Logo

கங்கூபாய்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4295
Gangoobai

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

கங்கூபாய் – Gangoobai

(மராத்தி - இந்தி திரைப்படம்)

ந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (National Film Development Corporation)  தயாரித்த அருமையான படம் - கங்கூபாய். 2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படமிது.

படத்தைப் பார்த்து பல மாதங்கள் கடந்தோடிய பிறகும், இன்னும் என் மனதில் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறுவதிலிருந்தே, அப்படத்தின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.

மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஏழை விதவைப் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

MAMI திரைப்பட விழா, இந்திய திரைப்பட விழா, கெனடாவில் நடைபெற்ற தெற்கு ஆசியன் திரைப்பட விழா, வியட்நாமில் நடைபெற்ற ஹனாய் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இப்படம் திரையிடப்பட்டு எல்லோரின் ஒருமித்த பாராட்டுக்களைப் பெற்றது.

படத்தின் கதை இது :

மும்பையின் வெளிப் பகுதியில் ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்கும் சிறிய ஊர் மாத்தெரான். அங்கு ஒரு ஏழைப் பெண் வசிக்கிறாள். அவள்தான் கங்கூபாய். அவளுக்கு திருமணமாகி, கணவன் இறந்து விட்டான். குழந்தை எதுவும் இல்லை. தகரம் வேய்ந்த ஒரு சிறிய வீட்டில் அவள் வசித்துக் கொண்டிருக்கிறாள்.

பல வீடுகளிலும் அவள் வேலை பார்க்கிறாள். சமையல் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, கடைகளில் ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொண்டு தருவது, பெருக்கிச் சுத்தம் செய்வது, நீர் மொண்டு கொண்டு வந்து தருவது என்று எல்லா வேலைகளையும் செய்யக் கூடியவள் கங்கூபாய்.

எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் கங்கூபாயை எல்லோருக்கும் பிடிக்கும். யார் சொல்லும் வேலையாக இருந்தாலும், அதை முடியாது என்று கூறாமல் சிறப்பாகச் செய்து முடிக்கும் அவளை அனைவரும் விரும்புவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

ஒருநாள் தான் வேலை செய்யும் எஜமானியின் இளம் பெண்ணான மகள் அணிந்திருக்கும் புடவையைப் பார்க்கிறாள் கங்கூபாய். அவ்வளவுதான்- அவள் அசந்து போகிறாள். பாராம்பரிய பார்ஸி முறையில் உருவாக்கப்பட்ட அந்த புடவையில் மலர்களும், பறவைகளும் அசைகின்றன. இப்படியொரு புதுமைப் புடவையை அவள் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. அந்த புடவையை வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அந்த புடவையின் விலை என்ன என்று கேட்கிறாள். அதன் விலை ஐம்பதாயிரம் ரூபாய். அதைக் கேட்டு ஆச்சரியத்தில் அவள் வாயைப் பிளக்கிறாள். அதே போன்ற ஒரு புடவையை தான் வாங்கி அணிய வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்.   ஆனால், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அவள் எங்கு போவாள்?

அதற்காக தன் ஆசையை அவள் விட்டெறிந்து விடவில்லை. அந்த புடவையை வாங்க வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்து, பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று மனதில் முடிவு செய்கிறாள்.  முன்பு செய்ததைவிட, அதிகமான வேலைகளைச் செய்கிறாள். மூட்டை தூக்கும் வேலையைக் கூட செய்கிறாள். தான் செய்யும் வேலைகளின் மூலம் கிடைக்கும் சிறிய சிறிய தொகையையும் அவள் பத்திரமாக தன் வீட்டில் ஒரு மர பெட்டியில் சேமித்து வைக்கிறாள்.

அவளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு வயதான பெண் இருக்கிறாள். அவள் பெயர் மலன். அவளிடம் தன்னுடைய புடவை ஆசையை கங்கூபாய் வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு `உனக்கு இப்படியொரு விபரீத ஆசையா? பணக்காரர்கள் வீட்டில் அந்தப் புடவையை அணிகிறார்கள் என்றால், அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. நீ அன்றாடம் காய்ச்சி. வீட்டு வேலை செய்தும், எடுபிடி வேலை செய்தும், சிறிய அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவள். நீயெல்லாம் இதற்கு ஆசைப்படலாமா?' என்கிறாள் மலன். ஆனால் கங்கூபாயோ `கஷ்டப்பட்டு உழைத்து நான் அந்த புடவையை வாங்கியே தீருவேன். அந்த புடவையை என்றைக்கு வாங்குகிறேனோ, அன்றைக்குத்தான் என் மனதில் முழுமையான அமைதி உண்டாகும்' என்கிறாள். அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மலன். 

