Logo

ஆகஸ்ட் ரஷ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3476
August Rush

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆகஸ்ட் ரஷ்

(அமெரிக்க திரைப்படம்)

சைப் பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் கலந்த ஒரு அருமையான குடும்பக் கதை. படத்தின் கதை கிட்டத்தட்ட நம் இந்தியப் படங்களில் வரும் கதையைப் போலவே இருக்கும். எனினும், நம்மை படத்தில் தீவிரமாக ஒன்றச் செய்வது- படம் முழுக்க ஆட்சி செய்யும் இசையும், நடிகர்களின் அசாத்தியமான நடிப்பும், உணர்ச்சிகரமான காட்சிகளும், திடீர் திடீர் என்று உண்டாகக்கூடிய திருப்பங்களும், கவித்துவம் நிறைந்த காட்சிகளும் தான்.

2007 ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.

1995 ஆம் ஆண்டில் படத்தின் கதை ஆரம்பமாகிறது. லைலா ஒரு புகழ் பெற்ற இசைக் குழுவில், இசைக் கருவி இசைப்பவளாக இருக்கிறாள். லூயிஸ் வேறு ஒரு இசைக் குழுவில் பாடகனாக இருப்பவன். அது ஒரு ‘ராக்’ இசை குழு. நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க கூடிய சூழ்நிலையில் லைலாவும் லூயிஸும் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.  சந்திப்பு பழக்கமாக வளர, அது படுக்கையில் போய் முடிகிறது.

சந்தர்ப்ப சூழ்நிலையால் லைலா சிக்காகோவிற்கு தன் தந்தையைத் தேடி வருகிறாள். இது தெரியாமல் வாக்குறுதி அளித்தப்படி லைலா வருவாள் என்று அவளை எதிர்பார்த்து லூயிஸ் காத்திருக்கிறான். இசையை எழுப்பிக் கொண்டு இங்குமங்குமாக திரிகிறான். அதைக் கேட்டாவது அவள் வரமாட்டாளா என்ற நம்பிக்கை அவனுக்கு. ஆனால், லைலா அங்கு இருந்தால்தானே?

நாட்கள் கடந்தோடுகின்றன. லைலா தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள். இது விஷயமாக அவளுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையே  மிகப் பெரிய வாக்குவாதம் உண்டாகிறது. அதைத் தொடர்ந்து அவள் வேகமாக சாலையில் ஓடுகிறாள். அப்போது ஒரு கார் அவள் மீது மோதுகிறது. அந்த அதிர்ச்சியில் வயிற்றிலிருந்த குழந்தை சற்று முன்பே வெளியே வந்து விடுகிறது. அவளுடைய தந்தை, குழந்தையை தத்து எடுப்பவர்களிடம் தந்து விடுகிறார். மயக்கமாக இருந்த லைலாவிடம் குழந்தை இறந்து விட்டாக கூறி விடுகிறார்.

பதினொரு வருடங்கள் கடந்தோடுகின்றன. லைலாவின் மகன் இவான், நியூயார்க் நகரத்திற்கு வெளியே இருக்கும் ஒரு அனாதைச் சிறுவர்கள் இல்லத்தில் இருக்கிறான். தன் பெற்றோர் என்றாவது ஒரு நாள் தன்னை வந்து அழைத்துச் செல்ல மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் அவன் இருக்கிறான். அவன் ரிச்சர்டு ஜெஃப்ரீஸ் என்ற சமூக சேவை செய்யும் மனிதரைப் பார்க்கிறான். வெகு சீக்கிரமே அவன் அங்கிருந்து வெளியேறி, நியூயார்க் நகரத்திற்கு வருகிறான். இசையை கேட்பதிலும், இசைப்பதிலும் எப்போதும் நாட்டம் கொண்டிருக்கும் அவனுக்கு ஒரு இடத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆர்த்தர் என்ற சிறுவன் பழக்கமாகிறான்.

தன்னுடைய இசைக் குழுவிலிருந்து விலகிய லூயிஸ் இப்போது சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் வசித்துக் கொண்டிருக்கிறான்.

