Logo

காதல்

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 6376
rasikkathane azhagu-kadhal

காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல. பூமியில் பிறந்ததும் பெற்ற அன்னையைக் காதலிக்கிறோம். அன்னை அவள் 'இதோ உன் அப்பா' என்று காட்டும் பொழுது தகப்பனைக் காதலிக்கிறோம். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைக் காதலிக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை விரும்புகிறோம். நம்மை சேர்ந்தவர் களைக் காதலிக்கிறோம். ஆரம்பத்தில் நம் தேவைகளை விரும்ப ஆரம்பிக்கிறோம். அதன்பின் விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கின்றோம்.

வாழ்க்கையில் பொருட்களை விரும்புகிற நாம்,

நம் உறவுகளை பெரிதும் விரும்புகிறோம். 'அம்மா என்றால் எனக்கு உயிர்' என்கிறோம். 'எனக்கு எங்க அப்பாதான் ரொம்ப பிடிக்கும்' என்கிறோம். இப்படி கூறுவதற்குப் பின்னணி யானது நாம் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு.

பெற்றோர் தவிர உடன்பிறப்புகள், மாமா, சித்தி போன்ற உறவுகள் மீது அன்பு வைத்து நேசிக்கிறோம். இந்த அன்பிற்கும் பெயர் காதல். அன்பு என்றால் காதல். காதல் என்றால் அன்பு. காதல் என்பது அன்பைக்குறிக்கும் ஒரு பொதுவான சொல். ஆனால் ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமே காதல் என்று குறிப்பிடப்படுவது வழக்கமாகி விட்டது.

ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையே தோன்றும் காதல் பலவிதமானது. கண்டதும் காதல், பேசிப் பழகிய பின் காதல், கல்யாணத்தில் முடியும் காதல், நினைத்தது கை கூடியதும் கைகழுவிவிடும் காதல், காமத்திற்காக மட்டுமே காதல், கல்யாணமாகியபின் மனைவி / கணவன் மீது ஏற்படும் காதல், கருணையினால் ஏற்படும் காதல், பணத்திற்காக வலிந்து உருவாக்கிக் கொள்ளும் காதல், ஜாதி வேறுபட்ட காதல், மதம் மாறுபட்ட காதல், ஓடிப்போகும் காதல், ஒதுங்கி நிற்கும் காதல், போராடும் காதல், கண்ணீரில் நீராடும் காதல், ஜெயித்து நிற்கும் காதல், தோல்வியில் துவண்டுபோன காதல், எதிர்ப்புகள் நிறைந்த காதல், ஆதரவுடன் வளரும் காதல், முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட காதல். இப்படி... வெவ்வேறு ரூபங்களில் காதல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது.

இப்படி..... காதலில் பல விதம் உண்டு. காமம் இல்லாத காதலே கிடையாது. உடல்ரீதியான ஈர்ப்புதான் உள்ளரீதியான காதலை உருவாக்குகிறது. தொட்டுப் பழகும் காதலிலும் உண்மை உண்டு. விரல்நுனி கூட படாமல் பழகும் காதலிலும் உண்மை இருக்கும். உண்மையே இல்லாமல் காதலும் உண்டு.

ஒருத்தியுடன் பழகி, அவளது அழகைப் பருகி, அவளது இளமைப் பருவத்தை ஆசைதீர  அனுபவித்து விட்டு அப்படியே விட்டு விலகிவிடும் காதலும் உண்டு. அன்பு மட்டும் போதும் என்று அளவோடு பழகும் காதல், 'காதலை கல்யாணத்தால்தான் ஜெயிப்பேன்' என்று உறுதி கொள்ளும் காதல்.... இவ்விதம் விதம்விதமான காதல்கள், மனிதரிடையே பரந்துள்ளது.

கண்களால் பேசும் காதல் மெள்ள, வாய்மொழியில் பேச ஆரம்பிக்கும். (காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது வேறு விஷயம்.) அதன்பின்  காதலை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்ததும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப் படுத்திக் கொள்வார்கள்.

'என் உயிரே நீதான்; என் உலகமும் நீதான்; நீ இன்றி நான் இல்லை. உன்னைப் பார்த்த அந்த வினாடியே எனக்கு உன் மேல் காதல் வந்துருச்சு' இப்படிப்பட்ட வசனங்களைப் பேசி, தங்கள் காதல் செடிக்கு நீரூற்றி வளர்ப்பார்கள். அது வேரூன்றி நின்றதும் கல்யாணம் பற்றிய கவலையும் தங்கள் காதல் பற்றி வீட்டில் எப்படி சொல்வது என்பதைப் பற்றிய பயமும் இவர்களைப் பற்றிக் கொள்ளும். நீண்ட விவாதம் நடக்கும். இருவரும் கலந்து பேசியபிறகு அவரவர் வீட்டில் தெரிவித்தபின் கலகம் பிறக்கும் அல்லது சுமுகமாக முடியும்.

