Logo

முதல் காதல் கடிதம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6603
Mudhal Kadhal Kaditham

முதல் காதல் கடிதம்

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ழு நாட்களுக்குப்பிறகு, இன்றுதான் சூரிய ஒளியே தென்படுகிறது. மேகங்களால் மூடப்பட்டிருந்த வானம் தெளிவான நீல நிறத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, வானம் இருண்டு மூடிக்கிடந்தபோது, இந்த அளவுக்குப் பனி விழுமென்று நினைக்கவே இல்லை. இரண்டு நாட்கள் முழுவதும் பிரசவ வேதனை எடுத்து நின்றுகொண்டிருக்கும் கர்ப்பிணியைப்போல, மழைமேகங்கள் நிறைந்திருந்த வானம் மூச்சைப் பிடித்துக்கொண்டு காட்சியளித்தது.

அப்போதுதான் என்ன ஒரு குளிர்ச்சி! நரம்புகள் அனைத்திலும் ரத்தம் முழுவதும் உறைந்து விட்டதைப்போல தோன்றியது. கைகளிலும் கால்களிலும் முகத்திலும் கூர்மையான ஊசிகள் குத்துவதைப்போல இருந்தன. இரண்டாவது நாள் மாலை நேரம் ஆனபோது, சரளை கற்களைப் போல பனி விழ ஆரம்பித்தது. அது தொடக்கம். பொழுது புலர்ந்தபோது, வாசலில் அரையடி உயரத்திற்குப் பனி உறைந்து கிடந்தது. முல்லை மலர்கள் சொரிவதைப்போல அப்போதும் பனி பொழிந்துகொண்டிருந்தது. அதிகமாகவும் குறைவாகவும் ஐந்து நாட்கள் அது நீடித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப் பகுதி முழுவதும் பனிப் போர்வை அணிந்திருந்தது. மரங்களின் உச்சிகளிலும் இலைகளிலும் கூட வெள்ளை நிறம் பூசப்பட்டிருந்தது.

இன்று வெய்யில் தோன்றும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எதுவுமே நடக்காததைப்போல, அதிகாலைப் பொழுது நல்ல பிரகாசத்துடன் இருக்கிறது. கிழக்கு திசையில், மலைக்கு மேலே சூரியன் புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறது.

வாசலில் வெய்யில் பரவுவதை எதிர்பார்த்துக் கொண்டு எல்லாரும் ‘பாரக்’கிற்குள் அமர்ந்திருந்தார்கள். ஆள் உயர கோட்டும், கனமான காலணிகளும், கையுறைகளும் அணிந்திருந்தாலும் குளிர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. போர் முறைகளை நன்கு கற்றிருக்கும “திறமைசாலியான எதிரியைப்போல அது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, தாக்குதலை நடத்துகிறது. ஏழு நாட்களாக எல்லாரும் அந்த எதிரியின் கடுங்காவல் பாசறையில் பிணைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.

சூரியன் தேவதாரு மரங்களுக்கு மேலே வந்த போது ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்களுக்கு நடுவிலிருந்த ‘பரேட் ஸ்கொயரில் வெய்யில் பரவியிருந்தது. அங்கு முதலில் ஓடிச்சென்ற ஆள் மிகுந்த சந்தோஷத்துடன் உரத்த குரலில் சொன்னான் : “எல்லாரும் வாங்க... நல்ல வெய்யில் இருக்கு.”

ஐந்தே நிமிடங்களில் அங்கு ஆட்கள் நிறைந்து விட்டார்கள். விடுமுறை நாளாக இருந்ததால் எதிர்பார்த்துக் காத்திருந்து வந்து சேர்ந்த வெய்யிலை விருப்பப்படி ரசிக்கலாம். கடிக்கும் அளவிற்கு குளிர் இருக்கும்போது, வெய்யில அன்பைச் சொரியும் நண்பனாகி விடுகிறது. பூட்ஸ் அணிந்திருந்த கால்கள் பனியின்மீது அழுத்தப்பட்டபோது, மணல் வெளியில் உண்டாவதைப்போல சத்தம் உண்டானது. வெய்யிலின் வெப்பம் பட்டு உற்சாகம் கொண்ட சிலர் துள்ளிக் குதித்தார்கள். அள்ளியெடுத்த பனிக்கட்டிகளை சிலர் தங்கள் நண்பர்களின் மீது எறிந்தார்கள். சிலர் பனிக்கட்டிகளைக் கொண்டு தாஜ்மஹாலை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆட்களின் கூட்டத்தில் ஒருவன் சொன்னான்.