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், படுப்பதற்கு முன்பு இதுவரை எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை கங்கூபாய் எண்ணிப் பார்ப்பாள். இப்படியே நாட்கள் கடந்தோடுகின்றன. பல மாதங்களுக்குப் பிறகு அவள் மனதில் நினைத்தபடி 50,000 ரூபாய்களைச் சேர்த்து விடுகிறாள்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்புகிறாள். தன் தோழி மலனிடம் அவள் விடை பெறுகிறாள். `மும்பை மிகப் பெரிய நகரம். கெட்டவர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் அதிகமாக இருப்பார்கள். பெரிய தொகையை எடுத்துக் கொண்டு போகிறாய். எச்சரிக்கையாக இருந்து கொள்' என்கிறாள் மலன். அதற்கு கங்கூபாய் `நான் ஏற்கெனவே ஒரு முறை மும்பைக்குச் சென்றிருக்கிறேன். பத்திரமாக நடந்து கொள்வேன்' என்கிறாள். கையில் ஒரு தோல் பை. அதில்தான் முழு பணமும் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவள் புகை வண்டியில் ஏறுகிறாள். மலன் வழியனுப்பி வைக்கிறாள்.

பரபரப்பான மும்பை நகரம், கங்கூபாய் கையில் தோல் பையுடன், மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறாள். சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு வாடகைக் காரை நிறுத்துகிறாள். கிராமத்தில் தான் வேலை பார்த்த வீட்டு எஜமானியின் மகள் புடவை வாங்கிய கடையின் விளம்பரம் ஒரு மாத இதழில் பிரசுரமாகியிருக்க, அதை காரின் ஓட்டுநரிடம் காட்டி, அங்கு போகும்படி கூறுகிறாள். புறப்படும் முன்பு மீட்டரைப் போடும்படி கூறுகிறாள்.

அமைதியான ஒரு இடத்தில் இருக்கக் கூடிய ஒரு உயரமான கட்டிடத்திற்கு முன்னால் கார் நிற்கிறது. ஓட்டுநர் ஏமாற்றவில்லை. மீட்டர் கட்டணம் எதுவோ, அதை மட்டுமே அவளிடம் அவன் வாங்குகிறான். கங்கூபாய் கட்டிடத்திற்குள் நுழைகிறாள். ஏதோ பெரிய கடையாக இருக்கும் என்று நினைத்தால், வெறும் வீட்டைப் போல அது இருக்கிறது. ஆள் அரவமே இல்லை. எனினும், மாடிப் படிகளின் மூலம் மேலே செல்கிறாள் கங்கூபாய்.


உள்ளே போனால்- ஒரு இளம் பெண் அமர்ந்திருக்கிறாள். நவ நாகரீக ஆடை அணிந்திருந்த அவள், வேலைக்காரி தோற்றத்தில் இருக்கும் கங்கூபாயை வெறுப்புடன் பார்க்கிறாள், `யார் நீ? எதற்காக வந்திருக்கிறாய்? என்று கேட்கிறாள். `புடவை வாங்குவதற்காக வந்திருக்கிறேன் என்கிறாள் கங்கூபாய். `நீ தேடி வந்த முகவரி இது இல்லை என்கிறாள்' அந்தப் பெண். கங்கூபாயோ `நான் தேடி வந்த இடம் இதுதான். ஏழையாக இருப்பதால் என்னிடம் பணம் இல்லை என்று நினைத்தாயா? இதோ பார்.... புடவை வாங்குவதற்காக நான் உழைத்து சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும் 50,000 ரூபாய்' என்று ஆவேசத்துடன் கூறியவாறு, கையிலிருந்த தோல் பையைக் கவிழ்க்கிறாள். அதிலிருந்து 100, 50, 10, 5 என்று ரூபாய்களும், நாணயங்களும் தரையில் விழுகின்றன. அதைப் பார்த்து என்னவோ போல ஆகி விடுகிறாள் அந்தப் பெண்.

