Logo

பொன்னம்மாவின் புடவை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4048

பொன்னம்மாவின் புடவை

(மலையாளக் கதை)

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

பொன்னம்மா ஒரு முறை திருவனந்தபுரத்திற்குச் சென்றிருக்கிறாள்.  இன்னொரு முறை எர்ணாகுளத்தைப் பார்க்க முடிந்தது.  நான்கு தடவைகள் ஆலப்புழைக்கும் போயிருக்கிறாள்.  அன்று திருவனந்தபுரத்திற்குச் சென்றபோது தோன்றிய ஆசை அது.  ஒரு புடவை.  எல்லா வருடங்களும் அம்பலப்புழை திருவிழாவிற்குச் செல்லும்போது அவளுடைய ஆசை மீண்டும் உயிர்த்தெழும்.  அவள் தன் தாயைத் தொந்தரவு செய்ய ஆரம்பிப்பாள்.  அவளுடைய அன்னை கூறுவாள்: 'உனக்கு ஒருத்தன் வர்றப்போ, அவன்கிட்ட சொல்லு, அது வரை இது போதும்.'

'ஓ!' என்று கூறியவாறு அவள் அமைதியாக இருப்பாள்.  இரண்டு மூன்று நாட்களுக்கு முகத்தைக் கோண வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள், அழுவாள்.  அந்த அழுகைக்கும் கோபத்திற்கும் பலன் இருக்கும்.  திருவிழாவிற்கு ஒரு நல்ல புடவையையும் ரவிக்கையையும் அவளுடைய தந்தை வாங்கிக் கொடுப்பார்.  ஒன்றிரண்டு தடவைகள் அவளுடைய தந்தை பணிக்கருமாமன் ஆலப்புழைக்குச் சென்றபோது, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து புடவையின் விலையைக் கேட்டார்.  ஆனால், அவ்வளவு விலை கொடுத்து ஒன்றை வாங்கி ஆசாரிப் பெண் அணிந்து ஏன் நடக்க வேண்டும் என்று அவர் சிந்தித்தார்.  அவ்வளவு பணம் கொடுத்தால் நான்கு முதல் தரமான புடவை கிடைக்கும்.  ஏன் அதிகம் சொல்ல வேண்டும்?  அவர் வாங்கவில்லை.

அம்பலப்புழை திருவிழாவிற்குச் செல்லும்போது பொன்னம்மா புடவை அணிந்த பெண்கள் எல்லோரையும் பார்ப்பாள்.  எப்படிப்பட்ட இனங்களில் எல்லாம் அவை இருந்தன!  பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் -- இப்படி எவ்வளவு நிறங்களிலும், எவ்வளவு வகைகளிலும் உள்ள புடவைகள்!  எல்லா இனங்களும் அவளுக்கு தெரியும்.

பணிக்கருமாமன் தன்னுடைய மருமகன் கொச்சு பணிக்கரைக் கொண்டு பொன்னம்மாவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தார்.  கொச்சு பணிக்கர் நல்ல மனிதன்.  ஒரு அப்பிராணி. வேலை எதுவுமில்லை.  எனினும், அந்த திருமணம் பணிக்கருமாமனின் பெரிய விருப்பமாக இருந்தது.  'அவனுக்கு வேலையெதுவும் இல்லையென்றால், வேண்டாம்' என்றுதான் அவர் கூறினார்.  'எனக்கு வயதான காலத்தில் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆள் இருக்கிறானே!'

பொன்னம்மாவின் கருத்தை யாரும் கேட்கவில்லை.  அதை அவள் சிறிது கூட கூறவுமில்லை.  ஆனால், தனியாக அமர்ந்திருக்கும்போது அவள் புடவையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள்.  மயிலிறகு கண்களைக் கொண்ட ஒன்றும், நீல நிறத்திலுள்ள ஒன்றும் -- இப்படி இரண்டு புடவைகள் அவளுக்கு வேண்டும்.

