Logo

கனவு ராஜாக்கள்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 8853
kanavu-rajaakkal

அன்று கதாநாயகன்! இன்று ஸ்டண்ட் நடிகர்!

சுரா

திரைப்படத் துறைக்குள் நூறு பேர் நுழைந்தால், ஒருவர் மட்டுமே வெற்றி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர முடியும். முடியாமல் போனவர்களின் நிலைமை அதற்குப் பிறகு எப்படி இருக்கும்?

அப்படிப்பட்ட ஒரு நண்பரின் பெயர்-  ரமேஷ்.

இவர் மோசஸ் திலக், கராத்தே மணி ஆகியோரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர். எனவே தன் பெயரை 'கராத்தே ரமேஷ்' என்று வைத்துக் கொண்டார். நான் அவரைச் சந்தித்தது 1982 ஆம் ஆண்டில்.

வேலூரைச் சேர்ந்த ரமேஷ் அப்போது பல இடங்களிலும் கராத்தே பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார். விஜயகாந்தைக் கதாநாயகனாகப் போட்டு 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாதிக்கொரு நீதி' ஆகிய படங்களைத் தயாரித்த வடலூரான் கம்பைன்ஸ் பட நிறுவனம் 'நீறு பூத்த நெருப்பு' என்ற படத்தைத் தயாரித்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.விஜயன்தான் அப்படத்தின் இயக்குநர். கதாநாயகனாக விஜயகாந்த் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் தருவதாக கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் ஒரு வார்த்தைகூட கூறாமலே வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு கிளம்பிப் போய்விட்டார் விஜயகாந்த். அதனால் எரிச்சலடைந்த தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரம், விஜயகாந்துக்குப் போட்டியாக ஒரு கதாநாயகனைக் கொண்டு வர நினைத்தார்.

விஜயகாந்துக்கு சினிமா ஸ்டண்ட் போடத்தானே தெரியும், உண்மையிலேயே  கராத்தே, குங்க்ஃபூ ஆகியவற்றைக் கற்றிருக்கும் ஒரு இளைஞனைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினால் என்ன என்று நினைத்தார் சிதம்பரம்.

அப்போது 'குமுதம்' வார இதழில் ரமேஷின் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. அகில இந்திய அளவில் நடைபெற்ற மூன்று கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்க மெடல்களை வாங்கியவர் என்றும், தாய்வானில் நடைபெற்ற உலக கதாத்தே போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டவர் என்றும் அதில் தகவல் இருந்தது. ஒரு விநியோகஸ்தர் மூலம் அவரைச் சென்னைக்கு வரவழைத்தார் சிதம்பரம். தன் மாணவர்களுடன் வந்த ரமேஷ், கராத்தே பாணியில் சண்டைகளைச் செய்து காண்பித்தார். அந்த நிமிடமே 'நீறு பூத்த நெருப்பு' படத்தின் கதாநாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

அண்ணன்- தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் ரமேஷுக்கு தங்கையாக நடித்தவர் விஜயசாந்தி. அப்போது அவர் தெலுங்குப் படவுலகில் நுழையவில்லை. தமிழில் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். இப்போது பிரபல படத் தயாரிப்பாளராக இருக்கும் ஏ.எம்.ரத்னம் அப்போது விஜயசாந்தியின் மேக்-அப் மேனாக இருந்தார். ரமேஷுக்கு ஜோடியாக ஒரு புதுமுக நடிகை நடித்தார்.

1982ல் ஆரம்பிக்கப்பட்ட அப்படம் பணப்பிரச்னை காரணமாக 1983ல் திரைக்கு வந்து, படுதோல்வியைத் தழுவியது. கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டோம், இனி வாழ்க்கை முழுவதும் ஒளிமயம்தான் என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்த ரமேஷுக்கு பலமான அடி கிடைத்தது. முதல்படமே தோல்வியடைந்துவிட்டதால், யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ரமேஷின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தன என்றாலும், திரைக்கதை மிகவும் பலவீனமாக இருந்ததால், மக்கள் அந்தப் படத்தை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட்டார்கள்.

அதற்குப் பிறகு கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிவண்ணன் என்று பலரையும் பார்த்து வாய்ப்புக் கேட்டார் ரமேஷ். கிடைக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கொம்பேறி மூக்கன்' ஆகிய படங்களில் அவருக்கு சிறு பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படியே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. கதாநாயகன் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை, நல்ல கதாபாத்திரங்களாவது கிடைக்கும் என்று பார்த்தார் ரமேஷ். அதுவும் கிடைப்பதாக இல்லை.

கவுரவம், அந்தஸ்து பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் 1986ஆம் ஆண்டில் திரைப்பட ஸ்டண்ட் நடிகர்களுக்கான சங்கத்தில் ரமேஷ் உறுப்பினராக போய்ச் சேர்ந்தார். பல படங்களிலும் ஸ்டண்ட் நடிகராக வந்து சண்டை போட்டார். ஸ்டண்ட் வீரராக ஆரம்பித்த ரமேஷின் பயணம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் வீரராக அவர் நடித்துவிட்டார். விஜயகாந்துக்குப் போட்டியாக கொண்டு வரப்பட்ட அவர், 'கேப்டன் பிரபாகரன்', 'கூலிக்காரன்' படங்களில் ஸ்டண்ட் வீரரராக நடித்து, விஜயகாந்திடம் உதை வாங்கினார். விஜயசாந்தியின் அண்ணனாக ‘நீறு பூத்த நெருப்பு’ படத்தில் நடித்த ரமேஷ், விஜயசாந்தி நடித்த தெலுங்குப் படங்களில் அவரிடம் அடியும் உதையும் வாங்கினார். அப்படி  அடிகள் வாங்கும்போது, அவரின் மனதில் கவலை உண்டாகத்தான் செய்தது. கண்களில் நீர் கூட வந்தது. ஆனால், வாழ்க்கைப் போராட்டம் என்று வருகிறபோது, அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

சரத்குமார், கார்த்திக், மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் ஆகியோருக்கு 'டூப்' போட்டிருக்கும் ரமேஷ், இளம் தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், மாதவன், ஆர்யா ஆகியோருடன் படங்களில் சண்டை போட்டிருக்கிறார். 'சந்திரமுகி' படத்தில் வரும் முதல் சண்டைக் காட்சியில் வந்து, ரஜினியிடம் உதை வாங்குவார் ரமேஷ்.

1982ஆம் ஆண்டில் 'நீறு பூத்த நெருப்பு' படத்திற்காக கராத்தே பாணி ஸ்டண்ட் காட்சிகளை ரமேஷ் செய்து காட்டும்போது, அருகில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நான். அவருடன் நான் அன்று கொண்ட ஆழமான நட்பு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வேலூரில் நடைபெற்ற அவருடைய திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். 'தங்கமனசுக்காரன்', 'மணிக்குயில்' போன்ற படங்களில் நடிக்க அவருக்கு நான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் இருவரும் சந்திப்போம். சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்களைப் பற்றியும் நேரம் போவதே தெரியாமல் உரையாடுவோம். என்னைப் பற்றிய நினைவு எப்போது வந்தாலும், உடனடியாக வேலூரிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் பேசுவார் ரமேஷ்.

கதாநாயகனாக நம்மால் வர முடியாமல் போய்விட்டதே என்ற கவலை ரமேஷுக்கு இப்போது இல்லை. ஸ்டண்ட் வீரராக நடித்து சம்பாதித்த  பணத்தில் சென்னையில் சொந்தத்தில் வீடு கட்டி, பொருளாதார ரீதியாக  நல்ல வசதியுடன் அவர் இருக்கிறார்.

“ 'நாம் ஏதோ ஒன்று வேண்டும் என்று ஆசைப்படுவோம். அது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமானது’- என் வாழ்க்கையின் மூலம் பலருக்கும் நான் கூற விரும்புவது இதைத்தான்” என்று கூறும் ரமேஷ் இப்போது திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்துக்கொண்டே தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கராத்தே பள்ளிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை அவரிடம் பத்தாயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

நடைமுறை சிந்தனையுடன் செயல்படும் ‘கராத்தே ரமேஷ்’ என்னுடைய நண்பராக இருப்பது குறித்து உண்மையிலேயே நான் என் மனதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.


இளையராஜா வைத்துக் கொடுத்த கேசட் கடையை இழுத்து மூடியவர்!

சுரா

வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை வெற்றிக்கான பாதையில் நடந்து சென்றிருக்க வேண்டிய ஒரு கலைஞன் அந்தப் பாதையில் நடந்து போவதற்கான வாய்ப்பையே இழந்துவிட்ட ஒரு சோகக் கதையை இப்போது கூறுகிறேன்.

அந்த சோகக் கதையின் கதாநாயகன்- இசையமைப்பாளர் இளைய கங்கை. இந்தப் பெயரில் சொன்னால்தான் எல்லோருக்கும் அவரைத் தெரியும் என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறேன். அவரின் உண்மைப் பெயர் இது அல்ல. இது சினிமாவிற்காக அவர் வைத்துக் கொண்ட பெயர்.

இளையகங்கையின் உண்மைப் பெயர் ஸ்டாலின். இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன்தான் இவர். தன்னுடைய தந்தையின் பெயரையும் சேர்த்து ஸ்டாலின் வரதராஜன் என்று தன் பெயரை வைத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய தந்தையின் முகச் சாயலை அப்படியே கொண்டிருந்தார் ஸ்டாலின். ஒல்லியான உடம்பு, கூர்மையான பெரிய கண்கள், கரிய நிறம், மஞ்சள் நிறத்தில் பற்கள், வெளிப்படையான சிரிப்பு, மதுரை மண் வாசனை வீசும் தமிழ்- இதுதான் ஸ்டாலின் வரதராஜன்.

1979ஆம் ஆண்டில் 'நூலறுந்த பட்டம்' என்ற படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக படவுலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த படம் அது. ஸ்டாலின் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு விட்டன. பாடல்களைக் கேட்டேன். கிராமத்துப் பின்னணியில் அமைந்த பாடல்களுக்கு மிகவும் அருமையாக இசையமைத்திருந்தார் ஸ்டாலின். தேனி, கம்பம் பகுதிகளில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஜயகாந்த், படவுலக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். அதற்கு முன்பு விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'தூரத்து இடி முழக்கம்' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. முற்றிலும் முடிவடைந்துவிட்ட 'நூலறுந்த பட்டம்' படத்தை நான் பார்த்தேன். குறை சொல்ல முடியாத அளவிற்கு அப்படம் இருந்தது. ஸ்டாலின் வரதராஜன் இசையமைத்த பாடல்கள் படத்தின் காட்சிகளுடன் மிகவும் அருமையாகப் பொருந்தியிருந்தன. 'வானுயர்ந்த சோலையிலே...' என்றொரு பாடல் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலின் மெட்டுக்குச் சொந்தக்காரர் பாவலர் வரதராஜன். அதே மெட்டில் அமைந்த பாடலை பாவலர் வரதராஜனே பாட, 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது போடிநாயக்கனூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சார கச்சேரியில் நான் கேட்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் அங்கு ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாவலர் வரதராஜனுடன் அவருடைய சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் மூவரும் மேடையில் அமர்ந்திருந்த காட்சி இப்போதுகூட என் மனத்திரையில் ஓடுகிறது. தன் தந்தையின் அந்தப் பாடலின் மெட்டை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, வரிகளை சூழ்நிலைக்கேற்ப மாற்றி சரியான இடத்தில் பொருந்தும்படி ‘நூலறுந்த பட்டம்’ படத்தில் இடம் பெறச் செய்திருந்தார் ஸ்டாலின்.

எனினும், பலவித காரணங்களாலும், அந்தப் படம் இன்று வரை திரைக்கு வரவில்லை. ஸ்டாலின் வரதராஜனின் கலையுலகக் கனவு ஆரம்பத்திலேயே சோதனைக்குள்ளாகிவிட்டது.

அதற்குப் பிறகு 'நீறு பூத்த நெருப்பு' படத்திற்கு அவர் இசையமைத்தார். அவர் அந்தப் படத்திற்கு நன்றாகவே இசையமைத்திருந்தார். எனினும், வர்த்தக ரீதியாக அப்படம் வெற்றி பெறாததால், அவரது திறமை வெளியே தெரியாமலே போய்விட்டது.

பட வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி, இறங்கி சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு மதுரையில் ஒரு ஆடியோ கேசட் கடை வைத்துக் கொடுத்தார் இளையராஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்டாலினை சென்னையில் பார்த்தேன். மதுரையில் நடத்திய ஆடியோ கேசட் கடையை இழுத்து மூடிவிட்டதாகக் கூறினார். 'படங்களுக்கு இசையமைக்காமல் எப்படி தலைவரே, ஒரு கடைக்குள் முடங்கிக் கிடக்க முடியும்?' என்றார் என்னிடம்.

விஜயகாந்தைப் பார்த்து வாய்ப்பு கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்- அவர் கதாநாயகனாக நடித்த 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைத்தது. அப்போதுதான் இளையராஜா பெயரையும், கங்கை அமரன் பெயரையும் கலந்து, இளைய கங்கை என்று தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொண்டார்.

இனி நாமும் இளைய கங்கை என்று அவரை அழைக்க வேண்டியதுதான். விஜயகாந்த் நடித்த அந்தப் படம் சரியாக ஓடவில்லை. மீண்டும் இளைய கங்கைக்கு சோதனை.

சில வருடங்களுக்குப் பிறகு விக்னேஷ் கதாநாயகனாக நடித்த 'மனதிலே ஒரு பாட்டு' என்ற படத்திற்கு இசையமைத்தார்.  அதுவும் ஓடவில்லை.

கடைசியாக அவர் இசையமைத்த படம்- 'காதலுக்குத் தலை வணங்கு'. ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துக் கொண்ட நானும் இளையகங்கையும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.

ஒரு நாள் இரவு சுமார் 11 மணி அளவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அவரைப் பார்த்தேன். ஆட்டோவில் வந்து கொண்டிருந்த நான், அவரைப் பார்த்ததும் இறங்கினேன். மது அருந்திய நிலையில் இருந்த அவர், என் கைகளை நட்புணர்வுடன் பிடித்து ஐந்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அதுதான் நான் அவரை இறுதியாக பார்த்தது.

அந்தச் சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் கழித்து, 'தினகரன்' நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இளையகங்கை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவி விட்டார் என்ற செய்தி அதில் பிரசுரமாகியிருந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். ஸ்டாலின் வரதராஜன் என்ற இளையகங்கை இந்த மண்ணை விட்டு நீங்கியிருக்கலாம். ஆனால், அவருடைய முகமும், சிரிப்பும், கள்ளங்கபடமற்ற மதுரை மனம் கலந்த பேச்சும் என் மனதில் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர் இசையமைத்த பாடல்களின் வரிகளும்தான்....


எத்தனையோ கதைகள் கூறிய இயக்குனர் எய்ட்ஸ் நோயில் இறந்தார்!

சுரா

விருதுநகரைச் சேர்ந்த அவரின் உண்மைப் பெயர் ராஜேந்திரன். அந்த பெயர்  சாதாரணமாக இருந்ததால், அவர் தன் பெயரை ஜெயராஜேந்திரன் என்று வைத்துக் கொண்டார். அந்தப் பெயருடன்தான் தமிழகமெங்கும் நடைபெற்ற பல நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அவரே நாடகங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கிறார், இயக்கியிருக்கிறார்.

கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் ஜெயராஜேந்திரனுக்கு உண்டு. அந்தப் பெயரிலேயே சங்கிலி முருகன் தயாரித்த இரண்டு படங்களுக்கு கதை, வசனம் எழுதவும் செய்திருக்கிறார். முரளி கதாநாயகனாக நடித்த, 'நானும் இந்த ஊருதான்' படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும் இவரே.

எனக்கு ஜெயராஜேந்திரன் அறிமுகமானது 1991ஆம் ஆண்டில். பாண்டியராஜனை கதாநாயகனாகப் போட்டு, 'நல்ல மனசுக்காரன்' என்ற படத்தை அவர் இயக்கினார். அப்போது பல இடங்களிலும் அவர் என் பார்வையில் படுவார். தான் இயக்கும் படத்தின் வளர்ச்சியைப் பற்றி, அவ்வப்போது கூறுவார். நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த அந்தப் படம், திரைக்கு வந்த நேரத்தில் படாத பாடு பட்டது. பல சிரமங்களையும் தாண்டி வெளிவந்து ஒரு வாரம் கூட ஓடவில்லை.

சில மாதங்கள் கழித்து ஜெயராஜேந்திரனை தேனாம்பேட்டை சிக்னலுக்கு அருகில் இருக்கும் ரோஸ்லேண்ட் லாட்ஜில் பார்த்தேன். என்னை அவர் தான் இருந்த அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார். ஒரு படத்திற்கு கதை  வசனம் எழுதுவதற்காக அறை போட்டிருப்பதாகச் சொன்னார். தான் இயக்க இருக்கும் அந்தப் புதிய படத்தின் கதையைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னிடம் சொன்ன அவர், படத்தின் பெயரைக்கூட சொன்னார். அந்தப் பெயர் ஞாபகத்தில் இல்லை. எனினும், அதற்குப் பிறகு அந்தப் படத்தை ஜெயராஜேந்திரன் இயக்கவில்லை.

அந்தச் சந்திப்பு நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரை பேருந்தில் சந்தித்தேன். விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால் அப்போதும் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை.

எனினும், அவ்வப்போது ஜெயராஜேந்திரன் என் கண்களில் பட மட்டும் செய்வார். அமைச்சர்களின் உதவியாளர்கள் அணிந்திருப்பதைப் போல சஃபாரி அணிந்து டிப்டாப்பாக காட்சியளிக்கும் ஜெயராஜேந்திரனின் கையில் எப்போதும் ஒரு ப்ரீஃப் கேஸ் இருக்கும். அதற்குள் டைரி, புகைப்படங்கள், கதை எழுதிய பேப்பர்கள் என்று எதையாவது வைத்திருப்பார்.

வருடங்கள் கடந்தோடின. ஒருநாள் சாலிகிராமத்தில் இருந்த என்னுடைய அலுவலகத்தைத் தேடி வந்தார் ஜெயராஜேந்திரன். வழக்கமான சஃபாரி உடை சகிதமாகத்தான். ப்ரீஃப் கேஸும் கையில் இருந்தது. அவரின் தோற்றத்தைப் பார்க்கும்போது, எனக்கு அந்தக் காலத்தில் பிரபல நடிகராக இருந்த கள்ளபார்ட் நடராஜன்தான் ஞாபகத்தில் வந்தார். அந்த அளவிற்கு அவர்கள் இருவருக்குமிடையே ஒரு உருவ ஒற்றுமை இருந்தது.

இப்போது தன்னுடைய பெயரை ராஜேஷ்வர்மா என்று நாகரீகமாக மாற்றிக் கொண்டு இருப்பதாக ஜெயராஜேந்திரன் சொன்னார். இனிமேல் தன் பெயர் ஜெயராஜேந்திரன் இல்லை என்றார். அதனால் இனி நாமும் அவரை ராஜேஷ்வர்மா என்றே அழைப்போம்.

தான் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக ராஜேஷ்வர்மா கூறினார். படத்தின் பெயர் 'ராயல் பேமிலி' என்றும், படத்தின் நாயகனாக நடிக்கிறவர் சரவணன் என்றும் சொன்னார். கிறிஸ்டி என்ற புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துவதாகக் கூறினார். அதற்கு அடுத்த வாரமே படத்திற்கான அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. நேசக்குமாரன் என்பவர் எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

தொடர்ந்து 'ராயல் பேமிலி' படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது.

படம் எதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்த சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக அந்தப் படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரவளி. வி.கே.ராமசாமி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போதுதான் எனக்கே தெரிய வந்தது- ராஜேஷ்வர்மா வி.கே.ராமசாமியின் நெருங்கிய உறவினர் என்ற விஷயம்.

படப்பிடிப்பின் போது படு உற்சாகமாக இருப்பார் ராஜேஷ்வர்மா. ‘’இந்தப் படம் முடிவடைந்ததும், இன்னொரு கதையை இயக்க இருக்கிறேன். அதில் கதாநாயகனாக நடிக்க போகிறவர் விஜயகாந்த். அவருக்கு இரட்டை வேடம். இதுவரை அவர் இப்படியொரு கதையில் நடித்ததே இல்லை. மிகச் சிறந்த படமாக அது வரும். அதற்குப் பிறகு வேறொரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர் விக்ரம்தான். அஜீத்திற்கு ஏற்ற ஒரு கதையையும் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்’’ என்றார் என்னிடம். அவர் சொன்ன இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமில்லாதவை என்று எனக்கு நன்றாக தெரியும். எனினும், அதைச் சொல்லி அவருடைய ஆர்வத்தை ஏன் குறைக்க வேண்டும் என்று வாயை மூடிக் கொண்டேன். இத்தனை வருடங்கள் படத்துறையில் வலம் வந்தும், நடைமுறை சிந்தனையே இல்லாமல் இருக்கிறாரே ராஜேஷ்வர்மா என்று அப்போது நான் நினைத்துக் கொள்வேன்.

'ராயல் பேமிலி' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில் ராஜேஷ் வர்மாவிற்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு மாத காலம் படுத்த படுக்கையாகக் கிடைந்தார். எய்ட்ஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். எங்கிருந்து அவருக்கு இந்த நோய் வந்ததோ தெரியவில்லை. ஒரு மாத காலம் நோயின் பிடியில் சிக்கிக் கிடந்த ராஜேஷ்வர்மா, ஒரு நாள் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். அவர் மரணத்தைத் தழுவிய அதே நள்ளிரவு நேரத்தில். 'ராயல் பேமிலி' படத்தின் இசையமைப்பாளர் கிறிஸ்டி கிண்டிக்கு அருகில் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தது ஒரு எதிர்பாராத ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

'ராயல் பேமிலி' முதல் பிரதி தயாராகி வருடங்கள் பல கடந்துவிட்டன. எனினும், வியாபாரம் ஆகாததால், படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெயராஜேந்திரன் என்ற ராஜேஷ்வர்மா என்ற ராஜேந்திரன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், ‘சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, பரத், கார்த்தி எல்லோருக்கும் ஏற்ற கதைகள் என்னிடம் இருக்கின்றன’ என்று கட்டாயம் என்னிடம் கூறியிருப்பார்.


பாக்யராஜுக்கு கராத்தே கற்றுக் கொடுத்த மாஸ்டரின் வாழ்வில் ஆயிரம் சோகங்கள்...

சுரா

சிலரிடம் உண்மையாகவே மிகச் சிறந்த திறமைகள் இருக்கும். எனினும், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போவதால், அவர்களின் திறமை வெளியே தெரியாமலே போய்விடும். படவுலகில் இப்படிப்பட்ட விஷயத்தை கடந்த 30 வருடங்களாக நான் நிறையவே பார்த்து வருகிறேன். அத்தகைய ஒரு மனிதரைப் பற்றித்தான் இப்போது நான் கூறப் போகிறேன்.

அந்த மனிதரின் பெயர் ஜே.வி.எஸ். பாவா. எனினும், 1979ஆம் ஆண்டில் எனக்கு அவர் சென்னையில் அறிமுகமாகும்போது, அவரது பெயர் நெல்லை செல்வம். திருநெல்வேலியில் இருக்கும் பேட்டை பகுதியைச் சேர்ந்த அவர் ஒரு கராத்தே மாஸ்டர். கராத்தே, குங்க்ஃபூ, அக்கிடோ, பாக்ஸிங், சிலம்பம் ஆகிய விஷயங்களை முறையாகக் கற்றிருந்தார் அவர். அவர் செய்த சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சிகளை அமெரிக்காவிலிருக்கும் ஆரேகான் பல்கலைக்கழக்கத்திற்காக அரைமணி நேரம் வரக்கூடிய ஒரு விவரணப் படமாகக் கூட எடுத்திருக்கின்றனர்.

பலருக்கும் கராத்தே, சிலம்பம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், நான் அவரை ஒரு நடிகராகத்தான் பார்த்தேன். கலைஞர் வசனம் எழுதிய 'கண்ணம்மா' படத்தை இயக்கிய எஸ்.எஸ். விக்ரம் 1977ஆம் ஆண்டில் 'ஒட்டுமாங்கனி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஜெய்கணேஷ், பிரமீளா நடித்த அந்தப் படத்தில் செல்வம்தான் வில்லன். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் என்ன காரணத்தாலோ திரைக்கு வரவில்லை.

நான் பார்க்கும்போது செல்வம் 'பச்சை சிரிப்பு', 'இடம் மாறிய பூக்கள்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். எனினும், சரியான பொருளாதார வசதி இல்லாத பட நிறுவனங்கள் தயாரித்த படங்களாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் அந்தப் படங்கள் வளராமல் நின்று விட்டன். 'நினைவுகள் மறைவதில்லை' என்ற படத்தில் ராஜீவ், கீதா நடிக்க, முக்கியமான பாத்திரத்தில் செல்வம் நடித்தார். அந்தப் படத்தில் அறிமுகமானவர்தான் ஊர்வசி. அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்தும், ஏனோ திரைக்கு வரவில்லை.

இதைத்தான் விதியின் விளையாட்டு என்று கூறுகிறார்களோ என்னவோ? முறையான சண்டைப் பயிற்சிகளைக் கற்றிருந்த ஒரு இளைஞர் தன் கலையுலகப் பயணத்தில் கால் வைத்த அத்தனை படங்களின் நிலைமையும் இப்படி ஆனதும், உண்மையாகவே அதிர்ந்து போய்விட்டார். எனினும், சோர்ந்து போய்விடவில்லை. நிச்சயம் சரியான வாய்ப்பு கிடைக்கும், படவுலகில் வெற்றிகரமாக பவனி வந்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.

படவாய்ப்பு கூறிக்கொள்கிற மாதிரி கிடைக்கவில்லை என்பதற்காக எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? கையில் இருக்கும் தொழிலை பிறருக்கு பயனாக இருக்கும் வண்ணம் பயன்படுத்துவோமே என்று படவுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு கராத்தே, குங்க்ஃபூ போன்றவற்றை கற்றுத் தர ஆரம்பித்தார். அவரிடம் இந்த வகை சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொண்டவர்கள் சில்க் ஸ்மிதா, பிரமீளா. மாஸ்டர் ஸ்ரீதர், அலெக்ஸ் பாண்டியன், சக்ரவர்த்தி, அபர்ணா, எம்.எஸ்.வசந்தி, 'சட்டம் என் கையில்' கதாநாயகி எலிசபெத் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களை செல்வத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன். அவர் செல்வத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தன் பெயரை மாடர்னாக தினேஷ் என்று வைத்துக் கொண்டார் செல்வம். அப்போது பாக்யராஜ் 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தை ஆரம்பிக்கும் நிலையில் இருந்தார். அதில் பாக்யராஜ் கராத்தே சண்டைகள் போடுவது மாதிரியெல்லாம் காட்சிகள் இருந்தன. அதற்காக தனக்கு தனிப்பட்ட முறையில் கராத்தே கற்றுத்தர ஒருவரைத் தேடினார் பாக்யராஜ். அதற்கென போய்ச் சேர்ந்தவர்தான் செல்வம். பாக்யராஜுக்கு கராத்தே பயிற்சி கொடுத்ததுடன், படத்தில் அவருடன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து 'சம்சாரமே சரணம்', 'என் இதயராணி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

நானும் செல்வமும் அவ்வப்போது பார்ப்போம். எப்போது பார்த்தாலும் மணிக்கணக்கில் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். இந்த சந்திப்பில் ஒரு நீண்ட இடைவெளி விழுந்தது. அதற்குக் காரணம்- செல்வம் ஆன்மீகப் பாதையில் நடைபோடப் போய்விட்டார். ஜே.வி.எஸ். பாவா என்று தன் பெயரை மாற்றி கொண்டு 'சர்வ சமய ஆலயம்' ஒன்றை திருநெல்வேலியில் ஆரம்பிக்கப் போவதாகக் கூறி, அதற்கு அடிக்கல் கூட நாட்டிவிட்டார். அந்த விழாவிற்குச் சென்றவர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நான் செல்வம் என்ற தினேஷை, ஜே.வி.எஸ். பாவா என்ற பெயரில் சந்தித்தேன். சிறந்த திறமையை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்தாமல் இருப்பதற்காக நான் அவரை செல்லமாகக் கோபித்தேன்.

சொன்னதோடு நிற்காமல் 'நிறங்கள்' என்ற பெயரில் சன் டி.வி.யில் ஒளிபரப்பான மெகா தொடரில் ஒரு அருமையான கதாபாத்திரத்தை பாவாவிற்கு நான் வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்திருப்பதைப் பார்த்து ஏவி.எம். தயாரித்த 'திக் திக் திக்' என்ற தொடரில் ஒரு நல்ல பாத்திரத்தை அவருக்குத் தந்தார் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர். மங்கை, வம்சம், வாரிசு, சூலம், சின்ன பாப்பா பெரிய பாப்பா என பல தொடர்களில் அதற்குப் பிறகு பாவா நடித்தார்.

மீண்டும் பாவாவின் கலையுலக வாழ்க்கையில் ஒரு இடைவெளி. மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியையும் மூத்த மகனையும் உடன் இருந்து கவனிப்பதற்கும், தன் இளைய மகனைப் படிக்க வைப்பதற்கும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மகன்களுக்கு சமையல் செய்து கொடுத்து, பார்த்துக் கொள்வதே பாவாதான். இந்த நிலைமையில் எப்படி நடிக்க முடியும்? படிப்பு முடிந்து பாவாவின் இளையமகன் வேலைக்குப் போகத் தொடங்கினார். இனி தன் கலையுலகப் பயணத்தைத் தொடரலாம் என்று தலையை உயர்த்தி பாவா பார்க்கும்போது, அவருடைய வயது 60ஐ தாண்டிவிட்டது. நடிப்பிற்கு வயது தடையா என்ன?

பாவாவின் கலைப் பயணம் மீண்டும் தொடர ஆரம்பித்தது. மேஜிக் ராதிகா தயாரித்த இயேசு பிரான் பற்றிய ஒரு ஆல்பத்தில் இயேசு கிறிஸ்துவாக நடித்ததே பாவாதான்.

பாண்டிபஜாருக்கு அருகில் இருந்த ஒரு தெருவில், ஒரு சிறிய அறையில் பாவா வாடகைக்கு தங்கியிருந்தார். நான் மாதத்திற்கு ஒருமுறையாவது அந்தப் பக்கம் செல்லும்போது, அவரைப் போய் பார்ப்பேன். நான் மொழிபெயர்க்கும் இலக்கிய நூல்களின் மீது அவருக்கு தீவிரமான ஈடுபாடு எப்போதும் உண்டு.  அந்தக் கதைகளைப் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் என்னுடன் உரையாடுவார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

இடையில் சில மாதங்கள் பாவா தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் திருநெல்வேலியிலிருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட அவர், நான் ‘ஆனந்த விகடன்’ இலவச இணைப்பாக எழுதியிருந்த ‘நலம் தரும் நல்லெண்ணெய்’ என்ற நூலை மிகவும் பாராட்டிப் பேசினார். இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அவர் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்த அவருடைய இளைய மகன் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் நல்ல ஒரு சம்பளத்தை வாங்கிக் கொண்டு பணியாற்றியிருக்கிறார். புனே கிளையில் பணியாற்றிய அந்த இளைஞருக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் உண்டாகியிருக்கிறது. தன்னுடைய சொந்த நாட்டிற்குச் சென்ற அந்த பெண், காதல் விஷயத்தில் தன் பெற்றோரின் சம்மதத்துடன் சில நாட்களில் திரும்பி வருவதாக அந்த இளைஞனிடம் கூறியிருக்கிறார். நாட்கள் கடந்தோடியிருக்கின்றன. அந்த இளைஞன் எதிர்பார்த்த சாதகமான பதில் அந்த இளம் பெண்ணிடமிருந்து வரவில்லை. அந்தப் பெண்ணின் வீட்டில் அந்தக் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. அந்தக் காதல் தோல்வியை அந்த இளைஞனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் வேலை, தன் பெற்றோர், தன் சம்பாத்தியம்- எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் ஒருநாள் தூக்கில் தொங்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். தான் உயிருக்குயிராக வளர்த்த தன் அருமை மகன் இப்படி காதலில் சிக்கி தன் உயிரை போக்கிக்கொண்டு விட்டானே என்பதை நினைத்து அந்த அன்புத் தந்தை கதறிக் கதறி அழுதிருக்கிறார். என்னுடன் தொலைபேசியில் இந்தச் செய்தியை அப்படி அழுது கொண்டேதான் கூறினார் பாவா. அந்தச் செய்தியை கேட்டபோது, எனக்கே மிகவும் அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. என் அருமை நண்பரை வார்த்தைகளால் தேற்றுவதைவிட, வேறு என்ன என்னால் செய்துவிட முடியும்?

அதற்குப் பிறகு மாதங்கள் எவ்வளவோ கடந்தோடிவிட்டன. ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு நண்பர் தொலைபேசியில் என்னிடம், நான் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறினார். அது – என் நண்பர் பாவா ஒரு மாதத்திற்கு முன்னால் சொந்த ஊரான திருநெல்வேலியில் மாரடைப்பில் மரணத்தைத் தழுவி விட்டார் என்பதுதான்.

குடும்பத்தில் உண்டான பல பிரச்சனைகளால் மன கவலைகளில் மூழ்கியிருந்த பாவாவிற்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை- அவருடைய இளைய மகன்தான். ஆனால், அந்த இளைஞனும் மரணத்தைத் தேடிச் சென்றுவிட்டதால், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார் அவர். அந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியே பாவாவின் மரணம்.

திரையுலகில் மிகப் பெரிய கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்ற வேட்கையுடன் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வந்த நெல்லை செல்வம் என்ற கராத்தே மாஸ்டர் பின்னர் தினேஷ் என்றும் ஜே.வி.எஸ். பாவா என்றும் தன் பெயரை வேண்டுமானால் பல வகைகளில் மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், அவருடைய திரையலக வாழ்க்கையில் பெருமையாகக் கூறிக் கொள்கிற அளவிற்கு பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகிவிடவில்லை. சொந்த வாழ்க்கையிலோ பிரச்சனைகள்... சோகங்கள்... அதிர்ச்சிகள்... எதிர்பாராத ஏமாற்றங்கள்... தாங்கிக் கொள்ள முடியாத இழப்புகள்...

எப்படியோ வந்திருக்க வேண்டிய ஒரு திறமை வாய்ந்த இளைஞரின்... என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருந்த ஒரு அருமையான நண்பரின் வாழ்க்கை, எந்தச் சாதனையும் புரியாமலே முடிந்துவிட்டது. அந்த வருத்தம் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையில், என் மனதில் என்றென்றைக்கும் இருக்கும்.


சித்தாளாக செங்கல் தூக்கியவர் இன்று சிறந்த பாடலாசிரியர்!

சுரா

எம்.ஏ. பட்டம் பெற்று விட்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வந்தவர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமாரைப் போன்றவர்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஒருவர் கவிஞராகவும், இயக்கியவாதியாகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் ஆக முடியுமா? முடியும் என்று செயல்வடிவில் காட்டியவர்- கவிஞர் பரிணாமன்.

நான் பரிணாமனை மதுரையில் 1978ஆம் ஆண்டில் சந்தித்தேன். அப்போது அவர் விவசாயத்திற்குப் பயன்படும் பம்ப் செட் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை அங்கு நடத்திக் கொண்டிருந்தார். கடையை அவருடைய அண்ணன் பார்த்துக் கொள்வார். எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் தீவிரமாக மூழ்கியிருப்பார் பரிணாமன். தினமும் நான் பரிணாமனைப் போய்ப் பார்ப்பேன். வண்ணநிலவன், வண்ணதாசன், பொன்னீலன், பா.செயப்பிரகாசம், டி.செல்வராஜ், ஹெப்சிபா ஜெசுதாசன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளையும் நான் பரிணாமன் சொல்லித்தான் படித்தேன்.

ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்ட பரிணாமனின் இயற்பெயர் கிருஷ்ணன். ஆரம்பத்தில் சித்தாளாகவும், கொத்தனாராகவும், கட்டிட கான்ட்ராக்டராகவும் இருந்திருக்கும் அவருக்கு மு.வரதராசனார், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரின் படைப்புகளைப் படித்ததால், இலக்கியத்தின் மீது ஒரு மிகப் பெரிய ஈடுபாடு உண்டாகியிருக்கிறது. தி.க.சி., கே.சி.எஸ். அருணாசலம், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரின் அறிமுகம் பரிணாமனுக்கு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் 'தாமரை'யில் இவர் கவிதை எழுதியிருக்கிறார். பரிணாமனின் முதல் கவிதைத் தொகுதியான 'ஆகஸ்டும் அக்டோபரும்' அந்தக் காலகட்டத்தில்தான் வெளியானது.

அப்போது நான் மலையாளத்திலிருந்து பல சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். அதனால் பரிணாமனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். ரஷ்ய இலக்கியங்கள் மீது எனக்கு ஒரு ஆழமான காதல் உண்டானதற்குக் காரணமே பரிணாமன்தான். மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலை என்னைப் படிக்கும்படி தூண்டியதே அவர்தான். லியோ டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ், மிகயீல் ஷோலக்கோவ் போன்ற பல ரஷ்ய எழுத்தாளர்களின் அருமையான படைப்புகளை நான் படிப்பதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் அவர்தான். அதை நான் எந்தச் சமயத்திலும் மறந்ததில்லை.

