Logo

சிறிய அலைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by காயத்ரி
Hits: 4252

சிறிய அலைகள்

எம். முகுந்தன்

தமிழில் : சுரா

 

சி

றிய வீட்டில்' பங்கஜாக்ஷனின் மனைவி ஶ்ரீதேவியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தினமும் காலையில் ஸ்கூட்டரில் ஏறி அலுவலகத்திற்குச் செல்லும் கணவரை அனுப்பி வைப்பதற்காக அவள் களைப்புடன் மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டிருப்பாள். அப்போது கூந்தல் அவிழ்ந்து கிடக்கும். ரவிக்கையின் சில பொத்தான்கள் கழன்று கூட கிடக்கலாம். நெற்றியிலிருந்த செந்தூர திலகம் பாதியோ அல்லது முழுதாகவோ அழிந்து போய் விட்டது என்ற நிலையும் உண்டாகலாம். கணவரின் ஸ்கூட்டர் சத்தம் அகன்று... அகன்று இல்லாது போகும்போது, அவள் வீட்டிற்குள் நுழைந்து செல்வாள்.

பிறகு... மதியம் நீங்கள் மீண்டும் அவளைப் பார்க்கிறீர்கள். இப்போது அவள் குளித்து முடித்து, வாயல் புடவை அணிந்து, கூந்தலை அழகாக மடித்துக் கட்டி, நெற்றியில் வட்ட வடிவத்தில் சிவப்பு நிறத்தில் பொட்டு வைத்து, அழகான தோற்றத்துடன் காணப்படுவாள். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி கணவரின் திரும்பி வருதலை எதிர்பார்த்தவாறு அவள் வெளி வாசலில் நின்று கொண்டிருப்பாள். அதற்குப் பிறகு சாயங்காலம் நீங்கள் மீண்டுமொரு முறை அவளைப் பார்க்கிறீர்கள். அப்போது பல வர்ணங்களைக் கொண்ட புடவையை அணிந்து, ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து, கணவருடன் சேர்ந்து கடற்கரைக்குப் போய்க் கொண்டிருப்பாள்.

இனி .... ஶ்ரீதேவியைப் பார்க்காதவர்களுக்காக அவளுடைய ஒரு தோற்றத்தைப் பற்றி கூறுகிறேன்.

வெளுத்த நிறம் ... இடைவெளி இல்லாத அடர்த்தியான கூந்தல்.... அரிசிப் பற்கள்... தாடைக்கு மேலே ஒரு சிறிய பள்ளம்... அழகான சிறிய மார்பகங்கள்.. சிறிய உரோமங்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்புள்.... ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து பயணிக்கும்போது, புடவை பாதங்களிலிருந்து சற்று மேலே உயர்ந்து இருப்பது மாதிரி இருந்தால், வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசுகள் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அவளுடைய கணுக்கால்களைப் பார்ப்பதற்கான அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால், அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கட்டும் என்று கதாசிரியரான நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன். காரணம் - நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், அந்த கணுக்கால்களைப் பற்றிய நினைவு வரும் நாட்களில் உங்களுடைய தூக்கத்தைக் கெடுக்கும். அந்த நினைவு அகலாத நோயைப் போல உங்களைப் பின் தொடரும்.

அவ்வாறு தூக்கத்தை இழந்தவர்களில் ஒருவன்தான் மோகனன் குறுப்பு என்ற இளைஞன்...

கீழ் நோக்கி வளைந்த அடர்த்தியான மீசையும், கரகரப்பான குரலும் கொண்ட ஒரு நல்ல இளைஞனாக அவன் இருந்தான். அவனுக்கு சிவப்பு நிறத்திலிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது. கடற்கரையின்  நீர் ஊறிக் கொண்டிருக்கும் வெளுத்த மணலில் வைத்துத்தான் முதல் தடவையாக அவன் அவளைப் பார்த்தான். அந்த நிமிடம் பங்கஜாக்‌ஷன் கரையிலிருந்த மணலில் இழுத்து போடப்பட்டிருந்த ஒரு சிறிய படகின் மீது சாய்ந்து அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவள் ஈரம் படிந்த வெள்ளை நிற மணலில் நின்றவாறு இளம் அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிய அலைகள் மணலின் வழியாக உருண்டு வந்தபோது அவள் புடவையைச் சற்று உயர்த்திப் பிடித்தவாறு பின்னோக்கி நகர்ந்து நிற்பாள். அலைகள் பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அவள் கடலை நோக்கி நகர்வாள். சில சூழ்நிலைகளில் பின்னோக்கி நகர்ந்து விலகிச் செல்வதற்கு முன்பே, அலைகள் அவளுடைய கால்களில் வந்து மோத ஆரம்பித்திருக்கும்.

