Logo

உன் மனதை நான் அறிவேன்

Category: மர்ம கதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 9941
Unn Manadhai Naan Ariven

'வெண்ணிலா' ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்! பெயருக்கேற்றபடி, நீல வானத்தில் பளிச்சிடும் நிலவு போல் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது. இரவின் இருளில் ஒளிவிடும் நிலா போல மிக அழகாக காட்சி அளித்த 'வெண்ணிலா' ஹோட்டலுக்குள் இரவு நேரப் பறவைகள், ஜோடிகளாகவும், தனியாகவும் நுழைந்து கொண்டிருந்தனர். 

ஜோடிகளாக வந்தவர்கள், உல்லாசமாய் சல்லாபித்தபடி சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். சிலர், தங்கள் மெய் மறந்து மகிழ்வதற்காக அங்கே வந்து கொண்டிருந்தனர். அவர்களது பிரச்னைகளையும் அலுவலக டென்ஷனையும் மறக்க வைக்கும் மதுபானம் எனும் மருந்தை நாடினர்.

ராத்திரிகளில் ராஜசுகம் தேடி வரும் நபர்கள் நிறைந்திருந்தனர். 'என்னுடைய வழக்கம் இதுதான்' என்று பகிரங்கமாய் வருபவர்களும் இருந்தனர். வெளியில் 'கம்பீர கனவான்' எனும் உருவகம் கொண்டவர்கள் சிலர். 'தங்கள் வேஷம் கலைந்துவிடுமே' என்ற அச்சத்தில் ரகஸியமாய் வந்திருப்பவர்களும் இருந்தனர்.

நேரம் ஆக ஆக... வருகையாளர்கள் அதிகமானார்கள். மதுபானப்பிரிவில் பகல் போல வெளிச்சமிடும் அழகிய அலங்கார மின்சார விளக்குகள் அணி வகுத்திருந்தன. 'அழகான மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. முன்பக்கம் நடன அரங்கம் மிக நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் வண்ணத்திரை போடப்பட்டிருந்தது.

ஒரு கையில் மதுபானத்தையும், இன்னொரு கையில் மாதுவின் கரத்தையும் பிடித்தபடி ஓய்வாக உட்கார்ந்திருந்தனர் சில ஆண்கள். தனியாக வந்தவர்கள் மதுவை சுவைத்தபடி, 'அரங்கத்தின் வண்ணத்திரை எப்போது திறக்கும்' என்று காத்திருந்தனர்.

சீருடை அணிந்த பணியாளர்கள், தங்கள் கைகளில் மது மற்றும் மதுவிற்கு கூட்டணியான உணவு வகைகளையும் ட்ரேயில் ஏந்தியபடி உலவிக் கொண்டிருந்தனர். உணவு வகைகளில் வாசனையும், மதுவின் நெடியும் கலந்து வினோதமான மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அங்கே வந்திருந்தவர்கள், பகல் நேரப் பணிகளையும், பற்பல பிரச்னைகளையும் அறவே மறந்து, ஒரு தனி உலகத்தை உணர்ந்தனர். பணம் அங்கே மிக அட்டகாசமாய் விளையாடியது. திடீரென, வாத்ய இசை ஆரம்பித்தது. வண்ணத்திரை உயர்த்தப்பட்டது. அழகு மயிலாக, மிக ஒயிலாக அங்கே வந்து நின்று அந்த அரங்கத்திற்கு மேலும் அழகு சேர்த்தாள் கயல்விழி. கயல்விழியைக் கண்டதும் தங்கள் விழிகளை மலர்த்தி விரித்தனர் அங்கிருந்த ஆண்கள்.

பெண்களின் மனதில் பொறாமை... தீப்பொறி கனன்றது. மனைவியுடன் வந்திருந்த ஓரிரு ஆண்கள், அருகில் மனைவி இருப்பதைக் கூட மறந்து, கயல்விழியின் அழகை ரஸித்துக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒலிக்கப்பட்ட இசைக்கேற்ப மிக நளினமாக தன் நடன அசைவுகளை ஆரம்பித்தாள் கயல்விழி. இசையின் தாளலயத்திற்கு ஏற்ப மிக வசீகரமாக ஆடினாள். ஆபாசமாக இல்லாமல் கவர்ச்சிகரமாக அவள் அணிந்திருந்த உடை, அவளது மேனியின் செழுமையை வெளிப்படுத்தியதால், ஆண்களின் இதயம், அரங்கம் ஏறாமலே ஆட்டம் கண்டது. கயல்விழி, சுழன்று ஆட... ஆட... அவர்களின் மனது, அதைவிட வேகமாய் சுழன்றது. கயல்விழியின் கண்கள் அவளது பெயருக்கு ஏற்றபடி மிக அழகான மீன் போல இருந்தன. சங்கு போல் அமைந்திருந்த அவளது கழுத்து, ரோஜாப்பூ போன்ற இளம் ரோஸ் நிறத்தில் காணப்பட்ட அவளது கன்னங்கள், ப்யூட்டி பார்லரில் வடிவமைக்காமலே இயற்கையாய் அழகான வடிவில் இருந்த புருவங்கள், எடுப்பான மூக்கு, பவள வண்ண உதடுகள் ஆகியவற்றின் மொத்த உருவமாய் மிக அழகிய ரூபவதியாய் காண்போரின் உள்ளங்களைக் கிள்ளி எறிந்து கொண்டிருந்தாள். உணர்வுகளால் எரிய வைத்துக் கொண்டிருந்தாள்.

நடனம் முடிந்தது. கனவு லோகத்தில் இருந்து நினைவிற்கு மீண்ட பார்வையாளர்கள், எழுந்து கலைந்து சென்றனர். உடை மாற்றிக் கொள்ளும் அறைக்கு சென்றாள் கயல்விழி.

அறையின் வாசலில் காத்திருந்தான் ஜெயராஜ். ஜெயராஜ் மூலம்தான் 'வெண்ணிலா ஹோட்ட'லில் நடனம் ஆடும் கான்ட்ராக்ட் கிடைத்தது கயல்விழிக்கு. நடனப் பெண்மணிகளை ஸ்டார் ஹோட்டலுக்கு நடனமாடுவதற்காக ஒருங்கிணைக்கும் சிறிய ஏஜென்ஸியை, நடத்தி வந்தான் ஜெயராஜ். 'ராஜ் கோ-ஆர்டினேட்டிங்' என்ற பெயரில் அவனது ஏஜென்ஸியை அவன் மட்டுமே தனித்து நடத்திக் கொண்டிருந்தான். ஹோட்டல் நிறுவனத்திடமிருந்து கயல்விழியின் நடனத்திற்கென்று பணம் பெற்றுக் கொண்டு, அதில் இருந்து கயல்விழிக்கு ஒரு தொகையைக் கொடுத்து வந்தான்.

உடை மாற்றி, தன் முக ஒப்பனையை கலைத்துக் கொண்டபின் வெளியே வந்தாள் கயல்விழி. பணத்தை ஒரு கவரில் போட்டு, தயாராக வைத்திருந்தான் ஜெயராஜ். கயல்விழியிடம் கொடுத்தான். உள்ளே இருந்து பணத்தை வெளியே எடுத்து எண்ணினாள் கயல்விழி.

''இந்த தடவையும் போன தடவை குடுத்த அதே தொகைதான் ஜெயராஜ் குடுத்திருக்கீங்க...''

''இந்த ஹோட்டல்ல ரெகுலரா டான்ஸ் பண்றதுக்காக கூப்பிடறாங்க. அதனால கெடுபிடியா பேச முடியலை கயல்விழி...''

''ஏகப்பட்ட கெடுபிடியில இருக்கேன் நான். சமையல் வேலை செஞ்சு என்னையும் என்னோட தங்கச்சி வந்தனாவையும் கஷ்டப்பட்டு அம்மா காப்பாத்திக்கிட்டிருந்தாங்க. அம்மாவுக்கு குறுக்குவலி வந்து, அடிக்கடி வேலைக்கு லீவு போட்டதுனால அம்மாவை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. ஆனா... சும்மா சொல்லக் கூடாது... அம்மா வேலை பார்த்த வீட்டு அம்மா, எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணினாங்க. அதனாலதான் எங்க குடும்ப வண்டி குடை சாயாம ஓடுச்சு. அம்மாவுக்கு வேலை போனதுனாலயும், அவங்க படுத்த படுக்கையா ஆனதுனாலயும் என்னால படிப்பை தொடர முடியலை. வந்தனா மட்டும் படிச்சிக்கிட்டிருக்கா. அவளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். அம்மாவுக்கு மருந்து வாங்கணும். ரெண்டு மாசமா வாடகை குடுக்காம நிக்குது. அப்பாங்கற ஸ்தானத்துல பணம் சம்பாதிச்சு குடுக்காட்டாலும் பரவாயில்ல, கூடவே இருந்திருந்தா ஒரு துணையாவது இருந்திருக்கும். பொறுப்பை தட்டிக் கழிச்சிட்டு ஓடிப்போயிட்டார். நடுத்தெருவுல நாதி இல்லாம நிக்கிற சூழ்நிலையிலிருந்து என்னோட குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக வேற வழியில்லாம ஹோட்டல்ல டான்ஸ் ஆடறேன். இதுக்காக நீங்க ஹோட்டல் மேனேஜ்மென்ட்ல இருந்து வாங்கிக் கொடுக்கற பணம் ரொம்ப குறைவு ஜெயராஜ்... தனி ஒருத்தியா நின்னு குடும்பச் செலவை சமாளிக்க முடியாமதான் ஆடறதுக்கு அரங்கத்துல ஏறிக்கிட்டிருக்கேன். நீங்க ஒரு கண்ணியமான கோ-ஆர்டினேட்டர்ன்னு கேள்விப்பட்டுதான் தைரியமா இந்த வேலைக்கு வந்தேன். என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோங்க... ப்ளீஸ்...''

கயல்விழியின் கெஞ்சலான பேச்சில் மனம் இரங்கிய ஜெயராஜ், மேலும் சில ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

''தேங்க்ஸ் ஜெயராஜ்.''

''அடுத்த தடவை இங்க டான்ஸ் ஆட கூப்பிடும்போது கூடுதலா கேட்டுப் பார்க்கறேன். நாம டிமாண்ட் பண்ணினா... டான்ஸ் ஆடறதுக்கு அவங்க ஆளை மாத்திடறாங்க...''

''நீங்க நினைக்கறது தப்பு ஜெயராஜ். இந்த ஹோட்டல் மேனேஜர் கிருஷ்ணன் என்கிட்ட காலையில பேசினார். என்னோட டான்ஸ் ப்ரோக்ராம்ன்னா நிறைய கெஸ்ட் வர்றாங்களாம். அதனால 'எங்களுக்கு தேதி குடுத்தப்புறம் மத்த ஹோட்டலுக்கு தேதி குடுங்கன்னு' சொன்னார். 'எதுவா இருந்தாலும் என்னோட கோ-ஆர்டினேட்டர் ஜெயராஜ்கிட்ட பேசிக்கோங்க ஸார்'ன்னு சொல்லிட்டேன். நான் நினைச்சிருந்தா... அவர் அப்பிடி சொன்னப்பவே 'தொகையை கூட்டிக் குடுங்க'ன்னு கிருஷ்ணன்கிட்ட கேட்டிருக்கலாம். எதிலயுமே நேர்மையை கடைபிடிக்கணும்ங்கற கொள்கை உள்ளவ நான். நீங்க பார்த்து பேசி கூடுதலான பணம் வாங்கிக் குடுத்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். நீங்க சொல்லிதான் இந்த வேலை எனக்கு கிடைச்சது. சின்ன வயசுல இருந்தே டான்ஸ் மேல உள்ள ஆர்வத்துனால டான்ஸ் ஆட பழகினேன். க்ளாசுக்கெல்லாம் போக ஏது பணம்? டி.வி. பார்த்து, சினிமா பார்த்து நானாகவே ஒரு ஆர்வத்துல ஆடிக்கிட்டிருப்பேன். அந்த பயிற்சியில இன்னிக்கு என்னோட பிழைப்பு ஓடுது. இல்லை... இல்லை... ஆடுது...''

தன் கஷ்டங்களை மறந்து நகைச்சுவையாய் பேசிய கயல்விழியைப் பார்த்து இரக்கப்பட்ட ஜெயராஜ், அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

''என்னால முடிஞ்ச உதவியை செய்ய நான் தயாரா இருக்கேன் கயல்விழி. கால்டேக்ஸி வெயிட் பண்ணுது. இந்தா... டேக்ஸிக்குப் பணம். நீ கிளம்பு.''

''ஓ.கே. ஜெயராஜ். தேங்க்யூ. நான் கிளம்பறேன்.'' கயல்விழி, ஹோட்டலை விட்டு வெளியே வந்து கால்டேக்ஸியில் ஏறி கிளம்பினாள். சிறிது தூரம் போனதும் கயல்விழியின் மொபைல் ஒலித்தது. ஹேண்ட் பேகில் இருந்து மொபைல் ஃபோனை எடுத்து காதில் பொருத்தியபின் பேச ஆரம்பித்தாள் கயல்விழி.

''ஹாய் சரிதா... என்ன இது... இந்த நட்டுநடு ராத்திரியில எனக்கு ஃபோன் பண்றே? உன்னோட ஹஸ்பெண்ட் அபிலாஷ் கோவிச்சுக்க மாட்டாரா?''

''அவர் ஏன் கோவிச்சுக்கப் போறார்? நம்பளோட நெருக்கமான நட்பைப் பத்தி அவருக்குத் தெரியாதா என்ன? அது சரி... டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டியா? ''

''ம்கூம். கால்டேக்ஸியில் போய்க்கிட்டிருக்கேன்...''

''ஏன்? கைடேக்ஸி கிடைக்கலியா...?''

''ஏய்... மொக்கை போடற... ரொம்ப கடிக்கற...?''

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

''இவ்வளவு சத்தமா சிரிக்கறியே... அபிலாஷ்... முழிச்சுக்கப் போறார்...''

''அவர், தூங்கும்போதுகூட மனசுக்குள்ள ஏதாவது ஒரு ட்யூனை கம்போஸிங் பண்ணிட்டிருப்பார்...''

''பின்னே... இன்னிக்கு அவர்தானே டாப்ல இருக்கற ம்யூஸிக் டைரக்டர்? புகழ் பெற்ற ம்யூசிக் டைரக்டர் அபிலாஷேரட சம்சாரமே... காலையில பேசலாமே...?''

''ஏன்? நான் பேசறது உனக்கு தொந்தரவா இருக்கா?''

''சச்ச... அபிலாஷேரட தூக்கத்துக்கு தொந்தரவா இருக்குமேன்னுதான் சொன்னேன். உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவேன்? நாலு வயசுல இருந்து இருபது வருஷமா ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். உயிருக்குயிரா பழகறோம்... உன் கூட பேசறதுதான் என்னோட மனசுக்கு ஆறுதலா இருக்கு...''

''நீ ஏதாவது ஒரு ப்ரொபஃஷனல் கோர்ஸ் படிச்சிருந்தா... அபிலாஷேரட சிபாரிசுல பெரிய கம்பெனியில வேலை வாங்கிக் குடுத்திருப்பார். உங்கப்பா வீட்டை விட்டு போனப்புறம், உங்கம்மாவுக்கும் உடம்பு முடியாமப் போனதுனால உன்னால படிக்க முடியாம போயிடுச்சு. இப்பவும் நான் சொல்றேன். அபிலாஷ்க்கு இருக்கற வசதிக்கு உனக்கு வேண்டிய மட்டும் பண உதவி செய்ய முடியும். ஏதாவது ஃபேன்ஸி ஷாப் வச்சுக்கலாம்ன்னு ஏற்கனவே நான் சொன்னேன். நீதான் கேட்க மாட்டேங்கற...''

''நட்புக்கு நடுவுல இந்த பணம்ங்கற நாகப்பாம்பு நுழைஞ்சுட்டா... அதோட விஷத்தைக் கக்கி, நம்ம நட்பை முறிச்சுடும். பொருளாதார வசதியைவிட நட்பைத்தான் நான் பெரிசா நினைக்கிறேன்.''

''நமக்குள்ள அப்பிடி என்ன பெரிசா பிரச்னை வந்துடப்போகுது? நீ ஏன் இப்பிடி பேசற...?''

''நம்ப நட்பு நம்பளோட மரணம் வரைக்கும் நீடிக்கணும். அந்த நல்ல எண்ணத்துலதான் நான் பேசறேன். எனக்கு ஒரு உதவின்னு தேவைப்பட்டா உன் கிட்டதான் கேட்பேன். வேற யார் இருக்கா எனக்கு?''

''உனக்கு என்ன உதவி வேண்ணாலும் செய்யக் காத்திருக்கேன். அபிலாஷேரட சிபாரிசுல சினிமாவுல நடிக்கச் சொன்னா... அதுவும் மாட்டேங்கற...''

''ஒரு படத்துக்கு நாப்பது நாள் கால்ஷீட் வாங்கிக்கிட்டு நாலு நாள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும். மீதி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச்சொல்லி சும்மா உட்கார வைப்பாங்க. எனக்கு சினிமாவுல நடிக்கறதுக்கு துளிகூட ஆர்வம் இல்லை சரித். டான்ஸ்... டான்ஸ்... டான்ஸ்தான் எனக்கு சின்ன வயசுல என் மனசுல பதிஞ்சு போன ஓர் ஆர்வம். தற்செயலா... நான் விரும்பின அந்த டான்ஸ் துறையிலயே என்னோட வாழ்க்கைப் படகு போறதுல எனக்கு திருப்திதான். ஒரே ஒரு சின்ன குறை என்னன்னா... பல பேர் கூடி இருக்கற நாட்டிய மேடையில ஆடாம பல பேர் ரசிக்கற ஹோட்டல் அரங்கத்தில ஆடறதுதான். ஆனா ஒரு விஷயம் ஆறுதலா இருக்கு. நான் டான்ஸ் ஆடப் போற எல்லா ஹோட்டல்லயும் உடை விஷயத்துல என்னை வற்புறுத்தறது இல்லை. கண்ணியக் குறைவான உடைகளை ஆட்சேபித்து, போட்டுக்க மறுத்தா... அவங்க அதை ஏத்துக்கறாங்க... கெட்ட விஷயங்கள்ல்லயும் நல்ல விஷயங்கள் நடக்கற மாதிரி... என்னோட மனோபாவத்துக்கு, இந்த மாதிரி சில விஷயங்கள் நல்லபடியா நடக்குது...''

''உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும். அது சரி... நாளைக்கு உனக்கு என்ன வேலை இருக்கு...?''

''கலைஞர் டி.வி.யில வர்ற 'ரோஸ் நேரம்' நிகழ்ச்சியில கலந்துக்கச் சொல்லி கேட்டிருந்தாங்க. நாளைக்கு ஷூட்டிங் இருக்காம். வரச் சொல்லி இருக்காங்க...''

''வெரிகுட். சின்னத்திரையில உன்னைப் பார்த்துட்டு பெரிய பெரிய டைரக்டர்ஸ் பெரிய திரைக்குக் கூப்பிடப் போறாங்க பாரு.''

''அம்மா தாயே. எவ்ளவு பெரிய டைரக்டர் நடிக்கக் கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் தாயே. ஆளை விடு...''

''சரி சரி. நீ ஒண்ணை நினைச்சுட்டா விட மாட்டியே...''

''ஆமாமா. நான் உன்னை நினைச்சவ. விட்டுருவேனா என்ன...?'' சரிதா சிரிக்க, கயல்விழியும் சிரித்து மகிழ்ந்தாள்.

''ஏய் சரித்... போதும். நீ தூங்கு. பாவம் அபிலாஷ்.''

''ஓ.கே. குட்நைட்...''

''குட்நைட்.''


கயல்விழி பயணித்துக் கொண்டிருந்த கால் டேக்ஸி, கயல்விழியின் வீட்டை நெருங்கியதும் நின்றது. டிரைவருக்கு பணம் கொடுத்தபின் வீட்டினுள் சென்றாள் கயல்விழி. தூங்காமல் காத்துக் கொண்டிருந்த வந்தனாவை கடிந்து கொண்டாள்.

''என்கிட்டதான் வீட்டு சாவி இருக்கே வந்தனா, நீ ஏன் தூங்காம இருக்க...? இவ்ளவு நேரமாச்சே...''

''பரீட்சைக்கு படிச்சுக்கிட்டிருந்தேன்க்கா...''

''சரி வந்தனா. நீயாவது நல்லா படி. நான் படிக்காத படிப்பையெல்லாம் சேர்த்து நீ படிக்கணும். உன்னோட படிப்புக்காக நான் செலவு செய்யறேன். நல்ல மார்க் வாங்கினா... ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.''

''சரிக்கா. நான் நல்லா படிச்சு உன்னை சந்தோஷப்படுத்துவேன்...''

''அது சரி, அம்மாவுக்கு மாத்திரை குடுத்துட்டியா?''

''குடுத்துட்டேன்க்கா... தூக்க மாத்திரையும் சேர்த்து குடுத்துருக்கறதுனால அசந்து தூங்கறாங்கக்கா.''

''சரி வந்தனா. நீ போய் தூங்கு...''

''தூக்கம் வரலைக்கா...''

''என்னது? நடுராத்திரி ரெண்டு மணிக்கு மேல ஆச்சு... தூக்கம் வரலையா?''

''ஆமாக்கா... பரீட்சைக்கு மும்முரமா படிக்கற வரைக்கும் கஷ்டம் தெரியலை. படிச்சு முடிச்சதும் நீ... எங்களுக்காக ராத்திரி... பகல் பார்க்காம உழைக்கறதை நினைச்சு ரொம்ப வேதனையா இருக்குக்கா. நீ ஒருத்தி இல்லைன்னா...''

''நான்தான் இருக்கேனே... நீ ஏன் கவலைப்படறே? என்னால படிக்க முடியலைன்னுதான் உன்னைப் படிக்க வைக்கிறேன். என்னைப் படிக்க வைக்க எனக்கு ஒரு அண்ணனோ... அக்காவோ இல்லை. உனக்கு நான் இருக்கேன். அதைப் பத்தி கவலைப்பட்டு... மனசை அலைபாய விடாம படிக்கறதைப் பத்தி மட்டும் யோசி. வேற யோசனையே இருக்கக் கூடாது. போம்மா வந்தனா... போய் படுத்துக்க. நிம்மதியா தூங்கு.''

கண்ணீர் துளிகள் பனித்திருந்த வந்தனாவின் கண்களைத் துடைத்துவிட்டாள் கயல்விழி. அவளது கைகளைப் பிடித்துக் கொண்ட வந்தனாவை அணைத்துக் கொண்டாள். பாசமலர்களாய் இருவரும் கட்டுண்டனர்.


அழகிய நீல வண்ணக் காரில் இருந்து இறங்கினான் அபிலாஷ். ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்றான். அவனுக்காக வாத்திய இசைக் கலைஞர்கள் காத்திருந்தனர். அன்றைய பாடல் பதிவிற்கான 'நோட்ஸை' அவர்களுக்குக் கொடுத்தான். நீண்ட நேரம் பயிற்சி கொடுத்தான். அவனுக்கு திருப்தி ஏற்படும் வரை இசைக்க வைத்தான்.

பாடலுக்கு இடையே வரும் பின்னணி இசையையும், பாடலுக்குப் பின்னால் வரும் வாத்ய இசையையும் பதிவு செய்து முடிப்பதற்குள் மதிய உணவு இடைவேளை வந்தது.

குறிப்பிட்ட அந்தப் பாடலைப் பாடுவதற்காக அந்தப் படத்தின் கதாநாயகி மாலா வந்திருந்தாள். அபிலாஷிற்காக சரிதா, மதிய உணவை எடுத்து வந்தாள். அவள் ஸ்டூடியோவிற்குள் நுழையும் பொழுது, மாலாவும், அபிலாஷூம் பேசிக் கொண்டிருந்தனர்.

'அபிலாஷ் ஸார்... உங்களோட பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கு. உங்க கம்போஸிங்ல வர்ற எல்லா பாட்டுமே கேக்கறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு. 'நிலவு காயும் நேரம்' படத்துல 'இரவு... நிலவு... கனவு... வரவு'...ங்கற பாட்டு செமயா இருக்கு. 'யங் ஜெனரேஷனு'க்கு பிடிச்ச மாதிரி இசை அமைச்சு கலக்கறீங்க அபிலாஷ் ஸார்... நீங்க இந்த சின்ன வயசுலயே பெரிய அளவுல 'ஹிட்' ஆயிட்டிங்க. நீங்களே ஒரு ஹீரோ போல ஹேண்ட்ஸமா இருக்கீங்க. நீங்க படத்துல நடிக்கலாமே...?''

அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சரிதாவிற்கு எரிச்சலாக இருந்தது. தன் உயிர் கணவன் அபிலாஷூடன் வேறு ஒரு பெண், பொதுவாகப் பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தாள். சரிதாவைப் பார்த்த அபிலாஷ், முகம் மலர்ந்தான். காலையில் பார்த்து விட்டு வந்த அதே சரிதாவை, மதிய உணவு வேளையில் பார்க்கும் பொழுது, ஏதோ நீண்ட நாட்கள் பார்க்காமல் இருந்து பார்ப்பது போல, மிகவும் மகிழ்ச்சியானான்.

மாலாவை சரிதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

''இவங்க மாலா. புதுசா வந்திருக்கற கதாநாயகி...'' என்றவன், மாலாவிடம் ''இவங்க மிஸஸ் சரிதா அபிலாஷ். என்னோட அன்பு மனைவி'' என்று சரிதாவை மாலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

''ஹாய் மேடம்...''

''ஹாய்...'' ஏதோ கடனே என்று ஹாய் சொல்லி வைத்தாள் சரிதா. ஆனால் மாலா மடை திறந்த வெள்ளம் போல் பேசினாள்.

''மேடம்... நீங்க ரொம்ப லக்கி மேடம். நம்பர் ஒன் ம்யூசிக் டைரக்டரோட மனைவிங்கறது சாதாரண விஷயம் இல்லை. நீங்களும் அபிலாஷ் ஸாரை மாதிரி அழகா இருக்கீங்க...''

இதைக் கேட்ட சரிதா, மேலும் கோபம் அடைந்தாள். தன் உணர்வுகளை மறைத்து, செயற்கையாய் புன்னகைத்தாள். சரிதா, அபிலாஷிற்கு சாப்பிடுவதற்காக எடுத்து வைப்பதைப் பார்த்த மாலா, அங்கிருந்து நகர்ந்தாள்.

''நீங்களும் சாப்பிடுங்க மாலா...'' அபிலாஷ் உபசரித்தான்.

''வேண்டாம் ஸார். நான் ஸோயா டயட்ல இருக்கேன். கார்ல என்னோட லன்ஞ்ச் பாக்ஸ் இருக்கு. என்னை மாதிரி நடிக்க வர்றவங்களெல்லாம் உணவுக் கட்டுப்பாடா இருக்கறது முக்கியமாச்சே. வெயிட் கூடிருச்சுன்னா அக்கா, அண்ணி வேஷம்தான் குடுப்பாங்க. நீங்க சாப்பிடுங்க ஸார். உங்க மனைவி உங்களுக்காக ஸ்பெஷலா கொண்டு வந்திருக்காங்க...'' என்று கூறிய மாலா, நாசூக்காய் அங்கிருந்து வெளியேறினாள்.

அதன்பின் அபிலாஷிற்கு சாப்பாட்டு வகைகளை பரிமாறினாள் சரிதா. சரிதாவின் மனநிலையை புரிந்து கொள்ளாத அபிலாஷ், வழக்கம் போல கலகலவென பேசினான். அவன் சாப்பிட்டு முடித்ததும் டிபன் கேரியரை எடுத்துக் கொண்டு காரில் வைத்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தாள் சரிதா.

அதே சமயம் ஸ்டூடியோவினுள் ரிக்கார்டிங்கிற்காக 'ஸ்டார்ட்' சொல்லப்பட்டது.


கலைஞர் தொலைக்காட்சி அலுவலக வளாகம், ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 'ரோஸ் நேரம்' நிகழ்ச்சிக்குரிய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தாள் கயல்விழி. இயக்குநர், அவளிடம் அன்றைய படப்பிடிப்பிற்குரிய ஸ்க்ரிப்ட் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். கவனமாக கேட்டுக் கொண்டாள் கயல்விழி.  படப்பிடிப்பு துவங்கியது.

கயல்விழியிடம் கேள்விக் கணைகளை வீசினார் ரோஸ்.

''இரவு நேரத்துல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டான்ஸ் ஆடற இந்த வேலை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?''

''சின்ன வயசுல டான்ஸ் ஆடறதுல எனக்கு விருப்பமும் ஆர்வமும் அதிகமா இருந்துச்சு. ஆனா... முறைப்படி கத்துக்க பொருளாதார வசதி இடம் கொடுக்கலை. வறுமையின் கொடுமைக்காக ஹோட்டல்ல டான்ஸ் ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு. ஆசைப்பட்ட நாட்டியக்கலை... பின்நாள்ல்ல... அத்தியாவசியமான தேவைக்காக என்னோட வாழ்க்கையோட ஐக்கியமாயிடுச்சு...''

''அப்பிடின்னா... ஹோட்டல்ல டான்ஸ் ஆடற இந்த வேலை உங்களுக்குப் பிடிக்கலையா?''

''பிடிக்காம போனதுக்கு பல காரணங்கள் இருக்கு. டான்ஸை நான் ஒரு கலையா மதிச்சு ஆடறேன். ஆனா டான்ஸை பார்க்கறவங்களோட கண்ணோட்டத்துல வக்கிரம் தலைவிரிச்சு ஆடுது. பல் ஆட்டம் கண்ட கிழவர்கள் கூட கீழ்த்தரமான ரஸனையிலதான் என்னோட ஆட்டத்தைப் பார்க்கறாங்க, அவங்க பார்க்கறது என்னோட டான்ஸை மட்டுமில்ல... அதையெல்லாம் சகிச்சிக்கிட்டுதான் ஆட வேண்டியாதிருக்கு...''

''கௌரவமான, பெரிய... ஸ்டார் ஹோட்டல்லதானே ஆடறீங்க...?''

''ஹோட்டல்ஸ், ஃபைவ் ஸ்டார் தரமா இருக்கலாம். கௌரவமானதா இருக்கலாம். ஆனா வர்றவங்க?''

''ஏன் நீங்க வேற வேலைக்கு முயற்சி செய்யலை?''

''இளமையில் வறுமைதான் மிகவும் கொடியதுன்னு ஒளவையார் பாடினாங்க. வறுமை... என்னோட வளமான கல்விக்கு வழி வகுக்கலை... முடியாத ஒரு விஷயமா இருந்தது என்னோட உயர் கல்வி. அதனால என்னால முடிஞ்சதை செஞ்சு, வறுமையின் சிகப்பு நிறத்தைக் கொஞ்சம் செழிப்பாக்கலாமேன்னு இந்த வேலைக்கு வந்துட்டேன். செய்யற எந்த வேலையா இருந்தாலும் என்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராத பட்சத்துல அதில முழு கவனத்தோட ஈடுபடுவேன்...''

''ஹோட்டல்ல டான்ஸ் ஆடறதுனால உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கா?''

''நான் உண்டு... என்னோட வேலை உண்டுன்னு இருக்கற சுபாவம் எனக்கு. குறிச்ச நேரத்துக்கு டான்ஸ் ஆடப்போவேன். ப்ரோக்ராம் முடிஞ்சதும் என்னோட சம்பளத்தை வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டே இருப்பேன். இதையும் மீறி, ஒரு பெண்ணான எனக்கு சில நபர்கள் தொந்தரவு குடுத்திருக்காங்க. அவங்க நினைக்கற மாதிரி, நான் 'அப்படிப்பட்ட பொண்ணு' இல்லைன்னு பொறுமையா சொல்லுவேன். என் பொறுமையை சோதிச்சாங்கன்னா... கடுமையா பேசிடுவேன். என்னோட ஏழ்மை காரணமா... என்னோட பெண்மையை அவமதிச்சா... அதை என்னால தாங்கிக்கவே முடியாது. வார்த்தைகளாலேயே சவுக்கடி குடுத்துடுவேன். பெண்கள்ன்னா... போகப் பொருட்கள்ன்னு ஆண் இனம் நினைக்கறதை எதிர்க்கறவ நான்.''

''உங்க டான்ஸை பார்க்கறதுக்கு எத்தனை வயசுல உள்ளவங்க வர்றாங்க?''

''இளைஞர்கள் ரொம்ப குறைவு. நடுத்தர வயதினரும், வயது முதிர்ந்தவங்களும்தான் பெரும்பாலும் வர்றாங்க. மனைவியோட வர்றவங்க, மனைவி இல்லாத பிற பெண்களோடு வர்றவங்களைவிட, தனியா... மதுவின் துணையோட வர்றவங்கதான் அதிகம். தங்களோட மகள் வயசுல இருக்கற என்னை கண்ணாலயே கற்பழிக்கற கிழடுகளும் வரும். அவங்களோட கண்லயும்,  புத்தியிலயும் நான் ஒரு பெண் அப்பிடிங்கற காம உணர்வுதான் இருக்குமே தவிர இந்த வயசுல தனக்கு ஒரு மகள் இருக்கறாங்கற நினைப்பெல்லாம் அவங்களுக்கு இருக்காது. 'நீ இல்லாட்டி இன்னொருத்தி'ன்னு ஆசையை அசை போட்டுக்கிட்டு... ஆடு... மாடு... மாதிரி போய்க்கிட்டே இருப்பாங்க. ஆடம்பரமான செலவுகளுக்காக, இந்த மாதிரி நபர்கள்ட்ட தங்கள் மானத்தை விட்டுக் கொடுக்கற பெண்களும் இருக்காங்க. அத்தியாவசியமான தேவைகளுக்கு தங்களோட பெண்மையை பலி கொடுக்கற பெண்களும் இருக்காங்க. முன்னே சொன்ன பெண்கள் கண்டனத்துக்கு உரியவர்கள். பின்னால் சொன்ன பெண்கள், பரிதாபத்துக்குரியவர்கள்...''

''சமூகத்துல இதுபோல பிரச்னைகளை சந்திக்கற பெண்கள் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?''

''இயற்கையா செடியில மலர்ந்திருக்கிற அழகான பூவை பல பேர் தொட்டுப் பார்ப்பாங்க. முகர்ந்து பார்ப்பாங்க... இறைவன் படைச்சு, இந்த பூமியில் பிறந்து, பெண்ணா மலர்ந்திருக்கற ஒரு பாவையை பல பேர் தொட்டுப் பாக்கலாமா? பார்த்து ரஸிக்கலாமா? இது பத்தி, பெண்ணாசை பிடிச்சு அலையற ஆண்கள் சிந்திக்கணும். இப்படிப்பட்ட ஆண்களுக்கு இடம் குடுக்கற பெண்களும் சிந்திக்கணும். எங்கேயும், எப்பவும் பெண்கள், அவங்க பழகற விதத்துலதான் மத்தவங்க எடை போடுவாங்க. ஒழுக்கமா இருக்கணும்னு தீவிரமான தீர்மானத்துல இருந்தா... தன்மானத்தை விட்டுக் குடுக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது.''

''நீங்க... ஹோட்டல்ல டான்ஸ் ஆடறதைப் பத்தி உங்க குடும்பத்தினரும், உங்க உறவினர்களும் என்ன நினைக்கறாங்க?''

''நடு இரவு நேரத்துல வீடு திரும்பும்போது, தூங்காம முழிச்சுட்டிருக்கற தங்கச்சிக்கு தெரியும் நான் ஹோட்டல்ல ஆடினாத்தான் எங்க குடும்ப வண்டி ஓடும்னு. உடம்பு சரி இல்லாம படுத்து இருக்கற என்னோட அம்மா, வைத்தியத்துனால உடம்பு தேறி, என்னோட கஷ்டத்துல ஒரு சின்ன பங்காவது எடுத்துக்கணும்னு துடிச்சிக்கிட்டுருக்காங்க. மத்தபடி சில உறவினர்கள், தூரத்து சொந்தக்காரங்களெல்லாம் என்னோட இந்த இரவு நேர டான்ஸ் வேலையை இழிவாத்தான் நினைக்கறாங்க.  என்னை கண்ணிய குறைவா நினைக்கற அவங்களா... என் கண்ல கண்ணீர் வழியும் போது துடைக்கப் போறாங்க? அவங்களா என் தங்கைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு முன் வருவாங்க? அவங்களா எங்க அம்மாவுக்கு மருந்து வாங்கித்தர நானாச்சுன்னு உதவிக்கரம் நீட்டறாங்க? என்னைப் பார்த்தாலே 'எங்க இவ பணம்... கிணம் கேட்ருவாளோ'ன்னு பயந்து ஓடறவங்கதான் அவங்க. யார் இழிவா பேசினாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. நான் சுத்தமானவ. என் மனசு சுத்தமா இருக்கு. என்னோட இந்த டான்ஸ் ஆடற வேலை ஒரு வேலை மட்டுமில்ல அது ஒரு கலையும் கூட. அப்படித்தான் நான் மதிக்கிறேன். வேற யார் என்ன நினைச்சாலும் எனக்கென்ன அதைப்பத்தி...?''

''பெண்களுக்கு நீங்க சொல்லக் கூடிய அறிவுரை?''

''என்னோட அனுபவங்கள் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கு, பெண்களுக்கு கல்விதான் முக்கியம். பெண்கள் சொந்தக்கால்ல நிக்கறதுக்குரிய மனதிடத்தையும் பொருளாதார வளத்தையும் கொடுக்கறது கல்விதான். உயர்கல்வி இருந்தா வாழ்க்கையில உயரலாம். தலை நிமிர்ந்து வாழலாம்.''

மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குரிய பதில்களை திறமையாகக் கூறிக் கொண்டிருந்தாள் கயல்விழி. ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினாள்.


ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தின் இருபத்தி ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவிற்கு 'வெண்ணிலா ஃபைவ் ஸ்டார்' ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். விழாவில், இன்சுவை விருந்துடன் கண்கள் ரஸிப்பதற்கும் நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். ஜெயராஜ் இதற்காக கயல்விழியை சந்தித்தான்.

''பெரிய கம்பெனியோட வெள்ளி விழா. 'வெண்ணிலா ஹோட்டல்'லதான் நடக்கப் போகுது. வழக்கம் போல டான்ஸ் ப்ரோகிராமுக்கு உன்னைக் கேக்கறாங்க, வழக்கத்தைவிட அதிகமான தொகை தர்றதுக்கும் சம்மதிச்சிருக்காங்க. கன்ஃபர்ம் பண்ணிடட்டுமா கயல்விழி?''

''ஓ. யெஸ். வர்ற மாசம் எட்டாந்தேதிக்குள்ள வந்தனாவுக்கு எக்ஸாம் பீஸ் கட்டணும். அம்மாவுக்கு மருந்து முடிஞ்சு போச்சு. மருந்து வாங்கணும். அவங்களுக்கு குறுக்கு வலிக்காம இருக்கறதுக்கு ஸ்பெஷல் படுக்கை ஒண்ணு வாங்கச் சொல்லி இருக்கார் டாக்டர். இந்த வாரம் தொடர்ச்சியா ப்ரோகிராம் இருந்தாதான் அடுத்த மாதம் முதல் வாரம் உள்ள செலவுகளை சமாளிக்க முடியும்.''

''சரி கயல்விழி. மூணாந்தேதின்னு குறிச்சு வச்சுக்கோ.''

ஜெயராஜ் கிளம்பினான்.


வெண்ணிலா ஹோட்டலில் தனியார் நிறுவனத்தின் வெள்ளி விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ட்ரேயில் கண்ணாடி க்ளாஸ்கள் உரசும் ஓசையும், சிலரது உரக்கப் பேசி சிரிக்கும் ஒலியும் கலந்து காற்றில் மிதந்தது. விஸ்கியையும், பிராந்தியையும் குடித்து விட்டு போதையில் மிதந்து கொண்டிருந்தனர் சிலர்.

கயல்விழியின் நடனம் ஆரம்பித்தது. அவளது நடன நிகழ்ச்சியுடன் வெள்ளி விழா நிறைவுற்றது. அனைவரும் கலைந்தனர். அந்த நிறுவனத்தின் அதிபர் அருண்விஜய்திலக் மட்டும் ஜெயராஜூடன் பேசிக் கொண்டிருந்தார்.

அருண்விஜய்திலக், சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களுள் ஒருவர். ஐம்பது வயது நிறைவடைந்தவர் எனினும் இளமை குறையாத தோற்றத்துடன் காணப்பட்டார். அவரது உடை, ஷர்ட் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பேனா மற்றும் கண் கண்ணாடி ஃப்ரேம் ஆகியவை அவரது செல்வச் செழிப்பை அடையாளம் காட்டின. எல்லா விதத்திலும் ஒரு சிறந்த மனிதர் எனும் பெயர் பெற்றிருந்த அவர், பெண்கள் விஷயத்தில் மட்டும் சபலப்படும் இயல்பு உடையவராய் இருந்தார். கயல்வழியைப் பார்த்ததிலிருந்து அவளது நடனத்தை ரஸித்தது மட்டுமல்லாமல் அவளையே ருசித்துப் பார்க்கும் ஆவலில் இருந்தார்.

''மிஸ்டர் ஜெயராஜ்... மிஸ் கயல்விழியை சந்திச்சு, அவங்களோட டான்ஸை பாராட்டணும்னு நினைக்கறேன்...''

''மேக்கப் ரூம்ல இருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸார், அவங்களை கூட்டிட்டு வரேன். அருண்விஜய்திலக்கை உட்கார வைத்து விட்டு கயல்விழியை அழைத்து வந்து அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

''மிஸ் கயல்விழி... உங்க டான்ஸ் பிரமாதம். அழகா... நளினமா ஆடறீங்க...''

''தேங்க்ஸ் ஸார்...''

''ஸார்ன்னு கூப்பிடாம அருண் அப்பிடின்னு கூப்பிடுங்களேன்... சின்ன வயசுலயே டான்ஸ் கத்துக்கிட்டிங்களா...?''

''எங்க குடும்ப சூழ்நிலையினால, டான்ஸ் க்ளாசுக்கு போகலை. பிழைப்புக்காக... ஹோட்டல்ல டான்ஸ் ஆடறேன்...''

''உங்களுக்கு என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நான் காத்திருக்கேன்...''

''தேங்க்யூ... நான் கிளம்பறேன்...''

''மிஸ் கயல்விழி... ஒரு நிமிஷம்... உங்க டான்ஸ் மட்டுமில்ல... நீங்களும் அழகா இருக்கீங்க... உங்க அழகுக்கு நான் அடிமை. நீங்க சம்மதிச்சா... சம்மதிச்சா... நான்...''

''நான் சம்மதிச்சா... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா...?''

''அ... அ... அதில்லை... நான் கல்யாணம் ஆனவன்...''

''அப்போ...? உங்க மனைவி சம்மதிச்சா... என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா...?''

கயல்விழி கேட்ட கேள்விக்கு மிகவும் அதிர்ச்சி அடைந்தார் அருண்விஜய்திலக்.

''இ... இ... இல்லை... அது வந்து...''

''நான் சம்மதிச்சா... என்னை... சும்மா... 'வச்சு'க்கப்போறீங்க? அப்படித்தானே?...''

''.............''

அருண்விஜய் திலக்கின் மௌனத்தை தன் கோபத்தால் உடைத்தாள் கயல்விழி.

''மிஸ்டர் அருண்விஜய்திலக்... உங்க பேரை சொன்னா சென்னையில எல்லாருக்கும் தெரியக்கூடிய ஒரு பிரபலம் நீங்க. உங்களுக்குத் தெரியாத விஷயம்... பெண்களை மதிக்கணும்ன்னு. நாலு பேர் முன்னால டான்ஸ் ஆடறவள்ன்னா... நாலு பேர்கூட படுத்துக்க சம்மதிப்பாள்ன்னு நீங்க எடை போட்டுடாதீங்க... நம்ம சமூகத்துல பெண்கள்ன்னா இளப்பமா நினைக்கறது... ஒரு வியாதியாவே ஆயிடுச்சு. ராக்கெட்டையே இயக்கற அளவுக்கு பெண்கள் சாதிச்சாலும் கூட ராத்திரி நேரப் பறவைகளாத்தானே மதிப்பிடறீங்க? ஏழ்மையில உழலற அழகான பொண்ணுன்னா... அழைச்சதும் உங்க அந்தரங்க அந்தப்புரத்துக்கு வந்துடுவாள்ன்னு இழிவா நினைச்சுடறீங்க... உங்களுக்கு மனைவி, மகன்... மகள்னு பல பேர் சொந்த பந்தமா இருக்கலாம். உங்க மனைவியையோ, மகளையோ, இப்பிடி ஒருத்தன் கூப்பிட்டா...? நான் இப்பிடி கேட்கும்போதே... உங்க ரத்தம் சூடேறுதில்ல? எங்க ரத்தமும் சுத்தமானதுதான். என் குடும்பமும் கண்ணியமான குடும்பம்தான். நல்ல பெண்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் ரெண்டு கண்கள் மாதிரி... உங்க விரலை வச்சு உங்க கண்ணை நீங்களே குத்திக்கலாமா? ஏழ்மையில கஷ்டப்படறவதானே... கேள்வி கேட்க ஆள் இல்லாதவதானே... கூப்பிட்டா வந்துருவா... தொட்டா ஒட்டிக்குவாள்ன்னு தப்புக் கணக்கு போடாதீங்க. உங்க மகளை வயசுக்கோளாறுல எவனாவது லேஸா கிண்டல் பண்ணினா கூட 'ஈவ்டீஸிங்'ன்னு ஏழு வருஷம் 'உள்ளே' தள்ள ஏற்பாடு பண்ணுவீங்க. ஆனா... அந்நியப் பெண்கள்ன்னா அந்யோன்யமா பழகிடுவாள்ன்னு... அநியாயமா... இப்பிடி அலையறீங்க... ஒட்டு மொத்தமா ஆண்களை மட்டுமே குறை சொல்ல முடியலை. இதுக்குக் காரணம்... சில பெண்கள், ஆண்களுக்கு தங்களோட அழகை... உடம்பை... தன்மானத்தை... விட்டுக் குடுத்துடறாங்க.

ஒரு சில பெண்கள் அப்படிப்பட்ட மனோபாவத்துல இருக்கிறத வச்சு... எல்லாரையும்... இருட்டுல பழகற இன்ப ராணிகள்ன்னு இளக்காரமா நினைக்கறது தப்பு. பெண்களை ஆற்றல் மிக்கவள், சக்தி மிக்கவள்ன்னு ஆகோ ஓஹோன்னு உயரத் தூக்கி புகழாட்டா கூட பரவாயில்லை... அவளை கீழே போட்டு மிதிச்சு கீழ்த்தரமா நடத்தாம இருந்தா அதுவே போதும்...'' படபடப்புடன் பேசிய கயல்விழிக்கு மூச்சிறைத்தது.

''ஸாரி... வெரி... ஸாரி...''

''அறிவின் பலத்தால பெரிய புகழ் அடைஞ்சு பிஸினஸ் மேக்னெட்ன்னு பேர் எடுத்திருக்கற நீங்க, பெண்ணாசைங்கற பலவீனத்தால 'சபலிஸ்ட்'ங்கற இமேஜ்க்கு ஆளாயிட்டீங்க. எங்கப்பா ஓடிப்போனப்புறம் எங்க அம்மா, உடல் தேய உழைச்சு, அடுப்படியில வெந்தாங்க. அதிலயும் சோதனை... அவங்களுக்கு குறுக்கு வலி வந்து, படுத்த படுக்கையா ஆகிட்டாங்க. அவங்க என்னிக்கு படுத்தாங்களோ... அன்னிக்கு நான் எழுந்திருச்சேன். அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் சுயமா... என்னோட சொந்தக் கால்கள்ல்ல நின்னுக்கிட்டிருக்கேன். யாரையும் எதிர் பார்க்காம எதிர்நீச்சல் போட்டு வாழற எனக்கு திமிர் உண்டு. வாழ்க்கைங்கறது ஒரு நீண்ட, நெடுந்தூரப் பிரயாணம். இதில எதையோ அடையறோம்... எதையோ இழக்கறோம்... எல்லாத்தையும் சமாளிச்சு ஒரு சவாலா வாழறதுலதான் நாம படற கஷ்டங்களை கொஞ்சம் மறக்க முடியுது. 'லைஃப் இஸ் எ சேலன்ஞ்!' இது என்னோட வாழ்க்கைக்கு பொருத்தமா இருக்கு. என்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராத எந்த வேலையும் செய்யலாம்ங்கற எண்ணத்துலதான்... எனக்குத் தெரிஞ்ச இந்த டான்ஸ் ஆடற வேலைக்கு வந்தேனே தவிர, தன்மானத்தை வித்து, வெகுமானங்களை அடையறதுக்காகவோ... என்னோட அழகை மூலதனமா வச்சு பெரும் பணம் சம்பாதிக்கணும்ங்கற இழிவான எண்ணத்துக்காகவோ இல்லை. உங்க மனசுல நீங்க கேக்கணும்னு நினைச்சதை ஓப்பனா கேட்டுட்டீங்க. என் மனசுல நினைச்சதை நான் பேசிட்டேன். குட்பை...'' அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் கயல்விழி.


ரிக்கார்டிங் முடிந்து, வீட்டிற்கு திரும்பியிருந்தான் அபிலாஷ்.

''இன்னிக்கு ரெக்கார்ட் பண்ணின பாட்டு பிரமாதம் சரித்...''

''ம்... ம்...''

''கவிஞர் எவ்ளவு அற்புதமா வார்த்தைகள்ளல்ல விளையாடி இருக்கார் தெரியுமா? அத்தனையும் வைரவரிகள்!''

''ம்... ம்...''

''என்ன சரித்... எதுக்கெடுத்தாலும் 'உம்' கொட்டிக்கிட்டிருக்க? நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்? என்ன ஆச்சு உனக்கு?''

''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு...''

''என்னது?! எனக்கா...?''

''ஆமா... உங்க இசை அமைப்பை புகழறதுக்கு அந்த புது நடிகை மாலாவை ரிக்கார்டிங் ஸ்டுடியோ வரைக்கும் வர்றதுக்கு அனுமதிச்சிருக்கீங்களே... அதைச் சொன்னேன்...''

''சீச்சி... அவ என்னை பாராட்டறதுக்கு வரலைம்மா... 'அந்த மாலாவுக்கு நல்ல குரல் வளம்... அவளை ஒரு பாட்டு பாட வைங்க'ன்னு டைரக்டர் சொன்னார். வாய்ஸ் டெஸ்ட் எடுத்தேன். எனக்கு திருப்தியா இருந்துச்சு. அதனால பாடல் பதிவுக்கு அவளை வரச்சொல்லி இருந்தேன். 'ஸாங் ரிக்கார்டிங்'காகக்தான் அவ வந்திருந்தா. ஏற்கனவே ம்யூசிக் ட்ரூப்ல பாடிக்கிட்டிருந்திருக்கா அந்தப் பொண்ணு... ''

''என்னது? பொண்ணா? அந்த குண்டா?!...''

''சரிம்மா... அந்தக் குண்டு பொண்ணு...''

''போதும். போதும் அவ நல்லா பாடினா. அவ குரல் நல்லா இருந்துச்சு... அவ்வளவுதானே?..''

''அடேங்கப்பா ஏன் இவ்ளவு கோபம்...?''

''பின்னே? நீங்க அழகா இருக்கீங்களாம். ஹீரோமாதிரி இருக்கீங்களாம். 'இஹி... இஹி'ன்னு பல்லைக் காட்டி பேசறா அந்த நடிகை, நீங்களும் ஈன்னு இளிச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டிருக்கீங்க. போதாதக்குறைக்கு உங்க கையை வேற குலுக்கிட்டு போறா... ''

'ஓ... இதுதான் கோபமா? 'ஸெலிப்ரேட்டி'யா இருக்கற எல்லாருக்குமே இந்த மாதிரி பிரச்னைகள் வரும். உனக்கு மட்டுமே நான் சொந்தம்ங்கறது நம்பளோட குடும்ப வாழ்க்கை... ஆனா... பொது வாழ்க்கையில ஒரு பிரபலமான ம்யூஸிக் டைரக்டரான நான், என்னோட ரஸிகர்கள், ரஸிகைகள் அத்தனை பேருக்கும் சொந்தமானவன். காலம் ரொம்பவே மாறிப் போனதுனால, பெண் ரஸிகைகள் தயங்காம கை குலுக்கறாங்க. அதில அவங்களுக்கு ஒரு சந்தோஷம். 'ஒரு பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷை நான் நேர்ல பார்த்தேன்; அவர் கூட பேசினேன்... அவருக்கு கை குடுத்தேன்...' அப்பிடின்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்கறதுல்ல பெருமைப்பட்டுக்கறாங்க. எவ்ளவு பெரிய பிரபலம் ஆனாலும் என்னோட திறமையை ரஸிக்கற ஒவ்வொரு தனி மனிதனும் எனக்கு முக்கியமானவங்க. இதில ஆண், பெண்ங்கற இனபேதம் பார்க்கமாட்டேன்.

அவங்களோட ரஸனைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. அவங்களை நான் மதிக்கணும். அதே சமயம், என்னோட இசை அமைப்புக்கு எத்தனை பெரிய கூட்டம் இருந்தாலும் என்னோட இதயத் துடிப்புக்கு நீதான் ஜீவன்! என் வாழ்க்கையில இசைக்கும், உனக்கும் சமமான இடம். அதுதான் முதலிடம்...'' அவளை அணைத்தபடியே அன்பாக பேசினான் அபிலாஷ்.

அவனது அன்பில் கரைந்து போனாள் சரிதா.

''இதுதாங்க எனக்கு வேணும். உங்க மனசுல எனக்கு மட்டும்தான் இடம். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யாருமே... வேற எதுவுமே வரக் கூடாது. நீங்க எனக்கு மட்டும்தான் சொந்தம். என் உலகமே நீங்கதான். என் உயிர் நீங்கதான்.''

''என் உயிர் நீதான். நீ இல்லாம நான் இல்லை...'' மீண்டும் அவளை இறுக்கி, கட்டித் தழுவினான் அபிலாஷ். ஊடலுக்குப் பின் ஏற்பட்ட கூடலில் அந்த காதல் பறவைகள் சங்கமித்தன.


பஸ்  நிலையம். பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தனர் ஒரு இளம் பெண்ணும், ஒரு கல்லூரி மாணவியும். வேறு ஆட்கள் யாரும் இல்லாதபடியால் பைக்கில் வந்து கொண்டிருந்த சுதாகர், அங்கே பைக்கை நிறுத்தி இறங்கினான்.

இளம் பெண்ணின் அருகே சென்றான்.

''புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். ஃபேன்ஸி ஐட்டம்ஸ் எல்லாம் உங்க வீட்லயே வச்சு விற்பனை செய்யலாம். வெளியே எங்கேயும் அலைய வேண்டியது இல்லை. நானே உங்க வீடு தேடி கொண்டு வந்து குடுத்துடுவேன். பொதுவா, லாபத்துல பத்து பெர்ஸண்ட் குடுப்பாங்க. ஆனா நான் முப்பது பெர்ஸண்ட் குடுப்பேன். இதுக்குக் காரணம், நான் நல்ல பணவசதி மிக்கவன். மத்தவங்களுக்கு உதவி செய்யணுங்கற எண்ணத்துலயும் அதே சமயம் யாரையும் சோம்பேறியாவும் ஆக்கிடக் கூடாதுங்கற நல்ல எண்ணத்துலயும்தான் முப்பது பெர்ஸண்ட்ங்கற ஒரு திட்டத்தை வச்சிருக்கேன். நீங்க இந்த திட்டத்துல சேர்ந்தா உங்களுக்கு இதன் மூலமா வர்ற அதிகப்படியான வருமானம் உதவியா இருக்கும். வேலைக்குப் போய் சம்பாதிக்கறதுல மட்டும் இந்தக் காலத்துல குடும்பத்தை நடத்த முடியுமா? உங்களுக்கு விருப்பமான புடவை வாங்கிக்கலாம். பிள்ளைங்க கேக்கறதை வாங்கிக் குடுக்கலாம். மொத்தத்துல, கஷ்டப்படாம குடும்பம் நடத்தலாம்...''

வாய் மூடாமல் பேசிய சுதாகர் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்டாள் அந்த இளம்பெண். உடன் நின்றிருந்த கல்லூரி மாணவியையும் சுதாகரின் பேச்சு, கவர்ந்தது.

''என்னைப் போல காலேஜ் ஸ்டூடன்ட்டுக்கும் குடுப்பீங்களா ஸார்?''

''நிச்சயமா உண்டு. உங்களோட படிப்பு செலவுக்கு உங்க அம்மா, அப்பாவை அதிகமா சிரமப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை... நீங்க ரெண்டு பேரும் உங்களோட அட்ரஸ், ஃபோன் நம்பர் குடுங்க. நான் ஃபோன் பண்ணிட்டு பொருட்களைக் கொண்டு வந்து தரேன். வேன் வச்சிருக்கேன். அதில எடுத்துட்டு வந்து குடுத்துடுவேன். வேன் போக, எனக்கு காரும் இருக்கு. ஆனா... இந்த ட்ராஃபிக் நெரிசல்ல பைக்தான் ஈஸியா இருக்கு...''

பெண்கள் இருவரும் அவரவர் பெயர், வீட்டு முகவரியையும் கை தொலைபேசி எண்களையும் எழுதிக் கொடுத்தனர். அவர்கள் எழுதிக் கொடுப்பதற்கும் பஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. பஸ்ஸில் அவர்கள் ஏறியதும், சுதாகர் தனது பைக்கில் ஏறி, குஷியாய் அதற்கு ஒரு உதை கொடுத்தான். பைக் விர்ரென கிளம்பியது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சுதாகர் போன்ற நபர்கள், பஸ் நிலையத்தில் நிற்கும் பெண்களிடம்தான் தங்கள் வலையை வீசுவார்கள். விற்பனைக்கு பொருட்களைக் கொடுத்து, அதிக லாபம் தருவதாக ஆசை காட்டுவதே முதல் படி. நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த பெண்களும், படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவிகளும் அந்த ஆசைக்கு அடிபணிந்து அவனுக்கு தங்கள் மொபைல் நம்பரையும், வீட்டு முகவரியையும் கொடுத்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் உண்மையாகவே சில பொருட்களை விற்பனைக்கென்று அவர்களது வீட்டில் கொடுப்பதுண்டு. உண்மையாகவே லாபப் பணத்தையும் கொடுப்பதுண்டு. ஓரிரு மாதங்களில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, விருந்து என்று கூறி அவர்களை ஹோட்டலுக்கு அழைப்பான். அங்கே பணக்கார ஆண்களை அறிமுகம் செய்து வைப்பான். அவர்கள் மூலம் பெண்களுக்கு 'கிஃப்ட்' என்ற பெயரில் புடவை, ஹேண்ட் பேக் போன்ற பரிசுப் பொருட்களை வழங்க வைப்பான்.

நடுத்தர வர்க்கத்து குடும்பப் பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் குறி வைப்பதே இவனது பழக்கம். இத்தகைய மிக மோசமான செயலில் ஈடுபட்டு, பெண்களை செல்வந்தர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் பெரும் செல்வம் சம்பாதிப்பதே சுதாகரின் தொழில். செல்வந்தர்களிடமிருந்து வரும் பணத்தில், உடன்பட்ட பெண்களுக்கு நல்ல தொகை கொடுத்து வந்தான் சுதாகர். அவனது வழிக்கு வராத பெண்களை வற்புறுத்த மாட்டான். ஆனால் ஆசை காட்டி மோசம் போக வைப்பதில் கில்லாடியாக இருந்தான். முன் எச்சரிக்கையாக அந்தப் பெண்களை மற்ற ஆண்களுடன் நெருக்கமாக ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்வான். திடீரென அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், உஷாராக அந்தப் புகைப்படத்தைக் காட்டி பயமுறுத்தி அந்த எதிர்ப்பை மிக சுலபமாக சமாளிப்பான். பெண்களை எந்த வகையில் தன் வசப்படுத்தலாம் என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். அவனது இந்த இழி தொழில் எனும் படுகுழிக்குள் விழுந்தனர் பல பெண்கள்.

இதன் மூலமாக சுதாகருக்கு பெரும் புள்ளிகளின் பழக்கம் அதிகரித்தது. அதற்கேற்றபடி அவனது வருமானமும் அதிகரித்தது. கணவனுக்குத் தெரியாமல் வெளிவரும் பெண்களும், பெற்றோருக்குத் தெரியாமல் அவனது தொழிலில் விழுந்த பெண்களும், கையில் பணத்தைக் கண்டதும் தங்கள் கற்பைத் தொலைக்கும் பெண்களும் இருந்தனர்.

மனச்சாட்சியின் உறுத்தலுக்கு உட்பட்ட பெண்கள், அத்தகைய தீய பாதையிலிருந்து விலகிக் கொண்டனர். போலீஸ், கேஸ் என்று துணிச்சலாக எதிர்க்கும் பெண்களை மட்டும் புகைப்படத்தைக் காட்டி அடக்கி வைத்தான்.


'காதலித்தவன் தன்னை கல்யாணம் செய்துக்கொள்வான்' என்ற நம்பிக்கையில் காதலனிடம் தன்னை முழுவதுமாய் பறிகொடுத்துவிட்டு, 'அவன் திரும்பி வருவான்' என்று காத்திருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் அவனால் உருவாகிய கரு காத்திருக்காமல் வளர்ந்தது. அது வெளியே பிறந்தது. பிறந்ததும் அவனைப் பெற்றெடுத்த அந்த அபலைப் பெண்ணின் உயிர் பிரிந்தது. தகப்பன் பேர் தெரியாமல் பிறந்து, தாயின் முகம் அறியாமல் வளர்ந்து, ஒரு சமூக விரோதியாய் உருவானான் அந்தக் குழந்தை. அவன்தான் சுதாகர். சிறு வயதில் அவனது உள்ளத்தில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் கேடுகெட்ட குணம் உடையவனாய் வளர்ந்தான். அனாதையாய் இருந்த அவனை ஆதரிப்போர் யாருமின்றி தறுதலையாய் உருமாறினான்.  உருப்படாமல் போனான். அதன் தீய விளைவாய், உழைக்காமலே பணம் சம்பாதிக்கும் இழிவான செயல்களை செய்து வந்தான்.

பணத்திற்காக சில பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தினான். பணம் பண்ணினான். வாழ்த்தி வணங்க வேண்டிய பெண் இனத்தை, தன் ஈன புத்தியால் வீழ்த்தி, அவன் வாழ்ந்து வந்தான். கையில் கணிசமாக பணம் சேர்ந்ததும் பெரிய பண முதலைகளின் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவனது அந்தரங்கத் தேவைக்காக பெண்களைத் தேடினான். அந்தப் பெண்களின் தேவைக்காக தன் நாடகத்தை அரங்கேற்றினான். அவனது நாடகத்தை நம்பிய பெண்களிடம் நைச்சியமாகப் பேசி, அவர்களை ஏமாற்றினான். தோற்றம், மிக கண்ணியமானதாக இருப்பது அவனுக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக இருந்தது. பசியின் கொடுமைக்காக சிறு வயதில் திருட ஆரம்பித்த அவன், அவனது இன்றைய இருபத்தி ஏழாவது வயதில் திருட்டைவிட மிகக் கேவலமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான்.


ஷாப்பிங் வளாகம். வீட்டில் பொழுது போகாமல் 'போர்' அடித்ததால் கற்றையாக பணத்தை அள்ளி 'ஹேண்ட்பேக்'கில் போட்டுக் கொண்டு அங்கே வந்து, ஆசைப்பட்ட பொருட்களையெல்லாம் ஆசை தீர வாங்கிக் குவிக்கும் பழக்கம் உடையவள் சரிதா.

சுமாரான வசதி கொண்ட பிறந்த வீட்டிலிருந்து, மிக அதிக வசதி கொண்ட அபிலாஷை திருமணம் செய்து கொண்ட சரிதாவிற்கு வாழ்க்கை இனித்தது. அந்த இனிமை பணத்தினால் மட்டுமே அல்ல, அபிலாஷின் அன்பான மனத்தினால். சினிமா துறையில், இசை அமைப்பில் முதலிடம் பெற்று, புகழ் அடைந்துள்ள அபிலாஷ், துளிக்கூட கர்வம் இல்லாதவன். அன்பே உருவானவன். எளிமையை விரும்புபவன். பெண்களை மதிப்பவன். பெண்மையை ஆராதிப்பவன். சிறு வயதிலேயே தன் பெற்றோரை இழந்த அவன், ஒரு கிறிஸ்தவ கருணை இல்லத்தில் பாதிரியார் ஒருவரால் வளர்க்கப்பட்டவன்.

அந்தப் பாதிரியார் கிட்டார் வாத்தியம் வாசிப்பதில் வல்லவர். அக்கலையை அபிலாஷிற்கு கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் இசை மீது அபிலாஷிற்கு அளவற்ற ஆர்வம் ஏற்பட்டது. தூண்டிவிட்டால் பிரகாசமாக எரியும் சுடரைப்போல பாதிரியார் கொடுத்து வந்த ஊக்கம், அவனது இசைத்திறமையை மேன்மேலும் வளர்த்தது.

புதிது புதிதாக கற்பனையில் தோன்றும் இசை ராகங்களை பாதிரியாரிடம் வாசித்துக் காட்டினான். அவனது திறமையை புரிந்து கொண்ட பாதிரியார், அவனுக்கு 'சர்ச்'சில் பாடும் பாடல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை அளித்தார். அதன் மூலம், வெளியிலிருந்து இசை ஆல்பம் தயாரிப்பார்கள் அவனுக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதன் பின் அந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களைக் கேட்ட ஒரு திரைப்பட இயக்குநர், அவனைப் பற்றி விசாரித்து, தனது படத்தில் இசை அமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

அந்த திரைப்படம் 'சூப்பர் டூப்பர்' ஹிட்டாகி, அபிலாஷின் பாடல்கள்தான் அந்த வெற்றிக்குக் காரணம் என்று பேசப்படும் அளவிற்கு பெயர் பெற்றான். அந்த முதல் பட வெற்றி, மேலும் மேலும் அவனை முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற வைத்தது. வாய்ப்புகள், பெருக... பெருக... வருமானம் அதிகரித்தது. புகழ் ஓங்கியது. ஆனால் அந்த உயர்ந்த நிலையிலும் அவனது நல்லியல்புகள் மாறவில்லை. அவனது அந்தஸ்து மேன்மை அடைந்தது. ஆனால் அவனுக்குள் ஆணவம் தலைகாட்டவில்லை. பொருளாதார ரீதியாக அவன் பெருவாரியான பணத்தை சம்பாதித்தான். ஆனால் வாழ்க்கையை ஒரு பொருளோடு வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்ந்தானே தவிர கண்மூடித்தனமான திசைகளில் அவனது கவனம் செல்லவில்லை. கருணை இல்லத்தில் வளர்ந்தபோது இருந்த நல்ல குண இயல்புகள் எள்ளளவும் மாறாமல் புனிதமான மனிதனாக இருந்தான். அவனை வளர்த்த அதே பாதிரியார் குறிப்பிட்டு சொன்ன பெண்ணான சரிதாவை மறுபேச்சு எதுவும் கூறாமல் திருமணம் செய்து கொண்டான்.

குழந்தைப் பருவத்திலேயே கருணை இல்லத்து பாதுகாப்பில் விடப்பட்டவன் அபிலாஷ். ஆனால் கல்லூரி மாணவியான சரிதா, அவனது கல்லூரி படிப்பை முடித்திருந்த சமயம் அவளது வாழ்க்கையில் நேரிட்ட சோகத்தினால் பாதிரியாரிடம் அடைக்கலம்  புகுந்தவள்.

அம்மா, அப்பாவுடன் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும்பொழுது, கார் ஓட்டி வந்த ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரே சமயத்தில் பெற்றோரை கண் முன்னால் துடிக்க துடிக்க பறி கொடுத்தவள். அவளது பெற்றோர் இருவரும் வேற்று ஜாதியை சேர்ந்தவர்கள். காதல் திருமணத்தால் உற்றார், உறவினர் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். எனவே சரிதா... நடுத்தெருவில் அனாதையாக நின்றாள். அவளுக்கு அடைக்கலம் கொடுத்த பாதிரியார், சரிதா மிக நல்ல பெண் என்று புரிந்து கொண்டு, அபிலாஷிடம் அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

தன்னை வளர்த்து, ஆளாக்கி, பெயரும், புகழும் அடைய வைத்த பாதிரியார், தனக்கு அனைத்து விஷயத்திலும் நன்மையையே செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சரிதாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான் அபிலாஷ்.

அபிலாஷும் சரிதாவும் மிக அன்பாக, 'புரிந்து கொள்ளுதல்' எனும் மிக முக்கியமான மனித நேயத்துடன் இனிது வாழலாயினர். சரிதா மீது தன் உயிரையே வைத்திருந்தான் அபிலாஷ். அதுபோல் அபிலாஷ் மீது உயிரை வைத்து உருகினாள் சரிதா. பணம், புகழ், நல்ல கணவன் அமைந்துள்ள முழுமையான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

அபிலாஷின் பேங்க் நிலவரம், வரவு செலவுகள் போன்ற எதுவுமே அபிலாஷிற்கு தெரியாது. அனைத்தையும் சரிதாவே திறம்பட கவனித்துக் கொண்டாள். அவளது இஷ்டப்படி செய்யும் எந்த செலவையும் 'ஏன்? எதற்கு?' என்று கேட்க மாட்டான் அபிலாஷ்.

இசை அமைப்பு, பாடல்பதிவு என்று அபிலாஷ் சதா சர்வமும் அவனது வேலைகளில் மூழ்கி இருந்தபடியால் பொழுது போக்காக, கார் ஓட்டுவது, கம்ப்யூட்டர் கல்வி போன்ற உபயோகமானவற்றை கற்றுக் கொண்டாள் சரிதா.

அவ்வப்போது எழும் பெற்றோரின் பிரிவுத் துயரம் தவிர வேறு எந்தக் கவலையும் இன்றி வானில் பறந்து திரியும் பறவை போல சுதந்திரமாக, சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் ஒரு புயல் உருவாகப் போவதை அறியாத மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய சரிதாவை வழி மறித்தான் ஒருவன். அவன் சுதாகர்.

அவனை அங்கே சற்றும் எதிர்ப்பார்க்காத சரிதா, அதிர்ச்சி அடைந்தாள்.

''நீ... நீயா...?''

''ஏன்? என்னை எதிர்பார்க்கலியா?''

''நான் ஏன் உன்னை எதிர்பார்க்கணும்?''

''ஒரு காலத்துல என்னை எதிர்பார்த்து காத்திருந்தவதானே?''

 ''அதுதான் நான் செஞ்ச ஹிமாலயத் தவறு. உன்னைப் போல கேடிகள் உயிரோட இருந்து என்னதான் கிழிக்கப் போறீங்க?''

கோபத்தில் சரிதாவின் முகம் சிவந்தது.

''ஓ... நான் உயிரோட இல்லாம போறதுல உனக்கு அவ்வளவு ஆர்வமா?''

''ஆமா. நீ இல்லாமப் போனா... பல பெண்களோட வாழ்க்கை சீரழியாம இருக்கும்.''

''என்னைப் பத்தின நினைப்பே உனக்கு இல்லையா?''

''நீ எக்கேடு கெட்டா... எனக்கென்ன? நான் என் கணவர்... அவரோட உடல்நலம், அவரோட இசை அமைப்பு... இதுதான் என்னோட உலகம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு கிடையாது.''

''உனக்கு சிந்தனை இல்லாம போகலாம். ஆனா... எனக்கு எப்பவும் ஒரே சிந்தனைதான். அது உன் மேலதான்.''

''ஷட் அப். நான் இப்ப இன்னொருத்தரோட மனைவி. கண்டபடி என்கிட்ட பேசாதே. வழியை விடு. நான் போகணும்...''

''தாராளமா போ. ஆனா எனக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டிட்டு போ...''

''என்னது?! அபராதமா? உளறலா இருக்கு?!..''

''என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்தனை கைப்பிடிச்சிட்டியே... அதுக்கு அபராதம் கட்டு. உன் வழியில வராம... போய்க்கிட்டே இருப்பேன்...''

''ஓ... ப்ளாக் மெயிலா? உன்னைக் காதலிச்சது என்னமோ உண்மைதான். ஆனா... உன்னோட சுயரூபமும், வெளிவேஷமும் தெரிஞ்சதும் உன்னை விட்டு விலகிட்டேனே... ஏன் என் வாழ்க்கையில குறுக்கே வர்ற?...''

''என்னோட சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம் ஒரு குப்பனையோ, சுப்பனையோ நீ கல்யாணம் பண்ணி இருந்தா... உன் வாழ்க்கையில நான் ஏன் குறுக்கே வர்றேன்? புடிச்சாலும் புடிச்ச... ஒரு புளியங்கொம்பையில்ல புடிச்சிருக்க?! பொன் முட்டை இடற வாத்து... உன்னை அவ்ளவு சுலபமா விட்டுடுவேனா என்ன?''

''புளியங்கொம்பா புடிச்சேன்... அது இதுன்னு... கண்ணியக்குறைவா பேசாதே. புனிதமான ஒரு பாதிரியார் உதவியால, கௌரவமா அபிலாஷ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ரொம்ப சுலபமா கெட்டுப் போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கும் சினிமா உலகத்துல இருக்கற அவர், நல்லவர். எந்த தவறான பழக்கமும் இல்லாதவர்ன்னு பாதிரியார் சொன்னதுனால அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். இதுல என்ன தப்பு? காதலிக்கிற எல்லாருமே காதலிச்சவங்களையா கல்யாணம் பண்ணிக்கிறாங்க? எத்தனையோ காரணங்களால காதல் கை கூடாம போயிடுது... என்னோட விஷயத்துல... உண்மையிலேயே... ஒரு நியாயமான காரணம் இருக்கு. அதனால என் மேல எந்த தப்பும் இல்லை... நான் நல்லவள்ங்கறதுனாலதான் கடவுளா பார்த்து காலேஜ்ல, என் கூட படிச்ச பொண்ணு வனிதாவை உன்னைப்பத்தின உண்மைகளை என்கிட்ட சொல்ல வச்சாரு. உன்னைப்பத்தின ரகசியம் அம்பலமாச்சு. என்னோட வாழ்க்கை மங்கலமாச்சு...''

''அந்த மங்கலம் கிடைச்சதுக்கு லம்ப்பா ஒரு தொகையை குடுத்திட்டினா... நான் உனக்கு மங்களம் பாடிட்டு போய்க்கிட்டே இருப்பேன்...''

''நீ சொல்ற நிபந்தனைக்கு நான் மறுத்தா...?''

''மறுத்தா? நீ எனக்கு உருகி உருகி எழுதின காதல் கடிதங்கள், நீயும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட புகைப்படங்கள் இதையெல்லாம் உன்னோட இசைக்கணவர், இளம்புயல் அபிலாஷுக்கு இ-மெயில் அனுப்பி வைப்பேன்...''

சரிதா அதிர்ந்தாள்.

''அடப்பாவி...''

''அடப்பாவி இல்லாம்மா நான் அப்பாவி...''

''எத்தனையோ குடும்பப் பெண்கள், கல்லூரி மாணவிகளோட வாழ்க்கையில குறுக்கிட்டு அவர்களை முறைகேடான பாதைக்கு கூட்டிக்கிட்டுப் போயிருக்க. பெண்களையும், பெண்மையையும் மதிக்காம... கால்ல போட்டு மிதிக்கற உன்னைப் போய் காதலிச்சதுக்காக வெட்கப்படறேன், வேதனைப்படறேன். நீ செஞ்ச பாவகரமான காரியங்களுக்கு பிராயச்சித்தமா என் வாழ்க்கையில தலையிடாம ஒதுங்கிப் போயிடு...''

''ஒதுங்கிப் போகலாம்... ஆனா... கணிசமான பணம் இல்லாம பதுங்கித்தான் வாழ வேண்டி இருக்கு. நான் கேக்கற பணத்தை நீ... குடுத்திட்டின்னா... உன்னோட அன்புக் கணவர் அபிலாஷ் கூட நீ வாழற வாழ்க்கையில வம்பு எதுவும் பண்ணாம நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன். கையில காசு, வாயில தோசை! இந்தக் கையில பணத்தைக் குடு. அந்தக் கையில படத்தை வாங்கிக்கோ. மீட்டரை போட்டுட்டேன். மேட்டரை முடிச்சுடு. என் பிழைப்பை நான் பார்த்துக்குவேன்...''

''உன் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பு...த்தூ...''

''பின்னே... உழைச்சு பிழைக்கறதெல்லாம் என்னால முடியாதும்மா...''

அப்போது அங்கே பாடல்பதிவின் பொறுப்பாளர் ஆறுமுகம் வந்தார். சரிதாவைப் பார்த்தார்.

''என்னம்மா?... இங்கே நிக்கறீங்க? காரை பார்க் பண்ணிட்டீங்களா? அல்லது நான் ஹெல்ப் பண்ணவா?'' ஆறுமுகம், சரிதாவிடம் பேச ஆரம்பித்ததும் நைஸாக அங்கிருந்து நழுவினான் சுதாகர்.

''காரை பார்க் பண்ணிட்டேன் ஆறுமுகம் அண்ணே. தேங்க்ஸ்...''

''சரிம்மா... நான் கிளம்பறேன்...''

ஆறுமுகம் அங்கிருந்து போனதும் சரிதா, திகைப்பு மாறாத உணர்வில், மெதுவாக நடந்து, கடைகள் இருக்கும் மாடிக்கு சென்றாள். அவளது இதயத்துடிப்பு அதிவேகமாய் இருந்தது. சமாளித்துக் கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டாள்.


'நெட்டை பாபு' என்று அழைக்கப்படும் பாபு, தனது பழைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரின் கதவை ஓங்கி அறைந்து சாத்தினான். அப்படி பலமாக மூடினால்தான் அந்தக் கதவு மூடும். லாரியின் கதவை மூடுவது போல மூட வேண்டும்.

பாவனாவின் வீட்டிற்குள் நுழைந்தான். சபலப்படும் ஆண்களின் ஆசைக்குத் தன் உடலை வழங்கும் நிலைமை ஏற்பட்ட பாவனா, பரிதாபத்துக்குரியவள். அவள் விரும்பி அந்த திரைமறைவு வாழ்க்கை அமையவில்லை. எனினும், தானாக வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும் விதமாக அமைந்துவிட்டது.

பாவனா அழகிய இளம்பெண். இயல்பாக நல்லவள். எனினும் சூழ்நிலைகளுக்கேற்ப தன் குணத்தை மாற்றிக் கொள்ளத் தயங்காதவள். அவளது அழகில் தங்கள் மனதை பறி கொடுக்காதவர்கள் இருக்க முடியாது. அவளது அழகிற்கு வஞ்சம் வைக்காத இறைவன், அவளது பொருளாதாரத்தில் மிக மிக கஞ்சம் பிடித்து விட்டான்.

எனவே... ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கினாள். அழகாக இருக்கும் ஏழைப் பெண்களின் அவலநிலை அவளுக்கும் ஏற்பட்டது.  வேலை தேடி சென்ற இடங்களில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, தன்னை இழந்தாள். தன் கற்பை இழந்தாள். விதிவசமாய் 'நெட்டை பாபு'வை சந்திக்க நேரிட்டது. பேரழகியாய் காணப்பட்ட அவளை விலை பேசலாமே என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அவளிடம் பேசினான்.

'நான் காரும் கீருமாய் இருக்கேன்னு, என்னை பெரிய ஆள்னு நினைச்சு... என்கிட்ட வேலை கேக்கற. உண்மையிலயே நானும் உன்னைப் போல கஷ்டப்படறவன்தான். இந்தப் பழைய கார் சும்மா ஒரு 'ஷேர'வுக்கு. வேலை எதுவும் நான் பார்க்கலை. நான் ஒரு கோ-ஆர்டினேட்டர்னு கௌரவமா வெளியில சொல்லிக்கிட்டாலும்... உண்மையிலயே... பச்சையா சொல்லப்போனா நான் ஒரு ப்ரோக்கர்... ஆமா... அழகான பெண்களுக்காக அலையும் ஆண்களுக்கு... பெண்களை அனுப்புற வேலைதான் எனக்கு. நீ சம்மதிச்சா... இந்த வேலை மூலமாத்தான் உனக்கு நான் ஹெல்ப் பண்ண முடியும்...'' தயக்கமாய் கூறிய 'நெட்டைபாபு'வை நிமிர்ந்து பார்த்தாள் பாவனா. விரக்தியான சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.

