
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
The Pope’s Toilet - தி போப்’ஸ் டாய்லெட்
(ஸ்பேனிஷ் திரைப்படம்)
2007ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்பட்ட இந்த உருகுவே நாட்டு திரைப்படத்தை இயக்கியவர்கள் Cesar Charlone, Enrique Fernandez.
1988ஆம் ஆண்டில் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் உருகுவே நாட்டின் ‘மெலோ’ என்ற ஊருக்கு வருகை தந்தார். அப்போதைய சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஸ்பேனிஷ் மொழியில் எடுக்கப்படும் படம் என்றாலே யதார்த்தமான கதை, அன்றாடம் நாம் சந்திக்கும் இயல்பான மனிதர்கள், அவர்களின் உண்மையான வாழ்க்கை நிலை, சிரமங்கள் நிறைந்த அவர்களுடைய வாழ்க்கையின் போக்குகள், அவர்களுடைய ஏக்கங்கள், ஆசைகள், அவர்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் வெளியிலிருக்கும் அதிகாரம் படைத்த சக்திகள் - இவை ஒவ்வொன்றும் உயிரோட்டத்துடன் கட்டாயம் இருக்கும்.
அவை இப்படத்திலும் இருக்கின்றன. உருகுவே நாட்டின் ‘மெலோ’வில் வாழும் மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை நடத்துவதற்கு எவ்வளவு சிரமப்படுகின்றனர், சாதாரண தேவைகளை நிறைவேற்றுவதற்குக் கூட அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை படத்தில் பார்க்கும்போது நம்மையும் மீறி அவர்கள் மீது நமக்கு ஒரு பரிதாப உணர்வும் இரக்கமும் உண்டாகிறது.
வறுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கும் அந்த ஊருக்கு போப் ஆண்டவர் வருகை தருகிறார். அதனால் என்ன நடக்கிறது?
நினைத்துப் பார்க்க முடியாத அந்த மாறுபட்ட கதை... இதோ:
உருகுவே, பிரேஸில் நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரு நாடு. அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்கள். பலவகையான சிரமங்களைக் கொண்ட முயற்சிகளிலும் ஈடுபட்டு, அங்குள்ளவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். அந்த நாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க ஊர் ‘மெலோ’.
மெலோவில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பல வகையான தொழில்களையும் செய்கின்றனர். கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சாப்பிட முடியும், வாழ முடியும் என்ற நிலைதான் அங்குள்ள எல்லோருக்கும். அந்த ஊரிலேயே சிலர் கடைகள் வைத்து சிறு சிறு வியாபாரங்களைச் செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் சிறிய லாபங்களைக் கொண்டு தங்களின் வாழ்க்கையை அவர்கள் நடத்துகின்றனர்.
அப்படிப்பட்ட சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்தான் பெட்டோ. தன் மனைவியுடனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடனும் போராட்டங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கையை அவன் நடத்திக் கொண்டிருக்கிறான். பல நேரங்களில் மனைவி ஆசைப்பட்டு கேட்கும் பொருட்களை அவனால் வாங்கிக் கொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அருமை மகள் ஆவலுடன் கேட்கும் சாதாரண பொருட்களைக் கூட சில வேளைகளில் அவனால் வாங்கிக் கொடுக்க முடியாமற் போகிறது. ஆனால், அவர்கள் இருவரின் மீதும் அவன் அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறான் என்பதென்னவோ உண்மை.
சிறிய அளவில் கள்ளக் கடத்தல் பண்ணி பிழைப்பதுதான் பெட்டோவின் தொழில். பிரேஸிலில் இருந்து தேயிலை, மாவு, பிராந்தி போன்ற விஷயங்களை தன்னுடைய சைக்கிளில் அவன் திருட்டுத் தனமாக வாங்கி கடத்திக் கொண்டு வருவான். அதை ‘மெலோ’வில் இருக்கும் கடைக்காரர்களுக்கு கை மாற்றி விடுவான். அதில் ஒரு சிறிய ஆதாயம் கிடைக்கும். அதை வைத்து அவன் தன் குடும்பத்தை நடத்துவான்.
அவனைப் போலவே நிறைய ஆண்கள் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியே ஐந்தாறு ஆண்கள் தங்களுடைய சைக்கிள்களில் தாங்கள் பிரேஸிலில் வாங்கிய பொருட்களை பார்சலாக கட்டி ஏற்றிக் கொண்டு மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த சாலைகளிலும், புல் மேடுகளிலும், ஒற்றையடிப் பாதைகளிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக பயணிப்பதுதான்.
