Logo

மலையாளத்தின் ரத்தம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6410
malayalathin ratham

கோலாலம்பூருக்கு அருகிலுள்ள உலுகோம்பாக் கிராமத்துக் கடைவீதியின் மூலையிலிருக்கும் முச்சந்திப் பெருவழியில் சாதாரணமாகக்காண முடிகிற அந்த சோற்று வண்டியும், விற்பனை செய்யும் மொய்தீனும் அந்த கிராமத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருந்தார்கள். ஆவியையும் புகையையும் பரவ விட்டுக்கொண்டு மொய்தீனின் உந்து வண்டி அந்தத் தெருவின் மூலையை அடையும்போது, மொய்தீன் தயாரித்த "நாசிகோரிங்” கை (வறுத்த மசாலா சாதம்) வாங்கிச் செல்வதற்காக மலேயாக்காரர்களான பாட்டிகளும் பிள்ளைகளும் இளம் பெண்களும் சுற்றிலும் வந்து கூடினார்கள்.

மொய்தீனின் நாசிகோரிங்கிற்கு ஒரு தனிப்பட்ட சுவை இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். கோம்பாக்கில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களும் சீனரும் மொய்தீனின் மசாலா சாதத்தை ருசி பார்த்து சந்தோஷப்படுவதுண்டு.

மொய்தீன் அண்டத்தோடுக்காரன். அப்படியென்றால் மொய்தீன் பிறந்ததும் குழந்தைப் பருவத்தைச் செலவழித்ததும் பொன்னானி தாலுகாவில் இருக்கும் அந்த கிராமத்தில்தான். அண்டத்தோடில் இருந்து உலுகோம்பாக்கை அடைவதற்கு இடையில் மொய்தீன் வாழ்க்கையின் 21 வருடங்களின் வரலாறு அடங்கியிருக்கிறது. அவனுக்கு மூன்று வயது நடந்தபோது அவனுடைய வாப்பா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் ஒரு படகோட்டியான அந்த்ரு அவனுடைய உம்மாவை திருமணம் செய்து கொண்டான். ஏழு வருடங்களில் அவனுடைய உம்மா ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். எல்லாமே ஆண் குழந்தைகள். மொய்தீனுக்கு வீட்டில் இடமில்லை என்றாகிவிட்டது. "கொஞ்சம் பெரியவனா ஆயிட்டேல்லடா... எங்காவது போய் நாலு காசு சம்பாதிக்கப் பாரு...” இளைய வாப்பா எப்போதும் குரைத்துக் கொண்டிருப்பான்.

இறுதியில் ஒருநாள் மொய்தீன் "நாலு காசு சம்பாதிப்பதற்காக” ஊரை விட்டு வெளியேறுவதற்குத் தீர்மானித்தான். பசி எடுக்கும்போது பச்சைத் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறைத்துக்கொண்டு திரூர் வரை நடந்து சென்றான். இரவில் திரூர் ஆற்றின் கரையில் இருந்த மணலில் படுத்து உறங்கினான். மறுநாள் புலர்காலைப் பொழுதில் புகைவண்டி நிலையத்திலிருந்து வண்டி ஏறினான். எங்கெல்லாமோ தங்கிக் கொண்டும் நடந்து கொண்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் பம்பாயை அடைந்தான். தேநீர்க் கடைகளில் "பாகர்வாலா”வாகவும், பானீநாரியல் (இளநீர்) காரனாகவும் சில வருடங்கள் பம்பாயில் வாழ்க்கையை ஓட்டினான். பிறகு ஒரு தங்கல்வாப்பாவுடன் சேர்ந்து ரங்கூனுக்குச் சென்றான். போர் நடைபெறுவதற்குச் சற்று முன்பு மொய்தீன் பர்மாவிலிருந்து மலேயாவிற்குச் சென்று சேர்ந்தான். போர்க்காலம் முழுவதும் அவன் மலேயாவிலேயே இருந்தான். இப்படியே இருபத்தொரு வருடங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மலையாளி முஸ்லிம் களுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் சமையலறையையும் சாப்பாட்டு மேஜைகளையும் எச்சிலையும் சுற்றிச் சுற்றித் திரிந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த மொய்தீன், ஆறு மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக ஒரு உந்து வண்டி வாங்கி மசாலா சாதம் தயாரித்து விற்கக்கூடிய ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தான்.

