Logo

டிபார்ச்சர்ஸ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4181
Departures

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

டிபார்ச்சர்ஸ் - Departures

(ஜப்பானிய திரைப்படம்)

2008ஆம் ஆண்டில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'Departures'. 130 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை இயக்கியவர் Yojiro Takita. ஜப்பானிய மொழியில் உருவாக்கப்பட்ட இப்படம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. அதே வருடத்தில் ஜப்பானில் நடைபெற்ற திரைப்பட விழாவில், Japan Academy Prize for picture of the year விருதையும் இப்படம் பெற்றது.

பொதுவாக எந்தத் திரைப் படத்திலும் பார்த்திராத ஒரு கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதுதான் இதன் சிறப்பம்சமே. ஜப்பானின் கிராமப் பகுதிகளில் தொன்று தொட்டு மக்களிடையே பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழமையான சடங்குதான் இப்படத்தின் மையக் கரு. வேறு எங்கும் இந்தச் சடங்கை நாம் பார்க்க முடியாது. இன்னும் சொல்லப் போனால்- ஜப்பானில் உள்ள நகரங்களில் வசிப்பவர்கள் கூட இந்தச் சடங்கினை வாழ்க்கையில் பின்பற்றுவது இல்லை.

'Departures' படத்தைச் சில வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது, நானே ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டேன். இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட கதையுடன் ஒரு படமா என்று அப்போது நான் நினைத்தேன்.

இறந்தவர்களை அப்படியே கொண்டு போய் புதைத்து விடுவதோ, எரித்து விடுவதோ என்பதுதான் நாம் பொதுவாக இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம். அப்படி இல்லாமல், மரணத்தைத் தழுவிய ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்களை அழகுபடுத்தி, அலங்கரித்து, அழகான தோற்றத்துடன் மயானத்திற்கு அனுப்பி வைப்பது என்ற செயல் ஜப்பானில் பல வருடங்களாகவே கிராமப் பகுதிகளில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு பிணங்களை அலங்கரித்து, வழியனுப்பி வைக்கும் ஒரு இளைஞனைச் சுற்றி பின்னப்பட்டதே இப்படம்.

'டிபார்ச்சர்ஸ்' படத்தின் கதை இதுதான்:

Daigo Kobayashi ஒரு அழகான தோற்றத்தைக் கொண்ட இளைஞன். அவன் ஒரு இசைக் குழுவில் இசைக் கலைஞனாக பணியாற்றுகிறான். Cell என்ற இசைக் கருவியை மிகவும் அருமையாக இசைக்கக் கூடியவன் அவன். கச்சேரிகளில் தன்னுடைய அபார திறமையை மக்களுக்கு முன்னால் காட்டிக் கொண்டிருந்த அவனுடைய இசைப் பயணத்தில் ஒரு பேரிடி விழுகிறது. அவன் இசைக் கலைஞனாக செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இசைக் குழு சிறிதும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் கலைக்கப்பட்டு விடுகிறது. அதை நம்பித்தான் அவனுடைய குடும்ப வாழ்க்கையே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென்று வேலை இல்லாத மனிதனாக அவன் ஆகிறான். என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. தன் இளம் மனைவி Mikaவுடன் டோக்கியோவை விட்டு புறப்படுகிறான். தான் பிறந்து, வளர்ந்த சிறிய ஊரான Sakataவிற்கு அவளுடன் கிளம்புகிறான். அங்குதான் அவனுடைய பூர்வீக வீடு இருக்கிறது. அவனுடைய தாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாள். அந்த வீடு இப்போது அவனுக்குத்தான்.

அந்த வீட்டிற்கு முன் பகுதியில் ஒரு காபி கடை இருந்தது. அதை பல வருடங்களுக்கு முன்பு டைகோவின் தந்தை நடத்திக் கொண்டிருந்தார். டைகோவிற்கு ஆறு வயது நடந்து கொண்டிருக்கும்போது, அவனுடைய தந்தை ஒரு பணிப்பெண்ணுடன் அந்த ஊரை விட்டே ஓடி விட்டார். தன் மனைவி, சிறுவனாக இருந்த மகன் டைகோ- இருவரைப் பற்றியும் அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை. அதற்குப் பிறகு அந்த தந்தை எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என்பதைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தன் அன்னையையும், தன்னையும் அனாதையாக விட்டு விட்டு, வேறொரு பெண்ணுடன் ஓடிச் சென்ற தன் தந்தையை மனதில் நினைத்தாலே, டைகோ கோபமும் வெறுப்பும் உள்ளவனாக ஆகிறான். அவரைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட ஒரு பாவச் செயல் என்று அவன் நினைக்கிறான். எனினும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு அவன் தந்தை அவனுக்குத் தந்த, ஏதோ குறிப்பாக எழுதப்பட்ட கற்களை அவன் வீசி எறியாமல், பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறான்.