இரு நாடுகளும் முடிகிற எல்லைப் பகுதியில் ஒரு சோதனைச் சாலை இருக்கிறது. அதில் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். சைக்கிள்களில் திருட்டுத் தனமான பொருட்களை ‘மெலோ’விற்குக் கடத்திச் செல்லும் மனிதர்கள், சோதனைச் சாலையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் வயல்களுக்கு நடுவில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் விரைந்து போய்க் கொண்டிருப்பார்கள். சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளே அந்த காட்சியைப் பார்ப்பார்கள். ஆனால், அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள். வேகமாக சென்று சைக்கிளைக் கைப்பற்றுவதோ, பொருட்களைச் சோதிப்பதோ, கடத்தலில் ஈடுபடும் மனிதர்களுக்கு தண்டனை தருவதோ- இவற்றில் எதுவுமே நடக்காது. சோதனைச் சாலையில் நின்று கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பார்கள். அவ்வளவுதான். பிறகென்ன? கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கொண்டாட்டம்தானே? அவர்கள் தங்களின் விருப்பப்படி பொருட்களை கொண்டு செல்வார்கள்.
இந்த மாதிரி ஒரு வகை அச்சத்தை மனதில் வைத்துக் கொண்டு, பதைபதைப்புடன் புயலென வயல்களுக்கு மத்தியில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் சைக்கிளில் பொருட்களைத் திருட்டுத் தனமாக கடத்திக் கொண்டு செல்வதை பெட்டோ சிறிதும் விரும்புவதில்லை.
எதற்கு பயந்து கொண்டே சைக்கிளை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று மிகுந்த தைரியத்துடன் சோதனைச் சாலையின் வழியாகவே வருவான். ஒருநாள் இப்படித்தான் துணிச்சலுடன் அவன் சைக்கிளில் வந்தான். சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரி அவனைத் தடுத்து நிறுத்தினார். ‘சைக்கிளில் என்ன இருக்கிறது?’ என்றார் அதிகார தொனியில். அவன் ‘சமையலுக்குத் தேவையான மாவு பாக்கெட்டுகள் இருக்கின்றன’ என்றான். அவர் அட்டைப் பெட்டியை அவிழ்த்து ஒவ்வொரு பாக்கெட்டையும் கையில் எடுத்து பார்த்தார். ஒரே ஒரு பாக்கெட் மட்டும் மிகவும் கனமாக இருக்கவே, அதை ஊசியால் குத்தினார். மாவு கொட்டியது. மாவுக்கு மத்தியில் இருந்த பேட்டரி ஸெல்கள் கீழே விழுந்தன. தன் வீட்டிலிருக்கும் வானொலி பெட்டிக்காக அவன் வாங்கிச் சென்றவை அவை. அவனுடைய மகள் அவற்றை வாங்கி வரச் சொல்லியிருந்தாள். அதனால் அதை மறக்காமல் அவன் வாங்கி வந்தான். ‘இதை எப்படி நீ கடத்திக் கொண்டு வரலாம்?’ என்று கேட்டார் அதிகாரி. அதற்கு பெட்டோ ‘சற்று தூரத்தில் எவ்வளவு பேர் சைக்கிளில் கடத்தல் பொருட்களுடன் போய்க் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுக்கிறீர்களே?’ என்றான். அவனையே வெறித்துப் பார்த்த அதிகாரி கூறினார் - ‘உன்னை பார் இந்தப் பக்கம் வரச் சொன்னது? நீயும் அவர்களைப் போல வயல்களுக்கு மத்தியில் போக வேண்டியதுதானே?’ என்று. அதைக் கேட்டு அந்த மனிதரையே வினோதமாக பார்த்தான் பெட்டோ.
அதற்குப் பிறகும் அவன் சோதனைச் சாவடியைத் தாண்டித்தான் வருவான். ஒரு நாள் தான் வாங்கிக் கொண்டு வந்த சாமான்களுக்கு மத்தியில், ஒரு பிராந்தி புட்டியை அவன் அட்டைப் பெட்டியின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்தான். என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று சோதனை போட்ட அதிகாரி, அந்த பிராந்தி புட்டியைப் பார்த்து விட்டார். பிறகென்ன? அவர் அதை ஆசை பொங்க எடுத்துக் கொண்டார். திருட்டுத் தனமாக கடத்திச் செல்லும் பொருட்களை கைப் பற்றுவதோ, கள்ளக் கடத்தலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோ அவருடைய நோக்கமல்ல. தனக்கு தேவைப்படும் மது புட்டி கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்துடன், அதை எடுத்து வைத்துக் கொண்டு, மீதி சாமான்களுடன் அவனைப் போகச் சொல்லி விட்டார்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், இழப்புகளுக்கு மத்தியிலும் அவன் தினமும் கடத்தல் தொழிலைப் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறான். தினமும் காலையில் சைக்கிளில் ஏறி மிதிப்பான். பொருட்களை வாங்கிக் கொண்டு பிரேஸிலில் இருந்து மெலோவிற்குத் திரும்புவான். இதுதான் அவனுடைய அன்றாட செயல். கஷ்டப்பட்டு தினமும் சைக்கிளை மிதிக்கவில்லையென்றால் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? எப்படிச் சாப்பிடுவது?
