
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி ஒயிட் பலூன் - The White Balloon
(ஈரானிய திரைப்படம்)
'தி ஒயிட் பலூன் '- 1995ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம். பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 85 நிமிடங்கள் ஓடக் கூடியது.
இப்படத்தின் இயக்குநர் Jafar Panahi. அவர் இயக்கிய முதல் படமிது. படத்திற்கு திரைக்கதை எழுதியவர் புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான Abbas Kiarostami. அப்பாஸ் இயக்கிய 'Through the Olive Trees' என்ற படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜாஃபர் பனாஹி.
பல சர்வதேச பட விழாக்களிலும் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளைப் பெற்ற படம் இது. அதில் குறிப்பிடத்தக்கது 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற Cannes Film Festivalஇல் பெற்ற விருது, உலகமெங்கும் உள்ள பத்திரிகைகளால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட இப்படத்தை புகழ் பெற்ற 'The Guardian' பத்திரிகை 'உலக அளவில் 50 சிறந்த குடும்பக் கதை கொண்ட படங்களைப் பட்டியல் போட்டால், அதில் இந்தப் படமும் ஒன்று' என்று எழுதியதிலிருந்தே இப்படத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏழு வயது உள்ள ஒரு சிறுமியை மைய கதாபாத்திரமாக வைத்து ஜாஃபர் பனாஹி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு குழந்தை நட்சத்திரத்தை வைத்து படத்தை இயக்கிய துணிச்சலான செயலுக்காகவே அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
'தி ஒயிட் பலூன்' படத்தின் கதை இதுதான்:
ஈரானின் புது வருடம் பிறப்பதற்கு (மார்ச் 21) இன்னும் ஒன்றரை மணி நேரமே இருக்கிறது. படம் அந்த இரவு வேளையில்தான் ஆரம்பமாகிறது.
ஏழு வயது கொண்ட சிறுமியான Raziehவும், அவளுடைய தாயும் டெஹ்ரான் நகரத்தின் மார்க்கெட்டில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடை வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு கடையில் கண்ணாடி ஜாடிகளில் நீந்திக் கொண்டிருக்கும் Gold fishகளைப் பார்க்கிறாள் ரஸியே. அவர்களின் வீட்டில் வளர்ப்பு மீன்கள் தொட்டியில் இருக்கின்றன. ஆனால், அவை மிகவும் மெலிந்து போன நிலையில் இருக்கின்றன. அதனால், ஜாடியில் இருக்கும் அழகான தங்க மீன் ஒன்று தனக்கு வேண்டும் என்று தன்னுடைய தாயை நச்சரிக்கிறாள் ரஸியே. ஆனால், அதை வாங்கித் தருவதற்கு அவளுடைய அன்னை தயாராக இல்லை. அவள் மறுத்து விடுகிறாள்.
ரஸியேவும், அவளுடைய தாயும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வரும் வழியில் ஒரு திறந்த வெளியில் இரண்டு பாம்பு வித்தை காட்டும் மனிதர்கள் பாம்பை வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை சுற்றிலும் நின்று நிறைய ஆட்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக பல பொய்களையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர் அந்த இரு மனிதர்களும். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு விரும்புகிறாள் ரஸியே. 'இந்த மாதிரி இடங்களிலெல்லாம் நீ நிற்கக் கூடாது' என்று கண்டிப்பான குரலில் கூறி, தன் மகளை வலிய அழைத்துக் கொண்டு செல்கிறாள் ரஸியேவின் அன்னை.
இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். தான் கேட்ட தங்க மீனை வாங்கித் தரவில்லையே என்ற ஏமாற்றத்தில் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாள் ரஸியே. வீட்டிற்கு வந்த பிறகும் 'எனக்கு அந்த தங்க மீன் வேண்டும்' என்று இடைவிடாமல் தன் தாயை நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள் ரஸியே.
