Logo

நினைவுச் சின்னம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4057

நினைவுச் சின்னம்
எஸ். கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா

சுதர்ம்மாஜி புகழ் பெற்ற ஒரு கவிஞராக இருந்தார். உணர்ச்சிகள் நிறைந்த ஏராளமான ஒளிரும் படைப்புகளால் அவர் இலக்கிய ஆலயத்தைப் பிரகாசமாக ஆக்கினார். அவருடைய பேனா நெருப்பென கனன்றது. அந்த கவிதைகள் உயர்ந்த சிந்தனைகள், சர்வதேச கொள்கைகள் ஆகியவற்றை ஆழமாகக் கொண்டிருக்கும் நெருப்பு குண்டமாக இருந்தன.

ஆட்கள் அவரை ஆதரித்தார்கள். வழிபட்டார்கள். 'இலக்கியத்தின் அணையா விளக்கு' 'மொழியின் அதிர்ஷ்ட ஒளி' என்றெல்லாம் புகழ் நிறைந்த பல பட்டங்களையும் அவர்கள் அவருக்கு அளித்தார்கள்.

ஒரு அமைதியான கிராமப் பகுதியில், தனியாக இருந்த ஒரு மலைச் சரிவில் ஒரு பழைய குடிசையில் சுதர்ம்மாஜி, மனைவியுடனும் பிள்ளைகளுடனும் வாழ்ந்தார்.

'கிராமப் பகுதியின் தனித்துவமான இயற்கை அழகை ரசிப்பதற்காக எங்கோ உட்புறத்தில் இருக்கும் ஒரு குடிசையில் அந்த கவிஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என்று அவருடைய இருப்பிடத்தைப் பற்றி தெரிந்திருந்த சில இலக்கிய ரசிகர்கள், ஆர்வம் நிறைந்த வேறு சிலரிடம் கூறினார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தன்னுடைய சில கவிதைகளில் தான் வர்ணிக்கக் கூடிய சொர்க்கத்திற்கு நிகரான மாளிகைகளின் சுக சவுகரியங்கள் நிறைந்த அறைகளில் சிறிது நாட்களாவது வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்காதா என்று சுதர்ம்மாஜி பல நேரங்களில் மனதில் வேதனையுடன் வேண்டியதுண்டு. சாதாரண தனிமைச் சூழலை விரும்பியோ, இயற்கையை பசுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ சுதர்ம்மாஜி அப்படிப்பட்ட ஒரு சூழலையும், வீட்டையும் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த அமைதியின் எல்லைக்கு அவரை விரட்டி விட்டவை கடன் கொடுத்தவர்களின் கடுமையான வார்த்தைகளும், கொடுமையான வறுமையும்தான். அந்த நெருப்புப் பொறி பறக்கும் கவிதைகள் எதுவும் அவருடைய வயிற்றிற்குள் இருந்த சுருக்கங்களைச் சரி செய்யவில்லை. அவை வாழ்க்கையின் உண்மைகளை மறைத்து வைக்கவில்லை. தினசரி தேவைகள் ஒவ்வொரு நிமிடமும் அந்த அப்பிராணி மனிதரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பசியால் அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு அந்த உலக புகழ் பெற்ற கவிதைகள் திறமையற்றவையாக இருந்தன. சிரமங்களும் பட்டினியும் இல்லாத வாழ்க்கை என்பது சுதர்ம்மாஜியைப் பொறுத்த வரையில், ஒரு வீணான ஆசையாகவே எஞ்சி நின்றது. செல்வச் செழிப்பையும் சந்தோஷத்தையும் புகழ்ந்து இதயம் நெகிழ பாடிய அந்த கவிஞர் பசியால் துடித்தார். வறுமையின் இருள் நிறைந்த மூலைகளில் தட்டுத் தடுமாறி காலத்தை ஓட்டினார்.

'என்ன ஒரு கற்பனை! என்ன ஒரு கொள்கைத் தெளிவு! என்ன ஒரு கம்பீரமான இலக்கு! அவருடைய கவிதைக்கு மண்ணாங்கட்டியைக் கூட நெருப்புக் கனலாக மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது' என்றெல்லாம் சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றி பொது மக்களும் பண்டிதர்களும் ஒரே மாதிரி தூரத்திலிருந்து பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்க, அருகில் கடன் கொடுத்தவர்கள் 'கடன் வாங்கிய பிறகு, விளக்கு பற்ற வைத்து தேடினால் கூட, அந்த திசையில் பார்க்க முடியாத பயங்கரமான திருடன்! இரவு வேளையில் மட்டுமே வெளியே வரும் பெருச்சாளி! ஒரு மனிதப் பற்றே இல்லாத கவிஞன்!' என்றெல்லாம் அவரைப் பற்றி பின்னாலிருந்து முணுமுணுத்ததை மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.

