Logo

இருள் நிறைந்த வானம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4781
Irul Niraindha Vaanam

இருள் நிறைந்த வானம்

பாறப்புரத்து

தமிழில் : சுரா

நேரம் அதிகமாக ஆகி விட்டிருந்தாலும், கடைசி வண்டி வரும் என்று வெற்றிலை, பாக்கு கடைக்காரன் கூறுகிறான். இனியும் வண்டியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்று பீடி சுற்றும் மனிதன் கூறுகிறான்.

பீடி சுற்றும் மனிதனின் கருத்துதான் மனதில் முன்னிலை வகிக்கிறது. கருத்துக்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்காமலேயே சராசரி அறிவைக் கொண்ட ஒரு ஆள் அதைச் செயல்படுத்த வேண்டும். மேற்கு திசை வானத்தின் விளிம்பு இருண்டு போய் காணப்படுகிறது. நான்கைந்து நாழிகைகள் பகல் இருந்தும், மாலையில் இருக்கக் கூடிய அளவிற்கு இருள் பரவியிருக்கிறது. பலமான காற்றில் கறுத்த மேகங்கள் வானப் பரப்பில் நீந்தி வந்து கொண்டிருப்பதைத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆற்றில், ஏரியிலிருந்து வரும் அலைகளை ஞாபகப்படுத்தும் நீர் வளையங்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த நீர் வளையங்களை கீறி பிரித்துக் கொண்டு, சற்று சரிந்த நிலையில் பாய்மரப் படகுகள் பாய்ந்து வருவதைப் பார்ப்பதென்பது சுவாரசியமான விஷயமாகவே இருக்கிறது. எந்த நிமிடத்திலும் மழை ஆரம்பிக்கலாம். பருவ மழைக் காலத்தில் மாலையில் ஆரம்பமாகும் மழை எப்போது நிற்கும் என்பதைக் கூறவே முடியாதே! அதற்குப் பிறகும், ஆற்றின் படகுத் துறையிலிருந்த அந்த வெற்றிலை, பாக்கு கடையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாத ஒரு மனிதனைப் போல நான் அமர்ந்திருந்தேன். போக முடியவில்லையென்றாலும், மழை பெய்யட்டுமே என்று மனதில் நினைக்கிறேன். ஒரு நல்ல மழை பெய்து நின்றால், இதயத்தின் கனமும் வெப்பமும் இல்லாமற் போய் விடும் என்ற வெற்று ஆசைதான் காரணமாக இருக்குமோ? கண்களை மூடிக் கொண்டு இருட்டு உண்டாக்க முயற்சிப்பதைப் போல. நிராயுதபாணியான ஒரு மனிதன், மனதில் நினைத்திராத நேரத்தில் எதிரியின் வளையத்திற்குள் மாட்டிக் கொள்வதைப் போல அந்த அனுபவம் ஏற்பட்டது. மறக்க முயற்சிக்க... முயற்சிக்க பிடிவாத குணம் கொண்ட குழந்தையைப் போல அது மனதில் உறுதியாக நின்று கொண்டிருந்தது. இந்த வயதிற்குள் இப்படிப்பட்டஒரு சூழ்நிலையைச் சந்திக்க வேண்டி நிலை உண்டாகியிருக்கிறதா? பதினைந்து வருடங்கள் ஒரு பட்டாளக்காரனாக ஊர் ஊராக சுற்றித் திரிந்த மனிதன்தான் இப்படி சந்தேகப்படுகிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடன் முகாமில் தூங்கிக் கொண்டிருந்த நண்பனின் சரீரத்திலிருந்து பிரித்தெடுத்த தலை புழுதி படிந்த மண்ணில் கிடந்து துடிப்பதைப் பார்த்த, முன் வரிசையில் இருந்தவர்கள் குண்டடி பட்டு விழுந்து கிடக்க, அவர்கள் மீது நடந்து சென்ற ஒரு பட்டாளக்காரன். ஆனால், கண்காட்சியைப் பார்ப்பதற்காக என்பதைப் போல கூட்டமாக நின்று கொண்டிருந்த மனிதர்களுக்கு மத்தியில் தன்னை நிறுத்திக் கொண்டு, 'நீயாடா அம்மாவுக்கும், மகளுக்கும் புருஷன்?' என்று ஒரு பொறுக்கி கேள்வி கேட்டது இதுவே முதல் முறை. அவனுக்குப் பின்னால் எதையும் செய்யக் கூடிய கைத்தடிகளின் ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்? அப்போது நாக்கு சுருண்டு கொண்டது. தைரியம் விலகிச் சென்று விட்டது. அது என்னுடைய பலவீனத்தின் காரணமாகவா? என்னுடைய கண்களுக்கு முன்னால் இறுதி மூச்சை விட்ட ஒரு நண்பனின் விதவையான மனைவியையும்,  மகளையும் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். மேலும் சற்று விளக்கமாக கூறுவதாக இருந்தால்- ஆதரவற்ற அந்த தாயையும் மகளையும் என்னிடம் ஒப்படைத்து விட்டுத்தான் அந்த நண்பன் இறந்தான். 'மாத்யூஸ் இருக்கிறான். அழாதே.' என்று இறுதி நேரத்தில் அவன் திரும்பத் திரும்ப கூறினான். அப்படி கூறக் கூடிய அளவிற்கு அந்த நட்பு உறவிற்கு நெருக்கம் உண்டான கால கட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, ஆச்சரியமும்...

