Logo

யுதிஷ்டிரன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4056

யுதிஷ்டிரன்

(பஞ்சாபி கதை)

அஜீத் கவுர்

தமிழில்: சுரா

 

ந்த முறை மீண்டும் வெள்ளப் பெருக்கு வந்தது.  கிராமம் முழுவதும் கலங்கிய நீரால் நிறைந்து காணப்பட்டது.

ஏரிகள் கரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மரங்களால் உறுதியுடன் நிற்க முடியவில்லை.  அவை சிறிதும் எதிர்பாராமல் பெயர்ந்து விழுந்தன.  பெரிய மரங்கள் மட்டும் தப்பித்தன.  ஆனால், நீரின் பலமான ஓட்டம் அவற்றை அசைப்பதைப் போல தோன்றியது.  எனினும், அவை தைரியம் கொண்ட வீரர்களைப் போல உறுதியாக நின்றிருந்தன.

கிராமத்தின் பலம் குறைவாக இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன.  மின்னல், இடி முழக்கம் ஆகியவற்றுடன் மிகப் பெரிய அளவில் மழை பெய்தபோது, வீடுகளின் சுவர்கள் குளிரில் பயந்து நடுங்குவதைப் போல தோன்றியது.

விளைந்த பொருட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.  வீடுகளுக்குள் தானியக் கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தானியங்களும், சமையலறைகளிலிருந்த அடுப்புகளும் நீரில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன.  விரிப்புகளும் போர்வைகளும் மெத்தைகளும் ஆடைகளும் கட்டில்களும் பாத்திரங்களும் கலப்பைகளும் நீரில் மிதந்து சென்றன.

ஆட்கள் ஏதாவது உறுதியாக இருந்த வீட்டில் சுருண்டு கொண்டு அமர்ந்திருந்தார்கள்.  இல்லாவிட்டால் பலம் கொண்ட பெரிய மரக் கிளைகளில் ஏறி அமர்ந்தார்கள்.

நாய்கள், காகங்கள் ஆகியவற்றின் சத்தம் கேட்கவில்லை.  நாலா திசைகளிலும் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது.  ஆழமான அமைதியும் இரைச்சலுடன் வந்து கொண்டிருந்த நீரோட்டமும்...

குழந்தைகள் மட்டும் அவ்வப்போது தேம்பித் தேம்பி அழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.  பசியாலும் பயத்தாலும்...  சுற்றிலும் நீர் நிறைந்து காணப்பட்டது.  ஆனால், பருகுவதற்கு ஒரு துளி நீர் கூட இல்லை.  பலமாக மழை பெய்ய ஆரம்பித்து விட்டால், ஆட்கள் பயந்து போய் வானத்தைப் பார்ப்பார்கள்.  ஒன்றோ இரண்டோ துளிகள் வாயில் வந்து விழும்.  தொண்டையிலிருக்கும் பலமான வேதனை தற்காலிகமாக குறையும்.

அவர்களுடைய வாழ்க்கையை அடித்துக் கொண்டு சென்ற நீர்.... அதே நீரின் இரண்டு துளிகளுக்காக அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

பல நேரங்களில் வரும் நீரிலிருந்து ஒரு கை நிறைய எடுத்து பருக வேண்டும் என்று மனம் ஆசைப்படும்.  ஆனால், அதே நீரில் மிதந்து வரும் பிணத்தையோ, இறந்து விட்ட கன்றுக்குட்டிகளையோ பார்த்து விட்டு, ஏமாற்றத்துடன் எச்சிலை உள்ளே போகும்படி செய்வார்கள்.

ஐந்தாவது நாள் நீர் வடிய ஆரம்பித்தது.

கிராமத்தின் தெருக்களில் சேற்றையும், குழிகளையும் பரிசாக தந்து விட்டு, நீர் வடிந்தது.

ஆட்கள் உறுதியான வீடுகளிலிருந்தும், மரங்களின் உச்சிகளிலிருந்தும் கீழே இறங்கினார்கள்.  அவர்களுக்கு கடுமையான பசி இருந்தது.  ஆனால், சாப்பிடுவதற்கு சிறிதளவு தானியம் கூட மீதமில்லாமலிருந்தது.

நீர் உறுதியான வீடுகளிலிருந்து தோல்வியடைந்து, திரும்பி வந்தது.  சுவர்களின் கீழ்ப் பகுதிகளில் மட்டும் ஈரம் படிந்திருந்தது.  கீழேயிருந்த அறைகளிலும் கூடங்களிலும் இருந்த பொருட்களை எடுத்து மேலே கொண்டு போய் வைத்தார்கள்.  அந்த பங்களாவின் தானிய அறை நீரால் நிறைந்திருந்தது.  அந்த மாளிகையின் எஜமானி சொன்னாள்: 'கொஞ்சம் நல்ல வெயில் வந்தால், மொட்டை மாடியில் தானியத்தைக் கொண்டு போய் காய வைக்கலாம்.  வெயிலும் காற்றும் பட்டால், கிருமிகளோ, புழுக்களோ இருக்காது.'

ஆனால், தற்காலிகமாக தானியத்தை மறைத்து வைக்க வேண்டியதிருந்தது.  காரணம் -- சுற்றிலும் எண்ணற்ற பசிக்கக் கூடிய வயிறுகள் இருந்தன.  பசிக்கும் வயிறுகளுடன் பயத்துடன் இருந்த ஆட்கள்...

இறுதியில் பங்களாவில் இருந்தவர்கள் தங்களுடைய உயரமான இரும்புக் கதவை உள்ளேயிருந்து இறுக அடைத்துக் கொண்டார்கள்.

