
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆர்டினரி
(மலையாள திரைப்படம்)
அருமையான லொக்கேஷன், இனிமையான பாடல்கள், பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர் – நடிகைகள், சுவாரசியமான சம்பவங்கள், இயல்பான உரையாடல்கள், எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சிகள் – இவற்றைக் கொண்டு ஒரு வெற்றிப் படத்தைத் தர முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
2012இல் திரைக்கு வந்த இந்தப் படத்தின் கதாநாயகர்கள் குஞ்சாக்கோ போபனும், பிஜு
மேனனும்.
வில்லனாக – ஆஸிஃப் அலி.
கதாநாயகியாக – ஸ்ரீதா சிவதாஸ்.
இசை: வித்யா சாகர்
இயக்கம் : சுஜீத்.
பத்தனம்திட்ட பேருந்து நிலையத்தில் படம் ஆரம்பிக்கிறது. இரவி அரசியல்வாதியாக வந்து, ஆட்சியில் அமரும் அமைச்சராக ஆக வேண்டும் என்று நினைக்கிறான். அவனுடைய தந்தை கேரள அரசாங்கத்தின் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் பஸ் கண்டக்டராக இருந்து, மரணத்தைத் தழுவியவர். தந்தையின் வேலை மகனுக்குக் கிடைக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த கண்டக்டர் வேலையை ஏற்றுக் கொள்கிறான் இரவி. தான் அணிந்து கொண்டு வந்த கலர் பேண்ட்டையும் சட்டையையும் ஒரு அறையில் கழற்றிப் போட்டு விட்டு, கண்டக்டர் அணிய வேண்டிய காக்கி பேண்ட், காக்கி சட்டை, தோளில் தொங்கும் தோல் பை, டிக்கெட்கள் அடங்கிய தகரம் ஆகியவற்றுடன் அதிகாரியைப் போய் பார்க்கிறான். அவனுக்கு வாழ்த்து கூறும் அவர், அவன் பணி செய்ய வேண்டிய ரூட் எது என்பதைக் கூறுகிறார்.
பத்தனம்திட்டயில் இருந்து மலை மீது இருக்கும் ‘கவி’ என்ற சிறிய கிராமத்திற்குச் செல்லும் பேருந்தில்தான் அவனுக்கு பணி. பத்தனம்திட்ட பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அந்த பேருந்து இரவு ஆரம்பமான பிறகு மலை உச்சியில் இருக்கும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ‘கவி’யை அடையும். ஓட்டுனரும், நடத்துனரும் அங்கே இருக்கும் ஒரு சிறிய கட்டிடத்தில் இரவில் தங்கிக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பி பத்தனம்திட்ட பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும். ‘கவி’யிலிருந்து புறப்பட்டு பத்தனம்திட்டவிற்கு வந்து, மீண்டும் ‘கவி’யில் போய் அடைக்கலம் ஆக வேண்டும். ஒரே ‘ட்ரிப்’தான்.
‘ஓட்டுனர் யார்?’ என்று கேட்கிறான் இரவி. ‘கவி’க்குச் செல்லும் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டிருப்பான் என்று பதில் வருகிறது. பேருந்து நிலையம் முழுவதும் தேடித் தேடிப் பார்க்கிறான். ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறான் சுகு. அவன்தான் ஓட்டுனர். இரவி என்ற இரவி குட்டன் பிள்ளையைப் பார்த்ததும், சற்று அவனை அங்கு நிற்குமாறு கூறி விட்டு, ‘இதோ டீஸல் போட்டு விட்டு வந்து விடுகிறேன்’ என்று பேருந்திற்குப் பின்னால் போகிறான் சுகு. இரவி அவனைப் பின்பற்றிச் செல்ல, ஒரு மூலையில் திருட்டுத்தனமாக பாக்கெட்டிற்குள்ளிருந்து மது புட்டியை எடுத்து, நீர் ஊற்றி கலந்து அதை சுகு பருகிக் கொண்டிருக்கிறான். இரவி அதைப் பார்த்ததும், சுகு அசடு வழிய சிரிக்கிறான்.
