Logo

கண்ணால் பார்த்த சாட்சி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6439
kannaal-partha-satchi

சிறுவனின் பெயர் ‘கண்ணால் பார்த்த சாட்சி’ இல்லை மோகன் என்பதுதான் அவனுடைய பெயர். அதனால் அந்த தங்கப்பல் வைத்திருந்த மனிதன் ‘கண்ணால் பார்த்த சாட்சி’யை மூன்று நாட்களுக்குள் சொல்லப்போவதாக கூறுவதைக் கேட்டபோதுகூட சிறுவன் பெரிய அளவில் பதைபதைப்பு அடையவில்லை.

பால்காரனை அவர்கள் தலையில் அடித்துக் கீழே விழ வைத்ததையும் அவனுடைய தலையை தரையில் போட்டு நசுக்கியதையும் ஒரு மரப்பெட்டியில் அதை வைத்து மூடியதையும் அவன் அந்த திருட்டு வேளையில் பதுங்கி நின்று பார்த்திருந்தான். ரத்தத்தின் குளிர்ந்த வாசனை தன்னைவாந்தி எடுக்க வைக்கும் என்பது தெரிந்திருந்தும், அவன் நின்ற இடத்தைவிட்டு அசையவேயில்லை. அவர்கள் அலிபாபா கண்ட நாற்பது திருடர்களைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். பால்காரனைக் கொல்லாவிட்டால், அவனுடைய சைக்கிளையோ, பாக்கெட்டில் இருந்தரூபாய் நோட்டையோ அவர்களால் எடுக்க முடியாதே! அதனால் அவர்கள் அந்த கீழ்த்தரமான செயலைச் செய்துவிட்டார்கள். சிறுவன் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. எறுப்பைக் கொல்வது பாவம் என்றான். பால்காரனைக் கொல்வதும் பாவமாக இருக்க வேண்டும். ஆனால், பாவத்தைச் செய்யக்கூடாது என்பதை மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால், ஒரு மனிதனால் சிறந்த திருடனாக ஆக முடியுமா? கடல் கொள்ளைக்காரனாக ஆகவே முடியாது. மாமா வாங்கித் தந்த புத்தகத்தில் கடல் கொள்ளைக்காரர்கள் பணக்காரர்களைக் கொலை செய்து அவர்களுடைய மோதிரங்களையும் கைக்கடிகாரங்களையும் எடுக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருந்ததே! சிறுவன் பெரியவனாக ஆனால், ஒரு மீசை வைத்திருக்கும் கடல் கொள்ளைக்காரனாக ஆவான். அதன் மூலம் தன்னுடைய தாய்க்கும் தங்கைக்கும் எப்போதும் புதிய ஆடைகளை வாங்கலாமே!

‘‘நான்தான் வேண்டுமா பாண்டுரங்க்? நான் இதுவரை இவ்வளவு சிறிய ஒரு பையனை...’’

‘‘நீங்க என்ன டுக்காராம்? ஒரு ஆட்டுக்குட்டியா?’’ கறுப்புத் தொப்பி அணிந்திருந்த மனிதன் கோபத்துடன் கேட்டான். தங்கப்பல் வைத்திருந்தவன் ஒரு மரப்பெட்டியின் மீது தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் சொன்னான்: ‘‘சரி... ஆனால், இன்றைக்கு முடியாது. இன்று ஏகாதசி.’’

