Logo

வருவேன் நான் உனது...

Category: மர்ம கதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 9257

காலையில் திருமணம். அன்று மாலையே ரிஸப்ஷன். திருமண வைபவத்திற்கென்று கனத்த பட்டுச் சேலையையும், அதைவிடக் கனமான நகைகளையும் சுமந்து களைப்பாயிருந்த மிருதுளா, வரவேற்பு விழாவில் சுடிதாருக்கு மாறியிருந்தாள். எனவே களைப்பு நீங்கிப் புத்தம் புதிதாய் மலர்ந்த ரோஜா போல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள்.

சுடிதார் என்றாலும் அதன் அடக்க விலை ரூபாய் இருபதாயிரத்தைத் தாண்டியிருந்தது. மிருதுளாவே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, துணி எடுத்திருந்தாள். அவளே டிஸைன் செய்து தைக்கக் கொடுத்து வாங்கினாள். அதன் துப்பட்டாவில் கோக்கப்பட்டிருந்த அழகிய மணிகள் காண்போரைக் கவர்ந்தன. காலையில் முகூர்த்தத்திற்குக் கட்டியிருந்த பட்டுப் புடவையின் முந்தானையிலும் அதே போன்ற மணிகளைத் தைத்திருந்தாள்.

தங்கத்தில் கோத்திருந்த முத்துமாலையும், காதுகளில் அணிந்திருந்த முத்துத் தொங்கல்களும் அவளது அழகிற்கு மேலும் அழகூட்டின.

சுற்றியிருந்த கூட்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை ஏகாந்த். அவனது கவனத்தைக் கலைத்தது ஒரு குரல். அந்தக் குரலுக்கு உரியவள் மிருதுளாவின் தோழி ரேகா.

“என்ன மிஸ்டர் ஏகாந்த்... மிருதுளாவைக் கண் கொட்டாமல் ரசிச்சிக்கிட்டிருக்கீங்க...?!”

ரேகா கேட்டதும் தன் உணர்விற்குத் திரும்பிய ஏகாந்த், சற்றே வெட்கப்பட்டான். தன்னைக் கேலி பண்ணிய ரேகா, ஒரு வித்தியாசமான பெண்ணாய் இருந்ததைக் கண்டு மனதிற்குள் பிரமித்தான். அவள் ஒரு பெண். அசாதாரணமான உயரம். ஆண்களைப் போன்ற ஆஜானுபாகுவான உருவ அமைப்பு. உடம்பில் மட்டுமின்றி முகத்திலும் ஒரு முரட்டுத்தனம். குரலில் கூடப் பெண்மையின் மென்மையின்றி சற்று மெலிதான வன்மை இருந்தது. அவளைப் போலவே அவள் அணிந்திருந்த ஜீன்சும் ரஃப் அன்ட் டஃப் ஆக இருந்தது.

‘ட்ரபிள் மேக்கர்’ என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த டீ-ஷர்ட் அணிந்திருந்தாள். அந்த டீ- ஷர்ட் ஏறி இறங்கிய வளைவுகள் மட்டுமே அவள் பெண் என்பதை வெளிப்படுத்தின.

ஆண்கள் ஒருவருக்கொருவர் முதுகில் தட்டித் தட்டிப் பேசுவது போலவே ரேகாவும் மற்றவர்களிடம் பேசும் பொழுது ‘டொம்’, ‘டொம்’ என்று தட்டியபடி பேசினாள்.

மிருதுளாவிற்கு ஏகப்பட்ட சிநேகிதிகள். மாலினி, பத்மினி, காமினி, வனிதா, ஸ்டெல்லா, பூஜா, அம்ருதா என்று பல மாநிலப் பெண்களும் மிருதுளாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சில பெரிசுகள், இவர்கள் அடிக்கும் லூட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“காலம் எப்படி மாறிப் போச்சு பார்த்தியா, கல்யாணப் பொண்ணோட ட்ரெஸ்லயிருந்து அவளைச் சுத்தி நிக்கிற தோழிப் பெண்களோட அரட்டையும், ஆட்டம் பாட்டமும் கவனிச்சியா? ஆண் பிள்ளைங்க மாதிரி என்ன ஒரு சிரிப்பு, சத்தமான பேச்சு!” காதில் அணிந்திருந்த ப்ளூ ஜாகர் வைரக் கம்மல் டால் அடிக்க, தலையை ஆட்டி ஆட்டிப் பேசியது ஒரு பெண் பெரிசு.

“என்ன மாப்பிள்ளை சார்... ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க, ரிஸப்ஷனுக்கு வந்திருந்த உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பந்திக்கு முந்திட்டாங்க. நீங்க எங்ககிட்ட மாட்டிக்கிட்டீங்க...” வனிதா பேசியதைக் கேட்டு மிருதுளாவின் தோழிகள் குரூப் பலமாகச் சிரித்தனர்.

“ஏ வனிதா, பாவம் மிஸ்டர் ஏகாந்த். ஏற்கெனவே நம்பளைப் பார்த்து மிரண்டு போயிருக்காரு. நீ வேற பயமுறுத்தாதே.” பேசிக் கொண்டே வனிதாவின் முதுகில் ஒரு தட்டுத் தட்டினாள் ரேகா.

“இவ ஒருத்தி. தொடாம, அடிக்காம பேசவே மாட்டா. யம்மாடி! சரியான வலி இவ தட்டின இடத்துல.”

“ஏ ரேகா... ஆண்கள் கூடப் பேசும்போது இப்படித் தட்டிப் பேசினா தப்பா நெனச்சுக்க மாட்டாங்களா?”

“அதெல்லாம் அவ ரொம்ப உஷார். நம்மகிட்ட மட்டும் தான் அவ கை நீளும். ஆண்களைத் தொடற மாதிரிச் சூழ்நிலை வந்தா... அவன்களை அடிச்சி நொறுக்கறதுக்குத்தான் கையை நீட்டுவா...” பத்மினி கூறியதும், மறுபடியும் அங்கே சிரிப்பலை பரவியது. ஏகாந்த் நெளிந்தான். இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ள அவன், பல பெண்கள் நடுவில் மாட்டிக் கொண்டு மேலும் சங்கோஜப்பட்டான். அவனது சுபாவம்தான் அப்படி. அவனது உருவம் மிகவும் கம்பீரமானதாக இருந்தது. அவனது முகம் வசீகரமாக இருந்தது. தன் தோழிகளிடம் ஏதாந்த் மாட்டிக் கொண்டதைக் கண்டு பரிதாபமாக அவனைப் பார்த்தாள் மிருதுளா.

“பயந்துட்டீங்களா? இவங்க எல்லோருமே இப்படித்தான். வாழ்க்கை வாழ்வதற்கேன்னு புரிஞ்சுக்கிட்டு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா அனுபவிக்கறாங்க. நானும் இப்படித்தான்...”

“இல்லை, மிஸ்டர் ஏகாந்த். இவ பொய் சொல்றா. இவளுக்கு முணுக்குன்னு மூக்குக்கு மேல கோபம் வந்திடும். நாங்க எல்லோரும் ஒரு ரகம்னா இவ ஒரு வித்தியாசமான ரகம். பல வருஷமா இவ கூட ரொம்ப இன்ட்டிமேட்டா பழகறோம். இருந்தாலும் அப்பப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை டெஸ்ட் பண்ணிப் பார்ப்பா...” மாலினி கூறினாள்.

“ஃப்ரெண்ட்ஷிப்பை டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதா, புதுசா இருக்கே நீங்க சொல்றது?...” வியப்புடன் கேட்டான் ஏகாந்த்.

“அப்பாடா... இப்பவாவது வாயைத் திறந்தீங்களே.” பேச ஆரம்பித்த ஸ்டெல்லாவை இடை மறித்தாள் அம்ருதா.

“நம்ப மிருதுளாவைப் பத்தி மிஸ்டர் ஏதாந்துக்கு எடுத்துச் சொன்னாத்தானே புரியும்?” அம்ருதா சொன்னதும், ஏகாந்திடம் திரும்பினாள் ஸ்டெல்லா.

“நாங்க இவ இல்லாம எங்கயும் போறதில்ல. இவ எங்க கூட வந்தாத்தான் எங்களோட எல்லா ப்ரோக்ராமும் ஜாலியா இருக்கு. இவ என்ன சொன்னாலும் கேட்போம். ஏன்னா... இவளோட அன்பு அத்தனை ஆழமானது. இவளோட நட்புக் கிடைக்க... நாங்க ரொம்ப  ‘லக்கி’. இவ எங்க மேல கொட்டற அன்பை நம்மகிட்ட இருந்த எதிர்பார்ப்பா. நட்பும், பாசமும் மனசுக்குள்ள நிறைய இருக்குன்னு மூடி வச்சுக்கறதை ஏத்துக்க மாட்டா. ஏதாவது ஒரு வழியில அன்பை வெளிப்படுத்தியே தீரணும்ங்கறது இவளோட எண்ணம். எதையும் வெளிப்படையாப் பேசிடணும்னு சொல்லுவா. அவளும் அப்படித்தான்... எதையும் மனசுல மறைச்சு வைக்காம வெளிய கொட்டிடுவா...”

ஸ்டெல்லா விட்ட இடத்திலிருந்து பத்மினி தொடர்ந்தாள். “பணக்கார வீட்டுப் பெண்ணா இருந்தாலும் ஏழைகளை இளக்காரமா நினைக்க மாட்டா. எல்லார் கூடயும் சரிசமமா பழகுவா. எம்.ஏ. ஸோஷியாலஜி படிச்ச இவ. பொதுச் சேவை, உரத்த சிந்தனை பற்றிய பேச்சாற்றல், கர்நாடக சங்கீதம் இதிலயெல்லாம் கில்லாடி. சமையல் கூட இவளுக்குக் கை வந்த கலை. எல்லா மாநிலச் சமையல்களும் அத்துப்படி. நிறையச் சமையல் புத்தகங்கள் வாங்கி வச்சிருக்கா. இவ்வளவு திறமைகள் இருந்தும் கொஞ்சம் கூடத் தலைக்கனம் கிடையாது.


 அட, சொல்ல வந்த விஷயத்தைக் கோட்டை விட்டுட்டு வேற ஏதேதோ சொல்லிட்டிருக்கேனே... ஃப்ரெண்ட்ஷிப்பை எப்படி டெஸ்ட் பண்ணுவா தெரியுமா? காலேஜூக்கு வந்ததும் முதல்ல இவளைத் தேடி வர்றமான்னு பார்ப்பா. அப்படிச் செஞ்சாத்தான் அவளுக்குத் திருப்தியா இருக்கும். அவளைத்தான் நடு ஆளா வச்சு நாங்க எல்லோரும் எதுவும் செய்யணும். அது கணிப்பு. அதுதான் அவளோட நம்பிக்கையும் கூட. ஃப்ரெண்ட்ஸுக்கு ஒரு பிரச்னைன்னா உயிரைக் குடுத்து ஹெல்ப் பண்ணுவா. எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல மிருதுளா மட்டும் தான் ஓரளவு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு... அவட்ட இருக்கற இன்னொரு ஸ்பெஷாலிட்டி... எந்தப் பிரச்னை வந்தாலும் திடமான மனசோடு அதை எதிர் கொள்வா. பிரச்னைகளைப் பார்த்து அழுது கண்ணீர் விட மாட்டா..”

“ஏ மாலினி... கொஞ்சம் நிறுத்தறியா? நீ பாட்டுக்கு என்னோட புகழ் பாடி அவரை போர் அடிச்சிக்கிட்டிருக்க...” மிருதுளா மாலினியின் வாயைத் தன் கைகளால் மூடினாள்.

இதையெல்லாம் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வருணா, மிருதுளாவின் அருகே வந்தாள்.

“என்ன வருணா, இவ்வளவு லேட்டா வர்ற?” ஏகாந்த் கேட்டதும், வருணா சிரித்தாள்.

“புதுப் பெண்ணை ரசிக்கறதுல நான் வந்ததைக் கூட நீங்க பார்க்கலையா? நான் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆச்சு...”

“ஓ... அப்படியா...?” என்றபடி மிருதுளாவிடம் திரும்பினான் ஏகாந்த்.

“மிருருளா... இவ வருணா. என்னோட அத்தை மகள். பி.காம். படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு வலை வீசிக்கிட்டிருக்கா”

“ஹாய் வருணா...” மிருதுளா வருணாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

வருணா நிறம் கொஞ்சம் மட்டு என்றாலும், அவளது கண்கள் அவளது முகத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருந்தன. நல்ல வாளிப்பான உடல்வாகு. தளதளவென்றிருந்த அவளது தோற்றம் காண்போரைக் கவர்ந்திழுந்தது.

வருணா புன்னகையுடன் மிருதுளாவிடம் பேச ஆரம்பித்தாள். “எங்க ஏகாந்த் மச்சானுக்குப் பொருத்தமான ஜோடியா நீ அமைஞ்சுட்ட மிருதுளா... மச்சான் கொஞ்சம் ‘ஷை’ டைப், கொஞ்சம் முன்கோபி. இரண்டும் சேர்ந்த கலவை இவர். மத்தப்படி ரொம்ப நல்லவர்...” வருணா, ஏகாந்த்தைப் பாராட்டிப் பேசியதைக் கேட்ட மிருதுளா மகிழ்ச்சி அடைந்தாள்.

“வேலைக்கு வலை வீசறதா சொன்னாரே! ஏதாவது இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ணீங்களா?”

மிருதுளா கேட்டாள்.

“என்ன மிருதுளா... நீங்க... நாங்கன்னு பேசிக்கிட்டு? சும்மா ‘நீ...’ ‘நான்’னே பேசேன்... ஒரு ப்ரைவேட் கம்பெனியில அக்கவுண்ட்ஸ் ஸெக்ஷன்ல அக்கவுண்டன்ட் வேணும்னு விளம்பரம் குடுத்திருந்தாங்க. விசாரிச்சப்ப... நல்ல கம்பெனின்னு சொன்னாங்க. அந்த இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ணினேன். அங்கே வேலை கன்ஃபர்ம் ஆயிடும்னு நம்பறேன்...”

“வெரி குட். ஆல் த பெஸ்ட்...”

“தேங்க் யூ. நான் கிளம்பறேன் மிருதுளா. ஏகாந்த் மச்சான்! நான் புறப்படறேன்...”

“சரி வருணா... அத்தை எங்கே?”

“அம்மா, அவங்க சொந்தக்காரங்களையெல்லாம் பார்த்ததும், உலகத்தை மறந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க அப்புறமா வரட்டும். நான் கிளம்பறேன்...” வருணா கிளம்பினாள்.

மேலும் ஒரு மணி நேரத்தில், வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் விடை பெற்றனர். அன்றைய தினமே ‘முதல் இரவு’ என்று திட்டமிருந்தபடியால் மிதுளாவின் அப்பா மோகன்ராம், அங்கிருந்து தன் வீட்டிற்குக் கிளம்புவதற்குத் தயாரானார்.

தோழிகள் அனைவரும் மிருதுளாவின் காதில் மட்டும் கேட்பது போல் ரகசியமாக வாழ்த்திவிட்டுக் கிளம்பினர்.

ஏகாந்த், தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு வருவதற்காக, அவர்களிடம் நெருங்கினான்.

“காட் ப்ளெஸ் யு மை ஸன்!” கோபால் வாழ்த்தினார். அவனது அம்மா சீதா, மகிழ்ச்சி பொங்கும் மனதுடன், ஏகாந்த்தின் அருகே வந்தாள்.

“ஏகாந்த்... நீ எங்களுக்கு ஒரே மகன். அது போல மிருதுளாவும் அவங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும். உங்களோட சந்தோஷமான வாழ்க்கையிலதான் எங்க சந்தோஷமும் நிம்மதியும் அடங்கி இருக்கு. நல்லபடியா போயிட்டு வாப்பா.”

“சரிம்மா.”

மிருதுளாவும் மாமியார் சீதாவிடமும், மாமனார் கோபாலிடமும் ஆசிகள் பெற்றுக் கொண்டாள்.

மிருதுளாவையும், ஏகாந்த்தையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார் மோகன்ராம். பின்பக்க இருக்கையில் ஏகாந்த்தும், மிருதுளாவும் அமர்ந்தனர். அமர்ந்த மறு வினாடியே காரின் கதவைத் திறந்து இறங்க முற்பட்டான் ஏகாந்த்.

“நீங்க ‘ட்ரைவ்’ பண்றீங்க மாமா... அதனால நான் முன் ஸீட்ல வந்து உட்கார்ந்துக்கறேன்...”

“வேணாம் மாப்பிள்ளை... இப்ப எதுக்கு அந்த கார்... ஃபார்மாலிட்டிஸ்? நீங்க மிருதுளா கூடவே உட்கார்ந்துக்கோங்க.”

“சரி மாமா,” என்ற ஏகாந்த், பின் பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த மிருதுளாவுடன் உட்கார்ந்து கொண்டதும் கார் கிளம்பியது. முதலிரவு அன்றே முதல் மோதலும் மனஸ்தாபமும் ஏற்படப்போவதை அந்தப் புதுமணமக்கள் அப்போது அறியவில்லை.

2

பெரிய படுக்கை அறை. ரூம் ஸ்ப்ரே தெளிக்கப்பட்டு அறை முழுவதும் சுகந்த மணம் பரவி இருந்தது. ஏகப்பட்ட பலகார, ஸ்வீட் வகைகள் ஏதுமின்றி ஆப்பிள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரியமான வழக்கமான வெள்ளி டம்ளர்களில் பால் வைக்காமல், அழகிய கண்ணாடி டம்ளர்களில் ஹார்லிக்ஸ் கலக்கி வைத்திருந்தார் மோகன்ராம். அவரது மனைவியும், மிருதுளாவின் அம்மாவுமான சாரதா, கர்ப்பப் பையை அகற்றும் ஆபரேஷன் தோற்றுப் போனதால், மிருதுளா பத்து வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டாள். என்றாலும் சொந்த பந்தங்களிலிருந்து யாரையும் உதவிக்கென்று அழைத்து வந்து வீட்டோடு வைத்திருப்பதற்கு மோகன்ராமிற்கு உடன்பாடில்லை. சமையலுக்கு ஒரு நடுத்தர வயதுப் பெ­­­ண்மணியையும், வீட்டு வேலைக்கு ஒரு இளம் பெண்ணையும் அமர்த்தியிருந்தார். எனவே மோகன்ராம் தனக்குத் தெரிந்தவரை மிருதுளாவின் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். மிருதுளாவின் படுக்கை அறையில் அவளது அம்மாவின் பெரிய வண்ணப் புகைப்படத்தை மாட்டியிருந்தாள் மிருதுளா. அந்தப் படத்தின் முன் நின்று வணங்கினாள். அதன்பின் ‘சிம்பிளாக’ அலங்கரித்திருந்த கட்டிலில் போய் உட்கார்ந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அறைக்குள் வந்த ஏகாந்த், மிருதுளாவின் அருகே வந்து உட்கார்ந்தான்.

கட்டிலின் அருகே ஒரு மேஜை மீது திருமணத்திற்கு வந்திருந்த பரிசுப் பொருட்கள் பிரிக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புதுமணத் தம்பதிகளான மிருதுளாவும், ஏகாந்த்தும் சேர்ந்து அவற்றைப் பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் அங்கே வைத்திருந்தார் மோகன்ராம்.

“உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா... கிஃப்ட் பார்சலையெல்லாம் பிரிச்சுப் பார்ப்போமா?...” ஏகாந்த் கேட்டான்.

“ஓ... பார்க்கலாமே...” மிருதுளா கூறியதும், இருவரும் ஆளுக்கு ஒன்றாய்ப் பிரிக்க ஆரம்பித்தனர். ஒரு பார்சலில் ஆணும், பெண்ணும் கை கோர்த்தபடி நிற்கும் அழகிய மார்பிள் பொம்மைகள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன.


“இட்டாலியன் மார்பிளில் செஞ்சிருக்காங்க. வெளிநாட்டுத் தயாரிப்பா இருக்கு!” என்று கூறிய ஏகாந்த், அதை அனுப்பியவரின் பெயரைக் கவனித்தான். ‘வித் பெஸ்ட் விஷஸ்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்த லேபிள் மீது ‘ஸ்டெல்லா’ என்று எழுதப்பட்டிருந்தது.

“உன்னோட ஃப்ரெண்ட் ஸ்டெல்லா அனுப்பியிருக்காங்க. குட் ஸெலக்ஷன்!” ஏகாந்த் பாராட்டியதை விடத் தன் சிநேகிதியை மரியாதையாக குறிப்பிட்ட அவனது நாகரிகம், மிருதுளாவின் மனதைத் தொட்டது.

அடுத்த பார்சலைப் பிரித்தாள் மிருதுளா. அது ரேகா கொடுத்தது. அழகான ப்ளாஸ்டிக் டப்பாவில் பத்து ஆடியோ ஸி.டி.க்கள் அடக்கமாகவும், நேர்த்தியாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஸி.டி.யின் கவர் மீது அந்தந்த ஸி.டியில் என்னென்ன பாடல்கள் பதிவாகியுள்ளன... அவை எந்தப் படத்தின் இடம் பெற்ற பாடல் என்பது அழகாக ‘டைப்’ செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. அத்தனை பாடல்களும் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசை அமைக்கப்பட்டவை என்பதால் பாடல்கள் வரிசைக்கு மேல் ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்’ என்று டைப் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த ஏகாந்த் கேட்டான்.

“என்ன மிருதுளா... உன்னோட ஃப்ரெண்ட் ரேகா நிறையப் பழைய பாடல்களை ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருங்காங்க, எல்லாம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைச்ச பாட்டாவே இருக்கு?!”

“ஆமாங்க. எனக்குப் பழைய பாடல்கள்தான் பிடிக்கும். அதுவும் எம்.எஸ்.வி.ஸாரோட பாடல்கள்ன்னா உயிர். என்னோட ரசனை புரிஞ்சு, கஷ்டப்பட்டுப் பாடல்களைத் தேடித் தேடி ரெக்கார்ட் பண்ணியிருக்கா ரேகா. நிறைய அட்வான்ஸ்ட் டெக்னாலஜி வந்தப்புறம் புதுப்பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பழைய காலத்துப் பாட்டெல்லாம் திரும்பத் திரும்பக் கேக்கற மாதிரி இருக்கு.”

“கே.வி. மகாதேவன், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஆர். பாப்பா... இவங்களைப் போல இசை மேதைகள் இசை அமைச்ச பாட்டு ஸி.டி.க்கள் நிறைய வச்சிருக்கேன். அதனால ரொம்ப வருஷத்துக்கு முந்தின பாட்டெல்லாம் கூட எனக்கு நல்லாத் தெரியும். என்னோட டேஸ்ட் தெரிஞ்ச நம்ப கல்யாணத்துக்காக எவ்வளவு ஆசையா ஸி.டி.க்களை கிஃப்ட் பண்ணி இருக்கா ரேகா?! ஆனா... என்னாலதான் அவ கேட்ட முக்கியமான உதவியைச் செய்ய முடியல... அவளோட அக்கா குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்றதுக்காகப் பணம் கேட்டா. கல்யாணச் செலவு பட்ஜெட்டுக்கு மேல போயிருச்சுன்னு அப்பா சொல்லிக்கிட்டிருந்தார். அதனால அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியல...”

அவள் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுடைய அழகையும், அந்த அழகான முகத்தில் வெளிப்படும் கவிதை போன்ற பாவனைகளையும் கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஏகாந்த்.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க?!” தலையைச் சாய்த்துக் கேள்வி கேட்டாள் மிருதுளா. அவளது பெண்மையின் இயல்பான நாணம் வெளிப்பட்டது.

“நான் கவனிச்ச வரைக்கும் எல்லா விஷயங்கள்லயும் நீ வித்தியாசமானவளா இருக்க மிருது... உன்னோட ரசனைகள் வித்தியாசமானதா, உயர்ந்ததா இருக்கு. காலையில கல்யாணத்தப்ப நீ கட்டியிருந்த முகூர்த்தப் புடவை முந்தானையில அழகான மணிகள் கோத்திருந்துச்சே... அது ரொம்ப சூப்பர். இப்ப... நீ... உடுத்தி இருக்கற துப்பட்டாவில கூட அதே மாதிரி மணிகள் கோத்திருக்கு. ரொம்ப அழகா இருக்கு...” என்றவன், அவளது துப்பட்டாவை எடுத்துப் பார்க்கும் சாக்கில் அவளது தோளைத் தொட்டான். செல்லமாக முறைத்தாள் மிருதுளா. அவனுடைய கையை வெட்கம் மாறாமல், மென்மையாகத் தள்ளி விட்டாள்.

“இந்த மணிகளெல்லாம் நான் பெங்களூர் போயிருந்தப்ப அங்க வாங்கினது. எனக்கு ரொம்பப் பிடிச்சதுனால நிறைய கலர்ல வகை வகையா வாங்கிட்டு வந்தேன். என்னுடைய புடவை, சுரிதார், துப்பட்டா எல்லாத்துலயும் இந்த மணிகளைக் கோத்திருக்கேன்.”

மீண்டும் கிஃப்ட் பார்சல்களைப் பிரித்தனர். அதிலுள்ள பொருட்களையும், அதை அனுப்பியவர்கள் யார் என்பதையும் பார்த்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

“உங்களோட ஃப்ரெண்ட்ஸ் கொடுத்திருக்கற எல்லா கிஃப்ட்டும் நல்லா இருக்கு!” மிருதுளா கூறினாள்.

“நானும் கவனிச்சேன்...”

“ஆனா மிருதுளா. அப்பாவோட பிஸினஸை நான் கவனிக்க ஆரம்பிச்சப்புறம் என் கூடப் படிச்ச நண்பர்களோட தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் போச்சு. சில ஃப்ரெண்ட்ஸ் வெளியூர்ல வேலை கிடைச்சு செட்டில் ஆயிட்டாங்க. அதனால இப்போதைக்கு எனக்குன்னு இருக்கற ஃப்ரெண்ட்ஸ் நம்ப கல்யாணத்துக்கு, ரிஸப்ஷனுக்கு வந்த மூணு பேர்தான். அவுங்களையும் தினமும் போய்ச் சந்திக்கிற வழக்கமெல்லாம் கிடையாது. பத்து மணிக்கு எங்க ஆஃபீசுக்குப் போனா, ராத்திரி எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன்.”

“அவ்வளவு வேலை இருக்குமா?”

“ஆமா மிருதுளா. நான் எம்.பி.ஏ. முடிக்கற வரைக்கும் அப்பாவே எல்லாம் பார்த்துக்கிட்டாரு. இப்ப நான் ஆஃபீஸ் பொறுப்பை எடுத்துக்கிட்டேன். எங்க அம்மாவும் அப்பாவும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் என்னோட ஆசை. இப்ப எனக்காக என் மனைவியா நீ வந்திருக்க... உன்னையும் உன் மனம் கோணாமல், முகம் மாறாமல் எப்பவும் சந்தோஷமா இருக்கற மாதிரிப் பார்த்துக்குவேன்.”

“உங்க அம்மா அப்பாவை இந்த அளவுக்கு நேசிக்கற உங்க பண்பு பாராட்டுக்குரியது.”

“பாராட்டு வெறும் வார்த்தையால மட்டும்தானா? கைகுலுக்கிப் பாராட்டக் கூடாதா?”

ஏகாந்த் கண்களைச் சிமிட்டியபடி குறும்பாகக் கேட்டதும் மிருதுளாவின் உடம்பில் ஓடிய இரத்தம் முழுவதும் கன்னத்திற்கு வந்தது போல் சிவந்தது வெட்கத்தால்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“உங்களைப் பத்தி ஓரளவுக்குச் சொல்லிட்டிங்க. என்னைப் பத்தி நானும் சொல்லணும். அம்மா இல்லாத எனக்காக, என்னோட எதிர்கால நலன் கருதி மறுமணம் பண்ணிக்காமலேயே வாழ்ந்துட்டார் எங்க அப்பா. இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சதுதான். இருந்தாலும் என்னோட கோணத்துல என் எண்ணங்களை நான் உங்ககிட்ட சொல்லணும். என் இஷ்டப்படி என்னை எம்.ஏ. ஸோஷியாலஜி படிக்க வச்சாரு எங்க அப்பா. எனக்கு முழுச் சுதந்திரம் குடுத்து வளர்த்தார். விளையாட்டுத்தனமா காதல், பையன்களோட சினிமா, டிஸ்கொதேன்னு சுத்தறது இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவுபூர்வமான சிந்தனைகள் செய்யற பெண் நான். எந்தப் பிரச்னையா இருந்தாலும் அதை நானே சந்திச்சுத் தீர்வு காணணும்னு நினைக்கறவ. எதையும் ஈஸியா எடுத்துப்பேன். ஆனா அதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க எப்படி வேண்ணாலும் போகட்டும்னு விட்டுட மாட்டேன். என் மேல் யார் அன்பு வச்சாலும் அந்த அன்பு நூத்துக்கு நூறு உண்மையானதா இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். எங்க அம்மா மேல உயிரையே வச்சிருந்தார் என்னோட அப்பா. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் கடுமையாப் பேசி நான் பார்த்தது இல்லை.


எங்க அம்மா இறந்த பிறகு அவங்க மேல வச்சிருந்த அன்பையும் சேர்த்து என் மேல வச்சு, என்னை ஒரு இளவரசி போல வளர்த்தார் எங்க அப்பா. என்கிட்ட எதையும் அன்பா, சாந்தமாத்தான் அப்பா பேசவார். எனக்காக எதையும் செய்யக்கூடிய இதயம் கொண்டவர் எங்க அப்பா. எனக்கு நல்ல கணவர் அமைஞ்சு, நான் நல்லபடியா வாழணுங்கறதுதான் அவருக்கு இலட்சியமா இருந்துச்சு. உங்களை அவர் தேர்ந்தெடுத்தப்புறம் கூடப் பல பேர்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சார். நீங்கதான் எனக்குன்னு அப்பா முடிவு பண்ணினதில் இருந்து, உங்களை எனக்கு ரொம்பப் புடிச்சிருச்சு. உங்களை முதல்ல போட்டோவுல பார்த்தப்பக் கூட என்னை எந்த உணர்வும் பாதிக்கலை. நீங்க, உங்க அம்மா, அப்பா கூடயும், நான் என் அப்பா கூடயும் வந்து ‘சம்பாரா’- ரெஸ்டாரண்ட்ல சந்திச்சு நம்ம கல்யாணம் பத்தி பேசினாங்கள்ல்ல? அப்பதான் உங்க அழகான உருவம் என்னை ‘டிஸ்டர்ப்’ பண்ணுச்சு. உங்க பேச்சுல இருந்து உங்க திறமைகளைப் புரிஞ்சுக்கிட்டேன். உங்க மேல அன்பும் மதிப்பும் உருவாயிருச்சு. நான் உங்க மேல என் உயிரையே வச்சிருக்கேன். ஐ லவ் யூ.”

அவளது கைவிரல்களை மென்மையாகப் பிடித்தான் ஏகாந்த். உள்ளமும் உடலும் சிலிர்த்துப் போன மிருதுளாவின் உணர்வுகளை, கிஃப்ட் பார்சல்கள் பிரித்துப் போடப்பட்டிருந்த பேப்பர் குவியல்கள் அருகே கிடந்த மிகச் சிறிய கிஃப்ட் பார்சல் கலைத்தது.

“என்னங்க இது, ஒரு கிஃப்ட் பார்சலைப் பிரிக்காமலே விட்டிருக்கோம்!” சொல்லியபடியே அதை எடுத்தாள். அதில் ஏகாந்த் என்று எழுதப்பட்டிருந்தது. ‘அனுப்பியவர் பெயர் இருக்குமே’ என்ற எண்ணத்தில் பின்பக்கம் திருப்பிப் பார்த்தாள். அனுப்பியவரின் பெயர் இல்லை. பார்சலைப் பிரித்தாள். அதனுள் இன்னொரு பார்சல் இருந்தது. மறுபடி பிரிக்க மறுபடியும் ஓர் பார்சல்.

“என்ன மிருதுளா, பிரிக்கப் பிரிக்க வெறும் பார்சலாவே வந்துட்டிருக்கு?!” ஏகாந்த் கேட்டான்.

“யாரோ விளையாட்டுக்கு இப்படிப் பண்ணி இருக்காங்க. கடைசிப் பார்சல் வரைக்கும் பிரிச்சுத்தான் பார்த்துரலாமே. எப்படியும் அனுப்பினவங்க பேர் கடைசியில இருக்கும்.” சொல்லிக் கொண்டே பிரித்தாள். கடைசியாக அதற்குள் மிகச் சிறிய சிவப்புக் கவர் இருந்தது. அந்தக் கவரினுள் ஒரு ஆடியோ ஸி.டி. இருந்தது. அதனுடன் ஒரு வெள்ளைப் பேப்பர் இருந்தது. அதில் எழுத்துக்கள் தெரிந்தன. அவ்வெழுத்துக்கள் கம்ப்யூட்டர் டைப் செய்யப்பட்டிருந்தன.

மிருதுளா படித்தாள்.

‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே...!’ அந்தப் பாடல் வரிகளைச் சுற்றிலும் சிகப்பு ரோஜாக்கள் வரையப்பட்டிருந்தன. கம்ப்யூட்டர் டைப் செய்யப்பட்டிருந்த எழுத்துக்கள் கூடச் சிகப்பு வண்ணத்தில் காணப்பட்டன. அதன் கீழே வேறு எதுவும் டைப் செய்யப்படவில்லை. கையெழுத்தும் இல்லை.

“இந்த ஸி.டி.யில என்ன இருக்குன்னு பார்த்துடலாம்.” மிருதுளா, அவளது ஆடியோ ப்ளேயரில் அந்த ஸிடியைப் போட்டு, ப்ளேயரை இயக்கினாள். சில வரிகள். வாத்திய இசை முடிந்தது ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ என்ற பழைய பாடல் ஒலித்தது.

“என்னங்க இது... யாரோ இந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருக்காங்க?” என்று கேட்ட மிருதுளா, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிப் போட்டாள். மறுபடியும் அதே ‘வருவேன் நான் உனது’ பாடல் ஒலித்தது. மீண்டும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிப் போட்டாள். அப்பொழுதும் கூட அந்தப் பாடல் மட்டும் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

“என்னங்க இது?! யாரோ இந்தப் பாட்டை ஸி.டி. முழுசும் ரெக்கார்ட் பண்ணி அனுப்பி இருக்காங்க! இது இருந்த கவரு சிகப்பு. உள்ளே இருக்கற எழுத்துக்களும் சிகப்புக் கலர்ல இருக்கு. இதில வரைஞ்சிருக்கற ரோஜாக்களும் சிகப்பு ரோஜாவா இருக்கு?!”

“உனக்குத்தானே பழைய பழைய பாடல்கள்னா பிடிக்கும். அதனால யாரோ விளையாட்டா இப்படி அனுப்பி இருக்காங்க. இதெல்லாம் உன் குறும்புக்கார ஃப்ரெண்ட்ஸாதான் இருக்கும்...”

“இது குறும்புக்காக வரைஞ்ச மாதிரி இல்லை. குரூரமான எண்ணங்களைக் குறிக்கற மாதிரி, எல்லாமே ரத்தக்கலர்ல சிகப்பா இருக்கு. அது மட்டும் இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் அனுப்பி இருந்தா என் பெயருக்குத்தானே அனுப்பி இருப்பாங்க? இது உங்களுக்கு வந்த கிஃப்ட் பார்சல்...”

“என்ன?... எனக்கா?”

“ஆமா.” கிஃப்ட் பார்சலின் மேல் கவரை ஏகாந்த்திடம் காண்பித்தாள் மிருதுளா.

படித்துப் பார்த்தான் ஏகாந்த்.

“எனக்கு யார் இபப்டி எழுதி அனுப்பி இருப்பாங்க? இந்தப் பாட்டே எனக்குத் தெரியாது...”

“இந்தப் பாட்டு பழைய இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா இசை அமைச்ச பாட்டு. ரொம்ப நல்ல பாட்டு. அர்த்தமுள்ள பாட்டு. அர்த்தத்தோடதான் யாரோ உங்களுக்கு அனுப்பி இருக்காங்க...” கூறிய மிருதுளாவின் பார்வை ஏகாந்த்தை ஊடுருவியது.

“என்ன அர்த்தமோ... எனக்கு ஒண்ணும் புரியலை மிருது.”

“எனக்குப் புரியுதுங்க. உங்களுக்காக, உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க, உங்களுக்கு வேண்டியவங்கதான் அனுப்பியிருக்காங்க...”

“எனக்கு வேண்டியவங்களா இருந்தா நிச்சயமா இந்த ஸி.டி.யெல்லாம் அனுப்பி இருக்க மாட்டாங்க. ஏன்னா... ஏதோ ரேடியோவுல போடற பாட்டு... தானா என் காதில் விழுந்தா ரசிப்பேனே தவிர, ஆடியோ ஸி.டி. வாங்கறதோ, ரெக்கார்ட் பண்ற பழக்கமோ எனக்கு கிடையாது.”

“நம்ப ரெண்டு பேருக்குள்ளயும் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும். திறந்த புத்தகமா இருக்கணும். நம்ம இரண்டு பேருக்கும் இடையில ஒரு காற்றுக் கூட ரகசியமா வீசக் கூடாது. என் மேல நீங்க வச்சிருக்கற அன்பு உண்மையான அன்பா இருக்கணும்... இதுதான் ரொம்ப முக்கியம். இப்ப சொல்லுங்க. இதுக்கு முன்னால யாரையாவது காதலிச்சிருக்கீங்களா? நீங்க உண்மையைச் சொல்லணும். எதுவா இருந்தாலும் நான் ஏத்துப்பேன். கடந்த காலத்தைக் கடந்த காலமாகவே நினைச்சுப்பேன். அதை நினைச்சு உங்களை வெறுத்துட மாட்டேன். உங்க அத்தை பொண்ணு வருணாவை நீங்க விரும்பலையா?”

“நிச்சயமா நீ நினைக்கற மாதிரி வருணாவையோ, வேற யாரையுமோ நான் காதலிக்கலை. வருணாவோட அப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இறந்ததுக்கப்புறம் எங்க அப்பாதான் எங்க அத்தைக்கும், வருணாவுக்கும் அடைக்கலம் குடுத்தாரு. ஏறக்குறையப் பத்து வருஷம் எங்க வீட்டுலதான் அகல்யா அத்தையும், வருணாவும் இருந்தாங்க. சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்ல வளர்ந்ததுனால பொண்ணு’ங்கற ஆசை வரலை. அன்பு மட்டும்தான். காலேஜ்ல படிக்கும்போது அழகான பொண்ணுங்களை ரசிக்கறது...


மறைமுகமா கேலி பண்றது... இப்படிச் சின்னச் சின்ன லூட்டியெல்லாம் அடிச்சதுண்டு. அதெல்லாம் அந்த வயசுக்குரிய சராசரி உணர்வுகளோட பிரதிபலிப்பு. எந்தப் பெண்ணையுமே நான் காதல் கண்ணோட்டத்துல பார்த்தது இல்லை. பழகினது இல்லை. பொண்ணுங்க என்கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொல்லியிருக்காங்க. அவங்களை நாசூக்கா மறுத்துட்டேன். நான் இது வரைக்கும் யார் கிட்டயும் ‘ஐ லவ் யூ’ சொன்னதில்ல. இப்ப உன்கிட்ட சொன்ன ‘ஐ லவ் யூ’தான் நான் முதல்ல சொன்ன ‘ஐ லவ் யூ’...”

“நானும் உங்களை மாதிரிதான். உங்களைச் சந்திக்கற வரைக்கும் யாரையும் காதலிச்சதில்ல. ஆனா...”

ஆனா என்று ஆரம்பித்துத் தொடர்ந்து மிருதுளா கூறிய விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ஏகாந்த்.

3

“ஆனா... எனக்கு ஆண் சினேகிதர்கள் உண்டு.” மிருதுளா கூறியதைக் கேட்ட ஏகாந்த்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவன் சற்றும் எதிர்பாராத அந்த விஷயத்தை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. படித்தவன் என்றாலும் தன் மனைவிக்கு ஆண் சினேகிதர்கள் உண்டு என்பதை முதல் இரவில் அவளே சொல்லக் கேட்டது, இதயத்தில் அதிர்ச்சி அலைகளை மோதச் செய்தது.

“என்னங்க, யோசிக்கறீங்க?! அவங்க யாருமே நம்ப கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ வரலையேன்னுதானே? அவங்க எல்லாருமே வேற வேற ஸ்டேட்ஸ்ல இருக்காங்க. ரெண்டு பேர் சென்னையிலதான் இருந்தாங்க. ஆனா அவங்களும் ஆஸ்திரேலியா போயிட்டாங்க. மத்தவங்களுக்கும் ஏதோ ஒரு வகையில வர முடியாம ஆயிடுச்சு. எல்லோரும் இ.மெயில்ல மெஸேஜ் அனுப்பி இருக்காங்க.”

“அ... அப்படியா?” சமாளித்துப் பேசினான் ஏகாந்த்.

“ஏன் உங்க முகம் ஒரு மாதிரியாயிடுச்சு? ஓ... எனக்கு ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு சொன்னது உங்க மனசைப் பாதிச்சுடுச்சு இல்ல?... இட்ஸ் நேச்சர். நம்ம நாட்டுக் கலாச்சாரத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னும் இது சகஜமாகலை. அப்படியே ஆண்கள் கூட ஃப்ரெண்ட்ஷிப் இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு எதுக்குப் பிரச்சனைன்னு கணவன்கிட்ட சொல்லாம விட்டுருவாங்க. அத்தோட அந்த ஃப்ரெண்ட்ஷிப்பையும் விட்டுருவாங்க. ஆனா நான் வித்தியாசமானவ. நட்புக்கு ஆண், பெண் பேதம் கிடையாது. நட்புக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படற காதல்ல உடல் சம்பந்தப்பட்ட ஈர்ப்பு இருக்கு. ஆனா சிலர். ‘அப்படியெல்லாம் இல்ல. உடல் சீதியான எந்த ஈர்ப்பும் இல்லாத காதல்... எங்களோட காதல்’ன்னு சொல்லிக்குவாங்க.  அது பொய். பொய்யான வேஷம் போடறது... காதலுக்குத் தேவையில்லாதது. உடல் உணர்வு சம்பந்தப்படாத காதல், காதலே இல்ல. ஒரு துளி உடல் ஈர்ப்புதான் பெரிய வெள்ளம் மாதிரியான காதலைப் பெருக வைக்குது... பொங்க வைக்குது. நட்புங்கறது காதலுக்கு அப்பாற்பட்டது. நட்புக்காக எந்த தியாகமும் செய்யலாம்னு தோணும். நண்பனுக்காக உயிரையே குடுக்கக்கூடத் துணிச்சல் வரும். ஆண், பெண் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட நட்புல கூட இந்த மாதிரி தியாக உணர்வுகள் உருவாகும். ஆனா நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட இருக்காங்க. எனக்கே அதைப்பத்தின அனுபவம் இருக்கு. ப்ராஜக்ட் விஷயமா பெங்களூர் போனப்ப ‘அரவிந்த் பானர்ஜி’ன்னு ஒருத்தன். அவனும் கேம்ப்புக்கு வந்திருந்தான். அவன் பெங்காலி. நல்லவன். பணக்கார வீட்டுப் பையன். அவங்கப்பா பெரிய ப்ரிண்டிங் ப்ரெஸ் வச்சிருக்காரு. வெளிநாட்டுல இருந்து கூட அவங்க ப்ரெஸ்சுக்கு ப்ரிண்ட்டிங் ஆர்டர் வருமாம். இது தவிர அரவிந்தோட அம்மா வழியில ஏகப்பட்ட பூர்வீகச் சொத்துக்கள் வந்திருக்கு. அதனால அந்த அரவிந்த் ஏகப்பட்ட வசதிகளோட வளர்ந்திருக்கான். இங்க... சென்னையில ஹாஸ்டல்ல ஸ்கூல் படிப்பு படிச்சிருக்கான். அதனால சகஜமா தமிழ் பேசுவான். செகுசா வசதிகள்ல்ல வளர்ந்த அவன் அந்த வசதியான வாழ்க்கைக்கு அடிமையானவன்னு சொல்லலாம். எல்லார் கூடயும் பழகற மாதிரிதான் அவன் கூடயும் பழகினேன். ஆனா அவன் என்னோட சகஜமான பழக்கத்தைக் காதல்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டான். என்கிட்ட வந்து காதல் கீதல்ன்னு பெனாத்தினான். அவனுக்கு நல்லபடியா புத்திமதி சொல்லி, நட்போட மகிமையை விளக்கினேன். புரிய வச்சேன். புரிஞ்சுக்கிட்டான்....”

