Logo

காகஸ் கே ஃபூல்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3552
kaagaz ke phool

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

காகஸ் கே ஃபூல்

(இந்தி திரைப்படம்)

ந்திப் படவுலகில் காவியங்களை உருவாக்கிய குரு தத் கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்த படம். ‘காகித மலர்’ என்பதுதான் படத்தின் தலைப்பு. 1959ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த படத்தை ஏற்கெனவே நான் இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் மூன்றாவது தடவையாக பார்த்தேன். எந்தவொரு வேறுபாடும் எனக்கு தெரியவில்லை. காலத்தை வென்ற காவியம் என்று கூறுவார்களே… அது இந்தப் படத்திற்குப் பொருந்தும்.

ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். சுரேஷ் சின்ஹா இந்திப் படவுலகின் புகழ் பெற்ற இயக்குநர். அவருடைய மனைவி – நல்ல வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்த பீனா. மனைவியின் வீட்டில் சுரேஷூக்கு மரியாதையே இல்லை. காரணம் – பட இயக்குநர் என்பதை அவர்கள் ஒரு தொழிலாகவே நினைக்கவில்லை. ஒரு தந்தைக்குரிய அங்கீகாரம் கூட வழங்கப்படாமல், சுரேஷூக்கும் பீனாவிற்கும் பிறந்த மகள் பம்மி தனியார் போர்டிங் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்படுகிறாள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு மழை நாளில், சுரேஷ் சின்ஹா சாந்தி என்ற பெண்ணைப் பார்க்கிறார். அவளின் அழகால் ஈர்க்கப்பட்ட அவர், அவளை தன் படத்தின் கதாநாயகியாக ஆக்குகிறார். சாந்தி புகழ் பெற்ற நடிகையாக ஆகிறாள். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த சாந்தியும், மன வாழ்க்கையில் அமைதி கிடைக்காமலிருந்த சுரேஷூம் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கிடையே உள்ள உறவு பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. அந்த விஷயம் பம்மியின் பள்ளி வரை போய்ச் சேர்கிறது. அதை அவமானமாக உணர்ந்த பம்மி, சாந்தியிடம் தன் தந்தையிடமிருந்து விலகிச் செல்லும்படி கூறுகிறாள். நம்மால் மற்றவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கும் சாந்தி, படவுலகை விட்டு விலகி ஒரு சிறிய கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக வேலை பார்க்க போகிறாள்.

சாந்தி இல்லாமற் போனதால், மன அமைதியை இழந்த சுரேஷ் தன் கவலையை மறக்க மதுவை நாடுகிறார். அதன் தொடர்ச்சியாக தொழிலில் அவருடைய ஈடுபாடு குறைகிறது. விளைவு – இயக்கிய படங்கள் தோல்விகளைச் சந்திக்கின்றன. தயாரித்த படங்கள் மிகப் பெரிய நஷ்டங்களை உண்டாக்குகின்றன. காலப் போக்கில் படவுலகிலேயே அவர் இல்லாமற் போகிறார். அவரை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

ஒருநாள் – யாருமே இல்லாத ஸ்டூடியோவின் இருண்ட படப்பிடிப்பு அரங்கத்திற்குள் ‘இயக்குநர் நாற்காலி’யில் அமர்ந்தவாறு, புகழ் குன்றின் உச்சியில் பொன்னொளி வீசிய அந்த மாபெரும் இயக்குநர் மரணத்தைத் தழுவி கிடக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு படப்பிடிப்பிற்காக வந்த குழுவினர், அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிற்கின்றனர்.

படத்தின் ஆரம்பமே – இயக்குநர் சுரேஷ் சின்ஹா ஸ்டுடியோவிற்குள் நரைத்த தலை முடியுடனும், தாடியுடனும் தளர்ந்து நுழையும் காட்சிதான். அரங்கத்திற்குள் தள்ளாடியவாறு நடந்து சென்று, ‘இயக்குநர் நாற்காலி’யில் அவர் போய் அமர, ‘ஃப்ளாஸ்பேக்’கில் கதை கூறப்படுகிறது. இயக்குநர் சுரேஷ் சின்ஹாவாக குருதத், சாந்தியாக வஹீதா ரஹ்மான் நடித்திருந்தார்கள்.

தன்னுடைய வாழ்க்கைக் கதையையே படமாக இயக்கி விட்டார் குருதத் என்று அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

குருதத் இறந்து கிடக்கும் காட்சியில் என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கும் நிச்சயம் அந்த உணர்வு உண்டாகும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.