அந்த விஷயம் கடையின் நிர்வாகியின் பார்வைக்குச் செல்கிறது. அவர் கங்கூபாயிடம் விசாரித்து என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார். 'இப்போதைய `ஷோ' விற்கு ஏற்கெனவே ஆட்கள் `புக்' செய்து விட்டார்கள். அதனால் இந்த `ஷோ' வில் இடமில்லை. சாயங்கால ஷோவிற்குத்தான் இடம் ஒதுக்க முடியும்' என்கிறார்கள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. எனினும், சாயங்கால `ஷோ'விற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

ஆரம்பத்தில் அவளிடம் பேசிய இளம் பெண் கங்கூபாய் அணிந்திருந்த பழைய செருப்புகளைக் கழற்றி, ஒரு ஓரத்தில் வைக்கச் சொல்கிறாள். அதற்குப் பதிலாக புதிய  ஒரு ஜோடி செருப்புகளைக் கொண்டு வந்து தந்து, அவற்றை அணியும்படி கூறுகிறாள். என்ன நடக்கிறது என்றே தெரியாமல், கங்கூபாய் அந்தச் செருப்புகளை வாங்கி அணிந்து கொள்கிறாள். 

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. சாயங்காலம் வருகிறது. கங்கூபாய் உள்ளே அழைக்கப்படுகிறாள். நடந்து சென்றால், உள்ளே  ஒரு கூடம். அதில் சில நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏற்கெனவே பெண்களும், ஆண்களும் அமர்ந்திருக்கின்றனர். ஒரு நாற்காலியில் கங்கூபாயை அமரச் சொல்கிறார்கள். அவளுக்கு அடுத்த நாற்காலியில் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு வசதி படைத்த மனிதரின் தோற்றத்திலிருக்கும் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஏழை வேலைக்காரி கங்கூபாயையே வியப்புடன் பார்க்கிறார். பணக்காரர்கள் வரக் கூடிய அந்த இடத்தில் ஒரு அன்றாடம் காய்ச்சியா என்று ஆச்சரியப்படுவதைப் போல அவருடைய பார்வை இருக்கிறது.

அப்போது வசதி படைத்த ஒரு பெண் அங்கு வருகிறாள். ஓரத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் அவளை அமரச் சொல்கிறார்கள். அவளோ அங்கு அமராமல் கங்கூபாய் அமர்ந்திருக்கும் இடத்தில்தான் அமர்வேன் என்கிறாள். `இந்த பெண் கிராமப் பகுதியிலிருந்து வந்திருக்கும் ஏழை வேலைக்காரப் பெண் தானே!' என்கிறாள். ஆனால், அங்குள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 'இந்த இடத்தில் பணக்காரர், ஏழை பாகுபாடெல்லாம் கிடையாது. அந்தப் பெண்ணுக்கு இடம் ஒதுக்கப்பட்டு விட்டது. நீங்கள் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போய் உட்காருங்கள்' என்கிறார்கள். வேறு வழியில்லாமல், அந்தப் பெண் வேண்டா வெறுப்புடன் அந்த இடத்தில் போய் அமர்கிறாள்.

இப்போது 'ஷோ' ஆரம்பிக்கிறது. எல்லோரும் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். எல்லோருக்கும் முன்னாலும் இளம் பெண் ஒருத்தி ஒரு அழகான புடவையுடன் வந்து, ஒயிலாக நிற்கிறாள். எல்லோரும்  அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். அந்தப் பெண் போனவுடன், இன்னொரு பெண் வேறு வகையான புடவை அணிந்து வந்து நிற்கிறாள். அவள் போன பிறகு இன்னொரு பெண்... வேறொரு புடவை. எல்லோரையும் போல, கண்களை ஆர்வத்துடன் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள் கங்கூபாய். 

இறுதியாக ஒரு இளம் பெண் வருகிறாள். அவளைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறாள் கங்கூபாய். காரணம்- கிராமத்து எஜமானியின் மகள் அணிந்திருந்த அந்த வகையான புடவையை அவள் அணிந்திருந்ததுதான். அந்தப் புடவையில் இருக்கும் பறவைகள் சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கின்றன. `நான் வாங்க விரும்பும் புடவை இதுதான்.... இதுதான்.... என்கிறாள் கங்கூபாய் சத்தமாக. அவளையே எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர்.

