Logo

தி குட் ரோட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4203
The Good Road

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

தி குட் ரோட் - The Good Road

(குஜராத்தி மொழி திரைப்படம்)

2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். அந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரே படம் இதுதான். அந்த ஆண்டின் சிறந்த குஜராத்தி மொழி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருதை இப்படம் பெற்றது.

Gyan Correa இயக்கிய இந்தப் படம் `hyper link format' என்ற உத்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது - ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் கதையில், பல கிளைக் கதைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட திரைக்கதை. குஜராத்தின் Kutch பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளைத் தொட்டுக் கொண்டு ஓடும் தேசிய நெடுஞ்சாலைதான் இந்தப் படத்தின் கதை நடைபெறும் இடம்.

இந்தப் படத்தில் மொத்தம் மூன்று தனித் தனி கதைகள். ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தப்படுகின்றன. எப்படி?

பாப்பு- ஒரு லாரி ஓட்டுநர். தன்னுடைய பெற்றோரைக் காப்பாற்றிக் கொண்டு, குடும்பத்தையும் காப்பாற்றுவதென்பது அவனுடைய சக்திக்கு மீறிய ஒரு செயலாக இருக்கிறது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டு தரப்படுகிறது. அதன்படி செயற்கையாக ஒரு விபத்து நடத்தப்பட வேண்டும். அந்த  விபத்தில் பாப்பு இறந்து விடுவான். பிறகு என்ன? இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும். இது படத்தின் முதல் கதை.

இரண்டாவது கதை இது :

 டேவிட், கிரண் இருவரும் ஒரு வசதி படைத்த நகரத்து தம்பதிகள். அவர்கள் விடுமுறையில் தங்களின் மகன் ஆதித்யாவுடன் தங்களுடைய காரில் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார்கள். டேவிட் காரை ஓட்ட, அவனுக்கு அருகில் கிரண் அமர்ந்து கண்களை மூடி தூங்கியவாறு பயணிக்கிறாள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களுடைய செல்ல மகன் ஆதித்யாவும் தூங்கிக் கொண்டு வருகிறான். நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் கார் நிற்கிறது. டேவிட் கீழே இறங்கி பங்கிற்குள் இருக்கும் கடையில் என்னவோ வாங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது பின் இருக்கையில் படுத்திருந்த ஆதித்யா மெதுவாக எழுந்து கதவைத் திறந்து கீழே இறங்குகிறான். அவன் இறங்கியதை கண்களை மூடி முன் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அவனுடைய தாய் கவனிக்கவில்லை. சிறிது தூரம் நடந்து செல்கிறான் ஆதித்யா. அங்கு ஒரு நாய்க் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அதைத் தடவியவாறு அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்திலிருந்து கடையில் நின்று கொண்டிருக்கும் ஆதித்யாவின் தந்தை டேவிட் காட்டப்படுகிறான்.

டேவிட் வந்து காரின் கதவைத் திறக்கிறான். அப்போதும் அவன் மனைவி கண்களை மூடிய நிலையிலேயே இருக்கிறாள். அவளை அவன் எழுப்பவில்லை. தன் இருக்கையில் வந்து அமர்கிறான். பின் இருக்கையில் தன் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு. காரை 'ஸ்டார்ட்' செய்கிறான். கார் இரைச்சலுடன் அங்கிருந்து கிளம்பி, நெடுஞ்சாலையில் போய் சேர்கிறது. 

கார் கிளம்பிச் செல்வதை நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஆதித்யா பார்க்கிறான். கையை உயர்த்தி கத்துகிறான். அதை அவனுடைய தந்தை பார்க்கவில்லை. கார் வேகமாக அங்கிருந்து பயணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருக்கிறான் பையன். 

