Logo

உன்னை விடமாட்டேன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 7396
unnai vidamaten

“ஏ கல்யாணி, இங்கே வாயேன்...” அகமது அழைத்ததும் கல்யாணி திரும்பிப் பார்த்தாள். ஃபைல்கள் வைக்கும் பெரிய இரும்பு அலமாரியின் பின்பக்கம் இருந்து அவளை எதிர்பார்த்திருந்தான் அகமது.

அவனருகே சென்றாள் கல்யாணி.

“எதுக்காக கூப்பிட்டிங்க ஸார்?”

“என்ன ஸார்... மோர்ங்கற?”

“பின்ன? இது ஆபீஸ். நீங்க என்னோட மேனேஜர். ஸார்ன்னு கூப்பிடாம?...” செல்லமாக சிணுங்கிய கல்யாணியின் அழகிய முகம் கண்டு வயிறு முட்ட தேன் குடித்த வண்டாக... சொக்கினான் அகமது.

“எங்கேயும், எப்போதும். என்னிக்கும் நீ என் அருமை காதலி, அன்பு மனைவி, உயிர்த் துணைவி...”

“இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அதுக்குள்ள அடுக்கடுக்கா வசனம் பேசறீங்க?”

“நான்தான் சொன்னேனே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுன்னு. அம்மா, அப்பாட்ட நம்ம காதலைப் பத்தி ‘பட்’ன்னு சொல்லிட முடியாது. நம்ம ரெண்டு பேர் காதலுக்கு நடுவுல வேற்று ஜாதிங்கற ஒரு காரணம் குறுக்கிடறதுனால அப்பா, அம்மாட்ட பேசறதுக்கு பயம்மா இருக்கு. ஆனா சொல்றதுக்கு ஒரு ச்சான்ஸை எதிர் பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன்... நிச்சயமா சொல்லிடுவேன். இப்ப வா...”
அவளை அணைத்துக் கொள்ள முயற்சித்தான். ஃபைல் அலமாரியின் மறைவிற்கு அவளை இழுத்துச் சென்று கட்டிப்பிடித்தான்.

அவனது அந்த அணைப்பில் தன்னை மறந்தாள் கல்யாணி. கண்கள் மயங்க அவனது அணைப்பிற்குள் அடங்கினாள்.

“ஐ லவ் யூ மை டியர் வைஃப்...” கிசுகிசுப்பாய் அவளது காதோரம் கொஞ்சல் வார்த்தைகள் பேசினான் அகமது.

‘வைஃப்’ என்கிற அந்த வார்த்தை கல்யாணிக்கு கரும்பாய் இனித்தது. யாரோ அந்தப் பக்கம் வருவதை அறிந்து, இருவரும் விலகினார்கள்.

நாட்கள் கடந்தன. நாளொரு வண்ணமாக அவர்களது காதல் வளர்ந்தது. திருமண விஷயம் பற்றி அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி.

“ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்டிக்கவோ தட்டிக்கிட்டு போகவோ முடியாதுடி என் செல்லம். நீ என் பொண்டாட்டி. கொஞ்சம் பொறுடா. சீக்கிரமா அம்மா, அப்பாட்ட சொல்லிடுவேன். அப்புறம். டும்டும்தான்.” அகமதுவின் காதல் நிறைந்த பேச்சில் அவளது நெஞ்சில் நம்பிக்கை ஊற்று பொங்கியது. ஆனந்தப் பூங்காற்று வீசியது.

கலெக்டர் லஷ்மி கிருஷ்ணனின் எதிரே தலை குனிந்து உட்கார்ந்திருந்தான் அகமது. கல்யாணியின் தாய் வழியில் தூரத்து உறவான லஷ்மி கிருஷ்ணன், எளிய குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து, இளம் வயதிலேயே முன்னுக்கு வந்து கலெக்டராக உயர்ந்தவள். அவளை தொடர்பு கொண்டு தனக்காக அகமதுவிடம் பேச வேண்டும் என கல்யாணி வேண்டிக் கொண்டபடி வந்திருந்தாள் லஷ்மி கிருஷ்ணன்.

“சொல்லு அகமது... கல்யாணியை நீ உண்மையாதானே காதலிச்ச?”

“ஆமா மேடம்.”

