
இடைக்கா என்ற இசைக்கருவியின் சத்தம். அதைத் தொடர்ந்து இனிமையான ஒரு பிராமணிப் பாட்டு.
கிராமத்தில் இருக்கும் ஒரு கோவில். கேமரா இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்கிறது. கோவிலும், கோவிலின் சுற்றுப்புறமும் காட்டப்படுகிறது. கூட்டம் அப்படியொன்றும் அதிகம் இல்லாத கோவிலுக்குள் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருக்கின்றனர். ஆலமரத்திற்குக் கீழே வட்டவடிவமாக இருக்கும் திண்டின் மேல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கிறார்.
குளத்தின் வெளிச்சுவர் மேல் கிராமத்து இளைஞர்கள் சிலர் உட்கார்ந்திருக்கின்றனர்.
கோவிலுக்குள் இருந்து வெளியே வரும் வயதான அந்த அம்மாவை நோக்கி நாம் படம் பார்ப்போரின் கவனத்தைக் கொண்டு செல்கிறோம். அவளுக்கு 55-லிருந்து 60-க்குள் வயது இருக்கும். நரைத்த முடி. ரவிக்கையும், முண்டும் அணிந்திருக்கிறாள். கோவிலின் ஆலமரத்திற்கு அருகில் அவள் இப்போது இருக்கிறாள்.
கிழவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முன்னாலும் பின்னாலும் ஆடியவாறு என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். வயதான அந்த அம்மாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
ஆலமரத்திற்குக் கீழே அந்த வயதான அம்மாவும் கிழவரும்.
அம்மா: கொஞ்சம் நைவேத்யம் தரட்டுமா?
கிழவர் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ சொல்லாமல் முணுமுணுப்பை நிறுத்திவிட்டு, அந்த வயதான அம்மாவைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த அம்மா கையில் இருந்த நைவேத்ய சாதத்தை இலையுடன் கிழவருக்கு முன்னால் வைக்கிறாள்.
அம்மா: இப்போ திடீர் கவிதை ஒண்ணும் தோணலியா?
கிழவரின் கவனம் சாதத்தின் மேல் இருக்கிறது. அதே நேரத்தில் அம்மாவின் கேள்வியின் மீதும் இருக்கவே செய்கிறது.
“அழுக்குள்ளோர் குளிக்க வேண்டும்
கவலையுள்ளோர் தொழ வேண்டும்
பசியுள்ளோர் கடவுளுடன் இருக்கவேண்டும்.”
அந்த அம்மா, கவிதையைக் கேட்டு சிரிக்கிறாள்.
அம்மா: உப்பும், பச்சை மிளகாயும் வேணும்னா வாங்கிக்கங்க.
அம்மா நடந்து போகிறாள்.
நடுத்தர வீடு. செறுமி (தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்) முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். கோவிலில் இருந்து வந்த அம்மா அவளுக்குப் பின்னால் கோவணம் மட்டும் அணிந்து மூக்கொழுக நின்றிருக்கும் கருப்பு நிறச் சிறுவனைப் பார்த்து:
நீயும் வந்திருக்கியா? நைவேத்யச் சோற்றை ஆலமரத்துக்குக் கீழே இருந்த ஆசானுக்குக் கொடுத்துட்டேன். பாவம். பலகாரம் பண்றதுக்கு இங்கே ஆளு இல்ல. கொஞ்சம் நீரைக் கொதிக்க வச்சு சாயா போட்டுத் தர்றேன் நான். அதுவரை அங்கேயே கொஞ்சம் நில்லு.
செறுமி: இவன் வாலு மாதிரி எப்பவும் என் பின்னாடியே வந்துர்றான்.
அந்த அம்மா வாசல் திண்ணையில் அமர்கிறாள்.
அம்மா: பலகாரத்துக்கு அரைக்கிறதுக்கு என்னால முடியாது. ஒரு வேலைக்காரி கிடைக்காம நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்!
முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு,
செறுமி: யாராவது ஒரு வேலைக்காரி கிடைச்சபிறகு போனா போதும்னு நான் ஏற்கனவே இருந்தவங்கக்கிட்ட சொன்னேன். கேட்டாத்தானே?
அம்மா: கேட்டா எது வேணும்னாலும் கொடுப்பேன். அதை விட்டுட்டு திருட்டுத்தனம் பண்ணினா, நிறுத்தாம என்ன பண்றது? அன்னைக்கு நான் கொஞ்சம் அவ தப்பை உணரட்டுமேன்னு சொன்னேன். அவ்வளவுதான். மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கிட்டா. யாராக இருந்தாலும் கேட்கத்தானே செய்வாங்க? (எழுந்து) தொழுவுல சாணியை வாரிட்டு, கன்னுக்குட்டியைக் கொண்டு போய் கட்டு. அதுக்குப் பிறகு வாசலைப் பெருக்கினா போதும்...
உள்ளே போகிறாள்.
கிழக்கும்பாட்டெ வீட்டின் சமையலறை. அம்மா தேநீர் தயார் பண்ணுகிறாள். ஏதோ ஒரு சிறு அரவம் கேட்டு அந்த அம்மா பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். கணக்குப்பிள்ளை அச்சுதன்நாயர். 50-லிருந்து 55 வயதிற்குள் இருப்பார். சமையலறைக்கு வெளியே மரியாதையுடன் அவர் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.
அம்மா: என்ன ஆச்சு அச்சுதன் நாயர்?
அச்சுதன் நாயர்: நான் பலர்கிட்டயும் சொல்லியிருக்கேன். வடக்கு வீடு தேவம்மாவுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கஞ்சி குடிக்க வழியே இல்லைன்னாலும், வேலைக்கு அவுங்களை அனுப்பி வைக்க மாட்டேன்னுட்டா. என்ன செய்றது? வேற யாரையாவது பார்க்க வேண்டியதுதான்.
அம்மா: ஹரிதாசன் வந்துட்டான்னு வச்சுக்கங்க. பிறகு ஒரு நாளைக்கு நாற்பது தடவை சாயா போட வேண்டியதிருக்கும். அவனைப் பார்க்குறதுக்கு ஆளுங்க வருவாங்க. அவங்களுக்கும் சாயா கொடுக்கணும். ரெண்டு வேளைக்கு சமைக்கணும். என்னால கொஞ்ச நேரம்கூட சமையலறையில இருக்க முடியல. காலு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுது...
அச்சுதன் நாயர்: அடிவாதம் காரணமாத்தான் அந்த வலி வருது. வைத்திய மடத்தோட மருந்து தீர்ந்து போச்சுன்னா, சொல்லுங்க.
அம்மா: (குரலைச் சற்று தாழ்த்தி) வேலைக்கு வர்ற வேலைக்காரி நாயரா இருக்கணும் அது இதுன்னு பார்த்தா இந்தக் காலத்துல நடக்காது. நல்ல சுத்தமா இருக்குறதா இருந்தா, யாரா இருந்தாலும் பரவாயில்ல....
அச்சுதன் நாயர்: (வெற்றி பெற்றுவிட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு- அதே நேரத்தில் நேராகப் பார்க்காமல்) நான் அதைத்தான் உங்கக்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப நடந்த மாதிரிதான்.
அம்மா: (தேநீரைக் கலந்தபடி) அந்தக் காலத்துல வேற ஜாதிக்காரங்க, வீட்டுக்குள்ளே நுழைய முடியுமா? ஹரிதாசன் கூடப் படிக்கிறவங்க வந்தாங்கன்னா நேரா மேலேல்ல அவன் கூட்டிட்டுப் போறான். போன ஓண சமயத்துல வந்தவங்களை அச்சு நாயர், நீங்க பார்த்தீங்களா? அவங்க போன பிறகு ஹரிதாசன் சொன்னான்- வந்தவங்கள்ல ஒரு ஆளு மாப்பிள்ளை. ஒரு ஆளு செறுமன்னு. (வாய் திறந்து சிரித்தவாறு) அவன் சொல்லலேன்னா நமக்கே தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பசங்க!
ஒரு டம்ளர் தேநீரை அச்சுதன் நாயர் முன் அம்மா நீட்டுகிறாள். அதை அச்சுதன் நாயர் பவ்யமாக வாங்குகிறார்.
உள்ளே யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது.
“மாளு அக்கா... மாளு அக்கா...”
அச்சுதன் நாயர்: குட்டிசங்கர மேனன் வர்றார்.
அம்மா மீதி இருந்த தேநீரையும், தனக்கென்றிருந்த தேநீரையும் பார்த்தவாறு ஆலோசிக்கிறாள்.
சுமார் ஐம்பது வயது மதிக்கக்கூடிய குட்டி சங்கரமேனன். கிராமத்து மனிதர். பார்த்தால் முட்டாளைப் போன்ற தோற்றம். அப்பிராணி.
அம்மா: ம்...?
குட்டிசங்கரன்: ஒண்ணுமில்ல... படியில கால் வச்ச உடனே வயித்துல ஒரு சத்தம். கொஞ்சம் குடிக்க கஞ்சி இருக்குமா?
அம்மா: செறுமிக்குக் கொடுக்குறதுக்குத்தான் கொஞ்சம் கஞ்சி இருக்கு. (தன் கையில் இருந்த டம்ளரை நீட்டியவாறு) இதைக் குடிங்க.
குட்டிசங்கரன்: (கணக்குப் பிள்ளையிடம்) குடலை ஆப்பரேஷன் பண்ணின பிறகு எனக்கு இப்படித்தான். எப்ப பசி வரும்னே தெரியல. வந்திருச்சுன்னு வச்சுங்கங்க, அப்பவே கஞ்சியோ சோறோ வேணும். இல்லாட்டி மயக்கம் வர்ற மாதிரி இருக்கும்.
அச்சுதன்நாயர்: இப்படி ஊர் முழுக்க பிச்சை எடுத்துத் திரியிறதுக்குப் பதிலா அந்தத் தோட்டத்துல போயி நிலத்தைக் கொத்திக்கிட்டு இருக்கலாம்ல?
ரசித்தவாறு தேநீரை அருந்திய அவர் அதை கவனிக்காமல்,
குட்டிசங்கரன்: வீட்ல பலகாரம் ஒண்ணும் இல்லியா?
அம்மா: பலகாரத்துக்கு எங்கே போறது?
குட்டி சங்கரன் மனதில் கொஞ்சம் ஏமாற்றத்துடன் தேநீரைக் குடிக்கிறார். சமையலறையை ஒருவித ஏக்கத்துடன் பார்க்கிறார்.
குட்டிசங்கரன்: (அச்சுதன் நாயரிடம்) சாப்பிடுறதுக்கு ஒண்ணும் தரலைன்னாலும் எனக்கு மாளு அக்கான்னாலே தனி பிரியம்தான், அச்சுதா, சுடுதண்ணி உள்ளே போனபிறகுதான் நிம்மதியா இருக்கு.
அவர் சொல்வதைப் பார்த்தவாறு-
அம்மா: எல்லாம் தாட்சாயணியோட தலையெழுத்து! பாவம்!
பாத்திரத்தில் இருந்த மீதி தேநீரை ஒரு டம்ளரில் ஊற்றியவாறு.
“அச்சுதன் நாயரே, இதை செறுமி காளியோட மகனுக்குக் கொடுங்க. நான் சீக்கிரம் சாப்பிடணும்.”
அச்சுதன் நாயர் டம்ளருடன் வெளியே செல்கிறார்.
மாலை நேரம்.
மாடுகளை மேய்க்கும் சிறுவர்கள். மாடுகளைக் குளிப்பாட்டும் ஆற்றின் வழியே ஒரு கிழவியும், ஒரு இளம்பெண்ணும் நடந்து கிராமத்திற்குள் வருகிறார்கள். கிழவியின் தோற்றத்தில் வறுமை தெரிகிறது. அந்த இளம்பெண்ணுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும். முண்டும், ப்ளவுஸும் அணிந்திருக்கிறாள். கிராமத்திற்குள் அவர்கள் நுழையும்போது, வெகுதூரத்தில் எங்கோ ஒரு ராக ஆலாபனை கேட்கிறது. அந்த ஆலாபனை அவர்கள் நடக்க நடக்க, அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு சுமை தாங்கிக் கல்லின் அருகில் நிற்கிறார்கள்.
கிழவி கிராமத்தைக் கண்களால் அளக்கிறாள். எதிரே ஒரு புள்ளுவனும், ஒரு புள்ளுவத்தியும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையில் வீணை இருக்கிறது. தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் கோணியில் நெல் இருக்கிறது. புள்ளுவத்தி பானையை வெளியே தொங்க விட்டிருக்கிறாள்.
நீண்டதூரம் நடந்து வந்ததால், பயங்கர களைப்புடன் இருக்கிறாள் கிழவி. அவளுக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.
கிழவி: (புள்ளுவத்தியிடம்) கெழக்கும்பாட்டெ வீடு எங்கே இருக்கு?
புள்ளுவன்: (தூரத்தில் விரலை நீட்டியவாறு) அங்கே ஏறி, கோயிலுக்குக் கீழே இறங்கி நடந்தா போதும்.
புள்ளுவத்தி: நீங்க எங்கே இருந்துவர்றீங்க?
கிழவி: நாங்க அக்கரையைச் சேர்ந்தவங்க...
புள்ளுவனும் புள்ளுவத்தியும் நடக்கிறார்கள். கிழவியும், அவளின் பேத்தியும் நடையைத் தொடர்கிறார்கள்.
கிழவியும், பேத்தி குஞ்ஞிமாளுவும் கோவிலுக்கருகில் வருகிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத கோவிலும் கோவிலைச் சுற்றியுள்ள இடமும். அந்த இடத்தை அடைந்ததும் கிழவி தயங்கி நிற்கிறாள். பிறகு ஆலமரத்திற்குக் கீழே இருக்கும் கிழவரைப் பார்த்ததும், நடந்து அவரை நோக்கி வருகிறாள்.
கிழவி: இங்கேயிருந்து எப்படிப் போகணும்?
கிழவர் புன்னகைத்தவாறு, வழியை விரலால் காட்டுகிறார். அவர் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவர்கள் நடந்து செல்லும்போது, அவர் இரண்டு வரிகளைச் சொல்லுகிறார்.
குஞ்ஞிமாளு, அவர் என்னமோ சொல்கிறார் என்று பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். அப்போது அவர் தான் சொன்ன கவிதையை நிறுத்திவிட்டு, அன்புடன், கள்ளங்கபடமில்லாத முகத்துடன் அவளைப் பார்த்து புன்னகை செய்கிறார்.
கிழக்கும்பாட்டெ அம்மா வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது யாரோ படியைக் கடந்து நடந்து வருவதை அவள் பார்க்கிறாள். கையில் இருந்த துடைப்பத்தை ஒரு மூலையில் போட்டுவிட்டு அவர்களை வரவேற்க தயாராகிறாள்.
கிழவியும், மகள் குஞ்ஞிமாளுவும் வாசலை அடைந்து நிற்கிறார்கள்.
கிழவி: (இளைப்புடன்) கெழக்கும்பாட்டெ வீட்டுக்கு இவளை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க.
அம்மா: உங்களை யாரு இங்கே அனுப்பினது?
கிழவி: நெய்க்கன் மாப்ளதான் எங்கக்கிட்ட சொன்னாரு. மாப்ளைக்கிட்டச் சொன்னது இங்க இருக்குற கணக்குப் பிள்ளை. (யாரிடம் என்றில்லாமல்) ரெண்டடி நடந்தா போதும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. என்னால முடியல...
அம்மா: உட்காருங்க... உட்காருங்க...
கிழவி திண்ணையில் அமர்கிறாள்.
அம்மா உள்ளே போகிறாள்.
கிழவியும் குஞ்ஞிமாளுவும் வாசலில் தனியே அமர்ந்திருக்கிறார்கள். வீட்டையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அவர்களின் கண்கள் அளக்கின்றன.
அம்மா உள்ளேயிருந்து மோர் கொண்டு வந்து கிழவியிடம் கொடுக்கிறாள்.
அம்மா: இந்தாங்க மோர். வேலைக்காரப் பெண் போன பிறகு, சாயங்கால சாயா இல்லைன்றது மாதிரி ஆயிடுச்சு. எனக்கும் அடி வாதம்...
கிழவி பாத்திரத்தில் இருந்து, உதடு படாமல் மோரைக் கவிழ்த்து குடிக்கிறாள்.
கிழவி: (ஆசுவாசமாகி) ஏவ்... கெழக்கும்பாட்டைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இக்கரைக்கு நான் அதிகம் வந்தது இல்ல.
அம்மா: அக்கரையில வீடு எங்கே இருக்கு?
கிழவி: நாங்க துணி சலவை செய்றவங்க. இது என்னோட மகளோட மக. இவளுக்குக் கீழே அஞ்சு பேரு இருக்காங்க.
அம்மா அவர்களை உற்றுப் பார்க்கிறாள்.
கிழவி: இவளோட அம்மா இறந்துபோனபிறகு வீட்டு நிலைமை ரொம்பவும் மோசமாப் போச்சு. என்னால ஒண்ணுமே செய்ய முடியல. சில வீடுகள்ல சலவை செஞ்சேன்.
அம்மா: ஆண் பிள்ளைகள் இல்லியா?
கிழவி: இறந்து போனவளுக்கு மூத்ததா எனக்கு ஒரு மகன் இருக்கான். அவன் ஆரம்பத்துல துணி துவைச்சான். அதுக்குப் பிறகு அவனுக்கு அதுல வெறுப்பு வந்திடுச்சு. இப்ப அவன் பாக்கு வெட்டுற வேலைக்குப் போறான். பெருசா சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்ல. அவனோட பொண்டாட்டியும் நானும் சேர்ந்துதான் சலவை செய்யப் போறோம்.
அம்மா: (குஞ்ஞிமாளுவைப் பார்த்தவாறு) பேரு என்ன?
குஞ்ஞிமாளு: குஞ்ஞிமாளு.
அம்மா: இதுக்கு முன்னாடி வேற எங்கயாவது வேலை பார்த்திருக்கியா?
குஞ்ஞிமாளு ‘இல்லை’ என்று தலையை ஆட்டுகிறாள்.
அம்மா: இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். மகன் படிப்பு முடிஞ்சு வந்தா, அவனும் கூட இருப்பான். அவனும் நிரந்தரமா இங்கே இருப்பான்னு சொல்றதுக்கு இல்ல. வேற வேலைக்குப் போறது வரை இருப்பான். வெளி வேலை செய்றதுக்கு செறுமி இருக்கா.
கிழவி: பழைய முறையை விடாத பத்து இருபது வீடுகள் இருக்கு. அந்த வேலையைச் செய்ய மகனோட பொண்டாட்டி ஒருத்தி போதும். இப்போ எல்லா வீடுகள்லயும் அவங்களே சோப்புப் போட்டு துணிகளைத் துவைச்சிக்கிறாங்க. இஸ்திரிப் பெட்டி எல்லா வீடுகள்லயும் இருக்கு. யாருக்குமே வண்ணான்களைத் தேவை இல்லாமப் போச்சு.
அம்மா: (அவளிடம்) நீ வீட்டுக்குள்ளே வா... (கிழவியிடம்) ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கீங்க இல்ல! இன்னைக்கு இங்கே தங்கியிருந்துட்டு நாளைக்கு போகலாம். தெரியுதா?
கிழவி: ராத்திரிக்கு முன்னாடி வீட்டுக்குத் திரும்பி வர்றதா சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். நான் நடந்து போயிர்றேன்.
அம்மா: மாசம் முடிஞ்சவுடனே கணக்குப் பிள்ளை மூலம் இவளோட சம்பளப் பணத்தைக் கொடுத்தனுப்புறேன். இங்கே இவளுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது.
கிழவி: (எழுந்து நின்றபடி) நான் புறப்படுறேன். குஞ்ஞிமாளு, ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்ல! அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு ரொம்பவும் கவனமா இருக்கணும். நல்லா நடந்து நல்ல பேரு வாங்கினா பொதுவா எல்லோருக்குமே நல்லது. (அம்மாவிடம்) நான் புறப்படுறேன். சின்னப்பிள்ளை குணம் இன்னும் இவளை விட்டுப் போகல. எல்லாம் காலப்போக்குல சரியாயிடும்.
அம்மா: இடையில வாங்க.
கிழவி மெதுவாக எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் நடக்கிறாள். நடந்து செல்லும் கிழவியை ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்ற குஞ்ஞிமாளு, அடுத்த நிமிடம் வாசலை நோக்கி நடக்கிறாள்.
அம்மாவைத் தொடர்ந்து வீட்டுக்குள் குஞ்ஞிமாளு நடக்கிறாள். நாம் அவர்களைப் பின் தொடர, வீட்டின் உட்புறத் தோற்றம் தெரிகிறது.
ஏணி இருக்கும் இடத்தில் நின்றவாறு அம்மா ஒரு அறையைக் காட்டுகிறாள்.
அம்மா: நான் இங்கேதான் படுப்பேன். நீ அங்கே படுக்கலாம். ராத்திரி கூப்பிட்டா கேக்குற மாதிரி இடமா பார்த்து படு.
அம்மா நடக்கிறாள்.
சமையலறைக்குப் பக்கத்தில் இருந்தவாறு-
அம்மா: சமையலுக்கு இந்தக் கிணத்துலதான் தண்ணி எடுக்கணும். எங்கோ இருந்து தண்ணி கொண்டு வரணும்ன்ற அவசியம் இல்ல. செறுமன் (தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண்) வந்து விறகு பொளந்து தருவான்.
அவள் சமையலறைக்கு அருகில் வருகிறாள். அங்கு நின்றவாறு-
அம்மா: இங்கே எல்லாமே சுத்தமா இருக்கணும். போன கோடை கால விடுமுறையில ஹரிதாசன் இங்கே வந்தப்போ, சோத்துல ஒரு முடியைப் பார்த்துட்டான். அவ்வளவுதான் - மூணு நாளா சாப்பாடே வேண்டாம்னுட்டான். உன்னோட சாமான்களை எல்லாம் வடக்கே இருக்குற சின்ன அறையில வச்சுக்கோ.
அவள் சமையலறை பக்கமிருந்து, சிறிய அறையை நோக்கி நடக்க, அம்மா வாசலை நோக்கி நடக்கிறாள்.
அம்மா முன் வாசலில் நின்றிருக்கிறாள்.
கணக்குப்பிள்ளை அச்சுதன் நாயர் மடியில் இருந்து பணத்தை எடுத்து அம்மாவின் கையில் தருகிறார்.
அச்சுதன் நாயர்: அந்த ஆளு தரவேண்டியதை முழுசா தரல. இன்னும் இருபது ரூபாய பாக்கி தரணும். நாளைக்கு தோட்ட வேலைக்கு ரெண்டு ஆம்பளைகளை வரச் சொல்லி இருக்கேன்.
பணத்தை வாங்கி அம்மா மடியில் வைக்கிறாள்.
அம்மா: அக்கரையில இருந்து ஒரு வண்ணாத்திப் பொண்ணு வீட்டு வேலை செய்ய வந்திருக்கா. நெய்கன் சொன்னானாம்.
அச்சுதன் நாயர்: அப்படியா? நெய்கன்கிட்டயும் நான் சொல்லியிருந்தேன். ஆள் எப்படி?
அம்மா: இப்போத்தானே வந்திருக்கா? கூப்பிடுறதுக்கும் சொல்றதுக்கும் வீட்டுக்குள்ளே ஒரு ஆளு இருக்கே! அதுதானே இப்போ முக்கியம்! (குரலைச் சற்றுத் தாழ்த்தி) பார்க்குறதுக்கு வண்ணாத்தி மாதிரியே இல்ல. அதுனால இதை நாமும் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.
அச்சுதன் நாயர்: சரி... நல்லது நடக்கட்டும்.
அம்மா: பாக்குக்காரன் நாளைக்குத்தான் பணம் தர்றதா சொன்னான்.
அச்சுதன் நாயர்: நாளைக்கு நான் போய் பாக்குறேன். (இலேசான தயக்கத்துடன்) ஒரு அஞ்சு ரூபா வேணும்.
அம்மா: அதை எடுத்துட்டு மீதியைக் கொடுத்திருக்கலாமே! (மடியில் இருந்து பணத்தை எடுத்து அதில் மிகவும் கவனமாக ஒரு ஐந்து ரூபாய் நோட்டை உருவி எடுத்து அச்சுதன் நாயரின் கையில் தருகிறாள்.) விளக்கு வைக்கிற நேரமாயிடுச்சே, அச்சுதன் நாயரே!