திருமண நாள் முடிவு செய்யப்பட்டது.  திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன.  அது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க காரியமாக இல்லை.  அந்த நாளன்று கட்டுவதற்கு ஒரு புடவை -- எப்படி அவள் கூறுவாள்?  திருமணத்திற்கு அணிவதற்கு ஒரு புடவை வேண்டுமென்று ஒரு மணப்பெண்ணும் கூற மாட்டாள்.  ஆனால், பொன்னம்மா சற்று சிந்தித்தாள்.  திருமணத்திற்கு மணமகன் கொடுப்பது ஒரு புடவையாக இருக்கும்.  சமீபத்தில் அங்கு நடந்த எல்லா திருமணங்களிலும் அப்படித்தான் நடந்தன.  அதுதான் இப்போதைய நாகரீகம்.  அவளுக்கும் புடவை கிடைக்காமற் போகுமா?  அது போதும்.  இப்போது வாய் திறக்க வேண்டாம்.  அதைத் தொடர்ந்து அவள் புடவையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த புடவை எப்படிப்பட்டதாக இருக்கும்?  அது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று மணமகனிடம் கூறினால் என்ன?  அதற்கு சூழ்நிலை இருந்தது.  ஆறேழு நாட்களுக்கு முன்பு அவன் அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தான்.  அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்து, வெளியே போனான்.  அப்போது கூறியிருக்கலாம்.  மயிலிறகு கண்களைக் கொண்ட புடவை போதும் என்று.  அது கிடைத்தால் -- பிறகு... நீல நிறத்தில் உள்ளது போதும்.  பணத்தைக் கொடுத்து எதற்கும் லாயக்கற்ற ஆசாரிப் பெண்கள் அணியக் கூடிய புடவையை வாங்கி விடுவானோ?  அன்று கூறவுமில்லை.  அப்படி ஒன்றாக இருந்தால், அதைக் காட்டி மணமகனைக் கிண்டல் பண்ண வேண்டும்.  அதை அவள் அணியவே மாட்டாள்.

திருமணம் நடைபெறும் இடத்திற்கு அவள் சென்றாள்.  தாலி கட்டப்பட்டது.  மாலை அணிந்து, தாம்பாளத்தில் வைத்து மணமகன் துணி கொடுத்தான்.  ஒரு ஜப்பான் புடவையும், மேற் துண்டும்!

பொன்னம்மா அறைக்குள் நுழைந்து, அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.  அந்த அழுகை வெட்கத்தால் வந்தது என்று பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

முதலிரவு வேளையில் படுக்கையறையில் வைத்து அவள் முதல் முறையாக கூறியது அதுதான்.  ஒரு புடவையை வாங்கித் தருவதாக அவன் கூறினான்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவள் அதையே கூறினாள்.  அவன் சத்தியம் செய்தான்  வாங்கிக் கொடுப்பதாக.  எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும், அவள் புடவையில் போய்தான் முடிப்பாள்.

அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் பொன்னம்மா புடவையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.  அப்படியே ஒரு மாதம் கடந்தது.  அவள் அழ ஆரம்பித்தாள்.  ஒரு மாதம் கடந்த பிறகும் ஒரு புடவையைக் கூட வாங்கித் தருவதற்கு இயலாத கணவன்தான் அவளுக்கு கிடைத்திருக்கிறான்.  அந்த வருட அம்பலப்புழை திருவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.  அவள் கேட்டாள்:

'வெட்கமே இல்லாமல் எப்படி திருமணம் செய்தீங்க?'

கொச்சு பணிக்கர் சற்று நெளிந்தான்.  ஒரு வாரத்திற்குள் அவளுடைய ஆசையை நிறைவேற்றித் தருவதாக அவன் கூறினான்.  அந்த வாரமும் முடிந்தது.  அவள் தன் தாயிடம் கூறினாள்.

'எனக்கு இந்த திருமண உறவு வேண்டாம்.'

எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

கொச்சு பணிக்கர் முடிந்த வரைக்கும் முயற்சித்தான்.  ஆலப்புழைக்குச் சென்று மயிலிறகு கண்கள் கொண்ட புடவையின் விலையைக் கேட்டான்.  இருபத்தைந்து ரூபாய்!  எங்கு இருந்து சம்பாதிப்பது?  அவன் பலரிடமும் கடன் கேட்டான்.  யாரும் கொடுக்கவில்லை.

ஒரு இரவு வேளையில் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னை மரத்தில் அவன் வேகமாக ஏறினான்.  பாதி சென்றபோது, கீழே விழுந்தான்.  ஒரு மாதம் சிகிச்சையில் கிடந்தான்.  மேட மாத்தில் மிகவும் வேண்டிய சிலரின் களங்களுக்கு நெல் காய வைப்பதற்காகச் சென்றான்.  அப்போது சிறிதும் எதிர்பாராமல் ஒரு செலவு வந்தது.  அவனுடைய தாய்க்கு ஒரு நோய்.  சம்பாதித்த பணம் தீர்ந்து விட்டது.  இறுதியில் அவன் தனக்கு வர வேண்டிய பாகத்தைக் கேட்டான்.  அதை வாங்கி விற்று, புடவை வாங்கலாம் என்று நினைத்தான்.  மாமா பாகத்தைத் தரவில்லை.