வண்டியின் ஹார்ன் சத்தம் கேட்கிறது. தப்பித்து விட்டேனா? ஓ... லாரி. படகுத் துறைக்கு அப்பால் மாட்டு வண்டிகளும் கார்களும் செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றன. பேருந்து மட்டும் வரவில்லை...

'பிறகு?'

'ஓ...'

'தெற்கு பக்கம் போறீங்களா?'

'ஆமாம்.'

'எங்கே போறீங்க?'

'......'

'இங்கே... எங்கே போயிட்டு வர்றீங்க?'

'அந்தக் கரையில் ஒரு ஆளைப் பார்க்க வேண்டியதிருந்தது.'

'இனி வண்டி வராதுன்னு சொல்றாங்க.'

'அப்படியா?'

பெஞ்சின் தலைப் பகுதியில் இந்த ஆள் எப்போது வந்து உட்கார்ந்தார்? வண்டி வராதாமே! அது அப்படித்தான் நடக்கும், சாதாரண லைன் பேருந்துகளைப் பற்றிய எண்ணத்தை வைத்துக் கொண்டு இந்தச் சாலையில் பேருந்திற்காக காத்திருப்பது என்பது முட்டாள்தனமான செயல்தான். பத்து மைல் தூரத்திற்குள் மூன்று நதிகளைக் கடக்க வேண்டியதிருக்கிறது. புஞ்சை வயல்களுக்கு மத்தியில் உயர்த்தி அமைக்கப்பட்ட அணைக்கட்டின் வழியாகத் தான் பெரும்பாலும் பாதை. ஒரு நல்ல மழை பெய்தால், அணைக்கட்டு உடைய ஆரம்பித்து விடும். எங்கேனும் அணைக்கட்டு உடைந்திருக்குமோ?

'நாம நடக்கலாமே? வேகமாக நடந்தால் நான்கைந்து நாழிகைகள்ல இருட்டுற நேரத்திலாவது வீட்டை அடைந்து விடலாம். என்ன?'

நான் உரையாடவில்லை. அவர் மீண்டும் கேட்டார்:

'அக்கரையில் எந்த வீட்டுக்குப் போனதா சொன்னீங்க?'

'ஒரு... ஒரு நண்பனைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.'

'வீட்டின் பெயர் என்ன?'

'வீட்டின் பெயர் ஞாபகத்தில் இல்லை.'

அவர் சற்று மிடுக்குடன், அர்த்தத்தை வைத்துக் கொண்டு பார்த்தார். பெயர் தெரியாத வீட்டிற்கு நண்பனைப் பார்ப்பதற்காகச் செல்வது! அப்போதுதான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். நடுத்தர வயதைக் கொண்ட, திடகாத்திரமான சரீரத்தைக் கொண்டிருக்கும் ஒரு ஆள். தலைமுடி முழுவதும் நரைத்திருந்தன. சேர்க்கைக்கு சரியான ஆள் அல்ல என்று தோன்றியிருக்க வேண்டும்- அவர் எழுந்து நடந்தார். போய்க் கொள்ளுங்கள். எனக்கு சிறிது தனிமை வேண்டும். மழையோ காற்றோ விருப்பம்போல வந்து கொள்ளட்டும். வேதனை நிறைந்த ஒரு கட்டு முள் இதயத்திற்குள் மாட்டிக் கிடக்கிறது. அந்த வேதனையை எப்படி அகற்றுவது?

'என் வீட்டில் எந்த நாய்க்குடா அதிகாரம்? தைரியம் இருந்தால், வாடா. ஒவ்வொண்ணையும் நான் அறுத்து எறியிறேன்' என்று கூறிக் கொண்டு விஜயா வெளியே வராமல் இருந்திருந்தால் அவன் என் உடலுக்கு பாதிப்பு உண்டாக்கியிருப்பானோ? 'ஆமாம்' என்று உள் மனம் பதில் கூறுகிறது. அப்போது காப்பாற்றியது அவள்தான்- விஜயா. சிறிய கண்களில் உதிர்ந்து விழுவதற்காக காத்திருக்கும் இரண்டு துளி கண்ணீருடன் ஒன்பது வயது கொண்ட ஒரு சிறுமி இதோ... என் கண்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். திறந்து வைத்த ஆங்கில புத்தகத்திலும் என் முகத்திலும் அந்த கண்கள் மாறி மாறி பதிகின்றன.