நான் சந்தித்த காலகட்டத்தில் பரிணாமன் மதுரை மாவட்டத்தின் கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராக இருந்தார். 'மகாநதி' என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். 1979ஆம் ஆண்டில் நான் மொழி பெயர்த்த ஒரு அருமையான ரஷ்ய சிறுகதையை அவர் மனம் திறந்து பாராட்டியதோடு நிற்காமல், அதை 'மகாநதி'யில் பிரசுரிக்கவும் செய்தார்.

மதுரையில் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பரிணாமன் 1988ஆம் ஆண்டில், ஜெயகாந்தன் ஆசிரியராகப் பணியாற்றிய 'நவசக்தி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்துவிட்டார். மதுரையில் இருந்த வீட்டை விற்றுவிட்டு சென்னைவாசியாக மாறிய பரிணாமன், தன்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுதியாக 'நெஞ்சில் ஆடும் கதிரும் நிஜம் விளையாத பூமியும்' என்ற நூலை வெளியிட்டார். இவருடைய அனைத்துக் கவிதைகளையும் உள்ளடக்கிய 'பரிணாமன் கவிதைகள்' என்ற நூலை செண்பகா பதிப்பகம் வெளியிட்டது.

கவிதைகள் எழுதுவதுடன் நிற்காமல், கடந்த 30 வருடங்களாக கம்பூனிஸ்ட் மேடைகளில் மெட்டுடன் கவிதைகளைப் பாடுவதிலும் பரிணாமன் முன்னணியில் இருக்கிறார். அவருடைய 'பத்து தலை ராவணனை ஒத்தைத் தலை ராமன் வென்றான்; மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா' என்ற பாடலையும், 'பாரதி பிடித்த தேர் வடம் நடு வீதியில் கிடக்கிறது; அதைப் பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஊர் கூடி தவிக்கிறது' என்ற பாடலையும் தமிழகத்தில் கேட்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நூற்றுக்கணக்கான மேடைகளில் சிங்கமென உணர்ச்சி பொங்க பரிணாமன் பாடுவதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். அப்போது பரிணாமன் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாடு மேலும் அதிகமாகும்.

பத்திரிகை, அரசியல் மேடை ஆகியவற்றைத் தொடர்ந்து பரிணாமன் கால் வைத்த இன்னொரு இடம் படவுலகம். முரளி கதாநாயகனாக நடித்த 'நானும் இந்த ஊருதான்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அவர் மாறினார். அதில் இடம் பெற்ற 'பொண்ணு சிரிக்குது பூவாட்டமா' என்ற பாடலை எழுதியவர் பரிணாமன்தான். தொடர்ந்து 'என் பொட்டுக்கு சொந்தக்காரன்' என்ற படத்தில் தேவா இசையமைப்பில் ஒரு பாடலை எழுதினார். இளையராஜா இசையமைப்பில் சங்கிலி முருகன் தயாரித்த 'நாடோடி பாட்டுக்காரன்' படத்தில் 'தென்பாண்டிச் சீமை தமிழ் கொடுத்த தாயே தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே' என்ற பாடலை எழுதினார் பரிணாமன். எடிட்டர் பி.லெனின் இயக்கிய 'ஊருக்கு நூறு பேர்' படத்தில் இடம் பெற்ற 'சத்திய வேள்வியில் சிந்திய குருதியில் புத்துயிர் பெற்றவர் நூறு பேர்' என்ற பாடலை எழுதிய பரிணாமனுக்கு மிகச் சிறந்த பெயரைப் பெற்றுத் தந்த படம் ஜனநாதன் இயக்கிய 'ஈ'. 'வாராது போல் வந்து வீழ்ந்தானடா' என்று பரிணாமன் எழுதிய பாடலை ஜேசுதாஸ் பாடினார். அதற்குப் பிறகு பரிணாமனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படம் 'வியாபாரி'. தேவா இசையமைப்பில் அப்படத்தில் இடம் பெற்ற 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்- அம்மாவை வாங்க முடியுமா?' என்ற பரிணாமனின் பாடலைக் கேட்காதவரும் உண்டோ?

பரிணாமன் சமீபத்தில் ‘எனது இந்தியா’ என்ற பெயரில் ஒரு நூலை எழுதியிருக்கிறார். அது தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வர இருக்கிறது.

பரிணாமனுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகள் உஷா டாக்டராக இருக்கிறார். சரத்சந்திரன் (சரத்சந்திரரின் நூற்றாண்டின் போது பிறந்தவர்) என்ற மகன் டி.வி. தொடர்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இன்னொரு மகனான ஜெயகாந்தன் எஞ்சினியராகப் பணிபுரிகிறார். 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' என்பார்கள். அதற்கு சரியான எடுத்துக்காட்டு பரிணாமனின் குடும்பம்தான்.

நானும் பரிணாமனும் சில மாதங்களுக்கு ஒரு முறை எங்காவது சந்திப்போம். இலக்கியம் குறித்து ஆர்வத்துடன் பேசுவோம். சிறந்த இலக்கியப் படைப்புகளை நான் மொழி பெயர்ப்பது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னைப் பாராட்டுவார். சமீபத்தில் நானும் அவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான 'பாலன் இல்ல'த்தில் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பல இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் அலசினோம். அப்போது 1978ஆம் ஆண்டில்- என்னுடைய 22வது வயதில் முதல் தடவையாக மதுரையில் பரிணாமனை நான் சந்தித்த சம்பவம் என் மனத்திரையில் ஓடியது.

பல வருடங்களுக்கு முன்பு சித்தாளாக வேலை பார்த்த பரிணாமன் இன்று கவிஞராகவும் இலக்கியவாதியாகவும். திரைப்படப் பாடலாசிரியராகவும் ஒளி வீசுகிறார் என்றால், அதற்குப் பின்னால் மறைந்திருப்பது அவருடைய ஆர்வமும், உழைப்பும்தான் என்பதை நான் கூறவேண்டுமா என்ன?


டாக்டர் ராமதாஸை மிரட்டிய படத் தயாரிப்பாளர்!

சுரா

ட தயாரிப்பாளர்கள் கதை அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் ஏவி. மெய்யப்பச் செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜெமினி எஸ்.எஸ். வாசன் போன்றவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதற்கு கதை பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது கூட ஒரு காரணம்.

இப்போது நம்மிடையே இருக்கும் படத் தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோருக்கு இந்த அறிவு சிறிதும் இல்லை என்பதே உண்மை. அவர்களுக்கிடையில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்கள் சிலரும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஞானவேல்.

அவரை எனக்கு இருபது வருடங்களுக்கு முன்பே தெரியும். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். தொழில் ரீதியான நண்பர்கள் அவர்கள். முரளியுடன் சேர்ந்து காஜா மைதீன் 'புதிய காற்று' படத்தைத் தயாரித்தபோது, காஜாவைப் பார்ப்பதற்காக ஞானவேல் வருவார். அவரை நான் பார்த்தது அங்குதான். நல்ல கதை அறிவு கொண்டவராக அவர் இருப்பதை அப்போதே நான் தெரிந்து கொண்டேன். பல படங்களின் கதைகளைப் பற்றியும் அவர் நுணுக்கமாக அலசிப் பேசுவார். ஞானவேலிடம் இருந்த கதை அறிவைப் பார்த்த இயக்குநர் கார்வண்ணன் அந்தப் படத்தின் கதை விவாதத்தின்போது அவரைத் தன்னுடன் வைத்துக் கொண்டார்.

'புதிய காற்று' படத்தின் கதை விவாதத்தில் பங்கு பெற்றதுடன் நின்றுவிடாமல், அந்தப் படத்தில் முதலமைச்சர் பாத்திரத்தில் ஞானவேல் நடிக்கவும் செய்தார். கம்பீரமான தோற்றத்துடன் அவர் முதலமைச்சர் கெட்-அப்பில் நடித்ததைப் பார்த்தபோது, அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் சரியாகப் பொருத்தியிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். படம் முழுக்க வரும் ஒரு பெரிய கதாபாத்திரம் அது. ஞானவேல் அந்தப் பாத்திரத்திற்கு தன் திறமையால் சிறப்பு சேர்த்திருந்தார் என்பதுதான் உண்மை.

அதற்குப் பிறகு தான் இயக்கிய 'தொண்டன்' என்ற படத்திலும், கார்வண்ணன் ஞானவேலுக்கு ஒரு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் பாத்திரம் அது.

முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்காகப் போராடுபவராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடித்திருந்தார். தொழிலதிபர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு குறைவான சம்பளத்தைக் கொடுத்து, அவர்களை தங்களின் தொழிற்சாலைகளில் வேலைகளில் ஈடுபடச் செய்வார்கள். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்கள் வேலை பார்ப்பதா என்று கொதித்தெழும் டாக்டர் ராமதாஸ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார். தொழிலதிபர்களுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டம் சட்டமன்றத்தில் பேசப்படும். டாக்டர் ராமதாஸால் தொழிலதிபர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என்று எண்ணும் அமைச்சர் ஞானவேல், டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசுவார். ஆரம்பத்தில் கனிவாகப் பேசும் ஞானவேல், படிப்படியாக எச்சரிக்கும் தொனியில் பேசுவார். 'தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிட்டால், பின்னர் மோசமான விளைவு ஏற்படும். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்பார். அதற்கு டாக்டர் ராமதாஸ் அடிபணிந்து விடுவாரா என்ன?

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது நான் அருகிலேயே இருந்தேன். எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் ஞானவேல், டாக்டர் ராமதாஸுடன் இயற்கையாக நடித்ததைப் பார்த்து நான் மனதிற்குள் அவரைப் பாராட்டினேன். 'தொண்டன்' படத்தில் டாக்டர் ராமதாஸுடன் ஞானவேல் நடித்த அந்தக் காட்சியையும், மிகவும் இயல்பாக அவர் வசனம் பேசி நடித்ததையும் படம் பார்த்த எல்லோரும் மனம் திறந்து பாராட்டினார்கள்.

ஞானவேல் நடித்த இன்னொரு படம் 'மாநகர் குற்றம்'. சமூக விரோதச் செயல்களைச் செய்யும் மனிதராக அவர் நடித்திருந்தார். ராஜன் சர்மா இயக்கிய அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்து விட்டது. எனினும், வியாபாரம் ஆகாததால், கிடப்பில் போடப்பட்டு விட்டது. படப்பிடிப்பின்போது ஞானவேலைப் பார்த்த நான் அந்தக் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக அவர் பொருந்தியிருப்பதாகச் சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

நண்பர்களான ஞானவேல், காஜா மைதீன், ஜெயப்ரகாஷ் மூவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம்தான் ரோஜா கம்பைன்ஸ். ஆரம்பத்தில் சில படங்கள் எடுக்கப்படும் வரையில் ஞானவேலும், ஜெயப்ரகாஷும் அந்நிறுவனத்தில் இருந்தார்கள். ஞானவேல் அந்நிறுவனத்தில் இருக்கும் வரையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன. அதற்கு ஞானவேலின் கதை அறிவும், கதையைத் தேர்வு செய்யும் திறமையும்கூட காரணங்களாக இருந்திருக்கலாம்.

கருத்து வேறுபாடு காரணமாக காஜா மைதீனை விட்டு, தனியாகப் பிரிந்து வந்து 'ஜி.ஜே. சினிமா' என்ற பேனரில் பல படங்களை ஞானவேல் தன் நண்பர் ஜெயப்ரகாஷுடன் இணைந்து தயாரித்தார். 'செல்லமே', 'ஏப்ரல் மாதத்தில்' போன்ற படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன. 'ஜூலி கணபதி' வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும், அது ஒரு மாறுபட்ட படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஞானவேலுடன் சுமார் ஒரு மணி நேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குச் சொந்தமாக எழும்பூரில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. ஞானவேலுவின் நல்ல ரசனையை அந்தச் சந்திப்பின்போது நான் உணர்ந்தேன். தனக்குப் பிடித்த இயக்குநர்கள் என்று அவர் மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், பாசில் ஆகியோரின் பெயர்களைக் கூறியபோது, எனக்கு அவர்மீது உயர்ந்த மதிப்பு தோன்றியது.

ஞானவேலுவின் திறமைக்கு அவர் இன்னும் உயரத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எனினும், நல்ல ரசனையும், கதை அறிவும் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த அவர், கடந்த சில வருடங்களாக படங்களெதையும் தயாரிக்கவில்லை. எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய அவருக்கு, படவுலகின் தற்போதைய ‘கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டிற்குள் ஓடும்’ போக்கு சிறிதும் பிடிக்காமல் போயிருக்கலாம். ஞானவேல் படங்களை தயாரிக்காவிட்டாலும், அவருடைய நண்பர் ஜெயப்ரகாஷ் இன்று பல வெற்றிப் படங்களிலும் நடித்து, முத்திரை பதித்து ஒரு மிகச் சிறந்த முன்னணி நடிகராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். படங்களைத் தயாரித்து, கையில் இருக்கும் பணத்தை இழப்பதை விட வெறுமனே இருந்து கொண்டு நமக்கென்றிருக்கும் தொழிலில் முழுமையான கவனத்தைச் செலுத்துவோம் என்று நினைக்கும் ஞானவேலின் மன ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு நல்ல ‘பிஸினஸ்மேன்’ அப்படித்தான் நடப்பார்!


ஜூஸ் கடையில் தங்கியவர் இயக்குனர் ஆனார்!

சுரா

பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் பங்களாப்பட்டிதான் ராஜவர்மனின் சொந்த ஊர். மதுரையில் பிறந்ததால் அவரின் தந்தை ராஜவர்மனுக்கு 'மதுரை ராஜ்' என்று பெயர் வைத்தார். பெரியகுளம் விக்டோரியா மகாராணி உயர்நிலைப் பள்ளியில் அவர் படிக்கும்போது, அதற்கு அடுத்து இருந்தது ரஹீம் திரையரங்கு. அங்கு திரையிடப்படும் படங்களின் வசனம் எப்போதும் வெளியே கேட்டுக் கொண்டேயிருக்கும். அதன் விளைவாக சினிமா மீது ஒரு மிகப் பெரிய மோகம் உண்டானது ராஜவர்மனுக்கு, சிவாஜி என்றால் அவருக்கு உயிர், அவரைப்போல சாதனை புரிய வேண்டும் என்று விரும்பிய அவர் பருத்தி விற்று வீட்டில் வைத்திருந்த பணத்தை பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி விட்டார். அப்போது மதுரையிலிருந்து சென்னைக்கு 19 ரூபாய் கட்டணம்.

ஏற்கெனவே தனக்கு நன்கு தெரிந்திருந்த ஜெயகுமார் என்பவர் புரசைவாக்கத்தில் வைத்திருந்த ஒரு ஜூஸ் கடையின் ஒரு அறையில் தங்கிக் கொண்டு சினிமா கம்பெனிகளின் படிகளில் ஏறி இறங்க ஆரம்பித்தார் ராஜவர்மன். 'சித்ராலயா' அலுவலகத்திற்குப் போய் கோபுவைப் பார்த்தார். கே.பாலசந்தரை வீட்டில் போய் சந்தித்து உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டார். 'கல்லுக்குள் ஈரம்' கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜாவை ரஞ்சித் ஹோட்டலில் போய்ப் பார்த்தார். 'இப்போது என்னிடம் வாய்ப்பு இல்லை. எனினும், மனதைத் தளரவிடாமல் முயற்சி செய்' என்று தோளில் கையை வைத்து தட்டிக் கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. அதற்குப் பிறகு எஸ்.பி.முத்துராமனைப் போய்ப் பார்த்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை.

புரசைவாக்கத்தில் ஃபோட்டோ ஸ்டூடியோ வைத்திருந்த சித்ரா ராமமூர்த்தி, சித்ரா மணி சகோதரர்கள் மூலம் எழுத்தாளர் ராண்டார் கையின் உதவியாளராகும் வாய்ப்பு ராஜவர்மனுக்கு கிடைத்தது. ராண்டார் கை எழுதித் தரும் படைப்புகளை குங்குமம், அஸ்வினி போன்ற பத்திரிகைகளுக்குக் கொண்டுபோய் கொடுப்பதுதான் அவருடைய வேலை. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய இருப்பிடத்தை அவர் வடபழனிக்கு மாற்றிக் கொண்டார்.

பள்ளியில் படிக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜவர்மன் ஆண்டிபட்டிக்கு அருகில் இருந்த சேவா நிலையத்தில் சேர்ந்து உடல் நலம் பெற்றார். அதை நடத்திக் கொண்டிருந்த டோரா ஸ்கார்லெட் என்ற ஆங்கிலேயப் பெண்மணி, அவருக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டார். அந்த ஜேம்ஸ் என்ற பெயருடன்தான் ராஜவர்மன் சென்னையில் உலாவிக் கொண்டிருந்தார்.

வடபழனி கோவிலுக்கு அருகில் 35 ரூபாய் வாடகையில் குடியேறிய நேரத்தில் 'பூம்பூம் மாடு' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அடைக்கலவன் என்பவர் படத்தை இயக்கினார். சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த படம். தொடர்ந்து சுரேஷ், விஜி நடித்த 'வளர்த்த கடா', பாண்டியன் நடித்த 'மண்சோறு', பாண்டியன், ஜெயஸ்ரீ நடித்த 'கோயில் யானை' படங்களிலும் ராஜவர்மன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது எஸ்.எஸ்.சந்திரன் அவருக்கு அறிமுகமானார். எஸ்.எஸ்.சந்திரன், இராம நாராயணனிடம் அவரை உதவியாளராகச் சேர்த்து விட்டார். இராம நாராயணனிடம் திரைக்கதை உதவியாளராக வீரன் வேலுத்தம்பி, வீரன் ஆகிய படங்களில் ராஜவர்மன் பணியாற்றினார்.

ராஜவர்மன் சொன்ன ஒரு கதை சங்கிலி முருகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தக் கதைதான் 'எங்க ஊரு காவக்காரன்'. ராமராஜன், கவுதமி நடித்த அந்தப் படத்தை டி.பி.கஜேந்திரன் இயக்கினார். ராஜவர்மன் கதை எழுதிய அந்தப் படம் 1988 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. அதில்தான் 'ராஜவர்மன்' என்ற பெயர் இடம் பெற்றது. அவருக்கு அந்தப் பெயரை வைத்தவர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவருடைய அக்கா. அந்தப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

தொடர்ந்து கார்த்திக், நிரோஷா நடித்த 'பாண்டி நாட்டுத் தங்கம்' படத்துக்கு கதை எழுதினார் ராஜவர்மன். அது 175 நாட்கள் ஓடியது. அதற்கடுத்து சங்கிலி முருகன் தயாரித்த 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன' படத்திற்கு சங்கிலி முருகன் கதை எழுத, அதற்கு வசனம் எழுதினார் ராஜவர்மன். அதுவும் 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து 'கும்பக்கரை தங்கையா' படத்திற்கு சங்கிலி முருகன் கதை எழுத, ராஜவர்மன் வசனம் எழுதினார். அந்தப் படமும் 100 நாட்கள் ஓடியது. அதற்கடுத்து சங்கிலி முருகன் தயாரித்து, அர்ஜுன் நடித்த 'எங்க ஊரு சிப்பாய்' படத்திற்கும் ராஜவர்மன் வசனம் எழுதினார். சங்கிலி முருகன் தயாரித்த இந்த அனைத்துப் படங்களிலும் அசோசியேட் இயக்குநராகவும் ராஜவர்மன் பணியாற்றினார்.

மூர்த்தி என்பவர் மூலம் ராஜவர்மனுக்கு இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொல்லி 'யாகவா புரொடக்ஷன்ஸ்' என்.ஆர். தனபாலன் தயாரித்த 'தங்க மனசுக்காரன்' படத்தை ராஜவர்மன் இயக்கினார். முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் மூலம்தான் சிவரஞ்சனி கதாநாயகியாக புகழ் பெற்றார். இளையராஜா தன்னுடைய மிகச் சிறந்த பாடல்கள் மூலம் உயிரூட்டிய அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து அதே நிறுவனத்திற்கு ராஜவர்மன் இன்னொரு படத்தை இயக்கினார். அதுதான் 'மணிக்குயில்'. முரளி, சாரதாப்ரீதா நடித்த அதுவும் வெற்றிப் படமே. அதே கால கட்டத்தில் ஏ.ஜி.எஸ். மூவீஸ் தயாரித்த 'தங்கக் கிளி' என்ற படத்தையும் ராஜவர்மன் இயக்கினார். முரளி கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

அந்தப் படம் திரைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, படவுலகில் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் நடந்த வேலை நிறுத்தத்தில் படத்துறை ராஜவர்மனை மறந்துவிட்டது. வேலை நிறுத்தத்திற்குப் பிறகு பல முயற்சிகளையும் அவர் செய்து பார்த்தார். எதுவும், சரியாக அமையவில்லை.

எனினும், ராஜவர்மன் வெறுமனே இருக்கவில்லை. செயல்பட்டுக் கொண்டே இருந்தார். செல்வா, செண்பகா நடித்த 'ஓடி வந்த மாப்பிள்ளை' என்ற இரண்டு மணி நேர டெலிஃபிலிமை அவர் இயக்கினார். சன் டி.வி.யில் அது ஒளிபரப்பானபோது,  அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அதற்குப் பிறகு 'பரிகாரம்' என்ற பெயரில் 2 மணி நேர டெலிஃபிலிம் ஒன்றை ராஜவர்மன் இயக்கினார். அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் நடித்தார்.

மிக விரைவில் 'மூங்கில் காடு' என்ற பெயரில் ஒரு படத்தை ராஜவர்மன் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.

ராஜவர்மன் இயக்க இருக்கும் இன்னொரு படம் 'பாளையக்காரன்' பிரபல முன்னணி நடிகர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு நல்ல ஒரு தயாரிப்பாளரை ராஜவர்மன் தேடிக் கொண்டிருக்கிறார். கதையை ராஜவர்மன் கூறினார். கதையைக் கேட்கும்போதே, பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று மனதில் பட்டது. திறமை இருப்பவர்கள் தொடர்ந்து படத்துறையில் இயங்கிக் கொண்டே இருக்கலாம். அதற்கு ராஜவர்மனே உதாரணம்.


நடக்க முடியாத சிவாஜியைக் கைபிடித்து அழைத்துச் சென்ற தயாரிப்பாளர்!

சுரா

திரைப்பட உலகத்திற்கு சம்பந்தமே இல்லாத படிப்பைப் படித்துவிட்டு, சிலர் படத் துறையில் ஏதாவது முத்திரை பதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் காலடி எடுத்து வைப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் - கே.சொக்கலிங்கம்.

ஆரணியைச் சேர்ந்த இவர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்றவர். படித்து முடித்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும் பெரிய துணி ஆலைகளில் நிர்வாகியாகப் பணிபுரிந்தார். அடிப்படையிலேயே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த சொக்கலிங்கத்திற்கு தான் பணி புரிந்த வேலையிலும் நல்ல சம்பளம் கிடைத்தது. எனினும், அதையும் தாண்டி அவரிடம் கலையின் மீது ஒரு தீவிர ஈடுபாடும், மிகப் பெரிய ஆர்வமும் இருந்தது.

சென்னைக்கு வந்து, 'கண்ணீரில் எழுதுகிறேன்', 'பூஜைக்கு வராத பூக்கள்' என்ற பெயர்களில் அவர் கதை, வசனம் எழுதிய நாடகங்களை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். அவருடைய இந்த நாடகங்கள் சென்னையில் பல சபாக்களிலும் நடைபெற்று மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 'அவள் கல்லறையில் நான்' என்றொரு நாடகம். அதற்கு கதை, வசனம், இயக்கம் எல்லாமே சொக்கலிங்கம்தான். அந்நாடகத்திற்குத் தலைமை தாங்குவதற்காக 80களில் பிரபலமாக இருந்த ஒரு திரைப்பட இயக்குநரை சொக்கலிங்கம் அழைத்திருக்கிறார். அந்த இயக்குநரும் வந்திருந்து முழு நாடகத்தையும் பார்த்திருக்கிறார். அவருக்கு நாடகம் மிகவும் பிடித்து விட்டது. நாடகத்தை 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு அந்த இயக்குநர் இயக்கிய ஒரு திரைப்படம் திரைக்கு வந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. போய்ப் பார்த்தால் அந்தக் கதை சொக்கலிங்கம் நாடகமாக நடத்திய கதை. அதைப் பார்த்து சொக்கலிங்கம் அதிர்ச்சியடைந்து விட்டார். நேராக அந்த இயக்குநரைப் பார்த்து தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குநர் ஏதோ சமாதானம் கூறியிருக்கிறார். இருந்தாலும், சொக்கலிங்கம் சமாதானம் ஆகவேயில்லை. அது மாறாத வடுவாக அவர் மனதில் தங்கிவிட்டது.

பிரமீளா, எம்.ஆர்.ஆர். வாசு, ஐ.எஸ்.ஆர்., 'அய்யா தெரியாது' ராமாராவ், என்னத்தெ கன்னையா, வி.எஸ்.ராகவன், தாம்பரம் லலிதா என்று பலரும் சொக்கலிங்கத்தின் நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.

தன்னுடைய நாடகத்தின் கதையை திரைப்பட இயக்குநர் திருடிய நிகழ்ச்சி, சொக்கலிங்கத்தின் மனதில் ஒரு தீவிர எண்ணத்தை உண்டாக்கியது. அது- திரைப்படத் துறைக்குள் நுழைய வேண்டும் என்பதுதான். பல முறை அவர் படத்துறைக்குள் காலடி எடுத்து வைக்க முயற்சித்தார். ஆனால், உடனடியாக பலன் கிடைக்கவில்லை. நினைத்தவுடன் படத் துறைக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து விட்டால், படத் துறைக்கு எப்படி மதிப்பு இருக்கும்? அதற்காக சொக்கலிங்கம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

அதற்கு 1990ஆம் ஆண்டில் பலன் கிடைத்தது. நடிகர் ஐ.எஸ்.ஆர்., சொக்கலிங்கத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் சொக்கலிங்கத்தை இயக்குநர் வி.சி.குகநாதனிடம் அறிமுகம் செய்து வைத்தார். தன்னுடைய படவுலக கனவையும், அதற்காக தான் பல வருடங்களாக முயற்சி பண்ணிக் கொண்டிருப்பதையும் சொக்கலிங்கம் அவரிடம் கூறினார். அத்துடன் தானே ஒரு படத்தைச் சொந்தத்தில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது உருவான படம்தான் 'முதலாளியம்மா'. அப்படத்தை சொக்கலிங்கம் 'திருமுருகன் கம்பைன்ஸ்' என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க, வி.சி.குகநாதன் இயக்கினார்.

சொக்கலிங்கத்தின் நாடகங்களில் அவர் மிகவும் சிறப்பாக வசனம் எழுதியிருந்ததைப் பார்த்த குகநாதன், சொக்கலிங்கமே 'முதலாளியம்மா' படத்திற்கு வசனம் எழுதலாம் என்று கூறிவிட்டார்.

முதலாளியம்மாவாக அப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர் பிரமீளா. முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் எதுவுமே தெரியாத அப்பாவியாக பானுசந்தர் நடிக்க, ஊரையே ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் கொடூர குணம் கொண்ட பிரமீளாவின் கொட்டத்தை அடக்கும் பெண்ணாக கனகா நடித்திருந்தார்.

எனக்கு சொக்கலிங்கம் அறிமுகமானது 'முதலாளியம்மா' தயாரிப்பில் இருந்தபோதுதான். அப்போதே சொக்கலிங்கம் என்னுடைய நெருங்கிய நண்பராக ஆகிவிட்டார். தான் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை அவர் படித்துக் காட்டுவார். அவரிடம் நல்ல திறமை இருப்பதை உணர்ந்தேன். அதை வீணாக்காமல், நல்ல முறையில் பயன்படுத்தும்படி அவருக்கு ஆலோசனை கூறுவேன். 'முதலாளியம்மா' படப்பிடிப்பில் வசனம் அடங்கிய பேப்பர்களுடன் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பார் சொக்கலிங்கம்.

'முதலாளியம்மா' திரைக்கு வந்து 50 நாட்களைத் தாண்டி ஓடியது. எல்லோருக்கும் படத்தைப் பிடித்திருந்தது. இயக்குநர் வி.சி.குகநாதன், வசனகர்த்தாவும் தயாரிப்பாளருமான சொக்கலிங்கம் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

தொடர்ந்து வி.சி.குகநாதன் இயக்கிய 'முதல் குரல்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் சொக்கலிங்கம். அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்ட அப்படத்தில் நியாயத்திற்காகப் போராடும் பத்திரிகையாளர் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தார். அப்போது மத்திய அரசாங்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவராக சிவாஜி இருந்தார். 'முதல் குரல்' படம் முடிவடையும் நிலையில் இருந்தபோது, சிவாஜிக்கு உடல் நிலையில் பாதிப்பு உண்டானது. அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை செய்துவிட்டு சிவாஜி திரும்பிய பிறகு, மீண்டும் படப்பிடிப்பு தொடர்ந்தது. அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சொக்கலிங்கம், தான் இன்னும் மறக்காமல் இருக்கும் ஒரு விஷயத்தைக் கூறினார்.

''சிவாஜி கதாநாயகனாக நடித்த 'முதல் குரல்' முற்றிலும் முடிவடைந்துவிட்டது. முழுப் படத்தையும் பார்ப்பதற்காக நடிகர் திலகம் தி.நகரில் இருக்கும் தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டருக்கு தன் மனைவியுடன் வந்திருந்தார். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது, சிவாஜி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறவே, படம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நடிகர் திலகம் என் தோளில் கைபோட, நான் அவரை பின்னால் இருந்த பாத்ரூமிற்கு அழைத்துச் சென்றேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடக்கவே மிகவும் சிரமப்பட்டார் சிவாஜி. பாத்ரூமிற்குள் அவர் சிறுநீர் கழிக்க, நான் மிகவும் அருகில் இருந்து உதவினேன். என் தோளில் கையைப் போட்டுக் கொண்டே அவர் சிறுநீர் கழித்தார். 'யார் பெத்த பிள்ளையோ... நீ எனக்கு உதவியா இருக்கே! நீ நல்லா இருக்கணும்' என்று சிவாஜி அப்போது என்னை வாழ்த்தினார். எல்லோரையும் தன் அபார நடிப்பால் அழவைத்த அந்த நடிப்பு மேதையின் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த நிலையைப் பார்த்து, என் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது'' என்று சொக்கலிங்கம் கூறியபோது, அவருக்கு பேச்சே வரவில்லை. அதைக் கேட்கும்போது, எனக்குள்ளும் இனம் புரியாத சோகம் படர்ந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொக்கலிங்கம் மீண்டும் தயாரிப்பாளராக இப்போது காலடி எடுத்து வைத்திருக்கிறார். 'இதயத்தின் கதை' என்ற பெயரில் ஒரு படத்தை விரைவில் தயாரிக்க இருக்கும் சொக்கலிங்கம், மதுவினால் வரும் கெடுதல்களையும், அதனால் குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் மையமாக வைத்து 'மயக்கமா கலக்கமா' என்ற பெயரில் தனித்தனிக் கதையாக உருவாக்கிய டி.வி. தொடர் ஒன்றையும் கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார். சொக்கலிங்கத்தின் கலையுலகக் கனவு இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே!


கே.பாலசந்தர் அறிமுகப்படுத்த, பி.வாசு உயரத்தில் உட்கார வைத்தார்!

சுரா

ம் நடிகர்கள் சிலரிடம் நடிப்புத் திறமையைத் தாண்டி சில அபூர்வ திறமைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் மார்த்தாண்டன். அவர் வரைந்த பல ஓவியங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். 'இவரால் எப்படி இந்த அளவிற்கு உயிர்ப்புடன் ஓவியங்களை வரைய முடிகிறது!' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் இன்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு நடிகராக இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்- ஓவியம் வரையும் திறமைதான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அதுதான் உண்மை.

நெல்லை மாவட்டம் ரொந்தை கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படித்திருந்த மார்த்தாண்டன் ஓவியத்தின் மீது கொண்ட தீவிர காதலால், நெல்லையில் இருந்த ஒரு ஓவியப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். அதற்குப் பிறகு ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றினார். தொடர்ந்து மும்பைக்குச் சென்றுவிட்டார். அங்கு இந்திப் படங்களுக்கு விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருந்த சி.மோகன் என்பவரிடம் இரண்டு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றினார்.

மும்பையில் கிடைத்த அனுபவங்களுடன் சென்னைக்கு வந்தார். 1980ஆம் ஆண்டு அது. அப்போது மிகவும் பிஸியான சினிமா டிசைனராக இருந்த உபால்டுவிடம் உதவியாளராக அவர் சேர்ந்தார். ஐந்து வருடங்கள் அங்கு இருந்தார். அப்போது மார்த்தாண்டனுக்கு இயக்குநர் மெளலி அறிமுகமானார். தான் இயக்கிய 'நன்றி மீண்டும் வருக', 'ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது' படங்களுக்கு விளம்பர டிசைன்கள் பண்ணும் வேலையை அவருக்குத் தந்தார் மெளலி. தன் ஓவியத் திறமை செயல் வடிவில் வந்தது குறித்து மார்த்தாண்டனுக்கு ஏக மகிழ்ச்சி.

தொடர்ந்து ராஜசேகர் இயக்கிய 'காலமெல்லாம் உன் மடியில்', 'கழுகுமலைக் கள்ளன்' படங்களுக்கு விளம்பர டிசைனராக மார்த்தாண்டன் பணியாற்றினார். வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் நடிகர்களையும், நடிகைகளையும், இயக்குநர்களையும் ஓவியமாக வரைந்து அவர்களிடம் அவர் நேரில் கொண்டு போய்க் கொடுப்பார். அதன் மூலம் பலரின் பாராட்டுகளும் மார்த்தாண்டனுக்குக் கிடைத்தன.

அந்த வகையில் கே.பாலசந்தரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டு போய் அவரிடம் மார்த்தாண்டன் தந்தார். ஓவியத் திறமையால் கவரப்பட்ட கே.பி., 'புதுப் புது அர்த்தங்கள்' படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னதான் ஓவியராக இருந்தாலும், படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை மண்ணில் கால் வைத்தவர் மார்த்தாண்டன். பள்ளியில் படிக்கிற காலத்திலேயே அவர் நிறைய நாடகங்களில் நடித்திருந்தார். உபால்டுவின் உதவியாளராகப் பணியாற்றும்போது, அங்கு வரும் எல்லா இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் பார்த்து வாய்ப்பு கேட்பார். யாரும் தரவில்லை.

முதல் நடிப்பு வாய்ப்பைக் கொடுத்தவர் கே.பாலசந்தர்தான். ஆனால், இதில் சோகம் என்னவென்றால், 'புதுப் புது அர்த்தங்கள்' திரைக்கு வந்தபோது, மார்த்தாண்டன் நடித்த காட்சி படத்தில் இல்லாமல் போய்விட்டது. நீளம் காரணமாக அது நீக்கப்பட்டுவிட்டது. அதை மார்த்தாண்டனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கே.பி.யைப் பார்த்து அழுதிருக்கிறார். மார்த்தாண்டனுக்காக வருத்தப்பட்ட கே.பி. 'ஒரு வீடு இரு வாசல்' படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தை அவருக்குத் தந்தார். ஒரு ஓவியராகவே அவரை பாலசந்தர் அந்தப் படத்தில் இடம் பெறச் செய்திருந்தார். மார்த்தாண்டன் ஓவியம் வரைவதை படத்தில் அப்படியே காட்டியிருந்தார். படம் பார்த்தவர்கள் மார்த்தாண்டனின் திறமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் படத்தில் மார்த்தாண்டன் பேசப் பட்டார்.

அதற்குப் பிறகு மார்த்தாண்டனுக்கு வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தை உண்டாக்கிக் கொடுத்த இயக்குநர் பி.வாசு. 'சின்னத் தம்பி' படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தைத் தந்து, மார்த்தாண்டனை பட்டி தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தவர் வாசு. அதற்கு பிறகு மார்த்தாண்டனுக்கு ஏறுமுகம்தான். தொடர்ந்து 'வால்டர் வெற்றிவேல்', 'பாளையத்தம்மன்', 'மனைவி ஒரு மந்திரி', 'பொண்ணு வீட்டுக்காரன்', 'சாதி சனம்', 'இது நம்ம பூமி', 'ராஜா ராஜாதான்', 'பூ வேலி', 'குருவம்மா', 'கோவை எக்ஸ்பிரஸ்', 'கிழக்கு வீதி', 'தெனாலி', 'செவ்வந்தி', 'பரட்டை என்ற அழகுசுந்தரம்', 'தொட்டால் பூ மலரும்' 'வேல்', 'பெருமாள்', 'பசுபதி', 'பிறகு', 'மாட்டுத் தாவணி' என்று பல படங்களிலும் நடித்து விட்டார். கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்து முடித்துவிட்டார் மார்த்தாண்டன்.

