Logo

பேர்ட் கேஜ் இன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4317
Bird Cage Inn

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பேர்ட் கேஜ் இன் – Bird Cage Inn

(கொரிய மொழி திரைப்படம்)

1998ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். உலக புகழ் பெற்ற தென் கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி-டுக் (Kim Ki-duk) இயக்கிய படம். 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

படத்தின் கதையையும் கிம் கி -டுக்கே எழுதினார். 100 நிமிடங்கள் ஓடக் கூடிய படமிது. கிம் கி-டுக் இயக்கத்தில் வெளியான மூன்றாவது படம் 'Bird cage Inn'.

ஒரு இளம் விலைமாதுவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

ஜின்-ஆ (Jin-a) இருபத்து இரண்டு வயது கொண்ட ஒரு அழகான இளம் பெண். பார்ப்போரைக் கவரக் கூடிய பேரழகு படைத்தவள் அவள். கண்கள், கன்னம், உதடுகள், நடை- ஒவ்வொன்றிலும் அழகு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அவளை ஒரு முறை பார்த்தாலே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்.

ஆனால், தன் அழகைப் பற்றி ஜின்-ஆ சிறிது கூட கர்வப்பட்டுக் கொள்வதே இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு, வாழ்ந்து கொண்டிருப்பவள் அவள். அவளுக்கென்று கொள்கை, கோட்பாடு எதுவுமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற திட்டமோ, இலக்கணமோ அவளிடம் இல்லவே இல்லை. எப்படியோ படைக்கப்பட்டு உலகத்திற்குள் வந்து விட்டோம், உயிருடன் இருக்கக் கூடிய நாட்களில் நன்கு சாப்பிட்டு, பிறரை சந்தோஷப்படுத்தி தானும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பிரச்னைகள் இல்லாமல், இன்பமாக வாழ வேண்டும் என்று நினைப்பவள் அவள்.

அவள் புதிதாக அந்த ஊருக்கு வருகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்க்கையை நடத்துவதற்கு விலை மாதுவாக மாறியவள் அவள். அவளுக்கென்று உலகத்தில் யாருமில்லை. விலை மாதுவாக ஆகியதற்காக அவள் கவலைப்படவும் இல்லை. மற்றவர்கள் வேலை செய்து பிழைப்பதைப் போல, தான் தன்னுடைய உடலை விற்று பிழைப்பு நடத்துகிறோம் என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அவள் வாழ்கிறாள்.

அந்த புதிய ஊரில் 'Bird Cage Inn' என்றொரு சிறிய இல்லம். கடலோரத்தில் அது இருக்கிறது. அங்குதான் அவள் தங்கி, விலை மாதுவாக தொழில் நடத்த வேண்டும். அவள் வரும்போதே, எதிரில் ஒரு பெண் வருகிறாள். அவளுக்கு முன்பு, அந்த இல்லத்தில் இதுவரை இருந்த விலை மாது அவள். அவளைக் கடந்துதான் அவள் வருகிறாள். அதாவது- பழைய அந்த இளம் பெண் அங்கிருந்து கிளம்ப, புதிய இளம் பெண்ணான  ஜின்-ஆ அந்த இல்லத்திற்குள் நுழைகிறாள்.

சொல்லப் போனால்- அது ஒரு வீடுதான். அந்த வீட்டில் நான்கு அறைகள் இருக்கின்றன. ஒரு பக்கம் இரண்டு அறைகள். அவற்றைப் பார்த்துக் கொண்டு வேறு இரண்டு அறைகள். அந்த 'விபச்சார விடுதி'யை ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்துகிறார்கள். நடுத்தர வயதைத் தாண்டிய அந்த தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

நான்கு அறைகளில் ஒரு அறையை புதிதாக வந்திருக்கும் ஜின்- ஆவிற்கு ஒதுக்குகிறார்கள். அந்த அறைக்குள்தான் அவள் 'தொழில்' நடத்த வேண்டும். அதற்கு நேர் எதிரில் இருக்கும் அறையில் அந்த கணவனும், மனைவியும். அவர்களும் ஏழைகள்தாம். மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள்தாம். ஜின்-ஆ அந்த வீட்டிலேயே... அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து, அங்கு சமைக்கப்படும் உணவைச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஜின்-ஆ பெறும் பணத்தில், அந்த குடும்பம் ஒரு பகுதி பணத்தை எடுத்துக் கொள்ளும். அந்த பணத்தைக் கொண்டுதான் அந்த குடும்பமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஜின்-ஆ இரவு வேளைகளில் தன்னை உடல் இன்பத்திற்காக தேடி வரும் ஆணுடன் படுத்துக் கிடப்பாள். பகல் வேளையில் அமைதியாக உட்கார்ந்து ஓவியம் வரைவாள். மிகவும் அருமையாக ஓவியம் வரையக் கூடிய அபார திறமை அவளுக்கு இருந்தது. சில நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து, கால்களில் நீர் படும் அளவிற்கு கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். ஓவியம் வரைவதிலும், இயற்கையின் அழகை ரசிப்பதிலும், பிடித்த உணவைச் சாப்பிடுவதிலும், கடலின் ஆரவாரத்தில் தன்னை இழப்பதிலும் அவள் தன்னுடைய அனைத்து கவலைகளையும், பிரச்னைகளையும் மறந்து வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