“மேஜையை எடுத்துப் போட்டால், ஆறு பேர் அமர்ந்து ஒரு விளையாட்டை ஆரம்பிக்கலாம்..”

“பந்தயம் இருக்கிறதா?”

“ஓஹோ...”

“ஒரு புட்டி ரம்...?”

“சரி...”

“நானும் குட்டியும் ஜோஸும்...”

“இப்போது சீட்டு விளையாட்டு வேண்டாம். கிராம ஃபோன் எடுத்து, புதிய நான்கு இசைத்தட்டுகளை வைக்கட்டுமா?”

“ரிக்ரியேஷன் அறை பூட்டப்பட்டிருக்கிறதே!”

“நாயிக் வர்க்கி எங்கே?” (வர்க்கிதான் ரிக்ரியேஷன் அறையின் இன்சார்ஜ்).

“வர்க்கியே புஹோய்!”

இசைத்தட்டு வைப்பதற்கு முன்பே ஒருவன் பாட ஆரம்பித்தான்.

“ஆவோ ஹமாரே ஹோட்டல் மே

சாயா பியோ ஜி கறம் கறம்

பிஸ்கட் காலோ நரம் நரம்

ஜோ தில் சாஹே மாகலோ ஹம்ஸே

சப் குச் ஹே பகவான் கஸம்

பகவான் கஸம்...”

(எங்களுடைய ஹோட்டலுக்கு வாருங்கள். சூடான தேநீரைக் குடியுங்கள். மென்மையான பிஸ்கட்களை சாப்பிடுங்கள். அதற்குப் பிறகு தேவைப்படுவதைக் கேளுங்கள். அனைத்தும் இருக்கின்றன. கடவுளின்மீது சத்தியம்...)

அப்போது சாமுவேல் ட்யூட்டி முடிந்து வந்தார். வந்தவுடன் அவர் சொன்னார். ‘எல்லாரும் சந்தோஷமாக வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படித்தானே? எந்த அளவிற்கு சிரமப்பட்டு இதைக் கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா?”

“ஓ! இவர் ட்யூட்டியில் இருந்துகொண்டு, வெய்யிலுக்கு ‘ஸ்பெஷல் டிமாண்ட்’ அனுப்பி, அதை இங்கே கொண்டு வந்திருக்கிறார்!”

“அப்படியென்றால் கொஞ்சம் பணம் செலவாகியிருக்குமே!”

“நாம... இப்படி செலவழிப்பதற்கு கையில் பணம் இருக்கிறதா என்ன?”

“இல்லை... பொதுமக்களுக்காக கடன் வாங்கி செலவழிக்கிறேன்.”

ஒரு தலைவரின் மிடுக்குடன் சாமுவேல் கேட்டார் :

“அப்படியென்றால்... என்ன ப்ரோக்ராம்?”

“சீட்டு விளையாட்டு...”

“வேண்டாம்... ரெக்கார்டு வைக்கணும்.”

“கொஞ்சம் நடப்பதற்காபீ சென்றால் என்ன?”

“இந்த பனிக்கு நடுவிலா நடப்பது?”

“வெறுமனே இருந்து இந்த வெய்யிலில் காயுங்க மனிதர்களே!”

சாமுவேல் இறுதித் தீர்மானமாகக் கூறினார்:

“சீட்டு விளையாட்டுத்தான்...”

சாமுவேலின் தலைமை இல்லாமல் சில காரியங்கள் எதுவும் யூனிட்டில் நடப்பதில்லை. விளையாட்டிலும் முக்கியமான விஷயங்களிலும் அவர் முன்னால் இருப்பார். ஓண விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், குடியரசு நாளன்று விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாமுவேல்தான். எவ்வளவு கருத்து வேறுபாடுகள் கொண்ட காரியங்களாக இருந்தாலும், அவற்றை சரி செய்துவிடுவார். மறுத்துக்கூற முடியாத அளவிற்கு ஒரு ஈர்ப்பு சக்தி அவருடைய நாக்கிற்கு இருக்கிறது. சாமுவேலின் கதைகளையும் வர்ணனைகளையும் கேட்பதற்குத்தான் எவ்வளவு பேர் வந்து கூடுகிறார்கள்!