கல்யாணத்தில் முடியும் காதலில் பிரச்சனைகள் கிடையாது. கல்யாணம் முடிந்த பிறகுதான் பிரச்சனைகள் துவங்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமையினால் ஏற்படும் பிரச்சனைகள் கல்யாணத்திற்கு பிறகுதான் வெடிக்கும்.

காதலிக்கும் பொழுது  'ஹனி' 'ஹனி' என்று அழைத்த காதலன், கல்யாணத்திற்குப் பின் 'சனி' 'சனி' என்று திட்டுவான்.

காதல் பல யுக்திகளைக் கொண்டது. பொய்களைக்கூட உண்மைகள் போல் நம்ப வைப்பது. 'நீதான் எனக்கு எல்லாம்' என்று பேசி பெண்ணை நம்ப வைப்பது காதலில் ஒரு யுக்தி. இந்தக் காதலில் நேர்மை இல்லை. நம்ப வைத்து அவளது அழகையோ பணத்தையோ அனுபவித்து முடித்தபின் அவளிடமிருந்து நழுவிவிடும் அழுக்கான குணம் கொண்ட ஒருவனது காதல், தந்திரங்கள் நிறைந்தது. இப்படிப்பட்டவனின் காதலில் விழுந்த பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

இவர்களிடம் அவனைப்பற்றிய தகவல்களை கூறி எச்சரித்திருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவனாய் அவளிடம் நாடகம் ஆடி இருப்பான். பின்னாளில் ஏமாந்து நிற்கும் போதுதான் தெரியும் அவனிடம், தான் ஏமாந்து விட்டோம். 'அவன் எச்சரித்தானே... அவள் சொன்னாளே...' என்று மிகவும் தாமதமாக நினைத்துப் பார்ப்பதில் எந்தப்பயனும் இன்றி திருவிழாக்கூட்டத்தில் தொலைந்து போன குழந்தையாய் திசையறியாது நிற்பாள் ஏமாந்து போன பெண்.

கைக்கு எட்டும் வரை கை கோர்த்து  திரிந்து, கைக்கு கிட்டியபின் கைவிட்டுவிட்டு பிரிந்து சென்று விடும் கயவர்களின் சாகஸ வலையில்  மாட்டிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்து கொண்டால், வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.

'காதல் என்பது எது வரை?....

கல்யாண காலம் வரும் வரை...

கல்யாணம் என்பது எது வரை?...

கழுத்தினில் தாலி விழும் வரை...

கண்ணுக்கு அழகு எது வரை?...

கையில் கிடைக்கும் நாள் வரை...'

காதல் எனும் உணர்வில் உள்ள யதார்த்தத்தைக் கவிஞர் எவ்வளவு எளிமையாக தன் பாடல் வரிகளில் தெளிவாக்கி யுள்ளார்?!

காதலில் தோல்வி அடைந்த சிலர் 'என்னோட காதல் நினைவுகளே எனக்குப் போதும். அந்த நினைவுகள் என் சோகத்திற்கு சுகம் தரும் இதமாகும்' என்று விரக்தியுடன் கூறுவார்கள். இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அந்த நினைவுகள் நீங்கும் விதமாக நெஞ்சில் வேறொரு காதல் புகுந்து கொள்ளுமாயின், பழைய காதல் தோல்வியின் சுவடுகள் கூட அறியாமல் புதிய காதலில் மூழ்கி, மகிழ்ந்து திளைப்பார்கள்.

தோல்வி அடைந்த அனைவருமே இவ்விதம் அல்ல. ஆனால் பெரும்பாலோர் இப்படித்தான். காதலித்தவனை/காதலித்தவளை மட்டுமே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நியதி இருக்குமானால் ஏகப்பட்ட காதலர்கள் கல்யாணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ வேண்டுமே?


