
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டியர்ஸ் ஆஃப் காஸா - Tears of Gaza
(நார்வே திரைப்படம்)
போருக்கு எதிராக எடுக்கப்பட்ட நார்வே நாட்டு திரைப்படம் 'Tears of Gaza.' 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருக்கும் காஸா மீது மிகப் பெரிய ராணுவ தாக்குதலை நடத்தியது. உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு இடம் காஸா. அந்த போர் 22 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது நடைபெற்ற கடுமையான போரில் 20,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், தொழிற்சாலைகள். தோட்டங்கள் அழிந்தன. 1387 பேர் கொல்லப்பட்டனர். 773 பேர் உடல் ஊனமுற்றவர்களாக ஆனார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். அவர்களில் 257 பேர் 16 வயதிற்குக் கீழே உள்ளவர்கள். 5500 பேர் காயமுற்றார்கள். 700க்கும் மேற்பட்ட பெண்களும், 1800க்கும் மேற்பட்ட குழந்தைகளும் நீண்ட கால மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாக ஆனார்கள்.
அப்படிப்பட்ட மிகப் பெரிய பாதிப்புகளையும், அழிவையும் உண்டாக்கிய போரையும், இஸ்ரேல் மிருகத்தனமாக நடத்திய போரின் கொடுமைகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட படமே இது. இன்னும் சொல்லப் போனால்- இதை ஒரு 90 நிமிடங்கள் ஓடக் கூடிய டாக்குமெண்டரி என்று கூறுவதே பொருத்தம். அதற்கேற்றபடி வானத்திலிருந்து குண்டுகள் போடப்படுவது, ஏவுகணைகள் வீசப்படுவது ஆகியவற்றின் உண்மையான காட்சிகளையே படத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர், சிறுமிகளின் பார்வையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை இயக்கியவர் Vibeke Lokkeberg. போரைப் பற்றி பாலஸ்தீன மக்கள் பலரிடமும், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சிலரிடமும் விசாரித்து பெற்ற தகவல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
படம் முடிவடைந்த பிறகு, இதற்கு இஸ்ரேலில் மிகப் பெரிய எதிர்ப்பு உண்டானது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்ற பலமான விமர்சனம் எல்லா பக்கங்களிலும் எழுந்தது. இஸ்ரேலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமென்றும், உலகிலேயே மிகவும் கொடூரமான ராணுவ தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடிய நாடு அது என்ற எண்ணத்தை அந்தப் படம் மக்கள் மத்தியில் உண்டாக்குகிறது என்றும், அந்நாட்டைச் சேர்ந்த மக்களும், அரசியல் விமர்சகர்களும் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தார்கள். அவர்கள் என்னதான் கூறினாலும்- காஸா போரின்போது நடைபெற்ற சம்பவங்களின் உண்மையான காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்ததால், மற்ற நாடுகள் இஸ்ரேலியர்கள் கூறியதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இஸ்ரேல் எந்த அளவிற்கு பாலஸ்தீனத்தின் மீதும், அம்மக்களின் மீதும் கொடூரமான ராணுவ தாக்குதலை, சிறிது கூட மனிதாபிமானமே இல்லாமல், அரக்க குணத்துடன் நடத்தியிருக்கிறது என்பதை அப்படத்தின் மூலம் உலகமே உணர்ந்து கொண்டது என்பதுதான் உண்மை.
2011ஆம் ஆண்டில் இஸ்ரேல் மக்களுக்காக. Jerusalem Film Festivalஇல் இப்படம் திரையிடப்பட்டது.
Gaza Film Festivalஇல் இந்தப் படத்திற்கு Gold Award கிடைத்தது. அந்த பரிசு தொகை படத்தில் இடம் பெற்ற பாலஸ்தீன குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
Al Jazeera International Documentary Festival 2011ஆம் ஆண்டில் Dohaவில் நடைபெற்றது. அதில் 'Tears of Gaza' திரையிடப்பட்டு, சிறந்த திரைப்படத்திற்கான 'Human Rights Award' ஐப் பெற்றது.
அரேபிய மொழியிலும், ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க பாலஸ்தீனத்தின் காஸாவிலேயே படமாக்கப்பட்டது.