“பின்ன? இப்ப வேற பொண்ணு கூட உனக்கு கல்யாணம் நிச்சயதார்த்தம் ஆகி இருக்காமே? அது உண்மையா?...”

“ஆமா மேடம்...”

“ஏன் ஒரு பொண்ணை காதலிச்சுட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க போற?...”

“ம்... அது... வந்து மேடம்... நாங்க வேற ஜாதி... அவ குடும்பம் வேற ஜாதி... எங்க அம்மா, அப்பா வேற்று ஜாதி பொண்ணை மருமகளா ஏத்துக்க மாட்டாங்க...”

“இவகிட்ட உங்க காதலை சொல்லும்போது இவளோட ஜாதி என்னன்னு தெரியாதா?...”

“அது... வந்து...”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. தெரியுமா... தெரியாதா?...”

“தெரி... தெரியும்...”

“தெரிஞ்சுதானே காதலிச்ச?... ஏன் உங்கம்மா... அப்பாட்ட சொல்லலை? சொல்லி இருந்தா உங்க காதலை ஆதரிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்கள்ல்ல?...”

“இல்லை மேடம். அவங்க. ஜாதி விஷயத்துல தீவிரமானவங்க...”

“பின்ன ஏன் இவளை தீவிரமா காதலிச்ச? நீ இவளை கல்யாணம் பண்ணிக்குவன்னுதானே நம்பிக்கையோட இருந்தா?...”

அப்போது குறுக்கிட்டுப் பேசினாள் கல்யாணி.

“இவன், என் கிட்ட உள்ள காதலை எப்பிடி சொன்னான்னு கேளுங்க மேடம்...”

உறவினள் எனினும் நெருங்கிய பழக்கம் இல்லாதபடியால் மேடம் என்றே அழைத்தாள் கல்யாணி.

“எப்பிடிம்மா சொன்னான்?”

“என்னை ‘ஹக்’ பண்ணி, கையைப் பிடிச்சு அழுத்திகிட்டே சொன்னான் மேடம்.”

கோபமாக அகமதுவிடம் திரும்பினாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்ப்பா... இவளைத் தொட்ட போது இவளோட ஜாதி தெரியலையா...? இவ வேற்று ஜாதிங்கறதுனால. உன்னோட பெற்றோர் மறுப்பாங்கன்னு தெரியலியா?...”

அகமது, திருட்டு முழி முழித்தபடி மெளனமாக இருந்தான்.

“ஒரு தடவை இவளோட அம்மா, அப்பா ஊர்ல இல்லைன்னு இவனோட வீட்டுக்கு கூப்பிட்டான் மேடம்.” கல்யாணி கூறினாள்.

“நீ போனியா?..” லஷ்மி கேட்டாள்.

“அ... ஆமா மேடம்...”

“கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால... அவன் கூப்பிட்டான்னா.... நீ... அவனோட வீட்டுக்குப் போயிடுவியா?” கடுமையாக கேட்டாள் லஷ்மி.

“நான் எதுக்கு மறுத்தாலும் அவன் ஒரு வார்த்தையை யூஸ் பண்ணி என்னோட வாயை அடைச்சுடுவான் மேடம். ‘வைஃப்... பொண்டாட்டி’ இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் அப்பிடியே ஆஃப் ஆகிடுவேன்.”

தலையில் அடித்துக் கொண்டாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்மா?... படிச்சவ நீ. ஒரு ஆபீஸ்ல வேலையும் பார்க்கற. கொஞ்சம் யோசிக்க மாட்டியா?... சரி, இவன் வீட்டுக்குப் போனியே... அங்கே என்ன நடந்துச்சு?”

“இவன்... என்னை யூஸ் பண்ணிக்கிட்டான் மேம்...” மிக்க தயக்கத்துடன் கூறினாள் கல்யாணி.

மீண்டும் கோபமானாள் லஷ்மி கிருஷ்ணன்.

“ஏம்ப்பா... இவளை உன்னோட ‘டைம் பாஸ்’க்காக யூஸ் பண்றதுக்குதான் காதல்ங்கற வார்த்தையையும், வைஃப், பொண்டாட்டிங்கற வார்த்தைகளையும் சொல்லி இவளை ஏமாத்தினியா?” அகமதிடம் கேட்டாள் லஷ்மி.

“அன்னிக்கு எங்க வீட்ல நான் எல்லை மீறி நடந்துக்கலை மேடம். லிமிட்டுக்குள்ளதான்... எல்லாமே...”