சுதர்ம்மாஜிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். என்ன செய்வது? அவருக்கு அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை உண்டாகி விட்டது. இலக்கியத்தை உயிர் வாழ்வதற்கான ஒரு வழியாக ஆக்கி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அது வாழ்க்கைக்கு ஒரு தாங்கக் கூடிய சக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் ஒரு திருமணத்தைச் செய்தார். அது ஒரு சுமையாக காலப் போக்கில் ஆகி விட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, இறுக பிணைக்கப்பட்ட ஒரு கட்டு என்று அது ஆகி விட்டது. அந்த நான்கு பேரும் வறுமையின் பிணைப்பில் சிக்குண்டு கிடக்கும் வீணான சுமைகளாக ஆகி, கண்களுக்குத் தெரியாத ஒரு ஆழமான குழியை நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கரைக்குக் கொண்டு வர கவிதையால் முடியவில்லை. அந்த கவிஞரின் மன வேதனைகள் இலக்கிய உலகைப் புத்துணர்ச்சி அடையச் செய்தன. இலக்கிய ரசிகர்களின் நரம்புகளில் உற்சாகத்தை நிறைத்தன. ஆனால், வீடும் வாசலும் இல்லாமல், காடுகளில் விளையும் சாதாரண கனிகளைச் சாப்பிட்டு, பாட்டுப் பாடி பறந்து திரியும் ஒரு குயிலல்ல மனிதக் கவிஞன் என்ற மிகப் பெரிய உண்மையை சுதர்ம்மாஜியின் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் முழுமையாக மறந்து விட்டிருந்தார்கள்.
தன்னுடைய இலக்கிய சேவையின் இறுதி விளைவு இந்த அளவிற்கு வறண்ட நிலையை அடைந்திருந்தாலும், தன் வாழ்க்கையை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கு சுதர்ம்மாஜி சம்மதிக்கவில்லை. அவர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்: 'காலம் செல்லச் செல்ல அனைத்தும் சரியாகும். என் படைப்புகள் சூடான நெய்யப்பத்தைப் போல உடனுக்குடன் விற்று தீரும். அந்த வகையில் நான் ஒரு பணக்காரனாக ஆவேன். புதிய ஆடைகளும் அழகான வீடுகளும் எனக்குச் சொந்தமாக ஆகும்.' ஆனால், யதார்த்தம், அவருக்கு முன்னால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளிலிருந்தவர்களின் கிண்டலை வெளிப்படுத்தும் பார்வை... கடன் கொடுத்தவர்களின், கொலை செய்யும் அளவிற்கு இருக்கக் கூடிய இறுதி எச்சரிக்கை.... மனைவியின் மரத்துப் போன பொறுமை... குழந்தைகளின் சத்தம் வராத அழுகைக் குரல். ஒரு பலகைத் துண்டின் மீது ஒரு துண்டுத் தாளை விரித்து வைத்து, ஒரு பழைய பேனாவைக் கையில் வைத்தவாறு அவர் கவிதையின் ஆழமான சுரங்கங்களைத் தோண்ட ஆரம்பிப்பார்.

கிழிந்த சட்டையும் அழுக்கடைந்த வேட்டியும் அணிந்து, சவரம் செய்யப்படாத முகத்துடன் அவர் வெளியேறி நடக்கும்போது, அந்தப் பகுதியில் வசிக்கக் கூடிய சிலர் 'அதோ போகிறார்... கவிஞர்' என்று கையால் சுட்டிக் காட்டிக் கூறுவதைக் கேட்டால், அவர் மாயாஜால வித்தைகள் காட்டக் கூடிய ஒரு குறவனாக இருப்பாரோ என்று தோன்றும்.

சுதர்ம்மாஜி சில பதிப்பாளர்களை அணுகி, அவர்களின் 'கைகளையும் கால்களையும்' பிடித்து, தன்னுடைய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பைப் பதிப்பித்துக் கொண்டு வருவதற்கு ஒரு தீவிர முயற்சி செய்து பார்த்தார்.

'கவிதையா? ச்சே... அதற்கு இப்போது மார்க்கெட் இல்லை. கதையாக இருந்தால், ஒரு முறை போட்டு பார்க்கலாம்' - அனைத்து பதிப்பாளர்களும் இப்படி கூறி நகர்ந்து கொண்டார்கள். இறுதியில் இரக்க குணம் கொண்ட ஒரு பதிப்பாளர் நூலை அச்சடித்துத் தருவதற்கு ஒத்துக் கொண்டார்.


'நெருப்புப் பொறிகள் (முதல் பகுதி)' - இதுதான் சுதர்ம்மாஜியின் நூலின் பெயர். நாட்டின் நாலா திசைகளிலும் தான் சம்பாதித்து வைத்திருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களின் கரங்களில் தன்னுடைய நூலின் முதல் பதிப்பு முழுவதும் நிமிட நேரத்தில் தவழ்ந்து தீர்ந்து, தொடர்ந்து ஒரு பணக் குவியலைப் பார்க்கலாம் என்பதுதான் நம் கவிஞரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த புனித மனம் கொண்ட மனிதர் தவறுதலாக நினைத்து விட்டார். 'கவிதையை ரசிக்கும் கதை வேறு. காசு கொடுத்து வாங்கும் கதை வேறு' - ரசிகர்கள் கூட்டம் முணுமுணுத்தது. அவர்கள் புத்தகத்தைத் திறந்து பக்கங்களைப் புரட்டி, இங்குமங்குமாக ஒன்றிரண்டு துண்டுகளை வாசித்து முனகி, மீண்டும் மேலட்டையின் மீது கண்களை ஓட்டினார்கள். அவர்கள் கூறினார்கள்: 'விலை ஒரு ரூபாயா? பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பில்லையா?'

'நெருப்புப் பொறிக'ளைப் பற்றி பத்திரிகைகள் ஒரேயடியாக புகழ்ந்து எழுதின. அதன் விளைவாக சுதர்ம்மாஜிக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன.

