Logo

நம்முடைய காலகட்டத்தில்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4055

நம்முடைய காலகட்டத்தில்

டி. பத்மநாபன்

தமிழில்: சுரா

ராமகிருஷ்ணன் ட்ரவுசரின் பாக்கெட்களில் கைகளை வைத்தவாறு நடைபாதையின் வழியாக மெதுவாக நடந்தான்.  அவனுடைய மனதில் சுகமான ஒரு குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.  சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ஒரு சஹாரா பாலைவனமாக இதுவரை இருந்தது வாழ்க்கை.  ஆசைகள் உதிர்ந்து விழுவதும், கனவுகள் வாடுவதும் மட்டுமே எப்போதும் நடந்திருக்கின்றன.  இப்போது முதல் தடவையாக சில தளிர்கள் தலையை நீட்டுகின்றன.  அதை நினைத்தபோது ராமகிருஷ்ணனுக்கு பெருமையும், சந்தோஷமும் உண்டாயின.  அவனுடைய வறண்டுபோய் காணப்பட்ட உதடுகளில் கள்ளங்கபடமற்ற ஒரு புன்சிரிப்பு பரவவும் செய்தது.  மிகவும் தாமதமாக நடந்தாலும் அவனும் ஒரு மனிதனாக ஆகப் போகிறான்.

ராமகிருஷ்ணனின் விரல் நுனிகள் அந்த புதிய நோட்டுகளை ஒரு புது பெண்ணை வருடுவதைப் போல தடவின.  நூற்றைம்பது ரூபாய் இருக்கிறது.  ஒரு மாத சம்பளம்.  இரண்டு நாட்களுக்குள் ஃபண்டிலிருந்து இருநூறு ரூபாய் கடன் வாங்கினான்.  அப்போது முன்னுற்றைம்பது ரூபாயாக ஆகி விட்டது.  எல்லா செலவுகளையும் கழித்தாலும், ஊருக்குப் போய் சேரும்போது ஒரு இருநூற்றைம்பது ரூபாயாவது மீதமிருக்கும்.  அதை வைத்து எல்லாவற்றையும் நல்ல முறையில் நிறைவேற்றலாம்.

யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை.  எனினும், உடன் பணி செய்யும் எல்லோரையும் அழைக்க வேண்டும்.  பழைய நண்பர்கள் யாரையும் விட்டு விடக் கூடாது.  வாழ்க்கையில் ஒரு முறைதானே ஒரு திருமணம் நடக்கிறது!

வாழ்த்துக்கள் ஏராளமாக வரும்.  எதையும் தூக்கி போட்டு விடக் கூடாது.  எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும்.  பிறகு... எல்லா காரியங்களும் முடிந்த பிறகு, எல்லோருக்கும் பதில் எழுத வேண்டும்.  இப்போது சிலர் பத்திரிகைகளில் பிரசுரம் செய்வது வழக்கமாக இருக்கிறது.  எல்லோருக்கும் சேர்த்து ஒரு பதில்.  ஐந்தோ ஆறோ ரூபாய்களில் காரியம் முடிந்து விடும்.  ஆனால், அது மோசமான விஷயம்.  நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றதல்ல.

ராமகிருஷ்ணன் மெதுவான குரலில் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: 'அய் விஷ் யூ எ ஹேப்பி அண்ட் ப்ராஸ்பெரஸ் மேரீட் லைஃப்!' -- இப்படித்தான் பெரும்பாலான வாழ்த்துக்களும் இருக்கும்.

வேண்டுமென்றால் இங்கேயே அழைப்பிதழை அடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும்.  ஆனால், திருமண நாளும், நடைபெறும் நேரமும் இனியும் அறிவிக்கப்படவில்லையே!

மாதம் ஆரம்பித்தவுடன், வர வேண்டும் என்பதுதான் இறுதியாக வந்த கடிதத்தில் இருந்த தகவல்.  எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி எழுதியிருக்க வேண்டும்.  அப்படி செய்யவில்லை.  போகட்டும்...