நடைமுறையில் அப்படி இல்லையே?! சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக காதலித்தவரை விட்டு வேறு நபரை / வேறு பெண்ணை மணந்து வாழும் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு அருமையான அடிப்படையை  வைத்து சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பே அமரர் டைரக்டர் ஸ்ரீதர் அவர்கள் 'கல்யாண பரிசு' எனும் திரைப்படம் இயக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும்  அபிநய ஸரஸ்வதி திருமதி. சரோஜாதேவி அவர்கள் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கதாநாயகன், தான் உயிருக்குயிராகக் காதலித்த பெண்ணின் (கதாநாயகியின்) அக்காவை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. இவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் கதாநாயகனின்  மனைவியும், கதாநாயகியின் சகோதரியுமான விஜயகுமாரி இறந்துவிடுகிறார். சராசரி கதைகளில் மனைவி இறந்தபின் கதாநாயகன் காதலித்த பெண்ணையே, கதாநாயகன் மறுமணம்  செய்து கொள்வது போல திரைக்கதையை இயக்குனர்கள் அமைத்திருப் பார்கள்.

ஆனால் இயக்குனர் ஸ்ரீதர், இயல்பான ஒரு முடிவை.... வாழ்க்கையின் யதார்த்தமான ஒரு திருப்பத்தை அமைத்து மிக அருமையாக இயக்கியிருந்தார்.  கதாநாயகி, வேறு நபரை திருமணம் செய்து கொள்வதுதான் இத்திரைப்படத்தின் வித்தியாசமான திருப்பம். 'கல்யாணபரிசு' படம் வெளிவந்த காலத்தில் 'காதல்' என்பதே மிகப்பெரிய விஷயம், தப்பான விஷயம் என்பது போன்ற மனப்பான்மை நிலவிவந்தது. காதல் தோல்வியடைந்த பெண், வேறொரு ஆடவனை மணப்பது என்பது அந்தப் பெண்ணுக்கு குற்றமனப்பான்மையை உருவாக்குவதாய் இருந்தது.

'கல்யாணபரிசு' படம்  வந்த பிறகு, 'இது வாழ்வின் யதார்த்தம், இயல்பானது' என்கிற நடைமுறை உண்மைகளைப் புரிந்து கொண்ட இளம் பெண்கள், குற்ற உணர்வில் இருந்து  விடுபட்டார்கள்.

 வாழ்வியல் உண்மைகளை தன் திரைக்கதையில் திறம்பட அமைத்து, ஒரு திரைப்படமாக அல்ல, ஒரு திரைக்காவியமாய் அளித்தார் இயக்குனர் ஸ்ரீதர். 'கல்யாணபரிசு' திரைப்படத்தின் கதாநயாகியாக  தங்களைக் கண்ட பெண்கள், தங்களை உணர்ந்த பெண்கள் பலர்.

எனவே இந்த வெள்ளித்திரைப்படம், இருபத்தைந்து வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பே தன் கதையிலும், திரைக்கதையிலும் புதுமையையும், புரட்சியையும் செய்து காட்டியவர் இயக்குனர் ஸ்ரீதர்.

'காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி...

காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்...'

எனும் இந்தப் பாடல் 'கல்யாணப் பரிசு' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலாகும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக காதலித்தவனை மணம் முடிக்க இயலாமல் வேறு நபரை திருமணம் செய்து கொண்டபின் அவள் எத்தனை உண்மையாக தன் கணவனை நேசித்தாள் என்பதையும், அந்த நிலையிலும் தன் பழைய காதல், தனக்கு தீங்கு இழைத்து விடுமோ என்று அஞ்சுவதைப் பற்றியும் மிகமிக அழகாக 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தினார் இயக்குனர் ஸ்ரீதர்.

தான் காதலித்த பெண் நன்றாக வாழவேண்டும் என்று மிக உண்மையாக நினைத்து, அவளுக்காக. அவளது கணவனின் உயிரை மீட்க பாடுபட்ட 'டாக்டர்' கதாபாத்திரத்தை ஒரு கவிதை போல படைத்திருந்தார் ஸ்ரீதர். அந்த கண்ணியமான காதலன் கதாபாத்திரம் அகில இந்திய ரீதியில் பாராட்டுகள் பெற்றது. 'எங்கிருந்தாலும் வாழ்க....... உன் இதயம் அமைதியில் வாழ்க......' என்ற பாடல் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தில் இடம் பெற்ற மிக அருமையான பாடல்!

காதலித்த பெண், யாரை மணந்தாலும், எங்கே இருந்தாலும் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கம் உள்ளவனின் காதல்தான் உண்மையான காதல் என்பதை 'எங்கிருந்தாலும் வாழ்க....... உன் இதயம் அமைதியில் வாழ்க......' என்ற எளிமையான, அருமையான வரிகளில் ரத்தினச் சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். அந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் மெட்டமைத்த திறமையும் ஒருங்கிணைந்து, ஒரு புதுமையான காதல் பாடலை அளித்தன.