ஆனால், ஆட்களின் சத்தம், தேம்பித் தேம்பி அழும் குழந்தைகளின் வேதனை நிறைந்த முனகல்கள், பெண்களின் அழுகை -- அனைத்தும் காற்றில் கலந்து பங்களாவைச் சுற்றி மோதிக் கொண்டிருந்தன.  காற்றில் பறந்து வந்த அவர்களின் கையற்ற சத்தத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சேற்றிலும் குழிகளிலும் சிக்கிக் கொண்ட ஆட்கள் மெல்ல.... மெல்ல நடந்து இழந்து விட்ட தங்களுடைய வீடுகளை நோக்கி சென்றார்கள்.  வெள்ளப் பெருக்கு அவர்களுடைய வீடுகளை ஒட்டு மொத்தமாக தகர்த்து விட்டிருந்தது.

ஆட்கள் தங்களுடைய இடிந்த வீடுகளிலிருந்து ஒடிந்து போன கட்டில்களை வெளியே கொண்டு வந்தார்கள்.  சேறு படிந்த கிராமத்தின் மண்டபத்தில் வந்து அமர்ந்தார்கள்.

ஏராளமான கட்டில்கள் நீரில் மிதந்து போய் விட்டிருந்தன.  ஆனால், சிலரின் கட்டில்கள் வாசற் படியில் சிக்கிக் கொண்டதால், திரும்பவும் கிடைத்தன.  அவற்றின் கயிறுகள் அறுந்து போயிருந்தன.  அவர்கள் அமர்ந்து ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தார்கள்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பங்களாவிற்குச் சென்று அவர்களை அழைக்கலாம் என்பது இளைஞர்களின் கருத்தாக இருந்தது.  ஒருவேளை இரும்புக் கதவுகளுக்கு அப்பால் தங்களுடைய சத்தம் கேட்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.  அந்த கடினமான இதயம் கொண்டவர்களிடம் சிறிது கனிவு கூட தோன்றலாமே!  ஒரு வேளை அவர்கள் தங்களுடைய பாதுகாத்து காப்பாற்றி வைத்திருக்கும் தானியத்தில் ஒரு பகுதியைத் தங்களுக்குக் கடனாக தந்தாலும் தரலாமே என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இருக்காது என்று வயதில் மூத்தவர்கள் நினைத்தார்கள்.  காரணம் -- அவர்கள் வாழ்க்கை முழுவதும் இரும்புத் திரைக்குள் இரும்பு மனிதர்களுடன் வாழ்ந்தவர்கள்.  அப்படிப்பட்டவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக் கூட அழ மாட்டார்கள்.  அவர்களின் மிடுக்கான பேரமைதிதான் அவர்களுடைய கலாச்சாரம்.  விவரமில்லாதவர்கள் பட்டினி கிடப்பவர்கள்தான்.  நாகரீகம் இல்லாதவர்கள் சுவர்கள் இடிந்த, மேற்கூரை பெயர்ந்து விழும் வீடுகளின் உரிமையாளர்கள்தாம்.

ஆனால், அவர்களுக்கு பசி இருந்தது. என்ன செய்வார்கள்?  எங்கு செல்வார்கள்?

இந்த அளவிற்கு பெய்து ஒரு வழி பண்ணி விட்டு, வானம் தெளிவான நிலையில் இருந்தது.  நீல வானம் மிக சுத்தமாக இருந்தது.  எல்லாவற்றையும் கழுவி நீக்கி விட்டதைப் போல.  இந்த அளவிற்கு பலமாக பெய்த பிறகு, இந்த வானம் இப்படி கள்ளங்கபடமற்ற தன்மையுடன் எப்படி தோன்றுகிறது?

ஒடிந்து போன கட்டில்களில் அமர்ந்து ஆட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளும் அழுது... அழுது சோர்வடைந்து போய் காணப்பட்டார்கள்.  ஏதாவது குழந்தையின் தாய் எப்போதாவது சற்று முனகுவாள்.

சாயங்காலம் ஆனது. வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டின.

பிரளயம் முடிந்தது.  எனினும், அது உண்மையிலேயே முடிந்ததா?  அது இப்போதும் அவர்களைச் சுற்றி இருந்தது.  இன்னொரு வடிவத்தில்.  இனி என்ன நடக்கும் என்ற பயத்துடன் இரைச்சலிட்டவாறு பாய்ந்து வரும் அலைகளின் பெயர் மட்டுமல்ல பிரளயம் என்பது. புதர்களுக்குள் மறைந்து இருந்து திடீரென்று வேகமாக தாவிக் குதிக்கும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் போன்றது பிரளயம்.


கிராமத்திலேயே மிகவும் வயது அதிகமான கிழவன் தன்னுடைய வழக்கப்படி குச்சியைத் தரையில் ஊன்றியவாறு, சற்று இருமினான்.  அவன் என்னவோ கூறப் போகிறான் என்பதற்கான அடையாளம் அது.  தொண்ணூறு வருடம் பழமையான அந்த தொண்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த சத்தத்தையும், தரையில் தட்டிய சத்தத்தையும் கேட்டு மக்கள் உஷாரானர்கள், மிகவும் அமைதியாக அமர்ந்து அவன் கூறப் போவதைக் கேட்பதற்கு காத்திருந்தார்கள்.

ஆனால், இன்று எதுவும் நடக்கவில்லை.  அவனுடைய குச்சி அங்கிருந்த சேற்றில் பட்டபோது, சத்தமெதுவும் கேட்கவில்லை.  தொண்டைக்குள்ளிருந்து 'கரகர' சத்தமும் வெளியே வரவில்லை.

