Logo

தி பெய்ன்டெட் வெய்ல்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4209
The Painted Veil

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

தி பெய்ன்டெட் வெய்ல் - The Painted Veil

(அமெரிக்க திரைப்படம்)

2006ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க திரைப்படம் 'The Painted Veil.' உலக புகழ் பெற்ற நாவலாசிரியர் W.Somerset Maugham இதே பெயரில் 1925ஆம் ஆண்டில் எழுதிய நாவலே இந்த திரைப்படத்திற்கு அடிப்படை.

ஏற்கெனவே இப்புதினம் இரண்டு தடவைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. 1934ஆம் ஆண்டில் முதல் தடவையாக தயாரிக்கப்பட்டது. Greta Garbo, Herbert Marshall இருவரும் இணைந்து நடித்தார்கள். அதற்குப் பிறகு 'The Seventh Sin' என்ற பெயரில் Bill Travers, Eleanor Parker சேர்ந்து நடிக்க, 1957ஆம் வருடம் இரண்டாவது முறையாக படமாக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக தயாரிக்கப்பட்ட 'The Painted Veil' திரைப்படத்தை இயக்கியவர் John Curran.

கதாநாயகன் - Edward Norton

கதாநாயகி - Naomi Watts.

125 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் ஆங்கிலம், சீனம், ஃப்ரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கொண்டது.

2006ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலும், 2007இல் ஐக்கிய நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டது.

சீனா, லண்டன் ஆகிய இடங்களில் நடைபெறும் கதை இது.

படம் சீனாவில் ஆரம்பிக்கிறது. நகரத்திலிருந்து விலகியிருக்கும் ஒரு வெட்டவெளியில் வால்டர் ஃபேன் என்ற டாக்டரும், அவரிடமிருந்து சற்று விலகி, Kitty Garstin என்ற இளம் பெண்ணும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்கும் இடத்திற்கு அருகில் சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நின்று கொண்டிருக்கும் இருவரும் எதையோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் அருகருகில் நிற்கலாம். ஆனால், அந்தப் பெண் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதன் மூலம் அவர்களுக்கிடையே ஏதோ பிரச்சினை இருக்கிறது என்ற விஷயம் படம் பார்ப்போரின் மனதிற்குள் புரிய வைக்கப்படுகிறது.

இப்போது சில சீனர்கள் இரு பல்லக்குகளுடன் அங்கு வருகிறார்கள். ஒரு பல்லக்கில் டாக்டர் வால்டர் ஏறிக் கொள்ள, இன்னொரு பல்லக்கில் அந்த பெண் ஏறிக் கொள்கிறாள். இருவரையும் சுமந்து கொண்டு அந்த சீனர்கள் நடக்கிறார்கள். பயணம் ஒற்றையடிப் பாதைகள், வயலின் வரப்புகள் என்று போய்க் கொண்டிருக்கிறது.

என்ன நினைத்தாரோ, வால்டர் பல்லக்கிலிருந்து இறங்கி, எல்லோருக்கும் முன்னால் கையில் கழியை வைத்துக் கொண்டு அமைதியாக நடக்கிறான். அவனுக்குப் பின்னால், அவன் இதுவரை ஏறி வந்த பல்லக்கு. ஆள் இல்லாமல், சீனர்கள் சுமக்க வந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னால் அந்தப் பெண் ஏறி அமர்ந்திருக்கும் பல்லகைச் சுமந்து வருகின்றனர்.

அந்த பெண் கிட்டி மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய மனம் லண்டனை நோக்கி பின்னோக்கி பயணிக்கிறது.

இப்போது லண்டனில் நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு காட்டப்படுகின்றன.

லண்டனில் ஒரு பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கிட்டி என்ற அழகு தேவதை காட்டப்படுகிறாள். அங்கிருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் அவள்.

அவள் ஒரு சுதந்திரப் பறவை. யாருடைய கட்டுப்பாட்டிற்கும் அடங்காதவள். தான் என்ன நினைக்கிறாளோ, அதன்படி வாழ வேண்டும் என்று நினைப்பவள். பார்ட்டிகளில் கலந்து கொண்டு, நடனமாடி அங்கு இருப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவள்.

