Logo

பறவை வெளியே வருமா

Category: மர்ம கதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 7953
paravai veliyae varuma

ரவிந்த் மருத்துவமனை, தூய்மையையும் சேவை மனப்பான்மையையும் தனக்குள் நிறைத்துக் கொண்ட புத்துணர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தது. வெண்புறாக்கள் போன்ற நர்சுகள் தங்கள் பணிகளில் கவனமாக ஈடுபட்டிருக்க, வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள் சுறுசுறுப்பாக நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

"அட என்னம்மா, நீ சீக்கிரம் வா, சீட்டு எழுதற இடத்துல போய் பேரைக் குடுக்கணும்" அங்கே வந்த ஒரு பெரியவர், தயக்கமாய் நின்ற அவருடைய மகளைத் துரிதப்படுத்தினார்.

"அப்பா, இந்த ஆஸ்பத்திரியைப் பார்த்தா ரொம்ப பெரிசா இருக்கு. எக்கச்சக்கமா செலவு ஆகும் போலிருக்கு. நாம வேற ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டிக்கலாம்ப்பா." கவலையாகப் பேசிய மகளின் தலையை ஆறுதலாக தடவினார் பெரியவர்.

"நீ நினைக்கிற மாதிரி இங்கே ரொம்ப செலவு ஆகாதும்மா. நாம விருப்பப்பட்டு ஒரு ரூபா குடுத்தாக்கூட வாங்கிக்குவாங்க. ஏழை, பணக்கார வித்யாசம் பார்க்காம மக்களுக்கு சேவை செய்யறதுக்காக இந்த மருத்துவமனையை ஒரு ஆசிரமத்துக்காரங்க நடத்துறாங்க. நல்ல மனசு கொண்ட பெரிய பணக்காரங்க நிறைய நிதி குடுக்கறாங்கம்மா. ரொம்ப நாளா உனக்கு இருக்கிற வயித்து வலி குணமாகணும். வாம்மா." அவர் விபரம் கூறியதும் நிம்மதியாக அவருடன் சீட்டு எழுதும் இடத்திற்கு விரைந்தாள் அவரது மகள்.

"டாக்டர் அங்கிள், நான் எப்ப அங்கிள் வீட்டுக்கு போகலாம்? நான் ஸ்கூலுக்குப் போகணும். படிக்கணும், என் சிநேகிதிகளை எல்லாம் பார்க்கணும். எனக்கு உடம்பு நல்லாயிடுச்சு டாக்டர் அங்கிள்." மூன்றாம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சின்னஞ்சிறுமி, தன் மழலை மாறாத மொழியில் டாக்டரிடம் விழி மலர்த்திப் பேசினாள்.

"பாப்பா! நீ இன்னைக்குச் சாயங்காலம் வீட்டுக்குப் போயிடலாம். ஜாலிதானே?" சிறுமியின் குண்டுக் கன்னங்களில் செல்லமாகத் தட்டினார்.

"டாக்டர், என் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை குடுத்தது நீங்கதான் டாக்டர். உங்களைக் கோயில் கட்டிக் கும்பிடணும் டாக்டர்" நன்றி உணர்வில் கண்ணீர் மல்கப் பேசினாள் சிறுமியின் தாய்.

"எல்லாம் கடவுள் செயல்மா. அவருக்கு நன்றி சொல்லுங்க. வீட்டுக்குப் போனாலும் இவளை ஒரு வாரம் பள்ளிக் கூடத்துக்கு அனுப்ப வேண்டாம். என்கிட்ட மறுபடி பரிசோதிச்சிட்டதுக்கப்புறமா அனுப்பலாம்."

"சரிங்க டாக்டர்."

அடுத்த அறைக்குள் சென்ற டாக்டர், அங்கே ஊசி போட்டுக் கொள்ள அடம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவரைப் பார்த்தார். நர்ஸ் அவரைக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"ஐயா... உங்க நல்லதுக்குத்தான் ஊசி போடறோம். உங்க உடம்பு சரியானாத்தானே வீட்டுக்குப் போக முடியும்?"

"எனக்கு சாப்பிடறதுக்கு ரொட்டியும், பாலும்தான் குடுக்கறீங்க. எனக்கு காரசாரமா மீன் குழம்பு வேணும். அதெல்லாம் குடுக்காட்டி ஊசி போட்டுக்க மாட்டேன்."

குழந்தை போல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த பெரியவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரிடம் நெருங்கினார், டாக்டர்.

"பெரியவரே, உங்களுக்கு மீன் குழம்புதானே வேணும்? இன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பா மீன் குழம்புக்கு ஏற்பாடு பண்றேன். முதல்ல ஊசி போட்டுக்கங்க."

"ம்கூம். இந்த நர்சம்மா வலிக்க வலிக்க ஊசி போடறாங்க. நான் மாட்டேன்" மேலும் அடம் பிடித்தவரை சமாளிக்க, தானே ஊசியை அவருக்கு செலுத்தினார் டாக்டர்.

2

வ்விதம் அன்பும், பண்பும் நிறைந்த ஊழியர்களைக் கொண்டு இயங்கிய அந்த மருத்துவமனையின் எட்டாம் நம்பர் அறைக்குள், மருந்துகள் சகிதம் நுழைந்தாள் நர்ஸ் அகிலா. அங்கே படுக்கையில் கண்ணீர் வழிந்தோடும் சோகத்துடன், சோர்வாகப் படுத்திருந்த மேகலாவின் அருகே சென்றாள்.

மேகலா, மஞ்சள் நிறத்தில், கரிய, பெரிய கண்களுடன், எடுப்பான அழகிய மூக்குடன் மிக மிக அழகாய் இருந்தாள். மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்த அவளது நீண்ட கூந்தல் தரையில் புரண்டுக் கொண்டு இருந்தது.

மருந்துகள் கொண்டு வந்த தட்டை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தரையில் புரண்ட அவளது பின்னலை எடுத்து கட்டிலில் போட்டாள் அகிலா. அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு, தன் முகத்தை புதைத்துக் கொண்ட மேகலா, குலுங்கிக் குலுங்கி அழுதாள். சிறிது நேரம் அவளை அழ விட்ட அகிலா, அவள் சற்று அடங்கியதும் அவளது முகத்தை நிமிர்த்தினாள்.

"அழாதே மேகலா. எல்லாம் நடந்து முடிஞ்சப்புறம் அழுது என்ன பிரயோஜனம்? பொண்ணாப் பொறந்தவளுக்கு அவளோட கற்புதாம்மா அவ மண்ணுக்குள்ள மறையற வரைக்கும் அவளுக்கு மரியாதை குடுக்கற கவசம். 'கன்னிப்பொண்ணு'ன்னு ஏன் சொல்றாங்கன்னு தெரியுமா? கல்யாணம் ஆகற வரைக்கும் யாருமே தொடாததுனால கன்னிப் போகாத கனியைப் போன்றவ பெண் அப்பிடிங்கறதுனாலதான் கன்னிப் பொண்ணுன்னு சொல்றாங்க. ஒரு நிமிஷ சபலம், எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாத அவலமாச்சே... ஆம்பளைகளுக்கென்ன?!.... பொண்ணுங்களைத் தொட்டுட்டு தொலைதூரம் போயிடுவானுங்க. அவனுங்க பொண்ணுங்களை தொட்டதுக்கு ஆண்டவன் அவங்களுக்கு எந்த அடையாளமும் குடுக்கறதில்லை. பொண்ணுங்களோட கருவறை, ரகசியமா இருந்தாலும் அவ தன்னோட கற்பை பறிகுடுத்து, அந்தக் கருவறை ஒரு உயிரை உருவாக்கிட்டா...? அதை ஊருக்கும் உலகத்துக்கும் மறைக்க முடியுமா? உயிரை உருவாக்கிய ஆண்... ? தப்பிச்சுக்கறான். உயிரை உள் வாங்கிய பெண்?  தப்பிக்கவே முடியாது. மேலிட்ட வயிறு, 'இவ கேடு கெட்டுப் போனவள்ன்னு' ஆதாரம் காட்டுமே... ஆதாரத்தை வளர விடாம தடுக்கறதுக்காக இங்கே வந்து அபார்ஷன் பண்ணிக்கிட்ட... செஞ்ச தப்பு போதாதுன்னு ஒரு ஜீவனை அழிக்கற பாவத்தையும் சேர்த்து பண்ணிட்டியேம்மா. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு நீ... இப்பிடி கல்யாணத்துக்கு முன்னாலயே அத்து மீறி நடந்துட்டு அல்லல் படலாமா? உன்னோட கணவன்னு சொல்லி காலையில இங்கே வந்து கையெழுத்துப் போட்டானே... அவன்தானே உன்னோட காதலன்?"

"ஆமா சிஸ்டர். அவர் பேர் வருண். ரொம்ப நல்லவர்."

"நல்லவனா இருந்தா காதலிக்கறதோட நிறுத்தி இருக்கணுமே.... உன் மனசை மட்டும் பார்க்காம உன் உடம்பையும் சேர்த்துப் பார்த்துட்டானே..."

"சிஸ்டர், என்னைக் காதலிச்ச வருண் ரொம்ப நல்லவர். என்னைக் கைவிட மாட்டார். அவர் நிச்சயமா என்னைக் கல்யாணம் பண்ணிக்குவார்."

"அதுக்குள்ள என்ன அவசரமாம்? உன்னை ஏன் இந்த நிலைக்கு ஆளாக்கினாராம்? ஆனது ஆயிடுச்சுன்னு உடனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்காம எதுக்காக இந்த அபார்ஷன்...?"

"அவரை மட்டும் குத்தம் சொல்லாதீங்க சிஸ்டர். ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா? அவரென்ன என்னை பலவந்தப்படுத்தியா கற்பழிச்சார்? நானும் ஒரு நிமிஷம் என்னை மறந்துட்டேன். தப்பு என் மேலயும் இருக்கு.


வருணோட அண்ணா அமெரிக்காவுல இருந்து இன்னும் நாலு மாசத்துல வந்துடுவாராம். அவர் வந்த பிறகு அவர்கிட்ட சொல்லி, கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறதா வருண் சொல்லி இருந்தார். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. அம்மா, அப்பா யாரும் இல்லாத வருணை, அவங்க அண்ணாதான் வளர்த்து, சுயமா சம்பாதிக்கற அளவுக்கு ஆளாக்கி இருக்கார். அந்த நன்றிக்கடனுக்காக அவர் வந்த பின்னாடிதான் கல்யாணம்னு வருண் காத்திட்டிருக்கார். எங்க வீட்லயும் இந்த விஷயத்தைச் சொல்ல முடியாது. 'நம்ப பொண்ணா... இப்படிக் கல்யாணத்துக்கு முன்னால தப்பு பண்ணிட்டாள்ன்னு அதிர்ச்சி ஆயிடுவாங்க. காதலையே ஏத்துக்க முடியாத எங்க அப்பாவும், அத்தையும் என்னோட களங்கத்தையும், கர்ப்பத்தையும் நிச்சயமா தாங்கிக்க மாட்டாங்க... வருணோட அண்ணா வந்தப்புறம் முறைப்படி அவரை எங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட எங்க காதலைப் பத்தி பேசச் சொல்லி, சமாதானம் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்னு திட்டம் போட்டிருந்தோம். அதுக்குள்ள இருட்டில நடந்த தவறு வெளிச்சத்துக்கு வந்துருச்சு. அதனால வருணோட அண்ணா வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதிருக்கு..."

"வருண் மேல நம்பிக்கை இருந்தா சரிதாம்மா. இன்னைக்கு ஆறு மணிக்கு உனக்கு டிஸ்சார்ஜ். நீ வீட்டுக்குப் போய் இரண்டு நாள் நல்ல ஓய்வு எடுக்கணும். ரொம்ப பலவீனமா இருக்க."

"சரி சிஸ்டர்" பதிலளித்த மேகலாவின் கண்கள் மீண்டும் பனித்தன. 'இந்த சிஸ்டர் அகிலா யாரோ, நான் யாரோ? காலையில தான் அறிமுகம். ஆனாலும் எத்தனை கனிவோடு, தாய்மையின் பரிவோடு என்னுடன் பழகுகிறாள்' எண்ணங்கள் ஓடின.

அடுத்த நோயாளியைப் பார்க்க வெளியேறினாள் அகிலா. மேகலா பேசியவை அனைத்தையும் பாதி திறந்திருந்த கதவின் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஓர் உருவம் அதன் பின் அவசர அவசரமாக நகர்ந்து வெளியேறியது.

3

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய... ஓம் நமோ நாராயணாய நமஹ..."

மந்திரங்களை உச்சரித்தபடியே வீட்டின் வாசற்படியில் செருப்புகளை கழற்றிப் போட்டான் பிரகாஷ்,

 "ஏண்டா பிரகாஷ்! ஸ்வாமி ஸ்லோகங்களை இடைவிடாம சொல்லிக்கிட்டிருக்கியே... ரொம்ப ஆச்சர்யமா இருக்குடா... இந்தக் காலத்துப் பையன் நீ... மத்த பசங்களைப் போல வாய்ல நுழையாத புது சினிமாப் பாடல்களை முணு முணுக்காம இப்படி பகவான் நாமங்களை சொல்லிக்கிட்டிருக்க... உங்க அப்பா ஆன்மீகவாதியா இருந்தவர். அவரோட ரத்தமாச்சே நீ? அதான் நீயும் பக்தியா இருக்க போலிருக்கு? ஹும்..." மூர்த்தி பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்தார்.

"உங்க அப்பா நல்ல மனுஷன். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார். என் தங்கை கமலத்தை அவருக்குக் கல்யாணம் கட்டிக் குடுத்தப்ப, ஒத்தைப் பைசா வரதட்சணை கேட்கலை. உங்க தங்கைக்கு நீங்க பிரியப்பட்டுப் போடறதைப் போடுங்க. மத்தபடி நான் எதுவுமே கேட்க மாட்டேன்னு சொன்னவர். மாப்பிள்ளை, மச்சான் உறவைத் தாண்டி நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள் போலத்தான் பழகினோம். மனுஷன்!... ஒரே நாள் நெஞ்சு வலியில போய் சேர்ந்துட்டாரு. இத்தனைக்கும் எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லாம் விதிதான்! வேறென்ன சொல்ல?..."

"அப்பா இறந்து போனப்புறம் எங்க அம்மா, சக்திவேல் அண்ணா, என்னை... எங்க மூணு பேரையும் நீங்க, உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து ஆதரவு குடுக்கறீங்களே மாமா. உங்க சப்போர்ட்லயும், பாசத்துலயும் தானே நாங்க நல்லா இருக்கோம் மாமா..."

"அட நீ என்னடா... உங்கம்மாவை மாதிரியே இதை ஒரு பெரிய விஷயமா பேசிக்கிட்டு! என் தங்கை அமங்கலியாயிட்டாளேங்கற கவலை ஒவ்வொரு நாளும் என்னை பாடா படுத்துதுடா..."

"நீங்களும் அத்தையை இழந்துட்டு வேதனைப்படறீங்க. எங்க அம்மாவும் எங்க அப்பாவை இழந்துட்டு தவிக்கறாங்க. நாம இப்ப ஒரே குடும்பமா, ஒரே வீட்ல வாழறதுனால நாம எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கோம் மாமா..."

தன் தங்கை கமலத்தின் கணவர் அகால மரணம் அடைந்தது பற்றி அடிக்கடி பேசுவது மூர்த்தியின் வழக்கம். எத்தனை முறை அவர் அதைப் பற்றிப் பேசினாலும் அலுக்காமல் அவருக்கு ஆறுதலாகவும், பொறுமையாகவும் பதில் கூறுவான் பிரகாஷ்.

"கமலம் உனக்கு ஃப்ளாஸ்க்ல காபி போட்டு வச்சிருப்பா. போய் குடி."

"நீங்க குடிச்சிட்டீங்களா மாமா?"

"எனக்குத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கொதி காபி வேணுமே... உங்கம்மா சூடா போட்டுக் குடுத்தா. குடிச்சுட்டேன்."

"சரி மாமா."

அங்கிருந்து நகர்ந்து சமையலறைக்கு சென்றான் பிரகாஷ். அங்கே சமையல் மேடை மீது இருந்த ப்ளாஸ்க்கில் இருந்து காபியை டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே வந்தான்.

வீட்டின் ஹாலில் போடப்பட்டிருந்த தாழ்வான இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். காபியை குடித்தான். ஒரு சிறிய மர டீப்பாய் மீது அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாதப் பத்திரிகைகளைப் புரட்டினான். அதில் இரண்டு பக்கங்களைத் திருப்பினான்.

"சிவ சிவா...” பதற்றத்துடன் பிரகாஷ் கூறியதைக் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார் மூர்த்தி.

"என்னடா பிரகாஷ்! என்ன ஆச்சு?"

"அ... அது... வந்து... ஒண்ணுமில்லை மாமா. பத்திரிகையில....."

"புரியுது. பத்திரிகையில ஏதாவது நடிகையோட கவர்ச்சிப் படத்தை பார்த்துட்டு அதிர்ச்சி ஆகியிருப்ப... உன்னைப் பத்தி எனக்குத் தெரியுமே..."

"ஆமா மாமா. கவர்ச்சியா இருந்தா கூட பரவாயில்லை... ஆபாசமா இருக்கு..."

"அதுக்காக நூத்துக் கிழவன் மாதிரி இப்படியா 'சிவ சிவா'ன்னு பதறுவ? என்ன பையன்டா நீ... உன்னோட வயசுப் பசங்க இந்த மாதிரிப் படங்களைத் தேடித் தேடி வாங்கிப் பார்ப்பானுங்க. நீ என்னடான்னா பார்த்த மறு நிமிஷம் கண்ணை மூடிக்கற... உங்க அண்ணன் சக்திவேலும் அமைதியான சுபாவமா, அன்பே உருவான பையனா இருக்கான். ஒழுக்கமான பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷப்பட, உங்கப்பாவுக்குக் குடுத்து வைக்கலை. அந்த ஆண்டவன், அவருக்கு ஆயுசை குறைச்சுட்டானேடா... உங்க அப்பாவோட ஒழுக்கமான குணமும், சாமி பக்தியும் அப்படியே உனக்கு வந்திருக்கு."

"அப்பாவைப் பத்தி நீங்க உயர்வா பேசறதைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு மாமா. ஆனா... உங்க அளவுக்கு நாங்க கூட அவரைப் பத்தி நினைக்கறதில்லை... உங்க அளவுக்கு ஏங்கறதில்லை... ஏன்னா... எங்க அப்பாவுக்கு சமமான அன்பையும், பாசத்தையும் நீங்க எங்க மேல வச்சிருக்கீங்க..."

"மனுஷப் பிறவி ரொம்ப அரிதான பிறவி. நமக்கு அந்த அரிதான பிறவி கிடைச்சிருக்கு. மனுஷனா பிறந்துட்டா... நம்பளால முடிஞ்ச அளவுக்கு நல்லதை மட்டுமே செய்யணுங்கற கொள்கை வச்சிருக்கறவன் நான். என் ரத்தத்தோட ரத்தம் நீங்க.


உங்க மேல அன்பு செலுத்தறது அபூர்வமான விஷயமில்லை. அது போகட்டும். உன்னோட படிப்பெல்லாம் எப்படி இருக்கு?"

"அதெல்லாம் சூப்பர் மாமா. படிச்சு முடிச்சுட்டு என்ன பண்றதுங்கறதுதான் யோசனையா இருக்கு. சக்திவேல் அண்ணாவைப் போல ஒரு உத்யோகத்துல உட்காரணும்ங்கற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. நானே சுயமா ஏதாவது க்ரியேடிவ்வான லைனுக்கு வரணும்ன்னு நினைக்கறேன்."

"நீ வேலைக்குத்தான் போகணும்ன்னு உன்னை வற்புறுத்த மாட்டேன்... உனக்கு எதில ஆர்வமோ அதையே செய். அதுக்கு செலவாகுமேன்னெல்லாம் யோசிக்காதே.  குறைஞ்ச வட்டிக்கு கடன் வாங்கித்தர நானாச்சு..."

"தேங்க்ஸ் மாமா. படிப்பு முடிஞ்சதும் என்ன பண்ணப் போறேன்னு திட்டம் போட்டுட்டு உங்ககிட்ட சொல்றேன். உங்களோட ஆசீர்வாதத்துலதான் எல்லாமே நடக்கணும்."

"என்ன நடக்கணும்? என்னண்ணா சொல்றான்... உன்னோட மருமகன்?" கேட்டபடியே அங்கே வந்தாள் கமலம்.

"அவனுக்கென்ன கமலம், ஆக்கப்பூர்வமாத்தான் பேசுவான்."

"சமையல்கட்டுல சமையல் பண்ணிட்டு அப்படி அப்படியே போட்டது போட்டபடி  கிடந்துச்சு. சுபிட்சா வர்றதுக்குள்ள ஒழுங்கு பண்ணிடலாமன்னு அந்த வேலையை பார்த்துக்கிட்டிருந்தேன். அது சரி, நீதானே காபி டம்ளரை இங்கேயே வச்சிருக்க? முதல் வேலையா டம்ளரை எடுத்து பாத்திரம் கழுவற இடத்துல வை. இல்லைன்னா சுபிட்சா வந்து பார்த்துட்டு உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா..."

"சரிம்மா."

காபி டம்ளரை சமையலறை மேடை மீது வைத்துவிட்டு அவனுடைய அறைக்குச் சென்றான் பிரகாஷ்.

"என்ன மேகலா, ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவ? இன்னிக்கு ஏழாச்சே? என்னம்மா, உடம்பு சரி இல்லையா? ஏன் முகமெல்லாம் வாடிக்கிடக்கு?" களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்த மேகலாவிடம் கேட்டாள் கமலம்.

"ஒண்ணுமில்ல அத்தை. தலைவலி. லேசா ஜுரம் வர்ற மாதிரி இருக்கு."

"மாத்திரை கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு படுத்துக்க. நான் வந்து தைலம் தேய்ச்சு விடறேன்."

"சரி அத்தை."

கமலத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்து, மேகலா படுக்கை அறைக்குச் சென்றாள்.

கமலம், மேகலாவின் உடல்நலக் குறைவு பற்றி மூர்த்தியிடம் பேச ஆரம்பித்தாள்.

"அண்ணா, மேகலாவுக்கு தலைவலின்னு படுத்திருக்கா. லேசா ஜுரம் வேற இருக்கு. மாத்திரை குடுத்திருக்கேன். ரூம்ல படுத்திருக்கா. நான் போய் அவளுக்குத் தைலம் தேய்ச்சிட்டு வரேன்...”

"கமலம், என் பொண்ணுங்களுக்கு அம்மா இல்லாத குறையே தெரியாம நீ அவங்களை கவனிச்சுக்கற. உனக்குத்தான் சிரமம்..." பேசி முடிப்பதற்குள் இடைமறித்தாள் கமலம்.

"என்னண்ணா நீ பேசறது? உன் பொண்ணுங்களை வளர்க்கறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணுமே? ஹும்..." பெருமூச்சுடன் பேச்சைத் தொடர்ந்தாள் கமலம்.

"உன் பொண்டாட்டி அல்பாயுசுல போய் சேர்ந்துட்டா. என் வீட்டுக்காரரும் நோய், நொடின்னு படுக்காம நெஞ்சு வலியில ஒரே நாள்ல போயிட்டார். அன்னில இருந்து 'எனக்கு நீ; உனக்கு நான்’னு ஒரே குடும்பமா இருக்கோம். உன்னாலதான் என் மகன்கள் சக்திவேலையும், பிரகாஷையும் கஷ்டப்படாம வளர்க்க முடியுது?"

"கமலம், சக்திவேலை நல்லா படிக்க வைச்சாச்சு. அவனுக்கு ஒரு நல்ல வேலை கெடச்சு, அவன் செட்டில் ஆகணும். பிரகாஷ் இந்த வருஷம் டிகிரி முடிச்சுடுவான். அவனை மேலே இன்னும் படிக்க வைக்கணும். எதிர்காலத்துல அவன் பெரிய ஆளா வரணும்."

"முதல்ல மேகலாவுக்கு கல்யாணம் பண்ணனும். சின்னவ சுபிட்சா இன்னும் ரெண்டு வருஷம் காலேஜ் போணுமே?"

"என் மனசில மேகலாவுக்கு மாப்பிள்ளையா நம்ம சக்திவேலைத்தான் நெனச்சிருக்கேன். சக்திவேல் ரொம்ப அமைதியான சுபாவம். தான் உண்டு; தன் வேலை உண்டுன்னு இருப்பவன். புத்திசாலி. இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனைப் பார்க்கறது அபூர்வம். நீ சம்மதிச்சா..."

"என் சம்மதம் என்ன அண்ணா? நானும் உன் மகள் மேகலாவைத்தான் சக்திவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறேன். உனக்கு இது இஷ்டம்னா எனக்கும் சம்மதம்தான்."

"வெளியில யாரோ அறியாதவங்க தெரியாதவங்ககிட்ட பொண்ணைக் குடுத்துட்டு என்ன பிரச்னை வருமோன்னு பதை பதைச்சுக் கிடக்கறதை விட, நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் பண்ணிக்கிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும். மேகலாவும் நல்லா இருப்பா."

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவிற்கு, களைப்பையும் மீறிய ஒரு கலக்கம் ஏற்பட்டது.

அவளது முக பாவங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த பிரகாஷ், ஒரு நமட்டுச் சிரிப்புடன் சொன்னான்.

"ஆமாமா. மேகலா  ரொம்ப நல்லா இருப்பா எங்க அண்ணனைக் கட்டிக்கிட்டா...."

"டேய், இனிமே நீ மேகலாவை அண்ணின்னு மரியாதையாக் கூப்பிடணும். தெரிஞ்சுதா? மேகலாவாம்."

"என்னை விட சின்னவதானே? நான் மேகலான்னுதான் கூப்பிடுவேன்."

"ஏன்டா, உன் அண்ணனையும் இந்த வயித்துலதான் பெத்தேன். அவன் சாதுவா இருக்கான். நீ மட்டும் ஏண்டா துடுக்கா இருக்கே!"

"அட விடு கமலம். அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு? பிரகாஷும் கெட்டிக்காரன்தான்."

"நீதான் மெச்சிக்கோ...” அப்போது வாசலில் யாரோ வருவது தெரிந்தது. பேச்சை நிறுத்திய கமலம், வாசற்படி அருகே பக்கத்து வீட்டு மீனா மாமி நிற்பதைப் பார்த்தாள்.

பேர்தான் மீனா மாமி. ஆனால் அவள் ஒரு இளம் பெண். வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் லட்சணமாக இருப்பவள். அவளுக்குத் திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது. அவளது கணவன் முரளி பிரபல தொலைக்காட்சியில் உத்தியோகத்தில் இருந்தான். அவனையும் முரளி மாமா என்று அழைப்பதே வழக்கமாக இருந்தது.

"அட! யாரு? மீனாவா? வாடியம்மா வா. பக்கத்து வீட்லதான் இருக்கேன்னு பேரு. ரெண்டு, மூணு நாளா ஆளையேக் காணோம்?"

"நான், எங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு இன்னிக்குக் காலைலதான் வந்தேன். வந்து பார்த்தா, வீட்ல சர்க்கரை இல்லை, காபிப்பொடி இல்லை. மூணு நாளைக்குள்ள அத்தனையையும் தீர்த்துட்டாரு என் வீட்டுக்காரர். இப்போ ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி காபின்னு உயிரை வாங்குவார்."

"அம்மா, மீனா மாமிக்கு காபிப்பொடியும், சர்க்கரையும் கொடுத்தனுப்பும்மா." சொன்ன பிரகாஷைப் பார்த்து புன்னகைத்தாள் மீனா மாமி.

"இந்த பிரகாஷுக்கு எப்பவும் கிண்டல்தான்."

"டேய், சும்மா இரேன்டா. கிண்ணத்தைக் கொடு மீனா" கமலம் காபிப்பொடி எடுத்து வர உள்ளே போனாள்.

"ஏ, பிரகாஷ், என்ன? மேகலா ஏன் இப்படி டல் அடிக்கறா?" மீனா கேட்டாள்.

"அவளுக்கு என்ன பிரச்சனையோ? எனக்கென்ன தெரியும்? தலைவலின்னு சொல்றா. தலைவலியோ என்ன வலியோ யாருக்கு தெரியும்?" பேசியபடியே ஓரக்கண்களால் மேகலாவை நோட்டம் விட்டான் பிரகாஷ்.

உள் மனதின் குழப்பங்களையும், கேள்விக்குறிகளையும் முகத்தில் பிரதிபலிக்காமல் இருந்தாள் மேகலா.

"ஒண்ணுமில்ல மீனா மாமி. லேசா ஜுரம்..."


"ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்க வேண்டியதுதானே?”

"ஆஸ்பத்திரிக்குப் போயிட்டுதானே வந்திருக்கா. அதுதான் வலி அதிகமாயிடுச்சு." பொடி வைத்து பிரகாஷ் பேசியதைப் புரிந்து கொள்ளாத மீனா, காபிப்பொடி, சர்க்கரையுடன் வந்த கமலத்திடம், கிண்ணங்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறினாள்.

"ஏன்டா, எதையாவது உளறிக்கிட்டே இருக்க?" பிரகாஷை அதட்டினாள் கமலம்.

"அம்மா... என்னோட ஃப்ரெண்ட் பாலாஜியை உனக்குத் தெரியும்ல? இன்னிக்கு அவனுக்கு அப்பென்டிஸ் ஆபரேஷன் நடந்துச்சு. அவனுக்கு உதவியா நான்தான் அவன் கூட நர்ஸிங் ஹோம்ல இருந்தேன்."

"யாருடா பாலாஜி? புசுபுசுன்னு மீசை வச்சுக்கிட்டு வருவானே? அவனா? இந்த சின்ன வயசுல ஆப்ரேஷனா?"

"ஆமாம்மா. அவனுக்குத்தான்...."

"ஆமா, எந்த நர்ஸிங்ஹோம்ல ஆப்ரேஷன் நடந்தது?"

"அரவிந்த் நர்ஸிங் ஹோம்ல. இன்னிக்கு ஆறுமணி வரைக்கும் நான் அங்கேதான் இருந்தேன்" வேண்டுமென்றே அழுத்தமாகப் பேசினான். வெளிறிப் போன முகத்துடன், கலக்கமான விழிகளுடன் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா.

4

ல்லூரி மாணவிகளுக்கே உரித்தான உடையலங்காரம் மற்றும் தலை முடி அலங்காரத்தில் கல்லூரியில் இருந்து திரும்பி வரும் களைப்பு சிறிதும் இன்றி காலையில் எழுந்து கல்லூரிக்குக் கிளம்பிய அதே சுறுசுறுப்பில் புதிய பூ போல புத்துணர்வோடு காணப்பட்டாள் சுபிட்சா.

அவளது அக்கா மேகலாவின் குணநலன்களுக்கு முற்றிலும் வித்தியாசமான சுபாவத்தைக் கொண்டவள் சுபிட்சா. முகபாவத்தில் அக்காவும் தங்கையும் ஏறக்குறைய ஒரே சாயலில் காணப்பட்டாலும் மனோபாவத்தில் ஏகப்பட்ட வித்யாசமான உணர்வுகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்தனர். இருவரும் கண்ணுக்கு லட்சணமான அழகிய பெண்கள். அவர்களை ஒரு முறை பார்ப்பவர்கள் மறுமுறை பார்க்காமல் கண்ணை எடுக்க மாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்த அம்மாவின் பளிச் நிறத்தையும், தளதளவென்றிருக்கும் உடல் வாகையும் கொண்டிருந்தனர். சகோதரிகள் இருவரும் தாய் இல்லாமல் வளர நேரிட்டபடியால் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தனர்.

வீட்டின் அருகே வந்துவிட்ட சுபிட்சா, வாசல்படியில் பிரகாஷ் அவனது செருப்புகளை கண்டபடி கழற்றிப் போட்டிருந்ததைப் பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டாள்.

"எத்தனை தடவை சொன்னாலும் இந்த பிரகாஷ் மச்சானுக்கு தெரியாது. காலையில நான் எவ்வளவு வரிசையா அடுக்கி வச்சுட்டுப் போயிருந்தேன்? மத்த செருப்பெல்லாம் ஒழுங்கா நான் வச்சது மாதிரி இருக்குல்ல..." கோபமாகப் பேசினாள் சுபிட்சா.

"அட என்னம்மா சுபிட்சா? வீட்டுக்குள்ள நுழைஞ்சும் நுழையாததுமா டென்ஷன் ஆகிக்கிட்டு? போய் முகம் கழுவி உடுப்பை மாத்து. வந்ததும் நொறுக்கு தீனிதானே சாப்பிடுவ? அத்தை உனக்காக மரவள்ளி சிப்ஸ் வாங்கி வச்சிருக்கா. சாப்பிடு."

நாற்காலியில் உட்கார்ந்து மாலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த மூர்த்தி கூறியதும் சற்று சமாதானமான சுபிட்சா, முகம் கழுவுவதற்காக குளியலறைக்குச் சென்றாள்.

அங்கே வாஷ் பேஸின் மீது இருந்த சோப்பு டப்பா மூடப்படாமல் திறந்தே இருந்தது. அந்த சோப், பிரகாஷ் உபயோகிப்பது. சோப் டப்பா திறந்து கிடப்பதைப் பார்த்த சுபிட்சா, மறுபடியும் டென்ஷனுக்கு ஆளானாள். குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.

"அப்பா... என்னமோ நான்... தேவையில்லாம டென்ஷன் ஆகறதா சொன்னீங்களே... பிரகாஷ் மச்சான், பாத்ரூம்ல சோப் டப்பாவைத் திறந்து போட்டிருக்காரு. இதுக்கு என்ன சொல்றீங்க?"

"என்னம்மா சொல்லணும்ங்கற? அவன் பாட்டுக்கு அவன் உண்டு அவனோட வேலை உண்டுன்னு இருக்கான். எடுத்த சாமானை எடுத்த இடத்துல வைக்காததைப் போய் பெரிய குத்தமாப் பேசறியே... பாவம்மா பிரகாஷ்!"

"கோவிச்சுக்கற மாதிரி நடந்துக்க வேண்டாம்னு அவர்கிட்ட சொல்லி வைங்கப்பா."

மூர்த்தியிடம் முறையிட்டுவிட்டு  வேகமாக சமையலறைக்குச் சென்றாள்.

"அத்தை... மரவள்ளி சிப்ஸ் வாங்கி வச்சிருக்கீங்களாமே... குடுங்க அத்தை. பசிக்குது..."

"காலேஜ்ல இருந்து வந்ததும் காலட்சேபம் பண்ணிக்கிட்டிருந்தியே என்ன விஷயம்?" கமலம் சிரித்தப்படியே கேட்டாள்.

"எல்லாம் உங்க அருமை மகன் பிரகாஷ் மச்சானோட விஷயம்தான். எத்தனையோ தடவை சொல்லிட்டேன், எடுத்த பொருளை எடுத்த மாதிரி ஒழுங்கா வைக்கணும்ன்னு. கேக்கறதே இல்லை."

"கேக்கறதில்லைன்னா விட்டுடு. நீ ஏன் டென்ஷனாகி கஷ்டப்படறே?"

"கஷ்டப்படறேனா? அவர்தான் என்னை கஷ்டப்படுத்தறார். சரி... சரி... சிப்ஸை எடுத்து குடுங்க அத்தை..."

"இதோ குடுக்கறேன்டியம்மா. மாமா பையன்னு வாய் நிறைய மச்சான்... மச்சான்னு சொல்லுவாளாம். ஆனா இப்படி குறை கண்டு பிடிச்சுக்கிட்டு அவனைத் திட்டிக்கிட்டே இருக்க... எப்பப் பார்த்தாலும் இப்படி டென்ஷன் ஆகாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கற..."

"நீங்கதானே சொன்னீங்க கேக்கலைன்னா விட்டுடணும்ன்னு... ஹ... ஹ... ஹ... இது எப்படி இருக்கு?..."

"உன்னை நைய்யப் புடைக்கணும் போல இருக்கு..."

"நீங்க என்னை அடிக்கணும்ன்னு நினைச்சாக் கூட உங்க கை அதுக்கு ஒத்துழைக்காது."

"நீயும் உங்க அக்காவும் என்னை அத்தைன்னு கூப்பிட்டாலும் உங்களையும் என்னோட குழந்தைகளாத்தான் நான் நினைக்கறேன். எனக்கு என்னோட வீடு, குடும்பம், உங்க மாமா, இந்த ரெண்டு பசங்க... இதைத் தவிர வேறு உலகமே தெரியாம வாழ்ந்துட்டேன். பெத்தவங்க இல்லாத எனக்கு உங்க அப்பாதான் என்னோட கல்யாணம், காட்சி எல்லாத்தையும் பார்த்தார். கல்யாணம் ஆகி நான் என் புருஷன் வீட்டுக்கு போனப்புறம் என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கறதைப் பார்த்து என்னோட அண்ணன் நிம்மதியா இருந்தார். கல்யாணம் ஆகி நாலு வருஷத்துல சக்திவேல், பிரகாஷ் ரெண்டு பேரும் பிறந்தாங்க. வீடு, சமையல், பிள்ளைகளை கவனிக்கறது, தினசரி பூஜைன்னு அமைதியா போய்க்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில, விதி விளையாட ஆரம்பிச்சுது. நெஞ்சு வலின்னு துடிச்ச உங்க மாமா, என் நெஞ்சு பதறப் பதற இந்த உலகத்தை விட்டே போயிட்டாரு. அந்த நேரத்துல அண்ணன் எனக்கு ஆறுதல் குடுக்கலைன்னா... என்னோட கதி?..."

"கூடப்பிறந்த தங்கச்சிக்கு அடைக்கலம் குடுக்கறது ஒரு அண்ணனோட கடமைதானே அத்தை?"

"நீ வேற... இந்த காலத்துல எந்த அண்ணன்... இவ்வளவு அன்பு செலுத்தி, பாதுகாப்பு குடுக்கறான்? நான் வாய் திறந்து எதுவும் கேக்காமலே என்னையும், என்னோட பிள்ளைகளையும் தன்னோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த எங்க அண்ணன் உண்மையிலேயே உயர்ந்த மனுஷன்!"

"எங்க அம்மாவைப் பறி குடுத்துட்டு அந்தத் துயரம் மாறாத நேரத்துல உங்களோட நிலைமையும் இப்படி ஆனதுல அப்பா ரொம்ப அப்ஸெட் ஆகி இருந்தாரு. நீங்க எங்க வீட்டோட வந்து இருந்து எங்களையும் பார்த்துக்கறதுனால அப்பா இப்ப நிம்மதியா இருக்காரு..."


"ஏ சுபி, ஒரு விஷயம் சொல்லணும்ன்னு நினைச்சேன். பிறந்த வீட்டுக்குப் போன மீனா மாமி வந்துட்டா. வழக்கம் போல காபிப் பொடியும், சீனியும் இரவல் வாங்கிட்டுப் போயிருக்கா..."

"இந்த மீனா மாமிக்கு இரவல் மாமின்னு பேர் வைச்சுடலாம். அடிக்கடி வந்து காபிப் பொடியும், சீனியும் கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. பாவம் அத்தை மீனா மாமி ரொம்ப வெகுளி..."

"அடடே உன் கூட பேசிக்கிட்டே இருந்ததுல மேகலாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போணும்ங்கறதையே மறந்துட்டேன்."

"அக்காவுக்கு என்ன ஆச்சு?"

"ஜுரமா இருக்கு. தலைவலிக்குதாம்."

"நான் கூட்டிட்டுப் போறேன் அத்தை. நீங்க வீட்ல இருங்க..."

"சரிம்மா" பதில் கூறிய கமலம், இரவு உணவு தயாரிப்பதற்காக சமையலறைக்குச் சென்றாள்.

மேகலாவின் அறைக்குள் வேகமாகச் சென்றாள் சுபிட்சா. அங்கே, கட்டிலில் படுத்திருந்த மேகலாவின் நிலையைப் பார்த்த சுபிட்சா அலறினாள்.

கண்கள் பாதி அளவு திறந்திருக்க, தலை ஒரு பக்கமாய் சாய்ந்திருக்க, கால்கள் இரண்டும் பரப்பி இருக்க மேகலா படுத்துக் கிடந்த கோலத்தைப் பார்த்து அலறிய சுபிட்சாவின் இதயம் அதிர்ந்தது. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து, ஒருக்களித்துப் படுப்பதுதான் மேகலாவின் வழக்கம். புடவை அணிந்திருந்தாலும், சுடிதார் அணிந்திருந்தாலும், நைட்டி அணிந்திருந்தாலும் ஒரு அங்குலம் கூட விலகி விடாமல் கவனமாக படுத்துத் தூங்கும் மேகலா... இப்படி இரண்டு கால்களையும் பரப்பி, உடுத்தி இருக்கும் புடவை முழங்கால் வரை விலகிக்கிடப்பதைப் பார்த்த சுபிட்சா, மிகுந்த பயத்துடன் மேகலாவின் அருகே சென்றாள். அவளது புடவையை பாதம் வரை இழுத்து மூடினாள். மேகலாவின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தாள். சுவாஸம் சீராக இருப்பதைப் பார்த்து நிம்மதி அடைந்தாள். மேகலாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். அந்த ஸ்பரிசத்திலும் மேகலா கண் விழிக்கவில்லை.

'இந்த அளவுக்கு ஆழ்ந்து தூங்கவே மாட்டாளே'... சிந்தித்தபடியே மேகலாவின் தோளைத் தொட்டு உலுக்கினாள் சுபிட்சா.

''அக்கா... அக்கா...''

பயத்திலும், பதற்றத்திலும் சற்று வேகமாகவே உலுக்கியதால் கண் விழித்தாள் மேகலா.

''அக்கா... அக்கா... என்னக்கா... ஏன் இப்படித் தூங்கறே?...''

''ம்... ம்..." என்று முனகிய மேகலா, மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.

மறுபடியும் அவளை உலுக்க ஆரம்பித்தாள். சுபிட்சா இவ்விதம் மேகலாவை உலுக்குவதைக் கண்ட கமலம் பதறினாள்.

''ஏம்மா சுபிட்சா... உடம்பு சரியில்லாம அசந்து தூங்கிக்கிட்டிருக்கிற மேகலாவை ஏன் இப்பிடி முரட்டுத்தனமா எழுப்பறே...? தொந்தரவு பண்ற ?...''

''என்னதான் உடம்பு சரி இல்லைன்னாலும் இந்த அளவுக்கு அசந்து அக்கா தூங்கினதே இல்லை அத்தை. அதனாலதான்.''

''அதுக்காக இப்படியா எழுப்புவாங்க? சொல்லப் போனா... அவ இப்படித் தூங்கறது நல்லதுக்குத்தான். நல்ல தூக்கம் தூங்கி எழுந்துட்டாள்ன்னா தலைவலி, அசதி எல்லாம் போய் ஃப்ரெஷ்ஷா ஆயிடுவா. அவளைத் தொந்தரவு பண்ணாதே. நல்லா தூங்கட்டும்...''

''எனக்கென்னமோ பயம்மா இருக்கு அத்தை...''

''பயம்மா?  நல்ல பொண்ணும்மா நீ... வா... அவளே தூக்கம் கலைஞ்சு எழுந்து வர்ற வரைக்கும் நாம எழுப்ப வேண்டாம். வா சுபிட்சா... சொல்றேன்ல...''

''சரி அத்தை...''

இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

5

றுநாள் காலை.

மேகலாவின் அருகில் படுத்திருந்த சுபிட்சா, பக்கத்தில் படுத்திருந்த மேகலாவைக் காணாமல் வேகமாக எழுந்தாள். ஏற்கெனவே எழுந்து, குளித்து முடித்து அறைக்குள் வந்து கொண்டிருந்த மேகலாவைப் பார்த்து, பயம் தெளிந்து புன்னகை புரிந்தாள் சுபிட்சா.

''என்னக்கா இவ்வளவு சீக்கிரமா எழுந்து குளிச்சுட்டே…?''

''சீக்கிரமா? மணியைப் பாரு...''

''அடடே... மணி எட்டா? இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன்?...'' சுபிட்சா பரபரப்பானாள்.

''ஐய்யய்யோ... அத்தை பாவம். சமையலறையில தனியா வேலை செஞ்சுட்டிருப்பாங்களே...'' மேகலா கவலைப்பட்டாள்.

''நம்ம அம்மா இருந்திருந்தா நம்பளை எழுப்பி வேலை வாங்குவாங்களா? அதுபோல அத்தையும் நாம தூங்கிக்கிட்டிருந்தா எழுப்பவே மாட்டாங்கள்ல? நாமளா போய் உதவி செஞ்சாத்தான். அம்மாவுக்கு சரிசமமா அத்தை கிடைக்க நாம குடுத்து வச்சிருக்கணும். சரி சரி. நீ போய் அத்தைக்குக் கூடமாட ஏதாவது செஞ்சு குடு.''

''அது சரி... நேத்து என்ன? உனக்கு அப்படி ஒரு தூக்கம்?''

''ஆபீஸ்ல இருந்து வர்ற வழியில தலைவலி அதிகமா இருந்துச்சு. ஒரு மருந்துக் கடையில மாத்திரை வாங்கிப் போட்டேன். அவன் என்ன மாத்திரை குடுத்தானோ... அப்படி அசந்து தூங்கியிருக்கேன்."

''இதுக்குத்தான் சொல்றது... ஆஸ்பத்திரிக்குப் போகாம டாக்டரைக் கேக்காம எந்த மாத்திரையும் வாங்கிச் சாப்பிடாதேன்னு...''

''ஆஸ்பிட்டல் போய் டாக்டர் கொடுத்த மாத்திரையைத்தான் மேகலா சாப்பிட்டா... என்னமோ மருந்துக் கடைன்னு குழப்பறே...''

திடீரென்று அங்கு வந்த பிரகாஷ் துடுக்காகவும், நக்கலாகவும் கேட்க, மேகலா, இதயம் அதிர்ந்தாள்.

''என்ன பிரகாஷ் மச்சான்?... நேத்து அக்கா தான் அசந்து தூங்கினாள்ன்னு பார்த்தா... உங்களுக்கு இன்னும் தூக்கம் கலையலை போலிருக்கு?...''

''நான் தூங்கினாலும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்குத் தெரியும்ன்னு சிலருக்குத் தெரியாது..." மீண்டும் பொடி வைத்து மறைமுகமாகப் பேசினான் பிரகாஷ்.

''அய்யோ... கடவுளே... காலங்காத்தால இந்தக் கடிமன்னனை கடலுக்குள்ள தள்ளிவிடணும் போல இருக்கு...''

''சுபி... நீ போய் அத்தையைப் பாரு. சமையலறையில அத்தை கஷ்டப்பட்டுக்கிட்டிருப்பாங்க...'' மேகலா கூறியதும் நைட்டியோடு கட்டிலை விட்டு இறங்கினாள் சுபிட்சா.

''ஆமா... இவ போய் 'தினந்தோறும் வாங்குவேன் இதயம்' பாடிக்கிட்டே ஜோதிகா மாதிரி டான்ஸ் ஆடப்போறாளாக்கும்?'' பிரகாஷ் கிண்டல் பண்ணினான்.

பிரகாஷிற்கு 'வெவ்வவே' என்று பழிப்பு காண்பித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுபிட்சா.

பிரகாஷிடம் தனியாக மாட்டிக் கொண்ட மேகலா, அறையை விட்டு வெளியேற முயற்சித்தாள். அறை வாசலுக்குக் குறுக்காக கையை வைத்து வழி மறித்துக் கொண்ட பிரகாஷ் கேட்டான்.

''என்ன ஆச்சு உனக்கு? ஏன் வில்லனைக் கண்ட கதாநாயகி மாதிரி என்னைப் பார்த்து பதுங்கறே... ஒதுங்கறே…?''

''நீ எனக்கு வில்லனும் இல்லை... நான் உன்னோட கதாநாயகியும் இல்லை...''

''என்னம்மா... என்ன கதாநாயகி... என்ன வில்லன்?'' தற்செயலாக அங்கே வந்த மூர்த்தி, மேகலாவிடம் கேட்டார்.

''அ... அ... அது... வந்துப்பா... பிரகாஷ் மச்சான் ஏதோ தமிழ்ப்பட சி.டி.யைப் பார்த்துட்டு..."

"அவன் எங்கம்மா தமிழ்ப்பட சி.டி.யைப் பார்த்திருக்கப் போறான்? ஏதாவது புராணப் படத்தைப் பார்த்து கன்னத்துல போட்டுக்கிட்டு இருந்திருப்பான்... சரி... சரி... பிரகாஷ்! இன்னிக்கு காலேஜ்ல இருந்து திரும்பி வர்றப்ப என்னோட கண்ணாடியை ரிப்பேருக்குக் குடுத்திருந்தேன். அதை வாங்கிட்டு வந்துடு..." 


"சரி மாமா. நான் போகும்போது பணம் குடுங்க. வாங்கிட்டு வந்துடறேன்."

மூர்த்தியைப் பின்தொடர்ந்து பிரகாஷ் வெளியேறியதும் நிம்மதி அடைந்தாள் மேகலா. தற்காலிகமான அந்த நிம்மதியைத் தொலைத்து, மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.

அப்போது அவர்களது வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. மூர்த்தி ரிஸீவரை எடுத்தார்.

"ஹலோ..."

"அரவிந்த் நர்ஸிங் ஹோம்ல இருந்து பேசறோம். மேகலா இருக்காங்களா...."

"கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க." பதில் கூறிய மூர்த்தி, உரக்கக் குரல் கொடுத்தார்.

"மேகலா... அரவிந்த் நர்ஸிங் ஹோம்ல இருந்து கூப்பிடறாங்க. உன் கூட பேசணுமாம்."

இதைக் கேட்ட மேகலா அதிர்ச்சி அடைந்தாள். அவளது இதயத் துடிப்பு வெகு வேகமாகத் துடித்தது. உடல் உபாதையிலும், உள்ளத்தில் உருவான உளைச்சலாலும் திகைப்பு மாறாத முகத்துடன் எழுந்தாள் மேகலா.

மேகலா எழுந்து, தொலைபேசி இருக்கும் இடத்திற்கு தளர்வாய் நடந்து சென்றாள். அடக்கமாகக் காத்திருந்த ரிஸீவரை எடுத்தாள். பேசினாள்.

"ஹலோ......"

"மேகலாவா?" மறுமுனையில் குரல் ஒலித்தது.

"அ... அ... ஆமா... நான் மேகலாதான் பேசறேன்..."

"எங்க டாக்டர் உங்ககிட்ட பேசணுமாம்... ஒரு நிமிஷம்..."

"சரி..." மௌனமாய் காத்திருந்த மேகலாவிற்கு அந்த ஒரு சில வினாடிகள் கூட யுகங்களாய் தோன்றியது. மீண்டும் மறுமுனையிலிருந்து குரல் வந்தது.

"மிஸ் மேகலா... நான் டாக்டர் ராஜேஷ் பேசறேன். சிஸ்டர் அகிலா உங்களைப்பத்தி சொன்னாங்க..."

"எ... எ... என்ன சொன்னாங்க...?"

"நீங்க ஒரு அட்வர்ட்டைசிங் கம்பெனியில வொர்க் பண்றீங்களாமே...?"

"ஆமா..."

"உங்க கம்பெனியில டி.வி. விளம்பரப்படம் தயாரிக்கறாங்களாமே?"

இதைக்கேட்டு, தடுமாறி, தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்த மேகலாவின் இதயத்துடிப்பு சற்று சீரானது. பதில் கூற ஆரம்பித்தாள்.

"ஆமா. நிறைய டி.வி. கமெர்ஷியல்ஸ் பண்ணி இருக்கோம்."

"எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு விளம்பரப் படம் எடுக்கணும். இது விஷயமா உங்க ஆபீஸ்ல யாரைப் பார்க்கணும்?"

"எங்க எம்.டி. மிஸ்டர் அஜய் படுகோனைத்தான் நீங்க பார்க்கணும். அவர் ஏகப்பட்ட பிஸி ஷெட்டியூல்ல இருக்கறவர். அப்பாயிண்ட்மென்ட் வாங்காம அவரைப் பார்க்க முடியாது..."

"ஓ... அப்படியா? ப்ளீஸ்... நீங்க கொஞ்சம் சொல்லி எவ்வளவு சீக்கிரம் அவரைப் பார்க்க வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்க்க வைங்களேன். அவசரமா... எங்க ஹாஸ்பிட்டல் ஆக்டிவிட்டீஸை ப்ரமோட் பண்ண வேண்டியதிருக்கு. இதுக்குரிய முதல் கட்டமா டி.வி.யில விளம்பரப் படம் போடலாம்னு எங்க ஹாஸ்பிட்டல் 'டீன்' சொல்றாரு. சிஸ்டர் அகிலா சொன்னாங்க உங்க விளம்பரக் கம்பெனிதான் இப்ப நம்பர் ஒன்ல இருக்கு'ன்னு..."

"ஆமா டாக்டர். ஆனா எங்க எம்.டி. பிரிண்டிங், ம்யூஸிக் எக்ஸ்போர்ட் பிஸினஸ் இப்பிடி பல வேலைகள்ல ரொம்ப பிஸியா இருக்கறவர். அவர் கூட உங்களை மீட் பண்ண வைக்கறதுதான் கொஞ்சம் கஷ்டம்..."

"ப்ளீஸ்... மேகலா... உங்க கம்பெனியிலதான் எங்க விளம்பரப் படம் தயாரிக்கணும். அதுவும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முக்கியமான டி.வி. சேனல்கள்ல டெலிகாஸ்ட் பண்ணணும்ன்னு சொல்லிட்டார். இந்தப் பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சுட்டார். நீங்க ட்ரை பண்ணி உங்க எம்.டி.யோட ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினா ரொம்ப உதவியா இருக்கும். ப்ளீஸ்..."

"சரி டாக்டர். என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன். ஏற்கெனவே அவருக்கு இருக்கற ஷெட்யூல் ஏதாவது கேன்சல் ஆனாலோ, தள்ளிப் போடப்பட்டாலோ... அவரை சந்திக்க வைக்க வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கறேன்."

"சரி, மிஸ் மேகலா. கூடிய வரைக்கும் சீக்கிரமா உங்க எம்.டி.யை சந்திக்க வைங்க... என்னோட மொபைல் நம்பர் எழுதிக்கோங்க. இந்த நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க…"

"சரி டாக்டர்." என்று கூறிய மேகலா, டாக்டர் ராஜேஷ் சொன்ன நம்பர்களைத் தொலைபேசி அருகே இருந்த புத்தகத்தில் குறித்துக் கொண்டாள்.

அரவிந்த் ஹாஸ்பிட்டல்... ஃபோன்... என்றதும் வெலவெலத்துப் போன அவள் மனது அமைதியானது.

'அன்னிக்கு நர்ஸிங்ஹோம்ல குடுத்த ஃபார்ம்ல மறந்து போய் வீட்டு போன் நம்பரை எழுதிட்டேன் போலிருக்கு. அதனால, நர்ஸ் அகிலா, என்னோட வீட்டு நம்பரை குடுத்திருக்கா. நிஜம்மாவே டி.வி. கமர்ஷியல் எடுக்கற விஷயங்கறதுனாலதான் அகிலா, என்னோட நம்பரைக் குடுத்திருக்கா...'

"என்ன யோசனைம்மா மேகலா? உடம்புக்கு எப்படி இருக்கு? அடிச்சுப் போட்ட மாதிரி நேத்து அசந்து தூங்கிக்கிட்டிருந்தியே? இப்ப பரவாயில்லையா?"

"தலைவலிக்கு மருந்துக் கடைக்காரன் குடுத்த மாத்திரையினால அப்படித் தூங்கி இருக்கேன் போலிருக்கு அத்தை. மத்தபடி வேற ஒண்ணும் இல்லை. இதோ இன்னிக்கு ஆபீஸ்க்குக் கிளம்பப் போறேன்..."

"கொஞ்சம் உட்கார். சூடா ஹார்லிக்ஸ் போட்டுத்தரேன். குடிச்சுட்டு குளிக்கப்போ. குளிச்சுட்டு வந்து வயிறு நிறைய சாப்பிட்டுட்டு ஆபீசுக்குக் கிளம்பு..."

"இதோ... நானே சமையலறைக்கு வந்து ஹார்லிக்ஸ் போட்டுக்கறேன் அத்தை..."

"அதெல்லாம் வேண்டாம். நான் போய் போட்டுக் கொண்டு வரேன். நீ இங்கேயே இரு. பிரகாஷ், காலேஜ் போயிட்டான். சுபிட்சாவும் கிளம்பிப் போயிட்டா. நீயும், அண்ணனும்தான் சாப்பிடணும். இன்னிக்கு அமாவாசை, நான் சாப்பிட மாட்டேன்" பேசிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள் கமலம்.

'ஒரு அம்மாவைப் போல அம்மாவுக்கு நிகரா பாசமுள்ள அத்தை...' கமலத்தின் அன்பைப் பற்றி நினைத்து உருகினாள் மேகலா.

6

கை வகையான, வண்ண வண்ணமான சுடிதார்களில் கல்லூரிப் பறவைகள். அங்கங்கே தாவணியில் இருந்த ஓரிரண்டு சிட்டுக்களைப் பார்த்து, "கனகா கனகா நீ எனக்கா" என்று கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர் விடலைகள்.

ராமராஜன் படத்தில் பாவாடை தாவணி உடுத்தி நடித்த நடிகை கனகாவை மனதில் வைத்து அவ்விதம் கேலி பண்ணிக் கொண்டிருந்தனர்.

மெஜந்தா வண்ண க்ரேப் சில்க் சல்வாரில் ஆரஞ்சு வண்ண ஜரிகைப் பூக்கள் அள்ளித் தெளித்திருந்தது. ஆரஞ்சு வண்ண சுடிதாருக்குப் பொருத்தமாக அதே வண்ணத்தில் ஷில்பான் துப்பட்டாவில் அங்கங்கே தைக்கப்பட்டிருந்த சமிக்கிகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. இத்தகைய அழகிய உடையை அணிந்திருந்த சுபிட்சாவின் காதுகளில் 'நாராயணா பேர்ல்ஸ்' கடையின் அழகிய முத்து தொங்கல்களும், கழுத்தில் முத்து மாலையும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. முத்துக்களுடன் மெஜந்தா வண்ண செயற்கைக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. சிவந்த நிறத்தில், எடுப்பான மூக்கும், விரிந்த விழிகளுமாய் மிக அழகாகக் காணப்பட்டாள் சுபிட்சா.

"ஏ சுபிட்சா! யார் யாரோ நடிக்க வர்றாங்க. நீ மட்டும் ஒரு படத்துல உன் முகத்தை காமிச்சா போதும்... ஒரே படத்துல கனவுக் கன்னியாயிடுவடி. அவ்ளவு அழகுடி நீ."


கண்கள், கனவுகளில் மிதக்க, சுபிட்சாவின் அழகைப் புகழ்ந்த கல்பனாவின் குண்டுக் கன்னத்தைக் கிள்ளினாள் சுபிட்சா.

"அட, சினிமா பைத்தியமே, ஒழுங்கா படிச்சு முடிச்சு, அம்மா, அப்பாவை சந்தோஷப்படுத்துடி. எப்பப் பார்த்தாலும் என்ன சினிமாப் பேச்சு, சினிமாக் கனவு?"

"நான்தான் குண்டா இருக்கேன். சினிமாவுக்கு லாயக்கு இல்ல. ஏதோ, அழகா இருக்கறவங்களை என்கரேஜ் பண்ணலாம்னுதான்..."

"போதும் போதும் உன் என்கரேஜ்மென்ட். இந்த சினிமாப் பேச்செல்லாம் ஒரு அளவோடதான் கல்பனா இருக்கணும்."

"ச்ச... நேத்து கே.டி.வியில இரட்டை ரோஜா படம் பார்த்தேன். குஷ்பு என்ன அழகு தெரியுமா? எந்த ட்ரெஸ் போட்டாலும் அவங்களுக்கு அழகா இருக்கு."

"ஏ சுபிட்சா, நீ என்னதான் வேப்பிலை அடிச்சாலும் இவளைப் பிடிச்சிருக்கற சினிமாப் பேய் ஓடாது" கறுப்பு சுடிதாரில் இருந்த வனிதா, கல்பனாவின் தலையில் லேசாகக் குட்டினாள்.

"அதை நீ சொன்னா போதுமா? அவ சொல்லணுமே."

"ஐய்யோ... வேணாம்மா தாயே... ஆளை விடுங்க. போன தடவை டான்ஸ் கம்போஸ் பண்ணிக்குடுன்னு கேட்டிங்க. நானும் என்னோட கால் முட்டி உடைய, கம்போஸ் பண்ணிக்குடுத்தேன். யாராவது ஒத்துழைச்சீங்களா? ஆறு பேர் ஆடற நிகழ்ச்சிக்கு யாருமே வரலை. ரிகர்சலுக்கு வராம ஒரு  நாளைக்கு ரெண்டு பேர் மட்டம் போடறது. பொறுப்பே இல்லாம நடந்துக்கிட்டீங்க. உங்களை ஒண்ணு சேர்த்து நான் கம்போஸ் பண்ணின டான்ஸ் மூவ்மென்ட்ஸை கத்துக்குடுத்து ஸ்டேஜ்ல உங்களை ஆட வைக்கறதுக்குள்ள நான் பட்ட பாடு! போதும்... போதும்னு ஆயிடுச்சு..."

"இந்தத் தடவை உனக்கு அந்தப் பிரச்னையே வராது..."

"வேணாம்... வேணாம்... இப்படித்தான் சொல்லுவீங்க. அப்புறம் உங்க வேலையைக் காட்டுவீங்க..."

"ஏ சுபி! சொல்ல வந்ததை முழுசா கேட்டுட்டுப் போப்பா... இந்த தடவை ஸோலோ பெர்ஃபார்மன்ஸ் பண்ணணும்ன்னு சொல்லியிருக்காங்க. அதனால நீ மட்டுமே தனியா டான்ஸ் பண்ணிடு. ப்ளீஸ்..."

"நான் மட்டும் தனியாவா?"

"ஆமா சுபி. நீதான் அழகா ஆடுவியே... எங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு... எங்களுக்கு பயிற்சி குடுத்துக்கிட்டு... நாங்க குடுக்கற தொல்லையைத் தாங்க முடியாம டென்ஷன் ஆகிக்கிட்டு..."

குறுக்கிட்டாள் சுபிட்சா.

ஷைலாவின் வாயைத் தன் கைகளால் பொத்தினாள் சுபிட்சா.

"அம்மா... தாயே போதும். மூடிக்கோ. நானே ஸோலோ டான்ஸ் ஆடிக்கறேன்."

தோழிகளில் ஒருத்தியான வர்ஷா இடைமறித்தாள்.

"ப்ளீஸ்... போன வருஷம் செஞ்ச தப்புக்கு இப்ப வேண்ணா தோப்புக்கரணம் போடட்டுமா?"

"ஒண்ணும் வேணாம். நானும் கூட சேர்ந்து ஆடறேன்னு ஆளாளுக்கு சொல்லாம... இந்த அளவுக்கு என்னை தனியா ஆடச் சொல்லணும்னு முடிவு எடுத்திருக்கீங்களே அதுவே பெரிய விஷயம். பிழைச்சுப் போங்க..."

"யே........................." அனைவரும் மகிழ்ச்சியுடன் உரக்கக் கத்தி மகிழ்ந்தனர்.

அவர்களுள் மிக உயரமாக இருந்த வனிதா, தன் கீச்சுக் குரலில் பேச ஆரம்பித்தாள்.

"ஏ... சுபி! நான் சொல்ற பாட்டுக்கு டான்ஸ் ஆடுறியாப்பா?"

"ஆரம்பிச்சுடுச்சுடி மொக்கை..." வர்ஷா கேலி செய்தாள்.

"அடங்கி இருங்கடி. எனக்கு எந்தப் பாட்டுப் பிடிக்குதோ... அந்தப் பாட்டுக்கு ஆடுவேன். ப்ரோக்ராம் நடக்கறப்ப பார்த்துக்கோங்க..." சுபிட்சா கூறியதும் அனைவரும் கோரஸாகக் கத்தினார்கள்.

"ஐய்யோ... அவ்வளவு சஸ்பென்ஸா? ப்ளீஸ் சுபி... முன்னாடியே சொல்லிடு சுபி... ப்ளீஸ்.”

"ம்கூம். என்னோட முடிவுல இருந்து எந்த மாற்றமும் கிடையாது. நிச்சயமா... நான் செலக்ட் பண்ற பாட்டு உங்க எல்லாருக்கும் பிடிச்சதாத்தான் இருக்கும். அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்."

"சரி..." வர்ஷா அரை மனதுடன் 'சரி' என்றதும் சுபிட்சா அவளை சமாதானப்படுத்தினாள்.

"என்ன குரல் இறங்குது? கவலைப்படாதே. சும்மா... இவ்வளவு நேரம் உங்களையெல்லாம் கலாய்க்கலாம்ன்னு அப்படிச் சொன்னேன். நாளைக்குக் காலையில நாம அஞ்சு பேரும் இதே இடத்துல சந்திப்போம். அப்போ... நான் எந்தப் பாட்டை செலக்ட் பண்ணியிருக்கேன்னு சொல்லுவேன்."

"யே......" மறுபடியும் அனைவரும் குதூகலமாக உரக்கக் கத்தினார்கள்.

"சரி... சரி... க்ளாசுக்கு லேட் ஆயிடுச்சு. வாங்க போகலாம்" சுபிட்சா கூறியதும் அனைவரும் வகுப்பிற்கு நகர்ந்தனர். மற்றவர்கள் வேகமாக ஓடிச் செல்ல, ஒரு பக்கம் நீளமாய் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டா, சுபிட்சாவின் கால்கள் இடறிவிட்டது. தடுமாறி விழப்போன அவள், சமாளித்து நடப்பதற்குள் மற்ற ஐந்து பேரும் கண்ணிலிருந்து மறைந்தனர்.

சில அடிகள் நடை வைத்த சுபிட்சாவின் தோளை யாரோ தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள்.

குளித்து முடித்து ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மேகலாவின் கையில் டிபன் பாக்ஸைக் கொடுத்தாள் கமலம்.

"இன்னிக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கன்னா கேட்க மாட்டேங்கற..."

"இந்த வாரம் முழுக்க லீவு போட முடியாது அத்தை. முக்கியமான வேலைகள் இருக்கு. என்னோட வேலைகளை நான்தான் செய்ய முடியும். அதனால கண்டிப்பா நான் போயாகணும் அத்தை."

"சரிம்மா. ஜாக்கிரதையா போயிட்டு வா. ரவா உப்புமாவும், தயிர் பச்சடியும் வச்சிருக்கேன். விசேஷமா சமைக்க முடியலை. சிம்பிளாத்தான் செஞ்சு வச்சிருக்கேன்..."

“உப்புமா செய்யும்போது வீடு முழுசும் மணத்துச்சே. உங்க கை மணமே தனிதான். எங்க ஆபீஸ்ல என்னோட டிபன் பாக்ஸைத் திறந்தா போதும்... கூட வேலை செய்யற பொண்ணுங்க எல்லாரும் எனக்கு... உனக்குன்னு வந்துருவாங்க. தினமும் உங்க சமையலுக்கு புகழ் மாலைதான்..."

"எனக்கு புகழ்மாலை இருக்கட்டும். உன் கழுத்துல எப்போ பூமாலை விழும்ன்னு நான் காத்திருக்கேன்."

"அதுக்கென்ன அத்தை அவசரம்?"

"அவசரம் இல்லைம்மா... அவசியம் இருக்கே... பொண்ணாப் பொறந்துட்டா வளர்ந்து ஆளாகற வரைக்கும் பெத்து, வளர்த்த தாய், தகப்பனோட துணை தேவையா இருக்கு. ஆளான பொண்ணுங்க படிச்சு முடிக்கற வரைக்கும் அப்பன்காரனோட ஆதரவு அனுசரணையா இருக்கும். அதுக்கப்புறம் அவளுக்காக அவ வாழ்க்கைத்துணையா ஒரு மனுஷன், புருஷனா வரணும். அவளோட வாழ்நாள் முழுசும் கூடவே இருந்து பாதுகாக்கற ஒரே ஜீவன் புருஷன்காரன்தான். ஏதோ விதிவசமா உங்க மாமாவை எமன் வாய்ல குடுத்துட்டு நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா... அவரை நினைச்சு ஏங்காத நாளே இல்லை. அந்த அளவுக்கு ஒரு புருஷனோட ஆதரவும், அரவணைப்பும் பொண்ணுங்களுக்குத் தேவையா இருக்கு. அதனாலதான் சொல்றேன்... உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு. நீ என்னடானா என்ன அவசரம்ன்னு கேக்கற... நல்ல பொண்ணும்மா நீ..."

"நல்ல பொண்ணுன்னு நீங்களே சர்டிபிகேட் குடுத்துட்டீங்க. நான் கிளம்பறேன் அத்தை..."


"கிளம்பறியா? நான் இவ்வளவு நேரம் பேசினதுக்கு எந்த பதிலும் சொல்லாம போறியே..."

"நான் சொல்றதுக்கு என்ன அத்தை இருக்கு? எப்போ எனக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ... அப்போ நானே உங்ககிட்ட சொல்றேன்..." அந்தப் பேச்சில் இருந்து தப்பிப்பதற்காக கிளம்ப முயற்சித்தாள் மேகலா.

"எங்கே... ஓடப் பார்க்கறே? நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ..."

"என்ன கேட்டிங்க? என்ன பதில் சொல்லணும் அத்தை?"

"உனக்கு விளையாட்டுதான் போ... கல்யாணம் பண்ணிக்கறதைப்பத்தி பேசிக்கிட்டிருந்தோமே?..."

"அத்தை... எனக்கு நீங்க அத்தை மட்டும் இல்லை. அம்மாவாவும் இருக்கீங்க. என்னோட அம்மாகிட்ட சொல்ற மாதிரி உங்ககிட்டயும் என் மனசில உள்ளதையெல்லாம் சொல்லிடுவேன். அதுக்குரிய நேரம் இன்னும் வரலை அத்தை. உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறேன்? என் பட்டு அத்தை, என் செல்ல அத்தை...." கமலத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள் மேகலா.

"போதுண்டியம்மா... நீ எனக்கு 'சோப்' போட்டது போதும். ஆபீசுக்குக் கிளம்பு. ஸ்கூட்டியில போகாதே. ஆட்டோவுல போ, இன்னும் ரெண்டு நாளைக்கு..."

"சரி அத்தை."

செருப்புகளை காலில் புகுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் மேகலா.

வீட்டு வாசலுக்குக் கொஞ்ச தூரத்திலேயே ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி ஏறினாள். ஆட்டோவை நிறுத்த முடிந்த அவளால் அவளது மனதில் அலை பாய்ந்து கொண்டிருந்த நினைவுகளை நிறுத்த முடியவில்லை.

'அம்மாகிட்ட சொல்ற மாதிரி எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட சொல்வேன் அத்தைன்னு அத்தைகிட்ட சொன்னேன். ஆனா... ஆனா... மூடி மறைச்சுட்டேனே... பாசத்தால என்னை முழுக்க நனைக்கற அத்தையை பொய்யான வார்த்தைகளால நனைச்சு, மறைச்சுட்டேனே...  இது... அத்தையோட அன்புக்கு நான் செய்ற தீங்கு இல்லையா...?'

"மேடம்... மேடம்... உங்க ஆபீஸ் வந்துருச்சு மேடம்..." ஆட்டோ டிரைவரின் குரல் கேட்டு, நீந்திக் கொண்டிருந்த நினைவலைகளை விட்டுக் கரையேறினாள் மேகலா.

ஆட்டோ டிரைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, கைப்பை மற்றும் டிபன் பாக்ஸ் இருந்த பையுடன் ஆபீஸ் கட்டிட வாசலை நோக்கி நடந்தாள் மேகலா.

7

திடுக்கிட்டுத் திரும்பிய சுபிட்சா, தன் தோளின் மீது கை வைத்தது யார் என்று பார்த்தாள். மேலும் அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அந்த அதிர்ச்சி அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவளுக்கு முன் நின்றது அவளது அம்மாவின் உருவம்.

"அம்மா..." உணர்ச்சிவசப்பட்டுப் போனாள்.

"சுபி... நீயும், உன்னோட அக்காவும் நல்லா இருப்பீங்க. உங்களை சுத்தி எப்பவும் ஒரு பாதுகாப்பு வளையமா நான் இருப்பேன். எல்லா இடங்கள்லயும் பரவி இருக்கிற காற்று மாதிரி உன்னை சுத்தியும், மேகலாவை சுத்தியும் எப்பவும் உங்க கூடவே இருப்பேன்" அவ்வளவுதான். அந்தப் பேச்சோடு அம்மாவின் உருவம் மறைந்துவிட்டது.

"அம்மா... அம்மா..." என்று அழ ஆரம்பித்தாள் சுபிட்சா. பின் தொடர்ந்து வந்த சுபிட்சாவைக் காணோம் என்று திரும்பி வந்தனர் அவளது தோழிகள்.

"என்ன சுபி... எங்க பின்னாடிதானே வந்துக்கிட்டிருந்த? ஏன் திடீர்னு நின்னுட்ட…?" கேட்டுக் கொண்டிருந்த வர்ஷா, கண்ணில் கண்ணீருடன் காணப்பட்ட சுபிட்சாவைக் கண்டு குழம்பினாள்.

"சுபி... என்ன ஆச்சு? ஏன் அழறே?"

"அம்மா... அம்மா..." தொடர்ந்து அழுதாள் சுபிட்சா.

"சொல்லு சுபி. ஏன் அழறே! அம்மா நினைவு வந்துடுச்சா?"

"நினைப்பு வரலை. நிஜம்மாவே எங்க அம்மா என் கண்முன்னாடி வந்தாங்க..."

"என்ன சுபி... என்ன சொல்ற? உங்கம்மா எப்படி வருவாங்க?! அவங்கதான்..."

இடைமறித்துப் பேசினாள் சுபிட்சா.

"எங்க அம்மா இறந்து போனது எப்படி நிஜமோ... அது போல அடிக்கடி அவங்க என் கண்ணுக்கு முன்னாடி வர்றதும் நிஜம்தான். தூக்கத்துல வர்ற கனவுலதான் அம்மா வர்றாங்கன்னு இல்லை. நான் நல்ல விழிப்போடு இருக்கும்போதும் எங்க அம்மாவோட உருவம் என்னோட கண் முன்னால நிழலாடுது. என் கூட எங்கம்மா பேசறாங்க. என்னை ஆசீர்வதிக்கறாங்க... எங்க அக்கா மேகலா... அன்பானவ. பாசமானவ. ஆனா என்னை மாதிரி ஆர்ப்பாட்டமா தன்னோட அன்பை வெளிப்படுத்தமாட்டா. நான்தான் எப்பவும் அம்மாவோட மடியிலேயே இருப்பேன். அவங்க முந்தானையிலேயே முடங்கிக் கிடப்பேன். அதனாலதான் அம்மாவோட முகம் என் நெஞ்சுக்குள்ளயும் கண்ணுக்குள்ளயும் அப்பப்ப வந்துக்கிட்டே இருக்கும். சில சமயம் என் முன்னாலயும் அவங்க உருவம் தோணுது..."

அழுகை மாறாத குரலில் பேசிக் கொண்டிருந்த சுபிட்சாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள் வனிதா. சுபிட்சாவிற்கு தாய் மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தினால் ஏற்படும் பிரமைதான் அது என்று புரிந்தாலும் அவளுடைய நம்பிக்கையான அந்த நிகழ்வுகளைப் பற்றி மாறாகவும் வேறாகவும் பேசாமல், அவள் கூறுவதை ஏற்றுக் கொண்டனர் தோழிகள். அனைவரும் வகுப்பிற்குச் சென்றனர்.

கடற்கரை, காதலர்கள் கூடிப் பேசும் பொது இடம். முகத்தோடு முகம் தெரியாத இருட்டு. மணலுக்குள் விரல்களை அளைந்தபடி உட்கார்ந்திருந்தாள் மேகலா. அவளது முன் நெற்றியில் அடர்த்தியாய், சுருள் சுருளாய் விழுந்திருந்த முடிக் கற்றைக்குள் தன் விரல்களை நுழைத்து விளையாடிக் கொண்டிருந்தான் வருண்.

"வருண், ப்ளீஸ் கையை எடுங்க. ஏற்கெனவே தப்பு பண்ணியாச்சு. எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. என் மேல அப்பாவும், அத்தையும் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. அத்தை என் அம்மா மாதிரி. அவங்ககிட்ட நம்ம காதல் விஷயத்தை சொல்லிடலாம்னு நினைக்கறேன்."