வெறுமனே... எந்த வேலையும் செய்யாமல் ஒரு இளைஞன் எப்படி இருக்க முடியும்? தனக்கேற்ற வேலை ஏதாவது கிடைக்காதா என்று டைகோ முயற்சி செய்து பார்க்கிறான். அப்போது அவன் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறான். ஒரு வேலைக்கான விளம்பரம் அது. 'வழியனுப்பி வைப்பதற்கு உதவியாளர் வேலை' என்று போடப்பட்டிருக்கிறது. அவன் அந்த வேலைக்காக, அதில் போடப்பட்டிருந்த அலுவலகத்தின் முகவரிக்குச் செல்கிறான். ஆட்களை வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ அனுப்பி வைக்கும் 'ட்ராவலிங் ஏஜென்ஸி' என்று அவன் நினைத்துச் செல்கிறான்.


அங்கு போன பிறகுதான், அவனுக்கே தெரிகிறது- அது ஒரு சுற்றுலா நிறுவனம் அல்ல என்ற விஷயமே. இறந்து போன உடல்களை அழகுபடுத்தி, அலங்காரங்கள் செய்து பெட்டிக்குள் வைத்து இடுகாட்டிற்கு 'சந்தோஷமாக வழியனுப்பி வைக்கக் கூடிய' சடங்குகளைச் செய்யக் கூடிய நிறுவனம் அது என்பதை அவன் தெரிந்து கொள்கிறான். அவனுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 'இப்படி ஒரு வேலையைத் தான் செய்ய வேண்டுமா?' என்று அவன் நினைக்கிறான், 'இசைக் கலைஞனாக மேடைகளில் திறமை காட்டிக் கொண்டிருந்த தன்னுடைய விரல்கள், இறந்த பிணங்களுக்கு பூக்களையும் நகைகளையும் வைத்து அலங்காரம் செய்வதா?' என்று வெறுப்புடன் நினைத்து, மனதிற்குள் ஒரே குழப்பத்துடன் அமர்ந்து இருக்கிறான். ஆனால், அந்த இடத்திலேயே அவனுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டு விடுகிறது. வேலை இல்லாமல் இருந்தவனுக்கு, வேலையைச் செய்வதற்கு முன்பே முன் பணம் கிடைத்தது ஒரு வகையில் சந்தோஷமாகக் கூட இருக்கிறது. தன்னுடைய புதிய முதலாளியான Sasakiயிடமிருந்து அந்த வேலைகளை அவன் கற்றுக் கொள்கிறான்.

ஆரம்பத்தில் வெறுப்புடனும், கவலையுடனும் இருந்த அவன் அந்த வேலையை காலப் போக்கில் மிகுந்த விருப்பத்துடன் செய்ய ஆரம்பிக்கிறான்.

ஏதோ பணத்திற்காக வேலை செய்தோம் என்றில்லாமல், அவன் முழுமையான அர்ப்பணிப்புடன் அந்த வேலையைச் செய்கிறான். அந்த வேலையில் ஈடுபடும்போது, ஒரு நாள் அவனுக்கு ஒரு புதிய அனுபவம். ஒரு பெண் இறந்து வீட்டில் அனாதையாக கிடக்கிறாள். அவள் இறந்ததை இரண்டு வாரங்களாக யாரும் பார்க்கவில்லை. அவன் அந்த இறந்த பிணத்திற்கு அலங்காரங்கள் செய்கிறான். மணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்வதைப் போல, அலங்கரிக்கிறான். அனைத்தும் முடிந்து, பேருந்தில் திரும்பி வருகிறான். அவனிடமிருந்து வரும் அருவருக்கத்தக்க வாசனையை முகர்ந்து, பேருந்தில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாக அவனைப் பார்த்து முகத்தைச் சுளிக்கிறார்கள். அவனை அவர்கள் அனைவரும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவன் உடலிலிருந்து ஏன் அப்படியொரு 'பிண வாடை' வருகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தன் உடம்பிலிருந்து வரும் வாசனையை அகற்றுவதற்காக, அவன் ஒரு பொது குளியலறைக்குச் செல்கிறான். அந்த பொது குளியலறையில் சிறுவனாக இருந்தபோது, அவன் எத்தனையோ முறைகள் குளித்திருக்கிறான். அந்த குளியலறையின் உரிமையாளர் Tsuyako Yamashita என்ற பெண். அவளுடைய மகன், இளம் வயதில் டைகோவுடன் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வகுப்பில் படித்தவன்.