பொன்னம்மா அவனிடம் கேட்டாள்:

'ஏன் ஆணாக இருக்கீங்க?'

ஒரு நாள் பணிக்கரைப் பார்க்க முடியவில்லை.  மறுநாளும் பார்க்க முடியவில்லை.  மூன்றாவது நாள் திருவனந்தபுரத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.  அவன் அங்கு இருந்தான்.  ஏதோ வேலை இருக்கிறதாம்!

பொன்னம்மாவிற்கு உற்சாகம் உண்டானது.  தன் கணவனுக்கு வேலை இருக்கிறதே!  இனிமேல் பணம் கிடைக்கும்.  புடவையையும் வாங்கலாம்.  அந்த புடவைக்கேற்ற ஒரு ஜாக்கெட் வேண்டும்.  ஒரு ஜாக்கெட் வேண்டும் என்ற விஷயத்தையும் எழுதி அனுப்பினால் என்ன?  வாங்கச் செய்யலாம்.  அவள் வைக்கத்தில் நடைபெறும் அஷ்டமிக்குச் செல்பவர்களின் மூலம் ஒரு குங்கும டப்பா வாங்கி வரச் செய்தாள்.  பக்கத்து வீட்டிலிருக்கும் ராஜம்மாவிடம் பொன்னம்மா கூறினாள்:

'எனக்கு ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்து தருவதாக கடிதத்தில் இருக்கு.'

பொன்னம்மா நாட்களை எண்ணி கடத்திக் கொண்டிருந்தாள்.  நூற்று இரண்டு, நூற்று ஒன்று என்று இப்படி நாட்கள் குறையக் குறைய புடவையின் தோற்றமும் அவளுக்கு தெளிவாக தெரிந்து கொண்டிருந்தது.  எப்படியாவது அம்பலப்புழை திருவிழா வந்தால் போதும் என்று அவள் நினைத்தாள்.

மீன மாதத்தின் ஆரம்பத்தில்தான் அம்பலப்புழை திருவிழா.  கும்ப மாதத்தின் இறுதியில் ஒரு நாள் கொச்சு பணிக்கர் தன்னுடைய எஜமானி அம்மாவிடம் சொன்னான்:

'வீட்டில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கு.  என் மனைவிக்கு உடல் நலமில்லை.  கொஞ்சம் வீடு வரை போகணும்.'

பல சமையல்காரர்களையும் பார்த்திருக்கும் முதலாளியம்மா கூறினாள் -- 'இது சமையல்காரர்கள் எப்போதும் கூறக் கூடிய தந்திர வார்த்தைகள்' என்று.  அப்போது அவனை அனுப்பி வைக்கும் சூழ்நிலை இல்லை.  பணிக்கர் கவலைப்பட்டான்.  போய் விட்டு திரும்பி வருவதாக அவன் சத்தியம் பண்ணினான்.  பயனில்லை.  பணிக்கர் எஜமானனிடம் கூறினான்.  எதற்கு இதைப்பற்றி அதிகமாக கூற வேண்டும்?  மீன மாதத்தின் ஆரம்பத்தில் அவன் மிகவும் சிரமப்பட்டு அனுமதி வாங்கினான்.  புறப்படும் நாளன்று மூன்று ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்துவிட்டு, எஜமானி அம்மா கூறினாள்:

'மூன்று ரூபாய் இருக்கு.  திரும்பி வந்த பிறகு, மீதியை தர்றேன்.'

கொச்சு பணிக்கரின் அனைத்து திட்டங்களும் தகர்ந்து விட்டன.  வழிச் செலவிற்கு இரண்டு ரூபாய் வேண்டும்.  புடவையை எப்படி வாங்குவது?  புடவை இல்லாமல் அங்கு சென்றால் -- அதற்குப் பிறகு விவாகரத்துதான்.  அதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை, அந்த அளவிற்கு அழகான ஒரு பெண் அவனுக்குக் கிடைப்பாளா?

கொச்சு பணிக்கர் கணக்கை முடித்து விட்டு, முழு பணமும் கிடைக்க வேண்டும் என்று தீர்மானமான குரலில் கூறினான்.  அதற்கு பலன் கிடைக்கவில்லை.  அவள் கொடுக்கவில்லை.