தன் வாழ்க்கைக்கு உயர்வு தந்தவர்கள் என்று கே.பாலசந்தர், பி.வாசு, இராம.நாராயணன் ஆகியோரைக் குறிப்பிடும் மார்த்தாண்டன், நடிகர்கள் விவேக், வடிவேலு இருவரும் தனக்குச் செய்துவரும் உதவிகளை வாழ்க்கையில் மறக்க முடியாது என்கிறார். 'ஷாஜகான்', 'சரவணா', 'தேவன்', 'செந்தூர தேவி' படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்குக் காரணம் விவேக். அதே போல வடிவேலு செய்த சிபாரிசால் '6.2', 'கோவை பிரதர்ஸ்', 'தலைமகன்', 'தொட்டால் பூ மலரும்' ஆகிய படங்களில் மார்த்தாண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடிப்பு வாய்ப்பையும் தாண்டி மார்த்தாண்டனுக்கு வேறொரு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறார் நடிகர் விவேக். மார்த்தாண்டனின் ஓவியத் திறமையை ஆரம்ப காலத்திலிருந்தே நன்கு தெரிந்திருந்த விவேக், அவரை ஒரு ஓவியக் கண்காட்சி வைக்கும்படி கூறியிருக்கிறார். அதற்கான பொருளாதார வசதி மார்த்தாண்டனிடம் இல்லை என்பது தெரிந்ததும், அந்த கண்காட்சிக்கான முழு செலவையும் விவேக்கே ஏற்றுக் கொண்டார். சென்னை 'சோழா' ஹோட்டலில் நடைபெற்ற அந்த ஓவியக் கண்காட்சிக்கு பல நடிகர்களையும், நடிகைகளையும் வரும்படி விவேக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜோதிகா, ரம்பா, ரோஜா, பி.வாசு, பார்த்திபன், பிரபுதேவா என்று பலரும் வந்து மார்த்தாண்டன் வரைந்த ஓவியங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அதன் மூலம் மார்த்தாண்டனுக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது. விவேக் செய்த அந்த உதவியைச் சொன்னபோது மார்த்தாண்டனின் கண்கள் கலங்கி விட்டன.

மார்த்தாண்டனை நான் 'ஒரு வீடு இரு வாசல்' தயாரிப்பில் இருந்தபோது பார்த்தேன். அப்போது ஆரம்பித்த நட்பு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். திறமை படைத்த ஒருவர் வாழ்க்கையில் முத்திரை பதிக்கும் சாதனைகளைச் செய்கிறபோது சந்தோஷப்படுவது இயல்புதானே!

'வாழ்க்கையில் இதுவரை கிடைத்த வாய்ப்புகள் திருப்தி தந்திருக்கின்றனவா?' என்று நான் கேட்டதற்கு, 'நிச்சயமாக' என்றார் மார்த்தாண்டன்- சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே.


சூப்பர் ஸ்டாரின் குருநாதரான குள்ள நடிகர்!

சுரா

ந்தவாசிக்கு அருகில் உள்ள வரதராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிங்காங்கின் உண்மையான பெயர் சங்கர். விவசாயியின் மகனான கிங்காங்கிற்கு ஒரு அக்கா, மூன்று தங்கைகள். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர், ஊரில் இருக்கும்போதே அங்குள்ள ஒரு நாடகக்குழு நடத்திய பல நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு படத்துறையில் நுழைய வேண்டும் என்ற வேட்கையுடன் 1986ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து விட்டார். அப்போது கிங்காங்கின் உயரம் ஒன்றே முக்கால் அடிதான். உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி, படங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். நாளிதழ்களில் வரும் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட செய்தியைப் படித்து விட்டு, அந்தப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்கே இருக்கின்றன என்று கோடம்பாக்கம் தெருக்களில் அலைவதுதான் அவரின் அன்றாடச் செயலாக இருந்தது.

அப்படி ஒவ்வொரு படியாக ஏறி இறங்கியதற்கு பலன் கிடைக்காமல் போய்விடவில்லை. 'மீண்டும் மகான்’ படத்தில் எஸ்.வி.சேகருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தை உத்தமன் என்பவர் இயக்கினார். எனினும், கிங்காங்கை எல்லோருக்கும் தெரிய வைத்தவர் இயக்குநர் 'கலைப்புலி' ஜி.சேகரன்தான். தான் இயக்கிய 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' படத்தில் கிங்காங்கை படம் முழுக்க வரும்படி செய்தார் அவர். சங்கர் என்ற பெயரை கிங்காங் என்று மாற்றி வைத்தவரும் அவர்தான். 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' படத்தில் கிங்காங்கிற்கு நல்ல பெயர். 'யார் இந்த குள்ள நடிகர்?' என்று படம் பார்த்த ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் படத்தை அடுத்து கிங்காங்கிற்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. 'பட்டிக்காட்டுத் தம்பி', 'நெத்தியடி', 'அதிசயப் பிறவி', 'மகராசன்', 'சின்ன பசங்க நாங்க', 'சின்ன ஜமீன்', 'ஜமீன் கோட்டை', 'கிழக்கு கரை', 'தங்கக் கிளி', 'வீரப் பதக்கம்', 'பாஞ்சாலங் குறிச்சி', 'பேண்ட் மாஸ்டர்', 'சாமுண்டி', 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி', 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'போக்கிரி', 'என்னைப் பார் யோகம் வரும்' என்று கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து கிங்காங் நடிக்கிறார். இதுவரை அவர் நடித்திருக்கும் படங்கள் 150.

தமிழ் தவிர 11 தெலுங்குப் படங்களிலும், 10 கன்னடப் படங்களிலும், 2 மலையாளப் படங்களிலும், 4 இந்திப் படங்களிலும் கூட கிங்காங் நடித்திருக்கிறார். 'கூங்கட்' என்ற இந்திப் படத்தில் கிங்காங் மிகவும் சிறப்பாக நடனம் ஆடியிருப்பதைப் பார்த்து இந்தி நடிகர் கோவிந்தா ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டி இருக்கிறார்.

'வா அருகில் வா' படத்தில் எல்லோரையும் பழி வாங்கும் பொம்மையாக நடித்தவர் கிங்காங்தான். படத்தை இயக்கிய கலைவாணன் கண்ணதாசன், ஆரம்பத்திலேயே பொம்மை வேடத்தில் நடிக்க, கிங்காங் மட்டுமே பொருத்தமானவர் என்று உறுதியான குரலில் கூறிவிட்டாராம்.

'அதிசயப் பிறவி' படத்தில் குருவாக கிங்காங் நடிக்க, சிஷ்யனாக ரஜினி நடித்திருந்தார். கதைப்படி ரஜினிதான் குரு. கிங்காங்தான் சிஷ்யன். ரஜினி அதை மாற்றி விட்டிருக்கிறார். படம் முழுக்க கிங்காங்கை 'குருவே குருவே... ' என்றுதான் ரஜினி அழைப்பார். படப்பிடிப்பிற்கு வெளியே பார்க்கும்போது கூட 'என்ன குருவே?' என்றுதான் ரஜினிகாந்த் அழைப்பாராம்.

விவேக்குடன் 'பாஸ் மார்க்' படத்தில் காமெடி நடிப்பில் கலக்கிய கிங்காங், 'போக்கிரி', 'வாத்தியார்', 'கருப்பசாமி குத்தகைதாரர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வடிவேலுடன் சேர்ந்து 'பிறகு', 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி' படத்தில் கிங்காங் நடித்தும், நீளம் காரணமாக அந்த காட்சி படத்தில் இடம் பெறாமல் போய்விட்டது. அது குறித்து கிங்காங்கிற்கு அதிகமான மனவருத்தம் இருக்கிறது.

'பெஸ்ட் டான்ஸ்' என்ற பெயரில் 30 நபர்களைக் கொண்ட ஒரு நடனக்குழு வைத்திருக்கிறார் கிங்காங். அதன் மூலம் பல இடங்களுக்கும் சென்று நடன நிகழ்ச்சிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை 5000 மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கும் கிங்காங் சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, துபாய் ஆகிய நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

'சின்ன பசங்க நாங்க' படத்தின்போது நான் கிங்காங்கைச் சந்தித்தேன். உயரம் குறைவான மனிதராக இருந்தாலும், கிங்காங்கிடம் ஒரு அபார திறமை மறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு நெருப்பும், முழுமையான ஈடுபாடும் எப்போதும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மேடைகளில் எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம் கிங்காங் மிகவும் சிறப்பாக நடனம் ஆடுவதைப் பார்த்து என்னை மறந்து நான் கைகளைத் தட்டி இருக்கிறேன்.

நடிகராக ஆன பிறகு, கிங்காங் தன் பெற்றோரையும், மூன்று தங்கைகளையும் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். எம்.ஜி.ஆர். நகரில் சொந்தத்தில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் கிங்காங்கிற்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

கிங்காங்கைத் தவிர, வீட்டில் யாருமே குள்ளமானவரில்லை. அதற்கான காரணம் என்ன என்பதுதான் கிங்காங்காலேயே புரிந்து கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.

‘இந்த உயரக் குறைவையே மூலதனமாக வைத்து பிழைத்துக் கொள்ளட்டும்' என்று இயற்கை நினைத்து விட்டிருக்குமோ?' என்று நான் கேட்டதற்கு, 'இருக்கலாம்' என்றார் கிங்காங்- ஒரு அழகான சிரிப்புடன்.

மூன்றே முக்கால் அடி உயரமே உள்ள கிங்காங்கின் முயற்சியும் உழைப்பும், பலரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். நான் கூற விரும்புவதும் அதுதான்...


முழுநேரம் குடித்த கதாநாயக நடிகர் முகவரியை இழந்தார்!

சுரா

டந்த சில வருடங்களில் என்னை மிகவும் பாதித்தது- நடிகர் விஜயனின் மரணம்தான். செய்தியைப் பத்திரிகைகளில் படித்ததும் ஆழ்ந்த கவலையில் மூழ்கி விட்டேன்.

1978ஆம் ஆண்டு. பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைக்கு வந்தது. அந்தப் படத்தில் 'பட்டாளத்தான்' பாத்திரத்தில் முரட்டுத்தனமான பார்வையுடன் ஒரு புதுமுக நடிகர் அறிமுகமாகியிருந்தார். அவர்தான் விஜயன். நான் அந்தப் படத்தை மதுரை கல்பனா திரையரங்கில் பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்தபோது, படத்தைப் பார்த்தவர்கள் கதாநாயகன், கதாநாயகியைப் பற்றி பேசியதைவிட விஜயனைப் பற்றித்தான் அதிகமாக பேசினார்கள். 'பட்டாளத்தானாக நடித்திருக்கும் இந்த நடிகர் யார்? இவ்வளவு அருமையாக இந்த பாத்திரத்திற்குப் பொருந்தியிருக்கிறாரே!' என்று எல்லோரும் பேசினார்கள். படத்தில் ஐந்தே ஐந்து காட்சிகளில்தான் விஜயன் வருவார். எனினும், காதலர்களை வாழ வைப்பதற்காக தன்னையே தியாகம் செய்யும் அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் சாகா வரம் பெற்று வாழ்ந்தது. அந்த பாத்திரத்தை ஏற்று நடித்த விஜயனும்தான்.

அதைத் தொடர்ந்து விஜயனுக்கு நிறைய படங்கள் ஒப்பந்தமாயின. பாரதிராஜா இயக்கிய 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் சுதாகரும், விஜயனும் கதாநாயகர்களாக நடித்தார்கள். அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது. புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலை 'உதிரிப் பூக்கள்' என்ற பெயரில் படமாக இயக்கினார் மகேந்திரன். அதில் விஜயன்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த கதாநாயகன் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தினார் விஜயன். குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அஞ்சுவை விஜயன் பாசம் பொங்கும் சிரிப்புடன் ஒரு காட்சியில் பார்ப்பார். விஜயனின் அந்த அழகான சிரிப்பும், ஒளி வீசும் கண்களும் இப்போதுகூட என் மனதில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருக்கின்றன.

விஜயன் நடித்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் 'பசி'. துரை இயக்கிய அந்தப் படத்தில் குப்பை பொறுக்கும் ஷோபாவை ஏமாற்றிக் கெடுக்கும் லாரி டிரைவர் பாத்திரத்தில் விஜயன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு விஜயன் அவ்வளவு அருமையாக பொருந்தியிருந்தார். சப்-டைட்டில் போடப்பட்டு அந்தப் படம் ரஷ்யாவில் கூட திரையிடப்பட்டது.

எம்.ஏ. பட்டதாரியான விஜயன் நடிக்க வருவதற்கு முன்பே பல மலையாளப் படங்களுக்கு கதை எழுதியிருந்தார். அவர் கதை எழுதிய சில படங்கள் நல்ல வெற்றிகளைக் கூட பெற்றன. மலையாளப் பட இயக்குநர் பேபியின் சில படங்களுக்கு கதை எழுதியதன் மூலம் விஜயனுக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தது. 'வார்ட் நம்பர் 7' என்ற பெயரில் விஜயன் கதை எழுதிய மலையாளப் படம் கேரளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே கதையை இயக்குநர் துரை 'பாதை மாறினால்' என்ற பெயரில் தமிழில் இயக்கினார். விஜயன் அதில் கதாநாயகனாக நடித்தார். சென்னை அரசு மருத்துவமனையில் பிணங்களை ஏற்றிச் செல்லும் கார் டிரைவராக விஜயன் நடித்திருந்தார். இறந்துவிட்ட தன் தாயையே யாரென்று தெரியாமல், பிணத்தை காரில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு பேரம் பேசுவார். படம் பார்ப்போர் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த காட்சி அது.

'மலர்களே மலருங்கள்' படத்தை விஜயன் சொந்தத்தில் தயாரித்தார். இது நடந்தது 1981ஆம் ஆண்டில். சுதாகர், ராதிகாவுடன் விஜயனும் நடித்திருந்தார். வர்த்தக ரீதியாக படம் ஓடவில்லை.

எனக்கு விஜயன் 1983ஆம் ஆண்டில் அறிமுகமானார். அப்போது 'கண்ணிலே அன்பிருந்தால்' என்ற படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தை இயக்கியவர் வி.அழகப்பன். வடபழனி விஜயா கார்டனில் நடைபெற்ற படப்பிடிப்பில்தான் விஜயனை முதல் தடவையாக நான் பார்த்தேன். பார்த்த முதல் கணத்திலேயே என் மனதில் அவர் ஆழமாக பதிந்து விட்டார். கேரளத்தில் பிறந்தவன் என்பதாலும், மலையாள இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்டிருப்பவன் என்பதாலும், மலையாள இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பவன் என்பதாலும் என்னை எப்போதும் விஜயனுக்கு மிகவும் பிடிக்கும். தகழி, பஷீர், பி.கேசவதேவ், எஸ்.கெ. பொற்றெக்காட், எம்.டி.வாசுதேவன் நாயர், எம்.முகுந்தன் போன்ற பல மலையாள எழுத்தாளர்களைப் பற்றி நேரம் போவதே தெரியாமல் நாங்கள் சந்திக்கும் நிமிடங்களிலெல்லாம் பேசியிருக்கிறோம்.

ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்த விஜயன் பின்னர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தன. அதன் விளைவாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. நேரம், காலம் பார்க்காமல் மது அருந்தும் பழக்கத்திற்கு அவர் அடிமையானார். எப்போதும் மது நெடியுடனே அவர் தென்பட்டார். அதனால் அவரை படத்திற்கு ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்கினர்.

நீண்ட காலம் பட வாய்ப்பே இல்லாமலிருந்த விஜயனுக்கு 'ஒரு கைதியின் டைரி' படத்தின் மூலம் மீண்டும் திரியை ஏற்றி வைத்தார் பாரதிராஜா. அதைத் தொடர்ந்து பல படங்கள் அவருக்கு ஒப்பந்தமாயின. எனினும், மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு தொடர்ந்து தொழில் கை கொடுக்கவில்லை.

கோவையில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்த விஜயன் மது அருந்தி விட்டு, அறைக்குள்ளிருந்து வெளியே வரவே முடியாது என்று கூறிவிட்டார். கடைசியில் நான் போய் கதவைத் தட்டி, அவரை வெளியே வரும்படி செய்தேன். 'காலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு குழுவினர் என்னை வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள். ஆறரை மணிவரை நான் எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை. அதற்குப் பிறகு நான் ‘தண்ணி அடித்து’ விட்டு படுத்து விட்டேன்' என்றார். அதைக் கேட்டபோது எனக்கு விஜயனைப் பார்த்து சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என்றே தெரியவில்லை.

எப்போதும் மதுவின் போதையிலேயே இருக்கும் விஜயன் எங்கே படப்பிடிப்பிற்கு வராமல் போய்விடுவாரோ என்று அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் அஞ்சினார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் அவருக்கு திருமணம் நடந்தது. கேரளத்தின் முதலமைச்சராக இருந்த ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரப் பெண்தான் விஜயனின் மனைவி. அந்தத் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. விஜயனின் அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தைச் சகிக்க முடியாமல், அவருடைய மனைவி சொந்த ஊருக்கே போய்விட்டார்.

அதற்குப் பின்னர் விஜயன் தனியாகவே சென்னையில் வாழ்ந்தார். நினைத்த இடங்களில் எல்லாம் தங்குவார். எந்த நண்பரின் அறையிலும் போய் படுத்துக் கொள்வார். பட வாய்ப்பு இல்லாமலிருந்த ஒரு நாளில் என்னைத் தேடி வந்து 25 ரூபாய் கடன் கேட்டார். நான் 50 ரூபாயை எடுத்து அவர் கையில் தந்தேன். மிகவும் பிஸியான நடிகராக நான் பார்த்த விஜயனையும், மதுவின் வாசனையுடன் எனக்கு முன்னால் நின்றிருந்த விஜயனையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். எனக்கு கண்ணீர் வந்தது.

பட வாய்ப்பு இல்லாமல் வெறுமனே இருந்த ஒரு நாளில் என் அலுவலகத்திற்கு என்னைத் தேடி அவர் வந்தார். “அருமையான ஒரு கதை என்னிடம் இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். ரஜினி என் நெருங்கிய நண்பர். கட்டாயம் சம்மதிப்பார்'' என்றார். 'முத்து' படம் திரைக்கு வந்து புகழின் உச்சியில் ரஜினி இருந்த நேரம் அது. விஜயனின் அப்போதைய நம்பிக்கையை நினைத்து, எனக்கு அவர் மீது பரிதாபம்தான் உண்டானது.

பல வருடங்களுக்குப் பிறகு 'ரமணா' படம் விஜயனுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பிறகு அவருடைய கேரள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஆட்டோவில் வந்திருந்தார் விஜயன். அப்போது நான் அங்கு இருந்தேன். 'இப்போது உங்களுக்கு நல்ல ஒரு திருப்பம் உண்டாகியிருக்கிறது. நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் மது அருந்துவதை விட்டு விடுங்கள்' என்று நான் அவரிடம் கூறினேன். 'நான் மது அருந்துவதை விட்டு விட்டேன். இப்போது குடிப்பதே இல்லை' என்றார் விஜயன் என்னைப் பார்த்து. அப்போது 'குப்'பென்று அவரது வாயிலிருந்து மதுவின் வாசனை வந்தது. அது ஒரு பகல் நேரம். அதுதான் விஜயன்!

விஜயன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு படத்திற்காக விஜயனைத் தேடினேன். அவர் இங்கு இல்லை- கேரளத்திற்குப் போய் விட்டார் என்றார்கள். அவரது முகவரியோ, தொலைபேசி எண்ணோ எங்கெங்கோ முயன்றும் கிடைக்கவில்லை.

இறுதியில் கிடைத்தது அவரைப் பற்றிய மரணச் செய்திதான்.

ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படி வாழ்ந்திருக்கிறார் விஜயன். கட்டுப்பாடு இல்லாத குடிப்பழக்கம் ஒரு கலைஞனின் வாழ்க்கையை எந்த அளவிற்கு அழித்துவிடும் என்பதை நாம் விஜயனின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

விஜயனின் மரணத்தால் கலையுலகம் ஒரு திறமை வாய்ந்த நடிகரை இழந்துவிட்டது. நான் ஒரு அருமையான நண்பரை இழந்துவிட்டேன்.


வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரை மறந்துவிட்ட விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும்!

சுரா

டலூர் சேஷசாயி தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராக ஆனவர் சிதம்பரம். மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் மனிதர். சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. எனினும், 1980ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த அவரின் கண்களில் கடலூர் புருஷோத்தமன் எழுதி, இயக்கிய 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் விளம்பர பேனர் பட்டது. கடலூர் புருஷோத்தமன் என்ற இடத்தில் வடலூர் சிதம்பரம் என்ற பெயர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் கற்பனை பண்ணிப் பார்த்தார்.

அடுத்த நாளே அதற்கான வேலையில் இறங்கிவிட்டார். தன்னுடைய சொந்தப் பணத்துடன், தொழிலாளர்களிடமும் பணத்தைத் திரட்டினார். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தது. அதை வைத்து 'வடலூரான் கம்பைன்ஸ்' என்ற பெயரில் பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது விஜயகாந்த் பல தோல்விப் படங்களில் நடித்து முடித்திருந்தார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அப்படித்தான். 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்றொரு தோல்விப் படத்தைக் கொடுத்துவிட்டு, படமெதுவும் இல்லாமல் தன்னுடைய மாமனார் வீட்டில் அவர் தங்கி இருந்தார். வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் என்பவர் வடலூர் சிதம்பரத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகரை அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரசேகர் ஒரு கதையைக் கூறினார். சிதம்பரத்திற்கு அந்தக் கதை பிடித்து விட்டது. சட்டத்திலிருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி ஒருவன் தப்பிக்கிறான் என்பதுதான் கதை. அந்தக் கதையின் நாயகனாக விஜயகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை'. அந்தப் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியது. விஜயகாந்த், எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருக்கும் படவுலகில் கிடைத்த முதல் வெற்றி அதுதான். எங்கோ இருந்து சிறிதும் எதிர்பாராமல் வந்த வடலூர் சிதம்பரத்தால் அந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்தது.

தமிழில் வெற்றி பெற்ற 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை பல மொழிகளிலும் ரீ-மேக் பண்ணுவதற்காக போட்டி போட்டார்கள். இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. எல்லா மொழிகளிலும் அந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. எனினும், அந்தப் படம் வேறு மொழிகளுக்குச் சென்ற வகையில், அதன் தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்திற்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாமலிருந்த வடலூர் சிதம்பரத்தைக் கையெழுத்துப் போட வைத்து, அதன் முழு பயனையும் எஸ்.ஏ.சந்திரசேகரே அனுபவித்துக் கொண்டார். எத்தனையோ கோடிகள் சம்பாதித்திருக்க வேண்டிய வடலூர் சிதம்பரம், தான் ஏமாற்றப்பட்டு விட்டதை பல நேரங்களில் என்னிடம் கூறி வேதனைப் பட்டிருக்கிறார்.

'சட்டம் ஒரு இருட்டறை' படத்தைத் தொடர்ந்து சிதம்பரம் தயாரித்த படம் 'சாதிக்கொரு நீதி'. கோமல் சுவாமிநாதன் 'செக்கு மாடுகள்' என்ற பெயரில் எழுதிய நாடகம் அது. விவசாயத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடும் கதை. விவசாயிகளுக்காக போராடுபவராக விஜயகாந்த் நடித்தார். அப்படத்தை 'மல்லிகை பதிப்பகம்' சங்கரன் இயக்கினார். விஜயகாந்த்துக்கு அந்தப் படத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. எனினும் அட்வான்ஸ் தொகையாக கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய்க்குப் பிறகு அவர் எந்தப் பணத்தையும் வாங்கவில்லை. மிகவும் குறுகிய காலத்தில் அப்படம் எடுக்கப்பட்டது. முற்போக்கான கதை. நல்ல படம் என்ற பெயர் கிடைத்தது. எனினும், படத்தின் இறுதியில் விஜயகாந்த் இறந்து விடுவதைப் போல காட்சி இருந்ததால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் படம் படுதோல்வி அடைந்துவிட்டது. சிதம்பரத்திற்கு மிகப் பெரிய பண இழப்பு உண்டானது.

அடுத்து கே.விஜயனை இயக்குநராகப் போட்டு 'நீறு பூத்த நெருப்பு' என்ற படத்தை சிதம்பரம் ஆரம்பித்தார். அதில் விஜயசாந்தி கதாநாயகியாக நடித்தார். விஜயகாந்த்தான் அதில் கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும். ஆனால், நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அவரால் அந்தப் படத்திற்கு கால்ஷீட் தர முடியவில்லை. கோபமடைந்த சிதம்பரம், கராத்தே போட்டியில் உலக அளவில் தங்க மெடல் வாங்கிய ரமேஷ் என்ற இளைஞரை கதாநாயகனாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஏ.எம்.ரத்னம் அப்படத்தில் விஜயசாந்தியின் ஒப்பனையாளராக பணியாற்றினார். இப்போது பல வெற்றி பெற்ற டி.வி. தொடர்களை இயக்கிக் கொண்டிருக்கும் சுந்தர் கே.விஜயன் அதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

'நீறு பூத்த நெருப்பு' திரைக்கு வந்து ஒரே வாரம்தான் ஓடியது. சிதம்பரத்திற்கு அதில் பெரிய அளவில் நஷ்டம் உண்டானது.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கடந்தோடின. சிதம்பரம் படம் எதுவும் தயாரிக்காமல் வெறுமனே இருந்தார். திடீரென்று விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து அவருக்கு ஒரு படம் பண்ணித் தர தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் வந்தது. உடனே அவர்களைப் போய் பார்த்தார் சிதம்பரம். அவர்களைப் பார்க்கப் போகும் போதெல்லாம் நானும் அவருடன் செல்வேன். இரண்டு பேரும் சிதம்பரத்தைப் பந்தாடினார்கள். அமைதியாக வீட்டில் உட்கார்ந்திருந்த சிதம்பரத்தை அவர்கள் அலைக் கழித்தார்கள் என்பதுதான் உண்மை. சிதம்பரம் தன் நிலையை எண்ணி வேதனைப்பட்டார். விஜய்காந்திற்கு தன் மன வேதனையை வெளிப்படுத்தி காட்டமாக ஒரு கடிதம் எழுதி, பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தார். சிதம்பரத்திடம் படத்தை இயக்குவதற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வாசலிலேயே அவரை நிற்க வைத்து கொடுத்து, கதவை மூடினார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தச் சம்பவம் நடந்த அன்று இரவில் என்னிடம் கண்ணீர் விட்டு அழுதார் சிதம்பரம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிதம்பரம் மன்சூர் அலிகானைக் கதாநாயகனாகப் போட்டு 'ஜனா' என்ற படத்தை ஆரம்பித்தார். அஸ்வினி குமார் அப்படத்தை இயக்கினார். முக்கால் பகுதி வளர்ந்த படம், பணம் இல்லாததால் அப்படியே நின்று விட்டது.

அதற்குப் பிறகு சிதம்பரம் படமெதுவும் தயாரிக்கவில்லை. படம் தயாரிக்க பணம் இருந்தால்தானே! இதற்கிடையில் அவருடைய மகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத மரணத்தைத் தழுவினார். சிதம்பரம் தொழிற்சங்கத் தலைவராக இருந்த சேஷசாயி தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வறுமையில் வாடினார்கள். பலர் நடுத்தெருவிற்கு வந்தார்கள். பலர் மரணத்தைத் தழுவினார்கள். சில வருடங்களுக்கு முன்னால் பழைய விஷயங்களையெல்லாம் மறந்து விட்டு சிதம்பரம் விஜயகாந்தையும், எஸ்.ஏ.சந்திரசேகரையும் சந்தித்து தொழிலாளர்களின் நலனுக்காக படம் பண்ணித் தரும்படி கேட்டார். ஆனால், சிதம்பரம் நினைத்தது நடக்கவில்லை. இதை சிதம்பரமே ஒரு நாள் என்னிடம் கூறினார்.

வளசரவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் குடியிருந்த சிதம்பரத்தைக் காப்பாற்றியது அவருடைய மகன் செல்வம்தான்.

சில வருடங்களுக்கு முன்னால் வடலூர் சிதம்பரம் மாரடைப்பில் மரணத்தைத் தழுவி விட்டார். விஜயகாந்தும் எஸ்.ஏ.சந்திரசேகரும் நினைத்திருந்தால், ரஜினிகாந்த் 'அருணாச்சலம்' படத்தின் போது தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமான பலரையும் தயாரிப்பாளர்கள் என்று போட்டு பல லட்சங்கள் கொடுத்து உதவியதைப் போல வடலூர் சிதம்பரத்திற்கு உதவியிருக்கலாம். அவர்கள் இருவரையும் வளர்த்துவிட்ட வடலூர் சிதம்பரம், பி.எஸ்.வீரப்பா போன்றோர் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு இறந்திருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது.

விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நடந்துக் கொண்டதைப் போல படவுலகில் உள்ள மற்ற நடிகர்களும் இயக்குநர்களும் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். முன்னணி நிலையை அடைந்திருக்கும் கதாநாயகர்களும் இயக்குனர்களும் தங்களை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பட்சம், அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அவர்கள் படங்களைத் தயாரிக்கும் வகையில் உதவி வாழ்க்கையில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டியது தங்களுடைய தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.


தயாரிப்பாளருக்கே தெரியாமல், படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா!

சுரா

1980ஆம் ஆண்டில் பாலுமகேந்திரா இயக்கிய 'அழியாத கோலங்கள்' பார்த்து பல வருடங்களுக்குப் பிறகு ஷ்யாம்சுந்தர் எனக்கு நெருக்கமாக அறிமுகமானார். அந்தப் படத்தில் பார்த்த அதே புன்னகையுடன் தன் அலுவலகத்தில் என்னை அவர் வரவேற்றார். திரைப்படத்தில் சிறுவனாக அவரைப் பார்த்த எனக்கு முன்னால் ஒரு திருமணமான இளைஞராக உட்கார்ந்திருந்தார் ஷ்யாம்சுந்தர். நான் சந்தித்தபோது அவர் 'விநாயகர் விஜயம்' என்ற புராண தொடரை தொலைக்காட்சிக்காக இயக்கி, தயாரித்துக் கொண்டிருந்தார் 'யந்த்ரா மீடியா' என்ற பெயரில் அவரே சொந்தத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனத்தை  நடத்திக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்திருக்கும் நடிகை மைனாவதியின் மகன்தான் ஷ்யாம்சுந்தர். பண்டரிபாய் அவருடைய பெரியம்மா.

'யார்' படத்தில் பேயாக நடித்தவர் ஷ்யாம் சுந்தர்தான். கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து கர்நாடக அரசாங்கத்தின் சிறந்த நடிகருக்கான பரிசைக்கூட பெற்றிருக்கிறார். பல படங்களில் நடித்த ஷ்யாமிற்கு, பின்னர் நடிக்கும் ஆசை இல்லாமற் போய்விட்டது. அதற்குப் பதிலாக தயாரிப்பாளராக மாறிவிட்டார். அவர் டி.வி. தொடர் தயாரித்தபோது, வாரம் ஒரு முறையாவது அவரை நான் சந்திப்பேன். மிகப் பெரிய திட்டங்கள் பலவற்றையும் மனதிற்குள் அவர் வைத்துக் கொண்டிருப்பதை என்னால் அப்போதே உணர முடிந்தது.

அந்தத் தொடருக்குப் பிறகு சில வருடங்கள் நான் ஷ்யாமைச் சந்திக்கவில்லை. திடீரென்று ஒருநாள் மலையாள நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கேரளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ஸ்தீரீ' மெகா டி.வி. தொடரைப் பற்றி அவர்கள் 'ஆஹா ஓஹோ' என்ற புகழ்ந்தார்கள். ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தத் தொடர் கேரளப் பெண்களை வீட்டிற்குள் கட்டிப் போட்டு விட்டது என்றார்கள். அந்தத் தொடரில் கையாளப்பட்டிருந்த கதையைப் பார்த்து, பெண்கள் அந்தத் தொடரை விட்டு விலகாமல் இருக்கிறார்கள் என்றார்கள். 'அந்தத் தொடரைத் தயாரிப்பவர் யார்?' என்று கேட்டதற்கு ஷ்யாம்சுந்தரின் பெயரைச் சொன்னார்கள்.

எனக்கு அது ஆச்சரியத்தைத் தந்தது. கேரளத்தில் பொதுவாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவ்வளவு சாதாரணமாக ஏற்றுக் கொண்டு விட மாட்டார்கள். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஷ்யாம் சுந்தருக்கு ஏசியாநெட் எப்படி வாய்ப்பைத் தந்தது... அவரால் கேரளத்தில் எப்படி கொடி நாட்ட முடிந்தது என்று உண்மையிலேயே நான் வியப்படைந்தேன். 'ஸ்த்ரீ' தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பாகி சாதனை புரிந்தது. அந்தத் தொடரைத் தொடர்ந்து, பல மெகா தொடர்களையும், வாரத் தொடர்களையும் மலையாளத்தில் தயாரித்தார் ஷ்யாம். எல்லா தொடர்களும் ஏசியாநெட் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பாயின. மலையாள தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களில் முடிசூடா மன்னராக விளங்கினார் ஷ்யாம்சுந்தர் என்பதுதான் உண்மை. அவருடைய 'யந்த்ரா மீடியா' நிறுவனம்தான் மலையாள டி.வி. தொடர்கள் தயாரிப்பதில் முதலிடம் வகித்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் கேரளத்தில் நல்ல நிலைமையில் இருப்பதை தெரிந்து, நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷ்யாம்சுந்தர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூடினார். சந்தித்தோம். அப்போது கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் அவருடைய அலுவலகம் இருந்தது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நிறைய டி.வி. தொடர்களைத் தயாரித்துக் கொண்டிருந்த அவர் தமிழில் 'பயணம்' என்ற மெகா தொடரைத் தயாரிக்க இருப்பதாகச் சொன்னார். பார்த்த கணத்திலேயே ஷ்யாம் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

'பயணம்' ஒளிபரப்பான சமயத்தில் நானும் ஷ்யாமும் அடிக்கடி சந்திப்போம். அதைத் தொடர்ந்து 'ஸ்ரீராமன் ஸ்ரீதேவி' என்ற மெகா தொடரை விஜய் டி.வி.க்காக ஷ்யாம் தயாரித்தார். 'பாரதி' என்ற புதிய சேனல் இங்கு வந்தபோது, அதில் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஸ்த்ரீ' தொடரை தமிழில் தயாரித்து 'அவள்' என்ற பெயரில் ஷ்யாம் வழங்கினார்.

சன் டி.வி.யில் புலனாய்வு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து 'நிஜம்' என்ற வாரத் தொடரை ஷ்யாம் தயாரித்தார். மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே மாதிரியான ஒரு தொடரை சூர்யா டி.வி.யில் 'க்ரைம்' என்ற பெயரில் மலையாளத்திலும் ஷ்யாம் தயாரித்தார். ஜெமினி டி.வி.யிலும் சில தொடர்களை ஷ்யாம் அப்போது தயாரித்தார்.

இடையில் ஜி.வி.அய்யரை இயக்குநராகப் போட்டு ஒரு கன்னட திரைப்படத்தை தயாரித்தார். தமிழில் பாலுமகேந்திராவை வைத்து 'ஜூலி கணபதி' படத்தை அவர் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக நிறைய பணத்தையும் அவர் செலவு செய்தார். பல ஹோட்டல்களிலும் கதை விவாதத்தை நடத்தினார் பாலுமகேந்திரா. இறுதியில், ஷ்யாமிற்கே தெரியாமல் அந்தக் கதையை 'ஜி.ஜே. சினிமா' நிறுவனத்திற்குக் கொடுத்து விட்டார் பாலுமகேந்திரா. அந்தப் பட முயற்சியில் சில லட்சங்களை தான் இழந்துவிட்டதாக என்னிடம் கூறினார் ஷ்யாம்சுந்தர்.

அதற்குப் பிறகு ராஜ் டி.வி.யில் ஷ்யாம்சுந்தர் தயாரித்த 'மீனாட்சி' என்ற மெகா தொடர் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏசியா நெட் கன்னடத்தில் ஆரம்பித்த 'ஸ்வர்ணா' என்ற புதிய சேனலுக்கு ஷ்யாம் தலைவராக ஆனார். தொடர்ந்து ஷ்யாமின் தலைமையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏசியா நெட் சேனல்களை ஆரம்பிப்பதாக இருந்தது. அதற்கான ஆரம்ப வேலைகள் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

அனைத்தும் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தபோது, விதி அதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்குமா? ஷ்யாம்சுந்தரை அது நம்மிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டது. தன்னுடைய 44வது வயதில், மாரடைப்பு வந்து ஷ்யாம் மரணத்தைத் தழுவிவிட்டார். சிறிதும் எதிர்பாராமல் ஷ்யாமின் மரணச் செய்தியைக் கேட்டபோது, அதிர்ச்சியில் நான் உறைந்து போய்விட்டேன்.

மிகப் பெரிய சாதனைகள் பலவற்றையும் செய்ய இருந்த ஒரு திறமையான இளைஞர் நம்மை விட்டுப் போய் விட்டார் என்பதுதான் உண்மை. ஷ்யாம் மறைந்திருக்கலாம். ஆனால், 'அழியாத கோலங்கள்' படத்தில் நடித்த ஷ்யாமின் அந்த அழகான புன்னகையை நம்முடைய இதயங்களிலிருந்து யாரால் அழிக்க முடியும்?


