Logo

சாயங்கால வெளிச்சம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4053

சாயங்கால வெளிச்சம்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா

ந்த வீடு ஆட்கள் வசிக்காததைப் போல இருந்தது. அங்கிருந்த சமையலறையிலிருந்து புகை வரவில்லை. கதவுகளும் சாளரங்களும் எப்போதும் அடைந்தே கிடந்தன. போர்ட்டிக்கோவின் இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்திருந்த உயரமான போகன்வில்லியா செடிகள் தவிர, வாசலிலும் சுற்றியிருந்த இடங்களிலும் காடு வளர்ந்திருந்தது.

நகரத்திலிருந்து வெளிப் பகுதிக்குச் சென்ற ஒரு ஒற்றையடிப் பாதைக்கு அருகில் வீடு இருந்தது. பழையதாக இருந்தாலும், பொதுவாகவே அது ஒரு நல்ல வீடாக இருந்தது. சற்று உயர்ந்த ஒரு மேட்டில் இருந்ததால், தூரத்திலிருந்தே வீட்டைக் காண முடிந்தது.

அந்த வீட்டில் ஒரு வாடகைக்காரன் தங்கியிருந்தான். அவன் அங்கு வசிக்க ஆரம்பித்து சிறிது காலம் ஆகி விட்டாலும், அவனைப் பற்றி பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனினும், அவன் ஒரு பத்திரிகையாளன் என்பதையும், மிகவும் இளம் வயதிலேயே அரசியல் காரியங்களில் ஈடுபட்டு, ஏகப்பட்ட கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட ஒரு மனிதன் என்பதையும் சிலர் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தியாவிலிருந்த ஒரு ஃப்ரெஞ்ச் காலனியிலிருந்து அவன் ஓடி வந்தவன் என்பதையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அந்த காரணத்திற்காக மட்டுமே அவர்கள் அவனை மதித்தார்கள். ஆனால், அவன் யாரிடமும் உரையாடுவதும் இல்லை.

அவனைத் தவிர, அங்கு ஒரு வேலைக்காரப் பையனும் இருந்தான். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அவனைத்தான் பார்த்தார்கள். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் - அந்த வீட்டை வீடாக ஆக்கியது அந்தச் சிறுவன்தான்.

திடீரென்று அந்த வீடு ஆள் அரவமற்றதாக ஆகி விட்டதைப் போல தோன்றியது. அப்போதுதான் அவர்கள் நினைத்தார்கள் - அவர்கள் பார்த்தார்கள் - மழைக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள் சாயங்காலம் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு மனிதன் ஒரு மூட்டையுடன் அங்கு வந்தான். நீண்ட தூரம் நடந்து வந்தவனைப் போல அவன் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டான். மறுநாள் காலையில் அவன் அங்கிருந்து போவதையும் பார்த்தார்கள். அவனுடன் அப்போது அந்தச் சிறுவனும் இருந்தான்.

அதற்குப் பிறகு அவனை அவர்கள் யாரும் பார்க்கவில்லை.

அந்த வீட்டிற்கு அதிகமாக யாரும் செல்லவில்லை. ஆனால், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் தபால்காரர் அங்கு சென்று கொண்டிருந்தார். அந்த மனிதனுக்கு வந்திருக்கும் கடிதங்களையும் புக் போஸ்ட்களையும் போர்ட்டிக்கோவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வைத்து விட்டு, தபால்காரர் திரும்பிச் செல்வார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மனிதன் அங்கு இருந்தால் கூட, அவன் எதுவுமே பேசுவதில்லை.

தபால்காரர் தவிர, ஒரு வயதான பெண்ணும் இருந்தாள். அந்த வயதான பெண் தினமும் காலையில் வந்து பெருக்கி, பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து விட்டு செல்வாள். அந்த பெண்ணின் வீடு சற்று தூரத்திலிருந்தாலும், காலையில் வருவதற்கு அவள் எந்தச் சமயத்திலும் சிறிதும் தயக்கம் காட்டியதேயில்லை.

அவன் அந்த நகரத்திற்கு வந்த பிறகு முதலில் வசித்த வீட்டிலும் அந்த பெண் வேலை செய்தாள்.