"அவசரப்படாத மேகலா. உன் அப்பா, அத்தை உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்களோ அது போலத்தான், அமெரிக்காவுல இருக்கற என் அண்ணா என் மேல நம்பிக்கை வச்சிருக்கார். அவர் இன்னும் நாலு மாசத்துல வந்துடுவார். என்னை வளர்த்து ஆளாக்கினதே அவர்தான். அவர்கிட்ட நேர்ல நம்ம காதல் விஷயத்தைச் சொல்லி முறைப்படி உன் வீட்டுக்குப் பொண்ணு கேக்க வர்றோம்."

"நீங்க என்னமோ நாலு மாசம்னு லேசா சொல்றீங்க. எங்க வீட்டில என் கல்யாணப் பேச்சு எடுத்துட்டாங்க. அதான் நான் ரொம்ப பயப்படறேன்."

"கொஞ்ச நாள் ஏதாவது சாக்கு சொல்லி சமாளிச்சுடு மேகலா. அண்ணன் வந்து இறங்கின மறு வாரமே நம்ம கல்யாணம். ஓ.கே? எங்கே முகத்தைக் காட்டு. உம்முனு இருந்தா நல்லாவே இல்லை."

"என்னால சிரிக்க முடியலை வருண். நேத்து நர்சிங்ஹோம்ல தனியா இருக்க ரொம்ப பயமா இருந்துச்சு."

"ஸாரிம்மா. நேத்து என்னால லீவு போட முடியாத சூழ்நிலை."

"எங்க அத்தை மகன் பிரகாஷ் நேத்து ரொம்ப வித்தியாசமா... ஜாடைப் பேச்சா பேசிக்கிட்டிருந்தான்… அந்த அரவிந்த் நர்சிங்ஹோமுக்கு அவனும் வந்திருந்தானாம்."


"அவனா? எதுக்கு?"

"அவனோட ஃப்ரெண்டுக்கு ஆப்ரேஷனாம்."

"இதை அவனே உன்கிட்ட சொன்னானா?"

"ம்கூம். அத்தைக்கிட்டயும், மீனா மாமிகிட்டயும் சொல்லிக்கிட்டிருந்தான். என்னை அவன் பார்த்திருப்பானோன்னு சந்தேகமா இருக்கு வருண்."

"சேச்சே, அந்த நர்சிங் ஹோம் எவ்வளவு பெரிசு? அவன் பாட்டுக்கு வந்துட்டுப் போயிருப்பான். வீணா நீ பயப்படாதே."

"இல்லை வருண். சக்திவேல் மச்சான் மாதிரி பிரகாஷ் நல்லவன் கிடையாது. அவனைப் பத்தி எங்க வீட்டில யாருக்குமே தெரியாது. வீட்ல ரொம்ப நல்லவன் மாதிரி நடந்துக்குவான். ஆனா அவன் போடறதெல்லாம் வேஷம். என் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட அவனைப்பத்தி கம்ப்ளெயின்ட் பண்ணி இருக்காங்க. நான் அப்பாகிட்டயோ, அத்தைகிட்டயோ அவனைப்பத்தி சொல்லிக்கலை."

"நர்சிங் ஹோமுக்கு அவன் வந்தது தற்செயலானது. நீ பயப்படாதே. இன்னும் நாலே மாசம் பொறுத்துக்கோ. நாம கணவன், மனைவியானப்புறம் யாரும் எதுவும் தப்பா பேச மாட்டாங்க. நாலு மாசந்தான். அப்புறம் நான் எங்கேயோ பறக்கப் போறேன். இந்த அழகுராணி எனக்கு சொந்தமாயிடுமே."

"நான் உங்களை நம்பறேன். எங்க வீட்டில என்னை நல்ல பொண்ணுன்னு நம்பறாங்க. அவங்க நம்பிக்கையை நான் காப்பாத்தணும். சக்திவேல் மச்சானுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க. இதை சீரியஸா ஆக விடாம என்ன பண்றதுன்னு எனக்குப் புரியலை. இதுக்கு நடுவுல இந்த பிரகாஷ் வேற... வருண், ப்ளீஸ் ரொம்ப லேட் பண்ணிடாம நம்ம கல்யாணத்தை சீக்கிரமா நடத்தப் பாருங்க. ப்ளீஸ்."

மேகலாவின் மாம்பழக் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் வழிவதை சகிக்க முடியாத வருண் அவளை அணைத்துக் கொண்டான்.

"அழாதே மேகலா. கண்ணைத் துடைச்சுக்கோ. ரொம்ப இருட்டிடுச்சு. வா போகலாம்."

இருவரும் கடற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். இவர்களைப் படகுக்குப் பின்னால் இருந்து இதுவரை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு உருவமும் இவர்களைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தது.

மேகலா பணிபுரியும் விளம்பர நிறுவனத்தின் விளம்பரப் படத் தயாரிப்புக் குழுவில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிபவள் சௌம்யா உதயகுமார்.

ஒளிப்பதிவுத் துறைக்கு பெண்கள் வருவது மிக அரிது. சிறு வயதிலேயே கேமிரா, புகைப்படம், வீடியோ இவற்றில் சௌம்யாவிற்கு அதிக ஈடுபாடு இருந்தது. மிகச்சிறிய வயதிலேயே அவள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள், அவற்றைப் பார்த்தவர்கள். அத்துறை பற்றி புரிந்தவர்கள், 'இந்தப் பொண்ணு பின்னாளில் சிறந்த புகைப்பட நிபுணராக பிரகாசிப்பாள்' என்று ஆருடம் சொன்னார்கள்.

அவர்கள் கூறியதை விட ஒரு படி அதிகமாக சிறந்த ஒளிப்பதிவாளராக உருவாகினாள் சௌம்யா. தனது ஆரம்ப அரிச்சுவடியை விளம்பரப் படங்களில் துவங்கிய சௌம்யா, விளம்பரப் படங்களின் ஒளிப்பதிவுத் துறையில் வேகமாக முன்னேறினாள். அவளது திறமையைக் கண்ட 'ஃபைவ் எஸ்' விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் அஜய் படுகோன் தனது நிறுவனத்தில் படத் தயாரிப்புக் குழுவில் சௌம்யாவை முதன்மை ஒளிப்பதிவாளராக நியமித்து, பெருந்தொகையையும் சம்பளமாக வழங்கியிருந்தார். இத்துறையில் அவளது திறமை மேலும் மெருகேறுவதற்காக அஜய் படுகோன் அவளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

திருமணம் என்ற கோட்பாட்டில் சௌம்யா, சௌம்யா உதயகுமாராக பெயர் மாறினாள். உதயகுமாரின்  நல்லாதரவால் மேலும் அத்துறையில் சிறந்து விளங்கினாள் சௌம்யா உதயகுமார்.

மேகலாவும், சௌம்யா உதயகுமாரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அலுவலகத்திற்கு வந்து மேகலாவுடன் அரட்டை அடிப்பாள் சௌம்யா உதயகுமார்.

இடைவிடாத படப்பிடிப்பினால் இரண்டு வாரங்கள் மேகலாவைப் பார்க்காவிட்டால் மேகலாவைத் தன் வீட்டிற்கு அழைத்து, அங்கே உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள்.

மேகலாவின் குடும்ப நிலவரங்கள் அனைத்தும் சௌம்யா உதயகுமாருக்குத் தெரியும். அவ்வப்போது தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை சௌம்யா உதயகுமாரிடம் பகிர்ந்து கொள்வாள் மேகலா.

மேகலா, வருண் காதல் விபரம் அறிந்து, முதன் முதலில் வாழ்த்தியது சௌம்யா உதயகுமார்தான்.

8

ரு ஞாயிற்றுக்கிழமை, மேகலாவின் வீட்டுத் தொலைபேசியில் சௌம்யா உதயகுமார் அழைத்தாள்.

"என்ன மேகி, ஸண்டே மூடா? ரெண்டு வாரமா ஷுட்டிங் பிஸியில நாம சந்திக்கவே முடியலை. இன்னிக்கு நாம மீட் பண்ணுவோமா? நடிகை ரேவதியோட ஹஸ்பண்ட் மிஸ்டர் சுரேஷ் மேனன் புதுசா ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிச்சிருக்காராம். அங்கே போகலாமா? உதயகுமாரையும் நம்ம கூட வரச்சொல்லி கூப்பிட்டேன். அவருக்கு ஒரு வேலை இருக்காம். நீ வந்தா நாம ரெண்டு பேரும் போகலாம்..."

"எனக்கும் உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. எத்தனை மணிக்கு, எங்கே வரணும்னு சொல்லு. அப்பாகிட்ட கேட்டுட்டு நான் வந்துடறேன்."

"தேங்க்யூ மேகி. அஞ்சு மணிக்கு வந்துடு. அந்த ரெஸ்ட்டாரண்ட்டோட பேர் 'க்ரிம்ஸன் சக்ரா'. அடையார்ல இருக்கு. கரேக்ட்டா அஞ்சு மணிக்கு வந்துடு. சரியா?"

"ஓ.கே. சௌமி."

தொலைபேசி ரிசீவரை வைத்து விட்டு, மூர்த்தியிடம் அனுமதி கேட்டாள் மேகலா.

"அப்பா... என்னோட ஃப்ரெண்ட் சௌம்யா உதயகுமார் போன் பண்ணினா. இன்னிக்கு சாயங்காலம் ரெஸ்ட்டாரண்ட்டுக்கு வரச் சொன்னா. போயிட்டு வரட்டுமாப்பா?"

"தாராளமா போயிட்டு வாம்மா. சௌம்யா நம்ப வீட்டுப் பொண்ணு மாதிரி. செல்போனும்  கையுமா, சதா பேசிக்கிட்டே திரியற பொண்ணுங்க மத்தியில செல்போனே வேண்டாம்னு சொல்லி நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கறீங்க நீயும், உன் தங்கச்சியும். வேற எங்கேயும் வெளியே போறதில்லை... என்னிக்கோ ஒரு நாள் ஆபூர்வமா... ஆசையா... ஹோட்டலுக்குக் கூப்பிடறா சௌம்யா. சந்தோஷமா போயிட்டு வாம்மா."

"தேங்க்ஸ்ப்பா..." என்றவள், கமலத்திடம் "அத்தை, துணி எல்லாம் எடுத்து மடிச்சு வச்சுட்டேன். நேத்து நீங்க மடிச்சு வச்சதையெல்லாம் பீரோவுல அடுக்கிட்டேன். வேற ஏதாவது செய்யணுமா அத்தை?"

"இனி என்னம்மா... சமையல் வேலை மட்டும்தான். நீயும், சுபிட்சாவும் கூட மாட செஞ்சு குடுத்தா வெஜிட்டேபிள் பிரியாணி  போட்டு தயிர் பச்சடி பண்ணிடலாம். வேற எந்த வேலையும் இல்லை."

"சரி அத்தை. நான் போய் பட்டாணியை உரிச்சுட்டு, தேங்காய் துறுவி வைக்கறேன். சுபி வந்து காய்கறி நறுக்கட்டும்?" மேகலா சமையலறைக்குச் சென்றாள்.

ஆட்டோவிலிருந்து 'க்ரிம்ஸன் சக்ரா' ரெஸ்ட்டாரண்ட் அருகே இறங்கிய மேகலா, உள்ளே சென்றாள். ஒரு பெரிய பங்களாவின் கீழ்ப்பகுதி உணவகமாக மாற்றப்பட்டிருந்தது.  உள்ளே போகும் வழியில் பச்சை பசேல் என்ற செடிகள், கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தன. மழை பொழிவது போன்ற செயற்கைத் தண்ணீர் வழியும்  ஒலி, மனதிற்கு ரம்யமாக இருந்தது. கேரளப் பகுதியை நினைவூட்டும் உள் அலங்காரங்கள்! தேக்கு மர நாற்காலிகள்!


மிகவும் பிரயத்தனப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய கண்ணாடிக் கிண்ணங்களும், மெழுகுவர்த்தி வைக்கும் கலைநயம் மிக்க பொருட்களும் இதயத்திற்கு ஒரு இதமான உணர்வை ஏற்படுத்தின.

செயற்கை மழைச்சாரலின் ஒலியின் நடுவே அங்கே இருப்பதே சுகமாக இருந்தது. மேகலா வரும் முன்பே... சௌம்யா உதயகுமார், அங்கே வந்து காத்திருந்தாள்.

"ஹாய் மேகி... வா.. வந்து உட்கார். ரெஸ்ட்டாரண்ட்டோட இன்ட்டீரியர் சூப்பரா இருக்குல்ல? எவ்ரிதிங் இஸ் டேஸ்ட் ஃபுல்லி டன்... கலா ரசனையான அலங்காரங்கள்! ஷுட்டிங் நடத்தறதுக்கு குடுத்தா சூப்பரா இருக்கும்..."

"உடனே உன்னோட ஐடியா ஷுட்டிங் பக்கம் போயிடுச்சா?" இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆர்டர் எடுப்பவர் வந்து பவ்யமாய் 'மெனு கார்டை' கொடுத்தார்.

"வாவ்..." மெனு கூட வித்தியாசமா ஸ்பெஷ்லா  இருக்கு மேகி... ஆப்பம், கடலைக்கறி, அசைவ பிரியர்களுக்கு மட்டன், சிக்கன், நண்டு இப்படி ஏகப்பட்ட ஐட்டம்ஸ். அசைவம் சாப்பிடாதவர்களுக்கு எக்கசக்கமான ஐட்டம்ஸ்... மெனுவைப் பார்த்தாலே வாய் ஊறுதே..." குழந்தை போல மகிழ்ச்சி அடைந்த சௌம்யா உதயகுமாரைப் பார்த்து... அந்த மகிழ்ச்சி, மேகலாவையும் பற்றிக் கொண்டது.

சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ப்ளேட், கருப்பும் வெள்ளையும் கலந்த வண்ணங்களில் இருந்தது. மேகலா தனக்கு சைவம்தான் வேண்டும் என்று ஆர்டர் எடுப்பவரிடம் கூறினாள். உடனே அவர், சைவம் சாப்பிடுகிறவர்களுக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை நிற ப்ளேட்டை கொண்டு வந்து வைத்து விட்டு ஏற்கெனவே இருந்த ப்ளேட்டை எடுத்துச் சென்றார். இவ்விதம் நிற வேறுபாடு செய்தால், பரிமாறுபவர், சிரமம் இல்லாமல் சைவ உணவு வகைகளைப் பரிமாறுவாராம். இதுதான் அவர்களது ஐடியா.

"நல்ல, புத்திசாலித்தனமான ஐடியா..." மேகலா புகழ்ந்தாள்.

சௌம்யா உதயகுமாரிடம் மெனு கார்டை வாங்கி மேகலா பார்த்தாள். அசைவ உணவிற்கு ஐநூத்தி ஐம்பது ரூபாய் மற்றும் சைவ உணவிற்கு நானூற்றி ஐம்பது என்றும் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தாள்.

"யம்மாடி... ஐநூத்தி ஐம்பது. நானூத்தி ஐம்பதா... என்ன சௌமி இது..?!"

"ஏ மேகி... அவங்க குடுக்கற ஐட்டங்களைப் பாரு. நிறைய வெரைட்டி குடுக்கறாங்களே..."

"சரி... பார்க்கலாம். அப்படி என்னதான் குடுக்கறாங்கன்னு..."

ஆர்டர் எடுப்பவர், இவர்கள் இருவரும் பேசுவதை புன்சிரிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். 'வெல்கம் ட்ரிங்’க்காக பானகம் வழங்கப்பட்டது.

அதன்பின் அசைவத்திற்கும், சைவத்திற்கும் என்று விதவிதமான ருசியான தென் இந்திய உணவு வகைகளும், கேரள உணவு வகைகளும், சைனீஸ் உணவு வகைகளும், பாயசம், இனிப்பு, இவற்றில் ஏகப்பட்ட வெவ்வேறு வகைகளும் வரிசையாக வந்து கொண்டே இருந்தன.

ஒவ்வொன்றையும் ருசி பார்த்தபடியே இருவரும் பேசினார்கள்.

"உன்னோட வருண் என்ன சொல்றாரு? எப்போ உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்?"

"அவரோட அண்ணன், அமெரிக்காவுல இருந்து இங்கே வந்தப்புறம்தான்னு உறுதியா சொல்லிட்டாரு..."

"அண்ணன், இந்தியாவுக்கு வராதப்ப... காதல் மட்டும் அவரோட அனுமதி இல்லாம வந்துடுமா வருணுக்கு?" கிண்டலாகவும் அதே சமயம் சற்று கோபமாகவும் கேட்டாள் சௌம்யா உதயகுமார்.

"எல்லாம் அண்ணனோட பாசத்துல வந்ததுனால ஒரு ஸாஃப்ட் கார்னர்."

"நீ... விட்டுக்குடுக்க மாட்டியே..."

"சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உண்மையான காரணம் அது தானே?"

“அவங்க அண்ணன் எப்போ வர்றாராம்?"

"நாலு மாசம் ஆகும்ன்னு சொன்னார்..."

ஆப்பத்திற்கு தொட்டுக் கொள்ள கொடுக்கப்பட்டிருந்த காளான் குருமாவை ருசி பார்த்தபடியே கூறினாள் மேகலா.

"ஆப்பத்திற்கு முதல்ல கடலைக்கறி குடுத்தாங்க. அப்புறம் காளான் குருமா, ஸ்டூ.."

"உனக்கு அப்படி... எனக்கு இப்படி... சிக்கன் ஸ்டூ, நண்டு, மட்டன் குருமா. ரைஸ் ஐட்டம் கொண்டு வரச்சொல்லி அதையும் ருசி பார்ப்போம்."

பரிமாறுபவர் 'ஸ்மோக்டு ரைஸ்' என்று சைவத்திலும், அசைவத்திலும் தயிர் பச்சடியுடன் ஒரு உணவு வகையைக் கொண்டு வந்து வைத்தார்.

"அட... இது நம்ம வீட்டு பிரியாணி..." சௌம்யா உதயகுமார் ஒவ்வொரு உணவையும் ரசித்துச் சாப்பிட்டாள்.

அப்போது அங்கே மிக உயரமான மனிதர் ஒருவர் வந்தார். பைஜாமா, குர்த்தா அணிந்திருந்த அவரை அண்ணாந்துதான் பார்க்க முடியும். அத்தனை உயரம்!

"ஹாய் சௌம்யா... ஸாரி... கொஞ்சம் வேலையாயிடுச்சு" அவர் சௌம்யாவிடம் சகஜமாக பேசினார்.

"இவ என்னோட டியர் ஃப்ரெண்ட் மேகலா. ஆபீஸ்ல ரிஸப்ஷனிஸ்ட்டா இருக்கா." மேகலாவை அறிமுகம் செய்து வைத்தாள் சௌம்யா உதயகுமார்.

"இவர்தான் மேகி, மிஸ்டர் சுரேஷ் மேனன்" மேகலா வணக்கம் தெரிவித்தாள்.

"ரெஸ்ட்டாரண்ட்டோட இன்ட்டீரியர் சூப்பர் ஸார்..." சௌம்யா உதயகுமார் பாராட்டியதும், அதன் பிரதிபலிப்பான மகிழ்ச்சியைத் தன் சிரிப்பில் வெளிப்படுத்தினார் சுரேஷ் மேனன்.

"இன்ட்டீரியர் பத்தி பாராட்டினதுக்கு தேங்க்ஸ் ஃபுட் ஐட்டம்ஸ் எப்படி இருக்கு?" சுரேஷ் மேனன் கேட்டார்.

"வொண்டர் ஃபுல். எக்கச்சக்க ஐட்டம்ஸ். ரொம்ப ருசியா இருக்கு."

"தேங்க்ஸ் சௌம்யா... மத்தபடி உங்க வொர்க் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?"

"பிஸியா போயிட்டிருக்கு. எங்க ஆபீஸ் மேனேஜ்மென்ட்ல இருந்து என்னை ட்ரெயினிங்கிற்காக வெளிநாட்டுக்கு அனுப்பறாங்க."

"வெரி குட். கங்கராஜுலேஷன்ஸ். சரி சௌம்யா... நீங்க நிதானமா என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க. எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு..."

"ஓ.கே.ஸார். நீங்க கிளம்புங்க."

சுரேஷ் மேனன், மேகலாவிடமும் விடை பெற்றுக் கிளம்பினார்.

"இவர் எப்படி உனக்குப் பழக்கம்? யம்மாடி... எவ்வளவு... உயரம்?!...."

"ரேவதி மேடத்தை வச்சு ஒரு டி.வி. கமர்சியல் பண்ணினப்ப பழக்கம். மேடம் மாதிரியே இவரும் நல்ல மனிதர். ஹோட்டலுக்கு வர்றதா முன் கூட்டியே போன் பண்ணி சொல்லி இருந்தேன். அந்த மரியாதைக்காக வேலைக்கு நடுவுல வந்துட்டுப் போறாரு."

உணவு ஐட்டங்களுக்குப் பிறகு நிறைய ஸ்வீட் வகைகளும், ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்டன. இருவரும் அவரவர் விருப்பப்பட்டதை சாப்பிட்டனர்.

"உன்னோட காதலைப் பத்தி உங்க வீட்ல யார் யாருக்குத் தெரியும்?"

"என் தங்கச்சி சுபிக்கு மட்டும்தான் தெரியும்."

"சுபி என்ன சொல்றா?"

"உன்னை மாதிரிதான் அவளும். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா..."

"வருண் பக்கம் அப்படி ஒரு ஸ்ட்ராங்கான, நியாயமான காரணம் இருக்கும் போது நீ வெயிட் பண்ணித்தானே ஆகணும்? இதோ நாலு மாசம் கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள ஓடிப்போயிடும். அப்புறம் டும்டும்தானே?"

"நீ அதுக்குள்ள வெளிநாட்டுல இருந்து வந்துடுவியா சௌமி?"

"வந்துடுவேன்னு நினைக்கிறேன். அதுக்கு நடுவுல சீக்கிரமா கல்யாண தேதி வச்சா கூட... என்னோட சொந்தப் பணத்துல உன் கல்யாணத்துக்கு நான் வந்துட்டுப் போறேன்..."

"தேங்க்ஸ் சௌமி."


ஆர்டர் எடுப்பவர் பில் கொண்டு வந்தார். சௌம்யா உதயகுமார், தன் கிரெடிட் கார்டைத் தேய்த்துவிட்டு டிப்ஸ் பணம் தனியாக வைத்துவிட்டு எழுந்தாள். மேகலாவும் எழுந்தாள். இருவரும் ரெஸ்ட்டாரண்ட்டின் அழகை மீண்டும் ரசித்தனர்.

அந்த ரெஸ்ட்டாரண்ட்டின் மேனேஜர் இவர்கள் அருகே வந்தார்.

"சுரேஷ் மேனன் சார் உங்களுக்கு 'கேன்டில் ரூம்' (Candle room) காட்டச் சொன்னார். வாங்க பார்க்கலாம்" என்றபடி அழைத்துச் சென்றார்.

"ஒரு சிறிய அறைக்குள் வாசனை திரவியங்கள் அடங்கிய பல மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் வாசனை மனதை மயக்கியது. இருவர் மட்டுமே உட்காருவதற்குரிய அலங்கார இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

"சூப்பர்" சௌம்யா உதயகுமார் பாராட்ட, அந்த அறையின் நேர்த்தியை, தனி உலகிற்கே அழைத்துச் சென்றது போல மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தாள் மேகலா.

"இங்கே இரண்டு பேருக்கு மட்டும்தான் மேடம் அனுமதி" என்றார் மேனேஜர்.

"முதல்லயே சொல்லியிருந்தா, நாங்க ரெண்டு பேரும் இங்கேயே உட்கார்ந்திருப்போம்..."

"நிறைய புதுமைகள் பண்ணி இருக்கிறார் சுரேஷ் மேனன். நல்ல ரிலாக்ஸேஷன் கிடைச்சது..."

மேனேஜரிடம் விடைபெற்று இருவரும் கிளம்பினார்கள். சௌம்யா உதயகுமார் தன் காரில் மேகலாவை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விடைபெற்றாள்.

9

"என்னக்கா, கனவு உலகத்துக்கு போயிட்டியா?" சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு மேகலாவின் காதில் கிசுகிசுத்தாள் சுபிட்சா.

"சுபி, வருணோட அண்ணா வர இன்னும் நாலு மாசமாகுமாம்."

"அதனால் என்ன? அப்பா நம்ப ரெண்டு பேர் மேலயும் உயிரையே வச்சிருக்கார். நீ, வருணைக் காதலிக்கறதை அப்பாகிட்ட சொல்லு. நிச்சயமா சம்மதிப்பார்."

"அப்பாகிட்ட இப்ப பேச வேண்டாம்னு வருண் சொல்லிட்டார். அவசரப்பட்டு காரியம் கெட்டுடக் கூடாதுன்னு சொல்றார்."

"அதுவும் சரிதான்க்கா. இன்னும் நாலு மாசம்தானே."

"நேத்து சக்திவேல் மச்சானுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்னு அப்பா அத்தைகிட்ட சொல்லிட்டிருந்தார்."

"சக்திவேல் மச்சான் ரொம்ப நல்லவர். ஆனா உன் மனசுதான் வருண்கிட்ட போயிடுச்சே?"

"வருணும் ரொம்ப நல்லவர்தான் சுபி."

"இப்பவே வக்காலத்துக்கு வர்றியா?"

"சீச்சி... அதுக்கு இல்ல...."

"சரி... சரி... ஒரேடியா வருண் புராணம் பாடாதே. நாளைக்கு எனக்குப் பரீட்சை இருக்கு. நான் போய் படிக்கறேன். வாசல்ல மீனா மாமி குரல் கேக்குது."

"அத்தை கூட பேசிக்கிட்டிருக்காங்க."

"காபிப்பொடி, சர்க்கரை வாங்க வந்திருப்பாங்க."

"அந்த மீனா மாமி ரொம்ப வெகுளி. அவங்க வெகுளித்தனமா பேசறதைக் கேட்டா ரொம்ப தமாஷா இருக்கும்."

"அவங்க ஹஸ்பண்ட் முரளி மாமா, மாமிக்கு பயந்து சாவார் மனுஷன். மனசில பட்டதை யாரு இருக்காங்க இல்லைன்னெல்லாம் பார்க்காம பட்பட்னு மாமி பேசிடுவாங்க”

அவர்கள் இருந்த அறைக்கு வந்தான் சக்திவேல்.

அவனுக்கு காபி கொண்டு வருவதற்காக எழுந்து சமையலறைக்குள் போனாள் மேகலா.

"என்ன சக்திவேல் மச்சான்! பேசினா முத்து உதிர்ந்திடுமா? எப்படித்தான் உங்களால இப்படி பேசாம இருக்க முடியுதோ?" மௌனமான புன்னகை ஒன்றையே அவளுக்கு பதிலாக அளித்தான் சக்திவேல்.

"ஆபீஸ்ல கூட யார்கிட்டயும் பேச மாட்டீங்களா?"

ஆவி பறக்கும் காபியுடன் வந்த மேகலா, சக்திவேலை வம்புக்கு இழுக்கும் சுபிட்சாவைப் பார்த்தாள்.

"ஏ சுபி, இதுதான் பரீட்சைக்கு படிக்கற லட்சணமா? அவரை ஏன் தொந்தரவு பண்ணற? இந்தாங்க காபி."

"தேங்க்ஸ்" சக்திவேல், மேகலாவிடம் இருந்து காபியை வாங்கினான்.

"வீட்டில இருக்கற ஆளுங்களுக்கு கூட தினமும் தேங்க்ஸ் சொல்றது இவர் ஒருத்தராத்தான் இருக்கணும்." சுபிட்சா, அவனைப் பற்றிப் பேசியதற்கு மீண்டும் ஒரு சிரிப்பையே வழங்கி விட்டு, கையில் ஒரு புத்தகத்துடன் மொட்டை மாடியை நோக்கிப் போனான் சக்திவேல்.

ஊரைவிட்டு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில், மரத்தடியில் நண்பர்கள் குழுவினருடன் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு இருந்தான் பிரகாஷ். அவரவர் கொண்டு வந்திருந்த 'டூ வீலர்'களின் மீதே உட்கார்ந்தபடி அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்தது.

"டேய், ஒரு சிகரெட் குடுடா ப்ளீஸ்" தன்னிடம் கேட்ட குணாவை முறைத்தான் பிரகாஷ்.

"இப்பதானேடா ஒரு சிகரெட் குடுத்தேன்" வாயில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எடுக்காமலே பேசினான் பிரகாஷ்.

"வஸந்த் வரேன்னு சொன்னானே... ஏன் வரலை?" கேட்டவன் கணேஷ். தொந்தியும், தொப்பையுமாக வயதுக்கு மீறிய முதுமை தென்படும் உருவத்தில் தோற்றம் அளித்தான் கணேஷ்.

"அவன்தான் இப்பல்லாம் நம்ம கூட வராம நழுவிக்கிட்டிருக்கானே. அவன் ரூட் மாறிட்டான்" பாலாஜி சொன்னதும் பிரகாஷ் ஆச்சர்யமானான்.

"என்ன? ரூட் மாறிட்டானா?"

"ஆமா தலைவரே, அவனுக்கு ஒரு சூப்பர் ஃபிகர் மாட்டிருச்சு."

வசந்த்தைப் பற்றி பேச்சு ஆரம்பித்ததும் ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்ததைச் செய்தி வாசிக்க ஆரம்பித்தார்கள் மைக் ஏதும் இல்லாமலே.

"யாருடா, அந்த சூப்பர் ஃபிகர்?"

"பேர் நிம்மி. நிம்மி என்கிற நிர்மலா. தினமும் புடவைதான். புடவையில கூட அசத்துவா. நோ மார்டன் ட்ரெஸ்."

"பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு. ஆனா ரொம்ப சிம்ப்பிள்."

"புன்னகை அரசி நம்பர் டூ.”

"ஓ! அப்படின்னா ஸ்நேகாவா?"

"வசந்த் எப்படிடா அவளைப் பிடிச்சான்? பார்க்கறதுக்கு அங்கிள் மாதிரி இருக்கான்? அவன் ஒரு உம்மணா மூஞ்சி வேற. எப்பப் பார்த்தாலும் விவேகானந்தர் மாதிரி தத்துவம் பேசிட்டிருப்பானே...!"

"அந்த தத்துவப் பேச்சில தான் நிம்மியம்மா சொக்கிட்டாங்களாம்."

"ஜஸ்ட் லைக் தட் டைம் பாஸிங் காதலா?"

"ம்கூம். தீவிரமான தெய்வீகக் காதலாம்."

"கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்."

"வசந்த்தை நம்ம வழிக்குக் கொண்டு வரப் பார்த்தோம். அவன் நம்பளை அவன் வழிக்குக் கொண்டு வரப் பார்த்தான். இப்போ அவன் நிர்மலா தேவியம்மையாரோட வழிக்குப் போயிட்டான்."

"ஒருத்தன் நல்லவனா இருந்துடக் கூடாதுடா உங்களுக்கு."

"அப்போ, நம்ம க்ரூப்ல இருந்து ஒரு ஆள் திருந்திட்டான்றியா? அப்படின்னா நம்பல்லாம் கேடியா, பேடியா, பேமானியா? சொல்லுடா."

அப்பாவியாய் கேள்வி கேட்ட கிட்டுவை முதுகில் அடித்தான் பிரகாஷ்.

சரிவர முளைக்காத மீசையைத் தடவியபடியே கேட்டான் சுந்தர்.

"டேய் பிரகாஷ். உன்னைத்தான் காதல் இளவரசன்ங்கறாங்க. பேர்தான் இளவரசன். இந்த இளவரசன் கிட்ட எந்த நாட்டு இளவரசியும் மாட்டின மாதிரி தெரியலையே?"

"முழுசா மீசை முளைக்காத நீ என்னைக் கேள்வி கேக்கறியா? என்கிட்ட பதுங்க வேண்டிய பட்சிகளின் பட்டியலே போட்டு வச்சிருக்கேன்."

"லிஸ்ட்ல ஏதாவது டிக் பண்ணி இருக்கியா?"

"இது வரைக்கும் நாலு முடிஞ்சிருக்கு. இன்னும் எத்தனையோ இருக்கு. இங்க பாருங்கடா மச்சிகளா, பொண்ணுங்ககிட்ட நாம் பண்ற கேமிங் எல்லாம் வெளியில தெரியாது.


இந்த காதல், கீதல், மண்ணாங்கட்டி எல்லாம் நமக்கு ஒத்து வராது. வலையை வீசணும். பறவைங்க சிக்கினா ஒரே அமுக்கு. ஆசையைத் தீர்த்துட்டு, குட்பை சொல்லிடணும். இல்லைன்னா எதுலயாவது மாட்டிக்குவோம். பழகற வரைக்கும் பழகிட்டு அப்புறம் கழுவுற மீன்ல நழுவற மாதிரி நழுவணும். இதுதான் என்னோட பாலிசி."

"நல்ல பாலிசி. எல்லாருக்கும் இது ஒத்து வராது தலைவரே."

"அதனாலதான் நான் தலைவரா இருக்கேன். நீங்க தோழர்களா இருக்கீங்க. என் வீட்டில நான் சாதுவா இருப்பேன். சாந்தமாதான் பேசுவேன். சுருக்கமா சொல்றதுன்னா நல்லா நடிப்பேன். யாருக்குமே என்னோட இந்த சுயரூபம் தெரியாது. சூப்பரா ஆக்ஷன் போடுவேன்."

"டபுள் ஆக்ஷன்னு சொல்லு தலைவா."

"சரி, சரி, பசி வயித்தைக் கிள்ளுது. சிட்டிக்குள்ளே போய் நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடலாம் வாங்க."

"சாப்பிடறதெல்லாம் சரிதான். ஆனா பொண்ணுங்க பின்னாடியெல்லாம் சுத்தாம ஒழுக்கமா இருக்கணும்டா. ஏதோ கேலி பண்ணலாம்... கிண்டல் பண்ணலாம்... தூர இருந்து பார்த்து ரசிக்கலாம். இதையெல்லாம் தாண்டி தப்பு தண்டா பண்றது நம்ப எதிர்காலத்தை பாதிக்கும்..." பாலாஜி அறிவுரை கூற ஆரம்பித்ததும் அனைவரும் அவன் முதுகில் தமாஷாக அடித்தார்கள்.

"ஆரம்பிச்சுட்டாண்டா 'அறிவுரை அருணாச்சலம்’, 'அட்வைஸ் அம்புஜம்' மாதிரி நமக்கு இவன் ஒரு 'அறிவுரை அருணாச்சலம்' வாங்கடா கிளம்பலாம்” பிரகாஷ் கூறினான்.

அனைவரும் டூ வீலர்கள் மீது ஏறி உட்கார, பழக்கப்பட்ட ரேஸ் குதிரைகளாய் வண்டிகள் புறப்பட்டன.

10

"குட்மார்னிங். ஃபைவ் எஸ் அட்வர்டைஸிங்" குயில் பாடியதோ என்று எண்ணும்படியான இனிமையான குரலில் மேகலா போனில் பேசிக் கொண்டு இருந்தாள். காதோரமும், முன் நெற்றியிலும் வந்து விழும் சுருள் கற்றை முடிகளை, மெல்லிய, அழகிய நீண்ட விரல்களினால் தள்ளி விட்டபடியே அவள் பேசும் அழகை வருவோர், போவோர் அனைவரும் ரசித்தனர்.வரவேற்புப் பெண்மணியாக அந்த விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் மேகலா, வெகு லாவகமாய் அங்கிருந்த டெலிபோன்களை அட்டென்ட் பண்ணி, நேரில் வருபவர்களையும் விசாரித்தபடி சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டு இருந்தாள்.

மற்றவர்களுக்கு வரும் போன் அழைப்புகளை எல்லாம் இனிமையாக, மென்மையாகப் பேசி, மலர்ந்த முகத்துடன் இருக்கும் மேகலா, அவளுக்கு வரப்போகும் அதிர்ச்சியான செய்தி கொண்ட போன்கால் பற்றி ஏதும் அறியாதவளாய் இருந்தாள் அந்த நிமிடம் வரைக்கும்.

அடுத்த நிமிடம்.

"ட்ரிங்... ட்ரிங்..."

"ஃபைவ் எஸ் அட்வர்டைஸிங்...." மேகலா சொல்லி முடிக்கும் முன்பாக மறுமுனையில் இருந்து கிடைத்த செய்தி கேட்டு அதிர்ந்து நின்றாள்.

தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசினாள் மேகலா.

"சுபி... நீ சொல்றது..."

"ஆமாக்கா. உறுதியா எனக்குத் தெரிஞ்சு, நான் நேர்ல பார்த்த தகவல்தான். வருண் பைக்ல போயிட்டிருந்திருக்கார். அவரை ஓவர்டேக் பண்ணின லாரி அவர் மேல மோதிடுச்சாம்."

"அவர் இப்ப எந்த நர்சிங் ஹோம்ல இருக்கார்?"

"ஜி.ஹெச்ல.... ஆனா.... வருண்.... ஸாரிக்கா.... ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துலயே.... வருணோட உயிர் போயிடுச்சாம்...."

"சுபி...." தன்னை அறியாமல் அலறினாள் மேகலா.

ஆபீஸ்.... அதன் சூழ்நிலை அனைத்தும் மறந்து அலறிய மேகலாவை அங்கு பணிபுரியும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

தன்னை சுதாரித்துக் கொண்டு சுபிட்சாவிடம் தன் பேச்சைத் தொடர்ந்தாள் மேகலா.

"சுபி.... நீ சொல்றது...."

மேகலாவின் குரல் நடுங்கியது.

"பேசிக்கிட்டே இருந்தா எப்படிக்கா? போஸ்ட் மார்ட்டம் பண்ணிக்கிட்டிருக்காங்க. நீ உடனே கிளம்பி வா.”

டெலிபோனின் மறுபக்கம் மௌமானதும் வியர்த்துப் போன முகத்தைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் லீவு எழுதிவிட்டு வெளியே வந்தாள் மேகலா. ஆட்டோவில் விரைந்தாள்.

போஸ்ட் மார்ட்டம் முடிந்தபின், வருணின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. துடிக்கும் உள்ளத்துடன், கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து ஓட, வருணின் உடல் அருகே வந்து நின்று கதறி அழுதாள் மேகலா.

"நீங்க இவருக்கு என்ன வேணும்?" நர்ஸ் கேட்டதும் தலை நிமிர்ந்தாள்.

"நா... நா... நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்கறதா...." பேச முடியாத நிலையில் துக்கம் தொண்டையை அடைக்க மேலும் கதறி அழுதாள் மேகலா. இதற்குள் சுபிட்சாவும் வந்து சேர்ந்தாள்.

சோகத்தில் மூழ்கி இருந்த மேகலாவை அணைத்து ஆறுதல் கூறினாள்.

"அக்கா, நடந்தது நடந்துடுச்சி. வருணுக்கு வேண்டியவங்க வேற யாரையாவது தெரியுமா? அட்ரஸ் இருக்கா?"

"இருக்கு. என் ஹாண்ட் பேக்ல ஒரு டைரி இருக்கும். அதில பாரு."

அட்ரஸை எடுத்த சுபிட்சா, அவர்களுக்கு போன் செய்யப் போனாள். தகவல் கூறிய பின் மேகலாவிடம் விரைந்து வந்தாள்.

"அக்கா, வருணோட அண்ணாவுக்கு அவங்களே தகவல் சொல்லிட்டாங்களாம். நாம கிளம்பலாம். உனக்கும், எனக்கும் மட்டுமே தெரிஞ்ச உன் காதல் விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். வா. நாம போகலாம்."

சுபிட்சா, மேகலாவுடன் ஆட்டோவில் ஏறிக் கொள்ள, ஆட்டோ விரைந்தது.

சுபிட்சாவின் கல்லூரி மைதானத்தில், ஒரு மரத்தின் அடியில் இருவரும் உட்கார்ந்தனர். சுபிட்சாவின் மடியில் முகம் புதைத்து மீண்டும் அழ ஆரம்பித்தாள் மேகலா. சிறிது நேரம் அழுது தீர்க்கட்டும் என்ற எண்ணத்தில் அவளை அழ விட்டாள் சுபிட்சா.

"அக்கா, நீயும், வருணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைச்சேன். இப்படி ஆயிடுச்சே. அழாதேக்கா. வழக்கமா ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போற வரைக்கும் இங்கேயே இருந்துட்டுப் போகலாம். வெளியில யாருக்குமே தெரியாத இந்த விஷயம் நமக்குள்ளேயே புதைஞ்சு போகட்டும். வருணை நீ  காதலிச்ச விஷயம், வருண் மறைஞ்சு போன மாதிரி ரகசியமா மறைஞ்சு போகட்டும். நீயும் ஒரு கெட்ட கனவா நினைச்சு வருணை மறந்துடு."

"உனக்கு எப்படி... வருணுக்கு ஆக்ஸிடென்ட் ஆன விஷயம் தெரியும்?" கண்களில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைத்தபடி சுபிட்சாவிடம் சன்னமான குரலில் கேட்டாள் மேகலா.

"காலேஜுல இருந்து நாங்க பத்து பேர் சேர்ந்து மாசத்துக்கு ஒரு தடவை ஹாஸ்பிடல், ஆசிரமம், அனாதை இல்லங்கள்னு ஏழைகளுக்கு எங்களால முடிஞ்ச உதவிகளை செய்யப் போவோம். இந்த தடவை தற்செயலா ஜி.ஹெச்ல உள்ள நோயாளிக் குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அங்கே போனோம். வந்தப்ப,  வருண் ஆக்ஸிடெண்ட்டாகி இறந்து போன தகவல் தெரிஞ்சது. ப்ளீஸ்க்கா... இனிமேல் வருணை மறக்க முயற்சி பண்ணு."

"மறக்கற மாதிரியா பழகினோம்? வருணை என்னால மறக்க முடியாது சுபி." சோகச் சித்திரமாய் காட்சி அளித்தாள் மேகலா.

அவளது விழி நீரைத் துடைத்து விட்டு, தன் தோள்களில் அவளை சாய்த்துக் கொண்டாள் சுபிட்சா. கண்ணீர் அவளது புடவை வரை நனைத்திருந்தது.


"நாளாக ஆக உன் துக்கம் குறையும். வருணை மறந்துட்டு இனி வருங்காலத்துக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கணும்."

"என்னோட வருண் இறந்தபிறகு இனி எனக்கென்ன சுபி வருங்காலம்?"

"நீ இப்ப ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்க. வா, முகத்தைக் கழுவலாம். அழுது அழுது முகம் சிவந்து, வீங்கி இருக்கு. கேன்டீன்ல போய் காபி சாப்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம். எழுந்திரு."

இருவரும் எழுந்து நடந்தார்கள்.

மனிதர்களின் இன்பமோ, துன்பமோ அவற்றை எல்லாம் கவனிக்காமல் காலம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

குளித்து முடித்த ஈரத்தலையைத் துடைத்துக் கொண்டு இருந்தாள் மேகலா. நீண்ட கூந்தல் காய்வதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, தலையை ஆற விட்டுக் கொண்டிருந்தாள்.

முடியை முன்பக்கம் போட்டு, கைகளால் அளைந்து, அளைந்து சிக்கு எடுத்துக் கொண்டிருந்த போது, அவளுக்கு வருணின் நினைவு வந்து, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

"உன்னோட இந்த நீளமான முடியும், முன் நெற்றியில் பிடிவாதமாய் வந்து விழும் சுருட்டை முடியும் தான் என்னை மயக்கிடுச்சு மேகலா."

வருண் கூறிய அந்த வார்த்தைகளையும், தன் நெற்றியில் விழும் முடிச்சுருளை அவனது கைகளால் அவன் நெருடும் அந்த ஸ்பரிசத்தையும் நினைத்து சோகத்தில் மூழ்கினாள்.

துன்பம் தாங்காமல், கட்டிலில் குப்புற விழுந்தாள். அழுதாள்.

திடீரென எழுந்தாள். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். திகைத்தாள். 'லேட்டாயிடுச்சே. சேலையை மாற்றலாம்’ என நினைத்தவள், அலமாரியைத் திறந்து புடவையையும், ஜாக்கெட்டையும் எடுத்தாள். முந்தானையை எடுத்து விட்டு,  ஜாக்கெட்டைக்  கழற்றினாள். ஜாக்கெட்டைப் போடுவதற்காகக் கையை நுழைத்தவள் மனதில் பட்சி பறந்தது. 'யாரோ.... யாரோ தன்னை சாவித்துவாரம் வழியாக பார்க்கிறார்கள்' மூளையில் அபாய மணி அடித்தது.

சேலையை எடுத்துப் போர்த்திக் கொண்டு சாவித்துவாரம் வழியாகப் பார்த்தாள். அதிர்ந்தாள். பிரகாஷ் அவளை அநாகரீகமாக சாவித்துவாரம் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

11

ன் கையில் இருந்த மொபைல் போனில் ஏற்கெனவே அழைத்த எண்களையே திரும்பத் திரும்ப அழுத்தினாள் வினயா.

மறுமுனையிலும் திரும்பத் திரும்ப 'நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டடுள்ளது' என்றே ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தது.

'த்சு... என்னஆச்சு'. இந்த பிரகாஷுக்கு? ரெண்டு நாளா விரல் தேய நம்பரை அழுத்திக்கிட்டிருக்கேன்! லைனே கிடைக்க மாட்டேங்குதே? எதுக்காக இப்படி மொபைலை ஆஃப் பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே? அவன் படிக்கற காலேஜுக்கும் வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கான். அவன் சொன்னதை மீறி அங்கே போனா... பயங்கரமா கோபப்பட்டு கத்துவான்... இப்ப என்ன செய்யறது?' மனதிற்குள் எண்ணங்கள் ஓடினாலும், அவளது விரல்கள் பிரகாஷிற்கு டயல் செய்வதை நிறுத்தவில்லை.

"நோ யூஸ். எத்தனை முறை டயல் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னுதான் வரும். ஏன்னா... என்னோட மொபைல் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு..."

தனக்குப் பின்பக்கம் இருந்து பிரகாஷின் குரல் கேட்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் வினயா.

"என்ன பிரகாஷ் நீ? ரெண்டு நாளா உன்னைப் பார்க்கவும் முடியல. மொபைல்ல பேசவும் முடியல. ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுருக்க?” கடுமையான கோபத்தில் இருந்த வினயா, பிரகாஷைப் பார்த்ததும் செல்லமான கோபத்திற்கு மாறினாள். சிணுங்கினாள்.

"காரணம் இல்லாம எதையும் செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியாதா? மொபைல் இன்ட்ஸ்ட்ருமென்ட்ல ஏதோ ப்ராபளம். சர்வீசுக்கு குடுத்திருக்கேன். அரைமணி நேரத்துல தர்றதா சொன்ன அந்த சர்வீஸ் சென்ட்டர் ஆளுக்கு இன்னும் அரைமணி நேரம் ஆகலை போலிருக்கு... இப்ப புரிஞ்சுதா ஏன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு?”

"ஒரு தெருவுக்கு நாலு போன் பூத் இருக்கு. நீ என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா?”

"கூடாதுன்னு ஒண்ணுமில்லை. மொபைல் போன் இதோ வந்துரும்... அதோ வந்துரும்னு... காத்திருந்தேன்....”

"நானும் உன் போன் கால் வரும் வரும்ன்னு காத்திருந்தேன்....”

"காத்திருக்கிறதும் ஒரு சுகம்தான்னு அடிக்கடி சொல்லுவியே..."

"சொல்லுவேன்தான். அதுக்காக இப்படியா?”

"வேற ஒண்ணுமில்ல வினா. எங்க சக்திவேல் அண்ணனுக்கு நல்ல வேலை கிடைச்சு ஆபீஸ் போயிட்டிருக்காரு. அவர் காலையில போனார்ன்னா நைட்ல லேட்டாதான் வீட்டுக்கு வர்றாரு. அதனால சின்னச் சின்ன வீட்டு வேலைகள் எல்லாம் இப்ப என்னோட தலையில. அம்மா, 'மளிகை சாமான் வாங்கிட்டு வா'ன்னு அனுப்புவாங்க. மாமா, 'கண்ணாடி'யை ரிப்பேர் பண்ணிட்டு வா'ன்னு அனுப்புவாரு. அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரும் ஆளாளுக்கு ஒரு வேலையைக் குடுப்பாங்க. அண்ணன், வேலைக்குப் போறதுக்கு முன்னால இதையெல்லாம் அவர்தான் செஞ்சுக்கிட்டு இருந்தாரு. இப்ப எல்லா வேலைகளும் அடியேன் தலையில.....”

"அத்தை பொண்ணுங்க அழகான பொண்ணுங்களோ?....”

"இதே கேள்வியை நீ நூறு தடவை கேட்டிருப்ப வினா. நானும் அதுக்குரிய ஒரே பதிலை நூறு தடவை சொல்லி இருப்பேன். திரும்பவும் சொல்றதுல என்ன கஷ்டம்? என்னோட அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரும் அழகுதான். ஆனா உன்னோட அழகுக்கு முன்னால அதுங்க கொஞ்சம் கம்மிதான்....”

"துதி பாடறதைக் கொஞ்சம் கம்மி பண்ணிக்கறியா? அது சரி, என்னோட பேர் வினயா. அந்தப் பேரை 'வினா' 'விடை'ன்னு கூப்பிடுறியே? நல்லாவா இருக்கு?....”

"எனக்கு நல்லா இருக்கு. எனக்கு புடிச்சிருக்கு!....”

"பேர் மட்டும்தான் புடிச்சிருக்கா?...." வசீகரமாய் கண்கள் சுழல பிரகாஷிடம் கேட்டாள் வினயா.

"பேருக்குரிய உன்னையும்தான் புடிச்சிருக்கு.... புதுசா என்ன கேள்வி?”

"'உன்னை புடிச்சிருக்கு'ன்னு நீ சொல்றதைக் கேட்க தினம் தினம் எனக்கு ஆசையா இருக்கு...”

"என்னோட ஆசையை மட்டும் புரிஞ்சுக்க மாட்டேங்கறியே?”

"அதென்ன? சொல்லு...”

"தெரியாத மாதிரி கேட்காதே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது வெளியூருக்குப் போயிட்டு வரலாம்னு எவ்வளவு நாளா கேட்டுக்கிட்டிருக்கேன்?”

"அது மட்டும் கேக்காத பிரகாஷ். நான் வீட்டுக்கு பயந்த பொண்ணு. அப்படியெல்லாம் என்னால வர முடியாது...”

"ஏன் முடியாது? காலேஜ் ப்ரோக்ராம்ன்னு பொய் சொல்லிட்டு வர வேண்டியதுதானே?...”

"வர முடிஞ்சா வந்திருக்க மாட்டேனா? எங்க அப்பா கேட்கற கேள்விக்கு பதில் சொல்லி சமாளிக்க என்னால முடியாது. நேரா காலேஜுக்குப் போய் விசாரிச்சுடுவாரு எங்கப்பா. முரட்டுத்தனமான குணம் அவருக்கு. என் மேலயும் முரட்டுத்தனமான பாசம் வச்சிருக்காரு. அவரை ஏமாத்திட்டு என்னால வரவே முடியாது பிரகாஷ்...”


"உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. அதனாலதான் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லி மழுப்புற...”

"நம்பிக்கை வேற.. நடைமுறை வாழ்க்கை வேற பிரகாஷ்... உன்னை நம்பாமலா என் மனசை பறி குடுத்திருக்கேன்? என் எதிர்காலத்தை உன்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்? கண்டிப்பான அப்பாவைக் கூட சமாளிச்சு உங்களை சந்திச்சுகிட்டிருக்கேனே... உன் மேல நம்பிக்கை இல்லைன்னா இப்படியெல்லாம் செய்வேனா?....." உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்த வினயாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பனிக்க ஆரம்பித்தன.

"சரி.. சரி.. அழாதே. நான் பேசினதை இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டியே.....”

"என் மேல கோபம் ஒண்ணும் இல்லையே....”

"கோபமும் இல்லை... ஒண்ணும் இல்லை....”

"இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு. ரெண்டு நாள் உன்னைப் பார்க்காததே எனக்கு கஷ்டமா இருக்கு தெரியுமா?. தினமும் நாம சந்திக்கணும். ஒரு நாள் கூடத் தவறாம நாம மீட் பண்ணனும். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். உன் மனைவியா வாழ்க்கையில செட்டில் ஆகணும்..."

"ஸ்டாப் மேடம். கல்லூரி படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம்.. குடும்பம்ன்னு செட்டில் ஆகறதெல்லாம் பாட்டன், பூட்டன் சொத்தை வச்சுக்கிட்டு, காசு மேல காசு பார்த்துக்கிட்டு இருப்பாங்களே... அவங்களுக்குத்தான் சரி. எங்க குடும்பத்துல செத்துப்போன பாட்டன் சொத்தும் கிடையாது.... உயிரோடு இருக்கிற அம்மா வழி சொத்து பத்து எதுவும் கிடையாது. இத்தனை வருஷமா மாமாவோட சம்பளத்துல குடும்ப வண்டி தடம் புரளாம ஓடறதே பெரிய  விஷயம். இப்பதான் அண்ணா வேலைக்குச் சேர்ந்திருக்கான். அவனோட வருமானத்திலதான் மாமாவோட பாரம் கொஞ்சம் குறையும். என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட பங்குக்கு எங்க குடும்பத்துக்கு நான் கடமை செய்யணும். அந்தக் கடமையை செய்யறதுக்கு நான் நிறைய படிக்கணும். உழைக்கணும். ஓரளவுக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணத்தைப் பத்தி சிந்திக்கவே முடியும். அது வரைக்கும் நீ காத்திருக்கணும்..."

"பிரகாஷ்! உனக்காக நான் எவ்வளவு நாள் வேண்ணாலும் காத்திருப்பேன். உன்னோட குடும்பக் கடமைகள்ல உனக்கு தோள் கொடுத்து துணையா இருப்பேன். உனக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாரா இருக்கேன். நீ என்னோட உயிர். என் உயிரின் உயிர். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது...."

"நினைச்சுப் பார்க்க முடியாத விஷயத்தை பத்தியெல்லாம் பேசி ஏன் கஷ்டப்படறே? உன்னைப் பத்தியும் நீ என் மேல வச்சிருக்கிற காதல்பத்தியும் நீ இந்த அளவுக்கு பேசித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா?”

"தெரிஞ்சுக்கிடணும்னு நான் இதைப்பத்தி எல்லாம் பேசலை. என்னோட உணர்வுகளை உன்கிட்ட பகிர்ந்துக்கிறேன்..."

"பகிர்ந்து உண்டால் பசி ஆறும்பாங்க. அப்படித்தானே?"

"அப்படித்தான். பெரிய கிழவன் மாதிரி பழமொழியெல்லாம் பேசறியே?"

"நான் பேசலைன்னா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்ப. உன் படிப்புல கவனத்தை செலுத்து. எதிர்காலத்துக்கு நாம படிக்கற படிப்புதான் ஆணிவேர். வாழ்க்கையில நாம உறுதியா நிக்கறதுக்கு முயற்சி செய்யலாம். அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கணும். நீ என் பின்னாலயும், நான் உன் பின்னாலயும் சுத்திக்கிட்டிருந்தா நம்பளை சுத்தி பிரச்சனைகள்தான் நிக்கும்" பிரகாஷ் நல்லவன் போல் தன்னைக் காட்டிக் கொள்ள நாடக வசனம் போலப் பேசினான்.

"நிக்காம சுத்தற பூமி மாதிரி நான். அதாவது உன்னை சுத்தற பூமி..." உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள் வினயா.

"அடடா பூமி.. வானம்ன்னு ஆரம்பிச்சுட்ட பார்த்தியா? உன்னை மாதிரி எனக்கு டைலாக் பேச வராது. என் மேல நீ வச்சிருக்கற அன்பைப் பத்தி நான் புரிஞ்சுக்கலையோன்னு சந்தேகப்பட்டு எனக்கு இவ்வளவு விரிவா விளக்கம் குடுத்துக்கிட்டிருக்கிறதெல்லாம் தேவையே இல்லை. நான் சொன்ன மாதிரி நம்ப படிப்பை முடிச்சுட்டு, பிரச்சனைகளை முடிச்சுட்டு நம்ப வாழ்க்கையை ஆரம்பிப்போம். தெளிவான மனசோட படிப்பை கவனி. எதிர்காலத்தைப்பத்தி நல்லா யோசிச்சு சில திட்டங்கள் வச்சிருக்கேன். என்னோட அந்தத் திட்டங்கள் வெற்றிகரமா நடக்கணும்...."

"நடக்கும் பிரகாஷ். இவ்வளவு குடும்பநேயம் இருக்கற உன்னோட நல்ல மனசுக்கேத்தபடி எல்லாமே நல்லபடியா நடக்கும்."

"தேங்க்ஸ் வினா..."

"ஓ.கே.பிரகாஷ். நான் கிளம்பறேன்.”

"ஓ.கே."

பிரகாஷிற்கு கை அசைத்துவிட்டு வினயா கிளம்பினாள்.

12

வினயாவுடன் பேசிவிட்டு நகர்ந்த பிரகாஷின் தோள் மீது கை போட்டான் பாலாஜி.

"டேய் பிரகாஷ்! உனக்கென்னடா மச்சான்... அங்கங்கே மச்சத்தோட பிறந்திருக்க… ஒரு மொபெட் கூட இல்லாத உன்கிட்ட பறவைங்க தானாவே சிறகடிச்சு வர்றாங்க?..."

"மொபெட் எதுக்குடா? மண்டையில கொஞ்சம் மூளை வேணும். சாதுர்யமான புத்திசாலித்தனம் வேணும். சரி.. சரி.. நீ என்ன இந்தப் பக்கம்? என்னை பாலோ பண்ணினியா? வேவு பார்க்க வந்தியா?"

"ரெண்டும் இல்லை. என்னோட ரெண்டு சக்கரவண்டி அதாண்டா என் ஸ்கூட்டர்... அதை ரிப்பேருக்குக் குடுத்திருந்தேன். அந்த மெக்கானிக் ஷெட் இந்த ஏரியாவுலதான் இருக்கு. வண்டி ரெடியாயிடுச்சுன்னு போன் பண்ணினான். வண்டியை எடுக்க இந்தப் பக்கம் வந்தேன். நீ அந்தப் பொண்ணு கூட கடலை போட்டுக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். அவ போனதும் உன்கிட்ட வந்தேன். அவ பேரு என்னடா?”

"அவ பேர் வினயா. நான் 'வினா'ன்னு கூப்பிடுவேன்.”

"ஐய்யய்ய.... வினாவா?"

"ஆமாண்டா. உனக்கு பொறாமையா இருக்கா?"

"லைட்டா........"

"என்னடா? மருதமலை படத்து வடிவேல்ன்னு நினைப்பா?

"எனக்காவது காமெடியன் வடிவேல்னு நினைப்பு! ஆனா... உனக்கு? காதல் இளவரசன் கமலஹாசன்னு ஓவரான நினைப்புடா..."

"இப்ப என்ன சொல்ல வர்ற?"

"அப்படிக் கேளு... பொண்ணுங்க பின்னாடி சுத்தறதை நிறுத்து. குடும்ப நேயம் நிறைஞ்சுருக்கற நீ... இந்த பொண்ணுங்க மேட்டர்ல தலையை விட்டுத் தேவை இல்லாத பிரச்சனைகளை தோள்ல சுமக்கப் போற. வீட்டில சாதுவான சாமியார் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு, காலேஜ்ல காதல் கதாநாயகனாக டபுள் ரோல் போடறியே, அதையும் நிறுத்து. உன்னோட வெல்விஷராத்தான் சொல்றேன்னு புரிஞ்சுக்க. பொறாமை... அப்படி இப்படின்னு தப்பா நினைக்காதே. இயல்பா ரொம்ப நல்லவன் நீ. இந்தப் பெண் சபலத்தினாலதான் தவறான பாதையில போயிக்கிட்டிருக்கே. கல்லூரி வாழ்க்கை, நம்பள மாதிரி மாணவர்களுக்கு கவலை இல்லாத கலகலப்பான வாழ்க்கைதான். ஆனால் கலகத்துல மாட்டிக்கற வாழ்க்கையா ஆகிடக் கூடாது. ஏதோ உன்னோட நல்ல காலம்! இது வரைக்கும் பழகின பொண்ணுங்களால உனக்கு எந்த பிரச்சனையும் வரலை. எல்லா பொண்ணுங்களையும் ஒரே மாதிரி நினைச்சுப் பழகறது சரி இல்லை. ஜாலியா பழகிட்டு டாட்டா சொல்லிட்டு போற பொண்ணுங்க... பிரச்சனை பண்ண மாட்டாங்க. ஆனா... அம்மா.. அப்பான்னு பாசமலரா இருக்கற பொண்ணுங்க, உன்னோட சுயரூபம் தெரிஞ்சா... சும்மா விட மாட்டாங்க. உன்னோட எதிர்காலமே கேள்விக் குறி ஆயிடும்..."


"யப்பா.... கொஞ்சம் மூச்சு விட்டுக்க பாலாஜி. கடுகளவு மேட்டரை மலையளவுக்கு கற்பனை பண்ணி கதை அளக்கற... ஓண்ணுமே இல்லாத ஒரு  சிம்ப்பிளான விஷயம் இந்த பொண்ணுங்க கூட பழகற விஷயம். இதுக்கு ஏகப்பட்ட பில்ட்அப் குடுத்து என்னை ஏண்டா இப்படிக் கொடுமைப்படுத்தற? எனக்கு நானும், என்னோட குடும்பமும்தான் முக்கியம். அதனால எந்தப் பிரச்சனையும் வந்துடாம க்ளியரா இருக்கேன். இருப்பேன். நீ கவலைப்படாதே மச்சான்...”

"விளையாட்டுக்கு ஒரு எல்லை உண்டு பிரகாஷ். நம்பளை மாதிரி இளைஞர்கள், மனக்கட்டுப்பாட்டோட படிச்சு முடிச்சு, பெரிசா சாதிக்க முடியாட்டாலும் ஏதோ நம்பளால முடிஞ்ச வரைக்கும் நல்லதையே செய்யலாம்ங்கற ஆதங்கத்துலதான் சொன்னேன். இதுக்கு மேலயும் நீ வீம்பு பிடிச்சா... அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது..." பாலாஜி பேசி முடிப்பதற்கும் அவர்கள் இருவரும் மெக்கானிக் ஷெட்டை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

பாலாஜியைப் பார்த்ததும் மெக்கானிக் ஷெட் பையன் சீனு ஓடி வந்தான்.

"அண்ணே..... உங்க வண்டி ரெடியாயிடுச்சண்ணே...." என்று கூறியபடி தலையை சொறிந்தான் சீனு.

"ரொம்ப சொறியாதடா. தலையில பள்ளம் விழுந்துடப் போகுது.... காசுதான வேணும் ? இந்தா......" பாலாஜி ஷர்ட் பாக்கெட்டினுள் கையை விட்டான்.

"அண்ணே.... 'தல'யோட படம் நாளைக்கு ரிலீஸ். முதல் நாள் முதல் ஷோவுக்கு போணும்னு ப்ளான் பண்ணி இருக்கேன்... அதுக்கு...."

"அதுக்கு...... நான் போயி உங்க 'தல'க்கு கட்அவுட் வைக்கணுமா?”

"அதெல்லாம் வேண்டாம்ண்ணே. வழக்கமா குடுக்கறதை விட கொஞ்சம் கூடுதலா காசு குடுங்கண்ணே......”

"சரி... சரி... இந்தா" பாலாஜி பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

"டேங்க்ஸ் அண்ணே" சீனு பல்லைக் காட்டினான்.

"டேங்க்ஸ் இல்லடா... தேங்க்ஸ்.”

"சரிண்ணே... ஷெட் முதலாளி வெளியூர் போயிருக்காரு. வண்டி சரி பண்ணின சர்வீஸ் சார்ஜை அவர் வந்தபிறகு அவர் கிட்டயே குடுத்துடுங்கண்ணே........"

"சரி பையா" பாலாஜி, தன் வண்டியை எடுத்தான்.

"பின்னாடி உட்காருடா பிரகாஷ்."

பிரகாஷ் ஏறி உட்கார்ந்தான். பாலாஜியின் ஸ்கூட்டர் கிளம்பியது.

"சூப்பரா ரெடி பண்ணிட்டான்டா. சும்மா குதிரை மாதிரி பறக்குது பாரு.”

"உன் வண்டி குதிரையாயிடுச்சுன்னு நீ பாட்டுக்கு சவாரி பண்ணாதே. என்னை பஸ் ஸ்டேண்ட்ல இறக்கி விட மறந்துடாதே.”

"அதெப்பிடிடா மறப்பேன்?.....”

பஸ் ஸ்டேண்ட் வந்ததும், பிரகாஷ் இறங்கிக் கொண்டான்.

மருந்து வைக்கும் அலமாரியில் இருந்து வலி நிவாரண மாத்திரையை எடுத்தாள் கமலம். சமையலைறைக்குச் சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்தாள். மாத்திரையை வாயில் போட்டு விழுங்கினாள். அப்போது அங்கே வந்த மேகலா, கமலம் மாத்திரையை விழுங்குவதைப் பார்த்தாள்.

"அத்தை... நானும் பார்க்கிறேன்... அடிக்கடி அந்த வலி நிவாரண மாத்திரையை எடுத்து சாப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க. உடம்புக்கு என்ன? சொன்னா டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போக மாட்டேனா? நீங்களாவே மாத்திரை எடுத்துப் போட்டுக்கிறீங்க? என்ன பண்ணுது உங்களுக்கு? ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுது? வந்து உட்காருங்க.....”

கமலத்தை உட்கார வைத்து பேன் ஸ்விட்ச்சைப் போட்டாள் மேகலா.

"எனக்கு ஒண்ணுமில்ல மேகலா. லேசா நெஞ்சு வலி. நெஞ்சு வலி வர்றப்ப வியர்த்துக் கொட்டுது. மாத்திரை சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல சரியாயிடுது.....”

"நெஞ்சு வலி... வியர்த்துக் கொட்றது... இதெல்லாம் லேசான விஷயம்ன்னு ரொம்ப சாதாரணமா சொல்றீங்க. இன்னிக்கு நாம டாக்டர்ட்ட போறோம். எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்.....”

"சரிம்மா.”

'நலமான இதயம்' என்ற போர்டு மாட்டப்பட்டு மிக சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழகிய மருத்துவமனைக் கட்டிடத்திற்குள் சென்றனர் மேகலாவும், கமலமும்.

"பில்டிங்கைப் பார்த்தாலே பில்லும் ரொம்ப ஜாஸ்தியா போடுவாங்க போலத் தெரியுது. இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிக்கா என்னைக் கூட்டிட்டு வருவே? என்னோட நெஞ்சு வலி, சாதாரண வாய்வு வலியாத்தான் இருக்கும். இதுக்குப் போய் பெரிசா கலாட்டா பண்றியேம்மா....”

"நீங்க நினைக்கிற மாதிரி இங்கே நிறைய பணமெல்லாம் வாங்க மாட்டாங்க அத்தை. இந்த ஹாஸ்பிட்டலை நடத்தற டாக்டர், பரம்பரைப் பணக்காரர். டாக்டர் படிப்புல ஆர்வப்பட்டு வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சு, அங்கே வேலை பார்த்து, அங்கே கிடைச்ச அனுபவத்தையும், சம்பாதிச்ச பணத்தையும் இங்கே கொண்டு வந்து இந்த ஹாஸ்பிட்டலை கட்டி இருக்கார்.

“ஏகப்பட்ட பணம் கொட்டிக் கிடக்கிற பணக்காரங்களுக்கு நிறைய பில் போடுவாரு. ஆனா ஏழைங்களுக்கு இலவசமா வைத்தியம் பார்த்து, இலவசமா மருந்து, மாத்திரைகளும் குடுப்பாரு. ஆப்ரேஷனுக்குக் கூட கட்டணம் எதுவும் வாங்க மாட்டார். நம்பள மாதிரி நடுத்தர வர்க்கத்து மக்கள் 'என்னால ரொம்ப செலவு பண்ண முடியாது டாக்டர்'ன்னு சொன்னா, புரிஞ்சுக்குவார். திறமையான டாக்டர் மட்டுமில்ல மனிதநேயம் மிக்கவர். ஒரு சேவையாத்தான் செய்யிறார். எல்லாத்துக்கும் மேல ராசியான டாக்டர்ங்கற புகழும்  இருக்கு.”

"என்னமோம்மா... நீ சொல்ற... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்."

அப்போது, 'கமலம் யாருங்க?’ என்று நர்ஸ் கூப்பிட்டாள்.

"வாங்க அத்தை. உங்களைத்தான் கூப்பிடுறாங்க.”

கமலாவை அழைத்துக் கொண்டு டாக்டரின் கன்சல்ட்டிங் அறைக்குள் சென்றாள் மேகலா.

"வாங்கம்மா" கருணாகரன் என்ற பெயருக்கேற்றபடி கருணை பொங்கும் முகத்துடன் கருணை வழியும் குரலோடு அழைத்தார் டாக்டர்.

"டாக்டர்... இவங்க என்னோட அத்தை. அடிக்கடி நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றாங்க. வியர்த்துக் கொட்டுது. அடிக்கடி வலி நிவாரண மாத்திரையைச் சாப்பிட்டுக்கறாங்க.”

டாக்டர், கமலத்தைப் பார்த்தார்.

"உங்க வயசு என்னம்மா?”

"நாப்பத்தஞ்சு டாக்டர்.”

"எவ்வளவு நாளா நெஞ்சு வலி இருக்குது?”

"கிட்டத்தட்ட ஒரு வருஷமா அப்பப்ப வரும் டாக்டர். கொஞ்ச நேரத்துல சரியாயிடும். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான் வலி ஜாஸ்தியாவும் இருக்கு... ரொம்ப நேரமும் இருக்கு.”

"எவ்வளவு நாளா வியர்த்துக் கொட்டுது?”

"இப்ப ரெண்டு மாசமாத்தான் டாக்டர். நெஞ்சு வலி வந்த உடனேயே ரொம்ப வியர்க்குது. மாத்திரை சாப்பிட்டா கூட வலி அடங்க மாட்டேங்குது டாக்டர்...”

"ஏம்மா.... ஒரு வருஷமா வலிக்குதுன்னு சொல்றீங்க... உடனே டாக்டரைப் பார்க்க வேண்டாமா? சரி... பரவாயில்லை... உங்களுக்கு இப்ப நான் மருந்து, மாத்திரை எதுவும் குடுக்கப் போறதில்லை. நீங்க நல்லா ஓய்வு எடுக்கணும். அதுதான் முக்கியம். சில டெஸ்ட்டுக்கு எழுதித் தரேன். டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட்டோட மறுபடியும்  என்னை வந்து பாருங்க. இங்கேயே எல்லா டெஸ்ட்டும் எடுத்துடலாம்."

"சரி டாக்டர்."

டாக்டர், மேகலாவிடம் திரும்பினார்.


"உங்க அத்தைக்கு நல்ல ஓய்வு தேவை. இவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட் வந்தப்புறம்தான் என்னால எதையும் சொல்ல முடியும்."

"சரி டாக்டர்."

டாக்டர் கருணாகரன் எழுதிக் கொடுத்த பரிசோதனை விபரங்கள் அடங்கிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு கமலத்துடன் வெளியேறினாள் மேகலா.

13

வலை சூழ்ந்த முகத்துடன் சாய்வு நாற்காலியில் காத்திருந்த மூர்த்தி, வாசல் அருகே காலடியோசை கேட்டதும் எழுந்தார். உள்ளே நுழைந்து கொண்டிருந்த கமலத்தையும், மேகலாவையும் பார்த்துப் பரபரப்பானார்.

"என்னம்மா மேகலா..... டாக்டர் என்ன சொன்னார்? பிரச்சனை ஒண்ணுமில்லையே...."

"ஏம்ப்பா இப்படி டென்ஷன் ஆகறீங்க? அத்தை களைப்பா இருக்காங்க. ஹார்லிக்ஸ் கலந்துக் குடுத்துட்டு வரேன்" என்று அவரிடம் கூறிவிட்டுக் கமலத்திடம் திரும்பினாள் மேகலா.

"அத்தை... ஆட்டோல குலுங்கிக் குலுங்கிப் போனதுனால நீங்க களைப்பா இருக்கீங்க. கொஞ்ச நேரம் படுத்திருங்க" என்று சொல்லிட்டு சமையலறைக்குச் சென்று ஹார்லிக்ஸ் கலக்கி எடுத்து வந்தாள். கமலத்திடம் கொடுத்தாள். மூர்த்தியின் எதிரே உட்கார்ந்தாள்.

"அப்பா, டெஸ்ட் எதுவும் எடுத்துப் பார்க்காம எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். எல்லா டெஸ்ட்டுக்கும் எழுதிக் குடுத்திருக்கார். அங்கே ஹாஸ்பிட்டல்லேயே எல்லா டெஸ்ட்டும் பண்ற வசதி இருக்கு. அங்கேயே, அப்பவே எல்லா டெஸ்ட்டும் எடுத்துடலாம்னு அத்தைகிட்ட சொன்னேன். 'இன்னிக்கு அஷ்டமி' இன்னைக்கு வேண்டாம். நல்ல நாள் பார்த்து, வந்து எடுத்துக்கலாம்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. எனக்கு ஒரே கோபம். நல்ல நாள்... நல்ல நேரம் பார்த்தா நமக்கு நோயும் நொடியும் வருது?...... அது நாம எதிர்பார்க்காத நேரத்துல வந்து பயமுறுத்துது. டாக்டரையும் பார்த்துட்டு, அவர் சொல்றதைக் கேக்காம இப்படி பண்றீங்களே அத்தைன்னு கோவிச்சுக்கிட்டேன். வழக்கம் போல 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா மாதிரி சிரிச்சு, பேசி என்னை சமாதானம் பண்ணி ஏகப்பட்ட சமாளிப்பு சமாளிச்சுக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. நீங்க என்னடான்னா... அத்தைக்கு என்னமோ ஏதோன்னு டென்ஷனா உட்கார்ந்திருக்கீங்க. இது மாதிரி நல்ல நாள் பார்க்கற பத்தாம் பசலித்தனத்தை அத்தை விடணும்."

"அது சரிம்மா..... நெஞ்சு வலிக்கு என்ன காரணமாம்?"

"தங்கச்சி மேல உள்ள பாசத்துல மனசு பதறிப்போய் இந்தக் கேள்வியைக் கேக்கறீங்க. அத்தைக்கு நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல ஆகுது. பரிசோதனை பண்ணாம டாக்டரால எதுவும் சொல்ல முடியாது. கவலைப்படாதீங்கப்பா. பெரிய பிரச்னையா எதுவும் இருக்காது. நிம்மதியா இருங்க."

"சரிம்மா."

ஹார்லிக்ஸை குடித்துவிட்டு டம்ளரை எடுத்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடக்க ஆரம்பித்த கமலத்தைப் பார்த்த மேகலா, கமலத்திடமிருந்து டம்ளரை வாங்கினாள்.

"பேசாம படுத்து இருங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். ரெண்டு நாள் ஆபீசுக்கு லீவு போட்டுடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. மூணாவது நாள் ஹாஸ்பிட்டலுக்குப் போறோம். இந்த நாள்....கோள்... ராகு காலம்... எமகண்டம்னு கதையெல்லாம் சொல்லாமக் கிளம்பியாகணும்” செல்லமாகவும், அதே சமயம் கண்டிப்பாகவும் மிரட்டினாள் மேகலா.

"அண்ணனும், தங்கச்சியுமா ஊர்க்கதை, உலகக்கதையெல்லாம் பேசிக்கிட்டிருங்க. நான் போய் ராத்திரி டிபன் வேலையைப் பார்க்கறேன்."

"எங்க உலகமே நம்ம குடும்பம்தான்மா...”

"அத்தை... நோ சென்ட்டிமென்ட்...." குறும்பாகவும், கேலியாகவும் பேசியபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மேகலா.

'இந்த சுபிட்சா காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வர்றதுக்கு ஏன் இவ்வளவு லேட் ஆகுது? எந்தக் கவலையும் இல்லாம ஒரு குழந்தை மாதிரி அவ  இஷ்டத்துக்கு இருக்கா' நினைத்தபடியே பெருமூச்சு விட்டாள் மேகலா. அவளது நினைவலைகள் தொடர்ந்தன.

'அவளாவது சந்தோஷமா... நிம்மதியா... இருக்கட்டும்...' அவளது எண்ணத்தில் தன் தங்கை மீதான பாசம் நிறைந்திருந்தது.

