Logo

ஹைவே

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4394
Highway

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஹைவே – Highway

(இந்தி திரைப்படம்)

2014 பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த படம். இரண்டே இரண்டு பிரதான கதாபாத்திரங்களை வைத்து தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட புதுமைப் படம். படத்தின் இயக்குநர் Imtiaz Ali. Jab we met, Love Aaj Kal ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி, தனகென ஒரு மிகச் சிறந்த பெயரைப் பெற்று வைத்திருக்கும் இம்தியாஸ் அலியின் முத்திரைப் படமிது. Sajid Nadiadwalaவுடன் இம்தியாஸ் அலியும் இணைந்து தயாரித்த 'Highway' படத்தின் கதையை எழுதியிருப்பதும் இம்தியாஸ் அலிதான்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சவுண்ட் டிசைனிங் : ரசூல் பூக்குட்டி.

133 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தின் கதாநாயகன் ரந்தீப் ஹூடா. கதாநாயகி- அலியா பட். (பிரபல பட தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் இவர்).

2014 பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 'பனோரமா' பிரிவில் 'Highway' திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதே கதையை இதே பெயரில் 1999ஆம் ஆண்டில் ஜீ-தொலைக்காட்சிக்காக அரை மணி நேர படமாக Imtiaz Ali இயக்கினார். அதற்கு மக்களிடம் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

அந்த கதையை முழு நீள திரைப்படமாக இயக்கினால் என்ன என்று அப்போதே நினைத்திருக்கிறார் இம்தியாஸ் அலி. கடந்த 15 வருடங்களாக தன் மனதிற்குள்ளேயே இந்த கதையை வைத்துக் கொண்டிருந்த இம்தியாஸ், காலப் போக்கில் அதில் ஏராளமான மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களின் குணங்கள், கதை நகரும் முறை ஆகியவற்றில் நிறைய மாற்றங்களைச் சிறிது சிறிதாக உருவாக்கி, இப்போது திரைக்கு வந்திருக்கும் படத்திற்கான கதையை உண்டாக்கியிருக்கிறார்.

முழு படத்தின் திரைக்கதையையும் முன்கூட்டியே எழுதி விடவில்லை. படமாக்கப்பட்ட இடங்களைப் பார்த்த பிறகு, புதிதாக ஏதாவது ஐடியாக்கள் தோன்ற, அதற்கேற்றபடி காட்சிளைப் புதிதாக உருவாக்கிய அனுபவங்களும் இம்தியாஸுக்கு உண்டாகியிருக்கிறது. படப்பிடிப்பிற்கு முன்பே இம்தியாஸ் வசனம் முழுவதையும் எழுதி வைத்திருக்கவில்லை. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் வைத்துத்தான் பெரும்பாலும் உரையாடல்களை எழுதியிருக்கிறார். 'முன் கூட்டியே தாளில் உரையாடல்களை நான் எழுதி தயார் பண்ணி வைத்திருந்தால், நிச்சயம் அவற்றில் உயிரோட்டம் இருக்காது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் வைத்தே, அந்தச் சூழ்நிலைகேற்றபடி எழுதியதால்தான் 'Highway' படத்தின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் யதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் அமைந்தன என்பதுதான் உண்மை' என்கிறார் இம்தியாஸ் அலி.

நெடுஞ்சாலையிலேயே நடைபெறும் இக்கதையை முதலில் மேற்கு வங்காளம்- பீஹார் - ஒடிஸா நெடுஞ்சாலையில்தான் படமாக்க இம்தியாஸ் திட்டமிட்டிருந்தார். பின்னர் தன் தீர்மானத்தை அவர் மாற்றிக் கொண்டார். டில்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 'Highway' படத்தின் படிப்பிடிப்பு நடைபெற்றது.

ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் மட்டுமே வைத்து ஒரு முழு நீள திரைப்படத்தை, சிறிதும் சோர்வு உண்டாகாத அளவிற்கு, பாராட்டக் கூடிய வகையில் இயக்குவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! இப்படிப்பட்ட ஒரு புதுமையான சிந்தனையைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகவே இயக்குநர் இம்தியாஸ் அலியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

படம் பார்த்த அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளிச் சென்ற 'Highway' படத்தின் கதை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்கள் எல்லோருக்கும் இப்போது உண்டாகியிருக்குமே! உங்களுக்காக இதோ கதை:

வீரா த்ரிபாதி ஒரு அழகான இளம் பெண். மிகப் பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான த்ரிபாதியின் மகள். அவளுக்கு திருமணம் நடக்க இருக்கும் மாலை மயங்கிய வேளையில் கதை ஆரம்பமாகிறது. தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகனிடம் தன்னைச் சிறிது தூரம் காரில் ஏற்றிக் கொண்டு செல்ல முடியுமா என்று கேட்கிறாள் வீரா. அதற்குச் சம்மதித்த அவன் அவளை தன் அருகில் உட்கார வைத்து காரை ஓட்டிச் செல்கிறான். கார் சிறிது தூரம் சென்றதும், மேலும் சிறிது தூரம் போகும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள் வீரா. 'இரவு நேரம்... சாலையில் பாதுகாப்பு இருக்காது. வேண்டாம்...' என்று கூறுகிறான் அந்த சொந்தக்கார இளைஞன். ஆனால்,  அவளோ பிடிவாதமாக இருக்கிறாள். வேறு வழியில்லாமல் அவன் காரை ஓட்டிச் செல்கிறான். ஒரு பெட்ரோல் பங்கிற்கு அருகில் செல்லும்போது, சிறிதும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் முகமூடி அணிந்திருக்கும் ஒரு கூட்டம் இளம் பெண் வீராவை மட்டும் கடத்திக் கொண்டு செல்கிறது.

ஒரு பாழடைந்த கட்டிடம். கடத்தல்காரர்கள் தங்களின் முகமூடிகளைக் கழற்றுகிறார்கள். ஆளைக் கடத்தி, அதை வைத்து பணக்காரர்களிடம் பணம் பறிக்கக் கூடிய கூட்டம்தான். ஆனால், அந்த இளம் பெண்ணின் தந்தை மிகப் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர் என்பதும், அரசாங்க அளவில் அவருக்கு வியக்கத்தக்க அளவில் செல்வாக்கு இருக்கிறது என்பதும் தெரிந்ததும் அந்தக் கூட்டம் சிறிது அச்சமடைய தொடங்குகிறது. அவளை கடத்தியது கூட தவறோ என்று கூட அவர்கள் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞன், வீராவின் அழகில் தன் மனதைப் பறி கொடுக்கிறான். அவளைப் பார்த்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறான். 'நான் கூறுவதைக் கேள். உன்னை நான் இங்கிருந்து தப்பிக்க வைக்கிறேன்' என்கிறான் அவன். இதையே அவன் திரும்பத் திரும்ப பல்வேறு சூழ்நிலைகளில் கூறிக் கொண்டே இருக்கிறான். ஒரு சமயம் அவன் இந்த வார்த்தைகளை அவளிடம் கூறிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தின் தலைவனான மஹாவீர் பதி பார்த்து விடுகிறான். அவ்வளவுதான்- அந்த இளைஞனை அந்த இடத்திலிருந்தே விரட்டியடிக்கிறான்.

இதற்கிடையில் வீராவை அவளுடைய குடும்பம் பலமாக தேடிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவள் கடத்தப்பட்டு எந்த இடத்தில் கடத்தல்காரர்களால் வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவளுடைய தந்தையும், மற்றவர்களும் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதையும், காவல் துறையின் உதவியுடன் சிறிது நேரத்தில் அங்கு வரப் போகிறார்கள் என்பதையும் மஹாவீர் தெரிந்து கொள்கிறான்.

