Logo

கன்யாகுமாரி

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 7229
kanyakumari

தாண்டவத்திற்குரிய தாளம் துடி. துடி சத்தம் ஒலிக்க சுசீந்திரத்தின் கருங்கல் சுவரில் இருக்கும் சிற்பங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.

வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலைகள் நடனமாடுவதைப்போல பார்வையாளர்களுக்கு தோன்றும் விதத்தில் நாம் காட்டுகிறோம். கற்சிலைகள் கதை சொல்லலாம்.

அப்போது ஒரு குரல்:

“கன்னிப் பெண்ணான தேவி பராசக்தி அக்கரையில் மூணு கடல்கள் ஒண்ணு சேர்கிற முனையில் சுசீந்திரத்தில் இருக்குற சிவனுக்காக தவமிருந்தா. திருமணத்தை தேவர்கள் நிச்சயம் செஞ்சாங்க!”

குரல் முடியும்போது, குரலுக்குச் சொந்தக்காரனின் முகம் காட்டப்படுகிறது. வழிகாட்டியின் முகம். வேஷ்டி அணிந்திருக்கிறான். தோளில் துண்டு இருக்கிறது. பெரிய கோவில்களில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நின்று கொண்டிருக்கும் கைடுகளில் ஒருவன் அவன்.

கைடு தொடர்கிறான்:

“நள்ளிரவு நேரத்துலதான் திருமணத்திற்கான முகூர்த்தம். சுசீந்திரத்துல இருந்து சரியான முகூர்த்த நேரத்துக்குப் போய்ச் சேரணும்னு வேக வேகமா நடந்து போகிறார் சிவன். ஆனா, சேவல் வடிவத்துல வந்து தேவேந்திரன் கூவியதைக் கேட்டு, முகூர்த்தம் தாண்டிப் போயிடுச்சேன்னு பதறிப்போன சிவன் பயங்கர கவலையுடன் திரும்பிப் போறாரு!”

சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டி சொன்ன கதையைக் கேட்கிறார்கள். வெவ்வேறு வகைப்பட்ட பெண்களும் ஆண்களும். கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி தன் தாயிடம் தாழ்ந்த குரலில் கேட்கிறாள்:

“சேவலாக வந்து கூவுறது நாரதர்தானேம்மா?”

தாய்: சும்மா இருக்கியா என்ன?

சிறுமி:    இல்ல... தாத்தா சொன்னாரு...

தாய்: (வெறுப்புடன்) சும்மா இருக்க மாட்டியா?

சிறுமி:    (யாரிடம் என்றில்லாமல் - தனக்குத்தானே கூறிக் கொள்வது மாதிரி) இப்படியா பொய் சொல்றது!

2

மாலை நேரம். சுசீந்திரம் கோவில்.

சுவரில் இருக்கும் ஒரு அழகான கருங்கல்லால் ஆன சிலையோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறாள் ஒரு இளம்பெண்.

அவள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். கூட்டத்தில் ஷர்ட்டும், பேன்ட்டும் அணிந்திருக்கும் நாகரிகமான ஒரு இளைஞன் அவளைப் புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் படும் சிரமத்தைப் பார்க்கும்போது தனக்கு எடுக்கத் தெரியாத ஒரு கேமராவை வைத்து அவன் என்னவோ பண்ணிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

அவளோ தன்னைத் தாண்டி நின்றிருக்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இளைஞன்:     (வெற்றிப் பெருமிதத்துடன்) நான் இந்த ஆட்டோமேட்டிக் ஸ்விட்சை ஆன் செய்ய மறந்துட்டேன். நௌ இட் ஈஸ் ஓகே. ரெடி. மாலதி, ரெடி, ஸ்மைல்... ஸ்மைல் ப்ளீஸ்...

இளம்பெண்:     (கைடிடம்) ஹலோ... அதுக்குப் பிறகு தேவி என்ன பண்ணினா?

கைடு:     (அவளுக்கு மட்டும் தனியாக அல்ல - மொத்த கூட்டத்திற்கும் சேர்த்து) தேவி கழுத்துல இருந்த மாலையை வீசி எறிஞ்சா, பந்தலை தாறுமாறா இழுத்து கீழே போட்டா. அங்கே இருந்த உணவு பதார்த்தங்களை மணல்ல வீசி எறிஞ்சா. இன்னைக்கும் கன்யாகுமரி மணல்ல அந்த நிற வேறுபாட்டைப் பார்க்கலாம்.

இளைஞன்:     (தன் மனைவி தான் எடுக்கும் புகைப்படத்திற்கு சரியாக போஸ் தரவில்லை என்ற மனக்குறையுடன்) கமான்... இங்கே பாரு. மாலதி... இலேசா சிரி.

இளம்பெண்:     எனக்கு சிரிப்பு வந்தாத்தானே? (மீண்டும் சுற்றுலா பயணிகளையும் கைடையும் பார்த்தவாறு) அதுக்குப் பிறகு தேவி என்ன ஆனா?

கைடு:     தேவி இன்னைக்கும் ஒரு நித்யகன்னியா காத்திருக்கா.

இளைஞன்:     மாலதி, ஒரு செகன்ட்... ரெடி... கேமராவை ‘க்ளிக்’ செய்கிறான்.

அவள் நடந்து அவனுடன் சேர்ந்து கூட்டத்தை நோக்கி வரும்போது-

இளைஞன்:     போஸ் நல்லா இல்ல...

இளம்பெண்:     எனக்கு சிரிப்பே வரமாட்டேங்குது.

இளைஞன்:     சும்மா இருக்கிற நேரத்துல எல்லா தேவையில்லாம சிரிப்பே...

கூட்டத்தில் வயதான ஒருவர், தான்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை பொறுப்பேற்றிருப்பவர் என்பது மாதிரி எல்லோரிடமும்,

“இதுக்கு மேல தாமதமானா, நாம சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க முடியாமப் போயிடும். நாம போகலாம்.”

எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘கலகல’வென பேசியவாறு நடக்கிறார்கள். கூட்டத்தில் ஒருவர்:

“எனக்கு இந்த ஊரை நல்லா தெரியும். இங்க பக்கத்துல இருக்குற ஒரு கடையில அருமையான பொரிச்ச கோழி கிடைக்கும். நாங்க திருவனந்தபுரத்துக்கு போறப்போ...”

பலதரப்பட்ட பேச்சுக்களுக்கு மத்தியில் அந்த மனிதனின் கோழியைப் பற்றிய நினைவு யாருக்குமே கேட்கவில்லை. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சாலையில் நிறுத்தியிருக்கும் டூரிஸ்ட் பஸ்ஸை நோக்கிச் செல்கிறது. கூட்டத்திலேயே கடைசியாக நடப்பவர்கள் அந்த இளைஞனும் அந்த இளம்பெண்ணும்தான். கைடு ஆட்களை எண்ணுகிறான்.

முதலில் சந்தேகக் கேள்வி கேட்ட சிறுமி:

அம்மா... அந்த சாமியாரை எங்கே?

கைடு:     ஒரு ஆளு குறையுதே!

நகைச்சுவையாகப் பேசக்கூடிய ஆள் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண்: சாமியாரைத்தான் காணோம். சன்னியாசிகளுக்குத்தான் மறையிற வித்தை தெரியுமே!

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருக்கு, கோவிலுக்குப் பின்னால் இருந்து காவி உடை அணிந்த சாமியார் வருகிறார். அவருக்கு வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். நரை விழுந்த தாடியும், தலைமுடியும், காவி உடையும் அணிந்த சாமியார் அவர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தனக்காக காத்திருக்கிறது என்பது தெரிந்ததும் வேகவேகமாக அவர் வருகிறார்.

குவியலாகக் கிடக்கும் செருப்புகள், ஷூக்கள்... பல கால்கள் அவற்றுக்குள் நுழைகின்றன. அவர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள்.

3

டற்கரை - பகல்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் கடற்கரை வழியாகப் போகிறது. பஸ்ஸில் இருக்கும் பயணிகளுக்கிடையே பலதரப்பட்ட உரையாடல்கள். வாழ்க்கையில் வெவ்வேறு முகங்களை அவர்களின் பேச்சில் நம்மால் காண முடிகிறது.

வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் சிறுமி தன் தாயிடம்:

“அம்மா... கடல் எங்கே இருக்கு?”

சிறுமியின் தாய்:     கொஞ்சம் சும்மா இருக்கியா?”

சாமியாரின் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு ஆள் சாமியாரை உரையாடலுக்கு இழுக்க முயற்சிக்கிறார்:

“வியாபாரத்தை வச்சு இந்தக் காலத்துல ஒண்ணுமே பண்ண முடியாது சாமி. சேல்ஸ் டாக்ஸ்காரங்களோட தொந்தரவைத் தாங்க முடியல. சில நேரங்கள்ல தோணும். பேசாம எல்லாத்தையும் விட்டுட்டு எங்காவது ஓடிப்போய் ஒரு மூலையில அமைதியா உட்கார்ந்துட்டா நல்லா இருக்குமேன்னு... என்ன சாமி, நான் சொல்றது சரிதானா?”

சாமியார் அதற்கு பதிலெதுவும் கூறாமல், வெறுமனே புன்னகைக்கிறார்.

வியாபாரி: சாமி, நீங்க அமெரிக்காவுக்கு போயிருக்கீங்களா?

சாமியார் ‘இல்லை’ என்று தலையை ஆட்டுகிறார்.

வியாபாரி: சன்னியாசிகளுக்கு அங்கே நல்ல மார்க்கெட். ஒவ்வொருத்தரும் அங்கே போயி டாலர்களை அள்ளிட்டு வர்றாங்க. சாமியார்களும் இந்தக் காலத்துல கொஞ்சம் பிராக்டிக்கலா சிந்திக்கணும்.


பாதி தன்னிடம் கேள்வி கேட்ட சக பயணியிடமும், பாதி தன்னிடமும் என்பது மாதிரி -

சாமியார்:  அனந்தம் பதமே வித்தம் யஸ்ய மே நாஸ்தி கிஞ்சன.

வியாபாரி: எனக்கு நீங்க சொன்னது புரியல.

சாமியார்:  ஜனகன் சொன்னது இது: என் சொத்துக்கு முடிவே இல்ல. அதே நேரத்தில் என்னிடம் எதுவுமில்லை.

4

வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் இள்மபெண்ணின் விரலை (அதில் திருமண மோதிரம் இருக்கிறது) தடவியவாறு -

இளைஞன்:     கடலைப் பார்க்குறதுன்றது நான் எப்பவும் விருப்பப்படுற ஒரு விஷயம். உன் வீட்டுக்கு நான் முதல் தடவையா வந்த அன்னைக்கு சாயங்காலம் நாம எல்லோரும் சேர்ந்து கடலைப் பார்க்கப் போனோம்...

அவன் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டிருந்தாலும், பஸ்ஸின் ஜன்னல் வழியாக வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டிருக்கும் காட்சிகளை அவள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இளைஞன்:     மாலதி, உனக்கு அது ஞாபகத்துல இருக்கா?

அவளைப் பார்க்காமல் வெளிக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வந்த அந்த இளம்பெண்:

“ம்... எல்லாமே ஞாபகத்துல இருக்கு. என் அக்காவை நீங்க கையைப் பிடிச்சு தண்ணில இறக்கி விட்டீங்க!”

இளைஞன்:     அப்போ நீ ரொம்பவும் பயப்பட்டே. நீ அப்போ ஒண்ணும் தெரியாத சின்னப் பொண்ணு.

இளம்பெண்:     அக்காவை நீங்க படமெடுத்தீங்க. ‘ஸ்ரீராமன் ஒரு போக்கிரி’ன்னு நான் மணல்ல எழுதி வச்சிட்டு தென்னை மரத்துக்குக் கீழே உட்கார்ந்திருந்தேன்.

அதைக் கேட்டு அந்த இளைஞன் ஒரு மாதிரி ஆகிவிடுகிறான்.

இளம்பெண்:     எனக்கு ஒண்ணும் அப்படி அழகா தெரியல.

ஒரு பிடி கையில் கிடைத்ததாக நினைத்து -

இளைஞன்:     உன் அக்காவுக்கு உன் அழகு இருக்குன்னு யார் சொன்னாங்க?

இளம்பெண்:     என் அக்கா விஷயத்தை யார் சொன்னது? நான் சொன்னது கடலை...

இரண்டு பேரும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

சாமியாரின் பார்வையில் பஸ்ஸில் இருக்கும் வெவ்வேறு வகைப்பட்ட கதாபாத்திரங்கள்.

5

ன்யாகுமரி முனை - பகல்.

பஸ் கன்யாகுமரிக்குள் நுழைகிறது. எங்கேயோ ஆம்பித்த ஒரு பாதை மூன்று கடல்கள் ஒன்று சேர்கிற ஒரு முனையில் திடீரென்று காணாமல் போய்விடுகிறது.

பஸ் நிற்கிறது.

சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவராக இறங்குகிறார்கள். கடைசியில் இறங்குவது சாமியார்.

சாமியார் வழிகாட்டியை எங்கே என்று தேடுகிறார். அவன் வியாபாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். சாமியார் அருகில் போய் அவர்களுடைய உரையாடல் கெட்டுவிடக்கூடாது என்று கருதி அமைதியாக அவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருக்கிறார்.

சாமியார்:  என் பெட்டியைக் கொஞ்சம் எடுத்துத் தந்தா...

கைடு:     ஓ... சாமியை நான் மறந்தே போனேன்.

வியாபாரி: அப்போ சாமி... நீங்க எங்ககூட இருக்குறதா இல்ல...?

சாமியார் ‘இல்லை’ என்ற அர்த்தத்தில் இலேசாக சிரிக்கிறார். கைடு பஸ்ஸின் மேல் ஏறுகிறான். பஸ்ஸில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை விட்டு ஆங்காங்கே சிதறிப் போகின்றனர். தூரத்திலிருந்து சிப்பி மாலைகளையும் பனை நுங்குகளையும் எடுத்துக் கொண்டு சிறுமிகள் ஓடி வருகிறார்கள். அவர்கள் புதிதாக வந்திருக்கும் இந்தக் கூட்டத்தை மொய்க்கிறார்கள்.

பஸ்ஸின் மேலிருந்து கைடு கீழ் நோக்கி நீட்டிய பெட்டியை வாங்கும்போது, சாமியாரைச் சுற்றி பொருட்கள் விற்பவர்களின் கூட்டம்.

கைடு:     கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உங்களோட பெரிய ரோதனையா போச்சு.

மாலை விற்கும் சிறுமிகள்: ஒரு ரூபா... ஒன் ருப்பி... வாங்குங்க சார்...

அவர்களில் இருந்து சற்று விலகி நிற்கும் பதினான்கு அல்லது பதினைந்து வயது வரக்கூடிய ஒரு இளம் பெண்ணை சாமியார் பார்க்கிறார். அவளும் சிப்பி மாலை விற்பவள்தான். கசங்கிப் போன ஜாக்கெட். ஆங்காங்கே துணியால் ஒட்டுப் போடப்பட்ட பாவாடை. கழுத்தில் கயிறில் கோர்க்கப்பட்டிருக்கும் வெள்ளியால் ஆன ஒரு டாலர் மட்டுமே அவளின் அணிகலன்.

சாமியாரை மற்ற சிறுமிகள் மொய்த்துக் கொண்டிருக்க, அதில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனியே நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண்.

சாமியாரும் அவளைப் பார்க்கிறார். ஏதோ ஒரு பழைய ஞாபகம் அவரின் மனதில் வந்து அலை மோதுகிறது.

புதிதாக வந்திருக்கும் இந்தக் கூட்டத்தில் நின்று பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்த இளம்பெண் கைகளில் வைத்திருக்கும் மாலைகளுடன் வேறு இடங்களைத் தேடி ஓடுகிறாள்.

சாமியார் நடக்கிறார்.

சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் பல்வேறு வகைப்பட்ட மக்கள் கூட்டம், மவுத் ஆர்கன் வாசித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், காதலன் - காதலிகள், அதற்கு மத்தியில் தெர்மோஃப்ளாஸ்க், உணவுப் பொருட்கள் ஆகியவற்றுடன் அமர்ந்திருக்கும் தமிழ்க் குடும்பங்கள்.

சாமியார் நடக்கிறார்.

6

“ஒன் ருப்பி... ஒன் ருப்பி... டூ ருப்பீஸ்... த்ரீ...”

ரெஸ்ட் ஹவுஸுக்குப் போகும் நடைபாதையில் நீண்ட தாடியையும், நீளமான தலைமுடியையும் வைத்துக் கொண்டு தோளில் துணிப்பை, பைஜாமா- ஷர்ட் என்றிருக்கும் நான்கைந்து ஹிப்பிகள். அவர்களில் இரண்டு பேர் பெண்கள்.

சிப்பி மாலை விற்கும் பெண்ணின் குரல்:

“ஒன் ருப்பி... ஒன் ருப்பி... சார்... ஒன் ருப்பி”

மணல் பரப்பு வழியே நடந்து ரெஸ்ட் ஹவுஸுக்குப் போகும் நடைபாதையை அடைந்த சாமியார் பெட்டியை பாதையின் ஓரத்தில் இருந்த சிறிய சுவருக்குக் கீழே சிறிது நேரம் வைத்துவிட்டு இளைப்பாறுகிறார். கண்களால் சுற்றிலும் ஒரு பார்வை பார்க்கிறார். சற்று தூரத்தில் ஹிப்பிகளுடன் சிப்பி மாலையை வைத்துக் கொண்டு விலை பேசிக் கொண்டிருக்கும் இளம் பெண் மீண்டும் சாமியாரின் பார்வையில் படுகிறாள். யாரோ சிலர் மாலைகளை வாங்குகிறார்கள். ஹிப்பி பெண் மாலையை கழுத்தில் அணிந்து அழகு பார்க்கிறாள். ஒரு பெண் அந்த மாலையைச் சரியாக அணிய உதவுகிறாள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் கேட்கவில்லை.

மாலைகளை விற்பனை செய்து முடித்த அவள் சாமியாரின் அருகில் ஓடி வருகிறாள். எதுவுமே பேசாமல் முன்பு பார்த்த சாமியாராயிற்றே என்று மனதிற்குள் நினைத்தவாறு திரும்பிப் போகப் பார்க்கிறாள்.

சாமியார்:  கொஞ்சம் நில்லும்மா.

பார்வதி:   சும்மா நேரத்தை வீண் செய்ய நான் விரும்பல.

அவளுடைய சுறுசுறுப்பையும், துடுக்குத்தனத்தையும் பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியடையும் சாமியார்:

“என்ன... என்கிட்ட மாலை விற்க மாட்டியா?”

பார்வதி:   எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. சாமியார்கள் மாலையும் வளையல்களும் வாங்குவார்களா என்ன?

அவள் மாலைகளை விற்பதற்கு புதிய இடங்கள் தேடி ஓடுகிறாள். அவள் போவதையே ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்றிருக்கிறார் சாமியார். பிறகு பெட்டியை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ஹவுஸை நோக்கி நடக்கிறார்.


7

ரெஸ்ட் ஹவுஸின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரிஸப்ஷன் அறைக்குள் சாமியார் நுழையும்போது, உரத்த குரலில் இந்தியில் உரையாடல் கேட்கிறது:

“அரெ பாய் க்யா ஹுவா? ங்ஹா, ங்ஹா உஸ்னெக்யா போலா?”

சாமியார் நடக்கும் காட்சியைப் பார்க்கிறார். கவுண்டரின் முன்னால் வெள்ளை நிறத்தில் பைஜாமாவும் ஷர்ட்டும் அணிந்த தொப்பியைக் கொண்ட சேட் ஒருவர் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு பயங்கர கோபத்துடன் தொலைபேசியில் யாருடனோ கத்திக் கொண்டிருக்கிறார். தொப்பைக்கார சேட்டின் கோபத்தை அங்கிருக்கும் எல்லோருமே பார்க்கிறார்கள். பக்கத்தில் சேட்டின் மனைவி நின்றிருக்கிறாள். அவளுக்கு வயது 35 இருக்கும். பருமனான உடலைக் கொண்ட பெண் அவள். அவளின் இடுப்பில் சாவிக் கொத்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வாயில் வெற்றிலை போட்ட சிவப்பு இருக்கிறது.

சேட்: ஃபிர் க்யா ஹுவா? போலோ, அரெ போலோ தும்.

சேட்டின் மனைவி தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்து கையால் சைகை செய்கிறாள்.

“மெதுவா?”

அதை கவனிக்காமல்-

சேட்: மாதவன் கெ பாஸ் ஃபோன் தே தோ.

ஒரு நிமிடம் இளைப்பாறி விட்டு, தொழிற்சாலையில் கணக்கெழுதும் மலையாளியை சேட் பயங்கர கோபத்துடன் திட்டுகிறார்.

“டேய் மாதவா, நாயோட மகனே... கடற்கரையில இருக்குற கோடவுனுக்கு ஐநூறு மூடையை உடனே மாற்றணும்னு நான் சொல்லியிருந்தேனே! நாயோட மகனே. இப்போ என்ன நடந்தது? (அடுத்த பக்கம் என்ன பதில் வருகிறது என்பதை கவனிக்காமலே) பணம் யாருக்கு நஷ்டம்? சொல்லுடா? சொல்லுடா நாயோட மகனே!”