இரண்டு மூன்று நாட்கள் மழை தொடர்ந்து பெய்தபோது, அந்த வயதான பெண்ணைக் காணோம். இருண்டு கிடந்த வானத்திலிருந்து மழை இடைவிடாமல் பெய்து கொண்டேயிருந்தது. ஆட்கள் வெளியே செல்வதற்கே சிரமப்பட்டார்கள். எல்லா இடங்களிலும் - நிலப் பகுதியிலும் பாதையிலும் வயல்களிலும் - நீர்மயமாக இருந்தது.

இறுதியில் மழை நின்று, மீண்டும் பிரகாசம் வந்ததும் ஒருநாள் உச்சி வேளையில் அந்த வயதான பெண் அந்த வீட்டிற்கு வந்தாள். முன்பக்க கதவு பாதி திறந்து கிடந்தது. வயதான பெண் முணுமுணுத்தவாறு கதவை முழுமையாக திறந்து விட்டாள்.

வயதான பெண் சிறிது நேரம் தயங்கியவாறு நின்றாள். அவனுடைய அறை நடுவிலிருந்த அறையின் ஒரு பக்கத்தில் இருந்தது. அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. அந்த வீட்டில் எந்த இடத்திலும் ஓசையோ அசைவோ எதுவுமில்லை.

வயதான பெண் என்னவோ முணுமுணுத்தாள். பிறகு மெதுவாக அவனுடைய அறையின் கதவைத் திறந்தாள்.

வயதான பெண் அதிர்ச்சியடைந்து, நடுங்கிப் போய் விட்டாள்.

கடவுளே!

அவன் அங்கு இறந்ததைப் போல கிடந்தான்.

அறையில் கூடு கட்டி வசித்துக் கொண்டிருந்த ஒரு கிளி, கிழவியின் சத்தத்தைக் கேட்டு கோபப்பட்டதைப் போல 'ற்ற்வீ' 'ற்வீ' என்ற சத்தத்தை உண்டாக்கி, அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்தது.

பதைபதைப்பு காரணமாக கிழவிக்கு எதையும் செய்ய தோன்றவில்லை. பயமும் இருந்தது. சிறிது நேரம் கிழவி அந்த காட்சியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நன்கு நிமிர்ந்து, எந்தவொரு அசைவுமில்லாமல்.... பிறகு அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்:

'ஓ.... என் மகனே, உன்னை நான்....'

ஆனால், அவன் இறக்கவில்லை. வாழ்விற்கும் மரணத்திற்கும் மத்தியில் கனவுகள் கண்டவாறு படுத்திருந்தான். சத்தத்தைக் கேட்டதும், அவன் கண்களைத் திறந்து பார்த்தான்.

ஓ.... கிழவி! கிழவி இதுவரை எங்கு இருந்தாள்? - மழை பெய்து கொண்டிருக்கிறதா? தமிழ் நாட்டில் எந்தச் சமயத்திலும் மழை பெய்வதில்லை. ஆட்கள் வயதாகி விட்டால், இறக்கிறார்கள். கிழவிக்கு வயது குறைவுதான். ஆனால், கிழவிக்கு எதுவுமே தெரியாது. அல்ஃபோன்ஸோ தோதோவைப் பற்றி கிழவி கேள்விப்பட்டிருப்பாளா? இல்லை.... ஸோலா, மாப்பாஸாங், ஃப்ளாபேர்....'
அவனுக்கு தொண்டை வறட்சி எடுப்பதைப் போல தோன்றியது.

எதையோ மறந்து போயிருக்கிறோம்? எதையோ இழந்திருக்கிறோம்? எவ்வளவு யோசித்துப் பார்த்தும் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் கண்களை மூடி படுத்திருந்தான்.

என்ன? என்ன? திடீரென்று இருளடைந்த அந்த அறைக்குள் வெளிச்சத்தின் ஒரு கீற்று கடந்து செல்வதைப் போல, அவனுக்கு நினைவில் வந்தது.

தேநீர் பருகி எவ்வளவு நேரமாகி விட்டது!

ஒரு வகையில் பார்க்கப் போனால் - எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன!