ராமகிருஷ்ணனைத் தெரிந்திருக்கும் பலரும் அவனைக் கடந்து சென்றார்கள்.  க்ளார்க்குகள், பெண் டைப்பிஸ்ட்டுகள், கல்லூரி மாணவர்கள் -- இப்படி பலரும்.  ஆனால், அவன் யாரையும் பார்க்கவில்லை.  தனக்குள்ளேயே மூழ்கிப் போய் நடந்து கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் நினைத்தான்: பெயர் என்னவாக இருக்கும்?  லட்சுமிக்குட்டி என்றோ அம்மிணி என்றோ இருக்குமோ?  ஆனால், அவையெல்லாம் பழைய பெயர்கள்.  இப்போது அவற்றிற்கெல்லாம் மதிப்பே இல்லை.  சமீப காலத்தில் ஒரு பெயரைப் பார்த்தான்.  விலாஸ குமாரி.

எவ்வளவு இனிமையானது?  விலாஸ குமாரி ராமகிருஷ்ணன்!

அவன் மீண்டும் மெதுவான குரலில் கூறினான்.

என் முதல் குழந்தைக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.  க்ளோரியா.... ஆனால், ஒரு பெண் குழந்தையாக இருக்கும் என்பதை எப்படி உறுதியாக கூற முடியும்?  ஆண் குழந்தைதான் வேண்டும்.  எனினும்...

க்ளோரியா!

அந்தப் பெயர் எவ்வளவு இனிமையாக இருக்கிறது?

ஆனால், அந்த பெயரை நினைத்தபோது, அவனுடைய இதயம் மிகவும் கவலைக்குள்ளானது.  நான்கு வருட காலம் அமைதியாக காதலித்தான்.  யாருக்கும் அது தெரியாது.  ஒருவேளை, அவளுக்கே கூட தெரிந்திருக்காது.  இல்லாவிட்டால், அவள் தெரிந்திருப்பாளோ?

'சிறானோ'வின் சோகம் நிறைந்த வாழ்க்கைக் கதையை வாசித்து விட்டு, அந்த பேரமமைதியான காதலனைப் போல தானும் ஆள் அரவமற்ற இடத்தில் வேதனையுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததை அவன் நினைத்துப் பார்த்தான்.  க்ளோரியா... நான் உன்னைக் காதலிக்கிறேன்.  மிகவும் ஆழமாக காதலிக்கிறேன்.  மேலும் மேலும் அதிகமாக காதலிக்கிறேன்!

காற்றில் அந்த குரல் வெறுமனே கலந்து கரைந்தது.  அவ்வளவுதான்.

எதுவுமே நடக்கவில்லை.

கல்லூரியிலும் வெளியிலும் வாழ்க்கை நிறைந்து வழிந்து கொண்டிருந்த ஒரு காலமது.

அப்போது நண்பர்களிடம் கூறுவான்: 'என் தேனிலவை நான் பாரிஸில் கொண்டாடப் போகிறேன்'.  அங்குள்ள ஒரு மது விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இரவு முழுவதும் நடனம் ஆடிய பிறகு, காலையில் ஒரு கள்ளச் சிரிப்புடன் அவளிடம் கூறுவேன்: 'ஏய்... என் அழகான, பரந்த இந்த நெஞ்சத்தில் தலையை வைத்து சிறிது நேரம் ஓய்வு எடு.'

ஒரு தாமரையின் தண்டைப் போல என் மார்பில் அவள் ஒட்டிக் கொண்டு படுத்திருக்கும்போது.....

ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான்.

க்ளோரியா!

அன்று வயது இருபத்து மூன்று நடந்து கொண்டிருந்தது.  இப்போது முப்பந்தைந்து ஆகி விட்டது.  ஒரு பெண்ணின் சரீரம் எப்படி இருக்குமென்று இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லை!

ராமகிருஷ்ணனுக்கு வெறுப்பு உண்டானது.  வாழ்க்கை எந்த அளவிற்கு அர்த்தமற்றதாக இருக்கிறது!

வால்டாக்ஸ் சாலையை அடைந்தபோது, அவனுக்கு ஞாபகத்தில் வந்தது -- தலைமுடியை வெட்ட வேண்டும்.  தலைமுடி, காட்டைப் போல வளர்ந்து காணப்பட்டது.  தலைமுடியை வெட்டி ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.  உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் -- சமீப காலமாக எதைச் செய்வதற்கும் நேரம் கிடைக்கவில்லை.  பகல் முழுவதும் வேலைகளைச் செய்து விட்டு, சாயங்காலம் திரும்பி வரும் போதும் தன்னுடன் கோப்புகளைக் கொண்டு வர வேண்டும்.  பிறகு இரவிலும் வேலையைச் செய்தால்தான், வேலை முடியும்.