 “அவன் நம்ப கல்யாணத்துக்கு வந்தானா?” ஏகாந்த் கேட்டான்.

“அவங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாததனால வர முடியலைன்னு இ.மெயில் அனுப்பியிருந்தான். எதையுமே மனம் திறந்து பேசிட்டா... புரிந்து கொள்ளுதல் வந்துடும். புரிந்து கொள்ளுதல் வந்துட்டா உண்மையான அன்பும் வந்துடும்...”

“எல்லாப் பெண்களும் உன்னை மாதிரி ஆண் நண்பர்களைப் பத்தியும், அவங்களோட நட்பைப் பத்தியும் அவங்களோட கணவர்ட்ட சொல்லுவாங்களா?....”

“மத்தவங்க சொல்லுவாங்களோ இல்லையோ... அது எனக்குத் தெரியாது. ஆனா... கல்யாணம் ஆகற வரைக்கும் நட்போட பழகிட்டு கல்யாணத்துக்கப்புறம் அந்த நட்பை முறிச்சுக்கறது, மறைக்கறது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம். ஒரு பெண் இன்னொரு பெண் கூடச் சினேகிதமா பழகற மாதிரி, ஒரு பெண் இன்னொரு ஆண் கூட ப்ரெண்ட்லியா பழகறதுல என்ன தப்பு? நட்பு அர்த்தமுள்ளது. மனித நேயமிக்கது. இதெல்லாம் என்னோட சொந்த அபிப்பிராயங்கள்!”

மிருதுளா பேசியதையெல்லாம் கேட்ட ஏகாந்த், அவனுடைய மனதில் தோன்றிய ஒரு கேள்வியை அவளிடம் கேட்டான்.

“இப்படி... காதல்னு நினைக்கற அளவுக்குப் பழகிட்டு, அப்புறம் அது காதல் இல்லை, வெறும் நட்புதான்னு சொல்றதும் நியாயமான செயல்தானா?...”

“காதல்னு நினைக்கற அளவுக்குன்னா? நான் என்ன டூயட் பாடினேனா... அவன் பின்னால சுத்தினேனா? உங்க கேள்வியே சரியில்ல...” லேசான கோபம் எட்டிப் பார்த்ததில் மிருதுளாவின் உதடுகள் துடித்தன.

“எதுக்காகக் கோபப்படறே? நீதானே சொன்ன... எதையும் ஓப்பனா பேசித் தெளிவு பண்ணிக்கணும்னு? தப்பா எதுவும் கேக்கலியே மேடம். தப்புன்னா சொல்லுங்க. தோப்புக் கரணம் போட்டுடறேன்...” அவன் குறும்பாகப் பேசியதும் கோபம் மறைந்து சிரித்தாள் மிருதுளா.

அவன் தலையில் லேசாகக் குட்டினாள்.

“என்னதான் படிச்சவர், விசாலமான மனசு உள்ளவர்ன்னாலும் பொதுவான ஆண்பிள்ளைப் புத்தி அப்பப்ப தலைதூக்குது பார்த்தீங்களா?”

“நோ... நோ... நிச்சயமா நான் சராசரி ஆண் பிள்ளை இல்லை. நீ எப்படி வித்தியாசமான கேரக்டரா இருக்கிறோ, அது போல நானும் எதையும் நிதானமா, ப்ராக்டிகலா சிந்திச்சுப் பேசறவன்.”

“அது சரி, நீங்க யாரையும் காதலிக்கலை, யார்ட்டயும் ஐ லவ் யூ சொன்னதில்லைன்னு சொன்னீங்க. அத்தை பெண்ணு வருணா மேல கூட ‘கிக்’ இல்ல, அன்பு மட்டுமேன்னு சொன்னீங்க. சிநேகிதிகள் கூடவா இல்ல?”


“இல்லை மிருதுளா. இயல்பா நான் கூச்ச சுபாவம் உள்ளவன். சொந்தக்காரங்க எங்க வீட்டுக்கு வந்தாக்கூட என் ரூமுக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்குவேன். அம்மாதான் படிச்சு இழுத்துக்கிட்டு வந்து பேச வைப்பாங்க. அப்ப கூட சும்மா ‘ஹலோ’ சொல்றதோட சரி. எங்க அப்பாவைப் போல நான். எங்க அப்பா அதிகமா யார் கூடயும் பேச மாட்டார். எங்க அம்மா கூடத்தான் நிறையப் பேசுவார். அது மாதிரி... நானும் உன் கூட நிறையப் பேசணும். பேசிக்கிட்டே இருக்கணும். சமீபகாலமா நிச்சயத்தார்த்தம் முடிஞ்சுட்டா கல்யாணம் வரைக்கும், பொண்ணும் மாப்பிள்ளையும் ஃபோன்ல பேசிக்கறது ஒரு வழக்கமாயிடுச்சு. வழக்கம்னு சொல்றதை விட ஒரு பேஷன் ஆயிடுச்சுன்னே சொல்லலாம். ஆனா நான் உன் கூடப் பேசவே இல்லை. இதைப் பத்தி நீ ஏதாவது யோசிச்சியா?”

“ஆமாம். அப்பா கிட்ட கூடக் கேட்டேன். ஏகாந்த் போன் பண்ணினார்னா நீ பேசு. நீயாவே போன் போட்டுப் பேச வேண்டாம்னு சொல்லிட்டார். சரி, காத்திருந்து மணிக்கணக்கா பேசற த்ரில் இருக்கட்டுமேன்னு நானும் உங்க கூடப் பேசலை. இப்ப நாம பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருந்ததுல ஹார்லிக்ஸைக் குடிக்கலை. பழங்களும் சாப்பிடலை. இந்தாங்க. குடிங்க.” மிருதுளா தனக்கு ஒரு க்ளாஸ் ஹார்லிக்ஸ் எடுத்துக்கொண்டு, ஏகாந்திற்கு ஒரு க்ளாஸைக் கொடுத்தாள்.

இருவரும் குடித்தனர்.

“ஐஸ் காபி மாதிரி, ஐஸ் ஹார்லிக்ஸ் ஆயிடுச்சு.” காலியான க்ளாஸை மேசை மீது வைத்தபடி சிரித்தாள் மிருதுளா.

“உன் பல் வரிசை ரொம்ப அழகா இருக்கு, மிருது. இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்லணும். நீ என்னை ஏகாந்த்ன்னு என் பெயரைச் சொல்லியே கூப்பிடலாம். ‘என்னங்க, இந்தாங்க’ இதெல்லாம் வேணாம். ‘என்னங்க’ன்னு கூப்பிட்டா ஒரு அந்நிய உணர்வுதான் தோணுதே தவிர ஒரு அந்யோந்யமான உணர்வே வரலை. அதனால ப்ளீஸ் நீ என்னை ‘ஏகாந்த்’ன்னே கூப்பிடேன்.”

“சரிடா ஏகாந்த்.” மிருதுளா சிரித்தபடியே கூறினாள்.

“ஏய், இது ரொம்ப ஓவர்.” மிருதுளாவின் கன்னத்தைக் கிள்ளினான் ஏகாந்த். அந்தக் கையை மெல்லத் தாழ்த்தி அவளது கழுத்தில் வருடிக் கொடுத்தாள். பிறகு அவளது நெற்றியில் அன்புடன் முத்தமிட்டான்.

 “ஏகாந்த்... இன்னிக்கு இது போதும். ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி நம்ப ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும். அதுக்கப்புறம்தான் நமக்குள்ள மத்ததெல்லாம்.”

 “மத்ததென்னாம்ன்னா?” குறும்பாகக் கண் அடித்தபடி கேட்டான் ஏகாந்த்.

 “மத்ததெல்லாம்ன்னா மத்ததெல்லாம்தான்...” அழகாகச் சிரித்த மிருதுளாவின் கண்களிலும், கன்னத்திலும் நாணம் மின்னியது. அவளை அணைத்துக் கொண்டான் ஏகாந்த். அவனது அணைப்பிற்கும் அடங்கிக் கொண்டாள் மிருதுளா. சில நிமிடங்கள் கரைந்தன.

அவனுடைய தோள் மீது சாய்ந்தபடியே மிகச் சன்னமாகப் பேசினாள் மிருதுளா.

 “எங்க அப்பா வச்சிருக்கற ஆப்பிள்ல்ல ஒண்ணு கூடச் சாப்பிடாம இருக்கோம். இப்ப சாப்பிடலாமா?”

 “ஓ... சாப்பிடலாமே... ஆனா ஆப்பிள் சாப்பிட்டா ஆதாம், ஏவாள் மாதிரி ஆகிட மாட்டோமே?...” கலகலவெனச் சிரித்தாள் மிருதுளா.

“கட்டுப்பாடு வேற எங்கயும் இல்ல. இங்க இருக்கு!” கூறிய ஏகாந்த், மிருதுளாவின் நெஞ்சில் விரலை வைத்தான்.

 “ஏன்? அதை இங்க இருக்குன்னு சொல்லக் கூடாதா?” ஏகாந்த் நெஞ்சில் தன் கையை வைத்தாள் மிருதுளா. இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர். மிருதுளா ஆப்பிளைத் துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க, ஏகாந்த் சாப்பிட்டான். மிருதுளாவையும் சாப்பிட வைத்தான்.

 “தூங்கலாமா? குட் நைட்...”

“குட் நைட்டா? குட் மார்னிங் ஆகப் போகுது. மணியைப் பாருங்க. மூணாகப் போகுது.” பஞ்சு மெத்தை மீது ஒரு பஞ்சுப் பொதி போலப் படுத்தாள் மிருதுளா. ஏகாந்த்தும் படுத்தான். அவனுடைய கையைத் தலையணையாய் அணை கொடுத்துப் படுத்துக் கொண்டாள் மிருதுளா. அவளைத் தன் இன்னொரு கையால் அணைத்துக் கொண்ட ஏகாந்த் கண்களை மூடினான். இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு மணி நேரம் ஆனது. திடீரென ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். மிருதுளா. அது சப்தம் இல்லை, பாடல் என்று புரிந்து கொள்ளச் சில விநாடிகள் ஆயின. பக்கத்தில் எடுத்திருந்த ஏகாந்த்தைப் பார்த்தாள். மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவனை எழுப்ப மனமின்றித் தன்னை அணைத்திருந்த கைகளை மெல்ல விடுவித்தாள். பாடலைக் கூர்ந்து கவனித்தாள். ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வான் உலகே...’ காற்றில் மிதந்து வந்த பாடலைத் தொடர்ந்து கேட்டாள் மிருதுளா.

‘காதலே கனவு எனும் கவிதைகளை வாழ்நாளில் ஓர் முறை பாடியே...’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

மிருதுளா ஏகாந்த்தை எழுப்பினாள்.

“என்ன மிருது?” கஷ்டப்பட்டுக் கண் விழித்தான் ஏகாந்த்.

“கிஃப்ட் பார்சல்ல ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருந்த ‘வருவேன் நான் உனது’ பாட்டு கேக்குது. கவனிங்க.”

“என்ன?... பாட்டா?”

“ஆமாங்க. ‘வருவேன் நான் உனது’ பாட்டு. கவனிச்சுக் கேளுங்க.”

“எனக்கு எதுவும் கேக்கலியேம்மா. முதல்ல உன்னோட ஆடியோ ப்ளேயரை ஆஃப் பண்ணிட்டினான்னு பாரு.”

“அதெல்லாம் பாட்டுக் கேட்டு முடிச்ச உடனேயே ஆஃப் பண்ணிட்டு ஸி.டி.யையும் வெளியே எடுத்துட்டேன்.”

“நீதான் பாட்டு பாட்டுங்கற. எனக்கு ஒண்ணுமே கேக்கல!” என்று கூறிய ஏகாந்த்தைக் கோபமாகப் பார்த்தாள் மிருதுளா.

“எனக்குக் கேக்கற பாட்டு உங்களுக்கு மட்டும் எப்படிக் கேக்காம இருக்கும்?”

“நிஜமா எனக்கு எந்தப் பாட்டும் கேக்கல மிருது. நீ அந்த கிஃப்ட் பார்சலையும் அந்தப் பாட்டையும் நெனச்சுக்கிட்டே படுத்திருப்ப. அதனால ஏற்பட்ட பிரமையா இருக்கும். வந்து படு. வா.”

அவளை இழுத்து அணைத்தான்.

“விடுங்க. நீங்க பொய் சொல்றீங்க. இந்தப் பாட்டுக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு...”

“இல்லை மிருது. நான் உன்கிட்ட எதையும் மறைக்கல. எந்தப் பாட்டுமே எனக்குக் கேக்கல. நீதான் ஏதோ கனவு கண்டுட்டு உளர்ற...”

“நீங்க என் மேல உயிரை வச்சிருக்கறது நிஜம்னா அந்தப் பாட்டைப் பத்தின விஷயத்தை என்கிட்ட சொல்லிடுங்க...”

“நான் உன்னை உயிருக்குயிரா நேசிக்கறது எப்படி நிஜமோ அதுபோல அந்தப் பாட்டைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுங்கறதும் நிஜம்.”

ஏகாந்த்திற்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது. மிருதுளாவையும் படுக்க வைத்துத் தானும் தூங்க ஆரம்பித்தான். மிருதுளாவைத் தன் பக்கம் இழுத்து அணைக்கும்பொழுது அவள் தடுத்தாள். அவனுக்கு முதுகைக் காட்டியபடி மறு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.


4

கைவிரல்களில் சொடக்குப் போட்டபடியே இருந்தான் அரவிந்த்.

“என்னப்பா அரவிந்த். நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ எதுவுமே பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்? உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கற உங்கம்மா உன்னோட கல்யாணத்தப் பார்க்கணும்னு ஆசைப்படறா. உனக்கு நல்ல மனைவி அமைஞ்சு உன் குடும்ப வாழ்க்கை கந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படறா. நம்மளோட ஏராளமான சொத்துகளைக் கட்டிக் காக்க, வாரிசுகள் உருவாகணும். அந்த வாரிசுகளை உருவாக்குறதுக்கு இந்த வீட்டுக்கு ஒரு மருமகள் வரணும். எந்தப் பொண்ணைக் காண்பிச்சாலும் ‘பிடிக்கல’, ‘பிடிக்கலை’ன்னு சொல்லிடற நீ யாரையாவது காதலிச்சாலுங்கூடப் பரவாயில்லை. தைரியமா என்கிட்ட சொல்லலாம். அந்தப் பெண்ணையே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் தயாரா இருக்கேன். எங்க காலத்துல எல்லாம் ஜாதி விட்டு ஜாதியில காதல், கல்யாணம் இதெல்லாம் மனசால கூட நெனச்சுப் பார்க்க முடியாது. இப்ப காலம் மட்டும் மாறல, என்னோட மனசும் மாறியிருக்கு. எங்களோட ஒரே மகனான நீ கல்யாணமாகிக் குடும்பஸ்தனா ஆகணும்னு  ரொம்ப ஆசைப்படறோம். அதனால வேற ஜாதிப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. ஏழையா இருந்தாலும் பரவாயில்லை. நீ காதலிக்கற பொண்ணு கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணா இருக்கணும். அவ்வளவுதான். ஒரு மாசம் உனக்கு டைம் தர்றேன். அதுக்கு மேல ஆச்சுன்னா, நாங்க பாத்து முடிவு பண்ற பெண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” மகன் அரவிந்த்திடம் அவனுடைய அப்பா அருண் பானர்ஜி, திடமான குரலில் திட்டவட்டமாகப் பேசினார்.

அவருக்குப் பதில் கூறுவதற்காக மெதுவாக உதடுகளைப் பிரித்தான் அரவிந்த்.

“சரிப்பா.” ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றான். கட்டிலருகே இருந்த சிறிய அலமாரியைத் திறந்தான். அதற்குள் அழகிய டைரி ஒன்று இருந்தது. அதைப் பிரித்தான். உள்ளே இருந்த ஒரு போட்டோவைப் பார்த்தான். கேம்ப்பில் எடுத்த குரூப் போட்டோவில் நண்பர்கள், சிநேகிதிகள் குழுவினரோடு காணப்பட்ட மிருதுளா, தன் அழகிய பல் வரிசை தெரியச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

போட்டோவில் இருந்த மிருதுளாவைப் பார்த்த அரவிந்த்திற்குப் பனி மூட்டம் போலப் பழைய நினைவுகள் தோன்றின.

ப்ராஜெக்ட் வொர்க்கிற்காகச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்திருந்த மாணவிகளில் மிருதுளாவும் ஒருத்தி. அதில் கலந்து கொண்ட அரவிந்த்தும், மிருதுளாவும் சந்தித்துக் கொண்டதில் இருவரும் நட்புக் கொண்டனர்.

“உங்களை மாதிரியே உங்க பேச்சு ஸ்வீட்டா இருக்கு மிருதுளா. ரொம்ப ஸ்மார்ட்டாவும் இருக்கீங்க. எல்லா ஸ்டூடென்ட்சும் உங்க கூடப் பழகறதுக்கு ஆர்வமா இருக்காங்க. எந்த நேரமும் உங்களைச் சுத்தி சிநேகிதிகள், சிநேகிதர்கள் கூட்டம் இருக்கு. ரியலி யூ ஆர் கிரேட்...”

“கிரேட்டா எதையும் நான் சாதிக்கலை அரவிந்த். எல்லார் கூடயும் நான் நல்லாப் பழகுவேன். என்னோட இந்த இயல்பை ப்ளஸ் பாயிண்ட்டா நான் நினைக்கறேன். வாழ்க்கைல நாம சந்தோஷப் படறதுக்கு ஏராளமான விஷயம் இருக்கு. மனிதப் பிறவி கிடைச்ச நாம, இந்த லைஃப்ல இருக்கற நல்ல. விஷயங்களை அனுபவிக்கணும். அதுசரி... உங்களைப் பத்தி சொல்லுங்களேன். உங்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி...”

“யாருமே கிடையாது. நான் ஒரே பையன்தான். என் சொந்த ஊர் கொல்கத்தா. ஆனா தாத்தா காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். தாத்தா வழிச் சொத்துக்கள் எக்கசக்கமா இருக்கு. எங்க அப்பா ப்ரிண்டிங் ப்ரெஸ் வச்சி, அதுவும் அமோகமா நடந்திட்டிருக்கு. எங்க அம்மா இந்திராணி பானர்ஜி. இந்த விஷயம் படிப்பு முடிச்சதும் ப்ரெஸ்சுக்கு வந்து உட்காரணும்னு அப்பாவோட அன்புக் கட்டளை. என்னோட வாழ்க்கையில... நான் ஆசைப்பட்டதெல்லாமே கிடைச்சிருக்கு. ஆசைப்பட்டது கிடைச்சே ஆகணும்னு நினைப்பேன். எனக்கு வண்ணமயமான வளர்ப்பு மீன்கள் பிடிக்கும். புள்ளி மான்களைப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். உயரமான மலைகள், நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கைக் காட்சிகள் பிடிக்கும்.  நான் அழகை ஆராதிப்பவன். அழகா இருக்கற எல்லாமே என் மனதைப் பாதிக்கும்...” சொல்லி விட்டு ஒரு அர்த்தத்தோடு மிருதுளாவைப் பார்த்தான் அரவிந்த்.

அவனுடைய பார்வையை மிருதுளா புரிந்து கொள்ளவில்லை. சகஜமாகத் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“என்னோட மனசைப் பாதிக்கற விஷயம் என்ன தெரியுமா? என் கூடப் பழகறவங்க, என் மேல அன்பு கொண்டவங்க... யாராக இருந்தாலும் என்கிட்ட பொய் சொல்லக் கூடாது. எதையும் மறைக்கக் கூடாது. அப்படி மறைச்சாலோ, பொய் சொன்னாலோ... அது என் மனசைப் பாதிக்கும்...”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரேகா வந்தாள். மிருதுளாவின் முதுகில் தட்டினாள்.

“ஆ... வலிக்குதும்மா தாயே... நீ பெண் புலியாக் கூட இல்ல... ஆண் சிங்கமா இருக்கியே...”

“இந்தக் காலத்துப் பசங்ககிட்ட அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கு. பெண் புலியைக் கூட ‘கிலி’ புடிச்சு ஓட விட்டுருவாங்க. ஆண் சிங்கம் மாதிரி ‘இமேஜ்’ இருந்தாத்தான் அவனுங்களை ஓட ஓட விரட்டலாம். சரி... சரி... நான் உன்னைத் தேடி வந்த விஷயம் என்ன தெரியுமா? மதுரையிலிருந்து வந்திருக்காளே மீனா... அவளுக்குத் திடீர்னு ஃபிட்ஸ் வந்திருச்சு.”

“ஐயோ... அப்புறம் என்ன ஆச்சு?...”

“கீழே விழுந்ததுனால தலையில அடிபட்டு ரத்தம் வந்துச்சு. ‘ஃபர்ஸ்ட் எய்ட்’ பண்ணிட்டோம். வா. அவளை நல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.”

“வா... நாம இப்ப உடனே போகலாம்.” மிருதுளாவும், ரேகாவும் அவசரமாகக் கிளம்பினார்கள்.

“நானும் உங்க கூட வந்தா... உங்களுக்கு உதவியா இருக்கும். எங்க ஃபேமிலி டாக்டரோட க்ளினிக்குக்கு நானே கூட்டிட்டுப் போறேன்.”

அரவிந்த் கூறியதும் மூவரும் விரைந்து சென்றனர். அவனுடைய உதவி செய்யும் மனப்பான்மையை அறிந்த மிருதுளாவிற்கு அவன் மீது மதிப்பு ஏற்பட்டது.

மீனாவிற்குத் தேவையான வைத்திய உதவிகள் அனைத்தையும் கூடவே வந்திருந்து கவனித்துக் கொண்டான் அரவிந்த்.

மிருதுளாவின் மனதைக் கவர்வதற்காகவே மிருதுளாவிற்குப் பிடித்தமான செயல்களைச் செய்தான். அதன் மூலம் மிருதுளாவின் இதயத்தில் இடம் பிடிப்பதில் தீவிரம் காட்டினான்.

கேம்ப்பிற்கு வந்திருந்த மற்ற மாணவர்களுடனும் மிருதுளா சிநேகமாகவும், சகஜமாகவும் பழகுவதைக் கண்ட அவனுக்கு மிருதுளா தன்னிடம் பழகுவது அன்பினாலா அல்லது காதலாலா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

‘இந்த கேம்ப்ல கலந்துகிட்ட மாணவர்கள்ல்ல என்னை விட யாரும் அழகு இல்லை. என்னை விடப் பணக்காரனும் இல்லை.


நிச்சயமா அவ என்னைக் காதலிப்பா. அதை எப்படி நான் தெரிஞ்சுக்கறது? அவ சொல்வாளா? அவ சொல்லாட்டி என்ன? நான் சொல்லணும். நிச்சயமா... மிருதுளா என்னை விரும்புவா. மத்தவங்ககிட்ட பேசறதை விட என்கிட்ட நிறையப் பேசறா. சிரிச்சுப் பேசிப் பழகறா. போன வாரம் என்னோட பிறந்த நாளுக்கு ரோஜா பொக்கே குடுத்து வாழ்த்துச் சொன்னா. ப்ராஜெக்ட் வொர்க் முடிஞ்சு அவ கிளம்பறதுக்குள்ள அவகிட்ட இதைப் பத்தி பேசணும். அவ ‘நோ’ சொல்லிட்டா... என்னால தாங்கவே முடியாது!’ தன் இதயத்தில் எழுப்பிய காதல் கோட்டைக்கு வர்ணங்கள் தீட்டிக் கொண்டிருந்தான் அரவிந்த்.

5

றுநாள், மிருதுளாவிடம் தன் காதலை வெளிப்படுத்திய அரவிந்த், அவளிடம் இருந்து எதிர்பார்த்த பதில் வராததால் நெஞ்சம் ஏமாற்றத்தால் அதிர, வாய்மொழி எதுவும் பேச இயலாமல் தவித்தான். அவன் அதிர்ந்து போனதையோ, ஏமாற்றம் அடைந்ததையோ அறிந்து கொள்ளாத மிருதுளா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“எதை வச்சு உங்க மனசுக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வந்துச்சுன்னு எனக்குத் தெரியலை, அரவிந்த். நீங்களே பார்த்திருப்பீங்க. நான் எல்லார் கூடயும் சகஜமா பழகறதை. நட்புக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. நட்புக்குத் தேவை களங்கமில்லாத மனசு மட்டும்தான். நான் நட்பைப் பெரிசா மதிக்கறவ. உங்க மேல எனக்கு நட்பு மட்டும்தான். நாம பழகியது நண்பர்களைப் போலத்தான். காதல்ங்கற உணர்வு இன்னும் என் இதயத்தை எட்டிக்கூடப் பார்க்கலை. இந்தப் பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச நல்ல நண்பர் நீங்க. நம்ம நட்பு இன்னும் தொடரணும். உங்க காதலை நான் மறுத்துப் பேசிட்டேன்னு அந்த நட்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சுடாதீங்க. ஒரு நண்பரா நான் உங்களை விரும்பறேன். புரிஞ்சுக்கோங்க. உங்க மனசு தெளிவா இருக்கும்னு நம்பறேன். நான் நாளைக்குச் சென்னை கிளம்பிடுவேன். அப்பப்ப உங்களுக்கு இ.மெயில் அனுப்பறேன். நீங்களும் எனக்கு இ.மெயில் அனுப்புங்க.”

மிருதுளா பேசியதற்குப் பதில் கூறும் விதமாகத் தன் உள் உணர்வுகளை மறைத்து உதடுகளால் ஒரு சிரிப்பை மட்டும் எதிர்த்தான் அரவிந்த். அந்தச் சிரிப்பிலும் ஜீவன் இல்லை. போட்டோவில் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

அரவிந்த்தின் ‘ஃப்ளாஷ் பேக்’ முடிந்தது.

கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான். ‘மிருதுளா என் கூடப் பழகினது காதலாகத்தான் இருக்கும்னு நம்பினேன்... ஏமாந்துட்டேன். அவளோட கல்யாணத்துக்குக் கண்டிப்பா வரணும்னு பல முறை போன் பண்ணிச் சொன்னா. என்னை வருந்த வச்சுட்டு அவளோட கல்யாண விருந்துக்கு வருந்தி வருந்தி அழைச்சா. அவளோட அழகும், பழகற விதமும் என் நெஞ்சுல ஏக்கத்தைத் தேக்கி வச்சிருச்சு... என்னை ஏங்க வச்சுட்டு எவனோ ஒரு ஏகாந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா. அவ சந்தோஷமா, நிம்மதியா வாழக் கூடாது. மிருதுளா என்னை மிருகமாக்கிட்டா.’

காதல் புகுந்திருந்த மனதில் கள்ளமும் கபடமும் புகுந்து கொண்டன. ‘தான் காதலிக்கிறவள் எங்கிருந்தாலும் நல்லா வாழணும்’னு நினைக்கறவனோட காதல்தான் உண்மையான காதல். அரவிந்த்தின் காதல்? தன் அழகிய தோற்றத்திற்கு, செல்வச் செழிப்பான அந்தஸ்திற்கு மயங்கி, தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டே தீரவேண்டும் என்ற அகம்பாவம் கொண்ட காதல்! இது உண்மையான காதல் அல்ல.

மிருதுளாவிடம் அவளது மறுப்பை சகஜமாக ஏற்றுக் கொள்வது போல் நடித்தான். அவள் அனுப்பும் இ.மெயிலுக்குப் பதில் அனுப்பி அவளுடைய தன் மதிப்பைப் பெற்றான். ‘இனி என்ன செய்வது?’ தீவிரமாக யோசித்ததான். யோசிக்க... யோசிக்க... தலை வலித்தது.

6

“ஏ, வருணா.... ரிஸப்ஷன்ல கூட நீ சாப்பிடாம கிளம்பிட்ட. அங்கே கொஞ்ச நேரம் இருந்து, என் கூடவே வந்திருக்கலாம்ல. என்ன அவசரம்னு ஓடி வந்த? அதுவும் சாப்பிடாம கொள்ளாம? உன் மாமா மகன் ஏகாந்த் அந்த மிருதுளாவைக் கட்டிக்கிட்டான்னு... இப்படி அங்கே சாப்பிடாம வந்தது மரியாதைக் குறைவான விஷயம் இல்லையா? நீ பட்டினி கிடந்தா மட்டும் நடந்த கல்யாணம் இல்லைன்னு ஆயிடுமா? ரிஸப்ஷன்ல அந்த மிருதுளாட்ட நீ சகஜமா பேசினதைப் பார்த்ததும் உன் மனசு மாறிடுச்சுன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா. இப்படி லேடி தேவதாஸ் மாதிரி வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்க! தாடி மட்டுந்தான் முளைக்கலை.” வருணாவைச் சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள் அகல்யா.

“அம்மா... உங்களால என்னைச் சிரிக்க வைக்க முடியாது. என்னோட மனசு எரிஞ்சுக்கிட்டிருக்கு. ஏகாந்த் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கணுங்கற என்னோட ஆசையில மண் விழுந்துடுச்சு. இனிமேல் என் வாழ்க்கையில என்ன இருக்கு?”

“இனிமேல்தான் உன் வாழ்க்கையில எல்லாமே இருக்கு. நீ எனக்கு ஒரே பெண்ணு. நீ கல்யாணமாகிக் குடும்பம் நடத்தறதைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா?...”

“என்னோட ஆசையே நிராசையாயிடுச்சு. உங்க ஆசையை என்னால நிறைவேத்த முடியாது.”

“இவ்வளவு அலட்சியமாப் பேசற உன்னை என்ன பண்றது? உங்க அப்பா இறந்துக்கப்புறம் நீதான் உன் உலகம்னு வாழ்ந்தேன். வாழ்ந்துக்கிட்டிருக்கேன். நீ இப்படிப் பிடிவாதமாப் பேசறதைக் கேக்கறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?...”

“உங்க கஷ்டத்தை மட்டும்தான் பெரிசா பேசறீங்க. என் வாழ்க்கையில கல்யாணங்கறதே இருக்காது. ஏகாந்த் மச்சானை மனசுல சுமந்து வாழ்ந்தேன். இப்ப ‘அவர் எனக்கு இல்லை’ங்கற ஏமாற்றத்தைச் சுமந்துக்கிட்டிருக்கேன். நெஞ்சுல ஆசைகளைத் தேக்கி வச்சு வாழற சாதாரணப் பெண்ணு தானே நானும்?”

மகள் சோகமாகப் பேசுவதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள் அகல்யா. தாய் மனம் தவித்தது. என்றாலும் சமாளித்து வருணாவைச் சமாதானம் செய்யும் விதமாய்ப் பேசினாள்.

“இவ்வளவு பேசறியே... ஒரு விஷயத்தை நினைச்சுப் பார்த்தியா? பல வருஷ காலமா, மாமா வீட்லதானே நாம இருந்தோம்? என்னிக்காவது ஏகாந்த் உன்னைக் காதலிக்கறதாவோ கல்யாணம் பண்ணிக்கறதாவோ சொல்லி இருக்கானா?...”

“சொன்னாத்தான் காதலா? எனக்கு ரோஜாப்பூன்னா பிடிக்கும்னு எத்தனை நாள் ரோஜாப் பூ வாங்கிட்டு வந்திருக்கார்? எனக்குப் பிடிச்ச கலர்ல சுடிதார் வாங்கிட்டு வந்திருக்கார்? எனக்கு உடம்பு சரியில்லாதப்ப எத்தனை நாள் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார்? எனக்குப் புடிச்ச புத்தகங்கள் எத்தனை வாங்கிக் குடுத்திருக்கார்? ஒரு நாளைக்கு எத்தனை தடவை வருணா, வருணான்னு கூப்பிட்டுக்கிட்டிருப்பார்...?”

“நீ சொல்ற இதையெல்லாம் ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருக்கறவன் கூடத்தான் செய்வான். மனம் விட்டு, வாய் விட்டு அவன் உன்னைக் காதலிக்கறதாவும் சொல்லல.


கல்யாணம் பண்ணிக்கறதாவும் சொல்லல. ஏகாந்த் நல்லவன். நம்ப வச்சுக் கழுத்தறுக்கற கெட்ட குணமெல்லாம் அவனுக்குக் கிடையாது. நீயாவே உன் மனசுல காதல், கல்யாணங்கற கற்பனையை வளர்த்திருக்க. அவன் இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி, எல்லாம் முடிஞ்சாச்சு. இன்னமும் அதைப்பத்திப் பேசறது வீணான விஷயம்.”

“என் வாழ்க்கை வீணாகிப் போச்சு. என்னை இப்படித் தவிக்க விட்டுட்ட ஏகாந்த் மச்சானைப் பழிவாங்கணும். நான் படற வேதனையைப் போல நூறு மடங்கு வேதனையை அவரும் படணும். இந்த நிமிஷத்துல இருந்து அவரைப் பழி வாங்கறதுதான் என்னோட வேலை. என் மனசை மாத்திடலாம்னு கனவு காணாதீங்க.”

“ஒரு பெண்ணான உனக்கு இப்படிப் பழிவாங்கற எண்ணமெல்லாம் வரக் கூடாது. இது தப்பு. பழி வாங்கறேன், குழில தள்றேன்னு நீயே உன் தலைல மண்ணை வாரிப்போட்டுக்காதே. ஒழுங்கா எழுந்திருச்சு, சாப்பிட வா!” பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த அகல்யா பொறுமையை இழந்து கடுமையாகப் பேசினாள்.

“சரி, சரி, சாப்பிட வரேன். ஆனா கல்யாணம் கில்யாணம்னு ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்கன்னா எனக்குக் கருமாதிதான் செய்ய வேண்டி இருக்கும்.”

வருணா உறுதியான குரலில் பேசியதைக் கேட்ட அகல்யா திகைத்தாள். ‘கொஞ்சம் இவள் போக்கில் விட்டுத் தான் பிடிக்க வேண்டும்.’ மனதிற்குள் எண்ணங்கள் ஓடின. கூடவே கவலையும் கூடியது.

7

“என்னப்பா ஏகாந்த்? உன்னோட முதலிரவு முடிஞ்சு மறுநாள் காலையிலேயே மிருதுளாவைக் காணோங்கற? எத்தனை மணிக்கு அவளைக் காணோம்னு பார்த்த? உன்னோட மாமனார் எங்கே?” மிருதுளா காணவில்லை என்ற செய்தியைக் கேட்ட சீதா பதறினாள். கேள்விக் கணைகளை வீசினாள். “உன் மாமனார் எங்கே?”

“மாமா இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்கார்.”

“கல்யாணம் முடிஞ்ச கையோட காலங்கார்த்தால இப்படி ஒரு குண்டைத் தூங்கிப் போடறியே... என்னதான் நடந்துச்சு...?”

“நானும் மிருதுளாவும் விடியக்காலம் மூணு மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் தூங்கிட்டோம். காலையில எழுந்திரிச்சுப் பார்த்தா அவ என் பக்கத்துல இல்லை. குளிக்கப் போயிருப்பாள்ன்னு காத்திருந்தேன். ரொம்ப நேரமாகியும் வரலை. பாத்ரூம்லயும் அவ இல்லை. வெளியே போய்ப் பார்த்தேன். ‘இன்னுமா மாப்பிள்ளை மிருதுளா தூங்கறா?’ன்னு மாமா கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஆயிடுச்சு. வீடு, தோட்டம் முழுவதும் தேடியும் மிருதுளா இல்லை. எதுவும் புரியலைம்மா.”

“நீ இப்ப உடனே புறப்பட்டு நம்ப வீட்டுக்கு வா. நேர்ல பேசிக்கலாம்.”

“சரிம்மா.” தளர்ந்த குரலில் சொல்லிவிட்டு ரிஸீவரை வைத்தான் ஏகாந்த். ஹால் ஸோஃபாவில் துயரத்துடன் உட்கார்ந்திருந்த மோகன்ராமின் அருகே சென்றான்.

“மாமா, கவலைப் படாதீங்க. மிருதுளா எங்கேயும் காணாமப் போயிருக்க மாட்டா. வந்துருவா. நான் போய் அம்மா, அப்பாவைப் பார்க்கணும். போயிட்டு வந்துடறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

“என்னோட காரை எடுத்துக்கிட்டுப் போங்க மாப்பிள்ளை.” மோகன்ராம் எழுந்து வந்து கார் சாவியை எடுத்துக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்ட ஏகாந்த் புறப்பட்டான். காரைத் தன் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

8

புது மணமகனுக்குரிய சந்தோஷமான, த்ரில்லிங்கான மனநிலையில் இருக்க வேண்டிய ஏகாந்த் மனக் குழப்பத்தில் இருந்தான். சோகத்தில் மூழ்கினான் என்றாலும் எச்சரிக்கை உணர்வுடன் காரை ஓட்டிச் சென்றான். சாலையின் ஓரமாக ப்ளாட்ஃபார்ம் மீது சற்று வயதான பெண்மணியுடன் வருணா பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். வருணா மிகவும் சீரியஸாகக் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.

‘வருணா யார் கூடப் பேசிக்கிட்டிருக்கா...? அந்தம்மாவை இதுக்கு முன்னால பார்த்ததே இல்லையே?’ யோசித்தவன், காரை வருணாவின் அருகே நிறுத்தினான். காரின் கதவைத் திறந்தான். கீழே இறங்கினான்.

“என்ன வருணா, இங்கே நிக்கறே? இவங்க யாரு?”

“இவங்க என் ஃப்ரெண்ட் நளினியோட சித்தி. கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்காங்க. அவங்களை வழி அனுப்பலாம்னு அவங்க கூட வந்தேன். நீங்க போங்க மச்சான். பக்கத்துலதானே பஸ் ஸ்டேண்ட்? நான் இவங்களை அனுப்பிட்டு வீட்டுக்குப் போய்க்கறேன்.”

அந்தப் பெண்மணியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான் ஏகாந்த். பாமரத்தனமாய்ச் சிகப்புக் கல் மூக்குத்தியும், வெள்ளைக் கற்கள் நிறையப் பதித்த கம்மலும் அணிந்திருந்தாள். தலைமுடியைச் சீராகச் சீவாமல் அள்ளிச் செருகிக் கொண்டை போட்டிருந்தாள். அவள் உடுத்தி இறந்த புடவை ஏகப்பட்ட சுருக்கங்களோடு காணப்பட்டது. ‘மொத்தத்தில், அந்தப் பெண்மணியின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. இந்தப் பெண்மணியைத் தன்னுடன் படித்த ஃப்ரெண்ட் நளினியின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. இந்தப் பெண்மணியைத் தன்னுடன் படித்த ஃப்ரெண்ட் நளினியின் சித்தி என்றாள் வருணா.’ மனதில் தோன்றிய எண்ணங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்த ஏகாந்த், வருணாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும் காரில் ஏறி, காரைக் கிளப்பினான்.

9

“அம்மா, மிருதுளா எங்கேம்மா போயிருப்பா...?” குரல் கம்மியது ஏகாந்த்திற்கு. மகனின் சோகமான குரலால் மனம் உடைந்த சீதா, அவனுடைய தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள்.

“நீ இப்படி அழறாப்ல பேசினா, என் மனசு தாங்கலை ஏகாந்த். ஆண்பிள்ளை இப்படித் தைர்யம் இழந்து போலாமா, நேத்து உன் முகத்துல எவ்வளவு சந்தோஷம் பொங்குச்சு! இப்ப துக்கத்துல மூழ்கி இருக்கற உன் முகத்தைப் பார்க்க என் பெத்த வயிறு எரியுதுப்பா. ஏப்பா, அந்த மிருதுளாவுக்கு உன்னைப் பிடிக்கலையா?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. என்னை ரொம்ப விரும்பறதா சொன்னா. நானும் மிருதுளாவை என் உயிருக்குயிரா விரும்பறேன்மா. ரெண்டு பேருமே இதைப் பத்திப் பேசிக்கிட்டோம்.”

“நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதப்பா. கல்யாணத்துக்கு முன்னால மிருதுளா வேறை யாரையாவது காதலிச்சிருப்பாளா? அதை உன்கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு...?”

சீதா பேசி முடிக்கு முன் அவளது வாயைத் தன் விரல்களால் மூடினான் ஏகாந்த்.

“இல்லைம்மா. மிருதுளாவுக்குக் காதல் கீதல்னெல்லாம் எதுவும் கிடையாது. அவ வெளிப்படையா எதையும் பேசக் கூடிய பொண்ணும்மா. அவ காதலிச்சது என்னை மட்டும்தான். அதுவும் கூட எங்க நிச்சயதார்த்தத்துக்கப்புறம்தான். ப்ளீஸ்... அவளைத் தப்பா நினைக்காதீங்கம்மா.”

“அப்படின்னா அவ இவ்வளவு அலட்சியமா வீட்டை விட்டுப் போக என்ன காரணம்?”

“அதுதான்மா எனக்குத் தெரியலை...” ஏகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போதே மோகன்ராம் அங்கே வந்தார். அவரது முகத்தில் ஏகப்பட்ட கவலை ரேகைகள்!

“வாங்க மாமா....”

“வாங்க சம்பந்தி. உட்காருங்க.” சீதாவும், ஏகாந்தும் மோகன்ராமை வரவேற்றனர்.


அதே சமயம் மாடியறையில் இருந்து கோபாலும் இறங்கி வந்தார்.

“என் கூடவே வந்திருக்கலாமே மாமா. நீங்க ரொம்ப டல்லா இருந்தீங்க. அதனாலதான் நான் மட்டும் கிளம்பி வந்தேன். உங்க காரை நான் எடுத்துட்டு வந்துட்டேன். நீங்க...”

“அதனால என்ன மாப்பிள்ளை? ஆட்டோவில வந்துட்டேன். மனசு கேக்கலை. சம்பந்தியைப் பாத்துப் பேசறது என்னோட கடமையாச்சே!”

“மிருதுளா ஏன் போனா? எங்கே போனா? எதுவும் எங்களுக்குப் புரியலை. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு, முதல் இரவு முடியறதுக்குள்ள இப்படி வீட்டை விட்டு வெளியே போனா தொண்ணூத்து ஒன்பது சதவீதம் காதல் தான் காரணமா இருக்கணும். அதை அவ கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி இருக்கணும். இப்படிக் கழுத்துல தாலியை வாங்கிட்டு பொழுது விடியறதுக்குள்ள வேலி தாண்டிப் போறது கண்ணியமான பெண் செய்ற காரியமா?” கோபால் சற்றுக் கடுமையாகப் பேச ஆரம்பித்தார். எதிலும் ஒரு ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர். இந்த விஷயங்களில் கண்டிப்பானவர்.

