
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கோலங்ஙள்
(மலையாள திரைப்படம்)
மலையாள பட உலகிற்கு பல அருமையான படங்களை இயக்கி, பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். அவர் இயக்கிய ஒரு மிகச் சிறந்த படமிது. இந்தப் படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான்.
1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் பி.ஜே.ஆன்டனி எழுதிய ‘ஒரு கிராமத்தின்டெ ஆத்மாவு’ என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.
கேரளத்தின் மத்திய திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வாழும் சில மனிதர்களின் கதையே இப்படம்.
இந்தப் படத்தின் கதாநாயகி – மேனகா (தமிழில் வெளிவந்த ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடித்தார். எனினும், பெரிய அளவிற்கு தமிழ்ப் பட உலகில் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை. ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘நெற்றிக் கண்’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் பலரின் ஞாபகத்தில் இருக்கிறார். ஆனால், மலையாளத்தில் 25 வருடங்களுக்கு முன்னால் குறிப்பிடத்தக்க நடிகையாக இருந்தார் மேனகா).
அந்த கிராமத்தின் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு கிறிஸ்தவ பெண்ணின் மகள் மேனகா. அவளுக்கு ஒரு அக்காவும் இருக்கிறாள்.
தினமும் கையில் புட்டிப் பாலை எடுத்துக் கொண்டு போய், படகில் பயணம் செய்து, அடுத்த கரையில் இருக்கும் வீட்டிற்குக் கொண்டு போய் கொடுத்து வருவதுதான் மேனகாவிற்கு வேலை.
பாவாடை, சட்டையுடன் படகில் பயணம் செய்யும் மேனகாவின் மீது, படகோட்டிக்கு காதல். படகில் அமர்ந்திருக்கும் அவளையே அவன் எப்போதும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். சில நேரங்களில் படகில் அவள் மட்டுமே அமர்ந்திருப்பாள். அந்த மாதிரியான நேரங்களில் அவளையே ஆசையுடன் பார்த்துக் கொண்டு அவன் படகை ஓட்டுவான்.
எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் அவளையே பார்த்துக் கொண்டு படகை ஓட்டிக் கொண்டிருக்க முடியும்? ஒருநாள் அவன் தன் காதலை வெளியிடுகிறான். அதைக் கேட்டதும் அவள் ஒரு மாதிரி ஆகி விடுகிறாள். ‘இனிமேல் இப்படியெல்லாம் பேசினால், நான் இந்தப் படகில் வருவதையே நிறுத்திக் கொள்வேன்’ என்கிறாள் அவள்.
அவ்வளவுதான்… அமைதியாகி விடுகிறான் படகோட்டி. அதற்குப் பிறகு அவன் வாயையே திறப்பதில்லை.
எந்தவித உற்சாகமும் இல்லாமலே படகை அவன் செலுத்துவான். அதில் புட்டிப் பாலுடன் அமர்ந்து பயணிக்கும் மேனகாவும் எதுவும் பேசுவதே இல்லை. வெறும் நடைப் பிணமாக அதற்குப் பிறகு ஆகி விடுகிறான் படகோட்டி.
இதற்கிடையில் வேறொரு ஊரிலிருந்து அந்த கிராமத்திற்கு படகில் பயணித்து வந்து, லுங்கி, சட்டையுடன் காலில் செருப்புகூட இல்லாமல் தெருத் தெருவாக மண்ணில் நடந்து ரிப்பன், சீப்பு, பவுடர், பலூன் ஆகியவற்றை விற்பனை செய்பவர் வேணு நாகவள்ளி. தெருவில் நடந்து கொண்டே அவர் ‘ரிப்பன்… குப்பி… பவுடர்… கம்மல்’ என்று கூறுவார். உடனே ஆங்காங்கே வீடுகளில் இருக்கும் பெண்கள் வெளியே வந்து தங்களுக்குப் பிடித்தமான பொருட்களை காசு கொடுத்து வாங்குவார்கள்.