கறுப்புத் தொப்பி அணிந்திருந்தவன் சிரித்தான். அவனுடைய உதடுகளின் வலது பக்கக் கோணல் சிறிதும் அழகாக இல்லை என்று சிறுவனுக்குத் தோன்றியது. அவனுடைய சிவந்த கண்களும் மெலிந்து வளைந்த உடலும்... எதுவுமே சிறுவனுக்குப் பிடிக்கவில்லை. பால்காரனின் தலையை ஒரு சுத்தியால் அடித்துக் கூழாக்கியது அவன்தான்! (ஆனால், அவன் ஒரு பலசாலியாக இல்லை. சிறுவனுக்கு தடிமனாக, சதைப் பிடிப்புடன் இருப்பவர்கள் மீதுதான் எப்போதும் மதிப்பு. தங்கப்பல் வைத்திருந்த மனிதனின் கைகள் உருண்டையாக இருந்தன. ஆனால், அவனுடைய முகத்தில் எப்போதும் தான் அழப் போகிறோம் என்பதைப் போன்ற ஒரு வெளிப்பாடு இருந்தது. சிறுவன் ஒரு முறை தன் மாமாவுடன் சர்க்கஸ் பார்ப்பதற்காகச் சென்றபோது, அவனுடைய சாயலைக் கொண்ட ஒரு கோமாளியைப் பார்த்தான். அந்தக் கோமாளி பெரிய தொப்பியுடன் நடந்து நடந்து ஒரு கம்பியைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறச் சென்றபோது, ஒரு தெரு நாய் அவனைக் கடிப்பதற்காக வந்தது. உடனே அவன் ஒரு அழும் முக பாவனையுடன் பின்னோக்கி நடக்கத் தொடங்கினான். சிறுவன் அவனைப் பற்றிநினைத்து பல நேரங்களில் சிரித்து புரண்டிருக்கிறான். ‘‘இவன் சிரிப்பில் முதல் ஆள். படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் எதற்கும் லாயக்கில்லாதவன்’’ என்று அவனுடைய தாய் இடையில் அவ்வப்போது கூறுவதுண்டு. அவனுடைய மாமா ஒரு நாள் சொன்னாள்: ‘‘லீலா, இவன் வேறு எதுவுமே படிக்க வேவ்டாம். சிரிக்க முடிந்தால், அவன் எப்போதும் நன்றாக இருப்பான். மனிதனாகப் பிறந்தால், எப்போதும் சிரிப்பதற்கு இயல வேண்டும்.’’ அவனுடைய தாய் உடனே அதற்கு எதிர்வாதம் செய்ய ஆரம்பிப்பாள். இறுதியில், அவனுடைய மாமாவின் க்ளார்க் வேலையைப் பற்றி அவன் தாய் கிண்டல் பண்ணுவாள். மாமா ஸோஃபாவில் உட்கார்ந்து தலையைக் குனிந்து கொண்டிருப்பார். மாமா அவருடைய வீட்டில் முதன்முதலாகப் பிறந்த முட்டாள் என்று பல நேரங்களில் சிறுவன் கேள்விப்பட்டிருக்கிறான். மீதி அனைவரும் புத்திசாலிகளாக இருந்தார்கள். தாத்தா கிரீடம் அணியாத மன்னராக இருந்தார். ஊரின் வழியாக நடக்கும்போது ஒரு மனிதன்கூட எதிரில் வர மாட்டான். எல்லாரும் பின் வழியாக வந்து முன்னால் நின்று கைகளைக் குவித்து வணங்குவார்கள். மாமாவின் அன்னை நிறைய படித்திருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். நல்ல அழகியும்கூட தந்தை பெயர் பெற்ற ஒரு வக்கீலாக இருந்தார். மாமாவின் தம்பிகள் இருவரும் பெரிய டாக்டர்களாக இருந்தார்கள். அக்கா ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் மனைவியாக இருந்தாள். மாமா மட்டும் இந்த ஐம்பதாவது வயதிலும் ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் க்ளார்க்காக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். சிகரெட்டுக்குப் பதிலாக பீடி புகைக்கிறார். நகரத்தில் இருக்கும் ஒரு சிறிய மதராஸி ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் தங்கிக் கொண்டிருக்கிறார்.

‘‘இன்றைக்கு அவன் பள்ளிக் கூடத்தில் இருந்து வர்றப்போ அதைச் செய்திருக்கலாமே, டுக்காராம்? எப்போது வேண்டுமானாலும் லாரியைத் தர்றேன் என்று சம்புநாத் கூறியிருக்கிறார் அல்லவா?

கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதன் பேசிக் கொண்டேயிருந்தான். அவனுடைய அந்த மெல்லிய குரலைக் கேட்டுக் கொண்டே தான் தூங்கி விடுவோமோ என்றுகூட சிறுவன் நினைத்தான். அவன் கதவிற்குப் பின்னால் இருந்த அடர்த்தியான இருட்டில் சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். தான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில், டின்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மூலையில் உட்காருவதற்கு அவனுக்கு இனிமேல் தைரியம் இருக்காது. அங்கு இல்லாமலிருந்தால் சிறுவனை அவர்களில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். சாளரத்தின் கதவு மெதுவாகத் திறக்கும் என்றும் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் தன்மீது விழும் என்றும் அவனுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் தன்னைப் பார்த்தவுடன், சிறுவன் அறையின் வெளியே நோக்கி நடந்தான். ஆனால், கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதன் படிகளுக்கு மேலே அவனையே பார்த்தவாறு நீண்டநேரம் நின்று கொண்டிருந்தான். சிறுவன் இரண்டு படிகள் இறங்கி அசையாமல் நின்றான். பிறகு, எதுவும் கூறாமல் அந்த மனிதன் இருட்டறைக்கு நுழைந்தபோது, அவன் தன் வீட்டை நோக்கி ஓடினான். இரண்டு வாரங்களாக தான் அந்தக் கூட்டத்தினரின் செயல்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் விஷயத்தையும், யாரும் நுழையாத அந்த கட்டிடத்திற்குள் தான் பகல் இரண்டு மணிக்குத் தனியே நுழைந்து, சில டின்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு அந்தத் திருடர்கள் அடுப்பு பற்ற வைப்பதையும் பிற செயல்களையும் பார்ப்பது உண்டு என்பதையும் எந்தச் சமயத்திலும் சிறுவன் தன் தாயிடம் கூறவில்லை.


 அது தன் தாய்க்கும் தந்தைக்கும் பிடிக்காத விஷயம் என்பது அவனுக்குத் தெரியும். நேற்றுதான் அவர்கள் பால்காரனைக் கொன்றார்கள். பால்காரன் சாளரத்தின் கதவுகளை வெளியே இருந்து திறந்து பார்த்திருக்க வேண்டியதில்லை. ஒரு வேளை, அவனை அவர்கள் கொன்றதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும். பால்காரன் அவர்களைப் பார்த்த நாளன்று சாயங்காலம் வீட்டிற்கு சைக்கிளுடன் வந்தபோது, சிறுவன் சொன்னான்:

"பால்காரா! அவர்களைப் பற்றி போலீஸ்காரர்களிடம் சொல்லாதே. அவர்கள் நல்ல திருடர்கள் அந்த டின்களில் வைரக் கற்களும் தங்கத் தூளும் இருக்கு. நம்மை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அவர்கள் நமக்கும் கொஞ்சம் தருவாங்க."

ஆனால், பால்காரன் சைக்கிள் மீது ஏறிக் கொண்டே சிரித்தான்.

"பாபா, அந்த டின்களில் இருப்பது தங்கம் அல்ல. வேறு ஒரு பொருள். நான் அதன் பெயரைச் சொல்ல மாட்டேன்."

"ஓ! பால்காரா, நீஅதைத் திறந்து பார்க்கவில்லையே! பிறகு எப்படித் தெரிந்தது?"

"எனக்கு வாசனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்."