“ஸாரி சம்பந்தி. எதிர்பார்க்காம இப்படி நடந்துடுச்சு. அவளுக்குச் செல்லம் குடுத்து வளர்த்தேன். சுதந்திரம் குடுத்து வளர்த்தேன். ஆனாலும் அவ அதையெல்லாம் ‘மிஸ்யூஸ்’ பண்ணியதில்ல. அவ நல்ல பொண்ணு, சம்பந்தி...’ மோகன்ராம் பரிதாபமாகப் பேசினார். சீதாவிற்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அதைப் பொருட்படுத்தாத கோபால் பேச்சைத் தொடர்ந்தார். “எங்க மகன் மனம் உடைஞ்சு போய் இருக்கான். புது மாப்பிள்ளையா... ஏகப்பட்ட ஆசைகளைச் சுமந்துக்கிட்டிருக்கற என் பையனை இப்படி வேதனைகளைச் சுமக்க வச்சுட்டா உங்க பொண்ணு. இந்த விஷயம் வெளில தெரிஞ்சா குடும்ப கெளரவம் என்ன ஆகிறது? ஊர் உலகமும், உற்றார் உறவும் என்னவெல்லாம் பேசவாங்க? படிச்ச பொண்ணு இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம இப்படிப் பண்ணிட்டா. உங்க பொண்ணு செஞ்ச இந்தக் காரியத்தால நாங்க ரொம்ப அப்ஸெட் ஆகி இருக்கோம்.”

பெண்ணைப் பெற்றவன் தலை குனிந்துதான் இருக்கணுங்கறது நியதியாகவே ஆகிவிட்ட தமிழ்நாட்டுக் கலாச்சாரம், உயர் படிப்பெல்லாம் படித்து வியாபாரத் துறையில் பெரிய புள்ளியான மோகன்ராமையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் பெண்ணைக் காணவில்லை என்ற பிரச்னை வேறு சேர்ந்து கொள்ள, விதியே எனக் கேட்டுக் கொண்டு மெளனமாக இருந்தார். கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

இதைப் பார்த்த சீதாவிற்குத் தர்மசங்கடமாக இருந்தது. கோபால் அதிகக் கோபத்துடன் பேசியதைக் கண்ட சீதா, நிலைமையைச் சமாளிக்க முன் வந்தாள்.

“அட... என்னங்க நீங்க... மிருதுளாவிற்கு என்ன நடந்ததுன்னே தெரியாம நம் மனம் போன போக்குல, வாய்க்கு வந்தபடி பேசறது நியாயமில்லங்க. நாம யாருமே எதிர்பார்க்காம நடந்த இந்த விஷயத்துக்குச் சம்பந்தி என்னங்க பண்ணுவாரு?”

“ஆமாப்பா. மாமா கலங்கிப் போயிருக்கார். இந்த நேரத்துல நாமதான்ப்பா அவருக்கு ஆறுதல் சொல்லணும்.” சீதாவும் ஏகாந்த்தும் பேசியதைக் கேட்ட கோபாலுக்குக் கோபம் குறைந்தது.

 “சரி. நடந்தது நடந்துருச்சு. இனி நடக்கப் போறது என்ன? இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? விஷயம் வெளியே தெரியறதுக்கு முன்னால வீட்டை விட்டுப் போன மிருதுளா திரும்ப வரணும். அவ ஏன் இப்படிப் போனாங்கறது தெரிஞ்சாகணும்.” கோபால் உறுதியாகக் கூறினார்.

“அப்பா, மிருதுளா உங்களுக்கு மருமகள். என்னோட மனைவி. தாலி கட்டினப்புறம் நாங்க பேசினது சில மணி நேரங்கள்தான். ஆனாலும் அவளை நூத்துக்கு நூறு சதவீதம் புரிஞ்சுக்கிட்டேன். அவளை என் உயிருக்குயிரா நேசிக்கறேன். அவளும் அப்படித்தான். அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு அவ மேல ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பேன். அவ நல்ல பொண்ணுன்னு நிரூபிப்பேன். நம்ப குடும்ப கெளரவத்தையும் காப்பாத்துவேன். அவ எனக்கு வேணும். அவள் இல்லாத வாழ்க்கை இனி எனக்கு இல்லை. அவ எங்கே போயிருப்பா, ஏன் போயிருக்கான்னு தெரியாம கண்ணைக் கட்டிக் காட்டில விட்டாப்ல இருந்தாலும் என் கண்ணும், மனசும் அவளைத் தேடிக்கிட்டேதான் இருக்கும்...”

“இவ்வளவு தூரம் பேசிறியேப்பா, மூணு மணி வரைக்கும் மிருதுளா உன் கூடப் பேசிக்கிட்டு இருந்தாள்னு சொன்னே. அவ வீட்டை விட்டு வெளியே போறதுக்கு என்ன காரணம்னு ஏதாவது ஒரு சின்னப் பொறி கூட உன் மனசுக்குத் தோணலியா? உனக்கு ஏதோ கொஞ்சமாவது இதைப் பத்தித் தெரிஞ்சிருக்கணும்னு நான் நினைக்கறேன்.”

“நீங்க நினைக்கறது சரிதான்மா. எங்க ரெண்டு பேருக்குள்ள சில விஷயங்கள்ல வாக்குவாதம் நடந்துச்சு. ஆனா... அதை நான் வெளியே சொல்ல விரும்பலை. நாலு சுவத்துக்குள்ள நடந்த அந்த விஷயம் நாலு பேருக்குத் தெரிய வேண்டாம். அதனால அதைப் பத்தி எதுவும் கேக்காதீங்க. எனக்கும் என் மனைவி மிருதுளாவுக்கும் இடையில நடந்த தனிப்பட்ட விஷயம் எல்லாத்தையும் நான் என் மனசுச்குள்ள பூட்டி வைக்கத்தான் விரும்பறேன். ஆனா... அவ கோவிச்சுக்கிட்டு வெளியே போற அளவுக்கு எங்களுக்குள்ள பெரிய பிரச்னையா எதுவும் நடக்கல... அம்மா, நான் மிருதுளாவைக் கண்டு பிடிச்சு அவ கூட சந்தோஷமா வாழத்தான் போறேன். நீங்க அதைப் பார்க்கத்தான் போறீங்க.”

“அதுக்காக, நீ என்ன செய்யப் போற? போலீஸ்ல சொல்லப் போறியா? அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதேப்பா...” கோபால் கூறினார்.

“என்னப்பா நீங்க? போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் குடுப்பேனா? அவங்க பேப்பருக்கு நியூஸ் குடுத்துருவாங்க. வெறும் வாயையே மெல்லற ஊர், அவல் கிடைச்சா சும்மா விடுமா? கண், மூக்கு, காது வச்சு டைரக்டரே இல்லாம சூப்பரா திரைக்கதை அமைச்சு ரீல் சுத்துவாங்க. மிருதுளாவை நானே கண்டுபிடிப்பேன். என்னோட முயற்சிக்கு நீங்களும் ஒத்துழைக்கணும்.”

“உன்னோட கஷ்டத்துல எங்களுக்கும் பங்கு இல்லையாப்பா? நாங்க என்ன செய்யணும்னு சொல்லுப்பா. எல்லா உதவியும் செய்யறோம்...” சீதா கூறினாள்.

“மிருதுளாவைத் தேடிக் கண்டுபிடிக்கற முயற்சியில நான் எங்கே போறேன், ஏன் போறேன்னு யாரும் கேக்காதீங்க. இதுதான் நீங்க எனக்குச் செய்யற பெரிய உதவி. அப்பா, ஆபீஸைப் பார்த்துக்கணும்.”

“அது ஒரு பெரிய விஷயமாப்பா? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே.”

“மணியாச்சுப்பா. இன்னும் ஒரு காபி கூடக் குடிக்காம இருக்கே. மாமாவும் எதுவும் சாப்பிடலை. வாங்க, எல்லோரும் ரெண்டு இட்லியாவது சாப்பிடலாம்.”

“வேணாம் சம்பந்தியம்மா. எனக்கு மனசு சரி இல்லை...”

“யாருக்குத்தான் மனசு நல்லா இருக்கு இந்தச் சூழ்நிலையில? அதுக்காக வயித்தைப் பட்டினி போட்டா மட்டும் சரியாயிடுமா?


வாங்க சம்பந்தி!” சீதா கூறியதும் மோகன்ராம் எழுந்தார். அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

“வாங்க மாமா. நான் உங்களை வீட்டில கொண்டு போய் விடறேன்.”

“சரி மாப்பிள்ளை.”

மோகன்ராம் விடை பெற்றுக் கிளம்பினார். ஏகாந்த் அவரை அவரது வீட்டில் கொண்டு விட்டான்.

“நான் கிளம்பறேன் மாமா. இந்தாங்க கார் சாவி.”

“நீங்க எடுத்துட்டுப் போங்க மாப்பிள்ளை.”

“வேண்டாம் மாமா. நான் ஆட்டோல போய்க்கறேன். நீங்க கவலைப்படாம இருங்க. டென்ஷன் ஆகி உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு போன் பண்ணிப் பேசறேன். தைர்யமா இருங்க.”

“எ... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மாப்பிள்ளை. இவ்வளவு பெரிய பிரச்னை நடந்திருக்கு. நீங்க கோபப்படாம நிதானமா இருந்து எனக்கு ஆறுதலும் சொல்றீங்க. யூ ஆர் எ ஜென்ட்டில் மேன்.”

ஏகாந்த்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கண்களில் கண்ணீர் மல்கப் பேசிய மோகன்ராமைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது ஏகாந்த்திற்கு.

“நான் வரேன் மாமா.” ஏகாந்த் புறப்பட்டான்.

10

காந்த் அவனது காரில் இருந்து இறங்கினான். கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள் அகல்யா.

“அட! ஏகாந்த்தா? வாப்பா. உன்னை இன்னிக்கு எதிர்பார்க்கவே இல்லை. நேத்துதான் கல்யாணம் முடிஞ்சுது. இன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்திருக்க. ஆச்சர்யமாகத்தான் இருக்கு. உள்ளே வா, ஏகாந்த்.”

ஏகாந்த் உள்ளே சென்றான். உட்கார்ந்தான். “வருணா எங்கே அத்தை? இன்னுமா அவ வீட்டுக்கு வரலை?”

“இன்னுமா வரலைன்னா? நீ அவளை எங்கேயாவது பார்த்தியா?”

“ஆமா அத்தை. காலையில, மிருதுளா வீட்டில இருந்து எங்க வீட்டுக்குப் போகும்போது, அவளை பஸ் ஸ்டேண்டுக்குப் பக்கத்துல பார்த்தேன்...”

“வர வர அவ எங்க போறா எதுக்குப் போறாள்னு என்ட்ட சொல்றதே இல்லை. கேட்டா கோபப்படறா. அது சரிப்பா, மிருதுளா அவங்க அப்பா வீட்டிலதான் இருக்காளா?...”

“அ... அ... ஆமா... அத்தை. அங்கேதான் இருக்கா. சும்மா உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” மிகவும் சிரமப்பட்டுப் பொய் சொன்னான் ஏகாந்த்.

“ரொம்ப தாங்க்ஸ், ஏகாந்த். நீ என்னோட அண்ணன் மகனா இருந்தாலும் என்னோட மகனா உன்னோட அன்பை அனுபவிக்கற பாக்யம் கிடைச்சிருக்கு...”

“ரத்த பாசம் எங்கே அத்தை போயிடும்? அதுவும் ஒரே வீட்ல... ஒரே குடும்பமா வாழ்ந்தவங்கதானே நாம?...”

“அதென்னமோ உண்மைதான்ப்பா. எங்க வீட்டு மேல இருந்த கேஸ் முடிஞ்சு, எங்க வீடு கிடைக்கறவரைக்கும் என்னோட அண்ணன் எனக்கு ஆதரவு குடுத்துக் கூடவே இருக்கச் சொன்னார். கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேல என்னையும், வருணாவையும் அவர்தானே பராமரிச்சார்? அவரோட மகன் நீ. உனக்கு அவரைப் போலவே நல்ல மனசு. நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன், கொஞ்சம் இருப்பா. காபி போட்டுக் கொண்டு வரேன்.”

“வேணாம் அத்தை, நான் போகணும்.”

“ஒரு சின்ன உதவி, ஏகாந்த். வருணாவோட ரூம்ல ட்யூப் லைட் எரிய மாட்டேங்குது. அதை மட்டும் கொஞ்சம் சரி பண்ணிட்டுப் போயிடுப்பா ப்ளீஸ். அவளோட ரூம் ரொம்ப இருட்டா இருக்கு. அதுக்கு வேற ரெண்டு நாளா என் உயிரை வாங்கறா. காலம் கெட்டுக் கிடக்கு. எலக்ட்ரிஷியன், அவன் இவன்னு யாரையும் நம்பி வீட்டுக்குள்ள விட முடியலை. சின்ன ப்ராப்ளம்னா நீயே பார்த்துடுவ. அவசரம்னா நீ கிளம்புப்பா...”

‘பழம் நழுவிப் பாலுக்குள் விழுந்தாப்ல நான் வந்த விஷயம் நழுவிப் போகாம நல்ல சான்ஸ் கிடைச்சுடுச்சு....’

வேகமா எழுந்த ஏகாந்த், ஒரு முறை வருணா வருகிறாளா என்பதைப் பார்த்துக் கொண்டான். வருணாவின் அறைக்குள் நுழைந்தான். அவளது அறையில் கட்டில் மீது அவள் அவிழ்த்துப் போட்ட ‘ராசாத்தி’ நைட்டி கண்டபடி கிடந்தது. மேஜை மீது புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. மேஜையின் இழுப்றையைத் திறந்தான். ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்கள் நிறைய இருந்தன. அவற்றை ஒதுக்கிப் பார்த்தான். ஒரு கருப்பு நிற டைரி கண்ணை உறுத்தியது. எடுத்தான். பிரித்தான். சில பக்கங்கள் காலியாக இருந்தன. சில பக்கங்களில் ஏகாந்த், ஏகாந்த் லவ்ஸ் மீ, ஐ லவ் ஏகாந்த் என்று வரிசையாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அது வருணாவின் கையெழுத்து.

‘நான் அவள் மேல வச்சிருக்கற பாசத்தைக் காதல்னு தப்புக் கணக்குப் போட்டுட்டாளே!’ நினைத்த ஏகாந்த். டைரி முழுவதையும் புரட்டிப் பார்த்து விட்டு இருந்த இடத்திலேயே வைத்தான். அந்த கம்ப்யூட்டர் மேஜையின் மேல் பக்கம் இருந்த சிறிய ஷெல்பைத் திறந்தான். அவன் மீது தொப் என்று ஏதோ விழுந்தது. திடுக்கிட்டான். ஒரு பொம்மை! துணியினால் தயாரிக்கப்பட்டிருந்த அந்தப் பொம்மையின் முகத்தைப் பார்த்த ஏகாந்த் திடுக்கிட்டான். அந்தப் பொம்மையின் முகம், மிருதுளாவின் சாயலில் இருந்தது. அதே ஷெல்ஃபில் சற்று வாடிய ஒரு எலுமிச்சம்பழம் இருந்தது. எந்த எலுமிச்சம் பழத்தின் மீது குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.

‘மை காட்! இதென்ன ஏதோ... பில்லி சூன்ய வேலை மாதிரி இருக்கு?! ச்ச... கெளரவமான குடும்பத்துல பிறந்தவ, கண்ணியமான தாய்க்குப் பிறந்தவ. இப்படி ஒரு இழிவான காரியத்தைச் செய்யத் துணிஞ்சிருக்கா...’ அவனது இதயத்தில் எழுந்த அதிர்ச்சி அலைகள் இப்போது கோப அலைகளாக உருவெடுத்தன.

“ஏகாந்த்! காபி சாப்பிடுப்பா.” அகல்யாவின் குரல் கேட்டது. சுதாரித்துக் கொண்ட ஏகாந்த், அந்தப் பொம்மையை வேக வேகமாக ஷெல்பினுள் வைத்தான்.

“என்னப்பா, ட்யூப் லைட் சரியாயிடுச்சா?” காபி கப்பை அவனிடம் கொடுத்தபடியே கேட்டாள் அகல்யா.

“அ... அது... வந்து அத்தை... லைட்ல ஒண்ணும் பிரச்சனை இல்லை. சோக் போயிடுச்சு. வேற வாங்கி மாட்டணும். நாளைக்கு நானே வாங்கிட்டு வந்து சரி பார்த்துடறேன்.”

சமாளித்துப் பேசிய ஏகாந்த், காபி கப்பை அகல்யாவிடம் இருந்து வாங்கினான்.

“என்னோட ரூம்ல உங்களுக்கென்ன வேலை?” அறை வாசலில் வருணா இடுப்பில் கையை வைத்தபடி நின்றிருந்தாள். அவளது கண்களில் கோபக் கனல் தெரிந்தது.

“என்னடி பெரிசா மிரட்டறே? உன்னோட ரூம்ல ட்யூப் லைட் எரியலைன்னு, நான்தான் பார்க்கச் சொன்னேன். நீ எங்கே போயிட்டு இவ்ளவு நேரம் கழிச்சு வர்றே? அதைச் சொல்லு.”

வருணா கேட்டதையும், அத்தை அவளிடம் பேசியதையும் கவனித்தும், கவனிக்காதது போல மெளனமாகக் காபியைக் குடித்து முடித்த ஏகாந்த் எழுந்தான்.


வருணாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான். அவனைப் பின் தொடர்ந்தாள் அகல்யா.

“நான் வரேன் அத்தை.”

“சரிப்பா.”

ஏகாந்த் வாசலுக்கு விரைந்தான்.

“நில்லுங்க.” வருணா கத்தினாள்.

“ஏன், என் கூடப் பேசாம போறீங்க?”

“உன் கிட்ட பேசிக்கிற மாதிரி நீ நடந்துக்கலை...”

“அப்படி என்னத்தைக் கண்டுட்டீங்க, என்னோட நடத்தையில?”

“எதுவுமே சரி இல்லை. எனக்கு நேரமாச்சு. நான் போகணும்.” நடந்தான் ஏகாந்த்.

“புதுப் பொண்டாட்டி காத்திருப்பாளோ?”

“ஏ, வருணா. வாயை மூடு. ஏகாந்த்! நீ கிளம்புப்பா.” ஏகாந்த் அங்கிருந்து வெளியேறினான். காரில் ஏறினான். கோபத்தில் அவனது கண்கள் சிவந்திருந்தன. எதற்கும் எளிதில் கோபப்படும்
குணம் இல்லாத ஏகாந்த்திற்கு வருணாவின் பேச்சும், அவளது செயல்களும் அதிக ஆத்திரத்தை மூட்டியிருந்தன.

அவளிடம் நேருக்கு நேராக அந்தப் பொம்மை பற்றிக் கேட்டிருக்கலாம். நான் ஏன் கேட்காமல் மெளனமாக வந்து விட்டேன்? அத்தையின் மனம் புண்படும் என்ற என் இரக்க குணம், எதுவும் கேட்க விடவில்லை. ஆனால், இப்போது கேட்டால்தானே மிருதுளாவைப் பற்றிய உண்மைகள் தெரியும்? காருக்குள் ஏறிய ஏகாந்த் இறங்கினான். அவனது ஷர்ட் பாக்கெட்டினுள் இருந்த செல்ஃபோன் அவனை லேசாக அதிரச் செய்து அழைத்தது. எடுத்தான். அதில் தெரியும் நம்பரைப் பார்த்தான். ‘மாமாவின் நம்பராச்சே!’ பரபரப்பானான். பேசினான்.

“சொல்லுங்க மாமா. என்ன விஷயம்?”

“மாப்பிள்ளை, நீங்க உடனே எங்க வீட்டுக்கு வாங்க. மிருதுளாவுக்கு ஒரு இ.மெயில் வந்திருக்கு.”

“யார்கிட்ட இருந்து? என்ன விஷயம் மாமா?”

“நீங்க வாங்க மாப்பிள்ளை. நேர்ல பேசிக்கலாம். சீக்கிரமா வாங்க.”

மோகன்ராம் செல்ஃபோன் தொடர்பைத் துண்டித்து விட்டதால் வேகமாக மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்தான். காரைக் கிளப்பினான். கார் விரைந்தது.

‘மிருதுளாவுக்கு இ.மெயில் வந்திருக்காம். அனுப்பினது யாரா இருக்கும்? முக்கியமான விஷயம் இல்லாம மாமா போன் பண்ணி உடனே வரச்சொல்லி இருக்க மாட்டார்.’ காரின் ஓட்டத்தோடு அவனது நினைவோட்டங்களும் சேர்ந்து கொண்டன.

11

மோகன்ராம் போர்டிகோவிலேயே காத்திருந்தார், ஏகாந்த்திற்காக. காரை நிறுத்தி ஏகாந்த், வேகமாக மோகன்ராம் அருகே வந்தான்.

“இதோ பாருங்க மாப்பிள்ளை. மிருதுளாவுக்கு வந்த இ.மெயில். ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கேன். படபடக்கும் நெஞ்சத்துடன் அதைப் படித்தான் ஏகாந்த்... ‘தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் வேற்று மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் தன் தந்தை அந்தக் காதலை மறுத்து, அவர் பார்த்துள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், தன் காதல் நிறைவேற மிருதுளா உதவி செய்ய உடனே வர வேண்டும்’ என்றும் ஆங்கிலத்தில் அந்த இ.மெயில் செய்தி அறிவித்தது. அதை அனுப்பியவன் அரவிந்த்.

“அரவிந்த்தைப் பத்தி மிருதுளா என்கிட்ட எல்லாமே சொல்லி இருக்கா, மாப்பிள்ளை. என்கிட்ட எதையுமே அவ மறைக்க மாட்டா...”

“புரியுது மாமா. என்கிட்டயும் அவளைப் பத்தின எல்லா விஷயமும் சொல்லி இருக்கா. அவனுக்கு உதவி செய்யறதுக்காகப் போறவ, என்கிட்டயோ, உங்க கிட்டயோ ஏன் சொல்லாமப் போகணும்?”

“அதுதான் எனக்குக் குழப்பமா இருக்கு, மாப்பிள்ளை.”

“இதை எப்படி நீங்க பார்த்தீங்க?”

“ஒரு வேளை மிருதுளா எங்கே இருந்தாவது ஏதாவது செய்தி குடுத்துடமாட்டாளாங்கற ஒரு ஆதங்கத்துல இ.மெயில் செக் பண்ணினேன். அவளோட ‘பாஸ்வர்ட்’ முதல் கொண்டு எல்லாமே எனக்குத் தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கற பொண்ணு அவ.”

“இது எப்ப வந்த இ.மெயில்?”

“ராத்திரி நாலு மணிக்கு வந்திருக்கு...”

‘ஓ... பாடல் ஒலி கேட்டு என்னை எழுப்பின மிருதுளா, மூணு மணிக்கு என் கூட கோவிச்சுக்கிட்டு திரும்பப் படுத்துக்கிட்டா... அதுக்கப்புறம் தூக்கம் வராம கம்ப்யூட்டரை நோண்டியிருக்கா. அப்ப அந்த இ.மெயில் செய்தியைப் பார்த்திருக்கா. என் கூடக் கோபமா இருந்ததால சொல்லாம கொள்ளாம கிளம்பியிருக்கா.’ ஏகாந்த் யோசனையில் ஆழ்ந்தான்.

‘அதுக்காக அவங்க அப்பாகிட்ட கூடச் சொல்லாம இவ்வளவு சீக்கிரமா ஏன் அவ போகணும்...?’ யோசிக்க யோசிக்கக் குழப்பம்தான் தோன்றியது.

“என்ன மாப்பிள்ளை, ஸைலண்ட்டா ஆயிட்டீங்க?” மோகன்ராமின் குரல் கேட்டுச் சிந்தனையில் இருந்து விடு பட்டான்.

“நான் இப்ப உடனே பெங்களூருக்குப் போறேன் மாமா. வேற எதுவும் என்கிட்ட கேக்காதீங்க. இந்த இ.மெயில் செய்திதான் மிருதுளாவைப் பாதிச்சிருக்கு. அவ அந்த அரவிந்த் பானர்ஜியைப் பார்க்கத்தான் பெங்களூருக்குப் போயிருப்பா.” சொன்னவன், தன் செல்போனை எடுத்துச் சில எண்களை அழுத்தினான். லைன் கிடைத்தது.

“ஹலோ, நான் ஜி.ஏ. இன்டஸ்ட்ரீஸ் டைரக்டர் ஏகாந்த் பேசறேன். மீடியட்டா பெங்களூருக்கு எத்தனை மணிக்கு ஃப்ளைட் இருக்கு?”

“பன்னிரண்டு மணிக்கு ஸார்.” மறுமுளையில் பதில் வந்தது.

“ஏகாந்த்ங்கற பேருக்கு ஒரு டிக்கெட் போடுங்க. என்னோட ரெஸிடென்சுக்கு டிக்கெட்டை உடனே அனுப்புங்க. தாங்க்ஸ்.” ஸெல்ஃபோனை மெளனமாக்கினான்.

“மாமா, நான் எங்க வீட்டுக்குப் போய் அம்மா, அப்பாகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிட்டு பெங்களூருக்குக் கிளம்பணும். டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்.”

மோகன்ராமிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் ஏகாந்த்.

12

விமானத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சீட் பெல்ட்டைப் போடும் முறை பற்றி ஏர்ஹோஸ்டஸ் கூறிக் கொண்டிருந்தாள். தினம் தினம் பாடம் ஒப்பிக்கும் மாணவியைப் போல் அவளுக்குச் சலிப்பாகத் தானே இருக்கும்.

தனக்குப் பின் பக்கம் இருந்து யாரோ முதுகில் சுரண்டுவது போல் உணர்ந்த ஏகாந்த், திரும்பிப் பார்த்தான். தன் அம்மாவின் பிடிக்குள் அடங்காத ஒரு துறுதுறுப்பான குழந்தை அவனைப் பார்த்துப் பொக்கை வாய் கொண்டு சிரித்தது. எந்த ஒரு கஷ்டமான மனநிலையில் இருந்தாலும் மழலையின் சிரிப்பில் உள்ளம்தான் எத்தனை குளிர்ந்து போகிறது! ஏகாந்த் அந்தக் குழந்தைக்குப் பதில் கூறும் விதமாக ஒரு சிரிப்பை உதிர்த்தான். மறுபடி சிந்தனைக்குள் சிக்கினான். ஷர்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை எடுத்தான். அரவிந்த் பானர்ஜி அனுப்பியிருந்த அந்த இ-மெயில் செய்தியை மறுபடி மறுபடி படித்தான். எதுவும் தோன்றாமல் பெருமூச்சு விட்டான். மன உளைச்சல் காரணமாகத் தலை வலித்தது. மாத்திரையைப் போடலாம் என எண்ணியவன், தண்ணீருக்காக, ஏர் ஹோஸ்டஸை அழைக்கும் பட்டனை அமுக்கினான்.

அப்போது அவனுக்கு மூன்று வரிசைகள் தள்ளி ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவன் ஏகாந்த்தைப் பார்த்தான். ஏகாந்த்தும் அவனைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவன் திரும்பிக் கொண்டான்.


அவனுடைய முழு உருவமும் தெரியாவிட்டாலும் அவனுடைய தலையில் தொப்பி அணிந்திருந்தான். மீசை இல்லாத முகம் என்றாலும் முரட்டுத்தனம் நிறைந்திருந்தது. அவன் திரும்பிக் கொண்டதால் அதற்கு மேல் அவனது முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவனை இதற்கு முன் எங்கோ பார்த்திருப்பதாக ஏகாந்த்திற்குத் தோன்றியது.

முன்தினம் இரவு சரியான தூக்கம் இல்லாதபடியால் மனக் கவலைகளையும் மீறிய களைப்பு ஏற்பட்டுக் கண்கள் செருகின. சாய்ந்து கொண்டான். தூங்கி விட்டான்.

ஆகாயப் பறவை பெங்களூரை நோக்கிப் பறந்தது. ‘எக்ஸ்க்யூஸ் மீ!’ இனிய குரல் மிக அருகில் கேட்டது. ஏகாந்த் விழித்தான். ஏர் ஹோஸ்டஸ் பெண் பவ்யமாகக் குனிந்தாள். “ஜூஸ் வேணுமா, டீ வேணுமா ஸார்?” ஆங்கிலத்தில் கேட்டாள்.

“ஐ டோண்ட் வான்ட் எனிதிங், ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மீ!” என்று பதில் கூறிய ஏகாந்த் மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

13

பெங்களூர் விமான நிலையம். பயணிகள் கலைந்தனர். வரவேற்க வந்தவர்களிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசிக் கொண்டே சென்ற வண்ணம் இருந்தனர். தனியாகப் பயணித்தவர்கள் சிந்தனையோடு நடை போட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

ஏகாந்த் தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு டாக்ஸி நிற்கும் இடத்தைத் தேடினான். அவனுக்கு எதிர்ப்புறம் விமானத்தில் பார்த்த தொப்பி அணிந்த நபரும் தோளில் தொங்கும் பையுடன் நின்றிருந்தான். டாக்ஸிக்காரனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான். ஏகாந்த்தும் எதிர்ப்புறம் சென்றான். இவன் போவதற்குள் தொப்பி அணிந்தவன் ஏறிச் சென்ற டாக்ஸி நகர்ந்து விட்டது.

ஏகாந்த் மற்றொரு டாக்ஸியில் ஏறினான். விமானத்தில் எதுவும் சாப்பிடாததால் அவனுக்குப் பசி அதிகமானது. டாக்ஸி டிரைவரிடம் நல்ல, தரமான ரெஸ்டாரன்ட்டிற்குப் போகும் படி ஆங்கிலத்தில் கூறினான். டாக்ஸி விரைந்தது. ஒரு சிக்னலில் டாக்ஸி நின்றது. பேப்பர் விற்கும் பையன் கார் அருகே வந்தான். பேப்பர் வாங்கிய ஏகாந்த், காசு கொடுப்பதற்குள் சிக்னல் விழுந்து டாக்ஸி நகர்ந்தது. ஐந்து ரூபாய் நோட்டை நீட்டியபடி ஜன்னல் பக்கம் திரும்பினான். அந்தப் பையன் ஓடி வந்து பெற்றுக் கொண்டான். ஏகாந்த் திரும்பும்பொழுது அவனுக்குப் பின்புறம் நின்றிருந்த டாக்ஸியின் முன் இருக்கையில் அந்தத் தொப்பி அணிந்தவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

ஏகாந்த்திற்கு வியப்பாக இருந்தது. ‘இந்தத் தொப்பிக்காரன் நமக்கு முன்னாடியே போய்விட்டானே, இப்ப நம் டாக்ஸிக்குப் பின்னாலே வரானே!’ சிந்தனைக் குதிரையை அடக்கிவிட்டு மேலோட்டமாகப் பேப்பரில் கண்களை அலையவிட்டான். அதன் பிறகு, அரவிந்த்தின் தொலைபேசி எண்களை அழுத்தினான். மறுமுனையில் நீண்ட நேரம் கழித்து ரிஸீவரை எடுக்கும் ஒலி கேட்டது.

“ஹலோ... அருண் பானர்ஜி ஹியர்.”

‘அருண் பானர்ஜி, அரவிந்த்தின் அப்பாவாக இருக்கலாம்.’ யூகம் சரிதானோ என்ற சந்தேகத்திலேயே மெதுவாக ஏகாந்த் பேசத் துவங்கினான்.

“ஹலோ? மே ஐ டாக் டு மிஸ்டர் அரவிந்த் பானர்ஜி?”

“மே ஐ நோ... ஹு இஸ் ஆன் தி லைன்?” கேட்டார் அருண் பானர்ஜி.

“ஐ ஆம் ஏகாந்த் ஃப்ரம் சென்னை. ஐ வாண்ட் டு டாக் டு மிஸ்டர் அரவிந்த் பானர்ஜி. ஐ ஆம் ஹிஸ் ஃப்ரெண்ட்.”

“அரவிந்த் ஹேஸ் கான் டு த ப்ரஸ். திஸ் இஸ் மை ரெஸிடென்ஸ். யூ கேன் கான்டாக்ட் அட் ஹிஸ் மொபைல் நம்பர். ஐ வில் கிவ் ஹிஸ் மொபைல் நம்பர்...” என்று அருண் பானர்ஜி, அரவிந்த்தின் மொபைல் நம்பரைக் கொடுத்தார். குறித்துக் கொண்ட ஏகாந்த் அவருக்கு நன்றி கூறினான். அருண் பானர்ஜி, ஏகாந்த்திடம் அரவிந்த்தை எதற்காகப் பார்த்துப் பேச வேண்டும் என்று கேட்டபொழுது, உண்மையைச் சொல்லவா வேண்டாமா என்று தயங்கி, பிறகு சொல்லாமல் விடுவதே இப்போதைக்குச் சரியானது என்ற எண்ணத்தில் எதையோ பேசிச் சமாளித்தான்.

ரெஸ்ட்டாரன்ட் அருகே வந்து டாக்ஸி நின்றது. டாக்ஸியில் இருந்து இறங்கிய ஏகாந்த், ரெஸ்ட்டாரன்டில் வேகமாகச் சாப்பிட்டு முடித்தான். வெளியே வந்தான். டாக்ஸியில் ஏறினான். பயணித்தான். அவனோடு அவனது நினைவுகளும் பயணித்தன.

‘மிருதுளாவின் சிநேகிதர்கள், சிநேகிதிகள் வீட்டுக்கு போன் செய்து விசாரிக்கலாம் என்றால் விஷயம் பரபரப்பாக வேறு விதமாகப் பரவி விடும். அரவிந்த், அவன் காதலித்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டானா? இதற்கு மிருதுளாவும் உதவி செய்து, அவளதும் அவர்களுடன் போயிருக்கிறாளா? வீட்டில் ப்ரஸ்சுக்குப் போயிருப்பதாகச் சொல்கிறாரே அருண் பானர்ஜி?’ எதுவும் புரியாமல் நெஞ்சு திக் திக் என்றிருந்தது ஏகாந்த்திற்கு.

‘அடுத்ததாக என்ன செய்யப் போறேன்? பெங்களூரில் சித்தி மகன் அஷோக்கைக் கூப்பிட்டு அவனிடம் பேச வேண்டும். அவனுடன் சேர்ந்து பேசினால் ஏதாவது வழி கிடைக்காதான்னு பார்க்கணும்.’ முடிவு செய்த ஏகாந்த், செல்ஃபோனில் அஷோக்கின் நம்பரை டயல் செய்தான். மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

“ஹலோ, அஷோக்?”

“அஷோக்தான் பேசறேன்.”

“டேய் அஷோக். நான் ஏகாந்த் பேசறேன்.”

“அட புது மாப்பிள்ளை? என்ன திடீர்னு? ஹனிமூனுக்குப் பெங்களூருக்கு வரலாம்ல?”

“நான் இங்கேதான் இருக்கேன்டா.”

“அட, ஹனிமூனுக்கு வந்துட்டியா?”

“அஷோக், நான் உன்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேசணும். ரொம்ப அவசரம். இப்ப உடனே உன்னை நான் பார்க்கணும்.”

“அப்படின்னா நீ ஹோட்டல் சென்ட்ரல் பார்க் வந்துடு.”

“சரி அஷோக். ஷோட்டல் லாபியில நான் காத்திருக்கேன். நீ கொஞ்சம் சீக்கிரமா வந்துடு.”

“இதோ வந்துடறேன்.”

ஏகாந்த் டாக்ஸியில் ஹோட்டல் சென்ட்ரல் பார்க் சென்றான். லாபியில் காத்திருந்தான். பத்து நிமிடங்களில் அஷோக் வந்தான்.

“என்ன ஏகாந்த்? என்ன பிரச்னை? ஏன் உன் முகம் இப்படி வாடிக் கிடக்கு? மிருதுளா எங்கே?”

“மிருதுளா வரலை... நான் மட்டும்தான் வந்தேன்...” ஆரம்பித்த ஏகாந்த் தயங்கித் தயங்கி மிருதுளா எந்த தகவலும் தெரிவிக்காமல் வீட்டைவிட்டுப் போனது பற்றி விளக்கமாகக் கூறினான். வருணாவின் அறையில் பார்த்ததையும், அவளிடம் அது பற்றிக் கேட்பதற்குள், அரவிந்த்தின் இ.மெயில் செய்தி கிடைத்தபடியால் உடனே பெங்களூருக்குப் புறப்பட்டுவிட்டதையும் சொல்லி முடித்தான்.

“அஷோக், இந்த விஷயங்கள் எல்லாம் உன் மனசுக்குள்ளயே வச்சுக்க. வீட்ல சித்திட்ட கூட எதையும் சொல்லிடாதடா ப்ளீஸ்.”

“சச்ச... என்ன ஏகாந்த் நீ... இதை ஏன் நான் சொல்லப் போறேன்? பர்ஸனல்ன்னு சொல்லிட்டா என்னை வெட்டிப் போட்டா கூட ஒரு விஷயம் வெளிவராது. இப்ப நாம மிருதுளாவைத் தேடறதுக்கு என்ன செய்யணும்னு யோசிப்போம்.


உனக்கு எல்லா உதவியும் நான் செய்யறேன்.”

“தாங்க்ஸ்டா அஷோக். எனக்காக நீ ஆபீசுக்குக் கூட லீவு போட வேண்டி இருக்கும்...” ஏகாந்த் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த ஹோட்டலின் போர்டிகோவைத் தாண்டிப் படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த தொப்பி அணிந்தவனைப் பார்த்தான்.

அதுவரை தொப்பி அணிந்தவனைப் பற்றி மிக முக்கியமான எதையும் யோசிக்காததால் அஷோக்கிடம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்போது மறுபடியும் அவனைப் பார்த்ததும் மெதுவாக அஷோக்கிடம் சொல்லி வைத்தான்.

“உடனே திரும்பிப் பார்க்காதே, அஷோக். ஹோட்டலுக்குள்ள நுழையற அந்தத் தொப்பிக்காரனை ஒரு நிமிஷம் கழிச்சுப் பாரு.” ஒரு நிமிடம் காத்திருந்த அஷோக், மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.

“அவன் யார், ஏகாந்த்?”

“அவன் யார்னு எனக்குத் தெரியாது. ஆனா அவனை இதுக்கு முன்னால எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. எங்கே பார்த்தேன்னு தெரியலை. இன்னிக்கு நான் வந்த ஃப்ளைட்லதான் இவனும் வந்தான். நான் வந்த டாக்ஸி ஒரு சிக்னல்ல நின்னப்ப இவனும் என்னோட டாக்ஸிக்குப் பின்னாடி நின்னான். இப்ப இங்கே வந்திருக்கான். இதெல்லாம் தற்செயலா நடக்குதா, அல்லது அவன் என்னை ஃபாலோ பண்றானான்னு எனக்குப் புரியலை.”

“அவன் எதுக்காக உன்னை ஃபாலோ பண்ணணும்? நீ இப்ப குழப்பத்துல இருக்கறதுனால உனக்கு அப்படித் தோணுதுன்னு நினைக்கறேன்.”

“இருக்கலாம். இப்ப மிருதுளாவை நாம கண்டுபிடிக்கணும்னா அந்த அரவிந்த் கூடப் பேசினாலோ அல்லது சந்திச்சாலோதான் முடியும். அவனோட மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான். அவனை எப்படித் தொடர்பு கொள்ள முடியும்?”

“எனக்கு ஒரு ஐடியா தோணுது, ஏகாந்த். மிருதுளாவுக்கு ஒரு இ.மெயில் மெஸேஜ் அனுப்பிப் பார்க்கலாம். மிருதுளா அதைப் பார்த்தாள்னா உனக்கு போன் பண்ணிப் பேசுவாள்னு நினைக்கறேன்.”

“நல்ல ஐடியா. எனக்கு இது தோணவே இல்லையே?”

“கவலையிலும் குழப்பத்திலும் இருக்கும் போது அறிவு வேலை பார்க்கறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். வா, இங்க பக்கத்துல ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. போகலாம்.” இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறினர். ஒரு ‘ப்ரெளசிங் சென்ட்ட’ருக்குச் சென்று மிருதுளாவின் இ.மெயில் ஐ.டி.க்கு செய்தி அனுப்பி வைத்தான் ஏகாந்த்.

14

ஷோக்கைச் சந்தித்த அதே சென்ட்ரல் பார்க் ஹோட்டலிலேயே தனக்கு ஒரு ஏ.ஸி. அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான் ஏகாந்த்.

பெங்களூர் வந்து ஒரு இரவு முடிந்துவிட்டது. தூக்கம் இன்றிப் புரண்டதால் உடல் வலித்தது. இ.மெயில் மெஸேஜ் பார்த்துவிட்டுத் தன் செல்போனில் அவளது அழைப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த ஏகாந்த் ஏமாற்றம் அடைந்தான். மணியைப் பார்த்தான். ஏழு ஆக இருந்தது.

இன்ட்டர்காமில் காபிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, காபி வந்ததும் குடித்துவிட்டு, குளித்து முடித்துத் தயாரானான். அழைப்பு மணியின் ஒலி கேட்டது.

“யெஸ். கம் இன்.” குரல் கொடுத்தான். அஷோக் உள்ளே வந்தான்.

“என்ன, ஏகாந்த். இவ்வளவு டயர்டா இருக்க? சரியாகத் தூங்கலை போலிருக்கு. உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, மிருதுளாட்ட இருந்த ராத்திரி கூட போன் வரலைன்னு. சரி. டிபன் சாப்பிட்டுட்டியா?”

“காபி குடிச்சேன். அது போதும். நீ சாப்பிட்டியா? ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?”

“நான் வீட்டிலேயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன்.”

“நான் பெங்களூர் வந்திருக்கறதா வீட்ல யார்ட்டயும் சொல்லலையே?”

“ம்கூம். மூச்சு விடலை. சரி, அடுத்ததா என்ன செய்யப் போறோம்?”

“இ.மெயில் மூலமா மிருதுளா கிடைச்சிடுவாள்ன்னு ஒரு நாள் பொறுத்துப் பார்த்தாச்சு. இனிமேலயும் பொறுமையா இருந்தா அது சரி இல்லை. உண்மையிலேயே மிருதுளா அரவிந்த்தைத் தேடித்தான் வந்திருக்காளா அல்லது வருணாவோட மாந்த்ரீக நடவடிக்கையினால மிருதுளா காணாமப் போயிருக்காளா... இதெல்லாம் இல்லாம வேற ஏதாவது ஆபத்துல மாட்டி இருக்காளான்னு சீக்கிரமா நாம கண்டு பிடிச்சாகணும். அரவிந்த் மூலமா மிருதுளா காணாமப் போகலைன்னு தெரிஞ்சுட்டா உடனடியா நான் சென்னைக்குப் போய் அந்த வருணாவை உலுக்கி, உண்மையை வரவழைக்கணும்...”

“நீ சொல்றது சரிதான், ஏகாந்த். ஆனா நீ முதல்லயே வருணாவை மிரட்டி விசாரிச்சிருக்கணும்.”

“இல்லை. அஷோக். அப்பா இந்த விஷயம் வெளியில தெரியக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கார். அது மட்டுமில்லை... நான் ஆத்திரத்தோட, அவளை விசாரிக்கலாம்னு இருந்தப்ப, என்னோட மாமனார் இந்த இ.மெயில் மெஸெஜ் பத்தி சொல்லி என்னைக் கூப்பிட்டுட்டார். அரவிந்த்துக்கும், மிருதுளாவுக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால அவனோட இ.மெயிலுக்கு உடனடியா மிருதுளா பிரதிபலிச்சிருப்பாள்ங்கற நம்பிக்கையும் எனக்கு இருந்துச்சு. அதனாலதான் அவசரம் அவசரமா பெங்களூருக்கு வந்துட்டேன்.”