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு தனக்குத் தானே என்னவோ முணுமுணுத்தவாறு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருக்கிறார் சேட். கவுண்டருக்குப் பின்னால் நின்றிருக்கும் மேனேஜர் தன்னுடைய சிரிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் சேட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறான். சேட்டின் முகம் கோபத்தால் பயங்கரமாக சிவந்து காணப்படுகிறது. இரத்தக் கொதிப்பால் உண்டாகும் நீண்ட பெருமூச்சு அவரிடம் வெளிப்படுகிறது. அவர்கள் அங்கிருந்து நகர்வதற்காக சாமியார் காத்திருக்கிறார்.

சேட்டின் மனைவி தன்னுடைய பையில் இருந்து வேகமாக மாத்திரைகள் இருக்கும் குப்பியை எடுத்து ஒரு மாத்திரையை மட்டும் வெளியே எடுத்து சேட்டின் கையில் தருகிறாள். அவர் அதை விழுங்கிவிட்டு மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு, பிறகும் என்னவோ தனக்குள் முணுமுணுத்தவாறு அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பிக்கிறார். அவருடைய மனைவி அவரைப் பின் தொடர்கிறாள். சாமியாரைப் பார்த்ததும், சேட் வணக்கம் சொல்கிறார்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று எண்ணிய சாமியார் கவுண்டரை நெருங்குகிறார்.

8

டலிலிருந்து வீசும் காற்றால் அறையின் ஜன்னல் கதவு வேகமாக அடைக்கிறது. அதை மீண்டும் திறந்து கொண்டியைச் சரியாக மாட்டி விடுகிறான் பணியாள். காற்றில் பறந்து கொண்டிருக்கும் திரைச்சீலையை ஒரு மூலையில் கட்டிவிட்டு நிறுத்திய அவன் சொன்னான்:

“இந்த இடத்துல நின்னு பார்த்தா, கடல் நல்லா தெரியும்!”

அப்போது இன்னொரு ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை நாம் பார்க்கிறோம். சாமியாரின் பார்வையில் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும் கடற்கரையும், கோவிலின் ஒரு பகுதியும் தெரிகிறது. பணியாள் மெத்தை விரிப்பில் இருந்த சுருக்கங்களைச் சரி செய்கிறான். அலமாரியில் இருந்த பழைய தண்ணீர் இருந்த கூஜாவை எடுத்துக் கொண்டு வெளியே போக முயற்சிக்கும்போது -

“ராத்திரி சாப்பிடுறதுக்கு என்ன வேணும்?”

சாமியார்:  எது இருந்தாலும் சரிதான்.

பணியாள் வெளியே செல்கிறான். சாமியார் வாஷ் பேஸினில் முகத்தைக் கழுவிவிட்டு திரும்பி வந்து பெட்டியைத் திறக்கிறார்.

பெட்டியைத் திறந்தவுடன் மேலே பல வர்ணங்களைக் கொண்ட புடவை இருக்கிறது. அதைப் பார்த்ததும் சாமியார் அதிர்ச்சியடைகிறார். வேகமாக அதில் இருக்கும் சாமான்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுக்கிறார். பெண்ணின் உடைகள், வாசனைப் பொருட்கள்... எல்லாவற்றையும் மீண்டும் பெட்டிக்குள் வைத்து மூடுகிறார். ஒரு நிமிடம் பெட்டியையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

கூஜாவில் நீருடன் வந்த பணியாள் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றிருக்கிறான். அவன் பேசிக் கொண்டிருப்பதில் மிகவும் விருப்பம் உடையவன் என்பதைக் காட்டுகிறோம்.

பணியாள்: சாமி, இப்போத்தான் முதல் தடவையா இங்கே வர்றீங்களா?

சாமியார்: பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு தடவை வந்திருக்கேன்.

பணியாள்: அப்போ இந்த ரெஸ்ட் ஹவுஸே இருந்திருக்காதே! இதை ஆரம்பிச்சதுல இருந்து நான் இங்கே இருக்கேன். ஆனா, ஒரு பிரயோஜனமும் இல்லை சாமி!

சாமியார் ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்க்கிறார். பணியாள் வருத்தப்பட்டுவிடக் கூடாதே என்று அவன் பேசுவதைக் கேட்பது மாதிரி ‘உம்’ கொட்டுகிறார்.

பணியாள்: அமைச்சர் வந்தப்போ சொன்னாரு. செக்ரட்டரி வந்தப்போ சொன்னாரு. இருந்தும் ஒண்ணுமே நடக்கல. நாங்க வாங்குற சம்பளத்தை வெளியே சொல்றதுக்கு இல்ல. ரொம்ப கம்மி.

சாமியார் அவன் சொன்னதைக் கேட்டதை வெளிப்படுத்துவது மாதிரி, அவனைப் பார்த்து புன்னகைக்கிறார்.

அப்போது அவரின் பார்வையில் கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் ஜன்னலின் அருகில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் வெளுத்து மெலிந்து போயிருக்கும் இளைஞன் படுகிறான்.

பணியாள்: அந்தப் பக்கம் இருக்குற அறைகள்தான் ரொம்பவும் நல்லா இருக்கும். சூரியன் உதயமாகுறதையும், மறையிறதையும் அங்கே நின்னு பார்க்கலாம்.

சாமியார்:  அப்படியா?

பணியாள்: அது யாருன்னு நினைக்கிறீங்க? கே.பி.டி. முதலாளியோட மகன். பேரு ஜெயன் முதலாளி.

சாமியார்:  (சாதாரணமான குரலில்) அப்படியா?

பணியாள்: கே.பி.டி. யை சாமி, உங்களுக்குப் பழக்கம் உண்டா?

சாமியார்:  இல்ல...

பணியாள்: கே.பி.டி.க்கு பஸ் சர்வீஸ், எஸ்டேட் எல்லாமே இருக்கு. அவருக்கு ஒரே மகன் இந்த ஜெயன்தான். முன்னாடி இவர் ஒரு பயங்கரமான ஆளு. எவ்வளவோ பணத்தை அழிச்சிட்டாரு. எவ்வளவு அழிச்சாலும் இன்னும் பணம் தீராம இருக்குன்னா பார்த்துக்குங்களேன். ஒரு வாரமா இங்கே இருக்காரு. மதுவைக் கையில தொட்டா அவ்வளவுதான்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. இப்போ ஆளே முழுசா மாறிப் போயாச்சு. ரொம்பவும் அமைதியான ஆளா மாறிட்டாரு. சிகரெட்கூட குடிக்கிறது இல்ல...

சாமியார் எதிர் திசையில் நின்றிருக்கும் அந்த இளைஞனையே பார்த்தவாறு நின்றிருக்கிறார்.

பணியாள்: சாமி, உங்களோட ஆஸ்ரமம் எங்கே இருக்கு?

சாமியார்:  எனக்கு ஆஸ்ரமும் இல்ல... ஒண்ணும் இல்ல.

பணியாள்: உங்களுக்கு எந்த ஊரு?

துக்கத்தின் சாயல் கலந்த ஒரு மெல்லிய புன்னகையுடன்-

சாமியார்:  ஊரைவிட்டு வந்து எத்தனையோ வருடங்களாச்சு. இனி ஊருன்னு அதை எப்படி நான் சொல்ல முடியும்? சொல்லத்தான் முடியுமா?


சாமியார் வெளியே போகப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு பணியாள் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான்.

9

டற்கரை. மாலை நேரம்.

கடைசியாக வந்த டூரிஸ்ட் பஸ் புறப்படுவதை சாமியார் பார்க்கிறார்.

கடற்கரையில் குறைவான கார்களே நின்றிருக்கின்றன. திரும்பவும் நடந்து ரெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் வந்து கடற்கரையில் அவர் நிற்கிறார்.

நடைபாதை வழியாக முன்னர் ஜன்னலருகில் நின்றுகொண்டு பார்த்த இளைஞன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். சாமியார் அவனை ஆர்வம் மேலோங்க பார்க்கிறார். இரவில் அவன் சரியாகத் தூங்கவில்லை என்பதை அவனுடைய கண்களை வைத்து அவர் கண்டுபிடிக்கிறார். மிகவும் அக்கறை எடுத்து அணியாதது மாதிரி அவனின் ஆடைகள் இருக்கின்றன. மிகவும் மெலிந்து போய் காணப்படுகிறான்.

அவன் அருகில் நெருங்கி வந்தபோது அவனுடன் பேசுவோமா வேண்டாமா என்ற தடுமாற்றத்துடன் சாமியார் நின்றிருக்கிறார். அப்போது -

ஜெயன்:   நமஸ்தே!

சாமியார்:  நமஸ்காரம்.

ஜெயன்:   சாமி, நீங்க வர்றதை நான் பார்த்தேன்.

சாமியார் ஒன்றும் பேசாமல் புன்னகைக்கிறார்.

ஜெயன்:   சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க இவ்வளவு ஆளுங்க வர்றது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு விஷயம்தான். சூரிய உதயத்தைப் பார்க்க ஒரு ஆளு கூட வெளியே வர்றது இல்ல....

அவன் மெதுவாக நடக்கிறான். அவனுடன் சாமியாரும்.

ஜெயன்:   சூரிய அஸ்தமனம் முடிஞ்ச பிறகுதான் நான் அறையை விட்டு வெளியிலேயே வருவேன். எனக்குப் பயம்....

சாமியார்:  எதுக்கு பயம்?

ஜெயன்:   சாமி உங்களுக்குத் தோணினது இல்லையா? எனக்கு... எனக்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்குறப்போ மரணத்தைப் பார்க்குறது மாதிரி இருக்கும். சாமியார் அவன் சொல்வதைக் கேட்கிறார். அவனுடைய கைவிரல்கள் இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் உள்ளுக்குள் வெளியே தெரியாமல் அழுவது தெரிகிறது.

சாமியார் மணலில் அமர்கிறார். இளைஞன் சற்று தூரத்தில் கடலையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். கடலில் யாரோ ஒரு மனிதன் நீந்திக் கொண்டிருக்கிறான்.

ஜெயன்:   ராத்திரி நேரம்தான் சொல்லப் போனால், ரொம்பவும் பயங்கரமானது. அலைகளோட ஓசை, மண்டபத்தின் விளக்குகள்... நான் கடந்து போன ஆறு இரவுகளும் ஒரு பொட்டு கூட உறங்கவே இல்ல.

தனக்குத்தானே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துபோன அவன் மென்மையாக புன்னகைக்கிறான்.

ஜெயன்:   நேற்று சின்னப் பையனா இருக்குறப்போ செய்யிற மாதிரி அர்ஜுனன், ஃபல்குனன், பார்த்தன், விஜயன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே படுத்துக் கிடந்தேன்.

சாமியார் அவனைப் பார்த்து புன்னகைக்கிறார்.

சாமியார்:  அப்படிச் சொன்னதுக்கு பலன் இருந்துச்சா?

ஜெயன்:   ஊஹும், சாமி என்னால உங்களுக்குத் தொந்தரவா? தொந்தரவுன்னா சொல்லிடுங்க. நான் உடனே போயிர்றேன்.

சாமியார்:  அப்படியெல்லாம் இல்ல. சொல்லு...

ஜெயன்:   நான் யார்கிட்டயாவது பேசி எவ்வளவு நாட்களாயிடுச்சுன்றீங்க? மவுன விரதம் இருக்கேன்னு வச்சுக்கங்களேன். தனிமைச் சிறை... (சிரித்தவாறு) எனக்கு நானே தந்துக்கிட்ட தண்டனை இது...

கடலில் நீந்திக் கொண்டிருந்த உடல் பலம் பொருந்திய இளைஞன் கரைக்கு ஏறி வருகிறான். கிரேக்க கடவுளின் உடல் வலிமை அவனுக்கு இருக்கிறது. நீர்வளைகள் சொட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய கட்டான உடலமைப்பு குறித்து அவனுக்கு நன்றாகவே தெரியும். காற்றில் கைகளை இப்படியும் அப்படியுமாக சுழற்றியவாறு நின்றிருந்த அவன் மீண்டும் அலைகளில் குதிக்கிறான்.

ஜெயன்:   சாமி, நீங்க சன்னியாசியா ஆனதுக்குக் காரணம்...?

சொல்ல வந்ததை அவன் நிறுத்துகிறான். சாமியார் அதற்கு என்ன பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவன் காத்திருக்கிறான்.

சாமியார்:  வாழ்க்கையின் கொடூர முகத்தால் அல்ல...

ஜெயன், சாமியார் மீண்டும் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்ப்புடன் பார்க்கிறான்.

சாமியார்:  சிறைச்சாலைகள் பல்வேறு வகையானவை, ஜெயன்....

ஜெயன் ஆர்வத்துடன் சாமியாரைப் பார்க்கிறான்.

ஜெயன்:   இங்கே வேலை செய்றவங்க என்னைப் பற்றி சொல்லியிருப்பாங்களே!

சாமியார்:  கொஞ்சம் சொன்னாங்க.

ஜெயன்:   முழுசா சொல்லாதது நீங்க செஞ்ச பாக்கியம்.

அவன் கடந்த காலத்தில் இருந்து மெதுவாக எழும், அதே நேரத்தில் மனதில் துக்கத்தை உண்டாக்கும் சில ஞாபகங்களை அசைபோட்டவாறு மெதுவாக இருந்த இடத்தை விட்டு லேசான புன்னகையுடன் எழுந்திருக்கிறான். மெதுவாக அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பிக்கிறான். சாமியாரின் சிந்தனை வயப்பட்ட விழிகள் அவனையே பின் தொடர்கின்றன. சாமியாரும் தனக்குத் தானே புன்னகை புரிகிறார்.

10

டற்கரை. மாலை நேரம்.

கடற்கரையில் மின் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. நீச்சலடிக்கும் இளைஞன் அப்போதும் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறான்.

கடைசி முறையாக அவன் கடலுக்குள் குதித்து முடித்து பிறகு கரைக்கு வருகிறான். ஒரு துண்டால் தன் உடம்பைத் துடைக்கிறான்.

கடற்கரை ஆள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது. சாமியார் இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்கிறார்.

அப்போது ஒரு உருவம் தன்னை நோக்கி நடந்து வருவதை சாமியார் பார்க்கிறார். அது வேறு யாருமல்ல- பகலில் அவர் பார்த்த சிப்பி மாலை விற்கும் இளம்பெண்தான்.

சாமியார்:  நீ வீட்டுக்குப் போகலியா?

பார்வதி:   ஊஹும்...

சாமியார்:  ஏன்?

அவள் பதிலெதுவும் பேசாமல் நின்றிருக்கிறாள். நீச்சலடிக்கும் இளைஞன் துண்டை தோளில் போட்டவாறு நடந்து போகும்போது அந்த இளம்பெண்ணையே உற்று பார்க்கிறான். அந்த இளைஞனுக்கு நல்ல திடகாத்திரமான உடம்பு.

இளைஞன்:     மாலை வியாபாரம் முடிஞ்சிருச்சா?

அவள் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. அவன் சென்றபிறகு அவள் வெறுப்புடன்- அதே சமயம் உறுதியான குரலில்:

“ஹோ... இந்த ஆளுக்கு மட்டும்தான் நீச்சல் தெரியுமா? இந்த ஆளைவிட சங்கரனுக்கு நல்லா நீந்தத் தெரியும்!”

சாமியார்:  சங்கரன்றது யாரு?

பார்வதி:   (தூரத்தில் கையால் சுட்டிக் காட்டி) அந்தப் பாறையில வேலை செய்யிற சங்கரனைத் தெரியாதா?

சாமியார்:  எனக்குத் தெரியாது.

பார்வதி:   சங்கரன் நினைச்சா அந்தப் பாறைவரை கூட அவரால நீந்த முடியும். ஆனா, எனக்குத்தான் பயம். நீந்தக் கூடாதுன்னு நான்தான் சொல்லியிருக்கேன்.

சாமியார்:  அங்கே வரை நீந்துறது கஷ்டமா என்ன?

பார்வதி:   (கிண்டலான குரலில்) பிறகென்ன? சாமி, வேணும்னா நீங்க நீந்திக் காட்டுங்க - பார்ப்போம். யாராலயும் அவ்வளவு தூரம் நீந்தவே முடியாது. முன்னாடி ஒரு சாமியார் நீந்தி காண்பிச்சார். அதுக்குப் பிறகு வேற யாருக்குமே அந்த அளவுக்கு தைரியம் வரல.

சாமியார்:  அது எவ்வளவோ காலத்துக்கு முன்னாடி இல்ல? அதுக்குப் பிறகு ஒரு ஆளு நீந்தி இருக்காரு. அவரை எனக்குத் தெரியும்.

பார்வதி:   சுத்தப்பொய். சாமி, உங்களுக்கு எதுவுமே தெரியாது.

சாமியார் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.


சாமியார்:  இன்னைக்கு எவ்வளவு ரூபாய்க்கு மாலை வித்திருப்பே?

பார்வதி:   ஆறு ரூபாவுக்கு.

சாமியார்:  புத்திசாலிப் பொண்ணு. ஆமா, உன் பேர் என்ன?

பார்வதி:   பார்வதி.

அவள் என்னவோ சிந்தனையுடன் கடற்கரையையே பார்க்கிறாள்.

பார்வதி:   (தனக்குத் தானே) நேரம் சாயங்காலம் ஆன பிறகும் வேலை முடியல... சரி... நான் வரட்டுமா?

சாமியார்:  நீ வீட்டுக்குப் போம்மா. அம்மா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கப் போறாங்க.

பார்வதி:   எனக்கு அம்மாவே இல்ல...

சாமியார்:  அப்பா?

பார்வதி:   அவரையும் நான் பார்த்தது இல்ல. இருக்குறது பாட்டி மட்டும்தான். அது கண்டபடி கெட்ட வார்த்தையில பேசும். பார்வை இல்லாதவங்களுக்கு இரவும் பகலும் தெரியுமா என்ன?

சாமியார்:  பாட்டிக்கு கண் தெரியாதா?

பார்வதி:   தெரியாது. அது கண்டபடி பேசினாலும், அதுமேல எனக்கு பயம் கிடையாது. மாமன் வீட்டுக்கு வராம இருக்கணும். அது ஒண்ணுதான் நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறது.

சாமியார்:  உன் மாமனா?

பார்வதி:   மாமன் ரொம்பவும் மோசமான ஆளு. ஊர்க்காரங்க எல்லாருக்கும் அந்த ஆளைக் கண்டு பயம். போலீஸ்காரனைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போன வீரப்பனைப் பற்றி சாமி, நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?

அதைக் கேட்டு சாமியார் இலேசாக அதிர்ச்சியடைகிறார். அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமலே, தனக்குத் தெரியாது என்கிறார்.

அப்போது தூரத்தில் யாரோ கூவும் சத்தத்தைக் கேட்டு அவள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடுகிறாள்.

11

டற்கரை. மாலை நேரம்.

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது மதிக்கக்கூடிய சங்கரன். கையில் கல்லால் ஆன உளியும் சுத்தியலும் அடங்கிய பையை வைத்திருக்கிறான். அரைக் கை சட்டையும், வேஷ்டியும் அணிந்திருக்கிறான். கறுத்துப் போய் காணப்படும் அந்த இளைஞன் கடுமையான உழைப்பின் காரணமாக பலமான உடல்வாகைக் கொண்டிருக்கிறான்.

ஓடிவரும் பார்வதிக்காக அவன் காத்திருக்கிறான்.

பார்வதி:   ஏன் இவ்வளவு தாமதமா வர்றீங்க?

சங்கரன்:  சில நேரங்கள்ல இப்படி தாமதமாயிடுது. வேலை இருந்தா நீ போக வேண்டியதுதானே!

அவளுக்கு சங்கரனின் கோபமும், தூக்கியெறிந்து பேசும் குணமும் நன்கு தெரிந்த ஒன்று. இரண்டு பேரும் நடக்கிறார்கள்.

சங்கரன்:  வீட்டுக்குப் போகலியா?

பார்வதி:   போகணும்.

சங்கரன்:  மீன் பிடிக்கிற அந்தோணியும் சேவியரும் நேத்து உன் மாமனுக்கு நல்ல உதை கொடுத்திருக்காங்க. வேலை செய்ற இடத்துல யாரோ சொன்னாங்க.

பார்வதி:   கொடுக்க வேண்டியதுதான். கள்ளு குடிச்சிட்டு தகராறு பண்ணணும்னு போனா சும்மாவா இருப்பாங்க!

சங்கரன்:  என்னை ஒரு நாளு இப்படித்தான் வாய்க்கு வந்தபடி திட்டினான். நான் அப்போ பேசாம விட்டுட்டேன். இனியொரு தடவை அப்படி அந்த ஆளு நடக்கட்டும். சுத்தியலை வச்சு தலையில ஒரே போடா போட்டுருவேன்.

பார்வதி:   அந்த ஆளு சுத்த மோசம். நீங்க ஏன் அந்த ஆளுக்கிட்ட தகராறுக்குப் போகணும்? அவர் பேசினது காதுலயே விழலன்றது மாதிரி இருந்துருங்க.

சங்கரன்:  சரியான மாமன் உனக்கு கிடைச்சான்!

