Logo

ஹாச்சி : ஏ டாக்'ஸ் டேல்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4377
Hachi : A Dog's Tale

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஹாச்சி : ஏ டாக்'ஸ் டேல் – Hachi : A Dog's Tale

(ஆங்கில திரைப்படம்)

2009ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். Hachiko என்ற உண்மையான பாசம் வைத்திருந்த ஒரு நாயின் உண்மைக் கதையை வைத்து இப்படம் படமாக்கப்பட்டது. அந்த நாயின் கதை 1987 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழியில் 'Hachiko Monogatari' என்ற பெயரில் ஏற்கெனவே திரைப்படமாக எடுக்கப்பட்டது. இரண்டாவதாக படமாக்கப்பட்ட இப்படத்தை Lassee Hallstrom இயக்கினார்.

'Hachi : A Dog's Tale' திரைப்படம் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'Seattle International Film Festival'இல் முதன் முறையாக திரையிடப்பட்டு, எல்லோரின் உயர்வான பாராட்டுக்களையும் பெற்றது. அதைத் தொடர்ந்து ஜப்பானில் திரையிடப்பட்டது. பின்னர் Sony Pictures Entertainment அமெரிக்காவில் இப்படத்தைத் திரையிட்டது. தொடர்ந்து 25 பல்வேறு நாடுகளிலும் திரையிடப்பட்டு, மிகப் பெரிய வெற்றியையும், புகழையும் படம் பெற்றது.

நான் இந்தப் படத்தை முழுமையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் பார்த்தேன். ஒரு நாயின் கதையை இந்த அளவிற்கு ஆழமாகவும், உணர்ச்சிமயமாகவும் படமாக்க முடியுமா என்று படத்தைப் பார்க்கும்போது, நான் ஆச்சரியப்பட்டேன். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, படத்தை இயக்கிய Lasse Hallstrom மீது எனக்கு அளவற்ற மரியாதை உண்டானது. அவரை மனதிற்குள் பல முறைகள் நான் பாராட்டிக் கொண்டேன்.

நான் பார்த்து, ரசித்து, வியந்த 'Hachi A Dog's Tale' திரைப்படத்தின் கதை இதுதான்:

பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஹீரோக்களைப் பற்றி வகுப்பறையில் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். ரோனி என்ற மாணவன், தன் தாத்தா வளர்த்த நாயின் கதையைக் கூறி அதுதான். தன்னுடைய ஹீரோ என்கிறான். அவன் கூறும் நாயின் கதை இது.

பல வருடங்களுக்கு முன்பு, ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புகை வண்டியில் ஒரு நாய்க்குட்டி அனுப்பப்படுகிறது. அமெரிக்காவை அடைந்த நாய்க்குட்டி ஒரு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு புகைவண்டி நிலையத்தில் சுமைகள் ஏற்றப்படும் வண்டியில் ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த தள்ளு வண்டியில் இருக்கும்போது. அது இருந்த கூண்டு தவறி கீழே விழுந்து விடுகிறது. அதை யாரும் கவனிக்கவில்லை.

கூண்டுடன் நாய்க்குட்டி புகை வண்டி நிலையத்தின் நடைபாதையில் கிடக்கிறது. அதை யாரும் எடுப்பதற்கு தயாராக இல்லை. அதை பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் பார்க்கிறார். அதை அவர் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் புகார் செய்து கேட்கும் பட்சம், அதை கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். ஆரம்பத்தில் அவருடைய மனைவி Cate, அந்த நாய்க்குட்டியை தங்களின் வீட்டில் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதவளாக இருக்கிறாள். Parker Wilson நாய்க்குட்டியை உற்றுப் பார்க்கிறார். அது 'Akita' என்ற ஜப்பானிய வகை நாய் என்பதை அவர் தெரிந்து கொள்கிறார்.

மறுநாள் புகை வண்டி நிலையத்திற்கு பார்க்கர் வில்ஸன் நாய்க்குட்டியுடன் வருகிறார். அதன் சொந்தக்காரர் அதைப் பற்றி ஏதாவது புகார் செய்திருக்கிறாரா என்று விசாரிக்கிறார். அப்படி யாரும் இதுவரை புகார் செய்யவில்லை என்று தெரிந்ததும், என்ன செய்வது என்று அவர் யோசிக்கிறார். அதனால், அவர் அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் Ken என்பவரிடம், நாய்க்குட்டி கிடைத்த கதையைக் கூறுகிறார். அதை கேட்ட Ken 'இந்த நாய்க்குட்டி உங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்!' என்கிறார்.

