Logo

இன் திஸ் வேர்ல்ட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3858

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

இன் திஸ் வேர்ல்ட் - In This World

(ஐரோப்பிய திரைப்படம்)

 

2002ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஐரோப்பிய திரைப்படம் 'இன் திஸ் வேர்ல்ட்'.  உலகமெங்கும் இருக்கும் பத்திரிகையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட படமிது.  இதை வெறும் திரைப்படம் என்று கூறுவதை விட, திரைப்பட வடிவத்தில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் வின்டர் பாட்டம் (Michael Winterbottom). 

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் Golden Bear விருதை இப்படம் பெற்றது.

பாகிஸ்தானின் பெஷாவரில் (Peshawar) இருக்கும் அகதிகள் முகாமிலிருந்த இரு அகதிகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

படத்தின் கதை இதுதான்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அகதிகள் முகாமின் பெயர் 'Shamshatoo Refugee Camp'.  1979 இல் சோவியத் யூனியன் படையெடுப்பாலும், 2001 இல் அமெரிக்கா குண்டுகள் போட்டு, ஆஃப்கானிஸ்தானுக்குள் நுழைந்து போரில் ஈடுபட்டதாலும் உண்டான மோசமான விளைவுகளால் 53,000 அகதிகள் அந்த முகாமில் வந்து தங்கினர்.  பலவிதப்பட்ட பிரச்னைகள், சிரமங்கள், துயரக் கதைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த முகாமில் இருக்கும் ஒரு இளைஞன் இனாயத்.  அவனுடைய மருமகன் உறவு வரக் கூடிய சிறுவன் ஜமால்.  இருவருமே அகதிகள்தாம்.  ஆஃப்கானிஸ்தானில் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள்.  இரு பெரும் வல்லரசு நாடுகளின் படையெடுப்புகளால் நம்முடைய நிலைமை இந்த அளவிற்கு மிகவும் கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதே என்று தினமும் அவர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.  அந்த அவல வாழ்க்கையிலிருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதற்கான யோசனையில் இருவரும் ஈடுபட்டிருக்கின்றனர்.  அப்போது இனாயத்தின் தந்தை அவர்களை எப்படியும் லண்டனுக்கு அனுப்பி வைத்து விடுவது என்ற முடிவைத் தெரிவிக்கிறார்.  சாதாரணமாக மனதில் முடிவை எடுத்து விடலாம்.  லண்டனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு அகதி செல்வது என்பது நடைமுறையில் நடக்கக் கூடியதா?  சட்ட ரீதியாக சாத்தியமில்லாத ஒன்று அது.  பிறகு எப்படி அந்த இருவரும் லண்டனுக்குச் செல்ல முடியும்?  சட்ட விரோதமாகத்தான் போக முடியும்.

கள்ளக் கடத்தைலைத் தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்சகளின் மூலம் -- தவறான வழிகளைப் பின்பற்றித்தான் அவர்கள் நிச்சயம் அங்சு செல்ல முடியும்.  இனாயத், ஜமால் இருவரின் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது.  கள்ளக் கடத்தல்காரர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து அவர்களை எப்படியாவது பாகிஸ்தான் அகதிகள் முகாமிலிருந்து கிளப்பிக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கிறார் இனாயத்தின் தந்தை.

