Logo

அவளின் சுயசரிதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5739
Avalin Suyasarithai

அவளின் சுயசரிதை

பி.கேசவதேவ்

தமிழில் : சுரா

வர்கள் எல்லாரும் என்னைப்பார்த்து அழுதார்கள். அதைப்பார்த்து நானும் அழுதேன். மரணச் செய்தியைத் தெரிந்துகொண்ட பக்கத்து வீடுகளைச் சேர்ந்த எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் என்னைத் தேடுகிறார்கள். என்னைப்பற்றிப் பேசுகிறார்கள். பெண்கள் என்னைப் பற்றி, என்னவெல்லமோ கூறி கூப்பாடு போடுகிறார்கள். ஒரு கிழவி எனக்கருகில் வந்தமர்ந்து சொன்னாள் : “குழந்தை, கடவுள் தீர்மானித்த விஷயம். எல்லா துக்கங்களிலும் மிகப் பெரியது விதவையாக இருக்கக்கூடிய துக்கம்தான். என்ன செய்வது? இனி கடவுளின் பெயரைச் சொல்லு. மோட்சம் கிடைக்கும்.”

அவள் கூறியது எதுவும் எனக்குப் புரியவே இல்லை.

இறந்த உடலைக் குளிப்பாட்டி, சந்தனமும், மலர்களும் அணிவித்து, தெற்கு திசையில் தலையை வைத்துப் படுக்கச் செய்திருந்தார்கள். தலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கின் சுடர், பிணத்தின் கண்மணிகளைப்போல அசைவே இல்லாமல் இருந்தது.

புரோகிதர் வந்துவிட்டிருந்தார். சிலர் ஒரு மாமரத்தை வெட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறந்த உடலைச் சிதையில் வைத்தார்கள். புரோகிதர் என்னிடம் என்னவோ செய்யும்படி கூறினார். நான் அவர் சொன்னபடி செய்தேன். நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. இறந்த மனிதரின் ஆன்மாவை எடுத்துக்கொண்டு, புகை சொர்க்கத்தை நோக்கி உயர்ந்து சென்றது.

இப்படி பத்தாவது வயதில் நான் விதவையாக ஆனேன்.

எனக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆகியிருந்தன. விருந்து, பூஜை, சில சடங்குகள்,  நாதசுரம் எல்லாம் நடந்தன. அது என்னுடைய திருமணம் என்று எல்லாரும் கூறினார்கள். நானும் அதை நம்பவே செய்தேன். எனக்கு அதுவரை அறிமுகம் ஆகியிராத ஒரு மனிதர் - என்னைவிட பத்து பதினைந்து வயது அதிகம் இருக்கக்கூடிய ஒரு ஆள் - அவர்தான் என்னுடைய கணவர் என்று எல்லாரும் கூறினார்கள். நான் அதை நம்பினேன்.

திருமணத்திற்குப் பிறகும் என்னுடைய வாழ்க்கையில் மாறுதல்கள் எதுவும் உண்டாகவில்லை. நான் பெற்றோரின் வீட்டிலேயே இருந்துகொண்டு, பக்கத்து வீடுகளிலிருக்கும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருந்தேன். அவர் - என்னுடைய கணவர் என்று கூறப்பட்ட அந்த மனிதர் - சில நாட்களில் அங்கு வருவார். வரும்போது எனக்கு ஏதாவது கொண்டு வந்து தருவார்.

நான் அவரை ‘அண்ணா” என்றுதான் அழைத்தேன். அப்படி அழைக்கக்கூடாது என்று தந்தையும் தாயும் என்னைத் திட்டினார்கள். அப்படி அழைப்பது அவருக்கும் பிடிக்கவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால் நான் அவரை எதுவும் கூறி அழைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவர் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையில் கிடக்கிறார் என்று ஒரு ஆள் வந்து சொன்னார். என் தந்தை என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றார். இரண்டு நாட்கள் கடந்தபிறகு, அவர் இறந்துவிட்டார்.

நாங்கள் பிராமணர்கள். திருமணம் முடிந்துவிட்டால், அதற்குப்பிறகு பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்தவொரு உரிமையும் இல்லை. அவள் கணவனது வீட்டின் உறுப்பினராகிவிடுவாள். அவளுடைய உரிமைகள் அனைத்தும் அங்குதான். விதவையான பிறகும் அவள் அங்கேயே கிடந்து கஷ்டங்களை அனுபவித்து சாக வேண்டும்.

என்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே ஒரு பிள்ளைதான் - நான் மட்டுமே. அதனால் விதவையான என்னை முன்பு இருந்ததைப்போல பெற்றோரின் வீட்டிலேயே இருக்கச் செய்தார்கள்.

மனைவி பதவி என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாமலிருந்ததால், விதவைக்கோலம் என்றால் என்ன என்பதையும் நான் அறிந்திருக்கவில்லை. நான் சில வேளைகளில் தோழிகளான சிறுமிகளுடன் சேர்ந்து வீடு கட்டி விளையாடுவதையும், ‘வெள்ளைக்காயை’ எடுத்து வைத்துக்கொண்டு பிரசவமான பெண்ணாகப் படுத்துக் கிடப்பதையும் பார்த்து என்னுடைய தாய் கண்ணீர் வழிய நின்று கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய தந்தை வறுமையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு அப்பள வியாபாரி. நாற்பது வயது வரை தொடர்ந்து கடுமையாக உழைத்து சம்பாதித்து வைத்திருந்த பணம் கொஞ்சம் கைவசம் இருந்ததை வைத்து என்னுடைய திருமணத்தை நடத்தினார். அது அப்படி ஆகிவிட்டது.

