
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
வசந்த மாளிகை
(தமிழ் திரைப்படம்)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த காதல் காவியம். 1972ஆம் ஆண்டில் டி.ராமாநாயுடு தயாரிக்க, கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி வெள்ளி விழாவைத் தாண்டி ஓடிய படம். தெலுங்கில் கோடூரி கவுசல்யா தேவி எழுதிய நாவலே இதற்கு அடிப்படை. அங்கு நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடிக்க ‘ப்ரேம் நகர்’ என்ற பெயரில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகே தமிழில் தயாரிக்கப்பட்டது.
சிவாஜி தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அப்போது அவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அரசியல் கட்சி தொண்டர்களும், சிவாஜியின் எண்ணற்ற ரசிகர்களும், பொது மக்களும் சேர்ந்து ‘வசந்த மாளிகை’யை ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக ஆக்கினார்கள். செல்வாக்கான ‘ஆனந்த பவன்’ பரம்பரையில் பிறந்த ஆனந்த் என்ற இளைஞனைச் சுற்றி பின்னப்பட்ட கதை. வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வரும்போது, அவன் லதா என்ற விமான பணிப் பெண்ணை விமானத்தில் பார்க்கிறான். முதல் பார்வையிலேயே அவளை அவனுக்குப் பிடித்து விடுகிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் காலப் போக்கில் ஆனந்தின் உதவியாளராக ஆகிறாள். எப்போதும் மதுவின் போதையிலேயே இருக்கும் ஆனந்தைக் குடிப் பழக்கத்திலிருந்து விடுவிக்க நினைக்கிறாள் லதா. அந்த முயற்சியில் அவள் இறங்க, கோபமடைந்த ஆனந்த் அவள் மீது மது புட்டியை வீசி எறிகிறான். அது அவளுடைய நெற்றியில் பட்டு, இரத்தம் கொட்டுகிறது. பதைபதைத்துப் போன ஆனந்த் ‘இனி நான் மதுவை தொடவே மாட்டேன்’ என்று சத்தியம் பண்ணுகிறான். அதைத் தொடர்ந்து தான் கட்டியிருக்கும் ‘வசந்த மாளிகை’யைக் காட்டுவதற்காக, லதாவை ஆனந்த் அழைத்துச் செல்கிறான். தான் காதலிக்கும் அழகு தேவதைக்காக அவன் கட்டியிருக்கும் மாளிகை அது! அங்கிருந்த ஒரு அறையைக் காட்டி ‘உள்ளே போ… நான் காதலிப்பவளின் உருவத்தைச் சுற்றிலும் பார்க்கலாம்’ என்கிறான் லதாவிடம். உள்ளே சென்றால், அறையைச் சுற்றிலும் கண்ணாடிகள்! அவை முழுக்க லதாவின் உருவங்கள்! ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விடுகிறாள் லதா. அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆனந்தின் அண்ணன் விஜய், லதாவின் மீது ஒரு திருட்டுப் பழியைச் சுமத்துகிறான். அதை உண்மை என்று நம்பிய ஆனந்த் அவளைப் பார்த்து ‘ஏன் அதை செய்தாய்?’ என்று கேட்டு விடுகிறான். அவ்வளவுதான்… அங்கிருந்து ஓடிச் செல்கிறாள் லதா. தொடர்ந்து அவளுக்கும் வேறொரு மனிதனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமண நாளன்று அவளை வாழ்த்துவதற்காக வருகிறான் ஆனந்த். ஆனந்தின் காலில் லதா வாழ்த்து பெறுவதற்காக விழ, அதைப் பார்த்தவர்கள் தவறாக எண்ணி, திருமணத்தையே நிறுத்தி விடுகின்றனர். லதாவே இல்லை… நாம் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று நினைக்கும் ஆனந்த் விஷத்தைக் குடித்து விடுகிறான். அதற்குப் பிறகு என்ன நடந்தது? இதுதான் ‘வசந்த மாளிகை’யின் கதை.
நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்புத் திறமையும், அவருக்கு ஈடு கொடுத்து நடித்த வாணிஸ்ரீயும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்!
படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் – எழுத்தாளர் பாலமுருகனின் சிறப்பான உரையாடல்கள்! குறிப்பாக – வசந்த மாளிகையைச் சுற்றிக் காட்டும்போது சிவாஜி அழகான தமிழில் பேசும் அருமையான வார்த்தைகள்! வாணிஸ்ரீயின் மீது சந்தேகம் வந்து, சிவாஜி கேட்கும் ஒரு கேள்வி இருக்கிறதே! ஒரே வார்த்தையில் எவ்வளவு பெரிய விஷயத்தை வெளிப்படுத்தி விட்டார் பாலமுருகன்!
‘வசந்த மாளிகை’யின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – கவியரசு கண்ணதாசனும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும். குடிமகனே, யாருக்காக?, கலைமகள் கைப் பொருளே, ஏன் ஏன் ஏன்?, இரண்டு மனம் வேண்டும், ஓ மாநிட ஜாதியே, மயக்கமென்ன? அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். கண்ணதாசனின் ஈடு இணையற்ற வரிகள்! அவற்றுக்கு உயிர் தந்திருக்கும் திரை இசைத் திலகத்தின் உயர்வான இசையமைப்பு! இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்த பாடல்கள் சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனவே!
இலங்கையில் ஒரு வருடத்திற்கும் அதிகமாகி ஓடி சாதனை புரிந்த ‘வசந்த மாளிகை’ நவீன தொழில் நுட்பத்துடன், இப்போது திரைக்கு வந்திருக்கிறது. காலத்தை வென்று நிற்கக் கூடிய சிறப்பு அம்சங்கள் பலவும் கொண்ட இந்தப் படத்தை இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பார்க்கட்டும்… ரசிக்கட்டும்… பல சாதனை மன்னர்களின் நினைத்துப் பார்க்க முடியாத திறமைகளைப் புரிந்து கொள்ளட்டும்!
பி.கு.: ‘வசந்த மாளிகை’ திரைக்கு வந்தபோது, நான் மதுரையில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மதுரை ‘நியூ சினிமா’ திரை அரங்கில் முதல் நாளன்று ரசிகர்கள் மலர்களை திரையின் மீது வீசியவாறு ‘சிவாஜி வாழ்க!’ என்று உற்சாகத்துடன் கத்தியதையும், ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ பாடலின்போது பண்ணிய ஆர்ப்பாட்டத்தையும், ‘மயக்கமென்ன’ பாடலின் போது ஸ்லோ – மோஷனில் சிவாஜி ஓடி வரும் அழகைப் பார்த்து கைத் தட்டியதையும், ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘யாருக்காக’ பாடல்களின் போது மனம் கனமாக, கண்ணீர் விட்டு அழுததையும் ட்ரவுசர் போட்ட பையனாக அமர்ந்து இந்த காதல் காவியத்தை பார்த்து ரசித்த அந்த இனிய நாளை மறக்கத்தான் முடியுமா?