பஸ், லாரி என்று பலவற்றிலும் அவர்கள் இருவரும் பயணிக்கிறார்கள்.  அப்படி பயணம் செய்யும்போது, எங்கே சோதனைச் சாலைகளில் பிடிபட்டு விடுவோமோ என்ற பயம் இருவருக்குமே இருக்கிறது.  மனம் துடிதுடிக்கத்தான் இருவருமே அமர்ந்திருக்கின்றனர்.  பெஷாவரிலிருந்து Quetta என்ற இடத்திற்குப் பயணமாகிறார்கள்.  பிறகு அங்கிருந்து ஈரானின் எல்லையில் இருக்கும் Taftan  என்ற இடத்திற்கு.  அங்குதான் அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது.  அவர்கள் பயணம் செய்யும் பேருந்திற்குள் சோதனை அதிகாரிகள் ஏறுகிறார்கள்.  ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்க்கும் அவர்கள் அவ்விருவரிடமும் வந்து 'நீங்கள் இருவரும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களா?' என்று கேட்கின்றனர்.  அதற்கு அவர்கள் 'இல்லை.... நாங்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்' என்று கூறுகிறார்கள்.  'அதற்கான சான்றுகள் உங்களிடம் இருக்கின்றனவா?' என்று அவர்கள் கேட்க, 'எங்களிடம் எந்தச் சான்றுகளும் இல்லை.  ஆனால், நாங்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்தாம்' என்கின்றனர்.  அவர்களின் பேச்சில் அந்த அதிகாரிகளுக்கு நம்பிக்கை வரவில்லை.  அவர்களையே சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.  அவர்களை பேருந்திலிருந்து இறக்கி, சோதனைச் சாலைக்குக் கொண்டு செல்கின்றனர்.  அங்கு என்ன நடக்கும்?  அவர்களிடம் முறையான சான்றுகள் எதுவுமே கிடையாது என்பதுதான் நமக்குத் தெரியுமே!  ஆட்களை சட்ட விரோதமாக வேறு நாடுகளுக்கு கடத்தி விடும் மனிதர்களுக்குப் பணத்தைக் கொடுத்து பயணம் செய்தவர்கள்தானே அவர்கள்!  விளைவு -- சிறுவன் ஜமாலும், இனாயத்தும் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அதற்காக அவர்கள் அமைதியாக இருந்து விடுவார்களா என்ன?  இனாயத் தன் ஷுவிற்குள் மறைத்து வைத்திருந்த பணத்தை எடுத்து ஆட்களைக் கடத்தி அனுப்பி வைக்கும் ஏஜென்டிடம் தருகிறான்.  மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பிக்கிறது.  சென்ற முறை பேருந்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி பயணித்தது போல் இல்லாமல் பல்வேறு வகையான வாகனங்களிலும் அவர்கள் பயணிக்கின்றனர்.  ஒரு லாரியில் பழங்கள்  ஏற்றப்படுகின்னறன.  அதற்கு மத்தியில் ஒரு பெட்டியை வைத்து, அதற்குள்  அவர்களை மறைந்து கொள்ளச் சொல்கின்றனர்.  அவர்கள் அந்தப் பெட்டிக்குள் செல்ல, பழங்கள் ஏற்றப்படுகின்றன.  வெளியிலிருந்து பார்த்தால், லாரியில் பழங்கள் ஏற்றப்பட்டிருப்பது மட்டுமே தெரியும்.  உள்ளே ஆட்கள் ஏற்றப்பட்டிருப்பது தெரியாது.  அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நமக்கே மனதில் கலக்கம் உண்டாகும்.  இப்படியெல்லாம் மனிதர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கிறார்களா என்று நாம் நினைப்போம்.  காற்றே வராத அளவிற்கு இருக்கக் கூடிய ஒரு இறுக்கமான சூழ்நிலையில் நீண்ட தூரம் எவ்வளவோ கிலோ மீட்டர்கள் மலைகளின் மீதும், பாலைவனப் பகுதிகளிலும், வளைவுகளிலும், நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களிலும் பயணிப்பது என்றால் சாதாரண விஷயமா?  அவர்களின் அந்தப் பயணத்தைப் படத்தில் பார்த்த போது, அவர்களுடைய மனம் அடித்துக் கொண்டதோ என்னவோ, என் மனம் வேகமாக அடித்துக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.

