Logo

சிரிப்பின் விலை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6720
siripin vilai

பூங்காவின் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன்.

பூங்கா என்று கூறும்போது, கொடிகளாலான குடில்களும் பூத்துக் குலுங்கும் செடி, கொடிகளும் உங்களுடைய ஞாபகத்தில் வரலாம். அவை எதுவுமே இல்லை. வெறும் புல்தரை மட்டுமே இருந்தது. ஒரு மூலையில் குழந்தைகள் விளையாடக்கூடிய ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு மிகவும் அருகிலேயே ஒரு சறுக்குமரம் இருந்தது.

அதைச் சுற்றி பத்து பன்னிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வெளிச்சுவருக்கு மேலே நான்கு பக்கங்களிலும் ஆட்கள் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாலைவேளையை மகிழ்ச்சியாக செலவழிக்க அவர்கள் அங்கு வந்திருந்தார்கள். வேண்டிய அளவிற்கு கையில் பணம் இருக்கும்பட்சம், அங்கு வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக இருக்கும். கடற்கரை இருக்கும் காரணத்தால்தான் எனக்கு இந்த நகரத்தின்மீது விருப்பம் உண்டானது. நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு வேளைகளில், இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் அரபிக்கடலின் அழகைப் பார்த்துக்கொண்டே அந்த மணல் வெளியில் மல்லாந்து படுத்துக்கிடப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. நிலவு வெளிச்சத்தில் கடற்கரை புன்னகை புரியும்போது என்னுடைய ஞாபகத்தில் வருவது... வேண்டாம்... அது இன்னொரு கதை...

குளிர்ச்சியான காற்று இருக்கிறது. வளைந்து நெளிந்து காட்சியளிக்கும் காங்க்ரீட் பாதைகள்... கட்டடங்கள்... நிழல் தரும் மரங்கள்... எல்லாவற்றையும் பார்த்தவாறு நான் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். ஒருமுகப்படுத்தி சிந்திக்கக்கூடிய சில காரியங்கள் மனதில் இருக்கின்றன. ஆனால், எதுவுமே தெளிவாக இல்லை.

அந்தப் பக்கம் இருக்கும் பெரிய மைதானத்தில் சாதாரண கால்பந்து போட்டிகள் நடக்கும். அதைப் பார்ப்பதற்கு ஏராளமான ஆட்களும் இருப்பார்கள். இன்று விளையாட்டு இல்லை. அதனால் பாதையில் நடைபெறும் காட்சிகளை மட்டும் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டு ஆட்கள் பூங்காவின் அரைச்சுவரில் இடம்பிடித்து உட்கார்ந்திருந்தார்கள்.

தூரத்தில் டவுன்ஹாலிலிருந்து  ஒலிபெருக்கியின் வழியாக யாருடைய சொற்பொழிவோ உரத்துக் கேட்டுக்கொண்டிருந்தது. இடி முழங்கியதைப் போன்ற குரல். நேற்றும் அதற்கு முந்தைய நாளும் அங்கு நாடகம் நடைபெற்றது. இன்று சொற்பொழிவு. சொற்பொழிவே நாடகத்தைப் பற்றித்தான் என்று யாரோ சொன்னார்கள். எது எப்படி இருந்தாலும் அது பிரச்சினையில்லை. சொற்பொழிவுகளில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மிகச்சிறந்த சொற்பொழிவின் மூலம் உலகத்தையே நாம் நல்லதாக ஆக்கிவிட முடியும் என்ற கருத்து முன்பு எனக்கிருந்தது.

கலாச்சாரத்தின் புதிய அலைகள் எழுந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன.

"பண்டைக் காலத்திலிருந்தே, பிரபஞ்சத்தில் நிலவிக் கொண்டிருக்கும் எண்ணங்களை..'

ஒலிபெருக்கி உரத்து ஒலிக்கச் செய்துகொண்டிருந்த அந்தக் குரல் என்னைச் சுற்றி ஒலித்துக்கொண்டிருப் பதைப்போலத் தோன்றியது...

நான் அரைச் சுவரின்மீது ஏறி உட்கார்ந்தேன். கீழே, பூங்காவிலிருந்த புல்லைத் தின்றுகொண்டே திமிலைக் காட்டியவாறு ஒரு காளை நடந்து போய்க் கொண்டி ருந்தது.