இவரை நடுவில் நிற்க வைத்து, எம்.ஜி.ஆர். ஓரத்தில் நின்றார்!

சுரா

'ஹெர்குலிஸ்' தங்கவேல்- எனக்கு இவர் 1982ஆம் ஆண்டில் அறிமுகமானார். தமிழக அளவில் 'ஆணழகன்' பட்டத்தை வென்றிருந்த அவர் அப்போதுதான் படங்களில் நடிப்பதற்காக, சென்னை மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

நல்ல உடலமைப்பைக் கொண்டிருந்த தங்கவேலுக்கு ஆரம்பத்திலேயே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் இயக்குனர் கே.பாக்யராஜைப் போய் பார்க்க, அவர் தான் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அருமையான ஒரு கதாபாத்திரத்தைத் தந்தார். சண்டை கற்றுத் தரும் பயில்வானாக நம்பியார் நடிக்க, அவருடைய சீடனாக தங்கவேல் நடித்தார். ஒரு சண்டைக் காட்சியில் நம்பியாருக்கு அவர் 'டூப்' போட்டிருக்கிறார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'ஆட்டோ ராஜா' படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை தங்கவேலுக்கு இயக்குநர் கே.விஜயன் கொடுத்தார். அதில் மிகச் சிறப்பாக தங்கவேல் நடிக்க, அதைத் தொடர்ந்து விஜயசாந்தி கதாநாயகியாக நடித்து, தான் இயக்கிய 'நீறு பூத்த நெருப்பு' படத்திலும் நல்ல ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு கே.விஜயன் அளித்தார்.

ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் தங்கவேல் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்கவே மாட்டார்கள். அதில் ஒரு நாடகக் காட்சி வரும். அந்தக் காட்சியில் கிருஷ்ண தேவராயராக ரஜினிகாந்த் நடிக்க, தெனாலி ராமனாக பாக்யராஜ் நடிப்பார். மங்கோலிய நாட்டு மன்னராக 'ஹெர்குலிஸ்' தங்கவேல் வருவார். ரஜினிக்கும், தங்க வேலுக்குமிடையே, யார் பலசாலி என்ற போட்டி நடக்கும். இருவரும் தங்கள் கைகளை பயன்படுத்தி பலத்தை நிரூபிப்பார்கள். இறுதியில் ரஜினி போட்டியில் வெற்றி பெறுவார். ரஜினி நடித்த படம் என்பதால் அந்தப் படத்தை எல்லோரும் பார்த்தார்கள். டி.வி.யில் அந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் இப்போது கூட சாலையில் தங்கவேலுவைப் பார்த்தால், ஓடி வந்து கை குலுக்குகிறார்கள் என்றால், சில நிமிடங்களே வரும் அந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு படம் பார்ப்போரின் மனங்களில் பதிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாக்யராஜ் தான் இயக்கிய 'தாவணிக் கனவுகள்' படத்தில் ராதிகாவைக் கெடுக்க முயலும் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தை தங்கவேலுக்குத் தந்தார். அதில் அவருடைய தோற்றமே மனதில் பயத்தை உண்டாக்கும் அளவிற்கு இருக்கும். அந்தப் படத்தைப் பார்த்த நடிகர் சிரஞ்சீவி தங்கவேலுவை அழைத்து தான் நடிக்கும் பல தெலுங்குப் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சிரஞ்சீவி நடித்த பல படங்களில் நடித்த தங்கவேல், பின்னர் நாகார்ஜுனா, கிருஷ்ணம் ராஜு, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என்று எல்லா முன்னணி தெலுங்கு கதாநாயகர்கள் நடித்த படங்களிலும் நடித்திருக்கிறார். சண்டை போட்டிருக்கிறார். தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்த பல மலையாளப் படங்களிலும் கூட தங்கவேல் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். சில இந்திப் பட வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. மிதுன் சக்ரவர்த்திக்கு தங்கவேல் மீது மிகுந்த பாசம் உண்டு. ஒரு ஆங்கிலப் படத்திலும் தங்கவேல் பல வகைப்பட்ட சண்டைபோடும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். கலைக்கு மொழி ஏது?

பாக்யராஜ், ராதா இணைந்து நடித்த, 'எங்க சின்ன ராசா' படத்தில் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் தங்கவேல் நடித்திருந்தார். அந்தப் படம் முடிவடைந்த பிறகு, படத்தைப் பார்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். குட்லக் ப்ரிவியூ தியேட்டருக்கு வந்திருக்கிறார். படம் முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். தங்கவேலுவின் கையை இறுகப் பற்றி மகிழ்ச்சியுடன் குலுக்கியிருக்கிறார். அவர் இறுகப் பிடிக்கும்போது, அவருடைய கையிலிருக்கும் பலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்று விட்டாராம் தங்கவேல். அப்போது,  தங்கவேலுவை நடுவில் நிற்க வைத்து, தானும் பாக்யராஜும் இரு பக்கங்களிலும் நிற்க, ஒரு புகைப்படத்தையும் எம்.ஜி.ஆர். எடுக்கச் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு அருகில் ஒரு புகைப் படத்திலாவது நிற்க மாட்டோமா என்று லட்சக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க, தன்னை நடுவில் நிற்க வைத்து தனக்கு அருகில் எம்.ஜி.ஆர். நின்று எடுத்த அந்தப் புகைப் படத்தை ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார் தங்கவேல்.

விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், அர்ஜுன் என்று எல்லா கதாநாயகர்களுடனும் நடித்திருக்கும், சண்டை போட்டிருக்கும் 'ஹெர்குலிஸ்' தங்கவேல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் 'முதல் குரல்'. வி.சி.குகநாதன் இயக்கிய அந்தப் படத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் செய்தியாளராக சிவாஜி வருவார். அதில் வில்லனாக நடித்தவர் ஜெய்கணேஷ். ஜெய்கணேஷின் உதவியாளராக அதில் தங்கவேல் வருவார். நடிகர் திலகத்தைப் பார்த்து 'அரசாங்கத்தை எதிர்த்து மனம் போனபடி எழுதும் உன் கையை ஒடிப்பதற்குத்தான் நான் வந்திருக்கிறேன்' என்று தங்கவேல் வசனம் பேசி நடிக்க வேண்டும். அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்னால் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவாஜியைப் பார்த்து, மரியாதை நிமித்தமாக பணிவுடன் 'வணக்கம்' கூறியிருக்கிறார் தங்கவேல். ஆனால் சிவாஜியோ 'நீ எனக்கு வணக்கம் சொல்லாதே' என்று கூறியிருக்கிறார். தங்கவேலுக்கு ஒரே அதிர்ச்சி! நாம் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து குழம்பியிருக்கிறார். அப்போது சிவாஜி 'கதைப்படி நீ என்னை அடிக்க வந்திருக்கும் ஆள். நீ என்னைப் பார்த்து வணக்கம் சொன்னால் எப்படி?' என்றிருக்கிறார்- சிரித்துக் கொண்டே. அப்போதுதான் தங்கவேலுக்கு நிம்மதியே உண்டானதாம். நடிகர் திலகத்தின் நகைச்சுவை உணர்வைப் பார்த்து, அங்கு இருந்த எல்லோரும் தங்களை மறந்து சிரித்திருக்கிறார்கள். அஜீத், சூர்யா போன்ற இளம் தலைமுறை கதாநாயகர்கள் நடித்த படங்களிலும் தங்கவேல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது நடிப்பு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் யோகா வகுப்புகளையும் தங்கவேல் நடத்திக் கொண்டிருக்கிறார். முறைப்படி யோகா கற்றிருக்கும் அவருடைய யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு பலரும் பயன்பெற்று வருகிறார்கள். ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், வலிப்பு போன்ற எல்லா வகையான நோய்களையும் தன்னுடைய யோகா பயிற்சிகளின் மூலம் குணப்படுத்தி வரும் தங்கவேல் தன்னுடைய யோகா கலை மூலம் எய்ட்ஸ் நோயை இல்லாமற் செய்ய முடியும் என்று சவால் விட்டுக் கூறுகிறார்.

படவுலகில் அவர் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில் நான் சந்தித்த தங்கவேல், இப்போதும் என்னை எங்கு பார்த்தாலும் நட்புடன் மனம் விட்டுப் பேசுவார். முரட்டுத்தனமான உடலமைப்பைக் கொண்டிருக்கும் அவருடைய எளிய குணமும், குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தன்னுடைய நான்கு தங்கைகளுக்கும் தான் சம்பாதித்த பணத்தில் திருமணம் செய்து வைத்து, ஒரு நிறைவான மனிதராக தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 'ஹெர்குலிஸ்' தங்கவேல், நான் மிகவும் விரும்பி பழகும் நண்பர்களில் ஒருவர் என்பதை பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.


சிறையில் 50 நாட்கள் களி சாப்பிட்ட சினிமா கதாநாயகன்!

சுரா

திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். எனினும், சிலருக்கு எப்படியோ அந்த வாய்ப்பு கிடைத்து விடும். அப்படி கிடைத்து விட்டது என்பதற்காக வானத்தையே தொட்டு விட்டதைப் போல சந்தோஷப்பட்டு விடக் கூடாது. அதற்குப் பிறகு அந்தக் கதாநாயகன் நடிக்கும் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே அந்தக் கதாநாயகனின் கலையுலகப் பாதை மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாக இருக்கும். இல்லாவிட்டால் பயணம் முழுவதுமே சோதனைகள்தான்.

படவுலகில் நுழைந்திருக்கும் பலரின் வாழ்க்கையில் நடப்பதென்னவோ இதுதான். ஆனால், இந்த உண்மையை படவுலகில் இருப்பவர்களும், படவுலகிற்கு வெளியே இருப்பவர்களும் தெரிந்திருக்கிறார்களா என்ன? தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என் கலையுலகப் பயணத்தில் நான் பார்த்த ஒரு இளம் கதாநாயகனைப் பற்றி இங்கு எழுதுகிறேன்.

நான் எழுதும் கதாநாயகனின் பெயர் விஷ்ணு. சொந்தப் பெயர் அஜய் என்றாலும், சினிமாவிற்காக அவரின் பெயர் விஷ்ணு என்றாகி விட்டது. அவரின் பெயரை மாற்றி வைத்தவர் பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. 1991ஆம் ஆண்டில் நெடுமுடி வேணு 'பூரம்' என்ற பெயரில் ஒரு மலையாளப் படத்தை இயக்கினார். பூரம் என்பது கேரளத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அது. அப்படத்தைத் தயாரித்தவர் 'குட்நைட்' மோகன்.

பூரம் திருவிழாவின்போது ஒரு ஊரில் நாடகம் நடத்துவதற்காக, ஒரு நாடகக் குழு நகரத்திலிருந்து போய் முகாம் இடுகிறது. அந்த நாடகத்தை நடத்துபவர் திலகன். அதில் கதாநாயகனாக ஒரு இளைஞன் நடிக்கிறான். அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்குமிடையே காதல் அரும்புகிறது. சில நாட்கள் கழித்து நாடகக் குழு அந்த ஊரை விட்டுக் கிளம்புகிறது. இளைஞனின் காதலைத் தெரிந்திருக்கும் திலகன் 'நாடகமா, காதலியா?- இந்த இரண்டில் எது வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்' என்கிறார்.

நாடக கதாநாயகன் அந்த இளம் பெண்ணின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்துவிட்டு, 'என்றாவதொரு நாள் நான் மீண்டும் திரும்பி வருவேன். அதுவரை எனக்காகக் காத்திரு' என்று கூறிவிட்டு,  நாடகக் குழுவுடன் கிளம்பி விடுகிறான். அவன் போவதையே பார்த்தவாறு மோதிரத்தை அணிந்திருக்கும் அந்த கிராமத்துப் பெண் சிலையென நின்றிருக்கிறாள்.

இதுதான் 'பூரம்' படத்தின் கதை. அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர்தான் அஜய் என்ற விஷ்ணு. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'கர்ணன்' படத்தின் வீடியோ கேசட்டை ஓட விட்டு, 'ஒரு நடிகனின் நடை, பாவனை, வசனம் பேசும் முறை, முக வெளிப்பாடு, மிடுக்கு, கம்பீரம்- அனைத்தும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடிகர் திலகத்திடமிருந்து மட்டுமே ஒரு நடிகன் கற்றுக் கொள்ள முடியும்' என்று கூறி, அதை மிகவும் நுணுக்கமாக கவனித்து பின்பற்றும்படி விஷ்ணுவிடம் கூறியிருக்கிறார் நெடுமுடி வேணு.

மிகச் சிறந்த நடிகரான நெடுமுடி வேணு நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு உயரத்தில் வைத்து மதித்திருக்கிறார் என்பதை நினைத்து தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.

இந்த விஷயத்தை என்னிடம் கூறியதே விஷ்ணுதான். நான் அவரைச் சந்தித்தது 1994ஆம் ஆண்டில். அப்போது அவர் 'வா வா வசந்தமே' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அரசியல்வாதியாக இருக்கும் பழ.கருப்பையாதான் அப்படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தை இயக்கியதும் அவர்தான். விஷ்ணுவிற்கு அதில் ஜோடியாக நடித்தவர் மாது என்ற நடிகை.

அந்தப் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடித்ததே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். பழ.கருப்பையா யாரோ ஒரு நடிகையைத் தேடி தி.நகருக்கு வந்திருக்கிறார். முகவரி தெரியாமல் ஒரு தெருவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்திருக்கிறார் விஷ்ணு. அவரிடம் தான் தேடி வந்த முகவரியைப் பற்றி விசாரித்திருக்கிறார் பழ.கருப்பையா. அப்போது அழகான தோற்றத்துடன் நின்றிருந்த விஷ்ணுவைப் பார்த்து 'தம்பி நீ என் படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தயாரா?' என்றிருக்கிறார் அவர். அதற்கு விஷ்ணு 'நான் ஏற்கனவே நடிகன்தான். நெடுமுடி வேணுவின் 'பூரம்' மலையாளப் படத்தில் நான்தான் கதாநாயகன்' என்றிருக்கிறார்.

அடுத்த நிமிடமே 'வா வா வசந்தமே' படத்தின் கதாநாயகனாக ஆகிவிட்டார் விஷ்ணு. படம் திரைக்கு வந்தபோது, விஷ்ணு எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து கட்டாயம் படத்தைப் பார்க்க வேண்டும் என்று என்னை வற்புறுத்த, நான் தேவி பேரடைஸ் திரை அரங்கில் போய் உட்கார்ந்தேன். ஆயிரம் பேர் உட்காரும் அரங்கில் 20 பேர் இருந்தார்கள். படத்தை உட்கார்ந்து பார்க்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு 'படு போராக' இருந்தது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால், கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அப்படி நடிக்கக் கூடிய படம் நல்ல ஒரு இயக்குநரால் இயக்கப்பட வேண்டும், மிகச் சிறந்த ஒரு கதையை அப்படம் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், விஷ்ணு மாதிரி வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.

'வா வா வசந்தமே' வந்த சுவடே தெரியாமல் திரை அரங்கை விட்டு வெளியே பதறி ஓடியதால்- விஷ்ணுவின் கலைப்பயணமே இருண்டு போய்விட்டது. அதன் விளைவு- வெறுமனே எதற்கு வீட்டில் இருக்க வேண்டும் என்று தொலைக்காட்சித் தொடர்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ஊர்வசி தயாரித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான 'பஞ்சமி' தொடரில் விஷ்ணு நடித்தார். தமிழ், மலையாளம் என்று சுமார் 30 டி.வி. தொடர்களில் அவர் நடித்தார்.

இதற்கிடையில் விஷ்ணுவிற்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தைகூட பிறந்தது. விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும். விஷ்ணுவிற்கும் அவர் திருமணம் செய்த பெண்ணுக்குமிடையே கருத்து வேற்றுமை. அதன் தொடர்ச்சியாக விஷ்ணு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை.

விஷ்ணுவிற்கு சிறைத் தண்டனை கிடைத்ததைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவிவிட்டார்.

மத்திய சிறைச்சாலையில் 50 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வந்த விஷ்ணுவை நான் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்னால் முதல் தடவையாக நான் பார்த்த அந்த இளைஞனையும், இப்போது பல கசப்பான அனுபவங்களைத் தாண்டி வந்திருக்கும் விஷ்ணுவையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்தபோது, என் மனம் என்ன காரணத்தாலோ கனத்தது.

கசப்பான விஷயங்கள் நடந்துவிட்டன என்பதற்காக விஷ்ணு வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கவில்லை. அவர் கதாநாயகனாக நடித்த 'ரெயின்' என்ற மலையாளப் படம் திரைக்கு வந்தது.  அதைத் தொடர்ந்து அவர் படத் தயாரிப்பிலும், விநியோகத்திலும் இறங்கினார். ஹிந்தியிலிருந்து சில படங்களை வாங்கி ‘டப்’ செய்து தமிழில் வெளியிட்டார். படவுலகில் இன்னும் பல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வேட்கையுடனும், இலட்சியத்துடனும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பமே ஒருவருக்கு நன்கு அமைந்துவிட்டால், சந்தோஷமே. அப்படி இல்லை என்ற சூழ்நிலை இருக்கும்போது, சரியில்லாத பாதையைச் செப்பனிட்டு நடை போட வேண்டும். அதைத்தான் விஷ்ணு செய்திருக்கிறார். அந்த வகையில் அது ஒரு நல்ல விஷயம்தானே!


பட வாய்ப்பு இல்லாததால், மதுவில் மிதந்த கதாநாயகன்!

சுரா

1984ஆம் ஆண்டில் பாரதிராஜா ‘மண்வாசனை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் பாண்டியன். அப்படத்தின் தயாரிப்பாளர் அப்போது மிகவும் பிரபலமான திரைப்பட மக்கள் தொடர்பாளராகவும், பாதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தவருமான சித்ரா லட்சுமணன். கதாநாயகனே இல்லாமல் தேனிக்குப் படப்பிடிப்பிற்கு துணிச்சலாக தான் கிளம்பிப் போய் விட்டதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான வளையல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பாண்டியனை பாரதிராஜா தன்னுடைய படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்தார் என்றும் அந்தக் காலத்தில் பத்திரிகைகளுக்குச் செய்தி தந்தார்கள். அந்தச் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது பாரதிராஜாவிற்கும் சித்ரா லட்சுமணனுக்கும் மட்டும்தான் தெரியும்.

பாரதிராஜா தமிழ்த் திரைப்பட உலகில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், நிழல்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என்று தொடர்ந்து பேசப்படும் படங்களை இயக்கி முத்திரை பதித்திருந்ததால், அவருடைய படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு அப்போது இருக்கும். ‘மண்வாசனை’ படம் தயாரிப்பில் இருந்தபோதே அதற்கு மக்களிடம் ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ரேவதி. பாண்டியன், ரேவதி இருவருமே படவுலகிற்குச் சிறிதும் தொடர்பே இல்லாதவர்கள். தன் திறமையை மட்டுமே நம்பி அவர்களை அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.

அண்ணாசாலையில் இருந்த ஒரு திரை அரங்கில் நான் ‘மண்வாசனை’ படத்தைப் பார்த்தேன். மக்கள் தங்களை மறந்து அந்தப் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். பட்டாளத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பி வரும் பாத்திரத்தில் பாண்டியன் நடித்திருந்தார். சொல்லப் போனால்- அந்தக் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தார் பாண்டியன். பாண்டியன் என்ற நடிகரையே நான் பார்க்கவில்லை. கிராமங்களிலிருந்து பட்டாளத்திற்குப் போய்ச் சேரும் பல இளைஞர்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் ஒருவரைத்தான் நான் பாண்டியனிடம் பார்த்தேன்.

பாண்டியன், ரேவதி இருவரையும் மிகவும் அருமையாகக் கையாண்டிருந்தார் பாரதிராஜா. இளையராஜா இசையமைத்த மிகச் சிறந்த பாடல்கள் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. பாடல் காட்சிகளின்போது திரை அரங்கில் மக்கள் ஆரவாரம் செய்ததும், உணர்ச்சிவசப்பட்டு கைகளைத் தட்டியதும் இப்போதுகூட என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

‘மண்வாசனை’ படத்தின் மூலம் மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு முன்னணி கதாநாயகனாக ஆனார் பாண்டியன். அப்படத்தைத் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனம், ‘புதுமைப் பெண்’ என்ற படத்தைத் தயாரித்தது. மீண்டும் பாண்டியன், ரேவதி இருவரும் நாயகன், நாயகியாக அதில் நடித்தார்கள். பாரதிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து அந்தப் படத்தை இயக்கி இருந்தார். ‘மண் வாசனை’ படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்த பாண்டியன், இந்தப் படத்தில் நகரத்து இளைஞராக நடித்திருந்தார். சென்னை அலங்கார் திரை அரங்கில் (இப்போது அந்த திரை அரங்கே இல்லை) நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். பாண்டியன், ரேவதி வந்த பல காட்சிகளையும் மக்கள் மெய்மறந்து ரசித்தனர். ஒரு பாடல் காட்சியில் பாண்டியனும் ரேவதியும் கைகளைத் தட்டிக் கொண்டே பாடுவது மாதிரி பாரதிராஜா காட்சி அமைத்திருந்தார். அந்தப் பாடல் காட்சிக்குத்தான் தியேட்டரில் என்ன வரவேற்பு! 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த அந்தப் படத்தை தெலுங்கிற்கும் கொண்டு போனார் பாரதிராஜா.

அந்த இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடியதால், தயாரிப்பாளர்கள் தேடும் கதாநாயகர்களில் ஒருவராக ஆனார் பாண்டியன்... அப்போது கிராமத்துப் பின்னணியில்தான் பெரும்பாலான படங்கள் தயாராகிக் கொண்டிருந்ததால், பாண்டியனைத் தேடி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஓடினர். இராம.நாராயணன், தான் இயக்கிய பல படங்களிலும் கதாநாயகனாக பாண்டியனை நடிக்க வைத்தார். ராமராஜன் இயக்கிய முதல் படமான ‘மண்ணுக்கேத்த பொண்ணு’விலும் பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்திலும் கூட கதாநாயகனாக நடித்தவர் பாண்டியன்தானே! ஒரே நேரத்தில் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார் பாண்டியன். பாண்டியன் கதாநாயகனாக நடித்தால் படத்தை வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக பட வினியோகஸ்தர்கள் கூறுவதை நானே அருகில் இருந்து கேட்டிருக்கிறேன்.

எனக்கு பாண்டியன் மிகவும் நெருக்கமாகப் பழக்கமானது 1988ஆம் ஆண்டில் தயாரான ‘சங்கு புஷ்பங்கள்’ என்ற படத்தின்போதுதான். அன்புக்கனி என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி விஸ்வநாத் நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது நானும் பாண்டியனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். நான் படித்த மதுரை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்தான் பாண்டியன் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கு வகுப்பு ஆசிரியராக இருந்த மன்னார்சாமி என்பவர் நான் படிக்கும்போது எனக்கு சரித்திர ஆசிரியராக இருந்திருக்கிறார். எனக்கு நான்கு வருடங்கள் கழித்து அங்கு படித்தவர் பாண்டியன். இந்த விஷயம் எங்களை மேலும் நெருக்கமாக்கியது.

அதற்குப் பிறகு ‘காதலெனும் நதியினிலே’ என்ற படத்தின்போதும் நானும் பாண்டியனும் அடிக்கடி சந்திப்போம். பாசிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய எம்.கே.ஐ. சுகுமாரன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சீதா. பாண்டியனுடன் இன்னொரு கதாநாயகனாக நடித்தவர் ‘ஒரு தலை ராகம்’ சங்கர். மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட அப்படம் திரைக்கு வந்தபோது, மக்களால் பேசப்பட்டது. 50 நாட்களைக் கடந்து அப்படம் ஓடியது.

பல வருடங்கள் தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களிலும் நடித்தார் பாண்டியன். அதன்மூலம் நன்கு சம்பாதிக்கவும் செய்தார். அதற்குப் பிறகு படவுலகில் பல மாற்றங்கள் உண்டாயின. திரைப்படக் கல்லூரி மாணவர்களின் நுழைவால், பிரம்மாண்டமான ஆக்ஷன் படங்கள் உருவாயின. அந்த சூழ்நிலையைத் தொடர்ந்து பாண்டியனைப் போன்றவர்களை படவுலகம் மறந்து விட்டது. பாண்டியனைத் தேடி யாரும் போகவில்லை. தனக்குத் தெரிந்த மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவரைத் தயாரிப்பாளராக்கி, ‘பந்தயக் குதிரைகள்’ என்ற பட முயற்சியில் பாண்டியன் ஈடுபட்டார். அதில் ஆக்ஷன் ஹீரோக்களாக பாண்டியனும், ‘ஒரு தலை ராகம்’ சங்கரும் நடித்தார்கள். ‘வைகாசி பொறந்தாச்சு’ பட நாயகி காவேரிதான் அதில் கதாநாயகி. பாண்டியன் பெரிதாக அந்தப் படத்தை எதிர்பார்த்தார். ஆனால், படம் வியாபாரம் ஆகாததால், திரைக்கே வர முடியாமற் போய்விட்டது. அதில் மனம் ஒடிந்து போனார் பாண்டியன்.

பல வருடங்கள் பட வாய்ப்பு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் பெரிய அளவில் அவரால் வர முடியவில்லை. மிகவும் சாதாரண சம்பளத்திற்கு அங்கு பலரும் நடிக்கத் தயாராக இருக்கும்போது, பாண்டியனை யார் தேடுவார்கள்? பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தன்னுடைய சாலிகிராமம் வீட்டில் வெறுமனே அமர்ந்திருக்கும் பாண்டியனை நான் பல நேரங்களில் சென்று பார்த்து பேசியிருக்கிறேன். பட வாய்ப்பு இல்லாத கவலை காரணமாக மது அருந்திவிட்டு சோர்வடைந்த கண்களுடன் பகல் நேரத்திலேயே உட்கார்ந்திருப்பார். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த பாண்டியனையும், இப்போது நான் பார்க்கும் பட வாய்ப்பில்லாத பாண்டியனையும் என் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. இதுதான் படவுலகம் என்று அப்போது நான் மனதில் நினைத்துக் கொண்டேன்.

பட உலகில் நுழைவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படிப்பட்ட வாய்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும். அதுவும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடிப்பது என்றால்...? மிகப் பெரிய அந்த வாய்ப்பைப் பெற்ற பாண்டியன் அரசியல் கட்சி, பிரச்சாரம் என்றெல்லாம் தடம் புரண்டு போகாமல் படத்துறையிலேயே கவனம் செலுத்தியிருந்தால் இரண்டாவது கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்திருக்கலாம்.

‘நிழல்கள்’ ரவி இயங்கிக் கொண்டிருக்கவில்லையா?

வாழ்க்கையின் கடுமையைப் புரிந்து கொள்ளாமல் வெகுளியாகவே வாழ்ந்துவிட்ட பாண்டியன் தன்னுடைய 47வது வயதில் மரணத்தைத் தழுவி விட்டார் என்பது எவ்வளவு பெரிய சோகச் செய்தி! பட வாழ்க்கையில் இருப்பவர்கள் உடலையும், தொழிலையும் எவ்வளவு அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே பாண்டியனின் மரணம் உணர்த்தும் பாடம்.


கும்பலில் நின்றவர் இயக்குநர் ஆனார்!

சுரா

டிக்கும் ஆசையுடன் 1978ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து சென்னை மண்ணைத் தேடி வந்தவர் நல்லதம்பி. பல திரைப்பட நிறுவனங்களுக்கும் போய் அவர் வாய்ப்பு கேட்டார். தான் ஏறாத சினிமா கம்பெனி படிகளே இல்லை என்கிற அளவிற்கு வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் அவர் வாய்ப்புகளுக்காக அலைந்தார்.

நல்லதம்பிக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சொல்லிக் கொள்கிற மாதிரியான பெரிய கதாபாத்திரங்கள் இல்லை. ஒரு சில படங்களில் ஒன்றோ இரண்டோ காட்சிகளில் வருவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றிரண்டு வரிகள் வசனம் பேசுவதற்கான வாய்ப்புகள் கூட கிடைப்பதுண்டு. சில படங்களில் வெறுமனே கூட்டத்தில் ஒருவராக அவர் நின்று கொண்டிருப்பார். நாளடைவில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் சேர்ந்து விட்டார். வடபழனியில் இருக்கும் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கத்திலும் அவர் உறுப்பினராக ஆனார்.

அதன் விளைவாக படங்களில் ஏஜெண்ட்களாக பணியாற்றுபவர்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை நல்லதம்பிக்கு வாங்கிக் கொடுத்தனர். டாக்டராக, வக்கீலாக, ஆசிரியராக, கம்பவுண்டராக, காவலாளியாக, திருடனாக, கற்பழிப்பவனாக, கயவனாக, கைதியாக, வேலைக்காரனாக, விவசாயியாக... இப்படி பல படங்களில் ‘துக்கடா’ வேடங்களில் நடிக்க நல்லதம்பிக்கு வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் ஆலமரத்திற்கு அடியில் நடக்கும் பஞ்சாயத்துக் காட்சிகளில் வேடிக்கை பார்க்கும் கிராமத்து மக்கள் கூட்டத்தில் ஒருவராக நல்லதம்பி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருப்பார். எத்தனையோ படங்களில் ஒரு வார்த்தை கூட வசனம் பேசாமல் அவர் வந்திருக்கிறார்.

சிவாஜிகணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், முரளி, சரத்குமார், கார்த்திக் என்று பலர் நடித்த படங்களிலும் நல்லதம்பி சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், அல்லது தோன்றியிருக்கிறார்.

எனக்கு நல்லதம்பியை 15 வருடங்களாக தெரியும். கோடம்பாக்கம், வடபழனி சாலைகளில் அமைதியாக ஒரு ஓரத்தில் அவர் எப்போதும் நடந்து போய்க் கொண்டிருப்பார். நேரில் பார்க்கும்போது ‘ஒரு படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க கூப்பிட்டிருக்காங்க அண்ணே... அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்பார். என்னை எப்போதும் ‘அண்ணே’ என்றுதான் நல்லதம்பி அழைப்பார். மதுரையிலிருந்து நடிப்பதற்காக வந்து, கலை தாகத்துடன் சென்னைத் தெருக்களில் கனவுகளை மனதிற்குள் வைத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருக்கும் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டு நான் பல நேரங்களில் நின்றிருக்கிறேன்.

எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே நூறு ரூபாய்க்கும், நூற்றைம்பது ரூபாய்க்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிக் கொண்டிருப்பது என்று ஒருநாள் முடிவெடுத்த நல்லதம்பி, படங்களுக்கான கதை விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். இயக்குநர் ஏ.சி.சந்திரகுமார் அவருடைய நண்பர். ஏ.சி.சந்திரகுமார் ‘பேண்ட் மாஸ்டர்’, ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ ஆகிய படங்களுக்கு கதைகளை உருவாக்கியபோது, அவருடன் நல்லதம்பியும் சேர்ந்து பணியாற்றினார். கதை அறிவும், நகைச்சுவை உணர்வும் கொண்ட நல்லதம்பியின் பங்களிப்பு சந்திரகுமாருக்கு பயனுள்ளதாக இருந்தது. அந்தக் கதைகளுக்காக கிடைத்த பணத்தில் நல்லதம்பிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சந்திரகுமார் தந்தார்.

கிட்டத்தட்ட நூறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த நல்லதம்பி இனிமேல் படங்களில் சிறு பாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கு பதிலாக, இயக்குநர் ஆவது என்ற முடிவுக்கு அவர் வந்தார். சந்திரகுமார் இயக்கிய ‘பகவத்சிங்’ என்ற படத்தில் அசோசியேட் இயக்குநராக நல்லதம்பி பணியாற்றினார். நெப்போலியன், சங்கவி நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நல்லதம்பியைப் பார்ப்பேன். வசனங்கள் அடங்கிய பேப்பர்களைக் கையில் வைத்துக் கொண்டு நடிகர்கள், நடிகைகள் பக்கத்தில் அவர் நின்றிருப்பார். என்னைப் பார்த்ததும் புன்னகைப்பார். வசனமே பேசாமல் வெறுமனே சிலையைப் போல பல படங்களில் வந்து நின்று கொண்டிருந்த அவருக்கு வாழ்க்கையில் ஒரு உயர்வு கிடைத்திருக்கிறது என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைவேன். அதை வெளிப்படுத்தும் விதத்தில் அவரைப் பார்த்து நானும் புன்னகைப்பேன்.

வருடங்கள் கடந்தன. சில வருடங்களுக்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நல்லதம்பி ‘நான் இயக்குநராகி விட்டேன். ‘ஆசை பறவை’ என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறேன். நாளைக்கு ஏவி.எம்.ஸ்டூடியோவில் நான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்று கூறி, என்னை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மறுநாள் நான் ஏவி.எம். ஸ்டூடியோவிற்குச் சென்றேன். துணை நடிகராக நான் பல வருடங்கள் பார்த்த நல்லதம்பி இயக்குநராக வளர்ச்சி பெற்று அங்கு நின்று கொண்டிருந்தார். தன் பெயரை ‘ஆசியன் நல்லதம்பி’ என்று வைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். செந்தில், சார்லி, மனோரமா ஆகியோர் நடிக்க, கேமரா, ஆக்ஷன் என்று கூறிக் கொண்டிருந்தார் நல்லதம்பி. படத்தின் தயாரிப்பாளர் இளங்கோவனை எனக்கு அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். தான் நினைத்த லட்சியத்தை நல்லதம்பி அடைந்து விட்டதற்காக அவருடைய கையைப் பிடித்து நான் குலுக்கினேன்.

இருபது நாட்கள் மிகவும் வேகமாக வளர்ந்த படம் பொருளாதார பிரச்னைகளால் திடீரென்று நின்று விட்டது. மறுபடியும் வடபழனி ஆற்காடு சாலையில் ஒரு ஓரத்தில் கனவுகளுடன் நல்லதம்பி நடந்து போய்க் கொண்டிருப்பார். சில மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் இளங்கோவன் பணத்தைத் தயார் பண்ணிவிட, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆசை பறவை’ மீண்டும் படப்பிடிப்பில் இறங்கியது. புதிய உற்சாகத்துடன் நல்லதம்பி ‘ஸ்டார்ட், கட்’ கூற தொடங்கினார்.

படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து, டப்பிங்கும் முடிந்து விட்டது.  அப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தி.நகர் தேவிஸ்ரீ தேவி ப்ரீவ்யூ தியேட்டரில் நடைபெற்றது. பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் நல்லதம்பி பேட்டிகள் கொடுத்தார். அனைத்தும் முடிந்த பிறகு நானும், நல்லதம்பியும், ‘ஆசை பறவை’ படத்தின் எடிட்டரும் ஒரு ஆட்டோவில் வடபழனிக்குச் சென்றோம்.  ஆட்டோவில் பயணிக்கும்போது, நான் கேட்க, நல்லதம்பி தன்னுடைய கடந்த காலங்களை கதை கூறுவதைப்போல என்னிடம் கூறிக் கொண்டு வந்தார்.

அதற்குப் பிறகு ஐந்து நாட்கள் கழித்து, நான் நல்லதம்பிக்கு ஃபோன் பண்ணினேன். அவருடைய செல்ஃபோனை வேறு யாரோ ஒருவர் எடுத்தார். ‘நல்லதம்பியின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்’ என்றார் அவர். தூங்கும்போதே ஹார்ட் அட்டாக்கில் இறந்திருக்கிறார் நல்லதம்பி. அந்தச் செய்தியைக் கேட்டு, நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். இப்படியும் ஒரு மரணமா?

படத்தில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த நல்லதம்பி, மதுரையில் இருந்த தன் சகோதரர்களை எத்தனையோ வருடங்களாக போய் பார்க்கவே இல்லை. சரியான வருமானம் இல்லாததால் தன் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் மேலூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிலேயே இருக்கும்படி அவர் கூறிவிட்டார். மாமனார்தான் அவர்களைத் காப்பாற்றி இருக்கிறார்.

நல்லதம்பி இறந்தது அதிர்ச்சியளித்தது என்றாலும், அவர்மீது அவர்களுக்கு பாசம் வரவில்லை. இல்லாவிட்டால் அவருடைய சொந்த சகோதரர்களே ‘இறந்த உடலை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டாம். நேராக சுடுகாட்டுக்கே கொண்டு போய் விடுங்கள்’ என்று கூறியிருப்பார்களா? நல்லதம்பிக்காக கண்ணீர் விட்டது அவருடைய மனைவியும் மகளும் மட்டும்தான். மகன்கள் கூட இல்லை.

தன்னுடைய இயக்குநர் பணியை முழுமையாக முடித்துக் கொடுத்து விட்டே நல்லதம்பி இறந்திருக்கிறார். இயக்குநர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நல்லதம்பி இயக்குநர் என்று தன் பெயர் படத்தில் வருவதைப் பார்க்காமலே இறந்துவிட்டார்.

நல்லதம்பி மரணத்தைத் தழுவி ஐந்து வருடங்கள் கடந்தோடிவிட்டன. ‘ஆசை பறவை’ வியாபாரம் ஆகாததால், இந்த நிமிடம் வரை திரைக்கு வரவில்லை. இயக்குநர் ஆகவேண்டும் என்று பல வருடங்களாக பாடுபட்டு எங்கோ பறந்து சென்றுவிட்ட ‘ஆசை பறவை’யான நல்லதம்பியை இப்போது கூட என்னால் மறக்கவே முடியவில்லை. எப்படி மறக்க முடியும்?