அப்பளம் தயாரிக்கும் விஷயத்தில் என்னுடைய சக்திக்கு இயன்றவரை என் தந்தைக்கும் தாய்க்கும் நான் உதவியாக இருப்பேன். என் தாய் உளுந்தை அரைக்கும்போது, நான் உளுந்தைச் சிறிது சிறிதாக திருவைக் கல்லில் தள்ளிவிடுவேன். அப்பளத்தைப் பரப்பி விடுவது, உலர வைப்பது, அடுக்குவது ஆகிய வேலைகளிலும் நான் உதவுவேன்.

அப்பளத்தை விற்பதற்காக என் தந்தை நகரத்திற்குச் செல்லும்போது, பக்கத்து வீடுகளில் விற்பனை செய்வதற்கு என் தாய் என்னை அனுப்பி விடுவாள். எண்ணுவதற்கும் கணக்கு பார்ப்பதற்கும் எனக்குத் தெரியும். என்னுடைய அப்பள வியாபாரத்தில் எந்தவொரு நஷ்டமும் உண்டாகவில்லை.

இப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. நான் வயதிற்கு வந்தேன். அதற்குப்பிறகு என்னை அப்பள வியாபாரத்திற்கு அனுப்ப என் தந்தைக்கும் தாய்க்கும் தயக்கமாக இருந்தது. ஆனால், ஜாதி ஆச்சாரங்கள் அனைத்தும் வறுமைச் சூழலில் எரிந்து போய்விடுமே!

எங்களுடைய பக்கத்து வீடுகள் முழுவதும் ஈழவர்கள் இருக்கக்கூடிய வீடுகள். அவற்றில் ஒன்று ஒரு சாணார் இனத்தைச் சேர்ந்தவர்களுடையது. அவர்கள் எங்களுடைய ஊரிலேயே மிகப்பெரிய வசதி படைத்தவர்கள். பண வசதி மட்டுமல்ல; இடங்களும் நிறைய இருந்தன. நான் அப்பளம் விற்பதற்காக அங்கேயும் வழக்கமாக போய்கொண்டிருந்தேன். ஈழவர்கள் எங்களைவிட தாழ்ந்த இனத்தவர்கள் என்றும், அதனால் நான் அவர்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும் என் அன்னை கூறியிருந்தாள். நான் அங்குசென்று வாசலில் நின்றுகொண்டிருப்பேன்; அவ்வளவுதான்.

ஒருநாள் காலையில் நான் அப்பளத்தை எடுத்துக்கொண்டு சாணாரின் வீட்டிற்குச் சென்றேன். வாசலில் யாருமில்லை. தெற்குப் பக்கத்திலிருந்த அறையில் ஒரு இளைஞன் நாற்காலியில் அமர்ந்து, மேஜையின்மீது காலை வைத்தபடி ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். நான் உரத்த குரலில் அழைத்தேன்: “அப்பளம் வேணுமா?”

பதிலாக எந்தக் குரலும் வரவில்லை. அந்த மிகப்பெரிய வீட்டிற்குள் என்னுடைய குரல் போய்ச் சேரவில்லை. அறையில் அமர்ந்திருந்த இளைஞன் சாளரத்தின் வழியாக என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, மீண்டும் பாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் நான்கைந்து முறை அழைத்தேன். என்னுடைய உரத்த அழைப்பு தொந்தரவாக இருப்பதைப்போல எண்ணிய அந்த இளைஞன் எழுந்து அந்தப் பக்கமாகச் சென்றார். சிறிது நேரம் கடந்ததும், அவன் வாசலுக்கு வந்து சொன்னார் : “பெண்ணே, ஒரு கட்டு அப்பளம் தா.”

நான் துணிக்கட்டுக்குள்ளிருந்து அப்பளத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றிருந்தேன். அவர் சொன்னார் : “இங்கே கொண்டு வா.”

அப்பளத்தை திண்ணையில் வைத்துவிட்டு நான் திரும்பவும் விலகி நின்றேன். அவர் கையிலிருந்த சக்கரத்தை (பழைய திருவிதாங்கூர் நாணயம்) என்னை நோக்கி நீட்டி, ஒரு மென்மையான புன்னகையுடன் சொன்னார் : “இந்தா சக்கரம்.”


நான் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். அருகில் செல்வதற்கு எனக்குத் தயக்கம்.... அசுத்தமாகி விடுவோமோ என்றொரு பதைபதைப்பு ! அது மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து ஏதோ ஒரு இது... அசுத்தமானாலும் பரவாயில்லை. அந்த புன்சிரிப்புதான் என்னை கவலைகொள்ளச் செய்தது. நான் சொன்னேன்: “அங்கே வைத்தால் போதும். நான் எடுத்துக்கொள்வேன்.”

அவர் மிடுக்கு நிறைந்த குரலில் சொன்னார் : “அப்படின்னா உன்னுடைய அப்பளத்தை எடுத்துக்கொண்டு போ.”