'நான் உங்களுடைய கவிதைகளை தொடர்ந்து வாசித்து ரசிக்கும் ஒரு இலக்கியத்தின் அடிமை. நீங்கள் 'தீப்பொறிகள்' என்றொரு கவிதை நூலை பதிப்பித்திருப்பதாக அறிந்தேன். எனக்கு ஒரு பிரதியை இலவசமாக அனுப்பித் தர வேண்டும்.' கடிதங்களின் உள்ளடக்கம் இப்படித்தான் இருந்தது. சில படிப்பகங்களில் வேலை செய்பவர்களும் இதே போல கேட்டுக் கொண்டு கடிதங்கள் எழுதினார்கள். சுதர்ம்மாஜி அமைதியாக இருந்தார். இதற்கிடையில் சுதர்ம்மாஜி தனக்குத் தெரிந்த ஒரு மனிதனைப் பார்த்தார். நன்கு தெரிந்திருந்த அந்த மனிதன் முதலில் ஒரு சாதாரண குசலம் விசாரித்து விட்டு நகர்ந்தான். பிறகு அவன் ஏதோ நினைத்துக் கொண்டு திரும்பி நின்றான்.

'நீங்கள் சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறீர்கள் அல்லவா?'

'ஆமாம்...'

'அதன் ஒரு பிரதி எனக்கு தரணும். என் மனைவி உங்களுடைய கவிதைகள் அனைத்தையும் மனப்பாடமாக வைத்திருக்கும் ஒருத்தி.'

'நண்பா!' - சுதர்ம்மாஜி ஒரு மெல்லிய புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு கூறினார்: 'எனக்கு நாட்டின் நாலா பக்கங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்தால், கவிதைக்கான சன்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும்... அதை அச்சடிப்பதற்கான செலவை யார் தருவார்கள்?'

அந்த நண்பன் புளியங்காயைக் கடித்த குரங்கைப் போல, முகத்தைச் சுளித்து, சற்று இளித்தான். 'ம்... ம்... அது உண்மைதான்' என்று கூறியவாறு தன் நடையைத் தொடர்ந்தான். சுதர்ம்மாஜி தூரத்திற்குச் சென்றதும், அவன் மீண்டும் திரும்பி நின்று அந்த கவிஞரைப் பார்த்து ஒரு கிண்டலுடன் கீழுதடலை நீட்டி முணுமுணுத்தான்: இந்த ஆளோட கவிதைக்கு பணம் வேணுமாம்! பணத்திற்கு அந்த அளவிற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதா?'

ஒரு சொற்பொழிவு வேண்டுமென்று கூறி சில ஆண்டு விழா நடத்துபவர்கள் சுதர்ம்மாஜியை வந்து பார்த்தார்கள். உடல் நலமில்லை என்று கூறி சுதர்ம்மாஜி அந்த வலையிலிருந்து ஒரு வகையாக தப்பித்த நிலையில், ஒரு சமாஜத்தின் செயலாளரின் கடிதம் வந்தது.

மதிப்பிற்குரியவரே,

தங்களின் கவிதைகள் இலக்கிய உலகைக் கவர்ந்து, இனிய சூழ்நிலையை உண்டாக்கி விட்டிருக்கின்றன. தங்களின் சிந்தனைப் பெருக்கிற்குள் தவழ்ந்து பறக்கும் கற்பனைப் பட்டாம் பூச்சிகள்! என்ன அழகானவை அவை! இலக்கிய பூமியில் கண்டெடுக்கப்பட்ட அரிதான ஒரு பொக்கிஷம் உங்களுடைய அறிவு! அது இன்னும் வளரட்டும்!

எங்களுடைய சமாஜத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 'இலக்கிய மலர்' என்ற ஒரு புத்தகம் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதில் சேர்ப்பதற்கு உடனடியாக ஒரு கவிதையை அனுப்பி வைத்து எங்களுக்கு உதவ வேண்டுமென்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

- செயலாளர்

காலை நேர காபிக்குப் பதிலாக வெந்நீரைக் குடித்து, மதிய உணவிற்கு வழி இல்லாமல் சுருங்கிப் போன குடலுடன் உள்ளே போய் விட்ட கண்களுடன் சுதர்ம்மாஜி என்னவோ எழுதுவதற்கு முயன்று கொண்டிருக்கும்போது, அந்தச் செயலாளரின் கடிதம் வந்தது. அந்த உறைக்குள் பதில் கடிதம் எழுதுவதற்காக ஒரு தபால் அட்டையும் வைக்கப்பட்டிருந்தது. அந்த அட்டையில் சுதர்ம்மாஜி இப்படி எழுதினார்:

அன்பு நண்பரே,

கடிதம் கிடைத்தது. நன்றி தெரிவிக்கிறேன். நீங்கள் கூறியதைப் போல, எனக்கு சிந்திக்க முடிகிற ஒரு மூளை இருக்கிறது. பாட முடிகிற ஒரு தொண்டை இருக்கிறது. உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு இதயம் இருக்கிறது. இவை தவிர, பசிக்கும் ஒரு வயிறும் இருக்கிறது.

ஏதாவது சன்மானம் அனுப்பி வைத்தால், உங்களுக்கு நல்ல ஒரு இலக்கிய மலர் கிடைக்கும். எனக்கு சிறிது உணவும் கிடைக்கும்.

பணிவுள்ள,
சுதர்ம்மாஜி

அந்த தபால் அட்டை செயலாளரின் கையில் கிடைத்ததும், அவர் வெறுப்பு, கிண்டல் ஆகியவற்றால் சிவந்து போன நாசி துவாரங்களுடனும் விழிகளுடனும் ஒரு வினோதமான சத்தத்தை உண்டாக்கினார். சமாஜத்தின் பணியாட்கள் சுற்றிலும் கூட்டமாக நின்று 'என்ன அது?' என்று விசாரித்தார்கள்.