அப்படி இருக்கும்போது சாவகாசமாக எப்படி முடியை வெட்ட முடியும்?

இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால் -- தெய்வம் இந்த மறைப்பை ஏன் ஆணுக்கு அளிக்க வேண்டும்?  தாடியும் முடியும் இல்லாவிட்டாலும், அதனால் தரமொன்றும் இறங்கி விடப் போவதில்லையே!  பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தலாமே! 

அவை இல்லாமலிருப்பதுதானே நல்லது!

இப்படி ஒவ்வென்றையும் நினைத்துக் கொண்டே சலூனை நோக்கி நடக்கும்போது, அவனுக்குள் திடீரென்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.

வால்டாக்ஸ்.... சாலை! சென்னையின் அனைத்து பிக் பாக்கெட் அடிப்பவர்களும் இருக்கக் கூடிய இடம்!  அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டுப் பார்த்தான்.  அந்த நோட்டுகள் அங்கு இருக்கின்றனவா?

இருந்தன.

அவனுக்கு மனதில் சமாதானம் உண்டானது.


அந்த நோட்டுகளை யாராவது பிக் பாக்கெட் அடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தபோது, ராமகிருஷ்ணனின் முகமே வெளிறிப் போய் விட்டது.  அதற்குப் பிறகு உயிருடன் வாழ்ந்தே பயனில்லை.  ஒரே ஒரு காரியத்தைத்தான் செய்ய வேண்டும்.  நேராக புகை வண்டி தண்டவாளத்தை நோக்கி நடக்க வேண்டும்.  பிறகு அங்கு கவிழ்ந்து படுக்க வேண்டும்.  வண்டி போய் விட்டால், எல்லா வேதனைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

சிலர் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.

எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படும் ஃபர்டினன்டின் முகம் மனதில் தோன்றியது.  டெஸ்பாச் பிரிவில் க்ளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தான் ஃபர்டினன்ட்.  ஒருநாள் வேலைக்கு வரவில்லை.  மறுநாளும் வரவில்லை.  ஏதாவது உடல் நலக்கேடாக இருக்குமென்று நினைத்தான்.  ஆனால், விசாரித்துப் பார்த்தபோது, தெரிய வந்தது -- ஃபர்டினன்ட் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்!

அதற்குப் பிறகு தூங்குவதற்காக படுத்தால், ஃபர்டினன்ட் முன்னால் வந்து நிற்பான்.  ஃபர்டினன்ட் சிரித்துக் கொண்டே கேட்பான்: 'என்னை மறந்து விட்டீர்களா?'  'இல்லை' என்று கூற வேண்டுமென்று நினைப்பேன்.  ஆனால், அப்போது ஃபர்டினன்டின் கண்களில் நீர் நிறைந்து நிற்கும்.  ஃபர்டினன்ட் ஏன் இறந்தான்?  காதல் காரணம் இல்லை.  ஃபர்டினன்டிற்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள்.

'என்னை மறந்து விட்டீர்களா?'  என்று ஃபர்டினன்ட் என்னைப் பார்த்து ஏன் கேட்டான்?  ஒருவேளை, நானும் அப்படி இறக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமாக இருக்குமோ?  அப்படி இருக்க வாய்ப்பில்லை.  ஆனால்....

சலூனில் கூட்டமிருந்தது.  காத்து நிற்பதற்கு நேரமில்லை.  அதனால் பிறகு வருவதாகக் கூறினேன்.  ஆனால், வெளியே வருவதற்கு முன்னால் கண்ணாடியில் நன்றாக ஒரு தடவை பார்த்தேன்.  அப்போது வேதனை நிறைந்த ஒரு உண்மையை உணர்ந்தேன்.  வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது.  நெற்றியின் இரு பக்கங்களிலும் இரண்டு இடங்களில் நன்றாக நரை இருப்பது தெரிந்தது.  இனி அது அங்கிருந்து மேல் நோக்கி ஏறும், அப்படியே சென்று...  சென்று ஒருநாள் காலையில் பார்க்கும்போது, தலையில் ஒரு முடி கூட இருக்காது.

