Logo

1983

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4453
1983

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

1983

(மலையாள திரைப்படம்)

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வந்த மலையாள திரைப்படம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் ஆப்ரிட் ஷைன் (Abrid Shine). இவர் ஒரு Fashion Photographer. படத்தின் கதையையும் இவரே எழுதியிருக்கிறார். திரைக்கதையை ஆப்ரிட் ஷைன்- பிபின் சந்திரன் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்.

மாறுபட்ட கதை, அருமையான திரைக்கதை - இவைதாம் படம் பார்ப்போரிடம் சிறிது கூட சோர்வே உண்டாகாத அளவிற்கு, படத்துடன் முழுமையாக ஒன்றச் செய்கின்றன.

பிரதீஷ் வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.

1983ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை நடைபெறும் கதை இது. 2013ஆம் ஆண்டில், படத்தின் கதாநாயகனாக ரமேஷன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.

கதை பின்னோக்கி செல்கிறது.

1983ஆம் ஆண்டு. அந்த வருடத்தில்தான் முதல் தடவையாக இந்தியா உலக கிரிக்கெட் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ்.

தூர்தர்ஷனில் உலக கிரிக்கெட் போட்டி காண்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களின் உணவு, உறக்கம் எல்லாவற்றையும் மறந்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து, வெறியுடன் கிரிக்கெட்டை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கல்கத்தாவிலிருந்த சச்சின் டெண்டுல்கருக்கு அப்போது வயது 10. அப்போதுதான் சச்சினுக்கு கிரிக்கெட்டின் மீது அளவற்ற ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. தானும் கிரிக்கெட் விளையாட வேண்டும், இதே போல உலக அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் சச்சினுக்கு அப்போதுதான் உண்டானது. இதை சச்சினே பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

சச்சினுக்கு மட்டுமல்ல- நம் படத்தின் கதாநாயகனான ரமேஷனுக்கும் அப்போது 10 வயது நடந்து கொண்டிருந்தது. சச்சினுக்கு மட்டும்தான் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் உண்டாக வேண்டுமா? கேரளத்தின் ஏதோ மூலையில் இருக்கும் குக்கிராமமான ப்ரம்மமங்களத்தில் பிறந்த ரமேஷனுக்கு அந்த ஆர்வம் உண்டாகக் கூடாதா என்ன? அவனுக்கும் உண்டானது.

விளைவு?

பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். தென்னை மட்டையையும் டென்னிஸ் பந்தையும் வைத்து அவர்கள் புறம்போக்கு இடங்களில் கிரிக்கெட் விளையாடினார்கள். பள்ளிக் கூடத்திற்குப் போகாத நேரங்களிலெல்லாம் கிரிக்கெட்தான். வேறு எதைப் பற்றியும் அவன் கவலைப்படுவதே இல்லை.

அவனுடைய மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது கிரிக்கெட் மட்டுமே.

சிறிது சிறிதாக சிறுவன் வளர்ந்து, இளைஞனாக ஆனான். அவனுடன் சேர்ந்து அவனுடைய கிரிக்கெட் ஆர்வமும். ஆர்வம் என்பதை விட. அவனுக்குள் கிரிக்கெட் என்பது ஒரு வெறியாகவே ஆகி விட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால்- அந்த கிராமமே 'கிரிக்கெட் கிறுக்கு' பிடித்த கிராமம் என்பதைப் போல ஆகி விட்டது. கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஒவ்வொருவரும் தங்களையே முற்றிலும் தொலைத்து விட்டு, கிரிக்கெட் விளையாட்டுடன் ஐக்கியமாகி திரிந்தார்கள்.