அவர் உள்ளே செல்வதற்கு முயன்றார். நான் கூச்சத்துடன் வேகமாக அருகில் சென்று கையை நீட்டினேன். என் கையில் சக்கரத்தை தந்துவிட்டு, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். நான் சக்கரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு ஒரு ஓட்டம் எடுத்தேன். எல்லா நாட்களிலும் அங்கு அப்பளம் வாங்குவதில்லை. ஆனால், அடுத்த நாள் நான் அப்பளத்துடன் அந்த வீட்டின் படிகளுக்கு முன்னால் போனபோது, அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்றொரு ஆசை உண்டானது. மறைந்துள்ள அந்தப் பார்வையும் அந்த புன்னகையும்! அதை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றொரு ஆர்வம் உண்டானது. என்ன காரணத்தைக் கூறிக்கொண்டு அங்கு செல்வது? என்னுடைய விருப்பத்தை அடக்கி வைத்துக்கொண்டு நான் நடக்க முயன்றபோது, உள்ளே ஒரு இருமல் சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞன் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு முன்னறையில் நின்றுகொண்டிருந்தார். நானும் சற்று சிரித்தேன். ஆனால், அங்கு நிற்பதற்கோ உள்ளே நுழைவதற்கோ எனக்கு தைரியம் வரவில்லை. இன்னொரு முறை அந்த முகத்தை தைரியமாகப் பார்த்துவிட்டு, மேலும் ஒரு முறை புன்னகைத்துவிட்டு, நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அதற்குப்பிறகு தினமும் நான் அந்த வகையில் பார்ப்பதும், பார்க்கும்போது சிரிப்பதும் எங்களுடைய வழக்கமாக இருந்தது. சிரிப்போமே தவிர, நாங்கள் எதுவும் பேசிக்கொள்வதில்லை.

இரண்டு மூன்று வாரங்கள் கடந்த பிறகு, ஒருநாள் அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு நான் அந்த வீட்டிற்கு முன்னால் போய்க்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அங்கே நின்றிருந்தார். அன்று என்னைப் பார்த்தபோது, அவன் சிரிக்கவில்லை. முகத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி வேறுபாடு இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அருகில் செல்லவில்லை. சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தேன். அவர் என்னை அழைத்தார் : “ரதீ, இங்கே பக்கத்தில் வா.”

நான் அருகில் சென்றேன். எனக்கு இதற்கு முன்வு அறிமுகமில்லாத ஒரு வெளிப்பாடு முகத்தில் தோன்றியது. “நான் திருவனந்தபுரத்திற்குச் செல்கிறேன்.” அந்த குரலிலும் ஒரு மாற்றம் தெரிந்தது. அவர் தொடர்ந்து சொன்னார். “அடுத்த வாரம் கல்லூரி திறக்கிறார்கள். நான் இன்றே போகிறேன்.”

நான் பதில் கூறவில்லை. பதில் கூற வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவர் தொடர்ந்து சொன்னார்: “நான் போய்விட்டால்... ரதி, அதற்குப் பிறகு உன்னுடைய அப்பளத்தைச் சாப்பிட முடியாதே!”

நான் சிரமப்பட்டு இப்படி கேட்டேன்: “கொண்டு போவதற்கு கொஞ்சம் அப்பளம் தரட்டுமா?”

“வேண்டாம் ரதி. நீ என்னை மறக்காமல் இருந்தால் போதும்.”

நான் கேட்டேன் : “என்னை மறந்துவிடுவீர்களா?”

“இல்லை...” அசாதாரணமான உறுதியுடன் அவர் சொன்னார் : “ரதி, நான் ஓணத்திற்கு வரும்போது, உனக்கு பரிசு தருகிறேன்.” அவர் உள்ளே சென்றார். நான் அப்பளம் விற்பதற்காகச் சென்றேன்.

கிருஷ்ணன் - அதுதான் அவருடைய பெயர். திருவனந்தபுரத்திற்குச் சென்ற பிறகும், நான் சாணாரின் வீட்டிற்கு அப்பளம் விற்பதற்குப் போவதுண்டு. ஆனால், அங்கு ஏதோ ஒரு குறை உள்ளதைப்போல- இதயம் இல்லாத சரீரத்தைப்போல - நிலவு இல்லாத இரவைப் போல எனக்கு தோன்றியது.

இப்படியே சில மாதங்கள் கடந்தோடின. ஓணம் நெருங்கியது. உத்ராடத் திருநாளன்று நான் அப்பளம் விற்பதற்காகச் சென்றபோது, அவர் அந்த வீட்டில் வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்! இதயத்தைக் குளிரச் செய்யும் புன்னகையுடன் நான் அவரைப் பார்த்தேன். அவர் கேட்டார் : “ரதி, நீ என்னை மறந்து விட்டாயா?”

அன்று முதன்முறையாக நான் கால் பெருவிரலால் தரையில் வரைந்துகொண்டே கேட்டேன் : “என்னை நினைத்தீர்களா?”

நானும் ‘மறக்கவில்லை...’ என்று சொல்ல முயன்றபோது... இல்லை - நான் அதைக் கூறவில்லை. ஈரமான கண்களுடன் நான் அவரை வெறுமனே பார்க்க மட்டும் செய்தேன்.

அவர் என்னை நோக்கி கையை நீட்டினார் : “இதோ ரதி, உனக்கு ஓணம் பண்டிகைக்கான பரிசு.”