தனிமைச் சூழல் கிடைக்கவில்லை. வெளியே வந்ததே சிறிது வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்துதான். வேலை என்றாலே ஒரு வகையான மனரீதியான பிரசவ வேதனைதான்... எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? ஆரம்பம் தான் சிரமமே... ஆரம்பித்து விட்டால் வெற்றிபெற்ற மாதிரிதான். அழகான மலர்களைவிட மென்மையான உடலை விற்று, நடந்து திரியும் அந்த குஜராத்தி இளம்பெண்தான் கதாநாயகி. ஒரு செம்பு வியாபாரம் செய்யும் மனிதனின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கச் சங்கிலி, மஞ்சள் நிறத்தில் திரைச்சீலை இடப்பட்டிருக்கும் ஒரு சாளரம், கண்ணாடி அணிந்து, தொப்பையுடனிருக்கும் ஒரு நவநாகரீக மனிதன்- இவர்கள் எல்லாரும் பின்னால் வருகிறார்கள்.

காளையின் ஆடிக்கொண்டிருக்கும் திமிலைப் பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன்.

"கிஹி... கிஹி...'

இனிமையான ஒரு கூட்டச் சிரிப்பு.மூன்று இளப்பெண்கள். அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து அது கேட்டது. அவர்கள் எதற்காக சிரித்தார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்திருப்பார்களோ?

கடவுளே! அப்படி இருக்க வாய்ப்பில்லை. இளம்பெண்களே, நீங்கள் சிரிப்பதைப் பார்க்கும்போது எனக்கு வெறுப்பு உண்டாகிறது. நீங்கள் அழுங்கள்...

அழும்போதுதான் அவர்கள் மிகவும் அழகானவர்களாக இருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. இதயத்தில் சந்தோஷமும் உண்டாகும்.

மெலிந்த கையில் தொங்கிக்கொண்டிருக்கும் பூக்கூடையை ஆட்டிக்கொண்டு, நெளிந்து நெளிந்து நடந்துகொண்டிருக்கும் அந்த குஜராத்தி இளம்பெண்.... அவளுக்கு எப்போதும் சிரிப்போ சிரிப்புதான். அவள் அழுவதைப் பார்க்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

புளிய மரங்கள் நிழல் பரப்பிவிட்டிருக்கும் காங்க்ரீட்டிலான பாதையைப் பார்த்தபோது, ஒரு வினோதமான கூட்டம் வந்துகொண்டிருப்பதை கவனித்தேன். மூன்று பேர்தான். முன்னால் கறுத்து மெலிந்து காணப்பட்ட ஒரு இளைஞன். தோளில் ஒரு செண்டை தொங்கிக்கொண்டிருந்தது. பின்னால் தடித்து, சதைப் பிடிப்புடன் இருந்த ஒரு இளம்பெண்... அதற்குப் பின்னால் கடவுளின் கொடூரமான நகைச்சுவை உணர்விற்கு சாட்சியம் கூறுவதைப்போல, குள்ளமான தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன். அவனுடைய தோளில் மலையைப்போல பெரிதாக இருந்த ஒரு சுமை... மிகவும் நெருக்கமாக அவர்கள் வர... வர... குள்ள மனிதனின் அவலட்சணமான உருவம் நன்கு தெரிந்தது. பெரிய தலை. எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்கும் அசிங்கமான முகம். அழகற்ற தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டும் சிரிப்பு. மெலிந்த கைகளும், கால்களும்... அந்த நடையைப் பார்த்தாலே, யாரும் பார்த்தவுடன் சிரித்துவிடுவார்கள். பிறகு பார்க்கலாம்... ஓ... பிறகு ஒன்றுமில்லை.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நின்று, அவர்கள் தங்களைச் சுற்றிலும் பார்த்தார்கள். அந்த இளைஞன், இளம்பெண்ணிடம் மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தான். அவள் தலையை ஆட்டினாள்.

அவர்கள் பூங்காவுக்குள் நடந்து வந்தார்கள்.

பூங்காவின் நடுப்பகுதிக்கு வந்ததும், அந்த இளைஞன் செண்டையைக் கீழே வைத்தான். குள்ள மனிதன் சுமையைத் தரையில் இறக்கி வைத்தான். அவள், சுற்றியிருந்த சுவரில் இடம்பிடித்திருந்த ஆட்கள் எல்லாரையும் அலட்சியமாக ஒருமுறை பார்த்தாள். ஓ... ஆட்களின் கவனம் அவர்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.

குள்ளன் மூட்டையை அவிழ்த்து பலவற்றையும் வெளியே எடுத்தான்.

