Logo

ஐந்தரை வயதுள்ள சிறுவன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8206

ஐந்தரை வயதுள்ள சிறுவன்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

சேகரன், நளினி தம்பதியின் ஒரே மகன் ஜெயன். முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.

வகுப்பு இருக்கும் ஒருநாள்.

“மணி எட்டாகிவிட்டதே! ஜெயன், நீ இன்னும் எழுந்திரிக்கலையா?”

பால் காய்ச்சிக்கொண்டிருந்த நளினி சமையலறையிலிருந்து அழைத்துக் கேட்டாள். அவள் கேட்டது முன்னறையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த சேகரனிடம்.

அவனுக்கு பத்தரை மணிக்கு அலுவலகம். எனினும், ஏழரை மணிக்கே எழுந்து பால் கலக்காத காப்பியைப் பருகிவிட்டு, பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கிறான்.

ஜெயன் பள்ளிக்கூடத்திற்கு ஒன்பது மணிக்குச் செல்ல வேண்டும்.

“பாருங்க... மகனை கொஞ்சம் எழுப்பிவிடுங்க.”

நளினி சமையலறையிலிருந்து மீண்டும் சொன்னாள்.

“பால் கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு...” அவள் கரண்டியால் அவ்வப்போது பாலைக் கிளறிக்கொண்டிருந்தாள்.

பால் பாத்திரத்தை இறக்கிய பிறகு அவள் முன்னறைக்குச் சென்றாள்.

“இன்னும் மகனைத் தட்டி எழுப்பலையா? மணி எட்டு தாண்டிடுச்சே! என் கடவுளே..”

“கிருஷ்ணமூர்த்தியயும் போயிட்டான்.”

பத்திரிகையில் தலையை மூழ்க வைத்துக்கொண்டிருந்த சேகரன் யாரிடம் என்றில்லாமல் கூறினான். அதைக்கேட்டு நளினி பதைத்துவிட்டாள்.

“கிருஷ்ணமூர்த்தியா? எந்த கிருஷ்ணமூர்த்தி?”

“ஸ்ரீ காகுளத்துல இருக்குற..”

அவன் பத்திரிகையிலிருந்து முகத்தை உயர்த்தினான். “நாயைக் கொல்லுற மாதிரி கொன்னுருக்காங்க.”

அவள் பத்திரிகையை  விலக்கி வைத்தாள்.

“எட்டு மணி தாண்டின பிறகும், எருமையைப்போல தூங்கிக் கொண்டிருக்கிறானே! உங்க தப்பு அது.”

“என் தப்பா?”

முந்தைய நாள் நள்ளிரவு தாண்டியபிறகுதான் ஜெயன் தூங்கினான்.

“இன்னும் கதை வேணுமா?”

‘சின்ட்ரல்லா’ கதை கூறி முடித்ததும், அவன் மீண்டும் கேட்டான்.

‘வேணும்.’

அவன் தன் தந்தையின் பெரிய மூக்கைப் பிடித்து இழுத்தான்.

‘சிங்கம், முயல் கதை..?”

‘அதை முன்னாடியே சொல்லிட்டீங்களே?”

‘நரியின் வால் போன கதை?”

‘ம்... அதுபோதும்.’

அவன் கதை கேட்பதற்கு தயாராகப்படுத்திருந்தான். சேகரன் கதையை ஆரம்பித்தான்.

சின்ட்ரல்லாவிடமிருந்து நரியின் வால்போன கதை... நரியின் வால்போன கதையிலிருந்து ஓநாய்... ஆட்டுக்குட்டியின் கதை... இப்படியே நள்ளிரவு தாண்டிவிட்டது.

‘ஒருத்தி பக்கத்துல படுத்திருக்கிறாளே என்ற நினைப்பு கொஞ்சம்கூட இல்லை...’

நளினி வருத்தப்பட்டாள்.

முதலில் உறங்குவது  ஜெயன்தான். சின்ட்ரல்லாவையும், வாலை இழந்த நரியையும் மனதில் நினைத்துக்கொண்டே அவன் உறங்கினான். உதடுகளில், இளம் உதடுகளில், புன்னகையுடனும் கனவுகளுடனும் அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

சேகரனும்.

“உன் அழகு சேகரனும். ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே இருக்கு!”