சமையலறை சிறியதுதான் என்றாலும் அங்கே இருந்த அலமாரிகளில் மளிகை பொருட்கள் அடங்கிய அழகிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் வரிசையாகவும், மிக அழகாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேல் தட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய டப்பாக்கள் இருக்க, கீழ்த்தட்டில் 'இதயம் மற்றும் மந்த்ரா' ஊற்றி வைக்கப்பட்ட ஜாடிகள் அழகாகக் காணப்பட்டன. பொன் நிறமான இதயமும், சற்று வெளிறிய பொன் நிறமான மந்த்ராவும் கண்ணாடி ஜாடிகளுக்குள் இருந்து கண்களைப் பறித்தன.

'பட்ஜெட் போடும் போது துண்டு விழுந்தா... எதை வேணாலும் கட் பண்ண விடுவாங்க அத்தை, ஆனா... இந்த இதயம்... மந்த்ரா...வுக்கு மட்டும் 'தடா' போடக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லுவாங்க' என்று நினைத்துக் கொண்டபடியே எண்ணெய் ஜாடிகளை எடுத்து, கீழே வைத்தாள்.

இரவு டிபனுக்கு சப்பாத்தியும், வெஜிடபிள் குருமாவும் தயாரிக்கத் திட்டமிட்டாள் மேகலா. கோதுமை மாவு இருந்த ப்ளாஸ்டிக் டப்பா, மேல் தட்டில் இருந்தது. சுபிட்சாவை விட உயரம் குறைவாக இருந்த மேகலாவால் அதை எளிதாக எடுக்க முடியவில்லை.

கால்களைத் தூக்கி எக்கியபடி டப்பாவை எடுக்க முயன்றாள்.

டப்பாவின் கீழ்ப்புறம் கையை வைக்கும் பொழுது இன்னொரு கை, அவள் கை மீது பட்டது. அவளது முதுகுப்பக்கம் யாரோ லேஸாக உரசுவது போல் உணர்ந்த மேகலா,  'சரேலென' கையை எடுத்தாள். வேகமாகத் திரும்பும் பொழுது சிறிதும் விலகாமல் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து கோபப்பட்டாள். எரிச்சல் பட்டாள்.

"தள்ளு." கோபம் தொனிக்க கத்தினாள்.

"எட்டாத கனியா இருக்கற உனக்கு எட்டாததைக் கட்டிப்பிடித்து... சற்று எட்டிப்பிடித்து எடுத்து உதவலாமேன்னு செஞ்சா... இப்படி கோபப்படறியே?" பொரிக்கித்தனமாக பிரகாஷ் பேசியதை, பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ளப் பெரும்பாடு பட்டாள் மேகலா சிறிய வீடு என்பதால் வெளியே ஹாலில் இருந்த மூர்த்திக்கும், கமலத்திற்கும் அடுப்பங்கரையில் நடக்கும் அவலம் தெரிந்துவிடக் கூடாது என்று தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள்.

"உன்னோட உதவி ஒண்ணும் எனக்குத் தேவை இல்லை. மரியாதையா நடந்துக்க பழகிக்க..."

"பழகறது மாமா பொண்ணு கூடத்தானே? மரியாதை எதுக்கு?"

"எதுக்கு இப்ப இந்த வேண்டாத பேச்சு...? வெளியே போ..."

"வெளியே எங்க அம்மாவும், உங்க அப்பாவும் இருக்காங்க. அவங்ககிட்ட என்ன பேசறது? மொக்கை போடுவாங்க..."

"மொக்கை போடுவாங்களா? பெத்தவங்களையும், தாய் மாமாவையும் மொக்கை போடுவாங்கன்னு சொல்றியே? உனக்கு வெட்கமா இல்ல?"

"வெட்கம் உனக்குத்தான். அதனாலதான் கிட்ட நெருங்கினாலே சுருங்கிப்போற”

"சுருங்கிப் போறேனா?  நெருங்கிப்பாரு... நெருப்பா சுடுவேன்... வீட்ல இருக்கற பெரியவங்க உன் மேல வச்சிருக்கற நம்பிக்கை நாசமாகி,  வருத்தப்படுவாங்களேன்னு பொறுமையா இருக்கேன்."

"பொறுமை காக்கற பூமா தேவியே... வீட்ல உள்ள பெரியவங்க, கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள பொறுமை இல்லாம பாரம் சுமந்துட்டு, ஆஸ்பத்திரிக்குப் போய் வயித்தை வெறுமையாக்கி வந்த பத்தினித் தெய்வமே.. நீங்க... நெருங்கினா நெருப்பா எரிச்சுடுவீங்களா? சுடுவீங்களா...ஹா.. ஹா... ஹா...”


"ஷட் அப்..." அவளை அறியாமல் குரல் ஓங்கக் கத்தினாள் மேகலா.

"என்னம்மா மேகலா... என்ன சத்தம்…?" கமலத்தின் குரல் கேட்டது.

"ஒ...ஒ... ஒண்ணுமில்ல அத்தை...”

வெளியில் இருந்து குரல் கேட்டதும் அங்கிருந்து அகன்றான் பிரகாஷ்.

தற்காலிகமாய் நிம்மதிப் பெருமூச்சு விட்ட மேகலா, ஸ்டூல் எடுத்து வந்து போட்டு, கோதுமை மாவு டப்பாவை எடுத்தாள்.

ஒரு பாத்திரத்தில் மாவைப் போட்டு, அத்துடன் சிறிதளவு இதயத்தை ஊற்றினாள். வெதுவெதுப்பான தண்ணீரையும், உப்புத் தூளையும் போட்டு, மாவை மிருதுவாகப் பிசைந்து மூடி வைத்தாள்.

பட்டாணியையும் அதனுடன் காலிப்பிளவரையும் போட்டு, மணக்க மணக்க குருமாவைத் தயாரித்தாள்.

வியர்த்திருந்த முகத்தை புடவை முந்தானையால் துடைத்தபடியே வெளியே வந்தாள்.

"அத்தை... சுபிட்சா இன்னுமா வரலை?...”

"அவ போன் பண்ணினா போலிருக்கு. உங்கப்பா பேசினார்.”

"ஆமாம்மா. காலேஜ் ப்ரோக்ராம்க்காக ரிகர்ஸல் இருக்காம். சுபிட்சா லேட்டாத்தான் வருவாளாம். உன்கிட்டயும் சொல்லச் சொன்னா" மூர்த்தி கூறினார்.

"சரிப்பா" என்றபடி அறைக்குச் சென்றாள். உள்மனதின் உளைச்சலை தன்னுள் அடக்கியபடி இருந்த மேகலா, அறைக்குள் சென்றதும் தலையணையில் முகம் புதைத்து அழுதாள்.

சில நிமிடங்கள் அழுதபின் எழுந்தாள். அவளது பெட்டியை எடுத்தாள். திறந்தாள். உடைகளின் அடியில் இருந்த வருணின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். மீண்டும் அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"வருண்... என்னை இப்படி இக்கட்டான நிலைமையில விட்டுட்டுப் போயிட்டீங்களே... நம்மளோட புனிதமான காதலைக் கொச்சைப்படுத்திப் பேசறானே அந்தப் பிரகாஷ்... என்னால தாங்க முடியலியே... நான் என்ன செய்வேன் வருண்?!..." வருணின் புகைப்படத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள் மேகலா.

தன் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை யாரோ துடைப்பது அறிந்து, திகைத்துப் போய் திரும்பியவள், சுபிட்சாவைப் பார்த்ததும் மேலும் அழுதாள்.

"என்னக்கா இது? இன்னுமா வருணை நீ மறக்கலை?"

"மறக்க முடியுமா சுபிட்சா?”

"மறந்துதான்க்கா ஆகணும்."

"முடியலியே....”

"முடியும்க்கா...”

"மேகலா....." ஹாலில் இருந்து அத்தை கூப்பிடும் குரல் கேட்டது.

"கண்ணீரைத் துடைச்சுக்கோக்கா... முகம் கழுவிட்டு வா. நான் போய் அத்தையைப் பார்க்கறேன்...”

சுபிட்சா வெளியேறினாள்.

'இந்தப் பிரகாஷ் பொறுக்கித்தனமா என்கிட்ட நடந்துக்கறானே. இதை எப்படித் தடுத்து நிறுத்தப் போறேன்? அரவிந்த் ஹாஸ்பிட்டல்ல என்னைப் பார்த்து, நானும் நர்ஸ் அகிலாவும் பேசினதை ஒட்டுக் கேட்டிருக்கான். அதனாலதான் தலைவலி.. வயித்துவலின்னு பேசி குத்திக் காமிச்சிட்டிருக்கான். நான் என் வயித்தை சுத்தம் பண்ணியதை சொல்லி என்னை மிரட்டிக்கிட்டிருக்கான்... இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போறேன்?.....' திகில் பரப்பும் எண்ணங்களோடு உடை மாற்றிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சமையலறைக்குள் சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தாள் சுபிட்சா. அவளுக்கு உதவி செய்வதற்காக உள்ளே போனாள்.

"நீ போய் பரிமாறுக்கா. நான் சப்பாத்தி போடறேன்..." மாவைப் பலகையில் வைத்து தேய்த்துக் கொண்டே கூறினாள் சுபிட்சா.

"ஒண்ணும் வேணாம். நான் சப்பாத்தி சுடறேன். நீ போய் பரிமாறு....." சாப்பிடுவதற்கு பிரகாஷ் வந்து உட்கார்ந்திருந்தபடியால் எரிச்சலுடன் பேசினாள் மேகலா.

"என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு டென்ஷன் ஆகற?”

"ஒண்ணுமில்லை சுபிட்சா... நீ போய் பரிமாறு..." என்று கூறியபடியே குருமா பாத்திரத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள் மேகலா.

வெளியே பிரகாஷ், குருமாவைப் பாராட்டிக் கொண்டிருந்தான்.

"ஆஹா...குருமா பிரமாதம்! அம்மா... குருமா பண்ணின உங்க கைக்கு நான் நிறைய சம்பாதிச்சு தங்க வளையல் வாங்கிப் போடப் போறேன்மா..." மேகலாதான் குருமா தயாரித்தாள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவ்விதம் கூறினான் பிரகாஷ்.

"டேய்... அது நான் செய்யலடா... மேகலா செஞ்சது...”

"ஓ... அப்படியா…!”

"என்ன அப்படியா? அதான் சொல்றாங்கள்ல?" சுபிட்சா குறும்பாகப் பேசியதும், கமலம் சிரித்தாள்.

"என்னை யாராவது மட்டம் தட்டிப் பேசிட்டா... உனக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துடுமே..." பிரகாஷ் கூறியதும் மேலும் பலமாகச் சிரித்தாள் கமலம். இவர்களது சந்தோஷமான ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மூர்த்தி.

சப்பாத்திகளைப் போட்டு முடித்த மேகலா, வெளியே வந்தாள். பிரகாஷின் முன்பு நிற்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

"அக்கா..... வா..... நாம சாப்பிடலாம்."

"எனக்கு பசி இல்லை....”

"அடிக்கடி இப்படிச் சொல்லி சரியாவே சாப்பிடறதில்லை.... வா... வந்து... உட்கார்..." பெரியமனுஷி போல மேகலாவை மிரட்டினாள் சுபிட்சா.

"வேணாம்னா விட்டுடேன் சுபிட்சா....”

"விட முடியாது... உட்காருக்கா. எனக்கு பசிக்குது. உனக்குத் தெரியும்ல எனக்குப் பசி தாங்காதுன்னு....”

சுபிட்சா அவ்விதம் சொன்னதும் மனம் இளகிய மேகலா, தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். பிரகாஷின் எதிரே உட்கார்ந்து சாப்பிடவே அவளுக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக பேருக்கு ஏதோ சாப்பிட்டோம் என்று சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

14

வருடைய அனுமதியையும் கேட்க வேண்டிய அவசியமின்றி இரவுப் பொழுது வந்தது. லைட்டைப் போட்டுப் படித்துக் கொண்டிருந்தாள் சுபிட்சா. ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு லீவு லெட்டர் எழுத ஆரம்பித்தாள் மேகலா.

"என்னக்கா? என்ன எழுதறே?”

"ரெண்டு நாளைக்கு லீவு கேட்டு லீவு லெட்டர் எழுதுறேன் சுபி. அத்தை ரெஸ்ட் எடுக்கட்டும். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்த விஷயம் அப்பா சொன்னாரா?”

"ஓ..... நான் காலேஜ்ல இருந்து வந்ததுமே சொன்னார். அத்தை ஏதோ நாள் நட்சத்திரம் பார்க்கணும்னு டெஸ்ட் எதுவும் எடுத்துக்காமலே வந்துட்டாங்களாமே?”

"அதை ஏன் கேக்கற? ஒரே பிடிவாதம்.....ஆனா இன்னும் ரெண்டு நாளைக்குள்ள ஹாஸ்பிட்டலுக்குப் போயாகணும்ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கேன்.”

"ஆமாக்கா. எப்படியாவது சீக்கிரமா கூட்டிட்டுப் போயிடு. உடம்புக்கு முடியலன்னா அத்தை நம்பகிட்ட சொல்லக் கூட யோசிப்பாங்க."

"அதனாலதான் டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனேன்....”

"நானும் வேணும்ணா லீவு போடட்டுமாக்கா....?”

"அதெல்லாம் வேண்டாம். ரிகர்ஸல் வேற இருக்குன்னு சொன்னியே... நான் பார்த்துக்கறேன்."

"ரிகர்ஸல்ன்னு நீ சொன்ன உடனே ஞாபகம் வருது. நான் டான்ஸ் ஆடப் போற பாட்டையெல்லாம் ஒரே சி.டி.யில ரெக்கார்ட் பண்ணி குடுத்தாரு பிரகாஷ் மச்சான். கடை கடையா ஏறி இறங்கி சி.டி வாங்கி ஒவ்வொரு பாட்டா ஜாயின் பண்ணி ரெக்கார்ட் பண்றதுக்கு எவ்வளவு அலையணும் தெரியுமா? உதவி செய்யற குணம் நம்ப அத்தையைப் போலவே பிரகாஷ் மச்சானுக்கும் நிறைய இருக்குக்கா....”

"இருக்கும். இருக்கும். ஒரே ரத்தம்தானே...." ஏதோ பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக பதில் கூறியவள், பிரகாஷைப் பற்றி பேசும் பொழுது சுபிட்சாவின் கண்களில் பளிச்சிடும் ஒரு மின்னல் ஒளியைக் கவனித்தாள்.


'இவ..... அந்தப் பிரகாஷை விரும்புகிறாளோ?.... கேட்டுவிடலாமா? நாமளா கேட்டு... எதுக்கு வம்பு?' யோசித்துக் கொண்டிருந்த மேகலாவின் தோளைத் தட்டினாள் சுபிட்சா.

"என்னக்கா... ஏதோ யோசனைக்குப் போயிட்ட? என்ன விஷயம்?”

"அ..... அது ஒண்ணுமில்லை. பிரகாஷ் பத்தி நீ பேசினியே..."

"ஆமா பேசினேன்தான். பிரகாஷ் மச்சான் நல்லவர். ஓடி ஓடி உதவி செய்யற நல்ல பண்பு உள்ளவர். அப்பா கூட சொல்வாங்க. 'இந்தக் காலத்துல பிரகாஷைப் போல அடக்கமான, அன்பான பையனைப் பார்க்கறதே கஷ்டம்ன்னு.”

"ஆமாமா. பிரகாஷ் மாதிரி பையனைப் பார்க்கறது கஷ்டம்தான்." மேகலா நக்கலாக பேசியதைப் புரிந்து கொள்ளாமல், சந்தோஷப்பட்டாள் சுபிட்சா. அவளுடைய சந்தோஷத்தை உணர்ந்த மேகலாவிற்கு பிரகாஷின் தவறான போக்கு பற்றி சுபிட்சாவிடம் சொல்வதற்கு மிகுந்த யோசனையாக இருந்தது. எனவே சுபிட்சாவிடம் எதுவும் சொல்ல முடியாமல் தன் இதயத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

'இத்தனை நாள் வீட்ல ராமனாவும், வெளில கிருஷ்ணனாவும் இருந்த அவன் இப்ப என்னோட அபார்ஷன் விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் வீட்லயும் கிருஷ்ணனா நடந்துக்க ஆரம்பிச்சுட்டான்.... அன்னிக்கு ஒரு பொண்ணு கூட உரசிக்கிட்டு நடந்து போய்க்கிட்டிருந்ததைப் பார்த்த எனக்கே ஒண்ணும் புரியல. அப்பாவியான பிரகாஷா இப்படி ஒரு பொண்ணு கூட சுத்தறான்னு நினைச்சேன். காலேஜ்ல படிக்கற பொண்ணுங்க கூட சேர்ந்து வெளியே போறதும் சகஜம்தான்னாலும் பிரகாஷைப் பொறுத்தவரைக்கும் அவன் அப்படியெல்லாம் பொண்ணுங்க கூட  பழகறவன் கிடையாதேன்னும் நினைச்சேன். சிட்டுக்குருவி போல சிறகடித்துப் பறக்கும் என் செல்லத் தங்கச்சி சுபிட்சா! இந்த இளம் வயசுலேயே அவ மனசுல ஒரு ஏமாற்றத்தை நான் ஏன் தரணும்? அவளாவது நிம்மதியா இருக்கட்டும். ஆனா பிரகாஷை இவ அத்தை மகனா விரும்பட்டும். காதல் கீதல்ன்னு மனசைக் கொடுத்துடக் கூடாது.'

"என்னக்கா... அடிக்கடி... எதாவது  யோசனைக்குப் போயிடற? என்ன ஆச்சு உனக்கு?" படித்து முடித்துவிட்டு லைட்டை அணைப்பதற்காக எழுந்த சுபிட்சா, விட்டத்தைப் பார்த்தபடி யோசனையில் இருந்த மேகலாவிடம் கேட்டாள்.

"ஒண்ணுமில்ல சுபி... லைட்டை ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்துக்க."

"நான் படுக்கறது இருக்கட்டும். வருணைப் பத்தின சிந்தனை தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டிருக்கு. உன் மனசு இப்ப பாலைவனமா இருக்கு. இந்தப் பாலைவனம் ஒரு சோலையா மாறணும்.... வருண் கூட நீ வலம் வந்த அத்தியாயம் முடிஞ்சுப் போச்சு. இனி புது வாழ்க்கைதான் ஆரம்பிக்கணும். விட்டத்தைப் பார்த்து யோசிக்கறதை முதல்ல நிறுத்து. நிம்மதியாத் தூங்கு. கவலைங்கற களையைப் பிடுங்கி எறி...”

"என்னோட கவலையெல்லாம் உன்னைப் பத்திதான்."

"போச்சுடா. எனக்கென்னக்கா... நான் ஒரு கல்லூரிப் பறவை. கலகலன்னு சிரிச்சுக்கிட்டு கலகலப்பா ஃப்ரெண்ட்ஸ் கூட பழகிக்கிட்டிருக்கேன். காலேஜ்ல அப்படி. வீட்டில? அம்மாவைப் போல அன்பு செலுத்தற அத்தை, பொண்ணுங்க மேல பாசமுள்ள அப்பா, என் மேல உயிரையே வச்சிருக்கிற நீ, அத்தை பெத்த ரத்தினங்கள் சக்திவேல் மச்சான், பிரகாஷ் மச்சான். ஆனந்தம் விளையாடும் வீடு. அதில அன்பைக் கொண்டாடும் குடும்பம். இதைவிட வேற எனக்கு என்ன வேணும்?"

"வேணும். உனக்கொரு ஒளிமயமான எதிர்காலம் வேணும். நல்ல பண்பான ஒருத்தன் உனக்கு புருஷனா வரணும். உன்னோட சுதந்திரமான போக்குக்குக் குறுக்கே வராத பெருந்தன்னையானவனா அவன் இருக்கணும். எல்லாத்துக்கும் மேல அவன், உன்னைத் தவிர வேற ஒரு பொண்ணை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத உத்தமனா இருக்கணும்..."

"ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப்... இப்ப கடைசியா சொன்னியே... அது நிஜம்மா... சத்தியமா... அப்படித்தான் இருக்கணும். என்னைப் பார்த்த கண்ணால வேற ஒருத்தியைப் பார்த்தாக் கூட எனக்குப் பிடிக்காது... பொறுக்காது... அது சரி, எப்பவோ நடக்கப் போற அதைப்பத்தியெல்லாம் ஏன் இப்பவே நாம பேசிக்கிட்டிருக்கோம் ? அதுக்கெல்லாம் இன்னும் எத்தனையோ வருஷம் இருக்கு. முதல்ல உன்னோட லைன் க்ளியராகணும்..."

"என்னோட மனசு க்ளியரா இருக்கு... நான், என்னோட இந்த அன்பு மயமான குடும்பம், என்னோட ஆபீஸ், அங்கே நான் ஈடுபாட்டோட செய்யற வேலைகள், என்னோட ஃப்ரெண்ட்ஸ்... இப்படியே என் வாழ்க்கையை ஓட்டிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...."

"ஒரு முடிவுலதான் இன்னொரு விடிவு பிறக்கும். உனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருக்கு. அதாவது, வருண் கூட உயிருக்குயிரா பழகிட்டு வேற ஒருத்தனுக்கு எப்படி வாழ்க்கையில இடம் கொடுக்க முடியும்ன்னு உன் மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருக்கு. அது எனக்குப் புரியுது. உனக்கு அந்தக் குற்ற உணர்வே தேவை இல்லை. வருண், உயிரோட இருந்து, நீ அவரை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அது துரோகம். ஆனா வருண் விபத்துல இறந்து போயிட்டாரு. அவர் இருக்கும் போதே, அவரோட குடும்ப நேயத்துக்காகத்தான் கல்யாணத்துக்காக காத்திருக்கவும் தயாரா இருந்த. எல்லாத்தையும் மறந்துடுக்கா. இனிமேல் உன்னோட வருணை நினைக்காதே. உன்னோட வருங்காலத்தை மட்டுமே நினைக்கணும். நீ சந்தோஷமா இருந்தாத்தான் நான் சந்தோஷமா இருப்பேன். உன்னோட நிம்மதிதான் எனக்கும் நிம்மதி..."

"என்னம்மா மேகலா, சுபிட்சா... மணி பதினொன்னு ஆகுது... இன்னும் என்ன பேச்சு தூங்காம?...."

வெளியிலிருந்து அத்தை கமலத்தின் குரல் கேட்டது.

"சுபி... மணி பதினொண்ணாம். தூங்கலாம். காலையில சீக்கிரமா எழுந்திருச்சு சமையல் சாம்ராஜ்யத்தைப் பிடிச்சுக்கணும். இல்லைன்னா அத்தை வந்து பிடிச்சுக்குவாங்க. அவங்களுக்கு ரெஸ்ட் குடுக்கணும்..."

"என்னையும் எழுப்பி விடுக்கா. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்."

"அதெல்லாம் வேண்டாம். நானே பண்ணிடுவேன். உனக்கு தக்காளி சாதம் பண்ணட்டுமா?"

"சரி."

மறுபடியும் வெளியில் இருந்து கமலத்தின் குரல்.

"தூங்குங்கம்மா."

"சரி அத்தை." உரக்கக் குரல் கொடுத்துவிட்டு, இருவரும் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயற்சித்தனர்.

15

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட மேகலா, அவளுக்கு முன்பே எழுந்து பல் விளக்கிக் கொண்டிருந்த சக்திவேலைப் பார்த்தாள்.

"ஆபீஸ் டூர் முடிச்சு நாளைக்குத்தான் வர்றதா இருந்துச்சே..."

"ஆமா மேகலா. கொஞ்சம் அட்வான்ஸா நேத்து ராத்திரியே வந்துட்டேன்."

"நீங்க பேப்பர் வாங்கிட்டு வர்றதுக்குள்ள உங்களுக்கு காஃபி போட்டு வைக்கறேன்."

"சரி."

சக்திவேல் நகர்ந்ததும் மேகலா, சமையலறைக்குச் சென்றாள்.

காபி கலக்கினாள். காலை டிபன், ஆபீஸ் போவோருக்கு டிபன், லன்ச் என்று அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தாள்.

கண்களைக் கசக்கியபடியே எழுந்து வந்த சுபிட்சா, செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.


"நான்தான் சொன்னேன்ல என்னை எழுப்பி விடுன்னு" சிணுங்கினாள்.

"சரி... சரி... இப்ப என்ன? ஃப்ளாஸ்க்கில காபி போட்டு வச்சிருக்கேன். எல்லோருக்கும் ஊத்தி குடு. போ...."

ஃப்ளாஸ்க்கில் இருந்த காபியை மூர்த்தி, கமலம், பிரகாஷ் ஆகியோருக்கு ஊற்றிக் கொடுத்தாள் சுபிட்சா.

"எனக்காக ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, வீட்ல இருக்கா மேகலா..." கூறியபடியே காபியை வாங்கிக் கொண்டாள் கமலம்.

மூர்த்தி காபியைக் குடித்ததும் 'வாக்கிங்' கிளம்பினார்.

காபியைக் குடிக்காமல் தன்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷைப் பார்த்து எரிச்சலுற்ற மேகலா, அங்கிருந்து நகர்ந்தாள்.

குளித்து முடித்த பிரகாஷ், ஸ்வாமி படங்கள் முன் நின்று மளமளவென்று ஸ்லோகங்களைச் சொல்லி முடித்தான். கிருபானந்தர் வாரியர் போல  நெற்றியில் விபூதியைப் பட்டையாகத் தீற்றிக் கொண்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவன் போல மிக நன்றாக நடிப்பதை உணர்ந்தாள் மேகலா. 

உண்மையாகவே தன் அமைதியான சுபாவத்துடன் அதிகம் பேசாமல், கிளம்பினான் சக்திவேல். அடுத்ததாக பிரகாஷ், வந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்ட போது வேண்டுமென்றே மேகலாவின் விரல்களைத் தீண்டியபடி வாங்கினான். தற்காப்பிற்காக தன் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்ளும் ஆமை போல தன் உள்ளம் சுருங்கிப் போனாள் மேகலா.

மேகலாவிற்கு மட்டுமே புரிய வேண்டும் என்பது போல புருவத்தை நெறித்து அவளை ஒரு முறை பார்த்தபின் பிரகாஷ் கிளம்பினான்.

"அக்கா, என்னோட டிபன் பாக்ஸ் பெரிசு தெரியும்ல? அத்தை எப்பவும் என்னோட பிரெண்ட்சுக்கும் சேர்த்து வச்சு குடுப்பாங்க நீயும் அது மாதிரிதானே பண்ணி இருப்ப?"

"ஆமா. உனக்கு பெரிய டிபன் பாக்ஸ்லதான் எடுத்து வச்சிருக்கேன்."

"சரிக்கா. நான் கிளம்பறேன். சமையலறையில எடுத்த சாமானை எடுத்த இடத்துல வச்சுடு. கலைச்சுப் போடாதே. எவ்வளவு அழகா... கலர்கலரா ப்ளாஸ்டிக் டப்பாவுல மளிகை சாமானைப் போட்டு அடுக்கி வச்சிருக்கேன்?"

"அதெல்லாம் அத்தை நேத்தே சொல்லிட்டாங்க... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? டைம் ஆச்சு. நீ கிளம்பு..."

"ஆமா. காலையில கொஞ்ச நேரம் ரிகர்ஸல் பண்ணணும். நான் வரேன் அத்தை... போயிட்டு வரேன். அப்பா போயிட்டு வரேன்."

மூர்த்தியிடமும், கமலத்திடமும் விடை பெற்று, மேகலாவிடம் டாட்டா காண்பித்துக் கிளம்பிய சுபிட்சாவின் துள்ளலையும், மகிழ்ச்சியையும் பார்த்த மேகலாவிற்கு 'இவள் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும் கடவுளே' என்ற எண்ணம் தோன்றியது.

"என்னம்மா மேகலா... தனியாவே காலை டிபன் வேலையையும் முடிச்சு, மதிய சாப்பாட்டுக்கும் ரெடி பண்ணிக் குடுத்துட்ட. உனக்குத்தான் சிரமம்?"

"எனக்கு எந்தச் சிரமமும் இல்லை அத்தை. நீங்களும், அப்பாவும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க. வாங்க சாப்பிட..."

"இதோ வரேம்மா. சக்திவேல் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டானே... ஏதாச்சும் சாப்பிட்டுட்டுப் போனானா?"

"இல்லை அத்தை. அவர், காபி மட்டும்தான் குடிச்சார். ஆபீஸ் கேன்ட்டீன்ல சாப்பிட்டுக்கிறதா சொல்லிட்டார். மதிய சாப்பாடு கூட இன்னிக்கு ஒருநாள் கேன்ட்டீன்லயே சாப்பிட்டுக்கிறாறாம்."

"அவங்க ஆபீஸ் கேன்ட்டீன் சாப்பாடு நல்ல டேஸ்ட்டாவும் இருக்குமாம். சுத்தமாவும் பண்ணுவாங்களாம்?"

"அது வரைக்கும் நல்லது. வாம்மா நீயும் சாப்பிடு. அப்பாவைக் கூப்பிடு..."

மூர்த்தியை அழைத்து வந்தாள் மேகலா.

அவர்கள் மூவரும் சாப்பிட்டார்கள்.

கல்லூரி வளாகம். ரிகர்சலை முடித்துவிட்டு வியர்த்துப் போன முகத்துடன் சுபிட்சா வகுப்பிற்குச் சென்றாள். கல்பனா, வனிதா, ஷைலா, வர்ஷா ஆகியோர், சுபிட்சா ஆடிய நடனத்தைப் பார்த்த அந்த பிரமிப்பிலிருந்து விடுபடாமல் சுபிட்சாவைத் தொடர்ந்தனர்.

"பிரமாதமா ஆடறே சுபிட்சா. உன்னாலதான் நம்ம க்ரூப்புக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்" கல்பனா கூறியதும் மகிழ்ச்சியில் சிரித்தாள் சுபிட்சா.

"சரிடி. கொஞ்சம் படிப்பையும் கவனிப்போம்."

சுபிட்சா சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.

ப்ரொஃபஸர் திருமதி கீதாவின் வகுப்பு. கீதா மிகவும் இனிமையான இயல்பு உடையவர். மாணவிகளின் மனோபாவம் அறிந்து நடந்து கொள்பவர். அவருடைய வகுப்பு என்றாலே மாணவிகளுக்கு குஷிதான். கீதா, பாடங்களைக் கற்றுக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று எண்ணாமல் மாணவிகளுடன் அரசியல் பேசுவார், சினிமா பற்றி விமர்சிப்பார், சமையல் குறிப்புகள் கொடுப்பார். உடை அலங்காரத்திற்கு உகந்த யோசனைகள் கூறுவார். குடும்ப நேயம் பற்றி விளக்குவார். சிறந்த எழுத்தாளர்களின் நாவல்கள், கட்டுரைகள், கதைகள் பற்றி சொல்லி புத்தகங்கள் படிக்க வேண்டியது மிக முக்கியம் என்று அறிவுறுத்துவார். பாடத்தை நடத்தினோம் போனோம் என்று போர் அடிக்காமல் பல விஷயங்களைப் பேசி மாணவிகள் மனதில் இடம் பெற்றிருந்தார். கீதாவைப் பார்த்ததும், சுபிட்சா விழிகள் மலர, இதழ்கள் விரித்துப் பேசினாள்.

"மேம்... இன்னிக்கு உங்க புடவை காம்பினேஷன் சூப்பர் மேம். பொதுவா வெள்ளைப் புடவைக்கு கறுப்பு அல்லது சிகப்பு பார்டர், பொருத்தமா இருக்கும். ஆனா உங்க புடவையில கடல் நீல கலர்ல நூல் வேலைப்பாடு செஞ்சுருக்கு. ரொம்ப அழகா இருக்கு மேம்."

"தேங்க்யூ."

சுபிட்சாவைத் தொடர்ந்து வனிதா பேச ஆரம்பித்தாள்..

"மேம்... காட்டன் புடவையைத் தவிர வேற எந்தப் புடவையும் கட்டாம, தினமும் வித விதமான காட்டன் புடவையில அசத்தறீங்க மேடம். ஆனா... எந்தக் கடையில எடுக்கறீங்கன்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கறீங்க மேடம்."

"பெரிய ரகசியம் எதுவும் இல்லை. குமரன் சில்க்ஸ்லதான் எடுக்கறேன்."

"தினமும் நீங்க...இன்னிக்கு என்ன டிசைன் புடவையில வர்றீங்கன்னு கவனிக்கறது த்ரில்லிங்கா இருக்கு மேடம்..."

"நீங்க எல்லாரும் நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். அதுதான் எனக்கு வேணும்."

"நிச்சயமா நாங்க நல்லா படிச்சு, உங்க பெயரைக் காப்பத்துவோம் மேம்."

அதன்பின் பாடங்களை சீரியஸ்ஸாக எடுத்து முடித்தார் கீதா.

வகுப்பு முடிந்து, மாணவிகள் கலைந்தனர்.

16

'நலமான இதயம்' மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தனர் கமலமும், மேகலாவும். மேகலாவின் முகம் வாடிக்கிடந்தது.

"என்னம்மா... மேகலா... திடீர்னு ஏன் டல்லாயிருக்கே? என்னை வெளியே அனுப்பிட்டு உன்கிட்ட டாக்டர் என்ன சொன்னார்? டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மல்தானே?"

"பெரிய பிரச்சனை ஒண்ணுமில்லை அத்தை. வீட்டுக்குப் போய் பேசலாம் வாங்க" என்றவள், ஆட்டோவை நிறுத்தினாள். கமலத்தை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டாள். ஆட்டோ கிளம்பியது. வீட்டிற்கு வந்ததும் ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள், மேகலா. அவளைப் பின் தொடர்ந்தாள் கமலம்.

ஆட்டோ சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார் மூர்த்தி. அனைவரும் உள்ளே வந்ததும் மூர்த்தி பரபரப்புடன் கேட்டார்.

"என்னம்மா? எல்லாம் நார்மல்தானே?"


"சொல்றேன்ப்பா. அத்தைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனா... கொலஸ்ட்ரால் லெவல், கூடுதலா இருக்காம். இரத்த அழுத்தம் அதிகமா இருக்காம். இரத்த அழுத்தத்துக்கு தினமும் மாத்திரை சாப்பிடணுமாம். கொலஸ்ட்ரால் லெவலைக் குறைக்கணுமாம். அஞ்சு கிலோ வெயிட் குறைக்கணும்னு டாக்டர் கண்டிப்பா சொல்லி இருக்காரு."

"ஏம்மா மேகலா... நம்ம வீட்டில இதயம், மந்த்ராதானே யூஸ் பண்றோம்? பின்ன எப்படி அத்தைக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துச்சு?"

"சரியான எண்ணெய்களைத்தான் பயன்படுத்தறோம். ஆனா... அத்தை என்ன பண்றாங்க? வாரத்துக்கு ஆறு நாள் உருளைக்கிழங்கு சாப்பிடறாங்க. குருமால தேங்கா. பொரியல்ல ஏகப்பட்ட தேங்கா. சாம்பாருக்கு பதிலா சட்னி சாப்பிடறாங்க. உணவு முறையும் முக்கியம்ப்பா. 'எங்க வீட்ல இதயத்துலதான் சமைக்கிறோம்'ன்னு சொல்லிக்கிட்டு அளவுக்கு அதிகமா சாப்பிடலாமா? ஏற்கெனவே அத்தையோட உடல்வாகு குண்டு. தினமும் உருளைக்கிழங்கு, தேங்காய்னு சமையல்ல சேர்த்துக்கிட்டா பிரச்சனை வரத்தான் செய்யும்..."

"ரேடியோல...டி.வி.லயெல்லாம் ஆயில் புல்லிங்னு காட்றாங்களே... அதைப் பண்ணிப் பார்த்தா...?"

"பண்ணிப் பாருங்க..."

"என்னம்மா....நீயும் டி.வி.யில அந்தப் பொண்ணு சொல்ற மாதிரியே சொல்ற?"

"பின்ன என்னப்பா? நீங்களும் தினமும் டி.வி.யில அந்த விளம்பரம் பார்க்கறீங்க. ஆனா ஒரு நாளாவது ஆயில் புல்லிங் பண்ணிங்களா? இனிமேல தினமும் நம்ப வீட்ல எல்லாரும் காலையில ஆயில் புல்லிங் பண்றோம். இப்ப அதைவிட முக்கியமான விஷயம்...அத்தையோட ஆரோக்கியம். முதல்ல அவங்க வெயிட்டைக் குறைக்கணும். அடுத்தது...சாப்பாட்டு விஷயத்துல அத்தை ரொம்பக் கண்டிப்பா இருக்கணும். ரத்த அழுத்தத்திற்குச் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைத் தவறாம சாப்பிட்டு, ரத்த அழுத்தத்தை நார்மலா வச்சுக்கணும். நல்ல ஓய்வு எடுத்துக்கணும். இதையெல்லாம் அத்தை சரிவர செஞ்சுட்டு வந்தாங்கன்னா ஹார்ட் அட்டாக் வராம தப்பிச்சுரலாமாம். இன்னொரு விஷயம்... நீங்க வாக்கிங் போகும்போது அத்தையையும் கூடவே கூட்டிட்டுப் போங்க. வாக்கிங் போறது ரொம்ப நல்லதாம். அத்தைக்கு நெஞ்சு வலி வர்றதுக்குரிய காரணத்தையெல்லாம் டாக்டர் சொல்லிட்டார். இனிமேல், எல்லாமே அத்தையோட அக்கறையில தான் இருக்கு. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுங்கற மாதிரி பெரிய பிரச்சனை வர்றதுக்குள்ள அத்தையை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் காமிச்சாச்சு."

"இந்தக் குடும்ப வண்டியோட அச்சாணி உங்க அத்தை. அவங்க நல்லா இருந்தாத்தான் நாம எல்லாரும் நல்லா இருக்க முடியும். அது மட்டுமில்லைம்மா... கமலத்தோட உடம்புக்கு ஏதாவது பிரச்சனைன்னா... அதை என்னால தாங்கிக்கவே முடியாது..."

"கவலைப்படாதீங்கப்பா.... அத்தை உங்க உடன்பிறப்புன்னா... அவங்க எங்களுக்கு அம்மா ஸ்தானத்துல இருக்கறவங்க. அவங்களைப் பார்த்துக்க வேண்டியது எங்க கடமைப்பா. வாயை மட்டும் அத்தை கொஞ்சம் கட்டணும். நாக்குக்கு ருசியா சாப்பிட்டுப் பழகினவங்க. கஷ்டமாத்தான் இருக்கும். ருசியா சமைக்கற அவங்களை சாப்பிடாதீங்கன்னு சொல்றது கஷ்டமாத்தான் இருக்கும்..."

"அட நீ வேற மேகலா...வயசு நாப்பத்தஞ்சுக்கு மேல ஆகுது. இது வரைக்கும் ஆசை தீர சாப்பிட்டாச்சுல்ல... இனிமே... உங்களுக்கு சமைச்சுப் போடறதே நான் சாப்பிட்ட மாதிரிதான்..."

"உங்க வாழ்க்கை தியாகத்துலயே போய்க்கிட்டிருக்கு அத்தை...."

"பெரிசா நான் என்ன பண்ணிட்டேன் மேகலா... நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். அதுதான் என்னோட சந்தோஷம். அதிலதான் எனக்கு மனநிறைவு!..."

கமலம் பேசியதைக் கேட்ட மூர்த்தி, உணர்ச்சிவசப்பட்டார்.

"கமலம்...உன் பையன்ங்க நல்ல பையன்ங்க. என் பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க. அவங்க மனசுக்கேத்த மாதிரி.. அவங்க குணத்துக்கேத்த மாதிரி... ஒளி மயமான எதிர்காலம் கிடைச்சு என்னிக்கும் நல்லபடியா வாழ்வாங்க. அதைப் பார்த்து நாம சந்தோஷம் அடையப் போகிறோம்."

"கடவுள் அருளால நீ சொல்றதெல்லாம் பலிக்கணும். மேகலாம்மா... அத்தை சொல்றதைக் கேளு. டாக்டர் சொன்ன மாதிரி மாத்திரைகளை தவறாம சாப்பிட்டுருவேன். சாப்பாட்டு விஷயத்துல கட்டுப்பாடா இருந்துப்பேன். எனக்கு ஓய்வு போதும். நாளையிலயிருந்து ஆபிசுக்குப் போ. உங்களுக்கு என்னோட சேவை நிறைய தேவைன்னு எனக்குப் புரியுது. அதுக்காகவாவது என்னோட ஆரோக்கியத்தை கவனிச்சுக்குவேன்......"

"சரி அத்தை. ஆனா பாத்திரம் கழுவ, வீடு பெருக்கி, துடைக்க இப்படி மேல் வேலைகளுக்கு வேலைக்காரி வைக்கணும். துணிகளை நானே  மிஷின்ல போட்டு எடுத்துடறேன். இனிமேல் நீங்க சமைக்கற வேலை மட்டும்தான் செய்யணும். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகமாக்கப் போறாங்க. அதனால... செலவு ஆகுமேன்னு யோசிக்காதீங்க..."

"அடடா...நீ என்னம்மா...ஆயிரம் ரூபாய்ன்னா சும்மாவா? நீ ஏதாவது ஆசைப்பட்டதை வாங்கிக்க முடியாம அதையும் எனக்காக செலவு பண்ணனுமா?"

"இது உங்களுக்காக பண்ணற செலவு இல்லை அத்தை. இதில எங்க சுயநலம்தான் அடங்கி இருக்கு. நீங்க தெம்பா இருந்தாதத்தான் எங்களைப் பார்த்துக்க முடியும். நீங்க தெம்பா இருக்கணும்ன்னா உங்களோட வேலைகளைக் குறைக்கணும். வேலைகளைக் குறைக்கணும்னா நிச்சயமா ஒரு வேலைக்காரி வச்சு ஆகணும். வேலைக்காரி வைக்கணும்னா குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா சம்பளம் குடுத்துத்தான் ஆகணும். அப்பாடா...உங்களுக்கு விளக்கம் குடுக்கறதுக்குள்ள எனக்கு மூச்சுவாங்குது அத்தை."

"அட நீ என்னம்மா...அத்தையை சமாதானம் பண்றதுக்காக இத்தனை பேசணுமா?" மூர்த்தியும், கமலத்துடன் சேர்ந்து கேலி செய்தார் மேகலாவை.

"அத்தையைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுப்பா. எனக்குத்தான் தெரியும்."

"சரிம்மா. உனக்கு மட்டுமே தெரிஞ்ச அத்தையை நீயே பார்த்துக்கம்மா."

அவர்களின் கேலிப் பேச்சு தொடர்ந்தது. அந்த இல்லத்திலும், அங்கிருந்தவர்களின் உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கி விளையாடியது.

சக்திவேல் வேலை செய்யும் அலுவலகம். மிக நேர்த்தியாக இன்ட்டீரியர் செய்யப்பட்டு அழகாகக் காணப்பட்டது. வீட்டில் மட்டுமல்லாமல் ஆபிஸிலும் தன் வேலையில் மட்டுமே கருத்தாக இருப்பான் சக்திவேல். ஒழுக்கத்தில் உயர்வான சக்திவேல். தன் அலுவலக ரீதியான பணிகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் செய்வான்.

கமலம் அத்தையைப் போல சக்திவேல் நல்ல நிறம் கொண்டவன். அவனது அப்பாவின் மூக்கைப் போல எடுப்பான மூக்கும், சற்று அகன்ற நெற்றியும் கொண்டவன். புசுபுசுவென்ற மீசை அவனுக்கு மேலும் கவர்ச்சியை அளித்திருந்தது. பெண்கள் மயங்கும் வலுவான  உடல்கட்டு உடையவன்.

உடன் பணிபுரியும் பெண்கள் யாரிடமும் அநாவசியமாக எதுவும் பேச மாட்டான். பேரழகியாக இருந்தாலும் வலிந்து சென்று அசடு வழியும் ரகம் இல்லை சக்திவேல். அவனது ஒழுக்கம் அவனுக்கே உரிய கம்பீரத்தை மேலும் கூட்டிக் காட்டியது. அவனது அமைதியான சுபாவமே மற்றவர்கள், அவனை மதிக்க வைத்தது.

அவன் விலகிப் போகப் போக, அவனுடன் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற ஆவலை பெண்களிடம் உருவாக்கியது.


அலுவலக மேனேஜ்மென்ட் அவனுக்கு தனி ஏ.ஸி அறை அளித்திருந்தது என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அவனிடம் பேசுவதற்காக அவனது அறைக்கு பெண்கள் வருவதுண்டு. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்களை மட்டுமே கூறுவானே தவிர வேறு எதுவும் பேச மாட்டான். புன்னகை தவழும் முகத்தில், சாந்தமான உணர்வுடன் பேசி அனுப்புவான்.

அலுவலக ரீதியான விஷயங்களைத் தவிர அநாவசியமான விஷயங்களைப் பேசுபவர்களிடமும் அவர்கள் மனம் நோகும்படிப் பேசாமல், கௌரவமாகப் பேசுவது தான் அவனது வழக்கம்.

பெண்களையும், அவர்களது உணர்வுகளையும் பெருமளவில் மதிப்பான். எந்தப் பெண்ணையும் தவறான கோணத்தில் பார்க்கும் தவறான சுபாவமே அவனுக்குக் கிடையாது. இப்படிப்பட்ட நூறு சதவிதம் நல்லவனான அவனது இதயத்தில் இடம் பெற்றுவிடத் துடித்த இளம் பெண்கள் பலர்.  யாரிடமும் தன் மனதைப் பறி கொடுக்காமல் பாதுகாப்பாய் இருந்தான் சக்திவேல். அழகிய பெண்களின் பழக்கம் தேவைப்படாத கண்ணியமான வாலிபன். பெண்கள் தன்னைச் சுற்றி வருவது தெரிந்தும், தன்னைப் பற்றிய சுயபிரதாப நினைப்பு இல்லாத பண்பாளன். அலுவலகத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தபடியால் வெகு விரைவில் அவனது முன்னேற்றம், மேலும் மேம்படும், அதன் காரணமாய் பொருளாதார ரீதியாகவும் உயர்வான் என்று அவனது மேலதிகாரி  பாராட்டிக் கூறி இருந்தார். உணவு இடைவேளை வந்ததும் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். டிபன் பாக்ஸைத் திறந்தான். தக்காளி சாதத்தின் மணம், மூக்கைத் துளைத்தது. உடன் வைக்கப்பட்டிருந்த தயிர் வெங்காய பச்சடியுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

சக்திவேலின் அலுவலகத்தில், அவனுக்குக் கீழே பணிபுரியும் பெண்கள், மதிய உணவை சேர்ந்து சாப்பிடுவதற்காக ஒன்றாக உட்காருவது வழக்கம். அன்றும் அது போல அவரவர் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஒன்று கூடினர்.

"லதா...இன்னிக்கு லஞ்ச்சுக்கு நீ என்ன கொண்டு வந்திருக்க?" பாமா கேட்டாள்.

"ஆறு பரோட்டாவும், தயிரும்..."

"வெரிகுட்...இங்க ஒண்ணு தள்ளு...ஏ கயல்விழி...நீ என்ன கொண்டு வந்த?"

"த்சு......போடி...சமையல் பண்றது ஒரே போர்... சாதம் பண்ணேன். அதில தயிரைக் கொட்டினேன். ஏலுமிச்சங்காய் ஊறுகாய்ல ஒரு துண்டை எடுத்துப் போட்டு டிபன் பாக்ஸை எடுத்துட்டு வந்துட்டேன்..."

"நீயே வச்சுக்க உன் தயிர் சாதத்தை..." லதா, அடுத்து வனஜாவிடம் திரும்பினாள்.

"வனஜா குடுத்து வச்சவ. அவளோட மாமியார் அவளை சமையலறைக்கே வர விடாம... வித விதமா சமைச்சுக் குடுத்தனுப்பறாங்க. இன்னிக்கு உன்னோட மாமியார் ஸ்பெஷல் என்ன...?"

"சோயா புலவும், உருளைக்கிழங்குக் கார வறுவலும் பண்ணிக் குடுத்திருக்காங்க. அவங்க, உருளைக்கிழங்கு கார வறுவல் ஸ்பெஷலிஸ்ட்."

"தெரியுமே... எத்தனை தடவை டேஸ்ட் பண்ணி இருக்கேன்! சரி, புவனா...நீ என்ன கொண்டு வந்த...?"

"இன்னிக்கு எங்க அம்மா வெங்காய ஊத்தப்பமும், புதினா சட்னியும் பண்ணி குடுத்திருக்காங்க."

"ஓ.கே. மெனு தெரிஞ்சுடுச்சு. இனி எல்லாரும், எல்லாரோட லன்ஞ்ச்சையும் ஷேர் பண்ணிக்குவோம்..."

"அது சரி பாமா...நீ என்ன கொண்டு வந்திருக்கன்னு சொல்லவே இல்லையே...?"

"நான் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கொண்டு வந்திருக்கேன். சில்லி இட்லி. ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்து நானே செஞ்சேன்."

அனைவரும் உணவு வகைகளைப் பகிர்ந்து கொண்டு, சாப்பிட்டுக் கொண்டே அரட்டை அடித்தனர்.

"சக்திவேல் சாரைப் போல ஒரு கட்டுப்பாடான மனுஷனை இந்தக் காலத்துல பார்க்கறதே ரொம்ப அபூர்வம். நாமளும் எத்தனையோ நாள் நம்மளோட லன்ஞ்ச்சை அவருக்குக் கொண்டு போய் குடுத்திருக்கோம்... ஒரு நாளாவது வாங்கிச் சாப்பிட்டிருக்காரா? எங்கம்மா... எனக்காகக் கஷ்டப்பட்டு செஞ்சதை நான்தான் சாப்பிடணும்னு நாசூக்கா மறுத்துடுவாரு. அநாவசியமா நம்ம கூட ஒரு வார்த்தை கூட பேசறதில்லை. ஜென்ட்டில்மேன். ஹும்... இப்படிப்பட்ட நல்ல மனுஷன் கணவனா கிடைக்க யாருக்குக் குடுத்து வச்சிருக்கோ..." பாமா பேசிக் கொண்டே சாப்பிட்டாள்.

அதன் பின் சினிமா, நியூஸ், டி.வி.சேனல் இவற்றைப் பற்றி அலசி ஆராய்ந்தபடி அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

17

ழுது கொண்டே வசனம் பேசிக் கொண்டிருந்த கதாநாயகியின் தாயும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் தொலைக்காட்சியில்.

"ஆறு மணிக்கு விளக்கு வைக்கற நேரம் இப்படி அழுகையும், புலம்பலுமா டி.வி. கத்திக்கிட்டிருக்கு.. அண்ணா மத்யானம் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தார். அப்படியே ஆஃப் பண்ணாம விட்டுட்டார் போலிருக்கு..." தனக்குள் பேசியபடியே தொலைக்காட்சியின் வாயை மூடினாள் கமலம்.

ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். மாலை நேர செய்தித்தாள் வாங்கப் போயிருந்த மூர்த்தி, திரும்பி வந்தார்.

"கமலம்...நீ...அசந்து தூங்கிக்கிட்டிருந்தே. அதனால கதவை சும்மா சாத்தி வச்சிட்டு பேப்பர் வாங்கப் போயிட்டேன். வழியில் நம்ம தண்டபாணி பிடிச்சுக்கிட்டான்..."

"தண்டபாணியா? யாரது?"

"அதான் கமலம்...நம்ப அம்மாவோட சித்தப்பா பேரன். அந்தக் காலத்திலேயே துபாய்க்கு போய் நிறைய சம்பாதிச்சுக் கொண்டு வந்தானே...அவன்தான்..."

"ஓ..இப்ப ஞாபகம் வருது. அவன் கல்யாணம் கூட பண்ணிக்கலியே..."

"ஆமா...பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கலை. பொண்ணு அமையல. அதுக்குள்ள வயசு கடந்துருச்சுன்னு கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டான். ரொம்ப காலமாச்சே பார்த்துன்னு பேச ஆரம்பிச்சோம். டைம் போனதே தெரியல. இன்னொரு நாளைக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கறதா சொன்னான்."

"பாவம்...கல்யாணம் பண்ணிக்காமலே வாழ்க்கையைக் கடத்திட்டான். நல்லவன்."

"அது சரி கமலம். மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சப்புறம் உனக்கு உடம்பு நல்லா இருக்கா?"

"ஓ. இப்ப நான் நல்லா இருக்கேன். டாக்டர் சொன்னபடி மத்யானம் சாப்பிட்டப்புறம் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுக்கறேன். நாள் தவறாம மாத்திரைகளை சாப்பிடறேன். மேகலா சொன்னது போல உருளைக்கிழங்கு, தேங்காயை சுத்தமா நிறுத்திட்டேன். உடல் எடை குறைஞ்சிருக்கு. உடம்பு லேஸா இருக்கு. நெஞ்சு வலி கூட வர்றதில்லை."

"நல்ல வேளை. உன்னோட ஆரோக்கியம் தேறினதுல எனக்கு சந்தோஷமா இருக்கு..."

"பிள்ளைங்க எல்லார்க்குமே சந்தோஷம்தான். அது சரி, தண்டபாணி கூட வெளியில காபி...டீ..எதாவது குடிச்சியா?"

"இல்லை கமலம். காபி போட்டுக்குடேன்."

"இதோ ஒரு நிமிஷம். பிள்ளைங்களும் வர்ற டைம் ஆச்சு. எல்லாருக்கும் காபி கலந்து வைக்கணும். ராத்திரிக்கு இட்லியும், சாம்பாரும் பண்ணி வச்சுடறேன்."

"சரி கமலம். நிறைய வேலையை இழுத்துப் போட்டு செய்யாதே."

"வேலையெல்லாம் குறைச்சுட்டேன். மேல் வேலைக்கு ஆள் போட்டுக்குடுத்திருக்கா மேகலா. அவ வச்சுக்குடுத்திருக்கற வேலைக்காரப் பொண்ணு நல்ல பொண்ணு. காய்கறி நறுக்கிக் கூடமாட ஒத்தாசையா இருக்கா. கடனேன்னு மேல்வேலை மட்டுமே செஞ்சுட்டுப் போகாம எனக்கு உதவியா இருக்கா. அதனால நீ கவலைப்படாதே."


பேசிக் கொண்டே மூர்த்திக்கு காபி கலக்கிக் கொடுத்தாள் கமலம். காபி டம்ளரை கையில் வாங்கிக் கொண்டு ஈஸி சேருக்குப் போனார் மூர்த்தி. கமலம், இட்லி தயாரிக்கும் வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

18

யற்கையன்னை, தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்தபடியால் இரவும், பகலும் மாறி மாறி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

கல்லூரி விழாவில் 'ஸோலோ'வாக மிக அற்புதமாக நடனமாடி பரிசையும், பாராட்டுகளையும் பெற்ற சுபிட்சா, கல்லூரியில் மிகப் பிரபலமானாள்.

அந்தக் கல்லூரியின் உரிமையாளர் சொக்கலிங்கம் அவர்களும், அவர்களது மகன் கிரிதரனும் விழாவிற்கு வருகை தந்து விழா, நிறைவு பெறும் வரை உடனிருந்து கண்டு களித்தனர். சுபிட்சாவின் நடனத்தை ரசித்த கிரியும், பிரமிப்பிற்கு ஆளானான்.

நளினம், நவீன ஸ்டைல், நேர்த்தியான முகபாவம், சுறுசுறுப்பான நடன அசைவுடன், தாளம் தப்பாத லயம் என்று, தன் நடனத்தினால், அரங்கத்தில் கூடியிருந்தோரை அசத்திக் கொண்டிருந்த சுபிட்சாவை வைத்த கண்ணை எடுக்காமல் ரசித்தான் கிரி.

கிரி, பெரும் செல்வந்தர் சொக்கலிங்கத்தின் மகன் என்றபோதும், அவன் பிறந்து, வளர்ந்த பணக்கார சூழ்நிலை அவனை சிதைப்பதற்கு பதில் செதுக்கியே இருந்தது. அதிக கண்டிப்பும் இன்றி, செல்லமும் இன்றி கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவன். பணத்தின் அருமையையும் அறிந்திருந்தான், அதன் வலிமையையும் புரிந்திருந்தான்.

கல்வியில் முதன்மையாக விளங்காவிட்டாலும், நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான். பெற்றோரைப் பெரிதாக மதிக்கும் பண்புள்ளவனாய் இருந்தான். நல்ல நண்பர்களின் நட்பு உள்ளவன். கார், பங்களா, கைநிறைய பணம், வாலிப வயசு அத்தனையும் நிரம்பப் பெற்றிருந்தாலும் முறை கேடான பழக்கங்களுக்கு ஆளாகாதவன். கண்ணியமானவன். அழகை ரசிப்பவன். அழகான பெண்களை ரசிப்பவன். அதிலும் அந்த வயதுக்குரிய அத்து மீறல் இன்றி அளவுடன் இருந்து கொள்பவன்.

வசதியான வாழ்க்கையும், அதன் சௌகர்யங்களும், சூழ்நிலையும் இருந்தும்கூட கண்ணியமான இளைஞனாய், மரியாதைக்குரிய வாலிபனாய் திகழ்ந்தான்.

அவனது அப்பா சொக்கலிங்கம் 'லிங்கம் கல்வி நிறுவன'ங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைப்பதற்காகக் காத்திருந்தார். மேலே... இன்னும்... மேலே படிக்க வேண்டும் என்ற அவனது நியாயமான ஆசைக்குத் தடையேதும் போடாமல் தட்டிக் கொடுத்து ஊக்கமூட்டினார்.

இன்னும் இரண்டு மாதங்களில் முதுகலை பட்டத்தை அடைந்து விடுவான். அதன்பின் தந்தை நிறுவிய கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை நிர்வாகிப்பது தன் தலையாய கடமை என்று கருதி கிரியும் தயாராக இருந்தான்.

இந்நிலையில் தான் அவர்களது கல்லூரிகளுள் ஒன்றான லிங்கம் கலைக் கல்லூரியின் விழாவில் சுபிட்சாவின் நடனத்தைப் பார்த்து மகிழ்ந்திருந்தான் கிரி. விழா நிறைவுற்ற நாளில் இருந்து அவனது விழிகளுக்குள் நுழைந்து இதயத்தில் வீற்றிருந்து, அவதிப்படுத்தினாள் சுபிட்சா. அவனது மனதிற்குள் சென்று அவனது தூக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தாள் சுபிட்சா. கிரியின் உயிர் நண்பன் வேணு. வேணுவிடம் எதையும் மறைப்பதில்லை கிரி. கல்லூரி விழாவில் சுபிட்சாவைப் பார்த்ததில் இருந்து தன் மனம் நிலை கொள்ளாமல் அலைபாய்வதை அவனிடம் சொல்லத் துடித்தான் கிரி.

வேணு, அவனது அப்பா வழித் தாத்தா மரணப்படுக்கையில் இருப்பதாகவும், சொந்த கிராமத்திற்கு சென்று அவரைப் பார்த்து வரப் போவதாகவும் கூறிவிட்டுப் போய் இருந்தான். வேணுவின் கிராமத்திற்குள் செல்போன் கலாச்சாரம் ஏற்படாதபடியால் அவனைத் தொடர்பு கொள்ளும் வழியின்றித் தவித்தான்.

மறுநாள் காலை. கடற்கரையில் ஜாகிங் பண்ணிக் கொண்டிருந்த கிரியின் ஷர்ட் பாக்கெட்டினுள்ளிருந்து லேசாக அதிர்வு கொடுத்தது 'சைலன்ட் மோடி'ல் போடப்பட்டிருந்த அவனது செல்ஃபோன். ஓடுவதை நிறுத்திவிட்டு செல்ஃபோனை எடுத்தான். ஏதோ முன்பின் அறியாத நம்பர்களாக இருந்தன. மனதிற்குள் கேள்விக்குறி தோன்ற, குரல் கொடுத்தான்.

"ஹலோ..."

"கிரி...நான் வேணு பேசறேண்டா..."

"வேணு...எங்கே இருந்து பேசறே...நீ இன்னும் சென்னைக்கு வரலியா?"

"இல்லைடா. தாத்தா மண்டையப் போட்டுட்டார். காரியம் பண்றதுக்கு வேண்டிய சாமான் வாங்கறதுக்காக பக்கத்து டவுனுக்கு வந்தேன். அதனாலதான் உன்கூட போன் பேச முடியுது. ஒரு பூத்ல இருந்து பேசறேன். எப்பிடி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன்டா. தாத்தாவுக்கு என்ன ஆச்சு?"

"தாத்தாவுக்கு வயசு ஆச்சு..."

"என்னடா கிண்டலா...?"

"பின்ன என்னடா... அவருக்கு தொண்ணூறு வயசுக்கு மேல ஆச்சு. டிக்கெட் வாங்கிட்டாரு. இதுக்குப் போய் என்னை ஒப்பாரி வைக்கச் சொல்றியா? தாத்தாவோட சாவு.. கல்யாண சாவுடா..."

"ஓ... தொண்ணூறு வயசுக்கு மேல ஆச்சா? சரிடா... அதைவிடு. நீ எப்ப வர்ற? அதைச் சொல்லுடா..."

"இன்னிக்குக் காரியம் முடிஞ்சதும் ராத்திரியே கிளம்பி வந்துடுவேன். காலையில 'பீச்'ல ஜாகிங் டைம்ல உன் முன்னாடி நிப்பேன்."

"சரிடா. தேங்க்ஸ்டா..."

"எதுக்குடா தேங்க்ஸ்?"

"அ...அ...அது வந்து...உன்னைப் பார்த்து ரெண்டு நாளாச்சுல்ல? அதான்..."

"என்னமோ சொல்ற... ஏதோ விஷயம் இருக்குன்னு மட்டும் புரியுது. என்னடா விஷயம்?"

"நேர்ல பேசலாம், சீக்கிரமா கிளம்பி வா."

டெலிபோன் லைனைத் துண்டித்து விட்டு, தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான். அவன் மட்டுமா ஓடினான்? அவனுடைய இதய ஓட்டமும் சேர்ந்து வேகமாக ஓடியது. அரங்கத்தில் ஆடிய சுபிட்சா, அவனது இதய அரங்கத்திலும் ஆட ஆரம்பித்திருப்பதை வேணுவிடம் 'எப்போது சொல்வோம்' என்ற துடிப்பில் அவனது மனம் துள்ளியது.

மறுநாள், சென்னை வந்து சேர்ந்ததும் கிரியை சந்தித்தான் வேணு.

"என்னடா கிரி... என்ன பேசணும்? ஓவர் எக்சைட்டடா இருந்தியே... சொல்லுடா..."

மௌனமாய் சிரித்தான் கிரி. அவனது சிரிப்பில் வெட்கம் வெளிப்பட்டது. ஆண்மகன் என்ற போதும் அவனுடைய சுபாவம் அவ்விதம் அவனை வெட்கப்பட வைத்தது.

"அட... இதென்ன புதுசா இருக்கு? புதுப் பொண்ணுங்க வெட்கப்படற மாதிரி முகம் சிவக்குது? பேச்சையே காணோம்?"

அதற்கும் மௌனமாகவே இருந்தான் கிரி.

"டேய் கிரி... 'என்னமோ சொல்லணும்' 'என்னமோ சொல்லணும்'ன்னு நேத்து போன்ல படபடத்துப் போய் பேசின? இப்ப ஏன்டா எதுவும் சொல்ல மாட்டேங்கற?"

"அது...ஒண்ணுமில்லைடா...வேணு..."

"ஒண்ணுமில்லையா... அப்படின்னா நான் போறேன்..." கேலியாகப் பேசினான் வேணு.

"சொல்றேண்டா. காலேஜ் பங்ஷன்ல... ஒரு பொண்ணு சோலோவா டான்ஸ் ஆடினா..."

"ஓ...உங்க லிங்கம் ஆர்ட்ஸ் காலேஜ்லயா...? அன்னிக்கு என்னால வர முடியாம போச்சு. சொல்லு சொல்லு... பொண்ணுங்கற... சோலோங்கற..."

"இருடா...சொல்றதுக்குள்ள ஏண்டா அவசரப்படறே? காலேஜ் ப்ரோக்ராம்ல டான்ஸ் ஆடின பொண்ணு... ரொம்ப அழகா இருந்தா... அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு...சின்னப் பொண்ணு..."

"அந்தப் பொண்ணு உன் கண்ணுக்குள்ள புகுந்து அடுத்து உன் நெஞ்சுக்குள்ள புகுந்துட்டாளாக்கும்..."

"ஆமாண்டா வேணு. அவதான் இனி எனக்கு எல்லாம்ன்னு என்னோட மனசு சொல்லிடுச்சு."

"ஓ..அந்த அளவுக்குப் போயாச்சா? அது சரி... உன் மனசு சொல்லிடுச்சு. அந்தப்பக்கம் அவளோட மனசும் அதையே சொல்லணுமே?"

"அதுதாண்டா எனக்கு 'திக்' 'திக்'ன்னு இருக்கு..."

"அவ யாரு? எந்தக் க்ளாஸ்? என்ன க்ரூப்? எந்த ஏரியா?"

"டேய் டேய் நிறுத்துடா... அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கத்தானே உன்கிட்ட சொல்றேன்? இந்த விஷயத்தை அப்பாகிட்ட நீதான் சொல்லணும்..."

"அப்பாகிட்ட அனுமதி கேட்டுட்டு காதலிக்கற ஒரே மகன் நீயாத்தான்டா இருக்கணும்..."

"அம்மா இல்லாம ஒரு அம்மா மாதிரி என்னை வளர்த்தார் அப்பா. அவர்கிட்ட நான் எதையும் மறைச்சதில்லை. மறைக்கவும் மாட்டேன். முதல்ல உன்கிட்ட சொன்னதுக்குக் காரணம், இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்றதுக்கு எனக்கு கூச்சமா இருக்கு. அதனாலதான் உன்கிட்ட சொன்னேன்."

"உங்க அப்பாகிட்ட நான் சொல்றதா? அதுவும் காதல் விஷயத்தை?"

"ப்ளீஸ்டா...நீதாண்டா சொல்லணும்..."

"அது சரி... அவ உன்னைக் காதலிக்கிறாளான்னு தெரியாம எப்படிடா சொல்ல முடியும்?"

"நான் அந்தப் பொண்ணை விரும்பறேன்ங்கற விஷயம்தான் இப்ப ஆரம்பிச்சிருக்கு. ஆரம்பிச்சதை அப்பாகிட்ட சொல்லியே ஆகணும். இதை நான் சொல்ல முடியாது. நீதான் சொல்லணும். ப்ளீஸ்டா...ஹெல்ப் பண்ணுடா..."

"சரி. உங்க அப்பாவை நான் எங்கே....எப்போ.... சந்திக்கணும்னு நீ சொல்லு."

"அப்பா... தினமும் சாயங்காலம் வாக்கிங் போயிட்டு டின்னர் சாப்பிட சப்-வே ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போவார். நீ தற்செயலா அங்கே போறமாதிரி போ. தற்செயலா அவரைப் பார்க்கற மாதிரி பாரு. தற்செயலா அவர்கூட பேசுறமாதிரி பேசு..."

"தற்செயலா நீ இப்பக் கொஞ்சம் வாயை மூடறியா? என்னோட நிலைமைக்கு சப்-வே ரெஸ்ட்டாரண்ட்டுக்கெல்லாம் போய் சாப்பிட முடியாதுன்னு உங்க அப்பாவுக்குத் தெரியாதா? அதுவும் நீ இல்லாம நான் மட்டும் அந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போனா.... என்னைச் செலவாளின்னு நினைச்சுக்க மாட்டார்? அந்த அமெரிக்கன் ரெஸ்ட்டாரண்ட் சப்-வேயெல்லாம் மேல்தட்டு மக்கள் போற ஹோட்டல்டா..."

"அப்பிடின்னு உனக்கு யார் சொன்னா? நீ நினைக்கிறது தப்பு. சப்-வே ல தொண்ணூறு ரூபாய்க்கு வயிறு முட்ட சாப்பிடற ஐட்டம் இருக்கு. அப்பா ஏன் அங்கே தினமும் போறார்ன்னா... அவர் காலையில ரொட்டி, இட்லின்னு எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவா சாப்பிடுவாரு. லஞ்ச் பண்ணும் போது சமையல்காரங்க எண்ணெய்யை தாராளமா விட்டு சமைச்சுடறாங்க. அதனால ராத்திரி சாப்பாடை சப்-வேயில லைட்டா, அதிக கலோரி இல்லாததா வாங்கி அப்பா சாப்பிட்டுக்கறார். மத்தபடி நீ நினைக்கற மாதிரி மேல்தட்டு மக்கள் மட்டும்தான் அங்கே சாப்பிட முடியும்னு கிடையாது. நெய், மட்டன், அதிகப்படியான எண்ணெய், மசாலான்னு சமைக்கற பிரியாணி வாங்கி சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துக்காம சப்-வே யில ஒரு 'வெஜிடபிள் ஸப்' வாங்கி சாப்பிட்டா போதும். ஷர்ட் பாக்கெட்டுக்கு ஏத்த உணவு, உடல் நலத்துக்கும் ஏத்த உணவு! அதனால... நீ தனியா சப்-வே க்கு போனாலும் அப்பா எதுவும் நினைக்க மாட்டாரு..."

"சரி கிரி. உனக்காக இது கூட செய்யமாட்டேனா? உங்கப்பாவை நான் என்னிக்கு எத்தனை மணிக்கு பார்க்கணும்? அதை மட்டும் சொல்லு."

"நாளைக்கே பார்த்துடு. நைட் எட்டு மணிக்கு ஸ்பென்ஸர்ஸ் சப்-வே யில அப்பா இருப்பார். இது அவரோட தவறாத அட்டவணை."

"ஓ.கே. முக்கியமான விஷயம் கேட்க மறந்துட்டேன். அந்தப் பொண்ணோட பேராவது தெரியுமா?"

"ஓ... ப்ரோக்ராம் பண்றதுக்கு முன்னால அவளோட பேரை மைக்ல அறிவிச்சாங்களே? அவ பேர் சுபிட்சா....."

"ஓ... உங்க காதலும் சுபிட்சமா ஆரம்பிச்சு, சுபிட்சமா கல்யாணத்துல முடியணும்..."

"தேங்க்ஸ்டா."

"சரி, கிளம்பலாமா?"

"ஓ போலாமே..." கூறியபடியே தன் 'ஸொனோட்டா' காரில் ஏறி அமர்ந்தான் கிரி.

"வாடா... உன்னை உங்க வீட்ல விட்டுடறேன்."

"சரிடா." என்ற வேணு, கிரியின் அருகே முன் இருக்கையில் உட்கார்ந்தான். கிரி, வண்டியைக் கிளப்பினான். மிக லாவகமாக அலுங்காமல் குலுங்காமல் கிரி, கார் ஓட்டுவதை ரசித்தான் வேணு. வாய்க்குள் பால்கோவா வழுக்கிக் கொண்டு போவது போல தரையில் வழுக்கிக் கொண்டு போனது 'ஸொனோட்டா' கார்.


19

க்திவேல் அன்று அதிசயமாக சீக்கிரமே வீடு வந்து சேர்ந்திருந்தான்.

கல்லூரி விழா முடிந்து விட்டபடியால் ரிகர்ஸல் பண்ண வேண்டிய வேலையும் இன்றி, சுபிட்சாவும் கல்லூரியில் இருந்து விரைந்து வந்திருந்தாள். பிரகாஷ், வழக்கம் போல கல்லூரியில் இருந்து கோவிலுக்குப் போய்விட்டு நெற்றியில் விபூதியைப் பட்டையாகப் பூசிக் கொண்டு பூனை போல வந்து சேர்ந்தான்.

தினமும் குறித்த நேரத்திற்கு வந்துவிடும் மேகலா, கமலத்திற்கு மாத்திரை வாங்கிவிட்டு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாள்.

"என்னப்பா சக்திவேல்? இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்ட?" மூர்த்தி கேட்டார்.

"இன்னொருத்தரை புதுசா அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க மாமா. இந்தப் போஸ்ட்டுக்கு ஆள் கிடைக்காததுனாலதான் எனக்கு அதிக வேலை இருந்துச்சு. இனிமேல் புதுசா வந்திருக்கறவர் பார்த்துப்பார்..."

"வேலை இல்லாம வேலையைத் தேடிக்கிட்டிருக்கறவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கறதும் கஷ்டம். வேலைக்கு ஆள் தேடிட்டிருக்கறவங்களுக்கு தகுதியான ஆள் கிடைக்கறதும் கஷ்டம்தான் இந்தக் காலத்துல......"

"ஆமா மாமா. எங்க எம்.டி. நல்ல திறமையானவங்களாத்தான் தேர்ந்தெடுத்து வேலை குடுப்பார்..."

"அதனாலதானே, சக்திவேல் மச்சானை எம்.டிக்கு அடுத்த பதவியில அவங்க எம்.டி. உட்கார வச்சிருக்கார்!...." வழக்கம் போல துடுக்குத்தனமாக சுபிட்சா கேட்டதற்கு எதுவும் பதில் கூறாமல் புன்னகை ஒன்றை உதிர்த்தான் சக்திவேல்.

"காலேஜ் ப்ரோக்ராம்ல சூப்பரா டான்ஸ் ஆடினியாமே? எங்க காலேஜ் முழுக்க அதே பேச்சுத்தான்." பிரகாஷ் சொன்னதும் சுபிட்சா மகிழ்ச்சியில் சிரித்தாள்.

"உங்க காலேஜ்ல படிக்கறவங்களுக்கு அடுத்த காலேஜ் பத்தி பேசறதுதான் வேலையோ?"

"அப்படி ஒண்ணுமில்ல... என் ஃப்ரெண்ட்ஸோட தங்கச்சிங்க உங்க காலேஜ்ல படிக்கறாங்க. அவங்க சொல்லி, என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க." அடக்கமாக பதில் கூறினான் பிரகாஷ்.

"உங்களை ப்ரோக்ராமுக்கு வரச் சொல்லி இருந்தேனே... ஏன் வரலை? அத்தை முதற்கொண்டு எல்லாரும் வந்திருந்தாங்கள்ல?... சக்திவேல் மச்சான் கூட வந்திருந்தார். உங்களால வர முடியலையாக்கும்?"

சுபிட்சா கேட்டதும் உடனே பதில் சொல்ல முடியாமல் தவித்தான் பிரகாஷ். தன் தவிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்தான்.

"அன்னிக்கு எங்க ப்ரொஃபஸர், முக்கியமான வேலை குடுத்துட்டார்" அதனாலதான் வர முடியலை..." அப்பாவி போல பதில் கூறிய அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டாள் சுபிட்சா.

'சுபிட்சாவின் கலை நிகழ்ச்சிக்குப் போனால் தன் நண்பர்களும் வருவார்கள். சுபிட்சாவை ரசிப்பார்கள்' என்ற எண்ணத்தினால்தான் பிரகாஷ், கலைவிழாவிற்கு போகவில்லை. அதை வெளியிட முடியுமா?’ எனவே தன் அப்பாவி வேஷத்தைத் திறம்பட நடித்தான்.

"இன்னிக்கு எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்." சுபிட்சா எழுந்து, சமையலறைக்கு சென்று அனைவருக்கும் தட்டுக்களை எடுத்து வந்தாள்.

"அத்தை...இன்னிக்கு என்ன டிபன்?" சுபிட்சா கேட்டாள்.

"இட்லி..." கமலம் பதில் கூறினாள்.

"இட்லிக்கு?" அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

"இட்லிக்கு சாம்பார், உனக்கு கேரட்டும், முருங்கைக்காயும் பிடிக்குமேன்னு நிறைய காய் போட்டு பண்ணி இருக்கேன்..."

"இதெல்லாம் ஓகே. சட்னி பண்ணலைதானே? சட்னி பண்ணினா உங்க கையும் நீளும். நாக்கும் நீளுமே..."

"இல்லைடியம்மா. இப்போவெல்லாம் சமையலுக்கு தேங்காய் உபயோகிக்கிறதே ஆபூர்வம்."

"சாம்பருக்கு தேங்காய் அரைச்சு, கரைச்சு ஊத்தினீங்களா?"

"இல்லவே இல்லைம்மா சுபி..."

சாம்பார் பாத்திரத்தை எடுத்து வந்த மேகலா, பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு சுபிட்சாவின் தலையில் செல்லமாய் குட்டினாள்.

"அத்தையை ஏன் இப்படி மிரட்டறே? பெரியவங்களை இப்படிப் பேசலாமா?..."

"உரிமையோட பேசறா... கேக்கறா. ஏம்மா அவளை கோவிச்சுக்கறே?" கமலம், மேகலாவைக் கேட்டதும் கமலம் மீது சாய்ந்து கொண்டாள் சுபிட்சா.

"அத்தைதான் எனக்கு நல்ல சப்போர்ட்..."

"யாருக்கு யார் சப்போர்ட்?" கேட்டபடியே கையில் கிண்ணத்துடன் வீட்டிற்குள் வந்தாள் மீனா மாமி.

