Logo

நம்முடைய இதயங்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7175
nammudaiya-idhayangal

புகை வண்டியின் அந்தப் பெட்டியில் மொத்தம் எட்டு பேர் இருந்தோம். பல்வேறு மதங்களைச் சேர்ந்த நாங்கள் அற்புதமான விஷயமான காதலைப் பற்றி ஒவ்வொன்றையும் கூறி கலகலப்பு உண்டாக்கிக் கொண்டிருந்தபோது, நாடு முழுக்கப் பயணம் செய்திருக்கும் அந்த இளைஞன் இந்தக் கதையைச் சொன்னான்:

‘‘வட இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்குறப்போ, நம்ம கேரளத்துல நிலவுற ஜாதி வித்தியாசம் சாதாரண ஒரு சிறு காற்றுன்னுதான் சொல்லணும். பயங்கரமான ஜாதிப் பாகுபாடு என்ற சூறாவளி அங்கே ஒவ்வொரு நாளும் பலமா அடிச்சுக்கிட்டேதான் இருக்குது. ஒருத்தரையொருத்தர் கடிச்சு உடம்பைக் கிழிச்சு ரத்தத்தைக் குடிக்கிறதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற ரெண்டு கொடூர மிருகங்களைப்போல நடந்துக்குவாங்க- இந்து, முஸ்லிம், சீக்கிய மதங்களைச் சேர்ந்தவங்க. மாறுபட்ட நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று சேராத கலாச்சாரமும்! நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்த பகை இப்பவும் இரத்தத்துல கலந்து இருக்குதோன்னு தோணும். பசுவதை, மொழிச்சண்டை- இவை ஒவ்வொண்ணும் வெறுப்புன்ற நெருப்புல ஊற்றப்படுற எண்ணெயைப்போல, ஏதாவதொரு தெருவின் ஒரு பக்கத்துல கோவில் இருந்தா, எதிர்பக்கத்துல ஒரு பள்ளிவாசல் இல்லாம இருக்காது. அப்படி இல்லைன்னாலும் உண்டாக்குவாங்க! இதுல இந்து, முஸ்லிம், வித்தியாசமே இல்ல. பாங்கு ஒலி கேக்குறப்போ, சங்கநாதமும் மணியோசையும் கேட்கும். மணி அடிக்கிறப்போ, பாங்கு ஓசை உரத்து ஒலிக்கும். இதுதான் உண்மையில் நடக்குறது. பிறகு- ஒரே ஆர்ப்பாட்டம்தான். பத்து முஸ்லிம் தலைகளை இந்துக்கள் எடுக்குறப்போ, முஸ்லிம்கள் மனதில் எண்ணிக்கொண்டே பதினொரு இந்துக்களின் தலைகளை வெட்டிக் கீழே விழச் செய்வாங்க. தலைகளை எண்ணிப் பார்த்துதான் வெற்றியை நிர்ணயம் செய்றது. சின்ன வயசுல பிள்ளைகளுக்குக் கற்றுத் தர்றதே மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவன் நம்மோட பிறவிப் பகைவன் அப்படின்னுதான். இலக்கியம்தான் இந்த விஷயத்தை மேலும் அதிகமா ஊட்டி வளர்த்துக்கிட்டு இருக்குறது.

‘ரங்கீலா ரஸுல்’ என்ற முஹம்மது நபியைப் பற்றிய மோசமான நூலை சிந்தி மொழியில் மொழி பெயர்த்த ராம்சந்த் மேல நடந்து கொண்டிருந்த வழக்கு இந்து-முஸ்லிம் விரோதத்தை அதன் உச்சக் கட்டத்துக்குக் கொண்டு போனது. வாதியாக நீதிமன்றத்துல வந்து நின்னது ஒரு ஜட்கா வண்டிக்காரரான அப்துல் கய்யும். நீதியின் முன்னால், அவன் ராம்சந்தைக் குத்திக் கொலை செய்தான். முஸ்லிம்கள் ப்ரிவியூ கவுன்சில் வரை போனார்கள் என்றாலும், அப்துல் கய்யுமைத் தூக்குல போட்டதுதான் நடந்தது.

