Logo

பசி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5875
Pasi

பசி

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

பொன்னின் ஒளியில் மூழ்கிவிட்ட அழகான கனவைப் போல, பிரின்ஸிப்பலின் மனைவி மொட்டை மாடியில், இறுக்கமான பட்டு ரவிக்கைக்குள்ளிருந்த தூய வெள்ளைநிற மார்புக் கச்சையில் அடங்காத மார்பகங்களை, கறுத்து திடமாக இருந்த மரத்தாலான கைப்பிடியில் முத்தமிடச் செய்து, முகத்தைக் கைகளால் தாங்கியவாறு தெருவைப் பார்த்து நின்றிருந்தாள்.

அதில் மட்டுமே சிந்தனையை வைத்து, தேநீர்க்கடையின் இருள் நிறைந்த மூலையில், இடது கையால் தலையைத் தாங்கியபடி, பாம்பின் நாக்கைப்போல பற்கள் எழுந்து நிற்கும் வாயைப் பிளந்துகொண்டு, கறுத்து மெலிந்த கற்சிலையைப் போல அமர்ந்திருந்தான் கொச்சு கிருஷ்ணன். தன் உதடும் நாக்கும் வலிய பற்றியெரிவதைப் போலவும், கண்களுக்கு பார்வை சக்தி குறைந்து வருவதைப் போலவும் அவனுக்குத் தோன்றியது. மிகவும் நீளமான ஒரு பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் எழுந்து நின்றான். அப்போது-

வயதான தேநீர்க்கடைக்காரன் வேலு விளக்கைப் பற்ற வைப்பதைப் பார்த்து கொச்சு கிருஷ்ணன் ஆச்சரிப்பட்டான்.

“நேரம் இருட்டிடிச்சா?”

“பிறகென்ன? நமக்காக நேரம் நின்றுகொண்டிருக்குமா?”

அதற்கு பதிலெதுவும் கூறாமல், கொச்சு கிருஷ்ணன் குவளையை எடுத்து, இரண்டு மூன்று முறை ‘குடுகுடா’வென்று நீரைப் பருகினான்.

“உனக்கு என்ன இவ்வளவு தாகம்?” வேலுவின் இரண்டாவது கேள்விக்கு கொச்சு கிருஷ்ணன் பதிலெதுவும் கூறவில்லை. அவன் ஒரு பிடியைப் பற்றவைத்துக் கொண்டு தெருவிற்கு வந்தான். குட்டிக்குரா பவுடரும் வியர்வையும் வேறு பல வாசனைப் பொருட்களும் சேர்ந்து உண்டாக்கிய வாசனையுடன், புடவையின் மூலம் ரவிக்கையையும், அதன் மூலம் மார்பகங்களை மறைத்திருந்த மார்புக் கச்சையையும் காட்டியவாறு, அலட்சியமான சிந்தனைகளுடனும் சிரித்து சந்தோஷத்தில் மூழ்கியவாறும் பூங்காவிலிருந்து திரும்பி வரும் மாணவிகளுக்கு வழிவிட்டவாறு கொச்சு கிருஷ்ணன் நடந்தான்- வெளிச்சம் வந்து கொண்டிருந்த சாளரங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே.

பெண்களுக்கான மருத்துவமனையின் மேல்பகுதி, கடுமையான மனம்கொண்டவர்களின் புன்னகையைப்போல உயிர்ப்பில்லாமல் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகள், மின்னலைப் போல தென்பட்ட முகங்கள், மலர்கள் மூடிய கூந்தல்கள், வண்ணப் புடவைகளால் மூடப்பட்ட அழகான சரீரங்கள், இங்குமங்குமாகக் கேட்டுக்கொண்டிருந்த கிலுகிலா சிரிப்பு... அந்த வகையில் நேரத்தையும் காலத்தையும் மறந்து கொச்சு கிருஷ்ணன் அந்த சாலையின் அருகில் நின்றிருந்தான். மழை பெய்வதைப்போலவும் குளிர்ந்த காற்று வீசுவதைப்போலவும் கொச்சு கிருஷ்ணன் உணர்ந்தான்.

அவன் வசித்துக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தபோது, அவுஸேப்பும் தாமோதரனும் பாய்விரித்துப் படுத்திருந்தார்கள். அடுப்புக் கல்லுக்கு அருகில் மூடிவைத்திருந்த பீங்கான் கிண்ணத்தின் அருகில், மண்ணெண்ணெய் விளக்கை நகர்த்தி வைத்துவிட்டு தாமோதரன் கேட்டான்:

“நீ எங்கே போயிருந்தே?”

“நடப்பதற்கு...” கொச்சு கிருஷ்ணன் கைகழுவிவிட்டு, சாதத்தின் அருகில்சென்று அமர்ந்தான்.

“நடை... நடை! என்ன ஒரு நடை இது!”

“நீ ஏன் கோபித்துக் கொண்டு போனாய்?” அவுஸேப் கேட்டான்: “நீ ஏன் வாயே திறக்காமல், எதுவுமே பேசாமல் நடந்து திரிகிறாய்?”

கொச்சு கிருஷ்ணன் இரண்டு மூன்று உருண்டை சாதத்தை தொண்டைக்குள் இறக்கிவிட்டு, நீரை ‘குடுகுடா’ என்று பருகிவிட்டு, பாத்திரத்தை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்து கையைக் கழுவினான்.

“இது என்ன ஒரு போக்கு? எங்காவது ஏதாவது சாப்பிட்டு முடிச்சிட்டு வர்றியா?” ஆச்சரியம் நிறைந்த தாமோதரனின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் கொச்சு கிருஷ்ணன் பதில் சொன்னான்.

“இல்லை...”