இன்றைய திரைப்பட ரசிகர்கள் மனதிலும் ரீங்காரமிடுகிறது இந்தப் பாடல். பெண் மட்டுமல்ல.... ஒரு ஆண்மகன் கூட காதலுக்காகவும், காதலிக்காகவும் மிக நேர்மையாக பாடுபட முடியும், அதன் மூலம் காதலை கௌரவிக்க முடியும் என்று எடுத்துக்காட்டிய படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் டைரக்டர் ஸ்ரீதர்.

காதலை மையமாக வைத்துத்தான் ஏராளமான திரைப்படங்கள் தயாராகின்றன. 'பாபி' எனும் ஹிந்தி திரைப்படம், காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படம்! இளமை ததும்ப எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படமும் அகில இந்தியப் புகழ் பெற்றது. 'பாபி' பார்க்காதவன் 'பாவி' என்பது போன்ற மனோபாவத்தை உருவாக்கிய திரைப்படம் இது.

காதல் பற்றிய அநேக விஷயங்கள், காதலிக்கும் ஜோடிகள், காதல் தோல்விகள், வெற்றிபெற்ற காதல்கள் இவையாவும் நாம் வாழ்க்கையில் சந்திப்பவை. கேள்விப்படுபவை. வாழ்க்கையில் வரும் இவையே திரைப்படங்களிலும் காட்சிகளாகவும், கதை களாகவும் காட்டப்படுகின்றன.

மரணம் அடைந்துவிட்ட தன் காதலியை உயிரோடு இருக்கிறாள் என்று கற்பனை செய்து கொண்டு அந்த கற்பனை உலகை நிஜம் என்று நம்பி வாழும் ஒரு இளம் காதலன் பற்றிய திரைப்படம் 'காதலில் விழுந்தேன்' எனும் திரைப்படம். இதில் கதாநாயகனாக நடித்த நடிகர் நகுலும்,  காதலியாக நடித்த நடிகை சுனைனாவும் தங்கள் இளமை ததும்பும் தோற்றத்துடனும், திறமை மின்னும் நடிப்பாற்றலுடனும் நடித்து அப்படத்தின் இயக்குனரின் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்களை வெகு அருமையாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களின் பாணி வேறு விதமாக காதலை சொல்லியது. இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் பாணி வேறு விதமாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்கிற படத்தில் காதல் பற்றி சொல்லியது. மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள இயக்குனர்களின் கோணத்தில் இந்த காதல்தான் எத்தனை விதமான பரிமாணங்களைக் கூறுகிறது!

காதலில் ஏகப்பட்ட உணர்வுகள் சங்கமிக்கின்றன. அன்பு, ஆசை, பாசம், பரிதவிப்பு, ஏக்கம், ஏகாந்தம், ஊடல், கூடல், சண்டை, சச்சரவு, சமாதானம், கனவு, களவு, காமம், சுயநலம், தியாகம் போன்ற பலவித உணர்வுகளின் சங்கமம் காதல்! இவற்றில் மிக முக்கியமான உணர்வு தியாகம்! சிலர், காதலுக்காகவும், காதலனுக்காகவும் / காதலிக்காகவும் தன்னை பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவரையும் தியாகம் செய்கிறார்கள். பலர், தங்கள் காதலையே பெற்றோருக்காக தியாகம் செய்கிறார்கள்.


'நீ காதலிக்கும் பெண் நம்ம மதம் இல்லை; நம்ம ஜாதி இல்லை. நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாது.... நாங்க தற்கொலை பண்ணிக்குவோம்; உன்னை தலை முழுகிடுவோம்' என்று பெற்றோர் மறுத்துப் பேசும் பொழுது, தங்கள் பெற்றோர் மற்றும் தங்கைக்காக காதலையும், காதலியையும் தியாகம் செய்து வாழும் மகன்கள்/ மகள்கள் பலர் உள்ளனர்.

இதயத்தில்  இருத்தி ஈருயிர் கலந்த காதலை குடும்பத்தில் இருக்கும் ரத்த உறவுகளுக்காக தியாகம் செய்து வாழும் அவர்களின் உயிர் பிரியும்வரை  அந்தக் காதலை மறக்க இயலாமல் தவிப்புடனேயே தங்கள் வாழ்நாட்களைக் கடத்துவார்கள். காதலை விட்டுக் கொடுத்த மகனுக்கு தங்கள் விருப்பப்படி ஒரு திருமணமும் செய்து வைத்து ஏதோ சாதித்து விட்டதாக எண்ணி பெற்றோர், சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்க, மனைவி எனும் ஸ்தானத்திற்கு வந்தவளிடம் கடந்த கால காதலை சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டு சஞ்சலத்துடன் சோக வலையில் வீழ்ந்து கொண்டிருப்பான் மகன். மகனது தியாகம் அவர்களுக்கு லாபம். மகனுக்கோ..... அது துன்பமெனும் ஓடம்!