ஆனால் ஒரு பிரச்சினை எழுகிறது. அதே புடவையை அங்கு வந்திருந்த அந்த பணக்காரப் பெண்ணும் கேட்கிறாள். இருப்பதோ ஒரு புடவை! என்ன செய்வது? அந்த வசதி படைத்த பெண் அந்த நிறுவனத்தின் பல வருட வாடிக்கையாளர். எனினும், கங்கூபாய்க்கே அதைத் தருவது என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்கிறார்கள். காரணம் அவள் ரொக்கப் பணம் தந்திருக்கிறாள். அந்த வசதி படைத்த பெண் ஏற்கெனவே மிகப் பெரிய தொகையை பாக்கி வைத்திருக்கிறாள். அவருக்கு 'இல்லை' என்று கூறிவிட, கோபமாக அவள் வெளியேறுகிறாள்.

அப்போதுதான் நமக்கே ஒரு உண்மை தெரிய வருகிறது. அங்குள்ள வாடிக்கையாளர்கள் எல்லோருமே இலட்சக்கணக்கான ரூபாய்களை அந்த நிறுவனத்திற்கு பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதும், கடனுக்குத்தான் புடவைகளை அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள் என்பதும். 

புடவை தனக்கு கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்துடன் போய் நிற்கிறாள் கங்கூபாய். அப்போது அவளுக்கு அதிர்ச்சி! இருக்கும் அந்த புடவையை தர மாட்டார்களாம் புதிதாக ஒரு புடவையை இனிமேல்  உருவாக்கித் தருவார்களாம். அதற்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை ஆகும் என்கிறார்கள்.  மனம் வாடிப் போய் நிற்கிறாள் கங்கூபாய். எனினும், புடவையுடன்தான் ஊருக்குச் செல்வது என்ற முடிவுடன் அவள் இருக்கிறாள். ஆனால், கையிலோ அதற்கு மேல் அவளிடம் பணமில்லை. 

அவளின் நிலைமையைப் புரிந்து கொள்ளும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி, அங்கு பணி புரியும் இளைஞனான வாமனின் அறையில், புடவை கிடைக்கும் வரை தங்கியிருக்கும்படி கூறுகிறார். அதற்கு வாமனும் ஒத்துக் கொள்கிறான்.

அவனுடைய அறைக்கு கங்கூபாய் செல்கிறாள். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியில் அந்த அறை இருக்கிறது. ஒரு திருமணமாகாத இளைஞனின் அறை எப்படி இருக்கும்? போட்ட பொருட்கள் போட்ட இடத்தில் கிடக்கின்றன. தாறுமாறாக இருக்கும் அந்த அறையைச் சுத்தம் பண்ணி ஒழுங்குபடுத்துகிறாள் கங்கூபாய். ஒவ்வொரு பொருளையும் சீராக எடுத்து வைக்கிறாள். கங்கூபாயின் கை பட்டதும் அந்த அறை அருமையாக மாறி விடுகிறது.ஹோட்டலிலிருந்து வாங்கி வந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவனுக்கு தன் கையால் உணவு தயாரித்து தருகிறாள் கங்கூபாய். தேநீரும்...


மறுநாள் அந்த நிறுவனத்தில் மாடல் அழகியாக பணி புரியும் மோனிஷா அந்த அறைக்கு வருகிறாள். வாமனின் அறை ஏற்கெனவே அவளுக்குத் தெரியும். அலங்கோலமாக எப்போதும் இருக்கக் கூடிய அந்த அறை மிகவும் அழகாகவும், சுத்தமாகவும் மாற்றப்பட்டு இருப்பதையும், கங்கூபாய்தான் அதைச் செய்திருக்கிறாள் என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள். கங்கூபாயை மிகுந்த மரியாதையுடன் அவள் பார்க்கிறாள்.

அவள் மீண்டும் கங்கூபாயை புடவை நிறுவனத்திற்கு அழைத்து வருகிறாள். அங்கு புடவைகளை வடிவமைக்கும் டிசைனரான ரோஹன் இருக்கிறான். அவன் கங்கூபாயின் உடல் அளவுகளை எடுக்கிறான். புடவை, ரவிக்கை இரண்டிற்கும்.