பார்வதி:   அந்த ஆளு என்னோட மாமன் ஒண்ணுமில்ல...

சங்கரன்:  பிறகு ஏன் அந்த ஆளை நீ அப்படி கூப்பிடுறே?

பார்வதி:   அப்பா அம்மா இல்லாத இந்த ஆளை பாட்டிதான் எடுத்து வளர்த்தாங்க. எங்கம்மா அவரை அண்ணன்ணு கூப்பிடுவாங்க. பிறகு நான் எப்படி அவரைக் கூப்பிடுறது?

சங்கரன்:  முன்னாடி வளர்த்ததுக்கு பாட்டி இன்னைக்கு அனுபவிக்கிறாங்கள்ல?

அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மிகவும் நெருக்கமாக நடக்கிறார்கள்.

பார்வதி:   வெள்ளைக்காரங்க வந்திருக்காங்க. மூணு மாலை வாங்கினாங்க. இன்னைக்கு வியாபாரம் பரவாயில்ல...

சங்கரன்:  ஆமா... எதைப் பார்க்கணும்னு அவங்க இங்கே வர்றாங்க?

பார்வதி:   இதெல்லாம் நமக்குத் தெரியுமா என்ன? அவங்க போட்டிருக்குற ட்ரெஸ்ஸைப் பார்க்கணுமே! ஆம்பளை யாரு பொம்பளை யாருன்னே கண்டுபிடிக்க முடியாது...

பாதை திரும்புகிற இடத்தில் சங்கரன் நிற்கிறான். பையிலிருந்து ஏதோ ஒரு பொட்டலத்தை எடுத்து அவள் கையில் தருகிறான்.

அதை வாங்குவதற்கு முன்பு -

பார்வதி:   என்ன இது?

சங்கரன்:  (கோபத்துடன்) மண்ணாங்கட்டி...

நீட்டிய பொட்டலத்தை மீண்டும் பைக்குள்ளே அவன் போடுகிறான்.

பார்வதி:   அந்தப் பெரிய பாறை வரை யாராலயும் நீந்த முடியுமா?

சங்கரன்:  நீ நீந்தப் போறியா?

பார்வதி:   அதைச் சொல்லல. முன்னாடி ஒரு ஆளு நீந்தியிருக்காராம். சாமியாருக்கு அந்த ஆளைத் தெரியுமாம்.

சங்கரன்:  எந்த சாமியார்?

தூரத்தில் சுட்டிக் காட்டியவாறு-

பார்வதி:   அதோ அங்கே உட்கார்ந்திருந்த சாமியார்...

சங்கரன்:  ம்... நேரமாயிடுச்சு. நீ புறப்படு.

அவள் இலேசான புன்னகையுடன் அங்கு தயங்கியவாறு நிற்கிறாள். அவன் சிரிப்பை மறைத்துக் கொண்டு பைக்குள் இருந்த பேப்பர் பொட்டலத்தை எடுத்து அவள் கையில் தருகிறான். அவள் அதை வாங்கிக் கொண்டு ஓடுகிறாள். சிறிது தூரம் சென்றபிறகு பொட்டலத்தை அவிழ்த்து பார்க்கிறாள். அதை எடுத்து வாயில் வைத்து கடித்தவாறு பின்னால் திரும்பி உரத்த குரலில் கூறுகிறாள்.

பார்வதி:   மண்ணாங்கட்டி நல்ல இனிப்பாவே இருக்கு.

சங்கரன்:  போடி முதல்ல...

12

ரெஸ்ட் ஹவுஸ் - இரவு.

வராந்தாவில் ஹிப்பிகள். சரஸ்ஸின் புகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்களையே மறந்து இருக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். அவள் அவனுடைய மார்பில் சாய்ந்தவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு புகைவிட்டுக் கொண்டு தியான நிலையில் இருக்கிறாள்.

மற்ற மூன்று ஹிப்பிகளும் அக்கார்டியன் இசைக் கருவியை மீட்டியவாறு பாடுகின்றனர் - ஆங்கிலத்தில்:

“ஐ நெவர் லவ் யூ

ஐ நெவர் ட்ரீம் யூ

பிகாஸ் ஐ ஆம் இன் லவ்

ஐ ஆம் இன் லவ்

ஐ ஆம் இன் லவ் வித் லவ்”

13

ரெஸ்ட் ஹவுஸின் படிக்கட்டில் தனியாக அமர்ந்திருக்கும் ஜெயன் ஹிப்பிகள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அவன் தனக்குள் கூறிக் கொள்கிறான்:

“ஐ வாஸ் இன் லவ் வித் லவ்!”

காதலை பழைய பாத்திரங்களைப் போல விலைக்கு வாங்க முயற்சி செய்து நடந்து திரிந்த ஒரு வியாபாரி.

கடந்த கால நினைவுகள் அவனுடைய மனதில் தோன்றி மறைகின்றன.

மூன்று நான்கு ரூபாய் நோட்டுகள். இளைஞனின் விரல்கள் அந்தப் பணத்தை நீட்டுகின்றன. க்யூட்டெக்ஸ் பூசிய விரல்கள் அந்தப் பணத்தை வேகமாக வாங்குகின்றன. ரூபாய் நோட்டுகளை சுருட்டி பிடித்திருக்கும் விரல்கள், ஹேண்ட் பேகின் கொக்கியைத் திறக்கின்றன.


பணம் கொடுப்பவனையும், அதை வாங்குபவளையும் நாம் பார்க்கவில்லை. கைகள் மட்டுமே நமக்குக் காட்டப்படுகின்றன.

பெண்ணின் குரல்:    நான் எப்பவுமே மறக்கமாட்டேன்.

ஆணின் விரல்கள் பெண்ணின் ஜாக்கெட் பட்டனை மெதுவாக அவிழ்க்கின்றன.

பெண்ணின் குரல்:    நா... நோ ப்ளீஸ்...

ஜெயனின் குரல்:     டாமிட்...

ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் ஒயின் க்ளாஸும் விஸ்கி க்ளாஸும். பெண்ணின் மிருதுவான கைகளில் ஒயின் க்ளாஸ். இளைஞனின் கையில் விஸ்கி க்ளாஸ்.

ஃப்ளாஸ்பேக் - மற்றொரு காட்சி.

ஆணின் தோள் மேல் சாய்ந்தவாறு கெஞ்சுகிற ஆதரவற்ற பெண்ணின் குரல்:

“என்னைக் கைவிட்டுற மாட்டீங்களே! என்னைக் கைவிட்டுற மாட்டீங்களே!”

ஜெயனின் குரல்:     காட்டிய அன்புக்கான முதலையும் வட்டியையும் நான் ஏற்கனவே தந்துட்டேனே! நௌ கெட் அவுட்!

ஆணின் கைகள் பாதத்தைப் பற்றிய பெண்ணின் கைகளை விலக்குகின்றன. காலியாய் இருக்கும் விஸ்கி குப்பி, அதற்கு அடியில் நான்கைந்து துளிகள் இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக் குச்சி. குப்பியின் வாய் பகுதியை இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கும் விரல்கள் பிடிக்கின்றன. ஒரு நிமிடம் அது உள்ளே போகும்போது குப்பிக்குள் எரியும் ஜுவாலை தெரிகிறது. சிறிது நேரத்தில் அது அணைந்தும் போகிறது. கேமரா மீண்டும் ஜெயனை நோக்கி திரும்புகிறது - ஆழமாக என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான் ஜெயன்.

14

ஜெயனின் கடந்த காலத்தில் அவன் சந்தித்த பெண்களுக்கு முகமே இல்லை- கையில் மைக் வைத்து பாடிக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண். கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் விளக்கொளியில் நின்று கொண்டிருக்கும் பாடகியின் உடலமைப்பு நன்றாகவே தெரிகிறது. பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது ஓடுகின்ற காரை நோக்கி நாம் பார்வையாளர்களின் கவனத்தைத் திருப்புகிறான். ஜெயன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் அந்த இளம்பெண் அமர்ந்திருக்கிறாள். பாடல் தொடர்கிறது.

அதே கார் வேறொரு இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாட்டு நிற்கவில்லை. வேறு உடை அணிந்த இளம்பெண். அவள் முகம் நமக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்றுதான். காரை ஓட்டுகிறபோது கடைக்கண்ணால் அவளின் சதைப் பிடிப்பான உடம்பை அளவெடுக்கிறான் ஜெயன்.

பாடலின் முடிவில் ஏதோ ஒரு ஹோட்டலின் அறைக்குள் இரட்டைக் கட்டிலில் அரை நிர்வாண கோலத்தில் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருக்கிறான் அவன். கீழே காலியான விஸ்கி குப்பிகள், கண்ணாடி டம்ளர்கள், சிகரெட் துண்டுகள், கொஞ்சம் தள்ளி, பின் பக்கத்தைக் காட்டிக் கொண்டு ஆடை அணியும் இளம்பெண்.

பழைய நினைவுகளிலிருந்து விடுபடுகிறான் ஜெயன்.

15

ரெஸ்ட் ஹவுஸின் படியில் தனியாக வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் ஜெயனைக் கடந்து ஒரு விலை உயர்ந்த கார் மெதுவாக வந்து போர்டிகோவில் நிற்கிறது.

டிரைவர் கார் கதவைத் திறக்க, வயதான ஒரு மனிதரும் ஒரு இளம்பெண்ணும் காரை விட்டு இறங்குகிறார்கள்.

வயதான பெரியவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். கறுத்துப்போய் இருக்கும் அந்தப் பெரியவர் ஒரு நோயாளி என்பது பார்க்கும்போதே தெரிகிறது. அவர் கழுத்தில் வெள்ளியால் ஆன சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கிறது. கையில் மோதிரம் இருக்கிறது. அவருக்குப் பின்னால் இருபத்தைந்து வயது இருக்கக்கூடிய இளம்பெண் ஒருத்தி நின்றிருக்கிறாள். வராந்தாவில் ஹிப்பிகள் பாட்டு பாடி முடித்து, சரஸ் உண்டாக்கிய போதையில் மிதந்தவாறு ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துப் படுத்துக் கிடக்கிறார்கள். ஒருவன் மட்டும் சுவரில் சாய்ந்தவாறு அவ்வப்போது தன் விரல்களை கிட்டாரில் மீட்டிக் கொண்டிருக்கிறான். அவர்களைப் பார்த்து கிழவரின் முகத்தில் இனம்புரியாத கோபமும் வெறுப்பும் உண்டாகின்றன.

கவுண்டருக்கு அருகில் போனதும் கிழவர் என்னவோ சொல்கிறார், வாதாடுகிறார்.

கிழவர்:    (மேனேஜரிடம்) படிகள்ல ஏறுறதுக்கம் இறங்குறதுக்கும் என்னால முடியாது. டாக்டர்ஸ் அட்வைஸ் பண்ணியிருக்காங்க.

மேனேஜர்: கீழே ஒரு அறை கூட காலியா இல்ல சார்.

கிழவர்:    (கோபத்துடன்) டெலக்ராமில் நான் ஸ்பெஸிஃபிக்கா சொல்லியிருந்தேன் - டவுன் ஸ்டேர்தான் எனக்கு வேணும்னு. இர்ரெஸ்பான்ஸிபில் பீப்பிள்.

அப்போது கிட்டாரில் இருந்து திடீரென்று ஒரு இசை மிதந்து வருகிறது. அதைக் கேட்டு ஹப்பிகளில் யாரோ விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்பு கொஞ்சம் கூட நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிரித்து சிரித்து அந்த ஆள் கடைசியில் அழ ஆரம்பிக்கிறான்.

டிரைவர் வெளியே நின்றிருக்கும் காரில் இருந்து பெட்டிகளையும், கூடைகளையும் உள்ளே கொண்டு வந்து வைக்கிறான்.

கிழவர் இளம்பெண்ணை ஒரு பார்வை பார்த்து விட்டு கோபத்துடன் ஹிப்பிகளை நோக்கி-

கிழவர்:    (மேனேஜரிடம்) மக்கள்கிட்ட இருந்து சாறு பிழியிற மாதிரி பிழிஞ்சு வரி வாங்கி ரெஸ்ட் ஹவுஸைக் கட்டினா, அது என்ன இந்த மாதிரி பைத்தியக்காரப் பசங்க தங்குறதுக்கா?

மேனேஜர்: அவங்க சுற்றுலாப் பயணிங்க சார்.

கிழவர் இளம் பெண்ணின் அருகில் போய்-

கிழவர்:    ஸ்மக்லர்ஸ், ஸ்பைஸ்... இதையெல்லாம் யார்கிட்ட போய் சொல்றது? இதுல எல்லாம் ஒரு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டாமா?

அவர் கீழே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுகிறார். எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்கிறார்.

வெளியே இருந்து வந்த ஜெயன் இளம் பெண்ணின் அருகில் வந்து நிற்கிறான். திடீரென்று தனக்கு அருகில் நின்றிருக்கும் குடும்பத்தனமான அழகான அந்தப் பெண் அவனுடைய மனதில் உறங்கிக் கிடக்கும் ஒரு மூலையைத் தட்டியெழுப்பி ஒரு மின்னல் கீற்றை உண்டாக்குவதுபோல் அவன் உணர்கிறான். அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். கிழவர் கோபத்துடன் பார்க்கிறார். ஜெயன் தன் உதட்டில் வந்த புன்னகையை அடக்கிக் கொள்கிறார். அவர்களுக்கிடையில் ரெஸ்ட் ஹவுஸ் பணியாள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு படிகளை நோக்கி நடந்து போகிறான்.

கிழவர்:    (பெண்ணிடம்) யார் இவன்?

இளம்பெண்:     எனக்குத் தெரியாது.

கிழவர்:    (வெறுப்புடன்) அவன் சிரிச்ச மாதிரி இருந்ததே!

கிழவரின் கோபத்தையும் வெறுப்பையும் எங்கே மற்றவர்கள் கவனித்துவிடப் போகிறார்களோ என்ற கவலை அவளுக்கு. அவள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கிழவரின் முகத்தைப் பார்க்காமலே மெதுவான குரலில் சொல்கிறாள்:

“எனக்குத் தெரியாது!”

16

ரவு.

ரெஸ்ட் ஹவுஸின் மாடிப் பகுதியைச் சேர்ந்த பால்கனி.

சாமான்களுடன் அறைக்குள் நடக்கும் பணியாளுக்குப் பின்னால் கிழவரும், இளம் பெண்ணும் வருகிறார்கள். பால்கனியில் நின்றிருக்கும் ஜெயன் அவர்களையே பார்த்துக் கொண்டு என்னவோ சிந்திக்கிறான்.


வராந்தாவின் இன்னொரு பகுதியில் நின்றிருக்கும் சாமியார் கட்டிடத்தின் பின் பாகத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயன் சாமியாரை நெருங்கி வருகிறான்.

ஜெயன்:   எதுவுமே சரியா ஞாபகத்துல வரமாட்டேன்குது.

சாமியார்:  (அமைதியாக புன்னகைத்தவாறு) அது எவ்வளவு பெரிய விஷயம்! பலருக்கும் அந்த சித்திதான் கட்டாயம் வேணும்.

ஜெயன்:   நான் அவளைப் பார்த்திருக்கேன்.

சாமியார்:  யாரை?

ஜெயன்:   இப்போ அறைக்குள்ளே போனாளே, அந்தப் பொண்ணை! எங்கே பார்த்தோம்ன்றதை எவ்வளவு யோசிச்சாலும் சரியா ஞாபகத்துல வரவே மாட்டேங்குது.

சாமியார்:  உலகம்ன்றதே ரொம்பவும் சின்னது.

ஜெயன்:   நான் சின்னப் பையனா இருக்குறப்போ என்னோட ஞாபக சக்தியைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவாங்க. மூணு வயசுல நடந்த விஷயங்களைக் கூட நான் அவ்வளவு அருமையா ஞாபகப்படுத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்னா பார்த்துக்கங்களேன். (மீண்டும் தீவிரமாக சிந்தித்து) எங்கே வச்சு பார்த்தேன்? வெரி ஃபெமிலியர்... ஐ ஆம் ஷுவர்...

சாமியார்:  மனசு இந்த மாதிரிதான் சில நேரங்கள்ல விளையாட்டு காண்பிக்கும். விதி வசத்தால நாம ஒண்ணை இழந்துட்டோம்னு நினைச்சு அதை மறக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருப்போம். அப்போ பார்த்தா பழைய தகரப் பெட்டியில இருந்து காணாமப் போன அந்த ஒண்ணை மனசு மறுபடியும் நம்ம முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும்.

பகல் நேரத்தில் பார்த்த பணியாள் ட்ரேயில் சோடாவும், மது குப்பிகளும் எடுத்துக் கொண்டு நடந்து போகும்போது அவர்கள் எதிரில் வந்ததும் நிற்கிறான்.

சாமியார் ஜெயனின் முகத்தைப் பார்க்கிறார். ட்ரேயில் இருந்த தன்னுடைய பார்வையை அவன் அகற்றுகிறான். சாமியார் தன்னைப் பார்க்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு புன்னகையுடன்-

ஜெயன்:   எனக்கு இப்போ எந்த டெம்ப்டேஷனும் இல்ல... என்னோட கோட்டா எப்பவோ முடிஞ்சிடுச்சு.

பணியாள்: (சாமியாரிடம்) இங்கேயே சாப்பிடுறீங்களா, எப்படி?

சாமியார்:  நான் வர்றேன்.

பணியாள்: இன்னைக்கு ரெண்டு பேரு லீவ் சார். ஆறு அறைகளையும் நானே பார்க்க வேண்டியதிருக்கும். டிப்பார்ட்மெண்ட் இந்த விஷயத்தையெல்லாம் யோசிச்சுப் பார்க்குதா? எதுதான் நினைக்கிற மாதிரி நடக்குது?

சேட்டின் அறை திறக்கிறது. சேட்டும் அவரின் மனைவியும் அறையைப் பூட்டிவிட்டு வெளியே நடக்கும்போது சேட் சாமியாரை தூரத்தில் பார்த்தவாறே வணங்குகிறார்.

(மேலே இரண்டு பிரிவுகளாக ஆறு அறைகள். இடது பக்கம் சாமியார், அதற்கடுத்து சேட், அதைத் தாண்டி நீச்சலடிக்கும் இளைஞன். வலது பக்கத்தின் ஓரத்தில் ஜெயன், அதற்கடுத்து கிழவரும் இளம்பெண்ணும், மூன்றாவது அறையில் கதையில் நேரடியாக வராத ஒரு குடும்பம்)

ஸ்போர்ட்ஸ் ஷர்ட்டும், பேன்ட்டும் அணிந்து மார்பில் பொத்தான்களை திறந்துவிட்டு உடம்புப் பகுதியை வெளியே காட்டிக் கொண்டிருக்கும் நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே வந்து அறைக் கதவைப் பூட்டுகிறான். அவன் அவர்களைப் பார்க்கிறான்.

“ஹை... ஹவ் ஆர் யூ?”

பதில் எதிர்பார்க்காத அந்தக் கேள்வியை காற்றில் பறக்கவிட்டு அவன் வாயால் விஷில் அடித்தவாறு நடந்து படிகளில் இறங்கிப் போகிறான்.

17

ரெஸ்ட் ஹவுஸில் இருக்கும் டைனிங் ஹால்.

கிழவரும் அந்த இளம் பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டைனிங் அறையின் வாசலில் விஷில் சத்தம் கேட்கிறது. கிழவர் தலையை உயர்த்தி பார்த்தால், நீச்சலடிக்கும் இளைஞன் வந்து கொண்டிருக்கிறான்.

அவன் உள்ளே வந்தபிறகும் கொஞ்சம் கூட விஷில் அடிப்பதை நிறுத்தாமல் டைனிங் டேபிளைச் சுற்றி வந்து சமையல் செய்யும் இடத்தின் வாசலில் நின்றவாறு கேட்கிறான்.

“சங்கரன் குட்டி... என் கோழி ரெடி ஆயிடுச்சா?”

உள்ளேயிருந்து குரல்: “ரெடி ஆயிடுச்சு சார்...”

மீண்டும் விஷில் சத்தம். விஷிலடித்தவாறு டைனிங் டேபிள் நடு நாயகமாகப் போட்டிருக்கும் நாற்காலியில் அமர்கிறான். அப்போது சேட்டும் அவரின் மனைவியும் அங்கே வந்து அமர்கிறார்கள்.

நீச்சலடிக்கும் இளைஞன்:  குட் ஈவ்னிங்! சேட்டு மனதிற்குள் முணுமுணுக்கிறார்- வெளியே காட்டிக் கொள்ளாமல்.

சேட்டின் மனைவி:   (மெதுவான குரலில்) ஈவ்னிங்!

அவள் அவனைப் பார்க்காமல் இருக்க முயற்சிக்கிறாள். ஆனால், சலனங்களைக் கொண்ட அந்த விழிகள் அவ்வப்போது அவனின் கண்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முன்பு நாம் பார்த்த பணியாள் தாண்டிச் சென்றபோது நீச்சலடிக்கும் இளைஞன் அவனை அழைக்கிறான்.

“பாஸ்கரா!”

