Logo

ஷட்டர்-(Shutter)

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6350
Shutter

என்னை கவர்ந்த திரைப்படங்கள் -  சுரா (Sura)

ஷட்டர் - Shutter 

(மலையாள திரைப்படம்)

2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த படம். 2012 டிசம்பர் மாதம் கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, படம் பார்ப்போரால் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, Silver Crow Pheasant Award ஐப் பெற்ற இப்படம் துபாயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகப் பெரிய பாராட்டைப் பெற்றது.

இதுவரை யாரும் எடுத்திராத, மனதில் கற்பனை பண்ணிக் கூட பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் ஜாய் மேத்யூ. படத்தின் கதாசிரியரும் அவரே.

134 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படியொரு மாறுபட்ட கதையைக் கையாண்டதற்காகவே ஜாய் மேத்யூவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சமீப காலமாக பல வித்தியாசமான படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் மலையாளப் பட உலகில் ஒரு ‘புதிய அலையை’ இப்படம் உருவாக்கி விட்டிருக்கிறது என்று துணிந்து கூறலாம். இந்தப் படத்திற்குப் பிறகு ‘இப்படியெல்லாம் கூட கதைகளைக் கையாளலாம் போலிருக்கிறதே!’ என்ற எண்ணம் படவுலகைச் சேர்ந்த பலருக்கும் தோன்றும்.

சரி... அந்த மாறுபட்ட கதைதான் என்ன?

இதோ...

ரஷீத் வளைகுடா நாட்டில் வேலைக்குச் சென்ற ஒரு மனிதன். விடுமுறையில் அவன் தன்னுடைய சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு வருகிறான். அங்கு அவனுக்கு சொந்தத்தில் வீடு இருக்கிறது. நல்ல மனைவி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மூத்த மகள், பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் இன்னொரு சிறிய மகள். அருமையான குடும்பம்.

விடுமுறைக்கு வந்திருக்கும் சமயத்தில் தன் மகளுக்குத் திருமணம் செய்து விடலாம் என்று ரஷீத் நினைக்கிறான். அதற்கு சொந்தத்திலேயே மண மகனும் இருக்கிறான். கிட்டத்தட்ட நிச்சயம் கூட செய்யப்பட்டு விடுகிறது. மகளுக்கோ திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. சொல்லப் போனால் - திருமணமாகும் வயது கூட அவளுக்கு இன்னும் ஆகவில்லை. தொடர்ந்து படிக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள்.

ஆனால், அவள் இன்னும் படிப்பதை ரஷீத் விரும்பவில்லை. செல்ஃபோனில் தன்னுடைய மகளுடன் படிக்கும் மாணவர்கள் அவளுடன் பேசுவதையோ, அவர்கள் நேரில் வந்து அவளுடன் பேசுவதையோ கூட அவன் விரும்பவில்லை. தன் மகளை அதற்காக அவன் கண்டிக்கிறான்.

வீட்டிற்கு அருகிலேயே வளைகுடா நாட்டில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு வர்த்தக வளாகத்தைக் கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறான் ரஷீத். அதன் கீழ் பகுதியில் ஒரே ஒரு கடை மட்டும் வாடகைக்குக் கொடுக்கப்படாமல், காலியாக கிடக்கிறது. வளைகுடா நாட்டிலிருந்து நிரந்தரமாக கேரளத்திற்கு வந்த பிறகு அந்த கடையை ஏதாவது வர்த்தக விஷயத்திற்கு தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவன் திட்டமிட்டிருக்கிறான். சாயங்கால வேளைகளில் தற்போதைக்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதற்கும், ‘தண்ணி’ அடிப்பதற்கும் ரஷீத் அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

ரஷீத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பனாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் இருக்கிறான். ஒரு இரவு நேரத்தில் அந்த ஆட்டோவில் பயணித்து வரும் ரஷீத், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு சபலம் உண்டாகிறது. ஆட்டோ ஓட்டுனரிடம் ‘அவளை பிக் அப் பண்ண முடியுமா?’என்று கேட்கிறான். ஆரம்பத்தில் தயங்கும் ஆட்டோ ஓட்டுனர், மெதுவாக நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை ஓரக் கண்ணால் பார்த்தவாறு ‘வர முடியுமா?’ என்கிறான். அவள் ‘500 ரூபாய் கொடுத்தால் வருகிறேன்’ என்கிறாள். அதைத் தொடர்ந்து அவளை ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

லாட்ஜ்களில் அறை கிடைக்குமா என்று பல இடங்களுக்கும் அலைகிறார்கள். ஆனால், எங்குமே அறை கிடைக்கவில்லை. இறுதியில் - வேறு வழியில்லாமல் தனக்குச் சொந்தமான ஷட்டர் போட்ட இடம்தான் இருக்கிறதே என்ற எண்ணம் ரஷீத்திற்கு வருகிறது. அந்தப் பெண்ணுடன் இருவரும் அங்கு வருகிறார்கள். ஷட்டர் திறக்கப்பட்டு, உள்ளே வருகிறார்கள். உள்ளே அட்டை பெட்டிகள், காலி டின்கள், பெயிண்ட் டப்பாக்கள் என்று பலவும் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் தூசி... வேறு வழியில்லையே!