ஒரு காலத்தில் தலை நிறைய முடிகள் இருந்தன.  நல்ல சுருண்ட முடிதான்....  ஆனால், அப்போது ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

ராமகிருஷ்ணன் அதை நினைத்து கவலைப்பட்டான். நெற்றியின் இரு பக்கங்களிலும் தடவியவாறு ராமகிருஷ்ணன் கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான்.  பிறகு அவன் யாரிடம் என்றில்லாமல் கூறினான்: 'இந்த நாசமாய் போன உப்பு நீர்தான் காரணம்.'

அப்போது யாரோ கூறினார்கள்: 'சில்விக்ரின் பயன்படுத்தணும். நல்ல... சுத்தமான சில்விக்ரின்!'

ராமகிருஷ்ணன் எதுவும் கூறவில்லை.  அவன் வெளியேறி நடந்தான்.  அப்போது மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் -- சில்விக்ரின்.  சில்விக்ரின் என்றால் என்ன?  எதனாலும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.  சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை வருகிறது.  சிலருக்கு வயதான பிறகும் வருவதில்லை.  அதெல்லாம் ஒரு அதிர்ஷ்டம்!

இனி நரையே வந்து விட்டது என்று கூட வைத்துக் கொள்வோம்.  தாங்கிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்வது?

ராமகிருஷ்ணன் சென்ட்ரலுக்கு முன்னால் குறுக்காக நடந்தான்.  சாலையைக் கடக்கும்போது சங்கர்ஜியைப் பார்த்தான்.  அவனைப் பார்த்து நீண்ட காலம் ஆகி விட்டிருந்தது.  பார்த்தவுடன் சங்கர்ஜி சொன்னான்:  'ராமகிருஷ்ணா, உன்னைப் பார்க்கவே முடியலையே?'

'நான் இப்போது லாட்ஜ் மாறி விட்டேன், சங்கர்ஜி. நீ?'

'நானா?  நான்.... என்னை ஹோட்டலிலிருந்து போகச் சொல்லி விட்டார்கள்.  இப்போது குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி எந்தவொரு இடமும் இல்லை.  முன்பே சென்னை முழுவதும் எனக்கு வீடு மாதிரிதானே?'

சங்கர்ஜி புன்னகைத்தான்.  ராமகிருஷ்ணனும் சிரித்தான்.  ஆனால், அவனுக்குள் கவலை இருந்தது.

பிரியும்போது சங்கர்ஜி சொன்னான்: 'இந்த சனிக்கிழமை சமாஜத்திற்கு வா.  ஒரு விவாதம் இருக்கிறது.  இலக்கியத்தில் தேக்க நிலை இருக்கிறதா, இல்லையா?  இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.  எது எப்படி இருந்தாலும்.... வா... அப்போது பார்ப்போம்!

சாலையில் விளக்குகள் எரிந்தன.

'குட்பை!'

மக்கள் கூட்டத்தில் அவன் கரைந்து போவதைப் பார்த்தவாறு ராமகிருஷ்ணன் சிறிது நேரம் நின்றிருந்தான்.  பிறகு மெதுவான குரலில் கூறினான்: 'ஒரு ஆச்சரியமான மனிதன்!'

சமாஜத்தில் வைத்துத்தான் சங்கர்ஜியை முதல் தடவையாக பார்த்தான்.

'இப்போது சமாஜத்திற்கு யாரெல்லாம் வருவார்கள்?  கேசவன் நாயரும் கோவிந்தனும் வருவார்களா?  கங்காதரன் இருப்பாரா?  நான் செல்வதே இல்லை.  செல்ல வேண்டும்.  எவ்வளவு வேலைகள் இருந்தாலும், சமாஜத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது?

டைலன் தாமஸின் கவிதையைப் பற்றி அவன் உற்சாகத்துடன் பேசினான்.  ஒரு 'பொஹீமியத்தின் தோற்றம் வெளிப்பட்டது.  அப்போது தோன்றியது - ஆள் சாதாரணம் இல்லை.

அவன் சாதாரண ஒரு ஹோட்டல் பணியாள் என்பதே பிறகுதான் தெரிந்தது.