அங்கிருக்கும் ஒரு மனிதர் சிறுவனைப் பார்க்கிறார். சிறுவனை அங்கு விட்டுவிட்டு, பெற்றோர்கள் காரில் கிளம்பிச் சென்று விட்ட தகவலை அவர் தெரிந்து கொள்கிறார். இப்போது ஒரு `நேஷனல் பெர்மிட்' கொண்ட ஒரு லாரி அங்கு வந்து நிற்கிறது. நாம் ஏற்கெனவே கூறிய பாப்பு ஓட்டுநராக இருக்கும் லாரிதான் அது. முகத்தில் ஏகப்பட்ட கவலையுடனும், நீண்ட தூரம் லாரியை ஓட்டியதால் உண்டான களைப்புடனும் அவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் உதவியாளராக ஒரு இளைஞன். பாப்புவிடம் பையனை ஒப்படைக்கும் பங்கில் இருந்த ஆள் `இந்த பையனோட அப்பாவும், அம்மாவும் காரில் கிளம்பிப் போயிட்டாங்க. தேசிய நெடுஞ்சாலையில் எங்காவது காரை நிறுத்தி விட்டு, கலங்கிப் போய் நின்று கொண்டிருப்பார்கள். இந்தச் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்து விடு' என்று கூறுகிறார். அரை மனதுடன் அதற்கு ஒத்துக் கொண்ட பாப்பு, அங்கிருந்து லாரியைக் கிளப்புகிறான். க்ளீனர் இளைஞனுக்கும், ஓட்டுநர் பாப்புவிற்கும் நடுவில் எதைப் பற்றியும் கவலைப் படாததைப் போல தைரியமாக அமர்ந்திருக்கிறான் சிறுவன் ஆதித்யா.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. லாரி என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்யா அழுக்கடைந்த நிலையில் இருக்கும் லாரியின் கேபினில் அழுக்கடைந்த ஆடைகளுடன் காட்சியளிக்கும் ஓட்டுநருக்கும், க்ளீனருக்கும் நடுவில் அமர்ந்து தன்னுடைய புதுமைப் பயணத்தைத் தொடர்கிறான். 

டேவிட்டும், அவன் மனைவி கிரணும் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் சில கிலோ மீட்டர் பயணிக்கிறார்கள். ஒரு இடத்தில் செல்லும்போது, டேவிட் தன் மகன் ஆதித்யாவை அழைக்கிறான். பின்னாலிருந்து எந்த பதிலும் இல்லை. திரும்பவும் அழைக்கிறான். இப்போதும் பதில் இல்லை. இதற்குள் கிரணும் கண் விழிக்கிறாள். இருவரும் திடுக்கிட்டு பின்னால் பார்க்கிறார்கள். பின் இருக்கை காலியாக இருக்கிறது. பையன் இல்லை. அவ்வளவுதான்- ஆடிப் போய் விடுகிறார்கள்.

டேவிட் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் காரைக் கொண்டு போய் நிறுத்துகிறான். அங்கு விஷயத்தைக் கூறுகிறான். `வழியில் எங்காவது காரை நிறுத்தினீர்களா?' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, தான் காரை நிறுத்திய இடத்தை டேவிட் கூறுகிறான். உடனே இன்ஸ்பெக்டர் `காரும், உங்களுடைய மனைவியும் இங்கேயே இருக்கட்டும். நான் கான்ஸ்டபிளை அனுப்புகிறேன். அவர் டூ வீலர் வைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் நீங்கள் அமர்ந்து, வந்த வழியிலேயே செல்லுங்கள், உங்கள் பையனைத் தேடிச் செல்வதற்கு அதுதான் வசதியாக இருக்கும்' என்கிறார். அதைத் தொடர்ந்து கான்ஸ்டபிளும், அவருக்குப் பின்னால் டேவிட்டும் சிறிய டூ வீலரில் அமர்ந்து தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வந்த வழியிலேயே திரும்பவும் டூ வீலரில் மகனைத் தேடியபடி பயணிக்கிறான் டேவிட்.


நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கிறது லாரி. நேரம் இப்போது இருட்டி விட்டது. பையனைக் காணோம் என்று காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டு விட்டதால், சாலையில் வரும் ஒவ்வொரு வாகனத்தையும் டார்ச் விளக்கு அடித்து சோதிக்கிறார்கள் போலீஸ்காரர்கள். வரிசையாக வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அந்த வரிசையில் பாப்புவின் லாரியும் நிற்கிறது. ஒவ்வொரு வாகனத்தையும் சோதித்துக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர். பாப்புவின் வண்டிக்குள்ளும் டார்ச் அடித்துப் பார்க்கப்படுகிறது. பாப்புவும், க்ளீனரும் மட்டும் இருக்கிறார்கள். சிறுவன் ஆதித்யா? அவன் தானே மேலே இருந்த மறைவிடத்தில் ஏறி பதுங்கி, படுத்துக் கொள்கிறான். இருட்டில் போலீஸ்காரருக்கு அவனைத் தெரியவில்லை. சோதனை முடிகிறது. லாரி கிளம்ப அனுமதி கிடைக்கிறது. லாரி கிளம்புகிறது.

பையன் இறங்கி கீழே வருகிறான். இப்போது சிறுவன் மீது பாப்புவிற்கு அளவற்ற அன்பும், பாசமும் உண்டாகிறது. லாரிக்குத் தேவையான சான்றிதழ்கள் முறைப்படி கையில் இல்லை என்பது ஒரு பக்கம்... யாரென்று தெரியாத ஒரு சிறுவனை அருகில் உட்கார வைத்துக் கொண்டு வரும் செயல் இன்னொரு பக்கம்... சிறுவனை கடத்திக் கொண்டு வருவதாக நினைத்து வழக்கு போட்டு விட்டால்? மிகப் பெரிய ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றி விட்டதற்காக சிறுவன் ஆதித்யாவைப் பெருமையுடன் பார்க்கிறான் பாப்பு.

நீண்ட தூரம் கடுமையான வெயிலுக்கு மத்தியில் பயணம் செய்ததாலும், இருட்டிலும் பல கிலோ மீட்டர்கள் பயணித்ததாலும், பையன் மிகவும் களைத்துப் போய் காணப்படுகிறான்.  அவன் அணிந்திருந்த சட்டை வியர்வையாலும், சாலையிலிருந்து வந்த தூசியாலும் மிகவும் அழுக்கடைந்து காணப்படுகிறது. அவனைச் சட்டையைக் கழற்றச் சொன்ன பாப்பு, லாரியிலிருந்து ஒரு பழைய பனியனை எடுத்து அவனிடம் தருகிறான். அதுவும் அழுக்கு பனியன்தான். இப்படிப்பட்ட.... பார்க்க சகிக்காத ஒரு பனியனை வாழ்க்கையிலேயே பார்த்திராத ஆதித்யா, வாங்கி அணிந்து கொள்கிறான். அவனையே வாஞ்சையுடன் பார்க்கிறான் பாப்பு. இதுவரை அவனைப் பிடிக்காமலிருந்த க்ளீனர் இளைஞனுக்குக் கூட அவனை மிகவும் பிடித்து விடுகிறது.

இதற்கிடையில் லாரியின் டயர் பங்க்சர் ஆகி விடுகிறது. வேறொரு டயர் மாட்டப்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் சிறுவன் ஆதித்யா `ஹம் இந்துஸ்தானி' என்ற பாடலை மிகவும் அருமையாக பாடுகிறான்.  பள்ளியில் அவன் பாட கற்ற பாடல் அது. அவனுடைய பாடலில் உற்சாகமடைந்த பாப்பு லாரியைக் கிளப்புகிறான். மீண்டும் பயணம் தொடர்கிறது.

அந்த நள்ளிரவு வேளையில் லாரி ஒரு இடத்தில் ஓரமாக நிறுத்தப்படுகிறது. அங்கு உணவு சாப்பிடுவதற்காக லாரியிலிருந்து கீழே இறங்குகிறான் பாப்பு. அவனுடன் க்ளீனர் இளைஞனும், ஆதித்யாவும். அவர்களுடன்  சேர்ந்து, ஆடிக்  கொண்டிருக்கும் பழைய பெஞ்சில் அமர்ந்து, அந்தச் சிறிய சாலையோர உணவு கடையில் சாப்பிடுகிறான் ஆதித்யா. இப்படியொரு புதிய அனுபவம் அவனுக்கு இதற்கு முன்பு கிடைத்ததே இல்லையே! 