இப்போது நடைபெறும் பார்ட்டியிலும் அதுதான் நடக்கிறது. Bacteriologist ஆன டாக்டர் வால்டர் ஃபேன் அங்கு வருகிறான். கிட்டியின் அழகான தோற்றத்தால் அவன் ஈர்க்கப்படுகிறான். தன்னுடன் நடனம் ஆட சம்மதமா என்று கேட்கிறான். அவள், 'சரி' என்று சொல்ல, அவளுடன் சேர்ந்து நடனமாடுகிறான். அதற்குப் பிறகு அவளுடைய நினைவாகவே அவன் இருக்கிறான்.

பிறகு ஒரு நாள் அவன் அவளுடைய வீட்டிற்கு வருகிறான். அவளையும் அழைத்துக் கொண்டு அவன் வெளியே செல்கிறான். தனியாக இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவளை தான் விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் கூறுகிறான். அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறாள்.

அவள் அவனுடன் சேர்ந்து ஆடியதைப் போலவே, வேறு எத்தனையோ இளைஞர்களுடன் பார்ட்டிகளில் கை கோர்த்து ஆடியிருக்கிறாள். அதற்காக அவர்களையெல்லாம் அவள் காதலித்து விட முடியுமா என்ன? ஒரு நிமிடம் ஆழமாக யோசிக்கிறாள். அவன் தன்னை விரும்புகிறான்... ஆனால் தனக்கு அவன் மீது அப்படியொன்றும் காதல் இல்லையே என்பதையும் சிந்தித்துப் பார்க்கிறாள். எனினும், 'சரி' என்று அவனுக்கு சம்மதிக்கிறாள். அதற்குக் காரணம்- கட்டுப்பாடுகள் நிறைந்த தன் வீட்டின் சூழலிருந்தும், தன் தாயின் கண்டிப்பிலிருந்தும் தப்பித்தது மாதிரி இருக்குமே என்ற யோசனை மனதில் உண்டானதுதான்.

இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர, தேன் நிலவுக்காக வெனிஸ் நகரத்திற்குச் செல்கிறார்கள். வால்டர் லண்டனுக்கு வந்திருந்தாலும், அவன் வேலை பார்ப்பது சீனாவில் இருக்கும் Shanghai நகரத்தில்தான். அவளையும் அழைத்துக் கொண்டு அவன் அங்கு செல்கிறான். அங்கு அவன் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு சோதனைக் கூடத்தில் தொற்று நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டராக வேலை பார்க்கிறான். அவனுடன் வாழும் வாழ்க்கையில் முழுமையான திருப்தியில்லாமல் இருக்கிறாள் கிட்டி. அவன் எப்போதும் ப்யூரட், பிப்பெட், சோதனைக் குழாய், மைக்ராஸ்கோப் என்று இருக்க, அவள் மனதளவில் வெறுமையை உணர்கிறாள். லண்டன் போன்ற மிகப் பெரிய நகரத்திலிருந்து வந்து, சீனாவிலிருக்கும் இப்படியொரு நகரத்தில் கூண்டுப் பறவையாக வாழ்வது என்பது, அவளுக்கு வெறுப்பைத் தரக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

இதற்கிடையில் ஒரு நாள் வால்டர், அந்த நகரத்தில் நடக்கும் 'Chinese Opera'  நிகழ்ச்சிக்கு அவளை அழைத்துச் செல்கிறான். அங்கு Shanghai நகரத்தில் British Vice Consul ஆக பணி புரியும் Charles Townsendஐயும், அவனுடைய மனைவி Dorothyஐயும் தன் மனைவி கிட்டிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான் வால்டர்.