சங்கர்ஜி பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தான்.  தேர்ச்சி அடைந்ததும், வேலை தேடி சென்னைக்கு வந்தான்.  நான்கு நாட்கள் சென்னையில் தெருக்களில் அலைந்த பிறகு, ஒரு ஹோட்டலில் பணியாளாக சேர்ந்தான்.  என்ன காரணத்தாலோ.... அதில் வெட்கப்படும் அளவிற்கு எதையும் அவன் பார்க்கவில்லை.  பகல் வேளையில் வேலை பார்த்தால் போதும்.... இரவில் படிக்கலாம்.

வாரத்தில் ஒரு நாள் மட்டும் இருக்கக் கூடிய விடுமுறையை சங்கர்ஜி சமாஜத்தின் வேலைகளுக்கு பயன்படுத்தினான்.

ஆனால், இப்போது அவனுக்கு பணி இல்லாமல் போயிருக்கிறது.

அவன் இனி என்ன செய்வான்?

சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வானோ?

ராமகிருஷ்ணனுக்கு வருத்தம் உண்டானது.  சங்கர்ஜி புன்னகைத்தவாறு இலக்கியத்தின் தேக்க நிலையைப் பற்றி சொற்பொழிவாற்றினான்.  ஆனால், அவனுடைய மனம் வேதனைப்படாதா?

ஊருக்கு அவன் பணம் அனுப்ப வேண்டாமா?

திடீரென்று ராமகிருஷ்ணன் நினைத்தான்: சங்கர்ஜிக்கு திருமணம் ஆகியிருக்குமா?

ஒருவேளை... ஆகியிருக்காது.  இதுவரை அதைப் பற்றி எதுவும் கூறி, கேட்டதில்லை.

சில நாட்களுக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன்.  அப்போது....

ராமகிருஷ்ணனின் உதடுகளில் புன்னகை பரவியது.

அவன் பார்க் ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.  அங்குள்ள மேம்பாலத்தின் மீது, வண்டியிலிருந்து இறங்கி வருபவர்கள், ஏறப் போகிறவர்கள் ஆகியோரின் கூட்டமும் ஆரவாரமும் காணப்பட்டன.  ஒரு கிராமத்து மனிதன் ராமகிருஷ்ணனின் மீது வந்து மோதி, காலை மிதித்து விட்டுச் சென்றான்.  ராமகிருஷ்ணனுக்கு கோபம் வந்தது.  ஆடை முழுவதையும் அசுத்தமாக்கி விட்டான்.  இனி நாளை அதை மாற்ற வேண்டியதிருக்கும்.  சலவை செய்யும் ஆள் வந்திருப்பானோ என்னவோ?  வேறு ஆடை எதுவுமில்லை.  வாரத்தில் ஒரு முறைதான் அவன் வருவான்.  சில நேரங்களில் தாமதமாக வருவான்.

அவன் வந்திருப்பானா?


வண்டி வருவதை எதிர்பார்த்தவாறு இரண்டு ஆங்கில இந்திய பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் அவர்களுடைய சிவப்பாக்கிய உதடுகளிலிருந்து இரத்தம் உதிர்ந்து விழுவதைப் போல தோன்றியது.  அவர்களுடைய உள்ளாடைகள் முழுமையாக வெளியே தெரிந்தன.  ராமகிருஷ்ணனின் இதயம் புதிய 'லெய்லண்ட்' பேருந்தைப் போல உரக்க துடித்தது.  ஒரு புதிய தாகமும் வெப்பமும் அவனிடம் உண்டாயின.  இதுவரை ஒரு...

ராமகிருஷ்ணன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன்னுடைய எதிர்கால மனைவியைப் பற்றி நினைத்துப் பார்த்தான்.  அவள் படித்திருப்பாளா?  பார்ப்பதற்கு அழகாக இருப்பாளா?  என்ன வயது இருக்கும்?

என்ன காரணத்தாலோ... எதுவுமே எழுதப்படவில்லை.  அவன் நினைத்தான்: என்னைப் பற்றி அவளும் நினைத்திருப்பாள் அல்லவா?

குத்து விளக்கிற்கு முன்பு அவள் நாணத்துடன் நின்று கொண்டிருக்கும்போது, என்ன செய்ய வேண்டும்?  அவளிடம் என்ன கூற வேண்டும்?  அவளை....

என் இதயமே!

ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான்.