மறுநாள் காலையில் வாமனின் அறை உள்ள பகுதியிலிருக்கும் ஒரு பூங்காவிற்குச் செல்கிறாள் கங்கூபாய். அங்கு அவள் முதல் நாளன்று தனக்கு அருகில் புடவை நிறுவனத்தில் அமர்ந்து `ஷோ'வைப் பார்த்த அந்த வயதான பார்ஸி பணக்காரரைப் பார்க்கிறாள். அவரும் கங்கூபாயைப் பார்த்து அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார். பூங்காவிலிருக்கும் செடிகளை ஆசையுடன் பார்க்கும் கங்கூபாயிடம் `இதென்ன செடிகள்? என் வீட்டில் ஏராளமான செடிகள் இருக்கின்றன!' என்கிறார் பெருமையாக. அத்துடன் தன் வீட்டின் முகவரி கொண்ட முகவரி அட்டையையும் அவளிடம் தருகிறாள்.

அதற்கு அடுத்த நாள் கங்கூபாய் அந்த முகவரி அட்டையைக் காட்டி விசாரித்து.... விசாரித்து அந்தப் பணக்காரரின் வீட்டிற்கு வருகிறாள். மிகப் பெரிய பங்களா. அவர் தன் வீட்டுத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிக் காட்டுகிறார். எங்கு பார்த்தாலும் செடிகள்.... கொடிகள்.... மரங்கள்.... எல்லாவற்றையும் பார்த்த கங்கூபாய் `செடிகள் நிறைய இருக்கு ஆனால், எந்தச் செடியிலும் மலர்களே இல்லையே! மலர்கள் இருக்கக் கூடிய செடிகள் இருந்தால்தானே தோட்டத்திற்கு அழகு!' என்று கூறும் கங்கூபாய் `நாம என்ன பெருசா பண்ணிட போறோம்? சூரியன் எங்கே இருக்குன்னு செடிகளுக்குத் தெரியும். அந்த திசையை நோக்கி அவை வளரும். நம்ம வேலை அவற்றுக்கு நீர் ஊற்றுவதுதான்.எல்லாவற்றிற்கும் நீர் தேவைப்படுது. சில செடிகளுக்கு குறைவாக.... சில செடிகளுக்கு அதிகமாக...' என்றும் சொல்கிறாள். பூச்செடிகள் இல்லாமலிருக்கும் தன் வீட்டுத் தோட்டத்தை கங்கூபாய் பாராட்டவில்லையே என்ற குறை அந்த மனிதருக்கு! தோட்டத்தில் நடந்து செல்லும்போது அந்த பணக்காரரின் மகனான இளைஞன் ஏதோ ஒரு பெண்ணுடன் கோபமாக செல்ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறான்.

புடவை நிறுவனத்திற்கு தினமும் போய் வந்து கொண்டிருக்கிறாள் கங்கூபாய். அங்கு பணி புரியும் இரு இளம் பெண்கள் டிசைனர் ரோஹன் தங்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை தரமாட்டேன் என்று கூறுவதாக குறைப்படுகிறார்கள் `இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்' உத்தரவே வாங்காமல், நீங்கள் போய் விட்டு வாருங்கள். எதுவும் ஆகி விடாது' என்று கங்கூபாய் கூற, அந்த இளம் பெண்கள் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.

மறுநாள் அவர்கள் நிறுவனத்திற்கு வரவில்லை. டிசைனர் ரோஹன் கவலையில் இருக்கிறான். 'வீட்டில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசரமாக ஒரு புடவை டிசைன் பண்ணித் தர வேண்டும். நாளைக்கு நிகழ்ச்சி. இந்த நேரம் பார்த்து இங்கிருக்கும் பெண்கள் வேலைக்கு வரவில்லை. நான் இப்போது என்ன செய்வது?' என்று கூறுகிறான் அவன். அப்போது உதவிக்கு வருகிறாள் கங்கூபாய். அவனை தனக்கு கற்றுத் தரும்படி கூறுகிறாள். அவன் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னுடைய எம்ப்ராய்டரிங் அறிவை வைத்துக் கொண்டு, அவள் சிலவற்றைச் செய்கிறாள். அதைப் பார்த்து அசந்து போகிறான் ரோஹன். அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இரவு நீண்ட நேரம் ஆகும் வரை அவனுடன் சேர்ந்து அவளும் `எம்ப்ராய்டரிங்' வேலையில் ஈடுபடுகிறாள். இறுதியில், ஏழைப் பெண் கங்கூபாயின் உதவியால், அந்தப் புடவை தயாராக, மனதில் சந்தோஷம் பொங்க அவளுக்கு நன்றி கூறுகிறான் ரோஹன். 