அப்படித்தான் கடலின் உயிர்ப்பான அலைகள் நுரைகளைக் கொண்டு வந்து சேர்த்த வெள்ளியால் ஆன கொலுசுகள் அணியப்பட்டிருந்த அவளுடைய கால்களை மோகனன் குறுப்பு பார்த்தான். அவன் தன்னுடைய சிறப்புத் தன்மை கொண்ட நாய்க் குட்டியைத் தடவிக் கொடுத்தவாறு சற்று தூரத்தில் மணலில் அமர்ந்திருந்தான். கடற்கரையை நோக்கி வரும் செம்மண் பாதையில் அவனுடைய சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது.

அன்று இரவு அவனுக்கு உறக்கம் இல்லாமற் போனது. ஶ்ரீதேவி அவனுக்குள் நுழைந்து விட்டிருந்தாள். எப்போதும் போல மறுநாளும் அவன் கடற்கரைக்குச் சென்றான். படகின் நிழலில் அமர்ந்து அவன் அமைதியாக சூரியன் மறைவதைக் கண்டு கொண்டிருக்க, அவள் அலைகளுடன் விளையாடிக் கொண்டும், கால்களில் கடலின் நுரைகளை வாங்கிக் கொண்டும் இருந்தாள்.

'அந்த நாயுடன் அமர்ந்திருக்கும் ஆளைப் பார்த்தீர்களா?' - ஒரு முறை அவள் தன் கணவனிடம் கூறினாள்: 'அவன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.'

நன்கு சவரம் செய்யப்பட்டு, சிவந்து பிரகாசமாக காட்சியளிக்கும் முகத்தைக் கொண்ட ஒரு இளைஞனாக பங்கஜாக்‌ஷன் இருந்தான். மீசை இல்லாததால், அவனுடைய முகத்திற்கு பெண்மைத் தன்மை இருப்பதைப் போல தோன்றினாலும், அவனுக்கு ஆண்மைத்தனம் வந்து வீங்கிய சதைப் பிடிப்பான கை, கால்கள் இருந்தன. அவனுடைய பலமான உடலமைப்பை அவள் வழிபட்டாள்.

'நாம் அந்தப் பக்கம் விலகி உட்காருவோம்' - அவள் கூறினாள்: 'அவனுடைய பார்வை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை:

கடலின் எல்லையில் நீரில் மஞ்சள் நிற சூரியன் சிறிது நேரம் தலையை நீட்டிக் கொண்டு கிடந்தது.  பிறகு அது நீரின் மாமிசத்தில் கீழே இறங்கிக் கொண்டும், வெளுத்த மணலில் இருட்டை விழச் செய்யவும் செய்தவுடன் அவர்கள் எழுந்து கைகளைக் கோர்த்து பிடித்தவாறு ஸ்கூட்டரை நோக்கி நடந்தார்கள். அப்போது அவன் தன்னுடைய நரைத்த முடியைக் கொண்ட நாய்க் குட்டியைக் கையில் வைத்தவாறு தங்களுக்குப் பின்னால் வருவதாக அவள் உணர்ந்தாள். பிறகு தெரு விளக்குகளிலிருந்து வெளியேறி வந்த அளவற்ற பிரகாசத்தில் நகரத்தின் அகலமான சாலையின் வழியாக ஸ்கூட்டரில் பயணித்த போது, பின்னால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளின் இரைச்சலை அவள் கேட்டாள். அவனுக்குப் பின்னால் அவனுடைய இடுப்பை இரு கைகளாலும் பிடித்தவாறு, ஒரு மனிதக் குழந்தையைப் போல நாய்க்குட்டி அமர்ந்திருந்தது.

அதற்குப் பிறகு பெரும்பாலும் தினமும் அவள் அவனைப் பார்த்தாள். கடற்கரையில் எப்போதும் அமரக் கூடிய படகின் நிழலை அடையும் போது, பின்னால் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவளுக்கு பரிச்சயமானது.