ஆனால், இந்த முறை சாமுவேலின் தீர்மானம் செயல்படவில்லை.

“விளையாடுவதற்கு சீட்டு எங்கே?”

“நாற்காலியையும் மேஜையையும் வெளியே இழுத்துப் போடாமல் விளையாட முடியுமா?”

“ரிக்ரியேஷன் அறையின் சாவியுடன் அந்த வர்க்கி எங்கே போனான்?”

மீண்டும் யாரோ உரத்தகுரலில் கத்தினார்கள்: “வர்க்கி... புஹோய்!”

அப்போது சாமுவேல் கிழக்குப் பக்கத்திலிருந்த அறையைக் கூர்ந்து பார்ப்பதை கவனித்தார்கள். சிவதாசன் ஒரு கடிதத்தை வாசித்தவாறு, தேவதாரு மரத்திற்குக் கீழே நின்றுகொண்டிருந்தான். சாமுவேல் அழைத்தார். “சிவதாசன், இங்கே வா...”

திடுக்கிட்டு சுய உணர்விற்கு வந்ததைப்போல, அப்பாவித்தனமாய் விழித்துக்கொண்டே சிவதாசன் கடிதத்தை மடித்து பாக்கெட்டிற்குள் வைத்தான். பிறகு மெதுவாக நடந்து வந்தான். அருகில் வந்தவுடன் சாமுவேல் கேட்டார். “கடிதம் யாருடையது?”

“என்ன?”

“இதே கடிதத்தை நேற்று இரண்டு மூன்று முறை வாசிப்பதைப் பார்த்தேனே?”

சிவதாசன் வெட்கத்துடன் சிரித்தான். அந்தப் பையன் சிரிப்பதும் பேசுவதும் பெண்களைப்போல வெட்கத்துடன்தான். என்ரோல் ஆகி ஒரு வருடம் கடந்து விட்டாலும், இப்போதுகூட ஒரு பட்டாளக்காரனுக்கு இருக்க வேண்டிய தைரியம் அவனுக்கு வந்து சேரவில்லை. சாமுவேல் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டார்.


“தாசன்...”

“என்ன?”

“காதல் கடிதமா?”

“இல்லை... இல்லை...”

“இங்க பாரு... முகத்துக்கு நேராக பொய் சொல்லக்கூடாது...”

சிவதாசன் முற்றிலும் பதறிப்போய்விட்டான்.

வெளிறிப்போன முகத்தில் ஒரு குற்றவாளியின் பதைபதைப்பு நிழலாடிக் கொண்டிருந்தது. அவனைத் தட்டிக்கொடுத்தவாறு சாமுவேல் கூறினார். “கவலைப் படாதே தாசன்... திருமதியின் பெயர் என்ன?”

சிவதாசன் முகத்தை குனிந்துகொண்டு நின்றிருந்தான். அப்போது கூப்பாடுகளம் அடக்க முடியாத சிரிப்புகளும் எழுந்தன. “இருந்தாலும் இவ்வளவு சின்ன வயதிலேயே நீ இந்த பிஸினஸை ஆரம்பிச்சிட்டியே, மகனே!”

“சின்ன திருட்டுப் பயலே... இதையும் வைத்துக் கொண்டா நடந்து திரிகிறாய்.”

“கடிதத்தைத் தா... நான் சத்தம் போட்டு வாசிக்கிறேன்.”

‘என் இதயமே!’

கிண்டல் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வந்தபோது, சிவதாசன் அறைக்குள் சென்றுவிட்டான்.

சாமுவேல் சொன்னார். “அந்தப் பையனைக் குறைச் சொல்லி பிரயோஜனமில்லை. அப்படிப்பட்ட வயது...”

அவர் தொடர்ந்து சொன்னார்: “இந்த வயதில் நானும் ஒரு காதல் கடிதத்தை எழுதி அனுப்பியிருக்கிறேன்.”

“அப்படியா?”

“பிறகு?”

“அது ஒரு கதை...”

“கேட்கலாமா?”

“வர்க்கி வந்தாச்சுல்ல! சீட்டு விøளாயட வேண்டாமா?”

