Logo

நட்புக்கு மரியாதை

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 6457
rasikkathane azhagu-natpukku-mariyadai

ட்பு என்பது மாசு, மறுவில்லாத மகத்தான உணர்வு. மலர்ந்து மணம் வீசும் உணர்வு. அன்பு, நேசம், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம் போன்ற அனைத்து உணர்வுக் கோர்வைகளின் அற்புதமான கலவை நட்பு. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடங்கிய அபூர்வ நேயம் நட்பு!

'உனக்காக நான், எனக்காக நீ' என்ற உணர்வின் உந்துதலை அளிப்பது நட்பு. அது எப்படி? வேறு ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் ஓருயிர், ஈருடலாய் நண்பர்களாவது எப்படி சாத்தியம்? நட்பில் அடங்கியுள்ள மகத்தான சக்திதான் காரணம்.

'உனக்காக நான், என்ன வேண்டுமானாலும் செய்வேன். எதை வேண்டுமானாலும் தருவேன். உனது... எனது... என்று இனி இல்லை. இனி எல்லாமே நமது... நமதுதான்' என்கின்ற நேயங்களை மனதிற்குள் மாயமந்திரமாய் உருவாக்குவது நட்பு!

ஐந்து வயதில் ஏற்படும் நட்பில், 'காக்கா கடி' கடிச்சுக் குடுத்த கமர்கட்டின் 'கமகம' வாசனை, காலத்தால் அழிக்க முடியாத நினைவுக் கோலங்கள்! சிறு வயதில் கமர்கட்டை கடித்துத் கொடுக்கச் செய்த நட்பு, பின்னாளில் தன் சட்டையைக் கழற்றிக் கொடுக்கும் நட்பாக பரிணாம வளர்ச்சி அடைகின்றது. தன்னிடமுள்ள பொருளைப் பார்த்து நண்பனோ, சிநேகிதியோ ஆசைப்பட்டு விட்டால் உடனே, மறு கணமே.... ஒரு விநாடி கூட யோசிக்காமல் 'நீ வச்சக்கோ; இது உனக்கே உனக்கு' என்று வழங்கக்கூடிய அன்பும், தாராள மனமும் நட்பில் நிறையவே உண்டு.

கொடுப்பதில் சுகம் அளிப்பது நட்பு. தியாகத்தில் திளைக்கச் செய்வது நட்பு. நட்புக்காக எதையும் செய்யத் தூண்டுவது நட்பு. ஆனால் அந்த நட்பையே தியாகம் செய்யச் சொன்னால்? அது மட்டும் முடியாது. அதற்கு மட்டும் வழியே இல்லை. நட்பை தியாகம் செய்யச் சொன்னாலோ 'நட்பை விட்டு விடு, விலகி வந்து விடு' என்று சொல்லப்பட்டாலோ அந்த வலி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளே கிடையாது. காதலைக் கூட விட்டுக் கொடுக்கும் கனிவான இதயத்தை உருவாக்குவது நட்பு.

தெரிந்தவர்கள், உற்றார் - உறவினர்களிடம் நண்பனை அறிமுகப்படுத்தும் பொழுது 'இவன் என் உயிர்த்தோழன்/என் உயிர்த்தோழி' என்கிறோம். நம் அம்மா, அப்பாவைக் கூட என் உயிர் அம்மா, என் உயிர் அப்பா என்று அறிமுகப்படுத்துவதில்லை. அம்மா, அப்பா மீது நம் உயிரையே வைத்திருந்தாலும் அது இயல்பான, இயற்கையான உணர்வு. எனவே அதை நாம் அவ்விதம் குறிப்பிடுவதில்லை. அம்மா, அப்பாவிற்கு நிகரான அன்பு வைத்திருக்கும் நட்பு என்பதை அந்த ஒற்றை வார்த்தை 'உயிர்' என்பதில் மெய்ப்பிக்கிறோம்.