ஒரு சிறுவனாக இருந்தபோது தன் தாய் தேநீர் தயாரித்து கொடுத்ததை அவன் நினைத்துப் பார்த்தான். எல்லோருக்கும் தயாரிப்பதில்லை. தந்தைக்கு தயார் பண்ணும்போது அம்மா, இளைய மகனுக்கும் கொடுக்கிறாள். தந்தை கூறுவார்: 'இவனுக்கு ஒரு பழக்கத்தை நீ கற்றுத் தருகிறாய் என்று தோன்றுகிறதே!'

அம்மா கூறுவாள்:

'நான்தானே அவனுக்குத் தருகிறேன்! குடி.... என் தங்க மகனே, குடி...'

தந்தைக்கு தேநீர் மிகவும் காட்டமாக இருக்க வேண்டும். அதையே மகனும் பழக்கமாக்கிக் கொண்டான்.

அவன் நினைத்துப் பார்த்தான்: நல்ல காட்டமான தேநீர் தயாரிப்பதற்கு இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும். ஒன்று தன் அன்னை. இன்னொன்று.... இன்னொன்று....


அவன் யாரிடம் என்றில்லாமல் கூறினான்:

'தேநீர் தயாரித்து கொண்டு வா, அலமாரியில் தூள் இருக்கும்...'

கிழவியால் முதலில் எதுவும் கூற முடியவில்லை. அவளுடைய உலகத்தில் அவன் மரணமடைந்து விட்டிருந்தான். ஆனால், இப்போது இதோ.....

அவள் மீண்டும் அழவும், கூறவும் ஆரம்பித்தாள்: 'ஓ.... என் மகனே, உன்னை.... நான் நினைத்தேன்...'

அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தது. அதனால் கிழவியால் அவனுடைய முகத்தைத் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவனுடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருக்க, நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி விட்டிருந்தன.

அவன் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

அவனுடைய தாயின் பாசம் நிறைந்த குரல் மீண்டும் கேட்பதைப் போல தோன்றியது. அத்துடன் அவனுடைய தந்தையின் முரட்டுத் தனமான குரலும் கேட்டது. அவனுடைய தந்தை கூறினார்: 'இல்லை... அவனுக்கு இனிமேல் இந்த வீட்டில் இடமில்லை.' வெளியே ஆட்கள் ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்... கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்... ஓடிக் கொண்டிருந்தார்கள்....

அவனுடைய அன்னை அழுதுகொண்டிருக்க, தந்தை மீண்டும் கூறினார்:

'இல்லை... அவனுக்கு இந்த வீட்டில் இனிமேல் இடமில்லை.'

தந்தை கூறியபோது, அவன் பக்கத்து அறையில் தயங்கிக் கொண்டு நின்றிருந்தான். ஆனால், அதற்கு முன்பே அவன் புரிந்து வைத்திருந்தான். அந்த வீட்டில் அவனுக்கு இடமில்லை. இடமில்லாத ஒரு இடத்தில் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்? அது ஒரு புறமிருக்க, காவல் நிலையத்தின் இருட்டான அறையில் கிடந்து இடுப்பு எலும்புகள் நொறுங்கி இறப்பதற்கு அவன் விரும்பவுமில்லை. இறக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டே மரணத்தைத் தழுவுவது என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!

ஆட்கள் கேட்பதுண்டு - நீங்கள் எப்படி ஊரையும் வீட்டையும் விட்டு கிளம்பி வந்தீர்கள்? அம்மாவையும் அப்பாவையும் விட்டு விட்டு எப்படி வந்தீர்கள்? உங்களுக்கு அப்போது மிகவும் வயது குறைவுதானே?
அவன் நீண்ட பெருமூச்சை விட்டான் - வயது குறைவு... வயது குறைவு!

சாயங்கால வேளைக்கே உரிய மஞ்சள் நிறத்தைக் கொண்ட ஒளிக் கீற்றுகள் தயங்கிக் கொண்டே உள்ளே நுழைந்து வந்தபோது, அவன் எழுந்து சென்று சாளரத்தை நன்கு திறந்து விட்டான்.