மேடையில் ஒரு பெண் பலவித உணர்ச்சிகளையும் காட்டி, சீன மொழி பேசி நடித்துக் கொண்டிருக்கிறாள். சார்லஸூம், கிட்டியும் அருகருகில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த பெண் ஏன் கவலையாக இருக்கிறாள், ஏன் அழுகிறாள் என்ற சந்தேகங்களை கிட்டி கேட்க, எந்தவித சந்தோஷமும் இல்லாமல் அந்தப் பெண் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றும், தன்னை அந்த வெறுப்பு நிறைந்த சூழலிலிருந்து மாற்றுவதற்கு யாராவது காதல் உணர்வுடன் வர மாட்டார்களா என்று அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்றும் கூறுகிறான் சார்லஸ். அதற்குப் பிறகும் அவள் சந்தேகங்கள் கேட்க, 'எனக்கு சீன மொழியே தெரியாது' என்கிறான் சார்லஸ்- சிரித்துக் கொண்டே. அதைக் கேட்டு கிட்டியும் சிரிக்கிறாள். கிட்டி வாழ்க்கையில் முழு சந்தோஷத்துடன் இல்லை என்பதையும், எங்கிருந்தாவது தென்றல் வந்து தன் மீது வீசாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்ட அவன், அவளைக் கவர்வதற்காகவே இப்படி குள்ளநரித்தனத்துடன் நடந்திருக்கிறான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது படுக்கையறையில் சார்லஸுடன் சேர்ந்து படுத்திருக்கிறாள் கிட்டி. சார்லஸ் அவளை உடலுறவு கொள்கிறான். அது முடிகிற நேரத்தில், அந்த அறையின் கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து யாரோ 'திருப்புவது' தெரிகிறது. சார்லஸ் பதறிப் போய், தன்னுடைய பேன்ட்டையும், சட்டையையும் எடுத்து அணிகிறான். கிட்டியும் அதிர்ச்சியடைந்து, கதவையே வெறித்துப் பார்க்கிறாள். 'யாராக இருக்கும்? ' என்று சார்லஸ் கேட்க, 'வால்டராகத்தான் இருக்கும்' என்கிறாள் கிட்டி. கதவின் தாழ்ப்பாள் 'திருப்பப்படுவது' நின்று விடுகிறது. அதன் மூலம் வெளியிலிருந்து தாழ்ப்பாளைத் திருப்பிய நபர் அங்கிருந்து போய் விட்டார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பதைபதைத்துப் போன கிட்டி 'நம் விஷயம் வால்டருக்குத் தெரிந்திருக்குமோ?' என்கிறாள்- கவலை நிறைந்த குரலில். 'அப்படியே தெரிந்தாலும், அதனால் பிரச்சினை இல்லை. அவன் எதுவும் கூற மாட்டான்' என்று சர்வ சாதாரணமாக பதில் கூறுகிறான் சார்லஸ்.

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், திடீரென்று ஒருநாள் சீனாவிலிருக்கும் Mei-Tan-Fu என்ற தூரத்து கிராமத்திற்கு தான் செல்ல இருப்பதாக கூறுகிறான் டாக்டர் வால்டர். அந்த கிராமத்தில் காலரா என்ற தொற்று நோய் தீவிரமாக பரவியிருக்கிறது என்றும், ஆட்கள் ஏராளமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பரவிக் கொண்டிருக்கும் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக ஒரு மருத்துவர் அங்கு தேவைப்படுகிறார் என்றும், தான் அங்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறான் வால்டர். 'நீயும் என்னுடன் அங்கு வர வேண்டும்' என்று அவன் கிட்டியிடம் கூறுகிறான். அதற்கு 'நான் அங்கு வரவில்லை. எந்தவித வசதியும் இல்லாத அந்த குக்கிராமத்திற்குச் செல்வதில் எனக்கு விருப்பமே இல்லை' என்கிறாள் கிட்டி. 'நான் அங்கு செல்வதை சார்லஸ் கூட விரும்ப மாட்டார்' என்கிறாள் அவள்.

அதைக் கேட்டு கடுப்பின் உச்சிக்கே சென்று விடுகிறான் வால்டர். 'நான் உன்னை விவாகரத்து செய்து விட்டு, அந்த கிராமத்திற்குச் செல்வேன்' என்கிறான் அவன். 'என்ன காரணத்தைக் கூறி...? ' என்று அவள் கேட்க, அவன் 'சார்லஸுடன் நீ கள்ள உறவு வைத்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியும் அதைக் கூறி நான் விவாகரத்து கேட்பேன்' என்று கூறுகிறான். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உறைந்து போய் நிற்கிறாள் கிட்டி.