ஆனால், சுற்றிலும் பலமான பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது.  யாரையும் அமைதியாக இருக்கச் செய்யும் அளவிற்கு அங்கு எதுவும் நடக்கவில்லை.  அப்போது கிழவனின் தளர்ந்து போன குரல் கேட்டது: 'சரி.... இனி என்ன செய்வது?'

எல்லோரின் பார்வையும் அவன் மீது பதிந்தது.  அந்த கண்களில் எந்தவொரு விருப்பமோ எதிர்பார்ப்போ தெரியவில்லை.

'ஒரு தடவை பங்களாவின் கதவைப் போய் தட்டலாம்' - அவன் மெதுவான குரலில் சொன்னான்.

எல்லோரும் எழுந்தார்கள்.  சேற்றின் வழியாக நடந்து பங்களாவின் உயரமான இரும்பு கதவை அடைந்தார்கள்.  தங்களுடைய தளர்ந்து போன கைகளால் கதவைத் தட்டினார்கள்.  உள்ளே பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது.  தொடந்து அவர்கள் இரும்பு கதவை பலமாக தட்டினார்கள்.  உள்ளே பேரமைதி தொடர்ந்தது.

ஒரு கிராமத்து இளைஞன் கிழவனின் குச்சியை வாங்கி, கதவில் பலமாக அடித்தான்.

'வேண்டாம், மகனே. குச்சி ஒடிந்து விட்டால், நான் எப்படி நடப்பேன்?' - கிழவன் கூறினான்.  ஆனால், இளைஞன் அதைக் கேட்கவில்லை.  அவன் குச்சியால் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான். மேலே இருந்து பங்களாவின் பெரிய எஜமானர் எட்டிப் பார்த்து விட்டு, திட்டினார்.

'என்ன செய்கிறீர்கள்?  உங்களுக்கு இந்த நேரம்தான் கிடைத்ததா?  நள்ளிரவு வேளையில் வந்து எங்களுடைய வீட்டை வந்து ஆக்கிரமிக்கிறீர்களா?'

'ஆக்கிரமிக்கவில்லை, எஜமான்.  நாங்கள் ஒரு கோரிக்கையுடன் வந்திருக்கிறோம்'  -- கிழவன் ஒரு வகையில் கூறி முடித்தான்.

'இப்படித்தான் கோரிக்கையை வெளிப்படுத்துவதா?  கதவை இப்படி தட்டியா?  தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள், நாசமாய் போனவர்கள்....!'

கிழவனின் தொண்ணூறு வயதைக் கொண்ட மெலிந்த சரீரம் நடுங்கியது.  நரைத்த முடியும் தாடியின் உரோமங்களும் சிலிர்த்தன.  அவனுடைய குரல் நடுங்கியது:'  'ஆக்கிரமிப்பு அல்ல, எஜமான்.  நாங்கள் பசியின் காரணமாக...'

'பசி!  அதற்கு உங்களுக்காக இங்கு தர்மசாலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறதா?  எங்களுடைய நிலம் முழுவதும் நாசமாகி விட்டது.  விளைச்சல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.  அவற்றையெல்லாம் தாண்டி, நீங்கள்... நள்ளிரவு வேளையில்...' - பங்களாவின் பெரிய எஜமானரின் குரல் கோபத்தால் உயர்ந்து ஒலித்தது.

அதுவும் உண்மைதான்.  கிராமத்தில் பாதியையும் தாண்டி அதிகமான நிலம் அந்த பங்களாவில் இருப்பவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது.  அங்கு இருந்த விளைச்சல்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.  ஆனால், அந்த மண்ணில் விவசாயம் செய்யும்போதும், விளைச்சல்களை எடுக்கும்போதும், அறுவடை முடிந்து உள்ளே தானிய அறையை நிறைக்கும்போதும் கிராமத்திலிருக்கும் சாதாரண மக்களின் வியர்வை அதில் இருந்தது.  அவர்கள் பெரிய ஜமீன்தார்களின் பணியாட்களாக இருந்தார்கள்.  சொந்தத்தில் நிலம் வைத்திருப்பவர்களும் அறுவடை காலத்தில் ஜமீந்தாரின் நிலத்திற்கு வேலைக்குச் செல்வார்கள்.  நான்கு கட்டு தீவனைத்தையும் சிறிது தானியத்தையும் கொண்டு வருவார்கள்.

'எஜமான், நீங்க கொஞ்சம் தானியத்தைக் கடனாகத் தந்தால்....?'

'கடன்?  இந்த மோசமான நேரத்தில் கடனாகக் கொடுப்பதற்கு எங்கே தானியம் இருக்கிறது?  இங்கேயிருந்து சீக்கிரமா கிளம்புங்க.'

'எங்கே போவது எஜமான்?  வீடும் இல்லை.... அடுப்பும் இல்லை.  விளைச்சலும் இல்லை.  உணவும் இல்லை.  சாப்பிடுவதற்கு எதுவுமில்லை.'

அப்போது பங்களாவின் பெரிய எஜமானரின் இளைய மகன் துப்பாக்கியுடன் தன் தந்தையை நோக்கி வந்தான்.

'போறீங்களா?  இல்லாவிட்டல்.... துப்பாக்கியால் சுடணுமா?'  -- அவன் துப்பாக்கியின் குழாயை அவர்களை நோக்கி நீட்டினான்.

எல்லோரும் பயந்து கதவுக்கருகிலிருந்து விலகினார்கள்.

இளைஞர்கள் சொன்னார்கள்.  'நாங்கள் போக மாட்டோம்.  எல்லோரும் இங்கேயே நில்லுங்க.  இது ஒரு கதவு.  இதே போன்ற பத்து கதவுகளை அடித்து நொறுக்கக் கூடிய பலம் எங்களுடைய பசிக்கு இருக்கிறது.'

