
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆமேன்- Amen
(மலையாள திரைப்படம்)
2013மார்ச் மாதத்தில் திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம். படத்தின் கதாநாயகன்- ஃபகத் ஃபாஸில். கதாநாயகி- ஸ்வாதி ரெட்டி (‘சுப்ரமணியபுரம்’ கதாநாயகி). படம் முழுக்க வரும் இளம் பாதிரியார் கதாபாத்திரத்தில் - இந்திரஜித். முக்கியமான பாத்திரத்தில் - கலாபவன் மணி.
இசைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டிருக்கும் படம். கிராமப் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் P.S.ரஃபீக். இயக்கம்: லிஜோ ஜோஸ் பெல்லிஸேரி.
முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை, சீரான திரைக்கதையுடன், படம் முடிந்த பிறகும் மனதில் தங்கி நிற்கக் கூடிய ஒரு படமாக இயக்கியிருக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிஸேரியை மனம் திறந்து பாராட்டலாம்.
வித்தியாசமான கதைக் கரு, மாறுபட்ட கதாபாத்திரங்கள், ஆழமான சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள்- இசை அனைத்தும் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்கள்.
‘ஆமேன்’ படத்தின் கதை ஒரு பழமையான ஸிரியன் தேவாலயம் இருக்கக் கூடிய குட்டநாட்டு கிராமமான குமரன்கரியில் நடக்கிறது. அந்த ஊரில் இருக்கும் ஒரு அப்பாவி இளைஞன் சாலமன். அவனுடைய தந்தை ஒரு இசை மேதை. சொந்தத்தில் வாத்தியக் குழு வைத்திருந்தவர். பலருக்கும் இசை கற்று தந்தவர். பல இசைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றவர். ஒரு இசை நிகழ்ச்சி முடிந்து படகில் திரும்பி வரும்போது, ஏரியில் தவறி விழுந்து அவர் இறந்து விடுகிறார். அதற்குப் பிறகு அந்த வாத்திய குழு வெற்றி என்ற ஒன்றைச் சந்தித்ததே இல்லை. வெற்றி பெறும் இசை குழுக்கள் முழுவதுமே வெளியூர்களைச் சேர்ந்தவைதாம்.
அப்படிப்பட்ட இசை மேதையின் மகன் சாலமன் எதற்குமே லாயக்கற்றவனாக இருக்கிறான். எந்த வேலையும் செய்யாதவனாக இருக்கிறான். சிறிது கூட துணிச்சல் இல்லாமல், பயந்தாங்கொள்ளியாக இருக்கும் அவனை யார் பார்த்தாலும் கிண்டல் பண்ணி சிரிக்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்களுக்கு அவன் ஒரு கேலிப் பொருளாகவே இருக்கிறான்.
மற்றவர்களுக்கு முன்னால் கிளாரினெட்டை அவனால் வாசிக்கவே முடியவில்லை. வாயில் கிளாரினெட்டை வைத்து பிடித்தாலே, அவனுடைய கைகள் நடுங்குகின்றன. எங்கே கிளாரினெட்டை கீழே போட்டு விடுவானோ என்று கூட எல்லோரும் நினைக்கின்றனார்.
ஆனால், தனியாக இருக்கும்போது மிகவும் அருமையாக அவன் கிளாரினெட் வாசிக்கிறான். அவன் தன்னை மறந்து, கிளாரினெட் வாசித்து இனிமையான இசையை காற்றில் தவழ விடும் உண்மை தெரிந்தவள் அந்த ஊரிலேயே ஒரே ஒருத்திதான். அவள்- ஷோசன்னா. அவள் ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகள்.
கீழே இருட்டில்... செடிகளுக்கு அருகில் நின்று கொண்டு சாலமன் கிளாரினெட் வாசிப்பான். அந்த இசை முழங்க ஆரம்பித்தவுடன், ஷோசன்னா வீட்டின் மாடி கதவுகள் தானாகவே திறக்கும். அடுத்த நிமிடம் ஷோசன்னாவின் அழகு முகம் சாளரத்தில் தெரியும். அவளைப் பார்த்தவாறு சாலமன் சந்தோஷத்துடன் கிளாரினெட் வாசிப்பான். அவள் புன்னகையுடன் அவனையே பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள். இது தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
அந்த ஊரிலிருக்கும் தேவாலயம் மிகவும் பெயர் பெற்றது. அங்கு இருக்கும் பெரிய பாதிரியார் தன் கட்டளைக்குக் கீழே முழு கிராமத்தையும் வைத்திருக்கிறார். அவர் என்ன கூறுகிறாரோ, அதை அந்த கிராமத்திலிருக்கும் மக்கள் அப்படியே கேட்டு பின்பற்றுவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் வெளியூலிருந்து ஒரு இளைஞர் அந்த கிராமத்திற்கு படகில் வருகிறார். படகில் சந்திக்கும் இளம் பெண்ணுடன் சேர்ந்து பாடுகிறார்... ஆடுகிறார். பேண்ட், சட்டையுடன் வரும் அந்த உயரமான இளைஞர் நேராக தேவாலயத்திற்கு வருகிறார். பெரிய பாதிரியாரை வந்து பார்க்கிறார். அப்போதுதான் நமக்கே தெரிகிறது- அவர் அந்த கிராமத்திற்கு புதிதாக வந்திருக்கும் இளம் பாதிரியார் என்று. பெரிய பாதிரியாரின் கட்டளைப்படி, புதிதாக வந்திருக்கும் பாதிரியாரான வின்சென்ட் வட்டோலி, பாதிரியார் அணிய வேண்டிய ஆடையை அணிகிறார்.