“சாமுவேல் சார், உங்க கதையைக் கேட்டபிறகுதான் மீதி எல்லாமே...”

ஒரு புன்சிரிப்புடன், கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சாமுவேல் சிந்தனையில் மூழ்கி நின்று கொண்டிருந்தார். கண்களில் பிரகாசம் பரவிவிட்டிருந்தது.

“பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அது அப்போது எனக்கு மீசை கூட அரும்பியிருக்கவில்லை. சிவதாசனைப் போல அப்போது நானும் ஒரு வெட்கப்படக் கூடியவனாக இருந்ததேன். இதற்கிடையில் நான் கேட்கிறேன்- நான் இந்த கதையைக் கூறினால், நீங்கள் என்னை கேலி செய்வீர்களா?”

“கேலி செய்வதா?”

“நிச்சயமாக செய்யமாட்டோம்..”

“நடந்த சம்பவங்களை அதேபோல சொல்லணும். புரியுதா...”

“பள்ளி இறுதித் தேர்வின் முடிவுகள் தெரிந்த அன்று நான் பட்டாளத்திற்கு வந்து சேர்ந்தேன். பத்திரிகையில் எனது பள்ளித் தேர்வெண் இல்லை என்பது தெரிந்ததும், நேராக ஆட்கள் எடுக்கப்படும் ரிக்ரூட்டிங் அலுவலகத்திற்குச் சென்றேன். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. ‘எந்த பிரிவில் சேர வேண்டும்?’ என்று ரிக்ரூட்டிங் அதிகாரி கேட்டபோது புரியாமல் விழித்தபடி நின்றிருந்தேன். பட்டாளம் என்ற ஒரு பிரிவைத் தவிர, அந்த காலத்தில் நமக்கு வேறென்ன தெரியும்?”

“அது உண்மைதான்...”

“அவர்கள், ‘உன்னை ஒரு க்ளார்க்காக வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜால்னாவில் உள்ள டிப்போவிற்குச் சென்று சேர்ந்து கொள்’ என்று கூறியபோது சந்தோஷம் தோன்றியது. க்ளார்க் கூறியபோது சந்தோஷம் தோன்றியது. க்ளார்க் வேலை ஆயிற்றே. அலுவலகத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் போதும். குண்டுகள் விழும் இடத்திற்கோ போகவேண்டிய தேவையில்லை. நண்பர்கள் இருந்தால், ஜால்னா வரை எந்தவித பிரச்சினையுமில்லாமல் போய்ச் சேர்ந்துவிட்டேன். ஆனால் கேம்பிற்குள் சென்றவுடன் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

“ஜால்னா எங்கே இருக்கிறது?”

“தெரியாதா? ஹைதராபாத்தில்...”

“செக்கந்த்ராபாத் வழியாகப் போகணும்...”

“ஆமா...”

“சரி... காதல் கடிதம் பற்றிய விஷயத்தைக் கூறவே இல்லையே!”

“அதைப் பற்றித்தான் கூறப்போகிறேன். ட்ரெயினிங்கின் முதல் நாளன்று நான் அழுதுவிட்டேன். ஆஜானுபாகுவான ராணுவ அதிகாரி இருந்தான். கையிலிருந்த ரைஃபில் கீழே விழுந்ததற்கு, பரேட் மைதானத்தை நான்கு முறை என்னை சுற்றி வரச் செய்தான். ஓடி முடித்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி நான் இருந்தபோது அவன் கேட்டான்: ‘தும் சாவல்கானே வாலா ஹை?’ (நீ சோறு சாப்பிடக் கூடியவனா).

யாரோ அதன் அர்த்தத்தைக் கூறியபோது, நான் பதில் சொன்னேன்: ‘ஆமாம்...’

