Logo

விடுமுறை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5689
vidumurai

விடுமுறை

அஜீத் கவுர்

தமிழில் : சுரா

ட்டியின் நுனியைப்போல சூரியன் வானத்தின் மார்பைப் பிளந்து கொண்டிருந்தது. குளையில் இருப்பதைப் போல அனைத்தும் பிரகாசமாக இருந்தன. வறட்சி, வெப்பத்தின் காரணமாக எல்லா இடங்களும் ஆளரவமற்று இருந்தன. சிறிய ஓசைகள் கூட கேட்கவில்லை.

பற்றி பரிந்து கொண்டிருந்த இந்த மதிய வேளையில், பிரகாசித்துக் கொண்டிருந்த வானமெனும் சூளைக்குக் கீழே, நிழலெதுவும் இல்லாத வயலில் வேலை செய்து கொண்டிருந்த சாதாரண விவசாயி அவன். அவனுடைய வயலும் சாதாரணமானதுதான். சாதாரண கிராமத்தைப் போன்றதுதான் அவனுடைய சில குடிசைகள். இந்த நேரத்தில் அவன் கிராமத்திற்கு வெளியில் நிலத்தை உழுது கொண்டிருந்தான்.

‘உலகத்தைப் படைத்த கடவுளே, பரவாயில்லை... உங்களுடைய இந்த சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை உண்மையிலேயே அபாரமானதுதான். இளம் வெய்யில் படாமல் கோதுமை விளையாது. அறுவடை செய்யும்போது, கோதுமை மணிகளின் அளவைக் கொண்ட வியர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து கொண்டிருக்கும். தானியத்தைப் பிரித்து ஒன்று சேர்க்கும்போது, பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல சூரியன் சிவப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்திலா? இல்லை... மங்கள்சிங் பாய். அது எப்படி சிவப்பு நிறமாகும்?’ இப்படி தனக்குத்தானே உரையாடிக் கொண்டிருந்தான். அவன். ‘ஏய், மங்கள்சிங், போய் குளி. குளித்துவிட்டு என்ன செய்வது? ஏதாவது பசுவை தானம் செய்யப் போகிறாயா மங்கள்சிங்?’

அவனுடைய மூத்த மகன் கர்த்தாரா கொலை செய்யப்பட்டுவிட்டான். போலீஸ்காரர்கள்தான் கொன்றுவிட்டார்கள் என்று சிலர் சொன்னார்கள். தீவிரவாதிகளுக்கு அவன்மீது ஏதோ கோபம் இருந்த காரணத்தால் கொன்றுவிட்டார்கள் என்று சிலர் கூறினார்கள். உறவினர்களில் யாரோ பழைய பகையைத் தீர்த்துக் கொண்டார்கள் என்று வேறு சிலர் கூறினார்கள். மது அருந்திவிட்டு கடைவீதியில் சிலரிடம் சண்டை போட்டான் என்று சிலர் கூறினார்கள். ஏதோ பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று போலீஸ்காரர்கள் கூறினார்கள்.

‘பரவாயில்லை மங்கள்சிங் பாய்... போக வேண்டியவன் போய்விட்டான். போன பிறவிக் கடனைத் தீர்த்துவிட்டு அவன் இங்கேயிருந்து போய்விட்டான். அதற்காக மனதில் வேதனைப்பட்டுக் கொண்டு நீ இப்படி உட்கார்ந்திருந்தால், வீட்டில் இப்போது இருப்பவர்களின் பசியைப் போக்குவதற்கு யார் இருக்கிறார்கள்? கடவுளா? அவர் கண்களை மூடி உறக்கத்தில் இருக்கிறார்... உனக்கு உதவுவதற்கு கடவுள் வரப்போவதில்லை. மங்கள்சிங், எழுந்து நட.’

அவன் எழுந்து நடந்தான். வேலை செய்தான். காயங்களில் தோல் காய்ந்து காணப்பட்டது. லேசாக சொறிந்தால் ரத்தம் வந்துவிடும். அதனால் அவன் வேறு பலவற்றைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தான். கர்த்தாராவைப் பற்றிய நினைவுகள் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தன.