ஆனால், பால்காரன் போலீஸ்காரர்களிடம்எ தையும் கூற மாட்டான் என்பது சிறுவனுக்குத் தெரியும். காரணம் போலீஸ்காரர்கள் மீது பால்காரனுக்கு வெறுப்பு இருந்ததுதான். அவன் பேருந்து நிலையத்தில் இரந்த குழாயைத் திறந்து நீர் எடுத்து கடைக்குக் கொண்டு செல்வதைப் பார்த்த ஒரு போலீஸ்காரன் அவனை மோசமான வார்த்தைகளில் திட்டிவிட்டான். அதற்குப் பிறகு பால்காரன் போலீஸ்காரர்களை 'மச்சான்கள்' என்றும் 'பெரிய வாயைக் கொண்டவர்கள்' என்றும் எப்போதும் கூறிக் கொண்டிருப்பான். சிறுவன் பெரியவனாகி ஒரு போலீஸ்காரனாக வந்தால், அவனுக்கு ஒரு துளி பால்கூட தரமாட்டேன் என்று அவன் கூறுவான். அதனால் பால்காரன் கூறியது பொய். அவன் எந்தச் சமயத்திலும் போலீஸ்காரர்களிடம் யாரைப் பற்றியும் புகார் கூறப் போவதில்லை. எனினும், பாண்டுரங்க் அவனைஏமாறற்விட்டான். உள்ளே பணத்தைக் காட்டி வரவழைத்துக்துக் கொன்றுவிட்டான். பால்காரனின் பாக்கெட்டில் இருந்த பர்ஸையோ அவனுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்கத்தால் ஆன பதக்கத்தையோ அவர்கள் எடுப்பதை சிகூனால் பார்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் அவன் வீட்டிற்குத் திரும்பி வர வேண்டியதிருந்தது. இரண்டாவதாக வெட்டியபோது, பதக்கம் தரையில் விழும் சத்தத்தை சிறுவன் கேட்டான். அது ஒரு அதிர்ஷ்டம் வாய்ந்த பதக்கம் என்றும், அதில் ராதையும் கிருஷ்ணனும் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அது முதல் தரமான வெள்ளித் தகட்டால் செய்யப்பட்டது என்றும் பால்காரன் அவனிடம் பல தடவைகள் கூறியிருக்கிறான். அதைத் தொடுவதற்குக்கூட அவனுக்கு எந்தச் சமயத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் பால்காரனுடனோ சமையல்காரனுடனோசலவை செய்பவனுடனோ விளையாடுவதை அவனுடைய தாய் விரும்பவில்லை. அவர்களுடைய கெட்ட நாற்றம் சிறுவனின் ஆடையில் வந்து ஒட்டிக்கொள்ளும் என்று அவனுடைய தாய் கூறுவதுண்டு அது உண்மையாகக் கூட இருக்கலாம். பால்காரன் அருகில் வரும்போது, காய்ந்த மோரின் வாசனை... சமையல்காரனுக்கு முட்டைக்கோஸ் வேக வைத்த வாசனை... சலவை செய்பவனுக்கு சாணத்தின் ஒரு வாசனை... இப்படி இவர்கள் எல்லாரும் பெரிய கெட்ட வாசனை கொண்டவர்களாக இருந்தார்கள். அவனுடைய அன்னை ஒரு சிறிய புட்டியில் இருந்து கொஞ்சம் சென்ட்டை எடுத்து இரண்டு கைகளிலும் தேய்த்து புடவையில் தடவுவாள். அதற்குப் பிறகு, நீண்ட நேரம் அவனுடைய தாயைச் சுற்றிலும் ஒரு நறுமணம் பரவிக் கொண்டிருக்கும். ஒரு புட்டியில் இருந்த சென்ட் தீர்ந்துவிட்டால், உடனே அவனுடைய தாய் வெளியே சென்று இன்னொன்றை வாங்கிக்கொண்டு வருவாள். 'பேனல் 5' என்ற பெயரைக் கொண்ட சென்ட்டை மட்டுமே அவனுடைய தாய் பயன்படுத்துவாள். மாமாவைப் போல தன் தாய் ஏன் நீல நிற புட்டியில் இருக்கும் சென்ட்டை வாங்கவில்லை என்று சிறுவன் கேட்டதற்கு, ஒருநாள் அவனுடைய தாய் சொன்னாள்:

"என்னுடைய இந்த நீளமான மூக்கிற்கு பதிலாக ஒரு பெரிய மூக்கை வைத்துக் கொண்டு வந்தால், உனக்கு என்னை அடையாளம் தெரியுமா? தெரியாது அல்லவா? அதே மாதிரி நான் வேறு ஒரு சென்ட்டைப் பூசிக் கொண்டு வந்தால் உனக்கு என்னைத் தெரியாமல் போய்விடும்."

தாய் கூறியது உண்மைதான். சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காலையில் குளித்து முடித்துவிட்டு அவனுடைய அன்னை கட்டிலுக்கு அருகில் வருவாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால் அவன் தன் தாய் வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வான். தாயிடம் இருக்கும் அந்த தனிப்பட்ட வாசனையின் மூலம்தான். அவனால் அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தாயின் காலை நேரத்து முகம் மிகவும் அழகாக இருக்கும்.

"நான் உன்னுடைய அம்மாவைத் திருமணம் செய்தது அவளிடம் இருக்கும் அறிவைப் பார்த்து அல்ல. அழகைப் பார்த்துதான்" என்று அவனுடைய தந்தை அவ்வப்போது கூறுவதுண்டு. அறிவு இல்லை என்று கேட்கும்போது கூட. அவனுடைய தாய் சிரித்துக் கொண்டிருப்பாள். அவனுடைய மாமா ஒரு நாள் சிறுவனிடம் சொன்னார்:

"உன்னுடைய அம்மாவின் தலையில் எதுவுமே இல்லை. மோகினிகளின் தலைகளைப் போல! மோகினிகளும் அழகிகள்தானே! அதனால்தானோ என்னவோ தலைக்குள் எதுவுமே இல்லை." தொடர்ந்து மாமா உரத்த குரலில் சிரித்தார். மாமா சிரிக்கும் போது சில நேரங்களில் அவருடைய கண்கள் ஈரமாவதுண்டு. அதற்கான காரணத்தைக் கேட்டதற்கு மாமா சொன்னார்.