நாய்க்குட்டியின் காதில் ஒரு அடையாளம் இருக்கிறது. அது ஜப்பானிய மொழியில் 'எட்டு' என்று அர்த்தம். அதை 'ஹாச்சி', என்று அவர் மொழி பெயர்த்து கூறுகிறார். 'நல்ல அதிர்ஷ்டம்' என்று ஜப்பானிய மொழியில் அதற்கு அர்த்தமாம். அந்த நாய்க்குட்டியை 'Hachiko' என்று பெயரிட்டு அழைக்க தீர்மானிக்கிறார் பார்க்கர் வில்ஸன்.

ஏதாவது ஒரு பொருளை விட்டெறிந்து, அதை எடுத்து வரும்படி நாய்க்குட்டியிடம் கூறுகிறார். ஆனால், அதைச் செய்வதற்கு அந்த நாய்க்குட்டி தயாராக இல்லை.

இதற்கிடையில் பார்க்கர் வில்ஸனின் மனைவி Cateடிற்கு யாரோ ஃபோன் செய்கிறார்கள். அந்த நாய்க்குட்டியை தாங்கள் வாங்கி, வளர்க்க விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். தன் கணவர் எந்த அளவிற்கு Hachi என்ற அந்த நாய்க்குட்டியின் மீது பிரியம் வைத்திருக்கிறார் என்பதை கண்கூடாகப் பார்த்த அவள், 'நாய் ஏற்கெனவே வேறொருவரால் வாங்குவதற்காக, பேசப்பட்டு விட்டது' என்று பொய் கூறுகிறாள்.

மற்ற நாய்களைப் போல விரட்டிக் கொண்டு வருவது, ஓடுவது, விட்டெறியப்படும் பொருட்களை ஓடிச் சென்று எடுத்து வருவது போன்ற செயல்களைச் செய்யாமல் இருக்கும் ஹாச்சியின் தனித்துவ குணத்தைப் பார்த்து, பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் ஆச்சரியப்படுகிறார். அது அவருக்கு மிகவும் வினோதமாக இருக்கிறது.

ஒரு நாள் காலையில், பார்க்கர் தன் வேலைக்குக் கிளம்புகிறார். அவரைப் பின் தொடர்ந்து புகை வண்டி நிலையத்திற்கு ஹாச்சியும் வருகிறது. பார்க்கர் வில்ஸன் திரும்பவும் வீட்டில் கொண்டு விடுவது வரை. அது அவரை விட்டு போக மறுக்கிறது. சாயங்காலம் ஹாச்சி, தானே புகை வண்டி நிலையத்திற்குச் செல்கிறது. பார்க்கர் புகை வண்டியில் திரும்பி வருவது வரை, அவருக்காக அது புகை வண்டி நிலையத்திலேயே காத்து நிற்கிறது. பார்க்கர் நாயின் குணத்தைப் பார்த்து மனதில் இனம் புரியாத ஒரு உணர்வை அடைகிறார்.


அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஹாச்சியை தான் செல்லும்போது, புகை வண்டி நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்கிறார். பார்க்கர் வில்ஸன் அங்கிருந்து புகை வண்டியில் ஏறி கிளம்பியவுடன், ஹாச்சி வீட்டிற்குத் திரும்பி வந்து விடும். பின்னர், சாயங்காலம் வந்து விட்டால், தன் எஜமானரை வரவேற்பதற்காக அது புகை வண்டி நிலையத்திலேயே காத்துக் கொண்டிருக்கும். அவர் வந்த பிறகு, இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வருவார்கள். இந்தச் செயல் ஒவ்வொரு நாளும் நடக்கும்.