அந்த நிமிடத்தில் உள்ளேயிருந்து குஞ்ஞிமாளுவின் குரல்:
“விளக்கு... விளக்கு...!”
குஞ்ஞிமாளு குத்து விளக்குடன் வாசலுக்கு வருகிறாள். கிழக்கு நோக்கி விளக்கைக் காட்டியவாறு வாசலின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு உள்ளே போகிறாள்.
அச்சுதன்நாயர் அவளையும் விளக்கையும் பார்த்து, பின்னர் அம்மாவைப் பார்க்கிறார். அம்மாவின் முகத்தில் ‘பெண் எப்படி?’ என்ற கேள்வி தெரிகிறது.
அச்சுதன்நாயர்: தப்பா சொல்றதுக்கு இல்ல. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வயசு அதிகமா இருக்குற மாதிரி ஒரு வேலைக்காரியைப் பார்த்திருக்கலாம்.
இரவு.
அம்மாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறு கட்டிலுக்குக் கீழே குஞ்ஞிமாளு.
அம்மா: உனக்குக் கீழே உள்ளவங்க படிக்கிறாங்களா?
குஞ்ஞிமாளு: தம்பிங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க.
அம்மா: உன்னோட அப்பா எதுவும் தரமாட்டாரா?
குஞ்ஞிமாளு: (கண்களை இலேசாக தாழ்த்தி) முதல்ல கொடுத்துக்கிட்டு இருந்தாரு. இப்போ... தம்பிங்க ரெண்டு பேரையும் அனுப்பிப் பார்த்தோம். ஒண்ணும் கொடுத்து விடல.
(காலைப் பிடித்து விடுவது தொடர்கிறது.)
அம்மா: பாவம்
குஞ்ஞிமாளு: இப்போ அவர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
அம்மா: (யாரிடம் என்றில்லாமல்) ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும், தலையெழுத்து நல்லா இருக்கணும். (அமைதி) சரி... நீ வௌக்க அணைச்சிட்டு ஒரு பக்கம் போய் படு.
அவள் வெளியே செல்கிறாள்.
குஞ்ஞிமாளு மங்கலான இருட்டில் பாயும், தலையணையும் போட்டுவிட்டு சில நிமிடங்கள் என்னவோ சிந்தனையில் இருக்கிறாள். அவளின் முகத்தில் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அவளின் முகத்தில் புலர் காலைப்பொழுதின் ரேகைகள்-
மங்கலான வெளிச்சமுள்ள அதிகாலைப் பொழுது.
குஞ்ஞிமாளு நடந்து வாசலுக்கு வருகிறாள். கையில் இருந்த சிறிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுகிறாள். தொங்கிக் கொண்டிருக்கும் டப்பாவில் இருந்து உமிக்கரியை எடுத்து பல் துலக்க ஆரம்பிக்கிறாள்.
முற்றத்தில் அவள் பல் துலக்கியவாறு நின்றிருக்க, தோட்டத்தில் சூரியனின் முதல் ஒளிக் கீற்றுகள் தெரிகின்றன.
கொஞ்ச நேரத்தில் சூரியனின் ஆக்கிரமிப்பு அதிகமாகிறது.
தொழுவத்தில் இருந்த பசுவின் குரல்-
அவள் சமையலறையின் அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிறைக்கிறாள். தொடர்ந்து அடுப்பில் தீ மூட்டுகிறாள்.
மீண்டும் பசுவின் குரல்.
அம்மா: அதைக் கொஞ்ச நேரம் அவிழ்த்துக் கட்டு. சில நேரங்கள்ல ஆளுகளைப் பார்த்தா, அது ஏதாவது குறும்புத்தனங்கள் செய்யும். கவனமா இருக்கணும்.
குஞ்ஞிமாளு: தண்ணி கொதிக்கிறப்போ, நான் கொஞ்சம் குளிச்சிட்டு வந்திடட்டா?
அம்மா மெதுவாக தலையை ஆட்டுகிறாள் - சம்மதிக்கிற மாதிரி.
வெளியே தொழுவத்திற்கு முன்னால் நின்றவாறு குஞ்ஞிமாளு பசுவையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறாள். பசு கொம்புகளை ஆட்டியவாறு அவளையே பார்க்கிறது.
குஞ்ஞிமாளு: நீ ஆளுகளை மிதிப்பியா? கொம்பால குத்துவியா?
பசுவின் பதில் செயல்-
குஞ்ஞிமாளு கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு நின்றிருக்கிறாள்.
குஞ்ஞிமாளு: என்னைக் கீழே விழ வைக்கலாம்னு நினைச்சா, பிறகு... நான் கஞ்சி, தண்ணி எதுவும் உனக்குத் தர மாட்டேன். வைக்கோல்கூட போட மாட்டேன். முடிஞ்சா நான் உன்னை உதைக்கக்கூட செய்வேன்.
ஆர்வத்துடன் அவள் பசுவை அவிழ்த்து விடுகிறாள். பசு ஒன்றுமே பண்ணாமல், சாதுவாக நிற்கிறது. தொழுவத்திற்குப் பின்னால் பசுவை அவள் நடத்திக் கொண்டு போகும்போதே பசுவிடம்-
‘ஆளுங்க உன்னைப் பத்தி சும்மாவா சொல்றாங்க! பிடிக்காதவங்க வந்தா, உன்னோட வேலையைக் காட்டுவே, இல்ல! அப்படித்தான் இருக்கணும்!’
பசுவைத் தோட்டத்தில் கட்டுகிறாள்.
கோவில் குளம்.
கல்லால் ஆன படியில் நின்றவாறு கோவணம் கட்டியிருக்கும் இரண்டு மூன்று சிறுவர்கள் தண்ணீரில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குளித்துக் கொண்டிருக்கும்
ஒரு கிழவி: டே பசங்களா, இப்படித்தான் தண்ணியைக் கலக்கி விடுறதா? இங்கே பாருங்க... ஒரே சேறா இருக்கு...
கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். குளித்து முடித்து ஈரத்துணியுடன் அம்மிணி குளக்கரையை விட்டு மேலே வருகிறாள். தோளில் ஈரத்துணிகள். கையில் ஒரு பழைய சோப் டப்பா.
வெளியே நின்றவாறு குஞ்ஞிமாளு தொழுது நிற்கிறாள். திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போது, உள்ளே கடவுளைத் தொழுதுவிட்டு வரும் அம்மிணி அவளை வியப்புடன் பார்க்கிறாள்.
“பிரசாதம் வேணுமா?”
அவள் வேண்டுமென்றும் சொல்லவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. பதிலுக்கு இலேசாக புன்னகைக்கிறாள்.
அம்மிணி கையில் இருந்த இலையால் ஆன பொட்டலத்தை அவளிடம் நீட்டுகிறாள். குஞ்ஞிமாளு அதில் இருந்த சந்தனத்தைத் தொடுகிறாள். இரண்டு பூக்களை எடுத்து தலையில் வைத்துக் கொள்கிறாள்.
அம்மிணி: நம்பூதிரி எனக்குக் கொஞ்சம் அதிகமா கொடுத்தார்.
அம்மிணி அவளுடன் சேர்ந்து நடக்கிறாள்.
அம்மிணி: நீ ஏன் கோவிலுக்குள்ள வரல?
குஞ்ஞிமாலு: எனக்கு வேலை நிறைய இருக்கு.
அம்மிணி: உன்னை இதுக்கு முன்னாடி இங்கே நான் பார்த்தது இல்லியே!
குஞ்ஞிமாளு: நான் நேத்துதான் இங்கே வந்தேன். கிழக்கும் பாட்டெ வீட்டுக்கு.
அம்மிணி: ஓ... அப்படியா? நீ அங்கேதான் தங்கி இருக்கியா?
குஞ்ஞிமாளு ‘ஆமாம்’ என்பது மாதிரி தலையை ஆட்டுகிறாள்.
அவர்கள் இருவரும் ஆலமரத்திற்குக் கீழே வரும்போது கிழவர் வழக்கம்போல தனக்குத்தானே என்னவோ பேசிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் பிரகாசம் இப்போதும் இருக்கிறது.
கிழவர் அவர்களை கவனிக்கவில்லை.
அம்மிணி: முன்னாடியே வந்திருக்கலாம்ல? இன்னைக்குக் காலையில கோவில் குளத்துல பூ பூத்திருந்துச்சு. நேத்து சாயங்காலம் யாரோ படிமேல பணம் வச்சிருந்திருக்காங்க.
குஞ்ஞிமாளு: இப்பவும் அந்த பூ அங்கே மலர்ந்து இருக்கும்ல!
அம்மிணி: நான் அதைச் சொல்லல. இங்கே இருக்குற கடவுளைப் பத்திய விசேஷமே அதுதான். ஏதாவது காரியம் நடக்கணும்னா அதை மனசுல நினைச்சுக்கிட்டு நாம போயி பணம் வைக்கணும். அது சரியா நடக்குறதா இருந்தா, காலையில கோவில் குளத்துல பூ விரியும். நீலதாமரை... ஒரே ஒரு பூதான் பூக்கும். அந்த மாதிரி பூவை உலகத்துலயே வேற எங்கேயும் பார்க்க முடியாது. குஞ்ஞிமாளுவிற்கு அதைக் கேட்டு நம்பிக்கை வரவில்லை. அவள் முகத்தில் ஆச்சரியம் தெரிகிறது.
அம்மிணி: சோதிக்கலாம்னு பணம் வச்சு பார்த்தா, பூ விரியவே விரியாது - தெரியுமா? இதுக்காக எங்க இருந்தெல்லாம் ஆளுங்க வர்றாங்கன்னு நினைக்கிறே! மத்த கோவில்கள்ல சுத்தி கலசம் வேணும்னா கட்டாயம் இந்த பூ வேணும்.
குஞ்ஞிமாளு: உன் வீடு எங்கே இருக்கு?
அம்மிணி: நான் ஷாரத்தெயில இருக்கேன்.
எதிரில் வரும் ஒரு பெண் அவர்கள் முன் வந்ததும், அம்மிணியைப் பார்த்து-
“உங்க அக்கா வந்தாச்சா அம்மிணி?”
அம்மிணி: வர்ற வாரம் வர்றாங்க.
நடக்கிறார்கள்.
குஞ்ஞிமாளு பிரிய வேண்டிய இடம் வந்ததும்-
அம்மிணி: சரி... நீ நடந்து போ. மறுபடியும் நாம பார்ப்போம். ஆமா... ஹரிதாசன் எப்போ வர்றாப்ல? மாளுக்குட்டி அம்மாவோட மகன்?
குஞ்ஞிமாளு: எனக்குத் தெரியாது.
அவரவர்கள் வழியே நடக்கிறார்கள்.
வீடு வாசல்.
ஈரத்துணியுடன் வீட்டு வெளி வாசலுக்குள் நுழையும் குஞ்ஞிமாளுவைப் பார்த்தவாறு, வாசல் திண்ணையில் அமர்ந்து தலை வாரிக் கொண்டிருக்கும் மாளுக்குட்டி அம்மா.
“போடுறதுக்கு வேற துணி கொண்டு வந்திருக்கே, இல்ல?”
குஞ்ஞிமாளு: கொண்டு வந்திருக்கேன்.
அவள் உள்ளே போகிறாள்.
படி ஏறி வரும் கணக்குப் பிள்ளை அச்சுதன் நாயரும் (அவர் கையில் ஒரு கொடுவாள் இருக்கிறது) அவருடன் சாப்பாட்டுப் பிரியரான குட்டி சங்கரமேனனும்.
அச்சுதன் நாயர்: இவருக்கு நீங்கதான் ஏதாவது அறிவுரை சொல்லணும். எது எப்படின்னாலும் இவர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளாச்சே!
குட்டி சங்கர மேனன் குற்ற உணர்வுடன், தலை குனிந்து நின்றிருக்கிறார்.
அம்மா: என்ன விஷயம்?
அச்சுதன் நாயர்: காலையில எழுந்தாச்சுன்னா, இந்த ஆளு டீ கடையில் போய் உட்கார்ந்துக்கிறாரு. அங்க வர்ற ஆளுங்க பேசுறது, சிரிக்கிறது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்காரு. ஆளுங்க கண்டபடி கெட்ட வார்த்தையில திட்டினாக்கூட இவர் அதைப் பற்றிக் கவலைப்படுறதே இல்ல...
குட்டி சங்கர மேனன்: நான் சும்மா போனேன் மாளு அக்கா.
அம்மா: (ஒரு நிமிடம் யோசித்தவாறு) கிழக்குப் பக்கம் வேலி சாய்ஞ்சு கிடக்கு. அச்சுதன்நாயர் கூட சேர்ந்து அதைக் கொஞ்சம் சரிப்படுத்துங்க. நான் சாயா தயார் பண்ணித் தர்றேன்.
குட்டிசங்கரன்: நான் சாயா குடிக்கிறதுக்காக வரல.
அம்மா: சரி... அதான் வேலியைச் சரி பண்ணச் சொன்னேன்ல!
அச்சுதன் நாயருடன் சேர்ந்து குட்டி சங்கர மேனன் தோட்டத்தை நோக்கி போகிறார். அம்மா அந்த மனிதரையே ஒரு நிமிடம் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். யாரிடம் என்றில்லாமல்-
“பாவம்!”
குஞ்ஞிமாளு வேறு ஆடை அணிந்து உள்ளேயிருந்து வந்து, தேநீரை அம்மாமுன் வைக்கிறாள்.
குஞ்ஞிமாளு: பலகாரம் ஏதாவது தயார் பண்ணணுமா?
அம்மா: (எழுந்தவாறு) இருக்குறது நாம மட்டும்தானே! சாயா மட்டும் போதும். சீக்கிரமே சாப்பாடு தயார் பண்ணப் பாரு. இவ்வளவு நேரமாயிடுச்சு - முற்றத்தைப் பெருக்க காளி இன்னும் வரலியே!
குஞ்ஞிமாளு: கோவில்ல படியில் பணம் வச்சா, பூ விரியுமா அம்மா?
அம்மா: அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க. நான் இதுவரை பணம் வச்சு பார்த்தது இல்ல. வைத்தியமடம் திருமேனிக்கு இது மேல பெரிய நம்பிக்கை. மருந்து எழுதித் தர்றதுக்கு வந்தப்போ என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாரு. ஆனா, நான் இதுவரை பார்த்தது இல்ல.
குஞ்ஞிமாளு: ஆலமரத்துக்குக் கீழே இருக்குற பெரியவருக்குப் பைத்தியமா என்ன?
அம்மா: வாலிபமா இருந்த காலத்துல அவர் எவ்வளவு பெரிய அறிவாளியான மனிதர் தெரியுமா? எங்கம்மா அவரைப் பற்றி நிறைய சொல்லி இருக்காங்க.
இங்கே இருந்த குழந்தைகளைப் படிக்க வைக்கிறதுக்காக அவர் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி மதுரைக்கோ தஞ்சாவூருக்கோ போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போயிட்டு வந்தாரு. அதுக்குப் பிறகு அந்த ஆலமரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்த மனிதர்தான்... அங்கேயே நிரந்தரமா தங்க ஆரம்பிச்சிட்டாரு. பாவம்...
தேநீர் டம்ளரை எடுத்துக் கொண்டு குஞ்ஞிமாளு உள்ளே போகத் தொடங்க, அம்மா-
“இப்ப ஒரு பிரச்னையும் இல்ல. ஹரிதாசன் வந்தபிறகு, ரெண்டு நேரம் பலகாரம் பண்ணி ஆகணும்...”
அம்மா எழுந்து நிற்கிறாள்.
“நான் அரிசி எடுத்துத் தர்றேன்!”
மதிய நேரம்.
உள் அறையில் அமர்ந்து அம்மா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு குஞ்ஞிமாளு பரிமாறிக் கொண்டிருக்கிறாள். அம்மா குளித்து முடித்து, நெற்றியில் விபூதி அணிந்திருக்கிறாள்.
அம்மா: உனக்கு வேண்டியதை எடுத்து வச்சிட்டு, அதுக்குப் பிறகு ஆம்பளைகளுக்குச் சாப்பாடு போடு. குட்டி சங்கரன்- பாவம்! அவருக்கு உடல்ல அப்படியொரு பிரச்னை! எவ்வளவு சாப்பிட்டாலும், அவருக்கு திருப்தியே உண்டாகாது.
குஞ்ஞிமாளு: சோறு நிறைய இருக்கு. கொடுக்கலாம்.
அம்மா: ஹரிதாசனோட அறையை நல்லா பெருக்கி சுத்தமா வச்சிருக்கணும். பரீட்சை முடிஞ்சிடுச்சு. எப்போ இங்கே வரப் போறான்னு தெரியல.
குஞ்ஞிமாளு: சாவி எங்கே இருக்கு?
அம்மா: பூட்டு போடல. அவன் வந்தான்னா வீட்ல ஒரு சின்ன அசைவு கூட இருக்கக்கூடாது. அவன் அப்பாவோட கோபம், ஆர்ப்பாட்டம் எல்லாமே இவன்கிட்டயும் இருக்கு. ஆனா, மனசுக்குள்ள எதுவுமே இல்ல பாவம்...
கையையும் கால்களையும் கழுவி, சாப்பிடுவதற்காக குட்டி சங்கரமேனன் உள்ளே வருகிறார்.
குட்டிசங்கரன்: மாளு அக்கா, வேலியைச் சரி பண்ணியாச்சு.
அம்மா: (தான் சாப்பிடும்போது, அவர் வந்ததை விரும்பாத குரலில்) வெளியே நில்லுங்க. அச்சுதன் நாயரைக் கூப்பிடுறப்போ, நீங்க வந்தா போதும்.
அவர் ஏமாற்றத்துடன் வெளியே செல்கிறார்.
அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்து, குஞ்ஞிமாளு ஹரிதாசனின் அறைக்குள் செல்கிறாள். உள்ளே ஏகப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கட்டிலில் மடித்து வைக்கப்பட்டிருந்த மெத்தையை எடுத்து விரித்து, அவள் சுத்தம் செய்கிறாள். அப்படி சொல்கிற அளவிற்கு தூசியோ, அழுக்கோ எதுவும் அறையில் இல்லை. இருந்தாலும், அம்மாவின் திருப்திக்காக அறையை அவள் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். ஒரு இளைஞனின் அறையை அவள் ஆச்சரியம் மேலோங்க பார்க்கிறாள். கலைநயத்துடன் உள்ள ஒரு காலண்டர் அங்கு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுவரில் வேறு ஒன்றிரண்டு படங்களும்.
ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து அவள் திறந்து பார்க்கிறாள்.
அதன் முதல் பக்கத்தில் ‘சி.பி.ஹரிதாஸ் எம்.ஏ. முதல் வருடம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. சுவரிடம் ஹரிதாஸின் புகைப்படமொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையே ஆர்வத்துடன் பார்த்தவாறு அவர் ஒரு நிமிடம் நிற்கிறாள்.
பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சின்னச் சின்னதாக எழுதப்பட்டிருக்கும் பக்கங்கள் திரையில் காட்டப்படுகின்றன. அவள் ஒரு பக்கத்தில் தன் கவனத்தைச் செலுத்தி மனதிற்குள் தட்டுத் தடுமாறி படிக்கிறாள். நான்கு வரிகள் உள்ள கவிதைகள் கருவி எதுவும் இல்லாமல் அவளின் உச்சரிப்பில் ட்ராக்கில்-
அவள் கல்லூரி ஆண்டு மலரைப் புரட்டுகிறாள். புகைப்படங்கள் உள்ள பல பக்கங்கள். ஒரு பக்கத்தில் யூனியன் மீட்டிங்கிலோ வேறு ஏதோ ஒரு மீட்டிங்கிலோ ஹரிதாசன் சொற்பொழிவாற்றும் புகைப்படம் பிரசுரமாகியிருக்கிறது. அது ஹரிதாசன்தானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவள் மேலும் அருகில் அந்த ஆண்டு மலரை வைத்து பார்க்கிறாள். கள்ளங்கபடமில்லாத அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
குஞ்ஞிமாளு தோட்டத்தில் கன்றுக்குட்டியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டுகிறாள். அவள் அருகில் வரும்போது, கன்றுக்குட்டி கத்துகிறது. கயிறை அவிழ்க்கும்போது குஞ்ஞிமாளு பசுவைப் பார்த்து-
“சத்தம் போடாதே, வர்ற ஆளுக்கு இந்த மாதிரி சத்தம் போடுறதெல்லாம் பிடிக்காதாம்.”
அவள் பசுவை தொழுவத்திற்குள் கொண்டு செல்கிறாள்.
வெளியே இருந்து அம்மாவின் குரல்:
“குஞ்ஞிமாளு, சீக்கிரமா சாயாவுக்கு தண்ணி வை...”
வெளிவாசல்.
வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு ஹரிதாசன் முன்னால் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் தலையில் சாமான்களைச் சுமந்தவாறு கூலிக்காரன்.
அச்சுதன்நாயர் கூலிக்காரனின் தலையில் இருந்த சாமான்களை இறக்கி (பெட்டியும் ஒரு தோள் பையும்) திண்ணையில் வைக்கிறார்.
ஹரிதாசன் பாக்கெட்டில் இருந்து காசையெடுத்து கூலிக்காரனுக்குத் தருகிறான். திண்ணைக்கு அருகில் போட்டிருந்த நாற்காலியில் அமர்கிறான்.
அச்சுதன்நாயர் நல்ல கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போகிறார்.
தாயும், மகனும் மட்டும் தனியே அங்கிருக்கிறார்கள்.
அம்மா: பரீட்சை முடிஞ்ச பிறகும் நீ ஏன் இவ்வளவு நாட்களா இங்கு வரல?
ஹரிதாசன்: நண்பர்கள் எல்லோரும் பல நாட்களா பிரிஞ்சு இருக்க வேண்டியதிருக்கு. அதுனால நாலஞ்சு நாட்கள் சேர்ந்து ஜாலியா இருப்போமேன்னு நினைச்சோம்.
அம்மா: நான் நினைச்சேன் நீ அப்பு மாமாவோட வீட்டுப் பக்கம் போயிருப்பேன்னு!
ஹரிதாசன்: கடிதம் போட்டிருந்தார் நேரம்தான் இருக்கே! பிறகு எப்பவாவது போக வேண்டியதுதான்!
உள்ளேயிருந்து குஞ்ஞிமாளு பணிவுடன் தேநீர் கொண்டு வருகிறாள். அதை நாற்காலிக்கு அருகில் இருக்கும் ஸ்டூலின் மேல் வைக்கிறாள்.
குஞ்ஞிமாளு: (திரும்பும்போது மிகவும் மெதுவான குரலில் அம்மாவிடம்) பலகாரம் கொண்டு வரட்டுமா?
அம்மா: பிறகு கொண்டு வா.
மகன் தேநீர் அருந்துகிறான். தாயும் மகனும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.
ஹரிதாசன்: மீனாட்சியம்மாவை எங்கே?
அம்மா: அவங்க போயிட்டாங்க.
சமையலறையில் குஞ்ஞிமாளு முருங்கை இலையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறாள். அம்மா கடந்து வருகிறாள்.
“ஆமா... என்ன வைக்கிற? பூசணிக்காயும், சேனைக்கிழங்கும் அவனுக்குப் பிடிக்காது - தெரியுமா?”
குஞ்ஞிமாளு: கொஞ்சம் முருங்கைக்கீரை கிடைச்சது.
அம்மா: அது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். பருப்பைச் சேர்த்து அதை வேக வை. அப்பளம் பொரிச்சிடு. சுண்ட வத்தல் இருந்தா அவன் ரொம்பவும் விரும்புவான்.
அவள் வேகமாக சமையல் வேலையில் ஈடுபடுகிறாள்.
அம்மா: வேலையை முடிச்சிட்டு, அவனோட அழுக்குத் துணிகளை துவைச்சுப் போடு. ஏணியில துணிகளை வச்சிருக்கேன். அடுப்புல குழம்பை வச்சிட்டு, குளியலறையில் தண்ணி எடுத்து வை. அவன் அங்கேதான் குளிப்பான்.
அவள் தன் வேலையில் தீவிரமாக இருக்கிறாள்.
ஏணிமேல் இடப்பட்டிருந்த அழுக்கு வேஷ்டியையும் அண்டர்வேரையும் பனியனையும் சட்டையையும் குஞ்ஞிமாளு எடுக்கிறாள். சட்டையை எடுத்து எதேச்சையாக முகர்ந்து பார்க்கிறாள்- எந்தவிதமான எண்ணமும் இல்லாமல். அவளையும் அறியாமல் ஒரு வகை உணர்வு அவளை உந்துகிறது.