“அப்படியென்றால், ஏன் சாப்பிடல? பசி இல்லையா?”

‘பசி!’ நீண்ட பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் பாயை விரித்துப் படுத்துக் கொண்டு விளக்கை அணைத்தான்.

“நீ ஒரு காரியம் செய்யணும்.” அவுஸேப்பின் குரல் தூரத்திலிருந்து கேட்பதைப்போல கேட்டது: “நாளை மறுநாள்... சனிக்கிழமைதானே? நீ கொஞ்சம் பேதி மருந்து சாப்பிடு.”

“அது சரிதான்...” தாமோதரன் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் போதும்; வயிறு சரியாயிடும்.”

அதற்கு எதுவும் பதில் கூறாமல், கொச்சு கிருஷ்ணன் இருட்டில் கண்களை அகலத் திறந்து பார்த்தவாறு அதே இடத்தில் படுத்திருந்தான்- அழகான முகங்களை, வடிவெடுத்ததைப் போன்றே சரீரங்களை, உருண்டு... முன்னோக்கிப் புடைத்துக்கொண்டு... வெள்ளை நிறக் கச்சைக்குள் மூடப்பட்ட மார்பகங்களைப் பார்த்தவாறு.

அப்போது மீண்டும் கேட்பதற்காக அவுஸேப்பின் குரல்- இருள் நிறைந்த மகா பிரபஞ்சத்தின் மூலையிலிருந்து கேட்பதைப்போல அது இருந்தது.

“எங்களுடைய சகோதரிக்கு ஒரு மனக்குறை.”

“எதைப் பற்றி?”

“பிறகு... தேவைப்படுற துணியைக் கொண்டு போகலைன்னு...”

“போனவாரத்துக்கு முந்தின வாரம் வெள்ளிக்கிழமைதானே நீ சட்டைக்கென்று கூறி, துணி வாங்கிக் கொண்டு போனாய்?”

“ஆமாம்... ஆமாம். இப்போ... அங்கே... சட்டைக்குள்ளே அணியறதுக்கு ஏதோ ஒண்ணு...  என்ன அது?”

“மார்புக் கச்சை...” தாமோதரன் விளக்கிக் கூறினான். “அது என்னோட அவளுக்கும் இருக்கு. அந்தமாதிரி விஷயங்கள் ஊர்ல இருக்கறதுதான். இல்லாவிட்டால், ஒரு குறைச்சல்தான்.”

“அது சரிதான்...” அவுஸேப் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

கொச்சு கிருஷ்ணன் தனக்குள்ளிருந்து மேலே எழுந்து வந்ததை, அசைவே இல்லாமல் நிறுத்தி நிறுத்தி விட்டான். அவர்கள் நாளை வீட்டிற்குச் செல்கிறார்கள். கொண்டுசெல்வதற்கு பல பொருட்களும் இருக்கின்றன. கொடுப்பதற்கு ஆட்களும் இருக்கிறார்கள்... மார்புக் கச்சை! உருண்டு, முன்பக்கம் தள்ளிக்கொண்டிருக்கும் மார்பகங்களை அருமையாகப் பாதுகாக்கக் கூடிய கருவி... நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள்... அவர்களுடைய குறட்டைச் சத்தம்! கொடுத்து வைத்தவர்கள்... பாயில் தலையைச் சாய்த்தால், அவர்களால் மரக்கட்டை போல உறங்க முடியும். நாளை அவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள்... மார்புக் கச்சை... அன்று பிரின்ஸிப்பலின் மனைவி வண்டியிலிருந்து இறங்கியபோது- அந்த அழகான மார்பகங்கள்- திறந்த காரின் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த கொச்சு கிருஷ்ணனின் இடதுகை விரல்களில் சற்று- உ... ர... சி... ய... து! கொச்சு கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து நின்றதை அந்தப் பெண் பார்த்தாள். கொச்சு கிருஷ்ணனின் கையிலிருந்து குடையை வாங்கிக் கொண்டு சிரித்தவாறு அப்படியே... அவள் நடந்து சென்றாள். அந்த சாரல் மழையில் கொச்சு கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தான்- தன்னை மறந்த நிலையில். பின்பகுதி- என்ன அழகு!


அதற்குப் பிறகு- கொச்சு கிருஷ்ணனை எப்போது பார்த்தாலும், அவள் ஏன் அப்படி சிரிக்கிறாள்? இதயம் கனிந்து வெளியேவரும் புன்னகை- அந்தக் கண்களின் வழியே... அந்த உதடுகளின் வழியே... அது எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது? ஒடுங்கி, வறண்டு போய் காணப்படும் அவர்... வெண்மையான மாடப் புறாவைப்போன்ற மனைவி... அவர் நல்ல குணத்தைக் கொண்டவர். கொச்சு கிருஷ்ணனுக்கு பல நேரங்களிலும் பரிசுப் பொருட்களைத் தந்திருக்கிறார்.

கொச்சு கிருஷ்ணனைப் பெரிதாக நினைப்பார். எனினும், கொச்சு கிருஷ்ணனுக்கு அவரைப் பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் நல்ல ஒரு தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதாலா? இல்லாவிட்டால் அந்த இரண்டு மாடிகளைக் கொண்ட மாளிகையும் பூந்தோட்டமும் இருப்பதாலா? எது எப்படியோ... பன்னீர் மலரைப்போன்ற அந்த சரீரம்...

அதைத் தொடர்ந்து கொச்சு கிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்து, தலையை கைகளில் தாங்கிக் கொண்டு, நீண்ட பெருமூச்சு விட்டான்: ‘அதிர்ஷ்டசாலிகள் உறங்குகிறார்கள்!’