''என்னோட குடும்பத்துல என்னை சேர்த்து மூணு ஜீவன்கள். திடீர்னு செத்துப் போயிட்ட அம்மாவோட இடத்தை நான்தான் இப்ப நிரப்ப வேண்டி இருக்கு. அப்பாவுக்கு நிரந்தரமான வேலை கிடையாது. வாடகைக்கு வீடு பார்த்து குடுக்கற வேலை. மூணு மாசத்துக்கு ஒரு வீடு முடிச்சு, கமிஷன் வாங்கிட்டு வந்தா பெரிய விஷயம். தங்கச்சிக்கு சின்ன வயசு. ஸ்கூல்ல படிக்கறா. அப்பா கொண்டு வர்ற பணம் வீட்டு வாடகை குடுக்கறதுக்கு உதவியா இருக்கு. மத்த செலவுக்கெல்லாம்? என்ன பண்றதுன்னு விழி பிதுங்கற நிலைமை. ஏதோ தெரிஞ்ச வரைக்கும் வேலைக்கு போகலாம்னு போனா... அங்கே என்னை... தவறான கண்ணோட்டத்துல அணுகற ஆண்கள்தான் அதிகம். அவங்ககிட்ட என்னை இழக்கறதும், நீங்க சொல்றபடி கேட்கறதும் ஒண்ணுதான். அதனால நீங்க சொன்ன 'அந்த வேலை'க்கு நான் சம்மதிக்கிறேன்.''

அதன்பின், 'நெட்டை பாபு' அழைத்துப் போகும் இடங்களுக்கு அவனுடன் போவதும், அவன் அறிமுகப்படுத்தும் ஆண்களிடம் தன் அழகை அரங்கேற்றி, அதற்குரிய தொகையை நெட்டைபாபுவிடம் வாங்கிக் கொள்ளும் வழக்கம் உண்டானது. ஆண்களின் இரவு நேர இச்சைகளைத் தீர்த்து வைத்து, தன் குடும்பத்தின் வறுமையைத் தீர்த்துக் கொள்ளும் இரவுப் பறவையாய் மாறினாள் பாவனா.

பாவனாவின் வீட்டிற்கு 'நெட்டை பாபு' வரும் பொழுது பாவனா, அவனுக்காக சூடான தேனீர் கொடுப்பது வழக்கம். அன்றும் அவன் வந்ததும் தேனீர் தயாரித்தாள். சிறிய சமையல் மேடை, 'கிச்சன்' என்று அழைக்கப்பட்டது. எட்டுக்கு எட்டு அறை 'பெட்ரூம்' என்று அழைக்கப்பட்டது. அதைவிட சின்ன ஹாலில் பழைய சோஃபா ஒன்று போடப்பட்டிருந்தது. சிறிய வீடு எனினும் மிக சுத்தமாய் காணப்பட்டது. பழைய சேலைகள் மற்றும் துப்பட்டாவில் ஜன்னலுக்கு திரைகளாக தைத்து போடப்பட்டிருந்தன.

சோஃபாவில் உட்கார்ந்தான் 'நெட்டைபாபு'. அவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட காரணமாய் இருந்தன அவனது நீண்ட கால்கள். பாவனா தேனீரைக் கொண்டு வந்தாள்.

''இன்னிக்கு மகாபலிபுரம் போகணும். சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு. கார் கொண்டு வரேன்...''

''உன்னோட கார்லயா?!''

''சச்ச... என்னோட கார்ல மகாபலிபுரம் என்ன... இதோ இருக்கிற மகாலிங்கபுரம்கூட போக முடியாது. எனக்கு தெரியாதா என்ன? கால் டேக்ஸி வரும். அதில போயிடலாம்...''

''இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த கேவலமான பிழைப்போ தெரியலை.''

''வருத்தப்படாதே பாவனா. வறுமையின் கொடுமையினால உன்னைப் போல பல பெண்களும், என்னைப்போல பல ஆண்களும் இந்த நிலைமையில இருக்கோம். ஒரு பெண்ணான உனக்கு உன்னோட இழப்பு... ஈடு செய்ய முடியாது.''

இதைக்கேட்டு பெருமூச்சு விட்ட பாவனா தொடர்ந்து பேசினாள்.

''முடியாத ஒரு விஷயத்தைப் பத்தி பேசிக்கிட்டே இருக்கறதுல பிரயோஜனமே இல்லை. ஆனா... ஒருத்தருக்கொருத்தர் நம்ம வேதனைகளை பகிர்ந்துக்கறதுனால ஏதோ கொஞ்சம் மனபாரம் குறையுது...''

அப்போது அங்கே பாவனாவின் அப்பா நீலகண்டன் வந்தார்.

நீலகண்டன் வந்ததும் விடைபெற்று கிளம்பினான் பாபு.

''அப்பா... இன்னிக்கு நான் வர லேட் ஆகும். தங்கச்சியை பார்த்துக்கோங்க. அவக்கிட்ட ஹாஸ்பிட்டல்ல நைட் டூட்டின்னு சொல்லி இருக்கேன். ஆஸ்பத்திரியோட ஆபீஸ்  வேலைன்னு சொல்லி வச்சிருக்கேன்... என்னால முடிஞ்ச வரைக்கும் மறைச்சு வைப்பேன். அவங்களுக்கு தெரியறப்ப தெரியட்டும்...''

''சரிம்மா... இன்னிக்கு ஒரு பெரிய பங்களா வாடகைக்கு முடியற மாதிரி இருக்கு. முடிஞ்சுட்டா... கணிசமான தொகை கிடைக்கும். பார்க்கலாம்...''

''சரிப்பா... நீங்க 'டாஸ்மார்க்' போகாம... வீட்டை பார்த்துக்கோங்க...''

''நான் இப்ப கொஞ்ச நாளா போறதில்லைம்மா.''

''அப்பிடியே விட்டுடுங்கப்பா...''

''சரிம்மா...''

''தேங்ஸ்ப்பா...'' பாவனா, மதிய உணவு தயாரிப்பதற்காக சமையலறைக்கு சென்றாள்.


அழகான இளம் மாலை நேரம். கயல்விழியின் வருகைக்காகக் காத்திருந்தாள் சரிதா. சதா சர்வமும் மொபைலில் பேசினாலும் நேரில் அவளைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சந்தோஷமான எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தாள்.

கூடவே, சுதாகர் தன்னிடம் பேசியதைப் பற்றியும், அவன் பயமுறுத்தி பணம் பிடுங்க முயற்சித்ததைப் பற்றியும் நினைத்தவள், சஞ்சலத்திற்குள்ளானாள். சுதாகர் பற்றிய சிந்தனை வந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

'வெளியே பார்ப்பதற்கு கண்ணியமானவன் போல தெரிந்ததே... அவன் ஒரு கயவனாக இருப்பான் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கலியே... என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் காதலிச்சுதனாலதானே அவங்களை உறவுகள் ஒதுக்கி வச்சாங்க? அதே தப்பை நானும் செஞ்சேனே? ஆனா... கடவுள் அருளால அவனோட அயோக்கியத்தனம் தெரிஞ்சு... அவனை விட்டு விலகி, அன்பே உருவான அபிலாஷ் எனக்கு கணவரா கிடைச்சுருக்காரே...

சுதாகர்கூட பழகினதை கெட்ட கனவா மறந்துட்டு, நிம்மதியா... சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கற இந்த நேரத்துல... அவனால இப்பிடி ஒரு பிரச்னைய எதிர்கொள்ள நேரிடும்னு எதிர்பார்க்கவே இல்லையே...? அவனை காதலிச்சதை... அம்மா... அப்பாகிட்ட கூட நான் மறைக்கலியே... ஆனா... இப்போ...? என் அன்பான கணவர்ட்டயும், என்  உயிர்த் தோழி கயல்விழிட்டயும் இதைப்பத்தி பேச முடியுமா? காதலிக்கும்போதே கயல்விழிட்ட நான் அதைப்பத்தி சொல்லலை. அம்மா, அப்பாவுக்கு மட்டுமே தெரிஞ்ச அந்த விஷயம்... அவங்களோட மரணத்துல மண்ணுக்குள்ள புதைஞ்சு போச்சு.

'ரகஸியமானது காதல்'ன்னு கயல்விழிட்ட கூட சொல்லாம வச்சிருந்தேன். அவனைப் பத்தின ரகஸியங்கள் வெளியானப்புறம் அறவே அவனை மறந்துட்டு, நிம்மதியா இருந்த நேரத்துல... பெத்தவங்களை பறி கொடுத்தேன். கடவுள், பாதிரியார் ரூபத்துல வந்து புயல் அடிச்ச என்னோட வாழ்க்கையில அபிலாஷ்ங்கற தென்றலை வீச வச்சார்... ஆனா... இப்போ... பாதிரியாரும் காலமாயிட்டார். யார்கிட்டயும், எதுவும் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேனே... சும்மா... என்னை பார்க்க நேரிட்டதால மிரட்டினானா... உண்மையிலேயே பெரிசா திட்டம் போட்டு மிரட்டறானா... அவன் அயோக்யன்... ஏதாவது திட்டத்தோடதான் அப்பிடி பேசி இருப்பான். பழைய காதலை நினைச்சு நானே என் மேல பரிதாப்படறதா?... புதிய வாழ்க்கையில பொன் புதையலா கிடைச்சிருக்கற அபிலாஷை நினைச்சு சந்தோஷப்படறதா? இன்பமயமான வாழ்க்கையில இடைச்செருகற அந்த அயோக்கியனோட மிரட்டலை நினைச்சு வேதனைப் படறதா...? நான் என்ன பண்ணுவேன்... கடவுளே...'

அபிலாஷ் இசை அமைத்த ஒரு பாடலின் மெட்டு, வீட்டின் அழைப்பு மணியில் ஒலித்தது. சிந்தனை வயப்பட்டிருந்த சரிதா, 'திடுக்'கென கலைந்தாள். எழுந்தாள், கதவைத் திறந்தாள்.

ஒரு கையில் வெள்ளை ரோஜா கொத்து அடங்கிய பொக்கேயும், மறுகையில் ஸ்வீட்ஸ் பார்ஸலுமாக வந்த கயல்விழியை அணைத்தபடி வரவேற்றாள் சரிதா.

''ஹாய் சரித்...'' மகிழ்ச்சி பொங்க உள்ளே வந்தாள் கயல்விழி.

''வா கயல்... வரும்பொழுதெல்லாம் பொக்கேயும், ஸ்வீட்சும் வாங்கிட்டு வரணுமா?''

''ஏதோ... என்னால முடிஞ்சது. வெறும் கையை வீசிக்கிட்டு வர முடியுமா? உனக்கு பிடிச்ச ஒயிட் ரோஸ். உனக்கு பிடிச்ச குட்டி ஜிலேபி. வேற என்ன உனக்கு பெரிசா செஞ்சடப் போறேன்?''

ஸ்வீட்ஸ் பார்ஸலைப் பிரித்து, அதிலிருந்து குட்டி ஜிலேபி ஒன்றை எடுத்து, சரிதாவின் வாயில் ஊட்டி விட்டாள் கயல்விழி. அவளது அதிகப்படியான பாசம், சரிதாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அங்கே இருந்த ரோஸ்வுட் டேபிள் மீதிருந்த பூ ஜாடியில் வெள்ளை ரோஜா பூங்கொத்தை செருகி வைத்தாள் கயல்விழி.  ஹாலுக்கு பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த வெட்ட வெளிப்பகுதியில் போடப்பட்டிருந்த அழகிய நவீன ஊஞ்சலில் இருவரும் உட்கார்ந்தனர். ஊர்க்கதைகள், நாட்டு நடப்புகள், அரசியல் அலசல், தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு, திரைப்படங்களின் விமர்சனம் என்று செம ஜாலியாக அரட்டைக் கச்சேரியை நடித்திக் கொண்டிருந்தனர்.

''பேசினதுல மறந்தே போயிட்டேன் கயல். உனக்கு பிடிச்ச பால் பாயஸம் பண்ணி வச்சிருக்கேன். இரு... இதோ போய் நானே எடுத்துட்டு வரேன்...''

''வேண்டாம் சரித். 'நோ' சொல்லப் பழகிட்டா... உடம்பு குண்டாகாம இருக்கும்.''

''உன்னோட டையட் அட்டவணையை உன்னோட வீட்ல வச்சுக்கோ. இன்னிக்கு நான் குடுக்கறதை நீ சாப்பிடனும்.''

''அதுதான் தப்புன்னு என்னோட டயட்டிஷியன் கோமதி சொல்றாங்க.''

''டயட்டிஷியன் என்ன சொல்றாங்க?''

''ஸ்வீட்ஸ் சாப்பிட அனுமதி இல்லைன்னு சொல்லி இருக்காங்க... காபி கூட குடிக்கறதில்லை. க்ரீன் டீதான் குடிக்கறேன். என்னோட உடம்பு குண்டாயிட்டா... டான்ஸ் ஆட முடியாது. குண்டாயிட்டா என்னைப் பார்க்கறதுக்கும் நல்லா இருக்காது... வீட்ல சமையலுக்கு 'இதயம்'தான் யூஸ் பண்றோம். அதனாலதான் கொழுப்பு சேராம உடம்பு ஸ்லிம்மா இருக்கு.''

''நீ நல்லா... தளதளன்னு இருக்கியே தவிர குண்டா ஒண்ணும் இல்லை. இன்னிக்கு மட்டும் எனக்காக பால் பாயஸம் குடிப்பியாம். சமையலுக்கு ஆள் இருந்தும் உனக்காக நானே செஞ்சேன்.... ப்ளிஸ் குடி கயல்...''

''என்னோட ஃப்ரெண்ட் நீ... சொன்ன பிறகு மாட்டேன்னு மறுக்கவா முடியும்? குடு... ஆனது ஆச்சுன்னு ஒரு புடி புடிச்சடறேன். நாளைக்கு எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் யோகாவோ, உடல்பயிற்சியோ செய்யணும்...''

அழகிய வெளிநாட்டு கிண்ணம் ஒன்றில் பால் பாயஸத்தை எடுத்து வந்து கயல்விழியிடம் கொடுத்தாள் சரிதா. நெய் மணக்க, பால் பாயாசத்தில் மிதந்த முந்திரிப்பருப்பு துண்டுகளைப் பார்த்ததும் கட்டுப்பாட்டை மீறி ஆசைதீரக் குடித்தாள் கயல்விழி.

''சூப்பர்... பிரமாதம்... அசத்திட்டே போ. இப்பிடி வர்றப்பபெல்லாம் பால் பாயாஸத்தை வளைச்சு மாட்டினா... உடல் வளைந்து நெளிஞ்சு டான்ஸ் பண்ண முடியாதுடி சரித்...''

''சரி சரி... அதான் சொன்னியே... எக்ஸ்ட்ராவா எக்ஸர்ஸைஸ் பண்ணிக்கலாம்னு பண்ணிக்கோ...''

''குறும்புடி உனக்கு...''

''குறும்போ... இரும்போ... அபிலாஷ் வந்ததும் டின்னர் சாப்பிடணும்... உனக்கு பிடிச்சது... அபிலாஷுக்கு பிடிச்சதுன்னு ஏகப்பட்ட ஐட்டம் பண்ணி வச்சிருக்கேன்...''

''அடிப்பாவி... என்னை ஒரு வழி பண்ணணும்ன்னு முடிவு பண்ணிட்ட போலிருக்கு?''

''இன்னிக்கு ஒரு நாள் சாப்பிட்டுட்டு உன்னோட டயட்டிஷியன் கோமதிட்ட என்ன பண்றதுன்னு கேட்டுக்கோ...''

''சதி லீலாவதி மாதிரி... சதி சரிதாவா இருக்கியே?!... ஓகே... உன்னோட பால் பாயஸத்துல முழு வயிறு நனைஞ்சாச்சு... இனி முக்காடு எதுக்கு? முட்ட முட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாளைக்கு முழுசும் எதுவும் சாப்பிடாம 'கட்' பண்ண வேண்டியதுதான்...''

இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். நேரம் போவது தெரியாமல் பேசி... பேசி... நட்பின் உணர்வை அனுபவித்தனர்.

அபிலாஷ் வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவனது கார் ஹாரன் ஒலி, தெரு முனையில் ஒலிக்கும் பொழுதே உணர்ந்து கொள்வாள் சரிதா. அன்றும் அதுபோல் உணர்ந்து, வீட்டு வாசலுக்கு போய் கதவைத் திறந்தாள். அபிலாஷ் தன் காரை ஓட்டியபடி உள்ளே வந்தான். காரை நிறுத்தியபின் இறங்கி, காரை பூட்டிவிட்டு கார் சாவியின் கீ செயினை தூக்கிப்போட்டு விளையாடியபடி வந்தான். அவனது வாயில் அன்று இசை அமைத்த பாடலின் மெட்டு விசிலாக வெளிவந்தது.

''ஹாய்...''

''கயல்விழி வந்திருக்கா...''

உள்ளே நுழைந்த அபிலாஷ், கயல்விழியை வரவேற்றான்.

''என்னம்மா மீன் கண்ணம்மா... எப்போ வந்தே?''

''நான் எப்பவோ வந்தாச்சு இசையமைப்பாளரே...''

''உன் தோழிக்கு நீ வந்ததும் தலைகால் புரியாதே...!''

''பின்னே? ஃப்ரெண்ட்ஷிப்ன்னா அப்பிடித்தான்...''

''மூழ்காத ஷிப் ஃப்ரெண்ட்ஷிப்தானே?...''

''அடடா... இசையமைப்பாளர் அவரோட பாணியிலயே டைலக் வுடறாரே...''

''சரி... சரி ரெண்டு பேரும் ரகளை விட்டது போதும். சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் வாங்க.'' செல்லமாக மிரட்டினாள் சரிதா.

''இதோ வந்துடறேனுங்க மேடம்...'' சரிதாவிற்கு பயப்படுவது போல குனிந்து, கைகளை குவித்து வணக்கம் சொல்வது போல நடித்தான் அபிலாஷ்.

மூவரும் சிரித்தனர்.

சரிதா, சாப்பிடும் மேஜை மீது வகை வகையான உணவுகளை எடுத்து வைத்தாள். அழகிய சாப்பிடும் தட்டுகள், அவற்றிற்கு ஜோடியான சிறு தட்டுகள், புதிய டிஸைனில் கண்ணாடி டம்ளர்கள், பரிமாறுவதற்காக உணவு வகைகள் எடுத்து வைக்கப்பட்ட பெரிய கண்ணாடி பாத்திரங்கள் ஆகியவை, சரிதாவின் கலாரஸனையை மட்டுமல்ல... அவளது செல்வச் செழுமையையும் அடையாளமிட்டுக் காட்டியது.

பஃபே முறையில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று உணவு வகைகளை அழகாக வரிசைப்படுத்தி அடுக்கி இருந்தாள் சரிதா.

அவரவர்க்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டுக் கொண்டே அரட்டையை ஆரம்பித்தனர்.

''எந்தப் படத்துக்கு இப்ப கம்போஸ் பண்றீங்க அபிலாஷ்?'' கயல்விழி கேட்பதும் வாயில் இருந்த கோளா உருண்டையை மென்று விழுங்கியபின் அவளுக்கு பதில் கூறினான் அபிலாஷ்.

''புதுபடம். 'உன் மனதை நான் அறிவேன்' அப்பிடிங்கற டைட்டில். டைரக்டரும் புதுசு. யாரோ ராஜசிம்மனாம். காதல் கதை. டைரக்டர் திறமைசாலி. ம்யூசிக்கை பொறுத்த வரைக்கும் எனக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்காரு. நாலு பாட்டு. நாலுமே ஹிட் ஆகும்...''

''உங்களுக்கென்ன அபிலாஷ்? உங்க கம்போஸிங் திறமையும் ஞானமும்தான் மூலதனம். மூளையை மட்டுமே மூலதனமா வச்சு முன்னுக்கு வந்தவர் நீங்க. ரெக்கார்டிங் ஸ்டுடியோ செலவு இல்லை. பாடறவங்களுக்கும், ம்யூஸிக் ப்ளேயர்களுக்கும், தயாரிப்பாளர் பணம் குடுத்துடுவார்.  உங்க கம்போஸிங் திறமைக்கும், ப்ரொட்யூஸர் பணம் குடுத்துடுவார். உங்க 'கீ' போர்டை தட்டினா பாட்டு... பாட்டுக்கேத்த பணம் கொட்டுது...''

''ஐய்யோ... இப்பிடி வேற ஒண்ணு இருக்கா? நான் என்னமோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கறேன்னு நினைச்சுக்கிட்டிருந்தா? 'கீ' போர்டை தட்டினா பாட்டு... பணம் கொட்டும்ங்கற...?!'' தமாஷாக பேசினான் அபிலாஷ்.

''சச்ச... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உங்க திறமைக்கு சவால் விட்டு ம்யூஸிக் பண்ணி ஒவ்வொரு படத்தையும் நீங்க ஜெயிக்க வைக்கறீங்க...''

''கடவுள் குடுத்த வரம்...'' அடக்கமாகக் கூறினான் அபிலாஷ்.

''உங்களுக்கு உங்க இசைத் திறமை... கடவுள் குடுத்த வரமா அமைஞ்சுடுச்சு. ஆனா... எனக்கு கடவுள் குடுத்த நாட்டிய திறமை, ஒரு சாபமா உருமாறிடுச்சு...''

''ம்கூம்... அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. எதிர்காலத்தைப் பத்தி... தெரிஞ்சுக்காமலே... ஒரு ஆர்வத்துல நீயாகவே கத்துக்கிட்ட உன்னோட நாட்டிய திறமை, நீயாவே அந்தக்கலை மேல இருந்த ஆர்வத்துல அதை வளர்த்துக்கிட்ட உன்னோட ஈடுபாடு... இதுதானே உனக்கு வாழ்க்கையை ஓட்டறதுக்கு உதவியா இருக்கு? அதைப்போய் சாபம்ன்னு சொல்லலாமா? நாங்க உதவி செய்யறோம்ன்னா... அதையும் ஏத்துக்க மாட்டேங்கற...''

''தத்துவம் பேசினது போதும். எல்லா ஐட்டமும் எடுத்துப் போட்டு நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும்...'' சரிதா உபசரித்தாள்.

''சரித், சமையல்கார வத்சாலம்மா... தனியா... செஞ்சிருந்தா நிச்சயமா இவ்ளவு டேஸ்ட்டா இருந்திருக்காது. அவங்களோட உதவியோட... உன்னோட... கை வண்ணத்துலதான் இன்னிக்கு எல்லா ஐட்டமும் சூப்பரா இருக்கு. ஆனா... இத்தனை ஐட்டம்ஸ் இருந்தும்... இங்கே இல்லாத ஒண்ணை கேட்டா... கோவிச்சிக்கமாட்டியே...'' அபிலாஷ், தயக்கமாகக் கேட்டான்.

''அட... என்னங்க நீங்க. சாப்பிடறதுக்காக நீங்க கேக்கறதுக்குப் போயி... நான் கோவிச்சுப்பேனா? என்ன வேணும்? சொல்லுங்க...''

''முட்டை ஆம்லெட் வேணும்...''

''அட... இதென்ன ஜுஜுபி மேட்டர்... இதோ... நான் போயி ரெண்டு நிமிஷத்துல ஆம்லெட் போட்டு... எடுத்துட்டு வரேன்...'' சரிதா எழுந்து சமையலறைக்கு சென்றாள்.

ஆம்லெட்டிற்காக காத்துக் கொண்டிருந்த அபிலாஷ், 'ஆம்லெட், ஆம்லெட்' என்று தாளம் போட்டான்.

''இருங்க அபிலாஷ்... நான் போய் சரிதாகிட்ட ஆம்லெட்டை வாங்கிட்டு வரேன்...'' என்று சொல்லியபடி எழுந்தவள், மேஜையின் விளிம்பில் இருந்த குழம்பு பாத்திரத்தை கவனிக்காமல், வேகமாக எழுந்த போது, அவளது கை பட்டு குழம்பு பாத்திரம் கவிழ்ந்து அபிலாஷின் பேண்ட் மீது குழம்பு சிந்தியது.

''ஐய்யய்யோ... ஸாரி... வெரி ஸாரி...'' என்று கூறியபடி பதற்றத்துடன் டிஷ்யூ பேப்பரால் அவனுடைய பேண்ட்டை துடைத்தாள். அப்போது முட்டை ஆம்லெட்டுடன் அங்கே வந்து கொண்டிருந்த சரிதா, அந்தக் காட்சியை பார்த்தாள். 'சுர்'ரென்று கோப உணர்வு தலைக்கு ஏற ''கயல்விழி...'' என்று உரக்கக் கத்தினாள்.

அவளது ஓங்கிய குரல் கேட்டு திரும்பிய அபிலாஷ்,

''என்னம்மா... என்ன ஆச்சு?'' என்று கேட்டான். கயல்விழியும் கேள்விக்குறி உணர்வு தோன்ற, சரிதாவைப் பார்த்தாள்.

''ஸாரி சரித்... அபிலாஷ் மேல குழம்பு கொட்டிடுச்சு...''

''நான் போய் பேண்ட்டை மாத்திட்டு வரேன். யூ டோன்ட் வொரி...'' என்ற அபிலாஷ், அவனது அறைக்குச் சென்றான்.

''சரிதா... நீ இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலியே. வா உட்கார், அபிலாஷ் ட்ரெஸ் மாத்திட்டு வந்ததும் நாம சாப்பிடலாம்.''

பதில் எதுவும் பேசப் பிடிக்காத சரிதா, மேஜை மீதிருந்த பொரித்த அப்பளம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

அப்பளத்தைக் கடித்தபடி, தன் டென்ஷனைக் குறைக்க முற்பட்டாள்.

'அபிலாஷ் என்னுடையவர். அவரோட மூச்சுக்காத்து கூட எனக்கு மட்டுமே சொந்தமானது... இவ... இவ... இந்த கயல்விழி... அவரோட... தொடையை... தொட்டு... ச்சே...' அப்பளம் அவளது வாயில் நொறுங்கிக் கொண்டிருக்க... அவளது மனதிற்குள், தேவையற்ற உணர்வுகள் நொறுங்கிக் கொண்டிருந்தன.

உடை மாற்றிக் கொண்டு வந்த அபிலாஷ், சாப்பிட உட்கார்ந்தான்.

''என்ன?! ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஸைலன்ட்டா இருக்கீங்க? 'சலசல'க்கற அருவி மாதிரி 'சளசள'ன்னு பேசிக்கிட்டு இருப்பீங்க?! ''

''உங்க சரிதா வாய்க்குள்ள அப்பளம் இருக்கு. பசியில அப்பளத்தை வாயில போட்டுக்கிட்டா...''

''ஓ... அப்பிடியா?! அதானே பார்த்தேன். என்னடா இது பேச்சே இல்லியேன்னு... சரி சரி... அந்த பரோட்டாவை டேஸ்ட் பார்க்கலாம். கயல்விழி... நீயும் ஒரு புடி புடிச்சுடு, நாளைக்கு முழுசும் ஜூஸ் டயட் போட்டுக்கோ...'' என்று உற்சாகமாக பேசியவன், சரிதாவிடம் திரும்பினான்.

''பரோட்டாவும், பனீர் ஷாய் குருமாவும் சூப்பர் சரித்மா...'' அபிலாஷின் சாப்பிடும் 'மூட்' மாறிவிடக் கூடாதே என்ற அக்கறையில் தன்னை சுதாரித்துக் கொண்டாள் சரிதா.

''போன வாரம் செஃப் தாமு ஸார் டி.வி.யில சொல்லிக்குடுத்தார். அதை எழுதி வச்சு செஞ்சேன்...''

''ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட இந்த மாதிரி டேஸ்ட்டா இருக்காது சரிதா...''

''தேங்க்யூ கயல்...''

மூவரும் அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு முடித்தனர். கயல்விழி கிளம்பினாள்.

''இவ்வளவு நேரத்துக்கப்புறம் கால்டேக்ஸிலயோ... ஆட்டோவுலயோ... போகக்கூடாது கயல்விழி. நான் வந்து ட்ராப் பண்றேன்...'' என்று அபிலாஷ் கூறியதை மறுத்தாள் கயல்விழி.

''இதெல்லாம் எனக்கு சகஜம். தினமும் ஹோட்டல்ல இருந்து லேட்டாதானே வீட்டுக்கு போறேன்?! நோ ப்ராப்ளம். நான் போயிடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம். குட்நைட் சரித்... குட்நைட்...'' என்றபடி அங்கிருந்து கிளம்பினாள் கயல்விழி.


நள்ளிரவு நேரம்... அபிலாஷின் மார்பில் புதைந்தபடி தூங்கிக் கொண்டிருந்த சரிதா, கண் விழித்தாள். அவளை அணைத்துக் கொண்டிருந்த அபிலாஷின் கையை மெதுவாக விலக்கினாள். எழுந்தாள். மனதில் இனம் புரியாத கலக்கம் தோன்றியது.

'ஏன்?' என்று யோசித்தாள்.

'நேத்து ராத்திரி நான்... கயல்விழிட்ட கோபமா நடந்துக்கிட்டேனோ... இல்லையே... கோபத்தை அடக்கிக்கிட்டுதானே இருந்தேன்? ஆனா... என் மனசில... அவ மேல கோபம் இருந்துச்சு. அபிலாஷ் மேல எனக்கு இருக்கற 'பொஸஸிவ்' உணர்ச்சியினால அவ மேல கோபம் வர்றது நியாயமே இல்லையே... நான் ஏன் இப்பிடி இருக்கேன்? கயல்விழி என் உயிர்த் தோழியா இருந்தும் அவளைக்கூட தப்பா நினைக்கறது தப்புதானே? அவளுக்கு என்னோட கோபம் புரியாட்டாலும்... என்னோட மனசாட்சி என்னைக்குத்துதே... இப்பவே அவளுக்கு ஃபோன் போட்டு பேசலாம்...''

உடனே... கயல்விழிக்கு ஃபோன் செய்தாள். மறுமுனையில் தூக்கக் கலக்கமான குரலில் 'ஹலோ...' என்றாள் கயல்விழி.

''ஏய்... என்ன... தூக்கமா?''

''பின்னே... ராத்திரி... அதை சாப்பிடு இதை சாப்பிடுன்னு போட்டுத் தாக்கினீங்க நீயும் அபிலாஷும்.  நைட்ல ஹெவியா சாப்பிட்டா லேட் நைட்ல தூக்கம் வராதா? அது சரி... நீ என்ன இந்த நேரத்துல ஸபோன் பண்ணி இருக்க?...''

''ஸாரிடி...''

''ஸாரியா? எதுக்கு? இந்த நேரத்துல ஃபோன் பண்ணினதுக்கா?''

''ச்சீ... அது இல்லை... நேத்து உன்கிட்ட நான் 'மூட்அவுட்' ஆனமாதிரி நடந்துக்கிட்டேனே... அதுக்கு...''

''அப்பிடியா? அப்பிடி ஒண்ணும் நீ நடந்துக்கலியே?''

சில வினாடிகள் மௌனம் காத்தாள் சரிதா.

''ஏய் சரித்... என்ன ஆச்சு உனக்கு? நேத்து அப்பிடி எதுவும் நடக்கலை, நேத்து நான் செம ஜாலியா இருந்தேன். ஒரு 'எக்ஸ்க்யூஸ் கிடைச்சது'ன்னு இஷ்டப்படி சாப்பிட்டேன். நல்லா அரட்டை அடிச்சு... மனசு ரிலாக்ஸ்டா வீட்டுக்கு வந்து சுகம்மா தூங்கறேன். நேற்றைய நாள் எனக்கு ரொம்ப நல்ல நாள். நீ என்னடான்னா... என்னமோ பெனாத்திக்கிட்டிருக்க... நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்ன்னு இருந்தா... நீ என்கிட்ட ஸாரி சொல்ற... சந்தோஷமா இரு.''

''ஓ. கே. கயல்... நாளைக்கு உனக்கு ப்ரோகிராம் இருக்கா?''

''தெரியல. கோ-ஆர்டினேட்டர் ஜெயராஜ்... இது வரைக்கும் ஃபோன் பண்ணலை.''

''ஃப்ரீயா இருந்தா எங்கேயாவது வெளியே போலாமா?''

''ஓ... போலாமே...''

''சரி கயல். நீ காலையில ஃபோன் பண்ணு...''

''சரி சரித்...''

இருவரும் பேசி முடித்தனர்.


தி.நகர் ஏரியாவில் மிக அழகான கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. 'அழகு' ப்யூட்டி பார்லர். அழகை மேம்படுத்தும் அந்த அழகுக்கலை நிலையத்தின் உரிமையாளர் உஷா ராஜன்.

உஷா ராஜனுக்கு அந்த அழகுக்கலை அனுபவத்தில்தான் பல வருடங்களே தவிர அவள் இளம்பெண். அழகுநிலையத்தை மிகவும் திறம்பட நடத்தி வந்தாள். அவளது இன்முகமும், அன்பான பேச்சும், அக்கறையான கவனிப்பும் அங்கே வரும் பெண்களை மிகவும் கவர்ந்தது. எனவே... வாய்மொழியாக பரவிய பாராட்டுகள், மேலும் அவளுக்கு வாடிக்கையாளர்களை சேர்த்தன.

அவளது அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களிடம் பிரியமும், பரிவுமாக இருப்பாள் உஷா ராஜன். பண்டிகை காலங்களில் அவர்களுக்கு துணிமணிகள் வாங்கித் தருவாள்.

தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள வரும் பெண்களில், அழகுப் பராமரிப்பிற்கு வருபவர்கள், வெறுமனே புருவம் சீரமைக்க மட்டுமே வருபவர்கள் என்ற பாரபட்சம் காட்டாமல், ஒரே விதமாக மதிப்பாள். இவை அனைத்திற்கும் மேலாக அவளை வெகுவாக பாராட்ட வேண்டியது அவளது அயராத உழைப்பிற்காக.

திருமணத்திற்கு முன்பே அழகுக்கலையில் ஐக்கியமாகி 'அழகு ப்யூட்டி பார்லர்' ஆரம்பித்த உஷா ராஜனுக்கு, கணவர் அமைந்தது இறைவன் கொடுத்த வரமாக இருந்தது. கணவரது முழு ஆதரவினால் அவளது அழகு நிலையத்தை மேன்மேலும் வளரச் செய்தது. மனைவி ஈடுபட்டிருக்கும் துறையில், அவள் முன்னேறுவதற்கு உறுதுணையாய் இருக்கும் ஆண்கள் பாராட்டுக்குரியவர்கள்.

அத்தகைய பாராட்டுக்குரிய ஒரு ஆணை, கணவனாக அமையப் பெற்ற உஷா ராஜனின் 'அழகு ப்யூட்டி பார்லரி'ல் தன் அழகை மேலும் மெருகு ஏற்றிக் கொள்வதற்காக அவ்வப்போது வரும் சரிதா, அன்றும் அங்கே வந்தாள். பார்லருக்குள் நுழைவதற்கு முன் அவளுக்கு பரிச்சயமான குரல் கேட்டு நின்றாள். அந்தக் குரலுக்குரியவன் சுதாகர்.

''அழகுக்கு அழகு சேர்க்கறியா? உன்னோட அழகுல உன்னோட புருஷனைக் கட்டிப்போட்டு வைக்கணும்னு ரொம்பத்தான் மெனக்கெடற?!! சினிமா உலகத்து சிங்காரிகள்கிட்ட உன் புருஷன் சிக்கிக்கக் கூடாதுன்னு உன்னோட உடம்பையும் 'சிக்'ன்னு வச்சுக்கற... உன்னோட வனப்பையும், காப்பாத்திக்கற?! ரொம்ப முன் ஜாக்கிரதையா இருந்துக்கறியே...''

''முன்ஜாக்கிரதையா இருந்ததுனாலத்தான் உன்கிட்ட இருந்து தப்பிக்க முடிஞ்சுது...''

''உன்னைத் தப்பிக்க விட்டது என்னோட முட்டாள்தனம்...''

''முட்டாள்தனம் கூட சில நேரங்கள்ல்ல நல்ல விஷயங்கள் செய்யுதே... அதாவது எனக்கு...''

''உனக்கு நல்ல விஷயம்... ஆனா எனக்கு?! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சே?! அதுக்குத்தானே ஒரு விலையை கேட்கறேன்?''

''விலையா?! ...''

''ஆமா. நான் சிங்கப்பூர்ல ஸெட்டில் ஆகறதுக்கு என்ன செலவு ஆகுமோ... அந்த தொகையை நீ எனக்குக் குடுக்கணும். பிரபல ம்யூசிக் டைரக்டர் அபிலாஷ் கூட நீ வாழற வாழ்க்கைக்கு விலைதான் அந்தத் தொகை...''

''என்ன... உளர்ற...?''

''உளறல் இல்லை... உண்மை. என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டியே... அந்த உண்மைக்குதான் ஒரு விலை கேக்கறேன். அந்த உண்மை உறங்கிப் போகணும்ன்னா... நான் சொல்ற ஒரு தொகையை நீ எனக்கு குடுத்தாகணும். உறங்கிக் போயிருக்கற அந்த உண்மையை உசுப்பிவிட்டு உன்னோட கணவர் அபிலாஷ் காது வரைக்கும் போகணும்ன்னா... தேவை இல்லாத வாக்குவாதம் பண்ணு. உன் கூட போட்டி போட நான் தயாரா இருக்கேன்...''

''எந்தக் கீழ் மட்டத்துக்கும் தயாரான ஒரு கேடு கெட்ட மனுஷன் நீன்னு எனக்குத் தெரியும்...''

''தெரிஞ்சுமா... வளவளன்னு கேள்வி கேட்டுக்கிட்டுருக்க? கையில பணத்தைக் குடுத்தா... நான் பாட்டுக்கு வானத்துல பறந்து... சிங்கப்பூருக்கு போயிக்கிட்டே இருப்பேன்...''

''என் கணவர் சம்பாதிக்கற பணத்தை உனக்கு ஏன் நான் தரணும்?''

''உன்னோட கணவர் அபிலாஷ்னு பெருமையா சொல்லிக்க அவன் உயிரோட இருக்கணுமே... அதுக்குதான்...''

இதைக்கேட்ட சரிதா, அதிர்ச்சிக்குள்ளானாள். அதிர்ச்சியினால் அவளது அழகிய முகம் வெளிறிப்போனது.

சமாளித்துக் கொண்ட அவளுள் கோபம் எழுந்தது. 

சுதாகர் தொடர்ந்து பேசினான்.

''என்ன? நான் பேசறது புரியலியா? ஆசைப் பொண்டாட்டியோட அந்தரங்கம், அரங்கத்துல அம்பலமாயிட்ட அவலத்தை எந்த புருஷனாலயும் தாங்கிக்க முடியாது. உன்னோட கடந்த காலத்தை அவன்கிட்ட சொல்லிட்டா?... அவன் உயிரோட இருப்பானா?''

''நீயெல்லாம் ஒரு மனுஷன்... ச்சீ...''

''மனுஷன்னுதானே காதலிச்ச?''

''வாழ்க்கையில நான் பண்ணின பெரிய தப்பே அதுதான்.''

''அந்த பெரிய தப்புகூட சின்னதா இன்னொரு சின்ன தப்பும் பண்ணிடேன்...''

''ம்கூம்... உனக்கு பணம் எதுவும் குடுக்க நான் தயாரா இல்லை...''

''அப்பிடின்னா எல்லாத்தையும் உன் புருஷன் அபிலாஷ்ட்ட சொல்லிடுவேன்...''

''ஐய்யோ... இதைச் சொல்லி சொல்லியே என்னை பயமுறுத்தி சாகடிக்கிறீயே ?...''

''இங்க பாரு சரிதா... உன்னை சாகடிக்கறதுனால எனக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்லை. நீ உயிரோட இருந்தாத்தான் உன் உயிருக்குயிரான அபிலாஷ்ட்ட 'உன்னோட கடந்த காலத்தைப்பத்தி சொல்லிடுவேன்'னு உன்னை மிரட்டி பணம் வாங்க முடியும். என்னோட காரியத்தை சாதிக்க முடியும்.''

''ஒரு பொண்ணை மிரட்டி பணம் பிடுங்கற செயல். உனக்கு பெரிய சாதனையா? உன்னை நல்லவன்னு நம்பினதுக்கு எனக்கு இந்த சோதனையா? ப்ளிஸ்... என்னை விட்டுடு... அன்பான கணவரோட, அமைதியா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். உன்னோட தவறான நடவடிக்கைகளை மாத்திக்கோ. உழைச்சு சம்பாதிச்சுப்பாரு. அதில இருக்கற சுகம் வேற எதிலயும் கிடையாது. உன்னோட தப்புக்கள உணர்ந்து திருந்திட்டினா... நீயும் நல்லவன்தான். நல்லவனாக முயற்சி செய்யேன்...''

''உன்னோட போதனைகள் எனக்குத் தேவை இல்லை உன்னோட செல்வபோகமான வாழ்க்கையில... உன்கிட்ட இருக்கற பணம்தான் எனக்குத் தேவை...''

''நேர்மை இல்லாத வழிகள்ல்ல நிறைய பணம் சம்பாதிச்சிட்டியே, அதெல்லாம் போதாதா உனக்கு?..''

''பணம் சேர... சேர... ஆசைகளும் நிறைய சேருதே. தேவைகளும் கூடுது. 'இது போதும்'ங்கற திருப்தியே வராதே. அதனாலதான் இந்த நாட்டில இருந்து சிங்கப்பூர்ல போய் ஸெட்டில் ஆகலாம்ன்னு  திட்டம் போட்டிருக்கேன். அந்தத் திட்டத்துக்கு ஏகப்பட்ட பணம் தேவைப்படுது. வெட்டியா வாக்குவாதம் பண்ணிக்கிட்டிருக்காம, எனக்கு உபதேசம் செஞ்சுக்கிட்டிருக்காம... பணத்தை நீ ஸெட்டில் பண்ணு... சிங்கப்பூர்ல நான் ஸெட்டில் ஆயிடறேன். அதுக்கப்புறம் இந்த சுதாகரோட தொந்தரவே உனக்கு இருக்காது...''

சுதாகர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது... அங்கே திரைப்படத் தயாரிப்பாளர் கங்காராம் வருவதை சரிதா பார்த்தாள்.

''நீ உடனே இங்கே இருந்து போய்டு. ப்ரொட்யூஸர் கங்காராம்  வர்றாரு. இப்ப என்னோட கணவர் ம்யூஸிக் பண்ணிக்கிட்டிருக்கறது அவரோட படத்துக்குத்தான்.''

சுதாகர், அங்கிருந்து நகர்ந்தான். சரிதாவைப் பார்த்த கங்காராம் அவளருகே வந்தார்.

''என்னம்மா... ஏன் வெளியே நிக்கறீங்க...?''

''அது... அது... வந்து... பார்லருக்கு வந்தேன் ஸார். நீங்க வர்றதைப் பார்த்துட்டு இங்கேயே நின்னுட்டேன்... நல்லா இருக்கீங்களா ஸார்...?''

''நான் நல்லா இருக்கேன்மா. மாயாஸ் ப்ளாஸாவுல நிறைய கண்ணாடி சாமான்கள் வாங்க வேண்டியதிருக்கு. என்னோட மூத்த பொண்ணு வரலஷ்மி... போன வருஷம் கல்யாணம் ஆனவ... அவ, வீடு வாங்கி இருக்கா. அவளுக்காக க்ராக்கரி ஐட்டம்ஸ் வாங்க வேண்டி இருக்கு. கார் பார்க்கிங்ல இடம் கிடைக்கல. அதனால காரை தள்ளி நிறுத்தச் சொல்லிட்டு மாயாஸ் ப்ளாஸாவுக்கு நடந்தே வந்தேன். சரிம்மா... நீ பார்லருக்கு போ.''

''சரி ஸார்.''

பெருமூச்சு விட்டபிடி சரிதா, பார்லருக்குள் நுழைந்தாள்.


பசி, வயிற்றைக் கிள்ளியது பாவனாவிற்கு. காலையில் இருந்து காலியாகக் கிடக்கும் வயிறு எரிந்தது. கையில் இருந்த பர்ஸிற்குள் பழைய பத்து ரூபாய் நோட்டுகள் அன்றைய பஸ் செலவிற்கு மட்டுமே தாங்கும். நெட்டைபாபு, அவனுடைய அம்மாவிற்கு உடல்நலம் மிக மோசமாக உள்ளது என்றறிந்து அவனது கிராமத்திற்கு சென்றுவிட்டான். நான்கு நாட்களாக நெட்டை பாபு இல்லாதபடியால் அவளுக்கு வருமானம் வரும் வழி இல்லை. தன்மானத்தை விற்று அதன் மூலம் வரும் வருமானம்தான் அவளது வாழ்க்கையின் வறுமையைப் போக்கி வந்தது. வரவிற்கு மேல் செலவாக தங்கையின் படிப்பு, வீட்டு வாடகை, மளிகை என்று பாவனாவிற்கு தலைசுற்றியது. நான்கு நாட்களாக கையில் காசு இல்லாதபடியால் ஆட்டோகூட எடுப்பதில்லை. தங்கை ஏதோ முக்கியமான புத்தகம் வாங்கி வைக்கும்படி சொல்லிட்டுப் போயிருந்தாள். அதற்காக வெளியேறியவள், வயிற்றைக் கிள்ளும் பசி வந்தபின்தான் காலையில இருந்து எதுவும் சாப்பிடாமலே இருப்பது நினைவிற்கு வந்தது. தங்கையின் கல்விப் பசியை ஆற்ற முடியாது என்பதால் தன் வயிற்றுப் பசியை தாங்கிக்கொண்டு நடந்த அவளது கவனத்தைக் கலைத்தது சுதாகரின் குரல்.

''பாவனா... பாவனா...''

''நீயா...?''

''என்ன பாவனா... இவ்வளவு அலட்சியமா பேசற?''

''நீ என்ன பெரிய லட்சயவாதியா? உனக்கு மதிப்பு குடுத்து பேசறதுக்கு? தப்புக்களை தப்பாம பண்றவன்தானே நீ...''

''என்னமோ நல்லவளா வாழப்போறதா சொன்ன? நெட்டைபாபுவை உன் வீட்டு ஏரியா பக்கம் பார்த்தேன்...?''

''என்னோட கஷ்டகாலத்துக்கு உன்னைப்போல ஆளு கூடவும், அந்த நெட்டைபாபு மாதிரியான ஆளு கூடவும் பழக வேண்டிய தலைவிதி எனக்கு. ஆனா... உன்னைவிட அந்த நெட்டைபாபு நல்லவன். நேர்மையானவன். எப்படியாவது இந்த கேவலமான பிழைப்பை விடணும்தான் நான் நினைக்கிறேன். அப்பிடி நினைச்சுதான் என்னோட பணத்தை தேவையானப்ப வாங்கிக்கலாம்ன்னு உன்னை நம்பி உன்கிட்ட விட்டுவச்சேன். ஒரு கணிசமான தொகை சேர்ந்ததும் தர்றேன்னு நீயும் சொன்ன... நீ இப்பிடி ஃப்ராடு பண்ணுவன்னு நான் நினைச்சேனா?''

''நீ இந்த இரவு நேர வாழ்க்கைக்கு முழுக்கு போடப்போறதா இதோட நாலு தடவை சொல்லிட்ட. சொன்னமாதிரி போயிடுவியோன்னு எனக்கு தேவையான பணத்தை நான் எடுத்துக்கிட்டேன்.''

''என்னோட பணத்தை எனக்குத் தெரியாம, என்னைக் கேட்காம எடுத்துக்கிட்டு... நியாயவாதி மாதிரி பேசற...?''

''நியாயம்... அநியாயம் பார்த்தா, நாம கம்பெனியை நடத்தினோம்?''

''பெரிய இன்ட்டர்நேஷனல் கம்பெனி நடத்தின மாதிரி பேசறியே? வறுமையின் கொடுமையினால என்னோட பெண்மையை அடகு வச்சு, வாழ்க்கைய ஓட்டறேன். கணிசமான தொகை சேர்ந்ததும் இந்த கேவலமான பிழைப்பை நிறுத்திட்டு புதுவாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு திட்டம் போட்டிருந்த நேரத்துல நீ என்னோட பணத்தை எடுத்துக்கிட்டு ஏமாத்திட்ட... பணம் இல்லாம எப்பிடி வாழ முடியும்?''

''வாழ நினைச்சா வாழலாம்... வழியா இல்லை பூமியில்? கவியரசுவே பாடி இருக்காரு...''

 ''ச்சீ... அவர் அற்புதமான தத்துவப் பாடல் எழுதறவரு. அதைப்போய்... அற்ப புத்தியுள்ள நீ... வேற ஏதோ அர்த்தம் பண்ணிக்கிட்டு பேசறியே...''

''சரி... அதெல்லாம் போகட்டும். பழைய மாதிரி நான் கூப்பிடற இடத்துக்கெல்லாம் என் கூட வா. சொக்க வைக்கற உன்னோட அழகுக்கு சொக்கத்தங்கத்தைக் கொட்டிக் குடுக்கற மாதிரி பணத்தை வாரி வழங்க, பெரிய பண முதலைப்புள்ளிகள் தயாரா இருக்காங்க. அந்த நெட்டைபாபுக்கெல்லாம் என்னோட அளவுக்கு பெரிய ஆட்கள் தொடர்பு கிடையாது...''

''ஆனா... அந்த நெட்டைபாபு நல்லவன். உன்னைப்போல ஏமாத்த மாட்டான். ஒரு பொம்பள சம்பாதிக்கற பணத்தை திருட்டுத்தனமா எடுத்துக்கற புத்தி அவனுக்கு கிடையாது.''

''நீயும் நல்லவளா மாறணும்... நல்லவளா மாறணும்ன்னு சொல்லிக்கிட்டே... மறுபடி இந்த ராத்திரி வேலைக்குத்தான் வர்ற. பட்டினி கிடந்தா கூட பழைய வாழ்க்கைக்கு வரமாட்டேன்னு வைராக்கியமா பேசின. பெரிய படிப்பு படிச்சிருந்தா... கௌரவமா பிழைச்சிருப்ப... வெறும் சதைப்பிடிப்பு இருக்கறதுனால படுத்துத்தானே பிழைக்க முடியும்? இந்த லட்சணத்துல வீம்பு எதுக்கு...?''

''உயிரோட இருக்கறதே எதுக்குன்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். பெண்களை பயன்படுத்தி பிழைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு கௌரவமே தேவை இல்லை. ஏன்னா... நீங்க ஆண்கள். பெரும்பாலான ஆண்கள் எந்த வழியில சம்பாதிச்சாலும் கௌரவம் பார்க்க மாட்டாங்க...''

''கௌரவம் பார்த்தா வசதியான வாழ்க்கை கிடைக்குமா? எதப்பத்தியும் யோசிக்காதே. எனக்கு பாடம் போதிக்காதே. நான் சொல்ற மாதிரி... பழையபடி என் கூட வா. இப்பவே உன்னோட முடிவை சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. நிதானமா சொல்லு...''

சுதாகர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவனது மொபைல் ஒலித்தது. பேசியபடியே அங்கிருந்து நகர்ந்தான் சுதாகர். கவலை சூழ்ந்த முகத்துடனும், தளர்ந்த நடையுடனும் புத்தகக் கடையை நோக்கி நடந்தாள் பாவனா.

அவளது கால்கள் நடந்தன. அவளது நினைவுகள், கடந்த காலத்தை நோக்கி சென்றன.


நெட்டை பாபுவை சந்திக்கும் முன்னால் சுதாகரின் ஏமாற்றுப் பேச்சில் மயங்கி, அவனது வலையில் விழுந்தவர்களுள் பாவனாவும் ஒருத்தி. சுதாகரின் சூழ்ச்சியினால்... அவன் அழைத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் அவனுடன் போய் வந்த பாவனா, அவன் அறிமுகப்படுத்தி வைத்த செல்வந்தர்களிடம் தன்னை இழந்தாள். தன்மானத்தை இழந்தாள். அதுவரை நெருப்பாக இருந்த அவள், பண நெருக்கடியினால் கற்பு நெறியை இழந்தாள்.

பாவனாவுடன் படுக்கை சுகம் பெற்ற பணமுதலைகளிடம் நேரடியாக அவளால் பணம் பெற்றுக் கொள்ள முடியாது. சுதாகர் மூலம்தான் அவளுக்கு சேர வேண்டிய பணம் வரும். அந்தப் பணத்தையும் முழுவதுமாகக் கொடுக்காமல் பாவனாவை ஏமாற்றினான் சுதாகர். பெரியதாக ஒரு தொகை அவனிடம் சேர்ந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவனை நம்பி, அவனிடம் பணத்தை விட்டு வைத்திருந்தாள் பாவனா. ஒரு நல்ல தொகை சேர்ந்ததும் தன்னுடைய தவறான பாதையை மாற்றிக் கொண்டு முறையான வாழ்க்கை வாழலாம் என்று காத்திருந்த பாவனாவிற்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. பெரிய தொகை சேர்ந்ததும் சுதாகரை சந்தித்து,  தன்னுடைய பணத்தைக் கேட்டாள்.

''என்ன பணம்? ஏது பணம்? யார் பணம்?'' எதுவுமே புரியாதது போல கேள்விகளை அடுக்கினான் சுதாகர்.

''என் உடலை மேய்ந்த பணக்கார செம்மறியாடுகள் கொடுத்த பணத்தையெல்லாம் நீதானே வாங்கி வச்சிருந்த? அதைத்தானே கேட்கறேன். என்னமோ ஒண்ணுமே புரியாத மாதிரி கேட்கற?''

''அதான் அப்பப்ப உன்கிட்ட குடுத்தேனே பாவனா...?''

''அதெல்லாம் ஒரு பணமா? என்னோட டேக்ஸி செலவு, சாப்பாட்டு செலவுக்கு மட்டும்தானே குடுத்த?''

''குடுத்ததை வங்கிக்கிட்டு... போய்க்கிட்டே இருந்தா... உன் பிழைப்பு நடக்கும். இப்பிடி ஏடாகூடமா கேட்டுக்கிட்டிருந்தா... ஒரு பைசா கூட தேறாது. எப்ப நீ வந்தாலும் உனக்கு சேர வேண்டிய தொகையை கரெக்ட்டா குடுத்துக்கிட்டுதான் இருந்தேன்... எதுக்காக இப்பிடி பொய் சொல்ற?''

''பொய்யா? நானா பொய் சொல்றேன்? வீட்டு உபயோகப் பொருட்கள் தர்றதாவும், அதை வித்துக் குடுத்தா கமிஷன் தர்றதாவும் சொல்லிட்டு,  அப்புறம் பொண்ணுகளை தப்பான வழிக்கு கொண்டு போற நீ சொல்றது பொய்யா? உன்னோட நாடகம் தெரிஞ்சும்... எதுவும் செய்ய முடியாத இயலாமையினால இரவு நேரங்கள்ல சீரழிஞ்சு போற வாழ்க்கையாயிடுச்சு. நீ சொன்ன பொய்கள்ன்னாலதான் நான் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.  பெரியதா ஒரு தொகை சேர்ந்ததும் இந்த வாழ்க்கையை அடியோட மறந்துட்டு ஏதாவது கடை வச்சு பிழைக்கலாம்ன்னு தைரியமா இருந்தேன். இப்ப என்னடான்னா... எனக்கு எந்தப் பணமும் குடுக்க வேண்டியதில்லைன்னு நீதான் பொய் சொல்ற. மனசுக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழறது ஒரு நரகம். இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைச்சுடும்ன்னு நம்பிக்கையோட காத்திருந்த எனக்கு துரோகம் பண்ணாத. எனக்கு சேர வேண்டிய பணத்தைக் குடுத்துடு. உன் திசைக்கே ஒரு கும்பிடு போட்டுட்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டிருப்பேன். கண்ணியமான குடும்பத்துல பிறந்து வளர்ந்த நான், நீ வச்ச கண்ணியில கண்ணை மூடிக்கிட்டு விழுந்துட்டேன். என்னோட கற்பு திரும்ப கிடைக்காதுதான். ஆனா... தினம் தினம் தினவெடுத்துப் போய் வர்ற திமிங்கலங்ககிட்ட என்னோட உடம்பைக் குடுக்ற உபாதையில இருந்து, மன வேதனையில இருந்து தப்பிச்சு... நிம்மதியா இருப்பேன். எனக்கு தேவைப்பட்டது பணம். அந்த பணத்துக்காகத்தானே என்னையே பல பேர்ட்ட பறி குடுத்தேன்...? பணக்கார சபலப் பேர்வழிகளுக்கு அர்த்தராத்திரியில அந்தரங்கமா படுக்கை விரிக்கச் சொன்ன... நீ... அதன் மூலமா எனக்குக் கிடைச்ச பணத்தை இல்லைன்னு இப்ப கையை விரிக்கறியே? உனக்கே நியாயமா இருக்கா? யோசிச்சுப் பாரு. உன் மனசாட்சியை கேட்டுப் பாரு...''

''மனசாட்சியா? அதையெல்லாம் ஓரங்கட்டிட்டுதானே என்னோட தொழிலை நான் பண்ணிக்கிட்டிருக்கேன்? உன்னோட பணம் என்கிட்ட இருக்கறதுக்கு எந்த சாட்சியும் உன்கிட்ட இல்லை. இந்த லட்சணத்துல மனசாட்சியைப்பத்தி பேசறியா?''

''ஆமா. பேசறேன்... உன்னை ஒரு மனுஷனா நினைச்சு. ப்ளீஸ்... என்னோட பணத்தை எனக்கு குடுத்துடு. இனிமேலாவது கௌரவமா வாழணும்ன்னு நினைக்கிறேன்.''

''நீ நினைக்கறது நடக்காது. என்கிட்ட இருந்து ஒரு பைசா கூட உனக்கு வராது... உன்னால என்னை என்ன பண்ண முடியும்?''

''முடியாதுதான். உன்னை என்னால ஒண்ணும் பண்ண முடியாதுதான். ஆனா... நீ செய்யற இந்தக் கொடிய பாவத்துக்கு நீ பதில் சொல்லியே ஆகணும். இனிமேல் நீ கூப்பிடற இடத்துக்கு நான் வர மாட்டேன்....''

''வர மாட்டியா? வர வைப்பேன். நீ வருவ. உனக்கு பணம் வேணும்ன்னா... என்னைத் தேடித்தானே வரணும்? உன்னோட கஷ்டத்துல இருந்து காப்பாத்தினவன் நான்...''

''காப்பாத்தினியா? நீயா? இஷ்டப்படாத வாழ்க்கையில... கஷ்டப்பட்டு... ஈடுபட்டு... நான் சம்பாதிச்ச பணத்தை அபகரிக்கற நீ... என்னைக் காப்பாத்தினதா சொல்ற? தட்டிக் கேட்க ஆள் இல்லாதவள்தானே? தட்டுகெட்டு வாழத் தயாரானவதானேன்னு இளப்பமா நினைச்சு... இழிவா பேசற நீ... என்னைக் காப்பாத்தினியா? வேடிக்கைதான் போ. சரி, முடிவா சொல்லு என்னோட பணத்தை தரப்போறியா இல்லையா?''

''அதான் முடியாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டேனே?''

''இதுதான் உன்னோட முடிவா?''

''ஆமா...''

''உன்னோட இந்த பாவத்துக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். குட்பை...''

கோபத்தால் சிவந்த முகத்துடனும், சோகத்தால் கண்ணீர் ததும்பிய கண்களுடனும் அங்கிருந்து அகன்றாள் பாவனா.

மோட்டார் சைக்கிள் ஹாரன் ஒலி, காதைத் துளைப்பது கேட்டு, பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் பாவனா.

காலம் கடந்தாலும் அந்த சுதாகர் மீது அவளுக்கு இருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை. நினைவுகளை தற்காலிகமாக இதயத்தின் ஓரத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு புத்தகக் கடைக்குள் நுழைந்தாள்.


வழக்கம்போல இரவு நேர நடன நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறி, கால்டேக்ஸி நிற்கும் இடத்திற்கு வந்தாள் கயல்விழி. அவளைப் பின் தொடர்ந்து வந்தான் சுதாகர்.

''மிஸ் கயல்விழி... உங்களைப் போலவே உங்க டான்சும் பிரமாதம். இந்த மாதிரி நளினமா டான்ஸ் ஆடி இதுவரைக்கும் நான் வேற யாரையும் பார்த்ததில்லை. அற்புதம்!...''

''தேங்க்ஸ்...'' ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள் கயல்விழி.

''மிஸ் கயல்விழி... உங்க ஹோட்டல் மேனேஜர்ட்ட கேட்டு உங்க பேரைத் தெரிஞ்சிக் கிட்டேன். உங்களை மாதிரி அழகான பெண்கள்... நினைச்சா... இந்த உலகத்தையே விலைக்கு வாங்க முடியும்...''

இதைக் கேட்டு கோபப்பட்டாள் கயல்விழி. சுதாகரின் சூழ்ச்சி புரிந்தது.

''உங்ககிட்ட வந்து உலகத்தை விலை கேட்டேனா? நாலு பேர்ல என்ன?! நானூறு... நாலாயிரம் பேர் முன்னால டான்ஸ் ஆடுவேன்... பாடுவேன். ஆனா... என்னோட வாழ்க்கையிலயும், என்னோட மனசுலயும் ஒருத்தன் மட்டும்தான் இருப்பான். பணத்துக்காக அரங்கத்துல ஆடற நான், அதே பணத்துக்காக யாரோட அந்தரங்கத்துலயும் ஆடத்தயாரா இல்லை. ஹோட்டல்ல டான்ஸ் ஆடறவள்ன்னா... கூப்பிட்டா வந்துடுவாள்ங்கற எண்ணமா...? பொண்ணுன்னா இளக்காரம், அவ மூலமா சம்பாதிக்கற பணம்ன்னா பலகாரம். ஒரு பொண்ணு நினைச்சா... ஒரு குடும்பத்தை மட்டுமில்லை ஒரு நாட்டையே கட்டிக் காப்பாத்துவா. ஆனா ஒரு ஆண்? அவனுக்கு பக்கபலமா... ஊன்றுகோலா... உறுதுணையா... கூடவே ஒருத்தி சேவை செய்யணும். அவனுக்கு தோள் குடுக்கணும். அந்தப் பெண் அவனோட மனைவியா, மகளா, தாயா, தோழியா இருக்கலாம். ஆனா இந்த துணைகள் இல்லாத ஒரு ஆம்பளை தனியா எதையும் வெட்டி முறிக்க முடியாது. ஆதரவு இல்லாத ஒரு பெண், சொந்தக்கால்ல நின்னு ஜெயிச்சுக் காட்டுவா. ஒரு ஆணுக்குரிய பலத்தையும், வலிமையையும் தன்னோட ஐக்கியப்படுத்திக்கிட்டு சாதனை செய்றவ பெண். குடும்பத்தையும் கவனிச்சு, வெளில வேலைக்கும் போய் இரட்டை பலத்தோட இறக்கை கட்டி பறக்கறவ பெண். பெண்களோட பெருமையை புரிஞ்சுக்காம எது எதையோ கற்பனை பண்ணிக்கிட்டு என்கிட்ட வந்து அனாவசியமா பேசிக்கிட்டிருக்கீங்க...''

''அட... பிடிக்கலைன்னா விடுங்க மிஸ் கயல்விழி. நீங்க நினைச்சா உங்களுக்கு இருக்கற அழகுக்கும், கலைத்திறமைக்கும் சினிமால ஹீரோயினா வரலாமே. நீங்க 'யெஸ்'ன்னு ஒரு வார்த்தை சொன்னா... உங்களை நான் நம்பர் ஒன் ஹீரோயினாக்கறேன். உங்களோட எதிர்காலம் பொன்மயமானதா இருக்கும்...''

''என்னோட எதிர்காலத்தைப்பத்தி முடிவு செய்ய எனக்குத் தெரியும். நான் உன்கிட்ட வந்து எதாவது கேட்டேனா...?''

''என்ன? மரியாதை தேயுது...?''

''மரியாதை குடுத்து மரியாதை வாங்கணும்?''

''உனக்கெல்லாம் மரியாதை ஒரு கேடா? என்னமோ... பெரிய கண்ணகி மாதிரி பேசுற? உன்னை மாதிரி எத்தனை பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன்?! ஆரம்பத்துல ஆ... ஊ...ன்னு கண்ணகி வேஷம் போடுவீங்க. பத்தினி தெய்வம் மாதிரி வசனம் பேசுவீங்க. அப்புறம்...? பத்து பேருக்கு பத்தினியா இருப்பீங்க. உன்னை மாதிரி பொம்பளைங்களைப்பத்தி எனக்குத் தெரியாதா?''

கயல்விழி குறுக்கிட்டு கத்தினாள்.

''ஸ்டாப் இட். என் வழிக்கு நீ வராதே...''

''நீயா என்னைத்தேடி என்னோட வழிக்கு வருவ...''

''அது ஒரு நாளும் நடக்காது...'' கால்டேக்ஸியில் ஏறிக் கொண்டாள் கயல்விழி. கார் விரைந்தது.


முன் தினம் இரவு ஹோட்டலில் ஆடிய களைப்பு நீங்காத கயல்விழி, காலையில் மிகவும் தாமதமாக எழுந்தாள். அவள் அணிந்திருந்த மெல்லிய காட்டன் நைட்டி, அவளது அழகான அங்கங்களின் அளவுகளையும், வளைவுகளையும் வடிவமைத்துக் காட்டியது.

எழுந்ததும் தன் உள்ளங்கைகளைப் பார்க்கும் வழக்கம் உடைய கயல்விழி, அன்றும் அதுபோல தன் உள்ளங்கைகளைப் பார்த்தாள்.

அப்போது அவள் முன் ஆவி பறக்கும் காபியுடன் நின்றிருந்தாள் வந்தனா.

காபியை கையில் வாங்கிக் கொண்ட கயல்விழி, தங்கையைப் பார்த்து புன்னகை செய்தாள்.

''நான் இன்னும் பல் தேய்க்கலை வந்தனா. இதோ வந்துடறேன்'' என்றபடி காபியை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு குளியறைக்கு சென்றாள். வேகமாக பல்லைத் தேய்த்துவிட்டு, காபியைக் குடித்தாள்.

''அருமையா காபி போட பழகி இருக்க. படிப்பெல்லாம் எப்பிடி போய்க்கிட்டிருக்கு?''

''நான்தான்க்கா க்ளாஸ் ஃபர்ஸ்ட்...''

''வெரிகுட். உன்னோட எதிர்காலம் உன்னோட படிப்புலதான் அடங்கி இருக்கு...''

''அந்தப் படிப்புக்கு வேண்டிய பணத்துல உன்னோட கஷ்டங்கள் அடங்கி இருக்கே...''

''இன்னைக்கு கஷ்டம்... பின்னாடி? நீ சுயமா முன்னுக்கு வந்தப்புறம் சௌகரியமா வாழப் போறோமே...''

''சௌகர்யங்களைப் பத்தி நீ பேசறியாக்கா? உன் கண்ணைப்பாரு. ராத்திரி சரியா தூங்காததுனால சிவந்து போயிருக்கு?! உடம்பு குண்டாயிடும்னு இஷ்டப்பட்டதை சாப்பிட முடியாம வாயைக் கட்டிக்கிட்டு கட்டுப்பாடா இருக்கியே?! உன்னோட ஆசைகளை எல்லாம் எனக்காக விட்டுக்குடுத்து எங்களோட நலனுக்காக உன்னைக் கசக்கிப் பிழிஞ்சு சாறு எடுக்கறோம். உனக்கு தங்கையா பிறந்து, அந்த உறவினால உனக்கு பெரிய பாரத்தைத்தான் நான் குடுத்திருக்கேன்...''

வந்தானாவின் கைகளைப் பிடித்து, தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் கயல்விழி.

''இந்த பாரம் எனக்கு பெரும் சுமை இல்லை வந்தனா. இது ஒரு பூக்கூடை. உறவுகள்ங்கறது நம்பளோட சந்தோஷத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துக்கற நேயம் கொண்டது. ஒரு பெரிய தொழில் நிறுவனத்துல அதோட பெரிய பொறுப்புக்கு அதோட நிர்வாகியோட திறமை காரணமா இருக்கலாம். ஆனா உறவுகளை நிர்வகிக்க பாசம்தான் முக்கிய பங்கு வகிக்கணும். உன் மேல என் உயிருக்கு மேலான பாசம் வச்சிருக்கேன். என் கூடப் பிறந்த உனக்காகவும், என்னைப் பெத்தெடுத்த அம்மாவுக்காகவும் என்னோட அன்பு இருக்கும். அந்த அன்பு, அற்புதமான அர்ப்பணிப்பா இருக்கும்.''

''உன்னையே அர்ப்பணிச்சு எங்களுக்காக வாழற உன்னைப் போல ஒரு அக்கா கிடைக்கறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்.''

''குடுத்து வச்சவ நான்தான். என்னோட சிரமங்களைப் புரிஞ்சுக்கிட்டு, வீட்டு நிலைமையை புரிஞ்சுக்கிட்டு... நான் ஆசைப்பட்டபடி நல்லா படிச்சிக்கிட்டிருக்கியே. அது போதும்மா...''

''சரிக்கா. நான் போய் அம்மாவுக்கு டிபன் குடுத்துட்டு, மாத்திரையும் குடுத்துட்டு ஸ்கூலுக்கு கிளம்பறேன்.''

''சரிம்மா. நானும் குளிக்கப் போறேன்.''

கயல்விழி, குளியலறைக்கு சென்றாள். அங்கிருந்த ஆள் உயரக் கண்ணாடியில் தன் மேனியின் அழகையும், செழுமையையும் கண்டு ரஸித்த கயல்விழியின் உடலில் விரகதாபமும், பருவத்தின் பரிதவிப்பில் எழுந்த உணர்ச்சிகளும் கிளர்ந்தெழுந்தன.

தளதளவென்று பூத்துக் குலுங்கும் இளமைகள் கண்டு சுயரஸனையில் ஆழ்ந்தாள். அழகான அங்கங்களை அவளே ரஸித்தாள். அவளையும் அறியாமல் அவளது விரல்கள், பளிங்கு போன்ற உடல் முழுவதையும் தழுவ, உணர்ச்சிகளால் சூழப்பட்டு தவித்தாள்.

'என் கழுத்தில் தாலி கட்டி என்னை கௌரவிக்கவும், என் அழகை ஆட்கொள்ளவும், தீயாக எரியும் என் ஆசைத்தீயை அணைக்கவும், என் உடலைத் தழுவிக் கொண்டு என் தாபத்தைத் தீர்க்கவும்  என் உருவத்தை மட்டுமின்றி என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு, என்னையே தன் உலகமாக மதித்து வாழும் ஒரு நல்லவன் வருவானா? எப்போது வருவான்? அப்பிடி ஒருவன் வரும் வரை என் வயது காத்திருக்குமா? கடவுளே... என் உடலைக் குத்தும் இந்த மோக முள்ளை எடுத்துவிடு கடவுளே. மனதில் தோன்றும் பாச உணர்வுகள் போதும். உடலில் பொங்கும் பருவ உணர்ச்சிகள் வேண்டவே வேண்டாம் தெய்வமே.' 'மோகத்தைக் கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' என்கிற வரிகள்தான் அவளது நினைவிற்கு வந்தன. மளமளவென்று பச்சைத் தண்ணீரைத் தன் தலை மீது ஊற்றி, உணர்ச்சி சூடேறிய தன் உடலைக் குளிரச் செய்தாள். தியாகமே என் வாழ்வு. குடும்ப நேயமே என் வாழ்வு' என்று கூறியபடியே குளித்து முடித்தாள், பச்சைத் தண்ணீர் பட்ட அவளது மேனி, தன் இச்சைகளைத் தணித்துக் கொண்டது. சில நிமிட நேரங்களில் தவித்துப் போன அவள், தெளிந்த உள்ளத்துடன் வெளியே வந்தாள். 'அவள் ஒரு தொடர்கதை'யாய் தன் அன்றாட அலுவல்களை அலுப்பின்றி செய்ய ஆரம்பித்தாள்.

வந்தனா ஸ்கூலுக்குப் போன பின், அம்மாவுடன் உட்கார்ந்து அரை மணி நேரம் பேசினாள். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அம்மாவுடன் ஆறுதலாக பேசுவது கயல்விழியின் வழக்கம்.

''என்னம்மா... பிஸியோதெரபியெல்லாம் தவறாம பண்ணிக்கிட்டிருக்கீங்களா?''

''பண்றேன்மா. பிஸியோதெரபிக்காக வர்ற பொண்ணு சங்கீதா, நாள் தவறாம வந்துடறா. நல்ல பொண்ணு....''

''அது சரிம்மா. வலி குறைஞ்சிருக்கா இல்லையா?''

''நல்லா குறைஞ்சிருக்குமா. இன்னும் கொஞ்ச நாள்ல்ல எழுந்திருச்சிடுவேன். வீட்டு வேலை எல்லாம் இனி நானே பார்த்துக்குவேன். பாவம் வந்தனா. ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால நிறைய வேலை செஞ்சுட்டுப் போறா. நீயும் களைப்பா வர்றதுனால உன்னாலயும் முடியலை. நான் இருந்தும் இல்லாத நிலைமை... கொடுமையா இருக்குமா. கண் முன்னால பிள்ளைங்க நீங்க கஷ்டப்படறதைப் பார்க்க, வேதனையா இருக்கு. குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்க வேண்டிய உங்க அப்பா... ஓடிப் போயிட்டாரு. இப்பிடிப்பட்ட ஆளு எதுக்காக கல்யாணம் பண்ணி, குழந்தைங்களைப் பெத்துக்கணும்? இஷ்டப்படி திரிஞ்சிருக்க வேண்டியதுதானே? என்னோட வாழ்க்கையையும் நாசம் பண்ணி... உங்களையும் இப்பிடி கஷ்டப்படுத்தி... அது போதாதுன்னு.... எனக்கு வேற உடம்புக்கு சுகமில்லாம.... போதுண்டா சாமி.... பொண்ணா பிறக்கவே கூடாது. அப்பிடியே பிறந்து தொலைச்சுட்டாலும் பொண் குழந்தைங்களை பெத்தெடுக்கக் கூடாது...'' ஆத்திரமும், அழுகையும் சேர்ந்து கொள்ள, அனலாய் வெளி வந்தன வார்த்தைகள். கண்களில் குளம் கட்டி நின்றது கண்ணீர். அம்மா அழுவதைப் பார்த்து, பதறிப் போனாள் கயல்விழி.

''ஏம்மா அழறீங்க? நாங்க இல்லையா உங்களுக்கு? பொண்ணுங்களைப் பெத்ததுனால தான் எங்களால முடிஞ்சதை நாங்க பார்த்துக்கறோம், பையன்களா இருந்தா...? அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்குன்னு சொல்ற மாதிரி.... சுமைதாங்கியா குடும்பத்தைத் தாங்காம... உன் மேல பாரத்தை சுமத்திட்டு. அவனுங்க ஊரை சுத்திக்கிட்டிருப்பானுங்க... அதெல்லாம் போகட்டும். இப்பிடி கவலைப்பட்டுகிட்டே இருந்தா... மன அழுத்தம் அதிகமாகி, உடம்பு குணமாகறதுக்கு லேட்டாகறது மட்டுமில்ல... இன்னும் அதிகமா உடல்நலம் பாதிக்கும், அதனால, கவலைப்படறதை நிறுத்துங்க. கடவுளை நம்புங்க. எல்லாம் சரியாகும். கூடிய சீக்கிரம் நீங்க எழுந்திருச்சு, பழைய மாதிரி நடமாடப்போறீங்க. அதையெல்லாம் நினைச்சு சந்தோஷப்படறதை விட்டுட்டு... போன கதையைப் பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க?!... நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுக்கணும். அதில எல்லாமே நார்மலா இருக்குன்னு வந்துட்டா... அதுக்கப்புறம் டாக்டர் சொல்ற ஆலோசனைப்படி மெதுவா கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நடந்து, அப்புறம் வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம். நேத்து, டாக்டர்ட்ட பேசினேன். அவரும் 'உங்கம்மாவோட பிரச்னை முக்கால்வாசி அளவு சரியாயிடுச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல்ல முழுசா குணமாயிடும். ஒரு ஸ்கேன் மட்டும் எடுத்துப் பார்த்துடலாம்'ன்னு சொன்னார்.''

''அப்பிடியாம்மா? நான் நடமாட ஆரம்பிச்சுட்டா... என்னால முடிஞ்ச வேலையை செய்வேன். உங்க வாய்க்கு ருசியா சமைக்கப் போடறதைவிட வேற என்னம்மா எனக்கு சந்தோஷம் இருக்கு...?''

''இன்னும் கொஞ்ச நாள்ல்ல அந்த சந்தோஷம் கிடைக்கும். அது வரைக்கும் எதைப் பத்தியும் யோசிக்காம, நிம்மதியா இருக்கணும். சரியா...?'' அம்மாவின் நாடியைப்பிடித்து கொஞ்சினாள் கயல்விழி.

''காலா காலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா உன்னோட குழந்தையை கொஞ்சிக்கிட்டிருந்திருப்ப...'' அம்மாவின் வாயை தன் விரல்களால் மூடினாள் கயல்விழி.

''மூச்... அந்தப் பேச்சுக்கே இடமில்லை....''

''வயசு... அதுக்குரிய ஆசைகள்... கனவுகள்... இதெல்லாம் உனக்குள்ள நிச்சயமா இருக்கும். நான் எழுந்திருச்சப்புறம்... உனக்கு மாப்பிள்ளை பார்க்கறதுதான் என்னோட முதல் வேலை.''

''நீங்க சொல்ற மாதிரி... எனக்கும் என்னோட வயசுக்குரிய ஆசைகள் எல்லாமே இருக்கு. ஒத்துக்கறேன். ஆனா... அதையும் தாண்டி எனக்காக சில கடமைகள், பொறுப்புகளெல்லாம் இருக்கு. அதுதான் எனக்கு முக்கியம். வந்தனாவுக்கு ஒரு வளமான எதிர்காலம் அமைச்சுக் குடுக்கறது மட்டும்தான் என்னோட லட்சியமா நினைக்கறேன். மத்ததையெல்லாம் ஓரங்கட்டிட்டு வாழப் பழகிட்டேன். அவளைப் பெற்றெடுத்த தாய் நீங்கன்னா... அவளை தத்தெடுத்த தாயா நான் என்னை உருவகப்படுத்தி வாழ்ந்துக்கிட்டிருக்கேன். சலனங்களை கட்டுப்படுத்தி, வாழ்க்கையை ஜெயிச்சுக் காட்டுவேன்...''

''உன்னோட திருமண வாழ்க்கையை தியாகம் செஞ்சுதான்... இந்தக் குடும்பத்தையும், உன்னோட தங்கச்சியையும் நீ பார்த்துக்கணுமா? உனக்கு கணவனா வர்றவன் நல்லவனா இருந்தா எந்த பிரச்னையும் இல்லையே...?''

''நல்லவனோ... வல்லவனோ... எவனா இருந்தாலும் கண்டிப்பா பிரச்னை வரும். உன் அம்மா, என் அம்மா, உன் தங்கச்சி, என் தங்கச்சி... உன் பணம்... என் பணம்.... இப்பிடி ஏகப்பட்ட தகராறுகள் வரும். இன்னிக்கு தேதிக்கு நான் எந்த சிக்கலும் இல்லாம நிம்மதியா இருக்கேன். என் குடும்பத்தை கவனிச்சுக்க எனக்கு சுதந்திரம் வேணும்மா. வேற யாரையும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படக் கூடாது. நான் சம்பாதிக்கற பணத்தை இன்னொருத்தன்ட்ட கேட்டுட்டு செலவழிக்கணும்ங்கற சூழ்நிலைக்கு நான் தயாரா இல்லை. நமக்கு நடுவுல ஒரு மூணாவது மனுஷன் வர்றதை நான் வெறுக்கறேன்மா...''

''மூணு முடிச்சு போடப் போறவன், மூணாவது மனுஷனா உனக்கு? வேடிக்கைதான் போ நீ பேசறது?''

''பேசும்போது வேடிக்கையா இருக்கற இந்த விஷயம், நடைமுறைக்கு வரும்போது வேதனையா உருமாறிடும். தீர்மானமா முடிவு பண்ணிட்டேன் திருமணமே வேண்டாம்ன்னு...''

''இப்ப... இந்த சூழ்நிலையில உனக்கு எல்லாமே ரொம்ப சுலபமான விஷயமா தோணும். இளவயசுல ஏற்படற துணிவு... குடும்பத்தை முன்னிலைப் படுத்தி, நன்மை செய்யத் துடிக்கும். உன்னோட கடமைகள் எல்லாம் முடிஞ்ச பிறகு? நீ தனியா நிக்கும்போது உன் கையோடு கை கோர்க்க இன்னொரு கை கிடைக்காதா.... சாய்ஞ்சுக்க தோள் கிடைக்காதான்னு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகும்... பெண்களோட தவிர்க்க முடியாத தவிப்புமா அது...''

''அட போங்கம்மா. எனக்கு கை குடுக்கறதுக்கு என்னோட உயிர்த் தோழி சரிதா இருக்கா. அவளோட தோள்ல சாய்ஞ்சுக்கிட்டா... என்னோட கவலைகள் எல்லாம் கண்காணாம ஓடிப் போயிடும். எனக்கே எனக்காக என்னோட சரிதா இருக்கும்போது... வேற யாருமே தேவை இல்லை...''

''அடடே... என்னோட கவலையில சரிதா பத்தி... கேக்கவே விட்டுப் போச்சு. சரிதா எப்பிடி இருக்கா? ஏதாவது விசேஷமா இருக்காளா...?''

''விசேஷமெல்லாம் இப்ப வேண்டாம்ன்னு தள்ளி வச்சிருக்கா. அவளுக்கு ஏதோ 'மூட்' சரி இல்லை. என்ன ஆச்சுன்னு தெரியலை.''

''வழக்கம் போல அவங்கம்மா அப்பாவை நினைச்சுட்டாளா...?''