‘தியாகி கய்யும்!’ -ஆயிரக்கணக்கான தொண்டைக் குழிகள்ல இருந்து இந்த முழக்கம் வந்தது. பிணம் இருந்த கட்டிலைத் தொடுறதுக்கு மக்கள் ஆயிரக்கணக்குல வந்து கூடினாங்க. தலைகள்! தலைகள்! லட்சக்கணக்கான தலைகள்! ஆரவாரம்! ஆரவாரம்! உள்ளத்தை நடுங்கச் செய்யும் பயங்கரமான ஆரவாரம்! கொதித்து நிற்கும் ஒரு முஸ்லிம் பெருங்கடலென கராச்சி மாறியது. அந்த நகரத்தின் சூழலே பயப்படுற மாதிரி இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த காலமது.

நான்கைந்து லாரி நிறைய வெள்ளைக்காரர்களின் பட்டாள் நகரத்திற்கு மேலே மூணு விமானங்கள். ஊர்வலம் பட்டாளத்துடன் மோதியது. கருங்கல் துண்டுகள் பறந்தன. சோடா புட்டிகள் உடைந்தன. ட! டு! ட! டே! என்று இயந்திரத் துப்பாக்கி இருபத்தொரு முறை கர்ஜனை செய்தது. அடி! இடி! அழுகை! ஓட்டம்! தலை உடைந்தும் ரத்தம் கொட்டியும் கீழே விழும் மனிதர்கள். எரிந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள். வீசியடிக்கும் வெப்பக் காற்று, ரத்தமும், வெடிமருந்தும் கலந்த வாசனை! இரத்த அபிஷேகம் நிறைந்த அந்த மாலை நேரத்தில் ரயில்வே சூப்பிரெண்ட்டின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் நான் நின்னுக்கிட்டு இருந்தேன். பயந்து போன கண்களுடன் மாயாதேவி மேலே ஏறி வந்து என்னை அழைத்தாள். ‘‘மனோகர், அய்யோ! போர்!’’ என்று கத்தினாள். ‘‘தேவி, போயிடு. நான் இந்தத் தமாஷான நிகழ்ச்சியைக் கொஞ்சம் பார்க்குறேன்’’- இது நான்.

அவள் என்னை வற்புறுத்தி அழைச்சா. நாங்க ஒண்ணா கீழே இறங்கினோம். நான் சொன்னேன்: ‘‘நான் தெருவுக்குப் போயி அதைக் கொஞ்சம் பார்க்கணும்னு நினைக்கிறேன்.’’ நான் இப்படிச் சொன்னதும், அவள் என்னைத் தடுத்தாள்:

‘‘வேண்டாம்... முஸ்லிம்கள் கொன்னுடுவாங்க.’’

‘‘ஓ... என்னைக் கொல்ல மாட்டாங்க’’- நான் இறங்கினேன். அவள் உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள்:

‘‘அம்மா, பாருங்க... மனோகர் தெருவுக்குப் போறாரு.’’

பதைபதைப்புடன் அவளோட அம்மா வந்தாள். ‘மகனே, அய்யோ! அந்தக் கெட்ட மிருகங்கள் கொன்னுடுவாங்க’’- இது அவளுடைய தாய். அப்போ கீழே ஒரு ஆரவாரம். இந்துக்கள் ஓடி வந்து கூடுறாங்க. மண்டை உடைந்த ஒரு முஸ்லிம் பிச்சைக்காரன்! உயிரைப் பற்றிய பயத்துடன் அவன் இந்தக் கட்டிடத்திற்குள் நுழைஞ்சிட்டான். வெளியே கைகளில் கழிகளை வைத்துக் கொண்டு இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந்த இந்துக்கள்! மாயா தேவியின் தாய் அந்த ஆளைப் போகும்படி சொன்னப்போ, மாயாதேவி பிடிவாதமான குரலில் சொன்னாள்: ‘‘வேண்டாம்... இந்த ஆளை அவங்க கொன்னுடுவாங்க’’ அவள் அந்த முஸ்லிமை குளியலறைக்குள் போகச் செய்து கதவை மூடினாள். அவளே உணவு கொண்டுபோய்க் கொடுத்தாள். அன்னைக்கு சாயங்காலம் அந்த ஆளைக் காப்பாற்றி வண்டியில அனுப்பினாள்.