‘அச்சா... தோ அபீ ரொட்டி கானா... ஸீக்லோ’. (அப்படியென்றால் ரொட்டி சாப்பிடக்கற்றுக்கொள்)

இரவில் கட்டிலில் படுத்துக்கொண்டு நான் அழுதேன். இது என்னுடைய அனுபவமாக மட்டும் இருக்கவில்லை. உங்கள் ஒவ்வொருவரிடமும் இப்படிப்பட்ட கதைகள் கூறுவதற்கு  இருக்கும். அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, நான் ஒரு பட்டாளக்காரன் என்ற உண்மையை காலப்போக்கில் உணர ஆரம்பித்தேன். பல மணி நேரங்கள் சிறிதும் சோர்வடையாமல் ‘பி.டி.’யும் பரேடும் செய்வதற்கான தெம்பு கிடைத்தது. ‘பேஸ்புக்’கில் கையொப்பமிட்டு சம்பளத்தை எண்ணி வாங்கியபோது, பெருமையாக இருந்தது. நான் ஒரு மனிதனாக ஆகியிருக்கிறேன்! மீசை கறுப்பாக ஆகாமலிருந்தாலும் வாரத்திற்கொருமுறை சவரம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கிடையில் மனதின் அடித்தட்டில் ஒரு ஆசை எழுந்து மேலே வந்தது. ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.”

“பரவாயில்லை...”

“நல்ல ஆசைதான்!”

“ஆள் மோசமில்லையே!”

“அப்படியா? பிறகு...?”

“அந்த சிந்தனை மனதிற்குள் சிறிதும் நீங்காமல் நின்றுகொண்டிருந்தது. அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோதும், பரேடில் ஈடுபட்டிருக்கும் போதும் ஒரே சிந்தனைதான்... கனவில் வரும் காதலிகள் தூக்கத்தில் உறவைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். கண்விழித்தபோது அந்த உருவங்கள் மனதில் ஆழமாக நின்றிருக்கவில்லை. தொடர்ந்து ஒரு காதலியைத் தேர்ந்தெடுத்துப் பிடிக்க வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபட்டேன். ஏற்கனவே நன்கு அறிமுகமான இளம்பெண்கள் எல்லாரின் உருவங்களும் மனதில் தோன்றின. என்னுடன் சேர்ந்து படித்த எல்லாரையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். சாரதா, சூசன்னா, தேவயானி, விசாலாட்சி, சின்னம்மா... அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒரு காதலியைக் கடிதம் எழுத வேண்டும். அப்படிச் செய்யாமல் வாழ முடியாது. இறுதியில் நான் ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். தேவயானி!”

“சபாஷ்!”

“பேர் நல்லா இருக்கு!”

“பெயரைப்போலவே அவள் அழகானவளாக இருந்தாள். பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் வீடு. அவளுக்கு தந்தை இல்லை. வயதான ஒரு தாய் இருக்கிறாள். நான்கு பெண் பிள்ளைகளில் தேவயானி எல்லாருக்கும் மூத்தவள். விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்கி, அவற்றை நகரத்திற்கு சுமந்து சென்று விற்று, அந்த அன்னை தன் பெண்களை வளர்த்தாள். அதன் மூலம் கிடைக்கும் சிறிய ஆதாயத்தைக் கொண்டு அவள் அவர்களைப் படிக்கவும் வைத்தாள். பள்ளிக்கூடம் செல்வதற்காக என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள் தேவயானி. நான் சொல்வதற்குத் தயங்கிக் கொண்டிருந்த தமாஷான விஷயங்களையெல்லாம் அவள் என்னிடம் சொல்வாள். ஜானம்மாவிற்கு மலையாள ஆசிரியர் கடிதம் கொடுத்த விஷயத்தை அவள்தான் என்னிடம் கூறினாள். அதைக் கூறியபோது, அவள் தாங்கமுடியாமல் சிரித்தாள்.


ஒருநாள் இரவு நான் தேவயானியை கனவு கண்டேன். பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களுடனும் முத்தத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் உதடுகளுடனும்...”

“ஓஹோ...”

“அபாரம்! அபாரம்!”

“சுவாரசியமாக கூறிக்கொண்டிருப்பதற்கு இடையில் பேசாதே. சொல்லட்டும்!”

“சரி... ஒரு விஷயம். காதலிப்பதற்கு சொந்த ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏன் கண்டுபிடிக்கவில்லை?”

“டேய், முட்டாள்! அந்த அளவுக்கு சிந்திக்கக்கூடிய அறிவு இருந்திருந்தால் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?”

“இன்னொரு வகையில் பார்த்தால்... உண்மையான காதலுக்கு ஜாதி என்ன? மதம் என்ன?”

“கதையைக் கேட்போம்...”