''தெரியலைம்மா. ஆனா... அவகிட்ட ஒரு வித்தியாசம் தெரியுது. அதுதான் கவலையா இருக்கு....''

''அட... என்னம்மா நீ... சின்னச்சிறுசுக... புருஷன், பொண்டாட்டிக்குள்ள செல்லமா தகராறு நடந்திருக்கும். அதனால கோபமா இருந்திருப்பா... இதுக்குப் போய் பெரிசா கவலைப்பட்டுக்கிட்டு? பொழுது போய்... பொழுது விடிஞ்சா அந்தக் கோபம் மாயமா மறைஞ்சுடும்.''

''ஓ... நீங்க அப்பிடி சொல்றீங்களா? அபிலாஷ் மேல உள்ள கோபத்தை என் மேல கொட்டி இருப்பாளோ? என்கிட்ட சரிதாவுக்கு அவ்ளவு உரிமை. இதை நினைச்சா எனக்கு எவ்ளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?''

''எனக்கு தெரியாததா? அது சரி, உன்னோட எதிர்காலம் பத்தி நான் பேசிக்கிட்டிருந்த விஷயம்... சரிதா பக்கம் திசை மாறிடுச்சு...''

''இங்க பாருங்கம்மா. உங்க பொண்ணு நான்... திசை மாறி எங்கேயும் போக மாட்டேன். எனக்கு நீங்க, வந்தனா, சரிதா, என்னோட டான்ஸ்... இதுதான் உலகம், வாழ்க்கை, எதிர்காலம் எல்லாம். வேற பேச்சே வேண்டாம்.''

'ஹூம்...' பெருமூச்சு விட்டாள் அம்மா.

''இதுக்கு மேல உன்கிட்ட என்ன பேசறது? என் வாய்க்கு பூட்டு போட்டு வைக்கப் பழகிட்ட.''

''இல்லைன்னா... உங்க கூட பேசி ஜெயிக்க முடியுமா? ''

''சரிடியம்மா... நீயே ஜெயிச்சவளா இரு. உனக்கு எது சந்தோஷமோ... அதன்படி செய். ''

''ம்... இப்பதான் நீங்க என் செல்ல அம்மா...'' அம்மாவின் கன்னத்தில் செல்லமாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, சமையலறையை நோக்கி நடந்தாள் கயல்விழி.


விசாலமான படுக்கை அறையில் அழகிய தேக்கு மரக்கட்டில் போடப்பட்டிருந்தது. அதன்மீது சொகுசான மெத்தையும் அதன்மீது ஷேரலாப்பூர் வேலைப்பாடுகள் நிறைந்த ஆடம்பரமான விரிப்பு விரிக்கப்பட்டு, வெல்வெட் உறைகள் போடப்பட்ட தலையணைகள் போடப்பட்டிருந்தன. தலையணையில் தன் முகம் பதித்து அழுது கொண்டிருந்தாள் சரிதா. சாலை விபத்தில் ஒரே நேரத்தில் தன் பெற்றோரை இழந்துவிட்ட துயரம், நினைவிற்கு வந்து அவ்வப்போது சரிதா அழுவது வழக்கம்.

ஆனால் அன்று, அவள் அழுததற்கு வேறு காரணம் இருந்தது. சுதாகரின் மிரட்டலால் பயந்து போய், செய்வதறியாது அழுது கொண்டிருந்தாள்.

கண்களில் கண்ணீர் பெருகியதால் ஐ லைனர் கலைந்து வழிந்திருந்தது. கண்களும், மூக்கும் வீங்கி, சிவந்து காணப்பட்டது. கண்ணீரின் ஈரத்தால் தலையணையும் அவளது புடவையும் நனைந்திருந்தது.

அபிலாஷின் காலடியோசை கேட்டது. அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கி, மூக்கு வீங்கி இருப்பதைக் கவனித்த, அபிலாஷ், மனம் பதறினான்.

''என்னம்மா... உங்கப்பா, அம்மா ஞாபகம் வந்துருச்சா?'' வழக்கமாய் சரிதா அதற்குதான் அழுவாள் என்பதால் கேட்டான் அபிலாஷ்.

''அ... அ... ஆமாங்க. ரோட்ல ஓரமா வாக்கிங் போய்க்கிட்டிருந்த எங்கம்மா, அப்பாவுக்கு குடிகார டிரைவர் ஓட்டிக்கிட்டு வந்த லாரி எமனாயிடுச்சு. விபத்து நடந்த அந்த இடத்துலயே அவங்க ரெண்டு பேரும் ரத்த வெள்ளத்துல செத்துக்கிடந்ததை பார்த்த அந்த அதிர்ச்சி என்னோட நினைவுக்கு வந்துடுது. நான் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வர்ற வழி அந்த வழிதான். என் கண்ணால பார்த்த அந்த கொடுமையான காட்சி இன்னும் என்னோட கண்ல இருந்து நீங்கலை. ஒரே நேரத்துல பெத்தவங்க ரெண்டு பேரையும் பறி குடுத்துட்ட அந்த துயரத்தை என்னால மறக்கவே முடியலை...'' சுதாகரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையுடன், கூடவே பெற்றவர்களின் பிரிவுத் துயரம் பற்றி பேச ஆரம்பித்தபின் மேலும் கதறி அழுதாள் சரிதா. அதைப் பார்த்துப் பதறிப்போன அபிலாஷ், அவளை அள்ளி, அணைத்து அவளது கண்களைத் துடைத்துவிட்டான்.

''உனக்கு அம்மாவா... அப்பாவா... கணவனா... துணைவனா... நண்பனா... எல்லாமே நான் இருக்கும்போது எதுக்கு இந்தக் கண்ணீர்? பெத்தவங்களை இழந்து தவிக்கிறது பெரிய சோகம்தான். கொடுமைதான். அதுக்காக? அதையே நினைச்சுக்கிட்டு அழுதுகிட்டே இருந்தா? நீ அழறதைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கே...''

''சரிங்க... நான் அழலை...''

''நீ சந்தோஷமா இருந்தாத்தான் நான் என்னோட ம்யூஸிக் வேலையில முழுமையா கவனம் செலுத்த முடியும். உனக்கு என்ன குறை? நான் பிரபலமான ம்யூஸிக் டைரக்டர்னு பேர் வாங்கி இருக்கேன். பாப்புலரான இசை அமைப்பாளரோட மனைவிங்கற பெருமையை உனக்கு குடுத்திருக்கேன். எல்லா விஷயத்துலயும் உனக்கு சுதந்திரம் குடுத்திருக்கேன். இதுக்கெல்லாம் மேல... நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். இதைவிட உனக்கு வேற என்ன வேணும்? எப்பவும் இருக்கறதப்பத்தி நினைச்சு சந்தோஷமா வாழணும். இல்லாததப்பத்தி நினைச்சுப் பார்த்து சோகமா இருந்தா... மனசு தவிச்சுப்போகும். மனுஷப்பிறவியா பிறக்கறது ரொம்ப பெரிய, அரிதான விஷயம்ன்னு சொல்லுவாங்க. அதனால இந்தப் பிறவியில, ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை அனுபவிச்சு வாழணும் 'லிவ் எவ்ரி மூவ்மெண்ட்'ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. அது நூத்துக்கு நூறு சரியானது. நடந்ததையே மறுபடி மறுபடி நினைச்சிக்கிட்டிருக்கறது வீணான மன உளைச்சலைத்தான் குடுக்கும். இப்ப... இந்த நிமிஷம் சந்தோஷமா இருக்கா? அதை அனுபவி. 'ஃப்ளாஷ் பேக்'குக்கே போகாதம்மா.''

''சரிங்க...''

''கொஞ்சம் சிரிங்க...''

''என்னங்க நீங்க... போங்க...''

''போகவா...?''

''ம்கூம்... வாங்க...'' சிணுங்கியபடி அவனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டபோது பெரிய நிம்மதி கிடைத்தது. ஆனால் மறுகணம், சுதாகரின் பயமுறுத்தல், நினைவில் தோன்றி அவளை சித்ரவதைப் படுத்தியது. என்றாலும் அபிலாஷின் அன்பான ஆறுதல் வார்த்தைகளை நினைத்து, தன்னை சமாளித்துக் கொண்டாள்.


சமையல்கார வத்சலாம்மாவின் உதவியோடு அபிலாஷிற்கு பிடித்தமான இரவு உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தாள் சரிதா. முள்ளங்கி பரோட்டாவும், தயிர் பச்சடியும் சேர்ந்த உணவு என்றால் அபிலாஷிற்கு மிகவும் பிடிக்கும். மாவை தயார் செய்து வைத்துவிட்டு, பச்சடிக்கு வெங்காயத்தை நறுக்கும்படி வத்சலாம்மாவிடம் சொல்லிவிட்டு, தயிர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ஃப்ரிட்ஜை திறந்தாள். அப்போது அழைப்பு மணி ஒலித்து அழைத்தது.

''அபிலாஷ்தான் வந்துட்டாரோ... காரோட ஹாரன் சப்தம் கூட கேட்கலியே...'' நினைத்தபடியே கதவைத்திறந்தாள் சரிதா.

''ஆஹா... என்ன ஒரு அதிசயம்! சொல்லாம கொள்ளாம இந்த நேரத்துல ஒரு ஆச்சர்யமான வருகை!...'' வாசலில் நின்றிருந்த கயல்விழியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் சரிதா.

''அதிசயமும் இல்லை. ஆச்சர்யமும் இல்லை. அவசியமா இந்த ஏரியாவுக்கு வர வேண்டி இருந்துச்சு. புரியலையா? புரியும்படியா சொல்றேன்... இந்த ஏரியாவுலதான் என் தங்கை வந்தனாவோட க்ளாஸ் டீச்சரோட வீடு இருக்கு. ஸ்கூல்ல பெர்மிஷன் கேட்டு, அந்த டீச்சர் ட்யூஷன் எடுக்கறாங்க. ஆனா ஃபீஸ் எக்கச்சக்கமா வாங்கறாங்க. அவங்ககிட்ட ஃபீஸை குறைச்சுக்க சொல்லிக் கேக்கணும். வந்தனா ப்ளஸ் டூ முடிச்சப்புறம் அவளை எந்த துறையில ஈடுபடுத்தலாம்ங்கற யோசனை கேக்கணும்ன்னு வந்தேன். அவங்களைப் பார்த்துட்டேன். பேசிட்டேன். நீ வீட்ல இருந்தா உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்...''

''நல்ல வேளை. நீ வந்த. என்னடா இது போர் அடிக்குமேன்னு நினைச்சுட்டிருந்தேன். இன்னிக்கு அபிலாஷ் வர்றதுக்கு பத்து மணியாகிடும். மணி ஏழுதான் ஆகுது. வா, ஊஞ்சலுக்கு போகலாம்...''

''போலாம். போலாம். அதுக்கு முன்னால சூடா எனக்கு ஒரு டீ போடச்சொல்லு வத்சலாம்மாவை.''

''ஸாரி கயல். உன்னைப் பார்த்த குஷியில உனக்கு குடிக்கறதுக்கு என்ன வேணும்னுகூட கேட்கலை...''

''உன்னோட வீட்ல, கேட்டு வாங்கி குடிக்கற உரிமையும், சாப்பிடற உரிமையும் எனக்கு இல்லாததா? நல்ல இஞ்சி டீ போடச் சொல்லு...''

வத்சலாம்மாவிடம் டீ போடச் சொல்லி விட்டு இருவரும் ஊஞ்சலுக்குப் போனார்கள். உட்கார்ந்தார்கள். பத்து நிமிடங்களில் இஞ்சி மணக்கும் தேனீர் வந்தது. சுவைத்துக் குடித்தாள் கயல்விழி.

''அபிலாஷ் அந்த புது படத்தோட ம்யூஸிக் வேலையை முடிச்சிட்டாரா...?''

''பாடல்களை முடிச்சுக் குடுத்துட்டார். இனி படம் முடிஞ்சப்புறம் ரீ-ரிக்கார்டிங் வேலையை முடிச்சுக் குடுக்கணும். அது சரி, அம்மா நல்லா இருக்காங்களா?''

''நல்லா இருக்காங்க. அம்மாவுக்கு பிஸியோதெரபி பண்ணச் சொல்றாரு டாக்டர். அதுக்காக வீட்டுக்கு வந்து பண்றவங்க இருக்காங்களாம். அதுக்கு நிறைய பணம் கேட்கறங்க. ஏற்பாடு பண்ணிட்டேன். தங்கச்சி படிச்சு முடிச்சு கால், ஊன்றி நின்னுட்டா... என்னோட கால் ஆட வேண்டி இருக்காது. அவ ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னா நான் டான்ஸ் ஆடி சம்பாதிக்கறது மட்டும் போதாது. ஏதாவது பிஸினஸ் ஆரம்பிச்சு, அதில சம்பாதிச்சாத்தான் அவளோட மேல் படிப்புக்கு உதவியா இருக்கும். ஆனா பிஸினஸ்ல மூலதனம் போடறதுக்கு நிறைய பணம் தேவைப்படும். ஓரளவுக்கு சேர்த்து வச்சிருக்கேன். அது போதாது. பேங்க்ல லோன் கேட்டா... 'வீட்டு பத்திரம் இருக்கா...?' 'நிலத்துப் பத்திரம் இருக்கா'ன்னு கேக்கறாங்க. வீடு, நிலம்ன்னு இல்லாததுனாலதானே கடன் கேக்கறோம்?! உயிரோட இருக்கற மனுஷனை நம்பி கடன் குடுக்கமாட்டாங்களாம். அஃறினைப் பொருளான வீடு, மனை, ஆறு அறிவு இல்லாத ஆடு, மாடு இதையெல்லாம் ஸெக்யூரிட்டியா கேக்கறாங்க. வீட்டுக்கும், மாட்டுக்கும் கடன் குடுக்கறவங்க, மனுஷனுக்கு குடுக்க மாட்டேங்கறாங்களே...''

''அப்படி இல்லை கயல்... கடன் வாங்கறவங்க, முறைப்படி திருப்பிக் குடுக்கணும்ங் கறதுக்காகத்தான் அப்பிடி ஒரு சட்டதிட்டம் வச்சிருக்காங்க. கடன் வாங்கறவங்க எல்லாருமே குடுக்காம விட்டுட்டா ?... பணம், கடனா குடுக்கற பேங்க்கோட நிலைமை என்ன ஆகும்? அதனால அதைக் குற்றம் சொல்ல முடியாது. சில நிபந்தனைகளோட கடன் குடுத்தாத்தான், வாங்கின பணத்தைத் திருப்பிக் குடுக்கற எண்ணம் வரும். குடுக்கறவங்களுக்கும் பாதுகாப்பு...''

''அப்போ...? என்னைப்போல ஏழைகளுக்கு கடன் தேவைப்பட்டா?''

''அதுக்கெல்லாம் கவர்மெண்ட்ல ஏதேதோ திட்டங்கள் இருக்கு. ஆனா... நீ நினைக்கற மாதிரி பெரிய தொகை குடுப்பாங்களா என்னன்னு தெரியலை. சின்னதா ஏதாவது தொழில் ஆரம்பிச்சா குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். அதைப்பத்தின தகவல்கள் எனக்கு சரியா தெரியலை. அதெல்லாம் போகட்டும், பேங்க் லோன்... அந்த லோன்னு பேசறியே? என்கிட்ட கேக்கணும்ன்னு தோணலையா? என்கிட்ட கேக்கறதுக்கு உனக்கு உரிமை இல்லையா? அந்த அளவுக்கு என்கிட்ட உரிமை எடுத்துக்க மாட்டியா? ஏன் இப்பிடி ஒரு தூரத்தை மெயின்டெயின் பண்ணற? எனக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இருபது வருஷமா உயிருக்குயிரா பழகிக்கிட்டிருக்கோமே... அதை மறந்துட்டு, பேங்க்லோன்... அது... இதுங்கறியே...''

''கோவிச்சுக்காதே சரிதா. நீ சொல்றியே இருபது வருஷமா உயிருக்குயிரா பழகற நட்புன்னு? நாம உயிரோட இருக்கற வரைக்கும் அந்த நட்பும் உயிரோட இருக்கணும். பணம்ங்கறது வலிமை மிக்கதுதான். நான் ஒத்துக்கறேன். ஆனா அதே பணம் நல்லது, கெட்டது ரெண்டுக்குமே தன்னோட வலிமையைக் காட்டும். பூஞ்சோலை போல பூத்துக்குலுங்கற நம்ம நட்புக்கு நடுவுல பணம்ங்கற ஒரு முட்புதர் உருவாக வேண்டாமே...?''

''ஏன் அப்பிடி சொல்ற? திரும்ப குடுக்க முடியலைன்னா நமக்குள்ள பிரச்னை வருமா? உனக்கு பணம் குடுத்துட்டு அதை திரும்ப எதிர்பார்ப்பேனா? தேவை இல்லாத கற்பனை பண்ணிக்கிட்டு என்னோட அன்பை கொச்சைப்படுத்தறியே?... உனக்கே இது சரின்னு தோணுதா? என் கூடப்பிறந்தவ இருந்தா... அவளுக்கு செய்ய மாட்டேனா?...''

பேசிக் கொண்டே போன சரிதாவின் வாயைத் தன் விரல்களால் மூடினாள் கயல்விழி.

''கூடப் பிறந்தவளா இருந்தாலும் சரி... கூடப்பிறக்காமலே கூடப்பிறந்தவ மாதிரி பாசத்தோட பழகற தோழியா இருந்தாலும் சரி... அன்பைக் குடுக்கலாம்... திரும்ப அதே அன்பை வாங்கலாம். ஆனா... பணம்ங்க்ற ஒரு இரும்புத்திரையை நடுவுல போடக்கூடாது.  கண்ணுக்குத் தெரியாத அந்தத் திரை, நம்ப மனசையும், உணர்வுகளையும் நமக்குத் தெரிஞ்சே நோக வச்சுடும். இப்ப நான் பணத் தேவையில இருக்கறதுனால அதை மட்டும் நினைச்சு நீ ஈஸியா பேசற. ஆனா நான்? இன்னைக்கு தேவையை மட்டுமில்லாம என் வாழ்நாள் முழுக்க தேவையான உன்னோட நட்பையும், பாசத்தையும் நினைச்சு பேசறேன்...''

''என்ன கயல் நீ... பெரிசா... ராமாயணம் படிக்கற? பண விஷயத்துக்கு இவ்ளவு பேசணுமா? உன்னோட முன்னேற்றம் என்னோட உதவியினால நடக்கக் கூடாதா? அப்பிடி என்ன ஈகோ உனக்கு?''

சரிதா, சற்று கோபத்துடன் கேட்டாள். கயல்விழி, அவளது கன்னத்தில் தட்டினாள்.

''சின்னக் குழந்தை மாதிரி பேசற. எனக்கு ஈகோவும் இல்லை, ஒண்ணும் இல்லை...'' கயல்விழி பேசுவதைக் கவனிக்காதவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு, கயல்விழிக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து கொண்டாள் சரிதா.

கயல்விழி தொடர்ந்து பேசினாள்.

''இதென்ன இது... முகத்தைத் திருப்பிக்கிட்டு... முதுகை காமிச்சுக்கிட்டு? ம்... எனக்கு அவசியமா... அவசரமா... பணம் தேவைப்பட்டா உன்னைத்தவிர வேற யார்க்கிட்ட கேட்கப் போறேன்? எனக்குன்னு இருக்கற ஒரே ஜீவன் நீதான். நீ மட்டும்தான். 'ஹோட்டல்ல டான்ஸ் ஆடறவ'ன்னு உறவுக்காரங்க ஒதுக்கி வச்சுட்டாங்க. என்னோட குடும்பத்தினருக்கு அடுத்து என்னோட உறவு, உயிர், அன்புத் தோழி எல்லாமே நீதான். என்னோட சந்தோஷத்துல கலந்துக்கறவ நீ. துக்கத்துல என்னோட கண்கள்ல்ல இருந்து வர்ற கண்ணீரோட உப்பை சுவைக்கறவ நீ மட்டும்தான். உன்கிட்ட எனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு?

வந்தனா போட்டுக்கற உடுப்பெல்லாம் நீ வாங்கிக் குடுக்கறதுதான். அம்மா கட்டற காட்டன் சேலைகள் எல்லாமே நீ வாங்கிக் குடுக்கறதுதான். இதோ... இந்த மொபைல் ஃபோன் நீ வாங்கிக் குடுத்ததுதான். இந்த ஹேண்ட்பேக் நீ வாங்கிக் குடுத்ததுதான். உரிமை இல்லாமயா இதையெல்லாம் வாங்கிக்கறேன்? பணத்தோட அருமை எனக்குத் தெரியற மாதிரி என்னோட தங்கைக்கும் தெரியணும். நான் எந்த பிஸினஸ் செஞ்சாலும்... அதை பிற்காலத்துல அவ எடுத்து நடத்தணும். குடும்பத்துக்கு நிரந்தரமான வருமானம் வர்றதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணனும். திடீர்னு... என்னால டான்ஸ் ஆட முடியாத நிலைமை ஏற்பட்டா... என்னோட குடும்பம் மொத்தமும் ஆடிப் போயிடும். 'சரிதா அக்கா குடுப்பாங்க, அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்க' அப்பிடிங்கற அலட்சிய மனப்பான்மை அவளுக்கு உருவாகிடக் கூடாது. பாங்க்ல லோன் இருந்தாத்தான்... அதை அடைக்கணும்ங்கற பொறுப்பு வரும். அந்தப் பொறுப்பை அவ உணர்ந்தாத்தான் கடினமா உழைப்பா. பணத்தோட அருமையும் தெரியும். நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய விஷயங்களைப் பத்தி தெளிவா சிந்திச்சுதான் பேசறேன். நீ சொல்ற மாதிரி எனக்கு ஈகோல்லாம் கிடையாது. என் செல்லம் இல்ல நீ... புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்... ''

கயல்விழி கொஞ்சியும், கெஞ்சியும் பேசுவதைக் கேட்ட சரிதா நெகிழ்ந்தாள். உள்ளம் மகிழ்ந்தாள். கயல்விழியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

''நான் இங்கே... இன்னிக்கு உன்னைப் பார்க்க வந்ததுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு சரிதா. ரெண்டு நாளா மன உளைச்சல். உன்கிட்ட பேசினாத்தான் கொஞ்சமாவது மனசு அமைதியா இருக்கும்ன்னுதான் உன்னைப் பார்க்க வந்தேன்...''

''மன உளைச்சலா? என்ன ஆச்சு கயல்?''

''முந்தா நாள் நைட், டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சதும் ஒருத்தன் வந்து என்னைப் பார்த்தான். என்னோட டான்ஸை புகழ்ந்தான். அதுக்கப்புறம் வேற மாதிரி அசிங்கமா பேச ஆரம்பிச்சுட்டான். அவன் ஒரு 'பிம்ப்'...''

''அடப்பாவி... சும்மாவா விட்ட அவனை?''

''நல்லா திட்டி அனுப்பிச்சுட்டேன். ஆனா... என்னை எவ்ளவு கீழ்த்தரமா நினைச்சிருந்தா அவன் அப்பிடி கேட்டிருப்பான்ங்கற நினைப்பு என் மனசை புண்ணாக்கிடுச்சு. அவமானமா இருக்கு... சில நேரங்கள்ல்ல ஏன்தான் 'பெண் ஜென்மமா பிறந்தோமோ'ன்னு இருக்கு...''

''பொண்ணா பொறக்கறதுக்கு பெரிய தவம் செஞ்சிருக்கணும்ன்னு சொல்லுவாங்க கயல். நீ பொண்ணா பிறந்ததுனாலதான் உன் அம்மா, தங்கச்சியை அன்போட பார்த்துக்கற. அவங்களுக்காக அக்கறையா உழைக்கற. பையனா இருந்தா... பொறுப்புகளை சமாளிக்கப் பயந்துக்கிட்டு அலட்சியமா இருந்துப்பாங்க. மானப்பிரச்னை. கௌரவக் குறைவுன்னு நேரிடும் போதுதான் பொண்ணா பிறந்ததுக்காக வருத்தப்பட வேண்டியதிருக்கு. அது சரி, அந்த ஆள் யார், அவனோட பேர் என்ன?''

''எதுவும் தெரியாது. கால்டேக்ஸியில ஏறப்போகும்போது என்கிட்ட வந்து பேசினான். அவனோட பேச்சு, தரக்குறைவா இருக்கறது தெரிஞ்சதும் நான் அவனை நல்லா திட்டிட்டேன். பெண்களை போகப் பொருளா நினைச்சு, ஆண்களோட சல்லாபத்துக்கு விலை பேசற அவனைப் போல பொறுக்கிகளை நிக்க வச்சு ஷுட் பண்ணனும்... தங்களோட கற்பை விலை பேசற பெண்களை விலைமாது, விபச்சாரி, தேவடியாள்ன்னு இழிவா பேசறாங்க. அப்பிடிப்பட்ட பெண்கள்ட்ட சுகம் அனுபவிச்சுட்டுப் போற ஆண்களுக்கு மட்டும் இந்த சமூகம் எந்த ஒரு இழிவான அவச் சொல்லும் குடுக்காதாம். இது என்ன நியாயம்? விபச்சார கேஸ்ல பிடிபடற பெண்கள் மட்டும்தான் தண்டனை அனுபவிக்கறாங்க. இருட்டில நடந்த அவங்களோட அவலத்தைப்பத்தி ஊடகங்கள்ல்ல வெளிச்சம் போட்டுக் காட்டுறாங்க. ஆணுக்கு ஒரு நீதி, பொண்ணுக்கு ஒரு நீதியாம்...''

சூடாகப் பேசிக் கொண்டிருந்தான் கயல்விழி. குறுக்கிட்டு பேசினாள் சரிதா.

''சமீப காலமா பெண்களும் 'நிறைய படிச்சுட்டோம், சுயமா சம்பாதிக்கறோம்'ங்கற அகம்பாவத்துல முறை தவறி, நெறி தவறி நடந்துக்கறாங்களே. அது மட்டுமில்ல... அம்மா... அப்பா... பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள காதல்ங்கற பிரச்னையில மாட்டிக்கறாங்க...!''

''காதல்... பிரச்னையா?'' கயல்விழி, தன் மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டாள்.

''ஆமா. காதலிக்கறவன் நல்லவனா கெட்டவனான்னு தெரிஞ்சுக்கற வயசும், பக்குவமும் வர்றதுக்குள்ள காதலிக்கறது பிரச்னைதான். இனிக்க இனிக்க பேசறதைப் பார்த்து 'இவன் நம்ப மேல உயிரையே வச்சிருக்கானே'ன்னு முழுசா நம்பிடறாங்க. அவனும் 'என் உயிரே', 'தேனே', 'மானே'ன்னு உருக வைக்கற மாதிரி பேசறான். அதில மயங்கிப் போய் ஏமாந்து சீரழியற பெண்கள் எத்தனையோ பேர்!...''

சரிதா, தன்னை நினைத்து, தனது தவறான காதலை நினைத்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள்.

''சரி... சரி... உன்னோட 'மூடை' நான் ரொம்ப கெடுக்கறேன்னு நினைக்கறேன். வேற பேச்சு பேசலாம். இன்னிக்கு நைட்டுக்கு என்ன சமையல்?''

''முள்ளங்கி பரோட்டா, தயிர் பச்சடி. அபிலாஷ்க்கு முள்ளங்கி பரோட்டான்னா போதும். டயட் கண்ட்ரோல் எதுவும் பார்க்காம நிறைய சாப்பிடுவாரு. நீயும் அபிலாஷ் வந்ததும் சாப்பிடு.''

''ஓ... சாப்பிடலாமே...''

அபிலாஷ் வரும்வரை இருவரும் அரட்டை அடித்து, கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர்.

அபிலாஷ் வந்தபிறகு மூவரும் சந்தோஷமாக, சிரித்து பேசியபடி சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் சரிதாவும், அபிலாஷும் சேர்ந்து, கயல்விழியை காரில் அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.


பாவனாவின் விழிகளில் கண்ணீர் நிறைந்து இருந்தது. வயிற்றுப் பாட்டிற்காக தன் கற்பை விற்றுப் பிழைக்கும் பிழைப்பை எண்ணி அழுதாள். 'இதுக்கு ஒரு முடிவு வேணும். கண்டிப்பா வேணும். என்ன செய்யறது? ஏதாவது செஞ்சாகணும். படிப்பும் இல்லை. கிடைச்ச வேலையை செய்யலாம்ன்னு போனா... எங்கே போனாலும் பாலியல் பலாத்காரம். வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு போனா கூட செய்ற வேலைக்குரிய காசை குடுத்து அனுப்பாம... என்னமோ... வேலை குடுத்ததே பெரிய விஷயம் போல... அவங்களோட அநாகரீகமான, மோசமான நடத்தையை வேற சகிச்சுக்க வேண்டியிருக்கு.

'இங்க ரெண்டு பேய் தலைவிரிச்சு ஆடுதுன்னு அங்க போனா... அங்கயும் ரெண்டு பேய் தலை விரிச்சு ஆடுது'ங்கற கதையா என்னோட வாழ்க்கை ஆகிப்போச்சு. இந்தப் பேயை விட அந்தப் பேய் பரவாயில்லைன்னு நெட்டை பாபு கூப்பிடற இடத்துக்குப் போக வேண்டியதிருக்கு... இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணுமே... என்ன வழி?!' நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்த பாவனாவின் சிந்தனையைக் கலைத்தது சுதாகரின் குரல்.

நீண்ட நாட்களாக தொடர்பு அற்றுப் போன சுதாகர், மீண்டும் அங்கே வந்தான். எதுவுமே நடக்காதது போலவும், சகஜமாக வந்து போவது போலவும் அங்கே வந்து நின்றான்.

அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது பாவனாவிற்கு. வீடு தேடி வந்தவனை 'வா' என்று வரவேற்கவும் முடியாமல், 'போ' என்று விரட்டவும் முடியாமல் மௌனமாக நின்றிருந்த பாவனாவிடம் எதையும் எதிர்பார்க்காமல் மளமளவென்று பேச ஆரம்பித்தான் சுதாகர்.

''என்ன பாவனா? வீட்டுக்குள்ள லைட்கூட போடாம இருட்டில உட்கார்ந்திருக்க?! வீட்ல வேற யாரையும் காணோம்?... ஏன் இவ்வளவு டல்லா இருக்கே? உடம்பு சரி இல்லையா? உன் முகமே சரி இல்லையே... சாப்பிட்டியா? இல்லையா...?''

''ரொம்ப அக்கறைதான் உனக்கு. என்னோட பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுட்டு இத்தனை நாள் கழிச்சு வந்து ஒண்ணுமே நடக்காத மாதிரி 'சாப்பிட்டியா'ன்னு கேக்கறியே? நீ மட்டும் ஏமாத்தலைன்னா என்னோட வாழ்க்கையில ஒரு ஏற்றம் வந்திருக்கும். நல்ல மாற்றம் வந்திருக்கும்.''

 ''ஏன்? என்ன ஆச்சு?...''

 ''என்னைத் தேடி வராதேன்னு சொல்லியும் வந்துக்கிட்டே இருக்கியே... இந்த பிழைப்புக்கு ஒரு முழுக்கு போடணும்னு நான் தவிக்கிறேன். உன்னாலதான் எனக்கு இவ்ளவு கஷ்டம். கணிசமான தொகையை முழுங்கி, ஏப்பம் விட்டுட்ட. நீ மட்டும் என்னை ஏமாத்தலைன்னா... வாழ்க்கையில ஒரு முன்னேற்றம் கிடைச்சிருக்கும். ஒவ்வொரு நாளும் முகம் அறியாத நபர்கள்ட்ட என்னோட நிஜ முகத்தைக் கழற்றி வச்சுட்டு பொய்முகத்தோட பழக வேண்டியதிருக்கு.''

''முதல்ல வேதாந்தம் பேசறதை நிறுத்து. உன்னோட மறைமுக வாழ்க்கை முடிஞ்சு, திரைமறைவு இல்லாத தெளிவான வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். அந்த திட்டத்துக்கு நீ ஒத்துழைச்சா... உனக்கு பெரிசா ஜாக்பாட் மாதிரி ஒரு தொகை குடுப்பேன்...''

''கொஞ்சம் வாயை மூடறியா சுதாகர்? இன்னொரு முறை ஏமாற, நான் என்ன பைத்தியக்காரியா?''

''இந்த தடவை நான் சொல்றதைக் கேட்கலைன்னாத்தான் நீ பைத்தியக்காரி...''

''என்ன சொல்ற சுதாகர்? புரியும்படியா சொல்லு...''

''நான் சொல்றதை கவனமா கேளு. இந்த வேலை ஒரு சினிமாவுல நடிக்கற மாதிரியான வேலை. உனக்கு பிடிக்காத வேற எந்த பழைய ரூட்டும் இதில கிடையாது. நான் சொல்றதைக் கேட்டு அதன்படி ஒரு வீட்ல நீ நடிக்கணும்...''

''என்னது?! வீட்ல நடிக்கணுமா?''

''முழுசா நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள குறுக்கே பேசறியே?! ரொம்ப ஈஸியான வேலை...''

''அதை... நான் சொல்லணும்... வீட்ல நடிக்கணும்ங்கற... அதைப் போய் ஈஸியான வேலைங்கற? எனக்கு பயம்மா இருக்கு.''

''ஒரு பயமும் இல்லை. நீ டீல் பண்ண வேண்டியது ஒரு பொண்ணு கூடதான். நான் சொல்ற அந்தப் பொண்ணோட வீட்டுக்கு ரெகுலரா போற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிக்கோ...''

''முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு ரெகுலரா போறதா? நீ சொல்ற ஐடியா... சொதப்பலா இருக்கு... விபரீதமானதா இருக்கு...''

''ஐய்யோ... நான் சொல்றதை முழுசா கேட்காம நீயாவே ஏன் கண்டபடி கற்பனை பண்ணிக்கற? என்னோட திட்டத்துக்கு நீ முழுசா ஒத்துழைச்சா... அரைகுறையா இருக்கற உன்னோட வாழ்க்கைத்தரம் உயரும். பெரிசா... நீ... கஷ்டப்பட வேண்டியதும் இல்லை. நல்லா நடிக்கத் தெரிஞ்சா போதும்...''

''வீண் வம்புல மாட்டிக்கிட மாட்டேனே?!...''

''ம்கூம். அதைப்பத்தின பக்கா ப்ளானை உனக்கு நாளைக்கு நான் சொல்றேன்...''

''நீ சொன்னப்புறம் நான் என்னோட முடிவை சொல்றேன்...''

''சரி...''

''நீ சொல்லப்போற திட்டத்துக்கு செயல்பட நான் சம்மதிச்சா... எனக்கு எவ்ளவு கொடுப்ப?..''

''ஆமாமா. கண்டிப்பா அதை நான் சொல்லித்தான் தீரணும். அப்பதானே நீ பணத்துக்காகவாவது ஒத்துக்குவ?'' என்ற சுதாகர், தொடர்ந்து சொன்ன தொகையைக் கேட்டு பிரமித்துப் போனாள் பாவனா.

''சொன்னேன்ல! நான் சொல்ற தொகை, உனக்கு இந்த வேலையை செய்ய வைக்கற ஆர்வத்தைத் தூண்டும்ன்னு!..''

''தொகையெல்லாம் பெரிசுதான். இந்த ஜென்மத்துல என்னால சம்பாதிக்கக் கூடியதில்லைதான். ஆனா... நீ சொன்ன அந்த தொகையில முப்பது பர்ஸண்ட்... நான் வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே குடுத்துடணும்.''

அவசரமாய் குறுக்கிட்டான் சுதாகர்.

''என்னது? முப்பது பர்ஸண்ட் பணத்தை அட்வான்ஸா குடுக்கணுமா?! ...''

''ஆமா. மறுபடியும் உன்கிட்ட ஏமாற... நான் என்ன லூஸா?... அது மட்டுமில்ல.. உன்னோட திட்டத்துல என்னோட பங்கு என்ன... அதனால எனக்கு ஏதாவது பாதிப்பு வருமான்னு நான் யோசிச்சுதான் முடிவு சொல்வேன். இதுக்கு ஒத்துக்குவேன். பணம் கிடைக்குதேங்கறதுக்காக தேவை இல்லாத பிரச்னையில மாட்டிக்கக் கூடாதே. இன்னிக்கு நிலைமையில... பணம் இல்லாட்டாலும் வம்பு, வழக்குன்னு இல்லாம ஏதோ வாழ்க்கை போயிட்டிருக்கு... என்னால முடியக் கூடிய வேலைதானான்னு நான் தெரிஞ்சுக்கணும்...''

''உன்னால முடியும்ங்கறதுனாலதான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். உன்னால மட்டும்தான் முடியும்ங்கறது என்னோட அபிப்ராயம்...''

''இந்த ஐஸ் வைக்கற வேலையெல்லாம் எனக்கு வேண்டாம்... சிக்கல் இல்லாத காரியம்ன்னா... நீ குடுக்கப் போற பெரும் தொகைக்காக நான் செய்வேன். மறுபடி என்னை ஏமாத்தணும்னு நினைச்சா... நான் பொல்லாதவளாயிடுவேன்...''

''என்னோட இந்த திட்டத்துக்கு சம்மதிக்கலைன்னாத்தான் நீ ஏமாளி...''

''சரி... சரி... நாளைக்கு நாம எங்கே சந்திக்கறோம்? இங்க... வீட்ல வேண்டாம்.''

''நாளைக்கு பீச்சுக்கு வந்துடு. அங்கே உட்கார்ந்து பேசலாம்.''

''மெரீனாதானே? கண்ணகி சிலைகிட்ட வந்துடறேன். மறுபடியும் சொல்றேன். பேசினதுல பாதி தொகையை முன் பணமா வாங்கிக்காம நான் எதுவும் செய்ய மாட்டேன்.''

''ரொம்பத்தான் கறாரா பேசற?! சரி... சரி... நாளைக்கு உன்னைப் பார்க்க வரும்போது பணத்தோட வர்றேன்.''

சுதாகர் வெளியேறினான்.


மனது உளைச்சலாக இருந்தபடியால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தாள் சரிதா. சுயமாய் காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்த சரிதாவின் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. கார் ஓட்டும்பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று மூளை எச்சரித்தது. மூளையின் எச்சரிக்கையை மீறி மனம் செயல்பட்டது. அதைக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்தியபடி ஓட்டினாள் சரிதா. கோவிலின் அருகே காரை நிறுத்த முடியாது என்பதால் சற்று தள்ளி நிறுத்தினாள். காரை விட்டு இறங்கிய சரிதாவை எதிர்கொண்டான் சுதாகர்.

அவனை எதிர்பார்க்காத சரிதா, திகைத்தாள்.

''நீயா?''

''நானேதான்...''

''மன அமைதி தேடி கோவிலுக்கு வந்தேன். இங்கேயுமா நீ...''

''நீ எங்கே போனாலும் நான் உன்னை பின் தொடர்ந்து வருவேன்...''

''என்னை நிம்மதியா வாழவிட மாட்டாயா?''

''உன்னோட நிம்மதி... உன்கிட்டதான் இருக்கு... அதை ஏன் வெளியே தேடற? என்கிட்ட கேக்கற? நான் கேக்கற பணத்தை குடுத்துட்டா... நீ நிம்மதியா இருக்கலாம்.''

''பணம் பணம்ன்னு ஏன் பறக்கற?''

''பறந்து போறதுக்குத்தான் பணம் கேக்கறேன்.''

''நிஜம்மாவே பணம் குடுத்தா என்னை தொந்தரவு குடுக்கமாட்டியா?''

''நிச்சயமா தொந்தரவு குடுக்கமாட்டேன்.''

''சரி. நாளைக்கு இதே நேரத்துக்கு இதே இடத்துக்கு வா. பணம் கொண்டு வரேன்.''

''கொண்டு வரேன்னு சொல்லிட்டு, என்னை வீணா அலைய விடாதே.''

''கொண்டு வராட்டா... நீ என்னை சும்மாவா விட்ருவ? நிழல் மாதிரி வந்துக்கிட்டே தானே இருப்ப? நாளையோட நீ இருக்கற திசைக்கே ஒரு பெரிய கும்பிடு...''

''தொகையை குடுத்துட்டு கும்பிடு போடு....''

''அதான்... சரின்னு சொல்லிட்டேன்ல. ஏன் திரும்ப திரும்ப தொகை... தொகைன்னு பேசிக்கிட்டே இருக்க? ஆனா ஒண்ணு... இதுக்கு மேல என்கிட்ட பணம் கேட்கக் கூடாது.''

 ''கேட்ட பணத்தை குடுத்திட்டின்னா நோ ப்ராப்ளம்.''

''ப்ராப்ளம் எனக்குத்தான். உனக்கென்ன? ஆனா... மறுபடியும் சொல்றேன்... இதுக்கு மேல என்கிட்ட பணமும் கேட்கக் கூடாது. என்னை பின் தொடர்ந்து வரவும் கூடாது. இனிமேல் என்னைப் பார்க்கவும் கூடாது. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது.''

''அதையெல்லாம் நாளைக்கு ஸெட்டில் பண்ணும்போது பேசிக்கலாம்.''

''ஸெட்டில்மென்ட்?! என்னமோ நீ எனக்கு குடுத்து வச்ச பணத்த ஸெட்டில் பண்ற மாதிரியில்ல கேக்கற? நீ ஒரு அயோக்கியன்னு தெரிஞ்சுதான் உன்னை விட்டு விலகினேன். என் மேல எந்தத் தப்பும் இல்லை...''

''தப்பு என் மேலதான். ரகசியமா இருந்த என்னோட மறுபக்கம் பகிரங்கமா உனக்குத் தெரியற மாதிரி ஆகிட்டது என்னோட தப்புதான். பரவாயில்லை... அந்தத் தப்புதான் இப்ப உன்கிட்ட இருந்து பணம் கறக்கறதுக்கு 'ரைட்' ஆன 'ரூட்'டை காட்டி இருக்கு. ஆனா... உன்னை என்னால மறக்க முடியலை. நீ எனக்குக் கிடைக்காட்டாலும் பரவாயில்ல... வேற எவனுக்கோ கிடைச்சுட்டியே... அதை என்னால தாங்க முடியலை. என் மனசுல ஆசை விதையை விதைச்சுட்டு வேற விளை நிலத்துல நீ பதியன் போட்டுட்டியே... அந்த ஆத்திரம் என்னோட வாழ்நாள் முழுசும் நீங்காது...''

''அந்த ஆத்திரம் அடங்கறதுக்குதான் என்னோட அன்புக் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தைக் குடுக்கறதுக்கு சம்மதிச்சிருக்கேன்...''

''ஆசை வச்சு காதலிச்ச பொண்ணு... அந்நியன் ஒருத்தனுக்கு கிடைச்சுட்ட ஆத்திரம் அத்தனை சீக்கிரம் அடங்குமா?''

''முதல்ல நீ அடங்கு. என்னை கோயிலுக்கு போக விடு. நாளைக்கு இங்கே வந்து உன்னோட கணக்கை முடிச்சுடறேன். இப்ப நீ கிளம்பு.''

சுதாகரின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து, கோயிலை நோக்கி நடந்தாள் சரிதா.


மெரீனாவில் ஆள் குறைவான இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் சுதாகரும், பாவனாவும்.

''ஒரு பெண் என்னைக் காதலிச்சா. நானும் அவளைக் காதலிச்சேன். ஆனா... அவ என்னை நம்பவச்சு கழுத்தறுட்டா...''

''கழுத்தறுத்தது நீயா... அந்தப் பொண்ணா? கழுத்தறுக்கறது உனக்கு கை வந்த கலையாச்சே?..''

''குறுக்கே பேசாத பாவனா. அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கா...''

''அதனால என்ன? கழுத்துல தாலி விழுந்தப்புறம் அவ வழுக்கி விழுந்தாத்தான் தப்பு... சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கறதுல நீ ஏன் குறுக்கிடணும்?''

''என்னோட காதலுக்குக் குறுக்கே வந்த அந்தக் கல்யாணம் ஜெயிக்கக் கூடாது. அந்தக் கல்யாணத்தை பண்ணிக்கிட்ட அவளும் தோல்வி அடையணும்.''

''அவ... ஏன் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு அவளை கேட்டியா?''

பாவனா கேட்டதும் சுதாகரின் முகம் மாறியது. அவளது அந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு திணறினான். அதன்பின் சமாளித்து பேசினான்.

''அவளை ஏன் நான் கேட்கணும்? பெரிய பணக்காரனா... புகழ் பெற்றவனா கிடைச்சதும் என்னைக் கழட்டிவிட்டுட்டா... காரணம் தெரிஞ்சே அவளிடம் போய் நான் எதுக்கு கேட்கணும்?''

''பணத்துக்காகத்தான் வேற ஒருத்தனை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு நீ சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது. உன்னோட தவறான நடவடிக்கைகள் தெரிஞ்சு... சரியான முடிவு எடுத்துத்தான் அவ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கணும்... கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்தப் பொண்ணு... நல்லபடியா வாழட்டுமே...''

''அவ நல்லபடியா வாழறதுல எனக்கு ஒரு நல்ல லாபம் வேணுமே...''

''அதுக்காக...?!''

''அதுக்காக... அவளை மிரட்டி பணம் கேட்டுக்கிட்டிருக்கேன்...''

''மிரட்டி உருட்டறதெல்லாம் உனக்கு கை வந்த கலைதான்... அது எனக்குத் தெரியும்... இதில என்னை ஏன் இழுக்கற? இந்த ப்ளாக் மெயில் மோசடிக்கெல்லாம் நான் வர மாட்டேன்...''

''அந்த வேலையில உன்னை நான் இழுக்கலை... அவ குடுக்கப் போற பணம் மட்டும் எனக்கு போதாது. அவளுக்கு நான் குடுக்கப் போற அதிர்ச்சி வைத்தியத்துல அவ மனசு... வேதனையில துடிக்கணும். அவ கிடைக்காம... என் நெஞ்சு எரியறது மாதிரி அவளோட நெஞ்சும் பல நூறு மடங்கு எரியணும். அதுக்காக ஒரு திட்டம் தீட்டி வச்சிருக்கேன்...

''அப்போ? அவளை பழி வாங்கற படலம்தான் நீ என்னை நடிக்கச் சொல்ற டிராமாவா?''

''புத்திசாலி! புரிஞ்சுக்கிட்டியே...''

''உன்னோட புத்தி எனக்குத் தெரியாதா? சரி... நான் என்ன பண்ணணும் சொல்லு...?''

''அவளோட வீட்லதான் நீ நடிக்கணும். பயப்படாதே... கச்சிதமா ப்ளான் போட்டிருக்கேன். நான் பழி வாங்க நினைக்கற அந்தப் பொண்ணு பேரு சரிதா. பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷேரட மனைவி...''

''வாவ்... அபிலாஷா... ஹய்யோ... அவரோட ஸாங்க்ஸ்ன்னா எனக்கு உயிர்... அவரோட எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்...''

உணர்ச்சி வசப்பட்டு பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த பாவனாவை அடக்கினான் சுதாகர்.

''வாயை மூடு. அவனோட ம்யூஸிக்கா இப்ப முக்கியம்? சரிதாவுக்கு அடிக்கடி ப்யூட்டி பார்லர் போற வழக்கம் உண்டு. நீ ஒரு பியூட்டிஷியனா அவளோட வீட்டுக்குள்ள நுழையணும். அதுக்காக ப்யூட்டி கோர்ஸ் சேர்ந்து படிச்சுக்கோ. அது மூலமா அவளைப் பிடிச்சுக்கோ. வீடு வீடா போய் சேலை, சோப், சப்பாத்தி மேக்கர்ன்னு விக்கப் போறாங்கள்ல்ல,  அது மாதிரி வீடு தேடி வந்து ப்யூட்டி ட்ரீட்மெண்ட் குடுக்கறதா சொல்லி அவளை ஃப்ரெண்ட் புடிச்சுக்கோ, அவ கூட நல்லா பழகி அவளோட புருஷன் அபிலாஷைப் பத்தி தப்பா பேசி அவ மனசைக் கலைக்கணும். அது மூலமா அவளோட நிம்மதியைக் குலைக்கணும். அவளும், அவ புருஷனும் பிரியணும். என்னைவிட்டு பிரிஞ்சு போன அவளை விட்டுட்டு அவளோட புருஷன் பிரியணும். அவளை விட்டு நான் பிரிஞ்சு துடிக்கற மாதிரி அவ, அவளோட புருஷனை பிரிஞ்சு கஷ்டப்படணும். அதுக்காக நீ தத்ரூபமா நடிக்கணும்.''

''நடிச்சா...?''

''நடிச்சா... உனக்கு நிறைய பணம் கிடைக்கும்...''

பாவனா அவசரமாய் குறுக்கிட்டாள்.

''பணமும் கிடைக்கும். கூடவே பெரும்பாவமும் கிடைக்கும்...''

''கொன்னா பாவம் தின்னா தீரும்.. நான் டைரக்ட் பண்ற அந்த நாடகத்துல நீ திறம்பட நடிச்சு, நான் சொல்றபடி நடந்துட்டா. நீ நினைச்ச மாதிரி லைஃப்ல  ஸெட்டில் ஆகிடலாம். இந்த சந்தர்ப்பத்தை விட்டா, நீ எப்ப... எப்பிடி... இவ்ளவு பெரிய தொகையை சம்பாதிக்கறது? ஸெட்டில் ஆகறது... யோசிக்காதே. நீ மறுத்தா... இந்த வேலையை செய்றதுக்கு நீ இல்லைன்னா... இன்னொருத்தி. நீ ஒருத்தி மாட்டேன்னு சொல்றதுனால நான் சும்மா இருந்துட மாட்டேன். எப்பிடியும் அவளை பழி வாங்கிட்டுதான் சிங்கப்பூருக்கு ஃப்ளைட் ஏறுவேன்...''

''சிங்கப்பூருக்கு போவியோ... சிறைச்சாலைக்கு போவியோ தெரியலையே...''

''யம்மா... தாயே. ஆளை விடு. இவ்ளவு சந்தேகப்பட்டின்னா வேலைக்கு ஆகாது. நான் வேற ஆளை பார்த்துக்கறேன்...''

''இ... இ...இல்லை சுதாகர். நானே இதுக்கு சம்மதிக்கறேன். ஆனா... நான் கேட்டபடி அட்வான்ஸ் தொகையை இப்பவே குடுத்துடு...''

''நீதான் நேத்தே சொல்லிட்டியே அட்வான்ஸ் வேணும்ன்னு. கையோட கொண்டு வந்திருக்கேன்.''

அவன் கொடுத்த அட்வான்ஸ் தொகை, அவளது வாயை அடைத்தது.

''இந்தா... இது உன்னோட ப்யூட்டி கோர்ஸ்க்கு கட்டற பணம். நல்ல பார்லரா பார்த்து ஏனோ தானோன்னு கத்துக்காம ஒழுங்கா கத்துக்க. சரிதாவை மயக்க வேண்டியது ப்யூட்டி ட்ரீட்மெண்ட்லதான்...''

''சரி சுதாகர். நான் தீர்மானிச்சுட்டேன். உன்னோட நாடகத்துல நடிக்கறதுக்கு தயாராயிட்டேன். அதுக்குரிய முதல் கட்டமா இன்னிக்கே ப்யூட்டி பார்லருக்குப் போய் ப்யூட்டி கோர்ஸ் சேர்ந்துடறேன்.''

''வெரி குட். வா... உன்னை நானே உன் வீட்ல கொண்டு போய் விட்டுடறேன்.''

''நான் வீட்டுக்கு போகலை. நேரே ப்யூட்டி பார்லர் போகப் போறேன். ஆட்டோவுல போய்க்கறேன்.''

''ஓ.கே.'' என்ற சுதாகர், காரில் ஏறி கிளம்பினான். காலியாக வந்து கொண்டிருந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தி, ஏறிக் கொண்டாள் பாவனா.


மறுநாள் காலை பத்து மணி. தன்னிடம் இருக்கும் ஷல்வார்களில் மிக நல்ல ஷல்வார் ஸெட்டை அணிந்து கொண்டாள் பாவனா. கறுப்பு நிற ஜார்ஜெட் துணியில் ஆரஞ்சு வண்ணப் பூக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு, மிக அழகாக இருந்தது. அதன் அழகு, பாவனாவிற்கு மேலும் அழகு சேர்த்தது. ஆரஞ்சு வண்ண துப்பட்டாவில் கறுப்பு நிற மணிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

ஷல்வாரின் மேலாடையில், மேல் பகுதியில் செய்யப்பட்டிருந்த அழகிய வேலைப்பாடுகள், அவளது முன் அழகுகளை மேலும் எடுப்பாக, எடுத்துக் காட்டியது. துப்பட்டா என்பது பெயருக்குத்தானே... தோளில் இருந்தும், மார்பில் இருந்தும் துப்பட்டா நழுவி விழும்பொழுது, தெரியும் கவர்ச்சிகள், காண்போரைக் கவர்ந்தது.

நல்ல உயரமும். அளவுடன் அகன்ற தோள் பட்டைகளும், சங்கு கழுத்தும் பாவனாவை ஒரு அழகிய அரேபியக் குதிரையாகக் காட்டியது. உடுத்தியுள்ள உடை ஏற்படுத்திய மிடுக்கான உணர்வினால், உற்சாகமாக 'அழகு' ப்யூட்டி பார்லரினுள் நுழைந்தாள்.

அங்கே, மற்ற அழகுக்கலை நிபுணர்கள், பெண்களுக்கு தலையலங்காரம் செய்வதையும், நவீன நாகரீகப்படி தலைமுடியை வெட்டி, அழகுபடுத்துவதையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா ராஜன்.

உள்ளே நுழைந்த பாவனாவை வரவேற்றாள்.

''நீங்க...?''

''நான் பாவனா. நேத்து ஃபோன்ல பேசினேனே... கோர்ஃஸ் விஷயமா...''

''ஓ... அந்த பாவனா நீங்கதானா?''

''ஆமா மேடம்...''

''இருபது நாள் கோர்ஸ். இருபத்தஞ்சாயிரம் ரூபா சார்ஜ் பண்ணுவேன்...''

''சரி மேடம்...''

''கோர்ஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே முழு தொகையையும் கட்டிடணும்...''

''இன்னிக்கே பணத்தை வாங்கிக்கோங்க...'' என்ற பாவனா, தன் ஹேண்ட்-பேகை திறந்து. சுதாகர் கொடுத்த பணத்தை எடுத்தாள். உஷாவிடம் கொடுத்தாள்.

பணத்தை வாங்கிய உஷா, அவளது ஹேண்ட்-பேகில் பத்திரப்படுத்தினாள்.

''கோர்ஸ் முடிஞ்சதும் இங்கேயே வேலைக்கு சேர்ந்துக்கறீங்களா?'' உஷா கேட்டாள்.

''அது... நான் யோசிக்கணும் மேடம். எனக்கு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் இருக்கு. அதுக்குத் தகுந்த மாதிரியான சம்பளத்தை உங்ககிட்ட கேட்கறது நியாயம் இல்லை...''

இதைக் கேட்ட உஷாவின் மனதில் ஆச்சரியம் தோன்ற, அதன் விளைவாய் அவளது புருவங்கள் உயர்ந்தன. கேள்விக் குறிகளாய் வளைந்தன.

''பின்ன எதுக்காக இந்த கோர்ஸ் கத்துக்க வந்திருக்கீங்க?''

வாய் தவறுதலாக பேசிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள் பாவனா. உதட்டைக் கடித்துக் கொண்ட அவள், சமாளித்து பேசினாள்.

''அ... அ... அது வந்து மேடம்... நானே பேங்க்ல லோன் வாங்கி ப்யூட்டி பார்லர் ஆரம்பிச்சு நடத்தலாம்னு இருக்கேன்...''

''இப்பல்லாம் நிறைய பார்லருக வந்துருச்சு. ரொம்ப போட்டியாயிடுச்சு. பார்லர்ல வேலை செய்றதுக்கும் ப்யூட்டிஷியன்ஸ் கிடைக்கறதில்லை... அதனால யோசிச்சு செய்யணும். தப்பா எடுத்துக்காதீங்க...''

''நீங்க ஒண்ணும் தப்பா சொல்லலியே...''

''மாசம் பிறந்துட்டா வாடகை, சம்பளம், எலக்ட்ரிக் பில்... இதெல்லாம் பயமுறுத்தும். இது போக, காஸ்மெட்டிக்ஸ், மெட்டீரியல்... அது.. இதுன்னு வாங்கற செலவு வேற... இதையெல்லாம் சமாளிக்கற அளவுக்கு பார்லர், பிஸியா நடக்கணும். நான் இந்த பார்லரை ஆரம்பிச்சப்ப இந்த ஏரியாவுல வேற பார்லர்களே கிடையாது. அதனால நிறைய கூட்டம் வந்துச்சு. நிறைய சம்பாதிச்சேன். ஆனா... இப்போ...? ஒரு தெருவுல மூணு பார்லருக்கு மேல வந்துருச்சு. அதனால போட்டி அதிகமாயிடுச்சு. அந்தப் போட்டியை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம். நான் சந்திக்கற கஷ்டங்களைத்தான் உன்கிட்ட சொல்றேனே தவிர, உன்னை பயமுறுத்தறதுக் காகவோ... என்னோட சுயநலத்துக்காகவோ சொல்லலை...''

''சச்ச... நான்... அப்பிடி எதுவும் நினைக்கலை மேடம். நல்லதுக்குதான் சொல்றீங்கன்னு புரியுது மேடம்.''

''பரவாயில்லையே. நல்லதுக்குதான் சொல்றேன்னு புரிஞ்சுக்கறியே?! பொதுவா எல்லாரும் நான் ஏதோ பொறாமையிலயும், போட்டியிலயும் அதைரியப்படுத்தறேனோன்னு நினைச்சுப்பாங்க. ஏதோ... எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். உன் இஷ்டம். இன்னிக்கே க்ளாஸை ஆரம்பிச்சுடலாமா?''

''ஓ... ஆரம்பிச்சுடலாமே...''

அன்றில் இருந்து இருபது நாட்கள் அனுதினமும் அங்கே வந்து முழு ஆர்வத்தோடு அனைத்து அழகுக்கலை பயிற்சியையும் மிக திறமையுடன் கற்றுக் கொண்டாள். அக்கலையில் மிக குறுகிய காலத்திலேயே மிக்க தேர்ச்சி பெற்றாள்.

அவளது திறமையைப் பார்த்த உஷா, மிக உண்மையாக, சகல அழகுகலைகளையும் கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, நிறைய ஆலோசனைகளையும் வழங்கினாள்.

''அழகுப் பராமரிப்பிற்காக இங்கே வரும் பெண்களோட தேவைகள் அறிஞ்சு, சேவை செய்யற மனப்பான்மை வேணும். அதுதான் முக்கியம். 'கடனே'ன்னு எந்த அழகுப் பராமரிப்பும் செய்யக் கூடாது. உண்மையான முழு மன ஈடுபாட்டோட செய்யணும்.  சில பேருக்கு சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். சிலருக்கு வறண்டு போயிருக்கும். அவங்கவங்களோட தோலின் தன்மைக்கு ஏத்தபடிதான் எல்லா பராமரிப்பையும் செய்யணும். உதாரணமா, மென்மையான சருமம் உள்ளவங்களுக்கு ஃபேஷியல் பண்ணும்போது முரட்டுத்தனமா அழுந்தத் தேய்க்கக் கூடாது. மெதுவா தேய்க்கணும்.

கொஞ்சம் வயசு கூடினவங்களுக்கு அழுத்தத் தேய்க்கலாம். அதுவும் அவங்களுக்கு அது சரியான்னு கேட்டுட்டுதான் செய்யணும். முதல் முதல்ல ஹேர்-டை போடறதுக்காக வந்திருந்தா... டெஸ்ட் பண்ணிப்பார்க்காம போடக் கூடாது. எப்பிடி டெஸ்ட் எடுக்கறதுன்னு நான் உனக்கு அடுத்த க்ளாஸ்ல சொல்லித்தரேன்.

கஸ்டமர்ஸோட அங்கங்களையும், தலைமுடியையும் ரொம்ப ஜாக்கிரதையா கவனமா பார்த்துக்கணும். ஃபேஷியல் பண்ணும்போது உன்னோட கையில நகம் வளர்ந்திருக்கக் கூடாது. முகத்துல நகக் கீறல் பட்டுட்டா அது இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். போன மாசம் இங்கே வேலை பார்த்த ஒரு பொண்ணு, கஸ்டமரோட கையில ப்யூமிக் ஸ்டோனை வச்சு தேய்ச்சு, அவங்களுக்கு காயமாயிடுச்சு. அவங்க ரொம்ப கோபமாகி கத்து, கத்துன்னு கத்தினாங்க. நம்ப மேல தப்பு இருக்கறப்ப... நாம எதுவும் பேச முடியாது. எக்ஸ்க்யூஸ் கேட்டு சமாதானம் பண்ணி அனுப்பி வச்சேன். அன்னிக்கோட அந்தப் பொண்ணையும் வேலையை விட்டு அனுப்பிட்டேன். அந்தக் கஸ்டமரும் அதுக்கப்புறம் வர்றதே இல்லை. இந்த மாதிரி பிரச்னைகளை எல்லாம் சமாளிச்சுதான் பார்லர் நடத்தணும். அழகுப் பராமரிப்புக்காக நம்பளை நம்பி வர்றவங்களை அவங்க மனசுக்கு திருப்தியா ஸர்வீஸ் பண்ணி அனுப்பணும். அழகுப் பராமரிப்புக்கு அப்பாற்பட்டு இங்கே வர்றவங்ககிட்ட மனரீதியான அணுகுமுறையில பழகணும். இதுதான் ரொம்ப முக்கியம். இங்கே வர்றவங்களை, திரும்ப திரும்ப வர வைக்கறதுக்கு மனரீதியான அணுகுமுறை ரொம்ப முக்கியம்.''

இவ்விதம் நல்ல அறிவுரைகளை வாரி வழங்கினாள் உஷா. பாவனாவும் அவற்றை மனதில் வாங்கி, அழகுக்கலை பயிற்சியை நேர்த்தியான முறையில் கற்று, தேர்ச்சி அடைந்தாள்.


நாட்கள் நகர்ந்தன. வழக்கம் போல நடன நிகழ்ச்சி இல்லாத ஒரு நாளில், வேறு முக்கியமான வேலை ஏதும் இல்லாதபடியால் சரிதாவைப் பார்ப்பதற்காக அவளது வீட்டிற்கு சென்றாள் கயல்விழி. இருவரும் கலகலப்பாக பேச ஆரம்பித்தனர்.

''என்ன சரிதா... வர... வர... உன்னோட முகம் செம பளபளப்பா இருக்கே?.. என்ன விஷயம்? அபிலாஷ் ஏதாவது வெளிநாட்டு க்ரீம் வாங்கிட்டு வந்தாரா?'' கயல்விழி கேட்டாள்.

''ம்கூம்...''

''ப்யூட்டி பார்லர் போய் ஸ்பெஷல் ப்யூட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக்கறியா?''

''ம்கூம்...''

''பின்னே? நான் சொன்ன மாதிரி பால் ஆடையில குங்குமப்பூ போட்டு. உன் முகத்துல தடவி... அதனால வந்த பளபளப்பா?''

''ம்கூம்...''

''ஏ சரித்... என்ன... ரொம்பத்தான் ஸஸ்பென்ஸ் வைக்கற? உன்னோட அழகு ரகஸியத்தை சொல்லக் கூடாதா? திடீர்னு ஒரு வித்யாசமான... நல்ல ஒரு வசீகரமான பளபளப்புல உன் முகம் மின்னுதேன்னு கேட்டா... சொல்ல மாட்டேங்கறியே?''

''சும்மா கொஞ்சம் ஸஸ்பென்ஸ் வச்சு சொல்லலாமேன்னு பார்த்தா கோவிச்சுக்கறியே? என்னோட முகத்துல தெரியற பளபளப்புக்குக் காரணம் ஒரு பொண்ணு...''

''என்ன ? பொண்ணா... புரியும்படியா சொல்லேன் சரித்...''

''நான் வழக்கமா போற 'அழகு' ப்யூட்டி பார்லர்க்கு அழகுக்கலை பயிற்சி எடுத்துக்கறதுக்காக ஒரு பொண்ணு வந்தா. ரொம்ப நல்ல பொண்ணு. பயிற்சி எடுக்கும் போதே... ரொம்ப நல்லா ஃபேஷியல், பெடிக்யூர்  எல்லாம் பண்ணினா. உண்மையான அக்கறையோட பண்ணினா. அடிக்கடி நான் அங்கே போறதுனால அவகூட நல்ல பழக்கம் ஆயிடுச்சு. பயிற்சி முடிஞ்சப்புறம் என்கூட ஃபோன்ல பேசுவா.

'என்ன நீ பாட்டுக்கு பயிற்சி முடிஞ்சதும், பார்லரை விட்டுட்டு போயிட்ட... நீ ஃபேஷியல் பண்ணினதுக்கப்புறம் வேற யார் பண்ணினாலும் எனக்கு திருப்தியே இல்லைன்னு' அவகிட்ட சொன்னேன்.

'உங்க வீட்டுக்கு வந்து நானே எல்லாம் பண்ணி விடறேன் மேடம்'னு கேட்டா. நல்ல வேளையா போச்சு. வந்துடேன்னு அட்ரஸ் குடுத்தேன். அவதான் இப்போ என்னோட ப்யூட்டிஷியன். அவளோட கை வண்ணத்துலதான் என்னோட முகம் இப்பிடி பளபளப்பா இருக்கு. முகம் மட்டும் இல்ல. கை, கால் எல்லாமே செம ஜோரா இருக்கு. பாவம் அந்தப் பொண்ணு. வீட்ல ரொம்ப கஷ்டமாம். அதனால வீடு தேடி வந்து அழகை பராமரிக்கற வேலை, வீடு தேடி வந்து வீட்டுப் பராமரிப்பு இப்பிடி பல வேலைகள் செஞ்சுதான் அவளோட குடும்பத்தைக் காப்பாத்தறாளாம்... ''

''அவ... கஷ்டம்ன்னு சொன்ன உடனே உனக்கு அனுதாப அலை பொங்கிடுச்சாக்கும்...?''

''சீச்சி... அப்பிடியெல்லாம் இல்லை. அவளோட வேலை திறமைக்கு நான் மதிப்பு குடுக்கறேன். அவ்வளவுதான்.''

''அவளோட திறமை... உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. ஆனா... ஜாக்ரதை! காலம் கெட்டுக் கெடக்கு. யாரையும் நம்ப முடியறதில்லை. அதனால... கவனமா இரு.''

''அதெல்லாம் நான் கவனமாத்தான் இருப்பேன். நீ கவலைப்படாதே.''

''அப்படின்னா சரி. எஞ்சாய் மகளே எஞ்சாய். உனக்கு ஏத்த ஆளாத்தான் கிடைச்சிருக்கா. அது சரி... அவளோட குடும்பத்துல சம்பாதிக்கறவங்க வேற யாரும் இல்லையா?''

''ஒரு அண்ணன் இருந்தானாம். சின்ன வயசுல வந்த விஷ ஜுரத்துல செத்துப் போயிட்டானாம். அவளோட கூடப்பிறந்த தங்கச்சிக்கு சோறு போட்டு, படிக்க வைக்கணுமாம், அதுக்காகத்தான் இவ ஓடியாடி உழைக்கிறாளாம்...''

''நம்ப தாத்தா, பாட்டி காலத்துல ஆண்கள்தான் சம்பாதிச்சாங்க. பெண்கள் வீட்டையும், குடும்பத்தையும் பார்த்துகிட்டு பிள்ளைகளை கண்ணும் கருத்துமா வளர்த்தாங்க. இப்போ?... பெண்களும் சேர்ந்து சம்பாதிக்க வேண்டியதிருக்கு. சம்பாதிக்கறது கூட பரவாயில்லை. ஆனா... 'இவதான் சம்பாதிக்கறாளே'ன்னு சில குடும்பத்துல ஆண்கள், சோம்போறியா ஊர் சுத்த ஆரம்பிச்சுடறாங்க. அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்...''

''ஆமா கயல். இப்போ விலைவாசி வேற உயர்ந்துட்டதால பொருளாதார பிரச்னை பூதாகரமாயிடுச்சு. அதனால கஷ்டப்பட்டு பிழைக்க வேண்டிய நிலைமையில பல குடும்பங்கள் இருக்கு... உனக்கு ஃபேஷியல் பண்ண வர்ற பொண்ணோட பேர் என்ன?''

''பாவனா...''

''அந்த பாவனாவுக்கு நீ ஒரு பெரிய க்ளையண்ட் கிடைச்சிருக்க. அதனால அவளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஃபேஷியல் வேலையில கெட்டிக்காரின்னு வேற சொல்ற... வள்ளல் நீ அள்ளி குடுப்பியே. பாவம் ஏழைப் பொண்ணு... பிழைச்சுப் போகட்டும்...''

''ஆமா கயல். பாவம்தான். ஆனா அவளைப் பார்த்தா ஏழ்மையான பொண்ணு மாதிரி தெரியாது. நல்ல நிறமா... அழகா இருப்பா. சினிமா நடிகைகள் மாதிரி நல்ல உயரம்...''

''பின்ன என்ன? பேசாம... அபிலாஷ்ட்ட சொல்லி அவளை யாராவது ப்ரொட்யூஸர்ட்ட அறிமுகப்படுத்தி சினிமா சான்ஸ் வாங்கி குடுத்துட வேண்டியதுதானே...''

''அவளே சொல்லிட்டா. சினிமாவுல நடிக்கறதுல ஆர்வம் இல்லைன்னு...''

''ஓ... அதைக்கூட விட்டு வைக்காம... கேட்டுட்டியா...?''

''பின்னே... காலுக்கு அழகுப் பராமரிப்பு பண்ணும்போது ஊர்க்கதை, சொந்தக் கதை, சோகக்கதை பேசறோமே? அப்போ நடந்த பேச்சுதான் அது...''

''அதுவா விஷயம் ? சரி... சரி... உனக்கும் பொழுது போகணுமில்ல...''

''ஆமா கயல். அபிலாஷ்... எப்பவும் பிஸியா இருக்கார். அவரை தொந்தரவு பண்றதில்லை. அதனால நானே எங்கே போகணுமோ... போய்க்கறேன்... அதிலதான் பொழுது போகுது... அடுத்த வாரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சுக்கு நான் போகும்போது நீயும் வர்றியாம். உனக்கு பிடிச்சதெல்லாம் நான் வாங்கித் தருவேனாம். எதையும் மறுக்காம, என் பேச்சைக் கேப்பியாம். அந்த வேலை... இந்த வேலைன்னு... எந்த சாக்கு போக்கும் சொல்லமாட்டியாம்.''

''கரெக்ட்டா என்னைக்கு போகணும்னு எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு. நிச்சயமா நான் வரேன்...''

''தேங்க்யூ செல்லமே...''

கயல்விழியை கட்டி அணைத்துக் கொண்டாள் சரிதா.

நீண்ட நேரம் இருவரும் அரட்டை அடித்து மகிழ்ந்தனர். அதன்பின் கயல்விழி, தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

அவளை வழியனுப்பவதற்காக வாசலுக்கு வந்தாள் சரிதா. அப்போது அங்கே... பாவனா நின்று கொண்டு இருந்தாள். மிக பவ்யமாக, சரிதாவிற்கு வணக்கம் போட்டாள்.

"ஹாய் பாவனா... என்னோட ஃப்ரெண்ட் கயல்விழி வந்ததுலயும், அவளைப் பார்த்து பேசினதுலயும் உன்னை வரச் சொன்னதையே மறந்துட்டேன். இத்தனைக்கும் உன்னோட கைவண்ணத்தைப் பத்தி இவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்... அடடே... கயல்விழியை உனக்கு அறிமுகப்படுத்தலியே... இதோ... இவதான் என் உயிர்த்தோழி கயல்விழி..." என்றவள், கயல்விழியிடம் "நான் சொன்னேனே கயல், என்னோட புது ப்யூட்டிஷியன் பாவனான்னு..."

"அடேங்கப்பா... பாவனா... பாவனான்னு உன்னைப் பத்தியும், உன்னோட கைத்திறமையைப் பத்தியும், சின்சியரான சர்வீஸ் பத்தியும் சரிதா புகழ்ந்து தள்ளிட்டா... சும்மா சொல்லக் கூடாது... எங்க சரிதாவோட முகத்தை சும்மா பளபளன்னு ஜொலிக்க வைக்கிறியே."

"தேங்க்ஸ் மேடம். நீங்க கூட ரொம்ப அழகா... சூப்பரா இருக்கீங்க... நீங்க எங்கே வேலை பார்க்கறீங்க மேடம்?"

"நான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டான்ஸ் ஆடிட்டிருக்கேன். அதுதான் என்னோட வேலை..."

"சினிமா நடிகைகள் மாதிரி அழகா இருக்கீங்க மேடம்..." மறுபடியும் கயல்விழியை புகழ்ந்தாள் பாவனா.

"நானும் அதைத்தான் சொல்றேன். அபிலாஷ்ட்ட சொல்லி சினிமாவுல வாய்ப்பு வாங்கித் தரேன்னா இவ கேட்க மாட்டேங்கறா..." சரிதா கூறியதும் கயல்விழி புன்னகைத்தாள்.

"நம்ம கதை வழக்கமான கதைதான். அதை அப்புறமா பார்த்துக்கலாம். எனக்கு லேட்டாகுது... நான் கிளம்பறேன்..."

"சரி கயல்."

கயல்விழி, பாவனாவிடமும் விடை பெற்று கிளம்பிளாள்.


அபிலாஷ், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்தான். காதுகளில் ஹெட் ஃபோனைப் பொருத்திக் கொண்டு இசையை ரஸித்துக் கொண்டிருந்தான். ஸ்டுடியோவில் பணிபுரியும் சீனிவாசன் எனும் இளைஞன், அபிலாஷ், ஹெட் ஃபோனை காதிலிருந்து எடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

அபிலாஷ், ஹெட் ஃபோனை எடுத்தான். அங்கே நின்ற சீனிவாசனை பார்த்தான்.

''என்ன சீனி... என்ன விஷயம்?''

''உங்களைப் பார்க்க ஹேமரஞ்சனின்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க ஸார். புது நடிகையாம்.''

''என்ன சீனி இது... நடிகைன்னா... சினிமா டைரக்டரைத்தான் பார்க்கணும். ம்யூஸிக் டைரக்டரை பார்க்க வந்திருக்காங்க?!..''

''ரொம்ப நேரமா காத்திருக்காங்க ஸார்...''

''சரி... உள்ள வரச்சொல்லு...''

சீனிவாசன் வெளியே சென்று, ஹேமரஞ்சனியை உள்ளே அனுப்பினான். புன்னகைப்பூ பூத்தபடி உள்ளே வந்தாள் ஹேமரஞ்சனி. இளமை அவளிடம் கொட்டிக்கிடந்தது. தளதளவெனும் பருவம் அவளது உடலில் அழகையும், கவர்ச்சியையும் அள்ளித் தெளித்திருந்தது. பதினெட்டு வயது கூட நிறையாத இளம் வயது எனினும் வயதிற்கு மீறிய வனப்பும் அவளது உடலில் மின்னியது.

முகமும் சந்திர பிம்பம் போல ஜொலித்தது. கரிய விழிகளும், சிறிய உதடுகளும் அவளது அழகை மேலும் மேன்மைப்படுத்தியது. காண்போரை நிலைதடுமாற வைக்கும் இந்த அழகுப் பெண், திரைப்படத்தில் நடிப்பதற்கு தேர்வானதில் ஆச்சர்யம் இல்லை.

அவள் அபிலாஷைப் பார்த்ததும் பரபரப்பானாள். 

''அபிலாஷ் ஸார்... உங்க பாட்டுன்னா எனக்கு உயிர். என்னோட கம்ப்யூட்டர்ல, என்னோட கார் ஆடியோ ப்ளேயர்ல, என்னோட 'ஐ-பாட்'ல எல்லாத்துலயும் உங்க பாட்டுதான்.''

தன்னைப் பற்றி ஏதும் சொல்லிக் கொள்ளாமல், பார்த்த உடனே பரவசமாகி, வளவளவென்னு பேசிக்கொண்டே போனாள்.

அவளது ஒவ்வொரு பாராட்டுதலுக்கும் 'தேங்க்ஸ், தேங்க்ஸ்' என்று சொல்லிக் கொண்டே இருந்தான் அபிலாஷ். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினாள்.

''ஸார்... உங்களை நிறைய சினிமா விழாக்கள்ல்ல பார்த்திருக்கேன். டி.வி.யில பார்த்திருக்கேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ஒரு ஹீரோ மாதிரி இருக்கீங்க... நீங்க படத்துல நடிச்சா... நீங்கதான் 'நம்பர் ஒன்'னா இருப்பீங்க. உங்களோட சுருட்டை முடியில என் மனசு சுருண்டு கெடக்கு...''

ஹேமரஞ்சனியின் பேச்சு வேறு விதமாக திசை மாறியதைக் கேட்ட அபிலாஷ் திகைத்தான். அபிலாஷின் முகமாறுதலையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்பது போல பொரிந்து தள்ளினாள்.

''உங்களை முதல் முதல்ல பார்த்ததுல இருந்து என்னோட மனசு என்கிட்ட இல்லை. என் கிட்ட இருந்த மனசு உங்ககிட்ட இருக்கான்னு பார்க்கணும். ஐ லவ் யூ அபிலாஷ் ஸார்.''

அவள் கூறியதைக் கேட்ட அபிலாஷ் மேலும் அதிர்ச்சி அடைந்தாள். பின்னர், சமாளித்து பேசினான்.

''இங்க பாரு. நீ சின்ன பொண்ணு. இந்த வயசுல வர்ற ஆர்வக் கோளாறுல ஏதேதோ பேசற. இது தப்பு. புதுசா நடிக்க வந்திருக்கறதா சொன்னாங்க. நடிகையா வர்றதுக்குரிய தகுதி உனக்கு இருக்கு. உன் திறமையை பத்தி உனக்குதான் தெரியும். திறமை இல்லாம ஒரு டைரக்டர் உனக்கு திரைப்படத்துல வாய்ப்பு குடுத்திருக்க மாட்டார். அதனால நடிப்புல உன் மனசை செலுத்து. இவ்வளவு சின்ன வயசுல காதல்ங்கறதெல்லாம் தேவையில்லாத விஷயம். வாழ்க்கையில முன்னுக்கு வர்றதுக்கு முயற்சி எடுக்கணும்... இப்ப நீ பேசினதெல்லாம் நீ பேசினது இல்லை. உன்னோட வயசு அப்பிடி பேச வைக்குது. கொஞ்சம் முயற்சி பண்ணி நீ கால் வச்சிருக்கற துறையில உன் மனசை ஈடுபடுத்து... நடிச்சு நல்ல பேர் எடு. சிறந்த நடிகைன்னு பேர் வாங்கு...''

ஹேமரஞ்சனி அவளது போக்கில் பேச்சைத் தொடர்ந்தாள். ''நடிகைன்னு பேர் வாங்கறதைவிட ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷேரட மனைவிங்கற பேர்தான் எனக்கு பெருமை...''

''இங்க பாரும்மா. நான் கல்யாணமானவன். என்னோட மனைவி மேல என் உயிரையே வச்சிருக்கேன்.''

''ஒரு செடியில பல பூக்கள் பூக்குதே ஸார்.''

இதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அபிலாஷ்.

'எல்லாம் தெரிஞ்சுதான் இப்பிடி உளறிக்கிட்டிருக்கா இந்தப் பொண்ணு' உள்ளுக்குள் ஓடிய எண்ணத்தை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பேசினான் அபிலாஷ். இப்போது அவனது குரலில் கடுமை தொனித்தது.

''நீ சொல்ற பூ விஷயம்... தாவர இனத்துக்கு பொருந்துமே தவிர மனித இனத்துக்கு இல்லை. நாம மனுஷங்க. வாழறது ஒரு முறை. அந்த வாழ்க்கையை வரைமுறையோட வாழணும். நிலை மாறும் மனசோட நீ எடுக்கற முடிவு தப்பு. திருமண வாழ்க்கையிலதான் ஈடுபாடுன்னு உறுதியான முடிவுல நீ இருந்தா... ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்க...''

''எனக்கு நீங்கதான் நல்லவர்... வல்லவர் எல்லாமே. என்னவரா... நீங்க எனக்கு கிடைக்கணும்...''

தான் சொல்வதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் இஷ்டப்படி பேசிக் கொண்டே போன ஹேமரஞ்சனியைப் பார்த்து கோபத்தின் உச்சிக்குப் போனான் அபிலாஷ்.

''ஷட் அப். ஒரு பொண்ணாச்சேன்னு இவ்ளவு நேரம் பொறுமையா பேசினேன். என் பொறுமையை சோதிக்காதே...''

''எனக்கு பாடம் போதிக்காதீங்க அபிலாஷ் ஸார். நீங்க எனக்கு ஊர் அறிய தாலி கட்ட வேண்டாம். உங்களோட மனசுங்கற நிழல்ல ஒதுங்கி வாழ ஒரு சின்ன இடம் குடுத்தா போதும்...''