ஹோட்டல்களிலும் தேநீர்க் கடைகளிலும் வேலைக்காரர்களாக சாவக்காட்டைச் சேர்ந்த வேறு நான்கைந்து மலையாளிகள் கோம்பாக்கில் இருந்தார்கள். ஒரு ஹோட்டலுக்கு மிகவும் பின்னால் மரப் பலகைகளால் மறைக்கப்பட்ட ஒரு அறையில் அவர்களுடன் சேர்ந்து மொய்தீன் வசிக்க ஆரம்பித்தான். இரவில் சாப்பிட்டு முடிந்த பிறகு, நள்ளிரவு வரை அவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து "கெஸ்”  பாடிக்கொண்டிருப்பான்.

"நாலு மைல்கள் நடந்து, சிரமப்பட்டு வாடி, அழகைப் பார்க்க உனக்கு முன்னால் வந்து நின்றானே, காதல் கொடியே நீ கொஞ்சம் வருவாயா?'

என்று பாடும்போது, தென்னை மரங்களும் மண் பாதைகளும் கலந்த கனோலி வாய்க்கால் கரையின் வழியாக, அமைதியான இரவு நேரத்தில், நிலவு வெளிச்சத்தில் வேதனையை அனுபவித்த இதயத்துடன் நடந்து செல்லும் காதலன் ஒருவனின் உருவம்தான் மொய்தீனின் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. வெள்ளைநிறச் சட்டையும் தலைத் துணியும் அணிந்து வெற்றிலை போட்டுச் சிவக்க வைத்த உதடுகளுடன் வீடுகளின் வாசல்களில் காற்றையும் நிலவு வெளிச்சத்தையும் அனுபவித்துக்கொண்டு எதிர்பார்த்து நின்றிருக்கும் பாத்தும்மாமார்களின், கதீசாமார்களின் கையில் அணிந்திருக்கும் வளையல்களின் குலுங்கல் சத்தங்கள் மொய்தீனின் காதுகளில் வந்து ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், அவை அனைத்தும் 21 வருடங்களுக்கு அப்பால் உள்ள நினைவுகள்... காதல் என்றால் என்ன என்றோ பெண்களின் உடல் அழகு என்றால் என்ன என்றோ தெரியத் தொடங்குவதற்கு முன்பே அவன் அந்த காட்சிகள் எல்லாவற்றுடனும் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது.

அவன் கோம்பாக்கில் உள்ள வயல்களை நோக்கி கண்களைச் செலுத்துவான். தாதுப் பொருட்களை எடுப்பதற்காக பள்ளம் தோண்டியிருந்த வெள்ளை நிற நிலங்களின் கரையில் தென்னை மரங்கள் வரிசையாக நின்றிருந்தன. நிலவு கனோலி வாய்க்காலின் கரையில் உள்ள வயல்களையும் தென்னை மரங்களையும் இப்படித்தான் இப்போது தழுவிக் கொண்டிருக்கும். அந்த கனோலி வாய்க்காலின் கரையில் இருந்த தென்னங் கன்றுகள் அனைத்தும் இன்று காய்ந்து, தளர்ந்து வயதாகிப் போன தென்னை மரங்களாக ஆகிவிட்டிருக்கும். அன்றைய குழந்தைகள் இன்று இடுப்பில் குழந்தைகளை வைத்துக்கொண்டு நடக்கும் பெண்களாக மாறிவிட்டிருப்பார்கள். எனினும், கனோலி வாய்க்காலின் கரையில் உள்ள காட்சிகளுக்கும் நிரந்தரமான வாழ்க்கைச் சலனங்களுக்கும் எந்தவொரு மாற்றமும் உண்டாகியிருக்காது. கோம்பாக்கில் உள்ள வயல்களின் நிழல்கள் வழியாக, கனோலி வாய்க்காலில் தேங்காய் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும் படகுகளின் தோற்றங்கள் அவனுக்கு முன்னால் நகர்ந்து வந்து கொண்டிருக்கும்.