வெளியே சென்று தனக்கு இரண்டு புரோட்டாவும், சிக்கன் குழம்பும் வாங்கிக் கொண்டு வரும்படி அந்த விலை மாது கூறுகிறாள். ஆட்டோ ஓட்டுனர் ஷட்டரை இழுத்து பூட்டைக் கொண்டு பூட்டி விட்டு, சாவியுடன் ஆட்டோவில் விரைகிறான்.

ஷட்டருக்குள் ரஷீத்தும் அந்த விபச்சாரியும். இடையில் அவளுக்கு ஃபோன் வருகிறது. தன்னுடைய செல்ஃபோனில் அவள் யாரோ ஒரு ஆணுடன் உரத்து பேசுகிறாள். ரஷீத் குரலை தாழ்த்தி பேசும்படி கூறுகிறான். சிறிது நேரத்தில் 500 ரூபாயை எடுத்து அவளிடம் கொடுக்கிறான் ரஷீத். அவ்வப்போது மேலே இருக்கும் சிறிய வெண்டிலேட்டரின் வழியாக அவன் பின்னால் இருக்கும் தன் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி நடந்து கொண்டிருக்கிறாள். மகள் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள்.

‘ஆட்டோ ஓட்டுனர் புரோட்டாவுடன் வந்த பிறகு, என்னை எழுப்புங்கள். ஒரே களைப்பாக இருக்கிறது’- என்று கூறிவிட்டு, கீழே கிடந்த ஒரு ‘பேக்’ கை தலைக்கு வைத்து விட்டு, தூசி படிந்த சிமெண்ட் தரையில் படுத்து விடுகிறாள் விலைமாது. ரிஷாத் அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது எழுந்து போய் வெண்டிலேட்டரின் வழியாக தன்னுடைய வீட்டைப் பார்க்கிறான். விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. அனேகமாக - அவர்கள் தூங்கச் சென்றிருக்கலாம்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் புரோட்டா வாங்கச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று முயற்சி செய்தால், அப்போதுதான் ரஷீத்திற்கு தெரிகிறது - தன்னுடைய செல்ஃபோனை வீட்டிலிருந்த மேஜையின்  மீது வைத்து விட்டு வந்து விட்டோம் என்பதே. இனி என்ன செய்வது?

புரோட்டா வாங்க வந்த ஆட்டோ ஓட்டுனர், புரோட்டாவை வாங்கி விட்டு வெளியே வரும்போது, அங்கே ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஒரு திரைப்பட இயக்குனர். அவர் இன்னும் படம் இயக்கவில்லை. பெரிய கதாநாயக நடிகர் ஒருவரிடம் கதையைக் கூறி விட்டு, அவரின் கால்ஷீட்டுக்காக அலைந்து கொண்டிருக்கிறார். தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வாடகை கூட ஒழுங்காக கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர் அவர். அன்று காலையில் இந்த ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் பயணம் செய்த அவர், படத்தின் திரைக்கதை - வசனம் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை ஆட்டோவிலேயே மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார்.


அதற்குப் பிறகு இந்த விஷயத்தை, தனக்குத் தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் பண்ணி அவர் கூற, ‘கவலைப் படாதீர்கள். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் நேர்மையானவர்கள். எப்படியும் உங்களிடம் ‘ஹேண்ட் பேக்’கைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடுவார்கள் என்கிறார் அவர். இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டே படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அவர். அதனால்தானோ என்னவோ ‘படப்பிடிப்பு எப்போது சார்?’ என்கிறார் ஆவலுடன். ‘கதாநாயகனின் கால்ஷீட் கிடைத்தவுடன்’ என்கிறார் அறிமுக இயக்குனர்.

அதற்குப் பிறகு அந்த ஆட்டோவில் பலரும் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். மாக்கெட்டிலிருந்து காய்கறிகளும், பழங்களும் கூடை கூடையாக வந்து இறங்குகின்றன.

பின்னர்தான் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த ரெக்ஸின் பையையே பார்க்கிறான். (நல்லவேளை- காய்கறி விற்கும் பெண் அந்த பையை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போகாமல் இருந்தாள்!). அதை எடுத்த அவன், மாலை நேரத்தில் ரஷீத் தன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த இடத்திற்கு அதை கொண்டு செல்கிறான். அதில் பணம் ஏதாவது இருக்கிறதா என்று நினைக்கும் அவர்கள் அதை திறந்து பார்க்க, அதற்குள் ஏதோ எழுதப்பட்ட தாள்கள் இருக்கின்றன. அதனால், அதை அங்கேயே ஒரு மூலையில் வைத்து விடுகின்றனர். அந்த ரெக்ஸின் பையில் தலையை வைத்துத்தான் இப்போது ஷட்டருக்குள் அந்த தெரு விபச்சாரி கண்களை மூடி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

இப்போது மீண்டும் புரோட்டா கடைக்கு முன்னால்- திரைப்பட இயக்குனர் ஆட்டோ ஓட்டுனரைப் பார்க்கிறார். ஆட்டோ ஓட்டுனர் இயக்குனரை... அடுத்த நிமிடம் ஆட்டோ ஓட்டுனர் ஓடிச் சென்று, ‘என்ன சார், உங்க பையை என் ஆட்டோவில் மறந்து எடுக்காமல் விட்டு விட்டீர்கள்!’என்கிறான். அதற்கு திரைப்பட இயக்குனர் ‘உன்னைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். என் பையை எங்கே?’ என்று கேட்கிறார். ‘பை இப்போது கையில் இல்லை. என்னுடன் வாருங்கள். ஒரு இடத்தில் இருக்கிறது. நான் எடுத்து தருகிறேன்’ என்கிறான். திரைப்பட இயக்குனர் ஆட்டோவில் ஏற, ஆட்டோ கிளம்புகிறது.