அவன் லாட்ஜில் இருந்த தன்னுடைய நண்பர்களை நினைத்துப் பார்த்தான்.  கோபாலனுக்கு மட்டுமே திருமணம் ஆகியிருந்தது.  ஆனால், கோபாலன் தன் மனைவியைப் பார்த்து மூன்று வருடங்களாகி விட்டன.  இடையில் அவ்வப்போது கடிதங்கள் வரும்.  கடிதம் வந்த நாளன்று, கோபாலனைப் பார்த்தாலே, குறிப்பாக தெரிந்து கொள்ளலாம்.  யாரிடமும் எதுவும் கூற மாட்டான்.  சிந்தனையில் மூழ்கியிருப்பான்.  முதலில் எல்லாம் கேட்பதுண்டு: 'என்ன கோபாலா?'

கோபாலன் எதுவும் கூற மாட்டான்.  கையில் கடிதத்தைத் தர மட்டும் செய்வான்.

அதில் கண்ணீர் விழுந்த அடையாளம் இருக்கும்.

திருமணம் முடிந்த மூன்றாவது நாள், இங்கு வந்தான்.

அதற்குப் பிறகு....

திடீரென்று கோபாலன் கேட்பான்: 'எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஒருவன் திருமணம் செய்தது தவறு.  அப்படித்தானே?'

அப்போது கோபாலனிடம் எதுவும் கூற தோன்றாது.

கோபாலனைத் தவிர, வேறு நான்கு பேர்களும் இருந்தார்கள்.  எல்லோரும் திருமணம் ஆகாதவர்கள்.  தாமஸும் மாதவன் குட்டியும் மூன்றோ நான்கோ மாதங்கள் ஆகும்போது, ஒரு இரவு வேளையில் மைலாப்பூருக்கு ஒரு புனிதப் பயணம் செய்வார்கள்.  மிகவும் தாமதமாகத்தான் திரும்பி வருவார்கள்.  போகும்போது இருக்கக் கூடிய உற்சாகம், வரும்போது இருக்காது.  அதுவல்ல ராகவனின் நிலை.  சம்பளம் கிடைத்த நாளன்று அவன் ஒரு உல்லாச பயணத்திற்கு தயாராகி விடுவான்.

ராகவனின் மய்யம் ப்ராட்வே.  ராகவனுக்கு வீட்டில் யாருமில்லை.

சட்ட மாணவனுக்கு ஒரு காதலி இருந்தாள்.  எலிஸபெத் டெயிலர்.  ஆவாகாட்னரேயையும் அவன் காதலித்தான்.  இரண்டு பேரின் படங்களையும் பார்த்துக் கொண்டே அவன் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும், சிந்தனையில் மூழ்கியிருப்பான்.

ராமகிருஷ்னண் ஒரு பெருமூச்சுடன் நினைத்தான்.  எனக்கு ஏன் அப்படிச் செய்ய தோன்றவில்லை?  ஏன் அவர்களைப் போல....

பழைய கால வானத்தில் நினைவுகள், கயிறு அறுந்த பட்டத்தைப் போல பறந்து விளையாடின.

ஞாயிற்றுக் கிழமை மிகவும் தாமதமாகத்தான் எல்லோரும் கண் விழிப்பார்கள்.  மிகவும் சோர்வுடன்தான் நாளே ஆரம்பிக்கும்.  ஆனால், அதற்கு சீக்கிரமே சூடு பிடிக்க ஆரம்பித்து விடும்.  அந்தச் சமயத்தில் சங்கரன் குட்டியைப் போன்ற ஏதாவது நண்பர்களும் வந்து சேர்ந்திருப்பார்கள்.  பிறகு.... பேச்சுத்தான், மதியம் உணவு தயாராகும் வரை, இலக்கியத்தையும், கலையையும் பற்றி உரையாடுவார்கள்.  அரசியல் பேசுவார்கள், சில வேளைகளில் சீட்டும் விளையாடுவார்கள்.

பெண்களைப் பற்றியும் உரையாடுவார்கள்.

மாதம் முடியும் நிலையில், பணத்திற்கு பிரச்னை உண்டாகி விடும்.

மெஸ்ஸில் கணக்கு கூட்டி பார்த்தாகி விட்டதா?

இந்த மாதம் என்ன வரும்?

இந்த மாதம் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியும் என்று தோன்றவில்லை.