பேருந்து ‘ஹார்ன்’ ஓசை ஒலிக்க, பேருந்து நிலையத்தை விட்டு புறப்படுகிறது. ‘கவி’யைச் சேர்ந்த பயணிகள் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள். அங்கு ஆசிரியராக பணியாற்றிய வேணு மாஸ்டர், பத்தனம்திட்டயில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றும் அழகு தேவதையான கல்யாணி, எப்போதும் குடியின் போதையிலேயே மிதந்து கொண்டிருக்கும் வக்கச்சன்- இப்படி பலதரப்பட்ட பயணிகளும் அதில் ஏறுகிறார்கள். கிட்டத்தட்ட இந்த கதாபாத்திரங்கள் தினமும் அல்லது அடிக்கடி அந்தப் பேருந்தில் ‘கவி’யிலிருந்து பத்தனம்திட்ட வருவார்கள். வேலை முடிந்து, அதே மாதிரி ‘கவி’க்கு திரும்பிச் செல்வார்கள். பேருந்து பயணத்தின்போது எவ்வளவோ சுவாரசியமான சம்பவங்கள்… வித்தியாசமான அனுபவங்கள்… மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டிக்கெட் கொடுக்கிறேன் என்று ஒரு பெண்ணின் மீது தடுமாறி விழுகிறான் இரவி. இன்னொரு நேரம் ஓட்டுனர் ‘ப்ரேக்’ போட, பேலன்ஸ் பண்ண முடியாமல் கல்யாணியின் மீது போய் விழுகிறான். ஆரம்பமே அமர்க்களம்தான்…
அவனை பாட்டு பாடுமாறு எல்லோரும் கேட்க, அவன் அருமையான ஒரு பாட்டைப் பாட, பேருந்தில் அமர்ந்திருந்த எல்லோரும் பாடலுக்கேற்றபடி ஆட… மொத்தத்தில் – அருமையான பயணம்.
இரவு சிறிது சிறிதாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில், பனி மூடிய ‘கவி’ என்ற அந்த அழகு பிரதேசத்திற்குள் முன் விளக்குகளுடன் நுழைகிறது பேருந்து.
இரவில் அங்குள்ள அறையில் டிரைவரும், கண்டக்டரும் தங்குகிறார்கள்… மனம் விட்டு பேசுகிறார்கள்… ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்து குளிரில் நடுங்குகிறார்கள்… புதிய அந்த இடத்தின் சுகத்தை அனுபவிக்கிறார்கள்.
பொழுது புலர்கிறது. காலைக் கடன் கழிப்பதற்காக புதர்களுக்கு மத்தியில் இரவி ஒதுங்க, வேலைக்குச் செல்லும் பெண்கள் வரிசையாக அங்கு வர, என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தவிக்க.. நம்மை சிரிக்கச் செய்யும் இப்படிப்பட்ட பல காட்சிகள்.