யாஹ்யா என்ற 12 வயது சிறுவன், ராஸ்மியா என்ற 11 வயது சிறுமி, அமிரா என்ற 14 வயது சிறுமி - இவர்கள் மூவரும் போரால் பாதிக்கப்பட்டவர்கள். தாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டோம் என்பதையும், அதன் மூலம் தாங்கள் எவ்வளவு பெரிய இழப்பிற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கண்ணீர் மல்க அவர்கள் கூறுகிறார்கள். போரின் கொடூரமான காட்சிகளுக்கு மத்தியில் இவர்கள் மூவரின் வாக்கு மூலங்கள், படத்தைப் பார்ப்போர் தெரிந்து கொள்வதற்காக வழங்கப்படுகின்றன.
கேமராவிற்கு முன்னால் மூன்று பேரும் தனித்தனியாக நின்று தங்களின் அவல கதையை கூறுகிறார்கள். அவர்களின் கண்ணீர் கதைகளை நமக்குக் காட்டுவதுதான் 'Tears of Gaza' படத்தின் நோக்கம்.
முதலில் 12 வயது சிறுவனான யாஹ்யா என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்.
'போரில் என் தந்தை கொல்லப்பட்டபோது, இந்த முழு உலகத்தையே இழந்து விட்டதைப் போல நான் உணர்ந்தேன். என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரையும் போரில் நான் இழந்து விட்டேன். உலகத்தில் நான் மட்டுமே தனியாக விடப்பட்ட உணர்வு எனக்கு உண்டானது.
என் தந்தை இறந்தவுடன், எங்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்தையுமே நாங்கள் இழந்து விட்டோம் என்ற எண்ணம்தான் எங்களுக்கு உண்டானது. நான் என் தந்தையை இழந்த பிறகு, ஒவ்வொரு நான் இரவிலும் நான் வாய் விட்டு அழுவேன். ஒவ்வொரு முறை நினைக்கும்போதும், எனக்கு அழுகை வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக- இரவு நேரங்களில் அவரை நினைக்கும் போது, அழுகை தானாகவே வந்து விடும். நான் திடீரென்று தூக்கத்திலிருந்து கண் விழித்து, அழ ஆரம்பிப்பேன். என் தந்தை உயிருடன் வரக் கூடாதா என்று அப்போது நினைப்பேன்.
நான் ஒரு டாக்டராக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதன் மூலம் இஸ்ரேலியர்களால் பாதிக்கப்பட்டு, காயமடைந்த மக்களுக்கு நான் சிகிச்சை செய்ய முடியும். யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு நான் சிகிச்சை செய்யலாம், மருந்துகள் தரலாம், அறுவை சிகிச்சை செய்யலாம். குண்டடி பட்டவர்கள், அதனால் காயமடைந்தவர்கள் ஆகியோருக்கு நான் டாக்டராக வந்து உதவ விரும்புகிறேன்.'
இந்த வார்த்தைகளை கேமராவிற்கு முன்பு நின்று கூறும் யாஹ்யா தன் தந்தையைப் பற்றியும், அவரின் மரணத்தைப் பற்றியும், அவரை நினைக்கும்போது அழுகை வருவதையும் கூறும்போது, தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவன் தேம்பித் தேம்பி அழுகிறான். அவன் மனம் உடைந்து அழுவதைப் பார்க்கும்போது, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம் கண்களிலும் கட்டாயம் கண்ணீர் அரும்பும்.
இப்போது போரின் கொடூரத்தால், பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியான ராஸ்மியாவின் குரல்.
'போரின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு தேடி நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான பள்ளிக் கூடத்தில் தஞ்சம் புகுந்தோம். ஆனால், அங்கும் இஸ்ரேலியர்கள் குண்டு போட்டார்கள். நாங்கள் இரவு முழுவதும் அங்கேயே இருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. எங்களுடைய மாமா, போரில் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது. இரவு வேளையில் என் தாத்தா, என் மாமாவை அழைத்து, பருகுவதற்கு நீர் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார். அவர் தன் இரு மகன்களுடன் வெளியே சென்றிருக்கிறார். அவர்கள் எல்லோருமே போரில் கொல்லப்பட்டு விட்டனர்.
வாழ்க்கை என்பது உண்மையிலேயே சிரமங்கள் நிறைந்தது... உண்மையிலேயே...'
இந்த வார்த்தைகளைக் கூறிய ராஸ்மியா அடக்க முடியாமல் அழுகிறாள். அதைப் பார்த்து, நம் மனமும் கனப்பது என்னவோ உண்மை.
14 வயது நிறைந்த அமிரா தன் சோக கதையை கூறுகிறாள். தலையில் துணி சுற்றியிருக்கும் அவள், ஊன்று கோல்களின் உதவியால்தான் நடக்கிறாள் போரின் கொடுமையால் அவளுக்கு அந்த பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
அமிராவின் கண்ணீர் கதை இதோ... அவளின் வார்த்தைகளிலேயே...