செயலாளர் அந்த தபால் அட்டையை ஒரு விஷ கிருமியைப் போல ஒரு விரலால் தூரத்தில் எறிந்து விட்டு கூறினார்:

'சுதர்ம்மாஜி மகா கவிஞருக்கு சன்மானமாக பணம் வேணுமாம்!'

'சன்மானமா?' - அந்த வார்த்தை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது: 'நம்முடைய மலரில் அவருடைய கவிதையைச் சேர்ப்பதையும் விட ஒரு சன்மானம் இருக்கிறதா என்ன? சரியான ஆள்தான்!' - ஒரு உறுப்பினர் கூறினார்.

'ஆமாம்... ஒரு பைசா கூட கொடுக்கக் கூடாது. பண வெறியன்!' - இன்னொரு உறுப்பினர் தொடர்ந்து கூறினார்.

'நான் அப்படி நினைக்கவில்லை' - இன்னொரு உறுப்பினர் உறுதியான குரலில் கூறினார்:

'நாம் நூல் அச்சடிப்பதற்கும் வேறு சில விஷயங்களுக்கும் பணம் செலவழிப்பதில்லையா? அது விற்பனையாகி பணமும் கிடைக்கிறது. அதனால்.... முடியுமானால்.... எழுத்தாளர்களுக்கு சிறிய ஒரு சன்மானம் அளிக்க வேண்டும்.'
'நான்சென்ஸ்....' - செயலாளர் இடையில் புகுந்து கூறினார்: 'சமாஜத்திற்கு பணம் சேர்ப்பதுதான் நம் நோக்கம். அப்படி இல்லாமல்.... பிச்சையெடுத்து நடந்து திரியும் கவிஞர்களுக்கு உணவளித்து காப்பாற்றும் பொறுப்பை இங்கு ஏற்றுக் கொள்ளவில்லை.'

'நீங்கள் கூறியது உண்மையே...' - சமாஜத்தின் தலைவர் இறுதி தீர்ப்பைக் கூறினார்: 'சன்மானம் கொடுக்கப்படாமல் கட்டுரைகளையும் கவிதைகளையும் தரக் கூடிய இலக்கியவாதிகள் வேண்டிய அளவிற்கு நம்மிடம் இருக்கிறார்கள். இந்த கவிஞனின் சரக்கு நமக்கு தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு கோழி கூவாமல் இருக்கிறது என்பதற்காக, பொழுது புலராமல் இருக்காது.'

சுதர்ம்மாஜி எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். வெறுப்பு கலந்த ஒரு பழிக்குப் பழி வாங்கும் மவுனத்துடன் செயலாளர் அந்த கவிஞரை ஆசீர்வதித்தார்.


கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து இரவு நேரத்தில்தான் சுதர்ம்மாஜி வெளியிலேயே வருவார். ஒருநாள் அவர் பசியால் சோர்வடைந்து, காதுகள் அடைத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளானார். கண்கள் இருண்டன. காலடிகள் மண்ணில் படாமல் ஒரு உயிரற்ற பிணத்தைப் போல வீட்டிற்குத் திரும்பி வரும் காட்சியை ஒரு கடைக்காரன் பார்த்தான். மறுநாள் அவன் ஒரு புதிய செய்தியை ஊரில் இருப்பவர்களுக்கு மத்தியில் பரப்பி விட்டான்: 'நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த கவிஞர் இருக்கிறாரே, சுதர்ம்மாஜி.... அவர் மூக்கு வரை கள்ளு குடித்து, சிறிது கூட சுய உணர்வே இல்லாமல் சாலையில் ஆடிக் கொண்டு போவதைப் பார்த்தேன்.'

கேட்டவர்கள் அனைவரும் அதை அப்படியே நம்பினார்கள். கையில் கிடைக்கக் கூடிய காசு அனைத்தையும் கொண்டு போய் அவர் அதற்கு சாராயம் வாங்கி குடிப்பார். கடன் கொடுத்தவர்களுக்கு காசு தருவதில்லை. வீட்டில் கடுமையான பட்டினி. அந்த வகையில் சுதர்ம்மாஜிக்கு குடிகாரர் என்ற பெயரும் சேர்த்து கிடைத்தது. அவருடைய சில ரசிகர்கள் மட்டும் அதை நம்பவில்லை. மீதிப் பேர் அதை நியாயப்படுத்தினார்கள்: அதில் என்ன இருக்கிறது? 'உண்மையான ரசனை கொண்ட கவிஞர்களுக்கு ஏதாவது சாதாரணமான ஒரு கெட்ட பழக்கம் இருக்கத்தான் செய்யும். துஞ்சத்து எழுத்தச்சன் முன்பு குடிக்கவில்லையா?'

அதனால் காலப் போக்கில் சுதர்ம்மாஜிக்கு மனரீதியாக ஒரு வீழ்ச்சி உண்டாகுமோ என்று கூட அச்சப்பட்டார்கள். அவருடைய கற்பனைகளை ஒரு இருள் மூடி விட்டிருந்தது. தினசரி தரித்திர சூழலிருந்து விடுபடுவதற்காக அவர் முடிந்த வரையில் முயற்சித்தார். முடியவில்லை. தினசரி தேவைகள் அவரை கட்டிப் போட்டன. விருப்பம் என்ன என்பதே அவருக்குத் தெரியாமலிருந்தது. சுதர்ம்மாஜி பூமியில் வாழும் ஒரு மனிதராக இல்லாமற் போயிருந்தார். அவருடைய தலை கற்பனை நிறைந்த இன்னொரு உலகத்திலும், சரீரம் நரகத்திலும் எல்லா நேரங்களிலும் இருந்தன. தற்காலிகமான சிரமங்களின் கொடுமையாலும் பட்டினியாலும் விரக்தியாலும் சுதர்ம்மாஜியின் சிந்தனைகள் தற்கொலை என்ற சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், மனைவியும் குழந்தைகளும் அடங்கிய சுமையின் காரணமாக அதற்கு அப்பால் அவரால் நகர முடியவில்லை.