ஆதித்யாவின் தந்தை டேவிட்டும், உடன் வந்த கான்ஸ்டபிளும் டூ வீலரை நிறுத்துகிறார்கள். அங்கு நின்று கொண்டிருப்பவர்களிடமும், அமர்ந்து கொண்டிருப்பவர்களிடமும் சிறுவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். அதற்குச் சற்று தள்ளி இருக்கும் இடத்தில்தான்  ஆதித்யா அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவர்கள் அவனைப் பார்க்கவில்லை. அவன் அவர்களைப் பார்க்கவில்லை. பாப்புவும், க்ளீனரும், சிறுவன் ஆதித்யாவும் லாரியில் ஏற, லாரி புறப்படுகிறது. மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் பயணம். இது எதுவுமே தெரியாமல், `பையன் அங்கு எங்காவது இருப்பானா?' என்று நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதைபதைப்புடன் தேடிக் கொண்டிருக்கிறான் டேவிட்.

நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனின் வாசலிலேயே எவ்வளவு நேரம்தான் காருக்கு அருகில் கிரண் அமர்ந்திருக்க முடியும்? தானும் தேடினால் என்ன என்று அவள் நினைக்கிறாள். அப்போதுதான் அவளுக்கே தெரிய வருகிறது- நெடுஞ்சாலை  இல்லாமல் வேறொரு பாதையும் இருக்கிறது என்று. ஒருவேளை... தன் மகனை யாராவது அந்த வழியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டால்...? காரை எடுக்கிறாள். அவளே அமர்ந்து காரை ஓட்டுகிறாள்.

கிட்டத்தட்ட ஒரு பாலைவனப் பகுதி. அதில் தன் காரைச் செலுத்துகிறாள் கிரண். சுற்றிலும் இருட்டு. ஆள் அரவமே இல்லை. அந்த இருட்டு வேளையில் அந்த வெட்ட வெளியில் அவளுடைய கார் மட்டும் விரைந்து கொண்டிருக்கிறது. பாதை என்று எதுவுமே இல்லை. சுற்றிலும் மணல். அந்த மணலில் கார் ஓட்டுவதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. முடிந்த வரைக்கும் அவள் ஓட்டுகிறாள். ஒரு இடத்தில் மணலுக்குள் கார் மாட்டிக் கொள்கிறது. அதற்கு மேல் வண்டி நகரவில்லை. காரின் டயர் மணலில் சிக்கி, சுழல்கிறது. அவ்வளவுதான். ஆடிப்போய் அந்த நள்ளிரவு வேளையில் இதற்கு முன்பு பார்த்தே இராத பாலை வனப் பகுதியில், தன்னந்தனியாக ஒரு பெண்- காருடன் !

நிமிடங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழியாக Kutch பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சிலர் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்- பல வர்ண உடைகள் அணிந்து. கொஞ்சம், கொஞ்சமாக அந்த கூட்டம்  நெருங்கி வருகிறது. அவர்களுடன் கழுதை இழுக்கும் வண்டியும் (இந்த காட்சி அப்படியே நமக்கு ஈரான் நாட்டு படத்தைப் பார்க்கும் ஒரு உணர்வை உண்டாக்குகிறது. சரியாக கூறுவதாக இருந்தால்-`காந்தஹார்' என்ற ஈரானியப் படம். அதில் இதே போல ஒரு திருமணக் குழுவினர் வருவார்கள் - வண்ண வண்ண ஆடைகள் அணிந்து.) மணலில் சிக்கிக் கிடக்கும் காரையும், மயங்கிய நிலையில் இருக்கும் கிரணையும் பார்க்கிறார்கள் அவர்கள். உதவிக்கு அவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால், கிரணின் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்?  