விரக்தியின் இறுதி எல்லையை அடைந்துவிட்டிருந்தான் கொச்சு கிருஷ்ணன்! ஒரேயொரு சிந்தனை- பெண்ணின் காதல், பெண்ணின் அண்மை, சரீரம், மணம், மார்பகங்கள், தொடைகள், தொப்புள்... கொச்சு கிருஷ்ணனின் அனைத்து அவயங்களும் மிகுந்த உயிர்ப்புடன் இருந்தன. ஆனால், ஒரு முகம்கூட கொச்சு கிருஷ்ணனை வரவேற்கவில்லை. கொச்சு கிருஷ்ணனை யாருமே திரும்பிப் பார்க்கவில்லை.

குளிர்ந்த நீருக்காக பாலைவனத்தில் அலையும் அனாதையைப் போல, கொச்சு கிருஷ்ணன் அன்றும் நகரம் முழுவதையும் சுற்றித் திரிந்தான். மனமும் சரீரமும் தளர்ந்துபோய், மாதவனின் துணிக்கடையில் வந்து உட்கார்ந்தான். புதிதாக திருமணமான ஒருவன் பட்டுத் துணிகளை வாங்கிக் கொண்டிருந்தான். பல வண்ணங்ளைக் கொண்ட பட்டுத் துணிகள் விரித்துப் போடப்பட்டிருந்தன. கொச்சு கிருஷ்ணன் ஒவ்வொன்றிலும் கையை ஓடவிட்டான். அவன் சரீரம் அதிர்ச்சியில் உறைந்துபோனது. நீண்ட பெருமூச்சுடன் கொச்சு கிருஷ்ணன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அவளுடைய வருகை... சற்று தடித்து, உயரமாக இருந்தாள். ஒரு சோகம் நிறைந்த புன்னகை முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் விலை குறைவான ஒரு ஜப்பான் புடவையை அணிந்திருந்தாள். கறுத்த புள்ளிகளைக்கொண்ட மஞ்சள் வண்ண ரவிக்கையும் ஜப்பானைச் சேர்ந்ததுதான். அனைத்தும் பழையனவாக இருந்தன. எனினும், ஒரு மிடுக்கு இருந்தது. குடை பிடித்திருந்த கையில் சிறிய துவாலை இருந்தது. தையல்காரன் மம்மதின் கடை வாசலில் சற்று நின்றுவிட்டு, மெஷினின் அருகில் அவள் அமர்ந்தாள். மம்மதுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். விளையாட்டாகத்தான். துணி வாங்கிக் கொண்டிருந்த வயதான கிழவனுக்குப் பின்னால் மறைந்துகொண்டு கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். இளமையின் துடிதுடிப்பு இல்லாமல்போய்விட்டிருந்தது. கண்களைச் சுற்றியிருந்த தோலில் கருமை படர்ந்திருந்தது. அவ்வப்போது அவள் தெருவையே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரலில் இனம்புரியாத ஒரு சோகம் கலந்திருந்தது. அந்த மார்பகங்கள்... அவைதான் அவளிடம் இருந்தவற்றிலேயே மிகவும் விலைமதிப்புள்ள சொத்து என்பதைப்போல, அவற்றின் சதைப் பிடிப்பை உலகத்திற்குக் காட்டுவதைப்போல... அந்த வீழ்ச்சியில் கிழவன் துணியை வாங்கிக் கொண்டு எழுந்தான். வெளிப்படையான அவளுடைய பார்வை கொச்சு கிருஷ்ணனின்மீது பதிந்தது. இதயத்தைப் பிழிந்தெடுத்த ஒரு பார்வை! கொச்சு கிருஷ்ணனின் சுவாசமே நின்றுவிட்டது. கடை வீதியும் ஆட்களின் கூட்டமும் மறைந்துவிட்டன. அவளும் கொச்சு கிருஷ்ணனும் மட்டும்தான் உலகத்திலேயே இருந்தார்கள்... கொச்சு கிருஷ்ணனுக்கு மீண்டும் சுய உணர்வு வந்தபோது, அவள் வெளியேறி நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பின்பாகத்தைப் பார்த்து பலரும் வெறுப்புடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பலரும் கிண்டல் கலந்த வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள். கொச்சு கிருஷ்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் மெதுவாக எழுந்து நடந்தான். அவன் ரிக்ஷா வண்டியில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள். பார்வை எட்டும் தூரம்வரை கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். மறைந்தவுடன் கொச்சு கிருஷ்ணன் மனதில் சுமை குடியேற ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

அது நடந்து இருபதாவது நாளன்று இரவு வேளையில், கொச்சு கிருஷ்ணன் வேலுவின் தேநீர்க்கடையில் இருந்தபோது, இரண்டு ரிக்ஷா வண்டிகள் செருப்புக்கடையின் வாசலுக்கருகில் வந்து நின்றன. ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இறங்கினார்கள். பழக்குலைகளுக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். அவள்! அவள்... அவளேதான்! அதே புடவை, அதே ரவிக்கை- எதிலும் மாற்றமில்லை! பதினான்காம் எண் விளக்கிற்கு முன்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளுடன் சுருள்முடியைக் கொண்ட மனிதனும். அவன் துறைமுகத்தில் வேலை பார்ப்பவன். அவள் குனிந்து, பல செருப்புகளையும் காலில் அணிந்து சோதித்துப் பார்த்தாள். திறந்த ரவிக்கை, மார்புக் கச்சைக்குள் நசுங்கிக் கிடக்கும் மார்பகங்கள்... அவள் நிமிர்ந்தாள். கால்களை இப்படியும் அப்படியும் திருப்பி வைத்துப் பார்த்தாள். திருப்தியை வெளிப்படுத்தினாள். துறைமுகத்தில் வேலை பார்ப்பவன் செருப்புக்கான விலையைக் கொடுத்தான். புன்னகையுடன் அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்னால் சுருள் முடியைக் கொண்ட மனிதனும். இரண்டு வண்டிகளும் வேகமாகப் பாய்ந்து சென்றன. கொச்சு கிருஷ்ணன் பலமாக ஒரு பெருமூச்சை விட்டான்.