அவன் அருகில் வந்தவுடன், கையால் சைகை காட்டுகிறான்-

“ஒரு லார்ஜ்”

பணியாள் சேட்டிற்கும், அவருடைய மனைவிக்கும் சப்பாத்தியும் குருமாவும் கொண்டு வந்து வைக்கிறான்.

கிழவருக்கு இளைஞன் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் மனதில் உண்டான எண்ணத்தை அடக்கிக் கொண்டு அவர் சாப்பிடுகிறார். தன்னுடன் இருக்கும் பெண்ணை கிழவர் பார்க்கிறார். அவள் அதை கவனிக்கவில்லை. அதற்குள் கிழவர் சாப்பிட்டு முடிக்கிறார்.

நீச்சலடிக்கும் இளைஞனின் முன்னால் பணியாள் பாஸ்கரன் விஸ்கி க்ளாஸையும், மூடி திறக்கப்பட்ட சோடாவையும் கொண்டு வந்து வைக்கிறான். அவன் அதில் சோடாவை ஊற்றும்போது-

நீச்சலடிக்கும் இளைஞன்:  எனி ஒன் டூ ஷேர் எ ட்ரிங் வித் மீ?

யாரும் பேசவில்லை.

இளைஞன்:     சேட்ஜி, ஒரு ஸ்மால் விஸ்கி?

சேட்: (தர்மசங்கடமாக உணர்ந்து) நோ சார். நமக்கு ப்ளட் சுகர், கொலஸ்ட்ரால், ஹை ப்ளட் பிரஸ்ஸர் -எல்லாமே இருக்கு.

நீச்சலடிக்கும் இளைஞன்:  வாட் எ பிட்டி (எல்லோரையும் பார்த்து கண்ணாடி டம்ளரை உயர்த்தி) “சீயேர்ஸ்...!”

பாதி குடித்துவிட்டு ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்தபடி பார்த்தவாறு-

“கிருஷ்ணன் குட்டி! சிக்கன்...”

பெரிய ஒரு தட்டில் பொரித்த ஒரு முழு கோழியை பணியாள் அவன் முன்னால் கொண்டு வந்து வைக்கிறான். அவன் திருப்தியுடன் அதைப் பார்த்தவாறு மீண்டும் குடியைத் தொடர்கிறான். சேட்டின் மனைவியைப் பார்த்தவாறு அவன் கண்ணாடி டம்ளரை உதட்டில் வைக்கிறான்.

அப்போது சாமியார் உள்ளே நுழைகிறார்.

காலியாய் இருக்கும் நாற்காலியில் அமர்ந்த சாமியார் குறிப்பாக யாரையும் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக எல்லாரையும் ஒரு நோட்டம் விடுகிறார். கிழவரின் தர்மசங்கடமான நிலை, நீச்சலடிக்கும் இளைஞனின் உடம்பையே பார்த்துக் கொண்டிருக்கும் சேட்டின் மனைவியின் கண்கள், ஒரு இயந்திரத்தைப் போல தலையைக் குனிந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இளம்பெண் - எல்லோரையும் அவர் பார்க்கிறார்.

இளம்பெண் தலையை உயர்த்தும்போது வாசலில் ஜெயன் நிற்கிறான். ஒரு நிமிடம் அவர்கள் இருவரின் கண்களும் சந்திக்கின்றன. அடுத்த நிமிடம் அவள் வேகமாக தலையைக் குனிந்து கொள்கிறாள்.

கிழவர் ஒருவித அசவுகரியத்துடன் எழுந்து நிற்கிறார். கையைக் கழுவுவதற்காக வாஷ்பேஸினை நோக்கி நடக்கும்போது -

கிழவர்:    சீக்கிரம் சாப்பிட்டு முடி எவ்வளவு நேரமாச்சு!


18

ரெஸ்ட் ஹவுஸ். சாமியாரின் அறை.

பெட்டியைத் திறந்து வைத்து உட்கார்ந்திருக்கும் சாமியார் என்னவோ யோசிக்கிறார். பிறகு அதில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுக்கிறார். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து அறைக்குள் எடுத்து வைக்கிறார். கட்டிலின்மேல் புடவைகளையும், குழந்தையின் ஆடைகளையும் வைக்கிறார்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு குடும்பம் அறைக்குள் இருப்பதாக சாமியார் கற்பனை பண்ணி பார்க்கிறார். நாற்காலியில் வந்து அமர்ந்து ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட அறையைப் பார்க்கிறார் சாமியார்.

எங்கோயிருந்து கேட்கும் குரல். சாமியாரின் காதில் அது விழுகிறது.

பெண்ணின் குரல்:    நீ பாலைக் குடிச்சு தூங்கமாட்டியா?

சிறுமி:    ஊஹும்.

இன்னொரு சிறுமி:   தாத்தா... இந்தக் கணக்கை சொல்லித் தாங்க.

சிறுமிகளின் சிரிப்பு.

தாயின் குரல்:   மகளே, நான சொன்னதை கேக்குறியா?

இரண்டு சிறுமிகளும் சேர்ந்து:   ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

ஹவ் ஐ ஒண்டர் வாட் யூ ஆர்

அப் எபவ் தி பேர்ட்ஸ் ஸோ ஹை

லைக் எ டயமண்ட் இன் தி ஸ்கை

சாமியார் தனியாக அமர்ந்து கனவில் மூழ்கியிருந்தது, திடீரென்று அறைக்குள் நுழைந்த ஒரு ஹிப்பியால் கெடுகிறது. அந்த ஹிப்பி அறை கதவைத் திறந்து உள்ளே வருகிறான். அவன் ஏதோ மயக்க மருந்து உள்ளே போனதால் உண்டான போதையில் இருக்கிறான்.

ஹிப்பி:    டெல் மீ வாட் இஸ் குண்டலினி?

சாமியார்:  அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருக்கிறார். ஹிப்பி பின்னால் பார்க்கிறான்.

சிதறிக் கிடக்கும் பெண்கள் அணியும் ஆடைகளைப் பார்க்கிறான். அவனுடைய முகத்தில் எல்லாமே புரிந்து விட்டதைப்போல் ஒரு சிரிப்பு அரும்புகிறது. மூடியிருக்கும் பாத்ரூம் வரை அவனின் பார்வை போகிறது. ஹிப்பி கண்களைச் சுருக்கியவாறு -

“ஸாரி... ஐ டிட் நாட் நோ யூ ஹேட் கம்பெனி. ஐ ஆம் ஸேம் ஃபன் ஓல்ட் பாய்!”

அவன் வெளியே சென்றபிறகு, சாமியார் இருந்த இடத்தை விட்டு எழுகிறார்.

தர்மசங்கடமான மனநிலையுடன் பிரிந்து கிடக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து பெட்டிக்குள் வைக்கிறார். சுவரில் இருந்த அழைப்பு மணியை அழுத்துகிறார்.

பணியாள் பாஸ்கரன் வந்து நிற்கிறான்.

சாமியார்:  இந்தப் பெட்டியை கவுண்டர்ல கொடுத்திடு. யாராவது வந்து கேட்பாங்க.

பாஸ்கரன் இலேசான போதையில் இருக்கிறான்.

பாஸ்கரன்: அப்போ?

சாமியார்:  பஸ்ல வச்சு இந்தப் பெட்டி மாறிடுச்சு...

பணியாள்: அப்போ... சாமி உங்க பெட்டி காணாமப் போயிடுச்சா?

சாமியார்:  ஆமா...

பணியாள்: விலை அதிகமான பொருட்கள் ஏதாவது அதுல...

சாமியார்:  என் பெட்டியில என்ன இருக்கப் போகுது?

பாஸ்கரன் வெளியே செல்கிறான்

19

ஜெயன் வராந்தாவில் நின்றிருக்கிறான். பணியாள் பெட்டியுடன் போகும்போது ஜெயனைப் பார்த்து நிற்கிறான்.

பணியாள்: தூக்கம் வரலியா?

ஜெயன்:   ஆமா...

பணியாள்: குடிக்கிறதை நிறுத்தினா சில நேரங்கள்ல இப்படித்தான்... (குரலைத் தாழ்த்திக் கொண்டு) ஒரு இருநூறு அடிச்சாத்தான் எனக்கு தூக்கமே வருது. இன்னைக்கு எனக்கு எவ்வளவு பிரச்னைன்றீங்க?

பணியாள் பேசுவதில ஆர்வம் காட்டாமல் அவன் கிழவரும் இளம் பெண்ணும் தங்கியிருக்கும் அறைக் கதவையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். பணியாள் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நின்று அது நடக்காது என்பது தெரிந்து ஏமாற்றத்துடன் நடந்து செல்கிறான்.

நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே வருகிறான். அந்தப் பக்கம் இருக்கும் சேட் தங்கியிருக்கும் அறையின் மூடப்பட்ட கதவை பார்க்கிறான். வராந்தாவில் நின்றிருக்கும் ஜெயனையும் பார்க்கிறான். அவனைப் பெரிதாக எடுக்காமல் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு இங்குமங்குமாய் நடந்தவாறு ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து புகைத்தவாறு மீண்டும் தன்னுடைய அறைக்குள் போகிறான்.

நான்காம் எண் அறையில் இருந்து கிழவரின் இருமல் சத்தம். இருமல் நீண்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

20

நான்காம் எண் அறை.

கிழவர் ஒரு மஃப்ளரால் தலையையும் கழுத்தையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தவாறு விடாமல் இருமிக் கொண்டிருக்கிறார். குளியலறைக்குள் இருந்து ஆடைகளை மாற்றி விட்டு வெளியே வருகிற இளம் பெண் அதைப் பார்த்து கிழவரின் முதுகைத் தடவி விடுகிறாள். கிழவர் அவளின் கையைத் தட்டிவிட்டு குனிந்தவாறு இருமுகிறார். இருமலின் முடிவில் அவர் மேல் மூச்சு, கீழ்மூச்சு விடுகிறார்.

இளம்பெண்:     மருந்து தரட்டுமா?

மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் கிழவர் பேசுவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு -

“ம்...”

இளம்பெண் மேஜைமேல் இருந்த ஒரு சிறு பெட்டியைத் திறந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறாள். கிழவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கைப்பிடியில் இரண்டு மாத்திரைகளை வைக்கிறாள். கிழவர் அதைப் பார்க்கிறார்.

கிழவர்:    ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து என்னைக் கொல்லலாம்னு பாக்குறியா?

இளம்பெண்:     மூச்சு விடுறதுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குறப்போ ரெண்டு மாத்திரை சாப்பிடலாம்னு டாக்டர்தானே சொன்னாரு?

கிழவர்:    ரெண்டு மாத்திரை சாப்பிடுறது இதயத்துக்கு நல்லது இல்ல. உன் முன்னாலதானே டாக்டர் பை சொன்னாரு? அதை மறந்துட்டியா?

அவள் ஒரு மாத்திரையை எடுத்து மீண்டும் பெட்டிக்குள் வைக்கிறாள். கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து தயங்கி நிற்கிறாள்.

பெண்:     தண்ணி...

கிழவர் பேசாமல் இருக்கிறார். புரிந்துகொள்ள முடியாத அமைதி.

பெண்:     படுக்கலியா?

கிழவர் பெருமூச்சு விட்டவாறு தரையையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

பெண்:     என்ன யோசிக்கிறீங்க?

திடீரென்று கிழவரின் குரல் உயர்கிறது.

கிழவர்:    ஏன், நான் யோசிக்கக் கூடாதா?

வெளியே இருப்பவர்கள் எங்கே கேட்டுவிடப் போகிறார்களோ என்று எண்ணிய அவள் பாதி திறந்திருக்கும் கதவை முழுமையாக அடைக்கிறாள்.

21

ராந்தாவில் நின்று கொண்டிருக்கும் ஜெயனின் காதுகளில் அடைக்கப்பட்ட கதவுச்சத்தம் வந்து ஒலிக்கிறது.

அவன் காதுகளைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு கேட்கிறான்.

பூட்டிய கதவுக்கு அப்பால் தேம்பி அழும் அந்தப் பெண்ணின் குரல் இலேசாக அவனுக்குக் கேட்கிறது.

நீச்சலடிக்கும் இளைஞன் மீண்டும் வெளியே வந்து சிகரெட்டைப் புகைத்தவாறு நின்றிருக்கிறான். கையில் விஸ்கி கிளாஸ் இருக்கிறது. ஜெயன் தன்னுடைய அறையை நோக்கி நடக்கிறான்.

22

நீச்சலடிக்கும் இளைஞன் வாயில் ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு ஆள் யாரும் இல்லாத வராந்தாவில் இங்குமங்குமாய் நடக்கிறான்.

சேட்டின் பாதி அடைக்கப்பட்ட வாசல் கதவுக்கு வெளியே ஒரு நிமிடம் நிற்கிறான். சேட் படுத்திருக்கிறார். வெண்மையான தடித்த இரண்டு கைகள் அவரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கின்றன.


23

சேட்டின் அறை. ஒரு மலையைப் போல் சேட் படுத்திருக்கிறார். அவரின் பைஜாமாவைச் சுருட்டி மேலே ஏற்றிவிட்ட அவர் மனைவி அவரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறாள்.

சேட் பாதி மூடிய கண்களுடன் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சத்தம் வெளியே கேட்கவில்லை. உதடுகள் மட்டும் அசைகின்றன.

உதடுகளின் அசைவு நின்றதும் அவள் மெதுவாக தன்னுடைய கைகளை எடுத்து எழுந்து நிற்கிறாள். டீப்பாயில் இருந்த வெள்ளியால் ஆன பெட்டியில் இருந்து பாக்கைக் கொஞ்சம் எடுத்து வாய்க்குள் போட்டு மென்றவாறு அவள் விளக்கை அணைக்கிறாள். மங்கலான இருட்டில் மூச்சு விடுவதற்கேற்றபடி சேட்டின் உடம்பு உயர்வதும் தாழ்வதுமாய் இருக்கிறது. அவள் இரட்டைக் கட்டிலின் இன்னொரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள். சிறிது நேரத்தில் சேட் குறட்டை விட ஆரம்பிக்கிறார்.

24

ரவு.

ஜெயன் தன்னுடைய அறையின் ஜன்னலருகில் நின்றிருக்கிறான். தூரத்தில் கடற்கரை தனிமையானதாகவும் ஒரு கனவைப் போலவும் தெரிகிறது. மங்கலான விளக்குகள், காந்தி மண்டபம்.

அவன் அறைக்குள் இங்குமங்குமாய் நடக்கிறான். தன்னுடைய கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை நினைத்துப் பார்த்தவாறு அவன் இருக்கிறான். பார்கள், கேபரேக்கள், சில நிமிடங்கள் மட்டுமே நிலவிய உறவுகள்...

எங்கே பார்த்த முகம் அது? அவன் மீண்டும் வெளியே வருகிறான்.

24-ஏ

ராந்தா, இரவு நேரம்.

பணியாள் வராந்தாவில் இருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கிறான். மங்கலான இருட்டு, ஜெயன் மங்கலான இருட்டில் வராந்தாவில் அசையாமல் நின்றிருக்கிறான்.

ஏதோ சத்தம் கேட்டு தலையைத் தூக்கி பார்த்தால் சேட்டின் அறை கதவைத் திறந்து ஒரு பெண் உருவம் வெளியேறிக் கொண்டிருப்பது தெரிகிறது. வேகமாக வெளியேறிய அந்த உருவம் நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்குள் நுழைகிறது.

நீச்சலடிக்கும் இளைஞன் கதவுக்கு வெளியே தலையை நீட்டி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறான்.

அவனின் பார்வையில் - வராந்தாவின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் ஜெயன் தெளிவில்லாமல் தெரிகிறான்.

25

ஜெயனின் அறை இரவு.

ஜெயன் மீண்டும் அறைக்குள் போய் பாதி படித்து வைத்திருந்த ஆங்கில நாவலை எடுத்து படிக்க ஆரம்பிக்கும்போது வாசல் பக்கம் குரல்:

"ஏய் மிஸ்டர்!"

தன்னுடைய சதைப் பிடிப்புடன் உருண்டு திரண்டு இருக்கும் உடம்பைக் காட்டியவாறு பைஜாமா மட்டும் அணிந்திருக்கும் நீச்சலடிக்கும் இளைஞன் வெளியே நின்றிருக்கிறான். ஜெயன் மரியாதை கலந்த குரலில்-

"கம் இன் ப்ளீஸ்!"

நீச்சலடிக்கும் இளைஞன்: என் பேரு ஃப்ரெடரிக். ஐ ஹேவ் த்ரீ யுனிவர்ஸிட்டி ரிக்கார்ட்ஸ் டூ மை க்ரடிட்...

ஜெயன்:   (தயங்கியவாறு) க்ளாட் டூ மீட் யூ. என் பேரு ஜெயன். இலேசாக சிரித்தவாறு.

ஃப்ரெடரிக்: சும்மா பேசிக்கிட்டிருக்க எனக்கு நேரமில்ல. சம் ஒன் ஈஸ் வெயிட்டிங் ஃபார் மீ. ஒரு வார்னிங்...(சிரிப்பு மாறுகிறது) மைன்ட் யுவர் ஒன் பிஸினஸ்...

ஜெயன்:   நான்...

ஃப்ரெடரிக்: நீங்க எப்படிப்பட்ட டைப்னு எனக்குத் தெரியும். நீங்க சாப்பிடுறது இல்ல. மற்றவங்களை சாப்பிட விடுறதும் இல்ல.

ஜெயன்:   ஸாரி... நான்...

ஃப்ரெடரிக்: சாயங்காலத்துல இருந்தே பதுங்கி ஒதுங்கி நீங்க நின்னுக்கிட்டு இருக்குறதை நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க.

ஜெயன்:   (வருத்தத்துடன்) மிஸ்டர் ஃப்ரெடரிக்!

ஃப்ரெடரிக்: இங்க எல்லாரும் ஒழுக்கமா நடக்குற மாதிரி பார்த்துக்குற வேலையை அரசாங்கம் உங்கக்கிட்ட தந்திருக்குதா என்ன?

அவன் வெளியே செல்கிறான்.

என்ன செய்வதென்று தெரியாமல், அதே சமயம் பயங்கர கோபத்துடன் ஜெயன் நின்றிருக்கிறான். வாசலில் அவன் நிற்கும்போது, ஃப்ரெடரிக்கின் அறை வாசல் கதவு தாழ்ப்பாள் போடப்படும் சத்தம்.

தூரத்தில் சேரிகளில் எங்கோ இருந்து புறப்பட்டு வரும் சன்னமாக ஒலிக்கும் ஒரு பாடல்...

26

ரவு.

பார்வதியின் குடிசை.

தூரத்தில் ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் சேரிப்பகுதி.

பார்வதி குடிசையில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து சங்கு மாலையைக் கோர்த்துக் கொண்டிருக்கிறாள். வெளிச்சமே இல்லாத ஒரு மூலையில் கயிற்றால் ஆன கட்டிலில் கம்பளியை மூடிக் கொண்டு அவளுடைய பாட்டி படுத்திருக்கிறாள்.

ஓலைக் கதவை யாரோ வெளியே இருந்து அசைக்கும் ஓசையைக் கேட்டு அவள் திடுக்கிட்டு யாரென்று பார்க்கிறாள்.

வெளியேயிருந்து குரல்:

கதவைத் திறடி...

பார்வதி பயத்துடன் பாட்டி படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலின் காலைப் பிடித்தவாறு மெதுவான குரலில் முணுமுணுக்கிறாள்:

"பாட்டி... மாமன்!"

கிழவி படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள். அம்மைத் தழும்பு விழுந்த முகத்தில் பார்வை தெரியாத இரண்டு கண்கள்.

கிழவி:    டேய் குரிப்பு... ராத்திரி ஒரு மூலையில கிடந்து படுக்க நீ விடுறியா இல்லியா?

வெளியே இருந்து குரல்:

கதவைத் திறடி...

பார்வதி பயத்துடன் ஓலையால் ஆன கதவைத் திறக்கிறாள். மது அருந்திவிட்டு பார்ப்பதற்கு எந்தவித மோசமான காரியத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கும் மனிதன் என்று தோற்றமளிக்கும் 35 இலிருந்து 45 வயதிற்குள் மதிக்கக்கூடிய ரவுடியான வீரப்பன் உள்ளே நுழைகிறான். கட்டம் போட்ட கைலி கட்டியிருக்கிறான். பட்டன் இடாத காலர் வைத்த பனியன் அணிந்திருக்கிறான்.

கிழவி:    நேரம் இப்போ என்ன தெரியுமாடா?

வீரப்பன்:  எனக்குத் தெரியாது... (பார்வதியிடம்) ஒரு ரூபா தாடி...

கிழவி:    அவ கையில எப்படிடா காசு இருக்கும்?

வீரப்பன்:  எனக்கு அதெல்லாம் தெரியாது.

கிழவி:    அவ ஏதாவது கொண்டு வர்றதை வச்சுத்தானடா நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்!

வீரப்பன்:  (பார்வதியிடம்) நீ பயப்படாதடி... உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுக்குப் பிறகு எனக்குள்ளதெல்லாம் உனக்குத் தானே!

கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து அவன் பார்வதியைப் பார்க்கிறான். அவள் பயந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறாள்.