அம்மாவின் பாசத்தைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது 'எங்க அம்மா என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி  பழகுவாங்க தெரியுமா?/ எங்க அப்பா என் கூட ஒரு ஃப்ரெண்ட் மாதிரி பழகுவார் தெரியுமா?' என்கிறோம். நட்பின் அர்த்தத்திற்கு இதைத் தவிர பெரிதாக வேறு என்ன கூற முடியும்?

எனது நாவல்களைத் தவறாமல் படித்து வரும் ஒரு வாசகி என்னிடம் அவ்வப்போது ஃபோன் பண்ணி பேசுவார். அவர் ஒரு கல்லூரி மாணவி. அவருக்கு ஏதாவது பிரச்சனை அல்லது  மனக்கஷ்டம் என்றால் என்னோடு பகிர்ந்து கொள்வார்.

ஒரு நாள் அவர் எனக்கு ஃபோன் பண்ணினார். தயக்கமாய் ஒரு பிரச்சனையைக் கூற ஆரம்பித்தார்.

 "மேடம், என்னோட உயிருக்குயிரான ஃப்ரெண்ட் ஒருத்தி. அவ ஏழை. நாங்க பள்ளிக்கூடத்துல எல்.கே.ஜி-யில இருந்து பழகறோம். வசதி இல்லாத காரணத்தினால அவளால காலேஜ் படிப்பு படிக்க முடியல. ஆனா நாங்க எங்க நட்பை தொடர்ந்தோம்.  காலேஜ் முடிஞ்சதும் நேரா அவ வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுதான் நான் என் வீட்டிற்கு வருவேன். அவளும் நான் எப்ப வருவேன்னு வாசலிலேயே பழியா காத்திருப்பா. வழி மேல விழி வச்சு பார்த்துக்கிட்டிருப்பா. அவளோட வீட்ல அவங்க அப்பா சரி இல்லை. வேலைக்குப் போறதில்லை. தப்பித்தவறி போனாலும், வந்த பணத்தை சாராயக் கடையில செலவு பண்ணிட்டு வருவாரு. அவங்க அம்மாவுக்கும் படிப்பு கிடையாது. வேற வேலையும் தெரியாது. அதனால சாப்பாட்டுக்கே சிரமம்.

அதனால என்னோட தோழியை அவங்கப்பா தவறான நபர்களின் பழக்கத்தால தவறான பாதைக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அழுது அடம் புடிச்ச என்னோட தோழி, தன் அம்மாவும், தம்பி, தங்கையும் பட்டினி கிடப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டா. இவள் மறுத்தால், குடிச்சுட்டு தன் அம்மாவை, அப்பா அடிச்சு நொறுக்கும் அவதியில இருந்து மீட்பதற்கு வேறு வழியே இல்லைன்னு தன்னை தியாகம் செய்யத் துணிஞ்சுட்டா. தன் மனதை கல்லாக்கிக்கிட்டா. மனதை மட்டும் அல்ல, தன் உடலையும் கல்லாக்கிக்கிட்டு, தன் அப்பா அழைத்துச் சென்ற தவறான இடத்துக்கு,  தடம் மாறி போக ஆரம்பிச்சுட்டா.

தன்னை எரித்து ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல தன் உடலை அழிச்சு, கற்பைப் பறி குடுத்து, குடும்பத்தினரோட பசியை ஆற்றினா. மெள்ள மெள்ள அந்தரங்கமாக அரங்கேறும் இந்த அசிங்கம், அக்கம் பக்கத்தினர் அறிஞ்சுக்கற நிலைமை ஏற்பட்டு, விஷயம் வெளியே கசிஞ்சு, என் அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சு. 'இனி காலேஜ் முடிஞ்சு நேரா நம்ம வீட்டுக்கு வா. அவ வீட்டுக்குப் போகக்கூடாது. இனி அவளோட ஃப்ரெண்ட் ஷிப்பையும் விட்டுடு. அவளை மறந்துடு'ன்னு சொல்லிட்டாங்க" என்று கூறியவள், அதற்கு மேல் பேச இயலாமல் கதறி அழுதாள். சில நிமிடங்களில் அவளே மீண்டும் பேசினாள்.