'இந்த விஷயத்தை எந்தவித பரபரப்பும் இல்லாமல் நாம் சரி செய்து கொள்வோம்' என்று கூறுகிறாள் கிட்டி. தன் மீது சார்லஸ் முழுமையான காதல் வைத்திருக்கிறான் என்றும், தன்னை அவன் திருமணம் செய்து கொள்ளக் கூட தயாராக இருப்பான் என்றும் அவள் கூறுகிறாள். 'அப்படியென்றால், Dorothyயின் நிலைமை?' என்று கேட்கிறான் வால்டர். 'எனக்காக அவர், அவளை விவாகரத்து செய்யக் கூட தயாராக இருப்பார். அந்த அளவிற்கு என் மீது அளவற்ற காதல் அவருக்கு' என்று பெருமை நிறைந்த குரலில் கூறுகிறாள் கிட்டி.

தொடர்ந்து கிட்டி, சார்லஸைச் சந்திக்கிறாள். வால்டர் தன்னை விவாகரத்து செய்ய தீர்மானித்திருக்கும் விஷயத்தை அவள் கூறுகிறாள். அதைக் கேட்டு சார்லஸ் அதிர்ச்சியடைகிறான். 'நாம் திருமணம் செய்து கொள்வோம். உங்களின் மனைவி டாரதியை விவாகரத்து செய்து விடுங்கள் அவளைவிட என் மீது தானே உங்களுக்கு அதிக காதல்!  டாரதியை விவாகரத்து செய்தால்தான், என்னை வால்டர் விவாகரத்து செய்வானாம்' என்று கூறுகிறாள் கிட்டி. அதற்கு சார்லஸ் மறுத்து விடுகிறான். 'டாரதி என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள். உனக்காக நான் எப்படி அவளை விவாகரத்து செய்ய முடியும்? நிச்சயம் முடியாது' என்று கூறுகிறான்- உறுதியான குரலில்.

எதிர்பார்த்த விஷயம் நடக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறாள் கிட்டி. பயணத்திற்கான ஆயத்தத்துடன் இருக்கும் வால்டரிடம் 'நானும் உங்களுடன் வருகிறேன்' என்று கூறுகிறாள். வேறு வழி?

பல்லக்கில் அமர்ந்திருக்கும் கிட்டி, இதுவரை நீங்கள் வாசித்த காட்சிகளை நினைத்துப் பார்க்கிறாள். லண்டனினும், ஷங்காயிலும் நடைபெற்ற ஒவ்வொரு காட்சியும் அவளுடைய மனத்திரையில் ஓடி முடிகிறது. அவள் பார்க்கிறாள். ஆட்கள் நடந்து கொண்டிருக்க, வெறும் பல்லக்கு ஒன்று தோளில் சுமந்து பயணித்துக் கொண்டிருக்க எல்லோருக்கும் முன்னால் சிறிய பாதையில் கழி ஒன்றைக் கையில் வைத்தவாறு அமைதியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறான் வால்டர். பத்து நாட்கள் புகை வண்டியில் தொடர்ந்து பயணம் செய்து முடித்து, இந்த பல்லக்கு பயணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்திற்கு நடந்துதான் செல்ல வேண்டும். வேறு ஊர்திகள் எதுவுமில்லை. கதை நடப்பது 1925ஆம் ஆண்டில் என்னும்போது, அப்படித்தானே இருக்கும்?

Mei-Tan-Fu என்ற அந்த கிராமம் ஒரு மலைப் பகுதியில் இருக்கிறது. வால்டரும், கிட்டியும் வசிக்கப் போகும் வீடு எங்கோ தூரத்தில், எல்லோரையும் விட்டு, விலகி இருக்கிறது. அவர்களுடைய வீட்டிற்குச் சற்று தூரத்தில் Waddington என்ற பிரிட்டிஷ் டெபிட்டி கமிஷனர் தன்னுடைய இளம் சீன மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வால்டர் தினமும் காலரா பரவியிருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகளைச் செய்வதற்காக கிளம்பி விடுவான். அப்போது கிட்டி மட்டும் தனியே வீட்டில் இருப்பாள். அந்த வீட்டில் ஒரு சமையல்கார பெண் மட்டும் இருப்பாள். அதைத் தவிர, அவளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சீன காவலாளி வீட்டிற்கு வெளியே எப்போதும் நின்றிருப்பான். அவள் வெளியே சென்றால், அவளைப் பின் பற்றி அவனும் நடந்து செல்வான். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல், வாழ்க்கையே வெறுத்துப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கிட்டி. வால்டருடன்கூட அவள் எதுவும் பேசுவதில்லை. அவனுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? சிறிதும் விருப்பமே இல்லாமல்தானே அவள் அந்த கிராமத்திற்கே வந்திருக்கிறாள்!