அப்போது அவளுடைய அண்ணன் அலி அவர்களுடைய தந்தைக்காக கடையிலிருந்து சோப் ஒன்றை வாங்கிக் கொண்டு வருகிறான். அவர்களுடைய தந்தை இப்போது நமக்கு காட்டப்படுகிறார். அவர் எந்தவித சுறுசுறுப்பும் இல்லாத, சோம்பேறித்தனமான மனிதர் என்பது அவரைப் பார்க்கும்போதே நமக்கு புரிந்து விடுகிறது. யாரிடமும் அதிகம் பேசிக் கொள்ளாமல், அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர் என்பதும் தெரிகிறது. குடும்பத்திற்கு அவ்வப்போது அமைதியற்ற சூழ்நிலையை உண்டாக்கக் கூடியவர் என்பதும் தெரிகிறது. அலியைப் பார்த்ததும் 'நான் சோப்பா வாங்கி வரச் சொன்னேன்? ஷாம்பு அல்லவா வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன்?' என்று கூறியவாறு சோப்பை அலியின் மீது வீசி எறிகிறார். தன் விதியை நொந்து கொண்டே, மீண்டும் ஷாம்பு வாங்குவதற்காக வெளியேறிச் செல்கிறான் அலி.
அவன் திரும்பி வந்தவுடன், தங்க மீன் வாங்கும் விஷயத்தில் தன் தாயிடம் எப்படியாவது கூறி உதவும்படி தன் அண்ணனிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள் ரஸியே. அதற்கு லஞ்சமாக அவனுக்கு ஒரு பலூனைத் தருவதாக அவள் கூறுகிறாள். '100 tomans கொடுத்தால், தங்க மீனை வாங்கி விடலாம்' என்கிறாள் அவள். அதற்கு அலி 'உனக்கு என்ன பைத்தியமா? அந்த 100 டொமான்களை வைத்து நான் இரண்டு திரைப்படங்களைப் பார்த்து விடுவேன்' என்று கூறுகிறான்.
இறுதியில் ரஸியேவின் விருப்பம் நிறைவேறுகிறது. அவளுடைய தாய் வீட்டில் இறுதியாக இருந்த 500 டொமான் நோட்டு ஒன்றை எடுத்து, ரஸியேவின் கையில் தருகிறாள். '100 டொமான்களுக்கு தங்க மீன் வாங்கி விட்டு, மீதி பணத்தைப் பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு வா' என்று கூறி, தன் மகள் ரஸியேவை அவள் அனுப்பி வைக்கிறாள்.
ரஸியேவிற்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சுதந்திரப் பறவையின் உற்சாகம் அவளுக்கு உண்டாகிறது. ஒரு கண்ணாடி ஜாடியைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு அவள் வெளியேறி நடக்கிறாள். அந்த கண்ணாடி ஜாடிக்குள் அவளின் தாய் தந்த அந்த 500 டொமான் நோட்டு இருக்கிறது. ஜாடிக்கு மூடி இல்லை. அதை கையில் வைத்துக் கொண்டு, தங்க மீனைச் சீக்கிரம் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் வேகமாக நடந்து செல்கிறாள் ரஸியே.
வழியில் அந்த பாம்பு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போதும் ஏராளமான ஆட்கள் சுற்றிலும் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஸியே அந்தக் கூட்டத்திற்கு முன்னால் போய் நிற்கிறாள். அவளையும், அவளுடைய கையிலிருக்கும் கண்ணாடி ஜாடிக்குள் இருக்கும் பணத்தையும் பார்க்கிறான் பாம்பு வித்தை காட்டும் மனிதன். அவனின் குறி அந்தப் பணத்தின் மீதே இருக்கிறது. அந்தச் சிறுமியிடமிருந்து எப்படியும் அந்த பணத்தை அபகரித்தே ஆவது என்ற நோக்கத்துடன் இருக்கிறான் அவன். பல கில்லாடி வேலைகளெல்லாம் செய்து, அந்த பணத்தைச் சிறுமியிடமிருந்து அபகரித்தும் விடுகிறான். பணம் தன் கையை விட்டுப் போன பிறகுதான், சுய உணர்விற்கு வருகிறாள் சிறுமி.