 "மேடம், என்னால அவளைப் பார்க்காம இருக்கவே முடியாது. எங்க அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியா நான் அவளைத்தான் ரொம்ப நேசிக்கிறேன். அதனால எங்க அம்மா, அப்பாவுக்குத் தெரியாம இது வரைக்கும் எதுவுமே செய்யாத நான், அவளைப் பார்க்க திருட்டுத்தனமா போக ஆரம்பிச்சுட்டேன். அவகிட்ட இந்த விஷயத்தை சொன்னப்ப அவ அழுதுட்டா. 'என்னாலதான், உனக்கு இவ்வளவு பிரச்சனை. உனக்கு உன்னோட பெத்தவங்கதான் முக்கியம். அதனால நீ... நீ... இனிமேல் இங்கே வராதேன்னு சொல்லி அழுதா. அவ அப்பிடி சொன்னப்ப என் நெஞ்சுக்குள்ள ஒரு எரிமலையே வெடிச்சுது. அவளும் என் மடியில முகம் புதைச்சு அழுதா.


'உன் வீட்டுக்கு தெரியாம நீ இங்கே வர்றது பெரிய பிரச்சனையாயிடும்ன்னு சொன்னா.         உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலியேன்னு சொல்லி நானும் அழுதேன். யாருக்கும் தெரியாம அவ வீட்டுக்கு நான் போறது எங்க அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட கண்டிப்பு, கண்காணிப்புன்னு ஆனதுனால தினமும் அவளைப் பார்க்க முடியாத சூழ்நிலையாயிடுச்சு, அவளைப் பார்க்காத நாட்கள் எல்லாம் முட்களா என் மனசைக் குத்துது  மேடம். இதுக்காக நீங்க ஏதாவது எழுதக் கூடாதா?" என்று கேட்டு, நீண்ட தன் பேச்சை நிறுத்தினாள் அந்தப் பெண்.

'உன் குடும்ப சூழ்நிலை, உன்னோட தோழியோட குடும்ப சூழ்நிலை, அவளோட வீட்டுக்கு போறதால உனக்கு எந்த வகையான பிரச்சனை வரும்ன்னு தெரியாம பொத்தாம் பொதுவா எதுவும் எழுத முடியாது. எழுதக் கூடாது. ஆனா நட்பைப்பத்தி நிச்சயமா நான் எழுதுவேன்' என்று அவளிடம் கூறி, அதன் மூலம் எழுதப்படும் கருத்துப் பரிமாற்றம்தான் இந்தக் கட்டுரை.

நேர்மையே உருவான அந்தப் பெண், நட்பிற்காக நேர்மை தவறி, தன் பெற்றோரிடம் சொல்லாமல் தோழியைப் போய் பார்க்க நேரிட்ட நிகழ்ச்சி அது. நட்பின் வலிமை அவளை அப்படி ஒரு நேர்மையற்ற செயலை செய்யத் தூண்டியது.

நட்பு என்ற உணர்வை அவரவர் அனுபவித்தால் மட்டுமே அது எத்தனை புனிதமானது. உள்ளத்துக்குள் ஊடுருவி, உயிரையே உருக்கும் உத்தமமான உணர்வு என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நட்பு எனும் உணர்விற்கு நட்பாகவே இருப்போம். அதைத்தடுக்கும் தீய சக்தியாக எரிக்க மாட்டோம்.

ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் நட்பாக பழகுவது, ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நட்பாக பழகுவது பொதுவானது. ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவது நம் நாட்டில் சமீபகாலமாகத்தான் உருவாகியுள்ளது, பரவி வருகிறது. இந்த நட்பில் களங்கம் இல்லை. கள்ளம் இல்லை. பெண்ணுடன் பெண் பழகுவது போலவே பெண், ஆணுடன் விகற்பமில்லாமல் பழகுகிறாள். ஆண், தன் இனம் சார்ந்தவனுடன் பழகுவது போவே பெண்ணுடன் நட்போடு பழகுகிறான். நட்பிற்கு உண்மையான நேயம்தான் தேவையே தவிர ஆண், பெண் இன பேதம் தேவை இல்லை என்பதை இக்காலத்து இளைய தலைமுறையினர் நிரூபித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் பொது இடத்தில் ஒரு ஆணுடன், ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தால் அக்காட்சி, காண்போரின் கண்களை உறுத்தும். அவர்கள் இதைப்பற்றி தவறான பிரச்சாரம் செய்வதும் நடைபெறும். இப்போது அப்படி இல்லை. சேர்ந்து படிக்கிறார்கள். சேர்ந்து விவாதிக்கிறார்கள். சேர்ந்து சாதிக்கிறார்கள். ஆண் - பெண் இன பேதம் இவர்களிடைய குறுக்குச் சுவர் எழுப்புவதில்லை. நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும் கொண்ட பாவையர், பாரதியாரின் புதுமைப் பெண்களாக, பூமிக்கு கண்களாக விளங்குகின்றனர். இவர்களது இந்தப் பெருமைக்கும், வெற்றிக்கும் பின்னணியாக ஆண்கள், ஆதரவு தருகின்றனர். ஆக்க பூர்வமான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் பழகுவது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. நட்பிற்குத் தலை வணங்கும் தன்மை வேண்டும். ஆண்-பெண் நட்பு, கயிறு மேல் நடக்கும் ஸர்க்கஸ் வித்தை போன்றது. கொஞ்சம் சறுக்கினாலும் நட்பு எனும் புனிதம் கெட்டுப் போகின்றது. நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத ஆண்களும், பெண்களும் பரிதாபத்திற்கு உரியவர்கள். தங்களைப் பற்றியும், தங்கள் நட்பைப் பற்றியும் புரிந்து கொள்ளாத இவர்களது நட்பு, முட்புதருக்குள் சிக்கிக் கொண்ட நிலைதான். எனவே இளைய தலைமுறையினர், தெளிவாக சிந்திக்க வேண்டும்.  ஒருவரின் நட்பில் உள்நோக்கம் ஏதேனும் உள்ளே புதைந்துள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆணுடன் பெண் நட்பு என்பது தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்.  நல்ல நண்பனிடமிருந்து நல்லனவற்றை அறிந்து கொள்ள நட்பு உதவ வேண்டும். இக்கால இளைஞர்கள், இளம் பெண்கள் நல்லன புரிந்து கொள்ளும் மனப்பான்மையுடன் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். 'வாடா' 'போடா' என்று பெண், ஆணையும், 'வாடி' 'போடி' என்று ஆண், பெண்ணையும் கல்மிஷம் இல்லாமல் அழைத்துக் கொண்டு, பஞ்சு போன்ற லேஸான மனதுடன், பச்சிளம் குழந்தைகள் போல் சிரித்து மகிழ்ந்து கொண்டு, பறவை இனம் போல் பரவசமாய் பழகி, நட்பிற்கு இலக்கணமாய் திகழ்கின்றனர்.

இந்த இன பேதம் இல்லாத இனிய நட்பு, இந்நாளைய இளைஞர்களிடம் உள்ள புத்திக் கூர்மையை வெளிப்படுத்து கின்றது. வெகு சமீபகாலமாக மட்டுமே பரவலாகியுள்ள இந்த இனபேதமற்ற  நட்பு முறையை நம் மூத்த தலைமுறையினர் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்துத்தான் இந்த நட்பு வட்டம் பரந்து விரிவடையும். குடும்ப சூழ்நிலைகளும் இந்நட்பை அங்கீகரித்து, அனுமதிக்கக்கூடிய பட்சத்தில் மட்டுமே இவ்வகை நட்பு இளவேனிற் காலம் போல இதமாக இருக்கும். இதற்கு, குடும்பத்தினரின் பரந்த மனப்பான்மை ஒருங்கிணைந்து, ஒத்துழைப்பு தர வேண்டும்.