''இதுக்கு மேல எதுவும் பேசாதே. என்னோட மனசு முழுசும் என் மனைவி சரிதா நிறைஞ்சிருக்கா. அவதான் என் உயிர். என் உலகம். என் ஜீவன். எந்த ரதி, ரம்பை வந்தாலும் என் மனசு அசையாது...''

''என்ன ஸார் இது... திரைப்பட உலகத்துல இருந்துக்கிட்டு இப்பிடி பேசறீங்க...?!''

''திரைப்பட உலகத்துல இருக்கறவங்கன்னா திரைமறைவான வாழ்க்கை வாழறவங்கன்னு அர்த்தமா? திரைஉலகத்துல இருக்கறவங்களும் மனுஷங்கதான். அவங்களுக்கும் குடும்பம், குழந்தைன்னு நல்லபடியான வாழ்க்கை இருக்கு. சினிமா உலகம்ன்னா ஒழுக்கம் கெட்டுப் போற உலகம்ன்னு சினிமாவுல நடிக்க வந்திருக்கிற நீயே பேசறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.''

''நியாயமான என்னோட ஆசையை நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க...''

''எது நியாயம் எது நியாயம் இல்லைன்னு எனக்குத் தெரியும். நீ ஒரு நடிகை. போக வேண்டியது ஷுட்டிங் நடக்கற இடத்துக்கு. என்னோட ஸ்டூடியோவுக்கு இல்லை. ஒரு பெண்கிட்ட முரட்டுத்தனமா பேசறது நாகரீகம் இல்லைன்னுதான் நான் இவ்ளவு நேரம் உன்கிட்ட பேசினேன். இனி எதுவும் பேசாதே. 'கெட் அவுட்'ன்னு என்னை சொல்ல வைக்காதே...''

அபிலாஷின் கோபமான வார்த்தைகள் அவளது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மௌனமாக வெளியேறினாள்.


 "என்ன பாவனா...? சொன்ன நேரத்துக்கு முன்னாடியே இன்னிக்கு வந்துட்ட?"

"அதுவா மேடம்? தெரிஞ்சவங்க கடையில விலை கம்மியா பத்து சேலை குடுத்தாங்க, அந்த விலைக்கு மேல இருபது பெர்ஸண்ட் லாபம் வச்சு விக்கலாம்ன்னு எடுத்தேன். என்னோட அதிர்ஷ்டம்... இன்னிக்கு ஒரே நாள்ல்ல பத்து புடவையும் வித்துருச்சு. அதனால அலைச்சலும் மிச்சம். கையில ஒரு நல்ல தொகையும் கிடைச்சுது. சீக்கிரமா அந்த வேலை முடிஞ்சதுனால உங்க வீட்டுக்கும் சீக்கிரமா வந்துட்டேன்."

பாவனா அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளை நிஜம் என்று நம்பிய சரிதா, அப்பாவியாய் அவள் மீது இரக்கப்பட்டாள்.

'பத்து சேலை வித்து ஏதோ கொஞ்சம் காசு கிடைச்சதுக்கே, இவ்வளவு சந்தோஷப்படறாளே... பாவம்...' என்று நினைத்தாள்.

"என்ன மேடம்... ஏதோ யோசனைக்கு போயிட்டீங்க?"

"ஒண்ணுமில்லை... தனி ஒரு பொண்ணா... நீ... இவ்வளவு கஷ்டப்படறியேன்னு யோசிச்சேன். எனக்கு அபிலாஷ் மாதிரி ஒரு நல்லவர் கிடைக்கலைன்னா உன்னைப் போல நானும் கஷ்டப்பட்டிருப்பேனோ என்னமோ?... அபிலாஷேரட காசோ... பணமோ... அந்தஸ்தோ... பெரிசில்லை... அவரோட தங்கமான மனசுதான் எனக்கு பெரிசு. உனக்கும் ஒரு நல்ல கணவர் வாய்க்கணும். நீ நல்லா இருக்கணும்."

"தேங்க்ஸ் மேடம்..." என்ற பாவனாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவளது மனசாட்சி குத்தியது. மறு வினாடியே அவளுடைய குடும்பக் கஷ்டங்கள் தலை விரித்து ஆடியது. பணம் குறித்த சுதாகரின் ஆசை வார்த்தைகள், அவனிடம் வாங்கியுள்ள அட்வான்ஸ் தொகை... இவையெல்லாம் அவளது மனசாட்சியை மழுங்க வைத்தன. எனவே பேச்சை மாற்றினாள்.

"நான் போய் ஹீட்டர் போடறேன் மேடம். நீங்க... புடவையை மாத்திட்டு ரெடியாகுங்க..." என்றபடி சரிதாவின் அறைக்குப் போனாள் பாவனா. அவளைத் தொடர்ந்து சென்றாள் சரிதா.

குளியலறையில் தண்ணீர் சூடான பின் சிறிய ப்ளாஸ்டிக் தொட்டியில் சுடுதண்ணீரைப் பிடித்து வந்து வைத்தாள். சரிதாவின் கால்களை அதில் நனைக்கச் செய்தாள். இருபது நிமிடங்கள் ஆன பிறகு சரிதாவின் கால்களை சோப் போட்டு கழுவ ஆரம்பித்தாள். கழுவியபின் முழுமையான ஈடுபாட்டோடு சரிதாவின் கால்களுக்கு பராமரிப்பு செய்தாள் பாவனா.

"ஆஹா... சூப்பரா இருக்கு பாவனா... உன்னோட தேய்ப்பு எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமா?" பாவனா தேய்த்து விடுவதை அனுபவித்து ரசித்தாள் சரிதா.

அதுதான் சமயம் என்று தன் சகுனி வேலையை ஆரம்பித்தாள் பாவனா.

"உங்க ஃப்ரெண்ட் கயல்விழி... ஹோட்டல்ல டான்ஸ் ஆடறதா சொன்னாங்க. அவங்க அழகா இருக்கறது மாதிரி அவங்க டான்சும் நல்லா இருக்குமா மேடம்?"

"அவ... ஸ்கூல்லயும்... காலேஜ்லயும் ஆடும்போது பார்த்திருக்கேன். விழாக்கள் நடக்கும்போது அவளோட டான்ஸ் இருக்கும். சூப்பரா ஆடுவா. ஆனா ஹோட்டல்ல ஆடறதை நான் பார்த்ததே இல்லை. அவளே என்னை 'அங்கெல்லாம் நீ வர வேண்டாம்'ன்னு சொல்லிடுவா..."

"அவங்க ரொம்ப அழகு மேடம். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?... அழகு இருக்கற இடத்துல ஆபத்தும் சேர்ந்தே இருக்கும் மேடம்... உங்க ஃப்ரெண்ட் கயல்விழிகிட்ட நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். நட்புங்கறது ஒரு அளவோடுதான் இருக்கணும். யாரையும் முழுசா நம்பிடக் கூடாது..."

சரிதாவின் பாதங்களை மிக நயமாத் தேய்த்து விட்டபடியே பேசினாள் பாவனா. அவள் தேய்த்து விடும் சுகத்தில் லயித்தபடி இருந்த சரிதா...  பாவனாவின் பேச்சில் மெல்ல மயங்கினாள். ஆனாலும் தன் தோழிக்காகப் பேசினாள்.

"சச்ச... கயல்விழி நல்லவள்..." சரிதா பேச வந்ததை முழுசாக பேச விடாமல் பாவனா பேச ஆரம்பித்தாள்.

"நல்ல பாம்பு கூட அழகுதான் மேடம். ஆனா... விஷத்தைக் கக்கினா... உயிர்த்துடிப்பு மிஞ்சாது. அதனாலதான் சொன்னேன் அளவோட இருந்துக்கோங்கன்னு. ஃப்ரெண்ட்ஷிப்பை வெளியில வச்சுக்கோங்க. வீட்டுக்குள்ள சேர்க்கறது உங்களுக்குத்தான் பிரச்னையா வந்து முடியும். உங்க கணவர் அபிலாஷ் புகழ் பெற்ற ம்யூஸிக் டைரக்டர். இளைஞர். செல்வந்தர். தோழின்னு உரிமை கொண்டாடி வீட்டுக்கு வர்றவங்க... அளவுக்கு மீறி அந்த உரிமையை எடுத்துக்கிட்டு, சீரா போய்க்கிட்டிருக்கற உங்க குடும்ப வாழ்க்கையை சீர் கெட்டுப் போக வச்சிருவாங்க. ஒரு இளைஞர், அழகான பொண்ணு கூட பழக நேரிடும்போது மனசு தடுமாறி... குணம் மாறிடுவாங்க. அதுக்குரிய வாய்ப்புகளை நீங்களே உருவாக்கலாமா? நீங்க கவனிச்சிருக்கீங்களோ என்னவோ... ஆண்கள்ல்ல பெரும்பாலானோர் தங்களோட நண்பர்களை வீட்டுக்குள்ள வர அனுமதிக்கமாட்டாங்க. அவங்களோட நட்பு வட்டத்தை வெளியிலயே வச்சுப்பாங்க. உஷார் பார்ட்டிங்க இந்த ஆண்கள். நாம... பெண்கள்தான் நட்பு, தோழின்னு உருகி, வீட்டுக்குள்ள சேர்த்து, கடைசியில நாம, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு ஆளாகிடுவோம்..."

"நீ என்ன பாவனா... இவ்வளவு சந்தேகப்படறே? குடுத்து.... வாங்கறதுதான் நட்பு..."

"இல்லை மேடம்... குடுத்துட்டா... திரும்ப வாங்கவே முடியாது..."

"எங்க நட்போட நெருக்கம் தெரியாம நீ பேசற... நானும் கயல்விழியும் ஒரே தட்டில சாப்பிடுவோம், ஒரே கப்ல 'டீ' குடிப்போம்."

அப்போது பாவனா சட்டென்று இடை மறித்து பேசினாள். "ஒரே படுக்கையிலயும் உங்களுக்குப் போட்டியா வந்துடக் கூடாதே... எனக்கு எந்த பாதிப்பும் இல்லை மேடம். அதே சமயம் நான் இப்ப உங்களுக்கு ஆலோசனை சொல்றதுனால எனக்கு எந்த ஆதாயமும் இல்லை.

உங்களோட நல்லதுக்குதான் இதையெல்லாம் சொல்றேன். எனக்கு உங்க ஸாரைப் பத்தியும் தெரியாது... கயல்விழியைப் பத்தியும் தெரியாது. பொதுவா... வாழ்க்கையின் நடப்புகளையும் எனக்குத் தெரிஞ்ச சில ஆதாரபூர்வமான விஷயங்களையும் எடுத்துச் சொன்னேன்

பத்திரிகைகள்ல்ல வர்ற உண்மை நிகழ்வு பற்றின செய்திகளை படிச்சிங்கன்னா தெரியும். ஊர்ல, நாட்டில, உலகத்துல என்னென்ன மாதிரியான துரோகங்கள் நடக்குதுன்னு தெரியும். அந்த துரோகங்கள் காரணமா ஏற்படற உறவும், பிரிவும் எந்த அளவுக்குக் குடும்ப வாழ்க்கையை பாதிக்குதுன்னு தெரிஞ்சுப்பீங்க. 'நீங்க, உங்க கணவர் உங்க வீடு... இதுவே உலகம்'ன்னு ஒரு கிணத்து தவளையா இருந்துட்டா... வெளி உலகமே தெரியாது. நம்பளை சுத்தி என்ன நடக்குதுன்னும் புரியாது. எத்தனையோ பெண்கள் எச்சரிக்கை உணர்வு இல்லாததுனால... தங்களோட வாழ்க்கையை தொலைச்சிருக்காங்க."

இதைக் கேட்ட சரிதா குழம்பிப் போனாள். வாக்குவாதம் செய்தாள்.

"யாரையுமே நம்பக் கூடாதுன்னு நீ சொல்றதை என்னால ஏத்துக்க முடியலை. நம்பிக்கைதானே வாழ்க்கை? அது இல்லாம எப்பிடி நிம்மதியா வாழ முடியும்?"

"நம்பிக்கை வேற. நடைமுறை வாழ்க்கை வேற... நம்பிக்கை மனரீதியானது. ஒரு ஜாக்கிரதை உணர்வோட கவனமா இருந்துக்கறது நடைமுறை வாழ்க்கைக்கு உதவியா இருக்கும். அதைத்தான் நான் சொன்னேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்ணு, கல்பனான்னு பேர். தன்னோட தோழியை அவளுக்கு யாருமே இல்லைன்னு... வீட்டோட கூட்டிட்டு வந்து ஆதரவு குடுத்தா. அவ வேலைக்குப் போறவ. அதனால அந்தத் தோழியை வீட்லயே விட்டுட்டு போக வேண்டிய சூழ்நிலை. தோழிக்கு ஒரு வேலை கிடைக்கறவரைக்கும் தன்னோட பாதுகாப்புல வச்சிருக்கணும்னு நினைச்சு உதவி செஞ்ச அந்தப் பொண்ணுக்கே பாதுகாப்பு இல்லாம அவளோட புருஷனை தோழிகிட்ட பறி குடுத்துட்டா. இத்தனைக்கும் அவளோட புருஷன் சொல்லி இருக்காரு, 'எங்கேயாவது ஹாஸ்டல்ல விட்டுடும்மா. பணத்தை நாம கட்டிடலாம்'ன்னு. தன் தோழி மேல உள்ள அளவுக்கு அதிகமான நம்பிக்கையிலயும், பாசத்துலயும்... வீட்டுக்குள்ள சேர்த்தா... ஆனா கல்பனாவே வீட்டை விட்டு வெளியேறிப் போயிடற மாதிரியான ஒரு இக்கட்ல மாட்டிக்கிட்டா. கல்பனாவோட புருஷன் மனசு மாறிட்டான். கல்பனாவோட தோழிகிட்ட மயங்கிட்டான். தோழிக்காக தியாகம் செஞ்ச கல்பனா, புருஷனோட துரோகத்துக்கு பலியாகிட்டா... வாழ்க்கையை பறி குடுத்துட்டா..." பாவனாவின் பேச்சு சரிதாவை பயமுறுத்தியது.

"இப்பிடியெல்லாம் கூட மனுஷங்க மாறிடுவாங்களா பாவனா...?'' குழம்பிப் போன மனதில் எழுந்த கேள்வியை பாவனாவின் முன் வைத்தாள்.

"நிஜம்மாவே நடந்த விஷயம் மேடம். வினாடி நேர சபலம்... விதி விளையாடி... வினையா முடிஞ்சுருச்சு. ஆதாரபூர்வமான உண்மை நிகழ்ச்சி அது. உயிரையே வச்சிருந்த புருஷன்... கேவலம்... இன உணர்ச்சிக்கு சபலப்பட்டு, வேற ஒரு பொண்ணு கூட தன் உறவை அமைச்சுகிட்டதால அவனை மன்னிக்கவும் முடியாம, மறக்கவும் முடியாம... அவனை விட்டுப் பிரிஞ்சு வாழறா கல்பனா. கல்பனா நிஜம். அவளோட புருஷன் பண்ணின துரோகம் நிஜம். அவளோட தோழி செஞ்ச தீமையும் நிஜம்..."

பாவனா கூறிய நிஜங்கள், சரிதாவை சுட்டன. அவள் கூறிய உண்மைகள் சரிதாவிற்கு கசந்தன.

பலவித உணர்வுக் கலவையில் மூழ்கிய சரிதாவின் நெஞ்சில், எஞ்சியது குழப்பம் மட்டுமே.

தன் கை வண்ணத் திறமையால் சரிதாவின் முகத்திற்கும், உடலுக்கும் மெருகு ஏற்றிய பாவனா, தன் பேச்சுத் திறமையால் சரிதாவின் மனதில் சந்தேகம் எனும் நஞ்சை ஏற்றினாள்.

அழகுப் பராமரிப்பு வேலைகள் முடிந்தபின், அங்கிருந்து கிளம்பினாள் பாவனா. அவளுக்கு நிறைய பணம் கொடுத்து அனுப்பினாள் சரிதா. அலை பாயும் மனதை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதை அறியாத பேதையாகிப் போனாள் அவள்.


சரிதாவின் மொபைலில் 'சிந்து நதியின் விசை நிலவினிலே...' பாடல் பாடியது. அந்தப் பாடல் ஒலித்தால் கயல்விழியின் அழைப்பு என்று அர்த்தம். அபிலாஷின் அழைப்பிற்கு அவன் இசை அமைத்த பாடல் ஒலிக்கும். மற்ற அழைப்புகளுக்கு அபிலாஷின் வேறு சில பாடல்கள் ஒலிப்பது போல அமைந்திருந்தாள் சரிதா.

மொபைலை எடுத்து குரல் கொடுத்தாள்.

''ஹலோ...''

''சரித்... நான் கயல்விழி பேசறேன்...''

''என்ன ? சொல்லு...'' வழக்கமாக போசாமல் சற்று வித்தியாசமாக சரிதா பேசுவதைக் கேட்ட கயல்விழி, தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

''என்ன சரித்... ஏன் உன்னோட குரல் ஒரு மாதிரியா இருக்கு?''

''அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ சொல்லு...''

''இன்னிக்கு உனக்கும், அபிலாஷுக்கும் என்னோட ட்ரீட். எந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போகலாம்னு நீயே சொல்லு...''

''ரெஸ்ட்டாரண்ட்டா? அதெல்லாம் வேண்டாம், அபிலாஷ்க்கு ரெக்கார்டிங் இருக்கு...''

அங்கிருந்த அபிலாஷ், இதைக் கேட்டுக் குறுக்கிட்டான்.

''ஒரு நிமிஷம் பேசறதை நிறுத்தேன்.''

சரிதாவும் அவன் சொன்னபடி செய்தாள்.

''யார் ஃபோன்ல?!''

''கயல்விழி. இன்னைக்கு டின்னர்க்கு கூப்பிடறா...''

''போலாமே. எனக்கு இன்னிக்கு ரெக்கார்டிங் கேன்ஸல்.'' என்றபடியே சரிதாவின் கையில் இருந்த அவளது மொபைலை வாங்கி அவன் பேசினான்.

''ஹாய் கயல்விழி? என்ன ட்ரீட்டெல்லாம் பலமா இருக்கு? ஏதாவது ஜாக்பாட் அடிச்சுதா?''

''ஜாக்பாட் அளவுக்கு இல்லாட்டாலும் கொஞ்சம் அப்பிடித்தான்னு வச்சுக்கோங்களேன். நான் டான்ஸ் ஆடற வெண்ணிலா ஹோட்டல் முதலாளி, அவங்க ஸ்டாஃப்சுக்கு போனஸ் போடறப்ப எனக்கும் போனஸ் போடச் சொல்லி இருக்காங்க. நல்ல தொகை குடுத்தாங்க, சந்தோஷம்தான்...''

''எனக்கு ரெக்கார்டிங் கேன்ஸல் ஆயிடுச்சு. அதனால வரலாம்...''

அப்போது சரிதா குறுக்கிட்டாள்.

''இல்லைங்க... எனக்கு தலைவலி அதிகமா இருக்கு. இன்னைக்கு வேணாம்.''

சரிதா, தலைவலி என்றதும் அபிலாஷ் துடித்துப் போனான். கயல்விழியிடம் ''அப்புறமா பேசறேன்'' என்று அவசரமாக பேசிவிட்டு, பதற்றத்துடன் சரிதாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

''சூடு இல்லையே...''

''ஜுரமெல்லாம் இல்லிங்க. தலைவலி மட்டும்தான்...''

''இரு. நான் உனக்கு தாய்லேண்ட் தைலம் தேய்த்து விடறேன்'' என்ற அபிலாஷ், அலமாரியைத் திறந்து தைலத்தை எடுத்து வந்தான். எப்போது தாய்லேண்ட் போனாலும், எதை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் தலைவலி தைலம் வாங்காமல் வரமாட்டான்.

சரிதாவை தன் மடியில் படுக்க வைத்தான். தைலத்தை எடுத்து இதமாகத் தேய்த்து விட்டான்.

''தலைவலிக்குதுன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே...?''

''சின்ன தலைவலிக்கு ஏங்க இப்பிடி கவலைப்படறீங்க?''

''எது சின்ன விஷயம்? உனக்கு தலை வலிக்கறது சின்ன விஷயமா? என்னோட சரிதா  செல்லத்துக்கு எதுவுமே வலிக்கக் கூடாது. எந்தக் கஷ்டமும் வரக்கூடாது... நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். நீ என் உயிர்...''

அபிலாஷ் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சரிதாவிற்கு, பாவனா கூறிய விஷயங்கள் நினைவிற்கு வந்தன.

'நீ என் உயிர். நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்'னு என்கிட்ட மட்டும்தான் சொல்றாரா? அல்லது வேற வேற பெண்கள்கிட்டயும் இந்த மாதிரி பேசுவாரா?! ஐய்யோ... அப்பிடியெல்லாம் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலியே... என்னோட அபிலாஷ் எனக்கு மட்டும்தான் சொந்தம். அவருக்கு என் மேல மட்டும்தான் அன்பு இருக்கணும். காதல் இருக்கணும். அவரோட நெஞ்சுக்குள்ள நான் மட்டும்தான் புதைஞ்சு கிடக்கணும். என்னை மீறி... என் பாசத்தை மீறி... என்னோட காதலை மீறி... என்னோட காவலை மீறி... அவர்... அவரோட மனசு அலை பாய்ஞ்சுடுமா?...'

அவளுக்கு தைலம் தடவிவிட்ட அபிலாஷ், தலைவலி குறையும் பொருட்டு, ஒரு துணியை எடுத்து அவளது நெற்றியில் இறுக்கமாகக் கட்ட முற்பட்டான்.

ஏதேதோ தேவையற்ற நினைவுகள் அவளது இதயத்தில் உருவானதால், 'அபிலாஷ் தன் கழுத்தை இறுக்கிக் கட்டி கொல்ல வருகிறா'னோ... என்ற விபரீதக் கற்பனை செய்த சரிதா, வாய்விட்டு அலறினாள்.

''ஐயோ... என்னைக் கொன்னுடாதீங்க. கொன்னுடாதீங்க...''

சரிதா இவ்விதம் அலறுவதைக் கேட்ட அபிலாஷ், அதிர்ச்சி அடைந்தான்.

ஒரு தாய், தன் குழந்தையை அணைத்து ஆறுதல்படுத்துவது போல, சரிதாவை கட்டி அணைத்து அவளை அமைதிப்படுத்தினான் அபிலாஷ்.

''என்னம்மா... என்ன... ஆச்சு? ஜூரம் கூட இல்லையே? ஆனா ஏதேதோ பினாத்தறியே? வீடியோ ஸி.டி. பார்க்கறேன்... பார்க்கறேன்னு... ஏதாவது க்ரைம்... த்ரில்லர் மூவி பார்த்திருப்ப. அந்த பயத்துல இப்பிடி அலறிக்கிட்டிருக்க...''

''ஆ... ஆமாங்க...'' சமாளித்தபடி அவள் பேச ஆரம்பித்தாள்...

''நீ எதுவும் பேச வேண்டாம். உனக்கு இப்ப நல்ல ஓய்வும், தூக்கமும் தேவை. நல்லா தூங்கு'' என்று பாசம் பொங்கப் பேசிய அபிலாஷ், அவளுக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டான்.

அவனது அன்பு மழையில் நனைந்த சரிதா, தற்காலிகமாக ஆறுதலடைந்து... கண்களை மூடிக்கொண்டாள்.


தான் கற்றுக் கொண்ட அழகுக் கலை பயிற்சியின் மூலம் மெள்ள... மெள்ள... சரிதாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாவனா, அதன்பின் அடிக்கடி அங்கே செல்வதை வழக்கமாகக் கொண்டதோடு அல்லாமல் சரிதாவின் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டாள்.

பாவனாவின் கைவண்ணத்தில், அவளது அபார திறமையில் தன் அழகும், பொலிவும் மெருகு ஏறியதைக் கண்டுணர்ந்த சரிதாவிற்கு பாவனா மீது நம்பிக்கையும், ஒருவித அன்பும் ஏற்பட்டது. பாவனாவின் சேவையில் மனம் மயங்கினாள். அதன் விளைவாய் பாவனாவிற்கு புதிய மொபைல் ஃபோன் வாங்கிக் கொடுத்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை. பாவனாவை வீட்டிற்கு வரவழைத்தாள் சரிதா. பாவனா வந்தாள். வத்சலாம்மாவை அழைத்து, பாவனாவிற்கு காபி போட்டுத் தரும்படி பணித்தாள். மணக்கும் ஃபில்ட்டர் காபியை ரஸித்து, ருசித்து குடித்தாள் பாவனா.

''இன்னிக்கு ஃப்ரூட் ஃபேஷியல் பண்ணலாமா மேடம்?''

''ஓ... பண்ணலாமே... ஆனா எல்லா ஃப்ரூட்சும் ஃப்ரிட்ஜில இருக்கான்னு தெரியலியே...?''

''அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். ஃபேஷியலுக்கு தேவையான எல்லா பழங்களையும் நானே வாங்கி கொண்டு வந்துட்டேன்.''

''தேங்க்யூ பாவனா... '' 

''நான் சமையல் கட்டுக்குப் போய் வெள்ளரிக்கா, கேரட்டை துறுவிட்டு, பழத்தையெல்லாம் கழுவி, சீவலா போட்டு எடுத்துட்டு வரேன். ஐஸ் கட்டியையும் எடுத்துட்டு வந்துடறேன். அதுக்குள்ள நீங்க, புடவையை மாத்தி நைட்டி போட்டு ரெடியா இருங்க.''

''ஓ.கே.'' சரிதா எழுந்து நைட்டியை எடுப்பதற்காக, பீரோவை திறந்து மூடினாள்.

அதே சமயம் பாவனா, சமையலறையில் ஃப்ரிட்ஜை திறந்து காய்கறிகளை எடுத்தபின் மூடினாள்.

சமையல்காரம்மாவிடம் காய்கறி துறுவும் சாதனத்தைக் கேட்டு வாங்கி, காய்கறிகளை துறுவலாக சீவினாள். பழங்களையும் சீவலாக செய்து கொண்டாள். கிண்ணங்களில் காய்கறிக் கலவை, பழச்சீவல் கலவை, ஐஸ் கட்டிகள் இவற்றை எடுத்துக் கொண்டு சரிதாவின் அறைக்குப் போனாள். அங்கே மிக நவீனமான, விலையுயர்ந்த, அழகான நைட்டி அணிந்திருந்த சரிதாவைப் புகழ்ந்து பேசினாள்.

''எந்த ட்ரெஸ் போட்டாலும் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு...'' என்று கூறியபடியே சரிதாவின் கழுத்துக்குக் கீழ்ப்பகுதியைத் தொட்டாள்.

''இதோ இந்த நிறம்தான் உங்களோட இயற்கையான, நீங்க பிறந்தப்ப இருந்த நிறம். உங்க முகத்தையும் இந்த நிறத்துக்குக் கொண்டு வரேன் பாருங்க. வெய்யில் படாத இடத்துல உள்ள நிறம் மாதிரி உங்க முகத்தையும், கைகள் ரெண்டையும் மாத்திக்காட்டறேன்...''

''நிஜம்மாவா?'' வியப்பில், விழிகள் விரிய கேட்டாள் சரிதா.

''சத்தியமா...'' சிரித்துக் கொண்டே ஃபேஷியலின் ஆரம்பக்கட்ட வேலையான, முகத்தை சுத்தப்படுத்தும் செயலை ஆரம்பித்தாள் பாவனா.

முகத்தை சுத்தப்படுத்தும் க்ரீமை, பஞ்சினால் எடுத்து சரிதாவின் முகத்தை மென்மையாக அழுத்தி துடைத்தாள். அதன் பின்னர் 'ஸ்க்ரப்' எனப்படும் க்ரீமை எடுத்து, முகம் முழுவதும் தடவி, தன் விரல்களால் சுற்றி, சுற்றி மேற்புறமாகத் தேய்த்தாள். மறுபடியும் பஞ்சினால் முகத்தைத் துடைத்துவிட்டு வெள்ளரிக்காய், தக்காளி, பழங்கள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சரிதாவின் முகம் முழுவதும் தேவையான அழுத்தம் கொடுத்து தேய்த்துவிட்டாள். அவள் தேய்த்துவிடும் சுகத்தில் கண்மூடி லயித்து அனுபவித்தாள் சரிதா.

சரிதா அவ்விதம் லயித்திருக்கும் நேரங்களில், அவளிடம் தன் மனதை திறந்து பேசுவது போல் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பாவனா, சரிதாவின் மனக்கதவைத் திறக்க முற்படுவாள். தன் சொந்தக் கதைகளை வெளிப்படையாகக் கூறுவது போல் நாடகமாடி சரிதாவின் மனதில் தன்னைப் பற்றிய நம்பிக்கை விதையை விதைத்தாள்.

அந்த விதை, வேரூன்றி வளரும் வகையில் தனது பேச்சையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் சரிதாவின் மனதை ஊடுருவது போல பேசும் பாவனா, அன்றும் அது போல பேச ஆரம்பித்தாள்.

''மேடம்... அபிலாஷ் ஸார் மேல உயிரையே வச்சிருக்கேன்னு அடிக்கடி சொல்லுவீங்களே... அவரும் அப்பிடித்தானே?!''

''நிச்சயமா அப்பிடித்தான். அவரும் என் மேல உயிரையே வச்சிருக்கார். அது சரி... உனக்கென்ன அதில சந்தேகம்? அவரும் அப்பிடித்தானேன்னு ரொம்ப சாதாரணமா கேட்டுட்ட?''

''அதுக்கு சரியான காரணம் இருக்கு மேடம். ஆம்பளைங்க கொஞ்சம் 'அப்பிடி' 'இப்பிடி' இருப்பாங்கள்ல்ல? மனைவிகிட்ட 'உன் மேல உயிரையே வச்சிருக்கேன்?.. நீதான் என் உயிர். நீ மட்டுமே உன் உயிர்'ன்னு டையலாக் விடுவாங்க. இந்த டையலக்கை வேற எவ எவகிட்டயெல்லாம் விடுவாங்களோ....? பெரும்பாலான ஆண்கள் அப்பிடிப்பட்டவங்கதான். வீட்ல ராமனா நடிப்பாங்க, வெளியில கிருஷ்ணனா லீலை பண்ணுவாங்க. அந்த லீலா வினோதங்களை மறைச்சு, பூசி மெழுகறதுக்குதான் ரெடிமேடான வசனங்களை அள்ளி வீசுவாங்க. இந்த மனைவிமார்கள் பாவம்! 'ஆகா... என் புருஷனைப் போல யோக்யசிகாமணி இந்த உலகத்துலயே வேற யாரும் கிடையாது'ன்னு பெருமிதத்துல மிதப்பாங்க. ஏகபத்தினி விரதன்னு மனைவி நம்பிக்கிட்டிருக்க, அவனோ... ஏகப்பட்ட பேருக்கு விரதனா... சுகபோகமா இருப்பான். புருஷனோட மறுபக்கம் தெரியாம, ஏமாளியா... இளிச்ச வாய்களா எத்தனையோ பெண்கள் இருக்காங்க... ப்யூட்டி பார்லருக்கு வர்ற எத்தனை பெண்கள் தங்களோட கணவரைப்பத்தி என்கிட்ட புலம்பி இருக்காங்க தெரியுமா?

'பலநாள் திருடன். ஒருநாள் அகப்படுவான்'னு சொல்லுவாங்க. திடீர்னு புருஷனோட தப்புக்களைப்பத்தி... சரியா புரிஞ்சுக்கும்போதுதான்  அந்தப் பொண்ணுகளுக்கு இத்தனை நாளா புருஷன் தங்களை ஏமாத்தினது தெரியவரும். அதுக்குள்ள பிள்ளை, குட்டிகள்னு குடும்பம் வளர்ந்திருக்கும். அதனால அவனைத் தட்டிக் கேட்கவும் முடியாம எட்டிப் போகவும் முடியாம 'இது என் தலைவிதி'ன்னு வாழற பொண்ணுங்கதான் இப்ப நிறைய. கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் பண்ணி... பலன் இல்லாம கண்ணீர் வடிக்கற பெண்களை சந்திக்கற அனுபவம் எனக்கு பார்லர்ல கிடைச்சிருக்கு...''

''வேற பெண்களோட கணவர் வேணும்ன்னா அப்பிடி நாடகமாடி இருக்கலாம், வேஷம் போடலாம். முகமூடியை மாட்டிக்கிட்டு மனைவியோட முகத்துக்கு முன்னால ஒண்ணு பேசி அவளோட முதுகுக்கு பின்னால வேற விதமா நடந்துக்கலாம். கண்ல பார்க்கற பொண்ணுகளோட கை கோர்த்து கொண்டாட்டம் போடலாம், தகாத உறவு கொண்டு தங்களோட மனைவியை ஏமாத்தலாம். ஆனா... என்னோட அபிலாஷ் அப்பிடிப்பட்டவர் இல்லை. அவருக்கு என்னைத் தவிர வேற ஒரு உலகம்ன்னு ஒண்ணு இருக்குன்னா... அது ம்யூஸிக்தான். சம்சார சந்தோஷத்துக்கு நான்... சங்கீத சாம்ராஜ்யத்துக்கு அவரோட இசை. இதைத் தவிர வேற எதுவுமே அவரோட கண்ணுக்கும் தெரியாது. கருத்துக்கும் தெரியாது. உண்மையிலேயே என்னோட அபிலாஷ்... உத்தமப் புருஷன்தான்...''

''அப்பிடின்னா... நூத்துல ஒருத்தர் உங்களோட அபிலாஷ் ஸார்...''

''இல்லை... இல்லை... ஆயிரத்துல ஒருத்தர்...''

''சரி மேடம்... லட்சத்துல ஒருத்தர்னே வச்சிக்கிடுவோம்... உங்க நம்பிக்கை அது. ஆனா... சில பேர், தடம் மாறி போறதுக்கு வாய்ப்புகளே இருக்காது. ஆனா... சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சாதகமா இருந்தும் மனசு தடம் புரளாம இருக்கறதுதான் பெரிய விஷயம். வேற பெண்களை நாடிப் போறதுக்கு சினிமா சம்பந்தப்பட்ட எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவர் ஒழுக்க சீலரா வாழறார்ங்கற பட்சத்துல, உண்மையிலேயே அபிலாஷ் ஸார் நல்லவர்தான். ஆனா... மேனகாங்கற கந்தர்வப் பொண்ணு, மௌன தவத்துல மூழ்கி இருந்த விசுவாமித்திர முனிவரையே அவளோட மோக வலையில் விழ வச்ச புராணக் கதை இருக்கு. அந்த மாதிரி எந்தப் பெண்ணும் அபிலாஷ் ஸாரோட மனசைக் கலைக்காம இருப்பாங்களா?!... பஞ்சும் நெருப்பும் பத்திக்கறதுக்கு ஒரே ஒரு நிமிஷம் போதும் மேடம்...'' என்று பேசி, பற்ற வைத்த பாவனா தொடர்ந்தாள்.

''ஆண்களோட புத்தி... அவசரப்புத்தி, சட்ன்னு சபலப்படற புத்தி.''

சரிதாவின் முகத்திற்கு நைஸாக மஸாஜ் செய்து அவளை அந்த சுகத்தில் திளைக்கச் செய்தபடி, அவளது மனதைக் கலைத்தாள் பாவனா. தூபம் போடுவதை மேலும் தொடர்ந்தாள்.

''அபிலாஷ் ஸார்... திரைப்பட விழாக்கள், திரைப்பட பூஜைகள் இப்பிடி பல பொது இடங்களுக்கு போறவர். அங்கே சினிமா நடிகைகள், மீடியா பெண்கள் இப்பிடி... பலதரப்பட்ட பெண்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அவரோட ரிக்கார்டிங்ல பாடறதுக்கு பொண்ணுக வர்றாங்க...? பத்திரிகையில இருந்தும், டி.வி. சேனல்கள்ல்ல இருந்தும் பேட்டி எடுக்க பெரும்பாலும் பெண்கள்தானே வர்றாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸாரை, லதா ரஜினிகாந்த் அவங்களோட காலேஜ்க்காக பேட்டி எடுக்க போனப்பதான் அங்க ரெண்டு பேரும் காதல் லயப்பட்டாங்க. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.''

பாவனா பேசப் பேச... சரிதாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அமிலம் சுரந்தது. இதயம் படபடப்பாக... அவளும் படபடவென பேசினாள்.

''சூப்பர் ஸ்டாருக்கு அப்போ கல்யாணம் ஆகலை. அதனால காதலிச்சார். கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதில தப்பு இல்லையே...?''

''தப்புன்னு நான் சொன்னேனா? கல்யாணம் ஆனவங்கன்னா... சபலப்பட மாட்டாங்களா? யாரையும் நம்ப முடியாது மேடம். இப்ப உள்ள காலம் அப்பிடி. முன்ன மாதிரி லேடீஸ் வீட்ல இருக்கறதில்லை. வெளியில... வேலைக்கு வர்றாங்க. பொருட்கள் விக்கற கடைகள், தையல் கடை, இப்பிடி ஏகப்பட்ட சுய தொழில் செய்யறாங்க. அவ்ளவு ஏன்? இப்போ... ஹோட்டல்ல இருக்கற கல்லாவுல கூட பெண்கள் உட்கார்ந்திருக்காங்களே. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா... பெண்கள் தடம் புரண்டு போறதுக்குரிய சூழ்நிலைகள்... இப்பிடி வெளியே போறதுனாலயும் ஏற்படுது. ஆண்களை மட்டுமே ஒட்டுமொத்தமா குறை சொல்ல முடியாது. சில பெண்களும் தப்பு பண்றாங்க. தப்பு பண்ற பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கும்போது நல்ல மனிதர்கள் கூட ஒழுக்கம் தவறிப் போயிடறாங்க. மனசை அலைபாய விடற பெண்களும் இதுக்குக் காரணம். தேடிப் போகாட்டாலும்... தானாகவே... வலிய ஒரு பெண்ணோட நட்பும், அவளோட புதிய அன்பும் ஆணை... தடுமாற வைக்கும். கல்யாணம் ஆன ஆண்கள்கூட இதுக்கு விதி விலக்கு இல்லை. சில பேர் இப்பிடிப்பட்ட நட்பை 'டைம் பாஸிங்' நட்பா எடுத்துக்கிட்டு விளையாட்டுத்தனமா விட்டுடுவாங்க. சில பேர் அந்த தகாத தொடர்பை தீவிரமா மதிச்சு, தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இதனால குடும்பத்துல குழப்பம் ஏற்பட்டு ரெண்டுங் கெட்டானா வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுடுது. சில ஆண்கள் எத்தனையோ பெண்கள் கூட பழக்கம் இருந்தாலும்.. மனைவிக்கு தங்களோட மனசுக்குள்ள ஒரு உயர்ந்த இடம் குடுத்துருப்பாங்க. இப்படிப்பட்ட ஆண்கள்கிட்ட பழகும் பெண்கள்ல்ல ஒருத்தி 'நீங்க உங்க மனைவியை விட்டுட்டு என்கிட்ட வந்துடுங்க'ன்னு சொன்னா... அந்த புதிய பெண்ணோட தொடர்பையே நிறுத்திக்குவாங்களே தவிர, தங்களோட மனைவியை விடத் தயாரா இருக்க மாட்டாங்க. பெண்களில் பல ரகம்! ஆண்களில் பலவிதம்! சில பெண்கள் ரொம்ப உஷார் மேடம்... தங்களோட கணவர்கூட எந்தப் பொண்ணும் பழகறதுக்குரிய வாய்ப்புகளை தவிர்த்துடுவாங்க. அதாவது... கணவர்கூட எந்தப் பெண்ணும் பழகவே அனுமதிக்காம, அதற்குரிய சந்தர்ப்பமே ஏற்படாம ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வச்சிருப்பாங்க. ஃப்ரெண்ட்ஸ், உறவுப் பெண்கள் இப்பிடி எந்தப் பெண்ணையுமே தங்கள் கணவர் பக்கம் நெருங்க விடாம ஜாக்கிரதையா இருந்துப்பாங்க...'' நீளமாக பேசிக் கொண்டிருந்த பாவனாவை இடைமறித்து பேசினாள் சரிதா.

''என்ன சொன்ன? ஃப்ரெண்ட்ஸா? அவங்களைக் கூடவா அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கற...?''

''பின்ன? அவங்களையும் சேர்த்துதான் சொல்றேன்...''

ஃபேஷியலில் முடிவுக் கட்டத்தில் போடப்படும் முகக்கவசப் பசையை சரிதாவின் முகத்தில் தடவியபடியே பதில் கூறிய பாவனா... மேலும் தொடர்ந்தாள்.

''முக்கியமா ஃப்ரெண்ட்ஸ்தான் மேடம்... நாளடைவில, இல்லற வாழ்க்கைக்கே போட்டியாளரா ஆகிடறாங்க. இந்த விஷயத்தை நான் கொஞ்சம் டீஸெண்ட்டா சொல்றேன். பச்சையா... கொச்சையா சொல்றதுன்னா சக்களத்திகளா ஆகிடறாங்க...''

இதைக் கேட்டு விருட்டென்று எழுந்தாள் சரிதா.

''மேடம்... 'ஃபேஸ் பேக்' இன்னும் காயலை மேடம். படுத்துக்கோங்க...'' மெதுவாக சரிதாவை மீண்டும் படுக்க வைத்தாள் பாவனா. கண்மூடி படுத்துக் கொண்ட சரிதாவின் கண்ணுக்குள் அபிலாஷ் மீது கொட்டிவிட்ட குழம்பை, கயல்விழி துடைத்துவிட்ட காட்சி தோன்றியது. அபிலாஷுடன் கயல்விழி சிரித்துப் பேசுவதும், அரட்டை அடிப்பதும் ஒரு திரைப்பட 'ஃப்ளாஷ் பேக்' போல தெரிந்தது.

'கயல்விழி நல்லவள்தான். ஆனா பாவனா சொல்ற மாதிரி வாய்ப்புகள் உருவானால், என் கணவர் அபிலாஷேரட மனசும் மாறிடுமோ? கயல்விழி எனக்குத்தானே தோழி?! என் கணவரோட அவளை ஏன் நான் பழக விடுகிறேன்? என் தலையில நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கறேனா?... என் உயிர்த்தோழி கயல்விழி நல்லவ. என் கணவரும் நல்லவர். ஆனா... சூழ்நிலைகள் இரண்டு பேரையும் மாத்திட்டா? என் உயிர் அபிலாஷ், மலர்விட்டு மலர் தாவிடுவாரா? என்னை மறந்துடுவாரா? அல்லது என் கூட வாழும் போதே இன்னொருத்தியையும் சேர்த்துக்குவாரா? ஐயோ கடவுளே... பாவனா சொல்றதையெல்லாம் கேட்கும்போது இப்பிடியெல்லாம் நடந்துடுமோன்னு பயம்மா இருக்கே...'

வழக்கமாக ஃபேஷியலின் முடிவில் தன்னை மறந்து, ஆழ்ந்து தூங்கிவிடும் சரிதா, அன்று குழப்பமான மனநிலையில் எண்ண அலைகளில் நீந்தியபடி தவித்தாள்.

'நான் மூட்டிய சிறு நெருப்பு, மேடத்தோட மனசுல பெருந்தீயாக கனன்று எரியுதே...' தூங்காமல் தவிக்கும் சரிதாவைப் சரிதாவைப் பார்த்து தனக்குள் நினைத்துக் கொண்டாள் பாவனா.

படிப்படியாக, அதன்பின் அங்கே வரும் ஒவ்வொரு முறையும், அழகுப் பராமரிப்பு கொடுக்கும் பொழுதெல்லாம் சந்தேகம் எனும் நஞ்சை சரிதாவின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்லோ பாய்ஸன்' போல ஏற்றினாள் பாவனா.

தன்னுடைய வார்த்தை ஜாலத்தாலும், அழகுக்கலைத் திறமை எனும் வசியத்தாலும் சரிதாவின் நிர்மலமான மனதை சந்தேகக்குணம் நிரம்பும் நிர்மூலமாக ஆக்கினாள். அவளது மனசாட்சி உறுத்தினாலும். சுதாகர் கொடுக்கும் பெரும் தொகையை எண்ணி, அவள் நடிப்பதற்கு ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே உருமாறி, மிக இயற்கையாக நடித்தாள். எறும்பு ஊற கல்லும் தேயும். தேய்ந்தது சரிதாவின் மனது. அடி மேல் அடி  அடித்தால் அம்மியும் நகரும். நகர்ந்தது சரிதாவின் மனது மட்டுமல்ல... தகர்ந்தது அவளது வாழ்வின் நம்பிக்கை எனும் அஸ்திவாரமும் கூட.


சதா சர்வ காலமும் 'பணம், பணம்' என்று பறக்கும் சுதாகர், நேர்மையற்ற வழிகளில் பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தான்.

குடும்பத்தினர்க்கு செய்ய வேண்டிய கடமைகளுக்காக பணத் தேவையில் இருந்த பாவனா, சுதாகர் காட்டிய நேர்மையற்ற வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். இருப்பினும் அவளது மனசாட்சி, முள்ளாகக் குத்தியது.

'இந்த ஒரு முறைதானே. இதன் மூலம் எனக்கு தேவையான பணம் கிடைச்சுடும். அதுக்கப்புறம் மிக நேர்மையாக, உண்மையாக ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது கடை ஆரம்பிச்சு நல்லபடியாக சம்பாதிச்சு, சேர்த்து வச்சு எதிர்காலத்தை வளமானதா உருவாக்கிக்கணும்.' முள்ளாக உறுத்திய மனசாட்சியிடம் பேசிக் கொண்டாள் பாவனா. அன்று அவளை சந்திப்பதாக சுதாகர் கூறி இருந்தான். எனவே அவனுக்காக ஒரு ஐஸ்க்ரீம் கடையில் காத்திருந்தாள் பாவனா. சுதாகர் வந்தான். இருவரும் பேச ஆரம்பித்தனர்.

''என்ன விஷயம்? சரிதா வீட்டுக்கு அடிக்கடி போறதா சொல்றியே? ஏதாவது பலன் இருக்கா?..''

''உனக்கு எப்பவும், எதிலயும் நம்பிக்கையே கிடையாது. என்னமோ 'உடுப்பி ஹோட்டல் போய் சாப்பிட்டியா? எப்பிடி இருந்துச்சு'ன்னு கேக்கற மாதிரியில்ல கேக்கற? ஒரு பெண்ணான நான் இன்னொரு பெண்ணோட வீட்டுக்குள்ள நுழைஞ்சு, அவளோட மனசை மட்டுமில்ல... அவளோட வாழ்க்கையையே கெடுக்கற மாதிரி நாடகமாடறது என்ன லேஸான விஷயமா?..''

''லேஸான விஷயமோ... கஷ்டமான விஷயமோ... அதுக்காக நான் உனக்கு குடுக்கற பணம்... குடுக்கப் போற பணம்... கொஞ்ச நஞ்சமில்லை... அது... தெரியுமில்ல?!''

''எப்பப் பார்த்தாலும் பணம் பணம்ன்னு அதைப் பத்தியே பேசி என்னோட வாயை மூடிடலாம்ன்னு நீ நினைக்கற. 'நீ செய்றது பெரிய தப்பு... கொடிய பாவம்'ன்னு என்னோட மனசாட்சி இடிச்சுக் காட்டுதே... அந்த மனசாட்சியை உன்னால மூட முடியுமா?''

''சரி... சரி... வேலை செஞ்ச விஷயத்தைப் பத்தி பேசு...''

''சரிதா மேடம்க்கு கயல்விழின்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்காங்க...''

''என்ன சொன்ன? கயல்விழியா?!''

''ஆமா...''

''அந்த கயல்விழி ஒரு டான்ஸரா? அதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்ல ஆடற டான்ஸரா?''

''ஆமா. உனக்கு அவளைத் தெரியுமா? அதாவது...''

''நீ நினைக்கற மாதிரி அவ ஒரு இரவுப் பறவை இல்லை. இரவு நேரத்துல டான்ஸ் மட்டும் ஆடற மயில்...''

''பின்ன எப்பிடி அவளைத் தெரிஞ்சு வச்சிருக்க?''

''அவளோட டான்ஸை 'வெண்ணிலா ஹோட்டல்'ல பார்த்தேன். பெரிய பெரிய புள்ளிகள், எல்லாம் அவளோட அழகையும் உடம்பையும் விலை பேசினாங்க.  எனக்கும் பெரிய அமௌண்ட் தர்றதா சொன்னாங்க. அதனால அவகிட்ட போய் கேட்டுப் பார்த்தேன். முகத்தில அடிக்கற மாதிரி கோபமா பேசிட்டா. அந்த கயல்விழி, இந்த சரிதாவுக்கு ஃப்ரெண்டா? அப்பிடின்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுடலாம்ன்னு சொல்லு...''

''ரெண்டு மாங்காயோ? மூணு மாங்காயோ? உன்னோட நாடகத்தை நிறைவேத்தி வைக்கறதுக்கு கயல்விழி எனக்கு ஒரு துருப்பு சீட்டா கிடைச்சிருக்கா. மெஸ்மரிஸம் பண்ற மாதிரி சரிதாகிட்ட பேசி... அபிலாஷ் மேல சந்தேகம் வர்றமாதிரி பத்த வச்சது மட்டுமில்ல... கயல்விழியையும் மறைமுகமா சம்பந்தப்படுத்தி பேசி இருக்கேன். சரிதா மேடம் அவுங்க புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்காங்க. அதைவிட பாசமும், காதலும் நிறையவே இருக்கு. நான் விதைச்ச சந்தேக விதை, துளிர்விடுதான்னு பார்க்கணும். ஆனா... இப்பிடியெல்லாம் என்னை வச்சு சரிதா மேடமோட வாழ்க்கையை கெடுக்கறதுனால உனக்கு என்ன பலன்?''

''அதான் சொன்னேனே... நான் காதலிச்ச ஒருத்தி, எனக்கு கிடைக்காம வேற எவனுக்கோ கிடைச்சுட்ட கோபத்தை இப்பிடி பழி வாங்கி, தீர்த்துக்கறேன்.''

சரிதாவை சந்தித்ததையோ... அவளை மிரட்டி பணம் கேட்டதையோ பாவனாவிடம் கூறாமல் மறைத்தான் சுதாகர்.

அவனிடம் தொடர்ந்து பேசினாள் பாவனா.

''இது தப்பு இல்லையா? நீ நல்லவனா இருந்தா... அவங்க பண்ணினது துரோகம்னு சொல்லலாம். தான் காதலிச்ச ஒருத்தன் மோசமானவன் தெரிஞ்சப்புறம் கண்ணை மூடிக்கிட்டு யாராவது கிணத்துல விழுவாங்களா? தப்பான உன்கிட்ட இருந்து தப்பிச்சு... வேற ஒரு நல்லவர் கூட நல்லதொரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டாங்க சரிதா மேடம். இதுக்கு ஏன் நீ... பழி வாங்கணும்?''

''அவ என்னை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா. நான் செய்யற தொழில்கள் மோசமான தொழில்கள்தான். ஆனா... நான் மோசமானவன் இல்லை...''

அவனைப் பேசவிடாமல் குறுக்கிட்டுப் பேசினாள் பாவனா.

''என்ன?! நீ செய்றதெல்லாம் மோசமான தொழில்கள். ஆனா... நீ மோசமானவன் இல்லையா? இந்த வருஷத்தோட சிறந்த ஜோக் இதுவாத்தான் இருக்கும்.''

''என்னைப் பேச விடாம நீ ஏன் நடுவுல பேசற? சொல்றத முழுசா கேளு. கேட்டுட்டுப் பேசு தங்களோட வறுமைக்காகவோ... ஊதாரித்தனமா செலவு பண்றதுக்கோ... என் மூலம் இரவுப் பறவையா உழைக்க வர்ற பெண்கள் யாரையுமே நான் கெட்ட எண்ணத்துல தொட்டதில்லை. அழகான பெண்களை பணம் சம்பாதிக்கற இரவு நேர வேலைக்கு கூப்பிடுவேன். வற்புறுத்துவேன். என்னோட வழிக்கு வரவைப்பேன். ஆனா... என் மனசுல நான் இடம் குடுத்தது சரிதாவுக்கு மட்டும்தான். அவளைத் தவிர வேற யாரையும் நான் இந்த மனசுல நினைச்சதும் இல்லை. இந்த கையால தொட்டதும் இல்லை. கணிசமா ஒரு தொகை சேர்ந்தப்புறம் இந்த தொழிலை விட்டுட்டு அவகூட சந்தோஷமா வாழணும்னு நான் நினைச்சிருந்த நேரத்துல எனக்கு அறிமுகமான பொண்ணு ஒருத்தி சரிதாகிட்ட என்னோட மறுபக்கத்தைப் பத்தி சொல்லிட்டா.  அந்தப் பொண்ணு ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். அவளுக்கும், சரிதாவுக்கும் எப்பிடி பழக்கம்னு எனக்குத் தெரியாது. எங்க காதல் படகை கவிழ்த்தது அந்தப் பொண்ணுதான். விஷயம் அம்பலமானதும் சரிதா, என்கிட்ட வந்து சண்டை போட்டா. என்னை விட்டு விலகிட்டா. என்னை தலை முழுகிட்டா. வேற ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிட்டா. என்னோட உண்மையான காதலை பொய்யானதுன்னு சொல்லி... என்னை அடியோட வெறுத்துட்டு, அந்த அபிலாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா. இப்ப சொல்லு... நான் பழி வாங்கறது தப்பா?''

''தப்புதான். கடந்த காலத்துல நடந்ததை மறுபடியும் இழுத்து, ஏன் கஷ்டப்படுத்தணும்? ஒருத்தரைப்பத்தி... அதுவும் தான் காதலிச்ச ஒருத்தனைப்பத்தி 'அவன் சரியானவன் இல்லை'ன்னு தெரிஞ்சபின் ஒரு பொண்ணு என்ன முடிவு எடுப்பாளோ அதைத்தான் சரிதா மேடமும் எடுத்திருக்காங்க. இது வாழ்க்கைப் பிரச்னை. போனா போயிட்டு போகுதுன்னு விடக் கூடிய விஷயம் இல்லை. 'தான் காதலிச்ச பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா வாழணும்'ன்னு நினைக்கறவனோட காதல்தான் உண்மையான காதல்! ஆனா... நீ...? காதலிச்சவளை பழி வாங்கி அவளோட வாழ்வை அழிக்கப் பார்க்கறியே?''

''நான் படற வேதனையை அவளும் படணும். நல்லவங்க மட்டும்தான் காதலிக்கணும்ன்னா உலகத்துல காதலே இருக்காது... ஊர், உலகத்துல இருக்கற அத்தனை காதலர்களும் நல்லவங்களா?''

''காதலுக்கு நீ சொல்ற இலக்கணம் பைத்தியக்காரத்தனமா இருக்கு. ஒவ்வொரு பொண்ணும் தான் காதலிக்கறவன், நல்லவன்னு நம்பித்தான் காதலிக்கறா. கல்யாணம்ங்கற சம்பிராதயத்துல இணையறதுக்கு முன்னால... காதலனோட முகமூடி கிழிஞ்சு... அவனோட நிஜ முகம் தெரிஞ்சுட்டா... 'நல்லவேளை... தப்பிச்சுட்டோம்'ன்னு தன் வழியில போயிடுவா. இது இயல்பான எச்சரிக்கை உணர்வு. தாலி கழுத்துல விழுந்தப்புறம் அவனோட அயோக்கியத்தனம் தெரிஞ்சுகிட்டா... 'பாழுங் கிணத்துல விழுந்தாச்சு, இனி கரை சேர என்ன வழின்னு யோசிச்சு, வாழ்க்கை முழுசும் போராடுவா. வாழ்க்கைல போராட்டம்... கண்கள்ல்ல நீரோட்டம்னு அவளோட வாழ்க்கையே இருண்டு போயிடும். அந்தக் காலத்துலதான் புருஷன்காரன் காலடியில விழுந்து கிடந்தாங்க பொண்ணுங்க. ஆனா... இப்போ... அவன் கட்டின தாலியைக் கழற்றி வீசி எறிஞ்சுட்டு... வீட்டு வாசப்படியை தாண்டி... கோர்ட் வாசல்ல போய் நிக்கறாங்க. நீ என்னடான்னா... கொஞ்ச நாள் காதலிச்ச பொண்ணு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு கிடந்து துள்ளற. பழிக்குப் பழி வாங்கணும்ங்கற. அவங்க எடுத்த முடிவு நியாயமானதுதான். ப்ளீஸ்... இதோட உன் பழிவாங்கற படலத்தை நிறுத்திக்கோயேன். என்னோட பணத் தேவையைக் கூட பொருட்படுத்தாம கேக்கறேன்... பாவம் அந்த சரிதா மேடம்... கணவர் அபிலாஷ் மேல தன் உயிரையே வச்சிருக்காங்க. மேக்கப்பை கலைக்கற மாதிரி அவங்களோட மனசைக் கலைக்கறது எனக்கு வேதனையா இருக்கு...''

''எதுக்காக வேதனை? வேடிக்கையா நினைச்சு... என்னோட டைரக்ஷன்ல நடிச்சு முடிக்கற வேலையைப் பாரு. என்னோட திட்டத்தை படிப்படியா செயல்படுத்து. உனக்கு தேவையான பணத்தை நான் கொட்டிக் குடுக்கறேன்...''

''என்னோட பலவீனமான நிலைமையை பயன்படுத்தி... செய்யக் கூடாததை செய்ய சொல்ற. என்னால முழு மனசா இதை செய்யவும் முடியலை. என்னோட இக்கட்டான நிலைமையில செய்யாம இருக்கவும் முடியலை. இருதலைக் கொள்ளி எறும்பு போல துடிக்கிறேன்... பாவத்துக்கு மேல பாவங்களை செஞ்சுக்கிட்டே போறேன். அந்தக் கடவுள் எனக்கு என்ன முடிவை வச்சிருக்காரோ தெரியலை...''

''புலம்பாத பாவனா. உனக்கு இந்த ப்ராஜக்ட் முடிஞ்சதும் கணிசமா ஒரு தொகை குடுப்பேன்ல... அதை வச்சு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுடு...''

''முற்றுப்புள்ளி வச்சுடலாம்னு நான் நினைக்கற ஒவ்வொரு தடவையும் அது தொடர்கதையா தொடர்ந்துகிட்டிருக்கு. நீ என்னை ஏமாத்திட்ட. என்னோட பணம் முழுசையும் என்கிட்ட குடுத்திருந்தா... இந்த பாவப்பட்ட வேலையை பணத்துக்காக நான் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது.''

''என் மேல பழி போடறியா? என்னால நீ ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சியே... அந்தப் பணத்தை சேர்த்து வச்சு ஸெட்டில் ஆகி இருக்கலாம்ல?...''

''சாத்தான் வேதம் ஓதற கதைதான் போ. சம்பாதிக்ற பணத்துல சரிபாதிக்கு மேல நீ தின்னுட்ட. பணக்கஷ்டம்ன்னா என்னன்னு உனக்கு தெரியுமா? கஷ்டப்படாம வர்ற காசு... இஷ்டத்துக்கு அள்ளி வீசுவ... அது சரி... என்னவோ சிங்கப்பூர்ல ஸெட்டில் ஆகப் போறதா சொன்னியே... அது என்ன ஆச்சு?... அதுக்கு தேவையான பணமும், எனக்கு குடுக்கறதா சொன்ன பணமும் பெரிய தொகையா இருக்கே... அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்க?''

''அதெல்லாம் ரெடியா இருக்கு. ப்ளாக் மெயில், பெண்களை ஏமாத்தி விலை பேசறது, இப்பிடி பல வழிகளில்ல சம்பாதிச்சு பணத்தை ஒதுக்கி வச்சிருக்கேன். பணத்தை பதுக்கி வச்சிருக்கற விஷயத்தை என்னோட கூட்டாளி வெங்கட்கிட்ட கூட நான் சொல்லலை சொன்ன... சிங்கப்பூர் போறதுக்குள்ள பணம் பணம்னு அரிச்சு எடுத்துருவான்.''

''சரிதாவை பழி வாங்கற வேலை முடிஞ்சுதுன்னா... என்னோட வாழ்க்கை, சிங்கப்பூர்ல ஆரம்பமாகிடும்...''

''பழி வாங்கறது... பழி வாங்கறதுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை பேசறியே... உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்க?''

''சரிதா, அவ புருஷன் அபிலாஷ் மேல சந்தேகப்பட்டு சிறுக சிறுக வேதனைப் படணும். பழம் நழுவி பாலுக்குள்ள விழுந்தாப்ல அந்த கயல்விழியும் என்னோட திரைக்கதையில முக்கியமான கதாபாத்திரமாயிட்டா. அதனால உன் மூலமா நான் நடத்தற இந்த நாடகம் எனக்கு டபுள் வெற்றி. அபிலாஷ்- கயல்விழி இவங்க இரண்டு பேரையும் சந்தேகப்பட்டு சரிதா சிறுக சிறுக வேதனைப் படணும். சரிதா மனசுல ஏற்படற சந்தேகத்துனால அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்னை ஏற்பட்டு அவங்க பிரியணும். என்னை 'வேண்டாம்'ன்னு ஒதுக்கிட்டு, என்னோட கண் முன்னாலயே வேற ஒரு பெரிய செல்வந்தனான அந்த அபிலாஷ்கூட வாழற அவளோட சம்சார சாம்ராஜ்யம் சரிஞ்சு போகணும். புருஷனை பிரிஞ்சு... சரிதா கதறி அழணும். 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'ங்கற அவளோட இறுமாப்புக்கு இறுதிச் சடங்கு நடக்கணும். ஓட்டை விழுந்த படகு எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும்? தாம்பத்ய வாழ்க்கையில சந்தேகம்ங்கற விஷ விதையை விதைச்சுட்டா... அவளோட மகிழ்ச்சியான இல்லறம்ங்கற பயிர் நாசமாயிடும். அப்பிடி நாசமாகறதுதான் என்னோட குறிக்கோள். குறி பார்த்து நான் வீசற அம்பு, அவளோட அன்பான வாழ்க்கையை குழி தோண்டி புதைக்கும். அந்த அம்பு நீ... அதை வீசறவன் நான்...''

''பணத்துக்காக நீ சொன்னதையெல்லாம் கேட்டு... உன்னோட நாடகத்துல நான் நடிச்சாலும் என்னோட மனசாட்சி ஒரு முள்ளா நெஞ்சுல குத்திக்கிட்டேதான் இருக்கு...''

''முள்ளும் மலரும். இந்த 'டீல்' முடிஞ்சு உன்னோட கைக்கு பணம் வந்து சேரும்போது இந்த முள் குத்தினது... மனசாட்சி உறுத்தினது இதெல்லாம் மறந்து போயிடும். பணம் குடுக்கற நிம்மதியையும் சந்தோஷத்தையும் வேற எது குடுத்துடும்?...''

''உன்னோட தத்துபித்து தத்துவத்தை கேட்டு கேட்டு எனக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கு. இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது...''

''சரி சரி. இந்தா... இதில பத்தாயிரம் ரூபா இருக்கு. உன்னோட வேலையில கவனமா இருந்து கச்சிதமா வேலையை முடி. முடிஞ்ச கையோட பேசினபடி காசை வாங்கிக்கோ...''

நீண்ட பெருமூச்சு விட்டபடி, சுதாகர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் பாவனா.


சரிதாவின் வீட்டிற்கு சென்றாள் கயல்விழி. கயல்விழியைப் பார்த்த சரிதாவின் முகத்தில் வழக்கம் போல தென்படும் மகிழ்ச்சி இல்லை.

'என்ன ஆச்சு சரிதாவுக்கு?' என்ற நினைத்தபடியே உள்ளே நுழைந்தாள் கயல்விழி.

'ஹாய், பூய்' என்று கூவி அழைத்து கட்டிப்பிடித்துக் கொள்ளும் சரிதா, அன்று சற்று எட்டியே நின்றாள்.

''என்ன இது? ஃபோன் கூட பண்ணாம வந்திருக்க?''

இப்படி ஒரு கேள்வியை சரிதாவிடமிருந்து கயல்விழி எதிர்பார்க்கவில்லை.

அவளது முகம் வாடியது. அப்போது மாடி அறையில் இருந்து அபிலாஷ் இறங்கி வந்தான்.

''அட... கயல்விழி... ஸர்ப்ரைஸ் விஸிட்டா இருக்கே?'' அபிலாஷ், சிரித்த முகத்துடன் கேட்டான்.

''என்ன அபிலாஷ்... நீங்களும் வீட்லதான் இருக்கீங்களா? நல்ல வேளை இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்கீங்க. ஜாலியா பேசிக்கிட்டிருக்கலாம். மேடம் சரிதாதான் கொஞ்சம் 'மூட்' சரி இல்லாதது மாதிரி தெரியுது...'' பேசியபடியே சரிதாவின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினாள் கயல்விழி.

''சரிதா... 'மூட்' அவுட்டா? ச்சான்ஸே இல்லை... இவ்ளவு நேரம் ஜாலியாதானே பேசிக்கிட்டிருந்தா?''

''உங்க கூட பேசறதுன்னா ஜாலியாத்தான் இருக்கும்...''

''சரி... ஏன் நின்னுக்கிட்டே இருக்க? உட்காரு... உன் கூடயும் ஜாலியா அரட்டை அடிக்கறேன்...''

கயல்விழி உட்கார்ந்தாள்.

''அப்புறம்? டான்ஸ் ப்ரோக்ரம் எல்லாம் எப்பிடி போய்க்கிட்டிருக்கு? டான்ஸை பார்த்து மயங்கிப் போற மன்மத ராசாக்கள் பண்ற ஜொள்ளாட்டமெல்லாம் தொடர்ந்து நடக்குதா?''

''அதெல்லாம் வாடிக்கையா நடக்கற வேடிக்கை... என்னோட டான்ஸையா ரஸிக்கறாங்க? என்னைத்தானே ரஸிக்கறாங்க...''

''உன்னைப் போல அழகான பொண்ணு நாலு பேர் பார்க்கற பொது இடத்துல ஆடும்போது ஏற்படற சங்கடங்கள் இயல்பானது...''

அபிலாஷ் கூறிய 'உன்னைப் போல அழகான பொண்ணு' என்கிற வார்த்தை, சரிதாவின் மனதை சுட்டது. 'உங்க கூட பேசினா ஜாலியாத்தான் இருக்கும்' என்று அபிலாஷிடம் கயல்விழி கூறியதும் அவளுக்குக் கடுப்படித்தது.

'பாவனா சொன்னது சரிதானோ?!  இவர் என்னடான்னா கயல்விழியை அழகுங்கறார். அவ என்னடான்னா அபிலாஷ் கூட பேசினா ஜாலியா இருக்கும்ங்கறா... நானே இடம் குடுத்துட்டு... இப்ப... தடம் புரண்டு போயிடுமோன்னு பயப்படறேனோ... '

''சரிதா... என்ன மௌன விரதமா?'' கயல்விழி சரிதாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

'விரதமா? விரோதமா? எனக்கே புரியலியே' மனதிற்குள் குழம்பிய சரிதா, நினைவுகளை ஒதுக்கிவிட்டு பேச ஆரம்பித்தாள்.

''திடீர்னு அம்மா... அப்பாவோட நினைப்பு வந்திருச்சு.''

''அடடே... ஸாரி சரித்...''

''சச்ச... ஸாரியெல்லாம் எதுக்கு? என்னோட இந்த கவலை புதுசா என்ன?''

''அடிக்கடி உன்னோட அம்மா, அப்பா ஞாபகம் வந்து நீ வருத்தப்படறதும் ஸ்ட்ரெஸ் ஆகறதும் எனக்குத் தெரியாதா? நீ சந்தோஷமா வாழறதைப் பார்க்க, அவங்களுக்கு குடுத்து வைக்கலை. அவங்களை நினைச்சு நீ இப்பிடி கஷ்டப்படறதை விட... நீ சந்தோஷமா இருந்தா தெய்வமாகிட்ட அவங்க ஆத்மா சாந்தி அடையும்.''

தான் கூறிய சமாளிப்பான பொய்யை உண்மை என நம்பி.. வெகுளித்தனமாக தனக்கு ஆறுதல் கூறும் கயல்விழியைப் பார்க்க சரிதாவிற்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. அவளை சமாதானப்படுத்தும் விதமாக சரிதா பேசினாள்.

''உன்னோட ஆறுதல் வார்த்தைகள் எனக்கு நிம்மதியைக் குடுக்குது. வீடு தேடி வந்திருக்கற உன்னை சரியா கவனிக்க கூட முடியாத மனநிலை...''

''யப்பாடா... இப்பத்தான் என்னோட பழைய சரிதாவைப் பார்க்க முடியுது. நீ இப்பிடி 'மூட் அவுட்' ஆகி நான் பார்த்ததே இல்லை. அதனால... என்னமோ... ஏதோன்னு பதறிப் போயிட்டேன்...''

அப்போது அபிலாஷ் குறுக்கிட்டான்.

''நான் ரெக்கார்டிங் கிளம்பணும். சரிதா... நான் கிளம்பறேன்மா...'' என்றவன், கயல்விழியிடம் ''கயல்விழி... உன்னை கொண்டு போய் விட்டுடறேன்... கிளம்பு...''

அப்போது அவசர அவசரமாக, ஒருவித பதைபதைப்புடன் சரிதா கூறினாள். ''வே... வேண்டாங்க. கயல்விழி இங்கே இருக்கட்டும். அவ இன்னும் கொஞ்ச நேரம் என் கூட இருந்துட்டு போகட்டும்.''

''ஓ.கே. கயல்விழி உன் கூட இருந்தா உனக்கு மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். நான் புறப்படறேன்.''

கயல்விழியிடமும், சரிதாவிடமும் விடைபெற்று கிளம்பினான் அபிலாஷ்.


அடிக்கடி சரிதாவின் வீட்டிற்கு  வந்து, அவளுக்கு அழகுப் பராமரிப்பு  செய்வது மூலமாக சரிதாவின் மனதில் சந்தேகத் தீயை ஊதி... ஊதி... பெருக்கினாள் பாவனா. அந்தத் தீ... பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டது சரிதாவின் இதயத்தில்.

அபிலாஷ் யாருடன் பேசினாலும் அவளுக்கு சந்தேகம் தோன்றியது. 'இப்பிடி இருக்குமோ.... அப்பிடி இருக்குமோ' என்று யோசித்தாள். தெளிந்த நீரோடை போலிருந்த அவளது மனநிலை, கலங்கிய குட்டையாகிப் போனது.

எந்த நேரமும் இதைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்றாள். பாவனா வீசிய தூண்டிலில் மாட்டிக் கொண்ட மீனாய் சிக்கிக் கொண்டாள் சரிதா. தேவையற்ற சந்தேகப் புயல் வீசிக் கொண்டிருந்த சரிதாவின் கவனத்தைக் கலைத்தது அவளது மொபைலில் ஒலித்த அபிலாஷின் இசை அமைப்பில் உருவாகியிருந்த பாடல்.

மொபைலை எடுத்து சரிதாவிடம் பேசினான் அபிலாஷ்.

''ஹாய் சரித்... டார்லிங்... நான் ஸ்டூடியோவுல இருந்து கிளம்பிட்டேன். இதோ வந்துடறேன்...''

''சரிங்க...''

''என்ன? தூக்கக்கலக்கமா?...''

''இல்லையே?..''

''சரிம்மா. நான் வந்துடறேன்.''

''சரிங்க'' என்ற சரிதா மொபைலின் வாயை அடைத்தாள்.


அபிலாஷ், ஸ்டுடியோவில் இருந்து காரில் கிளம்பினான். அப்போது அவனது மொபைல் ஒலித்தது. எண்களைப் பார்த்தவன் சற்று பரபரப்பானான். திரைப்படத் தயாரிப்பாளர் பழனிவேலின் மொபைல் எண்கள் அவை.

தயாரிப்பாளர் பழனிவேல்தான் முதன் முதலாக அபிலாஷிற்கு இசை அமைப்பு வாய்ப்பைக் கொடுத்தவர். அவரது தயாரிப்பில் வெளி வந்த படத்தில்தான் அவனது பாடல்கள் 'சூப்பர் டூப்பர்' ஹிட்டாகி, அபிலாஷின் திறமையை வெளியே தெரிய வைத்தது.

எனவே, பழனிவேலின் மீது மிகுந்த மிரியாதை வைத்திருந்தான் அபிலாஷ். காரை ஓட்டிக் கொண்டிருந்த அபிலாஷ், ஓர் ஓரமாக நிறுத்தினான். பேச ஆரம்பித்தான்.

''வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா ஸார்?''

''நான் நல்லா இருக்கேன் அபிலாஷ் ஸார். நீங்க எப்பிடி இருக்கீங்க?''

''என்ன ஸார் இது?! நீங்க போய் என்னை 'ஸார்'ன்னு கூப்பிடறீங்க?!..''

''இந்த சினிமா உலகத்துல பெரிய ம்யூஸிக் டைரக்டராயிட்டிங்க. உங்களை ஸார்ன்னு கூப்பிடாம பின்ன எப்பிடி கூப்பிடறது ?.. நாம இருக்கற சினிமா உலகத்துல... பெரிய ஹீரோ, சின்ன வயசு வாலிபனா இருந்தா கூட... 'அஜய் ஸார்... அந்த ஸார்... இந்த ஸார்'ன்னுதான் கூப்பிடணும்...'' என்று கூறிய பழனிவேல் சிரித்தார்.

''நான் அப்பிடியெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன் ஸார்.''

''சச்ச... உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா ஸார்? உங்களோட அடக்கமான பண்பு பத்தி எல்லாருக்கும் தெரியும். இமயமளவு உயர்ந்துட்டாலும் இதயத்தளவுல இறுமாப்பு இல்லாத நல்ல மனிதர் நீங்க. உங்களை மாதிரி கர்வமில்லாத மனுஷங்களை இந்தக் காலத்துல பார்க்கவே முடியாது...''

''திறமை, புகழ், உயர்வு இதெல்லாம் இறைவன் குடுக்கறதுதான் ஸார். நம்ம கையில என்ன இருக்கு?''

''அதென்ன அப்பிடி சொல்லிட்டீங்க? உங்களைப் பொறுத்த வரைக்கும் உங்க கையிலதானே உங்க திறமை இருக்கு?!..''

''புரியலியே ஸார்?...''

''உங்க கீ-போர்ட்ல உங்க கைவிரல்கள்தானே இசை அமைக்குது? அதைச் சொன்னேன் அபிலாஷ்.''

''ஓ... அப்பிடி சொல்றீங்களா? உங்ளோட பாராட்டுகளுக்கு என்னிக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன் ஸார்... நீங்க ரெண்டு ஹிந்திப் படம் தயாரிச்சு... ரெண்டு படமுமே நல்லா போனதா கேள்விப்பட்டேன் ஸார்.''

''ஆமா அபிலாஷ். பட்ஜெட் படம்தான் ரெண்டுமே. ஆனாலும் ஹிட் ஆயிடுச்சு... இப்ப மறுபடியும் புதுசா ஒரு தமிழ்ப்படம் பண்ணப் போறேன். பெரிய பட்ஜெட் படம். இதைப்பத்தி பேசறதுக்கு உங்ககிட்ட அப்பாயிண்ட்மென்ட் கேக்கலாம்ன்னுதான் உங்க மொபைல்ல கூப்பிட்டேன்...''

''அப்பாயிண்ட்மென்ட் என்ன ஸார்... பெரிய அப்பாயின்ட்மென்ட்... இப்பவே நேர்ல சந்திச்சு பேசலாம் ஸார். வீட்டுக்குதான் கிளம்பிக்கிட்டிருந்தேன்...''

''அப்பிடியா? உடனே உங்களை சந்திக்கறதுல எனக்கு சந்தோஷம். ஹோட்டல் மாயா இன்ட்டர்நேஷனல்க்கு வந்துடறீங்களா? 'பேஸ்மென்ட்ல' இருக்கற ரெஸ்ட்டாரண்ட்ல நாம சந்திப்போம்...''

''சரி ஸார். நான் நேரா மாயா இன்ட்டர்நேஷனல்க்கு வந்துடறேன்.''

''தேங்க்யூ அபிலாஷ். வாங்க, நானும் அங்கே வந்துடறேன்.''

''சரி ஸார்.''

பேசி முடித்த அபிலாஷ், மாயா இன்ட்டர்நேஷனல் ஹோட்டலுக்கு காரை செலுத்தினான்.


ஹோட்டல் லாபியில் காத்திருந்த அபிலாஷ், தயாரிப்பாளர் பழனிவேல் வந்ததும் அவரை கை குலுக்கி வரவேற்றான்.

''வாங்க பழனிவேல் ஸார். எல்லாம் உங்களாலதான். உங்க படம் 'ஹிட்' ஆனதுனாலதான் எனக்கு இப்பிடி தொடர்ந்து பிஸியா இருக்கற அளவுக்கு படங்கள் இருக்கு...''

''உங்க திறமையும், ஆண்டவன் அருளாலயும் நல்லது நடக்குது அபிலாஷ்.''

''ஆமா ஸார். அது உண்மைதான்.'' அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கே பணியாளர் வந்தார். அவர்களுக்கு கொறிக்கவும், குடிக்கவும் என்ன வேண்டும் என்று பவ்யமாகக் கேட்டான்.

''கட்லெட்டும், டீயும் சொல்லுங்க அபிலாஷ்...''

பணியாளரிடம் திரும்பிய அபிலாஷ் அவரிடம் ''ரெண்டு ப்ளேட் கட்லெட்டும், ரெண்டு டீயும் கொண்டு வாங்க...''

பணியாளர் அங்கிருந்து நகர்ந்தார்.

''சொல்லுங்க ஸார். புதுப்படத்துக்கு கதை யாரோடது ஸார்? டைரக்ஷன் யாரு?''

''தெலுங்குல ஹிட்டான படத்தோட கதையை வாங்கி இருக்கேன். டைரக்டர் மதிவாணன்தான் அந்தப் படத்தைப் பத்தி என்கிட்ட சொன்னார். கதை ரொம்ப நல்லா இருக்கு. ம்யூஸிக் ஸ்கோப் உள்ள கதை. அதனாலதான் எனக்கு உடனே உங்க ஞாபகம் வந்துச்சு. டைரக்டர் மதிவாணனும் உங்களைத்தான் ம்யூஸிக் பண்ணச் சொல்லணும்ன்னு சொன்னார். உங்க 'டேட்'  எப்பிடி இருக்கு? ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் எல்லாம் வாங்கிட்டேன். ரெண்டு பேரும் பிஸியானவங்க. அதனால அவங்க குடுத்திருக்கற தேதிகளுக்கு முன்னால நீங்க பாடல்களை இசை அமைச்சுக் குடுத்துட்டா நல்லா இருக்கும்...''

''எங்தெந்த டேட் ஸார் வாங்கி இருக்கீங்க?''

''ஜுலை பதினொண்ணுல இருந்து முப்பது வரைக்கும். அதுக்கப்புறம் செப்டம்பர் பத்துல இருந்து அக்டோபர் பத்து வரைக்கும் முன் ஏற்பாடா கால்ஷீட் வாங்கி வச்சிருக்கேன்.''

''ஒரு நிமிஷம் ஸார். என்னோட டேட்ஸ் பார்த்துட்டு சொல்றேன்'' என்ற அபிலாஷ், தன் மொபைலில் குறித்த வைத்திருந்த தேதிகளைப் பார்த்தான்.

''டேட் இடிக்குதே ஸார்...'' தயக்கமாக அபிலாஷ் கூறியதும் சற்று அதிர்ச்சி அடைந்தார் பழனிவேல். இதைக் கவனித்த அபிலாஷ், பேச ஆரம்பித்தான்.

''கவலைப்படாதீங்க ஸார். என் ஒய்ஃப் கூட டென்மார்க் போற ப்ளான் இருக்கு. அதை கேன்ஸல் பண்ணிட்டு அந்த டேட்ல உங்க பாடல்களை இசை அமைச்சுக் குடுத்துடறேன். டைரக்டர் கூட ஸ்டோரி டிஸ்கஷன்ல உட்கார்ந்துட்டா என்னோட வேலை ஈஸியாயிடும். ''

''ஃபேமிலி டூரை கேன்ஸல் பண்ணிட்டு... டேட் குடுக்கறதா சொல்றீங்களேன்னு கஷ்டமா இருக்கு. ஸாரி... வேற வழி இல்லை அபிலாஷ்...''

''பரவாயில்லை ஸார். என்னை அறிமுகப்படுத்தின உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப் போறேன்? வேற எந்த ப்ரொட்யூஸருக்கோ டைரக்டருக்கோ குடுத்த டேட்ஸை மாத்தி ஒண்ணும் உங்களுக்கு பண்ணலியே? என்னோட பெர்ஸனல் டூரை கேன்ஸல் பண்ணித்தானே உங்களுக்கு 'ஸாங்' கம்போஸிங் பண்ணித் தர்றதா சொல்றேன்? யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாம உங்களுக்கு பண்ணிடறேன். நீங்க எதுவும் யோசிக்காதீங்க...''

''வெளிநாட்டு 'ட்ரிப்'பை கேன்ஸல் பண்றது உங்களுக்கு பெர்ஸனலா பிரச்னைதானே அபிலாஷ்...?''

''அதெல்லாம் இல்லை ஸார். என்னோட மனைவி சரிதா என்னைப் புரிஞ்சுக்கிட்டவ. என்னோட தொழிலை புரிஞ்சுக்கிட்டவ. ம்யூஸிக்கை நான் எந்த அளவுக்கு நேசிக்கறேன்னு அவளுக்குத் தெரியும். அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.''