ஒரு நாள் உச்சிப் பகல் வேளையில் சுதர்ம்மாஜி ஒரு நண்பரைத் தேடி ஒரு வயலின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். களைப்பைப் போக்குவதற்காக அவர் ஒரு கோவிலின் குளத்திற்கு அருகிலிருந்த ஒரு ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தில் போய் உட்கார்ந்தார். வெயிலின் அதிக வெப்பமும் பசியின் கடுமையும் அவரை ஒரு உயிருள்ள பிணமாக ஆக்கின. கையில் ஒரு தேய்ந்து போன செம்புக் காசு கூட இல்லை. ஒரு உஷ்ணம் தகிக்கும் வயலின் வழியாக இனிமேலும் மூன்று கல் தூரம் நடக்க வேண்டும். சுய உணர்வை இழந்து வழியில் விழுந்து விடுவோமோ என்று கூட அவர் பயந்தார்.

அருகிலிருந்த ஒரு நிலத்தில் உயரம் குறைவாக இருந்த ஒரு தென்னை மரத்தில் பெரிய ஒரு இளநீர் குலை வெளியே தொங்கிக் கொண்டிருப்பது சுதர்ம்மாஜியின் பார்வையில் பட்டது. தாகத்தால் பார்வை தெரியாமல் அவர் அதை நோக்கி நடந்தார். அந்த செழிப்பாக இருந்த இளநீர் குடங்களில் ஒன்றில் அவர் தன் கையை வைத்தார். சுதர்ம்மாஜி நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்தார். ம் அரை மைல் தூரம் அளவிற்கு ஒரு உயிரினத்தைக் கூட பார்க்க முடியவில்லை.

'யாருக்குச் சொந்தமானது இது?' - சுதர்ம்மாஜியின் மனச்சாட்சி முணுமுணுத்தது. அவர் தன் கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டார்.

'கடன் கொடுத்தவர்களைச் சமாதானப் படுத்துவதற்காக நான் பல நேரங்களில் பொய் கூறியிருக்கிறேன். ஆனால், எந்தவொரு நேரத்திலும் நான் திருடியது இல்லை' - சுதர்ம்மாஜி தன் மனதிற்குள் நினைத்தார்: 'எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது - கவிஞன். கவிஞர்கள் பொய் கூறியிருக்கிறார்கள். பெண்களுடன் தவறான உறவு கொண்டிருக்கிறார்கள். ஆனால், திருடியதாக கேள்விப்பட்டதில்லை' - அவர் தலையைத் தாழ்த்தியவாறு ஆலமரத்தடியை நோக்கி திரும்பி, வயலின் நடுவிலிருந்த சோளக் கொல்லை பொம்மையை வெறித்துப் பார்த்தவாறு கூறினார்: 'திருடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத ஒரு மனிதன்!'

சுதர்ம்மாஜியின் வறண்டு போய் காணப்பட்ட கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் அந்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தில் உதிர்ந்து விழுந்தன.

பிரபாவும், பிரதிபாவும் - இவைதான் சுதர்ம்மாஜியின் குழந்தைகளின் பெயர்கள். இளைய குழந்தையான பிரதிபாவிற்கு ஒன்றரை வயது. சுதர்ம்மாஜிக்கு பணம் வருவதற்கான அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில் பிரதிபாவிற்கு காய்ச்சல் வந்தது. அது ஒரு கடுமையான ஜுரமாக இருந்தது. மருந்துகளின் தட்டுப்பாடும் உணவு பிரச்னையும் சேர்ந்து அந்த குழந்தையை அபாயமான நிலைக்குக் கொண்டு போய் விட்டது. தாயின் நிராசை கலந்த பெருமூச்சுக்களாலோ, இதயத்தைப் பிழிந்து வந்த கண்ணீராலோ அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்கு முடியவில்லை.

சுதர்ம்மாஜி மீண்டும் தன்னுடைய ஒரு நெருங்கிய நண்பனைத் தேடிச் சென்று விஷயத்தைக் கூறினார். அவன் ஒரு மருத்துவ மாணவன்.

நண்பன் கூறினான்: 'மிகவும் வருத்தப்படுறேன். வரும் வாரத்தில் வந்தால், ஏதாவது தருகிறேன்.'

'அந்தச் சமயத்தில் என் குழந்தை இறந்து விடும்' - சுதர்ம்மாஜி கவலையுடன் கூறினார்.

'என்ன செய்வது? என் கையில் காசு இல்லை என்று நான்தான் சொன்னேனே!' - சுதர்ம்மாஜி திரும்பி நடந்தார். வாசற்படியை அடைந்தபோது, அந்த மருத்துவ மாணவன் தன் மனைவியிடம் கிண்டல் கலந்த குரலில் கூறுவதை சுதர்ம்மாஜி கேட்டார்: 'குழந்தை இறந்துவிட்டால், பிணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன்.'