'ஆனால், அவர்களின் கையில் துப்பாக்கி இருக்கிறது' -- வயதானவர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.

'ஒரே ஒரு துப்பாக்கியை வைத்து எவ்வளவு பேரைக் கொல்வார்கள்?  எப்போதாவது குண்டு தீரும்.  தீர்வதற்கு முன்பே நாம் கதவை அடித்து நொறுக்குவோம்.  எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிடித்தால், கதவு தகர்ந்து விடும்.'

'வேண்டாம், மகனே, நான் ஏற்கெனவே இறந்து விட்டேன். '

'இறந்து போயிருந்தால், பிறகு... ஏன் மரணத்தைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?'

சிறிது நேரம் அவர்கள் அதே இடத்தில் நின்று தங்களுக்குள் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள்.  பிறகு கிராமத்திலேயே மிகவும் வயதான கிழவன் குச்சியை இறுக பிடித்தவாறு திரும்பி நடந்தான்.  அவனுக்கு தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்க்கக் கூடிய தைரியம் இல்லை.

அவன் திரும்பி நடந்ததும், மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குப் பின்னால் நடந்தார்கள்.  பங்களாவிலிருந்து பின்னோக்கி திரும்பி நடந்த அவர்களில் யாருக்கும் தங்களுடைய தலைவனின் வார்த்தையை மீறக் கூடிய தைரியம் இல்லை.

அவர்கள் மீண்டும் திரும்பி வந்து தங்களுடைய பழைய கட்டிலில் அமர்ந்தார்கள்.  கிழவன் தன் நெற்றியில் கையை வைத்தவாறு வானத்தைப் பார்த்தான்.  அங்கு ஒளி குறைவான நிலவு தெரிந்தது.  வானத்தில் நெஞ்சுப் பகுதியில் இருக்கக் கூடிய ஒரு காயத்தைப் போல நிலவு அவனுக்குத் தெரிந்தது.  சுற்றிலுமிருந்த நட்சத்திரங்கள் வேதனையை வெளிப்படுத்தக் கூடிய துளிகளாக தெரிந்தன.

'எனக்கு தோன்றுவது -- நாம் ஆற்றின் அந்தக் கரைக்குச் செல்ல வேண்டும்.  அங்குள்ள பெரிய நகரத்தில் வேலை தேடுவோம்  பிள்ளைகள் பசியால் இறந்து போய் விடாமல் பார்ப்போம்... என்ன?' -- அவன் மற்றவர்களிடம் தன்னுடைய கருத்தைத் தொடர்ந்து எதிர்பார்த்த சம்மதத்தைக் கேட்டான்.

'அந்த மாளிகையின் சுவர்களைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.  உள்ளே எல்லோருக்கும் வசிப்பதற்கு இடம் இருக்கிறது.  தேவைப்படும் அளவிற்கு தானியமும்.....' -- ஒரு இளைஞன் மீண்டும் தன் மனதிற்குள் இருக்கும் விஷயத்தை உரத்த குரலில் கூறினான்.

'ஆமாம்... இதுவும் ஒரு வழி.  ஆனால், இதில் ஏராளமான பேரின் உயிர்களை இழக்கப்பட வேண்டியிருக்கும்.  தவிர, உங்களில் இறக்கக் கூடிய ஆட்களின் இறந்த உடலின் மீது ஏறி அமர்ந்து தப்பிக்கும் ஆட்கள் எப்படி வயிறு நிறைய உணவு சாப்பிடுவார்கள்?  நல்லது...  நாம் இப்போதே ஆற்றின் அந்தக் கரைக்குச் செல்வோம்.  நகரத்தில் கஷ்டப்பட்டு, வயிறை நிறைப்போம்.  பிறகு.... சக்தியைப் பெற்று விட்டு, ஆலோசிப்போம்.  மாளிகையிலிருக்கும் அயோக்கியர்களை என்ன செய்வது?  அவர்களை உண்மையிலேயே நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.  ஆனால், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை'  -- கிழவன் நடுங்குகிற குரலில் தன் கருத்தை வெளியிட்டான்.


இரவின் பாதி வேளை கடந்து விட்டிருந்தது.  அவர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக கட்டிலை விட்டு எழுந்து ஆற்றின் கரையை நோக்கி நடந்தார்கள்.  அவர்களுக்குப் பின்னால் பசியால் வாடிய பசுக்களும் எருமைகளும் காளைகளும் கிராமத்தைச் சேர்ந்த நாய்களும் சென்றன.

அவர்கள் ஆற்றின் கரையை அடைந்தார்கள்.  அங்கு நிறைய சேறு காணப்பட்டது.  வெள்ளப் பெருக்கால் கரையிலிருந்த மணல் முழுவதும் அரிக்கப்பட்டு கொண்டு போகப்பட்டிருந்தது.

இரவின் இருட்டில் நிலவும், மின்னி ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களும் தந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் நீர் மிகவும் கறுத்துப் போய் காணப்பட்டது.  அதில் எவ்வளவோ பிணங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.  எவ்வளவோ அடுப்புகளும், கால் நடைகளும், கால் நடைகளின் தீவனங்களும், பாத்திரங்களும், மண் சுவர்களும், ஒடு வேய்ந்த மேற் சுரைகளும், குழந்தைகளின் பைகளும், நோட்டு புத்தகங்களும் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன.  ஆனால், இன்று அந்த நீர் மிகவும் அமைதியாக காணப்பட்டது.

சேறு நிறைந்த நீரில் நிலவின் நிழலோ, நட்சத்திரங்களின் பிரகாசமோ தெரியாது.  அந்தக் கரையையும் பார்க்க முடியவில்லை.  கறுப்பு நிறத்தில் நீர்... ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் ஆட்களுக்கு இருந்தது.  அந்தக் கரையில் இருக்கும் மண் இங்கிருப்பதை விட சிறந்ததாக இருக்கும்.