அந்த இளைஞனுக்கு தன் மனைவியின் மீது ஈர்ப்பு உண்டாகியிருப்பது பங்கஜாக்‌ஷனுக்குப் புரிந்தது. அப்போது அவனுக்கு பெருமிதம் உண்டானது. முன்பே அவளுடைய அளவற்ற உடல் சுகத்தைப் பற்றி அவன் உணர்ந்திருந்தான். இந்த அளவிற்கு அழகானவளும், வசீகரத்தன்மை கொண்டவளுமான ஒரு பெண் மனைவியாக கிடைத்ததற்காக மனதிற்குள் அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் ஒரு புதிய பொறுப்பைப் பற்றிய புரிதலும் அவனுக்குள் உண்டானது. யார் என்று தெரியாத அந்த இளைஞனுக்கு தன்னுடைய மனைவியை காதலிப்பதற்கோ உடலுறவு கொள்வதற்கோ உரிமை இருக்கலாம். அந்த உரிமையை அவன் ஒத்துக் கொள்கிறான்.  அதற்கு மேல் வேறு எந்தவொரு சுதந்திரமும் அந்த இளைஞனுக்கு இல்லை. அவன் ஶ்ரீதேவியை கண்கள் நிறைய பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கட்டும்....  ஆனால், அவளைத் தொடுவதற்கோ, அவளுடன் உரையாடுவதற்கோ அவனுக்கு சுதந்திரமில்லை. அவற்றிற்கெல்லாம் அவன் முயற்சி செய்வான் என்று பங்கஜாக்‌ஷனுக்குத் தோன்றியது. அப்படி நடப்பதாக இருந்தால், அவன் அந்த நடவடிக்கைகளை நசுக்க வேண்டியதிருக்கிறது. ஶ்ரீதேவியைப் பாதுகாக்க வேண்டியதிருக்கிறது. அந்த பொறுப்பைப் பற்றிய புரிதல் அவனை ஒரே நொடியில் பாடாய் படுத்தியது.

ஒரு சாயங்கால வேளை... கணுக்காலுக்கு மேலே உயர்த்திப் பிடித்த புடவையுடன் சிற்றலைகளுக்கு மேலே அவள் நடனமாடிக் கொண்டிருந்த போது, யாரென்று தெரியாத மனிதனின் நாய்க்குட்டி அவளை நோக்கி ஓடி வந்தது. அதை அவன் மனப்பூர்வமாக செய்திருக்கிறான் என்பதை பங்கஜாக்‌ஷன் புரிந்து கொண்டான். அவன் இளைஞனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, அதை எதிர்பார்த்து நின்றிருந்தான். அவன் மனதில் நினைத்ததைப் போலவே, நாய்க்குட்டிக்குப் பின்னால் இளைஞனும் ஶ்ரீதேவியை நோக்கி ஓடி வந்தான். நாய்க்குட்டி, பின் வாங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய அலைக்கு மேலே ஓடி வந்து அவளுடைய கணுக்கால்களில் முத்தமிட்டது. அப்போது இளைஞன் முன்னோக்கி பாய்ந்து நாய்க்குட்டியைக் கையிலெடுத்து அதைத் திட்டினான். அதற்குப் பிறகு அவன் அவளுக்கு மிகவும் அருகில் போய் நின்றான்.

'ஸோ ஸாரி....'

அவனுடைய குரலில் முதிர்ந்து நின்ற ஈர்ப்பு அவளைத் தளர்வடையச் செய்தது.

'ஶ்ரீதேவி என்பதுதானே பெயர்?'

'ஆமாம்.'

அவளுடைய சிவப்பு நிற உதடுகள் நடுங்கின.

'நல்ல பெயர்.'

அவன் கூறினான். அதற்குப் பிறகு அவன் மீண்டும் என்னவோ கூறுவதற்காக முயன்றான். அதற்குள் பங்கஜாக்‌ஷன் அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவர்கள் ஒருவரையொருவர் ஒரு நிமிடம் முகத்துடன் முகம் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அப்போது மஞ்சள் நிற சூரியன் நீருக்குள் இறங்குவதும், உருகிய நீருக்கு மேலே இருட்டு பரவுவதும் நடைபெற்றன.