ஒரு நாட்டு வைத்தியர் கூறிய சாதாரண மருந்துகளால் பிரதிபாவிற்கு நோய் குணமாகவில்லை. பச்சைத் தண்ணீர்தான் இருந்ததே தவிர, அதை வெப்பப்படுத்துவதற்கு ஒரு விறகுக் கொள்ளி கூட வீட்டில் இல்லை.
சுதர்ம்மாஜி அறையின் மூலையைப் பார்த்தார். அங்கு அவருடைய கவிதை நூல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. நூறு பிரதிகளுக்கு மேல் கையை விட்டு போகவில்லை. அச்சகத்தில் கடன் தீராமலிருந்தது. தொள்ளாயிரம் பிரதிகள் அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

சுதர்ம்மாஜி அந்த புத்தகங்களை அள்ளி அடுப்பிற்கு அருகில் கொண்டு போய் போட்டார்.

'இதை எரிய வைத்து நீரைச் சூடு பண்ணி கொடு' - சுதர்ம்மாஜி தன் மனைவியிடம் கூறினார்: 'என் மகள் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வாங்கி இறக்கட்டும்.'

அந்த வகையில் அந்த 'நெருப்புப் பொறிகள்' ஒவ்வொன்றாக உண்மையான நெருப்புப் பொறிகளைத் தொட்டன. அந்த கவிதைகள் நெருப்பிடம் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அந்த புத்தகங்களின் வெண்மையான பக்கங்கள் ஒவ்வொன்றாக எரிந்து கரிந்து சுருங்கி சாம்பலாகி வெளியே பறந்து சென்றன.


அந்த வெந்நீரைப் பருகிக் கொண்டே பிரதிபா மரணத்தைத் தழுவினாள்.

சுதர்ம்மாஜி மருத்துவ மாணவனுக்கு அருகில் மீண்டும் போய் நின்றார்.

'ஓஹோ... நீங்கள் வந்திருக்கீங்களா?' - அவன் வெறுப்புடன் கேட்டான்.

'ஆமாம்... நேற்று இரவு என் குழந்தை இறந்து விட்டது. பிணத்தை நீங்கள் வாங்கிக் கொள்வதாகக் கூறியதை நான் கேட்டேன். நீங்கள் இப்போது வாங்கிக் கொள்ளலாம்.'

அந்த மருத்துவ மாணவன் அதிர்ச்சியடைந்து விட்டான். அவனுடைய முகம் வெளிறிப் போய் விட்டது.

ஒரு தடுமாற்றத்துடன் அவன் சொன்னான்: 'சுதர்ம்மாஜி! உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். மன்னிக்கணும்.' அவன் உள்ளே சென்று 25 ரூபாய் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து சுதர்ம்மாஜியின் கையில் தந்தான்.
சுதர்ம்மாஜி வீட்டிற்கு நடந்து செல்லும்போது தன் மனதிற்குள் நினைத்தார்: 'என் மகளுடைய உயிரின் விலை இருபத்தைந்து ரூபாய்.'

மறுநாள் காலையில் சுதர்ம்மாஜி ஒரு சுமையைக் கட்டி, வீட்டிலிருந்து புறப்பட்டார்.

'எங்கே போறீங்க?' - மனைவி கேட்டாள்.

'தேச பயணத்திற்கு' - சுதர்ம்மாஜி பதில் கூறினார்.

'அப்படியென்றால் என் நிலையும், குழந்தைகளின் நிலையும்?'

சுதர்ம்மாஜி தன் மனைவியின் கையில் 20 ரூபாயைக் கொடுத்தார். 'ஒரு மாதம் கழித்து நான் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கிறேன்' - அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் தன் வீட்டிடமும், தன் சொந்த ஊரிடமும் விடை பெற்றார்.

இரண்டு மாதங்கள் கடந்தன. சுதர்ம்மாஜியின் மனைவியின் மேல் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அது வட இந்தியாவிலிருக்கும் ஒரு இடத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையிலிருந்து வந்திருந்தது.

'உங்களுடைய கணவரான சுதர்ம்மாஜி இங்கு நேற்று இரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்ட தகவலை வருத்தத்துடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம், அவரின் கையிலிருந்த ஒரு சுமையை உங்களுடைய மேல் முகவரிக்கு தனியாக அனுப்பி வைக்கிறோம். இறந்த உடலுக்கு வேண்டிய சடங்குகளைச் செய்து, இங்கேயே அடக்கம் செய்கிறோம்.

டாக்டர் சரத்குமார்.'

* * * *

 

'மகாகவி சுதர்ம்மாஜியின் மரணம்' - நாளிதழ்கள் தலைப்பு இட்டன. 'ஒரு மிகப்பெரிய இழப்பு' 'இலக்கிய உலகிற்கு உண்டான பேரிழப்பு' 'ஒரு மகாகவியின் மரணம்' ஆகிய பல தலைப்புகளையும் தந்து எல்லா பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகள் எழுதின. சுதர்ம்மாஜியின் மரணத்தைப் பற்றிய செய்திச் சுருக்கம் பத்திரிகையில் இப்படி வெளிவந்தது: 'சிறிது காலம் எதிலும் பற்றில்லாமல் சுதர்ம்மாஜி ஒரு துறுவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். பிறகு... இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு தேச பயணத்திற்காக அவர் புறப்பட்டு விட்டார். வட இந்தியாவிலிருக்கும் ஒரு தர்ம மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிறிதும் எதிர்பாராமல் அவர் மரணத்தைத் தழுவி விட்டார்.'