அவள் அடுத்த நிமிடம் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு வந்து ஒரு பக்கெட்டுக்குள் போட்டுவிட்டு, மீண்டும் சமையலறையைத் தேடிப்போகிறாள்.
சமையலறையில் இப்போது இரண்டு அடுப்புகளும் எரிந்து கொண்டிருக்கின்றன. தீயை ஊதியவாறு அருகில் இருக்கிறாள் குஞ்ஞிமாளு.
குளியலறையில் நீர் விழும் ஓசை.
குளியலறையில் இருந்து ஒரு சினிமாப் பாடலின் வரி.
அவள் உப்பு பார்த்து, பாத்திரங்களை இறக்கி வைக்கிறாள்.
மாலை நேரம்.
துணி துவைத்து, குளித்து முடித்து (தோளில் ஹரிதாசனின் ஆடைகள்) குஞ்ஞிமாளுவும், ஷாரத்தெ அம்மிணியும் கோவில் குளத்திலிருந்து நடந்து வருகிறார்கள்.
அவர்கள் பார்வையில் - ஆலமரத்துக்குக் கீழே இருக்கும் பெரியவருக்குச் சற்று தள்ளி ஹரிதாசனும், வேறு இரண்டு வாலிபர்களும் தெரிகிறார்கள். மூன்று பேரும் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். கிழவரும் மூக்கின் வழியே புகையை விடுகிறார்.
அவர்கள் இருவரும் கிழவரை நெருங்குகிறார்கள். அப்போது
அம்மிணி: “ஆசான்... நீங்களும் சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சாச்சா?”
ஆசான் சிரித்தவாறு அம்மிணியிடம்:
“எல்லாமே வெறும் புகை, மகளே... புகைப்படலம்... புகை... படலம்...”
இளைஞர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள்.
குஞ்ஞிமாளு முகத்தைத் தரை நோக்கி கவிழ்த்தவாறு நின்றிருக்கிறார்கள்.
அம்மிணி: ஆசான்... நீங்க பாகவதரைப் பார்க்கப் போறதில்லையா?
குஞ்ஞிமாளு: (மெதுவான குரலில்) சீக்கிரம் வா, அம்மிணி.
அம்மிணி இடது கண்ணால் ஹரிதாசனையும் அவனின் நண்பர்களையும் பார்த்தவாறு குஞ்ஞிமாளுவுடன் சேர்ந்து நடக்கிறாள்.
குஞ்ஞிமாளு: அவங்க எல்லோருமே ஆலமரத்துக்குக் கீழே நின்னுக்கிட்டு இருக்காங்க!
அம்மிணி: (சிரித்தவாறு) ஹரிதாசனையும், கூட இருக்கிறவங்களையும் தானே சொல்ற? நமக்கென்ன? ஹரிதாசன் என்கூடத்தான் ஏழாம் வகுப்பு வரை படிச்சது. இப்போத்தானே எம்.ஏ. அது இதெல்லாம்.
அவர்கள் நடக்கிறார்கள்.
அம்மிணி: நாளைக்கு பிரசவத்துக்காக அக்கா வீட்டுக்கு வர்றாங்க. இது அவங்களுக்கு மூணாவது பிரசவம். அக்காவும், குழந்தைகளும், அக்கா புருஷனும் வந்துட்டாங்கன்னா வேலை செஞ்சு செஞ்சு என்னோட உடம்பே ஒரு வழியாயிடும். ஆமா... கெழக்கும்பாட்டு வீட்ல வேலை ரொம்பவும் அதிகமாக இருக்கா என்ன?
குஞ்ஞிமாளு: இப்போத்தானே செய்யவே ஆரம்பிச்சிருக்கேன்! வந்திருக்குற ஆளோட விருப்பமும் விருப்பமில்லாததும் என்னன்னு யாருக்குத் தெரியும்?
அம்மிணி: அக்காவுக்கு இந்த முறை பிரசவம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குமாம். குழந்தைங்க எப்பவும் என்கூடத்தான் இருப்பாங்க. அவங்க செய்தசேட்டைகளைப் பார்க்கணுமே! அக்கா புருஷன் எப்படின்ற.... மணிக்கு நாற்பது தடவை என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.
குஞ்ஞிமாளு: அம்மிணி, உனக்கு இதுவரை திருமண ஆலோசனை எதுவும் வரலியா?
அம்மிணியின் முகம் இருண்டு போய் காணப்படுகிறது. ஒரு நிமிடம் ஒரே நிசப்தம்.
அம்மிணி: அப்பாவுக்குப் பிடிச்சிருந்தா, ஜாதகப் பொருத்தம் சரியா வரமாட்டேங்குது. ஜாதகம் சரியா இருந்தா, ஆளை யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது. எனக்கு செவ்வா தோஷம் வேற...
இருவருமே மவுனமாக இருக்கின்றனர். ஒருவரோடு ஒருவர் ஒன்றும் பேசிக் கொள்ளாமலே, இரண்டு தனித்தனி வழிகளில் இருவரும் நடக்கிறார்கள்.
இரவு நேரம்.
சமையலறைக்கு வெளியே நின்றவாறு அம்மாவிடம் சாதத்தையும், குழம்பு, கூட்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக குஞ்ஞிமாளு நீட்டுகிறாள்.
சற்று தூரத்தில் அமர்ந்திருக்கும் ஹரிதாசனுக்கு அம்மாவே பரிமாறுகிறாள். பரிமாறிய பாத்திரங்களைத் திரும்பவும் வாங்கி, புதிய பாத்திரத்தை அம்மாவிடம் தருகிறாள் குஞ்ஞிமாளு.
ஹரிதாசன் சாப்பிடுவதை அவளால் பார்க்க முடியவில்லை. படம் பார்ப்போர்களும்தான். அவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருக்கிறான். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது, இந்தப் பக்கத்தில்நின்று கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவின் காதில் விழுகிறது.
ஹரிதாசன்: குட்டிசங்கரன் மாமா எப்படி இருக்குறார்?
அம்மா: வீட்ல ஒழுங்கா இருக்குறது இல்ல. சோறு எங்கெங்கே கிடைக்குதோ அங்கேயெல்லாம் போய் நின்னுக்கிட்டு இருப்பாரு. எவ்வளவு சொன்னாலும் ஆளு கேக்குறதுஇல்ல.
ஹரிதாசன்: என்னோட வேலை விஷயம் சரியாயிடுச்சுன்னா, அம்மா... நீங்க என்கூட வந்துற வேண்டியதுதான்.
அம்மா: அப்ப இங்கே?
ஹரிதாசன்: அச்சுதன்நாயர் தோட்டத்தைப் பார்த்துக்கட்டும். அம்மா... நீங்க மட்டும் இங்கே தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க? உடம்புக்கு கொஞ்சம் ஆகாமப் போச்சுன்னு வச்சுக்கங்க, அதைப் பார்க்குறதுக்கு பக்கத்துல ஒரு டாக்டர் கூட இல்ல...
அம்மா: கூப்பிட்டா, ஓடி வர்றத தூரத்துலதானே அச்சுதன்நாயர் இருக்காரு!
ஹரிதாசன்: உங்க ஒரு ஆளுக்காக ஒரு வேலைக்காரி... செறுமி. வேலை செய்ற ஆளுங்க. வீட்டைப் பூட்டிட்டுப் போயிட்டோம்னு வச்சுக்கங்க. தோட்டத்துல இருந்து வர்ற வருமானம் முழுவதுமே லாபம்தான்.
அம்மா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள்.
அந்தப் பக்கம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு குஞ்ஞிமாளுவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி வெளிப்பாடுகள்.
இரவு நேரம்.
ஹரிதாசன் தன்னுடைய அறையில் அமர்ந்து சிகரெட் பிடித்தவாறு, எதையோ படித்துக் கொண்டிருக்கிறான். மிகவும் மெதுவான அவன் குரலில் - ஒரு கவிதையின் வரிகள் பாடலாக இல்லாத ட்ராக்கில். அது முடிந்ததும், அவன் படிப்பது மீண்டும் தொடர்கிறது. அப்போது பாகவதர் பாடுவது கேட்கிறது. அவள் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்கிறான்.
பக்கத்திலிருந்து கேட்கும் அம்மாவின் இறுமல் ஒலி.
எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக அமர்ந்துகொண்டு சிகரெட்டை அணைக்கிறான்.
அம்மா வாசலில்.
அம்மா: படுக்கை விரிச்சுப் போட்டிருக்கில்ல?
ஹரிதாசன்: அம்மா, நீங்க போய் படுங்க.
அம்மா: பயணம் செஞ்சு வந்திருக்கே, இல்ல! சீக்கிரமா படு.
ஹரிதாசன்: பாகவதரோட பாட்டு இப்பவும் இருக்குல்ல, அம்மா?
அம்மா: ராத்திரிகூட அவர் தூங்கமாட்டார் போலத்தான் இருக்கு.
ஹரிதாசன்: பாகவதருக்கு தளர்வாதம் வந்ததால, நம்ம ஊரு ஆளுங்களுக்கு இசைமேல ஒரு பெரிய நாட்டமே வந்திருக்கும் அப்படித்தானே?
அம்மா: அவருக்கு நிலையான புத்தி கிடையாது. அதுனால படிக்கிறதுக்கு ஒரு குழந்தைகூட அங்கே போறது கிடையாது. மண்டல காலத்துல மட்டும் அவர் மவுன விரதம் இருக்கார். பாவம்...
ஹரிதாசன்: என்ன இருந்தாலும் நம்ம ஊரு உண்மையிலேயே சாதாரணம்னு சொல்ல முடியாது. அம்மா... நான் என் நண்பர்கள்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். வேதாந்தம் சொல்லிக்கிட்டு இருந்த பூசாரி மட்டுமே உலகத்தை விட்டு போயிருக்காரு. ஆலமர நிழல்ல இருக்கும் நாணு ஆசானோட கவிதை, பக்கவாதம் பாதிக்கப்பட்ட அப்புக்குட்டி பாகவதரோடு பாட்டு... என்ன வித்தியாசமான கதாபாத்திரங்கள்!
அம்மா: உனக்கு அப்படித்தான் தோணும். எது எப்படியோ உன்னோட அப்பா அடிக்கடி சொல்லுவாரு - இந்தக் கோவிலோட மகிமையே தனிதான்னு.
ஹரிதாசன்: பாட்டி கூட இங்கே இருக்குற தெய்வத்தைப் பற்றிப் புகழ்ந்து சொல்லுவாங்க. ராத்திரி முழுக்க மூணு நாலு இடங்களுக்குப் போய் ரவுண்ட் அடிச்சிட்டு காலையிலதான் கோவிலுக்கு திரும்பி வருமாம்.
அம்மா: இப்படி எத்தனை எத்தனையோ கதைகள்! (மேஜையைப் பார்த்தவாறு) குடிக்கிறதுக்கு அந்தப் பொண்ணு தண்ணி வைக்கலியா? சீக்கிரமா படுத்துத் தூங்கு.
அம்மா வெளியே போகிறாள்.
சமையலறையில் கடைசி வேலையாக தண்ணீர் விட்டு கழுவி சுத்தப்படுத்துகிறாள் குஞ்ஞிமாளு. பின்னர் அறையைத் துடைக்கிறாள். குஞ்ஞிமாளு எல்லாம் முடித்து கை கழுவி விட்டு வரும்போது அம்மா:
“இன்னொரு தடவை நம்மால ஏணியில ஏற முடியாது. ஹரிதாசனுக்கு ஒரு லோட்டாவுல தண்ணி கொண்டு போய் வைக்கணும், தெரியுதா? பச்சைத் தண்ணி...”
அவள் பாத்திரத்தில் நீரை எடுக்கிறாள். அதோடு டம்ளரையும். நாம் அவளைப் பின் தொடர்கிறோம்.
அவள் சமையலறையைத் தாண்டி ஏணியில் ஏறும்போது, ஒரு ஏணிப்படி இலேசாக அசைகிறது - ஓசை எழுப்புகிறது.
மேலே வழியில் அவள் மங்கலான வெளிச்சத்தில் சற்று தயக்கத்துடன் நிற்கிறாள். இருந்தாலும், மனதில் இருக்கும் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்டுப்படுத்தியவாறு வாசலைக் கடக்கிறாள்.
அறைக்குள் அவள் மேஜைமேல் நீர் இருக்கும் பாத்திரத்தையும் டம்ளரையும் வைக்கும்போது, எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பார்ப்பது மாதிரி அவன் அவளைப் பார்க்கிறான்.
அவள் திரும்ப நடக்கிறாள்.
இரவு நேரம்.
அம்மா படுத்திருக்கிறாள். அவளின் காலை குஞ்ஞிமாளு பிடித்து விடுகிறாள்.
அம்மா படுக்கையில் இருந்தவாறே-
அம்மா: பலகாரத்துக்கு அரிசி ஊறப் போட்டுட்டியா, குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு: ம்...
அம்மா: அவன் படுத்துட்டானா?
குஞ்ஞிமாளு: அறையில வெளிச்சம் இருக்குறது மாதிரி தெரியுது. பரீட்சைதான் முடிஞ்சிருச்சே! பிறகு எதுக்குப் படிக்கணும்மா?
அம்மா: அவன் கண்ணுல பார்க்குறது எதுவா இருந்தாலும் அதை எழுதி வைப்பான். அதைப் படிச்சிக்கிட்டு இரப்பான் அவனுக்கு வேற என்ன வேலை இருக்கு?
கால்களைப் பிடித்துவிட்டுக் விட்டுக் கொண்டிருந்த கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் அசைவை நிறுத்துகின்றன. போர்வையைக் கால்வரை இழுத்துவிட்ட குஞ்ஞிமாளு மெல்ல இருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்கிறாள்.
அவளுக்குக் கொட்டாவி வருகிறது.
இருட்டில் குஞ்ஞிமாளு படுத்துக் கிடக்கிறாள்.
குஞ்ஞிமாளுவின் முகம். பிறகு... அவளின் கண்கள்.
எங்கோ இருந்து மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடல் ஓசை. உறக்கம் மெல்ல அவளை வந்து தழுவுகிறது.
இருட்டில் அசைகின்ற ஆலமரத்தின் இலைகள்.
மொட்டுகள் மட்டும் இருக்கும் சிறிய தாமரைக் குளம். கரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நதியின் அலைகள். இந்தக் காட்சிகள் வழியாக ராக ஆலாபனை மிதந்து வர - நேர மாற்றம்.
தோட்டத்தில் கன்றுக்கட்டி கயிறில் கட்டியபடி மேய்ந்து கொண்டிருக்கிறது. குஞ்ஞிமாளுவும் செறுமி காளியும் ஓலை மடலை வெட்டி அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியே இருந்து அம்மிணியின் குரல்:
“குஞ்ஞிமாளு...”
குஞ்ஞிமாளு பார்க்கும்போது வேலிக்கப்பால் அம்மிணி நின்றிருக்கிறாள்.
குஞ்ஞிமாளு: இங்கே வா அம்மிணி...
அம்மிணி: எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நீ கொஞ்சம் வாயேன்...
குஞ்ஞிமாளு வெட்டுக் கத்தியைக் கையில் எடுத்தவாறு அம்மிணிக்கு அருகில் வருகிறாள்.
வேலிக்கு அருகில் குஞ்ஞிமாளுவும் அம்மிணியும்.
அம்மிணி: சமையல் வேலைகள் அதிகமா? கோவில் பக்கமே உன்னை ஆளைக் காணோமே!
குஞ்ஞிமாளு: நான் வீட்டுக்கு தூரம்... இன்னைக்கு மூணாவது நாள்.
அம்மிணி: ஹரிதாசன் இருக்காப்லயா?
குஞ்ஞிமாளு: இருக்காரு. எப்பவும் அறைக்குள்ள இருந்து படிச்சுக்கிட்டே இருக்காரு.
அம்மிணி: அக்காவால நிக்கவும் முடியல, நடக்கவும் முடியல, குழந்தைங்க என்ன ஆட்டம் போட்டாலும் அக்காவோட வீட்டுக்காரர் ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசுறது இல்ல. (யாரிடம் என்றில்லாமல்) எல்லா கஷ்டங்களையும் சகிச்சுக்கத்தான் நான் ஒருத்தி இருக்கேன்ல!
(கையில அணிந்திருந்த புதிய வளையல்களைக் காட்டி) இதைப்பாரு... நல்லா இருக்கா? குஞ்ஞிமாளு ஆர்வத்துடன் அதைப் பார்க்கிறாள்.
அம்மிணி: (சிரித்தவாறு) இது தங்கம் கிடையாது. பார்க்குறதுக்கு தங்கம் மாதிரியே தெரியும். ரோல்ட் கோல்டு, அக்காவோட வீட்டுக்காரர் கோயம்புத்தூர்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு. நாங்க செனகத்தூர் திருவிழாவுக்குப் போறோம். குழந்தைங்க அதுக்குப் போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிக்குதுங்க. அக்காவோட வீட்டுக்காரரும் சரின்னு சம்மதிச்சிட்டாரு. நாங்க போறோம். நீயும் வர்றியா?
குஞ்ஞிமாளு: அய்யோ... நான் வரல.
அம்மிணி: ஹரிதாசனோட அம்மாக்கிட்ட நான் சொல்றேன்.
குஞ்ஞிமாளு: அய்யோ... வேண்டாம்.
அம்மிணி: அப்ப நான் வரட்டா? வாரியத்துல போய் நான் பாலைத் தர வேண்டியதிருக்கு.
அவள் நடக்கிறாள்.
வாத்தியங்களின் ஓசை. குறி சொல்லல். கையில் தட்டுடன் நின்று கொண்டிருக்கும் இளம் பெண்கள். தீப்பந்தங்கள். திரை முழுக்க வாண வெடிகள்.
குஞ்ஞிமாளுவின் முகம். உறங்கிக் கொண்டிருக்கும் குஞ்ஞிமாளு மங்கலான வெளிச்சத்தில் கண்களைத் திறக்கிறாள். தான் இதுவரை கண்ட திருவிழா காட்சிகள் ஒரு கனவு என்பதை உணர்கிறாள். அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்.
மூடிய கண்களுடன், புன்னகை அரும்பியிருக்கும் முகத்துடன் அப்படியே உறங்கியும் போகிறாள். திடீரென்று அந்தக் கண்கள் திறக்கின்றன. அவள் கத்துகிறாள்.
“அய்யோ, அம்மா...!”
உறங்கிக் கொண்டிருக்கும் அம்மாவின் முகத்தின் மேல் குஞ்ஞிமாளுவின் அலறல் சத்தம். அவள் திடுக்கிட்டு எழுகிறாள்.
“என்னடி... என்ன?”
குஞ்ஞிமாளுவின் குரல்:
“என் கால்ல, என்னவோ தாவி ஓடினது மாதிரி இருந்துச்சு...”
அம்மா: விளக்கைப் போட்டுப் பாரு. ஏதாவது எலியா இருக்கும். நெல் பத்தாயத்தோட அந்தப் பொந்தை அடைக்கணும்னு நானும் எத்தனையோ தடவை அச்சுதன் நாயர்கிட்ட சொல்லிட்டேன்.
பாயில் மங்கலான வெளிச்சத்தில் எழுந்து அமர்ந்திருக்கும். குஞ்ஞிமாளு. அவள் ஒரு பெருமூச்சு விட்டவாறு மீண்டும் படுக்கிறாள்.
காலை நேரம்.
சாப்பிடும் இடம்.
பழைய பாணியில் அமைந்த ஒரு மேஜை. நான்கு ஸ்டூல்கள். ஹரிதாசன் தேநீரும், பலகாரமும் சாப்பிடுகிறான். அம்மா அருகிலேயே நின்றிருக்கிறாள். புதிதாகச் சுட்ட தோசையை ஒரு தட்டி எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு குஞ்ஞிமாளு நகர்கிறாள்.
அவள் சமையலறையில் தோசை சுடுகிறாள். வெளியே தாயும், மகனும் பேசுவது அவளுக்குக் கேட்கிறது.
அம்மா: தெற்குப் பக்கம் எலியோட தொந்தரவு இருக்கா என்ன?
ஹரிதாசன்: இல்லியே!
குஞ்ஞிமாளுவின் முகத்தில் என்னவோ சிந்தனை நிழலாடுகிறது. புகைந்து கொண்டிருக்கும் தோசைக் கல்லில் அவள் ஒரு கரண்டி மாவை ஊற்றுகிறாள்.
காலையில் குளித்து முடித்து வரும் குஞ்ஞிமாளு படியைக் கடக்கிறபோது, ஹரிதாசனுக்காக சற்று ஒதுங்கி நிற்கிறாள்.
ஹரிதாசன் நிற்கிறான்.
ஹரிதாசன் முகத்தை உயர்த்தாமலே:
“ராத்திரி மேல வா. மூணாவது படி ஆடும். பார்த்து வரணும்.”
அவள் பதிலுக்குக் காத்திராமல் போகிறான். அவனின் சிகரெட் புகையோடு வார்த்தைகள் சேர்ந்து ஒலிக்கின்றன. அவள் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நிற்கிறாள்.
அவன் உண்டாக்கிய புகைப்படலம் பெரிதாகி அவளின் தலையைச் சுற்றி தெரிகிறது. பின்னர் அது காணாமல் போகிறது.
அன்று இரவு.
குஞ்ஞிமாளுவின் படுக்கையறை. அவள் அமர்ந்திருக்கிறாள். எங்கோ தூரத்தில் இருந்து ராக ஆலாபனை கேட்கிறது. அவள் விளக்கை அணைத்து படுக்கிறாள். உறங்கவில்லை. அவளின் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிகிறது.
மீண்டும் எழுந்து உட்காருகிறாள். என்ன செய்வது என்று தெரியாத நிலை.
அவள் என்னவோ தீர்மானித்ததுபோல் படுக்கிறாள். கண்களை மூடியபடி மெல்ல பிரார்த்திக்கிறாள்:
“கடவுளே!”
அதிகாலை நேரம்.
குளியலறையில் நீர் நிரப்பி விட்டு வெளியே வரும் குஞ்ஞிமாளு தனக்கு முன்னால் பிரஷ்ஷால் பல் துலக்கிக் கொண்டு நின்றிருக்கும் ஹரிதாசனைப் பார்த்து நிற்கிறாள். மேலே சொருகிய முண்டை கீழே இறக்கிவிட்ட அவள் தயங்கி நிற்க, அவளின் தோள் வழியே பார்த்து யாருமில்லை என்பது உறுதியானவுடன்-
ஹரிதாசன்: நீ ஏன் வரல?
அவள் பதட்டத்துடன் நின்றிருக்கிறாள். தலை குனிந்து கடந்து செல்லும்போது, பின்னால் இருந்து ஒரு வார்த்தை அவளின் முகத்தில்-
ஹரிதாசனின் குரல்:
“வரணும்...”
நீலத்தாமரை விரியக்கூடிய குளத்தின் பகுதி. மதிலையொட்டி குஞ்ஞிமாளுவும் அம்மிணியும். குஞ்ஞிமாளு குளித்து முடித்து விட்டாள். அம்மிணி குளிக்கப் போகிறாள்.
குஞ்ஞிமாளு: ஒரு ரூபா என் கையில இருந்திருந்தா நான் இன்னைக்கு படி மேல வச்சு கடவுளை வணங்குறதா இருந்தேன்.
அம்மிணி: எதைத் தெரிஞ்சிக்கிறதுக்கு?
குஞ்ஞிமாளு: இல்லாமலா அதைச் செய்வேன்?
அம்மிணி: சும்மா சோதிக்க வேண்டாம்.
குஞ்ஞிமாளு: கடவுளை நான் சோதிக்கல,அம்மிணி. எனக்கு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும்.
கேலிக் குரலில் அம்மிணி:
“யார்கிட்டயும் என்னன்னு சொல்ல முடியாத விஷயமா?”
குஞ்ஞிமாளு: (உறுதியான குரலில்) இது அந்த மாதிரி எதுவும் இல்ல அம்மிணி...
அவள் நடக்கிறாள்...
கண்களை மூடி பிரார்த்தித்த பிறகு, அவள் திரும்பி நடக்கிறாள்.
ஆலமரத்தின் அருகில் வருகிறாள்.
நாணு ஆசானும், குஞ்ஞிமாளுவும். அவளுக்கு கிழவரிடம் என்னவோ சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது. கிழவரும் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. கண்களில் ஒருவித பிரகாசத்துடன், புன்னகை தவழ, கிழவர் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறார்.