மீண்டும் பயணம் தொடங்குகிறது – பத்தனம்திட்ட நோக்கி. திரும்பவும் பேருந்தில் பயணமாகும் பயணிகள்… சுவாரசியமான சம்பவங்கள்…
தினமும் பேருந்தில் பயணிக்கும் கல்யாணியின் மீது இரவிக்கு காதல் பிறக்கிறது. தன் காதலை அவன் ஒரு டிக்கெட்டின் பின் பகுதியில் எழுதி, அவளிடம் தருகிறான். அவள் அதை வாங்கி தன் பர்ஸுக்குள் வைத்துக் கொள்கிறாள். பின்னர் ஒரு நாள் அந்தக் காதலில் தனக்கு சம்மதமே என்றும் கூறுகிறாள். பிறகென்ன? ‘கவி’யின் அழகு ஆட்சி செய்யும் இடங்களில் உலகை மறந்து ஆட வேண்டியதுதான்… பாட வேண்டியதுதான்… அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
ஆசிரியர் வேணு மாஸ்டரின் மகள் கல்யாணி என்றாலும், அவருக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள். அவள் அவருடைய வளர்ப்பு மகள். அவருக்குப் பிறந்தவள் அல்ல. அவருடைய நண்பரின் மகள். நண்பர் மரணமடைய, அந்தப் பெண் அன்னாவை அவரே வளர்க்க வேண்டிய நிலை. அன்னாவை பெண் கேட்டு வருகிறார் ஜோஸ் என்ற ஆசிரியர். அந்த இளைஞர் மிகவும் நல்லவர். எனினும், அதற்கு மறுத்து விடுகிறார் வேணு மாஸ்டர். தன்னுடைய சொந்த மகன் தேவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க தான் எப்போதோ நிச்சயம் செய்து விட்டதாக கூறுகிறார் அவர். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார் ஜோஸ் மாஸ்டர்.
எங்கோ தூரத்திலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பி வரப் போகும் தேவனுக்காக அந்த முழு குடும்பமும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.
இப்போது இரவிக்கு அந்தப் பேருந்துப் பயணம் நன்கு பழகி விட்டது. ‘கவி’யும், அந்த கிராமத்து மக்களும்தான்…
இதற்கிடையில் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு பயணியிடம், போலீஸ்காரர் ஒருவர் தன் அதிகாரத்தைக் காட்ட, அவரை துணிச்சலுடன் கேள்வி கேட்கிறான் இரவி. ‘எனக்கும் சட்டம் தெரியும். நீங்களும் அரசாங்க ஊழியர்தான். நானும் அரசாங்க ஊழியர்தான். நீங்களும் காக்கிச் சட்டை போட்டிருக்கிறீர்கள். நானும் காக்கிச் சட்டை போட்டிருக்கிறேன்’ என்கிறான். அவனின் அச்சமற்ற வார்த்தைகளைக் கேட்டு, அங்கிருந்து கிளம்பி விடுகிறார் போலீஸ்காரர்.
நாட்கள் நகர்கின்றன. ஒருநாள் பனி மூடிய மலைப் பாதையில் மேல் நோக்கி, பேருந்து முனகிக் கொண்டே வளைந்து வளைந்து பயணிக்க, ஒரு இடத்தில் அது நின்று விடுகிறது. காரணம் – பேருந்தின் டயர் ‘பங்க்சர்’ ஆகியிருக்கிறது. பயணிகள் அந்த வழியே வரும் ஜீப்களிலும், வேன்களிலும் (கேரளத்தில் அது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய காட்சி) ஏறி, ‘கவி’யை நோக்கி புறப்படுகிறார்கள்.
இரவியும், ஓட்டுனர் சுகுவும் பேருந்திற்கு முன்னால் இருட்டு நேரத்தில் மலைப் பாதையில் அமர்ந்திருக்கிறார்கள். ரிப்பேர் செய்ய வருகிறார் ஆசான் என்ற சலீம்குமார். டயரின் பங்க்சரைச் சரி பண்ணுவதற்கு முன்னர் அவர் தனக்குள் மதுவை ஊற்றிக் கொள்கிறார். அதற்குப் பிறகுதான் வேலையே நடக்கிறது. வேலை முடிந்ததும் சரியாகி, கிளம்பி விடுகிறார்.
ஓட்டுனர் சுகு முழு போதையில் இருக்கிறான். வண்டியை அவன் ஓட்ட வேண்டாம் என்று கூறிய இரவி, ஓட்டுனரின் இருக்கையில் தான் அமர்ந்து பேருந்தை ஓட்டுகிறான். பயணிகள் இருக்கையொன்றில் அமரும் சுகு சந்தோஷமாக உரையாடிக் கொண்டு வருகிறான்.