மாதத்திற்கொரு முறை அவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் வருவார். இந்த கிராமத்திற்கு இந்த முறை வந்து விட்டால், பலூனும் ரிப்பனும் விற்கும் அந்த வியாபாரியை அடுத்த மாதம்தான் இனிமேல் பார்க்க முடியும். ஒருநாள் தன் வீட்டிற்கு அருகில் தெருவில் கூவிக் கொண்டு செல்லும் வேணு நாகவள்ளியிடம் ரிப்பன் வாங்க ஆசைப்படும் மேனகா, கொஞ்சம் காசை இப்போது கொடுத்து, மீதியை அடுத்த மாதம் தருவதாகக் கூற, வியாபாரி அதற்கு மறுத்து விடுகிறார். ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பும் மேனகாவின் முகத்தில் கவலை குடி கொள்கிறது.
அந்த இரவு நெருங்கும் நேரத்தில் தன்னுடைய ஊருக்குச் செல்வதற்காக படகுத் துறைக்கு வருகிறார் வேணு நாகவள்ளி. படகில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான் படகோட்டி. அவனுடைய அன்றைய வேலை முடிந்து விட்டது. அவனை பலூன் வியாபாரி தட்டி எழுப்புகிறார். ‘அக்கரைக்குப் போக வேண்டும்’ என்கிறார். ‘இன்றைய என் வேலை முடிந்து விட்டது. இனி நாளைக்குக் காலையில்தான் மீண்டும் படகை ஓட்டுவேன்’ என்று கூறும் படகோட்டி, பலூன், ரிப்பன் விற்கும் வியாபாரியின் முகத்தில் தெரியும் கவலையைப் பார்த்து மனிதாபிமான எண்ணத்துடன் ‘நீங்கள் அவசரமாக போக வேண்டுமென்றால், நான் படகோட்ட தயார்’ என்கிறான். ஆனால், வேணு நாகவள்ளி வேண்டாம் என்று கூறி விடுகிறார்.
அந்த இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் அந்த நடந்து திரியும் வியாபாரி எங்கே தங்குவார்? அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து தங்கச் சொல்கிறான் படகோட்டி. இரவு நேரத்தில், இருவரும் மனம் விட்டு பேசுகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே ஒரு நெருங்கிய நட்பு உண்டாகிறது.
மறுநாள் பொழுது விடிந்த பிறகு, மீண்டும் ரிப்பன், பலூன் விற்பனைக்காக தெருவில் நடந்து வரும் வியாபாரியைப் பார்த்து, மேனகா ‘நேற்று பார்த்தபோது, அடுத்த மாதம்தான் இந்த கிராமத்திற்கே வருவேன் என்று சொன்னீர்கள், இப்போது பார்த்தால், தெருவில் வந்து கொண்டிருக்கிறீர்கள்’என்று கேட்க, ‘இனிமேல் நான் வேறெங்கும் போவதாக இல்லை. இந்த ஊரிலேயே தங்கி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்’ என்கிறார் வியாபாரி. சொன்னதோடு நிற்காமல், மேனகா தரும் காசை வாங்கிக் கொண்டு ரிப்பனையும் தருகிறார். ரிப்பன் வியாபாரி, நடந்து செல்லும் மேனகாவையே, இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த கிராமத்தின் பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு இடத்தில், அவரிடம் கேட்டு, ஒரு குடிசையைக் கட்டி, அதில் குடி புகவும் செய்கிறார் ரிப்பன் வியாபாரி வேணு நாகவள்ளி.
நாட்கள் நகர்கின்றன. ரிப்பன் வியாபாரி தன் மனதிற்குள் மேனகாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்த காதல் உணர்வு வளர்ந்து பலமானதாக ஆகிறது. ஒருநாள் தன் மனதில் இருக்கும் காதலை அவர் வெளியிட, அதை மறுப்பேதும் கூறாமல் மேனகா ஏற்றுக் கொண்டு ‘சம்மதம்’ என்று கூறியதைப் பார்த்து, வியாபாரியின் முகத்தில் படரும் சந்தோஷத்தின் ரேகைகளைப் பார்க்க வேண்டுமே?