“மிருதுளா உன்கிட்ட சொல்லாமப் போறதுக்கு எந்தக் காரணமும் இல்லையே?”

“ஆமா, அஷோக்... நீ சொல்றது சிரிதான். ஆனா... ஒண்ணொண்ணையும் அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோன்னு யோசிக்க யோசிக்க ரொம்ப குழப்பமா இருக்கு. கவலையாவும் இருக்கு.”

“கவலைப்படாத, ஏகாந்த். நாம செய்ற முயற்சியினால மிருதுளாவைப் பத்தின தகவல் சீக்கிரமா கிடைக்கும்.”

“நாம அனுப்பின இ.மெயிலுக்குப் பதிலும் இல்லையே. பார்த்திருந்தா உடனே பதில் அனுப்பியிருப்பா...” தளர்வான குரலில் பேசிக் கொண்டிருந்த ஏகாந்த்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

“அஷோக்! நாம நேர அந்த அரவிந்த்தோட ப்ரஸ்சுக்குப் போய்ப் பார்த்தா என்ன?”

“நல்ல ஐடியா. நாம இப்ப உடனே அங்கே போகலாம்.”

இருவரும் டாக்ஸி விடித்து அரவிந்த்தின் ப்ரஸ்சுக்குச் சென்றனர். அங்கே இருந்த செக்யூரிட்டி இவர்களை நிறுத்தினான். யார் என்று விசாரித்தான். அவன் கன்னடத்தில் பேசியதால் அஷோக் அவனுக்குப் பதில் கூறினான்.

“நாங்க அரவிந்த்தோட ஃப்ரெண்ட்ஸ். சென்னையில இருந்து வந்திருக்கோம். அரவிந்த் ப்ரஸ்சுல இருக்கறதா அரவிந்த்தோட அப்பா அருண் பானர்ஜி சொன்னார்...” கன்னடத்தில் அஷோக் செக்யூரிட்டிற்கு விளக்கம் கொடுத்தான்.

“அரவிந்த் ஸார் இங்கே வரலை. வழக்கமா இந்த டைம்ல வந்துடுவாரு. ஆனால் இன்னிக்கி இன்னும் வரலை. எப்போ வருவார்னு தெரியாது. நீங்க அவரை மொபைல்ல கூப்பிட்டு அப்பாய்ட்மென்ட் வாங்கிட்டு வந்து பாருங்க.” செக்யூரிட்டி கன்னடத்தில் கூறிய தகவலை அஷோக் ஏகாந்த்திற்கு விளக்கினான்.

இதைக் கேட்ட ஏகாந்த் மிகவும் ஏமாற்றம் அடைந்தான்.

அவர்கள் இருவரும் தொடர்ந்து இரண்டு மணி நேரம்வரை அரவிந்த்தின் மொபைலில் அவனை அழைத்தனர். அவனது மொபைல் ‘ஸ்விச்ட் ஆப்’ என்றே மீண்டும் மீண்டும் குரல் வந்ததே தவிர, அரவிந்த் கிடைக்கவில்லை.


சோர்ந்து போனான் ஏகாந்த். அவனது தோளைத் தொட்டு ஆதரவாகப் பேச ஆரம்பித்தான் அஷோக்.

“அப்ஸெட் ஆகாத, ஏகாந்த். டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம். நாம ரூமுக்குப் போயி என்ன செய்யலாம்னு பேசுவோம் கிளம்பு.”

அரவிந்த்தின் பிரிண்ட்டிங் ப்ரஸ் காம்பெளண்டிற்கு வெளியே நின்று பேசிச் கொண்டிருந்த அவர்கள் இருவரும் ஹோட்டல் அறைக்குக் கிளம்பினார்கள்.

அறைக்கு வந்ததும் தலையில் கை வைத்தபடி கவலையோடு இருந்தான் ஏகாந்த். திடீரென்று கோபமாகப் பேச ஆரம்பித்தான்.

“அந்த அரவிந்த் எங்கே போனான்னு தெரியலை. அவனைப் பார்க்க முடியாம ரொம்ப குழப்பமா இருக்கு. வருணாவால என் மிருதுளா காணாமப் போயிருந்தாலோ அல்லது மிருதுளாவுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ... அந்த வருணாவை நான் சும்மா விட மாட்டேன். மாந்த்ரீகம், பில்லி, சூன்யம் இதிலயெல்லாம் எனக்கு ஒரு கடுகளவு கூட நம்பிக்கை கிடையாது. அதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை. பணம் பறிக்கறதுக்காகச் செய்யற ஃப்ராடு வேலை. இப்படி ஒரு ஃப்ராடு வேலையில முட்டாள்தனமா வருணா ஈடுபடுவாள்ன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.” கோபமாகப் பேசிக் கொண்டிருந்த ஏகாந்த்தைச் சமாதானப்படுத்த முயற்சித்தான் அஷோக்.

“டென்ஷன் ஆகறதுனால மன உளைச்சல்தான் ஜாஸ்தியாகும். ரிலாக்ஸ், ஏகாந்த்...”

“சரி, அஷோக். ஒரு நிமிஷம்... டாய்லெட் போயிட்டு வந்துடறேன்.” கூறிய ஏகாந்த் டாய்லெட் போவதற்காக எழுந்தான்.

அப்போது அறைக் கதவின் அருகே இருந்து யாரோ வேகமாக மறைந்து செல்வது தெரிந்தது.

15

டனே ஏகாந்த் அறையை விட்டு வெளியே வந்து மறைந்து நின்றிருந்து, பின் வேகமாகச் சென்றது யார் என்று பார்த்தான். மிக மிக வேகமாக நடந்து சென்றது அந்த உருவம். வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்தாலும் அந்த உருவத்திற்குரிய நபர், ஃப்ளைட்டிலும் ஏற்கெனவே ஹோட்டல் லாபியிலும் தான் பார்த்த அதே தொப்பி அணிந்தவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டான்.

அவனது சிந்தனை பரந்தது. விரிந்தது. ‘என்னைச் சுற்றி, என் வாழ்வைச் சுற்றி என்ன நடக்கிறது? இந்தத் தொப்பி மனிதன் யார்? இவன் ஏன் என்னைப் பின் தொடர்கிறான்? ஃப்ளைட்டில் பார்த்தது, நான் ஏறி வந்த டாக்ஸிக்குப் பின்னாடி அவன் வேறு டாக்ஸியில் வந்தது கூடத் தற்செயலாக இருக்கலாம். அதன்பின் ஹோட்டல் லாபியிலும், இதோ இப்போது என் அறையின் அருகில் நின்று பிறகு வேகமாக மறைந்து செல்வதும் தற்செயலான விஷயம் இல்லையே?’ சிந்தனைக் குதிரையைத் தட்டிக் கொண்டிருந்த ஏகாந்த்தின் முதுகைத் தட்டினான் அஷோக்.

“என்ன ஏகாந்த்.... திடீர்னு ரூமுக்கு வெளிய வந்து நிக்கற? இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க...?”

“மிருதுளா ஏதோ ஆபத்துல இருக்காளோன்னு பயமா இருக்கு. அஷோக். நான் உன்ட்ட காண்பிச்ச அதே தொப்பி மனிதன் இப்ப என் ரூம் கதவுட்ட மறைஞ்சு நின்னுட்டு வேகமா வெளியே போறதைப் பார்த்தேன்.”

“நல்லா பாத்தியா? அவன்தானா?...”

“அவனேதான். அந்த உயரம், பரந்த முதுகு, தொப்பி இதெல்லாம் அவன்தான்னு நல்லா அடையாளம் தெரியுதே...”

“நான் ஒண்ணு கேக்கறேன், ஏகாந்த்... தப்பா நினைச்சுக்காதே. கல்யாணத்துக்கு முன்னால நீ யாரையாவது காதலிச்சிருக்கியா? எதுக்காகக் கேக்கறேன்னா... காதல் கை கூடாம... நீ வேற ஒரு பொண்ணான மிருதுளாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட கோபத்துல உன்னைப் பழி வாங்கிறதுக்காக இப்படியெல்லாம் பயமுறுத்தறாங்களோன்னுதான்...” அஷோக் பேசி முடிப்பதற்குள் ஏகாந்த் குறுக்கிட்டான்.

“உன்னோட சந்தேகம் நியாயமானதுதான். இதுல தப்பா நினைச்சுக்கறதுக்கு என்ன இருக்கு? ஆனா... நான் எந்தப் பொண்ணையும் காதலிச்சது இல்லை. நான் காதலிச்சது என் மனைவி மிருதுளாவைத்தான். முதல் நாள்... ஒரே நாள் அவ கூடப் பேசியிருக்கேன்னாலும்... அந்த ஒரே நாள்... அவ கூடப் பழகினதுல என்னோட மனசைப் பறிகுடுத்துட்டேன். என் உயிரையே அவ மேல வச்சுட்டேன். ஒரு ராத்திரி மட்டுமே பழகினாலும் அவ என் இதயம் முழுசும் நிறைஞ்சுட்டா. அவ இல்லாத வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையே கிடையாது. எனக்கு அவ வேணும். என்னோட மிருதுளா எனக்கு வேணும். அவளைத் தவிர நான் வேற யாரையும் காதலிச்சது இல்லை...” உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான் ஏகாந்த்.

“ஸாரி, ஏகாந்த். உனக்கு எந்த வழியில பிரச்னை உருவாகுதுங்கற யோசனையிலதான் நான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். மிருதுளா படிச்சவ. முற்போக்குச் சிந்தனை உள்ளவள்னு நீ சொன்ன. அப்படி இருக்கும்போது யார் கிட்டயும் சொல்லாமக் கொள்ளாமப் போகக் கூடியவள் இல்லைன்னு புரியுது. முதல் இரவு அன்னிக்கு, விடியற நேரத்துக்குள்ள புதுமணப் பெண்ணைக் காணோங்கறது அதிர்ச்சியான விஷயம் மட்டுமில்ல. மர்மமான விஷயமாவும் இருக்கு... ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பழைய பாடலை உன்னோட மாமனார் வீட்ல, உன்னோட முதல் இரவு அறை வரைக்கும் கேக்கற மாதிரி யாரோ ஒலி பரப்பியிருக்காங்க. அந்தப் பாடலுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

“எனக்கும் பழைய பாடல்களுக்கும் சம்பந்தமே கிடையாது. அதிலயும் குறிப்பா இந்த ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பாடலை நான் கேட்டதே இல்லை. கிஃப்ட் பார்சல்ல வந்திருந்த அந்த ஸி.டி.யை மிருதுளா அவளோட ஆடியோ ப்ளேயர்ல போட்டா. அந்த ஸி.டி. முழுசும் திரும்பத் திரும்ப ‘வருவேன் நான் உனது’ பாடல்கள் ரெக்கார்ட் ஆகியிருந்துச்சு. ஆடியோ ப்ளேயர்ல போட்டிருந்த அந்த ஸி.டி.யை மிருதுளா வெளில எடுத்துட்டதா சொன்னா. அதுக்கப்புறமும் அந்தப் பாட்டு கேக்குதுன்னு மிருதுளா உறுதியாச் சொன்னா. ஆனா எனக்குக் கேக்கவே இல்லை.”

“ரொம்ப ஆச்சர்யமா இருக்கு ஏகாந்த். ஒண்ணுமே புரியலை. தானாகவே சுதந்திரமாய் எங்கேயும் போகக் கூடிய தைர்யமும், துணிச்சலும் நிறைஞ்ச மிருதுளாவுக்கு யாரோ வேற்று நபர்களால ஆபத்து ஏற்பட்டிருக்கணும்.”

“அவளுக்கு ஒரு ஆபத்துன்னு நினைக்கறப்ப ரொம்ப பயமா இருக்கு. என்னதான் ஒரு பொண்ணு தைர்யசாலியா இருந்தாலும், எதிர்பாராத சிக்கல்ல சிக்கிட்டாள்ன்னா பிரச்னைதான். தன்னோட துணிச்சலை வெளிப்படுத்திக்கறதுக்கு சந்தர்ப்பம் ஒத்துழைக்காத அளவுக்குப் பெரிய பிரச்னையாயிருந்தா...? அதுதான் என்னோட மிகப் பெரிய பயம்.”

“உன்னோட பயம் நியாயமானது. அதனால இந்த விஷயத்தை போலீஸ்ல சொல்லிட்டா என்ன? அவங்க ரொம்ப தீவிரமா ஈடுபட்டு, சீக்கிரமா கண்டுபிடிச்சுடுவாங்க, ஏகாந்த்...”

“ஐயோ! வேண்டாம், அஷோக். போலீஸ்ல சொன்னா பிரச்னை பூதாகரமாயிடும். விஷயம் வெளில கசிஞ்சிடும். குடும்ப கெளரவம் குலைஞ்சு போயிடுமே...”


“நீ சொல்றது சரிதான். ஆனா... மிருதுளாவை நாம உயிரோட கண்டுபிடிக்கணுமே. போலீஸ் அளவுக்கு நம்பளால எல்லா இடங்கள்லயும் உள்ளே நுழைய முடியாது. சில சந்தர்ப்பங்கள்ல நாம என்ன செய்யறதுன்னு தெரியாம திணற வேண்டியதிருக்கு. போலீஸ்ன்னா அவங்களோட அதிகாரத்தைப் பயன்படுத்தி வேகமா செயல்படுவாங்க. நம்பளால அவங்க அளவுக்குத் தீவிரமா செயல்பட முடியாது...”

“முடியாதுன்னு எனக்குப் புரியுது. ஆனா... நான் சொன்னேனே... இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாதுன்னு... அதான் யோசிக்கிறேன்.”

“யோசிக்கறதுக்கு ஒரு எல்லை உண்டு, ஏகாந்த். ‘காலம் கடந்துடுச்சே’ன்னு வருத்தப்படும்படியா எதுவும் நடந்துடக் கூடாது பாரு...”

“ஐயோ... அப்படியெல்லாம் எதுவும் ஆயிடக்கூடாது, அஷோக். போலீஸ்லயே சொல்லிடலாம். ஆனா... மிருதுளா காணாமப் போன விபரத்தைப் பத்திரிகையில வெளிவராம பார்த்துக்கணும். இது நம்பளால முடியுமா?”

“முடியும் ஏகாந்த். நாம கம்ப்ளெயிண்ட் குடுக்கற ஸ்டேஷன்ல உள்ள போலீஸ் அதிகாரிகள்ட்ட ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டோம்ன்னா அவங்க, பத்திரிகைகளுக்கு இது சம்பந்தப்பட்ட செய்தியைக் குடுக்க மாட்டாங்க.”

“அப்படியா? அப்படின்னா சரி. ஆனா... மிருதுளா காணாமப் போன விஷயத்தைப் பெங்களூர் போலீஸ்ல சொல்றது சரியா? இல்லை, சென்னை போலீஸ்ல சொல்லலாமா...?”

“சென்னையில கம்ப்ளெயிண்ட் குடுக்கறதுதான் நல்லது...”

“ஓகோ. அப்படின்னா நான் இப்ப உடனே சென்னைக்குக் கிளம்பணும். ஏர்போர்ட் போய் ஓப்பன் டிக்கெட் எடுத்துப் போய்க்கறேன். போய் அப்பாட்ட பேசி, அவரைச் சமாதானப்படுத்திட்டு, உடனடியா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்துடறேன்.”

“அதுதான் நல்லது, ஏகாந்த். நாம இதில ஈடுபட்டுக்கிட்டிருந்தா நேரம் காலம்தான் ஓடுமே தவிர, வேற எந்தப் பிரயோஜனமும் கிடையாது. நான் வேணும்ன்னா உன் கூட சென்னை வரட்டுமா?”

“சச்ச... நீ எதுக்குச் சிரமப்பட்டுக்கிட்டு?... உன்னோட உதவி தேவைப்பட்டா நானே உன்னைக் கூப்பிடுவேன். அது மட்டுமில்ல. போலீஸ் டிபார்ட்மென்ட்ல இந்த வேலையை ஒப்படைச்சுட்டா... அவங்க பார்த்துப்பாங்க. நான் வேற என்ன செய்யப் போறேன்? இது தொடர்பான என்னோட ஒரே வேலை... அந்த வருணாவை ஃபாலோ பண்ணி, அவ என்னதான் செய்யறாள்ன்னு கண்டுபிடிக்கணும். அவ ரூம்ல எலுமிச்சம்பழம், பொம்மையெல்லாம் பார்த்ததில் இருந்து அவ மேல ஒரே ஆத்திரமா இருக்கு...”

“த்சு... பாவம். சின்னப் பொண்ணு... என்னவோ உன் மேல உள்ள ஆசையில புத்தி தடுமாறிப் போயிட்டா... விடு. இப்ப நீ கிளம்பு” என்ற அஷோக், ரிஸப்ஷன் நபரை அழைத்தான். கன்னடத்தில் பேசினான்.

“ரூம் நம்பர் டூ நாட் ஒன்ல இருந்து பேசறேன். பில் போட்டுடுங்க. இப்ப ரூமைக் காலி பண்றோம்.”

அஷோக் பேசி முடிப்பதற்குள் ஏகாந்த் தன் பொருட்களைப் பெட்டியில் எடுத்துத் தயாரானான். இருவரும் ரிஸப்ஷனுக்குச் சென்றனர்.

ரிஸப்ஷனிஸ்ட் பில்லைக் கொடுத்ததும், ஏகாந்த் தன் க்ரெடிட் கார்டைக் கொடுத்தான். க்ரெடிட் கார்டை வாங்கிய ரிஸப்ஷனிஸ்ட், அதை மிஷினில் கொடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை முடித்தபின், ஸ்லிப்பில் ஏகாந்த்திடம் கையெழுத்து வாங்கினாள். பில்லை ஒரு கவரில் வைத்து ஏகாந்த்திடம் கொடுத்தாள்.

“தாங்க்யூ ஸார்!” மந்திரப் புன்னகையை உதிர்த்தபடியே கூறினாள்.

வெல்கம் கூறிய ஏகாந்த் வெளியேறினான். அஷோக் அவனைப் பின் தொடர்ந்தான். இருவரும் ஒரு டாக்ஸியில் ஏறினர்.

டாக்ஸி விரைந்தது.

“அஷோக், மிருதுளா காணாமப் போயிட்ட விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. ஜாக்கிரதையா இருந்துக்கோ, அஷோக். ப்ளீஸ்...”

“என்ன, ஏகாந்த் இது... என்னை நம்பு. நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன். உன்னோட பிரச்னை என்னோட பிரச்னை மாதிரி. பெரியம்மா பையன், சித்தி பையன்ங்கற உறவையும் தாண்டி கூடப் பிறந்தவங்க மாதிரிதானே சின்னப் பிள்ளையில இருந்து நாம பழகிட்டிருக்கோம்? எனக்குப் பெங்களூர்ல வேலை கிடைச்சதுனால நான் இங்க வந்துட்டேன். உன்னோட பேச்சை மீறி, என்னோட வாக்கை மீறி, இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீ தைர்யமா இரு. நம்ம தமிழ்நாடு போலீஸ் ரொம்ப கெட்டிக்காரங்க. நிச்சயமா, மிருதுளாவைச் சீக்கிரமா கண்டுபிடிச்சுடுவாங்க.”

“மிருதுளா சராசரிப் பொண்ணு இல்ல. அவ புதுமைப் பெண். புரட்சிகரமான பெண். என்னோட அமைதியான குணத்துக்கு நேர்மாறான ஆர்ப்பாட்டமான பெண். அதே சமயம் அன்பான பெண். ஆழமா என்னை நேசிக்கற பெண். சில மணி நேரங்கள்லயே நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம். அவளுக்கு ஆண் நண்பர்கள் உண்டுன்னு அவளே சொன்னதும் என்னோட மனசுல ‘சுருக்’ன்னு ஒரு தாக்கம் உண்டாச்சு. என்னை அறியாமலே என் முக பாவம் அந்தத் தாக்கத்தை வெளிப்படுத்திடுச்சு. அதைப் புரிஞ்சுக்கிட்ட மிருதுளா, ‘இது ஆண்களுக்கே உரிய பொதுவான, இயற்கையான இயல்பு!’ன்னு யதார்த்தமா பேசினா. கல்யாணத்துக்கு முன்னால போன்ல கூட நாங்க பேசிக்கிட்டதில்ல. ஆனா கல்யாணத்தன்னிக்கு ராத்திரி நிறையப் பேசினோம். அந்தக் கொஞ்ச நேரப் பழக்கத்திலேயே மிருதுளா என் மனசோட ரொம்ப நெருக்கமாயிட்டா. இப்ப நெருஞ்சி முள் மாதிரி என் மனசு குத்துது, அவளைக் காணாம...”

“காணாமப் போன மிருதுளா சீக்கிரம் கிடைச்சுடுவா. கவலைப்படறதை நிறுத்திட்டு காரியத்துல கண்ணா இருந்து இறங்கு. ஆல் தி பெஸ்ட்...”

“தாங்க்யூ, அஷோக்!” அஷோக்கை அனுப்பிவிட்டு, ஏகாந்த் டிக்கெட் கொடுக்குமிடத்திற்குச் சென்றான்.

“உடனடியா சென்னை போற ஃப்ளைட்டுக்கு ஒரு டிக்கெட் குடுங்க ப்ளீஸ்!” டிக்கெட்டைக் கேட்டு வாங்கிக் கொண்ட ஏகாந்த், பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குச் சென்றான். இன்னும் அரைமணி நேரத்தில் சென்னை கிளம்பும் ஃப்ளைட் புறப்படும் என்றும் பிரயாணிகள் வரலாம் என்றும் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, போர்டிங் பாஸ் ஷர்ட் பாக்கெட்டில் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு அறிவிப்பில் சொன்ன கேட் அருகே இருந்த க்யூவில் நின்றான்.

உடல் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் மனம் ஏதேதோ சிந்தனைகளின் வயப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் இரண்டு பேர் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன் ‘க்யூ’ நகராமல் நிற்கவே, அடுத்த இரண்டு நபர்கள் எரிச்சலுற்றனர். அவர்களுள் ஒருவர் ‘எக்ஸ்க்யூஸ் மீ!’ என்று கோபமாகக் கத்தினார். அந்த சப்தத்தினால் சிந்தனை கலைந்த ஏகாந்த், முன் பக்கம் என்ன நடக்கிறது என்று கவனித்தான். ‘எக்ஸ்க்யூஸ் மீ!’ என்று அந்த நபர் கத்தியதும் அவருக்கு முன் நின்றிருந்த நபர், தன் மொபைல் போனில் செய்தி அனுப்பிக் கொண்டிருப்பதை நிறுத்தினான். ‘ஸாரி’ என்று சொல்லிவிட்டு வரிசையின் முன்புறம் நகர்ந்தான்.


அவனைப் பார்த்த ஏகாந்த்திற்குத் திகைப்பாக இருந்தது. காரணம் அந்த நபர் தொப்பி அணிந்தவன்!

‘இந்தத் தொப்பி மனிதனைத் தற்செயலாக நான் பார்க்க நேரிடுகிறதா அல்லது இவன் என்னைப் பின் தொடர்கிறானா?’ ஏகாந்த் யோசிப்பதற்குள் க்யூ வேகமாக நகர்ந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தினுள் ஏறி உட்கார்ந்தான் ஏகாந்த். தொப்பி அணிந்தவனைக் கவனிக்காதது போலவும், சாதாரணமாக இருப்பது போலவும் நடித்தபடி அவனைக் கண்காணித்தான். அந்தத் தொப்பி அணிந்தவன், ஏகாந்த்தின் பக்கமே பார்க்காமல் ஒரு ஆங்கில நாவலில் மூழ்கினான். விமானம் பறந்தது. சென்னையை வந்து அடைந்தது. விமான தளத்தில், ஏகாந்த்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக நடந்து வெளியேறினான் தொப்பி அணிந்தவன். நெஞ்சம் நிறையத் துக்கத்துடனும், தூக்கம் இல்லாத கண்களுடனும் தளர்வாய் நடந்து டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தான் ஏகாந்த்.

16

“வேற வழியே இல்லைப்பா. போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்துத்தான் ஆகணும்... எனக்கு என்னோட மிருதுளா வேணும்...”

“வேணும்தான்ப்பா யார் வேணாங்கறாங்க?.... ஆனா... நம்ப குடும்ப கெளரவம்...”

“கெளரவம் பார்த்துதான்ப்பா நானும் பொறுமையா இருந்தேன். நானே அவளைத் தேடிப் போனேன். ஆனா... கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரிதான் இருக்கே தவிர ஒரு தகவலும் தெரியலப்பா. மிருதுளா காணாமப் போய் முழுசா ரெண்டு நாளாயிடுச்சு. இதுக்கும் மேலயும் கெளரவம், மானம்னு நாம பாட்டுக்கு அலட்சியமா இருந்துட்டா... அவ உயிரோட கிடைக்கறதே கஷ்டம்ப்பா...”

“கஷ்டமாத்தான்ப்பா இருக்கு. மகன் கல்யாணமாகிக் கலகலன்னு சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கணும்னு ஆசையா நாங்க இருக்கறப்ப... இப்படி புதுப் பொண்ணு காணாமப் போயிட்டாளேன்னு கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்றது? நடக்கறது நடக்கட்டும். போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்துடு. அவங்களாவது சீக்கிரமா மிருதுளாவைக் கண்டுபிடிக்கட்டும். உன்னோட முகமே சரியில்ல. கண்ணைச் சுத்திக் கருவளையம் விழுந்திருக்கு. நீ பெங்களூர் புறப்பட்டுப் போனதில் இருந்து அம்மா, பூஜையறையே கதியாக் கிடக்கா. போ. போய் அம்மாவைப் பாரு. பார்த்துட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பு.”

“சரிப்பா,” என்ற ஏகாந்த், பூஜையறைக்குச் சென்றான். அங்கே சோகமாய் உட்கார்ந்தபடி ஸ்லோகப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த சீதாவைப் பார்த்தான். அவளிடம் விபரங்களைக் கூறிவிட்டு, ஆறுதலாகச் சில நிமிடங்கள் பேசிவிட்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தான். கார் சாவியை எடுத்தான். போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தான்.

17

சென்னை பி11 போலீஸ் ஸ்டேஷன்.

நகரத்தின் முக்கியமான பிரமுகர் ஒருவர் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரிடம் தான் கொடுக்க வந்த புகார் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் நேர்மையான போலீஸ் அதிகாரி என்று பெயர் எடுத்தவர். நல்ல உயரமும், பெரிய மீசையும் அவரது தோற்றத்திற்கு மேலும் கம்பீரத்தை அளித்திருந்தன. வந்திருந்த பிரமுகரிடம் பேசி முடித்துவிட்டு அவரை அனுப்பியபின், அன்றைய தினம் பார்க்க வேண்டிய முக்கியமான ஃபைலைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தபோது ஏகாந்த் உள்ளே வருவதைப் பார்த்தார். அவருக்கு ஏகாந்த் வணக்கம் தெரிவித்தான்.

“இன்ஸ்பெக்டர் ஸார்... என் பேர் ஏகாந்த். ஒரு கம்ப்ளெயிண்ட் குடுக்கணும் ஸார்.”

“உட்காருங்க.”

ஏகாந்த் உட்கார்ந்தான்.

“சொல்லுங்க, மிஸ்டர் ஏகாந்த்.”

“எனக்கு இன்னிக்கு கல்யாணமாகி மூணாவது நாள். கல்யாணமான அன்னிக்கு ராத்திரி முடிஞ்சு, காலையில என் மனைவியைக் காணோம் ஸார்.”

“உங்க மனைவியோட பேர் என்ன?”

“மிருதுளா.”

“அவங்க வயசு?”

“இருபத்து நாலு.”

“படிச்ச பொண்ணா?”

“ஆமா ஸார். எம்.ஏ. ஸோஸியாலஜி படிச்சிருக்கா.”

“உங்க கல்யாணத்துக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல பேசி இருக்கீங்களா?”

“இல்ல ஸார். பேசலை. முதல் இரவுலதான் நான் அவ கூடப் பேசினேன்...”

“நல்லா கலகலப்பா பேசினாங்களா?”

“கலகலப்பா மட்டுமில்ல, மனம் விட்டு ஓப்பனா பேசினா ஸார்...”

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால வேற யாரையாவது காதலிச்சதா சொன்னாங்களா?”

“இல்ல ஸார். தனக்கு யார் மேலயும் காதல் வரலைன்னும், எங்க ரெண்டு பேர் ஃபேமிலியும் ஒண்ணா சேர்ந்து ரெஸ்ட்டாரண்ட்ல சந்திச்சுப் பேசும்போதுதான், என் மேல அவளுக்கு லவ் வந்ததாகவும் சொன்னா ஸார்.”

“அது உண்மையா இருக்கும்னு நீங்க நம்பறீங்களா?”

“யெஸ் ஸார். நான் நம்பறேன்... மிருதுளா ரொம்ப நல்ல பொண்ணு. மனசுக்குள்ள ஒண்ணை மறைச்சு வச்சு, முகத்துக்கு நேரா வேற மாத்திப் பேசற பொண்ணு இல்ல அவ. தனக்கு ஆண் நண்பர்கள் இருக்கறதா வெளிப்படையா சொன்னா. உண்மையிலேயே அவ யாரையோ காதலிச்சிருந்தா... அவளுக்குத் தடையேதும் விதிக்கக் கூடியவர் இல்ல அவளோட அப்பா. அந்த அளவுக்குச் சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. யாரையோ காதலிச்சுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு இல்ல ஸார்...”

“உங்க கல்யாணத்துக்கு அவங்களோட நண்பர்கள் யாராவது வந்திருந்தாங்களா?”

“இல்ல ஸார். அவளோட சிநேகிதிகள் வந்திருந்தாங்க. நண்பர்கள் யாரும் வரலை. வெளிநாட்டில் ஸெட்டில் ஆன அவங்க, இ.மெயில்ல வாழ்த்து அனுப்பி இருக்கிறதா மிருதுளா சொன்னா... ஸார்! இ.மெயில்ன்ன உடனே ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது ஸார். பெங்களூர்ல இருந்து அரவிந்த்ன்னு ஒரு நண்பன் மிருதுளாவுக்கு இ.மெயில் அனுப்பி இருந்தான். கல்யாணம் முடிஞ்சு விடியற்காலம் நாலு மணிக்கு இந்த இ.மெயில் வந்திருக்கு. அவன் காதலிக்கற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க அவங்கப்பா சம்மதிக்கலைன்னு உதவி கேட்டுச் செய்தி அனுப்பி இருந்தான்.”

“அந்த இ.மெயில் செய்தியைப் பார்த்துட்டுதான் மிருதுளா கிளம்பிப் போயிருப்பாங்களா?”

“தெரியலை ஸார். அப்படிப் போறதா இருந்தாலும் சொல்லாமப் போக வேண்டிய அவசியம் இல்லையே ஸார்...”

“சரி... உங்க மனைவி மிருதுளாவோட கோணத்துல பார்க்கும்போது எந்தச் சிக்கலும் இல்லைங்கறீங்க... அந்த அரவிந்த்தோட இ.மெயிலைத் தவிர...” அப்பொழுது ஏகாந்த் குறுக்கிட்டுப் பேசினான்.

“அந்த அரவிந்த்தைச் சந்திக்கப் பெங்களூருக்குப் போனேன் ஸார். அவனைப் பார்க்க முடியல. மொபைல்லயும் அவன் கிடைக்கல. மனசு அப்ஸெட் ஆகி நான் இங்கே கிளம்பி வந்துட்டேன்...”

“ஓகோ. உங்க ஸைட்ல உங்களை யாராவது காதலிச்சாங்களா? எதுக்காகக் கேக்கறேன்னா... மிருதுளா தானாவே வீட்டை விட்டுப் போகக் கூடிய வாய்ப்புகள் இல்லாத பட்சத்துல இந்தக் கேள்வியை நான் உங்ககிட்ட கேக்க வேண்டியதிருக்கு...”

“என் மனைவி மிருதுளா, எனக்கு மனைவியாகற வரைக்கும், என்னை யாரும் காதலிக்கல. நானும் யாரையும் காதலிக்கல ஸார்.


நான் மிருதுளாவைத்தான் காதலிக்கறேன். அவ மேல என் உயிரையே வச்சிருக்கேன்.”

“உங்க பிஸினஸ் தொடர்பா உங்களுக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா?”

“தொழில் போட்டிங்கற முறையில கூட எனக்கு யாரும் விரோதிகள் கிடையாது ஸார். ஆனா நான் பெங்களூருக்கு மிருதுளாவைத் தேடிப் போனப்ப ஃப்ளைட்ல என்னோட ஸீட்டுக்குப் பின்னால ஒரு தொப்பி மனிதன் இருந்தான். அவனை எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்துச்சு. ஆனா எங்கே பார்த்திருக்கேன்னு எனக்கு ஞாபகம் வரலை. அவன் பெங்களூர்ல என்னை ஃபாலோ பண்ணினான். நான் தங்கியிருந்த லாட்ஜ்லயும் அவனைப் பார்த்தேன். என்னோட ரூமுக்கு வெளியே நின்னுக்கிட்டிருந்தான். அவன் ஏன் என்னை ஃபாலோ பண்ணணும்னு எனக்குப் புரியல ஸார். எனக்கு இந்த குழப்பத்துல அவன் என்னைத்தான் பின்தொடர்ந்தானா அப்படிங்கற விஷயத்தை என்னால உறுதியா சொல்ல முடியல. இன்னொரு விஷயம்... எங்க கல்யாணத்துக்கு வந்திருந்த பரிசுப் பார்ஸல்கள்ல ஒரு பரிசுப் பார்ஸல் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. நிறையச் சிகப்பு ரோஜாக்கள் வரைஞ்சு, அதுக்கு நடுவுல என்னோட பேரையும், அட்ரஸையும் எழுதியிருந்தாங்க... பரிசுப் பொருளா ஒரு ஆடியோ ஸி.டி. இருந்துச்சு. அந்த ஸி.டி. முழுசும், ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ அப்படிங்கற பழைய பாட்டு ரெக்கார்டு பண்ணியிருந்துச்சு.”

“இந்தத் தகவல் ரொம்ப அபூர்வமானதா இருக்கே. நீங்க சொல்ற இந்தப் பாட்டு, இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியவே தெரியாதே...”

“அப்படியில்ல ஸார். நீங்க நினைக்கறது தப்பு. இந்தப் பாட்டு மிருதுளாவுக்கு நல்லா தெரியுது. அவளுக்குப் பழைய பாடல்கள்னா ரொம்பப் பிடிக்குமாம். மெல்லிசை மன்னரோட இசையமைப்புல உருவான பாடல்களை ரொம்ப விரும்பிக் கேப்பாளாம். அவளோட ஃப்ரெண்ட் கூட மிருதுளாவுக்கு நிறையப் பழைய பாட்டை ரெக்கார்ட் பண்ணிக் கல்யாணப் பரிசா குடுத்திருக்கா. ஆனா இந்த ‘வருவேன் நான் உனது’ பாடலை ரெக்கார்ட் பண்ணி கிஃப்ட் பார்ஸல்ல வச்சி அனுப்பினது வேற யாரோ. அதை யார் குடுத்தாங்கன்னு தெரியலை. குடுத்தவங்க பேரு அந்தப் பார்ஸல்ல இல்ல. ரொமப் ஆச்சர்யமான விஷயம்... என்னன்னா ஸார்... அந்த ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பாட்டை ரெக்கார்ட் பண்ணி மிருதுளாவுக்குக் குடுத்திருந்தா அது பொருந்தும். ஆனா அந்த கிஃப்ட் என்னோட பேருக்கு வந்திருக்கு.”

“ஓகோ...”

“ஸார்! என் மிருதுளா மேல நான் என் உயிரையே வச்சிருக்கேன் ஸார். அவளைச் சீக்கிரமா தேடிக் கண்டுபிடிச்சுக் குடுங்க ஸார். அவ கூட வாழ்ந்தது என்னமோ சில மணி நேரங்கள்தான்... ஆனா யுகம் யுகமா, ஜென்ம ஜென்மமா அவ கூடத்தான் வாழணும்ங்கற ஆசையும், அன்பும் எனக்குள்ள உருவாயிடுச்சு ஸார். அவ இல்லாம நான் இல்ல ஸார். ப்ளீஸ் என்னோட மனைவியைக் கண்டுபிடிச்சுக் குடுங்க ஸார்.”

“பதற்றப்படாதீங்க, மிஸ்டர் ஏகாந்த். உங்க கவலையும், பயமும் எனக்குப் புரியுது. மிருதுளா காணாமப் போனதைக் குறிச்சு நீங்க குடுத்திருக்கற தகவல்களை வச்சு நாங்க மூவ் பண்ணுவோம். எங்களால முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமா கண்டுபிடிச்சுடுவோம். கம்ப்ளெயிண்ட்டை எழுதிக் குடுத்துட்டுப் போங்க...”

“தாங்க்யூ ஸார். என்னோட மொபைல் நம்பரைக் குறிச்சுக்கோங்க ஸார். ஏதாவது தகவல் வேணும்னா கூப்பிடுங்க ஸார்...” கூறிய ஏகாந்த், தன் மொபைல் நம்பரை இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரிடம் கொடுத்துவிட்டுப் போனான்.

கனத்த இதயத்துடனும், கவலை சூழ்ந்த முகத்துடனும் காரில் ஏறி அமர்ந்த ஏகாந்த், கார் ஸ்டீயரிங்கின் மீது தலையைக் கவிழ்த்தான். சில நிமிடங்களில் தன்னைச் சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்தவன், காரின் கண்ணாடியைச் சரிப்படுத்துவதற்காக நிமிர்ந்தான். திடுக்கிட்டான்.

அந்தச் சிறு கண்ணாடியில் ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ என்று ரத்தச் சிகப்பில் எழுதப்பட்டிருந்தது.

18

கார் கண்ணாடியில் ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பாடலின் முதல் வரிசை எழுதி இருந்ததைப் பார்த்துக் திடுக்கிட்ட ஏகாந்த், காரை விட்டு இறங்கி மறுபடியும் காவல் நிலையத்திற்குள் சென்றான்.

“இன்ஸ்பெக்டர் ஸார்...” பதற்றத்துடன் உள்ளே நுழைந்த ஏகாந்த்தைப் பார்த்தார் ப்ரேம்குமார். அவரது புருவங்கள் கேள்விக் குறி முடிச்சை உருவாக்கின.

“என்ன மிஸ்டர் ஏகாந்த்...?”

“ஸார், என்னோட காரை பார்க் பண்ணிட்டு வர்றப்ப காரை ‘லாக்’ பண்ணாம வந்துட்டேன். கார் கண்ணாடியில சிகப்புக் கலர்ல ‘வருவேன் நான் உனது’ பாட்டோட முதல் வரியை யாரோ எழுதி வச்சிருக்காங்க ஸார்.”

“என்னது?! உங்க கார் கண்ணாடியிலயா? வாங்க, போய்ப் பார்க்கலாம்...”

இருவரும் காரின் அருகே சென்றனர். ஏகாந்த் கார் கதவைத் திறந்தான். இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் குனிந்தபடி கண்ணாடியைப் பார்த்தார். கண்ணாடியில் எந்த எழுத்துக்களும் இல்லை.

“என்ன மிஸ்டர் ஏகாந்த்... ‘வருவேன் நான் உனது’ பாட்டோட முதல் வரி எழுதியிருக்குன்னீங்க. ஒண்ணுமே எழுதலியே?”

“இப்ப நான் எழுதியிருந்ததைப் பார்த்துட்டுதானே ஸார்... உங்களைக் கூப்பிட வந்தேன்...?!”

“உங்க மனைவி காணாமல் போன கவலையிலயே மூழ்கிட்டதால இப்படியெல்லாம் பிரமையா தேணுது உங்களுக்கு. காணாமப் போனது ஒரு பொருளோ நகையோ இல்லை. உங்க மனைவி. அதனால ஏற்பட்ட மனக் குழப்பத்துல தவிக்கறீங்க மிஸ்டர் ஏகாந்த். கிளம்புங்க. உங்க மனைவியைத் தேடற வேலையைச் சீக்கிரமா ஆரம்பிச்சிடறோம்.”

“ஓ.கே.ஸார்.” சுரத்தில்லாமல் பதில் கூறிய ஏகாந்த், காரில் ஏறி உட்கார்ந்து அங்கிருந்து கிளம்பினான்.

19

காரில் ஏறிக் கிளம்பிய ஏகாந்த், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அஷோக்கின் மொபைல் நம்பர்களை அழுத்தினான். மறுமுனையில் அஷோக் பேசினான்.

“ஹலோ... ஏகாந்த்...”

“அஷோக்... போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டேன்...”

“அப்படியா? ரொம்ப நல்லது. தமிழ்நாடு போலீஸ் துறையில நல்ல திறமையானவங்க இருக்காங்க. இனி மிருதுளாவைக் கண்டுபிடிக்கற பொறுப்பை அவங்க பார்த்துப்பாங்க... அது சரி... நீ ஏன் ரொம்ப ‘டல்லா’ பேசற? என்னமோ கிணத்துக்குள்ள இருந்து பேசற மாதிரி இருக்கே உன்னோட குரல்?...”

 

“ஆமா, அஷோக். போலீஸ்ல சொல்லிட்டா அவங்க மிருதுளாவைக் கண்டுபிடிச்சுடுவாங்கன்னு கொஞ்சம் தைர்யமா இருந்தேன். ஆனா... என்னோட கார் கண்ணாடியில ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ பாட்டை யாரோ ரத்தக்கலர்ல எழுதி வச்சிருந்தாங்க... அது ரத்தம்தானா அல்லது கலரான்னு கூட நான் கவனிக்கலை. அவசரமா இன்ஸ்பெக்டரைக் கூப்பிட மறுபடியும் ஸ்டேஷனுக்குள்ள போயிட்டேன்...”

“என்ன? உன்னோட கார் கண்ணாடியிலயா?”

 


“ஆமாம், அஷோக், ஏதோ கொஞ்ச நஞ்சம் இருந்த தைர்யமும் போச்சு...”

“ஏன் இவ்வளவு ‘அப்ஸெட்’ ஆகிப் பேசற, ஏகாந்த்?”

“கார் கண்ணாடியில எழுதியிருந்ததைக் காண்பிக்கலாம்னு இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரைக் கூட்டிட்டு வந்தேன். ஆனா, கண்ணாடியில எந்த எழுத்தும் இல்லாம சுத்தமா அழிக்கப்பட்டிருந்துச்சு...”

“ரொம்ப ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாவும் இருக்கே?! அந்தச் சில நிமிஷ நேரத்துல எழுதறதும் அதை அழிக்கறதும் எப்படிச் சாத்தியமாச்சு? ஒண்ணுமே புரியலியே?...”

“அந்தப் புரிபடாத மர்மங்களாலதான் நான் ‘அப்ஸெட்’ ஆயிட்டேன், அஷோக்...”

“தைர்யமா இரு ஏகாந்த். போலீஸ் டிபார்ட்மென்ட் சீக்கிரமா எல்லாத்தையும் துப்பறிஞ்சு, மிருதுளாவையும் கண்டு பிடிச்சுக் குடுப்பாங்க.”

“அந்த நம்பிக்கையிலதான் நானும் இருக்கேன். அஷோக் வேற ஏதாவது விஷயம்னா உனக்கு போன் பண்றேன். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வீட்டுக்குப் போய்க் கிட்டிருக்கேன்...”

“சரி, ஏகாந்த். தைர்யமா இரு.”

“ஓ.கே., அஷோக். தேங்க்யூ.”