அவர்களது சம்மதம் இல்லாமல் இவ்விதம் பழகுவது, அது தூய்மையான நட்பே என்றாலும், தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டுப் பெரியவர்கள் புரிந்து கொண்ட பின்னர் அவர்களே இந்த நட்பிற்கு இன்முகம் காட்டி இருகரம் நீட்டி வரவேற்பு கொடுப்பார்கள். அது வரை காத்திருந்தால், நல்ல விதமாய் மாறி வரும் இந்த நட்பு நேயம், நாளுக்கு நாள் மேன்மை அடையும். நட்பிற்கு எப்படி ஆண், பெண் இன வேறுபாடு இல்லையோ அது போல வயதும் ஒரு வரம்பு இல்லை. நட்பிற்கு வயது தேவை இல்லை. நல்ல மனது இருந்தால் போதும். தலைமுறை இடைவெளி இல்லாதது நட்பு. பெரியோர், சிறியோர், அனைவருக்கும் பொதுவானது. மனித இனத்திற்கே பொதுவானது.

புராண காலத்தில் கூட கர்ணனும், துரியோதனனும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்திருந்தனர். விளையாடும் பொழுது கர்ணன், நண்பனின் மனைவியை வித்தியாசம் பாராமல் தொட்டிழுக்க, அவளது மேலாடையில் இருந்து உதிர்ந்த முத்துக்களை, துரியோதனன் 'எடுக்கவோ... கோர்க்கவோ' என்றானே? எதனால்? நட்பிற்கு அவன் கொடுத்த மரியாதையல்லவா?! நட்பிற்கு மரியாதை மட்டுமல்ல... நண்பன் மீது கொண்ட நம்பிக்கையும்தான் அவனை அவ்விதம் வெளிப்படையாக கேட்க வைத்தது. நட்பு, காலத்தை வென்றது, காலத்தினால் அழியாதது.


வரலாற்றுப் பகுதியைப் பார்த்தோம் எனில் சீஸரும், ப்ருட்டசும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் திடீரென நிறம் மாறிய மனதுடன், கரத்தில் கத்தி கொண்டு சீஸரின் முதுகில், குத்தினான் ப்ருட்டஸ். அங்கேயும் நட்பு அழியவில்லை என்று அறுதியிட்டு கூறுவேன். அந்த நிலைமையிலும் சீஸர், தன் நட்பு மாறாத நேயத்துடன் 'யூ டு ப்ருட்டஸ்?' (' You too Brutus?') என்று கண்களில் நீர் மல்க, சிவந்த விழிகளுடன் கேட்டானே? கோபமே இல்லாத ஒரு நட்புறவுடன் வேதனை மயமாகத்தான் அவனது கேள்வி இருந்தது. அங்கே நட்பு இறக்கவில்லை. நண்பன் மட்டுமே இறந்தான்.

தன் நண்பன் அல்லது தோழியின் காதலுக்கு தூது போவது புராண காலத்தில் இருந்து இன்று வரை நடைபெற்று வரும் விஷயமாகும். தோழியின் காதலுக்கு தூது சென்று, அந்தக் காதலுக்கு தூபம் போட்டு வளர்த்து விடும் பொழுது ஏதோ இமாலய சாதனை செய்வது போன்ற சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தோன்றும் பொழுது?... காதலை ஆதரித்த தோழி இன்னும் பல படிகள் மேலே சென்று அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக மேலும் பாடு படுவாள். தனக்கு  தன் தோழியின் குடும்பத்தினரால் பிரச்சனை ஏற்படும் என்றாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் தோழியின் காதலை  கல்யாணத்தில் நிறைவு செய்ய உதவிகள் பல செய்வாள்.