தான் என்ன வேலை பார்க்கிறோம் என்பதை அவன் தன் மனைவி 'மிகா'விடம் இதுவரை கூறவில்லை. நவ நாகரீகமான அந்த இளம் பெண், 'பிணத்தை அலங்கரிக்கும் வேலைகளை' செய்யக் கூடியவன் தன் கணவன் என்ற உண்மை தெரிந்தால், எங்கே வெறுத்து ஒதுக்கி, வீசி எறிந்து விடுவாளோ என்று அவன் தன் மனதில் நினைக்கிறான். அதனால், எந்த காரணத்தைக் கொண்டும், தான் பார்க்கும்  வேலை அவளுக்குச் சிறிது கூட தெரிந்து விடக் கூடாது என்பதில் அவன் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கிறான்.

ஆரம்பத்தில் தன்னுடைய வேலையைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த டைகோ, நாட்கள் செல்லச் செல்ல, தன் வேலைகளில் ஏராளமான அனுபவங்களைப் பெற்ற மனிதனாக ஆகிறான். எந்த வீட்டில் சாவு நடந்தாலும், அடுத்த நிமிடம் அவனைத்தான் தேடுகிறார்கள்.

பிணத்தை அலங்கரிப்பதில் அவன் மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞனாக ஆகிறான். ஏராளமான பிணங்களுக்கு அவன் அழகுபடுத்தும் கலைஞனாக பணி புரிகிறான். அதில் முழுமையான நிபுணத்துவம் பெற்றவனாக ஆகிறான். முழுமையான அர்ப்பணிப்புடன் அவன் வேலை செய்வதைப் பார்க்கும்போது, நமக்கே அவன் மீது ஒரு அளவற்ற அன்பும், ஈடுபாடும் உண்டாகிறது. இறந்தவர்களின் வீட்டில் இருப்பவர்கள், தங்களின் இழப்பினை மறந்து, அவனுடைய திறமையைப் பார்த்து பாராட்டும்போது, அவனுக்கு மனதில் சந்தோஷம் உண்டாகிறது. தங்களின் இறந்த உறவினர் மிகவும் அழகான தோற்றத்துடன், மயானத்திற்குச் செல்வதைப் பார்த்து, அவர்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியைப் பார்த்து அவனுக்கு மனதில் இனம் புரியாத பெருமிதம் உண்டாகிறது.

இதற்கிடையில் அவன் என்ன வேலை பார்க்கிறான் என்ற விஷயம் அவனுடைய மனைவி Mikaவிற்குத் தெரிந்து விடுகிறது. இறந்த ஒரு பிணத்திற்கு தன் தணவன் Daigo, மணிக் கணக்கில் அலங்காரங்கள் செய்து கொண்டிருப்பதை ஒரு டி.வி.டி. மூலம் அவள் தெரிந்து கொள்கிறாள். தன் கணவனைப் பார்த்து 'உடனடியாக அந்த பாழாய்ப் போன வேலையை விட்டொழியுங்கள்' என்று அவள் கூறுகிறாள். பலரையும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் தன் வேலையை விடுவதற்கு அவன் மறுத்து விடுகிறான்.  விளைவு- மிகா அவனிடமிருந்து கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். டோக்யோவிலிருக்கும் தன் பெற்றோரிடம் அவள் சென்று விடுகிறாள். தன் மனைவி தன்னை தனியாக விட்டு விட்டு, புறப்பட்டுச் செல்கிறாளே என்று மனதில் கவலைப்பட்டு கண்ணீர் விடுகிறான் டைகோ. அதற்காக தான் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து, இழப்பில் இருக்கும் பலரையும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் 'புனிதப் பணி'யை விட்டு விட முடியுமா என்ன? அவன் தன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய பால்ய கால நண்பனான Yamashita 'உன் மனைவியின் செயலைப் பார்த்து, கவலையில் மூழ்குவதை விட்டு விடு. இன்னொரு மரியாதைக்குரிய வேலை கிடைக்கும் வரையில் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்' என்று கூறுகிறான்.


மாதங்கள் கடந்தோடுகின்றன. ஒரு நாள் மிகா திரும்பி வருகிறாள். அவள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறாள். பிறக்கப் போகும் தங்களின் மகன் தலையை நிமிர்த்தி பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் நல்ல ஒரு வேலையில் வெகு சீக்கிரம் சேரும்படி தன் கணவன் டைகோவை அவள் கேட்டுக் கொள்கிறாள். அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பொது குளியலறையின் உரிமையாளரான திருமதி. Yamashita மரணமடைந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளும் மிகாவும் நெருக்கமான சினேகிதிகள். திருமதி. Yamashitaவின் குடும்பத்து உறுப்பினர்களுக்கு முன்பும், தன் மனைவி மிகாவிற்கு முன்பும் டைகோ தன் சடங்குகளைச் செய்கிறான்.