லைலா சிக்காகோவில் குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாள். மரணப் படுக்கையில் கிடக்கும் தன் தந்தை கூறி, தன் குழந்தை விபத்தில் இறக்கவில்லை என்பதையும், தற்போது நியூயார்க்கில் அவன் உயிருடன் இருக்கிறான் என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள். ஆனால், அவன் அங்கு எங்கே இருக்கிறான் என்று தனக்கு தெரியாது என்று கூறுகிறார் அவர். அடுத்த நிமிடமே நியூயார்க்கிற்குச் செல்ல அவள் முடிவெடுக்கிறாள்.

ஆர்த்தரின் வீட்டிற்குச் செல்கிறான் சிறுவன் இவான். அவன் மூலம் மேக்ஸ்வெல் என்ற மனிதன் அவனுக்கு அறிமுகமாகிறான். அவன் வீடற்ற சிறுவர்களுக்கு இசை கற்றுத் தந்து, அவர்களை வைத்து தெருக்களில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறான். அவன் இவானுக்கு August Rush’ என்ற புதிய பெயரை நிகழ்ச்சிக்காக வைக்கிறான். சிறுவனிடமிருந்த இசைத் திறமையை வைத்து அவன் கிளப் நடத்துபவர்களிடமும், இசை நிகழ்ச்சி நடத்துபவர்களிடமும் பணம் சம்பாதிக்க முயல்கிறான். காலப் போக்கில் ஆர்த்தரின் இடத்தை ஆகஸ்ட் என்ற இவான் பிடித்து, அந்த குழுவின் முக்கியமான அங்கமாக ஆகிறான்.

லைலாவைத் தேடி லூயிஸ் சிக்காகோவிற்கு வருகிறான். அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு அவன் வருகிறான். அங்கிருந்த ஒரு பெண், வேறு ஒரு பெண்ணை விசாரிப்பதாக நினைத்து, அவள் தேன் நிலவிற்காக நியூயார்க் சென்றிருப்பதாக அவனிடம் கூறுகிறாள். குழம்பிப் போன லூயிஸ் நியூயார்க்கிற்கு பயணமாகிறான்.

ஒருநாள் பூங்காவொன்றில் நடந்து கொண்டிருந்த லூயிஸை, ஆகஸ்ட் பார்க்கிறான். அவர்கள் இருவரும் சேர்ந்து இசைக்கிறார்கள்- தாங்கள் தந்தையும், மகனும் என்ற உண்மை தெரியாமலே.

லைலா இசையமைக்கும் குழுவின் இசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த இசையால் ஈர்க்கப்பட்ட ஆகஸ்ட் அந்த இடத்தை நோக்கி வருகிறான். விமான நிலையத்தை நோக்கி போய்க் கொண்டிருந்த லூயிஸ், லைலாவின் பெயரை பேனர்களில் பார்க்கிறான். அடுத்த நிமிடம் துள்ளிக் குதித்து அங்கு வருகிறான். ரிச்சர்ட் ஜெஃப்ரீஸ். ஆகஸ்ட்டை அங்கு பார்க்கிறார். இவான்தான் அவன் என்பதை அவர் தெரிந்து கொள்கிறார். அவர் மூலம் அங்கு இசையமைக்கும் வாய்ப்பு ஆகஸ்ட்டிற்கு கிடைக்கிறது. லைலா தன் நிகழ்ச்சி முடிவடைந்து, அங்கிருந்து கிளம்பும்போது ஆகஸ்ட்டின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. அப்போது அங்கு வரும் லூயிஸ் தன் காதலி லைலாவைப் பார்க்கிறான். ஆகஸ்ட் தன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, லைலாவையும், லூயிஸையும் புன்னகையுடன் பார்க்கிறான். அவர்கள்தான் தன் பெற்றோர் என்ற உண்மை அவனுக்கு தெரிய வருகிறது.  ஆகஸ்ட் என்ற இவான் ‘The Music is all around us, all you have to do is listen’  என்ற வார்த்தைகளைக் கூற, படம் முடிவடைகிறது.

லூயிஸாக..... Jonathan Rhys Meyers

லைலாவாக... Keri RusseII

சிறுவன் இவானாக... Freddie Highmore

Kirsten Sheridan இயக்கிய ‘August Rush’கதையை  படிக்கும்போது, ஒரு இந்திப் படத்தையோ, தமிழ் படத்தையோ பார்ப்பதைப்போல் தோன்றுகிறதா?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.