நல்ல குணம் படைத்த ஒரு இளம் பெண் மதிக்கிற ஒரு மனிதனாக ஆவது... அது ஆசீர்வாதமும், ஆனந்தமும் உள்ள ஒரு நிலை... காதல்! - கண்களால் பார்க்க முடியாத, காதுகளால் கேட்க முடியாத, நினைத்துப் பார்க்க முடியாத காதல்! காதல் நம்பிக்கைகள் என்ற மிகப் பெரிய கடலில் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனோன்னு நான் நினைச்சேன். எந்தவிமான பாதுகாப்பும் இல்லாத அந்தக் குஜராத்தி பிராமணக் குடும்பம் என்னை அன்புடன் கவனித்தது. மாயாதேவியின் சகோதரன் யஸ்வந்த் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த ஒரு நல்ல இளைஞன். நாங்க அறிமுகமானது ஒரு ஹோட்ல்ல. அவங்க வீட்டுல நான் ஒன்பது மாதங்கள் இருந்தேன். பலமுறை அங்கேயிருந்து கிளம்ப நான் முயற்சி செய்வேன்... ஆனா, அவங்க என்னை விடல. எந்த அளவுக்கு உறுதியான மனதுடன் அவங்கக்கிட்ட இருந்து விலக முயிற்சித்தேனோ, அதைவிட உறுதியுடன் சூறாவளி பலத்துடன் - நான் அவங்கக்கிட்ட மிகவும் நெருக்கமானேன். என் உணவு, என் ஆடைகள், என்னோடு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களில் தேவி மிகவும் கவனம் செலுத்தினாள். நான் சிகரெட் புதைப்பதைப் பார்த்து அவள் கிண்டல் செய்வாள். பிராமமணன் சிகரெட் புகைக்கக் கூடாது!


இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மேஜை மேல ஒரு பாக்கெட் சிகரெட் இருக்கும் எனக்கே தெரியாமல், அது அங்கே இருக்குறதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தோணாம இல்ல. அதை அங்கு கொண்டு வந்து வச்சது அவள்தான்!

நிறைய சாப்பிட்டு, நான் மந்தமாக உட்கார்ந்திருந்தேன். சிகரெட் இல்ல. நண்பன் வந்தாதான் பணம் கிடைக்கும். அந்த வெறி பிடித்த சூழ்நிலையில் அவளின் வாசனை... தேவி ஜன்னல் வழியா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கள்ளங்கபடமில்லாமல் தேவி கேட்டாள்:

‘‘மனோகர், என்ன கவலையில இருக்கீங்க?’’

‘‘ஓண்ணுமில்லையே?’’

‘‘ஆனா, முகம் ரொம்பவும் வாட்டமா இருக்கே?’’

‘‘அதுவா?’’

‘‘ம்...’’- புன்னகைத்தவாறு அவள் கட்டாயப்படுத்தினாள்.

‘‘சொல்லுங்க, மனோகர்! உங்கக் கவலைக்குக் காரணம் என்ன?’’

‘‘கவலைக்குக் காரணம்- கொஞ்சம் பணம்தான்.’’

‘‘எவ்வளவு?’’

‘‘ஐம்பது ரூபாய்’’

‘‘ஐம்பது ரூபாய்...’’- மெதுவான குரலில் அவள் சொல்லிவிட்டு மறைந்து போனாள். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு சின்ன துணிப் பொட்டலம் கனமாக என் மடியில வந்து விழுந்தது. ‘‘என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு. சாயங்காலம் அப்பா வந்தபிறகு...’’- இப்படிச் சொல்லிவிட்டு அவள் ஓடிட்டா. நான் அதைப் பிரிச்சுப் பார்த்தேன். ஒரு சின்ன கைக்குட்டை அதுல நாணயங்களாக ஐந்து  ரூபாய்!

மூணு அணாவுக்கு (பதினெட்டு பைசா) ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினேன். நண்பன் வந்தப்போ மூணு அணாக்கள் வாங்க, அதை ஐந்து ரூபாய் நோட்டாக மாற்றி ஒரு புத்தகத்துக்குள்ளே வச்சு நான் கொடுத்தேன். கொஞ்ச நேரம் போனவுடன் அவள் வந்தாள். பன்னீர் மலரைப் போல அழகா இருக்குற முகம் ரொம்பவும் சிவந்து போயிருந்தது. நான் சொன்னேன்:

‘‘எனக்கு வேழ வழியில பணம் கிடைச்சது.’’

அவளுடைய குரல் இடறியது. அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். ‘‘நான் தந்தது... எனக்கு அது திரும்பவும் வேண்டாம்...’’

வழக்கத்திற்கு மாறாக ஒரு அதிகாலை வேளையில் சட்டையே இல்லாமல் நான் குளியலறைக்குள்ளே போனேன். அன்னைக்குச் சாயங்காலம் தேவி கேட்டாள்:

‘‘மனோகர், நீங்க ஏன் பூணூல் போடல?’’