அவர்கள் ஈரானின் டெஹ்ரானுக்குள் நுழைகிறார்கள்.  அங்கிருந்து 'Maku' என்ற இடத்திற்கு.  அங்கிருந்து கால் நடையாக ஒரு மலைப் பகுதியைக் கடந்தே, துர்க்கியை அடைகிறார்கள்.  இஸ்தான்புல் நகரத்தில் தங்களைப் போலவே வேறொரு நாட்டிற்குப் பயணிக்கும் ஒரு குடும்பத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.  ஒரு கணவன், அவனுடைய மனைவி, அவர்களுடைய கைக் குழந்தை...  அவர்களும் சட்ட விரோதமாக பயணம் செய்பவர்கள்தாம்.  அவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அழைத்துக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.  எந்த வாகனத்தில்?  படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, உண்மையிலேயே நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுவோம்.  ஒரு மிக நீளமான கன்டெய்னர் லாரியில் உள்ள ஒரு குழாய் போன்ற பகுதிக்குள் அவர்கள் அனைவரையும் அமரச் செய்து விட்டு, அதை வெளியே இறுக்கமாக இரும்புக் கம்பி கொண்டு மூடி விடுவார்கள்.  அதற்கு வெளியே கன்டெய்னரில் ஏற்றப்படும் சரக்குகள்.  காற்று என்பதே சிறிதும் நுழைய முடியாத ஒரு இடத்தில் ஐந்து பேரும் பல மணி நேரங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்வது என்பதை உங்களால் மனதில் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதா?  நினைக்கும்போது நம் இதயத் துடிப்பே நின்று விடுவதைப் போல நிச்சயம் நாம் உணர்வோம்.  ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல், அடைக்கப்பட்ட அந்த இடத்திற்குள் அந்த ஐந்து பேரும் அமர்ந்திருப்பார்கள்.  ஜமால், இனாயத்துடன் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டு வருவான்.  தங்களுக்குப் புதிதாக அறிமுகமான அந்த கணவனுடனும், மனைவியுடனும் மனம் திறந்து அவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள்.  அந்த இடத்திலிருந்து தப்பித்து வேறு நாட்டிற்குச் சென்று விட்டால் போதும் என்ற மன நிம்மதியுடன் அந்த கும்பல் இருப்பதை அவ்விருவரும் உணர்வார்கள்.  அந்த அழகான ஆண் குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் தங்களின் பல நாள் கவலைகளை முற்றிலும் மறப்பார்கள் ஜமாலும், இனாயத்தும்.


பயணம் பல மணி நேரங்கள் நீடித்துக் கொண்டிருக்கும்.  மலை, சமவெளி, பாலைவனம், மேடு, பள்ளம் என்று கன்டெய்னர் லாரி போய்க் கொண்டே இருக்கும்.  நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு, அது இத்தாலியை அடையும்.  கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படும் ஒரு 'ஷெட்'டிற்குள் அது நுழைந்து நிற்க, அதிலிருந்து சரக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கப்படும்.  இறுதியில் உள்ளே இருக்கும் மறைவிடம் திறக்கப்பட, உள்ளே....  இறந்த நிலையில் இனாயத், அந்த கணவன், அவனுடைய மனைவி... மயங்கிய நிலையில் ஜமால் சோர்வடைந்து படுத்திருக்கிறான்.  அவனைத் தட்டி எழுப்ப, திகைப்புடன் அவன் எழுந்திருக்கிறான்.  இனாயத், அந்த குடும்பத்தின் தலைவன், தலைவி ஆகியோரை அசைத்துப் பார்க்க, அவர்களிடம் எந்தவித அசைவும் இல்லை.  அவர்கள் எப்போதோ இறந்து விட்டனர்.  படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து தன்னுடைய அழகான தோற்றத்தால் நம் உள்ளங்களில் இடம் பிடித்த, துணிச்சலுடன் ஜமாலை அழைத்துக் கொண்டு சாகசப் பயணம் மேற்கொண்ட, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்ட இனாயத் இறுதி மூச்சை விட்டு விட்டான் என்பதை நினைக்கும்போது நமக்கே மனதில் கவலை உண்டாகத்தான் செய்யும்.  அதே நேரத்தில் -- இப்படிப்பட்ட இக்கட்டான பயணத்தில் உயிருடன் ஒரு மனிதன் இருந்தால்தான் ஆச்சரியம் என்பதையும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், தன் தந்தையும் தாயும் மரணத்தைத் தழுவியிருக்க, அவர்களின் அந்த செல்லப் பையன் உயிருடன் இருப்பான்!  கணவனும், மனைவியும் இறந்து விட்டார்கள் என்பதை அங்கு இருப்பவர்கள் தெரிந்து கொண்டு, அவர்களைப் புரட்டிப் போட, அவர்களுக்கு நடுவிலிருந்து குழந்தை நெளிவான் பாருங்கள்!  அந்த இடத்தில் நம்மையும் மீறி நமக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்ளும்.  பெரியவர்களே இறந்து போக, காற்றே புக முடியாத ஒரு இடத்தில் உயிருடன் ஒரு கைக் குழந்தை இருப்பது என்றால்....?  மனதில் நாம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது.  அங்குள்ள மனிதர்கள் ஆசையுடன் அந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும்போது, பாசத்துடன் அவனை நமக்கும் கொஞ்ச வேண்டும் போல தோன்றும்.  இனி அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன, அவனை வளர்க்கப் போவது யார், எந்தவித கவலையும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொள்ளப் போவது யார்?  அவன் எப்படி வளர்வான்?  என்னவாக ஆவான்?  -- இந்த அத்தனை கேள்விகளும் அப்போது நம் மனங்களில் அடுத்தடுத்து எழும்.  காலம்தான் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும்.