அந்த கிராமத்து மனிதர்களிடம் அன்பாகவும், பாசத்துடனும் பழகும் வின்சென்ட் பாதிரியாரை எல்லோருக்கும் பிடிக்கிறது. இசையில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் வின்சென்ட், இசைக் கருவிகளை மீட்டுகிறார். மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டாகிறது.
சாலமனுக்கும் ஷோசன்னாவிற்குமிடையே இருக்கும் ஆழமான காதல் விஷயம், வின்சென்ட் வட்டோலிக்கு நன்கு தெரியும். அந்த இரு இளம் உள்ளங்களுக்கிடையே எந்த அளவிற்கு அன்பும், காதலும் ஊடுருவி விட்டிருக்கிறது என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார். தன் மகள் மீது சாலமன் வைத்திருக்கும் காதல் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் அவளுடைய தந்தை, உடனடியாக அவளுக்கு வேறொரு இளைஞனுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறார்.
சாலமனின் தந்தையிடம் இசை கற்ற மனிதர் லூயி பப்பன். முதுமைப் பிராயத்தை எட்டி விட்ட அவருக்கு, ஒரு இசை மேதையின் மகனான சாலமன் இசையின் வாசனையே இல்லாமல் இருக்கிறானே என்பது குறித்தும், கிளாரினெட்டை கையில் பிடித்தாலே நடுங்க ஆரம்பித்து விடுகிறானே என்பதைப் பற்றியும், அந்த கிராமத்தின் இசைக் குழு ஒவ்வொரு வருடமும் நடக்கும் இசை போட்டியில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறதே என்பதைப் பற்றியும் மிகுந்த கவலை.
இதற்கிடையில் ஒரு இரவு வேளையில் லாந்தர் விளக்கொளி சகிதமாக லூயி பப்பன் ஏரியில் படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் கிளாரினெட்டை வாசிக்கிறார். அப்போது சற்று தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் வேறொரு படகிலிருந்து ஒரு இனிய கிளாரினெட் இசை. அந்த கிராமத்தில் இப்படியொரு இசையை அவர் கேட்டதில்லை. ‘தன்னையே தாண்டிச் செல்கிற அளவிற்கு, அந்த ஊரில் கிளாரினெட் வாசிப்பதற்கு ஒரு ஆள் இருக்கிறானா? யார் அவன்?’ என்ற வியப்புடன் அவர் தான் செல்லும் படகை அருகில் கொண்டு செல்லும்படி கூறுகிறார். அருகில் போய், விளக்கை உயர்த்தி பார்த்தால்... சாலமன் தன்னை மறந்து கிளாரினெட் வாசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது லூயி பப்பனுக்கு உண்டாகும் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! ‘தன் குருநாதரின் மகன் தான் நினைத்ததைப் போல முட்டாள் அல்ல. அவன் இசை விஷயத்தில் மிகவும் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான். ஊருக்குத்தான் இந்த விஷயம் இதுவரை தெரியாமலே இருந்திருக்கிறது’ என்பதைப் புரிந்து கொண்ட அவர், சாலமனின் தோளை சந்தோஷத்துடன் தட்டிக் கொடுக்கிறார்.
ஷோசன்னாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. உண்மைக் காதலர்களின் காதல், தோல்வியில் முடிந்து விடக் கூடாது என்பதற்காக சாலமனும் ஷோசன்னாவும் அந்த கிராமத்தை விட்டு படகில் தப்பித்துச் செல்வதற்காக இளம் பாதிரியார் வின்சென்ட் வட்டோலி உதவுகிறார். ஆனால், அதற்குள் கிராமத்து ஆட்கள் அங்கு வந்து விடுகிறார்கள். பாதிரியார் உதவி செய்தும், அந்த காரியம் வெற்றி பெறாமற் போகிறது.
சாலமனும், ஷோசன்னாவும் தேவாலயத்தில் மக்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். காதலர்கள் தப்பித்துச் செல்வதற்கு உதவியதற்காக வின்சென்ட் வட்டோலி குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறார். ஷோசன்னாவின் தந்தை ‘எதற்குமே லாயக்கற்றவனான ஒருவனுக்கு நான் எப்படி என் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்?. சாலமன் விரைவில் நடக்க இருக்கும் இசைப் போட்டியில், இசைக் கலைஞனாக கலந்து கொண்டு வெற்றி பெறட்டும். வெற்றி பெற்றால், என் மகள் ஷோசன்னாவைத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்கிறார்.