பேசி முடித்த ஏகாந்த், மொபைலை மெளனப்படுத்தி விட்டு, காரைக் கிளப்பினான்.

20

மீரா ஷாம்பூ போட்டுக் குளித்த கூந்தல் சிக்கல்கள் இல்லாமல் பளபளவென மின்ன, சற்று ஈரமான தலை முடியை உலர வைப்பதற்காக விரித்துப் போட்டபடி தன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் வருணா. அவளது தலைமுடியில் இருந்த தண்ணீரின் ஈரம் போல அவளது கண் இமைகளிலும் கண்ணீரின் ஈரம்! ஏகாந்த்தை ஒரு தலையாகக் காதலித்த மனவலி, தீராத வலியாக இருந்தது அவளுக்கு.

அப்போது அவளது மொபைலில் அவளுக்கு அமைப்பு வந்தது. மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்தாள். மெதுவான குரலில் “ஹலோ”  என்றாள்.

“என்னம்மா... அன்னிக்கு அவசர அவசரமா எனக்குப் பணம் குடுத்தியே... அதில் எழுநூறு ரூபா குறையுதும்மா...”

“ஐயோ கடவுளே... இதுக்கெல்லாமா... போன் போடுவாங்க? உங்களுக்குப் பணம் குடுக்கும் பொழுது எங்க ஏகாந்த் மச்சான் திடீர்னு என்னைப் பார்த்துட்டாரு. அந்த அவசரத்துல கவனக்குறைவா கணக்கை விட்டுட்டேன் போலிருக்கு. அடுத்த முறை பார்க்கும்போது குடுத்துடறேன். அடிக்கடி போன் பண்ணாதீங்க... ப்ளீஸ்...”

“வேலை பார்த்த காசைத்தானம்மா கேக்கறேன். தப்பா நினைச்சுக்காதம்மா...”

“உங்க வேலை ஒண்ணும் வேலை பார்த்த மாதிரியே தெரியலியே...”

“அவசரப்படாதம்மா. இந்த திரிசூலி வச்ச குறி தப்பாது. நீ நினைச்ச காரியம் கைகூடி வரும்...”

“கை கூடி வருமா...? அவர் இன்னொருத்தியைக் கைப்பிடிச்சு ரெண்டு நாளாச்சு...”

“அவசரப்படாதம்மா. உனக்கு உன்னோட மச்சான் கிடைப்பாரு. அவரு கையை நீ புடிக்கப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.”

“நிஜமா... உன்னோட மச்சான் எனக்குக் கிடைச்சுடுவரா...?”

“முக்காலும் சத்தியமா. இந்தத் திரிசூலியை நம்பு.”

வருணா பேசிக் கொண்டிருக்கும்போது, அகல்யாவின் குரல் கேட்டது.

“வருணா... ஏ... வருணா...”

“சரி சரி. எங்கம்மா கூப்பிடறாங்க.” கூறியவள், தன் மொபைலில் இதுவரை பேசிக் கொண்டிருந்த லைனைத் துண்டித்தாள்.

“என்னம்மா...?”

“எலெக்ட்ரிக் பில்லுக்குப் பணம் கட்டிட்டு வான்னு நாலு நாளா நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். தேதியைப் பாரு. பதினாலாச்சு. நாளைக்குக் கடைசி நாள். கூட்டமா இருக்கும். இன்னிக்கே கூட்டமாத்தான் இருக்கும். கிளம்பற வழியைப் பாரு. சுறுசுறுப்பா இருக்க நீ இப்ப கொஞ்ச நாளா மந்தமா இருக்க. எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்க. பொறுப்பா இருக்கப் பழகிக்க. இன்னொரு வீட்ல வாழப் போறவ. இங்கே மாதிரி உன்னோட வீராப்பையெல்லாம் அங்க காட்ட முடியாது. இங்கே மாதிரி செல்லமெல்லாம் அங்க செல்லுபடி ஆகாது. உங்க மாமா உனக்கு ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கறதா சொன்னாரு. ஏகாந்த்தோட கல்யாணத்துக்கு முன்னால. நான்தான் கல்யாண வேலையா இருக்காரே, கல்யாணம் முடியட்டும்னு காத்திருந்தேன்.”

“வெளிநாட்டு மாப்பிள்ளைன்னா ஏம்மா இப்படிப் பறக்கறீங்க? எனக்கெல்லாம் வெளிநாட்டுக்குப் போய் வாழறது சுத்தமா பிடிக்காது. லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இப்படி உலக நாடுகள்ல்ல போய் ஜாலியா வாழலாம்னு நம்ம நாட்டுப் பொண்ணுக போயிடறாங்க. அங்க போய் புருஷனுக்குச் சமைச்சுப் போடற சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்கணும்... புருஷன் கூடப் படுத்துக்கிட்டு, அவனோட வாரிசுகளைப் பெத்து வளர்க்கணும். அவனோட வீட்ல இருக்கற பாத்திரங்களோட பாத்திரமா பொண்ணுங்களும் உழைச்சு ஓடாத் தேயணும். இங்க சமைச்சுப் போட்ட பாத்திரங்களைக் கழுவுறதுக்கு வேலைக்காரி. குளிக்கும்போது கழற்றிப் போடற துணிகளையும் அவளே துவைச்சுப் போடறா. துவைச்சுக் காயப் போட்ட துணிகளையும் சாயங்காலம் அவளே எடுத்து அயர்ன் பண்ணி வைக்கறா அல்லது மடிச்சு வைச்சுடறா. வசதியானவங்க வீட்ல சமையலுக்கு ஆள் இருந்தா உட்கார்ந்த இடத்துக்குச் சாப்பாடு, காபி, டிபன் வந்து சேர்ந்துடுது. இதையெல்லாம் விட்டுட்டு வெளிநாட்டுக்குப் போய் ஆபீஸ் வேலைக்குப் போய்க்கிட்டு வீட்டு வேலையும் பார்த்துக்கிட்டு... அது என்ன வாழ்க்கை?!... அது மட்டுமில்லம்மா. நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கற மனப்பக்குவத்துக்கு வரலை. அதனால வரன் பார்க்கறதை நிறுத்திக்கோங்க. எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு நான் சொல்லும்போது மாப்பிள்ளை பார்த்தா போதும்.”

“போதுண்டியம்மா. போதும். கொஞ்சம் வாயை மூடிக்கறியா, திறந்த வாய் மூடாம இதென்ன இப்படி ஒரு பேச்சு?! பெரியவங்க பார்த்து எது செஞ்சாலும் நம்ப நல்லதுக்குத்தான் செய்வாங்கங்கற நம்பிக்கை வேணும். இதுதான் காலகாலமா நம்ப தமிழ்ப் பொண்ணுங்களோட பண்பாடு.”

“அதெல்லாம் அந்த காலம்மா. இப்ப எங்களுக்கே எது நல்லது எது கெட்டதுன்னு புரிஞ்சுக்கற மனப் பக்குவம் வந்தாச்சு.”

“என்னத்தை வந்துச்சு? இப்படி விதண்டாவாதமா பேசிக்கிட்டிருக்கறதுதான் வந்திருக்கு. ‘அப்பா இல்லாத பொண்ணாச்சே’ன்னு செல்லம் குடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு. ரொம்ப வாய் பேசற.”

“பேசறதுக்குத்தான்ம்மா வாய்...” சிரித்தபடி அகல்யாவின் கன்னத்தைப் பிடித்துத் திருகினாள் வருணா.

“பேசறதையெல்லாம் பேசித் தீர்த்துட்டு, இப்ப வந்து சிரிச்சு மழுப்பி... சமாளிச்சிடுவியே...”

“உங்களைச் சமாளிக்கறது ரொம்ப ஈஸிம்மா. பாசம்ங்கற கயித்தை வச்சு உங்களைக் கட்டிப் போட்டுடலாமே!”

“சும்மா கயிறு திரிக்காத. நான் பாசம் உள்ளவதான். ஆனா பாசத்தை வச்சு என்னைப் பலவீனப்படுத்திடலாம்னு மட்டும் நினைச்சுடாத. நல்ல விஷயத்துல, நான் நின்னா நின்னதுதான். என்னை மீறி எதையாவது ஏடாகூடமா செய்றதுக்கு என்னோட பாசத்தைப் பணயம் வச்சுடலாம்னு கனவு காணாதடி மகளே...” அகல்யாவும், வருணாவைப் போலவே, சிரித்துப் பேசிக் காட்டினாள்.

“அடடே... அப்படியே நான் பேசற மாதிரியே பேசறீங்களேம்மா. சூப்பர்ம்மா! கொஞ்சம் விட்டா சினிமா நடிகர், நடிகைகள் மாதிரி மிமிக்ரி எல்லாம் பண்ணுவீங்க போலிருக்கே!”


“சரி... சரி. நேரமாச்சு. கிளம்பு. இந்தா பணம். எலக்ட்ரிக் பில் அங்க டேபிள் மேல இருக்கு. எடுத்துட்டுப் போய்க் கட்டிட்டு வா. பார்த்து நிதானமா போ. ஸ்கூட்டர்ல வேகமாப் போகாத.”

“சரிம்மா. நான் போயிட்டு வந்துடறேன்.” ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு, கட்டில் மீது கிடந்த துப்பட்டாவை எடுத்துக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டபடி கிளம்பினாள் வருணா.

ஸ்கூட்டரின் முன் பக்கம் உள்ள கூடையில் தன் பர்ஸ், மொபைல் ஃபோன் ஆகியவற்றை வைத்தாள். ஸ்கூட்டரில் தானாக இயங்கும் இயக்கம் வேலை செய்யாததால், அவளது பாதம் கொடுத்த ஒரு உதையில் ஸ்கூட்டர் உயிர் பெற்றது. ஓட்டம் பிடித்தது.

தெரு முனை தாண்டி, திரிசூலியை முன்பு சந்தித்த அதே இடத்தில் மறுபடியும் ஸ்கூட்டர், தற்காலிகமாக உயிர் துடிப்பதை நிறுத்தியது. எரிச்சலுற்ற வருணா, மறுபடியும் ஸ்கூட்டரை உதைத்தாள். இரண்டு முறை உதை வாங்கியதும் வண்டியைச் செலுத்த முற்பட்டாள். யாரோ தன்னைக் கவனிப்பது போல உள்ளுணர்வு உந்த, பார்வையைச் சுற்றும் முற்றும் சுழலவிட்டாள். அவளுக்கு இடது புறமாக இருபது அடிகள் தூரத்தில் கறுப்பு லுங்கியும், காவி வண்ண ஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். அந்த மனிதனின் கரிய முகம் நீண்ட காலத் தாடிக்கு நடுவே இருந்தது. தலைமுடியும் வெட்டப்படாமல் நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இவளை உறுத்துப் பார்த்த அந்த மனிதனுக்கு ஒரு கண் மட்டுமே இருந்தது. மறு கண் அழுந்த மூடிக்கிடந்தது. அவன் ஒற்றைக் கண்ணால் இவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

21

ஸ்ப்லிட் ஏ.ஸி. இயங்கும் மிக மெல்லிய ஓசை. ஏறத்தாழ எண்ணூறு சதுர அடிப் பரப்பளவு உள்ள பெரிய படுக்கை அறை. நான்கு பேர் சேர்ந்தாற் போலப் படுத்துக் கொள்ளும் அளவு பரந்த கட்டில். அதன் மீது பஞ்சு மெத்தை. அதன் மீது மிக விலையுயர்ந்த காஷ்மீர் விரிப்பு. பட்டு உறைகள் போடப்பட்ட தலையணைகள். கட்டிலின் அருகே இருண்டு பக்கமும் அழகிய சிறு மேஜைகள், தலைப்பக்கம் இருந்த அந்த மேஜையில் ஒரு மேஜை மீது அழகான கண்ணாடி ஜாடியில் தண்ணீர். அதன் அருகே கண்ணாடி டம்ளர்கள், சைனா வேலைப்பாடு அமைந்த பூஜாடி ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேஜை மீது ஆடம்பரமான இரவு விளக்கு வைக்கப்பட்டிருந்தது.

அறையின் ஓர் ஓரத்தில் புதிய ஃப்ரிட்ஜ், அதற்குள் பழங்கள், சாக்கலேட்கள் வகை வகையாக வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பக்கம் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட குளியலறை, ‘மேக்கப்’ போட்டுக் கொண்ட நடிகை போலப் பளபளவென மின்னியது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சாதனங்கள் அத்தனையும் விலை உயர்ந்தவையாக இருந்தன. வெள்ளை வெளேர் என்ற குளியல் தொட்டி சொகுசுக் குளியலுக்கு வரவேற்றது.

அறை முழுவதும் ‘ரூம் ஸ்ப்ரே’ தெளிக்கப்பட்டுக் ‘கும்’ என்று வாசனை மிக ரம்மியமாக இருந்தது. இத்தனைக்கும் நடுவே, வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிருதுளா, கட்டிலின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

அறையின் கதவு திறக்கப்பட்டது. மாநிறமான நடுத்தர வயதுப் பெண்மணி, ஆவி பறக்கும் உணவு வகைகளுடன் உள்ளே வந்தாள். அவளது காது மடல்களில் ஏகப்பட்ட வளையங்கள் அணிந்திருந்தாள். மூக்கில் ஓர் வளையம். பவளநிற மாலை அணிந்திருந்த அவள், புடவை கட்டியிருந்த விதம் வேறு விதமாக இருந்தது. முந்தானைப் பகுதியை உல்ட்டாவாகப் போட்டிருந்தாள். கைகளில் பாசி மணிகள் கோத்த வளையல்கள் நிறைய அணிந்திருந்தாள். அவள் கொண்டு வந்த இட்லி, சாம்பார், சட்னியை ஒரு ப்ளேட்டில் எடுத்த வைத்தாள். வைத்த பிறகு, மிருதுளாவின் அருகே வந்தாள். மிருதுளாவின் கை, கால்களின் கட்டை அவிழ்த்து விட்டாள். அதன் பின் வாயைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டாள்.

 “ம்... சாப்பிடு!” கன்னடத்தில் கூறினாள். இட்லிகள் இருந்த ப்ளேட்டை மிருதுளாவிடம் கொடுத்தாள். அவளது குரலில் கனிவும் இல்லை, கடுமையும் இல்லை. சாப்பிடும் மனநிலை இல்லாதபோது, முன்தின இரவு, கோபத்தில் காயப்போட்ட வயிறு, உணவை வேண்டியது. எனவே அந்தப் பெண் நீட்டிய ப்ளேட்டைக் கையில் வாங்கினாள்.

அந்தப் பெண்மணி விடியற்காலமே ஒரு முறை வந்து, மிருதுளா பல் துலக்கவும், காலைக் கடன்களை முடிப்பதற்கும் கட்டவிழ்த்துவிட்டு மறுபடியும் கட்டிப் போட்டுவிட்டுப் போயிருந்தாள். இட்லியைச் சாம்பார் தொட்டுச் சாப்பிட்டு முடித்தாள் மிருதுளா. உடனே அவளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள் அந்தப் பெண்மணி. அதன்பின் ஃப்ளாஸ்க்கிலிருந்த காபியை ஊற்றிக் கொடுத்தாள்.

காபியை உறிஞ்சியபடி யோசித்தாள் மிருதுளா. ‘நேத்துல இருந்து இப்படித்தான் நடக்குது. சிறகை எடுத்துட்டு தங்கக் கூண்டிற்குள் அடைச்சு வச்சு, ஆப்பிள்களையும் வழங்கும் அந்த நபர் யார்? அது ஒருவர்தானா? இல்லை. ஒரு கூட்டமே சேர்ந்து என்னைக் கடத்தி வைச்சிருக்கா? இங்கயிருந்து எப்படித் தப்பிக்கறது?’

காபியைக் குடித்து முடித்ததும் காலி ‘கப்’பை அந்தப் பெண்மணி பெற்றுக் கொண்டாள்.

“குளிக்கறதானா போய்க் குளி.” கன்னட மொழியில் அவள் கூறியது புரியாவிட்டாலும் சைகை மொழியால் புரிந்து கொண்ட மிருதுளா, குளியலறைக்கு நடந்தாள். அந்த அறையிலிருந்த ஓர் மர பீரோவில் இருந்து அழகிய சுரிதார் ஸெட், உள்ளாடைகள் மற்றும் உடம்பு துடைக்கும் துண்டை எடுத்துக் கொடுத்தாள் அந்தப் பெண்மணி. அவற்றை வாங்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்ட மிருதுளா சுற்றிலும் நோட்டம் விட்டாள். ‘ம்... நேத்தும் பார்த்த அதே பாத்ரூம். இன்னிக்கு மட்டுமென்ன மாறியிருக்கவா போகுது? நான் எதுக்கு இப்படிப் பார்த்துக்கிட்டிருக்கேன்?’ யோசனைக்குத் தற்காலிகமாய்த் தடைவிதித்த மிருதுளா, இருபது நிமிடங்கள் ஷவருக்கு அடியில் நின்றாள்.

 ‘இது சென்னைதானா... வேறு ஸ்டேட்டா... இந்தம்மா என்னடான்னா கன்னடம் பேசுது. என்னைக் காணாம அப்பா, ஏகாந்த் எல்லாம் தவிச்சுக்கிட்டிருப்பாங்களே... இங்க இருந்து தப்பிச்சுப் போற மார்க்கம் என்ன? எதுவும் புரியல. ரெண்டு நாளா அடைச்சு வச்சிருக்காங்க. யாரும் வந்து எதுவும் பேசலியே... கல்யாணமான பொண்ணு, மறுநாள் காணோம்ன்னா... எல்லாரும் என்ன நினைச்சுக்கிட்டிருப்பாங்க? தந்திரமா இந்த ரூம்ல ஒரு போன் கூட இல்லாம விட்டிருக்காங்க. அப்பா அங்க அதிர்ச்சியாயிருப்பாரு. ஏகாந்த் என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பாரு? நான் எப்படி இங்க வந்தேன்? ஒண்ணுமே புரியலியே...’ அவளது உடல் மீது விழுந்து உருண்ட தண்ணீருடன் சேர்ந்து அவளது நினைவலைகளும் உருண்டன.


இதற்குள் குளியலறைக் கதவைப் ‘படபட’வெனத் தட்டும் சப்தம் கேட்கவே அவசர அவசரமாக ஷவரின் வாயை அடைத்த மிருதுளா, உடம்பைத் துடைத்துக் கொண்டு சுரிதார் அணிந்து கொண்டாள். மறுபடியும் கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

“இதோ வரேன்... கமிங்...” என்று குரல் கொடுத்ததும் கதவைத் தட்டுவது நின்றது. மிருதுளா வெளியே சென்று அங்கிருந்த டிரஸ்ஸிங் டேபிள் மீது இருந்த பவுடரை எடுத்து முகத்திற்குப் போட்டாள். ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டாள்.

“இங்கே வா...” அந்தப் பெண்மணி கூப்பிட்டதும் கட்டிலின் அருகே சென்றாள். அவ்வளவுதான். உடனே மீண்டும் மிருதுளாவின் வாய், கை, கால்கள் கட்டப்பட்டன. கட்டிப்போட்டதும் அந்தப் பெண்மணி சாவியை எடுத்துக் கொண்டாள். மிருதுளா சாப்பிட்டுவிட்டு வைத்திருந்த ப்ளேட், காபி, தண்ணீர் குடித்த கப், டம்ளரையும் எடுத்துக் கொண்டு போய் அறையின் வாசலில் வைத்தாள். கதவருகே நின்றபடி மிருதுளாவைப் பார்த்தாள்.

“மத்தியானம் சாப்பாடு கொண்டு வருவேன்” என்று கன்னடத்தில் கூறிவிட்டு வெளியேற யத்தனித்தாள். அப்போது மொபைல் போனின் ஒலி கேட்டது. பதறிப்போன அந்தப் பெண்மணி அவசரமாகத் தன் ஜாக்கெட்டிற்குள் கையை விட்டு மொபைல் போனை எடுத்து, மிக மெதுவாகப் பேசினாள்.

“ஹலோ... துர்க்கா பேசறேன்.” கன்னடத்தில் பேசினாலும் அவளது பெயர் துர்க்கா என்பதை மிருதுளா புரிந்து கொண்டாள். இதற்குள் துர்க்கா வேறு ஏதோ ரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட்டு லைனைத் துண்டித்துவீட்டு கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறினாள்.

‘ஓகோ... இவளிடம் மொபைல் இருக்கா... ஏன் இவ பயந்து பதறி அவசரமாப் பேசறா? என்னை அடைச்சு வச்சிருக்கறவங்களுக்குத் தெரியாம மொபைல் போன் வச்சிருக்கா போலிருக்கு. ஸ்விட்ச் ஆப் பண்ண மறந்துட்டா போலிருக்கு.’ சிந்தனைகள் அவளது மனதில் கவலையையும், பயத்தையும் மூட்ட, நெஞ்சில் திகில் உணர்வு சூழ்ந்தது.

22

பைலைப் பார்த்து முடித்த ப்ரேம்குமார், மேஜை மீதிருந்த ஃபோனின் ரிஸீவரை எடுத்தார். எண்களை அழுத்தினார். லைன் கிடைத்தது. பேசினார்.

“ஹலோ இன்ஸ்பெக்டர் கார்த்திக்?” மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

“யெஸ். ஸ்பீக்கிங்...”

“கார்த்திக்! நான் ப்ரேம்குமார் பேசறேன். சென்னையிலயிருந்து...”

“ப்ரேம்குமார் ஸார்... எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். ஒரு கேஸ் பத்தி உங்ககிட்ட பேசணும், கார்த்திக். மிருதுளான்னு ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மறுநாள் விடியக்காலையில காணோம்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...”

“கல்யாணமெல்லாம் முடிஞ்சப்புறம் காணோமா? இந்தக் கேஸ் ரொம்ப வித்தியாசமான கேஸா இருக்கே... வழக்கமா கல்யாணத்துக்கு முன்னால யாரையாவது லவ் பண்ணிட்டு அதனால கழுத்துல தாலி விழறதுக்குள்ள சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுவாங்க. ஆனா இந்தப் பொண்ணு கல்யாணம் முடிஞ்சப்புறம் விடியற்காலை காணாமப் போயிருக்கா...”

“ஆமா. முதலிரவு கூட வச்சிருக்காங்க. காலையில புருஷன்காரன், தன் பக்கத்துல படுத்திருந்த பொண்ணைக் காணோம்னு மாமனார்கிட்ட கேட்டிருக்கான். மாமனார், ‘அவ வெளியிலயே வரலியே’ன்னு சொல்லியிருக்காரு. அதுக்கப்புறம் பொண்ணைக் காணோங்கறது ஊர்ஜிதமாயிடுச்சு. முதலிரவுல புருஷன் கூடப் படுத்திருந்த பெண்ணைக் காணோம். அவளுக்கு விடியக்காலை நாலு மணிக்கு ஒரு இ.மெயில் வந்திருக்கு. அந்த இ.மெயில் யாரோ அரவிந்த்தாம். பெங்களூர்ல இருந்து அனுப்பியிருக்கான். தான் ஒரு பெண்ணைக் காதலிக்கறதாகவும், அந்தப் பொண்ணைத் தன்னோட அப்பா கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலைன்னும், தனக்கு இது விஷயமா உதவி செய்யணும்னும் கேட்டு மிருதுளாவுக்கு இ.மெயில் பண்ணி இருக்கான்... அவனுக்கு உதவி செய்றதுக்குதான் இந்தப் பொண்ணு வீட்டை விட்டுப் போயிருப்பாளோன்னு நினைச்சா அவ ஏன் சொல்லாமப் போகணும்னு கேள்வி வருது. அந்த அரவிந்த்ங்கற ஆள் பெங்களூர் வாசி. அவனை விசாரணை பண்ணணும்.”

“அந்த அரவிந்த் பிரிண்டிங் பிரஸ் ஓனரா, ப்ரேம்குமார் ஸார்?”

“ஆமா. இந்திரா பிரிண்ட்டர்ஸ்ன்னு ரொம்ப பெரிய பிரெஸ். பெங்களூர்லயே பேமஸான ப்ரிண்டிங் ப்ரஸ்ஸாம்.”

“ஸார்.... அந்த அரவிந்த் எனக்கு ரொம்ப பழக்கம் ஸார். நல்ல ப்ரெண்ட். பெரிய இடத்துப் பையன் ஸார்...”

“உங்க ப்ரெண்ட்ங்கறதாலயோ... பெரிய இடத்துப் பையன்ங்கறதாலயோ சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவனா இருக்கணுங்கிறது ஒண்ணும் கட்டாயம் இல்லையே... அது சரி... அவன் எப்படி உங்களுக்கு ஃப்ரெண்ட் ஆனான்?”

“அவனோட பங்களாவுல நகை, பணமெல்லாம் நிறையத் திருடு போயிடுச்சு. அப்ப என்னோட ஸ்டேஷன்லதான் கம்ப்ளெயிண்ட் பண்ணினான். மூணே நாள்ல திருடினவனைக் கண்டுபிடிச்சு, களவு போன அத்தனை பொருட்களையும் மீட்டுக் குடுத்தேன். அதனால அந்த அரவிந்த்துக்கு என் மேல ரொம்ப மரியாதை. அடிக்கடி போன் போட்டுப் பேசுவான். அவன் ரொம்ப ஹை ஸ்டேட்டஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஸார்.”

“இப்போதைக்கு இந்தக் கேஸ்ல அவனும் அவனோட இ.மெயிலும்தான் முக்கியமான தடயமா கிடைச்சிருக்கு. அதனால அந்த அரவிந்த்தை விசாரிங்க. வேணுன்னா மஃப்டியில போய்க்கோங்க. விசாரணையில விஷயம் க்ளியராயிட்டா நாம அவனை ஏன் தொந்தரவு பண்ணப் போறோம்? ஏன் கார்த்திக்... ஃப்ரெண்டாச்சேன்னு தயக்கமா இருக்கா?...”

“சச்ச... அதெல்லாம் இல்ல ஸார். ஒரு கேஸ்னு எடுத்துக்கிட்டோம்னா எல்லோரையும் பாரபட்சம் பார்க்காம விசாரிக்கறதுதான் ஸார் நம்ம கடமை?”

“குட் ப்ரொஸீட் பண்ணுங்க.”

“சரி ஸார். அந்த மிருதுளா வேற யாரையாவது காதலிச்சு அந்த ஏமாற்றத்தல தானாவே வீட்டை விட்டு வெளியே போயிருப்பாளோ ஸார்? யாராவது கடத்திட்டுப் போயிருந்தா இந்நேரத்துக்குப் பணம் கேட்டு மிரட்டல் வந்திருக்கணுமே ஸார்?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் வரலை. இளமையான ஒரு பொண்ணு காணாமப் போறதுன்னா.... ஒண்ணு... பணத்துக்காகக் கடத்தலா இருக்கணும். அல்லது காதல் விவகாரமா இருக்கணும். கடத்தல்ன்னா மூணாவது நபர் சம்பந்தப்பட்டது. காதல்ன்னா அந்தப் பொண்ணு சம்பந்தப்பட்டது. இந்தக் கேஸைப் பொறுத்த வரைக்கும் கண்ணைக் கட்டி விட்டது மாதிரி இருக்கு. ஏன்னா... கம்ப்ளெயிண்ட் குடுத்த அவளோட புருஷனே அவளுக்குக் காதல் விவகாரம் எதுவும் கிடையாதுன்னு சொல்றான். நம்பறான்...”

“அவளோட புருஷன் பேர் என்ன ஸார்?”

“ஏகாந்த். அவனும் ஓரளவு பணக்காரன்தான். பார்த்தா ஆள் ரொம்ப டீஸெண்ட்டா இருக்கான். இருந்தாலும் அவனையும் ஃபாலோ பண்ணச் சொல்லி இருக்கேன்.”

“ஓ.கே. ஸார். நான் அரவிந்த்தைப் பார்த்துட்டு வந்தப்புறம் உங்களுக்கு போன் பண்றேன் ஸார்.”

“ஓ.கே., கார்த்திக். தேங்க்யூ.” பேசி முடித்தார் ப்ரேம்குமார்.

23

ந்திரா ப்ரிண்ட்டர்ஸ் அலுவலகத்தின் அருகே தன் பைக்கை நிறுத்தினான் இன்ஸ்பெக்டர் கார்த்திக். மஃப்டியில் இருந்த கார்த்திக், சினிமாவில் வரும் இன்ஸ்பெக்டர்கள் போலின்றித் தலைமுடியை ஒழுக்கமாக வெட்டி இருந்தான்.


‘ஜிம்’மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்த கட்டுப்பாடான தேகத்துடன், மரியாதைக்குரிய நபராக அவனது தோற்றம் இருந்தது. நிறையக் களவு, கொலை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட கயவர்களைக் கண்டுபிடித்துக் கூண்டில் ஏற்றிய திறமைசாலி. பெங்களூர் போலீஸ் துறை, தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள ‘வீரசிங்கம்’ என்று பாராட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தான்.

பைக்கை நிறுத்திய கார்த்திக், இந்திரா ப்ரிண்ட்டர்ஸ் அலுவலகத்திற்குள் சென்றான். வெளிநாட்டு நிறுவனம் போன்ற பிரம்மாண்டமும், கலை அழகும் நிறைந்திருந்தது. உள்ளே நுழைந்ததும் வரவேற்ற ஒரு வாலிபன், கார்த்திக்கிடம் கேட்டான்.

“யாரைப் பார்க்கணும் ஸார் நீங்க?”

“மிஸ்டர் அரவிந்த்தைப் பார்க்கணும்.”

“நீங்க...”

“என் பேர் கார்த்திக். நான் அரவிந்த்தோட ஃப்ரெண்ட்...”

“ப்ளீஸ் உட்காருங்க ஸார்” என்றவன் இன்ட்டர் காமில் ஏதோ பேசினான்.

“வாங்க ஸார்” என்றபடி கார்த்திக்கை அழைத்துச் சென்றான். குறிப்பிட்ட ஒரு அறையின் கதவின் மரப் பலகையில் பித்தளை எழுத்துக்களில் ‘அரவிந்த் பானர்ஜி’- ‘டைரக்டர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போர்ட் காணப்பட்டது. அந்த அறையின் கதவை நாசூக்காகத் தட்டினான் அந்த வாலிபன்.

“யெஸ்... கம்... இன்...” என்ற குரல் கேட்டது. கார்த்திக்கை உள்ளே அனுப்பினான் அந்த வாலிபன். கார்த்திக் உள்ளே போனதும் தானே மூடிக்கொள்ளும் கதவு மிக மெல்லிய தாளலயத்தோடு மூடிக் கொண்டது.

பார்த்திக்கைப் பார்த்ததும் சில விநாடிகள் அடையாளம் புரியாத அரவிந்த், அதன்பின் கார்த்திக்கை அடையாளம் கண்டு கொண்டான்.

“ஹலோ இன்ஸ்பெக்டர்... வாங்க வாங்க... மஃப்டியில வந்திருக்கறதுனால ‘சட்’ன்னு அடையாளம் தெரியலை...”

“என்ன அரவிந்த், எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு பார்த்து...”

“நல்லா இருக்கேன் ஸார். உட்காருங்க ஸார்.”

கார்த்திக் உட்கார்ந்தான். சொகுசு குஷன் பொருத்தப்பட்ட நாற்காலி ‘மெத்’ என்று அவனை உள் வாங்கிக் கொண்டது.

“ப்ரிண்டிங் யூனிட் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?”

“சூப்பரா போய்க்கிட்டிருக்கு ஸார். என்ன குடிக்கிறீங்க? ஹாட் ஆர் கோல்ட்?”

“டீ ப்ளீஸ்....”

உடனே அரவிந்த், இன்ட்டர்காமில் ‘டீ’க்குச் சொன்னான்.

“அரவிந்த்... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்...”

“என்ன ஸார்.... சொல்லுங்க...”

“சென்னையில ‘மிருதுளா’ன்னு ஒரு பொண்ணைக் காணோம்னு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...”

இதைக் கேட்டதும் அரவிந்த்தின் முகம் சற்று இருட்டிற்குப் போனது. ஓரிரு விநாடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்டான் அரவிந்த்.

“மிருதுளாவா... சென்னை கர்ல்லா? எனக்குக் கூடச் சென்னையில மிருதுளான்னு ஒரு பொண்ணைத் தெரியும். ‘ப்ராஜக்ட்’ விஷயமா இங்க வந்திருந்தா... அவளுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதானே கல்யாணம் ஆச்சு... அந்த மிருதுளாவையா காணோங்கறீங்க?”

“ஆமா. அதே மிருதுளாதான்.”

இதற்குள் ஒரு வாலிபன் ‘டீ’ கொண்டு வந்தான்.

“எடுத்துக்கோங்க ஸார்.”

ஏலக்காய் மணக்கும் சூடான டீயைக் கார்த்திக் குடித்தான்.

“அந்த மிருதுளாவைக் காணோமா? என்ன ஸார் இது? ரொம்ப வினோதமா இருக்கு? புதுசா கல்யாணம் ஆன பொண்ணைக் காணோங்கறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கே...”

“ஆமா அரவிந்த். கல்யாணமாகி முதல் இரவு முடிஞ்சு, காலையில அவளைக் காணோம்...”

“ஏதாவது காதல்... விவகாரம்....”

“நோ... நோ.... அதெல்லாம் ஒண்ணுமில்ல. எங்களுக்குக் கிடைச்சிருக்கற ஒரே ஒரு தடயம் அவளுக்கு வந்த இ.மெயில். அந்த இ.மெயில் நீங்க மிருதுளாவுக்கு அனுப்பினது...”

“ஓ... அதுவா?... சும்மா தமாஷா அனுப்பி வச்சேன். எப்பவும் நான் அப்படித்தான். பொழுது போகலைன்னா... ப்ரெண்ட்சுக்கு எதையாவது ஏடாகூடமா இ.மெயில் பண்ணுவேன்...”

“அதுவும் குறிப்பிட்ட இ.மெயில்ல நீங்க அனுப்பின செய்தி...?”

“அது... சும்மா தமாஷுக்குதான் அனுப்பினேன்...”

“அவளுக்குக் கல்யாணமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”

“ஓ... நல்லாத் தெரியுமே. எனக்கு இன்விடேஷன் அனுப்பி இருந்தா. எங்க அம்மா உடம்புக்கு முடியாம படுத்திருந்தாங்க. அதனாலதான் நான் அவ கல்யாணத்துக்குப் போகலை...”

“அது சரி... ஆனா... புதுசா கல்யாணமான பொண்ணுக்கு, கல்யாணத்தன்னிக்கு இப்படி ஒரு இ.மெயில் செய்தி அனுப்பினது... அவ்வளவு நல்ல விஷயமா இல்லியே, அரவிந்த்...”

“ஆமா ஸார்... என்னதான் வேடிக்கைக்கு அனுப்பறதா இருந்தாலும் கல்யாண சமயம், அதுவும் கல்யாணத்தன்னிக்கு இப்படி ஒரு இ.மெயில் அனுப்பினது சரி இல்லதான். அனுப்பின பிறகுதான் நானே யோசிச்சேன். ஃபீல் பண்ணினேன்...”

“மிருதுளா கூட உங்களுக்கு எந்த அளவுக்குப் பழக்கம்?”

“அவ ப்ராஜக்ட் விஷயமா இங்க வந்தப்பதான் பழக்கம். எங்க காலேஜ்ல இருந்து எங்க குரூப் போன இடத்துக்குத்தான் அவங்களும் வந்திருந்தாங்க. அப்ப நாங்க பழகறதுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைச்சுது. மிருதுளா நல்ல பொண்ணு. மத்தவங்களுக்கு உதவி செய்யற மனப்பான்மை உள்ள பொண்ணு. நான் என்னோட ஸ்கூல் படிப்பு வடிச்சது சென்னையிலதான். அதனால எனக்குத் தமிழ் நல்லா பேச வரும். ஆனா கன்னட நெடி என்னோட தமிழ்ல்ல இருக்குன்னு மிருதுளா கேலி பண்ணுவா. அப்படி நான் பேசற தமிழை ரொம்ப ரசிப்பா. அவ காணாமல் போனதா நீங்க சொல்றது எனக்கு ரொம்ப அதிர்ச்சியான விஷயம்... இந்த விஷயமா நீங்க எந்த உதவி வேணும்னாலும் என்னைக் கேட்கலாம்.”

“தேங்க்யூ, அரவிந்த். நீங்க பழகின வரைக்கும் மிருதுளா இப்படிக் காணாமல் போறதுக்கு வேற ஏதாவது காரணம் தோணுதா?”

“எனக்கும் மிருதுளாவுக்கும் அந்த ‘ப்ராஜக்க்ட வர்க்’ நடந்த பதினஞ்சு நாள்தான் பழக்கம். ரொம்ப ஃப்ரெண்ட்லியாத்தான் நாங்க ரெண்டு பேரும் பழகினோம். மிருதுளா புத்திசாலி. சராசரிப் பெண்களைவிட அதிகமான அறிவுபூர்வமானவ. பணக்கார வீட்டுப் பொண்ணா இருந்தாலும் அகம்பாவம் இல்லாத நல்ல பொண்ணு. ஆண், பெண் நண்பர்கள்ன்னு இன பேதம் பார்க்காம நல்லா பழகுவா. சுறுசுறுப்பானவ. இதைத் தாண்டி வேற எதுவுமே அவளைப் பத்தி தெரியாது ஸார். நல்ல பொண்ணான அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருச்சேன்னு வருத்தமா இருக்கு ஸார்.”

“உங்களோட இ.மெயில் செய்திக்கும், அவ காணாமப் போனதுக்கும் ‘லிங்க்’ ஏதும் இருக்குமோன்னு தோணுச்சு. இந்த விஷயத்தை க்ளியர் பண்ணிக்கலாம்னுதான் நான் இங்க வந்தேன், அரவிந்த்...”

“நோ ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர். உங்க கடமையை நீங்க செய்யறீங்க. அஃப் கோர்ஸ்... இது விஷயமா எந்த உதவி வேண்ணாலும் செய்யத் தயாரா இருக்கேன். சீக்கிரமா மிருதுளாவைக் கண்டுபிடிச்சு அவங்க அப்பாகிட்டவும், புருஷன்ட்டயும் சேர்த்து வைங்க ஸார்... ப்ளீஸ்..”

“ஷ்யூர்...” என்று கூறிய கார்த்திக், மேஜையின் ஓரத்தில் ஏதோ எழுதப்பட்ட ரோஸ் நிற பேப்பர் இருந்ததைக் கவனித்தான்.


அரவிந்த்திடம் பேசிக் கொண்டே அந்தப் பேப்பரில் இருந்த எழுத்துக்களை நோட்டம் விட்டான். அது ஒரு கடிதம் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே கீழே கையெழுத்துப் போடும் பகுதியைப் பார்த்தான். பார்த்ததும் அவனது போலீஸ் மூளை அதை எடுத்துக் கொள்ளத் தூண்டியது.

‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தவனுக்குச் சாதகமாக, ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த ஒரு ஊழியன், ப்ரிண்ட் செய்த ஒரு மெல்லிய அட்டையை அரவிந்த்திடம் காட்டுவதற்காக வந்தான். அது இரண்டு அடிக்கு இரண்டடி அகலத்தில் இருந்தது.

“ரொம்ப அவசரம் ஸார். நீங்க ஓ.கே. சொல்லிட்டிங்கன்னா மிஷினை ஓட்டிரலாம்.” கூறிவிட்டு வெளியேறினான். அவன் கொடுத்த அட்டையை அரவிந்த் வாங்கிப் பார்த்தான். அப்போது அவனது முகம் அந்த அட்டையால் மறைக்கப்பட்டிருந்தது. இதுதான் தருணம் என்று அந்த ரோஸ் நிற பேப்பரை எடுத்துத் தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் கார்த்திக்.

“நீங்க பிஸியாயிட்டீங்க அரவிந்த், உங்க வேலையைக் கவனிங்க. நான் கிளம்பறேன். தாங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்!” கூறிய கார்த்திக் அரவிந்த்திடம் விடை பெற்று வெளியேறினான். வெளியேறிய கார்த்திக், தன் பைக்கில் ஏறும் முன்பு, அரவிந்த்தின் டேபிள் மீதிருந்த ரோஸ் நிற பேப்பரை ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து எடுத்தான். பிரித்தான். படித்தான்.

அது அரவிந்த்திற்கு மிருதுளா எழுதிய காதல் கடிதம்.

24

மிருதுளா அடைபட்டுக் கிடந்த அறை, திறக்கும் ஓசை கேட்டது.

‘லன்ச் டைம் கூட இல்லையே...’ அங்கிருந்த பெரிய சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்த மிருதுளா, யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, உள்ளே நுழைந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டாள். வந்தவன். அவளது கை, கால் கட்டுகளையும், வாய்க் கட்டையும் அவிழ்த்துவிட்டான்.

“நீ... நீ... நீயா...?”

மிருதுளா கேட்டதும் மென்மையாகப் புன்னகைத்தான் அரவிந்த். தன்னைக் காப்பாற்றத்தான் அரவிந்த் வந்திருப்பதாக நினைத்தாள் மிருதுளா. அவளுடைய தவறான கணிப்பை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட அரவிந்த் இப்போது விஷமமாகச் சிரித்தான்.

“நானேதான் என் இனிய பெண்ணே... உன்னை இங்க அடைச்சு வச்சது நான்தான். வேற யாராவதா இருந்தா இத்தனை சொகுசா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வசதிகள் செஞ்சு குடுத்திருப்பாங்களா?”

“என்ன உளர்ற? என்னைக் கண்டுபிடிச்சுக் காப்பாத்த வந்திருக்கன்னு நினைச்சேன்...?!”

“தப்பும்மா செல்லம் தப்பு. உன்னை இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்கறதே நான்தான்...”

“நீயா அரவிந்த் இப்படிப் பண்ணியிருக்க? என்னால நம்பவே முடியல...”

“நீ நம்பினாலும் நம்பாட்டாலும் அதுதான் உண்மை...”

“ச்சீ... உன்னை நல்லவன்னு நினைச்சுட்டிருந்தேனே?”

“நீ... எனக்குக் கிடைக்கற வரைக்கும் வல்லவனா போராடுவேன். கிடைச்சதுக்கப்புறம்... நல்லவனா மாறிடுவேன்... நீ என் தேவதை! அதனாலதான் உனக்கு இவ்வளவு செளகர்யமான ஏற்பாடுகள்... உன்னை அடைஞ்சே தீரணும்னு ஆசைப்பட்டு இந்த அறைக்குள்ள அடைச்சு வச்சிருக்கேன்.”

“உன்னை ஒரு நல்ல ஃப்ரெண்டுன்னு நம்பினேனே...”

“தப்பும்மா, தப்பு. இவ்வளவு ஆசையா பேசறேன்...” அரவிந்த் தன் கைகளை அகலமாக விரித்துக் காண்பித்தான்.

“நான் இன்னொருத்தரோட மனைவின்னு தெரியாதா உனக்கு?”

“தப்பும்மா தப்பு. நீ இன்னொருத்தரோட மனைவி இல்ல. என்னோட வருங்கால மனைவி...”

“ச்... சீ... ‘தப்பு’... ‘தப்பு’ன்னு சொல்லிக்கிட்டு தப்பாவே பேசறியே! வெட்கமா இல்ல?...”

“வெட்கம், மானம், கெளரவம் எல்லாத்தையும் விட்டுத்தானே உன்னைக் கடத்திக் கொண்டு வந்து வச்சிருக்கேன்!...”

“கடத்தினேன் கடத்தினேங்கறியே?... நீ எப்படி என்னைக் கடத்தியிருக்க முடியும்?”