அவன் அவளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே கூறினான். அதிகாலையிலேயே கண்விழித்து, குளித்து முடித்து நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்து, கண்களில் மைதீட்டி, அவள் அழகான தோற்றத்துடன் முன்னால் நின்றுகொண்டிருந்தாள்.

“மகனை நான் போய் எழுப்பட்டுமா?”

அவள் உள்ளே சென்றாள்.

ஜெயன் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. என்னவோ சிந்தித்துக்கொண்டிருப்பதைப்போல மேலே வரையைப் பார்த்தவாறு படுத்திருந்தான்.

“மகனே, கண்விழிச்சிட்டியா? தூங்கிட்டிருக்கேன்னு அம்மா நினைச்சேன்.”

அவன் கண்விழித்துப் படுத்திருப்பதைப் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டாள். விழிப்பு வந்தவுடன் வேகமாக எழுந்து வருவதுதான் அவனுடைய வழக்கம். எந்தவொரு இடத்திலும், அமைதியாகப் படுத்திருப்பதோ அமர்ந்திருப்பதோ அவனுடைய வழக்கமில்லையே! இன்று ஏன் இப்படி சிந்தித்துக்கொண்டு படுத்திருக்கிறான்?

“மகனே, நீ என்ன சிந்திக்கிறே?”

நளினி ஜெயனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

“வாலையிழந்த நரியைப் பற்றியிருக்கும்...”

சேகரன் உள்ளே வந்தான்.

“மகனுக்கு தலைமுடி வெட்டியாகணும்.”

நளினி ஜெயனின் நெற்றியில் சிதறிக் கிடந்த தலைமுடிகளை மேலே கோதி ஒதுக்கினாள்.

“என் தலைமுடியையும் ஞாயிற்றுக்கிழமை வெட்டணும்.” சேகரன் தன்னுடைய தலைமுடிகளை கையால் வருடினான்.

“எழுந்திரு மகனே.”

நளினி ஜெயனைப் பிடித்து எழுப்பினாள். அவன் எதுவும் முடியாததைப்போல தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“ஜெயா, உனக்கு சுகமில்லையா?”

“சரியாகத் தூக்கம் இருந்திருக்காது.”

தந்தையும் தாயும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

“சீக்கிரமா போய் பல் தேய்... அதற்குள் நீ குளிக்கிறதுக்கு அம்மா நீர் எடுத்து வைக்கிறேன்.”

ஜெயன் எதுவும் பேசாமல் கட்டிலைவிட்டுக் கீழே இறங்கி, உமிக்கரியை எடுத்துக்கொண்டு கிணற்றின் கரையை நோக்கிச் சென்றான்.

“இன்னும் பல் தேய்க்கலையா?”

நீரை எடுத்து வைத்துவிட்டு, சமையலறைக்குள்ளிருந்து வெளியே வந்த நளினி கேட்டாள். பல் தேய்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு, என்னவோ சிந்தித்துக்கொண்டு அவன் நின்று கொண்டிருந்தான்.

ஜெயன் பல்லைத் தேய்த்தான்.

“இன்னைக்கு அம்மா குளிப்பாட்டி விடுறேன். இனி தனியாக குளிப்பதற்கு நேரமில்லையே!”

அவன் எதிர்த்துக் கூறவில்லை. தன்னை வேறு யாரும் குளிப்பாட்டுவது, அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லாத விஷயம் எனினும்...

நளினி அவனைக் குளிப்பாட்டி, துவட்டி விட்டு, இடுப்பில் துண்டைச் சுற்றிவிட்டுச் சொன்னாள் :

“ஓடிப்போய் துணிகளைப் போட்டுக்கோ.”

அவள் சமையலறைக்குச் சென்று குவளையில் பாலை ஊற்றி சர்க்கரை இட்டு, கரண்டியால் கிளறினாள். ஆடை மாற்றி முடித்து, ஜெயன் வந்தான்.

“நல்ல மகன்.”

எண்ணெய் தேய்க்கப்பட்ட அவனுடைய தலைமுடியில் அவள் தன் உதடுகளைப் பதித்தாள். அப்பா, அம்மாவின் எத்தனையெத்தனை முத்தங்கள் அவனுக்கு ஒவ்வொரு நாளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.

ஜெயன் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நளினி புத்தகம், ஸ்லேட் ஆகியவற்றை எடுத்து வைத்துவிட்டாள்.