நான்கு இரும்பு வளையங்கள், ஒரு கழி, ஒரு புட்டி, இரண்டு வெட்டுக் கத்திகள்- இப்படி பல...


அவள் தளர்ந்த நிலையில் மெதுவாக புல் பரப்பில் உட்கார்ந்திருந்தாள். மாநிறத்தில், நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு இளம்பெண்... ஊஞ்சலில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் குள்ளனைச் சுற்றி வந்து நின்றார்கள். அவன் தன் முகத்தை வைத்து என்னவோ கோமாளித்தனத்தைக் காட்டியிருக்க வேண்டும்- குழந்தைகள் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். குழந்தைகள் சூழ்ந்து நின்றுகொண்டிருந்ததால் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க முடியவில்லை.

இளைஞன் செண்டையைத் தரையிலிருந்து எடுத்து தன் தோளில் தொங்கவிட்டு, முழக்க ஆரம்பித்தான். ஆட்கள் சுற்றிலும் கூடவேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், யாரும் சுவரை விட்டுக் கீழே இறங்கவில்லை. கிண்டல் கலந்த பார்வைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவள் அப்போதும் தளர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்...

செண்டையின் சத்தம் படிப்படியாக உயர்ந்தது. குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டானது. என்ன நடக்கப் போகிறது? சுவரின்மீது அமர்ந்திருந்த ஆட்களுக்கும் ஆர்வமிருந்தது. ஆனால், அதை அங்கு வெளியே காட்டிக்கொள்ள முடியாதே! செண்டையின் சத்தம் உச்சநிலையை அடைந்ததும் திடீரென்று நின்றது. அப்போது தளர்ந்து உட்கார்ந்திருந்த இளம்பெண் ஒரு பூனைக்குட்டி எழுந்திருப்பதைப்போல வேகமாக எழுந்தாள்.

சாலையை நோக்கி அமர்ந்திருந்தவர்கள்கூட தாங்கள் அமர்ந்திருந்த முறையை மாற்றினார்கள்.

அவள் நிமிர்ந்து நின்று இரண்டு முறை தன்னுடைய கைகளை மடக்கி நீட்டினாள். தொடர்ந்து மெதுவாக ரவிக்கையை... ஆமாம்... ரவிக்கையை அவிழ்த்தாள்.

ஆட்களுக்கு, நான் உள்ளிட்ட ஆட்களுக்கு சுவாரசியம் உண்டானது. ரவிக்கைக்குள் இறுக்கமாக இருந்த இன்னொரு ரவிக்கையும் இருந்தது. அடர்த்தியான சிவப்பு நிறம்... இப்போது நிலவிக்கொண்டிருந்த நிமிடங்களில் ஆர்வம் நிறைந்து நின்றிருந்தது. பூங்காவின் நடுப்பகுதியை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த கண்களில் கிண்டல் இல்லை.

தொடர்ந்து அவள் தன் இடுப்பில் சுற்றியிருந்த துணியை அவிழ்த்தாள். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் அது இருந்தது. கால்களோடு இறுக்கமாக ஒட்டியிருந்த நிக்கர் ஒன்றை உள்ளே அவள் அணிந்திருந்தாள்.

இப்போது யாருக்கும் கவனம் இல்லை. ஒரு கலை நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது.

செண்டை மீண்டும் முழங்கியது.

தைரியம் கொண்ட சிலர் முதலில் கீழே இறங்கினார்கள்.

அப்போதுதான் மற்ற ஆட்களுக்கு தன்னம்பிக்கை வந்தது. நிகழ்ச்சி நடத்தப் போவோரைச் சுற்றி ஒரு அரை வட்ட வடிவத்தில் ஆட்கள் சூழ்ந்து நின்றார்கள். கிட்டத்தட்ட சுவர்ப்பகுதி ஆட்கள் யாருமே இல்லாமல் ஆகிவிட்டது. குஜராத்தி இளம்பெண்ணைப் பற்றிய விஷயம் இப்போதைக்கு நிற்கட்டும். நானும் கீழே இறங்கினேன்.

செண்டையின் தாளத்திற்கு ஏற்றபடி, பார்வையாளர் களின் வரிசைக்கு மத்தியில் விடப்பட்டிருந்த இடத்தில், அவள் துள்ளிக்கொண்டே இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள். பிறகு... நினைக்காத நேரத்தில் சட்டென்று நின்று கைகளைத் தட்டிக்கொண்டே நின்றபடியே ஒருமுறை குட்டிக்கரணம் போட்டாள்.

செண்டை அடிப்பவன் உரத்த குரலில் கத்தினான்.