மழை பெய்யவில்லை. வானம் நன்கு தெளிந்து காணப்பட்டது. வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனித மனதின் பெரு மூச்சுகளைப் போல கடல் இரைச்சலிட்டுக் கொண்டிருப்பதை அவன் கேட்டான். அவன் இமையை மூடாமல் அந்த சத்தத்தையே கூர்ந்து கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். ஒளி வெள்ளத்தில் குளித்துக் கொண்டு நின்றிருந்த கடற்கரைகள்... தென்னந் தோப்புகள்.... குடிசைகள்.... இளம் பெண்கள் புத்தகங்களுடன் ஆற்றின் கரையில் படகை எதிர்பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்... இளம் வயலட் நிறத்தைக் கொண்ட நீர் மருதம் பூக்கள் நீரோட்டத்தில் மிதந்து போய்க் கொண்டிருந்தன. எங்கு....? எங்கு....?

கிழவி தேநீர் பாத்திரத்துடன் வந்தாள். அவன் அப்போதும் சாளரத்தின் அருகில் வெளியே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். ஆனால், வாசலிலிருந்த செம்பருத்திச் செடிகளிலிருந்து குருவிகள் சலசலப்பு உண்டாக்கியதையும், பக்கத்து வீட்டின் கிணற்றுக்கு அருகில் நின்றவாறு குளித்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் நாலா பக்கங்களிலும் எட்டிப் பார்த்து யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு மார்புக் கச்சையை அவிழ்த்து விட்டு துவைக்க ஆரம்பித்ததையும் அவன் பார்க்கவில்லை. அவனுக்கு முன்னால் அப்போதும் இளம் வயலட் நிறத்திலிருந்த நீர் மருதம் மலர்கள் நீரோட்டத்தின் தெளிந்த நீரில் மிதந்து போய்க் கொண்டிருந்தன.

கிழவி கூறினாள்: 'தேநீர்...'

அவன் திரும்பி நின்றான். கிழவி 'கப்'பில் தேநீரை ஊற்றிக் கொண்டிருந்தாள். கிழவியின் கை நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு கவலை உண்டானது. கிழவிக்கு வயது ஆகிக் கொண்டிருந்தது....

கிழவி திடீரென்று ஒரு பெருமூச்சை விட்டவாறு கூறினாள்: 'அந்த பையன் இருந்திருந்தால்....'

அவன் அதிர்ச்சியடைந்து கிழவியின் முகத்தையே பார்த்தான். அவனுடைய கண்களில் வேதனையும் பதைபதைப்பும் பரவியிருந்தன. ஆனால், கிழவி அதைக் கவனிக்கவில்லை. தனக்குச் சொந்தமான ஒரு உலகத்தில் இருந்தவாறு அந்த வேலைக்காரச் சிறுவனின் நல்லவை, கெட்டவைகளை கிழவி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'....ஓ.... இப்படியொரு பையன்! குளிப்பதில்லை... நீரில் நனைவதில்லை... சொன்னால், கேட்பதில்லை.'

கிழவியின் பார்வையில் அந்தச் சிறுவனிடம் ஏகப்பட்ட குறைகள் இருந்தன (அப்படியே இல்லையென்றாலும், கிழவியின் பார்வையில் யாரிடம்தான் குறைகள் இல்லை?) அந்தக் குறைகளை ஒவ்வொன்றாக கிழவி நினைத்துப் பார்த்தாள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ஏதோ ஞாபகம் வந்ததைப் போல, கிழவி மீண்டும் கூறினாள்:

'..... எது எப்படியிருந்தாலும், ஒரு புத்திசாலியான பையன்.....'

அவன் எதுவும் கூறவில்லை. வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். மரத்தின் கிளைகளிலிருந்து சாயங்கால வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருந்தது. முழு உலகமும் அசைவுகள் இல்லாதவையாகவும், அமைதியானவையாகவும் ஆகி விட்டதைப் போல தோன்றியது.

வெளியே கூற முடியாத ஒரு உணர்ச்சி உந்துதலின் - கவலை, வேதனை, அன்பு ஆகியவற்றின் - கனமான பாதிப்பு அவனை மூடியது.