 


வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியில்லை என்பதற்காகத்தான் அவள் தன் உடலையே விற்று வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அவளை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களே அவளைச் சொந்த ஆசைக்கு பலிகடா ஆக்குகிறார்கள் என்றால்...? அப்படியொரு காரியமும் அங்கு நடக்கிறது. அந்த குடும்பத்தின் தலைவன் யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நடுத்தர வயதைத் தாண்டிய அந்த மனிதர் பருமனான சரீரத்தைக் கொண்டவர். அமைதியாக அமர்ந்து, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் வர்ணத்தை இழந்திருக்கும் வெளிச் சுவரில் தன்னுடைய அறிவுக்கு எப்படி முடியுமோ, அந்த அளவிற்கு மீனை தூரிகையால் வரைந்து கொண்டிருப்பார். ஜின்-ஆவின் ஒவ்வொரு செயலையும் ஆழமாக பார்த்துக் கொண்டிருப்பார்- எதுவுமே பேசாமல். மிகவும் கறராக இருக்கும் அவரைப் பார்த்தால், யாருமே பயப்படுவார்கள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- அந்த குடும்பத்தை அவர் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.

அப்படிப்பட்ட அவர் ஒருநாள் யாரும் இல்லாத வேளையில் ஜின்-ஆவின் அறைக்குள் அவளைப் பின் பற்றி நுழைகிறார். தான் உள்ளே நுழைந்தவுடன், கதவை அடைக்கிறார். அதை ஜின்-ஆ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த மனிதரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்கிறாள். 'முடியாது. வெளியே செல்லுங்கள்' என சத்தம் போடுகிறாள். ஆனால், அந்த மனிதர் கேட்பதாக இல்லை. அவளுடைய விருப்பத்திற்கு எதிராக அவள் மீது பலவந்தமாக ஆக்கிரமிக்கிறார். தன் மகளின் வயது கொண்ட அந்த அழகுச் சிலையின் மீது, தொப்பை விழுந்து, பார்க்கவே சகிக்காத தன்னுடைய உடலை படர விடுகிறார். தப்பிப்பதற்கு வழியில்லை என்றவுடன் அமைதியாகி விடுகிறது அந்த இளம் கிளி. எதைப் பற்றியுமே கவலைப்படாமல், தன் காம வெறியை மட்டுமே பெரிதாக நினைத்து, அவளை பாடாய் படுத்தி தன் உடல் ஆசையை தீர்த்துக் கொள்கிறது அந்த மிருகம். எல்லாம் முடிந்து, எதுவுமே நடக்காதது மாதிரி அவர் வெளியே வருகிறார்.

அந்த இல்லத்தின் தலைவி ஜின்-ஆவை தாங்கள் உயிர் வாழ்வதற்காக, உதவ வந்திருக்கும் பிறவி என்பதைத் தாண்டி எதையுமே நினைக்கவில்லை. ஆனால், முடிந்த வரைக்கும் அவளுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவள் பார்த்துக் கொள்கிறாள். அவர்களுடைய பருவ வயதில் இருக்கும் மகள் (ஜின்-ஆவின் வயதுதான் அவளுக்கு) கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான்.