அந்தக் கரைக்குக் கடந்து செல்வதற்கு படகு எதுவும் இல்லை.

அருகில் எந்த இடத்திலும் யாரும் இல்லை.  சுற்றிலும் ஒரு வெறுமை மட்டும்....

ஆனால், அவர்களுக்கு எதிர்பார்ப்பிற்கு வழிவகை இருந்தது.  புலர் காலைப் பொழுதிற்கான எதிர்பார்ப்பு, படகிற்கான எதிர் பார்ப்பு, பயணத்தின் நோக்கம் என்பதற்கான எதிர்பார்ப்பு....

கொஞ்சம் கொஞ்சமாக வானத்திலிருந்த கறுப்பு விலகத் தொடங்கியது.  நட்சத்திரங்களும் மறைந்தன.  பறவைகள் சத்தம் உண்டாக்கவோ, கோழிகள் கூவவோ இல்லை.  பால்காரனின் அழைப்பு ஒலியும் கேட்கவில்லை.  ஆனால், பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.  பறவைகளும் காகங்களும் வெறுமையைப் பார்த்து விட்டு, தூர இடங்களை நோக்கி சென்றன.  பால் குடங்கள் வெள்ளப் பெருக்கிக் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.

பொழுது புலர்ந்தது.  சூரியனின் தோற்றம் மேலே தெரிந்தது.  குழந்தைகள் பசியின் காரணமாக, செயலற்று போயிருந்தனர்.  இப்போது அவர்கள் அழவில்லை.  பசியை நிறைய தாங்கி, பெரியவர்களுக்கு பழகிப் போய் விட்டிருந்து.  ஆனால், தாகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எல்லோரின் உதடுகளும் வறண்டு போய் விட்டிருந்தன.  அவர்களுக்கு முன்னால் ஆறு ஓடிக் கொண்டிருந்தது.  ஆனால், அதிலிருக்கும் நீரைக் கையில் எடுத்து வாய்க்குள் ஊற்றுவதற்கான தைரியம் யாருக்கும் இல்லாமலிருந்தது.  காரணம் -- ஆற்றில் இறந்த உடல்கள் மிதந்து வந்து கொண்டிருந்தன. பசுக்ளும் எருமைகளும் சேற்றில் சரிந்து கிடந்தன.  நாய்களும் களைத்துப் போய் படுத்திருந்தன.

எல்லோரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.  அந்தக் கரைக்குச் செல்லக்கூடிய படகை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர்.  அக்கரை மண் இதை விட சிறந்ததாக இருக்கும்.  அங்கிருந்து நகரத்திற்குச் செல்வதற்கு வழி இருக்கும்.  நகரத்தின் உயர்ந்த மாளிகைகளில் நீர் புகாது.

நகரத்தில் பருகுவதற்கு வேறு நீர் இருக்கும்.  பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்குகளும் இருக்கும்.  பணிக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.  உணவும்... உணவும்... உணவும்.

எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள், நூறு நாட்களாக தோன்றும்.

இறுதியில் பகல் மங்கலானது.  இறுதியில் மங்கித்தான் ஆக வேண்டும்.  ஆனால், மிகவும் தாமதமாகத்தான் மங்கியது.

இரவு வந்தது.  கறுத்து இருண்ட இரவு.

நீண்ட நேரம் கடந்தது.  இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் -- ஏராளமான நூற்றாண்டுகளும் ஏராளமான யுகங்களும் இருட்டில் கடந்து சென்ற பிறகு, தூரத்தில்... மிகவும் தூரத்தில் ஒரு பிரகாசம் ஆடியவாறு வருவதைப் பார்த்து, வயதான மனிதர்கள் அந்த திசையில் கூர்ந்து பார்த்தார்கள்.  வயது சற்று குறைந்தவர்களும் குழந்தைகளும் எழுந்து அந்த பிரகாசத்தைப் பார்த்தார்கள்.

வயதான ஆள் நடுங்கும் குரலில் கூறினான்: 'ஏதாவது படகாக இருக்கும்.'

'ஆமாம்... ஏதோ படகில் தொங்க விடப்பட்டிருக்கும் லாந்தர் விளக்குதான்' -- எல்லோரும் கூறினார்கள்.

அந்த பிரகாசம் நெருங்கி வந்ததும், எல்லோரும் எழுந்து நின்றார்கள்.  படகுதான்.  ஆமாம்...  படகேதான்.  அதில் ஒரு மனிதன் இருந்தான்.  துடுப்பின் சத்தமும் கேட்டது.  ஆடிக் கொண்டிருந்த லாந்தர் விளக்கும் தெரிந்தது.  படகு கரையை அடைந்தது.  எல்லோரும் படகோட்டியைச் சுற்றி நின்றார்கள்.  தங்களை அக்கரையில் கொண்டு போய் விட வேண்டுமென்று அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்.

அவன் மிகவும் சோர்வடைந்து போய் காணப்பட்டான்.  அவன் சொன்னான்: 'நான் தூங்கட்டுமா?'

'தூங்குவதா?  இது தூங்குவதற்கான நேரமா?  எங்களுடைய வீடுகள் இடிந்து போய் விட்டன.  நிலம் முழுவதும சேறாக ஆகி விட்டது.  நீ எங்கே உறங்குவே?  எங்களைப் பார்.  நாங்கள் தூங்கி எவ்வளவு நாட்களாகி விட்டன!  பசித்து, தாகமெடுத்து முதலில் மரங்களின் உச்சிகளில் ஏறி உட்கார்ந்திருந்தோம்.  இப்போது உன்னை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.  நேற்று இரவிலிருந்து...'