'நேற்று நான் குறிப்பாக சொல்லிட்டுப் போனேன்ல, விஜயா... இதை படிச்சிருக்கணும்னு.'

'வாசலில் கட்டம் போட்டு குதித்துத் தாண்டுறதுதான் சாயங்காலம் அவளோட வேலையா இருக்கு'- சமையலறையிலிருந்து தாய்.

'சொல்லலைன்னா, இன்னைக்கு அவளுக்கு இரவு உணவு கிடையாது. பெண்ணை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கா'- தந்தை.

தந்தை மீது பயம் இல்லாமலிருந்த காரணத்தால், ஏதாவது ஒன்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று என்னையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவள் விஷயத்தில் தன் அளவிற்கு எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று தாமோதரன் நம்பினான். இன்னும் சொல்லப் போனால்- தன்னை விட, உணர்ச்சி மயமாக ஆரம்பித்து, வளர்ந்த அந்த நட்பு உறவைப் பற்றிய நினைவு எந்த அளவிற்கு ஆழமாக இதயத்தில் பதிந்து கிடக்கிறது! ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து... அரை இலட்சம் பேர் என்ற எண்ணிகை பலம் கொண்ட ஒரு பட்டாளப் பிரிவின் பதிவு மையத்தில் அன்று இரண்டாயிரம் க்ளார்க்குகள் இருந்தார்கள். அதில் பாதிக்கும் மேல் மலையாளிகள். மத்திய இந்தியாவிலிருந்த அந்த முகாமில் அந்த வகையில் ஒரு சிறிய கேரளம் உருவாக்கப்பட்டது. எல்லோரும் பதினேழுக்கும் இருபத்து ஐந்துக்கும் இடையில் உள்ள வயதைக் கொண்ட, எதற்கும் தயாராக இருக்கும் இளைஞர்கள். போர் தலையை உயர்த்திக் கொண்டு நிற்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத போர் நடக்கும் இடங்களுக்கு தினமும் 'ட்ராஃப்ட்' செல்கிறது. போனவர்களைப் பற்றி அதற்குப் பிறகு எதுவும் தெரிவதில்லை. எனினும், முகாமில் இருப்பவர்களின் உற்சாக பொங்குதலுக்கு எந்தவித குறையும் இல்லை. அது அந்தச் சூழ்நிலையின் தனித்துவ குணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் வயது காரணமாக இருக்குமோ? முகாமில் முதல் முறையாக ஒரு மலையாள நாடகத்தில் நடிப்பதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது யார்? குட்டன் பிள்ளையா? ஃபிலிப்பா? முன்பு நாடக கம்பெனிகளில் நாயகர்களாக அரங்குகளில் கொடி கட்டிப் பறந்த வீரர்கள் அவ்விருவரும். சிறிய இலக்கியவாதிகளும் ரசிகர்களும் முகாமில் நிறைய இருந்தார்கள். நடிப்பதற்கான நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒத்திகை ஆரம்பமானது. தலைமைப் பொறுப்புகளெல்லாம் நடிகர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்தான். எனினும், ஒத்திகை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான் தினமும் செல்வேன். பின்னால் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருப்பேன். என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள். கவனிக்கும் அளவிற்கு, நான்கு பேர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சரக்கு எதுவும் என்னிடம் இல்லை. ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, சோகம் நிறைந்த ஒரு காட்சியில் நாயகி பாடுவதற்கு ஒரு பாடல் வேண்டும் என்ற கருத்து வந்தது. பாடலை உருவாக்கக் கூடிய பொறுப்பை அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு இலக்கியவாதி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவன் எழுதிய பாடலைப் பாடி, திருப்தியை உண்டாக்க முடியவில்லை. நான்கைந்து நாட்கள் அதைச் சோதித்துப் பார்த்து தோல்வியை அடைந்ததும், நான் வெட்கத்துடன் கூறினேன்:

'நான் ஒரு பாடலை எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.'

தொடர்ந்து பாகெட்டிற்குள்ளிருந்து ஒரு தாளை எடுத்து நீட்டினேன். இலக்கியவாதிகளும் நடிகர்களும் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால், நாயகியாக நடித்த ஆள் மெல்லிய, இனிய குரலில் அதைப் பாடியபோது அவர்களுடைய சந்தேகம் ஆச்சரியமாக மாறியது. பையன் பரவாயில்லையே! தொடர்ந்து அந்த நாடகத்திற்கு நான் நான்கைந்து பாடல்களை எழுதினேன். நாடகம் வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கியமான காரணம் பாடல்கள்தாம் என்று யாரோ கூறினார்கள்.