“கடத்தினது வேற ஆள். அது யாருங்கறது பரம ரகசியம்... உன்னைக் கொண்டு வந்து இங்கே... இப்படிப்பட்ட ராயல் வசதிகளோட தங்க வச்சிருக்கறது நான்...”

“என்னோட கை, கால், வாயையெல்லாம் கட்டிப் போட்டு, ஜெயில்ல மாதிரி அடைச்சு வச்சிருக்கறதுக்குப் பேர் ராயல் லைஃபா?...”

“மிருதுளா... நீ மட்டும் ‘சரி’-ன்னு ஒரு வார்த்தை சொல்லு... இந்த அரவிந்த் கூட உன்னோட மறு கல்யாணம் ‘ஜர்ம்’ ‘ஜாம்’னு நடக்கும். உன்னை மகாராணி மாதிரி வாழ வைப்பேன். என்னோட உள்ளங்கைகள்ல உன்னோட பாதங்களைத் தாங்குவேன். உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே என் கண் வழியா நீ என்னோட இதயத்துல நுழைஞ்சுட்ட... இந்த அறையில அடைச்சு வச்சா... என்னோட இதயச் சிறைக்குள்ள வந்துடுவேன்னுதான் இதையெல்லாம் செஞ்சேன்.... நீ எனக்கு வேணும்...”

“முட்டாள்தனமாப் பேசாத. ஒரு பொண்ணை இப்படியெல்லாம் மிரட்டி உருட்டி அடைய முடியாது. அதிலயும் நான் கல்யாணமான பொண்ணு. இன்னொருவரோட சொத்து....”

“எனக்கிறக்கற ஏராளமான சொத்துக்களுக்கெல்லாம் மேலா உன்னை ஒரு பெரிய சொத்தா நான் மதிக்கறேன்.”

“ஒரு நல்ல நண்பனாத்தானே நீ பழகினே...?”

“அதெல்லாம் வெறும் நாடகம். ‘ப்ராஜக்ட் வர்க் கேம்ப்’க்காக இந்த ஊருக்கு நீ வந்தப்ப... உன்கிட்ட என்னோட காதலைச் சொன்னப்ப.... நீ அதை ஏத்துக்கலை. நட்பு ரீதியா மட்டும் பழகுவோம்னு சொல்லிட்ட. நீ மறுத்துப் பேசினதை சீரியஸா எடுத்துக்காத மாதிரி நானும் நடிச்சேன். எப்படியாவது உன்னை அடையணும்ன்னு துடிச்சேன். சென்னைக்கு வரணும்... உன்னைப் பார்க்கணும், பேசணும்ன்னு என்னென்னவோ திட்டம் போட்டு வச்சிருந்தேன். என்னோட துரதிர்ஷ்டம்... ப்ரிண்டிங் ப்ரஸ் சம்பந்தமா வெளிநாட்டு ட்ரிப் போக வேண்டிய அவசியமாயிடுச்சு. அம்மாவுக்கு வேற நெஞ்சு வலி வந்து அவங்களைக் கவனிக்கறதுல... எங்கயும் நகர முடியாத சூழ்நிலையாயிடுச்சு. இதுக்குள்ள நீ அந்த ஏகாந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. உன்னைப் பார்த்த நாள்ல இருந்து உன்னோட அழகான முகத்தையே நினைச்சுக்கிட்டிருந்தேன். உன் ஞாபகமாகவே இருந்தேன். உன்னைப் பார்த்த நிமிஷத்துலயிருந்து எனக்குள்ள ஒரு வெறி உருவாயிடுச்சு. ‘நீ எனக்கு வேணும்’, ‘நீ எனக்கு வேணும்’ங்கற எண்ணத்துலதான் என்னோட இதயம் துடிக்குது. எங்க அம்மாவுக்கு வாழ்நாட்கள் ரொம்ப கம்மின்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால என்னோட கல்யாணத்துக்கு வீட்ல அவசரப்படுத்தறாங்க. ஒரு மாசம் டைம் குடுத்திருக்கார் எங்க அப்பா. ஒண்ணு... அவர் பார்த்துச் சொல்ற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும். அல்லது நான் எந்தப் பொண்ணை விரும்பினாலும் அவளைக் கல்யாண பண்ணி வைக்கவும் தயாரா இருக்கறதா சொன்னார். அவர் குடுத்திருக்கற காலக்கெடு முடியறதுக்குள்ள உன்னைத் தயார் பண்ணணுமே. அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு...”

“என்னமோ பெரிசா... பெண் பார்க்கும் படலத்துக்கு முறைப்படி ஏற்பாடு பண்ணின மாதிரி பேசற? இதுக்குப் பேர் ஏற்பாடு இல்ல. கடத்தல். ‘கிட்நாப்பிங்...’”


“நீ எப்படி வேண்ணாலும் சொல்லிக்கோ. எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலை இல்லை...”

“உனக்குக் கவலை இல்லாம இருக்கலாம். ஆனா... எங்க வீட்லயும் ஏகாந்த்தோட வீட்லயும் எவ்வளவு கவலைப்படுவாங்க? கல்யாண மாலையில இருக்கற பூக்கள் கூட வாடியிருக்காது... என்னை இப்படிக் கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்க...”

“உன்னை அடையறதுக்காகத்தான் அடைச்சு வச்சிருக்கேன்...”

“அது நடக்காது.”

“நடக்கும். நடத்திக் காட்டுவேன்.”

அரவிந்த் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, மிருதுளா அறையைச் சுற்றிலும் கண்களைச் சுழற்றினாள்.

அவளது பார்வை, கதவின் பக்கம் சென்றது.

இதைக் கவனித்த அரவிந்த் சிரித்தான்.

“என்ன பார்க்கற? தப்பிச்சுப் போறதுக்கு வழி பார்க்கறியா?”

.....

“கதவைச் சும்மாதான் சாத்தி வச்சிருக்கேன். ஆனா... என்னை மீறி நீ எங்கேயும் தப்பிச்சுப் போயிட முடியாது...”

“அரவிந்த்... ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு. நீ என்னை லவ் பண்றதா சொன்ன அந்த நிமிஷமே உன்னை நான் மறுத்துட்டேன். உனக்கு அப்படி ஒரு எண்ணம் வர்ற மாதிரி நான் நடந்துக்கவும் இல்ல. எல்லாமே மனம் விட்டுப் பேசின விஷயம்...”

“ஆமா. உன்னோட மனசை என்கிட்ட விட்டுட்டுப் போன விஷயம்...”

“மனம் விட்டுப் பேசி... முடிஞ்சு போன விஷயம்னு சொன்னேன்...”

“நோ... நோ... முடிஞ்சு போகல. இனிதான் எல்லாமே ஆரம்பம். அன்னிக்கு நீ சொன்னதை ஏத்துக்கிட்ட மாதிரி நடிச்சாலும் என்னோட உள் மனசுக்குள்ள நான் விதைச்சுக்கிட்ட காதல் விதை, முளைச்சு துளிர் விட்டு, செடியா பூத்துக் குலுங்குது. இனி அந்தப் பூ பூக்கற செடிக்கு ஒரு ஜோடி வேணும். அந்த ஜோடி நீயாகத்தான் இருக்கணும். நீ... நீ... மட்டும்தான் இருக்க முடியும்...”

“முடியாது... அரவிந்த், முடியாது. என்னோட கணவர் ஏகாந்த்தைப் பார்க்கற வரைக்கும் எனக்கு வேற யார் மேலயும் காதல் வரலை. காதல்ங்கறது உணர்வு பூர்வமானது. ஒருத்தரைப் பார்த்தது மனசு அசையணும். ‘ஜில்’லுன்னு இதயத்துக்குள்ள ஒரு நீர் வீழ்ச்சி பாயணும். ‘இவன்தான் இனி எனக்கு எல்லாமே’ங்கற சரணாகதி உணர்வு பொங்கணும். ஏகாந்த்தைப் பார்த்தப்ப, அவர் கூட பேசினப்ப, எனக்கு இந்த உணர்வெல்லாம் தானாவே உருவாச்சு. இப்படியெல்லாம் பயமுறுத்தி அந்த உணர்வை உருவாக்க முடியாது. ப்ளீஸ் என்னை விட்டுடு. என்னை மறந்துடு. என்னை இங்கிருந்து போக விடு. என்னைக் காணோம்னு ஊர்ல எல்லாரும் தவிச்சிக்கிட்டிருப்பாங்க...”

“நானும்தான் தவிக்கிறேன் உன் மேல உள்ள ஆசையில...”

“ஆசைதான் அழிவுக்குக் காரணம். கல்யாணம் ஆன ஒரு பெண்ணை இப்படிக் கடத்திக்கிட்டு வந்து, அடைச்சு வச்சு ‘டார்ச்சர்’ பண்ணிக்கிட்டிருக்க. சட்டத்தை மீறி நீ செஞ்சுக்கிட்டிருக்கற இந்த அடாவடியான குற்றங்களுக்குத் தண்டனையா... நீ அழிஞ்சு போகப் போற. எத்தனை நாள் நீ என்னை அடைச்சு வச்சிருந்தாலும் உன்னோட ஆசை நிறைவேறாது. என்னை விட்டுடு...”

“சட்டத்தை மீறி உன்னை அடைய முடியாதுன்னுதான் உன்னைக் கெஞ்சிக்கிட்டிருக்கேன்... ப்ளீஸ் மிருதுளா. நீ எனக்கு வேணும்...”

“ச்சீ... அடுத்தவர் மனைவின்னு கூட யோசிக்காம இப்படிக் கேவலமா நடந்துக்கறியே... நீ யெல்லாம் ஒரு மனுஷனா?...”

“நீ என்னை எப்படி வேண்ணாலும் திட்டு. நீ திட்டறது கூட எனக்குச் சங்கீதம்தான். உன்னை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். ஒரு பிச்சைக்காரன் போல என்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் மிருதுளா... நீ என் மனைவியா ஆகணும். என்னோட காதல் உண்மையான, தூய்மையான காதல். உடல் இச்சைக்குட்பட்ட காம வெறி இல்ல. நான் அப்படிப்பட்டவனா இருந்திருந்தா... இதோ இந்த வினாடியே என்னோட ஆசையைத் தீர்த்துக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் இல்ல. நீ என் மனைவியாகணும். அதுதான் என்னோட ஆசை...”

“வாயை மூடு. உன்னோட ஆசை தப்பானது. முறை இல்லாதது. என்னைப் போக விடு. கல்யாணம் முடிஞ்ச மறுநாள் காலையிலேயே என்னை எவன் மூலமோ கடத்தி இருக்க. யார் மூலமா, எப்படிக் கடத்தினேங்கறதெல்லாம் புரியாத புதிரா இருந்தாலும் அந்தப் புதிருக்கான விடையையெல்லாம் நான் உன்கிட்ட எதிர்பார்க்கல. எனக்கு இப்ப தேவை இங்கிருந்து விடுதலை. என்னைப் போகவிட்டா, உன்னைக் காட்டிக் குடுக்காம நான் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பேன். என்னைப் போக விடு.”

“உன்னைப் போக விடறதுக்கா இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்கேன்? உன்னோட மனசு மாறணும். நான் நினைச்சது நடக்கணும். அற்புதமான அழகான நீ... ஒரு அர்த்தமுள்ள கவிதை. என்னோட காதல் தேவதை நீ. ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு விநாடியும் நான் உன்னையேதான் நினைச்சுக்கிட்டிருக்கேன்...”

“ஐயோ...!” காதுகளை மூடிக் கொண்டாள் மிருதுளா.

“உன் கழுத்துல அந்த ஏகாந்த் தாலி கட்றதுக்கு முன்னாலயே உன்னைக் கடத்தியிருக்கணும். ஆனா... ‘மை பேட் லக்’... அதுக்குத் தகுந்த ஆள் எனக்குச் சரியான நேரத்துல கிடைக்கல. அதனாலதான் அந்த ஏகாந்த்தோட உனக்குக் கல்யாணம் நடந்துடுச்சு. அதனால என்ன? நீ... கைபட்ட ரோஜாவா இருந்தாலும் என் இதயம் தொட்ட ரோஜாவாச்சே. வேற எதைப் பத்தியும் நான் பொருட்படுத்தறதா இல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் உன்னோட அந்தக் கல்யாணம், நான் கண்ட கெட்ட கனவு. எனக்குத் தேவை என்னோட உறவு. ‘மனைவி’ங்கற உரிமையுள்ள உறவு. ஒரு வாரம் டைம் தரேன். உன் மனசை மாத்திக்கோ.” உறுதியான குரலில் கூறிய அரவிந்த், கயிறை எடுத்தான். மறுபடியும் மிருதுளாவின் கை, கால்கள், வாயைக் கட்டினான்.

“உன்னோட பூப் போன்ற மேனியில இப்படியெல்லாம் கயிறு போட்டுக் கட்டறது எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்றது? வேற வழி இல்லாமத்தான் இப்படிப் பண்றேன்...”

மிருதுளாவைக் கட்டிப் போட்ட அரவிந்த், வெளியே சென்று அறையின் கதவைப் பூட்டினான். இரும்பாலான அந்தக் கதவு மிகமிக உறுதியாக இருந்தது. வெளியே வந்த அரவிந்த், ஒரு மீட்டர் தூரம் வரை நடந்தே வந்தான், கார் நிற்கும் இடத்திற்கு. மிருதுளாவை அடைத்து வைப்பதற்காக அந்த அளவுக்கு ரகசியமான இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

காரில் ஏற முற்பட்டவன், காருக்கு இடது புறமாக, காரையொட்டி முக்காடிட்ட ஓர் உருவம் நிற்வதைப் பார்த்தான். நெஞ்சிற்குள் ‘திக்’ என்ற உணர்வு பரவியது. அரவிந்த்தை காருக்குள் ஏற விடாமல் தடுத்தது அந்த உருவம்.


25

“என்னப்பா ஏகாந்த்... இப்படி ஆயிடுச்சு? மிருதுளா காணாமல் போன விஷயத்தை மூடி மறைக்க முடியல. என்னதான் ஊர்ல இருந்து வந்த உறவுக்காரங்கள்லாம் கல்யாணத்தன்னிக்கே கிளம்பிட்டாங்கன்னாலும் உள்ளூர்ல இருக்கற சொந்தக்காரங்க, விஷயத்தைக் கிசுகிசுக்காம இருப்பாங்களா? அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பரவிடுச்சு. குடும்ப கெளரவம் காத்துல பறக்குது ஏகாந்த்... அவமானமா இருக்கு. இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நம்ப குடும்பத்துல யாருமே, எதுக்குமே போகலே. இந்தச் சம்பவத்தால போலீஸ் ஸ்டேஷன்ல கால் வச்சாச்சு...” பெருமூச்சு விட்டார் கோபால்.

“மருமக இந்த வீட்ல வலது கால் எடுத்து வைப்பாள்ன்னு ஆசையா காத்துக்கிட்டிருந்தேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையாயிடுச்சு...” தன் வேதனையைச் சீதாவும் ஏகாந்த்திடம் பகிர்ந்து கொண்டாள்.

“எனக்கு ஒண்ணுமே புரியலம்மா.”

“எனக்குப் புரியுது, ஏகாந்த்... பண்பான பொண்ணுன்னு நாம்ப ஏமாந்துட்டோம்னு நல்லாவே புரியுது...”

“அப்படில்லாம் சொல்லாதீங்கம்மா. உண்மையிலேயே மிருதுளா நல்ல பண்பான பொண்ணுதான்...”

“ஒருநாள் பழகினதுல நீ என்னத்தப்பா அவளைப் பத்தி தெரிஞ்சுட்ட, பொண்ணை அப்படி வளர்த்திருக்கேன்... இப்படி வளர்த்திருக்கேன்னு அவங்கப்பா அளந்து விட்டதை நாமளும் நம்பிட்டோம். மகனுக்குக் கல்யாணம் ஆச்சா, மருமக வீட்டுக்கு வந்தாளா, வீடு கலகலப்பா இருந்துச்சான்னு இல்லாம அவளைக் காணோம், போலீஸ், புகார்ன்னு இப்படி ஆயிடுச்சே...”

இடைமறித்துப் பேசினார் கோபால்.

“என்ன சீதா நீ... பாவம், ஏகாந்த்... புதுசா கல்யாணமான பையன். முகத்துல அந்தக் களையே இல்லாம கவலைப்பட்டுப் போய் இருக்கான். அவனுக்கு ஆறுதலாப் பேசாம... ஏதேதோ பேசி அவனைக் கஷ்டப்படுத்தறியே...”

“நான் பேசறதுதாங்க உங்களுக்குப் பெரிசா தெரியும். அந்தப் பொண்ணு அம்மா இல்லாம வளர்ந்த பெண்ணு, யோசிச்சு முடிவெடுப்போம்னு சொன்னப்ப, நீங்களும், ஏகாந்த்தும் உடனே பேசி முடிச்சுடலாம்... பேசி முடிச்சுடலாம்னு அவசரப்பட்டீங்க. பதறாத காரியம் சிதறாதுன்னு பெரியவங்க சொன்னது சரியாத்தானே இருக்கு?”

சீதா பேசுவதைக் கேட்ட ஏகாந்த்திற்கு மன வேதனை அதிகமாகியது. சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“அம்மா... ப்ளீஸ்... மிருதுளா உடனே கிடைச்சுடமாட்டாளான்னு நான் தவிச்சுக்கிட்டிருக்கேன்...”

“சரிப்பா. என்னமோ... என்னோட ஆதங்கத்துல பேசிட்டேன். கல்யாணமான புது மாப்பிள்ளை நீ... இப்படித் தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு இருக்கறதைப் பார்க்க பெத்தவ எனக்கு வேதனையாத்தானே இருக்கு. சரி... சரி... ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. சாப்பிடாம இருந்துட்டா மட்டுமே மிருதுளா கிடைச்சுடப் போறாளா என்ன? நானும் வேண்டாத தெய்வமில்ல. அவ சீக்கிரம் கிடைக்கணும், குடும்ப நிலைமை சீராகணும்னு... மனசுல பாரத்தை வச்சுக்கிட்டு வயிற்றைக் காலியா வச்சிருக்க ஏகாந்த்... வா... நீங்களும் வாங்கங்க...” இருவரையும் வற்புறுத்திச் சாப்பிட அழைத்துச் சென்றாள் சீதா.

அப்போது ஏகாந்த்தின் மொபைல் ஒலித்தது. ஸெல்போனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டான்.

“இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரா? வணக்கம் ஸார்...” பேச ஆரம்பித்த ஏகாந்த், இன்ஸ்பெக்டர் கூறிய அதிர்ச்சித் தகவலுக்கு உள்ளம் அதிர்ந்தான்.

26

“என்னப்பா ஏகாந்த்... யார் ஃபோன்ல? என் உன் முகம் இப்படி மாறிடுச்சு...?” சீதா பதற்றத்துடன் கேட்டாள். மொபைல் ஃபோனில் வந்த தகவலுக்கு அதிர்ந்து போன ஏகாந்த் மிக மெல்லிய குரலில் பேசினான்.

“இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பேசினார்மா... மிருதுளாவோட வயசையொத்த ஒரு பொண்ணோட பிணம் கிடைச்சிருக்காம். ரயில்ல அடிப்பட்டதுனால முகம் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்குச் சிதைஞ்சு போயிருக்காம்....” உடைந்த குரலில் பேசிய ஏகாந்த்தின் பய உணர்வும், பதற்றமும் கோபால் மற்றும் சீதாவைப் பற்றிக் கொண்டன.

“அம்மா... அது... மிருதுளாவா இருக்கக் கூடாதும்மா. அவ எதுக்கும்மா ரயில்ல போய் விழணும்? அவளா இருக்காதும்மா...”

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சீதா, அவனது தலையை வருடிக் கொடுத்தாள். கோபாலும் ஆறுதலாகப் பேசினார்.

“ரிலாக்ஸ், ஏகாந்த். ‘டெட் பாடி’ எங்க இருக்கிறதா இன்ஸ்பெக்டர் சொன்னார்?”

“ராயப்பேட்டை ஆஸ்பிட்டல்லப்பா... அடையாளம் கண்டுபிடிக்கறதுக்காக இன்பெக்டர் ப்ரேம்குமார் அங்க வரச் சொல்றாரு.”

“அப்ப... கிளம்பு. நம்பளால கண்டுபிடிக்க முடியுதான்னு பார்ப்போம்...”

“மாமாவையும் இன்ஸ்பெக்டர் வரச் சொல்லியிருக்காராம். மாமா நேரா அங்க வந்துடறதா சொன்னாரப்பா...”

“சரி... வா. நாம போகலாம்.”

“சரிப்பா.”

சாப்பிடாமல் கொள்ளாமல் அவர்கள் கிளம்பிச் செல்வதைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா.

27

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை. கீழ் மட்ட மக்கள் கவலை சூழ்ந்த முகங்களுடன் காணப்பட்டார்கள். மனிதாபிமானமிக்க நல்ல ஊழியர்கள் சிலர், நோயாளிகள் டாக்டரைப் பார்ப்பதற்காக உதவி செய்து கொண்டிருந்தனர்.

உட்கார்வதற்குக் கூடச் சிரமப்பட்ட நோயாளிகளில் சிலர் மருத்துவமனையின் வெராண்டாவில், தரை மீது சுருண்டு படுத்திருந்தனர். வெள்ளை உடை அணிந்த மருத்துவர்களும் நடமாடிக் கொண்டிருந்தனர்.

மருத்துவமனைக்குள் வந்திறங்கிய கோபாலும், ஏகாந்த்தும் மார்ச்சுவரி பகுதி எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டனர். மார்ச்சுவரி பகுதியில் இவர்களுக்காகக் காத்திருந்தார் ப்ரேம்குமார். அவருடன் மோகன்ராமும் நின்றிருந்தார். மோகன்ராமின் முகம் வெளிறிப்போய்க் காணப்பட்டது.

“வாங்க... போய்ப் பார்ப்போம்...” ப்ரேம்குமார் சென்னதும், மூவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

“இதோ... இதுதான் ‘ரெயில்வே ட்ராக்’ல கிடைச்ச டெட்பாடி.” வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த துணியை நீக்கிவிட்டுக் காண்பித்தார் ப்ரேம்குமார். மூவருமே அந்தப் பிணத்தின் சிதைந்து போன முகத்தைப் பார்த்து, பார்க்கச் சகிக்காமல் திரும்பிக் கொண்டனர்.

ப்ரேம்குமார் கூறினார், “முக அடையாளம் தெரியலை.  பிணத்து மேல இருக்கற டிரஸ்ஸைப் பாருங்க. முழுசா இல்லாட்டாலும் கிழிஞ்சு, நைஞ்சு போன துணிப்பகுதியைக் கவனிங்க. கை, கால் விரல்களெல்லாம் ரொம்ப நாசமடையாம இருக்கு. அதையும் பாருங்க. உடுத்தி இருந்த துணி, சுரிதாரா, நைட்டியா, புடவையா என்னன்னே தெரியாத அளவுக்கு நைஞ்சு போயிருக்கு...”

மனதைத் திடப்படுத்திக் கொண்டு மோகன்ராம் பார்த்தார். அவரைத் தொடர்ந்து ஏகாந்த்தும் பார்த்தான்.

பிணத்தின் கழுத்துப் பகுதியில் ரத்தக் கறையாய்ப் போன மஞ்சள் சரடு நைந்து போய்க் காணப்பட்டது. பிணத்தின் உயரம் மிருதுளாவின் உயரத்திற்குச் சரியாக இருந்தது. கைப் பருமன், விரல்கள் எல்லாமே மிருதுளாவுடையதைப் போலவே இருந்ததைப் பார்த்த மோகன்ராம் அலறினான்.

“ஐயோ... மிருதுளா... என் கண்ணே....” அழுதார். மோகன்ராம் அழுவதைப் பார்த்த ஏகாந்த்திற்கு, ‘இது மிருதுளாதானோ’ என்ற எண்ணம் தோன்றியது. கூடவே சோக உணர்வு தொற்றிக் கொண்டது.

‘அப்படின்னா... என்னோட... மிருதுளா... இது... இந்தப் பிணமா?... ஐயோ... என் மிருதுளா பிணமாகிப் போனாளா? இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாளா...’ பெண்பிள்ளை போலக் குலுங்கி அழுதான் ஏகாந்த்.


“மிஸ்டர் ஏகாந்த்... அவசரப்படாதீங்க. போஸ்ட் மார்ட்டங்கற அடுத்த கட்டம் இருக்கு...” ப்ரேம்குமார் கூறியதும் மோகன்ராம் இடைமறித்துப் பேசினார்.

“இது மிருதுளாவேதான், இன்ஸ்பெக்டர். அதே உயரம். அதே மாதிரி சதைப் பிடிப்பான கைவிரல்கள். நைந்து போகாத கால் விரல்கள் கூட இது மிருதுளாதான்னு காட்டுதே.” அழுகை மாறாத குரலில் பேசினார் மோகன்ராம்.

“ ‘பாடி’யை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப் போறேன். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் உங்களைக் கூப்பிடறேன். இப்ப நீங்க மூணு பேரும் கிளம்பலாம்.”

“ஏற்கெனவே ரயில்ல அடிபட்டு என் பொண்ணோட உடம்பு இந்தக் கதியாயிருக்கு. இன்னும் ‘போஸ்ட் மார்ட்’டத்துல வேற என் பொண்ணோட உடம்பைக் கூறுபோடுவாங்களே!”

“என்ன மிஸ்டர் மோகன்ராம்... சட்டதிட்டங்கள் அப்படி இருக்கே. ஸாரி. உங்க நிலைமை எனக்குப் புரியுது. இன்னும் இது மிருதுளான்னு கன்ஃபர்ம் ஆகலியே... டி.என்.ஏ. ரிப்போர்ட் வந்துட்டா எந்தக் குழப்பமும் இல்லாம இது மிருதுளாவா இல்லையான்னு தெளிவாயிடும். கிளம்புங்க.”

ப்ரேம்குமார் கூறியதும் மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். கார்களை நிறுத்தியிருந்த இடம்வரை மூவரும் பேசிக் கொண்டே போனார்கள்.

“சம்பந்தி... என் மக... என் மகளுக்கு இப்படி ஆயிடுச்சே சம்பந்தி... ஒரே பொண்ணுன்னு என் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தேனே... மணக்கோலத்துல கண் குளிரப் பார்த்த என் மகளை இப்படிப் பிணமா பார்க்க வச்சுட்டானே, அந்த ஆண்டவன்...”

அழுகை வெடித்துக் கொண்டு வர, அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பெரும்பாடு பட்டார் மோகன்ராம்.

“கன்ட்ரோல் பண்ணிக்கோங்க சம்பந்தி. அது மிருதுளா தான்னு இன்னும் முடிவாகலியே...” கோபால் ஆறுதலாகப் பேசினார்.

“இல்லை சம்பந்தி. அது என் பொண்ணு மிருதுளாதான். முதல் இரவு கொண்டாடிய பொண்ணு... தொடர்ந்த இரவுகளையே பார்க்காம இப்படிக் கண்ணை மூடிட்டாளே... அவ ஏன் இப்படிப் பண்ணினா? யாரால அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுச்சு? எதுவுமே தெரியாம எனக்குத் தலை சுத்துது. நெஞ்சு வலிக்குது.” கதறிய மோகன்ராம், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.

“மாமா... மாமா....”

சம்பந்தி... சம்பந்தி... ஏகாந்த்தும் கோபாலும் சாய்ந்துவிட்ட மோகன்ராமைப் பார்த்துப் பதறினர்.

ஏகாந்த் அவரைத் தூக்கி நிறுத்தினான். பக்கத்திலிருந்த குழாயிலிருந்து கைகளில் தண்ணீர் பிடித்து வந்து மோகன்ராமின் முகத்தில் தெளித்தார் கோபால். கண் விழித்தார் மோகன்ராம். மனம் ஓரளவு தெளிந்தார். தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுதாரித்தார்.

“உணர்ச்சி வசப்படாதீங்க சம்பந்தி... வாங்க!” அவரது கையைப் பிடித்துச் சென்றார் கோபால். மெளனமாக அவர்களைப் பின் தொடர்ந்த ஏகாந்த், மனசுக்குள் அழுதான்.

‘என்னை நேர்ல பார்த்த முதல் தடவையிலயே அவளோட மனசை நான் டிஸ்டர்ப் பண்ணினதா சொன்னாளே. மனம் திறந்து பேசணும், ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்னு எவ்வளவு தெளிவா சொன்னா? இப்ப அவளுக்கு என்ன நடந்ததுன்னே புரியாம தவிக்கிறேனே...’ ஏகாந்த்தின் மனம் அலை பாய்ந்தது.

‘சிதைந்து போன அந்த முகம்?... அந்த முகத்துக்கு உரிய உடல்... அது... என் மிருதுளாவா? இருக்காது. இருக்கக் கூடாது. ‘வருவேன் நான் உனது’ பாடலைப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு நான் சொன்னதை நம்பாம திரும்பிப் படுத்துக்கிட்டா. அந்தக் கோபத்துல... ச்சே... ச்சே... அந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு வெளியே போற அளவுக்கு ஸென்ஸிடிவ்வான இயல்பு இல்லையே? புத்திசாலியான, தெளிவான சிந்தனை உள்ள பொண்ணாச்சே என் மிருதுளா?’ துன்ப ரேகைகள் அவனது முகத்தில் பிரதிபலித்தன.

காரின் அருகே வந்ததும், மோகன்ராம் அவரது காரில் ஏற முற்பட்டார்.

“மாமா... எங்க கார்ல வாங்க. நான் உங்களை உங்க வீட்ல விட்டுடறேன். இப்படி ஒரு நிலைமையில் நீங்க கார் ஓட்ட வேண்டாம் மாமா. யாரையாவது மெக்கானிக்கை அனுப்பி உங்க காரை எடுத்துக்கலாம்.”

“வேணாம் மாப்பிள்ளை. ஐ அம் ஆல்ரைட் நெள. கார் ஓட்ட முடியாத அளவுக்கு உடம்புக்குப் பிரச்னை ஒண்ணுமில்ல. மனசுதான் சரியில்ல. நான் சமாளிச்சுப் போய்க்குவேன். நீங்க கிளம்புங்க. வரேன் சம்பந்தி.” விடை பெற்றுக் காரில் ஏறிக் கிளம்பினார் மோகன்ராம்.

கோபாலும், ஏகாந்த்தும் தங்களது காரில் ஏறினர். கனத்துப்போன இதயத்துடன் ஏகாந்த் காரை இயக்கினான். கார் ஸ்டீயரிங் சுற்றுவது போல அவனது மனமும் சுற்றியது.

28

லக்ட்ரிக் பில்லிற்குப் பணம் கட்டி விட்டு வீட்டிற்குள் வந்த வருணாவை வாசலிலேயே வழி மறித்தாள் அகல்யா.

“என்னம்மா? ஏன் இவ்வளவு பதற்றமா இருக்கீங்க?” அகல்யாவின் முகம் பிரதிபலித்த பதற்றம், வருணாவை இவ்விதக் கேள்வி கேட்க வைத்தது.

“கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மிருதுளாவைக் காணோமாம். இப்ப என்னடான்னா மிருதுளாவோட வயசுல ஒரு பொண்ணோட பிணத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து மாமாவுக்குத் தகவல் வந்துச்சாம். மாமாவும், ஏகாந்த்தும் ராயப்பேட்டை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்களாம். அத்தை எனக்கு போன் போட்டு எல்லா விபரத்தையும் சொன்னாங்க. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியல. வா. நாம இப்ப உடனே மாமா வீட்டுக்குப் போகணும்.”

அகல்யா கூறியதைக் கேட்டதும் வருணாவின் அடி வயிற்றில் பய உணர்வு பிறாண்டி எடுத்தது. அவளுடைய இதயத் துடிப்பு அவளுக்கே ‘தொம் தொம்’ என்று கேட்டது.

‘திரிசூலியின் வேலை இப்படிக் கொலையில முடியும்னு எதிர்பார்க்கவே இல்லையே. ஏகாந்த் மச்சான் எனக்கு வேணும்னு திரிசூலிட்ட சொன்னேனே தவிர மிருதுளாவைத் துன்புறுத்தணும், கொலை பண்ணணும்னெல்லாம் நான் சொல்லவே இல்லையே. வசியம் பண்ணி ஏகாந்த் மச்சான் என்னைத் தேடி வரணும்னுதானே நான் அவகிட்ட சொன்னேன்... இப்படி மிருதுளாவைக் கொல்ற அளவுக்குப் போய், சிக்கல்ல மாட்டி விட்டுட்டாளே...’ நெஞ்சில் திகில் சூழ, விக்கித்து நின்ற வருணாவை அழைத்தாள் அகல்யா.

“என்னடி வருணா... நான் கிளம்பணும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்... நீ என்னடான்னா இப்படிப் பேயறைஞ்ச மாதிரி நிக்கற?” அதட்டினாள்.

“நீ... நீங்க... சொன்ன விஷயத்துல ரொம்ப ‘ஷாக்’ ஆயிட்டேன்மா. வாங்க கிளம்பலாம்.” சமாளித்துப் பேசினாள் வருணா. பணம் கட்டிய ரசீதை அலமாரியினுள் வைத்தாள்.

“வாங்கம்மா.”

இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பினர்.

ஏகாந்த்தின் வீடு வந்ததும், ஸ்கூட்டரை நிறுத்தினாள் வருணா. அகல்யா இறங்கியதும், காம்பெளண்ட் கேட் அருகே கூட்டரை ‘பார்க்’ செய்துவிட்டு, பூட்டியபின் உள்ளே போனாள். கோபாலின் கார் வெளியே நின்றது.


“மாமா வந்துட்டார் போலிருக்கே...” அகல்யா வேகமாக உள்ளே நுழைந்தாள். வருணாவும் அவளைத் தொடர்ந்தாள்.

ஹாலில் இருந்த சோஃபாவில் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள் கோபாலும், சீதாவும்.

“அண்ணா... அண்ணி...” அகல்யாவைப் பார்த்ததும் அன்பு மிகுதியால் மேலும் கவலைக்குட்பட்டார்கள்.

“என்னண்ணா ஆச்சு?”

“போலீசுக்குக் கிடைச்சிருக்கற பிணம் மிருதுளாவோடதுதான்னு அவங்கப்பா சொல்றாரும்மா... பெத்து வளர்த்தவரே சொல்லும்போது சரியாத்தானே இருக்கும்?...”

“ஏகாந்த்துக்கு அந்த மிருதுளாவைப் பார்க்கும்போது ‘தாய் இல்லாம வளர்ந்த பொண்ணு’ன்னு நான் கூடத் தயங்கினேன் அகல்யா. உங்க அண்ணனும், ஏகாந்த்தும் ஒரேயடியா மிருதுளாதான் பொண்ணுன்னு நிச்சயம் பண்ணாங்க...”

சீதா கூறியதைக் கேட்டுக் கோபால் சற்றுக் கோபப்பட்டார்.

“நீ இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்க. அன்னிக்கு ரெஸ்ட்டாரண்ட்ல மிருதுளாவைப் பொண்ணு பார்த்துப் பேசினோமே... அப்ப, நம்ப ஏகாந்த்துக்கு, மிருதுளாவை ரொம்ப பிடிச்சிருச்சு, நம் மகன் ஆசைப்பட்டபடி அந்தப் பொண்ணையே முடிச்சு வைக்கலாம்னு நினைச்சுதான் அவளை நிச்சயம் பண்ணோம். நமக்கு இருக்கிறது ஒரே மகன். அவனோட விருப்பம்தான் நமக்கு முக்கியம். எனக்கென்ன ஜோஸ்யமா தெரியும்? இப்படியெல்லாம் நடக்கும்னு? எதிர்பாராத விதமா இப்படி நடந்துடுச்சு. அதுவே இன்னும் இதுதான் நடந்திருக்கணும்னு முடிவாகலை. உன்னோட கோணத்துல இருந்து ‘தாய் இல்லாம வளர்ந்த பொண்ணு’... ‘அப்படி இப்படின்னு’ நீ பேசற. இதே மாதிரி மிருதுளாவோட அப்பாவும் அவரோட கோணத்துல பேசினார்ன்னா?... ‘என்னடா இது... நல்ல இடத்துச் சம்பந்தம்னு பொண்ணைக் குடுத்தோமே... மாப்பிள்ளைப் பையனால மகளுக்கு ஏதோ பிரச்னையோ என்னவோ’ன்னு அவர் பேசக் கூடும்தானே? அவர் ஜென்டில் மேன். அதனாலதான் நம்பளை வம்புக்கு இழுக்காம இருக்கார். புரிஞ்சுக்க... நான் ஒண்ணும் மகன் விருப்பப்பட்டுட்டான்னதும் விசாரிக்காம முடிவு பண்ணலை. நாலு பேர்ட்ட அவங்க குடும்பப் பின்னணியைப் பத்தி விசாரிச்சேன். ‘பண்பான பொண்ணு. பதவிசான பொண்ணு. தாய் இல்லாத பொண்ணைத் தகப்பன்காரர் நல்லபடியாத்தான் வளர்த்திருக்கார்’னு சொன்னாங்க. நல்ல இனவழியான குடும்பம்தான்னு சொன்னாங்க. இதுக்கம் மேல என்ன பண்ணியிருக்க முடியும்? நம்ம போறாத நேரம்... மகனோட கல்யாணம் முடிஞ்ச மறுநாளே இப்படியெல்லாம் நடந்துடுச்சு... தாய் இல்லாம வளர்ந்த எல்லாப் பொண்ணுகளுக்குமா இப்படி நடக்குது? முதல்ல அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு நமக்குத் தெரியாது. விஷயமே தெரியாம எதையும் மனம் போனபடி பேசக்கூடாது...”

அண்ணனின் கோபத்தைக் குறைப்பதற்காக அகல்யா பேசினாள். “என்னண்ணா நீங்க... அண்ணி மேல கோபப்பட்டுக்கிட்டு? அவங்க ஏதோ... ஆதங்கத்துல பேசிட்டாங்க... நினைச்சுக்கூட பார்க்க முடியாத விபரீதம் நடந்திருக்கும்போது அண்ணியோட மனசுக்குச் சங்கடமாத்தானே இருக்கும்? அண்ணியைக் கோபிக்காதீங்க. ஆஸ்பத்திரியில என்ன நடந்துச்சு?... பிணத்தை நீங்க பார்த்தீங்களா?”

“அதையேன் கேக்கற? முகம் சிதைஞ்சு போய் அடையாளமே தெரியலை. மிருதுளாவோட அப்பா ‘அது என்னோட பொண்ணுதான்’னு சொல்றாரு. மிருதுளாவோட உருவ அமைப்பு, உயரமெல்லாம் ஒத்துப் போகுதாம்...”

கோபால் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த வருணாவின் நெஞ்சில் பய அலைகள் பாய்ந்து பாய்ந்து மோதின.

“ஏகாந்த் என்னண்ணா சொல்றான்?”

“ஒரே நாள் பழக்கத்துல அவனால என்னம்மா சொல்ல முடியும்? மிருதுளாவோட அப்பா, ‘அந்தப் பிணம் தன்னோட பொண்ணுதான்னு’ சொன்னதைக் கேட்டு ரொம்ப ‘அப்ஸெட்’ ஆயிட்டான். டி.என்.ஏ. பரிசோதனைன்னு ஒண்ணு இருக்குன்னாலும்கூட அவன் ரொம்ப டென்ஷனாயிட்டான். ஆஸ்பத்திரியில இருந்து வந்ததுமே மாடிக்கு அவனோட ரூம்ல போய்க் கதவைப் பூட்டிக்கிட்டான்.”

“போஸீஸ் என்ன முடிவு எடுத்திருக்காங்க?”

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறம்தான் எதையும் கன்ஃபாம் பண்ணுவோம்னு சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் டி.என்.ஏ. பரிசோதனை இருக்காம். அது மூலமா அந்தப் பிணம் யாரோடதுன்னு கண்டுபிடிக்கலாமாம். ஆனா அதுக்கு ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுமாம். எந்த விஷயமும் புரிபடாம ஒரே குழப்பமா இருக்கு அகல்யா. ஏகாந்த் தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு கவலையா இருக்கறதைப் பார்க்க மனசு கஷ்டமா இருக்கு.” சீதா ஆறுதலை எதிர்பார்த்து அகல்யாவிடம் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டாள்.

“கவலைப் படாதீங்க அண்ணி. நீங்களோ... அண்ணனோ யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு இப்படி நடந்திருக்கவே கூடாது. எந்தப் பாவி அந்தப் பொண்ணுக்கு இந்தக் கதியைக் குடுத்தானோ... அவன் விளங்கவே மாட்டான்...” அகல்யா கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மேலும் நடுங்கியது வருணாவின் உள்ளம்.

‘தப்பு பண்ணிட்டேனோ... தப்பு பண்ணிட்டேனோ!’ என்று அவளது உள் மனது புலம்பியது.

வருணாவின் நிலைமை புரியாத அகல்யா, “ஏ வருணா... சும்மா உட்கார்ந்துக்கிட்டிருக்கிறே... அத்தைக்கு, மாமாவுக்குக் காபி போட்டுக் கொண்டு வந்து குடுக்கலாம்ல...” என்று அதட்டியதும் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

“ஏன் அகல்யா... அவளைக் கோவிச்சுக்கற? இன்னும் பத்து நிமிஷத்துல சமையல்காரி வந்துருவா...”

“பரவாயில்ல அண்ணி... வருணா போட்டுக் கொண்டு வரட்டும். பொண்ணுகளைப் படிக்க வச்சாலும் பிரச்னையாயிருக்கு. படிக்க வைக்காட்டாலும் பிரச்னையாயிருக்கு. என்ன செய்றதுன்னே புரியல அண்ணி...” அகல்யா கூறியதைச் சீதாவும் ஆமோதித்தாள்.

“ஆமா, அகல்யா... இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் பத்தி எதையும் தீர்மானிக்க முடியல...”

கோபால் குறுக்கிட்டார்.

“இந்தக் காலமோ... அந்தக் காலமோ... எந்தக் காலத்துலயும் எதிலயும், நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். எல்லாமே அவரவர் விதிப்படி நடந்தே தீரும். இதுல படிக்க வச்சது, படிக்காம விடறதுங்கற பேச்செல்லாம் வீண் விவாதம்...” கோபால் பேசி முடிப்பதற்குள் வருணா காபியுடன் வந்தாள்.

அனைவரும் காபியைக் குடித்தபடி சற்று மனது இளைப்பாறல் அடைந்தனர். வருணாவின் மனசு மட்டும் ‘திக்... திக்...’ திகிலானது.

29

ன்னைக் காருக்குள் ஏற விடாமல் தடுத்த அந்த உருவம், முக்காடை நீக்கி, முகத்தைக் காட்டியதைக் கண்டான் அரவிந்த். அந்த முகத்திற்குச் சொந்தமானவள் ஓர் இளம் பெண். பெங்காலி இனப் பெண்களின் நிறமும், யெளவனமும் நிரம்பியிருந்த அந்த அழகிய முகத்தில் இனம் புரியாத ஒரு சோகம் மெல்லியதாய் இழையோடிக் கொண்டிருந்தது.

“நீ... நீ... யார்?” அரவிந்த் கேட்டான்.

“நான் யார்ன்னு உனக்குத் தெரியாது. ஆனா... நீ யார்ன்னு எனக்குத் தெரியும். உங்க அப்பா அருண் பானர்ஜியோட தங்கை விதுபாலா பானர்ஜியைத் தெரியுமா?”

“தெரியும். எங்கப்பாவோட தங்கை... எனக்கு அத்தை. தெரியாமலா இருக்கும்? அவங்க, காலேஜ்ல படிக்கும்போது எக்ஸ்கர்ஷன் போனப்ப ஒரு மலைச்சரிவுல கால் வழுக்கி விழுந்து அங்கேயே இறந்துட்டதாகவும், அவங்களோட ‘பாடி’ கூடக் கிடைக்கலைன்னும் அப்பா சொல்லியிருக்கார்.