“ஹாய்!''

மக்கள் கைகளைத் தட்டினார்கள். நானும் வெறுமனே இருக்கவில்லை. கூர்ந்து கவனித்தபடி இருந்தேன். அவள் தொடர்ந்து இரண்டு முறை மூன்று முறை குட்டிக்கரணம் போட்டாள். ட்ரெமண்டஸ்!

தொடர்ந்து கைத்தட்டல்கள்!

“சபாஷ்... சபாஷ்

கிரி.. கிரி... கிரி...''

மக்கள் பார்த்தார்கள்... ஓ... குள்ள மனிதனின் நுழைவு. இதுவரை நண்பன் எங்கே போயிருந்தான்? காலில் பெரிய ரப்பர் ஷூக்கள் இருந்தன. வேட்டியின் இடத்தில் மிகப்பெரிய பைஜாமாவை அணிந்திருந்தான். தலையில் பதிந்திருக்கும் தொப்பி... முகத்தில் அரிசி மாவால் வரைந்திருந்தான். கையில் ஒரு கழி...

“கிரி... கிரி... கிரி...''

ஆட்கள் சிரித்தார்கள். குள்ளன் பற்களை இளித்துக் கொண்டு, ஒரு குரங்கைவிட மிகவும் அருமையாக வக்கனை காட்டிக்கொண்டிருந்தான்.

இடையில் தன்னுடைய பின்பகுதியைச் சொறிந்து, கீழே விழப்போவதைப் போல ஓரிரு முறை தட்டுத் தடுமாறியவாறு இருந்த அந்த நடையை ஆட்கள் ரசித்தார்கள்.

“கிரி... கிரி... கிரி...''

தொடர்ந்து அந்த அழைப்பும்...

“ஏய்... தங்கச்சீ!''

குள்ளன் இளம்பெண்ணை அழைத்தான்.

“என்ன?''

இளம்பெண் அழைப்பைக் கேட்டாள்.

“இது என்ன வேலை?''

“சர்க்கஸ் வேலை.''

“ரொம்ப மோசம்... சரியான சர்க்கஸ் வேலைன்னா என்ன தெரியுமா? நான் காட்டப்போறேன்.''

பழைய ரப்பராலான ஷூக்களை வீசி எறிந்துவிட்டு, கைகளை வீசிக்கொண்டே பார்வையாளர்களை வணங்கியவாறு குள்ளன் சொன்னான்:

“மதிப்பிற்குரிய மனிதர்களே... கண்கட்டு வித்தையல்ல. ஜாலவித்தையல்ல. வெறும் உடற்பயிற்சி. சர்க்கஸைப் பாருங்க... ஹாய் ஜமா!''

குட்டிக்கரணம் போடுவதாக பாவனை பண்ணி, குள்ளன் தரையில் உருண்டான்.

ஆட்கள் உரக்கக் கூவினார்கள்.

குள்ளன் கோபம் வருவதைப்போல நடித்தான். தன்னுடைய கால்களுக்கு அவனே தண்டனை தந்தான்.

“அண்ணா...''

இளம்பெண் அழைத்தாள்.

வேதனையுடன் அழைப்பைக் கேட்டுக்கொண்டே-

“என்ன தங்கச்சி?''

“ரொம்ப மோசம்?''

“என்ன மோசம்.''

“நான் பிரமாதமான வேலையைக் காட்டப் போறேன்.''

“என்ன வேலை?''

“இதோ பார்..''

மீண்டும் சத்தமாக செண்டை முழங்கியது. அவள் தரையிலிருந்து ஒரு இரும்பாலான வளையத்தை எடுத்து, அது எந்த அளவிற்கு சிறியதாக இருக்கிறது என்பதைப் பார்வையாளர்களிடம் புரியவைப்பதற்காக அதை உயர்த்திக் காட்டினாள். தொடர்ந்து ஒரு கையையும் தலையையும் அதற்குள் நுழைத்து, தன்னுடைய சரீரத்தை நுழைப்பதற்கு முயற்சி செய்தாள்.

“கிரி... கிரி... கிரி... கிரி... கிரி...''

குள்ளன் கேலி செய்துகொண்டே வக்கனை காட்டினான்.

அவளுடைய தடிமனான சரீரத்தின் வழியாக இரும்பாலான வளையம் படிப்படியாக நுழைவதைப் பார்த்தவாறு ஆட்கள் திகைப்புடன் நின்று கொண்டிருந் தார்கள்.