அடுத்த நாள் சொல்லாமலே விடுமுறை எடுத்துச் சென்ற இளம் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்களிடம் ரோஹன் எதுவும் கூறவில்லை. இப்போது கங்கூபாயின் புடவை தயாரிக்கும் வேலை ஆரம்பமாகிறது. கங்கூபாயும் அவர்களுடன் சேர்ந்து தனக்குத் தெரிந்த திறமையைக் காட்டுகிறாள்.

பார்ஸி பணக்காரர் ஒருநாள் கங்கூபாயைப் பார்த்து பாராட்டுகிறார். செடிகளைப் பற்றி அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை மெச்சுகிறார்.

அவரின் மகனுக்கும், புடவை நிறுவனத்தில் பணியாற்றும் மாடலிங் பெண் மோனிஷாவிற்கும் இடையே  நெருங்கிய உறவு இருப்பதையும், அந்த இளைஞன் அவளுக்கேற்ற ஆளில்லை என்பதையும் உணர்ந்த கங்கூபாய், வாமன் மோனிஷாவை மனதிற்குள் உயிருக்கு உயிராக காதலிப்பதையும், அவன்தான் அவளுக்குச் சரியான ஜோடி என்பதையும் உணர்ந்து அவர்களுக்கிடையே காதல் வெற்றி பெற உதவுகிறாள். அவர்கள் இருவரும் கங்கூபாயை தெய்வத்தைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். 

புடவை வாங்கியவர்கள் எல்லோரும் இலட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பதால், அந்த நிறுவனம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதை விலைக்கு விற்பதற்கு தயாராக இருக்கிறார்கள். பார்ஸி பணக்காரரிடம் கூறி, மிகப் பெரிய தொகைக்கு அதை வாங்கச் செய்கிறாள் கங்கூபாய். அதை வாங்கியவன் வாமன். அதற்கு முழு பண உதவியையும் செய்தவர் அந்த பார்ஸி பணக்காரர். கங்கூபாய் கூறியதால் உண்டான நம்பிக்கையில் அவர் அதைச் செய்கிறார்.

 கங்கூபாயின் புடவை தயாராகி விடுகிறது. அதை அவளிடம் கொடுத்து அணியும்படி கூறுகிறார்கள். அவள் புடவை, ரவிக்கையுடன் கண்ணாடிக்கு முன்னால் நிற்கும்போது தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. தானா அது? அவளின் அந்த புடவையை வாங்கி பிளாஸ்டிக் பையில் வைத்து தருகிறார்கள்.

அன்று மாலை கங்கூபாய்க்கு வழியனுப்பு விழா. பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தன் செலவில் அதைச் செய்தவர் அந்த பார்ஸி பணக்காரர். வந்த மும்பையில் தங்கியிருந்த ஒரு வார காலத்தில் எல்லோருக்கும் நல்லவை பண்ணிய அந்த ஏழைப் பெண்ணை அந்த விழாவில் எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள். பார்ஸி பணக்காரர், புடவை நிறுவனத்தின் நிர்வாகி. வாமன், மோனிஷா, டிசைனர் ரோஹன் எல்லோரும் தன்னைப் புகழ, கண் கலங்கியவாறு அவர்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறாள் கங்கூபாய்.

கங்கூபாய் - மீண்டும் மாத்தெரான் கிராமத்து மண்ணில். புடவையுடன் திரும்பி வந்த அவளைப் பார்த்து அவளின் தோழி மலனுக்கு மிகவும் சந்தோஷம் உண்டாகிறது.


வரும் வழியில் தான் வேலை செய்யும் ஒரு வீட்டிற்குச் செல்கிறாள் கங்கூபாய். அங்கு இருப்பவள் ஒரு மாடலிங் பெண். அவள் மிகுந்த கவலையில் இருக்கிறாள். திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அன்று மாலையில் தன்னைப் பார்ப்பதற்காக வர இருப்பதாகவும், அப்போது கட்டுவதற்கு நல்ல ஒரு புடவை இல்லை என்றும், எல்லா புடவைகளும் சலவைக்குப் போய் விட்டதாகவும் அவள் கூறுகிறாள். தான் வாங்கி வந்திருக்கும் புதிய புடவையை அந்த இளம் பெண்ணிடம் கொடுத்து, பயன்படுத்தி விட்டு மறுநாள் தரும்படி கூறுகிறாள் கங்கூபாய். அன்று இரவு நிம்மதியாக தன் வீட்டில் அவள் உறங்குகிறாள்.