அவளுக்கு அழுகை வருகிறது. தங்க மீன் வாங்குவதற்காக தன் தாய் தந்த டொமான் நோட்டை இப்படி அறிவில்லாமல் ஏமாந்து கொடுத்து விட்டோமே என்பதை நினைத்து, அவள் கவலைப்படுகிறாள். 'அந்த டொமான் நோட்டைத் திருப்பித் தாங்க. எங்க அம்மா தங்க மீன் வாங்குவதற்காக எனக்கு தந்தது அது. 100 டொமனுக்கு தங்க மீன் வாங்கிவிட்டு, மீதியை வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும்' என்று அழுது கொண்டே கூறுகிறாள் சிறுமி ரஸியே.
சிறுமியின் அழுகையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்த பணத்தை பாம்பு வித்தை காட்டும் மனிதன் திரும்ப தருகிறான். மலர்ந்த முகத்துடன் அதை வாங்கும் ரஸியே, மீண்டும் அதை கண்ணாடி ஜாடிக்குள் போட்டுக் கொண்டு தங்க மீன்கள் இருக்கும் கடையை நோக்கி ஆர்வத்துடன் நடக்கிறாள்.
தங்க மீன் விற்பனை செய்யப்படும் கடைக்கு வந்த அவள், ஒரு மீனைக் காட்டி 'எனக்கு இந்த மீன்தான் வேண்டும்' என்று கூறுகிறாள். கடைக்காரர் பணத்தைக் கேட்க, பணத்தை எடுப்பதற்காக ஜாடிக்குள் கையை விடுகிறாள் ரஸியே. அப்போதுதான் தெரிகிறது- அதற்குள் அந்த டொமான் நோட்டு இல்லை. அது எங்கு போனது?
அவ்வளவுதான்- அடக்க முடியாத அளவிற்கு அவளுக்கு அழுகை வருகிறது. கண்களில் நீர் அரும்ப நின்று கொண்டிருக்கும் அந்த அழகுச் சிறுமியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஒரு வயதான பெண். அவள் மீது பரிதாபப்பட்ட அவள் 'வழியில் எங்காவது ஜாடியை வைத்தாயா?' என்று கேட்கிறாள். வழியில் ஒரு பேக்கரியின் வாசலில் வைத்ததாக கூறுகிறாள் சிறுமி.
அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு நடக்கிறாள் அந்த பெண். இருவரும் நடந்து அந்த பேக்கரி கடைக்கு அருகில் வருகிறார்கள். அங்கு பண நோட்டு கீழே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஆனால், அங்கு இல்லை. கவலையுடன் இருவரும் நடக்க, வழியில் தரையில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளுக்குக் கீழே, பள்ளத்திற்குள் தன்னுடைய டொமான் நோட்டு கிடப்பதைப் பார்க்கிறாள் ரஸியே. அவள் நடந்து வரும்போது, ஜாடியிலிருந்து அந்த பண நோட்டு தவறி கீழே விழுந்திருக்கிறது? அதை எப்படி எடுப்பது? அதை எடுப்பது என்றால்... அதற்கு அருகில் இருந்த கடை, புது வருடம் பிறக்க இருப்பதால் சீக்கிரமே மூடப்பட்டு விட்டது. பிறகு... என்ன செய்வது?
அந்த வயதான பெண் அருகிலிருந்த டெய்லரின் கடையில் விஷயத்தைக் கூறி. 'இந்தச் சிறுமியின் பணம் அந்த குழிக்குள் விழுந்து கிடக்கிறது. அதை எடுப்பதற்கு கொஞ்சம் உதவுங்கள்' என்கிறாள். அந்த வயதான டெய்லரிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு, அந்தப் பெண் அங்கிருந்து செல்கிறாள். டெய்லர் தன் பணியாளை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நிமிடக் கணக்கில் திட்டிக் கொண்டிருக்கிறார். அவளுக்கு உதவும் நிலையில் அந்த மனிதர் இல்லை என்பதை அந்தச் சிறுமி புரிந்து கொள்கிறாள். நமக்கும் அது புரிகிறது.