பல இடங்களிலும் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றிய முட்டாள்தனமான விமர்சனங்கள் மட்டுமே இலக்கிய கூட்டங்களில் முக்கிய விஷயமாக இருந்தன. சுதர்ம்மாஜியை ஹாஃபீஸ்ஸுடனும் ஷெல்லியுடனும் சம நிலையில் வைத்து மிகப் பெரிய மனிதர்கள் சொற்பொழிவாற்றினார்கள். பத்திரிகைகளில் எங்கு பார்த்தாலும், சுதர்ம்மாஜியைப் பற்றிய மரண சுலோகங்களும், இரங்கல் செய்திகளும், நினைவுகளும்தான்....

சுதர்ம்மாஜியின் கவிதைகளைக் கேட்டு பதிப்பாளர்கள் கவிஞரின் மனைவியை அணுகினார்கள். 'நெருப்புப் பொறிக'ளின் இரண்டாம் பதிப்பிற்கான பதிப்புரிமைக்கு ஒரு பதிப்பாளர் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

தொடர்ந்து ஊரில் உள்ளவர்கள் ஒரு மிகப் பெரிய முயற்சியில் இறங்கினார்கள். சுதர்ம்மாஜிக்கு ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். ஊரிலிருந்த பணக்காரர்களும், மிகப் பெரிய மனிதர்களும், பெரிய பதவிகளில் இருந்தவர்களும் சேர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து. நினைவுச் சின்னம் அமைப்பதற்காக 10,000 ரூபாய் சேர்க்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

அங்கேயே மூவாயிரம் ரூபாய் சேர்க்கப்பட்டது.

பணம் ஏற்பாடு செய்யும் குழு நாடெங்கும் நடந்தது. அவர்கள் பல படிகளிலும் ஏறி இறங்கி, கூறிய அடுத்த நிமிடமே, ஐந்து... பத்து என்று ஒவ்வொருவரும் நன்கொடை தந்தார்கள். சுதர்ம்மாஜியின் கவிதைகளை மனப்பாடம் செய்து வைத்திராத இலக்கிய ரசிகைகளான பெண்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை இருந்தது. அதனால் அவர்களும் பணம் பெற்று தருவதிலும், நன்கொடை அளிப்பதிலும் உதவினார்கள். முன்பு சுதர்ம்மாஜியைப் பற்றி கேள்வியே பட்டிராதவர்கள் கூட, சுதர்ம்மாஜியின் 'நெருப்புப் பொறிக'ளை வாங்கி, வாசிக்க ஆரம்பித்தார்கள். சுதர்ம்மாஜியின் மனைவி, தன் கணவரின் கவிதைகள் இருந்த இன்னொரு நோட்டு புத்தகத்தைப் பதிப்பாளர்களிடம் காட்டினாள். அவர்கள் அதை 3,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி 'சொர்க்க ஒளி' என்ற பெயரில் பதிப்பித்தார்கள்.

பலரிடமிருந்தும் பெற்ற நன்கொடை ஒரு பெரிய தொகையாக இருந்தது. நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த வள்ளல் குணம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியில் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன் சில செட்டிகளும் பட்டாணிகளும் சேர்ந்து கொண்டார்கள். மகாகவி 'சுதர்ம்மாஜி நினைவு நிதி'க்கு பெரிய அளவில் நன்கொடைகள் அளித்தார்கள்.

நன்கொடையாக பணம் பெறுவதற்கு பல இடங்களுக்கும் சென்றவர்கள் கான்ட்ராக்டர் லோனப்பனையும் அணுகினார்கள். நினைவுச் சிலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைத் தனக்கு தருவதாக ஒப்புக் கொண்டால், அந்த நிமிடமே நூறு ரூபாய் நன்கொடை தருவதாக லோனப்பன் கூறினார். குழு அப்போதைக்கு ஒத்துக் கொண்டு நன்கொடை பணத்தை வாங்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து அந்த நல்ல நாளும் வந்து சேர்ந்தது. சுதர்ம்மாஜி நினைவுச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நாளன்று, அந்தப் புனிதச் செயலைச் செய்வதற்கு திவானே வந்திருந்தார். அந்த பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் வேறொரு ஊரைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய கவிஞர். நாட்டிலிருந்த இலக்கிய சேவை செய்பவர்களும், மிகப் பெரிய அறிஞர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள்.

விழாவில் ஏராளமான கவிஞர்களும் பண்டிதர்களும் சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றி முடிவே இல்லாமல் சொற்பொழிவாற்றினார்கள். இன்னும் சிறிது காலம் சுதர்ம்மாஜி உயிருடன் இருந்திருந்தால், அவர் நோபல் விருதைப் பெற்றிருப்பார் என்று கூட அவர்கள் உரத்த குரலில் கூறினார்கள்.

நிதிக்கு பலரிடமிருந்தும் கிடைக்கக் கூடிய தொகை முழுவதும் கிடைத்து விட்டதாக செயலாளர் அறிவித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் கைகளைத் தட்டி, பாராட்டை வெளிப்படுத்தினார்கள்.


தலைவர் மிகவும் நீளமான, ஆழமான கருத்துக்கள் கொண்ட ஒரு அருமையான சொற்பொழிவை ஆற்றினார். சுயநல எண்ணமே இல்லாமல் இலக்கிய சேவை செய்வது எப்படி என்பதற்குச் சரியான உதாரணம் தற்போது நினைவு கூரப்படும் சுதர்ம்மாஜிதான் என்று அவர் இறுதியாக கூறினார்.

தலைமை உரை முடிந்ததும், அரங்கத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு தாடி வைத்த மனிதர் எழுந்து, இரண்டு வார்த்தைகள் பேசுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று தலைவரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

தலைவர் 'வரலாம்' என்று சைகை செய்தார்.