 


நான் சென்னையில ஸ்கூலிங் பண்ணினதால வேற எதுவும் எனக்குத் தெரியாது.”

“உனக்கு எதுவுமே தெரியக் கூடாதுங்கறதுதானே உங்க அப்பாவோட குறிக்கோள்!”

“என்ன உளர்ற?”

“உளறல. உங்க அப்பா மறைச்சு வச்சிருக்கற உண்மைகளை உனக்கு வெட்ட வெளிச்சமாக்கணும்னு நினைக்கறேன். நீ நினைக்கற மாதிரி உன்னோட அத்தை விதுபாலா பானர்ஜி, எக்ஸ்கர்ஷன் போகும்போது மலைச்சரிவுல விழுந்து சாகலை. அவங்க போன வருஷம் வரைக்கும் உயிரோடதான் இருந்தாங்க. உயிரோடு வாழ்ந்தவங்களை இறந்து போயிட்டாங்கன்னு பொய் சொல்லியிருக்கார் உங்கப்பா. மனசுக்குப் பிடிச்ச எங்க அப்பாவைக் கதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருபது வருஷம் வாழ்ந்தாங்க...”

“அப்படின்னா... நீ... நீ... விதுபாலா அத்தையோட...”

“கரெக்ட். உன்னோட விதுபாலா அத்தை என்னோட அம்மா. நான் அவங்களுக்கு ஒரே பெண்ணு. என் பேரு சுமலதா. வேறு ஜாதியில பிறந்த எங்கப்பாவைக் காதலிச்சது குற்றம்ன்னு உங்க அப்பா, எங்க அம்மாவை வேரோட உறவறுத்து விட்டுட்டாரு. காதலுக்கு மறுப்புச் சொன்ன உங்கப்பாட்ட எங்கம்மா மன்னிப்புக் கேட்டபிறகும் மனசு மாறவே இல்ல. அதனால வீட்டை விட்டு வெளியே வந்து எங்கப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வறுமையில கஷ்டப்பட்டாங்க. ஜாதியைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, அந்தஸ்தைத் தாண்டி, அன்பையும், அரவணைப்பையும் தாண்டி வந்து வாழ்ந்த அவங்களுக்கு அமைதி இல்ல. சந்தோஷம் இல்ல. வறுமையின் கொடுமையை அனுபவிச்சாலும் எங்கம்மா, எங்கப்பா ரெண்டு பேரும் உழைச்சுப் பிழைச்சாங்க. என்னையும் கஷ்டப்பட்டுப் படிக்க வச்சாங்க. கஷ்டப்பட்டாலும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தப்ப... விதி எங்கமாவைப் பார்த்துக் குரூரமா சிரிச்சுது. ஆமா. எங்கப்பாவுக்குத் திடீர்னு கிட்னி ஃபெயிலியராயிடுச்சு. உயிருக்கே ஆபத்தான நிலையைக் கடந்து அவர் உயிர் வாழணும்ன்னா பெரிய ஆபரேஷன் பண்ணியாகணும்னும், அதுக்கு நிறையப் பணம் செலவாகுன்னும் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. எங்கப்பாவோட உயிரை மீட்கணும்ன்னு, இருபது வருஷத்துக்கப்புறம் உங்கப்பா வீட்டுக்குப் போய் அவரோட கால்ல விழுந்தாங்க எங்கம்மா தன் புருஷனோட உயிரைக் காப்பாத்தணும்னு தன்மானத்தை விட்டுக் கொடுத்துப் பிச்சை கேட்டாங்க.”

“கல் நெஞ்சுக்காரரான உங்கப்பாவோட மனசு இரங்கவே இல்ல. காலைப் பிடிச்சுக் கெஞ்சின எங்கம்மாவுக்குக் கையை விரிச்சுட்டாரு. தேவைக்கு மேல ஏகப்பட்ட பணமும் சொத்தும் இருந்த உங்கப்பாவுக்கு ஒரு உயிர் காக்கற தேவைக்குக் கூடப் பணம் குடுக்க மனசு வரலை. வைத்தியச் செலவுக்குப் பணம் இல்லாத ஒரே காரணத்துனால எங்கப்பாவோட மூச்சு நின்னுபோச்சு. காதலுக்காகவும், கணவனுக்காகவும் தன்னோட சுகத்தையெல்லாம் இழந்த எங்கம்மாவும் ஒரே மாசத்துல எங்கப்பாவைத் தேடி மேல போயிட்டாங்க... நான் இப்படி அநாதையா... அநாதரவா நிக்கறேன்னா... அதுக்குக் காரணம் உங்கப்பா. அவரோட ஜாதி வெறி... அந்தஸ்து மோகம். பணக்காரர்ங்கற திமிர். தப்பு செய்றவங்களுக்குக் ‘கடவுள் தண்டனை குடுப்பார்’... ‘கடவுள் தண்டனை குடுப்பார்’ன்னு எங்கம்மா சொல்லுவாங்க. ஆனா... உங்கப்பாவுக்கு நான் தண்டனை குடுக்கணும். அதுக்காக உங்கப்பாவையும், உன்னையும் நிழலா பின் தொடர்ந்தேன். உன்னை நான் கொலை செஞ்சு, அவர் உன்னை இழந்து தவிக்கறதைத் தூர நின்னு பார்த்து ரசிக்கணும். என் கையால உன்னைத் தண்டிக்கணும்....”

ஆத்திரமாகப் பேசிய சுமலதா, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்த்தின் நெஞ்சில் குத்துவதற்காகக் கையை ஓங்கினாள். பயத்தில் அரவிந்த் கண்களை மூடிக்கொண்டான். ஓங்கிய சுமலதாவின் கையை ஒரு முரட்டுக் கரம் பிடித்துத் தடுத்து நிறுத்தியது. சுமலதாவின் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்தது. அடுத்த வினாடி தன் கையை வெடுக்கென்று உருவிக் கொண்ட சுமலதா அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தாள்.

சுமலதாவின் கத்திக்குத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய நபரைப் பார்த்தான் அரவிந்த்.

“நீயா...” பயம் குறையாத குரலில் கேட்டான் அரவிந்த்.

“நானேதான்!” அழுத்தமாகப் பதில் கூறியவன் தொப்பி அணிந்தவன்!

“ஒரு கடத்தலுக்குக் குடுக்க வேண்டிய தொகையைக் குடுக்காம நாளைக் கடத்திக்கிட்டிருக்க. எனக்கு அவசரமா உடனே பணம் வேணும். அந்தப் பொண்ணோட கத்திக் குத்துலயிருந்து உன்னைக் காப்பாத்தினேனே... இப்பவாவது எனக்குத் தர வேண்டிய பணத்தைக் குடுத்துடு!” தொப்பி அணிந்தவன் கடுமையான தொனியில் கேட்டான்.

“இப்ப... என்கிட்ட அவ்வளவு பெரிய தொகை இல்ல. நாளைக்கு எ.ஜி.ரோட்ல, ‘பிங்க்’ பில்டிங் பக்கத்துல வந்து நில்லு. நான் அங்க வந்துடறேன். என் காரைப் பார்த்ததும் கிட்ட வந்துடு. பேசியபடி உனக்குப் பணம் குடுத்துடறேன்.”

“பேச்சு மாறாத. எனக்குப் பணம் ரொம்ப அவசரம். அவசியம். நாளைக்குதான் உனக்குக் கடைசி வார்னிங். நாளைக்குத் தரலைன்னா. நான் ரொம்ப பொல்லாதவனாயிடுவேன். ஜாக்கிரதை! இப்ப நீ போகலாம்.”

காரில் ஏறிக் கிளம்பினான் அரவிந்த்.

30

மிருதுளா அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை. வழக்கம் போல் அவளுக்கு உணவு கொண்டு வந்த துர்க்கா, அறைக்குள் நுழைந்தாள். மிருதுளாவின் வாய்க்கட்டு, கை, கால் கட்டுக்களை அவிழ்த்தாள்.

அவளிடம் செய்கையால் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள் மிருதுளா. மிருதுளா கேட்டது புரிந்து, இறுகிய முகத்துடன் தன் வேலைகளிலேயே கவனமாக இருந்தாள் துர்க்கா.

‘குளிக்கப்போ!’ என்று கன்னடத்தில் கூறிய அவள், மிருதுளாவிற்காக உடைகளை எடுக்கச் சென்றாள். எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தாள்.

‘இவ கிட்ட கெஞ்சறதும் ஒண்ணு. சுவர்ல முட்டிக்கறதும் ஒண்ணு.’ நினைத்தபடியே குளியலறையை நோக்கி நடந்தாள் மிருதுளா. அப்போது துர்க்காவின் ஜாக்கெட்டிற்குள் அவள் மறைத்து வைத்திருந்த அவளது மொபைல் ஒலித்தது. வழக்கமாய் அங்கே வரும் பொழுது மொபைல் போனை ‘ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிடுவாள். இரண்டாவது முறையாக அன்று அவளது ஸெல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய மறந்துவிட்டாள். துர்க்காவிடம் மொபைல் இருப்பதை அறிந்து கொண்ட மிருதுளா, அது ஒலித்ததை அறியாதவள் போல் குளியலறைக்குச் சென்றாள்.

‘துர்க்கா பேசினால் தனக்குக் கேட்கட்டுமே,’ என்ற எண்ணத்தில் குளியலறைக் கதவை லேசாகத் திறந்து வைத்து, கதவருகே நின்று கொண்டாள். கூர்ந்து கேட்டாள்.

துர்க்காவின் மொபைலின் மறு முனையிலிருந்து உரத்த ஒரு குரல் கேட்டது. “அக்கா... போனை கட் பண்ணிடாதக்கா... அவசரமான விஷயம்...”

“ஆ... தமிழ்... தமிழ்... யாரோ துர்க்கா கிட்ட தமிழ் பேசறாங்க. அப்படின்னா... துர்க்கா... தமிழ்க்காரியா?...” துர்க்கா என்ன பேசப் போகிறாள் என்று மேலும் உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்டாள் மிருதுளா.

“என்னடா தம்பி... அப்படி என்ன தலை போற விஷயம்?


என்கிட்ட போன் இருக்கற விஷயமே யாருக்கும் தெரியாது. தெரிஞ்சுட்டா என் தலை போயிடும்...”அவசர அவசரமாகப் பேசினாள் துர்க்கா.

“ஐயோ அக்கா... இங்கேயும் தலைபோற விஷயம்தான். நம்ப ரம்யா மேல லாரி மோதி, அவ தலையில அடிபட்டு கோமாவுல கிடக்கா. நாப்பத்தெட்டு மணி நேரம் ஆனப்புறம்தான் எதுவும் சொல்ல முடியும்னு டாக்டருங்க சொல்றாங்க...”

“அடப்பாவி... ‘என் பொண்ணை வளர்த்து ஆளாக்கு’ன்னு உன்னை நம்பி விட்டேனே... எப்படியா இது ஆச்சு? உன்னை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இப்படியா ரம்யாவைத் தனியா விடுவ?”

“ரம்யா எங்கே போனாலும் நான் அவ கூடவேதான்க்கா போவேன். நேத்து நைட் டூட்டிக்குப் போனதுனால பகல்ல கொஞ்சம் கண் அவந்துட்டேன்க்கா. கம்ப்யூட்டர் க்ளாசுக்குப் போன பொண்ணு மேல லாரிக்காரன் மோதிட்டான்க்கா....”

துர்க்காவுடன் மறுமுனையில் பேசிய குரல், மிருதுளாவிற்குத் தெளிவாகக் கேட்கவில்லை எனினும், ஏதோ பேசுவதும் அதுவும் தமிழில் என்பதும் மட்டும் கேட்டது. துர்க்கா... தொடர்ந்து பேசினாள்.

“ஐயோ... இப்ப ரம்யா... என்ன நிலைமையில இருக்கா? கண்ணைத் தெறக்கவே இல்லையா?...”

“அந்தப் பத்ரகாளி அம்மன்தான்க்கா கண் திறக்கணும்... ரம்யா அவசர சிகிச்சைப் பிரிவுல இருக்காக்கா...”

தன் செல்ல மகளுக்கு, ஒரே மகளுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக, மகளின் உயிர் ஊசலாடும் வேதனையை அனுபவித்த துர்க்கா... சூழ்நிலையை மறந்து, அவளது தம்பியுடன் சகஜமாகத் தமிழில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளா, கோபத்துடன் குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.

“ஏம்மா... உனக்குத் தமிழ் தெரிஞ்சுருக்கு! தெரியாத மாதிரி நடிச்சிருக்க... தாய் மொழியையே மறந்து இப்படி ஒரு நாடகமா? ஏன்? எதுக்காக? நீ யாரு? அந்தக் கயவன் அரவிந்த்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?... நீயும் ஒரு பொண்ணுதானே?... என் விருப்பத்துக்கு விரோதமா ஒருத்தன் என்னை அடைச்சு வச்சிருக்கான். அதுக்கு நீயும் உடந்தையா இருக்கியே?... செல்லு...  இது எந்த இடம், பெங்களூர்தானே?” கோபமாகப் பேசிக் கொண்டிருந்த மிருதுளா, தன் போகத்தைக் குறைத்துக் கொண்டு தன்மையாகப் பேச ஆரம்பித்தாள்.

“சொல்லு... ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணே கேடு நினைக்கலாமா? உனக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டா? நினைச்சுப் பாரு. என்னைக் காணாம என்னைப் பெத்தவரும், புருஷனும் எப்படித் துடிச்சிக்கிட்டிருப்பாங்க?”

மிருதுளா இவ்விதம் பேசியதும், துர்க்கா தன் மகளை நினைத்துப் பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள். அச்சமயத்தில் துர்க்காவின் கையிலிருந்த மொபைல் போனை தட்டிப் பறித்தாள் மிருதுளா.

“இப்ப நான் ஒரு போன் அடிச்சா போதும். போலீஸ் பட்டாளமே வந்து நிக்கும்..”

“வேணாம்மா... என்னை மன்னிச்சிடு. குடிக்காரப் புருஷனால எந்த வருமானமும் இல்ல. வயித்த கழுவவும், என் பொண்ணை வளர்க்கவும், இந்த மாதிரி தவறான வேலைகள்ல இறங்கிட்டேன். நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். கல்யாணம் கட்டினதுக்கப்புறம் இந்தப் பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு ஒரே பொண்ணு. அவ பேர் ரம்யா. அவளையும் என்னை மாதிரி ஆக்கிடக் கூடாதுன்னுதான் நல்லா படிக்க வைக்கணும்னு சென்னையில இருக்கற என் தம்பிகிட்ட அனுப்பிட்டேன். இங்க ஒருத்தன் நடத்தற திருட்டுக் கும்பல்ல சேர்ந்தேன். அவன் என்ன வேலை செய்யச் சொல்றானோ அதைச் செய்யணும். செஞ்சா நிறையப் பணம் கொடுப்பான். எல்லாமே சட்டத்தை மீறின வேலைங்கதான். என்னோட இந்த தப்பான வேலையைப் பத்தி அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னுதான் சென்னைக்கு என் தம்பிகிட்ட அவளை அனுப்பினேன். என் தம்பியும் சோம்பேறி. நெனச்சா வேலைக்குப் போவான்.... இல்லாட்டி படுத்துத் தூங்குவான். அதனால என் மகளோட படிப்புச் செலவுக்கு நான்தான் இங்க இருந்து பணம் அனுப்பறேன். அவ நல்லா படிக்கறா, அவ படிச்சு முடிச்சு கெளரவமான உத்யோகத்துல சேர்ற வரைக்கும் இந்தத் திருட்டுக் கும்பல்ல இருந்தாகணும். குடிக்காரப் புருஷன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கும்போது எனக்கு இருபது வயசு. அவர் இந்த ஊர்க்காரர்ங்கறதுனால நானும் இங்க வந்தேன். அதனால இங்க உள்ள நடை உடை பாவனை, பாஷை எல்லாம் எனக்கும் வந்திடுச்சு. என் மக ரம்யாவுக்காகத்தான் இப்படி ஒரு இழிவான வாழ்க்கை நான் நடத்தறேன். என்னை மன்னிச்சிடும்மா. வாம்மா... நாம இங்கயிருந்து தப்பிச்சிடலாம்!” என்ற துர்க்கா, மிருதுளாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முயற்சிக்கும் பொழுது அங்கே வந்து நின்ற அரவிந்த், இருவரையும் அறைக்குள்ளே தள்ளினான். மிருதுளாவின் கையிலிருந்த மொபைல் போனைப் பிடுங்கிக் கொண்டான். தன்னிடம் இருந்த சாவியால் அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். மறுபடியும் கதவைத் திறந்து துர்க்காவிடம் இருந்த சாவியையும் பிடுங்கிக் கொண்டான். இருவரையும் கட்டிப் போட்டு விட்டு வெளியேறினான்.

31

ன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பணிபுரியும் காவல் நிலையம். அவரது மேஜை மீதிருந்த டெலிபோன் ஒலித்து அழைத்தது. ரிஸீவரை எடுத்தார் ப்ரேம்குமார்.

“இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்?” மறுமுறையிலிருந்து கேள்வி வந்தது.

“ஆமா கார்த்திக். நான்தான் பேசறேன். சொல்லுங்க.”

“என்ன ஸார்... குரலை வச்சே கண்டுபிடிச்சிட்டீங்க?”

“இதுல என்ன ஆச்சர்யம்? பாரதிராஜா ஸாரோட குரல் மாதிரி பெக்யூலியர் வாய்ஸ் உங்களுக்கு. சரி கார்த்திக், என்ன விஷயம் சொல்லுங்க. அந்த அரவிந்த் மேட்டர் என்னாச்சு?”

“அவரோட ஆபீசுக்கு மஃப்ட்டியில போனதுனால என்னை அவருக்கு அடையாளம் தெரியல. என்னை அடையாளம் கண்டதும் அவரோட முகம் லேசா இருட்டடிச்சது. ‘சட்டுன்னு’ சுதாரிச்சிக்கிட்டு சகஜமா பேசினாரு.”

“மிருதுளாவைப் பத்தி கேட்டீங்களா?”

“மிருதுளா ‘ப்ராஜக்ட்’ விஷயமா பெங்களூர் வந்த சமயத்துல பழக்கமாம். நல்ல ஃப்ரெண்ட் அப்படீன்னு சொன்னாரு...”

“அந்த இ.மெயில் பத்தி என்ன சொன்னாரு?”

“அது சும்மா தமாசுக்காக அனுப்பினதா சொன்னாரு. எல்லா ஃப்ரெண்ட்சுக்கும் அதே செய்தி அடங்கின இ.மெயில் அனுப்பியிருக்கறதா சொன்னாரு. அதையெல்லாம் எனக்குக் காண்பிச்சாரு. அவரோட பேச்சு இயல்பா இருந்தாலும் அதுல ஒரு செயற்கைத்தனம் தெரிஞ்சது ஸார். சும்மா சொல்லக் கூடாது ஸார். இப்ப உள்ள நடிகர்களையெல்லாம் மிஞ்சிப் போற அளவுக்கு நல்லாவே நடிக்கறாரு.”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க – நடிக்கறார்னு?”

“மிருதுளா தனக்கு நல்ல சிநேகிதி மட்டும்தான்னு சொன்னாரு. ஆனா அவரோட டேபிள் மேல மிருதுளா எழுதின காதல் கடிதம் இருந்துச்சு.”


“என்ன?! மிருதுளா எழுதின காதல் கடிதமா? யாருக்கு எழுதியிருந்தா?”

“அரவிந்த்துக்குதான் ஸார். உருகி உருகி எழுதியிருந்தா ஸார்....”

“என்ன கார்த்திக் இது! மிருதுளாவோட ட்ராக் வேற எங்கயோ போகுது?!”

“ஸார்... நாமளே எத்தனை கேஸ் பார்த்திருக்கோம். பணக்கார வீட்டுப் பொண்ணுக கேஸ்ல பெரும்பாலும் இப்படித்தான். தன்னோட பொண்ணு ‘பதிவிரதை’ன்னு அப்பனும், தன்னோட பொண்டாட்டி ‘ஒழுக்க சீலி’ன்னு புருஷனும் அடிச்சுச் சொல்லுவாங்க. தீவிரமா விசாரிக்கும் போதுதான் அவங்க வண்டவாளம் தண்டவாளத்துல ஏறும்...”

“ஒருத்தனைக் காதலிச்சு... வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு... அப்புறம் பிரச்னைகள்ல்ல மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியது. அது சரி... மிருதுளா வயசையொத்த பொண்ணோட பிணம் கிடைச்சுதே, அதைப் பார்த்துட்டு... ‘அது தன்னோட மகள் மிருதுளா’ன்னு அவங்கப்பா சொன்னான். ஏகாந்த்தால எதுவும் உறுதியா சொல்ல முடியலை. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு. அந்த ரிப்போர்ட் என்ன சொல்லுது தெரியுமா?” என்ற ப்ரேம்குமார், தொடர்ந்து கூறிய போஸ்ட்மார்ட்டம் பற்றிய தகவலைக் கேட்டு, அத்தகவல் அந்த அளவில் இந்தக் கேஸை நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்ற யோசனைக்கு ஆளானான் கார்த்திக்.

“என்ன கார்த்திக்... என்ன யோசனை? மிருதுளா அரவிந்த்துக்கு எழுதின காதல் கடிதத்தை எனக்கு ஃபேக்ஸ் பண்ணிவிடுங்க. மிருதுளாவோட அப்பா மோகன்ராமையும், ஏகாந்த்தையும் இங்க வரச் சொல்லியிருக்கேன். பி.எம். ரிப்போரட் பத்தி அவங்ககிட்ட பேசணும்.”

“சரி ஸார். அப்பிறமா உங்களைக் கூப்பிடறேன் ஸார்.”

“ஓ.கே.” பேசி முடித்தார்.

32

‘ஃபோர் எஸ்’ எனும் மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பகுதியில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள் வருணா. அவள் பணி புரியும் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். சிந்தனை வயப்பட்டபடியே ஸ்கூட்டரைச் செலுத்தினாள்.

‘திரிசூலி மூலமா குறுக்கு வழியில ஏகாந்த்தை அடைய எண்ணிச் சிறுபிள்ளைத்தனமா நான் செஞ்ச மூடத்தனமான செயல் எவ்வளவு பெரிய பிரச்னையில கொண்டு வந்து விட்டுடுச்சு? போலீஸ் என்னை மோப்பம் பிடிச்சுட்டா... ஐயோ! பயமா இருக்கே...’ யோசித்துக் கொண்டே ஆபீஸை நோக்கி ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்தாள் வருணா. அச்சமயம் அவளது ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தினான் ஒற்றைக் கண் மனிதன். அவனது பரட்டைத் தலையும், தாடியும் ஒற்றைக் கண் மூடிய பயங்கரமான தோற்றமும் ஏற்கெனவே பயந்து கிடந்த வருணாவின் அடி வயிற்றில் அமிலம் வார்த்தது போல மேலும் பய ஊற்றுப் பொங்கியது. வருணாவின் நெஞ்சம் நடுங்கியது.

அவளுக்கு மிக அருகில் வந்தான் ஒற்றைக்கண் மனிதன். ‘ஈ’ என்று விகாரமாய் இளித்தான். கருப்பான அவனது கால், கை எலும்புகள் துருக்கிக் கொண்டு பார்க்கவே அருவருப்பாக இருந்தன. அந்தக் கைகளால் ஸ்கூட்டரைப் பிடித்துக் கொண்டபடி வருணாவிடம் பேச ஆரம்பித்தான்.

“உன் வீட்டுக்குத் தெரியாம நீ செய்யற காரியம் எவ்வளவு டேன்ஜர் தெரியுமா? உங்க வீட்ல இருக்கறவங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொன்னா என்ன ஆகும்...?”

“ஐயோ... அப்படியெல்லாம் பண்ணிடாத... எனக்கு ரொம்ப பயமா இருக்கு...”

அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மேலும் விகாரமாய் இளித்தான் அவன்.

“உன்னோட பயம்... எனக்கு ஜெயம்... நீ நிம்மதியா இருக்கணும்னா எனக்கு ஒரு ஐம்பதாயிரம் வெட்டு.... அதற்கப்பறம்... நீ நடையை கட்டு... உன் வழியில நான் வரமாட்டேன். பணம் குடுக்கலைன்னா, படு குழியில தள்ளிடுவேன்...”

“திரிசூலி இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னாங்களே...”

“அவ திரிசூலி... திரிச்சி திரிச்சிதான் பேசுவா. சொல் சுத்தமே கிடையாது அவளுக்கு. என் கூட மல்லுக்கு வந்தாள்னா புல்லைவிடக் கேவலமா மிதிபடுவா. நான் இல்லாம... என்னோட உதவி இல்லாம அவளால எந்த ஒரு காரியமும் பண்ண முடியாது. நீ அவளுக்குக் கொடுத்த பணத்துல பத்துப் பைசா கூட அவ எனக்குக் கொடுக்கல. இந்த மாந்த்ரீக, வசியம்... இதெல்லாம் அவளுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் தெரிஞ்சவன் நான்! எல்லாம் அறிஞ்சவன் நான்! எல்லாம் புரிஞ்சவன் நான்! நான்... நான்... இல்லாம அவ இல்ல. ஆனா... என்னமோ அவதான் எல்லாத்தையும் செஞ்சி கிழிச்ச மாதிரி உன்கிட்ட பேசிப் பணத்தைப் பிடுங்கிட்டுப் போயிட்டா. சரி... இப்ப நீ சொல்லு. எனக்கு எப்ப பணம் கொடுக்கப் போற?”

வருணா அணிந்திருந்த சுரிதார் பேண்ட்டுக்குள் அவளது தொடைகள் வியர்த்து வழிந்தன. அச்சத்தினால் உடல் முழுவதும் நடுங்கியபடி இருக்க, நாக்கு... மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு, அவனுக்குப் பதில் கூற முடியாமல் தவித்தாள்.

“ம்... சொல்லு...” அவன் உறுமியதும் சிரமப்பட்டு வாய் திறந்தாள் வருணா.

“நான் பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு இல்ல. நடுத்தர வர்க்கந்தான். ஏற்கெனவே எங்க அம்மாவுக்குத் தெரியாம என்னோட தங்க வளையல்களை வித்துதான் திரிசூலிக்குப் பணம் குடுத்தேன். இதுக்கு மேல வேற எதையும் வீட்ல இருந்த எடுக்க முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்க.”

“உன்னோட சொந்தக் கதையெல்லாம் எனக்குத் தேவையில்ல...”

மேலும் கடுமையாக அவன் பேச ஆரம்பித்தபோது அங்கு ‘ட்ராஃபிக்’கை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ட்ராஃபிக் போலீஸ்காரர், வருணா ‘ராங்’ஸைடில் ஸ்கூட்டரை நிறுத்திப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவள் அருகே வந்தார்.

“என்னம்மா... பார்த்தா படிச்ச பொண்ணா இருக்க!... இப்படி நடு வழியில ராங் ஸைடில வண்டிய நிறுத்திப் பேசிக்கிட்டிருக்க?” என்று உரக்கக் கேட்டார்.

போலீஸைப் பார்த்துப் பயந்து போன ஒற்றைக் கண் மனிதன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வருணா.

“ஸாரி ஸார்... இதோ கிளம்பிட்டேன்,” என்றபடி ஆஃபீஸிற்கு வண்டியைச் செலுத்தினாள்.

வருணாவும், ஒற்றைக்கண் மனிதனும் பேசிக் கொண்டிருந்ததைத் தூரத்திலிருந்து காருக்குள் அமர்ந்தபடி கண்காணித்துக் கொண்டிருந்த ஏகாந்த், காரைக் கிளம்பி வருணாவின் ஸ்கூட்டர் அருகே ‘சரக்’ என்று நிறுத்தினான்.

மீண்டும் பயந்து போன வருணா ஸ்கூட்டரை ‘சடன் பிரேக்’ போட்டு நிறுத்தினாள். காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கிய ஏகாந்த் கோபமாகப் பேசினான்.

“வேலைக்குப் போற வழியில தெருவுல நின்னு எவன் கூடயோ பேசிக்கிட்டிருக்க? அவனைப் பார்த்தாலே சரியான கேடியா தெரியுது... அப்படிப்பட்டவன் கூட உனக்கென்ன பேச்சு? அன்னிக்கு என்னடான்னா ஒரு பொம்பள கூடப் பேசிக்கிட்டிருந்த... கேட்டா... நளினியோட சித்தின்னு சொன்ன... இப்ப இவன்? நளினியோட சித்தப்பான்னு சொல்லுவியா? கொஞ்ச நாளா உன்னோட போக்கே சரியில்ல...


இப்ப நான் அவசரமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கிட்டிருக்கேன். உன்னை வந்து பேசிக்கறேன்...”

கோபம் கொப்பளிக்கப் பேசிய ஏகாந்த், காரைக் கிள்ிபபிக் கொண்டு சென்றான்.

ஏகாந்த் வருணாவிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த மோகன்ராமிற்கு எதுவும் புரியவில்லை. அது ஏகாந்த்தின் குடும்பப் பிரச்னை என்பதால் நாகரிகம் கருதி மெளனமாக இருந்தார்.

33

ன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட ‘மிருதுளா... கன்னித் தன்மை நீங்கியவள், கற்பழிப்பு நேரிடவில்லை!’ என்ற தகவல்களைக் கேட்டதும் ஏகாந்த் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தான். “அப்படின்னா அந்தப் பிணம் என்னோட மிருதுளாவோடது இல்ல இன்ஸ்பெக்டர். என் மனைவி கூட முதலிரவு நடந்தாலும் நாங்க ரெண்டு பேரும் மனம் திறந்து பேசிக்கிட்டோமே தவிர உடல் ரீதியான உறவே வச்சிக்கலை. ஸோ... என்னோட மிருதுளா உயிரோட எங்கயோ இருக்கா... நீங்க இன்னும் கொஞ்சம் தீவிரமா தேடுங்க இன்ஸ்பெக்டர், ப்ளீஸ்..”

“ஒரு நிமிஷம்... நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க மிஸ்டர் ஏகாந்த். உங்கவிட்ட கேக்கறதுக்கு கஷ்டமாதான் இருக்கு... இருந்தாலும் நான் அதப்பத்தி பேசித்தான் ஆகணும்... உங்க மனைவி மிருதுளா, கல்யாணத்துக்கு முன்னால வேற யார் கூடயாவது...”

ப்ரேம்குமார் பேசியதைக் கேட்ட மோகன்ராம் கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.

“ஸ்டாப் இட் இன்ஸ்பெக்டர். என் பொண்ணு அப்படிப்பட்ட கேவலமான பொண்ணு இல்ல. அவ பண்பானவ. பண்பாடு நிறைஞ்சவ. சில உயர்மட்டத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுங்க மாதிரி டிஸ்கோத்தே, டேட்டிங் அது இதுன்னு ஊர் சுத்தற ரகம் இல்ல என் பொண்ணு. அவளுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அது உண்மையான நட்பு ரீதியானது. எல்லை தாண்டாத தூய்மையான சிநேகிதம் மட்டும்தான். தட்டிக் கொடுத்து வளர்க்கத் தாய் இல்லாட்டாலும் தட்டுக் கெட்டுப் போற மாதிரி என் பொண்ணை நான் வளர்க்கலை. அவ நெருப்பு. நீங்க இந்தக் கேஸோட ஃபைலை க்ளோஸ் பண்ணணுங்கறதுக்காக எப்படி வேணாலும் பேசலாமா...?”

ஆவேசமாகக் கத்திய மோகன்ராமைக் கை அமர்த்தி அடக்கினார் ப்ரேம்குமார்.

“லுக் மிஸ்டர் மோகன்ராம். புலன் விசாரனைன்னு வந்துட்டா போலீஸ் நாங்க எல்லாக் கோணத்துலயும் சிந்திப்போம். கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்போம். அது எங்களோட கடமை மட்டுமில்ல.... எங்களோட துப்புத்துலக்கற வழி முறைகளை அப்படித்தான் இருக்கும். என்னமோ இவ்வளவு கோபப்படறீங்களே... அரவிந்த்துக்கு உங்க மக மிருதுளா எழுதின காதல் கடிதம் இதோ இருக்கு பாருங்க...”

கார்த்திக் ஃபேக்ஸ் மூலம் அனுப்பிய கடிதத்தை மேஜை மீது போட்டார் ப்ரேம்குமார்.

“எடுத்துப் பாருங்க...”ப்ரேம்குமார் கூறியதும் மோகன்ராம் அதை எடுத்துப் பார்த்தார், படித்தார்.

“இது என்னோட பொண்ணு மிருதுளாவோட கையெழுத்து இல்ல இன்ஸ்பெக்டர். ஒரு விஷயம் இன்ஸ்பெக்டர்... நான் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கற அப்பா கிடையாது. என் பொண்ணு ஒருத்தனைக் காதலிக்கறதா சொல்லியிருந்தா, அவளுக்கு எந்தத் தடையும் இல்ல. அப்படி இருக்கும்போது அவ ஏன் ஒருத்தனைக் காதலிக்கணும்? வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கணும்? நிச்சயமா இந்த லெட்டர் என் பொண்ணு எழுதினது கிடையாது. அந்த அரவிந்த்கிட்ட தான் ஏதோ தப்பு இருக்கு. அவனைப் பிடிச்சு உலுக்கி விசாரிங்க.”

“ஆமா இன்ஸ்பெக்டர். மாமா சொல்றது ரொம்ப கரெக்ட். அந்த அரவிந்த்தைத் தீவிரமா விசாரிங்க.”

“நீங்க சொல்ற மாதிரியெல்லாம் அதிரடியா அரவிந்த்தை விசாரணை பண்ண முடியாது. பெங்களூர்ல அவர் பெரிய புள்ளி. மஃப்டியில போய் விசாரணை பண்ணின கார்த்திக் கண்ணுல இந்த லெட்டர் பட்டிருக்கு. இது ஒரு ஸ்ட்ராங்கான ஆதாரம். இனி கொஞ்சம் கொஞ்சமா அந்த அரவிந்த்தை ஃபாலோ பண்ணணும். இந்த ஒருலெட்டரை வச்சு உங்க மிருதுளாவுக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடியாது. இன்னும் பல வழிகள்ல மிருதுளாவைத் தேடணும். நாங்க தீவிரமா ஈடுபட்டுச் சீக்கிரமா மிருதுளாவைக் கண்டு பிடிப்போம்.”

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் கூறியதும் சற்றுச் சமாதானம் அடைந்தனர் ஏகாந்த்தும், மோகன்ராமும். இருவரும் ப்ரேம்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.

34

“என்ன? மிருதுளா வயசுள்ள பொண்ணோட ‘டெட்பாடி’ கிடைச்சுருக்கா?” ஏகாந்த்தின் மொபைல் அழைப்பில் பேசிக் கொண்டிருந்த அஷோக் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமா அஷோக். ஆனா அந்தப் பிணத்தோட ‘போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்’-ல அந்தப் பிணத்திற்குரிய பெண் ‘கன்னித்தன்மை’ நீங்கியவள்னு சொல்லியிருக்காங்க. அதனால அது என்னோட மிருதுளாவா இருக்க முடியாது. முதலிரவுல மிருதுளா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா... ‘கொஞ்ச நாள் நாம பேசி, பழகி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான் உடலால ஒண்ணு சேரணும்னு.’ நானும் அவ சொன்னதை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன். அதனாலதான் உறுதியா சொல்றேன், போலீஸ்க்கு கிடைச்சிருக்கற அந்தப் பிணம் என்னோட மிருதுளா இல்ல. பிணத்தோட முகம் அடையாளம் தெரியாமல் சிதைஞ்சு போயிருந்தாலும், அது மிருதுளா இல்லைங்கறது எனக்கு நல்லாத் தெரியும்...”

“பிறகென்ன? நிம்மதியா இரு...”

“இல்ல, அஷோக்... மிருதுளாவுக்கு, கல்யாணத்துக்கு முன்னால, வேற யார் கூடயாவது தொடர்பு இந்திருக்குமோங்கற ரீதியில இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு....”

“அட... நீ என்ன ஏகாந்த் இதுக்குப் போய்க் கஷ்டப்பட்டிருக்கிட்டு, போலீஸ்காரங்க அப்படித்தான் கேட்பாங்க. அவங்களோட சூழ்நிலை அப்படி. விசாரணைன்னு வரும்போது அவங்களோட கோணத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். அதைத்தான் கேட்டிருக்காங்க. அது அவங்களோட ட்யூட்டி. நீ உன் மனைவியை நம்பற. அந்த நம்பிக்கை மிருதுளாவை உன்கூடச் சேர்த்து வைக்கும்...”

“சரி, அஷோக். உன் கூடப் பேசும்போது ஆறுதலா இருக்கு...” என்ற ஏகாந்த், போலீஸாருக்குக் கிடைத்துள்ள பிணம் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அஷோக்கிடம் கூறி முடித்தான்.

அஷோக்கிடம் பேசிய பின், ஏகாந்த்தின் கனத்துப் போயிருந்த மனது சற்று லேசானது.

35

“எங்களூர் எ.ஜி.ரோடின் மையப் பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டுத் தொப்பி அணிந்தவனுக்காகக் காத்திருந்தான் அரவிந்த்.

கற்றை கற்றையான ரூபாய் நோட்டுக்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். அரவிந்த்தின் கார் அருகே வந்தான் தொப்பி மனிதன். அவனைப் பார்த்ததும் பணக்கற்றையை அவனிடம் கொடுத்தான்.

“எதுவும் பேசாத. நீ கேட்ட தொகைக்கு மேல இரண்டு மடங்கா கொடுத்திருக்கேன். என்னோட உயிரைக் காப்பாத்தினதுக்கு தாங்க்ஸ்.... சீக்கிரம் இங்கிருந்து கிளம்பு.” அவசர அவசரமாகப் பேசி முடித்த அடுத்த வினாடி  அரவிந்த் காரில் பறந்தான்.


இவர்கள் இருவரையும் சற்றுத் தள்ளி நின்று, மஃப்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் கார்த்திக் கண்காணித்துக் கொண்டிருந்தான். விடாமல் அரவிந்த்தைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த அவனது கண்களில், அரவிந்த்திடமிருந்து தொப்பி மனிதன் பணம் வாங்கிய காட்சி தென்பட்டது உஷாரானான். மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த தொப்பி மனிதனைப் பின் தொடர்ந்து கார்த்திக்கும் நடந்தே சென்றான். அதே தெருவில் இருந்த வங்கிக் கட்டடத்திற்குள் நுழைந்தான் தொப்பி மனிதன்.

வங்கி மூலமாக, மிக விரைந்து பணப் பரிமாற்றம் செய்யும் வழி முறைகளைக் கடைப்பிடித்துப் பணத்தைச் செலுத்தினான். வெளியே வந்தான். நடந்தான். கார்த்திக்கும் அவனைப் பின் தொடர்ந்தான். தொப்பி மனிதன் ஒரு டெலிஃபோன் பூத்திற்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு யாரிடமோ பேசினான். வெளியே வந்தான். அவன் வெளியேறியதும் படு வேகமாக கார்த்திக் அந்த டெலிஃபோன் பூத்திற்குள் நுழைந்தான். ‘ரீ டயல்’ பட்டனை அழுத்தினான். மறுமுனையில் குரல் ஒலித்தது.

“யாருங்க? யார் வேணும் உங்களுக்கு?”

“இப்ப ஒருத்தர் பேசினாரே, அவர் யார் கூடப் பேசினார்?”

“நீங்க யாரு? அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?”

தொப்பி மனிதனை விட்டுவிடக் கூடாது என்பதால் கண்ணாடி வழியே அவனைப் பார்த்தபடியே வேகமாகப் பேசினான் கார்த்திக். “நான் பெங்களூர் இன்ஸ்பெக்டர். அது எந்த ஊரு?”

“ஸ... ஸ... ஸாரி ஸார். இது சென்னைல இருக்கற பப்ளிக் பூத். இங்க யார் யாரோ வந்து பேசுவாங்க. போவாங்க. இப்ப இங்க பேசினது ஒரு பொண்ணு சார். முப்பது வயதுக்குள்ள இருக்கும். அடிக்கடி இங்க வந்து இன்கமிங் காலுக்காக வெயிட் பண்ணிப் பேசிட்டுப் போகுது சார். அதுக்காகக் கொஞ்சம் பணம் குடுக்கும். அதனால நானும் சம்மதிக்கறது வழக்கம் சார். மத்தப்படி அந்தப் பொண்ணைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஸார்.”

“சரி... சரி...” அவசரமாகப் பேசிய கார்த்திக் பூத்திலிருந்து வெளியே வந்தான். தொப்பி மனிதன் ஒரு மருந்துக் கடையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் என்ன செய்கிறான் என்று கண்காணித்தான். தொப்பிக்காரன் ஒரு மருந்துச் சீட்டைக் கொடுத்து மாத்திரைகள் வாங்கினான். அவற்றை ஜீன்ஸ் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

மருந்துக் கடை ஊழியரிடம் ஏதோ கேட்டான். அந்த நபர் ஒரு பேப்பர் மற்றும் பேனாவை அவனிடம் கொடத்தார். அவர் கொடுத்த பேப்பரில் நீண்ட நேரமாக ஊதோ எழுதினான் அவன். அதை மடித்து ஜீன்ஸின் இன்னொரு பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மருந்துக் கடை ஊழியனிடம் பேனாவைக் கொடுத்துவிட்டு நடைபாதையில் இருந்த ஒரு சிறிய கோவில் முன் நின்று கை கூப்பிக் கண் மூடி வணங்கினான். மீண்டும் நடந்தான். திடீரென முன்பின் அறியாத ஒரு நபர் முரட்டுத் தனமாகத் தன்னைப் பிடிப்பதை உணர்ந்து திரும்பினான்.

36

ன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரின் மொபைல் ஒலிக்க, பைக்கில் போய்க் கொண்டிருந்த ப்ரேம்குமார், பைக்கை ஓரமாக நிறுத்தினார். மொபைலை எடுத்துக் காதோடு சேர்த்தார். பேசினார்.

“ஹலோ...”

“சார்! நான் கார்த்திக். தொப்பி மனிதனுக்கு அரவிந்த் கட்டுக் கட்டா பணம் குடுத்ததைப் பார்த்தேன். அவனைப் பத்தித்தான் ஏகாந்த் சொல்லியிருப்பார்னு நினைக்கறேன். அவனைப் பின் தொடர்ந்து போய்ப் பிடிச்சுட்டேன். அவனை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன் ஸார். மத்ததை அப்புறம் பேசறேன் ஸார்.”

“சரி, கார்த்திக். நீங்க அவனை விசாரியுங்க. அவனுக்கும் அரவிந்த்துக்கும் உள்ள தொடர்பு இந்த கேசுக்கு ஸ்ட்ராங்கான தகவல்களைத் தரும்னு நான் நம்பறேன்.”

“ஓ.கே.ஸார்.” பேசி முடித்த கார்த்திக், தொப்பி மனிதனிடம் திரும்பினான்.

“நீ யாரு? உனக்கும் அந்த அரவிந்த்துக்கும் என்ன தொடர்பு?”

“அ... அரவிந்த்தா? அப்படி யாரையும் எனக்குத் தெரியாது...”