“ஷட் அப்...” மிகுந்த கோபத்துடன் கத்திய லஷ்மி கிருஷ்ணன் தொடர்ந்து கோபம் மாறாமல் பேசினாள்.

“அதென்னப்பா லிமிட்? உன்னோட அகராதியில இந்த ‘லிமிட்’டுக்கு என்ன அர்த்தம்? ஒரு பொண்ணை ஆசை வார்த்தை பேசி, அவ மனசைத் தொட்டதுக்கு அர்த்தமும் அவளைக் கெடுக்கறதுதான்.”
அப்போது கல்யாணி எரிமலை போல பொங்கினாள்.

“இவன் அனுப்பின மெஸேஜ் எல்லாம் என்னோட மொபைல்ல வச்சிருக்கேன் மேடம். நீங்களே பாருங்க...”
லஷ்மி கிருஷ்ணனின் கோபம் கல்யாணியின் மீது தாவியது. “நீயும் சேர்ந்துதான்ம்மா தப்பு பண்ணியிருக்க. கல்யாணம் ஆகறதுக்கு முன்னால இவன் கூப்பிட்டான்னு அவங்க வீட்டுக்குப் போனது மிகப் பெரிய தப்பு. ‘வைஃப்...’, ‘பொண்டாட்டின்னு...’ வாயால சொல்லிட்டா உன்னை நீ விட்டுக்குடுத்துடுவியா..? தாலி கட்டி கல்யாணம் ஆனப்பறம்தான் ஒருத்தனுக்கு ஒருத்தி பொண்டாட்டி ஆக முடியும். இது கூட தெரியாதா? என்னமோ மொபெல்... மெஸேஜ்... அது இதுங்கற...”


அப்போது அங்கிருந்த கல்யாணியின் அம்மா மாரியம்மா “ஆமாம்மா பொழுதன்னிக்கும் அந்த ஸெல் ஃபோனை நோண்டிக்கிட்டே இருப்பா. ராத்திரி பன்னிரண்டு... ஒரு மணி வரைக்கும் இதே வேலைதான். எங்க மகன்... இவளோட தம்பி... என்னிக்காவது ஒரு நாள் மொபைலை கேட்டா கூட தரமாட்டா. சண்டை போடுவா. அதுக்கெல்லாம் காரணம் இப்பத்தான் புரியுது. ஆபிசுக்கு போறது, குடுக்கற காசுக்கு வேலை பார்த்து, பெத்தவங்களையும் சந்தோஷப் படுத்தறதுக்கு. ஆனா... இவன்... என்னடான்னா... ஆபீஸ்ல வச்சு கட்டிப் பிடிப்பானாம்... தொட்டுப் பேசுவானாம். இவளும் இவனோட பேச்சுல மயங்கி தட்டு கெட்டுப் போவாளாம்...” ஆவேசமாகப் பேசினாள் மாரியம்மா.

 பிள்ளைகள், தங்களைப் போல கல்வியறிவு இல்லாமல் ஆகிவிடக் கூடாது என்று கிராமத்திலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் கல்யாணியின் பெற்றோர்.

 துபாயில் கூலி வேலை செய்து, குடும்பத்தைப் பிரிந்து கிடந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தார் கல்யாணியின் அப்பா ஆறுமுகம்.

 விடுமுறைக்கு வந்திருந்த அவர், கல்யாணி ஏமாந்து போனதை அறிந்து கோபப்பட்டார்... வருத்தப்பட்டார்...

 “பிள்ளைங்களுக்கு படிப்பு வேணும். கெளரவமான வேலை செஞ்சு நல்லா சம்பாதிச்சு சந்தோஷமா வாழணும்னு நான் பாடு படறேன். இவ என்னடான்னா... எவனோ ஒருத்தன் ஏமாத்திட்டான்னு... இப்பிடி வந்து உட்கார்ந்திருக்கா...” என்ற ஆறுமுகம் கல்யாணியிடம் திரும்பினார்.

 “காதலிக்கும்போது அம்மா, அப்பாவுக்கு பயப்படாத இவன், சொந்தக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கத் தயாராகிட்டான். விட்டுடும்மா.” மகளுக்கு பரிந்து பேசினார் ஆறுமுகம்.

 அப்போது குறுக்கிட்டுப் பேசினாள் லஷ்மி கிருஷ்ணன்.