தொடர்ந்து, மாலையில் வேலுவின் தேதீர்க்கடையில் போய் அமர்ந்து கொச்சு கிருஷ்ணன் பிரின்ஸிப்பலின் மனைவியைப் பார்ப்பான். இப்படியே இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன. இருள் நிறைந்த தென்னந்தோப்புகளுக்குப் பின்னால் அடர்த்தியான சிவப்பு வண்ணத்தைப் பரவச் செய்தவாறு சூரியனும் மறைந்து விட்டிருந்தது. கொச்சு கிருஷ்ணன் பூங்காவிற்குச் சென்று நின்றபோது- சிவப்பு நிற ஜப்பான் புடவை, கறுத்த புள்ளிகள் போட்ட மஞ்சள் நிற ரவிக்கை... சுவரில் தனியாக!


கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். அவள்! அவளே தான்! கொச்சு கிருஷ்ணன் பூங்காவில் அவளுக்கு முன்னால் இங்குமங்குமாக நடந்தான். ஐந்நூறு முறை நடந்தான். குளிர்ந்த காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இடிமுழக்கமும். உள்ளே நெருப்பு நெற்றியை நக்கிக் கொண்டிருந்தது. கொச்சு கிருஷ்ணனால் தலையை உயர்த்தி நிற்க முடியவில்லை. ஆட்கள் எல்லாரும் கொச்சு கிருஷ்ணனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொச்சு கிருஷ்ணன் உணர்ச்சி வேறுபாடுகளைத்தான் அவர்கள் அனைவரும் சந்தேக எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் எல்லாரும்... மாணவிகள் எல்லாரும்... அனைவரும்! கொச்சு கிருஷ்ணன் சாலைக்கு வந்தான். வேலுவின் தேநீர்க்கடையில் போய் உட்கார்ந்தான். இரண்டு மூன்று குவளை நீரைப் பருகினான். இடையில் பிரின்ஸிப்பலின் வீட்டைப் பார்த்தான். அங்கு யாருமில்லை. கொச்சு கிருஷ்ணனால் இருக்கமுடியவில்லை. தாகம்! பசி! வறட்சி! மாலை நேரமாகிவிட்டிருந்தது. கொச்சு கிருஷ்ணன் நடந்தான். பூங்காவின் எல்லா இடங்களிலும் மெல்லிய இருள் பரவிவிட்டிருந்தது. காணோம்! கடவுளே! அவள்... அவள் எங்கே? பிரார்த்தனையின் விளைவு என்பதைப் போல ஒரு மின்னல் வீசியது! திடீரென்று தோன்றிய அந்த வெளிச்சத்தில்- புள்ளி போட்ட ரவிக்கை நீண்டு வளைந்து கடக்கிறது அரைச் சுவரில்!

கொச்சு கிருஷ்ணன் சுவரின் மீது தூரத்தில் உட்கார்ந்தான். அவளுக்கு அப்பால் இருளில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். கழுகுகளைப்போல இருந்த அவர்களுடைய வாய்களில் பீடியின் நெருப்பு!

இருட்டிற்கு அடர்த்தி அதிகரித்துக்கொண்டு வந்தது. பூங்கா காலியாகிக்கொண்டிருந்தது. அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அங்குமிங்கும் பார்த்துவிட்டு, எழுந்து சற்று முதுகை நிமிர்த்தினாள். வானத்தின் விளிம்பு சற்று அதிர்ந்தது. கொச்சு கிருஷ்ணனுக்குள் துடிப்பு நின்றுவிட்டது! அவள் அருகிலிருந்த ஒவ்வொருவரின் அருகிலும் சென்று, என்னவோ முணுமுணுத்துவிட்டு நடந்தாள். கொச்சு கிருஷ்ணனைப் பொருட்படுத்தாமல் அவள் நடந்து செல்கிறாள்! கடவுளே! கொச்சு கிருஷ்ணன் ஒருமுறை இருமினான். இதயம் வெந்து உண்டான ஒரு இருமல்! மிகுந்த பரவசம் கலந்திருந்த ஒரு இருமல்! அவள் அதைக் கேட்டாள். அவள் கொச்சு கிருஷ்ணனின் அருகில் நெருங்கி வந்தாள். ஆமை தலையை நீட்டுவதைப்போல, இருட்டுக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணனின் முகத்தை நோக்கி அவள் முகத்தை நெருக்கமாகக் கொண்டுவந்தாள். மெதுவாக, மிகவும் மெதுவாக: 

“குளத்தில்...”

கொச்சு கிருஷ்ணனின் நினைவில் இருந்தது அவ்வளவு தான். குட்டிக்குரா பவுடர் வியர்வையில் கலந்த தோலின் மணம். அவள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தாள். கொச்சு கிருஷ்ணனுக்கு எதுவுமே புரியவில்லை. கொச்சு கிருஷ்ணனின் வாயில் நீரில்லை. நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. உட்கார முடியவில்லை. கொச்சு கிருஷ்ணன் எழுந்து சென்றான். கனவில் நடப்பதைப் போல, பூங்காவின் சிறிய குளத்திற்கருகில் நின்று அவள் தலைமுடியைக் கட்டிக் கொண்டிருந்தாள். சிமெண்ட் படியில் கால் வைத்து, கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான். துடிப்பு. சத்தம் வெளியே கேட்கவில்லை. உயிர்ப்பே இல்லாமல், பலமே இல்லாமல் கொச்சு கிருஷ்ணன் மெதுவான குரலில் கேட்டான். “என்னிடம் என்ன சொன்னீங்க?”