நாடகம் நடைபெற்ற மறுநாள்... சாயங்காலம் உணவு சாப்பிட்டு விட்டு, அறையில் வந்து அமர்ந்திருந்தபோது வெளுத்து, அழகாக இருந்த ஒரு ஆள் அறையின் கதவிற்கு அருகில் வந்து நின்று கொண்டு கேட்டான்:

'மாத்யூ என்பதுதானே பெயர்?'

'ஆமாம்...'

அவன் சிரித்தான். பிறகு உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். அப்போதுதான் தோளில் சிவப்பு நிற கோடுகளுக்கு மத்தியில் இருந்த சிறிய நட்சத்திரத்தைப் பார்த்தேன். ஜமேதார்... இதற்கு முன்பு அறிமுகமாகியிராத ஒரு ஜமேதார் சாதாரண ஒரு க்ளார்க்கைத் தேடி வந்திருக்கிறான். நான் எழுந்து நிற்க முயற்சித்தபோது, என்னைப் பிடித்து அமர வைத்துக் கொண்டு அவன் சொன்னான்:

'பெயர் ஜமேதார் ஹெட் க்ளார்க் தாமோதரன். பதினெட்டாவது ஸ்டாலியனிலிருந்து நேற்றுதான் வந்திருக்கிறேன். இரவில் நாடகம் பார்த்தேன். அந்த பாடல்கள் என்னைக் கவர்ந்து விட்டன. இந்த அளவிற்கு திறமை வைத்திருக்கும் ஒரு ஆள் பட்டாளத்தில் இருப்பான் என்று மனதில் நினைக்கவில்லை. வாழ்த்துக்கள்.'

தொடர்ந்து நலம் விசாரிப்புகள் நடந்தது. நான் அந்த ஆளை விட மிகவும் மரியாதைக்குரிய மனிதன் என்ற நிலையில்தான் உரையாடலும் நடவடிக்கைகளும்... அந்தச் சந்திப்பும் நலம் விசாரிப்பும் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக ஆயின. சாயங்காலம் ஆகி விட்டால், தாமோதரன் தேடி வருவான். அதற்குப் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பாதையிலோ, மைதானத்தின் வழியாகவோ நடந்து செல்வோம். ஆச்சரியப்படும் வகையில் வேகமாக அந்த நட்பு உறவின் கண்ணிகள் பலம் கொண்டதாக ஆயின. ஒருவரை விட்டு ஒருவரிடம் ரகசியங்கள் இல்லை. இதயத்தில் மறைத்து வைத்திருப்பதற்கு எதுவுமில்லை. மனைவியின் கடிதங்கள் வந்தால், என்னிடம் காட்டுவான். குடும்ப விஷயங்களைப் பற்றி கருத்துக்கள் கேட்பான். அப்படித்தான் விஜயா அறிமுகமானாள். அப்போது விஜயாவிற்கு ஏழு வயதல்லவா? ஆமாம்... மூன்றாவது வகுப்பில் அவள் படித்துக் கொண்டிருந்தாள். தந்தை எழுதிய கடிதத்தின் அடிப் பகுதியில் அவள் எனக்கு தனியாக எழுதினாள்:

'அங்கிளுக்கு,

உங்களின் பாடலை எனக்கும் அம்மாவிற்கும் பாட தெரியும். அப்பாவுடன் நீங்களும் விடுமுறை எடுத்து வர வேண்டும். நான் பார்க்க வேண்டும்.'

ஆனால், நான் அங்கு சென்று பார்ப்பதற்குப் பதிலாக அவளும் தாயும் சேர்ந்து இங்கு வந்தார்கள். தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் அது நடந்தது...