“உன்னோட பொய்க் கதையெல்லாம் நம்பறதுக்கில்ல. நான் யார் தெரியுமா? இன்ஸ்பெக்டர்! நீயும் அந்த அரவிந்த்தும் பேசிக்கிட்டிருந்ததையும், அவன் உனக்குக் கட்டுக்கட்டா பணம் குடுத்ததையும் பார்த்துட்டுதான் உன்னைப் பின் தொடர்ந்தேன். சொல்லு... உனக்கும் அரவிந்த்துக்கும் என்ன சம்பந்தம்?”

“கார்த்திக், தொப்பிக்காரனிடம் கேட்டு முடிப்பதற்குள், ஸ்டேஷன் ஃபோன் அலறியது. ரிஸீவரை எடுத்துப் பேசினான் கார்த்திக்.”

“ஹலோ... என்ன? ஸ்கூல்ல வெடிகுண்டா? இதோ... இப்பவே கிளம்பிப் போயிடறேன் ஸார். என்னோட ஸ்டேஷன்ல இருந்து ரொம்ப பக்கம் ஸார். இதோ... இப்பவே போயிடறேன் ஸார்...” பேசி முடித்த கார்த்திக் பரபரப்பானான்.

சில கான்ஸ்டபிள்களை அழைத்தான். அவர்களை ஜீப்பிற்குப் போகும்படி பணித்தான். வேறு ஒரு கான்ஸ்டபிளை அழைத்தான்.

“இவனை லாக்கப்ல போட்டு அடைச்சு வைங்க. பக்கத்துல ஸெயின்ட் தெரஸா ஸ்கூல்ல ‘வெடிகுண்டு’ வச்சிருக்கறதா போன் வந்துச்சாம். கமிஷனர் என்னை அங்க போகச் சொல்லியிருக்கார். இவனை உள்ள தள்ளுங்க. விசாரணையை வந்து வச்சுக்கலாம்.”

“ஓ.கே. ஸார்!” என்ற கான்ஸ்டபிள், தொப்பி மனிதனை லாக்கப்பிற்குள் தள்ளிக் கதவைப் பூட்டினான்.

கான்ஸ்டபிள்களுடன் கார்த்திக் ஜீப்பில் ஏறினான். ஸ்கூலை நோக்கி ஜீப் விரைந்தது. பறந்தது.

37

மிருதுளா காணாமல் போனது தொடர்பான அத்தனை தகவல்களையும் அஷோக்கிடம் மொபைல் ஃபோன் மூலம் பரிமாறிக் கொண்டான் ஏகாந்த்.

“நான் வேண்ணா லீவு போட்டுட்டு உன் கூட வந்து இருக்கட்டுமா, ஏகாந்த்?”

“சச்ச.... அதெல்லாம் ஒண்ணும் வேணாம், அஷோக். நீ எதுக்கு லீவு போட்டுக்கிட்டு? நான் ஓரளவு தைர்யமாத்தான் இருக்கேன். நீ வேணும்னு தேவைப்பட்டா கண்டிப்பா உன்னைக் கூப்பிடுவேன்.”

“இவ்வளவு உரிமையோட நீ என் கூடப் பழகறது எனக்கு சந்தோஷமா இருக்கு, அஷோக். நீ வேண்ணா பாரு. சீக்கிரமா மிருதுளா கிடைச்ச, அந்த சந்தோஷமான விஷயத்தை உன் வாயால நீ சொல்ல, நான் கேக்கப் போறேன்...”

“ஓ.கே. அஷோக் தேங்க்யூ.”

அஷோக்கிடம் பேசி முடித்தான் ஏகாந்த்.

 

ஸ்டவ்வில் சாம்பார் சாதத்திற்குத் தாளித்துக் கொண்டிருந்த அகல்யா, காபியைக் குடித்துக் கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்ட வருணாவைக் கவனித்தாள்.

காய்கறிகளைக் கடாயில் கொட்டி விட்டு ஸ்டவ்வை ‘சிம்’மில் போட்டு விட்டு வருணாவின் அருகே வந்தாள் அகல்யா.

“என்னம்மா வருணா... கொஞ்ச நாளா எப்பப்பார்த்தாலும் ஏதோ யோசனையாகவே இருக்க? மாமா வீட்ல என்னடான்னா அந்த மிருதுளா விஷயம் ‘அப்படி இப்படி’ன்னு ஏதேதோ பேசிக்கிட்டு எப்ப போனாலும் கவலையாவே இருக்காங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்கு அங்கே போறதும் இங்கே வர்றதுமா நான் கிடந்து அல்லாடிட்டிருக்கேன்.


நீ என்னடான்னா நல்ல வேலை கிடைச்சுட்ட சந்தோஷம் கூட இல்லாம எப்பவும் ஏதோ யோசனைக்குப் போயிடற. சரியா சாப்பிடறதில்ல. உன்னோட அலை அலையான முடி எப்படிக் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு பாரு. என்ன பிரச்னை உனக்கு? என்கிட்ட சொல்லு...”

“ஒண்ணுமில்லம்மா. புதுசா வேலைக்குப் போறதுனால கொஞ்சம் டென்ஷன். வேற ஒண்ணுமில்ல. அதோட, ஏகாந்த் மச்சான் இப்படிக் கல்யாணம் ஆன சூட்டோட போலீஸ் ஸ்டேஷன், கேசுன்னு அலையறாரேன்னு வருத்தமா இருக்கு....”

“போலீசுக்குக் கிடைச்ச பிணம்தான் மிருதுளா இல்லைன்னு ஏகாந்த் நம்பறானே! சீக்கிரமா மிருதுளாவை போலீஸ் கண்டு புடிச்சிடுவாங்க. அவ எங்கயாவது உயிரோட இருப்பா. அவளை மீட்டுடுவாங்க. நீ அதையே நெனச்சி கவலைப்படாதே. எழுந்திரு. போய்க் குளிச்சிட்டு ஆபீசுக்குக் கிளம்பு. உனக்கு லன்ச்சுக்கு சாம்பார் சாதம் தாளிச்சு, பொரிச்ச உருளைக்கிழங்கு பண்றேன். நீ போய் ரெடியாகு.”

“சரிம்மா.”

போலீஸிற்குக் கிடைத்த பிணம் மிருதுளா இல்லை என ஏகாந்த் நம்புவது அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. செய்து விட்ட தவறை நினைத்து வருந்திய அவளது மனம் திருந்தி இருந்தது. எழுந்து டவலை எடுத்துத் தோள் மீது போட்டுக் கொண்டாள். தலை முடியை உயர்த்திக் கொண்டு கிளிப்பை மாட்டிக் கொண்டாள். குளியலறைக்குள் சென்றாள்.

‘இன்னிக்கு ஏகாந்த் மச்சானைப் பார்த்துப் பேசி என் மனசில உள்ளதையெல்லாம் கொட்டி மன்னிப்புக் கேக்கணும். ஒத்தைக் கண்ணனோட மிரட்டலுக்கு மச்சான்ட்ட உதவி கேக்கணும். அவர் கோபப்பட்டாலும் பரவாயில்லைன்னு எல்லா விஷயத்தையும் அவர்ட்ட சொல்லிடணும்.’ முடிவு செய்த வருணா, குளித்து முடித்துத் தயாராகி, சாப்பிட்டபின் வாசலுக்கு வந்தாள்.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ எதிரே ஏகாந்த் வந்தான்.

வருணாவைப் பார்த்ததும் பாராதது போல, அகல்யாவிற்குக் குரல் கொடுத்தபடி உள்ளே சென்றான்.

“அத்தை... அத்தை...”

சமையலறைக்குள்ளிருந்து ஹாலுக்கு வந்தாள் அகல்யா.

“வாப்பா ஏகாந்த்... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. வருணாவுக்கு ‘லன்ச்’ எடுத்து ‘பேக்’ பண்ணிட்டு வந்துடறேன். ஏ வருணா... மச்சான் கூடப் பேசிக்கிட்டிரு. நான் காபி போட்டுக் கொண்டு வரேன்.”

“சரிம்மா,” என்ற வருணா அங்கிருந்த பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த ஏகாந்த்தின் அருகே வந்தாள்.

“மச்சான்... ப்ளீஸ்... என் ரூமுக்கு வாங்களேன். உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ப்ளீஸ்...”

கையிலிருந்த பத்திரிகையை வைத்துவிட்டு வருணாவைப் பின் தொடர்ந்தான் ஏகாந்த். வருணா அவளது அறைக்குச் சென்றாள். ஏகாந்த்தும் போனான்.

“மச்சான்... என் மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியும். ஏன் கோபமா இருக்கீங்கன்னும் தெரியும்...” என்று ஆரம்பித்து, ஏகாந்த்தை விரும்பியதிலிருந்து, எப்படியாவது ஏகாந்த்தை அடைய எண்ணித் திரிசூலியை நம்பியது, அதன் தொடர்பாக ஒற்றைக்கண் மனிதன் தன்னை ‘ப்ளாக் மெயில்’ பண்ணுவது உள்ளடக்கிய அத்தனை தகவல்களையும் சுருக்கமாகவும் அதே சமயம் புரியும்படியுமாகவும் எடுத்துக் கூறிய வருணா, பெருமூச்செறிந்தாள். மேலும் தொடர்ந்தாள்.

“என்னை மன்னிச்சுடுங்க மச்சான். சின்னப்பிள்ளைங்க பொம்மைக்கு ஆசைப்பட்டுச் சண்டை போட்டுக்கற மாதிரி நான் நடந்துக்கிட்டேன். நான் நினைச்சதைச் சாதிக்கணும்னு, ‘பில்லி’, ‘சூனியம்’, ‘வசியம்’ங்கற விளம்பரத்தைப் பார்த்து இப்படி ஒரு குறுக்கு வழியில முட்டாளதனமா இறங்கிட்டேன். பின் விளைவுகளைப் பத்தி கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காம ஏதோ வீர தீர சாகசம் செய்யறதா நினைச்சு, கேவலமான இந்த ‘வசியம்’ அது இதுங்கற ஏமாத்து வேலையில இறங்கிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அன்னிக்கு ‘பஸ் ஸ்டேண்ட்’கிட்ட அந்த வயதான பொம்பளை கூட என்னைப் பார்த்தீங்களே, அவதான் திருசூலி. வசியம் பண்றதுல கெட்டிக்காரின்னு தன்னைப் பத்தி சொல்லி என்கிட்ட பணம் பறிச்சா. அவளோட ‘வசிய’ வேலையிலதான் மிருதுளாவுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு பயமா இருக்கு...”

“சீச்சீ... படிச்ச பொண்ணா இருந்து இப்படி முட்டாள்தனமா இருக்கியே... அந்த திரிசூலிக்கும், மிருதுளா காணாம போனதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... உன்னோட புத்திசாலித்தனத்தை நல்ல வழியில் ஈடுபடுத்து...”

“சரி மச்சான்... இனிமேல் எந்தத் தப்பும் பண்ணமாட்டேன். எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். நேத்து அந்த ஒத்தைக் கண் மனுஷன் கூடப் பேசிக்கிட்டிருந்தப்ப நீங்க கூட பார்த்தீங்கள்ல? அவன்ட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க. நான் செஞ்சதெல்லாம் தப்புன்னு உணர்ந்துட்டேன். அம்மாட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்...” அழுதாள் வருணா.

“அழாத வருணா. அத்தை வந்துடப் போறாங்க. கண்ணைத் துடைச்சுக்க. உன் மேல நான் கொண்ட அன்பு ஒரு சகோதரத்துவத்துக்கு மேலான பாசம் கொண்டது. ஒரே வீட்ல ஒண்ணா... ஒரே குடும்பமா பல வருணமா வாழ்ந்தோம். என்னோட அத்தை பொண்ணான உன் மேல எனக்கு ஏற்பட்டது ரத்த பாசம்தான். அதைப் புரிஞ்சுக்க. உனக்குத் தேவையான உதவியெல்லாம் நான் செய்யத் தயாரா இருக்கேன். இப்ப... நான் கேக்கற கேள்விக்கெல்லாம் உண்மையான பதில் சொல்லணும். உன்னோட ‘ஷெல்ஃப்’ல மிருதுளாவோட சாயல்ல ஒரு பொம்மையும், எலுமிச்சம் பழமும் இருந்துச்சே... அது ஏது?”

“உங்க கல்யாணத்துக்கு உங்களுக்குக் குடுக்கணும்ன்னு அம்மா ஆசையா வாங்கிட்டு வந்தாங்க. அந்தப் பொம்மையோட முகம் மிருதுளாவோட சர்யல்ல இருக்குன்னு அம்மா வாங்கினாங்களாம். உங்களுக்காக அதை ‘கிஃப்ட் பேக்’ பண்ணச் சொன்னாங்க. அப்ப எனக்கு இருந்த பொறாமை உணர்வுலயும் வெறுப்பு உணர்வுலயும் அதை அப்படியே ‘ஷெல்ஃப்’ல போட்டு வச்சுட்டேன். அந்த எலும்மிச்சம்பழம் திரிசூரி குடுத்தது. மந்திரிச்சது... மாந்த்ரீகம்னு என்னை நம்ம வச்சுக் குடுத்தா... அது மட்டுமில்ல... உங்க கல்யாணத்தன்னிக்கு உங்களை ‘டிஸ்டர்ப்’ பண்ணணும்னு ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே...’ங்கற பழைய சினிமா பாடலை ஒரு ஸி.டி. முழுசும் திரும்பத் திரும்ப ரெக்கார்ட் பண்ணி அதை ‘கிஃப்ட் பேக்’ பண்ணி உங்க பேர் எழுதி, மத்த கிஃப்ட்ஸ் கூட கலந்து வச்சுட்டேன்...”

“ஓ... அதனாலதான் அதில என் பேர் கூட எழுதாம விட்டுட்டியா?...”

“ஆமா மச்சான். இன்னொரு தப்பு பண்ணினேன். நீங்க இன்ஸ்பெக்டரைப் பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள போனப்ப, திறந்திருந்த உங்க கார் கண்ணாடியில ‘வருவேன் நான் உனது...’ பாடல் வரியைச் ‘சிகப்பு வேக்ஸ்’ வச்சு எழுதினது நான்தான். அதைப் பார்த்துட்டு நீங்க திரும்பவும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், இன்ஸ்பெக்டரோட திரும்ப வர்றதுக்குள்ள, கண்ணாடியில எழுதினதை நானே அழிச்சுட்டேன்.

 


உங்களை ‘டிஸ்டர்ப்’ பண்ணணும்னு நான் செஞ்சதையெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க... இதைத் தவிர உங்களுக்கோ... மிருதுளாவுக்கோ... வேற எந்தக் கெடுதலும் செய்யல மச்சான்... என்னை நம்புங்க...”

“நம்பறேன் வருணா. செஞ்ச தப்பைத் தப்புன்னு உணர்ந்துட்ட... இனிமேல் நீயே நினைச்சாலும் கூட உன்னால எந்தத் தப்பும் பண்ண முடியாது. அனுபவங்கள்தானே மனுஷங்களுக்குப் பாடச் சொல்லிக் குடுக்குது, பக்குவப்படுத்துது? நடந்ததையெல்லாம் மறந்துடு. போனதெல்லாம் போகட்டும். அந்த ஒத்தைக் கண் மனுஷன் மிரட்டறதைப் பத்தி பயப்படாத. உன்னோட பேர் அடிபடாம, போலீஸ்ல சொல்லி அவனை இனி இந்த ஏரியா பக்கமே வராம நான் பார்த்துக்கறேன். உலகமே இன்ட்டர்நெட், ஸாட்டிலைட்ன்னு விஞ்ஞான ரீதியா முன்னேறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா... ஆஃப்டர் ஆல் ஒரு துண்டு விளம்பரத்தைப் பார்த்துட்டு வசியம்... அது... இதுன்னு திரிஞ்சிருக்கு. சிறுபிள்ளைத்தனமா பண்ணிட்ட. செஞ்சதைத் தப்புன்னு சீக்கிரமாவே புரிஞ்சுட்ட. உனக்கு எந்தப் பிரச்னையும் வராம நான் பார்த்துக்கறேன். உதவி செய்றேன். நல்ல பொண்ணா நடந்துக்க... புரியுதா?”

“சரி மச்சான்...” இதற்குள் அகல்யா அங்கே வந்தாள்.

“அடடே... வருணாவுக்கு ‘லன்ச்’ ரெடி பண்றதுல உனக்குக் காபி போட்டுக் கொண்டு வர மறந்துட்டேன். ஒரு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வந்துடறேன்.”

“வேணாம் அத்தை. வருணாகூடப் பேசிக்கிட்டிருந்தது... பாயசமே குடிச்சது மாதிரி இருக்கு...” சரித்தான் ஏகாந்த்.

“அப்பாடா... உன் முகத்துல சிரிப்பைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு. பச்சை மிளகா மாதிரி ‘சுர்’ன்னு காரமாவும், காட்டமாவும் பேசற இவ கூடப் பேசியதைப் பாயசம் குடிச்ச மாதிரி இருக்குங்கற?!”

“இனிமேல் வருணா அப்படியெல்லாம் பேசமாட்டா...”

“என்னமோப்பா... இவதான் என் உலகம்னு வாழ்ந்துட்டேன். நீயும் உன்னோட பிரச்னைகள் முடிஞ்சு நல்லபடியா வாழணும். கடவுள்தான் கண் திறக்கணும்.”

“தேங்க்ஸ் அத்தை. நான் கிளம்பறேன்.”

ஏகாந்த் வெளியில் வந்து காரில் ஏறிக் கிளம்பினான்.

38

வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்ட ‘ஸெயின்ட் தெரஸா’ பள்ளிக் கூடத்திற்குத் தேவையான பாதுகாப்புகளை ஏற்பாடு செய்துவிட்டு அங்கேயே இருந்தான் கார்த்திக். வெகு நேரம் ஆகியும் எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. சந்தேகத்திற்குரிய நபர்களும் அங்கு தென்படவில்லை.

கமிஷனரின் ஆணைப்படி இரவு ஏழு மணி ஆனதும் பள்ளிக் கூடத்தில் ஒருவர் பாக்கி இல்லாமல் வெளியேற்றப்பட்டு, பள்ளிக் கூடம் பாதுகாப்பாக மூடிப்பட்டது. குழுமி இருந்த பாதுகாப்புக் குழு கான்ஸ்டபிள்கள் வெளியேறினர்.

கார்த்திக் ஜீப்பில் ஏறினான். அப்போது அவனது மொபைல் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

மறுமுனையிலிருந்து வந்த செய்திக்குப் பரபரப்பானான். “என்ன?! லாக்கப்ல இருந்த அந்தத் தொப்பி மனுஷன் தற்கொலை பண்ணிக்கிட்டானா?... இதோ... நான்... ஸ்டேஷனுக்குத்தான் வந்துக்கிட்டிருக்கேன்...”

ஜீப் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தது.

39

லாக்கப்பில் வாயில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தான் தோப்பி மனிதன். அவனுக்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவு ஈ மொய்த்தபடி இருந்தது.

‘மை காட்... இவனை வச்சுத்தானே இந்த கேஸை வேகமா நகர்த்தணும்னு ப்ளான் பண்ணி இருந்தேன்? சரி, இவனோட ஜீன்ஸ், ஷர்ட்ல ஏதாவது ‘அட்ரஸ் ப்ரூஃப்’ இருக்கான்னு பாருங்க. ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க...”

“ஓ. கே. ஸார்!” என்று கூறி, லாக்கப்பிற்குச் சென்ற கான்ஸ்டபிள், வேகமாகத் திரும்பி வந்தான்.

“ஸார்... அவனோட ஜீன்ஸ் பாக்கெட்ல இந்தப் பேப்பர் இருந்துச்சு ஸார்.” கான்ஸ்டபிள் ஒரு பேப்பரைக் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்தான் கார்த்திக்.

அது டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டு. அதில் ‘வெல்த் நர்ஸிங் ஹோம்’ என்ற மருத்துவ மனைவின் முகவரியும், டாக்டர் சுகுமார் என்ற பெயரும் அச்சடிக்கப்பட்டிருந்தது. சில மருந்துகள் எழுதப்பட்டிருந்தன.

நோயாளியின் பெயர் வி.வினாயகம் என்றும் வயது ஐம்பத்தைந்து என்றும் எழுதியிருந்தது. நர்ஸிங் ஹோமின் முகவிரயைக் கவனித்தான் கார்த்திக். சென்னையிலிருந்தது அந்த நர்ஸிங் ஹோம். தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்தான்.

“டாக்டர்... ஒரு கேஸ் விஷயமான இன்வெஸ்டிகேஷன்ல ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கிடைச்சிருக்கு, டாக்டர். அதைப் படிக்கறேன். அந்த மாத்திரைகளெல்லாம் எந்த வியாதிக்குக் குடுக்கறதுன்னு சொல்றீங்களா?...” கேட்ட கார்த்திக்கிற்கு உடனே பதிலளித்தார் அந்த டாக்டர்.

“முதல்ல எழுதி இருக்கறதா நீங்க சொல்ற மாத்திரைகள் உயர் ரத்த அழுத்த நோயளிகளுக்குக் குடுக்கக் கூடிய மாத்திரைகள். அடுத்ததா நீங்க சொன்ன மாத்திரைகள் வைட்டமின் மாத்திரைகள். கடைசியா நீங்க சொன்ன மாத்திரை தூக்க மாத்திரை. சில ரத்த அழுத்த நோயாளிகள் தூக்கம் வராம தவிப்பாங்க. அவங்களுக்காக டாக்டர்ஸ்... நாங்க... இந்த மாத்திரைகளைப் பரிந்துரைத்து எழுதிக் கொடுப்போம்.”

“ஓ.கே. டாக்டர். தேங்க் யூ...”

பேசி முடித்த கார்த்திக் சிந்தித்தான்.

‘அப்படின்னா இந்தத் தொப்பி மனிதன், அந்தத் தூக்க மாத்திரைகளை வாங்கத்தான் மருந்துக் கடைக்குப் போயிருக்கான். நான் அவனைப் பார்க்கறதுக்கு முன்னாலேயே தற்கொலை முடிவுக்கு வந்திருப்பானோ... அல்லது போலீஸ்ல மாட்டிக்கிட்டா தற்கொலை பண்ணிக்கணும்னு முன்கூட்டியே திட்டமிட்டு மாத்திரை வாங்கி வச்சிருப்பானோ? எப்படியோ... இவன்ட்ட எக்கசக்கமா தப்புகள் இருக்கு...’

அவனது சிந்தனையைக் கலைத்தான் கான்ஸ்டபிள்.

“தொப்பி மனுஷனோட இன்னொரு பாக்கெட்ல இந்த கவர் இருந்துச்சு ஸார்.” கான்ஸ்டபிள் கொடுத்த கவரைப் பார்த்தான் கார்த்திக்.

அந்தக் கவரினுள் நாலைந்து பேப்பர்களில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம் இருந்தது.

அழகான கையெழுத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம். படிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.

போலீஸ் துறையினர்க்கு,

வணக்கம். என்னுடைய தற்கொலை முடிவிற்கு நான்தான் காரணம். வேறு யாரும் இல்ல. நான் எம்.ஏ.ஸோஷியாலஜி படித்திருக்கிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். என் அப்பா என்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். எனக்கு ஒரு அக்கா. அவள் பெயர் புவனா. அவளுக்குத் திருமணமாகி இரண்டு வயதுக் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அக்காவின் கணவர் திடீரென இறந்துவிட்டார். விதவையான என் அக்காவிற்குப் புகுந்த வீட்டில் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. எனவே நாங்கள்தான் அவளுக்கு, அவளது குழந்தைக்கு அடைக்கலம் கொடுத்தோம். என் அக்காவிற்கு அவளது குழந்தைதான் உலகமாகவும், வாழ்க்கையாகவும் இருந்தது. குழந்தையின் முகம் பார்த்துத் தன் சோகம் மறந்திருந்த என் அக்காவின் வாழ்வில் விதி மீண்டும் விளையாடியது. குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் இதய ஆப்ரேஷன் பண்ண வேண்டுமென்று டாக்டர்ஸ் கூறிவிட்டனர். ஏற்கெனவே இரத்த அழுத்தத்தினால் இதயம் பாதிக்கப்பட்டுள்ள என் அப்பாவிற்கு அதிகமான மருத்துவச் செலவு.


அக்காவின் திருமணச் செலவு கையைக் கடித்த நிலையில் அவளது குழந்தையின் மருத்துவச் செலவு சேர்ந்துகொள்ள, நாங்கள் செய்வதறியாது திகைத்தோம். தவித்தோம். குழந்தையின் ஆபரேஷன் செலவிற்கு இரண்டு லட்ச ரூபாய் ஆகுமென்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். என் அக்காவோ, ‘என் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்று கூறி அழுதாள்.

அதனால், பணக் கஷ்டம் போதாதென்று மனக் கஷ்டமும் வேறு சேர்ந்துவிட்டது. என்ன செய்வதென்று யோசித்தேன். பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். மொபைல் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல் கொடுத்ததில் ஐம்பதாயிரம் மட்டுமே சேர்ந்தது. எனவே மீதித் தொகைக்கு யாரைக் கேட்பது என்ற பெரிய கேள்வி எழுந்து என்னைப் பயமுறுத்தியது.

என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் வட்டத்தில் மிருதுளா மட்டும்தான் பணக்கார வீட்டுப் பெண். அவளிடம் போயிக் கேட்கலாம்னு யோசித்தேன். அவளிடம் பணம் கேக்கறதுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழி இல்லாமல் அவளிடம் கேட்டேன். அவளுக்குத் கல்யாணம் நிச்சயமாகி, அந்தச் செலவு, கல்யாணச் செலவு என்று எக்கசக்கமாகப் பணச் செலவாகி விட்டது என்று கூறினாள். எனக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டாள். அவளைச் சமாதானப் படுத்தி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த எனக்குத் திடீரென்று அரவிந்த்தின் ஞாபகம் வந்தது. மிகப் பெரிய பணக்காரனான அரவிந்த்தை நேரில் சந்தித்துக் கேட்டால் என்ன என்று யோசித்தேன். உடனே கிளம்பிப் போனேன். அவனைப் பார்த்து, எங்கள் நிலைமையைப் பற்றிச் சொன்னேன்.

அவன் எனக்குப் பண உதவி செய்வதாகச் சம்மதித்தான். அதற்குப் பதிலாக என் ஃப்ரெண்ட் மிருதுளாவைக் கடத்திப் பெங்களூர்க்குக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். முதலில் நான் மறுத்தேன். பின்னர் வேறு வழியே இல்லாத இக்கட்டான சூழ்நிலையில் அரவிந்த் விதித்த அந்த நிபந்தனைக்கு நான் இணங்கினேன்.

எனவே மிருதுளாவின் முதல் இரவு முடிந்து, விடிந்த பொழுதில் தோட்டத்திற்கு வந்த மிருதுளாவின் மூக்கருகே மயக்க மருந்து கலந்த கர்சீப்பை வைத்து அவள் மயங்கியதும் அரவிந்த் ஏற்பாடு செய்திருந்தவர்கள் மற்றும் டிரைவரின் உதவியால் அவன் குறிப்பிட்ட இடத்தில் மிருதுளாவை ஒப்படைத்தேன். அந்த இடம் பெங்களூரின் அவுட்டர் பகுதியிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடம். அந்த இடத்திற்குப் பெயர் ‘எலஹங்கா’ என்பதாகும். ஏர்போர்ட்டைத் தாண்டியதும் எலஹங்கா ஏரியா வந்துவிடும். நீண்ட மயக்கத்தில் இருந்த மிருதுளாவிற்கு, நான் அங்கிருந்து கிளம்பும் வரை சுயநினைவு திரும்பவில்லை. அவளுக்கு மயக்கம் தெளிவதற்குள் நான் அங்கிருந்து கிளம்பிவிடத் திட்டமிட்டிருந்தேன். மிருதுளாவைக் கடத்திக் கொண்டு போய் அங்கே விட்ட பிறகு கூட அவன் எனக்குப் பணம் தரவில்லை. மிருதுளா, அரவிந்த்தைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்க வேண்டும் என்று மேலும் ஒரு ‘செக்’ வைத்தான். நான் இதை மறுத்துப் போராடிக் கொண்டிருந்தேன். அரவிந்தைப் பழிவாங்க எண்ணிய ஒரு பெண் அவனைக் கத்தியால் குத்த வந்தபோது அவனது உயிரைக் காப்பாற்றினேன். ஆகவே, மறுநாள் அவன் எனக்கு இரண்டு மடங்காகப் பணம் கொடுத்தான். பணத்தை என் அக்காவிற்கு பேங்க் மூலமாக அனுப்பி விட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதற்குள் போலீஸ் என்னைப் பிடித்துவிட்டது. என் உயிர்ததோழி மிருதுளாவிற்குத் துரோகம் செய்துவிட்ட குற்ற உணர்வினால் வேதனைப்பட்ட நான் தற்கொலை முடிவு எடுத்தேன். என் அப்பாவின் மருந்துச் சீட்டை வைத்துத் தூக்க மாத்திரைகளை வாங்கினேன். லாக்கப்பில் வைத்து மாத்திரைகளை விழுங்கினேன். தொகை பெரியது என்பதால் மிருதுளாவாலும் எனக்கு உதவி செய்ய முடியாத நிலை. அரவிந்த் போன்ற பெரும் செல்வந்தர்கள் மட்டுமே உதவி செய்ய முடியும். ஆனால் அவனும் பண உதவிக்குப் பதிலாக மிருதுளாவிற்குத் துரோகம் செய்யும் வேலையைக் கொடுத்துவிட்டான். வேறு வழியே இல்லாத நான் அந்த துரோகத்தைச் செய்ய நேர்ந்தது மிகக் கொடுமையான விஷயமாகும். என்னை யாரும் அடையாளம் கண்டு பிடிக்கக் கூடாது என்பதால் ஆண்களைப் போல் ஜீன்ஸ், ஷர்ட் போட்டுக் கொண்டேன். என் தலைமுடியை ஆண்களின் ஸ்டைலில் வெட்டிக் கொண்டேன். தொப்பி அணிந்து கொண்டேன். ஒரு ஆணின் தோற்றம் போல் காட்சி அளிப்பதற்கு எனது உருவ அமைப்பும், குரலும் ஒத்துழைத்தது. ஆம்! என் பெயர் ரேகா. நான் மிருதுளாவின் உயிர்த்தோழி. பணம் கிடைத்த மறு நிமிடம் என் அக்காவின் குழந்தைக்கு ஆபரேஷனை ஆரம்பித்திருப்பார்கள். என் கடமை முடிந்தது. இதனால் எனக்கு மனநிறைவு என்றாலும் நட்பிற்கு நான் செய்த துரோகத்தால் மனமுறிவு ஏற்பட்டு, அதனால் உண்டாகும் மன உளைச்சலால் ஒவ்வொரு நிமிடமும் துடிக்கிறேன். எனவே விடை பெறுகிறேன்.

உண்மையுடன்

ரேகா.

 

கடிதத்தைப் படித்து முடித்தான் கார்த்திக். அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாருக்கு டயல் செய்தான்.

“ஸார்... அரவிந்த் கிட்ட இருந்து ஒருத்தன் கட்டுக் கட்டா பணம் வாங்கிட்டுப் போனதாகவும் அவனைப் பிடிச்சு ஸ்டேஷன்ல வச்சிருக்கறதாகவும் சொன்னேன்ல ஸார். அது ஒரு பெண் ஸார். அந்தப் பொண்ணு லாக்கப்ல வச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா.”

“என்ன?! அந்தக் குற்றவாளி ஒரு பெண்ணா? அவ தற்கொலை பண்ணிக்கிட்டாளா?!”

“ஆமா ஸார். மிருதுளாவைக்  கடத்திக்கிட்டுப் போனது ஒரு பெண். மத்த விபரம் எல்லாம் ஜீப்ல போகும்போது சொல்றேன் ஸார். இப்ப நான் உடனே மிருதுளாவை மீட்கணும்.”

“ஓ.கே. கார்த்திக். யூ ப்ரொஸீட்.”

பேசி முடித்த கார்த்திக் சில கான்ஸ்டபிள்களுடன் ஜீப்பில் ஏறினான். ஜீப் விரைந்தது. மீண்டும் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாருடன் தொடர்பு கொண்டான். மறுமுனையில் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரின் குரல் கேட்டது.

“சொல்லுங்க, கார்த்திக்.”

“மிருதுளாவைக் கடத்தினது ஒரு பெண்ணுன்னு சொன்னேன்ல ஸார். அவளை விசாரணை பண்ணலாம்னு இருந்தப்ப ஸெயின்ட் தெரஸா ஸ்கூல்ல வெடிகுண்டு வச்சுட்டாங்கன்னு போன் வந்ததா கமிஷனர் சொல்லி என்னை அந்த ஸ்கூலுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வச்சுட்டார். நான் போகும்போது அந்தப் பொண்ணை லாக்கப்ல அடைச்சு வைக்கச் சொல்லிட்டுப் போனேன். நான் கூல்ல இருந்து திரும்ப வர்றதுக்குள்ள அந்தப் பெண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா. அவளோட ஜீன்ஸ் பாக்கெட்ல லெட்டர் எழுதி வச்சிருந்தா. அந்த லெட்டர் மூலமாதான் மிருதுளாவைக் கடத்தினது எதுக்காக, யாருக்காக, எப்படிங்கற முழுத் தகவல்களும் தெரிஞ்சுது. மிருதுளாவைக் கடத்திக்கிட்டுப் போன பொண்ணு பேரு ரேகாவாம்.


அவதான் பணத் தேவைக்காக மிருதுளாவைக் கடத்தியிருக்கா. இதுக்குக் காரணம் அந்த அரவிந்த். அந்த அரவிந்த்தோட இடத்துலதான் மிருதுளா இருக்காளாம்...” என்று ஆரம்பித்த கார்த்திக், எல்லா விபரங்களையும் கூறினான்.

“ஒரு பெண், தன் நடை உடை பாவனைகளை மாத்திக்கிட்டு, மிகவும் ரிஸ்க் எடுத்து ஆபத்தான, சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டிருக்கா. அவளோட இந்தத் துணிச்சலுக்குக் காரணம் அவளது குடும்ப நேயமும் பாசமும். அது மட்டும் இல்ல ஸார். பணம் இருந்தும் உதவி செய்ற மனப்பான்மை இல்லாத அரவிந்த்தும் அந்த ரேகாவோட தற்கொலைக்குக் காரணமாயிட்டான். நான் குறிப்பிட்ட ‘எலஹங்கா’ ஏரியா வந்துருச்சு ஸார். மிருதுளாவைப் பார்த்ததுக்கப்புறம் உங்ககூட மறுபடியும் பேசறேன் ஸார்.”

ஜீப்பில் இருந்து இறங்கி போலீஸாருடன் மிருதுளா அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் சென்றடைந்தான் கார்த்திக். ஜீப்பை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு வந்திருந்தார்கள். அரவிந்த் அங்கு வந்தால் ஜீப்பைப் பார்த்து உஷாராகிவிடக் கூடாது என்பது கார்த்திக்கின் எண்ணம். மிருதுளா அடைக்கப்பட்டிருப்பதாக ரேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்திற்குச் சென்றான். மிருதுளா அடைபட்டிருந்த கதவு பூட்டப்பட்டிருந்தது. கூடவே அழைத்துப் போயிருந்த பூட்டு உடைப்பவன், உறுதியான அந்தப் பூட்டை உடைத்தான். போலீஸாருடன் கார்த்திக் உள்ளே நுழைந்தான். அங்கே மிருதுளாவும் துர்க்காவும் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் கட்டிலோடு சேர்த்துக் கட்டிப்போடப்பட்டிருந்தனர். அவர்களது கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. அப்போது யாரோ வரும் காலடி ஓசை கேட்டது. உடனே உஷாரான கார்த்திக், மிருதுளா, துர்க்கா உட்பட அனைவரையும் அந்தப் பெரிய அறையின் பின்பக்கம் மறைந்து கொள்ளச் சென்னான். கார்த்திக்கும் ஒளிந்து கொண்டான். சில விநாடிகளில் அரவிந்த் உள்ளே நுழைந்தான், போலீஸார் அவனை மடக்கிப் பிடித்தனர்.

“அரவிந்த்... உன்னோட நாடகமெல்லாம் அம்பலமாயிடுச்சு!” என்றபடி அவனது கைகளில் விலங்கை மாட்டினான் கார்த்திக். அனைவரும் ஜீப்பில் ஏறிக் கொள்ள, ஜீப் விரைந்தது. அவமானத்தில் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான் அரவிந்த்.

“மிருதுளா...! உங்களைக் கடத்தினது யார் தெரியுமா? உங்க ப்ரெண்ட் ரேகா. ஆண் வேஷம் போட்டுக்கிட்டு இந்த வேலையைப் பண்ணியிருக்கா.” கார்த்திக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மிருதுளா.

“ரேகாவா?! இருக்கவே இருக்காது இன்ஸ்பெக்டர். அவ ஆண் பிள்ளை போல முரட்டுத்தனமானவ... வீரமானவ... ஆனா எனக்குத் துரோகம் செய்ய மாட்டா. அவ ரொம்ப நல்லவ....”

“நல்லவங்களைச் சில சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், தேவைகள் இதெல்லாம் மாத்திடுது. நல்ல விஷயத்துக்காகத் தன்னோட தைரியத்தையும், வீரத்தையும் துஷ்ப்ரயோகம் பண்ணியிருக்கா உங்க ஃப்ரெண்ட்...” என்று கூற ஆரம்பித்த கார்த்திக், ரேகா எதற்காக அவ்விதம் மாறினாள் என்பதை விளக்கினான்.

“ரேகா என்கிட்ட உதவி கேட்டப்ப என்னோட கல்யாணச் செலவு இருந்ததுனால அவளுக்கு உதவி செய்ய முடியாமப் போச்சு. அது இந்த அளவுக்கு விபரீதத்துல கொண்டு வந்து விடும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. பாவம் ஸார் ரேகா. எனக்கு அவ மேல கோபமே இல்லைன்னு சொல்லணும்.”

“அது முடியாது மிஸஸ் மிருதுளா. ஏன்னா ரேகா தற்கொலை பண்ணிக்கிட்டா...”

இதைக் கேட்டதும் குலுங்கிக் குலுங்கி அழுதாள் மிருதுளா. அவள் அழுது முடித்த பிறகு கார்த்திக் கேட்டான்.

“வருவேன் நான் உனது பாடலை உங்க ரூம் ஆடியோ ப்ளேயர்ல கேட்டீங்க. அந்தப் பாட்டு காத்துல மிதந்து வந்து திரும்பத் திரும்பக் கேட்டதா உங்க கணவர் ஏகாந்த்கிட்ட சொன்னீங்களாமே?”

“ஆமா ஸார். விடியக்காலை கூட அந்தப் பாடல் தோட்டத்துப் பக்கமிருந்து வந்த மாதிரி எனக்குக் கேட்டுச்சு. அதனால நான் தோட்டத்துக்குப் போனேன். அப்பத்தான் நான் கடத்தப்பட்டிருக்கேன். யாரால எதனால எப்படின்னு எனக்கு எதுவுமே தெரியாது. திடீர்ன்னு நான் அறைக்குள்ள அடைபட்டிருந்தேன்...”

“ஒரு விஷயம்... மிஸஸ் மிருதுளா. அந்தப் பாடலைப் பத்தி மிஸ்டர் ஏகாந்த்ட்ட தீவிரமா விவாதம் பண்ணியிருக்கீங்க. உங்க ரூம் ஆடியோ ப்ளேயர்ல அந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கீங்க. அதனால அந்தப் பாட்டு கேக்கற மாதிரியே ஒரு பிரமை தோணியிருக்கு. உங்க சப்கான்ஷியஸ் மைன்ட்ல அது ரிஜிஸ்டர் ஆயிருக்கு. அதை நீங்க நிஜம்னு நம்பிட்டீங்க. ஏகாந்த் தனக்குப் பாட்டுச் சத்தமே கேக்கலைனு சொன்னப்ப பாட்டு கேட்டுச்சுன்னு அவர் கூட வாக்குவாதம் பண்ணியிருக்கீங்க...”

“ஆமா ஸார். அது என்னோட தப்பு. அந்தப் பாட்டால நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன்.”


“உங்களையும் ஏகாந்த்தையும் டிஸ்டர்ப் பண்ணணும்னு தான் ஏகாந்த்தோட அத்தை பொண்ணு வருணா அந்த ஸி.டி.யை ஏகாந்த்தோட பேருக்கு அனுப்பியிருக்கா. இந்த விஷயத்தைச் சென்னை இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்ட்ட ஏகாந்த் சொன்னாராம். ஸோ, எல்லா மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்திடுச்சு. ஒண்ணே ஒண்ணைத் தவிர. அதற்கான பதிலை அரவிந்த்தான் சொல்லணும்.” நக்கலாகப் பேசினான் கார்த்திக்.

சொல்லுங்க அரவிந்த், உங்க டேபிள் மேல இருந்த மிருதுளா எழுதின காதல் கடிதத்தைப்பத்தி விளக்கம் சொல்லுங்க....”

கைகளில் விலங்குடன் தலை குனிந்திருந்த அரவிந்த், சற்று நிமிர்ந்து சன்னமாக குரலில் பேச ஆரம்பித்தான்.

“அ... அ... அந்த லெட்டர் மிருதுளா எழுதின மாதிரி நானே எழுதி வச்சி அப்பப்ப எடுத்துப் படிச்சு சந்தோஷப்படற லெட்டர். மிருதுளா என் இதயத்தையும், என் உடம்புல உள்ள அத்தனை இரத்த நாளங்களையும் ஆக்ரமிச்சிருந்தா. அதனோட விளைவுகள்தான் இதெல்லாம்...”

“அதுதான் நீங்க மனரீதியா பாதிக்கப்பட்டதற்குரிய ஆரம்ப நிலை.” கார்த்திக் கூறியதும் மறுபடியும் தலைகவிழ்ந்தான் அரவிந்த்.

ஜீப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது. இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாருக்கு போன் செய்து அத்தனை தகவல்களையும் விளக்கினான் கார்த்திக்.

துர்க்கா, தான் செய்த தவறுகளுக்கெல்லாம் ப்ராயச்சித்தமாக, மிருதுளாவைக் காப்பாற்ற எண்ணினாலும், அவளுக்குத் தண்டனை உண்டு.

ப்ரேம்குமார் மூலம் மிருதுளாவைக் கண்டுபிடித்த செய்தி அறிந்த ஏகாந்த், உடனே அஷோக்கின் மொபைலுக்கு போன் செய்தான்.

“ஹாய், அஷோக்... நீ சொன்ன மாதிரியே என் மிருதுளா கிடைச்சுட்டா. உங்க ஊர்ல, பெங்களூர்லதான் அவ இருக்காளாம். இன்ஸ்பெக்டர் போன் பண்ணினார். எல்லாத்துக்கும் காரணம் அந்த அரவிந்த்! மத்ததெல்லாம் நான் நேர்ல சொல்றேன். நான் பெங்களூருக்குதான் கிளம்பிக்கிட்டிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு, அஷோக்...”

“அதான் உன் குரல்லயே தெரியுதே. யப்பாடா. இப்ப எல்லாருக்கும் நிம்மதியாச்சு. ஓ.கே. நீ கிளம்பற வழியைப் பாரு.”

“ரைட், அஷோக்.”

அஷோக்கிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான் ஏகாந்த்.

பின்னர் கார்த்திக்கின் மொபைலுக்கு போன் செய்தான். மிருதுளாவிடம் கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டான்.

“ஹாய் மிருது... மைடியர்... நல்லா இருக்கியாம்மா? இதோ அடுத்த ஃப்ளைட்ல பறந்து வந்திடறேன்.”

‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் ஏகாந்த்தனே...’ மெதுவான குரலில் ரகசியமாய்ப் பாடி மகிழ்ந்தாள் மிருதுளா.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.