சினிமா மக்கள் தொடர்பாளரின் காதலுக்கு உதவினார் விஜயகாந்த்!

சுரா

விஜயமுரளியை எனக்கு 1984ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் முன்னணி திரைப்பட மக்கள் தொடர்பாளராக இருந்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சின்னாளபட்டியைச் சேர்ந்த விஜயமுரளியின் உண்மையான பெயர் முரளி. அவருடைய குடும்பம் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. அந்தத் தொழில் சொல்லிக் கொள்கிற மாதிரி கை கொடுக்காததால் முரளியின் தந்தை சென்னையில் ஏதாவது வேலை பார்க்கலாம் என்று ஊரை விட்டுக் கிளம்பி வந்து விட்டார். குடிசை மாற்று வாரியத்தில் சூப்பர்வைசராக அவருக்கு வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து முரளியின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சென்னைக்கு வந்து விட்டார்கள்.

ஐந்தாம் வகுப்பு வரை சின்னாளபட்டியிலும் வேறு சில ஊர்களிலும் நடந்த முரளியின் படிப்பு சென்னையில் தொடர்ந்தது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்தத் துயரமான சம்பவம் நடந்தது. 1975ஆம் ஆண்டில் ஒரு நாள் தன் கண் துடிக்க, ரேஷன் வாங்கச் சென்றிருக்கும் முரளியின் தாய்க்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயந்த முரளியின் தந்தை அவரை உடனடியாக ரேஷன் கடைக்குப் போகச் சொல்லியிருக்கிறார்.

கலைவாணர் அரங்கத்திற்கு எதிரில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திரும்பும் இடத்தில் முரளியின் தாய் ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்ட பையுடன் நடந்து வந்திருக்கிறார். அப்போது ஒரு வாகனம் வேகமாக வர, அவரைத் தேடி வந்த முரளி தன் தாயைக் காப்பாற்றுவதற்காக அவரைப் பிடித்துத் தள்ளியிருக்கிறார். முரளியும், அவரின் அன்னையும் கீழே விழ, அரிசி சாலையில் கொட்டிக் கிடந்திருக்கிறது. எனினும், விபத்திலிருந்து தப்பித்தாகி விட்டது என்ற நிம்மதியுடன் வீட்டிற்கு வந்தால், முரளியின் வீட்டுக்கு முன்னால் ஒரே கூட்டம். தண்ணீர் வருவதற்காக உதவப் போன முரளியின் தந்தை மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்னால் துடிப்புடன் உட்கார்ந்திருந்த தன் தந்தை சில நிமிடங்களில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து முரளிக்கு உண்டான சோகத்திற்கு அளவே இல்லை.

முரளியின் தந்தை இறந்து விட்டதால், அவருடைய அண்ணனுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வேலை கிடைத்தது. அவருடைய இரண்டு தங்கைகளுக்கும் அரசாங்கம் 15,000 ரூபாய் வீதம் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்தியது.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்த முரளி தன் குடும்ப நிலைமையை மனதில் எடை போட்டு  ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைத்தார். திருச்சியைச் சேர்ந்த அவருடைய உறவினர் ஒருவர் மூலம் அடையாறில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்த ஜி.கே.தர்மராஜின் அறிமுகம் முரளிக்குக் கிடைத்தது. அவருடைய அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக முரளி சேர்ந்தார். ‘அக்கரைப் பச்சை’. ‘இளைய தலைமுறை’ ஆகிய படங்களைத் தயாரித்தார் தர்மராஜ். அவர் தயாரித்த ‘வடைமாலை’ என்ற படத்திற்கு முரளி கேஷியராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க ‘உன்னை விடமாட்டேன்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தார் தர்மராஜ். அதற்கு இளையராஜா இசையமைப்பாளர். வாலி கதை, வசனம், பாடல்களை எழுதினார். கே.சங்கர் இயக்குவதாக இருந்த அந்தப் படத்தின் பாடல் பதிவு பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் நடந்தது. சில நாட்களில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடவே, அவர் படங்களில் நடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு விட்டது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

ஜி.கே.தர்மராஜின் அந்த அலுவலகத்திற்கு அப்போது ‘மாலை முரசு’ நாளிதழின் சினிமா பகுதி ஆசிரியராகப் பணியாற்றிய செல்வகணேசன் வருவார். அவர் மிகவும் நெருக்கமாக முரளிக்கு அறிமுகமானார். வேலை எதுவும் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முரளியை அவர்தான் திரைப் பட மக்கள் தொடர்பாளர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளராகச் சேர்த்து விட்டார். 1975ஆம் ஆண்டு கிளாமரின் உதவியாளராகச் சேர்ந்த முரளி 1985ஆம் ஆண்டு வரை சுமார் 300 படங்களுக்கு உதவியாளராக அவரிடம் பணியாற்றினார்.

இப்போதைய எந்த வசதிகளும் அந்தக் காலத்தில் இல்லை. அதிகாலையிலிருந்தே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகையின் செய்தியாளர் வீட்டிற்கும், அவர்கள் பணியாற்றும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் பயணிக்க வேண்டும். முரளி அதைத்தான் செய்தார். எனக்கு படக் காட்சிக்கான அழைப்பிதழ்களைத் தருவதற்காக எத்தனையோ முறை முரளி சைக்கிளில் வந்திருக்கிறார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட முரளியின் சுறுசுறுப்பைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் பணியாற்றியபோது, உதவியாளர் ‘நாகமுரளி’ என்று முரளியின் பெயர் படங்களின் டைட்டிலில்  வரும். நாகரத்தினம் என்பது முரளியின் தந்தையின் பெயர்.

கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராகப் பணியாற்றியபோது, முரளிக்கும் கிராமரின் மகள் விஜயகுமாரிக்கும் இடையே காதல். ஆனால், அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள ஆரம்பத்தில் கிளாமர் மறுத்துவிட்டார். அப்போது முரளிக்கு ஆதரவாக கிளாமர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியவர்கள் இராம நாராயணன், விஜயகாந்த், சந்திரசேகர், ராதாரவி ஆகியோர். அவர்கள் சொன்ன பிறகுதான் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி சம்மதிக்கவே செய்தார்.

திருமண நாளன்று, மண்டபத்தில் மின்சாரமே வரவில்லை. சாதாரண விளக்கு வெளிச்சத்தில் முரளி தாலியைக் கட்டினார்.

அதற்குப் பிறகு முரளி தன் மனைவியின் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்து ‘விஜய முரளி’யாக ஆனார். பல வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றிய முரளி தனித்து படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். ‘இரண்டு மனம்’, ‘ஹலோ யார் பேசுறது’, ‘மருதாணி’, ‘வெற்றிக் கனி’, ‘நான் உங்கள் ரசிகன்’, ‘கோயில் யானை’, ‘குங்குமப் பொட்டு’ ஆகிய படங்களுக்கு அவர் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார். விஜயமுரளிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நடிகர் திலகம் சிவாஜியும், ரஜினியும் இணைந்து நடித்த ‘படிக்காதவன்’. அதற்குப் பிறகு ‘நாட்டுக்கொரு நல்லவன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘அவ்வை சண்முகி’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘பாசப் பறவைகள்’, ‘பாடாத தேனீக்கள்’, ‘புயல் பாடும் பாட்டு’, ‘சாமுண்டி’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘வேலை கிடைச்சிருக்கு’, ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று ஏராளமான படங்களுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார்.

தன் பல வருட படவுலக அனுபவங்களைக் கொண்டு விஜயமுரளி 1991ஆம் ஆண்டில் படத் தயாரிப்பாளராக மாறினார். ராமராஜனை கதாநாயகனாகப் போட்டு ‘மில் தொழிலாளி’ என்ற படத்தை பாண்டிச்சேரியைச் சேர்நத தன் இரு நண்பர்களுடன் சேர்ந்து அவர் தயாரித்தார். அதற்குப் பிறகு 1992இல் ஆனந்தராஜ் கதாநாயகனாக நடிக்க ‘போக்கிரித் தம்பி’ என்ற படத்தை அதே நண்பர்களுடன் இணைந்து அவர் தயாரித்தார். 2002ஆம் ஆண்டில் விஜயமுரளி மட்டும் தனியே பாண்டியராஜன் நடிக்க ‘வடக்கு வாசல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இப்போது ஒளிப்பதிவாளர் ரவீந்தர் இயக்கத்தில் ‘மூன்றாம் பெளர்ணமி’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. தன் தாய் மகாலட்சுமியின் பெயரைக் கொண்டு ‘மகா மூவி மேக்கர்ஸ்’ என்று தன்னுடைய பட நிறுவனத்திற்கு அவர் பெயர் வைத்திருக்கிறார்.

தன்னுடைய அண்ணன், தம்பி, இரண்டு சகோதரிகள் எல்லோருக்கும் விஜயமுரளியே செலவு செய்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் விஜயமுரளி.

விஜயமுரளிக்கு இரண்டு மகன்கள். தன் கடமைகளை நல்ல முறையில் நிறைவேற்றி இப்போதும் பிஸியான திரைப்பட மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டு வெற்றிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் விஜயமுரளியைப் பார்க்கும்போது, என் மனதில் தோன்றுவது- எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் சினிமா செய்திகளையும், அழைப்பிதழ்களையும் சைக்கிளில் வைத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களை நோக்கிப் பயணித்த அந்த ஒல்லியான உருவத்தைக் கொண்ட முரளி என்ற இளைஞனும், அவருடைய சுறுசுறுப்பும்தான்.


இசையமைப்பாளரின் பெயரை மாற்றி வைத்தார் மு.மேத்தா!

சுரா

சையமைப்பாளர் வி.எஸ்.உதயாவை எனக்கு 1984ஆம் ஆண்டிலிருந்து தெரியும். சென்னை மாநிலக் கல்லூரியில் அப்போது அவர் பி.ஏ. (பொருளாதாரம்) படித்துக் கொண்டிருந்தார். ‘ராக தரங்கிணி’ என்ற பெயரில் ஒரு இசைக் குழுவை வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் என்னை வந்து சந்திப்பார். தானே கற்பனை பண்ணி சூழ்நிலைகளை உண்டாக்கி, அதற்கேற்றபடி பல புதுமையான ட்யூன்களை அமைத்து டேப் ரிக்கார்டரை கையோடு கொண்டு வந்து எனக்கு போட்டுக் காட்டுவார். சில நேரங்களில் கிட்டாரை இசைத்து, அவரே பாடியும் காட்டுவார். அவர் போட்டிருக்கும் ட்யூன்கள் இனிமையானவையாகவும், புதுமையானவையாகவும் இருக்கும். படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே அவருக்கு இருந்தது.

உதயாவின் நண்பர் தேவதாசன் 1992ஆம் ஆண்டில் ‘மாநகர காதல்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கு உதயாவையே இசையமைப்பாளராகப் போட்டார். உதயாவின் இசையமைப்பில் ஆறு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. எனினும், சுவிட்சர்லாந்தில் இருக்கும் ரெமி ரெக்கார்டிங் நிறுவனம் ‘இரட்டை ரோஜா’ படத்துடன் இணைந்து ‘மாநகர காதல்’ படத்தின் பாடல்களை இசைத் தட்டாகக் கொண்டு வந்தது.

விக்ரம் தெலுங்கில் நடித்த ஒரு படத்தை தமிழில் ‘கண்டேன் சீதையை’ என்ற பெயரில் ‘டப்’ செய்தார்கள். தெலுங்கில் ஆர்.பி.பட்நாயக் இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தில் பாடல்கள் இல்லை. தமிழில் ‘டப்’ செய்யும்போது, வி.எஸ்.உதயாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார்கள். தமிழ் வடிவத்தில் பாடல்கள் இடம் பெற்றன. எல்லா பாடல்களுக்கும் மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்தார் உதயா. ‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி நீ இரண்டாயிரத்து ஆளு... நான் சொல்றதைக் கேளு’ என்ற பாடலை உதயாவின் இசையமைப்பில் சொந்தக் குரலில் பாடி நடித்தார் விவேக்.

2003ல் திரைக்கு வந்த ரஞ்சித் கதாநாயகனாக நடித்து, இயக்கிய ‘பீஷ்மர்’ படத்திற்கு உதயாதான் இசையமைப்பாளர்.

பல வருடங்களுக்கு முன்னால் ட்யூன்களைப் போட்டு வைத்துக் கொண்டு, டேப் ரிக்கார்டருடன் பல இயக்குநர்களையும் போய்ப் பார்த்தார் உதயா. இயக்குநர் பாரதிராஜாவைப் பார்க்க முயற்சி செய்து, கடைசி வரை பார்க்கவே முடியாமல் போய்விட்டது. நீண்ட காலம் முயற்சி செய்து எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில்தான் ‘இசை ஆல்பம்’ என்ற முயற்சியில் உதயா இறங்கினார். அந்த எண்ணத்தை அவரிடம் உண்டாக்கியது ‘மாநகர காதல்’ இசைத் தட்டை வெளியிட்ட சுவிட்சர்லாந்து, ரெமி ரெக்கார்டிங் நிறுவனம்தான்.

அந்நிறுவனம் வெளியிட்ட ‘இனிய காதலர்களே’ என்ற இசை ஆல்பத்தில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனையும் தேவாவையும் இணைந்து பாடும்படி உதயா செய்தார். மனசுக்குள் மழை, விடியல், உறவுகள், ஊஞ்சல் என்ற பல அருமையான இசை ஆல்பங்கள் வி.எஸ்.உதயாவின் இசையமைப்பில் வெளியே வந்து, உலகில் உள்ள தமிழர்களின் வீடுகளிலெல்லாம் ஒலித்தன. உதயாவின் இசைத் திறமையைப் பார்த்து வெளிநாடுகளில் இருந்த தமிழர்கள் அவரைப் பாராட்டினர். ரெமி ரெக்கார்டிங் நிறுவனம் உதயாவின் இசையமைப்பில் இதுவரை பதினைந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறது.

நார்வே நாட்டைச் சேர்ந்த வசீகரன் என்பவரின் அறிமுகம் உதயாவிற்குக் கிடைத்தது. உதயாவின் இசைத் திறமையைப் பார்த்த அவர் ஒரு இசை ஆல்பத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்படி உருவான இசை ஆல்பம்தான் ‘காதல் கடிதம்’. அந்த ஆல்பத்தில் இடம் பெற்ற எட்டு பாடல்களையும் வசீகரன் எழுத, உதயா இசையமைத்தார். உலகமெங்கும் அந்த இளமை தவழும் இசை ஆல்பம் நல்ல வரவேற்புடன் விற்பனை ஆனது.

சில வருடங்களுக்கு முன்னால் ‘மார்கழிப் பூவே’ என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. அதற்கு உதயாதான் இசையமைப்பாளர். பாடல் பதிவிற்கு அவர் என்னை அழைத்திருந்தார். சிங்களப் பாடகி நிரோஷாவை ஒரு பாடலைப் பாடுவதற்காக இலங்கையிலிருந்து அவர் வரவழைத்திருந்தார். ‘இன்னிசை மழைதனில் நனைகிறேன் குடை தேடாதே... இயற்கையின் அழகினில் இணைகிறேன் தடை போடாதே...’ என்ற மு.மேத்தாவின் பாடலை மிகவும் இனிமையாகப் பாடினார் நிரோஷா. அந்த பாடல் வரிகளும் நிரோஷாவின் இனிய குரலும் இப்போது கூட என் இதயத்திற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தப் படம் சில வருடங்களுக்கு முன்னால் ‘காசு’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. ரகுமான், ராஜஸ்ரீ, சங்கீதா நடித்த அந்தப் படத்தை கவுரி மனோகர் இயக்கி இருந்தார்.

‘காதல் கடிதம்’ இசை ஆல்பத்திற்கு பாடல்கள் எழுதி, அதைத் தயாரித்த வசீகரன், உதயாவின் இசையமைப்பில் அடுத்து உருவாக்கிய இசை ஆல்பம் ‘காதல் மொழி’. அதில் இடம் பெற்ற பாடல்களையும் வசீகரனே எழுதினார். ‘காதல் கடிதம்’ இசை ஆல்பம் நார்வேயில் வெளியிடப்பட, அந்த விழாவிற்கு உதயா தன் மனைவியுடன் சென்றிருந்தார். 2004ஆம் ஆண்டில் நார்வே தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் கொண்டாடப்பட, அதற்கு தன்னுடைய இசைக் குழுவினருடன் சென்று, வி.எஸ்.உதயா இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இசை ஆல்பமாக வெளி வந்த ‘காதல் கடிதம்’ பாடல்களை வைத்து ஒரு திரைப் படத்தை உருவாக்கினால் என்ன என்ற சிந்தனை தோன்றவே, அதற்கான முயற்சியில் உதயா இறங்கினார். அவருடைய மனைவி வினோலியா பல பத்திரிகைகளில் கதைகள் எழுதுபவர். ‘காதல் கடிதம்’ என்ற பெயரிலேயே படம் தயாரானது. ஆல்பத்தில் இருந்த பாடல்களே படத்தில் இடம் பெற்றன. இலங்கையில் படமாக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு அப்படம் திரைக்கு வந்தது. அதில் இடம் பெற்ற ‘யாழ்தேவியில் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்...’ என்ற பாடல் எல்லோராலும் பாடப்பட்டது.

மு.மேத்தா, பழனிபாரதி, விவேகா, அறிவுமதி, நந்தலாலா என்று பல பாடலாசிரியர்களும் உதயாவின் இசை ஆல்பங்களுக்கும், படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பிரபல பாடகர்களும், பாடகிகளும் அவரின் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஜாக்சன் பாஸ்கோ, டென்மார்க்கைச் சேர்ந்த ஜனனி, சாம் பி.கீர்த்தன், பாடகர் கிருஷ்ணராஜின் மகள் ஜீவரேகா என்று பலரையும் அவர் பாட வைத்திருக்கிறார்.

பாட வாய்ப்புகள் பெரிய அளவில் இங்கு தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் சிறிது கூட இல்லை உதயாவிற்கு. உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் ரசிக்கக் கூடிய இசை ஆல்பங்களுக்கு இசையமைப்பதில் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். நான் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தபோது ‘காதல் வானம்’ என்ற இசை ஆல்பத்திற்கு அவர் இசையமைத்துக் கொண்டிருந்தார். ஆல்பங்களில் இடம் பெற்ற பாடல்களை எனக்கு போட்டுக் காட்டினார். விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, பரத், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் இடம் பெறும் அளவிற்கு மிகவும் அருமையாக இருந்தன அந்தப் பாடல்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் உதயாவைத் தேடி வந்தன. அவர் இசையமைத்த ‘பரவசம்’ என்ற திரைப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. உதயாவின் இசையில் ‘மன்னாரு’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து, பேசப்படும் படமாக இருந்தது.

சமீபத்தில் அவருக்கு ஒப்பந்தமாகியிருக்கும் படம் ‘பேருந்து தினம்’. மிகவும் மாறுபட்ட இளமை ததும்பும் கவித்துவம் நிறைந்த அந்தப் படத்தில் உதயா தன்னுடைய திறமையைக் காண்பிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன என்பதை அந்தப் படத்தின் விளம்பரங்களிலிருந்து என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.

வி.எஸ். உதயா என்ற தன்னுடைய பெயரை இப்போது அவர் உதயன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பெயர் மாற்றத்திற்கு மூல காரணமாக இருந்தவர் கவிஞர் மு.மேத்தா.  “உதயா என்றால் உதயமாகாது என்ற அர்த்தம் வருகிறது. அதனால் உங்களுடைய பெயரை இனிமேல் ‘உதயன்’ என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் கவிஞர் மேத்தா.

இசைத் திறமை இருக்கும் பட்சம், எந்த வடிவத்திலாவது செயல்பட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதற்கு உதயா என்ற உதயனே எடுத்துக்காட்டு. 1984ஆம் ஆண்டில் ஒரு கல்லூரி மாணவராக என்னை வந்து சந்தித்த உதயாவையும், இப்போது உலகமெங்கிலும் உள்ள தமிழர்களின் இதயங்களில் இசை அருவியைப் பொழியச் செய்து கொண்டிருக்கும் உதயனையும் நினைத்துப் பார்க்கும்போது, அவருடைய தளராத முயற்சிகளும், கடின உழைப்பும், இசைத் திறமையும், புதுமை செய்ய வேண்டும் என்ற வெறியும்தான் என் மனதில் தோன்றுகின்றன.

உதயன் என்று தன்னுடைய பெயரை பாசிட்டிவ்வாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் வி.எஸ்.உதயாவின் இனி வரும் நாட்கள் உதயமானவையாக இருக்கட்டும் என்று ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் நான் வாழ்த்துகிறேன்.


பட தயாரிப்பாளரை பொய் சொல்லி ஏமாற்றினார்கள் உறவினர்கள்!   

சுரா         

‘ஒரு வார்த்தை பேசு’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருப்பவர் ஏ.ஜி.மெய்யப்பன். பொறியியல் பட்டம் பெற்றிருக்கும் விமல் என்ற புதுமுக கதாநாயகனையும், ‘காதல்’ படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவை கதாநாயகியாகவும் வைத்து படத்தை  அவர் தயாரிக்கிறார்.30 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏ.ஜி.மெய்யப்பன் எனக்கு அறிமுகமானார். காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கல்லுப்பட்டி அவரின் சொந்த ஊர். பரமக்குடியில் ‘நித்யா டிரைவிங் பள்ளி’ என்ற பெயரில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அதன் மூலம் இதுவரை 22,000 பேருக்கு அவர் ஓட்டுனர் பயிற்சி அளித்திருக்கிறார். அவரிடம் ஓட்டுனர் பயிற்சி பெற்ற 1600 பேர் தற்போது பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் அரசாங்கத்தின் அனுமதி பெற்று லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யும் தொழிலையும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மெய்யப்பனின் தந்தை முல்லை கணேசன் நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேவராஜ் – மோகன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். அவர் வெளியே வந்து தனித்து இயக்கிய ஒரு படம் பாதியிலேயே நின்று விட்டது. அதற்குப் பிறகு அவர் தன்னுடைய சொந்த ஊருக்குப் போய் விட்டார். 1997ஆம் ஆண்டில் தேவகோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு மெய்யப்பனின் தந்தை பாத யாத்திரை சென்றிருக்கிறார். திருச்செந்தூர் கோவிலுக்குப் போய் விட்டு திரும்பி வரும் போது, தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்த ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.

தன் தந்தை படவுலகம் பற்றிய பல விஷயங்களையும் கூற, மெய்யப்பனுக்கு கலைத் துறை மீது மிகுந்த ஈடுபாடு உண்டாகி விட்டது. தன்னுடைய தந்தை மேலே வராமற் போன படவுலகில், தான் எப்படியும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் மெய்யப்பன் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

உதயம் ராஜரிஷி என்பவர் இயக்கும் ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் கதை- வசனத்தையும் மெய்யப்பனே எழுதியிருக்கிறார். ‘சின்னத்தம்பி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஒளிப்பதிவு செய்யும் அப்படத்தில் செல்வராஜா என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். அப்படத்தில் ஒரு பாடலையும் மெய்யப்பன் எழுதியிருக்கிறார். ‘பித்துப் பிடிச்ச மாமனுக்கு என் மேல கண்ணோட்டம் முத்துப் போல வந்து நின்னா நிக்கிறியே கல்லாட்டம்... தம்புராட்டி அம்மனுக்கு காலமெல்லாம் கொண்டாட்டம்’ என்று தொடங்கும் அவர் எழுதிய பாடல் படத்தில் ஒரு கோவில் திருவிழா காட்சியின்போது இடம் பெறுகிறது.

அண்ணன் – தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் மெய்யப்பன். அவர் நடித்த பல காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டு விட்டன. படங்களில் நடித்த அனுபவம் எதுவும் இல்லையென்றாலும், மிகவும் இயல்பாக நடித்த மெய்யப்பனை அவருடன் நடித்த ‘நிழல்கள்’ ரவி, வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர் என்று பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சில வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய ஊருக்குச் சென்ற மெய்யப்பனின் வாழ்க்கையில் விதி விளையாடிய விளையாட்டை என்னவென்று கூறுவது?

ஊராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, ஊருக்குச் சென்ற மெய்யப்பன் ஒரு அதிகாலைப் பொழுதில் மோட்டார் பைக்கில் தன் மனைவி, மூன்று வயதே ஆன கடைசி மகன் ஆகியோருடன் பரமக்குடியிலிருந்து கல்லுப்பட்டிக்கு பயணம் செய்திருக்கிறார். எதிரில் வந்த சைக்கிள் மீது மோதி விடப் போகிறோமே என்று நினைத்து பைக்கை வலது பக்கம் திருப்பியிருக்கிறார். சைக்கிளில் பயணம் செய்தவர் தப்பித்து விட்டார். ஆனால், மெய்யப்பனின் பைக் இடது புறமாக கீழே சாய்ந்து, சாலையில் கிடந்த கல் ஒன்று மெய்யப்பனின் இடது பக்க நெற்றிக்குள் போய் விட்டது. சம்பவம் நடந்த இடத்திலேயே மெய்யப்பன் தன் சுய நினைவை இழந்து விட்டார். அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறி விட்டார்கள். ஆனால், உறவினர் ஒருவர் கையைத் தொட்டுப் பார்த்தபோது நாடித் துடிப்பு இருந்திருக்கிறது.

உடனடியாக மெய்யப்பனை மதுரையில் உள்ள ஜவஹர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மெய்யப்பனின் உயிர் மீது நம்பிக்கை இல்லாமலிருந்த மருத்துவர்கள், அவருடைய மனைவி அழுவதைப் பார்த்து இரக்கப்பட்டு ஆப்பரேஷன் செய்ய சம்மதித்திருக்கிறார்கள்.

ஆப்பரேஷன் செய்து, நெற்றிக்குள் இருந்த கல்லை எடுத்து விட்டார்கள். ‘ஆனால், இடது கண்ணில் பார்வை தெரியாது. ஞாபகங்கள் இருக்காது, பேசும் சக்தி இருக்காது’ என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும், மெய்யப்பனின் மனைவிக்கும், உறவினர்களுக்கும் உண்டான அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

எனினும், பல நாட்கள் மெய்யப்பன் மருத்துவமனையிலேயே இருந்திருக்கிறார். விபத்து நடந்த விஷயம் அவருக்கு ஞாபகத்திலேயே இல்லை. ‘நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?’ என்று அவர் கேட்டதற்கு ‘மும்பையில் படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக வந்திருக்கிறோம்’ என்றிருக்கிறார் அவருடைய சித்தப்பா கருப்பன் செட்டியார். அவர்தான் மெய்யப்பனை அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டவர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும், அதே பொய்தான் மெய்யப்பனுக்குக் கூறப்பட்டிருக்கிறது. விபத்து நடந்து பல நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது, ‘மதுரை’ என்ற பெயர் பலகையுடன் ஒரு பேருந்து போயிருக்கிறது. வலது கண் மூலம் மங்கலாக அதைப் பார்த்த மெய்யப்பன் ‘தமிழில் பெயர் பலகை இருக்கிறதே?’ என்று தன் சித்தப்பாவிடம் கேட்டிருக்கிறார். தொடர்ந்து கம்பம், திருச்சி, குமுளி என்று பல பேருந்து பெயர் பலகைகளையும் பார்த்து, அதே கேள்வியை திரும்பவும் அவர் கேட்டிருக்கிறார். ‘அவை எல்லாமே மும்பையிலிருந்து தமிழகத்திற்குச் செல்லும் பேருந்துகள் தான்’ என்றிருக்கிறார் அவருடைய சித்தப்பா. அப்போது மெய்யப்பன் இடது பக்கத்தில் பார்க்க, ‘பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்’ என்று இருந்திருக்கிறது. அதற்கு எதிரில்தானே நமக்குச் சொந்தமான டிரைவிங் பள்ளி இருக்கிறது என்ற எண்ணத்துடன் அவர் திரும்பிப் பார்த்தால், ‘நித்யா டிரைவிங் ஸ்கூல்’ என்ற பெயர் பலகை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு எல்லா உண்மைகளையும் மெய்யப்பனின் சித்தப்பா அவரிடம் கூறி விட்டார். மெய்யப்பனுக்கு விபத்து நடந்த விஷயமே அப்போதுதான் தெரிந்திருக்கிறது.

மருத்துவமனையில் இருந்தபோது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டதற்கு, ‘என் பெயர் செபஸ்தியார்’ என்றிருக்கிறார் மெய்யப்பன். நினைவுகள் வந்து பேச ஆரம்பித்த பிறகு, அவரை விபத்து நடைபெற்ற காயா ஓடை என்ற கிராமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மரணத்தின் மடியிலிருந்து திரும்பி வந்த மெய்யப்பன் மீது அந்த ஊர் மக்கள் பொழிந்த அன்பிற்கு அளவே இல்லை. அப்போது விசாரித்தபோது, ஒரு உண்மை தெரிய வந்தது. விபத்து நடந்த இடத்திற்குச் சற்று தள்ளி ‘செபஸ்தியார் திருக்கோவில்’ என்ற கிறிஸ்தவ ஆலயம் இருந்திருக்கிறது. விபத்து நடைபெறுவதற்குச் சற்று முன்பு பைக்கில் வரும்போது அந்தப் பெயரை மெய்யப்பன் பார்த்திருக்கிறார். அதனால்தான் அந்தப் பெயர் அவருடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டிருக்கிறது.

கல்லுப்பட்டியில் வேலாயுதசுவாமி திருக்கோவிலையும், ராஜகோபுரத்தையும் தன் சொந்தச் செலவில் 1998இல் கட்டியிருக்கும் மெய்யப்பன் தன்னுடைய 10வது வயதில் இருந்து கல்லுப்பட்டியிலிருந்து பழனிக்கு 167 கிலோ மீட்டர் கால் நடையாக நடந்து, கடந்த 35 வருடங்களாக ஒவ்வொரு தைப் பூசத்தின்போதும் பாத யாத்திரை சென்றிருக்கிறார். தன்னுடைய மகன்கள் மூவருக்கும் பழனியப்பன், கார்த்திகேயன், சிவசுப்ரமணியன் என்று பெயர் வைத்திருக்கிறார்.

அவருக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள், ‘நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம். நன்றி சொல்ல வேண்டியது கடவுளுக்குத்தான்’ என்று கூறினார்களாம். தன்னை உயிருடன் இருக்கச் செய்தவர்கள் தான் வணங்கும் முருகப் பெருமானும், விபத்து நடந்த இடத்தில் இருந்த தேவாலயத்தில் குடியிருக்கும் இயேசுவும்தான் என்று நம்பும் மெய்யப்பனுக்கு நினைவுகள் வந்து விட்டன. பேச்சாற்றல் வந்து விட்டது. வலக்கண் பார்வை மட்டுமே தெரிகிறது. இடக் கண் பார்வை முற்றிலுமாக இல்லாமற் போய் விட்டது. அதுவும் தான் வணங்கும் கடவுளின் அருளால் சீக்கிரமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மெய்யப்பன்.

மெய்யப்பனைப் பற்றி நான் எழுதிய இந்தக் கட்டுரை பிரசுரமான ‘வண்ணத்திரை’ வார இதழைப் படித்த ‘கொடைக்கானல்’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சொந்த ஊரிலிருந்த மெய்யப்பனைத் தொடர்பு கொண்டு, அவரை நேரில் சென்னைக்கு வரவழைத்து பேசியிருக்கிறார். ‘உங்களுடைய சோகக் கதையை வாசித்தேன். மிகவும் வருத்தப் பட்டேன். மிகப் பெரிய தொகையை படத்தில் முதலீடு செய்துவிட்டு மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் தயாரித்த ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தை நானே ஏற்று நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக இருங்கள். நீங்கள் முதலீடு செய்த பணத்தை இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராஜேந்திரன்.

அதைத் தொடர்ந்து ‘ஒரு வார்த்தை பேசு’ படத்தின் படப் பிடிப்பு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமானது. அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ரகஸியா பங்கு பெற்ற கவர்ச்சி நிறைந்த ஒரு பாடல் காட்சி அது. அந்த காட்சியில் மெய்யப்பனும் கலந்து கொண்டு ஆடினார். அதற்குப் பிறகு தியாகராய நகரில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.

‘வாழ்க்கையில் சோதனைகளைத் தாண்டித்தான் சாதனைகளா?’ – மெய்யப்பனின் வாழ்க்கையை கூர்ந்து பார்க்கும்போது நமக்கு இந்த கேள்வியைத்தான் கேட்க தோன்றுகிறது.

 


வெறுத்து ஊருக்குச் சென்ற நடிகரை, திரும்ப நாசர் அழைத்துக் கொண்டு வந்தார் !

சுரா    

‘அவதாரம்’ படத்தில் நடித்ததன் மூலம் ‘இவர் யார்?’ என்று எல்லோரையும் கேட்க வைத்த பாலாசிங்கை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர்.

நாகர்கோவிலிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அம்சிகாகுழி பாலாசிங்கின் சொந்த ஊர். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்ற பாலாசிங்கிற்கு ஆரம்ப நாட்களிலேயே நடிப்பு மீது தீவிர ஈடுபாடு உண்டு. அந்த வேட்கையில் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் தேசிய நாடகப் பள்ளி நடத்திய நாடகப் பட்டறையில் கலந்து கொண்டு நடிப்பு சம்பந்தப்பட்ட பல அரிய பாடங்களை அவர் தெரிந்து கொண்டார். பி.வி.காரந்த், எம்.எஸ்.சத்யு, பத்மா சுப்ரமணியம் போன்ற பலரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு பல விஷயங்களையும் கற்றுத் தந்தனர்.

அந்த அனுபவங்களுடன் பாலாசிங் சென்னை மண்ணில் 1979ஆம் ஆண்டில் கால் வைத்தார். தாம்பரத்திற்கு அருகில் தன்னுடைய உறவினர் வீட்டில் பல மாதங்கள் அவர் தங்கியிருந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் தினந்தோறும் கிளம்பி வந்து பலரையும் சந்திப்பார். அதன் மூலம் பல முக்கியமான தொடர்புகள் அவருக்குக் கிடைத்தன. அதற்குப் பிறகு கண்ணம்மா பேட்டையில் 90 ரூபாய் வாடகையில் நண்பர் ஒருவர் குடியிருந்த ஓலைக் குடிசையில் போய் ஒட்டிக் கொண்டார். அவர்கள் இருவரும் மண்ணெண்ணெய் அடுப்பில் எதையாவது சமைத்து சாப்பிடுவார்கள். பல நேரங்களில் பட்டினி கிடப்பதும் உண்டு. மழை பெய்யும் நாட்களில், ஒரே அறை கொண்ட அந்த குடிசைக்குள் மழை நீர் நுழைந்து விடும். அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பாலாசிங் மழை நீரில், மின்சாரம் இல்லாத இரவில் தான் மூழ்கிக் கிடப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து கண் விழித்த அனுபவம் கூட இருக்கிறது.

அந்தக் கால கட்டத்தில் ஞாநியின் அறிமுகம் பாலாசிங்கிற்கு கிடைத்தது. அவருடைய ‘பரீக்ஷா’ நாடகக் குழு அப்போது பல வித்தியாசமான நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது. அருமையான சோதனை நாடகங்கள்! பாதல் சர்க்காரின் ‘பிறகொரு இந்திரஜித்’ விஜய் டெண்டுல்கரின் ‘கமலா’ போன்ற பல நாடகங்களை அக்குழு நடத்தியது. அவற்றில் பாலாசிங் நடித்தார். அந்நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் எனக்கு பாலாசிங் அறிமுகமானார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலாசிங் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்தார். இயக்குநர் மெளலி அப்போது அவருக்கு அறிமுகமானார். மெளலி இயக்கிய ‘வா இந்தப் பக்கம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் வாய்ப்பு பாலாசிங்கிற்கு கிடைத்தது. தொடர்ந்து ‘மற்றவை நேரில்’, ‘ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’, ‘நன்றி மீண்டும் வருக’ ஆகிய படங்களிலும் பாலாசிங்கிற்கு சிறு சிறு வாய்ப்புகளைத் தந்தார் மெளலி.

ரகுவரனின் முதல் படம் ‘ஏழாவது மனிதன்’. அதில் அவருடைய நண்பராக பாலாசிங் நடித்தார். ராஜன் சர்மா இயக்கிய ‘யாரோ அழைக்கிறார்கள்’ படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக பாலாசிங் நடித்தார். கண்ணம்மாபேட்டையில் பாலாசிங் தங்கியிருந்த ஓலைக் குடிசையை அவருடைய நண்பர் ஒருநாள் திடீரென்று காலி செய்து விட்டார். அப்போது பாலாசிங் ஊரில் இல்லை. நண்பர் அந்த விஷயத்தை கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். ஊரிலிருந்து திரும்பி வந்தபோது, பாலாசிங்கின் ஆடைகள் வைத்திருந்த சூட்கேஸ் பக்கத்து வீட்டில் இருந்தது. அதை வாங்கிய பாலாசிங் அடுத்து போய் தங்கியது எழுத்தாளர் ஞாநியின் வீட்டில். அங்குதான் பல வருடங்கள் அவர் தங்கியிருந்தார். பகல் நேரத்தில் நடிப்பு வாய்ப்புக்காக அலைவது, இரவு நேரத்தில் சில நேரங்களில் மது அருந்திவிட்டு பன்னிரண்டு மணி... ஒரு மணிக்குக் கூட வந்து கதவைத் தட்டுவது... அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கூட சிறிதும் முகம் கோணாமல் நட்பு பாராட்டிய ஞாநியையும், அவருடைய மனைவி பத்மாவையும் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் பாலாசிங்.