“நளினி அக்கா... நளினி அக்கா... ஜெயன் ரெடி.. ஆயாச்சா?” தெருவில் நின்றவாறு வத்சலா உரத்த குரலில் கேட்டாள். அவள் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்து, பன்னிரண்டு வயது கொண்ட ஒரு சிறுமி. ஜெயன் தினமும் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதும், திரும்பி வருவதும் வத்சலாவுடன் சேர்ந்துதான். நளினி ஸ்லேட், புத்தகம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, ஜெயனின் கையையும் பற்றியவாறு தெருவில் இறங்கினாள்.

“சாயங்காலம் மகனே, உனக்கு அப்பா சாக்லெட் வாங்கி வர்றேன்.”

வாசலில் நின்றவாறு சேகரன் உரத்த குரலில் சொன்னான்.

“என்ன, இன்னைக்கு என் மகனிடம் எந்தவொரு சந்தோஷமும் இல்லையே!”

ஸ்லேட்டையும் புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு, தலையை குனிந்தவாறு நடந்துவரும் ஜெயனைப் பார்த்து வத்சலா கேட்டாள் :

“குழந்தை, உன் ஸ்லேட்டையும் புத்தகத்தையும் நான் கொண்டு வரட்டுமா?”

வத்சலா கூறியதை ஜெயன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

“என்ன கண்ணு, நீ பேசாமலே இருக்கே?”

அவன் எதுவும் கூறாமல் தலையை குனிந்துகொண்டே நடந்தான்.


“என்ன-, இன்னைக்கு நீ இவ்வளவு அமைதியாக இருக்கே?” வத்சலா ஆச்சரியப்பட்டாள். பொதுவாகவே அவன் நிறைய பேசுவான். விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுடைய பிடியை விட்டுவிலகி தெருவில் ஓடுவான். வாய்க்கால் நீரில் கல்லை எடுத்தெறிவான்.

இன்று அவை எதுவுமே நடக்கவில்லை.

பள்ளிக்கூடத்தை அடையும்போது முதல் மணி அடித்து விட்டிருந்தது.

வத்சலா ஜெயனின் வகுப்பு வாசல்வரை அவனுடன் சேர்ந்து வந்தாள்.

“இனி நான் போகட்டுமா?”

அவன் தலையை ஆட்டினான்.

முதல் பீரியட் உண்ணி மாஸ்டருடையது. அவர்தான் ஜெயனின் வகுப்பாசிரியர்.

“கெ.பி. மோகனன்!”

“யெஸ் சார்...”

மோகனன் எழுந்து நின்றான்.

“எ ராமச்சந்திரன்”

“ப்ராஸன்ட் சார்.”

ராமச்சந்திரன் எழுந்து நின்றான்.

“எம்.பி.ஸி. ஹாசிம்.”

“யெஸ் சார்.”

ஹாசிம் எழுந்து நின்றான்.

“ஸி. ஜெயன்.”

பதில் வராமல் இருந்ததும், மாஸ்டர் ரெஜிஸ்ட்டரிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தார்.

“ஸி. ஜெயன்!”

உண்ணி மாஸ்டர் திரும்பவும் கூறினார்.

பதில் எதுவும் வரவில்லை.

“நீ தூங்குறியா?”

மாஸ்டர் எழுந்து ஜெயனின் அருகில் வந்தார். அவன் தலையை உயர்த்தி வைத்தபடி உட்கார்ந்திருந்தான்.

“சுகமில்லையா மகனே?”

தனக்கு ஒன்றுமில்லை என்று அவன் தலையை ஆட்டிக்காட்டினான்.

மாஸ்டர் திரும்பவும் சென்று தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தார்.

“ஹோம் ஒர்க்...”

மாணவர்களுக்கு மத்தியில் ஒரு முணுமுணுப்பு உண்டானது.

“அசோகன்!”

முன் வரிசையில் அமர்ந்திருந்த அசோகன் தலையை குனிந்து நின்றான்.

அவன் வீட்டுப் பாடத்தைச் செய்யவில்லை.

அசோகன் பெஞ்சின்மீது ஏறி நின்றான்.

“ராமச்சந்திரன்!”

ராமச்சந்திரன் வீட்டுப் பாடத்துடன் மாஸ்டரின் அருகில் சென்றான். வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டவை மூன்று கணக்குகள். மூன்றில் இரண்டு தவறாகப் போடப்பட்டிருந்தன.

“ஹாசிம்...”

