Logo

தி ஆர்ட்டிஸ்ட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3273
The Artist

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி ஆர்ட்டிஸ்ட்

(ஃப்ரெஞ்ச் திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த வசனம் இல்லாத ஊமைப் படம். முற்றிலும் கருப்பு – வெள்ளையில் எடுக்கப்பட்டது.

1927 – 1932 கால கட்டத்தில் ஹாலிவுட்டில் கருப்பு – வெள்ளையில் தயாரிக்கப்பட்ட ஊமைப் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைச் சுற்றி பின்னப்பட்ட கதை.

கருப்பு – வெள்ளை படங்களில் வசனமே பேசாமல், வெறும் வாயசைவுகளைக் கொண்டும், ஜாடைகள் செய்தும் மக்களின் கைத்தட்டல்களை வாங்கி மிகப் பெரிய கதாநாயகனாக வலம் வந்தவன் அவன்.

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை அவன் படத்தில் நடிக்க வைத்து அவளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறான்.

காலம் மாறுகிறது. ஊமைப் படங்களின் காலம் முடிவுக்கு வருகிறது. பேசும் படங்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. அந்த கதாநாயகனை வைத்து படங்களை எடுத்த நிறுவனம் பேசும் படங்களைத் தயாரிக்க ஆரம்பிக்கிறது.

காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாத கதாநாயகன், பேசும் படத்தில் நடிக்க மறுத்து விடுகிறான். ‘மக்களுக்கு ஊமைப் படங்கள்தான் பிடிக்கும். பேசும் படங்களை நிராகரித்து விடுவார்கள்’ என்று உறுதியான குரலில் அவன் கூறுகிறான். வேறு புதிய கதாநாயகர்கள் பேசும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஊமைப் பட கதாநாயகன் அறிமுகப்படுத்திய பெண், பேசும் படங்களில் கதாநாயகியாக நடிக்க தயாராகிறாள். பேசும் படத்திற்கு போட்டியாக பேசாத படமொன்றை சொந்தத்தில் தயாரித்து, அதில் நடிக்கிறான் நம் கதாநாயகன். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கிறது..

‘You and I belong to another era, George. The world is talking’ என்று கூறியதையும், ‘Out with the world, in with the new. Make way for the young!’ என்ற சூழல் படவுலகில் உண்டானதையும் பொருட்படுத்தாத அவன் படவுலகிலிருந்து வீசி எறியப்படுகிறான்… மக்களால் மறக்கடிக்கப்படுகிறான்… சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் இழக்கிறான்.

மதுவிற்கு அடிமையாகிறான்… சாலையில் செல்லும்போது கூட அவனை யார் என்று யாருக்கும் தெரியவில்லை.

காலத்திற்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், யாருடைய நிலையும் இதுதான்…

பின் குறிப்பு : சோர்வடைந்து விட வேண்டாம்... தரையில் விழுந்த கதாநாயகன், மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறான். பேசும் படத்தில் கதாநாயகனாக நடித்து, திரும்பவும் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்கிறான்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை Jean Dujardin பெற்றார்.

சிறந்த படமாகவும் ‘The Artist’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை தவிர, பல திரைப்பட விழாக்களிலும் ஏராளமான விருதுகளை இப்படமும், கதாநாயகனும் தட்டிச் சென்றிருக்கின்றனர். அவனை மீண்டும் சிம்மாசனத்தில் உட்கார வைத்த, அவன் வளர்த்து விட்ட கதாநாயகியும்தான்…

இது போன்ற சிறந்த திரைப்படங்களைப் பற்றி பதிவிட்டால் (உங்கள் மொழிபெயர்ப்புகளை தொடந்து வாசித்து வருகிறேன் சார்) எங்களுக்கு உதவியாக இருக்கும்... ( சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன்... உண்மையில் அருமையான கதையமைப்பும், நடிப்பும்...)

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.