அவன் அமைதியற்ற மன நிலையுடன் அறையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

கிழவி போய் விட்டிருந்தாள். குளிர்ந்து போன தேநீர் பாத்திரம் மேஜையின் மீது ஒரு அனாதை பிணத்தைப் போல கிடந்தது.

அவன் அந்த தேநீரைப் பருகவில்லை. தேநீர் பாத்திரத்தைத் தூக்கியபோது, அவன் அதில் தெரியும் நிழலைப் பார்த்தான் - முத்து. குருநாத முதலி, காளியம்மா ஆகியோரின் மகன் முத்து.

அலமாரியில் பழைய பத்திரிகைகளும் மாத இதழ்களும் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சிவப்பு நிற காலிக்கோ உறை போட்ட ஒரு புத்தகத்தை அவன் தேடி எடுத்தான். அது ஒரு பழைய டைரி.

அவன் போர்ட்டிக்கோவில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் போய் படுத்தான். அவனுடைய கையில் அந்த புத்தகமும் இருந்தது. ஆனால், அவன் அதை வாசிக்கவில்லை. அதன் பக்கங்களை அவன் வெறுமனே திருப்பித் திருப்பி புரட்டிக் கொண்டிருந்தான். சூனியமாகி விட்டிருந்த அவனுடைய மனதிற்குள் அவ்வப்போது சில காட்சிகள் பறந்து சென்றன. ஆனால், ஒன்று கூட அங்கு தங்கி நிற்கவோ அவனை ஆழமாக, சிந்திக்க வைக்கவோ செய்யவில்லை.

பெயருக்கு நெசவுத் தொழில் இருந்தாலும், எல்லா நேரங்களிலும் மது அருந்தி பயனற்ற மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன்.... கணவனிடமும் மகனிடமும் எந்தவொரு அன்பும் இல்லாமல், கிராமத்திற்கு அவ்வப்போது வரக் கூடிய ஒரு லாரிக்காரனுடன் உறவு வைத்திருக்கும் மனைவி... அவர்களின் மகனாக பிறக்கக் கூடிய அதிர்ஷ்டக் குறைவான ஒரு சிறுவன் தன்னுடைய நிற பளபளப்பே இல்லாத வாழ்க்கையில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு புன்சிரிப்புடன் நுழைந்து வந்ததை அவன் பார்த்தான்.


பலரும் புன்னகைப்பதைப் பார்த்திருக்கிறான். ஆனால், அது என்ன ஒரு புன்னகை!

அவனுடைய பற்கள் முழுவதும் வெளியே தெரியும். பெரிய உருண்டையான கண்களில் அன்பும் கள்ளங்கபடமற்ற தன்மையும் வழிந்து ஒழுகிக் கொண்டிருந்தன.

அவனுடைய அண்ணன் அவனிடம் கேட்டார்:

'டேய், நீ இவனுடன் போறியா? உனக்கு நல்லதாக இருக்கும். என்ன?'

அவன் அவனை நேரடியாக பார்த்து முழுமையான சம்மதம் என்பதைப் போல தலையை ஆட்ட மட்டும் செய்தான்.

(சிறிது சிறிதாக வளர்ந்திருந்த உரோமங்கள் எழுந்து நின்று கொண்டிருக்கும் தலை... புன்னகைக்கும் பெரிய உருண்டைக் கண்களும், வெளுத்து காணப்பட்ட பற்களும்....)

தொடர்ந்து அண்ணன் அவனிடம் கூறினார்:

'ஒருவேளை எனக்கு வெகு சீக்கிரமே இடம் மாறுதல் உண்டாகலாம். அப்போது இவனையும் அழைத்துக் கொண்டு செல்வது என்பது - அதில் பல சிரமங்கள் இருக்கின்றன. நடக்காத விஷயம். நீ அழைத்துக் கொண்டு போ. ஒரு வேளை.... ஒரு குவளை தேநீர் தயாரித்துத் தருவதற்கு அவன் பயன்படலாம்.'

என்னவோ சிந்தித்ததைப் போல சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு ஒரு புன்சிரிப்புடன் அண்ணன் கேட்டார்:

'உனக்கு இப்போதும் நல்ல கடுப்பமான தேநீர் வேணுமா?'