இதற்கிடையில் ஒரு நாள் கிட்டி, அந்த கிராமத்திலிருக்கும் ஒரு அனாதை இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த அனாதை இல்லத்தை சில ஃப்ரெஞ்ச் தாதியர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கிட்டி அங்கிருக்கும் அனாதைச் சிறார்களைப் பார்க்கிறாள். பார்த்ததும், அவர்கள் மீது அவளுக்கு இனம் புரியாத ஒரு இரக்கம் உண்டாகிறது. எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், அந்த அன்பு உள்ளங்களுக்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஃப்ரெஞ்ச் பெண்களை அவள் பார்க்கிறாள். அவர்கள் மீது அவளுக்கு உயர்ந்த மரியாதை உண்டாகிறது.

வீட்டில் தனியாகத்தானே இருக்கிறோம், அந்த அனாதை இல்லத்திலிருக்கும் சிறுவர்களுக்கு தானும் ஏதாவது சேவை செய்தால் என்ன என்று அவள் நினைக்கிறாள். அதை அவள் அங்குள்ள கன்யாஸ்திரீகளிடம் வெளியிடவும் செய்கிறாள். அங்குள்ள சிறுவர்களுக்கு இசை, பாடல் ஆகிய பயிற்சிகளை அவள் கற்றுத் தரலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்ட அவள், உடனடியாக அதில் இறங்கவும்  செய்கிறாள். அப்போது மதர் சுப்பீரியர் ஒரு தகவலை அவளிடம் கூறுகிறார். அவளுடைய கணவன் வால்டர் அங்குள்ள சிறுவர்களிடம், குறிப்பாக- சிறு குழந்தைகளிடம் அளவற்ற அன்பு வைத்திருப்பவன் என்பதே அது. தன் கணவன் எந்த அளவிற்கு அனாதையாக இருப்பவர்களிடமும், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அன்பும், அக்கறையும் உள்ளவனாக இருக்கிறான் என்பதை அவள் நினைத்துப் பார்க்கிறாள். ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் அனாதை இல்லத்தில் இருக்கும் தன் மனைவி கிட்டியைப் பார்க்கிறான் வால்டர். சிறுவர்களுக்கு இசை கற்றுத் தரும் அவளைப் பார்த்து, அவன் மிகவும் பெருமைப்படுகிறான். தான் இதுவரை நினைத்ததைப் போல, அவள் சுயநலம் கொண்டவள் அல்ல, அவளுக்குள்ளும் கனிவு நிறைந்த நல்ல மனம் இருக்கிறது என்பதை அவன் தெரிந்து கொள்கிறான்.

அவள் மீது அவன் வைத்திருந்த கோபமும், ஆத்திரமும் படிப்படியாக குறைகின்றன. தன் கணவன் மீது அந்த இளம் மனைவி வைத்திருந்த வெறுப்பு, பனியைப் போல மறைகிறது. இருவருக்குமிடையே முன்பு இல்லாமலிருந்த அன்பும், காதலும் மலர்கிறது. அந்த தொற்று நோய் பரவிக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கிடையே விரும்பத்தக்க ஒரு புரிதல் உண்டாகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள். சில நாட்களில் அவள் கர்ப்பவதி ஆகிறாள். ஆனால், ஒரு பிரச்சினை.. வயிற்றுக்குள்ளிருக்கும் அந்த குழந்தைக்கு தந்தை யார்? உண்மை தெரியாமல் கண்ணீர் விட்டு அழுகிறாள் கிட்டி. தன் குழப்பத்தை கணவன் வால்டரிடம் கூறவும் செய்கிறாள். 'அது ஒரு பிரச்சினையே இல்லை... எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். யார் குழந்தையாக இருந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்கிறான் அவன் தன் அன்பு மனைவியிடம். தனக்கு கிடைத்திருக்கும் அபூர்வ குணம் கொண்ட கணவனையே பெருமையுடன் பார்க்கிறாள் கிட்டி.

காலரா ஏராளமான உயிர்களைத் தட்டிப் பறித்து விடுகிறது. இதுவரை அந்த கிராமத்திற்கு நீர் தந்து கொண்டிருந்த நீர் நிலையை வால்டர் முழுமையாக மூடி விடும்படி கூறுகிறான். அதன் மூலம்தான் காலரா பரவுகிறது என்று அவன் கண்டு பிடித்ததே காரணம். ஆனால், அதற்கு கிராமத்தில் பலத்த எதிர்ப்பு உண்டாகிறது.