'நான் வழி தவறி இங்கு வந்து விட்டேன்.  இருள் மிகவும் கடுமையாக இருக்கிறது.  நட்சத்திரங்களைப் பார்த்து முதலில் நான் வழியைக் கண்டு பிடித்தேன்.  ஆனால், இன்று என்ன நடந்ததோ என்னவோ?  இந்த ஆற்றுக்கே அகலம் அதிகமாக ஆகி விட்டிருக்கிறது.  ஒருமுறை கரையிலிருந்து கிளம்பினால், நீர் நம்மை எங்கு கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை.'

'வா... பரவாயில்லை.  நாம் எல்லோரும் சேர்ந்து அக்கரைக்குச் சென்று ஓய்வு எடுக்கலாம், உணவு சாப்பிடலாம்.  நீ எங்களை அக்கரையில் கொண்டு போய் விட்டால் மட்டும் போதும்...'

'அக்கரையில் அதற்காக தர்மசாலை திறந்து வைத்திருக்கிறார்களா என்ன?  எல்லா இடங்களிலும் இருட்டும், பசியும்தான்.  நீங்களும் இங்கேயே தங்குங்க.  நானும் கொஞ்சம் தூங்குறேன்.'

வயதான ஆள் நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினான்:  'காலை வரை இங்கு இருந்தால் நாங்கள் இறந்து விடுவோம்.  யாருமே எஞ்சியிருக்க மாட்டோம்.  அக்கரையில் உணவு இல்லையென்றால், நீராவது கிடைக்குமல்லவா?  உன் குழந்தைகளை மனதில் நினைத்துக் கொண்டு, நீ எங்களை அந்தக் கரையில் கொண்டு போய் விடு.'

படகோட்டியின் இதயம் கனிவானதாக மாறியது.  அவன் சொன்னான்:  'சரி... அப்படியென்றால் ஏறுங்க.  ஆனால், பத்திரம்... இந்த பசுவையும் எருமையையும் இங்கேயே விட்டுடுங்கள்.  இவற்றிற்கு உயிர் அளித்த கடவுள் உணவையும் தருவார்.'


அது பொய் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும்.  ஆனால், வேறு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது.  அந்த படகு நோஹாவின் பெட்டகமொன்றும் இல்லை.  பசுவையும் எருமையையும் ஒட்டகத்தையும் குதிரையையும் காளையையும் முயலையும் சிங்கத்தையும் நரியையும் நாயையும் அணிலையும் காகத்தையும் நத்தையையும் மனிதர்களையும் ஏற்றி அக்கரைக்குக் கொண்டு செல்லக் கூடிய பெட்டகம்...

எல்லோரும் படகில் ஏறி அமர்ந்தார்கள்.  அமர்வதற்கு இடம் கிடைக்காதவர்கள் பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.  அந்த அழகான தோற்றத்தைக் கொண்டிரருந்த இளைஞனின் பெயர் மங்கது.  அவனுடைய தாய் ஏராளமான கடவுள்களை வணங்கி, வழிபாடு செய்த பிறகு பிறந்தவன் அவன்.  அவன் தன்னுடைய கருப்பு, வெள்ளை நிறத்தைக் கொண்ட மோத்தி என்ற நாயுடன் படகில் ஏற முயற்சித்தபோது, படகோட்டி கூறினான்: 'இப்போதே எடை அதிகமாகி விட்டது.  இந்தச் சூழ்நிலையில் நீ நாயையும் கொண்டு வந்திருக்கிறாய்.  இந்தப் படகில் மனிதர்களுக்கே இடமில்லை.  அப்படிப்பட்ட நிலையில் நீ நாயையும் அழைத்துக் கொண்டு வந்து...'

மங்கது தர்மசங்கடமான நிலையில் இருந்தான் அவன் கூறினான்: 'இது.... மோத்தி.'

அப்போது படகோட்டி கூறினான்: 'மோத்தியாக இருந்தாலும், ஹீராவாக இருந்தாலும், தேவையில்லை.  என் படகில் நாய்களைக் கொண்டு போக முடியாது.  இதை விட்டுட்டு வா.'

மங்கது இரண்டடிகள் பின்னால் வைத்தான்.  'மோத்தியைக் கொண்டு போக முடியவில்லையென்றால், நானும் வரவில்லை.'

மங்கதுவின் தாய் நீண்ட காலத்திற்கு முன்பே மரணமடைந்து விட்டாள்.  அவனுடைய தந்தை ஏதோ ஒரு காலத்தில் எஜமான்களிடமிருந்து பணம் கடனாக வாங்கியிருந்தான்.  அதற்காக இன்று அவன் அந்த பழைய கடனை அடைப்பதற்காக அவர்களுக்கு பணி செய்து கொண்டிருக்கிறான்.  அவர்களுடைய மிருகங்களைப் பார்த்துக் கொள்கிறான்.  எஜமான்மார்களின் மாளிகையில் அவனுக்குக் கிடைக்கும் உணவை அவன் மோத்திக்கும் தந்து கொண்டு, சாப்பிடுகிறான்.

இரவில் தனியாக இருக்கும்போது மனம் நிறைவாக இருப்பததைப் போல தோன்றும்.  அப்போது மோத்தியிடம் அவன் தன்னுடைய துயர கதையைக் கூறுவான்.

படகிலிருந்து யாரும் அவனை அழைக்கவில்லை.  'எதற்காக நீ அந்த நாய்க்காக உன்னுடைய உயிரைப் பணயம் வைக்கிறாய்?  வா... வந்து படகில் ஏறு.  நல்ல நிலை உண்டான பிறகு, திரும்பி வருவோம்.  உன் மோத்தி இங்கேயே உன்னை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கும்.  அதற்கு உயிர் கொடுத்த கடவுள், அதற்கு....'