“தேவயானிக்கு நான் காதல் கடிதம் எழுதினேன். அதை எழுதி முடிப்பதற்கு ஏழு நாட்கள் ஆயின. திருத்தி எழுதுவதும், எழுதியதையே திரும்ப எழுதுவதுமாக இருந்ததேன். என்ன எழுதினேன் என்பதைப் பற்றி தெளிவாக ஞாபகத்தில் இல்லை. இதயத்தில் தங்கி நின்றுகொண்டிருந்த எல்லாவற்றையும் தாளில் எழுதினேன் என்பது மட்டும் தெரிகிறது. அவளுடைய வீட்டு முகவரிக்கு அதை அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு பதில் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். என்ன ஒரு ஆர்வம்! பதில கடிதத்தில் அவள் என்ன எழுதுவாள் என்பதைப் பற்றி மனதில் கற்பனை செய்து பார்த்தேன். கடந்து கொண்டிருந்த மணிகளை எண்ணிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருந்தேன். இறுதியில்...”

“அது வந்து சேர்ந்தது. அப்படித்தானே?”

“வந்தது. ஆனால், பதில கடிதம் இல்லை. நான் அனுப்பி வைத்திருந்த காதல் கடிதமேதான்.. அத்துடன் என் தந்தையின் ஒரு ஃபார்வர்டிங் லெட்டரும். அதிலிருந்த சில வரிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. ‘பத்து... பதினெட்டு வயதுவரை உன்னை மிகவும் கவனம் செலுத்தி வளர்த்தது இதற்குத்தானடா? உன்னால் மனிதர்களின் முகத்தைப் பார்த்து என்னால் நடக்க முடியாமல் போய்விட்டதேடா...”

“ஹோய்... ஹோய்...”

“ஹஹ... ஹ...”

“சிரிக்காதீர்கள் மனிதர்களே!”

“சாமுவேல் சார், என்ன நடந்தது?”

“முதல் விடுமுறைக்குச் சென்றபோதுதான் அது தெரிந்தது. பேருந்து நிலையத்திலேயே ஒரு நண்பன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறி, கிண்டல் பண்ணினான்.  ஊர் முழுவதும் அந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. நடந்தது இதுதான். அஞ்சல் பணியாள் கடிதத்தை எடுத்துச் சென்றபோது, தேவயானி வீட்டில் இல்லை. கடிதத்தை அவளுடைய தாயின் கையில் கொடுத்திருக்கிறார். அது தேவயானிக்கு வந்திருப்பது என்று சொன்னதன் மீது அவளுடைய தாய்க்கு நம்பிக்கை உண்டாகவில்லை. அந்த வழியாக நடந்து சென்றவர்களில் யாரையோ அழைத்திருக்கிறாள். அதற்குப் பிறகு பிரிக்காத அந்தக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள்- ‘தெய்வங்களே, தேவர்களே... என் பொண்ணுக்கு இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறதே, தங்கமான தேவர்களே!”

தெருவில் போய்க் கொண்டிருந்தவர்களும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் அங்குவந்து குழுமிவிட்டார்கள். யாரோ மரணமடைந்து விட்டதைப்போல அந்த அன்னை நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதிருக்கிறாள்.

‘அந்த தடிமாட்டுப் பயல் இப்படியொரு காரியத்தைச் செய்தான்? இனி என் பொண்ணை கல்யாணம் பண்ணுறதுக்கு யார் வருவாங்க? என் தேவர்களே?’

அங்கு கூடி நின்றிருந்தவர்களுக்கு நடுவிலிருந்து தேவயானி வந்தாள். விவரம் என்னவென்று தெரிந்ததும் அவள் சொன்னாள் : ‘யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு வந்திருக்கும் கடிதம் தானே? அம்மா, இங்கே தா.’

அந்தக் குரலை யாரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவளுடைய ரகசிய காதலன் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? என் தந்தையையும் சேர்த்து, அந்த ஊரின் முக்கியமான மனிதர்கள் அங்குவந்து சேர்ந்தார்கள். அவர்கள் எல்லாரும் முன்னால் இருக்க கடிதம் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசித்தபோது, என் தந்தை அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அன்று அப்பா எதுவுமே சாப்பிடவில்லை என்று என் தாய் என்னிடம் சொன்னாள்.”

“அதற்குப் பிறகு- விடுமுறையின்போது தேவயானியைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?”