‘பரீக்ஷா’ வின் மாறுபட்ட நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, டாக்டர் ருத்ரனின் ‘முத்ரா’ நாடகக் குழு நடத்தும் நாடகங்களிலும் நடிக்க பாலாசிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குழு நடத்திய இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒளரங்கசீப்’ நாடகத்தில் ஒளரங்கசீப்பாக நாசர் நடிக்க, அவரின் தம்பி தாராவாக பாலாசிங் நடித்தார். அந்தக் கால கட்டத்தில் பாலாசிங்கிற்கு அறிமுகமானவர்தான் நாசர்.

மலையாளத்தில் பிரபல இயக்குநராக இருந்த பி.என்.மேனன் இயக்கிய ‘மல முகளிலே தெய்வம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு பாலாசிங்கிற்குக் கிடைத்தது. அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அர்ச்சனா. அந்தப் படத்திற்கு விருது கிடைத்தது.

தொடர்ந்து ‘தூரம் அதிகமில்லை’ படத்திலும், ‘உயரும் ஞான் நாடாகெ’, ‘தடவறையிலே ராஜாக்கன்மார்’, ‘ஜங்கில் ராணி’ படங்களிலும் அவர் நடித்தார். ஞாநி சென்னைத் தொலைக்காட்சிக்காக இயக்கிய ‘விண்ணிலிருந்து மண்ணுக்கு’ வார தொடருக்கு பாலாசிங் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணி புரிந்திருக்கிறார். ‘ஜாதிமான்’ என்ற படத்திற்கும் ‘மானச மயினே வரூ’ என்ற மலையாளப் படத்திற்கும் பாலாசிங்தான் தயாரிப்பு நிர்வாகி. பி.எஸ்.தரன் இயக்கி, நாசர் கதாநாயகனாக நடித்த ‘மிஸ்டர் பிரசாத்’ படத்திலும் பாலாசிங் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தோள் பையுடன் அலைந்து கொண்டிருக்கும் பாலாசிங்கை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படியே பன்னிரெண்டு வருடங்கள் ஓடி விட்டன. நாடகங்களிலும், படங்களிலும் அவ்வப்போது நடித்தாலும், ஒரு பெரிய நிலைக்கு தன்னால் வர முடியவில்லையே என்ற மனக்குறை பாலாசிங்கிற்கு இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால் சுமார் ஒரு மணி நேரம் தி.நகர் பாண்டிபஜாரில் நடந்து கொண்டே தன்னுடைய நிலையை மிகவும் கவலையுடன் என்னிடம் வெளிப்படுத்தினார் பாலாசிங்.

திருவல்லிக்கேணியில் தன்னுடைய ஊரைச் சேர்ந்த போலீஸ்காரர்களுடன் மேன்ஷனில் தங்கிக் கொண்டு, பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்த அனுபவமும் பாலாசிங்கிற்கு உண்டு.

சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத பாலாசிங் சொந்த ஊருக்கே ஒருநாள் சென்று விட்டார். 1992ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் நடந்தது. குழந்தையும் பிறந்தது. மூன்று வருடங்கள் ஊரிலேயே இருந்தார். அப்போது நாசரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அடுத்த சில நாட்களில் நாசரே அங்கு வந்து விட்டார். தான் இயக்க இருக்கும் ‘அவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்கும்படி அவர் பாலாசிங்கிடம் கூறினார். எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் சென்னைக்கு மீண்டும் வந்த பாலாசிங், ‘அவதாரம்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் திரைக்கு வந்தபோது எல்லோராலும் பேசப்பட்டார். பாலுமகேந்திரா நாசருக்கு ஒரு பெரிய பாராட்டுக் கடிதமே எழுதினார். பாலாசிங்கின் நடிப்பை ரேவதி, ஸ்ரீவித்யா ஆகியோர் மனம் திறந்து பாராட்டினர். நடிகர் சிவகுமார் படத்தைப் பார்த்து விட்டு பாலசிங்கை ஒரு தெருக்கூத்து கலைஞன் என்றே நினைத்திருக்கிறார்.

‘பொற்காலம்’, ‘இந்தியன்’, ‘முனி’, ‘ரெண்டு,’ ‘ராமன் அப்துல்லா’, ‘ஆனந்தப் பூங்காற்றே’, ‘புதுப்பேட்டை’, ‘தங்கம்’, ‘பீமா’, ‘பிரிவோம் சந்திப்போம்’ என்று தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார் பாலாசிங். ‘சூலம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’ டி.வி. தொடர்களில் நடித்த பாலாசிங் இளையபாரதி இயக்கிய கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ டி.வி தொடரில் நடித்தார். அதில் அவர் நடித்த ‘உறங்காப் புலி’ என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததாக கலைஞரே அவரைப் பாராட்டியிருக்கிறார்.

அழகப்பன் சி. இயக்கிய ‘வண்ணத்துப்பூச்சி’ படத்தில் மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் பாலாசிங்.  ‘உளியின் ஓசை’ படப்பிடிப்பின்போது நானும் பாலாசிங்கும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அதில் பிரம்மராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் பாலாசிங். முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் பார்த்த பாலாசிங் அப்போது என் ஞாபகத்தில் வந்தார்.

பாலாசிங்கின் குடும்பம் இப்போது அவருடைய ஊரில்தான் இருக்கிறது. வடபழனியில் ஒரு வாடகை வீட்டில் இருந்து கொண்டு பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலாசிங். ‘ஒரு மனிதனுக்கு நல்ல விஷயங்கள் அனுபவிக்க வேண்டிய வயதில் நடக்க வேண்டும். காலம் கடந்து நடக்கும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமலே போய் விடுகிறது’ என்றார் பாலாசிங்- என்னிடம். அந்த வார்த்தைகளில்தான் எவ்வளவு பெரிய உண்மை மறைந்திருக்கிறது!


இந்த இசையமைப்பாளர் முன்னால்... ஹாரிஸ் ஜெயராஜ் பின்னால்...

சுரா

திருவாரூருக்கு அருகில் இருக்கும் அணக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் அமுதபாரதி. ஆனால், அப்போது அவருடைய பெயர் மோகன். பள்ளியில் படிக்கும்போதே இசையிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகம். பள்ளி விழாக்களில் பாடுவார். கட்டாயம் முதல் பரிசு அவருக்குத்தான். அதனால் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர். மிகவும் அருமையாக பாடல்களைப் பாடியதற்காக அவர் பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

பி.எஸ்ஸி. வேதியியல் பட்டதாரியான அவர் 1986ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். சென்னைக்கு வந்ததற்கு முக்கிய காரணமே படவுலகில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற நோக்கம்தான். அவருடைய உறவினர்களும், நண்பர்களும் சென்னைக்கு சென்றால்தான் மனதில் நினைக்கிற மாதிரி பெரிய ஆளாக வர முடியும் என்று அவருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். அந்த ஆர்வத்துடன் சென்னை மண்ணில் கால் வைத்த அவர் கர்நாடக இசையை முறைப்படி கற்க வேண்டும் என்று நினைத்தார். அப்போது கர்நாடக இசையைக் கற்றுக் கொடுப்பதில் மிகவும் பிரபலமாக இருந்த திருவையாறு கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ஆறு ஆண்டுகள் கர்நாடக இசையை அவர் முறைப்படி கற்றார்.

கர்நாடக இசையுடன் நின்றுவிடக் கூடாது, மேற்கத்திய இசையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். மைலாப்பூரில் இளையராஜா மேற்கத்திய இசையைக் கற்ற தன்ராஜ் மாஸ்டரின் பெயரில் ஒரு இசை கற்பிக்கும் பள்ளியை அப்துல் சத்தார், ஜெகதீசன் என்ற இருவர் நடத்திக் கொண்டிருந்தார்கள். லண்டன் ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கிற்காக அங்கு அவர் மேற்கத்திய இசையைக் கற்றார். அவருடைய இசைத் திறமையைப் பார்த்து அவ்விருவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஆரம்பத்திலேயே இரண்டாவது கிரேடில் தேர்ச்சி பெற்ற அவர் அடுத்து நான்காவது கிரேடிற்குத் தாவினார். அப்துல் சத்தாருக்கு அவர் மீது முழுமையான நம்பிக்கை. இருந்தாலும், ஜெகதீசனுக்கு அது பிடிக்கவில்லை. படிப்படியாக போவதுதான் சரி என்றார் அவர். வேகமாக தாவி, தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியாது என்றார் ஜெகதீசன். ஆனால், தான் நிச்சயம் மற்றவர்களைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குவேன் என்றார் அமுதபாரதி. சொன்னதைப் போலவே, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினார். தன்னுடைய சவாலில் வெற்றி பெற்றதைக் கூற வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜெகதீசனைத் தேடிப் போனார் அமுதபாரதி. ஆனால், அதற்கான வாய்ப்பை ஜெகதீசன் தரவில்லை. அதற்கு முந்தைய நாள்தான் ஹார்ட் அட்டாக்கில் அவர் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டார் அமுதபாரதி. அவர் மேற்கத்திய இசை கற்ற இடத்தில், இசை கற்க வந்தவர்தான் இப்போதைய பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

தொடர்ந்து ஜேக்கப் ஜான் என்பவரிடம் பியானோ இசைப்பதையும் அமுதபாரதி கற்றார்.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை, பியானோ ஆகியவற்றைக் கற்றாகிவிட்டது- இனிமேல் திரைப் படங்களுக்கு இசையமைக்க முயற்சிக்கலாம் என்று களத்தில் இறங்கினார். ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் எப்படி இசையமைக்கிறார் என்று அமுதபாரதி அருகில் இருந்து கொண்டு பார்த்தார். எம்.எஸ்.வி.யிடம் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போதே எம்.எஸ்.வி.க்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு பல முறைகள் அவர் எம்.எஸ்.வி.யைப் பார்த்திருக்கிறார். அமுதபாரதியை மெட்டுகள் போடச் சொல்லி எம்.எஸ்.வி. கேட்டிருக்கிறார். மிகவும் அருமையாக அவர் ட்யூன்கள் போடுவதை, மனம் திறந்து எம்.எஸ்.வி. பாராட்டியிருக்கிறார்.

இளையராஜா ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் அவர் நுழைய முயற்சித்திருக்கிறார். ஆனால், வெளியே இருந்த காவலாளி உள்ளே விடவில்லை. அதற்காக அவர் மனம் தளரவில்லை. வெளியே வந்த இளையராஜாவிடம், பாடல் பதிவு நடப்பதை தான் பார்க்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். இளையராஜா உள்ளே போய் உட்காரச் சொல்லியிருக்கிறார். இளையராஜாவின் அந்தப் பண்பு தன்னை மிகவும் கவர்ந்து விட்டது என்கிறார் அமுதபாரதி.

அவருக்கு திரைப்படத்திற்கு இசையமைக்கும் முதல் வாய்ப்பைத் தந்தவர் பியாரிலால் ஜெயின் என்ற தயாரிப்பாளர். 1998ஆம் ஆண்டில் அவர் தயாரித்த ‘ரத்னா’ என்ற படத்திற்கு அவர் இசையமைத்தார்.  அப்போது மோகன் என்ற தன் பெயரை சினிமாவிற்காக ஜெயசூர்யா என்று மாற்றி வைத்துக் கொண்டார். முரளி, சங்கீதா, ரேவதி ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் ‘வாடிப்பட்டி வடுகபட்டி’ என்ற பாடலை அவர் எழுதவும் செய்தார். தொடர்ந்து அதே தயாரிப்பாளர் தயாரித்த ‘முள்ளில் ரோஜா’ என்ற படத்திற்கும் அவர் இசையமைத்தார்.

மோகன் என்ற தன் பெயரை ஜெயசூர்யா என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தவர் மூன்றாவதாக அமுதபாரதி என்று இப்போது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அமுதபாரதி என்ற பெயரைச் சூட்டியவர் நியூமராலாஜி நிபுணர் சி.வி.ராஜராஜன். டி.ராஜேந்தரை விஜய டி.ராஜேந்தராக மாற்றியவர் இதே ராஜராஜன்தான்.

கடந்த வருடம் அமுதபாரதி ‘கண்ணா நீ எனக்குத்தான்டா’ என்ற படத்திற்கு இசையமைத்தார். ஒளிமாறன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அவற்றில் ஐந்து பாடல்களை அமுதபாரதியே எழுதியிருக்கிறார். செந்தில்நாதன் இயக்கும் ‘காதல் மொழி’ என்ற படத்திற்கு அவர் தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்திற்குப் பிறகு ராஜகுமாரன் இயக்க, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருந்த படத்திற்காக அமுதபாரதி எல்லா ட்யூன்களையும் போட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால், லட்சுமி மூவி மேக்கர்ஸ் அந்தப் படத்தைத் தயாரிக்கவில்லை. அதே கதையை ‘காதலுடன்’ என்ற பெயரில் சொந்தமாக தயாரித்தார்கள் தேவயானியும், ராஜகுமாரனும். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். ஆனால், அமுதபாரதியின் நான்கு பாடல்களின் ட்யூன்களையும், பாடல் வரிகளையும் அப்படியே பயன்படுத்திக் கொண்டாராம் ராஜகுமாரன். போட்ட மெட்டுகளை அப்படியே கையாண்ட ராஜகுமாரன் வெறுமனே பாடல்கள் எழுதியவர் என்று மட்டும் தன்னுடைய பெயரை இடம் பெறச் செய்தது குறித்து அமுதபாரதி வருத்தப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

‘ரத்னா’ படத்தின்போது எனக்கு அறிமுகமான அமுதபாரதியிடம் இன்றைய முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களைத் தரும் அளவிற்கு அபார திறமை இருக்கிறது. படவுலகம்தான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


மு.க.ஸ்டாலினுக்கு வசனம் சொல்லி கொடுத்தவர்!

சுரா

நான் அறந்தாங்கி சங்கரைப் பார்த்தது 1988ஆம் ஆண்டில். அப்போது அவர் ஒரு திரைப்பட இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் எறும்பைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த சங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்ற கனவுடன் எம்.காம். முடித்துவிட்டு சென்னையைத் தேடி வந்தவர் அவர். தினத்தந்தி, தினமலர், இதயம் பேசுகிறது, தாய் என பல பத்திரிகைகளிலும் சிறுகதைகள் எழுதியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

அதற்குப் பிறகு நான் அவரைப் பார்த்தது வி.சி.குகநாதனின் அலுவலகத்தில். வி.சி.குகநாதன் தயாரித்த 'முதலாளியம்மா', 'முதல் குரல்' ஆகிய படங்களில் வசன உதவியாளராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஏராளமான விளம்பரப் படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். சென்னைத் தொலைக்காட்சியில் மனோரமா நடித்து ஒளிபரப்பான 'அன்புள்ள அம்மா', மு.க. ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கிய நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', பட்டுக்கோட்டை பிரபாகரின் கதையான 'பரத் சுசீலா' குட்டி பத்மினி தயாரித்த 'வைஷாலி' போன்ற பல தொடர்களிலும் உதவி இயக்குநராக சங்கர் பணியாற்றினார்.

தன்னுடைய பல வருட தொலைக்காட்சித் தொடர் அனுபவங்களை வைத்து விக்கிரமனின் கதையான 'நிம்மதி', ஆர்.வி. எழுதிய ‘வெள்ளிக்கிழமையில் ஒரு கன்னிப் பெண்', வையவன் எழுதிய ‘ஆண்மை’, வல்லிக்கண்ணன் எழுதிய 'அருமையான துணை', கே.பி. நீலமணி எழுதிய 'ஓடும் ரயிலில் ஒரு சரணாகதி' ஆகிய தொடர்களை சங்கர் சொந்தத்தில் தயாரித்தார்.

'மெட்டி ஒலி' திருமுருகனை இயக்குநராகப் போட்டு 1998 ஆம் ஆண்டில் சங்கர் தயாரித்த 13 வார தொடர் 'கோகுலம் காலனி'. அது சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் 33 வாரங்கள் ஒளிபரப்பான 'அப்பு குப்பு' என்ற தொடரை அவர் தயாரிக்க, கே.எம்.பாலகிருஷ்ணன் இயக்கினார். தொடர் முழுக்க வரும் ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் 'மெட்டி ஒலி' திருமுருகனும், பாண்டு என்ற கதாபாத்திரத்தில் சங்கரும் நடித்தார்கள்.

இவை தவிர சில தொடர்களுக்கு கதை, வசனம் எழுதி சங்கரே இயக்கவும் செய்தார்.

நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பல பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் சங்கரை நான் அவ்வப்போது பார்ப்பேன். ஆரம்பத்தில் நான் பார்த்த அதே சுறுசுறுப்பான சங்கராகவே எப்போதும் அவர் என் கண்களில் படுவார்.

தொலைக்காட்சித் தொடர்களில் பிஸியாக இருந்த காலகட்டத்திலேயே 'தமிழரசி' பத்திரிகையில் ரிப்போர்ட்டராகவும் அவர் பணியாற்றினார். ஒரு கவிதைத் தொகுப்பையும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், சிறுவர்களுக்கான இரண்டு புதினங்களையும், ஒரு வாழ்வு முன்னேற்ற நூலையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

எடிட்டர் லெனினை இயக்குநராகப் போட்டு, 'செடியும் சிறுமியும்' என்ற குறும்படத்தை அவர் தயாரித்திருக்கிறார். சங்கர் எழுதிய 'பூச்சி அரித்த கன்று' என்ற சிறுகதை தமிழக அரசு வெளியிட்ட 8ஆம் வகுப்பிற்கான தமிழ்த் துணைப்பாட நூலில் இடம் பெற்றுள்ளது.

நெப்போலியன் கதாநாயகனாக நடித்த 'தாமரை', முரளி கதாநாயகனாக நடித்த 'தொண்டன்' ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் சங்கர் நடித்திருக்கிறார்.

ஏக்நாத்தின் ஆடியோ, வீடியோ நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர் 'விஷன் டைம்' ராமமூர்த்தியிடம் 7 வருடங்கள் மார்க்கெட்டிங் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். அதில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். கலைஞரின் 'தென்பாண்டிச் சிங்கம்' தொடரின் மார்க்கெட்டிங்கிற்கு உதவியாக இருந்தவரே சங்கர்தான்.

சென்னைத் தொலைக்காட்சியில் 520 நாட்கள் ஒளிபரப்பான 10 நிமிட நிகழ்ச்சியான 'காமெடி  பார்க்-காமெடி ஸ்பெஷல்' எல்லோரையும் கவர்ந்த ஒன்று. அதைத் தயாரித்தவர் சங்கர்.

இதுவரை சங்கர் எழுதிய சிறுகதைகள் 90. அவை பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன.

அவர் நடித்திருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் 45.

பல வருடங்களுக்கு முன்னால் நான் சங்கரை மட்டுமே பார்த்தேன். அதற்குப் பிறகு அவரது மொத்த குடும்பத்தையும் பார்த்து விட்டேன். குடும்பத்தில் சங்கர்தான் மூத்தவர். அவருக்குப் பின்னால் நான்கு தம்பிகளும், ஒரு தங்கையும் இருக்கிறார்கள். சங்கர் தன் கால்களை கலைத் துறையில் சற்று பலமாக ஊன்றிய பிறகு, அவருடைய குடும்பமே சென்னைக்கு வந்துவிட்டது. அவரது முயற்சியால் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தன்னுடைய கடுமையான உழைப்பால் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொந்தத்தில் வீடு வாங்கி, சங்கர் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூத்த மகன் கடுமையாக உழைத்தால், அவனுடைய மொத்த குடும்பமும் நல்ல நிலைமைக்கு வந்துவிடும் என்பதை நான் அவர் மூலம் தெரிந்து கொண்டேன். அதை நான் ஒரு நாள் சங்கரின் தந்தையிடம் சொன்னபோது, அவருடைய முகத்தில் தெரிந்த புன்னகையையும், பெருமிதத்தையும் பார்க்க வேண்டுமே!

தன்னுடைய பல வருட கலையுலக அனுபவங்களை வைத்து எதிர்காலத்தில் சொந்தத்தில் படம் எடுக்கும் எண்ணம் சங்கருக்கு இருக்கிறது. நல்ல திறமையான இளைஞர்களை இயக்குனராகப் போட்டு, படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அதற்கு முன்னால் தொலைக்காட்சி மார்க்கெட்டிங்கில் தனக்கு இருக்கும் பல வருட அனுபவங்களை வைத்து ஒரு பெரிய மார்க்கெட்டிங் நிறுவனத்தை விரைவில் சொந்தத்தில் ஆரம்பிக்கும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. அதன் மூலம் பலருக்கும் உதவ முடியுமே என்ற எண்ணமே அதற்கு காரணம்.

சங்கருக்கு ஆன்மிக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது தனியாகவும், குடும்பத்துடனும் தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கும் போய்க்கொண்டிருப்பார். மூன்று வருடங்களுக்கு முன்பு என்னை அவர் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். என்ன அருமையான கோவில்! என் வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவம் அது.

சங்கரும் நானும் அவ்வப்போது நேரில் சந்திப்போம். நேரில் சந்திக்க முடியாத நேரங்களில், தொலைபேசியில் உரையாடுவோம். சங்கர் இப்போது சென்னை நகரத்தின் ரயில் நிலையங்களிலும், தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களின் பேருந்து நிலையங்களிலும் விளம்பர போர்டுகள் வைக்கும் ஏஜென்ஸியைச் சொந்தத்தில் வைத்திருக்கிறார்.

அறந்தாங்கி சங்கரின் தந்தை சமீபத்தில் காலமாகிவிட்டார். அயல்நாட்டிலிருந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரு.லேகா ரத்னகுமாரிடம் சங்கரின் தந்தை காலமான செய்தியை நான் கூறினேன். அதற்காக வருத்தப்பட்ட அவர் ‘அறந்தாங்கி சங்கரைப் பற்றி நம் லேகாபுக்ஸ் (lekhabooks.com) இணைய தளத்தில் உடனடியாக பதிவு செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையிட்டார். அதன் விளைவாகவே இந்தக் கட்டுரையை நான் உடனடியாக இங்கு பதிவு செய்கிறேன்.

தொழிலில் மிகுந்த கவனத்துடன், முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிச்சயம் யாராலும் வெற்றி பெற முடியும். அதற்கு அறந்தாங்கி சங்கரே ஒரு எடுத்துக்காட்டு. தனி மனிதராக வந்து, இன்று ஒரு குடும்பத்திற்கே ஆலமரமாக இருக்கிறாரே! அது எவ்வளவு பெரிய விஷயம்!


மஞ்சள் நிற பைக்குள் கதைகளை வைத்துக் கொண்டு சாலைகளில் அலையும் இயக்குநர்!

சுரா

1980ஆம் ஆண்டில் 'கரை கடந்த ஒருத்தி' என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. அப்படத்தை இயக்கியவர் மாந்துறை பாபுஜி. வனிதாஸ்ரீ என்ற புதுமுகம் அதில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காதல் கதை அது. ஆரம்பத்தில் 'கரை கடந்த குறத்தி' என்றுதான் அதற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைக்குழு அந்தப் பெயரை அனுமதிக்க மறுத்துவிட்டது. அதனால் படம் திரைக்கு வருகிற நேரத்தில் 'கரை கடந்த ஒருத்தி' என்று பெயரை மாற்றி விட்டார்கள். படத்தில் இடம் பெற்ற, எம்.ஜி.வல்லபன் எழுதிய 'ஓடத்துல தண்ணீரு...' பெண்ணொருத்தி கண்ணீரு' என்ற அருமையான பாடலை எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் மறக்கத்தான் முடியுமா?

அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏதோ பெரிய ஒரு சாதனையை அந்தப் படம் செய்யப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். தணிக்கைக் குழுவினர் பல இடங்களில் குதறிவிட்டிருந்ததாலோ என்னவோ, அந்தப் படம் திரைக்கு வந்தபோது சரியாக ஓடவில்லை. எனினும், மாந்துறை பாபுஜி என்ற இயக்குநரின் பெயர் என் மனதில் அப்போதே ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், அவரை நான் நேரில் பார்த்ததில்லை.

தான் இயக்கிய முதல் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனதால், அடுத்த வாய்ப்புக்காக மாந்துறை பாபுஜி பலமாக முயற்சி செய்து பார்த்திருக்கிறார். வாய்ப்புதான் கிடைக்கவில்லை. இந்த முயற்சிகளில் ஐந்து வருடங்கள் மிகவும் வேகமாக ஓடிவிட்டன. 1985ஆம் வருடத்தில் அவர் ஒரு முயற்சியில் இறங்கினார். தஞ்சாவூர் பகுதியில் உள்ள சில இளைஞர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கினார். 16 எம்.எம்.மில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தின் பெயர் 'சக்சஸ்'. இந்தத் தகவலை அப்பகுதியில் இருக்கும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்து சொன்னான்.

அப்போது நான் 'வண்ணத்திரை' வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். மாந்துறை பாபுஜி பல இளைஞர்களிடமும் பணம் வசூல் செய்து படத்தை இயக்கும் விஷயத்தை மூன்று பக்கங்கள் வரக்கூடிய ஒரு கட்டுரையாக நான் எழுதிவிட்டேன். என் பெயருக்குப் பதிலாக புனைப்பெயர் ஒன்றைப் போட்டிருந்தேன். இறுதியில் கட்டுரையை முடிக்கும்போது 'மாந்துறை பாபுஜி தான் இயக்கும் படத்திற்கு 'சக்சஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார். பலரிடமும் பணம் வாங்கிய விஷயத்தில் தான் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இவர் அந்தப் படத்திற்கு 'சக்சஸ்' என்று பெயர் வைத்திருப்பாரோ?' என்று எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரை வெளியாகி பல வருடங்களுக்குப் பிறகு நானும் மாந்துறை பாபுஜியும் ஒரு ஸ்டூடியோவில் சந்தித்தோம். என்னிடம் மிகவும் அன்பாக பேசினார் பாபுஜி. அந்த முதல் சந்திப்பிலேயே என் மனதில் பாபுஜி நல்ல ஒரு இடத்தைப் பிடித்து விட்டார்.

'கரை கடந்த ஒருத்தி' படத்திற்குப் பிறகு, தான் படவுலகில் காலை ஊன்றுவதற்காக மிகவும் சிரமப்பட்டு போராடிக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். உள்ளுக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடனேயே பேசுவார் பாபுஜி என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவருடன் உரையாடிக்  கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்து நான் புன்னகைத்தேன். என் புன்னகைக்கு காரணத்தை அவர் கேட்டார். நான் அவரைப் பற்றி 'சக்சஸ்' படம் எடுக்கும்போது பத்திரிகையில் எழுதியதைக் குறிப்பிட்டு, 'அதை எழுதியது நான்தான்' என்றேன்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாபுஜி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னைப் பார்த்து 'அந்தக் கட்டுரையால் எனக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகிவிட்டது தெரியுமா? எனக்கு மிகப் பெரிய அவமானத்தை அது தேடித் தந்துவிட்டது. அந்தக் கட்டுரை வந்தபிறகு, படம் வளராமல் அப்படியே நின்றுவிட்டது' என்றார். அதைக் கேட்டு எனக்கு வருத்தம் உண்டானது. 'இவ்வளவு நல்ல மனிதரான உங்களைப் பற்றியா நான் அப்படி எழுதினேன் என்பதை நினைக்கும்போது எனக்கும் மனதில் சங்கடமாகத்தான் இருக்கிறது' என்றேன் நான்.

அதற்குப் பிறகு பாபுஜிக்கும் எனக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உண்டானது. பாபுஜியை நான் 'அண்ணன்' என்றுதான் அழைப்பேன். ஆரம்பத்தில் 'வாங்க... போங்க... ' என்று மரியாதையுடன் என்னை அழைத்துக் கொண்டிருந்த அவர் காலப்போக்கில் 'நீ... வா... போ...' என்று ஒருமையில், உரிமையுடன் அழைக்க ஆரம்பித்தார். அவர் அப்படி அழைப்பது எனக்குப் பிடித்திருந்தது.

எப்படியோ ஒரு தயாரிப்பாளரை வலை வீசிப் பிடித்து விட்டார் பாபுஜி. முரளி-சித்தாராவை வைத்து 'வழி பிறந்தது' என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்கினார். முக்கால் பகுதி முடிவடைந்துவிட்ட அந்தப் படம் என்ன காரணத்தாலோ, அப்படியே நின்றுவிட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு மாந்துறை பாபுஜியின் வலையில் இன்னொரு தயாரிப்பாளர் மாட்டினார். நெப்போலியனைக் கதாநாயகனாகப் போட்டு 'கிழக்குப் பக்கம் காத்திரு' என்ற படத்தை பாபுஜி இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்தப் படத்தின் கதாநாயகி ரேகா. படப்பிடிப்பின்போது அடிக்கடி பாபுஜியை நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன். பாதி வரை வளர்ந்த அப்படம், பணத்தட்டுப்பாட்டால் அப்படியே நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி தெருக்களில் மாந்துறை பாபுஜியை அவ்வப்போது பார்ப்பேன். மஞ்சள் பையைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் வெயில், மழை பார்க்காமல்  அவர் நடந்து போய்க் கொண்டிருப்பார். அந்தப் பைக்குள் பல கதைகளும், திரைக்கதைகளும் இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு எதிரில் அவரைப் பார்த்தேன். ஒரு துணிப் பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். 'உன்னை நான் தேடிக்கிட்டு இருக்கேன்பா... ஒரு தயாரிப்பாளர் கிடைச்சிருக்காரு. என்கிட்ட ஒரு அருமையான கதை இருக்கு. திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். இந்தக் கதைக்கு சத்யராஜ்தான் பொருத்தமா இருப்பாரு. அவரை நான் சந்திக்க நீ உதவ முடியுமா?' என்றார் பாபுஜி. 'வால்டர் வெற்றிவேல்', 'அமைதிப்படை', 'தாய்மாமன்', 'மாமன் மகள்' என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து சத்யராஜ் புகழின் உச்சியில் இருந்த நேரமது. மாந்துறை பாபுஜி மீது எனக்கு அப்போது பரிதாபம்தான் உண்டானது. அது சிறிது கூட நடக்காத விஷயம் என்பதால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை.

அதற்குப் பிறகு வருடங்கள் பல கடந்தோடி விட்டன. மாந்துறை பாபுஜி என் கண்களிலேயே படவில்லை. காலப் போக்கில் வேலை நெருக்கடியில் நானும் அவரை மறந்துவிட்டேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு அமைந்தகரை லட்சுமி திரை அரங்கிற்கு முன்னால் பாபுஜியை நான் பார்த்தேன். அது ஒரு இரவு நேரம். நான் எதிர்த்திசையில் ஆட்டோவில் அவசரமாகப் போய்க் கொண்டிருந்ததால், அவருடன் என்னால் பேச முடியவில்லை. பாலித்தீன் பையில் பிரியாணியோ, புரோட்டாவோ எதோவொன்றை பார்சலாக வாங்கிக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். அவருடைய வீடு அந்தப் பகுதியில் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு பாபுஜி ஒரு நாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கே.கே.நகரில் உள்ள ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் அலுவலகத்தில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். ‘படம் இயக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன்பா... தயாரிப்பாளர் ஒருத்தர் கூட மாட்டல... குடும்பச் செலவுக்கு ஏதாவது சம்பாதிச்சு ஆகணுமே! நம்மால, வீட்டுல இருக்குறவங்க ஏன் தேவையில்லாம சிரமப்படணும்? அதனால இந்த வேலையில வந்து சேர்ந்துட்டேன். மாசாமாசம் ஏதோ கொஞ்சம் பணம் வருது. அதை வச்சு குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்’ என்றார் பாபுஜி என்னிடம்.

அதற்குப் பிறகு பாபுஜி என் கண்களில் தென்படவில்லை. எனினும், விஜய்க்காகவோ, அஜீத்திற்காகவோ, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, பரத், ஜெயம் ரவி, விஷால், விமல், விஷ்ணு, விக்ரம் பிரபு ஆகியோருக்காகவோ பல கதைகளை தயார் பண்ணி, தன் கையில் இருக்கும் மஞ்சள் நிற பைக்குள் அவர் வைத்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.


 சிரமப்பட்ட இயக்குநருக்கு பண உதவி செய்தார் கே.எஸ்.ரவிக்குமார்!

சுரா

ந்திரகுமாரை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். உடன்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரகுமாருக்கு படத் துறையின் மீது தீராத காதல். எப்படியும் இயக்குநராகி விட வேண்டும் என்ற வெறியுடன் சென்னையில் கால் பதித்திருந்தார்.

எப்போது பார்த்தாலும், நின்று என்னுடன் பேசுவார். சந்திக்கும் சில நிமிடங்களில் தன் கை வசம் இருக்கும் கதைகளில் ஒன்றிரண்டைக் கூறுவார். அவர் கதை கூறுவதும், காட்சிகளை விவரிப்பதும் ரசிக்கும்படி இருக்கும்.

பாலு ஆனந்த் இயக்குநரான பிறகு, அவர் இயக்கிய படங்களில் அசோசியேட் டைரக்டராக சந்திரகுமார் பணியாற்றினார். ‘ரசிகன் ஒரு ரசிகை’, ‘நானே ராஜா நானே மந்திரி’ ஆகிய படங்களில் அவர் பணி புரியும்போது அவரை நான் பார்த்திருக்கிறேன். ‘நீங்களும் திரைக்கதாசிரியர் ஆகலாம்’ என்று ஒரு புத்தகத்தை அப்போது அவர் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் பல அருமையான தகவல்களை கூறியிருந்தார்.

அப்போதிருந்தே என் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார். தான் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர். படங்களின் காட்சிகளை பிரித்துப் பிரித்துக் கூறி அலசுவார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, தேவ் ஆனந்த், ராஜ்கபூர் ஆகியோர் நடித்த பழைய இந்திப் படங்களைப் பற்றிக் கூறி, அந்தப் படங்களின் கதைகளை நேரம் போவதே தெரியாமல் விவரித்துக் கொண்டிருப்பார். சந்திரகுமாருடன் ஒரு மணி நேரம் பேசினால், எப்போதோ திரைக்கு வந்த பல பழைய படங்களின் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். பழைய படங்களின் கதைகளைக் கூறுவதுடன் நிற்காமல், கதையை இந்த மாதிரி மாற்றி இப்போது இருக்கும் பாணிக்கு ஏற்றபடி பண்ணினால் வெற்றி பெறும் என்பார்.

சிலருக்கு கதை எழுத வரும். ஆனால், அதை சுவாரசியமாக சொல்லத் தெரியாது. சந்திரகுமாருக்கு மிகவும் அருமையாக கதையை வாயால் சொல்லத் தெரியும். அவர் ஒரு மணி நேரம் தான் தயார் பண்ணி வைத்திருக்கும் கதையைக் கூறுகிறார் என்றால், கதை கேட்டு கொண்டிருப்பவர்களில் ஒருவர் கூட எழுந்து போக மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் ஈடுபாட்டுடன் அவர் கதையைக் கூறுவார். கதையைக் கேட்டு முடித்த பிறகு ‘கதை நன்றாக இருக்கிறதே!’ என்று எல்லோர் மனதிலும் தோன்றும். அப்படியொரு சிறந்த கதை கூறும் மனிதராக சந்திரகுமார் இருந்தார்.

பல படங்களிலும் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய சந்திரகுமார், தனித்து படங்களை இயக்குவதற்காக முயற்சித்தார். பல நிறுவனங்களிலும் ஏறி இறங்கினார். முரளி – குஷ்பு நடிக்க ‘சூரிய நமஸ்காரம்’ என்ற படத்தின் இயக்குநர் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘வருஷம் 16’ திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் குஷ்பு இளவரசியாக உலாவிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது.  என்ன காரணத்தாலோ ஒருநாள் படம் திடீரென்று நின்றுவிட்டது. பணப் பிரச்னை என்று சிலர் சொன்னார்கள். உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. 80 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்ட ஒரு படம் அப்படியே நின்று போனால், அதை இயக்கிய இயக்குநரின் மனம் என்ன பாடுபடும்? ‘சூரிய நமஸ்காரம்’ ‘திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடும், தமிழ்ப் பட உலகில் நாம் ஒரு இயக்குநராக கம்பீரமாக உலா வரலாம்’ என்ற கற்பனையில் மிதந்து கொண்டிருந்த சந்திரகுமாரின் ஆசையில் மண் விழுந்தது. படத்தை நகர்த்துவதற்காக என்னென்னவோ செய்து பார்த்தார். முடியவில்லை. முதல் படத்தின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ற மன வேதனையில் உழல ஆரம்பித்து விட்டார் சந்திரகுமார்.

அதற்குப் பிறகு அவரை பல இடங்களிலும் நான் பார்ப்பேன். முன்பிருந்த உற்சாகம் அவரிடம் சிறிது கூட இருக்காது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவரைப் போல இருப்பார்.