நான் கையை நீட்டினேன். பட்டுத்துணித் துண்டில் சுற்றப்பட்ட ஒரு பொருளை என் கையில் தந்துவிட்டு அவர் சொன்னார் : “இதை யாரிடமும் காட்டாதே.”

வீட்டிற்குச் சென்றபிறகு யாருக்கும் தெரியாமல் நான் அவிழ்த்துப் பார்த்தேன். ஒரு சிறிய தங்க மோதிரம்! என்னுடைய மோதிர விரலுக்கு சரியாக அளவு எடுத்ததைப்போல கனகச்சிதமாக இருந்த ஒரு மோதிரம்! அதில் எனக்குத் தெரியாத மொழியில் என்னவோ எழுதப்பட்டிருந்தது. அதை என் மோதிர விரலில் அணிந்து பார்த்தேன். திடீரென்று எனக்கு வெட்கம் வந்தது. அந்த நிமிடமே அதைக் கழற்றி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்.

இரவில் என் தந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கும் போது, நான் அதை எடுத்து விரலில் அணிவேன். மோதிரம் அணிந்த கையை மார்பின் அருகில் வைத்துக்கொண்டு, அதே நிலையில் சிறிது நேரம் படுத்திருப்பேன். தூங்குவதற்கு முன்பு அதைக் கழற்றி பாதுகாப்பாக வைக்கவும் செய்வேன்.

ஓண நாளன்று நான் காலையில் எழுந்தேன். கொஞ்சம் முல்லை மலர்களைச் சேகரித்து மாலை தயார் செய்தேன். யாரும் பார்க்காத மாதிரி சலவை செய்து வைத்திருந்த பாவாடையையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்தேன். மாலையை எடுத்துக்கொண்டு போக முயன்றபோது, தலைமுடியைச் சற்று அழகாக வாரவேண்டுமென்று எனக்கு தோன்றியது. யாருக்கும் தெரியாமல் அதைச் செய்தேன். ஒரு குங்குமப் பொட்டையும் வைத்தேன். தொடர்ந்து படியைக் கடந்து ஒரு ஓட்டம்!

வீட்டின் வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். இலையில் சுற்றப்பட்டிருந்த அந்த மலர் மாலையை நான் அவரிடம் நீட்டினேன். அப்போது அதை அப்படித் தரக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. நான் பொட்டலத்தை அவிழ்த்து மாலையை எடுத்தேன். கையை உயர்த்தினேன். அவர் சிறிது குனிந்தார். மாலையை அவருடைய கழுத்தில் அணிவித்துவிட்டு நான் சொன்னேன்: “இது என்னுடைய பரிசு.”

அவர் என்னைப் பிடிப்பதற்காக கையை நீட்டினார். நான் அப்பால் விலகி-, அங்கிருந்து ஓடி மறைந்தேன்.


எனக்கு பதினாறு வயது முடிந்தது. என்னை அப்பளம் விற்பதற்கு அனுப்பக்கூடாது என்று என் தந்தையும் தாயும் முடிவு செய்தார்கள். எனக்கு கவலை உண்டாகிவிட்டது. தாய், தந்தையின் தீர்மானத்திற்கு எதிராக செயல்படுவதற்கு எனக்கு தைரியமில்லை. வீட்டிற்குள்ளேயே நான் அமைதியற்ற மனதுடன் இருந்துகொண்டிருந்தேன். சில நேரங்களில் படிகளைப் பார்த்துக்கொண்டு நான் வாசலிலேயே நின்று கொண்டிருப்பேன். சில வேளைகளில் படிகள் இருக்கும் பகுதியைப் போய் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பி வருவேன்.

இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கடந்தன. எங்களுடைய வீட்டின் வடக்குப்பக்கம் இருக்கும் வீட்டைச் சேர்ந்த மாதவன் திருவனந்தபுரத்தில்தான் படிக்கிறான். கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்ற தகவலை நான் தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் அவரும் வந்திருப்பார். ஹா! கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று...

விடுமுறை முடிந்தது. மாதவன் திரும்பிச் சென்று விட்டான். ஆமாம்... அவரும் திரும்பச் சென்றிருப்பார்- நான் ஒருமுறைகூட பார்க்காமலேயே! என்னை ஒருமுறை கூட பார்க்காமல்! என்னை அவர் மறந்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. நானும் மறப்பதற்கு முயற்சி செய்தேன். நான் மறக்க முயற்சி செய்யச் செய்ய, அவரைப் பற்றிய என்னுடைய நினைவு அதிகரித்துக்கொண்டே வந்தது.