கிழவர்: என்னம்மா உன்னோட சந்தேகம்?
குஞ்ஞிமாளு: ஒண்ணுமில்ல..
கிழவர்: இருக்கு... உன் முகத்தைப் பார்க்கும்போதே தெரியுதே!
குஞ்ஞிமாளு பதைபதைப்புடன் நிற்கிறாள்.
குஞ்ஞிமாளு: படியில பணம் வைக்க முடியாதவங்க பிரார்த்தனை செஞ்சா, பூ விரியாதா?
கிழவர்: குழந்தை... இது அவங்கவங்களைப் பொறுத்தது. சிலருக்கு பதில் தாமரைக் குளத்துல கிடைக்கும். வேறு சிலருக்கு இந்த ஆலமரத்தோட இலைகள் பதில் சொல்லும். (அவளை உற்றுப் பார்த்துவிட்டு, புன்னகையுடன்) விஷயம் ரொம்பவும் முக்கியமானதோ?
அவள் நேராக பதில் எதுவும் கூறாமல் முகத்தைத் தாழ்த்தியவாறு ஆசானுடன் இதுவரை பேசிக் கொண்டிருந்ததே தவறு என்பது மாதிரி வேகமாக நடக்கிறாள்.
பகல்.
மனதில் அமைதி இல்லாமல் இருக்கும் குஞ்ஞிமாளு தோட்டத்தில் பசுவிற்குத் தீனி போடுகிறாள். அவளின் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் முகம்.
பசு அவளை உற்றுப் பார்க்கிறதோ என்று அவளுக்கு சந்தேகம். அவள் யாரிடம் என்றில்லாமல் முணுமுணுக்கிறாள்.
“எனக்குத் தெரியாது கடவுளே! நான் யார்கிட்ட சொல்லுவேன்?”
பசு பதில் கூறுகிற மாதிரி கத்துகிறது.
கோவிலுக்கு அருகில் பூசாரி, இரண்டு மூன்று கோவில் பணியாளர்கள். சட்டை போடாத நான்கைந்து ஊர்க்காரர்கள்.
ஒரு கிழவன்: ராத்திரி கோவில்ல சுத்தி கலசம் இருக்கு. அப்போ பூ பூக்கும்.
நம்பூதிரி: ஆனா, பூ பூக்க யாரும் பணம் வைக்கலியே!
இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை இல்லாத ஒரு ஆள்:
“நான்தான் எப்பவும் சொல்றேனே, பணம் வைக்கிறதுக்கும் பூவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு. தண்டும் வேரும் தண்ணிக்குள்ளேதானே இருக்கு! அப்போ அதுக்குன்னு நேரம் வர்றப்போ உண்டாகத்தான் செய்யும். அதுக்காக உலகத்துல இல்லாத விஷயத்தைச் சொல்லி கொண்டாடித் திரிய வேண்டாம்....”
அவன் கூட்டத்தை விட்டு வெளியே செல்கிறான்.
ஆலமரத்துக்குக் கீழே இருக்கும் கிழவர்.
கிழவர் சற்று தூரத்தில் பேசிக் கொண்டு நின்றிருக்கும் ஒரு சிறிய கூட்டத்தையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார்.
சற்று தூரத்தில் நடந்து போகும் குஞ்ஞிமாளுவை அவர் கூப்பிடுகிறார். - உரத்த குரலில்.
“இங்கே வா!”
குஞ்ஞிமாளு தூரத்தில் நிற்கிறாள் - தயக்கத்துடன். பிறகு அதே தயக்கத்துடன் நெருங்கி வருகிறாள்.
கிழவர்: கோவில் குளத்தைப் பார்த்துட்டுப் போ. நேற்று நீ கேட்ட கேள்விக்கு அங்கே பதில் இருக்கு.
அவள் வியந்து நிற்கிறாள். தொடர்ந்து புன்னகைக்கிறாள். நெருங்கி வருகிறாள். திரும்பி நடக்கிறாள்.
இப்போது அவள் வேகமாக காலடி எடுத்து வைத்து நடக்கிறாள். படு வேகமாக நடந்து ஆட்கள் யாரும் இல்லாத மதிலின் ஒரு ஓரத்தில் நின்றவாறு பார்க்கிறாள். கீழே குளம். குளத்தில் ஒர நீலப்பூ.
அவளையுமறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. அவள் திரும்பி நடக்கிறாள்.
மீண்டும் ஆலமரத்துக்குக் கீழே கிழவர் புன்னகை ததும்ப நின்றிருக்கிறார்.
“இப்போ சந்தேகம் தீர்ந்துடுச்சா, குழந்தை?”
குஞ்ஞிமாளு முகத்தைக் குனிந்தவாறு புன்னகைக்கிறாள்.
அந்த முகத்தில் குத்துவிளக்கின் எரிகின்ற திரியின் பிரகாசம். அவள் வீட்டு வாசலில் மாலை நேர விளக்கு ஏற்றி, உள்ளே போகும்போது, வாசலின் அருகில் ஹரிதாசன் நின்றிருக்கிறான். அவனுக்காக அவள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் குத்து விளக்குடன் சற்று விலகி நிற்க, அவனின் உதடுகள் மெல்ல உச்சரிக்கின்றன:
“நீ வரணும்...”
ஏணி இருக்கும் அறையில் அமர்ந்து அம்மா ராமாயணமோ என்னமோ படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையைக் கடந்து குஞ்ஞிமாளு ஏதோ ஒரு வேலைக்காக மேலே போகிறாள். அவள் தன் காலை மூன்றாவது படியில் வைக்கிறபோது, அது இலேசாக அசைகிறது.
அம்மா ஒரு நிமிடம் தான் படித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்க்கிறாள். மீண்டும் புத்தகம் வாசிப்பதில் ஈடுபடுகிறாள்.
மேலே அறையைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு கீழே வரும் குஞ்ஞிமாளு. குஞ்ஞிமாளுவின் கால்கள் இந்த முறை ஏணியின் மூன்றாவது படியையே மிதிக்காமல் கடந்து மிதித்து எந்தவித பிரச்சினையும் உண்டாக்காமல் கீழே வருகின்றன.
அம்மா ராமாயணம் வாசிக்கும் சத்தம் மட்டும். மற்றபடி ஒரே நிசப்தம்.
இரவு:
ஹரிதாசன் தன்னுடைய அறையில் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். கவனம் அதில் முழுமையாகச் செல்லவில்லை. எழுதியது போதும் என்று நினைத்துப் பேனாவை மூடி வைக்கிறான். பிறகு ஒரு மாத இதழை எடுத்து பக்கங்களை வெறுமனே புரட்டுகிறான். இடையில் காதைத் தீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். மீண்டும் புத்தகத்தைப் புரட்டுகிறான். என்னவோ யோசித்தவாறு அவன் பார்க்கும்போது வாசலில் பாதி மறைந்து கொண்டு அவனைப் பார்க்காமல் முகத்தைக் குனிந்தவாறு நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு.
அவன் மெதுவாக எழுந்து, வாசலை நோக்கி நடக்கிறான். பிறகு அவளின் கையைப் பற்றி உள்ளே அவளை ஆவேசத்துடன் இழுத்து தன்னுடன் நெருக்கமாக இருக்கச் செய்கிறான்.
அவளின் முகத்தில் காதல் உணர்வுகள் இல்லை. பயம்தான் தெரிகிறது. அவள் அறைக்குள் முழுமையாக வந்தபிறகு, அவன் மெல்ல - மிகவும் கவனமாக கதவை அடைக்கிறான். அவன் விளக்கை இப்போது அணைக்கிறான். திடீரென்று அறையில் இருள் மூடுகிறது. இருட்டில் கரைந்து அவர்கள் நிழல்களாக நின்று கொண்டிருக்கின்றனர். அவனின் கைப்பிடிக்குள் அவள் சிக்கிக் கொண்டிருக்கிறாள். அசையும் நிழல் உருவங்கள். அவன் அவளை மெத்தையில் படுக்க வைக்கிறான். எல்லாமே இருட்டில் நடக்கிறது. தூரத்தில் ஒரு ராக ஆலாபனை கேட்கிறது.
இருட்டில் எல்லாமே தெளிவு இல்லாமல் இருக்கின்றன. இருந்தாலும் அவளின் உடலின் மேல் மிகவும் நெருக்கமாக சாய்ந்து கிடக்கும் உருவம் தெரிகிறது. வயிற்றில் தடவிக் கொண்டிருக்கும் கைகள். வேண்டாம் என்று தடுக்கும் அவளின் கை. ப்ளவுஸின் கொக்கியை அவிழ்க்க முயலும் கை, எல்லாம் இருட்டில் கலந்து தெளிவில்லாமல் தெரிகின்றன.
ட்ராக்கில் ராக ஆலாபனை.
திரையில் மெல்லிய பெண் குரல்:
“வேண்டாம்... வேண்டாம்...”
தாழ்ந்த ஆண் குரல்:
“பரவாயில்லை... பரவாயில்லைன்றேன்...”
“அய்யோ வேண்டாம்...”
ஆடிக்கொண்டிருக்கும் வாழைப்பூ. அதில் தேன் குடித்துக் கொண்டிருக்கும் அணில் அடுத்த நிமிடம் தாவி ஓடுகிறது.
இப்போது வாழைப் பூ மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறது. அணில் கத்தும் ஓசை மட்டும் கேட்கிறது. அதிகாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் நின்றவாறு பல் தேய்த்துக் கொண்டிருக்கிறாள் குஞ்ஞிமாளு. அணிலின் அட்டகாசம் தாங்க முடியாமல் கல்லை எடுத்து வாழை மரங்களின் மேல் அவள் எறிகிறாள். அணிலின் ஆர்ப்பாட்டம் அடங்குகிறது.
அவள் கிணற்றின் கரையில் நின்று முகம் கழுவுகிறாள். ஈர்க்குச்சியால் நாக்கை வழித்து, மீண்டும் முகம் கழுவுகிறாள். சமையலறையை நோக்கி நடந்து செல்லும்போது வெளிவாசலில் அவளுக்கு முதுகை காட்டியவாறு நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஹரிதாசனின் ஒர தூரதோற்றம். அவள் சமையலறைக்குள் நுழைகிறாள்.
சமையலறையில் அம்மா தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு நிமிடம் அம்மாவை நேருக்கு நேராக பார்க்காமல் கவனிக்கிறாள்.
காலை நேரம்.
ஹரிதாசனின் படுக்கையறையில் குஞ்ஞிமாளு. கசங்கிக் கிடக்கும் மெத்தைக்கு அருகில் - அதையே பார்த்தவாறு ஒரு நிமிடம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்துபோய் நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு.
அவள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது.
யோசனையில் இறுதியில் அவள் முகம். மெத்தையைச் சரி செய்தபோது என்னவோ கீழே விழுகிறது. என்னவென்று பார்த்தால் வளையல் துண்டுகள். அவள் தன் கைகளைப் பார்க்கிறாள்.
ஒரு வளையலைக் காணோம். யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்தவாறு அவள் கீழே கிடந்த வளையல் துண்டுகளை எடுத்து மடிக்குள் மறைத்து வைக்கிறாள்.
நீரில் ஒரு வளையல் துண்டு விழுகிறது. அது கொஞ்ச நேரத்தில் கீழே போகிறது. குஞ்ஞிமாளு மற்ற வளையல் துண்டுகளையும் நீருக்குள் எறிகிறாள்.
அவள் தற்போது கோவில் குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாள். பின்னர் நடக்க ஆரம்பிக்கிறாள்.
குஞ்ஞிமாளு ஷாரத்தெ வீட்டின் முன் சந்தேகத்துடன் நிற்கிறாள். கையில் அப்பளக்கட்டு இருக்கிறது. முன்பக்கம் யாரையும் காணோம். உள்ளே இருந்து வாசலுக்கு வந்த அம்மிணி ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோக முயலும்போது அவள் குஞ்ஞிமாளுவைப் பார்க்கிறாள். அடுத்த நிமிடம் படியை நோக்கி ஓடி வருகிறாள்.
அம்மிணி: அக்கா பிரசவமாயிட்டாங்க! நேத்து ராத்திரி. இப்பவும் பெண் குழந்தைதான்.
குஞ்ஞிமாளு: நான் செட்டிச்சி கடை வரை போயிட்டு வர்றேன். அவருக்கு மிளகு அப்பளம்னா ரொம்பவும் பிடிக்குமாம்.
அம்மிணி: நீ வர்றியா? குழந்தையை நீ பார்க்க வேண்டாமா? நல்ல நிறம்... தெரியுமா? முடி எவ்வளவுன்ற?
குஞ்ஞிமாளு: நான் பிறகு வர்றேன். இன்னும் குளிக்கக்கூட இல்ல. (சந்தேகத்துடன்) அம்மிணி, உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?
அம்மிணி: எதுக்கு? சின்னச் சின்னதா யாராவது சொன்னா புரிஞ்சுக்குவேன். அக்கா அப்பப்போ ஏதாவது சொல்லித் தருவாங்க. இப்போ படிச்சு என்னத்தைச் செய்யப் போறோம்?
குஞ்ஞிமாளு: ஸேஃப்னா என்ன அர்த்தம்?
அம்மிணி: (சிறிது நேரம் ஆலோசித்து) ஸேஃப்... ஸேஃப்... அலமாரிக்குத்தான் அப்படிச் சொல்வாங்க.
குஞ்ஞிமாளு: ஸ்வீட்னா?
அம்மிணி: இனிப்பா இருக்குறதை அப்படிச் சொல்லுவாங்க. மிட்டாயி, லட்டு... இதையெல்லாம் ஸ்வீட்னுதான் சொல்லுவாங்க. ஆமா... உன்கிட்ட யாரு இங்கிலீஷ்ல லெக்சர் அடிக்குறது?
குஞ்ஞிமாளு: யாருமில்ல... சும்மா கேட்டேன். சரி போ...
அம்மிணி: சரி நான் போறேன். எச்சரிக்கையா இருந்துக்கோ. இங்கிலீஷ்ல ஆரம்பிச்சா, ரொம்பவும் எச்சரிக்கையா இரு. என்ன இருந்தாலும் எம்.ஏ.க்காரன் இருக்கிற வீடாச்சே! வேற சிலரோட இங்கிலீஷ் என்கிட்டயும் வருது. நீ ரொம்பவும் கவனமா இருந்துக்கோ.
குஞ்ஞிமாளு மிகவும் வெட்கத்துடன் - தயங்கியவாறு நின்றிருக்கிறாள்.
“உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிடுச்சு!”
அவள் தன் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை எங்கே அவள் பார்த்து விடப் போகிறாளோ என்று மறைத்தவாறு வேகமாக அந்த இடத்தை விட்டு நீங்குகிறாள்.
வீட்டின் வாசல்.
அம்மா, மகன், கணக்குப் பிள்ளை அச்சுதன் நாயர் ஆகியோர் இருக்கிறார்கள். அச்சுதன்நாயர் பாக்குகளை வெட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா தலை வாரிக் கொண்டிருக்கிறார்.
மகனின் கவனம் பாதி பத்திரிகையிலும் மீதி அம்மா மீதுமாக இருக்கிறது.
அம்மா: அப்பு மாமாவைப் பார்க்குறப்போ நான் கேக்குறேன்- அவர் பண்றது சரியா இருக்கான்னு. (அச்சுதன் நாயரிடம்) இவனுக்கு வேலை விஷயம் சரியாயிருச்சா என்ன? இவனுக்குன்னு எல்லாம் ஒழுங்கா அமைய வேண்டாமா? அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுறதே இல்ல. கடிதத்துல ஒண்ணே ஒண்ணை மட்டும் தவறாம எழுதிடுறாரு.
அச்சுதன் நாயர்: மத்தவங்களைப் போலவா இங்கேயுள்ள விஷயம்? இங்க இருக்குறதே ஒரே ஒரு ஆண் பிள்ளைதான். வேலை பார்த்து மாச சம்பளம் கட்டாயம் வாங்கணும்ன்ற நிலைமை எல்லாம் இங்கே இல்ல. அதுனாலதான் அப்பு மேனன் இந்த அளவுக்கு அவசரப்படுறாரு.
அம்மா: வேலை விஷயமா நீ ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கியா தாசா?
ஹரிதாசன்: என் நண்பன் ஒருத்தனோட அப்பாக்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். முதல்ல ரிசல்ட் வரட்டும்மா. அதுதான் இப்போ எனக்கு பயமே.
அம்மா: டைஃபாயிடா கெடந்து முழுசா குணமாகுறதுக்கு முன்னாடியே பி.ஏ. எழுதினியே! அப்போ உனக்கு ஒரு சந்தேகமும் இல்லியே!
ஹரிதாசன்: (பத்திரிகையை திண்ணையில் வைத்துவிட்டு) அன்னைக்கு எனக்கு பயமே இல்ல. இப்போ ஒரு பேப்பரைப் பற்றி நான் ரொம்பவும் கவலையா இருக்கேன்.
(வெளியே செல்கிறான்)
அம்மா: (கணக்குப் பிள்ளையிடம்) இவனுக்கு எப்பவுமே சந்தேகம்தான். ஆனா, ரிசல்ட் வர்றப்போ பாருங்க முதல் வகுப்புல பாஸ் பண்ணியிருப்பான். இவனோட குணமே இதுதான். மனசுல கொஞ்சம்கூட உறுதி கிடையாது. பாவம்!
இரவு.
ஹரிதாசனின் படுக்கையறை. சிறிது நேரம் அங்கு இருந்த பிறகு குஞ்ஞிமாளு தன்னுடைய இடத்திற்குப் போவதற்குத் தயாராக இருக்கிறாள். அறையில் இலேசான வெளிச்சம் இருக்கிறது. அவன் ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு படுத்திருக்கிறான். அவள் தனக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத இடத்தில் இருப்பது போல மனதில் நினைத்துக் கொண்டு ப்ளவுஸின் கடைசி பட்டனைப் போட்டுக் கொண்டிருக்கிறாள். மெதுவான குரலில் குஞ்ஞிமாளு:
“பரீட்சையைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு பயம்?”
ஹரிதாசன்: (தாழ்ந்த குரலில்) ஒரு பேப்பர் ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு.
குஞ்ஞிமாளு: கவலைப்படாதீங்க. நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே நடக்காது.
ஹரிதாசன் அவளை வியப்புடன் பார்க்கிறான்.
குஞ்ஞிமாளு: சந்தேகம் இருந்தா, நான் அதைத் தீர்க்குறேன்.
அவன் எதுவுமே பேசாமல், சிரிக்கிறான்.
குஞ்ஞிமாளு: (மிடுக்காக) சிரிக்காதீங்க... நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லல. இதை முன் கூட்டியே தெரிஞ்சிக்கிறதுக்கு வழி இருக்கு.
ஹரிதாசன்: நீதான் போர்ட் ஆஃப் எக்ஸாமினர்ஸ் போலிருக்கு?
குஞ்ஞிமாளு: என்ன சொல்றீங்க?
ஹரிதாசன்: மார்க் போடுறது நீதானோன்னு கேட்டேன்.
குஞ்ஞிமாளு: நான் போட வேண்டாம். எல்லாம் தெரிஞ்ச ஒரு ஆள் இருக்கானே?
அவள் மிடுக்காக வெளியே நடந்து செல்கிறாள். அவன் திரும்பிப் பார்க்கிறான். தலையணையில் அவள் தலை வைத்து படுத்த பகுதியை அவன் முகர்ந்து பார்க்கிறான். முழுமையான மனநிறைவுடன் அடுத்த நிமிடம் கண்களை மூடி உறங்கி ஆரம்பிக்கிறான்.
சமையலறைப் பகுதி.
மாலை நேரம். சிறிய ஒரு துண்டைத் தோளில் இட்டவாறு உள்ளே இருந்து வந்த குஞ்ஞிமாளு செறுமி பெருக்கிக் கூட்டி வைத்திருக்கும் குப்பைகளை நெருப்பில் போட்டு எரிக்கிறாள். அதைப் பார்த்தவாறு நின்றிருக்கும் அம்மாவின் அருகில் வந்து குஞ்ஞிமாளு (தயங்கியவாறு):
எனக்கு ஒரு ரூபா வேணும்...
அம்மா: வீட்ல இருந்து யாராவது வந்திருக்காங்களா என்ன?
குஞ்ஞிமாளு: யாரும் வரல. இது... இது கோவில்ல வழிபாடு நடத்துறதுக்கு...
அம்மா: சில்லறையை போட்டு வைக்கிற டப்பாவுல இரண்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருக்கு. அதுல இருந்து எடுத்துக்கோ.
அவள் சென்ற பிறகு, அம்மா வேலைக்காரியிடம்:
“வண்ணாத்திப் பொண்ணுன்னாங்க. இருந்தா என்ன? நல்ல குணம்... கடவுள் பக்தி... ஒரு குறையும் சொல்றதுக்கு இல்ல. பாவம்...”
செறுமி: அந்த மீனாட்சி பாட்டி கஞ்சியும் சோறும் தர்றப்போ, என் கையில செலவுக்கு ஏதாவது தருவாங்க. இது அப்படியெல்லாம் எதுவும் தர்றதில்ல...
கோவிலில் இருந்து கொட்டும், பாட்டும் கழிந்து மாராரும் மற்றவர்களும் வெளியே வருகிறார்கள். கூட்டத்தில் குஞ்ஞிமாளுவும், அம்மிணியும் இருக்கிறார்கள். அம்மிணியுடன் பன்னிரெண்டும் எட்டும் வயதான இரண்டு சிறுமிகள்.
சிறுமிகள் பலர் கூட்டமாக ஆலமரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு முன்னால் அம்மிணியும் குஞ்ஞிமாளுவும்.
அம்மிணி: என்கிட்ட கூட சொல்ல மாட்டியா?
குஞ்ஞிமாளு: இதை மட்டும் சொல்லவே மாட்டேன்.
அம்மிணி: பணம் வச்சு சாமி கும்பிடுறேன்னா, நிச்சயம் இது சின்ன விஷயமா இருக்காது. (சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு) நான் சொல்லட்டுமா?
‘சொல்லு...’ என்று சொல்வது மாதிரி சற்று பயத்துடன் குஞ்ஞிமாளு தலையை ஆட்டுகிறாள்.
அம்மிணி: குஞ்ஞிமாளு, உன்னை யாரோ பொண்ணு கேட்டிருக்காங்க. இந்த விஷயத்தை யாரோ உன்கிட்ட வந்து சொல்லி இருக்காங்க. இது நடக்குமா நடக்காதான்னு தெரிஞ்சிக்கணும்னு நீ நினைக்கிறே. அதுக்காகத்தான் நீ பணம் வச்சு, கடவுள்கிட்ட வேண்டி நிக்கிறே. என்ன - நான் சொன்னது உண்மைதானா? சொல்லு...
குஞ்ஞிமாளு: (சிரித்தவாறு) இல்ல... இல்ல... உன்னால நிச்சயம் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது. (குரலை மாற்றி) இங்க பாரு... பின்னாடி நான் உனக்கு நிச்சயம் இதைச் சொல்வேன். கட்டாயம்... இப்ப நீ இதைப் பற்றி என்கிட்ட கேட்காதே. என்ன?
மறுநாள்.
பகல். ஹரிதாசனின் அறை.
அவன் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவின் பாகங்களை முழுமையாக கழற்றி எடுத்து, மீண்டும் அவற்றைப் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.
அப்போது குஞ்ஞிமாளு கடந்து வருகிறாள்.
ஹரிதாசன்: (அவளைப் பார்த்து இதுவும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கமா என்ற எண்ணத்துடன்) அம்மா என்ன பண்றாங்க?
குஞ்ஞிமாளு: (மெதுவான குரலில்) சமையலறையில் இருக்காங்க. இங்க பாருங்க.... பரீட்சையைப் பற்றி நீங்க இனி கவலைப்படவே வேண்டாம்! தெரியுதா? இனிமேல் நீங்க எது நினைச்சாலும் நடக்கும், இந்தாங்க....
அவள் கையில் இருந்த பேப்பர் பொட்டலத்திற்குள் ஒரு இலையில் சுற்றப்பட்டிருந்த நீலத்தாமரை அடங்கியிருந்த கோவில் பிரசாதத்தை அவனிடம் தருகிறாள்.
ஹரிதாசன்: என்ன இது?
குஞ்ஞிமாளு: இந்தச் சந்தனத்தை எடுத்துக்கங்க. பிரசாதம். நான் கும்பிட்டதுக்கு, நிச்சயம் பலன் கிடைக்காமல் போகாது.
