
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஸீரோ டார்க் தர்ட்டி
(ஹாலிவுட் திரைப்படம்)
சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஹாலிவுட் திரைப்படம் இது. மிகவும் துணிச்சலான ஒரு கதைக் கருவை இதில் கையாண்டிருந்தனர்.
அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கி, உலக அளவில் அந்நாட்டை தலை குனிய வைத்த செயலுக்கு மூல காரணமாக இருந்தவர் ஒசாமா பின்லேடன்.
தங்களை அந்நிலைக்கு ஆளாக்கிய பின்லேடனை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைமை, அதற்கான செயலில் தீவிரமாக இறங்குகிறது.
ஆஃகானிஸ்தானில் தங்களின் படையுடன் இறங்குகிறது. அங்கு பின்லேடன் இல்லை என்றதும், தலிபான்கள் சிலரைப் பிடித்து மிரட்டி, பின்லேடனின் மறைவிடத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
அவர்கள் பதில் கூற மறுக்க, உயிர் போகும் அளவிற்கு வன்முறையை அவர்கள் மீது செலுத்தி, அவர்களைப் பேச வைக்கின்றனர்.
இறுதியில் ஒரு கூரியர் பணியாளர் மூலம் பாகிஸ்தானில் எந்தவித தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத ஒரு சாதாரண பழைய கட்டிடத்தில் பின்லேடன் தன் குடும்பத்துடன் மறைந்திருக்கும் தகவல் அவர்களுக்குக் கிடைக்கிறது.
அதைத் தொடர்ந்து அவர்கள் படையுடன் சென்று தாக்கி, பின்லேடனின் உயிரை எப்படி பறிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை படம் பார்ப்போரிடம் ஒருவித ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கும் அளவிற்கு இருக்கும் சீரான திரைக்கதை இப்படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
உரையாடல்கள் நிறைய இருக்கும் இப்படத்தின் பல அம்சங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.
குறிப்பாக சி.ஐ.ஏ. அதிகாரியாக நடித்த ஜெஸிக்கா சேஸ்ட்டைனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று நிச்சயம் எதிர்பார்த்தேன்.
காரணம் – அந்த அளவிற்கு அவர் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், கிடைக்கவில்லை.
‘சவுண்ட எடிட்டிங்’கிற்கான விருது மட்டுமே இந்தப் படத்திற்காக தரப்பட்டிருக்கிறது.