ஹாசிமும் வீட்டுப் பாடத்துடன் மாஸ்டரின் அருகில் சென்றான். அவன் இரண்டு கணக்குகளை மட்டுமே செய்திருந்தான். இரண்டும் தவறாகச் செய்யப்பட்டிருந்தன.

“ஜெயன்!”

மாஸ்டர் அழைத்தது அவனுடைய காதுகளில் விழவில்லை.

“ஜெயன்!”

மாஸ்டர் திரும்பவும் அழைத்தார். ஜெயன் அதைக் கேட்கவேயில்லை. ஒரு நிமிடம் மாஸ்டர் சந்தேகப்பட்டார். பிறகு எழுந்து ஜெயனின் அருகில் சென்றார்.

“ஹோம் ஒர்க் செய்யலையா?”

ஜெயன் தலையை உயர்த்தி மாஸ்டரைப் பார்த்தான். அவனுடைய கண்கள் கலங்கி சிவந்திருந்தன.

மாஸ்டர் அவனுடைய வீட்டுப்பாடத்தை எடுத்துத் திறந்து பார்த்தார். மூன்று கணக்குகளையும் செய்திருந்தான். அனைத்தும் சரியாக செய்யப்பட்டிருந்தன.

“திறமைசாலி!”

ஜெயனின் தலை மீண்டும் கவிழ்ந்தது. அவனுடைய கலங்கிய கண்களில் நீர் நிறைவதை மாஸ்டர் பார்த்தார். எதுவும் புரியாமல் மாஸ்டர் அவனுடைய முகத்தை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

உண்ணி மாஸ்டர் மேஜையின் மீது இருந்த மணியை அழுத்தினார். பியூன் கணாரன் ஓடி வந்தான்.

“கணாரன், ஜெயனை அவனுடைய வீட்டில் கொண்டு போய் விடு.”

“அவனுக்கு என்ன மாஸ்டர்?”

“காய்ச்சல்னு நினைக்கிறேன்.”

கணாரன் ஜெயனுடைய ஸ்லேட், புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவனுயை கையைப் பிடித்துக்கொண்டு வெளியேறினான்.

“சாயங்காலம் நான் அங்கே வர்றேன்னு சேகரனிடம் சொல்லு.”

“சொல்றேன், மாஸ்டர்.”

கணாரனும் ஜெயனும் தெருவில் இறங்கி நடந்தார்கள். பிரதான சாலையை அடைந்ததும், ஜெயன் மெதுவான குரலில் சொன்னான் :

“நான் தனியா போயிக்கிறேன்.”

“நானும் வர்றேன். காரும் பஸ்ஸும் வருகிற வழி.” கணாரன் ஒரு பீடியைப் பற்றவைத்தான்.

“என்னை விடு.”

ஜெயன் கணாரனின் முகத்தைப் பார்த்து கெஞ்சினான். அவனுடைய கண்கள் நிறைந்து ததும்பின. கணரானின் பிடி தளர்ந்தது.

ஜெயன் சாலையின் ஓரத்திலேயே நடந்தான். ஸ்லேட்டையும் புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு, வாயில் இறுகப் பற்றிய பீடியுடன் கணாரன் திகைப்படைந்து நின்றான்.

வீட்டிற்குச் செல்லும் வழியைத் தாண்டி, வயலையும் தாண்டி, ஜெயன் நடந்தான். அவனுக்கு மேலே உச்சிப் பொழுது சூரியன் பற்றி எரிந்துகொண்டிருந்தது. வெப்பத்தால் அவனுடைய முகம் சுட்டது.

முன்னால ரயில் தண்டவாளம் நீண்டு கிடந்தது. சிறிய பாலத்தின் மீது அவன் அமர்ந்தான். தலை மார்பின்மீது தொங்கிக்கிடந்தது. கண்களிலிருந்து நீர் கன்னங்களின் வழியாக கீழ்நோக்கி வழிந்துகொண்டிருந்தது.

தூரத்தில் மங்களூர் மெயில் வந்துகொண்டிருந்தது. அவன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சென்று தரையில் கவிழ்ந்துபடுத்தான். உச்சி வெயிலின் வெப்பம் சுட்டுக் கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் அவனுடைய கண்ணீர் விழுந்துகொண்டிருந்தது.

சுற்றிலும் புகையைப் பரவச் செய்து, பூமியைக் குலுக்கிய வாறு, உரத்த இரைச்சலை எழுப்பியபடி வண்டி அவனுடைய தலைக்குமேலே கடந்து சென்றது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.