அவனுக்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உந்து வண்டியில் நடக்கும் சாத வியாபாரத்தின் மூலம் தினமும் பத்து பதினைந்து டாலர்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. செலவெல்லாம் போக தினமும் பத்து ரூபாய் எஞ்சி நிற்கும். அந்த வகையில் ஒரு வருட சம்பாத்தியத்துடன் அவன் தன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தான். அவனுடைய உம்மாவும் இளைய வாப்பாவும் கடுமையான காய்ச்சல் கண்டு இறந்துபோன தகவலை ஊரிலிருந்து வந்து சேர்ந்த புதிய நண்பர்களிடமிருந்து அவன் கேட்டுத் தெரிந்துகொண்டான். இப்போது ஊரில், உறவினர்கள் என்று கூறிக்கொள்வதற்கு யாரும் இல்லை. எனினும், பிறந்த ஊராயிற்றே! அவன் இப்படி கை நீட்டி அலைந்து வாழ ஆரம்பித்து இருபத்தொரு வருடங்கள் ஆகிவிட்டனவே! அவனுக்கே வெறுப்பாக இருந்தது. கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒரு நிலத்தையும் குடியிருக்க ஒரு இடத்தையும் வாங்கி ஏதாவது வியாபாரமோ ஒப்பந்தமோ நடத்தி கிராமத்திலேயே எஞ்சியிருக்கும் வாழ்நாட்கள் முழுவதும் வாழ வேண்டும். பிறந்த மண்ணிலேயே அவனுடைய இறந்த உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.


மதிய நேரம் கடந்தபோது மொய்தீன் வழக்கம்போல தன்னுடைய உந்து வண்டியில் அடுப்பு, வாணலி, அரிசி, மசாலா பொருட்கள், கோழி முட்டைகள், காய்கறிகள் ஆகியவற்றை நிறைத்துக்கொண்டு தெருவின் மூலையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது அவனுடைய சிந்தனைகள் கிராமத்தையே சுற்றிக் கொண்டிருந்தன. "ஊருக்குப் போகணும்... ஊருக்குப் போகணும்...” அவனுடைய இதயத் துடிப்புகூட அதேபோல முணுமுணுப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது.

அவன் காய்கறிகளை அறுத்து ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான். அப்போது தாழம்பூவின் வாசனையைப்போல ஒரு நறுமணம் அவனுடைய நாசிக்குள் நுழைந்தது. அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். மைமூணா அருகில் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய ஆடையில் தேய்க்கப்பட்டிருந்த ஏதோ தாழ்ந்த தரத்தில் இருந்த வாசனை திரவியம்தான் அந்த நறுமணத்தை உண்டாக்கியிருக்கிறது.

அவன் அவளைப் பார்த்ததைப்போல காட்டிக் கொள்ளவில்லை. அவளிடமிருந்து வெளிவந்த தாழம்பூவின் வாசனை அவனை கனோலி வாய்க்காலின் கரைக்கு அழைத்துக் கொண்டு சென்றது. சில குறிப்பிடத்தக்க வாசனைகள் உண்டாக்குகிற நினைவுகளுக்கு மறைந்து போகாத இனிமை இருக்கத்தான் செய்கிறது. கனோலி வாய்க்காலின் கரையில் தாழம்பூக்கள் மலர்ந்து நின்று கொண்டிருக்கும் காலம். அந்த தாழம்பூக்களைப் பறித்துக்கொண்டு போய் அவன் விற்றிருக்கிறான். அவனுடைய உம்மாவின் துணிப் பெட்டியைத் திறக்கும்போதுகூட அந்த தாழம்பூவின் நறுமணம் வருவதுண்டு.