ஒரு மது கடைக்கு முன்னால் ஆட்டோ நிறுத்தப்படுகிறது. கதை இருந்த ரெக்ஸின் பை கிடைத்து விட்ட சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர் ஆட்டோ ஓட்டுனருக்கு மது வாங்கிக் கொடுத்து, அவனுடன் சேர்ந்து அவரும் அருந்துகிறார். இருவரும் அடுத்தடுத்து ‘பெக்’குகளில் மூழ்கிக் கொண்டிருக்க, நேரம்  ‘கடகட’வென ஓடிக் கொண்டிருக்கிறது.

பின்னிரவு நேரத்தில் இருவரும் மீண்டும் ஆட்டோவில் பயணிக்கிறார்கள். சாலையின் ஒரு முக்கியமான சந்திப்பில் ரோந்து சுற்றும் போலீஸ்காரர்கள் வாகனங்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள். மது அருந்தியிருக்கும் ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து ஆட்டோவைத் திருப்ப முயல்கிறான். ஆனால், முடியவில்லை. அதற்குள் ஆட்டோவை போலீஸ்காரர்கள் நிறுத்தி விடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுனரை வாயை ஊதச் செய்கிறார்கள். அவன் வாயை ஊத, மது அருந்தியிருப்பது தெரிய வருகிறது. ஆட்டோவை நிறுத்திவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அப்போதே வரும்படி கூறுகிறார்கள். அவனை மட்டும் தனியே விட்டு விட்டால், கதை இருக்கும் ஹேண்ட் பேக்கை எப்படி பெறுவது என்று நினைக்கிறார் இயக்குனர். அதனால் ‘நானும் மது அருந்தியிருக்கிறேன். என்னையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள்’ என்கிறார் அவர். ‘சட்டத்தில் அப்படியொரு விதியே இல்லை. ஓட்டுனரைத்தான் கைது செய்ய முடியும். மது அருந்தியிருந்தாலும், பயணியைக் கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை’ என்கின்றனர் போலீஸ்காரர்கள்.

ஆனால், அந்த திரைப்பட இயக்குனர் அதை சிறிதும் காதிலேயே வாங்கிக் கொள்வது மாதிரி தெரியவில்லை. தன்னையும் கைது செய்தே ஆக வேண்டும் என்கிறார் அவர். அவருடைய பிடிவாதம் தாங்க முடியாமல், ஆட்டோ ஓட்டுனருடன் சேர்த்து அவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர் போலீஸ்காரர்கள். ‘காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் நண்பர்தான் அங்கு இருப்பாரே! அவரைப் பார்த்து ஒரு வார்த்தை கூறிவிட்டால், அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனருடன் கிளம்பி வெளியே வந்து விடலாம்’ என்ற நினைப்பு அவருக்கு. ஆனால், மனதில் நினைக்கிற மாதிரியெல்லாம் காரியங்கள் நடந்து விடுமா என்ன? போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் அதற்கு முன்பே தன் வீட்டிற்குச் சென்று விட்டார். அவரை இயக்குனர் அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவருடைய அலை பேசி ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருக்கிறது. ‘வீட்டிற்குச் சென்று விட்டால், அலைபேசியை அவர் ‘ஆஃப்’ செய்து விடுவார்’ என்று அங்கிருந்த போலீஸ்காரர்கள் கூறுகிறார்கள்.

அதற்குப் பிறகு என்ன செய்வது? இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டும் என்று கூறி விடுகிறார்கள். ஷட்டரை பூட்டு போட்டு பூட்டி விட்டு, அதற்குள் ரஷீத்தையும் விலை மாதுவையும் அடைத்து விட்டு, புரோட்டா வாங்க வந்த ஆட்டோ ஓட்டுனர் தன் நிலைமையை நொந்து கொண்டு, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். வேறு வழியில்லாமல்- அவனுடன் திரைப்பட இயக்குனரும். மறுநாள் காலை 9 மணிக்குத்தான் அவருக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டர் வருவாராம். அதுவரை அங்கேயே அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

திடீரென்று என்ன நினைத்தானோ, ஆட்டோ ஓட்டுனர் ரஷீத்தின் அலை பேசிக்கு ஃபோன் பண்ணுகிறான். மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. அது ரஷீத்தின் வீட்டின் மேஜையின் மீது இருக்கிறது என்ற உண்மை தெரியாமல், ‘ஷட்டருக்குள் உங்களையும், அந்த விபச்சாரப் பெண்ணையும் இருக்கச் செய்து விட்டு, பூட்டு போட்டு விட்டு சாவியைக் கொண்டு வந்து விட்டேன். இப்போது மது அருந்தியிருப்பதன் காரணமாக, என்னை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விட்டார்கள்’ என்கிறான் அவன்- voice mail-இல். அதை அவன் கூற, திரைப்பட இயக்குனர்‘நீ இரண்டு தவறுகளைச் செய்து விட்டாய். ஒன்று- ஷட்டருக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டு வந்தது. இன்னொன்று - சிறிதும் யோசிக்காமல் voice mail இல் உண்மையை உளறி, ரஷீத்தின் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவலைத் தெரிய வைத்தது’ என்று கூற, தவறு செய்து விட்ட குற்ற உணர்வுடன் விழிக்கிறான் ஆட்டோ ஓட்டுனர்.