இரும்பு வளையத்தைவிட்டு வெளியே வந்தவுடன் ஆட்கள் கைகளைத் தட்டினார்கள்.

அவள் பாராட்டிற்கு தலையை குனிந்து நன்றியை வெளிப்படுத்தினாள்.

குள்ளன் நிகழ்ச்சியைச் செய்வதற்காக வந்துநின்றான்.

ஒரு பெரிய வளையத்தை எடுத்து, சிரமம் இருப்பதைப் போல நடித்துக்கொண்டே, உடலே படாமல் அதை நகர்த்திக்கொண்டு வந்து, நிம்மதியாக பெருமூச்சு விட்டான். வளையத்தைக் கீழே வைத்துவிட்டு, நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைப்பதாகக் காட்டியவாறு பார்வையாளர்களைப் பார்த்தான். பாராட்டு கிடைக்க வில்லை. தானே கைகளைத் தட்டிக்கொண்டு தன்னைத்தானே அவன் பாராட்டிக்கொண்டான்.

அப்போது ஆட்கள் சிரித்தார்கள்.

இளம்பெண் வில்லைப்போல வளைந்து நின்றாள்.

செண்டை அடித்துக் கொண்டிருந்தவன் அவளுடைய வயிற்றின்மீது ஏறி நின்றான். என்ன ஒரு மகா அற்புதக் காட்சி! ஆட்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். குள்ளன் தன்னுடைய ஒரு கண்ணை மூடியவாறு உரத்த குரலில் கூப்பாடு போட்டான்:

“அய்யோ... என் தங்கச்சியைக் கொன்னுடாதே!''

இரண்டு அரிவாள்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆடுவதுதான் இறுதி நிகழ்ச்சியாக இருந்தது. குள்ளன் அந்த நிகழ்ச்சியை தமாஷாக ஒரு மரக்குச்சியை வைத்துக்கொண்டு செய்தான்.


செண்டையின் முழக்கம் நின்றது.

இளம்பெண், குள்ளன் திறந்து வைத்திருந்த மூட்டைக்குள்ளிருந்து ஒரு கிண்ணத்தை வெளியே எடுத்து பார்வையாளர்களை நோக்கி நடந்தாள். அவள் எதுவும் கூறவில்லை. எல்லாருக்கும் தெரியும். ஆட்கள் இரக்க குணம் கொண்டவர்கள். காலணா, அரையணா, இரண்டணா... அதிக இரக்க குணம் கொண்ட இளைஞர் கள் நான்கணா நாணயத்தைப் போட்டார்கள். காசு போடுபவர்கள் எல்லாரிடமும் அவளுடைய வியர்வை வழிந்துகொண்டிருந்த முகத்தில் மலர்ந்த புன்னகை நன்றி கூறியது.

காசு போட்டு முடிந்தவுடன், அவள் தான் கழற்றி வைத்திருந்த துணியையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்தாள்.

ஆட்கள் அங்கிருந்து பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்கள்... பூங்கா ஆட்கள் யாருமே இல்லாமலானது. செண்டை அடிப்பவன் கிண்ணத்தில் விழுந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்... குள்ளன் இரும்பு வளையத்தையும் கத்திகளையும் எடுத்து மூட்டைக்குள் வைத்துக்கொண்டிருந்தான். இனி பார்ப்பதற்கு எதுவுமில்லை. நான் சுவரிலிருந்து கீழே இறங்கி சாலையில் நடந்தேன்.

டவுன் ஹாலிலிருந்து சத்தமாக ஒலித்துக்கொண்டி ருந்த அந்த சொற்பொழிவு காதில் வந்து விழாத ஏதாவதொரு இடத்தைத்தேடிப் போக வேண்டும்.

அப்போது அந்த எண்ணம் மட்டுமே மனதில் தோன்றியது.எந்தவொரு இலக்கும் இல்லாமல் நடந்தேன். இருட்டும் வரையில் இதேபோல தெருக்களில் நடந்துகொண்டிருப்பது என்பது எப்போதும் வாடிக்கையான ஒன்றுதான். முடிந்த வரையில் மாலையில், தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துசேருவதைத்தான் விரும்புவேன்.