அப்படியே இல்லையென்றாலும் காளைகளைப் பூட்டக்கூடிய நாட்கள்தான் இவை. மண்ணைக் கிளறி சீர்ப்படுத்தும் நாட்கள். நிறைய வேலைகள் இல்லையென்றாலும், தான் முழுமையான ஈடுபாட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையை அவன் தேடிப்பிடிப்பான். இப்படிக் கூறுவான். ‘மனம் என்பது சொல்வதைக் கேட்காத குதிரை, மங்கள்சிங். கடிவாளத்தை எப்போதும் இறுகப் பற்றியிருக்க வேண்டும்.’ இல்லாவிட்டால் இப்படிக் கூறுவான்- ‘கடவுளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறது மங்கள்சிங்? இங்கேயிருப்பதைப் பிடுங்கி அங்கே நட வேண்டும் என்றுதானே துறவி சாயி கூறியிருக்கிறார்.’

எனினும், கடவுளைப் பற்றி அவன் இதுவரை சிந்தித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்திருக்கலாம். தனக்கென்றிருக்கும் சொர்க்கத்தில் ஆனந்தக் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பார். ஆழ்ந்த உறக்கத்தில் அவர் இருப்பார். தன்னுடைய இளம் வயதில், மழை பெய்து முடித்து நிர்மலமான வானத்தில் இளம்வெயில் பரவியிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஏழு நிறங்களைக் கொண்ட ஊஞ்சல் தோன்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனுடைய தந்தை கூறுவதுண்டு- ‘நீ ஆடவேண்டும் என்பதற்காக கடவுள் படைத்திருக்கும் ஊஞ்சல் அது.’

‘அவருக்கு வேறென்ன வேலை, மங்கள்சிங்? ஊஞ்சலில் ஆடுவதும் தூக்கமும் முடிந்தால், வானத்தில் ஒரு பயணம்... பொசுக்கிக் கொண்டிருக்கும் இந்த உச்சிப்பகல் பொழுதில் காளையைப் பூட்ட வேண்டிய சூழ்நிலை வந்தால் அவருக்குப் புரியும்... இந்த உலகத்தைப் படைத்ததன் மூலம் எப்படிப்பட்ட துன்பத்தை தான் உண்டாக்கியிருக்கிறோம் என்ற உண்மை...’

சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த இந்த மதிய வேளையில் அவன் காளையைப் பூட்டிக் கொண்டிருந்தான். காளைகளைக் கொஞ்சுவதற்கு மத்தியில், வந்து கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான். பஸந்த் கவுர் உணவு கொண்டு வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதே. தாகம் எடுத்து தாகம் எடுத்து தொண்டையே வறண்டுபோய்விட்டது. நீர் பருகினால், சூடாகிவிட்ட அடுப்பின் நிலையிலிருக்கும் வயிற்றிலிருந்து வெடிச் சத்தமோ, சீறலோ உண்டாகும். அதற்குப் பிறகு உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அப்போது அவளுடைய வருத்தத்தைக் கேட்க வேண்டியதிருக்கும்- ‘இவ்வளவு தூரத்திலிருந்து நான் கஷ்டப்பட்டு...’

அப்போது ஒற்றையடிப் பாதையில் தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. ஆனால் அது கிராமத்தின் திசையிலிருந்ததல்ல. வெளியே எங்கோ இருந்து வரும் ஆள்...

‘இந்த சுட்டுப் பொசுக்கும் உச்சிப்பொழுதில் இங்கே யார் வந்து கொண்டிருப்பது மங்கள்சிங்?’