நாட்கள் மிகவும் வேகமாக கடந்தோடுகின்றன. ஒருநாள் பார்க்கர் வில்ஸன் வேலைக்காகக் கிளம்புகிறார். அவருடன் செல்ல ஹாச்சி மறுக்கிறது. பார்க்கர் அங்கிருந்து கிளம்புகிறார். அவர் தன் கையில் ஒரு பந்தை வைத்திருக்க, அவரைப் பின் தொடர்ந்து ஓடுகிறது ஹாச்சி. அந்தச் செயலைப் பார்த்து பார்க்கர் வில்ஸன் ஆச்சரியப்படுகிறார். இறுதியில் தான் விட்டெறியும் பந்தை வேகமாக ஓடிச் சென்று எடுத்து வருவதற்கு ஹாச்சி தயாராகி விட்டதை நினைத்து, அவர் மனதிற்குள் சந்தோஷப்படுகிறார். கல்லூரிக்குச் செல்வது தாமதமாகி விடக் கூடாதே என்று நினைக்கும் அவர், தான் செல்லக் கூடிய புகை வண்டியில் ஏறுகிறார். ஆனால், அவருடைய ஹாச்சி அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல், அவர் புகை வண்டியில் ஏறி, தன் பயணத்தைத் தொடர்கிறார்.

கல்லூரிக்குச் சென்ற பேராசிரியர் பார்க்கர் வில்ஸன், தன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டே மாணவர்களுக்கு இசை வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். ஹாச்சியுடன் காலையில் விளையாடிய அதே பந்துதான். திடீரென்று அவருக்கு மாரடைப்பு உண்டாகிறது. அடுத்த நிமிடம் அவர் மரணத்தைத் தழுவுகிறார்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கே அந்த காட்சி ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கும்.

புகை வண்டி நிலையத்தில், மாலை வேளையில் தன் எஜமானர் பார்க்கர் வில்ஸன் திரும்பி வரும் புகை வண்டியை எதிர்பார்த்து, ஹாச்சி அமர்ந்திருக்கிறது. ஆனால், பார்க்கர் வரவேயில்லை. எப்படி வருவார்? அவர்தான் இந்த உலகத்தை விட்டே போய் விட்டாரே! நேரம் மணிக் கணக்காக கடந்தோடிக் கொண்டிருக்கிறது. மாலை இரவாகிறது. புகை வண்டி நிலையத்தில் ஆட்களின் கூட்டம் குறைகிறது. எங்கும் ஒரே அமைதி.... இரவில் விழும் கடுமையான பனியில் தன் எஜமானரை எதிர்பார்த்துக் கொண்டு. அந்த அன்பே உருவான நாய்  படுத்திருக்கிறது. அதன் உடலெங்கும் பனிப் போர்வை... இப்போது பார்க்கர் வில்ஸனின் மருமகன் மைக்கேல் வருகிறான். அவன் தன் மாமாவை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் ஹாச்சியைப் பார்க்கிறான். அதை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறான்.

மறுநாள் காலையில் ஹாச்சி திரும்பவும் புகை வண்டி நிலையத்திற்கு வருகிறது. பகல் முழுவதும் அங்கேயே இருக்கிறது. இரவிலும் கூட அங்கிருந்து அது நகர்வதாக இல்லை. நாட்கள் நகர்கின்றன. Cate தாங்கள் குடியிருந்த வீட்டை விற்கிறாள். ஹாச்சியை தன் மகள் Andy யின் வீட்டிற்கு அனுப்புகிறாள். அந்த வீட்டில் Andy, அவளுடைய கணவன் மைக்கேல், அவர்களுடைய ஆண் குழந்தை ரோணி ஆகியோர் இருக்கிறார்கள். அந்த வீட்டிற்குச் சென்ற நாய் ஹாச்சி, அன்கிருந்து தப்பித்து, தான் இருந்த பழைய வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டு பிடித்து அங்கு வருகிறது. பின்னர், அங்கிருந்து புகை வண்டி நிலையத்திற்குச் செல்கிறது. அங்கு தான் எப்போதும் அமர்ந்திருக்கக் கூடிய இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு மனிதர் அந்த நாய்க்கு சாப்பிடுவதற்கு உணவு தருகிறார். தினமும் பார்க்கர் வில்ஸனுடன் அது வருவதையும், மாலையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பதையும், அவருடன் சேர்ந்து சந்தோஷமாக வீட்டிற்கு திரும்பிச் சென்றதையும் தினமும் பார்த்த மனிதராயிற்றே அவர்! பேராசிரியர் பார்க்கர் வில்ஸன் இறந்த விஷயம் அந்த மனிதருக்குத் தெரியும். உண்மை தெரியாமல், தன் எஜமானரை எதிர்பார்த்துக் கொண்டு புகை வண்டி நிலையத்தில் வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் ஹாச்சியைப் பார்த்து அவருக்கு கண்ணீர் வருகிறது. நமக்கும்தான்..