காதலை தியாகம் செய்வது ஆணோ.... பெண்ணோ.... அவர்களது மனதில் ஆழ்ந்து போன அந்தக் காதல் நினைவுகள், ஆயுட்காலம் வரை இதயத்தை சூழ்ந்திருக்கும். வேறொருவரை. கைப்பிடித்து, பேரன், பேத்தி, என்று குடும்பம் பெருகியபின்னும் அந்தக் காதலின் ஞாபகங்கள் அவனது / அவளது இதயத்தைப் பிடித்து உலுக்கியபடியே இருக்கும். காதல் என்பது மதம் பார்த்து வருவதல்ல. மனம் பார்த்து வருவது.

ஜாதியையும், மதத்தையும் உருவாக்கிய மனிதன், அதனாலேயே சிலவற்றை இழக்கிறான். இன்றைய கால கட்டத்தில், கலப்பு திருமணங்கள் பெருகி விட்ட முன்னேற்ற  நிலை ஒரு பக்கம் இருக்க, இன்னமும் பல குடும்பங்கள் ஜாதி, மத பேதத்தினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் பொழுது, அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை. எந்த உதவியும் இன்றி, எவர் தயவும் இன்றி கஷ்டப்பட நேரிடுகின்றது. காதலிக்கும் பொழுது இருந்த தைரியமும், திடமும் கல்யாணமான பின் ஏற்படும் கஷ்டங்களில் காணாமல் போய்விடுகிறது. காதலில் இது ஒரு பரிமாணம்!

பெற்றோர் பார்த்து தோந்தெடுத்து செய்து வைத்து திருமணத்தில் பிரச்சனைகள் வந்தால், அந்த பிரச்சனை களுக்குரிய தீர்வை செய்ய பெற்றோர் முன்வருவார்கள். பெற்றோரை எதிர்த்து செய்து கொள்ளும் காதல் திருமணத்திற்கு அங்கீகாரமும் இருக்காது. அரவணைப்பும் இருக்காது. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வைக்கும் காதல் இது.

 ஒருத்தி, ஒருவனை நினைத்துவிட்டு குடும்ப சூழ்நிலைகளால் அவனை மறக்க நேரிட்டு,  இன்னொருவனை மணக்க நேரிடும் இக்கட்டான சூழ்நிலையில் அவளது மனம் படும் பாடு சொல்லில் விவரிக்க இயலாதது. கடந்த கால நினைவுகளை முழுவதுமாக மறந்து, வாழவும் முடியாமல் அதையே நினைத்து சாகவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாகத் துடிக்கும் அவளது பெண்மனம். வேறொருவன் கணவனாக வந்தபின் காதலித்தவனை நினைக்கும் குற்ற உணர்வில் தவிப்பாள். மறக்க முடியாத மனதை உருவாக்கும் சக்தி நிறைந்தது காதல்!

காதல் வயப்பட்டவர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்ள விழைவார்கள். காதலியை மனைவியாக்கிய பிறகு அவள் கஷ்டப்படாமல் வாழ்வதற்குரிய வழிமுறைகளை அறிவதிலும், அதன்படி செயல்படுவதிலும் நாட்டம் கொள்வார்கள். காதலனுக்கு ஒரு லட்சியம் இருந்தால் அந்த லட்சியம் நிறைவேற காதலி, அவனுக்காக பாடு படுவாள், நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்தித்து செயல்படும் காதலும் உண்டு; அதைப்பற்றி கவலையே படாத கண்மூடித்தனமான காதலும் உண்டு.

'அவளை அடைந்தே திருவேன்' என்று காதலே இல்லாத காமம் மட்டுமே நிறைந்த வெறித்தனமான காதலும் உண்டு.  உண்மையான காதல் உலகை வெல்ல வைக்கும். பொய்யான காதல் உயிரைக் கொல்ல வைக்கும். காதலுக்காக தங்கள் ராஜ்யத்தையே இழந்த பழம் பெரும் மன்னர்களின் காதல் வரலாறுகள் உள்ளன. காதலுக்காக தாஜ்மஹால் எனும் அடையாளச் சின்னம் எழுப்பிய ஷாஜஹான் மன்னன் பெயரை இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் எழுப்பிய அந்தக் காதல் மாளிகை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதையும் அறிகிறோம். சரித்திரக்காலம் தொட்டு இன்றைய காலம் வரை காதல் எனும் உணர்வு மனிதர்களின் மனங்களை ஆட்டி வைக்கும் சக்தி வாய்ந்தது. காதல் ஏழைகளுக்கு வரலாம். ஆனால் கோழைகளுக்கு வரக்கூடாது.