 “இருங்க ஐயா. அகமதுவைப் பெத்தவங்களும் வந்திருக்காங்க. அவங்களையும் உள்ள வரச் சொல்லி பேசுவோம்.”

 அகமதுவின் அம்மா நூருன்னிஸாவும், பஷீரும் வந்தனர்.

 “பஷீர் பாய், உங்க மகன் இந்தப் பொண்ணைக் காதலிச்சிருக்கான். கல்யாணம் பண்ணிக்கறதா வாக்கும் குடுத்திருக்கான். ஆனா... இப்ப உங்களோட மகள் வயிற்று பேத்தியை நீங்க நிச்சயம் பண்ணி இருக்கீங்க. அதுக்கும் இவன் சம்மதிச்சிருக்கான்”

 இதைக் கேட்ட பஷீர் அதிர்ச்சி அடைந்தார்.

 “என்னம்மா சொல்றிங்க? இவன்... எங்க மகன் அகமது, இந்தப் பொண்ணை காதலிச்சிருக்கானா? ஐய்யோ மேடம்... ஊர் அறிய நிச்சயம் பண்ணி கல்யாணப் பத்திரிகை கூட குடுத்தாச்சு மேடம். அது நின்னு போனா எங்க மானம், மரியாதையெல்லாம் நாசமாயிடும் மேடம்...”

 ஐம்பத்தைந்து வயது நிறைந்த அந்தப் பெரிய மனிதர் ஒரு பெண்ணைப் போல குலுங்கி அழுதபடியே பேசினார்.

 “பஷீர் பாய், உங்ககிட்ட உங்க மகன் அகமது தன்னோட காதல் பத்தி சொல்லலியா?”

 “சொல்லலைம்மா. எனக்கு எதுவும் தெரியாது...”

 “சொல்லி இருந்தா இந்தப் பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்களா? இவதான் உங்க பையன் காதலிச்ச பொண்ணு கல்யாணி...”

 அழுகை மாறாத குரலில் அவர் பதில் கூறினார்.

 “சொல்லி இருந்தா பண்ணி வச்சிருப்பேன்மா. இவன் சொல்லவே இல்லை மேடம்...”

“காதலிக்கறது மட்டுமல்ல. நீங்க யாரும் ஊர்ல இல்லாத போது உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் இவளை யூஸ் பண்ணி இருக்கான் உங்க மகன். ரெண்டு பேரும் கணவன், மனைவியா வாழ்ந்திருக்காங்க...”

 “நான் ஒண்ணும் லிமிட் மீறலை...” அகமது மறுபடியும் அதையே கூறினான். அப்போது அவனது அம்மா நூருன்னிஸா இறுகின முகத்துடன் பேசினாள் “இவன் கூப்பிட்டான்னா... இவ பொட்டைப்பிள்ளை பின்னடியே போகணுமா...?”

 “அம்மா நூருன்னிஸா... நீங்க பேசறது சரி இல்லை. உங்க மகன் ஆம்பளைன்னா... என்ன வேணும்னாலும் செய்யலாமா? ரெண்டு பேரும் சேர்ந்துதான் தப்பு பண்ணிருக்காங்க...” என்னமோ எல்லை மீறல... மீறலங்கறான் உங்க பையன். “ஒரு பொண்ணோட மனசைத் தொட்டாலும், உடம்பைத் தொட்டாலும் தப்பு... தப்புதான்.” லஷ்மி கிருஷ்ணன் கடுமையாகப் பேசியதும் நூருன்னிஸா மெளனம் சாதித்தாள். பஷீர் திரும்ப திரும்ப “இந்தக் கல்யாணம் நின்னுபோனா எங்க குடும்ப கெளரவம் குறைஞ்சு போயிடும்” என்று கூறியபடி அழுது துடித்தார்.

 அகமது ‘கல்லூளி மங்கன்’ போல ‘கம்’ என்று இருந்தான். தகப்பன் பஷீர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துடித்தார்.

 “இங்க பாருப்பா அகமது... உங்க அப்பாவை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தறன்னு புரிஞ்சுதா? கல்யாணி வேற ஜாதி... வேற மதம். உங்க வீட்ல உங்க காதலை ஒத்துக்க மாட்டாங்கன்னு... தெரிஞ்சும் ஏன் கல்யாணியோட மனசைக் கலைச்ச? சரி... இப்ப... உங்க அப்பா சம்மதிச்சார்ன்னா இவளை நீ கட்டிப்பியா?”

