
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கத்தாம
(மலையாள திரைப்படம்)
என்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன்.
படத்தின் இயக்குநர் – மலையாளத்தில் தொடர்ந்து பல அருமையான படங்களை இயக்கி அளித்துக் கொண்டிருக்கும் கமல்.
2011ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.
கேரளத்திலிருக்கும் பட்டாம்பியைச் சேர்ந்த ஒரு ஏழை இளம் பெண் அஸ்வதி. ராதாகிருஷ்ணன் என்ற ஒரு இளைஞனை அவள் திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு முன்பு அவன் பல தவறான வழிகளில் சென்றவன்தான். ஆனால், திருமணம் நடப்பதற்கு முன்னால், அவை எல்லாவற்றையும் மனம் திறந்து அஸ்வதியிடம் கூறுவதுடன் நிற்காமல், முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டு நல்ல ஒரு மனிதனாக அவன் வாழவும் செய்கிறான். அவர்களுடைய சந்தோஷமான குடும்ப வாழ்க்கை சில நாட்கள் மட்டுமே நீடிக்கிறது. ராதாகிருஷ்ணன் சிலரால் கொல்லப்படுகிறான். தன்னுடைய கணவன் இறந்துவிட்டதாலும், பொருளாதார பிரச்னைகள் அழுத்திக் கொண்டிருப்பதாலும், அஸ்வதி வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஒரு வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அதே ஊரைச் சேர்ந்த உஸ்மான், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அரேபிய குடும்பத்தில் கார் ஓட்டுநராக இருக்கிறான். அவன் மூலம் அவள் சவுதிக்குச் செல்கிறாள்.
முழு நேரமும் பர்தா அணிந்திருக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு அங்கு உண்டாகிறது. அந்த நாட்டின் சட்டம் அது. கடுமையான விதிமுறைகள், அடிமையாக வாழ்க்கையை நடத்தக் கூடிய கட்டாயம் ஆகியவற்றிற்கு மத்தியில் அவள் ஒரு வீட்டின் வேலைக்காரியாக போய் சேர்கிறாள்.
அங்கு அஸ்வதிக்கு பல பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. பாலியல் தொந்தரவுகள் கூட உண்டாகின்றன. அஸ்வதியை வேலைக்குக் கொண்டு வந்த உஸ்மான், அவள் வேலை பார்க்கும் வீட்டிலிருந்த ஒரு இந்தோனேசியாவைச் சேர்ந்த வேலைக்காரியுடன் தொடர்பு வைத்திருக்க, அவன் அங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறான். அந்தப் பெண், அந்த கொடுமையான வீட்டிலிருந்து தப்பித்துச் செல்ல அஸ்வதி உதவுகிறாள். அதனால் தண்டனை என்ற பெயரில் அவளை அங்கு கொடுமை செய்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அஸ்வதி ஒருநாள் அங்கிருந்து தப்பித்து விடுகிறாள். ஆள் அரவமற்ற, பரந்து கிடக்கும் பாலை வனத்தில் அவள் மட்டும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். பின்னால் அவளைக் கார்களில் துரத்துகிறார்கள்.
அவள் மீண்டும் அந்தக் கொடியவர்களிடம் சிக்கினாளா? அந்த வறண்டு கிடக்கும் பாலைவன நாட்டிலிருந்து தப்பினாளா? மீண்டும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தாளா?
இதுதான் ‘கத்தாம்ம’ படத்தின் கதை.
அஸ்வதியாக வாழ்ந்திருக்கும் காவ்யா மாதவன் மீது நமக்கு மிகப் பெரிய மரியாதை உண்டாகும். அந்த அளவிற்கு பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவர்.
அஸ்வதியின் கணவன் ராதாகிருஷ்ணனாக – பிஜூ மேனன்.
கார் ஓட்டுநர் உஸ்மானாக – சூரஜ் வெஞ்ஞாரமூடு.
சவுதி அரேபியாவில் இங்கிருந்து அங்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு ஏதாவது பிரச்னைகள் வந்தால் அதில் தலையிட்டு ஆவன செய்வதற்கும், மீண்டும் இந்தியாவிற்கு வர விரும்புபவர்களை பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைப்பதற்கும், பாலைவனத்தில் இறந்து கிடக்கும் உடல்களை அடையாளம் கண்டு கூறுவதற்கும், பணமில்லாமல் தவிப்பர்களுக்கு பணம் ஏற்பாடு செய்து உதவுவதற்கும் – இப்படி பல நல்ல காரியங்களையும் செய்வதற்கு என்றே சவுதியில் இருக்கும் மலையாளியான ‘ரஸாக் கொட்டெக்காடு’ என்ற அருமையான கதாபாத்திரத்தில் – நம் எல்லோருக்குமே பிடிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகரான ஸ்ரீநிவாசன்.
இந்தியாவில் வெளியான இப்படம் மத்திய கிழக்கு நாடுகளில் திரைக்கு வராமல் தடை செய்யப்பட்டு விட்டது.
படத்திற்கு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் – எம். ஜெயச்சந்திரனின் பின்னணி இசை.
மக்கள் பிரச்னையை எடுத்து படத்தை இயக்கிய காரணத்திற்காக இயக்குநர் கமலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய அளவில் பாராட்டுகள் கிடைத்தன.
பாலைவனத்தில் பதைபதைப்புடன் காவ்யா மாதவன் தப்பித்து ஓடி வரும் காட்சி, படத்தைப் பார்த்து பல நாட்கள் ஆன பிறகும், நம் மனங்களில் பசுமையாக வலம் வந்து கொண்டே இருக்கும்.