அவன் வாணலியில் நிலக்கடலை என்ணெய்யை ஊற்றி, ஒரு வாத்து முட்டையை உடைத்தான். கெட்டுப்போன முட்டை. அதன் நாற்றம் அவனை மீண்டும் கிராமத்தின் வாய்க்கால் கரைக்கு அழைத்துக்கொண்டு சென்றது. நீரில் அழுகிக் கிடக்கும் தென்னை நாரின் நாற்றமது.

“பிக்கின்  பை பை ஸத்துப்ளேட் நாசி கோரிங்.'' (ஒரு ப்ளேட் நாசிகோரிங்கை நல்ல முறையில் தயார் பண்ணிக் கொடு.)

மைமூணாவின் கொஞ்சலும் குழைவும் கொண்ட வார்த்தைகள் மொய்தீனைச் சுய உணர்வுக்குக் கொண்டுவந்தன. அவன் அவளை நோக்கி சிறிதும் சந்தோஷம் அளிக்காத ஒரு பார்வையைச் செலுத்தினான்.

தவிட்டு நிறத்தில் இருந்த ஒரு புதிய சாரோங்கையும், ரோஸ் நிறத்தில் உள்ள ஒரு சட்டையையும் அணிந்து, கையில் ஒரு நீல நிற ஹேண்ட் பேக்கை வைத்தவாறு மாலை நேர சுற்றுக் காக வெளியேறி வந்திருக்கும் மைமூணாவை மொய்தீனுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவள் ஒரு ஜகல். நாசிகோரிங்கை வாங்கி சுவைத்து சாப்பிட்டுவிட்டு, உதட்டை நக்கி விட்டு, கையைத் துடைத்தவாறு, "டுயி நங்யி போலெ காஸி” (பிறகு பைசா தருகிறேன்) என்று கூறிவிட்டு பல தடவைகள் அவள் கிளம்பிச் சென்றிருக்கிறாள். இனிமேல் அவளுடைய தந்திரங்கள் எதுவும் அவனிடம் செல்லுபடியாகாது. அவன் தன் கிராமத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடு களைச் செய்து கொண்டிருந்தான். வெள்ளை நிற மேலாடையும் தலைத் துணியும் காதில் வளையமும் அணிந்த மலையாள பீபியின் கனவு வயதில் இருக்கும் ஒரு ஓவியம் அவனுடைய இதயத்தில் நிறைந்து நின்று கொண்டிருந்தது. அவளுக்காக அவன் ஒவ்வொரு காசையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். மைணோவின் மயக்கத்தையும் கொஞ்சலையும் கடைக்கண் வெட்டலையும் இடுப்பு குலுக்கலையும் பார்த்து ரசிப்பதற்கு அவனுக்கு இப்போது நேரமில்லை.

“டூ லு காஸி டூயீ.'' (முதலில் காசைத் தா) மொய்தீன் மைமூணாவை நோக்கி கையை நீட்டிக்கொண்டே சொன்னான்.

“நங்யி...'' (பிறகு...) மைமூணா ஒரு மைனா குருவியைப்போல கூறினாள்.

“திட- பீகி பீகி...'' (இல்லை- போ... போ...) அவன் வெறுப்புடன் உறுதியான குரலில் கூறினான்.

மொய்தீனின் நடவடிக்கை அவளை ஆச்சரியப்படச் செய்தது. இந்த காகத்திற்கு என்ன ஆனது?

மொய்தீன் வெங்காயத்தை அறுத்து ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தான் மசாலா சாதத்தில் சேர்ப்பதற்காக. சற்று தலையை உயர்த்திப் பார்த்தபோது, சிறிது தூரத்தில் ஆஸ்ஸா வந்து கொண்டிருந்தாள். "மாத்தா மாத்த” (போலீஸ்காரர்) மஹ்மூத்தின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஆஸ்ஸாவும் இன்னொரு ஜகல்தான். "நாசிகோரிங்'கை வாங்கி சாப்பிட்டு விட்டு, ஒரு கவர்ச்சியான புன்சிரிப்புடன் "மாரிருமா இனி மாலம்”(இன்று இரவு வீட்டிற்கு வா) என்று அவள் நேற்று அவனிடம் கூறியிருந்தாள்.