 “ம்... ம். அவங்க சம்மதிக்க மாட்டாங்க...”

 “ஆமா மேடம். எங்க பேத்திக்கு இவனைப் பேசி நிச்சயமாயிடுச்சு. எங்க மானம் போயிடும்...”

 பஷீர் பாய் கூறினார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

 “பஷீர் பாய்... நீங்க... உங்களைப்பத்தியே... உங்க குடும்ப கெளரவம் பத்தி மட்டுமே பேசறீங்க. இதோ இந்தப் பொண்ணு உங்க மகனை நம்பி கெட்டுப் போயிருக்கா. இவளுக்கும் குடும்பம், ஊர், உறவுன்னு இருக்குல்ல? இவங்களுக்கு மட்டும் மானம் மரியாதை இல்லையா?... சொல்லுப்பா அகமது... இவளை கல்யாணம் பண்ணிக்கறியா? நான் உங்க அப்பாவை கன்வின்ஸ் பண்றேன்...”

 “இல்ல மேடம். முடியாது...”

 “ஏன் முடியாது? நீங்க இவளை லவ் பண்ணீல்ல? அக்கா பொண்ணுகூட நிச்சயம்ன்னதும் அந்த ‘லவ்’ மாயமா மறைஞ்சு போச்சா?...”

 அப்போது கல்யாணி இடைமறித்து, “மேடம் அகமதுட்ட நான் பேசணும்...”

 “பேசும்மா. பேசினாத்தான் ஒரு தெளிவு வரும். நல்ல முடிவு வரும்...”

 அகமதுவிடம் கல்யாணி பேச ஆரம்பித்தாள்.

 “உன் அக்கா மக கூட நிச்சயம் ஆனப்புறம் எதுக்காக நீ என்னை பீச்சுக்கு வரச் சொன்ன? வந்து நான் யாரை கல்யாணம் பண்ணினாலும் உன்னைத் தேடி வருவேன்னு சொன்ன... என்னைத் தொட்டுப் பேசின. என்னிக்கும் நீதான் என் பொண்டாட்டின்னு அப்பவும் வசனம் பேசின...”

 அகமது மெளனம் சாதித்தான்.

 “எதுக்காகப்பா அவளை பீச்சுக்கு வரவழைச்ச? தொட்டுக்கறதுக்கு ஒருத்தி. கட்டிக்கறதுக்கு ஒருத்தின்னு ஜாலியா வாழலாம்னு நினைச்சிருக்க. இவ இப்பிடி நீதி கேட்க ஏற்பாடு பண்ணுவாள்னு நீ எதிர் பார்க்கலை… சரி… நடந்தது நடந்துருச்சு. ரெண்டு பேரும் காதலிச்சிருக்கீங்க. கணவன் மனைவியா வாழ்ந்திருக்கீங்க. இவ உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. இவளை கல்யாணம் பண்ணிக்க. நீ இவளை இப்பவும் விரும்பறதானே?” லஷ்மி கிருஷ்ணன் கேட்டார்.

 “இல்லை மேடம். எனக்கு என்னோட அம்மா, அப்பாதான் முக்கியம்…”


இவன் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் கல்யாணி துடித்தாள். மறுகணம் தைரியமானாள்.

 “சரி, மேடம்… இவன்… என்னை… இப்ப விரும்பலைன்னு சொல்லிட்டான். என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னும் சொல்லிட்டான். ஆனா… எனக்கு இவனும், இவனோட அம்மா, அப்பாவும் எழுதிக் குடுக்கணும். என்னோட அம்மா, அப்பாவும் எழுதிக் குடுக்கணும்…”

 “என்னம்மா எழுதிக் குடுக்கணும்?” லஷ்மி கிருஷ்ணன் கேட்டாள்.

“என்னை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணிக் குடுக்க மாட்டோம்ன்னு என்னோட அப்பா, அம்மா எழுதிக் கொடுக்கணும். அதே மாதிரி இவனும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. இதை அவங்க அம்மா, அப்பா எனக்கு எழுதித் தரணும்…”

இதைக் கேட்டு அகமதின் அப்பாவும், அம்மாவும் மிரண்டனர். திகைத்தனர். அதிர்ந்தனர்.