இப்படியே கோடைகாலமும் வந்து சேர்ந்தது. தேர்வு முடிந்து மாதவன் திருவனந்தபுரத்திலிருந்து வீட்டிற்கு வந்தான். என்னுடைய அமைதியற்ற நிலைமை மேலும் தீவிரமானது. படிகள் இருக்கும் பகுதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் தனியாக அமர்ந்திருப்பேன். கற்பனையில் அவரைப் பார்ப்பது எனக்கு நிம்மதியைத் தந்தது. என்னிடம் அன்றொரு நாள் அப்பளம் கேட்டதையும், சக்கரத்தை (நாணயத்தை) என் கையில்தான் தருவேன் என்று பிடிவாதம் பிடித்ததையும், சாளரத்தின் வழியாக இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு புன்னகை தவழும் அதரங்களுடன் என்னைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்ததையும், திருவனந்தபுரம் போவதற்கு என்னிடம் விடைபெற்றதையும், எனக்கு ஓணப் பரிசு தந்ததையும், நான் மாலையைக் கழுத்தில் அணிவித்ததையும் - இப்படி சந்தோஷம் எழச்செய்யும் காட்சிகள் ஒவ்வொன்றையும் நான் என்னுடைய மனத்திரையில் கண்டுகொண்டிருப்பேன். சில வேளைகளில் அந்த மோதிரத்தை எடுத்து விரலில் அணிந்துகொண்டு யாருமே இல்லாத இடத்தில் போய் உட்காருவேன். சில நேரங்களில் என்னைப் பார்ப்பதற்காக அவர் படிகளை தாண்டி வருகிறார் என்பதைப்போல, எனக்குத் தோன்றும். சில வேளைகளில் அவர் பின்னால் நின்றுகொண்டு என்னை அழைக்கிறார் என்பதைப்போல தோன்றும்.

நான் தனிமைச் சூழலை மிகவும் அதிகமாக விரும்பினேன். என்னுடைய அந்த சிறிய வீட்டின் தெற்குப் பகுதியிலிருந்த ஒரு வயலின் ஓரத்தில், ஒரு சிறிய புதரும் ஒரு பெரிய புளியமரமும் இருந்தன. மாலை வேளையில் நான் அந்த புதரின் மறைவில் போய் அமர்ந்திருப்பது வழக்கமான விஷயமாக இருந்தது. அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி சந்தோஷப்படுவதற்கு எந்தவித பாதிப்புமில்லாத ஒரு பொருத்தமான இடமாக அது இருந்தது. ஒரு மாலைவேளையில் நான் அங்கு சென்று வயலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். நேரம் சாய்ந்தும், நான் அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன். நான் அவரைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.

“ரதீ!” நான் கனவில் இருப்பதைப்போல சற்று திடுக்கிட்டுப் பார்த்தேன். அதோ... அவர் அங்கு... அந்த வயலில் என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்! முதலில் நான் நம்பவில்லை. அவர் அதற்குப் பிறகும் அழைத்தார்: “ரதீ!”

நான் வேகமாக எழுந்தேன். அவர் எனக்கருகில் வந்தார். மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் எங்களுடைய முகங்கள் ஒன்றையொன்று பார்த்தன. நாங்கள் எதுவும் பேசவில்லை. நாங்கள் என்ன பேசுவது! எங்களுடைய இதயங்கள் அவற்றின் மௌன மொழியில் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தன.

அவர் மேலும் அருகில் வந்தார். நான் அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அவர் கைகளை என்னை நோக்கி நீட்டினார் - அவருடைய மூச்சுக் காற்று என் முகத்தைத் தொட்டது. அதற்குப் பிறகு எனக்கு எதுவுமே தெரியாது.

ஒரு வருடம் கடந்தோடியது. நான் கர்ப்பிணியாக ஆனேன். ஆச்சாரமாக இருக்கக்கூடிய பிராமண ஜாதியில் ஒரு விதவை கர்ப்பிணியாக ஆவது! அவளுக்கும் அவளுடைய குடும்பத்திற்கும் அதைவிட ஒரு ஆபத்து உண்டாக முடியுமா? வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் தப்பிப்பதற்கு அவளுக்கு வழியே இல்லை.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை என் தாயும் தந்தையும் தெரிந்துகொண்டார்கள். என் தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு கூப்பாடு போட்டாள். என் தந்தை எதுவும் பேசவில்லை. என் தாயை சமாதானப் படுத்தவோ, என்னை பார்த்து கோபப்படவோ... எதுவுமே செய்யவில்லை. நெருப்பு மலையைப்போல அவருடைய மனம் உருகிக்கொண்டிருந்தது. என்னை விலக்காக்கி, வீட்டிற்கு வெளியே விரட்டிவிடுவது - அது ஒன்றுதான் என் தந்தைக்கும் தாய்க்கும் உள்ள தப்பிக்கும் வழி. குடும்பதிலிருந்து ஒதுக்கப்பட்டு, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தெருவில் அலைவதற்கு நான் தயாராக இருந்தேன். நான் யாருடைய ஈர்ப்பிற்கும் அடிபணிந்து போகவில்லை. யாருடைய வஞ்சனைச் செயலிலும் சிக்கிக்கொள்ளவில்லை. என்னுடைய கர்ப்பத்தில் இருக்கக்கூடிய குழந்தை என்னுடைய காதல் செடியில் காய்த்த விளைவு. அந்த விஷயத்தில் நான் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

என்னை வீட்டைவிட்டு வெளியேற்றவில்லையென்றால், நானும் என்னுடைய தாய், தந்தையும் சமுதாயத்திலிருந்து விரட்டப்படுவோம். அதுதான் ஜாதியின் ஆச்சாரம்! அதுதான் சமுதாய நீதி!

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்று என் தாய் என்னிடம் கேட்டாள். நான் சொல்லவில்லை. என் தாய் வற்புறுத்தினாள். வற்புறுத்தல் தாங்க முடியாத அளவிற்கு வந்தபோது நான் சொன்னேன் : “அது யாரென்று நான் சொல்லமாட்டேன். அது யாரென்று அறிந்து யாருக்கும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. தவறு செய்தது நான்தான். என்னை தண்டித்தால் போதும்.”