திடீரென்று ஒரு இடத்தில் அதிர்ச்சியடைந்து பேருந்தை நிறுத்துகிறான் இரவி. பேருந்திற்கு முன்னால் அடிபட்ட நிலையில் ஒரு இளைஞன்…. நிலை குலைந்து இரவியும், சுகுவும் பேருந்தை விட்டு கீழே வருகிறார்கள். அடிபட்டுக் கிடக்கும் அந்த இளைஞனைத் தூக்கிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அந்த வழியாக ஒரு ஜீப் மேல் நோக்கி வருகிறது. அந்த ஜீப் ஓட்டுனரிடம் விஷயத்தைக் கூற, அருகிலிருக்கும் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு போய் சேர்ப்பதாக அவன் கூறி, அந்த இளைஞனின் உடலை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்புகிறான்.
இரவியும் சுகுவும் பின்னர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு விசாரிக்க, அப்படி எந்த இளைஞனும் அடிபட்ட நிலையில் கொண்டு வரப்படவில்லை என்று அங்கு கூறுகிறார்கள். அந்த மருத்துவமனையில் மட்டுமல்ல- சுற்றியுள்ள எந்த மருத்துவமனையிலும் அந்த இளைஞன் சேர்க்கப்படவில்லை. அப்படியென்றால், அந்த அடிப்பட்ட இளைஞன் என்ன ஆனான்?
அடுத்த நாள் அந்த இளைஞனின் உடல் இறந்த நிலையில் ஒரு குட்டையில் மிதக்கிறது. இறந்தவன் வேணு மாஸ்டரின் மகன் தேவன்.
ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்ற ஓட்டுனர் யார்? அவன் ஏன் தேவனை மருத்துவமனையில் சேர்க்கவில்லை? அவனைக் கொலை செய்து, குட்டையில் ஏன் வீசி எறிய வேண்டும்? இப்போது அந்த ஓட்டுனர் எங்கே இருக்கிறான்?
இந்த கேள்விகள் ஒரு பக்கம் குடைந்து கொண்டிருக்க, வேறொரு பிரச்னையில் இருக்கிறார்கள் இரவியும், சுகுவும். அடிபட்டு பேருந்துக்கு முன்னால் கிடந்த தேவனின் தோல் பை, இப்போது இரவியிடம் இருக்கிறது. அதைத் திறந்து பார்த்தால்… அன்னா அவனுக்கு எழுதிய காதல் உணர்வு கொண்ட கடிதங்களின் குவியல்… அந்த பையை எப்படி பிறரின் கண்களில் படாமல் தொடர்ந்து பாதுகாப்பது?
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று உண்மையைக் கூறலாம் என்றால்… அதிலும் பிரச்னை… பேருந்தை ஓட்டியவன் சுகு அல்ல, இரவி… கண்டக்டர் எதற்கு பேருந்தை ஓட்ட வேண்டும்? ஓட்டுனர் மதுவின் போதையில் இருந்தான் என்பது தெரிந்தால், அவனுடைய வேலையே பறி போய் விடாதா?
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு இரவு வேளையில் மங்கலான வெளிச்சத்தில் தேவனின் தோல் பைக்குள் இருந்த அந்த கடிதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இரவி. அப்போது அவனைத் தேடி வருகிறாள் கல்யாணி.
அவள் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இரவி அந்த கடிதங்களை மறைக்கிறான். கல்யாணி அவற்றைப் பறிக்க முயல, கோபமடைந்த இரவி அவளை கன்னத்தில் அடித்து விடுகிறான். அந்த போராட்டத்தில் அந்த கடிதங்கள் சிதறி காற்றில் பறக்கின்றன.
இப்போது-
வெளியே நின்று கொண்டிருப்பது அன்னா. அவள் கீழே சிதறிக் கிடக்கும் கடிதங்களைப் பார்க்கிறாள். அனைத்தும் அவள் தேவனுக்கு எழுதிய கடிதங்கள். அந்த கடிதங்கள் இரவியிடம் எப்படி வந்தன? அறைக்குள் வந்து பார்க்கிறாள். உள்ளே – தேவனின் தோல் பை. அது எப்படி அங்கே வந்தது?