பெட்டோவின் மகளுக்கு தொலைக்காட்சியில் செய்தியாளராக வர வேண்டும் என்ற ஆசை. எல்லா நேரங்களிலும் அதே நினைவிலேயே அவள் இருக்கிறாள். தான் தனியாக இருக்கும் வேளைகளில் அவள் தொலைக்காட்சியில் வரும் அறிவிப்பாளர்கள் பேசுவதைப் போல, பேசிப் பார்ப்பாள், சிரித்தவாறு கேள்வி கேட்டுப் பார்ப்பாள். என்றாவதொரு நாள் தன்னுடைய கனவு நிறைவேறாதா என்ற எதிர்பார்ப்புடன் அவளுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.
கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டி கள்ளக் கடத்தல் செய்யும் பெட்டோ பல நேரங்களில் சோதனைச் சாவடி அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டியதிருக்கும். எனினும், அந்த கசப்பான விஷயங்களையெல்லாம் தன் மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டு மவுனமாக இருப்பது அவனுடைய குணமாக இருந்தது.
மாலை நேரங்களில் மது அருந்தும் இடத்தில் அளவுக்கும் அதிகமாக மது அருந்தி விட்டு, வாய்க்கு வந்தபடி புலம்புவான் பெட்டோ. தன் மனதில் இருக்கும் குமுறல்களை அப்போது எல்லோருக்கும் தெரியும்படி வெளியிடுவான். மதுவின் போதை அதிகமாக, பல இரவு வேளைகளிலும் தள்ளாடியபடி அவன் தன் வீட்டுக்கு வருவான்.
இந்த சூழ்நிலையில்தான் அந்த அறிவிப்பு வந்தது. போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பால் ‘மெலோ’ நகருக்கு வருகை தரப் போகும் விஷயம்தான் அது. அவர் நகருக்கு வரும்போது, பிரேஸிலில் இருந்து 60,000லிருந்து 2,00,000 வரை மக்கள் வந்து கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டதும், மெலோவில் உள்ள மக்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தச் செய்தியால் அதிகமான சந்தோஷத்தை அடைந்தவர்கள் வியாபாரிகள்தான். ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து கூடும்போது, தங்களின் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும், அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு அவர்களின் மனங்களில் உண்டானது.
‘பலரும் அவரவர்களுக்குத் தெரிந்த வியாபாரத்தைச் செய்து, பணம் சம்பாதிக்க முயல்வார்கள். நாம் என்ன செய்யலாம்?’என்று சிந்தித்தான் பெட்டோ. அப்போது அவனுக்குத் தோன்றியதுதான்- நவீன பாணியில் ஒரு டாய்லெட் அமைத்தால் என்ன என்பது. போப் ஆண்டவர் மெலோவிற்கு வரும் நாளன்று பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடப் போகிறார்கள். என்னதான் தேநீர் கடைகளும் உணவு கடைகளும் மெலோவில் நிறைய உண்டாகி விட்டிருந்தாலும், ‘டாய்லெட்’ என்ற ஒன்று மிகவும் அவசியமாயிற்றே! புதிதாக ஒரு டாய்லெட் அமைத்தால், அதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாமே என்று திட்டமிட்டான் பெட்டோ. தன் மனதில் உதித்த அந்த புதிய சிந்தனையை தன்னுடைய மனைவியிடமும் மகளிடமும் அவன் கூறினான். அது அவர்களுக்கும் பிடித்திருந்தது.
பிறகென்ன? அடுத்த கணமே அதற்கான முயற்சியில் இறங்கி விட்டான் பெட்டோ. தன் வீட்டிற்குப் பின்னால் காலியாக கிடக்கும் இடத்தில் டாய்லெட்டைக் கட்டுவது என்று அவன் தீர்மானித்து விட்டான். தீர்மானித்து விட்டால் போதுமா? அதற்கு பணம் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது? கள்ளக் கடத்தல் தொழிலை விட்டால் பெட்டோவிற்கு வேறு என்ன தொழில் தெரியும்?