இப்போது...மீண்டும் ஷட்டருக்குள் செல்வோம். பதைபதைத்துப் போன நிலையில் ரஷீத் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறான். தரையில் இப்படியும் அப்படிமாக புரண்டு கொண்டிருக்கும் விலை மாது திடீரென்று திடுக்கிட்டு எழுந்து நிற்கிறாள். காரணம்- ஒரு எலி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அடிக்க இருவரும் முயல, அது எங்கோ ஓடி விடுகிறது. இதற்கிடையில் ரஷீத் வெண்டிலேட்டரின் வழியாக அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை கவனிக்கிறாள் அந்த விபச்சாரப் பெண். அப்போதுதான் அவளுக்கே தெரிய வருகிறது- அதற்குப் பின்னால் ரஷீத்தின் வீடு இருக்கிறது என்ற விஷயம். ‘புரோட்டா வாங்கப் போன ஆட்டோக்காரன் இன்னும் வரவில்லை. அடுத்து எனக்காக ஒரு வாடிக்கையாளர் ஒரு இடத்தில் காத்திருக்கிறார். நான் எப்படி போவது?’ என்கிறாள் அந்தப் பெண். ரஷீத் எவ்வளவு சமாதானம் கூறியும், அவள் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. சத்தம் போட்டு கத்துகிறாள். ஆத்திரமடைந்த ரஷீத் அவளை ஓங்கி அடித்து விடுகிறான். நிலை குலைந்த அவள் சுவரில் மோதி கீழே விழுகிறாள். அப்போது தரையில் வைக்கப்பட்டிருக்கும் டப்பாக்கள் சாய்ந்து கீழே விழுகின்றன.

மறுநாள் காலை-

திரைப்பட இயக்குனருக்குத் தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் அமர்ந்திருக்க, இயக்குனரும் ஆட்டோ ஓட்டுனரும் அதில் அமர்ந்திருக்கிறார்கள். சிபிமலயில், லால் ஜோஸ் ஆகிய இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் தான் நடித்த விஷயத்தை சுவாரசியமாக கூறிக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் அவர்களை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார். அங்குதான் ஆட்டோ நின்று கொண்டிருக்கிறது.

அந்த ஆட்டோவில் திரைப்பட இயக்குனரை, அவர் தங்கியிருக்கும் இடத்தில் ஓட்டுனர் இறக்கி விடுகிறான். ‘நீ இப்போது ஆட்டோவில் செல்ல வேண்டாம். பேருந்தில் போ. ஷட்டர் மூடப்பட்டிருக்கும் இடத்தில் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்’ என்று அவனிடம் இயக்குனர் கூற, ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அங்கு நிறுத்தி விட்டு, பேருந்தில் பயணிக்கிறான்.

பேருந்து ஷட்டரைத் தாண்டிச் செல்கிறது. ஷட்டருக்கு முன்னால் ஒரே கூட்டம். அதனால் பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் அந்த இடத்தில் இறங்காமல், அதே பேருந்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

இப்போது ஷட்டருக்கு முன்னால்-

ஏதோ பொருள் வாங்குவதற்காக வந்த ஒரு சிறுமியின் காலில் ஒரே இரத்தம். உடனடியாக கூட்டம் கூடி விடுகிறது. பிறகுதான் எல்லோருக்கும் தெரிகிறது - அது இரத்தம் அல்ல, பெயிண்ட் என்று. பெயிண்ட் எங்கிருந்து வந்தது? பார்க்கிறார்கள். ஷட்டருக்குள்ளிருந்து பெயிண்ட் வழிந்திருக்கிறது. (முந்தைய இரவில் அந்தப் பெண் தடுமாறி கீழே விழும்போது, தரையில் இருந்த பெயிண்ட் டப்பா கவிழ்ந்து விட்டது. அதிலிருந்து வந்ததுதான் அந்த பெயிண்ட்.)