ரமேஷன் கிரிக்கெட் விளையாட்டில் அரசனாக இருந்தான். அவன் பேட்டிங் செய்தால், கிரிக்கெட் பந்து எங்கு போய் விழும் என்றே தெரியாது. அவன் களத்தில் இறங்கினாலே, பவுண்டரியும்... சிக்ஸரும்தான். அவனுடைய விளையாட்டு திறமையைப் பார்த்து ஊரே மூக்கில் விரல் வைத்து அதிசயமாக பார்த்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களே இரு அணிகளாக பிரிந்து விளையாடுவார்கள். சில நேரங்களில் அந்த கிராமத்திற்கும், பக்கத்து கிராமங்களில் இருக்கும் கிராமத்திற்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும். எந்த அணி விளையாடினாலும், ரமேஷன் எந்த அணியில் இருக்கிறானோ, அந்த அணிதான் வெற்றி பெறக் கூடிய அணி என்பதைக் கூறவும் வேண்டுமா?

ரமேஷனின் தந்தை அந்த ஊரில் ஒரு 'லேத் பட்டறை' வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் அவர் தன் குடும்பத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். தன் மகன் ரமேஷன் ஒழுங்காக படிக்காமல், எப்போதும் கிரிக்கெட் மட்டையும், பந்துமாக அலைந்து கொண்டிருப்பதில் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை. பல தடவைகள் அவர் தன் மகனை நேரில் அழைத்து, அதற்காக கண்டிப்பான வார்த்தைகளை பயன்படுத்தி அவனைத் திட்டவும் செய்கிறார். ஆனால், அவன் அவற்றையெல்லாம் பொருட்டாகவே நினைக்காமல், தன் மனம் என்ன கூறுகிறதோ, அந்த வழியிலேயே போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய தந்தைக்கு அவனை ஒரு எஞ்ஜினியராக எப்படியும் ஆக்கி விட வேண்டும் என்ற ஆசை. தன் மகனின் நடவடிக்கைகளைப் பார்த்து, தன்னுடைய எஞ்ஜீனியர் ஆசை எங்கே நிறைவேறாமற் போய் விடுமோ என்ற மன கவலை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டிருந்தது.

ரமேஷன் படிக்கும் அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி மஞ்சுளா. காண்போர் மனதைச் சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்த பருவச் சிட்டு அவள். சில நேரங்களில் அவர்கள் இருவர் மட்டும் தனியாக நடந்து கொண்டே தங்களை மறந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அந்த அழகு தேவதைக்கு என்ன காரணத்தாலோ, ரமேஷனின் மீது அளவற்ற ஈடுபாடு உண்டாகி விட்டிருந்தது.

12வது வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் ரமேஷன் மிகவும் குறைவான மதிப்பெண்கள் வாங்கி, தோல்வியைத் தழுவினான். மஞ்சுளா நல்ல மதிப்பெண்கள் வாங்கி, தேர்ச்சி பெற்றாள். ரமேஷன் தோல்வியடைந்ததற்குக் காரணம்- எப்போதும் கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் கையில் வைத்துக் கொண்டு அலைந்ததுதான் என்று மிகவும் கோபத்துடன் சத்தம் போட்டார் அவனுடைய தந்தை. தன் மகனை எஞ்ஜீனியராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று தான் கண்ட கனவு நடக்காமல் போய் விட்டதே என்ற மன கவலை அவருக்கு.

மஞ்சுளா பக்கத்திலுள்ள நகரத்திலிருக்கும் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிப்பதற்காகச் சென்றாள். ரமேஷன் என்ன செய்வான்? அவனுடைய படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, அவனை தன்னுடைய லேத் பட்டறையில் தன்னுடன் வேலை பார்க்கும்படி செய்தார் அவனின் தந்தை. அவரால் வேறு என்ன செய்ய முடியும்? கைலியை அணிந்து கொண்டு, மின்சார இணைப்பு கொடுப்பதும், சக்கரங்களை ஓட விடுவதும், எதையாவது வெல்டிங் செய்வதும், தீப் பொறிகளை பறக்கச் செய்வதும் ரமேஷனின் வேலையாக ஆனது.