என்னதான் ஜின்-ஆ தங்களுடைய வீட்டின் ஒரு அறையில்தான் தங்கியிருக்கிறாள் என்றாலும், அவள் மற்றவர்களுடன் உடலைப் பங்கு வைப்பதன் மூலம்தான் தங்களுடைய தேவைகளே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், இல்லத்து உரிமையாளர்களின் மகள் ஹை-மி (Hye-mi),  ஜின்-ஆவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருக்கிறாள். எப்போதும் அவளை ஒரு கேவலமான பிறவியாகவே அவள் பார்க்கிறாள். சரீரத்தை விற்று பிழைப்பு நடத்துபவள்தானே என்று புழு, பூச்சியைப் பார்ப்பதைப் போல வெறுப்புடன் பார்க்கிறாள். தங்கள் குடும்பத்துடன் சரி சமமாக, வட்டமாக உட்கார்ந்து கையில் குச்சியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அருகில் அமர்ந்திருக்கும் ஹை-மி, சகித்துக் கொள்ள முடியாததைப் போல ஜின்-ஆவைப் பார்க்கிறாள். 'நான் எத்தனை முறை கூறியிருக்கிறேன்? இனிமேல் எங்களுடன் சேர்ந்து நீ சாப்பிடக் கூடாது. நீ உன்னுடைய அறைக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடு' என்கிறாள். அப்படி அவள் ஏளனமாக பேசுவதைக் கேட்டு மனதிற்குள் வருத்தப்பட்டாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், அமைதி புறாவாக இருந்து விடுகிறாள் ஜின்-ஆ. இந்த அவமான சம்பவங்கள் ஒரு முறை, இருமுறை அல்ல... பல தடவைகள் நடக்கின்றன. ஹை-மியின் இந்த அடாவடித் தனங்கள் ஒவ்வொன்றையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறாள் ஜின்-ஆ.

அறைகளுக்கு வெளியே நீர் வரும் குழாய் இருக்கும். அங்கு தான் நீர் எடுப்பது, பாத்திரங்கள் கழுவுவது, குளிப்பது, பல் துலக்குவது... அனைத்தும். குழாய்க்கு அருகியேலே இருக்கும் ஒரு தூணில் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்ட்டிக் உறையில் அங்குள்ள எல்லோருடைய டூத் ப்ரஷ்களும் இருக்கும். அவரவர்கள் வந்து, பல் துலக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஜின்-ஆ வந்து, பேஸ்ட்டை எடுக்கும்போது, பல நேரங்களில் அவளிடமிருந்து அதை வெறுப்புடன் பிடுங்கியிருக்கிறாள் ஹை-மி. 'ச்சீ... கேவலமான பிறவியான நீ எந்த கையை வைத்து டூத் பேஸ்ட்டை எடுக்கிறாய்? இனிமேல் இங்கே இருக்கும் டூத் பேஸ்ட்டை நீ எடுக்கக் கூடாது' என்பாள் கண்டிப்பான குரலில் அவள். அப்போதெல்லாம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பாள் ஜின்-ஆ. நமக்கே அவளைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும்!

ஒரு நாள் ஹை-மி கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள். அப்போது கையில் குடை இல்லை. திடீரென மழை வந்து விடுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல், மழையில் நனைந்து கொண்டே அவள் புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்து கவலைப்பட்ட ஜின்-ஆ, அவளுக்குப் பின்னால் ஓடி வந்து, தன்னுடைய வர்ண குடையைக் கொண்டு அவள் மீது மழை நீர் விழாமல், தலைக்கு மேலே பிடிக்கிறாள். ஆனால், அதை ஒதுக்கி விட்டு ஹை-மி வேகமாக நடக்கிறாள். பிறகும், விடாமல் அவளை குடை பிடித்து காப்பாற்ற பார்க்கிறாள் ஜின்-ஆ. ஆனால் ஹை-மியோ வெறுப்புடன் குடையைப்  பிடுங்கி எறிய, தெருவில் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டு கிடக்கிறது குடை. தான் உதவி செய்ய வந்து, அவமானப்பட்டு நிற்கும் கேவலமான நிலையை நினைத்து நொந்து கொண்டு கவலையுடன் நின்றிருக்கிறாள் ஜின்-ஆ.

 