அந்த நாற்றமெடுத்த வாத்து முட்டையை ஆஸ்ஸாவின் முகத்தை நோக்கி எறிய வேண்டும்போல மொய்தீனுக்குத் தோன்றியது. மொய்தீனின் முகத்தில் தெரிந்த கோபத்தின் அடையாளத்தைப் பார்த்த ஆஸ்ஸா அந்தப் பக்கம் வராமல் வேறொரு பாதையில் திரும்பினாள். என்னவோ முணுமுணுத்துக் கொண்டே மைமூணாவும் அங்கிருந்து கிளம்பினாள்.

கறுத்த நிறத்தில் இருந்த முக்கால் பேண்ட்டும் அரைக்கை சட்டையும் அணிந்து தோளில் நீளமான பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்த ஒரு சீனப் பெண் மொய்தீனின் "நாசிகோரிங்” கை வாங்கிக் கொண்டு சென்றாள்.

பள்ளிக்கூட ஆசிரியர் அபூபக்கரும் போலீஸ்காரர் மஹ்மூத்தின் மூத்த மகள் ஸித்தியும்- அவர்களுடன் கலபலா என்று சத்தம் உண்டாக்கியவாறு அவளுடைய நான்கு தங்கைகளும் "நாசிகோரிங்” வாங்குவதற்காக வண்டிக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்தார்கள். மொய்தீனின் வியாபாரத்திற்கு கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பேண்ட் அணிந்த தடிமனான மனிதன் வண்டிக்கு முன்னால் வந்து நின்றான். மொய்தீன் அலட்சியமாக அவனைச் சிறிது நேரம் பார்த்தான். முகத்தின் சாயலைப் பார்த்தால் ஒரு மலையாளியைப் போல அவன் தோன்றினான். எனினும், மொய்தீன் எதுவும் கேட்கவில்லை. கோலாலம்பூரில் இருந்து வந்திருக்கக் கூடிய ஆளாக இருக்க வேண்டும்- மொய்தீன் மனதில் நினைத்தான். சிறிது நேரம் கடந்ததும், அந்த தடிமனான மனிதன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான். ஒரு விமானத்தின் சத்தம் வானத்தில் கேட்டது. ஆட்கள் மேல் நோக்கிப் பார்த்தார்கள். மொய்தீனும். அந்த விமானம் உலுலங்காத்தின் காடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கூடாரங்களைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மொய்தீனுக்குப் புரிந்துவிட்டது. உலுலங்காத்தின் காடுகளில் கம்யூனிஸ்ட்கள் மறைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி கோம்பாக்கில் சில நாட்களாகவே பரவிவிட்டிருந்தது.

கோம்பாக்கின் காஸியாரும் நாசிகோரிங் வாங்குவதற்காக வந்தார். கிராமத்தில் உள்ள எல்லாரையும் மொய்தீனுக்கு நன்கு தெரியும். அவனுடைய நாசிகோரிங்கை ஒவ்வொரு வீடாக எடுத்துச் சென்று விற்க வேண்டியதில்லை. தேவைப்படுபவர்கள் அவனைத் தேடி அவனுடைய இடத்திற்கே வர ஆரம்பித்திருந்தார்கள்.

விமானம் அங்கு சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது. “உலுலங்காத்தில் உள்ள காடுகளில் இன்று இரவு அவர்கள் குண்டுகள் போடுவதைக் கேட்கலாம்'' ஸித்தி தன் தங்கைகளிடம் கூறினாள்.

குண்டு போடும் செய்தியைக் கேட்டதும், மொய்தீனுக்கு போர்க்காலம் பற்றிய நினைவு வந்தது. அன்று புகைவண்டி ஒர்க் ஷாப் இருந்த செம்துல் பகுதியில் ஜப்பான்காரர்கள் ஆயிரக்கணக்கான குண்டுகளைப் போட்டார்கள்.