அவன் அழுக்கடைந்த கைலி, சட்டையுடன் லேத் பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பான். அவன் மனதிற்குள் காதலித்த மஞ்சுளா, அழகு பெட்டகமென, ஒய்யாரமாக கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பாள். அந்த காட்சியை வேடிக்கை பார்க்க மட்டும்தானே அவனால் முடியும்?

அதற்காக அவன் சிறிதும் கவலைப்படவில்லை. படிப்பு நின்று விட்டால், வாழ்க்கையில் எல்லாமே நின்று போய் விட்டதாக ஆகி விடுமா என்ன? லேத் பட்டறையில் வேலை செய்த நேரம் போக, எஞ்சியிருக்கும் நேரங்களில் அவன் வழக்கம்போல தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினான். ரமேஷனின் பேட்டிங் திறமையையும், அள்ளி குவித்த பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பார்த்து இப்போதும் அந்த கிராமத்து இளைஞர்கள் ஆச்சரியப்படத்தான் செய்தார்கள். எங்கிருந்து அவனுக்கு இப்படியொரு திறமை வந்தது என்று அவர்கள் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், தேர்வில் தோல்வியடைந்து படிப்பிற்கு முற்றுப் புள்ளி விழுந்த பிறகும், அந்த கவலை சிறிதும் இல்லாமல் கிரிக்கெட்டே கதி என்று இருக்கும் தன் மகனின் செயலைப் பார்த்து கோபமும், ஆத்திரமும் அளவிற்கும் அதிகமாகவே வந்தது அவனுடைய தந்தைக்கு. 'இனிமேல் உன்னை கிரிக்கெட் மட்டையுடன் பார்த்தால்... அவ்வளவுதான்' என்று கண்டிப்புடன் மிரட்டிக் கூட பார்த்தார். அவர் பேசும் நிமிடத்தில் மட்டும், எதுவும் பேசாமல் அவன் மவுனமாக நின்றிருப்பான். அவர் அங்கிருந்து நகர்ந்ததும், கிரிக்கெட் மட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவான்.

அவனுடைய காதல்? அது எப்படி முடியும் என்று நமக்கு தெரியாதா? பணக்கார வீட்டுப் பெண்ணாகவும், கல்லூரி மாணவியாக நகரத்தில் படித்துக் கொண்டிருப்பவளுமான மஞ்சுளா, சாதாரண கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, அழுக்கு படிந்த கைலியுடன் லேத் பட்டறையில் 'வெல்டிங்' பண்ணிக் கொண்டிருக்கும் ரமேஷனை எப்படி திருமணம் செய்வாள்? அவளே விரும்பினாலும், அவளுடைய பெற்றோர் ஒத்துக் கொள்ள வேண்டாமா?

இறுதியில் என்னதான் நடந்தது?

மஞ்சுளா அமெரிக்காவில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு இந்திய இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். உயிருக்குயிராக தன் மனதிற்குள் வைத்து நேசித்த காதலியை இழந்த சோகத்துடன் லேத் பட்டறையில் வியர்வை வழிய நெருப்புப் பொறிகளை பறக்க விட்டவாறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷன்.

மஞ்சுளாவை வாழ்க்கையில் இழந்து விட்டோமே என்ற கவலை அவனை ஆட்கொள்ளாமல் இல்லை. அதற்காக அவளையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? தன் தந்தைக்குச் சொந்தமான லேத் பட்டறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட அவன், அந்த வேலையில் தன் ஆருயிர் காதலியை மறக்க முயற்சி செய்தான். தன் மகன் வேலையில் ஆழ்ந்து மூழ்கியிருப்பதைப் பார்த்த அவனுடைய தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார். அதே நேரத்தில் - அவர் பார்க்காத நேரத்தில் அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்.

காதல் தோல்வியால் எப்போதும் சோக முகத்துடன் காணப்பட்ட அவனுக்கு, அவனுடைய நண்பர்கள் ஆறுதல் கூறினர். 'உடனடியாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள். அப்போதுதான் உன்னுடைய மன கவலைகள் நீங்கும்' என்று அவர்கள் ரமேஷனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆரம்பத்தில் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. எனினும், விடாமல் நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, அவன் அதற்கு சம்மதித்தான்.