“நான் காலையும் முகத்தையும் கழுவிட்டு வருகிறேன் என்றல்லவா சொன்னேன்.” அவள் மெதுவான குரலில் சொன்னாள். அடுத்து என்ன கூறுவது? கொச்சு கிருஷ்ணனுக்கு எதுவும் தோன்றவில்லை. பேரமைதி! பேரமைதி! நாக்கு அடங்கிப்போய் விட்டதா? அவளுடைய மூச்சு! கட்டிப்பிடித்த முத்தமிட்டால் என்ன!

“பிறகு...” கொச்சு கிருஷ்ணனுக்கே தெரியாமல் குரல் வெளியே வந்தது: “பிறகு... எங்கே போறீங்க?”

“புகைவண்டி நிலையத்திற்கு அருகில்.”

“பெயர் என்ன?”

“எலிஸபெத்.”

“திருமணம் ஆகிவிட்டதா?”

“நான்கைந்து வருடங்களாகி விட்டன. கணவர் இலங்கைக்குப் போனார். அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. இரண்டு மூன்று தங்கைகள் இருக்காங்க. அம்மா இருக்காங்க.”

“வேறு ஆண்கள் யாருமில்லையா?”

“யாருமில்லை...”

அவன் மேலும் சற்று நெருங்கினான். அவள் கேட்டாள்:

“உங்களுடைய வீடு?”

“வீடு இல்லை. ஒரு அறையில் தங்கியிருக்கிறேன்.”

“வேறு ஆட்கள் இருக்காங்களா?”

“வேறு இரண்டு பேர் இருக்காங்க?”

“அம்மோ” அவள் மெதுவான குரலில் சொன்னாள். “அது தொந்தரவான விஷயம். வேறு ஒரு அறை எடுக்க முடியாதா?”

“எடுக்கலாம்...” கொச்சு கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். “நாளைக்கே எடுக்கலாம்.”

“அதுதான் நல்லது.”

“ஆமாம்...” கொச்சு கிருஷ்ணன் ஏக்கத்துடன் சொன்னான். அவள் நெருங்கி, மிகவும் நெருங்கி வந்தாள். கொச்சு கிருஷ்ணனுக்கு ஒரு ஆசை. வெறும் ஒரு தொடல், ஒரு முத்தம். கேட்பதற்கு தைரியமில்லை. கடவுளே. கொச்சு கிருஷ்ணனின் சரீரம், அவனுடைய இதயம், அவனுடைய ஆன்மா- யுகங்களின் ஆவேசத்துடன், யுக யுகங்களின் தாகத்துடன், நிலையில்லாமல் மோகத்துடன், இனம்புரியாத வகையில் கெஞ்சியது:

“நான் ஒரு முறை முத்தமிடட்டுமா?”

அதற்கான பதில்... கடவுளே. கொச்சு கிருஷ்ணன் எரிந்து உருகி உஷ்ண நிலையில் இருந்தான்... அதற்கான பதில். கொச்சு கிருஷ்ணனின் உணர்வு, அவனுடைய உயிர்- அனைத்தும் மறையப் போகின்றன. பெண்ணின் சக்தி. ஆணின் பலவீனம். அதற்கான பதில். இருளில் மூழ்கியிருந்த நீர்ப்பரப்பு அசைவே இல்லாமல், ஓசை இல்லாமல் காணப்பட்டது. வானமும் கட்டடங்களும் மவுனம் பூண்டு நின்றிருந்தன. அதற்கான பதில். குளிர்ந்த நீர் நிறைந்திருந்த கார்மேகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் காய்ந்து வறண்ட பாலைவனத்தைப் போல கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான். யுகங்கள்... யுகங்கள் கடந்து சென்றன. அவள் அலட்சியமாக முணுமுணுத்தாள்.

“முத்தம் கொடுங்க...”

அருளின் அமிர்த மழை. கொச்சு கிருஷ்ணன் விழுந்துவிட்டான். அந்த உதடுகளில், அந்தக் கன்னங்களில், அந்த கழுத்தில், அந்த மார்பகங்களில்... கொச்சு கிருஷ்ணன் ஹா! ஒரு குளிர்ந்த காற்று வீசியது. இலைகள் ஓசை உண்டாக்கின. குளத்தில் அலைகள் சத்தம் உண்டாக்கின. நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தன. குளத்தின் கரையிலிருந்த மின் விளக்குகள், இருளின் கழுத்தில் வைர மாலையைப் போல பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. கொச்சு கிருஷ்ணன் அந்த மார்பகத்தில் கன்னத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு மெதுவான குரலில் முனகினான்.

“உங்களை நான் எவ்வளவோ நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“அப்படியா?” அவள் கொச்சு கிருஷ்ணனின் முடியை வருடினாள். “பிறகு... திருமணம் ஆகிவிட்டதா?”


“இல்லை...” கொச்சு கிருஷ்ணன் அவளுடைய கையை எடுத்து முத்தமிட்டான். “நாளைக்கு நான் அறை எடுக்கிறேன்.”

“எடுங்க... நாளைக்கு ஆறு மணிக்கு நான் இங்கே இருப்பேன்.”

“வராம போயிடுவீங்களா?”

“வருவேன். பிறகு... என்ன வேலை?”

“அரசாங்க வேலை.”

“காவல் துறையிலா?”

“இல்லை... கல்லூரியில்... ப்யூன்.”

“சம்பளம்?”

“எட்டு ரூபாய்.”