"ஓ... இன்னிக்கு என்ன சீக்கிரமாவே டின்னருக்கு உட்கார்ந்துடீங்க? சும்மாதான் வந்தேன்..."

"சும்மா வந்த மாதிரி தெரியலியே மீனா மாமி... கையில கிண்ணம் கொண்டு வந்திருக்கீங்களே..." சுபிட்சா கேட்டதும் அதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு சிரித்தபடியே அவளது கன்னத்தைக் கிள்ளினாள் மீனா மாமி.

"சுபிட்சாவுக்கு குறும்பு ஜாஸ்தியாயிடுச்சு" மேகலா கூறியதும் மீண்டும் சிரித்தாள் மீனா மாமி.

"அவ சின்னப் பொண்ணுதானே..." மீனா மாமி சுபிட்சாவிற்காகப் பரிந்து பேசினாள்.

"மீனா மாமி எனக்கு ஃப்ரெண்ட் மாதிரி. அதனால அவங்களை நான் ஜாலியா கலாய்ப்பேன்..."

"தேங்க்ஸ்டி சுபிட்சா. சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க எல்லாருமே எனக்கு ஃப்ரெண்ட்ஸ்தான். நான் இங்கே குடித்தனம் வந்ததில இருந்து உங்க குடும்பத்துல ஒருத்தி மாதிரிதானே என்கூடப் பழகறீங்க..."

"ஏ...மீனா... பேசிட்டே  இருந்தா  எப்படி?  உட்கார்ந்து ரெண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போயேன்" கமலம் உபசரித்தாள்.

"வேணாம் மாமி. எங்க ஆத்துக்காரர் காபிக்காக காத்துக்கிட்டிருக்கார். காபிப்பொடி வாங்கிண்டு போகலாம்னுதான் வந்தேன்."

"அதுக்கென்ன, குடு கிண்ணத்தை, நான் எடுத்துட்டு வரேன்." கமலம் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு சமையலறைக்கு சென்று காபிப்பொடி எடுத்துக் கொண்டு வந்தாள். மீனா மாமியிடம் கொடுத்தாள்.

"மாமி, எனக்கு உங்களோட காபின்னா ரொம்ப பிடிக்கும். ஒரு டம்ளர்ல காபி எடுத்துட்டு வந்து குடுங்க. முதல்ல மாமாவுக்கு குடுத்துடுங்க..."

"அதுக்கென்னடி சுபிட்சா... உனக்கில்லாத காபியா?..."

"மீனா... அவ சும்மா விளையாட்டுக்கு கேக்கறா. நீ என்னடான்னா நிஜமாவே காபி கொண்டு வரேன்னு சொல்றியே..."

"அதனால என்ன கமலம் மாமி ? என்னிக்கோ ஒரு நாள் அபூர்வமா என்கிட்ட காபி கேக்கறா... இதோ அஞ்சு நிமிஷத்துல காபி போட்டு எடுத்துண்டு வரேன்டி சுபிட்சா... சரி கமலம் மாமி...நான் கிளம்பறேன்."

மீனா மாமி கிளம்பினாள்.

அவள் போனதும் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

"அத்தையோட சாம்பார்ன்னா சாம்பார். இந்த வாசனை, ருசி, பக்குவம் எல்லாம் வேற யாருக்கும் வராது..." சுபிட்சா, சாம்பார் சாப்பிட்டிருந்த விரல்களை சப்பியபடியே கூறினாள்.

"நானாவது அத்தைகிட்ட சமையல் கத்துக்கிட்டேன். நீ... சாப்பிட மட்டும்தான் கத்துக்கிட்டிருக்க..." மேகலா, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபிட்சாவை கேலி செய்தாள்.

"உனக்கு அவசியமா சமையல் கத்துக்கணும். அதனால நீ கத்துக்கிட்ட. நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போகப் போறவ..."

"கொஞ்சம் வாயை மூடறியா?" மேகலாவுக்கு கோபம் தலை தூக்கியது.

"ஏம்மா கோபப்படறே... அவ சொல்றது சரிதான். உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணணும்."

"வேணாம் அத்தை. எனக்குக் கல்யாணம் வேண்டாம்."

"எல்லா பொண்ணுங்களும் சொல்றதுதான் இது..." கமலம் பேசும் பொழுது சுபிட்சா குறுக்கிட்டாள்.

"நீங்க கூட அப்படிச் சொன்னீங்களா அத்தை?"

"ஏ...வாலு... உனக்கு எப்பவும் கிண்டலும் கேலியும்தான்... நிஜம்மா, நான் கூட அப்படித்தான் சொன்னேன். ஆனா...மனசுக்குள்ள கல்யாண ஆசை இருந்ததும் நிஜம்..." இந்த வயதிலும் கமலம் வெட்கப்பட்டாள்.


"அட...அத்தைக்கு வெட்கத்தைப் பாரேன்..." சுபிட்சா, கமலத்தின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினாள்.

"விளையாட்டு இருக்கட்டும். நிஜமாவே ஒண்ணு சொல்றேன்" என்ற கமலம், மூர்த்தியிடம் திரும்பினாள்.

"நம்ப சக்திவேலுக்கு மேகலாவை கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு நான் நினைக்கறேன். நீ என்ன சொல்றண்ணா?...."

"நான் என்ன கமலம் சொல்றது? உனக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான். சக்திவேல் மாதிரி ஒரு தங்கமான பையன் கிடைக்கறதுன்னா சும்மாவா? எனக்குப் பரிபூரண சம்மதம்."

"அப்பா...ப்ளீஸ்... இப்ப எதுக்கு இந்த கல்யாணப் பேச்சு? வேண்டாம்ப்பா...ப்ளீஸ்..." மூர்த்தியிடம் கெஞ்சினாள் மேகலா.

"இப்ப பேசாம சாப்பிட்டுட்டு நிதானமா பேசலாங்கிறியாக்கா?" சுபிட்சா, மேகலாவைப் பார்த்து கண் அடித்தாள்.

அவளைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள் மேகலா.

"சரிம்மா. உன் மனசுல என்ன இருக்குன்னு வெளிப்படையா சொல்லு..." மகளின் மனநிலை அறிந்து பேசினார் மூர்த்தி.

"மூர்த்தி... எல்லாரும் சாப்பாட்டை முடிங்க. சாவகாசமா இதைப்பத்தி பேசிக்கலாம்" கமலம் சொன்னதும் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

பிரகாஷ் அவனது மொபைல் மூலம் வினயாவை தொடர்பு கொண்டான்.

"ரெண்டு தடவை கூப்பிட்டிருக்க... மிஸ்டு கால் பார்த்தேன். என்ன விஷயம் வினயா?"

"விஷயம் இருந்தாத்தான் கூப்பிடணுமா ?"

"சேச்சே...அப்பிடியெல்லாம் இல்லை வினா. இன்னிக்கு நாம சந்திக்கலாம். வள்ளுவர் கோட்டம்கிட்ட இருக்கற சுதந்திரதின பார்க்குக்கு வந்துடு. நான் அங்கே உன்னை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பேன்..."

"தேங்க்யூ பிரகாஷ். எத்தனை மணிக்கு நான் அங்கே வரணும்?"

"ஆறுமணிக்கு வந்துடு."

"ஓ.கே. பிரகாஷ்." விடை பெற்று, தன் மொபைலை அமைதிப்படுத்தினாள் வினயா.

20

சுதந்திரதின பூங்கா. சுதந்திரமாக காதலர்கள் சந்திக்கும் இடம். படித்தவர்கள், படிக்காதவர்கள், மேல்மட்டத்தினர், கீழ் மட்டத்தினர் என்று இனபேதம், அந்தஸ்து பேதம் எதுவும் பார்க்காமல் ரகவாரியாக காதலர்கள் கூடி இருந்தனர். பெண்களை, அதாவது காதலியை தங்கள் வசம் வீழ்த்தி இருந்த காதலர்கள் ஒரு புறம். காதலனை தன் காலடியில் தவமிருக்கச் செய்யும் காதலிகள் மறுபுறம். டைம் பாஸ்ஸிங் காதலர்கள் கவலையே இன்றி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த ஒரு பெஞ்சில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்க, புல்வெளியில் கால்களை மண்டி போட்டபடி, புறங்கைகளை அவனுடைய மடியில் ஊன்றியபடி அவனைக் கெஞ்சி, கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். இருவரது கழுத்திலும் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் அவர்கள் வேலை பார்ப்பதற்குரிய அடையாள அட்டை கோர்க்கப்பட்ட பட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்க, அந்த வாலிபன் முறுக்கிக் கொண்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி தன் கோபத்தை உணர்த்திக் கொண்டிருந்தான்.

கண்ணியமான கம்பெனியில் கண்ணியமான உத்யோகம் பார்க்கும் இந்த இளைஞனும், பெண்ணும் பலரும் பார்க்கும் வண்ணம் காட்சிப் பொருட்களாய் இருந்தனர். சுற்றுப்புறம், சூழ்நிலையை மறந்து அவர்கள் நடந்து கொள்ளும் அக்காட்சி போல அனுதினமும் சுதந்திரதினப் பூங்காவில் அரங்கேறும் அவலமான காட்சிகள்!

இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ், தூரத்தில் வினயா வருவதைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்து கையை ஆட்டினாள். சில நிமிடங்களில் அவனருகே வந்தாள் வினயா.

"சுதந்திரதின பூங்காவா?.. காதலர்தின பூங்காவா?" வினயா சிரித்தபடியே கேட்டாள்.

"வைலட் கலர் சுடிதார்ல ஆளை அசத்தறியே?" பிரகாஷ், பேச்சை மாற்றினான்.

"உனக்குப் பிடிச்ச கலர் வைலட் ஆச்சே? எப்போ, எந்தக் கடையில வைலட் கலர்ல எதைப் பார்த்தாலும் வாங்கறேன். இன்னிக்கு உனக்கு என்னோட ட்ரீட். நேத்து எங்க சித்தப்பா பெங்களூர்ல இருந்து வந்திருந்தார். 'சுடிதார் வாங்கிக்கோ'ன்னு ஆயிரம் ரூபா குடுத்தாரு. சாப்பிடப் போகலாமா ?"

"போலாம். நீ குடுக்கற ட்ரீட் ஆச்சே... விட்ருவேனா என்ன?"

"எந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்கு போகலாம்?"

"பெரிய ரெஸ்ட்டாரண்ட்டெல்லாம் வேண்டாம். போன வாரம் என்னோட ஃப்ரெண்ட் கணேஷ் அவங்களோட ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனான். வெஜிடேரியன் ஹோட்டல். டிபன் வெரைட்டியெல்லாம் பிரமாதமா இருந்துச்சு."

"அந்த ரெஸ்ட்டாரண்ட் எங்கே இருக்கு? அதைச் சொல்லு முதல்ல..."

"ட்ரிப்ளிகேன்ல இருக்கு. பேரு என்ன தெரியுமா? 'இன்சுவை.' உண்மையாகவே எல்லா ஐட்டமும் சுவையாத்தான் இருந்துச்சு."

"அப்பிடின்னா சரி. அங்கேயே போலாம். ஆட்டோவைக் கூப்பிடு." பிரகாஷ் ஆட்டோ பிடித்ததும் இருவரும் அதில் ஏறி இன்சுவைக்கு இன்முகத்துடன் பயணித்தனர்.

சப்-வே ரெஸ்ட்டாரண்ட். நவீன அலங்காரத்தில் நாகரீகமாகக் காணப்பட்டது. வேணு உள்ளே நுழையும் பொழுதே, அங்கே கிரியின் அப்பா சொக்கலிங்கம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

அறுபதை நெருங்கும் வயதிலும் 'டை' அடிக்கத் தேவை இல்லாத கறுத்த தலைமுடியுடன் முதுமை தெரியாமல் இருந்தார். விலையுயர்ந்த கண்ணாடி ஃப்ரேமிற்குள் சாந்தமான பார்வை! தூய பருத்தித் துணியில் தைக்கப்பட்ட கோடு போட்ட ஷர்ட்டும், எளிமையான வேஷ்டியும் உடுத்தி இருந்தார். பரம்பரைப் பணக்காரர் என்பதில் பந்தா இல்லை. எனவே அதிகப்படியான செயின் கழுத்தில் இல்லை. தடிமனான ப்ரேஸ்லெட் கையில் இல்லை. மெல்லிய செயினில் அவரது மனைவி காமாட்சியின் ஃபோட்டோ உள்ள டாலர் கோர்க்கப்பட்டிருந்தது. வலது கை மோதிர விரலில் மட்டும் நீலக்கல் மோதிரம் அணிந்திருந்தார். எந்தவித சிறப்பு அலங்காரமும், பகட்டான ஆடை, பளிச்சென்ற நகைகள் இன்றியும் கூட செல்வந்த தோற்றத்துடனும், செல்வாக்கான கம்பீரத்துடனும் காணப்பட்டார் சொக்கலிங்கம்.

வேணு அவரைப் பார்ப்பதற்குள் அவரே அவனைப் பார்த்து கையசைத்துக் கூப்பிட்டார்.

"என்னப்பா வேணு...அதிசயமா இருக்கு. உன் ஃப்ரெண்ட் கிரி இல்லாம தனியா வந்திருக்க?"

"அ...அது...அது வந்து அங்கிள்...சு...சும்மா...உங்களைப் பார்க்கத்தான்..." வேணு உளறிக் கொட்டினான்.

"சும்மாவா என்னைப் பார்க்க சப்-வே வரைக்கும் தேடி வந்த? தயங்காம சொல்லு. என்ன விஷயம்? எதாவது உதவி தேவையா? சொல்லுப்பா வேணு..."

இதற்குள் அங்கே வந்த வெயிட்டர் ஆர்டர் எடுத்தார்.

"எனக்கு வழக்கம் போல வெஜிடபிள் சூப் ஒண்ணு குடுங்க. இந்த தம்பிக்கு என்ன வேணும்னு கேட்டுக் குடுங்க."

வேணு ஆர்டர் கொடுத்தான்.

"சொல்ல வந்த விஷயத்தை சொல்லுப்பா வேணு..."

"அங்கிள்...அது...வந்து...உங்களோட லிங்கம் ஆர்ட்ஸ் காலேஜ் விழாவுக்கு நீங்க போயிருந்தீங்களா அங்கிள்...?"

"ஆமா. போயிருந்தேன். கிரி வந்திருந்தான். நீ வரலியே..."

"ஆமா அங்கிள்... அன்னிக்கு என்னால வர முடியல. அந்த ப்ரோக்ராம்ல ஒரு பொண்ணு ஸோலோ டான்ஸ் ஆடற நிகழ்ச்சியும் இருந்துச்சாம். அந்தப் பொண்ணு... அந்தப் பொண்ணை... கிரி... கிரி விரும்பறானாம் அங்கிள்..." இதை சொல்லி முடிப்பதற்குள் சப்-வேயின் ஏ.ஸி குளிரிலும் வேணுவிற்கு வியர்த்து வழிந்தது.

வாய்விட்டுச் சிரித்தார் சொக்கலிங்கம்.


"அட... இதுக்கா வேணு இவ்வளவு தயக்கம்? நானும் உங்க வயசைக் கடந்து வந்தவன்தானே? இந்த வயசுல அழகான பெண்கள், காதல் இந்த மாதிரி ஈர்ப்புகளெல்லாம் வந்தாதத்தான் நீங்க வாலிபப் பசங்க. மேல சொல்லு. அந்தப் பொண்ணுகிட்ட போய் கிரி பேசினானா?"

சொக்கலிங்கம் சிரித்துப் பேசியதும் தைரியமாக பேச ஆரம்பித்தான் வேணு. "இல்லை அங்கிள். அவளை தீவிரமா விரும்பறானாம். அவதான் அவனோட எல்லாம்ன்னு அவன் மனசு சொல்லுதாம்..."

"என்ன வேணு இது! கிரி அந்தப் பொண்ணு கூட பேசலைங்கற. பின்ன எப்படி அவதான் எல்லாம்ன்னு சொல்றான்?"

"அந்தப் பொண்ணோட பேர் மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கான் அங்கிள்."

"அப்படியா? பேர் என்ன?"

"பேர் சுபிட்சாவாம்."

"அந்தப் பொண்ணப்பத்தின தகவல்களை காலேஜ் மூலமா நான் விசாரிச்சு வைக்கிறேன். இந்த விஷயத்தை, கிரி என்கிட்ட நேரடியாவே சொல்லி இருக்கலாமே..."

"அவனுக்கு கூச்சமா இருக்குன்னு, என்னை உங்ககிட்ட பேசச் சொன்னான் அங்கிள்..."

"அதனால என்னப்பா? ஃப்ரெண்டுக்காக நீ பேசற. எனக்கு கிரி ஒரே பையன்னு உனக்குத் தெரியும். நான், அவன் மேல என் உயிரையே வச்சிருக்கேன்னும் தெரியும். அவன் விரும்பற பொண்ணை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதைத் தவிர பெரிய சந்தோஷம் எனக்கு வேற என்ன இருக்கு? காதலிச்சு, ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் பெத்தவங்க முன்னாடி பையன்ங்க வந்து நிக்கற இந்தக் காலத்துல, ஒரு பொண்ணை விரும்பற ஆரம்ப காலகட்டத்துலயே 'அப்பாகிட்ட சொல்லணும்'னு நினைக்கற நல்ல பையன் கிரி. அவன் விரும்பற பொண்ணு, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணா இருக்கக் கூடிய பட்சத்துல, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஜாதி, மத வேறுபாடோ... அந்தஸ்து பேதமோ பார்க்கற ஆளு நான் இல்லை. கிரி மனசுல அந்தப் பொண்ணு இருக்கா. அந்தப் பொண்ணு மனசுல கிரி இருக்கானான்னு தெரியணும். விசாரிக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்."

"தேங்க்ஸ் அங்கிள். பெரிய செல்லவந்தரான நீங்க... இந்த அளவுக்குப் பெருந்தன்மையா பேசறீங்க. 'காதல்'னு பேச்சை ஆரம்பிச்சதுமே தாம்தூம்னு குதிக்கற அப்பாக்களுக்கு நடுவுல ஆழமா சிந்திக்கிறீங்க. உங்களைப் போல ஒரு அப்பாவுக்கு மகனா பிறந்ததுக்கு கிரி, குடுத்து வச்சிருக்கணும்."

"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட். ஒருத்தரைப்பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா அவங்களோட நண்பர்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டா போதும்னு சொல்லுவாங்க. கிரியோட நண்பன் நீ. உன் கூட ஃப்ரெண்ட்ஷிப்பா இருக்கற கிரியும் நல்லவனாத்தான் இருப்பான். கிரி கூட ஃப்ரெண்ட்ஷிப்பா பழகற நீயும் ஒரு நல்ல பையன்தான். பேசிக்கிட்டே இருந்ததுல சாப்பிடாம அப்படியே வச்சிருக்கியே...சாப்பிடு வேணு..."

வேணு சாப்பிடும் வரை அவனுடன் இருந்து, ரெஸ்ட்டாரண்ட் பில்லைக் கட்டிவிட்டு, அவன் கூடவே கிளம்பினார்.

"வா வேணு...வீட்டுக்குத்தானே போற? உன்னை விட்டுட்டு நான் போறேன்."

"நான் பஸ்ல போய்க்கறேன் அங்கிள்..."

"அட என்னப்பா...உன்னைத் தூக்கிக்கிட்டா போகப்போறேன்? கார்லதான கொண்டு விடப் போறேன். வா..." சிரித்துக் கொண்டே அன்புடன் அழைத்த சொக்கலிங்கத்தின் வார்த்தையைத் தட்ட முடியாத வேணு, அவரது காரில் ஏறினான். கார் கிளம்பியது.

21

வீட்டில் உள்ள அனைவரும் கல்லூரி, ஆபீஸ் என்று கிளம்பிப் போனபின், சீரியல் பார்ப்பதற்காக டி.வி.க்கு அருகில் வந்தார் மூர்த்தி.

"அண்ணா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" கமலம் அவர் அருகே வந்தாள்.

"சொல்லும்மா... கமலம் என்ன விஷயம்?"

"நீ சீரியல் பார்க்கறதைக் கெடுக்கறேனோ...?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. மேகலாவை, சக்திவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுல உனக்குப் பரிபூரண சம்மதம்தானே?"

"இதில என்னம்மா உனக்கு திடீர் சந்தேகம்?"

"அதில்லண்ணா... மேகலா நல்ல நிறமான, அழகான பொண்ணு. கல்யாண தரகர்ட்ட சொல்லி வச்சா பெரிய பணக்கார வீட்டு மாப்பிள்ளை கிடைப்பாங்க. உனக்கும் உசந்த இடத்து சம்பந்தம் கிடைக்கும். அதையெல்லாம் விட்டுட்டு சக்திவேலுக்கு, மேகலாவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் நினைக்கறது பேராசையோன்னு தோணுது."

"சச்ச... என்னம்மா இது...சக்திவேலுக்கு என்ன குறைச்சல்? நல்ல பையன். நல்ல அழகு. கௌரவமா சொல்லிக்கற மாதிரி உத்யோகத்துல இருக்கான். அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு எந்த வம்புக்கும் போகாத நல்லவன். இந்தக் காலத்துல இதுக்கு மேல வேற என்ன தகுதியை எதிர்ப்பார்க்கணும்...?"

"நீங்க எதிர்பார்க்க மாட்டீங்கண்ணா. சின்னஞ்சிறுசுதானே நம்ம மேகலா? அவளுக்கு உள்ளுக்குள்ள அவளோட எதிர்காலத்தைப் பத்தி எத்தனையோ கனவு இருக்கும். பணக்கார வீட்டுல மருமகளாப் போகணும், வசதியா வாழணும்...அப்படி...இப்படின்னு ஏகப்பட்ட ஆசைகள் இருக்கும். அதையெல்லாம் தெரிஞ்சுக்காம நாமளே முடிவு செய்யறது சரியான்னு தெரியலை. அண்ணன், தங்கச்சி நாம..., நமக்குள்ள சம்பந்தம் பண்ணிக்கறது நமக்கு சந்தோஷமான சமாச்சாரம்தான். ஆனா பிள்ளைங்களுக்கு அது... சங்கடமாயிடக் கூடாதில்லண்ணா..."

"சங்கடமோ...சந்தோஷமோ...பிள்ளைங்கக்கிட்ட மனம்விட்டு பேசிட்டா நல்லது. விருப்பம் இல்லைன்னா விட்டுடலாம். சம்மதிச்சா சந்தோஷமா ஆக வேண்டியதைப் பார்க்கலாம். வேண்டாம்னு சொல்லிட்டா யாருக்கும் சங்கடம் இல்லை. நமக்குத் தேவை...பிள்ளைங்க மனம் போல வாழ்க்கை அமையணும். நம்ப மனசுக்கேத்தபடி அவங்களை மாத்தணும்னு நினைக்கவும் கூடாது. அவங்களை வற்புறுத்தவும் கூடாது..."

"வற்புறுத்தி, அமைச்சுக்குடுக்கற வாழ்க்கையினால அவங்களோட மனசு உடைஞ்சு போயிடும். நம்ம காலத்துல அம்மா, அப்பா கை நீட்டிக்காட்டற பையனை, பொண்ணு கட்டிக்கறதும், பொண்ணைப் பையன் கட்டிக்கறதும் வழக்கமா இருந்துச்சு. இப்ப... பொண்ணுகிட்ட கேக்காம, பையனைக் காட்டாம பெத்தவங்களே முடிவு செய்றதெல்லாம் பிரச்சனையாயிடுது. அதனால... மேகலாகிட்டயும், சக்திவேல்கிட்டயும், அவங்களுக்கு இதில இஷ்டம்தானான்னு கேட்டுடலாம்னு நான் நினைக்கறேன் அண்ணா."

"நீ நினைக்கறபடியே செஞ்சுடலாம் கமலம். சக்திவேல் அதிகம் பேசாத இயல்பு உள்ளவன். அவன்கிட்ட நீதான் பேசணும். அவன்கிட்ட விலாவாரியா பேசு. அவனோட விருப்பம் தான் முக்கியம். எந்தக் கட்டாயமும் இல்லைன்னு தெளிவாப் பேசு. நானும் மேகலாகிட்ட பேசறேன். அவங்க ரெண்டு பேருக்கும் விருப்பம்ன்னா கூடிய சீக்கிரம் கல்யாணத்தை நடத்திடலாம்."

"சரிண்ணா. இன்னிக்கே பேசிடறேன்."

"மேகலாவும், சக்திவேலும் சம்மதிச்சுட்டாங்கன்னா உன்னைவிட எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம். ஏன் தெரியுமா? புதுசா ஒரு குடும்பத்தில இருந்து வர்ற மாப்பிள்ளை பையன் கூட நம்பளுக்கு ஒத்துப் போறதுக்கு நாளாகும். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறது ரொம்ப கஷ்டம். நம்ம சக்திவேல்ன்னா எனக்கு இந்த பிரச்சனையெல்லாம் இல்லை. வேற ஒரு குடும்பத்து பையனா இருந்தா...மேகலா இந்த வீட்டை விட்டு அவங்க வீட்டுக்குப் போயிடுவா.


வீட்டோட மாப்பிள்ளையா ஒரு அந்நிய குடும்பத்துல இருந்து வந்தாலும் நம்ப கூட ஒத்துப் போற குணம் உள்ளவனா இருப்பானாங்கறது நமக்குத் தெரியாது. சக்திவேல் நம்ம வீட்டுப்பையன். ரத்த சம்பந்தம் உள்ளவன். வயோதிகத்துல இருக்கற நமக்கு நம்ப ரத்த உறவுகள், நம்ம கூட உதவியா இருக்கறது நல்லது..."

"நல்லதே நடக்கும்ண்ணா. நம்பிக்கையோட பிள்ளைங்ககிட்ட பேசுவோம். எல்லாம் ஆண்டவன் விட்ட வழி..."

"சரி கமலம்.. நான் கொஞ்ச நேரம் ஈஸி சேர்ல சாய்ஞ்சு கண் அசர்றேன். நீயும் ஓய்வு எடு..."

"சரிண்ணா" கமலம், படுக்கை அறைக்கு சென்றாள்.

லிங்கம் கலைக் கல்லூரியின் அலுவலகம். கல்லூரியில் ப்ரின்ஸ்பால் தேவராஜ். எதிரே உட்கார்ந்திருந்த சொக்கலிங்கத்திடம் பவ்யமாகவும், மரியாதையாகவும் பேசிக் கொண்டிருந்தார். கல்லூரியில், கல்வி பற்றிய விபரங்களையும், ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய மேம்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். அதன்பின் சுபிட்சாவைப் பற்றிய விபரங்களைக் கேட்டார்.

"பி.ஏ. ஸெகண்ட் இயர் ஆர்ட்ஸ் க்ரூப்ல படிக்கற சுபிட்சா, எந்த ஊர் பொண்ணு?"

"சென்னைதான் ஸார்."

"அந்தப் பொண்ணு படிப்புல எப்படி?"

"நல்லா படிக்கற பொண்ணு ஸார். கலைவிழா அன்னிக்கு டான்ஸ் ஆடுச்சே ஸார். அந்தப் பொண்ணுதான் ஸார் சுபிட்சா."

"அந்தப் பொண்ணோட அட்ரஸ் குடுங்க."

"இதோ தரேன் ஸார்." என்ற ப்ரின்ஸ்பால், ஃபைலை எடுத்து, சுபிட்சாவின் அட்ரஸை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தார்.

"எக்ஸ்க்யூஸ் மீ ஸார்... அந்தப் பொண்ணு சுபிட்சா நல்ல பொண்ணு ஸார். அவ மேல தப்பு ஒண்ணுமிலையே...?"

"சேச்சே...தப்பெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான்..."

"ஸாரி ஸார். அதைப்பத்தி நான் கேட்டது தப்புன்னா..."

"இதில என்ன தப்பு இருக்கு தேவராஜ்? நான் கிளம்பறேன். உங்களோட முயற்சியிலதான் இந்தக் காலேஜ் நல்லபடியா முன்னேறிக்கிட்டிருக்கு. ஆல் த பெஸ்ட்."

விடை பெற்று புறப்பட்டார் சொக்கலிங்கம்.

22

ன்சுவை உணவகம். திருவல்லிக்கேணி ஏரியா. அங்கே சமீபத்தில் துவக்கப்பட்ட அந்த உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்காதவர்கள், காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் பிரகாஷும், வினயாவும் சிறிது நேரம் காத்திருந்தனர். இடம் கிடைத்ததும் உட்கார்ந்தனர்.

"இந்த ஹோட்டல்ல ஸ்பெஷல் ஐட்டம் என்ன?" வினயா கேட்டாள்.

"பசி அதிகமாயிடுச்சா? ஆர்டர் குடுத்த உடனே கொண்டு வந்து குடுத்துருவாங்க.

“இங்கே இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி குடுப்பாங்க. சூப்பரா இருக்கும். அதுதான் இங்கே ஸ்பெஷல். மத்தபடி ஸ்வீட்ஸ் எல்லாமே நல்லா இருக்கும்..."

ஆர்டர் எடுப்பவர் வந்தார்.

"குட்டி ஜிலேபி ரெண்டு ப்ளேட்டும், ரெண்டு ப்ளேட் தோசையும் தக்காளி சட்னியும் குடுங்க..."

ஆர்டர் எடுத்தவர் போனார்.

"பரவாயில்ல... சின்ன ஹோட்டலா இருந்தாலும் சுத்தமா, பாக்கறதுக்கு பளிச்ன்னு இருக்கு." வினயா கூறியதும் சிரித்தான் பிரகாஷ்.

"என்ன சிரிப்பு?" வினயா அவனது தோள்பட்டையில் குத்தினாள்.

"பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தாத்தான் அங்கே தயாரிக்கற உணவு வகைகள் நல்லா இருக்கும்ன்னு அர்த்தம் கிடையாது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை விட சில சின்ன ஹோட்டல்கள்ல எல்லா உணவு வகைகளும் ருசியா இருக்கும். அதில இந்த இன்சுவை ஒண்ணு..."

இதற்குள் ஆவி பறக்கும் தோசைகளும், லேசாக எண்ணெய் மிதக்கும் தக்காளிச் சட்னியும், இரண்டு சிறிய தட்டுகளில் குட்டி ஜிலேபி சகிதமாக ஆர்டர் எடுப்பவர் வந்தார்.

இருவரும் ரசித்து சாப்பிட்டனர். அப்போது அங்கே இன்னொரு மேஜை அருகே நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவன், கையில் ஒரு புகைப்படத்தை வைத்தபடி பிரகாஷையும், புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். இதை கவனிக்காத பிரகாஷ், சிரித்துப் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

பிரகாஷை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவனுக்கு இருபத்தியெட்டு வயது இருக்கும். கண்ணியமான தோற்றம் கொண்ட அவன், சூழ்நிலை பாராமல் பிரகாஷை, புகைப்படத்துடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தான். புகைப்படத்தில் உள்ள நபரும், பிரகாஷும் ஒரே நபர்தான் என்று தெரிந்ததும் அவன் வேகமாக எழுந்திருக்க முற்பட்டான். அப்போது சஃபாரி உடை அணிந்த ஒருவர், அவனருகே வந்து பேச்சுக் கொடுத்தார். அவர், அவனுடைய உயர் அதிகாரி போலும். எனவே வேகமாக புகைப்படத்தை ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவருக்கு வணக்கம் கூறினான். மரியாதை நிமித்தம் நின்று கொண்டே அவரிடம் பேசினான். அவனது கண்கள் மட்டும் பிரகாஷை சுற்றியே சுழன்று கொண்டிருந்தன.

சஃபாரி நபர் பேசிக் கொண்டிருந்தபடியால் அந்த வாலிபனால் எழுந்து, பிரகாஷைப் பின் தொடர இயலாமல் போனது.

வினயாவின் தோள் மீது கைகளைப் போட்டபடி உணவகத்திலிருந்து வெளியேறினான் பிரகாஷ். அவனது முதுகையே வெறித்தபடி பார்த்த வாலிபன், இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டமைக்காக மனம் நொந்தபடி சஃபாரி மனிதருடன் 'விதியே' என்று பேசிக் கொண்டிருந்தான்.

இளம் காலை நேரம். ஸ்போர்ட்ஸ் உடையும், ஸ்போர்ட்ஸ் காலணிகளும் அணிந்தபடி 'ஜாகிங்' கிளம்பிக் கொண்டிருந்தான் கிரி.

"கிரி..."

மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த சொக்கலிங்கம் கூப்பிடுவது கேட்டு நின்றான் கிரி.

"என்னப்பா?"

"நீ ஜாகிங் முடிச்சுட்டு வந்து என்னைப் பாரு கிரி. உன் கூட கொஞ்சம் பேசணும்."

"சரிப்பா."

"என்னோட ரூம்லதான் இருப்பேன்."

"சரிப்பா."

கிரி, தன் ஸ்போர்ட்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஐ-பாட் எனும் பாடல் கேட்கும் கருவியை எடுத்தான். அதன் ஹெட் போனை காதுகளில் பொருத்திக் கொண்டு, பங்களாவின் வெளிப்பக்கம் வந்து, மெதுவாக நடக்க ஆரம்பித்து, பின்னர் ஓட ஆரம்பித்தான்.

'பருவமே...புதிய பாடல் பாடும்... இளமையின் பூந்தென்றல் ஆடும்...' இளையராஜாவின் இன்னிசை மழையில் அவனது மனதிற்குள்ளும் மழை பொழிந்தது. அதற்குக் காரணம் சுபிட்சாவின் நினைவு. அடுத்ததாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 'பெண் ஒண்று கண்டேன்...பெண் அங்கு இல்லை...' பாடல் இசைத்து அவனது மனதை மேலும் சுபிட்சாவின் நினைவில் பரவசப்படுத்தியது.

'நெஞ்சத்தைக் கிள்ளாதே.' திரைப்படத்தில் வரும் மோகனாக தன்னையும், சுஹாஸினியாக சுபிட்சாவையும் கற்பனை செய்தபடி ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் வழக்கமாக ஓடும் பூங்காவில் ஒரு மணி நேரம் ஓடியபின், நடந்து அவனது பங்களாவிற்கு வந்தான். அவனது அறைக்கு சென்றான். வியர்த்திருந்த முகத்தைக் கழுவினான்.

அதன்பின் சொக்கலிங்கத்தின் அறைக்கு சென்றான். நாசூக்காய் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அன்றைய செய்தித்தாள்களை படித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம், கிரியைப் பார்த்ததும் செய்தித்தாள்களை மேஜை மீது வைத்தார். அவரது அறை வெகு விசாலமாய் அழகாய் இருந்தது. வாசனை திரவியம், சூடாக்கப்பட்டு எரியும் மெழுகுவர்த்தி, அழகிய தாய்லாந்து பீங்கான் விளக்கில் பொருத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தபடியால், அறை முழுவதும் 'கும்'மென்று மணம் வீசியது. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் மிக நேர்த்தியாக இருந்தன.

அறையில் அங்கங்கே மாட்டப்பட்டிருந்த மின்சார விளக்குகளின் வடிவங்கள் புதுமையாக இருந்தன. அகலமான தேக்குமரக்கட்டில் மீது ஷோலாபூர் பெட்ஷீட் விரிக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்ஷீட்டின் வேலைப்பாடுகள் கட்டிலுக்கு மேலும் அழகு சேர்த்தது. ஜன்னல்களுக்கு மாட்டப்பட்டிருந்த திரைச்சீலைகள் கலைநயம் மிக்கவையாக இருந்தன. ஜன்னல்களுக்கு அருகே, செய்தித்தாள்கள் படிப்பதற்கென்றே போடப்பட்டிருந்த அழகிய நாற்காலியும், மேஜையும் கண்களைக் கவரும் வண்ணம் நவீனமாக இருந்தன. அந்த நாற்காலியில்தான் சொக்கலிங்கம் உட்கார்ந்திருந்தார்.

"உட்காரு கிரி”

கிரி உட்கார்ந்தான்.

"கிரி..... சுத்தி வளைச்சு பேச விரும்பல. நேத்து வேணு சப்-வே-யில வச்சு என்கிட்ட பேசினான். சுபிட்சாங்கற பொண்ணை நீ விரும்பறதாகவும், அவளைப்பத்தின விபரங்கள் ஏதும் தெரியாதுன்னும் சொன்னியாம்..."


"அ...அ...அது… வந்துப்பா... அந்தப் பொண்ணு..."

"தயங்காம சொல்லு கிரி. உன் மனசுல இருக்கறதை வெளிப்படையாப் பேசினாத்தான் எனக்குப் புரியும். உன் மேல நான் வச்சிருக்கற நம்பிக்கை இன்னும் உறுதியா ஆகறமாதிரி நீ ஒரு பொண்ணை உன் மனசுல நினைச்சதைக் கூட என்கிட்ட மறைக்க நினைக்கலை. உன்னோட எண்ணம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைப்பேன்”

"தேங்க்ஸ்ப்பா...”

"நீ சொன்ன அந்தப் பொண்ணைப்பத்தி நம்ப காலேஜ்ல விசாரிச்சுட்டேன். அதைப்பத்தி விசாரிக்க, ஒரு பெண் போனாத்தான் சரிப்பட்டு வரும்னு என்னோட செக்கரட்டரி ஷோபா ஜெகன்னை அனுப்பினேன். ஷோபா ஜெகன், எங்கே போய் எப்படி விசாரிச்சாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா...எல்லா விபரங்களையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு வந்திருக்காங்க. இந்தப் பொண்ணு சுபிட்சா, லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு ஒரு தங்கச்சி. அவங்க விதவை. அவங்களுக்கு ரெண்டு மகன்ங்க. எல்லாரும் ஒரே குடும்பமா ஒரே வீட்ல வாழறாங்க. சுபிட்சாவுக்கு ஒரு அக்கா. அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியில வேலை பார்க்கறா. நல்ல குடும்பம். பெரிய பொண்ணுக்கே இன்னும் கல்யாணம் பண்ணாதப்ப சின்னப் பொண்ணுக்கு இப்போதைக்கு அதைப்பத்தி பேசமாட்டாங்க. அதுவும் ஸெகண்ட் இயர் படிக்கற பொண்ணு. அதனால மூத்தவளுக்கு கல்யாணம் முடிச்சப்புறம் நாம பேசிப் பார்க்கலாம்னு நான் நினைக்கிறேன். நம்ப அந்தஸ்து கூட ஒப்பிடும்போது அவங்க ரொம்ப கீழ் மட்டத்துலதான் இருக்காங்க. உனக்கே தெரியும். இந்த அந்தஸ்து பேதமெல்லாம் நான் பார்க்க மாட்டேன்னு. அவங்க இனம், ஜாதி பத்தி கூட நான் பெரிசா யோசிக்கலை. நீ என்ன நினைக்கற?"

"அப்பா..... சுபிட்சா என் மனசுக்குள்ள வந்தாச்சு. அவ எனக்கு கிடைப்பாள்ன்னா இன்னும் எத்தனை வருஷம் வேணாலும் காத்திருக்கத் தயாரா இருக்கேன். ஆனா அவ எனக்கு வேணும். என் மனைவியா, துணைவியா அவதான் வரணும். என்னோட ஆசையைப் புரிஞ்சுக்கிட்ட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்ப்பா”

"உன் மனசுக்கேத்தபடி அவளையே உன் மனைவியா, இந்த வீட்டு மருமகளா கொண்டு வர்றதுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் உனக்கு எல்லாம் செய்வேன். நீயும் உன்னோட மேல் படிப்பை இப்பத்தானே முடிச்சிருக்க? உனக்கு இன்னும் உலக அனுபவம் கிடைக்கணும். வாழ்வியல் பாடங்களும் கிடைக்கணும். கல்வி நிறுவனங்கள் நடத்தறது சம்பந்தமான சிறப்பு படிப்பு படிக்கறதுக்கு வெளிநாட்டுக்கு வேண்ணா போயிட்டு வாயேன். நம்ப கல்வி நிறுவனங்களோட மேம்பாட்டுக்கு உதவியா இருக்கும். சுபிட்சாவோட அக்காவிற்கு கல்யாணமாகி, அவளுக்கு அவங்க வீட்ல கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குத் தயாரா இருக்கற பட்சத்துல, அவங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட முறைப்படி பேசலாம்."

"சரிப்பா..... ஆனா... நான் வெளிநாட்டுக்கு இப்ப போகலைப்பா. நம்ப ஆபிசுக்கு வந்து நம்ப வேலைகள் பத்தி தெரிஞ்சு, பழகிக்கறேன்ப்பா."

"உன்னோட இஷ்டம் கிரி. கண்டிப்பா வெளிநாட்டுக்கு போய்த்தான் ஆகணும்ன்னு நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்......"

"தேங்க்ஸ்ப்பா."

"ஓ.கே.கிரி.... நீ போய் குளி. ஜாகிங் முடிஞ்சு அப்படியே... பேச உட்கார்ந்தாச்சு..."

"பரவாயில்லைப்பா. இதோ நான் போய் குளிச்சு ரெடியாயிடறேன். நீங்க போகும்போது உங்க கூடவே ஆபிசுக்கு வந்துடறேன்."

"குளிச்சு ரெடியாகி சாப்பிட உட்காரணும். சரியா சாப்பிடமாட்டேங்கறன்னு சமையல்காரர் பாண்டி அண்ணே சொல்றாரு. முட்டை, பால், இட்லி, சாம்பார் இதையெல்லாம் காலை உணவுல சேர்த்துக்கணும். உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ப நாட்டு இட்லி, சாம்பார் மாதிரி ஒரு சத்தான காலை உணவு இந்த உலகத்துலயே, இந்தியாவுல மட்டும்தானாம். நம்பளோட மதிய உணவு கூட அப்படித்தான். பருப்பு, சத்து நிறைஞ்ச காய்கறி பொரியல், நிறைய காய்கள் போட்ட சாம்பார்... இப்படி நல்ல ஊட்டச்சத்தான உணவு. நல்லா சாப்பிடு. எக்ஸர்ஸைஸ் பண்ணு. யோகா பண்ணு. தியானம் பண்ணு. உடம்பும் நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்."

"சரிப்பா."

சொக்கலிங்கத்தின் அறையை விட்டு, தன் அறைக்குச் சென்றான் கிரி. குளித்து முடித்து, கண்ணாடி முன் நின்றான். கண்ணாடியில் சுபிட்சாவின் முகம் தெரிந்தது. தன்னை மறந்தான். சுபிட்சாவின் நினைவுகளில் நீந்தினான். இன்ட்டர்காம் ஒலித்தது, அவனது நினைவுகளைக் கலைத்தது.

ரிஸீவரை எடுத்தான். பேசினான்.

"ஹலோ..."

"கிரி தம்பி... பாண்டி பேசறேன்... என்னா தம்பி... இன்னும் நீங்க சாப்பிட வரலியே..."

"இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் பாண்டிண்ணே..."ரிஸீரை வைத்தான். பேண்ட், ஷர்ட்டை அணிந்தான். அடர்ந்திருந்த தலை முடியை அடக்கி, அழகாக வாரினான். டிரஸ்ஸிங் டேபிள் இழுப்பறையைத் திறந்து, வாசனை திரவியத்தை எடுத்து, தன் மீது தெளித்துக் கொண்டான்.

மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தான். அங்கே தெரிந்த சுபிட்சாவின் முகத்தைப் பார்த்து, குறும்பாகக் கண்ணடித்து, 'டாட்டா' காண்பித்து, அவசரமாய், சாப்பிடும் அறைக்குச் சென்றான்.

"வாங்க தம்பி... உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்."

"இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்சமான வெண் பொங்கல், சாம்பார், இட்லியும், பொடியும் இருக்கு...."

"பாண்டிண்ணே... நீங்க பாட்டுக்கு ரயில் வண்டி மாதிரி சொல்லிக்கிட்டே போறீங்க...எனக்கு வெண்பொங்கலும், சாம்பாரும் மட்டும் போதும். உங்களோட ஸ்பெஷல் ஃபில்ட்டர் காபி குடுங்க. அது சரி... நான் சரியா சாப்பிடறதில்லைன்னு அப்பாகிட்ட சொன்னீங்களாமே?"

"ஆமா தம்பி... மூணுநாளா வறட்டு ரொட்டி மட்டும்தானே சாப்பிட்டீங்க? அதைத்தான் சொன்னேன். அப்பா சொன்னாத்தானே கேப்பீங்க?"

"அது என்னமோ திடீர்னு சாப்பாடே பிடிக்காம இருந்துச்சு. அதனாலதான் ரொட்டி மட்டும் சாப்பிட்டேன்..."

"எல்லாம் வயசுக் கோளாறுதான் தம்பி..."

"அதென்ன வயசுக் கோளாறு? எனக்கு ஒரு கோளாறும் இல்லை பாண்டிண்ணே..."

"சரி தம்பி. ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன். வெண்பொங்கல் எப்படி இருக்கு?"

"உங்களோட வெண்பொங்கல்ன்னா... சொல்லணுமா என்ன? பிரமாதம்! வெண்பொங்கல் முடிச்சாச்சு. அடுத்து காபி குடுங்க பாண்டிண்ணே..."

"இதோ ஒரு நிமிஷம் தம்பி..."

காபி வாசனை மூக்கைத் துளைக்க, ஆவி பறக்கும் ஃபில்ட்டர் காபியைக் கொண்டு வந்து கொடுத்தார் பாண்டி. ரசித்துக் குடித்தான் கிரி.

குடித்து முடித்ததும் கிளம்பினான்.

"நான் கிளம்பறேன் பாண்டிண்ணே..."

"சரி தம்பி..."

"நீங்க சாப்பிடுங்க. நான் சாப்பிடற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். வயசாச்சுல்ல உங்களுக்கு? பசி தாங்காது..."

"நீ இவ்வளவு பாசமா பேசறதுலயே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு தம்பி..... நீ பொறந்ததுல இருந்து இங்கே வேலை பார்க்கறேன்.


எல்லாம் உங்க அம்மா சொல்லிக் குடுத்த கைப்பக்குவம்தேன். உங்க அம்மா அல்பாயுசல போய் சேர்ந்துடுச்சு. உனக்கு கல்யாணமாகி, உன் மகளுக்கோ, மகனுக்கோ... சமைச்சுப் போட்டு அதுக சாப்பிடறதப் பார்த்துட்டுத்தேன் நான் கண்ணை மூடணும். அந்த ஒரு ஆசைதான் தம்பி எனக்கு..."

"என்ன ஆசை பாண்டி உனக்கு?..." சொக்கலிங்கத்தின் குரல் கேட்டது.

"அது வந்துங்கய்யா... நம்ப கிரி தம்பிக்கு கல்யாணம் கட்டி பிள்ளைக் குட்டிங்க பொறந்தப்புறம் அதுகளுக்கு என் கையால சமைச்சுப் போடணும்னு சொன்னேங்கய்யா..."

"கிரியோட பிள்ளைங்களுக்கு என்ன? பேரன், பேத்திகளுக்கே நீங்கதான் பண்ணிப் போடுவீங்க..."

"ஐய்யோ... என்னோட வயசு இப்பவே அறுபது ஆச்சுங்கய்யா..."

"அறுபது வயசுலயும் அறுசுவையா சமைச்சு, ஆளை அசத்தறீங்களே..." என்றவர், கிரியிடம், "கிரி, நாம ஆபீசுக்குக் கிளம்பலாமா?" கேட்டார்.

"சரிப்பா."

இருவரும் கிளம்பிப் போவதை அன்பு பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டி.

 

23

"நல்ல ஹோட்டல்ன்னு சொன்னீங்க. என்னோட ட்ரீட்ன்னு அங்கே சாப்பிட்டும் முடிச்சாச்சு. நீங்க சொன்னபடி அங்கே டிபனும் நல்லா இருந்துச்சு. இனி அடுத்து எங்கே போகப் போறோம்?"

நெஞ்சம் நிறைய ஆசைகளை சுமந்து கொண்டிருந்த வினயா கேட்டாள். அவளது கன்னத்தைக் கிள்ளிய பிரகாஷின் கைகளைத் தடுத்தாள்.

"யாராவது பார்த்துடப் போறாங்க பிரகாஷ்......"

"இது எங்க ஏரியா உள்ள வராதேன்னு இந்த ஏரியாவுல யாரும் சொல்ல முடியாது. இது நம்ப ஏரியா கிடையாது. அதனாலதான் இந்த தைரியம்..."

"இந்த தைரியம் நம்ப கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு இருந்தா நல்லது..."

"நல்லது எது கெட்டது எதுன்னு எனக்குத் தெரியாதா? எங்க மாமா              பொண்ணு மேகலாவோட கல்யாண விஷயமா வீட்ல பேசிக்கிட்டிருக்காங்க. எங்க அண்ணனுக்கும் மேகலாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்க அம்மாவும், மாமாவும் விரும்பறாங்க..."

"உங்க அண்ணன் என்ன சொன்னாரு?"

"எங்க அண்ணன்... வழக்கம் போல மௌன சாமியாரா இருக்கான்..."

"அப்படி இல்லை பிரகாஷ்... மாமா பொண்ணுன்னா கட்டிக்க கசக்குமா என்ன? சம்மதம்ங்கற அர்த்தத்துலதான் பேசாம இருந்திருப்பார்..."

"ம்கூம். மேகலாவை எங்கண்ணன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கக் கூடாது..." பிரகாஷின் முகம் இயல்பான நிலையில் இருந்து மாறுபட்டது. அவனது கண்களில் வெறுப்பு தென்பட்டது. வார்த்தைகளில் கோபம் வெளிப்பட்டது.

"ஏன்...பிரகாஷ்? நீ ஏன் இப்படி நினைக்கறே? உங்க மாமா பொண்ணு அழகா இருப்பாள்ன்னு சொல்லி இருக்கியே... பின்ன என்ன வந்துச்சு?"

"அழகா இருந்தா மட்டும் போதுமா? ஒரு தகுதி வேணுமே..." தன்னை மறந்து மேகலாவின் மீதுள்ள கோபத்தை மேலும் வெளிப்படுத்தினான் பிரகாஷ். அவனது பேச்சு, வினயாவைக் குழப்பியது.

"என்ன பிரகாஷ்?... தகுதி...அது...இதுன்னு பெனாத்தறே?"

"அது...அது...வந்து...மேகலா, ப்ளஸ் டூ தான் படிச்சிருக்கா. ப்ளஸ் டூ முடிச்சதும் ரிஸப்ஷனிஸ்ட்டா வேலைக்குப் போயிட்டா. அவளுக்குக் குடும்பத்தை நிர்வகிக்கற தகுதி வரணுமேன்னு சொன்னேன்..." மனம் அறிந்து பொய் சொல்லி சமாளித்தான் பிரகாஷ்.

"நீ பாட்டுக்கு எதையாவது ஏடா கூடமா பேசி, நம்ப லைன் க்ளியர் ஆகறதை லேட் பண்ணாதே....."

"ப்ளீஸ் வினா... நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன்... நான் பெரிய அளவுல முன்னேறினப்புறம்தான் கல்யாணத்தைப்பத்தி யோசிக்கணும்ன்னு. நீ இப்படி அவசரப்படறது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை..."

"சரி சரி. ஸாரி... ஏதோ ஆசையில பேசிட்டேன். கோபப்படாதே. அப்புறம் உங்க அண்ணன், மேகலா கல்யாணப் பேச்சு எது வரைக்கும் வந்திருக்கு?"

"மேகலா....இப்ப... அவளுக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா. அண்ணன் சரின்னும் சொல்லலை. வேண்டாம்ன்னும் சொல்லலை. இனிமேல் பெரியவங்க பார்த்து என்ன செய்வாங்களோ தெரியாது. மேல்படிப்புக்கு நீ என்ன ப்ளான் பண்ணி இருக்க?"

"ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு செலவாகும்ங்கற விபரம் தெரியாம அப்பாகிட்ட பேச முடியாது. அப்பா ஒருத்தர் சம்பளத்துலதானே எங்க குடும்ப வண்டி ஓடுது? தங்கச்சி ஸ்கூல் படிச்சுக்கிட்டிருக்கா. பட்ஜெட் போட்டுத்தான் எதுவுமே செய்ய முடியும். திட்டமிட முடியும்."

"எனக்கும் அப்படித்தான். மாமா என்னோட மேல்படிப்புக்கோ, தொழில் துவங்கறதுக்கோ... லோன் வாங்கித்தர்றதா  சொல்லி இருக்காரு. அவராலதான் எங்க குடும்ப வண்டியும் ஓடுது. மாமாவோட பென்ஷன் பணமும், சக்திவேல் அண்ணாவோட சம்பளமும்தான் அந்த வண்டி சிரமப்படாம ஓட, கொஞ்சம் உதவியா இருக்கு..."

"அண்ணன், தங்கை உறவு, அண்ணன் மகள்களை தன் மகள்களா நினைக்கற உங்கம்மாவோட அன்பு, இதுக்கு நடுவுல நல்லா முன்னேறி இன்னும் குடும்ப வளத்தைப் பெருக்கணும்ங்கற உன்னோட பொறுப்பு...... இப்படி ஒரு நல்ல, பாசப்பிணைப்பான குடும்பத்துல என்னோட வாழ்க்கையும் ஐக்கியமானா நான் பாக்யசாலி..."

"ஏய் வினா...... என்ன இது? பாக்யசாலி... பெருச்சாளின்னுக்கிட்டு? சீரியல் டைலாக் மாதிரி ஜவ்வு போடறே?"

"உனக்கு ரொம்பத்தான் கொழுப்பு. ஸென்டிமென்ட்டா நான் பேசினதை சீரியல் டைலாக்ன்னு நக்கல் அடிக்கற?"

"ஸென்ட்டிமென்ட்டுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு. இன்னிக்கு ஜாலியா இருக்கோமா..... 'என்ஞாய்'ன்னு அனுபவிக்கணும். உன்கிட்ட ஒரு விஷயம் கேட்டுக்கிட்டே இருக்கேன்...நீ அதைப்பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கற?"

"எதைப்பத்தி…?”

"தெரியாத மாதிரி நடிக்காதே. ஒரு சனி, ஞாயிறு பாண்டிச்சேரிக்கு போயிட்டு வரலாம்னு சொன்னேனே......”

"வெளியூர் போறது....அங்கே தங்கறது..... இதெல்லாம் என்னால முடியாத விஷயம்... அதாவது எங்க வீட்ல இதுக்கெல்லாம் அனுமதிக்கவே மாட்டாங்க. எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லிட்டேன். இங்கே நாம பாத்துக்கறதே பெரிய விஷயமா இருக்கு. வெளியூர்ல யாராவது பார்த்துட்டா? ஐய்யோ...போச்சு...ஸாரி பிரகாஷ். இந்த ஒரு விஷயத்துக்கு என்னால 'நோ' தான் சொல்ல முடியும்."

"உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை. அப்பிடித்தானே?”

"ம்கூம். எனக்கு என்மேலயே நம்பிக்கை இல்லை. அதுவும் ஒரு காரணம். மரியாதைக்குரிய காதலர்களா இருந்து காதலுக்கு மரியாதை குடுத்து, ஊர், உலகம் மதிக்கற மாதிரி நம்ப காதல், கல்யாணத்துல முடியணும். அதுக்கு நடுவுல இந்த வாலிப வயசின் ஆசைகளுக்கு இடம் குடுக்காம இருக்கறதுதான் நல்லது. சூழ்நிலை காரணமா பலவீனப்பட்டுட்டா... வாழ்க்கையே ஊனமாயிடும். நம்பளை பலவீனப்படுத்தற அப்படி ஒரு சூழ்நிலையை நாமளே ஏன் உருவாக்கிக்கணும்?”

"பழைய பஞ்சாங்கப் பாட்டி மாதிரி ஏதேதோ பேசறே... என் தலையெழுத்து! இதையெல்லாம் நான் கேக்கணும்ன்னு.....”

"கேட்கப் பிடிக்கலைன்னா காதை மூடிக்கோ. என்னமோ வேற விஷயமே இல்லாத மாதிரி கண்ட பேச்சும் பேசிக்கிட்டிருக்கறது நீ......”


"சரி...சரி... கோவிச்சுக்காத. பாண்டிச்சேரியில அரவிந்தர் ஆஸ்ரமம், மனக்குள விநாயகர் கோவில், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில், ஊசுட்டேரி லேக், ஆரோவில் க்ளோப், ஆலம்பரக்கோட்டை... பீச், இப்படி பிரசித்தி பெற்ற இடங்கள் இருக்கு. லல்லு குல்ஃபியும், நியூ ஆனந்தா பால்கோவாவும் மாதிரி பாண்டிச்சேரி தவிர நீ வேற எங்கயும் சாப்பிட்டிருக்க மாட்ட. அது மட்டுமா? சின்ன சின்ன காபி கடைகள்ல்ல ஃபில்டர் காபி எவ்வளவு பிரமாதமா இருக்கும் தெரியுமா? பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துட்டு சாப்பிட வேண்டியதையெல்லாம் சாப்பிட்டுட்டு வரலாம்னு கூப்பிட்டா, ரொம்ப பிகு பண்ணிக்கறே..."

"இதோ ரெண்டரை மணி நேரத்துல போக முடியற பாண்டிச்சேரிக்குப் போய் அஞ்சு மணி நேரத்துல பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துட்டு வர்றதுக்கு ரெண்டு நாள் எதுக்காகப் போகணும்? நான் வரமுடியாது.....”

"அதான் சொல்லிட்டியே முடியாதுன்னு...விடு....”

"கோபப்படாதே பிரகாஷ்....ஸாரி.... அடடே... பேசிக்கிட்டே நடந்ததுல இவ்வளவு தூரம் வந்துட்டோமே. நேரம் போனதே தெரியலை. எனக்கு இங்கே பஸ் கிடைக்கும். நான் போகட்டுமா?”

"ஓ.கே. எனக்கு எதிர்ப்பக்கம் இருக்கற பஸ் ஸ்டேண்டலதான் பஸ் வரும். தேங்க்ஸ் ஃபார் யுவர் ட்ரீட் அட் 'இன்சவை'. நாளைக்கு போன் பண்றேன்....."

"டாட்டா....."

பிரகாஷ், எதிர்ப்பக்கம் போவதற்காக திரும்பிச் சென்றான். வினயா, தன்னுடைய பஸ்ஸின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

24

னி உலகமாக இயங்கும் கல்லூரி வளாகம்! தங்கள் உலகமே கல்லூரி வாழ்க்கைதான் என்பது போல கவலை மறந்து கவிபாடித்திரியும் கன்னியர் கூட்டம் நிறைந்திருந்தது.

சுபிட்சாவை சுற்றி அவளது தோழியர் குழுவும் நின்றிருந்தனர்.

"கல்லூரி கலைவிழாவுல நீ ஆடியதைப்பத்தி இன்னும் பேசிக்கிட்டிருக்காங்க. அந்த ஒரே ப்ரோக்ராம்ல நீ காலேஜோட சூப்பர் ஸ்டார் ஆகிட்ட சுபிட்சா....." சுபிட்சாவைக் கட்டி அணைத்தபடி கூறினாள் கல்பனா.

"ஏண்டி, ரொம்ப மிகைப்படுத்தி பாராட்டறீங்க? ஒண்ணு தெரியுமா? அன்னிக்கு என்னோட ப்ரோக்ராம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வழக்கம் போல எங்கம்மா வந்தாங்க. என்னை ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதனாலதான் அன்னிக்கு என்னால எதுவுமே மறக்காம அப்படி ஆட முடிஞ்சது. எங்கம்மா என்னை சுத்தி காத்து மாதிரி வந்துக்கிட்டே இருக்காங்க......"

"உனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ்ன்னு பேசிக்கறாங்கடி....." வர்ஷா கத்தினாள்.

"ஏண்டி இப்படிக் கத்தறே? இன்னும் அஃபிஷியலா இன்ஃபார்ம் பண்ணலையே. பார்க்கலாம்."

"சுபி, உன்னோட அழகும், நளினமான ஆட்டமும் தான் அன்னிக்கு ஹைலைட்!" ஷைலா பாராட்டினாள்.

"என்னிக்கோ முடிஞ்சு போன கலைவிழாவைப்பத்தி இன்னிக்கும் பேசிக்கிட்டிருக்கீங்க. எக்ஸாம் வரப் போகுதில்ல?"

"அது பாட்டுக்கு அது வரட்டும்....." அலட்சியமாய் பேசிய வனிதாவை முதுகில் தட்டினாள் சுபிட்சா.

"அப்புறம் நம்ம பாடு? எக்ஸாம்ல ஃபெயிலானா படு அசிங்கம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கூட படிப்பும் முக்கியம். எங்கம்மா நான் சின்னப்பிள்ளையா இருந்தப்ப 'படி' 'படி'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதனால, நான் நிறைய படிக்கணும். எங்கம்மாவோட ஆசையை நிறைவேத்தணும்ன்னு தீவிரமா இருக்கேன். எங்க வீட்ல என்னைப் படிக்க வைக்கறதுக்கு செலவு செய்ய சிரமப்படுவாங்க. அதனால ஸ்காலர்ஷிப்ல படிச்சு முன்னேறணும்.”

"சுபி சொல்றது நூத்துக்கு நூறு சரியானது. நாம படிக்கணும். நம்பளோட சொந்தக்கால்கள்ல நிக்கற அளவுக்கு அடிப்படையா இருக்கற ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்கணும்......" கல்பனா கூறியதும் வனிதா சிரித்தாள்.

"சிங்...சக்-சங்.....சக்" என்று கைகளால் தாளம் போட்டாள். அவள் அவ்விதம் செய்ததைப் பார்த்ததும் கல்பனா கோபப்பட்டாள்.

"என்னடி..... நான் சுபிட்சாவுக்கு ஜால்ரா தட்றேன்னு தானே நீ... இப்படி தாளம் போடற?"

"கல்பனாவுக்கு கோபத்தைப் பாரேன். வனிதா சும்மா... விளையாட்டுக்குத்தானே சொன்னா..." சுபிட்சா அவளை சமாதானப்படுத்தி, கோபத்தை மாற்றி சிரிக்க வைத்தாள். அதன்பின் தொடர்ந்து பேசினாள்.

"ஹாய்..... நான் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்... ஆனா அது நிச்சயமானதா என்னன்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும்... உங்ககிட்ட அந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளணும்ன்னு நினைச்சு சொல்றேன்... எங்க மேகலா அக்காவுக்கும் சக்திவேல் மச்சானுக்கும் கல்யாணம் பேசிக்கிட்டிருக்காங்க... மேகலாக்கா 'இப்ப கல்யாணம் வேண்டாம்'ன்னு முரண்டு பிடிக்கறாங்க. ஆனா வீட்ல எங்கப்பாவும், எங்க அத்தையும், அக்காகிட்ட பேசி முடிவு பண்ணுவாங்க."

"உங்கக்கா ஏன் வேண்டாம்ங்கறாங்க?" கல்பனா கேட்டாள்.

அவள் கேட்டதும் சந்தோஷத்தில் மலர்ந்திருந்த சுபிட்சாவின் முகம் சற்று வாடியது. மேகலா ஏன் திருமணத்திற்கு மறுக்கிறாள் என்கிற உண்மையான காரணம், அவளை வாட்டியது.

"என்னடி.... என்ன ஆச்சு? திடீர்னு ஏதோ யோசனைக்கு போயிட்டே..." கல்பனா அவளைப் பிடித்து குலுக்கினாள்.

"ஒண்ணுமில்லடி. எங்கம்மா ஞாபகம் வந்துச்சு...... அம்மா உயிரோட இருந்திருந்தா... எவ்வளவு நல்லா இருக்கும்? ஆனா... ஒரு கண் போனவங்களுக்கு மறுகண் இருக்கற மாதிரி எங்கம்மாவுக்கு பதில் எங்க அத்தையை 'அம்மா'வா குடுத்திருக்காரு கடவுள். அது ஒரு பெரிய ஆறுதல்...”

"உங்க அக்காவுக்குக் கல்யாணம் கூடி வரட்டும். எங்க எல்லாருக்கும் ஒரு ஜாலி கொண்டாட்டம் இருக்கு. ஒரு கலக்கு கலக்கிட மாட்டோம்?" வனிதா கூறியதும் அனைவரும் 'யே...' என்று மகிழ்ச்சியில் கூவினார்கள்.

மேகலா... சிந்தனையிலும், கவலையிலும் மூழ்கி இருந்தாள்.

'ஒருவரை மனசார விரும்பி, அவருடன் எல்லை மீறி பழகிய பழக்கத்தில் உருவான கருவையும் அழித்து, கருவிற்குக் காரணமான காதலனின் உயிரையும் பறி கொடுத்து, அதன்பின் இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்வது சரிதானா..... வருணுடன் நான் எல்லை மீறி பழகியது சரி இல்லை.... விதி, வருணின் உயிரைப் பறித்ததும் சரி இல்லை... இப்ப... சக்திவேல் மச்சானுக்கு என்னை மணமுடித்து வைக்கறதற்காக அத்தையும், அப்பாவும் பேசுவதும் சரி இல்லை. பிரகாஷின் மோசமான நடவடிக்கைகளும் சரி இல்லை. என் வாழ்க்கையில எதுதான் சரியா இருக்கு? காதல்...! அது சரிதான். ஆனால் என் நிலை தடுமாறி, தாலி கட்டிக் கொள்ளும் முன்பே வேலி தாண்டி, நெறி தவறியது. சரி அல்லவே? மிகவும் தவறல்லவா? ஒரு கணம் என்னை மறந்ததற்கு, மறக்கவே முடியாத துன்பமாகி விட்டதே... மணவாழ்க்கையில் இணையப் போகிறோம்ங்கற அசைக்க முடியாத நம்பிக்கையிலதானே என்னை... வருணுக்கு முழுமையாகக் குடுத்தேன்? அவரால உண்டாகிய இன்னொரு உயிரையும் அழித்து, எதிர்பாராத விதமா வருணையும் பறி குடுத்து... எனக்கு ஏன் இந்த நிலை? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் மனசாரக் கூட நினைச்சதில்லையே... அம்மா இருந்தா அம்மாகிட்ட சொல்லி அழலாம்...


தாயோட மடி இல்லாம தனியா என்னோட வேதனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்... ஒரு ஆறுதலா அத்தையும், கூடப்பிறந்த சுபியும் இருக்காங்க. அத்தைகிட்டயும் எல்லா விஷயத்தையும் பேச முடியாது. சுபிகிட்ட வருணை, நான் காதலிச்சதை மட்டும் சொல்ல முடிஞ்சது. காதலனுக்காக என்னையே விட்டுக்குடுத்துட்ட என்னோட தப்பை அவகிட்ட சொல்லமுயுமா?” நீண்ட நேர சிந்தனையில் இருந்த மேகலாவின் கவனத்தைக் கலைத்தாள் சுபிட்சா.

"என்னக்கா..... நானும் ரொம்ப நேரமா உன்னை கவனிச்சுக்கிட்டிருக்கேன். அப்படி என்ன யோசனை?”

"யோசிக்க யோசிக்க குழப்பம்தான் மிஞ்சுது..... நான் என்ன செய்ய முடியும்? அத்தையும், அப்பாவும் என்னோட கல்யாணம் பத்தி பேசினதைக் கேட்டதுல இருந்து கலக்கமா இருக்கு. கல்யாணத்துல எனக்கு விருப்பமே இல்லை. இப்படியே இந்தக் குடும்பத்து மகளா, இந்த வீட்லயே இருந்துடறதுதான் எனக்கு நிம்மதி...”

"ஒரே ஒரு திருத்தம்க்கா. இந்தக் குடும்பத்து மகளா..... இல்லை... மருமகளா... இந்த வீட்லயே நீ இருக்கறதுக்குத்தான் அப்பாவும், அத்தையும் பேசிக்கிட்டிருக்காங்க...”

"சுபி...ஒருத்தரைக் காதலிச்சுட்டு இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கறது துரோகம் இல்லையா?"

"இல்லை. நீ காதலிச்சவர் உயிரோட இருந்து, நீ வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா..... அதுக்குப் பேர்தான் துரோகம்...”

"பின்னே என்ன தியாகமா?”

"தியாகமும் இல்லை துரோகமும் இல்லை..... வாழ்க்கையின் இயல்போடு நம்ப மனநிலையை மாத்திக்கிட்டு, ஒரு புதுப் பாதையில அடி எடுத்து வைக்கணும். நேத்து வரைக்கும் நடந்ததை மறந்துட்டு, இதோ இந்த நிமிஷம் என்னங்கறதைப்பத்திதான் சிந்திக்கணும். முடிவு எடுக்கணும்."

"முடிவு எப்பவோ வந்தாச்சு என் வாழ்க்கையில.... வருணோட மரணம்....என் வாழ்க்கையின் முடிவு."

"ஒரு விடிவு பிறக்கலாம் இல்லையா? ப்ளீஸ் அக்கா..... நான் உன் தங்கச்சிதான். ஆனா என்னை உன்னோட ஃப்ரெண்டா நினைச்சுக்கோ. மனம் விட்டுப் பேசு. நான் சொல்றதையும் கேளு. உனக்கு ஒரு வசந்தகாலம் வரணும். அதுதான் என்னோட ஆசை. நடந்து, முடிஞ்சு போனதையே எப்பவும் நினைச்சுக்கிட்டு... உன்னை நீயே வருத்திக்கிட்டு... அதனால உன் கூடப்பிறந்த என்னையும் வருத்திக்கிட்டு இருக்க. அன்புக்கு வயசு கிடையாது. நம்ப அம்மா ஸ்தானத்துல இருந்து சொல்றேன்... நீ சக்திவேல் மச்சானை கல்யாணம் பண்ணிக்க. சக்திவேல் மச்சான் நல்லவர். நம்பளைப்பத்தி புரிஞ்சுக்கிட்டவர். வம்பு... தும்புக்குப் போகாத உயர்ந்த மனிதர். அன்பை வெளிக்காட்டத் தெரியாத அந்த மனசுக்குள்ள குடும்பப்பற்று, புரிந்து கொள்ளுதல்... இதெல்லாம் ஏராளமாய் நிறைஞ்சிருக்கு. அத்தைக்கு நெஞ்சு வலி பிரச்சனை. அப்பாவுக்கு வயசாயிருச்சு. நம்ம குடும்பத்தைச் சேர்ந்தவங்க கூடவே, நாம இருக்கறதுதான் அவங்களுக்கு பாதுகாப்பு. அது நம்ம கடமையும் கூட. நீ சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னாலும் வேற யாரையாவது நிச்சயமா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் முயற்சிப்பாங்க. 'கல்யாணமே வேண்டாம்னு' நீ பிடிவாதம் பிடிச்சா அப்பா மனசும், அத்தை மனசும் வேதனைப்படும். அது மட்டுமில்லை. அதுக்குக் காரணம் கேட்டுத் துளைச்சு எடுப்பாங்க.

“உன்னோட காதலைப்பத்தியும், உன் வருணோட மரணம் பத்தியும் அவங்களுக்குத் தெரிஞ்சா... துடிச்சுப் போயிடுவாங்க. வருண், உயிரோட இருந்திருந்தா... காதலைப்பத்தி பேசி அவங்களை சமாதானப்படுத்தி இருக்கலாம். அதுக்கும் வழி இல்லை. வருண், இறந்து போனதுனால நீ கல்யாணமே வேண்டாம்னு வைராக்யமா இருக்கறன்னு தெரிஞ்சா...அவங்களால அதைத் தாங்கிக்கவே முடியாது.

“வாழ்க்கையில பெரிசா... எதையுமே எதிர்பார்த்து வாழாத நம்ப அப்பாவும், அத்தையும், குடும்பத்தினர் அத்தனை பேரும் சந்தோஷமா வாழணும்ங்கற ஒரே ஒரு நியாயமான ஆசையை மட்டுமே நெஞ்சுல சுமந்துக்கிட்டிருக்காங்க. அந்த நியாயமான ஒரு ஆசையை நாம நிறைவேத்தி வைக்கறது நம்ப கடமை அக்கா. அடிக்கடி என் கண் முன்னால வர்ற நம் அம்மா... என்னைக் கேட்பாங்களே... ஏன் சுபி உங்கக்கா இப்பிடி வெறுமையா நிக்கறாள்ன்னு? அதுக்கு நான் என்னக்கா பதில் சொல்லுவேன்? உயிரோட இல்லாத அம்மாவைக்கூட விட்டுடு. உன் முன்னால, உன் கூடவே, உன் ரத்தத்தோட ரத்தமா, உன்னோட ஒரே உடன் பிறப்பா உன் மேல உயிரையே வச்சிருக்கற என்னைப் பாருக்கா...என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கோக்கா. விபத்துல இறந்து போயிட்ட வருணோட நீ கொண்ட உன் காதலையும் ஒரு விபத்தா மறந்து போயிடுக்கா. நீ சிரிச்சாத்தான் எனக்கு சந்தோஷம். நீ நல்லா வாழறதுதான் எனக்கு நிம்மதி. உன்னோட ஒளிமயமான எதிர்காலம்தான் என்னோட எதிர்காலத் திட்டங்களுக்கு நான் நடவடிக்கை எடுக்கறதுக்கு அடிப்படையா, அடித்தளமா இருக்கும்.

“நீ... சோகமாகி, உன்னோட வாழ்க்கை ஓய்ஞ்சு போயிட்டா...எனக்கு எதுவுமே இருக்காது. நீ நல்லபடியா வாழாம கடமைக்காக, கடனுக்காக வாழறதுன்னு முடிவு எடுத்துட்டா எனக்கு என்னோட படிப்புலயும் நாட்டம் இருக்காது. படிப்புக்கு அப்புறம் நான் என்ன செய்யணும்ன்னு கனவு கண்டுக்கிட்டிருக்கேனோ அந்தக் கனவெல்லாம் கலைஞ்சுபோயிடும். அதனால நானும் நிலைகுலைஞ்சு போயிடுவேன். உன்னோட சந்தோஷம்தான் எனக்கு தெம்பு அளிக்கற டானிக். நீ சந்தோஷமா இல்லைன்னா எனக்கு எதுவுமே இருக்காது. ஆசை ஆசையா 'சுபி' 'சுபி'ன்னு கூப்பிடுவியே... உன்னோட சுபி சொல்றேன்க்கா... நீ சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருப்ப. அவரோட அன்புல உன்னோட கடந்த காலம் மறக்கும். புதுசா ஒரு இன்ப வாழ்க்கை பிறக்கும். ப்ளீஸ்க்கா... எனக்காக உன்னோட சுபிக்காக... நீ... சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுணும்க்கா... ப்ளீஸ்க்கா..." உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்த சுபிட்சா... திடுதிப்பென்னு மேகலாவின் கால்களில் விழுந்து, அவளது பாதாங்களைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

சுபிட்சாவின் இந்த உணர்வு பூர்வமான செய்கையால் மனம் துவண்டு போன மேகலா, அவளைத் தூக்கி நிறுத்தினாள்.

"ச்சீ.... என்ன சுபி... இது.... நீ போய் என்னோட கால்ல விழுந்துக்கிட்டு... என் மேல இந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கற உனக்காக நான் எதுவும் செய்வேன். நீ 'உன் அக்கா நல்லா இருக்கணும்'னு நினைக்கற மாதிரி நானும் என்னோட தங்கை நல்லா இருக்கணும்ன்னுதான் நினைப்பேன். அதனால... நீ சொல்ற மாதிரி சக்திவேல் மச்சானை நான் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இன்னும் யோசிக்க நிறைய அவகாசம் வேணும். என்னோட மனசைத் தயார் பண்றதுக்கு எனக்கு டைம் குடு. அவசரமா என்னைக் கட்டாயப்படுத்தாத சுபி. ப்ளீஸ்.. வருண் கூட பழகின அந்த உணர்வுகள்ல இருந்து நான் மீண்டு வரணும். நீயும், சௌமியும் சொல்ற மாதிரி அதை மறக்கறது அவ்வளவு லேசான விஷயம் இல்லை.


ஆனா நீ இவ்வளவு தூரம் என்கிட்ட கெஞ்சறப்ப ஓரேடியா மறுக்க என்னால முடியல. என்னோட சூழ்நிலையில புதுசா ஒரு வாழ்க்கையைப்பத்தி நான் நிறைய சிந்திக்கணும். அதுக்கப்புறம்தான் முடிவு எடுக்கணும். பதறாத காரியம் சிதறாது. அதனால நான் கேட்டபடி எனக்கு டைம் குடு...."  

மேகலா பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபிட்சா உணர்ச்சி வசப்பட்டாள்.