மறுநாள் பொழுது புலருகிறது. வீட்டு வேலை செய்வதற்காக, நடிக்க ஆசைப்படும் பெண்ணின் வீட்டிற்கு அவள் செல்கிறாள். மதுவின் போதை இன்னும் கூட நீங்காமல் அந்த இளம் பெண் படுத்துக் கிடக்கிறாள். கங்கூபாயைப் பார்த்து கண் விழிக்கும் அவள், அவளுக்கு நன்றி கூறுகிறாள். 'நீ புடவை தந்த ராசிதான். அந்த புதிய படத்தின் கதாநாயகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டேன்' என்கிறாள் அவள் மகிழ்ச்சியுடன். அப்போது திடுக்கிட்டு போய் கங்கூபாய் பார்க்கிறாள். அந்த இளம் பெண் அவிழ்த்துப்போட்ட கங்கூபாயின் புதிய புடவை முற்றிலும் நெருப்பில் எரிந்து சாம்பலாக குவிந்து கிடக்கிறது. அருகில் தரையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. கங்கூபாய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் ! அந்த இளம் பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறாள். 

நாட்கள் நகர்கின்றன. தினமும் காலையில் எழுவது... செடிகளுக்கு நீர் ஊற்றுவது... பறவைகளுக்கு இரை போடுவது... வேலைக்குச் செல்வது... தன்னுடைய சராசரி வாழ்க்கையை மீண்டும் தொடர்கிறாள் கங்கூபாய்.

ஒருநாள் கங்கூபாயைத் தேடி ஒரு சிறுவன் வருகிறான். மலையின் மேற்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருப்பவர்கள் அவளை வரச் சொன்னதாகக் கூறுகிறான். அவள் அங்கு செல்கிறாள்.

அங்கு இருந்தவர்கள் - வாமனும், மோனிஷாவும்! அவர்கள் புதிதாக வீடு கட்டி, அங்கு குடி வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் கங்கூபாய்க்கு மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!  'இந்த வீட்டைச் சுத்தம் செய்வது என் வேலை' என்கிறாள் அவள். அப்போது ஒரு பெண் அவளைக் கடந்து துடைப்பத்துடன் செல்கிறாள். அவள்தான் வீட்டு வேலைக்காக வைக்கப்பட்டிருப்பவள். அப்படியென்றால், அவர்கள் கங்கூபாயை மறந்துவிட்டார்களா?

ஒவ்வொரு அறையாக கங்கூபாய்க்குச் சுற்றிக்காட்டும் வாமன், மாடியிலிருக்கும் ஒரு அழகான அறையின் கதவைத் திறந்து கூறுகிறான்: 'கங்கூபாய், இந்த அறை உன்னுடைய அறை. நீ இந்த அறையில்தான் இனிமேல் இருக்க வேண்டும். உன் வீட்டின் சாளரத்தைத் திறந்தால் கண்கொள்ளாக் காட்சிகள் தெரியும் என்று அடிக்கடி கூறுவாயே! அதோ... உன் அறையின் சாளரத்தைத் திறந்து பார் மலைகள், செடிகள், மரங்கள், வானம், நீர்நிலை அனைத்தும் தெரியும்! அதற்காகத்தான் இந்த அறை உனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. காலம் முழுவதும், என்னுடனும், மோனிஷாவுடனும் ஒரு பெற்ற அன்னையைப் போல நீ இருக்க வேண்டும்!' என்று அவன் கூறுவதைக் கேட்டு, கங்கூபாயின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது, ஆனந்தக் கண்ணீர் !

இந்த படத்தில் கங்கூபாயாக வாழ்ந்திருப்பவர் - சரிதா ஜோஷி. ஏழை விதவைப் பெண் கங்கூபாய் கதாபாத்திரத்திற்கு இப்படி வேறு யாருமே உயிர் தந்திருக்க முடியாது.

மற்றவர்களுக்கு நல்லவை செய்தால், நம் வாழ்வு நிச்சயம் நல்லதாகவே அமையும் என்பதை கல்வெட்டு போல மனதில் பதிய வைக்கும் படமிது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.