அதைத் தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சுசீலாவை அவன் திருமணம் செய்து கொண்டான். அவள் மிகவும் குறைவாக படித்தவள். பெரிய விஷயங்களெல்லாம் எதுவும் தெரியாது. திருமணம் நடந்த முதல் நாளன்று புகுந்த வீட்டிற்கு வந்த அவள், வீடு முழுவதும் மாட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் படங்களைப் பார்த்தாள். ரமேஷனிடம் 'யார் இவர்? சினிமா நடிகரா? நான் இவர் நடித்த படத்தைப் பார்த்ததே இல்லையே!' என்றாள்- அப்பாவித்தனமான குரலில். அதைக் கேட்டதும் உலகமே இடிந்து விட்டதைப் போல உணர்ந்தான் ரமேஷன். கிரிக்கெட்டே உயிர் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கணவனுக்கு, சச்சின் டெண்டுல்கரை யார் என்றே தெரியாத ஒரு மனைவி! வாழ்க்கையின் வினோத போக்கை என்னவென்று கூறுவது?

கிரிக்கெட்டைப் பற்றித்தான் சுசீலாவிற்கு எதுவுமே தெரியாமல் இருந்ததே தவிர, அவள் ஒரு அருமையான மனைவியாக இருந்தாள். நல்ல ஒரு குடும்பப் பெண்ணாக இருந்தாள். தன் கணவனை கவலையே இல்லாமல் பார்த்துக் கொண்டாள். லேத் பட்டறை வேலை, எஞ்சிய நேரங்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட்டு என்று ரமேஷனின் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தது. தன் மகனை எஞ்ஜீனியராக ஆக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலே போய் விட்டதே என்ற மனக் குறையுடன் இருக்கும் ரமேஷனின் தந்தை கிட்டத்தட்ட அவனிடம் பேசுவதே இல்லை என்பதே உண்மை.

மாதங்கள் கடந்தோடின. ரமேஷனுக்கும், சுசீலாவிற்கும் ஒரு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு கண்ணன் என்று அவர்கள் பெயர் வைத்தார்கள். கண்ணன் படிப்படியாக வளர்ந்து சிறுவனாக ஆனான். பள்ளிக் கூடத்தில் நன்கு படித்தான். அதே நேரத்தில்- விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் அவனுக்கு இருந்தது. அதுவும்... கிரிக்கெட்டில். தன் தந்தையிடம் இருந்த கிரிக்கெட் வாசனை அவனுக்கும் பரவி விட்டிருந்தது. ரமேஷனைப் போலவே அவனுடைய மகனும் கிரிக்கெட்டின் மீது உயிரையே வைத்திருந்தான். அதைப் பார்த்து ரமேஷன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தனக்கு தெரிந்த கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வித்தைகளையெல்லாம் அவன் தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

வீட்டின் முற்றத்தில் ரமேஷன் 'பவுலிங்' செய்ய மகன் கண்ணன் 'பேட்டிங்' செய்தான். ரமேஷன் 'பேட்டிங்' பண்ணும்போது, கண்ணன் 'பவுலிங்' பண்ணினான். அந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்த ரமேஷனின் தந்தைக்கு உண்டான கவலைக்கு அளவே இல்லை. தன் மகனின் வாழ்க்கைதான் குட்டிச்சுவராக போய் விட்டது, இப்போது தன் பேரனின் வாழ்க்கையும் அதே போல ஆகி விடும் போலிருக்கிறதே என்று அவர் வருத்தப்பட்டார். அதற்காக ரமேஷனும், கண்ணனும் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவார்களா என்ன? ரமேஷனின் தந்தை இல்லாத வேளைகளில் ரமேஷனும், அவனுடைய மகன் கண்ணனும் தங்களை மறந்து கிரிக்கெட்டில் மூழ்கி மகிழ்ந்தார்கள்.