ராமகிருஷ்ணன் நீண்ட பெருமூச்சை விட்டான்.  என்ன ஒரு வாழ்க்கை!

எனினும், அதிலிருந்து விடுதலை பெற்று விட்டோமே என்பதை நினைத்தபோது அவனுக்கு நிம்மதி உண்டானது.  ஆனால், புதிய வீட்டின் வாடகை முப்பது ரூபாய்.  இரண்டு பேரின் செலவும், வாடகையும் போக, மீதி ஏதாவது இருக்குமா?  வீட்டிற்கு அனுப்ப வேண்டாமா?

ராமகிருஷ்ணன் இதய சுமையுடன் வெளியே பார்த்தான்.  மாலை நேரம் மறைந்து விட்டிருந்தது.  வானம் இருட்டிக் கொண்டிருந்தது.  பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வழியாக வாகனங்கள் .ஓடிக் கொண்டிருந்தன.  சேத்துப்பட்டு ஸ்டேஷனில் பச்சை வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

வண்டியிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தபோது அவன் சிந்தித்தான்: படித்தது தவறு.  படித்திருக்க வேண்டியதில்லை.

ஆனால், அன்று அது தோன்றவில்லை.  பி.ஏ. படித்து முடித்த பிறகும் இரண்டு வருடங்கள் படித்தான்.  அதற்குப் பிறகு அதனால் இப்போது என்ன பிரயோஜனம்?  வேண்டுமென்றால் கூறலாம்.  டைலன் தாமஸின் கவிதையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.  ஆனால், மாதத்தில் நூற்றைம்பது ரூபாய் கிடைப்பதற்கு டைலன் தாமஸின் கவிதைக்கான தேவை இருக்கிறதா?

மார்க்கெட்டிற்கு முன்னாலிருந்து தெருவிற்கு திரும்பக் கூடிய திசையை அடைந்ததும், ராமகிருஷ்ணன் சிறிது நேரம் சந்தேகத்துடன் நின்றான்.  அங்கமுத்துவைப் போன்ற ஒருத்தி முல்லைப் பூ விற்றுக் கொண்டிருந்தாள்.  தினமும் அதன் வழியாக கடந்து செல்வதுண்டு.  ஆனால், அந்த பூக்களின் நறுமணம் சிறிதும் அந்த அளவிற்கு இதயத்தைக் கவரக் கூடிய வகையில் இல்லை.

பச்சை, சிவப்பு நிறங்களைக் கொண்ட பட்டுப் புடவை அணிந்த இளம் பெண்கள் முல்லைப் பூக்களை வாங்கிக் கொண்டு சென்றார்கள்.  அவர்கள் கண்ணாடி வளையல்கள் ஒலிப்பதைப் போல பேசவும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கவும் செய்தார்கள்.  ஒரு நடுத்தர வயது மனிதன் பூக்களை வாங்கி கட்டி கோட்டின் பைக்குள் வைத்தவாறு, பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.  அவனை எதிர்பார்த்து ஒரு பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

ராமகிருஷ்ணனிடமும் அங்கமுத்து கேட்டாள்: 'என்னங்க, மல்லிகைப்பூ வேணுமா?'

ஆனால், ராமகிருஷ்ணன் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.  அவன் சாலையில் நின்றவாறு கனவு கண்டு கொண்டிருந்தான்.

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவள் காபியை தயார் பண்ணி, காத்து நின்றிருந்தாள்.

'இன்று சற்று நேரமாகி விட்டது.  அப்படித்தானே?' - அவள் சொன்னாள்.

'ஓ... பரவாயில்லை, உனக்கு நான் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்.'

'எங்கே?  பார்க்கட்டுமா?'

'இங்கே வா...' அப்போது அவளுக்காக வாங்கிய அந்த முல்லைப் பூக்களின் நறுமணம்...

'ஏன் சாமி, மல்லிகைப்பூ வேணுமா?'

அங்கமுத்து மீண்டும் கேட்டாள்.  அவன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்றிருந்தான்.