வெளியே வந்த சிறுமி, பக்கத்து கடைக்காரர்களிடம் விஷயத்தைக் கூறுகிறாள். அவர்களும் முயன்று பார்க்கிறார்கள். ஆனால், முடியவில்லை. 'இந்தக் குழிக்குள் இருக்கும் பண நோட்டை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு அருகில் இருக்கும் கடைக்காரரிடம்தான் அதற்கான கருவிகள் இருக்கின்றன. ஆனால், புது வருடம் பிறக்க இருப்பதால், அவர் கடையை மூடி விட்டு போய் விட்டாரே'! என்று கூறி விட்டு, அவர்களும் தங்களின் கடைகளை அடைத்து விட்டு கிளம்பி விடுகிறார்கள்.
இதற்கிடையில் அவளுடைய அண்ணன் அலி அங்கு வருகிறான். அவனிடம் தன்னுடைய மோசமான சூழ்நிலையை விவரிக்கிறாள் சிறுமி. அலி இரும்புக் கம்பிகளின் வழியே, கீழே பார்க்கிறான். பள்ளத்திற்குள் டொமான் நோட்டு படபடத்துக் கொண்டிருக்கிறது. வேகமாக ஓடிய அலி, ஒரு ராணுவ வீரரை அழைத்துக் கொண்டு வருகிறான். அவரை வைத்து அந்த பண நோட்டை எடுப்பதற்காக இருவரும் முயற்சிக்கிறார்கள். அதுவும் தோல்வியிலேயே முடிகிறது.
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல், கவலையுடன் கடை வீதியில் அமர்ந்திருக்கின்றனர். இருவரின் முகங்களிலும் ஏராளமான கவலை. கடை வீதியில் யாருமே இல்லை. இன்னும் சில நிமிடங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. ஆனால், அவர்களிடம் மட்டும் சந்தோஷம் இல்லை.
அப்போது அந்த வழியாக ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம் பலூன் விற்கும் மனிதன் நடந்து வருகிறான். அவனிடம் பலூன்கள் தொங்க விடப்படும் ஒரு கழி இருக்கிறது. எல்லா பலூன்களும் விற்பனையாகி விட்டன. ஒரே ஒரு வெள்ளை நிற பலூன் மட்டும் விற்கப்படாமல் அவனிடம் இருக்கிறது. அதைப் பார்த்த சிறுவன் அலி, அந்த கழியை வைத்து உள்ளே விழுந்து கிடக்கும் பண நோட்டை எடுத்துத் தரும்படி கேட்கிறான். அந்த இளம் வியாபாரி கழியைக் குழிக்குள் விடுகிறான். அது டொமான் நோட்டைத் தொடுகிறது. ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை.
என்ன செய்வது என்று மூவரும் யோசிக்கிறார்கள். அந்த பின் இரவு வேளையில் கடைவீதியில் இருப்பதே அந்த மூன்று பேர்தாம். சிறுவன் ஓடிச் சென்று வேறொரு இடத்திலிருந்த கடையிலிருந்து ஒரு 'சுவிங்கம்' வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அந்த கழியின் ஓரத்தில் ஒட்ட வைத்து, குழிக்குள் விழ, பண நோட்டு அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியே வருகிறது.
டொமான் நோட்டு கையில் கிடைத்தவுடன், சிறுமி ரஸியேவிற்கு உண்டான சந்தோஷம் இருக்கிறதே...! அப்பப்பா...!
இனி என்ன? தங்க மீனை வாங்க வேண்டியதுதானே! காணாமல் போன பணம்தான் கைக்கு வந்து விட்டதே!
ரஸியேவும், சிறுவன் அலியும் தங்க மீனை வாங்குவதற்காக அங்கிருந்து வேகமாக ஓடுகிறார்கள். வெள்ளை நிற பலூன் தொங்கிக் கொண்டிருக்கும் கழியுடன் நடக்கிறான் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் வியாபாரி.
ரஸியேவாக நடித்திருக்கும் சிறுமியின் பெயர்- Aida Mohammadkhani. சிறுவன் அலியாக நடித்திருப்பது- Mohsen Kalifi. பாத்திரங்களாகவே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக- சிறுமி!
எத்தனை வருடங்கள் ஆனாலும், நம்மால் 'The White Balloon' படத்தை மறக்கவே முடியாது- அந்தச் சிறுமியையும்தான்....