Andy புகை வண்டி நிலையத்திற்கு வருகிறாள். தன் தந்தையை எதிர்பார்த்துக் கொண்டு, கடுங்குளிரில் அமர்ந்து கொண்டிருக்கும் நாய் ஹாச்சியை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறாள். ஆனால், மறுநாள் காலையில் அது புகை வண்டி நிலையத்திற்கு கிளம்புகிறது. அதை அவள் தடுக்கவில்லை. தன் விருப்பப்படி அது செல்லட்டும் என்று அதை சுதந்திரமாக அவள் போக விடுகிறாள்.

அடுத்த பத்து வருடங்கள், ஹாச்சி தினமும் புகை வண்டி நிலையத்திற்கு வந்து, தன் எஜமானர் பார்க்கர் வில்ஸனுக்காக காத்திருக்கிறது. மரணமடைந்த தன் எஜமானரின் கதை தெரியாமல், குளிரிலும், மழையிலும் புகை வண்டி நிலையத்தில் காத்துக் கிடக்கும் அந்த நாயின் கதை பத்திரிகையில் பிரசுரமாகிறது. பார்க்கரின் மனைவி கேட், தன் கணவரின் கல்லறையைப் பார்ப்பதற்காக திரும்பி வருகிறாள். அங்கு தன் கணவருடன் பணியாற்றிய ஜப்பானிய பேராசிரியர் கென்னைப் பார்க்கிறாள். தன் கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்கிறாள் அவள். புகை வண்டி நிலையத்திற்கு அவள் வருகிறாள். அங்கு தன் கணவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஹாச்சியைப் பார்த்து அவள் அதிர்ச்சியடைகிறாள். 

கவலையுடன் இருக்கும் கேட், ஹாச்சியுடன் அடுத்த புகை வண்டிக்காக காத்திருக்கிறாள். வீட்டிற்கு வரும் கேட், இப்போது பத்து வயது சிறுவனாக இருக்கும் தன் பேரன் ரோணியிடம், ஹாச்சியின் கதையைக் கூறுகிறாள்.


ஹாச்சி தினமும் அந்த புகை வண்டி நிலையத்திற்குச் செல்கிறது. தன் எஜமானரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் இறுதி வாழ்நாள் வரை அந்தச் செயல் தொடர்கிறது. கடைசி நாளன்று, தன் கடந்த கால வாழ்க்கையை அது நினைத்துப் பார்க்கிறது. தான் புகை வண்டி நிலையத்தின் நடைப்பாதையில் அனாதையாகக் கிடந்தது, தன் எஜமானர் பார்க்கர் வில்ஸன் தன்னை வீட்டிற்குக் கொண்டு சென்று பாசத்துடன் வளர்த்தது, தான் அவருடன் தினமும் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றது, அவர் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வரை அவரை எதிர்பார்த்துக் கொண்டு இருந்து, அவர் வந்தவுடன் இருவரும் சேர்ந்து வீட்டிற்குத் திரும்பியது, இறுதியில் ஒரு நாள் அவர் திரும்பி வராமலே போனது... இப்படி ஒவ்வொன்றையும் அந்த நன்றியின் உருவமான நாய் மனதில் அசைப் போட்டுப் பார்க்கிறது.

புகை வண்டி நிலையத்திற்கு முன்னால் அமர்ந்திருந்த ஹாச்சி, தன் எஜமானர் புகை வண்டியிலிருந்து வெளியேறி வெளியே வருவதாகவும், இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வதாகவும் மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கிறது. ஹாச்சியின் வாழ்க்கை அத்துடன் முடிவடைகிறது. பனிப் போர்வை படர்ந்திருக்க, எந்த விதமான அசைவுமில்லாமல், புகை வண்டி நிலையத்திற்கு முன்னால் உறைந்து போய் அமர்ந்திருக்கிறது அந்த நன்றியின் உறைவிடம்.