அதை லூயி பப்பன் ஏற்றுக் கொள்கிறார். ‘நடக்க இருக்கும் இசைக் குழுக்களுக்கு இடையிலான இசைப் போட்டியில் இந்த கிராமத்து இசைக் குழுவிற்கு தலைமை தாங்கி, கிளாரினெட் வாசிக்கப் போகிறவனே சாலமன்தான்!’ என்கிறார் அவர். சாலமனின் அபார இசை திறமையைத்தான் அவர் ஏற்கெனவே பார்த்து விட்டாரே!.
இசைக் குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் ஆரம்பமாகின்றன. சாலமனைத் தோற்கடிப்பதற்காக வெளியூரிலிருந்து திறமை வாய்ந்த ஒரு இசை கலைஞனை கொண்டு வந்து விடுகிறார்கள். எல்லா சதிச் செயல்களையும் தாண்டி, இசைப் போட்டியில் எல்லோரும் வியந்து அண்ணாந்து பார்க்கும் வண்ணம் சாலமன் கிளாரினெட் வாசிக்கிறான். அவன் தலைமை தாங்கிய கிராமத்து இசைக் குழு, பல வருடங்களுக்குப் பிறகு வெற்றி வாகை சூடுகிறது. சாலமனின் நினைத்துப் பார்த்திராத இசை திறமையைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகென்ன? ஷோசன்னாவை தான் வாக்களித்தபடி சாலமனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் அவளுடைய தந்தை. அந்த இளம் காதலர்களை வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைக்கிறது இனிய இசை.
படகுத் துறை. படகொன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து பேன்ட், சட்டை அணிந்த ஒரு உயரமான இளைஞர் இறங்குகிறார். அவர் கரையிலிருக்கும் சிறிய கடைக்கு முன்னால் சென்று ஒரு எலுமிச்சம்பழ ஜூஸ் வாங்கி பருகுகிறார். அவர்- புதிதாக அந்த கிராமத்திற்கு வந்திருக்கும் இளம் பாதிரியாரான வின்வென்ட் வட்டோலி.
அப்படியென்றால் இதுவரை... கிராமத்து மக்களின் மீது அன்பும், அக்கறையும் வைத்திருந்த... சாலமனையும் ஷோசன்னாவையும் வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைப்பதற்காக போராடிய வின்சென்ட் வட்டோலி யார்?
படம் இந்த இடத்தில் முடிவடைகிறது.
சாலமனாக- ஃபகத் ஃபாஸில். படத்திற்குப் படம் நடிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார். சாலமனை நம் உள்ளங்களில் வாழ விட்டிருக்கிறார்.
ஷோசன்னாவாக- ஸ்வேதா ரெட்டி. பொருத்தமான தேர்வு! சிரிக்கும்போது அழகு தேவதை! சோகக் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார்.
இளம் பாதிரியார் வின்சென்ட் வட்டோலியாக-இந்திரஜித். முத்திரை நடிப்பு! இந்தப் பாத்திரத்திற்கு இவ்வளவு கனகச்சிதமாக இவரைத் தவிர, வேறு யாருமே பொருந்த மாட்டார்கள். மனதில் நிற்கும் கதாபாத்திரம்! அதற்கு நூறு சதவிகிதம் உயிர் தந்திருக்கிறார் இந்திரஜித்.
லூயி பப்பனாக கலாபவன் மணி. பண்பட்ட நடிப்பு!
பெரிய பாதிரியாராக ஜாய் மேத்யூ- அனுபவ நடிப்பு!
படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் - ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். என்ன நேர்த்தியான ஒளிப்பதிவு! என்ன அருமையான லைட்டிங்! இந்த மாறுபட்ட கதைக்கு தன் சிறப்பான ஒளிப்பதிவால் உயிர் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்!
இசை: பிரசாந்த் பிள்ளை. பாடல்கள்: காவாலம் நாராயண பணிக்கர், பி.எஸ்.ரஃபீக். ‘ஆமேன்’ ஒரு சிறந்த திரைப்படமாக இருப்பதற்கு, இவர்களுடைய பங்கு மிகவும் பெரியது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும், பாடல்களும், இசையும் நம் செவிகளில் முழங்கிக் கொண்டே இருக்கின்றனவே!
படத்திற்கு படத்தொகுப்பு செய்தவர் மனோஜ். திறமையான எடிட்டிங்! படம் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் நம்மால் அதை உணர முடிகிறது.
புதுமையான பின்னணியில், மாறுபட்ட ஒரு கதை கொண்ட திரைப்படத்தை இயக்கிய துணிச்சலுக்காக ஒரு விலை மதிப்புள்ள பூச்செண்டு-இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸேரிக்கு!