கல்யாணியின் அருகே வந்து அழுதார் பஷீர்.

“அம்மா… நீ என் பொண்ணு மாதிரிம்மா. இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா எங்க மானம் கப்பலேறிடும்மா…” என்று கெஞ்சி கேட்டு கை கூப்பினார்.

“நானும் ஒரு பொண்ணுதான்ப்பா. அதை நினைக்க மாட்டேங்கறிங்க... என்னை மாதிரி இன்னும் பல பொண்ணுங்க இவனை மாதிரி ஆளுக கிட்ட ஏமாறக் கூடாதுன்னுதான்ப்பா நான் இதை செய்யச் சொல்றேன்…” தீர்க்கமாகக் கூறினாள் கல்யாணி.

முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி மகனின் அருகே தள்ளாடியபடி சென்று உட்கார்ந்தார் பஷீர்.

கல்யாணியின் அம்மா “எங்க மகள் சொல்றது சரி. நாங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம். நீங்களும் உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டோம்னு எழுதிக் குடுங்க” என்றார்.

“கல்யாணி, நீ இவன் மேல உயிரையே வச்சிருக்க. நீயே அவன்ட்ட பேசு. ஒரு முடிவு எடு…” லஷ்மி கிருஷ்ணன் கூறியதும் கல்யாணி எழுந்து அகமதின் அருகே சென்றாள்.

அம்மா, அப்பாவின் அருகே பூனை போல பயந்தபடி உட்கார்ந்திருந்த அகமதுவின் கையைப் பிடித்தாள்.

“நீ ஏன் இப்படி பண்ற? என் மேல எவ்வளவு காதலா இருந்த? நாம எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? அதையெல்லாம் நினைச்சுப்பாரு. என்னை ஏத்துக்கோ. கல்யாணம் பண்ணிக்கோ… ப்ளீஸ்… என் வாழ்க்கையே நீதான். என் உலகமே நீதான். என் சகலமும் நீதான்…”

அகமதின் மனம் கரையவே இல்லை. தன் கையைப் பிடித்திருந்த கல்யாணியின் விரல்களை மெல்ல தள்ளி விட்டு, தன் அருகே உட்கார்ந்திருந்த அப்பா பஷீரின் கையோடு கை சேர்த்துக் கொண்டான்.

“இப்பிடி ஒரு கல் நெஞ்சக்காரனை நீ இன்னும் ஏம்மா கெஞ்சிக்கிட்டிருக்க?” வருத்தப்பட்டுப் பேசினார் லஷ்மி கிருஷ்ணன்.

 “நான் எனக்காக மட்டும் கெஞ்சலை மேடம். இவன் கல்யாணம் பண்ணிக்கப் போற இவனோட அக்கா மகளுக்கு பதினெட்டு வயசுதான் ஆகுதாம். அந்தப் பொண்ணை இந்த துஷ்டன்ட்ட இருந்து காப்பாத்தலாம்னு நினைச்சேன். ஆனா தன் பொண்ணைக் கட்டிக்க போறவன் இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் அந்தப் பொண்ணோட அம்மா இவனுக்கு பொண்ணு குடுக்க வரிஞ்சு கட்டிக்கிட்டு காத்திருக்காங்க. பொண்ணோட எதிர் காலத்தை விட தங்களோட குடும்ப கெளரவம்தான் பெரிசுன்னு நினைக்கற இவங்களோட வறட்டு கெளரவத்தைப் புரிஞ்சுக்கிட்டேன். அது மட்டுமில்ல மேடம்… ஒருத்தியை கல்யாணம் கட்டிக்கிட்டு மறுபடியும் என்னைப் போல இன்னொருத்தி கூட இவன் அலையமாட்டான்னு என்ன நிச்சயம்? கண்டிப்பா கட்டினவளை ஏமாத்திட்டு..., பழகற பெண்களை மாத்திக்கிட்டே இருப்பான். இவனால வேற பொண்ணுங்க பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சும்தான் நான் இப்படி பேசறேன். இவன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் இவன் வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்துக் கூட பார்க்க விடாம நான் இவனை கண்காணிக்கணும். இவன் தினம் தினம் என்னைப் பார்த்து… இவகிட்ட மாட்டிக்கிட்டேமேன்னு நினைச்சு, உணர்வுகளால உயிரோட சாகணும். இவனை வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க விடக் கூடாது. இப்படிதான் இவனுக்கு பாடம் கத்துக்குடுக்கணும்னு நினைச்சேன். அதை வெளிப்படையா சொல்லிட்டேன்...”