 செல்வந்தர்களின் காதல் செல்லாக் காசாகும் நிலைமையும் உண்டு. வறுமைக் கோட்டிற்குள் வாடுபவர்களின் காதல், வளமாவதும் உண்டு. இதற்கு காதலின் உள்நோக்கம் காதலாக மட்டுமே இருக்க வேண்டும்.

'காதல் போயின் சாதல்' என்றார் பாரதி. அது அந்தக் காலம்! காதல் போயின் இன்னொரு காதல்!.... இது இந்தக் காலம்.

நிம்மதியைத் தருவதும் காதல். அதைத் தொலைப்பதும் காதல். சந்தோஷத்தை அள்ளித் தருவதும் காதல். அதே சந்தோஷத்தை கிள்ளி எறிவதும் காதல்! கண்களால் பேச வைப்பதும் காதல்! அதே கண்களை கண்ணீரால் நனைப்பதும் காதல் ! காதலுக்கு தூது போன நபரே, அந்தக் காதல் அழிவதற்குக் காரணமாக இருப்பதும் நடக்கின்றது. 'கொலையும் செய்வாள் காதலி' என்று நம்ப வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்த ஒரு கொலைக்குற்றம்.

சமீபத்தில் விஜய் டி.வியில் வெளிவரும் நீயா? நானா? நிகழ்ச்சியில் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், தங்கள் சுற்றம், சொந்த பந்தம், உறவினர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் கூறினார்கள். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணம் ஜாதி, மத பேதம். இன்றைய மாறிவிட்ட நவநாகரீக யுகத்திலும் கூட ஜாதி, மத பேதம் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை ஆதங்கத்துடன் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டனர். இவர்களுள் ஒரு ஜோடி கூறிய தகவல் என்னை மிகவும் பாதித்தது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவன் 'என் கூட படிக்கும் பையன்கள் எல்லோருக்கும் தாத்தா பாட்டி இருக்காங்க, எனக்கு மட்டும் ஏன் இல்லை?' என்று கேட்பதாக அவர்கள் கூறிய தகவல் மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது.


அதே நிகழ்ச்சியில் காதலில் தோல்வி கண்ட ஓர் இளைஞர் கூறிய சோகமான விஷயம் என் மனதை தாக்கியது. அந்த இளைஞர் 'நான் ஒரு பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தேன். அவளும் என்னை அவ்விதம் காதலிப்பதாக கூறினாள். என்னிடம் உருகி உருகி பேசினாள். ஐந்து வருடங்கள் தொடர்ந்து நாங்கள் காதலித்து வந்தோம். அவளது படிப்பு முடிந்த பின் அமெரிக்காவில், அபரிதமாக சம்பாதிக்கும் ஒருவனை அவளது வீட்டார் அவளுக்காக திருமணம் முடிக்க பேசியபோது, மனம் மாறி விட்டாள்.

ஐந்து வருடங்களாக காதலித்த அவள் வெறும் ஐந்து நிமிடங்களில் அமெரிக்க மாப்பிள்ளையை மணமுடிக்க அவளது பெற்றோரிடம் முழு மனதுடன் சம்மதித்துவிட்டாள். அதிர்ச்சி அடைந்த நான், 'உன்னால் என்னை மறக்க முடியுமா?' என்று கேட்டேன். அதற்கு அவள் கூறிய பதில்... என் இதயத்தை நொறுக்கியது. அவள் கூறிய பதில், 'மறந்துதானே ஆக வேண்டும்' என்பதாகும். 'அப்படி என்றால் நம் காதல்?' என்று கேட்டேன். 'அது ஒரு (passing cloud)' என்று கூறி மேலும் என்னை அதிர வைத்தாள்.

அவளது திருமண பத்திரிக்கையை எனக்கு அவள் கொடுத்த அன்று இரவு நான் தற்கொலை முயற்சி செய்தேன். என் பெற்றோர் என்னைக் காப்பாற்றி விட்டனர். அதன் பின் உணவு கொள்ளாமல், உறக்கம் கொள்ளாமல் நான் ஏறத்தாழ இருபது கிலோ எடை குறைந்தேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளை மறக்க முயற்சித்தாலும் அவள் மீதான காதலை என்னால் மறக்கவே முடியவில்லை. காதல் என்பது தீவிரவாதம் போன்றது' என்று பேசி முடித்தார் அந்த இளைஞர். அவரது தோற்றம் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர் போலத்தான் இருந்தது.

காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்றோரை விட்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சி செய்த அவரது தற்கொலை நடவடிக்கை முட்டாள்தனமானது.

காதலிக்கும் பொழுது தங்கள் காதல்தான் பெரிது என்று எண்ணி சொந்த பந்தங்களைத் துறந்த காதலர்கள், தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான பின்னர் பெற்றோர் உட்பட உறவுகளை இழந்து தவிக்கும் பொழுது 'இப்படி அனைவரையும் இழக்க வைத்த காதல் தேவை இல்லையோ..... தவறு இழைத்து விட்டோமோ' என்று முன்னுக்குப்பின் முரணாக நினைப்பார்கள். காலதாமதமாக ஏற்படும் இந்தக் குற்ற உணர்வுகளால் என்ன பலன்?

சில சமயங்களில் காதல் என்பது கானல் நீர் போல ஆகிவிடும். இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க, ஒரு விழிப்புணர்வு தேவை. எச்சரிக்கை உணர்வும் தேவை. ஒருவன் மீது ஈர்ப்பு கொண்டு விட்டால் அவனைப்பற்றிய உண்மையான சில தீய குணங்கள் பற்றி பிறர் கூறினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், ஆராய்ந்து பார்க்காமல், தொடர்ந்து அந்தக் காதலை வளர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு காதல், கானல் நீர் ஆகிவிடுகின்றது.

 ஒரு இளம்பெண் இப்படித்தான்... அவளது நலன் மீது அக்கறை கொண்ட பலர் எச்சரித்தும் அவள் காதலித்தவனின் சுயரூபம் பற்றி அறிந்து கொள்வதில் அலட்சியமாக இருந்து விட்டு பின்னாளில் அவனைப் பற்றிய உண்மைகள் தெரிந்துக் கொண்ட பின், தன் தவறை உணர்ந்தாள். 'ஏன் இப்படி பலர் எச்சரித்தும் உஷாராக இல்லாமல் உதாசீனாப்படுத்தி விட்டாய்?' என்று கேட்டால் 'லவ் இஸ் ப்ளைண்ட்' (Love is Blind) என்கிறாள். இப்படி குருட்டுத்தனமான காதலை வளர்ப்பவர்கள் நிலைமை மிக மோசமானது.

நல்லவனா... கெட்டவனா... என்று ஆராய்ந்து பார்த்து வருவது காதல் இல்லை என்று முட்டாள்தனமாக வாதாடினாள். நல்லவனா... கெட்டவனா... என்று பார்த்து வரவேண்டாம். குறைந்த பட்சம், காதலிக்க ஆரம்பித்த பிறகு மற்றவர்கள் எச்சரிக்கை கொடுக்கும் பொழுதாவது அதை மதித்து, தனது காதல் சரியான நபர் மீது இல்லை என்று புரிந்து கொள்ளலாமே.

காதல்தான் பெரிது, அதுதான் என் வாழ்வின் மையம் என்று எண்ணினால் அந்த எண்ணம் மனதில் உறுதியாக இருக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருப்பதால் வாழ்க்கையில் குழப்பங்கள்தான் மிஞ்சும். சீரான வாழ்க்கை சீர்கேடாகும்.

இதைவிட மோசமானது காதலர்களின் தற்கொலை முடிவு. உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் அசட்டு முடிவு அபத்தமான முடிவு. நின்று போராட வேண்டுமே தவிர தன் உயிரைக் கொன்று முடிந்து விடக்கூடாது. தற்கொலை செய்து கொள்பவர்கள், தற்கொலைதான் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு என்று சுலபமாக, சுயமாக முடிவு எடுத்து தன்னலமே பெரிது என்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். உடல்நோக பெற்று, உயிர் நோக வளர்த்து, மகன் / மகள் பற்றிய கனவுகளில் மிதந்து, ஏராளமான எதிர்பார்ப்புகளோடு பெற்றோர் காத்திருக்கும் பொழுது... காதலுக்காக தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சியை அளிப்பது பெற்றவர்களின் நிம்மதியை அழிக்கும் அநியாயமான செயலாகும்.