தந்தை ஒரு பக்கம்... தாய் இன்னொரு பக்கம்... இவை எதுவுமே தெரியாமல் அவர்களின் செல்ல மகன் ஆதித்யா லாரியில் பயணம். இப்போதும் சோதனைகள் நிற்கவில்லை. பாதையெங்கும் போலீஸ்காரர்கள் ஜீப்புடன் நிற்கிறார்கள். ஒரு இடத்தில் போலீஸ் ஜீப் ஒன்று நிற்க, அதைப் பார்த்து பயந்து போன பாப்பு, நெடுஞ்சாலையை விட்டு ஓரமாக லாரியைத் திருப்பி விடுகிறான். 


இந்த சம்பவங்களுக்கு மத்தியில் இன்னொரு புதிய கதை. மும்பையில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பி வருகிறாள் பூனம் என்ற சிறுமி. ஒரு லாரியில் அவள் ஏறி வருகிறாள். எங்கோ இருக்கும் ஒரு குக்கிராமத்தில் அவளின் வயதான பாட்டி இருக்கிறாள். அந்த ஏழைச் சிறுமி தன் பாட்டியைத் தேடி வருகிறாள். ஆனால், அவள் வந்த லாரி, அந்த கிராமம் இருக்கும் திசையில் போகக் கூடியது அல்ல. அதனால், ஒரு மலைப் பகுதியில் அவளை, அந்த லாரியின் ஓட்டுநர் இறக்கி விட்டு விடுகிறார். லாரி புறப்பட, சிறுமி அருகிலிருந்த ஒற்றையடிப் பாதையின் வழியே நடக்கிறாள்.

அந்த பாதை ஒரு குன்றின் உச்சியை அடைகிறது. அது ஒரு சிறிய கிராமம். அங்கு பல வர்ணங்களில் ஆடைகள் கொடிகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நடனம், நாடக ஒத்திகை அனைத்தும் நடக்கின்றன. பல இளம் பெண்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களை ஒரு முரட்டுத்தனமான மனிதர் இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் நம் சிறுமி. அவர்களோ, அவளையே பார்க்கிறார்கள். அவள் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் யார் என்று நம் சிறுமிக்குத் தெரியாது. 

நடனமும், நாடகக் காட்சிகளும் நடைபெறுகின்றன  (இந்த காட்சிகளும் நமக்கு ஈரான் நாட்டு படத்தை ஞாபகப்படுத்தக் கூடியவையே!) அந்தப் பெண்கள் ஒரு இடத்தில் போய் தங்க, அவர்களுடன் போய் அந்த இரவு வேளையில் தங்கிக் கொள்கிறாள் பூனம். 

நான்கு சுவர்களுக்குள் இளம் பெண் ஒவ்வொருத்தியும் தனித் தனியாக வந்து நிற்க, சாளரத்தின் வழியாக அவர்களின் அழகை அள்ளி பருகுகின்றனர் அந்த கிராமத்தின் `காம வயப்பட்ட ஆண்கள். அதற்குப் பிறகுதான் சிறுமி பூனத்திற்கே தெரிய வருகிறது - அந்த இடம் அந்த அளவிற்கு நல்ல இடம் இல்லை என்று. அங்கிருந்த இளம் பெண்களின் மூலம் அவளுக்கு தெரிய வருகிறது - அது உடலை வைத்து பிழைப்பு நடத்தும் இடம் என்பதும், அவர்கள் விலை மாதர்கள் என்பதும், வேறு வழியில்லாமல் விளக்கில் வந்து விழுந்த விட்டில் பூச்சிகள் அவர்கள் என்பதும், அது கலை என்ற போர்வையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும்....

பிறகென்ன? அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள். சாலையில் ஒரு லாரி வருகிறது. கையைக் காட்ட, லாரி நிற்கிறது. பாட்டி இருக்கும் கிராமத்தைக் கூறுகிறாள். அந்த திசையில் போகும் லாரிதான் அது. ஓட்டுநர் அவளை ஏற்றிக் கொள்கிறான். பூனம் ஏற, லாரி புறப்படுகிறது. 