யாரும் எதுவும் கூறவில்லை.  வயதான மனிதன் மட்டும் அவனை ஒரு முறை அழைத்தார்.  ஆனால், அந்த மனிதனின் பலவீனமான குரல் அலைகளில் காணாமல் போய் விட்டது.

படகு புறப்பட்டது.

பசுக்களும் எருமைகளும் காளைகளும் கரையிலேயே விடப்பட்டு விட்டன.  இருட்டில் அவற்றின் கண்களை யாராலும் பார்க்க முடியவில்லை.  அவை அழுதனவா...?  அல்லது....  அவர்கள் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்களா?  தெரியவில்லை.

எல்லா ஆசைகளும் முடிவுக்கு வரும்போதும், ஒரு எதிர்பார்ப்பு எஞ்சியிருக்கும்.

அந்த மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தபோது, புத்த பகவானுக்கும் இதே போன்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருக்க வேண்டும்.

மங்கது மோத்தியைக் கையில் தூக்கியவாறு, படகு நகர்ந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

படகில் அமர்ந்திருந்தவர்கள் உண்மை, உண்மையற்ற தன்மை ஆகியவற்றின் நடுவில் உள்ள ஒரு தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள்.  தாங்கள் உண்மையிலேயே படகில்தான் அமர்ந்திருக்கிறோம் என்றும், படகு நீரில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் சில நேரங்களில் அவர்களுக்கு தோன்றும்.  சில நேரங்களில் தோன்றும்.... இப்போதும் கரையில் சேற்றில்தான் அமர்ந்திருக்கிறோம் என்று தங்களுடைய எஞ்சிய கால்நடைகள், சொறி நாய்களுக்கு மத்தியில் முன்னால் ஆற்றின் பரந்த வடிவத்தைப் பார்க்கும்போது, காலம் நின்று போய் விடுமோ என்ற உணர்வு அவர்களுக்குள் உண்டாகும்.

படகோட்டியும் மிகவும் களைத்துப் போயிருந்தான்.

தங்களுடைய கரையிலிருந்து எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதோ, அக்கரை இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதோ அவர்களுக்கு சிறிதும் தெரியாது.  நான்கு திசைகளிலும் பயங்கரமான இருட்டு பரவியிருந்தது.  நான்கு பக்கங்களிலும்  கீழேயும், மேலேயும்.

நட்சத்திரங்களையும் பார்க்க முடியவில்லை, மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்க வேண்டும்.

நீண்ட காலம் கடந்து சென்றது.  மணிகள், வாரங்கள், மாதங்கள், சகாப்தங்கள், யுகங்கள்.... எல்லோரும் அதை உணரவும் செய்தார்கள்.  ஆனால், இரவு அதே போலத்தான் இருந்தது.  அந்த இரவு வேளையின் இருட்டு நான்கு திசைகளிலும் பரவியிருந்தது.

அப்போது படகோட்டி இரண்டு துடுப்புகளையும் கீழே போட்டான்.  மனப்பூர்வமாக அதைச் செய்தானா?  அல்லது அவனுடைய கைகள் மரத்துப் போய், துடுப்பு கையிலிருந்து நழுவி கீழே விழுந்து விட்டதா?

துடுப்பு நீரில் விழும் சத்தம் கேட்டது.  மெல்லிய சத்தம்....

துடுப்புகளை நீரில் போட்டு விட்டு, அவன் தளர்ந்து போய் அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

அவன் தளர்ந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆட்கள் அவனுடைய கைகளையே பார்த்தார்கள்.  'என்ன....?  இனி கையை வைத்து படகைச் செலுத்தலாம் என்ற எண்ணமா?  துடுப்பை கையில் காணோமே?'

துடுப்பைப் பற்றி விசாரிக்க முயற்சித்தவர்களின் வாய்களிலிருந்து ஒரு கூப்பாட்டைப் போன்ற சத்தம் உயர்ந்து ஒலித்தது.  அது நீரில் எதிரொலித்தது.

எல்லோரும் அந்தச் சம்பவத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதித்தார்கள்.  அவர்கள் பயத்தில் இருந்தார்கள்.

அப்போது ஒரு ஆள் எழுந்தான்.  அவன் எப்போதும் திருவிழாக்களில் குஸ்தி சண்டையில் போட்டி போடக் கூடியவன்.  எண்ணெய் தேய்த்து, மரக் கட்டையைச் சுழற்றியவாறு நடப்பான்.

உடல் முழுவதிலும் மண்ணைப் பூசிக் கொண்டு, குஸ்தி போடுவதற்காக தன்னைத் தயார் பண்ணுவான்.  அந்தக் காலமெல்லாம் கடந்து போய் விட்டது.  இளமையின் அந்த இரத்தத் துடிப்பு நின்று போயிருந்தாலும், அவனுக்குள் இப்போதும் பழைய உற்சாகமும், தைரியமும் எஞ்சியிருந்தன.

அவன் தன்னுடைய சட்டையைக் கழற்றி விட்டு, கைலியைத் தார் பாய்ச்சி கட்டிவிட்டு, தொடையைத் தட்டியவாறு எஞ்சியிருந்தவர்களிடம்: 'நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் நீந்தி அக்கரைக்குச் செல்வேன்.  அங்கிருந்து துடுப்புடனோ, படகுடனோ திரும்பி வருவேன்.  நீங்கள் அனைவரும் மன அமைதியுடன் இருங்க, அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திரும்பக் கூடாது.  படகு கவிழ்ந்து விடக் கூடாது.  நான் இப்போதே போய் விட்டு, வருகிறேன்.'