இதற்கிடையில் அந்த கிராமத்தில், கிராமங்களுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக மாநில அளவில் முன்பு விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரரான விஜய் மேனன் வந்திருந்தார். கிராமத்து இளைஞர்கள் விளையாடிய கிரிக்கெட் விளையாட்டை அவர் பார்த்தார். தென்னை மட்டையையும், டென்னிஸ் பந்தையும் வைத்துக் கொண்டு ரமேஷன் ஆடிய அபாரமான ஆட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே அவர் அசந்து போனார். நாற்பது வயதை அடைந்திருக்கும் ஒரு கிராமத்து மனிதன் என்ன அருமையாக விளையாடுகிறான் என்று அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவன் குவித்த பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பார்த்து அவருக்கு வியப்புதான் உண்டானது. ஒரு குக்கிராமத்தில் இப்படியொரு நினைத்துப் பார்க்க முடியாத திறமைசாலியா என்று அவர் மூக்கில் விரல் வைத்து பார்த்தார்.

'யார் அந்த இளைஞர்? அவரை இங்கே வரச் சொல்லுங்கள்' என்றார் விஜய் மேனன். ரமேஷனைப் பற்றி அவர் ஆர்வத்துடன் விசாரித்தார். தன்னுடைய சோக கதையை அவன் மனம் திறந்து கூறினான். தன்னுடைய மகனையும், அவனிடம் இருக்கும் கிரிக்கெட் திறமை பற்றியும் விஜய் மேனனிடம் ரமேஷன் கூற மறக்கவில்லை. அதற்கு விஜய் மேனன் 'இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு ஒரு குக்கிராமத்திற்குள்ளேயே அடங்கிக் கிடந்தால் எப்படி? தென்னை மட்டையையும், டென்னிஸ் பந்தையும் வைத்து விளையாடுவதா கிரிக்கெட்? கிரிக்கெட் விளையாட்டிற்கென்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில், சர்வ தேச அளவில் என்று நிறைய போட்டிகள் இருக்கின்றன. ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரன் இப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி, வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும். கபில்தேவ், சுனில் கவாஸ்கர், அசாருத்தீன், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் இப்படி படிப்படியாக முன்னேறித்தான் உலகமெங்கும் தெரியக் கூடியவர்களாக ஆனார்கள். இப்படி ஒரு சிறிய கிராமத்திற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தால், எந்த காலத்திலும் பெரிய ஆளாக வரவே முடியாது' என்றார். 'சார்... நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், வர முடியாமல் போய் விட்டது. என் மகனையாவது அப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றான் ரமேஷன். நகரத்திலிருக்கும் தன்னுடைய 'ஸ்போர்ட்ஸ் அகாடெமி'க்கு அவனை அழைத்துக் கொண்டு வரும்படி ரமேஷனிடம் கூறினார் விஜய் மேனன்.

அடுத்த வாரமே அந்த அகாடெமிக்கு தன் மகனுடன் போய் நின்றான் ரமேஷன். சிறுவன் கண்ணனின் பேட்டிங்கைப் பார்த்த விஜய் மேனன், அவனை அங்கு சேர்த்துக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் பையனை அழைத்துக் கொண்டு வந்தால் போதும் என்றார். முதலில் சிறுவனுக்கு பேட், பந்து, தலைக் கவசம் ஆகியவை வாங்க வேண்டும். அதற்கு பணத்திற்கு எங்கே போவது?

ரமேஷனின் மனைவி சுசீலா, தன் கணவனின் கவலையைப் பார்த்து, தன்னுடைய நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். அதை வைத்து பேட், பந்து, தலைக் கவசம் ஆகியவற்றை வாங்கினான் ரமேஷன். கண்ணனின் கிரிக்கெட் பயிற்சி தொடர்ந்தது. சிறுவனுக்கு கிரிக்கெட்டின் பல உத்திகளையும் ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்தார் விஜய் மேனன்.