கிழவி:    ஒருத்தியை அடிச்சு கொன்னது போதாதா? இன்னொருத்தியைக் கட்டணும்னு வேற ஆசைப்படுறயாக்கும்... ம்க்கும்...

வீரப்பன்:  (பார்வதியை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு) இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும். என்னடி... என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம்தானே?

பார்வதி பயந்து போய் உட்கார்ந்திருக்கிறாள். பதிலெதுவும் கூறும் நிலையில் அவள் இல்லை.

வீரப்பன்:  சொல்லுடி...

கிழவி:    நீ கிளம்புடா... பிள்ளையைத் தேவையில்லாம பயமுறுத்தாதே.

வீரப்பன்:  கண்ணு தெரியலையேன்னு கூட நான் பார்க்க மாட்டேன். மிதிச்சு நான்... (பார்வதியிடம்) ஒரு ரூபா எடு...

பார்வதி:   என்கிட்ட காசு இல்ல...


அவன் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறான். பெட்டிகளையும், கூடைகளையும் எடுத்து பார்த்துவிட்டு கீழே கூடையை எடுக்கிறான். அதிலிருக்கும் நாணயங்களை எடுத்து இடுப்பில் சொருகியபடி வெளியே போகும்போது வாசலில் திரும்பி நின்று-

வீரப்பன்:  அடியே! பார்த்து நட... அந்தக் கல் வேலை செய்யிற பையன் கூட நீ சிரிச்சு விளையாடிக்கிட்டு இருக்குறதை நான் பார்த்தேன்.

அவன் வெளியே சென்றவுடன், அவள் கதவை அடைக்கிறாள்.

மீண்டும் மாலை கோர்க்கும் வேலையில் ஈடுபடுகிறாள். பழைய உற்சாகம் அவளிடம் இல்லாமல் போகிறது. கயிற்றுக் கட்டிலில் மீண்டும் படுக்கிறாள் கிழவி.

கிழவி:    எந்தப் பையனைப் பற்றி அவன் சொன்னான்?

பார்வதி:   எனக்குத் தெரியாது.

கிழவி:          பிறகு ஏன்டி அவன் அப்படி சொல்லணும்?

பார்வதி பேசாமல் இருக்கிறாள்.

கிழவி:    இப்போ உனக்கு நடக்குறது பதினாலு வயசுன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ, ஏதாவது கெட்ட பேரு உனக்கு வந்துச்சு, பிறகு நான் யார்னு கூட பார்க்க மாட்டேன்... அவ்வளவுதான் சொல்லுவேன்.

பார்வதி:   (கோபத்துடன்) பைத்தியக்காரத்தனமா பேசாத பாட்டி...

கிழவி:    உங்கம்மா வாங்கித்தந்த கெட்ட பேரு போதாதுன்னா நீ வேற வாங்கித் தரலாம்னு பார்க்குற?

பார்வதி பேசாமல் இருக்கிறாள். அவளின் முகம் மிகவும் வாடிப் போகிறது. கண்களில் கண்ணீர் அரும்புகிறது. தன்னையும் மீறி அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள். கிழவி கண்களை மூடி படுத்திருக்கிறாள்.

ஒரே அமைதி.

கிழவி:    படுத்துட்டியா?

பார்வதி பேசாமல் இருக்கிறாள்.

கிழவி:    (சாந்தமான குரலில், பாசத்துடன்) மனசு வேதனையா இருக்குறப்போ நான் ஏதாவது சொல்லத்தான் செய்வேன். இங்கே வா. இங்கே வந்து உட்காரு.

பார்வதி முதலில் தயங்குகிறாள். பிறகு கட்டிலில் பாட்டியின் அருகே வந்து உட்காருகிறாள். பேத்தியின் தலைமுடியைத் தேடி தடவியவாறு-

கிழவி:    நீ இருக்குறதுனாலதான் நான் வயிறு காயாம இருக்கேன். உன்னை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா, நிம்மதியா நான் செத்துப் போவேன்.

பார்வதி:   பாட்டி, நீ சாகக்கூடாது. நீ மட்டும் இல்லைன்னா மாமன் கள்ளு குடிச்சிட்டு வந்தா, நான் என்ன செய்றது?

கிழவி:    உனக்கு எந்த தொந்தரவும் வராது. எப்பவும் தேவியை மனசுல நினைச்சுக்கிட்டே நட. சரி... இப்போ படுத்து உறங்கு.

கிழவியின் பார்வையற்ற கண்கள் இருக்கும் முகத்தில் பல்வேறு சிந்தனைகளும் நிழலாடுகின்றன.

27

ன்யாகுமாரியில் தெரியக்கூடிய அழகான சூரிய உதயம்.

கட்டு மரங்களில் ஏறி அலைகடலில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள்.

சூரியனின் முதற்கதிர்கள புறப்பட்டு வரும் வேளையில் தனியாக கடற்கரையில் நின்றிருக்கும் சாமியார்.

28

சேரியின் இன்னொரு எல்லையில் கருங்கல்லில் வேலை செய்து கொண்டிருக்கும் சங்கரன் சூரிய உதயத்தைப் பார்க்கிறான்.

பின்னால் பதுங்கிப் பதுங்கி வந்த பார்வதியை அவன் சரியாக கவனிக்கவில்லை. அவளின் கையில் அலுமினியத்தால் ஆன ஒரு தூக்கு பாத்திரம் இருக்கிறது. இலையால் ஆன ஒரு பொட்டலத்தையும் வைத்திருக்கிறாள்.

பாதி வேலை முடிந்திருந்த கருங்கல்லில் ஒரு பெண் உருவம் உருவாகி வருகிறது.

சிற்பம் வடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சங்கரன் பின்னால் இருந்து பார்வதியின் குரல் வருவதைக் கேட்கிறான்.

பார்வதி:   வேலைக்குப் போகாம கள்ளத்தனம் காட்டிக்கிட்டு இங்கேயே உட்கார்ந்திருந்தா எப்படி?

அவன் திரும்பிப் பார்க்காமல் வேலையைத் தொடர்ந்தவாறு-

"நேரம் இன்னும் நிறைய இருக்கு!"

அவள் பின்னால் இருந்து அவனுக்கு முன்னால் வந்து நிற்கிறாள். கையிலிருந்த தூக்கு பாத்திரத்தையும் இலைப் பொட்டலத்தையும் கீழே மணலில் வைக்கிறாள்.

பார்வதி:   (கல்லில் இருக்கும் உருவத்தைப் பார்த்து) முழுசா முடிஞ்சிருச்சா?

சங்கரன்:  நீ என்ன மேஸ்திரியா (தன்னுடைய வேலைப்பாட்டைப் பார்த்து- ஒருவித திருப்தியுடன்) வேலை முழுசா முடிஞ்ச பிறகு பார்... கோவில்ல இருக்குற சிலைகளைவிட இது ரொம்பவும் நல்லா இருக்கும்.

பார்வதி:   சரி... நான் கிளம்பணும். இதைக்குடிச்சிட்டு பாத்திரத்தைத் தாங்க.

அவன் இலைப் பொட்டலத்தைப் பிரித்து அவள் காலையில் பண்ணிய பலகாரத்தைச் சாப்பிடுகிறான். தூக்கு பாத்திரத்தில் இருந்த தேநீரைக் குடிக்கிறான்.

பார்வதி:   இது முழுசா முடிஞ்ச பிறகு இதை என்ன செய்வீங்க?

சங்கரன்:  (சர்வ சாதாரணமான குரலில்) யாருக்காவது கொடுக்க வேண்டியதுதான்.

பார்வதி:   விலைக்கா?

சங்கரன்:  விலைக்கோ சும்மாவோ கொடுக்க வேண்டியதுதான்.

அவள் பேசாமல் இருக்கிறாள். மனதிற்குள் சிறுபிள்ளைத்தனமான கோபம்.

சங்கரன்:  உனக்கு வேணுமா?

பார்வதி:   (ஆசையை அடக்கிக் கொண்டு) எனக்கு எதுக்கு?

சங்கரன்:  வெள்ளைக்காரங்க யாருக்காவது வித்தா நல்ல பணம் கிடைக்கும்.

பார்வதி:   தேவியோட விக்கிரகத்தை விக்கிறதா? நான் வீட்ல கொண்டு போய் வைக்கப் போறேன். ஒவ்வொரு நாளும் அதுக்கு பூ வைப்பேன். விளக்கு ஏத்துவேன்.

அவன் வேலை செய்து கொண்டிருக்கும் கருங்கல்லை எடுத்து இன்னொரு இடத்தில் வைத்து ஓலைக் கீற்றால் அதை மூடுகிறான்.

சங்கரன்:  (நிழலைப் பார்த்து) ம்... சரி... நான் கிளம்பட்டுமா? ரெண்டு மாசம் ஆனா பாறையில வேலை முடிஞ்சிடும்.

பார்வதி:   அதுக்குப் பிறகு என்ன செய்றதா உத்தேசம்?

சங்கரன்:  கையில இருக்குற காசு தீர்றது வரை ஒரு வேலைக்கும் நான் போகமாட்டேன். ரோட்டுல சுத்திக்கிட்டு திரிய வேண்டியதுதான். மீதி இருக்குற நேரத்துல நல்லா தூங்க வேண்டியதுதான்.

பார்வதி:   நல்லா தின்னணும்... சோம்பேறி. பணம் முழுசும் தீர்ந்திடுச்சுன்னா...?

சங்கரன் ஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு சுத்தியலையும் உளியையும் பையில் போட்டுக் கொண்டு-

சங்கரன்:  மருதுவான் மலையில கருங்கல்லு இருக்குமா? பிழைக்கிறதுக்கு எனக்கு யாரோட தயவும் வேண்டாம்...

அவன் நடக்கிறான். காலியான தூக்கு பாத்திரத்தை அடைத்தவாறு அவள் அவனுக்குப் பின்னால் நடக்கிறாள்.

பார்வதி:   (தயங்கியவாறு) நேத்தும் மாமன் வந்து தேவையில்லாததெல்லாம் சொன்னாரு.

சங்கரன் அதைக் கேட்டு நிற்கிறான். அவன் மனதிற்குள் கோபம் எழுகிறது.

சங்கரன்:  என்ன சொன்னான்?

பார்வதி தலை குனிந்து நிற்கிறாள். எதுவும் பேசவில்லை.

பார்வதி:   காசு கேட்டாரு... பிறகு...

சங்கரன்:  பிறகு?

வெட்கத்துடன், அதே நேரத்தில் வேதனையுடன்-

பார்வதி:   என்னைக் கல்யாணம் பண்ண போறதா சொன்னாரு.

சங்கரன்:  (கோபத்துடன்) நீ அவன் சொல்றதைக் கேட்டு நின்னே?

பார்வதியின் கண்கள் நனைகின்றன.

பார்வதி:   நான் என்ன பண்ண முடியும்? ஊரைவிட்டு உடனே ஓடுறதுக்கு நான் ஒண்ணும் ஆம்பளை இல்லியே!

பாதை பிரிகிற இடத்தில் அவர்கள் நிற்கிறார்கள். சங்கரன் என்னவோ தீவிரமாக சிந்திக்கிறான். தூரத்தில் ஒரு படகிலிருந்து கேட்கும் சங்கொலி.

சங்கரன்:  (முகத்தை உயர்த்தாமல், மெதுவான குரலில்) நேரமாயிடுச்சு.

நடக்கிறான்.


29

டற்கரை.

அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வரிந்து கிடக்கும் கடற்கரை. சாமியாரும் ஜெயனும் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்.

ஜெயன்:   டைனிங் ரூம்ல ராத்திரி பார்த்தப்போ எனக்கு நிச்சயமா தெரிஞ்சிடுச்சு - நான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன். ராத்திரி முழுக்க யோசிச்சுப் பார்த்தேன். எங்கே பார்த்தோம்னு ஞாபகத்துலயே வரல...

சாமியார்:  நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். ஜன்னல் பக்கத்துல முதல் தடவையா ஜெயன், உன்னோட முகத்தைப் பார்த்தப்போ எனக்கே எங்கேயோ உன்னைப்  பார்த்தது மாதிரி இருந்துச்சு.

ஜெயன்:   (ஆச்சரியத்துடன்) என்னையா?

சாமியார் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டுகிறார். அப்போது ரெஸ்ட் ஹவுஸிலிருந்து வரும் பாதையில் கிழவரும், அந்த இளம் பெண்ணும் நடந்து வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். பெண்ணின் கையில் பூத்தட்டும், பூஜை சாமான்களும் இருக்கின்றன. கோவிலில் இருந்து சேட்டும் அவரின் மனைவியும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிழவரையும் இளம் பெண்ணையும் கடந்து ரெஸ்ட் ஹவுஸை நோக்கி போகிறார்கள்.

நீச்சல் உடையணிந்து, பெரிய ஒரு துண்டை தோளில் போட்டவாறு பாதையில் நடந்து வந்த நீச்சலடிக்கும் இளைஞன் ஃப்ரெடரிக் சாமியாரையும் ஜெயனையும் கடந்து தண்ணீரை நோக்கி நடக்கிறான்.

ஜெயனின் கண்கள் அப்போது கிழவருடன் இருக்கும் இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஜெயன்:   நானும் கோயிலுக்குப் போகப் போறேன்...

சாமியார் புன்னகைக்கிறார்.

ஜெயன்:   சாமி, நீங்க வர்றீங்களா?

சாமியார்:  நீ போ, நிழல்களைப் பின்பற்றிப் போகிற காலம் என் வாழ்க்கையில் என்னைக்கோ முடிஞ்சு போச்சு தம்பி...

30

திகாலை நேரம்.

சாமியார் நடக்கிறார். ஹிப்பிகள் கூட்டம் எதிரில் வந்து கொண்டிருக்கிறது. சாமியார் அவர்களைக் கடந்து போகும்போது முதல் நாள் இரவு அறைக்குள் வந்த ஹிப்பி அழைக்கிறான்:

“ஹை...!”

அதைக் கேட்டு சாமியார் நிற்கிறார். ஒரு இளம்பெண்ணின் தோளில் கை போட்டவாறு நடக்கும் ஹிப்பி அவளை இறுக அணைத்தவாறு சாமியாரிடம்-

ஹிப்பி:    டிட் வி ஹாவ் எ டிஸ்கஷன் லாஸ்ட் நைட்?

சாமியார்:  (தயங்கியவாறு) இட் வாஸ் நாட் மச் ஆஃப் ஏ டிஸ்கஷன்.

ஹிப்பி:    டிட் வி ரீச் எனி வேர்?

சாமியார்:  நோ.

ஹிப்பி:    ஹா! ஐ தாட் ஸோ!

31

கல்.

ஓலையால் ஆன கதவுக்கு வெளியே மணலில் வெயில் காய்ந்து கொண்டிருக்கிறாள் கண் பார்வை தெரியாத கிழவி.

விற்பனை செய்யக்கூடிய பொருட்களை தயார் பண்ணும் சிறுவர் - சிறுமிகளும், வயதானவர்களும் மணலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பனை நுங்கு வெட்டுபவர், இளநீர் விற்பவர், மாலை கோர்க்கும் சிறுமிகள்- எல்லோரும் அங்கு இருக்கின்றனர்.

இடுப்பில் மண்குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு வரும் பார்வதி அவர்களைத் தாண்டி தன்னுடைய சொந்த குடிசையை நோக்கி வருகிறாள். வரும் வழியில் அவள் நிற்கிறாள்- ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.

சாமியார் சேரியின் பின் பக்கத்திலிருந்து நடந்து வருகிறார். அவளைப் பார்த்த சாமியார் மெதுவாக அவளை நோக்கி நடந்து வருகிறார்.

சாமியார்:  வியாபாரத்துக்கு இறங்கியாச்சா?

பார்வதி:   வீட்டு வேலை முடியலையே!

சாமியார் சுற்றிலும் பார்க்கிறார். அவளின் குடிசை வாசலில் வெயில் காய்ந்து கொண்டிருக்கும் கிழவி.

சாமியார்:  சங்கரன் எங்கே?

பார்வதி:   முதல் படகுல வேலைக்குப் போயாச்சு.

சாமியார்:  என்ன இருந்தாலும் சங்கரன் திறமையான ஆளு... நான் சொல்றது சரிதானே?

பார்வதி பேசாமல் இருக்கிறாள். அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.

சாமியார்:  அவனுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும் அப்படித்தானே?

பார்வதி:   (கூச்சத்துடன்) சாமி, உங்களுக்கு எப்படி எது தெரியும்?

சாமியார்:  எனக்கு எல்லாமே தெரியும். அந்த கரும்பனைக்கு அப்பால் முன்னாடி ஒரு பழைய குளம் இருந்துச்சு. உனக்கு அதெல்லாம் தெரியாது. மல்லிகைத் தோட்டத்தைத் தாண்டி மாரியம்மன் கோவில் இருந்துச்சு.

பார்வதி:   சாமி, நீங்க எல்லாத்தையும் நடந்தே பார்த்திருப்பீங்க.

சாமியார்:  அதைப் பார்க்காமலே எனக்கு தெரியும். உன் பாட்டியோட பேரு கண்ணம்மாதானே?

பார்வதி:   அது எப்படி உங்களுக்குத் தெரியும்?

சாமியார்:  சங்கரனுக்கு உன்னைப் பிடிக்கும்னு எனக்கு எப்படித் தெரிஞ்சது?

அவள் வெட்கப்பட்டு அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் தர்மசங்கடத்துடன் நின்றிருக்கிறாள். ஒரு வேப்பங்குச்சியில் பல்லைத் துலக்கியவாறு வந்து கொண்டிருக்கும் வீரப்பனைப் பார்த்த அவள் வேகமாக குடிசையை நோக்கி நடக்கிறாள். சேரிக்குள் யாரென்றே தெரியாத ஒரு வெளியாள் எதற்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரப்பன் அங்கு வருகிறான்.

சாமியார் அவனை உற்று பார்த்துவிட்டு சுற்றிலும் இருக்கும் ஏழைகளின் உலகத்தைப் பார்க்கிறார். மீண்டும் தனக்கு முன்னால் நின்றிருக்கும் வீரப்பனைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அவன் ஒரு மாதிரி நெளிகிறான். பந்தாவாக வந்த வீரப்பன் பயபக்தியுடன் நின்றிருக்கிறான்.

வீரப்பன்:  வணக்கம்!

சாமியார் அமைதியாக கை கூப்புகிறார். பிறகு திரும்பி நடக்கிறார்.

32

கல்.

வரிசையாக அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள். ஒவ்வொரு கடையாக சுற்றுலாப் பயணிகள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கிழவரும், அந்த இளம்பெண்ணும்கூட இருக்கிறார்கள். அவர்களுக்குச் சற்று அப்பால் ஜெயன் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். இப்போது அவனின் நெற்றியில் சந்தனக்குறி இருக்கிறது. ஒரு கடையில் இருந்து வெளியே வருகிறபோது அவள் கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவன் தன்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். கிழவருக்கு அது தெரியாது.

ஒருவகை வெறுப்புடன் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டுக் கொண்டு இளம் பெண்ணுடன் நடக்கும் கிழவர். அவள் இன்னொரு கடையில் ஏறும்போது -

கிழவர்:    என்னால இதுக்கு மேல முடியாது.

பெண்:     அப்படின்னா நிழல்ல உட்காருங்க. நான் இப்போ வந்திர்றேன்.

கிழவர்:    இங்கே இருக்குற கடைக்காரங்க திருட்டுப் பசங்க. ஒண்ணுக்கு நாலு விலை சொல்லுவாங்க. இங்கே வாங்குற எதுவுமே நாலு நாளுக்கு மேல தாங்காது...

பெண்:     சும்மா பார்த்துட்டு வர்றனே!

கிழவர்:    (வெறுப்புடன்) வாங்கு... வாங்க வேண்டாம்னு நான் சொன்னேனா என்ன?

33

லவகைப்பட்ட சங்குகள், வீட்டில் வைக்க வேண்டிய அலங்காரப் பொருட்கள். கடைக்குள் அவள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வருகிறாள். எதுவுமே அவளுக்குப் பிடிக்கவில்லை.

கடைக்காரன்:   இதைப் பாரும்மா... எல்லாமே கையால செய்யப்பட்டது.


அவன் வேறு ஏதோ பொருளை எடுத்துக் காட்ட முயலும்போது அவள் கடையை விட்டுவெளியே வருகிறாள். அவளுக்கு முன்னால் ஜெயன் நின்றிருக்கிறான்.

ஜெயன்:   ஸாரி! நேத்தே கேக்கணும்னு நினைச்சேன். யுனிவர்ஸிட்டி காலேஜ்ல நீங்க படிச்சீங்களா?

பெண்:     இல்லை.

ஜெயன்:   எங்கேயோ பார்த்திருக்கோம்ன்றது மாதிரி மனசுல பட்டது. என் பேரு ஜெயன்...

‘ரஜனி!’

கிழவர் அழைப்பதைக் கேட்டு, அவளுடைய முகத்தில் அதிர்ச்சி. திரும்பிப் பார்த்தபோது கிழவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அவளுக்குப் பின்னால் நின்றிருக்கிறார்.

கிழவர்:    ப்ரேக்ஃபாஸ்டுக்கு நேரம் தள்ளியிருச்சுன்னா எனக்கு வயித்துல வலி வந்துடும்ன்ற விஷயம் உனக்குத் தெரியும்ல?