அதற்குப் பிறகு அவள் எதுவும் கேட்கவில்லை. கரிய நிழல்கள் அசைந்தன. தூரத்தில் ஒரு இருமலும். எலிஸபெத் அனுமதி கொடுத்தாள். “அப்படியென்றால், போங்க.”

“நாளைக்கு...”

“ம்...”

அதற்குப் பிறகும் என்னவோ கூறவேண்டுமென்று கொச்சு கிருஷ்ணன் நினைத்தான். எனினும், கொச்சு கிருஷ்ணன் நடந்தான். ஏங்கி ஏங்கி தேம்பித் தேம்பி அழுதவாறு... எலிஸபெத்... அந்த சினேகிதி... கண்ணீரைத் துடைப்பதற்கு கொச்சு கிருஷ்ணனுக்கு மனமே வரவில்லை. கொச்சு கிருஷ்ணனின் தலை, மரங்களைவிட கட்டடங்களைவிட உயர்ந்து மேகங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

கண்ணீருக்கு மத்தியில் கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். அடக்கமுடியாமல் கொச்சு கிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

அறைக்குள் நுழைந்தபோது அவுஸேப்பும் தாமோதரனும் கண்களை அகலத்திறந்து பார்த்தார்கள். ஆச்சரியத்துடன் அவர்கள் வாயைப் பிளந்தார்கள். கொச்சு கிருஷ்ணன் கேட்டான்-

“உங்களுக்கு என்ன கோபம்?”

“உனக்கு ஏதாவது புதையல் கிடைத்ததா என்ன?” அவுஸேப் ஆச்சரியப்பட்டான். “உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்?”

“சந்தோஷம்?” கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். “நாளைக்கு நான் அறையை மாற்றப் போகிறேன்.”

“எதற்கு?” தாமோதரன் கேட்டான்.

கொச்சு கிருஷ்ணன் சொன்னேன்.

“எனக்கு விருந்தாளிகள் வர்றாங்க.”

“உனக்கு விருந்தாளிகள் யார்?”

“இருக்காங்க...”

கொச்சு கிருஷ்ணன் வேறெதுவும் கூறாமல் விளக்கை அணைத்துவிட்டுப் புன்னகைத்தான்.

“நீ சாப்பிடலையா?”

“சாப்பாடு...” கொச்சு கிருஷ்ணன் கிண்டல் கலந்த குரலில் சொன்னான். “ சாப்பாடு எதுவும் வேண்டாம்.”

“பசி இல்லையா?”

“பசி...” கொச்சு கிருஷ்ணன் தன் உதடுகளை மெல்ல தடவியவாறு புன்சிரிப்பைத் தவழவிட்டான். தாமோதரனுக்கு அவுஸேப்பும் என்னவோ கேட்டார்கள். கொச்சு கிருஷ்ணன் அவை எதையும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அதைத் தொடர்ந்து அவர்களுடைய குறட்டை ஒலி கேட்க ஆரம்பித்தது. கொச்சு கிருஷ்ணன் முணுமுணுத்தான்.

‘உறங்கிக்கொண்டிருக்கின்றன கழுதைகள்.’

அந்த வகையில் நள்ளிரவு தாண்டும்வரை கொச்சு கிருஷ்ணன் சுகமான கற்பனைகளில் மூழ்கியிருந்தான். அறை எடுக்கப்போகும் விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது கொச்சு கிருஷ்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறைந்தபட்சம் இரண்டு ரூபாய்களாவது வேண்டும்.... என்ன வழி? கொச்சு கிருஷ்ணன் வலி உண்டாக... வலி உண்டாக சிந்தித்தான். அறை மாறிச்சென்றுவிட்டால் எப்படி வாழ்வது? அரிசியை வேகவைத்து சாப்பிடுவது- அது நடக்காத விஷயம். கொச்சு கிருஷ்ணன் மனதில் கணக்கு போட்டுப் பார்த்தான்.

                                           ரூபாய்         அணா        பைசா

காலையில் தேநீர்                       0                 0             9

மதியம் சாப்பாடு                         0                 1             6

மாலையில் தேநீர்                       0                 0             6

இரவு உணவு                              0                 1             6

மண்ணெண்ணெய், பீடி                 0                 0             6

ஒரு நாளைக்கு                           0                 4             9

அப்படியென்றால், ஒரு மாதத்திற்கு 8                14            6

சலவைக்கும் சவரம் செய்வதற்கும் 0                 4             0

அறை வாடகை                           2                 0             0

மொத்தம்                                  11                2             6

கிடைப்பது                                  8                 0             0

அதிகம்                                       3                 2             6

 

கடவுளே. மூன்று ரூபாய், இரண்டணா, ஆறு பைசா, எப்படி முடியும்? ஒரு நேர உணவை விட்டுவிடலாம், தேநீர் வேண்டாம், பீடி வேண்டாம், சலவை வேண்டாம், சவரம் வேண்டாம், எதுவும் வேண்டாம், எட்டு ரூபாயில் நிறுத்த வேண்டும். நாளைக்கு இரண்டு ரூபாய்க்கு என்ன வழி?

இரண்டு ரூபாய், அந்தச் சிந்தனையுடனேயே நேரம் வெளுத்தது. கொச்சு கிருஷ்ணன் அன்று ப்யூன் வேலைக்குச் செல்லவில்லை, நகரம் முழுக்க அலைந்து தனக்குத் தெரிந்த எல்லாரையும் பார்த்துக் கேட்டான். யாருடைய கையிலும் இல்லை. கடைகளில் பணப்பெட்டிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு முதலாளிகள் வெள்ளி ரூபாய்களை எண்ணி எண்ணி அடுக்கி வைக்கிறார்கள். நோட்டுகளை கட்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்... கடவுளே. கொச்சு கிருஷ்ணனிடம் ஏன் பணம் இல்லை? கொச்சு கிருஷ்ணனின் தலைக்குள் ஒரே போராட்டம். ஒரு வழியும் கிடைக்கவில்லை. வெறும் இரண்டு ரூபாய்... இறுதியாக இருக்கும் ஒரே வழி.