‘‘அதுவா?’’ நான் சிறிது தடுமாறினேன். ‘‘எங்க ஊர்ல குயவர்கள் கூட பூணூல் போடுவாங்க. பூணூல் போடுறதுதான் பிராமணனுக்கு அடையாளமா?’’

‘‘பிறகு?’’

‘‘ஓருவனின் சிந்தனை, அவனின்செயல்கள்- இவைதான் பிராமணனுக்கு அடையாளங்கள். என் நெஞ்சைப் பிளந்து பார்த்தால் தெரியும்- ‘ஓம்’ என்று எழுதப்பட்டிருக்கும் இதயத்துக்கு மேலே ஒரு பூணூல்! தேவி, நீ அதைப் பார்க்கணுமா?’

‘‘வேண்டாம்... வேண்டாம்...’’- மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே அவள் அழகுச் சிலையென பால்கனி தளத்தில் நின்னுக்கிட்டு இருந்தாள். நூற்றுக்கணக்கான மின்விளக்குகள் அதிர்ந்து பிரகாசித்தன. நான் கேட்டேன்:

‘‘தேவி, நீ என்னைக் காதலிக் கிறியா?’’

அதற்குப் பதில் என்பது மாதிரி அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். நான் இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனேன்.

‘‘தேவி...’’

‘‘ம்....’’

‘‘சொல்லு...’’

‘‘உங்களுக்குத் தெரியதா?’’

‘‘ஆனால்...’’

‘‘என்ன ஆனால்?’’- அவள் பதறிப்போய்க் கேட்டாள்.

‘‘நான் ஒரு சாதாரண மனிதன்.’’

‘‘நான் ராஜகுமாரி ஒண்ணும் இல்லையே!’’

‘‘ஆமாம்...’’

‘‘ஆமாமா?’’

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரோஜா மலர் மலர்ந்து கொண்டிருந்தது. அதன் புது நறுமணத்திற்காக ஏங்கி ஏங்கி என் இதயம் நெருங்கி, அதற்குள் ஆழமாகச் செல்ல அவசரப்பட்டது. என் உள்ளங்கையில் இருக்குற ரோஜா மலர், விரல்களைக் கொஞ்சம் நெருங்கினால், மென்மையான இதழ்கள் கசங்கி, நிரந்தரமாக அது முடிவுக்கு வந்திடும். ஆனால் முழுமையடைந்து, நிறைந்து ததும்பி இருக்கும் இனிய, அழகான அந்தத் தோற்றம்... அதை மனதில் நினைக்கும்போது என்னால் எதையும் தெளிவா சிந்திக்கவே முடியல...

நள்ளிரவு நேரம் தாண்டியிருக்கும் இரண்டாவது யாமம். கண்ணாடி ஜன்னல் வழியாக நிலவொளி உள்ளே விழுந்து கொண்டிருந்தது. நண்பன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். பக்கத்து அறையில் மாயாதேவி. அவளுக்குப் பக்கத்தில் அவளோட தாயும், தந்தையும் பாடிஸ் மட்டும அணிந்து கூந்தலுக்குக் கீழே தன் கையை வைத்து தேவி கனவு கண்டு கொண்டிருக்கலாம்.

உடல் பயங்கரமாக வலித்தது. நான் எழுந்து உட்கார்ந்தேன். பிரபஞ்சம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. நான் மெதுவாக இருமினேன். அதற்குப் பதில் என்பது மாதிரி பக்கத்து அறையில இருந்து ஒரு இருமல் சத்தமும் நீண்ட பெருமூச்சும் கேட்டது. என் இதயத்துல நெருப்புப் பற்றியதைப் போல அப்போ இருந்தது. நான் எழுந்தேன். வாசல் கதவு எங்கோ தூரத்துல இருக்குறது  மாதிரி இருந்தது. என் கைகளும், கால்களும் நடுங்கின. கதவைத் தொட முடியல. நெருப்பால் உண்டாக்கப்பட்டதா என்ன? என் இதயத் துடிப்புதான் அங்கேயிருந்தும் கேட்குதா? எனக்குள் என்னவோ உடைஞ்சது மாதிரி இருந்தது. கதவில் கையை வைத்தேன். ‘‘கிர்... கிர்... கிர்...’’ - வாசல் கதவு திறந்தது. ‘‘கிர்... கிர்ர்....’’ - வானமும் பூமியும் நடுங்குற அளவுக்குப் பயங்கரமான சத்தம்! எல்லா உலகங்களும் என்னை வெறித்துப் பார்த்தன. பற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளையத்திற்குள் நான்... கண்களால் பார்க்க முடியல. மூச்சு அடைத்தது. திறந்ததைப் போலவே நான் கதவை அடைத்தேன். ஜன்னலைத் திறந்துவிட்டேன். ஹாவ்! அமைதியான நிலவு வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். பரந்துகிடக்கும், விசாலமான நகரம்! மெதுவாக வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று... பல விஷயங்களையும் யோசித்து குமைந்து கொண்டிருந்த தலையை வெளியே நீட்டி நான் பார்த்தவாறு நின்னுக்கிட்டு இருந்தேன்.