'நாங்கள் வீட்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். யார் என்பதைப் பார்ப்பதற்காக என் தந்தை எழுந்து சென்றார். சிறிது நேரத்தில் ஒரு வெடிச் சத்தம் பெரிதாக கேட்டது. நாங்கள் வாசலுக்கு ஓடினோம். எங்கள் தந்தையை எங்களால் பார்க்க முடியவில்லை. வீட்டு வாசலில் ஒரே புகை மயமாக இருந்தது. அதனால், எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை.
அதனால், நாங்கள் தெருவிற்குச் சென்று அவருக்காக குரல் கொடுத்தோம். அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. அதனால், திரும்பவும் வீட்டின் வாசற் பகுதிக்கே வந்து விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக புகை விலகியது. அப்போது கதவிற்கு அருகில் எங்களின் தந்தை கிடப்பதைப் பார்த்தோம். அவர் இறந்து விட்டதைப் போல கிடந்தார். அவருடைய தலையிலிருந்து குருதி வந்து கொண்டிருந்தது. நாங்கள் ஓலமிட்டோம்... சத்தமாக அழுதோம். அவரின் உடலைத் தொட்டு, அசைத்துப் பார்த்தோம். கண் விழித்து எழ மாட்டாரா என்று நினைத்தோம். ஆனால், அவர் எழ விரும்பவில்லை. என் சகோதரர்கள் என் தந்தைக்கு அருகிலேயே இருந்து விட்டார்கள்.
ஏதாவது உதவி கிடைக்காதா என்பதை எதிர் பார்த்து, நான் தெருவிற்கு ஓடினேன். அப்போது திடீரென்று ஒரு வெடிச் சத்தம் கேட்டது. நான் தரையில் விழுந்து விட்டேன் நான் எழுந்து நிற்பதற்காக பல முறைகள் முயன்றேன். ஆனால், என் கால்கள் குழைந்து கொண்டே இருந்தன.
என் சகோதரர்களும், சகோதரிகளும் என்னைப் பார்த்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றார்கள். அதற்குப் பிறகு, அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் என் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு, கிட்டத்தட்ட 15 நிமிடங்கள், அவரைத் தட்டி எழுப்புவதற்காக முயற்சி செய்து கொண்டிருதேன். அதற்குப் பிறகு நான் நம்பிக்கையை இழந்து விட்டேன். அதனால் மீண்டும் நான் வீட்டிற்குள் சென்று விட்டேன்.
நான் மாடிக்குச் சென்றேன். தரை முழுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. ஏவுகணைகளால் உண்டான பாதிப்பு அது. நான் என்னுடைய சுய உணர்வை இழந்து, சராசரி நிலைக்கு வருவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தேன். என்னுடைய சரீரத்திலிருந்து இரத்தம் வெளியே வந்து கொண்டிருந்ததால், மயக்கமடைவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் நான் கண் விழிக்கும்போது, என் கால் காயமுற்றிருப்பதையே என்னால் உணர முடியவில்லை. மாடி முழுவதும் இரத்தம்... அப்போதுதான் நான் என் கால்களைப் பார்த்தேன். சதை, எலும்பு அனைத்தும் வெளியே தெரிந்து கொண்டிருந்தன. அறுக்கப்பட்ட ஈரலைப் போல, பார்க்கும்போது அது காட்சியளித்தது. காயமுற்ற கால்களால் நான் எழுந்து நின்றேன். என்னால் நீர் பருக முடிந்தது. ஆனால், நான் அதை வீசி எறிந்து விட்டேன்.
அப்போது இஸ்ரேலியர்கள் நான் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேனோ, அந்த இடத்தை நோக்கி இன்னொரு ஏவுகணையை ஏவினார்கள். அது என்னைத் தாக்கவில்லை. நான் அங்கு அசைந்து கொண்டிருந்ததால், அவர்கள் ஏவுகணையை வீசியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்கள் இன்னொரு ஏவுகணையை என் தந்தையின் மீது ஏவினார்கள். அவர் துண்டு துண்டாக சிதறினார். நான் என் தந்தையை இறுதியாக பார்த்தது அப்போதுதான்.