ஒற்றையடிப் பாதையையொத்த சாலையில் நம் சிறுவன் ஆதித்யா பயணிக்கும் பாப்புவின் லாரி பனி படலத்திற்கு மத்தியில் வந்து கொண்டிருக்கிறது. பொழுது புலர்ந்திருக்கும் வேளை. திடீரென்று எதிரில் இன்னொரு லாரி. அதைப் பார்த்ததும், நிலை குலைந்து போகிறான் பாப்பு. எங்கே மோதி விடப் போகிறதோ என்று வேறொரு பக்கம் லாரியை பாப்பு திருப்புகிறான். எதிரில் வந்த லாரி அதற்குள் அங்கிருந்து போய் விடுகிறது. (சிறுமி பூனம் பயணிக்கும் லாரியாகக் கூட அது இருக்கலாம்.)

திரும்பிய வேகத்தில், லாரி நிலை தடுமாறிகிறது. (விபத்து நடத்த வேண்டும் என்பது ஏற்கெனவே பாப்பு போட்டிருந்த திட்டம் தானே!) சரிந்த லாரிக்குள் பாப்பு, க்ளீனர், ஆதித்யா...

லாரி சரிந்த இடத்தில் கூட்டம் கூடி விடுகிறது. போலீஸ்காரர்கள் வந்து சேர்கிறார்கள். மகனைத் தேடி அலைந்த டேவிட்டும், கிரணும் அங்கு வருகிறார்கள். 'என்ன லாரி? என்ன விபத்து? என்று பார்க்கிறார்கள். அங்கிருந்த கல்லில் எந்தவித அதிர்ச்சியும் இன்றி, அமைதியாக உட்கார்ந்திருக்கிறான் சிறுவன் ஆதித்யா. தன் மகனைப் பார்த்த சந்தோஷத்தில், அந்த பெற்றோர் ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டு, முத்த மழை பொழிகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் செல்ல மகன் கிடைத்து விட்டான். பிறகென்ன?

ஆனால், இப்போது அவர்கள் பார்க்கும் ஆதித்யா அல்ல- இதற்கு முன்பு அவர்கள் பார்த்த ஆதித்யா. தேசிய நெடுஞ்சாலையில் அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் சாதாரண அனுபவங்களா?

'The Lunch box' ' திரைப்படம்தான் ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, 'The Good Road' தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஒரு பெரிய சலசலப்பே உண்டானது இரண்டு படங்களையுமே நான் பார்த்து விட்டேன். எந்த வகையில் பார்க்கப் போனாலும்- 'The Good Road'தான் தகுதியான படம் என்பதே என் கருத்து. 

தேசிய நெடுஞ்சாலையிலேயே, இதற்கு முன்பு நடிப்பு அனுபவம் இல்லாதவர்களை வைத்து படமொன்றை இயக்குவது என்பது சாதாரண விஷயமா? டேவிட்டாக நடித்த Ajay Gehi, கிரணாக நடித்த Sonali Kulkarni, சிறுவன் ஆதித்யாவாக நடித்த Keval Katrodia, லாரி ஓட்டுநராக நடித்த Shamji Dhana Kerasia (இவர் உண்மையிலேயே ஒரு ஓட்டுநரே!), அவனின் உதவியாளராக வந்த Priyank Upadhyay, சிறுமி பூனமாக நடித்த Poonam Kesar Singh - அனைவரும் தாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட ஒரு புதுமையான கதைக் கரு கொண்டு படத்தைத் தயாரித்த தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை (National Film Development Corporation, NFDC)  நாம் பாராட்ட வேண்டும். அத்துடன் படத்தை இயக்கிய Gyan Correa வையும்தான்.

ஒரு சிறப்புச் செய்தி :- இந்த படத்திற்கு Sound Designer ஆக பணியாற்றியவர் - ரசூல் பூக்குட்டி. 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.