அவன் பிரசாதத்தையும், கள்ளம் கபடமற்ற அவளின் முகத்தையும் பார்க்கிறான். பிறகு இலையை அவளிடமிருந்து வாங்குகிறான்.
குஞ்ஞிமாளு கீழே அம்மாவுக்கு அருகில் சமையலறையில்-
அம்மா: நான் அடுப்பைப் பார்த்துக்குறேன். நீ வைத்தியரைப் போய்ப் பார்த்து களிம்பு வாங்கிட்டு வா. சீக்கிரம். அச்சுதன் நாயர் நாளைக்குத்தான் வருவாரு.
குஞ்ஞிமாளு வெளியே செல்ல முயலும்போது திரும்பி-
“மேலே சாயா கொடுக்கணுமே...”
அம்மா: நான் கொடுத்துக்குறேன்...
கிராமத்தில் இருக்கும் வைத்தியர் வீட்டின் படியில் குஞ்ஞிமாளுவும் (கையில் களிம்பு குப்பி), அவளுக்குப் பின்னால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுவனும் (காளியின் பேரன்) இறங்கி நடக்கிறார்கள். தூரத்தில் பாகவதரின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அவள் கிழக்கும் பாட்டு வீட்டுப் படியில் கால் வைக்கிறபோது, பாட்டு இலேசாகக் கேட்கிறது. படிக்கு அருகிலேயே சிறிது நேரம் நிற்கிறாள். கேமரா அந்த வீட்டுக்குள் தன் பார்வையைப் பதிக்கவில்லை.
அவள் நடக்க ஆரம்பிக்கிறாள்.
கிராமத்துக் காட்சிகள்.
தூரத்தில் பாட்டுச் சத்தம்.
கிராமத்தின் ஒரு தேநீர் கடை. அதற்கு முன்னால் ஒரு சைக்கிள்காரன் வண்டியை விட்டு இறங்கி, அங்கு இருப்பவர்களிடம் என்னவோ விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
“கெ.ஹரிதாஸ் மேனன், கிழக்கும்பாட்டு... அவருக்கு ஒரு தந்தி வந்திருக்கு... அவரோட வீடு எங்கே இருக்கு?”
கடைக்காரன்: கெழக்கும் பாட்டு ஹரிதாசனா? இதோ... அந்த வழியே போயி, இடது பக்கம் போனா ஒரு கோயில் இருக்கும். அங்கே இருந்து கீழே போனா ரெண்டு வழி இருக்கு. முதல் வழியை விட்டுட்டு ரெண்டாவது வழியில நீ போகணும்.
தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் ஒருவன்:
நாம கொடுத்திடலாம். இல்லாட்டி அந்தக் கணக்குப்பிள்ளை இப்போ வருவாரு.
அங்கே அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் சாப்பாட்டுப் பிரியர் குட்டிசங்கர மேனனைப் பார்த்து:
“இதோ இந்த மேனன் இருக்காரே... இவர் அந்தப் பக்கம் போறவருதான். நீ இவர்கிட்டயே கூட கொடுக்கலாம்.”
குட்டி சங்கர மேனனின் முகத்தில் ஒரு உணர்ச்சி மாற்றமும் இல்லை.
தந்திக்காரன்: இதுல கையெழுத்துப் போடுங்க.
அவர் அசையாமல் இருக்கிறார்.
அச்சுதன் நாயர் அப்போது அங்கு வருகிறார்.
“என்ன அங்கே? யாருக்குத் தந்தி வந்திருக்கு? ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கிறதா சொன்னாங்களே!”
அவர் தந்தியை வாங்குகிறார்.
தந்திக்காரன் காட்டிய இடத்தில் அவனுடைய பேனாவை வாங்கி கையெழுத்துப்போட்ட அச்சுதன் நாயர், வாங்கிய தந்தியை இப்படியும் அப்படியுமாய் பார்த்தவாறு என்னவோ சிந்திக்கிறார்.
தேநீர் கடைக்காரன்: தந்தின்னு வர்றப்போ யார் வேணும்னாலும் பிரிச்சு பார்க்கலாம். என்ன யோசிக்கிறீங்க அச்சுதன் நாயரே?
அவர் அந்த ஆள் சொன்னதை கவனிக்காமலே நடக்கிறார்.
ஒற்றையடிப் பாதை.
அச்சுதன் நாயர் வேகமாக நடக்கிறார். ஒரு முஸ்லீம் எதிரில் வந்து நின்று:
“உங்களை காலையில இருந்து நான் தேடிக்கிட்டு இருக்கேன். எவ்வளவு நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறது!”
அச்சுதன் நாயர்: (நடந்தவாறு) எனக்கு இப்போ பேசுறதுக்கு நேரமில்ல. என் பின்னாடியே வா... (நடந்தவாறு) ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கு (நடக்கிறார்)....
பின்னால் யாரோ கூப்பிடுகிறார்கள்.
“அச்சுதன் நாயர்... கொஞ்சம் நில்லுங்க... ஒரு விஷயம் சொல்லணும்...”
அச்சுதன் நாயர்: (திரும்பி நின்று) இப்போ பேசுறதுக்குநேரம் இல்ல குமாரா... ஹரிதாசனுக்கு தந்தி வந்திருக்கு...
நடக்கிறார்.
சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் குஞ்ஞிமாளு. மகிழ்ச்சியுடன் சமையலறை வாசலில் வந்து நிற்கிறாள் அம்மா.
“ஹரிதாசன் பாசாயிட்டான். முதல் வகுப்பு... இப்போத்தான் அச்சுதன் நாயர் தந்தி கொண்டு வந்து கொடுத்தாரு....”
அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தன் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை முடிந்தவரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் வைத்திருக்கிறாள் குஞ்ஞிமாளு. அம்மா திரும்பியபோது-
குஞ்ஞிமாளு: அம்மா...
அம்மா திரும்பி நிற்கிறாள்.
குஞ்ஞிமாளு: (தயக்கத்துடன்) நாம இன்னனக்கு பாயசம் வைப்போம்.
அம்மா ஒரு நிமிடம் யோசிக்கிறாள்.
அம்மா: கோயில்ல பாயசம் கொடுக்க ஏற்பாடு பண்ணச் சொல்லி அச்சுதன் நாயர்கிட்ட சொல்லி இருக்கேன். அதுபோதும். இவனோட அழுக்குத் துணிகளை நல்லா துவைச்சுப் போடு. அச்சுதன்நாயர் கிட்ட கொடுத்து இஸ்திரி போட்ட வாங்கி வரச் சொல்லணும். எப்போ இவன் போக வேண்டியதிருக்கும்னு எனக்குத் தெரியல...
குஞ்ஞிமாளு: பெட்டி இருந்தா, நானே இஸ்திரி போட்டு கொடுத்துடுவேன்.
அம்மா: வீட்ல இஸ்திரி போடுறது பொதுவா அவனுக்குப் பிடிக்காது (வெளியே செல்கிறாள்).
மனதில் மகிழ்ச்சியுடன் புன்னகை தவழ நின்றிருக்கிறாள் குஞ்ஞிமாளு. ஏதோ கனவு கண்டு எழுந்ததைப் போல், மீண்டும் சமையல் வேலைகளில் அவள் மூழ்கி விடுகிறாள்.
அம்மாவின் குரல் அவள்மேல்-
“குஞ்ஞிமாளு... கொஞ்சம் வாசலுக்கு வா. வேலைகளை முடிச்சிட்டு வந்தா போதும்...”
அவளின் முகத்தில் மீண்டும் ஒரு மலர்ச்சி.
வாசல்.
வண்ணாத்திக் கிழவி வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். அம்மா தந்த பணத்தை வாங்கி கிழவி தன்னுடைய மடியில் வைக்கிறாள்.
கிழவி: எட்டு வருஷமா அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்ல. இப்போத்தான் வந்தான். அவன் இப்போ ரொட்டிக் கடையில வேலை பார்த்துக்கிட்டு இருக்கான்.
அம்மா: உங்களுக்கு உதவிக்கு ஒரு ஆளு வந்தது மாதிரி ஆச்சே!
கிழவி: அவன் வீட்ல இருந்தா, துணி துவைக்க ஒரு ஆளு கிடைச்ச மாதிரி இருக்கும். நாலு ஆளுங்க செய்ற வேலையை அவன் ஒருத்தனே செஞ்சு முடிச்சிடுவான். ஆனா வந்ததுல இருந்து திரும்பிப் போறதுலயே குறியா இருக்கான்.
அப்போது குஞ்ஞிமாளு அங்கு வருகிறாள். தயக்கத்துடன் நிற்கிறாள். கிழவியைப் பார்த்ததும் மலர்ந்திருந்த அவளின் முகத்தில் ஒருவகை வாட்டம் வந்து ஒட்டிக் கொள்கிறது.
கிழவி: உன்னோட அப்பு மாமா வந்திருக்கான், குஞ்ஞிமாளு...
குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் மவுனமாக நின்றிருக்கிறாள்.
கிழவி: (அம்மாவிடம்) அவன் அவளை வீட்ல இருக்க வைக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றான். யோசிக்கிறப்போ ஒரே ஒரு வழிதான் தெரியுது. இவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணித் தர்றதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். அப்போத்தான் அவன் வீட்ல ஒழுங்கா இருப்பான். அவன் கல்யாணம் பண்றேன்னோ, பண்ணமாட்டேன்னோ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறான்.
அம்மா: ம்... இவளுக்கும் கிட்டத்தட்ட பதினேழு வயசு ஆச்சுல்ல!
அம்மா பார்க்கும்போது குஞ்ஞிமாளு மெதுவாக தலையைக் குனிந்தவாறு உள்ளே போய்க் கொண்டிருக்கிறாள்.
பகல்.
ஏணியில் இறங்கி வரும் ஹரிதாசன் அங்குமிங்கும் பார்க்கிறான்.
அம்மா பகலில் உறங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்க்கிறான்.
அடுத்த நிமிடம் சமையலறைப் பக்கம் செல்கிறான்.
சமையலறைக்கு வெளியே கிணற்றுக்குப் பக்கத்தில் குஞ்ஞிமாளு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். அவன் தோட்டத்தைப் பார்க்கிறான். கன்றுக்குட்டி அங்கு நின்றிருக்கிறது.
அவன் அவளருகில் வருகிறான்...
தனக்கு நெருக்கமாக காலடிச் சத்தம் கேட்டதும், அவள் தலையை உயர்த்திப் பார்க்கிறாள். ஹரிதாசன் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறான்.
ஹரிதாசன்: அம்மா தூங்கிக்கிட்டு இருக்காங்க. மேலே வா.
அவன் மீண்டும் உள்ளே செல்கிறான்.
பகல்:
ஹரிதாசன் அறையில் அவளை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறான்.
குஞ்ஞிமாளு அங்கு வருகிறாள். அவன் அவளை இறுக கட்டிப்பிடித்து தன்னுடன் இருக்க வைக்க முயல்கிறான். அவள் அவன் பிடியை விட்டு, விலகி நிற்கிறாள்.
“அய்யோ... அம்மா எப்போ கூப்பிடுவாங்கன்னே சொல்ல முடியாது!”
அவன் மீண்டும் அவளைக் கட்டிப் பிடிக்க முயற்சிக்கிறான்.
குஞ்ஞிமாளு: வேண்டாம்... இப்போ எதுவுமே வேண்டாம்.
ஹரிதாசன்: பிறகு எப்போ?
அவள் விலகி நின்று தலை குனிந்தவாறு புன்னகைக்கிறாள்.
ஹரிதாசன்: இனி வேலை விஷயம் வேற சரியாக வேண்டியதிருக்கு. அதுக்கு உன் கையில ஏதாவது ஸ்பெஷல் வழிபாடு இருக்கா என்ன?
குஞ்ஞிமாளு: நான் கடவுள்கிட்ட வேண்டுகிறேன் (சிறிது நிறுத்தி) ஒரு ரூபா தர்றீங்களா?
ஹரிதாசன்: எதுக்கு?
குஞ்ஞிமாளு: தேவைப்படுது.
அவன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறான். அவளிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டுகிறான்.
குஞ்ஞிமாளு: இது எனக்கு எதுக்கு? ஒரு ரூபா போதும்.
ஹரிதாசன் ஒன்றுமே புரியாமல் அவளைப் பார்க்கிறான். அடுத்த நிமிடம் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவள் திரும்பி நடக்க முயல-
ஹரிதாசன்: (மெதுவாக) ராத்திரி...
அவனின் குரல் அவள் முகத்தில்-
தெளிவற்ற நிலையிலிருந்த தெளிவான நிலைக்கு வரும் தாமரைக் குளம். அதில் ஒரு சிறிய நீலத்தாமரை.
கரையில் குஞ்ஞிமாளு.
அதிகாலை நேரம்.
குஞ்ஞிமாளு கண்களை மூடி தொழுகிறாள்:
“கடவுளே!”
அவளுக்கு நிம்மதி. திரும்பி நடக்க முயலும்போது, அவளுக்கு முன்னால் அம்மிணி. அம்மிணியின் முகத்தில் இலேசான கவலை தெரிகிறது. குஞ்ஞிமாளுவின் முகத்தில் மகிழ்ச்சியும் புன்னகையும்.
அம்மிணி: உன்னோட பிரார்த்தனை எப்பவுமே பலிக்குமா?
குஞ்ஞிமாளு: கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்.
அம்மிணி: நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை செஞ்சு பார்த்தேன். நான் நினைச்ச மாதிரி எனுக்கு எதுவுமே நடக்கல.
அவளின் குரலில் கவலை தெரிகிறது. அதைப் பார்த்து சிறிது கலக்கத்துடன் குஞ்ஞிமாளு!
“என்ன அம்மிணி?”
அம்மிணி: (தன் கவலையை அடக்கிக்கொண்டு, புன்னகைத்தவாறு) ஒண்ணுமில்ல...
ஆலமரத்துக்குக் கீழே அமர்ந்திருக்கும் கிழவர் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்.
கிழவர்: நளினீதலகதஜலமதி தரளம்
தத்வஜ்ஜீவித மதிசயசபலம்
வித்திவ்யாத்யமிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்
இளம்பெண்கள் அருகில் வந்ததும் தான் சொல்லிக் கொண்டிருக்கிற சுலோகத்தை அவர் நிறுத்துகிறார். அவர்களையே அர்த்தம் நிரம்பிய பார்வையுடன் உற்று நோக்குகிறார். என்னவோ சொல்ல நினைத்த அவள், அதைச் சொல்லாமல் ஒதுக்கி வைத்து, ‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டியவாறு தனக்குத்தானே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போகிறார்.
வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான் ஹரிதாசன். வாசலில் ஈரத் துணிகளை காயப் போட்டுக் கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவை இங்கிருந்தே அவனால் பார்க்க முடிகிறது. அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த அவன் மீண்டும் புத்தகம் படிப்பதில் ஈடுபடுகிறான். அவள் அவனைக் கடந்து நடந்துபோகும்போது அவன் கடைக் கண்ணால் அவளைப் பார்க்கிறான். அவனின் மடியில் ஒரு நீலப் பூ விழுகிறது. அவன் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க, திரும்பிக்கூட பார்க்காமல் அவள் நடந்து உள்ளே செல்கிறாள்.
அவன் அந்த மலரைக் கையால் எடுத்துப் பார்க்கிறான். (முகர்ந்து பார்க்கவில்லை) பிறகு என்னவோ நினைத்தவாறு அவன் புன்னகை தவழ அந்த மலரைப் புத்தகம் கொண்டு மூடுகிறான்.
அப்போது படியைக் கடந்து வரும் கருப்பு நிற இளைஞனை அவன் பார்க்கிறான். அந்த இளைஞனின் காலில் செருப்பு கிடையாது. மடித்துக் கட்டப்பட்ட வேஷ்டியும், அரைக் கைச் சட்டையும் அணிந்திருக்கிறான். கிராமிய மணம் அவனின் தோற்றத்தில் தெரிகிறது.
அவன் ஹரிதாசனுக்கு அருகில் வந்து நிற்கிறான். அவனை ஹரிதாசன் ‘யார்’ என்ற கேள்வி மனதில் எழ பார்க்கிறான்.
அப்புக்குட்டன்: நான் அக்கரையில் இருந்து வர்றேன்.
ஹரிதாசன்: அப்படியா?
அப்புக்குட்டன்: (கூச்சம் எதுவும் இல்லாமல்) என்னோட சொந்தக்காரப் பொண்ணு இங்கே வேலை பார்க்குது. நான் அதைப் பார்க்கணும்.
ஹரிதாசன்: (அவனைக் கூர்ந்து பார்த்தவாறு) ம்...
அப்புக்குட்டன்: எனக்கு நேரம் கிடைக்கிறதே பெரிய விஷயம். டவுண்ல பேக்கரியில வேலை பார்க்குறேன். நான் உடனே போய் ஆகணும். அதுக்கு முன்னாடி சில வீட்டு விஷயங்களைச் சரி பண்ண வேண்டியதிருக்கு...
ஹரிதாசன் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்.
அப்புக்குட்டன்: நான் உடனே கிளம்பணும்.
ஹரிதாசன் ஆர்வமே இல்லாமல் உள்ளே போகிறான்.
வந்திருக்கும் இளைஞன் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கண்களால் அளந்தவாறு, தூசியைத் தட்டி திண்ணையில் அமர்கிறான்.
சமையலறையில்:
அம்மாவும் குஞ்ஞிமாளுவும்.
குஞ்ஞிமாளு: எனக்கு இங்கே வேலை இருக்கு. அம்மா, நீங்க சொல்லி அனுப்பிடுங்க...
அம்மா: போய் என்னன்னு கேளு. நீ பார்க்க முடியாதுன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? (அன்பான குரலில்) ஒரு வேளை அந்த ஆளு உன்னைப் பொண்ணு பார்க்குறதுக்காக வந்திருக்கலாம்.
குஞ்ஞிமாளு: (கொஞ்சம் கூட விருப்பமில்லாத குரலில்) யாரும் அப்படி என்னைப் பார்க்க வர வேண்டிய அவசியமில்ல...
அம்மா: பொதுவா எல்லா பொண்ணுகளுமே ஆரம்பத்துல இப்படித்தான் சொல்லுவாங்க. போ... அவனுக்குச் சாயாவோ, வேற ஏதாவதோ கொடு, சாப்பிடுறதா இருந்தா சாப்பாடு போடு...
அம்மா வெளியே செல்கிறாள்.
வாசல். அப்புக்குட்டன் அமர்ந்திருக்கிறான். குஞ்ஞிமாளு அவனிடம் வருகிறாள். குஞ்ஞிமாளுவைப் பார்த்ததும், அவன் மனதில் ஒருவித திருப்தி உண்டாகிறது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இலேசாகச் சிரித்தவாறு-
அப்புக்குட்டன்: குஞ்ஞிமாளு, நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.
குஞ்ஞிமாளு: ம்...
அப்புக்குட்டன்: இங்கே நீ நல்லா இருக்கேல்ல?
அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டுகிறாள்.
அப்புக்குட்டன்: ஆமா... இங்கே யார் யார் இருக்குறது?
குஞ்ஞிமாளு: அதிகமா யாரும் கிடையாது. அம்மா... பிறகு அம்மாவோட மகன்.
அப்புக்குட்டன்: ஓ... இப்ப பார்த்தேனே அந்த ஆளா?
இரண்டு பேரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர்.
அப்புக்குட்டன்: அங்கே எனக்கு நாளொண்ணுக்கு பதினஞ்சு ரூபா சம்பளம். சில நேரங்கள்ல இருபது ரூபா கிடைக்கிறதும் உண்டு. ஆனா, இனி அந்த வேலைக்குப் போக வேண்டாம்னு கிழவி சொல்லுது.
குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் நின்றிருக்கிறாள்.
அப்புக்குட்டன்: உன்னோட கருத்து என்னன்னு சொல்லு.
குஞ்ஞிமாளு வாய் திறக்காமல் இருக்கிறாள்.
அப்புக்குட்டன்: சரி... நீ எப்போ அங்கே வர்ற? அதைத் தெரிஞ்சிக்கிட்டு வர்றதுக்குத்தான் அப்பாவும் பாட்டியும் என்னை இங்கே அனுப்பி வச்சாங்க.
அவள் பேசாமல் இருக்கிறாள்.
அப்புக்குட்டன்: என்ன... எதுவுமே பேசாமல் நின்னுக்கிட்டு இருக்கே?
குஞ்ஞிமாளு: அம்மாக்கிட்ட கேக்கணும்...
அப்புக்குட்டன்: அவங்களோட சவுகரியத்தைப் பார்த்துக்கிட்டு என் விஷயத்தைத் தீர்மானிக்கிறது அவ்வளவு சரியா இருக்காது. எனக்கு டவுண்ல இருக்குறதுல ஒரு கஷ்டமும் இல்ல... மேலும் அந்த வயசான கிழவி சொல்றப்போ...
வாசலில் ஹரிதாசன்-
“ஸ்... ஸ்... மெதுவா பேசணும். இங்கே மட்டும் கேக்குற மாதிரி பேசினா போதும்...”
இதைக் கேட்டதும் அப்புக்குட்டனின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் தெரிகின்றன. ஒன்றும் பேசாமல் அவன் எழுந்து நிற்கிறான்.
அப்புக்குட்டன்: வெள்ளிக்கிழமை நீ அங்கே வரணும். நீ அப்படி வரலைன்னா, நான் என் பாட்டுக்குப் போயிடுவேன். அதுக்குப் பிறகு பாட்டி இல்ல யாரு சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.
குஞ்ஞிமாளு: சாயா...
அப்புக்குட்டன்: நான் கடையில போயி குடிச்சிக்கிறேன். வேண்டாம்.
நடக்கிறான். பின்னால் திரும்பி-
அப்புக்குட்டன்: இந்த வெள்ளிக்கிழமை- முடிஞ்சா அதுக்கு முன்னாடியே கூட வரப்பாரு.
நடக்கிறான்.
அவள் சிலையென உறைந்து போய் நிற்கிறாள்.
இரவு நேரம்.
ஹரிதாசனின் அறை. மங்கலான வெளிச்சம். நிழல்கள்.
குஞ்ஞிமாளு: நான் போக மாட்டேன்.
நிசப்தம்.
குஞ்ஞிமாளுவின் குரல்:
“என்னைப் போகச் சொல்லாதீங்க”
ஹரிதாசன்: நான் யாரையும் அனுப்புறதா இல்ல.
குஞ்ஞிமாளு: அதைச் சொன்னா மட்டும் போதாது.
ஹரிதாசன்: உன் வீட்டுக்காரங்க வந்து உன்னைக் கூட்டிட்டுப் போனா, நாங்க என்ன சொல்ல முடியும்?
குஞ்ஞிமாளு: (பெருக்கெடுத்து வரும் அழுகையுடன்) நான்... நான்... நான்... உங்க கூடவும் அம்மா கூடவுமே இருந்துர்றேன்.
ஹரிதாசன் ஒன்றுமே பேசாமல் மவுனமாக இருக்கிறான். அவன் அவளின் தோளில் கையை வைத்து-
“பேசாம படு. நான் பொழுது புலர்ந்த உடனே புறப்படணும். அந்த வண்டியை விட்டுட்டா, இன்டர்வ்யூவுக்குப் போக முடியாப் போயிடும்...”
குஞ்ஞிமாளு: அப்படி எதுவும் நடக்காது. நான் கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்.
ஹரிதாசன்: திரும்பவும் அந்த நீலப்பூவைப் பற்றிச் சொல்றியா?
குஞ்ஞிமாளு: கடவுள் கண்ல அதைக் காட்டினாரா இல்லியா?
அவன் அவளை படுக்கையின் மேல் சாய்க்கிறான்.
வயல்வெளி.
அதிகமான கவலையுடன் அம்மிணி. அவளுக்கு அருகில் குஞ்ஞிமாளு.
குஞ்ஞிமாளு: பாட்டி அதுக்குப் பிறகும் வந்தாங்க.
அம்மிணி: நீ போறதுதான் நல்லது, குஞ்ஞிமாளு.
குஞ்ஞிமாளு பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறாள்.
அம்மிணி: நாம எல்லோருமே ஒரு வயசுல ஆகாயத்துல இருந்து தேவகுமாரன் இறங்கி வந்து நம்மளைக் கூட்டிட்டுப் போவான்னு நினைச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்போம். ஆனா, அப்படி ஒரு சம்பவமே நடக்கப் போறதில்ல. (யாரிடம் என்றில்லாமல்) தேடி வந்தவனை விட்டுட்டோமேன்னு பின்னாடி நாம கவலைப்பட்டு பிரயோஜனம் இல்ல. என் விஷயத்தையே எடுத்துக்கயேன். வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க எனக்கு விருப்பமே இல்ல. நான் எங்கே போறது?