பெண்:     சரி... போகலாம்.

கிழவர்:    வேண்டாம்... சல்லாபம் தொடரட்டும்.

கிழவர்:    (அவன் கேட்கட்டும் என்று) ஒரு புடவையோட நிறத்தைப் பார்த்துட்டா போதும், அதுக்குப் பின்னாடி அலைய ஆரம்பிச்சிடுறானுங்க. குட் ஃபார் நத்திங் ஃபெல்லோஸ்!

பெண்:     மெதுவா பேசுங்க. அவர் காதுல விழுந்துடப் போகுது.

கிழவர்:    (உரத்த குரலில்) கேட்டா என்ன? தலையை எடுத்திடுவானா? எங்கே போனாலும் இந்த மாதிரி ஆளுங்களோட தொந்தரவைத் தாங்க முடியல...

நடக்கிறார்கள்.

ஜெயன் அவர்கள் போவதைப் பார்த்தவாறு தனியாக நின்றிருக்கிறான்.

ஜெயன்:   (தனக்குள்) ரஜனி... ரஜனி... எங்கே இவளைப் பார்த்திருப்பேன்...? எங்கேன்னே ஞாபகத்துல வரமாட்டேங்குதே!

34

சூரிய அஸ்தமனத்தின் ஆரம்பம்.

கடலுக்குப் பக்கத்தில் ஒரு பாறை மேல் அமர்ந்திருக்கிறார் சாமியார்.

ரிக்வேத சுலோகமோ சந்தியா வந்தனமோ ஏதோ ஒன்றைப் பாடுகிறார் சாமியார்.

அஸ்தமனத்தைப் பார்க்க வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

35

டகுகள் நிறுத்தும் இடம்.

கருங்கல்லில் வேலை செய்யும் ஆட்களை ஏற்றி வருகிற படகு, அது நிற்கும் இடத்திற்கு வருகிறது. கறுத்த உடம்பையும், கருங்கல்லின் உறுதியையும் கொண்ட பணியாளர்கள் கூட்டமாக படகிலிருந்து இறங்குகிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் சங்கரனும் இருக்கிறான்.

சங்கரன் நடக்கிறான். பாதையிலிருந்து கடற்கரையில் கால் வைக்கும்போது நின்று பார்க்கிறான்.

ஆங்காங்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் இங்குமங்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்- சிறுமிகள், பொருட்கள் விற்பவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள். அவனின் கண்கள் பார்வதியைத் தேடுகின்றன.

மணலில் இருபதடி தூரம் நடந்த அவன் கடற்கரையில் அவளைத் தேடுகிறான்.

சாமியாரின் குரல்:    சீக்கிரமே வேலை முடிஞ்சிருச்சா?

சங்கரன் திகைத்து நிற்கிறான்.

சாமியார்:  (புன்னகைத்தவாறு) இங்கே ஓடி நடக்குறதைப் பார்த்தேன்...

சங்கரன் தயங்கி நிற்கிறான்.

சாமியார்:  பார்வதியை எனக்குத் தெரியும். நட....

சாமியார் நடக்கிறார். ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டதைப் போல அவனும் அவருடன் சேர்ந்து நடக்கிறான். சாமியார் நிற்கிறார். சங்கரனும் நிற்கிறான்.

சாமியார்:  சங்கரா, உன் வீடு எங்கே இருக்கு?

சங்கரன்:  நாகர்கோவில்ல...

சாமியார்:  வீட்ல யாரெல்லாம் இருக்காங்க.

சங்கரன்:  தெரியாது...

சாமியார்:  போறது இல்லியா?

சங்கரன்:  பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.

சாமியார்:  அதுக்குப் பிறகு யாரும் தேடலியா?

சங்கரன்:  (தலைகுனிவுடன்) இல்ல...

சாமியார்:  அம்மா...?

சங்கரன்:  எனக்கு நாலு வயசு இருக்குறப்போ ரோட்டு வேலைக்கு வந்த மேஸ்திரி கூட அவங்க ஓடிப்போயிட்டாங்க.

சாமியார்:  அப்பா?

சங்கரன்:  செத்திருக்க மாட்டார்... (வெறுப்புடன்) கெட்டவங்க அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டாங்க.

சாமியார் சிந்தனையில் ஆழ்கிறார்.

அவர் மீண்டும் நடக்கிறார்.

ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருக்கும் கடற்கரையை அவர்கள் அடைந்தபோது சற்று தூரத்தில் பார்வதி சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் ஓடி ஓடி மாலை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.

சாமியார்: பாறையில வேலை எப்போ முடியும்?

சங்கரன்:  ஒரு மாசத்துல முடிஞ்சிடும். ஒருவேளை ரெண்டு மாசம் ஆனாலும் ஆகலாம்.

சாமியார்:  அதுக்குப் பிறகு?

சங்கரன்:  (யோசித்து) கல் இருக்குற இடத்துல வேலை இருக்கும்.

சாமியார்:  நீ போயிட்டா பார்வதிக்கு துணைன்னு யார் இருக்கா?

கறுத்து காமதேவனைப் போல அழகாக இருக்கும் அந்த இளைஞனின் முகத்தில் வெட்கம் ஒரு மலரைப் போல மலர்கின்றது.

சாமியார்:  (கடுமையான குரலில் - உபதேசம் செய்வது மாதிரி) அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது. அவ மனசு கஷ்டப்படுறது மாதிரி எப்பவும் நடக்கக்கூடாது.

சாமியார் இன்னும் ஏதாவது சொல்வாரோ என்ற ஆர்வத்துடன் அவர் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சாமியார்:  ம்... நட.

சாமியார் தனியாக நின்றிருக்கிறார். அவருக்கு முன்னால் கடல் கம்பீரமாக விரிந்து கிடக்கிறது. கடலைப் பார்த்தவாறு தனியாக நின்றிருக்கும் சாமியாரை மக்கள் கூட்டத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்த ஜெயன் பார்க்கிறான். அவன் அடுத்த நிமிடம் சாமியாருக்கு அருகில் வருகிறான்.

ஜெயன் அருகில் வந்தவுடன்-

சாமியார்:  ஞாபகத்தோட விளையாட்டு எந்த அளவுல இருக்கு?

ஜெயன்:   இன்னும் ஞாபகத்துல வரலியே!

சாமியார்:  (புன்னகைத்தவாறு) அப்படியா?

ஜெயன்:   காலையில அவங்க அறைக்குள் நுழைஞ்ச பிறகு, வெளியே வரவே இல்ல. கிழவன் சொத்தைக் காத்துக்கிட்டு இருக்குற பூதம்போலன்னு சொல்லலாம்.

சாமியார்:  சில கிழவர்கள் அப்படித்தான்.

36

டற்கரை.

கடலில் நீந்திக் கொண்டிருக்கும் ஆண்மைத்தனமான உடம்பைக் கொண்ட இளைஞனின் ஒவ்வொரு அசைவையும் வேடிக்கை பார்த்தவாறு குஜராத்தி பெண் பாக்கை மென்று கொண்டு கரையில் அமர்ந்திருக்கிறாள்.

சேட் அவளைக் கவனிக்காமல் ஏதோ வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சேட் இடையில் நிறுத்தி அவளைப் பார்க்கும்போது, அவள் தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

சேட்: என்ன சிரிக்கிறே?

சேட்டின் மனைவி பதிலேதும் கூறாமல் இருக்கிறாள்.

சேட்: நீயாவது என் பிஸ்னஸ் விஷயங்கள்ல ஆர்வம் செலுத்துவேன்னு நினைச்சேன். கடவுளே... எனக்கு யாருமே இல்லியா?

37

ரெஸ்ட் ஹவுஸின் அறை. ஜன்னலருகில் நின்றிருக்கிறாள் இளம்பெண். தூரத்தில் கடற்கரை. ஆங்காங்கே சிதறிப்போய் மனிதர்கள் தெரிகிறார்கள். கிழவர் தலையில் மஃப்ளரைக் கட்டியவாறு அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

ரஜனி:     நாம கொஞ்சம் நடந்துட்டு வருவோம்.

கிழவர்:    நீ வேணும்னா போ. நான் வரல.

ரஜனி:     எனக்கு உடம்பு சரியில்ல...

கிழவர்:    (குரலை உயர்த்தி) நான் நல்லா இருந்தா உனக்கு என்ன? நல்லா இல்லாம இருந்தாத்தான் என்ன?

இளம் பெண் மன வேதனையுடன் அமைதியாக நின்றிருக்கிறாள். கிழவர் எதையோ வாயில் மென்றவாறு அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் அப்போதும் வெளியே பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள்.

கிழவர்:    ரஜனி!

அவள் மெதுவாக திரும்பி கிழவரைப் பார்க்கிறாள்.


கிழவர்:    நீ வேணும்னா போ.

ரஜனி:     நான் போகல.

கிழவர்:    போ. எனக்கு கடல் காற்று ஒத்து வரல.

ரஜனி:     நான் போகல. சும்மா பேச்சுக்காக சொன்னேன்.

கிழவர்:    எனக்காக யாரும் தியாகம் செய்றதா நினைக்க வேண்டாம். அதை நான் விரும்பவும் இல்ல.

ரஜனியின் கவலை படர்ந்த முகம். அந்த முகத்தின்மீது கடலலைகள்.

38

டலலைகள்.

கரை மேல் ஏறும் அலைகள் மீது நீர் தெறிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.

வாழ்க்கையின் வசந்தத்தைக் காண துடிக்கும் இரண்டு குதிரைகள் -சங்கரனும் பார்வதியும்.

கடலலைகளை விட்டு மேலே கரைக்கு வந்து உயர்ந்த மணல் மேட்டின் மேல் சங்கரன் அமர்கிறான். அவளும் கரைக்கு ஏறி வந்து அவனுக்கு அருகில் நின்றிருக்கிறான்.

சங்கரன்:  மேஸ்திரி இன்றைக்கு கணக்கு பார்த்து விடுறப்போ எவ்வளவு காசு கையில இருக்கும் தெரியுமா?

பார்வதி:   எவ்வளவு இருக்கும்?

சங்கரன்:  ‘ஒன்று’ என்று கையால் காட்டுகிறான்.

பார்வதி:   ஒண்ணா?

சங்கரன்:  போடி... நூறு. ஒருவேளை அதிகமாக்கூட இருக்கலாம்.

பார்வதி:   அது கிடைச்ச பிறகு...?

சங்கரன்:  எங்கேயாவது போக வேண்டியதுதான்.

பார்வதி:   இங்கேயே இருக்கலாம்ல? இங்கே கல் இல்லியா? கல் இருக்குற இடத்துல வேலை இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்குற ஆளுதானே நீங்க?

சூரிய அஸ்தமனத்தின் கடைசி நிமிடம். சூரியன் மறையப் போகும் கடைசி நிமிடத்தில்-

பார்வதி:   நான் கூட சில முடிவுகள் எடுத்திருக்கேன்.

சங்கரன்:  அப்படியா?

பார்வதி:   பார்க்கத்தானே போறீங்க. நானும் எங்கேயாவது போகப் போறேன்.

சங்கரன்:  (கோபத்துடன்) எங்கே போகப் போற?

பார்வதி:   எங்க போகணும்னு தோணுதோ அங்கே...

அவள் அவனுடன் கொண்ட கோபத்துடன் நடந்து போகிறாள்.

சங்கரன்:  பார்வதி!

அவள் நிற்கவில்லை. அதற்கு பதிலாக வேகமாக நடக்கிறாள். அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும்போது கையில் இருந்த சிப்பி மாலைகள் ஓசை உண்டாக்கும் வண்ணம் அவள் வேகமாக ஓடுகிறாள். அவன் அவளைத் தொடர்ந்து ஓடுகிறான்.

39

பார்வதி முன்னால் ஓடுகிறாள். அவளைப் பின்பற்றி சங்கரன் ஓடுகிறான். வேகமாக ஓடி அவன் அவளை நெருங்குகிறான். அப்போது தனியாக இருக்கும் ஒரு மண்மேட்டின் மேல் அவள் களைப்படைந்து சிரித்துக் கொண்டே விழுகிறாள். அவனும் மண்மேட்டின்மேல் விழுகிறான். அவளின் உடம்பை உரசியவாறு அவனின் கைப்பிடிக்குள் அவள் -

அவன் தன்னையும் மீறி தான் இதுவரை அனுபவித்திராத ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு அவளை முத்தமிடுகிறான். அவள் தன்னை மீறி அவனுடைய கழுத்தைச் சுற்றி வளைக்கிறாள்.

பார்வதி:   போவீங்களா?

சங்கரன்:  இல்ல...

பார்வதி:   சத்தியம் பண்ணுங்க. தேவிமேல சத்தியம் பண்ணுங்க.

சங்கரன்:  உன் மேல சத்தியமா...

பார்வதி:   தேவி மேல் சத்தியமான்னு சொல்லுங்க...

சங்கரன்:  நீதானே தேவி! பார்வதி!

40

பாதை பிரியும் இடத்தில் பார்வதியும் சங்கரனும் நிற்கிறார்கள். நாணத்தால் அவள் தலை குனிந்தவண்ணம் இருக்கிறாள்.

சங்கரன்:  நல்ல நிலவு இருக்குற ஒரு ராத்திரி நேரத்துல நாம பாறைக்குப் போகணும்.

பார்வதி நாணம் மேலிட நிற்கிறாள்.

சங்கரன்:  கட்டு மரத்துல வர பயமா இருக்கா?

பார்வதி:   தனியாவா?

சங்கரன்:  நான் துடுப்பு போடுவேன். அப்ப பயப்படுவியா?

பார்வதி:   நான் பயப்பட மாட்டேன்... (தலைகுனிந்தவாறு) நீங்க எங்கே கூப்பிட்டாலும் நான் வருவேன்.

சங்கரன்:  எங்கே கூப்பிட்டாலும்...?

பார்வதி:   கூப்பிட்டு பாருங்க...

சங்கரனுக்கு மீண்டும் அவளைத் தொட வேண்டும் போல் இருக்கிறது. மனமே வராமல் அவள் நடக்கிறாள். அவன் காதல் மேலோங்க அவளையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.

41

தோழிகள் புடைசூழ மாலை அணிந்த கோலத்துடன் திருமணப் பந்தலில் பார்வதி நின்றிருக்கிறாள். மேள சத்தம் காதைப் பிளக்கிறது. குளவைச் சத்தமும்தான். திருமணத்திற்காக வந்த தேவதைகள் அவளை வாழ்த்துகின்றனர்.

எல்லோரும் புறப்படுகின்றனர். தோழிகளும்தான். திருமணப் பந்தலில் பார்வதி மட்டும் தனியாக இருக்கிறாள். அவள் தன் கழுத்தில் இருந்த மாலையை விட்டெறிகிறாள். பந்தலில் இருக்கும் தோரணங்களைப் பிய்த்து எறிகிறாள்.

அவள் மெதுவாக மங்கலான இருட்டில் கண்களைத் திறந்து பார்க்கிறாள். கயிற்றுக் கட்டிலின் மேல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பாட்டியின் சுவாச சத்தம் மட்டும் கேட்கிறது.

42

சூரிய உதயம்.

ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் சேட்டும் அவரின் மனைவியும் நின்றிருக்கிறார்கள். டாக்ஸியில் பணியாள் சாமான்களை ஏற்றுகிறான்.

நீச்சலடிப்பதற்காகச் செல்லும் ஃப்ரெடரிக் ஒரு நிமிடம் அதைப் பார்த்தவாறு நிற்கிறான். பிறகு நடக்க ஆரம்பிக்கிறான். சேட்டின் மனைவி அவனைப் பார்க்காதிருக்க முயற்சிக்கிறாள்.

கடற்கரையில் இருந்து ஃப்ரெடரிக்கிற்கு எதிரில் வந்து கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து சேட் வணங்குகிறார்.

கடற்கரையில் இருந்து ஃப்ரெடரிக்கிற்கு எதிரில் வந்து கொண்டிருக்கும் சாமியாரைப் பார்த்து சேட் வணங்குகிறார்.

சேட்: ஆசீர்வதிங்க... (மனைவியிடம் சைகை காட்டுகிறார்)

சேட்டின் மனைவி சாமியாரின் காலில் விழுந்து வணங்குகிறாள். சாமியார் அவளை ஆசீர்வதிக்கிறார்.

சேட்: பல வருஷங்களா வியாபாரம் செஞ்சு எவ்வளவோ சொத்து சம்பாதிச்சாச்சு. இருந்தாலும் ஒரு வாரிசு இல்ல. எத்தனையோ புண்ணிய இடங்களுக்குப் போயாச்சு சாமி... நீங்க எங்களை ஆசீர்வதிக்கணும்.

சாமியார்:  ஸ்வஸ்தி!

அவர்கள் காரில் ஏறுகிறார்கள். கார் அந்த இடத்தைவிட்டு நீங்குகிறது. தூரத்தில் பார்வதி. நீச்சலடிக்கும் ஃப்ரெடரிக் அவளுடன் பேசிக் கொண்டிருப்பதை சாமியார் பார்க்கிறார்.

43

கல்.

ஃப்ரெடரிக் வழக்கமான தன்னுடைய நீச்சல் உடையுடன் நின்று கொண்டிருக்கிறான். எப்போதும் இருப்பதைப்போல் இல்லாமல் பார்வதி ஒரு அழுக்கு தாவணியை அணிந்திருக்கிறாள். கூந்தலில் நான்கைந்து பூக்கள் இருக்கின்றன. கையில் விற்பதற்காக இருக்கும் சங்கு மாலைகள்.

ஃப்ரெடரிக்கைக் கொஞ்சம்கூட கவனிக்காமல், அதாவது- அவன் கேட்ட கேள்விக்கு பதிலெதுவும் கூறாமல் அவள் நடந்து போகும்போது-

ஃப்ரெடரிக்: நில்லு... எனக்கு மாலை வேணும்.

பார்வதி:   எனக்கு வேற வேல இருக்கு.

ஃப்ரெடரிக்: ஆமா... மாலை வித்தா ஒரு நாளைக்கு உனக்கு என்ன காசு கிடைக்குது?

பார்வதி போக முயற்சிக்கிறாள். அப்போது கையிலிருந்த மாலைகளைப் பிடித்து அவன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான்.

ஃப்ரெடரிக்: கொஞ்சம் நில்லு. (தாழ்ந்த குரலில்) நீ என் ரூமுக்கு வர்றியா?

பார்வதி:   எதுக்கு?

ஃப்ரெடரிக்: ஒரு விஷயம் இருக்கு. உனக்கு தேவையானதை நான் வாங்கித் தர்றேன்.

பார்வதி:   (கோபத்துடன்) இப்போ என் மாலையை விடுறியா இல்லியா?

அப்போது அங்கே வரும் சாமியாரைப் பார்த்து ஃப்ரெடரிக் மாலையை விடுகிறான். கடற்கரையை நோக்கி அவன் நடக்கிறான்.


சாமியார்:  ஏதாவது மாலை வாங்கினானா?

பார்வதி:   அந்த ஆளு எதுவும் வாங்கல. இப்படித்தான் பார்க்குறப்ப எல்லாம் அதுவும் இதுவும் சொல்லிக்கிட்டு இருப்பான்...

சாமியார் யாரிடம் என்றில்லாமல் தனக்குள் இரண்டு வரி சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கூறிக் கொள்கிறார்.

பார்வதி:   (ஒன்றும் புரியாமல்) என்ன  சொன்னீங்க?

சாமியார்:  ஒண்ணுமில்ல...

நடக்கிறார்கள்.

44

சாமியாரின் அறை.

நனைந்த தன்னுடைய ஆடைகளைக் காயப் போட்டுவிட்டு, ஒரு துண்டை இடுப்பில் சுற்றியவாறு சாமியார் நின்றிருக்கிறார். அப்போது அவரின் அறைக் கதவு தட்டப்படுகிறது.

சாமியார் கதவைத் திறக்கிறார். வாசலில் ஜெயன் நின்றிருக்கிறான்.

சாமியார்: வா... உட்காரு ஜெயன்...

ஜெயன் கவலை படர்ந்த ஒரு புன்னகையுடன் அமர்கிறான்.

சாமியார்:  என்ன கோயிலுக்குப் போகலியா?

ஜெயன்:   'இல்லை' என்று தலையை ஆட்டுகிறான்.

ஜெயன்:   அவளைக் கிழவன் உள்ளே அடைச்சி வச்சிருக்கான்.

சாமியார்:  ராட்சசன்கிட்ட இருந்து கன்னியைக் காப்பாத்துறதுக்காக மாறுவேஷம் போட்டு நடக்குற இராஜகுமாரன் வந்திருக்காரு... அப்படித்தானே?

ஜெயன்:   சாமி, என்னைக் கிண்டல் பண்றீங்களா?

சாமியார்:  நிச்சயமா இல்ல...

ஜெயன்:   சாமி, உங்களுக்குத் தெரியாது.

சாமியார்:  எனக்குப் புரியுது.

ஜெயன்:   (சாமியாரைப் பேசவிடாமல்) இல்லை... உங்களால புரிஞ்சிக்க முடியாது. எனக்குக் கூட இதுவரை தெரியாமத்தான் இருந்துச்சு. என்னால தாங்க முடியல... சன்னியாசிமார்கள் பொதுவா யார் மேலயும் அன்பு செலுத்துறது இல்லையில்லையா?