"மாட்டேன்னு மறுத்துப் பேசிக்கிட்டிருந்த நீ... யோசிக்கிறதுக்கு டைம் கேட்டிருக்கியே... அதுவே எனக்குப் பெரிய விஷயம். நிதானமா யோசிச்சு நல்ல பதிலா சொல்லுக்கா... இது ஆடி மாசம். இனி ஆடி மாசம் முடிஞ்சப்புறம்தான் அத்தையும், அப்பாவும் உன் கல்யாணப் பேச்சை எடுப்பாங்க. அதுக்குள்ள உன் மனசைத் தயார் பண்ணிக்க. பழசை மறந்து, புதுசுக்கு மாறு. 'டைம் இஸ் தி பெஸ்ட் மெடிஸன்'னு சொல்லுவாங்க. காலம், உன் மனக்காயத்தை மாத்தும். புதிய வழியை ஏத்துக்கற பக்குவத்தைக் குடுக்கும். புது வாழ்க்கைக்கு நல்வரவு சொல்லி வரவேற்க, நீ... முழு மனசா... தயாரா இருக்கணும்..”

 "சரி சுபி..... உனக்காக... நான்...”

"நீ எதையும் செய்வ. எனக்குத் தெரியும். என் பட்டு அக்கா...... என் செல்ல அக்கா... மேகலாக்கா... மேகமாய் என் மேல அன்பு மழை பொழியற என் உயிர் அக்கா..." சுபிட்சா, மேகலாவைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தாள். சுபிட்சாவின் கண்ணீர் துளிகள் மேலாவின் கன்னங்களையும் சேர்த்து நனைத்தன. உடன் பிறந்த பாசத்தின் நேசமும், தியாகமும் அங்கே மலர்ந்திருந்தது.

25

நெஞ்சு வலி வந்ததில் இருந்து, கமலத்தை விடியற்காலமே எழுந்திருக்கக் கூடாது என்று அன்புக் கட்டளை இட்டிருந்தனர் சுபிட்சாவும், மேகலாவும். எனவே விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து காபி போடுவது, அத்தைக்கு ஹார்லிக்ஸ் கலந்து வைப்பது போன்ற முன் வேலைகளை மேகலா செய்து வைப்பது வழக்கம். சுபிட்சா, இரவில் படித்துவிட்டு மிக தாமதமாக தூங்குவதாலும் ஏழு மணிக்கு வேலைக்காரி உதவிக்கு வந்து விடுவதாலும் அவளை எழுப்புவதில்லை எட்டு மணி வரை.

சமையலறையில், டிகாஷன் போடுவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தாள் மேகலா. அவளுக்கு பின்புறம், பூனை போல மெதுவாக பாதம் பதித்து நடந்து வந்த பிரகாஷ், மேகலாவின் இடுப்பில் லேஸாக கை போட்டான். திடுக்கிட்டு திரும்பினாள் மேகலா.

"ச்சீ... என்ன வேலை இது?" என்று கடுமையாக பேசியபடி அவனது கையைத் தட்டி விட்டாள்.

சமையலறையின் சுவர் ஓரமாய் சாய்ந்து கொண்டான் பிரகாஷ்.

"எவனோ ஒருத்தன் செய்யாத வேலையையா நான் செஞ்சுட்டேன்?" பிரகாஷின் குத்தல் பேச்சு, மேகலாவுக்கு நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.

பிரகாஷ் தொடர்ந்தான்.

"என்னடா இது..... இப்படி ஓப்பனா பேசறானேன்னு பார்க்கறியா? இது சும்மா...ஒரு சின்ன சாம்பிள்... எவனோ தொட்ட இந்த உடம்பை..... நான் லேசா தொட்டதுக்கு இந்த துள்ளு துள்ளறே..."

மீண்டும் அவளைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தான்.

"மேகலா... இங்கே வாம்மா..." மூர்த்தி கூப்பிடும் குரல் கேட்டதும், மேகலா சமையலறையை விட்டு வேகமாய் வெளியேறியனாள்.

"கதவைப் பூட்டிக்கம்மா. நான் வாக்கிங் போயிட்டு வரேன்....." என்றபடி மூர்த்தி கிளம்பினார்.

அவர் வெளியேறியதும், மேகலா சமையலறைக்கு போகாமல் குளியலறைக்கு சென்று, கதவைத் தாள் போட்டுக் கொண்டு அழுதாள்.

பத்து நிமிடங்கள் ஆன பிறகு வெளியே வந்தாள். அப்பாவியாய், அன்றைய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

"என்ன? தப்பிச்சுட்டோம்னு பார்க்கறியா? நீ எங்கே போயிடுவ? எலியை பிடிக்கறதும், விடறதும்.... மறுபடி பிடிக்கறதும் விடறதுமாய் பூனையோட கொடூர விளையாட்டைப் பார்த்திருக்கியா? இன்னிக்கு நான் அந்தப் பூனையோட விளையாட்டைத்தான் விளையாண்டேன். நான் உன்னைக் கட்டிப் பிடிக்கறதும் நீ எட்டிப் போறதுமாய் இருந்த விளையாட்டு நல்லாத்தான் இருக்கு...."

"அப்பாவி போல வேஷம் போட்டுக்கிட்டு இப்படி ஒரு பாவியா இருக்கியே..... இந்தக் குடும்பத்துல உள்ள அத்தனை பேரும் உன்னை உத்தமன்... நல்லவன்னு நம்பிக்கிட்டிருக்காங்க..."

"நோ....நோ...நோ... நான் உத்தமன் இல்லை. நான் நல்லவன் இல்லை. ரொம்ப கெட்டவன்... அது, உனக்கு மட்டும்..."

"ப்ளீஸ் பிரகாஷ்.... என்னை சித்ரவதை பண்ணாதே. நீ என்னை விட ஆறு மாசத்துக்குத்தான் மூத்தவன், இருந்தாலும் உன்னைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கறேன். என்னை விட்டுடு. நீ எனக்கும் நல்லவனாவே இரு... ப்ளீஸ்..." மேகலா கெஞ்சினாள்.

"உன்னோட அழகும், இளமை பொங்கும் கவர்ச்சியும் என்னை உனக்கு வில்லனாக்குதே.... உன்னை அனுபவிச்ச அந்த யாரோ ஒருவன்... குடுத்து வச்சவன். மேல்லோக சொர்க்கத்துக்கு போறதுக்கு முன்னால பூலோக சொர்க்கமான உன்னை ரசித்து, ருசி பார்த்துட்டு போயிட்டான்...”

"ச்சீ.....நீ...நீ... மனுஷனா? உன்னோட முகமூடியை எல்லார் முன்னாடியும் கழற்றி எறிய எனக்கு ஒரு நிமிஷம் போதும்..."

"முடிஞ்சா செஞ்சுக்கோ. நீ செய்ய மாட்டே. ஏன்னா..... உனக்கு குடும்ப நேயம் கொஞ்சம் ஓவராவே இருக்கு. என்னோட மறுபக்கம், குடும்பத்துல எல்லாருக்கும் தெரிஞ்சுட்டா... அவங்களால அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கவே முடியாது. அதனால நீ என்னைப்பத்தியும், என்னோட திருவிளையாடல்களைப் பத்தியும் அவங்ககிட்ட மூச்சு கூட விடமாட்ட....”

"என்னை ப்ளாக் மெயில் பண்றியா?”

"யப்பாடா..... இதைப் புரிஞ்சுக்க உனக்கு இவ்வளவு நேரமாச்சா... " பிரகாஷ் பேசி முடிப்பதற்குள், யாரோ காலிங்பெல்லை அழுத்தும் ஒலி கேட்டது. மேகலா ஓடிச்சென்று, கதவைத் திறந்தாள். வாசலில் வேலைக்காரி காமாட்சி நின்றிருந்தாள்.

"இன்னாம்மா மேகலா..... இவ்வளவு சீக்கிரமா வந்துட்டேனேன்னு பாக்கறியா? இன்னிக்கு எங்க தெருவாண்டை இருந்து பத்து, முப்பது பேரு... புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்குப் போறோம். லீவு எடுத்தா... நீ திட்டுவியே... அதான் ஏழு மணிக்கு வர்ற நான் இன்னிக்கு ஆறுமணிக்குள்ள வந்துட்டேன். நான் வாசல் பெருக்கி, மொழுகிட்டு வரேன். அதுக்குள்ள உன் கையால கொஞ்சம் காபியோ... டீயோ... போட்டுக் குடுத்துடும்மா. காபியை குடிச்சுட்டேன்னா... சும்மா ரெயில் வண்டி ஓடற மாதிரி கடகடன்னு வேகமா முடிச்சுக் குடுத்துட்டு நான் போய்க்கினே இருப்பேன். அத்தையம்மா எழுந்தப்புறம்... என்னென்ன காய் நறுக்கணும், எத்தனை வெங்காயம் வெட்டணும்னு கேட்டு வைம்மா..." வாய் மூடாமல் பேசிய காமாட்சி, துடைப்பத்தை எடுக்கச் சென்றாள்.

பிரகாஷின் துர்ச்செயல் அளித்த அதிர்ச்சியால் மன இறுக்கமாகிய மௌனத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள் மேகலா.

சமையலறையில் அத்தைக்கு ஒத்தாசையாக சின்னச் சின்ன வேலைகளை முடித்த மேகலா, சமையலறையை விட்டு வெளியே வந்து, அறைக்குச் சென்றாள். அங்கே இருந்த மேஜை மீது ஒரு அழகிய வாழ்த்து அட்டை, ஃபேன் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.


"கார்ட் சூப்பரா இருக்கே....." என்று நினைத்த மேகலா, அதை எடுத்துப் பார்த்தாள், பிரித்தாள். உள்ளே ஒரு மூலையில் இரட்டை இதயம் படம் வரைந்து அதற்கு கீழே 'பிரகாஷ் மச்சானுக்கு' என்று எழுதி சுபிட்சா கையெழுத்து போட்டிருந்தாள். 'ஹாப்பிபர்த்டே' என்று அவள் கைப்பட எழுதி இருந்தாள்.

"பிரகாஷை.... சுபிட்சா காதலிக்கிறாளா...இல்லை இது... சாதாரண அன்பு நிமித்தத்தால் வாங்கி எழுதப்பட்டதா..." எதுவும் புரியாமல் தவித்தாள் மேகலா.

"கடவுளே... சுபிட்சாவின் அன்பு... காதலாக இருக்கக் கூடாது. என் தங்கை... புடம் போட்ட தங்கம் போன்றவள். அவளுடைய எதிர்காலம் பௌர்ணமி நிலவாய் ஒளி வீசணும்... அமாவாசை இருட்டாய் இருண்டு போயிடக் கூடாது." உள்ளத்தின் படபடப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆபீசுக்கு உடுத்திச் செல்ல வேண்டிய புடவை, துண்டு எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

குளித்து முடித்து, விளக்கேற்றி விட்டு சில நிமிடங்கள் கண் மூடி பிரார்த்தனை செய்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் மேகலா.

"ஹாவ்....." கொட்டாவி விட்டபடி படுக்கையில் நெளிந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருந்தாள் சுபிட்சா.

"என்ன சுபி.... இன்னிக்கு காலேஜுக்கு போற மாதிரி இல்லியா? ஏன் இவ்வளவு நேரத்தூக்கம்?”

"ஒண்ணுமில்லைக்கா. சோம்பலா இருக்கு. இன்னிக்கு கொஞ்சம் லேட்டாக் கூடப் போகலாம். அதனால நல்லா தூங்கிட்டேன்”

"சரி, எழுந்திரு....”

"அம்மா மாதிரியேதான் நீயும். எழுந்திரு எழுந்திருன்னு காலையில வந்து அம்மா எழுப்பிக்கிட்டே இருப்பாங்க...." என்று கூறியவள், எழுந்து வந்து, மேகலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"ஏய்...என்ன... இது..." மேகலா கேட்டதும் தன் கைகளை எடுத்துக் கொண்ட சுபிட்சா, கைகளைக் கட்டிக் கொண்டு, தலையை சாய்த்து மேகலாவைப் பார்த்தாள்.

"எங்க அக்கா, நான் சொல்றதைக் கேட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சாளே அதுக்குத்தான் இந்த அணைப்பு. பார்த்தியா? நீ சம்மதம் சொன்னதும் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு?”

"ஏ சுபி... நான் சம்மதம்னு சொல்லவே இல்லையே. 'யோசிக்கறதுக்கு டைம் குடு'ன்னு தானே கேட்டேன்? நைஸா... நான் சம்மதம் சொன்ன மாதிரி பேசறியே..."

"இத்தனை நாளா என்ன சொல்லிக்கிட்டிருந்தே? கல்யாணமே வேண்டாம். வேண்டாம்ன்னுதான சொல்லிக்கிட்டிருந்தே? இப்ப... யோசிக்க டைம் கேட்டிருக்கே. யோசிச்சு... 'சம்மதம்'ங்கற பதிலைத்தான் நீ சொல்லுவனு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குக்கா."

"என்னோட எதிர்காலத்துக்கு நீ இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறதைப் பார்க்கும் போது..... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்குத் தங்கையாப் பிறக்கணும்ன்னு சாமியை வேண்டிக்கறேன்...”

"பின்னே? வேற யாருக்காவது அக்காவா வேற ஜென்மத்துல கூட உன்னைப் பிறக்க விட்டுடுவேனா என்ன?"

"உன்னோட பாசத்துக்கு முன்னால இந்த உலகமே எனக்கு தூசுதான்… சரி, சரி... நேரமாச்சு. போய் பல் விளக்கிட்டு, ஆயில் புல்லிங் பண்ணிட்டு, குளிச்சுட்டு வா..." சுபிட்சா பீரோவைத் திறந்து, உடையைத் தேர்ந்தெடுத்தாள். மேகலா, கண்ணாடியைப் பார்த்து பவுடர் போட ஆரம்பித்தாள்.

"சரிக்கா."

பீரோவில் இருந்து ஒரு உடையை எடுப்பதற்குள், பல உடைகளைக் கலைத்துப் போட்டாள் சுபிட்சா. இதைக் கவனித்த மேகலா, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டே சுபிட்சாவை செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

"ஏ.....சுபி... டி.வி.யில பழையபடம் பார்த்திருக்கியா? வைஜெயந்தி மாலா நடிச்ச பழைய படத்துல, அவங்க இப்படித்தான் பீரோவுல இருந்து ஒவ்வொரு துணியா எடுத்துக் கீழே போடுவாங்க. கண்டபடி வீசுவாங்க. அதுக்கப்புறமாத்தான் அவங்க போட்டுக்கறதுக்காக ஒரு ட்ரஸ்ஸை செலக்ட் பண்ணுவாங்க. அந்த மாதிரி நீ இப்ப எடுத்துப் போடற... என்னிக்குதான் இந்த விஷயத்துல நீ திருந்தப் போறியோ...”

"என்கிட்ட நீ திருத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே....." விளையாட்டாக சுபிட்சா பேசியது உண்மையாகவே நடக்கப் போகிறது என்பதை அப்போது மேகலாவும் அறியவில்லை... சுபிட்சாவும் அறியவில்லை.

"அதெல்லாம் இருக்கட்டும். கலைத்துப் போட்ட ட்ரஸ்ஸையெல்லாம் எடுத்து அடுக்கி வச்சிட்டு, குளிக்கப் போ...." மேகலா, செல்லமாய் மிரட்டினாள்.

"அசுக்கு...பிசுக்கு... ஆசையைப்பாரு... நீயே மடிச்சு வைச்சுடுக்கா. நான்தானே எப்பவும் எல்லாத்தையும் அடுக்கறேன். டாட்டா..." என்று கூறிவிட்டு குளிப்பதற்காக ஓடினாள்.

"ஏ குறும்புக்காரி.... ஒரு நிமிஷம் நில்லு... டேபிள் மேல ஒரு க்ரீட்டிங் கார்ட் பார்த்தேனே...." சுபிட்சா, தன்னிடம் அதைப்பற்றி சொல்லாமல் மறைக்கிறாளோ என்ற எண்ணத்தில் அது பற்றி ஏதும் தெரியாததுபோல, கேட்டு அவளை ஆழம் பார்த்தாள் மேகலா.

"அதுவா.... உள்ளே பார்க்கலியாக்கா? நாளைக்கு பிரகாஷ் மச்சானோட பிறந்தநாளாச்சே... அவருக்கு குடுக்கறதுக்காக வாங்கி வச்சிருக்கேன். உன்னோட கையெழுத்துக்காகத்தான் வெயிட்டிங். நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள கையெழுத்து போட்டு வை...”

"ம்கூம். நான் மாட்டேன்....”

"ஏன்? பிரகாஷ் மச்சான் கூட எதாவது கோபமா?”

"கோபமும் இல்ல ஒண்ணும் இல்லை.... போடலன்னா விடேன்.... மணியாச்சு... நீ குளிக்கப் போ.”

"என்னமோ.... திடீர் திடீர்னு அக்காவுக்கு மூடு மாறிடுது. கல்யாணம் ஆனாத்தான் சரிப்படுமோ என்னமோ..." சுபிட்சா முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

'இவளோட வாயைக் கிண்டிப்பார்த்தாச்சு. வெகுளித்தனமா பேசறாளே தவிர உண்மை என்னன்னு கண்டுபிடிக்க முடியலியே....' தலையை வாரி க்ளிப் போட்டுக் கொண்டிருந்த மேகலாவிற்கு எதுவும் புரியவில்லை.

ஆபீஸ் போவதற்குரிய உடையலங்காரம், முக அலங்காரம் முடிந்தபின் ஹேண்ட்பேக்-ஐ எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். பிரகாஷின் கையில் லன்ஞ்ச் பாக்ஸைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கமலம். மேகலா இருந்த திசை பக்கம் கூட பிரகாஷ் பார்க்கவில்லை.

"வாம்மா மேகலா, சாப்பிட வா, சுபிட்சா எங்கே....?”

"அவ குளிச்சுட்டு வருவா...." மேகலா சாப்பிட உட்கார்ந்தாள்.

அவளது தட்டில் மூணு இட்லிகளை வைத்து, தக்காளி சட்னியை வைத்தாள் கமலம்.

"போதும் அத்தை." மேகலா கூறினாள்.

"என்னம்மா நீ.... எனக்கு ரெஸ்ட் குடுக்கணும்னு, காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திருச்சு வேலை செய்யற... ஆபிசுக்கும் போய்... அங்கேயும் வேலை செய்யணும்... நல்லா சாப்பிடணும். இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்க”

"ஐய்யோ... வேண்டாம் அத்தை. வயிறு முட்ட சாப்பிட்டுட்டு போனா ஆபீஸ் போய் தூக்கம் வரும் அத்தை. போதும் அத்தை. லன்ஞ்ச் பாக்ஸ்லயும் நிறைய போட்டு அனுப்பிடாதீங்க. மதியம் சாப்பிட்டுட்டு... தூக்கம் கண்ணை சுழட்டிக்கிட்டு வருது அத்தை...”

"இந்தக் காலத்துப் பொண்ணுங்க நீங்கள்லாம் பாவம் மேகலா. அந்தக் காலத்துல நாங்கள்லாம் மாங்கு மாங்குன்னு வீட்டு வேலை பார்த்தாலும் மத்யானம் சாப்பிட்டப்புறம் குறைஞ்ச பட்சம் அரைமணி நேரமாவது அசந்து தூங்குவோம். ஆபீஸ்ல மாதிரி உட்கார்ந்துகிட்டே வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


உடம்புக்கு முடியலியா? கொஞ்ச நேரம் படுத்துக்கலாம். காலம் மாறிப் போச்சு. பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிச்சாகணும்ங்கற நிலைமை வந்துருச்சு. நீங்க ஓடி ஓடி உழைக்கறதைப் பார்க்கும் போது... கஷ்டமா இருக்கும்மா....”

"எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை அத்தை. குடும்பப் பொறுப்பை நீங்க பார்த்துக்கறீங்க. சிரமமே இல்லாம நான் பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டு வந்துக்கிட்டிருக்கேன். ஆபீஸ் ஒரு தனி உலகம் அத்தை. எனக்கு பிடிச்ச வேலை. அங்கே நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. நீங்க கவலைப்படும்படியா எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை அத்தை...." சாப்பிட்டு முடித்த மேகலா எழுந்திருக்கும் பொழுது சுபிட்சா வந்தாள்.

"செல்ல மகாராணி..... வந்துட்டாங்க பாரு" கமலம் கேலி செய்தபடியே சுபிட்சாவிற்கு சாப்பிட எடுத்து வைத்தாள். அழகாக உடுத்தி, அழகாக அலங்கரித்து, தன் அழகுக்கு அழகு சேர்த்திருந்தாள் சுபிட்சா. குட்டி ஜிமிக்கிகள் காதோரம் ஆட, கமலத்திடம் சிரித்து பேசிக் கொண்டே சாப்பிட்டாள் சுபிட்சா.

அவள் சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் இருவருக்கும் லன்ஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள் கமலம்.

"வா சுபி. போகலாம்" மேகலா அழைத்ததும், சுபியும் அவளது பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். மேகலாவும், சுபிட்சாவும் கிளம்பினார்கள்.

மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்த மூர்த்தியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர்.

அவர்கள் இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கமலம் பெருமூச்செறிந்தாள்.

26

'தாய் இல்லாத இந்தப் பொண்ணுங்க அந்தக் கஷ்டமே இல்லாம வாழ்நாள் முழுசும் திவ்யமா வாழணும்' மனதார வாழ்த்திய கமலம், அடுத்து மூர்த்திக்கு சாப்பிட எடுத்து வைப்பதில் ஈடுபட்டாள்.

"அண்ணா....நாளைக்கு பிரகாஷுக்கு பிறந்தநாள். எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகணும்னு ஆசைப்படறேன். நல்ல வேளை இந்த வருஷம் அவனோட பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாயிடுச்சு. இல்லைன்னா எனக்கு லீவு போட முடியாது... உனக்கு லீவு போட முடியாதுன்னு ஆளாளுக்கு சொல்லுவாங்க. இன்னிக்கு ராத்திரி பிள்ளைங்ககிட்ட பேசணும். உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”

"எனக்கென்ன கமலம் பிரச்சனை? நீ விருப்பப்படறே. கண்டிப்பா போகலாம். நல்ல நாளும் அதுவுமா கோவிலுக்குக் கூட போக முடியாம அப்படி என்ன பிரச்சனை வந்துடப் போகுது? நிச்சயமா போகலாம். ஃபோன்கிட்ட இருக்கற டெலிஃபோன் புக்கை எடு. 'கால் டேக்ஸி' நம்பர் எழுதி வச்சிருப்பேன். நாளைக்கு கோவிலுக்கு போறதுக்கு கார் சொல்லிடலாம். எந்தக் கோவிலுக்கு போகணும்?”

"பாண்டிச்சேரியில இருக்கற மணக்குள விநாயகர் கோவில் போகலாமா?”

"வேண்டாம் கமலம். போக மூணு மணி நேரம்... வர மூணு மணி நேரம் கார்ல பயணிக்கணும். உனக்கு சோர்வா ஆயிடும்...”

"அப்பிடின்னா.... திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு போகலாமா?”

"சரி கமலம். போகலாம்."

"அப்பிடின்னா நாளைக்கு மத்யானம் சாப்பாட்டுக்கு கட்டு சாதம் செஞ்சு எடுத்துக்கலாம். தேவையான சாமானை மேகலாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டா வரும்போது வாங்கிட்டு வந்துடுவா....”

"எதுக்கு கமலம் வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு? அங்கே பக்கத்துல நிறைய ஹோட்டல் இருக்கு. அங்கே சாப்பிட்டுக்கலாம். தண்ணி மட்டும் எடுத்துக்க....”

"சரிண்ணா.... எனக்கு ஃப்ளாஸ்க்ல காபி எடுத்துக்கறேன். ஹோட்டல் காபி எனக்கு பிடிக்காது.”

"உன் இஷ்டம்மா. சிரமப்படாம போயிட்டு வரணும். அவ்வளவுதான்.”

"எனக்கு ஒரு சிரமமும் இல்லை அண்ணா." பேசிக்கொண்டே டெலிஃபோன் புக்கை எடுத்து வந்து கொடுத்தாள் கமலம்.

"கோவிலுக்குப் போகணும்ன்னு நான் நினைக்கறது பிரகாஷேரட பிறந்த நாளுக்காக மட்டுமில்லண்ணா....இந்த மாசம் முடிஞ்சு ஆவணி பிறந்தப்புறம் சக்திவேல்ட்டயும், மேகலாட்டயும் கல்யாணம் பத்தி பேசணும். அதுக்கு முன்னால கோவிலுக்குப் போகணும்னு தோணுச்சு. அதுக்கும் சேர்த்துதான் கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்.”

"நல்ல விஷயம் துவங்கறதுக்கு முன்னால கோவிலுக்குப் போய் தெய்வ சந்நிதானத்துல பிரார்த்தனை பண்ணிட்டு துவங்கினா... நல்ல பலன் இருக்கும் கமலம்."

"அதுங்க ரெண்டும் ஒரு மனசா சம்மதிச்சா எனக்கு நிம்மதியா இருக்கும்”

"நமக்கு நன்மை எதுவோ அதுவே நடக்கும்னு நம்பு கமலம். மனசை அலட்டிக்கிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே... பிள்ளைங்கக்கிட்ட வெளிப்படையா பேசிட்டு அவங்களோட சம்மதத்துலதான் எல்லாமே செய்யப் போறோம்? அதனால எந்த பிரச்சனையும் வராது. நிம்மதியா இரு.”

"சரிண்ணா. நீ எனக்கு ஆதரவா இருக்கறது யானை பலம் சேர்ந்த மாதிரி....”

"யானை பலமெல்லாம் ஒரு காலத்தோட முடிஞ்சுடுச்சு. மனோன்மணி என்னை விட்டுப் போனதில இருந்து என்னோட பலமும் போயிடுச்சு... நிம்மதியும் போயிடுச்சு. ரெண்டு பொண்ணுங்களை என் தலையில சுமத்திட்டு அவ போய் சேர்ந்துட்டா. அதுங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சு, அதுங்களை சந்தோஷமா வாழ வைக்கற கடமையை செஞ்சுட்டேன்னா.... மனோன்மணியோட ஆத்மா சாந்தி அடையும். பொண்ணுங்க மேல உயிரையே வச்சிருந்தா. இவ்வளவு சீக்கிரம் உயிரை விட்ருவான்னு எதிர்பார்க்கவே இல்லை...”

"என்னை டென்ஷன் ஆகாதேன்னு சொல்லிட்டு நீ என்னடான்னா மனோன்மணியை நினைச்சு கண் கலங்கிக்கிட்டு இருக்க.... மனோன்மணியோட ஆசீர்வாதத்தினால் மேகலாவும், சுபிட்சாவும் நல்லா இருப்பாங்க...”

"சரிம்மா. நான் போய் பால் வாங்கிட்டு வந்துடறேன்."

"சரிண்ணா." மூர்த்தி கிளம்பினார்.

சொக்கலிங்கத்தின் ஆபீஸ் அறை. அவரது இருக்கைக்கு முன்பாக வேணுவும், கிரியும் உட்கார்ந்திருந்தனர்.

"என்ன கிரி... என்ன விஷயம்? ஆபீஸ்ல நீ நிறைய கத்துக்கிட்டதா நம்ப மேனேஜர் சீதாராம் சொன்னாரு. சந்தோஷமா இருக்கு. அது சரி... இப்ப எதுக்காக என்னைப் பார்க்க வேணுவோட வந்திருக்க?"

"அது... அது... வந்துப்பா..."  கிரியால் மேலே பேச இயலவில்லை தயங்கினான். வேணு ஆரம்பித்தான்.

"சுபிட்சான்னு ஒரு பொண்ணைப்பத்தி கிரி சொன்னான்ல அங்கிள்... அந்தப் பொண்ணு வீட்ல பேசி... இப்போ உறுதி பேசிட்டு, அவங்க வசதிக்கேத்தபடி ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு உங்ககிட்ட கேக்கணும்னு சொல்லி, என்னையும் கூட்டிக்கிட்டு வந்தான்..."

"ஓ...அப்படியா?... இதுவும் நல்ல யோசனைதான். ஆனா பொண்ணு வீட்ல ஒத்துக்கணுமே?" 

"அப்பா... ப்ளீஸ்ப்பா... கேட்டுப்பாருங்கப்பா. உங்க செகரட்டரி ஷோபா ஜெகன், நேரடியா சுபிட்சாவோட அக்காகிட்ட பேசலையே... ஷோபா ஜெகனை அந்த அக்காவைப் பார்த்து பேசச் சொல்லுங்களேன்ப்பா...."  

"அந்தப் பொண்ணோட அக்காவுக்கு கல்யாணம் முடியட்டும். அதுக்கப்புறம் கேட்கலாம். இப்ப கேக்கறது அவ்வளவா முறையான செயல் இல்லையேன்னு யோசிச்சேன். இருந்தாலும் உன்னோட ஆசைக்காக நான் அதைப்பத்தி அந்தப் பொண்ணோட அக்காகிட்ட பேசச் சொல்றேன்...."

"அங்கிள்... உங்களை மாதிரி அப்பா கிடைக்க, கிரி குடுத்து வச்சிருக்கணும்."


"பரம்பரை பணக்கார வம்சா வழியில பிறந்து வளர்ந்து, வாழ்ந்துக்கிட்டிருக்கற கிரியைப் போல கட்டுப்பாடான மகனை அடையறதுக்கு நான்தான் வேணு குடுத்து வச்சிருக்கணும். என்னோட மகன் ஆசைப்பட்டது அவனுக்குக் கிடைக்கணும். அவன் நினைச்சது நடக்கணும். அதுதான் எனக்கு நிம்மதி."

"கரும்பு தின்ன கசக்குமா அங்கிள்? நம்ப கிரியை வேண்டாம்னு நிராகரிக்க, யாருக்கு மனசு வரும்?"

"இந்தக் காலத்து பொண்ணுங்களோட விருப்பு, வெறுப்புகளை புரிஞ்சுக்கவே முடியலை. நம்ப ஸ்கூல், காலேஜ்ல படிக்கற பொண்ணுங்க விஷயமா எத்தனையோ பிரச்சனைகளை நான் சந்திக்கிறேன்... மகள் நல்லபடியா வாழணும்னு தங்களோட சொத்து பத்தைக்கூட வித்து அவளுக்கு நல்லா படிச்ச மாப்பிள்ளையை பெத்தவங்க பார்த்து வச்சிருக்க, இந்தப் பொண்ணுங்க 'எனக்கு அவன் வேண்டாம், நான் ஒருத்தனை மனசுல நினைச்சுருக்கேன். அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்'னு முரண்டு பிடிப்பாங்க. நல்லது… கெட்டது தெரியாத வயசுல தங்களோட வாழ்க்கைத்துணையை கண்மூடித்தனமா தேர்தெடுக்கறாங்க. நம்ப முயற்சியை நாம செய்வோம். அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி... என்னோட சொல்வாக்கை முன்வச்சோ...செல்வச் செழிப்பை முன்வச்சோ அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களை வற்புறுத்தமாட்டேன். பொண்ணோட அக்கா வேலை செய்யற விளம்பர கம்பெனி ஆபீஸ்க்குப் போய் மறைமுகமா அந்தப் பொண்ணோட குடும்பத்தைப் பத்தின தகவல்களை ஷோபா ஜெகன் விசாரிச்சிட்டு வந்து சொல்லிட்டாங்க. இனி அந்தப் பொண்ணோட அக்காவை நேரடியா சந்திச்சு பேசச் சொல்லி ஷோபா ஜெகனை அனுப்பலாம். ஒரு பெண் கூட இன்னொரு பெண் விவேகமா பேசினா எந்த பிரச்சனையும் வராம இந்த விஷயத்தில பேச்சு வார்த்தை நடத்தலாம்."

"தேங்க்ஸ்ப்பா..." வேணுவுடன் வெளியே கிளம்பினான் கிரி.

27

மேகலா பணிபுரியும் 'ஃபைவ் எஸ்' விளம்பர நிறுவனத்தின் அலுவலகம். டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்த மேகலா, அவளுக்கு எதிரே நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, கையசைத்து உட்காரும்படி கேட்டுக் கொண்டாள்.

அந்தப் பெண்மணி உட்கார்ந்தாள். இலைப்பச்சை நிறத்தில் மெரூன் பார்டர் போட்ட ஸில்க் காட்டன் புடவை உடுத்தி இருந்தாள். அவள், புடவை உடுத்தி இருந்த நேர்த்தி, கண்களைக் கவர்ந்தது. சற்றே குட்டையான முடியை ஒன்று சேர்ந்து இலைப்பச்சை வண்ணத்தில் க்ளிப் போட்டிருந்தாள்.

வயதின் ஏற்றம் முகத்தில் தென்படவில்லை. நல்ல நிறம். கரிய கண்கள். அழகு நிலையத்தில் வடிவமைக்கப்பட்ட புருவங்கள். மிகச் சிறியதாய் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தாள். மரியாதைக்குரிய தோற்றத்தில் காணப்பட்ட அந்தப் பெண்மணி, மேகலா ஃபோன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தாள்.

மேகலா பேசி முடித்ததும், அவளது ஹேண்ட்பேக்கில் இருந்து விசிட்டிங் கார்ட் ஒன்றை எடுத்து, மேகலாவிடம் கொடுத்துக் கொண்டே பேசினாள்.

"என் பேர் ஷோபா ஜெகன். மிஸ்டர் சொக்கலிங்கத்தோட செக்கரட்டரி. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஒரு முப்பது நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியுமா?"

"ஓ.யெஸ். கொஞ்சம் காத்திருங்க. பர்மிஷன் போட்டுட்டு வரேன். பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு. அங்கே போயிடலாம்.”

"ஓ... தாராளமா..." மேகலா, தனக்கு பதிலாக ஷீலா என்ற பெண்ணை ஃபோன் அட்டெண்ட் பண்ணச் சொல்லிட்டு கிளம்பினாள்.

ஷோபா ஜெகனும், மேகலாவும் அருகிலுள்ள 'காபி ஷாப்'ற்கு சென்றனர். காபி ஆர்டர் கொடுத்தனர்.

"ஏற்கெனவே உங்க ஆபீஸ்க்கு நான் வந்திருக்கேன். ஆனா நேரடியா உங்களை சந்திக்கலை. அதைப்பத்திதான் இப்ப உங்ககூட பேச வந்திருக்கேன். உங்க பேர் மேகலா. உங்க வீடு கே.கே.நகர்ல இருக்கு. உங்களுக்கு ஒரு தங்கச்சி. பேர் சுபிட்சா. லிங்கம் ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.ஏ. படிக்கறாங்க. உங்களுக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். அத்தைதான் அம்மா மாதிரி பார்த்துக்கறாங்க. உங்க அப்பா மூர்த்தி, ரிட்டயர்டு ரெயில்வே உத்யோகஸ்தர். உங்க அத்தைக்கு ரெண்டு மகன்ங்க. மூத்தவர், ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கறாரு. இளையவர் காலேஜ் ஸ்டூடண்ட். உங்க ரெண்டு குடும்பமும் ஒரே வீட்ல ஒண்ணா வாழறீங்க... உங்களுக்கு கல்யாணம் பேசிக்கிட்டுருக்காங்க." மூச்சு விடாம பேசிய ஷோபா ஜெகன், தங்கள் குடும்ப விவரங்களை கடகடவென அடுக்கியதைக் கேட்டு சற்று பயந்தாள் மேகலா.

"என்ன மேகலா, இதெல்லாம் உங்க ஆபீஸ்க்கு வந்து மறைமுகமா நான் உங்க குடும்பத்தைப்பத்தி சேகரிச்ச தகவல்கள்..."

"எதுக்காக இந்த மறைமுகம்?"

"அதான் இப்ப நேர்முகம் காணல் நடத்திட்டிருக்கேனே. சொல்றேன்...." என்று பேச ஆரம்பித்தாள் ஷோபா ஜெகன்.

"லிங்கம் கல்லூரி நிறுவனங்களின் அதிபர்தான் மிஸ்டர் சொக்கலிங்கம். நல்லவர். பணக்காரர்ன்னாலும் கூட பண்பாளர். தரும சிந்தனை உள்ளவர். சுய விளம்பரத்தை விரும்பாதவர். கல்வித்துறை முன்னேற பல வழிகள்ல உதவி செய்றவர். இவருக்கு ஒரே மகன். பேர் கிரிதரன். 'கிரி'ன்னு கூப்பிடுவாங்க. கிரியோட அம்மா இறந்து போயிட்டாங்க. கிரியும் நல்லவர். வயசு இருப்பத்தி ஆறு. எம்.பி.ஏ. க்ராஜுவேட். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது... லிங்கம் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிக்கற உங்க சுபிட்சா, காலேஜ் விழாவுல டான்ஸ் ஆடறதைப் பார்த்திருக்காரு கிரி. உங்க தங்கை சுபிட்சாவைப் பார்த்த அந்த நிமிஷமே கிரியோட மனசு, சுபிட்சாகிட்ட காணாமப் போயிடுச்சாம். கல்யாணம் பண்ணிணா அந்தப் பொண்ணைத்தான் பண்ணிக்கணும்னு இருக்காராம்.

“எந்தப் பையனாவது அவன் காதல்ல விழுந்ததை உடனே அவங்கப்பாகிட்ட சொல்லுவானா? கிரி சொல்லி இருக்கார். என்னோட முதலாளி சொல்லித்தான் நான் உங்க குடும்பத்தைப்பத்தி விசாரிச்சேன். பெரிய பணக்கார இடம்ன்னு பயந்துடாதீங்க. அந்தப் பண்பான குடும்பத்துல வாழ்க்கைப்பட உங்க தங்கை குடுத்து வச்சிருக்கணும். எங்க முதலாளிக்காக நான் ஏதோ அவங்க குடும்பத்துக்கு சாதகமா பேசறேன்னு நினைச்சுடாதீங்க. உண்மையிலேயே நல்ல குடும்பம். ஏதாவது ஒரு பிரச்சனைன்னா தாராளமா நீங்க என்னைக் கேக்கலாம். நான் கியாரண்டியா சொல்றேன். கண்ணை மூடிக்கிட்டு உங்க தங்கையை கிரிக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கலாம். உங்க தங்கை தொடர்ந்து படிக்கறதுக்கு ஆட்சேபணை சொல்லமாட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க தங்கை விருப்பப்பட்டா, எங்க முதலாளியோட கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கலாம். முழு சுதந்திர உணர்வோடு உங்க தங்கை அங்கே வாழலாம். பங்களாக்கள், கார்கள், சொகுசான வாழ்க்கைக்கு நடுவுல இதையெல்லாம் விட உயர்ந்த, மதிப்பு வாய்ந்த 'சுதந்திரம்'ங்கற உரிமையை குடுப்பாங்க. இது பெரிய விஷயம்தானே? நல்லா யோசிங்க. இப்ப அவசரம் இல்லை.

“இதுதான் பையன், இதுதான் பொண்ணுன்னு உறுதி பேசி நிச்சயம் பண்ணிட்டு உங்க வசதிப்படி, இஷ்டப்படி ரெண்டு வருஷம் கழிச்சுக் கூட கல்யாணத்தை வச்சுக்கலாம்னு எங்க முதலாளி சொன்னாரு.


இப்போதைக்கு என்னை மீடியேட்டரா அனுப்பின அவர், நீங்க சரின்னு சொன்னா முறைப்படி உங்க வீட்டுக்கு வருவார். நான் என்னோட இருபது வயசுல இருந்து லிங்கம் கல்வி நிறுவனங்களோட ஆபீஸ்ல வேலை பார்க்கறேன். எனக்கு இப்ப நாற்பது வயசு. இருபது வருஷமா அங்கே வேலை பார்க்கறேன். என்னை அவரோட குடும்பத்துல ஒருத்தியாத்தான் மதிக்கறார். அன்பு செலுத்தறார். எனக்கு அவர்தான் மாப்பிள்ளை பார்த்து, தன் சொந்த மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கற மாதிரி என்னோட கல்யாணத்தை நடத்தி வச்சார். அதனாலதான் இந்த நல்ல விஷயத்தைப் பேச என்னை அனுப்பி இருக்கார். இனிமேல் நீங்கதான் உங்க வீட்ல பேசி, ஒரு நல்ல பதில் சொல்லணும்..." நீளமாக பேசிய ஷோபா ஜெகன், புன்னகையோடு தன் பேச்சை முடித்தாள். பின்னர் அவளே தொடர்ந்தாள், என் ஹஸ்பெண்ட் மிஸ்டர் ஜெகன், பாலக்காட்டுக்கும், சென்னைக்கும் அடிக்கடி பறக்கற உத்யோகம் பார்க்கிறார். எங்களுக்கு ஒரே பையன். வயசு பதிமூணு. என்னோட சின்ன குடும்பம், சந்தோஷம் நிறைஞ்ச குடும்பம். இது என்னைப்பத்தின விபரம். இனி நீங்கதான் பேசணும்."

'கனவா... நிஜமா?' என்று பிரமிப்பாக இருந்தது மேகலாவிற்கு. 'இப்படியும் கூட நடக்குமா? இப்படியும் சில மனிதர்களா?' என்ற வியப்பில் எதுவுமே பேசாமல் இருந்த மேகலாவைத் தொட்டுப் பேசினாள் ஷோபா ஜெகன்.

பிரமிப்பில் இருந்து விடுபட்டு சுயநினைவிற்கு வந்தாள் மேகலா.

"ஸாரி மேடம். நீங்க சொன்னதையெல்லாம் கவனமா கேட்டுக்கிட்டேன். இந்த விஷயத்துல முடிவு எடுக்க வேண்டியது எங்க அப்பாவும், அத்தையும். அவங்க எடுக்கற முடிவுக்கு சுபிட்சா சம்மதிச்சாத்தான் நடக்கும். எனக்குக் கல்யாணம் பண்றதுக்கு பேசிக்கிட்டிருக்கற இந்த நேரத்துல சுபிட்சாவோட கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. முதல்ல சுபிட்சாகிட்ட பேசிட்டு அதுக்கப்புறம்தான் பெரியவங்ககிட்ட பேசணும்."

"யார்கிட்ட எப்ப பேசணும்...எப்படிப் பேசணும்னு உங்களுக்குத்தான் தெரியும் மேகலா. பேசுங்க, ஆனா... பதில் மட்டும் சந்தோஷமானதா இருக்கணும். ஏன் தெரியுமா? எங்க கிரி, சுபிட்சா மேல ஏகப்பட்ட ஆசை வச்சிருக்காரு. நல்ல பையனான கிரிக்கு அவர் ஆசைப்பட்டது கிடைக்கணும். சுபிட்சாவுக்கு வயசு கம்மி. நீங்கதான் அவங்களுக்கு எடுத்து சொல்லணும். நாம கிளம்பலாமா? என்னோட கார் உங்க ஆபீஸ் கார் பார்க்கிங்ல நிக்குது. போய் எடுத்துகிட்டு கிளம்பணும்.”

"சரி மேடம்."

"இந்த மேடம் கீடமெல்லாம் வேண்டாமே... சும்மா ஷோபான்னே கூப்பிடலாமே..."

"நீங்க பெரியவங்க. உங்களை எப்படி?"

"பெரியவங்க சின்னவங்க வித்யாசமெல்லாம் நட்புக்கு கிடையாதே. நாம ஃப்ரெண்ட்ஸாகவே பழகலாம்."

"தேங்க்யூ."

மேகலாவின் ஆபீஸ் வரை வந்து தன் காரை ஓட்டிக்கொண்டு கிளம்பிய ஷோபாவிற்கு கையசைத்து விடை கொடுத்தாள் மேகலா.

28

திய உணவு இடைவேளை. அவரவர் லன்ஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர். அப்போது வனிதாவின் மொபைலில் 'ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் நான் காத்திருந்தேன்' பாடல் 'ரிங்டோ'னாய் ஒலித்தது. வனிதா, நம்பரைப் பார்த்தாள்.

"ஏ சுபிட்சா.... உங்கக்காவோட ஆபீஸ் நம்பர்... இந்தா நீ பேசு..." சுபிட்சாவிடம் தன்னுடைய மொபைலைக் கொடுத்தாள் வனிதா.

சுபிட்சா பேச ஆரம்பித்ததும் மேகலா பேசினாள்.

"சுபி... உன்கிட்ட நான் நிறைய பேச வேண்டியதிருக்கு. வீட்ல வச்சு பேச முடியாத விஷயங்கள்.... அதனால நாம எங்கேயாவது உட்கார்ந்து பேசணும்..."

"ஏன்க்கா? என்ன விஷயம்? எதாவது பிரச்சனையா?”

"பிரச்சனை வந்துடக் கூடாதேன்னுதான் பேசணும்னு சொல்றேன்..."

"நீ பேசறதைக் கேட்கும் போது பயம்மா இருக்குக்கா...”

"பயப்படாதே. மனம் விட்டு பெர்சனலா உன்கிட்ட பேசணும்ன்னு கூப்பிடறேன். நம்ப ரெண்டு பேருக்குள்ள ரகசியமா பேச வேண்டிய விஷயம் இது. அதனாலதான்....”

"சரிக்கா. எத்தனை மணிக்கு எங்கே வரணும்னு சொல்லு. நான் வந்துடறேன்....”

"நாலு மணிக்கு அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு வந்திடு. அங்கே உட்கார்ந்து பேசலாம். நான் ஆபீஸ்ல பெர்மிஷன் போட்டுட்டேன். நீயும் வந்துடு.....”

"சரிக்கா" பேசி முடித்த சுபிட்சா. மொபைலை வனிதாவிடம் கொடுத்தாள். சாப்பிடாமலே லஞ்ச் பாக்ஸை எடுத்து வைத்தாள்.

"ஏ சுபிட்சா.... என்ன ஆச்சு? உன் முகமே சரி இல்லை? ஏன் சாப்பிடலை? எனி ப்ராப்ளம்?”

"ஒண்ணுமில்லை......”

"ஒண்ணும் இல்லாமயா இப்படி அப்ஸெட் ஆகி இருக்கே? உங்க அத்தையோட கைமணமான சமையலைப் பாராட்டி, ரசிச்சு எங்களுக்கும் குடுத்து சாப்பிடற நீ.... லஞ்ச்சே வேண்டாம்னு டிபன் பாக்ஸை திறக்காம உட்கார்ந்திருக்க... கேட்டா... ஒண்ணுமில்லைங்கற? சொல்லு சுபிட்சா..." கல்பனா கனிவுடன் கேட்டாள்.

"அக்கா ஏதோ என்கிட்ட தனியா பேசணுமாம். இது வரைக்கும் ஒரு நாளும் அவ இப்படி சொன்னதில்லை. அதான் பயமா இருக்கு.....”

"அட லூசு...... இதுக்குப் போயா இப்படி பயப்படறே. உங்க வீடு...சின்ன வீடுன்னு நீயே சொல்லி இருக்க. உன் கூட மட்டும் பேசறமாதிரி பெர்சனலா ஏதாவது பேசறதுக்காக அப்படிச் சொல்லி இருப்பாங்க. உங்க வீட்ல அப்படிப் பேச முடியாதுங்கறதுனால உன்கிட்ட தனியா பேசணும்னு சொல்லி இருப்பாங்க. நீயாவே பிரச்சனைன்னு கற்பனை பண்ணிக்கிட்டு பயந்துக்கிட்டு சாப்பிடாம இருக்க. முதல்ல சாப்பிடு. தைரியமா இரு. உங்க அம்மா உனக்கு துணையா இருக்காங்கன்னு சொல்லுவியே... அதை மறந்துட்டு இப்படி பயப்படலாமா? சாப்பிடு..." ஷைலா, டிபன் பாக்ஸைத் திறந்து கொடுத்தாள்.

"சாப்பிடு சுபிட்சா" அனைவரும் சுபிட்சாவை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். அவள் சாப்பிட்டு முடித்த பிறகு, மற்றவர்கள் எழுந்து கொள்ள, சுபிட்சா மட்டும் எழுந்திருக்கவில்லை.

"என்ன சுபிட்சா... வா..." தோழியர் கூப்பிட்டனர்.

"நான் கொஞ்சம் தனியா இருக்கணும். ப்ளீஸ்.....”

சுபிட்சா அப்படிச் சொன்னதும் அவர்கள் வகுப்பிற்கு நடந்தனர்.

தனிமையான சுபிட்சா, அம்மாவை நினைத்தாள்.

"அம்மா... அம்மா..." தன் மனதிற்கு கட்டளையிட்டு தாய் மனோன்மணியின் உருவத்தை கண்முன்னால் கொண்டு வர முயற்சித்தாள். அன்று... மனோன்மணியின் உருவம் சுபிட்சாவின் பார்வைக்கு வரவே இல்லை.

'அம்மா... நான் கூப்பிடாமலே வருவியேம்மா... என்னைத் தொட்டுப் பேசுவியேம்மா... இன்னிக்கு ஏம்மா நீ வரமாட்டேங்கற. வாம்மா ப்ளீஸ்...' மனோன்மணியின் உருவம் அவளுக்குக் காட்சி அளிக்கவில்லை.

"அக்காவுக்கு என்னம்மா ஆச்சு? அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதும்மா. நீ இப்படி வராம இருக்கறதைப் பார்த்தா.... எனக்கு கலக்கமா இருக்கும்மா...." மறுமுறை கெஞ்சியும் மனோன்மணியின் உருவம் காட்சி அளிக்காததால் ஏமாற்றம் அடைந்தாள் சுபிட்சா.


"உன் பேச்சு கா வுட்டுட்டேன்மா. நீ வரலைன்னா என்ன? உன் ஃபோட்டோ என்கிட்ட எப்பவும் என் கூடவே இருக்கே.....” சுபிட்சா, தன் ஹேண்ட்பேக்கில் இருந்து மனோன்மணியின் ஃபோட்டோவை எடுத்தாள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஆறுதல் அடைந்தாள். நிம்மதி பெற்றாள்.

'சகலமும் நீதாம்மா' என்று சரணாகதியாகிவிட்டு வகுப்பிற்குக் கிளம்பினாள்.

கோவிலுக்குள் சுபிட்சா வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த மேகலா எழுந்து சென்றாள். மேகலா பரபரப்பாக இருப்பதைப் பார்த்த சுபிட்சாவிற்கும் மனசு பதறியது.

"என்னக்கா.... ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கே? வீட்ல பேச முடியாம அப்படி என்ன பேசணும்னு கூப்பிட்டே?”

"சொல்றேன் சுபிட்சா..... நீ போய் சாமி கும்பிட்டுட்டு வா. நான் அந்த நாகலிங்க மரத்தடியில உட்கார்ந்திருக்கேன்."

சுபிட்சா, கோவிலுக்குள் உள்ள தெய்வ சந்நிதிகளை தரிசித்து, சாமிகும்பிட்ட பின் மேகலாவின் அருகே வந்து உட்கார்ந்தாள்.

"நீ படிச்சு முடிச்சப்புறம் எதிர்காலத்திட்டம் வச்சிருக்கறதா சொன்னியே சுபி..... அது என்ன?”

"இந்த பி.ஏ.ஆர்ட்ஸ் படிப்பெல்லாம் இப்போ சாதாரண படிப்புன்னு ஆயிடுச்சு. நானே சொந்தமா பணம் சம்பாதிக்கற மாதிரி ஒரு கோர்ஸ் படிக்கணும். அதுக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம்னு இருக்கேன். இந்தியாவுல படிச்சுட்டு... வெளிநாட்டுக்குப் போய் அங்கே இருக்கற ஸ்பெஷல் கோர்ஸ் படிக்கணும்னு நினைச்சிருக்கேன்....”

"அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே.... அவ்வளவு பணத்துக்கு அப்பா எங்கே போவார்? நம்ப பொருளாதார நிலைமை உனக்குத் தெரியாதா?”

"அப்பா எங்கேயும் போக வேண்டியதில்லைக்கா.....நான் படிச்சு நல்ல மார்க் எடுத்து ஸ்காலர்ஷிப் மூலமா மேல்படிப்பு படிப்பேன்...”

"ஓ.... நிறையவே யோசிச்சு வச்சிருக்க...! வேற என்ன திட்டம் வச்சிருக்க?"

"ஃபேஷன் டெக்னாலஜியும், காஸ்ட்யூம் டிஸைனிங்கும் படிச்சு முடிச்சுட்டா இந்தப் படிப்பு சம்பந்தமா நம்ப திறமையை வெளிப்படுத்த, திரைப்பட உலகம் இருக்கு. சினிமா லைன்ல...ஒரு காஸ்ட்யூம் டிஸைனரா பெரிய அளவுல பேர் எடுக்கணும்னு ஆசைப்படறேன்...”

"உன்னோட ஆசைக்குப் பிற்காலத்துல உன்னோட புகுந்த வீட்டில சம்மதிக்கலைன்னா....”

"புகுந்த வீடா? நான் பிறந்த வீடுதான்க்கா எனக்கு புகுந்த வீடாவும் இருக்கும்....." பிரகாஷை, சுபிட்சா விரும்புகிறாளோ என்ற ஒரு மேலோட்டமான எண்ணம் இருந்தது எனினும் அதைத் திட்டவட்டமாய் இவ்விதம் சுபிட்சா கூறியதும் மேகலா அதிர்ந்தாள். புரியாதது போல தன் கேள்வியைத் தொடர்ந்தாள்.

"அப்படின்னா.... என்ன... சுபி சொல்லவர்ற…?”

"பிரகாஷ் மச்சானை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட பிறந்த வீடுதானே எனக்குப் புகுந்த வீடு?”

"உன் வயசுக்கு அதிகமாவே யோசிச்சிருக்க சுபி..." சுபிட்சாவின் கன்னத்தைச் செல்லமாய் தடவியபடியே பேசினாள் மேகலா.

"பிரகாஷ் மேல உனக்கு காதலா?" மேகலா கேட்டதும் சிரித்தாள்  சுபிட்சா.

"இதுக்கு பேர் காதல்ன்னு சொல்ல முடியாது. பிரகாஷ் மச்சான் நல்லவர். அவர் மேல எனக்கு மரியாதை இருக்கு, மதிப்பும் இருக்கு. என்னோட ஃப்யூச்சர் ஸேஃப்டிக்காக அவரை நான் நம்பறேன்..."

"ஃப்யூச்சர் ஸேஃப்டிங்கற காரணத்துக்காக ஒருத்தனை விரும்பறது சரிதானா சுபி?"

"தப்பு இல்லையே... பிரகாஷ் மச்சான் நம்ம மாமாவோட மகன். நம்ம குடும்பத்துல ஒருத்தர். நம்ப வீட்ல நாம எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வச்சிருக்கோம். அதுபோல பிரகாஷ் மச்சானும் நம்பளை புரிஞ்சு வச்சிருக்கிறார்தானே?"

"அவன் புரிஞ்சு வச்சிருப்பான். நீ.. அவனை...?" உள் அர்த்தமாய் மேகலா பேசுவது புரியாமல் சுபிட்சா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"ஏன்க்கா? பிரகாஷ் மச்சானை உனக்குப் பிடிக்கலியா?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. ஒருத்தரை பிடிச்சிருக்கறதுக்கும், விரும்பறதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு என்னை சக்திவேல் மச்சானுக்கு பேசிக்கிட்டிருக்காங்க. நீ ஒருத்தியாவது இன்னும் வளமான குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு நல்லா இருக்கலாமே? ஏன் குண்டு சட்டியில குதிரை ஓட்டணும்?"

"நம்ம கூடவே  நமக்கு ஆதரவா இருக்கற நம்ம உறவுகளோட உதவியை வச்சு அந்த வளமான வாழ்க்கையை நாமளே தேடிக்கலாமே?"

"பிரகாஷ் இல்லாம உன்னால முன்னேற முடியாதுன்னு நீ ஏன் நினைக்கறே?"

"பிரகாஷ் மச்சான் வேண்டாம்ன்னு நீ ஏன் நினைக்கறே? எனக்காக எவ்வளவோ உதவி செய்யறாரு பிரகாஷ் மச்சான். என்னோட காலேஜ் ப்ராஜெக்ட் வேலைகளை எல்லாம் அவர்கிட்ட குடுத்து நிறைய வேலை வாங்கி இருக்கேன். முகம் கோணாம நான் என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்யறாரு. பாட்டு ரெக்கார்ட் பண்ணணுமா? காலையில சொன்னா சாயங்காலம் ரெடியா இருக்கும். கம்ப்யூட்டர்ல வைரஸ்ஸா? உடனே ஓடியாடி அதை சரி பண்ணிக்குடுப்பாரு. அடித்தளமான எல்லா உதவிகளையும் எனக்கு அவர்தான் செஞ்சு குடுக்கறாரு..."

சுபிட்சா, பிரகாஷிற்கு சூட்டும் புகழ்மாலையைக் கண்டு மேகலா எதுவும் பேச இயலாது மௌனம் சாதித்தாள். அவளது மௌனம் கண்டு சுபிட்சா வருத்தப்பட்டு, மேகலாவின் நாடியைப் பிடித்துத் தூக்கி செல்லமாகப் பேசினாள்.

"உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்க்கா. உனக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்...."

"உனக்கு பிடிச்சதை நீ செய்யாதேன்னு நான் எப்படிச் சொல்வேன்?"

"சுத்தி வளைச்சு பேசாதேக்கா. நேரடியா என் முகத்தைப் பார்த்துச் சொல்லு..."

சுபிட்சா இவ்விதம் கேட்டதும் சற்று அதிர்ந்து போன மேகலா, பின்னர் சமாளித்துப் பேசினாள்.

"உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்..."

"ஒரு உறுதியான காரணம் இல்லாம... நீ இந்த அளவுக்கு விலாவாரியா பேசமாட்ட. எதையோ மனசுல வச்சுகிட்டுத்தான் நீ இங்கே என்னை வரச்சொல்லி இருக்கே. இப்படி பேசிக்கிட்டிருக்கே. சொல்லுக்கா... சொல்லு... எதையும் மறைக்காம ஓப்பனா சொல்லு..." மேகலாவின் தோள்பட்டைகளைத் தன் கைகளால் பிடித்து உலுக்கினாள் சுபிட்சா.

"ஆமா சுபி. என் மனசுக்குள்ள ஒரு நல்ல விஷயத்தை புதைச்சு வச்சிக்கிட்டுத்தான் இவ்வளவு நேரம் உன்கிட்ட பேசினேன். உண்மையை உன்கிட்ட சொல்லித்தான் ஆகணும்" தீர்மானமான குரலில் விளக்கம் கூற ஆரம்பித்தாள் மேகலா.

"உங்க காலேஜ் அதிபர் சொக்கலிங்கத்துக்கு உங்க காலேஜ் போல இன்னும் நிறைய ஸ்கூல், காலேஜ் எல்லாம் இருக்கு... பணம் பண்றதுக்காக மட்டுமில்லாம நேர்மையான வழியில முறையான நிர்வாகமா இருக்கு அவரோட கல்வி நிறுவனங்கள். அவரோட ஒரே மகன் கிரிதரன்ங்கற கிரி. எம்.பி.ஏ. முடிச்சுட்டு அப்பாவோட கல்வி நிறுவனங்களை நிர்வாகம் பண்றதைப் பத்தி அப்பாகிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டுயிருக்கானாம். அந்தப் பையன் கிரி, ரொம்ப நல்லவனாம். பணக்காரப் பையன்களுக்குரிய வழக்கமான ஊதாரித்தனம், ஒழுக்கக் கேடு... இதெல்லாம் இல்லாத தங்கமான பையனாம். அவனுக்கு உன்னைக் கேட்டு அனுப்பி இருக்காங்க..."


சொக்கலிங்கத்தின் செக்கரட்டரி, தன்னை சந்தித்து, கிரி சம்பந்தமாக பேசிய அத்தனையும் விலாவாரியாக எடுத்துரைத்தாள் மேகலா.

"பணக்காரங்க சங்காத்தமே தேவையில்லைக்கா. அது தொற்று வியாதி மாதிரி. மேல மேல பணம் சேர்க்கற ஆசையை, ஒரு வியாதியைப் பரப்பற மாதிரி பரப்பிடும். பெருந்தன்மை, எளிமை, பேராசை இல்லாத இயல்பு... இதுக்கு முன்னால பணம் என்ன செய்யும்?"

"நான்தான் சொன்னேனே சுபி... ஒரு சராசரி பணக்கார செருக்கோ பந்தாவோ இல்லாத ஒரு கண்ணியமான குடும்பம் அந்த சொக்கலிங்கத்தோட குடும்பம். நீ படிச்சு முடிச்சு வெளிநாடு போயிட்டு வந்து சினிமா துறையில உன் திறமையைக்காட்ட பல வருஷம் ஆகும். சொக்கலிங்கத்தோட லிங்கம் கல்வி நிறுவனங்களோட நிர்வாகத்துல உன்னோட திறமையைக் காட்டலாமே. கல்விங்கறது சாதாரண விஷயம் இல்லை. கல்வி சம்பந்தப்பட்ட துறையில நிறையப் புதுமைகள் செய்யலாம். உன்னோட அறிவைக் கல்வியின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். ஏழைக் குடும்பத்து அங்கத்தினர்களுக்கு இலவசமான கல்வி கிடைக்க சொக்கலிங்கம் ஏற்பாடு செஞ்சிருக்காராம். பணம் சம்பாதிச்சு, அந்தப் பணத்தை தேக்கி வச்சிருக்கறவங்க மத்தியில அந்தப் பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்யற மனசு உள்ளவரா இருக்காரு சொக்கலிங்கம். தானத்துலயே சிறந்த தானம் கல்விதானம். உனக்கு சினிமாத் துறையிலதான் ஈடுபடணும்ன்னு ஆர்வம் இருந்தா அதைத் தடுக்க மாட்டாங்க. அந்த விஷயத்துல உனக்கு சுதந்திரம் குடுப்பாங்க. சொக்கலிங்கம் சார் நினைச்சா... கோடீஸ்வர சம்பந்தம் வீடு தேடி வரும். ஆனா... அவர்... நம்பளோட கீழ்மட்ட அந்தஸ்தை பொருட்படுத்தாம உன்னை மருமகளா ஏத்துக்க முன்வந்திருக்கார். நீ சம்மதிச்சா உனக்கு எப்ப விருப்பமோ அப்ப கல்யாணம். அவசரமே இல்லை..."

"ஸாரிக்கா... அது... அது... வேண்டாம்க்கா..."

"ஒளிமயமான எதிர்காலம் உன்னோட கண்ணுக்கெதிரே பிரகாசமா தெரியுதே! அந்த ஒளியை, உன்னோட மறுப்பால மறைக்கப் பார்க்கறே..."

"நம்பிக்கைங்கற ஜோதி என் நெஞ்சுல நிறைஞ்சு இருக்குக்கா. எனக்கு அது போதும். பணம் வீசற வலையை விட பாசவலைதான் எனக்குப் பெரிசு.."

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டே. நான் என்னமோ... சொக்கலிங்கத்தோட பணத்துக்காகத்தான் உன்னோட எதிர்காலத்தை திசை திருப்பறதா நீ நினைக்கறது தப்பு. நிச்சயமா பணத்துக்காக இல்லை. அந்தக் குடும்பத்தோட நல்ல மனசுக்காகத்தான் சொல்றேன்... நீயும் நல்லா இருப்பே...."

"பிரகாஷ் மச்சானை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் நல்லா இருக்க மாட்டேன்னு நீயா ஏன் கற்பனை பண்ணிக்கறே?"

சுபிட்சா இப்படிக் கேட்டதும் 'மேலே என்ன பேசுவது? அவளது இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது?' என்ற தவிப்பில் மௌனமானாள் மேகலா. அவளது இதயச்சுவரில் சிந்தனைச் சிதறல்கள் மோதின.

'ஐய்யோ... இவளுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? பிரகாஷோட முகமூடியைக் கிழிச்சா... எதையும் வெளிப்படையாப் போட்டு உடைக்கற இயல்புள்ள சுபிட்சா, வீட்டுக்குப் போய், பூகம்பமா வெடிப்பா. இந்தப் பூகம்பம், அத்தையோட உயிருக்கு உலையாகிவிடாதா? பிரகாஷ் மேல அப்பா வச்சிருக்கற நம்பிக்கையும் நாசமாகிவிடுமே... அப்பாவிற்கும் மன உளைச்சல் வந்துவிடுமே... வயசான அவங்க ரெண்டு பேரும் நொந்து போயிடுவாங்களே... இவ இப்படி சண்டித்தனம் பண்றாளே...'

மேகலாவின் மௌனம் கண்டு சுபிட்சா, அவளது மௌனத்தைக் கலைத்தாள்.

"என்னக்கா இது? எதுவும் பேச மாட்டேங்கற? என் மேல கோபமா?"

"கோபமெல்லாம் இல்லை. நான் சொல்றதைப் பத்தி யோசி. யோசிக்காமலே உன்னோட முடிவைச் சொல்றதும், மாட்டேன்னு மறுக்கறதும் சரி இல்லை சுபி. அவசரமே இல்லை. எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அவசர முடிவுகள் என்னிக்குமே ஆபத்தானது. நிதானமா யோசி. பணக்கார சம்பந்தம்ங்கறதுனால நான் இந்த அளவுக்கு பேசறேன்னு என்னைத் தப்பா நினைச்சுடாதே..."

"உன்னை எப்படிக்கா நான் தப்பா நினைப்பேன்... யாரோ முன்ன பின்ன தெரியாத ஷோபா ஜெகன்ங்கற லேடி வந்து உன்கிட்ட மிஸ்டர் சொக்கலிங்கம் குடும்பத்தைப்பத்தி பேசினதை வைத்து நாம அவங்களை நம்பறது சரிதானா? ஒரு அந்நிய குடும்பத்தைப்பத்தி அவங்க ஆபீஸ்ல வேலை செய்யற ஒருத்தங்க வந்து பேசினதை மட்டுமே வச்சு அந்தக் குடும்பத்தை இந்த அளவுக்கு நீ நம்பறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு... அதிர்ச்சியாவும் இருக்கு..."

"இதுல ஆச்சரியப்படறதுக்கும், அதிர்ச்சி அடையறதுக்கும் என்ன இருக்கு? சில விஷயங்கள்ல சில பேரை நம்பித்தான் ஆகணும். எதுக்குமே... யாரையுமே நம்பாம இருக்கறது வாழ்க்கையோட சீரான ஓட்டத்தை தடைப்படுத்தும். நம்பிக்கைதான் வாழ்க்கை. குருட்டுத்தனமா சில பேரை நம்பறதுதான் முட்டாள்தனம்..." பிரகாஷை மனதில் வைத்துப் பேசினாள் மேகலா. பின், அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

"ஷோபா ஜெகன் விலாவாரியா அந்தக் குடும்பத்தைப்பத்தி நல்ல விதமா சொன்னாலும், நானும் எனக்குத் தெரிஞ்ச அளவுல வேற ரூட்ல விசாரிக்காம விட்ருவேனா? அதுக்கு முன்னால உன்னோட சம்மதத்தை கேட்கறது என்னோட கடமையாச்சே? உன்னைக் கேட்காம... உன்னோட சம்மதம் இல்லாம நான் வேற வழிகள்ல விசாரிக்கறதுனால என்ன பிரயோஜனம்? அதனாலதான் முன்கூட்டியே உன்கிட்ட பேசலாம்னு இங்கே வரச் சொன்னேன்..."

"ஸாரிக்கா. நீ பெரியவ. உனக்குத் தெரியாததா? ஏதோ... கேட்கணும்னு தோணுச்சு... கேட்டுட்டேன். நான் அப்படி பேசினது தப்புதான்க்கா..."

"சீச்சீ... எதுக்கு ஸாரி எல்லாம் சொல்லிக்கிட்டு... வெளிப்படையா பேசறதுதானே நல்லது... மனம்விட்டுப் பேசினாத்தான் எதையும் புரிஞ்சுக்க முடியும்..."

"என்மேல கோபமில்லையேக்கா..." கெஞ்சலாகப் பேசினாள் சுபிட்சா.

"கோபமா...? உன்மேலயா...? எனக்கா...? எப்பவுமே உன்மேல எனக்கு கோபமே வராது. நீ நல்லா இருக்கணுங்கறதுக்காக... உனக்காக... நான் எதையும் செய்வேன்."

"உன்னைப்போல ஒரு அக்கா கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்" சுபிட்சா அன்புடன் பேசினாள்.

"நேரமாச்சு சுபி. நாம கிளம்பலாம்" மேகலா கூறியதும் இருவரும் கோயிலிருந்து வெளியேறினார்கள்.

29

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலை நோக்கி கால்டேக்ஸி விரைந்து கொண்டிருந்தது. சக்திவேலை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள் சுபிட்சா.

"என்ன சக்திவேல் மச்சான்... உங்க ஆபீஸ்ல நீங்க... 'கோபியர் கொஞ்சும் ரமணா'வாமே..."

"ஐய்யய்யோ... அப்படியெல்லாம் இல்லை..." சக்திவேல் பதறினான்.

"ஹய்யா... உங்களை வாய்திறக்க வச்சுட்டேன் பார்த்தீங்களா? ஆனா... நான் சொன்ன அந்த கோபியர் கொஞ்சும் ரமணா நிஜமானதுதான்..."

"சுபிட்சா... பெரியவங்கள்லாம் இருக்காங்க..." சக்திவேல் கெஞ்சினான்.

"ஏண்டா சக்திவேல் அவளை அடக்கற? என்னிக்கோ ஒரு நாள் இப்படி எல்லாரும் ஒண்ணா வெளியே கிளம்பிப் போறோம். ஜாலியா பேசிக்கிட்டு வர்றதுல என்ன தப்பு?" கமலம் கூறியதும் ‘யே...’ என்று கத்தினாள் சுபிட்சா.

"அத்தை எப்பவும் என்னோட கட்சிதான்." சுபிட்சா, கமலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.


"என்னம்மா சுபிட்சா... சக்திவேலோட ஆபீஸ் விஷயத்தை பாதியிலேயே நிறுத்திட்ட?" மூர்த்தி கேலியாகக் கேட்டார்.

"அட! அப்பாவைப் பாரேன்... தங்கை மகனை கிண்டல் பண்ற தாய்மாமான்னு நிரூபிக்கிறாரு... சக்திவேல் மச்சானோட ஆபீஸ்ல நிறைய பெண்கள்தாம்ப்பா வேலை பார்க்கறாங்க. அவங்களுக்கெல்லாம் சக்திவேல் மச்சான்தான் கமலஹாசன் மாதிரி. ஆனா... பார்க்கத்தான் கமல்... கிட்ட நெருங்கினா விஸ்வாமித்திர முனிவர்ன்னு பெண்கள்லாம் கேலி பண்றாங்களாம்."

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கியே... உனக்கெப்படித் தெரியும்?" கமலம் கேட்டாள்.

"அவங்க ஆபீஸ்ல வேலை செய்யற ஒருத்தங்களோட தங்கச்சி என் க்ளாஸ்மேட். அவதான் சொன்னா."

"ஓ... லண்டன் பி.பி.ஸின்னு சொல்லு..." மேகலா கூறியதும் அனைவரும் சிரித்தனர்.

"என்ன... பிரகாஷ்... ஸைலன்ட்டா வர்ற? விழா நாயகனே நீதானே? உன்னோட பிறந்த நாளுக்காகத்தானே இந்த ட்ரிப்?" மூர்த்தி இப்போது பிரகாஷை சீண்டினார்.

"அவர், காரோட ஜன்னல் பக்கம்தானே உட்கார்ந்திருக்காரு? வெளியில தெரியற கலர்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வருவாரு...." சுபிட்சா, தன் குறும்பான கேலியை வெளியிட்டாள்.

"கலர்களை பார்த்துக்கிட்டா...? அப்படின்னா?" வெகுளியாய் கமலம் கேட்டாள். இதைக் கேட்டு மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

"அப்பாவுக்கும், உங்களுக்கும் அதெல்லாம் புரியாது அத்தை..." சுபிட்சா சொன்னதைக் கேட்டதும் மூர்த்தி பேச ஆரம்பித்தார்.

"கலர்கள்னா கமலம்... கலர் கலரா உடுத்திக்கிட்டு போற பொண்ணுங்க. ஸைட் அடிக்கறதுன்னும் சொல்லுவாங்க..." மூர்த்தி இவ்விதம் விளக்கியதும் அங்கே சிரிப்பலை பரவியது.

மீண்டும் மூர்த்தி தொடர்ந்தார், "எங்களுக்கும் எல்லாம் தெரியும்மா. உங்க வயசையெல்லாம் தாண்டி வந்தவங்கதானே நாங்க. எங்க  காலத்துல இதுக்கு வேற பேர். இப்ப நீங்க என்னென்னவோ சொல்றீங்க! போதாக்குறைக்கு இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் டி.வி. தொடர்கள் சொல்லிக்குடுத்துடுதே..." மூர்த்தியுடன் சேர்ந்து கமலமும் டி.வி. பற்றி பேசினாள்.

"எங்களை மாதிரி வயசானவங்களுக்கு டி.வி. தொடர்கள்தான் மிகப்பெரிய வரப்பிரசாதம். வம்பு, வழக்குன்னு போறோமா? நாங்க பாட்டுக்கு டி.வி. பார்க்க உட்கார்ந்துடறோம்..."

"நீங்க பாட்டுக்கு டி.வி. சீரியலே கதின்னு உட்கார்ந்து கிடக்கறதும் உடல்நலத்துக்கு கெடுதல் அத்தை. தொடர்கள்ல வர்ற உணர்ச்சிவசப்படும் காட்சிகளைப் பார்த்துட்டு இரத்த அழுத்தம் ஏறுதாம். எதுவுமே ஒரு அளவோடுதான் இருக்கணும்" மேகலா தன் பங்குக்கு கூறினாள்.

"முன்னயெல்லாம் 'சிவனே'ன்னு வயசானவங்க உட்கார்ந்திருந்தாங்க. இப்போ? 'சீரியலே'ன்னு உட்கார்ந்துடறாங்க." மூர்த்தி கூறினார்.

"அப்பா மொக்கை போட ஆரம்பிச்சுட்டாரு" சுபிட்சா இவ்விதம் சொன்னதும் மேகலா, அவளைக் கண்டித்தாள்.

"ஏ சுபி... என்ன இது? அப்பாவைப் போய் மொக்கை அது... இதுன்னுக்கிட்டு?"

"மொக்கைன்னா என்னம்மா?" கமலம் கேட்டாள்.

இதற்கு முந்திக்கொண்டு மூர்த்தி பதில் கூறினார்.

"முன்னயெல்லாம் ரம்பம், ப்ளேடுன்னு சொல்லுவாங்கள்ல கமலம்... இப்போ அதுவே கடி, மொக்கைன்னு ஆயிடுச்சு" அவர் விளக்கம் கொடுத்ததும் அத்தனை பேரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

"மேகலாக்கா... பெரிசுக, வீட்லயே இருக்காங்கன்னுதான் பேர். ஆனா எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்க பாத்தியா?"

"ஆமா...பெரிய... உலகளாவிய தகவல்கள் பாரு... ஒரு விஷயம் கவனிச்சியா?... இப்ப டி.வி. முன்னாடி இல்லாததுனாலதான் ரெண்டு பேரும் இவ்வளவு பேசறாங்க பாரு..."

"அதென்னவோ சரிதான்க்கா. குடும்ப நேயத்தையே மறக்க வைக்கற குடும்ப சீரியல்கள் வந்துக்கிட்டு இருக்கிற வரைக்கும், மகுடிக்கு மயங்கற பாம்பு மாதிரி டி.வி. முன்னால கட்டிப்போட்டது மாதிரி உட்கார்ந்துக்கிட்டுதான் இருப்பாங்க. என்ன பிரகாஷ் மச்சான்... சிரிக்கற ட்யூட்டி மட்டும்தான் உங்களுக்கா? சிரிக்க வைக்க மாட்டிங்களா? சிட்டியை விட்டு அவுட்டர் ஏரியாவுக்கு வந்துட்டோம். கலர்கள் கூட கண்ணுக்குத் தெரியாதே..." சுபிட்சா, பிரகாஷை வம்பிற்கு இழுத்தாள்.

"ஏம்மா சுபிட்சா... பிரகாஷ் அப்படிப்பட்ட பையன் இல்லைம்மா. சினிமாக்காரிக படத்தை புத்தகத்துல பார்க்கக் கூட கூச்சப்படுவான். இந்தக் காலத்துல அவனை மாதிரிப் பையனை பார்க்கவே முடியாதும்மா..." மூர்த்தி பிரகாஷிற்கு மகுடம் வைத்தார்.

"எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ?" நாசூக்காகப் பேசினாள் மேகலா.

ஜாலியான மனநிலையில் அனைவரும் இருந்தபடியால், மேகலா பேசியதை கேலியாகவே எடுத்துக் கொண்டு அனைவரும் சிரித்தனர்.

மேகலா, பிரகாஷை அடிக்கண்ணால் பார்க்க, அவளது நக்கலான பேச்சைப் புரிந்து கொண்ட பிரகாஷ், அவளை யாரும் அறியா வண்ணம் முறைத்துப் பார்த்தான்.