திருமதி. Yamashitaவின் இறந்த உடலைக் கொண்டு வந்து வீட்டிற்கு முன்னால் இருக்கச் செய்து, அதை மணிக்கணக்காக அலங்கரிக்கிறான் டைகோ. அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் அங்கு கூடியிருந்த அனைவரும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னையே முழுமையாக மறந்து விட்டு, நூறு சதவிகித அர்ப்பணிப்பு உணர்வுடன் பிணத்தை அழகுபடுத்தி, அலங்கரிக்கும் தன் கணவனையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மிகா.

அப்போதுதான் அவளுக்கே தெரிகிறது- தன் கணவனைப் பற்றி எவ்வளவு சாதாரணமாக தான் இதுவரை நினைத்திருக்கிறோம் என்று. 'எவ்வளவு அருமையான ஒரு கலைஞனை நாம் மிகவும் தரக் குறைவாக நினைத்து விட்டோம்!' என்று அவள் தன் மனதிற்குள் நினைக்கிறாள். யாரிடமும் இல்லாத ஒரு தனித் திறமை தன் கணவனிடம் இருப்பதை நினைத்து அவள் பெருமை கொள்கிறாள். உயிரற்ற ஒரு பிணத்தை ஒரு மணப் பெண்ணுக்கு நிகராக அலங்காரம் செய்து, இறுதி பயணத்திற்கு ஆயத்தம் செய்யும் தன் அருமைக் கணவனின் அபார திறமையைப் பார்த்து அவள் ஆச்சரியப்படுகிறாள். அங்கு இருந்த எல்லோரும் டைகோவின் கலைத் திறமையை மனம் திறந்து பாராட்டுகிறார்கள். இன்னொரு வேலையைத் தேடும்படி தன் கணவனிடம் இனிமேல் கூறக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானிக்கிறாள் மிகா.

ஒருநாள் இன்னொரு அதிர்ச்சியான செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. எங்கோ வேறொரு பெண்ணுடன் பல வருடங்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிப் போன டைகோவின் தந்தை இறந்த செய்திதான் அது. தன் மனைவி மிகாவுடன், டைகோ தன் தந்தையின் இறந்த உடலைப் பார்ப்பதற்காக அந்த இன்னொரு கிராமத்திற்குச் செல்கிறான். ஆரம்பத்தில் தன் தந்தையின் பிணத்தைப் பார்த்து அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த 'பிண அடக்கம் செய்யும் பணியாட்கள்' அந்த ஏழை மனிதனின் பிணத்தை மிகவும் அலட்சியப்படுத்துவதைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைகிறான். சிறு வயதில் தன்னையும், தன் அன்பு அன்னையையும் அனாதையாக தவிக்க விட்டு விட்டு ஓடிய மனிதர்தானே என்று ஆரம்பத்தில் வெறுப்புடன் நினைக்கும் அவன், தன் வழக்கமான கடமையைச் செய்வது என்று முடிவு செய்கிறான்.

அந்த பிணத்தை வெள்ளை நிற துணியைக் கொண்டு வந்து போர்த்துகிறான். பின்னர் அலங்கரிக்க ஆரம்பிக்கிறான். அப்போது அவனுடைய தந்தையின் உள்ளங்கையில் ஏதோ இருப்பதை அவன் பார்க்கிறான். என்ன என்று பார்த்தால் - சிறு வயதில் அவன் தன் தந்தையிடம் கொடுத்த 'ஏதோ எழுதப்பட்ட கல்.' அந்தச் சடங்குகளைச் செய்யச் செய்ய, தன் தந்தை சிறுவனாக இருந்த தன்னிடம் அன்பாக நடந்து கொண்டது, தன்னைக் கொஞ்சியது, தனக்கு கதைகள் கூறியது என்று ஒவ்வொன்றும் அவனுடைய ஞாபகத்தில் வருகின்றன. டைகோ மெதுவாக அந்த 'எழுதப்பட்ட கல்'லை தன் மனைவி மிகாவின் வீங்கிய வயிற்றின் மீது வைத்து தடவுகிறான்.

அத்துடன் படம் முடிவடைகிறது.

'எந்த வேலையும் தாழ்வானது அல்ல. அனைத்துமே உயர்ந்தவைதாம்... புனிதமானவைதாம். பலரையும் சந்தோஷம் கொள்ளச் செய்வதுதான்' என்ற அருமையான செய்தியைக் கூறும் இப்படத்தில் Daigoவாக நடித்திருக்கும் Masahiro Motoki, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். Mikaவாக நடித்திருக்கும் Ryoko Hirosueவும்தான்.

முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையைக் கையாண்டதற்காகவும், அதை விட்டு சிறிது கூட விலகாமல், படத்தை இயக்கியதற்காகவும் இயக்குநர் Yojiro Takitaவிற்கு - ஒரு பூச்செண்டு!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.