சாமியார்:  எல்லாரும் அன்புக்காகத்தான் ஏங்குறாங்க. அது கிடைக்கலைன்னு வர்றப்போ, கிடைச்சதை வச்சு அவங்க திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்...

ஜெயன்:   (ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு) சாமி உங்களுக்குத் தெரியுமா? நான் கல்யாணம்ன்ற ஒண்ணைப் பத்தி இதுக்கு முன்னாடி எப்பவும் மனசுல நினைச்சுப் பார்த்ததே இல்ல. காரணம் என்ன தெரியுமா? எந்தப் பெண் மேலயும் என் மனசு ஒட்டாததுதான். சில மணி நேரங்கள் மட்டுமே நீடிச்சு நிக்கிற காதல் நாடகங்களை நான் விலைக்கு வாங்கினேன்...

சாமியார் அவன் கூறியதைத் தொடர்ந்து-

சாமியார்:  நான் அதை முடிக்கிறேன். 'இப்போ வாழ்க்கையிலேயே முதல் தடவையா எந்த காரணமும் இல்லாம ஒரு பெண் மேல ஈடுபாடு வந்திருக்கு. கண்டு மறந்த கனவைப் போல அவள் என்னை பாடா படுத்திக்கிட்டு இருக்கா.' இதுதானே நீ சொல்ல வர்றது?

ஜெயன்:   அப்படி நான் நினைக்கிறது தப்பா?

சாமியார்:  அப்படி நான் சொல்லலியே?

ஜெயன்:   நான் பல விதங்கள்லயும் சிந்திச்சுப் பார்த்தேன்.

சாமியார்:  ம்...

ஜெயன்:   (சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தொடர்கிறான்) நேராக போயி அறைக் கதவைத் தட்டுறது. என்னை அந்தக் கிழவன் ஒரு மாதிரி பார்ப்பான். அப்போ அவனைப் பார்த்து நான் சொல்லப் போறேன், நான் அவளை மனப்பூர்வமா காதலிக்கிறேன்னு..(பேச்சைச் சிறிது நிறுத்தி)... சாமி... நீங்க என்ன சொல்றீங்க?

சாமியார் எதுவும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சாமியார்:  இப்போ எனக்கு ஞாபகத்துல வருது. ஜெயன், உன்னை நான் ரொம்பவும் முன்னாடி பார்த்திருக்கேன்.

ஜெயன்:   என்னையா? இம்பாஸிபில்...

சாமியார்:  நான் பார்த்தது.... எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி கண்ணாடியில பார்த்த என் முகம் இப்படித்தான் இருந்துச்சு...

ஜெயன் சாமியாரைத் திகைப்புடன் பார்க்கிறான்.

ஜெயன்:   எனக்கு... எனக்கு எதுவுமே புரியல.

சாமியார்:  நாம எதுவுமே தெரியாதவங்களா இருக்கமேன்னு நமக்குத் தெரியும்.

ஜெயன் இருந்த இடத்தை விட்டு எழுகிறான். என்னவோ கூறுவதற்காக தயங்கி நிற்கிறான். பிறகு என்ன நினைத்தானோ ஏதோ சிந்தனையுடன் மெதுவாக வெளியே நடக்கிறான்.

45

டற்கரை.

கடற்கரையில் கோவிலில் இருந்து திரும்பி வரும் குடும்பங்களுக்கு சங்கு மாலைகள் விற்பதற்காக பார்வதி ஓடிக் கொண்டிருக்கிறாள்.

பார்வதி:   ஒரு ரூபா... ஸார்.. ஒரு ரூபா...

ஒரு பெண் மாலைகளைப் பார்த்துவிட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறாள்.

அவளின் கணவன் இடுப்பில் செருகி வைத்திருக்கும் பர்ஸை எடுத்து பார்த்து, நோட்டுகளை வெளியே எடுத்து, பின்னர் என்ன நினைத்தானோ மீண்டும் பர்ஸிலேயே வைத்துவிட்டு, மாலை வாங்கிய மனைவியிடம்-

அவன்:         பிறகு வாங்கலாம். சேஞ்ச் இல்ல...

அவ்வளவுதான். அந்தப் பெண் மாலையைத் திருப்பி பார்வதியிடமே தருகிறாள். பார்வதி ஏமாற்றத்துடன் அதை வாங்கி கையில் வைத்தவாறு நடக்கிறாள். தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரியவே, அதை நோக்கி ஓடுகிறாள்.

46

குளித்து முடித்து உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்த ஃப்ரெடரிக் பார்வதி நடந்து செல்வதைப் பார்க்கிறான். அவளை அவன் அழைக்கிறான்:

"ஏய்!"

அவள் நடக்கிறாள். ஃப்ரெடரிக் சற்று அருகில் வந்து-

ஃப்ரெடரிக்: நீ எனக்கு மாலை தர மாட்டியா?

பார்வதி:   எத்தனை வேணும்?

ஃப்ரெடரிக்: எவ்வளவு கையில இருக்கோ எல்லாத்தையும் வாங்கிக்கிறேன்.

அவள் தன் கையிலிருக்கும் மாலைகளை எண்ணுகிறாள்.

பார்வதி:   இருபது மாலைகள் இருக்கு. பதினஞ்சு ரூபா கொடுத்துட்டு எல்லாத்தையும் எடுத்துக்கோ.

ஃப்ரெடரிக்: ரூபா அறையில இருக்கு. சாயங்காலம் அறைக்கு வா. தர்றேன்.

பார்வதி அவனைப் பார்த்து கீழே துப்புகிறாள்.

பார்வதி:   நீயெல்லாம் ஒரு ஆளு!

அவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவளுக்கு முன்னால் வீரப்பன் நின்றிருக்கிறான். எப்போதும் அவனைப் பொறுத்தவரை போதைதான்.

வீரப்பன்:  எட்டணா எடுடி...

பார்வதி:   நான் இதுவரை ஒரு மாலை கூட விக்கலியே!

வீரப்பன்:  பொய் சொன்னே கொன்னுடுவேன். திருட்டு நாயே!

பயத்துடன், அதே சமயம் கவலையுடன்-

பார்வதி:   நான் இதுவரை மாலை ஒண்ணு கூட விக்கல...

அவள் தப்பித்தால் போதும் என்று நடக்கிறாள். வீரப்பனும் ஃப்ரெடரிக்கும் நின்றிருக்கிறார்கள்.

ஃப்ரெடரிக்: இங்கே பிராண்டி, விஸ்கி எதுவுமே கிடைக்காதா?

வீரப்பன்:  (உண்மையான ஆர்வத்துடன்) ரெஸ்ட் ஹவுஸ்ல இல்லையா சார்?

ஃப்ரெடரிக்: ஸ்டாக் தீர்ந்து போச்சு.

வீரப்பன்:  உங்களுக்கு நாட்டுச் சரக்கு வேணும்னா...

ஃப்ரெடரிக்: ஒரு சேஞ்ச்சுக்கு வேணும்னா நாட்டு சரக்கை சாப்பிட்டுப் பார்க்கலாம். ஆமா... இந்தப் பொண்ணு யாரு?

வீரப்பன்:  என் சொந்தம்தான். ஆனா, பத்து பைசா பிரயோஜனம் கிடையாது.

ஃப்ரெடரிக்: அப்படியா?(என்னவோ சிந்தித்தவாறு) சரி... ரெஸ்ட் ஹவுஸ்ல இருக்குற என்னோட அறைக்கு வா...

47

ற்றொரு சூரிய அஸ்தமனப் பொழுது

48

ஃப்ரெடரிக்கின் அறை. வீரப்பன் பயங்கர போதையுடன் சுவரில் சாய்ந்தவாறு இருக்கிறான். டீப்பாயில் நாட்டு சாராய குப்பி இருக்கிறது. அது முக்கால் பகுதி தீர்ந்திருக்கிறது.

சிகரெட் புகை வீரப்பனின் முகத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அவன் போதையில் சிக்கி பாதி உறக்கத்தில் இருக்கிறான்.


ஃப்ரெடரிக் அவனையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். சிகரெட் புகைத்தவாறு அலமாரியில் இருந்து விஸ்கி குப்பியை எடுக்கிறான். அதில் கொஞசம் டம்ளரில் ஊற்றி குடிக்கிறான். பிறகு டம்ளரில் நாட்டு சாராயத்தின் மீதியை ஊற்றி அழைக்கிறான்.

"வீரப்பா!"

வீரப்பன்:  (கண்களைத் திறந்து) சார்!

ஃப்ரெடரிக்: எழுந்திரு...

போதையுடன், சுய நினைவே இல்லாமல் அவன் எழுந்து உட்காருகிறான். எங்கிருக்கிறோம் என்பதையே அவன் அப்போதுதான் உணர்கிறான்.

வீரப்பன்:  ஆனா, ஒரு விஷயம் சொல்றேன். எவ்வளவு குடிச்சாலும் வீரப்பனுக்கு ஒண்ணுமே ஆகாது.

ஃப்ரெடரிக்: சரி... இதையும் குடி...

அவன் டம்ளரை கையில் வாங்குகிறான்.

ஃப்ரெடரிக்: நான் சொன்னது உனக்கு ஞாபகத்துல இருக்கா?

அவன் கண்களை மூடிக் கொண்டு டம்ளரை காலி செய்கிறான். பயங்கர சத்தத்துடன் அதைக் கீழே வைக்கிறான்.

வீரப்பன்:  எவ்வளவு குடிச்சாலும், வீரப்பன் எதையும் மறக்க மாட்டான். இன்னொரு தடவை வேணும்னா நான் அதைச் சொல்லட்டா, சார்?

அதிகாரக் குரலில்-

ஃப்ரெடரிக்: உன்னால முடியுமா?

வீரப்பன்:  வீரப்பன் ஒரு தடவை வாக்கு கொடுத்தா, கொடுத்ததுதான். நான் கொண்டு வருவேன். எட்டு மணிக்கு அவ இங்கே இருப்பா.

அவன் வாசல் வரை போய் ஏதோ யோசித்தவாறு திரும்பி வந்து தலையைச் சொறிகிறான்.

வீரப்பன்:  சார்... காசு...

ஃப்ரெடரிக் ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டுகிறான். வீரப்பன் அதை வாங்குவதற்கு ஆர்வத்துடன் கையை நீட்ட, அவன் கையைப் பின்னால் எடுத்து-

ஃப்ரெடரிக்: எட்டு மணி!

வீரப்பன்:  எட்டு மணி.

அவன் பணத்தைத் தருகிறான். அவன் வெளியே சென்றவுடன் ஃப்ரெடரிக் விஸ்கி குப்பியைப் பார்க்கிறான். அழைப்பு மணியை அடிக்கிறான்.

49

ராந்தா.

சாமியார் அறைக் கதவைத் திறக்கிறார். சாமியாரின் கையிடுக்கில் ஒரு பேப்பர் பொட்டலம் இருக்கிறது. அப்போது ஜெயன் வேகமாக அங்கு வருகிறான்.

ஜெயன்:   அவங்க காலையில போறாங்க. மேனேஜர் சொன்னாரு.

சாமியார்:  போகட்டும். யாரும் எங்கேயும் நிரந்தரமா இருக்க முடியுமா என்ன?

ஜெயன்:   என்கூட வாங்க. நாம அவங்க கூட பேசுவோம். சாமி... நீங்க என் கூட இருந்தா எனக்கு தைரியமா இருக்கும்.

சாமியார் கதவைத் திறந்து, பாதி உள்ளே நுழைந்தவாறு, திரும்பி நின்று-

சாமியார்:  நானா? புறம்போக்கு நிலத்துல அலைஞ்சு திரியிற ஆளு நான்... குடும்பத்துல எனக்குன்னு என்ன இடம் இருக்கு? சொல்லு ஜெயன்.

ஜெயன்:   நான் தனியாவே போயிடுவேன்... என்ன நடக்கப் போகுது?

சாமியார்:  ஆசிகள்! வாழ்த்துக்கள்!

பொட்டலத்தில் இருந்த பல வர்ண உடைகளையும் வெளியே எடுத்து காட்டியவாறு-

சாமியார்:  காலையில ஒரு பெண்ணை பார்த்து இந்த ஆடைகளை ஒப்படைச்சிட்டு நானும் இங்கேயிருந்து கிளம்புறேன்.

திகைத்து நிற்கும் ஜெயனிடம்-

சாமியார்:  வரன் வானத்தின் அளவிற்கு தலையை உயர்த்தி நடந்து வர்றப்போ தேவதைகளே திகைப்படைஞ்சு நின்னுடுறாங்க. மணமகளோட காலடிகளை பூமி முத்தமிடுது. உலகம் காதலர்களை ஆதரிக்கிறது. சன்னியாசிகளும்தான்.

சாமியார் உள்ளே போகிறார்.

50

ரவு.

ஜெயன் வராந்தாவில் தயங்கி நிற்கிறான்.

நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்கு ட்ரேயில் சோடா குப்பிகளையும் மதுவையும் எடுத்துக் கொண்டு போகும் பணியாள் அவனைத் தாண்டி நடந்து போகிறான்.

பணியாள்: ஸ்டாக் வந்திடச்சு. ஓ... இவர்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்?

ஜெயனின் நரம்புகள் முறுக்கேறுகின்றன. இருந்தாலும், அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான்.

பணியாள்: ஃபாரின் அடிச்சா, அவ்வளவு கெடுதல் இல்ல... இல்லியா?

சேட் காலி செய்த அறையில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.

ஜெயன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கவே பணியாள் பாஸ்கரன் நடக்கிறான்.

"வாவோ, வாவோ, வாவோ! மகனே நீ உறங்கு..."

அறைக்குள் தாய் மகனைத் தூங்க வைக்க முயற்சி செய்கிறாள். ஜெயன் நடக்கிறான். ஃப்ரெடரிக்கின் அறைக்கு முன்னால் வந்தபோது நிற்கிறான். நீச்சலடிக்கும் இளைஞனின் அறைக்குள் சோடாக் குப்பி திறக்கும் சத்தம்.

கையில் விஸ்கி க்ளாஸுடன் ஸ்போர்ட்ஸ் ஷர்ட், ஷாட்ஸ் அணிந்தவாறு ஃப்ரெடரிக் வெளியே வருகிறான். வராந்தாவில் நின்றிருக்கும் ஜெயனைப் பார்த்து மீண்டும் அவன் உள்ளே போகிறான்.

எதிர்பார்க்காமல் ஃப்ரெடரிக் மீண்டும் வெளியே வருகிறான்.

ஜெயனிடம்-

ஃப்ரெடரிக்: யூ வாண்ட் சம்திங்?

ஜெயன்:   நோ. தேங்க் யூ.

ஃப்ரெடரிக் உள்ளே போகிறான்.

50ஏ

ஃப்ரெடரிக் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருக்கிறான். அவன் பயங்கர போதையில் இருக்கிறான். கடிகாரத்தைப் பார்க்கிறான். நேரம் எட்டுமணி ஆகிறது. அவன் வெளியே வருகிறான். வராந்தாவில் இங்குமங்குமாய் பார்க்கிறான். அப்போது கிழவரின் அறைக்கு வெளியே தயங்கியவாறு நின்றிருக்கும் ஜெயனை அவன் பார்க்கிறான். கோபம் மாறி அவன் முகத்தில் புன்னகை படர்கிறது.

51

கிழவர் சாய்வு நாற்காலியில் மஃப்ளரால் தலையை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். ரஜனி ஜன்னலருகில் வெளியே பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கிழவர் முகத்தைத் திருப்புகிறார்.

மீண்டும் கதவு தட்டப்படுகிறது.

ரஜனி ஜன்னலருகிலிருந்து நடந்து வந்து கதவைத் திறக்கிறாள்.

ஜெயன் அங்கு நின்றிருக்கிறான். ஒரு நிமிடம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் கிழவர் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து அவளின் தோளுக்கு அப்பால் நின்றிருக்கும் ஜெயனைப் பார்க்கிறார்.

கிழவர்:      என்ன வேணும்?

இளம்பெண் இலேசாக விலகி நிற்க, ஜெயன் இரண்டடி தாண்டி முன்னால் வருகிறான். தடுமாற்றத்துடன்-

ஜெயன்:   ஸாரி... நான்...

கிழவர்:         என்ன வேணும்?

ஏதாவது சொல்ல வேண்டுமே என்று எண்ணியவாறு, கொஞ்சமும் சம்பந்தமும் இல்லாமல் கேட்கிறான்-

"ரெயில்வே டைம் டேபிள் இருக்கா?"

கிழவர் எதுவுமே புரியாமல் அவனையே மேலிருந்து கீழ்வரை பார்க்கிறார்.

கிழவர்:         இல்ல...

அவள் மேஜை மேல் இருந்த டைம் டேபிளை நோக்கி நீண்ட தன்னுடைய கையை பின்னால் இழுத்துக் கொள்கிறாள்.

ஜெயன்: நான் ஒண்ணாம் நம்பர் அறையில இருக்கேன். உங்ககூட பேசலாம்னு வந்தேன்.

கிழவர்:         எனக்கு உடம்புக்கு சரியில்ல. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

ஜெயன்:   என் பேரு ஜெயன். வீடு மூணாறுல இருக்கு. க்ளாட் டூ மீட் யூ.

ஜெயன் இலேசாக நடுங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கையை கிழவர் முன்னால் நீட்டுகிறான். கிழவர் தயங்கியவாறு-

"ஐ ஆம் சோமசுந்தரம். அம்பிகா மில்ஸோட மேனேஜிங் டைரக்டர்... (பெண்ணைப் பார்த்து) இது என்னோட மனைவி ரஜனி..."


ஜெயன் அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் சிரிக்க முயற்சிக்கிறான். வலிய வரவழைத்துக் கொண்ட அசட்டுச் சிரிப்புடன்-

ஜெயன்:   தேங்க் யூ. தேங்க் யூ. வெரி நைஸ் டூ ஹேவ் மெட் யூ.

அவன் வெளியே புறப்பட, கிழவர் ரெயில்வே டைம் டேபிளை அவனை நோக்கி நீட்டுகிறார்.

அதை கவனிக்காமல், வாங்காமல்

ஜெயன்: தேங்க்யூ... தேங்க்யூ...

கிழவர் டைம் டேபிளை மேஜை மேல் எறிந்து, கதவைப் பலமாக ஓசை உண்டாகும் வண்ணம் அடைத்து, உரத்த குரலில்:

"குட் நைட்."

52

ரவு.

ஃப்ரெடரிக்கின் அறை. கதவு அடைக்கப்படும் சத்தம். அவன் டம்ளரில் மீதியிருந்த மதுவைக் குடித்து முடிக்கிறான். பிறகு கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வெளியே நடக்கிறான்.

52-ஏ

தவைப் பூட்டிவிட்டு ஃப்ரெடரிக் படியில் இறங்கத் தொடங்கும்போது வராந்தாவில் தனியாக, பரபரப்புடன் நின்று கொண்டிருக்கும் ஜெயனைப் பார்த்து அவன் நிற்கிறான்.

ஃப்ரெடரிக்: எனி லக்? சரக்கு எப்படி?

வந்த கோபத்தை அடக்க முடியாமல் தன்னைவிட பலசாலியும் முரடனுமான ஃப்ரெடரிக்கை முகத்தில் அடிக்கிறான் ஜெயன்.

மது தந்த போதையும், தன்னுடைய உடல் வலிமையில் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் கொண்ட ஃப்ரெடரிக் தனக்கு ஒரு எதிரி கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறான். அவன் உரத்த குரலில் கத்துகிறான்.

"யூ பாஸ்டர்ட்!"

சொல்லிவிட்டு ஜெயனை கண்மண் தெரியாமல் அடிக்கிறான். ஜெயன் கீழே விழுகிறான். சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சாமியார் கீழே விழுந்து கிடக்கும் ஜெயனை அடித்துக் கொண்டிருக்கும் ஃப்ரெடரிக்கைத் தடுக்கிறார். ஃப்ரெடரிக் கீழே விழுந்து கிடக்கும் ஜெயனை சர்வ சாதாரணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அலட்சியமாக சிரித்தவாறு படிகளில் இறங்கிச் செல்கிறான்.

விழுந்து கிடந்த இடத்தைவிட்டு ஜெயன் மெதுவாக எழுந்து நிற்கிறான்.  சாமியார் அவன் எழ உதவுகிறார்.

வாயின் ஓரத்தில் வழிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தவாறு-

ஜெயன்: தமாஷ்... எல்லாமே சும்மா தமாஷுக்காக...

கிழவரும் இளம் பெண்ணும் அந்தக் காட்சியைப் பார்த்தவாறு நின்றிருக்கிறார்கள்.

கிழவர்:    வா ரஜனி... கதவை மூடு. பொறுக்கிப் பசங்க... எங்கே போனாலும் மனுஷனுக்கு நிம்மதின்றதே இல்ல...

53

கிழவர் அறைக்குள் வருகிறார். ரஜனி அப்போதும் வெளியிலேயே நின்றிருக்கிறாள்.

கிழவர்:         நீ கதவை மூடிட்டு உள்ளே வர்றியா இல்லியா?