கார், கோவிலை நெருங்கியது. அனைவரும் காரில் இருந்து இறங்கினர். உள்ளே சென்றனர். அலங்கார பூஷிதையாகக் காட்சி அளித்த அம்மனை வணங்கினர். அன்று அங்கே அம்மனுக்கு தங்கரதம் இழுக்கும் திருப்பணியும் நடைபெறுவதாக இருந்தது. சிறிய தங்க ரதத்தை ஒரு வாலிபன், பக்தியுடன் இழுத்து வர, இன்னும் சிலரும் கூட வந்தனர். அந்த வாலிபன் கிரி. கிரியுடன், வேணுவும் இருந்தான்.

"டேய், வேணு... மாம்பழக்கலர் பாவாடையும், பச்சை தாவணியும் போட்டுக்கிட்டிருக்காளே... அவதாண்டா சுபிட்சா..." உணர்ச்சி வசப்பட்டாலும் குரலை அடக்கி வேணுவிடம் சொன்னான்.

"கல்லூரிக் கலை விழாவுல டான்ஸ் நல்லா பண்ணீங்கன்னு போய் சொல்லேண்டா..."

"என்னது? நான் போய் பேசறதா?"

"பின்னே? நானா போய் பேச முடியும்?"

"நீ வேற... சும்மா இருடா... முன்ன பின்ன அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்ட போய் திடீர்னு நான் போய் பேசறது அநாகரீகம்."

"நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதே..." வேணு மறுபடியும் வற்புறுத்தினான்.

கிரி பதில் சொல்வதற்குள், அம்மனுக்கு ஆராதனை காட்டிய குருக்கள், அங்கு கூடி இருந்த அனைவருக்கும் விபூதி பிரசாதம் கொடுத்தார்.

கிரியின் அருகே வந்து அவர்களுக்கும் விபூதி கொடுத்தார்.

விபூதி தட்டில் தட்சணை வைப்பதற்காக, ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்துப் பிரித்தான் கிரி. அதில் ஃபோட்டோ வைத்துக் கொள்ளும் பகுதியில், சுபிட்சாவின் புகைப்படம் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட மேகலா திகைத்தாள். மேகலாவின் அருகே நின்று கொண்டிருந்த சுபிட்சாவை அப்பொழுதுதான் கிரி பார்த்தான். பரவசமானான். அவன் இளைஞன் கிரி என்று தெரியாததால், கோவிலை வலம் வருவதற்காக சுற்றி சென்று, பின்பக்கமாகப் போய்க் கொண்டிருந்த கிரியை, மேகலா பின் தொடர்ந்தாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ..." மேகலாவின் குரல் கேட்டுத் திரும்பினான் கிரி.

"யெஸ்.."

"உங்க ஷர்ட் பாக்கெட்ல என் தங்கையோட ஃபோட்டோவை வச்சிருக்கீங்க... கல்யாணம் ஆகாத பொண்ணோட ஃபோட்டோவை இப்படி வச்சிருக்கறது சரிதானா? நான் அவளோட அக்கா... அந்த ஃபோட்டோ எப்படி கிடைச்சது உங்களுக்கு?"

"அது... அந்தப் பொண்ணு கலைவிழாவுல டான்ஸ் ஆடினப்ப எடுத்த ஃபோட்டோ. அந்த காலேஜ், எங்களோட 'லிங்கம் ஆர்ட்ஸ்' காலேஜ். கலை விழாவுக்கு எங்கப்பா கூட போயிருந்தேன்.


கல்லூரி நிறுவனர்ங்கற முறையில எங்கப்பாவுக்கு வந்த ஃபோட்டோஸ்ல இருந்து அதை எடுத்து வச்சிருக்கேன். ஸாரி... நான் இப்படி வச்சிருக்கறது தப்புதான்..."

அவன் பேசியதில் இருந்து அவன்தான், ஷோபா ஜெகன் குறிப்பிட்ட 'கிரி' என்று புரிந்து கொண்டாள் மேகலா.

கிரி தொடர்ந்து பேசினான்.

"உங்க தங்கை சுபிட்சாவை முறைப்படி பெண் கேட்டு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்பட்டு எங்கப்பாகிட்ட சொல்லி இருக்கேன். மத்தபடி... தப்பான..."

"போதும் கிரி. எனக்குப் புரிஞ்சுடுச்சு..." மேகலா பேச்சை முடிக்கும் முன், மூர்த்தி அவளைத் தேடி வந்தார்.

"என்னம்மா மேகலா... அம்மன் சந்நிதியில் சுபிட்சா பாட்டு பாடப் போறா. வாம்மா..."

மேகலா மறுபடியும் சந்நிதிக்குச் சென்றாள். கிரியும் கோயில் வலம் வருவதை முடித்துவிட்டு சந்நிதிக்கு வந்தான். அவன் கூடவே வேணுவும் சென்றான்.

அங்கே கண்மூடி லயித்தபடி அம்மன் பக்தி பாடலை பாடிக் கொண்டிருந்தாள் சுபிட்சா. அவளைப் போலவே அவளது குரலும் இனிமையாக இருப்பதை ரசித்தான் கிரி.

கிரி ரசிப்பதைக் கவனித்து விட்ட பிரகாஷ், கோபத்தில் பற்களைக் கடித்தான். மற்ற அனைவரும் தெய்வீகப் பாடலை ரசித்து, ஆன்மிக உணர்வில் திளைக்க, பிரகாஷ் மட்டும் கிரியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாடல் முடிந்தது. பரபரவென பிரகாஷ், சுபிட்சாவிடம் சென்றான்.

"வா கிளம்பலாம்" என்றான், மற்றவர்களையும் துரிதப்படுத்தினான்.

"ஏண்டா பிரகாஷ், திடீர்னு இப்படி வந்து அவசரப்படுத்தறே..." கமலம் சலித்துக் கொண்டே கிளம்பினாள். அம்மனின் கழுத்தில் போடப்பட்டிருந்த பூச்சரத்தை, குருக்கள் சுபிட்சாவிடம் கொடுக்க, அவள் அதைத் தன் கூந்தலில் தொங்க விட்டுக் கொண்டாள்.

சுபிட்சாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி. அவர்கள் அனைவரும் காரில் ஏறி செல்வதற்காக கோயில் வாசலை நோக்கி நடந்தனர். கிரியும், வேணுவும் வெளியே வந்தனர். சுபிட்சாவின் கூந்தலில் இருந்த பூச்சரம் கீழே விழுந்ததை அறியாமல் அவள், கால்டாக்ஸியில் ஏறினாள். கால்டாக்ஸி கிளம்பியது. சுபிட்சாவின் கூந்தலில் இருந்து விழுந்த பூச்சரத்தை கிரி எடுத்துக் கொண்டான். சுபிட்சாவே தன்னுடன் இருப்பது போல மகிழ்ந்தான்.

30

பீஸிலிருந்து வந்த மேகலா, லன்ஞ்ச் பாக்ஸை கழுவி வைத்தாள். உடை மாற்றிவிட்டு சோஃபாவில் வந்து உட்கார்ந்தாள்.

அவளுக்கு சூடான காபி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள் கமலம்.

"என்னம்மா மேகலா... உங்கப்பாவும், நானும்  உன்னோட கல்யாண விஷயம் பேசலாம்னு காத்திருக்கோம்..." என்றவள், மூர்த்தியிடம் திரும்பி, "என்னண்ணா...நீயே பேசேன்..." என்றாள்.

"அவ என்னோட பொண்ணுன்னாலும் என்னை விட உனக்குத்தான் உரிமை அதிகம். நீயே பேசேன்..." மூர்த்தி சொன்னதும் கமலம் பேச ஆரம்பித்தாள்.

"மேகலா... சக்திவேலுக்கு உன்னைக் கட்டி வைக்கலாம்னு நானும், உங்கப்பாவும் நினைக்கறோம், விருப்பப்படறோம். நீ என்னம்மா சொல்ற?"

"அத்தை... எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

"பொண்ணாப் பிறந்த ஒவ்வொருத்தியும் குறிப்பிட்ட கால கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தறதுதான் நம்ப கலாச்சாரம். உனக்கு கல்யாண வயசு வந்தாச்சு. சக்திவேல் நல்ல வேலை கிடைச்சப்புறம்தான் கல்யாணம்ன்னு காத்திருந்தான். நல்ல வேலையும் கிடைச்சாச்சு. நல்ல வேளையும் வந்தாச்சுன்னு நான் நம்பறேன். நீ என்னம்மா சொல்ற? என்னோட பையன்ங்கறதுக்காக சக்திவேலைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு உன்னை வற்புறுத்தலை. உனக்கு சக்திவேல் வேண்டாம்ன்னா வெளியில மாப்பிள்ளை பார்க்கலாம். நீ என்ன முடிவு எடுக்கறியோ அதுதான்.  கல்யாணம்ங்கறது யாரோட வற்புறுத்தலுக்காகவும் நடக்கக் கூடாது. பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிச்சிருக்கணும். அதுதான் முக்கியம்..."

"நான் யோசிக்கணும் அத்தை..."

"என்னம்மா மேகலா... எத்தனை நாள்தான் யோசிப்பே? உன்னோட எதிர்காலம் நல்லபடியா அமைஞ்சுட்டா அதுதான் எங்களுக்கு சந்தோஷம். உனக்கு அடுத்து இன்னொருத்தி சுபிட்சா இருக்கா. எங்க காலத்துக்குள்ள உங்களோட எதிர்காலத்தை எங்க கண்ணால பார்த்துட்டா, நாங்க நிம்மதியா கண்ணை மூடுவோம்..." மூர்த்தி, சற்று உறுதியான குரலில் பேசினார்.

"அது... வந்துப்பா..."

"என்ன சொல்லணும்னு நினைக்கறியோ... அதை சொல்லும்மா."

"உங்க விருப்பமும், அத்தையோட விருப்பமும் எனக்குக் புரியுதுப்பா. ஆனா... என்னோட விருப்பத்தை நான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு டைம் வேணும்ப்பா."

"எங்க விருப்பத்தை உன் மேல திணிக்க மாட்டோம். அதை மட்டும் தெளிவா நீ புரிஞ்சுக்க. உங்க அம்மா மனோன்மணி நம்பளை விட்டுப் போனப்புறம், உங்களை தனி ஆளா எப்படி வளர்த்து ஆளாக்கப் போறேனோன்னு மலைச்சுப் போய் நின்னேன். துரதிர்ஷ்டவசமா உங்க அத்தையோட கணவரும் போய் சேர்ந்துட்டாரு. அந்த நிலைமையில இருந்து இன்னிக்கு வரைக்கும் நீ, சுபிட்சா, சக்திவேல், பிரகாஷ்... நாலு பேரும் எங்களுக்கு எந்தத் தொல்லையும் குடுக்காம... பொறுப்பான பிள்ளைங்களா வளர்ந்து ஆளாகி நிக்கறீங்க. அனுசரிச்சுப் போற பக்குவமும் உங்ககிட்ட நிறையவே இருக்கு. என் தங்கச்சி பெத்த தங்கமான பையன்ங்க... சக்திவேலும், பிரகாஷும். நம்ம குடும்பம் ஒத்துமையா வாழறதுக்கு அவங்க ரெண்டு பேரும் ஒரு காரணம். அந்த ஒற்றுமை நிலைக்கணும்னு நினைச்சுத்தான் உன்னைத் தன் பையனுக்கு கேட்கறா உங்க அத்தை. இதில் அவளோட எண்ணத்தைவிட உன்னோட விருப்பம்தான் முக்கியம். இனி நீ தான்ம்மா சொல்லணும்..."

"அப்பா... எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கப்பா. ப்ளீஸ்..."

"சரிம்மா. யோசிச்சு சொல்லு..."

மேகலா... உடனே சம்மதம் சொல்லாமல் யோசித்து சொல்வதாகக் கூறியதைக் கேட்டு முகம் வாடினாள் கமலம். அந்த வாட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டாள்.

"சரிம்மா மேகலா... நீ போய் முகம் கழுவும்மா. ராத்திரி டிபனுக்கு என்ன செய்யட்டும்?"

"ஏழு கூட ஆகலியே அத்தை. ஏழு மணிக்கு நானும் சமையலறைக்கு வரேன். ரவா கிச்சடியும், தக்காளி சட்னியும் பண்ணிடலாம். சமையலறையில மளிகை சாமான் பாட்டில்கள்யெல்லாம் கலைச்சுப் போட்டு வச்சிருக்கேன் அத்தை. சுபிட்சா வந்து பார்த்தா கத்துவா. அவ வர்றதுக்குள்ள அதையெல்லாம் அடுக்கி வைக்கணும் அத்தை..."

"அக்காவுக்கு பயப்படற தங்கச்சியை பார்த்திருக்கேன். தங்கச்சிக்கு பயப்படற அக்காவை இப்பத்தான் பார்க்கறேன்" கமலம் சிரித்தபடி சமையலறைக்குள் சென்றாள்.

அறைக்குள், அலமாரியில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்துப் போட்டாள் சுபிட்சா. ஒவ்வொரு துணியையும், பொருளையும் மறுபடியும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு நினைக்கறேன்... சுபி." மேகலா, பேச ஆரம்பித்தாள்.

"மனசுக்குள்ள நினைச்சதை வாய்விட்டு சொல்லிடுக்கா..."


"சொல்லத்தான் போறேன். அன்னிக்கு அங்காள பரமேஸ்வரி கோவில்ல வச்சு லிங்கம் கல்வி நிறுவனங்களோட உரிமையாளர் மகன் கிரியைப் பத்தி உன்கிட்ட பேசினேன்ல? நீ சொன்ன மாதிரி ஷோபா ஜெகன் சொன்னதை மட்டுமே நம்பாம, எனக்குத் தெரிஞ்ச பல வழிகள்ல அந்த கிரியைப்பத்தியும் அவங்க குடும்பத்தைப்பத்தியும் நல்லா விசாரிச்சிட்டேன். நான் விசாரிச்ச வரைக்கும் அந்தக் குடும்பத்தைப்பத்தியோ, அந்தப் பையனைப்பத்தியோ தப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலை. எல்லாரும் நல்ல விதமாத்தான் சொல்றாங்க. ஷோபா ஜெகன் சொன்னது அத்தனையும் நிஜம்னு தெரிஞ்சுக்கிட்டேன். உன்னோட சந்தேகத்தைத் தெளிவு பண்ணிட்டேன். இப்பச் சொல்லு... அந்தக் கிரியை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?"

"நான்தான் அன்னிக்கே சொன்னேனேக்கா... நம்ப குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கேன்னு. நம்ப குடும்ப நிலைமையை யோசிச்சுத்தான்க்கா சொல்றேன். நம்ப அம்மா இறந்து போனப்புறம் துவண்டு போன மனசோட வாழற நம்ப அப்பா, மாத்திரைகளையே சாப்பாடு மாதிரி சாப்பிட்டு வாழற அத்தை, அவங்க ரெண்டு பேரையும் நம்ம கூடவே இருந்து பார்த்துக்கணும். என் மேல உயிரையே வச்சிருக்கற அக்கா நீ... உன்னைப் பிரியாமல் இங்கேயே இருக்கலாம். குடும்ப நேயத்துக்காக நான் எடுத்த முடிவுதான்க்கா அது..."

"நீ சொல்ற இந்தக் காரணங்கள் உன் இதயத்தில உருவாக்கி இருக்கற இரக்கத்திற்குப் பேர் கருணை. காதல் இல்லை..."

"காதல்ன்னு நானும் சொல்லலைக்கா... பிரகாஷ் மச்சான் நல்லவர். தினமும் நியூஸ் பார்க்கறியா? பேப்பர் படிக்கறியா? வரதட்சணை கொடுமை, நகை, பணம் கேட்டு பிறந்த வீட்டுக்கு அனுப்பறது... மண்ணென்ணெய் ஊற்றி தீ வைப்பு, தீக்குளிப்பு இப்படி எத்தனை கொடூரங்கள் நடக்குது? இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் நம்ம வீட்டு வயசான பெரியவங்க எப்படி தாங்கிப்பாங்க? நாம, தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலைமையிலயும், முதுமையிலயும் அவங்க இருக்காங்க..."

"கிரியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சொல்ற எந்த பிரச்சனையும் நமக்கும் வராது. நம்ம பெரியவங்களுக்கும் வராது. அங்கே நீ உன் மனம் போல வாழலாம்."

"எனக்கு அதில நம்பிக்கை இல்லைக்கா. ஒரு ஸ்ட்ரேன்ஞர் மனிதனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவனை நான் புரிஞ்சுக்கறதுக்குள்ள புதுசு புதுசா பிரச்சனைகள் உருவாயிடும்..."

"ஏன் இப்படி நெகட்டிவ்வாவே பேசறே... நினைக்கற?"

"என் மனசுல ஆழமா பதிஞ்சு போன நம்பிக்கையை மாத்த முடியலைக்கா..."

"முயற்சி பண்ணு. அந்த சொக்கலிங்கம் பத்தி நான் சொன்ன விஷயங்களைப்பத்தி நல்லா உட்கார்ந்து யோசி. இது உன்னோட காலேஜ் கலை விழா ப்ரோக்ராம் இல்லை... நீ ஸேலோவா டான்ஸ் ஆடி ஜெயிக்கறதுக்கு. இது உன்னோட எதிர்காலம்... அவசரப்படாம நல்லா யோசிச்சு அப்புறம் சொல்லு.."

சுபிட்சா பதில் கூற வாய் திறப்பதற்குள் கரண்ட் நின்று போய் அத்தனை மின்சார விளக்குகளும் அணைந்து போய் இருட்டாகியது. மெழுகு வர்த்தியை ஏற்றுவதற்காக எழுந்தாள் சுபிட்சா.

சௌம்யா உதயகுமார், அவளது மேல்நாட்டுப் பயணத்தை வெற்றிக்கரமாக முடித்து விட்டு இந்தியாவிற்குத் திரும்பியதையொட்டி ஒரு வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் 'ஃபைவ் எஸ்' விளம்பர நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஜய் படுகோன். விழா இனிது முடிந்து, அனைவரும் கலைந்தனர்.

சௌம்யா உதயகுமார், தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானாள். அவளுக்காகக் காத்திருந்த மேகலாவின் அருகே சென்றாள்.

"கிளம்பலாமா மேகி? நீ... என்னோட அபார்ட்மெண்ட்டுக்கு வா. நாம நிதானமா பேசி ஆறு மாசமாச்சு. நான் இன்னிக்கு உன்கூட பேசியே ஆகணும்... ப்ளீஸ் மேகி..."

"சரி சௌமி. வரேன்."

இருவரும் சௌம்யா உதயகுமாரின் காரில் ஏறிக் கொண்டனர். ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டில் காரை நிறுத்தினாள் சௌம்யா உதயகுமார். இருவரும் காரை விட்டு இறங்கினர்.

தன்னிடம் இருந்த சாவியால் அபார்ட்மெண்டின் கதவைத் திறந்தாள் சௌம்யா உதயகுமார். இருவரும் உள்ளே சென்றனர்.

"உதயகுமார் ஊர்ல இல்லியா சௌமி?"

"இங்கேதான் இருக்காரு. நேரங்காலமே கிடையாது அவருக்கு. ஆர்ட் டைரக்டராச்சே? ஏதாவது செட்ல இருப்பாரு. ஆளுக்கொரு சாவி வச்சிருக்கோம்."

"நீ ஊர்ல இல்லைன்னா கூட வீட்டை க்ளீனா வச்சிருக்காரு."

"அதெல்லாம் நல்லபடியா, அக்கறையா பார்த்துப்பாரு."

இருவரும் அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகளை அழுது கொட்டினாள் மேகலா. சௌம்யா உதயகுமாரின் மடியில் முகம் புதைத்து அழுதாள். அவள் அழுவதைக் கண்ட சௌம்யா உதயகுமாருக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன்னை சமாளித்துக் கொண்ட சௌம்யா உதயகுமார், மேகலாவின் முதுகில் ஆறுதலாகத் தடவிக் கொடுத்தாள்.

"எழுந்திரு மேகி. வருண் ஆக்ஸிடென்ட்ல போயிட்ட விஷயம் தெரிஞ்சு ரொம்ப ஷாக் ஆயிட்டேன். உன் கூட ஃபோன்ல பேசினப்ப நீ அழுதுகிட்டே இருந்தது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. உன்னோட நல்ல மனசுக்கு இப்படி ஒரு இழப்பு வந்திருக்கவே கூடாது."

"வந்துருச்சே சௌமி. நான் எதிர்பார்க்காத விதத்துல என் வாழ்க்கையில இடி விழுந்துருச்சே சௌமி..."

"இடி இடிச்சு, மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு. இனி இருண்டு போன உன்னோட இதய வாசலைத் திறந்து வச்சு வருங்காலத்தைப் பத்தி யோசி... வருணுக்கு இப்படி ஆகும்ன்னு யார் நினைச்சா? மனசை பறிகொடுத்தவனோட உயிரையும் பறிகுடுத்துட்டு இப்படி ஒரு மனநிலையில உன்னை சந்திக்க வேண்டி இருக்கும்னு நானும் நினைக்கலை. ஆனா நடந்து முடிஞ்சதை நினைச்சுக்கிட்டே இருக்கறதை விட நடக்கப் போறது என்னங்கறதைத்தான் யோசிக்கணும். உங்க அத்தை பையன் சக்திவேலுக்கு உன்னைப் பேசறாங்கன்னு ஃபோன்ல சொன்ன. சக்திவேல் நல்ல மனுஷன்தானே? அவரை ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கக் கூடாது? உங்க வீட்ல உன்னோட காதல் விஷயம் யாருக்கும் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லாத அளவுக்கு இப்ப நிலைமை ஆயிடுச்சு. பெரியவங்க இஷ்டப்படி சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்கோ மேகி..."

"வருண் என் மேல தன் உயிரையே வச்சிருந்தாரு. அவரோட அன்பை மறந்து வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு என்னோட குற்ற உணர்ச்சி தடுக்குது சௌமி."

"வருண் உயிரோட இருந்து, அவரை விட்டு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ணணும்னு நினைச்சாத்தான் அது தப்பு. விதிவசத்தால விபத்துல மாண்டு போன வருணை, உயிரோட இருக்கற நீ... அதை மறக்காம... இப்படியே எத்தனை காலம் வாழ முடியும்? உனக்காக ஒரு எதிர்காலம் வேணும். உனக்காக ஒரு துணை வேணும். உனக்காக ஒரு குடும்பம் உருவாகணும்.


மழை வர்றதுக்கு முன்னால கூடி வர்ற மேகம், பெரிசா காத்து அடிச்சதும் கலைஞ்சுதானே போகுது? அது போல வருணோட இழப்பும் ஒரு கலைஞ்சு போன மேகம்ன்னு விட்டுடு. உங்க அத்தை, அப்பா அவங்களுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தானே ஆகணும்? அவங்க எதிர்பார்க்கற ஒரு நல்ல பதிலைச் சொன்னீனா ஏதோ வயசான ரெண்டு ஜீவன்களோட நிம்மதியைக் காப்பாத்தற புண்ணியமாவது இருக்குமே. இன்னொரு விஷயம் மேகி, வாழ்க்கையில வர்ற மாற்றங்களை நாம மனப்பூர்வமா ஏத்துக்கிட்டோம்ன்னா... அந்த மாற்றங்கள் நமக்குள்ளே புதிய பரிணாமங்களை ஏற்படுத்தும். நான் சொல்றதை நம்பு. கல்யாணம் பண்ணி புருஷன் கூட வாழ்ந்து, அந்த தாம்பத்தியத்தின் அடையாளமா குழந்தை பெத்தவங்க கூட அந்தப் புருஷன் இறந்து போனதுக்கப்புறம் மறுமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறாங்க. அப்படி இருக்கும் போது நீ ஏன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்கத் தயங்கறே? உன்னோட வெல்விஷரா சொல்றேன் மேகி. நான் சொல்றதைக் கேளு..."

"யோசிக்கறேன் சௌமி..." வழக்கமாய் கூறும் பதிலையே இப்போதும் கூறினாள் மேகலா.

மீண்டும் அவளே தொடர்ந்தாள்.

"சுபிட்சா விஷயமா உன்கிட்ட ஒண்ணு பேசணும் சௌமி. லிங்கம் கல்லூரி நிறுவனங்களோட அதிபர் சொக்கலிங்கத்தோட ஒரே வாரிசு கிரிதரன்ங்கற கிரி அவரோட பையன். அவனுக்கு சுபிட்சாவைக் கேக்கறாங்க. காலேஜ் கலை விழாவுல சுபியோட டான்ஸ் ப்ரோக்ராம்ல சுபியைப் பார்த்த அந்தப் பையன், 'ரெண்டு வருஷம் ஆனா கூட பரவாயில்லை... நான் காத்திருக்கேன்' அப்படின்னு சொல்றானாம். தற்செயலா அந்தக் கிரியை கருமாரி அம்மன் கோயில்ல பார்த்தேன். பார்க்கறதுக்கு ஆள் நல்ல லட்சணமா இருக்கான். கலைவிழாவுல எடுத்த சுபியோட ஃபோட்டோவை அவனோட ஷர்ட் பாக்கெட்ல வச்சிருந்தான்." கோயிலில் அன்று நடந்ததையும், ஷோபா ஜெகன், தன்னிடம் கிரியைப்பற்றியும், அவனது நல்ல குடும்பப் பின்னணி பற்றியும் எடுத்துக் கூறி, சுபிட்சா விஷயமாக பேசியதையும், ஷோபா ஜெகன் மட்டும் அல்லாமல் வேறு சிலரிடமும், தான் கிரியைப் பற்றி விசாரித்ததையும் சௌம்யா உதயகுமாரிடம் விளக்கமாகக் கூறினாள் மேகலா.

"நல்ல வேளையா போச்சு. குடும்பப் பின்னணிக்கும், அந்தப் பையன் கிரிக்கும் இவ்வளவு தூரம் நல்ல விதமா தெரியும் போது, சுபிட்சாவை அந்தக் கிரிக்கே கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதானே? படிப்பு முடிச்சப்புறம் கூட கல்யாணம் பண்ணிக்கறதுக்கு காத்திருக்கறதா சொல்றானே. உன்னோட கல்யாணத்தை முடிச்சுட்டு, சுபிட்சாவிற்கு, இப்போ நிச்சயம் பண்ணி வச்சுக்கிட்டு ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்க வேண்டியதுதானே? இதில யோசிக்க என்ன இருக்கு?"

"சுபிட்சா ஒத்துக்கணுமே... ஒத்தக்கால்ல நிக்கறா... இந்தப் பையன் வேண்டாம்னு..."

"ஏனாம்?"

"அவ... பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கறதுல ஆர்வமா இருக்கா..."

"ஆர்வம்ன்னா? காதலா?"

"ஆர்வம்ன்னா அதுக்கு அர்த்தம் காதல் இல்லை. வீட்ல, கூடவே இருக்கற அத்தை பையன்ங்க நல்ல பையனுங்க. சக்திவேலை நான் பண்ணிக்கிட்டா பிரகாஷை அவ பண்ணிக்கலாம்னு நினைக்கறா. வெளியில இருந்து வரக்கூடிய அந்நியப் பையனா இருந்தா பிரச்சனை வருமோன்னு நினைக்கறா. மத்தபடி காதல் கீதல்லாம் எதுவும் கிடையாது. பிரகாஷை நல்லவன்னு நம்பறா..."

"ஏன்? பிரகாஷ் நல்லவன் இல்லையா?"

"நல்லவன்தான்... அவனுக்கென்ன..." மேற்கொண்டு பிரகாஷைப் பற்றிய விஷயங்களைப் பேச அவளுக்கு கூசியது. என்னதான் உயிர்த்தோழியாக இருந்தாலும் குடும்ப கௌரவம் கருதி, பிரகாஷின் தகாத நடவடிக்கைகள் பற்றி சௌம்யா உதயகுமாரிடம் சொல்வதில் மேகலாவிற்கு உடன்பாடு இல்லை.

"என்ன மேகி, நல்லவன்தான்னு இழுக்கற?"

பிரகாஷ் பற்றிய பேச்சைத் தவிர்த்துப் பேசினாள் மேகலா.

"கிரி நல்ல குணமான பையன். ஏராளமான சொத்துக்கள்! தாராளமான பணப்புழக்கம்!  கிரிக்கு வாழ்க்கைப்பட்டா மகாராணி மாதிரி சுபிட்சா வாழலாமே? என் தங்கை செல்வச் சீமாட்டியா வாழற ஆசை எனக்கு இருக்கக் கூடாதா சௌமி?"

"ஏன் இருக்கக்கூடாது? செல்வச் சீமான் குடும்பம் மட்டுமில்லாம நல்ல பண்புள்ள மனிதர்கள்ன்னு தெரிஞ்சப்புறம் தயங்காம... அவங்ககிட்ட பேசலாமே?"

"பேச வேண்டாம்ன்னு சுபிட்சா தடுக்கறா. எனக்கு என்ன பண்றதுன்னு புரியலை. கிரி சார்பா ஷோபா ஜெகன் என்னை வந்து பார்த்து பேசினாங்கன்னு வீட்ல நான் யார்கிட்டயும் சொல்லலை. சுபிட்சா கிட்டதான் சொல்லி இருக்கேன்."

"சுபிட்சா சின்னப் பொண்ணு. அவளுக்கு அதைப்பத்தி முடிவு எடுக்கற வயசு பத்தாது. பெரியவ நீ சொல்றதை அவ கேக்கணும்..."

"சின்னப் பொண்ணுன்னு நீ சொல்லற. அவ ரொம்ப ஆழமா யோசிக்கறா. அளவுக்கு அதிகமாகவும் யோசிக்கறா. வற்புறுத்துறதுக்கும் எனக்கு மனசு வரலை."

"மனசுக்குள்ள ஒண்ணு வச்சு... வெளியில வேற பேசற பொண்ணு இல்லை சுபிட்சா. அவளுக்கு விபரம் பத்தலை. அத்தை பையனைக் கட்டிக்கிட்டா பிரச்சனை இல்லாம பாதுகாப்பா இருக்கலாம்னு அவ நினைக்கறா..."

"நினைக்கறதெல்லாம் நடந்துட்டா தெய்வமே இல்லைன்னு கவிஞர் பாடி இருக்காரு..."

"அதே கவிஞர்தான் 'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை'ன்னும் பாடி இருக்கார். அதனால... புது வாழ்க்கையைத் துவங்கறதுக்கு, முதல்ல உன்னோட மனசை நீ தயார் பண்ணிக்கோ. சுபிட்சாவோட விஷயத்தை அப்புறம் பார்க்கலாம்."

"அப்புறம் பார்க்கலாம்ன்னு லேஸா விட்டுட முடியாது சௌமி. பணக்கார மாப்பிள்ளை வேணும்... சம்பந்தம் வேணும்னு நாம வலிந்து தேடிப் போகலை. சுபியை விரும்பிப் பெண் கேக்கற அந்த நல்லவங்க, பணக்காரங்களா இருக்காங்க. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமையற வாய்ப்பு தேடி வரும்பொழுது... ஏன் அதை நழுவ விடணும்ங்கறதுதான் என்னோட ஆதங்கம். எங்க அம்மா இருந்திருந்தா எடுத்துச் சொல்றது எடுபடும். என்ன இருந்தாலும் நான் அக்காதானே?"

"அக்காவா இருந்தாலும் ஒரு தாய் ஸ்தானத்துல இருந்துதானே சுபிட்சாவுக்கு நல்லது நடக்கணும்னு ஆசைப்படறே... உன்னோட ஆசையில அவளோட அழகான வாழ்க்கையும் அடங்கி இருக்குன்னு சுபிட்சா புரிஞ்சுக்குவா. அடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகரும். சுபிட்சாகிட்ட நீ சொல்லிக்கிட்டே இரு. அவ மனசுல பதியும்."

"அவ  மனசுல எங்கம்மாவோட முகமும், பாசமும் பதிஞ்சு கிடக்கு. திடீர் திடீர்னு 'அம்மா என் முன்னால வந்தாங்க'ம்பா. என்னைப் பார்த்தாங்க, ஆசீர்வாதம் பண்ணாங்கன்னு சொல்லி கண் கலங்குவா."

"அவ, கண் கலங்காத வாழ்க்கை வாழணும்னு உங்கம்மாவே ஆசீர்வதிப்பாங்க. அவகிட்ட திரும்ப திரும்ப பேசு. அவ மனசை மாத்து..."

"மாத்திட்டா... நிச்சயமா என் தங்கை நல்லா இருப்பா. இது உறுதி..."

"இவ்வளவு உறுதியா இருக்கற... நீ உன்னோட எதிர்காலம் பத்தியும் உறுதியான ஒரு முடிவு எடு. எல்லாமே நல்லபடியா நடக்கும்..."


"நடக்கணும் சௌமி. உன்கிட்ட பேசினதுல என் மனசு ரிலாக்ஸா இருக்கு. இப்படி உன்கிட்ட உட்கார்ந்து என்னோட உணர்வுகளைப் பகிர்ந்துகிட்டது நல்லா இருக்கு. நீ வெளிநாடு போனப்புறம் நமக்குள்ள ஒரு இடைவெளி வந்திருக்கேன்னு கவலைப்பட்டேன்..."

"கவலைப்படறதுக்காகவே காரணத்தைத் தேடுவியா மேகி? ஆறு மாசத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்? சொன்னது போலவே வந்து சேர்ந்துட்டேனே... எத்தனை இ.மெயில் அனுப்பினாலும், ஃபோன் பேசினாலும் நேர்ல பார்த்து மனம் விட்டுப் பேசற சந்தோஷம் வேற எதில இருக்கு?"

"வேற எதிலயும் இல்லை. என் உயிர் ஃப்ரெண்ட் சௌம்யாட்டத்தான் இருக்கு..." மேகலா, சௌம்யா உதயகுமாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

"பார்த்தியா... பேசிக்கிட்டே இருந்ததுல உனக்கு குடிக்கக் கூட ஒண்ணுமே குடுக்கலை."

"குடுத்திருக்கியே... உன்னோட அன்பையும், அறிவுரையையும். அது போதும். நான் கிளம்பறேன்."

"நான் உன்னை கொண்டு வந்து விடட்டுமா?"

"வேண்டாம் சௌமி. நான் ஆட்டோவுல போய்க்கறேன்."

சௌம்யா உதயகுமார் விடை கொடுக்க, மேகலா,அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியேறினாள்.

31

வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மேகலா.

அவளுக்குப் பின்பக்கம் இருந்த பிரகாஷ், அவளது கழுத்தில் கை போட்டான். பதறிப்போன மேகலா... பிரகாஷைப் பார்த்து திடுக்கிட்டாள். அவனிடமிருந்து விடுபட இயலாதபடி வாஷிங் மெஷின் போடப்பட்டிருந்த இடம் மிகக் குறுகலான இடம். அவனிடமிருந்து தப்பிக்க, தவியாய் தவித்தாள் மேகலா. வாஷிங் மிஷின் சுழல்வது போல அவளது உள்ளமும் சுழன்றது.

பிரகாஷின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தாள். அவன் விடாமல் அவளைத் தன் கைகளுக்குள் அடக்குவதற்காக அவளை எட்டிப் பிடித்தான். தீ பட்டு விட்டது போல திகைத்துப் போனாள் மேகலா.

'கத்தினால் உதவிக்கு யாரேனும் வருவார்கள். ஆனால் இந்த பிரகாஷின் முகமூடி கிழிந்து... வீடு ரெண்டு பட்டு விடுமே? அப்புறம் அத்தையும், அப்பாவும் அதிர்ச்சியில அலைமோதிப் போவாங்களே...'

உள்ளத்தின் புலம்பலை அடக்கியபடி பிரகாஷின் பிடியில் சிக்கிக் கொண்ட மேகலா, அவளது புறங்கையை உருவ முயற்சித்ததில், அவளது கை வலித்தது. அவனுடைய உடும்புப்பிடியில் சிக்கிக் கொண்ட மேகலாவின் உடம்பு நடுங்கியது. தத்தளித்தாள். தவித்தாள்.... வேறு வழியே இல்லாமல் அடிக்குரலில் பேசினாள்.

 "உனக்கென்ன... இந்த உடம்புதானே வேணும்? எடுத்துக்க. ஆனா... என் கழுத்துல ஒரு தாலியைப் போட்டுட்டு, ஊரறிய என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு எடுத்துக்க... இப்ப என்னை விட்டுடு..." மேகலா அழுதாள்.

பிரகாஷ் அடக்கி வாசித்து, இளக்காரமாய் சிரித்தான்.

"என்ன? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? ஒருத்தனுக்கு மனசையும் குடுத்து, உடம்பையும் குடுத்து கெட்டுப்போய் ஏமாந்து நிக்கற உனக்கு நான் தாலி குடுக்கணுமா?"

"அவர்... வருண் ஒண்ணும் என்னை ஏமாத்தலை. விதி செஞ்ச சதியால விபத்துல செத்துப் போயிட்டாரு..."

"நீ கெட்டுப் போன கதையும் தெரியும். அவன் செத்துப் போன கதையும் தெரியும். நீங்க ரெண்டு பேரும் பீச்ல படகுக்கு பின்னாடி கல்யாணத் திட்டம் போட்டிருந்த கதையும் தெரியும். அவன் கொடுத்த குழந்தையை  ஹாஸ்பிட்டல்ல போய் டெட்டால் போட்டு கழுவிட்டா? நீ சுத்தமாகிடுவியா? நான் என்ன இளிச்ச வாயனா... உனக்கு வாழ்க்கை குடுக்க?"

"நான் ஒண்ணும் உன்கிட்ட வாழ்க்கைப் பிச்சை கேட்கலை. உன்னை உத்தமன்னு நம்பிக்கிட்டிருக்காளே என் பைத்தியக்கார தங்கச்சி. அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்தறதுக்குத்தான் கேட்கிறேன்...."

"ஓ... தங்கைக்காக... அக்கா செய்யற தியாகமா? த்சு த்சு த்சு... தியாகச்சுடர்ங்கற நினைப்பா உனக்கு? உன்தங்கச்சி புதுமலர்... அறிவாளி... அழகி... அவளை எந்தக் காரணம் கொண்டும் எவனுக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..."

"ஏன் என் பின்னால அலைஞ்சு என்னை அவமானப்படுத்தறே?"

"எனக்கு தேவை நீ இல்லை. உன்னோட உடம்பு!... இந்த வளமையும், செழுமையும் நிறைஞ்ச அழகான உடம்பு... "

"நீதானே சொன்ன... நான் அழுக்கானவள்ன்னு?"

"ஆமா... ஏற்கெனவே அழுக்கான நீ என்னாலயும் இன்னும் அழுக்காகு. இதோ இந்த வாஷிங் மெஷின்ல துணியை துவைக்கற மாதிரி அந்த அழுக்கையும் துவைச்சு எடுத்து அலசு...."

"அலசிப் பார்க்க வேண்டியது உன் மூளையையும், மனசையும்தான். காதல்ங்கறது என்னோட உரிமை. வருணை நான் காதலிச்சேன். அவரோட ஆசைக்கு அடிபணிஞ்சேன். அளந்தியே... எல்லாமே உனக்கு தெரியும்னு. அதைப்பத்தி உனக்கென்ன? அதெல்லாம் என்னோட சொந்த விஷயம்."

"சொந்த விஷயம்ங்கற... சரி... யாரோட சொந்த விஷயம்? அரவிந்த் ஹாஸ்பிட்டல்ல உன் அவமானச் சின்னத்தை அழிச்சது வரைக்கும்தான் உன் சொந்த விஷயம். இப்போ... என் அண்ணன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கியே? இது யாரோட சொந்த விஷயம்? அவன் என்னோட அண்ணன். இது எங்க சொந்த பந்தம் சம்பந்தப்பட்ட விஷயம்மா கண்ணு. என்னோட அண்ணனை முட்டாளாக்கறது உன்னோட சொந்த விஷயம் இல்லை..."

"நான் உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க இன்னும் சம்மதிக்கவே இல்லை... அதுக்குள்ள நீ ஏன் இந்த துள்ளு துள்ளறே? நான் ஒண்ணும் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணணும்ங்கற கனவுல மிதந்துக்கிட்டு கிடக்கலை. குடும்ப நலனுக்காக உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையில இருக்கேன். ஒண்ணு புரிஞ்சுக்கோ... நான் உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு எடுத்தாலும் கூட அதுவும்  என்னோட சொந்த விஷயம்தான். விரும்பாமலே உன்னைப் புருஷனா ஏத்துக்கிட்டு, உன்னை ஒரு மனுஷனா மாத்தலாம்னுதான் உன்னைக் கெஞ்சினேன். அதை விட, என்னோட தங்கச்சிக்காகத்தான் போயும் போயும் உன்னைப் போல ஒரு மிருகத்துக்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைக்கத் துணிஞ்சேன்."

"நீ எதுக்கும் துணிஞ்சவதானே? என்னோட ஆசைக்கும் இணங்கிடு..."

"உங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா... உன்னோட அண்ணி ஸ்தானம். அண்ணிங்கறவ... ஒரு அம்மா மாதிரி..."

"இந்த அண்ணி, அம்மா... சென்ட்டிமென்ட்டெல்லாம் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தேவை உன்னோட அழகு! இந்த அழகான உடம்பு..."

"ச்சீ... இவ்வளவு கேவலமான உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைக்க நான் என்ன முட்டாளா?"

"நீ முட்டாள் இல்லை. எங்க அண்ணன் உட்பட எல்லாரையும் முட்டாளாக்கறவ... நீ..."

"நான் யாரையும் ஏமாத்தி... கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கெஞ்சலை..."

"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அண்ணன் ஏமாந்தவன், எங்க அம்மா ஏமாந்தவங்க..."

மேலும் மேலும் கேவலமாகப் பேசிக் கொண்டே போன பிரகாஷின் மீது ஆத்திரப்பட்டாள் மேகலா. விரல்களை சொடுக்கினாள். "இதோ இந்த நிமிஷம் சொல்றேன்... என் தங்கச்சியை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறது நடக்கவே நடக்காது..."


ஓடிக் கொண்டிருந்த வாஷிங் மெஷின் நின்றது… கமலத்தின் குரல் கேட்டது. மிஷின் அருகே வந்து கொண்டிருந்தாள் கமலம்.

"என்னம்மா மேகலா... காலங்காத்தால வாஷிங் மெஷின் போட்டுட்டியா? அட... பிரகாஷ்... நீயும் சீக்கிரமாவே எழுந்துட்டியா? மேகலாவிற்கு கூடமாட உதவி செய்யறியா? சரி...சரி... நான் போய் காபி போடறேன்... வாங்க" என்றபடி கமலம் அங்கிருந்து நகர்ந்தாள்.

32

காலேஜில் இருந்து திரும்பிய சுபிட்சா, வழக்கம்போல வாசலில் தாறுமாறாக கிடந்த செருப்புகளை அடுக்கி வைத்தாள். டெலிஃபோன் அருகே உள்ள சிறிய மேஜை மீது இருந்த செய்தித்தாள்கள் கலைந்து கிடந்ததால் அவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைத்தாள்.

"யார் இப்படி கலைச்சுப் போடறாங்களோ தெரியலை..." என்று முணு முணுத்துக் கொண்டே டி.வி. அருகே இருந்த காலி காபி கப்பை எடுத்து வைத்தாள்.

வழக்கமாய் டி.வி. எதிரில் உட்கார்ந்திருக்கும் கமலம், படுத்திருப்பதைப் பார்த்தாள். 'எப்பொழுதும் தன்னைப் பார்த்தும் காபி போடப் போகும் அத்தை ஏன் இன்னும் படுத்திருக்காங்க' என்று எண்ணியவளாய் கமலத்தின் அருகே சென்றாள்.

"என்ன அத்தை? உடம்புக்கு என்ன? ஏன் படுத்திருக்கீங்க?"

"லேஸா நெஞ்சு வலிக்குதும்மா..."

"ஐய்யய்யோ... ஆஸ்பத்திரிக்குப் போலாமா அத்தை?"

"அப்படியெல்லாம் அவசரமா ஆஸ்பத்திரிக்குப் போகற மாதிரி வலிக்கலை.."

"மாத்திரையெல்லாம் கரெக்டா சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்களா?"

"ஒரு வேளை கூட தவறாம சாப்பிடறேன்மா..."

"பின்ன ஏன் நெஞ்சு வலி வருதுன்னு டாக்டரைப் பார்த்து கேட்கலாம் அத்தை..."

"இப்போதைக்கு வேண்டாம்மா. எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை. மனசுல ஒரு கவலை. மேகலா...கல்யாணப் பேச்சு எடுத்தா, யோசிச்சு சொல்றேன்னு எப்பவும் ஒரே பதிலைத்தானே சொல்றாளே தவிர 'சரி'ன்னு சொல்லவே மாட்டேங்கறா. ஒரு வேளை சக்திவேலைப் பிடிக்கலியோ....."

"சேச்சே... அப்பிடியெல்லாம் இருக்காது அத்தை..."

"இல்லை சுபிட்சா. அவ, பிடி குடுத்தே பேச மாட்டேங்கிறா. மேகலா, என்னோட மருமகளா வரணும்ன்னு நான் ஆசைப்படறேன், ஆனா... அவ மனசுல என்ன இருக்குன்னு வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறா. யோசிச்சு சொல்றேன், யோசிச்சு சொல்றேன்னுதான் சொல்றா. காலம் றெக்கை கட்டிக்கிட்டுப் பறக்குது. மாத்திரை சாப்பிட்டும் கூட அடிக்கடி நெஞ்சு வலி வருது. மேகலாகிட்ட சொல்லிடாதம்மா. அவ பதறிப் போயிடுவா. நர்ஸிங் ஹோம், அட்மிட்னு பெரிசாக்கிடுவா. எனக்காக நீ அவகிட்ட பேசு. நிஜம்மா அவ மனசுல என்ன இருக்குன்னு அவ சொன்னா போதும். என்னோட ஆசைக்காக அவ சம்மதிக்கணுங்கற அவசியம் இல்லை. அவளை வற்புறுத்தாதே. மேகலா... சக்திவேலைக் கட்டிக்க சம்மதிச்சுட்டாள்ன்னா எனக்கு நெஞ்சு வலியே வராது... ஆனா என்னோட ஆசையை அவ மேல திணிக்கறதுக்கு நான் விரும்பலை..."

"விரும்பி சம்மதிப்பா அத்தை. நீங்க ஏன் கவலைப்படறீங்க? நான் ஏற்கெனவே அக்காகிட்ட இதைப்பத்தி பேசிக்கிட்டுத்தான் இருக்கேன். நிச்சயமா அவ சம்மதிப்பா. நீங்க அதையே யோசிச்சுக்கிட்டு... சரின்னு சொல்லுவாளா மாட்டாளான்னு குழம்பிக்காம அமைதியா இருங்க. மனசு அலைபாஞ்சா உடம்புக்கு ஆகாது. நிம்மதியா இருங்க."

"உன்கிட்ட மனம் விட்டு பேசினதுல நெஞ்சு வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா ஒண்ணு.... எனக்கு நெஞ்சு வலி வருதுன்னு மேகலாகிட்ட இப்ப சொல்லாதே..."

"சொல்லாம இருந்தா எப்படி அத்தை?... உங்க உடம்புக்கு பிரச்சனையா ஏதும் வந்துடக் கூடாதே..."

"சொல்லவே வேண்டாம்னு சொல்லலைம்மா. இப்ப வேண்டாம்னுதான் சொல்றேன். சமயம் பார்த்து, நானே அவகிட்ட சொல்றேன். சூடா ஒரு காபி போட்டுக் கொண்டு வாம்மா..."

"இதோ போட்டுட்டு வரேன் அத்தை..."

சுபிட்சா சமையலறைக்குள் சென்றாள்.

33

ரவு மணி எட்டு. அறையின் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள் மேகலா. மனச்சோர்வால் உள்ளம் களைத்துப் போய், உடல் துவண்டு போய் கிடந்தது. 'வருணைக் காதலிச்சேன். அவரோட அண்ணன் வரட்டும்னு கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். காத்திருந்ததுக்கு பலன் கிடைக்கறதுக்கு முன்னாலயே வருண் போய் சேர்ந்துட்டார். அப்படியே அப்பாவுக்கு மகளா கடைசி வரை வாழ்ந்துடலாம்ன்னா... சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க. என்னோட ரகசியம் தெரிஞ்சுகிட்ட பிரகாஷ், ப்ளாக்மெயில் பண்ணி என்னை கீழ்த்தரமா அடைய நினைக்கிறான். அவன் கெட்டவனா இருந்தாலும் பரவாயில்லை... அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சுபிட்சாவை காப்பாத்தலாம்ன்னா அதுக்கும் வழி இல்லை. சுபிட்சாகிட்ட கிரியைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா... அவ பிரகாஷைக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவுல இருக்கா, நல்ல வேளை அவ பிரகாஷைக் காதலிக்கலை.

‘பிரச்சனை இல்லாத வாழ்க்கையை எதிர்பார்த்து அவனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறா. உண்மையான காதலா இருந்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, பிரகாஷைக் கேட்டிருக்கவே மாட்டேன். சுபிட்சாவை, பிரகாஷ்ட்ட இருந்து தப்பிக்க வைக்கறதுக்கு வழி இருந்தும், அந்த வழியை அடைச்சு வைக்கறான் இந்தப் பிரகாஷ். இந்த சின்ன வீட்லயே பிரகாஷால எனக்கு எவ்வளவு தொல்லையும், அவமானமும் நடக்குது? வாஷிங்மிஷின்ல துணியை போட்டுக்கிட்டிருக்கும் போது அவன் நடந்துக்கிட்ட விதமும், பேசின அசிங்கமான பேச்சும்... தாங்க முடியலை. எத்தனை காலத்துக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்? நல்லவனா நாடகம் போடற பிரகாஷ் என்னைத் தவறான நோக்கத்துல நெருங்கறான்னு அத்தைக்குத் தெரிஞ்சா அவங்க நெஞ்சு வெடிச்சுடும்.

‘ஒரு முறை நெறி தவறினதுக்கு ஒவ்வொரு நாளும் தண்டனை அனுபவிக்கிறேன். ஊமை கனவு கண்டமாதிரி, வருணோட குழந்தையை அழிச்சதையோ, பிரகாஷோட கெட்ட நடத்தையைப் பத்தியோ... யார் கிட்டயும் சொல்ல முடியாம அவதிப்படறேன். கிரி விஷயத்தை அப்பாகிட்டேயும், அத்தைகிட்டேயும் சொன்னா... அவங்க சுபிட்சாவை வற்புறுத்துவாங்க. அவ 'மாட்டேன்'னு பிடிவாதம் பிடிப்பா. தேவை இல்லாத பிரச்சனை. சௌமி, சுபிட்சா, அப்பா, அத்தை எல்லாரும் சக்திவேலை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. பிரகாஷ்ட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வேணும். அந்தப் பாதுகாப்பு வளையம் சக்திவேல் மச்சானோட தாலியா ஏன் இருக்கக் கூடாது? நாளுக்கு நாள் பிரகாஷோட அட்டூழியம் அதிகமாகிட்டே போகுது. பிரகாஷ் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கற சுபிட்சா கிட்ட அவனைப்பத்தி என்ன சொன்னாலும் எடுபடாது. எலிப்பொறி வச்சு பிடிக்கற மாதிரி என்னைப் பிடிக்க முயற்சிக்கற பிரகாஷ்கிட்ட இருந்து தப்பிக்கணும். அவங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணி, வாழ்ந்து காட்டணும்... இதுதான் சரி...'

திடமான முடிவு எடுத்த மேகலா, பக்கத்தில் சுபிட்சா வந்து படுத்திருப்பதைப் பார்த்தாள்.

"படிச்சு முடிச்சுட்டியா சுபி?"

"நான் எப்பவோ படிச்சு முடிச்சு உன் பக்கத்துல வந்து படுத்தாச்சு. என்னக்கா தீவிரமா எதையோ யோசிச்சுட்டிருக்கியே?..... நான் ஒரு விஷயம் உன்கிட்ட பேசணும்."


"நானும் உன்கிட்ட பேசணும். நீ முதல்ல சொல்லு... "

"இல்லைக்கா... நீ முதல்ல சொல்லு..."

"நீ முதல்ல சொல்லு. அப்புறம் நான் சொல்றேன்..."

"சரிக்கா. நானே சொல்றேன். சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் கேட்டேன், அத்தை, அப்பா... எல்லாரும் கேட்டுட்டாங்க. யோசிச்சு சொல்றேன்னு ஏன் நழுவுற? பெரியவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா? அதுதானே மரியாதை! எத்தனை நாள் தான் யோசிப்ப? எதுக்காக இவ்வளவு காலம் கடத்துற? உனக்கே தெரியும் அத்தைக்கு பி.பி. இருக்கு. நெஞ்சு வலி வர்ற பேஷ்ண்ட்ன்னு. அம்மாவை இழந்துட்டு தவிக்கற அப்பா... உன்னோட கல்யாணக் காட்சிக்காக ஆசையா காத்துக்கிட்டிருக்காரு. எவ்வளவு  நாளைக்கு காக்க வைக்கப் போற? படிச்ச பொண்ணு நீ. இப்படி எதுவுமே சொல்லாம இருக்கறது தப்பில்லையா? சிந்திச்சு முடிவு எடுக்க டைம் வேணும்னு கேட்ட... நானும் பொறுமையா காத்துக்கிட்டிருக்கேன். ஆனா இப்படி யோசனையிலேயே காலத்தைக் கடத்திக்கிட்டிருக்க. 'சரி'ன்னு சொல்ல மாட்டியாக்கா?" கெஞ்சினாள் சுபிட்சா.

"சரி சுபி..."

"இந்த 'சரி' எதுக்காகக்கா சொல்ற?"

"நீ என்னை எதுக்காக 'சரி'ன்னு சொல்லச் சொல்லிக் கேட்டியோ? அதுக்காக...?"

"அப்படின்னா சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் இந்த சரியா?"

"ஆமா. அதுக்குத்தான் இந்த 'சரி'..."

"யே..." மகிழ்ச்சியில் சுபிட்சா கத்தினாள்.

"ஏ.சுபி. கத்தாதே. ராத்திரி நேரம்.."

"எனக்காக... என்னோட பேச்சைக் கேட்டு சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன உனக்கு கோடி தடவை தேங்க்ஸ் சொல்லணும்க்கா."

'உனக்காக இல்லை சுபி... இந்தக் கல்யாணம் எனக்காக... என்னோட பாதுகாப்புக்காக... அந்த பிரகாஷோட மூக்கை உடைக்கறதுக்காக...'

மேகலாவின் மனதிற்குள் எண்ணங்கள் ஓடின.

"என்னக்கா... ஸைலன்ட்டாயிட்ட? வெட்கமா?"

"வெட்கம் இல்லம்மா... வேதனை..." சுபிட்சா கூறியதும் பதறினாள் சுபிட்சா.

"அக்கா..."

"ஒண்ணுமில்லை சுபி. பழைய ஞாபகம்..." சமாளித்தாள் மேகலா.

"டெலீட் பண்ணிடுக்கா. பழசையெல்லாம் டெலீட் பண்ணிடு. அப்பாடா!... மனப்பூர்வமா நீ சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச சந்தோஷத்துல, கண்ணை சுழட்டிக்கிட்டு வந்த தூக்கம் கூட பறந்து போயிடுச்சு. சந்தோஷமா இருக்கு..."

"உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..."

"அது சரி... நீ என்னவோ சொல்லணும்னு இருந்தியே... அது என்ன?"

"அதுவும் இதேதான்..."

"புரியலியே?"

"நீ பேச நினைச்ச அதே கல்யாண விஷயம்தான் நான் பேச நினைச்சதும்..."

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..." தன் குயில் குரலில் சுபிட்சா பாட, அதை ஆனந்தமாய் ரசித்தாள் மேகலா. தங்கையின் அன்பை நினைத்து மனம் கசிந்து உருகினாள். அதன்பின் இருவரும் உறங்கினார்கள்.

விடியற்காலையிலேயே, மேகலா  எழுவதற்கு முன் சுபிட்சா எழுந்து கமலத்தை மெதுவாக எழுப்பினாள்.

"என்ன சுபிட்சா... இவ்வளவு சீக்கிரமா எழுந்திருச்சுட்ட... அதிசயமா இருக்கு?"

"ஸ்... சத்தமா பேசாதீங்க. அதிசயமா எழுந்திருச்சது, இன்ப அதிர்ச்சியா உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றதுக்குத்தான்."

விருட்டென்று கமலம் எழுந்தாள்.

"அத்தை... அக்கா, சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா..."

"அப்படியா? நிஜமாவா..." மகிழ்ச்சியில் தன்னையும் அறியாது உரக்கப் பேசிய கமலத்தை அடக்கினாள் சுபிட்சா.

"ஸ்... மெதுவா பேசுங்க அத்தை. நிஜம்மா அக்கா சம்மதிச்சுட்டா. ஆனா, நான் சொன்னேன்னு அவகிட்ட காண்பிச்சுக்காதீங்க. அவளே சொல்றாளான்னு பார்போம். சரியா?"

"சரிடிம்மா. காலங்காத்தால இனிப்பான சமாச்சாரம் சொல்லி இருக்க. இன்னிக்கு உனக்கு பாயசம் பண்ணித்தரேன்..."

"சரி அத்தை."

மறுபடியும் அறைக்கு சென்று மேகலாவின் அருகில் படுத்துக் கொண்டாள் சுபிட்சா.

சுபிட்சா போய் படுத்ததும், போர்வைக்குள் இருந்து கையை நீட்டி சுபிட்சாவின் காதைக் கிள்ளினாள் மேகலா.

"ஏ முந்திரிக் கொட்டை... விடியறதுக்கு முன்னாடியே எழுந்து போய் அத்தைகிட்ட சொல்லிட்டியா…?"

"ஆமாக்கா. எனக்கு அத்தனை சந்தோஷம்."

"நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்."

"சரிக்கா... மறுபடி கொஞ்ச நேரம் தூங்கிட்டு, ஆறு ஆறரைக்கு எழுந்திருக்கலாமே..."

"ஓ.கே."

மேகலாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்து கண்களை மூடினாள் சுபிட்சா.

தங்கையின் அன்பை உணர்ந்த மேகலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

34

தினசரி செய்யும் வேலைகள் அனைத்தும் முடித்து, ஆபீஸ் கிளம்பும் வரை சாதாரணமாக இருந்த மேகலா, தன்னிடம் கல்யாண விஷயம் பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்த கமலம் மௌனமாக இருந்தாள். வழக்கம் போல லன்ஞ்ச் பாக்ஸை மேகலாவின் கையில் கொடுத்தாள் கமலம்.

"அத்தை... சக்திவேல் மச்சானுக்கு சம்பதம்ன்னா எனக்கும் சம்மதம் அத்தை. அப்பாகிட்ட நீங்களே சொல்லிடுங்க அத்தை..."

டிபன் பாக்ஸை கையில் வாங்கிக் கொண்ட மேகலா, ஆபீஸிற்கு கிளம்பினாள்.

"என்னம்மா மேகலா, இவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்லிட்டு... நீ பாட்டுக்கு ஆபிசுக்கு கிளம்பறே..."

"அதான் அந்த முந்திரிக் கொட்டை சுபிட்சா விடியறதுக்கு முன்னாடியே சொல்லிட்டாளாமே..."

எதுவுமே தெரியாதது போல நடித்துக் கொண்டிருந்த கமலம், இதைக் கேட்டு சிரித்து விட்டாள். கமலத்தின் சிரிப்பைப் பார்த்து மேகலாவும் சிரிக்க, அங்கே ஒரு மூலையில் இருந்த விதி, இவர்களைப் பார்த்து சிரித்தது.

வள்ளுவர் கோட்டம் வளாகத்தினுள் நடைபெற்ற கண்காட்சியில்  சுற்றிக் கொண்டிருந்த பிரகாஷின் முதுகில் தட்டினான் பாலாஜி.

திரும்பிய பிரகாஷ், பாலாஜியைப் பார்த்து புன்னகைத்தான்.

"என்ன பாலாஜி... கொஞ்ச நாளா உன்னை பார்க்கவே முடியலியே..."

"திடீர்னு நான் லண்டனுக்கு போற மாதிரி ஆயிடுச்சுடா..."

"என்னது? லண்டனுக்கா?"

"ஆமா பிரகாஷ். எங்க சித்தப்பா பொண்ணு பிருந்தா லண்டன்ல ஸெட்டில் ஆகி பதினஞ்சு வருஷமாச்சு. அவ, லண்டன்ல இந்திய உணவுக்காகவே பிரத்தியேகமா ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிக்கறா. அதுக்கு நம்பிக்கையான ஆள் வேணும். உடனே கிளம்பிவான்னு சொன்னா. பாஸ்போர்ட், விஸா, லொட்டு லொசுக்குன்னு வேலை பெண்டு எடுத்துருச்சு. 'பணமே போடாம உன்னை பார்ட்னரா போட்டுடறேன். நீ பார்த்து நடத்து எனக்கு தேவை நம்பிக்கையான ஆள்'ன்னு சொல்லி, லண்டன் போறதுக்கு பணமும் அனுப்பிட்டா. அதனால படிப்பைக்கூட முடிக்காம கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டேன்."

"படிப்பை முடிக்காம போறது புத்திசாலித்தனமா?"

"நான் படிப்பை முடிச்சு வேலைக்கு போனா சம்பாதிக்கறதைவிட அங்கே பல மடங்கு சம்பாதிக்கலாம்னு பிருந்தா சொன்னா. அவளோட புருஷன் டாக்டர். இருபது வருஷத்துக்கு முன்னாலயே அங்கே ஸெட்டில் ஆனவர். அதனால நிறைய பணம் சேர்த்து வச்சிருக்காரு. அங்கே பணத்தை பணம் பண்ற வேலைதான். இன்னும் கொஞ்ச நாள்ல  கிளம்பிடுவேன்."

"நல்ல நேரம் பொறந்துடுச்சு உனக்கு. இனி உங்க குடும்பம், கஷ்டப்படாம நல்லா இருப்பாங்க."


"ஆமா பிரகாஷ். அம்மா, அப்பாவையெல்லாம் விட்டுட்டுப் போறதை நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு. தங்கச்சியும், தம்பியும் என்னைப் பிரிஞ்சு இருக்கவே மாட்டாங்க. நான் லண்டன்ல போய் சம்பாதிச்சு அவங்களை வசதியா வாழ வைக்கலாம்ன்னு நம்பிப் போறேன். எனக்கு நம்பிக்கை இருக்குடா..." பாலாஜி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பிரகாஷிற்கு மொபைல் ஃபோனில் அழைப்பு வந்தது.

ஹாய், பூய் என்று அவன் அசடு வழிந்து பேசுவதிலேயே எதிர் லைனில் பேசுவது பெண் என்று பாலாஜிக்குப் புரிந்தது. பிரகாஷ் பேசி முடித்ததும். "டேய் பிரகாஷ்... பொண்ணுங்க கூட ஊர் சுத்தறதை நிறுத்துடா. அந்த வினயா கூட உன்னை ட்ரிப்ளிகேன் ஹோட்டல்ல என்னோட தம்பி பார்த்தானாம். அவ கூட ஊர் சுத்தறது யாருக்கும் தெரியாதுன்னு நீ நினைக்கற. பொய்க்கு கண்ணே இல்லைன்னாலும் உண்மைக்கு ஆயிரம் கண்கள் உண்டு. ஜாக்கிரதை. திருந்து. நம்பிக்கை குடுத்து பழகற வினயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் மேல எந்தப் தப்பும் இருக்காது. காதலுக்காக போராடு. ஆனா... காதலியை ஏமாத்தறதுக்காக போராடறது வீண்... வம்பை விலை குடுத்து வாங்காத..."

"எனக்காக என் மாமா பொண்ணு சுபிட்சா இருக்கா. காதல் எனக்கு ஹோட்டல் சாப்பாடு மாதிரி. மாமா பொண்ணைக் கல்யாணம்  பண்ணினா... பக்குவமா, சுத்தமா சமைக்கற வீட்டு சாப்பாடு மாதிரி. வீடுதான் என்னிக்கும் நிரந்தரம். ஹோட்டலுக்குப் போனா காசைக் குடுக்கறோம். சாப்பிடுறோம். வந்துக்கிட்டே இருக்கோம், அங்கே காசு, இங்கே காதல் நாடகம்."

"நீ போடற நாடகத்துல உன்னோட வேஷம் கலைஞ்சு போயிட்டா? உன் மாமா பொண்ணு உன்னை திரும்பிக் கூட பார்க்கமாட்டா..."

"காலேஜ் சம்பந்தப்பட்ட வேலை, கம்ப்யூட்டர் வேலை, ஃபோட்டோ ப்ரிண்ட், ப்ராஜெக்ட் வொர்க் இப்படி அவ கேக்கற எல்லா உதவியையும், உடனுக்குடனே செஞ்சு அவளை சூப்பரா கவுத்து வச்சிருக்கேன். என்னைப் போல ஒரு நல்லவனே இல்லைங்கற அளவுல நம்ப வச்சுருக்கேன். அவளைப் பொறுத்த வரைக்கும் நான் கண்ணியமானவன்னு க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். என்னைப்பத்தி தப்பா யார் என்ன சொன்னாலும் அவ நம்பவே மாட்டா..."

"அடப்பாவி... நம்ப வச்சு அவ கழுத்தறுக்கிறியேடா..."

"கழுத்தறுக்கலடா... அவ கழுத்துல தாலி கட்டப் போறேன். எங்க குடும்பத்துல எல்லாரும் என்னை நம்பறாங்க. அதனால சுபிட்சா எனக்கு கிடைக்கிறதுல எந்தத் தடையும் இருக்காது. அவ ஒரு அழகுப் பெட்டகம். அறிவுப் பொக்கிஷம். அவ எனக்கு மட்டுமே சொந்தம்..."

"அவ உனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நீ எப்படி நினைக்கிறியோ, அதுபோல அவளும் உன்னை அவளுக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கணும்ல?"

"நான் ஆம்பளை. அவ பொம்பளை. பொண்ணுங்க என்னைக்கும் ஆண்களை விட தாழ்ந்தவங்கதான். போட்டா போட்டியெல்லாம் என் கூட போட முடியாது."

"எல்லா பொண்ணுங்களும் வினயா மாதிரி பயந்த சுபாவத்தோட இருக்க மாட்டாங்க. ஆண்களோட முகமூடியைக் கிழிச்சு எறியற வீராங்கனைகளும் இருக்காங்க."

"கழுத்துல தாலி விழற வரைக்கும்தான் வீரமெல்லாம், தாலிக்கயிறே சுருக்குக் கயிறா மாறும்னு பெண்கள் பயப்படுவாங்க..."

"தப்புக் கணக்கு போடறே பிரகாஷ். நீ நினைக்கற மாதிரி... வாழ்க்கை ஒரு விளையாட்டு இல்லை. உணர்வுகளால் சூழப்பட்டது. சொந்தமும் பந்தமும் நிறைஞ்ச குடும்ப நேயம் மிகுந்ததுதான் வாழ்க்கை..."

"எனக்கும் குடும்ப நேயம் உண்டுடா. என் குடும்பத்தை நான் நேசிக்கிறேன்."

"அது எனக்கும் தெரியும். ஆனா உன்னோட பலவீனம், பெண் சபல புத்தியை விட்டுட்டா உண்மையிலேயே நீ நல்லவன்டா..."

"நான் நல்லவனா இருந்து என்ன செய்ய? வல்லவனா இருக்கணும். கல்யாணம் கட்டிகிட்டு, காய்கறி வாங்கிப் போட்டு, சமைச்சு போடறதை சாப்பிட்டுக்கிட்டு, பிள்ளை குட்டிகளை ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ்க்கு ஓடற சராசரி மனுஷனா... குடும்பஸ்தனா வாழ்றதுல என்னடா ஜாலி இருக்கு? அனுபவி ராஜான்னு அனுபவிக்கணும்..."

"வினயா பாவம். உன்னை ரொம்ப நம்பறா. உன் கிருஷ்ணலீலையை வினயாவோட நிறுத்திக்கோ. அவளை விட்டுடாதே..."

"உன்னோட உபதேசத்தை முடிச்சுக்கிறியா ப்ளீஸ்?"

"உன்னைத் திருத்தலாம்னு நினைச்சேன். ம்கூம்...நீ திருந்தற மாதிரி தெரியல. உண்மையான நண்பனா புத்திமதி சொல்லிட்டேன். நான் சொன்னதையெல்லாம் யோசிச்சுப்பாரு. உன்னோட திருவிளையாடல்களை மூட்டை கட்டி தூரப் போட்டுட்டு முழுமையான நல்ல மனுஷனா மாறு..."

"நான் மாறமாட்டேன்டா. சுத்தி சுத்தி அறிவுரை கூறி அறுக்கறதுலயே குறியா இருக்கியே. நண்பனா என்மேல நீ வச்சிருக்கற அன்புக்கு மரியாதை வச்சிருக்கேன். லண்டன் போறதுக்கு முன்னால நாம சந்திப்போம்."

"சரிடா பிரகாஷ். கிளம்பலாமா?"

"ஓ. கிளம்பலாமே."

இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

"என்னடா பிரகாஷ்... ஷுவுக்கு பாலிஷ் போட்டுக்கிட்டு இருந்த உன்னை திடீர்னு பார்த்தா ஆளையே காணோம்? சாப்பிடாம கொள்ளாம எங்கே போன? எப்பவும் எங்கே போனாலும் சொல்லிட்டுப் போவ. நீ பாட்டுக்கு போயிட்டே... வீட்ல விசேஷம்,  சந்தோஷமான சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கோம். அதில கூட கலந்துக்க முடியாம அப்படி எங்கே போன? அந்தப் பொண்ணு மேகலா, உங்க அண்ணன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்க, சம்மதம் சொன்னப்ப... இங்கேதானே இருந்தே? அவகிட்ட ஒரு வாழ்த்து சொல்லக் கூட முடியாம அப்படி என்ன அவசரமோ வெளியே போக? அவளை ஆபிசுக்கு அனுப்பிட்டு திரும்பிப் பார்த்தா உன்னை காணோம்? என்ன ஆச்சு உனக்கு?"

"எனக்கு ஒண்ணும் ஆகலைம்மா. உனக்குத்தான் என்னமோ ஆகிப்போச்சு..." மூர்த்தி அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரகாஷ், மெதுவான குரலில் தொடர்ந்து பேசினான்.

"மேகலா எனக்கு அண்ணியா வர்றதுல எனக்கு சந்தோஷம்தான்மா. ஆனா... இப்பயெல்லாம் டாக்டர்ஸ் சொல்றாங்க, சொந்தத்துல கல்யாணம் கட்டினா ஊனமுள்ள பிள்ளை பிறக்கும். மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளை பிறக்கும்ன்னு... பத்திரிக்கைகள்ல இதைப்பத்தி நிறைய எழுதறாங்க..." அவன் பேசி முடிக்கும் முன் கமலம் குறுக்கிட்டாள்.

"அட போடா. ஒரு நாளைக்கு இதை சாப்பிடுன்னு எழுதறாங்க. இன்னொரு பத்திரிக்கையில அதே பொருளை சாப்பிடக் கூடாதுன்னு எழுதறாங்க. ஸ்திரமா எதையும், யாரும் எழுதறதும் இல்லை சொல்றதும் இல்லை. உங்க அப்பாவுக்கு நான் கூட ஒண்ணுவிட்ட அத்தை மகன், மாமா மகள் உறவுதான். நீயும், உங்க அண்ணனும் நல்லாதானே இருக்கீங்க, எந்தக் குறையும் இல்லாம?"

"அப்போ... இதைப்பத்தின விழிப்புணர்வெல்லாம் கிடையாதும்மா. இப்போ இது கூடாதுன்னு வலியுறுத்தி சொல்றாங்கம்மா. இந்தக் கல்யாணம் வேண்டாம்மா. நானே... மேகலாவுக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்க்கறேன்மா..."


"அடப்பாவி... வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல தாழியை உடைக்கற மாதிரி பேசறியே? இந்தக் கல்யாணம் நடக்கணும்னு நான் தவமா தவம் கிடந்துருக்கேன். நீ என்னடான்னா வேண்டாம்ங்கற... நீ உன் வேலை எதுவோ அதைப்பாரு. யார்கிட்டயும் போய் எதையும் உளறிக்கிட்டிருக்காதே. ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் பண்ணிக்கிட்டு ஒரே குடும்பமா இருக்கணும்னு நான் கனவு கண்டுக்கிட்டிருக்கேன். நீ ஏதாவது பேசி குழப்பிடாதே பிரகாஷ். மேகலா சம்மதம் சொல்றதுக்கே எவ்வளவு நாளாயிடுச்சு தெரியுமா? நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலைப்பா. நம்ம குடும்பத்து வாரிசுகள் நல்லபடியா இருப்பாங்க. நீ கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும்..."

35

ன்று, சற்று சீக்கிரமாவே ஆபிஸிலிருந்து கிளம்பி வந்துவிட்ட மேகலா, பிரகாஷும், கமலமும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.

"ஓ. பிரகாஷேரட ரூட்... இப்படிப் போகுதா? இவன் மத்த பொண்ணுங்களைத் தொட்டுப் பார்ப்பானாம். இவனுக்கு விதி வசத்தால தடுமாறின பொண்ணான நான் அவங்க அண்ணனுக்கு மனைவியா வரக்கூடாதாம். இவனோட அண்ணனுக்கு சுத்தமான பெண், மனைவியா வரணுமாம். அதுக்காக அவங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு அத்தையோட மனசைக் கலைச்சுக்கிட்டிருக்கான்..."

மனதிற்குள் தோன்றிய எண்ணங்களை மறைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

"என்ன அத்தை... என்னோட கல்யாண சமாச்சாரம் கேட்டு பிரகாஷ்... அதிர்ச்சி ஆயிட்டாரா?"

பிரகாஷை சீண்டுவதற்காக வேண்டுமென்றே அவ்விதம் கேட்டாள் மேகலா.

இதைக் கேட்ட கமலம் திகைத்துப் போனாள்.

"என்னம்மா மேகலா சொல்ற?"

"இல்லை அத்தை... பிரகாஷ் ஆனந்த அதிர்ச்சி அடைஞ்சுட்டாரான்னு கேட்டேன்..."

"அப்பாடா... அதானே பார்த்தேன். என்னடா இது அதிர்ச்சி அப்படி இப்படின்னு பேசறியேன்னு... அது சரி, என்ன இது புதுசா... பிரகாஷை அவர் இவர்னு சொல்ற? அவன் உனக்கு மூத்தவனா இருந்தாலும் அவன் இவன்னுதானே இத்தனை நாள் சொல்லிக்கிட்டிருந்தே?"

"இத்தனை நாளா பிரகாஷ் எனக்கு அத்தை மகன். சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, பிரகாஷ் எனக்கு கொழுந்தன் முறை ஆச்சே? அதனால... இப்பவே அவரை அப்படி கூப்பிட்டு பழகிக்கறேன்..." ஓரக்கண்ணால் பிரகாஷைப் பார்த்தபடி பேசினாள் மேகலா.

பிரகாஷ், கோபத்துடன் பற்களைக் கடித்தபடி மேகலாவை முறைத்தான்.

அவனை அலட்சியமாகப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் மேகலா.

இவர்கள் இருவரது மறைமுகமான பேச்சைப் புரிந்து கொள்ளாத கமலம், தன் மருமகளாக வரப்போகும் மேகலாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

புதிதாய் எடுத்த பட்டும், பாலியெஸ்ட்டரும் கலந்த புடவைக்குப் பொருத்தமான ஜாக்கெட்டை டெய்லரிடமிருந்து வாங்கி வந்திருந்தாள் மீனா மாமி. கண்ணாடி முன் நின்று அதை அணிந்து, சரி பார்த்துக் கொண்டிருந்தாள். மீனா மாமி சரி பார்த்துக் கொண்டிருந்ததை முரளி மாமா ரசித்துக் கொண்டிருந்தார்.

"சூப்பரா இருக்குடி நோக்கு இந்தப் புடவையும் ஜாக்கெட்டும். ஜாக்கெட் கன கச்சிதமா தைச்சிருக்கானே..."

"நீங்க புஸ்தகம் படிச்சுட்டிருந்தீங்கன்னு பார்த்தா... என்னைப் பார்த்துக்கிட்டிருந்தேளாக்கும்? பொல்லாத மனுஷனாக்கும்... நீங்க..."

"புடவை நான் செலக்ட் பண்ணதாச்சே... அதான் நல்லா இருக்கு..."

"ஆமாமா... உங்க செலக்ஷன் எப்பவுமே ஜோராத்தான் இருக்கும். என்னோட செலக்ஷன் மட்டமாத்தான் இருக்கும்... அதனாலதானே உங்களை செலக்ட் பண்ணியிருக்கேன்?"

