Logo

மான்சூன் வெட்டிங்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3519
Monsoon Wedding

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

மான்சூன் வெட்டிங்

(இந்தி திரைப்படம்)

2001ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஒரு மிகச் சிறந்த படம். இயக்கம்:  மீரா நாயர். பஞ்சாபைச் சேர்ந்த குடும்பத்திலிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு டில்லியில் திருமணம் நடைபெறுகிறது. அதைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் – இதுதான் இந்தப் படத்தின் மையக் கரு.

இந்தப் படம் திரைக்கு வந்தபோது, என்னை யார் பார்த்தாலும் ‘Monsoon Wedding படத்தைப் பார்த்து விட்டீர்களா?’ என்று கேட்பார்கள். நடிகை ரேவதிகூட ஒரு நாள் என்னிடம், ‘அந்தப் படத்தை அவசியம் பாருங்கள். நல்ல படம்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுவாரசியமான பல சம்பவங்களுடன் படத்தை இயக்கியிருந்த மீரா நாயரை என் மனதிற்குள் பாராட்டினேன். சமீபத்தில் இரண்டாவது முறையாக இந்தப் படத்தைப் பார்க்க நேரிட்டது. முதல் தடவை பார்த்தபோது, அந்தப் படம் எந்த அளவிற்கு என்னை கவர்ந்ததோ, அதன் அளவில் சிறிது கூட இப்போதும் குறைவு உண்டாகவில்லை.

நல்ல வசதிகள் கொண்ட உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் லலித் வர்மா (நஸிருத்தீன் ஷா). பாரம்பரிய பழக்க வழக்கங்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருக்கும் அவர், நவீன விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் அவற்றைப் பின் பற்றுபவரே. தன்னுடைய மகள் அதிதிக்கு (வசுந்தரா தாஸ்) பஞ்சாபிய பாரம்பரிய முறையில் கொண்டாட்டங்கள் சகிதமாக டில்லியில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பது அவருடைய ஆசை. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனில் பொறியாளராக பணியாற்றும் ஹேமந்த் என்ற இளைஞனைத்தான் மணமகனாக, தன் மகளுக்கு அவர் முடிவு செய்திருக்கிறார். மிகவும் கோலாகலமாக நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா, ஓமன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும் டில்லியில் வந்து குழுமி விடுகிறார்கள்.

பாரம்பரிய பாணியில் நடைபெறும் திருமணம் என்றாலும், நடைமுறையில் உள்ள நவீன அம்சங்கள் பலவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆடல், பாடல், விருந்து, பார்ட்டி – இப்படி அனைத்தும். நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த திருமணத்தையொட்டிய நிகழ்ச்சிகளின்போது எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. சில சந்தோஷத்தைத் தருவன… சில அதிர்ச்சி அளிப்பவை…. சில சிறிதும் எதிர் பாராதவை… சில அழ வைப்பவை… சில முகத்தைச் சுளிக்க வைப்பவை.

ஹேமந்த்தைத் திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய முதலாளி விக்ரமுடன் (அவளை விட 20 வயது மூத்தவன்) கொண்டிருந்த உறவிற்கு முற்றுப் புள்ளி வைக்கிறாள் அதிதி. அதன் மூலம் பாரம்பரிய வழக்கப்படி தன் தந்தையின் தீர்மானத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் மகளாக தன்னை அவள் மாற்றிக் கொள்கிறாள். எனினும், திருமணத்திற்கு முதல் நாள் அவள் தன் மனதில் இதுவரை வைத்திருந்த விக்ரமைத் தேடிச் செல்ல… அதனால் உண்டாகும் எதிர்பாராத பிரச்னைகள், திருப்பங்கள், கசப்புகள், வெறுப்புகள், கண்ணீர்….