‘இதில் ஒரு புதுமை தோன்றவில்லையா? முன்பெல்லாம் தூரத்தில் யாராவது வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அது யாரென்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆர்வம் மனிதர்களுக்கு இருந்தது. விருந்தாளி எந்த வீட்டுக்கு வருகிறாரென்ற ஆர்வம்... அது யாருடைய மாமாவாகவோ சித்தப்பாவாகவோ இருக்கும். இல்லாவிட்டால் மனைவியின் வீட்டிலிருந்து வரக்கூடிய உறவினராக இருக்கும். எந்த வீட்டிற்கு வரக்கூடிய உறவினராக இருந்தாலும் சரி, முதலில் பார்க்கக்கூடிய வீட்டுக்காரர்கள் வரும் நபருக்கு லஸ்ஸியோ அல்லது வேறு ஏதாவதோ கொடுத்து உபசரிக்காமல் போக விடமாட்டார்கள்.’

‘இப்போது காலத்திற்கு வந்திருக்கும் மாற்றத்தைப் பார். தூரத்தில் ஆள் வருவதைப் பார்க்கும்போதே, மனிதர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. மனிதனைப் பார்த்து மனிதன் பயப்படக்கூடிய நிலைமையைச் சற்று சிந்தித்துப் பார் மங்கள்சிங். சிங்கம் இன்னொரு சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை. நேருக்கு நேராக வந்து கொண்டிருக்கும் அவன் தன்னைவிட பலசாலியாக இருந்தால்கூட.’


இப்போது தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ஆளை நன்கு பார்க்க முடியும். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நடக்க நடக்க, தேய்ந்து பழையதாகிவிட்ட செருப்பு தூசியைக் கிளப்பி, தேய்ந்து தேய்ந்து மேலும் மோசமாகிக் கொண்டிருந்தது. தூசி படிந்த பைஜமாவும் குர்த்தாவும் தலையில் அணிந்திருந்த அழுக்கடைந்த பகடி (தலைப்பாகை)யும்... தோளிலும் சால்வையைப் போல ஏதோ ஒன்றை அணிந்திருக்கிறார். வெயில்படாமல் இருப்பதற்காக ஒரு பழைய துணியைக் கொண்டு தலையை மூடியிருக்கிறார். குனிந்த தலையைப் பார்க்கும்போது ஆள் பல மைல்களைக் கடந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவருடைய முழுக்கவனமும் தன்னுடைய கால் வடுகளிலேயே இருந்தது. கையில் வைத்திருந்த கழி ஊன்றுவதைவிட, நிலத்தில் இழுபட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. முகத்தில் ஆழமான சுருங்கங்கள். வயது அதிகமாகிவிட்ட அதிர்ஷ்டமில்லாத ஒரு ஆளைப்போல அந்த மனிதர் தோன்றினார்.

மங்கள்சிங் முதலில் நினைத்தான். ‘அந்த மனிதர் அவர் வழியில் போகட்டும்... யாராக இருந்தாலும் எனக்கென்ன? பிறகு... இப்போதைய காலமும்... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  போர்வைக்குள் ஏ.கே.47 மறைத்து வைத்திருக்கவில்லை என்று யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்தில் வெறும் ஒரு முட்டாளாக இருப்பதுதான் நல்லது மங்கள் சிங்.’

வயதான அந்த மனிதர் மேலும் சற்று அருகில் வந்தார். வயலின் வரப்பில் நின்று, இமை மூடாமல் அவர் மங்கள்சிங்கை நேரடியாகப் பார்த்தார்.

“தண்ணீர் கிடைக்குமா?” பலவீனமான குரலில் அவர் கேட்டார்.

மரத்திற்குக் கீழிருந்த முக்காலியில் மண் குடம் வைக்கப்பட்டிருந்தது. மங்கள்சிங் உழுவதை நிறுத்திவிட்டு காளைகளை அவிழ்த்துவிட்டு, மரத்தின் நிழலுக்கு அவற்றை வாஞ்சையுடன் போகச் செய்தான். தொடர்ந்து அந்த மனிதரிடம் கூறினான்- “வாங்க பெரியவரே, வேண்டும் என்கிற அளவுக்கு தண்ணி இருக்கு. எவ்வளவு வேணும்னாலும் குடிங்க,”

‘நீரைக் குடித்துவிட்டுப் போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரமா போங்க...’ மங்கள்சிங் தன் மனதிற்குள் கூறினான்.

