
2002ஆம் ஆண்டில் திரைக்கு வந்த, இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படம். எனினும், தமிழ், வங்காளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உரையாடல்கள் இருக்கின்றன.
எழுதி இயக்கியவர் நான் பெரிதாக மதிக்கும் அபர்ணா சென்.
இப்படம் திரைக்கு வந்த புதிதிலேயே நான் அதைப் பார்த்து விட்டேன். இரண்டாவது முறையாக சமீபத்தில் மீண்டும் அதைப் பார்த்தேன். அபர்ணாசென்னை என்ன வார்த்தைகள் கூறி புகழ்வது என்றே தெரியவில்லை.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பாரம்பரிய தன்மை உள்ள பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன் கைக் குழந்தையுடன் இமயமலைப் பகுதியிலிருக்கும் ஒரு ஊரிலிருந்து பேருந்தில் கொல்கத்தாவிற்குப் பயணம் செய்கிறாள்.
கொல்கத்தாவிலிருந்து ரயில் மூலம் அவள் சென்னைக்கு வர வேண்டும். அதே பேருந்தில் அவளுக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு வங்காள இளைஞன் பயணிக்கிறான். அவன் ஒரு புகைப்படக் கலைஞன். அவனும் சென்னைக்கு வர வேண்டியவனே.
மலைப் பகுதியில் கீழே வந்து கொண்டிருக்கும்போது, ஒரு ஊரில் மதக் கலவரம். வரிசை வரிசையாக கார்களும், லாரிகளும் நிறுத்தப்படுகின்றன. இந்துக்கள் அதிகமாக வாழும் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இந்துவை, முஸ்லீம்கள் கொலை செய்து விடுகிறார்கள்.
அதனால் கோபமடைந்த இந்துக்கள் முஸ்லீம்களைத் தேடிப் பிடித்து தாக்குகிறார்கள், கொல்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும் புகைப்படக் கலைஞன் ஒரு முஸ்லீம் என்று அப்போதுதான் தெரிகிறது. அவனைக் காப்பாற்றுவதற்காக, தன்னுடைய பிராமண கணவன் அவன் என்று அந்த தமிழ்ப் பெண் பொய் கூறி, நிலைமையைச் சமாளிக்கிறாள்.
இரவு வேளையில் மின்சாரம் இல்லாத ஒரு காட்டு பங்களாவில் அவளும், அவனும் தனியே தங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? இதுதான் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ படத்தின் கதை.
மிஸ்டர் அய்யராக ராகுல் போஸ் (‘விஸ்வரூபம்’ படத்தில் உமராக நடித்திருப்பவர்)… மிஸஸ் அய்யராக கொங்கொனா சென் சர்மா இந்த அளவிற்கு ஒரு அசல் தமிழ் பிராமண பெண்ணாகவே கொங்கொனா அளவிற்கு வேறு யாராவது நடித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.
என்ன யதார்த்தமான நடிப்பு! காட்சிக்குத் தகுந்தபடி என்ன அருமையான முக வெளிப்பாடு! என்ன உணர்ச்சிகளின் குவியல்! நான் கொங்கொனாவின் ரசிகனாகவே ஆகி விட்டேன் என்பதே உண்மை.
இங்கு இயக்குநர்கள் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கூறிக் கொண்டிருக்கும் பலரும் கட்டாயம் அபர்ணா சென்னின் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியும்.