இதயம் வெந்துக்கிட்டு இருந்தது. எல்லாத்தையும் நான் சொல்லி ஆகணும். வாய்விட்டு உரத்த குரல்ல அழணும் போல எனக்கு இருந்தது. அங்கேயிருந்து தூரத்தை நோக்கி நான் போகணும். நான் உயிருடன் இல்லாமல் போயிருந்தால்...! மரணம்! ஆமாம்... என் காதல் தேவதையின் கையால் நான் சாகணும்!

நான் போனேன். வானவில் வெளிச்சத்தில் போர்த்தப்பட்ட குளிர்கால நிலவு உதயமாவதைப் போல தேவி நின்று கொண்டிருந்தாள். வெளிச்சத்தில் மூழ்கியிருக்கும் மேற்கு வான விளிம்பு... சிவப்புப் பட்டு நூல் இரத்தக் கோடு போட்டு வெள்ளை நிற கைக்குட்டையில் ஓடிக்கொண்டிருக்கு. அதில் ‘னீணீஸீஷீ...’ என்பது வரை ஆங்கிலத்தில் பின்னப்பட்டிருக்கு. ஊசி முனை மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கிறது. என்னைப் பார்த்ததும் அவள் கைக்குட்டையை மறைத்தாள். பிறகு மெல்லிய புன்சிரிப்புடன் கேட்டாள்:

‘‘மனோகர், அப்பாக்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?’’

‘‘என் காஷ்மீர் பயணத்தைப் பற்றி...’’

‘‘அப்பா என்ன சொன்னாரு?’’

‘‘அங்கே இப்போ கடுமையான குளிர்காலம்னு சொன்னாரு.’’


‘‘ம்... நான் சொன்னப்போ நீங்க நம்பல...’’

‘‘நம்பாம இல்ல...’’

‘‘பிறகு...?’’

நான் விஷயத்தை மாற்றினேன். நான் கேட்டேன்:

‘‘தேவி, இந்தக் கைக்குட்டை யாருக்கு?’’

‘‘தேவனுக்கு...’’- அவள் கடைக் கண்களால் என்னைப் பார்த்தாள். என் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. எனக்குள்ள ஒரு பதைபதைபப்பு உண்டானது. அவள் பக்கத்துல வந்தாள்.

‘‘மனோகர், சொல்லுங்க...’’

‘‘தேவி, நான் காதலிக்கிறேன்...’’

‘‘யாரை?’’

‘‘உன்னை.’’

‘‘அதற்கா அழுகை?’’

அவள் சிரித்தாள்.

‘‘தேவி, நான் போறேன்.’’

‘‘எங்கே?’’

‘‘ரொம்பவும் தூரத்துல இருக்குற ஏதாவதுதொரு இடத்துக்கு...’’

‘‘என்னை இங்கே விட்டுட்டா?’’

‘‘ஆமா... நீ என்னைக் காதலிக்கல.’’

அவள் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். ஊசி முனையால் விரலைக் குத்தி ஒரு துளி ரத்தத்தை வெளியேற்றி, அதை அந்தக் கைக்குட்டையில் ஒற்றினாள். நான் சொன்னேன்:

‘‘தேவி, நான் ஒரு பொய் சொல்லிட்டேன்.’’

‘‘என்ன சொல்றீங்க?’’

நான் உண்மையைச் சொன்னேன்: ‘‘நான் ஒரு முஸ்லிம்மான். என் பேரு ஹமீது...’’

இடி விழுந்ததைப் போல அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளின் முகம் தாளைப் போல வெளிறிப்போனது. பதைபதைப்புடன் அவள் என்னைப் பார்த்தாள்.