சொற்பொழிவாற்றும் மேடையில் ஏறி நின்ற அந்த பண்டிதர் முதலில் தன்னுடைய தாடியைச் சற்று வருடினார். தொடர்ந்து அதை பலமாக பிடித்து இழுத்தார்.

தாடி அந்த மனிதரின் கைக்கு வந்தது. எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு முகம் அரங்கத்தில் இருந்தவர்களுக்கு முன்னால் புன்னகை தவழ தோன்றியது. அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய் விட்டார்கள்.

சுதர்ம்மாஜி!

அரங்கம் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டது. தலைவர் நாற்காலியிலிருந்து கீழே விழுந்து விடுவாரோ என்ற நிலை உண்டானது. வெற்றி முழக்கத்தால் அரங்கமே அதிர்ந்தது.

'அமருங்கள்! அமருங்கள்!' - சுதர்ம்மாஜி அரங்கில் அமர்ந்திருந்தவர்களை ஒரு வகையாக அமைதிப்படுத்தினார். பெண்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்தார்கள்.

'ஆமாம்... நான்.... சுதர்ம்மாஜியேதான். நான் மரணமடையவில்லை என்பதற்குச் சான்று உங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த நான்தான். நான் உயிருடன் இருக்கும்போதே எனக்கான மிகப் பெரிய நினைவுச் சின்னம் இந்த நான்தான். என்றாலும் நான் சில விஷயங்களைக் கூற நினைக்கிறேன். நான் மரணமடைந்து விட்டேன் என்ற தகவலைக் கேட்டவுடன், இந்த அளவிற்கு ஆரவாரத்தை வெளிப்படுத்தி, தாராள குணத்துடன் மிகப் பெரிய முயற்சிகளில் ஈடுபட்ட உங்களில் ஒரு குழந்தை கூட நான் உயிருடன் இருக்கிறேன் என்று நீங்கள் அறிந்திருந்த காலத்தில், என்னுடைய நிலை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு விரும்பவில்லை. இலக்கியத்திற்கு நறுமணம் கமழும் மலர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள் நீரும் உரமும் வெயிலும் வெளிச்சமும் கிடைக்காமல் காய்ந்து கருகும் அந்த முட்செடிகளை - இலக்கியவாதிகளை - சற்று திரும்பிப் பார்க்கக் கூட செய்வதில்லை. நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன்.'

சுதர்ம்மாஜி தன்னுடைய பரிதாபகரமான வாழ்க்கையைப் பற்றி, எதையும் மறைத்து வைக்காமல் இதயம் நெகிழ விளக்கிக் கூறினார்.

பிரதிபாவின் மரணத்தைப் பற்றி தொண்டை அடைக்க கூறியபோது, அரங்கில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.

'ஆமாம்... வறுமை என் வாழ்க்கையையும் சரீரத்தையும் மட்டுமல்ல - என் சிந்தனைகளையும் நாக்கையும் கூட மோசமாக பாதித்தது. கடன் கொடுத்தவர்களைச் சமாதானப் படுத்துவதற்காக நான் பொய்கள் கூறினேன். காலப் போக்கில் பொய் கூறாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலை உண்டானது. வாழ்வதற்காக நான் எல்லாவற்றையும் விற்றேன். இறுதியில் ஒரு பெண் தன்னுடைய சரீரத்தை விற்பனை செய்வதைப் போல நான் என்னுடைய தன்மானத்தையும் விற்றேன். ஆயிரம் சிறிய பொய்களை கூறுவதை விட லாபம் தரக் கூடிய பெரிய ஒரு பொய்யைக் கூறுவது நல்லது என்று நான் தீர்மானித்தேன். மிகவும் இறுதியில் நான் என்னுடைய வாழ்க்கையையும் விற்றேன் - அதன் விலையின் ஒரு பகுதிதான் நீங்கள் பலரிடம் நன்கொடையாகப் பெற்ற 10,000 ரூபாய். நான் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால், இலக்கியத்திற்கு பெரிய சேவைகளைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் பேசியதைக் கேட்டேன். நானும் அதைத்தான் விரும்புகிறேன். என்னை மேலும் சில வருடங்கள் வாழ அனுமதியுங்கள். நான் சந்தோஷமாக, சுதந்திரமாக வாழ்ந்து இனியும் இலக்கிய சேவைகளைச் செய்கிறேன், அதனால் தாராள குணம் கொண்ட பெரியவர்களே, அன்புள்ள நண்பர்களே, ஆயிரக் கணக்கான என்னுடைய ரசிகர்களே, பலரிடமும் பெறப்பட்ட இந்த தொகைக்கு சரியான உரிமையாளர் நான்தான் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.'

சுதர்ம்மாஜி உயிருடன் எழுந்து வந்ததைப் பார்த்து எல்லோரும் ஆனந்தத்தால் தங்களை மறந்திருந்தார்கள் - அந்த பணம் சுதர்ம்மாஜிக்குத்தான் என்று எல்லோரும் உரத்த குரலில் கூறினார்கள்.

நினைவுச் சிலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்திருந்த திவானே 10,000 ரூபாய் கொண்ட பண முடிப்பை சுதர்ம்மாஜியின் கையில் கொடுத்தார்.

அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் வெற்றி முழக்கமிட்டார்கள்: 'சுதர்ம்மாஜி, ஸிந்தாபாத்!'

கான்ட்ராக்டர் லோனப்பன் மட்டும் எதிர்ப்புடன் அங்கிருந்து வெளியேறினார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.