மறுநாள் காலையில் பங்கஜாக்‌ஷன் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, அவன் அவளுடைய வீட்டை நோக்கி சென்றான். வெளியே அவனுடைய மோட்டார் சைக்கிள் நின்றிருக்க, அதன் மீது அவனுடைய நாய்க்குட்டி அமர்ந்திருந்தது. கதவைத் திறந்தபோது, அது அவனாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதனால் அவனை கண்களுக்கு நேராக... முன்னால் பார்த்ததும், அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள்.

'உள்ளே வரலாமா?'

திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த அவள் அவனுடைய குரலைக் கேட்டு சுய உணர்விற்கு வந்தாள். அவளுடைய பதிலுக்காக காத்து நிற்காமல் அவன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தான். பிறகு முகவுரை எதுவும் கூறாமல் அவன் கூறினான் :

'நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமல்லவா? ஒரு முறை மட்டும் நீ சம்மதிக்கணும். பிறகு எந்தச் சமயத்திலும் உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.'

உடனடியாக அவளிடம் பாரம்பரிய பெருமை வெடித்துச் சிதறியது. அவளுடைய முகம் நெருப்பைப் போல சிவந்தது.

'போ... வெளியே... பொறுக்கி...'

அவன் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுமில்லாமல் நாற்காலியை விட்டு எழுந்தான். அவளுடைய முகத்தைப் பார்க்காமலே அவன் வாசலை நோக்கி நடந்தான். வாசற்படியை அடைந்ததும், அவன் அங்கேயே நின்றான்.

'இன்று சூரியன் மறைவதற்கு முன்னால் நான் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவேன்' - அவனுடைய குரல் ஒரு குளத்தைப் போல அமைதியாக இருந்தது: 'இல்லாவிட்டால்... என் பெயர் மோகனன் குறுப்பு இல்லை.'

அவன் வெளி வாசலைக் கடந்து சென்றான். மோட்டார் சைக்கிளின் சத்தம் அகன்று இல்லாமலானவுடன், அவளுடைய இதயத் துடிப்பு மெதுவாக பழைய நிலைக்கு வந்தது.

அவன் போய் சில நிமிடங்கள் கடந்ததும், வரவேற்பறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. அந்தப் பக்கத்தில் பங்கஜாக்‌ஷனின் குரலைக் கேட்டவுடன் அவளிடமிருந்து ஒரு அழுகைச் சத்தம் வெளியே வந்தது.

'நீ அழுகிறாயா?'

அவனுடைய பதைபதைப்பான குரல் .....

'கொஞ்சம் சீக்கிரம் வரணும்....' - அவள் கூறினாள் : 'என்னால் இங்கு தனியாக இருக்க முடியாது.'

'நான் இதோ வர்றேன்.'

அவன் கூறினான்.

பதினைந்து நிமிடங்களில் வெளியே மோட்டார் சைக்கிளின் சத்தத்தைக் கேட்டு அவள் முழுமையாக நடுங்கி விட்டாள். மோகனன் குறுப்பின் மோட்டார் சைக்கிள்தான்... அதன் சத்தத்தை அவளால் எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியுமே! அவன் திரும்பவும் வந்திருக்கிறானோ?

ஆனால், உள்ளே நுழைந்து வந்தது ... பங்கஜாக்‌ஷன் ... அவளுடைய சுவாசம் சமநிலைக்கு வந்தது.

'உனக்கு என்ன ஆச்சு, என் ஶ்ரீதேவி?'

அவளுடைய கண்கள் கலங்கி, முகம் பயந்து வெளிறிப் போய் காணப்பட்டது. அதைப் பார்த்து பதைபதைத்துப் போனதைப் போல அவன் அவளை நோக்கி ஓடி வந்தான். ஒரே மூச்சில் அவள் நடைபெற்ற அனைத்தையும் விளக்கிக் கூறினாள். முழுவதையும் கூறி முடித்தவுடன், அவளுக்கு நிம்மதியாக இருந்தது. என்னவெல்லாமோ தனக்குள்ளிருந்து உருகிச் சென்றதைப் போல அவள் உணர்ந்தாள். அப்போது அவன் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து அவளுடைய கொலுசுகள் அணிந்த கால்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். முழுமையான வழிபாட்டுணர்வுடனும், அளவற்ற வெறியுடனும் அவன் நடந்து கொண்டான். அவன் அவளுடைய பாதங்களைச் சேர்த்துப் பிடித்து தன்னுடைய முகத்தில் வைத்து, அவளுடைய கொலுசுகளில் முத்தமிட்டான். அவனுடைய அசாதாரணமான  நடவடிக்கையைப் பார்த்து அவளுக்கு சந்தோஷம் உண்டானது.