‘‘ஹ... மி... து... முஸல்... மான்...!’’

நிலைகுலைந்து அவள் சுவர் மீது சாய்ந்து நின்றாள். என் அழிவை எதிர்பார்த்து தலையில கையை வச்சு நான் கீழே உட்கார்ந்தேன். வேதனையுடன் நிமிடங்கள் ஒன்று, இரண்டு, மூன்றுன்னு நகர்ந்து கொண்டிருந்தது. வெந்து புகைந்து கொண்டிருந்த யுகங்கள் நிறைய கடந்ததைப் போல எனக்கு இருந்தது. என் கன்னத்தை இரண்டு கைகள் தொட்டன. கண்ணீரில் நனைந்த என்னுடைய முகம் உயர்ந்தது. தேவியின் முகத்தில் கொஞ்சம்கூட இரத்தம் இல்லை. எங்களுடைய கண்கள் ஒன்றையொன்று பார்த்தன. தேவி பதைபதைப்பான குரலில் சொன்னாள்: ‘‘யாராக இருந்தாலும் நான் உங்களைக்  காதலிக்கிறேன்....’’

 

சூரியன் உதிக்கும் புலர்காலைப் பொழுதைப்போல மறுநாள் அவள் வந்தாள். அந்த அளவிற்கு இதய மோகினியாக தேவி அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்ல. அவள் சிரித்தாள். ‘‘இந்தாங்க... உங்களக்கு ஒரு பரிசு’’- ரத்தம் படிந்த கைக்குட்டையில் அவளுடைய புகைப்படம்! அதை என் மடியில வச்சப்போ, கண்ணீர்த் துளிகள் அதன் மீது விழுந்தன. மடியில வச்சிருந்த மலர்களை அவள் எடுத்தாள். ‘‘இந்தாங்க.. இதையும்...’’ புகைப் படத்தில் மலர்களை வைத்துவிட்டு பைத்தியம் பிடித்தவளைப் போல அவள் சிரித்தாள். அவள் கேட்டாள்: ‘‘நான் இறந்துட்டா, நீங்க என்ன செய்வீங்க?’’

எதுவும் சொல்லாமல் நான் அதை என் முகத்தில் வைத்து அழுத்தினேன். கண்களைத் திறந்தபோது அவள் போய்விட்டிருந்தாள். அன்னையில இருந்து தேவியிடம் பெரிய மாற்றம் மாறுதல், இதயத்தில் நெருப்பு அணைந்து போனதைப் போல அவளின் முகத்திலிருந்து ஒளி குறைந்து போயிருந்தது. இரண்டு வாரங்களில் படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு அவள் ஆயிட்டா. நோய்க்கான காரணம் என்னன்னு டாக்டர்களால்கூட கண்டுபிடிக்க முடியல. அந்தந்த நேரத்துக்கு மருந்துகள் தந்தேன். நான் அறையிலேயே இருந்து அவளைப் பத்திரமா பார்த்துக் கொண்டேன். இரவு ரொம்ப நேரம் ஆச்சு. எல்லாரும் தூக்கத்துல இருந்தாங்க. அந்தத் தளர்ந்துபோன கைகள் உயர்ந்தன. வெளிறிப் போன உதடுகள் மெதுவாக முணுமுணுத்தன.

‘‘ஹமீது!’’

‘‘என்ன தேவி?’’

‘‘நான்இறந்துட்டா, நீங்க என்னை நினைப்பீங்களா?’’

‘‘என் தேவி, நீ இறக்க மாட்டே. சீக்கிரம் நீ நல்லாயிடுவே....’’

எங்களின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. நான் அந்த முகத்தை நோக்கிக் குனிந்தேன். அந்தக் கைகள் என் கழுத்தைச் சுற்றி வளைத்தன. நாங்கள் மறந்துவிட்டோம். அழகான ஒரு புன்னகை. தேவி சுக நித்திரையில் ஆழ்ந்தாள். நான் விளக்கின் திரியை இறக்கினேன்.

மறுநாள் சாயங்காலம் தேவியின் உடல் எரியூட்டப்பட்டது.

புகை வண்டியின் கம்பார்ட்மெண்டில் அமர்ந்து கதயைக் கேட்டவர்கள் அந்த இளைஞனையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்:

‘‘பிறகு?’’

அதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை.

கூறுவதற்கு என்ன இருக்கிறது?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.