தொலைபேசி இணைப்பகத்தையும், காவலர்களின் இருப்பிடங்களையும், கடைகளையும், திரை அரங்கையும் கடந்து நடந்தேன். வழியில் ஓரிரண்டு நண்பர்களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் உலகத்தை நன்றாக ஆக்க வேண்டும் என்பதற்காக வெளியே கிளம்பியிருக்கும்- நம்முடைய கொம்பு மீசையை வைத்திருக்கும் மனிதர். அவரை நிராகரித்தேன். அடுத்த மனிதனிடமிருந்து அவ்வளவு வேகமாகத் தப்பிக்க முடியவில்லை. வளர்வதற்கும், சிகிச்சை செய்வதற்கும் வசதியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கவிதைகள் எழுத ஆரம்பித்து ஏழு வருடங்களாகி விட்டன...

“இன துவேஷமும் ஜாதிக் கண்ணோட்டமும் உள்ள இந்த கொடூரமான பத்திரிகை ஆசிரியர்களும், அவர் களுக்காக கையிலிருக்கும் மணியை அடிக்கும்...''

இவ்வளவையும் கூறியவுடன், நான் சொன்னேன்.

“அன்பு நண்பனே! நான் போகட்டுமா? என்னைக் கொன்னுடாதே!''

அவனுக்கு அது பிடித்திருக்காது. நான் நடந்தேன். வயல் இருக்கும் இடத்திற்கு வந்தேன். ஆளரவமற்ற வயல். அதைக் கடந்து சுடுகாடு... வயலை ஒட்டி சாலை செல்கிறது. சாலையின் ஓரத்தில் மூன்று மாமரங்கள் இருந்தன. நான் அங்கிருந்த ஒரு சிறிய பாலத்தின்மீது உட்கார்ந்தேன்.

மீண்டும் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தேன்- தன்னுடைய மெலிந்து காணப்பட்ட கையில் பூக்கூடை யைத் தொங்கவிட்டுக் கொண்டு நடந்துவரும் அந்த குஜராத்தி இளம்பெண்ணைப் பற்றி...

“இங்கிருந்து போடா...''

ஒரு பெண்ணின் கோபக் குரல். சற்று தள்ளியிருக்கும் மாமரத்தின் நிழலிலிருந்து அந்தக் குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்ணிடம் திட்டு வாங்கிய அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும்?

பார்த்தால்... சற்று முன்பு பூங்காவில் நிகழ்ச்சி நடத்திய சர்க்கஸ் குழு...

“எனக்கு இன்னும் இரண்டணா வேணும்.''

குள்ளன்தான்... வெறும் விளையாட்டுக்காகக் கூறவில்லை. அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“இப்போ கொடுக்குறதே அதிகம்!''

“நான் ஏத்துக்க மாட்டேன்!''

“போய் என்ன பண்ணணுமோ பண்ணு!''

விஷயம் இதுதான். அவனுக்கு மேலும் இரண்டணா வேண்டும். அவள் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. அதாவது- அவளுடைய சம்மதம் இல்லாமல் செண்டை அடிப்பவன் தரமாட்டான் என்று அர்த்தம்.

குள்ளன் தன்னுடைய கஷ்டங்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான். அதைக்கேட்டு, அவளிடம் எந்தவொரு அதிர்ச்சியும் உண்டாகவில்லை.

“உனக்கு நாலணாவுக்குமேல யாருடா தருவாங்க?''

“சொன்ன வார்த்தைக்கு நாணயமா நடக்கணும்.''

“ஓ... ஒரு நாணயக்காரன்! த்தூ...''

கெஞ்சல்களும், திட்டுதல்களும், வசையும்.

மீண்டும் கெஞ்சல்...

“இன்னைக்கு அதிகமா காசு கெடைச்சதுல்ல!''

“ஆமா... என் உடம்பை வேதனைப்படுத்தினதால...''

அவன் எதுவும் பேசவில்லை. அவலட்சணமான முகத்தையே நான் கூர்ந்து பார்த்தேன். அந்தக் கண்களில் நீர் இருக்கிறதோ? குள்ளன் அழுது கொண்டிருக்கிறான்...

பாதையில் நடந்து கொண்டிருந்தவர்களின் கவனம் அவர்களை நோக்கித் திரும்புகிறது என்பதைப் புரிந்துகொண்டவுடன், செண்டை அடிப்பவன் இளம்பெண்ணிடம் என்னவோ முணுமுணுத்தான்.

அவர்கள் எழுந்து நடந்தார்கள். மலையைப் போன்ற சுமையைச் சுமந்தவாறு அவர்களுக்குப் பின்னால் குள்ளன்...

...தூரத்தில் செண்டையின் சத்தம் கேட்டது. அங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

“கிரி கிரி கிரி... கிரி கிரி...'' குள்ளனின் குரல்.

நான் பாலத்திலிருந்து எழுந்து மீண்டும் நடந்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.