கொச்சு கிருஷ்ணன் சென்றான். ப்ரின்ஸிப்பல் உறங்கிக் கொண்டிருந்தார். மனைவி ரவிக்கை இல்லாமல் மார்புக் கச்சை மட்டும் அணிந்து சாய்வு நாற்காலியில் படுத்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். கொச்சு கிருஷ்ணன் வணங்கியபடி நின்றான். கொட்டாவி விட்டவாறு, நெளிந்து கொண்டே புன்னகை தவழ அந்தப் பெண் கேட்டாள்.

“என்ன கொச்சு கிருஷ்ணா?”

கொச்சு கிருஷ்ணன் வியர்க்க நின்று கொண்டிருந்தான். அவள் மீண்டும் கேட்டாள். “என்ன ஆச்சு கொச்சு கிருஷ்ணா?”

கொச்சு கிருஷ்ணன் வெளிறிப்போய் காணப்பட்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான்.

“அம்மாவுக்கு உடல் நலமில்லை.”

“என்ன நோய்?”

கடவுளே. அவள் ஏன் இதையெல்லாம் கேட்கிறாள்?

கொச்சு கிருஷ்ணன் சொன்னான்-

“கிட்டத்தட்ட பெரிய நோய்தான்...”

அதற்குப் பிறகு எதுவும் கேட்காமல் அவள் எழுந்து உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவந்து கொச்சு கிருஷ்ணனின் கையில் ஒரு தாளைத் தந்துவிட்டு சென்றாள்.

“கொண்டுபோய் மருந்து வாங்கிக்கொள். சிரமம் இருக்கும்போது என்னை வந்து பார்க்கணும்.”

கொச்சு கிருஷ்ணன் பார்த்தான். ஒரு பத்து ரூபாய் நோட்டு. கொச்சு கிருஷ்ணனின் கண்கள் நிறைந்து விட்டன. அந்தப் பாதங்களில் விழுந்து சற்று வணங்க வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது.

அன்று நான்கு மணி ஆனபோது கொச்சு கிருஷ்ணன் புதிய அறைக்கு மாறினான். கொச்சு கிருஷ்ணன் மனதிற்குள் நினைத்தான். எலிஸபெத்தை சற்று ஆச்சரியப்பட வைக்க வேண்டும். சந்தோஷம் நிறைந்த அந்தச் சூழ்நிலையை கொச்சு கிருஷ்ணன் பார்க்க வேண்டும்.

 


 

கொச்சு கிருஷ்ணன் கடைவீதியை நோக்கி ஓடினான். வாசனை சோப்-3 அணா, ஒரு சென்ட் புட்டி - 10 அணா, மார்பு கச்சைக்குத் தேவையான வெள்ளை நிற சில்க்- 1 ரூபாய் 4 அணா, ஓரத்தில் அகலமான சிவப்பு நிறக் கரையைக் கொண்ட வெள்ளை வண்ணப் புடவை - 3 ரூபாய். அனைத்தும் நல்ல முறையில் நடந்தன. பளபளத்துக் கொண்டிருந்த வெள்ளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து, சிவப்பு நிற நாடாவைக் கொண்டு கொச்சு கிருஷ்ணன் அறைக்கு வந்தான். மேலும் ஒருமுறை அறை முழுவதையும் பெருக்கி சுத்தம் செய்தான். பாயை விரித்துப் போட்டு, பழைய தலையணையை வெள்ளை நிறத் துணியைக் கொண்டு மூடினான். பெட்டியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சந்தோஷத்துடன் தடவிக் கொண்டிருந்தான். எலிஸபெத்- அவளுடைய சரீரம் முழுவதும் சென்ட் தேய்க்க வேண்டும்.

இன்று இரவு- கொச்சு கிருஷ்ணன் புன்னகைத்தான். தொடர்ந்து முத்தமழை பொழிய வேண்டும்.

ஒரு மணமகனைப்போல கொச்சு கிருஷ்ணன் பூங்காவை அடைந்தான். சற்றே புன்னகையில் மூழ்கிக் காணப்பட்டது பூங்கா. வழியின் ஓரத்திலிருந்த செடிகளும், மலர்களும், புல்பரப்பும் புன்னகைத்துக் கொண்டிருந்தன. குளத்தின் நீர் வட்டங்களில் சூரியனின் சீற்றுகள் புன்னகையுடன் நடனமாடிக் கொண்டிருந்தன.

புன்னகையுடன் சூரியனும் மறைந்தது.

கொச்சு கிருஷ்ணனின் நெற்றியில் வியர்வை அரும்ப ஆரம்பித்தது. எலிஸபெத்தைக் காணவில்லை. பதைபதைப்புடன் பூங்காவின் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தான். எலிஸபெத் வந்திருக்கவில்லை. ஏழு மணி... எட்டு மணி... இல்லை எலிஸபெத் வரவில்லை. ஒன்பது - மணி பத்து.

புகைவண்டி நிலையம் வரை கொச்சு கிருஷ்ணன் நடந்தான். எலிஸபெத்தைக் காணோம்.

மறுநாள் புகைவண்டி நிலையம் வரை நடந்து சென்றுவிட்டு, கொச்சு கிருஷ்ணன் பூங்காவிற்கு வந்தான். குளத்தின் கற்சுவரில் காலை எடுத்து வைத்தவாறு பதைபதைப்புடன் நின்றான். மணி பத்து. பூங்காவைப் பூட்டினார்கள். எலிஸபெத் இல்லை.