வெளியே ஒலிக்கும் சத்தங்கள், ஆரவாரங்கள் அனைத்தையும் உள்ளே இருக்கும் ரஷீத்தும், அந்த விலை மகளும் கேட்கிறார்கள். அந்தப் பெண்ணின் வாய்க்குள் துணியை வைத்து பிடித்துக் கொண்டிருக்கிறான் ரஷீத். வெளியில் நின்று கொண்டிருப்பவர்கள், ஒரு ஆளை அழைத்து பின் பக்கத்தில் ஏறிச் சென்று, வெண்டிலேட்டர் வழியாக உள்ளே பார்க்கச் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகள் உள்ளே இருக்கும் ரஷீத், அந்தப் பெண் இருவரின் காதுகளிலும் விழுகின்றன. ஒரு மனிதன் பின்பக்கத்தில் ஏறி வெண்டிலேட்டரின் வழியாக உள்ளே பார்க்கிறான். வெண்டிலேட்டருக்கு நேர் கீழே, ரஷீத் அந்தப் பெண்ணின் வாய்க்குள் துணியை வைத்து, இறுக அவளைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். வெண்டிலேட்டரின் அருகில் இருப்பவனுக்கு அவர்கள் தெரியவில்லை. அவன் கண்களில் கீழே விழுந்து கிடக்கும் பெயிண்ட் டப்பா மட்டுமே தெரிகிறது. எலி ஓடியதால் அது கீழே விழுந்திருக்கும் என்று அவன் சத்தம் போட்டு மேலே இருந்தவாறு கூறுகிறான். பின்னர் அவன் இறங்க, உள்ளே இருக்கும் இருவருக்கும் நிம்மதி உண்டாகிறது.

பக்கத்து கடைக்காரர்கள் கம்பியை எடுத்துக் கொண்டு வந்து பூட்டுக்குள் விட்டு, ஷட்டரைத் திறக்க முயற்சிக்கிறார்கள். உள்ளே இதயம் படபடக்க ரஷீத்தும் அந்தப் பெண்ணும் நின்று கொண்டிருக்கின்றனர். திறக்க முயன்று முடியாமல், அந்த முயற்சியை வெளியே இருப்பவர்கள் கை விடுகின்றனர். ரஷீத் ஷட்டரின் இடைவெளி வழியாக வெளியே பார்க்கிறான். வெளியே - தன்னுடன் படிக்கும் ஆண் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறாள் ரஷீத்தின் மூத்த மகள். அதை ஆத்திரத்துடன் பார்க்கிறான் ரஷீத்.

வெளியே - உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கடைகளில் தீவிரமாக வியாபாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உள்ளே- ஷட்டருக்குள் இருட்டுக்குள் இருக்கின்றனர்- தவிப்புடன் ரஷீத்தும், அந்த விபச்சாரப் பெண்ணும். வாய்க்குள் துணி வைக்கப்பட்டு படுத்த நிலையில் அவள் இருக்க, ஏதோ நினைத்த ரஷீத் அவளுக்கு அருகில் தன் மணி பர்ஸை அப்படியே கொண்டு போய் வைக்கிறான். அத்துடன் தன்னுடைய விரல்களிலிருந்து கழற்றப்பட்ட இரண்டு மோதிரங்களையும், விலை உயர்ந்த கைக் கடிகாரத்தையும். அவற்றையே அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மீண்டும் இரவு நேரம். ஊர் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைகள் சிறிது சிறிதாக மூடப் படுகின்றன. ஷட்டருக்கு வெளியே முந்தைய இரவின் ஆரம்பத்தில் ரஷீத்துடன் ஷட்டருக்குள் மது அருந்தி விட்டுச் சென்ற அவனின் நண்பர்கள். ரஷீத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அவன் வராமல் போகவே வெறுப்படைந்து அவனைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் தாறுமாறாக பேசிக் கொள்கின்றனர். ஒருவன் ‘ரஷீத் அப்படி என்ன பெரிய வேலையை வளைகுடா நாட்டில் செய்து கொண்டிருக்கப் போகிறான்?. ஏதாவது கூலி வேலையாகத்தான் இருக்கும். நமக்குத் தெரியாதா?’ என்கிறான். இன்னொருவனோ ‘ரஷீத்தின் அப்பா என்ன தொழில் அந்தக் காலத்தில் பண்ணினார் என்று நினைக்கிறீர்கள்? தலையில் மீனை வைத்துக் கொண்டு தெருத் தெருவாக அலைந்து கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்!’ என்கிறான். இவற்றையெல்லாம் ஷட்டருக்குள் இருக்கும் ரஷீத் கேட்கிறான். ‘நேற்று நம்முடன் சேர்ந்து ‘தண்ணி’ அடிக்கும்போது நம்மை வானளாவ புகழ்ந்து பேசிய இவர்கள், இன்று நாம் இல்லாத நேரத்தில் நம்மைப் பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறார்களே!’ என்று நினைக்கும் அவன் மனதளவில் மிகவும் கவலைப் படுகிறான். அப்போது வெளியில் அமர்ந்திருந்த ஒரு நண்பன் ‘ரஷீத் வீட்டில் இல்லையென்றாலும், சாவி வீட்டில் இருக்கும். நான் கேட்டு வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்று கூறி விட்டு, ரஷீத்தின் வீட்டை நோக்கி நடக்கிறான்.


ரஷீத் வெண்டிலேட்டரின் வழியாக வெளியே பார்க்கிறான். ரஷீத்தின் நண்பன் சுவரின் மீது ஏறி, உள்ளே இருக்கும் படுக்கையறையையோ, குளியலறையையோ சாளரத்தின் வழியாக திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த ரஷீத் உள்ளே அமர்ந்து, தாங்க முடியாமல் அழுகிறான். இப்போது அந்தப் பெண்ணின் வாயில் துணி இல்லை. அவள் அழுது கொண்டிருக்கும் ரஷீத்தை ஆச்சரியத்துடனும், கவலையுடனும், இரக்கத்துடனும் பார்க்கிறாள்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது வெளியே ஒரே அமைதி. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. மனித நடமாட்டமே வெளியே இல்லை. ஏதோ நினைத்த விலைமாது, உள்ளே இருந்த ஒரு கம்பியைக் கொண்டு வந்து ஷட்டருக்குள் விட்டு அதை உடைக்க முயற்சிக்கிறாள். அவளுடன் சேர்ந்து, ரஷீத்தும். ஆனால், ஷட்டர் சிறிது கூட நகர்ந்து கொடுக்கவில்லை. விளைவு- சோர்வுடனும், கவலையுடனும் இருவரும் உட்கார்ந்து விடுகிறார்கள்.