ம்.. சரி... ஒரு இரண்டு அணாவிற்கு தா.  ராமகிருஷ்ணன் சுற்றிலும் பார்த்தான்.  பல வர்ணங்களும், நறுமணமும் நிறைந்த ஒரு உலகம்!  வாழ்க்கை எந்த அளவிற்கு இனிமையானது!  உதட்டில் பாடலை முணுமுணுத்துக் கொண்டும், மனதில் புன்னகையுடனும் ராமகிருஷ்ணன் வீட்டை நோக்கி நடந்தான்.


அறையில் விளக்கைப் போட்டு விட்டு, அவன் ஆடையை அவிழ்த்து மாற்றினான்.  நோட்டை எடுத்து மீண்டுமொரு முறை எண்ணி விட்டு, பெட்டியில் வைத்து மூடினான்.  பூக்கள் இருந்த பொட்டலத்தை கட்டிலின் மீது வைத்தான்.  தொடர்ந்து மடித்து வைத்திருந்த படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.  அப்போது அவனுக்கு பெருமையாக இருந்தது.  புதிய கட்டில் மீட்கப்பட்டு விட்டது என்று கூறினான்.  முழுமையாக பணத்தைக் கொடுத்து முடிக்கவில்லையென்றாலும்....

ராமகிருஷ்ணன் சமையலறையை நோக்கி நடந்தான்.  ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான வீட்டு பாத்திரங்கள் -- பெரும்பாலும் மண் பாத்திரங்கள் -- அங்கு தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தன.  விறகு கூட அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.  அவன் நினைத்தான்:  இனி அவள் வந்து அடுப்பில் நெருப்பு எரிய வைப்பதுதான் நடக்க வேண்டியது!

அவன் அவ்வாறு சிந்தனையில் மூழ்கியவாறு நின்றிருக்க, பக்கத்து வீட்டிலிருக்கும் கொச்சுமணி ஒரு கடிதத்துடன் வந்தான்.  கையெழுத்தைப் பார்த்ததும் ராமகிருஷ்ணனுக்கு புரிந்து விட்டது.  அவனுடைய தந்தையின் கடிதம்.  நாளும், முகூர்த்த நேரமும் மீதி எல்லா தகவல்களும் அதில் இருக்கும்.

அவன் வேகமாக அதை பிரித்து வாசித்தான். '... பிறகு... உன் தாயின் காலில் மீண்டும் முன்பு இருந்ததைப் போல நீர் கட்டியிருக்கிறது.  இனி நாட்டு மருத்துவம் எதுவும் செய்வதற்கு மீதியில்லை.  டாக்டரிடம் காட்ட வேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.  அதையும் கூட செய்து பார்ப்போம்.  இது தவிர, வேறு என்ன கூறுவது?  எது எப்படி இருந்தாலும், நீ இந்த மாதம் ஏதாவது கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும்.  மனைக்கல் வீட்டின் கடன் இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது.  பிறகு... நேற்று உன் ஜாதகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தார்கள்.  ஜாதகம் சேரவில்லையாம்.  ஆனால், தாமோதரன் சொன்னான் -- பெரிய வீடு இல்லாததுதான் காரணம் என்று.  அவர்கள் அனைவரும் பிறக்கும்போதே வீட்டுடன் வந்திருக்கலாம்.  போகட்டும்...  ஆனால், ஜானகியைப் பற்றி நினைக்கும்போதுதான்...  அவளுக்கு இந்த மகரத்தில்...!'

பிறகு... அவனால் வாசிப்பதற்கு முடியவில்லை.  சரீரம் தளர்ந்து போவதைப் போல தோன்றியது.

எதுவும் தெரியவில்லை.

எதுவும் கேட்கவில்லை.

எல்லா விளக்குகளும் அணைந்து போகின்றன.  அவன் சுவரின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.  கண்களில் நீர் நிறைந்தது.

'ஏன் அழறீங்க, அண்ணா?'

கொச்சுமணி பதைபதைப்புடன் கேட்டான்: 'அண்ணா... அண்ணா, ஏன் அழறீங்க?'

அவன் அதை காதிலேயே வாங்கவில்லை.

(ஃபர்டினன்ட்: 'என்னை மறந்திட்டீங்கள்ல?'

இறக்கிறான்.

இறக்கிறான்.

புகைவண்டி)

திருமணமாகாத அந்த முப்பத்தைந்து வயது கொண்ட மனிதனின் முல்லைப் பூக்கள் அப்போதும் அங்கு நறுமணத்தைப் பரவச் செய்து கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.