குஞ்ஞிமாளு எங்கே பார்த்துவிடப் போகிறாளோ என்று அவளுக்குத் தெரியாமல் கண்ணில் வழியும் நீரை அவள் துடைக்கிறாள்.
குஞ்ஞிமாளு அவளையே பார்க்கிறாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் நடக்கிறாள்.
மலைப்பக்கம் போய் நின்று அவள் கிராமத்தைப் பார்க்கிறாள். ராகம் கேட்கிறது.
பரந்து கிடக்கும் கிராமம் பெரிதாகத் தெரிய, தூரத்தில் ஒரு சிறு உருவமாக அவள். அவளின் பார்வையில் ஆற்றின் அக்கரையில் வந்து கொண்டிருக்கும் புகைவண்டி.
ஹரிதாசன் இன்டர்வ்யூ முடிந்து வரும் வண்டி.
வீட்டின் உட்பகுதி.
ஹரிதாசன் பெட்டியில் பொருட்களை அடுக்கி வைக்கிறான். படுக்கையை அச்சுதன் நாயர் கட்டுகிறார். அம்மாவும் இருக்கிறாள். தரையில் பல பொருட்கள்- கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
அம்மா: ஊறுகா எங்கே குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு ஒரு குப்பியில் ஊறுகாயுடன் வருகிறாள்.
குஞ்ஞிமாளு: இந்தா இருக்கு.
ஊறுகாய் குப்பியை அம்மாவிடம் அவள் தருகிறாள்.
அம்மா: இனியும் ஏதாவது தேவைப்பட்டா நீ கடிதத்துல எழுது. அச்சுதன் நாயர் கொண்டு வந்து தருவாரு
ஹரிதாசன்: எர்ணாகுளம் அப்படி ஒண்ணும் அதிக தூரத்துல இல்லியே, அம்மா! அப்பப்போ நானே வருவேன்.
அம்மா: இருந்தாலும்...
குஞ்ஞிமாளு வெளியே செல்கிறாள்.
அவள் சமையலறை வழியாக வெளியே வருகிறாள். பிறகு வாசல் அருகில் நிற்கிறாள்.
வாசலில் அம்மா, அச்சுதன் நாயர் நிற்கிறார்கள். கூலிக்காரனின் தலையில் அச்சுதன் நாயர் பொருட்களை எடுத்து வைக்கிறார். அவன் முன்னால் நடக்கிறான்.
அம்மா வெளியே பார்த்தவாறு அங்கு கன்றுக்குட்டியின் அருகில் நின்று கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவைப் பார்த்து அழைக்கிறாள்.
“குஞ்ஞிமாளு... உள்ளே போ. ஹரிதாசன் புறப்படுறான்...”
அம்மா: (மெதுவான குரலில் மகனிடம்) வண்ணாத்தி எதிரில் நிக்கிறது நல்ல சகுனம் கிடையாதுன்னு பொதுவாக சொல்லுவாங்க.
ஹரிதாசன் அதைக் கேட்டு எதுவும் பேசாமல் புறப்படுகிறான்.
ஹரிதாசன்: வேலையில் சேர்ந்துட்டு, உங்களுக்குக் கடிதம் எழுதுறேன்மா.
அம்மா: பத்திரமா பார்த்து நடந்து போ...
அவன் இரண்டு பக்கங்களிலும் பார்க்காமல் நடக்கிறான்.
வாழைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஹரிதாசனும், அச்சுதன்நாயரும் நடந்து போய்க் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்தவாறு குஞ்ஞிமாளு பார்க்கிறாள்.
இன்னொரு நாள்.
குஞ்ஞிமாளு தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறாள்.
சாப்பாட்டுப் பிரியரான குட்டிசங்கரன் அவளின் அருகில் வந்து சிரிக்கிறார்.
“எங்க போற?”
குஞ்ஞிமாளு: எங்கேயும் இல்ல...
குட்டிசங்கரன்: இன்னைக்கு என்ன குழம்பு?
குஞ்ஞிமாளு: (சிரித்தவாறு) வத்தக் குழம்பு...
குட்டிசங்கரன்: ஹரிதாசனுக்கு வேலை கிடைச்சு போயாச்சு. இனி குழம்பு அவ்வளவு நல்லதா இருக்காது... இல்லியா?
அவள் கோவிலை நெருங்குகிறாள். ஷாரத்தெ வீட்டைப் பார்த்ததும், அதன் முன் நிற்கிறாள்.
அங்கே முன்பு ஒரு காட்சியில் பார்த்த இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
குஞ்ஞிமாளு: அம்மிணி எங்கே, தங்கம்?
சிறுமிகள் அவளை கவனிக்கவில்லை. விளையாட்டிலேயே அவர்களின் கவனம் இருக்கிறது.
ஒரு சிறுமி: சித்திக்கு சுகமில்ல... படுத்துக் கெடக்குது.
குஞ்ஞிமாளு: உடம்புக்கு என்ன?
சிறுமி: காய்ச்சல்.
குஞ்ஞிமாளு அங்கேயிருந்து நடக்கிறாள்.
வழியில் எதிரே வந்து கொண்டிருக்கும் அப்புக்குட்டனைப் பார்த்து குஞ்ஞிமாளு தயங்கி நிற்கிறாள். அவனும் நிற்கிறான். முழுமையாக அவன் குடித்திருக்கிறான். பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்து பற்ற வைக்கிறான்.
அப்புக்குட்டன்: நீ வரல இல்லே...?
குஞ்ஞிமாளு ஒன்றுமே பேசாமல் நிற்கிறாள்.
அப்புக்குட்டன்: ம்... (மீண்டும் பீடியை இழுத்து புகையை விட்டவாறு) உன்னோட பாட்டி படுத்த படுக்கையா கிடக்குது. அம்மா மட்டும்தான் இப்போ துணி துவைக்கிறது....
குஞ்ஞிமாளு: சம்பளம் வாங்க இந்தத் தடவை வராதப்பவே நான் என்ன காரணமா இருக்கும்னு நினைச்சேன். அம்மா அச்சுதன் நாயர்கிட்ட சம்பளப் பணத்தைக் கொடுத்து அனுப்பினாங்களே! கிடைச்சதா?
அப்புக்குட்டன்: ம்... அதை வச்சு அங்கே உள்ள பிரச்னைகளைத் தீர்த்துட முடியுமா என்ன?
குஞ்ஞிமாளு: நான் ஒருநாள் வர்றேன்.
அப்புக்குட்டன்: அப்படி ஒண்ணும் வரவேண்டாம். நான் கூப்பிட்டப்போ வராத நீ, இனி ஏன் வரணும்? இப்போ அங்கே ஆகுற செலவு முழுவதையும் நான்தான் பார்த்துக்குறேன்.
குஞ்ஞிமாளு: நீங்க இப்போ சுயநினைவு இல்லாம என்னன்னவோ பேசுறீங்க!
அப்புக்குட்டன்: நீ ஒரு நாளு வருவே- அது எனக்குத் தெரியும். பணக்காரங்க வீட்ல வேலைக்காரிகளுக்கு என்ன சம்பாத்தியமா கிடைக்குமோ அதைச் சுமந்துக்கிட்டு வருவே!
குஞ்ஞிமாளு: யாராவது இதைக் கேட்டா என்ன நினைப்பாங்க? கடவுளே...
அப்புக்குட்டன்: த்தூ... எனக்கு உன்னோட தம்புராக்கன்மார்கள் யாரும் செலவுக்குப் பணம் தரல! ஒரு சோப்பு... கொஞ்சம் பவுடர்... இதுதான் உங்களோட விலையாடி? த்தூ....
அவள் அதைக் கேட்டு கோபமடைகிறாள்.
குஞ்ஞிமாளு: ஏதாவது அனாவசியமா பேசினா, சொந்தம் பந்தம்னு கூட பார்க்க மாட்டேன். நீங்க இப்போ நகர்றீங்களா? இல்லியா?
அப்புக்குட்டன்: இந்தப் பாதை என்ன கெழக்கும் பாட்டுக்காரங்களுக்குச் சொந்தமானதா என்ன?
அவன் அவளைக் கிண்டலாகப் பார்த்துச் சிரிக்கிறான். அவள் அவனைக் கடந்து செல்கிறாள்.
குஞ்ஞிமாளு வீட்டை அடையும்போது அங்கு அச்சுதன்நாயர் நின்றிருக்கிறார். அம்மா கீழே சுவரில் சாய்ந்தவாறு ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
கீழே பிரிக்கப்பட்ட ஒரு கவர் இருக்கிறது. படித்து முடித்த காகிதத்தை இராமாயணத்திற்குள் வைத்த அம்மா மனதில் மகிழ்ச்சி பொங்க புன்னகைக்கிறாள்.
அச்சுதன்நாயர்: விசேஷம் ஒண்ணும் இல்லியா?
அம்மா: இல்ல, சுகமா இருக்கான். வேலை நல்ல வேலைதான். அப்பு அண்ணன் போய் பார்த்திருக்காரு.
அச்சுதன் நாயர்: அவர் ஆளை விடமாட்டார் போலிருக்கே!
அம்மா எழுகிறாள். இராமாயணத்தை வாசல்படியில் வைத்தவாறு, அச்சுதன் நாயரிடம்-
அம்மா: அதுக்குப் இப்ப என்ன அவசரம்? அவன் சொன்னதும் ஒரு விதத்துல சரிதான்.
அச்சுதன் நாயர்: என்னைக்கு இருந்தாலும் நடந்துதானே ஆகணும்!
வெளியே நின்றவாறு அவர்கள் பேசுவதை குஞ்ஞிமாளு கேட்டுக் கொண்டிருக்கிறாள். அச்சுதன் நாயரின் குரல் அவள் காதுகளில் கேட்கிறது:
“என்ன இருந்தாலும் அன்னிய ஆளுங்க இல்ல. ஒரு அளவோட செஞ்சா போதும். அவுங்களும் நீங்களும் சொந்தக்காரங்களா இருக்குறப்போ, தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் எதுக்கு?”
யாரும் இல்லாத வாசல் பகுதி.
குஞ்ஞிமாளு துடைப்பத்துடன் உள்ளே வருகிறாள். தரையைப் பெருக்குகிறாள். கையில் இருந்து துடைப்பத்தைக் கீழே வைத்துவிட்டு, பின்பக்க வாசலைப் பார்க்கிறாள். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும கண்களை ஓட்டியவாறு இராமாயணத்தை எடுத்து கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறாள்:
அன்புள்ள அம்மாவுக்கு,
இங்கு விசேஷங்கள் ஒன்றுமில்லை. அம்மா, உங்களின் காலில் வலி அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன். நான் பணம் எதுவும் அனுப்பி வைக்கவில்லை. அங்கு பணத்திற்கு என்ன தேவை இருக்கிறது? ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படுகிற பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். அப்பு மாமா இங்கு வந்திருந்தார். வீட்டிற்கு என்னைக் கட்டாயம் வரச் சொல்லி இருக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அங்கு போய் வரலாம் என்று இருக்கிறேன். பஸ்ஸில் போனால், அன்றே திரும்பி வந்துவிடலாம். அச்சுதன்நாயர் என்னைப் பற்றி விசாரித்திருப்பாரே! இப்போது இங்கு புதிதாக ஒரு அதிகாரி வேலைக்கு வந்திருக்கிறார். அவருக்கு அப்பாவை நன்றாகத் தெரியுமாம். வேறு விசேஷங்கள் எதுவும் இல்லை.
உங்களின் மகன்
ஹரிதாசன்.
கடிதத்தை முழுமையாகப் படித்து முடித்தபோது அவளின் மனதில் ஒருவித ஏமாற்றமும் உண்டானது. அவள் மெதுவாக அந்தக் கடிதத்தை மடித்து ராமாயணத்திற்குள் வைத்துவிட்டு தரையைப் பெருக்குவதைத் தொடர்கிறாள்.
நகரத்தில் உள்ள ஒரு வீடு. அத்தை. மூத்த மகள் நவநாகரீக தோற்றத்தில் உள்ள ரத்னம். அவளுக்கடுத்த ஒரு தங்கை, ஒரு தம்பி.
அந்த வீட்டின் வரவேற்பறை.
ரத்னம் நன்கு படித்த ஒரு இளம்பெண். அழகி. தன்னம்பிக்கை உள்ளவள். சாதாரண பெண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவள்.
ஒரு நல்ல குடும்ப சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
ஹரிதாசன்: அப்பு மாமா வர்றப்போ சொன்னா போதும், அத்தை.
அத்தை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நீ வருவேன்னு எங்கேயும் வெளியே போகாம இங்கேயே உன்னோட மாமா இருப்பாரு. இன்னைக்கு வக்கீலைப் பார்த்துட்டு வர்றேன்னு வெளியே புறப்பட்டுப் போனாரு. மத்தியானம் வரை உனக்காக எதிர்பார்த்துட்டுத்தான் போனாரு.
ஹரிதாசன்: பரவாயில்ல... இன்னொரு நாளைக்கு வர்றேன்.
ரத்னம்: சும்மா சொல்றாரும்மா. இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலதானே இவர் இருக்காரு! இதுவரை எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் கடந்து போயிருக்கு! (ஹரிதாசனிடம்) அப்பா வந்த பிறகு நீங்க போனா போதும்.
ரத்னம் தன்னுடைய முடிவை கூறிவிட்ட திருப்தியுடன் உள்ளே போகிறாள்.
ரத்னத்தின் தம்பி ஹரிதாசனின் கைக்கடிகாரத்தை அவிழத்து தன் கையில் கட்டுகிறான். பிறகு அதை தன் அக்காவிடம் காட்டுகிறான்.
அத்தை: (அதைப் பார்த்து) நல்லா இருக்குற கடிகாரத்தைக் கெடுத்திடாதே. ஹரிதாசன் கையில அதைக் கொடு. தாசனைத் தொந்தரவு செய்யக் கூடாது. தெரியுதா? எல்லோரும் உள்ளே போங்க.
குழந்தைகள் அனைவரும் உள்ளே போகிறார்கள். அத்தையும், ஹரிதாசனும் மட்டும் தனியே-
அத்தை: மாமா மற்ற விஷயத்தைப் பற்றிப் பேசத்தான் உன்னை இங்கே வரச் சொன்னதே!
அவனுக்கு எல்லாம் புரிந்தாலும் எதுவுமே தெரியாத மாதிரி அமர்ந்திருக்கிறான்.
ஹரிதாசன்: என்ன விஷயம்?
அத்தை: ரத்னத்தோட விஷயம்தான்.
ஹரிதாசன்: அதுக்கு என்ன இப்போ அவசரம்?
அத்தை: உனக்கு வேணும்னா அவசரம் இல்லாம இருக்கலாம். அவளுக்கு வயது இருபத்திரெண்டு ஆயிடுச்சே!
ஹரிதாசன்: வேலையில சேர்ந்த உடனே லீவு எடுக்குறதுன்றது அவ்வளவு நல்லா இருக்காதே... அத்தை!
அத்தை: அதிக நாட்கள் லீவு எதுக்கு? ஞாயிற்றுக் கிழமையைச் சேர்த்து ஒண்ணோ ரெண்டோ நாட்கள் லீவு எடுத்தால் போதாதா? நாம என்ன எங்கேயோவா இருக்கோம்? எல்லா விஷயங்களையும் மாமா வந்து சொல்லுவாரு. காலையில சீக்கிரமா நீ போயிடலாம்.
ஹரிதாசன்: எனக்கு ஆபீஸ் இருக்கே!
அப்போது ரத்னம் அங்கே வருகிறாள்.
ரத்னம்: ஆறரை மணிக்கு ஒரு பஸ் இருக்கு. ஏழரை மணி பஸ்ஸுக்குப் போனாக்கூட போதும். ஏன்- எட்டரை மணி ஃபாஸ்ட்ல போனாக் கூட ஆபீஸுக்குப் போயிடலாம்.
ஹரிதாசன்: (ரத்னத்திடம்) நான் சட்டை, வேஷ்டி எதுவுமே கொண்டு வரலியே!
ரத்னம்: அதுனால என்ன? ஆறரை மணி பஸ்ஸுக்குப் போனா போதும். ரூமுக்குப் போயி குளிச்சு ட்ரெஸ் போட்டுட்டு போறதுக்கு தாராளமா நேரம் இருக்கு.
உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மாமாவைப் பார்த்ததும் ஹரிதாசன் எழுந்து நிற்கிறான்.
அப்புமேனன்: நீ வந்துட்டியா? உட்காரு...
ரத்னம்: போறேன்னு நிக்கிறாரு. நான்தான் சொன்னேன் நாளைக்குப் போகலாம்னு.
அப்புமேனன்: கொஞ்சம் பிஸின்றது மாதிரிதான் காட்டிக்கணும். பிஸியாகவே இல்லைன்னாலும், அப்படி காட்டிக்கிறதுதான் இந்தக் காலத்துல ஃபேஷன்.
சிரித்தவாறு உள்ளே போகிறார்.
ரத்னம்: இப்போ அவசரம் இல்லியே! வாங்க... மேலே போய் இருக்கலாம். ஸ்டீரியோல ஏதாவது நல்ல பாட்டு வச்சு கேட்கலாம்.
ஸ்டீரியோவில் இருந்து ஒரு இசை. பாதி கவனத்தைப் படிப்பதிலும், மீதி கவனத்தை இசையிலும் செலுத்தியவாறு ஹரிதாசன் தனியாக அமர்ந்திருக்கிறான்.
ரத்னம் அங்கு வருகிறாள். ஒரு நாற்காலியை எடுத்து அவனுக்கு மிகவும் நெருக்கமாகப் போட்டு அதில் அமர்ந்தவாறு ஸ்டீரியோவின் ஒலியைக் குறைக்கிறாள்.
ரத்னம்: என்ன தீர்மானிச்சிருக்கீங்க?
ஹரிதாசன்: மாமா எல்லா விஷயங்களையும் சொன்னாரு.
ரத்னம்: உங்களோட முடிவு என்ன?
ஹரிதாசன்: நேரம் வர்றப்போ சொல்றேன்.
ரத்னம்: எனக்கு ஒண்ணும் அவசரமில்ல...
ஹரிதாசன்: எனக்கும்தான். அத்தைதான். ரொம்ப அவசரப்படுறாங்க.
அத்தை அப்போது அங்கு வந்து மகளிடம்-
“தாசனுக்கு தெற்குப் பக்கம் உள்ளே படுக்கையை விரிச்சுப் போடு. குழந்தைங்க ரெண்டும் பக்கத்து அறையில கீழே விரிச்சுப் படுக்கட்டும். தெற்குப் பக்கம் காத்து நல்லா வீசும் (ஹரிதாசனிடம்) அவசரம் ஒண்ணுமில்ல. படுக்கணும்னு தோணுறப்போ படுத்தா போதும். உன்னோட மாமாவைப் பொறுத்தவரை பத்து மணி அடிச்சிட்டா, படுத்திடணும்... நாங்க படுக்குறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும்.
அத்தை வெளியே போகிறாள்.
ரத்னம்: சீக்கிரம் எந்திரிச்சிடுவீங்களா? வேணும்னா அஞ்சுக்கோ அஞ்சரைக்கோ நான் வந்து எழுப்புறேன்.
ஹரிதாசன்: எழுப்ப வேண்டிய அவசியமில்ல. சில நேரங்கள்ல நான் உறங்கவே மாட்டேன்.
ரத்னம்: காதல் நோய்ல சிக்கிக்கிட்டவங்கதான் அப்படி இருப்பாங்க. நாம என்ன அப்படியா?
சிரித்தவாறு வெளியே செல்கிறாள்.
ஹரிதாசன் படுக்கையறையில்.
பெட்ரூமின் விளக்கொளி.
அவன் எழுந்து உட்காருகிறான். வேஷ்டியும், பனியனும் அணிந்திருக்கிறான். சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான். சிகரெட்டைப் பிடித்தவாறு என்னவோ சிந்திக்கிறான். பிறகு... எழுந்து நிற்கிறான்.
மங்கலான வெளிச்சம்.
சாத்தப்பட்டிருக்கும் ஒரு சதவை அவன் திறக்கிறான். அறையில் இருக்கும் வெளிச்சத்தில் அவள் கட்டிலில் படுத்துக் கிடக்கிறாள்.
கீழே ஒரு படுக்கையில் இரண்டு குழந்தைகள். அவன் உள்ளே நுழைந்து கட்டிலுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளை ஓசையில்லாமல் எழுப்புகிறான். அவள் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அறைக்கு வெளியே இருக்கும் பகுதிக்கு ஹரிதாசனும் ரத்னமும் வருகிறார்கள். அவர்கள் இருட்டில் நின்றிருக்கிறார்கள்.
ரத்னம்: தாஸ் அத்தான், உங்களோட பழைய நோய் இன்னும் உங்களை விட்டு போகலியா? சின்ன வயசுல கனவுல நடக்குற பழக்கம்...
ஹரிதாசன்: வா... அந்த ரூமுக்குப் போகலாம்.
ரத்னம்: குழந்தைங்க எந்திரிச்சிடக் கூடாதுன்னுதான் நான் இங்கே வந்தேன். போங்க... போய் படுங்க.
ஹரிதாசன்: நீயும் வா...
ரத்னம்: அதுக்குன்னு நேரம் வரட்டும். தாஸ் அத்தான், போய் படுங்க. விருந்துக்கு இலை அறுக்குறப்போ யாராவது சமையலறைக்குள்ள நுழைஞ்சு திருட்டுத்தனமா திருடிச் சாப்பிடுவாங்களா?
அவள் திரும்பவும் அறைக்குள் போகிறாள். அவன் நிழலைப் போல தான் படுத்திருக்கும் அறையைத் தேடி போகிறான்.
பகல்.
கிழக்கும்பாட்டெ வீட்டின் வாசலில் நின்றவாறு அப்புமேனனும் வேறு இரண்டு நடுத்தர வயது மனிதர்களும் விடைபெறுகிறார்கள். அச்சுதன்நாயர், திண்ணையில் குட்டி சங்கர மேனன்.
அப்புமேனன்: தங்கச்சி, நான் வர்றேன். நாம இதுக்கு மேல விரிவா பேசுறதுக்கு என்ன இருக்கு? (உடன் இருப்பவர்களுடன் சிரித்தவாறு) பழைய காலமா இருந்தா ஹரிதாசன் கையில ரெண்டு வேஷ்டிகளைக் கொடுத்து நீ அங்கே அவனை அனுப்பி விட்டுடலாம். என்ன நான் சொல்றது சரிதானே? காலை சாப்பாடு முடிஞ்சு வேனிலோ காரிலோ அங்கேயிருந்து வந்திட வேண்டியதுதான். இங்கே விருந்து எதுவும் வேண்டாம். எதுக்கு தேவையில்லாம செலவு?
அதற்குப் பதில் உணர்ச்சிகள் குட்டிசங்கர மேனனின் முகத்தில் -
அப்புமேனன்: சரி... நாங்க புறப்படுறோம்.
அவர்கள் எல்லோரும் படிகளில் இறங்குகிறார்கள் - குட்டி சங்கர மேனன் தவிர.
குட்டிசங்கரன்: அது அவ்வளவு நல்லா இருக்காது.
அம்மா: என்ன சொல்றீங்க?
குட்டி சங்கரன்: இங்கே விருந்து எதுவும் வேண்டாம்னா, ஹரிதாசன் என்ன சாதாரண ஒரு ஆளோட மகனா?
அம்மா: ஹரிதாசன் கூடவே நீங்க போங்க. அங்கே பிரமாதமான விருந்து கிடைக்கும்.
குட்டிசங்கரன்: (தயங்கிவாறு) வெளியே போக தாட்சாயணி சம்மதிக்க மாட்டா.
அம்மா உள்ளே போகிறாள்.
அம்மா உள்ளே நுழையும்போது, குஞ்ஞிமாளு திரும்பிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.
அம்மா: சாப்பாட்டுக்கு அரிசி போட்டுட்டியா குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு: (திரும்பியே பார்க்காமல்) ம்...
அம்மா: கன்னுக்குட்டி தண்ணி, புல்லு, வைக்கோல் எதுவுமே சாப்பிடாம நின்னுக்கிட்டு இருக்கு. அதுக்கு என்ன ஆச்சு?