பொன்னம்மா உறங்கி நாட்கள் பல ஆயின.  அவள் இரவு நேரங்களில் வெளியே தன் கணவனின் காலடியோசை கேட்கிறதா என்று கவனத்தைப் பதித்துக் கொண்டே படுத்திருப்பாள்.  பகல் முழுவதும் வாசலுக்குச் சென்று பார்த்துக் கொண்டிருப்பாள்.  புடவை கொண்டு வருவான் என்று அவள் உறுதியாக நினைத்தாள்.

அம்பலப்புழை கொடியேற்றத்திற்கு முந்தைய நாள் நள்ளிரவு தாண்டியிருந்தது.  பொன்னம்மா நினைத்துக் கொண்டே படுத்திருந்தாள்.  வெளியே ஒரு காலடிச் சத்தம் கேட்டது.  பொன்னம்மா எழுந்து உட்கார்ந்தாள். கொச்சு பணிக்கர் ஒரு முறைதான் அழைத்தான்.  அவள் கதவைத் திறந்தாள்.  அவன் அலட்சியமாக ஒரு பொட்டலத்தை அவளுடைய கைகளில் எறிந்தான்.

முன்பு எப்போதுமில்லாத ஒரு அதிகார குணம் அவனிடம் இருந்தது.  அதை பொன்னம்மா ஏற்றுக் கொண்டாள்.  'அடியே தங்கம்' என்று அவன் அழைக்கும்போது, எந்த அளவிற்கு பணிவுடன் அவள் அந்த அழைப்பைக் கேட்கிறாள்!  அவன் இருக்கிறானா இல்லையா என்று கேட்காமலேயே அவள் அரிசியைச் சமைப்பதற்கு தயாரானாள்.  உணவு சாப்பிட்டு விட்டு எழுந்தபோது, அவள் சொன்னாள்:

'அய்யோ! ஒரு பிடி சோறு சாப்பிடலையே!'

படுக்கையறைக்குள் சென்றதும் -- அந்த அளவிற்கு இதய பூர்வமான, உணர்ச்சி வசப்பட்ட ஒரு முத்தம் கொச்சு பணிக்கருக்கு அன்று வரை கிடைத்ததே இல்லை.  அவன் ஒரு செல்லப் பெயரைக் கூறி அவளை அழைத்தான்.

அவள் சொன்னாள்:

'நான் புடவையை உடுத்தும்போது, இதைவிட அழகியாக இருப்பேன்.  நாளை புடவையை அணிந்து விட்டு, ஒரு முத்தம் தர்றேன்'

மறுநாள் பொன்னம்மா தன்னுடைய தோழிகள் எல்லோரிடமும், புடவை வாங்கிக் கொண்டு வந்திருக்கும் கதையைக் கூறினாள்.  மயிலிறகு கண்களைக் கொண்ட புடவை, அவர்கள் அனைவரும் வந்து பார்த்தார்கள்.  பலருக்கு அது சந்தோஷமான விஷயமாக இருந்தது.  வேறு சிலரோ பொறாமைப்பட்டார்கள்.  பொறாமைப்படுபவர்கள் யார் என்ற விஷயமெல்லாம் பொன்னம்மாவிற்குத் தெரியும்.  அவள் அவர்களில் ஒருத்தியின் முகத்தைப் பார்த்து கூறினாள்:

'எழுதி அனுப்பி வர வச்சது... விலை நூறு ரூபாய்.'

கிழக்கு வீட்டு கமலம்மா சொன்னாள்:

'இது புதிய புடவை மாதிரி தோன்றவில்லை.'

பொன்னம்மா கோபத்துடன் கேட்டாள்:

'ம்... என்ன?'

'இதற்கு பளபளப்பு இல்லை.'

'இது சில்க், அதனால்தான் பளபளப்பு இல்லை.'

'அப்படின்னா, புதுத் துணிக்கு இருக்கக் கூடிய மணம் இருக்குமே!'

பொன்னம்மாவால் பதில் கூற முடியவில்லை.  அவள் சொன்னாள்:

'இல்லாவிட்டாலும், சின்ன வயசுல இருந்தே உனக்கு என் மீது பொறாமை.'

பொன்னம்மா புடவையை பொட்டலத்தில் சுற்றி கட்டினாள்.  அப்போது கமலம்மா சொன்னாள்.

'அதன் நுனிப் பகுதியில் சலவை செய்பவனின் அடையாளம் இருக்குது.'

மறுநாள் பொன்னம்மாவிற்கும் கமலம்மாவிற்குமிடையே பெரிய சண்டை நடந்தது.