எல்லோரையும் விட வயதான ஆள் மிகவும் பலவீனமான குரலில் கூறினான்:  'ஒரு பிரயோஜனமும் இல்லை.  நீர் நிறைந்த இந்த ஆற்றைக் கடப்பது என்பது எளிதான விஷயமல்ல.'

'நாம் செய்வது எளிய காரியம் மட்டுமில்லையே, மாமா!'

பல வருடங்களுக்கு முன்பு குஸ்தி பயில்வானாக இருந்த அவன் மிகவும் பணிவுடன், அதே நேரத்தில் உறுதியான குரலில் கூறி விட்டு, ஆற்றுக்குள் குதித்தான்.

பிறகு... சிறிது நேரம் நீருடன் போராடி, அவன் நீந்தித் துடிக்கும் சத்தம் கேட்டது.  படிப்படியாக அது நகர்ந்து சென்றது.

ஆனால், ஆற்றின் அகலம் மிகவும் அதிகமாக இருந்தது.  வெறும் தைரியத்தை மட்டும் வைத்துக் கொண்டு அக்கரைக்குச் செல்வது என்பது சிரமமான விஷயமே!  தன்னுடைய கைகளும் கால்களும் கொஞ்சம் கொஞ்சமாக, மரத்துப் போவதைப் போல அவனுக்குத் தோன்றியது.  கறுத்து, வெற்றிப் பெருமிதத்துடன் இருக்கும் அந்த நீருடன் போராடுவது என்பது கஷ்டமான ஒரு விஷயம்.  அதன் சக்தி அஞ்சக் கூடிய விதத்தில் இருந்தது.

நீந்தி... நீந்தி தான் ஒன்றிரண்டு முறைகள் மூழ்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது.  மரணம், பிணங்கள் ஆகியவை நிறைந்த நீரின் ஒன்றிரண்டு மடக்குகளை, தெரியாமலே அவன் குடித்து விட்டான்.  அவன் நீரின் அடிப் பகுதிக்குச் சென்றபோது.  மூக்கிலும் வாயிலும் நீர் நிறைந்தது.  அதைத் துப்பக் கூடிய பலம் அவனுக்கு இல்லாமற் போயிருந்தது.

அவன் மூழ்க ஆரம்பித்தபோது, அவனுடைய வாயிலிருந்து ஒரு பயங்கரமான கூப்பாட்டுச் சத்தம் வெளியே கேட்டது.  வானத்தையே கிழித்து அறுக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தது.  அந்த கூப்பாட்டுச் சத்தம் சூறாவளியைப் போல, இடி முழக்கத்தைப் போல, பெரும் புயலைப் போல, பூகம்பத்தைப் போல பூமியெங்கும் முழங்கியது.  தூரத்தில் நகரத்தின் விளக்குகள் பட்டாசு போல வெடித்து, அணைந்து போயின.  கடுமையான இருட்டு.  நான்கு திசைகளிலும் பூமியிலும் வானத்திலும் முழுமையான இருட்டு....

அந்த இருட்டில் நீருக்கு மத்தியில் படகில் அமர்ந்து, மரணத்தைப் பார்த்து ஆட்கள் அஞ்சினார்கள்.

நீரில் மூழ்கி தாழ்ந்து கொண்டிருக்கும் ஏதோ தைரியம் கொண்ட மனிதனின் பூகம்பத்தை நினைவுபடுத்தும் உரத்த சத்தம்.  அதில் அனைத்து சக்திகளும் அடங்கியிருந்தன.

அவன் மூழ்கி கீழே சென்றாலும், அவனுடைய கூப்பாட்டுச் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது.  இந்தக் கரையில் மங்கது நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.  கடுமையான இருட்டில் படகு எங்கே இருக்கிறது என்று அவன் தேடிக் கொண்டிருந்தான்.  பிறகு... அவன் தன்னுடைய மோத்தியை, தன் ஒரே நண்பனை நெஞ்சோடு சேர்த்து வைத்தவாறு எங்கோ நடந்து சென்றான்.

அவன் தனி மனிதனாக, ஒழுங்காக காலடிகளை எடுத்து வைத்து இருட்டிற்கு எதிராக நடந்தான்.  நடக்கும்போது அவன் மோத்தியை முத்தமிட்டான்.  மோத்தியின் கண்கள் நிறைவதைப் போல அவனுக்குத் தோன்றியது.

'நீ என் அழறே, மோத்தி?  நாம் இரண்டு பேரும் எங்காவது போய் சேர்வோம்.  நீ தனியாக இல்லையே!  நானும் தனியாக இல்லை, இரண்டு பேரும் சேர்ந்திருக்கிறோம்.  ஏன் அழறே?'

மோத்தியின் கழுத்தில் ஒரு அசைவு தோன்றியது.  அவன் ஒத்துக் கொண்டதைப் போல முனகுவதாக தோன்றியது.  அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

திடீரென்று மங்கதுவிற்கு மிகவும் பழைய ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது.  கருவேல மரத்திற்கு அருகிலிருக்கும் வீட்டில் வசித்த வயதான பெண் ஒரு நாள் அவனிடம் சொன்னாள்: 'நாய்கள் மீது அன்பு வைத்தால், அவை நன்றியுடன் இருக்கும்.  நமக்கு கவலை உண்டாகும்போது, அவை அழும், சத்தம் உண்டாக்காது.  அழுது கொண்டிருக்கும்.'

மங்கது மோத்தியை அன்புடன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொண்டு நடந்தான்.  அந்த பாதையில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமலிருந்தது.  வாழ்க்கை இல்லாமலிருந்தது.  மரணமும் இருக்காது.  சொர்க்கமும், நரகமும் இருக்காது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.