எவ்வளவு நாட்களுக்கு தனக்கு ஏற்பட்ட இழப்பையே ஒரு மனிதன் நினைத்துக் கொண்டிருக்க முடியும்? ‘இயக்குநர் வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கலாம். அதற்கு முன்னால் சில கதைகளை உருவாக்கி மற்றவர்களுக்குத் தரலாம்’ என்ற முடிவுக்கு சந்திரகுமார் வந்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சந்திரகுமாருக்கு மிகவும் நெருங்கிய நண்பர். ரவிகுமார் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்திலேயே சந்திரகுமாருக்கும் அவருக்கும் நல்ல பழக்கம். ரவிகுமார் இயக்கும் படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொள்வார் சந்திரகுமார். ராமராஜன் கதாநாயகனாக நடித்த ‘ராஜா ராஜாதான்’ படத்திற்கு சந்திரகுமார் வசனம் எழுதினார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்க, சரவணன் கதாநாயகனாக நடித்த ‘சூரியன் சந்திரன்’ என்ற படத்திற்கு சந்திரகுமார்தான் கதை - வசனகர்த்தா. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘பேண்ட் மாஸ்டர்’ படத்திற்கு கதை, வசனம் எழுதினார். ‘சூரியன்’ படம் திரைக்கு வந்து, சரத்குமார் மக்களால் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரமது. பிரபல படத் தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்பிரமணியம் அந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திரைக்கு வந்தபோது, வர்த்தக ரீதியாக ஓடவில்லை. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ படத்திற்கும் சந்திரகுமார்தான் கதை, வசனகர்த்தா. ‘நாட்டாமை’ திரைக்கு வந்து ரவிகுமார் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நேரமது. ஆனால், ‘முத்துக் குளிக்க வர்றீகளா’ ஒரு தோல்விப் படமாக அமைந்துவிட்டது.

நேரில் பார்க்கும்போது மிகவும் சுவாரசியமாக கதை சொல்லும் சந்திரகுமார் கதை எழுதிய எல்லா படங்களும் வர்த்தக ரீதியாக ஏன் தோல்வியடைந்தன? அந்தக் கதைகள் மக்கள் மனதில் ஏன் இடம் பிடிக்காமல் போய்விட்டன? இந்த விஷயத்தை நானே தனியாக இருக்கும்போது சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். வாயால் எளிதில் ஒரு கதையைக் கூறி விட முடியும். அதையே படத்தின் கதையாக எடுக்கும்போது அது வெற்றி பெறும் என்று உறுதியாக யாராலும் கூற முடியாது. சந்திரகுமார் கதை எழுதிய படங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான். ரவிகுமார் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட சந்திரகுமாரின் இந்தக் கதை சொல்லும் ஆற்றலில் மயங்கித்தான் அந்தக் கதைகளைப் படமாக இயக்கத் துணிந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெப்போலியன், சங்கவி ஆகியோரை வைத்து ‘பகவத் சிங்’ என்ற படத்தை இயக்கினார் சந்திரகுமார். நெப்போலியன் நடித்த படங்களிலேயே அதிகமான செலவில் எடுக்கப்பட்ட படம் அது. நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து, திரைக்கு வந்தபோது, எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ஓடவில்லை. சரவணன் கதாநாயகனாக நடித்த ‘செவத்த பொண்ணு’ என்றொரு படத்தையும் சந்திரகுமார் இயக்கினார். ‘யாகவா புரொடக்ஷன்ஸ்’ என்.ஆர்.தனபாலன் அந்த படத்தைத் தயாரித்தார். அதுவும் வர்த்தக ரீதியாக தோல்விப் படமே.

சில படங்களுக்குக் கதைகள் எழுதியிருந்தாலும், ஒரு இயக்குநர் என்ற கோணத்தில் பார்த்தால், சந்திரகுமார் படத்துறையில் சந்தித்தது தோல்விகளைத்தான். அவர் கதைகள் எழுதிய படங்கள் கூட அவருடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு தேவைப்பட்ட பணத்தைத் தந்தனவே தவிர, அவருக்கு பெயரையோ புகழையோ பெற்றுத் தரவில்லை என்பதுதான் உண்மை. இயக்குநராக தோல்வியடைந்த பிறகு, பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார் சந்திரகுமார். வியர்வை வழியும் முகத்துடன் யாரையாவது பார்ப்பதற்கு வடபழனி, சாலிகிராமம் தெருக்களில் வேகமாக வெயிலில் அவர் நடந்து போய்க் கொண்டிருப்பார். மிகவும் நெருங்கிய நண்பர்கள் யாராவது தென்பட்டால், நூறோ இருநூறோ செலவுக்கு கேட்பார். மனக் கவலையாலோ என்னவோ, குடிப் பழக்கத்திற்கு அவர் ஆளாகிவிட்டார். பகல் நேரத்தில் கூட நல்ல போதையுடன் நின்று கொண்டிருப்பார். நான் பார்க்கும் நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் அவர் மது நெடியுடன்தான் இருந்திருக்கிறார்.

பொருளாதார ரீதியாக அவர் மிகவும் கஷ்டப்பட்ட காலங்களில் அவருக்குப் பெரிதும் கை கொடுத்தவர் கே.எஸ்.ரவிகுமார். தன் படங்களின் கதை விவாதங்களில் சந்திரகுமாரை பங்குபெறச் செய்து, அவருக்கு பணம் கிடைக்கும்படி செய்திருக்கிறார். ‘முத்து’ படத்தின் கதை விவாதத்தில் சந்திரகுமாரை பங்குபெறும்படி ரவிகுமார் செய்ததையும், அப்போது தனக்கு ஒரு நல்ல தொகையை அவர் வாங்கித் தந்ததையும் மிகுந்த நன்றியுடனும், பெருமையுடனும் சந்திரகுமார் என்னிடம் கூறியிருக்கிறார்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், மனம் தளரமாட்டார் சந்திரகுமார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஒரு தயாரிப்பாளரிடம் பேசியிருக்கிறேன். விரைவிலேயே படத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்’ என்பார். எட்டு வருடங்களுக்கு முன்னால் வடபழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் என்னைப் பார்த்த சந்திரகுமார் ‘10 நாட்கள் கழித்து உங்களுக்கு ஃபோன் பண்ணுகிறேன். ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்திருக்கிறது’ என்றார்.

அதற்குப் பிறகு 10 நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் வந்தது. சந்திரகுமாரிடமிருந்து அல்ல- ‘மாலை மலர்’ பத்திரிகை அலுவலகத்திலிருந்து. சந்திரகுமார் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை தொலைபேசியில் என்னிடம் சொன்னார்கள். அதிர்ச்சியில் நான் உறைந்து போனேன்.

வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போது கூட நான் சந்திரகுமாரை நினைக்கும்போது, அவர் என்னிடம் ஆர்வத்துடன் பல கதைகளைக் கூறியதும், சுவாரசியமான பல சம்பவங்களை அடுத்தடுத்து விவரித்ததும், பழைய இந்தி, தமிழ் திரைப்படங்களின் கதைகளையும், பாடல்களையும் ரசிக்கும் வண்ணம் கூறியதும் என் மனத்திரையில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. 


தெருவில் மண்ணெண்ணெய் விற்றவர் ரஜினிகாந்த் படத்தின் வினியோகஸ்தராக ஆனார்!

சுரா

ந்தவாசியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆச்சமங்கலம் என்ற கிராமம்தான் தேவேந்திரனின் சொந்த ஊர். அவருடைய தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். தேவேந்திரன் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும், அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதுதான் உண்மை. அதற்குப் பிறகு தங்களுடைய ஆடுகளையும், மாடுகளையும் மேய்ப்பதே அவரின் வேலையாகிவிட்டது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னையைத் தேடி வந்த தேவேந்திரன் ஆரம்பத்தில் செய்தது மண்ணெண்ணெய் விற்கும் தொழில். தெருத் தெருவாக மண்ணெண்ணெய் விற்க பயன்படும் வண்டியை கையால் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும். தி.நகரில் இருந்த ஒரு திரைப்பட நிறுவனத்திற்கு நான் சென்றிருந்தபோது, அதன் வாசலில் மண்ணெண்ணெய் விற்கும் வண்டியுடன் நின்று கொண்டிருந்தார் தேவேந்திரன். இது நடந்தது 1989ஆம் ஆண்டில். திரைப்பட நிறுவனத்தில் மண்ணெண்ணெய் விற்பவருக்கு என்ன வேலை என்று நான் நினைத்தேன். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு தான் வந்திருப்பதாக அவர் கூறினார். அந்த நிறுவனம் அப்போது தயாரித்துக் கொண்டிருந்த படத்தின் பெயர் 'போர்க்கொடி' ராஜ்சிற்பி இயக்கிய அந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க, ஜெயந்தி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்தார் (இவர்தான் பின்னர் விசித்ரா என்று பெயரை மாற்றிக் கொண்டு கவர்ச்சி நடிகையாக படங்களில் வலம் வந்தார்.) இப்போது பிரபல இயக்குநராக இருக்கும் சேரன் (அப்போது இவரின் பெயர் இளஞ்சேரராஜன்) அப்படத்தின் வசனகர்த்தாவாகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். தேவேந்திரனுக்கு அப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மண்ணெணெய் விற்கப் போய் விடுவார் தேவேந்திரன்.

தி.நகர் தெருக்களில் அவ்வப்போது மண்ணெண்ணெய் வண்டியுடன் தேவேந்திரனைப் பார்ப்பேன். வெயில், மழை எதைப் பற்றியும் கவலைப்படாமல் 'அவர் வண்டியை இழுத்துக் கொண்டு ‘கிருஷ்ணாயில்… கிருஷ்ணாயில்…’ என்று கூப்பாடு போட்டவாறு போய்க் கொண்டிருப்பார். அவரைப் பார்த்து நான் புன்னகைப்பேன். அவரும் பதிலுக்குப் புன்னகைப்பார்.

தேவேந்திரன் நடித்த 'போர்க்கொடி' படம் முற்றிலும் முடிவடைந்தும், வியாபாரம் ஆகாததால் திரைக்கு வராமலே நின்றுவிட்டது. அது குறித்து தேவேந்திரனுக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது. அதற்குப் பிறகு தேவேந்திரன் பல திரைப்பட நிறுவனங்களின் படிகளிலும் ஏறி, நடிக்க வாய்ப்புக் கேட்டார். ஆனால், யாரும் தரவில்லை. அழுக்கு லுங்கியைக் கட்டிக் கொண்டு, கருப்பு நிறத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மண்ணெண்ணெய் வியாபாரியை அவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள்.

அதற்குப் பிறகு நான் தேவேந்திரனை பதினைந்து வருடங்களுக்குப் பிறகுதான் பார்த்தேன். அப்போது அவரை மண்ணெண்ணெய் வியாபாரியாகப் பார்க்கவில்லை. பட வினியோகஸ்தராக பார்த்தேன். இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் வைத்ததாக என்னிடம் அவர் சொன்னார். வீடுகள் வாங்கவும் விற்கவும் உதவுவது, வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுப்பது, கடன் ஏற்பாடு பண்ணி தருவது என்று பல வேலைகளையும் அவர் பார்த்திருக்கிறார். அப்போது சில நண்பர்கள் அவருக்குப் பழக்கமாகியிருக்கிறார்கள். அவர்கள் படத்துறையைச் சேர்ந்தவர்கள். படங்களை வாங்கி திரை அரங்குகளில் திரையிடும் தொழிலைச் சேர்ந்த அவர்களுடன் தேவேந்திரன் பார்ட்னராகச் சேர்ந்திருக்கிறார். படங்களை வாங்கி வாடகை அடிப்படையில் திரை அரங்குகளில் திரையிடச் செய்திருக்கிறார். 'பாட்சா' படத்தை அபிராமி திரை அரங்கிலும் 'நம்மவர்' படத்தை நாகேஷ் தியேட்டரிலும் 'கல்நாயக்' படத்தை உதயம் தியேட்டரிலும் வாடகை அடிப்படையில் அவர் திரையிடச் செய்திருக்கிறார். அந்தத் தொழிலைப் பற்றிய விஷயங்களை படிப்படியாக தெரிந்து கொண்ட தேவேந்திரன் பட வினியோகத்தில் தீவிரமாக அதற்குப் பிறகு இறங்கிவிட்டார்.

புதிய படங்கள் திரைக்கு வந்து ஒரு சுற்று முடிந்தவுடன், ஒரு தொகையைக் கொடுத்து அதை வினியோகஸ்தர்கள் வாங்குவார்கள். அதற்கு வினியோக வட்டாரத்தில் 'ஷிஃப்டிங்' என்று பெயர். தேவேந்திரன் அந்த 'ஷிஃப்டிங்'  முறையில் என் ஆசை மச்சான், சுந்தர புருஷன், படையப்பா, வாலி, நினைத்தேன் வந்தாய், உன்னைக் கொடு என்னைத் தருவேன், வள்ளல், சொன்னால்தான் காதலா என்று பல படங்களையும் வாங்கி வினியோகித்திருக்கிறார். தன் மனைவியின் பெயரில் 'மாரியம்மா பிலிம்ஸ்' என்று பட வினியோகக் கம்பெனிக்கு பெயர் வைத்த தேவேந்திரன், செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் 134 திரை அரங்குகளில் 100 திரை அரங்குகளில் தான் வாங்கிய படங்களைத் திரையிட்டிருக்கிறார். சிந்தாமணி முருகேசன், கேயார், கே.ராஜன், 'ஆல்பர்ட்' மாரியப்பன், 'கலைப்புலி' ஜி.சேகரன் என்று பலரும் பட வினியோகத் துறையில் இருக்கும் நல்லது கெட்டதுகளை அவருக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அது தேவேந்திரனுக்கு நன்கு பயன்பட்டிருக்கிறது.

பட வினியோகத்தில் ஈடுபட்டிருக்கும்போது பல பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் தேவேந்திரனுக்குப் பழக்கமாகி இருக்கிறார்கள். 'நான் வாழ்க்கையில் கொஞ்சமும் எதிர்பார்த்திராத விஷயங்கள் இவை. முறையான படிப்பு இல்லாத என் வாழ்க்கையிலா இவையெல்லாம் நடக்கின்றன என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்' என்றார் என்னிடம் தேவேந்திரன்.

அதற்குப் பிறகு தேவேந்திரனை சில மாதங்களுக்கு ஒருமுறை பாண்டியபஜாரில் நான் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்தபோது, பட வினியோகத் தொழிலை தான் விட்டுவிட்டதாகச் சொன்னார். 'ஏன் விட்டு விட்டீர்கள்?' என்று கேட்டதற்கு 'நான் பல படங்களையும் வினியோகம் செய்தேன். எவ்வளவோ இலட்சங்களைக் கடன் வாங்கி தொழிலைச் செய்தேன். சில படங்களில் லாபம் கிடைத்தது. சில படங்கள் பெரிய நட்டத்தையும் தந்தன. பணம் வந்திருக்கிறது போயிருக்கிறது, புரண்டிருக்கிறது. இறுதியில் மீதம் என்ன என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அதனால் 'சொன்னால்தான் காதலா' படத்துடன் அந்தத் தொழிலுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்’ என்றார் தேவேந்திரன்.

பல தொழில்களையும் செய்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தி.நகரில் சொந்தத்தில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் தேவேந்திரனுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மகள் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுவிட்டார். மூத்த மகன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றிருக்கிறார். இரண்டாவது மகன் லயோலா கல்லூரியில் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து விட்டார். அவருக்கு நடனம், இசை ஆகியவற்றிலும் பயிற்சி பெற தேவேந்திரன் ஏற்பாடு செய்திருக்கிறார். மூத்த மகனை திரைப்பட இயக்குநராகவும், இரண்டாவது மகனை இசை அமைப்பாளராகவும் கொண்டு வர வேண்டும் என்பது அவருடைய ஆசை.

‘எனக்கு என் பெயரை மட்டும்தான் எழுதத் தெரியும். அதற்கு மேல் எதுவும் தெரியாது. அப்படி என் பிள்ளைகள் இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் எப்படியெல்லாம் ஆசைப்படுகிறார்களோ அப்படியெல்லாம் நான் அவர்களைப் படிக்க வைத்திருக்கிறேன்’ என்றார் தேவேந்திரன் என்னிடம் - புன்னகை ததும்ப.

அப்போது 25 வருடங்களுக்கு முன்னால் மண்ணெண்ணெய் வண்டியை இழுத்துக் கொண்டு எனக்கு முன்னால் தெருவில் ‘கிருஷ்ணாயில்… கிருஷ்ணாயில்…’ என்று சத்தம் போட்டு கூவிக் கொண்டே வந்து கொண்டிருந்த தேவேந்திரன் ஒரு நிமிடம் என் மனதில் தோன்றி மறைந்தார்.


பட விழாவில் கலந்து கொண்ட ஏவி.எம்.சரவணன் சாட்சி கையெழுத்து போட்டார்!

சுரா

1987ஆம் ஆண்டு. நாகராஜன் என்ற திரைப்பட தயாரிப்பு நிர்வாகி, படங்களின் படப்பிடிப்பு நடக்கும் மந்தைவெளி 'சிங்கப்பூர் ஹவுஸ்'க்கு என்னை அழைத்துச் சென்றார். 'ஊமைக்குயில்' என்ற படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாக்யராஜைப் போலவே ஆடைகள் அணிந்து, கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தா, கதாநாயகன் எல்லாமே அவர்தான். வசனம் பேசும் முறையில் கூட பாக்யராஜை அப்படியே பின்பற்றி நடித்துக் கொண்டிருந்த அவரை வியப்புடன் நான் பார்த்தேன். அவர்தான் எம்.ஆர்.யோகராஜ்.

பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்த யோகராஜின் உண்மையான பெயர் பன்னீர்செல்வம். கதாநாயகனாக நடித்து, படங்களை இயக்க வேண்டும் என்பது அவருடைய மனதில் இருந்த மிகப் பெரிய விருப்பம். அந்தக் கால கட்டத்தில் பாக்யராஜ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து புகழின் உச்சியில் இருந்தார். பாக்யராஜின் படங்கள் என்றால் பன்னீர் செவ்வத்திற்கு உயிர். அவரது பாணியிலேயே குடும்பக் கதையை நகைச்சுவை கலந்து சொன்னால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறலாம் என்று கணக்குப் போட்டார் அவர். இதற்கு ஆரம்பமாக தன் பெயரை யோகராஜ் என்று மாற்றிக் கொண்டார். யோகம், பாக்யம் இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதானே!

பாக்யராஜ் பாணியில் யோகராஜ் உருவாக்கிய கதைதான் ‘ஊமைகுயில்’. யோகராஜ், இளவரசி, தேவிஸ்ரீ ஆகியோர் அதில் நடித்தார்கள். பாக்யராஜின் ஜெராக்ஸ் பிரதியைப் போல யோகராஜ் நடித்துக் கொண்டிருந்ததை அரைமணி நேரம் பார்த்துவிட்டு நான் திரும்பி விட்டேன். அதற்குப் பிறகு இருபது நாட்கள் கழித்து யோகராஜ் அழைக்க, நான் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சாலிகிராமம் அருணாச்சலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜூடோ ரத்தினம் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணி புரிய, யோகராஜ் ஸ்டண்ட் வீரர்களுடன் சிலம்புச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

அதுவரை நடைபெற்ற காட்சிகளைப் புகைப்படங்களாக எடுத்து ஒட்டியிருந்த ஆல்பத்தை நான் பார்த்தேன். முதல் நாள் யோகராஜை சற்று கேலியாக பார்த்த நான், அந்த ஆல்பத்தைப் பார்த்ததும் மனம் மாறினேன். புகைப்படங்களைப் பார்த்தபோது, ‘படத்தில் ஏதோ ஒரு நல்ல கதை இருக்கிறது – யோகராஜ் நாம் நினைத்ததைப் போல சாதாரண ஆள் இல்லை’ என்று என் மனம் கூறியது. ஆல்பத்தைப் பார்த்தபோதே, அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று என் மனதில் பட்டது. அதை அப்போதே யோகராஜிடம் கூறவும் செய்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்பதை அவரின் முகமே கூறியது.

நாட்கள் கடந்தன. ‘ஊமை குயில்’ திரைக்கு வந்தது. யோகராஜ் இயக்கி, நடித்த அந்த முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் முழுமையாக நம்பி வாங்கினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் அப்படம் நன்றாக ஓடியது. படத்துறையைச் சேர்ந்த எல்லோரும் அந்தப் படத்தைப் பற்றி பேசினர். யோகராஜ் என்ற மனிதரின் தன்னம்பிக்கைக்கும், திறமைக்கும் கிடைத்த வெற்றி அது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

‘ஊமை குயில்’ தயாரிப்பில் இருந்தபோது, படம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் யோகராஜ் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். ஒரு பைக்கில் அமர்ந்து கொண்டு பல இடங்களுக்கும் அவரே நேரில் போய், வேலைகளைச் செய்வார். பைக்கில் அவருக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு நான் பல ஸ்டூடியோக்களுக்கும் சென்றிருக்கிறேன். ‘ஊமை குயில்’ திரைக்கு வந்த பிறகு, ஒரு நாள் மாருதி காரில் சென்று கொண்டிருந்தார் யோகராஜ். என்னைப் பார்த்ததும் காரை நிறுத்தினார். உள்ளே உட்காரும்படி சொன்னார். இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். நான் நினைத்ததைப் போலவே ‘ஊமை குயில்’ வெற்றி பெற்று விட்டதைக் குறிப்பிட்டேன். படத்தில் தனக்கு நல்ல லாபம் கிடைத்ததாக யோகராஜ் சொன்னார்.

படத்தின் 50வது நாள் விழா நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக நாஞ்சில் மனோகரன், ஏவி.எம்.சரவணன், சிந்தாமணி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவைப் பார்க்க வந்திருந்தவர்களைப் பார்த்தால், படவுலகத்தைச் சேர்ந்தவர்களாக தெரியவில்லை. எல்லோரும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக தெரிந்தார்கள். அனைவரும் டிஃபன் பாக்ஸ் அடங்கிய பைகளுடன் காட்சியளித்தார்கள். கோட், சூட், அணிந்து ரோஜா மலரைக் கோட்டில் சொருகிக் கொண்டு பந்தாவாக நடந்து வந்த யோகராஜைப் பார்த்து ஒரே கூக்குரல். அப்போதுதான் அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்தது- அவர்கள் அனைவரும் யோகராஜுடன் ‘பல்லாவரம் இங்கிலீஷ் எலெக்ட்ரிக்கல்ஸ்’ நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என்பதே. அவர்களின் பணத்தை பயன்படுத்தித்தான் யோகராஜ் ‘ஊமை குயில்’ படத்தை எடுத்திருக்கிறார். கூறியபடி அவர்களுக்கு பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. யோகராஜை அவர்கள் பல இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 50வது நாள் சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார்கள். வந்து விட்டார்கள்.

யோகராஜிடம் எல்லோரும் பணத்தைக் கேட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டு, பணத்தைக் கொடுத்து விடுவதாக அவர் சொன்னார். அதற்கு சாட்சிகளாக அங்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களான நாஞ்சில் மனோகரன், ஏவி.எம்.சரவணன், சிந்தாமணி முருகேசன் மூவரும் கையெழுத்துப் போட்டார்கள். வி.ஐ.பி.க்களாக வந்திருந்தவர்கள் ‘கட்டப் பஞ்சாயத்து’ நடத்தியதை இப்போது நினைத்தால் கூட எனக்குச் சிரிப்பு வருகிறது.

100 நாட்களைத் தாண்டி சென்னை கிருஷ்ணவேணி திரை அரங்கில் ஓடியது ‘ஊமை குயில்’. தொடர்ந்து யோகராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க ‘எம் பொண்டாட்டி’ என்ற படம் ஆரம்பமானது. இதில் யோகராஜுக்கு ஜோடியாக ரஞ்சனி நடித்தார். கிட்டத்தட்ட 10 படங்களில் கதாநாயகனாக நடிக்க, யோகராஜ்க்கு வாய்ப்புகள் தேடி வந்தன. செந்தில்நாதன் இயக்கத்தில், வி.சி.குகநாதன் தயாரித்த ‘முந்தானை சபதம்’, ஜமீன்ராஜ் இயக்கத்தில் உருவான ‘காசு தங்க காசு’, ஜீவபாலன் இயக்கிய ‘சம்சாரமே சரணம்’ ஆகிய யோகராஜ் கதாநாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து சரியாக ஓடவில்லை. அவர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியாக சரியாக ஓடாததால், மீதி படங்கள் பாதி முடிந்த நிலையில் அப்படியே நின்று விட்டன. சில படங்கள் தொடக்க விழாவுடன் நின்றுவிட்டன.

யோகராஜ் இயக்கிய ‘எம் பொண்டாட்டி’ இன்று வரை திரைக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் என்னை அழைத்துச் சென்று அந்தப் படத்தை யோகராஜ் போட்டுக் காட்டினார். எடுக்கப்பட்ட காலத்தில் திரைக்கு வந்திருந்தால், அந்தப் படம் ஓடியிருக்கலாம். அதற்குப் பிறகு படவுலகில் எவ்வளவே வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகி விட்டனவே!

ஐந்து வருடத்திற்கு முன்னால், யோகராஜ் தானே கதாநாயகனாக நடித்து இயக்க இருந்த ஒரு படத்திற்காக பாடல்களை ‘ரெக்கார்ட்’ பண்ணினார். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த நிலையிலேயே அப்படம் நின்று விட்டது.

வாழ்க்கையில் சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். அது தொடரவும் செய்யும். வேறு சிலரின் வாழ்வில் அதிர்ஷ்டம் ஒரு மின்னலைப் போல சில நொடிகளுக்கு மட்டும் தோன்றி மறைந்துவிடும். எம்.ஆர்.யோகராஜின் வாழ்வில் அதுதான் நடந்திருக்கிறது.


கலைஞரின் கதையை இயக்கிய கம்யூனிஸ்ட்!

சுரா

லைஞர் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி’ என்ற கதையை ‘உளியின் ஓசை’ என்ற பெயரில் இயக்கினார் இளவேனில்.

இளவேனிலை நான் நேரில் சந்திப்பதற்கு முன்பே, அவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் படித்திருக்கிறேன். 77ஆம் வருடமாக இருக்க வேண்டும். அப்போது ‘கணையாழி’ மாத இதழ் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக அசோகமித்திரன் பணியாற்றிக் கொண்டிருந்தார். யாருக்குமே புரியாமல், சம்பந்தமே இல்லாத சொற்களையும் வார்த்தைகளையும் போட்டு கவிதை என்று எழுதினால், அதை கட்டாயம் கணையாழியில் பிரசுரிப்பார்கள் என்றிருக்கிறார் இளவேனில். அதை நிரூபிப்பது மாதிரி, தன்னுடன் உட்கார்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு வார்த்தையைக் கூறுமாறு இளவேனில் கூறியிருக்கிறார். அவர்கள் கூறிய தொடர்பே இல்லாத வார்த்தைகளை இங்குமங்குமாக போட்டு, அர்த்தமே இல்லாத ஒரு கலவையை கவிதை என்ற பெயரில் ‘அரூபசொரூபன்’ என்ற புனைப் பெயருடன், ‘கணையாழி’க்கு அனுப்பினார். அடுத்த மாதமே அது ‘கணையாழி’யில் பிரசுரமாகி வந்தது. அதை நானும் படித்தேன். அதைத் தொடர்ந்து வேறொரு பத்திரிகையில் இளவேனில் அந்தக் கவிதை பிரசுரமான கதையை வெளிப்படுத்தினார். அர்த்தமே இல்லாத, புரியவே புரியாத ஒன்றை கவிதை என்று அனுப்பினால் ‘கணையாழி’யில் அதை மிகச் சிறந்த படைப்பு என்று நினைத்து பிரசுரிப்பார்கள் என்ற உண்மையை வெளியே போட்டு உடைத்தார். இளவேனிலைப் பற்றி நான் படித்த முதல் செய்தியே அதுதான். அப்போதே இளவேனில் என்ற பெயர் என் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டது.

1980ஆம் ஆண்டு சென்னையில் அவரை நான் சந்தித்தேன். நான் அப்போது ‘பிலிமாலயா’ மாத இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘ஜனசக்தி’ அலுவலகத்திலிருந்து வெளிவரும் ‘தாமரை’ இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக  இருந்த சோமுவைப் பார்க்கப் போனபோது, அங்கு இளவேனில் இருந்தார். ‘தாமரை’ இதழின் மேலட்டையை இளவேனில்தான் உருவாக்குவார். அத்துடன், உள்ளே படங்கள் வரைவது, தலைப்புகள் எழுதுவது எல்லாமே அவர்தான். சிறந்த கவிஞரான இளவேனில் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஆழமான சிந்தனையாளரான இளவேனில் மிகுந்த நகைச்சுவையுடன் உரையாடுவார். பல கம்யூனிஸ்ட்காரர்களைப் போல இல்லாமல், நெருங்கிய தோழமையுடன் பழகுவார். பார்த்த கணத்திலேயே எனக்கு இளவேனிலை மிகவும் பிடித்துவிட்டது. அவரை வாரம் ஒரு முறையோ இரு முறையோ ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் சந்திப்பேன். காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய் ஆகியோரைப் பற்றி ஏராளமான தகவல்களை அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

இப்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராகவும் இருக்கும் அழகன் தமிழ்மணி 1981ஆம் ஆண்டில் ‘நயனதாரா’ என்ற மாத நாவலை சொந்தத்தில் நடத்தினார். அதற்கு அட்டை வடிவமைப்பு, உள்ளே தலைப்புகள் ஆகியவற்றை இளவேனில்தான் அமைத்துக் கொடுத்தார். தியாகராய நகரில் இருந்த அந்த அலுவலகத்தில் நான், இளவேனில், தமிழ்மணி மூவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.

‘இளவேனில் கவிதைகள்’ என்ற பெயரில் அவர் எழுதியிருந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கவிதைகளைப் படித்தபோது, அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது. முற்போக்கு சிந்தனைகள் கொண்ட அந்தக் கவிதைகளுக்கு இலக்கிய வட்டாரத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ‘எனது சாளரத்தின் வழியே’ என்ற பெயரில் இலக்கிய விமர்சனங்கள் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார், இலக்கியம் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை தன் பார்வையில் அவர் எழுதியிருந்தார். அந்த நூலையும் நான் ஆர்வத்துடன் படித்தேன். இளவேனிலில் மாறுபட்ட பார்வையை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ’25 வெண்மணித் தெரு’ என்ற அரசியல் விமர்சனக் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டார். மிகவும் துணிச்சலாக எழுதப்பட்ட அந்த நூலில் முரண்பாடான பல கருத்துக்களை அவர்  வெளிப்படுத்தி இருந்தார். அந்நூலில் இடம் வெற்றிருந்த சில கட்டுரைகள் எனக்கு உடன்பாடாக இல்லையென்றாலும், அது ஒரு சிறந்த நூல் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நூலை மூன்று நாட்கள் ஊண், உறக்கம் எவை பற்றியும் கவலைப்படாமல் நான் படித்தேன். அதற்குப் பிறகு என்னை முற்றிலும் மறந்துவிட்டு, நான் படித்த புத்தகம் இளவேனில் எழுதிய ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ தான். கலைஞர் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தார். கலைஞர்தான் அந்நூலை வெளியிடவும் செய்தார். நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அண்ணா அறிவாலயத்தில் அது நடந்தது. இளவேனிலின் எழுத்துத் திறமையை மிகவும் உயரத்தில் வைத்து கலைஞர் பாராட்டினார்.

அன்று இரவே நான் ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ நூலை வாசிப்பதற்காக உட்கார்ந்தேன். உணவு, தூக்கம் எதுவுமே ஞாபகத்தில் வரவில்லை. நூலை கீழே வைக்கவே முடியவில்லை. தொடர்ந்து அதைப் படித்துக் கொண்டே இருந்தேன். மறுநாளும் வாசிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு தகவலையும் மிகவும் சுவாரஸ்யத்துடன் இளவேனில் எழுதியிருந்தார். அந்த நூல் வெளியாகி இருபது வருடங்கள் கடந்தோடி விட்டன. இப்போது கூட அதில் வரும் கதாபாத்திரங்கள் என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அந்தப் பெருமை அந்தப் புத்தகத்தை எழுதிய இளவேனிலுக்குத்தான்.

கவிதை, இலக்கியக் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், ஓவியம் என்று பல திறமைகளைக் கொண்டிருந்த இளவேனிலுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற ஆவல் பல வருடங்களாகவே இருந்தது. 70களின் இறுதியில் ‘நூறு பூக்கள் மலரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை அவர் இயக்க முயற்சித்தார். அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று விட்டது. பிறகு ‘வீரவணக்கம்’ என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பமாகி இரண்டு பாடல்கள் கூட அதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்தப் படமும் தொடங்கிய வேகத்திலேயே நின்றுவிட்டது. பின்னர் ‘நெஞ்சில் ஓர் தாஜ்மகால்’ என்றொரு படத்தை அவர் இயக்க திட்டமிட்டார். சிவாஜி ராஜா இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்டன. எல்லா பாடல்களையும் இளவேனிலே எழுதினார். எனினும், படம் வளராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு சில திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். ‘நந்தன்’ பத்திரிகையில் இளவேனில் ஆசிரியராக இருந்தபோது நான் அதில் திரைப்படத்துறை பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன்.


பின்னர் ‘குடியரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இளவேனில் பல மாதங்கள் தொடர்ந்து ‘முரசொலி’யில் எழுதிய அரசியல் கட்டுரைகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அக்கட்டுரைகள் ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ என்ற பெயரில் பின்னர் நூலாக வந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றது.

முப்பது வருடங்களாக திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று இளவேனில் கொண்டிருந்த ஆவல் நான்கு வருடங்களுக்கு முன்பு செயல்வடிவத்திற்கு வந்தது. அவரது இயக்கத்தில் கலைஞர் கதை- வசனம் எழுத ‘உளியின் ஓசை’ படம் திரைக்கு வந்து பரவாயில்லாமல் ஓடியது. ஒரு காதல் காவியமாக அதை இளவேனில் உருவாக்கியிருந்தார்.  ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞராக, அரசியல் ஆய்வாளராக, ஓவியராக, இலக்கிய விமர்சகராக, சிறந்த சிந்தனையாளராக அனைவரிடமும் நல்ல பெயரைப் பெற்றிருந்த இளவேனில் ஒரு திறமை வாய்ந்த திரைப்பட இயக்குநர் என்பதையும் ‘உளியின் ஓசை’ படத்தின் மூலம் நிரூபித்தார்.

‘உளியின் ஓசை’ திரைக்கு வந்து சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனமே இளவேனிலின் இயக்கத்தில் ‘நீயின்றி நானில்லை’ என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தது. அப்படத்திற்கும் கலைஞரே கதை – வசனம் எழுதினார். அப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டூயோவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். தேவா அப்படத்திற்கு இசையமைத்தார். அப்படத்திற்காக சில பாடல்கள் கூட ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

‘நீயின்றி நானில்லை’ படத்திற்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன், இளவேனில், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் ஆகியோருடன் நானும் மூணாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம், குற்றாலம், புனலூர், தேக்கடி ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பின்னர் என்ன காரணத்தாலோ இளவேனில் அந்தப் படத்தை இயக்க விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த நிறுவனம் அந்தப் படத்தை நிறுத்தி விட்டு, ‘பெண் சிங்கம்’ என்ற பெயரில் வேறொரு படத்தை, வேறொரு இளைஞர் இயக்கத்தில் ஆரம்பித்தது. அதற்கு கலைஞர் கதை – வசனம் எழுதினார்.