இப்போது நம்முடைய ஜமாலின் விஷயத்திற்கு வருவோம்.  திகைப்படைந்து எழுந்த ஜமால் தன்னைச் சுற்றிலும் இறந்து கிடப்பவர்களைப் பார்ப்பான்.  இனாயத்தை அசைத்துப் பார்ப்பான்.  மூக்கில் கையை வைத்துப் பார்ப்பான்.  மூச்சு வரவில்லை என்பது தெரிந்ததும், தன் அன்பிற்குரிய இனாயத் இறந்து விட்டான் என்பதை அவன் உணர்ந்து கொள்வான்.  தாங்க முடியாத கவலை அவனுடைய முகத்தில் வந்து ஆக்கிரமிக்கும்.  தன்னுடைய ஒரு பாதியே தன்னை விட்டுப் போய் விட்டதைப் போல அவன் உணர்வான்.  தான் இந்த அகன்ற உலகில் அனாதையாக விடப்பட்டதைப் போன்ற ஒரு எண்ணம் அவனுக்குள் உண்டாகும்.

ஆனால், அதையே நினைத்துக் கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டிருக்க முடியுமா?  அந்த கன்டெய்னர் லாரியிலிருந்து வேகமாக குதித்து, உலகத்திலிருந்தே தப்பித்து ஒடுவதைப் போல ஜமால் புயலென பாய்ந்து ஒரு ஓட்டம் ஓடுவான் பாருங்கள்....!  மொத்த படத்திலேயே என் மனதில் இப்போதும் நின்று கொண்டிருக்கும் ஒரு அருமையான காட்சி அது.  நீண்ட தூரம் ஓடி.... ஓடி.... ஒரு இடத்தில் போய் நிற்பான், இனி தன் உயிருக்கு எந்த வித பாதிப்புமில்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அப்போதுதான் அவனுக்குள் உண்டாகியிருக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து, இத்தாலியிலேயே பல நாட்கள் வாழ்வான் ஜமால், பரபரப்பான இத்தாலியின் சாலைகளில் அவன் பல பொருட்களையும் விற்பனை செய்வான்.  அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பான்.  பொருட்களை விற்பனை செய்து நடந்து போய்க் கொண்டிருப்பதற்கு மத்தியில், ஒரு ரெஸ்ட்டாரெண்டில் இருந்த பெண்ணிடம் அவளுடைய பர்ஸைத் திருடிக் கொண்டு அவன் ஓடுவான்.  அவள் கலங்கிப் போய் அழுவாள்.  அதை அவன் பொருட்படுத்தினால் தானே!  நீண்ட தூரம் ஓடிய பிறகு, அநத் பர்ஸுக்குள் இருந்த பண நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பர்ஸை ஒரு புதருக்குள் வீசி எறிந்து விடுவான்.

அந்த பணத்தைக் கொண்டு பாரிஸுக்கு புகை வண்டியில் ஒரு டிக்கெட் எடுப்பான்.  அங்கிருந்து 'Sangatte Asylum Seekers Camp' என்ற அகதிகள் முகாமிற்குச் செல்வான்.  அங்கிருக்கும் பல அகதிகளையும் அவன் பார்க்கிறான்.  அவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையைப் பார்த்து, கவலைப்படுகிறான்.  அந்த இடத்தில் யூசெஃப் என்ற ஒரு புதிய நண்பன் அவனுக்கு அறிமுகமாகிறான்.  அவனுடன் சேர்ந்து அவன் ஒரு லாரியில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.  இறுதியாக.... தான் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டானோ, அந்த இடத்திற்கு போய் சேர்கிறான்.  ஆம்.... லண்டன் மண்ணில் அவன் கால் பதிக்கிறான்.  ஆரம்பத்திலிருந்து அவனுடன் சேர்ந்து பயணித்த இனாயத் அவனுடன் இப்போது இல்லை.  எனினும், அவன் ஒருவனாவது நினைத்த இலக்கை அடைந்தானே!  அந்த வகையில் சந்தோஷம்தான்...