அந்த கிராமத்தில் ஒரு சிறிய தேநீர் கடை. வேலையற்ற பலரும் அங்கு ‘வெட்டியாக’ உட்கார்ந்து ஊர்க் கதைகளை அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த கடையின் சொந்தக்காரர் ஸ்ரீனிவாசன். அந்த பயனற்ற கும்பலின் பிரயோஜனமற்ற உரையாடல்களைக் கேட்டு சீனிவாசனுக்கு எரிச்சல்… எரிச்சலாக வரும். ஆனால், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். எனினும், அவ்வப்போது தான் மனதில் நினைப்பதை அவர் வெளிப்படையாக கூறவும் செய்வார்.
அந்த கிராமத்தில் எந்தவொரு வேலையுமில்லாமல் ஒவ்வொரு வீட்டின் பின் புறங்களிலும் லுங்கியுடன் அலைந்து கொண்டிருப்பவர் நெடுமுடி வேணு. குடிசைகளின், வீடுகளின் பின்னால் இருக்கும் குளிக்கும் இடங்களில் பெண்கள் யாராவது குளித்துக் கொண்டிருந்தால், அதை ‘தட்டி’யின் ஓட்டை வழியாக பார்த்து ரசிப்பதே அவரின் வேலை. அதனால், அவர் அந்த கிராமத்தின் பல பெண்களிடமும் பிரம்படியும், ‘விளக்குமாற்று’ அடியும் வாங்கியிருக்கிறார். எனினும், சிறிது கூட அவர் திருந்துவதாக இல்லை. யாருக்கும் தெரியாமல், திருட்டுத்தனமாக ஓட்டைகளின் வழியே, குளிக்கும் பெண்களின் உடலைப் பார்த்து குதூகலிக்கும் அவரின் செயல் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அவர் ஓட்டை வழியாக பெண்களின் உடலைப் பார்க்க, அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆக, அவளின் உடலில் இந்த இடத்தில் மச்சம்… அந்த இடத்தில் மச்சம் என்றெல்லாம் அவர் கூற, திருமணம் செய்ய வந்த ஆண் அவர் கூறியது உண்மைதான் என்பது தெரிந்தவுடன், திருமணமே வேண்டாம் என்று மறுத்து ஓட… இப்படி எத்தனை பெண்களின் திருமணங்கள் நின்று போனதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார் நெடுமுடி வேணு!
கள்ளு வர்க்கி… இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் திலகன். இருபத்து நான்கு மணி நேரமும் கள்ளு கடையில் அமர்ந்து கொண்டு கள்ளு குடித்துக் கொண்டிருப்பவர். எனினும், வசதி இருக்கிறது. அவருக்கு மேனகாவின் மீது ஒரு கண். மேனகா புட்டி பாலுடன் நடந்து செல்லும்போது, அவரையே வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருப்பார் திலகன். மனைவியை இழந்து விட்ட திலகன், தன்னுடைய இரண்டாம் தாரமாக ‘சின்ன பொண்ணான’ மேனகாவை அடைந்தே ஆவது என்பதில் வெறியாக இருக்கிறார்.
மேனகாவைப் பெண் கேட்டு அவளின் பெற்றோருக்கு தூது அனுப்புகிறார். அவர்களுக்கு சில கடன் பிரச்னைகள் இருக்கின்றன. அதை முழுமையாக தீர்த்து வைப்பதாக கூறுகிறார் திலகன். கல்லும் கனிய ஆரம்பிக்கிறது. மேனாவின் தாய் ‘திலகனுக்கு மனைவியாக ஆகும்படி தன் மகளை’ கேட்டுக் கொள்கிறாள். ஆனால், தான் மணம் செய்ய விரும்புவது ரிப்பன் வியாபாரியைத்தான் என்று மகள் சொல்ல, கோபத்தின் எல்லைக்கே சென்று விடுகிறாள் தாய். ‘இந்த திருமணத்திற்கு நீ சம்மதிக்கவில்லையென்றால், நான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து விடுவேன்’ என்று வேகமாக தாய் ஓட, அவளுக்குப் பின்னால் மகள் ஓடுகிறாள். தன் தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, தன் வாழ்க்கையை அவள் பலியிடுகிறாள்.