தான் செய்யும் தொழிலையே இன்னும் சற்று வேகமாக செய்ய ஆரம்பித்தான். இப்போது சைக்கிளுக்குப் பதிலாக ஒரு பழைய மோட்டார் சைக்கிள் அவனுக்குக் கிடைத்தது. அதை தன் தொழிலுக்கு பயன்படுத்தினான். அதை வைத்துக் கொண்டு அவன் கடுமையாக உழைத்தான். தினமும் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செங்கல், கல், சிமெண்ட் என்று வாங்கினான். சிறிது சிறிதாக டாய்லெட் உருவாகிக் கொண்டிருந்தது.
தன் மனைவி சேமித்து வைத்திருந்த பணம், தன் மகள் கல்லூரி கட்டணத்திற்காக வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் அவன் அதற்காக செலவழித்தான். பின்னர் எப்படியும் பணம் வந்து விடுமே என்ற எதிர்பார்ப்பில் அவர்களும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
டாய்லெட் கட்டப்பட்டு விட்டது. சுற்றுச் சுவர் கூட வைக்கப்பட்டு விட்டது. மேற்கூரை போடப்பட்டு விட்டது. உள்ளே இருக்கக் கூடிய ‘ப்ளேட்’ மட்டும் இன்னும் வைக்கப்படவில்லை. அதை இனிமேல்தான் வாங்க வேண்டும். இதற்கிடையில் தன் மகளிடமும், மனைவியிடமும் மக்களிடமிருந்து எப்படி பணம் வசூல் செய்வது என்பதை அவன் கற்றுத் தந்தான். சொல்லப் போனால் - ஒரு பயிற்சியே அவர்களுக்கு அவன் நடத்தினான். அவன் சொல்லித் தந்தபடி அவர்கள் நடந்து காட்டினார்கள். போப் ஆண்டவரின் வருகையின்போது, மக்களிடமிருந்து காசு வசூல் செய்யப் போவது அவர்கள்தானே?
போப் ஆண்டவர் மெலோவிற்கு வரும் நாள் வந்து சேர்கிறது. ஊர் முழுவதும் ஏராளமான கடைகள். பல்லாயிரக் கணக்கில் மக்கள் வந்து கூடுவார்கள் என்பதை எதிர்பார்த்து எங்கு பார்த்தாலும், தேநீர் கடைகள், உணவு கடைகள், பல்வேறு பொருட்களையும் விற்கக் கூடிய கடைகள்... உணவுப் பொருட்களை தயார் பண்ணி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
போப் ஆண்டவர் மெலோவிற்கு வருகிறார். அவர் அரங்கத்தின் மேடையில் ஏறி உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஊரெங்கும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில், மெலோ நகரத்தின் மக்கள் அந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.
பெட்டோ டாய்லெட்டிற்குள் வைக்கக் கூடிய ‘ப்ளேட்’டை வாங்கிக் கொண்டு தன் வண்டியில் பிரேஸிலில் இருந்து மெலோவிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறான். அப்போது அவனைப் பார்த்து விடுகிறார் ‘ரோந்து’ வரும் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் சுங்க இலாகா அதிகாரி. அவருக்கும் பெட்டோவிற்கும் ஒரு பெரிய வாக்குவாதமே நடக்கிறது. இறுதியில் அந்த அதிகாரி பெட்டோவின் இரு சக்கர வாகனத்தை எடுத்து தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேகமாக பறக்கிறார். பெட்டோ என்ன செய்வதென்று தெரியாமல், தன் கையில் டாய்லெட்டிற்கான ‘பீங்கான் ப்ளேட்’டைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடுகிறான்.
போப் ஆண்டவரின் உரை முடிவுக்கு வருகிறது. நிகழ்ச்சி முடிய, போப் ஆண்டவர் ஆட்கள் புடை சூழ வெளியே வருகிறார். வெளியே நின்று கொண்டிருக்கும் காருக்குள் போப் ஆண்டவர் ஏறுகிறார். சுற்றிலும் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். போப் ஆண்டவர் ஏறிய கார் அங்கிருந்து புறப்படுகிறது. இவை அனைத்தையும் ‘மெலோ’வின் மக்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறார்கள். போப் ஆண்டவர் கிளம்பிச் சென்ற இடத்தில் நின்று கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் ‘டாய்லெட்’டிற்கான பீங்கான் ப்ளேட்டைக் கையில் தூக்கிக் கொண்டு பெட்டோ ஓடுகிறான். அவன் வியர்வை வழிய ஓடும் காட்சி தொலைக்காட்சிப் பெட்டியில் தெரிகிறது. அந்த பரிதாபக் காட்சியை பெட்டோவின் மனைவியும், மகளும் வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறார்கள். அதைப் பார்த்து அவர்களின் முகம் வாடுகிறது.