அடுத்த நிமிடம் அங்கிருந்து வேறொரு தூர இடத்திற்கு அவளைக் கொண்டு செல்கிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத இடமது. அந்த இடத்தில் அவளை வைத்துக் கொண்டிருப்பதும் பாதுகாப்பானது அல்ல என்பது தெரிந்ததும், மற்ற ஆட்களை ஒதுக்கி விட்டு, ஒரு லாரியில் அவளை மட்டும் ஏறுமாறு கூறி விட்டு, அதில் தான் மட்டும் ஏறுகிறான் மஹாவீர்.


அந்த பழைய லாரியில் வீராவும், மஹாவீரும் மட்டும்... என்னதான் நடக்கிறதோ, அது நடக்கட்டும் என்ற மனத் துணிவுடன் இருக்கிறான் மஹாவீர். இப்போது அவர்களுடைய லாரி பயணம் ஆரம்பமாகிறது- நெடுஞ்சாலையில். காவல் துறையினரின் கண்களில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் பயணிக்கின்றனர். நகரங்கள், கிராமங்கள் என்று லாரி பயணிக்கிறது. ஏற்றம், இறக்கம், மேடு, பள்ளம், மலை, வயல் வெளிகள், அடர்ந்த காடுகள், பாலைவனம் என்று லாரி பல வகையான இடங்களையும் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கிறது.

ஆரம்பத்தில் பயங்கமான கூட்டமொன்றால் கடத்தப்பட்டு விட்டோமே என்று பதட்டமும், பயமும் அடைந்த வீராவிற்கு இப்போது சிறிது கூட அச்சமோ, பதைபதைப்போ இல்லாமற் போகிறது. எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் மிகவும் சர்வ சாதாரணமாக லாரியின் முன் இருக்கையில் அவள் அமர்ந்திருக்கிறாள். மலர்ந்த முகத்துடனும், பயமற்ற கண்களுடனும், புன்னகை தவழும் அதரங்களுடனும் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து மஹாவீர் ஆச்சரிப்படுகிறான். சிறிது கூட கலக்கமே இல்லாமல் அந்தப் பெண்ணால் எப்படி இருக்க முடிகிறது என்று அவன் நினைக்கிறான்.

இன்னும் சொல்லப் போனால்- மஹாவீர்தான் கலங்கிப் போன மனதுடனும், பய உணர்வுடனும் இருக்கிறான். எங்கே வீராவின் தந்தை தன்னுடைய அரசாங்க செல்வாக்கை வைத்து, காவல் துறையை முழுமையாக பயன்படுத்தி தன்னை வளைத்து ஒரு வழி பண்ணி விடுவாரோ என்ற அச்சத்துடன் அவன் லாரியை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவன் பெரும்பாலும் பேசுவதே இல்லை. எப்போதாவது ஒரு முறைதான் வாயையே திறக்கிறான். முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு, சிறிது கூட உதட்டில் புன்னகையோ, மென்மைத்தனமோ இல்லாமல் கோபக்கார இளைஞனைப் போல காட்டிக் கொண்டு லாரியை ஓட்டுவதில் மட்டுமே கவனமாக இருக்கும் மஹாவீரையே வியப்புடன் பார்க்கிறாள் வீரா.

ஒவ்வொரு மாநிலமாக லாரி கடந்து சென்று கொண்டிருக்கிறது. இடையில் ஆங்காங்கே சோதனைகள்... கெடுபிடிகள்... எல்லாவற்றையும் தாண்டித்தான் லாரி பயணிக்கிறது. பயணத்திற்கு மத்தியில் வீராவிற்கு தேநீர், சிற்றுண்டி, உணவு என்று பலவற்றையும் வாங்கித் தருகிறான் மஹாவீர். அவற்றை ஆவலுடன் வாங்கிச் சாப்பிடுகிறாள் வீரா.