அவள் திரும்பிப் பார்க்கிறாள். அவளின் கண்கள் இலேசாக கலங்கியிருக்கின்றன.
குஞ்ஞிமாளு: கொஞ்சம் கஞ்சித் தண்ணி குடிச்சிச்சே!
அம்மா: ஆமா... உன் கண்ணுல என்ன?
குஞ்ஞிமாளு: தீ ஊதுறப்போ புகை கண்ணுல பட்டுருச்சு...
அவள் வேகமாக திரும்பி நடக்கிறாள்.
குஞ்ஞிமாளு - கோவில் பகுதியில்.
ஆலமரத்துக்குக் கீழே கிழவர் படுத்துக் கிடக்கிறார்- கண்களைத் திறந்தவாறு. அவள் ஆலமரத்திற்கு அருகில் வந்து நிற்கிறாள்.
குஞ்ஞிமாளு: என்ன, உடம்புக்கு சரியில்லையா?
கிழவர் எழுந்து நிற்கிறார். 'ஒன்றுமில்லை' என்று தலையை ஆட்டுகிறார்.
கிழவர்: உனக்கு விஷயம் தெரியுமா?
அவள் 'என்ன' என்பது மாதிரி பார்க்கிறாள்.
கிழவர்: பாகவதருக்கு நேற்று கொஞ்சமும் முடியாமப் போச்சு. தண்ணீர் கொடுத்து எழுந்து உட்கார வச்சா, ஒரு சத்தம் கூட வரல...
கிழவர் சொன்ன செய்தியைக் கேட்டதும், அவள் சிந்தனையில் மூழ்கிவிடுகிறாள்.
கிழவர்: இனி பாக்கி இருப்பது நான் மட்டும்தான். சத்தம் வரலைன்னா, பாகவதர் செத்துப் போயிட்டாருன்னு அர்த்தம். எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும். முழு பைத்தியம்... அதுக்கு முன்னாடி(கைகளால் கூப்பியவாறு) என் கடவுளே... என் கடவுளே... என்னை அங்கே கூப்பிட்டுடு...
அவர் கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருக்கிறார். அவள் நடக்கிறாள்- மனம் முழுக்க வேதனையுடன்.
தலையில் வைக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்புகள், சுமைகள், மூட்டைகள்- கேமராவுக்கு முன்னால் கடந்து வருகின்றன.
அச்சுதன்நாயரும் வேலைக்காரர்களும் திண்ணையில் பொருட்களை இறக்கி வைக்கிறார்கள். அம்மா அவற்றைப் பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.
அம்மா (உள் பக்கம் பார்த்தவாறு)
குஞ்ஞிமாளு, ஹரிதாசன் வர்றப்போ யாராவது கூட வருவாங்க. சாயாவை முன்கூட்டியே போட்டு வச்சிடு. சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தி வைக்கணும். காளிக்கிட்ட ரெண்டு வேலைக்காரங்களை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன். எல்லாத்தையும் நீ சரியா பார்த்துக்கணும்.
அவள் உள்ளே போகிறாள்.
இரவு நேரம்.
சமையலறைக்கு வெளியே குஞ்ஞிமாளு என்னவோ சிந்தித்தவாறு நின்றிருக்கிறாள். அம்மா அங்கு வருகிறாள்.
அம்மா: என்ன, வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா?
குஞ்ஞிமாளு: ம்...
அம்மா: சரி... படுத்துக்கோ. காலையில சமையல்காரங்க வருவாங்க. இப்போ படுத்தாத்தான் கொஞ்சமாவது தூங்க முடியும். வாசல் கதவை அடைச்சிட்டியா? ஹரிதாசன் மேலே போயிருக்கான்.
இரவு நேரம்.
குஞ்ஞிமாளு படுத்திருந்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. ஒரே அமைதிச் சூழ்நிலை.
அவள் சில நிமிட யோசனைக்குப் பிறகு, படுக்கையை விட்டு எழுந்து நிற்கிறாள்.
ஏணிப்படிகளில் அவள் ஏறுகிறாள்- மிகவும் கவனத்துடன், அமைதியாக- நிழலைப் போல.
இருட்டு, ஹரிதாசன் கண்களைத் திறக்கிறான். கட்டிலுக்கு அருகில் குஞ்ஞிமாளு நிற்கிறாள். இருட்டில் கரைந்து போய் அவள் நிற்பது தெரிகிறது.
அவன் அவளைப் பிடித்து தனக்கருகில் உட்கார வைக்க முயற்சிக்கிறான். அவள் இப்போது அழவில்லை. தொண்டைகூட அடைக்கவில்லை. துக்கம் முழுவதும் இதயத்தில் மட்டுமே.
ஹரிதாசன்: படுத்துக்கோ...
குஞ்ஞிமாளு: (கைகளை உதறியவாறு) மாட்டேன்...
ஹரிதாசன்: நேரம் இருக்கு. படு...
மீண்டும் அவளை அவன் கட்டிப் பிடிக்க முயல, அவள் விலகி நிற்கிறாள். ஆனால், அவன் கையை எடுக்கவில்லை.
குஞ்ஞிமாளு: வேண்டாம்.
ஹரிதாசன்: வா... இனி இப்போ உன்னைப் பார்ப்பேன்னு எனக்கே தெரியாது.
குஞ்ஞிமாளு: பார்க்கவே வேண்டாம். இதுவரை செய்த தப்புக்கு கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.
ஹரிதாசன்: அப்படியெல்லாம் தேவையில்லாம ஏதாவது நினைக்காதே வா...(மீண்டும் அவளைக் கட்டிப் பிடிக்க முயல்கிறான்).
குஞ்ஞிமாளு: வேண்டாம். இனிமேல் என்னைத் தொடாதீங்க. நீங்க இனிமேல் அந்தப் புதுபொண்ணுகூடத்தான் படுக்கப் போறீங்கள்ல?
மங்கலான வெளிச்சத்தில் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.
குஞ்ஞிமாளு: உங்களுக்கும் உங்க கூட வாழப் போற அந்த அம்மாவுக்கும் நல்லது நடக்கட்டும். நான்அதுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்குவேன்.
அவள் திரும்பி நடக்கிறாள்.
ஹரிதாசன் தனியே இருக்கிறான். பிறகு என்ன நினைத்தானோ வாசலருகே நடந்து சென்ற அவன், மெதுவான குரலில் அழைக்கிறான்:
“குஞ்ஞிமாளு!”
ஒரு நிமிடம் அதற்குப் பிறகும் அங்கேயே நின்றிருந்த அவன், திரும்பவும் வந்து மெத்தையில் அமர்கிறான். பிறகு தனக்குத் தானே புன்னகைத்தவாறு மெத்தையில் படுக்கிறான்.
காலை நேரம்.
வாசலில் இருந்த புல் தரையிலும், படியிலும் மற்ற இடங்களிலும் ஆட்கள் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு வந்தவர்கள்.
கிராமிய மணம் கொண்ட மனிதர்களும் நாகரீகத் தோற்றம் கொண்டவர்களும்.
அச்சுதன் நாயரும், வேறு இரண்டு ஆட்களும் பரிமாறுகிறார்கள். கெட்டிலில் இருந்து தேநீரை டம்ளர்களில் ஊற்றுகிறாள் குஞ்ஞிமாளு. வாசலில் இருந்து கெட்டிலுடன் அவள் திரும்பவும் உள்ளே செல்கிறாள்.
உள்ளே போகும் குஞ்ஞிமாளுவிற்கு எதிரே அம்மாவுடன் திருமண ஆடைகளுடன் (சில்க் ஜிப்பா, வேஷ்டி) ஹரிதாசன் வருகிறான். (ஜிப்பாவிற்கு பட்டன் இட்டவாறு வருகிறான்)
அவள் ஒதுங்கி நிற்கிறாள். அவன் அவளைக் கடந்து போகிறான்.
வாசலில்-
“ம்... வாங்க... வாங்க... மாப்பிள்ளை வாங்க. நீங்க வர்றதுக்கு முன்னாடியே நாங்க சாயா குடிக்க ஆரம்பிச்சிட்டோம்.”
ஒருவன்: “கழுத்துல ஒரு மைனர் செயின் போட்டிருக்கலாம்!”
மற்றொருவன்: பொண்டாட்டிக்கிட்ட ஏகப்பட்ட நகைகள் இருக்கு. மாற்றி மாற்றி போட்டுக்க வேண்டியதுதான்.
அவர்கள் பேசுவதை குஞ்ஞிமாளு கேட்கிறாள். அவள் அடுத்த நிமிடம் வேகமாக உள்ளே போகிறாள்.
அவள் சமையலறை வழியாக வெளியே செல்கிறாள்.
தனக்கென்று விதிக்கப்பட்ட சமையலறையில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஐந்து அடுப்புகளும் ஜுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்க, நெருப்புக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறாள் அவள்.
அம்மா சமைலறைக்கு, சமையல்காரர்களுடன் வருகிறாள்.
அம்மா: ஆளுங்க வந்துட்டாங்க. சமையலறையை இவங்க பார்த்துப்பாங்க. நீ மேலே வராம இங்க என்ன செஞ்சிக்கிட்டு இருக்கே?
அம்மாவைத் தொடர்ந்து அவள் வெளியே செல்கிறாள். சமையல்காரர்கள், சமையலறைக்குள் நுழைகிறார்கள்.
பழைய அறை:
புதிய இரட்டைக் கட்டிலில் புதிய படுக்கைகள். கட்டில் இடம் மாறியிருக்கிறது. புதிய உறை போட்ட தலையணைகள் அவள் வைக்கிறபோது-
அம்மா: அங்கே இல்ல... இங்க. இதுதான் கிழக்குப் பக்கம். (அம்மா மெத்தை, தலையணை எல்லாவற்றையும் தட்டி சரிப்படுத்துகிறாள்). புதிய கட்டிலும் படுக்கையும் இருக்கட்டும்னு நான்தான் சொன்னேன். அவுங்க இங்க ஒண்ணும் இருக்கப் போறது இல்ல. இருந்தாலும் அவங்களுக்குன்னு இங்க ஒரு அறை வேண்டாமா? அந்தச் சின்ன மேஜை மேல ஊதுபத்தி, சந்தனம், பழம் எல்லாத்தையும் சாயங்காலத்துக்கு முன்னாடியே சரி பண்ணி வச்சிடணும்...
குஞ்ஞிமாளு அந்தப் பக்கம் திரும்பியவாறு வேலை செய்கிறாள்.
அம்மா: தங்கச்சிமார்களும், மற்ற பெண்களும்தான் எனக்கு இந்த விஷயத்துல உதவியா இருந்திருக்க வேண்டியது. அந்த பாக்யம் உனக்கு கிடைச்சிருக்கு! என்ன நான் சொல்றது!
அவள் புன்னகைக்க முயற்சிக்கிறாள். ஆனால் முடியவில்லை.
அன்று மாலை.
கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் வேனும், டாக்ஸியும். மணமகனும் மற்றவர்களும். (ரத்னத்துடன் ஒரு வயதான கிழவியும் இப்போது இருக்கிறாள்) எல்லோரும் வாகனத்தை விட்டு அப்போதுதான் இறங்குகிறார்கள். அவர்கள் கோவில் முன்நின்று தொழுகிறார்கள். பூசாரி வெளியே வந்து மணமகனுக்கும் மணமகளுக்கும் பிரசாதம் தருகிறார். அவர்கள் கோவில் குளத்தையொட்டி நடந்து போகிறார்கள். கூட்டத்தில் இருந்து தனியே ஆன ஹரிதாசனும் ரத்னமும் கோவில் குளத்தின் சுவரருகே நின்றிருக்கிறார்கள்.
ஹரிதாசன்: இங்கே ஒரு பிரத்யேகமான பூ மலரும். பணம் வச்சு ராத்திரி வேண்டினா, காலையில ஒரு நீலத் தாமரை பூக்கும். நடக்குற விஷயங்களா இருந்தா கட்டாயம் பூ பூக்கும்.
ரத்னம்: அதை நீங்க நம்புறீங்களா என்ன?
ஹரிதாசன்: இங்கே உள்ளவங்களுக்கு இதுமேல உண்மையாகவே பெரிய அளவுல நம்பிக்கை இருக்கு.
ரத்னம்: தாஸ் அத்தான், நீங்க இதுக்கு முன்னாடி இதைச் சோதிச்சுப் பாரத்திருக்கீங்களா?
ஹரிதாசன்: நானா? எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?
அவர்கள் நடந்துபோய் மற்றவர்களுடன் இணைந்து கொள்கிறார்கள். அவன் எதேச்சையாக பார்த்தபோது கோவிலைத் தாண்டி இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஒரு சிறிய உருவம்.
குஞ்ஞிமாளு: (மெதுவாக கண்களை மூடியவாறு பிரார்த்திக்கிறாள்) காப்பாத்தணும்! காப்பாத்தணும்!
அவளுக்கு முன்னால் தடியை ஊன்றியவாறு ஆலமரத்திற்குக் கீழே இருக்கும் வயதான பெரியவர் நின்றிருக்கிறார்.
கிழவர்: பாகவதரோட கண்கள் மட்டும் சாகவே இல்ல. என்னைப் பார்த்ததும், அந்தக் கண்கள் என்னை யார்னு அடையாளம் கண்டுபிடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். சரி... கல்யாண வேலையை விட்டுட்டு இங்க வந்து நிக்கிறியே, குழந்தை?
குஞ்ஞிமாளு: சமையலுக்கு ஆளுங்க இருக்காங்க.
கிழவர்: அடக்கி வைக்க முடியாதப்போ கொஞ்சம் சத்தம் போட்டு அழலாம். அது ஒரு வகையில மனசுக்கு நிம்மதியா இருக்கும்!
அவளின் முகத்தைப் பார்க்காமல் அவர் தடியை ஊன்றியவாறு நடந்து போகிறார்.
வீட்டின் வாசலிலும், உள்ளேயும் திருமண விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமகனும், மணமகளும் இருக்கிறார்கள். குட்டிசங்கர மேனனின் தர்மசங்கடமான நிலை.
சமையலறையில் விருந்து சாமான்கள். எல்லாம் பரிமாறப்பட்ட ஒரு இலையைத் தூக்கிப் பிடித்தவாறு குஞ்ஞிமாளு வெளியே செல்கிறாள்.
ஆலமரத்துக்குக் கீழே அமர்ந்திருக்கும் கிழவரின் முன்னால் அந்த இலையை அவள் வைக்கிறாள்.
குஞ்ஞிமாளு: நான் பாத்திரத்துல பாயாசம் கொண்டு வர்றேன். முதல்ல சாப்பாட்டைச் சாப்பிடுங்க.
கிழவர் ஆர்வத்துடன் உண்ண ஆரம்பிக்கிறார். எங்கேயோ பார்த்தவாறு கவலையுடன் நின்றிருக்கும் அவளை திடீரென்று அவர் பார்க்கிறார். சோற்று உருண்டையை உருட்டிக் கொண்டிருந்த அவரின் கைகள் நிற்கின்றன. தாடை எலும்பின் அசைவும் நிற்கிறது. ஒரு ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரம் திடீரென தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு விட்டதைப்போல, அவர் எந்தவித அசைவும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார். பசியே இல்லாமற் போனதுபோல் உணர்கிறார் அவர். குஞ்ஞிமாளு திரும்பியபோது, அதை கவனிக்கிறாள்.
குஞ்ஞிமாளு: என்ன சாப்பிடல?
கிழவர்: என்னோட பசி செத்துப் போச்சு, மகளே. போதும்.
அவர் இலையை எடுக்கிறார். பிறகு அதைத் தூக்கி விட்டெறிகிறார். அதற்காகக் காத்திருக்கும் தெரு நாய்கள் சண்டை போட்டு அதைத் தின்கின்றன.
இரவு நேரம்.
சமையலறையை நோக்கி இரவில் படுக்கப்போகும் ஆடைகளுடன் (பகலில் அணிந்திருந்த நகைகளும், சூடியிருந்த மலர்களும் அப்படியே இருக்கின்றன. புடவை மட்டும் சாதாரண புடவையாக மாறியிருக்கிறது) ரத்னம் வருகிறாள்.
அவள் கூஜாவில் சீரகத் தண்ணீரை ஊற்றிக் கொண்டு போக முயலும்போது, சிரித்தவாறு குஞ்ஞிமாளுவிடம்:
“எவ்வளவு காலமா இங்க வேலை பாக்குறே?”
குஞ்ஞிமாளு: கொஞ்ச நாட்களாத்தான். மேலே போறதா இருந்தா பச்சைத் தண்ணி கொண்டு போங்க. சீரகத் தண்ணி அவர் குடிக்க மாட்டாரு.
அந்தப் புதிய தகவலைக் கேட்டு ரத்னம் சீரகத் தண்ணீரைப் பாத்திரத்தில் திரும்பவும் ஊற்றுகிறாள். குஞ்ஞிமாளு கூஜாவில் தண்ணீரை நிரப்பித் தருகிறாள்.
ரத்னம்: வாசல்ல கூட்டம் குறைஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்.
குஞ்ஞிமாளு: படுக்குறப்போ தெற்குப் பக்கம் இருக்குற ஜன்னலை அடைச்சிடுங்க. பூனை அது வழியாதான் எப்பவும் உள்ளே வரும்.
ரத்னம் ஆர்வம் மேலோங்க இந்த கிராமத்துப் பெண்ணைப் பார்க்கிறாள்.
குஞ்ஞிமாளு: பாத்திரத்தோட படி ஏறுறப்போ, பார்த்து போகணும். மூணாவது படி இலேசா அசையம்.
ரத்னம் வியப்புடன் அவளைப் பார்க்கிறாள். பின்னர் திரும்பிப் பார்த்தாவறு-
ரத்னம்: குஞ்ஞிமாளு, நீ கோயில் குளத்துலயா குளிப்பே?
குஞ்ஞிமாளு: ஆமா...
ரத்னம்: பணம் வச்சா பூ மலரும். மலர்ந்தால் நினைச்சது நடக்கும்னு சொல்றாங்களே! உண்மையா?
குஞ்ஞிமாளு: நீ ஏன் அதைச் சோதிச்சுப் பார்க்கல, குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு வேதனையுடன் புன்னகைக்கிறாள்.
இரவு நேரம்.
ராக ஆலாபனை கேட்கிறது.
நிசப்தமான வீடு.
குஞ்ஞிமாளு தொழுவத்தில் பசுவைப் பார்த்துவிட்டு வெளியே வந்து நின்று கொண்டிருக்கிறாள். வாழைத் தோப்பைத் தாண்டி முருங்கை மரம். அவள் கையில் விளக்கு இருக்கிறது. இப்போதும் ராக ஆலாபனை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அவள் படுக்கிறாள். இருந்தாலும் கண்களை மூடவில்லை. எங்கேயோ இருந்து வரும் ராக ஆலாபனை இன்னும் நிற்கவில்லை. அவள் திடீரென்று என்னவோ நினைத்து, எழுந்து உட்காருகிறாள். அப்போது ராக ஆலாபனை நிற்கிறது.
கலக்கத்துடன் குஞ்ஞிமாளு:
“அம்மா, உறங்கிட்டீங்களா?”
அம்மாவின் பதில் குரல்: இல்ல.... என்ன விஷயம்?
குஞ்ஞிமாளு: பாகவதர் பேச முடியாத நிலையில இருக்காருன்னு கேள்விப்பட்டேன். பிறகு... இப்போ யாரு அங்கேயிருந்து பாடுறது?
அம்மா: நான் கேட்கல. உனக்கு அப்படி தோணியிருக்கும்.
அவள் படுக்கிறாள். அப்போது பாட்டு கேட்கவில்லை. இருட்டில் கண்களைத் திறந்தவாறு அவள் படுத்திருக்கிறாள். அவளின் முகம் தெளிவற்றதாகிறது.
சமையலறைப் பகுதியில் மேஜை மேல் ரத்னம் பலகாரங்களை வைக்கிறாள். குஞ்ஞிமாளு கொண்டுவந்து தரும் பொருட்களை அவள் வாங்கி வைக்கிறாள்.
குஞ்ஞிமாளு: கூப்பிட்டபிறகு வந்தாபோதும். ஒரே நிமிஷம்... மிளகாய் துவையல் இன்னும் தயாராகல.
ரத்னம்: சட்னி இருக்குறது போதாதா? துவையல் வேற வேணுமா?
குஞ்ஞிமாளு: கட்டாயம் வேணும்னு சொல்லுவாரு.
ரத்னம்: (சிரித்தவாறு) எனக்குத் தெரிஞ்சதை விட தாஸ் அத்தானுக்கு எதெது பிடிக்கும், எதெது பிடிக்காதுன்னு குஞ்ஞிமாளு, நீதான் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கே. (திறந்த மனதுடன்) சரி... துவையல் அரை. குஞ்ஞிமாளு, இந்த மாதிரி நிறைய விஷயங்களை உன்கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்க வேண்டியதிருக்கு.
பகல்.
அம்மாவின் காலில் மருந்து தடவிக் கொண்டிருக்கிறாள் ரத்னம். வெளியே ரத்னத்தின் புடவையையும் மற்ற துணிகளையும் கொண்டு வரும் குஞ்ஞிமாளுவிடம்-
அம்மா: ரத்னம்தான் இருக்காளே! நீ வேணும்னா இன்னைக்கு வீட்டுக்குப் போயிட்டு வா.
ரத்னம்: சாயங்காலம் வந்திடணும். தாஸ் அத்தான் போகப்போறாரு. நீ கட்டாயம் என் கூட துணைக்குப் படுத்துக்கிறதுக்கு வேணும்.
குஞ்ஞிமாளு: நான் வீட்டுக்குப் போகல.
அம்மா: பாட்டிக்கு உடம்புக்கு ஆகாமத்தானே இருக்கு! போயி பார்த்துட்டு வா.
குஞ்ஞிமாளு ஒன்றும் பேசாமல் மவுனமாக இருக்கிறாள்.
ரத்னம்: போயி பார்த்துட்டு வா, குஞ்ஞிமாளு.
குஞ்ஞிமாளு உள்ளே போகிறாள்.
அம்மா: இவளோட மாமா மகன் ஒருத்தன் இருக்கான். இவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு வந்தான். இவளுக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல போல இருக்கு.
ரத்னம்: ஏனாம்?
அம்மா: இவளுக்கு விருப்பமில்லைன்றப்போ, நாம இவளைக் கட்டாயப்படுத்தினா நல்லாவா இருக்கும்?
ரத்னம்: தாஸ் அத்தான் என்ன சொல்றாரு?
அம்மா: அவன் என்ன சொல்வான்? அவனைப் பொறுத்தவரை புத்தகத்தையும், எழுதுறதையும் தவிர அவனுக்கு வேற எதைப்பற்றி தெரியும்? பாவம்...
இரவு நேரம்.
புது மணமக்களின் படுக்கையறையில் ரத்னமும், நீர் நிரப்பப்பட்ட பாத்திரமும் பாயுமாக துணைக்கு இருக்கும் குஞ்ஞிமாளுவும். கீழே பாயை விரிக்கிறாள் குஞ்ஞிமாளு. ரத்னம் படுக்கையைச் சரி பண்ணுகிறாள்.
ரத்னம்: ஓ... நான் அதைக் கேட்க மறந்துட்டேன். உன் பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு?
குஞ்ஞிமாளு: பரவாயில்ல...
ரத்னம்: சரி... ஏன் மத்தியானமே ஓடிவந்துட்டே?
குஞ்ஞிமாளு: (சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு...) அந்த ஆளு பேசுற முறையே எனக்குப் பிடிக்கல. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாப்ல. இதுல நல்லா தண்ணி வேற போட்டிருக்காப்ல.
ரத்னம்: கொஞ்சம் குடிச்சா மட்டும் நல்லதா? தாஸ் அத்தான் இப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்காரு. என்ன இருந்தாலும் அவன் உன்னோட மாமன் மகனாச்சே!
அதற்கும் குஞ்ஞிமாளு பதில் எதுவும் பேசவில்லை. ரத்னம் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு புத்தகத்தைப் புரட்டியபோது அதற்குள் ஒரு வாடிய மலர் இருக்கிறது. அதைப் பார்க்கிறாள் ரத்னம்.
ரத்னம்: என்ன இது? என்ன இது? இதுதானே அந்தப் பூ? குஞ்ஞிமாளு ஒன்றுமே பதில் பேசவில்லை.