தோழியின் குடும்பத்தில் தன்னை திட்டுவார்கள், அவமானப்படுத்துவார்கள் என்று தெரிந்தும், தன் நட்புக்காக அவள் தியாகம் செய்கிறாள். இந்த சூழ்நிலையில் அவளது மனதில் தோழியின் நட்பு ஒன்று மட்டுமே குறியாக இருக்கும். அந்த நட்பிற்காக 'எதையும்  தாங்கிக் கொள்வேன்' என்ற குறிக்கோள் மட்டுமே நிலைத்திருக்கும். பின்னாளில் தோழியின் காதல் திருமணத்தை அவளது பெற்றோர் அங்கீகாரம் செய்து, அவர்களை தங்களுடன் இணைத்து அவளது காதல் கணவனையும் தங்கள் குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது முதன் முதலில் மிக்க மகிழ்ச்சி அடைவது அவளுக்கு உதவி செய்த அந்த உயிர்த்தோழிதான்.

தான் காதலிக்கும் பெண்ணையே தன் நண்பனும் விரும்புகிறான் என்று தெரிந்து கொண்ட நண்பன், தன் காதலை ஊமையாக்கி, தன் நண்பனின் காதலை வாழ வைப்பான். நட்புக்காக தன் காதலை மூடி மறைத்து நண்பனின் காதலை வெற்றியாக்கி மகிழும் அந்த தியாகம், நட்பிற்கு மட்டுமே உண்டு.

காதலா? நட்பா? என்று ஒரு இக்கட்டான நிலைமை வரும் போதும் எந்த ஒரு உண்மையான நண்பனும் நட்புதான் பெரிது என்று நட்புக்கு மரியாதை செய்வான். 'என்னை விட உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட் தான் உசத்தி' என்று கணவனிடம், செல்லமாய் சிணுங்கும் மனைவியர் உண்டு.

இவ்விதம் நட்பு என்பது மிக உயர்வானதாக மதிக்கப் படுகின்றது. நண்பர்கள்/தோழியர் ஒன்று கூடி விட்டால், அங்கே மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகின்றது. ஆரவாரமும், ஆனந்தமும் அலைமோதுகிறது. நம் அம்மா அப்பாவிடம் சொல்ல முடியாத விஷயங்களைக் கூட நண்பனிடம்/தோழியிடம் பகிர்ந்துக் கொள்கிறோம். அவ்விதம் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம் மனதில் அளவிட இயலாத ஆறுதல் பிறக்கிறது. அமைதி கிடைக்கிறது. உறவுகள் நமக்கு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள். நண்பர்கள்/தோழிகள் ரத்த சம்பந்தமே இல்லாத போதும் உறவினர்க்கு மேலாக நமக்குத் தோள் கொடுப்பவர்கள்.

நட்பு என்பது நம் மனதை ஊடுருவிச் செல்லும் ஒரு உணர்வு. இவன்தான்/இவள்தான் எனக்கு எல்லாம் என்கிற நெருக்கத்தை ஏற்படுத்தும் சக்தி நட்பிற்கு உண்டு. வேறு யார் நம்மை பிரிந்து சென்றாலும், அதைக் கஷ்டப்பட்டாவது தாங்கி கொள்வோம்... ஆனால் நண்பனோ/தோழியோ பிரிந்து செல்வதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவர்களின் பிரிவு, திருமணம், மேற்படிப்பு போன்ற நல்ல விஷயங்களுக்காக இருப்பினும் அந்தப் பிரிவு நமக்கு துயரத்தையே கொடுக்கிறது.

நட்பு நாகரீகமானது. தெய்வீகமானது. மனித நேயங்களில் மிக உயர்ந்த ஒரு  ஸ்தானத்தைப் பெற்றுள்ள நட்புக்கு மரியாதை  செய்வோம்.

 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.