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற செய்தி காட்டுத் தீயைப்போல பரவியது. கேட்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். ‘வீட்டிலும் வெளியிலும்’ எனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டு, எனக்குக் கிடைக்கப்போகும் தண்டனையைக் குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள். சிலர் என்னுடைய தாய் - தந்தையிடம் கவலையை வெளிப்படுத்தினார்கள். என்னுடைய ரகசிய காதலன் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மட்டும் எல்லாருக்கும் ஒரே மாதிரி விருப்பம் இருந்தது.

எங்களுடைய ஜாதியைச் சேர்ந்த சில வயதான பெண்கள் என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள். என்னுடைய கர்ப்ப நிலையைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்தார்கள்.  சமுதாய ஆன்மிகவாதிகளும், பெரியவர்களும் சேர்ந்து பேசினார்கள். என்னை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதென்று அவர்கள் ஒரே மனதுடன் தீர்மானித்தார்கள். இரண்டே இரண்டு தீர்மானங்கள் மட்டுமே. ஒன்று - என்னை வீட்டைவிட்டு வெளியே போகும்படி கூறிவிட்டு, வீட்டைச் சுத்தப்படுத்துவது, இல்லாவிட்டால் - என்னைப்போலவே என் தந்தையையும் தாயையும் வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறுவது. ‘கல்லைப் பிளக்கக்கூடிய உத்தரவாக’ இருந்தது அது!


தாய் - தந்தையிடம் நான் வீட்டைவிட்டு வெளியேறிக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுடைய ஒரே மகளுக்காக சமுதாயத்தின் எதிர்ப்பை மீறுவதென்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

அவமான நெருப்பில் போட்டுப் பொசுக்குவது - அதுதான் சமுதாய எதிர்ப்புகளை மீறுபவர்களுக்கு சமுதாயம் தரும் தண்டனை. மக்கள் எங்களைப்பற்றி பல வகையான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். என்னுடைய கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்குத் தந்தை - என் சொந்த தந்தைதான் என்றும், அதனால் தான் அவர் என்னை ஒதுக்கித் தள்ளாமல் இருக்கிறார் என்றும் சமுதாயப் பிசாசுகள் பேசின. அது போதாதா? இதைவிட பயங்கரமான வேறு எந்த ஒரு தண்டனையை சமுதாயம் எங்களுக்குத் தர வேண்டும்?

நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் மிகவும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டோம். என் தந்தையும், தாயும் என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை. என் தாய் சில வேளைகளில் தான் மட்டும் அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பாள். நான் அருகில் சென்றவுடன் என் தாய் கவலையை மனதிற்குள்ளேயே அடக்கிக்கொள்வாள். என் தந்தையின் நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது, நான் நடுங்கிப்போய் விடுவேன். மக்கள் அவரை மிகுந்த வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அவருக்கு கேட்கிற மாதிரி ‘மகளின் காதலன்’ என்று அழைப்பதற்குக்கூட தயங்கவில்லை. என் தந்தை அவை எல்லாவற்றையும் மிகவும் அமைதியாகத் தாங்கிக் கொண்டார். ஒருநாள் என் தந்தை என்னை அருகில் அழைத்து கேட்டார் : “மகளே, அது யாரென்று சொல்லு.”

நான் கண்ணீருடன் கூறினேன் : “அப்பா ! அது யாரென்று கூறுவதற்கு என்னால் முடியவில்லை. எந்த சூழ்நிலை வந்தாலும், என் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையுடன் என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் நான் அதைச் சொல்லமாட்டேன்.”

அதற்குப்பிறகு என் தந்தை எதுவும் கேட்கவில்லை. நான் முழு கர்ப்பிணியாக ஆனேன். ஒரு இரவு வேளையில் யாருடைய உதவியும் இல்லாமலேயே நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

இரவின் இரண்டாவது ஜாமம் முடிந்தது. தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். நிர்மலமான வானத்தில் காட்சியளித்த நட்சத்திரங்கள், என் கையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கள்ளங்கபடமற்ற முகத்தைப் பார்த்து கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. என்னுடைய ‘அவமானச் சுமையை’ அதன் சொந்தக்காரரின் கையில் ஒப்படைப்பதற்காக நான் அங்கு சென்றேன்.

அவர் அங்கு காத்திருந்தார். நான் குழந்தையை அவரிடம் நீட்டினேன். முதல் குழந்தையை முதன் முதலாக அதன் தந்தையின் கையில் கொடுக்கும்போது, தாய்க்கு உண்டாகக்கூடிய சந்தோஷத்தையும், அதை தாயின் கைகளிலிருந்து வாங்கும்போது தந்தைக்கு ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் அனுபவித்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

இரு கைகளையும் நீட்டி அவர் குழந்தையை வாங்கி, ஆர்வத்துடன் முத்தமிட்டு, மெதுவாக அதை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டார். அவர் அதன் முகத்தைச் சற்று பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டானது. பதிவிரதைகளான பெண்களுக்கு பொதுவாகவே உண்டாகக்கூடிய ஒரு ஆசை அது. அவருக்கும் அப்படிப்பட்ட ஒரு ஆசை உண்டாகாமல் இல்லை. ஆண்களுக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய சந்தேகம் அது.