ரத்னம்: என்ன? தாஸ் அத்தானுக்கும் இதுல நம்பிக்கை வர ஆரம்பிச்சிடுச்சா? தெய்வங்கள்தான் மனிதர்களைக் கெடுக்கிற பெரிய முதலாளிகள்னு பெருசா பேசுவாரே!
குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் படுத்திருக்கிறாள். ரத்னமும் படுக்கிறாள். விளக்கை அணைக்கிறார்கள். படுக்கையறை விளக்கு மட்டும் எரிகிறது.
ரத்னம்: நான் உன்னைக் குறை சொல்லல. விருப்பமில்லாதவங்களை கல்யாணம் பண்றதுன்றது கஷ்டமான ஒரு விஷயம்தான். ஆமா... உனக்கு அந்த ஆளை பிடிக்கலியா?
குஞ்ஞிமாளு எதுவும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து-
குஞ்ஞிமாளு: இனி அந்தவீட்டு படியில கால் வச்சா, காலை ஒடிச்சிடுவேன்னு அந்த ஆளு இன்னைக்குச் சொல்றாரு.
ரத்னம்: கோபத்துல அப்படி சொல்லியிருப்பான். யாராவது அப்படிச் செய்வாங்களா? உன்னோட வீடும்தானே அது?
குஞ்ஞிமாளு எதுவுமே பேசவில்லை.
கோவில் குளத்தில் இருந்து கை, கால்களை கழுவி விட்டு வரும் ரத்னமும், குஞ்ஞிமாளுவும். தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் அம்மிணியைப் பார்த்ததும் கொஞ்சம் ரத்னத்தைவிட வேகமாக நடந்துபோன குஞ்ஞிமாளு அவளை அழைக்கிறாள்.
“அம்மிணி... கொஞ்சம் நில்லு...”
அம்மிணி நிற்கிறாள். குஞ்ஞிமாளு அம்மிணியின் அருகில் வருகிறாள். அம்மிணி ஈரத்துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கிறாள்- வயிறு வெளியே தெரியாத விதத்தில்.
குஞ்ஞிமாளு: வெளியே உன்னைப் பார்க்கவே முடியலியே! ஊர்ல இருந்து வந்தவங்கதான் எல்லோரும் போயிட்டாங்கள்ல!
அம்மிணி: எனக்கு உடம்புக்கு சரியில்ல...
குஞ்ஞிமாளு: வீட்டு படி வரை மூணு, நாலு தடவை நான் வந்தேன்.
அம்மிணி: உள்ளே வர வேண்டியதுதானே!
அதற்கு குஞ்ஞிமாளு பதில் எதுவும் சொல்லவில்லை.
அதற்குள் ரத்னம் அங்கு வந்து விடுகிறாள்.
குஞ்ஞிமாளு: (நடந்தவாறு) நாளைக்குப் பார்க்கலாமா?
அம்மிணி: சரி...
குஞ்ஞிமாளு வழக்கமான வழியில் ரத்னத்துடன் நடக்கிறாள்.
அவர்கள் இருவரும் நடக்கும்போது-
ரத்னம்: நாளைக்குச் சீக்கிரமா எந்திரிச்சு கோவில் குளத்துக்கு நாம வரணும்.
குஞ்ஞிமாளு: எதுக்கு?
ரத்னம்: விஷயம் இருக்கு. நானும் படிமேல பணம் வச்சு ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்.
இலேசாக புன்னகைத்தவாறு-
குஞ்ஞிமாளு: சோதனை செஞ்சு பார்க்குறது நல்லதா?
ரத்னம்: நமக்குத் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதை நமக்குத் தெரிய வைக்க கடவுளைத் தவிர யாரால முடியும்?
குஞ்ஞிமாளு அமைதியாக இருக்கிறாள். இருவரும் நடக்கிறார்கள்.
அறையின் உட்பகுதி.
பரப்பி வைக்கப்பட்டிருக்கும் புடவைகள், மற்ற ஆடைகள், ஹரிதாசனும், ரத்னமும் இருக்கிறார்கள்.
ரத்னம்: என்கிட்ட நிறைய பழைய புடவைகள் இருக்கு. அதுல நாலு புடவைகளை அந்தப் பொண்ணுக்குக் கொடுக்கப் போறேன்.
ஹரிதாசன்: யாருக்கு?
ரத்னம்: (அவனைப் பார்க்காமல்) குஞ்ஞிமாளுக்கு. சாயங்காலம் அவளுக்கு ஒரு நல்ல புடவையைக் கட்டி வெளியே என் கூட கூட்டிட்டுப் போகலாம்னு இருக்கேன். அழகான பொண்ணு. என்ன... நான் சொல்றது சரிதானே?
ஹரிதாசன்: இதெல்லாம் தேவையா?
ரத்னம்: என்ன இருந்தாலும் பெண்ணாச்சே! அவளுக்கும் ஆசைன்னு ஒண்ணு இருக்காதா?
அவள் பழைய புடவைகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறாள். சமையலறைக்கு அருகில் அம்மாவைப் பார்த்த ரத்னம்-
“குஞ்ஞிமாளுவை எங்கே?”
அம்மா: அவள் பையைத் தச்சிக்கிட்டு இருக்கா.
ரத்னம் குஞ்ஞிமாளுவின் சிறிய அறைக்குள் நுழைகிறாள். அந்தச் சிறிய அறையில் இருக்கும் மரத்தால் ஆன பெட்டியைத் திறக்கிறாள். பிறகு ஒவ்வொன்றாக வெளியே எடுத்து பார்க்கிறாள். கல்லூரி ஆண்டு மலரில் இருந்து கிழித்து வைத்த புகைப்படம் உள்ள பக்கம், தந்தி, தந்தியின் கவர், ஹரிதாசன் அம்மாவின் முகவரிக்கு எழுதிய மூன்று கடிதங்கள், சிகரெட் அட்டைகள், காய்ந்துபோன ஒரு நீல மலர்!
அவள் என்னவோ யோசனையில் ஆழ்ந்து போகிறாள்.
அவள் உடல் இலேசாக நடுங்குகிறது.
பொருட்களை மீண்டும் முன்பு இருந்த மாதிரியே வைத்துவிட்டு, புடவைகளை பெட்டிக்கு வெளியே வைத்த அவள் அறையை விட்டு வெளியேறுகிறாள்.
இரவு நேரம்.
சாப்பாட்டு அறை. ஹரிதாசன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ரத்னம் அவனுக்குப் பரிமாறுகிறாள். பின்னால் குஞ்ஞிமாளு தூரத்தில் நின்றிருக்கிறாள். சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்கிறாள் அம்மா.
ஹரிதாசன்: வீடு எல்லாம் சரி பண்ணியாச்சு. நாங்க குடி போக வேண்டியதுதான். லீவு எடுக்க வேண்டிய அவசியமே இல்ல...
அம்மா: ஆமா... வேலைக்கு ஆள் வேண்டாமா?
ரத்னம்: குஞ்ஞிமாளுவை அங்கே கூட்டிட்டுப் போயிடலாம்.
ஹரிதாசன்: (அதை விரும்பாமல்) அப்போ இங்கே யார் வேலை செய்யிறது?
ரத்னம்: அம்மாவும் நம்மகூட வந்துடட்டும். அச்சுதன்நாயர் இங்கே இருக்குறதுனால, பேசாம வீட்டைப் பூட்டிட்டே அவுங்க வந்துடலாம். ஒரு பிரச்னையும் இல்ல...
ஹரிதாசன் எதுவுமே பேசாமல் இருக்கிறான்.
வெளியே சமையலறை சுவரில் சாய்ந்தவாறு என்னவோ நகத்தால் வரைந்து கொண்டு ஏதோ சிந்தித்தவாறு நின்றிருக்கும் குஞ்ஞிமாளு-
அதிகாலை நேரம்.
குளித்து முடித்து வரும் குஞ்ஞிமாளுவும், ரத்னமும் கோவிலின் அருகில்.
குஞ்ஞிமாளு: நீங்க சோதனை பண்ணி பார்க்கணும்னு வச்சதாலதான் பூ மலராமப் போச்சு!
ரத்னம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். சில நொடிகளுக்குப் பிறகு-
ரத்னம்: பதில் எனக்குக் கிடைக்காம போயிருக்கலாம். ஒரு வேளை குஞ்ஞிமாளு, உனக்கு அந்த பதில்...
இப்போது குஞ்ஞிமாளு அமைதியாக இருக்கிறாள்.
ரத்னம்: நீ ஏன் கூட வரேல்ல?
குஞ்ஞிமாளு: நீங்க பிரியப்பட்டா...
ரத்னம்: (இலேசாக சிரித்தவாறு) உனக்கு விருப்பமா?
குஞ்ஞிமாளு: அம்மா கூட இருக்குறதுன்னா எனக்கு விருப்பம்தான். உங்க கூட இருக்குறதுன்னா எனக்கு விருப்பம்தான். நீங்க தீர்மானிச்சா சரி...
ரத்னம்: உனக்குன்னு சுயமா ஒரு முடிவெடுக்கவும் தெரியாதா?
குஞ்ஞிமாளு: (சிரித்தவாறு) என்னைப்போல உள்ளவங்க ஒரு முடிவு எடுத்து என்ன பிரயோஜனம்?
ஒரே நிசப்தம். ரத்னம் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாள்.
வாசல்.
அச்சுதன் நாயர் திண்ணையில்.
அம்மாவும், ஹரிதாசனும் வாசலில்.
ரத்னம் அங்கு வருகிறாள்.
“என்ன முடிவு பண்ணினீங்க?”
ஹரிதாசன்: நாளைக்குப் புறப்படுவோம். அம்மா சொல்றாங்க நாளைக்கு நாள் நல்லா இருக்குதுன்னு.
ரத்னம்: அச்சுதன்நாயர், குஞ்ஞிமாளுவோட வீட்ல சொல்லிடுங்க... ஒண்ணுமே சொல்லாம அங்கே இவளைக் கூட்டிட்டுப் போனா நல்லா இருக்காது. நான் இவளை எர்ணாகுளத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்.
ரத்னம் உள்ளே போகிறாள்.
அறையில்.
ரத்னம் வர, அவளுக்குப் பின்னால் ஹரிதாசன்.
ஹரிதாசன்: நமக்கு அங்கே வேற யாராவது வேலை செய்ய கிடைப்பாங்க. இவளை எதுக்கு தேவையில்லாம அங்கே கூட்டிட்டுப் போகணும்? அது நமக்கு சரிப்பட்டு வராது.
ரத்னம்: (இலேசாக சிரித்தவாறு) அது பாவம் இல்லியா?
ஹரிதாசன்: போறப்போ அவளுக்கு ஏதாவது கொடு. அது போதும்.
ரத்னம்: எவ்வளவு கொடுக்கணும்?
ஹரிதாசன்: பழைய புடவைகளை ஏற்கனவே கொடுத்திருக்கேல்ல! இப்போ பத்தோ இருபத்தஞ்சோ கொடு.
ரத்னம்: அது போதுமா?
ஹரிதாசன்: தாராளமா போதும்.
ரத்னம்: அவள் செய்த சேவைக்கு என்னோட நாலு பழைய புடவைங்க, உங்களோட இருபத்தஞ்சு ரூபா. இது போதுமா?
அவள் சொன்னதை விரும்பாத ஹரிதாசன்:
“பிறகு என்னதான் கொடுக்கணும்னு சொல்ற, ரத்னம்? இந்த அளவுக்கு நாம கருணை காட்டினா போதும்னு நினைக்கிறேன்.”
ரத்னம்: நமக்கு வேண்டியது கிடைச்சிருச்சுன்னா, இவங்களை எங்கேயாவது பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா என்னவோ போல இருக்கும்ல?
ஹரிதாசன்: என்ன...என்ன சொல்ற நீ?
ரத்னம்: எது சரி, எது சரியா இருக்காதுன்ற விஷயம்...
ஹரிதாசன்: இவளுக்கு இங்கே ஏதோ கல்யாண ஆலோசனை வந்திருக்குன்னு நீயும் கேள்விப்பட்டிருப்பே இல்லே! நாம ஏன் தேவையில்லாம அவளை கஷ்டப்படுத்தணும்?
ரத்னம்: ம்... அது ஒரு காரணம்! ஆனா, தாஸ் அத்தான் - நீங்க பயங்கர புத்திசாலி. க்ளவர்... ஒரு ஆபத்தும் உண்டாக்கல இல்ல? குற்றச்சாட்டு, சத்தியாகிரகம், மிரட்டல்... யு ஆர் க்ளவர்... வெரி வெரி க்ளவர்...
ஹரிதாசன்: ரத்னம்... டோண்ட் டாக் நான்சென்ஸ்.
ரத்னம்: நான் பல நேரங்கள்ல ஆண்களைப் பற்றி சிந்திச்சுப் பார்க்குறது உண்டு. சும்மா வாதத்துக்காக சொல்லட்டுமா?
ஹரிதாசன்: படிச்ச விஷயத்தை எங்கே வைக்கணுமோ அங்கேயே நிறுத்திக்கணும். அதை விட்டுட்டு கண்ட இடத்துல தூசு தட்டி அதைப் பார்த்தா...
ரத்னம்: என்ன சொல்றீங்க? இப்படி நினைச்சுப் பாருங்க... நம்மோட முதல் இரவு அன்னைக்கு நான் ஒரு கன்னிப்பெண் இல்லைன்னு தாஸ் அத்தான், உங்களுக்குத் தெரிய வருதுன்னு வச்சுக்கங்க... அப்ப நீங்க எப்படி நடப்பீங்க?
ஹரிதாசன் நடுங்கி நிற்கிறான்.
ரத்னம்: அவ வேலைக்காரி. என்ன சொன்னாலும் சரின்னு கேட்கக் கூடிய அப்பாவிகள் சிலரும் இருக்கத்தான் செய்றாங்க. நான் சொல்றது உண்மைதானே? ‘உன் கனவில் ஒரு மொட்டு கருகினால் என் இதயத்தில் குருதி வழியும்’னு ஒரு கவிதை இருக்கே? நீங்கதானே அந்தக் கவிதையைச் சொன்னீங்க? அதை எழுதினதே நீங்கதானா?
ஹரிதாசன்: இருக்கலாம் அதுக்காக?
ரத்னம்: (சிரித்தவாறு) சும்மா கேக்குறேன்...
ஹரிதாசன்: (குரலை உயர்த்தி) தேவையில்லாம என் தலையில ஏறி உட்காரலாம்னு நினைக்காதே.
ரத்னம்: (கிண்டலாக) பணிவாகவும், அடிமையாகவும் இருக்குற தாசிகளை மட்டுமே நீங்க பார்த்திருக்கீங்க... (குரலை மாற்றி) யூ... மிஸரபில் ஹிப்போக்ரட்...
அவன் அவளின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறான்.
அம்மாவின் குரல்:
“தாஸா!”
அம்மா அங்கு வருகிறாள்.
ஒரே நிசப்தம்.
சில நொடிகளுக்குப் பிறகு
ஹரிதாசன்: அம்மா... நான்...
ரத்னம் கோபப்படவில்லை. வருத்தப்படவும் இல்லை. அடி வாங்கிய பிறகும் வெற்றி பெற்றவளைப்போல அவள் நின்றிருக்கிறாள்.
அம்மா: (மெதுவான குரலில்- யாருக்கும் கேட்காமல்) இப்பவே இப்படி சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்கன்னா, பின்னாடி இது எதுல போய் முடியும் தெரியுமா?
இரண்டு பேரும் வாய் திறக்காமல் மவுனமாக நின்றிருக்கிறார்கள்.
அம்மா: நான் வீட்டை பூட்டிட்டு, உங்க கூட வந்துறப்போறேன். வேலைக்காரங்க விஷயத்தைப் பற்றி யாரும் இங்கே ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. ரெண்டு பேருக்கு சமையல் பண்ணிப் போட இப்போக்கூட என்னால முடியும்.
அம்மா வெளியே போவதற்காக ஏணியில் இறங்க ஆரம்பிக்கும்போது, ஏணிக்குக் கீழே குஞ்ஞிமாளு நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். மேலே நடந்த சண்டை அவள் காதிலும் விழாமல் இல்லை. அம்மா ஏணியில் இறங்குகிறாள்.
அம்மா இப்போது சமநிலை அடைந்த மனதுடன் இருக்கிறாள். கீழே அம்மாவும் குஞ்ஞிமாளுவும்.
அம்மா: குஞ்ஞிமாளு, நான் இவங்க கூட போறேன். நீ உன் வீட்டுக்குப்போ. எப்போதாவது ஆள் தேவைப்படுதுன்னு வர்றப்போ, நான் அச்சுதன் நாயரை அங்கே அனுப்பி வைக்கிறேன். இன்னைக்கு கணக்கு எவ்வளவுன்னு பார்த்து தீர்த்திடுவோம்.
குஞ்ஞிமாளுவின் பதில் என்ன என்பதையே எதிர்பார்க்காமல் அம்மா சமையலறைப் பக்கம் போகிறாள்.
காலை நேரம்.
சமையலறைக்கு வந்த ரத்னத்தினம்-
அம்மா: அந்தப் பொண்ணைக் காணோமே! போயிட்டாளா என்ன?
ரத்னம்: ராத்திரி ஒண்ணுமே சொல்லல. காலையில போறதா இருந்தா, ஒரு வார்த்தை சொல்லாம போக மாட்டா.
அம்மா: அவளோட துணியும், சாமான்களும் இங்கேதான் இருக்கு. காசு கூட இன்னும் வாங்கல.
ரத்னம்: அப்படின்னா குளிக்க போயிருப்பா.
அம்மா: பாத்திரங்களை தேய்ச்சிப் போட்டுட்டு, தண்ணீர் நிரப்பி வச்ச பிறகுதான் பொதுவா அவ குளிக்கப் போவா.
ஒரு சத்தம்:
“அம்மா...”
முற்றத்தில் காளி நின்றிருக்கிறான்.
அங்கிருந்தவாறே-
காளி: கோயில் குளத்துல ஒரு பெண்ணோட பிணம் மிதக்குதாம்.
அம்மாவும், ரத்னமும் நடுங்கிப் போகிறார்கள்.
ரத்னம் நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே போகிறாள். படுக்கையை விட்டு எழுந்து வந்த ஹரிதாசன் முன்னால் அவள் நிற்கிறாள்.
ரத்னம்: உங்களுக்கு விஷயம் தெரியுமா?
ஹரிதாசன்: என்ன?
ரத்னம்: கோயில் குளத்துல ஒரு பெண் பிணம் மிதக்குதாம்.
ஹரிதாசன்: (பதைபதைப்புடன்) யார்? யார் பிணம்?
ரத்னம்: (பரபரப்பை மறைத்துக் கொண்டு) கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க. படிச்சவங்க எப்பவும் எச்சரிக்கையா இருப்பாங்கன்னு நான் நினைச்சேன். தாஸ் அத்தான், உங்க விஷயத்துல ஏதோ தப்பு நடந்திருச்சோ?
அவன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறான் என்பதை எதிர்பார்க்காமலே அவள் உள்ளே போகிறாள்.
ஹரிதாசன் மனதில் கலவரத்துடன் மெதுவாக நடந்து கோவில் பகுதியை அடைகிறான். தூரத்தில் கோவில் குளத்தின் அருகில் ஆட்களின் கூட்டம் தெரிகிறது. எதிரே வந்த ஒரு ஆள் அவனைப் பார்த்து நிற்கிறான்.
“ராத்திரி விழுந்திருக்கணும். அப்படின்னாத்தான் இப்போ பிணம் நீருக்கு மேல வர முடியும்!”
ஹரிதாசன் தளர்ந்து போய் நிற்கிறான்.
தளர்ச்சியையும் பதைபதைப்பையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருக்கும் ஹரிதாசனிடம்:
அந்த ஆள்: எங்கே போறீங்க?
ஹரிதாசன்: எங்கேயும் இல்ல.
அந்த ஆள்: ஷாரடிக்கும் வாரஸ்யார்க்கும் அறிவே இல்ல. இல்லாட்டி அம்மிணி இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பாளா?
ஹரிதாசன்: அம்மிணியா?
அந்த ஆள்: ஷாரத்தெ வீட்டு அம்மிணிதான்.
அவன் போகிறான்.
ஹரிதாசன் உடல் சோர்வடைந்து நிற்கிறான். முதலில் ஒரு சிறு சிரிப்பின் அலை அவனின் முகத்தில். பிறகு... எதற்கு என்றே தெரியாமல் கையைத் தலையில் வைத்தவாறு அவன் மெதுவான குரலில் தேம்பித் தேம்பி அழுகிறான்.
ஆலமரத்துக்குக் கீழே கவலையுடன் நின்றிருக்கும் குஞ்ஞிமாளு, கிழவர். குஞ்ஞிமாளுவின் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.
கிழவர்: ம்... உன்னோட சினேகிதி போயிட்டா.
குஞ்ஞிமாளு: நானும் இங்கேயிருந்து போகப் போறேன்.
கிழவர்: எங்கே?
குஞ்ஞிமாளு: வீட்டு படியில ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கிழக்கும்பாட்டு வீட்டைப் பூட்டிட்டு போறாங்க. எங்கேயாவது போக வேண்டியதுதான். வேலைக்காரிகளைத் தேவைப்படுற ஏதாவதொரு வீடு இல்லாமலா போகும்?
கிழவர்: (கவலையுடன்) எனக்குன்னு ஒரு வீடும் இல்ல, மகளே. எனக்கு இருக்குறதே இந்த ஆலமரத்தோட அடிதான் (சோகத்துடன் புன்னகைக்கிறார்).
குஞ்ஞிமாளு நடக்கிறாள்.
அவள் வாசலை அடையும்போது அம்மா, ரத்னம், ஹரிதாசன் மூவரும் புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். முற்றத்தில் கூலிக்காரன் நின்றிருக்கிறான். பின்னால் அச்சுதன்நாயர்.
அம்மா: உன்னோட சாமான்கள் சமைலறைக்கு வெளியே இருக்கு.
அவள் ஒன்றுமே பேசாமல் அமைதியாக நிற்கிறாள்.
ரத்னம் அவளின் அருகில் வந்து கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து:
ரத்னம்: நான் வரட்டுமா, குஞ்ஞிமாளு?
குஞ்ஞிமாளு கண்ணீருடன் புன்னகைக்க முயற்சிக்கிறாள். அப்போதுதான் அவள் பார்க்கிறாள்- அப்புக்குட்டன் வந்து கொண்டிருக்கிறான். புறப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்த அவன், ஓரளவுக்கு விஷயத்தைப் புரிந்து கொண்டு நிற்கிறான்.
அவன் ஹரிதாசனைப் பார்த்துச் சிரிக்கிறான்.
ஹரிதாசனுக்கு எரிச்சல் உண்டாகிறது.
ஹரிதாசன்: அப்போ நீ ரொட்டி வேலைக்குப் போகல!
அப்புக்குட்டன்: (பணிவுடன்) இல்ல. நாட்டுல அழுக்கைச் சரி பண்ண யாராவது ஆள் இருந்தாகணும்ல...
ஹரிதாசனின் முகத்தில் தெரியும் உணர்ச்சியின் வெளிப்பாடு-
அவர்கள் புறப்படுகிறார்கள்.
ஆள் இல்லாத வீட்டின் முன்னால் அவளும், அப்புக்குட்டனும் மட்டும்.
அப்புக்குட்டன்: உன்னோட சாமான்கள் எங்கே?
அவள் சிலை போல மவுனமாக நின்றிருக்கிறாள்.
மீண்டும் கிராமத்திற்கு வரும் ஒற்றையடிப்பாதை.
சிறிய ஒரு சுமையுடன் குஞ்ஞிமாளு நீண்டு போகும் அந்த கிராமத்தின் ஒற்றையடிப்பாதை வழியே நடந்து போகிறாள்.
அவள் போவதையே பார்த்தவாறு நின்றிருக்கிறான் அப்புக்குட்டன்.
அவனும் அவளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பிக்கிறான்.
அப்போது ஆற்றைக் கடந்து இன்னொரு வயதான கிழவியும், ஒரு இளம்பெண்ணும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவள்கள் வழியில் பார்த்த ஒரு கிராமத்து மனிதனிடம் கேட்கிறார்கள்:
“கெழக்கினியாத்து வீட்டுக்கு எப்படி போகணும்?”
கிராமத்து ஆள்: நேரா நடந்து கோயிலுக்குப் பக்கத்துல போய் விசாரிங்க. சொல்லுவாங்க.
மற்றொரு தாசி கிராமத்திற்குள் நுழைகிறாள்- மற்றொரு வீட்டிற்கு.