இரவு, பகல், வெயில், மழை, குளிர் என்று பயணம் தொடர்கிறது. இப்போது மஹாவீரைப் பற்றி எந்தவித பயமும் இல்லை வீராவிற்கு. பல்வேறு இடங்களையும் தாண்டிச் செல்லும் அந்த பயணத்தை மிகவும் விரும்பி ரசிக்கிறாள் வீரா. பயணத்திற்கு மத்தியில் தன்னைப் பற்றி மனம் திறந்து அவள் மஹாவீரிடம் கூறுகிறாள். தான் மிகப் பெரிய பணக்காரரின் மகளாக இருந்தாலும், செல்வத்திற்கு மத்தியில் புரண்டு கொண்டிருந்தாலும், அரண்மனையைப் போன்ற வீட்டில் இருந்தாலும், தான் ஒரு கூண்டுப் பறவையே என்கிறாள் அவள். சிறிய வயதிலிருந்து இப்போது வரை சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாத அளவிற்கு, தான் ஒரு அடைக்கப்பட்ட கிளியாக இருந்து வரும் உண்மையை அவள் வெளிப்படுத்துகிறாள். வீட்டைத் தாண்டி எங்கும் தனியாக போவதற்கு வீட்டிலுள்ளவர்கள் தன்னை அனுமதித்ததில்லை என்கிறாள் அவள். இப்போது பல்வேறு நகரங்களையும், கிராமங்களையும், இயற்கையின் அழகுகளையும், இதற்கு முன்பு பார்த்திராத மாநிலங்களையும், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளையும், பண்பாடுகளையும், தோற்றங்களையும், ஆடைகளையும், அணிகலன்களையும், மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கும் மனிதர்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது குறித்து தான் மிகவும் சந்தோஷப்படுவதாகவும், ஆனந்தத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கூறுகிறாள் வீரா. இப்படிப்பட்ட மிகப் பெரிய உலகம் வெளியே இருக்கிறது என்ற விஷயமே இதுவரை தனக்கு தெரியாமல் போய் விட்டது என்கிறாள் அவள். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தன் வாழ்கையில் தனக்கு கிடைத்ததற்காக தான் மனதில் மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறாள் அவள்.

அவள் கூறுவதையே ஆச்சரியத்துடன், எதுவுமே பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான் மஹாவீர். அவனால் இனிமேல் தனக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதையும், அவன் முழுமையான நம்பிகைக்கு உரியவனாக ஆகி விட்டான் என்பதையும் உணர்ந்து கொண்ட அவள் தன் மனதில் இன்னும் மறையாமல் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை மனம் திறந்து அவனிடம் கூறுகிறாள். 'எனக்கு அப்போது 9 வயது. கள்ளங்கபடமற்ற வயது. எது நல்லது, எது கெட்டது என்பது கூட தெரியாது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு மாமா இருந்தார். அவருக்கு அப்போதே 40 வயதிற்கு மேல் இருக்கும். குளியலறைக்குள் நான் இருக்கும்போது, அவர் உள்ளே நுழைந்து, என்னிடம் நடக்கக் கூடாத வகையில் நடப்பார். அப்போது எனக்கு அவருடைய நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய வயது கூடக் கூட அவருடைய மோசமான நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பிட்ட வயதை நான் அடைந்தபோது, அவர் முறையற்ற வழியில் நடக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் மாமாவிடம் நான் அதை வெளிப்படையாக கூறவும் செய்தேன். அதற்குப் பிறகும் தன்னுடைய சில்மிஷ வேலைகளை அவர் சிறிதும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல், என் தாயிடம் விஷயத்தைக் கூறினேன். 'இந்த விஷயத்தை வேறு யாரிடமும் கூறி விடாதே. உனக்குள் வைத்துக் கொள்.' என்று என் அன்னை என்னை அடக்கப் பார்த்தாரே தவிர, என் மாமாவைக் கண்டிக்கவில்லை. என் மாமாவின் தொந்தரவுகள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால்- அந்த வீட்டிற்குத் திரும்பிப் போகவே எனக்கு பிடிக்கவில்லை. என் மாமா என்னை பலமுறை நாசமாக்கிய அந்த வீடு எனக்கு எப்படி பிடிக்கும்? அதை விட இந்த சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் இந்த இனிய பயணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று கூறுகிறாள் வீரா.