அவர் சொன்னார் : “என் பாக்கெட்டில் ‘லைட்’ இருக்கிறது.”

நான் ‘எலெக்ட்ரிக் லைட்’டை எடுத்து எரியச் செய்தேன். அவர் குழந்தையின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அவர் அதை தொடர்ந்து முத்தமிட்டார். அந்தக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிறைந்தது.

குழந்தை கண்விழித்து அழ ஆரம்பித்தது. நான் வேகமாக அதை வாங்கிப் பால் கொடுத்தேன். அவர் தழுதழுத்த குரலில் சொன்னார் : “ரதீ என் செல்லக் குழந்தையை பத்திரமா பார்த்துக்கணும்.”

மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. அவர் ஒரு பி.ஏ.க்காரராக ஆனார். நான் கர்ப்பிணியாகவும் ஆனேன்.

ரவி... அதுதான் என் முதல் மகனின் பெயர். அவனுக்கு இப்போது மூன்று வயதாகிவிட்டது. இவ்வளவு நாட்களாக நான் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அவனை அனுமதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாட்டின் காரணமாக என்னுடைய எந்தப் பாவமும் செய்யாத குழந்தை கேலிப் பொருளாக ஆக்கப்படும் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.

ஒருநாள் எங்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு ஏழைப்பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவளுடன் ஒரு குழந்தையும் இருந்தது. ரவியும் அவனும் சேர்ந்து பலா இலைகளை விரித்து, மண்ணையும் கல்லையும் பரிமாறி ஒரு விருந்து நடத்தினார்கள். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். படிப்படியாக  விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, வேறு இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்தார்கள்.

சிங்க மாதத்தில் திருவோணம் நெருங்கியது. ஒருநாள் மாலை வேளையில் நான் சிந்தனையில் மூழ்கியவாறு திண்ணையில் அமர்ந்திருந்தேன். ரவி, மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவன் கையில் ஒரு ரப்பர் பந்து இருந்தது.

ரவி கூறினான் : “நாம் எல்லாரும் சேர்ந்து விளையாடுவோம்.”

அவன் சொன்னான் : “என் அப்பா நான் விளையாடுவதற்குத்தான் பந்தையே வாங்கி வந்தார்.”

ரவி உடினடியாக அதற்கு பதில் சொன்னான் : “என் அப்பா எனக்கு பந்து வாங்கித் தருவார்.”

‘ரவியின் எதிராளி விழுந்து விழுந்து சிரித்து கொண்டே சொன்னான் : “பந்து வாங்கித் தருவதற்கு உனக்கு அப்பா இருக்கிறாரா?”

எல்லாரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். என் குழந்தையின் முகம் வெளிறிப்போய்விட்டது. அழுதவாறு அவன் வின்னை நோக்கி ஓடி வந்தான். “அம்மா! என் அப்பா எங்கே?” அவன் கேட்டான்.

நான் எதுவும் கூறவில்லை. என் இதயம் பயங்கரமாக வேதனைகொண்டது. என் குழந்தையின் கள்ளங்கபடமற்ற முகம் கண்ணீரில் மூழ்கிப்போனது. அதற்குப் பிறகும் அவன் கேட்டான்: “சொல்லு, அம்மா! எனக்கு அப்பா இருக்கிறாரா?”

“இருக்கிறார்.” அதற்குமேல் எதுவும் கூறுவதற்கு என்னால் முடியவில்லை.

போதும் - அவனுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும்... அவனுடைய முகம் பிரகாசமாக ஆனது. நான் அவனைப் பிடித்து மடியில் அமரவைத்து நெற்றியில் கண்ணீரைச் சிந்தினேன். அவன் கேட்டான்: “அம்மா, நீ ஏன் அழணும்? அப்பா எங்கே போயிட்டாரு?”

நன் பதில் கூறிவில்லை. அவன் தொடர்ந்து கேட்டான் : “அப்பா எப்போ வருவார் அம்மா?”

நான் அவனை சமாதானப்படுத்தினேன் : “மகனே, உன் அப்பா நாளைக்கு வருவார்.”

அவன் ஆர்வத்துடன் கேட்டான் : “எனக்கு பந்து கொண்டுவருவாரா?”

“ம்...”

அவன் திருப்தியாகிவிட்டான்.


அன்று உத்ராடம். இரவு ஏழு நாழிகை இருட்டிய பிறகும், ரவி உறங்கவில்லை. அவன் தன்னுடைய தந்தையைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தான். அவன் அவ்வப்போது கேட்டான் : “அப்பா எப்போ வருவார்?”

நான் கூறுவேன் : “நள்ளிரவு ஆகும். மகனே, நீ தூங்கு. அப்பா வந்தவுடன் உன்னை எழுப்புகிறேன்.”

“வேண்டாம்... அப்பாவைப் பார்த்துவிட்டுத்தான் நான் தூங்குவேன்.”

தன்னுடைய தந்தையின் நிறம், உயரம், எடை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் நினைத்தான். அவை எல்லாவற்றையும் நான் அவனுக்குக் கூறினேன். அவை அனைத்தையும் கேட்டவாறு, அவன் என் மடியில் படுத்துத் தூங்கிவிட்டான்.

