
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
வெள்ளரிப்றாவின்டெ சங்ஙாதி
(மலையாள திரைப்படம்)
நான் சமீபத்தில் பார்த்து ரசித்த சிறந்த மலையாளப் படங்களில் ஒன்று இது. ‘வெண்புறாவின் நண்பன்’ என்று இதற்கு அர்த்தம்.
திலீப், காவ்யா மாதவன், இந்திரஜித் நடித்த இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், சமீப காலமாக மலையாளப் படவுலகில் நல்ல பெயரைப் பெற்று வரும் அக்கு அக்பர்.
படவுலகை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். இந்திரஜித் (நடிகர் பிருத்விராஜின் அண்ணன்) ஒரு வேலை தேடி சென்னைக்கு வருகிறார்.
ஜெமினி லேப்பில் அவருக்கு ஒரு வேலை கிடைக்கிறது. பழைய படங்களின் பிரதிகள் வைக்கப்பட்டிருக்கும் பிரிவின் பொறுப்பாளர் வேலை.
அங்கிருந்த ஒரு பழைய படத்தின் ஃபிலிமை தூசி தட்டி எடுக்கிறார். அது 33 வருடங்களுக்கு முன்பு அவருடைய தந்தை இயக்கி, முற்றிலும் முடிவடைந்தும், திரைக்கு வராமல் போய் விட்ட படம்.
புதுமுகங்கள் நடித்த படம் என்பதால் யாரும் வாங்காமல் போக, அதனால் பல இலட்சங்களுக்கு கடனாளியாக ஆன அவரின் தந்தை மனமொடிந்து மரணத்தைத் தழுவிக் கொள்கிறார். எப்போதோ எடுக்கப்பட்ட அந்த படத்தை இப்போதைய ஒரு நட்சத்திர இயக்குநரின் உதவியுடன் பல மாற்றங்களை அவர் செய்கிறார்.
படத்திற்கு மெருகு ஏற்றப்படுகிறது. இந்திரஜித் அந்தப் படத்தை எப்படியும் திரைக்கு கொண்டு வந்து, தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். படம் திரைக்கு வருவதற்கு முன்னால், ஒரு ‘பிரிமியர் ஷோ’ அதற்கு போட வேண்டும் என்று நினைக்கிறார்.
அதில் நடித்த கதாநாயகனையும், கதாநாயகியையும் அந்த ‘ஷோ’விற்கு வர வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அந்த முதல் படத்துடன் காணாமல் போன அவர்களை எங்கே போய் தேடுவது? எனினும், இந்திரஜித் தேடுகிறார்.
நீண்ட அலைச்சலுக்குப் பிறகு அவரின் கண்களில் படுகிறார் அப்படத்தின் கதாநாயகனான திலீப். நரைத்த முடியுடன், தாடியை வளர்த்த நிலையில் அந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் கீதத்தை பாடிக் கொண்டிருக்கிறார் அவர். அடுத்து கதாநாயகி? அவர் எங்கும் கிடைக்கவில்லை.
‘பிரிமியர் ஷோ’விற்கான நாள் வருகிறது. கதாநாயகன் திலீப் வரவழைக்கப்படுகிறார். அதில் என்றோ வில்லனாக நடித்த லால், தானே தேடிப் பிடித்து அங்கு வருகிறார். அதில் ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக பணியாற்றிய சாய்குமார் வருகிறார்.
யாருமே எதிர்பாராமல் கதாநாயகியும் தட்டுத் தடுமாறி வருகிறார். அவர்…? வேறு யார்? காவ்யா மாதவன்தான். படத்தில் மட்டுமல்ல, உண்மை வாழ்க்கையிலும் காதலித்த, அந்த காதல் ஜோடி புறாக்கள், நடுத்தர வயதைத் தாண்டிய நிலையில் வாழ்க்கையில் சிறிதும் எதிர்பாராமல் ஒன்று சேர்கின்றனர்.
கவித்துவம் நிறைந்த இந்தப் படம் என் மனதில் இப்போதும் பசுமையாக நின்று கொண்டிருக்கிறது.