அவள் உள்ளே வருகிறாள். கதவை மூடுகிறாள். கிழவர் பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

ரஜனி:     அலட்டிக்காம பேசாம படுக்க வேண்டியதுதானே! இப்போ மூச்சுவிட முடியாம தவிக்கப் போறீங்க.

கிழவர்:    நான் சீக்கிரம் தூங்கினா நல்லதுன்னு நினைக்கிறியா?

கிழவரின் வார்த்தைகளில் மறைந்து இருக்கும் உட்பொருளை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது.

ரஜனி: உடம்பு மேலும் மோசமாயிடப் போகுதேன்னு நான் நினைச்சேன்...

கிழவர்:    (வெறுப்புடன்) நான் ஒரு நோயாளி. எனக்கு வயசாயிடுச்சு. சீக்கிரம் நான் சாகணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோ.

கிழவர் இருமத் தொடங்குகிறார். அவள் அவனின் முதுகைத் தடவிவிட முயற்சிக்க, கிழவர் அவளுடைய கையைத் தட்டிவிடுகிறார். மீண்டும் அவர் இருமுகிறார். மூச்சுத் திணறல் உண்டாகிறது.

அவள் பெட்டியில் இருந்து மாத்திரைகளைத் தேடி எடுத்து கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிறைத்து கிழவரிடம் தருகிறாள். அவர் மாத்திரைகளை விழுங்கி நீரைக் குடித்து, மெதுவாக கட்டிலில் சென்று விழுந்து மேல்மூச்சு, கீழ்மூச்சு விடுகிறார். சிறிது நேரத்தில் அவர் அமைதியாகிறார். போர்வையை எடுத்து அவருடைய கழுத்து வரை மூடிய அவள் மீண்டும் ஜன்னலருகில் போய் நிற்கிறாள்.

இருண்டு போய் கிடக்கும் கடலைப் பார்த்தவாறு நின்றிருக்கும் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் முதுகுப் பக்கம் இலேசாக ஆடுவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

54

ஹிப்பிகள் கிட்டாரின் இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் போதை மருந்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிறார்கள். 

அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.

மயக்க நிலையில் இருக்கும் கண்களுடனும், திறந்த உதடுகளுடனும் காட்சியளிக்கும் ஒரு ஹிப்பி பெண்ணின் உடல் அசைவுகளைப் பார்க்கும்போது அவள் ஏதோ போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கிறாள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

55

சாலையோரத்தில் மின் கம்பத்திற்குக் கீழே பயங்கர போதையில் சுயநினைவே இல்லாமல் வீரப்பன் விழுந்து கிடக்கிறான். ஃப்ரெடரிக் அவனைப் பார்க்கிறான்.

ஃப்ரெடரிக்: வீரப்பா!

அவன் அசையாமல் கிடக்கிறான். ஃப்ரெடரிக் கோபத்தில் அவனை அசைத்துப் பார்க்கிறான்.

ஃப்ரெடரிக்: வீரப்பா!

வீரப்பன் போதை மயக்கத்தில்-

"வீரப்பன் கூட விளையாடலாம்னு நினைக்கக்கூடாது. ப்பூ! போலீஸ்காரனைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன்டா இந்த வீரப்பன்! ப்பூ..."

ஃப்ரெடரிக்: வீரப்பா!

என்ன செய்வதென்று தெரியாமல், அடக்க முடியாத கோபத்துடன் ஃப்ரெடரிக் ஒரு நிமிடம் அவனையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.

ஃப்ரெடரிக்: வீரப்பா... ப்ளடி ராஸ்கல்!

பயங்கர போதையில்-

வீரப்பன்: அதை உன் பொண்டாட்டிக்கிட்ட போய் சொல்லு...

அவனை அடிப்பதிலோ, உதைப்பதிலோ அர்த்தமே இல்லை என்பதைப் புரிந்து கொண்ட ஃப்ரெடரிக் அந்த இடத்தை விட்டு நீங்கி நடக்கிறான்.

56

தீப்பந்தத்தில் யாரோ எண்ணெய் ஊற்றுகிறார்கள். பந்தம் பெரிதாக எரிகிறது.

சேரியில் தீப்பந்தங்கள், பெட்ரோமாக்ஸ் ஆகியவற்றின் வெளிச்சத்தில் சிறிய மாரியம்மன் கோவிலுக்கு வெளியே இருக்கும் வெற்றிடத்தில் ஒரு தெருக்கூத்து நடந்து கொண்டிருக்கிறது. பல வர்ண புடவைகளைக் கட்டிய பெண்கள்... கறுத்துப் போன ஆண்கள்...

அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தில் பார்வதியும் இருக்கிறாள். தாவணி அணிந்திருக்கிறாள். தலையில் சாமந்திப்பூ வைத்திருக்கிறாள்.

கூட்டத்திற்குப் பின்னால் வந்து நிற்கும் ஃப்ரெடரிக் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான். பார்வதியின் கவனம் முழுவதும் தெருவில் நின்றிருக்கும் கூட்டத்தின் மீதுதான் இருக்கிறது. சங்கரன் வந்துவிட்டானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவள் அடிக்கொரு தரம் ஆண்கள் கூட்டத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

தெருக்கூத்து முடிகிறது. அந்த இடத்திற்கு செண்டை அடிப்பவர்கள் வந்ததும், பார்வதி இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள்.

56-ஏ

நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடற்கரை. பார்வதி நடக்கிறாள். காதுகளைத்த தீட்டி கேட்கிறாள். சுத்தியல் கருங்கல் மேல்படும் சத்தம். அவள் அந்தச் சத்தம் கேட்கும் திசையை நோக்கி வேகமாக நடக்கிறாள்.

57

சாமியாரின் அறை.

மெத்தையில் கண்களை மூடி படுத்திருக்கும் சாமியார் கண்களைத் திறக்கிறார். அவருக்கு தூக்கமே வரவில்லை. எழுந்து கதவைத் திறக்கிறார்.


57-ஏ

சாமியாரின் அறைக்குள் மெத்தை காலியாகக் கிடக்கிறது. அறையில் யாரும் இல்லை.

சாமியார் ஒரு நிமிடம் என்னவோ சிந்திக்கிறார். அடுத்த நிமிடம் வேகமாக வெளியேறி நடக்கிறார்.

58

நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு-கடற்கரை.

சாமியார் கடற்கரையைச் சுற்றியிருக்கும் பாதையில் நின்றிருக்கிறார். யாரையும் அங்கு காணோம். நடக்கிறார். மின் கம்பத்திற்குக் கீழே போதையில் சுய நினைவில்லாமல் விழுந்து கிடக்கும் வீரப்பனைக் கடந்து சாமியார் நடக்கிறார்.

அப்போது சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வெளுத்த உருவத்தைப் பார்க்கிறார். பக்கத்தில் சென்று பார்க்கும்போது, உட்கார்ந்திருப்பது ஜெயன் என்பது தெரிகிறது. அவன் மது அருந்தியிருக்கிறான். பக்கத்தில் காலி சாராய குப்பி இருக்கிறது.

சாமியார்: ஜெயன்... ஜெயன்...

அவன் போதையில் கண்களைத் திறக்கிறான்.

ஜெயன்:   சாமியா? ஸாரி.. ஒய்? தேரீஸ் நத்திங் டூ பி ஸாரி. சிறைக் கதவை நான் உடைச்சிட்டேன்.

சாமியார் அவனைப் பிடித்து எழுந்து உட்கார வைக்க முயற்சிக்கிறார்.

சாமியார்:  சரி... எழுந்திரு!

ஜெயன்:   (ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உளறுகிறான்) எனக்கு புரிஞ்சு போச்சு. லைக் எஃபூல் ஐ பர்காட் எவ்ரி திங்(சாராய குப்பியை எடுக்கும்போது அது அவனின் கையிலிருந்து கீழே விழுகிறது. சிமென்ட் தரையில் அது விழுந்து உடைகிறது). பசுவை மேய்க்குறுதுக்கு தோட்டத்துக்கு ஒரு பொண்ணு வருவா. அவ மடியில நாவல் பழம் இருக்கும்(சிரித்து குரலை மாற்றியவாறு) அம்மா பார்த்துடக்கூடாது... பணக்கார வீட்டு பையன் நாவல் பாத்தைத் தின்னக் கூடாதாம்.

சாமியார் மிகவும் கஷ்டப்பட்டு அவனைத் தாங்கி பிடிக்கிறார். சாமியாரின் தோள் மேல் அவன் சாய்ந்து கிடக்கிறான். அவனைப் பாதி சுமந்தவாறு சாமியார் நடக்கும் போது-

ஜெயன்:   நாம எங்கே போறோம? திரையில் இரண்டு பேரின் நிழல்கள். நெருக்கமாக நடக்கும் நிழல்கள் மேல் மீண்டும் கேள்வி-

"நாம் எங்கே போறோம்?"

59

மூச்சு விட்டவாறு கஷ்டப்பட்டு ஜெயனைச் சுமந்து வரும் சாமியார் படிகளில் ஏறி மேலே வருகிறார்.

ரஜனியின் குரல்:     நான் பிடிச்சுக்கிர்றேன்...

சாமியார் பார்க்கும் போது ரஜனி,

இரண்டு பேரும் சேர்ந்து அவனை அறைக்குள் தாங்கியவாறு கொண்டு செல்கிறார்கள்.

60

ஜெயனின் அறை.

மெத்தையில் படுத்துக் கிடக்கும் ஜெயன் மெதுவாகக் கண்களைத் திறக்கிறான். முன்னால் சாமியார், ரஜனி.

ஜெயன் சிரமப்பட்டு எழ முயற்சிக்கிறான்-

சாமியார்: பேசாம படு.

அவர் சொன்னதைக் கேட்காமல் அவன் எழுந்து உட்காருகிறான்.

ரஜனியை நோக்கி-

ஜெயன்: நன்றி.

அவள் கவலையுடன் அவனைப் பார்க்கிறாள்.

ஜெயன்:   ரஜனி... ரஜனி... நாவல் காட்டைத் தாண்டி இருக்குற வீடு. எல்லையில ஓடைப் பூக்கள். பாறைமேல விழும் நீர் ஓசை. பறந்து திரியிற கிளியைப் போல பேச முயற்சிக்கிற பொண்ணு...

ரஜனி:     (கவலையான குரலில்) நான் நினைச்சுப் பார்க்குறேன். எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்குறேன்.

ஜெயன்: அந்த ஜெயன் செத்துட்டான்...

ரஜனி:     (கவலையுடன்) அந்த ரஜனியும் செத்துட்டா ஜெயன்!

சாமியார்:  சரி... தூங்கு(ரஜனியிடம்) நீ புறப்படும்மா...

அவன் மீண்டும் படுத்து கண்களை மூடுகிறான். அப்போது அவனின் முகத்தில் திருப்தியை வெளிப்படுத்தும் புன்னகை அரும்புகிறது.

சாமியார் விளக்கை அணைக்கிறார்.

சாமியாரும் ரஜனியும் அறையை விட்டு வெளியே வருகிறார்கள்.

61

ராந்தா.

சாமியாரும் ரஜனியும்.

சாமியார்:  தூக்கம் வராதவங்களோட இரவு இது... இல்லியா?

அப்போது கிழவரின் உரத்த குரல்:

"ரஜனி!"

வாசலில் கண்களைக் கசக்கியவாறு நின்றிருக்கும் கிழவர் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு வேகமாக அருகில் வருகிறார்.

ரஜனி:     நான் இன்னும் உறங்கல. எனக்குத் தூக்கமே வரல. ஏதோ பொணம் இருக்கற பெட்டிக்குள்ள படுத்திருக்குறது மாதிரியே தோணுது.

கிழவர்:    (ரஜனியிடம்) உனக்கு இந்த ஆளுக்கிட்ட என்ன வேலை?

சாமியார்:  நாங்க ஒரு நாவல் காட்டு கதையைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.

மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு, அடக்க முடியாத கோபத்துடன்

கிழவர்:         முப்பது வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்திருந்தா உன் பல்லு உன்கிட்ட இருந்திருக்காது. போலி சாமியார்...

சாமியார் புன்னகைக்கிறார்.

கிழவர்:  ரஜனி!

ரஜனி பேசாமல் இருக்கிறாள்.

கிழவர்:    (உரத்த குரலில்) ரஜனி!

திடீரென்று அவளின் குரல் உயர்கிறது.

ரஜனி:          நான் இங்கேதான் இருக்கேன். ஒரு பொணத்தைப் போல கடந்த ஆறு வருஷமா உங்க கூட தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இங்க பாருங்க...

கிழவர்:         (கோபத்தை அடக்க முடியாமல்) எனக்கு எல்லாம் தெரியும். நான் செத்துப் போன பிறகு சந்தோஷமா வாழலாம்னு நினைக்காதே. எல்லாத்தையும் நான் அனாதை இல்லத்துக்கு எழுதி வச்சிடுவேன். என்னை ஏமாத்தணும்னு யாராவது நினைச்சா...

ரஜனி:          வியாபாரத்துல உங்களுக்கு என்னைக்குமே லாபம்தான். தொந்தரவு பண்ணாம பேசாம போகக்கூடாதா?

கிழவர்:         ரஜனி!

ரஜனி:          (உரத்த குரலில்) இங்கேயிருந்து போங்க...!

அவளிடம் இதுவரை இப்படியொரு கோபத்தைப் பார்த்திராத கிழவர் என்ன செய்வதென்று தெரியாமல், அதே சமயம் கொஞ்சம் கூட நம்பவே முடியாமல் ரஜனியையே பார்க்கிறார். பிறகு மூச்சுவிட முடியாமல் மூச்சுவிட்டவாறு திரும்பிப் போகிறார்.

அவள் தூணின் மேல் சாய்ந்து நின்றவாறு தேம்பித் தேம்பி அழுகிறாள்.

சாமியார் அமைதியாக நின்றிருக்கிறார்.

அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவர் ரஜனியின் தலையைப் பாசத்துடன் தடவுகிறார்.

சாமியார்:  எல்லாத்தையும் தாங்கிக்கிற சக்தியைக் கடவுள் தரட்டும். அழாதம்மா... அழாதே.

ரஜனி:          எனக்கு ஒண்ணும் ஏமாற்றம் இல்ல. பதினெட்டு வயசுல இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறப்பவே, இதுக்கு மேல நான் எதையும் எதிர்பார்க்கல.

அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

சாமியார்:  அழாதே... அழாதே...

ரஜனி:          (கண்ணீரைக் கையால் துடைத்தவாறு) இல்லை... இனி நான் அழல. இந்த வியாபாரத்தால குடும்பம் பிழைச்சது. ரெண்டு தம்பிமாருங்க படிச்சாங்க. படுக்குறதுக்கு வீடு கிடைச்சது. அடுப்புல ஒரு நாளு கூட தீ அணையல. எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் கிடையாது.

என்னதான் அவள் தனக்குத்தானே ஒரு கட்டுப்பாடு போட்டாலும் அவளால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. அது தகரவே செய்தது. அழுதவாறு அவள் அறைக்குள் ஓடுகிறாள்.

62

நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடல்.

கட்டுமரத்தில் சங்கரனும் பார்வதியும் கரையை நோக்கி வருகிறார்கள். அவள் ஒரு அமைதியான இசையைப் போல கடலில் பயணம் செய்து கரையை அடைகிறாள். கட்டுமரத்திலிருந்து அவன் அவளைக் கையைப் பற்றி கரையில் இறக்குகிறான்.


நிலவொளி விழுந்து கொண்டிருக்கும் கடற்கரையில் அவர்கள் ஓடுகிறார்கள். இயற்கை அவர்களுக்கு உதவுகிறது.

பார்வதி:   (காதால் கேட்டபடி) கோயில்ல கொட்டு, பாட்டு எல்லாமே முடிஞ்சிடுச்சு. பாட்டி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கோ?

படகின் மறைவில் நின்றவாறு சங்கரன் அவளின் தோளில் தன் கையை வைக்கிறான்.

பார்வதி:   போகட்டுமா?

சங்கரன் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதிக்கிறான்.

சங்கரன்:  தனியா போயிடுவியா?

பார்வதி:   விடுங்க. மீதி நாளைக்கு.

சங்கரன்:  கட்டாயமா?

பார்வதி:   சத்தியமா...

சங்கரன்:  என்னைத் தொட்டு சத்தியம் பண்ணு.

பார்வதி:   சத்தியமா...

அவன் கையில் இலேசாக கிள்ளிய அவள் 'கலகல'வென சிரித்தவாறு நிலவொளியில் ஓடுகிறாள்.

63

ரவு.

மணல் மேட்டை விட்டு கீழே இறங்கிய அவள் திடீரென்று நிற்கிறாள். அவளுக்கு முன்னால் சிகரெட் பிடித்துக் கொண்டு ஃப்ரெடரிக் நின்றிருக்கிறான். திடீரென்று என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்துப் போய் நிற்கும் பார்வதி தன்னுடைய வழியை வேறு பக்கம் மாற்றிக் கொண்டு படுவேகமாக நடக்க ஆரம்பிக்கிறாள். அப்போது அவன் அவளை எட்டி பிடிக்கிறான். அவளுடைய தாவணி அவன் கையில் சிக்குகிறது.

இன்னொரு முறை தோல்விக்குத் தயாரில்லாத அவன் அவளைப் பின் தொடர்கிறான்.

அவள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பயத்துடன் ஓடுகிறாள். அரக்கனாக மாறிய காமம் அவளைப் பின்தொடர்கிறது.

64

ரவு.

வாயில் பாட்டு ஒன்றை முணுமுணுத்தவாறு இனிமையான நினைவுகளுடன் நடக்கிறான் சங்கரன்.

பார்வதியின் அபயக்குரல் அவன் காதில் விழுகிறது.

அவன் காதில் மீண்டும் பார்வதியின் குரல்.

அவன் ஓடுகிறான். நிற்கிறான். "பார்வதி!" என்ற அவன் குரல் காற்றில் பரவி ஒலிக்கிறது. அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல அவள் போன வழியிலேயே ஓடுகிறான். "பார்வதி..."- கடலலைகள் அந்தப் பெயரை எதிரொலிக்கின்றன.

"பார்வதி...!"- காற்று அதை எதிரொலிக்கிறது.

65

ரவு.

ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருக்கும் சிமென்ட் பெஞ்சில் கடலையே பார்த்தவாறு அமர்ந்திருந்த சாமியாரும் பார்வதியின் அபயக் குரலைக் கேட்கிறார்.

சாமியார் இருந்த இடத்தைவிட்டு எழுந்து நிற்கிறார். வேகமாக நடக்கிறார். சாமியாரின் முகத்தில் தூரத்திலிருந்து எதிரொலிக்கும் சங்கரனின் குரல்:

"பார்வதி..."

66

சாமியார் சம்பவம் நடக்கும் இடத்திற்கு வரும்போது அவர் காணும் காட்சி:

விழுந்து கிடக்கும் ஃப்ரெடரிக்கின் மார்பின் மீது அமர்ந்து சங்கரன் பைத்தியம் பிடித்தவனைப் போல சுத்தியலால் ஃப்ரெடரிக்கின் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறான். சாமியார் அவனைப் பிடித்து நிறுத்துகிறார். இரத்தத்தில குளித்த தலை. ஃப்ரெடரிக்கின் உடல் அசைவற்று கிடக்கிறது.

தளர்ந்து போய் கீழே விழுந்து கிடக்கும் பார்வதியைப் பிடித்துத் தூக்குகிறார் சாமியார். அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு தொண்டை அடைக்க கூறுகிறார்-

சாமியார்:  உலகத்தால கள்ளங் கபடமில்லாத தன்மையை தாங்கிக்க முடியல, மகளே!

சாமியார் அவளை அணைத்துப் பிடித்தவாறு நடத்திக் கொண்டு போகிறார். சிறிது தூரம் ஒரு இயந்திரத்தைப் போல அவர்களைப் பின் தொடர்கிறான் சங்கரன். பிறகு சுத்தியலைக் கடலில் வீசி எறிந்த அவன் தளர்ந்து போய் உட்கார்ந்து கேவிக் கேவி அழுகிறான்.

67

ங்கக் கடலில் சூரிய உதயம்.

ஒரு பஸ் கன்யாகுமாரியை விட்டு புறப்படுகிறது. பின்னால் போய்க் கொண்டிருக்கும் நிலப் பகுதி. பஸ்ஸின் பின்னிருக்கையில் விலங்கு மாட்டப்பட்ட கைகளையே பார்த்தவாறு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான் சங்கரன். அவனின் இருபக்கங்களிலும் போலீஸ்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் சாமியார் அவனைப் பார்க்கிறார். அவன் அதைப் பார்க்கவில்லை.

ஜன்னல் வழியாக சாமியார் வெளியே பார்க்கும் போது-

ஆள் அரவமற்ற கடற்கரையில் தன்னந்தனியாக நின்றிருக்கிறாள் பார்வதி.

காற்றில் அவளின் எண்ணெய் தேய்க்காத தலைமுடி பறக்கிறது.

துக்கத்தால் கறுத்துப்போன அவளின் முகம். பஸ்ஸின் உறுதியான சக்கரங்கள் அந்த முகத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கின்றன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.