இன்னொரு முறை தனக்கு ஒரு 'வாக் மேன்' வேண்டும் என்று தன் தாயிடம் கேட்கிறாள் ஹை-மி. சாயங்காலம் திரும்பி வரும்போது, அவளுடைய அறையில் ஒரு மஞ்சள் நிற வாக்மேன் இருக்கிறது. தன் அன்னைதான் வாங்கி வைத்திருக்கிறாள் என்று நினைத்து, சந்தோஷத்துடன் அதை பயன்படுத்துகிறாள் ஹை-மி. ஆனால், பின்னர் அது ஜின்-ஆவிற்குச் சொந்தமானது, தான் தன் அன்னையிடம் கூறியதைக் கேட்டு அவள் தன்னுடைய வாக்மேனைக் கொண்டு வந்து வைத்திருக்கிறாள் என்பது தெரிந்ததும், அதை ஜின்-ஆவிடமே திருப்பித் தந்து விடுகிறாள் ஹை-மி. அத்துடன் நின்றால் பரவாயில்லை. 'இந்த மாதிரி வேலைகளையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே. மழையில் குடையைக் கொண்டு வந்து என் மீது பிடிக்கிறாய். இப்போது உன்னுடைய வாக்மேனை என் அறையில் கொண்டு வந்து வைக்கிறாய். இவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. நீ எங்களுடைய வீட்டில் தங்கியிருக்கலாம். அதற்காக நீ எங்களுக்கு இணையாகி விட மாட்டாய். நாம் இருவரும் வெவ்வேறு வகைப்பட்டவர்கள். நான் ஒழுக்கத்தைப் பெரிதாக நினைப்பவள். உடலைப் புனிதமாக நினைப்பவள். நீ சரீரத்தை வைத்து பிழைத்துக் கொண்டிருப்பவள். நீ வேறு உலகம்... நான் வேறு உலகம்' என்று கூறுகிறாள். அவள் பேசுவதைக் கேட்டு, சிலையென  நின்று கொண்டிருக்கிறாள் ஜின்-ஆ.

பொதுவாகவே ஹை-மி தன்னை ஒரு ஆணைப் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆண்களைப் போல, தலை முடியை ஒட்ட வெட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள். பெரும்பாலும் அவள் அணிவது ஆண்கள் அணியக் கூடிய பேண்ட்டையும், அரைக் கை வெள்ளை நிற சட்டையையும்தான். பெண்களுக்கே உரிய நளினம், மென்மைத்தனம் எதுவும் இல்லாமல், முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்துக் கொண்டு மிடுக்கான தோரணையிலேயே ஒவ்வொரு செயலிலும் இருக்கிறாள் அவள். அவளுக்கு ஒரு 'பாய் ஃப்ரண்ட்' இருக்கிறான். அவனைப் பெரும்பாலும் தன் அருகிலேயே நெருங்க விடுவதில்லை அவள். ஒரு நாள் தனித்திருக்கும் வேளையில் ஹை-மியை உடல் ரீதியாக அடைவதற்கு முயற்சிக்கிறான் அவன். ஆனால், அவளோ உறுதியாக மறுத்து விடுகிறாள். 'திருமணம் ஆவதற்கு முன்பு இந்த விஷயத்திற்கு நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்' என்கிறாள் பிடிவாதமான குரலில். தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றத்துடன், அவளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவளுடைய 'பாய் ஃப்ரண்ட்.'

விஷயம் அத்துடன் நிற்கவில்லை. ஹை-மியிடம் ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றவுடன், வேறு ஏதாவது பெண்ணுடன் உறவு கொண்டால் என்ன என்று நினைக்கும் அந்த 'பாய் ஃப்ரண்ட்', விபச்சாரம் நடக்கும் 'Bird Cage Inn'  என்ற இல்லத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு வருகிறான். அதுதான் ஹை-மியின் வீடு என்பதோ, விபச்சாரம் நடத்தி கிடைக்கும் பணத்தில்தான் அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதோ அவனுக்கு தெரியாது. அவன் ஜின்-ஆவின் அறைக்குள் நுழைகிறான்.

இரவு ஆரம்பமாகும் நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருகிறாள் ஹை-மி. ஜின்-ஆவின் அறையின் வாசலில் கழற்றிப் போடப்பட்டிருக்கும் ஷூக்களைப் பார்க்கிறாள். அவை தன்னுடைய  'பாய் ஃப்ரண்ட்'டுக்குச் சொந்தமானவை போல இருக்கின்றனவே என்று சந்தேகத்துடன் பார்க்கிறாள்.

அறைக்குள் போன 'பாய் ஃப்ரண்ட்' தன் ஆடைகளைக் கழற்றுகிறான். ஜின்-ஆவும். அதற்குள் தன் காதலி ஹை-மியின் ஞாபகம் வந்து விடவே, அவளுக்கு துரோகம் செய்யலாமா என்று நினைத்து, பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, எந்த 'தப்பும்' செய்யாமல் அங்கிருந்து அவன் வெளியேறுகிறான். அவனைப் பற்றிய தகவல் தெரிந்து, அவனையே வினோதமாக பார்க்கிறாள் ஜின்-ஆ.