ஒரு விமானம் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு என் மீது விளகொளியைச் செலுத்தியவாறு வானத்தில் நின்று கொண்டிருந்தது. நான் அசையாமல் நின்றேன். தொடர்ந்து நான் கோமா நிலைக்குச் சென்று விட்டேன். என் தந்தையைப் பற்றிய நினைவுகளில் நான் மூழ்கி விட்டேன். 'உனக்கு நான் இருக்கிறேன்டா, கண்ணு' என்று என் தந்தை கூறும் குரல் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான் எழுந்து, வாய் விட்டு அழுதேன். ஒவ்வொரு முறை எழும்போதும், நான் ஏன் எழுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
நான் என்னுடைய சகோதரர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எனக்காகவும், என் தந்தைக்காகவும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதற்காகச் சென்றார்கள். அவர்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்த இஸ்ரேலியர்கள், அவர்களைச் சுட்டு தரையில் சாய்த்து விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் போயிருக்கக் கூடாதா என்று நினைக்கிறேன்.
நான் நன்கு படித்து, ஒரு வக்கீலாக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்குத்தான்... ஏனென்றால், அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். எங்களுடைய அனைத்து நிலத்தையும் அவர்கள் திருடிக் கொண்டார்கள்.'
இதை கூறும்போது அமிரா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். தன் தந்தையைப் பற்றியும், சகோதரர்களைப் பற்றியும் கூறும்போது தன் அழுகையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம். அதுதான் உண்மை.
படத்தின் ஆரம்பத்திலேயே இந்தச் சிறார்கள் மூவரைப் பற்றியும் கூறி, அவர்களின் மூலம்தான் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தின் காஸா மீது உண்டாக்கிய, தாங்கிக் கொள்ள முடியாத தாக்குதல்களும், அதனால் உண்டான கொடுமைகளும், இழப்புகளும் படத்தில் கூறப்படப் போகின்றன என்பதை கோடிட்டுக் காட்டி விடுகிறார்கள்.
தொடர்ந்து காஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக் காட்சிகள் காட்டப்படுகின்றன. சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்... அலுவலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்... பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மத்தில் வானத்தில் அவ்வப்போது விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன... ஏவுகனைகள் வீசப்படுகின்றன... துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றன... நெருப்புப் பொறிகள் பறக்கின்றன... எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களெல்லாம் தங்களுக்கு நன்கு பழகிப் போனவை என்பதைப் போல அவர்களுடைய நடவடிக்கைகள் படத்தில் காட்டப்படுகின்றன.
எல்லோரும் சர்வ சாதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு ஏவுகணை பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தின் மீது விழுகிறது. அதைத் தொடர்ந்து அந்த முழு கட்டிடமும் நொறுங்கி விழுகிறது. எங்கு பார்த்தாலும் புகை மயம்... மரண ஓலம். இடிபாடுகளுக்கு மத்தியில் உயிரற்ற உடல்கள்...
இஸ்ரேலியர்கள் குண்டு வீசும்... ஏவுகணை ஏவும்... காட்சிகள் படம் முழுக்க காட்டப்படுகின்றன. பாலஸ்தீன மக்களின் துயரங்களை நம்மால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது.
படத்தைப் பார்க்கும்போதே 'இந்த இஸ்ரேலியர்களுக்கு வேறு வேலையே இல்லையா? சிறிதும் இரக்க குணமில்லாமல் இப்படியா கொடூர மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்? இப்படி ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொல்வதாலும், கட்டிடங்களை நொறுக்குவதாலும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாலும் அடையப் போகும் நன்மைதான் என்ன?' என்ற கேள்வி நம் மனங்களுக்குள் எழுந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. அந்த கேள்விகள் நியாயமான கேள்விகள். பதில் கூறப் போவது யார்?
படத்தின் இறுதி காட்சி...
கடற்கரைப் பகுதி. நீரையே பார்த்துக் கொண்டு யாஹ்யா, ராஸ்மியா இருவரும் அமைதியாக நின்றிருக்க, ஊன்று கோலுடன் அவர்களை நோக்கி கண்ணீர் மல்க வந்து கொண்டிருக்கிறாள் அமிரா.
அத்துடன் படம் முடிவடைகிறது. படம் முடிந்த பிறகும், படத்தில் பார்த்த போரின் கொடுமைகளும், யாஹ்யா, ராஸ்மியா, அமிரா என்ற அந்த கள்ளங்கபடமற்ற சிறார்களின் சோகம் நிறைந்த முகங்களும் என் மனதில் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் அத்தகைய உணர்வு உண்டாகும் என்பதை மட்டும் என்னால் சத்தியம் பண்ணி கூற முடியும்.