மென்மையான மண்ணை மிதித்து அந்த வயதான கிழவர் மரத்தின் அடிப்பகுதியை நோக்கி வந்தார். மங்கள்சிங் குடத்திலிருந்து ஒரு குவளை நிறைய நீரை எடுத்து அவருக்குக் கொடுத்தான். அப்போதுதான் அவர் தன் மார்போடு, சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த பொட்டலம் மங்கள்சிங்கின் கவனத்தில் பட்டது.

மங்கள்சிங்கின் மனம் அமைதியில்லாமல் தவித்தது. நிவேதனத்துக்கான மலர்கள் கொண்ட பொட்டலத்தை இதேபோல மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு கர்த்தார் பூர் ஸாஹப்பிற்குச் சென்ற விஷயம் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. அவனுடைய மனம் இளகியது. ‘இந்த கிழவருக்கும் சொந்தமான யாராவது...’

திடீரென்று அவன் பயந்துவிட்டான். ‘இதில் வெடிமருந்து இருக்கக்கூடாது என்றில்லை மங்கள்சிங்.’

அவன் தன் மனதை அமைதிப்படுத்த முயன்றான். இந்த வயதான மனிதருக்கு அருகிலும் ஒரு பஸந்த்கவுர் இல்லையென்று யாருக்குத் தெரியும்? பயணத்திற்கு மத்தியில் பசி தோன்றும்போது சாப்பிடுவதற்காக ‘மிஸ்ஸி பராடி’ தயார் செய்து அவள் அவருக்குக் கொடுத்திருக்கலாம். மிஸ்ஸி பராடியாக இருந்தால், அதில் கட்டாயம் ஊறுகாய் இருக்கும். அவனுடைய முகத்தில் புன்சிரிப்பு மலர்ந்தது. ‘நம்ம பெண்களை வெல்வதற்கு யாருமே இல்லை மங்கள்சிங். வெண்ணெய் தேய்த்து மிஸ்ஸி சப்பாத்தி சுட்டு, அதற்கிடையில் மசாலா கலந்த மாங்காய் ஊறுகாய்த் துண்டுகளை வைத்துத் தரும் ஆற்றல் கொண்ட பெண்கள் இந்த உலகத்தில் வேறெங்கு இருக்கிறார்கள்?’

‘எங்குமில்லை. கிழவர் இங்கே நிழலில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடுவதாக இருந்தால், பஸந்தி கொண்டு வந்த லஸ்ஸியை வயிறு நிறைய குடிப்பதற்கு நான் இந்த மனிதருக்குத் தருவேன். அந்த மனிதர் எந்த சமயத்திலும் மறக்க மாட்டார்.’

‘சரி... அந்த மனிதர் பஞ்சாபி இல்லையென்றால், மங்கள்சிங்...? மிஸ்ஸி சப்பாத்திற்கு பதிலாக அந்த மனிதரின் பொட்டலத்தில் வறுத்த கடலையோ சாதமோ வேறு ஏதாவதோ இருந்தால்? எது இருந்தாலும் நமக்கென்ன? வெளியே எங்கோ இருக்கக் கூடிய ஆளாக இருந்தால், இங்கு... இந்த பஞ்சாபில் எதற்கு இப்படி அலைந்து திரிய வேண்டும்? இங்கு இப்போது என்ன இருக்கிறது? கூலிவேலை செய்பவர்கள்கூட இங்கேயிருந்து இடம் மாறிப்போய்க் கொண்டிருக்கிறார்கள். பிறகு... இந்த, ஆளை எடுத்துக்கொண்டால், வேலை செய்யக்கூடியவராகத் தெரியவில்லை. வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு இருக்கவேண்டிய வயது இவருக்கு. வறண்ட இடத்தில் அலைந்து திரியக்கூடிய வயதல்ல.’