மழைத் துளிகள் விழுந்து கொண்டிருக்கின்றன அல்லவா? மழை மேகம் சுற்றிலும் பரவி விட்டிருக்கிறது. வண்டி வருமா?... லாரியும் மாட்டு வண்டிகளும் இப்போதும் தாங்கள் செல்லக் கூடிய நேரத்திற்காக காத்து கிடக்கின்றன. கார்களுக்குத்தான் முதலிடம். அது சரியா? மாட்டு வண்டியாக இருந்தாலும், லாரியாக இருந்தாலும் முன்னால் வந்தவர்களை முன்னாலேயே போகச் சொல்வதுதானே சரியானது? என்ன இந்த தவறும் சரியும்? இயற்கையிலேயே அப்படிப்பட்ட ஒரு சட்டம் பின்பற்றப்படுகிறதா? முன்பே வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் இறங்கியவர்கள் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, பின்னால் வந்த எவ்வளவு பேர் அவர்களைத் தாண்டிச் செல்கிறார்கள்! தாமோதரனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அவன் எவ்வளவு அருகில் மரணத்தைச் சந்தித்தான்! கையை நீட்டி எட்டிப் பிடிக்கக் கூடிய  அளவிற்கு அவ்வளவு நெருக்கத்தில்... இரவு பத்து மணி வரை நான் அந்த வீட்டில் இருந்தேன். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு முடித்து, தமாஷாக பேசி சிரித்துக் கொண்டிருந்து விட்டு, திரும்பி வந்தேன். பொழுது புலரும் நேரத்தில் கேள்விப் படுகிறேன்: ஜமேதார் தாமோதரன் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறான் என்று. பார்ப்பதற்காக சென்றிருந்தபோது, மருத்துவமனையின் சிவப்பு நிற கம்பளி போர்வைக்குள் தளர்ந்து போய் படுத்திருந்தான். புன்னகைக்க முயற்சித்தது, பலனில்லாமல் போனது. பேசியபோது நாக்கு குழைந்தது. அன்று சாயங்காலமே தூரத்திலிருந்த பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது கூட, மரணம் இந்த அளவிற்கு அருகில் இருக்கிறது என்று சந்தேகப்படவில்லை. ஆனால், மறுநாள் காலையில் மிகவும் சீரியஸாக இருப்பதாக தந்தி கிடைத்தது. சாயங்காலம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும். அணிந்திருந்த ஆடைகளுடன் விஜயாவும் அவளுடைய அன்னையும் என்னுடன் சேர்ந்து புறப்பட்டார்கள். போய்ச் சேர்ந்தபோது, எங்கள் மூன்று பேரையும் மாறி மாறி பார்த்தான். அந்தப் பார்வையில் கவலையும் பயமும் முன்னால் நின்று கொண்டிருந்தன. நேராக படுக்க முடியவில்லை. மிகவும் சிரமத்துடன்தான் மூச்சு விட முடிந்தது. டாக்டர் என்னை மட்டும் வெளியே அழைத்து கேட்டார்:

'நண்பரா?'

'ஆமாம், சார்.'

'அளவுக்கு மேல குடிப்பாரோ?'

'இல்லை, சார்.'

'உங்களுக்குத் தெரியாது. முன்பு குடித்திருப்பார். ஈரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனி காப்பாற்ற முடியாது.'

'என்ன சார்?'

'இந்த இரவை விடியச் செய்வாரா என்பதே சந்தேகம்தான்.'

வெடித்துக் கொண்டு வந்த அழுகையை அடக்குவதற்கு முயற்சித்தபோது, டாக்டர் தாழ்ந்த குரலில் சொன்னார்:

'டோன்ட் டெல் ஹெர் நவ்.'

மெதுவாக காலடிகளை எடுத்து வைத்து ஏறிச் சென்றேன். அந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை. விஜயாவைப் பார்க்க முடியவில்லை. அவளுடைய தாயை...

'மாத்யூஸ்...'- மெல்லிய பலவீனமான குரல்.

'கொஞ்சம் இந்தப் பக்கம் வா.'

அருகில் சென்றேன். மிகவும் சிரமத்துடன் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன.

'இவளுக்கு யாருமே இல்லை என்ற விஷயம் தெரியும்ல? நான்... இனி... இனி... இங்கே இல்லை.'

நடுங்கிப் போகும் அளவிற்கு உரத்த குரலில் அழுகைச் சத்தம்... விஜயா தன் தாயின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருக்கிறாள். அந்த அழுகையில் கரைந்து போகும் பலவீனமான குரல் கட்டிலில் இருந்து கேட்டது.

'மாத்யூஸ் இருக்கிறான். அழாதே.'

தெளிவற்ற, பயங்கரமான ஒரு கனவைக் காண்பதைப்போல அனைத்தும் இருந்தன. இறுதியில் அது நடந்தது. விஜயாவின் பிஞ்சுக் கைகள் தன் தந்தையின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளுக்குள் நெரிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

'சார்!'

'.........'

'சார்!'

'ம்... என்ன?'- அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். பீடி சுற்றும் மனிதன். சுற்றப்பட்ட பீடிகளை எண்ணி ஒப்படைத்து விட்டு, அவன் இலைகளை வெட்டிக் கொண்டிருக்கிறான்.

'சார், எதையோ ஆழமாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ?'

'ம்... ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டிருந்தேன்.'

'சரி... இனிமேல் வண்டியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். பிறகு... எங்கே தங்குவீங்க?'

'இல்லை... தங்க வேண்டியது இல்லை. மழை பெய்து நின்ற பிறகு, நடந்து போகலாம்னு நினைக்கிறேன்.'

'அது சரி...'