'பவுலிங்'கில் பலவித கில்லாடித்தனங்களையும் காட்டக் கூடிய ஒரு சிறுவன் வேண்டுமென்றே பந்தை கன்னா பின்னாவென்று எறிந்து, கண்ணனின் முழங்காலில் காயத்தை உண்டாக்கி, அவனைச் செயல்பட முடியாமல் ஆக்கினான். அந்த பையனின் 'பவுலிங்'கைப் பார்த்தாலே, பயந்தான் கண்ணன்.

ரமேஷனும், நடக்க முடியாமல் நொண்டிக் கொண்டே வந்த மகன் கண்ணனும் ஒரு பூங்காவிற்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே கிரிக்கெட் பயிற்சி நடப்பதாகவும், அதை பார்ப்பதற்கு 20 ரூபாய் கட்டணம் என்றும் போடப்பட்டிருந்தது. ரமேஷன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, தன் மகனுடன் உள்ளே சென்றான்.

உள்ளே ஒரு 'பவுலிங் மெஷின்' வைக்கப்பட்டிருந்தது. அது பந்தை ஜெட் வேகத்தில் எறிய எறிய, அங்கிருந்த சிறுவர்கள் சுறுசுறுப்பாக 'பேட்டிங்' செய்தார்கள் 'இப்படியொரு மெஷின் இருந்தால் அருமையாக கிரிக்கெட் பயிற்சி பெறலாமே!' என்று நினைத்த ரமேஷன், அதன் உரிமையாளரிடம் அதன் விலையைக் கேட்டான். அவர் அதன் விலை சில இலட்சங்கள் என்று கூறினார். அந்த பணத்தை ரமேஷன் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

தொங்கிய முகத்துடன் கிராமத்திற்கு வந்த ரமேஷன் லேத் பட்டறையில் இரவும், பகலும் என்னவோ வேலையில் ஈடுபட்டான். அங்கு துருப்பிடித்த நிலையில் கிடந்த இரும்பு சக்கரங்களை எடுத்து, நெருப்புப் பொறி பறக்க வைத்தான். வெல்டிங் செய்தான். என்னென்னவோ பண்ணிக் கொண்டிருந்தான். இரவில் வீட்டிற்குக் கூட வரவில்லை. இந்த அளவிற்கு தொழிலில் ஆழமாக தன் மகன் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, ரமேஷனின் தந்தை சந்தோஷப்பட்டு புன்னகைத்தார்.

பொழுது விடிந்தது. தான் புதிதாக உண்டாக்கிய கருவியை வீட்டிற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான் ரமேஷன். அதில் மூன்று சக்கரங்கள் சுழன்றன. ஒரு சக்கரம் மட்டும் சுற்றவே இல்லை. அது அவன் உருவாக்கிய 'பவுலிங் மெஷின்'. அந்தச் சக்கரமும் சுழன்றால் மட்டுமே, பவுலிங் செய்யப்படும் பந்துகள் பறக்கும். என்ன முயன்றும், அதை அவனால் சரி செய்யவே முடியவில்லை. கவலையுடன் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்த ரமேஷனின் தந்தை 'உனக்கு என்ன பிரச்சினை? ' என்று கேட்டார். அவன் கூறினான். உடனடியாக ஒரு 'ஸ்க்ரூ ட்ரைவரை' கொண்டு வரும்படி அவர் கூறினார். அதை வைத்து அவர் என்னென்னவோ பண்ணினார். சில நிமிடங்களில் அந்த கருவி இயங்க ஆரம்பித்தது.

அதிலிருந்து பந்துகள் பறந்தன. ரமேஷனும், அவனின் செல்ல மகன் கண்ணனும் ஜெட் வேகத்தில் 'பேட்டிங்' செய்தார்கள். அவர்கள் மட்டுமா? ரமேஷனின் தந்தை கூட பேட்டிங் செய்ய ஆரம்பித்தார் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் ரமேஷனின் தாயும், அவனுடைய மனைவியும். முழு குடும்பமும் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கியிருந்தது.