அப்போது பஸந்த் கவுர் உணவுப் பொட்டலத்தையும் லஸ்ஸி நிறைந்திருந்த பாத்திரத்தையும் அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள். அவள் எப்போது அருகில் வந்தமர்ந்தாள் என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை. அவளும் அந்த வயதான மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மங்கள்சிங் முஷ்டியைச் இறுக்கிக் கொண்டு வெங்காயத்தை உடைத்தான். பொட்டலத்திலிருந்து சப்பாத்தியை வெளியே எடுத்தான். ஊறுகாயின் வாசனை சுற்றிலும் பரவியது.

இரண்டு சப்பாத்திகளில் ஒரு வெங்காயத்தின் பகுதியையும் ஊறுகாய்த் துண்டையும் வைத்து கிழவருக்கு முன்னால் நீட்டினான். வயதான மனிதர் அதை வாங்கி மென்று சாப்பிட ஆரம்பித்தார்.

நீர் நிறைக்கப்பட்டிருந்த குடத்தின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த குவளை ஒன்றே ஒன்றுதான் இருந்தது. பிரச்சினையாக இருந்தது. பஸந்த் கவுர் அதில் லஸ்ஸியை நிறைத்து முதலில் கிழவருக்குக் கொடுத்தாள். அவர் அதை உறிஞ்சிப் பருகினார். தொடர்ந்து பஸந்த் கவுர் சிறிது நீரால் குவளையைக் கழுவி, அதில் லஸ்ஸியை ஊற்றி மங்கள்சிங்கின் முன்னால் வைத்தாள். அவனும் அதை உறிஞ்சிக் குடித்தான். லஸ்ஸி குறைந்து போய்விடக்கூடாது என்பதற்காக பஸந்த் கவுர் குடத்திலிருந்த நீரைப் பருகினாள்.

சப்பாத்தி சாப்பிடும் நேரத்தில், கிழவன் மங்கள் சிங்கையோ பஸந்த் கவுரையையோ பார்க்கவேயில்லை. தன் கணவனுக்குத் தெரிந்த ஆளாக அவர் இருப்பார் போலிருக்கிறது என்று அவள் நினைத்தாள். காரணம்- அவள் வரும்போது இருவரும் மரத்தின் நிழலில் ஒன்றாக அமர்ந்திருந்ததுதான்.

உணவு கொடுத்துவிட்டு பஸந்த் கவுர் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாள். கிழவர் இப்போதும் பொட்டலத்தை தன் வயிற்றோடு சேர்த்துப் பிடித்தவாறு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். தரையில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளை எண்ணுவதைப்போல அவர் கீழே பார்த்துக் கொண்டிருந்தார்.


மவுனத்தைக் கலைத்துக் கொண்டு மங்கள் சிங் கேட்டான்- “கொஞ்சம் படுப்பதற்கு போர்வை விரிக்கட்டுமா?” அதைத் தொடர்ந்து கிழவர் அந்த மரத்தடியில் தரையில் படுத்தார். பொட்டலத்தை தலைக்குக் கீழே வைக்கும்போது அவர் மிகவும் கவனமாக இருந்தார். அதைப் பார்க்கும்போது பொட்டலத்திற்குள் கண்ணாடிப் பாத்திரங்கள் இருக்கின்றன என்பதைப் போலவும், அவை உடைந்துவிடுமோ என்று அவர் பயப்படுகிறார் என்பதைப் போலவும் தோன்றியது. பொட்டலத்தில் தலை வைத்தவாறு அவர் கண்களை மூடினார்.

‘பாவம்... மிகவும் களைத்துப் போயிருக்கிறார் என்று தோன்றுகிறது.’ மங்கள் சிங் தனக்குள் நினைத்தான்.

பாவம்... தூங்கிக் கொள்ளட்டும் என்று முதலில் நினைத்தான். பிறகுதான் தோன்றியது. பொட்டலத்திற்குள் ஏதாவது அபாயத்தை உண்டாக்கும் பொருள் இருந்தால்? வெடிகுண்டாக இருக்கக் கூடாதென்றில்லையே. அதனால்தான் இப்படி பாதுகாப்பாக, அசையாமல் அதை அவர் வைத்திருக்கிறார். இறுதியில் அவன் கிழவரிடம் கேட்டான். “பெரியவரே, நீங்க எங்கேயிருந்து வர்றீங்க?”