போப் ஆண்டவர் மெலோவிற்கு வருகை தரும்போது, ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள், சிறுநீர் கழிப்பதற்கும் மலம் கழிப்பதற்கும் தவிப்பார்கள், அதற்காக ஒரு நவநாகரீக டாய்லெட்டைக் கட்டினால் நல்ல ஒரு தொகையைச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்டான் பெட்டோ. ஆனால், அதைக் கட்டுவதற்கு கையில் பணம் இல்லாமல், தன் கடத்தல் தொழில் மூலம் அன்றாடம் கிடைக்கும் பணத்தையும் தன் மனைவி, மகள் ஆகியோரின் பணத்தையும் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் ‘டாய்லெட்’டை உருவாக்கினான். ஆனால், அவன் அதை முழுமையாக முடிப்பதற்கு முன்பே, போப் ஆண்டவர் அந்த ஊருக்கு வந்து, உரையாற்றி விட்டு, கிளம்பிச் சென்றும் விட்டார். அவனால் அந்த ‘டாய்லெட்’டை வைத்து எதுவுமே சம்பாதிக்க முடியவில்லை.
2,00,000 மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க, மொத்தமே 400 பேர்தான் பிரேஸிலில் இருந்து போப் ஆண்டவரின் உரையைக் கேட்க வந்திருந்தார்கள். ஆனால், அவரின் வருகையை ஒட்டி போடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை மட்டும் 387. எல்லோருக்கும் தாங்க முடியாத அளவிற்கு பண இழப்பு! பலரும் பல இடங்களிலும் கை நீட்டி கடன் வாங்கி கடை போட்டார்கள். பணத்தில் மிதக்கலாம் என்று கனவு கண்டார்கள். அனைத்தும் வீணாகி விட்டது. எல்லோரும் விரலைச் சூப்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
போப்பின் வருகையின் மூலம் ‘மெலோ’ நகரம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்றும், பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையை அடையும் என்றும் பலரும் கணக்குப் போட்டார்கள். அனைத்தும் பகல் கனவுகளாக ஆகி விட்டன. முன்பு இருந்ததை விட மிகவும் மோசமான நிலைக்கு பின்னால் தள்ளப்பட்டு விட்டது ‘மெலோ’.
பெட்டோவின் வீடு. வீட்டிற்கு முன்னால் பெட்டோ கட்டிய நவ நாகரீக டாய்லெட். அதற்குள் பெட்டோ இருந்தான். அவனுடைய மகள் வெளியே இருந்தவாறு அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் வெளியே வராமலே இருந்தான். அவள் பொறுமையாக அவனுக்காக காத்திருந்தாள். தான் உருவாக்கிய ‘டாய்லெட்’டை உள்ளே இருந்து கொண்டே பாவம்... அவன் ரசித்துக் கொண்டு இருக்கிறான் போலிருக்கிறது!
எது எப்படியோ... போப் ஆண்டவரின் வருகைக்காக உருவாக்கப்பட்ட அந்த ‘டாய்லெட்’ இப்போது அந்த வீட்டில் இருப்பவர்களின் பயன்பாட்டிற்கு உதவிக் கொண்டிருப்பதென்னவோ உண்மை.
பெட்டோவாக வாழ்ந்திருக்கும் Cesar Troncoso படம் முழுக்க நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
1988ஆம் ஆண்டு தென் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் மெலோவிற்கும் வருகை புரிந்தார். அப்போது அவரின் வருகை படமாக்கப்பட்டது. இது உண்மையில் நடைபெற்றது. அதை மையமாக வைத்து ஒரு கற்பனை கதையை உருவாக்கி, சிறந்த ஒரு படமாக இயக்கிய Cesar Charlone, Enrique Fernandez இருவரையும் மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டும்.
போப் ஆண்டவரின் பயணத்தை ஒரு பக்கம் கூறினாலும், அதற்கு மத்தியில் காட்டப்படும் ‘மெலோ’ மக்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைகளையும், வறுமையையும், அவர்களின் பரிதாப நிலைமைகளையும் நம்மால் எப்படி மறக்க முடியும்?