''ரொம்ப தேங்க்ஸ் அபிலாஷ். இந்தக் காலத்துல அதுவும் இந்த திரைப்பட உலகத்துல உங்களைப் போல நன்றி உணர்வு உள்ளவர்களை பார்க்கறதே ரொம்ப அபூர்வம். உங்க ப்ரோக்ராம்மை மாத்தாம இருக்கணும்ன்னா ஒரு வழி இருக்கு. ஆனா அதுக்கு டைரக்டர் மதிவாணன் ஒத்துக்க மாட்டார். ஏன்னா... முதலில் ஸாங்ஸைதான் ஷூட் பண்ணனும்ங்கறார். இல்லைன்னா...  மத்த ஷ*டூ்டிங்கை முடிச்சுட்டு கடைசியில ஸாங்க்குக்குரியதை ஷுட் பண்ணிக்கலாம்...''

''இல்லை ஸார். அதுக்கப்புறம் எனக்கு டேட்ஸ் சிக்கல் ஆகிடும்.''

''ஓ... அப்பிடியா? டைரக்டர் மதிவாணனை உங்க கூட பேசச் சொல்றேன். ஸ்டோரி டிஸ்கஷனுக்கு என்னிக்கு, எங்கே உட்காரலாம்னு பேசிடுவார்.''

''சரி ஸார். ரொம்ப சந்தோஷம்...''

அதன் பின் புதிய படத்தின் கதையை அபிலாஷிற்கு விளக்கினார் பழனிவேல்.

கதையை கவனமாக கேட்டுக் கொள்டான் அபிலாஷ்.

''டைரக்டரோட திரைக்கதையையும் கேக்கறதுக்கு அவர்கூட பேசி ஒரு டிஸ்கஷன் போட்டுடலாம் ஸார்...''

''தேங்கஸ் அபிலாஷ். நாம கிளம்பளாமா?''

''ஓ.கே. ஸார்.''

இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர்.


அபிலாஷிற்காக காத்திருந்த சரிதா. அவன் வருவதற்கு மிகவும் தாமதமானபடியால் பலமுறை அபிலாஷின் மொபைலில் அழைத்தாள். அவனது மொபைலை அவன் எடுக்கவில்லை. எனவே உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்க, அவனுக்காகக் காத்திருந்தாள்.

அபிலாஷின் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவளது உள்ளம் படபடத்தது. சந்தேகம் துளைத்து எடுத்துக் கொண்டிருந்த அவளது மனது அமைதி அற்றுப் போனது.

வாசல் கதவை திறந்து வைத்துவிட்டு ஹாலில் உள்ள ஸோஃபாவில் வந்து உட்கார்ந்தாள். அபிலாஷ் வந்தான்.

''ஸாரிடா சரித். என்னோட மொபைலை 'ஸைலன்ட் மோட்'ல போட்டிருந்தேன். என்னோட முதல் பட ப்ரோட்யூஸர் பழனிவேல் ஸார் திடீர்னு கூப்பிட்டார். புதுசா படம் பண்றாராம். நான்தான் ம்யூஸிக் பண்ணனும்ன்னு சொல்லி, இப்ப உடனே பார்த்து பேசணும்ன்னார். அதனால மாயா இன்ட்டர்நேஷனல் ஹோட்டல்ல ஒரு மீட்டிங் போட்டோம்...''

''மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வழியில மொபைல் ஃபோன்ல என்னைக் கூப்பிட்டிருக்கலாமே...''

''சார்ஜ் இல்லாம போச்சும்மா. அதனாலதான் வேகமா காரை ஓட்டிட்டு வந்தேன்.''

''எங்கே?... உங்க மொபைலை காட்டுங்க பார்க்கலாம்...''

''நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா?...''

சரிதா குதர்க்கமாகக் கேட்பதை அப்போது புரிந்து கொள்ளாத அபிலாஷ், சிரித்தபடியே கேட்டான். சமாதானமாகாத சரிதா, மேலும் தன் கேள்விக் கணையைத் தொடர்ந்தாள்.

''பழனிவேல் ஸாரை பார்க்கப் போறதுக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே?...''

''ஏன்? இப்ப... என்ன ஆச்சு? அதான் வந்துட்டேன்ல? நீ காத்துக்கிட்டிருப்பியேன்னு வேக வேகமா வந்தேன்... நீ என்னடான்னா... கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிட்டிருக்க?''

''உங்களுக்கு ஏன் கோபம் பொத்துகிட்டு வருது?...''

''பின்ன என்ன? உனக்காக பதற்றமா ஓடி வந்தா... சொன்னதை புரிஞ்சுக்காம அநாவசியமான கேள்வி கேட்கற?''

''அவசியமான கேள்விதான் கேட்கறேன். என்னிக்காவது இப்பிடி மொபைலை எடுக்காம இருந்திருக்கீங்களா? இப்ப என்ன புதுசா?...''

''என்னோட சூழ்நிலையை சொன்னதுல என்ன புதுசு? நீதான் புதுசு புதுசா கேள்வி கேட்டுக்கிட்டிருக்க... உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி குடைஞ்சு எடுக்கற?''

''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குதான் என்னமோ ஆயிடுச்சு...''

''நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீதான் மாறிக்கிட்டிருக்க...''

''நீங்க மாறிடக் கூடாதே...'' இதைக் கூறும்போது சரிதாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இதைக் கண்ட அபிலாஷ் பதறினான்.

''என்னம்மா சரித்... ஏன் என்னென்னமோ பேசற? மனசு சரி இல்லையா? எங்கயாவது வெளியில போய்ட்டு வந்திருக்கலாம்ல? ஏன் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கற? கொஞ்ச நாளாவே நீ இப்பிடித்தான் இருக்க... ஏன்னுதான் எனக்கு புரியலை...''

''அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பழனிவேல் ஸாரை எந்த ஹோட்டல்ல சந்திச்சதா சொன்னீங்க?''

''மாயா இன்ட்டர்நேஷனல் ஹோட்டல். நான்தான் ஏற்கெனவே சொன்னேனே.''

''அவர் என்ன சொன்னார்? அவரோட படத்துக்கு டேட்ஸ் குடுத்துட்டீங்களா?...'' சந்தேகங்கள் மீண்டும் குடைய கேள்விகளைத் தொடர்ந்தாள் சரிதா. ஆனால் அபிலாஷ், அவள் மனநிலை சரியாகி, சாதாரணமாக கேட்கிறாள் என்று எண்ணி சமாதானம் அடைந்தான்.

தயாரிப்பாளர் பழனிவேல் பேசியதையெல்லாம் அவளிடம் கூறினான்.

இதயத்திற்குள் புதைந்திருந்த சந்தேகம் துளி கூட மாறாமல் அவன் கூறியதை ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

''பசிக்குதும்மா. சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே...''

இருவரும் சாப்பிடும் அறைக்கு சென்றனர். உணவு வகைகளை எடுத்து, வைத்து பரிமாறிக் கொண்டிருந்த சரிதா, சிந்தனை வலைக்குள் சிக்கிக் கொண்டாள். அவளுடைய குழம்பிய மனநிலை ஏதும் புரியாத அபிலாஷ், வழக்கம் போல கலகலவென பேசிக் கொண்டிருந்தான்.

''கயல்விழி ஃபோன் பண்ணினா...''

''ரெக்கார்டிங்ல இருந்திருப்பீங்களே?! உங்க மொபைலை ஆஃப் பண்ணிதானே வச்சிருப்பீங்க?''

''டீ ப்ரேக்ல கூப்பிட்டா பேசுவேன்னு அவளுக்குத் தெரியுமே... அதனால டீ டைம்ல கூப்பிட்டா... நீ என்னவோ மூட் அவுட் ஆகி இருந்தியாம்...''

''நான் எப்பவும் போலத்தான் இருந்தேன்...''

''எனக்கென்ன தெரியும்? அவ சொன்னதை உன்கிட்ட சொன்னேன்...''

''அது சரி... இன்னிக்கு என்ன ரெக்கார்டிங்?''

''இன்னிக்கு ஹீரோயின் பாடற பாடல் ரிக்கார்டிங். கோரஸ் கூட வந்திருந்தாங்க... கோரஸ் பாட வந்த பொண்ணுங்க என்னைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எல்லாருமே திறமையா பாடறாங்க... அந்தப் பொண்ணுங்கள்ல்ல ஒருத்திக்கு குடும்பத்துல ரொம்ப கஷ்டமாம். அவளுக்கு உதவி செய்யணும்னு தோணுச்சு. கையில செக் புக்தானே இருந்துச்சு. அதனால ரெண்டாயிரம் ரூபாய்க்கு செக் போட்டு குடுத்தேன்...''

''அவ பேரு என்ன?''

''பேரெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாதும்மா.''

''நல்ல வேளை... என்னோட பேரை மறந்துடலியே?!...''

''ஏய்? என்ன குறும்பா?''

''அ... அதெல்லாம் ஒண்ணும் இல்லை...''

''கயல்விழி சொன்னது சரியாத்தான் இருக்கு நீ ஏதோ மூட் அப்ஸெட் ஆகியிருக்கே...''

''கயல்விழி சொன்னா எல்லாமே சரியாத்தான் இருக்கும். உங்களுக்கு...''

''எனக்கு மட்டுமா? உனக்கும்தான். கயல்விழி சொல்றதைத்தானே நீ கேட்ப... உங்க ஃப்ரென்ட்ஷிப்பை பார்த்து நானே பிரமிச்சுப் போயிருக்கேனே...''

''.............''

''என்ன சரிதா? எதுவும் பதிலே சொல்லமாட்டேங்கற? உனக்கு என்ன ஆச்சு?''

''எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதேன்னுதான்....''

''நீ பேசறது ஒண்ணுமே புரியலை...''

''எனக்கு இப்பத்தான்ங்க புரிய ஆரம்பிச்சிருக்கு....''

''எதைப் பத்தி...?''

''இந்த உலகத்தைப் பத்தி?''

''அடேங்கப்பா உலகத்தைப் பத்தி புரிஞ்சுக்கிட்டியா? நீயா? நீ ஒரு வெகுளி...''

''பார்க்கறதுக்குதான் நான் வெகுளி. வெகுண்டு எழுந்தா வெடிகுண்டுதான்...''

''டி.வி.யில ஏதாவது பழைய தமிழ்ப்படம் பார்த்தியா? டையலாக்கெல்லாம் ஒரு டைப்பா இருக்கு?'' சிரித்தான் அபிலாஷ்.

''யார் என்ன டைப்ன்னு யோசிச்சு யோசிச்சே எனக்கு பொழுது போகுது...''

''யார் என்ன டைப்பா இருந்தா நமக்கென்னம்மா. உனக்கு நான்; எனக்கு நீ... நாம எப்பவும் இதே மாதிரி அன்பா இருந்தா அது போதும்...''

''ஆமாங்க. எனக்கு நீங்கதான் எல்லாமே. உங்களுக்கும் எல்லாமே நானாத்தான் இருக்கணும்.''

''அப்பிடித்தானே இருக்கோம்?''

''இன்னிக்கு வரை இருக்கோம். என்னிக்கும் இருப்போமா?''

''என் உயிர் உள்ள வரை நாம இப்பிடித்தான் இருப்போம். நீதான் என் உயிர், நீ மட்டுமே என் உயிர்...''

அபிலாஷ், சரிதாவை இறுக அணைத்தபடி கூறினான்.  ஆனால் அந்த அணைப்பில் லயித்துப் போகாமல் பாவனா கூறிய அதே வார்த்தைகளை அபிலாஷ் கூறுகிறானே என்று யோசனைக்குப் போனாள்.

''என்ன சரிதா... என் தோள்லயே தூங்கிட்டியா?''

சமாளித்தபடி தன் யோசனையிலிருந்து மீண்டாள் சரிதா. இருவரும் படுக்கையறைக்கு சென்றனர்.

அபிலாஷ் தூங்கிய பிறகும் சரிதாவிற்கு தூக்கம் வரவில்லை.

'கயல்விழி எதற்காக இவருக்கு போன் போடணும்? கோரஸ் பாட வந்த பொண்ணுங்க கிட்ட சிரிச்சிப் பேசி இருப்பாரோ? மனசு சபலப்பட்டுத்தான் அந்தப் பொண்ணுக்கு செக் குடுத்திருப்பாரோ? ப்ரொட்யூஸர்ட்ட பழனிவேல்ட்ட பேசிக்கிட்டிருந்ததா சொன்னது நிஜமா? பாவனா சொல்ற மாதிரி, ஆண்கள் ஒரு வினாடி நேரத்துல சபலப்பட்டுருவாங்களோ? அபிலாஷேரட இந்த முகம், இந்த உடல், ஸ்பரிஸம் அன்பு இவை எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தம். அவருக்கு நான்; எனக்கு அவர். நடுவுல வேற யாரும் வரக்கூடாது. வரவிட மாட்டேன். ஜாக்கிரதையா இருக்கணும். கயல்விழி என்னைவிட அழகு. ச்ச... என்னோட கயல்விழியையா நான் இப்பிடி நினைக்கிறேன்? நினைச்சதுல என்ன தப்பு? அவளைவிட என்னோட கணவர் எனக்கு முக்கியமாச்சே? அவர் எனக்கு மட்டுமே வேணும்ங்கற உணர்வுலயும் உரிமையிலயும் நான் போடற வேலி... முள் வேலி இல்லை... முன் ஜாக்கிரதை வேலி. என்னோட ஃப்ரெண்ட் என்னிக்கும் எனக்கு ஃப்ரெண்ட்தான். அவளை இவர்கூட பழக விடாம பார்த்துக்கறது என்னோட எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடுதானே? அது சரி... ஒரு கயல்விழியை அவர் கண்ல பட  விடாம, அவர்கூட பழக விடாம தடை போட்டுக்க முடியும். ஆனா இவரோட வெளி உலக வாழ்க்கையில இவர்கூட எந்தப் பெண்ணுமே... பழகாம என்னால பாதுகாத்துக்க முடியுமா?'

ஒரு திகில் உணர்வு அவளது நெஞ்சிற்குள் எழுந்து, அவளது உள்ளம் முழுவதும் சூழ்ந்து கொண்டது. பாவனா பற்ற வைத்த சந்தேகக் கனல், அவளது மனதில் பெரு நெருப்பாய் எரிந்தது. எரிமலையாய் பொங்கியது.

அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அபிலாஷைப் பார்த்தாள். ஒரு நடிகருக்குரிய சிறப்பான முக அமைப்பும், இசை எனும் தெய்வீகத்தில் சதா சர்வமும் ஈடுபட்டுக் கொண்டிருந்த படியால் அவனது முகத்தில் ஏற்பட்டிருந்த தேஜசும்... தினம் தினம் பார்க்கும் சரிதாவையே காந்தம் போல் இழுத்தது.

'இவர் என்னுடையவர். என்னுடையவர் மட்டுமே. வேற எந்தப் பொண்ணோட மூச்சுக்காத்து கூட இவர் மேல படக் கூடாது. யாரும் இவரோட அழகை ரஸிக்கக் கூடாது. இந்த முகம்... இந்த... உடல்... இந்த... அடர்ந்து கிடக்கும் அழகான தலைமுடி... ஒவ்வொன்றும் எனக்கு மட்டுமே சொந்தம். எண்ணற்ற நினைவலைகள், புயல் கண்ட கப்பல் போல அவளது உள்ளத்தில் ஆடியது. அபிலாஷை நெருங்கி அணைத்துக் கொண்டாள். அவளது ஸ்பரிஸத்தில் லேஸாக கண் விழித்தான் அபிலாஷ்.

''என்னம்மா... நீ இன்னும் தூங்கலியா...'' கேட்டபடி அவளை இறுக அணைத்துக் கொண்ட அபிலாஷை மீண்டும் தூக்கம் அணைத்துக் கொண்டது.

பெருமூச்சு விட்டபடி புரண்டு புரண்டு படுத்தாள் சரிதா.

'இவர் சொன்ன காரணம் உண்மையாத்தான் இருக்குமா? தயாரிப்பாளர் பழனிவேலை சந்தித்து பேசியது நிஜமாக இருக்கக்கூடும். ஆனால் அத்தனை நேரம் அவருடன்தான் அபிலாஷ் இருந்திருப்பாரா? பழனிவேல் ஸாருக்கு ஃபோன் செய்து சாமர்த்தியமாக பேசி உண்மை விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா? தற்செயலாக நான் அவருடன் ஃபோனில் கேட்ட விபரங்களை அபிலாஷிடம் அவர் கூறிவிட்டால்? இன்னிக்கே நான் கேட்ட கேள்விகளுக்கு அபிலாஷ் கோவிச்சுக்கிட்டார். நான் சந்தேகப்படுவதை அப்பட்டமாக அபிலாஷ் புரிந்து கொண்டால்?...'

இவ்விதம் நீண்ட நேரம் யோசித்ததையே திரும்பத் திரும்ப யோசித்தபடி தூக்கமின்றித் தவித்தாள் சரிதா.

தூக்கக் கலக்கத்தில், பழக்க தோஷமாக சரிதா மீது கையைப் போட்ட அபிலாஷின் கையை இறுகப் பற்றிக் கொண்ட சரிதா, தன் கண்களையும் இறுக மூடினாள்.

'இவரோட இந்தக் கை, என் உடலை மட்டுமே தீண்டும் கையா? அல்லது பல பெண்களை அணைத்த கையா? பாவனா சொன்னது போல ஆண்களில் யாருமே உத்தமர்கள் இல்லையா? இதைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் பதறுகிறதே... என் இதயம் தாறுமாறாய் துடிக்கின்றதே...  கடவுளே... நான் நினைப்பது சரியா? தப்பா? என் கணவர் அபிலாஷ் எனக்கு மட்டுமே சொந்தமானவரா? அல்லது வேறு பலருக்கும் தன்னைக் கொடுத்தவரா? அவளது உள்ளம் புலம்பியது. தூக்கமின்மையால் அவளது இரவு மிகவும் நீண்டது. விடியும் பொழுதில்தான் அவளையும் அறியாமல் அவளது விழிகள், தூக்கத்தைத் தழுவின.


மறுநாள். அபிலாஷ், ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு போனபிறகு, மன அமைதி நாடி கோயிலுக்கும் போகலாம் என்று கிளம்பிக் கொண்டிருந்தாள் சரிதா.

அவளது அறைக் கதவை வத்சலாம்மா நாசூக்காய் தட்டியபடியே குரல் கொடுத்தாள்.

"உள்ளே வாங்க வத்சலாம்மா. என்ன விஷயம்?"

அறையினுள் சென்றாள் வத்சலாம்மா.

"யாரோ ஒரு பொண்ணு வந்திருக்காங்கம்மா ஐய்யாவைத் தேடி..."

சரிதாவின் மனதில் இடி இறங்கியது போல் இருந்தது.

"என்ன? பொண்ணா? ஐய்யாவைத் தேடியா?" அவளையும் மீறி வெளிப்பட்டுவிட்ட அதிர்ச்சியை அதிகமாக வெளியிட்டு விடாமல் கேட்டாள் சரிதா.

"ஆமாம்மா. பேர் வித்யாவாம். பாட்டு பாடற பொண்ணாம்..."

தலை கிறுகிறுத்தது சரிதாவிற்கு. "சரி... வத்சலாம்மா, நீங்க சமையலை கவனிங்க. நான் போய் பார்க்கறேன்..."

பேசி முடிப்பதற்குள் ஏ.ஸி.யின் குளிர்ச்சியிலும் வியர்த்தது சரிதாவிற்கு.

"என்னம்மா?... என்ன ஆச்சு? ஏன் இப்பிடி வியர்த்து கொட்டுது?''

"அது... அது... ஒண்ணுமில்ல வத்சலாம்மா. நீங்க போங்க. நான் போய் வந்திருக்கறது யார்ன்னு பார்த்துக்கறேன்..."

"சரிங்கம்மா." வத்சலாம்மா, அறைக்குள்ளிருந்து வெளியேறினார்.

அதன் பின் ஹாலுக்கு வந்த சரிதா, அங்கே ஒரு இளம் பெண் இருப்பதைப் பார்த்தாள்.

ஒல்லியான உடல்வாகுடன், மாநிறமாக காணப்பட்ட அந்தப் பெண்ணின் முகம் மிக அழகாக இல்லாவிட்டாலும், வசீகரமாக இருந்தது.

'இவ எதுக்காக இங்கே வந்திருக்கா?! அதுவும் அபிலாஷைப் பார்க்கறதுக்காக வீட்டுக்கு வந்திருக்கா...!'

எண்ணங்கள் இதயத்தில் அசை போட, சரிதாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.

"நீ யார்? எதுக்காக என் கணவர் அபிலாஷை பார்க்க வந்திருக்க?''

''அபிலாஷ் ஸார் இசை அமைச்ச நிறைய பாடல்கள்ல்ல கோரஸ் பாடி இருக்கேன் மேடம். என் பேரு வித்யா."

"அவர்ட்ட எத்தனையோ பொண்ணுக கோரஸ் பாடறாங்க..."

"அ... அ... அது வந்து மேடம்... எங்க குடும்பம் ஏழ்மைப்பட்ட குடும்பம். நான் கோரஸ் பாடறதுல வர்ற வருமானத்துலதான் நாங்க நாலு பேர் வாழணும். என்னோட கஷ்டம் தெரிஞ்சுக்கிட்ட அபிலாஷ் ஸார், கோரஸ் பாடினதுக்கு ப்ரொட்யூஸர் குடுத்த தொகைக்கு மேல எனக்கு ரெண்டாயிரம் ரூபா குடுத்து உதவினார்."

"இப்ப என்ன அதுக்கு?" தன் புகைச்சலை வெளிப்படுத்திய வார்த்தைகள் வித்யாவை மனதை நோக வைத்தது.

அவளது முகம் மாறியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சகஜமாக பேசும் பாவனையில் பேச ஆரம்பித்தாள்.

"மேடம்... அபிலாஷ் ஸார் பணம் குடுத்த நேரம் நல்ல நேரம் மேடம். எனக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைச்சிருக்கு மேடம். அதுவும் நான் தவம் இருந்து காத்து கிடந்த கவர்மென்ட் வேலை. அபிலாஷ் ஸார் குடுத்த பணத்தை லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலை கிடைச்சுது மேடம்."

"கிடைச்சுருச்சுல்ல. வேலையைப் போய் பார்க்க வேண்டியதுதானே? வேலை மெனக்கெட்டுப் போய் இங்கே வருவானேன்? கஷ்டப்பட்டியேன்னு உதவி செஞ்சா... இப்பிடி வீடு வரைக்குமா வர்றது?"

இதைக் கேட்ட வித்யா மேலும் அவமானப்பட்டாள். முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்கினாள். துளிர்த்த கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுந்து விடாமல் கண்களுக்குள்ளேயே தேக்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

"கவர்மென்ட் வேலை கிடைச்சுட்டா... திருப்பதிக்கு வர்றதா வேண்டி இருந்தேன் மேடம். திருப்பதிக்கு போய்ட்டும் வந்துட்டேன். ஸாருக்கு நன்றி சொல்லிட்டு திருப்பதி லட்டு குடுக்கலாம்னுதான் மேடம் வந்தேன்" என்று கூறிய வித்யா, திருப்பதி லட்டு இருந்த சிறிய பாலித்தீன் கவரை சரிதாவிடம் கொடுத்தாள்.

ஏனோதானோவென்று லட்டை வாங்கிக் கொண்ட சரிதா. அதிக கோபம் அடைந்தாள்.

"நீ திருப்பதி போய்ட்டு வந்து என்னை மொட்டையாக்கிடாதே..." சுடு சொற்களால் வித்யாவின் இதயத்தை எரித்தாள் சரிதா. சரிதாவின் அனல் வீசும் வார்த்தைகளைக் கேட்ட வித்யா அதிர்ச்சியில் அலறினாள்.

"மேடம்..."

"இப்பிடி குரலை உயர்த்தினா? உன்னோட பாட்டை ரிக்கார்டிங் ஸ்டூடியோவோட நிறுத்திக்கணும். இங்க வந்து புகழ் பாடற வேலையெல்லாம் வச்சுக்காதே..."

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாத வித்யா, அழுது கொண்டே வெளியேறினாள்.

"அம்மா..." சரிதாவை, வத்சலாம்மா கூப்பிட்டாள்.

"என்ன வத்சலாம்மா..?"

"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்மா."

"என்ன விஷயம்? சொல்லுங்க..."

"நீங்க தப்பா நினைக்கலைன்னா..."

"தப்பா நினைக்கற மாதிரி நீங்க எதுவும் சொல்ல மாட்டிங்களே..."

சில வினாடிகள், தயக்கமாக நின்றிருந்தாள் வத்சலாம்மா.

"எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க வத்சலாம்மா..."

"அது... அது... வந்தும்மா... உங்களுக்கு முகத்துக்கு... கை, காலுக்கெல்லாம் பாலீஷ் போடறதுக்கு ஒரு பொண்ணு வர்றாளே... அதாம்மா... பேர் கூட பாவனா..."

"ஆமா. அவளுக்கென்ன..."

"அவளுக்கு ஒண்ணும் இல்லைம்மா. அவளால உங்களுக்கு எதுவும் ஆகிடக் கூடாது... அவளை உங்க ரூம் வரைக்கும் உள்ளே அனுமதிக்கறது அவ்வளவு சரி இல்லைன்னு எனக்கு தோணுதும்மா..."

"சச்ச... அவ நல்ல பொண்ணு வத்சலாம்மா. லட்ச ரூபா பணக்கட்டை வச்சிருந்தா கூட பணம் வச்ச இடத்துல வச்சபடியே இருக்கும். இந்தக் காலத்துல அப்பிடி ஒரு நம்பிக்கையான பொண்ணை பார்க்கவே முடியாது..."

"காலம் கெட்டுக் கெடக்கும்மா. பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. தினமும் பேப்பர்லயும், டி.வி.லயும் என்னென்னமோ செய்திகள் வருது. அந்த பயத்துலதான்மா சொல்றேன். உங்களுக்கு தெரியாதது இல்லை. தாயா, பொண்ணா பழகறோம். அந்த உரிமையில, என் மனசுல பட்டதை சொன்னேன்மா..."

"நீங்க என் மேல உள்ள அன்பிலயும் அக்கறையிலயும்தான் சொல்றீங்கன்னு எனக்கு புரியுது வத்சலாம்மா. ஆனா அந்த பாவனா ரொம்ப நல்லவ. நம்பிக்கையானவ. கஷ்டப்படற குடும்பத்துல இருந்து வர்றா... பரிதாபமா இருக்கு. அதுக்காக என்னால முடிஞ்ச உதவியை நான் செய்யறேன்..."

"தர்மம் செய்றதை விட, தர்மம் செய்றதை தடுக்கிறது பெரிய பாவம்மா. அவளுக்கு உதவி செய்யறதை நான் தடுக்கலை. உங்களுக்கு அவ மேல நம்பிக்கை இருந்தா சரிதான். முன் எச்சரிக்கையா சொல்லிடலாமேன்னு செல்லி வச்சேன். தப்பா எடுத்துக்காதீங்க."

"நீங்க சொன்னதுலயும் எந்த தப்பும் இல்லை. அந்தப் பொண்ணு பாவனாவும் தப்பானவ இல்லை."

"சரிங்கம்மா" என்ற வத்சலாம்மா, அங்கிருந்து நகர்ந்தார்.


பனகல் பார்க் நெரிசலில் அபிலாஷின் கார் அங்குலம் அங்குலமாக நகர்ந்துக் கொண்டிருந்தது. குமரன் ஸில்க்ஸில் கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த செக்யூரிட்டி, 'இடம் இல்லை' என்று கைகளால் சைகை செய்தான். உள்ளிருந்து ஒரு கார் வெளியேறியது. அந்தக் கார் வெளியேறியதும் அபிலாஷின் கார் உள்ளே சென்றது. அபிலாஷ் காரிலிருந்து இறங்கினான். குமரன் ஸில்க்ஸின் முதல் மாடிக்கு சென்றான்.

இரண்டாவது மாடியில் இருந்து அபிலாஷைப் பார்த்த 'குமரன் ஸில்க்ஸ்' குமார், வேகமாக இறங்கி வந்தார். குமரன் ஸில்க்ஸ் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான குமார், இன்முகத்துடன் அபிலாஷை வரவேற்றார்.

''வணக்கம் ஸார். மேடம் வரலியா?''

''இல்லை. அவங்களுக்கு பிறந்தநாள் வருது. அவங்களுக்கு ஸஸ்பென்ஸாவும், ஸர்ப்ரைஸாவும் பட்டு புடவை எடுத்துக் குடுக்கலாம்னு இங்கே வந்தேன்...''

''ஓ... அப்பிடியா?! உங்க மேடம்க்கு பாரம்பரியமான பட்டு புடவைதான் பிடிக்கும். வாங்க, அந்த ஸெக்ஷனுக்கு போகலாம்...''

அபிலாஷை அழைத்துச் சென்றார் குமார்.

அபிலாஷை அடையாளம் கண்டு கொண்ட சிலர், அவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். அப்போது அங்கே கயல்விழி வந்தாள்.

''ஹாய் அபிலாஷ்... நீங்க என்ன இங்கே? ஆச்சரியமா இருக்கே...?''

''ஆமா கயல்விழி... சரிதாவுக்கு ஆச்சரியமா ஒரு பரிசு குடுக்கலாமேன்னு பட்டு புடவை எடுக்க வந்தேன்.''

''அட?! நீங்களுமா?!''

''நீங்களுமான்னா?!''

''நானும் சரிதாவுக்கு பர்த்டே கிஃப்ட்டுக்காக பட்டு புடவை வாங்க வந்தேன்... நானும் ஸஸ்பென்ஸா குடுக்கணும்னு ஐடியா பண்ணி இருந்தேன்...''

''சரி... சரி... வா... புடவை பார்க்கலாம்.''

தன் பணியாளர்களிடம் சொல்லி புதிதாக வந்திருக்கும் புடவைகளை எடுத்துக் காட்டச் சொன்னார் குமார். தன் முதலாளி சொன்னதாலும் புடவை வாங்க வந்திருப்பது பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷ் என்பதாலும் பணியாளர், வெகு உற்சாகமாக புடவைகளை எடுத்துக் காண்பித்தார் பணியாளர்.

அபிலாஷ் தேர்வு செய்த புடவையை கயல்விழியும் தேர்வு செய்தாள்.                            

''ஏய்... நான் ஸெலக்ட் பண்ணின புடவையையே நீயும் எடுக்கற?''

''சரி போங்க. நான் வேற பார்த்து ஸெலக்ட் பண்றேன்...''

இருவரும் சிரித்தனர்.

அப்போது அங்கே சரிதா வந்தாள்.

அபிலாஷையும், கயல்விழியையும் அங்கே சேர்ந்து பார்த்ததிலும், அவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்ததிலும் நெஞ்சம் அதிர்ந்தது சரிதாவிற்கு. அவளது உள்ளத்திற்குள் சுனாமி வீசியது. பொது இடத்தில் கௌரவம் கருதி, தன்னை அடக்கிக் கொண்டு அபிலாஷிடம் பேசினாள்.

''இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால நான் உங்க மொபைல்ல கூப்பிட்டப்ப... ஸ்டூடியோவுல இருக்கறதா சொன்னீங்க?!...''

ஸஸ்பென்ஸாக பரிசு தர வேண்டும் என்று குமரன் ஸில்க்ஸிற்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தபடியால் சரிதாவிடம் ஸ்டூடியோவில் இருப்பதாகக் கூறி இருந்தான் அபிலாஷ். எனவே, திடீரென்று சரிதா கேட்ட கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை. சரிதா தன் கேள்விக் கணைகளை மேலும் தொடர்ந்தாள். மனதிற்குள் சுர்ரென்று ஏறிய கோபத்தை மறைத்துக் கொண்டாள்.

''நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வந்தீங்களா?''

''ம்கூம்... அபிலாஷ் ஏற்கெனவே இங்கே வந்திருந்தார். அதுக்கப்புறம்தான் நான் வந்தேன்.''

''குமார் ஸார் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ங்கறதுனால எப்பவும் என் கூடத்தானே நீ வருவ?!'' என்று கயல்விழியிடம் கேட்டபின், அபிலாஷிடம் திரும்பி ''நீங்களும் இங்கே வர்றதா இருந்தா... நான் இல்லாம வர மாட்டீங்களே? என்ன விஷயம்?''

''அ...  அது.... வந்து ஒரு முக்கியமான விஷயத்துக்காக புடவை எடுக்கறதுக்காக இங்கே வந்தேன்'' அபிலாஷ் உளறிக் கொட்டினான்.

''புடவை கடைக்கு புடவை வாங்க வராம... புடலங்காய் வாங்கறதுக்கா வருவாங்க?'' செயற்கையாய் சிரித்த சரிதாவுடன் சேர்ந்து அபிலாஷும், கயல்விழியும் அசடு வழிந்தபடி சிரித்தனர்.

''புடவை யாருக்கு?  கோரஸ் பாடற பொண்ணுக்கா?...'' குத்தலாக சரிதா பேசுவதை புரிந்துக் கொள்ளாத அபிலாஷ் வெகுளித்தனமாக பதில் கூறினாள்.

''இன்னிக்கு கோரஸே கிடையாதே...'' இதைக் கேட்ட சரிதா, எரிச்சல்பட்டாள். அவளுடைய எரிச்சல் உணர்வு, கயல்விழி மீது தாவியது.

''உனக்குத்தான் புடவைங்கறது தேவையே இல்லாததாச்சே?!...'' சரிதா மறைமுகமாகத் தாக்கிப் பேசியதைப் புரிந்து கொண்ட கயல்விழி வேதனைப்பட்டாள்.

''அதில்லை... நீதான் ஷல்வார், ஜீன்ஸ், சுடிதார்ன்னு போடறவளாச்சே... அதனால கேட்டேன்...''

''புடவை எனக்கு இல்லை சரிதா...''

''சரி... சரி... எடுத்து முடிச்சாச்சா? பில் போட்டாச்சா?'' என்றவள் அபிலாஷிடம் ''போலாமாங்க?'' என்று கேட்டாள்.

அபிலாஷ், கயல்விழியைத் திரும்பிப் பார்த்தார்.

''வா... கயல்விழி உன்னை உன் வீட்ல விட்டுட்டு நாங்க போறோம்... இல்லைன்னா... நீ எங்க வீட்டுக்கு வா. இன்னிக்கிதான் ப்ரோகிராம் இல்லைன்னு சொன்னியே. வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் மொக்கை போட்டுட்டு போயேன்...''

அப்போது இடை மறித்துப் பேசினாள் சரிதா.

''இல்லைங்க... எனக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் போகணும், டெய்லர் கடைக்குப் போகணும், கார்பெட் வாங்கப் போகணும். ஏகப்பட்ட இடங்களுக்கு போகணும். கயல்விழி ஏதோ அவசர விஷயத்துக்கு புடவை வாங்க வந்திருக்கா. நாம கிளம்பலாம்.''

''ஆமா அபிலாஷ். நீங்க கிளம்புங்க. நான் மெதுவா போய்க்குவேன்...''

''ஓ.கே. கயல்விழி... நாங்க கிளம்பறோம்.''

அபிலாஷுடன், சரிதா கிளம்பினாள்.

கயல்விழியிடம் 'போயிட்டு வரேன்' என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சரிதாவின் இந்த மாறுபட்ட போக்கினால் கயல்விழியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

'ஏன்...? ஏன்...? ஏன்...? இப்பிடி?' என்கின்ற கேள்வி அவளது இதயத்தைக் குடைந்தது. அவளது உள்ளம் குமைந்தது. அபிலாஷையும் சரிதாவையும் வழி அனுப்பிவிட்டு வந்த குமார், கயல்விழியிடம் ''வேற என்னம்மா பார்க்கறீங்க?''ன்னு கேட்டதும் தன் உணர்விற்கு வந்தாள் கயல்விழி.

''ஷல்வார் ஸெட் பார்க்கணும் ஸார்.'' சமாளித்துப் பேசிய கயல்விழியை ஷல்வார் விற்பனை பகுதிக்கு அழைத்துச் சென்றார் குமார்.


ஒரு கவரில் பணத்தை எண்ணி வைத்து அதை கயல்விழியிடம் கொடுத்தான் ஜெயராஜ். கயல்விழியின் கை அந்தக் கவரை வாங்கிக் கொண்டாலும் அவளது கவனம் எங்கோ இருந்தது.

''என்ன கயல்விழி? என்ன யோசனை? கவர்ல என்ன குடுத்தேன்... எவ்ளவு குடுத்தேன்... எதையுமே பார்க்காம, அதைப்பத்தி எதுவுமே கேக்காம அப்பிடி என்ன யோசனை?''

 ''அ... அ... அது வந்து ஒண்ணுமில்லை ஜெயராஜ்...''

''ஏதோ இருக்கு. அதனாலதான் நீ இப்பிடி வேற சிந்தனையில இருக்க. கவனமா கேட்டுக்க. இந்த கவர்ல இருக்கற பணம், பெங்களூருல இருக்கற பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மூணு நாள் நீ ஆடறதுக்கான அட்வான்ஸ் தொகை. டான்சுக்கு இதுவரைக்கும் நீ வாங்காத ஒரு தொகை. சந்தோஷமான சமாச்சாரம்ன்னு சொல்ல வந்து, கையோட அட்வான்ஸையும் கொண்டு வந்து குடுக்க வந்திருக்கேன்... நீ என்னடான்னா.... 'உம்'ன்னு இருக்க... என்ன ஆச்சு? என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லேன்.''

''சொல்லக் கூடாத விஷயம்னு எதுவும் இல்லை. என்னவோ தெரியலை. மனசு கலக்கமா இருக்கு.''

''எப்பவும் கலகலப்பா இருக்கற நீ இப்பிடி சொல்றது ஆச்சரியமா இருக்கு... கூடவே கவலையாவும் இருக்கு...''

''கவலைகளை எல்லாம் ஓரங்கட்டிட்டு மனசுல எதையுமே வச்சுக்காத ரகம் நான். என்னையே திணற வச்சுட்ட ஒரு விஷயம் நடந்துருச்சு...''

''உன்னையே திணற வைக்கும்படியா அப்பிடி என்ன நடந்துச்சு...''

''உனக்குதான் தெரியுமே... என்னோட ஃப்ரெண்ட் சரிதான்னா எனக்கு உயிர்ன்னு? அவ... என்னமோ தெரியலை... திடீர்னு என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறா...?''

''அட... இவ்ளவுதானா? இதுக்குப் போயா இப்பிடி கவலைப்படறே...?''

''என்ன நீ? இவ்ளவுதானான்னு ரொம்ப சாதாரணமா கேக்கற...? ஃப்ரெண்ட்ஷிப்ங்கறது... வாழ்க்கையில ஒரு உன்னதமான நேயம். நாங்க சுமார் இருபது வருஷமா நெருங்கின தோழிகளா இருக்கோம். கூடப்பிறந்த பிறப்புகளுக்கு மேலா ஒரு உயர்ந்த அன்பு கொண்டு பழகறது நட்பு. நட்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம். நட்புக்காக உயிரையே தியாகம் செஞ்சவங்க இருக்காங்க தெரியுமா? நட்பை யார் எதிர்த்தாலும் விட்டுட முடியாது. மனசுக்குள்ள மலர்க்கூட்டமா நிறைஞ்சு, மணம் வீசறது நட்பு. அந்த மலர்க்கூட்டம் வாடிப் போகாம... தினம் தினம் புதுசா பூத்தது மாதிரி இருக்கும். காரணம் 'நீயே எனக்கு எல்லாம்'ன்னு சரண் அடையற அன்புதான்.

இனிமையான உணர்வுகளை மனசுக்குள்ள வச்சிருக்க விடறது நட்புதான். ஃப்ரெண்ட் நம்ம கூடவே இருந்தாலும் நட்பும், பாசமும் நெருக்கமா இருக்கும். அதே ஃப்ரெண்ட் எங்கயோ தொலைதூரத்துல இருந்தாலும் அந்த நட்பு நமக்குள்ள இருக்கும். கிட்ட இருக்கும்போது நேசிக்கறதைவிட தூர இருக்கும்போது தோழியைப் பத்தி யோசிச்சுக்கிட்டே இருப்போம். நாம நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்க கிட்ட கூட, அவங்க நம்பளோட விருப்பத்துக்கு ஏத்தபடிதான் எதுவும் செய்யணும்ன்னு எதிர்பார்ப்போம். ஆனா நட்புன்னு வரும்போது அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாம நண்பனை அப்பிடியே அவனோட இயல்போட, தோழியை அப்பிடியே அவளோட இயல்போட ஏத்துக்கறோம். இதுதான் நட்போட மகிமை. ஆண்- பெண் காதல்ல கூட வார்த்தை ஜாலங்கள் விளையாடும். வார்த்தை விளையாட்டு விளையாடி ஏமாத்தற நாடகம் நடக்கும். ஆனா... நட்பில... எந்த மாயாஜாலமும் கிடையாது. உண்மையான நேசமும், பாசமும் மட்டும்தான் இருக்கும். அப்படிப்பட்ட உயர்ந்த நட்பு கொண்ட சரிதா... என்கிட்ட வழக்கம் போல பேசலைன்னு சொன்னா... ஏதோ சாதாரண விஷயம் சொன்ன மாதிரியில்ல கேக்கற?...''

''நீயாவே எதையோ கற்பனை பண்ணிக்கிட்டு சங்கடப்பட்டுக்கிட்டிருக்க. நீ இப்ப மூட் அப்ஸெட் ஆகி உட்கார்ந்திருந்தாயே? அந்த மாதிரி மிஸஸ் சரிதாவுக்கும் ஏதாவது மூட் அவுட் ஆகி இருக்கும். அதனால உன்கிட்ட சரியா பேசி இருக்க மாட்டாங்க. மனுஷங்க எல்லாரும், எப்பவும், ஒரே மாதிரி இருக்க முடியாது கயல்விழி. மனக்கஷ்டம், குடும்பத்துல குழப்பம், வேலைக்காரங்க பிரச்னை, உடல் ஆரோக்கிய பிரச்னை... இப்பிடி எத்தனையோ விஷயங்கள் இருக்கு. எல்லா சமயத்துலயும் எல்லாமே சரியா நடக்கும்னு எதிர்பார்க்க முடியுமா? அது சாத்தியமா? மிஸஸ் சரிதாவுக்கு ஏதாவது குழப்பம் இருந்திருக்கும். அதனால உன்கிட்ட சரியா பேசி இருந்திருக்க மாட்டாங்க... ''

''குழப்பமான மனநிலையில அவ ஜவுளிக்கடைக்கு வரவே மாட்டா...''

''ஓ... ஜவுளிக்கடையில அவங்களை பார்த்தியா? இங்கே பாரு கயல்விழி... மனசு சோர்வாகி இருக்கற நேரங்கள்ல்ல... ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், புடவைக்கடை, ரெஸ்ட்டாரண்ட்... இந்த மாதிரி இடங்களுக்குப் போனா நல்ல ரிலாக்ஸேஷன் கிடைக்கும். அதுக்காக கூட மிஸஸ் சரிதா புடவை கடைக்கு வந்திருப்பாங்க...''

''எனக்குத் தெரிஞ்சு, அவ அப்பிடி வரக் கூடியவ இல்லை. ஜாலி மூட்ல இருந்தாத்தான் வெளிய கிளம்புவா...''

''உனக்கு தெரிஞ்சு அப்பிடி இருக்கலாம். உனக்குத் தெரியாத அவங்களோட மனசோட மறுபக்கம் இருக்கலாமே?... அதனால அவங்க சரியா பேசாததை நினைச்சு உன்னை நீ வருத்திக்காதே. அவங்க பிரச்னை முடிஞ்சதும் பழையபடி உன்கிட்ட பேசுவாங்க.''

''அவ இந்த மாதிரி என்கிட்ட நடந்துக்கறது மனசுக்கு கஷ்டமா இருக்கு ஜெயராஜ்...''

''சட்டையில படற தூசியை எப்பிடி தட்டிட்டு போறோமோ... அது மாதிரி பிரச்னைகளை தட்டித் தூர எறிஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும். அதையே நினைச்சுக்கிட்டு இருந்தா சரியாயிடுமா? பிரச்னைகள் நம்மைத் தேடி வராது. நாமதான் அதை உண்டு பண்ணிக்கறோம். நீயாவே உன்னோட ஃப்ரெண்ட் பத்தி நினைச்சுக்கிட்டு கவலையால சோர்ந்து போயிருக்க... எல்லாத்தையும் காத்துல பறக்க விடு. மறக்க விடு. ரிலாக்ஸ்டா இரு. உன்னோட தைரியமே உடைஞ்சு போகுதுன்னா... நீ... மிஸஸ் சரிதாவை எந்த அளவுக்கு நேசிக்கறன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது... நாளைக்கே எல்லாம் சரியாயிடும். இந்த மாசம் பத்தாந்தேதி பெங்களூரு கிளம்பணும். உன்னோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் நீ வந்து சரி பார்க்கணும்.''

''சரி ஜெயராஜ். நாளைக்கு உனக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன். ஆறுதலா பேசினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்...''

''என்னோட பேச்சு உனக்கு ஆறுதல் குடுத்திருக்குன்னு தெரிஞ்சு நான் சந்தோஷப்படறேன். நாளைக்கு பார்க்கலாம்.''

ஜெயராஜ் கிளம்பினான்.

சோர்வுற்ற மனம் சற்று தெளிவு அடைந்தது போல் உணர்ந்த கயல்விழியும் அங்கிருந்து கிளம்பினாள். கனத்துப் போயிருந்த அவளது இதயம் சற்று லேஸானது போல் உணர்ந்தாள்.


சுதாகர், நிதானமாக அவனது லோகன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனது இருக்கைக்கு அருகே உட்கார்ந்திருந்தான் வெங்கட். அம்மா- அப்பா வைத்த வெங்கடாஜலபதி எனும் பெயரை வெங்கட் என்று சுருக்கிக் கொண்டான்.

வெங்கட் முப்பத்தைந்து வயது இளைஞன். நிறம் கறுப்பு எனினும் களையாக இருந்தது.

பீரும், மதுபானமும் அருந்தும் பழக்கம் இல்லாதபடியால் முகத்தில் ஏற்படும் ஊதல் இல்லை. சிவந்த விழிகள் இன்றி வயதுக்கு மீறிய தொந்தியும் இன்றி... கண்ணியமான தோற்றத்துடன் இருந்தான்.

காரின் ஆடியோ, யுவன்சங்கர் ராஜாவின் 'காதலிக்கும் ஆசை இல்லை' பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.

''என்ன சுதா... நம்ப சிங்கப்பூர் திட்டம் என்ன ஆச்சு?''

வெங்கட் பேச ஆரம்பித்ததும், பாடலின் ஒலியைக் குறைத்தான் சுதாகர்.

''நம்ம திட்டம் சிங்கப்பூர் போற திட்டம் வெங்கி. சின்னாளம்பட்டி கிராமத்துக்குப் போற திட்டம் இல்லை. பணம்... அந்த வெள்ளையப்பன் இல்லாம எந்த அப்பன்களும் எங்கயும் போக முடியாது... அதுக்கான நடவடிக்கைகளை செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். நான் என்ன சும்மாவா இருக்கேன்? பணம் போடற பார்ட்னர் நான். பழகின தோஷத்துக்கு இந்த சிங்கப்பூர் திட்டத்துல உன்னை ஸ்லீப்பிங் பார்ட்னரா போட்டிருக்கேன். நீ என்னடான்னா... அவசரப்படற... என்னை டென்ஷன் பண்ற.''

''டென்ஷன் உனக்கு மட்டுமா? வீட்ல எனக்கு தினமும் பிரச்னையாகுது. என் பொண்டாட்டி கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. பையனுக்கு ஃபீஸ் கட்டணும்.''

''அட நீ என்னப்பா? அந்த ராணியை மில் ஓனர் மோகனரங்கம் கேட்டார்ல? அவளை முடிச்சு குடுத்தா... செம அமௌண்ட் கிடைக்குமே...''

''அட நீ வேற... என்னமோ... கல்யாணத்துக்கு கேக்கற மாதிரி பேசற?''

''ஆமாமா அவர் நித்ய கல்யாண ஆள்தானே?''

''ராணி இப்ப ரொம்ப பிஸியாயிட்டா. டைரக்ட்டா அவளுக்கு பெரிய ஆளுக தொடர்பு கிடைச்சுக்கிட்டிருக்கு. நம்பளை கண்டுக்கறதே இல்லை.''

''மோகனரங்கம் அவளை கண்டுக்கணும்ங்கறாரே?''

''அவ பெரிய தொகை சொல்றாப்பா சுதா.''

''மோகனரங்கம் என்ன சின்ன ஆளா? அவர் கேட்டதை நாம குடுத்தா... நாம கேக்கறதை அவர் குடுப்பாரு.''

''ஜோக் அடிக்கற நிலைமையிலயா இருக்கோம். சீரியஸா பேசுப்பா.''

''இங்க பாரு வெங்கட்... வாழ்க்கையை ஈஸியா கொண்டு போகணும். எதுக்கும் அலட்டிக்கக் கூடாது.''

''ஒனக்கென்ன அசால்ட்டா சொல்லுவ... அலட்டிக்க கூடாதுன்னு... என் பொண்டாட்டி அருணாவோட அண்ணனுக பேட்டை ரௌடிங்க. அருணா அவனுங்ககிட்ட போய்... தான் கஷ்டப்படறதா சொன்னா... உடனே அரிவாளைத் தூக்குவானுங்க.''

''இப்ப உனக்கு என்ன கஷ்டம்?''

''கையில பணம் இல்லாத கஷ்டம்.''

''இந்தா இதைப்புடி''

''தேங்க்ஸ் சுதா.''

''தேங்க்ஸ்ல்லாம் இருக்கட்டும். இப்போதைக்கு இதை வச்சு உன் அருணாவோட வாயை அடைச்சு வை.''

''ஐய்யோ... தெரியாம காதலிச்சுத் தொலைச்சுட்டேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். அவஸ்தைப்பா சுதா. 'நீங்களும் சுதாகர் அண்ணனும் பார்ட்னர்ங்கறீங்க. அவரு கார் வச்சிருக்காரு. நீங்க இந்த பைக்கையே கட்டி அழறீங்களேன்'னு கேக்கறா சுதா. ஏதோ பேருக்கு பார்ட்னர்ன்னு சொல்லப் போய் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.''

''மாட்டினது நீ இல்லை வெங்கி. உன்கிட்ட மாட்டிக்கிட்டது நான். எவ்ளவு பணம் குடுத்தாலும் செலவு பண்ணி தீர்த்துடற...''

''தீர்த்து முடிக்கிறது நான் இல்லை சுதா. என் பொண்டாட்டி அருணா. மகனை கொண்டு போய் ஸ்கூலுக்கு விடப் போவா. வீட்டுக்கு வந்ததும் துணியை துவைக்க உட்காருவா. அவ்ளவுதான்... துணி துவைச்சு முடிக்க ரெண்டு மணி நேரம் ஆகும். அதுக்கப்புறம் படுத்தாள்ன்னா தூக்கம்தான். கும்பகர்ணனுக்கு போட்டியா தூங்குவா. முக்கால்வாசி நாட்கள்ல்ல சமைக்கறதே கிடையாது. எனக்கு ஃபோன் போட்டு 'ஹோட்டல்ல ஏதாவது வாங்கிட்டு வாங்க'ன்னு சொல்லுவா... பார்ஸல் வாங்கிட்டுப் போகணும். மாசத்துல இருபது நாள் ஹோட்டல்ல வாங்கினா எவ்ளவு செலவு ஆகும்ன்னு பார்த்துக்க. வாஷிங் மெஷின் வாங்கிப் போட்டிருக்கேன். அதில துவைக்க மாட்டாளாம். கையிலதான் துவைப்பாளாம். வேலைக்காரி வச்சுக்கோன்னா அதுவும் கேட்க மாட்டா. 'எனக்கு பிடிக்காது. நானேதான் எல்லாம் செய்யணும்'பா. செஞ்சுட்டு செஞ்சுட்டு 'எனக்கு சமைக்க முடியலை. நேரம் இல்லை. பையனை கொண்டுவிட, சாப்பாடு கொண்டு போய் குடுக்கன்னு போக வரவே சரியா இருக்கு'ன்னு சொல்லி புலம்புவா...!''

''வேலைக்காரி வீட்டு வேலை செஞ்சா பிடிக்காதுன்னு சொல்ற உன் பொண்டாட்டிக்கு ஹோட்டல்ல யாரோ சமைக்கறது மட்டும் பிடிக்குதாமா...?''

''அது ஒரு ஹோட்டல் தீனி பைத்தியம் சுதா. அவங்க அம்மா வீட்ல எப்பவும் ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிடுவாங்க. டீ கூட வீட்ல போட மாட்டாங்க. அதே பழக்கம் இவளுக்கும் வந்துருச்சு... இன்னொரு விஷயம், கையில காசை குடுத்தா போதும். புடவைக் கடை, சுடிதார் கடைன்னு கிளம்பிடுவா. எக்கச்சக்கமா வாங்கிப் போட்டுடுவா. இப்பிடி செலவு பண்ணினா என்னம்மா பண்றதுன்னு கேட்டா போச்சு... பெரிய பூகம்பமே வெடிக்கும். அவ பேச நான் பேச... அடுத்த கட்டமா அவளோட அண்ணன்களுக்கு ஃபோன் பண்ணி ஏடா கூடமா என்னைப் பத்தி போட்டுக் குடுத்துடுவா. அவ்ளவுதான்... அவனுங்க என்னைத் தேடி வந்து 'தங்கச்சி கண்ணுல தண்ணி வந்தா... உன்னை சும்மா விடமாட்டோம்'ன்னு மிரட்டுவானுங்க. நான் எதிர்த்து பேசினா... அடிதடி கலாட்டாவாயிடும். என் மகன் மேல உயிரையே வச்சிருக்கேன். அதனால வம்பு பண்ணாம அமைதியா இருந்திடுவேன். என்னோட மௌனத்தை மைனஸ் பாயிண்ட்டா அவங்க எடுத்துக்கறதால அருணாவும் அதனால என்னை மதிக்கறதில்லை...''

''அவ பின்னால திரிஞ்சு, துரத்தி துரத்தி காதலிச்சியே... இப்ப என்னடான்னா ஏகப்பட்ட பிரச்னை சொல்ற?!''

''காதலிக்கும் போது தேன் ஒழுக பேசினா. கல்யாணத்துக்கப்புறம் தேள் கொட்டற மாதிரி கொட்டறா. அவளுக்கு இப்பிடிப்பட்ட அண்ணனுங்க இருக்கானுங்கன்னு தெரிஞ்சிருந்தா... அருணாவை காதலிச்சிருக்கவே மாட்டேன்...''

''அண்ணனுங்க அக்கிரமக்காரங்கள்ன்னு தெரிஞ்சா... காதலிச்சவளை கை கழுவிடுவியா?''

''பின்னே என்ன பண்றது சுதா? வீட்டுக்கு போறதுக்கே பயம்மா இருக்கு. ஆனா ஒண்ணு... இத்தனை பிரச்சனைக்கு நடுவுல... என் பையனோட குரல் கேட்டா எனக்கு எல்லா கவலையும்  பறந்துடும்... மறந்துடும்...''

''சரி, சரி... அருணா சின்ன வயசுக்காரி. செல்லமா வளர்ந்தவ. அதனால விவரம் போதாது. கொஞ்ச நாளானா சரியாயிடுவா.''

''அது சரி சுதா. நம்ம சிங்கப்பூர் திட்டம்?...''

''நீ அதிலயே இரு. அதுக்காகத்தான் நானும் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல்ல முடிஞ்சுடும். சிங்கப்பூர்ல ஹோட்டல் ஆரம்பிக்கறதுக்கு எண்பது பர்ஸண்ட் பணம் என்கிட்ட ரெடியா இருக்கு. பாக்கி இருபது பர்ஸண்ட் தேறிடுச்சுன்னா 'ஆகாய வெண்ணிலாவே'ன்னு பாடிக்கிட்டே ஃப்ளைட் ஏறிட வேண்டியதுதான்.''

''நான் மட்டும் முதல்ல சிங்கப்பூர் போய்ட்டு அங்கே ஹோட்டல் வேலைகளைப் பார்த்து முடிச்சுட்டு உனக்கு தகவல் சொல்றேன். அதுக்கப்புறம் நீ வா. நீ நிரந்தரமா அங்கே தங்க வேண்டிய அவசியம் இருக்காது. தேவைப்படறப்ப வந்து போனா போதும்...''

''ஒரேயடியா அருணாகிட்ட இருந்து விடுதலை கிடைச்சுடும்ன்னு இருந்தேனே...''

''நீ அருணாவை நிரந்தரமா இங்கே விட்டுட்டு வந்தா... அவளோட அண்ணனுங்க உன்னை சும்மா விட்டுடுவானுங்களா?''

''ஆமாமா. அடிக்கடி வர போக இருந்தாத்தான் அருணாவும் 'கம்'ன்னு இருப்பா. இல்லைன்னா அவளை சிங்கப்பூருக்குக் கூட்டிட்டு போகச் சொல்லி என்னை இம்சை பண்ணுவா...''

''சுதா... சிங்கப்பூர் போனப்புறம் நம்பளோட இந்த இழிவான தொழிலை விட்டுடணும்...''

''ஃபைனான்ஸ் பிஸினஸ்ல அவனை இவனை ஏமாத்தி, எப்பிடியோ மாட்டிக்காம ஒரு பெருந்தொகை சேர்த்துட்டோம். ஸைடு பிஸினஸா பெண்களை வாடகைக்கு பேசி விடறதை செஞ்சோம். இனிமேல் ஹோட்டல் தொழில் மட்டுமே செய்வோம். அதுக்கு முன்னால ஆத்ம திருப்திக்காக நான் செய்ய வேண்டிய வேலை இருக்கு. அதை செய்றதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி, அதுவும் நடந்துக்கிட்டிருக்கு. அந்த வேலை முடியட்டும். நம்ம திட்டம் நிறைவேறிடும்.''

''பொருளாதார நெருக்கடியை தீர்த்துட்டா... என்னோட பொண்டாட்டி நெருக்கடிக்கும் ஒரு முடிவு வரும்...''

''அது பொருளாதாரம். அருணா உன்னோட தாரம்...''

''சுதா...  புலமை துள்ளி விளையாடுது சுதா...''

''நீ வேற... ஏதோ பேச்சு வாக்கில வந்துச்சு. சரி... சரி... உன்னோட வீட்டை நெருங்கிட்டோம். நீ இறங்கிக்கோ. நாளைக்கு சந்திப்போம்.''

''ஓ.கே. சதா...'' என்ற வெங்கட் காரை விட்டு கீழே இறங்கிச் சென்றான்.

சுதாகரின் கார், புழுதியைப் கிளப்பியபடி வேகமாக சென்றது.


''என்னங்க... உங்க @ஃப்ரெண்ட் சுதாகர், உங்களை இறக்கி விட்டுட்டு அப்பிடியே போயிட்டார் போலிருக்கு?''

''அவனுக்கு ஏதோ அவசர வேலையாம். அதனால போயிட்டான். ஆதித்யா எங்கே?''

''அவன் ஹோம்-வொர்க் எழுதிக்கிட்டிருக்கான்.''

''ஆதித்யா... இங்கே வாடா.''

ஆதித்யா, அறைக்குள்ளிருந்து ஓடி வந்தான்.

''அப்பா...'' வெங்கட்டின் கைகளைப் பிடித்துக் கொண்டு துள்ளி குதித்தான்.

''ஹோம் வொர்க் முடிச்சுட்டியாடா?''

''இன்னும் கொஞ்சம் இருக்குப்பா...''

''முடிச்சுடுப்பா.''

''சரிப்பா. முடிச்சப்புறம் நாம் விளையாடலாமா?''

''என்ன விளையாடலாம்?''

''வீடியோ கேம்ஸ்...''

''சரிப்பா. நீ போய் எழுதி முடி...''

''சரிப்பா'' என்ற ஆதித்யா, வெங்கட்டின் கன்னத்தில் முத்தமிட்டான்.

''அப்பாவும், பையனும் கொஞ்சினது போதும். போய் எழுதுடா. நீங்க காஃபியை குடிங்க...''

''உனக்கு பொறாமையா இருக்கா அருணா...?''

''அவன் எனக்கும் மகன். புரிஞ்சுக்கோங்க. அதெல்லாம் இருக்கட்டும். அவனுக்கு ஃபீஸ் கட்டறதுக்கு பணம் கேட்டேனே?''

''இந்தாம்மா தாயே. ஃபீஸ் கட்டினது போக மீதிப் பணத்தை பார்த்து செலவு பண்ணும்மா. சிக்கனமா இருந்துக்கப் பழகு.''

''ஆரம்பிச்சுட்டீங்களா உங்க புராணத்தை? எங்க அம்மா வீட்ல நான் எவ்ளவு செல்லமா வாழ்ந்தவ தெரியுமா?...''

''ஐய்யோ... இப்ப நீ ஆரம்பிச்சுட்டியா? உங்க அம்மா வீட்ல நீ பணத்தை அள்ளி வீசி செலவு பண்ணினவ. உங்க அண்ணனுக உனக்கு தினமும் புது துணி எடுத்து குடுப்பாங்க. தினமும் ஹோட்டல்ல வகை வகையா வாங்கி சாப்பிடுவீங்க... சினிமா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ன்னு ஊர் சுத்துவீங்க... இதுதானே நீ தினமும் பாடற பல்லவி? என்னால அப்பிடியெல்லாம் செலவு பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுதானே என்னைக் காதலிச்ச?''

''உங்களைப் பார்த்தா நல்ல வசதியான ஆள் மாதிரி தோணுச்சு...''

''ஓகோ... அப்போ? எனக்காக என்னைக் காதலிக்கலியா?''

''சச்ச... அப்பிடியெல்லாம் இல்லைங்க. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்...''

''மூச்சுக்கு முந்நூறு தடவை மொபைல்ல என்னைக் கூப்பிட்டுப் பேசின... நாம காதலிச்சப்ப... இப்ப என்னடான்னா... வசதி அது... இதுன்னு பேசற...?''

''அதான் சொல்லிட்டேனேங்க? சும்மா சொன்னேன்னு. கோவிச்சுக்காதீங்க. காபியை குடிங்க...''

''எனக்கு வேண்டாம்...''

''சுதாகர் அண்ணன் கூட போய் எங்கயாவது சாப்பிட்டீங்களா?''

''ம்கூம். இன்னிக்கு அவன் அந்த மூட்ல இல்லை...''

''அதான பார்த்தேன். இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க மாட்டீங்களே...?''

''அப்பிடியெல்லாம் இல்லை அருணா. ஆதித்யா கூட இருக்கணும்னுதான் நான் சீக்கிரமா வந்தேன்...''

''பையன் மேல இவ்ளவு பாசமா இருக்கீங்க... அவனுக்காக என்ன சேர்த்து வச்சிருக்கீங்க...?''

''அடப்போடி பைத்தியக்காரி. அவனுக்கு இப்பதான் ஆறு வயசு ஆகுது. அவன் வளர்ந்து ஆளாகறதுக்குள்ள அவனோட எதிர்காலத்துக்கு என்ன செய்யணுமோ... எல்லாம் செஞ்சுட மாட்டேனா என்ன?''

''அதுக்குத்தான் சிங்கப்பூர் போற திட்டம் இருக்குன்னு சொன்னீங்க. ஆனா நீங்க கிளம்பற மாதிரியே தெரியலியே?''

''அதுக்குரிய வேலைகள் எல்லாம் நடந்துக்கிட்டுதாம்மா இருக்கு. அது லேஸான விஷயம் இல்லை. ஏகப்பட்ட பணம் புரட்டணும். சுதா அந்த வேலையாத்தான் அலைஞ்சுக் கிட்டிருக்கான். சும்மா சும்மா அதைப் பத்தி பேசி நச்சு பண்ணாதன்னு எத்தனை தடவை சொல்றது உனக்கு? என் நிலைமையை புரிஞ்சுக்க. என்னை நம்பு...''

''நம்பித்தானேங்க காதலிச்சேன்... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... வசதியா வாழணும்னு நினைக்கறது தப்பா?''

''தப்புன்னு நான் சொல்லலை. 'கொஞ்சம் பொறுமையா இரு'ன்னுதான் சொல்றேன்.''

''நான் பொறுமையா இருந்துருவேன். ஆனா... கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை. ஏன் இன்னும் உன்னோட புருஷன் சிங்கப்பூருக்கு கிளம்பலைன்னு எங்க அப்பா, அண்ணனுக எல்லாரும் கேக்றாங்க. அது மட்டும் இல்லைங்க. நீங்க ஏதோ தப்பான வழியில பணம் சம்பாதிக்கறதா எங்க அப்பாகிட்ட யாரோ சொல்லி இருக்காங்க...''

இதைக் கேட்ட வெங்கட் அதிர்ச்சி அடைந்தான்.

''நான் எந்த தப்பும் பண்ணலை. என் மேல பொறாமைப்பட்டு, யாரோ ஏதோ கதை கட்டி விட்டிருக்காங்க.''

''மத்தவங்க நம்மளைப் பார்த்து பொறாமை படற அளவுக்கா நாம வாழ்ந்துக் கிட்டிருக்கோம்? என்னமோ குடி இருக்க பெரிய பங்களா, ஆளாளுக்கு ஒரு கார், வெளிநாட்டு பயணம்ன்னு நாம வாழற மாதிரியும் அதைப் பார்த்து அடுத்தவங்க பொறாமை படற மாதிரியும்ல பேசறீங்க? வேடிக்கையாத்தான் இருக்கு. நீங்க நிறைய சம்பாதிக்காட்டாலும் பரவாயில்லைங்க. நேர்மையான வழியில மட்டும் சம்பாதிங்க. பணம்... பணம்ன்னு நான் பறக்கறதுனால நீங்க தவறான வழிகள்ல ஈடுபட்டு, சிக்கல்ல மாட்டிக்கக் கூடாது. சராசரி பெண்களுக்குரிய துணிமணி, நகை நட்டுங்கன்னுதான் ஆசைப்பட்டேன். ஏதோ கொஞ்சம் நாக்குக்கு அடிமையாகி ஹோட்டல் சாப்பாடுக்கு ஆசைப்படறேன். இனிமேல் என்னை நான் கட்டுப்படுத்திக்கறேன்....''

வெங்கட் குறுக்கிட்டான்.

''என்ன நீ! நான் நேர்மை தவறி இழிவான தொழில் செய்றவன்னே முடிவு பண்ணிட்ட மாதிரில்ல பேசற?...''

''இழிவானங்கற வார்த்தையே என்னோட வாய்ல இருந்து வரலை. கண்ணால காண்பதும் பொய். காதால கேக்கறதும் பொய். தீர விசாரிக்கறது மட்டும்தான் உண்மைன்னு சொல்லுவாங்க. எங்க அப்பா சொன்னார்ங்கறதுக்காக, அதை அப்பிடியே நம்பி, உங்க கூட சண்டை போடறேனா? என்ன, ஏதுன்னுதானே விசாரிக்கறேன்? உங்களுக்கு ஒரு பாதிப்புன்னா... அது என்னையும், நம்ப மகன் ஆதித்யாவையும் சேர்த்துதானே பாதிக்கும்...?''

அருணாவின் பேச்சில் இருந்த உண்மைகளும், நியாயங்களும் வெங்கட்டின் மனதை சுட்டெரித்தன.

'தன்னுடைய இளவயது ஆசைகளைக்கூட தியாகம் செய்கிற அளவுக்கு இவ்ளவு நல்ல பொண்ணா இருக்காளே... இவளை புரிஞ்சுக்க எனக்கு இத்தனை நாளாயிடுச்சா?!'... வெங்கட்டின் மனதிற்குள் ரகஸியமாய் நினைவலைகள் புரண்டன.

''என்னங்க? நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டிருக்கீங்க?...'' அருணாவின் குரல் கேட்டு தன்னை சுதாரித்துக் கொண்டான் வெங்கட்.

''நாம நல்லபடியா வாழலாம் அருணா. நீ கவலைப்படாதே'' என்று ஆறுதலாக அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஹோம் வெர்க் முடித்துவிட்ட ஆதித்யா, வெங்கட்டின் முதுகின் மீது தொற்றிக் கொண்டான். ஆதித்யாவுடன் விளையாட ஆரம்பித்தான் வெங்கட்.


சிகரெட் புகையை வளையம் வளையமாக விட்டு, அதை வேடிக்கை பார்த்தபடியே சிந்தனை வயப்பட்டிருந்தான் சுதாகர். புருவத்தின் மத்தியில் இரண்டு கோடுகள் போட்டிருக்க, சிகரெட்டின் நிகோட்டின் கறை படிந்த உதடுகள் கறுத்துப் போயிருக்க, தீய வழியிலேயே அவளது எண்ணங்கள் இருந்தபடியாலும், அவனது செயல்கள் தீயனவாக இருந்தபடியாலும் அவனது முகம், வயதுக்கு மீறிய முதுமையை அடைந்திருந்தது. நல்ல மனம் இருந்தால் தோற்றமும் நன்றாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாத மனிதனான அவன், தன் தவறான பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தான். அவன் வரச் சொல்லி மொபைலில் அழைத்தபடியால் அங்கே வந்த பாவனா, சிகரெட் புகையின் நெடி தாங்காமல் முகத்தை சுளித்தாள்.

''சுதாகர்... ப்ளீஸ்... சிகரெட்டைத் தூக்கி வீசறியா...?''

''வந்துட்டியா? வரும்போதே அதிகாரம் தூள் பறக்குது?!...''

''ப்ளீஸ்ன்னு கேக்கறதுக்கு உன்னோட அகராதியில அதிகாரம்ன்னு அர்த்தமா?....''

''அர்த்தமோ... அனர்த்தமோ...'' என்றபடியே சிகரெட்டை வாயிலிருந்து எடுத்து வீசினான் சுதாகர். தொடர்ந்தான் தன் கேள்வியை.

''என்ன உன்னோட ஃபேஷியல் வசியம், அபிலாஷ்- சரிதா ஜோடிகிட்ட ஒண்ணும் நடக்கலை போலிருக்கு?!''

''இது ஒண்ணும் சின்ன பிள்ளைங்க விளையாடற கண்ணாமூச்சி ஆட்டம் இல்லை. ஒரு தம்பதியோட தாம்பத்யத்தை ஆட்டம் காண வைக்கற ஆபத்தான வேலை. வெடிகுண்டு வைக்கற வேலையைவிட கவனமா செய்ய வேண்டிய வேலை. ரொம்ப சுலபமா ஒண்ணும் நடக்கலை அது இதுன்னு பெனாத்திக்கிட்டிருக்க?''

''பின்னே என்ன? அந்த சரிதாகிட்ட சதாசர்வமும் மந்திரம் ஓதிக்கிட்டிருந்தா போதுமா? மந்திரத்தோட பலன் தெரிய வேண்டாமா?''

''என்ன இது? மந்திரம்.... தந்திரம்ன்னுகிட்டு? சூமந்திரக்காளி போட்டு மாயாஜால வித்தை காட்டறவளா நான்? நல்ல மனசை கலைக்கறோமோங்கற மனக் கஷ்டத்தோட போராடிக்கிட்டிருக்கேன். ஆனா அதே சமயம் உன்கிட்ட வாங்கப் போற தொகைக்கான நடவடிக்கைகளை தவறாம செஞ்சுகிட்டுதானே இருக்கேன். சும்மா என்னை தொந்தரவு பண்ணாதே. என்னை என்னோட போக்குல விட்டுடு. உன்னோட திட்டப்படி, எல்லாமே நடக்கும்.''

''கோவிச்சுக்காத பாவனா. என்னை ஏமாத்தின அந்த சரிதா... அவ புருஷனோட சந்தோஷமா வாழவே கூடாது. அவங்க பிரியணும். அதைப் பார்த்து நான் ரஸிக்கணும். எம் மனசுல ஆசை விதை விதைச்சுட்டு அந்த ஆசை, மரமாகி வளர்ந்தப்புறம் வேரோட வெட்டி சாய்ச்சுட்டா. அதே போல அவ அமோகமா வாழற அந்த குடும்ப வாழ்க்கை நாசமாகணும். அந்த நாளை சீக்கிரமா பார்க்கணும்...''

''சீக்கிரமா பார்க்கறதுக்கு இது என்ன வாண வேடிக்கையா? தீ பத்தவச்ச உடனே புஸ்னு எழும்பற பூவாணமா? கல்யாணம்ங்கற புனிதமான சடங்கைப் பத்தியும், இல்லறம்ங்கற சந்தோஷமான வாழ்க்கையைப் பத்தியும் உனக்கு என்ன தெரியும்? உனக்கு தெரிஞ்சதெல்லாம் பணமும் பகட்டும்தானே? பாசத்தைப் பத்தியும், குடும்ப நேயத்தைப் பத்தியும் உனக்கு என்ன தெரியும்?''

''சும்மா நிறுத்து பாவனா... அன்பு, காதல், அதோட வெற்றி, சந்தோஷம் இதெல்லாம் தேவைப்படற சராசரி மனுஷன்தான் நானும். சின்னஞ்சிறு வயசுல இருந்து அம்மாவோட அன்புக்காக ஏங்கினவன் நான். அப்பாவோட தோளுக்காக ஏங்கினவன் நான். அண்ணன், அக்கா, தம்பிகளோட அரவணைப்புக்காக ஏங்கினவன் நான். 'அம்மா'ன்னு கூப்பிட தாய் இல்லை. மகனேன்னு கூப்பிட அப்பா இல்லை. யாருமே இல்லாம... தானாக வளர்ந்த மனிதன் நான். வறட்சியாகிப் போன என் மனசு, புரட்சி செய்ய ஆரம்பிச்சது. அம்மா, அப்பாவைத் தவிர மத்த அனைத்தையும் விலைக்கு வாங்கலாம்ன்னு எனக்கு நானே ஒரு மூர்க்கத்தனத்தை வளர்த்துக்கிட்டேன். மனசாட்சியை மறைய வச்சேன். களவு, ஏமாற்றிப் பிழைக்கறதுன்னு என்னோட 'ரூட்'டை புரட்டிப் போட்டேன். என்னோட அடாத நடவடிக்கைகளைப் பார்த்து அடங்காதவங்க கூட அடங்கினாங்க. பயத்துல மடங்கினாங்க. என்னோட அந்த முரட்டுத்தனம்தான் மத்தவங்க என்னைப் பார்த்து பயப்பட வைக்குதுன்னு புரிஞ்சுக்கிட்ட நான், மேல மேல வன்முறைகளை செய்ய ஆரம்பிச்சேன். அதில எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் குடுத்தது பணம்தான். நேர்வழியில வருதோ... குறுக்கு வழியில வருதோ...

பணம்தான் பிரதானம்ன்னு புரிஞ்சுக்கிட்ட நான், குறுக்கு வழிதான் சுலபமான வழின்னு தெரிஞ்சு. அந்த வழியில நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். பணம் எனக்கு குடுக்கற சந்தோஷம் வேற எதிலயும் இல்லை. பெண்களோட அத்யாவசிய தேவைகளைப் புரிஞ்சுகிட்ட நான், என்னோட திட்டங்களை பெண்களை மையமா வச்சு தீட்டினேன். தொடர்ந்து வேற பல வழிகளில்லயும் என்னோட கபட புத்தியை தீட்டினேன். வெற்றிடமா இருந்த என் மனசுல சரிதா வந்து சேர்ந்தா. ஆனா... அதுவும் பாதியில் அறுந்த காத்தாடி போல ஆடிப்போச்சு.....''

குறுக்கிட்டாள் பாவனா.

''ஆடி அடங்கறதுதான் வாழ்க்கை. ஆறடி நிலம்தான் சொந்தம்ன்'னு கவிஞர்கள் எழுதி, இருக்காங்க. இந்த உலகத்துல உயிரோட வாழற வரைக்கும் நம்பளால முடிஞ்ச நல்லதை செய்யணும். சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் சாக்கா வச்சுக்கிட்டு நாம செய்யற தப்புக்களை நியாயப்படுத்தக் கூடாது...''

பலமாக சிரித்தபடி பேச ஆரம்பித்தான் சுதாகர்.

''சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் குற்றம் சொல்லி சம்பாதிக்கற நீ... எனக்கு அறிவுரை சொல்றியா?''

''அனுபவங்கள் குடுக்கற பாடங்கள்தானே அறிவுரைகளா வெளிப்படுது? படிச்சிருந்தா... கிடைச்ச வேலையை செஞ்சு பிழைச்சுருப்பேன். கௌரவம் பார்க்காம வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு செய்யப் போன இடத்துல பாலியல் தொல்லையால நான் அவதிப்பட்ட அவலம்தான் உனக்கு தெரியுமே? அழகா பிறந்தது என்னோட அதிர்ஷ்டம்னு சின்ன வயசுல நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கேன். ஆனா அழகா பிறந்தது என்னோட துரதிர்ஷ்டம்ன்னு வளர வளர... புரிஞ்சுக்கிட்டு வேதனைப்பட்டுட்டிருக்கேன். கல்விதான் காலத்துக்கும் கை குடுக்கும். கல்விதான் கஷ்டகாலத்துல கை குடுக்கும்ன்னு பெரியவங்க சொன்னாங்க. அவங்க சொன்னபடி... படிக்கறதுக்கு அந்த ஆண்டவன் படி அளக்கலியே? படிப்பு இல்லாததுனால... நயவஞ்சகர்களிட்ட சிக்கிக்கிட்டு சீரழிஞ்சு போனேன். 'செத்த நாய் மேல எத்தனை லாரி ஏறினா என்ன'ன்னு டைரக்டர் பாக்யராஜ் ஸார் ஒரு படத்துல வசனம் எழுதி, பேசி இருப்பாரு. அது மாதிரி ஒரு தடவை நாசமாகிப்போன கற்பு, எத்தனை தடவை நாசமாகிப் போனா... என்னன்னு விரக்தியாயடுச்சு. படிக்க வசதி இல்லாத ஒரு வறுமையான சூழ்நிலையில... படுக்கையில பத்து பேரோட படுத்துக் கிடக்கற விதியாயிடுச்சு. அந்த இழிவான வருமானம் இனி வேண்டாம்னுதானே மனசாட்சியை அடகு வச்சு, சீ சொல்ற இந்த அநியாயமான காரியத்தை செய்யத் துணிஞ்சிருக்கேன். பகட்டுக்கும், பணக்கார ஆசைகளுக்கும் ஆளாகியா நான் அந்த மோசமான வழிக்குப் போனேன்? ஒரு பொண்ணு, தன்னோட மானத்தை வித்து வந்த வருமானத்தை, பதுக்கி வச்சுக்கிட்டவன்தானே நீ? அந்தப் பணத்தை கேஸ் போட்டு திரும்ப கேட்கறதுக்கு கடன் பத்திரமா இருக்கு என்கிட்ட? உன்னோட பழி வாங்கற படலத்தை வெற்றிகரமா முடிச்சப்பறம் அதுக்கு பேசின தொகையை உன்கிட்ட இருந்து வாங்கின அடுத்த நிமிஷத்துல இருந்து நீ யாரோ... நான் யாரோ...''

அதற்கு மேல் பேச அவளது கோப நெருப்பு, தண்ணீர் பட்ட தணலாய் அணைந்து போய், அந்தத் தண்ணீர் அவளது கண்களில் கண்ணீராய் வழிந்தது. அவளது உள்ளம் உடைந்து நொறுங்கிப் போய் கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்தது.

''ஸாரி... பாவனா... நம்ம பேச்சு இப்பிடி ஒரு பிரச்னையில முடியும்ன்னு நான் எதிர்பார்க்கலை...''

அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாத பாவனா, எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.


கடற்கரை சாலையின் நடைபாதையில் வந்து கொண்டிருந்தாள் பாவனா. வாழ்க்கையில் வழுக்கி விழுந்து வழி மாறி தடம் புரண்டுவிட்ட தன் விதியை எண்ணி நொந்து கொண்டபடியே நடந்து கொண்டிருந்தாள்.

'அம்மா' என்கிற ஒரு ஜீவன் இல்லாமல் நான் படும் பாடு... என் துன்பங்களை பகிர்ந்து கொள்ள தாயின் மடி இல்லாத கொடுமை! அப்பா இல்லாமல் கூட வளர்ந்து விடலாம், வாழலாம். ஆனா... அம்மா இல்லாமல் வளர்வதும், வாழ்வதும் துயரம் நிறைந்தது. 'அம்மா... எங்களை விட்டுட்டு எங்கோ மேல போயிட்டியே. நான் அழுவதைப் பார்க்க உன் மனம் ஏற்குமா? நீ இருந்திருந்தா நான் ஏன் அழப் போறேன்?! அம்மா... அம்மா...'

பெற்ற தாயின் இழப்பை எண்ணி, மனம் தவிக்க, எதிர்காலம் பற்றிய திகிலை எண்ணித் தகிக்க, சுதாகரின் நாடகத்தில் நடிப்பது எதில் போய் முடியுமோ என்று உள்ளம் துடிக்க, இயந்திர கதியாய் நடந்து கொண்டிருந்தவளின் கவனத்தை திடீரென கலைத்தது ஒரு காட்சி.