கிழவர் கண்களைத் திறந்தார். பல யுகங்களாக இருந்த களைப்பும் விரக்தியும் அவற்றில் தெரிந்தன. அத்துடன் மெல்லிய ஒரு பிரகாசமும் அதில் கலந்திருப்பதைபோல மங்கள்சிங்கிற்குத் தோன்றியது.

களைத்துப் போயிருந்த கண்களால் ஒரு நிமிடம் அவர் வெறுமனே மங்கள்சிங்கைப் பார்த்தார்.

“பயணம் எங்கே?” மங்கள் சிங்கின் அடுத்த கேள்வி.

“எங்கேயுமில்லை...”

‘உச்சிப் பொழுதில் இந்தக் கடமையான வெய்யிலில் வெறுமனே யாரும் பயணம்  செய்யமாட்டார்கள். ஏதாவது இலக்கு இருக்கும்...’ மங்கள் சிங்கின் மனதிற்குள் ஆர்வமும் சந்தேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

“எங்கேயுமில்லை. வெறுமனே புறப்பட்டேன். மனம் சோர்வடைந்தபோது கிளம்பிவிட்டேன்.”

“பெரியவரே, உங்க பெயரென்ன?”

“பெயரா?”

“ஆமாம்... பெயர்?”

“என் பெயர் கடவுள்.”

“கடவுள் என்றால்...?”

“என் பெயர் கடவுள் என்பதுதான்.”

“சரி... இங்கே இப்படி சுற்றித்திரிவது எதற்குக் கடவுளே?”

“மனதில் வெறுப்புண்டாகி, நான் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியேறி வந்துவிட்டேன்.”

“யாரிடமிருந்து விடுமுறை எடுத்தீங்க?”

“வேறு யாரிடமிருந்தும் அல்ல. என்னிடமிருந்துதான்...”- பெரியவரின் குரலில் பரிதாபம் கலந்திருந்தது.

‘அது எப்படி நடக்கும்? ஆகாயங்களில் சுகமாக வாழ்ந்து கொண்டும், நட்சத்திரங்களில் சுற்றித் திரிந்து கொண்டும் இருக்கக்கூடிய கடவுள்... சூரியனையும் சந்திரனையும் விளக்காகப் பயன்படுத்தும் கடவுள்... கிழவர் தமாஷாக ஏதோ பேசுகிறார்.’- மங்கள் சிங் தனக்குள் நினைத்தான்.

அவன் தன் மனதிற்குள் கூறியதைக் காதில் வாங்கியதைப் போல கடவுள் சொன்னார்-

“இல்லை... விளையாட்டாக இல்லை. உண்மையிலேயே நான் கடவுள்தான். நான் இந்த உலகத்தை எதற்காகப் படைத்தேன் என்பது தெரியுமா? இப்போது மனிதன் மனிதனைத் தின்று கொண்டிருக்கிறான். உலகத்தைப் படைக்கும்போது நான் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.”

“நீங்கள் கடவுளாக இருக்கும் பட்சம், ஒரு கழியைச் சுழற்றி எல்லாரையும் நேர்வழிக்குக் கொண்டு வரவேண்டாமா? எதற்கு விடுமுறை எடுக்க வேண்டும்?”

“அப்படியல்ல. நான் தளர்ந்து போய்விட்டேன். என் பெயரைக் கூறித்தான் ஆட்கள் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் விடுமுறை எடுத்தால், ஒருவேளை இந்த அக்கிரமங்கள் முடிவுக்கு வரலாம்.”

“முடிவுக்கு வருமா?”

“என்னவோ?” கடவுள் நீண்ட பெருமூச்சுவிட்டார்.