மொய்தீன் வேலை செய்த ஹோட்டலின் மேற்பகுதியில் ஒரு குண்டு விழுந்தது. ஹோட்டலில் இருந்த பத்தொன்பது ஆட்களும் வெந்து இறந்துபோய் விட்டார்கள். மொய்தீன் கழிவறையில் இருந்ததால், மரணத்திலிருந்து தப்பித்துவிட்டான்.

"அரிசி இல்லாமற் போகும்போதுதான், மனிதன் இறப்பான்.”  இப்படி மனதிற்குள் கூறிக்கொண்டே அவன் ஒரு சுருண்ட இலையை விரித்து அதில் மசாலா சாதத்தை வைத்துக்கட்டி ஸித்தியின் கையில் கொடுத்தான். பைசா 40 சென்ட்டை வாங்கி பாக்கெட்டிற்குள் போட்டான்.

இரவு பத்து மணி வரை அவன் தன்னுடைய வியாபாரத்தை நடத்தினான். அன்று வழக்கத்தைவிட அதிகமாக விற்பனை நடந்தது. 21 டாலர்கள் கிடைத்தன.

அடுப்பிலிருந்த நெருப்பை அணைத்துவிட்டு, கோப்பை, கிண்ணங்கள் எல்லாவற்றையும் வண்டியின் கீழே இருந்த அறையில் வைத்து அடைத்துப் பூட்டிவிட்டு, ஒரு சிகரெட்டை வாயில் வைத்துப் புகைத்துக் கொண்டே அவன் தன்னுடைய இருப்பிடத்தை நோக்கி வண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தான். ஹோட்டலுக்குப் பின்னால்  வண்டியை நிறுத்திவிட்டு, அவன் தன்னுடைய அறைக்குள் சென்றான்.

தெருவிலிருக்கும் குழாயின் அருகில் சென்று சற்று குளிக்க வேண்டும்- அதுதான் அடுத்த வேலை. மொய்தீன் தான் அணிந்திருந்த லுங்கியையும் பனியனையும் கழற்றிவிட்டு, மேற்துண்டை எடுத்துத் தோளில் இட்டபோது, அருகில் இருந்த நிலத்தில் இருந்து ஒரு ஆரவாரமும் அழுகைச் சத்தமும் அவனுடைய காதுகளில் வந்து விழுந்தன.

மொய்தீன் கவனித்துக் கேட்டான். "அய்யோ... அய்யோ...” என்ற அழுகைச் சத்தம். ஒரு மலையாளியின் குரலைப்போல தோன்றுகிறதே? மொய்தீன் வேகமாக பனியனை எடுத்து அணிந்து கொண்டு மேற்குப் பக்கத்தில் இருந்த நிலத்தை நோக்கிப் பாய்ந்தான்.

போலீஸ்காரர் மஹ்மூத்தின் வீடு அது. பத்து, பதினைந்து ஆட்கள் அந்த வாசலில் குழுமி நின்றிருந்தார்கள். ஒரு மனிதனை அவர்கள் வாசலிலிருந்த தென்னை மரத்துடன் சேர்த்துக் கட்டியிருந்தார்கள். "பஞ்சுரி... பஞ்சுரி...” (திருடன்... திருடன்...) என்று உரத்த குரலில் கூறியவாறு அவர்கள் அவனுடைய பிடறியிலும் முகத்திலும் வழுக்கைத் தலையிலும் பிரம்பால் அடிகளைத் தந்து கொண்டிருந்தார்கள்.

மொய்தீனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. வேலைக்காரி ஆஸ்ஸாவை இரவு நேரத்தில் பார்ப்பதற்காக வந்திருந்த ஆள் தவறுதலாக வெளியே குதித்தபோது பிடிக்கப்பட்டு விட்டிருக்கிறான். மொய்தீன் தென்னை மரத்திற்கு அருகில் சென்று, அந்த "கட்டப்பட்டிருக்கும் யாரென்று தெரியாத மனிதனின்” முகத்தையே உற்றுப் பார்த்தான். சாயங்காலம் அவனுடைய வண்டிக்கு அருகில் வந்து நின்ற பேண்ட் அணிந்த தடிமனான ஆள்தான். முகத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“நீங்க யார்?'' -மொய்தீன் மலையாளத்தில் கேட்டான்.