வெளியே சென்று, மூங்கில்களை வாங்கிக் கொண்டு வந்து, அதன் மூலம் குழாய்கள் அமைத்து கிராமத்திற்கு புதிதாக நீர் வரும் வழியை உண்டாக்குகிறான் வால்டர். அப்போது வேறொரு இடத்திலிருந்து, காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்திற்கு வருகிறார்கள். எங்கே அவர்கள் வந்து, அதன்மூலம் நீரில் நோய் கிருமிகள் பரவி விடுமோ என்று பயந்த வால்டர், அவர்கள் அனைவரையும். ஊருக்கு வெளியே ஒரு வெற்றிடத்தில் தங்க வைக்கிறான்.

அத்துடன் நிற்காமல், இரவு - பகல் பாராமல் அவன் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்கிறான். காலப் போக்கில், வால்டரே காலராவால் பாதிக்கப்படுகிறான். எழுந்து செயல்பட முடியாத நிலை அவனுக்கு உண்டாகிறது படுத்த படுக்கையாக அவன் ஆகிறான். அவனை அருகிலேயே இருந்து கவனமாக பார்த்துக் கொள்கிறாள் கிட்டி. எனினும், இயற்கை வால்டரை உயிருடன் இருக்க விடவில்லை. அவன் உயிரைத் தட்டிப் பறித்து விடுகிறது. நம் அன்பிற்குரிய நண்பன் வால்டர் நம்மை விட்டு பிரிந்து விடுகிறான். தன் கணவனின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், கண்ணீர் விட்டு அழுகிறாள் கிட்டி.

வால்டரின் மரணத்தைத் தொடர்ந்து, கர்ப்பமாக இருக்கும் கிட்டி சீனாவை விட்டு வெளியேறுகிறாள்.

மீண்டும் லண்டன். ஐந்து வருடங்கள் கடந்தோடி விட்டன. கிட்டி அருமையான ஆடைகளை அணிந்து, கடைத் தெருவில் தன் மகன் வால்டரின் கையைப் பிடித்தவாறு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு எதிரில் நடந்து வருகிறான் சார்லஸ். 'யார்? கிட்டியா? இது யார்?' என்று கேட்கிறான். 'இவன் என் மகன் வால்டர்' என்று கூறுகிறாள் கிட்டி. சிறுவனிடம் 'உனக்கு வயது என்ன?' என்று கேட்கிறான் சார்லஸ். அதற்கு பையன் 'ஐந்து வயது' என்கிறான். அவன் தனக்கு பிறந்தவன் என்பதை அவன் புரிந்து கொள்கிறான். அதை காட்டிக் கொள்ளாமல் 'கிட்டி, நான் மூன்று வாரங்கள் லண்டனில் இருப்பேன்' என்கிறான் சார்லஸ். அவளுடன் மீண்டும் படுக்கையில் பங்கு பெறலாம் என்ற நப்பாசை அவனுக்கு. அவன் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், 'குட்பை சார்லஸ்' என்று கூறி விட்டு, கிட்டி அங்கிருந்து கிளம்புகிறாள்.

சிறிது தூரம் சென்றதும், சிறுவன் வால்டர் தன் தாயிடம் 'யார் அவர்?' என்று கேட்கிறான். அதற்கு கிட்டி 'முக்கியமான நபர் இல்லை' என்று கூறுகிறாள். கூறி விட்டு, அவள் தன் அன்பு மகனுடன் நடந்து செல்கிறாள்.

படம் அத்துடன் முடிவடைகிறது.

'என்ன ஒரு அருமையான படத்தைப் பார்த்தோம்!' என்ற எண்ணம் நம் அனைவரின் மனங்களிலும் நிச்சயம் உண்டாகும்.

Edward Norton, Naomi Watts- இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

'Sometimes the greatest journey is the distance between two people' என்ற வாசகங்களுடன் ஆரம்பமாகும் இப்படத்தின் நடிப்புக் கலைஞர்கள், ஆஸ்கார் விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டார்கள் என்பது சிறப்புத் தகவல்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.