அப்படி கூறியது நன்கு சிந்தித்துக் கூறிய கருத்து அல்ல. எதையும் தீர்மானிக்க முடியாத அளவிற்கு மனம் முற்றிலும் குழம்பிப் போய் கிடந்தது. விஜயா இப்போது என்ன படித்துக் கொண்டிருப்பாள்? அவளுடைய தாய்? அவளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிறகுதான் அவர்களால் என்னைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடத்தின் விடுமுறையும் கழிந்து திரும்பி வரும்போது, விஜயா எழுதுவாள்: 'இப்படி நடக்கிற அளவிற்கு... அங்கிள், உங்களுக்கு நாங்கள் எதுவும் செய்து விடவில்லையே! நீங்கள் எங்களை மறந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டோம்.' மறந்து விட்டேன் என்று அவள் எழுதுவது, அந்த வார்த்தையைக் கொண்டு நினைக்கப்படும் அர்த்தத்தில் அல்ல. அதற்கு மாறாக, அவர்களைப் பற்றி, யாருக்காவது ஞாபகம் என்ற ஒன்று இருந்தால், அது எனக்கு மட்டும்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு கூறுவதற்கு இல்லையென்றாலும், ஒரு நண்பனின் இறுதி ஆசைகளை நிறைவேற்ற முயற்சித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி என் அளவிற்கு அறிந்திருக்கக் கூடிய இன்னொரு நண்பன் அவனுக்கு இல்லை. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவனுடைய தந்தை எப்போதோ அவனுடன் கொண்டிருந்த அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். பாகம் பிரித்ததில் கொடுத்த பத்து சென்ட் நிலத்தை, படிப்பிற்காக செலவழித்த பணத்தைக் கணக்கு வைத்து அந்த தந்தை திரும்ப வாங்கிக் கொண்டார். அதற்குப் பிறகு எஞ்சியிருந்த உறவினர்கள் அவனுடைய மனைவியின் வழியில் வந்தவர்களே. விஜயாவிற்கு ஐந்து மாமன்மார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அந்த அன்னையும் மகளும் அங்கு திரும்பிச் சென்றார்களோ? அப்படி இருக்க வழியில்லை. காரணம்- அவர்கள் அனைவரும் ஏற்கெனவே அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். தாமோதரன் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் காரணம். ஐந்து மருமகன்கள் இருக்க, அவன் தன் மனைவியையும் மகளையும் வாடகை வீட்டில்தான் இருக்கச் செய்திருக்கிறான். ஐந்து பேரில், கள்ளுக் கடை நடத்தும் ஒரு ஆளைப் பற்றி தாமோதரன் கூறியது ஞாபகத்தில் இருக்கிறது. மற்ற நான்கு பேரும் கள்ளு இறக்கும் தொழிலாளிகளாகவும், சுமை தூக்கும் தொழிலாளிகளாகவும் இருந்தார்கள். எதிர்பாராத வகையில், தாமோதரனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதும், கடை வைத்திருந்தவன் சகோதரியையும் மகளையும் அங்கு வரும்படி அழைத்தான். வேறு எங்கும் போவதற்கு வழியில்லாமலிருந்ததால், அவர்கள் அங்கே சென்றார்கள்.


ஆனால், அவர்கள் சென்று ஒரு மாதத்திற்குள் கேள்விப்பட்டது எந்த அளவிற்கு அதிர்ச்சியைத் தரக் கூடிய செய்தியாக இருந்தது! முகாமில் இருப்பவர்கள் நன்கொடையாக ஒவ்வொருவரிடமும் வாங்கி ஒப்படைத்த தொகையைக் கூட அவன் கடனாக வாங்கியிருக்கிறான். அந்த மனிதனின் நினைவுடன் மிகவும் நெருக்கமாக நட்பைக் காட்டப் கூடிய சில பொருட்களைக் கூட அந்த ஆள் கைப்பற்றிக் கொண்டான். தன் அன்னை கூறக் கூற, விஜயா எழுதும், கண்ணீரில் நனைந்த கடிதங்கள் என்னை அதிர்ச்சியடையச் செய்தன. என்ன செய்ய முடியும்? 'வேறு யாருமில்லை. எல்லாவற்றையும் விஜயாவின் அங்கிளிடம் கூறாமல் நான் யாரிடம் கூறுவது?' இறுதி நிமிடத்தில் அவன் கூறிய வார்த்தைகள் இதயத்தில் பதிந்து நின்றிருக்கின்றன....

ஓ... மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறதே! கடையின் தட்டி சாய்ந்து குத்தியபோது, நதியும் வானப் பரப்பும் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்து விட்டன. மழைத் துளிகளுக்குத்தான் என்ன சக்தி! சுற்றி வீசிக் கொண்டிருந்த காற்றில் நீர் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. தன்னுடைய அறிவுரையைக் கேட்காததால் உண்டான வருத்தம் காரணமாக பீடி சுற்றுபவன் பேசாமல் இருக்கிறானோ?