சாலையில் எதிர்ப்புறம், வயதான ஒரு அம்மா, தெருவை கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். 'சர்... சர்....' என்று வாகனங்கள் எதையும் கவனிக்காமல் விரைந்து ஓடிக் கொண்டிருந்தன.

சாலையைக் கடக்க முயன்ற அந்த அம்மா, வேகமாக வந்து கொண்டிருந்த காரை கவனிக்கவில்லை. அந்தக் காரை ஓட்டி வந்தவனும் அந்த அம்மாவை கவனிக்கவில்லை. இதை கவனித்துக் கொண்டிருந்த பாவனா, வேகமாக பாய்ந்தோடிச் சென்று அந்த அம்மாவைத் தன் பக்கம் இழுத்து நிறுத்தி காப்பாற்றினாள். அதன் மூலம் நிகழவிருந்த பெரிய விபத்தையும் தவிர்த்தாள். தெருவில் டயர் தேயும் பெரும் ஒலியுடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான் அந்தக் காரை ஓட்டி வந்தவன்.

''வயசானவங்களை ரோட்டை க்ராஸ் பண்ண விட்டுட்டு இப்பிடித்தான் அலட்சியமா இருக்கறதா?'' என்று பாவனாவை திட்டினான்.

''அந்தப் பொண்ணை திட்டாதேப்பா. யார் பெத்த பிள்ளையோ... அவதான் என்னை காப்பாத்தினா...''

''சரி... சரி... பார்த்து போங்க'' என்று அந்த ஆள் காரில் ஏறி கிளம்பினான்.

பயத்தில் இதயம் படபடக்கப் பேசிய மூதாட்டியை ஆறுதல் படுத்தினாள் பாவனா.

''பயப்படாதீங்க... வந்து இப்பிடி உட்காருங்க'' என்று கூறியபடி கைத்தாங்கலாகப் பிடித்து அனைத்து வந்து உட்கார வைத்தாள். பாக்கெட் தண்ணீர் வாங்கிக் குடிக்க வைத்தாள்.

தண்ணீர் குடித்ததும் சற்று தெளிர்ச்சி பெற்ற அந்த மூதாட்டி, நன்றியுடன் பாவனாவைப் பார்த்தாள்.

''நீ நல்லா இருப்பம்மா. அந்தக் கார்ல அடி பட்டிருந்தா... அநாதையா தெருவுல செத்துக் கிடந்திருப்பேன். உண்மையிலேயே அனாதையா இருந்தா பரவாயில்லை. எனக்கு ஒரு மகன் இருக்கான். அவன் இருந்தும் நான் அப்பிடி செத்துப் போயிட்டா... அவனுக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கும்?! ''

''என்னது? மகன் இருந்துமா இப்பிடி தனியா வெளில வர்றீங்க? உங்களைப் பார்த்தா ஏதோ... உடம்புக்கு முடியாத மாதிரி தெரியுதே? ஏன் உங்க மகனோட துணை இல்லாம வெளில வர்றீங்க? ''

''அவனுக்காகத்தான்மா. அவன் சொல்ல சொல்ல கேட்காம தனியா கிளம்பி வந்தேன். என் மகன் ஹோட்டல்ல சர்வரா வேலை செய்யறான். சம்பளம் கம்மிதான். அவனுக்கு இரக்க சுபாவம். தாராள மனசு. உதவி செய்யற குணம். இங்கே கடற்கரையில எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்கற அஞ்சலை, பஜ்ஜிக் கடை போடறவ. அவளுக்கு ஏதோ பணக்கஷ்டம்ன்னு சம்பளம் வந்ததும் அதில இருந்து குடுத்தான் என் மகன். அவ அதைத் திருப்பித் தரலை. என் பையனுக்கு மொபெட்ல பெட்ரோல் போடக்கூட காசு இல்லை. வீட்டு வாடகை குடுக்காததுனால வீட்டுக்காரம்மா வந்து கத்திட்டு போனாங்க. அதனால அஞ்சலையைப் பார்த்து பணத்தைக் கேட்கலாமேன்னு கிளம்பி வந்தேன். அவ வீட்டுக்கிட்ட அவளைப் பார்க்க முடியறதில்லை. எண்ணெய், மாவு வாங்க, வாழைக்காய் வாங்கன்னு கடை கண்ணிக்கு போயிடறா. அவளைப் பார்க்க வந்தப்பதான் கார்ல மாட்டிக்கப் பார்த்தேன். புண்ணியவதி நீ காப்பாத்திட்ட...''

அப்போது அவர்களை நோக்கி ஒரு இளைஞன் வந்தான்.

''என்னம்மா நீ? உனக்கு எத்தனை தடவை சொல்றது? உடம்புக்கு முடியாத நிலைமையில தனியா வெளிய வராதன்னு? இப்பதான் அஞ்சலை அக்காவைப் பார்த்து பணம் கேட்டுட்டு வரேன். வர்ற வழியில நீ இங்க இருக்க?! அது சரி... இவங்க யாரு?!''

''படபடன்னு பேசிக்கிட்டே போனா... நான் என்னப்பா சொல்றது? வண்டிக்கு பெட்ரோல் போடக்கூட காசு இல்லாம அல்லாடறியேன்னு நானும் அஞ்சலையைப் பார்க்கத்தான் வந்தேன். தெருவைத் தாண்டி வரும்போது ஒரு கார்ல மாட்டிக்கப் பார்த்தேன். நல்ல வேளையா இந்தப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்து காப்பாத்துச்சு...'' என்று கூறிய அந்த அம்மா பாவனாவிடம் திரும்பினாள்.

''உன் பேரைக் கூட கேக்கலியேம்மா?''

''என் பேர் பாவனா...''

''என் பேர் வஸந்த். அம்மாவை சரியான நேரத்துல, விபத்துல இருந்து காப்பாத்தி இருக்கீங்க. தேங்க்ஸ்...''

''என் கண் முன்னால நடக்க இருந்த ஒரு விபத்துல இருந்து இவங்களைக் காப்பாத்தறதுக்கு கடவுள் அனுக்கிரகம் புரிஞ்சிருக்கார். அது சரி, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னா அவங்க கூட இருந்து பார்த்துக்கக் கூடாதா?...''

''நல்ல கேள்விதான் கேக்கறீங்க. நான் வேலை செய்யற ஹோட்டல்ல ஒரு நாள் லீவு போட்டா... அன்னிக்கு சம்பளத்தை குறைக்கறது மட்டுமில்ல எக்ஸ்ட்ராவா, நூறு ரூபா ஃபைன் போடுவாரு முதலாளி. அம்மாவை வீட்ல படுத்து ரெஸ்ட் எடும்மா. முதலாளிகிட்டே கேட்டுட்டு சீக்கிரமா வந்துடறேன்'னு சொல்லிட்டுதான் போனேன். சொன்ன மாதிரியே பெர்மிஷன் கேட்டுட்டு அஞ்சலை அக்காவை பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்ன்னு இங்கே வந்தேன். இங்கே என்னடான்னா... இந்தக் கூத்து நடந்திருக்கு...''

''நீங்க கையில காசு இல்லாம... செலவுக்கு கஷ்டப்படறீங்களேன்னு உங்க அம்மா தன்னோட கஷ்டத்தைப் பார்க்காம இவ்ளவு தூரம் வந்திருக்காங்க. நீங்க... அவங்க கஷ்டப்படக் கூடாதேன்னு பெர்மிஷன் போட்டுட்டு வந்திருக்கீங்க. ஆக மொத்தம் உங்க ரெண்டு பேரோட பாசப்பிணைப்புலதான் இந்த விஷயம் நடந்திருக்கு.''

இதைக் கேட்ட வஸந்த்தின் அம்மா விசாலம், பாவனாவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.

''நல்லா புரிஞ்சுக்கிட்டியேம்மா. புத்திசாலியான பொண்ணும்மா நீ...''

''இந்த அளவுக்கு பாராட்டும்படியா நான் இன்னும் எதுவும் பெரிசா செஞ்சுடலை...''

''மத்தவங்களுக்கு உதவி செய்யறதே பெரிய விஷயம்தான்மா. நான் யார்னே உனக்குத் தெரியாது. முன்ன பின்ன முகம் அறியாத எனக்கு ஓடி வந்து உதவி செஞ்ச. என்னோட ஆயுசுக்கும் இதை மறக்கவே மாட்டேன்மா'' பேசிக்கொண்டே போனவளைத் தடுத்தான் வஸந்த்.

''போதும்மா விட்டா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்ப. அவங்க என்ன வேலையா வந்தாங்களோ... அவங்க நேரத்தை நாம ஏன் கெடுக்கணும்? வாம்மா நாம கிளம்பலாம்'' என்றவன், பாவனாவை பார்த்து, ''தேங்க்ஸ்ங்கற வார்த்தை சாதாரணமானது பாவனா. ஆனா அதை சொல்லாமப் போனா ரொம்ப தப்பாயிடும், எங்க அம்மாவோட உயிரைக் காப்பாத்தியதுக்கு ரொம்ப நன்றி...'' என்று கூறிய வஸந்த், பாவனாவின் கையில் இருந்த மொபைலைப் பார்த்தான்.

''உங்க மொபைல் நம்பர் குடுக்கலாம்னா குடுங்க ப்ளீஸ்...''

''ஓ... தரேனே...'' என்ற பாவனா, தன் மொபைல் நம்பர்களைக் கூறினாள்.

தன்னுடைய மொபைலில் அவனது நம்பர்களைக் குறித்துக் கொண்டபின் அவனது அம்மாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். பாவனாவும் பஸ் ஸ்டேன்டை நோக்கி நடந்தாள்.


பல சிந்தனைகளோடு காரை ஓட்டிக் கொண்டு வந்த சரிதா, பெண்களின் உடைகள், ஜாக்கெட் இவற்றிற்கு அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து வரும் 'ஸ்ரீ டிஸைனர்ஸ்' நிறுவனத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு, இறங்கினாள்.

'ச்ச... கார் ஓட்டும்போது நான் ஏன் இப்பிடி வேற எது எதையோ யோசிச்சுக்கிட்டே ஓட்டறேன்? முன்னயெல்லாம் வேற எந்த யோசனையும் இல்லாம எவ்ளவு கவனமா ஓட்டுவேன்? வர்ற வழியில ஆட்டோவுல இடிக்கப் பார்த்தேனே... நல்ல வேளை... இடிக்காம... சமாளிச்சுட்டேன்' தைக்கக் கொடுப்பதற்காக துணிகள் கொண்டு வந்த பையை எடுக்காமல் இறங்கி விட்டபடியால் மீண்டும் காரைத் திறந்து பையை எடுத்தாள்.

பையை எடுத்துக் கொண்டு ஸ்ரீ டிஸைனர்ஸ்க்குள் நுழைந்தாள் சரிதா. அங்கே பல இளம் பெண்கள் அழகிய கை வேலைப்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். அழகிய பட்டுத் துணிகளில், கல், முத்துக்கள், சமிக்கி, மணிகள் மற்றும் தங்க வண்ண நூல் இவற்றைக் கொண்டு மிகமிக நேர்த்தியாக, கலை நயமான வேலைப்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அந்த நிறுவனத்தை திறம்பட நடத்தி வரும் பூர்ணிமா, அந்தப் பெண்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது நாத்தனார் விஜியும் டிஸைன் புத்தகங்களை, வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

சில பெண்கள், தங்கள் துணிகளில் எம்ப்ராய்டரி போடுவதற்குரிய டிஸைன்களை அங்கிருந்த கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தனர். கம்ப்யூட்டரில் இருந்த ஏகப்பட்ட டிஸைன்களை ஒவ்வொன்றாக அங்கிருந்த இன்னொரு பெண் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

சினிமா நடிகைகள் சிலருக்கு செய்து கொடுத்த டிஸைன்களையும் காட்டினாள். அங்கே கலைநயம் காணப்பட்டது.

அங்கே வந்து கொண்டிருந்த சரிதாவைப் பார்த்ததும் பூர்ணிமா, அவளை இன்முகத்துடன் வரவேற்றார்.

''ஹாய்... சரிதா....''

''ஹாய் பூர்ணிமா மேம்...''

''என்ன சரிதா... எப்பிடி இருக்கே? அபிலாஷ் ம்யூஸிக் பண்ற அத்தனை படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாயிட்டிருக்கு?... எங்க சாந்துனுவோட அடுத்த பட ப்ரொட்யூஸர் கூட அபிலாஷைத்தான் ம்யூஸிக் பண்ணச் சொல்லப் போறாராம்...''

''அப்பிடியா மேம்? இப்ப புதுசா ப்ரொட்யூஸர் பழனிவேல் ஸாரோட படத்துக்கு டேட்ஸ் குடுத்திருக்கறதா அபிலாஷ் சொன்னார்.''

''ஓ வெரி குட். அபிலாஷ்க்கு முதல் படம் குடுத்ததே அவர்தானே?''

''ஆமா மேம். அதனால அவருக்கு டேட்ஸ் குடுத்தே ஆக வேண்டியதிருக்கு...''

''அபிலாஷூக்கு நான் காங்க்ராஜுலேஷன்ஸ் சொன்னேன்னு சொல்லு சரிதா...''

''நிச்சயமா சொல்றேன் மேம்.''

''சரி, என்ன தைக்கணும்?''

''பட்டு புடவை கொண்டு வந்திருக்கேன். அதில மணியும் சமிக்கியும் சேர்த்து வச்சு தைக்கணும் மேம்.''

''சரி, வந்து உட்கார் சரிதா. டிஸைன் பார்க்கலாம்'' என்ற பூர்ணிமா, சரிதாவிடம் புடவையை வாங்கினார். அதிலுள்ள பார்டர் டிஸைனுக்குப் பொருத்தமாக ஒரு வெள்ளை பேப்பரில் அவரே வரைந்து காண்பித்தார். அவர் வரைந்த டிஸைன் மிக அழகாக இருந்தது. மற்றொரு புடவைக்கும் டிஸைனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து விட்டு, பூர்ணிமாவிடம் விடைபெற்று கிளம்பினாள் சரிதா.

''அவசரமா வேண்டியதிருக்குதா சரிதா? இந்த டிஸைனுக்கு நிறைய வேலை இருக்கு. அதனால கேட்டேன்.''

''அவசரம் ஒண்ணுமில்ல மேம். இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னால ஸ்பென்ஸர்ஸ்ல ரெடிமேடா கொஞ்சம் சுடிதார் எடுத்தேன். அதனால இப்போதைக்கு அவசரம் இல்லை.''

''ஓ.கே. ரெடியானதும் உன்னோட மொபைல்ல கூப்பிடறேன்.''

''சரி மேம். தேங்க்யூ....''

வாசல் வரை வந்து வழி அனுப்பினார் பூர்ணிமா பாக்யராஜ். அங்கிருந்து வெளியே வந்தாள் சரிதா.

அவளது கார் அருகே சுதாகர் நின்றிருப்பதைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தாள்.

''நீயா...?''

''நானேதான்... அன்னிக்கு ஆஞ்சநேயர் கோயில்ல பார்த்தப்ப, மறுநாள் கோவில் பக்கம் வந்து பணத்தைக் குடுக்கறதா சொல்லிட்டுப் போன நீ.... இன்னிக்கு வரைக்கும் என் கண்ல மண்ணைத் தூவிக்கிட்டிருக்க. உன்னோட மொபைல் நம்பரைத் தர மறுத்துட்ட. 'நிச்சயமா பணத்தைக் கொண்டு வந்து தந்துடுவேன். எனக்கு ஃபோன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை'ன்னு உறுதியா சொன்னியே... உளவாளி போல உன்னைத் தொடர்ந்து வந்து வாங்கிக்கணுமா? அல்லது என்னை ஏமாத்திடலாம்ன்னு திட்டம் போட்டிருக்கியா?''

''ஏமாத்தறதா? உன்னையா? நீதானே மத்த எல்லாரையும் ஏமாத்தறே? அனாவசியமா உனக்கு ஏன் குடுக்கணும்ன்னுதான் குடுக்கலை...''

''அநாவசியமா... அத்யாவசியமாங்கறதை நீயே புரிஞ்சுக்கற மாதிரி என்னால என்ன வேண்ணாலும் பண்ண முடியும். ஆனா... அந்த அளவுக்கு போக வேண்டாமேன்னு பார்க்கறேன். என்னமோ பணத்துக்காக அபிலாஷை கல்யாணம் பண்ணிக்கலைன்னு வீராப்பு பேசினியே? இப்பிடி பணத்த பதுக்கி வச்சிக்கலாம்ன்னு நினைக்கற உனக்கு பண ஆசை இல்லைனு சொல்றது உனக்கே வெட்கமா இல்லை?''

''ஒரு பொண்ணுகிட்ட, இவ்ளவு மட்டமா பேசி, அவளை ப்ளாக்மெயில் பண்ணி பணம் பறிக்கற உனக்கு வெட்கமா இல்லை?''

''நான் ஆம்பளை. எனக்கு எதுக்கு வெட்கம்? என்னை வேதனைப்படுத்திய நீ... இவ்ளவு தைரியமா... சந்தோஷமா... ஜாலியா... காரை எடுத்துக்கிட்டு ஊரை சுத்திக்கிட்டிருக்க, பிரபல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷேரட மனைவிங்கற பேர்ல. நீ ஊரை ஏமாத்தி உலையில் போடலாம். 'உள்ளுக்குள்ள ஒருத்தனை நினைச்சு, அவன் கூட உருகி உருகி பழகிட்டு, வேற ஒருத்தனை கைப்பிடிச்சு வாழற வஞ்சகக்காரி நீ'ன்னு இந்த ஸொஸைட்டிக்கும், சினிமா உலகத்துக்கும் தெரிய வைக்கறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது. உன் புருஷனோட மானம் காத்துல பறக்கும். கப்பல் ஏறும். எது வசதி? நான் கேட்ட பணத்தை குடுத்து நம்ம அக்ரிமெண்ட்டை ஸெட்டில் பண்றதா... அல்லது நான் சொன்னபடி உன் குடும்ப கௌரவத்தைக் குலைக்கறதா?''

''ஐய்யோ... உன் மனசாட்சியைத் தொட்டு கேட்டுப் பாரு. என் மேல ஏதாவது தப்பு இருக்கான்னு? நல்லவனா நடிச்சது நீ. என்னை நம்ப வச்சது நீ. மோசம் பண்ணினது நீ.''

''நானா காதலிச்ச ஒரு மோசடிப் பேர்வழியான உன்னை ஒதுக்கிட்டு,  தானா தேடி வந்த ஒரு தங்கமான வாழ்க்கையை ஏத்துக்கிட்டது எந்த வகையிலயும் தப்பே இல்லை...?''

''அந்த தங்கமான வாழ்க்கையில, உனக்கு கிடைச்சிருக்கற தங்கச் சுரங்கத்துல இருந்து கொஞ்சம் தங்கத்தை சுரண்டிக் குடுத்தா கூட என்னோட தேவைக்கு அது போதுமே...''

இவர்கள் இருவரும் தெருவில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பதை அங்கே போய்க் கொண்டிருந்தவர்கள் கவனிப்பதைக் கண்ட சரிதா, கடுமையான குரலில் பேச ஆரம்பித்தாள்.

''நாலு பேர் கவனிக்கற மாதிரி இப்பிடி நடுத் தெருவுல வச்சு பேசறியே...?''

''அப்போ? வா... உன் பங்களாவுக்கு போகலாம். நடு வீட்ல... நடு ஹால்ல... உட்கார்ந்து பேசலாம்...''

நக்கலாகப் பேசிய சுதாகரைப் பார்த்து எரிச்சல் அடைந்தாள் சரிதா. அவனை முறைத்துப் பார்த்தாள்.

''உன்னோட முறைப்பெல்லாம் என்னை ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு பணத்தைக் குடுத்தா... நான் பாட்டுக்கு உன் வழிக்கே வராம போய்க்கிட்டே இருப்பேன்... இல்லைன்னா... உன்னோட கடந்த கால காதலுக்குக்குரிய சாட்சிகளை உன்னோட அன்புக் கணவன் அபிலாஷ்ட்ட காண்பிச்சு, உன்னோட அந்தரங்கத்தை அவனுக்கு அம்பலப்படுத்திடுவேன்.''

''ஷட் அப்...'' அவளையும் அறியாமல் குரல் ஓங்கப் பேசிவிட்டாள் சரிதா. அங்கே போகும் சிலர் மறுபடியும் இவர்களை வித்தியாசமாக... கவனித்தபடி சென்றனர்.

''நாம அன்னைக்கு பேசினபடி உனக்கு பணம் வேணும். அவ்ளவுதானே? நாளைக்கு இதே நேரத்துல லயோலா காலேஜ் போற வழியில இருக்கற சர்ச்சுக்கு வந்துடு. அங்கே கார் பார்க்கிங்ல வச்சு உனக்கு குடுத்துடறேன்.''

''மறுபடியும் 'நாளைக்கு'ங்கற வாக்குறுதியா 'நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்' கதைதானா எனக்கு. இன்னிக்கு... இப்பவே வேணும்.''

''இப்பவே... அவ்ளவு பணம் எங்கிட்ட எப்பிடி இருக்கும்? வீட்ல இருந்துதான் எடுக்கணும். சாயாங்காலம் நாலு மணிக்கு நான் சொன்ன இடத்துக்கு வந்துடு. உனக்கு குடுக்க வேண்டியதை குடுத்து முடிச்சு... உனக்கு ஒரு தலை முழுக்கும் போட்டுடறேன். அதுக்கப்புறம் நீ என்னைத் தேடி வரக்கூடாது. என்னை ஃபாலோ பண்ணக் கூடாது...''

''முதல்ல... குடுத்த வாக்கை காப்பாத்து... கண்டிஷன் எல்லாம் அப்புறம் போடு. அன்னிக்கு நீ உன்னோட டெலிபோன் நம்பரை தர மாட்டேன்னு சொல்லிட்ட. நீ பணம் கொண்டு வந்து குடுத்துடுவன்னு நானும் நம்பிக்கையா இருந்துட்டேன். நீ பணம் கொண்டு வரலை. அதனால... இப்ப எனக்கு உன்னோட மொபைல் நம்பரை குடு...''

''ம்கூம்...'' அவசரமாய் மறுத்தாள் சரிதா.

''சரியா... நாலு மணிக்கு பணத்தோட சர்ச்ல இருப்பேன். மொபைல் நம்பர் தரமாட்டேன்.''

''சரி... ஆனா சொன்னபடி நீ வரலைன்னா... உன்னோட வீடு தேடி வந்துடுவேன். ஜாக்கிரதை.''

''மிரட்டினது போதும். நீ கிளம்பு.'' என்று கூறிய சரிதா, காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தாள். அவளது கோப உணர்வு அவள் காரை ஓட்டிய வேகத்தில் தெரிந்தது. கார் விரைந்தது.


பார்வதியின் மாத்திரைகளை ரகவாரியாகப் பிரித்து, நவீன மாத்திரை டப்பாகளில் எடுத்து தேதிவாரியாகப் போட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி.

''நேத்து வெண்ணிலா ஹோட்டலுக்கு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு அபிலாஷ் வந்திருப்பார் போலிருக்கு. அந்தப் படத்தோட ப்ரொட்யூசரும், டைரக்டரும் செம ஜொள்ளு பார்ட்டீஸ். அதனாலதான் அவனுக அவரை அங்கே இழுத்துக்கிட்டு வந்திருக்கானுங்க. என்னோட மொபைல்ல சார்ஜ் இல்லாததுனால ஹோட்டல் லைன்னுக்கு ஜெயராஜ் கூப்பிட்டிருந்தாரு. ரிஷப்ஷன்ல போய் பேசப் போகும்போது லாபியில அபிலாஷ், ப்ரொட்யூசர், டைரக்டர் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்த அபிலாஷ் என்கிட்ட வந்து பேசினார். படத்துக்காக அங்கே வந்ததாக சொன்னாரு.''

''அபிலாஷ் நல்ல மனுஷன். சரிதா குடுத்து வச்சவ...''

''ஆனா... சரிதா கொஞ்ச நாளா ஏதோ அப்செட் ஆகி இருக்காம்மா... ''

''உயிர்த்தோழிதானே... அவளா சொல்லட்டும்னு இருக்காம நீயே மனம் விட்டு கேட்க வேண்டியதுதானே? ''

''குமரன் ஸில்க்ஸ்-ல பார்த்தப்ப கூட என்கிட்டே ஒரு மாதிரியா பேசிட்டா. அவளுக்கு பர்த்-டே கிஃப்ட் வாங்கறதுக்குதான் நான் தற்செயலா அங்கே போனேன். அபிலாஷும் சரிதாவுக்கு பிறந்தநாள் புடவை வாங்கறதுக்காக அங்கே வந்திருந்தார்.''

''சரிதா பர்த்-டே எப்ப?''

''அக்டோபர் பத்தாம் தேதிம்மா...''

''மறக்காம அன்னிக்கு அவ பேர்ல கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு கிஃப்ட்டை எடுத்துக்கிட்டு அவளைப் போய் பாரு. எல்லாம் சரியாயிடும். சரிதா நல்ல பொண்ணு. நமக்கு துணிமணி... மளிகை சாமான்... அது இதுன்னு எவ்ளவோ உதவி செய்யறா. பணம் இருந்தாலும் மனசு வேணும்ல்ல...''

''பிஸினஸ் பண்றதுக்கு கூட ஹெல்ப் பண்றதா சொன்னா. நான் மறுத்துட்டேன். ஏதோ பொருளா குடுக்கறதை வாங்கிக்கலாம். ஆனா பெரிய அளவுல பணமெல்லாம் வாங்கிக்கக் கூடாதும்மா. பணம் பத்தும் செய்யும். அந்த பத்துல ஒண்ணு விரோதம். அதனால அவளோட நட்பு மட்டும் போதும்னு இருக்கறதுதான் நல்லது.''

''நமக்கு அந்த ஆண்டவன் வழி காட்டுவார். படுத்த படுக்கையா ஆயிட்டேனோன்னு நினைச்சேன். ஆனா கூடிய சீக்கிரம் நல்லா நடக்கலாம்னு டாக்டர் சொல்றாரு. எல்லாம் கடவுள் அருள்தானே தவிர வேறென்ன?''

''ஒரு பையன் மாதிரி நீதான் குடும்பத்தைத் தூணா தாங்கறே... மத்த பொண்ணுக மாதிரி நீயும் ஒருத்தன் கையில தாலி வாங்கி, அந்த வாழ்க்கை மூலமா உன் கையில் குழந்தை, குட்டியின்னு தவழனும்...''

''அம்மா, உன்னோட அந்த ஆசையெல்லாம் வந்தனா மூலமா நிறைவேறும்.''

''ரெண்டு கண்ணும் நல்லா தெரியணும்னுதானே நினைப்போம்?''

''ரெண்டு கண்ணும் தெரியாம இருக்கறதைவிட ஒரு கண் பார்வையிலகூட சமாளிச்சுக்கலாமேன்னும் நினைப்போமே. அது போல கடமைக்கு நான். உங்க ஆசைக்கு அவ.''

''என்னமோம்மா... குடும்பத்தலைவன்னு ஒருத்தன் இல்லாததுனால அந்தக் குடும்பம் நிர்க்கதியாயிடுச்சு பார்த்தியா?''

''என்னம்மா நிர்க்கதி? சுயமா நின்னு ஜெயிச்சு காட்டத்தான் நான் இருக்கேனே...''

''உன்னோட இந்த வயசு, மனசு, ஆசை, ஏக்கம் இதெல்லாம் எனக்கு புரியாதாம்மா? உன்னோட வயசைக் கடந்து வந்தவதானே நான்?''

''கட்டுப்பாடுன்னு ஒரு உணர்வையும் ஆண்டவன் குடுத்திருக்கானேம்மா. பிறக்கற எல்லா பெண்களும் கல்யாணம் கட்டி குழந்தை பெத்துக்கிட்டுதான் இருக்கணும்னு எந்த விதியும் கிடையாது.''

''என்னோட விதி... என் பொண்ணுக இப்பிடி கஷ்டப்படணும்ன்னு....''

''இப்ப புரியுதா? கல்யாணம் ஆகிட்டா மட்டும் போதாது. கட்டிக்கிட்டவன், குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்தணுமே. அப்பா உங்களை விட்டுட்டு ஓடிப் போயிட்டாரு. நீங்க தனி ஒரு ஆளா தனிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தா... ரெண்டு பொண்ணுங்களோட பாரமும் இருந்திருக்காது. குறுக்கு ஒடிய வேலை செஞ்சு... இப்பிடி அவஸ்தைப்பட வேண்டியது இருந்திருக்காது.''

பார்வதி, பெருமூச்சு விட்டபடி யோசித்தார்.

''என்னம்மா... நான் சொல்றது சரிதானே? அதைத்தானே யோசிக்கறீங்க?''

''ஆமாம்மா. ஆனாலும் நம்ப கலாச்சாரம், பாரம்பரியம், பெண்களுக்கு நடக்க வேண்டிய சடங்குகள், இதெல்லாம் அறவே விட்டுட முடியுமா?''

''பந்த பாசத்தை அறுத்து விட்டுடக் கூடிய மனப்பான்மையை மனசுல வளர்த்துக்கிட்டா... எந்த சூழ்நிலையிலயும் பெண்களால சமாளிக்க முடியும்... ''

''வாய் வார்த்தையால பேசறது ரொம்ப சுலபம்மா...''

''பொண்ணு மனசு வச்சா எல்லாமே... எதுவுமே சுலபம்தான்மா.''

''உன் கூட பேசி ஜெயிக்க முடியுமா? எனக்கு அம்மாவா இருக்க வேண்டியவ... பொண்ணா பொறந்துட்ட...''

''இப்பவும்... எப்பவும்... நான்... உங்களுக்கு அம்மாதான்மா. குழந்தைங்களைத்தான் தத்து எடுத்துக்கணுமா? பெற்றோரைக் கூட தத்து எடுத்துக்கலாமே.''

''உன்னை மாதிரி ஒரு மகளைப் பெத்தெடுக்க நான் ஈரேழு ஜென்மத்துக்கு குடுத்து வச்சிருக்கணும்.''

''அப்பிடி என்ன பெரிசா நான் செஞ்சுட்டேன்? சரி... சரி... நாளைக்கு டாக்டரைப் பார்க்கணும்...''

''சரிம்மா. சரிதாவோட பிறந்தநாள் அன்னிக்கு மறக்காம அவளுக்கு பிடிச்ச குண்டு மல்லிபூச்சரம் வாங்கிட்டுப் போம்மா.''

''சரிம்மா.''

'பிறந்த நாளுக்குள்ள சரிதாவோட 'மூட்' சரியாயிடுமா?' யோசித்தபடியே... பார்வதியின் 'மெடிக்கல் ரிப்போர்ட்' ஃபைலை எடுத்து வைக்கத் தயாரானாள் கயல்விழி.


யாருடனோ தன் மொபைலில் பேசிக் கொண்டிருந்த டாக்டர் சந்திரசேகர், தன் அறைக்குள் நுழைந்த கயல்விழியைப் பார்த்து உட்காரும்படி சைகை செய்தார்.

டாக்டர் சந்திரசேகர், முடநீக்கு இயல் துறையில் நிபுணர். மிகுந்த திறமைசாலி. மருந்துகள், மாத்திரைகளால் குணமாவதை விட சத்தான உணவுகளில் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துவார். அறுவை சிகிச்சை செய்வதில் அதீத நிபுணத்துவம் பெற்றவர். பிரபல மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிபவர். பேராற்றல் மிக்க இவரிடம் சிகிச்சைக்கு அம்மாவை அழைத்துப் போகும்படி கூறியவள் சரிதா. ஒரு சமயம் அவளுக்கு படிக்கட்டுகளில் இறங்கும்போது பலமாக அடிபட்டுவிட்டதால், இவரிடம் சிகிச்சை மேற்கொண்டதாகவும், மூன்றே வாரங்களில் எலும்பு முறிவை சரி பண்ணிவிட்டதாகவும் அவரைப் பற்றி கயல்விழியிடம் கூறி இருந்தாள் சரிதா.

டாக்டரின் மேஜைக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் கயல்விழி. மேஜை மீது சாம்பிள் மாத்திரை அட்டைகள், மருந்து கம்பெனிகள் கொடுத்த நாட்குறிப்பு புத்தகங்கள், ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதும் பேப்பர்கள், சில ஃபைல்கள், பேனாக்கள், சிறிய பேனா டார்ச்லைட்கள் ஆகியவை பரப்பி இருந்தன.

ஃபோன் பேசி முடித்த சந்திரசேகர், காதில் பொருத்தி இருந்த தன் மொபைலை எடுத்துக் கொண்டே புன்முறுவலுடன் கயல்விழியிடம் பேச ஆரம்பித்தார்.

''என்ன மிஸ் கயல்விழி... உங்க அம்மா எப்பிடி இருக்காங்க?''

''முதல்ல இருந்ததை விட இப்ப அம்மா எவ்ளவோ பரவாயில்லை டாக்டர். நாங்கதான் அவங்களை ரெஸ்ட்டா இருங்கன்னு சொல்லி படுக்க வச்சிருக்கோம். அவங்க வெளியில உட்கார்ந்திருக்காங்க ஸார். அவங்க உடல்நிலை பத்தி ஏதாவது அப்ஸெட் ஆகற மாதிரி நீங்க சொல்லிடக் கூடாதேன்னு அவங்களை வெளியில உட்கார வச்சுட்டு நான் மட்டும் உள்ளே வந்தேன்.''

''முதுகுக்கு கீழ்ப்பக்கம் வலி குறைஞ்சிருக்கிறது முன்னேற்றத்துக்கான அறிகுறி. இந்த நேரத்துல... அவங்க... மெள்ளமா நடைப்பயிற்சி பண்ணனும். பண்ணினா... பழையபடி நார்மலா ஆயிடுவாங்க. ஆனா... அவங்க படுக்கையில ரெஸ்ட்டா இருந்தாத்தான் நல்லதுன்னு நீங்களாகவே யூகம் பண்ணி இப்பிடி படுக்க வச்சுக்கிட்டே இருந்தா... அது சரி இல்லை...''

''அம்மா நார்மலா ஆயிடுவாங்கன்னு நீங்க சொல்றதைக் கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு டாக்டர்.''

''உங்களைவிட அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் குடுத்த எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்களை உள்ளே கூட்டிட்டு வாங்க...''

''சரி டாக்டர்...''

கயல்விழி, வெளியே சென்று அம்மாவை கைப்பிடித்து அழைத்து வந்தாள். அம்மாவின் மற்றொரு கையில் ஸ்டிக் இருந்தது. இருவரும் உள்ளே சென்று உட்கார்ந்தனர்.

''வணக்கம் டாக்டர்'' அம்மா வணக்கம் கூறினாள்.

''வணக்கம்மா. வலி நல்லா குறைஞ்சிருக்காமே?''

''ஆமா டாக்டர். வலியே இல்லைன்னு கூட சொல்லலாம்.''

''வெரி குட். நீங்களும் பிஸியோதெரபி ரெகுலரா பண்ணிக்கிட்டிருக்கீங்க. அதனால்தான் உங்க வலி இவ்ளவு சீக்கிரமா குறைஞ்சிருக்கு. இன்னும் ஒரு மாசத்துல யாரோட உதவியும் இல்லாம நீங்களாவே நடக்க ஆரம்பிச்சுடுவீங்க. நான் எழுதிக் குடுத்திருக்கிற சில மாத்திரைகளுக்கு பதிலா இனிமேல் நீங்க கேரட், பால், கீரை, முட்டை, ஸோயா இதெல்லாம் சேர்த்துக்கோங்க. இதுக்காக எந்த மாத்திரைகளை நிறுத்தணும்ன்னு குறிச்சு குடுத்துடறேன். மத்த மாத்திரைகளை ரெகுலரா சாப்பிட்டுக்கிட்டே இருங்க. இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம். நீங்க இனிமேல் படுத்தே இருக்கக் கூடாது. மெதுவா நடைப்பயிற்சி செய்யணும். நடக்காமலே விட்டுட்டா கஷ்டமாயிடும். இன்னும் ஒரு மாசத்துல நீங்க பழைய மாதிரி நல்லா நடக்க ஆரம்பிச்சுடுவீங்க. வலியே இருக்காது. நான் சொல்ற வரைக்கும் பிஸியோதெரபி, தொடர்ந்து பண்ணுங்க.''

''சரி டாக்டர். என் பொண்ணுங்கதான் என்னை படுக்கையில இருந்து எழுந்திருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க...''

''நீங்க விழுந்திடுவீங்களோங்கற பயத்துல அப்பிடி சொல்லி இருப்பாங்க. இப்ப அவங்களுக்கு விளக்கி சொல்லிட்டேன். எடுத்த எடுப்பிலயே வேகமா நடந்துடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிங்க.'' விளக்கமாக எடுத்துக் கூறிய டாக்டர் சந்திரசேகர், புதியதாக வேறு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.

''எங்கம்மாவை இந்த அளவுக்கு குணப்படுத்திட்டீங்க டாக்டர். உங்களை கடவுளா நினைக்கறேன் டாக்டர்...''

''பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க கயல்விழி. நான் படிச்ச மருத்துவப் படிப்பினால என்னால முடிஞ்சதை செஞ்சேன். அவ்ளவுதான்.''

''தேங்க்யூ டாக்டர். நீங்க சொன்ன மாதிரி அம்மாவை முழு நேரமும் படுக்கையில ரெஸ்ட் எடுத்துக்காம கொஞ்ச கொஞ்சமா நடக்கச் சொல்றேன். எனக்கு எங்க அம்மா, பழைய அம்மாவா வேணும்.''

''நிச்சயமா அவங்க சரியாயிடுவாங்க.''

''ஓ.கே. டாக்டர் நாங்க கிளம்பறோம். உங்களை ரெக்கமண்ட் பண்ணின சரிதாவுக்கும் நன்றி சொல்லணும்.''

''ஓ... மிஸஸ் அபிலாஷா? அவங்க நல்லா இருக்காங்களா? அவங்களை நான் கேட்டதா சொல்லுங்க...''

''ஷ்யூர் டாக்டர்...''

''நான் வரேன் டாக்டர். வணக்கம்'' என்று பார்வதியும் கயல்விழியும் டாக்டர் சந்திரசேகரிடம் விடை பெற்று கிளம்பினர்.


அன்றைய தினம், சரிதாவிடம் என்னவெல்லாம் பேசலாம், எதைப் பற்றி பற்ற வைக்கலாம் என்று முன் ஏற்பாடாக ஒத்திகை பார்த்த பின்னரே சரிதாவின் வீட்டிற்கு வந்திருந்தாள் பாவனா. அதற்கு ஏற்றவிதமாக கயல்விழி, அபிலாஷ் இருவரையும் சரிதா, நடனம் ஆடும் வெண்ணிலா ஹோட்டலில் பார்த்ததாக சுதாகர் சொல்லி இருந்தான்.

சரிதாவைப் பார்த்ததும் பச்சாத்தாபத்தில் மனம் தடுமாறிய பாவனா, தன்னை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள். வழக்கம் போல சரிதாவின் முகப் பராமரிப்பு பற்றி முத்தாய்ப்பாக பேச ஆரம்பித்தாள்.

''இன்னிக்கு என்ன மேடம். நட்ஸ் ஃபேஷியல் பண்ணலாமா?''

''இன்னிக்கு ப்யூட்டி ட்ரீட்மென்ட் எதுவும் வேண்டாம் பாவனா. கெஸ்ட் ரூம்ல இருக்கற மூணு ஷெல்ஃபையும் அடுக்கணும்.''

''அடுக்கிடலாமே...''

ஷெல்ஃபுக்குள் இருந்த உடைகள், பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே போட்டாள் சரிதா. ஷெல்ப் உள்ளே துணியால் துடைத்து சுத்தம் செய்தபடி, விதியை நொந்தபடியே, தன் சதி வேலையை ஆரம்பித்தாள் பாவனா.

''மேடம், அபிலாஷ் ஸார் ஹோட்டலுக்கெல்லாம் போவாரா?''

''இதென்ன கேள்வி? அவசியமா தேவைப்பட்டா போவார். ஆனா... அவருக்கு வீட்டு சமையல்தான் பிடிக்கும். கூடியவரைக்கும் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடுவாரு. ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு நானே சாப்பாடு கொண்டு போய் குடுத்துடுவேன். என்னால போக முடியலைன்னா... காலையிலயே அவரோட லஞ்ச்சையும் சேர்த்து சமைச்சு பேக்கிங் பண்ணி அவர்ட்டயே குடுத்து, கார்ல ஏத்திடுவேன். ஸ்டூடியோவுல மைக்ரோவேவ் அவன் இருக்கு. அதில சூடு பண்ணி சாப்பிட்டுக்குவாரு. ஹோட்டல்ல சாப்பிடறது அவ்ளவா அவருக்குப் பிடிக்காது.''

''நேத்து என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தி அபிலாஷ் ஸாரை வெண்ணிலா ஹோட்டல்ல பார்த்தாளாம்.''

''என்னது? வெண்ணிலா ஹோட்டலுக்கா? நிச்சயமா அங்கே அவர் போயிருக்கவே மாட்டார். என்னதான் கயல்விழி என்னோட ஃப்ரெண்டா இருந்தாலும் கூட அவ டான்ஸ் ப்ரோக்ராமுக்குக் கூட அங்கே போக மாட்டோம். அவளும் அதை விரும்பமாட்டா. நாங்களும் போக மாட்டோம்.''

''அதில்ல மேடம்... கயல்விழியும், அபிலாஷ் ஸாரும் பேசிக்கிட்டிருந்ததைக் கூட என்னோட ஃப்ரெண்ட் பார்த்தாளாம்...''

இதயத்தில் பூகம்பம் வெடிப்பது போன்ற உணர்வை மறைத்துக் கொண்டு பேசினாள் சரிதா.

''அபிலாஷ்க்கு அங்கே போக வேண்டிய அவசியமே இல்லியே?!''

சாதாரணமாக பேசுவது போலவும், அப்பாவியைப் போலவும் அதற்கு பதில் கூறினாள் பாவனா.

''ஏதோ தற்செயலான சந்திப்பா இருக்கும் மேடம்...''

''கயல்விழியை சந்திக்கப் போகணும்னா அவளுக்கு ஃபோன் பண்ணி சொன்னா... வீட்டுக்கே வந்துடுவா... அபிலாஷ் எதுக்காக அங்கே போய் அவளைப் பார்த்திருக்கப் போறாரு?''

''ஹய்யோ மேடம். வெளுத்ததெல்லாம் பால்ன்னு நினைக்கற உங்களுக்கு எதுவுமே யதார்த்தமாத்தான் தெரியுது. என்னோட ஃப்ரெண்ட்கிட்ட கூட நான் வாக்குவாதம் பண்ணிணேன். 'நீ வேற யாரையோ பார்த்துட்டு அபிலாஷ்ன்னு சொல்ற'ன்னு. அவ, உறுதியா சொல்றா அபிலாஷ் ஸார்தான் அதுன்னு... சரி, சரி... இந்த பாக்ஸ் தேவையா இல்லையான்னு பாருங்க. தேவையில்லாததை தூரப் போடுங்க... ''

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி பற்ற வைப்பதையும் வைத்துவிட்டு, அதன்பின் ஏதோ சாதாரணமாக பேசுவது போல பேச்சின் திசையையும் மாற்றி அன்றைய சதி வேலையை முடித்தாள் பாவனா.

சரிதாவின் கைகள் ஷெல்ஃபில் இருந்து எடுத்துப் போட்ட பொருட்களை சரி பார்ப்பதில் ஈடுபட்டாலும் அவளது கவனம் 'வெண்ணிலா ஹோட்டல்'.... 'கயல்விழி...' 'அபிலாஷ்...' இவற்றைச் சுற்றியே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போய்க் கொண்டிருந்த மனது... அன்றைய பாவனாவின் விஷ அம்பு தைத்தபடியால் நிலை குலைந்து போனது.

உள்ளத்திற்குள் ஊடுருவிய சந்தேகம் எனும் கொடிய உணர்வு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் துரும்பைப் போல சுழன்றாடித் தள்ளியது.


அபிலாஷ், சரிதாவின் முந்தானையை பிடித்து இழுத்தான்.

''என்ன இது? உன் கையால சூடா ஒரு காஃப்பி போட்டுக் குடுப்பன்னு பார்த்தா சுத்தி சுத்தி வந்து என்னென்னமோ பண்ணிக்கிட்டிருக்க?''

சரிதா பதில் ஏதும் கூறாமல் காஃப்பியுடன் வந்தாள்.

சரிதா மௌனம்.

''என்னடா இது... நம்ம ஆளு மௌன சாமியாரா ஆயிட்டாங்க! ஏய் சரித், என்ன ஆச்சு?''

''எனக்கு ஒண்ணும் ஆகலை. உங்களுக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு.''

''உன்னை பொண்ணு பார்த்ததில இருந்தே எனக்கு என்னமோ ஆயிடுச்சுதான். சிரிக்கிறாள். உனக்கு சிரிப்பு வரலியா?''

''பொண்ணு பார்த்ததில் இருந்தா அல்லது பொண்ணுகளை பார்க்க ஆரம்பிச்சதுல இருந்தா?''

''அடிப்பாவி... உன்னோட கிண்டலுக்கும் ஒரு அளவு இல்லையா?''

''கிண்டலும் இல்லை சுண்டலும் இல்லை. சீரியஸாத்தான் பேசறேன்.''

''சரிதா... சீரியஸா பேசறீயா? இது சரியா?''

''போதும் உங்க தமாஷ். வெண்ணிலா ஹோட்டலுக்கு போனீங்களா?''

''அதை ஏன் கேக்கற... அந்த ஹோட்டலுக்கு வேண்டாம்னு சொன்னா... டைரக்டர் கேக்கவே இல்லை. அங்கதான் போணும்னு சொல்லிட்டார். அதனால போனேன். புது படம். புது டைரக்டர். புது நடிகர்கள் நடிக்கற படத்துக்கு ம்யூஸிக் போடணும்னு பேசறதுக்கு அங்கே கூப்பிட்டுட்டு போனாங்க. ஆனா... எனக்கு டேட்ஸ் இல்லை. இன்னொரு விஷயம், அவங்களோட ரேட் எனக்கு ஒத்து வரலை.''

''வெண்ணிலா ஹோட்டலுக்கு போனதை என்கிட்ட ஏன் சொல்லலை?''

''மறந்தே போயிட்டேன்மா. அது சரி... ஏன் இவ்ளவு சீரியஸா கேக்கற?''

''விஷயம் இருக்கு. அங்கே வேற யாரை பார்த்தீங்க?''

''அங்கே... வேற... யாரை பார்க்க முடியும்? நம்ப கயல்விழி டான்ஸ் ஆடற ஹோட்டல். ஆனா அங்க அவளை பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. தற்செயலா ரிஸப்ஷனுக்கு போன் பேச வந்தா. அப்போ அவளைப் பார்த்து நான் பேசினேன். அதுக்கென்ன இப்போ?''

''அதுக்கென்னவா? அதைப்பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லியே?''

''இப்ப சொல்லிட்டேனே...''

சரிதாவின் கேள்விகளில் சந்தேகம் கொக்கி நிற்பதை அறியாத அபிலாஷ், குறும்பாகவும், வேடிக்கையாகவும் பதில் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது குறும்புப் பேச்சை ரஸிக்க முடியாத மனநிலையில் இருந்த சரிதா, மேலும் அவனிடம் கேள்விக் கொக்கிகளைப் போட்டாள்.

''அவ என்ன சொன்னா?''

''வழக்கம் போல குசலம் விசாரிச்சா. உன்னைப் பத்தி கேட்டா.''

''என்னைப் பத்தி உங்ககிட்ட கேட்டிருக்கா. என்னைப் பத்தி உங்ககிட்ட கேட்ட அவ, அதைப்பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லியே...?''

''அடடா... நான் உன்கிட்ட சொல்லலை. அவ உன்கிட்ட சொல்லலை. ஏன் இப்பிடி பேசற... கேக்கறன்னு எனக்கு புரியவே இல்லை...''

''எனக்கும் எதுவும் புரியலை...''

''உனக்கு நட்டு கழண்டிருக்குன்னு எனக்கு புரியுது...''

வழக்கமாக அபிலாஷ் இவ்விதம் கிண்டலாக பேசும்பொழுது, அவனை செல்லமாக அடிப்பதற்கு வருவாள் சரிதா. அவளது அந்த அன்பு கலந்த செய்கையை எதிர்பார்த்திருந்த அபிலாஷிற்கு சரிதாவின் தீவிர மௌனம், வித்தியாசமாக இருந்தது.

'நான் கேக்கறதைப் பத்தி புரிஞ்சும், புரிஞ்சுக்காத மாதிரி நடிக்கறாரா? அல்லது வழக்கமா பேசற மாதிரிதான் பேசறாரா? கயல்விழியை பார்த்ததை ஏன் என்கிட்ட சொல்லலை? இதைப்பத்தி இன்னும் வெளிப்படையா கேட்டா பிரச்னையாயிடுமா? கேக்காமலே விட்டாலும் பிரச்னையாத்தானே ஆகும்? பாவனா சொன்ன மாதிரி... நான் ரொம்ப கவனமா இருக்கணுமா? ஆமா. அதுதான் சரி. இவர்கிட்ட நேரடியாவே கேட்டுடலாமே?' தனக்குள் யோசித்து, குழம்பியவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

''நீங்க இப்ப கொஞ்ச நாளா என்கிட்ட எதையும் சொல்றதில்லை.''

சரிதாவின் குரலில் தென்பட்ட கோபம், எரிச்சல் இதையெல்லாம் லேஸாக புரிந்து கொண்ட அபிலாஷிற்கும் கோபம் உண்டானது.

''என்னமோ உளறிக்கிட்டிருக்க. ஸ்டூடியோ, ம்யூஸிக், வீடுன்னு நான் பாட்டுக்கு இருக்கேன். என்னோட டைட் ஷெட்யூல்ல சில நேரம் எதையாவது சொல்ல மறந்திருப்பேன். வெண்ணிலா ஹோட்டலுக்கு போனதும், அங்கே கயல்விழியை பார்த்ததும் என்ன புதுசான விஷயமா? அப்பிடிப் பார்த்தா... அன்னிக்கு அந்த தயாரிப்பாளரையும், டைரக்டரையும் பார்த்து பேசினது, அவங்க படத்துக்கு டேட் இல்லைன்னு சொன்னது இதைக் கூடத்தான் உன்கிட்ட நான் சொல்லலை. அதையெல்லாம் கேட்காம கயல்விழியைப் பார்த்து பேசினது மட்டும் கேக்கறியே... ஏன்?''

'என்ன பதில் சொல்வது' என்று புரியாமல் விழித்தாள் சரிதா.

அப்போது அபிலாஷின் மொபைல் அவனை அழைத்தது. நம்பரைப் பார்த்தான். தயாரிப்பாளர் பழனிவேலின் நம்பர். எனவே அவருடன் பேச ஆரம்பித்தான்.

'நல்லவேளை... அவருக்கு ஃபோன் கால் வந்துடுச்சு' என்று நினைத்தபடியே அங்கிருந்து நழுவிச் சென்றாள் சரிதா.

'பழனிவேல் ஸார் பேசினார்னா குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவாரு' பொங்கிக் கொண்டு வந்த அவளது கோப அலைகள் சற்று அடங்கின.

படுக்கை அறைக்கு சென்று குப்புறப் படுத்துக் கொண்டாள். ஃபோன் பேசினபடியே அங்கே வந்த அபிலாஷ், சரிதாவின் அருகில் கட்டிலின் சாய்வுப் பலகை மீது சாய்ந்தபடி பேசினான்.

ஒரு கையால் குப்புறப் படுத்துக் கிடந்த சரிதாவின் முதுகைத் தடவினான்.

தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த சரிதா, அவனது ஸ்பரிஸத்தால் சிலிர்த்தாள்.

'இவரோட இந்தப் பாசமான தொடுதலும், அணைப்பும் எனக்கே உரியது. எனக்கு மட்டுமே உரிமையானது. ஆனா... அவர்... மேல தப்பு இருக்கோன்னு எனக்கு சந்தேகம் வருதே. அவர் மனசுல வேற யாராவது இருப்பாளா? கயல்விழி என்னோட ஃப்ரெண்ட். அவ நல்லவ. இவரும் நல்லவர். ஆனா... என்கிட்ட அவங்க சந்திச்சதை மறைக்கறாங்களே...  அதுக்கு என்ன காரணம்? பாவனா சொன்ன மாதிரி நான் ஜாக்கிரதையா இருக்கணுமோ? ஆமா. அதுதான் சரி. ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு நான் இவரை அது பத்தி கேட்டா... இவருக்கு கோபம் வருதே... ஓப்பனா கேக்கவும் முடியாம... கேக்காம இருக்கவும் முடியாம... இந்த விஷயத்தை எப்பிடி சமாளிக்கறது... என்ன பண்றதுன்னு தெரியலியே... ஆனா... அபிலாஷ்... என் உயிர். அபிலாஷ் எனக்கு மட்டுமே. எங்களுக்கு நடுவுல வேற யார் வர முடியும்? வந்துட்டா? சினிமா துறையில இருக்கற இவரோட சூழ்நிலைகள், இவரை என்கிட்ட இருந்து பிரிச்சுடுமோ?' சந்தேகத் துளிகள் விஷத்துளிகளாய் சரிதாவின் மனதை அலைக்கழித்தன. அதன் விளைவாய் அவளது கண்களில் இருந்து கண்ணில் துளிகள் துளிர்த்தன.

அவளையும் அறியாமல் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அவளது முதுகில் கை வைத்திருந்த அபிலாஷ், திடுக்கிட்டான். அவசரமாய் ஃபோன் பேசி முடித்துவிட்டு, சரிதாவை தன் மடியில் அள்ளிப் போட்டுக் கொண்டான்.

''என்னம்மா சரித்... என்ன... ஏன் அழறே... கேட்டபடியே அவளது கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை சுண்டி எறிந்தான். தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

''நீங்க... நீங்க... எனக்கு மட்டும்தான் சொந்தம்.''

''இது என்ன புதுசா? எனக்கு நீ...  உனக்கு நான்... கைநடுங்கி, தடி பிடிச்சு நடக்கும் முதுமையிலகூட இது மாறாதே... இப்ப என்ன உனக்கு திடீர்னு இப்பிடி கேக்கன்னு தோணுது? ஏதோ குழப்பத்துல இருக்க. நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு காத்து கூட நுழைய முடியாது. சின்ன வயசுல நீயும் கஷ்டப்பட்டு வளர்ந்தவ. நானும் கஷ்டப்பட்டு வளர்ந்தவன். என்னோட இந்த வளர்ச்சி... என்னை புகழோட உச்சியில ஏத்தினாலும் என் உள்ளத்துல இருக்கற என்னோட சரிதா... நீ... அங்கேயே- என் மனசுக்குள்ளயேதான் இருப்ப. உன்னோட அம்மா, அப்பா ஞாபகம் வந்து மனசு கஷ்டத்துல இருக்கறன்னு எனக்கு புரியுது. பாதுகாப்பு இல்லாத பொண்ணுங்கதான் இப்பிடி எது எதையோ நினைச்சு தடுமாறுவாங்க. உனக்கு பாதுகாப்பா நான் இருக்கும்போது நீ ஏன் குழம்பணும்? தடுமாறணும்? கவலைன்னா என்னன்னு தெரியாம உன்னை வாழ வைக்கிற மனசு எனக்கு இருக்கு, என்னை நம்பி வந்தவள் நீ... உன்னோட வாழ்க்கைக்கு ஆதாரம் நான். ஜீவன் நான். எதைப் பத்தியும் யோசிக்காதே. நிம்மதியா தூங்கு'' என்று சிறகின் மென்மையான தன்மையாக பேசி, அவளைத் தூங்கச் செய்தான்.

அவளைத் தூங்கச் செய்த அபிலாஷின் உணர்வுகள் விழித்துக் கொண்டன. உணர்வுகள் உந்தியதால் எண்ணங்கள் உதயமாகின.

'சரிதாவோட அம்மாவும், அப்பாவும் அகால மரணமடைஞ்ச துக்கத்தோட தாக்கத்துல இப்பிடி ஸ்ட்ரெஸ் ஏறிப் போய் ஏடா கூடமா பேசறாளா? அப்பிடித்தான் இருக்கும், பாவம் சின்ன வயசு. குழந்தைப் பருவத்துல இருந்தே உறவுக்காரங்களோட புறக்கணிப்பும் அவளை பாதிச்சிருக்கு. அவளுக்காகன்னு இருந்த அன்புப் பெற்றோரையும் இழந்தப்புறம் அவ மனசுல எவ்ளவு வேதனை இருந்திருக்கும்? ஆனா... அந்த அன்பை எல்லாம் சேர்த்து வச்சு அவளுக்கு அம்மாவா, அப்பாவா, தோழனா, உறுதுணையா... அனைத்துமாகி நான் அன்பு செலுத்தியும் அடிக்கடி இந்த மாதிரி அவதிப்படறாளே... கொஞ்ச நாள் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போய் வாடிப் போய் கிடக்கற அவளோட மனச்சோர்வை நீக்கி புதுசா பூத்த பூவா மலர வச்சு, சோகமே தீண்டாத மனநிலையை உருவாக்கி அவளை சந்தோஷப்படுத்தணும்ன்னு நினைச்சுதான் டிக்கெட்டெல்லாம் போட்டு வச்சேன். திடீர்னு பழனிவேல் ஸார் புதுப்படம் துவங்கணும்னு சொன்னதுனால அந்தத் திட்டம் தள்ளிப் போயிடுச்சு. புகழை சம்பாதிக்கறேன். பணத்தை சம்பாதிக்கிறேன். என் உயிர் மனைவியோட மன நிம்மதியை என்னால விலை குடுத்து வாங்க முடியலியே...

சரிதா கொஞ்ச நாளா சரி இல்லை. எதையோ நினைச்சு குழம்பறா. அவளோட உயிர்த்தோழி கயல்விழி, அவகிட்ட பேசினதை ஏதோ தற்செயலா சொல்லாம விட்டதுக்கு தேவை இல்லாத கேள்விகள் கேக்கறா. ஒரே கேள்வியை மாத்தி மாத்தி கேட்டுப் பார்க்கறா. உள்ளத்திற்குள் பொங்கிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத அபிலாஷ், மனம் துவண்டான். 'என்ன செய்வது? என்ன செய்வது?'  என்ற சிந்தனைகளே திரும்ப திரும்ப அவனது இதயத்தில் மோதியபடி இருந்தன. வர மறுத்த தூக்கத்தை, வலிய வரவழைக்க முயற்சித்தான். அவனது நெஞ்சம், துக்கத்தில் கனத்தது. தூக்கம் தொலைந்து போனதால் அவனது கண் இமைகளும் கனத்துப் போனது. ஆரம்பத்தில் அவதிப்பட்ட அபிலாஷ்... தீர்க்கமாக சிந்தித்தான். 'என் மேல எந்த தப்பும் இல்லை. நான் பெண்களை ஆராதிக்கறவன். அவர்களை மதிப்பவன். வலிய என்னைத் தேடி வரும் பெண்களைக் கூட அறிவுரை சொல்லி அனுப்பறவன். நான் நினைச்சா... எத்தனையோ பெண்கள் கூட எப்பிடி  எப்பிடியோ சுத்தியிருக்கலாம். அப்பிடி நினைக்கக் கூட என்னால முடியலியே... என்னை தப்பானவனா சரிதா நினைச்சுட்டா. நான் நல்லவனா இருக்கும்போது எந்தக் காரணமும் இல்லாம, என்னை சந்தேகப்படறா. எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறா. இதுக்கு மேல என்னால என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது. இனிமேல் சரிதாவே என்னைப் புரிஞ்சுக்கிட்டு வரட்டும். நான் ஏன் கஷ்டப்படணும்? துக்கப்படணும்? ஒரு கணவனுக்குரிய எல்லா கடமைகளையும் என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். இனி அவளாவே மனம் தெளியட்டும். இதைப்பற்றியெல்லாம் யோசிச்சு குழம்பிக்கிட்டிருந்தா... என்னோட இசை அமைப்பு பணி பாதிக்கும். சரிதா எப்பிடி எனக்கு முக்கியமோ அது போல இசையும் எனக்கு முக்கியம். சரிதா ஒரு கண். இசை இன்னொரு கண். சரிதா என் உயிர்ன்னா... அந்த உயிரைத் தாங்கற உடல் இசை. அதனால சரிதா என்னைப் புரிஞ்சுக்கற வரைக்கும் இசையே என் சுவாஸமாக, நேசமாக இருக்கும். அவள் மாறுவாள். மாறும் வரை காத்திருப்பேன். துவண்டு போகாமல் இசையில் என் உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொள்வேன்....' என்று திடமான முடிவு கொண்டான். உள்ளம் தெளிவு பெற்றதும், கண்களில் தூக்கம் தானாகவே வந்தது. அவனைத் தழுவிக் கொண்டது.


ஸ்பென்ஸர்ஸ் வணிக வளாகம். அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதார், ஷல்வார், காக்ரா போன்ற உடைகளுக்கென்று பிரத்தியேகமான கடை ஒன்றிற்கு சென்றிருந்தாள் சரிதா. அங்கே அடிக்கடி சென்று விலை உயர்ந்த உடைகள் வாங்குவதால் அக்கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் சரிதாவை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்றனர். உரிமையாளர் ஒரு பெண்மணி. பிரபல ம்யூஸிக் கம்ப்போஸர் அபிலாஷின் மனைவி சரிதா என்ற கௌரவமான அடையாளம் காரணமாகவும் அவளுக்கு நல்ல வரவேற்பையும், மரியாதையையும் கொடுத்தனர். புத்தம் புதிதாக வரவழைத்திருந்த ஆடைகளை ஆர்வமுடன் எடுத்துக் காட்டினார்கள். உடைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்த சரிதா, தன் தோள் மீது யாரோ கை வைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

''ஹாய் தேவிகா...''

''ஹாய் சரிதா...'' சந்தோஷ முகம் காட்டி சிரித்தபடி பேசினாள் தேவிகா.

திரைப்படத் தயாரிப்பாளர் பழனிவேலின் மனைவி தேவிகா.

''அட... என்ன சரிதா? உங்க முகத்துல ஒரு தனி பளபளப்பு தெரியுது? ஸ்கின் ட்ரீட்மென்ட் எடுத்தீங்களா? நிஜம்மா சொல்றேன். முன்னைவிட இப்ப ரொம்ப அழகா இருக்கீங்க...''

''தேங்க்யூ தேவிகா. பெரிசா ஸ்கின் ட்ரீட்மென்ட் எதுவும் எடுக்கலை. ஒரு ப்யூட்டிஷியனோட கை வண்ணம்தான்...''

''அப்பிடியா? எந்த பார்லர்ல? வழக்கமா... நீங்க 'அழகு ப்யூட்டி பார்ல'ருக்குத் தானே போவீங்க?''

''அதே 'அழகு ப்யூட்டி பார்லர்'ல ட்ரெயினிங் எடுத்துக்கிட்ட ஒரு பொண்ணு, என்னோட வீட்டுக்கே வந்து ப்யூட்டி ட்ரீட்மென்ட் குடுக்கறா. அவ ஃபேஷியல் பண்ணினா... சூப்பரா இருக்கும். ஃபேஷியல் மட்டுமில்ல... பெடிக்யூர், மேனிக்யூர், தலைமுடி பராமரிப்பு எல்லாமே நல்லா பண்ணுவா...''

''வீட்டுக்கே வந்து பண்றதுன்னா... ரொம்ப வசதியாயிடுச்சு. அவகிட்ட மொபைல் இருக்கா? அவளோட நம்பர் குடுங்களேன். எனக்கும் அவளை எங்க வீட்டுக்கே வந்து பண்ணி விடச் சொல்றேன்...''

''ஓ! அப்பிடியே பண்ணலாமே. அவளோட மொபைல் நம்பரை உங்களுக்கு எஸ்.எம்.எஸ். பண்ணி விடறேன்...''

''ஆனா... சரிதா... வீட்டுக்கு வந்து பண்றாள்ன்னு சொல்றீங்க. நல்ல நம்பிக்கையான பொண்ணுதானா?...''

''நம்பிக்கையைப் பொறுத்த வரைக்கும் அவ தங்கம். என்னோட ரூம் வரைக்கும் அவளை அனுமதிக்கிறேன். ஏதாவது அவசர செலவுக்கு பணம் வேணும்ன்னா... கேட்டு வாங்குவாளே தவிர கை நீட்ட மாட்டா. ரொம்ப நல்ல பொண்ணு...''

''அவ பேரு?''

''பாவனா.''

''பேர் நல்லா இருக்கே?!...''

''அவளும் நல்ல அழகா இருப்பா...''

''ப்யூட்டிஷியனுக்கேத்தபடி அவளும்  ப்யூட்டியாகத்தான் இருக்கா போல...''

''ஆமா. அது சரி தேவிகா... உங்க ஹஸ்பென்ட் பழனிவேல் ஸார் புதுசா படம் எடுக்கறாராமே?'' தற்செயலாய் தேவிகாவை சந்திக்க நேரிட்ட அந்த சந்தர்ப்பத்தில் அபிலாஷ், ப்ரொட்யூஸர் பழனிவேலை சந்தித்து பேசியது உண்மைதானா என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக தேவிகாவிடம் நைஸாக விசாரித்தாள்.

''ஆமா சரிதா. ரெண்டு ஹிந்திப்படம் எடுத்து வெற்றியாயிடுச்சு. மறுபடியும் தமிழ் சினிமாவுக்கே வரணும்ங்கற ஆசையில புதுசா படம் பண்ணப் போறார். அது சரி... உங்க ஹஸ்பெண்ட் அபிலாஷ்தான் ம்யூஸிக்ன்னு இவர் சொன்னாரு. ஆனா... நீங்க என்னடான்னா இப்பிடி கேக்கறீங்க?!''

''அ... அ... அது... வந்து... அபிலாஷ் என்கிட்ட சொல்லிகிட்டிருந்தாரு. டிஸ்கஷன் வைக்கச் சொல்லி இருக்கறதா...''

''ஆமா சரிதா. இந்த வாரமே டிஸ்கஷன் இருக்கும்.''

''அபிலாஷேரட முதல் படத்துக்கு உங்க பழனிவேல் ஸார்தான் வாய்ப்பு குடுத்தார். அதனாலதான் இன்னிக்கு அபிலாஷ் ம்யூஸிக்ல நம்பர் ஒன்னா இருக்காரு.''

''நாங்க வாய்ப்பு குடுத்தாலும்... அபிலாஷேரட திறமையும் சேர்ந்துதான் அவருக்கு வெற்றி குடுத்திருக்கு...''

இருவரும் உடைகளைத் தேர்வு செய்து கொண்டே பேசிக் கொண்டனர். உடைகள் தேர்வு முடிந்ததும் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.


பாவனாவின் மொபைல் எண்களை அழுத்தினான் வஸந்த். மறுமுனையில் பாவனாவின் குரல் ஒலித்தது.

''ஹலோ...''

''ஹலோ... நான் வஸந்த் பேசறேன்...''

''வஸந்த்...?''

''மறந்துட்டிங்களா? எங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணி காப்பாத்தினீங்களே...''

அவன் பேசி முடிப்பதற்குள்ளேயே, பாவனாவிற்கு ஞாபகம் வந்துவிட, அவசரமாய் பேசினாள்.

''ஸாரி... திடீர்னு வஸந்த்ன்னு சொன்னதும் ஒண்ணும் புரியலை. வெரி ஸாரி...''

''அதனாலென்ன? பரவாயில்லை. எங்கம்மா உங்களைப் பத்திதான் எப்பவும் பேசிக்கிட்டே இருக்காங்க. உங்களுக்காக ரவாலட்டு பண்ணி இருக்காங்க. 'அந்தப் பொண்ணுக்கு கொண்டு போய் குடுடா குடுடா'ன்னு என்னை அனுப்பறதுலயே குறியா இருந்தாங்க. அதுக்குதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். உங்களை எங்கே பார்க்கலாம்?''

''நான் இப்ப ஸிட்டி ஸென்ட்டர்ல இருக்கற லேண்ட்-மார்க் கடைக்குப் போகப் போறேன். என் தங்கச்சிக்கு சில  ஜாமான்கள் வாங்க வேண்டியதிருக்கு... நீங்க... அங்க வர முடியுமா...?''

''ஓ... வந்துடறனே...''

''சரி. வாங்க.''

''தேங்க்யூ.''

இருவரும் லேண்ட்-மார்க் கடையில் சந்தித்து விட்டு அதன்பின் அந்த வளாகத்தில் இருந்த காஃபி ஹோட்டலுக்கு சென்றனர்.

காஃபி ஆர்டர் பண்ணினாள் பாவனா.

''இந்தாங்க பாவனா. அம்மா குடுக்கச் சொன்னாங்க'' என்று கூறி ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவை பாவனாவிடம் கொடுத்தான் வஸந்த்.

''எங்கம்மாவோட கைப்பக்குவத்துல இந்த ரவாலட்டு சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். எங்க சொந்தக்காரங்கள்ல்லலாம் எனக்கு பண்ணி குடு உனக்கு பண்ணிக் குடுன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆனா... இதை உங்களுக்குக் குடுக்கறதுக்கு எனக்கு தயக்கமா இருந்துச்சு...''

''ஏன்? அதனால என்ன? ரவாலட்டும் ஒரு தரமான இனிப்பு பண்டம்தானே? அதுவும் வீட்ல செஞ்சது. எதுக்காகத் தயக்கம்?''

''அதில்லை... வந்து...''

''வந்து என்ன போய் என்ன? எப்படா... வீட்டுக்குப் போய் ரவாலட்டை ரஸிச்சு, சுவைச்சு சாப்பிடுவோம்ன்னு இருக்கு...''

''நிஜம்மாவா?''

''பின்னே? சும்மா கிடைச்ச ரவாலட்டுக்கு சும்மாவா சொல்லுவாங்க?''

காஃபி வந்ததும் இருவரும் குடித்தனர்.

''பாவனா... நான்... வசதி இல்லாதவன்... ஏழை...'' மிகவும் தயங்கி பேச ஆரம்பித்தான் வஸந்த்.

''எதுக்காக இப்ப இந்த புராணம்?''

''அது வந்து... ஏழை, பணக்கார பேதம் பார்க்காம மனுஷங்களுக்குள்ள நுழையற ஒரு உணர்வு என்னன்னு தெரியுமா?''

புரிந்தும் புரியாதது போல நடித்தாள் பாவனா.

''தெரியலியே...''

''அ... அ... அது... வந்து... காதல். இப்ப எனக்குள்ள அது உதயமாகி இருக்கு...''

''அட... அப்பிடியா? யார் அந்த அதிர்ஷ்டசாலியோ?''

''அதிர்ஷ்டசாலின்னு எப்பிடி சொல்ல முடியும்? அன்றாடம் வகை வகையான கார்கள்ல்ல சவாரி செய்ற பணக்காரன் இல்லையே நான்?''

''பணம் பார்த்து வர்றது காதல் இல்லை. மனம் பார்த்து வர்றதுதான் காதல்...''

''அப்பிடின்னா...''

''ஏன் நிறுத்திட்டீங்க... சொல்லுங்க...''

ஒரு கணம், தன் தயக்கத்தை ஒட்டு மொத்தமாகத் தள்ளி வைத்துவிட்டு தைரியமாக பேசினான் வஸந்த்.

''அப்பிடின்னா... என்னோட மனசு பார்த்து உங்களுக்கு காதல் வருமா? ஏன்னா... நான்... நான்... உங்களை... விரும்பறேன். உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு விரும்பறேன்...''

திடீரென... வஸந்த் இவ்விதம் கூறியதும் ஆச்சர்யம் அடைந்தாள் பாவனா.

''ஒரே ஒரு நாள், ஒரே ஒரு முறைதான் நாம பார்த்திருக்கோம். பேசி இருக்கோம். நேத்து பார்த்துட்டு... இன்னிக்கு வந்து... காதல்... கல்யாணம்ன்னு சொல்றீங்க?!''

''அ... ஆமா பாவனா. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழனும்னு என்னோட அடி மனசுல ஆழமா ஆசை வந்துருச்சு...''

''இவ்ளவு அவசரமா உங்க ஆசையை சொல்றீங்களே? நிதானமா யோசிச்சீங்களா?''

''யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? நீதானே சொன்ன... மனசு பார்த்து வர்றதுதான் காதல்ன்னு?''

''உங்க மனசு பார்த்து எனக்கு காதல் வரலாம். வராமலும் போகலாம். ஆனா என்னோட மறுபக்கத்தைப் பத்தி தெரிஞ்சா... என்னை விட்டு விலகிப் போயிடுவீங்க...''

சிரித்தான் வஸந்த்.

''உன்னோட மறுபக்கம்னு எதை நினைச்சு சொல்றியோ... அந்த மறுபக்கம் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். தெரிஞ்சுதான் என்னோட காதலை சொல்றேன்.''

பாவனா அதிர்ச்சி அடைந்தாள். அதன்பின் சமாளித்துக் கொண்டாள். வஸந்த் தொடர்ந்து பேசினான்.

''ஹோட்டல்ல சர்வர் வேலை, ஆட்டோ ஓட்டற வேலை, ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்ல்ல சமைக்கற வேலை... இப்பிடி கிடைச்ச வேலையை செய்யறவன் நான். ஒரு ரெஸ்ட்டாரண்ட்ல தற்காலிகமா வேலைக்குப் போனப்ப நீ அங்கே வர்றதைப் பார்த்திருக்கேன். இதுக்கு மேல விளக்கமா அதைப்பத்தி எதுக்காகப் பேசணும்? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...''

''நீங்க என்னை விரும்பற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை! ஒரு பொண்ணுக்கு அவளோட கற்புதான் முதல் தகுதின்னு நினைக்கிறேன்.'' பாவனாவின் குரல் தழுதழுத்தது.

''கற்புங்கறது உடம்பைப் பொறுத்ததா? மனசைப் பொறுத்ததா?'' அழுத்தமாகக் கேட்டான் வஸந்த்.

''ரெண்டும்தான்....''

''ஆனா நீ யார்கிட்டயாவது உன் மனசை குடுத்து, அவன் கூட உடலாலயும் வாழ்ந்திருக்கியா?''

''நிச்சயமா இல்லை. என் மனசை குடுக்கறதைப்பத்தி நான் யோசிக்கறதுக்கே என் வாழ்க்கையில இடமில்லை.''

''தவிர்க்க முடியாத காரணத்துனால உன்னை நீ இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட. அது எப்பிடி உன்னோட தவறாகும்? அதனால மனசளவுல நீ தூய்மையானவள்...''

''முள்ளுல சேலை பட்டா? சேலை கிழிஞ்சுதான் போகும். அதுக்காக முள்ளைக் குத்தம் சொல்ல முடியுமா? முள் இருக்குன்னு முன்ஜாக்கிரதையா இருந்துக்கறதுதானே முக்கியம்?''

''நீ கடந்து வந்த முட்கள் நிறைஞ்ச பாதையை மலர்த் தோட்டமா மாத்திக் காட்ட நான் தயாரா இருக்கேன்...''

''தெய்வ பூஜைக்குத்தான் மலர்கள். என்னை மாதிரி பொண்ணுக்கு அதெல்லாம் அதிகம். ஆரம்பத்துலயே சொல்றேன். உங்க மனசை மாத்திக்கோங்க.''

''ஆரம்பம்ன்னு நீயே சொல்லிட்டு ஏன் அதை முடிக்கச் சொல்ற?''

 ''முடியற விஷயத்தைத்தான் பேசணும்...''

''முடிச்சு போடற விஷயம்தானே? முடியாம போறதுக்கு என்ன வாய்ப்பு இருக்கு?''

''வாய்ப்பு கிடைக்கும்போது விட்றக் கூடாதுன்னு வாழ்க்கையை அமைச்சுக்கற அளவுக்கு நான் பக்குவப்படாதவ இல்லை. பட்டுத் தெளிஞ்சவ... அதனால தெளிவான முடிவுதான் எடுப்பேன். என் மேல ஆசைப்படறது உங்களோட வயசு...''

சிரித்தான் வஸந்த்.

''ஓ! வயசுக் கோளாறுலதான் உன்னை விரும்பறதா நினைச்சுட்டியா? அந்த வயசை எல்லாம் தாண்டி வந்துட்டவன் நான். நீ மட்டும்தான் அனுபவங்கள் கிடைச்சதுனால ஞானோதயம் அடைஞ்சவளா? நானும் வாழ்க்கையில ஏகப்பட்ட அடி வாங்கினவன்தான். அந்த அடிகள் ஒவ்வொண்ணும் எனக்கு நிறைய பாடங்கள் கத்துக் குடுத்திருக்கு. உன்னை ஒரு பொம்மையா நினைச்சு... விளையாட விரும்பற சிறுவன் இல்லை நான். உன்னைப் போல ஒரு நல்ல பொண்ணை, மதிச்சு உன் கூட வாழணும்னு நினைக்கற ஆண் மகன் நான்...''

''நான் நல்ல பொண்ணுன்னு நீங்க எப்பிடி முடிவு பண்ணினீங்க? இது தான் நம்பளோட ரெண்டாவது சந்திப்பு....!''

''ஒரு பானை நிறைய சோறு ஆக்கறோம். அது வெந்ருச்சான்னு ஒவ்வொரு பருக்கையையுமா பார்க்கறோம்...? ஒரு பருக்கையை மட்டும்தானே பார்க்கறோம்?''

''அது... அது... அது...''

''என்ன? அது இதுன்னு இழுக்கற? உன்னைப் புரிஞ்சுக்கிட்டவன் நான். நான் ஹோட்டல்ல வேலை செஞ்சப்ப உன்னை அங்கே 'அந்த' சூழ்நிலையில பார்த்தும்கூட, எனக்கு உன் மேல எந்தவித தப்பான கருத்தும் தோணலை. அதுக்கப்புறம்... உன்னை நான் எதிர்பார்க்கவே இல்லை. உனக்கும், எனக்கும் அந்தப் பிணைப்பு ஏற்படணும்ன்னுதான் நம்பளோட அந்த ரெண்டாவது சந்திப்பு நிகழ்ந்திருக்குன்னு நான் நம்பறேன்... ''

'என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?!''

''கற்பனை இல்லை... காதல்! கண்களால பார்த்து, இதயத்தால இணைஞ்சு, கைகளால அணைச்சு, துணையா உன் கூடவே இருந்து வாழ்ணும்ங்கறதுதான் என்னோட காதலுக்கு அர்த்தம்...''

''கண்டதும் காதலுக்கு இப்பிடி ஒரு பெரிய விளக்க உரை தேவையா?''

''விளக்கி சொன்னாலும் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கறியே...''

''புரிஞ்சதுனாலதான் என்னை விட்டு விலகிப் போயிடுங்கனு சொல்றேன்...''

''உன் கூட பழகாமலே என்னை விலகிப் போகச் சொல்றியே?!...''

''பழகப் பழகப் பாலும் புளிக்கும்ன்னு சொல்லுவாங்க...''

''தேய்க்க தேய்க்கத்தான் சந்தனம் மணக்கும்ன்னும் சொல்லுவாங்க... தெரியாதா?''

''தெரியும். ஆனா... ஆனா...''

''ஆனா... ஆவன்னாவெல்லாம் வேண்டாம். ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு போறதுல என்ன பிரயோஜனம்? உண்மையாகவே நீ என்னை விரும்பலைன்னா... அதை ஓப்பனா சொல்லிடு. ஏதேதோ காரணமெல்லாம் சொல்லாதே...''

''அவசரமா எடுக்கற முடிவு... அவஸ்தையில கொண்டு போய் விட்டுடும்...''

''யாரை?''

''...ரெண்டு பேரையும்தான்... என்னோட கடந்த காலத்தைப் பத்தி...''

 ''எதுவுமே... யோசிக்காம... உன்னை நான் நேசிக்கிறேன். வெறும் உடல் உணர்ச்சிகளால ஏற்பட்ட நேசம் இல்லை இது. மன உணர்வுகளால உண்டான உண்மையான அன்பு. உன்னை என் மனைவியா... துணைவியா அடையத்தான் நான் விரும்பறேன். இதுக்கு மேல என்னால வேற எதுவும் பேச முடியலை... என்னைப் புரிஞ்சுக்க. இப்ப... உன்னோட எண்ணம் என்னவோ அதைச் சொல்லு. கண்ணாடி பாத்திரத்தை கல் மேல வைக்கற மாதிரி களங்கமில்லாத என்னோட காதலைப் பத்தி... ரொம்ப ஜாக்கிரதையாத்தான் சொல்லி இருக்கேன். எனக்கு பதில் சொல்லு...?''

பாவனா இறுகிய முகத்துடன் மௌனமாக இருந்தாள்.

அவளை தீர்க்கமான பார்வை பார்த்தான் வஸந்த்.

''ஆனாலும் நீ ரொம்ப அழுத்தக்காரியாத்தான் இருக்க. சரி, பரவாயில்லை. இப்பவே பதில் சொல்லுன்னு உன்னை வற்புறுத்தறதும் நியாயம் இல்லை...''

''ஒரு குடம் பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் அது வீண்தான். சொல்றதைக் கேக்காம நீங்க 'அந்தப் பாலைத்தான் குடிப்பேன்'ன்னு பிடிவாதம் பிடிக்கறீங்க... ''

''என்னைப் பொறுத்த வரைக்கும் நீ விஷம் கலந்த பால் இல்லை. சர்க்கரை கலந்த பாயஸம்...''