அவளுடைய சோக கதையைக் கேட்ட மஹாவீர் தன்னுடைய அவல வாழ்க்கையை அவளிடம் கூறுகிறான். சிறு வயதிலிருந்தே அன்பு, பாசம் என்றால் என்னவென்றே தெரியாத ஏழ்மைச் சூழலில் தான் வளர்ந்ததையும், வறுமையின் பிடியில் சிக்கி வாடிய நாட்களையும், அதனால் முரட்டுத்தனமான மனிதனாக தான் மாறிப் போனதையும் அவன் கூறுகிறான். தன் துயர கதையை வீரா கூற, தன் சோக கதையை மஹாவீர் கூற... அவர்களுக்கிடையே மேலும் ஒரு நெருக்க சூழ்நிலை உண்டாகிறது. இருவரும் புன்னகை தவழ, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.


நெடுஞ்சாலையில் ஒரு இரவு வேளையில்... ஒரு இடத்தில் காவல் துறையினரின் சோதனை. ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி, டார்ச் விளக்கு அடித்து, சோதனை போடுகின்றனர். அவ்வளவுதான்- பதறிப் போகிறான் மஹாவீர். வீராவும்தான்... ஆனால், புத்திசாலித்தனமாக ஒளிந்து கொண்டு, காவல் துறையினரின் கண்களில் மஹாவீர் சிக்கிக் கொள்ளாதது மாதிரி அவள் பார்த்துக் கொள்கிறாள். அந்தச் சம்பவம் மஹாவீரின் மனதை உருக்கி விடுகிறது. அவளை தன்னிடமிருந்து விலகி போய் விடும்படி அவன் கூறுகிறான். ஆனால், அவனை விட்டு போவதற்கு அவள் மறுத்து விடுகிறாள்.

பயணம் மீண்டும் நெடுஞ்சாலையில் தொடர்கிறது. ஒரு இரவு வேளையில்... ஒரு பேருந்து நிலையத்திற்கு அருகில் லாரியை நிறுத்தி விட்டு, மஹாவீர், வீராவிற்கு தேநீர் வாங்கிக் கொண்டு வந்து தருகிறான். இருவரும் லாரியில் இருக்கின்றனர். லாரியின் பின் பகுதியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டே வீரா, பேருந்து நிலையத்திற்கு முன்னால் நெருப்பை மூட்டி, குளிர் காய்ந்தவாறு தாளம் தட்டி, நாட்டு பாடலை சிலர் பாடிக் கொண்டிருக்க, அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை வாழ்க்கையில் தான் பார்த்திராத ஒரு புதிய அனுபவம் தனக்குக் கிடைத்ததைப் போல அவள் உணர்கிறாள்.

லாரி ஜெய்ப்பூரை அடைகிறது. இருவரும் லாரியிலிருந்து இறங்கி கடைத் தெருக்களைச் சுற்றிப் பார்க்கின்றனர். அவளுக்காக கழுத்தில் அணியக் கூடிய பல வகையான பாசிகளை வாங்குகிறான் மஹாவீர்.

மீண்டும் பயணம் தொடர்கிறது. பஞ்சாப், இமாச்சல பிரதேசத்தைத் தாண்டி, காஷ்மீருக்குள் அவர்கள் நுழைகிறார்கள். காஷ்மீரில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு மலைப் பகுதியில், அன்று இரவு தங்குவதற்காக ஒரு அறை மட்டும் கொண்ட ஒரு வீட்டை அவர்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். மஹாவீர் வெளியே சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வர, வீரா அங்கிருக்கும் விறகு அடுப்பில் சமையல் செய்கிறாள். அவள் சமைத்த உணவை, இருவரும் சாப்பிடுகின்றனர். தான் செய்த சமையலை 'நன்றாக இருக்கிறது' என்று கூறி, ரசித்து சாப்பிடும் மஹாவீரையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறாள் வீரா. அன்று இரவு இருவரும் அந்தச் சிறிய வீட்டிற்குள் உறங்குகின்றனர்.