‘பாவம்... மனம் வெறுப்படைந்துவிட்டது. மிகுந்த விரக்தியும்...’ மங்கள் சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

“விரக்தி என்றால்... கடுமையான விரக்தி. நான் முழுவதுமாக தகர்ந்து போய் இருக்கிறேன். உங்களுடைய வீட்டில் காலியாக ஏதாவது கட்டில் கிடக்கிறதா? இரவில் நான் வாசலில் படுத்துக் கொள்கிறேன். அதிகாலையில் எழுந்து போய்விடுகிறேன்.”

“நான்  இப்போது காளையைப் பூட்ட வேண்டுமே.”

“பரவாயில்லை... நீங்கள் உங்களுடைய வேலையைச் செய்யுங்கள். நான் இந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கிறேன். கொஞ்சம் தூங்கிவிட்டு, உங்களுடைய வீட்டிற்கு வருகிறேன்.”

மங்கள்சிங்கிற்கு எதுவுமே புரியவில்லை. அவன் எழுந்து காளைகளுக்கு தீனியும் நீரும் கொடுத்து விட்டு நிலத்தை உழ ஆரம்பித்தான்.

சூரியன் மறைந்தபோது, அவன் காளைகளை அவிழ்த்துவிட்டான். கலப்பையைத் தோளில் வைத்தவாறு, கிழவரிடம் சொன்னான்-

 

“சாயங்காலம் ஆகிவிட்டது. இனி நாம் புறப்படுவோம். இருட்டு வருவதற்கு முன்பே வீட்டை அடையணும். போதாத காலம்...”

கிழவர் காலில் செருப்பை அணிந்து, போர்வையை இழுத்த தோளில் இட்டு, பொட்டலத்தை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனுடன் சேர்ந்து நடந்தார்.

‘காப்பாற்றணும், என் கடவுளே. ஏதாவது போக்கிரியாக இருக்காது என்று யார் கண்டது? இல்லாவிட்டால்... தீவிரவாதியாக இருக்குமோ? இந்த மனிதரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது சரியான செயல்தானா?’ மங்கள்சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

“நீ என்னிடம் அடைக்கலம் கேட்கிறாயா? இப்போது நான் யாருக்கும் எதையும் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. நான் விடுமுறையில் இருக்கிறேன்.” கிழவர் கூறினார்.

‘இது... பரவாயில்லையே. என் மனதில் இருக்கக்கூடிய விஷயம் இந்த மனிதருக்கு எப்படிப் புரிகிறது?’ மங்கள் சிங் தன் மனதிற்குள் நினைத்தான்.

உச்சிப்பொழுதில் பார்த்த விருந்தாளியை மீண்டும் பார்த்ததும், பஸந்த் கவுர் பாத்திரத்தில் மைதாவைக் குழைக்க ஆரம்பித்தாள்.

எல்லாரும் சப்பாத்தி சாப்பிட்டார்கள்.

வாசலில் கட்டிலை இழுத்துப்போட்டு, அதில் போர்வையை விரித்தார்.

கிழவர் செருப்பை எடுத்து கட்டிலுக்குக் கீழே வைத்தார். தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் பொட்டலத்தை தலைப் பகுதியில் வைத்து, அதில் தலையை வைத்து அவர் படுத்தார்.

“ஒரு விஷயத்தைக் கேட்டால், தப்பாக நினைக்கக் கூடாது...” தாழ்ந்த குரலில் மங்கள்சிங் கேட்டான்.

“என்ன விஷயம்?”

“ஒரு நிமிடம்கூட கையை விட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்று கவனம் செலுத்துமளவு இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்கிறது?”

கிழவரின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவர் சொன்னார்- “இதில் ஒரு பிடி நட்சத்திரங்களும், ஒரு மேகக் கூட்டமும், பறவைகளின் ஓசைகளும், தளிர் இலைகளும், புற்களும் கொடிகளும், கொஞ்சம் பனித் துணிகளும், சிறிது நீரும், தொட்டிலில் ஆடும் குழந்தையின் முதல் கிளிக்கொஞ்சலும்... இவைதான் இருக்கின்றன. இவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.”

தொடர்ந்து அவர் கண்களை மூடி, பொட்டலத்தின் மீது தலையை வைத்துப் படுத்துறங்கினார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.