"அடிப்பாவி... இப்படியா மட்டம் தட்டுவ? சரி... சரி... இதே ஜோர்ல உன் கையால ஒரு காபி போட்டுக்குடேன்..."

"ஆரம்பிச்சுட்டேளா? காலையில கமலம் மாமி ஆத்துக்கு, காபிப்பொடி வாங்கிண்டு வரலாம்னு போனேன். கமலம் மாமி இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தா... அப்புறம் அவளே சொன்னா... மேகலாவுக்கும், சக்திவேலுக்கும் கல்யாணம் பேசி இருக்காளாம்ன்னா..."

"அப்பிடியா... கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்குடி மீனு. பாவம் அந்தப் பொண்ணுகள். தாய் இல்லாம வளர்ந்த பொண்ணுங்க. ஏதோ.. கமலம் மாமி துணை இருக்க, அதுகள் பாடு கொஞ்சம் நல்லா இருக்கு. இந்தக் காலத்துல இந்த மாதிரி பொறுப்புள்ள பொண்ணுங்களைப் பார்க்கறது ரொம்ப 'ரேர்'. மேகலா, ஆபிசுக்கும் போய்க்கிட்டு, வீட்டையும் பார்த்துக்கிட்டு பம்பரமா சுழல்ற பொண்ணு. அழகா இருக்கோம், வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கறோம்ங்கற கர்வம் துளியும் கிடையாது. சக்திவேல் அமைதியான பையன். அவனுக்கேத்த மாதிரி மேகலா அமைஞ்சுட்டா, கமலம் மாமியையும், மூர்த்தி ஸாரையும் கூடவே இருந்து பார்த்துப்பா. ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டிருக்கறதுனால பொதுவா கல்யாணத்துக்கு அப்புறம் வரக்கூடிய பிரச்சனைகள் எதுவும் வராது. இந்தக் காலத்துல பிள்ளைங்க, பெத்தவங்களை முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடறாங்க. ஆனா வயசானவங்க கூடவே இருக்கணும்ங்கறதுக்காக சொந்தத்துக்குள்ளேயே கல்யாணம் கட்டிக்க முடிவு செஞ்ச இந்தப் பிள்ளைங்க நல்ல பிள்ளைங்க. நிச்சயமா இதைப் பாராட்டணும்..."

"அது மட்டுமில்லன்னா... மேகலா, அவளோட தங்கை சுபிட்சா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கா தெரியுமா? தங்கைன்னா உயிர். அக்கா தங்கைன்னா மேகலா, சுபிட்சா மாதிரி இருக்கணும். பக்கத்து வீட்ல இவ்வளவு நல்ல மனுஷங்க கூட பழகறதுக்கு நாம ரொம்ப லக்கிங்க..."

"லக்கியெல்லாம் இருக்கட்டும், நீ போய் எனக்கு சுடச்சுட காபி கொண்டு வாயேன்... காபிப்பொடி இருக்கா அல்லது கமலம் மாமி ஆத்துக்கு போகணுமா?"

"சச்ச... நீங்க வேற... காலையிலதானே அவா ஆத்துல இருந்து காபிப்பொடி வாங்கிண்டு வந்தேன்னு சொன்னேனோல்லியோ?."

36

ரோஜா வண்ண சல்வார் அணிந்து, அதே வண்ண மேலாடையில் அழகிய சமிக்கி வேலைப்பாடுகள் செய்து, கற்கள் பதித்த துப்பட்டா அணிந்து ஒரு தேவதை போலக் காணப்பட்ட மேகலாவைப் பார்த்து பிரமித்துப் போனாள் சௌம்யா உதயகுமார்.

"இத்தனை நாளா இவ்வளவு அழகை எங்கே ஒளிச்சு வச்சிருந்தே? ஏனோ தானோன்னு ஒரு புடவையும் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு வருவ. இன்னிக்கு நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?"

"சுபிதான் என்னை மாத்திக்கிட்டிருக்கா. இதெல்லாம் அவளுக்காக."

"ஏன் அவளுக்காக? உனக்காக நீ வாழணும். சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்த விஷயத்தை நீ ஃபோன்ல சொன்ன உடனே எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? அறிவு  பூர்வமான முடிவு..."

"அது கூட சுபிக்காகத்தான்..."

"இப்பத்தானே சொன்னேன்... நாம் நமக்காக வாழணும். புரிஞ்சுக்கோ. பந்தம், சொந்தம், பாசம் எல்லாம் இருக்கணும். அதை வேண்டாம்னு நான் சொல்லலை. ஆனா உனக்காகவும் நீ வாழணும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கணும். டாக்டர் கிருஷ்ண வர்மாவோட கோட்பாடு என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலைகள்.


இன்னொரு எட்டு மணி நேரம் தூக்கம், நாலு மணி நேரம் நம்ம பிரியமானவங்க கூட, அவங்களுக்காக நேரத்தை செலவு செய்யறது, மீதி நாலு மணி நேரம் நமக்கே நமக்கு. அதாவது நம்பளோட ஆரோக்யம், உடற்பயிற்சி, யோகா, அழகுபடுத்துதல், அந்தரங்க அக்கறை செலுத்துதல் இப்படி நமக்காக செலவிடணுமாம். இதை ஃபாலோ பண்ணினா... நாமளும் நல்லா இருக்கலாம். குடும்பத்தையும் கவனிச்சுக்கலாம். உடல், மன ஆரோக்யமும் நல்லா இருக்குமாம். அதாவது உனக்காக ஒரு நாள்ல நாலு மணி நேரம் ஒதுக்கச் சொல்றாரு.

“வருணோட நினைவு இனி உன் மனசுல இருக்கவே கூடாது. ஒரு நிழல் போல உன்னைத் துரத்தின அந்த நினைவு ஒரு சுழல்ல சிக்கி மூழ்கிப் போனது மாதிரி போயிடணும். ஓவ்வொரு பொண்ணோட மனசுலையும் காதல் இருக்கும். காதலிச்சவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா எத்தனையோ பெண்கள் கல்யாணமாகாமலே இருப்பாங்க. சிறுபிராயக் காதல், பருவக்காதல், முதிர்காதல் இப்படி எத்தனையோ காதல் இருக்கு. நீ காதலிச்ச வருண், துரதிர்ஷ்டவசமா செத்துப் போயிட்டார். அதுக்கு நீ என்ன பண்ணுவ? போனதெல்லாம் போகட்டும். காதலுக்கு மரியாதை குடுத்த நீ... இனி, சக்திவேல் கட்டப்போற தாலிக்கு மரியாதை குடு. சக்திவேல்தான் உன் உலகம். சக்திவேலோட மனம் கோணாம, அவரை உன்னோட அன்பால நீராட்டு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு 'உனக்கு நான் எனக்கு நீ' ன்னு வாழ்க்கையை ஆரம்பியுங்க..."

"ஆமா சௌமி... நானும் அதுக்குத் தயாராயிட்டேன். பழசையெல்லாம் மறந்துட்டு க்ளீன் ஸ்லேட்டா இருக்கேன். மழை பெஞ்சு நனைஞ்ச பூமி மாதிரி 'பச்'ன்னு என் மனசும் குளிர்ந்து போயிருக்கு. நீ சொல்ற மாதிரி இனி நான் எனக்காக வாழ்வேன்.  சக்திவேல் மச்சானுக்காக வாழ்வேன். அவரை என் வாழ்வின் ஆதாரமா, ஒரு கொழுகொம்பா புடிச்ச எனக்கே எனக்குன்னு ஒரு அன்பான வாழ்க்கையை சிருஷ்டி பண்ணுவேன். ஆனந்தமா வாழ்வேன். எனக்குள்ள இப்படி ஒரு மாற்றம் வர்றதுக்குக் காரணம் நீயும், சுபியும்தான்."

பிரகாஷ் கூட ஒரு காரணம் என்று அவளது உள்மனம் பேசியதை அடக்கி வைத்தாள்.

"நாங்க சொன்னதை நீ ஏத்துக்கிட்டியே... அது பெரிய விஷயம். என்ஜாய் யுவர் லைஃப் மேகி."

மேகலாவைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினாள் சௌம்யா உதயகுமார்.

ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த வினயா, பிரகாஷ் பஸ் ஸ்டேண்டில் நிற்பதைப் பார்த்து ஆட்டோ டிரைவரிடம் 'வண்டியைக் கொஞ்சம் நிறுத்துங்களேன்' என்றாள்.

ஆட்டோ நின்றது. பேசிய தொகையைக் கொடுத்து விட்டு, பிரகாஷ் அருகே சென்றாள் வினயா.

"ஹாய்... பிரகாஷ்..."

"நீயா?"

"ஏன் உன் கேள்வியே ஒரு மாதிரி இருக்கு?"

"உன்னை நான் இங்கே எதிர்பார்க்கலை..."

"நானும் இங்கே உன்னைப் பார்க்க வரலை... எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை. ஆஸ்பத்திரியில ட்ரிப்ஸ் ஏத்திக்கிட்டிருக்காங்க. மருந்து, மாத்திரை வாங்கிட்டு போகணும். அதுக்காக ஆட்டோவுல ஏறின நான், நீ பஸ் ஸ்டேண்ட்ல நிக்கறதைப் பார்த்தேன். மனசு கேக்காம ஆட்டோவை அனுப்பிட்டு உன்னைப் பார்க்க வந்தா... நீ 'உர்'ன்னு இருக்கே..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்க அண்ணனுக்குக் கல்யாணம்..."

"அடப்பாவமே... அண்ணனுக்கு கல்யாணம்ன்னா...இப்படியா மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டு சொல்லுவாங்க?"

'என் மனசுக்குள்ள இருக்கற எரிச்சல் என்னை அறியாமலே வெளிப்பட்டுச்சோ...' தன் எண்ணத்தை மறைத்து, இயல்பிற்கு வந்தான் பிரகாஷ்.

"கல்யாணம்ன்னா நிறைய வேலை இருக்குமே... அதை நினைச்சு கொஞ்சம் மலைப்பா இருக்கு. அதனால நான் கொஞ்சம் மூட் அவுட்."

"எதுக்குத்தான் மூட்அவுட் ஆகறதுங்கற விவஸ்தையே இல்லியா உனக்கு? இதெல்லாம் சந்தோஷமா செய்ய வேண்டிய வேலை. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். என்னால முடிஞ்ச வேலைகளை நான் செஞ்சு தரேன்..."

"தேங்க்யூ… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... நீ கிளம்பு. உங்க அப்பாவுக்கு மருந்து வாங்கிட்டு போணும்னீல்ல?"

"என்னைத் துரத்தறதுலயே குறியா இரு. இன்னிக்கு நீ சரி இல்லை. உன் முகமும் சரி இல்லை."

இதற்குள் பிரகாஷ் ஏற வேண்டிய பஸ் வந்தது.

"நான் கிளம்பறேன் வினா..." கையசைத்து கூறியபடியே பஸ்ஸிற்குள் ஏறிக் கொண்டான் பிரகாஷ்.

"ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு 'மூட்'ல இருக்கான் இந்த பிரகாஷ்" பெருமூச்செறிந்தாள் வினயா. அப்போது அவளது மொபைல் ஒலித்தது. எடுத்தாள். காதில் வைத்தாள். இவள் 'ஹலோ' சொல்வதற்குள் மறு முனையிலிருந்து உரக்க குரல் ஒலித்தது. "ஏ வினயா? இன்னும் ஏன் மருந்து வாங்கிட்டு வரலை? ஏன் இவ்வளவு லேட் ஆகுது?"

"இதோ... வந்துக்கிட்டே இருக்கேன்." என்று கூறிவிட்டு மொபைல் ஃபோனை அடக்கினாள்.

வேறு ஆட்டோவைப் பிடித்தாள். ஏறினாள். கிளம்பினாள்.

37

"ஷோபா ஜெகன், அந்தப் பொண்ணு சுபிட்சாவோட அக்காவைப் பார்த்து பேசிட்டாங்களாம். இப்போதைக்கு கல்யாணப் பேச்சு எடுக்க முடியாதுன்னு அந்தப் பொண்ணு சொல்லிடுச்சாம்." கிரியிடம் கூறினார் சொக்கலிங்கம்.

இதைக் கேட்ட கிரி மௌனமாக இருந்தான்.

"என்னப்பா கிரி, ஏமாற்றமாயிடுச்சா?"

"அதெல்லாம் இல்லைப்பா. அவங்க என்னை வேண்டாம்னு சொல்லலையே... இப்போதைக்குதானே பேச முடியாதுன்னு சொல்றாங்க..." கிரி, தெளிவாகப் பேசினான்.

"அங்கிள்... கிரி இந்த விஷயத்துல தீவிரமாகவும் இருக்கான். அதே சமயம் பொறுமையா காத்திருக்கவும் தயாரா இருக்கான்." வேணு, கூறியதும் புன்னகைத்தார் சொக்கலிங்கம்.

"நண்பனைப் பத்தி நண்பன்தான் புரிஞ்சுக்க முடியும். கிரிக்கும் வயசு இருக்கு. அந்தப் பொண்ணுக்கும் வயசு இருக்கு. ஆண்டவன் பிராப்தம் இருந்தா... ரெண்டு பேருக்கும் முடிச்சு போடுவான்..." சொக்கலிங்கம் ஆதரவாகப் பேசினார்.

"நீங்க 'ஆண்டவன்'னு சொன்னதும். எனக்கு ஞாபகம் வருதுப்பா. கருமாரி அம்மன் கோயில்ல அந்தப் பொண்ணைப் பார்த்தேன்ப்பா. அவங்க குடும்பத்தோட வந்திருந்தா. அம்மன் சந்நிதியில பாட்டு கூட பாடினாப்பா. அவளோட குரல் ரொம்ப இனிமையா இருந்துச்சுப்பா. நம்ம காலேஜ் கலைவிழாவுல எடுத்த சுபிட்சாவோட ஃபோட்டோவை என் ஷர்ட் பாக்கெட்ல வச்சிருந்ததை அந்தப் பொண்ணோட அக்கா பார்த்துட்டாங்க. அதைப்பத்தி என்கிட்ட கேட்டாங்க. நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது அவங்க அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டாரு. ஆனா... நான் சுபிட்சாவை விரும்பற விஷயத்தை அவங்ககிட்ட சொல்லிட்டேன்ப்பா. அவங்கப்பா வந்து அவசரப்படுத்தினதுனால அதுக்கு மேல விவரமா அந்தப் பொண்ணோட அக்காகிட்ட என்னால பேச முடியலை..."

"கோயில்ல நேர்ந்த அந்த சந்திப்பு எனக்கென்னமோ தெய்வச் செயலா தோணுது. நல்லதே நடக்கும்னு நம்புவோம்." சொக்கலிங்கம் கூறியதும் கிரி சந்தோஷப்பட்டான்.


"நிச்சயமா சுபிட்சாதான்ப்பா என்னோட மனைவி..."

"அங்கிள்... கிரி ரொம்ப உறுதியான முடிவுல இருக்கான் அங்கிள்..."

"அப்படி இருக்கறது நல்லது வேணு. ஸ்திரமான நம்பிக்கை எதையும் சாதிக்கும்" சொக்கலிங்கம் கூறியதும் மேலும் நம்பிக்கைத் துளிர், தழைத்து வளர்ந்தது கிரியின் இதயத்திற்குள்.

38

ல்லூரி வளாகம். சுபிட்சாவும், அவளது தோழிகளும் கூடி இருந்தனர்.

அனைவருக்கும் சாக்லேட்களை வாரி வழங்கினாள் சுபிட்சா.

"எங்க அக்காவுக்குக் கல்யாணம். எங்க அக்காவுக்குக் கல்யாணம்." மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினாள் சுபிட்சா.

"ஏ சுபி... உங்க அக்காவோட கல்யாணத்துல ஆரத்தி எடுக்கற அலங்காரப் பொருளெல்லாம் நாங்கதான் செய்வோம். புதுப் புது ஐடியாவா யோசிச்சு பிரமாதமா செஞ்சுடுவோம்..." வனிதா சந்தோஷமாகப் பேசினாள்.

"கண்டிப்பா க்ரூப் டான்ஸ் அதாவது நார்த் இன்டியன்ஸ் கல்யாணத்துல வைப்பாங்கள்ல அந்த மாதிரி டான்ஸ் ஆட ஏற்பாடு பண்ணணும்டி சுபி.." கல்பனா கெஞ்சினாள்.

"கல்யாண சமையல் யாருடி?” சாப்பாட்டு பிரியை ஷைலா ஆவலுடன் கேட்டாள்.

"உங்க பாட்டன்... சாப்பாடா முக்கியம்?" கல்பனா கேலி பண்ணினாள்.

"ஆமா... கல்யாணத்துல சாப்பாடும்தான் முக்கியம். விதம் விதமா சாப்பாடு ருசியா செஞ்சு போட்டா வருஷக் கணக்கா அதைப்பத்தியே பாராட்டி பேசிக்கிட்டிருப்பாங்கள்ல?"

"மத்தவங்க பாராட்டறதுக்கா... அல்லது... நீ... விதம் விதமா முழுங்கறதுக்கா?"

"போங்கடி. நான் சாப்பாட்டுராமிதான்" ஷைலா சரண்டர் ஆனாள்.

"யாரோட லைட் ம்யூஸிக் வைக்கப் போறீங்க?" வர்ஷா கேட்டாள்.

"ம்யூஸிக் ப்ரோக்ராம் வச்சா... என்னிக்கோ ஒரு நாள் சந்திச்சுக்கற கல்யாண வீட்டு சூழ்நிலையில ஒருத்தருக் கொருத்தர் பேசிக்க முடியாது. ம்யூஸிக் ஸவுண்ட்ல பேசறதே கேட்காது." சுபிட்சா கூறினாள்.

"ஆமா. சுபிட்சா சொல்றது சரிதான். பல ஊர்கள்ல இருந்து வந்து, ஒண்ணு கூடற, அபூர்வமான அந்த நல்ல இனிமையான சூழ்நிலையில சொந்தக்காரங்களும், நண்பர்களும் எத்தனையோ விஷயங்களைப் பத்தி பேசணும்னு ஆவலா கூடி இருக்கறப்ப, எதுவும் பேச முடியாம போயிடுது..."

"தேதி வச்சுட்டாங்களா சுபிட்சா?"

"ம்கூம். . இனிமேலதான் பேசி முடிவு பண்ணுவாங்க."

"உங்க அத்தை பையனே அக்காவுக்கு மாப்பிள்ளையாயிடுவாரு... உங்க அக்காவோட அழகுக்கு ஏத்த அழகன்தான் உங்க அத்தை மகன்..."

"அவர் பேர் சக்திவேல்தானே?"

"ஆமா. என்னடி இது... ஏதோ ஒண்ணு ரெண்டு தடவைதான் எங்க சக்திவேல் மச்சானை பார்த்திருக்கீங்க... ஆனா... எக்கச்சக்கம்மா ஸைட் அடிச்சிருக்கீங்க போல?"

"சீச்சி... அப்படியெல்லாம் இல்லை... "

"சரி... சரி... இனிமேல் அவர் எங்க அக்காவோட சொத்து. தெரிஞ்சுக்கோங்க..."

"சரிடியம்மா. க்ளாசுக்கு போகலாமா?"

"ஓ... போகலாமே..." குதூகலமாய் வகுப்பிற்கு கிளம்பினார்கள்.

திருமண மண்டபத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. மணப்பெண் மேகலா, பட்டுப் புடவையிலும், நகைகளிலும் அழகிய தேவதையாக ஜொலித்தாள். அவளது கூந்தலில் சூடப்பட்டிருந்த அடர்ந்த மல்லிகைச்சரம், அவளது அழகுக்கு அழகு சேர்த்தது. மணமகன் சக்திவேல், பட்டு ஜரிகை வேஷ்டி, பட்டு ஷர்ட்டில் கம்பீரமான ஆண்மகனாக, மேகலாவின் அருகே மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தான்.

ஜோடிப் பொருத்தம் பார்த்துப் புகழாத விருந்தினர் இல்லை. மணமக்களைப் பார்த்து மகிழ்ந்திருந்தாள் கமலம். மகளின் மணக்கோலம் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார் மூர்த்தி. சுபிட்சா குஷியின் உச்சத்தில் இருந்தாள். அவளது சிநேகிதிகள் அங்கே கலக்கிக் கொண்டிருந்தனர்.

வண்ண வண்ண உடைகளில், விதம் விதமாய் அவங்கரித்துக் கொண்டு பூஞ்சோலையில் படபடவென அழகிய பலவர்ண நிறங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் போல அவர்கள் காணப்பட்டனர்.

தங்கள் இல்லத்து திருமணமாகக் கருதி, அத்தனை பேரும் ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் ஆடி ஓடி திரிந்து கொண்டிருந்தனர்.

மலர்ந்த முகத்துடன் காணப்பட்ட கமலத்தையும், மூர்த்தியையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் மேகலாவும், சுபிட்சாவும். திருமணக் கோலத்தில் இருந்த மகளைப் பார்த்து பூரித்து நின்றார் மூர்த்தி.

மீனா மாமி, காஞ்சிபுரம் பட்டை மடிசாராக கட்டிக் கொண்டு, காதிலும், மூக்கிலும் வைரங்கள் மின்ன, 'எதிர் நீச்சல்' பட்டுமாமி சௌகார் ஜானகி போலக் காணப்பட்டாள். முரளி மாமா அவ்வப்போது காபிக்காக சமையல் கட்டு பக்கம் சென்று வந்து கொண்டிருந்தார்.

பிரகாஷ், ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தாலும் அவனது முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. 'உர்' என்ற நிஜ முகத்திற்கு, உற்சாகமாய் இருப்பது போன்ற முகமூடியை மாட்டிக் கொண்டு திரிந்தான்.

கெட்டி மேளம் கொட்ட வருகையாளர்கள் அட்சதை தூவ, பெரியோர்கள் ஆசிகள் வழங்க, ஊரறிய உலகறிய மேகலாவின் கழுத்தில் சக்திவேல் தாலி கட்டினான். சக்திவேல் அணிவித்த தாலி, மேகலாவின் கழுத்தில் பட்ட அந்தக் கணம், ஒரு புனிதமான உணர்வை அடைந்தாள் மேகலா. புல்லரித்துப் போன உணர்வுகளுடன், சந்தோஷமான மனதுடன் சக்திவேலின் தாலியை ஏற்றுக் கொண்டாள் மேகலா.

தாலி கட்டிய மறுகணம், தற்செயலாய் பிரகாஷின் முறைத்த பார்வை அவளது கண்களில் சிக்கியது. 'பார்த்தியாடா உங்க அண்ணன் கையால தாலி வாங்கி, அவருக்கு மனைவியாகிட்டேன்' என்ற அர்த்தத்தில் இறுமாப்போடு ஒரு எதிர்பார்வை அவனைப் பார்த்தாள் மேகலா. அவளது அந்தப் பார்வையைப் புரிந்து கொண்ட பிரகாஷ் மேலும் கடுப்பானான்.

39

க்திவேலின் ஆபிஸில் பணிபுரிபவர்கள் அனைவரும் மேகலாவை சுற்றி நின்று கொண்டனர்.

"மேகலா... நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி."

"ரியலி யு ஆர் லக்கி."

இவ்விதம் அனைவரும் மேகலாவிடம் கூறிய போது, மேகலா பெருமிதம் கொண்டாள். அதன்பின் அனைவரும் விருந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

எளிமையாக நடைபெற்றாலும் சிறப்பான முறையில் மேகலா,சக்திவேல் திருமணம் நடைபெற்றது.

விருந்தினர்கள் கிளம்பியதும், மணமகன், மணமகளுடன் அனைவரும் வீடு திரும்பினர். திருமணமான பிறகு, மேகலாவும், சக்திவேலும் தங்குவதற்கு தனி அறை தேவைப்படும் என்று கமலம் கூறியதின் பேரில் ஆபிஸில் லோன் போட்டு மாடியில் ஒரு அறை கட்டியிருந்தான் சக்திவேல்.

சக்திவேலின் உடைகள், துணிமணிகள் மற்றும் பொருட்களும், மேகலாவின் உடைமைகள் அனைத்தும் அந்த அறைக்கு மாற்றப்பட்டன. புதிய கட்டில், மெத்தை, விரிப்புகள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முதல் இரவை அங்கே துவங்குவதற்குரிய ஏற்பாடுகளை கமலம் செய்திருந்தாள். மீனா மாமியை வர வழைத்து, மேகலாவை முதல் இரவிற்காக புதிய அறைக்கு அனுப்பி வைத்தாள் கமலம். வெட்கப்பட்ட மேகலாவை கேலி பண்ணியபடியே அழைத்துச் சென்று, அறைக்குள் அனுப்பி வைத்தாள் மீனா மாமி.

அறைக்குள் காத்திருந்த சக்திவேல் எழுந்து வந்து, மேகலாவை எதிர் கொண்டழைத்துக் கொண்டான். அறையின் கதவுகளைப்பூட்டி, தாழ் போட்டான்.


முதல் இரவு முடிந்து, விடியற்காலை கீழே வருவதற்காக அறையை விட்டு வெளியே வந்தாள் மேகலா. திருட்டுப் பூனை போல அங்கே வந்தான் பிரகாஷ்.

"எங்க அண்ணனுக்கு முதல் இரவு... ஆனா உனக்கு?" பிரகாஷ் கேட்ட கேள்வி மேகலாவின் மனதை வேதனைப்படுத்தி முள்ளாய் குத்தியது. உள்ளுக்குள் துளிர்த்த வேதனையை மீறி, எழுந்த கோபத்தை அடக்கி, தன்மையாகவும், மென்மையாகவும் பேசத் துவங்கினாள் மேகலா.

"நடந்ததையெல்லாம் மறந்து, புது வாழ்க்கையில காலடி பதிச்சிருக்கேன். நமக்குள்ள நடந்த பிரச்சனைகளையெல்லாம் ஒரேடியா மறந்துடலாம். நேத்து வரை நான் உன்னோட மாமா மகள்ங்கற உறவு. இனி நான் உன் அண்ணணோட மனைவி. அம்மா ஸ்தானம். நாம ரெண்டு பேரும் இனி சுமுகமா இருக்கலாம். ஒரே வீட்ல, ஒரே குடும்பமா வாழற நாம இப்படி மன வேற்றுமையோட இருக்கறது சரி இல்லை. நம்ப தகராறு, வீட்ல இது வரைக்கும் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சுதுன்னா யாருமே நிம்மதியா இருக்க முடியாது. ப்ளீஸ் பிரகாஷ்... மனசறிஞ்சு நான் எந்தத் தப்பும் பண்ணலை. இருந்தாலும் உன்கிட்ட ஸாரி கேக்கறேன். என் மேல எந்தக் கோபமோ... வருத்தமோ இருந்தாலும் அதையெல்லாம் மறந்துடு. மன்னிச்சுடு. நான் பட்ட வேதனையெல்லாம் போதாதா? இனிமேலாவது நான் நிம்மதியா வாழக் கூடாதா? சின்ன வயசுல இருந்து ஒரே வீட்ல... ஒரே குடும்பமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து எல்லாருமே நல்லா இருக்கலாமே..."

"விட்டுக் கொடுக்கவும் மாட்டேன். உன்னை சும்மா விடவும் மாட்டேன். எதையும் மறக்கவும் மாட்டேன்."

"போயும் போயும் உன்னைப் போல ஒருத்தனை மனுஷனா நினைச்சு... திருத்தலாம்னு பொறுமையா... தன்மையா பேசினேன் பாரு... நீ ஒரு மனுஷனா இருந்தாத்தானே அறிவுரைகள் உன் மண்டையில ஏறும்? நீ ஒரு மிருகம்.."

"நீ எப்படி வேண்ணாலும் திட்டிக்கோ. அதைப்பத்தி எனக்குக் கவலையே இல்லை. நான் வருந்தவும் மாட்டேன். திருந்தவும் மாட்டேன். ஒரு பொம்பளை நீ... இந்த அளவுக்கு வீரம் பேசும் போது... ஒரு ஆம்பளை நான்... எவ்வளவு திமிரா இருப்பேன்?.."

"உன்னோட திமிர் அடங்கற ஒரு நாளும் வரும்..."

"டேய் பிரகாஷ்..." கீழே இருந்து கமலம் கூப்பிடுவது கேட்டதும் 'தடதட'வென்று படிக்கட்டுகளில் இறங்கினான் பிரகாஷ்.

40

ரு வாரம் ஒரு மணி நேரமாக ஓடியது மேகலாவிற்கு. சக்திவேலின் ஷர்ட்டில் விட்டுப் போயிருந்த பட்டனைத் தைத்துக் கொண்டிருந்த மேகலாவின் அருகே வந்து உட்கார்ந்தாள் சுபிட்சா.

"சந்தோஷமா இருக்கியாக்கா?"

"ம்கூம்... சந்தோஷமா இல்லை சுபி..."

"அக்கா....." அதிர்ச்சியில் அலறிய சுபிட்சாவின் வாயை, தன் விரல்களால் அடைத்தாள் மேகலா.

"பயந்துட்டியா சுபி... ? ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல வந்தேன்..."

"யம்மா... ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன்க்கா. இப்படியா பயம் காட்டுவே..."

"சக்திவேல் மச்சான் என் மேல உயிரையே வச்சிருக்காரு. அவர் எனக்கு கடவுள் மாதிரி. என்னோட வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் குடுத்திருக்காரு...."

"இதுக்கெல்லாம் காரணம்... நம்ப அம்மாவோட ஆசீர்வாதம்தான்க்கா. நம்ம அம்மா, எப்பவும் நம்ப கூடவே இருக்காங்க..."

"ஆமா சுபி. என்னை சந்தோஷப்படுத்திப் பார்க்கற நீயும் அமோகமா வாழணும்னு நான் அம்மாவை வேண்டிக்கறேன்..."

"அம்மாவை மாதிரி நம்பளை கவனிச்சுக்கற அத்தையோட முகம், இப்ப மலர்ச்சியா இருக்கு. சொந்த அண்ணன் மகள் தனக்கு சொந்தமான மருமகளா வந்துட்டாள்ன்னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆக மொத்தம் நம்ப வீடு ஆனந்தம் விளையாடும் வீடா இருக்கு."

"ஆனந்தம் மட்டுமா? அராஜகமும் நடக்குதே......" மேகலாவையும் அறியாமல் மேகலாவின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வெளி வந்துவிட்டன.

"என்னக்கா என்னமோ முணு முணுக்கறே?"

"அது... அது... வந்து ஒண்ணுமில்லை சுபி..." மேகலா பேசி முடிப்பதற்குள் சக்திவேல் அங்கே வந்துவிட்டதால் நிலைமையை சமாளித்தாள் மேகலா.

"ரெடியாயிட்டியா மேகலா... உன்னை உன்னோட ஆபீஸ்ல விட்டுட்டு நான் கிளம்பறேன்."

"சரிங்க. கிளம்பலாம். லன்ஞ்ச் பாக்ஸை எடுத்துக்கிட்டு வந்துடறேன்..."

"இதோ... இது உன்னோட லன்ஞ்ச் பாக்ஸ்... இது என்னோடது... அம்மா குடுத்தாங்க..."

சக்திவேலும், மேகலாவும் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினார்கள். அவர்கள் இருவரும் ஜோடியாகப் போவதைப் பார்த்து ரசித்தாள் கமலம்.

அக்காவின் வாழ்க்கை மிக அழகிய கவிதை போல மலர்ந்திருப்பதை அறிந்து, துள்ளலான மனதுடன் கல்லூரிக்குக் கிளம்பினாள் சுபிட்சா.

நாட்கள் மிக வேகமாய் உருண்டோடின. மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மேகலாவிற்கு காலம் இறக்கை கட்டிக் கொண்டு பறப்பது போல இருந்தது. சக்திவேலின் அன்பு மழையில் நனைந்து நீராடினாள். அமைதியான சுபாவம் கொண்ட சக்திவேல், வெளியில் நிதானமாக இருந்து கொண்டாலும் அறைக்குள் வந்து விட்டால் ஆர்ப்பாட்டமான சக்திவேலாக மாறிவிடுவான்.

மேகலா மீது அளவற்ற அன்பைப் பொழிவான். அவள் மீது உயிரையே வைத்திருப்பதாகக் கூறி அள்ளி அணைத்துக் கொள்வான். தன் உலகமே மேகலாதான் என்று பாசமிக்க வார்த்தைகளால் அவளது மனதைக் குளிர்வித்தான். மேகலாவின் அழகைப் புகழ்ந்து, அந்த அழகைப் பருகினான். உணர்வுகளால் உள்ளம் உருகினான்.

"வேலைக்குப் போறது உனக்கு கஷ்டமா இருந்தா வீட்லயே இரு மேகலா. எனக்குத்தான் ப்ரமோஷன் கிடைச்சு, சம்பளம் ஜாஸ்தியா வருதில்ல?"

"இந்த ரூம் கட்றதுக்கு வாங்கின கடனை அந்தப் பணத்துலதான்ங்க அடைக்கணும். அது மட்டுமில்ல... நான் சும்மாதானே இருக்கேன்? வேலை பார்க்கறதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை..."

"என்ன சொன்ன? சும்மாதான் இருக்கியா? சும்மா இல்லாம எப்போ என்னோட குழந்தையை சுமக்கப் போற? "

"ச்...சீ...ய்..."

"ஹய்... இந்த ச்சீ..ய்... சும்மாதானே? நிஜம்மா உனக்கு குழந்தை ஆசை இல்லியாக்கும்?"

வெட்கத்துடன் அவனது மார்பில் முகம் புதைத்துக் கொண்ட மேகலா, கொஞ்சலாகப் பேசினாள்.

"ஆசை இருக்கு. அந்தக் குழந்தை வர்ற வரைக்கும் இதுதான் எனக்கு குழந்தை..." என்று கூறி சக்திவேலின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அன்பு சங்கமித்த உள்ளத்துடன், ஆசை ஓடைகள் பெருக்கெடுத்து ஓட, இருவரும் கட்டி  அணைத்து ஒருவரோடு ஒருவர் இரண்டறக் கலந்து, இன்பமான இல்லறத்தை அனுபவித்தனர்.

41

"என்னம்மா மீனா? வா உள்ளே..." மீனா மாமியை வரவேற்றாள் கமலம்.

"என்ன கமலம் மாமி. உங்க ஆத்துல ஆபீஸ் போறவா... காலேஜ் போறவான்னு இருக்கறதால காலையிலயே மத்யான சமையலையும் முடிச்சுடறேள். எனக்கு இனிமேலதான் சமையல் ஆகணும். எங்க ஆத்துக்காரருக்கு கேரியர் சாப்பாடு அனுப்பணும்.


முள்ளங்கி சாம்பார் கேட்டார். முள்ளங்கி, தக்காளியெல்லாம் வாங்கிட்டேன். சமையல் கட்டுல மளிகை சாமான்ல சாம்பார் பொடி இல்லை. உங்க சாம்பார் பொடி கொஞ்சம் தரேளா? மாமி..."

"அதுக்கென்ன மீனா... இதோ எடுத்துத்தரேன்..." கமலம், சமையலறை சென்று சாம்பார் பொடி எடுத்துவந்தாள். மீனா மாமியிடம் கொடுத்தாள்.

கமலம் மாமி வீட்டு சுவரில் புதிதாக, சக்திவேல், மேகலா திருமண புகைப்படம் அழகிய சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்ததை மீனா மாமி பார்த்தாள்.

"பொருத்தமான ஜோடி கமலம் மாமி. உங்க மகளா வளர்த்த பொண்ணு மேகலாவை மருமகளா அழைச்சுட்டீங்க. எப்படிப் பார்த்தாலும் மகள், மருமகள்... இந்த ரெண்டு உறவுகள்லயும் மகள்ங்கற பாசமான ஸ்தானம் இருக்கு. மேகலா மாதிரி ஒரு நல்ல பொண்ணு மருமகளா கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணி இருக்கணும். நீங்களும் வயசால மட்டுமில்ல மனசாலயும் ரொம்பப் பெரியவா. நான் ஏன் இப்படி சொல்றேன் தெரியுமா...? ஒரு ஆண் பையனைப் பெத்து வளர்த்துட்டா போதும். இந்த அம்மாக்கள் பெண் வீட்டார்ட்ட சீர், செனத்தின்னு வரதட்சணையா குடுன்னு பெரிய லிஸ்ட் குடுப்பா. நீங்க எதுவுமே கேட்கலியாமே? நிஜமாவே நீங்க பெருந்தன்மையானவாதான் கமலம் மாமி..."

"ஐயய்யோ... வரதட்சணையாவது ஒண்ணாவது... இந்த மாதிரி கேட்டு வாங்கறது கேவலமான விஷயம்னு நினைக்கறவ நான். அவரவர் கை, கால் கொண்டு பிழைச்சு எது  வேணுமோ வாங்கிக்கணுமே தவிர பொண்ணு வீட்ல கேட்டு வாங்கறது பிச்சை எடுக்கறதுக்கு சமம். ஒரு வீட்ல பிறந்து வளர்ந்த பொண்ணு, நமக்கே நமக்குன்னும், நம்ப குடும்பத்துக்காகவும் பிறந்த வீட்டை விட்டு தன் தாய், தகப்பன், உடன் பிறப்புகளை விட்டுட்டு இன்னொரு குடும்பத்து ஆட்களை 'தன்னோட உறவுகள் இனி இவங்கதான்'னு புகுந்த வீட்டுக்கு வந்து, புருஷன் குடும்பத்தோட வந்து ஐக்கியமாகறாளே... அது என்ன சாதாரண விஷயமா? தங்களோட பொண்ணையே தானமா குடுக்கற பெத்தவங்ககிட்ட... தங்கம் குடு, பொன் நகை குடு அதைக்குடு, இதைக்குடுன்னு கேக்கறது நியாயமே இல்லை..."

"ஒரு மகள் மருமகளா வர்றதைப்பத்தி நல்லா அழகா எடுத்து சொல்றீங்க கமலம் மாமி... ஆண் பையன்களைப் பெத்த எல்லாத் தாய்மார்களும் உங்களைப் போலவே பெருந்தன்மையா இருந்துட்டா... கேஸ் சிலிண்டர் வெடிக்காது... மருமகள்கள் தற்கொலை நடக்காது..."

"அல்பாயுசுல என் புருஷன் போய் சேர்ந்துட்டாலும், எங்க அண்ணணோட ஆதரவுல, என் மகன்களோட அன்புல, எங்க அண்ணணோட மகள்கள் பாசத்துல நிம்மதியா இருக்கேன். இந்த நிம்மதி நிலைச்சு இருந்தா அது போதும் மீனா எனக்கு..."

"உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது கமலம் மாமி. சக்திவேலும், மேகலாவும் வந்ததும் சுத்திப் போடுங்கோ, என் கண்ணே பட்டுடும் போலிருக்கு. கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாதும்பாங்க..."

"பொறாமைக்காரங்க கண்ணுதான் கொள்ளிக்கண்ணா எரிக்கும். நீ எங்களைப்பத்தி பெருமையா நினைக்கறவ. மதிக்கறவ, உன்னோட கண்ணெல்லாம் ஒண்ணும் பண்ணாது."

"சரி மாமி. குக்கர்ல பருப்பு போட்டு 'சிம்'ல வச்சிட்டு வந்தேன். நான் போய் சமையலை கவனிக்கிறேன். வரேன் மாமி..."

சாம்பார் பொடி கிண்ணத்துடன் மீனா மாமி கிளம்பினாள்.

42

காலையில் எழுந்திருக்கும் பொழுதே மேகலாவிற்கு தலைவலியாக இருந்தது. கமலத்திற்கு உதவியாய் சில வேலைகளை முடித்து விட்டு மாடி அறைக்கு வந்து சக்திவேலுக்கு பணிவிடைகள் செய்தபின் அவனிடம் தனக்கு தலைவலிப்பதாகக் கூறினாள் மேகலா.

"என்னம்மா... தலைவலிக்குதா? ஏன் இவ்வளவு நேரமா என்கிட்ட சொல்லலை?" என்று அன்பாக கோபித்துக் கொண்டான், தைலத்தை எடுத்து வந்து தேய்த்து விட்டான். மேகலாவின் முகம் வாடி இருப்பதைக் கண்டு துடித்துப் போய் விட்டான்.

"தலைவலிதானேங்க? என்னோட தலையே போயிட்ட மாதிரி துடிக்கறீங்க…?"

"இப்படியெல்லாம் பேசாதே. எனக்குக் கஷ்டமா இருக்கு. இன்னிக்கு நீ லீவு போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடு. குளிக்க வேண்டாம். குளிச்சா தலைவலி அதிகமாயிடும். அம்மாகிட்ட சுடச்சுட காபி போட்டு வாங்கிட்டு வரேன். சூடு ஆறாம குடி."

"என் அன்பான புருஷரே... காபியெல்லாம் குடிச்சாச்சு. உங்க டிபனும் ரெடியாயிடுச்சு. நீங்க சொன்னபடி ஆபிசுக்கு லீவு போட்டுடறேன். இப்ப நீங்க குளிக்கப் போறீங்களா?" கிண்டலாக கேட்ட மேகலாவை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டான் சக்திவேல்.

"எழுந்திருக்கும் போதே தலைவலிங்கறே? பின்னே எதுக்கு கீழே போய் வேலை செஞ்சே? 'மாமியாரே ஒரு காபி'ன்னு குரல் குடுத்தா உங்க அத்தை காபியோட வரப் போறாங்க. அவ்வளவுதானே..."

"என்னால முடிஞ்ச வேலையை அத்தைக்கு செஞ்சு குடுத்தேன். நீங்க குளிச்சிட்டு கீழே போய் அத்தைகிட்ட கேட்டு சாப்பிடுங்க. லன்ஞ்ச் பாக்ஸை வாங்கிக்கோங்க..." என்று கூறிய மேகலா படுத்துக் கொண்டாள்.

குளித்து விட்டு வெளியே வந்த சக்திவேல், ஆபீஸ் போவதற்குத் தயாராகிய பின், மேகலாவின் அருகே வந்தான்.

"மேகாம்மா..." அன்பு ததும்ப அழைத்தான்.

"என்னம்மா... தலைவலி இன்னும் விடலியா? ஒரு நாளும் இப்படி அசந்து தூங்கமாட்டியே..."

"கொஞ்ச நேரம் நல்ல தூங்கி முழிச்சா தலைவலி சரியாகிடும்ங்க.”

"சரிம்மா. நான் கிளம்பறேன். தலைவலி விடலைன்னா என்னோட மொபைல்ல கூப்பிடு. நான் பெர்மிஷன் போட்டுட்டு உன்னை வந்து ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன். பதினோரு மணிக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. அதை  முடிச்சுட்டா... லீவு கூட போட்டுக்கலாம்..."

"அதெல்லாம் வேண்டாம்ங்க, தூங்கினா சரியாயிடும். இல்லைன்னா நான் ஃபோன் பண்றேன்."

"சரிம்மா. நான் சாப்பிட்டுட்டு கிளம்பறேன்" என்றவன், குனிந்து மேகலாவின் கன்னத்தில் முத்தமிட்டான். தன் ப்ரீஃப் கேஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போனான். மேகலா கண் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். ஒரு மணி நேரம் தூங்கியபின், திடீரென அவளது முகத்தில் சூடான மூச்சுக் காற்று படுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். எதிரே, பிரகாஷ் நின்றிருந்தான். அவளைத் தொட்டணைத்து இழுத்தான்.

"ச்சீ... நீயா? அண்ணிக்காரி தனியா இருக்கற நேரம் ரூமுக்குள்ள வந்து இப்படி நிக்கறியே... வெட்கமா இல்லை உனக்கு?"

"எனக்கு வெட்கம் இல்லை. அதே மாதிரி உனக்கும் வெட்கம் இருக்கக் கூடாது... வா..."

"ச்சீ நாயே..." மேகலா சீறினாள்.

"நான் நாயா? நாய் என்ன பண்ணும்? கடிக்கும்... இதோ இப்ப... உன்னை..."

"டேய் பிரகாஷ்... இப்ப நான் கூச்சல் போட்டு அத்தையையும், அப்பாவையும் கூப்பிட்டிருவேன்... ஜாக்கிரதை..."


"ஓ... தாராளமா கூச்சல் போடு. கூப்பிடு அவங்களை... என்னை நீ மாட்டி விட்டா... நான் உன்னை மாட்டி விட்ருவேன். உன் வண்டவாளம், தண்டவாளத்துல ஏறிடும்... அதனால நீ கத்தவும் மாட்ட. யாரையும் கூப்பிடவும் மாட்ட. சும்மா என்னை மிரட்டிப் பார்க்கறியா…? உன்னோட கடந்த கால வாழ்க்கை, உங்க அப்பாவுக்கோ... எங்க அம்மாவுக்கோ... என் அண்ணனுக்கோ தெரிஞ்சா? என்ன ஆகும்ன்னு தெரியும்ல? மாமா, பார்பர் ஷாப் போயிருக்காரு. எங்கம்மா நல்லா தூங்கறாங்க. சும்மா.. ஜஸ்ட்... கொஞ்ச நேரம்... என்னோட ஆசைக்கு இணங்கிட்டினா... உன்னோட கடந்தகால ரகசியம், இறந்து போன காலமா இருக்கும், இல்லைன்னா... உன்னோட எதிர்காலமே சூன்யமாகிடும்..."

"ப்ளீஸ் பிரகாஷ்... என்னை விட்டுடு. நிம்மதியா வாழ விடு. உன் அண்ணன் என் மேல உயிரையே வச்சிருக்காரு... உன்னைக் கெஞ்சி கேட்டுக்கறேன்... என்னை விட்டுடு..."

மேகலா பேசிக் கொண்டிருக்கும் பொழுது பிரகாஷின் மொபைல் ஒலித்தது. நம்பரைப் பார்த்தான். அது சக்திவேலின் நம்பர். பரபரப்புடன் எடுத்து "ஹலோ..." என்றான்.

"பிரகாஷ்... நீ எங்கே இருக்க? காலேஜ்லயா?"

"இ...இ... இல்லைன்னா... வீ... வீட்ல..."

"வீட்லதான் இருக்கியா? ஏன் லேண்ட் லைனை எடுக்கலை? மாமா இல்லையா?"

"மாமா சலூன் போயிருக்கார். அம்மா தூங்கறாங்க. நான்... நான்... டாய்லெட்ல இருந்தேன் அண்ணா. காலேஜ் ப்ரொஃபஸர் இறந்துட்டாரு. அதனால லீவு விட்டுட்டாங்க..."

"சரி...சரி... காலையில நான் ஆபீஸ் கிளம்பும் போது மேகலா தலைவலின்னு படுத்திருந்தா. இப்ப எப்படி இருக்குன்னு கேக்கறதுக்குதான் ஃபோன் பண்ணினேன். யாரும் லேண்ட் லைன் எடுக்கலை. மேகலாவை நீ பார்த்தியா?" சக்திவேல், பிரகாஷின் மொபைல் ஃபோனில் பேசுவது மேகலாவிற்கு கேட்டது.

பிரகாஷ் சமாளித்தான்.

"நான் பார்க்கலை அண்ணா. இதோ நான் மாடிக்குப் போய் பார்க்கறேன்."

'பாவி என்னமாய் சமாளிக்கிறான்.... என்னமாய் நடிக்கறான்?' மேகலா நினைத்தாள்.

பிரகாஷ், மொபைலில் பேசியபடியே படிக்கட்டுகளில் இறங்கிப் போனான்.

43

'தன் நிலைமை இப்படி இருக்கிறதே... திருமணமான பிறகும் இந்த பிரகாஷால் தொல்லை தொடர்கிறதே' என்று நினைத்து, தலையணையில் முகம் புதைத்து கத்தி அழுதாள் மேகலா. அழுதபடியே கட்டிலின் அருகே உள்ள சிறிய மேஜை மீதிருந்த அவளது அம்மா மனோன்மணியின் புகைப்படத்தைப் பார்த்தாள் மேகலா. பார்த்த பிறகு அவளது அழுகை மேலும் அதிகரித்தது.

"அம்மா... என் நிலைமையைப் பார்த்தியாம்மா? இந்தக் கொடுமையை நான் உன்னைத்தவிர வேற யார் கிட்டம்மா சொல்ல முடியும்? உன்கிட்ட மட்டும்தான்மா சொல்ல முடியும். கிராதகன், காமுகன்... பிரகாஷ்ட்ட இருந்து என்னைக் காப்பாத்தும்மா. என் புருஷன் என் மேல வச்சிருக்கற அன்பு எனக்கு ஆயுசு முழுசும் வேணும்மா. இந்த பிரகாஷ் பாவி என்னைப் பாடாப் படுத்தறானேம்மா... எனக்கு சின்னதா தலைவலி வந்தாக்கூட துடிச்சுப் போற என் புருஷனோட மனசு எப்பவும் நிம்மதியா இருக்கணும்மா. என்னைக் காப்பாத்தும்மா... என்னைக் காப்பாத்தும்மா" அம்மாவிடம் பிராத்தனை பண்ணியபடியே அழுத களைப்பில் மீண்டும் கண் அயர்ந்தாள்.

சுபிட்சாவின் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் விழுந்து விழுந்து செய்து கொடுத்தான் பிரகாஷ். சுபிட்சாவைத் தன் பக்கம் இழுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ... அத்தனையும் செய்தான். இக்காரணத்தால் சுபிட்சாவிற்கு பிரகாஷ் மீது அன்பும், மதிப்பும் உயர்ந்தது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மேகலாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பிரகாஷ் விரிக்கும் வலையில் தன் தங்கை சிக்கி விடக்கூடாதே என்ற தவிப்பில் துவண்டாள் மேகலா. தங்கையின் எதிர்காலம் பற்றிய பயத்தினால் அவ்வப்போது, மௌனமாக ஆகிவிடும் மேகலாவை கவனிக்கத் தவறவில்லை சக்திவேலும், சுபிட்சாவும்.

"என்ன மேகலா... திடீர் திடீர்னு மௌனசாமியா மாறிடறே... ஏதோ..... ஒரு யோசனைக்குப் போயிடறே... என்ன விஷயம்?" சக்திவேல் இவ்விதம் கேட்கும் பொழுது எதையாவது காரணம் சொல்லி சமாளிப்பாள் மேகலா. அடிக்கடி சக்திவேல் இப்படிக் கேள்வி எழுப்புவதும் அதற்கு மேகலா மழுப்புவதுமாக பதில் கூறுவதும் வழக்கமாக நிகழ்ந்து வந்தது.

மேகலா 'உம்' என்று இருக்கும் பொழுது 'அக்காவுக்கு பழைய ஞாபகம் வந்துருச்சோ... குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாளோ?' என்று நினைப்பாள் சுபிட்சா. நினைப்பதை வெளிப்படையாகக் கேட்கவும் முடியாமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் குழம்பினாள் சுபிட்சா.

யாரிடமும், எதையும் வெளிப்படையாகப் பேச முடியாத மேகலா, கயவனான பிரகாஷை சுபிட்சா திருமணம் செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக சுபிட்சாவிற்கு ஒரு கடிதத்தில் எழுதினாள். நேரில் பேசினால், ஏதாவது சமாளிப்பாக பேசி பிரகாஷ் பற்றிய உண்மைகளை நம்ப மறுத்து விடுவாள்,  என்ற யோசனையில் கடிதமாக எழுதினாள் மேகலா. நாளுக்கு நாள் பிரகாஷினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போனதால், மனதில் உள்ளதை வார்த்தைகளில் கொட்டி எழுதி வைத்து, தற்காலிக நிம்மதி அடைந்தாள்.

44

ரு நாள் காலை  நேரம். வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட வெகு சீக்கிரமாக எழுந்து உட்கார்ந்திருந்த கமலத்தைப் பார்த்தாள் மேகலா.

"என்ன அத்தை... ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டீங்க?"

"லேசா நெஞ்சு வலிக்குதும்மா...ராத்திரியே வலி இருந்துச்சு. அவசரமா போடற மாத்திரையை போட்டுட்டு தூங்கலாம்னு பார்த்தேன். ஆனா வலி விடலை..."

"இத்தனை பேர் இருக்கோம். யாரையாவது எழுப்பி இருக்கக் கூடாதா அத்தை? என்ன அத்தை நீங்க..." என்ற மேகலா, அவசரமாக சக்திவேலை அழைத்தாள். சுபிட்சாவை எழுப்பினாள். பால் வாங்கச் சென்றிருந்த மூர்த்தி வந்ததும் தகவலைக் கூறினாள்.

சக்திவேல் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்தான். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. கமலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

கமலம் மருத்துவமனையில் அவசரப்பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டாள்.

டாக்டரை சந்தித்து பேசினார்கள் மேகலாவும், சக்திவேலும்.

"பயம் ஒண்ணுமில்லையே டாக்டர்..." மேகலா கேட்டாள்.

"ஐ.ஸி.யு.ல இருந்து வெளியே வர்றதுக்கே இன்னும் ஒரு வாரம் ஆகும்மா. எங்க ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் க்ரூப் உங்க அத்தைக்கு பை-பாஸ் சர்ஜரி பண்ண வேண்டி இருக்கும்னு அபிப்பிராயப்படறாங்க...."

"பை பாஸ் சர்ஜரியா டாக்டர்? " அதிர்ச்சியுடன் கேட்டாள் சக்திவேல்.

"ஆமா. ஆனா அதை நாளைக்குதான் டிஸைட் பண்ணுவோம். சர்ஜரிக்கு டைம் இருக்கு. அவசரம் இல்லை.."

"சரி டாக்டர். அதுக்கப்புறம் அத்தை பழையபடி நல்லா இருப்பாங்கள்ல?" மேகலா கேட்டாள்.


"உணவு கட்டுப்பாட்டுல இருந்து, மருந்து மாத்திரை கரெக்ட்டா சாப்பிடணும். உணர்ச்சிவசப்படக் கூடாது. கொலஸ்ட்ரால் லெவல் கட்டுப்பாட்டுல வைச்சுக்கிட்டா எந்த பிரச்சனையும் வராது. அதிர்ச்சியான சேதியோ, அதிக வருத்தம் தரக்கூடிய விஷயமோ தாங்கிக்க முடியாது. மத்தபடி இப்போதைக்கு அவங்க கொஞ்சம் க்ரிட்டிகலான ஸ்டேஜ்லதான் இருக்காங்க. அளவுக்கு மீறின உணர்ச்சிவசப்படறதும்... அதாவது... எக்ஸைட் ஆகறதும் ஹார்ட்டுக்கு கெடுதல்தான்..."

"நீங்க சொல்றது சரிதான் டாக்டர். எங்க கல்யாணம் முடிஞ்சு, நாங்க சந்தோஷமா வாழறதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்க ஆசைப்பட்டபடி எங்க குடும்பம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் பண்ணிக்கிட்டதுல, அளவுக்கு மீறின மகிழ்ச்சியில உணர்ச்சிவசப்பட்டதுனால எங்க அம்மாவுக்கு ஹார்ட்-அட்டாக் வந்திருக்குமோ..." சக்திவேல் கேட்டான்.

"சான்ஸஸ் ஆர் தேர். சந்தோஷம், சோகம் ரெண்டுமே அளவுக்கு மீறினா, ஹார்ட் ப்ராப்ளம் உள்ளவங்களுக்கு பிரச்சனை அதிகமாகும். இன்னொரு விஷயம் உங்ககிட்ட முன் கூட்டியே சொல்லணும் பைபாஸ் சர்ஜரி கன்ஃபார்ம் ஆகிட்டா.... குறைந்தபட்சம் மூணுலட்சம் ஆகும். அந்தத் தொகையை தயார் பண்ணிக்கோங்க."

"சரிங்க டாக்டர்."

சக்திவேலும், மேகலாவும் டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தனர். அங்கே கவலை மூழ்கிய முகத்தோடு மூர்த்தி காத்திருந்தார்.

"என்ன சொல்றாரு டாக்டர்?"

டாக்டர் கூறிய விபரங்களை சக்திவேல் கூறினான்.

மேலும் கவலைக்கு ஆளானார் மூர்த்தி.

"அவ்வளவு பணம் செலவாகுமா?"

"ஆமாம்ப்பா. நாம தயாரா இருக்கணும்ங்கறதுக்காக முன்கூட்டியே டாக்டர் சொல்லிட்டார்."

"என்னோட ஆபீஸ்ல லோன் போடலாம்ன்னா, இப்பதான் மாடி ரூம் கட்டறதுக்கு லோன் வாங்கினேன்..." சக்திவேல் கவலைப்பட்டான்.

"என்னோட ஆபீஸ்ல லோன், அட்வான்ஸ்ங்கற பேச்சுக்கே இடமில்லை. அந்த ஸிஸ்டமே கிடையாது... இப்ப என்னங்க பண்றது பணத்துக்கு?" சக்திவேலிடம் மேகலா கேட்டாள்.

"ஏம்மா கவலைப்படறீங்க? கிராமத்துல நம்ம பூர்வீக சொத்து இருக்கு. சின்னதா ஒரு வீடும், நிலமும் இருக்கு. நான் போய் அதை வித்து பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். அஞ்சு லட்சத்துக்கு போகும்னு நினைக்கிறேன்..." மூர்த்தி தைரியம் கூறினார்.

"எதுக்கு மாமா அதை வித்துக்கிட்டு? பூர்வீக சொத்துன்னு உங்களுக்காக அது மட்டும்தான் இருக்கு. அதையும் விக்கணுமா?"

"ஒரு ஆத்திர அவசரத்திற்கு உதவாத சொத்து எதுக்குப்பா சக்திவேல்? எனக்கும் சொத்து இருக்குன்னு அதை வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய? என் தங்கையோட வைத்திய செலவுக்கு உதவியா இருக்கேன்னு எனக்கு ஒரு ஆறுதல்தான்..." மூர்த்தியின் பாசம் கண்டு நெகிழ்ந்து போனான் சக்திவேல்.

"மாமா... சுபிட்சாவோட கல்யாணத்துக்கு பணம் தேவைப்படுமே..."

"அது நடக்கறப்ப ஆண்டவன் வழி காட்டுவான் சக்திவேல்... நான் ஊருக்குக் கிளம்பறதுக்கு டிக்கெட் ஏற்பாடு பண்ணுப்பா."

"சரி மாமா."

மூவரும் கலந்து பேசி பணத்திற்கு ஏற்பாடு செய்ய ஒரு முடிவு எடுத்தனர்.

"அப்பா... நான் லீவு போட்டுட்டு இங்கே ஆஸ்பத்திரியில இருந்துக்கறேன். சுபிட்சாவுக்கு பரீட்சை ஆரம்பிக்கப் போகுதுன்னு சொன்னா. அவ படிக்கணும்..."

"சரிம்மா."

"வாங்கப்பா... ஒரு வாய் காப்பி கூட குடிக்காம வாடிப்போய் இருக்கீங்க. கேன்டீன் போய் காபி குடிக்கலாம். வாங்க." மேகலா, மூர்த்தி, சக்திவேல் மூவரும் மருத்துவமனை கேன்ட்டீனை நோக்கி போனார்கள்.

45

காலையில் சுபிட்சா, வேலைக்காரியின் துணையோடு சமையல் வேலைகளை முடித்து, சக்திவேல், பிரகாஷ், இருவருக்கும் லன்ஞ்ச் பாக்ஸில் மதிய உணவை வைத்து, தனக்கும் எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள். மூர்த்திக்கு காலை டிபனை மேஜை மீது எடுத்து வைத்து விட்டு, குழம்பு, பொரியல் தயாரித்து விட்டு சாதம் மட்டும் மீனா மாமியிடம் தயார் பண்ணச் சொல்லி கேட்டுக் கொண்டாள்.

"மீனா மாமி... சமையல் எல்லாம் முடிச்சுட்டேன். அப்பாவுக்கு சாதம் மட்டும் வச்சுக் குடுத்துடுங்களேன் ப்ளீஸ்..."

"அதுக்கென்னடி சுபிட்சா... இது கூட நான் செய்ய மாட்டேனா என்ன? அது சரி... டாக்டர் உறுதியா சர்ஜரின்னு சொல்லிட்டாரா?"

"இல்லை மாமி. ஆனா அநேகமா சர்ஜரி இருக்கும்னு அபிப்ராயப் படறதா சொன்னாராம். எதுக்கும் தயாரா இருக்கலாமேன்னு அப்பா எங்க, ஊர்ல இருக்கற சொத்துக்களை வித்துட்டு வர்றதுக்கு கிளம்பப் போறாரு. சக்திவேல் மச்சான் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்னாதான் தெரியும், அப்பா இன்னிக்கு கிளம்பறாரா... நாளைக்கு கிளம்பறாரான்னு..."

"உங்க அத்தை... கமலம் மாமி... உங்க அக்காவுக்கும், சக்திவேலுக்கும் கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ஏக சந்தோஷமா இருந்தா... அந்த அதிகப்படியான சந்தோஷமே அவளுக்கு உடம்புக்கு ட்ரபுள் குடுத்துருச்சோ என்னமோ... பாவம்டி... கமலம் மாமி..."

"ஆமா மீனா மாமி. அத்தை நல்லவங்க. அவங்க இல்லைன்னா நாங்க நல்லபடியா வளர்ந்திருக்கவே முடியாது மீனா மாமி. எனக்கு காலேஜுக்கு லேட் ஆகுது. நான் கிளம்பறேன் மீனா மாமி..."

"சரிடிம்மா. போயிட்டு வா. சாதம் பண்ணி உங்கப்பாவுக்கு நான் குடுத்துடறேன்."

"தேங்க்ஸ் மீனா மாமி..."

சுபிட்சா, கல்லூரிக்குக் கிளம்பினாள்.

பெட்டியில் இரண்டு நாளைக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டார் மூர்த்தி.

"பிரகாஷ்... என்னை ட்ரெயின் ஏத்தி விட்டுடுப்பா..."

கல்லூரியில் இருந்து வந்த பிரகாஷிடம் சொன்னார் மூர்த்தி.

"இதோ... முகம் கழுவிட்டு வந்துடறேன் மாமா." என்றவன் தொடர்ந்து பேசினான்.

"அம்மா எப்படி இருக்காங்க மாமா?"

"யாரும் பார்க்க முடியலியேப்பா. ஐ.ஸி.யூ.ல இருக்கறதுனால கண்ணாடி வழியா முகத்தை மட்டும்தானே பார்க்க முடியுது?"

"ஆமா மாமா. நானும் அம்மாவோட முகத்தை கண்ணாடி வழியாத்தான் பார்க்க முடிஞ்சுது. அம்மா இப்படி நடமாட்டமே இல்லாம படுத்துக்கிடந்து பார்த்ததே இல்லை மாமா. கஷ்டமா இருக்கு மாமா. பழையபடி அம்மா நல்லா ஆயிடுவாங்கள்ல மாமா?" கண்கள் கலங்க பிரகாஷ் கேட்டதும் மூர்த்திக்கும் மனசு பாராமாகி விட்டது. தன்னை சமாளித்துக் கொண்டு பிரகாஷிற்கு ஆறுதல் கூறினார்.

"எல்லாம் ஆண்டவன் பொறுப்புப்பா. அவன் காலடியில சரணாகதி அடைஞ்சுட்டா... எல்லாம் நல்லபடியா நடக்கும். கமலம் நல்லபடியா எழுந்து வந்துடுவா. நீ கவலைப்படாதே. உனக்கும் பரீட்சை சமயம். மனசைக் குழப்பிக்காம படிப்புல கவனத்தை செலுத்து."

"சரி மாமா. ஆனா..."

"என்னப்பா பிரகாஷ்? என்ன தயக்கம்? என்ன விஷயம் சொல்லு."

"அம்மாவோட ட்ரீட்மென்ட்டுக்கு உங்களோட பூர்வீக சொத்தை விக்கறதுக்காக ஊருக்கு போறீங்களாமே?"

"ஆமா... அதனால என்னப்பா? அவ உங்களுக்கு அம்மாவாகறதுக்கு முன்னால என்னோட தங்கை. என்னோட உடன்பிறப்பு. என்னோட ரத்தம். அவளுக்காக செய்யாம வேற யாருக்காக செய்யப் போறேன்? இளவயசுலயே தாலியை பறிகுடுத்துட்டு, எந்த சுகமும் அனுபவிக்காம நம்பளே உலகம்னு தியாகமே உருவா வாழ்ந்துட்டிருக்கா.


அவளோட தூய்மையான அன்புக்கு முன்னால இந்த சொத்து சுகமெல்லாம் எந்த மூலைக்கு? அவளைக் காப்பாத்தறதுக்கு எனக்கு இப்படி ஒரு சொத்து இருக்குதேன்னு ஆறுதலா இருக்கு. நீ ஏன் இதுக்குப் போய் இவ்வளவு யோசிக்கற? ஒண்ணும் யோசிக்காதே. சாயங்காலம் காலேஜ் விட்டு சீக்கிரமா வந்துடு. நான், கிராமத்துக்குக் கிளம்பணும்."

"சரி மாமா" பிரகாஷின் கண்களில், கமலத்தை நினைத்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

"என்ன பிரகாஷ் இது? பெண் பிள்ளை மாதிரி கண்ணீர் விட்டுக்கிட்டு? நான் ஊருக்குப் போயிட்டு உடனே வர முடியாது. நிலபுலன்களை விக்கறதுன்னா லேசான விஷயம் இல்லை. கூடிய சீக்கிரம் வந்துட முயற்சி பண்ணுவேன். நான் வர்ற வரைக்கும் ஆளாளுக்கு ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருந்துக்கோங்க..."

"சரி மாமா. நான் காலேஜுக்கு கிளம்பறேன் மாமா."

"சரி போயிட்டு வா."

பிரகாஷ் கிளம்பினான்.

மருத்துவமனை. கமலத்திற்கு பைபாஸ் சர்ஜரி என்று முடிவு செய்து அறிவித்திருந்தனர். இதய ஆப்ரேஷன் என்றதும் மேகலாவும், சக்திவேலும் பயந்தனர். மறுநாளே சர்ஜரி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. மேகலா, சக்திவேல் ஆகிய இருவர் மீது உள்ள நம்பிக்கையிலும் பரிச்சயமான குடும்பத்தினர் என்பதாலும் முன் பணம் கட்ட வேண்டிய அவசியம் இன்றி ஆப்ரேஷனுக்கு அனுமதி கொடுத்து, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார் டாக்டர்.

மறுநாள். டாக்டர் குறிப்பிட்டிருந்த நேரப்படி கமலத்திற்கு ஆப்ரேஷன் ஆரம்பிக்கப்பட்டது. பிரகாஷ், சுபிட்சா இருவரும் பரீட்சை என்பதால் கல்லூரிக்குப் போயிருந்தனர். சக்திவேலும், மேகலாவும் லீவு போட்டிருந்தனர். இதயம் திக் திக் என்று அடிக்க, படபடப்புடன் காணப்பட்டாள் மேகலா. அவளுக்கு ஆறுதல் கூறினாலும் உள்ளூர பயந்து கொண்டிருந்தான் சக்திவேல். ஏகப்பட்ட ஸ்வாமி ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தாள் மேகலா.

ஆப்ரேஷன் முடிந்து, டாக்டர்கள் வெளியே வரும் வரை டென்ஷனோடு காத்திருந்தனர் மேகலாவும், சக்திவேலும்.

"ஆப்ரேஷன் ஸக்ஸஸ்... ஆனா... இப்ப நீங்க அவங்களைப் பார்க்க முடியாது. அதைப்பத்தி அப்புறமா நாங்க இன்ஃபார்ம் பண்றோம்..."

"சரி டாக்டர். தேங்க்ஸ் டாக்டர்..."

'கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. எங்களால முடிஞ்சதை நாங்க செஞ்சிருக்கோம். கடவுள்தான் பெரிய டாக்டர்..." புன்னகையுடன் கூறியபடி அங்கிருந்து தன் அறைக்கு நடந்தார் டாக்டர்.

மறுநாள் காலை.

"என்னங்க... நீங்க இங்கேயே இருங்க. நான் வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு உங்களுக்கும், எனக்கும் ஏதாவது சாப்பிடறதுக்கு சமையல் பண்ணி எடுத்துட்டு வரேன்."

"ஏன் மேகலா…? இங்கே கேன்ட்டீன்லயே சாப்பிட்டுக்கலாமே..."

"இல்லைங்க. எனக்கு உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு. வீட்டில குளிச்சுட்டு வந்தா நல்லா இருக்கும். போறது போறேன். அப்படியே சிம்பிளா ரச சாதம் பண்ணி வத்தல் வறுத்து எடுத்துட்டு வந்துடறேன்."

"சரிம்மா. நீ போயிட்டு வா. ஆஸ்பத்திரி வாசல்லயே ஆட்டோ நிக்கும். போயிட்டு சீக்கிரமா வந்துடு."

"சரிங்க."

மேகலா அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

46

பிரகாஷின் கல்லூரியில் ஸ்ட்ரைக் என்று  லீவு அறிவித்தனர்.

நல்ல வேளையாக பரீட்சைகள் முடிவடைந்திருந்தன. கமலத்தின் உடல்நிலை குறித்து கவலைப்பட்டு சரியாகத் தூங்காத பிரகாஷ் 'வீட்டுக்குப் போய் நல்லா ஒரு தூக்கம் போடலாம்' என்ற எண்ணத்தில் வீட்டிற்குக் கிளம்பினான். வீட்டின் மாற்றுச் சாவி பேண்ட் பாக்கெட்டில் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொண்டான்.

பிரகாஷ் போகும் முன்பே, மேகலா வீட்டிற்குப் போயிருந்தாள். அவளிடமும் வீட்டின் மாற்றுச் சாவி ஒன்று இருந்தது. வீட்டிற்கு வந்த மேகலா, தலைக்குக் குளித்து, நீண்ட கூந்தலை நுனி முடிச்சாகப் போட்டிருந்தாள். குளித்த முகம் பளிச்சென்று இருந்தது. கரிய விழிகள் கவிதை பாடிக் கொண்டிருந்தன. நெற்றியின் நடுவே இருந்த, அழகிய பொட்டு அவளது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.

ஒரு ஸ்டவ்வில் உலைக்கு அரிசியை போட்டு விட்டு மற்றதில் ரசம் வைக்கலாம் என்று ரசத்திற்கு மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகாய், சோம்பு ஆகியவற்றை வறுத்தாள். ஈயப் பாத்திரத்தைக் காய வைத்து ரசத்தைத் தாளித்துக் கொண்டிருக்கும் பொழுது, யாரோ தன் இடுப்பைப் பிடிப்பதை உணர்ந்து திரும்பினாள் திடுக்கிட்டாள்.

அங்கே பிரகாஷ் மேகலாவின் அழகைப் பருகியவாறு நின்றிருந்தான். குடும்ப சூழ்நிலை, தாயின் உடல்நிலை அனைத்தையும் மறந்து, அவனது காம உணர்வும், பழி வாங்கும் வெறியும் மட்டுமே அவனில் நிறைந்திருந்தது.

பிரகாஷின் கைகளைத் தட்டிவிட்ட மேகலா ஆத்திரம் அடைந்தாள்.

"நீ... நீ... உன்னை..." கோபத்தோடு பற்களைக் கடித்தாள்.

"நீ என்ன பத்ரகாளி மாதிரி கோபப்படறே? இங்கே இன்னிக்கு யாருமே இல்லை. யாரும் வரவும் மாட்டாங்க. தடியால அடிச்சாக் கூட கனியாத பழமான நீ... இன்னிக்கு எனக்கு தானாவே கிடைச்சிருக்கே... விட்டுடுவேனா?" மோகத்துடன் அவளை அணைத்தான்.

"ச்சீ... உங்கம்மா இருக்கற நிலைமை... குடும்பத்துல எல்லாரும் அல்லாடிக்கிட்டிருக்கோம்... அறிவு இல்லை உனக்கு?"

"ஆசைதான் நிறைய இருக்கே... இதுக்கு எதுக்கு அறிவு?" மீண்டும் அவளைக் கட்டிப்பிடித்தான் பிரகாஷ்.

"ச்சீ..." மேகலா அவனை பலம் கொண்டு மட்டும் தள்ளி விட்டாள். வெறி தணியாத பிரகாஷ், அவளை இழுத்து அணைத்தான். அவனுடன் தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து போராடினாள் மேகலா. சமையலறையை ஒட்டியுள்ள சிறிய இடத்தில்தான் பாத்திரம் கழுவும் ஸின்க் இருந்தது. போராடிக் கொண்டிருந்த மேகலா, அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக பின் நோக்கி நகர்ந்தாள். பாத்திரம் கழுவும் இடத்திற்கும், சமையலறைக்கும் இடையே இருந்த சற்று உயர்ந்த படிக்கட்டில் கால் தவறி, மல்லாக்க விழுந்தாள். விழுந்த வேகத்திலேயே அதிர்ச்சியில் இதயம் அவளது துடிப்பை நிறுத்தியது. அதே சமயம் ஸ்டவ்வில் போட்டிருந்த உலைத் தண்ணீர் பொங்கி, தீயை அணைத்தது, கீழே விழுந்துவிட்ட மேகலா, இறந்து போனதை அறியாத பிரகாஷ், குனிந்து அவளைத் தொட்டுத் தூக்க முயற்சித்தான். மேகலாவின் கைகள் பிடிப்பின்றி 'தொப்' என்று விழுந்தன. நிலைகுத்தி இருந்த கண்களுக்கு நேரே தன் விரல்களை ஆட்டினான் பிரகாஷ். ம்கூம். எவ்வித அசைவும் இல்லை. மெதுவாக அவளது இதயத்தின் அருகே காதை வைத்துக் கேட்டுப் பார்த்தான். துடிப்பை நிறுத்தி இருந்த இதயம், நிசப்தமாக இருந்தது. மேகலா இறந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான் பிரகாஷ். அவனையும் அறியாமல் அலறினான்.

"ஐய்யோ..."

'மேகலா செத்துட்டாளா? நான் என்ன செய்வேன்? இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே?' பயமும், அதிர்ச்சியும் அவனது இதயத்தை மிக வேகமாகத் துடிக்க வைத்தது. அப்போது... காலிங் பெல் அடிக்கும் ஓசை கேட்டது.


"ஐய்யோ... யாரோ வந்திருக்காங்களே..." மேலும் பயந்து போன பிரகாஷ், யோசிப்பதற்குள் மறுபடியும் காலிங் பெல் ஒலித்தது.

சமையலறை கதவை சாத்தி விட்டு வெளியே வந்து வாசல் கதவைத் திறந்தான்.

அங்கே மீனா மாமி, கையில் கிண்ணத்தோடு நின்றிருந்தாள்.

"என்ன பிரகாஷ்... உனக்கு காலேஜ் லீவா? அல்லது அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்கறதுனால லீவு போட்டுட்டியா? கொஞ்சம் காபிப்பொடி குடுப்பா..."

"இருங்க மீனா மாமி... இதோ கொண்டு வரேன்" அவசர அவசரமாக பேசிய பிரகாஷ், அதைவிட அவசரமாக சமையலறைக்கு சென்று காபித் தூளை எடுத்து வந்து மீனா மாமியிடம் கொடுத்தான்.

"ஆப்ரேஷன் முடிஞ்சு கமலம் மாமி நல்லா இருக்காளோன்னோ?"

"ஓ... நல்லா இருக்காங்க..." பிரகாஷிற்கு வியர்த்து வழிந்தது.

"இதென்ன உனக்கு இப்படி வியர்த்துக் கொட்டுது?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமி. ஃபேன் போடாம உட்கார்ந்திருந்தேன். அதான். சரி மாமி... நான் ஆஸ்பத்திரிக்கு போகணும்..." மீனா மாமியைக் கிளப்புவதில் தீவிரமானான் பிரகாஷ்.

"ஸாரி பிரகாஷ். நீ கிளம்பு..." மீனா மாமி காபிப்பொடியுடன் கிளம்பினாள்.

வாசல் கதவைப் பூட்டிய பிரகாஷ், சமையலறைக்கு சென்றான்.

'தீ பிடிச்சு செத்துப் போயிட்ட மாதிரி செட் அப் பண்ணிட்டா?'

யோசித்தவன், செயலில் இறங்கினான்.

கேஸ் காலியாகிப் போகும் சமயங்களில் உபயோகிப்பதற்கென்று கெரோஸின் ஸ்டவ் வைத்திருப்பது வழக்கம். எனவே அங்கே இருந்த மண்ணெண்னை கேனை எடுத்தான். இறந்து கிடந்த மேகலா மீது ஊற்றினான். தீக்குச்சியைப் பற்ற வைத்து மேகலாவின் உடல் மீது போட்டான். தீ பற்றி எரிந்தது. வீட்டைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவிட்டு அங்கிருந்து நழுவினான் பிரகாஷ்.