பொழுது புலர்கிறது. வீட்டிற்குள் மஹாவீர் இல்லை. வெளியே வருகிறாள் வீரா. மஹாவீர் மலைப் பகுதியின் புல்வெளியில் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறான். திடீரென்று போலீஸ் துறையினர் அந்த இடத்தைச் சூழ்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அவர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட, அது பாய்ந்து, கீழே சாய்கிறான் மஹாவீர். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அவன் ஏற்கெனவே துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லியிலிருக்கும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துக் கொண்டு வரப்படுகிறாள் வீரா. அவளைச் சுற்றிலும் வீட்டிலுள்ள எல்லோரும், அவளைக் கேள்விகள் கேட்டு துளைக்கின்றனர். ஆனால், அவள் அவர்களைக் கேள்வியால் துளைத்தெடுக்கிறாள். 'இதோ... எனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறாரே... மாமா. இவர் என்னுடைய 9 வயதிலிருந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அதை கூறிய பிறகும், என் அம்மா அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. இது எதுவுமே தெரியாத மாதிரி இதோ எனக்கு முன்னால் என் தாய் அமர்ந்திருக்கிறார். பணம், அரண்மனை, ஆடம்பரம் எல்லாம் இருந்தாலும் எனக்கு சிறிது கூட சுதந்திரம் இல்லை. நான் இங்கு ஒரு கூண்டுப் பறவை. நான் ஏதோ கடத்தப்பட்டதாகவும், துயரங்களை அனுபவித்ததாகவும் நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. இப்போதுதான் புதிய உலகங்களையே நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறேன். இந்த வீட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. என்னை யாரும் தடுக்காதீர்கள். இனிமேல் வெளியே இருப்பதுதான் என்னுடைய உலகம். அங்குதான் என்னுடைய இனி இருக்கக் கூடிய வாழ்க்கையைச் செலவிடப் போகிறேன். சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு, சந்தோஷாக இருக்கப் போகிறேன்' என்கிறாள் வீரா. பதில் கூற முடியாமல் எல்லோரும் சிலையென அமர்ந்திருக்கின்றனர்.

அந்த மாளிகையின் கதவு திறக்கப்படுகிறது. தன் காரில் அந்த வீட்டை விட்டு வெளியேறி, நெடுஞ்சாலையில் பயணிக்கிறாள் வீரா.

மீண்டும் காஷ்மீர் மலைப் பகுதி. முன்பு மஹாவீருடன் இருந்த அதே இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மேட்டில் நின்று கொண்டிருக்கிறாள் வீரா. சற்று தூரத்தில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஓடி விடியாடிக் கொண்டிருக்கின்றனர். தன் இளமைக் காலத்தை மனதில் அசை போட்டுக் கொண்டும், மஹாவீருடன் தான் செலவழித்த இனிய நாட்களை நினைத்துக் கொண்டும் புன்னகை தவழ, அந்த மலைப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறாள் வீரா. அந்த அழகு தேவதையை, சுற்றிலும் ஆட்சி செய்யும் இயற்கை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது.

Veera Tripathiயாக நடித்த Alia Bhatt, Mahaveer Bhatiயாக நடித்த Randeep Hooda- இருவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

படத்தில் மொத்தம் 9 பாடல்கள். அவற்றில் 'மாஹி வே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். பாடல்களைச் செயற்கையாக இடம் பெறச் செய்யாமல், கதையின் போக்கிலேயே இருப்பதைப் போல இடம் பெறச் செய்ததற்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும், இயக்குநர் இம்தியாஸ் அலியையும் கட்டாயம் நாம் பாராட்ட வேண்டும்.

திரைக்கு வந்தபோதே நான் 'Highway' படத்தைப் பார்த்து விட்டேன். எனினும், அதன் ஒவ்வாரு காட்சியும் இப்போதும் என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.