''நான் சீரியஸா... வாழ்க்கையைப் பத்தி பேசிக்கிட்டிருக்கேன்... நீங்க என்னடான்னா வேடிக்கையா பாயஸம் அது... இதுன்னு பேசறீங்க?!''

''நீ மட்டும் விஷம்... கிஷம்ன்னு பேசலாமா? சரி... சரி... இப்ப எதுக்கு பாவனா வளவளன்னு பேசிக்கிட்டு? என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டிருக்க? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.''

''கேட்ட உடனே பதில் சொல்றதுக்கு இது ஒண்ணும் விடுகதை இல்லை. எனக்கு யோசிக்க டைம் வேணும்...''

''அப்பாடா... இது போதும். எடுத்த எடுப்பிலேயே 'வேண்டாம்', 'எனக்கு தகுதி இல்லை' அப்பிடி இப்பிடின்னு பேசின நீ... இப்ப இந்த அளவுக்கு பேசறது எனக்கு நம்பிக்கையா இருக்கு...''

''நம்பிக்கையை வளர்த்துக்காதீங்க. என்னோட பதில் உங்களை ஏமாற்றமடைய வச்சா... அதுக்கு நான் பொறுப்பு இல்லை. கனவுகள் கலைந்து போகக் கூடியவை. உங்க ஆசையும் அப்பிடித்தான்.''

''என்னோட ஆசை... நிறைவேறுமா... அல்லது நிராசையாகிடுமாங்கறதைப் பத்தி எனக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. சின்ன வயசுல இருந்து நானும் கஷ்டப்பட்டவன்தான். எத்தனையோ ஏமாற்றங்களை சந்திச்சவன்தான். அதனால எதையும் தாங்கிக்கற இதயம் உள்ளவன் நான். ஆனா உன்னைப் பார்த்த அந்த நேரம்... எனக்குள்ள... ஏற்பட்ட ஒரு மாற்றம்,  மகிழ்ச்சி, 'இவ, எனக்கு வேணும்'ங்கற உணர்வு... இதெல்லாம் உண்டாச்சு. அசையாத என்னோட மனசும் உன்னைப் பார்த்ததும் அசைஞ்சுடுச்சு. அசைஞ்சுக் குடுத்த என் மனசு... ஆனந்த கீதம் பாடற விதமா உன்னோட பதில் இருக்கும்ன்னு நான் நம்பறேன்...''

''நான்தான் சொன்னேனே நம்பிகையை வளர்த்துக்காதீங்கன்னு.''

''என் மனசுல... தானா முளைச்சு வளர்ந்திருக்கிட்டிருக்கற நம்பிக்கைங்கற செடியை என்னால வேரோட பிடுங்கி எறிய முடியுமா?''

''இந்த அளவுக்கு வளர்றதுக்கு நான் என்ன தண்ணி ஊத்தினேனா? உரம் போட்டேனா...?''

''ஐய்யோ... பாவனா... உன்னை நான் எந்தத் தப்பும் சொல்லலை. என்னோட மனசை நான் வெளிப்படுத்தறேன். அவ்ளவு தான்...''

''அவ்ளவுதான்னு லேஸா சொல்லிட்டீங்க... எந்தவித சலனமும் இல்லாம... இயற்கையோட... விளைவுக்கு உட்பட்ட மேகக் கூட்டம், எப்பிடி அதோட போக்குல போகுமோ அதுபோல போய்க்கிட்டிருந்தேன். என்கிட்ட... காதல், கல்யாணம்ன்னு பேசி... என்னைக் குழப்பறீங்க...''

''குழப்பறது நான் இல்லை. நீதான் தேவை இல்லாம குழம்பற. உன்னோட குணச்சித்திரத்தை.... எனக்காக மாத்திக்கணும்ங்கற அவசியம் இல்லை. மனப்பூர்வமா... நீ சம்மதிச்சா... எனக்கு சந்தோஷம். மறுத்தா... தேவதாஸ் மாதிரி தாடியெல்லாம் வளர்த்துக்கிட்டு தண்ணி அடிச்சுக்கிட்டு திரிய மாட்டேன். தற்கொலைல்லாம் பண்ணிக்க மாட்டேன். கோழைத்தனமா தற்கொலைக்கு தூண்டி விடற காதலை... தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடற இளைஞர்கள் மத்தியில, நான் வித்தியாசமானவன். ஆனா... தாங்க முடியாத வருத்தமும், ஏமாற்றமும் நிறையவே இருக்கும். வறுமையின் காரணமா... வெறுமையான மனசோட வாழ்ந்துக்கிட்டிருந்த நான், உன்னைப் பார்த்தப்புறம் 'ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்தாத்தான் என்ன? இந்த பாவனாங்கற பெண் என் கூட கை கோர்த்து வந்தாள்ன்னா... எனக்கும் ஒரு பிடிப்பு ஏற்படுமே'ன்னு தோணுச்சு. சத்தியமா சொல்றேன்... இதுவரைக்கும் எந்தப் பெண்ணுமே என் இதயத்தை இதுபோல தொட்டதில்லை. மனசுல பட்டதையெல்லாம் கொட்டிட்டேன். இனி... உன்னோட பதில்லதான் என்னோட எதிர்காலம் அடங்கி இருக்கு...''

''என்னோட எதிர்காலமே கேள்விக்குறியா இருக்கு... உங்களுக்கு வேற பதில் சொல்லணுமா? சரி, எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க...!''

''சரி பாவனா. இன்னிக்கு தேதி பத்து. பதினோழாந்தேதி நாம சந்திப்போம்...''

''சரி. ஆனா அது வரைக்கும் நீங்க என்னோட மொபைல்ல கூட பேசக்கூடாது.''

''சரி. இங்கே... இதே... இடத்துல சந்திப்போம், அது வரைக்கும் உன்கூட மொபைல்ல கூட பேச மாட்டேன்... அது சரி... ஏன் பேசக்கூடாதுன்னு சொல்ற ?''

''ஒரு விஷயத்தைப் பத்தி தெளிவான முடிவு எடுக்கணும்ன்னா... நடுவுல வேற எந்த விஷயமும் என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாத்தான் நல்லது.''

''ஓ.கே. நல்லதே நடக்கட்டும்...'' இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.


மழை கொட்டிக் கொண்டிருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கிய பாவனா, சரிதாவின் பங்களாவை நோக்கி நடந்தாள். மழையை எதிர்பார்க்காததால் அவள் குடை எடுத்து வரவில்லை. எனவே அவள் நனைந்தாள். அவளது உடைகள் தொப்பலாக நனைந்து விட்டபடியால் அவளது உடைக்குள் இருந்த உள் அங்கங்கள், எடுப்பான வடிவத்தையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தின.

தெருவில் போகும் ஆண்கள், அவளது அந்த ஈரமான கவர்ச்சியில் தங்கள் வயதைக் கூட மறந்து, வாய் பிளந்தபடி ரஸித்துக் கொண்டே நடந்தார்கள். அவர்களது கண்களில் தெரிந்த காமவெறியைக் கண்ட பாவனா உடலும், உள்ளமும் கூனிக் குறுகிப் போனாள். வெகு வேகமாக நடந்து சென்று சரிதாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

அன்று வத்சலாம்மா லீவு என்பதால் சரிதாவே வந்து கதவைத் திறந்தாள். ஈரமான உடையில் புறா போல் நடுங்கிக் கொண்டிருந்த பாவனாவைப் பார்த்து பதற்றமடைந்தாள் சரிதா.

''என்ன பாவனா? உள்ள வா. இப்பிடி நனைஞ்சிருக்கியே? முதல்ல வந்து தலையை துவட்டு. என்னோட சுடிதார் ஸெட் உனக்கு கொஞ்சம் லூஸ் ஃபிட்டிங்கா இருக்கும். பரவாயில்லை. எடுத்து தரேன், போட்டுக்க'' என்று கூறியபடி துண்டு எடுத்துக் கொடுத்தாள் சரிதா.

அதன்பின் தன் அறைக்கு சென்று சுடிதார் ஸெட் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாள். கீழே ஹாலில் இருந்த வத்சலாம்மாவின் அறைக்கு சென்று, தலையைத் துடைத்துவிட்டு சரிதாவின் சுடிதாரை அணிந்து கொண்ட பாவனா, வெளியே வந்தாள்.

''அட... கொஞ்சம் லூஸா இருக்கும்ன்னு பார்த்தா... ரொம்ப லூஸா இருக்கே. சரி சரி இது கூட உனக்கு நல்லாத்தான் இருக்கு.''

சரிதா பேசியது எதையும் கவனிக்காத  பாவனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

''அட! ஏன் பாவனா அழறே? என்ன ஆச்சு?''

''பஸ்ல இருந்து இறங்கி உங்க வீட்டுக்கு நடந்து வர்றதுக்குள்ள... ஈரமாயிட்ட என்னோட உடம்பை ரொம்ப கீழ்த்தரமா பார்த்துக்கிட்டே போனானுங்க மேடம். ரொம்ப கஷ்டமா இருக்கு... பொண்ணா பொறந்து நான் படற கஷ்டங்களுக்கு எனக்கு என்னிக்குதான் விடுதலை கிடைக்குமோன்னு இருக்கு...''

சரிதாவின் அனுதாப அலைகளில் நீந்தினாள் பாவனா. செயற்கையாகப் பேச ஆரம்பித்தாலும் இயல்பான அவளது பெண்மை ஒரு விழிப்புணர்வை அடைந்து, அதனால் தன் துக்கத்தை வெளிபடுத்தினாள் பாவனா.

''அழகான பொண்ணுங்களை எப்பவும் பிரச்னை எதிர் நோக்கி காத்திருக்கும். அதுவும் நீ பேரழகான பொண்ணு. உன்னை சும்மா விடுமா சமூகம்? அது சரி, நீ ஆட்டோவுல வர வேண்டியதுதானே? எத்தனையோ தடவை சொல்லிட்டேன் உனக்கு... பஸ்ல வராதன்னு...''

 ''உங்க வீட்ல இருந்து அரை கிலோ மீட்டர்தான் மேடம் பஸ் ஸ்டேண்ட். அதுக்கு ஏன் ஆட்டோ செலவுன்னு யோசிச்சேன். இப்ப மழை சீஸனும் கிடையாது. திடீர்னு இப்பிடி பெரிய மழை அடிக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...''

''ஆமா... இப்ப சீஸன் பார்த்தா மழை பெய்யுது? நினைச்ச நேரம் பெய்யுது...''

''சரி மேடம். இன்னிக்கு என்ன பண்ணலாம்?''

''இன்னிக்கு என்னோட முகத்துக்கோ, காலுக்கோ ப்யூட்டி ட்ரீட்மெண்ட் தேவையில்லை. என்னோட ரூம்ல இருக்கற ஷெல்ஃப் எல்லாத்தையும் அழகுபடுத்தி அடுக்கணும். செய்வியா?''

''என்ன மேடம் கேள்வி இது? நீங்க என்ன வேலை குடுத்தாலும் நான் செய்வேன் மேடம்.''

''சரி, வா... என் ரூமுக்கு போகலாம்!''

இருவரும் சரிதாவின் அறைக்கு சென்றனர். அங்கே சுவரில் பதித்த மூன்று பெரிய அலமாரிகள் இருந்தன. சாவி வைத்து முதல் அலமாரியைத் திறந்தாள் சரிதா.

மேல்தட்டிலும், கீழ்த்தட்டிலும் பட்டுப்புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன.

ஒரு தட்டில் ஏகப்பட்ட நகைகள் சிதறிக் கிடந்தன. வெல்வெட்டால் தயாரிக்கப்பட்ட நகைப்பெட்டிகள் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பிரமித்துப் போன தன் உணர்வை அவளையும் அறியாமல் வெளிப்படுத்தினாள் பாவனா. ஓரிரு நிமிடங்களில் சமாளித்தபடி பேச ஆரம்பித்தாள்.

''என்ன செய்ய மேடம்?''

''முதல்ல இந்த நகைகளை எல்லாம் எடு. எடுத்து ஸெட் ஸெட்டா பெட்டியில அடுக்கு. வெளிய போகும்போது போட்டுக்கிட்டு போன நகைகளை அடுக்காம அப்பிடியே கலைச்சுப் போட்டிருக்கேன் பாரு. நகைப் பெட்டியில இருந்த நகைகளும் மாறி இருக்கும், அதையும் சரியா பார்த்து எடுத்து அடுக்கு. அதுக்கப்புறமா பட்டு புடவைகளை அடுக்கலாம். இன்னைக்கு வத்சலாம்மா வரலை. காலையில எழுந்திருச்சதுல இருந்து சரியான வேலை. தூக்கம் கண்ணை சுழட்டுது. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன். நீ அடுக்கிக்கிட்டிரு.''

''அ... அ... அது வந்து மேடம்... நீங்களும் என் கூட இருந்தா... நல்லது...''

''ஏன்? நான் எதுக்கு கூட இருக்கணும்? உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்கு, இப்ப தூங்கியாகணும். நீ அடுக்கு...'' என்று அன்பாக கட்டளை இட்ட சரிதா, போர்வையை எடுத்து போர்த்தியபடி கட்டிலில் படுத்துக் கொண்டாள். படுத்தவள், அடுத்த நிமிடம் அயர்ந்து தூங்கிவிட்டாள்.

தங்க நகைகள், வைர நகைகள் பலவித விலை உயர்ந்த நவரத்தினக் கற்கள் பதித்த ஏராளமான நகைகள் இவற்றை கலர் பார்த்து, டிஸைன் பார்த்து ஸெட் ஸெட்டாக அடுக்கிய பாவனாவிற்கு கைகள் நடுங்கியது. அதைவிட நெஞ்சம் நடுங்கியது.

நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அடுக்கினாள். சில நகைப் பெட்டிகளில் ஐநூறு ரூபாய் நோட்டுகளும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மகாலஷ்மியும், தனலஷ்மியும் தங்கள் கடாட்சத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

'சரிதா மேடமும் பெண். நானும் பெண். என்னோட நிலைமை...? இங்கே இருக்கற தங்க நகைகளுக்கு இருக்கற தங்கம்ங்கற பேர் கூட எனக்குக் கிடையாது. ஆனா மேடத்தோட நிலைமை? அவங்ககிட்ட இருக்கற தங்க நகைகளால அவங்களையே அபிஷேகம் பண்ணலாம் போல... ஹூம்' பெருமூச்சு விட்டாள் பாவனா.

நல்ல குடும்பத்துல பிறந்து வளர்ந்த நான், சூழ்நிலையோட கட்டாயத்துல என் பெண்மையை பறிகுடுக்கும்படி ஆயிடுச்சு. அந்தக் கொடுமையான பாவத்தைத் தொலைக்க இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கணுமோ தெரியலை. சுதாகரோட திட்டப்படி அந்த தப்பை  செய்ய வேண்டிய நிர்பந்தத்துல இருக்கேன். என்னோட பாவங்கள்ல்ல இருந்து நான் விடுதலையாகறதுக்கு அந்த தப்பை கடைசியா செஞ்சு, அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். சரிதா மேடம் மனசைக் கலைக்கற நாடகத்துல எனக்கு குடுத்திருக்கற வேஷத்தை ஒழுங்கா முடிச்சுட்டு, நாடக முடிவுல திரை போடற மாதிரி என்னோட தொடர் தவறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்.

கவனமாக நகைகளை சீராக அடுக்கினாள். ஒரு பேப்பர் எடுத்து எல்லா நகைகளுக்கும் லிஸ்ட் எழுதினாள். அதன்பிறகு சரிதாவின் புடவைகளை எடுத்து வெளியே வைத்தாள். ஷெல்ஃப் முழுவதையும் துடைத்து, புதிதாக நியூஸ் பேப்பர் விரித்தாள். புடவைகளை மிக அழகாக மடித்து, நேர்த்தியாக அடுக்கினாள். அப்போழுதும் சரிதா தூங்கிக் கொண்டிருந்தாள். மற்ற அலமாரிகளைத் திறக்க வேண்டாம் என்று எண்ணிய பாவனா, தூங்கிக் கொண்டிருந்த சரிதாவை மெதுவாக எழுப்பினாள்.

''மேடம்... மேடம்...''

அவளது குரலைக் கேட்ட சரிதா, மெதுவாகக் கண் விழித்தாள்.

''என்ன பாவனா?... நல்லா தூங்கிட்டேன் போலிருக்கு?...''

''ஆமா மேடம். ஒரு ஷெல்ஃப் அடுக்கிட்டேன் மேடம். இந்தாங்க நகைகளுக்கு லிஸ்ட் போட்டிருக்கேன்...''

''அட... இந்த வேலையை செய்யணும்ன்னு எவ்ளவோ நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன். அப்பாடா... ஒரு பெரிய வேலையை முடிச்சுட்ட...'' என்றபடியே எழுந்தவள், பாத்ரூமிற்கு சென்றுவிட்டு வந்தாள்.

பாவனா அடுக்கி முடித்த அலமாரியைத் திறந்து பார்த்தாள்.

''வாவ்... சூப்பர்! பிரமாதமா அடுக்கிட்டியே?!'' நகைகளை பாவனா அடுக்கி இருக்கும் நேர்த்தியைப் பார்த்தவள் மறுபடியும் பாராட்டினாள்.

''அது சரி... மறந்து போச்சு பாரேன். மணி ரெண்டாகுது. நீ இன்னும் சாப்பிடாம இருக்க. எனக்கு பசிக்குது. வா. சாப்பிடலாம். நேத்து வத்சலாம்மா சமைச்சு வச்சுட்டுத்தான் போயிருக்காங்க. ஃப்ரிட்ஜில் இருக்கு எல்லாமே. வா... மைக்ரோவேவ் அவன்ல சூடு பண்ணிக்கலாம்...''

பாவனாவிற்கும் பசி, வயிற்றைக் கிள்ளியது. இருவரும் சமையலறைக்கு சென்றனர். ஃப்ரிட்ஜில் இருந்த உணவு வகைகளை எடுத்து, ஒவ்வொன்றாக மைக்ரோவேவ் அவன்-ல் வைத்து சூடு பண்ணினாள்.

அவள் சூடு பண்ணியதை டைனிங் டேபிளுக்கு கொண்டு வந்து வைத்தாள் பாவனா. சரிதா ப்ளேட் எடுத்து வைத்தாள். இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

மறுபடியும் சரிதாவின் அறைக்கு சென்று, மற்ற இரண்டு ஷெல்ஃப்களையும் அடுக்கி முடித்தாள் பாவனா. அவள் அடுக்கும் பொழுது அவளுடன் அரட்டை அடித்தது மட்டுமல்ல...  சரிதாவின் மனது குழம்பிப்போகும் விதமாக பல கதைகளை பேசினாள் பாவனா.

அடுக்கி முடிக்கும் பொழுது மாலை நேரம் ஆகிவிட்டது. பாவனாவிற்கு ஒரு நல்ல தொகையை கொடுத்தாள் சரிதா. அதை வாங்க மறுத்த பாவனாவின் கைகளில் பணத்தைத் திணித்தாள் சரிதா. சரிதாவிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினாள் பாவனா.


அபிலாஷின் பங்களா, அந்தப் பகுதிக்கு மிக அழகு சேர்க்கும் விதமாக, கம்பீரமாகவும், கலைநயத்துடனும் மிடுக்காக நின்றிருந்தது.

பெரிய இரும்புக் கதவின் வெளியே அழகிய மர வேலைப்பாடுகள் நிறைந்த கூடாரம் ஒன்றில் காவல்காரன் அவனது மொபைலில் இளையராஜா அவர்களின் திரைப்படப் பாடல்களை ரஸித்து கேட்டுக் கொண்டிருந்தான்.

புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தான் அவன். வாட்ச் மேன் வேலைக்கு ஆள் நிலைப்பதே இல்லை. பத்து நாளைக்கு ஒரு ஆள் வருவான். திடீரென நின்னு விடுவான். அதன்பின் நீண்ட நாட்களுக்கு ஆட்களே கிடைக்காது. இப்படி இருந்தது அங்கே நிலைமை.

தனது காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பங்களா கதவின் அருகே வந்தான் சுதாகர். அவனைப் பார்த்த காவல்காரன், மொபைலின் வாயை அடைத்தான். அவனது வாயைத் திறந்தான்.

''யாருபா நீ... இன்னா விசயம்?'' வாட்ச்மேன், சென்னை செந்தமிழில் வார்த்தைகளைக் கடித்து துப்பினான்.

''என் பேர் சுதாகர். சரிதாம்மாவுக்கு வேண்டியவங்க.''

''ஓ... வெயிட் பண்ணு....'' என்றவன், இன்ட்டர்காமை எடுத்து சில நம்பர்களை அழுத்தினான். வீட்டில் இருந்த வத்சலாம்மா ரிஸீவரை எடுத்து காதிற்கு கொடுத்தான்.

காவல்காரனின் பரிச்சயமான குரல் கேட்டது.

''என்ன பாபு?''

''நம்ப அம்மாக்கு வேண்டிய ஆளாம். இங்கே வந்திருக்காரு. பேர் சுதாகராம்.''

''சரி... நீ வை. நான் அம்மாகிட்டே கேட்டுட்டு உன்னை கூப்பிடறேன்.''

''சரி வத்சலாம்மா.''

இன்ட்டர்காமை தலை வணங்க வைத்துவிட்டு சுதாகரிடம் திரும்பினான்.

''கொஞ்சம் வெயிட் பண்ணுபா...''

இன்ட்டர்காம் ஒலித்தது.

சரிதா பேசினாள். அவளது குரல் படபடப்பாய் இருப்பதை அவளாலேயே மறைக்க முடியவில்லை.

''பாபு... அந்த ஆளோட பேர் என்ன சொன்னான்?''

''சுதாகர்...ன்னு சொல்றார் மேடம்...''

''சரி... அவன்... அவர்கிட்ட குடு...''

இன்ட்டர்காம் கை மாறியது...

சரிதா பேசினாள்.

''ஹலோ... யாரு...?''

''ஏன்? குரலை வச்சு கண்டுபிடிக்க முடியலியோ? நான் சுதாகர்...''

''எதுக்காக என் வீடு தேடி வந்த?''

வத்சலாம்மா, சமையலறையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டே தடுமாற்றத்துடன் கேட்டாள் சரிதா.

''பணம் குடுக்கறதா சொல்லிட்டு நைஸா நழுவிட்டிருக்கியே... அதுக்குத்தான் வந்தேன்...''

''ஐய்யோ... உனக்கு பணம் தரக் கூடாதுங்கற எண்ணமே எனக்கு கிடையாது. கண்டிப்பா குடுப்பேன்.''

''குடுக்கறதை இப்பவே குடுத்துடு.''

''முதல்ல நீ இங்க இருந்து கிளம்பி அல்ஸா மால் காம்ளெக்சுக்கு போ. நான் அங்கே வந்துடறேன். வீட்டுகிட்ட நிக்காத ப்ளீஸ்...''

''அப்பிடின்னா ஒரு கண்டிஷன். உன்னோட மொபைல் நம்பரை குடு. குடுத்தாததான் போவேன்...''

''நான்தான் வரேன்னு சொல்றேன்ல?''

''நம்பர் குடுக்கலைன்னா... நான் இங்க இருந்து ஒரு 'இஞ்ச்' கூட நகரமாட்டேன்...''

''ஐய்யோ... சரி... நம்பரை நோட் பண்ணிக்கோ. நைன் ட்ரிபிள் ஃபோர் த்ரி.. டவுள் ஃபைவ்  ட்ரிபிள் பைவ்...''

''ஆஹா... நம்பர் செம ஃபேன்ஸியா இருக்கே...''

''சரி... நீ... கிளம்பு...''

''சரி...''

சுதாகர், தன் காரில் ஏறுவதற்காக நகர்ந்தான்.

''இன்னா ஸார்... மேடம் பார்க்கலை?''வாட்ச்மேன் கேட்டான்.

''அட... நீ... வேற...'' என்று முணுமுணுத்தபடியே காருக்குள் உட்கார்ந்து, அங்கிருந்து விரைந்தான்.


அல்ஸா மால் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் சுதாகர். அவனுக்குள் கோப எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.

'இந்த சரிதா என்னை என்ன 'கேனப்பயல்'ன்னு நினைச்சுக்கிட்டிருக்காளா? பணம் கொண்டு வந்து தரேன்னு சொல்லி ரெண்டு தடவை ஏமாத்திட்டா. ஒரு பொம்பளைக்கு இவ்ளவு 'தில்' இருந்தா... எனக்கு எவ்ளவு இருக்கும்?' தன் மொபைலை எடுத்தான். சரிதாவின் நம்பர்களை அழுத்தினான்.

''ஹலோ...'' மறுமுனையில் சரிதாவின் குரல்.

''என்ன? கிளம்பியாச்சா?''

''வர்றதுக்குள்ள என்ன அவசரம்? வந்துடறேன்...''

''பணத்தோடன்னு சொல்லு...''

''ஆமா... ஆமா...'' சரிதா, மொபைலில் தொடர்பைத் துண்டித்தாள்.

'இவ மட்டும் இன்னிக்கு பணத்தோட வரலைன்னா... என்ன பண்றேன் பாரு...?'

முப்பது நிமிடங்களில் சரிதா அங்கே வந்தாள். ஒரு பெரிய பையை அவனிடம் கொடுத்தாள். அந்தப் பை நிறைய... கற்றை கற்றையாகப் பணமும் நிறைய நகைகளும் இருந்தன.

''நீ கேட்டதை நான் குடுத்துட்டேன். நான் கேட்டது?...''

''காரியத்துல குறியாத்தான் இருக்க?''

''சூடு கண்ட பூனை நான். சும்மா விடுவேனா?''

சுதாகர், தன்னிடம் இருந்த ஒரு சிறிய பையை அவனிடம் கொடுத்தான்.

''எல்லாம் இருக்கா?''

''வேணும்ன்னா பார்த்துக்க...''

''கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ வந்துடறேன்'' என்ற சரிதா, அங்கே இருந்த டாய்லெட்டிற்கு சென்றாள். சுதாகர் கொடுத்த பையைப் பிரித்தாள். அதனுள் சரிதா, அவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், சரிதா அவனுக்கு எழுதிய கடிதங்களும் இருந்தன.

அவற்றை பைக்குள்ளேயே வைத்துவிட்டு, பையுடன் அங்கிருந்து வெளியேறி சுதாகர் இருந்த இடத்திற்குப் போனாள்.

''நீ கிளம்பலாம்... இனி என்னோட வாழ்க்கையில நீ குறுக்கே வரக்கூடாது. என்னோட மொபைல் நம்பரை அழிச்சுடு...''

''அழிக்கலைன்னா?!''

''என்னோட நம்பரை மாத்திடுவேன்...''

''செம க்ரிமினல் அறிவு உனக்கு...''

''உனக்கா? எனக்கா? சரி... சரி... இனி உன்னோட எனக்கென்ன பேச்சு?'' சரிதா அங்கிருந்து வெளியேறினாள்.


வீட்டிற்கு வந்து, தன் அறையில் படுக்கை மீது 'தொப்' என்று விழுந்த சரிதாவிற்கு நெஞ்சம் நடுங்கியது. பருந்தைக் கண்டு பயப்படும் புறாவைப் போல அவளது உடம்பு முழுவதும் நடுங்கியது.

'என் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்... எத்தனை பணம்!.. எவ்ளவு நகைகள்! ராத்திரி பகலா ம்யூஸிக் மட்டுமே சிந்தனையா இருந்து சம்பாதிச்சாரே... எனக்கு அவர் குடுத்திருக்கற சுதந்தரத்தை இப்பிடி துஷ்பிரயோகம் பண்ணிட்டேனே... என்னை எவ்ளவு நம்பறார்... எந்தப் பணத்தையும் பத்தி அவர் கேக்கறதே இல்லை. 'எதுக்காக இவ்ளவு பணம் எடுத்த'ன்னு ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது கேட்டிருப்பாரா? அவருக்கு நான் செஞ்ச இந்த துரோகம்... கடவுளுக்கே பொறுக்காதே... நான் அவரை சந்தேகப்பட்டு பேசினப்பகூட அவர் கோபப்படலியே... ஆறுதலா, ஆதரவா என்னை அள்ளி அணைச்சு தூங்க வச்சாரே...'

சுதாகருக்கு பணம் கொடுத்தது பற்றி நினைத்து அழுதாள்.

'இந்தப் பக்கம், இந்த சுதாகர் பணம் பறிக்கறதுக்காக ப்ளாக் மெயில் பண்ணிக்கிட்டிருக்க, இன்னொரு பக்கம் அபிலாஷ் பத்தின பிரச்னை என் மனசை பாதிக்க... கடவுளே... நான் என்ன செய்வேன்?' அவளது அழுகை வலுத்தது.

அவளது அறைக் கதவை தட்டும் ஓசை கேட்டது. கண்ணீர் வடிந்து கொண்டிருந்த கண்களைத் துடைத்துவிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

அங்கே வத்சலாம்மா நின்று கொண்டிருந்தாள்.

''என்னம்மா இது? கண்ணெல்லாம் இப்பிடி சிவந்து கெடக்கு?!''

''அதெல்லாம் ஒண்ணுமில்ல வத்சலாம்மா... கண்ல ஏதோ பிரச்னை. அதுக்குத்தான் கண் டாக்டர்ட்ட போயிட்டு வந்தேன்.''

பொய்களை உண்மை போல பேசினாள் சரிதா.


மறுநாள். சரிதாவின் வீட்டிற்கு பாவனா வந்தாள்.

அவள் வந்ததும் அவளை சாப்பிட சொன்னாள் சரிதா.

''வேண்டாம் மேடம்..''

''உன்னோட வாய் வேண்டாம்ன்னு சொன்னாலும் உன்னோட வயிறு கேட்கும்ன்னு எனக்குத் தெரியும். ரொம்ப ஃபஸ் பண்ணிக்காம போய் சாப்பிடு...'' என்று கூறிய சரிதா, வத்சலாம்மாவை அழைத்தாள்.

''வத்சலாம்மா... பாவனாவுக்கு சாப்பிட எடுத்து வைங்க. ஃப்ரிட்ஜ்ல மீன் குழம்பு இருந்துச்சே. அதை சூடு பண்ணிக் குடுங்க. உங்களோட மீன் குழம்புன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம்...''

''சரிங்கம்மா'' வத்சலாம்மா குரல் கொடுத்தார்.

''பாவனா நீ சாப்பிட்டுட்டு என்னோட ரூமுக்கு வா.''

சரிதா, தன் அறைக்கு சென்றாள்.

சாப்பிட்டு முடித்த பாவனா, சரிதாவின் அறைக்கு சென்றாள்.

''தேங்க்ஸ் மேடம். இங்கே வர்றப்பயெல்லாம் எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு, கை நிறைய பணமும் குடுத்து அனுப்பறீங்க. போன ஜென்மத்துல உங்க கூட பிறந்திருப்பேனோ என்னமோ? அடுத்த ஜென்மத்துல உங்களோட தங்கையா பிறக்கணும்ன்னு வேண்டிக்கறேன் மேடம்....''

பேசிக் கொண்டிருந்த பாவனாவின் குரல் தழுதழுத்தது. கண்ணில் கண்ணீர் வழிந்தது. அவளது குரலிலும் நடிப்பு இல்லை. அவள் விட்ட கண்ணீரிலும் பொய் இல்லை.

'என் மேல இவ்ளவு பாசம் வச்சிருக்கற இவங்க வாழ்க்கையிலயா நடிக்கற நிலைமை எனக்கு வரணும்?'

''ஏய்... என்ன இது? நான் உனக்கு அப்பிடி என்ன பெரிசா செஞ்சுட்டேன்? உன்னோட கைத்திறமைக்கு உனக்கு பணம் குடுக்கறேன்... வேற என்ன செய்யறேன்?''

''நீங்க குடுக்கற பணம் எனக்கு பெரிய உதவியா இருக்கு.''

''திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டிருக்காத...''

''சரி மேடம். மேன்னிக்யூர் ஆரம்பிச்சுடலாமா?''

''ஓ... யெஸ்...''

சரிதாவின் விரல்களில் ஏற்கெனவே போட்டிருந்த நெயில் பாலீஷை, ரிமூவரில் பஞ்சை நனைத்து துடைத்துவிட்டாள். அதன்பின் அது தொடர்பான அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தாள்.

''என்ன பாவனா... எப்பவும் ஏதாவது பேசிக்கிட்டே செய்வ? இன்னிக்கு என்ன மூச்சு, பேச்சையே காணும்?''

''அது... அது... வந்து மேடம்... நானே உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி பேசணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதைப் பத்தின யோசனையில்தான் பேசாம இருக்கேன்...''

''யோசிச்சதைப் பேசினாத்தானே விஷயத்தை நான் தெரிஞ்சுக்க முடியும்?''

''அது... அது... வந்து... மேடம்... வஸந்த்ன்னு ஒருத்தரை சந்திச்சேன். அவர் என்னை விரும்பறதா சொன்னார். என்னோட வாழ்க்கையில ஏற்பட்ட பல பிரச்னைகளால எனக்கு காதல்ங்கற உணர்வே வரலை. ஆனா... வஸந்த் என்னை உண்மையா நேசிக்கறார்ன்னு புரியுது. ஆனா... எனக்கு அவர் மேல காதல்ங்கற ஈடுபாடு வரலை. அவர் நல்லவர்னு தெரியுது. அவரோட அன்பை மதிக்கணும்ன்னு தோணுது. ஆனா அவரை நான் காதலிக்கிறேனான்னு எனக்கு தெரியலை.''

''என்ன பாவனா... பாலச்சந்தர் ஸார் படத்துல மாதிரி பேசறே? அந்த வஸந்த் யார், அவனோட குடும்பப் பின்னணி என்ன, அவன் என்ன வேலை செய்யறான்? அவனோட வருமானம் எவ்ளவு? இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டியா?''

''ரெஸ்ட்டாரண்ட்ல சப்ளையர் வேலை, ஆட்டோ ஓட்டற வேலை... இப்பிடி கிடைச்ச வேலையை செய்வாரு. நாளைக்கு நான் அவரோட காதலுக்கு பதில் சொல்லி ஆகணும். அதுதான் ஒரே குழப்பமா இருக்கு.''

''உன் மனசுக்கு நல்லவன்னு தோணினா மட்டும் போதாது. தீர விசாரிக்கணும். அவனோட விலாசம் தெரிஞ்சு, அந்த ஏரியாவுல போய் அவனைப் பத்தி கேக்கணும். அக்கம் பக்கம் இருக்கறவங்களுக்குத்தான் விஷயம் தெரியும். விவகாரம் எதுவும் இருந்தாலும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க. அவன் வேலை செய்யற இடத்துலயும் விசாரிக்கலாம். காதல்ன்னு சொல்லிக்கிட்டு பெண்களை நெருங்கற ஆண்கள்ட்ட ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். வளைச்சுப் பிடிக்கறதுக்கு வலையை வீசுவாங்க. சிக்கிக்கிட்டோம்ன்னா அதில இருந்து மீள்றது கஷ்டம். அதனால நல்லா விசாரிச்சுக்கோ. என்னடா இது... இப்பிடி விசாரணை பண்ணி உண்டாகறது எப்பிடி காதலாகும்ன்னு யோசிக்கிறியா? நீ நினைக்கறது சரிதான். ஆனா... இன்னிக்கு நிலைமை அப்பிடி இருக்கே? காதலுக்காக நம்பளையே மாத்திக்கறோம். ஆனா... அவனுங்க... காதலிக்கற பொண்ணுகளையே மாத்திடறானுங்களே. அது மட்டுமில்லை. நல்லவனா... வல்லவனா நமக்கு காட்சி அளிக்கற அவனுங்களோட மறுபக்கம் பத்தி தெரிஞ்சுகிட்டாதான் நல்லது. ஒரு முன் ஜாக்கிரதை உணர்வுக்காகத்தான் சொல்றேன். உன்னோட வாழ்க்கையை ஒருத்தன் கையில ஒப்படைக்கும் போது அவன் நம்பிக்கையானவனா இருக்கணும். நாம ஏமாளிகளா இருந்தா ஏமாத்தறவங்க... ஏமாத்திக்கிட்டேதான் இருப்பாங்க. அதனால சரியான முடிவு எடு. உண்மையிலேயே அவன் நல்லவன்னு நிரூபணமாயிட்டா... அவனையே கல்யாணம் பண்ணிக்கோ....'' தன்னுடைய பழைய அனுபவத்தை வைத்துப் பேசினாள் சரிதா.

''சரி மேடம். உங்ககிட்ட மனம் விட்டு பேசினப்புறம் எனக்கு ஒரு தெளிவான முடிவு கிடைச்சிருக்கு மேடம்.''

''எனக்குத் தெரிஞ்சதை நான் சொன்னேன். இது உன்னோட எதிர்காலம் பத்தின பெரிய விஷயம். அதனால முடிவு எடுக்க வேண்டியது நீதான். அந்த முடிவு, நல்ல முடிவா இருக்கணும். ஒரு தடவை ஏமாந்துட்டா... வாழ்நாள் முழுசும் அது சம்பந்தமான பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமாயிடும்.''

''புரியுது மேடம். இந்த உலகத்துலயே இவ்ளவு யோசிச்சு... காதல் பண்ற ஒருத்தி நானாத்தான் மேடம் இருக்கும்...''

''ஓ... காதலிக்கறதுன்னு முடிவே பண்ணிட்ட போலிருக்கு?!''

''ச்சீய்... போங்க மேடம்...''

''நான் எங்கே போக?! நீதான் போகணும் அந்த வஸந்த்தை தேடி... உன்னோட பதிலுக்காகக் காத்திருப்பான்ல்ல?''

''நான் பதில் சொல்ற வரைக்கும் ஒரு ஃபோன் கால் கூட பண்ணக் கூடாதுன்னு சொன்னேன் மேடம். நான் சொன்னபடி வஸந்த் ஒரு ஃபோன் கூட பண்ணலை மேடம்.''

''ஆனாலும் நீ ரொம்ப மோசம். இப்பிடியா ஒருத்தனை காக்க வைப்ப? பாவம். ஆனா ஒரு விஷயம்... நாம பாவம் பார்த்து தொபுக்கடீர்ன்னு கால்ல விழுந்து கிடப்போம். அவனுக நம்ப காலை இடறி விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பானுக.''

''போனால் போகட்டும் போடா'ன்னு பாடிக்கிட்டே டாட்டா சொல்ல வேண்டியதுதான் மேடம்...''

''டாட்டா சும்மா சொல்லக் கூடாது. பேட்டா செருப்பால அடிச்சு சொல்லி விரட்டணும்...''

''ஆஹா... சூப்பரா சொல்றீங்க மேடம்...''

''பின்ன என்ன? காதல்ல நம்பளை சிக்க வச்சுட்டு, அவனுக சிறகடிச்சுப் பறந்துடுவானுங்க. அதனால நாம ஜாக்கிரதயாத்தான் இருக்கணும்.''

''என்னோட குடும்ப சூழ்நிலையிலயும், வறுமைக் கோட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கற கஷ்டமான இந்த மனநிலையிலயும் காதலைப் பத்தி கடுகளவு சிந்தனை கூட இல்லாம இருந்தேன். ஆனா...''

''ஆனா... அந்த வஸந்தைப் பார்த்தப்புறம் கொஞ்சமா மனசு அசையுது... அலை பாயுது. அப்பிடித்தானே...''

''ஆமான்னு அழுத்தமா சொல்லவும் முடியல. இல்லைன்னு ஆணித்தரமா மறுக்கவும் முடியலை மேடம்...''

''நீ சொன்னபடி உன்னோட பதில் வர்ற வரைக்கும் உனக்கு ஃபோன் போடாம பொறுமையா காத்திருக்கான் அந்த வஸந்த். நீ கஷ்டப்படற மாதிரி அவனும் ஏழையா இருக்கானேன்னு யோசிக்கறியா?''

''சச்ச... அப்பிடி இல்லை மேடம். என்னதான், பணம் ஒரு முக்கியமான தேவையா இருந்தாலும்... பணத்துக்காகவோ... வசதியான வாழ்க்கைக்காகவோ காதலிக்கற சுபாவம் எனக்கு இல்லை மேடம். நான் தயங்கறதுக்கு காரணம்... இப்ப எனக்கு இருக்கற இந்த சுதந்திரமான வாழ்க்கை, கல்யாணம்ங்கற சிறைக்குள்ள சிக்கிக்கிட்ட சிறைப்பறவையா ஆகிடுமோன்னு பயம். சின்ன வயசுல இருந்தே குடும்பத்தோட பெரிய பொறுப்புகளை சுமந்து, அதனால, எல்லா விஷயத்துலயும் முடிவு எடுக்கக்கூடிய உரிமை எனக்கு வந்துச்சு... கூடவே திறமையும் வந்துருச்சு. கணவர்ங்கற ஸ்தானத்துல இன்னொரு நபர், என்னோட வாழ்க்கையில சேரும்போது, என்னோட உரிமையும், சுதந்திரமும் பறிபோயிடுமோன்னு பயம்மா இருக்கு மேடம். வானமே எல்லையா வாழ்ந்துக்கிட்டிருக்கறவ நான். எனக்கு ஒரு எல்லைக்கோடு யாரும் போட்டுடக் கூடாது. அன்புக்கு அடங்கி வாழலாம் மேடம். ஆனா... அதிகாரத்துக்குள்ள முடங்கி வாழறது தேவையே இல்லை மேடம். சுயமா முடிவு எடுத்து வாழ்ந்த என்னால யாரோட கட்டுப்பாட்டுக்கும் அடி பணிய முடியாது... இயற்கையா ஓடற நதி மாதிரியான பெண் நான். நதி எப்பிடியும் அது போற போக்குலதான் போகும். நானும் அப்பிடித்தான்...''

''அட... இதையெல்லாம் அந்த வஸந்த்கிட்ட வெளிப்படையா பேசி, உன்னோட நிபந்தனைகளை சொல்லிட வேண்டியதுதானே?''

''மனம் விட்டு வெளிப்படையா பேசறது மட்டுமில்லை. 'கல்யாணத்துக்கப்புறம் என்னை எந்தக் காரணத்துக்காகவும், எதுக்காகவும் கட்டுப்படுத்தவும் கூடாது. அதைச் செய்... இதை செய்ன்னு கட்டளை இடவும் கூடாது'ன்னு முதல்லயே கண்டிப்பா சொல்லிடணும். அதுதான் முக்கியம்...''

''உன்னோட எல்லா கண்டிஷன்களுக்கும் இப்ப சரின்னு சொல்லிட்டு, கல்யாணம் ஆன பிறகு பேச்சு மாறிட்டா...?''

''அதுக்காகத்தான் மேடம் சொல்றேன். கல்யாணம்ங்கற சம்பிரதாயத்துல சிக்கிக்கக் கூடாதுன்னு...''

''எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி நாம கணிக்க முடியாதுல்ல? ஒருத்தன் கெட்டவனா இருந்தா ஒட்டு மொத்த ஆண் இனமே கெட்டவங்களாத்தான் இருப்பாங்கன்னு நாம முடிவு எடுக்கக் கூடாது...''

''அதுக்காக பரீட்சை பண்ணி பார்க்க முடியுமா மேடம்? 'வாழ்ந்துதான் பார்ப்போமே'ன்னு வாழறதுக்கு இது, 'ஒரு ஆட்டம் ஆடித்தான் பார்ப்போமே'ங்கற விளையாட்டு இல்லையே...''

''ஆமா பாவனா. எதிர்காலமே இந்த விஷயத்துல அடங்கி இருக்கு. புத்திசாலித்தனமா யோசிக்கறதுதான் நல்லது. காதலிக்கும்போது எதுக்கெடுத்தாலும் 'சரி சரி'ன்னு தலைய ஆட்டுவானுங்க. கல்யாணத்துக்கப்புறம் அவனுகளோட ஆதிக்கத்தை நம்ப மேல செலுத்துவானுக... அப்ப நம்பளால என்ன செய்ய முடியும்? ஒண்ணு... அடி பணிஞ்சு கிடப்போம் அல்லது சண்டை போட்டு வாக்கு வாதம் ஆகி, வாழ்க்கை, சண்டையும், சச்சரவுமா ஆகிடும். 'நீ பெரிசா?... நான் பெரிசா...'ங்கற ஈகோ போராட்டம் நடக்கும்...''

''வஸந்த் பேசறதைக் கேட்கும்போது அவர் மேல நம்பிக்கை வருது...''

''நம்பினா முழுசா நம்பி, உன்னையும் உன்னோட வாழ்க்கையையும் அவன்கிட்ட ஒப்படைச்சுடு. தடுமாறிக்கிட்டே இருந்தா... ஒரு முடிவுக்கு வர முடியாது.''

''முடியும் மேடம். என்னைப் பொறுத்த வரைக்கும் எங்க குடும்பத்துல, என்னை யாரும் கட்டுப்படுத்த மாட்டாங்க. எங்க குடும்ப சாம்ராஜ்யத்துல நான்தான் ராஜா. நான்தான் மந்திரி. நிறைய 'டைம்' இருக்கு. நல்லா யோசிச்சு முடிவு எடுப்பேன்.''

''நீ எடுக்கற முடிவு, உன்னோட எதிர்காலத்தை ஒளிமயமானதா உருவாக்கணும். காதல்ங்கறது பெரும்பாலும் கபட நாடகமாத்தான் இருக்கு. உன்னதமான உணர்வுகளுக்குள்ள உதயமாகறதுதான் உண்மையான காதல். 'இவ அழகா இருக்கா', 'இவளை அடைஞ்சுடலாம்', 'ஆசை தீர அனுபவிக்கலாம்'ன்னு தூண்டில் போடற காதல், உண்மையான காதலாகவே இருக்க முடியாது. நீ உலகம் புரிஞ்சுக்கிட்டவ. சமூகத்துல என்னவெல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டவ. இளமையில வறுமை, கொடுமைன்னாலும் கூட உன்னோட ஏழ்மை, உனக்கு எத்தனையோ அனுபவங்களைக் குடுத்திருக்கும். அதனால உனக்கு நான் அதிகமா சொல்ல வேண்டியது இல்லை. உன்னால மிகச் சரியான முடிவு எடுக்க முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.''

''தேங்க்ஸ் மேடம். என்னையும், என்னோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்.''

'என்னோட காதல் அனுபவம்... உனக்கு அறிவுரை கூற வைக்குது' மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சரிதா.

'என்னோட நாடக வேலை முடிஞ்சப்புறம்தான் வஸந்த்தை கல்யாணம் பண்ணிக்க முடியும். யாரை ஏமாத்தி நாடகம் நடத்தறேனோ... அவங்களே எனக்கு 'ஏமாந்து போயிடாத'ன்னு புத்திமதி சொல்றாங்க.' உள்ளுக்குள் ஓடிய எண்ணங்களால் கூனிக் குறுகிப் போனாள் பாவனா.

'நான் நல்லவளா மாறக்கூடிய காலக்கட்டம் சீக்கிரம் வந்துடும். அப்புறம்... நான் முழுக்க... முழுக்க... நல்ல பொண்ணு. சுதாகர்ட்ட முழுத் தொகையையும் வாங்கிட்டா... ஏழ்மை நிலை மாறிடும். பணத்துக்காக இனி நடிக்க வேண்டியது இல்லை. இரவு நேர வரவுக்காக நான் எவனிடமும் போக வேண்டியது இல்லை. சின்னதா ஒரு ரெஸ்ட்ராரண்ட் ஆரம்பிச்சு, அதை பெரிய அளவுல முன்னேத்துவேன். ரெஸ்ட்டாரண்ட்ல எனக்கு உதவி செய்ய வஸந்த் என் கூட இருப்பார்.' 'ஹக்' நாக்கைக் கடித்துக் கொண்டாள் பாவனா. வஸந்த் பத்தின கற்பனை, கல்யாணம் தாண்டி அவர்கூட சேர்ந்து ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிக்கற வரைக்கும் போயிடுச்சே?!' கற்பனையில் மிதந்த பாவனா, அவளையும் அறியாமல் வெட்கப்பட்டாள். அவளது வெட்கத்தைப் பார்த்த சரிதா, சிரித்தாள்.

''என்ன பாவனா? கற்பனை வானத்துல பறந்துக்கிட்டிருக்க போல...''

''ச்சீச்சி... அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்...''

''ஒண்ணுமில்லாமலா வெட்கத்தோட சிகப்பு ரேகை உன் முகத்துல ஓடுது?!''

''உங்ககிட்ட ரகஸியமா எதுவும் செய்ய முடியாது போல?!''

''இவ்ளவு தூரம் பழகின என்கிட்ட உனக்கு என்ன ரகஸியம் இருக்க முடியும்?...''

சரிதாவின் இந்த வார்த்தைகள், பாவனாவின் இதயத்தை குத்திக் கிழித்து ரத்தக் களறியாக்கியது, அவளது முகபாவம் மாறுவதைக் கண்ட சரிதா சற்று பதறினாள்.

''பாவனா... நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?''

''இல்லை மேடம்... தப்பெல்லாம் என் மேலதான் மேடம்....''

''யாரும் எந்தத் தப்பும் பண்ணலை. போதுமா? சந்தோஷமா இரு.''

''சரி மேடம்...''

உள்ளத்திற்குள் ஏற்பட்ட உணர்ச்சிக் கலவைகளின் போராட்டத்தில் தடுமாறியபடி, அந்ததத் தடுமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு அரும்பாடு பட்டு, அதன்பின் சமாளித்து, சரிதாவிடம் விடைபெற்று கிளம்பினாள் பாவனா.


கையில் கட்டியிருந்த 'வாட்ச்'சில் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக் கொண்டே, பாவனாவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வஸந்த்.

'சொன்னா சொன்ன டைமுக்கு வராம இந்த பாவனா என்ன பண்றா? ஏன் இவ்ளவு லேட் பண்றா? ஒரு வேளை... மறுத்துப் பேச மனம் இல்லாம... வராம விட்ருவாளோ? அவ வராம இருந்துட்டா? அதுக்கு என்ன அர்த்தம்? அவ சொன்னபடி இது விஷயமா அவளுக்கு ஃபோன் கூட போடலியே? அப்பிடி இருந்தும் ஏன் அவ இன்னும் வரலை? வர கொஞ்சம் லேட்டாகும்னு கூடவா சொல்ல முடியாது?! அவசரமா ஏதும் வேலைன்னு போயிட்டாளா... அல்லது என்னையும், என்னோட காதலையும் அலட்சியமா நினைசுட்டாளா? என் காதலை ஏத்துக்குவாளா... மாட்டாளா... தவிப்புல இப்பிடி காத்திருக்க வச்சுட்டாளே... ஆமா... இல்லைன்னு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சுட்டா... நிம்மதியா இருக்கலாமே?'

அவனது தாறுமாறான, தடுமாறும் சிந்தனைகள் தடைபடுவது போல... சற்று தூரத்தில் பாவனா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனது இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அதிவேகமாகத் துடித்தது. பாவனா, அவனை நெருங்கி வரும் வரை காத்திருக்காமல் அவளை நோக்கி நடந்து எதிர் கொண்டான்.

''ஹாய் பாவனா...'' உள்ளம் படபடத்ததில், அதன் வெளிப்பாடாய் மூச்சிறைத்தது.

''ஏன் இப்பிடி மூச்சிறைக்குது? நீங்க இருக்கற இடத்துக்கு நான் வந்து சேர்றதுக்குள்ள அவசர அவசரமா வர்றீங்க?...''

'வழக்கம் போல அதட்டி உருட்டி பேசறாளே தவிர, இவ முகபாவத்துல இருந்து எந்த பதிலையும் கணிக்க முடியலியே?' வஸந்த் குழம்பினான்.

''என்ன?! நான் கேட்டுக்கிட்டிருக்கேன்... நீங்க பாட்டுக்கு எதுவும் பேசமாட்டேங்கறீங்க?! வாங்க. உட்கார்ந்து பேசலாம்.''

கடற்கரையோரம் 'சில்' என்று வீசியது காற்று. படகின் மறைவு தேடிப் போகாமல், ஆள் அரவம் இல்லாத இடம் தேடிப் போகாமல் இருவரும் உட்கார்ந்தனர்.

''ஸஸ்பென்ஸ் வைக்காம சொல்லிடேன் பாவனா...''

''நான் என்ன சினிமா கதையா சொல்றேன்?! ஸஸ்பென்ஸ்... அது... இதுன்னுக்கிட்டிருக்கீங்க?...''

''கதையா இருந்தா... இவ்ளவு ஆவலா கேட்க மாட்டேன் பாவனா. இது வாழ்க்கை. அதனாலதான்...''

''ஆமா. நீங்க சொல்றது சரிதான். வாழ்க்கையை வேடிக்கையா எடுத்துக்காம சீரியஸா நினைச்சுதான் எந்த முடிவும் எடுக்க வேண்டியதிருக்கு. அதனாலதான் உங்களுக்கு பதில் சொல்றதுக்கு டைம் கேட்டேன். மனம் திறந்து பேசணும்ங்கற திடமான எண்ணத்துலதான் நான் வந்திருக்கேன். நீங்க என் மனசுல சின்னதா ஒரு இடத்தைப் பிடிச்சிருக்கீங்கறது என்னமோ உண்மைதான். ஆனா அதுக்காக 'காதலுக்கு கண் இல்லை'ன்னு கண் மூடித்தனமா நம்பற ரகம் இல்லை நான். வாழ்க்கையில எவ்வளவோ அடி பட்டுட்டேன். எனக்கு நேர்ந்த சோகமும், துக்கமும், இழப்பும், வறுமையும் ஒவ்வொரு அனுபவம். இந்த உலகத்தைப் புரிஞ்சுக்க வச்சது அந்த அனுபவங்கள்தான். குருவி தலையில பனங்கா மாதிரி என்னோட சின்ன வயசுலயே குடும்ப பாரத்தை சுமக்க நேர்ந்துச்சு. ஒரு பிடி சோத்துக்கு வழி இல்லாத நிலைமையில் படிச்சு முன்னேற என்ன வழி இருக்க முடியும்? அதனாலதான் என்னோட வழி... வழுக்கி விழற பாதையில போயிடுச்சு...''

பாவனா பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டுப் பேசினான் வஸந்த்.

''கடந்த காலத்துல, இறந்து போன விஷயங்களை இப்ப எதுக்கு 'போஸ்ட் மார்ட்டம்' பண்ற பாவனா? தேவையே இல்லை...''

''ப்ளீஸ்... வஸந்த்... என்னைப் பேச விடுங்க. காதல், கல்யாணம் இதெல்லாம் ஒரு நிறைவேறாத கனவுன்னு எப்பவோ எனக்கு புரிஞ்சு போச்சு. ஆனா... என்னை முழுசா புரிஞ்சுக்கிட்டு, கறைபடிஞ்ச என்னோட பழைய வாழ்க்கையைப் பத்தி பொருட்படுத்தாம... உங்க மனசை எனக்குக் கொடுத்து, என் மனசுல உங்களுக்கு ஒரு இடமும் கேக்கற நல்லவனான உங்களை அடையாளம் காண்பிச்சிருக்காரு கடவுள்.

நீங்க நல்லவனா இருக்கற அந்தக் காரணத்துக்காகவே உங்களுக்கு என்னால எந்த பாதிப்பும் வந்துடக் கூடாதேன்னு பயப்படறேன். உங்களோட வாழ்க்கையில நான் ஒரு குறுக்கீடா ஆகிடக் கூடாதேன்னு யோசிக்கறேன்.

இப்பிடித்தான்... எல்லா விஷயத்துலயும், எப்பவும் நானே யோசித்து, நானே ஒரு முடிவு எடுத்து பழகிட்டேன். இனி கல்யாண பந்தத்துல, கணவன்ங்கற உரிமையில என்னோட சுதந்திரத்தில யாரும் தலையிடறது எனக்கு சரிப்பட்டு வராது. நான் எப்பவும் நானா இருக்கணும். கணவன், மனைவின்னா, கலந்து பேசி முடிவு எடுக்கணும்ன்னு அறிவுரை சொல்றது பெரியவங்ளோட வழக்கம். நானும் கலந்து பேசத் தயார். ஆனா... முடிவு எடுக்கிறது என்னோட இஷ்டப்படிதான் இருக்கும்.

'என்னடா இது இப்பிடி பேசறாளே'ன்னு நினைப்பீங்க. பின்னாடி ஏற்படப் போடற பிரச்னைகளைத் தடுக்கறதுக்கான ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் இது. 'பொண்ணு பார்க்கறது', 'கால் விரலால தரையைத் தேய்ச்சுக்கிட்டு வெட்கப்படறது...' இந்த சம்பிரதாயங்களை எல்லாம் தாண்டிப் போய் என் குடும்பம்தான் என்னோட கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமேன்னு எனக்குள்ள ஒரு லஷ்மணன் கோட்டை போட்டுக்கிட்டவ நான். அந்த லஷ்மணன் கோட்டை தாண்டத் தூண்டற மாதிரி நீங்க என்னோட மனசை சலனப்படுத்தி இருக்கீங்க. அந்த சலனம், என்னோட எதிர்காலத்தை சலசலப்புக்கோ சஞ்சலத்துக்கோ உட்படுத்திடக் கூடாது. அதுக்காகத்தான் வெளிப்படையா பேசிடணும்ன்னு பேசறேன். நான் இப்பிடி பேசறது உங்களுக்கு சங்கடமா இருக்கலாம். ஆனா இப்ப எதுவுமே பேசாம விட்டுட்டா... பிற்காலத்துல பிரச்னைகள் பெரிசா உருவாகும்.

அப்ப  'அன்னிக்கே இதைப் பத்தியெல்லாம் பேசி அதுக்கப்புறம் முடிவு எடுத்திருக்கலாமே'ன்னு நினைச்சு நினைச்சு வேதனைப்படறது வேண்டாத விஷயம்தானே. உங்க மனசை நோக வைக்கணும்ங்கற எண்ணத்துல இதெல்லாம் நான் பேசலை. உங்களைக் கஷ்டப்படுத்திட்டேனா?!...''

பாவனா நீளமாக பேசி முடித்ததை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் வஸந்த். இப்போது அவன் பேசினான்.

''இஷ்டப்பட்ட பெண்ணை அடையறதுன்னா அதுக்குக் கஷ்டப்படாம முடியுமா? நீ இவ்ளவு நீளமா பேசினதுக்கு ஒரே ஒரு வரியில என்னால பதில் சொல்ல முடியும்...''

''என்ன?! ஒரே ஒரு வரியிலயா?!''

''ஆமா பாவனா.''

'' 'ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இருந்தா உயிர் உள்ள வரைக்கும் பிரச்னை இல்லாம சந்தோஷமா வாழலாம்.' இதுதான் அந்த ஒற்றை வரி. உன்னை நூத்துக்கு நூறு புரிஞ்சுக்கிட்டவன் நான். என்னைப் புரிஞ்சுக்கறது புத்திசாலியான உனக்கு சிரமமான விஷயம் இல்லை. இருந்தாலும் உன்னோட திருப்திக்காக சொல்றேன், உன்னோட உரிமைகள்ல்ல நான் தலையிடமாட்டேன். உன்னோட சுதந்திரம் என்னிக்கும் நிரந்தரமா இருக்கும். போதுமா? இப்ப சொல்லு உன்னோட முடிவை...''

''என்னோட முடிவு... நம்பளோட வாழ்க்கையின் ஆரம்பமா இருக்கும்.''

இதைக் கேட்ட வஸந்த், சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான். அவனது இதயத்தில், தேவதைகள் வாசனை மலர்களை தூவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட பாவனா, சில நிமிடங்கள் மௌனம் காத்தாள். அவளது மௌனத்தை கலைத்தான் வஸந்த்.

''தேங்க்யூ பாவனா. சந்தோஷத்துல எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. 'தலைகீழ் புரியாம இருக்கான்'னு சொல்லுவாங்களே... அதுக்கு அர்த்தம் இப்பதான் எனக்கு புரியுது...''

''உன்னோட சுதந்தரத்துல நான் குறுக்கிட மாட்டேன். உனக்கு பிடிச்சதுதான் எனக்குப் பிடிக்கும். உனக்குப் பிடிக்காதது எனக்கும் பிடிக்காது.''

''பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு பிடிவாதம் பிடிக்கற என்னோட உணர்வுகளை இந்த அளவுக்கு புரிஞ்சு வச்சிருக்கறதுக்கு உண்மையிலேயே நான் சந்தோஷப்படறேன்...''

''சந்தோஷம் மட்டும்தானா? இப்பக் கூட ஒரு 'ஐ லவ் யூ' சொல்லத் தோணலியா உனக்கு?''

''நான்தான் சொன்னேனே... நான் ஒரு சராசரி பொண்ணு இல்லை. 'ஐ லவ் யூ, 'உன்னைப் பார்க்காம என்னால முடியல', இப்பிடியெல்லாம் காதல் வசனம் பேசற மனப்பான்மையெல்லாம் எனக்கு இல்லை. 'என்னடா இது இப்பிடி மேம்போக்கா பேசறாளே'ன்னு நீங்க நினைக்கலாம். நான் விழுந்து விழுந்து காதல் செய்யற பெண் இல்லைன்னாலும் காதல்ங்கற இலக்கணத்துல இணைஞ்சிருக்கற அன்பைப் புரிஞ்சுக்காதவ இல்லை. அன்புங்கற சக்தி என் மனசுலயும் நிறைஞ்சு இருக்கு. என் மனசுக்குள்ள இருக்கற ஆழமான அன்புக்கு வெளிவடிவம் குடுக்கற பழக்கம் எனக்கு இல்லை. சின்ன வயசுலயே கஷ்டங்களை அனுபவிச்ச இந்த மனசு... கொஞ்சம்... பாறையா இறுகித்தான் போச்சு. கல்லுக்குள் ஈரம்ன்னு சொல்லுவாங்க. அது போலத்தான். அந்த ஈரத்துலதான் உங்களோட காதல் இப்ப ஒட்டிக்கிட்டிருக்கு. இதுக்கு மேல வெளிப்படையா என்னோட காதலை என்னால சொல்ல முடியலை. சொல்லத் தெரியலைன்னு கூட வச்சுக்கோங்க... கடல் அளவு அன்பு இருந்தாலும் கடுகளவு கூட அதை வாய் வார்த்தையால சொல்ற மனோபாவமே எனக்குக் கிடையாது. இதுதான் என்னோட குணச்சித்திரம். புரிஞ்சுக்கிட்டாதான் என் கூட நீங்க நிம்மதியா வாழ முடியும். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை நெஞ்சுல சுமந்துக்கிட்டு வந்தா... ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆனா... ஒண்ணு மட்டும் நிச்சயம். என்னோட அன்பு தூய்மையானது. அந்த அன்புக்காக உயிரையும் குடுப்பேன்... ''

''போதும் பாவனா. இதுக்கு மேல நீ வேற எதுவும் பேசித்தான் எனக்கு புரிய வைக்கணும்ங்கறது இல்லை. முழுசா உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன். நீ பயப்படற மாதிரி... நம்ப கல்யாண வாழ்க்கை, உன்னோட சுதந்திரத்தைப் பறிக்காது. உன் பிறந்த வீட்ல நீ எப்பிடி ஒரு மகளா... சகல உரிமைகளோடு வாழறியோ... அதே போல உன் புகுந்த வீட்லயும் மருமகளா... உன்னோட இஷ்டப்படி, சந்தோஷமா வாழலாம். அதுக்கு இதோ... இந்த கடல் சாட்சியா உறுதி கூற என்னால முடியும். என்னோட இந்த வார்த்தைகளை நூத்துக்கு நூறு, ஆணித்தரமா நீ நம்பலாம். பரஸ்பர நம்பிக்கையோட நம்ப வாழ்க்கையை நாம துவங்கலாம்...''

''ஒரே ஒரு கண்டிஷன் வஸந்த். நான் என்னோட குடும்பத்தோட எதிர்காலத் தேவைக்காக ஒரு முக்கியமான வேலைக்குரிய ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டிருக்கேன். அந்த வேலை முடிஞ்ச அடுத்த நாளே கூட நம்ப கல்யாணத்தை நடத்திக்கலாம். அது வரைக்கும் காத்திருக்கணும். அந்த வேலை சம்பந்தமா... என்ன... ஏதுன்னு கேட்கவும் கூடாது.''

''எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நான் காத்திருப்பேன்... நீ ஈடுபடற வேலை சம்பந்தமா உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் நீ என்னைக் கேக்கலாம்.''

''ம்கூம். என்னோட அந்த வேலையில யாரோட தலையீடும் இருக்கக் கூடாது.''

''யப்பா... வசந்த மாளிகை சினிமாவுல வர்ற வாணிஸ்ரீ மாதிரியே எடுத்தெறிஞ்சு பேசறியே... அந்த சினிமா கேரக்டர் பேசறதுலயும் லைட்டா கொஞ்சம் அகம்பாவம் தொனிக்கும்...''

''அப்போ? என்னை அகம்பாவக்காரின்னு சொல்றீங்க? அப்பிடித்தானே?''

''சச்ச... நீதான் சொன்னியே... இதுதான் உன்னோட குணச்சித்திரம்ன்னு...''

''சமாளிச்சு பேசறதுல சாமர்த்தியசாலிதான் நீங்க...''

''சமாளிக்கறது... சரிக்கட்டறது இதெல்லாம் எனக்குத் தெரியாது...''

''ஆனா... ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது. டி.வி.யில நிறைய தமிழ்ப் படங்கள் பார்க்கறீங்கன்னு...''

''ஆமா. அம்மா பார்க்கும்போது நானும் பார்ப்பேன். அம்மாவுக்கு பழைய படங்கள்தான் பிடிக்கும்.''

''அவங்க வயசென்ன... உங்களோட வயசென்ன...''

''ரஸனைக்கு ஏது பாவனா வயசு? எனக்கு பிடிச்சதை நான் பார்க்கறேன். சில நேரம் எனக்குப் பிடிக்காத ரொம்ப ஆதி காலத்து சினிமா படங்களையெல்லாம் அம்மா பார்ப்பாங்க. தூக்கம் வராம, ராத்திரி நேரங்கள்ல்ல... அவங்க பார்க்கற அந்த சினிமாக்கள் எனக்கு சீக்கிரமா தூக்கம் வரவச்சுடும். அது சரி... நம்ப கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சுட்ட சந்தோஷமான சமாச்சாரத்தை அம்மாகிட்ட சொல்லணும்னு ஆசையா இருக்கு. நாம கிளம்பலாமா? அம்மாகிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறம் கல்யாண தேதி... மத்த விஷயங்களைப் பத்தி பேசி முடிவு எடுக்கலாம்...''

''தேதி பத்தி உங்க அம்மாகிட்ட இப்ப எதுவும் பேச வேண்டாம் வஸந்த். என்னோட வேலை முடியட்டும்...''

''சீக்கிரமா முடிஞ்சுடும். எனக்கு நம்பிக்கை இருக்கு...''

''உங்க நம்பிக்கைக்கு தேங்க்ஸ். கிளம்பலாமா?''

''சரி.''

இருவரும் கடற்கரையோரத்திலிருந்து நகர்ந்தனர். பாவனாவின் கையைக் கோர்த்துக் கொள்ளத் துடித்த தன் மனதை அடக்கிக் கொண்டபடி அவளுடன் சென்றான் வஸந்த்.


இரவின் மடியில் நிலவின் குளுமையில் ஊர் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம். சரிதா, மெள்ள எழுந்தாள்.

படுக்கையறையில் மேஜை மீதிருந்த அபிலாஷின் மொபைலை எடுத்தாள். யார் யாரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. யார் யாருக்கு அவன் ஃபோன் பண்ணி இருக்கிறான் என்று பார்த்தாள்.

சில அழைப்புகள் அந்த நம்பர்களுக்குரியவர்களின் பெயரில் பதிவாகி இருந்தன. வேறு சில நம்பர்கள், பெயரின்றி பதிவாகி இருந்தன.

'இந்த நம்பர் யாருடையதா இருக்கும்... இது யாருடையதா இருக்கும்' என்று யோசித்தபடியே அபிலாஷின் மொபைலை நோண்டிக் கொண்டிருந்த சரிதா, கயல்விழி என்று வந்திருந்ததைப் பார்த்ததும் இதயம் அதிர்ந்தாள்.

அவளது மனம் படபடத்தது. ஏ.ஸி அறையின் குளிர்ச்சியிலும் நெற்றியில் முத்து முத்தான வியர்வைத் துளிகள் துளித்து நின்றன.

'கயல்விழி என் தோழி... அவள் மொபைல் நம்பரைப் பார்த்து நான் ஏன் இவ்வளவு அதிர்ச்சி அடையறேன்... சாதாரணமாக இவருக்கு அவ போட்டிருக்கக் கூடாதா? பேசி இருக்கக் கூடாதா?' பெரு முயற்சி செய்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டபோதும், பாவனா ஏற்றிய விஷ ஊசிகளின் வீரியம் சரிதாவின் மனதிற்குள் தன் காரியத்தைக் காட்டியது.

'உயிர்த்தோழியா இருந்தா கூட கணவன் - மனைவிக்கு நடுவில வரவிட்டா... அவ... கணவனோட மனசுக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும் வந்து உட்கார்ந்துடுவாள்'ன்னு பாவனா சொன்னாளே... அவ சொன்னது வெறும் வார்த்தைகளா என் காதில ஒலிக்கலையே... எச்சரிக்கை மணியாத்தானே கேட்டுச்சு? எடுத்து சொல்றதுக்கே ஆள் இல்லாம பரிதவிக்கற இந்தக் காலத்துல... ஒருத்தி, விளக்கமா சொல்லியும் நான் ஜாக்கிரதையா இருக்கலைன்னா...'

உள்ளம் நடுங்கின சரிதா, மேலும் வியர்வை மழையில் நனைந்தாள்.

'மனசுல கள்ளம் இல்லைன்னா அபிலாஷ் ஏன் அவ ஃபோன் பண்ணினதைப் பத்தி என்கிட்ட சொல்லலை? கயல்விழியும் என்கிட்ட சொல்லலியே...'

சந்தேகச் சிதறல்கள் அவளது அமைதியை சிதைத்தது.

'நான் இன்னிக்கு கோயிலுக்குள்ள இருக்கும்போது கயல்விழி பண்ணி இருப்பாளோ? கோயிலுக்குள்ள ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தப்ப கயல்விழி எனக்கு ஃபோன் பண்ணிப் பார்த்துட்டு அபிலாஷை கூப்பிட்டிருப்பாளோ? அப்பிடியே இருந்தாலும் இவர் ஏன் என்கிட்ட சொல்லலை? சந்தேக அலைகள் உள்ளத்தினுள் கொந்தளிக்க, சூறாவளியாய் அவளது மனதிற்குள் அதிர்ச்சிப் புயல் வீசியது.

மேலும் நம்பர்களை கவனித்தாள். ஏதேதோ புதுப்புது நம்பர்கள் வந்திருந்தன. செய்தி அனுப்பும் பகுதியை நோட்டம் விட்டாள்.

'ப்ளீஸ் கால் மீ ஸார்.'

'உங்க அப்பாயின்ட்மெண்ட் வேணும் ஸார்.'

'ஐ லவ் யூ அபிலாஷ்! ஃப்ரம் மோனா' இப்பிடி... பல செய்திகள் அவளது கண்ணை உறுத்தியது. இதயத்தைத் துளைத்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளையும் அறியாமல் அழுகை ஒலி சற்று அதிகமாகிவிட, தூங்கிக் கொண்டிருந்த அபிலாஷ் எழுந்து, அவளருகே வந்தான்.

''என்ன சரித்... ஏன் அழறே?'' என்றவன் அவளிடம் இருந்த தனது மொபைல் ஃபோனைப் பார்த்து குழம்பினான்.

''என்னம்மா... என்னோட ஃபோனை கையில் வச்சுக்கிட்டு இப்பிடி அழுதுக்கிட்டிருக்க?! என்ன விஷயம்?''

''கயல்விழி உங்களைக் கூப்பிட்டிருக்கா ஏன் என்கிட்ட சொல்லலை?''

''உன்னோட லைன் கிடைக்கலைன்னு என்னைக் கூப்பிட்டா... அவ டான்ஸ் ஆடற ஹோட்டல்ல யாரோ புட்டீக் நடத்தறாங்களாம். உனக்கு பிடிச்ச துணிமணிகள், நகைகள் இருக்கு, உன்னைக் கூப்பிட்டுட்டு போறதுக்காக உனக்கு ஃபோன் பண்ணி இருக்கா. நீ கோயில்ல இருந்திருப்ப, அதனால என்கிட்ட சொல்லி உன்கிட்ட சொல்லச் சொன்னா... எனக்கு மறந்து போச்சு...'' என்று யதார்த்தமாக பேசியவன்... 'இவள் ஏன் இந்த நேரத்துல என்னோட ஃபோனை நோண்டணும்?' என்ற எண்ணம், மூளையில் பொறிதட்ட, தன் பேச்சை நிறுத்திவிட்டு சரிதாவின் முகத்தைத் திருப்பினான்.

''என்ன இது? புது பழக்கம்? ம்? ராத்திரி நான் தூங்கினப்புறம் என்னோட மொபைலை எடுத்து, கால் லாக், மெஸேஜ் எல்லாம் செக் பண்ணிக்கிட்டிருக்க?''

அவனது பேச்சில் இதுவரை அவள் அறியாத கடுமை தொனித்ததை உணர்ந்தாள் சரிதா...

''பொண்ணுங்க கிட்ட இருந்து ஐ லவ் யூன்னெல்லாம் மெஸேஜ் வந்திருக்கு....?''

''ஆமா... தினமும் வந்துக்கிட்டேதான் இருக்கு. அதுக்கென்ன இப்போ...?''

''ரொம்ப சாதாரணமா 'அதுக்கென்ன இப்போ'ன்னு கேக்கறிங்க?''

பாவனாவால் அவளது மனதில் விதைக்கப்பட்ட சந்தேக விதை, முளைத்து, செடியாகி, ஒரு விஷ விருட்சமாகி தன் விஷத்தின் வீரியத்தை கேள்வி ரூபத்தில் வெளியிட்டது.

ஆனால் அக்கேள்வியால், அவளது வாழ்வில் தொடரப்போகும் விபரீதத்தை அப்போது அவள் அறியவில்லை.

கபடம் அறியாத அவளது மனதில் கள்ளம் புகுந்து கொண்டு ஆட்டி வைக்கும் வித்தையை அவள் மீது செலுத்தி இருந்தாள் பாவனா.

பாவனாவின் ஆதிக்கம் செலுத்தப்பட்டப்பட்டிருந்த சரிதாவின் மனது, நல்லது கெட்டதை ஆராய்ந்து, நினைத்துப் பார்க்கும் தன்மையை இழந்திருந்தது.

சந்தேகப் புயல் தாக்கியதால், அவளது நாக்கில் இருந்து முன் எப்போதும் வராத வார்த்தைகள் வெளி வந்தன.

தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

''ரொம்ப சாதாரணமா அதுக்கென்ன இப்போன்னு கேக்கறீங்க? நீங்க என்னோட புருஷன்.  உங்களுக்கு எவள் எவளோ கண்டபடி மெஸேஜ் குடுத்திக்கிட்டிருக்கா... அதைப்பத்தி நான் கேக்காம வேற யார் கேப்பா? கேட்டதுக்கு... அலட்சியமா எதிர் கேள்வி கேக்கறீங்க?...''

அபிலாஷ் குறுக்கிட்டான்.

''ஷட் அப்... நான் ஒரு பிரபலம். பொது வாழ்க்கையில ஈடுபட்டிருக்கற நான்... அதுவும் திரைப்படத்துறைங்கற கலை சம்பந்தமான துறையில இருக்கறதுனால... எனக்கு இந்த மாதிரி மெஸேஜ் வரும். ஃபோன் வரும். உனக்குத் தெரியாதா? ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ. என் மேல தப்பு இருந்தா... எனக்கு வர்ற போன்கால்ஸ், மெஸேஜ் எல்லாத்தையும் டெலீட் பண்றதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் கூட தேவையில்லை. 'கால்லாக்' அத்தனையையும் டெலீட் பண்றதுக்கு எவ்ளவு நேரம் ஆகும்? நான் ஓப்பன் ஆனவன். என் மொபைல் ஓப்பன். என்னோட கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட அத்தனையும் ஓப்பன். என் மனசும் அப்படித்தான்.

ஒரு ஸெலிப்ரேட்டியான என்னை நெருங்கறதுக்கு எத்தனையோ பெண்கள் முயற்சிக்கறாங்க. அவங்க யாருக்காவது நான் பதில் அனுப்பி இருக்கேனா? எந்த ஃபோன் காலையாவது அட்டெண்ட் பண்ணி இருக்கேனா?

இத்தனைக்கும் என்னோட நம்பரை மாத்திக்கிட்டேதான் இருக்கேன். எப்பிடியோ நம்பரை தெரிஞ்சுக்கிட்டு இது போல நடக்குது. தப்பு பண்ணணும்னு நினைச்சா... எனக்கு எத்தனையோ வழிகள் இருக்கு. எனக்கு மட்டும் இல்லை. ஆணோ, பெண்ணோ... தடம்புரண்டு தப்பு பண்ண நினைச்சா இந்த ஃபோன் ஒரு கடுகளவு மேட்டர் கூட கிடையாது. கையில மொபைலை வச்சுக்கிட்டே... பெண்ணும் தவறான வழியில போகலாம். ஆணும் தவறான வழியில போகலாம். புரிஞ்சுக்க. உன் இஷ்டத்துக்கு ராத்திரி நேரம் நான் தூங்கின பிறகு என்னோட ஃபோனை எடுத்து நோண்டிப் பார்ப்ப. 'நான் நல்லவன், நான் நல்லவன்'னு உனக்கு நான் நிரூபிச்சுக்கிட்டே இருக்கணுமா?

எனக்கு நீயும், ம்யூஸிக்கும் ரெண்டு கண்கள். ஒரு கண் புரையோடிப் போன கூட இன்னொரு கண்ணான என்னோட ம்யூஸிக்ல என் மனசை ஈடுபடுத்தி அதில நான் ஜெயிச்சுக்கிட்டே இருப்பேன். உன்னோட சந்தேகத்தால என்னோட இசை வாழ்க்கை எந்த விதத்துலயும் பாதிக்காது. சுத்தமான பாலை குடிச்சிக்கிட்டிருக்கறவனை 'நீ குடிக்கறது கள்ளச்சாரயம்ன்னோ... கடுமையான விஷம்ன்னோ... சந்தேகப்பட்டா? குடிக்கற பால், விஷமா இருக்குமா? அல்லது சாராயமா இருக்குமா? மத்தவங்க என்ன சொன்னாலும் என்ன சந்தேகப்பட்டாலும் எனக்கு அதைப்பத்தின கவலை இல்லை. அர்த்த ராத்திரியில அர்த்தமில்லாத கேள்விகள் கேட்டு என்னை கோபப்படுத்தற... இப்ப கொஞ்ச நாளாத்தான் நீ இப்பிடி மாறிட்ட. என்ன காரணம்ன்னு எனக்கு புரியல. உன்னோட 'பொஸஸிவ்நெஸ்' எனக்கு தெரியும். ஆனா... நாளடைவில அந்த பொஸஸிவ்னெஸ் ஸஸ்பெக்ஷனா மாறிடுச்சு. எனக்கு பிடிக்கல.

ஒரு ஆண் ஒரு பெண்ணை சந்தேகப்பட்டா மட்டும்... வாய் கிழிய பேசறீங்க? பெண்ணடிமை அது... இதுன்னு... ஒரு பொண்ணான நீ... உன்னோட புருஷனான என்னை இப்பிடி சந்தேகப்படறது... நமக்குள்ள பிரச்னையை உருவாக்கும். உன் மனசு சுத்தமானதுன்னு நான் நம்பற மாதிரி என் மனசு சுத்தமானதுன்னு நீ நம்பணும். நம்பிக்கைதான் வாழ்க்கை... என்னைப் பார்க்க வர்ற ரசிகைகள் என்னோட விசிறிகள்! அவங்கள்ல்ல சில பேருக்கு என்னைப் பத்தி மாறுபட்ட அபிப்ராயம் இருக்கும். 'இவன் சினிமா சம்பந்தப்பட்டவன், சினிமாவுல பிரபலமானவன்' அப்பிடிங்கற கவர்ச்சி இருக்கும். அந்தக் கவர்ச்சிக்கு ஆளாகி சில பொண்ணுக எனக்கு யெஸ் யெம் யெஸ் அனுப்பறாங்க. மொபைல்ல கூப்பிடறாங்க. சில நேரம் ஸ்டூடியோவுக்கே கூட தேடி வந்துடறாங்க.