“தேவயானியைப் பார்ப்பதற்கென்று இல்லை. வீட்டைவிட்டு வெளியே வந்து நடப்பதற்குக்கூட எனக்கு வெட்கமாக இருந்தது.”

“பாவம்.”

“அதற்குப் பிறகு அவளைப் பார்த்தது... பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு கடந்த விடுமுறைக்குச் சென்ற போதுதான். இதற்கிடையில் பள்ளி இறுதி வகுப்பும் முடித்து ட்ரெய்னிங்கும் முடித்து, அவள் ஒரு ஆசிரியையாக ஆகிவிட்டாள் என்ற விஷயத்தை நான் கேள்விப்பட்டிருந்தேன். நீண்டகாலம் எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் தேவயானி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பட்டாளத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே தேவயானியின் தாய் மரணமடைந்துவிட்டாள் என்ற தகவலையும் என்னால் தெரிந்துöõள்ள முடிந்தது. விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்த மறுநாள் பிற்பகல் வேளையில் நான் சற்று தூங்கி எழுந்தபோது, பக்கத்து அறையில் என்னுடைய குழந்தைகளுக்கு யாரோ பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் சென்று பார்த்தேன். ஆள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவள் கேட்டாள்: ‘யாரென்று தெரியவில்லை... அப்படித்தானே?’

‘அப்போது என் குழந்தைகளின் தாய் உள்ளே வந்து சொன்னாள் : ‘அய்யோ... தேவயானி டீச்சரை தெரியலையா? நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து படித்தீர்கள் என்று டீச்சர் எப்போதும் சொல்லுவாங்களே?”

நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். தேவயானி! ஆனால், நான் கனவு கண்டுகொண்டிருந்த தேவயானி அல்ல அது. அவள் மிகவும் மெலிந்துபோய் காணப்பபட்டாள். நெற்றி முழுக்க கோடுகள் தெரிந்தன. உயிர்ப்பில்லாத கண்களைச் சுற்றிலும் கருப்பு அடையாளம் பரவிவிட்டிருந்தது. வெள்ளை நிற முண்டும், விலை குறைந்த துணியாலான ரவிக்கையையும் கருத்த கரை போட்ட மேற்துண்டையும் அவள் அணிந்திருந்தாள்.

தேவயானி அப்போதும் திருமணமாகாதவளாகவே இருந்தாள். தன்னுடைய மூன்று தங்கைகளையும் அவள்தான் வளர்த்திருக்கிறாள்.

தங்கைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறாள். மிகப்பெரிய ஒரு தியாகச் செயலை ஏற்றுக்கொண்டதைப் போல, நிறைவேறாமல் போன ஏதோவொன்றை எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதைப்போல அவள் திருமணமாகாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

குழந்தைகளின தாய் சமையலறைக்குச் சென்றிருந்த போது, நான் கேட்டேன். ‘சரி... தேவயானி, இதுவரை திருமணமே வேண்டாமென்று நீ தீர்மானித்ததற்குக் காரணம்...?’

அந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அந்த முகத்தின் உணர்ச்சிகளே காட்டின. சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். ‘அந்த விஷயத்தை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்.’

அப்போது அவளுடைய கண்களிலிருந்து இரண்டு முத்து மணிகள் விழுந்து சிதறின. வாய் திறந்து பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புன்னகைக்க முயற்சித்துக்கொண்டே அவள், மேற்துண்டின் துணியை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.”

சாமுவேல் கதையைக் கூறி முடித்தபோது, நண்பர்களில் யாரும் சிரிக்கவில்லை. கூப்பாடு போடவில்லை. அவர்கள் அனைவரும் சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள்.

வெயிலுக்கு நல்ல சூடு உண்டாகிவிட்டிருந்தது. உறைந்து போயிருந்த பனியின் மேற்பகுதி ஈரமாக இருந்தது.

‘பாரக்’கின் மேற்கூரை சூடாக ஆனபோது, பனிக்கட்டிகள் நகர்ந்து கீழே விழ ஆரம்பித்தன.

சாமுவேல்தான் நிலவிக்கொண்டிருந்த அமைதியைக் கலைத்தார். அவர் கேட்டார்: “சரி.. இனி என்ன ப்ரோக்ராம்?”

அங்கு அமர்ந்திருந்தவர்களில் யாரோ சொன்னார்கள். “நான் அந்த தேவயானியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.