இப்போது... திரைப்பட இயக்குனர் தங்கியிருக்கும் இடம். ஆட்டோ ஓட்டுனர் அங்கு வருகிறான். ‘நீ ஏன் இங்கு வந்தாய்? ஷட்டருக்குள் இருக்கும் அந்த இருவரையும் ஷட்டரைத் திறந்து வெளியே கொண்டு வராமல்...’ என்கிறார் அவர். அதற்கு ‘பக்கத்தில் இருக்கும் கடை திறந்திருக்கும்’ என்று ஆட்டோ ஓட்டுனர் கூற, ‘இப்போது மணி இரவு பத்தரையைத் தாண்டி விட்டது. கடையை மூடி விட்டுப் போயிருப்பார்கள். நீ அங்கு உடனடியாக போ’ என்கிறார் இயக்குனர். தன் ஆட்டோவுடன் அங்கிருந்து கிளம்புகிறான் ஓட்டுனர்.

மீண்டும் நாம் ஷட்டருக்குள் செல்வோம். ஷட்டருக்குள் ரஷீத்தும், அந்தப் பெண்ணும். வெளியே யாரோ நடந்து வரும் ஓசை. ஷட்டரின் பூட்டு திறக்கப்படும் சத்தம். பூட்டு கழற்றப்படுகிறது. திறப்பதற்கு ஏற்ற வகையில் வழி வகை செய்யப்படுகிறது. எல்லா சத்தங்களும் காதுகளில் விழ, அடுத்து நடக்கப் போவதை எதிர்பார்த்து ரஷீத்தும், அந்தப் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். எதுவும் நடக்கவில்லை. யாரும் உள்ளே வரவில்லை. ரஷீத் வேகமாக எழுந்து, கீழே சிதறிக் கிடக்கும் அந்தப் பெண்ணின் ஆடைகளை எடுத்து அவளின் பைக்குள் திணிக்கிறான். அந்த விபச்சாரப் பெண் ரஷீத்தின் மணிபர்ஸ், மோதிரங்கள், கைக் கடிகாரம் அனைத்தையும் எடுத்து அவனிடமே தருகிறாள். ‘இன்னொருத்தரின் பொருள் நமக்கு எதற்கு? அதிகமாக ஆசைப்பட்டால், நம்மிடம் அது தங்காது’ என்கிறாள் அவள். ரஷீத்தைப் பார்த்து ‘நீ ஒரு நல்ல மனிதன். அப்பாவி!’ என்கிறாள். அவன் வியர்வையில் நனைந்து போயிருக்கும் சட்டையுடன் இருப்பதைப் பார்த்து, ‘இந்தச் சட்டையுடனா வீட்டிற்குப் போகப் போகிறாய்? வேண்டாம்... நான் மைசூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு சட்டை இருக்கிறது. ஒரு ஆளுக்காக வாங்கிக் கொண்டு வந்தேன். அதை நீ அணிந்து கொள்’ என்று கூறி, வெள்ளையில் சிவப்பு நிறத்தில் பூக்கள் வரையப்பட்ட ஒரு சட்டையைத் தருகிறாள்.

இரவு வெகு நேரமாகி விட்டது.

ஆட்டோ வெளியே வந்து நிற்கிறது. ஆட்டோ ஓட்டுனர், தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு, வேகமாக ஷட்டரைத் திறப்பதற்காக வருகிறான். அருகில் வந்தால், ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருக்கிறது. ஓட்டுனர் உள்ளே வருகிறான். அவன் ஷட்டரின் பூட்டைத் திறக்கவில்லை என்ற விஷயம் அப்போதுதான் ரஷீத்திற்கே தெரிகிறது. அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள். ‘நான் ஒரு தவறு செய்து விட்டேன். செல்ஃபோன் உங்களின் கையில்தான் இருக்கிறது என்று எண்ணி, நான் voice mail இல் பேசி விட்டேன். வீட்டில் இன்னொரு சாவி இருக்கிறது. அதைக் கொண்டு வந்து யாரோ திறந்திருக்கிறார்கள்’ என்கிறான் ஆட்டோ ஓட்டுனர்.

அவ்வளவுதான்- ஆடிப் போகிறான் ரஷீத். அப்படியென்றால்... தன் வீட்டில் உள்ளவர்களுக்கு ‘தான் ‘தேவடியாளுடன்’ஷட்டருக்குள் அடைந்து கிடந்த விஷயம் தெரிந்து விட்டதோ?’ - கலங்கிப் போயிருக்கும் அவன், ‘இனி என் வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?’ என்கிறான்.   அதற்கு ‘நான் ஒருவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். அவர் ஏதாவது ஐடியா கொடுப்பார்’ என்று கூறும் ஆட்டோ ஓட்டுனர், திரைப்பட இயக்குனரிடம் அவனை அழைத்து வருகிறான்.