வயலின் எதிர்க்கரையிலிருந்து ஒரு பாதி ராக்கோழி கூவிக்கொண்டிருந்தது. ரவி சுகமான உறக்கத்தில் மூழ்கிப் படுத்திருந்தான். நான் அமைதியாக என் குழந்தையைத் தூக்கியெடுத்து, தோளில் படுக்கச் செய்து, அந்த ரகசிய இடத்திற்கு... இல்லை... புண்ணிய இடத்திற்குப் புறப்பட்டேன். நள்ளிரவு வேளையில் அதைப்போன்று எவ்வளவோ புனிதப் பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன்!

இருண்ட ஆகாயத்திலிருந்து நிலவு தன்னுடைய ஒளியைப் பரவச் செய்துககொண்டிருந்தது. நான் அவர் அருகில் சென்றேன். அவர் ஆர்வத்துடன் இரண்டு கைகளையும் நீட்டினார். நான் என் செல்லக்குழந்தையைத் தட்டி எழுப்பினேன் : “மகனே, இதோ அப்பா! உன்னுடைய அப்பா!”

அவன் கண்விழித்தான். அந்த நீட்டப்பட்ட கைகளை நோக்கி அவன் தாவினான். “அப்பா! அப்பா...!” அவன் தன் தந்தையின் மார்பில் சாய்ந்து படுத்துக் கொண்டான் : “என் அப்பா!... என் அப்பா!”

அவர் அந்தக் காதல் கனியை தொடர்ந்து முத்தமிட்டார். நான் மிகவும் சந்தோஷம்பட்டேன்.

அவன் தன்னுடைய தந்தையை இறுகப் பற்றிக் கொண்டு சொன்னான் : “இனி நான் என் அப்பாவை விடவே மாட்டேன்.”

அவர் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார் - தந்தை தன் மகனின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

மறுநாள் திருவோணம். நான் அவர் கழுத்தில் மாலை அணிவித்த நாள்... ஊர் முழுவதும் சந்தோஷத்தில் திளைக்கும் நாள்.

நான் காலையில் குளித்துமுடித்து திண்ணையில் அமர்ந்து தலை வாரிக்கொண்டிருந்தேன். என் தந்தை உள்ளே அமர்ந்து முந்தைய நாள் அப்பளம் விற்பனை செய்த கணக்கைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார். என் தாய் சமையலறையில் இருந்தாள். ரவி தன்னுடைய புதிய ரப்பர் பந்தை வாசலில் தட்டிக் கொண்டும், சில நேரங்களில் தட்டியதைத் தொடர்ந்து கவிழ்ந்து கீழே விழுந்துகொண்டும், எழுந்து நின்று ஆரவாரம் எழுப்பிக் கொண்டும் இருந்தான். என்னுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை அவ்வப்போது அசைந்துகொண்டிருந்தது.

வாசற்படியில் யாரோ வந்திருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. ஆமாம்... அவர்தான்- என் குழந்தையின் அப்பா. நான் எழுந்தேன். அவர் படிகளைக் கடந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டப்பகல் ! எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அவர் என் வீட்டிற்கு வருகிறார். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்! நான் வறுமை வயப்பட்ட ஒரு பெண். அவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலையிலிருக்கும் ஒரு இளைஞன். நான் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு தவறு செய்த பெண். அவர் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் என் வீட்டிற்கு வருகிறார் என்றால்...! நான் திகைப்படைந்து நின்றுவிட்டேன்.

அவர் வாசலில் வந்து நின்றிருந்தார். ரவி வேகமாக பந்தைத் தட்டிக் கவிழ்ந்து விழுந்தான். பிறகு வேகமாக எழுந்து “ஹாயி! ஹாய்!” என்று உரத்த குரலில் கத்தினான். அவன் தந்தையைப் பார்க்கவில்லை. அவர் அவனை வாரித் தூக்கி ஒரு முத்தம் கொடுத்தார். அவன் தன் தந்தையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். “அப்பா! அப்பா! அம்மா, அப்பா வந்திருக்காரு!”

அந்த இடத்தில் இருந்துகொண்டு நகர்வதற்கு, ஏதாவது கூறுவதற்கு என்னால் முடியவில்லை. நான் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கி மூச்சுவிட முடியாமல் இருந்தேன். அவர் எனக்கு அருகில் வந்து சொன்னார் :

“ரதி, காதல் என்ற ஒன்றின் கழுத்தை நெறிப்பதற்கு இனி என்னால் முடியாது. தந்தை என்ற பதவியை கேலிப் பொருளாக ஆக்குவதற்கு இனி நான் தயாராக இல்லை. வா! என்னைப் பின்தொடர்ந்து வா. சமுதாய நாய்கள் குரைக்கட்டும்! நாம் இனி ஒன்றாகச் சேர்ந்து பயணத்தைத் தொடருவோம்.”

என் தந்தையும் தாயும் வாசலுக்கு வந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. ரவி தன்னுடைய தந்தையின் காதையும் மூக்கையும் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அவருடைய நன்கு சீவப்பட்டிருந்த தலை முடிகளை அவன் கலைத்துவிட்டான். அவருடைய பட்டுச் சட்டையின் எல்லா இடங்களிலும் அவன் தூசிபடும்படி செய்தான்.

“வா..” அவர் கட்டளை பிறப்பித்துவிட்டு, எங்களுடைய குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு நடந்தார். நான் அவரைப் பின்பற்றினேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.