47

ருத்துவமனையில் காத்திருந்த சக்திவேல் 'வீட்டிற்கு போன மேகலா ஏன் இன்னும் வரலை' என்று யோசித்தபடியே காத்திருந்தான். வீட்டிற்கு ஃபோன் பண்ணிப் பார்த்தான். டெலிஃபோன் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. 'மேகலா, கிளம்பிட்டா போலிருக்கு' என்று நினைத்தபடி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் லயித்தான்.

காபியை முரளி மாமாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் மீனா மாமி.

"ஏண்டி மீனா... காபியில என்ன ஒரே புகை நாத்தம் வருது?" என்று கேட்டார்.

"இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னோட காபியைக் குறை சொன்னதில்லை நீங்க... இப்பிடி கொண்டாங்க காபியை..."

முரளி மாமாவிடமிருந்த காபியை வாங்கி குடித்துப் பார்த்தாள். திடீரென புகை நாற்றம் பெருவாரியாக அதிக அளவில் வந்தது.

"ஏன்னா... புகை நாத்தம் பக்கத்து வீட்ல இருந்து வர்ற மாதிரின்னா தெரியுது?" என்றபடி எழுந்து கமலம் மாமி வீட்டிற்கு போனாள் மீனா மாமி. முரளி மாமாவும் அவளைப் பின் தொடர்ந்தார்.

வாசல் கதவு வெறுமனே சாத்தி இருந்தது.

ஒரே புகை மண்டலமாக இருக்கவே இருவரும் பயந்து போனார்கள். சமையலறையில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது. உடனே முரளி மாமா ஷர்ட் பாக்கெட்டில் இருந்த அவரது மொபைல் ஃபோனில் இருந்து போலீஸை அழைத்தார். விபரம் கூறினார்.

தீயில் கருகிக் கிடந்த மேகலாவைப் பார்த்து சக்திவேல், சுபிட்சா, மீனா மாமி... சுபிட்சாவின் தோழிகள் யாவரும் சுத்தி அழுதனர். பிரகாஷும் அழுது கொண்டிருந்தான்.

மீனா மாமி, பிரகாஷின் அருகே சென்றாள்.

"ஏண்டாப்பா பிரகாஷ்... நான் காபிப்பொடி வாங்க வரும் போது நீ மட்டும் தானே இருந்தே?"

"ஆமா மீனா மாமி. நான் உங்களுக்கு காபிப்பொடி குடுத்ததும் வீட்டை பூட்டிட்டு வெளியேறி போயிட்டேன். மேகலா அப்புறமா வந்திருக்கா போலிருக்கு..."

"ஆமாமா. அப்பிடித்தான் இருக்கணும். ஆளாளுக்கு ஒரு சாவியை வச்சுண்டு திறந்து வந்துடறேள். சக்திவேலைப் பாரு... என்னமா கதறி அழறான்... பாவம்... ஆம்பளை இப்படி பொம்மனாட்டியாட்டம் அழறானே..."

"ஆமா மீனா மாமி. அண்ணன், மேகலா மேல உயிரா இருந்தான்..."

பிரகாஷ் மேலும் அழுதான். அவனது நடிப்பை உண்மையான அழுகை என்று நினைத்து அவன் மீதும் பரிதாபப்பட்டாள் மீனா மாமி.

காவல் துறையினர் வந்தனர். மேகலா இறந்து கிடந்த இடத்திற்கு சென்றனர். அங்கே, தரையில் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கவனித்தனர். குறித்துக் கொண்டனர். 'தீ விபத்துல மரணம்ன்னாலோ... தீ வச்சு எரிக்கப்பட்டாலோ இப்படி ரத்தக்கறை இருக்காதே... போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி, அந்த ரிப்போர்ட் வந்தப்புறம் பார்த்துக்கலாம். என்னோட சந்தேகம் 'க்ளியர் ஆகும்' என்று நினைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஆதவன், மற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு இட்டார். மேகலாவின் உடலைப் போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

48

காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் ஆதவன் டெலிஃபோனில் சில எண்களை அழுத்தினார். மறுமுனையில் குரல் கேட்டது.

"ஹலோ...மஞ்சுநாத் ஹியர்..."

"மஞ்சுநாத்... நான் ஆதவன் பேசறேன். மேகலான்னு ஒரு பொண்ணோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அவசரமா கேட்டேனே?"

"இதோ பி.எம் ரிப்போர்ட்டை எடுத்துக்கிட்டு அங்கே தான் ஸார் கிளம்பிக்கிட்டிருக்கேன். இதோ வந்துடறேன்"

"ஓ.கே. மஞ்சுநாத். தேங்க்யூ..."

ரிஸீவரை வைத்து விட்டு மஞ்சுநாத்தின் வருகைக்காகக் காத்திருந்தார் ஆதவன்.

குற்றப்பிரிவுத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர் இன்ஸ்பெக்டர் ஆதவன். சென்னை புறநகர் பகுதியில் நடந்த பயங்கரமான கொலையின் புலன் விசாரணையை தீவிரம் காட்டி இரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டுபிடித்தவர். நேர்மையான இன்ஸ்பெக்டர் என்னும் பெயர் எடுத்தவர்.

விரைவில் பதவி உயர்வு பெறப் போகும் அதிகாரி எனும் பேச்சு நடந்துக் கொண்டிருந்தது.

மஞ்சுநாத், காவல் நிலையத்திற்குள் வந்தான்.

மஞ்சுநாத் இளைஞன். பிரேதப் பரிசோதனை செய்வதில் நிபுணன். நடிகர் விஷால் போன்ற தோற்றத்தில் நெடிதான உயரம் கொண்டவன்.

இன்ஸ்பெக்டர் ஆதவனின் கைகளைப் பிடித்து குலுக்கினான்.

"உட்காருங்க மஞ்சுநாத்..."

மஞ்சுநாத் உட்கார்ந்தான். மேகலாவின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டை ஆதவனிடம் கொடுத்தான்.

அதைப் படித்துப் பார்த்தார் ஆதவன்.

"நான் யூகிச்ச மாதிரிதான் நடந்திருக்கு போல? பின் மண்டையில அடிபட்டு மூளைக்கு போற ரத்தம் உறைந்து போய், அதனால அவளோட உயிர் போயிருக்குன்னும், அவ செத்துப் போனதுக்கப்புறம்தான் தீ வச்சு எரிச்சு இருக்கணும்னு எழுதி இருக்கீங்களே மஞ்சுநாத்..."

"ஆமா ஸார். தேட் இஸ் த ஃபேக்ட். பின் மண்டையில பலமா அடிப்பட்டிருக்கு. அவ உயிர் போனதுக்கப்புறம் தீ வச்சுருக்கலாம்..."

"அப்பிடின்னா இது தீ விபத்து இல்லை. யாரோ அந்தப் பொண்ணு மேகலாவை கொலை பண்ணியிருக்காங்க..."


"யூ ஆர் ரைட் ஸார். அந்தப் பொண்ணோட மார்பகங்களின் ஆரம்பப் பகுதியில அதாவது மேல் பகுதியில லேசான நகக்குறிகள் பதிஞ்சிருக்கு. இடுப்பு பகுதியிலயும் நகக்காயங்கள் இருக்கு..."

"அப்படின்னா பலவந்தமா கற்பழிப்பு நடந்திருக்கா?"

"இல்லை ஸார். கற்பழிப்பு முயற்சியில போராடும் போது அவ கீழே விழுந்திருக்கணும்... அப்போ அடி பலமா பட்டிருக்கணும். அதனாலதான் அவ இறந்து கிடந்த இடத்துல ரத்தக்கறை இருந்திருக்கணும். அடிப்பட்டதுல அவ உயிர் போயிருக்கணும்..."

"யெஸ். நீங்க சொல்றது சரிதான். உயிர் போயிட்டதைப் பார்த்து பயந்து போன அந்தக் குற்றவாளி, அதுக்கப்புறம் கெரோஸினை ஊத்தி, அவ உடலை எரிச்சிருக்கான். இப்ப உடனே அந்தப் பொண்ணோட வீட்டுக்குப் போகணும். அவங்க வீட்ல இருக்கிறவங்களை விசாரிக்கணும். கான்ஸ்டபிள், ஜீப்பை ரெடி பண்ணு" என்றவர் மஞ்சுநாத்திடம் "நீங்களும் வர்றீங்களா மஞ்சுநாத்?" என்று கேட்டார்.

"வரேன் ஸார்."

அவர்கள் பேசிக்கொண்டே ஜீப்பில் ஏறினார்கள். அவர்களது பேச்சு தொடர்ந்தது.

"எனக்கென்னமோ அந்தப் பொண்ணு மேகலாவுக்கு யாராலயோ பாலியல் பலாத்கார தொந்தரவு இருந்திருக்கணும்னு தோணுது. எவ்வளவோ செய்திகள் இதைப்பத்தி வருது. பெரும்பாலும் குடும்பத்துல உள்ள உறவுக்காரங்களாலதான் இந்த பாலியல் பலாத்கார விவகாரங்கள் நடக்குதாம். பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றில் இது குறித்த எச்சரிக்கை உணர்வு பத்தி நிறைய எழுதறாங்க. டி.வி.யில பேசறாங்க. ஆனாலும் இந்தக் குற்றங்கள் கூடுதலாகுதே தவிர குறையவே இல்லை. இதுக்குக் காரணம் பெண்கள், தங்களுக்கு ஏற்படற இந்த இக்கட்டான நிலைமை பத்தி வெளியே சொல்லாம மறைச்சுடறதுதான். குடும்ப கௌரவம், தன்மானப் பிரச்சனை காரணமா அவங்களால வெளிய சொல்ல முடியறதில்லை. உதாரணமா ஒரு பெண்ணுக்கு, அவ வேலை செய்யற இடத்துல உள்ள ஆண்களால பாலியல் பலாத்கார பிரச்சனை ஏற்பட்டா... அவ அதை யார்கிட்டயும் சொல்றது இல்லை. 'தன்னோட வேலை பறி போயிடும், குடும்பம் தெருவுல நிக்க நேரிடும்'ங்கற எதிர்கால பிரச்சனை காரணமா சொல்லாம மறைச்சுடறா. ஒரு குடும்பத்துல, உறவுக்காரன் கார்டியனாவோ... அந்தக் குடும்பத்துக்கு பண உதவி செய்றவனாவோ இருக்கக் கூடிய பட்சத்துல, அவனால ஏற்படற பாலியல் பலாத்கார தொந்தரவை வெளிய சொல்லி அவனைக் காட்டிக் குடுக்காம விட்டுடறாங்க பெண்கள். பொருளாதார பலவீனத்தைப் பயன்படுத்தி தங்களோட வக்கிரத்தனமான பலவீனத்தை நிறைவேத்திக்கற அயோக்கியர்கள், உறவுக் கூட்டத்துக்குள்ளதான் நிறைய இருக்காங்க."

"இதைக் தடுக்கறதுக்கு என்ன வழி ஸார்?" மஞ்சுநாத் கேட்டார்.

"காவல் துறையாலயோ கடுமையான தண்டனைங்கற சட்டத்துனாலயோ மட்டும் இதை எப்படித் தடுக்க முடியும் மஞ்சுநாத்? பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களோட அவல நிலைமையை மூடி மறைக்காம... தைரியமா வெளியே சொல்லத் துணியணும். சொன்னாத்தானே காவல்துறையும், சட்டமும் நடவடிக்கை எடுக்க முடியும்? தடுக்க முடியும்?

“பாலியல் பலாத்காரக் குற்றத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் துணிச்சலா முன் வந்தாத்தான் ஆண்களின் இந்த வக்கிரத்தனமான போக்கைத் தடுத்து நிறத்த முடியும். குடும்பம், மானம், கௌரவம், பாசம், நன்றிக்கடன்ங்கற சென்ட்டிமென்டைத் தள்ளி வச்சுட்டு குற்றங்களையும், குற்றவாளிகளையும் காட்டிக் குடுக்க பெண்கள் மனதளவுல தயாராகணும்.

ஓரே ஒரு பெண் துணிஞ்சா போதும் அவளைப் பார்த்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கு துணிச்சல் வரும். அவங்களோட அந்தத் துணிச்சல்தான் முறைகேடாக நடந்து கொள்ளும் ஆண்களின் பாலியல் குற்றங்களைக் குறைக்கும். நாளடைவுல நீக்கும்.

“பத்திரிகைகள் எழுதற கட்டுரைகள், குடுக்கற விழிப்புணர்வு மட்டுமே போதாது. சம்பந்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு தொந்தரவு குடுக்கற நபர்களை அடையாளம் காட்ட தைரியமா முன் வரணும். சமீபத்துல இந்த பாலியல் பலாத்கார பிரச்சனையை மையமா வச்சு 'அச்சமுண்டு அச்சமுண்டு'ங்கற ஒரு படம் வெளிவந்துச்சு. அதில சிறுமியரை பாலியல் பலாத்காரம் பண்றதைப் பத்தி டைரக்டர் அருண், அருமையா கதை அமைச்சு அற்புதமா டைரக்ட் பண்ணி இருக்கார். குத்துப்பாட்டு இல்லாத, டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை இல்லாத டீஸென்ட்டான படம்... மக்களுக்கு மெஸேஜ் சொன்ன தரமான படத்தை மட்டும் டைரக்டர் அருண் தரலை... பாடமும் தந்திருக்கார்."

"நான் கூட அந்தப்படம் பார்த்தேன் ஸார். நீங்க சொன்ன மாதிரி ஆர்ப்பாட்டம் இல்லாத அருமையான படம் ஸார் அந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படம். அவலமான ஒரு குற்றஇயல் கருவைக் கொண்ட கதையை அழகான ஒரு கவிதை மாதிரி குடுத்திருக்காரு டைரக்டர் அருண்."

"வயிற்றுப் பசிக்கு வீட்டு வேலைக்கு வர்ற இளம் ஏழைப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் வீட்டின் எஜமான் குடுக்கற செக்ஸ் டார்ச்சர்பத்தி அந்தப் பொண்ணுங்க தைரியமா வெளிய சொல்லணும்.

“வக்கிரத்தனமா அவங்களைத் தொட்டா உடனே 'எடு விளக்கமாத்தை, அடி சாத்து அவனை'ன்னு வீறு கொண்டு பெண்கள் எழணும். ஒரு தடவை சூடான பால் பானைக்குள்ள வாயை விட்ட பூனை... மறுபடி விடுமா? அது போலத்தான்."

அவர்கள் பேசிக் கொண்டே இருக்க, ஜீப், மேகலாவின் வீட்டில் நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.

அழுது கொண்டிருந்த சுபிட்சாவிடம், ஆதவன் விசாரணையை ஆரம்பித்தார்.

"இறந்து போனது உங்க அக்காவா?" ஆதவன் கேட்டார்.

"ஆமா இன்ஸ்பெக்டர் ஸார்."

"அவங்களுக்கு கல்யாணமாயிருச்சா?"

"ஆயிடுச்சு ஸார். எங்க சொந்த அத்தை பையன்தான் மாப்பிள்ளை."

"அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்களா?."

"ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க ஸார்."

"உங்க அக்கா கல்யாணத்துக்கு முன்னால யாரையாவது காதலிச்சாங்களா?"

ஆதவன் இப்பிடி ஒரு கேள்வி கேட்டதும் சுபிட்சா அதிர்ச்சி அடைந்தாள். 'என்ன பதில் சொல்வது?' என்று திகைத்தாள்.

"இங்கே பாரும்மா. நாங்க போலீஸ் டிபார்ட்மெண்ட். எங்களோட பார்வைக்கும், சந்தேகத்துக்கும் ஏத்தமாதிரி கேள்விகளைக் கேட்டோம். உண்மையான பதிலை சொன்னாத்தான் குற்றாவாளியைக் கண்டுபிடிக்க முடியும்."

"குற்றவாளியா?" சுபிட்சாவின் குரல் நடுங்கியது.

"ஆமாம்மா. பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்ல, உங்க அக்கா தீ பிடிச்சதால சாகலை. கீழே விழுந்து பின்னந்தலையில அடிப்பட்டு இறந்து போயிருக்காள்னு எழுதி இருக்காங்க. அது மட்டுமில்ல. உங்க அக்காவைக் கற்பழிக்க நடந்த முயற்சியில அவ உடம்புல ஏற்பட்ட நகக் காயங்களும் இருக்காம். கற்பழிப்புல இருந்து தன்னைக் காப்பத்திக்கற முயற்சியில கீழே விழுந்து இறந்து போயிருக்கா. இதைப் பார்த்து பயந்து போன குற்றவாளி, அவ மேல கெரோஸினை ஊத்தி தீ வச்சிருக்கான். இப்ப சொல்லும்மா... உங்க அக்கா யாரையாவது காதலிச்சிருக்காளா?"


'அக்கா வருணை காதலிச்சதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்தான் செத்துப் போயிட்டாரே. அக்காவைக் கெடுக்க வந்தவன் வேற எவனோ, அக்காவோட காதல் விஷயத்தை சொன்னா சக்திவேல் மச்சான் மனசு வேதனைப்படும். காதலைச் சொல்ல வேண்டாம்...' என்று சுபிட்சா முடிவு செய்வதற்குள் மறுபடியும் ஆதவன் அவளைக் கூப்பிட்டார்.

"என்னம்மா இவ்வளவு யோசனை? சொல்லும்மா..."

"இல்லை ஸார். எங்க அக்கா யாரையும் காதலிக்கலை..."

"அவங்களுக்கு வேற யாராவது பாலியல் தொந்தரவு குடுக்கறதைப்பத்தி உன்கிட்ட சொல்லி இருக்காளா?."

"இல்லை ஸார். அப்படி எதுவுமே அவள் சொன்னதில்லை."

மகளைப் பறிகொடுத்துவிட்ட சோகம் தாங்காமல், மிகவும் தளர்ச்சி அடைந்து காணப்பட்ட மூர்த்தியின் அருகே சென்றார் இன்ஸ்பெக்டர் ஆதவன்.

"உங்க பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை இருந்துச்சா? அதைப்பத்தி உங்ககிட்ட பேசி இருக்காளா?"

"இல்லை இன்ஸ்பெக்டர். அவ என்கிட்ட எதுவும் அந்த மாதிரி பேசலை. ஏதாவது வருத்தமோ, பிரச்சனையோ... எதையுமே லேசுக்குள்ள வெளிய காட்டிக்க மாட்டா. சொல்லவும் மாட்டா. ஆனா... என்னோட ரெண்டாவது பொண்ணு. இதோ, இருக்காளே சுபிட்சா... அவகிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பா. மத்தபடி அவ உண்டு, அவ வேலைகள் உண்டு, ஆபீஸ் உண்டுன்னு இருக்கற பொண்ணு. கல்யாணத்துக்கப்புறம் சந்தோஷமா இருந்ததைக் கண் கூடா பார்க்க முடிஞ்சது. இவ்வளவு சீக்கிரமாவே அவ வாழ்க்கை முடிஞ்சுடும்ன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. ஒரு காய்ச்சல்... நோய் வந்து படுத்து கிடந்து செத்துப் போயிருந்தா கூடப் பரவாயில்லை... இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டதுல என் மனசு ரொம்ப அதிர்ச்சி ஆயிடுச்சு..."

"ஸாரி ஸார். உங்க உணர்வுகள் எனக்குப் புரியுது. வெரி ஸாரி..."

அடுத்ததாக இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் வந்தார்.

"உங்க மனைவி மேகலா கூட நீங்க சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடத்தினீங்களா?."

"ஆமா ஸார். நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சு வாழ்ந்துக்கிட்டிருந்தோம்" உடைந்து போன குரலில் கூறினான் சக்திவேல்.

"உங்க மனைவிக்கு உங்ககிட்ட எதையாவது மறைக்கற வழக்கம் உண்டா?"

"இல்லை ஸார். எங்களுக்குள்ள அப்படி எந்த ஒளிவு, மறைவும் கிடையாது ஸார்."

"உங்க வீட்ல வேற யார் யாரெல்லாம் இருக்காங்க?"

"நான், எங்க அம்மா, எங்க மாமா, மாமா பொண்ணு சுபிட்சா, என் தம்பி பிரகாஷ் எல்லாரும் ஒண்ணா இந்த வீட்ல கூட்டுக் குடும்பமா இருக்கோம்..."

"உங்க தம்பி எங்கே?"

"எங்க அம்மாவுக்கு பைபாஸ் சர்ஜரி. அதனால ஆஸ்பத்திரியில இருக்கான்."

"ஓகே... உங்க தம்பியை நான் விசாரிக்கணும். நாளைக்கு காலையில பத்து மணிக்கு சி.லெவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க. உங்க வீட்ல வேலைக்காரனோ, வேலைக்காரியோ இருக்காங்களா?"

"வேலைக்காரி இருக்கா."

"அவளையும் நாளைக்கு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க."

"சரி ஸார்."

"உங்க மனைவிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? யார் மேலயாவது சந்தேகப்படறீங்களா?."

"நான் எதிர்பார்க்கவே இல்லை ஸார். தீ விபத்துல இறந்துட்டாள்ங்கற விஷயமே அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா பிரேத பரிசோதனைக்குப் பிறகு 'கற்பழிப்பு' முயற்சியில தலையில் அடிப்பட்டு இறந்தப்புறம் தீ வச்சுருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சப்பறம் ரொம்ப வேதனையா இருக்கு. யார் மேலயும் எனக்கு சந்தேகம் இல்லை இன்ஸ்பெக்டர். எதுவும் புரியலை. கண்ணைக் கட்டி காட்டில விட்டாப்ல இருக்கு. அம்மாவுக்கு எந்த அதிர்ச்சியான சேதியும் தாங்க முடியாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியலை..."

"ஸாரி மிஸ்டர் சக்திவேல். உங்க துக்கம் புரியுது. நாங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தே ஆகணும். விசாரிச்சே ஆகணும். இதெல்லாம் எங்க கடமை. நாளைக்கு உங்க தம்பியை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க..."

"சரி ஸார்."

இன்ஸ்பெக்டர் ஆதவனும், மஞ்சுநாத்தும் கிளம்பினார்கள்.

மீனா மாமியின் வீட்டுக்குப் போனார்கள்.

அங்கே மீனா மாமியும், முரளி மாமாவும் இருந்தனர்.

"மிஸ்டர் முரளி, நீங்கதான் மேகலா வீட்ல இருந்து புகை வர்றதா புகார் குடுத்துருக்கீங்க. மேகலாவிற்கு நேர்ந்தது விபத்து இல்லை..." என்று ஆரம்பித்து பி.எம்.ரிப்போர்ட் பற்றிய விவரங்களைக் கூறினார்.

"மேகலாவோட வாழ்க்கையில வேறு யாரோ ஒரு நபர் குறுக்கிட்டிருக்காங்க. நிச்சயமா ஏதோ மர்மம் இருக்கு. ஆனா ஒட்டு மொத்தமா அவங்க குடும்பத்துல யாருக்குமே எதுவும் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லுங்க..."

"எங்களுக்குத் தெரிஞ்சு அந்தக் குடும்பத்துக்கு பகையாளிகள் யாரும் கிடையாது. அவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க. மேகலாவுக்கு இப்படி ஒரு மோசமான தொந்தரவு கொடுக்கக்கூடியவங்க இருக்கிறது தெரிஞ்சு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஆச்சர்யமாவும் இருக்கு. அந்தப் பொண்ணு மேகலா, அடக்கமான, அமைதியான பொண்ணு. பாவம். அவளுக்கு இப்படி ஒரு முடிவு வரும்ன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை..."

மீனா மாமி கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்டார் ஆதவன். முரளியிடம் திரும்பினார்.

"நீங்கதான் எஃப்.ஐ.ஆர் குடுத்திருக்கீங்க. எங்களோட விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுக்கணும். வேற எந்தத் தகவல் கிடைச்சாலும் உடனே என்னைத் தொடர்பு கொண்டு பேசுங்க. அல்லது நேர்ல வாங்க."

"சரி ஸார்..."

முரளி கூறியதும் ஆதவனும், மஞ்சுநாத்தும் கிளம்பினர்.

அவர்கள் இருவரும் மேகலா பணிபுரிந்து வந்த 'ஃபைவ் எஸ்' விளம்பர நிறுவன ஆபீஸிற்கு போனார்கள். அங்கே அனைவரிடமும் விசாரணை நடத்தினார் ஆதவன். மேகலாவின் கேஸிற்கு எந்தத் தடயமும், தகவல்களும் அங்கே அவருக்குக் கிடைக்கவில்லை.

'மேகலா நல்ல பெண். அவளுக்கு யாராலும் எந்த பிரச்சனையும் இல்லை' என்றே அனைவரும் கூறினார்கள். அந்தக் கேஸில் விழுந்துள்ள இறுக்கமான முடிச்சை எப்படி அவிழ்ப்பது என்ற யோசனையில் அங்கிருந்து கிளம்பினார் ஆதவன்.

"மஞ்சுநாத்... இந்தப் பொண்ணு மேகலா கேஸ் ரொம்ப மர்மமா இருக்கு. வீட்ல பிரச்சனை இல்லைன்னா அவ வேலைப் பார்க்கற ஆபீஸ்ல பிரச்சனை இருக்கணும். ரெண்டு இடத்துலயும் எந்த பிரச்சனையும் இல்லைங்கறாங்க. அந்தப் பொண்ணோட புருஷன் சக்திவேலோட தம்பியை விசாரிச்சா ஏதாவது முக்கியமான தகவல் தெரியவரும்னு எதிர்பார்க்கிறேன்."

"ஆமா ஸார். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நாளைக்கு அவனை வரச்சொல்லி இருக்கீங்கள்ல... பார்க்கலாம்..."

ஆதவனும், மஞ்சுநாத்தும் போன பிறகு, திகில் கலந்த பார்வை பார்த்தாள் மீனா மாமி.

"என்னன்னா இது அநியாயமா இருக்கு? அந்த மேகலா தீப்பிடிச்சு சாகலியாமே? எவனோ கற்பழிக்க முயற்சி பண்ணினானாம். பயங்கரமா சொல்லிட்டுப் போறாரு இன்ஸ்பெக்டர்? நல்ல பொண்ணு மேகலாவுக்கா இந்த கதி வரணும்?."


"மேல் லோகம் போயிட்ட மேகலாவைப்பத்தி நீ பேசற... கீழ... பூமியில இருக்கற நம்ம கதி? போலீஸ்காரங்க, வீட்டுக்கு வந்து துருவி எடுக்கறாங்க பாரு... உணர்ச்சிவசப்பட்டு போலீசுக்கு சொன்னது பெரிய தொல்லையா இருக்கே.."

"ஏன்னா அப்படி சொல்றேள்? நல்ல மனுஷா. அதுக்காகத்தானே நாம செஞ்சோம்? எஃப்.ஐ.ஆர் குடுத்த உங்களைத்தான் போலீஸ் கேட்பாங்க... அதுதானே சட்டம்? நம்ப மேல எந்தத் தப்பும் இல்லாதப்ப நாம ஏன் பயப்படணும்? அவங்க கேக்கற கேள்விக்கு நமக்குத் தெரிஞ்ச பதிலை நாம சொல்லப் போறோம்... அவ்வளவுதானே! ரொம்பத்தான் அலட்டிக்காதீங்கோ..."

"உனக்கென்னடியம்மா... நீ பாட்டுக்கு சொல்லுவ. சரி... இந்தப் போலீஸ் வந்துட்டு போன டென்ஷன்ல தலை ரொம்ப வலிக்குது. ஒரு காபி போட்டுக்குடேன்..."

"சுத்தி முத்தி கடைசியில காபிக்கு வந்துடுவேளே... சித்தே இருங்கோ. இதோ எடுத்துட்டு வரேன்..."

மீனா மாமி சமையலறைக்குள் நுழைந்தாள்.

49

ம்மா கண் விழித்ததும் மேகலாவை கேட்பார்களே என்ற கவலை சக்திவேலின் மனதை முற்றுகையிட்டிருந்தது.

"பிரகாஷ்... அம்மாவை நான் பார்த்துக்கறேன். நீ பத்து மணிக்கு சி.லெவன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர் ஆதவனைப் பாரு."

"எதுக்கு அண்ணா...?" கேட்பதற்குள் தொண்டைக் குழிக்குள் ஏதோ அடைப்பதை போலிருந்தது பிரகாஷிற்கு.

"வீட்ல எல்லாரையும் விசாரணை பண்ணினார். உன்னையும் அதுக்காகத்தான் வரச் சொல்லி இருக்கார். கரெக்டா பத்து மணிக்குப் போயிடு. எனக்கு மனசு சரி இல்லை. இன்ஸ்பெக்டர் சொன்ன சில தகவல்களால நெஞ்சு பாரமா இருக்கு..."

"சரிண்ணா... நான் கிளம்பறேன்."

பிரகாஷ், மருத்துவமனையை விட்டு புறப்பட்டான்.

'இன்ஸ்பெக்டர் என்ன சொல்லி இருப்பார்... அண்ணன் இந்த அளவுக்கு அப்ஸெட் ஆகற அளவுக்கு…?' அவனது இதயம் முழுவதும் திகில் பரவியது. போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டான்.

ஆட்டோ கிளம்பியது.

காவல் நிலையத்தில் வேலைக்காரியிடம் விசாரணையை முடித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், வேலைக்காரியை அனுப்பி விட்டு பிரகாஷை தீவிரமாக விசாரணை செய்தார். பிரகாஷின் மொபைல் நம்பரைக் கேட்டு குறித்துக் கொண்டு, அவனையும் அனுப்பினார்.

"இப்ப நீ போகலாம். நாங்க கூப்பிடும் போது நீ வரணும். வெளியூர் எங்கேயும் போகக் கூடாது..."

"சரி ஸார்..." பிரகாஷின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.

பிரகாஷ் அங்கிருந்து கிளம்பினான்.

கடைக்கு சென்று காபிப்பொடி வாங்கிக் கொண்டு வந்து மீனா மாமியிடம் கொடுத்தார் முரளி மாமா.

"ஆ...ஊ...ன்னா... பக்கத்து ஆத்துல போய் காபிப்பொடி வாங்கிண்டு வந்துண்டிருந்தேன். மேகலா போன பிறகு அங்கே போய் காபிப்பொடி கேக்கறதுக்கே தோணலை. கமலம் மாமி ஆஸ்பத்திரியில இருக்கா. மூர்த்தி மாமா சோகத்துல சோர்ந்து போய் இருக்கார். சுபிட்சா காலேஜுக்கு போயிடறா. வீட்ல இருக்கற நேரம் முழுசும் அழுதுக்கிட்டே இருக்கா. அக்கா மேல உயிரையே வச்சிருந்த பொண்ணு... அழறதைப் பார்க்கும்போது பரிதாபமா இருக்குன்னா. பிரகாஷும், சக்திவேலும் மாறி மாறி ஆஸ்பத்திரிக்குப் போக வர இருக்கா. இதுக்கு நடுவுல போலீஸ் விசாரணை வேற..."

"யம்மாடி... காபியைப் போட்டுக் குடுத்துட்டு பேசறியா?"

"சரி, சரி, இதோ போடறேன்..." மீனா மாமி காபி போட்டு கொடுத்தாள்.

"எனக்கென்னவோ அந்த பிரகாஷ் மேல சந்தேகமா இருக்குன்னா. ஏன் தெரியுமா? மேகலா செத்துப்போன அன்னிக்கு, புகை நாத்தம் வர்றதுக்கு கொஞ்ச நாழி முன்னாடி நான் காபிப்பொடி வாங்கப் போனேனோல்லியோ? அப்போ... வாசக்கதவை கூட சரியா திறந்து பேசலை அந்த பிரகாஷ். உள்ள போய் அவனே காபிப்பொடி எடுத்துட்டு வந்து குடுத்தானே தவிர, என்னை உள்ளே வான்னு கூப்பிடலை. அது மட்டுமில்லைன்னா... அவசர அவசரமா எடுத்துட்டு ஓடி வந்தான். முகம் முழுக்க வியர்வை கொட்டிட்டிருந்துச்சு. அவன் ஏன் அப்படி அவசரப்படணும்? திருதிருன்னு முழிக்கணும்…?" மீனா மாமியின் சந்தேகம் சரியா தவறா என்று முரளி மாமாவிற்கு புரியவில்லை.

"பிரகாஷ் மேலயா சந்தேகப்படற? பக்தி நிறைஞ்ச பையன் பிரகாஷ். சதா சர்வமும் ஸ்வாமி ஸ்லோகங்களை உச்சரிச்சுண்டே இருக்கற அவன் மேல தப்பு இருக்கும்ன்னு எனக்குத் தோணலியே..."

"நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான். ஆனா அவன் ஏன் அவ்வளவு அவசரமா என்னை வெளியே அனுப்பினான்?"

"அந்த ஒரு விஷயத்தை மட்டும் வச்சு பிரகாஷை சந்தேகப்படறது சரியா?"

"ஒண்ணுமே புரியலைன்னா. போலீஸ் விசாரணை பண்ணி முடிச்சப்புறம்தான் எல்லாம் புரியும். போலீஸ்காரங்க... ஒரு சின்ன தடயம் கிடைச்சாக் கூட அதை வச்சு சீக்கிரமா குற்றவாளியை கண்டுபிடிச்சுருவாங்க. அந்தக் குடும்பத்துல இப்படி ஒரு மர்மமான சம்பவம் நடந்திருக்குங்கறதை என்னால ஜீரணிக்கவே முடியலை. என்னமோன்னா.... ஆளாளுக்கு வீட்டு சாவியை வச்சுண்டு திறந்து வர்றதுகள்... போறதுகள்... ஒண்ணும் புரியலியே...... நாம பிரகாஷ் மேல சந்தேகப்படறதை போலீஸ்ல சொன்னா...?"

"ஏற்கெனவே இன்ஸ்பெக்டர் ஆதவன்,... பிரகாஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கார். எஃப்.ஐ.ஆர் குடுத்ததுனால நம்பளை போலீஸ் குடையறாங்க. நாமளா போய், பிரகாஷ் மேல சந்தேகப்படறதைப்பத்தி சொன்னா சும்மா விடுவாளா?"

"ச்சே... பாவம்ன்னா அந்தக் குடும்பம். கமலம் மாமி வேற ஆப்ரேஷனாகி ஆஸ்பத்திரியில இருக்கா. மேகலாவை பறிக்குடுத்துட்டு எல்லாரும் தவிக்கறா. கமலம் மாமிட்ட மேகலா விஷயத்தை சொன்னா மாமிக்கு அதிர்ச்சி ஆயிடும்... சொல்லவும் முடியாது... சொல்லாம இருக்கவும் முடியாது. என்ன பண்ணப் போறாளோ தெரியலை. மேகலாவுக்கு நேர்ந்த இந்த கதிக்கு காரணம் இதுதான்னு தெரிஞ்சுக்கிட்டாலாவது ஏதோ கொஞ்சம் ஆறுதலா இருக்குமே..."

"குற்றவாளி பிரகாஷ்தான்னு நிரூபணம் ஆயிட்டா...? அவா எல்லாரும் அதிகமா அதிர்ந்து போய் துக்கப்படுவாளே.."

"அதுக்கென்ன செய்யறது? தப்பு செஞ்சவன் தண்டனை அடைஞ்சே தீரணும். நாமளா ஏன் அப்படி இருக்குமோ... அவனால இருக்குமோ... இவனால இருக்குமோன்னு... குழம்பிக்கிட்டு பேசிக்கிட்டிருக்கோம்? நமக்குத் தெரிஞ்ச தகவல்களை போலீஸ்ல சொன்னாதான் அவங்க குற்றவாளியை சீக்கிரமா கண்டுபிடிக்க முடியும். போலீஸ்க்கு தகவல் சொல்றதுக்கு பயந்து போய் எல்லாரும் சும்மா இருந்தா போலீஸ் டிபார்ட்மெண்ட் குற்றவாளியை கண்டுபிடிக்க லேட் ஆகும். நம்பள மாதிரி பொது மக்கள் ஒத்துழைச்சாத்தான் நல்லது.."

"நீ சொல்றது சரிதான் மீனா. ஆனா... பிரகாஷ் மேல நாம வீண் பழி சுமத்தற மாதிரி ஆகிட்டா... பக்கத்தாத்து ஃப்ரெண்ட்ஷிப் போயிடும். நான் என்ன சொல்றேன்னா... எதுவுமே நமக்கு உறுதியா தெரியாத பட்சத்தில... போலீஸ்ல சொல்றது சரி இல்லை.."

"ஆமான்னா...நீங்க சொல்றதும் சரிதான். பேப்பர்ல தினமும் மேகலா கேஸ் விஷயம் போடறாங்க. பாவம்... கௌரவமா வாழ்ந்த குடும்பம். இப்படி அவமானப்படறாங்க..."


"என்னவோ கெட்டநேரம்... போ..."

"கெட்டவங்க இருக்கறதுனாலதான் கெட்ட விஷயங்கள் நடக்குது.  ஒரு நாளைக்கு உண்மை வெளியே வரத்தானே போகுது? அந்தக் கடங்காரப்பாவி... யார்னு பார்க்கத்தானே போறோம்?"

"நம்பளால முடிஞ்சதை நாம செய்யலாம்டி மீனா. எனக்கு தைரியம் வந்துடுச்சு... எல்லாம் உன்னாலதான்."

"ரொம்ப தேங்க்ஸ்ன்னா... சாயங்காலம் விளக்கேத்த இதயம் வாங்கணும், போய் வாங்கிட்டு வாங்களேன்..."

"இதோ போறேன். பொண்டாட்டி சொன்னா உடனே கேட்கணும்."

முரளி மாமா எழுந்து வெளியே சென்றார்.

50

ழுது கொண்டிருந்த சுபிட்சாவை ஆறுதல் படுத்தினான் சக்திவேல்.

"அழாதே சுபிட்சா."

"எப்படி சக்திவேல் மச்சான் அழாம இருக்க முடியும்? என் மேல உயிரையே வச்சிருந்த அக்கா இப்படி கொடூரமா செத்துப் போயிட்டா. ஆப்ரேஷன் முடிஞ்சு ஆஸ்பத்திரியில இருக்கற அத்தை ஐ.ஸி.யூல இருந்து வந்து மேகலாவைக் கேட்டா என்ன சொல்லப் போறோம்? 'மகள் போய் சேர்ந்துட்டா'ங்கற துக்கத்துல இருக்கற அப்பாவுக்கு.... அந்த துக்கம் போதாதுன்னு அத்தை வேற ஆஸ்பத்திரியில இருக்காங்க. அக்காவை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிட்ட நீங்க... உங்க முகமே வாடிப் போய் கிடக்கு. எதை நினைச்சு அழறது... எதை நினைச்சு ஆறுதல் அடையறது? ஓண்ணும் புரியலியே..." சுபிட்சா மேலும் அழுதாள்.

"போலீஸ்... பிரகாஷ் மச்சானை சந்தேகப்படறாங்க. பிரகாஷ் மச்சான் பாவம். நல்லவர். அவரைப் போய் சந்தேகப்படலாமா?" தொடர்ந்து அழுதபடியே பேசிய சுபிட்சாவை ஆறுதல் படுத்தும் வழி அறியாமல், தானும் கலங்கி நின்றான் சக்திவேல்.

"மாமா பாவம், வயசானவர். அவருக்கு சாப்பிட ஏதாவது குடு சுபிட்சா. பசி பொறுக்க மாட்டாரே. உனக்குத் தெரியாததா? போ... அவரை கவனி..."

"நீங்களும் சாப்பிட வாங்க சக்திவேல் மச்சான். உப்புமா கிளறி வச்சிருக்கேன். நீங்களும், அப்பாவும் சாப்பிடுங்க." சுபிட்சா சமையலறைக்குள் சென்றாள்.

மறுநாள் காலை. நியூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த மீனா மாமி உரக்கக் கத்தினாள்.

"ஏன்னா.."

காபி குடித்துக் கொண்டிருந்த முரளி மாமா, காபி டம்ளரை மேஜை மீது வைத்தார்.

"ஏண்டி, நிம்மதியா காபி குடிக்க விடாம இப்படி கூச்சல் போடற? உனக்கு என்ன ஆச்சு?"

"எனக்கு ஒண்ணும் ஆகலைன்னா. இங்க வந்து பேப்பரை பாருங்கோன்னா. நான் சொன்னேனோல்லியோ... அந்தப் பிரகாஷ் மேல சந்தேகமா இருக்குன்னு..."

முரளி மாமாவிடம் பேப்பரைக் கொடுத்தாள் மீனா மாமி.

முரளி மாமா மேகலா கேஸ் பற்றிய செய்தி முழுவதையும் படித்தார்.

"நெற்றியில் விபூதிப்பட்டையும், கழுத்துல ருத்ராட்ச கொட்டையுமா பக்திமானா இருக்கற பிரகாஷ்... பொண்ணுங்க கூட சுத்திக்கிட்டு திரிபவனா? நம்பவே முடியலயே மீனு...!"

"நான்தான் சொன்னேனே... அவன் அவசர அவசரமா காபிப்பொடியைக் குடுத்து, என்னை அவசரமா அனுப்பி, கதவைப் பூட்டினதும், வியர்த்து வழிந்ததும்... எனக்குப் பட்சி சொல்லுச்சுன்னா... பார்த்தீங்களா அதுவே நிஜமாயிடுச்சு? இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி அப்பாவியா இருந்த பிரகாஷ் ஒரு கேடியா இருக்கானே...?"

"இங்க பாரு மீனு... வெளியில கண்டபடி பொண்ணுங்க கூட சுத்தித் திரியற சில வாலிபப்பசங்க, வீட்ல இருக்கற பொண்ணுங்ககிட்ட மரியாதையா பழகுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனால அவனுக்கு பொண்ணுங்க சகவாசம் இருக்கறதுக்கும், மேகலா கேசுக்கும் முடிச்சு போட்டுப் பார்க்கறது நூறு சதவிகிதம் சரியான்னு எனக்குத் தெரியலை. இனி போலீஸ் அந்த பிரகாஷ் கூட சுத்தின பொண்ணுங்களை விசாரிப்பாங்க. அப்ப தெரியும் அவனோட திருவிளையாடல்... அவனோட மொபைல்ல இருக்கற நம்பர்கள் மூலமா நிறைய கண்டுபிடிப்பாரு இன்ஸ்பெக்டர். நான் உன்கிட்ட என்ன சொன்னேன்... போலீஸ்காரங்க சின்ன தடயம் கிடைச்சா சீக்கிரமா குற்றவாளியைக் கண்டுப்பிடிச்சிருவாங்கன்னு சொன்னேன்னோல்லியோ?"

"ஆனா பிரகாஷ்தான் குற்றவாளின்னு கண்டுபிடிக்கலை..."

"ஒரு பொண்ணைக் காதலிக்கறதுனாலயோ... பல பொண்ணுங்க கூட சுத்தறதுனாலயோ பிரகாஷை குற்றவாளின்னு போலீஸ் எப்படி சொல்லுவாங்க? தகுந்த ஆதாரம் கிடைச்சாத்தான் ஒருத்தரை குற்றவாளின்னு அவங்களால நிரூபிக்க முடியும்."

"பிரகாஷோட மறுபக்கம் இப்ப வெட்ட வெளிச்சம் ஆயிடுச்சுல்ல. பாவி... அடக்க ஒடுக்கமானவன்னு வேஷம் போட்டுக்கிட்டு அடங்காத காளையா திரிஞ்சுருக்கானே. யாரை நம்பறது... யாரை நம்பக் கூடாதுன்னே புரியலைன்னா... நாளைக்கு என்ன நியூஸ் வருதுன்னு பார்ப்போம்...."

"பேப்பரைப் பார்த்துட்டு நீ கத்தின கத்துல... என்னோட காபி ஆறிப் போச்சுடி மீனு. சுடவச்சுக் குடேன்..."

"சரி... சரி... குடுங்க." முரளி மாமாவிடமிருந்த காபி டம்ளரை மீனா மாமி வாங்கிக் கொண்டு அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

51

நியூஸ் பேப்பரைப் பார்த்த சுபிட்சாவும் அதிர்ச்சி அடைந்தாள்.

'சினிமா பத்திரிகையில வர்ற நடிகைகளோட படத்தைப் பார்த்து கூச்சப்படற பிரகாஷ் மச்சானுக்கு பல பெண்களோட பழக்கமா? வீட்ல அவர் நடந்துக்கற விதத்துக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லையே... வீட்ல இருக்கறவங்க எல்லார்கிட்டயும் எதுக்காக இந்த நல்லவன்ங்கற நாடகம்?' பலவாறு எண்ணி, குழம்பினாள் சுபிட்சா.

'பிரகாஷ் மச்சானோட உதவியால, சொந்தக் கால்ல நிக்கணும், அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சனை இல்லாத வாழ்க்கை வாழலாம்னு நான் நினைச்சது மட்டுமில்ல... அக்காகிட்டயும் அழுத்தமா சொன்னேனே...'

எண்ணங்கள் அவளது இதயத்தில் சிலந்தி வலை போல பின்னியது. நீண்ட நேரம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து, பிரகாஷின் அறைக்கு சென்றாள். அலமாரியை உருட்டினாள். அதன்பின் மேஜை டிராயரைத் திறந்தாள்.

அழகிய டைரி ஒன்று கண்ணில் பட்டது. அதில் 'வித் லவ் பொற்கொடி' என்று எழுதப்பட்டிருந்தது. பக்கங்களைப் புரட்டினாள் சுபிட்சா.

'இன்று பொற்கொடியுடன் பாண்டிச்சேரி போனேன். தோளோடு தோள் உரச பயணித்தோம். எனது திட்டப்படி அங்கே, அவளுடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கினேன். அவளை அனுபவித்தேன். அவளை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை கொடுத்திருந்தபடியால் அவள் எனது ஆசைக்கு இணங்கினாள்.'

'இன்று பாலாஜியை சந்தித்தேன். அவன் எனக்கு அறிவுரை கூறினான். 'நீ நல்லவன். பெண் சபல புத்தியை விட்டுவிட்டால் நீ நல்லபடியாக முன்னேறலாம் என்று கூறி அறுத்தான்.'

'நான் எத்தனை பெண்களுடன் சபலபுத்தி கொண்டாலும் எனக்கு மனைவியாக சுபிட்சாதான் வர வேண்டும். அவள்தான் எனக்கு மனைவி.'

'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோ என்று என்னைக் கெஞ்சினாள் மேகலா. அவளுடைய தங்கையை நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணுமாம். அதுக்காக அவளையே தியாகம் செய்யறாளாம். நான் மாட்டேன் என்று மறுத்து விட்டேன். எனக்கு சுபிட்சாதான் மனைவி...'

இவ்விதம் நிறைய உண்மை விஷயங்களை எழுதி வைத்திருந்தான் பிரகாஷ்.


'ஐய்யோ... அக்கா... இவனைப்பத்தி தெரிஞ்சுதான் பிரகாஷ் வேண்டாம்னு சொன்னியா? இவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தறதுக்குதான் போயும் போயும் இவனைப் போல அயோக்யனைக் கல்யாணம் பண்ணிக்கத் துணிஞ்சியா? உனக்காக எதையும் செய்வேன்! உனக்காக எதையும் செய்வேன்னு, நீ இதுக்குத்தான் சொன்னியா? இவன் வேண்டாம்னு நீ சொன்னதை நான் புரிஞ்சுக்கலியே.’ கதறி கதறி அழுத சுபிட்சா, மேலும் பக்கங்களைப் புரட்டினாள்.

'ஒருநாள் ஏதோ நீளமாக எழுதிக் கொண்டிருந்த மேகலா, என்னைப் பார்த்ததும் மறைத்தாள். அவள் ஆபீஸ் போன பிறகு அவள் எழுதியதை எடுத்துப் பார்த்து விட்டு ஒளித்து வைத்திருக்கிறேன்.' இதைப் படித்த சுபிட்சா பரபரப்பானாள். டிராயர் முழுவதும் மேகலாவின் கடிதத்தைத் தேடினாள். டிராயரில் விரிக்கப்பட்டிருந்த பேப்பரைத் தூக்கிப் பார்த்தாள். நீளவாக்கில் மூன்றாக மடிக்கப்பட்டிருந்த  ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அது மேகலா எழுதிய கடிதம்... திகில் நிறைந்த மனதுடன் அதைப் படிக்க ஆரம்பித்தாள்.

'என் உயிர் தங்கை சுபி,

உன்னிடம் நேரில் கூறினால் நீ சமாளித்துப் பேசி என்னை சமாதானப்படுத்தி விடுகிறாய். எனவே வேறு வழி இல்லாததால் இக்கடிதம் எழுதியுள்ளேன். பிரகாஷ் கெட்டவன். காமுகன். அவனை நம்பாதே. என்னை நம்பு. அந்த பிரகாஷ் என் மீது, என் உடல் மீது ஆசைப்பட்டு என்னை அடையத் துடிப்பவன். அவனது அண்ணியாக ஆன பிறகும் என்னை அனுபவிக்க நினைப்பவன். தன்மையாக அறிவுரை கூறினேன். கேட்கவில்லை. வன்மையாக கண்டித்துப் பார்த்தேன்.  கேட்கவில்லை. அவன் பெண் சபல புத்தி கொண்டவன். நான் எழுதி இருப்பதைப் படித்து தீவிரமாக யோசித்து முடிவு எடு. நான் பேசும் பொழுது நீ பதில் கூறுவது போல் அலட்சியமாக இருந்துவிடாதே. என் உயிர் தங்கை நீ நன்றாக இருக்க வேண்டும். லிங்கம் கல்லூரி நிறுவனங்களின் உரிமையாளர் சொக்கலிங்கத்தின் மகன் கிரி நல்லவன். பண்பானவன். அவனை திருமணம் செய்து கொள். இந்த பிரகாஷ் வேண்டாம். வீட்டில் அவனால் ஏற்பட்ட பாலியல் பலாத்கார பிரச்சனைகளை பலமுறை எதிர் கொண்டுள்ளேன். இப்படிப்பட்ட அவனுக்கு நீ மனைவியாவது மிகவும் மடத்தனமானது. உன் அக்கா சொல்வதைக் கேள்..'

பாதியில் நின்றிருந்தது அக்கடிதம்.

'பிரகாஷ் இவ்வளவு கேவலமானவனா?.... எனக்காக என் அக்கா இந்தக் கயவனை கணவனாக்கிக் கொள்ளும் எண்ணம் வச்சிருந்திருக்கா. அவள் மனம் ஒரு தியாக பூமி' எண்ணங்கள் பின்னலிட கண்களில் கண்ணீர் வழிந்தது சுபிட்சாவிற்கு.

52

வினயாவின் குடும்பத்தில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது.

"ஒரு கொலைக்காரப் பயலைக் காதலிச்சதும் இல்லாம... இப்ப அவனைப்பத்தின தகவல்களை போலீஸ் ஸ்டேஷன்ல வேற சொல்லப் போறேங்கற? உனக்கென்ன மூளை கலங்கிப் போச்சா?" வினயாவின் அப்பா, ராமநாதன் கேட்டார். வினயாவின் அம்மா புனிதவதி, தங்கை இருவரும் பயம் கலந்த முகத்துடனும்  மனதுடனும் வினயாவைச் சுற்றி நின்றிருந்தனர்.

"என்னோட மூளை கலங்கிப் போகாம, எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்கணும்ன்னா அவனைப்பத்தி நான் போலீஸ்ல சொல்லியே ஆகணும்..." வினயா பேசியதைக் கேட்ட ராமநாதன், அவளைக் கன்னத்தில் அறைந்தார்.

இதைப்பார்த்து புனிதவதி பதறினாள். தடுக்கப் போனால், ராமநாதனின் கோபம் அதிகமாகும் என்பதால் அழுதபடி இருந்தாள்.

"நீங்க என்னை அடிச்சாலும் சரி, கொன்னாலும் சரி, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் சொல்லத்தான் போறேன்..."

மறுபடியும் அடித்தார் ராமநாதன்.

அதுவரை மௌனமாக அழுது கொண்டிருந்த புனிதவதி, வினயாவின் அருகே சென்றாள். கோபமாகக் கத்தினாள். "ஏண்டி இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறே? நம்ம குடும்ப கௌரவத்தை நினைச்சுப் பார்த்தியா? உன்னோட எதிர்காலத்தைப்பத்தி நினைச்சுப் பார்த்தியா? நீ இப்ப உன்னோட காதல்... கண்றாவி விஷயத்தை அம்பலப்படுத்தினா... நாளைக்கு உன்னை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்? இதோ நிக்கற உன் தங்கச்சியை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்?"

"அம்மா... நானும் பொண்ணு. தங்கச்சியும் பொண்ணு. நம்ம ஊர்ல, நம்ம நாட்டில என்னை மாதிரி எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒரு பொண்ணாவது என்னோட இந்த நிலைமை தெரிஞ்சு, சுதாரிப்பா இருந்துக்க மாட்டாங்களாங்கற ஆதங்கத்துலதான்மா நான் இந்த விஷயத்துல இவ்வளவு தீவிரம் காட்டறேன்... நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற பொண்ணுங்களையெல்லாம் 'நீயும் என் பொண்ணு மாதிரிதான்னு' சொல்லி அன்பு காட்டுவீங்களே... பொண்ணுங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கலாம்னு நினைச்சுத்தாம்மா நான் இவ்வளவு தூரம் பேசறேன்.

“உங்க வயித்துல பிறந்த பொண்ணான என்னைப்பத்தி மட்டும் கவலைப்படறீங்களேம்மா.. உங்க வயித்துல பிறக்காத எத்தனை பொண்ணுங்க இருக்காங்க? என்னோட தப்பு அவங்களுக்கு ஒரு பாடமா இருக்கக் கூடாதாம்மா? அப்பா மேல நான் கடலளவு பாசம் வச்சிருக்கேன்மா. அவரையே நான் எதிர்த்துப் பேசறேன்னா... நீங்க கொஞ்சம் யோசிக்கணும்மா. காதல்.. காதல்ன்னு மயங்கிப் போற பொண்ணுங்களுக்கு சாதல்தான் முடிவுன்னு ஆகிடுது. எல்லாருமே குடும்ப கௌரவம்னு நினைச்சு, சம்பந்தப்பட்டவங்களைக் காட்டிக் குடுக்காம... தப்பிக்க வைச்சோம்ன்னா... இன்னும் ஏகப்பட்ட பெண்கள் பாதிக்கப்படுவாங்க... வீட்டையும், நாட்டையும் ஒரே மாதிரி நேசிக்கணும்னு சான்றோர்கள் சொல்லி இருக்காங்களே... என்னோட நாட்டுக்காக பெரிசா ஏதும் செய்ய முடியாட்டாலும் என்னைப் போன்ற பெண்களுக்காக ஏதோ என்னால முடிஞ்சதை செய்யணும்ன்னு நினைக்கறது தப்பாம்மா?

‘எனக்கு ஏற்பட்ட காதல், ஒரு விபத்து மாதிரின்னு புரிஞ்சுக்கிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்க, ஒரு நல்லவன் முன் வந்தா மனப்பூர்வமா அந்த வாழ்க்கையை ஏத்துக்குவேன். இதை ஒரு காரணமா வச்சு, களங்கமா நினைச்சு என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை. என் இஷ்டத்துக்கு நிறைய படிச்சு, முன்னேறி என்னோட சொந்தக் கால்கள்ல நின்னு சுதந்திரமா வாழ்வேன். வாழ்ந்து காட்டுவேன். கல்யாணம் ஆகலைன்னா பெண்களால வாழ முடியாதா? சொல்லப் போனா... அந்தக் கல்யாணங்கற சம்பிரதாயத்துனாலதான் பெரும்பாலும் பெண்களோட முன்னேற்றம் தடைப்படுது. அதனால தைரியமா இதைப்பத்தி போலீஸ்ல சொல்லலாம்னு நான் எடுத்திருக்கற முடிவுக்கு ஒத்துழைக்க மாட்டீங்களாப்பா?"

வினயா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதனுக்குக் கோபம் தணிந்தது. வினயாவைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டார்.

"ஸாரிம்மா வினயா. சுயநலமா சிந்திச்சுக்கிட்டிருந்த என்னோட புத்தியில தட்டிட்டம்மா. வாம்மா, இப்பவே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம். நானும் உன் கூட வரேன். இனிமேலயும் உன்னோட இந்த நல்ல எண்ணத்துக்கு மதிப்பு குடுக்கலைன்னா நான் ஒரு அப்பா இல்லை... ஏன்... ஒரு மனுஷனே இல்லை..."

"தேங்க்ஸ்ப்பா..."


வினயாவும், ராமநாதனும் உடனே சி.லெவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பிரகாஷ் பற்றிய தகவல்களைக் கூறினார்கள். பாண்டிச்சேரிக்கு தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டது உட்பட அவனது காதல் பிடியில் தான் சிக்கிக் கொண்ட விபரத்தை இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் கூறினாள் வினயா.

"இன்ஸ்பெக்டர் ஸார்... பிரகாஷைப்பத்தி வேற எதுவும் எனக்கு தகவல்கள் தெரியாது. பிள்ளைங்களை நம்பி காலேஜுக்கும், ஸ்கூலுக்கும் அனுப்பற பெற்றோர்களை ஏமாத்தக் கூடாதுங்கற பாடத்தை நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் தெரிஞ்சுக்கிட்ட பாடத்தை என்னைப் போன்ற பெண்களும் தெரிஞ்சுக்கணும்னுதான் எங்க குடும்ப கௌரவத்தைக் கூட பெரிசா நினைக்காம இங்கே வந்து உங்ககிட்ட தகவல்கள் சொல்லி இருக்கேன். படிக்கற வயசுல படிப்புல மட்டும்தான் கவனத்தை செலுத்தணும். இல்லைன்னா... எதிர்காலமே இருண்டு போயிடும்னு புரிஞ்சுக்கிட்டேன்" வினயா பேசியதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஆதவன், அவளைப் பாராட்டினார்.

மகளின் மனதைப் புரிந்துக் கொண்டு அவளுக்கு உதவியாகக் கூட வந்த ராமநாதன், வினயாவைப்பற்றி பெருமிதம் கொண்டார். இருவரும் இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

காவல் நிலையத்திற்குள் புயலென நுழைந்தான் ஒருவன்.

"மேகலாங்கற பொண்ணு கேஸ் விஷயமா இன்ஸ்பெக்டர்கிட்ட நான் பேசணும்..." கான்ஸ்டபிளிடம் படபடவென முரட்டுத்தனமாக பேசினான் அவன்.

"இன்ஸ்பெக்டர் ஆதவன் இருக்கார். அவர்கிட்ட போய் சொல்லுங்க." கான்ஸ்டபிள் கூறியதும் அவன், இன்ஸ்பெக்டர் ஆதவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு சென்றான்.

இன்ஸ்பெக்டர், யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.

"ஸார்..."

அவனைக் கையசைத்து, உட்காரும்படி கையைக் காட்டினார் ஆதவன்.

அவன் உட்கார்ந்தான். ஆதவன் ஃபோன் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க முடியாமல் தவித்தான். சேரில் வசதியாக உட்காராமல் சேரின் நுனியில் உட்கார்ந்திருந்தான். அத்தனை டென்ஷனாக இருந்தான் அவன்.

ஃபோன் பேசி முடித்த ஆதவன், தன் எதிரே உட்காந்திருந்தவனைப் பார்த்தார்.

"நீங்க யார்? என்ன விஷயம்?."

"என் பேர் கார்மேகம் ஸார். நான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில வேலை பார்க்கறேன். மேகலான்னு ஒரு பொண்ணு கற்பழிப்பு முயற்சியில கீழே விழுந்து செத்துப் போனதுக்கப்புறம் அவளை தீ வச்சு எரிச்சது அந்த பிரகாஷ்தான் ஸார்..."

கார்மேகம் பேச ஆரம்பித்ததுமே உஷாரானார் ஆதவன்.

"எதை வச்சு பிரகாஷ்தான்னு சொல்றீங்க?"

"பிரகாஷ் ஒரு பொம்பளை பொறுக்கி ஸார். காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றுபவன். எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா ஸார். அவ பேர் பொற்கொடி. பேருக்கேத்த மாதிரி தங்கம் போல இருப்பா ஸார். நல்லா படிச்சுக்கிட்டிருந்த பொண்ணு ஸார். எங்கேயோ... எப்படியோ... இந்த பொறுக்கி பிரகாஷைப் பார்த்திருக்கா. அவன்  வீசின காதல் வலையில விழுந்திருக்கா. உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசைக்காட்டி, அவனோட ஆசையை தீர்த்துக்கிட்டு, என் தங்கச்சியை கழட்டி விட்டுட்டான் ஸார். அவன் வேற பொண்ணு கூட சுத்தறதைப் பார்த்துட்ட என் தங்கச்சி பொற்கொடி, மனசு உடைஞ்சு போய் தற்கொலை பண்ணிக்கிட்டா ஸார். என் உயிருக்குயிரான பொற்கொடியோட உயிர் இந்த உலகத்தை விட்டுப் போனதுக்குக் காரணம் இந்த பிரகாஷ்தான் ஸார்..."

"இதுக்கு என்ன ஆதாரம்?"

"இதோ... இந்த ஃபோட்டோவைப் பாருங்க ஸார். பொற்கொடியோட பீரோவுல இருந்துச்சு. பாருங்க ஸார்... ஃபோட்டோவுக்குப் பின்னால 'ஐ லவ் யூ பொற்கொடி'ன்னு எழுதி கையெழுத்துப் போட்டிருக்கான்."

கார்மேகத்தின் கையில் இருந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்த்தார் ஆதவன்.

அந்த ஃபோட்டோவில் இருந்தது பிரகாஷ்தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.

கார்மேகம் படபடப்பு நீங்காத குரலில் தொடர்ந்து பேசினான்.

"இவனை எப்படியாவது பழி வாங்கணும்ன்னு துடிச்சேன் ஸார். ஆனா இவனோட அட்ரஸ் கிடைக்காம இவனைத் தேடி அலைஞ்சேன். பொற்கொடியோட பீரோவுல இந்த ஃபோட்டோவை தவிர, இவன் சம்பந்தப்பட்ட வேற எதுவுமே கிடைக்கலை ஸார்."

"ஒரு நாள் ட்ரிப்ளிகேன் 'இன்சுவை ஹோட்டல்'ல ஒரு பொண்ணு கூட அவனைப் பார்த்தேன். அவனைத் தொடர்ந்து போய் பிடிக்கறதுக்குள்ள, எங்க மேனேஜர், என்னைப் பிடிச்சுக்கிட்டாரு. அதனால அவன் அன்னிக்குத் தப்பிச்சுட்டான்."

"பிரகாஷ், உன் தங்கச்சியை ஏமாத்தினான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

"தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னால என் தங்கச்சி எனக்கு லெட்டர் எழுதி இருந்தா. அந்த லெட்டர்ல்ல எல்லா விஷயமும் எழுதி இருந்தா. ஆனா அவனோட அட்ரஸ் மட்டும் அதில் இல்லை. பொற்கொடிக்கே அவன், அவனோட அட்ரஸைக் குடுத்திருக்க மாட்டான். எப்படியோ.. பொற்கொடி கையில அவனோட ஃபோட்டோ மட்டும் கிடைச்சிருக்கு... கூடப்பிறந்த ஒரு தங்கச்சியை பறி குடுத்துட்டு பரிதவிக்கிறேன் ஸார். அந்தப் பிரகாஷுக்கு தண்டனை வாங்கிக் குடுங்க ஸார். அதன் மூலமா செத்துப் போன என் தங்கச்சி திரும்பக் கிடைக்காட்டாலும் அவன் செஞ்ச தப்புக்குரிய தண்டனையை அனுபவிக்கிறான்ங்கற ஒரு சின்ன திருப்தியாவது இருக்கும் ஸார்..."

சோகம் தாங்காமல் தவித்தான் கார்மேகம்.

"குற்றவாளி அவன்தான்னு நிரூபணம் ஆனா... சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செய்வோம். கான்ஸ்டபிள் உங்ககிட்ட சில பேப்பர்ல கையெழுத்து வாங்குவாங்க. கையெழுத்து போட்டுட்டுப் போங்க. உங்க அட்ரஸ், மொபைல் நம்பர் குடுத்துட்டுப் போங்க. கோர்ட்ல கேஸ் நடக்கும் போது நீங்க வரணும். அதே சமயம் விசாரணை சம்பந்தமா ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாலும் வரணும்..."

"வரேன் ஸார்."

காவல் நிலையம். லண்டனில் இருந்த பிரகாஷின் நண்பன் பாலாஜியிடம் இன்ஸ்பெக்டர் ஆதவன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார்.

"ஆமா ஸார். அவன் என்னோட ஃப்ரெண்டு ஸார். பொதுவா நல்லவன் ஸார். ஆனா பெண் சபல புத்தியினால் கெட்டுப் போயிட்டான். இன்ட்டர்நெட்ல மேகலா கேஸ் பத்தி நானும் படிச்சேன். வினயாங்கற பொண்ணைக் காதலிக்கறதா சொல்லி அவளை அனுபவிச்சுட்டு கை கழுவுறதுதான் ஸார் அவனோட திட்டம். நான் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் திருந்தலை ஸார். இந்த மேகலா பத்தி எதுவுமே அவன் பேசினது இல்லை ஸார். மாமா பொண்ணுங்க இருக்காங்கன்னு தெரியும். அவ்வளவுதான். நான் லண்டன் கிளம்பறதுக்கு முன்னால கூட திருந்திடுன்னு சொல்லிட்டுத்தான் கிளம்பினேன். ஏதோ, சபலபுத்தி... நாளடைவில திருந்திடுவான்னு நினைச்சேன். ஆனா சொந்த மாமா பொண்ணை கற்பழிக்க முயற்சி பண்ணி அவ சாகறதுக்கும் காரணமாகி, அவ உடலை தீ வச்சு எரிக்கிற அளவுக்கு பிரகாஷ் இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ஸார்."

நீளமாக பேசி முடித்தான் பாலாஜி.


பிரகாஷின் கல்லூரிக்கு சென்று, அவனைப் பற்றி விசாரித்தாள் சுபிட்சா. 'உதவி செய்யற மனப்பான்மை உள்ளவன். ஆனால் பெண்களுடன் சுற்றுபவன். அந்த ஒரு கெட்ட குணம் இல்லாவிட்டால் நன்றாக முன்னேறக் கூடியவன்' என்று அவனது நண்பர்கள் கூறினார்கள்.

நொந்து போன உள்ளத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் சுபிட்சா.

53

ருத்துவமனை. ஆப்ரேஷனுக்குப் பிறகு சராசரி நினைவிற்கு வராமல் அரைகுறை மயக்கத்திலேயே இருந்த கமலம், அன்று முழுமையாக மயக்கம் தெளிந்தாள்.

"என்னப்பா சக்திவேல், மேகலா எங்கே?" அவள் கண் விழித்த பின் கேட்ட முதல் கேள்வியே மேகலா பற்றித்தான்.

'என்ன சொல்வது' என்று திகைத்துப் போனான் சக்திவேல். இதற்குள் கமலத்திற்கு ஊசி போடுவதற்காக உள்ளே வந்த நர்ஸ், சக்திவேலை வெளியே அனுப்பினாள். ஊசி போட்டு முடித்ததும் உள்ளே போன சக்திவேல், 'நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்துடறேன்மா' என்று கூற கமலம், "மேகலாவை கூட்டிட்டு வாப்பா" என்று சொன்னாள். மௌனமாய் வெளியேறினான் சக்திவேல்.

வீட்டில் டி.வி. பார்த்தே பொழுது போக்கின கமலத்திற்கு மருத்துவமனையில் வேறு பொழுது போக்கு ஏதுமின்றி கஷ்டமாக இருந்தது.

அங்கிருந்த வார்டு பையனைக் கூப்பிட்டாள்.

"தம்பி, யாராவது நியூஸ் பேப்பர் வச்சிருந்தா படிக்கறதுக்கு கேட்டு வாங்கிட்டு வாப்பா" என்றாள் கமலம்.

ஒரு கட்டு செய்தித்தாள்களை மற்ற அறையில் இருந்தவர்களிடம் கேட்டு வாங்கி வந்தான். கமலத்திடம் கொடுத்தான். அவன் கொடுத்த அத்தனை பேப்பர்களிலும் மேகலா கேஸ் பற்றிய முழு விபரங்களும், குற்றவாளியாக பிரகாஷை சந்தேகப்படுவதும் வெளியாகி இருந்தன. படிக்கும் பொழுதே அதிர்ச்சி அடைந்த கமலம், அதைப் படித்து முடிக்கும் பொழுது அவளே முடிந்து விட்டாள். ஆம்... அந்த அதிர்ச்சியான செய்திகளை அவளது இதயத்தால் தாங்க முடியாமல் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.

மேகலாவின் இழப்பு... பிரகாஷின் சுயரூபம் இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் இதய நோயால் பாதிக்கப்பட்ட கமலத்தால் தாங்கிக் கொள்ள முடியுமா?

கமலத்தின் மரணம் அவளது துன்பங்களில் இருந்து அவளுக்கு விடுதலை அளிப்பதாகவே அமைந்தது.

54

காவல் நிலையம். மீனா மாமி, முரளி மாமா இருவரும் மேகலா இறந்து போன அன்று பிரகாஷின் நடவடிக்கைகள் இருந்த விதத்தைப் பற்றி இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் எடுத்துக் கூறினார்கள். அங்கே வந்த சுபிட்சா, பிரகாஷின் டைரியையும், மேகலாவின் கடிதத்தையும் இன்ஸ்பெக்டர் ஆதவனிடம் ஒப்படைத்தாள். பிரகாஷ், சிறையில் அடைக்கப்பட்டான். பிரகாஷின் கைரேகை பதிவின் மூலமும், அவனது மொபைலில் இருந்த நம்பர்கள் மூலமும் தகுந்த தகவல்கள் கிடைத்தபடியால் பிரகாஷ்தான் குற்றவாளி என போலீஸாரால் நிரூபிக்கப்பட்டது. இனி தப்பிக்க வழி இல்லை என்றதும், பிரகாஷே வாக்குமூலம் கொடுத்தான். அவனது தவறுகளை ஒப்புக் கொண்டான். வழக்கு பதிவாகியது. குடும்பத்தினர் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.

மீனா மாமியும், முரளி மாமாவும் பிரகாஷை அடைத்து வைத்திருந்த ஜெயிலுக்கு சென்றனர்.

"நீ நன்னா இருப்பியாடா? நல்ல குடும்பத்துல பொறந்த உனக்கு ஏண்டா இந்த ஈன புத்தி? மேகலாவையும், உன்னைப் பெத்தவளையும் சாகடிச்சுட்ட. மேகலா நல்ல பொண்ணு. கல்யாணமாகி சந்தோஷமா வாழ்ந்திருந்த அந்தப் பொண்ணை அநியாயமா சாகடிச்சுட்டியே? அண்ணன் மனைவி அம்மாவுக்கு சமம்டா. அவளையா பெண்டாளப் போனே?..த் தூ..." காறி உமிழ்ந்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் மீனா மாமி. மேகலாவின் ஆசைப்படி, கிரியை மணந்து கொள்ள முடிவு எடுத்தாள் சுபிட்சா. சக்திவேல்தான் கிரியின் அப்பா சொக்கலிங்கத்துடன் பேசி சுபிட்சாவின் படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசினான்.

அதன்படி திருமணம் நிச்சியக்கப்பட்டது. காலம் பறந்தது. குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் சுபிட்சா, கிரிதரன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குக் கிளம்பினாள் சுபிட்சா. முதுமை அடைந்துவிட்ட அப்பாவையும், மனைவியைப் பிரிந்து மாறாத சோக முகத்துடன் காணப்படும் சக்திவேலையும் பார்த்துக் கதறி அழுதாள்.

"சுபிட்சா... உங்க அக்கா ஆசைப்பட்டபடி கிரிக்கும் உனக்கும்  கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். இதுக்காகத்தான் இத்தனை நாள் நான் இங்கே காத்திருந்தேன். நான் என்னோட வேலையைப் பூனாவுக்கு மாற்றல் வாங்கிட்டேன். நான் பூனாவுக்கு போகப் போறேன். மேகலா இல்லாத இந்த வீட்ல இனி என்னால இருக்க முடியாது" கண்கள் கலங்க விடை பெற்றான் சக்திவேல்.

"எனக்கு மட்டும் இங்கே என்னம்மா இருக்கு? என் உயிருக்குயிரான தங்கச்சி கமலம் போய் சேர்ந்துட்டா. என் மகளும் போயிட்டா. நீ... நல்லபடியா ஒரு நல்ல குடும்பத்துக்கு மருமகளாயிட்டே. நான் சிவானந்த குருகுலத்துல போய் இருக்கப் போறேன்மா. பேரன், பேத்தி பொறந்த பிறகு எனக்கு கொண்டு வந்து காட்டு. நம்ப வீட்டை உனக்குத்தான் எழுதி வச்சிருக்கேன். இதுதான் என்னால செய்ய முடிஞ்சது" மூர்த்தியும் அழுதார். அவர் அழுவதைப் பார்த்து சுபிட்சாவும் அழுதாள். கிரி ஆறுதல் கூறினான். சுபிட்சாவிடம் விடை பெற்று சக்திவேலும், மூர்த்தியும் வெளியேறினார்கள். சுபிட்சா, கிரியுடன் புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள். கிரி, அவளை உயிருக்கும் மேலாக நேசித்தான்.

55

று வருடங்கள் உருண்டோடின. சொக்கலிங்கத்தின் மேல் தன் அப்பாவைப் போல பாசம் வைத்து, அவரை கவனித்துக் கொண்டாள் சுபிட்சா. அவரும், சுபிட்சா மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். சுபிட்சா, தன் அறிவுத்திறனால் லிங்கம் கல்வி நிறுவனங்களை மேலும் மேம்படுத்தினாள். குடும்பத்தையும் பேணிக் காத்து வந்தாள். குறிப்பிட்ட நாளில் மூர்த்தியையும், சக்திவேலையும் வரவழைத்தாள். கிரியின் பங்களாவில் உள்ள தன் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றாள். அங்கே மேகலாவின் புகைப்படமும், கமலத்தின் புகைப்படமும் மாட்டப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்த சக்திவேலும், மூர்த்தியும் கண்ணீர் வடித்தனர்.

"அம்மா... அம்மா..." குழந்தைகளின் குரல் கேட்டது.

"சக்திவேல் மச்சான். இது என் பொண்ணு. பேர் மேகலா. இது என் பையன். பேர் சக்திவேல்.  இன்னைக்கு இவங்களுக்கு பிறந்தநாள். அப்பாவுக்கு ஆறுமாசத்துக்கு ஒரு முறை குழந்தைகளை கூட்டிட்டுப் போய் காமிச்சுடுவேன். நீங்க இப்பத்தானே இவங்களை பார்க்கறீங்க. மேகலா, சக்திவேல்... இங்க வாங்கடா... இதோ பாருங்க. இது உங்க பெரியப்பா" சக்திவேலைக் காட்டினாள்.

சுபிட்சாவின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்த சக்திவேல், மகிழ்ச்சியடைந்தான். அவர்களை அள்ளி அணைத்துக் கொண்டான். அங்கே வந்த கிரியின் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டாள் சுபிட்சா. 'என் அக்கா கொடுத்த வாழ்க்கை' என்று கிரியின் தோளோடு சாய்ந்து கொண்டாள் சுபிட்சா.

தன் பெண்மையை வருணிடம் கொடுத்துவிட்ட உண்மையை மறைக்கவும், குடும்பத்தினரின் நிம்மதியைக் காக்கவும் மேகலா பட்ட பாடு? பிரகாஷிடமிருந்து சுபிட்சாவைக் காப்பாற்ற, அவள் செய்த தியாகம்!

குடும்பத்தினரின் நிம்மதியைக் காக்கவும், சந்தோஷத்தை நிலை நிறுத்தவும், மேகலா தியாகத் தீபமாகத் திகழ்ந்தாள். தீயவன் பிரகாஷால் அந்த தீபம் பெருந்தீயாக எரிந்து தீக்கிரையாகிப் போனது.

குடும்பத்தினரின் அமைதிக்காக அவள் மறைத்து வைத்த உண்மை எனும் பறவை வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக எத்தனை பாடுபட்டாள்!. அவள் பட்டபாடு வீண் போகாமல், பிரகாஷின் சுயரூபம் எனும் உண்மை மட்டுமே வெளிப்பட்டு சுபிட்சாவின் வாழ்வு, மேகலாவின் ஆசைப்படி கிரியுடன் இணைந்தது. ஆனந்தமயமான வாழ்வு மலர்ந்தது.

பிரகாஷைப் பற்றிய நிஜமுகத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்த மேகலா, அவளை அறியாமல் அவளையே பலி கொடுத்து, பிரகாஷின் பொய் முகத்தை வெளிச்சமிட்டுக்காட்டி விட்டாள். தங்கை சுபிட்சாவின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வைத்து, அவளது அம்மாவைப் போல அவளும் சுபிட்சாவிற்கு வானில் இருந்து வாழ்த்திக் கொண்டிருந்தாள்.

 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.