திரைப்பட இயக்குனர் தங்கியிருக்கும் இடம்.

ரஷீத் வெளியே நின்று கொண்டிருக்க, ஆட்டோ ஓட்டுனர் உள்ளே வந்து விஷயத்தைக் கூறுகிறான். ‘அந்த ஆளை உள்ளே அழைத்து வர வேண்டாம். எப்படி இருந்தாலும் வீட்டிற்குப் போய்த்தானே ஆக வேண்டும்! எந்த பிரச்னைகள் வந்தாலும், அதைச் சந்திப்பவன்தான் மனிதன். சந்திக்கட்டும்!’ என்கிறார் இயக்குனர். ஆனால், கடைக் கண்களால் வெளியே பார்க்கிறார். வெளியே- வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் வரையப்பட்ட சட்டையை அணிந்திருக்கும் ரஷீத்தை அவர் பார்க்கிறார்.

ரஷீத் தயங்கிக் கொண்டே வெளி வாசலைத் திறந்து, தன் வீட்டின் முன்னால் வந்து ‘காலிங்பெல்’லை அழுத்துகிறான். அவனுடைய மூத்த மகள் வந்து கதவைத் திறக்கிறாள். அவள் ஒரு மாதிரியாக தன் தந்தையைப் பார்க்கிறாள். பூக்கள் போட்ட சட்டையையும்… ‘அப்பா... நீங்க ரொம்பவும் நல்லவர். ஆனால், உங்களுக்கு இருக்கும் நண்பர்கள்தான் சரியில்லை. நடந்த விஷயம் அம்மாவுக்குக் கூட தெரியாது. என்னுடன் படிக்கும் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். நான் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வார்கள். ஏன் என்று கூட கேட்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அருமையான நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனிடம் கூறி நான்தான் ஷட்டரைத் திறக்கச் செய்தேன். ஆண் நண்பர்களுடன் பழகினாலோ, அவர்களுடன் சேர்ந்து சிரித்தாலோ, பேசினாலோ தப்பாக நினைக்கிறீர்கள். நாங்கள் எல்லோரும் சேர்ந்து படிக்கிறோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமே இல்லை. எங்கள் எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன... இலட்சியங்கள் இருக்கின்றன... எதிர்கால நோக்கங்கள் இருக்கின்றன. எங்களின் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே. எங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அப்பா... ப்ளீஸ்... எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். என்னை தொடர்ந்து படிக்க வையுங்கள். ப்ளீஸ், அப்பா’ என்கிறாள் ரஷீத்தின் மகள். தன் மகளையே கனிவுடனும், நன்றியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறான் ரஷீத்.

சாப்பாட்டு மேஜை. எதுவுமே கேட்காமல், எப்போதும் போல ‘எதுவுமே தெரியாத’ ரஷீத்தின் மனைவி, அவனுக்கு இரவு உணவு கொண்டு வந்து வைக்கிறாள். தன் மனைவியின் முகத்தையே பார்க்கும் ரிஷாத் அவளிடம் ‘நம் மகளுக்கு திருமணம் வேண்டாம். அவள் தொடர்ந்து படிக்கட்டும்’ என்கிறான். தன் கணவனை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அவள் ‘நாம் ஏற்கனவே நிச்சயம் செய்து விட்டோமே!’ என்கிறாள். அதற்கு அவன்  ‘அதனால் என்ன? நம் சொந்தகாரர்கள்தானே! நான் கூறி சமாளித்துக் கொள்கிறேன்’ என்கிறான். மனம் மாறிய நிலையில் இருக்கும் தன் கணவனையே வினோதமாக பார்க்கிறாள் அந்த அன்பு மனைவி. சாப்பிட்டு முடித்த ரஷீத், படுக்கையில் போய் படுக்கிறான். அருகில் அவனுடைய இனிய குடும்பம்...

பொழுது புலர்ந்து விட்டது. ஆட்டோ ஓட்டுனர் தன் ஆட்டோவில் யாரையோ ஏற்றிக் கொண்டு வேகமாக போய்க் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில்- எதிர் திசையில் வேறொரு ஆட்டோ வருகிறது. அந்த ஆட்டோ வந்து சாலையின் ஒரு இடத்தில் நிற்கிறது. அங்கு திரைப்பட இயக்குனர் நின்று கொண்டிருக்கிறார். ஆட்டோவிலிருந்து ரிஷாத்துடன் ஷட்டருக்குள் இருந்த விலை மாது இறங்குகிறாள். அவள் தன் கையிலிருந்த பணத்தை இயக்குனரிடம் தருகிறாள். ‘சீக்கிரம் படத்தை இயக்க பாருங்கள்...’ என்கிறாள். அவளிடமிருந்து பணத்தை வாங்கிய இயக்குனர் ‘ஆட்டோ ஓட்டுனர் என்னுடைய ‘பேக்’ கைக் கொண்டு வந்து தந்து விட்டான். ஆனால், அதில் என்னுடைய கதை அடங்கிய தாள்கள் இல்லை’ என்கிறார். ‘நான் ஒரு கதை படித்தேன். மிகவும் அருமையான கதை. இதை படியுங்கள் என்று ஒரு கதை அடங்கிய தாள்களை அவரிடம் தரும் அந்தப் பெண் ‘மைசூரில் உங்களுக்கென்று ஒரு சட்டை வாங்கினேன். அதை இப்போது வேறொருவருக்கு கொடுத்து விட்டேன்’ என்கிறாள். கதை அடங்கிய தாள்களைப் புரட்டும் இயக்குனர் ‘அந்தச் சட்டை வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற பூக்கள் வரையப்பட்டதா?’ என்று கேட்கிறார். தொடர்ந்து அவர் ‘இப்போது நான் எடுக்கப் போகும் கதை முன்பு எழுதியது அல்ல. புதிய கதை. இப்போது நான் இயக்கப் போகும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?’ என்று கேட்டு விட்டு, ‘Shutter’....... என்கிறார் - அவளைப் பார்த்துக் கொண்டே.