அவன் எதுவும் கூறவில்லை. அண்ணன் மீண்டும் கேட்டார்:

'நீ சமீபத்தில் வீட்டுக்குப் போயிருந்தாயா?'

ஒரு அதிர்ச்சியுடன் அவன் தன் அண்ணனின் முகத்தையே பார்த்தான்.

அவன் வீட்டிற்குச் செல்வதே இல்லை என்ற விஷயம் அண்ணனுக்கு நன்றாகவே தெரியும், வீட்டிலிருக்கும் யாருடனாவது ஏதாவது வகையில் உறவு வைத்திருக்கிறான் என்றால், அது அண்ணனுடன் மட்டும்தான். எனினும், அண்ணன் ஏன் அப்படி கேட்டார்?

அண்ணனைப் பற்றி நினைத்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்பு பரவியது. அண்ணன் எப்போதும் நியாயத்தின் பக்கத்தில்தான் இருப்பார். எந்த விஷயத்தைப் பற்றியும் அண்ணனுக்கு தெளிவான ஒரு கருத்து இருந்தது. ஆனால், எந்தச் சமயத்திலும் அண்ணன் தேவையில்லாமல் பேச மாட்டார். எல்லாவற்றையும் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் மட்டும் செய்வார்....

அம்மாவைப் பற்றி அண்ணன் கூறியபோது, அவனால் அண்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை, அண்ணன் கூறினார்: 'வீட்ல இருந்து கடிதம் வந்திருந்தது. அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லையாம்... அந்தப் பழைய வாதநோய்தான்...'

ஆனால், அவனுடைய உணர்ச்சி மாறுதலைப் பார்த்ததும், அண்ணன் எவ்வளவு வேகமாக விஷயத்தை மாற்றிக் கொண்டார்!

(எனினும், அந்த விஷயத்தை நிரந்தரமாக மாற்றுவதற்கு யாரால் முடியும்? அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்து சென்றிருக்கின்றன. மூன்று வருடங்கள்.... அம்மா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மகனும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால்....)

அவன் பெருமூச்சை அடக்கினான். மீண்டும் அந்தச் சிறுவனைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அன்று சாயங்காலம் குருநாத முதலியிடம் அண்ணன் அந்த விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டபோது எவ்வளவு சாதாரணமான குரலில் அவன் சொன்னான்!: 'சரி சார்.... எல்லாம் உங்கள் விருப்பம் சார்.'

மகனைப் பிரிந்து இருப்பது என்பது ஒரு தந்தைக்குக் கவலை தரும் ஒரு விஷயமாக இருக்காதா?

ஒரு காலை வேளையில் அவர்கள் இருவரும் - அவனும், அந்தச் சிறுவனும் - புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் கணிக்கொன்றை மரங்கள் பூத்து நின்று கொண்டிருந்தன. பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. அந்தச் சிறுவன் கொன்றைப் பூங்கொத்துகளைப் போல புன்னகைத்துக் கொண்டும், பறவைகளைப் போல சந்தோஷப்படவும் செய்தான்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் ஆரம்பம் அது என்பதை அவன் நினைக்கவில்லை. அந்த மனிதனோ?

அந்த மனிதன் நினைத்தானா.... தமிழ்நாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அழகற்றவனாக இருந்தாலும், கள்ளங்கபடமற்றவனாகவும் அன்பு நிறைந்தவனாகவும் இருந்த அந்தச் சிறுவன் பிறகு தன்னுடைய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக ஆவான் என்பதையும், பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு ஒரு சாயங்கால வேளையில் ஒரு மழை மேகத்தைப் போல அந்தச் சிறுவன் கிட்டத்தட்ட மறக்க ஆரம்பித்திருந்த அவனுடைய தந்தை எங்கிருந்தோ பறந்து வந்து அவனைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு போவான் என்பதையும்...?

இல்லை... இல்லை...