"என்னுடைய சிரிப்பு அப்படித்தான் இருக்கும், மகனே. கொஞ்சம் அழுகையும் கொஞ்சம் சிரிப்பும்... அப்படியே ஒரு நாள் இந்தக் கிழவன் இறந்து விடுவான்."

மாமா இறந்தால், தான் மிகவும் கவலைப்படுவோம் என்று சிறுவனுக்குத் தோன்றும். ஆனால், அவன் அதைப் பற்றிக் கூறுவதில்லை. மாமா தான் ஒரு 'திருமணமாகாத ஆள்' என்று கூறுவதுண்டு. மனைவியும் குழந்தைகளும் இல்லாத ஒரு அதிர்ஷ்டசாலி என்று அதற்கு அர்த்தம் என்றும் மாமா கூறுவார். தான் பெரியவனாக ஆகும்போது ஒன்று- ஒரு திருமணமாகாத ஆளாக ஆவேன், இல்லாவிட்டால் ஒரு கடல் கொள்ளைக்காரனாகஆவேன் என்று மாமாவிடம் கூறியபோது, மாமா மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தார். இரண்டு மாதிரி ஆனாலும், பல ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று மாமா சொன்னார்.

"எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, டுக்காராம். உங்களைத் தவிர, இந்த மாதிரியான காரியங்களை இந்த அளவிற்கு அருமையாக யாரால் செய்ய முடியும்? இந்தப் பிள்ளைகளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் தலை சுற்றத் தொடங்கிவிடும்..."-  கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதனின் வார்த்தைகளைக் கேட்டு, சிறுவன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டான்.


தங்கப்பல் வைத்திருந்த மனிதன் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு புட்டியை எடுத்து வெளியே வைத்தான். உயரம் குறைவாக இருந்த இன்னொரு மனிதன் அதில் ஏதோ நீரை ஊற்றி கார்க்கால் மூடி, திரும்பக் கொடுத்தான்.

"மூணு நாட்கள் தர வேண்டும்." டுக்காராம் சொன்னான்.

"அந்த வகையில் ஒரு நேரடி சாட்சியும் இல்லாமல் போய்விடும். பிறகு... தற்போதைக்கு நாம் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. மழைக்காலம் முடிவது வரை இந்த வீட்டை யாரும் இடிப்பதற்கு வரப் போவதில்லை."

கறுத்தத் தொப்பி அணிந்திருந்த மனிதன் தரையில் இருந்து எழுந்து அறைக்கு வெளியே சென்றான். அவனுக்குப் பின்னால் ஒவ்வொரு தோல் பையையும் எடுத்துக் கொண்டு எஞ்சியிருந்தவர்களும் வெளியே சென்றார்கள். சிறுவன் சுவரின்மீது மறைந்து நின்று கொண்டு அவர்கள் படிகளில் இறங்கி மறைவதைப் பார்த்தான். அந்த அறையில் அப்போதும் பால்காரனின் ரத்தத்தின் வாசனை இருந்தது. ஆனால், பால்காரனின் சட்டையோ வேட்டியோ அங்கு இல்லை. பால்காரனை மரப்பெட்டிக்குள் அடைத்து அவர்கள் வெளியே கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று சிறுவன் நினைத்தான். அவன் அந்த தரையில் காலடிகள் நன்கு பதியும் வண்ணம் நடந்தான். செருப்புகள் அணியாமல் சொர சொர என்று இருக்கக் கூடிய தரையிலும் மண்ணிலும் நடப்பது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருந்தது. அவனுடைய தாய் அவன் காலடிகளைப் பார்த்துக் கொண்டு சத்தம் போட்டுக் கூறுவதுண்டு: "இங்கே வந்து பாருங்க... இவனுடைய பாதங்களை... சலவை செய்பவனின் பாதங்களைப் போல சொர சொர என்று இருக்கின்றன."