அவன் எழுந்து கதவை அடைத்து விட்டு, திரைச் சீலைகளை இழுத்து விட்டான். அறையில் அப்போது இருள் உண்டானது.

'யாராவது வருவார்கள்.'

'யாரும் வர மாட்டார்கள்.'

அவன் மீண்டும் தன்னுடைய சிறிய தலையை அவளுடைய கணுக் கால்களுக்கு நடுவில் கொண்டு போய் வைத்தான். தன் கணவனின் உரோமங்கள் இல்லாத சிவந்த முகம் மேலும் சிவப்பானதையும், சுவாசத்திற்கு வேகம் அதிகரித்ததையும் அவள் பார்த்தாள். அவனுடைய குரலில் மெல்லிய நடுக்கம் இருக்கிறதோ?

'இது என்ன கதை?'

'இதெல்லாம் பட்டப் பகலிலா?'

'கதவு அடைக்கப்பட்டிருக்கு....' அவன் கூறினான்: 'நீ பயப்படாதே. யாரும் வர மாட்டாங்க.'

ஒரு யாகம் செய்யும் ஒரே சிந்தனையுடன் அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது. அவளுடைய தாடையிலிருந்த குழியிலும் அரிசிப் பற்களிலும் நகங்களிலும் அவன் தன்னுடைய உதடுகளை அழுத்தி வைத்தான். ஒரு தாந்த்ரீக செயலைச் செய்வதைப் போல இறுதியில் யாக குண்டத்தில் நெருப்பு பற்றிப் படரவும், யாக சாலை பற்றி எரியவும் செய்தது. வேகமாக சுற்றும் காற்றாடிக்குக் கீழே கண்களை மூடி மல்லார்ந்து படுத்தவாறு அவள் களைப்பைப் போக்கிக் கொண்டிருக்க, அவன் எழுந்து ஆடையை அணிய ஆரம்பித்தான்.

'ஶ்ரீதேவி.... நன்றி.'

அந்த குரல் அவளுக்குள் மின்சக்தியை உண்டாக்கியது. அதிர்ச்சியடைந்து நொறுங்கி கண்களைத் திறந்தாள். பார்த்தபோது... அவளுடைய கணவன் பார்த்தவாறு நின்று சிரித்துக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

'நான் உன் கணவன் அல்ல' - அவன் கூறினான்:

'நான்....மோகனன் குறுப்பு.'

அவள் நிர்வாணமாக எந்தவித அசைவுமில்லாமல் கிடந்தாள். அப்போது அவள் அவனுடைய முகத்தில் கீழ்எநோக்கி வளைந்த அடர்த்தியான மீசையைப் பார்த்தாள். அவனுடைய குரல் முற்றிலும் மோகனன் குறுப்பின் குரலாக மாறியிருக்கிறது.

'சூரியன் மறையும் நேரம் தூரத்தில்...’ ­ அவன் பாடினான்: 'நான் முன்கூட்டியே என் வாக்கை நிறைவேற்றி விட்டேன்!'

அவன் மெதுவாக கதவைத் திறந்து வெளியேறினான். அவனுடைய நடந்து செல்லும் காலடிச் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது. தொடர்ந்து வெளியே மோட்டார் சைக்கிள் கிளம்புவதையும், அதன் இரைச்சல் ஒரு கர்ஜனையாக வளர்வதையும், அதற்குப் பிறகு மீண்டும் ஒரு இரைச்சலாக குறைந்து... குறைந்து... தூரங்களில் இல்லாமற் போவதையும் அவள் தெரிந்து கொண்டாள். சிறிய வெயிலின் ஜுவாலைகள் கண்ணாடி ஜன்னல்களில் குமிழ்கள் உண்டாக்கின. அவளுடைய சுய உணர்வு மஞ்சள் நிற  மதிய வேளையில் கரைந்தது. ஒரு மஞ்சள் நிற திரவமாக அவள் வெயிலில் நீராடினாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.