இப்போது இங்கு கிழவியோ வேறு யாருமோ வந்தால், தோட்டத்திலிருந்த பெரிய மாமரத்தின் மேலே ஒரு 'சைத்தான்' இருக்கிறது என்று கூறுவதற்கும், மாங்காய் பொறுக்க வரும்போது 'சைத்தான்' இரத்தம் நிறைந்த பெரிய கண்களால் வெறித்துப் பார்த்து நாக்கை நீட்டி அவனை நோக்கி பாய்ந்து..... 'இந்தப் பக்கம் வரக் கூடாது. மரத்திற்குக் கீழே போனால், சைத்தான் குரல்வளையைப் பிடிக்கும். குரல்வளையைப் பிடித்தால்....' இப்படிக் கூறி கண்களால் வெறித்துப் பார்த்து, நாக்கை நீட்டி மாங்காய் பொறுக்குவதற்காக வருபவர்களைக் கொல்வதற்காக பாய்ந்து வரும் கற்பனையில் மிகவும் பயங்கரமான அந்த சைத்தானாக நடிப்பதற்கும் யாருமில்லை!

பெரிய மாமரத்தின் உச்சியிலிருக்கும் சைத்தானே, உன்னுடைய அந்த பழைய நண்பன் எங்கு போனான்?

கடைக்கோ, அஞ்சல் நிலையத்திற்கோ செல்வதற்கு ஒரு ஆள் இல்லை. எப்போதாவது இரவு வேளையில் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வரும்போது, படுக்கையை விரித்து தயார் பண்ணி வைப்பதற்கு ஒரு ஆளில்லை. இடைவேளையில் ஒரு கப் தேநீர் வைத்துத் தருவதற்கு ஒரு ஆளில்லை. வெளியே மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும்போது, எந்தவொரு செயலையும் செய்ய முடியாமல் வெறுமனே அமர்ந்திருக்கும்போது ஏதாவது இரண்டு வார்த்தைகள் கூறுவதற்கு ஒரு ஆளில்லை. இல்லை... இல்லை....

இருள் பரவி விட்டிருந்தது. காற்று வீசும்போது 'போகன்வில்லியா'வின் கிளைகளிலிருந்து காய்ந்த இலைகள் போர்ட்டிகோவில் பறந்து விழுந்து கொண்டிருந்தன. வானத்தின் மூலையில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் தெரிந்தன. இலைகளுக்கு மத்தியில் பார்த்தபோது, அவை பெரிய மின் மினிப் பூச்சிகளைப் போல அவனுக்குத் தோன்றியது.
பக்கத்து வீடுகளிலிருந்த குழந்தைகள் கடவுளின் பெயர்களை கூறுவதும், பாடங்கள் படிப்பதும் காதில் விழுந்தன.
முன்பு எப்போதோ வாசித்த ஒரு கவிதையின் சில வரிகளை அவன் வெறுமனே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

'அந்தி மயங்கியது மலர்த் தோட்டம் மயங்கியது
மந்தாரக் கிளையில் மலர்கள் மயங்கின
மின்னல் கை வாளின் அலகு ஒளிர்ந்தது
தென்றலின் கதறல் சுற்றிலும் எழுந்தது'

திரும்பத் திரும்ப அவன் அந்த வரிகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: 'அந்தி மயங்கியது....'

அந்த வீட்டில் வெளிச்சமில்லை. அவன் அங்கு தனியாக இருந்தான். சைத்தான் தங்கியிருக்கும் பெரிய மாமரத்தின் உச்சியிலிருந்து பறவைகள்.....

அவன் தனக்குள் கூறிக் கொண்டான்:

'இல்லை... இல்லை... நான் இதுவரை கனவு கண்டு கொண்டிருந்தேன். இந்த வாழ்க்கையில் நான் யார் மீதாவது அன்பு வைத்திருந்தால், அது என் மீது மட்டும்தான். அந்த குழந்தை ஒரு கற்பனை மட்டுமே. வெறும் ஒரு கற்பனை....'

தாமதமாகி விட்டது... மிகவும் தாமதமாகி விட்டது.....

அவன் களைப்பு காரணமாக கண்களை மூடி படுத்தான்.

.... நீரோட்டத்தின் தெளிந்த நீரில் இளம் வயலட் நிறத்திலிருந்த நீர் மருதம் மலர்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.