தான் லண்டனை அடைந்ததும், ஜமால் செய்த முதல் வேலையே தன்னுடைய மாமாவிற்கு பொது தொலைபேசி மூலம் பேசியதுதான்.  'மாமா, நான் லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டேன் என்கிறான்.  அவனுடைய மாமா 'இனாயத் எங்கே?' என்று கேட்க, 'இனாயத் இந்த உலகத்தில் இல்லை' (not in this world) என்று பதில் கூறுவான் ஜமால்.  என்ன அருமையான பதில்!  ஒரு சில சொற்களில் எவ்வளவு பெரிய உண்மையை அந்தச் சிறுவன் கூறி விட்டான்!  இனி ஜமாலின் உலகம் லண்டன்தான்.... உயர்வோ, தாழ்வோ எதுவாக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையை இனிமேல் அவன் அங்கு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.....

இப்போது மீண்டும் பாகிஸ்தான் அகதிகள் முகாம்.  பெஷாவரில் அகதிகளும், குழந்தைகளும், வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் உயிர்களும் கவலைகளுடன் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.  குழந்தைகள் வறுமைக்கு மத்தியில் சிரிக்கின்றனர்...  ஆச்சரியப்படுகின்றனர்....  அழுகின்றனர்... ஏக்கத்துடன் நடந்து திரிகின்றனர்....  பேந்தப் பேந்த விழிக்கின்றனர்...  தங்களுடைய எதிர்காலம் என்னவென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

'In this World' திரைப்படம் அத்துடன் முடிகிறது.  டைட்டில் ஓடுகிறது.  அதில் ஒரு டைட்டில்: 'ஜமால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கிறான்.  அங்கு அது மறுக்கப்படுகிறது.  எனினும், பதினெட்டு வயது ஆரம்பமாகும் வரை, அவன் அங்கு இருக்கலாம் என்ற அனுமதி  மட்டும் கிடைக்கிறது'.


படத்தின் இயக்குநர் 'Michael Winterbottom' என்ற பெயர் போட்டவுடன், என்னை மறந்து நான் கைகளைத் தட்டினேன்.  உண்மையான உழைப்பிற்கு நாம் கொடுக்கும் பரிசு அதுவாகத்தான் இருக்க முடியும்!

படத்தில் இடம் பெறும் பல காட்சிகளைப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நடைபெறும் சம்பவமா அல்லது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளா என்ற சந்தேகம் நமக்கு உண்டாகும்.  இரண்டுமேதான்.  பல காட்சிகள் படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்குத் தெரியாமலே, ஒரு சிறிய டிஜிட்டல் கேமராவின் உதவியால் படமாக்கப்பட்டிருக்கின்றன.  ஜமால் உண்மையிலேயே ஒரு ஆஃப்கான் அகதியே.  அவனையும், இனாயத்தையும் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் ஈரானியர் உண்மையிலேயே ஈரானிய போலீஸ்காரரே. இனாயத்தாக நடித்த இளைஞர் சந்தையில் வர்த்தகம் செய்பவர்.  அவர் அழகாக இருந்ததால், இந்த நடிக்கும் வாய்ப்பு. பல இடங்களில் பொய் சொல்லித்தான் படப்பிடிப்பையே அனுமதி வாங்கி நடத்தியிருக்கிறார்கள்.

இதில் சந்தோஷமும், ஆச்சரியமும் பட வேண்டிய விஷயம் -- பதினெட்டு வயது வரைதான் லண்டனில் இருக்க முடியும் என்று அனுமதிக்கப்பட்ட ஜமால், தென் கிழக்கு லண்டனில் இப்போதும் ஒரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  படத்தில் 'நடித்ததற்காக' கிடைத்த பணத்தில் இனாயத் ஒரு லாரியை விலைக்கு வாங்கி, காபுலுக்கும் பெஷாவருக்குமிடையே சரக்குகள் ஏற்றி அனுப்பும் வர்த்தகத்தில் இப்போது ஈடுபட்டிருக்கிறான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.