ஒரு தாய் எப்படி தன் உடலையும், உயிரையும் கொடுத்து வளர்க்கிறாளோ அதுபோல ஒரு தகப்பனும் தன் மகன்/மகளை வளர்ப்பதற்கு பொருளாதார ரீதியாக மிகுந்த பாடு படுகிறார். அத்தனை பாடும் வீண் ஆகும் வகையில் காதல் வலையில் சிக்கிக் கொண்டு, மடிந்து போதலே முடிவு என்ற மனோபாவத்திற்கு ஆளாகி, பெற்றோரை துன்புறுத்தும் பாவமூட்டைகளை சுமக்க வேண்டுமா?

காதல் எனும் உணர்விற்கோ.... காதலுக்கோ நான் எதிரி         அல்ல. காதலித்தவனோடு / காதலித்தவளோடு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவதுதான் தவறு என்பது என் கருத்து. மகள் ஓடிவிட்டாள்/மகன் ஓடிப்போய்விட்டான் என்கிற அவலம் தரும் அவமானம் அளவற்ற துன்பத்தைக் கொடுக்கும்.

'மகள் எங்கே... எப்படி... தவிக்கிறாளோ... அவள் விரும்பியவன் நல்லவனா...கெட்டவனா...' என்றெல்லாம் யோசித்து யோசித்து வேதனைப்படும் அந்தக் கொடுமை தாய்மார்களுக்கு தாங்க இயலாத துயரம். எனவே எவரையும் துன்புறுத்தாத வகையில் காதல் இருந்தால் அதில் வெற்றி காணலாம்.

காதல், வயது பார்த்து வருவதல்ல. சில தம்பதிகள் ஆரம்பக் காலத்தில் ஏனோ தானோ என்று ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்வார்கள். இதற்குக் காரணம் தம்பதிகளில் ஒருவருக்கு அந்த சுபாவம் இயல்பாகவே இருக்கலாம் அல்லது குடும்ப சூழ்நிலைகள் காரணமாக அவ்விதம் வாழ வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கலாம்.


ஆனால் நாளடைவில் அச்சூழ்நிலைகள் மாறியபின் இவர்களுக்குள் ஒரு புரிந்து கொள்ளுதல் ஏற்படும். அச்சமயத்தில் இவர்களது வயதும் ஏறி இருக்கும். அதனாலென்ன? மனது கூடி விட்டால் வயது கூடுவதைப்பற்றிய கவலை ஏன்?  அந்த வயதிலும் உள்ளத்தில் காதல் தோன்றி, மனைவியிடம் கணவனும், கணவனிடம் மனைவியும், நெருக்கமாக வாழத்துவங்குவார்கள். வெகு அந்நியமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிக அந்யோன்யமாக வாழ ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு தம்பதியை நானே சந்தித்துள்ளேன். அவர்களது இந்த மாற்றம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது குடும்ப சூழ்நிலைகள்தான் காரணம் என்று மனம் விட்டு கூறினார்கள்.

காதல் வயப்பட, வயது ஒரு வரைமுறை அல்ல. மனப் பக்குவம்தான் மிக முக்கியம். புரிந்து கொள்ளுதல், பால் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட மனம் சார்ந்த உண்மை நேசம், தியாக மனப்பான்மை இவை அனைத்தும் அடங்கிய காதல்தான் உண்மையான காதல்.

உண்மையான காதல் என்றும் ஜெயிக்கும். ஜெயம் என்பது, எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருடன் போட்டி போட்டு, வெற்றி கொள்வது அல்ல. எவருடைய மனதையும் நோக வைக்காமல், பொறுமையாகக் காத்திருந்து கல்யாணம் செய்து கொள்வதே காதலில் ஜெயம்!

நிரந்தரமான சந்தோஷத்திற்கு காதலும் அதன் வெற்றி மட்டுமே போதாது. காதலுக்கு வெற்றி, கல்யாணம். கல்யாணத்திற்கு வெற்றி... இருவரும் மனம் கலந்து ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து உயிர் உள்ளவரை சந்தோஷமாக வாழ்வதாகும்.

காதலிக்கும் பொழுது இருந்த அதே அளவு அன்பும், ஆசையும், பாசமும், உயிர் உள்ளவரை நிலைப்பது ஒன்றே நிஜமான காதல்! வாழ்வின் ஓர் முக்கியமான உணர்வு காதல்! காதலர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக பழகலாம். வாழலாம். ஆனால் ஒருவருக்காக மற்றவரோ அல்லது இருவருமோ தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவு எடுப்பது உத்தமம் அல்ல. வாழ்வதற்காக காதலியுங்கள். காதலித்து வாழுங்கள். இதுவே காதலின் வேதம்!

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.