இதற்கு மத்தியில் அதிதியின் தங்கை உறவு வரக் கூடிய கொண்ட ஆயிஷாவின் காந்தப் பார்வையில், சிட்னியிலிருந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பியிருக்கும் ராகுல் பட, அதனால் அங்கு உண்டாகும் பிரச்னைகள்…

அதிதியின் இன்னும் திருமணமாகியிராத பெண் எழுத்தாளரான ரியா எல்லா கட்டுப்பாடுகளையும் கடந்து, தான் பல வருடங்களாக மனதிற்குள் அடக்கி வைத்திருந்த பல உண்மைகளை வெளியிட்டு உண்டாக்கும் அதிர்ச்சி அலைகள்…

பல பிரச்னைகளாலும் எங்கே திருமணத்திற்கே பாதிப்பு உண்டாகி விடுமோ என்றொரு விரும்பத்தகாத சூழல் உண்டாகி, அதன் காரணமாக டில்லியின் கொளுத்தும் வெயிலையே தாண்டும் அளவிற்கு, வெப்பமென தகிக்கும் சம்பவங்கள், காட்சிகள்…

இந்த கோலாகலங்களுக்கும், கவலைகளுக்கும், திருப்பங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் மத்தியில் ஒரு மெல்லிய காதல் நீரோடை.

அது – அங்கு சமையல் மற்றும் திருமண வேலைகளைப் பார்க்கும் சாதாரண தோற்றத்தைக் கொண்ட துபே என்ற ஒரு ஏழை இளைஞனுக்கும், அந்த குடும்பத்தின் இளம் வேலைக்காரப் பெண்ணான ஆலீஸூக்குமிடையே சிறிதும் எதிர்பாராமல் அரும்பி, காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து… ஆழமான ஒன்றாக வளர்ச்சி பெற்ற நிலையில் இருப்பது.

தாங்க முடியாத வெப்பச் சூழ்நிலைகளைத் தாண்டி, குளிர்ச்சியான சூழ்நிலை உண்டாகிறது. காற்று வீசுகிறது… மழை பொழிகிறது. வானிலிருந்து நீர் துளிகள் உடலில் விழுந்து தெறிக்க, அதிதிக்கும் ஹேமந்திற்கும் திருமணம் நடககிறது. மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெறும் அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் குடும்பத்துடன் வந்திருந்த அனைவரும் மணமகனையும் மணமகளையும் வாழ்த்துகிறார்கள்.

அதே நேரத்தில் – அதே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில் எல்லோருடைய வாழ்த்தொலிகளுக்கும் மத்தியில், யாருக்குமே தெரியாமல் அங்கிருந்த பூந்தோட்டத்தில் அங்கு இன்னொரு திருமணமும் நடைபெறுகிறது. அது - ஏழை துபேக்கும், வேலைக்காரப் பெண் ஆலீஸூக்கும் நடக்கும் எளிய திருமணம். மழை நீரில் நனைந்து கொண்டே தாங்கள் இருவருக்கு மட்டுமே தெரிய, அவர்களின் திருமணம் நடக்கிறது. பணத்தைக் கொட்டி உண்டாக்கப்பட்ட ஆரவாரங்களுடன் நடைபெற்றால் என்ன? எந்தவித வசதியும் இல்லாமல், கட்டிய ஆடைகளுடன் மிக மிக எளிமையாக, தூய அன்பை மட்டுமே அணிகலனாகக் கொண்டு நடைபெற்றால் என்ன? திருமணம்… திருமணம்தானே!

திருமணத்தையொட்டி வயதானவர்களிலிருந்து சிறு குழந்தை வரை உற்சாகத்துடன் அங்கு ஆடுகிறார்கள்… பாடுகிறார்கள். எந்தவித ஏற்றத் தாழ்வும், பொருளாதார வித்தியாசமும் இல்லாமல் அவர்களுடன் ஏழைகளான துபேயும், ஆலீஸூம் கூட சேர்ந்து ஆடுகிறார்கள்.

இந்த இறுதி காட்சிகளைப் பார்த்தபோது, என்னை மறந்து நான் மனதிற்குள் மீரா நாயரை வாழ்த்தினேன். அவருக்குள் இருந்த அந்த மனித நேயத்தை நான் மிகவும் மதிப்புடன் நினைத்துப் பார்த்தேன்.

என்ன ஒரு அருமையான படம்!

சிறப்புச் செய்தி: ‘Monsoon Wedding’ டொரான்டோ, வெனிஸ் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் ‘Golden Lion’ விருதை இப்படம் பெற்றது. ‘அபராஜிதோ’ படத்திற்காக விருது பெற்ற சத்யஜித் ரேக்குப் பிறகு, வெனிஸ் பட விழாவில் பரிசு பெற்ற இந்தியர் மீரா நாயர்தான். இது தவிர, கேன்பெரா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்திற்காக விருது பெற்றார் மீரா நாயர்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.