என்ன மோசமான நிமிடத்தில் இங்கு கிளம்பி வருவதற்கு தீர்மானித்தேன்? ஐந்தெட்டு வருட காலமாக மனதின் தூண்டுதலை தடை செய்து வைத்திருந்தேன். 'இந்த ஊருக்கு வந்தால் உன்னுடைய எலும்பு உன்னிடம் இருக்காது' என்ற மிரட்டல் கடிதம் கிடைத்ததுதான் காரணமோ? 'சகோதரியும் மருமகளும் என்ற நிலையில் வேண்டாம். மனிதப் பிறவிகள் என்ற நிலைக்காவது அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்' என்று கடையின் சொந்தக்காரனுக்கு எழுதியதற்குப் பதிலாகத்தான் அந்த மிரட்டல் கடிதம் வந்தது. அப்போது அந்த தாயும் மகளும் பட்டினி கிடந்தார்கள். அவர்களுடைய பென்ஷன் வேண்டுகோளைப் பற்றி என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. கடை உரிமையாளருக்குச் சொந்தமான ஒரு இடத்தில் தென்னை மடல்களையும், கொம்புகளையும் கொண்டு உண்டாக்கப்பட்ட வீட்டில்தான் அவர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த தாயும் மகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அந்த மனிதன் ஊரில் பெரிய மனிதனாகவும் பணக்காரனுமாக நடந்து திரிந்தான். அதைத் தெரிந்து கொண்டுதான் நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன். அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு அது வழி வகுத்தது. நான் முற்றிலும் தவறாக நினைக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு விஜயாவின் அன்னையுடன் இருக்கும் உறவு தவறான உறவு. ஊரில் என்னைப் பார்த்தால் கொன்று அழித்து விடுவதாக ஒரு மிரட்டல் வேறு. மீண்டும் விஜயாவின் அன்னையின் கடிதம் கிடைத்தபோதுதான், அந்த மிரட்டலுக்கான அர்த்தம் புரிந்தது. கடன் வாங்கிய பணத்தைத் திருப்பி கேட்டதே நான் கூறியதால்தானாம். கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் இருக்கும் பென்ஷன் தொகையையும் ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று போட்டிருந்த திட்டத்திற்கு நான் தடையாக இருந்து விட்டால்...?

அந்த மிரட்டலால் நான் பின் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் விஷயத்தில் மேலும் பொறுப்புணர்வு உண்டானது. இயலக் கூடிய பொருளாதார உதவிகளைச் செய்தேன். 'இயலக் கூடிய' என்று கூறுவது சரியா? சொந்த விஷயங்களை ஒதுக்கி வைத்து விட்டுக் கூட நான் அவர்களுக்கு உதவியிருக்கிறேன். சற்று தாமதமானாலும், பென்ஷன் அனுமதிக்கப்பட்டு, வந்து சேர்ந்தது. அதை எந்த அளவிற்கு நிம்மதிப் பெருமூச்சுடன் தெரிந்து கொண்டேன்! 'அரியர்ஸ்'ஸாக நல்ல ஒரு தொகை இருந்தது. பிறகு ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய செலவிற்குத் தேவைப்படும் பணம் கிடைக்கும். அந்த தகவல்கள் தெரிந்தவுடன், நான் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்:

'எல்லா விஷயங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இனி உங்களுக்கு என்று இருப்பது நீங்கள் மட்டுமே. உதவிக்கு கடவுளும். வேறு எந்த ஆளையும் எதிர்பார்க்க வேண்டாம்.'

அதைத் தொடர்ந்து அவர்கள் அந்தச் சிறிய வீட்டையும் நிலத்தையும் விலைக்கு வாங்கினார்கள். அதற்காக அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய எதிர்ப்பு எந்த அளவிற்கு பெரிதானது! அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள நேர்ந்தபோது இதய உறவுகளின் அடிப்படை குணங்களைப் பற்றியே சந்தேகம் உண்டாக ஆரம்பித்து விட்டது. சிறிது பணம் உண்டாக்கும் ஈர்ப்பிற்காக ஒரு சகோதரியுடன் இந்த அளவிற்கு கொடூரமாக நடந்து கொள்வதற்கு தைரியம் இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தானே? அந்த சகோதரனால் சந்தோஷத்துடன் வாழ முடிகிறது என்பதையும், சகோதரி விதவையாகவும் யாருமற்ற அனாதையாகவும் இருக்கிறாள் என்பதையும் மனதில் நினைக்கும்போது...

அந்த எதிர்ப்பைத் தாண்டி அவர்கள் வாழத்தான் செய்தார்கள். எதற்கும் சிரமப்படவில்லை. கிடைத்ததில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தி வைத்தார்கள். இதயத்தில் முழுமையான திருப்தியும் பெருமையும் உண்டாயின. ஆமாம்- தோற்கவில்லை. அந்த நண்பனின் இறுதி விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் எனக்கு உள்ள பங்கு மிகச் சிறியதாகவே இருந்தாலும், இருக்கட்டுமே!