அதற்கடுத்த நாள்- அதற்கு அடுத்த நாள்... இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்து சென்றன. தினமும் புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பிவந்து, பூங்கா அடைக்கப்படும் வரை அமைதியாக கொச்சு கிருஷ்ணன் அந்தக் குள்ததின் சுவரில் காலை வைத்துக் கொண்டு நின்றிருப்பான். அந்த முத்தத்தின் இனிமை, அந்த மார்பகங்களின் குளிர்ச்சி, அவளுடைய தோலின் அந்த நறுவணம். நினைவு. நினைவு. இனிய மோகங்கள் நிறைந்த நினைவு. அதில்தான் வாழ்க்கை.

இப்படியே மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. கொச்சு கிருஷ்ணனுக்கு எந்த சமயத்திலும் ப்ரின்ஸிப்பலின் மனைவி காசு, பணம் கணக்கு பார்க்காமல் உதவிக் கொண்டிருந்தாள். நான்காவது கிறிஸ்துமஸும் நெருங்கிக் கொண்டிருந்தது. பிரகாசமான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாலை வேளை. புகைவண்டி நிலையத்தை நோக்கி கொச்சு கிருஷ்ணன் நடந்து போய்க் கொண்டிருந்தான். சும்மாவாகவே... வெறும் சும்மாகவே... அப்போது பாதையில் அருகிலிருந்து பலவீனமான ஒரு குரல்.

“ஏதாவது தந்துட்டுப் போங்க... பசிக்குது...”

கொச்சு கிருஷ்ணன் கண்கள் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த பெண்ணின் மீது பதிந்தன. நரைக்க ஆரம்பித்திருந்த தலைமுடி கிழிந்த ஆடைகள். பலவீனமான அந்தப் பார்வை. அதை எங்கு பார்த்திருக்கிறோம்?

“அம்மா, உங்க ஊர் எது?”

“இங்கேதான்...”

“தங்கியிருக்குறது..?”

“புகைவண்டி நிலையத்திற்கு அருகில்...”

“பெயர்?”

“எலிஸபெத்...”

எலிஸபெத். ஹோ... என்ன ஒரு மாற்றம். இறக்கும் நிலையில் இருக்கிறாள். கொச்சு கிருஷ்ணன் தலைக்குள் ஒரே போராட்டம். குளத்தை நோக்கி முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு, கொச்சு கிருஷ்ணன் வெறுமனே கேட்டான்-

“இந்த மாநிலத்திலேயே இல்லையா?”

“கோயம்புத்தூர்ல இருந்தேன். உடல்நலக்கேடு உண்டாயிருச்சு.”

கொச்சு கிருஷ்ணன் ஒரு நிண்ட பெருமூச்சை விட்டான்.

“வாங்க... நான் சோறு வாங்கித் தர்றேன்.”

கொச்சு கிருஷ்ணன் திரும்பி நடந்தான். அவள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதைப்போல அவனுக்குப் பின்னால்... அவளுக்கு ஏதோ பயங்கரமான உடல்நலக்கேடு உண்டாகியிருக்கிறது. என்ன நோய்?

அறையின் வாசலில் அவளை உட்காரச் செய்துவிட்டு, கொச்சு கிருஷ்ணன் ஹோட்டலிலிருந்து ஒரு சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் வைத்தான். அதை சாப்பிட்டு முடித்தவுடன், நன்றியுடன் அவள் போக முயன்றபோது, தடுமாறுகிற குரலில் கொச்சு கிருஷ்ணன் மெதுவாகக் கேட்டான்.

“என்னை ஞாபகத்துல இருக்குதா?”

ஆர்வத்துடன் நின்று கொண்டிருக்கும் கொச்சு கிருஷ்ணனை பாதத்திலிருந்து தலைவரை அவள் பார்த்தாள். எப்படி ஞாபகத்தில் வைத்திருக்க முடியும்.

“பார்த்ததாக ஞாபகத்தில் இல்லை” அவள் கூறினாள். “யாரு?”

கொச்சு கிருஷ்ணனின் சுவாசமே நின்றுவிட்டது. அவனுடைய தலைக்குள் மின்மினிப் பூச்சுகள் பறந்தன. கனவில் நடப்பதைப்போல கொச்சு கிருஷ்ணன் அறைக்குள் வந்தான். சிவப்புநிறக் கயிறால் கட்டப்பட்டிருந்த வெள்ளைநிற அட்டைப் பெட்டியை அவிழ்த்து எடுத்துக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான்.

“இதில் என்ன இருக்கு?” அவள் கேட்டாள்.

கொச்சு கிருஷ்ணன் கையால் சைகை செய்தான். அவள் ஊர்வதைப்போல நடந்து, திரும்பிப் பார்த்தவாறு சாலையின் மூலையில் திரும்பி மறைந்தாள்.

அசைவே இல்லாத கல் சிலையைப் போல கொச்சு கிருஷ்ணன் நின்றிருந்தான்- மாலைநேரச் சிவப்பில் தெரிந்த, குருதியைப்போல பிரகாசமாக வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன்.

அப்போதும் பொன்னின் பிரகாசத்தில் மூழ்கிவிட்ட அழகான கனவைப்போல ப்ரின்ஸிப்பலின் மனைவி மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள்- இறுக்கமாக இருந்த பட்டு ரவிக்கைக்குள் அணிந்திருந்த தூய வெள்ளை நிற மார்புக் கச்சைக்குள் அடங்கா மார்பகங்களை, கறுத்து, திடமாக இருந்த மரத்தாலான கைப்பிடியில் முத்தமிடச் செய்து, முகத்தைக் கைகளால் தாங்கியவாறு, தெருவைப் பார்த்துக் கொண்டு....

மங்களம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.