காலில் காயம் உண்டாகி விட்டதால், நகரத்திற்கு பையன் வராமற் போகவே, அவனைத் தேடி விஜய் மேனனே கிராமத்திற்கு வந்தார். ரமேஷன் செலவே இல்லாமல் பழைய இரும்புச் சக்கரங்களைக் கொண்டு உருவாக்கிய புதுமையான 'பவுலிங் மெஷி'னையும்,  அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பயிற்சியையும் அவர் பார்த்து, வியப்படைந்தார்.


மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியைப் பற்றி கூறிய அவர், ஒரே ஒரு சிறுவன்தான் தேர்வு செய்யப்படுவான் என்றும், அதை கூறுவதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறினார்.

நகரத்தில் மாவட்ட அளவில் தேர்வு செய்யும் போட்டி. ஆயிரக்கணக்கில் சிறுவர்களும், இளைஞர்களும் வந்திருந்தார்கள். கண்ணனுக்கு 10 வயதுதான் நடக்கிறது என்று கூறி, முதலில் உள்ளே அனுமதிக்கவே மறுத்தார்கள். விஜய் மேனன் பலமாக சிபாரிசு செய்ய, சிறுவன் அனுமதிக்கப்படுகிறான். அவனைக் காயப்படுத்திய சிறுவன்தான் இப்போது 'பவுலிங்' செய்கிறான். அவனைப் பார்த்ததும் நடுங்குகிறான் சிறுவன் கண்ணன். அதைப் புரிந்து கொண்ட விஜய் மேனன் 'அந்த பையனின் கண்களை நீ பார்க்காதே. அவன் 'பவுல்' செய்யும் பந்தை மட்டுமே பார்!' என்கிறார். கண்ணன் அதன்படி நடக்கிறான். பிறகென்ன? பந்து பறக்கிறது. கண்ணனின் அபாரமான பேட்டிங் திறமையைப் பார்த்து மைதானத்திலிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கின்றனர்.

மாவட்ட அளவில் ஒரே ஒரு சிறுவன்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு சிறுவன்...! வேறு யார்? நம் கண்ணான கண்ணன்தான்.

ரமேஷன், தன் மகனுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனின் கை, தன் மகன் கண்ணனின் தோள் மீது இருக்கிறது. அவர்களுக்கு முன்னால் மிக உயர்ந்த மலை.

ஒற்றையடிப் பாதையில் நடந்து போகும் அவர்கள் நிழல் வடிவத்தில் காட்டப்படுகிறார்கள். 'என் மகன் இப்போது தேர்வாகி விட்டான். அவன் உயர்ந்த இடத்திற்குச் செல்வதற்கு  இன்னும் பல மலைகளையும் தாண்ட வேண்டும். நிச்சயம் அவன் தாண்டுவான். அதற்கு இறுதி வரை அவனுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்' என்ற ரமேஷனின் குரல் படம் பார்க்கும் நம் மீது ஒலிக்கிறது.

'A film by சச்சின் டெண்டுல்கரின் பரம ரசிகனான ஆப்ரிட் ஷைன்' என்ற டைட்டில் கார்டு திரையில் ஓடுகிறது.

அத்துடன் படம் முடிவடைகிறது. நல்ல ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற மன நிறைவுடன் எழுந்து நிற்கிறோம் நாம்.

ரமேஷனாக நிவீன் பாலி ('நேரம்' படத்தின் கதாநாயகன்)

விஜய் மேனனாக - அனூப் மேனன்

மஞ்சுளாவாக - நிக்கி கல்ராணி

ரமேஷனின் தந்தையாக- ஜாய் மேத்யூ

சிறுவன் கண்ணனாக - பகத் ஆப்ரிட்

ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. படம் முடிந்த பிறகும், அவர்கள் நம் மனங்களில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் படத்தின் வெற்றியே!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.