இதுதான் ஹாச்சியின் கதை

மீண்டும் வகுப்பறை. ரோணி, தன் மனதில் ஹீரோவாக நாய் ஹாச்சியை நினைப்பதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுகிறான். ரோணியின் கதையைக் கேட்டு கலங்கிப் போய் அமர்ந்திருக்கிறது முழு வகுப்பறையும். கதையை ரோணி ஆரம்பிக்கும்போது, அவனைக் கிண்டல் பண்ணிய மாணவர்கள் கூட, கதையை அவன் முடிக்கும்போது கண்ணீர் விடுகிறார்கள்.
      பள்ளி முடிவடைகிறது. பள்ளிக்கூட பேருந்திலிருந்து ரோணி வெளியே இறங்குகிறான். அவனை வீட்டிற்கு அழைத்து கொண்டு செல்வதற்காக அவனுடைய தந்தை வந்திருக்கிறான். அவனுடைய கையில் அவனுக்குச் சொந்தமான செல்ல நாய் இருக்கிறது. அதன் பெயர்.......... ஹாச்சி.

முன்பு பார்க்கர் வில்ஸனும் ஹாச்சியும் நடந்து சென்ற அதே பாதையில் இப்போது பார்க்கரின் பேரன் ரோணியும், புதிய ஹாச்சியும் சந்தோஷத்துடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் படம் முடிவடைகிறது.

படத்தின் இறுதியில் 'பெயர்கள்' போடப்படுகின்றன. அப்போது நமக்கு உண்மையான Hachiko வைப் பற்றிய தகவல் போடப்படுகிறது. அது Odate என்ற இடத்தில் 1923 ஆம் ஆண்டில் பிறந்தது. தன் எஜமானர் Hidesaburo Ueno 1925 ஆம் ஆண்டில் மரணமடைந்த பிறகு, ஹாச்சிகோ Shibuya train Station க்கு தினமும் வந்து, அவருக்காக காத்துக் கொண்டு இருந்திருக்கிறது. இந்தச் செயல் ஒன்பது வருடங்கள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அந்த உண்மை நாயான ஹாச்சிகோ 1934 ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவி விட்டதாக படத்தில் போடப்படுகிறது. ஆனால், அது இறந்த உண்மையான நாள் மார்ச் 8, 1935.

Shibuya Train Stationக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் அந்த அருமை நாயின் சிலை படத்தின் இறுதியில் புகைப்பட வடிவத்தில் காட்டப்படுகிறது.

ஹாச்சியை மனதில் நினைத்துக் கொண்டே, அந்தச் செல்ல நாய்க்காக கண்ணீர் விட்டவாறு, கனத்த இதயத்துடன் நாமும் சிலையென அமர்ந்திருக்கிறோம்.

93 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தில் ஹாச்சியாக Chico, Layla, Forrest என்ற மூன்று நாய்கள் நடித்திருக்கின்றன.

பேராசிரியர் பார்க்கர் வில்ஸனாக Richard Gere  (பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்!

Cate ஆக- John Allen

Michael ஆக- Robbie Sublett

Andy ஆக Sarah Roemer

சிறுவன் ரோணியாக – Kevin Decoste

Rhode Island இல் இருக்கக் கூடிய Bristol, Woonsocket என்ற இடங்களில்தான் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருகின்றன. மே 19, 2012 ஆம் ஆண்டில் Woonsocket புகை வண்டி நிலையத்திற்கு முன்பு ஒரு விழா கொண்டாடப்பட்டது. 'Hachi: A Dog's Tale’ படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் வரலாற்றில் இடம் பெற்ற  ஜப்பானிய நாயான Hachikoவை நினைவு படுத்தும் வகையில், ஒரு நிரந்தரமான Bronze Statue அவ்விழாவில் திறந்து வைக்கப்பட்டது. அந்த Hachiko – Shibuya Station க்கு முன்னால்....இந்த Hachi – Woonsocket Stationக்கு முன்னால்- சிலை வடிவத்தில். அவ்விழாவில் Woodsocket இன் மேயர், ஜப்பான் தூதரக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர். அந்தச் சிலையின் இரு பக்கங்களிலும், இரு Cherry Blossom செடிகள் நடப்பட்டன. அவை இப்போது மரமாக வளர்ந்து, காற்று வீசும்போது அசைந்து, ஹாச்சியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

Page Divider

 

 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.