நம் ‘shutter’ திரைப்படம் இந்த இடத்தில் முடிவடைகிறது.

ஷட்டருக்குள் அடைபட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பவராக வாழ்ந்திருப்பவர் லால். இதற்கு மேல் ஒரு பொருத்தமான நடிகர் இல்லை என்பதே உண்மை. ரஷீத் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

விலை மாதுவாக சஜிதா மாடத்தில். பண்பட்ட நாடக நடிகை. என்ன அற்புதமான நடிப்பு!

திரைப்பட இயக்குனராக- எல்லோரும் மதிக்கும் ஸ்ரீனிவாசன். பாத்திரத்திற்கு என்ன அருமையாக உயிர் தந்திருக்கிறார்! இவரைத் தவிர இந்த கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள்?

ஆட்டோ ஓட்டுனராக வினய் ஃபோர்ட். ஆட்டோ ஓட்டுனராகவே வாழ்ந்திருக்கிறாரே மனிதர்!

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுகள் இரண்டு 1) ஒளிப்பதிவு 2) சவுண்ட்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி நாயர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்ன அருமையான லைட்டிங்! ஷட்டருக்குள் இருக்கும் சிறிய இடத்தில் இருளும் ஒளியும் ஆங்காங்கே இருப்பதைப் போல லைட்டிங் பண்ணியிருக்கிறாரே! ‘ஷட்டர்’ திரைப்படம் ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக ஆனதற்கு ஹரி நாயரின் பங்களிப்பு மிகவும் அதிகம். ‘ஒரு தேர்ந்த ஒளிப்பதிவு என்றால் எப்படி இருக்க வேண்டும்?’ என்பதற்கு சரியான உதாரணமாக ஹரி நாயரின் ஒளிப்பதிவை கூறலாம். இப்படியொரு ஒளிப்பதிவாளர் இங்கு இருப்பதற்கு நாம் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும்.

அடுத்து நாம் பாராட்ட வேண்டியவர் Sound designing செய்திருக்கும் ரங்கநாத் ரவி. Sound mixing செய்திருப்பவர் எம்.ஆர்.ராமகிருஷ்ணன். பின்னணி இசை என்று எதுவுமே இல்லாமல் வெறும் ஓசைகளை மட்டுமே வைத்து ஒரு மிகச் சிறந்த படம் உருவாகியிருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்! இயற்கையான ஒலிகளை மிகவும் தத்ரூபமாக கொண்டு வந்து, ஒரு படம் பார்க்கிறோம் என்னும் உணர்வே நமக்கு தோன்றாமல், ஒரு உண்மைச் சம்பவத்தைத்தான் நேரில் பார்க்கிறோம் என்னும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை படைத்திருக்கிறார்கள் என்றால்... அதற்கான பெருமை Sound விஷயத்தில் பணியாற்றியிருக்கும் இவ்விருவரையும்தான் சேரும்.

படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் ஜாய் மேத்யூ. மலையாள நாடக உலகில் பன்முகத் தன்மைகளையும் வெளிப்படுத்தி புகழ் பெற்ற மனிதராக இருக்கும் இவர், ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அம்ம அறியான்’ என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். நீ.... ண்.... ட... இடைவெளிக்குப் பிறகு ‘ஷட்டர்’ படத்தின் மூலம் ஜாய் மேத்யூ இயக்குனர் அவதாரத்தை முதல் தடவையாக எடுத்திருக்கிறார்.  முதல் படமே முத்திரைப் படமாக அமைந்து விட்டது! கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பல முறைகள் மாற்றியும், திருத்தியும் ‘ஷட்டர்’ படத்தின் திரைக்கதையை ஜாய் மேத்யூ திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார். அந்த கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த பரிசுதான் இந்த வெற்றி!

மலையாளப் படவுலகில் ஒரு மாறுபட்ட திரைப்படத்தை இயக்கி, ‘புதிய அலை’ கொண்ட படங்கள் உருவாக ஒரு முன்னுதாரணமாக இருக்கும் ஜாய் மேத்யூ அவர்களே! உங்களின் வரவேற்கத் தக்க திறமைக்கு முன்னால் தலை குனிந்து வணங்குகிறேன். உங்களின் இந்த புதிய அலை இனியும் தொடரட்டும்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.