இறுதியில் அது நடந்தது. மிரட்டல் கடிதத்தைப் பற்றி மறக்கவில்லையென்றாலும், அந்த தாயையும் மகளையும் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். அது ஒரு தவறான முடிவோ? கேட்டும் கூறியும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து சென்றபோது, முற்றத்தில் தாயும் மகளும் காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சுத்தமும் ஐஸ்வர்யமும் உள்ள அந்தச் சிறிய வீடு இதயத்தில் குளிர்ச்சியை உண்டாக்கியது. விஜயாவின் தாயால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்ததை விட விஜயாவிடம் தைரியமும் செயலாற்றும் திறமையும் இருந்தன. தரையில் கால் ஊன்றாத வயதிலேயே, துயரங்கள் நிறைந்த வாழ்க்கையின் பக்கங்களைக் கடந்து வந்தபோது, அவையெல்லாம் அவளுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அந்தச் சிறிய வீட்டின் ஐஸ்வர்யத்திற்குப் பின்னால் இருக்கக் கூடிய உழைப்புகள் கூட அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும்...

திடீரென்று முற்றத்தில் சத்தம் கேட்டது:

'வீட்டுக்குள்ளே யாருடீ?'

நடுங்கிக் கொண்டே விஜயா சொன்னாள்:

'சங்கர் மாமா.'

எனக்கு முன்பே விஜயாவும் அவளுடைய அன்னையும் முற்றத்திற்கு வந்தார்கள். கறுத்து தடிமனாக இருந்த ஒரு குள்ளமான மனிதன் முற்றத்தில் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் எட்டு, பத்து ஆட்கள் இருந்தார்கள். வேலிக்கு அருகில் ஆண்களும் பெண்களுமாக நிறைய வேடிக்கை பார்ப்பவர்களும்... எல்லாவற்றையும் நான் தெளிவாக பார்த்தேனா? இல்லை... சூழ்நிலையின் தீவிரத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு தாமதமாகி விட்டது. என்ன...? என்ன செய்ய வேண்டும்?

'கொஞ்ச காலமாகவே சற்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.'


பின்னால் கூட்டத்தில் நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவரின் கிண்டல் நிறைந்த சத்தம். அந்த குள்ளமான மனிதன் எனக்கு நேர் முன்னால் இரண்டு மூன்று அடிகள் தூரத்தில் நின்று கொண்டிருந்தான். கள்ளின் தாங்க முடியாத வாசனை. கையிலிருந்த சிறிய கழியைச் கழற்றியவாறு அவன் கேட்டான்:

'நீயாடா அம்மாவுக்கும், மகளுக்கும் புருஷன்?'

திகைப்படைந்து நின்று விட்டேன். அந்த கேள்விக்கு பதில் கூறக் கூடிய மன தைரியத்தைக் கொண்டு வர முயற்சித்தேன். முயவில்லை. பதிலை எதிர்பார்த்து அவன் அதைக் கேட்கவில்லை. பின்னால் நின்றிருந்தவர்கள் நெருங்கி வந்தார்கள். விஜயா கடந்து வந்ததை நான் பார்க்கவில்லை. சத்தம் மட்டும் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, அவளுடைய கையில் கறியை அறுக்கும் கத்தி இருந்தது. பிரசவித்த புலியைப் போல அவள் உரத்த குரலில் கத்தினாள்:

'எந்த நாய்க்குடா என் வீட்டின் விஷயங்கள் தெரிய வேண்டியது? வாங்கடா... நான் ஒவ்வொண்ணா அறுத்து எறியிறேன்...'

ஒரு நிமிடம் அவன் உறைந்து போய் நின்று விட்டான். அப்போது பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் யாரோ ஓடி வந்து அமைதி உண்டாக்க முயற்சித்தார்கள். அதனால் தப்பிக்க முடிந்தது. ஓடினேனோ? நடக்கவில்லை. அது மட்டும் உண்மை. கால்கள் சிறகுகளாக வடிவமெடுத்திருக்கக் கூடாதா என்று மனதிற்குள் ஆசைப்பட்டேன். சாலையில் கால் வைத்த பிறகுதான் திரும்பிப் பார்ப்பதற்கே தைரியம் வந்தது.

'சார்...'

'என்ன?'

'உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு. அதோ... வண்டி வர்றதை பார்க்குறீங்கள்ல...'

'ஓ... வண்டி!'

முற்றத்திற்கு வந்தேன். மழை எப்போது நின்றது? மழை மேகங்கள் அகன்று, தெளிவாக இருந்த மேற்கு திசை வானத்தில் சிவப்பு நிற மேகங்கள் சிதறிக் கிடந்தன. வண்டி 'செங்ஙாட'த்திலிருந்து (நீரில் பயணிக்கும் மிதவை. அக்கரையிலிருந்து இக்கரைக்கும், இக்கரையிலிருந்து அக்கரைக்கும் மனிதர்கள், பொருட்கள், வாகனங்கள் போய்ச் சேர்வதற்கு அது பயன்படும்) இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக ஏறி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.