வெளியே வந்து பார்க்கிறாள் ஹை-மி. ஷூக்கள் இருந்த இடத்தில் இப்போது அவை இல்லை.  அப்படியென்றால், அவன் போய் விட்டானோ என்ற நினைப்புடன் அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையில் ஹை-மியின் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் தம்பி ஹ்யுன்-வூ (Hyun-woo), எப்போது பார்த்தாலும் ஜின்-ஆவையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். அவனிடம் ஒரு கேமரா இருக்கிறது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் அவன். அவளை நிர்வாணமாக படமெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் அவன். அதை அவளிடம் பல முறைகள் அவன் கூறுகிறான். ஆனால், ஜின்-ஆ அதற்கு மறுத்து விடுகிறாள்.

இருப்பினும், விடாமல் அவளை நச்சரித்துக் கொண்டே இருக்கிறான் பையன். ஒருநாள் கடலோரத்தில் அமர்ந்திருக்கிறாள் ஜின்-ஆ. அங்கு சிறுவன் ஹ்யுன்-வூ வருகிறான்.  'புகைப்பட போட்டி நடக்கப் போகிறது. நான் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். யார் யாரிடமெல்லாமோ, நிர்வாணமாக மறுப்பே கூறாமல் நீ படுத்துக் கிடக்கிறாய். எனக்கு ஒரே ஒரு முறை ஒரு புகைப் படத்திற்காக நிர்வாணமாக 'போஸ்' தரக் கூடாதா?' என்று கெஞ்சுகிறான். பையனின் பரிதாபமான நிலையைப் பார்த்து, இறுதியில் அவள் சம்மதிக்கிறாள். கடலோரத்தில் நின்றிருந்த ஒரு கப்பலில் அவளை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுக்கிறான் ஹ்யுன்-வூ. புகைப்படங்கள் எடுத்து முடித்தவுடன், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் அவன், அவளுடன் உடலுறவு கொள்ள நினைக்கிறான். ஆரம்பத்தில்  மறுக்கும் அவள், கடைசியில் சம்மதிக்கிறாள். அவர்களுக்கிடையே உடல் ரீதியான உறவு உண்டாகிறது.

ஜின்-ஆவின் 'சகோதரன்' என்று கூறிக் கொண்டு அவளை வைத்து முன்பு பிழைப்பு நடத்திய ஒருவன் அவ்வப்போது அந்த இல்லத்திற்கு வருகிறான். அவளுடன் உடலுறவு கொள்கிறான். இறுதியில், அவள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறான். இது பல தடவைகள் நடக்கிறது.

ஹ்யுன்-வூ புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வைத்த புகைப்படத்தைப் பார்த்த ஒரு பத்திரிகையின் உரிமையாளர், சிறுவனைத் தேடி வருகிறார்.  சிறிய ஒரு தொகையைத் தந்து விட்டு, அவனிடமிருந்த முழு நெகட்டிவ்களையும் வாங்கிக் கொண்டு செல்கிறார் அவர். அந்த புகைப்படங்கள் ஒரு மாத இதழின் அட்டையிலும், உள்ளேயும் பிரசுரிக்கப்பட்டு, வெளியே வருகிறது. அனைத்தும் ஜின்-ஆவின் நிர்வாண படங்கள்!

அவற்றைப் பார்த்த 'சகோதரன்' என்று கூறிக் கொண்டு ஜின்-ஆவைத் தேடி வரும் மனிதன், மீண்டும் வருகிறான். அந்த புகைப்படங்களின் மூலம் அவள் பெரிய தொகையை வாங்கியிருப்பாள் என்று நினைத்து, பணத்தைக் கேட்கிறான். தான் எதுவுமே வாங்கவில்லை என்கிறாள் அவள். கோபத்தில் அவளை அடிக்கிறான் அவன். அப்போது ஹை-மி அங்கு வருகிறாள். ஜின்-ஆவை அவள் காப்பாற்றுகிறாள். தான் மீண்டும் வருவதாக கூறிவிட்டுச் செல்கிறான் அந்த 'சகோதரன்.'

 

 


அன்று இரவு ஜின்-ஆ தன் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள். இரத்தம் வழிய படுத்திருக்கும் ஜின்-ஆவைப் பார்க்கும் ஹை-மி அவளை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறாள்.