"நீ சலவை செய்பவனின் பாதங்களைப் பார்ப்பதற்காக திரிந்ததால்தான், அவன் என்னுடைய சட்டைகள் எதையும் கொண்டு வரவில்லை." அவனுடைய தந்தை கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறுவார். அவன் தந்தைக்கு, அவனுடைய தாயை எப்போதும் கேலி செய்வதுதான் வேலை...

சிறுவன் காலில் தட்டிய பொருளைப் பொறுக்கி எடுத்தான். சுவருக்கு அருகில், தரையில் இருந்த ஒரு சிறு வெடிப்பில் அந்தப் பதக்கம் விழுந்து கிடந்தது- பால்காரனின் அதிர்ஷ்டப் பதக்கம். அவன் அதைத் துடைத்துப் பாக்கெட்டிற்குள் போட்டான். இனிமேல் தானும் அதிர்ஷ்டசாலிதான் என்று அவனுக்குத் தோன்றியது. பால்காரனைப் போல சீட்டி அடிக்கவும், பாக்கெட்டிற்குள் ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு நடக்கவும், இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு சைக்கிளை மிதிக்கவும் தனக்கும் இனிமேல் முடியலாம். ஒரு வேளை தான் ஒரு கடல் கொள்ளைக்காரனாக மாறலாம். ஒரு பெரிய கப்பலில் மண்டை ஓட்டின் படத்தைப் போட்டிருக்கும் கோட்டை அணிந்து கொண்டு, சுருட்டைப் புகைத்துக் கொண்டே தான் நடக்கலாம். வேறு கப்பல்களை குண்டு வைத்து தகர்த்து, அங்கு இருக்கும் தங்கத்தையும் வைரக் கற்களையும் தன்னுடைய கப்பலுக்கு கடத்திக் கொண்டு வரலாம். ஒரு நாள் அந்த தோற்றத்துடன் பெரிய மீசையையும் வைத்துக் கொண்டு தான் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்காக போவோம். அவனுடைய தாய் கூறுவாள்: "சே... என் மகனே, இந்த அளவிற்கு தைரியம் கொண்ட ஒரு கடல் கொள்ளைக்காரனாக நீ ஆகிவிட்டாயே! நீ இப்படி ஆவாய் என்று உன்னைப் பார்த்தபோது, நான் நினைக்கவேயில்லை..." என்று.

சிறுவன் அறைக்கு வெளியே போய் படிகளில் இறங்கினான். படிகளில் இறங்கும் போது, அவனுடைய பாக்கெட்டிற்குள் இருந்த பளிங்கு குண்டுகள் பட்டு அந்த வெள்ளிப் பதக்கம் ஓசை உண்டாக்கியது.

அந்த கட்டிடத்திற்கு வெளியே வந்தவுடன், மஞ்சள் வெயில் அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. வாசலில் எங்கும் ஒரு ஆள் கூட இல்லை. முருங்கை மரத்திற்குக் கீழே சில பூக்கள் விழுந்து கிடந்தன. முருங்கைப் பூக்களை இரண்டு நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்றால், கண்கள் சிவப்பாக ஆகும் என்று சமையல்காரன் கூறியதை அவன் நினைத்துப் பார்த்தான். சமையல்காரன் சிறுவனாக இருந்தபோது, எப்போதும் சிவந்த கண்களுடனே இருந்தாலும் அவனுடைய தந்தையின் தம்பி, கதகளி நடத்துபவர்கள் கண்களில் இடுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பூவை அவனுக்குக் கொடுப்பாராம். சமையல்காரன் அதை வைத்து கண்களைச் சிவப்பாக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்வானாம். சமையல்காரனை பள்ளிக்கூடத்தில் பார்த்தவுடன் ஆசிரியர் கூறுவார்: "அடடா... இன்றைக்கு வேறு வந்திருக்கிறானே! இன்று மழை பெய்யும். சந்தேகமே இல்லை!"