“நான்... கோபால பிள்ளை... அய்யோ... என்னை இவங்க அடிச்சு கொல்றாங்களே... என்னை காப்பாத்துங்க...''

மலையாளியேதான்! மொய்தீனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மலையாளத்தின் ரத்தம் தெறிப்பதைப் பார்த்து அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அய்யோ என்ற அழுகைக் குரல் கண்டத்தோடு கிராமத்திலிருந்து

ஒலிப்பதைப்போல அவனுக்.குத் தோன்றியது. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான்.

மொய்தீன் காஸியாரின் கையிலிருந்த பிரம்பைப் பிடித்துப் பிடுங்கி முதலில் காஸியாரின் தலையில் ஒரு அடி கொடுத்தான். தொடர்ந்து முன்னால் இருந்தவர்கள் எல்லாரையும் அவன் அடித்து விரட்டினான். போலீஸ்காரர் மஹ்மூத்தின் உடம்பிலும் ஒரு லத்தி சார்ஜ் விழுந்தது. மொய்தீனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாரும் தப்பித்து அங்கிருந்து பாய்ந்தோடினார்கள்.

மொய்தீன் கோபால பிள்ளையின் கட்டுக்களை அவிழ்த்து அவனை அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்தான். மொய்தீனின் நண்பர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

இனி என்ன செய்வது? பதட்டம் கலந்த ஒரு அமைதி.

மொய்தீன் இனிமேல் அந்தக் கடைவீதியில் இருப்பதற்கு வழியில்லை. குற்றம் செய்த ஒரு காஃபரின் பக்கம் சேர்ந்து கொண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தலைகளை அடித்து நொறுக்கிய மொய்தீனின் உயிருக்கு இனிமேல் அங்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் அவனை அங்கு இருக்க விடப்போவதில்லை.

“நானும் பிள்ளையும் உலுலங்காத்துக்குப் போகிறோம்.'' மொய்தீன் தன்னுடைய நண்பர்களிடம் கூறினான். “இன்ஷா அல்லா... பிறகு பார்ப்போம்.''

அவர்கள் அவனைத் தடுக்கவில்லை. அங்கிருந்து ஒன்பது மைல் தூரத்தில் உலுலங்காத் கிராமம் இருந்தது. காட்டு வழியில் பயணம் செய்ய வேண்டும். எனினும், கோம்பாக்கில் ஒளிந்து கொண்டிருப்பதைவிட உலுலங்காத்திற்குச் சென்று தப்பித்துக் கொள்வதுதான் நல்லது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அன்று நள்ளிரவு நேரத்தில் உலுலங்காத்திற்கு மறைந்து ஓடிய மொய்தீனையும் கோபால பிள்ளையையும் பற்றி அதற்குப் பிறகு இதுவரை யாருக்கும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மொய்தீனின் சோற்று வண்டி இன்றும் அந்த ஹோட்டலுக்குப் பின்னால் மழையில் நனைந்து பாசி பிடித்துக் கிடக்கிறது. மொய்தீன் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது ஒரு காசர்கோட்டைச் சேர்ந்தவனான அப்துல்லாவின் "நாசிகோரிங்” வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

உலுலங்காத்தின் காடுகளில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய கம்யூனிஸ்ட் வேட்டையில் சிக்கி இறந்தவர்களின் கூட்டத்தில் இரண்டு இந்தியர்களும் இருந்தார்கள் என்ற பத்திரிகைச் செய்தியை அதிகமாக யாரும் கூர்ந்து கவனித்திருக்க மாட்டார்கள். மலேயாவின் காடுகளில் குண்டுகள் பட்டு இறப்பவர்கள் எல்லாரும் கம்யூனிஸ்ட்கள் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.