ஹை-மியின் 'பாய் ஃப்ரண்ட்' அவளைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனை வெறுப்புடன் போகச் சொல்கிறாள் ஹை-மி. 'நீ எங்கள் வீட்டிற்கு வந்து ஜின்-ஆவுடன் படுத்தாய் அல்லவா?' என்கிறாள் அவள். ஆனால் அவனோ 'வந்தது உண்மை. ஆனால், உன் ஞாபகம் வந்து, எதுவுமே பண்ணாமல், நான் திரும்பிச் சென்று விட்டேன்' என்கிறான். அருகில் நின்றிருந்த ஜின்-ஆவிடம் 'இவர் கூறுவது உண்மையா?' என்று அவள் கேட்க, 'பொய்... என்னுடன் அவர் மூன்று தடவைகள் உடலுறவு கொண்டார்' என்கிறாள். அந்த 'பாய் ஃப்ரண்ட்'டை விரட்டியடிக்கிறாள் ஹை-மி. அதை புன்னகைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஜின்-ஆ. தான் கூறியது பொய் என்று அந்த குறும்புக்காரிக்குத்தான் தெரியுமே!

ஜின்-ஆ வெளியே சென்றிருக்க, அவளின் அறையைப் பரிசோதிக்கிறாள் ஹை-மி. அங்கிருக்கும் நூல்கள், ஜின்-ஆ தன் கைப்பட வரைந்த அருமையான ஓவியங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் ஹை-மி அவள் மீது உயர்ந்த மதிப்பு கொள்கிறாள். தான் இதுவரை அவளை கேவலமாக நினைத்ததற்காக வருத்தப்படுகிறாள்.

கடலோரம். ஜின்-ஆ நின்று கொண்டிருக்கிறாள். மீண்டும் அந்த 'சகோதரன்' வருகிறான். பணம் கேட்டு ஜின்-ஆவை நச்சரிக்கிறான். அப்போது அங்கு வந்த ஹை-மியின் தந்தை 'என் மகனை ஏமாற்றி, புகைப்படங்களை வாங்கிச் சென்று விட்டார்கள். பணம் எதுவும் தரவில்லை' என்கிறார். அதைக் கேட்டு கோபமடையும் 'சகோதரன்' அந்த மனிதரிடம் 'நீயும் ஜின்-ஆவுடன் படுத்தவன்தானே?' என்று தாக்க முயற்சிக்கிறான். அந்த மனிதர் 'சகோதர'னை அடித்து, உதைக்கிறார். தன் தந்தையும், தம்பியும் கூட ஜின்-ஆவை உடல்ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்து, அவமானத்துடன் நிற்கிறாள் ஹை-மி.

'இவளைப் பார்த்தாலே, படுக்க தோன்றுகிறது. நான் கண் காணாத இடத்திற்கு எங்காவது போய் விடுகிறேன். இனி நான் வர மாட்டேன்' என்று அந்த 'சகோதரன்' குருதி படிந்த ஆடையுடன் நடக்க முடியாமல் நடந்து செல்கிறான், அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள் ஜின்-ஆவும், ஹை-மியும்.

புதிய தோழிகளான ஜின்-ஆவும், ஹை-மியும் ஒருவர் முதுகில் இன்னொருவர் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அன்று இரவு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஜின்-ஆ அன்று 'தொழில்' பண்ண முடியாது. அதனால் தன் தோழி சிரமப்படக் கூடாது என்பற்காக, அவளுக்கு பதிலாக ஹை-மி அவனுக்கு தன் உடலைப் பணயம் வைக்கிறாள். அன்று முதல் தடவையாக தன் கன்னித் தன்மையை அந்தப் பெண் இழக்கிறாள்- தன் அன்பு தோழி ஜின்-ஆவிற்காக.

மாலை நேரம். கடல் பகுதி. உயரமான இரும்புத் தூணின் விட்டத்தில் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜின்-ஆ, ஹை-மி என்ற அந்த அன்பு தோழிகள் தங்களை மறந்து சிரித்தவாறு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மன மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

படம் முடியும்போது 'கிம் கி-டுக்கின் பெயர் போட்டவுடன், என்னை மறந்து நான் கைகளைத் தட்டினேன். 'இயக்குநர் என்றால் இவரல்லவா இயக்குநர்!' என்று என் மனம் கூறியது.

Jin-a வாக நடித்திருக்கும் Lee Ji-Eun உண்மையிலேயே ஒரு அழகு தேவதைதான்! என்ன அருமையான நடிப்பு! இப்போது கூட அந்த பெண்ணின் முகம் என் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

Hye-mi யாக நடித்திருக்கும் Lee Hae -பொருத்தமான தேர்வு!

படத்தின் கலை இயக்குநரும் Kim Ki-duk தான். ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற Noosa Film Festival இல் சிறந்த art director க்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.