அதற்கு பிறகு இளவேனிலை அடிக்கொரு தரம் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்தியன் காஃபி ஹவுஸில் சந்திப்பேன். ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘ஒரு படத்தை இயக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று என்னிடம் அவர் கூறுவார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அவரை தொடர்ந்து பார்க்கவே முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்து அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ‘காருவகி’ என்ற பெயரில் ஒரு சரித்திர நாவலை தான் எழுதிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்நூல் வெளியிடப்பட்டது. அண்ணா சாலையில் உள்ள நூலக அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு நானும் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், சி.மகேந்திரன், மேலாண்மை பொன்னுசாமி, பத்திரிகையாளர் ஜவஹர் ஆகியோர் அந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இளவேனில் ‘காருவகி’ நூலின் ஒரு பிரதியை மறுநாள் எனக்கு வாசிப்பதற்காக கொடுத்தார். இதற்கு முன்பு இளவேனில் எழுதிய அவரின் மற்ற நூல்களை எப்படி ஆர்வத்துடனும், முழுமையான ஈடுபாட்டுடனும் வாசித்தேனோ அதே உற்சாகத்துடன் ‘காருவகி’யையும் வாசித்தேன். அசோகன், சந்திரகுப்த மவுரியன் ஆகியோரின் காலகட்டத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அருமையான நாவல் அது. அந்த நூலை எழுதுவதற்காக ஏராளமான நூல்களை வாசித்து, அவற்றிலிருந்து பல உண்மைத் தகவல்களையும் திரட்டியிருந்தார் இளவேனில். நான் இதற்கு முன்பு எப்போதும் கேள்விப்பட்டிராத பல விஷயங்கள் அந்தப் புதினத்தில் கூறப்பட்டிருந்தன. தமிழனான குடிலன் என்பவன்தான் கெளடில்யர் என்பதும், மாமன்னன் அசோகன் புத்த மதத்திற்கு மாறியதற்கு காரணமே காருவகி என்ற தமிழை தாய் மொழியாக கொண்ட பெண் என்ற உண்மையும் அந்நூலைப் படித்த பிறகுதான் எனக்கே தெரிய வந்தது. இளவேனில் தன்னுடைய அபாரமான எழுத்தாற்றலால் அந்நூலை மிகச் சிறப்பான ஒரு புதினமாக படைத்திருந்தார். இன்றைய நிகழ்கால அரசியல் போக்குகளையும், தந்திரத்தனங்கள் கொண்ட அரசியல்வாதிகளையும், முரண்பாடுகளையும் மையச் சின்னங்களான அரசியல் தலைவர்களையும், அவர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளையும், முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகளையும், துரோகங்களையும், ஏமாற்று வேலைகளையும், நயவஞ்சகங்களையும் மிகவும் அருமையாக உரையாடல்களின் மூலம் அந்நூலில் தோலுரித்துக் காட்டியிருந்தார் இளவேனில். நூலை வாசிக்கும்போதே அவர் யார் யாரையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவற்றை எழுதியிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

‘காருவகி’ நாவலை மிகவும் உயர்வாக எழுதியதற்காக இளவேனிலை நான் மனம் திறந்து பாராட்டினேன். படம் இயக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், தொடர்ந்து பல அருமையான நூல்களை படைக்க வேண்டும் என்று அவரை ஒரு நெருங்கிய நண்பர் என்ற வகையில் நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சரி என்று தலையை ஆட்டினார். சமீபத்தில் சந்தித்தபோது மிக விரைவில் ஒரு மாறுபட்ட நூலை எழுத தொடங்கப் போவதாக என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயம் அது. மிகச் சிறந்த தொழிற்சங்க தலைவரும், முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதருமான வி.பி.சிந்தனைப் பற்றி ஒரு ஆழமான நூலை வெகு சீக்கிரமே எழுத வேண்டும் என்று இளவேனிலை நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு காரணம் – பல வருடங்கள் தோழர் வி.பி.சி.யுடன் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தவர் இளவேனில் என்ற விஷயம் எனக்கு தெரிந்திருந்ததுதான்.

வாழ்வில் சிலரால் மட்டுமே தாங்கள் கால் பதிக்கும் துறைகளிலெல்லாம் முத்திரை பதிக்க முடியும். அதற்கான திறமைகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். என் இனிய நண்பர் இளவேனிலுக்கு அந்த வகையில் பல்வேறு திறமைகள் இருக்கின்றன. தன் படைப்புகளில் அவர் தொடர்ந்து அவற்றை வெளிப்படுத்தி ஆழமான பதிவை உண்டாக்குகிறார். திறமைகள் பல கொண்ட, முற்போக்கு சிந்தனை வாய்ந்த ஒரு நல்ல இலக்கியவாதியான இளவேனிலின் நெருங்கிய நண்பனாக நான் இருப்பதற்கு உண்மையிலேயே கர்வத்துடன் பெருமைப்படுகிறேன்.

 


ஏற்கெனவே இரண்டு பேர் எடுத்த கதையை மூன்றாவதாக இயக்கினார் பி.வாசு…

சுரா

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்பிரமணியத்தை எனக்கு 1990ஆம் வருடத்திலிருந்தே தெரியும். அப்போது அவர் ‘சின்ன பசங்க நாங்க’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஆரம்ப காலத்திலிருந்தே அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். காமராஜரை நேரில் பார்த்து பேசியவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி எல்லோரையும் அவருக்கு நன்கு தெரியும். கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் அவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படவுலகின் உச்ச நடிகராக இருந்து கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் ‘அகில இந்திய சிவாஜி ரசிகர்கள் மன்றம்’ மிகவும் செல்வாக்காக இருந்தது. அதன் தலைவராக சின்ன அண்ணாமலை இருந்தார். அவருடன் இருந்து கொண்டு சிவாஜியின் கலையுலக வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் அவரும் ஒருவர். கவியரசு கண்ணதாசனுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர் ஏ.ஜி.எஸ்.

பல வருடங்களாக அரசியல் பணி ஆற்றிக் கொண்டிருந்த ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு படவுலகின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. படவுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அவரை இயக்குநராகப் போட்டு ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது ஏ.ஜி.எஸ்ஸின் (படவுலகில் அவரை எல்லோரும் இப்படித்தான் அழைப்பார்கள்) ஆசை. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. ‘தாலாட்டு கேக்குதம்மா’ படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது, அந்தப் படத்தால் கவரப்பட்ட இளையராஜா ஏ.ஜி.எஸ்ஸிடம் இயக்குநர் ராஜ்கபூரை வைத்து படம் எடுக்கும்படி சொன்னார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘சின்ன பசங்க நாங்க.’

முரளி, ரேவதி இணைந்து நடித்த அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னை மானமுள்ள பொண்ணுயின்னு மதுரயில பாத்தாக’ என்ற இளையராஜா இசையமைத்த அருமையான பாடலை மறக்கத்தான் முடியுமா? ரேவதியின் மிகச் சிறந்த நடிப்பு, இளையராஜாவின் இனிய பாடல்கள், ராஜ்கபூரின் உணர்ச்சி பூர்வமான இயக்கம் ஆகியவற்றால் ‘சின்ன பசங்க நாங்க’ 100 நாட்கள் ஓடியது. தான் தயாரித்த முதல் படமே வெற்றிகரமாக அமைந்ததில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு மிகுந்த சந்தோஷம்.

தொடர்ந்து முரளி, ஷாலி ஜோடியை வைத்து ‘தங்கக் கிளி’ என்ற படத்தை அவர் ஆரம்பித்தார். இளையராஜா இசையமைத்த அந்தப் படத்தை ராஜவர்மன் இயக்கினார். ஊட்டியில் முக்கால் பகுதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, எந்தவொரு காரணமும் இல்லாமலே நடிகர் முரளி ஒரு இரவு வேளையில் ஊட்டியிலிருந்து கிளம்பி சென்னைக்கு காரில் வந்துவிட்டார். முரளியால் பல படங்களுக்கும் பிரச்னைகள் உண்டாகிக் கொண்டிருந்த கால கட்டம் அது. கதாநாயகன் சென்னையில் இருக்க, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊட்டியில் வெறுமனே தங்கிக் கொண்டிருந்தார்கள். கடுப்பாகி விட்ட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். எல்லோரையும் கிளம்பி சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். ‘ஏன் சார் ஊட்டியிலிருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்தீர்கள்?’ என்று முரளியைப் பார்த்து ஏ.ஜி.எஸ். கேட்டதற்கு ‘நான் ஏன் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்றார் முரளி கூலாக.

இப்படி பலவித பிரச்னைகளையும் தாண்டி எடுக்கப்பட்ட அந்தப் படம் திரைக்கு வந்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் உண்டானது. ‘தங்கக் கிளி’ தயாரிப்பில் இருந்த போதே ஏ.ஜி.எஸ்., சரத்குமாரை வைத்து ‘பேண்ட் மாஸ்டர்’ படத்தை ஆரம்பித்து விட்டார். ‘சூரியன்’ படத்தில் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய சரத்திற்கு ‘பேண்ட் மாஸ்டர்’ படத்திற்கு 20 லட்சத்தை சம்பளமாகக் கொடுத்தார் ஏ.ஜி.எஸ். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினார்கள். ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு அந்தப் படத்தில் நல்ல லாபம் கிடைத்தது. கூறிய பட்ஜெட்டைவிட சற்று குறைவாகவே படத்தை முடித்துத் தந்த முறையில் கே.எஸ்.ரவிக்குமார் மீது ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு நல்ல மதிப்பு உண்டானது. விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் படம் ஓடியது.

தொடர்ந்து ஏ.ஜி.எஸ். தயாரித்த படம் ‘கட்டுமரக்காரன்’. பிரபு கதாநாயகனாக நடிக்க, மும்பையைச் சேர்ந்த அஞ்சலி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்தார். பி.வாசு அப்படத்தை இயக்கினார். பிரபு, பி.வாசு இருவரும் படவுலகில் உயர்ந்த சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. முதல் நாள் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றபோது, மொத்த படவுலகமே அங்குதான் இருந்தது. பூஜை போட்ட நாளன்றே அனைத்து ஏரியாக்களும் வியாபாரம் ஆகிவிட்டது. மிகுந்த பொருட்செலவில் ஏ.ஜி.சுப்பிரமணியம் அந்தப் படத்தைத் தயாரித்தார். அதற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சிறு மோதல் உண்டானதன் காரணமாக, பின்னணி இசையை தேவா அமைத்தார். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் முதல் பிரதி தயாரான மறுநாள் ஏ.ஜி.எஸ்ஸை அவருடைய அலுவலகத்தில் பார்த்த நான் ‘என்ன அண்ணே, படத்தைப் பார்த்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘பார்த்து விட்டேன். ஒரு விஷயம் இப்போதான் சார் தெரிஞ்சது. நான் தயாரித்த ‘தங்கக் கிளி’, ‘பேண்ட் மாஸ்டர்’, ‘கட்டுமரக்காரன்’ மூன்று படங்களிலும் இருப்பது ஒரே கதை. ‘தங்கக் கிளி’ படத்தின் கதாநாயகன் இசைக் கருவிகள் விற்கப்படும் கடையில் வேலை பார்ப்பான். ‘பேண்ட் மாஸ்டர்’ படத்தின் கதாநாயகன் பேண்ட் வாத்தியம் வாசிப்பான். ‘கட்டுமரக்காரன்’ கதாநாயகன் படகு ஓட்டுகிறான். மூன்று படங்களிலும் கதாநாயகர்கள் வேறு. அவர்கள் செய்யும் தொழில் வேறு. ஆனால், கதை ஒரே கதை என்றார் சிரித்துக் கொண்டே. அதுதான் ஏ.ஜி.எஸ்.!

படம் திரைக்கு வருவதற்கு முதல் நாள் ‘இந்தப் படம் ஓடாது சார்’ என்றார் ஏ.ஜி.எஸ். என்னிடம். அவர் சொன்னது மாதிரியே படம் ஓடவில்லை.

தொடர்ந்து அவர் தயாரித்த படம் ‘மாமன் மகள்’. சத்யராஜ் – மீனா நடித்த அந்தப் படத்தை குருதனபால் இயக்கினார். நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த அந்தப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

அடுத்து ஏ.ஜி.சுப்பிரமணியம் தயாரித்த படம் ‘பொன்னு வெளையிற பூமி’. கதாநாயகனாக நடித்த ராஜ்கிரணுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அட்வான்ஸாக 50 லட்ச ரூபாயைக் கொண்டு போய் கொடுத்தார் ஏ.ஜி.எஸ். குஷ்பு, வினிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்தார்கள். படம் தயாரிப்பில் இருக்கும்போது ராஜ்கிரண் நடித்து திரைக்கு வந்த ‘மாணிக்கம்’, ‘பாசமுள்ள பாண்டியரே’ என்ற இரு படங்களும் தோல்வியைத் தழுவ, அதனால் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி விட்டது. ‘பொன்னு வெளையிற பூமி’. படம் முடிவடைத்து பல மாதங்கள் ஆகியும், அதை திரைக்கு கொண்டு வர ஏ.ஜி.எஸ். பட்ட பாடு இருக்கிறதே! மிகவும் கஷ்டப்பட்டு, பலவித போராட்டங்களுக்குப் பிறகு படத்தைத் திரைக்கு கொண்டு வந்தார். ஆனால், மிகப் பெரிய தோல்விப்படமாக அது அமைந்துவிட்டது. அதில் ஏ.ஜி.சுப்பிரமணியத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் உண்டானது.

எனினும், அடுத்த பட முயற்சியில் ஏ.ஜி.எஸ். கால் வைத்தார். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ‘முதல் முதலாக’ என்ற பெயரில் ஒரு படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிப்பதற்காக மிகவும் பிரம்மாண்டமாக தாஜ் கோரமண்டலில் தொடக்க விழா நடத்தினார் ஏ.ஜி.எஸ். வாழப்பாடி ராமமூர்த்தி அந்தப் படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அதற்காக பல லட்சங்களை கடன் வாங்கி செலவு செய்தார் ஏ.ஜி.எஸ். படத்தின் இயக்குநரான அழகம் பெருமாளுக்கு விலை உயர்ந்த ஒரு காரைக் கூட அவர் வாங்கிக் கொடுத்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் ஆரம்பத்திலேயே நின்று விட்டது. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவே இல்லை.

முன்னணி நடிகர்களை வைத்து ஆறு படங்களைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். பணம் என்று எதையும் சம்பாதிக்கவில்லை. படங்களை எடுக்கும்போது வந்த பணத்தை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் கொடுத்திருக்கிறார்.  அவ்வளவுதான்.

ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸில் பாரதிராஜாவின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் ஒரு சிறிய அறையில் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.ஜி.எஸ்ஸை அவ்வப்போது நான் போய் பார்ப்பேன். இருவரும் மணிக்கணக்கில் சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்போம்.

கடந்த பல வருடங்களாக படமெதுவும் தயாரிக்காமல் இருக்கும் ஏ.ஜி.எஸ்ஸை சமீபத்தில் அவருடைய அறையில் நான் போய் பார்த்தேன். ‘விரைவில் முன்னணி கதாநாயகன் ஒருவரை வைத்து படமொன்றைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான வேலைகளில் இப்போது நான்  ஈடுபட்டிருக்கிறேன்’ என்றார் ஏ.ஜி.எஸ். என்னிடம்.

23 வருடங்களாக நான் நெருங்கிய நட்பு கொண்டிருப்பவராகவும், பல அனுபவங்களைப் பெற்றிருப்பவராகவும், மலையே இடிந்து விழுந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்பவராகவும், நான் உயர்ந்த மரியாதை கொண்டிருக்கும் மனிதராகவும் இருக்கும் ஏ.ஜி.சுப்பிரமணியம் என்ற ஏ.ஜி.எஸ். மீண்டும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.


இவர் அறிமுகப்படுத்திய கதாநாயகியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்!

சுரா

ழகன் தமிழ்மணியை எனக்கு 1980ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். அப்போது அவர் அழகன் தமிழ்மணி அல்ல. வெறும் தமிழ்மணி.

நான் அப்போது ‘பிலிமாலயா’ பத்திரிகையின் இணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். தமிழ்மணி ‘நயனதாரா’ என்ற பெயரில் ஒரு மாத நாவலை நடத்திக் கொண்டிருந்தார். நாவல் போக, எஞ்சியிருக்கும் 20 பக்கங்களிலும் நான் பல விஷயங்களையும் எழுதுவேன். அப்படித்தான் எனக்கு அவர் அறிமுகம். இப்போது கதர் வேட்டி, கதர் சட்டையுடன் காட்சியளிக்கும் தமிழ்மணி, அப்போது பேண்ட், சட்டை அணிந்திருப்பார். ஸ்கூட்டரில் அவர் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, அவருக்குப் பின்னால் நான் உட்கார்ந்து பல இடங்களுக்கும் போயிருக்கிறோம். கதாசிரியர் தூயவனின் அலுவலகம், அவரின் வீடு, தேவர் பிலிம்ஸ் அலுவலகம் என்று பல இடங்களுக்கும் என்னை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே எனக்கும் அவருக்கும் மிகவும் நெருங்கிய நட்பு உண்டாகி விட்டது. அவருடைய வீட்டிற்கு நான் செல்வேன். அவருடைய மனைவிகள், மகன்கள், மகள்கள் எல்லோருமே எனக்கு நல்ல பழக்கம்.

தூயவன் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தைத் தயாரிக்க, அதன் இணைத் தயாரிப்பாளராக தமிழ்மணி இருந்தார். திடீரென்று அவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆனதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தில் தமிழ்மணிக்கு கணிசமான அளவில் பணம் கிடைத்தது. அதை வைத்து கருப்பு நிறத்தில் ஃபியட் கார் ஒன்றை அவர் விலைக்கு வாங்கினார். ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த தமிழ்மணி காரில் போக ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு கார்த்திக் – ஜீவிதாவை வைத்து, அமீர்ஜான் இயக்கத்தில் ‘தர்மபத்தினி’ என்ற படத்தை தமிழ்மணி தயாரித்தார். மாறுபட்ட ஒரு கதையைக் கொண்டிருந்த அப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து கார்த்திக்கை கதாநாயகனாகப் போட்டு ‘சோலைக்குயில்’ என்ற படத்தை தமிழ்மணி தயாரித்தார். அப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக தோடர் இனத்தைச் சேர்ந்த ராகிணி என்ற புதுமுக நடிகையை தமிழ்மணி அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, கார்த்திக்கிற்கு கதாநாயகி ராகிணியின் மீது உண்மையான காதல் பிறந்து விட்டது. ‘சோலைக்குயில்’ திரைக்கு வந்த சில நாட்களிலேயே கார்த்திக் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

அடுத்து தமிழ்மணி தயாரித்த படம் ‘சித்திரைப் பூக்கள்’. கவியரசு கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு அந்தப் படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தின் மூலம் வினோதினி கதாநாயகியாக அறிமுகமானார். சரத்குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக வருவார். மிகவும் அருமையான கதாபாத்திரம் அது. மூணாறு, ஊட்டி ஆகிய இடங்களில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஊட்டியில் டிசம்பர் மாத கடும் குளிரில் ‘சித்திரைப் பூக்கள்’ படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு இரவு நேரத்தில் தமிழ்மணியும் நானும் அரசுப் பேருந்தில் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த குளிர் சாதன வசதி கொண்ட காரில் அதே படப்பிடிப்பை முடித்து விட்டு எஸ்.எஸ்.சந்திரனும் கோவை சரளாவும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். என் மீதும், தமிழ் மணியின் மீதும் பேருந்தின் கூரையிலிருந்த ஓட்டையிலிருந்து மழை நீர் தொடர்ந்து சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது தமிழ்மணி ‘என்னிடம் பணம் வாங்கி நடிப்பவர்கள் ஏ.சி. காரில் போகிறார்கள். தயாரிப்பாளரின் நிலைமையைப் பார்த்தாயா, சுரா?’ என்றார். அப்போது மட்டுமல்ல – இப்போதும் கூட தயாரிப்பாளர்களின் நிலைமை அப்படித்தானே இருக்கிறது?

‘சித்திரைப் பூக்கள்’ ப்ரிண்ட் டெலிவரியின்போது ஜெமினி லேப்பில் தமிழ்மணியின் அருகில் நான் நின்றிருந்தேன். வினியோகஸ்தர்கள் தாங்கள் கூறியபடி பணத்தைக் கொடுத்து படத்தை வாங்கவில்லை. அதனால் அந்தப் படத்தில் தமிழ்மணிக்கு மிகப் பெரிய இழப்பு உண்டானது. கையில் ஒரு காசு கூட இல்லாமல் வெறும் கையுடன் தமிழ்மணி நின்றிருந்தார். அப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.

அந்தப் படத்திற்குப் பிறகு எட்டு வருடங்கள் தமிழ் மணி படத்துறை பக்கமே காலடி எடுத்து வைக்கவில்லை. வைக்க முடியாத நிலை… தன் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு அவர் படாத பாடுபட்டார். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்கும் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவர் பட்ட சிரமங்களுக்கு ஒரு நாள் விடிவு உண்டானது. சன் தொலைக்காட்சி அவருடைய வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றி வைத்தது. ‘மங்கை’ என்ற நெடுந் தொடரை சன் டி.வி.க்காக அவர் தயாரித்தார். தமிழ்மணி பொருளாதார ரீதியாக வளர்ந்தார். அவருடைய புகழும் வளர்ந்தது. அந்தத் தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பானது.

தொடர்ந்து சன் டி.வி.யில் ‘அம்மா’, ‘அம்பிகை’, ‘அவளும் பெண்தானே’  ஆகிய மெகா தொடர்களை தமிழ்மணி தயாரித்தார். சன் குழுமத்தைச் சேர்ந்த ஜெமினி டி.வி.யிலும் பல மெகா தொடர்களை அவர் தெலுங்கில் தயாரித்தார். அவரை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்தன. நூற்றுக் கணக்கான நடிப்புக் கலைஞர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் தமிழ்மணி உதவியாக இருந்தார். 10 வருடங்கள் தொடர்ந்து சன் டி.வி.யில் பல மெகா தொடர்களைத் தயாரித்த தமிழ்மணி, அப்போதுதான் அழகன் தமிழ்மணியாக மாறினார். தமிழ்மணி என்ற தன்னுடைய பெயருக்கு முன்னால் தன் தந்தையான அழகப்ப தேவரின் பெயரில் இருந்து ‘அழகன்’ என்ற பதத்தை எடுத்து ஒட்டிக்கொண்டார். தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் மத்தியில் தமிழ்மணி புகழ் குன்றின் உச்சியில் பொன்னொளி வீசினார்.

அப்படியே அவர் தன் பயணத்தை தொடர்ந்திருக்கலாம். விதி அவரை விட்டால்தானே! பல வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படத் தயாரிப்பாளராக மாறினார். ஆர்.பாலுவை இயக்குநராகப் போட்டு ‘அன்பே உன் வசம்’ என்ற படத்தை அவர் தயாரித்தார். அந்தப் படத்தை வாங்க ஒரு விநியோகஸ்தர் கூட முன் வரவில்லை. 30 பிரிண்டுகள் போட்டு தமிழ்மணியே தமிழகமெங்கும் வெளியிட்டார். படம் ஒருவாரம் கூட ஓடவில்லை. 10 வருடங்கள் தொலைக் காட்சித் தொடர்கள் தயாரித்ததன் மூலம் அவர் சம்பாதித்த பணம், சொத்து அனைத்தும் அந்த ஒரே படத்தின் மூலம் காணாமல் போயின. தமிழ்மணி மீண்டும் கடனாளியாக ஆனார். பல கார்கள் நின்று கொண்டிருந்த அவருடைய அலுவலகத்தின் முன்னால் ஒரு கார் கூட இல்லாமற் போனது.

மீண்டும் தமிழ்மணி பல மாதங்களுக்குப் பிறகு டி.வி. தொடர் தயாரிப்பில் இறங்கினார். ராஜ் டி.வி.யில் ‘முந்தானை முடிச்சு’ என்ற மெகா தொடரைத் தயாரித்தார்.

தமிழ்மணிக்கு மீண்டும் ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. இயக்குநர் பாலாவின்  ‘நான் கடவுள்’ படத்தில் கதாநாயகன் ஆர்யாவின் தந்தையாக தமிழ்மணி நடித்தார். அதற்குப் பிறகு சுமார் பத்து படங்களில் தமிழ்மணி நடித்தார். நடிப்பில் பெரிய அளவில் அவரால் முன்னுக்கு வர முடியவில்லை.

பின்னர் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளராக தமிழ்மணி சில வருடங்கள் இருந்தார். அதன் மூலம் அவருக்கு நிறைய தொடர்புகள் கிடைத்தன. தெரியாதவர்களுக்கும் தெரிந்தவராக அவர் ஆனார்.

தமிழ்மணியும் நானும் அவ்வப்போது சந்திப்போம். மனம் விட்டு பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம். அவருடைய வீட்டிற்குச் சென்று நான் சாப்பிடுவேன். அவருடைய குடும்பத்தில் நடக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் எல்லாவற்றிலும் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.

தமிழ்மணி தன் மகன் அஜய்யை கதாநாயகனாகப் போட்டு ‘மீன் கொத்தி’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். அது விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மீண்டும் மெகா தொடர் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

மேடுகள், பள்ளங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், வீழ்ச்சிகள் என்று பலவற்றையும் பார்த்துவிட்ட தமிழ்மணியின் கையில் சொல்லிக் கொள்கிற அளவிற்கு சம்பாத்தியம் எதுவும் இல்லை. எனினும், இப்போது பல அனுபவங்களையும் பெற்றிருக்கும் பக்குவப்பட்ட மனிதராக அவர் ஆகி விட்டிருக்கிறார். அந்த அனுபவங்களைக் கொண்டு அவர் மீண்டும் உயரத்தை நோக்கி பயணிப்பார், நிறைய பணத்தையும் சம்பாதிப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணியின் வாழ்க்கையை மிகவும் அருகிலேயே இருந்து பார்த்து வந்திருப்பவன் என்ற முறையில் என்னால் அதை உறுதியுடன் கூற முடியும்.


விஜயகாந்தை ஜப்பானுக்கு அழைத்துச் சென்ற இயக்குநர்!

சுரா

‘பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற படத்தை இயக்கிய வி.அழகப்பனை நம்மால் எப்படி மறக்க முடியும்?

எனக்கு இயக்குநர் வி.அழகப்பனை 1981ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். நான் பார்க்கும்போது அவர் நடிகர் விஜயனைக் கதாநாயகனாக வைத்து ‘கண்ணிலே அன்பிருந்தால்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னால் உதயசங்கர், மேனகா என்ற இரு புதுமுகங்களை வைத்து ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தை நான் பழனியில் பார்த்தேன். நான் விரும்பாத சில காட்சிகள் அந்தப் படத்தில் இருந்தாலும், பல காட்சிகளில் இயக்குநரின் திறமை அதில் தெரிந்தது. அந்தக் காரணத்தால் நானே அவரை தேடிச் சென்று பார்த்தேன். ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படத்தில் நான் கண்ட சில குறைகளை அவரிடம் சொன்னேன். குறிப்பாக - இடைவேளை காட்சி. நான் சொன்னதை அழகப்பன் ஒத்துக் கொண்டார். இடைவேளைக்குப் பிறகு படம் பார்ப்போரை மீண்டும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்காக அதைச் செய்ததாக அவர் சொன்னார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு எங்களுக்குள் ஒரு நெருங்கிய நட்பு உண்டானது.

‘கண்ணிலே அன்பிருந்தால்’ முற்றிலும் முடிவடைந்தும், விஜயனுக்கு மார்க்கெட் மதிப்பு இல்லாமற் போனதால், படம் திரைக்கு வராமல் நின்று விட்டது. அதற்குப் பிறகு அழகப்பன் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார். மீண்டும் படத்தை இயக்குவதற்காக பல வகைகளிலும் அவர் போராடினார். அப்போது நான் தியாகராய நகரில் இருந்தேன்.  அவரும் அங்குதான் இருந்தார். நானும் அவரும் அடிக்கடி சாலையில் சந்திப்போம். பல கதைகளையும் என்னிடம் அவர் கூறுவார். தேவராஜ்- மோகனிடம் அசோசியேட் இயக்குநராக தான் பணியாற்றிய நாட்களைப் பற்றி அவர் கூறுவார். ‘அன்னக்கிளி’ படத்தில் தான் இணை இயக்குநராகப் பணியாற்றியதையும், அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்ததையும் அவர் என்னிடம் பல சம்பவங்களுடன் கூறியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் பணியாற்றி, மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றிருக்கும் அழகப்பன் பட உலகில் முறையான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறாரே என்று பல நேரங்களில் நான் கவலைப்பட்டிருக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1985ஆம் ஆண்டில் வி.அழகப்பனுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அழகப்பனின் திறமையை நன்கு தெரிந்து கொண்டிருந்த படத்தொகுப்பாளர் வி.ராஜகோபால் அந்த வாய்ப்பை அவருக்கு அளித்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘ஆகாயத் தாமரைகள்’. சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ரேவதி கதாநாயகியாக அதில் நடித்தார். ‘மண்வாசனை’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் ரேவதி ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. ஒட்டன் சத்திரத்தில் நடைபெற்ற அப்படத்தின் படப்பிடிப்பிற்கு நான் போயிருந்தேன். சுரேஷுக்கும் ரேவதிக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்து இயக்கிக் கொண்டிருந்த அழகப்பனைப் பார்த்தபோது எனக்கு பாரதிராஜாதான் ஞாபகத்தில் வந்தார். அப்படத்தின் ஒரு காட்சியில் சாணத்தைத் தட்டிக் கொண்டே நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்த ரேவதியின் திறமையைப் பார்த்து, கூடியிருந்த கிராமத்து மக்கள் தங்களை மறந்து கைகளைத் தட்டினார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கைகளைத் தட்டினேன்.

‘ஆகாயத் தாமரைகள்’ திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. அதைத் தொடர்ந்து வி.அழகப்பன், தரங்கை சண்முகம், மோகன் நடராஜன் மூவரும் சேர்ந்து ஒரு பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். அதுதான் ஸ்ரீ ராஜகாளியம்மன் பட நிறுவனம். அந்நிறுவனத்தின் மூலம் ‘பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற படத்தை ஆரம்பித்தார்கள். அப்படத்தை அழகப்பன் இயக்கினார். சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, நதியா கதாநாயகியாக நடித்தார். ‘பூவே பூச்சூடவா’ திரைக்கு வந்து நதியா மக்கள் மனங்களில் இளவரசியாக வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அந்தப் படத்திற்கு டி.ராஜேந்தர் மிகவும் சிறப்பாக இசையமைத்தார். தன் படங்கள் இல்லாமல், வெளிப் படம் ஒன்றிற்கு டி.ராஜேந்தர் இசையமைப்பது அதுவே முதல் முறை. ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் வளர்ந்த ஒரு கவித்துவமான காதல் கதை அது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படமும், ‘பூக்களை பறிக்காதீர்கள்’ படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தன. பெரிதாக எதிர்ப்பக்கப்பட்ட, பிரம்மாண்ட படமான ‘விக்ரம்’ வர்த்தக ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் போக, சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘பூக்களை பறிக்காதீர்கள்’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. அதில் இடம் பெற்ற ‘பூக்களைத்தான் பறிக்காதீங்க...’, ‘மாலை என்னை வாட்டுது...’, ‘அம்மாடி சின்னப் பெண்ணு...’ ஆகிய டி.ராஜேந்தரின் பாடல்கள் இப்போது கூட நம் இதயங்களில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றன!

ஸ்ரீராஜகாளியம்மன் நிறுவனம் தயாரித்து, வி.அழகப்பன் இயக்கிய அடுத்த படம் ‘பூ மழை பொழியுது’ விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படம் அதுதான். அந்தப் படத்திற்கு இந்திப் பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அதன் படப்பிடிப்பு நடைபெற்றது. சுரேஷ் இரண்டாம் கதாநாயகனாக நடிக்க, நதியா அப்படத்தின் கதாநாயகியாக நடித்தார். ஆர்.டி.பர்மன் இசையமைப்பில் அமைந்த ‘நதியா நதியா நைல் நதியா…’ என்ற கவிஞர் வாலியின் இனிய பாடலை நம்மால் மறக்கத்தான் முடியுமா?

தொடர்ந்து அழகப்பன் இயக்கிய படம் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’. இயக்குநராக இருந்த ராமராஜனை அந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் அழகப்பன். ரேகா கதாநாயகியாக நடித்தார். அழகப்பனின் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் அது. திரைக்கு வந்து அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து மோகன், நளினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை வைத்து ‘குங்குமக் கோடு’ என்ற படத்தை அழகப்பன் இயக்கினார். ஒரு இளம் விதவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டதால், வர்த்தக ரீதியாக அது தோல்வியைத் தழுவியது. எனினும், அப்படத்திற்காக எஸ்.ஏ.ராஜ்குமார் எழுதி இசையமைத்த ‘தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது... தள்ளாடும் மலருக்குக் காவலாய் தென்றல் இருக்குது... பெண்ணே உனக்குக் காவலாய் என்ன இருக்குது?’ என்ற பாடல் இப்போதும் என் மனதில் பசுமையாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து பிரபு, சரிதா, அமலா ஆகியோரை வைத்து அழகப்பன் ‘பூப் பூவா பூத்திருக்கு’ என்ற படத்தை இயக்கினார். அருமையான குடும்பக் கதை அது. டி.ராஜேந்தர் அப்படத்திற்கு இசையமைத்தார். பல காட்சிகள் அந்தமானில் படமாக்கப்பட்டன. சரிதாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம் ‘பூப் பூவா பூத்திருக்கு’. அது திரைக்கு வந்து சிறந்த வெற்றியை பெற்றது. டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ‘எங்கப்பா வாங்கித் தந்த குதிரை...’ என்ற பாடல் மக்களின் மனங்களில் இப்போது கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்து, அழாதவர்கள் யார்? வி.அழகப்பன் இயக்கிய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘பூப் பூவா பூத்திருக்கு’தான். பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே, படமாக்கப்பட்ட காட்சிகளை வசனத்துடன் அழகப்பன் தன் நண்பர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் திரையிட்டுக் காட்டினார். அதற்கு என்னையும் அழைத்திருந்தார். படம் முடிந்து வெளியே வந்து நான் அடக்க முடியாமல் அழுதேன். அதைப் பார்த்த அழகப்பன் என் தோளில் தன் கையை வைத்து ‘அழாதீங்க சார்… இது படம்தானே?’ என்று தேற்றியதை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

‘அன்னக்கிளி’, ‘கல்யாணராமன்’ படங்களைத் தயாரித்த எஸ்.பி.டி. பிலிம்ஸுக்காக அழகப்பன் இயக்கிய படம் ‘இரண்டில் ஒன்று’. ராம்கி, நதியா நடிக்க, ஒரு கொடூரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் அப்படத்தில் ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரனின் அபாரமான நடிப்புத் திறமையைக் கொண்ட படம் அது. தணிக்கையின் போது பல சிரமங்களையும் அனுபவித்த அப்படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தொடர்ந்து ரகுவரன் கதாநாயகனாக நடிக்க ‘என் வழி தனி வழி’ என்ற படத்தை அழகப்பனே சொந்தத்தில் தயாரித்து, இயக்கினார். மாறுபட்ட கதையைக் கொண்ட அப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவி, அழகப்பனுக்கு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியைக் கொடுத்துவிட்டது. தாங்க முடியாத பண இழப்பில் இருந்த அழகப்பனுக்கு, அப்போது முன்னணி நட்சத்திரமாக இருந்த ராமராஜன் கால்ஷீட் கொடுத்து உதவினார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘தங்கமான ராசா’. ராமராஜன், கனகா நடித்த அந்தப் படத்தை அழகப்பன் இயக்கினார். 100 நாட்கள் ஓடி அது சாதனை புரிந்தது. அதற்குப் பிறகு அழகப்பன் அர்ஜுன் நடிக்க, ‘தங்கத் தாமரைகள்’ என்ற படத்தையும், ராமராஜன் நடித்த ஒரு படத்தையும் இயக்கினார்.

பின்னர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘ஜாக்பாட்’ என்ற மலையாள படத்தின் தமிழ் உரிமையை வாங்கினார் அழகப்பன். மலையாள படத்தில் இருந்த காட்சிகளுடன், தமிழில் சில காட்சிகளை தன் இயக்கத்தில் அவர் படமாக்கினார். மம்மூட்டிக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்ததால், அப்படத்தை எளிதில் விநியோகம் செய்துவிட முடியும் என்று அழகப்பன் எதிர்பார்த்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயாராக இல்லை. மிகப் பெரிய தொகையை அழகப்பன் வெளியில் கடன் வாங்கியிருந்தார். ‘ஜாக்பாட்’ படத்தை திரைக்குக் கொண்டு வர முடியாத்தால், அழகப்பனுக்கு மிகப் பெரிய இழப்பு உண்டானது.

அதற்கடுத்து வி.அழகப்பன் படமெதுவும் இயக்கவில்லை. திரையுலகில் பல மாற்றங்கள் உண்டாயின. ஏற்கெனவே இருந்தவர்கள், மக்களால் வீசி எறியப்பட்டார்கள். புதிதாக பல இளைஞர்கள் இயக்குநர்களாக அறிமுகமாகி வியக்கத்தக்க சாதனைகள் புரிந்தனர். அப்படி படவுலகம் மறந்து போய்விட்ட ஒரு மனிதராக வி.அழகப்பன் ஆகிவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு உடல் ரீதியாக அழகப்பன் பாதிக்கப்பட்டார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக் கொண்டே சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கக் கூடிய சூழ்நிலை அவருக்கு உண்டானது. ராணுவ வீரரைப் போன்ற மிடுக்கான தோற்றத்தையும், யாருக்கும் தலை வணங்காத குணத்தையும், கம்பீரமான நடவடிக்கைகளையும், சிங்கத்தைப் போன்ற திமிரையும், அளவற்ற தன்னம்பிக்கையையும் கொண்டிருந்த அழகப்பனால் வெறுமனே எப்படி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? தன் விதியை தானே நொந்து கொண்டு அவர் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னால் சிறிதும் எதிர்பாராமல் வி.அழகப்பன் மரணத்தைத் தழுவி விட்டார். அவர் மரணமடைந்த செய்தி எனக்கே சமீபத்தில்தான் தெரிய வந்தது. எத்தனையோ வெற்றிப் படங்களை இயக்கிய வி.அழகப்பன், யாருக்கும் பரவலாக தெரியாமலே இறந்து விட்டார் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. படவுலகிலிருந்து அவர் விலகி இருந்த காரணத்தால், அவருக்கும் எனக்கும் பல வருடங்கள் எந்தவித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. நான் உயர்வாக மதிக்கும் ஒரு நல்ல இயக்குநரை, அருமையான நண்பரை பல வருடங்கள் பார்க்காமலே இருந்து விட்டோமே என்பதற்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் தற்போது அமெரிக்காவில் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார். இளைய மகன் ஒரு திரைப்படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.வி.அழகப்பன் என்ற மனிதர் இந்த உலகத்தை விட்டு நீங்கியிருக்கலாம். ஆனால், அவர் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் நம் உள்ளங்களில் நிரந்தரமாக என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.