“ஹேட்ஸ் அஃப் டூ யூமா கல்யாணி. நீ எவ்வளவு பெரிய சாதனை பண்ணி இருக்க தெரியுமா? இவனை மாதிரி ஆளுக, இனிமே பொண்ணுகளை காதல்ங்கற பேரால ஏமாத்தறதுக்கு யோசிக்கவே பயப்படுவாங்க...”

அப்போது வேகமாக எழுந்தார் பஷீர். யாரும் எதிர்பாராத வகையில் தடால் என்று கல்யாணியின் காலில் விழுந்தார்.

“உன் பிடிவாதத்தை எனக்காக விட்டுக் குடுத்துடுமா. நான் இவனுக்கு நிச்சயம் செஞ்ச கல்யாணம் நடக்கலைன்னா எங்க குடும்ப கெளரவம் குலைஞ்சு போயிடும்....” கெஞ்சினார் பஷீர்.

மனதை கல்லாக்கிக் கொண்டு, தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படுத்தினாள் கல்யாணி.

அகமதுவின் குடும்பத்தினர் தலை குனிந்தனர். கல்யாணியை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் லஷ்மி கிருஷ்ணன்.

 “உன்னோட இந்தப் போராட்டத்தைப் பத்தி பத்திரிகையில நானே எழுதப் போறேன். டி.வி-ல கூட பேசப் போறேன். ஏமாத்தற ஆண்களுக்கு இது ஒரு சவுக்கடி. ஆனா… பொண்ணுகளும் இந்தக் காதல் வலையில சிக்கிக்காம, காதலிக்கறவன் அதுக்கு தகுதி உள்ளவனான்னு யோசிக்கணும். பெற்றோர் பார்த்து பண்ணி வெச்ச கல்யாணத்திலேயே பிரச்னை வருது. நீங்களாவே தேடிக்கிட்ட வாழ்க்கையில யாரோட உதவியும் இருக்காது. அதனால முன் எச்சரிக்கையா இருந்து செயல்படணும். உன்னோட இதை தைரியம் எல்லா பெண்களுக்கும் வரணும். அதே சமயம், இந்தக் காதல் ஒத்து வருமான்னு நீ யோசிக்கலை. அது உன்னோட தப்பு. படிச்ச பொண்ணான நீயே பெண்மைக்குரிய மென்மையான உணர்வுல இவனோட காதலை சத்தியம்ன்னு நம்பிட்டே. உன்னோட எதிர்காலத்தைப் பத்தி உன்னை பெத்தவங்களுக்கு உன்னை எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும். எல்லாத்தையும் நீ நொறுக்கிட்ட. சரி... நடந்தது நடந்து போச்சு. கல்விங்கறது ஒரு கடல் மாதிரி. நீ இன்னும் மேல நிறைய படி. ‘டைம் இஸ் த பெஸ்ட் மெடிஸின்’ அப்படின்னு சொல்லுவாங்க. காலம் உன்னோட துக்கத்தை மாத்தும். அப்போ உன் மனசும் மாறும். நிறைய படிச்சு வாழ்க்கையில முன்னேறு. உன் மனசை சமூக, சமுதாய சேவைகள்ல்ல ஈடுபடுத்தி வாழ முயற்சி செய். ஆல் த பெஸ்ட்.” லஷ்மி கிருஷ்ணன் விடை பெற்று கிளம்பினாள்.

(சமீபத்தில் நடைபெற்ற ஓர் உண்மை சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ‘உன்னை விட மாட்டேன்’. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. நிஜ வாழ்க்கையில், காதலனின் அப்பா பஷீர் கெஞ்சினார் என்பதற்காகவும், அகமதுவின் காதல் உண்மையானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டதாலும் இளகிய மனதுடன் தன் முடிவை விட்டுக் கொடுத்திருந்தாள் கல்யாணி. தைர்யமான பெண், திடீரென இரக்கம் கொண்டு இறங்கிப் போனதை மாற்றி, கதையின் முடிவை, எனது கற்பனையில் வேறு விதமாக எழுதியுள்ளேன்.)

-சித்ரலேகா


Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.