இந்த விஷயம் தெரிந்து, இடிந்து போன ரிப்பன், பலூன் வியாபாரி வேணு நாகவள்ளி தன்னுடைய குடிசையை நெருப்பிற்கு இரையாக்கிவிட்டு, அந்த ஊரை விட்டே வெளியேறுகிறார்.
கிராமத்து மனிதர்களின் அட்டகாசங்களைக் கேள்வி கேட்ட தேநீர் கடை ஸ்ரீனிவாசனின் தேநீர் கடை, நெடுமுடி வேணுவின் ஆட்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. அவரும் வேறு வழியே இல்லாமல், வெறும் கையுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி ஓடுகிறார்.
திலகனுக்கும் மேனகாவிற்கும் திருமணம் நடக்கிறது.
அந்த கிழவன் தன் மென்கரங்களை காமவெறியுடன் பற்றி இருக்க, வெறுப்புடன் அதைச் சகித்துக் கொண்டிருக்கிறாள் மேனகா.
கிழவன் திலகனும் – அரும்பு நிலையில் இருக்கும் மேனகாவும் கணவன்- மனைவி கோலத்தில் படகில் ஏறி அமர, அதை ‘ஒரு காலத்தில்’ மேனகாவை தன் மனதிற்குள் காதலித்த படகோட்டி ஓட்டுகிறான் – வெறுப்புடனும், கசப்புடனும்.
படகில் செல்லும்போது ‘கள்ளு வர்க்கி’ புட்டியிலிருந்த கள்ளைக் குடிக்கிறார். புரை ஏற, சிரிக்கிறார் திலகன். அப்போது அவர் வாயிலிருந்து கள்ளு சிதறி தெறிக்கிறது.
அதை வெறுப்புடன் பார்க்கிறான் படகோட்டி.
படகு அக்கரையை அடைகிறது. ‘கள்ளு’வர்க்கி, தன் இளம் மனைவி மேனகாவுடன் நடந்து செல்ல, வாழ்க்கையின் வினோதத்தையும் விளையாட்டையும், அவலத்தையும் தன் மனதில் நினைத்துக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் படகோட்டி.
அத்துடன் படம் முடிவடைகிறது.
ஒரு கிராமத்தையும், அந்த கிராமத்து மனிதர்களையும், பெண்களையும் உயிர்ப்புடன் தன் படத்தில் சித்தரித்திருக்கும் கே.ஜி.ஜார்ஜை மனம் திறந்து பாராட்டலாம்.
படத்தின் இசையமைப்பாளர்: எம்.பி.ஸ்ரீனிவாசன்.
ஒளிப்பதிவு : ராமச்சந்திரபாபு.
மேனகாவின் தாயாக நடித்த ராஜம் கே.நாயருக்கு சிறந்த துணை நடிகைக்கான கேரள அரசாங்கத்தின் விருது கிடைத்தது.
நான் இந்தப் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே கே.ஜி.ஜார்ஜ் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஒரு முன் திரையீடு’ நிகழ்ச்சியில் பார்த்து விட்டேன். அந்நிகழ்ச்சிக்கு கே.ஜி.ஜார்ஜ், நடிகர் ஸ்ரீனிவாசன் இருவரும் வந்திருந்தனர்.
இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயம் - ‘கோலங்ஙள்’ படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் பின்னர் பிரபலமானவர்களாக ஆகி விட்டார்கள்.