இதெல்லாம் சினிமா இன்டஸ்ட்ரியில பிரபலமா இருக்கறவங்களுக்கு ஏற்படற தர்ம சங்கடமான நிகழ்வுகள். இதையெல்லாம் சமாளிக்கறதுக்கு நான் என்ன பாடு படறேன்னு உனக்கு தெரியுமா? ஒரே ஒரு வினாடி நேரம் போதும் நான் பாதை மாறி போறதுக்கு. ஒரு சொடக்கு போட்டா போதும். பொண்ணுங்க க்யூவில வந்து நிப்பாங்க. நான் அப்பிடிப்பட்ட அசிங்கமானவன் இல்லை. என் மேல உனக்கு உள்ள சந்தேகம்... என்னை அழுக்காக்காது. சந்தேகம்ங்கற அழுக்கு உன் மனசுலதான் இருக்கு. அந்த அழுக்கை டெட்டால் போட்டு கழுவு. ஆபிஸ் வேலைக்கு வெளிய போற சராசரி மனுஷன், வேலைக்கு போகாத மனைவியை வீட்ல விட்டுட்டுதானே போறான்? காலையில வீட்டை விட்டு வெளிய போற அவனோட மனைவி, அவன் திரும்பற வரைக்கும் தனியாத்தான் இருக்கா. அவளோட புருஷன் வற்றதுக்குள்ள அவ எத்தனையோ தப்பு பண்ணலாம். ஆனா... புருஷன் வர்றதுக்காக வாசல்ல கண்ணைப் பதிச்சு ஏங்கிப் போய் காத்து கிடக்கறா. இது புரியாம 'நான் இல்லாத நேரம் எவனாவது வந்தானா? அவன் வந்தானா... இவன் வந்தானா... அவன் எதுக்கு வந்தான்... இவன் எதுக்கு வந்தான்னு' கேள்வி கேட்டா... அவளுக்கு எப்பிடி இருக்கும்? மனித வாழ்க்கையில குடும்ப வாழ்க்கை கிடைச்சு வாழறது பெரிய பாக்கியம். அந்த வாழ்க்கையை சீரான முறையில வாழணும். இல்லைன்னா சீர்குலைஞ்சு போகும். பொஸஸிவ்நெஸ் இருக்கறது தப்பு இல்லை. ஆனா... நாளடைவில அதுவே ஸஸ்பெக்ஷனா மாறிடறது... பெரிய தப்பு. இப்ப கொஞ்ச நாளாத்தான் நீ இப்பிடி சந்தேகப்பட ஆரம்பிச்சிருக்க. உன்னோட சந்தேகம் ஒரு தொடர் கதையா இருந்தா... நம்பளோட சந்தோஷத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலைமை வந்துடும்...''

இது வரை இந்த அளவுக்கு அபிலாஷ் கடுமையாக பேசியறியாத சரிதா, அதிர்ந்தாள். அழுகை அவளது கண்களை கண்ணீரால் நிறைந்தது. துக்கம் அவளது நெஞ்சை அடைத்தது.

அபிலாஷிடமிருந்து அப்படி ஒரு கடுமையை எதிர்பார்க்கவில்லை சரிதா.

அவன் வீசிய சுடு சொற்களில் இருந்த உண்மைகள் அவளை சுட்டன. என்றாலும் 'தன்னிடம் கயல்விழி பேசியதை ஏன் மறைக்க வேண்டும்' என்கிற வீம்பான கேள்வி, அவளது மனதை அரித்தது.

கண்ணீரை சுண்டி எறிந்த சரிதா, ''நீங்க என்கிட்ட சில விஷயங்களை மறைக்கறீங்க...'' என்றாள்.

''உன்கிட்ட எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எதேச்சையா எதையாவது சொல்ல மறந்திருப்பேன். அதுக்காக? நீ சந்தேகப்படறது நியாயம்ன்னு சொல்ல வர்றியா? ''

''நியாய அநியாயம்னு வாக்குவாதம் பண்றதுக்கு இது கோர்ட் இல்லை. நம்ம வீடு. மனசில இருக்கறதை வெளிப்படையா கணவனும், மனைவியும் பேசிக்கறதுல என்ன தப்பு?''

''எந்த தப்பும் என் மேல இல்லை. தப்பு செஞ்சுக்கிட்டு... தப்பிக்கறதுக்கு பல ஆயிரம் வழிகள் இருக்கு. எனக்கு தப்பு செய்யவும் தெரியாது. தப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை.  அநாவசியமா பேசிக்கிட்டிருக்காத...''

''நான் பேசறது அநாவசியமா? நீங்க இப்பிடி திட்டறது அநாவசியமா?''

''அவசியமோ... அநாவசியமோ... இப்போதைக்கு நாம பேச வேண்டாம். காலையில பேசிக்கலாம்.''

''பேசறதுக்கு நேரம் காலம் முக்கியமான்னு கேட்டவர் நீங்க...''

''அந்த அளவுக்கு உன் மேல அன்பு வச்சிருந்தவன் நான்...''

''அன்பு வச்சிருந்தவன் நான்னு சொல்றீங்களே... இப்ப என் மேல அன்பு இல்லையா?''

''இல்லைன்னு நீயா ஏன் கற்பனை பண்ணிக்கிட்டு வாய்க்கு வந்தபடி பேசற?''

''வாய்க்கு வந்தபடி பேசறது நீங்களா... இல்லை நானா?''

''நான் எப்பவும் நானாத்தான் இருக்கேன் சரித். நீதான் இப்ப எது எதையோ நினைச்சு மாறிப்  போயிருக்க... நாம ரெண்டு பேருமே கருணை இல்லத்துல இருந்து வந்தவங்க. அன்பு மயமான அந்த இடத்துல இருந்து வந்த நாம... இப்பிடி வம்பு வளர்த்துக்கிட்டிருக்கறது சரியான்னு நீ கொஞ்சம் யோசி...''

''யோசிச்சு யோசிச்சு எனக்குள்ள குழம்பிப் போயிடக் கூடாதுன்னுதாங்க உங்ககிட்ட பேசறேன்.''

''எனக்குத் தெரியாம என்னோட மொபைலை நோண்டிக்கிட்டிருந்த நீ, அதை நான் பார்த்துட்டதுனாலதான்... அதைப்பத்தி கேட்டதுக்கப்புறம்தான் பேசற. இங்க பாரு சரிதா, இல்லறத்துல இருக்க வேண்டியது இன்பம் மட்டும் இல்லை. நம்பிக்கையும்தான். நம்பிக்கை நாசமானா... இல்லறத்துல இல்லாம போறது சந்தோஷம். உன்னோட சந்தேகம் நம்ம சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சுடும்...''

''புதைஞ்சு போற உண்மைகள் கூட சந்தோஷத்தை பறிச்சுடும் இல்லையா?''

''பறி போறது சந்தோஷம் மட்டும் இல்லை. உன்னோட மனசு! அது இப்ப பரிஞ்சுப் போய் கிடக்கு. புதுசா நீ என்னை புரிஞ்சுக்க வேண்டிய நிலைமையும் இல்லை. இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம். கீறல் விட்டுப் போன பாத்திரத்தை கீழே போட்டா... உடைஞ்சு போயிடும். இப்ப உன் மனசுல கீறல் விழுந்திருக்கு. என்னோட கோபத்தால அதை உடைச்சுட விரும்பலை. உன்னோட மனசு மாறும்ன்னு பொறுமையா காத்திருக்க நான் தயார். ஆனா... என்னோட பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, புரிஞ்சுக்க...''

கோபம் சற்று தணிந்த குரலில் தன்மையாக... அதே சமயம் உறுதியாக பேசிய அபிலாஷ்... மறுபடியும் கட்டிலுக்கு சென்று போர்வையை எடுத்து மூடி, படுத்துக் கொண்டான்.

இது வரை பார்த்தறியாத அபிலாஷின் புது முகத்தைப் பார்த்து, வியர்த்துப் போனாள் சரிதா. ஆனாலும் அவளது மனதில் உருவாகி இருந்த சந்தேகப் பேய், விஸ்வரூபம் எடுத்து தலை விரித்தாடியது.


வழக்கம் போல பாவனா வந்த போது, குளிக்காமல் கொள்ளாமல், கலைந்த தலைமுடியுடனும், கலங்கிய கண்களுடனும் சோகமாகக் காணப்பட்டாள் சரிதா.

''என்ன மேடம்? எப்பவும் காலையில குளிச்சு முடிச்சு 'பளிச்'ன்னு இருப்பீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்கீங்க? ''

அப்போது அங்கே வத்சலாம்மா வந்தாள்.

''மணி பதினொண்ணு ஆகுது. இன்னும் ஒரு வாய் காபி கூட குடிக்கலை. 'நானே போடறேன்... நானே போடறேன்...'னு எனக்கும் சேர்த்து கருப்பட்டி காப்பி போடுவாங்க.  இன்னிக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்கலை. எழுந்திருச்சதும் சாமி கும்பிட்டு விளக்கேத்துவாங்க. அதுவும் செய்யலை.''

உண்மையான கவலையோடு வத்சலாம்மா பேசியது கண்டு பாவனாவின் மனசாட்சி 'சுருக்' என்று குத்தியது.

பாவனாவைப் பற்றி நல்ல விதமான அபிப்ராயம் இல்லாத வத்சலாம்மா, தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த இயலாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளை அழைத்தாள் பாவனா.

''வத்சலாம்மா... ஒரு தட்டில ரெண்டு இட்லி அல்லது தோசை போட்டு குடுங்க. நான் அவங்களை சாப்பிட வைக்கிறேன்.''

''சரி'' என்ற ஒற்றை வார்த்தையுடன் சமையலறைக்கு சென்றாள் வத்சலாம்மா.

சரிதாவை அழைத்துக் கொண்டு மாடியிலுள்ள அவளது அறைக்கு சென்றாள்.

சரிதாவை உட்கார வைத்தாள்.

''இவ்ளவு 'டல்'லா உங்களை நான் பார்த்ததே இல்லை மேடம். என்ன ஆச்சு ? என்கிட்ட சொல்லலாம்ன்னா சொல்லுங்க மேடம்.''

சரிதாவின் முதுகை ஆறுதலாக தடவிவிட்டபடியே பாவனா கூறியதும் சரிதா பேச ஆரம்பித்தாள்.

அறையின் கதவை நாசூக்காகத் தட்டி விட்டு உள்ளே வந்தார் வத்சலாம்மா. 'இதயம்' நல்லெண்ணெய் மணக்க மணக்க ஊற்றி, வார்க்கப்பட்ட மிருதுவான தோசைகளுடன், சிறிய கிண்ணத்தில் வெங்காய சாம்பார் ஊற்றி கொண்டு வந்திருந்தார் வத்சலாம்மா.

அவற்றை சரிதாவிடம் கொடுப்பதற்குள் முந்திக் கொண்டு, பாவனா வாங்கிக் கொண்டாள். இதனால் மனது வாடிப் போன வத்சலாம்மா, சரிதாவிடம் கூட எதுவும் பேசாமல் வெளியேறினார்.

''மேடம், முதல்ல சாப்பிடுங்க'' என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். நீண்ட நேரமாக காலியாகக் கிடந்த வயிறு சற்று நிரம்பியதும் ஓரளவு புத்துணர்ச்சி பெற்றாள் சரிதா. ஆனால் முன்தினம் இரவு, அபிலாஷ் பேசிய கடுமையான வார்த்தைகள் நினைவிற்கு வந்ததாலும், அவன் கடுமையாக பேசியதற்குரிய காரணம் நினைவிற்கு வந்ததாலும் மீண்டும் தனக்குள் சுருங்கிப் போனாள்.

''முகம் வாடிக் கிடக்கு மேடம். ஒரு ஃபேஷியல் பண்ணி விடறேன். நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும் மேடம்.'' என்று கூறிய பாவனா, சரிதாவின் பதிலை எதிர் பார்க்காமல் ஃபேஷியலில் தன் கை வண்ணத்தைக் காண்பிக்க ஆரம்பித்தாள்.

கூடவே, தன் வாய்ப் பேச்சின் பிரதாபத்தையும் பயன்படுத்தி, சரிதாவின் வாயிலிருந்து பேச்சை வரவழைத்தாள். அவளது சாமர்த்தியமான பேச்சினால் தன் உள்ளத்தில் உள்ளதைக் கொட்ட ஆரம்பித்தாள் சரிதா.

''நேத்து ராத்திரி, அபிலாஷ் என்னை ரொம்ப திட்டிட்டார் பாவனா. அவரோட மொபைல் ஃபோனை 'செக்' பண்ணிப் பார்த்துக்கிட்டிருந்தப்ப அவர் முழிச்சுக்கிட்டார். கயல்விழி அவருக்கு ஃபோன் பண்ணி இருக்கா. அதை அவர் என்கிட்ட சொல்லவே இல்லை. யார் யாரோ பெண்கள் அவருக்கு கண்டபடி காதல் வசனம் மெஸேஜ் பண்ணி இருக்காங்க. உயிர்த் தோழியா இருந்தாகூட வீட்டுக்குள்ள விடக் கூடாதுன்னு நீ சொன்னப்ப, நான் 'என்னடா இது... இவ இப்பிடி பேசறாளே'ன்னு நினைச்சேன். ஆனா... இப்பதான் புரியுது... எல்லா விஷயங்களுக்கும் ஒரு எல்லை இருக்குன்னு. கயல்விழியோட பேசினதைப் பத்தி ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டப்ப ஏதேதோ காரணம் சொல்றாரு.

மத்த பொண்ணுங்களோட மெஸேஜ் பத்தி கேட்டதுக்கும் 'நான் பிரபலமானவன்' 'அது' 'இது'ன்னு சொன்னாரு. கோபமா வேற கத்தினார். 'அவர் எனக்கு மட்டுமே சொந்தம்'ங்கற என்னோட எண்ணத்துல மண் விழுந்து போச்சு. கயல்விழி அவர்கிட்ட பேசினதுக்கப்புறம் என்கிட்ட பேசவே இல்லை. அவ மேலதான் ஆத்திரமா வருது...'' கோயிலில் இருக்கும் நேரங்களில் தன் மொபைலை 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வைப்பதையும், அதன் பின்னர் நீண்ட நேரம் மறுபடியும் செயல்பட வைக்க மறந்து விடுவதையும் அறவே மறந்து போய், கயல் விழியைத் திட்டித் தீர்த்தாள் சரிதா.

தன்னுடைய மாய வலை, சரிதாவின் இதயத்தில் ஏற்படுத்திய காயம் வலியை ஏற்படுத்தியுள்ளது கண்டு, சந்தோஷமும் கூடவே சஞ்சலமும் அடைந்தாள் பாவனா. சுதாகர், தனக்குக் கொடுத்த வேலை முடிந்தால் விரைவில் தன் பணக் கஷ்டம் தீரும் என்கிற எதிர்பார்ப்பு அளித்த சந்தோஷத்தையும், அப்பாவியான சரிதாவின் மனதைக் கலைத்து, அவளது மனதில் சந்தேக விதையைத் தூவி, அவளையும், அபிலாஷையும் மன வேறுபாடுக்குள்ளாக்கி, கயல்விழியின் உண்மையான நட்பை பிரித்து, ஏகப்பட்ட பாவ காரியங்கள் செய்ய நேரிட்ட அவலத்தால் சஞ்சலமும் அடைந்தாள் பாவனா. ஒரு பக்கம் மனசாட்சி முள்ளாக உறுத்த, இன்னொரு பக்கம் குடும்பத்தின் வறுமைக் காட்சி அந்த முள்ளை எடுக்க முயல, பல்வித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் மன அழுத்தத்திற்கு ஆளானாள்.

பாவனாவிடம் தன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்ததாள் சரிதா. அப்போதைக்கு அவளது துக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது.

விதியின் வலிமை மிக்கக் கரங்கள், அந்தப் பெண்மணிகளின் மன நிம்மதியை நசுக்கின.


ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு சென்ற அபிலாஷ், முன்தின இரவு நடந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைத்து உள்ளம் துவண்டான்.

'பாவம் சரிதா. என் மேல உள்ள அளவற்ற அன்பினால அப்பிடி பேசிட்டா' என நினைத்த அவன், சரிதாவின் மொபைலில் அவளது நம்பர்களை அழுத்தினான்.

மறு முனையில் சரிதா மொபைல் லைனை எடுக்கவே இல்லை.

சரிதாவின் மொபைலில் அபிலாஷின் நம்பர்கள் தென்பட்டதையும், அதை சரிதா அலட்சியப் படுத்தியதையும் கவனித்து, மனதில் குறித்துக் கொண்டாள் பாவனா.

முதல் முறையாக அபிலாஷின் அழைப்பை நிராகரித்தாள் சரிதா. அவளது மனதிற்குள் அபிலாஷின் மீதான கோபம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

வலிந்து அழைத்தும் அதை அலட்சியப்படுத்திய சரிதா மீது மீண்டும் கோபம் துளிர்த்தது அபிலாஷிற்கு.

'வேண்டுமென்றே என் அழைப்பை ஏற்க மாட்டேங்கிறாளா... அல்லது தூங்கிக்கிட்டிருக்காளா... குளிச்சிக்கிட்டிருக்காளா...' யோசித்த அபிலாஷ், 'மிஸ்ட்கால்' பார்த்து கூப்பிடறாளா பார்ப்போம்' என்ற முடிவிற்கு வந்தான்.

இசை அமைப்பில் தன் கவனத்தை செலுத்தினான். முன் தின நாள் அவனது 'கீ போர்'டில் புதிய பாடலுக்குரிய ட்யூனை உருவாக்கி, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்திருந்தான்.

பல்லவியின் ட்யூனைக் கேட்ட அவனுக்கு உற்சாகம் பிறந்தது. முன் இரவு நடந்த நிகழ்வு மறந்தது. அவனது உள்ளம் இசை எனும் தெய்வீகத்தில் மிதந்தது. உணர்வுகள் மகிழ்ந்தது. தன்னை மறந்தான். சூழ்நிலையை மறந்தான். இசை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு இசைப் பயணத்தில் இன்பமாக பயணித்தான்.

இசையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவனுக்கு இந்த உலகமே தெரிவதில்லை. நேர்ந்த எந்தக் கலகமும் நினைவிற்கு வருவதில்லை. பணம், பொருள் எதைப் பற்றிய எண்ணமும் உருவாவது இல்லை. தான் போடும் ட்யூன் மிக சிறப்பாக வர வேண்டும். இயக்குநருக்குப் பிடிக்க வேண்டும், தயாரிப்பாளரின் மனம் குளிர வேண்டும். இவற்றைத் தவிர பிற எண்ணங்கள் இசை அமைப்பின் போது அபிலாஷின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. முழுமையான கவனத்தை இசையில் செலுத்தி வாழ்வதால் அவனது மனம் தெய்வீகமானதாக இருந்தது. அவனது உள்ளம் தெய்வம் வாழும் இல்லமாக இருந்தது.

இறை பணியில் ஈடுபட்டிருக்கும் பக்தர்களின் இதயம் நிம்மதியாக இருப்பது போல, இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் அபிலாஷின் இதயமும் நிம்மதியாக இருந்தது.

அவனது அந்த நிம்மதியைக் குலைக்கும் விதமாக சரிதாவின் சந்தேக நடவடிக்கை ஆரம்பித்திருந்தது.

அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருந்தது.

அதைப் பற்றியெல்லாம் சிந்தனை சிறிதளவும் இன்றி தன் பணியில் தன்னைப் பிணைத்துக் கொண்டான். இரவு பதினோரு மணி வரை ஸ்டூடியோவில் இருந்த அவன், வீட்டிற்கு கிளம்பும்பொழுது சரிதாவின் நினைவு வந்து, 'ஸைலன்ட் மோ'டில் போடப்பட்டிருந்த அவனது மொபைலில் சரிதாவின் நம்பர்கள் மிஸ்டு கால் பகுதியில் தென்படுகிறதாவென்று பார்த்தான். அவளது நம்பர் இல்லை. பெருமூச்சு விட்டபடியே காரைக் கிளம்பினான்.


இறைவனிடம் கேட்காமலே இரண்டு மனம் கொண்டு விட்ட பாவனா, வழக்கமாக சுதாகரை சந்திக்கும் இடத்திற்கு சென்றாள்.

காத்திருந்த சுதாகருக்கு, பாவனாவின் மகிழ்ச்சி நிறைந்த முகம் நல்ல செய்தியை அறிவிக்கும் விதமாக இருப்பது கண்டான். அவனும் மகிழ்ச்சி கொண்டான்.

''ஒரு நாளும் இல்லாத திருநாளா... ஏதோ நல்ல செய்தியை சொல்ற மாதிரி உன் முகத்துல சந்தோஷம் தாண்டவம் ஆடுதே?''

''நான் என்ன சிவபெருமானா? ஆனந்த தாண்டவம் ஆடறதுக்கு? ஏதோ அந்த சிவனோட அருளால என்னோட கஷ்டம் விடியணும்னு நான் கிடக்கேன். செய்யக் கூடாத ஒரு காரியத்தை செஞ்சுக்கிட்டு அதுக்கு கைகூலியா பணத்தை எதிர்பார்க்கற எனக்கு பணம் கிடைச்சு என்னோட குடும்ப கஷ்டம் விடியப் போகுதுன்னு சின்னதா சந்தோஷம் இருந்தாலும் உள் மனசு உறுத்தலாத்தான் இருக்கு...''

''சரி... சரி... பழம் பாட்டு பாடாத. என்ன நடந்துச்சு?... என்ன நடக்குது? அதைச் சொல்லு...''

''நீ சொன்ன மாதிரி சரிதா மேடம் மனசுல கயல்விழி மேலயும் சந்தேகம் வந்துச்சு, அபிலாஷ் ஸார் மேலயும் சந்தேகம் வந்தாச்சு...'' என்று ஆரம்பித்து முன்தினம் சரிதா, மனம் உடைந்து போய் இருந்தது மற்றும் அபிலாஷ் கோபமாக பேசியது ஆகியவற்றை விளக்கிக் கூறிய பாவனா தொடர்ந்தாள்.

''கயல்விழியோட எந்த அளவுக்கு நட்பா இருந்தாங்களோ அந்த அளவுக்கு இப்ப விரோதமா இருக்காங்க. நீ சொல்லிக் குடுத்தபடி சரிதா மேடம் மனசுல சந்தேகத்தை தூண்டியதுனால இப்பிடியாயிடுச்சு. களங்கம் இல்லாத அந்த தம்பதியோட அன்பு ராஜாங்கத்துல... கலகமூட்டியாச்சு. அந்தக் கலகத்துனால ஏற்பட்ட மனக்கலக்கம் எனக்குள்ள நீங்காத வேதனையா நின்னுபோச்சு.''

''இதோட நின்னு போனா போதுமா? அந்த அபிலாஷை விட்டு சரிதா பிரியணும். நிரந்தரமான ஒரு இடைவெளி அவங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல உண்டாகி அவ வாழ்க்கை சின்னா பின்னமாகணும்...''

''அடப்பாவி... உன்னோட பழி வாங்கற இந்த வன்மம், உன்னோட நிம்மதியையும், வாழ்க்கையையும் குழி தோண்டி புதைச்சுடும். உன் கூட உன்னோட துஷ்ட நடவடிக்கைகளுக்கெல்லாம் துணை வர்ற நானே என்ன பாடு படப்போறேனோ... கடவுள் என்ன தண்டனை குடுக்கப் போறாரோன்னு துடிச்சிக்கிட்டிருக்கேன். என்னை கருவியா ஆட்டி வைக்கற உனக்கு என்ன கேடு காத்திருக்கோ?''

''காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி சரிதாவை அந்த அபிலாஷ் அபேஸ் பண்ணிட்டான். இதுக்கு நான் சும்மா இருக்கணுமா?...''

இடை மறித்து பேசினாள் பாவனா. ''ஒரு நிமிஷம்... சரிதா மேடம் உன்னை காதலிச்சது உண்மைதான்னாலும், உன்னோட கேடுகெட்ட நடவடிக்கைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம்... உன்னோட தொடர்பே வேண்டாம்னு விலகிப் போனவங்க. நீ என்னடான்னா... உனக்காக அவங்க தவம் இருந்து காத்து கிடந்த மாதிரியும், அந்த தவத்தை கலைச்சுட்டு அபிலாஷ் அவங்களோட வாழ்க்கையில வந்தது மாதிரியும் பேசற? உன்னோட கற்பனை வளத்தையும், நீ அமைச்ச திரைக்கதையையும் கேட்டுக்கிட்டிருக்கறதுக்கு நான் என்ன... வாய்ல விரலை வச்சா கடிக்கத் தெரியாத சின்ன பாப்பாவா?''

''நீ சின்ன பாப்பாவோ... பெரிய நூத்துக் கிழவியோ... நான் சொன்ன ப்ராஜக்ட்டை ஓரளவுக்கு முடிச்சுருக்க...''

''என்னது? ஓரளவுக்கா?'' பாவனா அதிர்ச்சியுடன் கேட்டாள்.

''ஆமா. அந்த சரிதா... நிரந்தரமா கணவனை விட்டு பிரியணும். அதுதானே நம்ம ஒப்பந்தம்?''

''பைத்தியம் மாதிரி உளறாத. என்னமோ பெரிய இன்ட்டர்நேஷனல் ப்ராஜக்ட் பண்ற மாதிரியும் கான்ட்ராக்ட் போட்டிருக்கற மாதிரியும் பேசிக்கிட்டிருக்க...''

''பேசின தொகை உன் கைக்கு வரணும்ன்னா நான் சொன்னது நடக்கணும்.''

''நடந்தே தீரும்ன்னு எப்பிடி சுதாகர் உறுதியா சொல்ல முடியும்? ஒரு பொண்ணான நான், என்னோட மனசை எவ்ளவு கடினப்படுத்திக்கிட்டு இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடிட்டிருக்கேன்னு கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கறியே?''

''புரிஞ்சுக்காத மாதிரி நீதான் நடிக்கற. என்னோட இந்த திட்டம் நிறைவேறினதுக்கப்புறம் நான் சிங்கப்பூர்க்கு போய் ஸெட்டில் ஆகணும். மன வேறுபாடுல சிக்கித் தவிக்கற சரிதா அவளோட கடந்த காலம் பத்தி புருஷனுக்கு தெரிஞ்சுட்டா என்ன ஆகும்ன்னு சிந்திக்கணும். அந்த சிந்தனைக்கு அவ குடுக்கப்போற விலைதான் என்னோட சிங்கப்பூர் விஜயம். சும்மா சொல்லக் கூடாது... நல்லவனான அபிலாஷையே சந்தேகப்பட வைக்கற வித்தையை உனக்கு நான் கத்து கொடுத்து, அதை நீ செம்மையா பண்ணி சரிதா- அபிலாஷ் உறவு வட்டத்துக்குள்ள ஒரு பிளவு ஏற்பட வச்சிருக்கிறே... நீ கில்லாடிதான்...''

''கில்லாடிப் பட்டம் குடுக்கலைன்னு நான் அல்லாடிக்கிட்டிருக்கலை. எனக்கு தேவை பணம். நான் இப்ப இருக்கற வீட்டை மாத்திட்டு இன்னும் கொஞ்சம் நல்ல வசதியான வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன். வீடும் பாத்துட்டேன். நாளைக்கு அட்வான்ஸ் குடுக்கணும். அட்வான்ஸ் கேக்கறாங்க. அந்த தொகை எனக்கு இப்ப வேணும்.''

''வேணும்ங்கற பணத்தைக் குடுக்க நான் தயாரா இருக்கேன். ஆனா பணியை முடிச்சுட்டு பணியாரத்தை வாங்கிக்க...''

''வாங்கிக்கப் போறது நீ... என்னோட சாபத்தை. வெண்ணெய் திரண்டு வர்ற வரைக்கும் கடைஞ்சுக்கிட்டிருக்கேன். மத்தை உடைச்சுடாதே. இன்னிக்கு... நீ பணம் குடுக்கலைன்னா... நடக்கறதே வேற...''

பாவனா, மிரட்டும் தொனியில் பேசுவதை கேட்ட சுதாகருக்கு அடி வயிற்றில் லேஸான கிலி பிடித்தது; 'காரியம் முடியற சமயம் இவளை பகைக்கக் கூடாது' என்று நினைத்தவன், செயற்கையாய் சிரித்தான்.

''அடடே... சும்மா தாமஷா பேசினதுக்கு பத்ரகாளி மாதிரி எகிறி குதிக்கறியே... இவ்ளவு பாடு படற உனக்கு பணம் இல்லைன்னு சொல்வேனா? இப்போதைக்கு இதை வச்சுக்கோ. மீதியை அப்புறம் வாங்கிக்கோ...''  சுதாகரின் மொபைல் ஒலித்து அழைத்தது. சுதாகரின் மொபைல் ஒலித்து அழைத்தது. சுதாகர் கொடுத்த பணத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் பாவனா.

''ஹலோ...'' என்று பேச ஆரம்பித்தான் சுதாகர்.

பணத்தை எண்ணிக் கொண்டே போய்க்கொண்டிருந்த பாவனா, அந்தப் பணக்கற்றையில் இருந்த பல ஐநூறு ரூபாய் நோட்டுகளின், ஓரங்கள் கிழிந்து, செல்லாத நோட்டுகளாக இருந்தபடியால் 'வேறு நோட்டுகள் கேட்கலாம்' என்ற எண்ணத்தில் மறுபடியும் சுதாகர் இருந்த இடத்திற்கு போனாள்.

அங்கே யாருடனோ சுதாகர் மொபைலில் பேசிக் கொண்டிருந்தான். அவனது பேச்சில் பாவனா என்று தன் பெயர் அடிபட்டபடியால், பதுங்கி நின்று ஒட்டு கேட்டாள்.

''நான் சொன்னேனே ஸார் பாவனான்னு ஒரு பொண்ணு. அவ எனக்காக ஒரு முக்கியமான வேலையைப் பார்த்துக்கிட்டிருக்கா. வேலை பக்காவா பார்த்துக்கறா. ஆனா... பணம்... பணம்ன்னு அரிச்சு எடுக்கறா... அந்த வேலைக்காக நான் பேசின தொகை பெரிசு. அதை எதிர்பார்த்துதான் அவ செய்யறா. ஆனா ஏமாளி. ஏற்கெனவே பண விஷயத்துல அவளை ஏமாத்தினவன் நான். மறுபடியும் நான் விரிச்ச வலையில விழுந்துட்டா. ஏதோ... நாய்க்கு எலும்புத்துண்டு போடற மாதிரி அப்பப்ப கொஞ்சம் பணத்தை விட்டெறிஞ்சுட்டிருக்கேன். பேசின முழு தொகையையும் குடுக்கறதுக்கு நான் என்ன மடையனா?! அவகிட்ட பேசிக்கிட்டிருந்ததுனாலதான் உங்க மொபைல் லைனை ரெண்டு தடவை மிஸ் பண்ணிட்டேன்... நீங்க கேட்ட பொண்ணு... நாளைக்கு உங்க கெஸ்ட் ஹவுசுக்கு வந்துடுவா...''

சுதாகரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாவனா பெரிதும் அதிர்ச்சியுற்றாள். ஒரு முடிவுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.


இசை அமைப்பு வேலை முடிந்து இரவில் வீடு திரும்பிய அபிலாஷ், காரை 'ஷெட்'டில் நிறுத்தி விட்டு பங்களா வாசலில் நின்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். இசைப்பணி முடியும் வரை பசி என்பதை அறியாத அபிலாஷ், தன் வயிறு உணவு கேட்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

அழைப்பு மணியின் ஒலி கேட்டு கதவைத் திறந்த சரிதா, வேகமாக திரும்பிச் சென்றாள். எப்போதும் ஆவலோடு அபிலாஷின் முகம் பார்த்து அகம் மலரும் சரிதா, அன்று அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

பசி அபிலாஷின் வயிறைக் குடைய, சரிதாவின் பாராமுகம் அவனது மனதைக் குடைய மௌனமாய் சென்று உடைகளைக் கலைந்து, இரவு அணியும் கவுனை அணிந்து கொண்டான்.

படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்ட சரிதா, கோபம் மாறாமல் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

சமையல் அறைக்கு சென்றான். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான். ரொட்டியையும், இரண்டு முட்டைகளையும் எடுத்தான். உள்ளிருக்கும் பொருள் வெளியே தெரியக் கூடிய அழகிய ப்ளாஸ்டிக் டப்பாவில் நறுக்கிய வெங்காயம் இருந்தது.

அதையும் எடுத்தான். பச்சை மிளகாயைத் தேடி எடுத்தான். குளிர் சாதனப் பெட்டியை மூடினான். ஒரு பாத்திரத்தில் தேவையான உப்புத் தூள், மிளகாய் தூள், போட்டுக் கலக்கினான். அதில் முட்டைகளை உடைத்து ஊற்றினான்.

மின்சார முட்டை அடிக்கும் கருவியில் முட்டைகளை மேலும் மென்மையாகக் கலக்கினான். ஸ்டவ்வைப் பற்ற வைத்து, தோசைக் கல்லைக் காய வைத்தான். இரண்டு தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினான். வதங்கியதும் முட்டைக் கலவையை பரவலாக ஊற்றி ஆம்லெட் தயாரித்து, அதை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டான்.

ரொட்டி 'டோஸ்ட்' செய்யும் இயந்திரத்தை இயக்கச் செய்து ரொட்டித் துண்டுகளை டோஸ்ட் செய்து அவற்றை பெரிய தட்டில் எடுத்துக் கொண்டான். இரண்டு தட்டுக்களையும் சாப்பிடும் மேஜை மீது வைத்தான். நாற்காலியில் அமர்ந்து ரொட்டியையும், முட்டையையும் சாப்பிட்டான்.

வயிறு நிறைந்ததும், மனதில் வெறுமை வெளிப்பட்டது. 'இது நாள் வரை ஒரு நாள் கூட தன்னை சரிதா, இப்படி உதாசீனப்படுத்தியது இல்லையே' என்கின்ற வேதனை குடைந்தது.

நீண்ட நேரம் சிந்தனை சிதறல்களில் சிக்குண்டான் அபிலாஷ்.

'நான் ஏன் ஸ்ட்ரெஸ் ஆகணும்? என் மேல என்ன தப்பு? நான் களங்கம் இல்லாதவன். நான் ஏன் கலங்க வேண்டும்? என்னோட மனசு தூய்மையா இருக்கு. நான் சுத்தமா இருக்கேன். என் மீது ஆசைப்பட்டு 'மெஸேஜ்' அனுப்பும் இளம் பெண்களைப் பற்றியும், அவங்களது முதிர்வு பெறாத இளமைக்கால உணர்வுகள் பற்றியும் கவலைப்பட்டிருக்கேனே தவிர, அவர்களில் யாருக்காவது பதில் 'மெஸேஜ்' அனுப்பி இருக்கேனா?

சரிதாவின் இனிய, உயிர்த் தோழி கயல்விழி! அவளிடம் நான் ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும், வழிகாட்டியாகவும்தான் பழகி வருகிறேனே தவிர வேறு தவறான எண்ணங்கள் எனக்கு இல்லையே?! கயல்விழியும் என்னை தன் குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைக்கிறா... பழகறா?! என்னையும், அவளையும் போய்... சந்தேகப்பட்டு சரிதா பேசும் பேச்சுக்கள்!... ச்சே... சரிதா ஏன் இப்பிடி மாறிட்டா?

சரிதா மேல என் உயிரையே வச்சிருக்கேனே! என்னோட இசையையும் அவளையும் சரி நிகர் சமமா நேசிக்கிறேனே?! இது அவளுக்கு தெரியாத விஷயமா? நடு ராத்திரியில... என்னோட... மொபைலை நோண்டிப் பார்த்து 'செக்' பண்ற அளவுக்கு நான் கேவலமாயிட்டேனா... அல்லது சந்தேகப் பேய் ஆட்டுவிக்கிற கேவலமான பெண்ணா... அவ ஆகிட்டாளா? என்னோட இதயத்தை நெருங்கக் கூடிய ஒரே பெண் சரிதா மட்டுமேன்னு ஏன் அவ புரிஞ்சுக்கலை?

சிந்தனைக் கூட்டில் இருந்து வெளி வருவதற்கு பெரிதும் முயற்சி செய்தான் அபிலாஷ். அவனது முயற்சிக்கு வெற்றி கிடைத்தபின் தெளிவானான்.

'என் மீது எந்தத் தவறும் இல்லாதபோது நான் ஏன் மன அழுத்தத்தில் தவிக்கணும்? வருவது வரட்டும். சரிதாவின் மனநிலை மாறட்டும். அவளே என்னைத் தேடி வரட்டும். அவளுக்கு என்னைப் பற்றிய தவறான எண்ணம் மறையட்டும்! என்று வைராக்யமாக எண்ணியவன், அவள் மீதுள்ள அளவற்ற பாசத்தினால் பரிதவித்தான்.

'பாவம் சரிதா. பெற்ற அம்மா, அப்பாவை கண் எதிரே விபத்தில் பறி கொடுத்த அவள், என்னையே தன் உலகமாக எண்ணி வாழ்ந்த அவள், எனக்காகவும், என் இசைத்துறையின் வெற்றிக்காகவும் எப்போதும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அவள், ஒரு தாய் போல என்னை கவனித்துக் கொண்ட அவள் ஏன் இப்படி தனக்குள் சுருங்கிப் போனாள்? எண்ணங்களில் குறுகிப் போனாள்? என்று மறுபடியும் சரிதா மீது பரிதாபப்பட்டான். எண்ண அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டான் அவன்.


அபிலாஷின் பாராமுகம் சரிதாவைத் தீயாக சுட்டது. என்றாலும் அவளது இதயத்திற்குள் சந்தேக வண்டுகள் துளைத்துக் கொண்டிருந்தன.

எனவே அவளும் அபிலாஷின் பாராமுகம் அவளை பாதிக்காதது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

அபிலாஷின் மௌனம், அவன் மீது சரிதா கொண்டிருந்த தவறான எண்ணங்களையும் மாறுபட்ட கருத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

சந்தேகம் எனும் கொடிய பேய் தன்னுடைய வாழ்வில் எந்த அளவிற்கு தலைவிரித்து ஆடப் போகிறது என்பதை அறியாத பேதையாய் இருந்தாள் சரிதா.

ஏதோ பெயருக்கு சாப்பிடுவதும், மன அழுத்தத்தினால் ஏற்பட்ட துக்கத்தினால் படுக்கையில் குப்புறப்படுத்துக் கிடப்பதுவுமாக பொழுதை நகர்த்தினாள்.

பாவனா அங்கே வரும் சமயங்களில் மட்டும் அவளிடம் புலம்புவாள். அபிலாஷின் மீது சரிதாவிற்கு உருவாக்கிய சந்தேக ஏவுகணை சிறிது கூட வீரியம் குறையாமல் இருக்கும்படி தன்னால் இயன்ற வரை மிக்க கவனத்துடன் செயல்பட்டாள் பாவனா.

எரிகின்ற தணல் மீது மேலும் காற்றைப் பெருக்கி, சரிதாவின் மனம் முழுவதும் நெருப்பினால் ஏற்படும் புகை மண்டலமாக்கினாள் அவள். அந்த நடவடிக்கையில் இந்த அளவிற்கு அவள் துரிதமாக ஈடுபடுவதற்கு சுதாகரின் இடைவிடாத தொந்தரவும் அதனால் ஏற்பட்ட அயர்ச்சியும் காரணங்களாக இருந்தன.

எப்படியோ... அந்த வஞ்சக வலையில் இருந்து விடுபட்டு விட வேண்டும் என்ற துடிப்போடு அவள் நடத்திய நாடகத்திற்கு ஓர் உச்சக்கட்டமும் நேர்ந்தது.


''என்னங்க... நீங்களும் இதோ போறேன் சிங்கப்பூருக்கு... அதோ போறேன் சிங்கப்பூருக்குன்னு சொல்லியே பல மாசமாச்சு. இன்னிக்கு விடியும்... நாளைக்கு விடியும்ன்னு நானும் பொறுமையா காத்துக்கிட்டிருக்கேன்... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... என்னதான் சொல்றாரு உங்க ஃப்ரெண்டு சுதாகர்?...''

''அவனும் இதோ பணம் புரண்டுடும் அதோ புரண்டுடும்னு என்கிட்ட சொல்றான். என்கிட்ட அவன் சொல்றதை, நான் உன்கிட்ட சொல்றேன். ஆனா... நேத்து கூட ரொம்ப நம்பிக்கையோட பேசினான். கொஞ்சம் பொறுமையா காத்திருந்தா... நல்ல காலம் பொறந்துடும்...''

''நீங்க சொல்லும்போதெல்லாம் நானும் நம்பிக்கையோட காத்திருக்கணும்ன்னுதான் நினைக்கிறேன். ஆனா... நாட்கள் றெக்கை கட்டிப் பறக்குது. அதனால மனசுக்குள்ள ஒரு நெருடல் சிறகடிச்சுக்கிட்டே இருக்கு...''

''கவலைப்படாதே... நடக்குமா... நடக்காதான்னு சிந்திக்காதே. நடக்கும்ன்னு நம்பு. நடக்கும். நேத்து சுதாகர்ட்ட ரொம்ப நேரம் இதைப் பத்திதான் பேசினேன். சீக்கிரமா சிங்கப்பூர் போயிடலாம்ன்னு ஆணித்தரமா சொன்னேன்.''

''சரிங்க. ஆனா என்னோட பொறுமையை சோதிக்காதீங்க. எங்க அம்மா வீட்ல, எங்க அண்ணனுங்க இதைப்பத்தி கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஒத்தைப் பொண்ணா பிறந்து, வளர்ந்த என் மேல அவங்களுக்கு இருக்கற பாசத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியாதாதது இல்லை. ஒரு லெவலுக்கு மேல ஆயிடுச்சுன்னா... அவங்களுக்கு வர்ற கோபத்தைப் பத்தியும் உங்களுக்குத் தெரியும். தங்கச்சியோட வாழ்க்கையில ஒரு சிக்கல்ன்னா... உங்களை சின்ன பின்னமாக்கிடுவாங்க. எங்க அண்ணனுங்க நல்லவங்கதான். ஆனா ஒரு பிரச்னைன்னு வந்துட்டா... அதுவும் என்னோட வாழ்க்கையில ஒரு பிரச்னைன்னா... கௌரவம் எல்லாம் பார்க்கமாட்டாங்க. தடாலடியா இறங்கிடுவாங்க.''

''நீ வேற... தடாலடி, அடிதடின்னு ஏம்மா பயமுறுத்தற? அந்த அளவுக்கெல்லாம் போகாது.''

''சரிங்க. உங்க வார்த்தையை நான் நம்பறேன். பையனோட ஸ்கூல்ல போய் பையனுக்கு சாப்பாடு குடுக்கணும். இன்னிக்கு நீங்க குடுத்துடறீங்களா?''

''சரி எடுத்துக் குடு.''

டிபன் பாக்ஸில் எடுத்து, அதை ஒரு கூடைப்பையில் வைத்து தண்ணீர் பாட்டிலோடு வெங்கட்டிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட வெங்கட், வீட்டிலிருந்து வெளியேறினான்.


லேஸான தூறலில் ஆரம்பித்த மழை, மிகவும் பலமான மழையாக பெய்ய ஆரம்பித்தது. ' ச்சோ' வென்ற இரைச்சலோடு பலத்த காற்றும் வீச, அந்த காற்றிற்குகூட அசைந்துக் கொடுக்காத மழை, விடாமல் பெய்துக் கொண்டிருந்தது.

இரவு நேரம் என்பதால் இடியும், மின்னலும் பக்க வாத்யம் வாசிக்க, காற்று, தன் பங்கிற்கு அதிரடியாக இசைக்க, மழை எனும் கச்சேரி அரங்கேறிக் கொண்டிருந்தது.

'மழை நிற்கும். மழை நிற்கும்' என்று எதிர்பார்த்திருந்த அபிலாஷ், ரிக்கார்டிங் ஸ்டூடியோவை விட்டு வெளியேறி காருக்குள் ஏறினான்.

'இப்போதைக்கு மழை நிக்காது. வீட்ல சரிதா, சில நேரம் எழுந்து வந்து சாப்பாடு குடுக்கறா. பெரும்பாலான நேரம் என்னைக் கண்டுக்கறதும் இல்லை. அவ கண்டுக்கலைன்னா  என்ன?... ஃப்ரிட்ஜ்ல ஏதாவது இருக்கும். சூடு பண்ணி சாப்பிட்டுக்க வேண்டியதுதான். பசி, வயித்தைக் கிள்ளுது. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, படுத்து தூங்கணும்.'

இவ்விதம் நினைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்தான் அபிலாஷ். காரை பத்திரமாக ஓட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. சமாளித்து ஓட்டினான். வழக்கமாக அவன் வீட்டிற்கு போகும் வழியில் மழையினால் தெருவில் பெரிய பள்ளம் உருவாகி அதில் மழைத் தண்ணீர் நிரம்பியிருந்தது.

அந்த பலத்த மழையிலும், தெருவில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அபிலாஷின் காரைப் பார்த்தான். காரின் அருகே வந்தான். அபிலாஷை பார்த்த அவன் உற்சாக மிகுதியில் கத்தினான்.

''ஹய்... பாட்டு ஸார்.... அபிலாஷ் ஸார்....'' என்று மறுபடி மறுபடி கூவினான். காரின் கதவின் ஜன்னல் பகுதியைத் திறந்த அபிலாஷ் மழையின் வலுவான சாறல் உள்ளே தெறித்தபடியால் ஜன்னல் கண்ணாடியை ஏற்றினான்.

''ஸார்... இந்தப் பக்கம் போக முடியாது... மழையினால பெரிய பள்ளமாயிடுச்சு... நீங்க வேற ரூட்ல போயிடுங்க. இந்த பள்ளம் ரொம்ப டேஞ்சர் ஸார்'' என்று அச்சிறுவன் உரக்கக் கத்தினான்.

லேஸாகக் காரின் கதவைத் திறந்து அச்சிறுவனுக்கு நன்றி கூறிய உடனே காரைத் திருப்பி வேறு பாதைக்கு வந்தான் அபிலாஷ்.

அவன் மாறி வந்த பாதை, கயல்விழியின் வீடு இருக்கும் பகுதியாகும். எல்லாத் தெருக்களிலும் மழைத் தண்ணீர் அங்கங்கே தேங்கிக் கிடந்தபடியால் காரை மிக மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தான் அபிலாஷ்.

அப்போது மிகப் பளீர் என மிக வெளிச்சமாக மின்னல் மின்னியது. அந்த வெளிச்சத்தில் ஓர் உருவம் அவனது கண்ணில் பட்டது. அந்த உருவத்திற்குரிய தோற்றம் ஒரு பெண்ணிற்குரியதாகக் காணப்பட்டது.

தனக்கு பரிச்சயமான உருவத்தோற்றமாக தோன்றுகிறதே என்ற எண்ணத்தில் கூர்ந்து கவனித்தான் அபிலாஷ்.

அவன் நினைத்தது போலவே அந்த உருவத்திற்குரிய பெண் கயல்விழி!

'ஐயோ... இவ ஏன் இப்பிடி வெளுத்துக்கட்டற மழையிலயும் இடி, மின்னல்லயும் இந்த ராத்திரி நேரத்துல தெருவுல வந்துக்கிட்டிருக்கா?!'

அதிர்ச்சியுடன் காரை ஓட்டிய அபிலாஷ், கயல்விழியின் அருகே சென்று காரை நிறுத்தினான். காரின் கதவைத் திறந்து, அவளை உள்ளே அழைத்தான்.

முதலில் யாரோ எவரோ என்று பயந்துபோன கயல்விழி, பரிச்சயமான அபிலாஷின் குரல் என்பதை உணர்ந்து உடனே காருக்குள் ஏறினாள்.

''என்ன கயல்விழி? இந்த நேரத்துல மழையில... இருட்டுல... தனியா... வந்துக்கிட்டிருக்க?!''

''டான்ஸ் ப்ரோக்ராம் முடிஞ்சப்புறம்தான் மழை லேஸா பெய்ய ஆரம்பிச்சுது. வழக்கமா வர்ற கால்டேக்ஸி வராம வேற கால்டேக்ஸி வந்துச்சு. அதை ஓட்டிக்கிட்டு வந்த டிரைவர் ஃபுல்லா தண்ணி அடிச்சிருந்தான். பெரிசா மழை பெய்ய ஆரம்பிச்சதும்... ரோட்டோரமா காரை நிறுத்திட்டு, பின்பக்கக் கதவைத் திறந்து, என் கையைப் பிடிச்சு இழுத்தான். செருப்பைக் கழட்டி அவனை அடி விளாசிட்டு ஓடி வந்துக்கிட்டிருக்கேன். ஓடி வர முடியாம... பள்ளம், மேடு வழுக்கறதுன்னு திண்டாடிப் போயிட்டேன்.''

''உனக்கு ஒரு துணையை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா... கேக்கமாட்டேங்கற...''

''துணையா? அதுவே ஒரு தொல்லையா ஆகிடும்ன்னுதானே தனி ஆளா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா... கல்யாணமே வேண்டாம்னு முடிவு எடுத்தாலும் ஒரு பெண்ணுக்குரிய சராசரி ஆசைகள், கனவுகள் ஏக்கங்கள் எனக்கும் அப்பப்ப உருவாகும். அபிலாஷ், என்னைப் புரிஞ்சுக்கிட்ட, எனக்காகவே வாழற ஒரு ஆண்மகன் கிடைக்கறது கஷ்டம். அப்பிடி யாராவது ஒருத்தனை நான் அடையாளம் கண்டு பிடிச்சா... உனக்கேத்தவன் இவன்தான்னு என் மனசுக்குள்ள மணி அடிச்சா... நிச்சயமா நான் கல்யாணம் பண்ணிப்பேன் அபிலாஷ். அது காலத்தோட நடக்கணும். காலம் கடந்துட்டா... இப்பிடியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான். மிஸ் கயல்விழியா வாழ்ந்துட்டா... வாழ்க்கையில எதையுமே மிஸ் பண்றதுக்கு வாய்ப்பே இருக்காது... அதெல்லாம் போகட்டும். உங்க சரிதா என்ன, என்னோட மொபைல்ல கூப்பிட்டா லைனை கட் பண்ணிடறா?! என் மேல என்ன கோபம் அவளுக்கு? திடீர்னு இப்பிடி பண்றா. ஒண்ணுமே புரியலை.''

''சரிதா எனக்குமே புரியாத புதிரா இருக்கா. இதைப்பத்தி இப்ப பேச வேண்டாம். எனக்கு பசிக்குது. உன்னை ட்ராப் பண்ணிட்டு, நான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும்...''

அவன் பேசி முடிப்பதற்குள் கயல்விழியின் வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தனர்.

இருவரும் காரிலிருந்து இறங்கினர். கயல்விழியின் வீட்டு வாசல் வரை துணைக்கு சென்ற அபிலாஷ், கிளம்பினான்.

''நான் கிளம்பறேன் கயல்விழி...''

''நல்லா இருக்கே நீங்க சொல்றது? பசிக்குதுன்னு சொல்லிட்டு என் வீட்டு வாசல் வரை வந்துட்டு, வெறும் வயிறா அனுப்பிடுவேனா என்ன?''

செல்லமாக மிரட்டல் போட்டாள் கயல்விழி. கயல்விழியின் குரல் கேட்டு மெதுவாக எழுந்து வந்தாள் பார்வதி.

''என்னம்மா கயல்விழி... கொட்டற மழையில நீ எப்பிடி வந்து சேரப் போறியோன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன்... அட... உன்கூட யாரு? அபிலாஷ் தம்பியா? வாங்க தம்பி வாங்க,,, மழை பெஞ்சதும் கரண்ட் போயிடுச்சு. கயல்விழி இன்வெர்ட்டர் போட்டு வச்சிருக்கா. அதனால சௌகர்யமா இருக்கு...''

''அம்மா... இப்ப அந்த கதை பேசவா நேரம்? அபிலாஷ்க்கு பசிக்குதாம். ஃப்ரிட்ஜில் மாவு இருக்குல்ல?''

''இருக்குமா.''

''சரிம்மா. நான் பார்த்துக்கறேன். நீங்க போயி படுத்துக்கோங்க...''

அம்மா நகர்ந்தாள்.

அபிலாஷை அங்கு இருந்த டைனிங் டேபிள் சேரில் உட்கார வைத்தாள் கயல்விழி.

ஃபிரிட்ஜைத் திறந்தாள். உள்ளே இருந்த டப்பாக்களைத் திறந்து பார்த்தாள்.

ஒன்றில் பூரிக்கு பிசைந்த மாவும், ஒன்றில் தோசை மாவும், மற்றொன்றில் சாம்பார், உருளைக்கிழங்கு மஸாலாவும் இருந்தன.

மடமடவென சாம்பாரையும், உருளைக்கிழங்கு மஸாலாவையும் எடுத்து மைக்ரோவேவ் அவனில் சூடு பண்ணினாள்.

ஸ்டவ்வின் ஒரு பர்னரில் தோசைக் கல்லையும், இன்னொன்றில் வாணலியையும் காய வைத்தாள். வாணலியில் 'மந்த்ரா' கடலை எண்ணெய்யை ஊற்றினாள்.

தோசை மாவை எடுத்து தோசைக் கல்லில் முறுகல் தோசையாக ஊற்றினாள். தோசையை சுற்றிலும் இதயம் நல்லெண்ணெயை ஊற்றினாள். அதே சமயம் பூரி மாவை எடுத்து மாவைத் தேய்த்து வட்டங்களாக தேய்த்தாள்.

ஒரு பக்கம் தோசையை வார்த்தபடியே, பூரியையும் பொரித்து எடுத்தாள். பந்துகள் போல எழும்பி வந்த பூரிக்களை அபிலாஷிற்கு பரிமாறி, தொட்டுக் கொள்ள ஒரு கிண்ணத்தில் சாம்பாரையும், இன்னொன்றில் உருளைக்கிழங்கு மஸாலாவையும் வைத்தாள்.

பசி மயக்கத்தில் மிக ஆர்வமாக பூரியை சாப்பிட ஆரம்பித்தான் அபிலாஷ்.

''ஆஹா... பூரிக்கு சாம்பார் காம்பினேஷன் சூப்பர் கயல்விழி'' என்று பாராட்டியபடியே பூரிக்களை உள்ளே தள்ளினான்.

தோசை ரெடியானதும் அதையும் கொண்டு வந்து வைத்தாள்.

''ஆஹா... செவசெவன்னு ஹோட்டல் தோசை மாதிரி பளபளன்னு மின்னுதே...'' என்றபடியே தோசைக்குள் உருளைக்கிழங்கு மஸாலாவைத் தடவி, ரஸித்து ருசித்து சாப்பிட்டான்.

''ஹோட்டல்லதான் இப்பிடி கண்ணுக்கு அழகா செவந்த தோசை பளபளன்னு மின்னும்...''

''தோசை சிவக்கறதுக்குக் காரணம் நம்மளோட கைப்பக்குவம். அம்மாதான் இப்ப எழுந்து சமைக்க ஆரம்பிச்சுட்டாங்கள்ல்ல? தோசை பளபளன்னு மின்னறதுக்குக் காரணம் இதயம் நல்லெண்ணெய். சாம்பார், உருளைக்கிழங்கு எல்லாமே அம்மா வச்சதுதான். ஒண்ணே ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங். பெரிய வெங்காயத்தை நீள நீளமா வெட்டி, அதில எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உப்புத்தூள் போட்டு பிரட்டி எடுத்து அதை பூரிக்கு தொட்டு சாப்பிட்டா செம சூப்பரா இருக்கும்.''

''டான்ஸ்லதான் பெரிய திறமைசாலின்னு பார்த்தா... தோசை கூட அழகா போடற... பந்து மாதிரி எழும்ப எழும்ப பூரி போடற... என்னதான் அம்மாவோட கைப்பக்குவம்ன்னாலும் அந்த மாவை சரியான முறையில் தோசையா போடறதுக்கும், பூரி போடறதுக்கும் ஒரு திறமை வேணும்ல்ல? அது சரி... பசி மயக்கத்துல நான் பாட்டுக்கு சாப்பிட்டுட்டேன், உன்னை சாப்பிட்டியான்னு கூட நான் கேக்கலை. ஸாரி...''

''நோ ஃபீலிங்ஸ். ஒரு நிமிஷம். நனைஞ்சு போயிருக்கற ட்ரெஸ்ஸை மாத்திட்டு வந்துடறேன். வந்து சூடா இஞ்சி டீ போட்டுத் தரேன்.''

''ஓ.கே'' வயிறு நிறைந்த அபிலாஷ் அந்த சேரிலேயே தலை சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

அப்போது கயல்விழியின் வீட்டு தொலைபேசி ஒலித்தது. கயல்விழி வந்து எடுக்கட்டும் என்றிருந்தான். கயல்விழி வருவதற்கு தாமதமானபடியாலும், தொடர்ந்து தொலைபேசி ஒலித்தபடியாலும் அவனே ரிஸீவரை எடுத்தான்.

''ஹலோ...'' என்றான்.

எதிர் முனையில் ஓரிரு நிமிடங்கள் மௌனம்.

மறுபடியும் ''ஹலோ... ஹலோ...'' என்றான். உடனே தொலைபேசி லைன் துண்டிக்கப்பட்டது.

அதன் பின்னரே உடை மாற்றிக் கொண்ட கயல்விழி வந்தாள்.

''லேண்ட் லைன் அடிச்சுது... நான் ஹலோ சொன்னதும் கட் ஆயிடுச்சு...''

''பரவாயில்லை. என்னோட மொபைலை 'ஸ்விட்ச் ஆஃப்' பண்ணி வச்சிருக்கேன். அதனால இதுல கூப்பிட்டிருப்பாங்க.''

''இந்த நடு ராத்திரியில கூட ஃபோன் பண்ணுவாங்களா?!''

''நடு ராத்திரி வரைக்கும் நடு மேடையில நடனம் ஆடற என்னைக் கூப்பிட நேரம், காலம் பார்ப்பாங்களா என்ன? நாளைக்கு ஹோட்டல்ல ஆடறதுக்கு வர வேண்டிய ஆள் 'கேன்ஸல்' பண்ணி இருப்பாங்க. பதில் ஆள் கிடைக்கணுமேன்னு என்னை 'ட்ரை' பண்ணி இருப்பாங்க. இதெல்லாம் சகஜமாப்பேச்சு. பழகிப் போயிடுச்சு...''

''மெதுவா பேசு கயல்விழி. உங்கம்மாவும் தங்கச்சியும் எழுந்துடப் போறாங்க...''

''அம்மாவுக்கு நடு ராத்திரிக்கு மேலதான் தூக்க மாத்திரை வேலை செய்யும். அதனால அவ்ளவு சீக்கிரம் எழுந்துக்க மாட்டாங்க. தங்கச்சி பண்ணிரண்டு மணி வரைக்கும் படிச்சிட்டு அசந்து தூங்குவா. அவளும் விஷயற்காலம் அஞ்சு மணி வரைக்கும் எழுந்திருக்க மாட்டா.''

''உன் தங்கை நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். அவளோட சொந்தக்கல்ல நிக்கணும்...''

''ஆமா அபிலாஷ். அதுக்காகத்தான் நான் பாடு பட்டுக்கிட்டிருக்கேன். இரவு ராணியா நான் நடனம் ஆடினாத்தான்... அவ... பிற்காலத்துல ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியா வலம் வர முடியும்.''

''உன்னோட நல்ல மனசுக்கு நீ நினைக்கிற எல்லாமே நல்லபடியா நடக்கும்.''

''இயந்திர கதியா ஆகிப்போன என்னோட சலிப்பான வாழ்க்கை கூட, உங்களை மாதிரி உண்மையான அன்பும், பாசமும் கொண்டவங்க கூட பேசும் போது சந்தோஷமானதா இனிமையா இருக்கு...''

''ஆமாண்டி. அடுத்தவளோட புருஷனை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்து கொட்டம் அடிச்சா... கொண்டாட்டமாத்தான் இருக்கும். சந்தோஷமாத்தான் இருக்கும்...'' தொப்பலாக நனைந்த உடையுடன்,  கண்களில் கோபக்கனல் தெறிக்க, முகத்தில் தோன்றிய கடுமை அவளது முகத்தை விகாரமாக்க, ஓங்கிக் குரல் கொடுத்த சரிதாவின் நெஞ்சம், ஏறி இறங்கி, ஏறி இறங்கியது.

''சரிதா...'' கயல்விழியும், அபிலாஷூம் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தனர்.

''நீ திறந்து போட்டுட்டு ஆடற மாதிரி உன் வீட்டுக் கதவையும் திறந்த போட்டுட்டு என் புருஷன் கூட கூத்தடிக்கிறியே! உனக்கு வெட்கமா இல்ல?''

''சரிதா....''

''யார்கிட்ட என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சுதான் பேசறியா?'' அவளது கன்னத்தில் அறைந்தான் அபிலாஷ்.

கன்னத்தைக் கையில் பிடித்துக் கொண்ட சரிதா, கண்ணீர் வழிவதையும் பொருட்படுத்தாமல் மேலும் கத்தினாள்.

''உங்க கூட எனக்கென்ன பேச்சு? நான் பேச வேண்டியதெல்லாம் இவ கூடத்தான்...''

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கயல்விழியின் அம்மாவும், தங்கையும் கலவர முகங்களுடன் வந்து பார்த்தனர்.

இதற்குள் அங்கே வந்து சேர்ந்தாள் பாவனா. நனைந்த உடையுடன், உடம்பில் அங்கங்கே ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட அவளைத் துரத்திக் கொண்டு வந்தான் சுதாகர்.

''என்னைக் காட்டிக் குடுக்கன்னு ஓடி வந்தியா நீ?...'' ஆக்ரோஷமாக அவளைப் பிடிக்க வந்தான். அவள் அவனது பிடிக்குள் சிக்காமல், கயல்விழியின் வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடினாள். அவள் மீது கோபவெறி கொண்ட சுதாகர், ஷர்ட்டிற்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாவனாவை சுட்டான்.

கல்லடி பட்ட புறாக்குஞ்சு போல சுருண்டு விழுந்தாள் பாவனா.

சுதாகரையோ, பாவனாவையோ எதிர்பார்க்காத சரிதா, திகைப்பில் வாய் அடைத்து நின்றாள். சுதாகர் தப்பித்து ஓடினான்.

துடித்துக் கொண்டிருந்த பாவனாவின் அருகே சென்றாள் சரிதா.

கயல்விழியும் அபிலாஷூம் அவளைத் தொடர்ந்தனர். பார்வதியும், வந்தனாவும் விக்கித்துப் போய் கலக்கத்துடன் கதிகலங்கி நின்றனர்.

''ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணலாம்'' என்ற கயல்விழியை சைகை காட்டி அருகே அழைத்தாள் பாவனா.

''வேண்டாம் கயல்விழி மேடம். நான் பிழைக்க மாட்டேன்'' என்றவள் சரிதாவையும் அழைத்து, திக்கித் திணறிப் போசினாள்.

''சரிதா மேடம். நான் நல்லவளா நடிச்சு உங்களை ஏமாத்திட்டேன்...'' என்று ஆரம்பித்து அவளால் இயன்ற அளவு சுதாகரின் சதித் திட்டத்திற்கு, உடந்தையாக இருந்தது பற்றி எடுத்துக் கூறினாள். அனைத்தையும் ஓரளவு சுருக்கமாகக் கூறி முடித்த அவள் ''ஸாரி... ஸாரி...'' என்றபடியே சரிதாவின் கையைப் பிடித்து அபிலாஷின் கைகளில் சேர்த்து வைத்தாள். அவளது உயிர்ப் பறவை அவளது... உடலை விட்டுப் பறந்தது.

கயல்விழி போலீசுக்கு ஃபோன் செய்ய, கொட்டும் மழையில் போலீஸார் வந்தனர். பாவனாவின் சடலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சுதாகர் பற்றிய விபரங்கள் கேட்டுக் கொண்ட போலீஸார், அவனைத் தேடும் வேட்டையில் இறங்கினர்.


சுதாகரைப் பிடித்த போலீஸார் கொடுத்த உபசாரத்தில் உடல் முழுதும் ரத்த களறியான சுதாகர் கையெடுத்துக் கும்பிட்டான்.

''உண்மையை சொல்லிடறேன்...'' என்று அவன் சரிதாவை காதலித்தது, ப்ளாக் மெயில் செய்து பணம் பறித்தது... அதன் பின் பாவனாவை அனுப்பி நாடகம் நடத்தி அபிலாஷ்- சரிதா இருவரையும் பிரித்தது... எல்லாவற்றையும் கூறினான்.

''டான்ஸர் கயல்விழி வீட்டுக்கு அந்த நேரத்துல ம்யூஸிக் டைரக்டர் அபிலாஷ் எதுக்கு வந்தார்? சரிதா எதுக்கு வந்தாங்க? இதைப்பத்தி நாங்க அந்த சரிதா மேடம்ட்டயும் கேட்போம். இப்ப நீ சொல்லு...''

''மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிக்கிட்டிருந்த அந்த நேரத்துல... மழையில மாட்டிக்கிட்ட நான், கயல்விழி வீட்டுக்குள்ள அவகூட அபிலாஷ் போறதைப் பார்த்தேன்.

இதுதான் நல்ல சான்ஸ்ன்னு பாவனாவை கூப்பிட்டு, சரிதாவுக்கு ஃபோன் பண்ணி, கயல்விழியோட வீட்ல, அபிலாஷ் இருக்கறதை சொல்லச் சொன்னேன். பாவனா மறுத்தா. அதுக்கேத்த மாதிரி சரிதாவோட லேண்ட் லைன், மொபைல் எதுவுமே கனெக்ட் ஆகலை. அதனால நேர்ல சரிதா வீட்டுக்குப் போகச் சொன்னேன். நான் அவளுக்கு இனி பணம் குடுக்கறதா இல்லைன்னு எப்பிடியோ தெரிஞ்சுக்கிட்ட அவ, 'சரிதா வீட்டுக்கு போகமாட்டேன்னு' முரண்டு பிடிச்சா. சரிதாகிட்ட நான் சொல்லச் சொன்ன மாதிரி 'அபிலாஷ் கயல்விழியோட வீட்ல இருக்கான்னு சொல்லமாட்டேன்'னு உறுதியா மறுத்தா. நீ போகலைன்னா... நானே அவ வீட்டுக்குப் போவேன்னு மிரட்டி அவளை சரிதா வீட்டுக்குப் போக வச்சேன். கயல்விழி வீட்ல அபிலாஷ் இருக்கறதை சரிதாட்ட சொல்ல வச்சேன். எனக்கு பயந்து நான் சொன்னதைக் கேட்ட பாவனா, அதுக்கப்புறம் மனசு மாறி, கயல்விழியோட வீட்டுக்கு, சரிதா பின்னாடியே போனாள். இதைப் பார்த்த எனக்கு என்னைக் காட்டிக்கொடுக்கத்தான் பாவனா அங்கே போறாள்ன்னு புரிஞ்சுப்போச்சு. கோபவெறி ஏறின நான், கயல்விழியோட வீட்டுக்குப் போய் அவளை சுட்டுட்டேன்'' தொடர்ந்து விலாவாரியாக சுதாகர் வாக்கு மூலம் கொடுக்க, அதைப் பதிவு செய்து கொண்டிருந்தனர் போலீஸார்.


அபிலாஷின் வீட்டில் சரிதாவை விசாரணை செய்தது போலீஸ். அந்த நடுநிசி நேரம் கயல்விழியின் வீட்டிற்கு அவள் போக நேர்ந்தது பற்றி விளக்கினாள் சரிதா. 'ஃப்ளர்ஷ் பேக்' போல அவள் நினைவில் மோதியது பாவனாவின் இரவு நேர வருகையும், அவளது பேச்சும்.

பேய் மழை பெய்து கொண்டிருக்க, அழைப்பு மணியின் ஓசை கேட்டு 'அபிலாஷாக இருக்கும்' என்று எண்ணியபடியே வீட்டின் வாசல் கதவைத் திறந்தாள் சரிதா.

அங்கே பாவனா ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தாள்.

''உள்ளே வா. என்ன இது? தனியா இந்த நேரத்துல?'' கேள்விகளை அடுக்கியவள், பாவனாவிற்கு துவட்டுவதற்காக துண்டை எடுத்துக் கொடுத்தாள்.

''ஒரு பொண்ணு அதிலயும் உன்னைப் போல வயசுப் பொண்ணு இப்பிடி அர்த்த ராத்திரியில வெளியே வரலாமா? உனக்கு அப்பிடி என்ன பிரச்னை?...''

வாஞ்சையுடன், பரிவுடன், பாசத்துடன் பேசிய சரிதாவின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் பாவனா.

'சுதாகர் சொல்லியது போல சரிதா மேடத்திடம் சொல்லலைன்னா... அவனே நேரல இங்க வந்துடுவானே.... சொல்லவும் முடியல.... சொல்லாம இருக்கவும் முடியலியே' என்று தவித்தபடி பாவனா தடுமாறிக் கொண்டிருக்க, அவளது மொபைல் ஒலித்தது.

''என்ன, அவகிட்ட செல்லிட்டியா? அல்லது நான் அங்கே வரவா?'' மொபைலில் மிரட்டினான் சுதாகர்.

''வேண்டாம் நானே சொல்லிடறேன்'' மொபைலை அடக்கினாள்.

''என்ன பாவனா? யார் மொபைல்ல?''

''அது... அது... வந்து மேடம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான் இந்த நேரத்துல மழையில ஓடி வந்தேன். க...... க..... கயல்விழி வீட்ல அபிலாஷ் ஸார் இருக்கார் மேடம். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாப்பல கயல்விழி வீட்டுக்குப் போறதை என் கண்ணால பார்த்தேன் மேடம்!''

''என்ன? இந்த நடு ராத்திரி நேரத்துல அவ வீட்டுக்கு போறாரா? அவளும் அவர் கூடவா இருந்தா?...'' அதிர்ச்சியில் தொண்டை அடைக்க... அதையும் மீறி அலறினாள் சரிதா.

அலறியவள் உடனே கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டின் கதவைக் கூட பூட்டாமல் வெளியேறி காரினுள் ஏறி கயல்விழியின் வீட்டிற்கு காரை செலுத்தினாள். காருக்கு பின்னாடியே ஓடி வரும் பாவனாவையும் அவள் கண்டு கொள்ளவில்லை.

மழை காரணமாக அவளால் காரை வேகமாக ஓட்ட முடியவில்லை. எனினும் கோப வெறியோடு காரை ஓட்டினாள்.

கயல்விழியின் வீட்டருகே காரை நிறுத்தினாள். காரை பூட்டாமல் கயல்விழியின் வீட்டு வாசலுக்கு சென்றாள்.

கதவின் மீது லேஸாக கையை வைத்து தள்ள, அங்கே அபிலாஷ். கயல்விழி இருவரையும் சேர்த்து பார்த்த அவள் கத்தினாள். அதன்பின் அங்கே பாவனா வர, சுதாகரும் வந்துவிட, சுதாகரின் துப்பாக்கி குண்டிற்கும் அவனது துஷ்ட குணத்திற்கும் பலியாகிப் போனாள் பாவனா.

பணத்திற்காக பாவனா விரித்த வலை, அபிலாஷ் மீது சந்தேகத்தை எழுப்புவதற்காக சுதாகரின் இயக்கத்தின்படி பாவனா நடத்திய நாடகம், அதற்கு தானும் பலியாகிவிட்டோமே எனும் தவிப்பு... ஆகிய உணர்வுகளின் கலவைகளோடு போலீஸிடம் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தாள் சரிதா. போலீஸார் கிளம்பினர்.


செய்தித்தாளில் 'பாவனா' எனும் பெயரைப் பார்த்ததும் பரபரப்பானான் வஸந்த். செய்தி முழுவதையும் படித்த அவனுக்கு அந்தத் தகவல்களும், நிகழ்வுகளும் எதிர்பாராதவையாக இருந்தன. பெண் பிள்ளை போல கண்ணீர் விட்டு அழுதான். கூடவே கோபமும் எழுந்தது. 'எந்த உதவி வேணும்ன்னாலும் கேள்'ன்னு சொல்லியிருந்தேனே... இப்பிடி தன்னந் தனியா செயல்பட்டு உயிரையை பலி குடுக்கும்படி ஆயிடுச்சே...'

அவன் அழுவதையும், அதிர்ச்சியில் திகைத்து நிற்பதையும் பார்த்த அவனது தாய் விசாலம் பதறிப் போனாள்.

''என்னப்பா வஸந்த்து... என்ன ஆச்சு...''

''அம்மா... என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச பாவனாவை கொலை பண்ணிட்டங்கம்மா.''

விசாலத்தின் வயோதிகம், அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டது. தட்டுத் தடுமாறி பேசினாள்.

''ஏம்ப்பா... கொலையாகற அளவுக்கு அவளுக்கு என்னப்பா பிரச்னை...?''

''அவ நல்ல பொண்ணுதான்மா. பணக் கஷ்டத்துன்னால, பணத் தேவைக்காக சிக்கல்ல மாட்டிக்கிட்டா.''

''அதைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாதாப்பா?''

''என்கிட்ட எதுவும் சொல்லலைம்மா. அவ அழுத்தக்காரி... ஆனா நல்லவ.''

விலாவாரியாக பாவனாவின் கடந்த காலம் பற்றி எதுவும் சொல்லாமல், விசாலத்திற்கு பாவனாவின் மீதிருந்த நல்ல அபிப்ராயம் மாறிவிடாமல் பதில் கூறினான் வஸந்த்.

'உயர் கல்வி இல்லாததுனாலதான் அவளுக்கு வறுமையும், ஏழ்மையும்ன்னு என்கிட்ட புலம்பினா. வருத்தப்பட்டா. அவளுக்கு இப்பிடி ஒரு முடிவு வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேம்மா...''

''அந்தப் பொண்ணு பாவனாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததுப்பா. நாம குடுத்து வச்சது அவ்ளவுதான்.''

பாவனாவின் உடல், 'போஸ்ட்மார்ட்டம்' செய்வதற்காகக் கொண்டு போகப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றான் வஸந்த். அங்கே அவளது உடலை வாங்குவதற்காக பாவனாவின் அப்பாவும், தங்கையும் ஓரிரு உறவினர்களோடு வந்திருந்தனர்.

பாவனாவின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களால் கொண்டு வரப்பட்டது. அதைப் பார்த்த பாவனாவின் அப்பாவும், தங்கையும் கதறி அழுதனர். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத வஸந்த், மானசீகமாக பாவனாவின் ஆத்மாவிற்கு அஞ்சலி செலுத்தினான். கனத்துப் போன இதயத்தோடு அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டின் ஹாலில் உள்ள கம்ப்யூட்டரில் ஒரு ஸி.டி.யை போட்டான் அபிலாஷ். அங்கே மௌனமாக கண்ணீர் வடித்தபடி உட்கார்ந்திருந்தாள் சரிதா. திரையில் சுதாகரும், சரிதாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஒளிபரப்பாயின. அவற்றைப் பார்த்த சரிதா திகைத்தாள். அவளது இதயம் அதிர்ந்தது. எழுந்து வந்து அபிலாஷின் காலடியில் சரிந்தாள்.

அவளை அள்ளி அணைத்து, தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான் அபிலாஷ்.

''இந்த ஸி.டி.யை நான் என்னிக்கோ பார்த்துட்டேன். நீ... உன் மனசுல இருந்து அவனைத் தூக்கி எறிஞ்சுட்டன்னு எனக்கு நல்லா தெரியும். உன் மனசு நான் அறியாததா ? நீ அப்பப்ப வித்யாசமா நடந்துக்கறப்பவெல்லாம் நீ ஏதோ சிக்கல்ல மாட்டி இருக்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். உன்னோட குழப்பத்திற்குரிய அடையாளம் ஏதாவது கிடைக்குதான்னு உன்னோட ரூம்ல, ஷெல்ஃப்ல தேடிப் பார்த்தேன். நான் நினைச்சது போல உன்னோட பீரோவுல கீழ்த்தட்டுல ஸீக்ரெட்லாக்கர்ல இந்த ஸி.டி.க்களை மறைச்சு வச்சிருந்த. எடுத்துப் பார்த்தேன். இதுவும் உன்னோட மாறுபட்ட நடவடிக்கைக்கு காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா ஒரு பாவனா... சும்மா வாய் வார்த்தையா ஏத்திவிட்டதைக் கூட நீ புரிஞ்சுக்கலை. உன்னோட பிரச்னையை உனக்கு தெரியாமலே முடிச்சுடணும்னுதான் எனக்கு ரொம்ப வேண்டிய ஒரு ப்ரொட்யூஸரோட உறவுக்காரர் பெரிய போலீஸ் அதிகாரி மூலமா உன்னைத் தொந்தரவு செய்யற ஆள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி இருந்தேன். துரதிர்ஷ்டவசமா அந்த போலீஸ் அதிகாரி, ஒரு கலவரத்துல பாதுகாப்புக்கு போனப்ப சுட்டுக் கொல்லப்பட்டுட்டார். என்னோட ஸ்டூடியோ வேலைகள்ல்ல, வேற போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள ரொம்பவே லேட்டாகிடுச்சு. இதுக்கு நடுவுல, உன் மனசை பாவனா கெடுத்ததுனால நீ என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. இதுதான் என்னை நிலை குலைய வச்சுடுச்சு. இசைங்கற ஒரு தெய்வீகம் என்னோட வாழ்க்கையில இணையலைன்னா உன்னோட சந்தேகத் தீ என்னை பொசுக்கி இருக்கும்...''

அவனது வாயைத் தன் கைகளால் மூடினாள் சரிதா.

''தப்பு முழுசும் என் மேலதான்ங்க. என்னை மன்னிச்சுடுங்க. உங்ககிட்ட எதையுமே மறைக்காத நான் 'நீங்க என்னைத் தப்பா நினைச்சுடுவீங்களோன்னு இந்த விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். பண விஷயத்துல நீங்க எனக்கு குடுத்த சுதந்திரத்தை நான் தவறான முறையில பயன்படுத்திட்டேன். அந்தக் கயவனுக்கு பணம் குடுத்ததை உங்களுக்கு தெரியாம மறைச்சுட்டேன்...'''

''என் பணம். உன்னோட பணம். அதை செலவு பண்ற உரிமை, சுதந்திரம் உனக்கு எப்பவும் உண்டு....''

''ஸாரின்னு சாதாரணமா சொல்லி என்னோட பாவத்தைக் கழுவ முடியாதுங்க. எப்பிடி... என்ன... சொல்லி உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கறதுன்னு தெரியலிங்க... கல்யாணத்துக்கு முன்னால நடந்த அந்த விஷயமும் தப்பு. அதை நான் உங்ககிட்ட சொல்லாததும் தப்பு... ''

''இங்க பாரு சரிதா. காதல்ங்கறது குற்றம்ன்னோ... மன்னிக்க முடியாத பாவம்ன்னோ நினைக்கற மோசமானவன் நான் இல்லை. அதை அறவே நீ மறந்துடு. இந்த நிமிஷத்துலயே மறந்துடு. உன் மனசுல கள்ளம் இல்லை. களங்கம் இல்லை. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என் மேல உயிரையே வச்சு நேசிச்சதுனாலதான் சட்டுன்னு, பாவனா தூண்டிவிட்டதும் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. என் மேல உள்ள அளவற்ற அன்பினாலதான் அதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நம்ம கயல்விழியை நீ சந்தேகப்பட்டது மட்டும் என்னால தாங்க முடியல... நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவுக்கு அவ உன்னை நேசிக்கறா... நீ கூடத்தான் அவளை உயிருக்குயிரான தோழியா அன்பு செலுத்தின...''

''ஆமாங்க. சந்தேகக் கீறல் விழுந்த என்னோட மனசுல கயல்விழியையும் உதாசீனப்படுத்திட்டேன். அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் என் மனசு நிம்மதியாகும்...''

''தப்பை உணர்ந்தாலே போதும். பெரிய பாவத்துல இருந்து ரட்சிப்பு கிடைக்கும்ன்னு நம்ம ஃபாதர் சொல்லி இருக்கார்ல...''

மறுபடியும் அபிலாஷின் கால்களில் விழுந்தாள் சரிதா.

அவளைத் தூக்கினான் அபிலாஷ்.

''இங்க பாரு சரிதா. இன்னொரு தடவை நீ என் கால்ல விழக்கூடாது. நடந்தது அத்தனையும் ஒரு கனவா, மாயமா மறைஞ்சு போகட்டும். நீ என் உயிர்.''

''உங்களுக்கு மட்டும்தான் அவ உயிரா? எனக்கும் அவ உயிர்'' என்று கூறியபடியே அங்கே வந்தாள் கயல்விழி.

அவளது காலில் விழுந்து கதறினாள் சரிதா.

''நோ... நோ....'' என்றவாறே அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள் கயல்விழி.

''அபிலாஷ் சொன்னது போல நடந்தது எல்லாமே ஒரு கனவுதான். மறந்துடு. கதவைத் திறந்துவிட்ட வத்சலாம்மாகிட்ட சூடா ஃபில்ட்டர் காபி கேட்டிருக்கேன். நீ இன்னிக்கு எனக்குப் பிடிச்ச பால் பாயாஸம் பண்ணித் தரப் போறியாம்.''

'நடந்தது எதையுமே மனசுல வைச்சுக்காம... வெள்ளந்தியாய், வெண்மையான உள்ளத்தோடு எப்பிடி இவளால பேச முடியுது' என்ற எண்ணத்தில் கயல்விழியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் சரிதா.

கயல்விழி, அபிலாஷ் இருவரது மனதையும் சரிதா அறியாவிட்டாலும் அவர்கள் இருவரும் சரிதாவின் மனதை அறிந்திருந்தனர். இப்போது அனைத்தையும் அறிந்து கொண்டாள் சரிதா. புரிந்து கொண்டாள்.

'உன் மனதை நான் அறிவேன்' என்ற உணர்ச்சியின் குதூகலத்தில் அங்கே பாசம் பரிமளித்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.