ஊருக்கே விஷயம் தெரிகிறது. ஊரே கூடுகிறது. போலீஸ்காரர் வருகிறார். ரவி முன்பு மோதிய அதே போலீஸ்காரர்தான். ‘நீயும் அணிந்திருப்பது காக்கிச் சட்டை. நானும் அணிந்திருப்பது காக்கி சட்டையா?’ என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்கும் அவர், அவனைக் கைது செய்கிறார்.
உண்மையில் நடந்தது என்ன?
தேவன் பேருந்தில் அடிபட்டானா? இல்லை… அதற்கு முன்பு யாரோ அடித்து, அவனை சாலையில் போட்டிருந்தார்களா? அந்த ஜீப் டிரைவர் தேவனை ஏன் மருத்துவமனையில் சேர்க்கவில்லை? அவனைக் கொன்று குட்டையில் வீசியது யார்? இரவியின் நிலைமை அதற்குப் பிறகு என்ன ஆனது? கண்டக்டரை பேருந்தை இயக்கச் செய்து விட்டு, போதையில் இருந்த ஓட்டுனர் சுகு என்ன செய்தான்? கொலைகாரப் பட்டம் பெற்றிருக்கும் இரவி மீது கல்யாணி கொண்ட காதல் என்ன ஆனது?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் மிகவும் அருமையாக பதில் கூறுகிறது ‘ஆர்டினரி.’ ‘கவி’ என்ற அந்த மலைப் பிரதேசத்திற்கு பத்தனம்திட்டயிலிருந்து தினமும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த ‘ஆர்டினரி’ பேருந்தையும், அதில் பயணிக்கும் பயணிகளையும் வைத்து இப்படி ஒரு திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத சம்பவங்களும், சஸ்பென்ஸ் நிறைந்த க்ளைமாக்ஸும் உள்ள ஒரு நல்ல படத்தைத் தர முடியும் என்பதைச் செயல் வடிவில் காட்டிய இயக்குநர் சுஜீத்திற்கு – ஒரு சபாஷ்!
அருமையான திரைக்கதை (நிஷாத் கே.கோயா, மனு பிரசாத்).
இயக்குநர் சுஜீத்தே கதையையும் எழுதியிருக்கிறார்.
வித்யா சாகரின் மிகச் சிறந்த இசையும், பாடல்களும் படத்திற்கு ப்ளஸ் பாய்ண்ட்.
ஃபைஸல் அலியின் ஒளிப்பதிவு – ஏ ஒன்! ‘கவி’ என்ற அந்த மலைப் பகுதி கிராமத்தை நம் இதயத்திற்குள் உலாவ விட்டதற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பேருந்தின் நடத்துனராக குஞ்சாக்கோ போபனும், ஓட்டுனராக பிஜுமேனனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். Beautiful combination!
கதாநாயகி கல்யாணியாக வரும் Shritha Sivadas- உண்மையாகவே ஒரு அழகான தேவதைதான்! இயல்பான சிரிப்பு, இயற்கையான நடிப்பு!
வில்லனாக வரும் Asif Ali- தேவையற்ற செயற்கைத்தனமான நடிப்பு! மிகை என்று கூட கூறலாம்.
வேணு மாஸ்டராக வரும் லாலு அலெக்ஸ், ஆசானாக வரும் சலீம்குமார், குடிகார வக்கச்சனாக வரும் பாபுராஜ்- அனைவரும் பாத்திரங்களுக்கு தங்களின் அனுபவ நடிப்புத் திறமையால் உயிர் தந்திருக்கிறார்கள்.
‘கவி’ என்ற கவித்துவமான மலை உச்சி கிராமத்தையும், அங்கு பயணிக்கும் ‘ஆர்டினரி’ பேருந்தையும், அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும், பயணிகளையும், கல்யாணியும்) நம்மால் எப்படி மறக்க முடியும்?