நான்கு நாட்கள் கடந்தன.  ஒரு உச்சிப் பொழுது வேளையில் பொன்னம்மா புடவையை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.  கொச்சு பணிக்கர் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.  இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு ஆளும் அங்கு வந்தார்கள்.  ஆள் தன்னுடன் வந்த போலீஸ்காரர்களிடம் கூறினான்:

'அதோ... என் புடவை, எஜமான்!'

'இதுவா?'

'ஆமாம்...'

போலீஸ்காரன் பொன்னம்மாவிடம் கேட்டான்:  'அந்த புடவையை இங்கே தா.'

பொன்னம்மா பயந்து நடுங்கினாள்.  அவள் புடவையைக் கொடுத்தாள்.  போலீஸ்காரன் கேட்டான்.

'இதை யார் கொண்டு வந்து தந்தது?'

அவள் நடுங்கிக் கொண்டே கூறினாள்:

'என் கணவர்.'

'எப்போது கொண்டு வந்தான்?'

'மூன்று நாட்களாச்சு.'

போலீஸ்காரர்களுடன் வந்திருந்த ஆள் புடவையை வாங்கி இப்படியும் அப்படியுமாக திருப்பித் திருப்பி பார்த்தான்.  அவனுடைய முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்!  அவன் சொன்னான்:

'பெரிய வீட்டைச் சேர்ந்த புடவை.  எனினும், நான் சலவை செய்து உலர போட்டு விட்டு அந்தப் பக்கம் போயிருப்பேன்.  அதற்குள் தட்டிக் கொண்டு போய் விட்டானே, எஜமான்!  அந்தத் திருட்டுப் பயலுக்கு இரண்டு அடிகள் கொடுங்க.  இதற்கு தனியா கொடுக்கணும்.  பெரிய வீட்டு அம்மாவிடம் நான் என்ன சொல்ல முடியும்?  அட கடவுளே!  பத்து ஐம்பது புடவைகள் இருந்ததில், நல்லதைத்தான் இவன் திருடியிருக்கான்'

பொன்னம்மா பயத்துடன் கூறினாள்:

'நான் இல்ல.... என்னை... என்னை... '

போலீஸ்காரன் கேட்டான்:

'உங்க கணவன் இங்கே இருக்கானா?'

'இருக்காரு.'

அப்போது யாரோ பக்கத்து அறையிலிருந்து ஓடுவதைப் பார்த்து போலீஸ்காரர்களில் ஒருவன் அந்தப் பக்கமாக ஓடினான்.  ஓடியது கொச்சு பணிக்கர்தான்.  போலீஸ்காரன் கொச்சு பணிக்கரை அங்கு பிடித்துக் கொண்டு வந்தான்.  அவன் ஆலமரத்தின் இலையைப் போல நடுங்கிக் கொண்டிருந்தான்.  போலீஸ்காரன் கேட்டான்:

'இந்த சலவை செய்பவனின் புடவையை இவன் உலர்வதற்காக விரித்து போடப்பட்டிருந்த இடத்திலிருந்து நீ திருடினாயா?'

'இல்ல!  அது நான் எடுத்த... இல்ல... திருடியதல்ல.  அது அவள் பணம் தந்து வாங்கியது.'

'இல்லை... அது எனக்கு கொண்டு வந்து தந்தது.'

அதைத் தொடர்ந்து அங்கு ஆட்கள் கூடினார்கள்.  போலீஸ்காரர்கள் என்னவோ எழுத ஆரம்பித்தார்கள்.  பொன்னம்மாவையும் கொச்சு பணிக்கரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

பணிக்கருமாமன் எங்கிருந்தோ ஐந்தெட்டு ரூபாய்களைத் தயார் பண்ணினார்.  அந்த போலீஸ்காரர்களில் ஒருவனுடைய இரக்கத்தை பணிக்கருமாமன் சம்பாதித்தார்.  வீட்டின் வடக்குப் பக்கத்தில் வைத்து அவர்களுக்கிடையே சிறிது நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

போலீஸ்காரன் கேட்டான்:

'இது இன்சார்ஜ் பொறுப்பில் இருப்பவருக்கு.  எனக்கு....?'

பணிக்கருமாமன் மேலும் என்னவோ கொடுத்தார்.  அதைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரன், 'இன்சார்ஜ்' பொறுப்பிலிருந்த போலீஸ்காரனை, சமாதானப்படுத்தினான்.  அவன் சலவை செய்யும் மனிதனிடம் கூறினான்:

'குடும்ப விஷயமல்லவா?  உனக்குத்தான் புடவை கிடைத்து விட்டதே!  இவர்களை அவமானப்படுத்தக் கூடாது,  நாம போகலாம்.'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.