சமையல்காரன் அந்த பழைய கதைகளைக் கூறிக்கொண்டு இருக்கும்போது, ஒருநாள் அவனுடைய தாய் சமையலறைக்குள் வந்துவிட்டாள். சமையல்காரன் போக்கிரித்தனமான விஷயங்களையெல்லாம் சிறுவனுக்கு கற்றுத் தரக்கூடாது என்றும், சிறுவனுடன் இவ்வளவு நேரமாக வெறுமனே பேசிக்கொண்டிருந்து நேரத்தைப் போக்க வேண்டாம் என்றும் அவனுடைய தாய் சொன்னாள். அன்று சாயங்காலம் சமையல்காரன் சிறுவனுக்கு சோறு பரிமாறும் போது சொன்னான்: "உங்களைத் தவிர, வேறு யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்க முடியும்? இந்த பம்பாய்க்கு வந்த பிறகு தையல்காரன் வர்க்கியைத் தவிர, வேறு எந்தவொரு மலையாளியையும் நான் பார்த்ததே இல்லை. பார்க்குமிடங்கள் எல்லாவற்றிலும் தோல் வெளுத்த வெள்ளைக்காரர்களும் வெள்ளைக்காரிகளும்தான். சில நேரங்களில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க முடியாதா என்று ஒரு ஆவல் தோன்றுகிறது.’’

சிறுவனின் மாமா சிலநேரங்களில் சமையல்காரனை அழைத்து அவனிடம் தீப்பெட்டி கேட்பதுண்டு. ஒரு நாள் அவனுடைய மாமா சமையலறையிலிருந்து கேட்ட பாட்டைக் கேட்டுவிட்டு சொன்னார்: ‘‘சமையல்காரன் மலையாள சினிமாவில் சேர்ந்தால் நன்றாக இருக்கலாம்’’ ªன்று. பாக்கெட்டிற்குள் பணம் வந்து விழுவதைப் பார்க்கலாம். என்றும் சொன்னார். அன்றிலிருந்து சமையல்காரன் எப்போதும் மாமாவைப் புகழ்ந்து கொண்டே இருப்பான். சமையல்காரனின் மேல் நோக்கி உயர்ந்த நீளமான பற்களை வெள்ளையாக ஆக்க வேண்டுமென்றும், அதற்குப் பிறகு திருவனந்தபுரத்திற்குச் சென்று சினிமா கம்பெனியில் சேர வேண்டுமென்றும் மாமா கூறும்போதும், சமையல்காரன் முழு வாயையும் திறந்து வைத்துக் கொண்டு நின்றிருப்பான். மாமா சமையல்காரர்களிடமும் கூலி வேலை செய்பவர்களிடமும் எப்போதும் தமாஷாகப் பேசிக் கொண்டு நேரத்தை வீணாக்கும் காரணத்திற்காகத்தான், மாமாவை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று சிறுவனின் தாய் அவன் தந்தையிடம் கூறுவதுண்டு. மாமா எல்லா சனிக்கிழமையும் சிறுவனுக்கு ஒவ்வொரு பொட்டலம் மிட்டாய் கொண்டு வந்து தருவார். மாதத்தின் முதல் வாரத்தில் அந்தப் பொட்டலத்தில் பெரிய சாக்லெட்டுகள் இருக்கும். இரண்டாவது வாரத்தில் தாளில் மூடப்பட்ட ட்ராஃபிகள் இருக்கும். மூன்றாவது வாரத்தில் வெறும் ஆரஞ்சு மிட்டாய். நான்காவது வாரத்தில் பல்லி மிட்டாய் என்று கூறப்படும் இனிப்பு மிட்டாய்கள்.


மாமாவின் கையில் பணம் இருக்காது என்றும் இவ்வளவு காலம் ஆன பிறகம் மாமா ஒரு ரூபாய் கூட சம்பாதித்ததில்லை என்றும் சிறுவன் கேள்விப்பட்டிருக்கிறான். எனினும் மாமா சொன்னார்: ‘‘நான் மனைவி இல்லாத ஒரு அதிர்ஷ்டசாலி!’’

சிறுவன் தன்னுடைய வீட்டின் வாசலில் ஏறி, கதவைத் தட்டினான். உரக்க தட்டினால் தன் தாய் கண் விழித்து வந்துவிடுவாள் என்பதும், தான் வெளியே சென்றதற்காக தன்மீது கோபப்படுவாள் என்றும் அவனுக்குத் தெரியும். அதனால் அவன் விரல்களால் செண்டை மீது மெதுவாகத் தட்டுவதைப் போல சிறிது நேரம் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. சமையல்காரன் சமையலறையில் நீர்க்குடம் வைக்கப்பட்டிருக்கும் மூலையில் உட்கார்ந்து கொண்டு ‘மாத்ருபூமி’ வாசித்துக் கொண்டிருந்தால், இந்த சத்தத்தை அவன் கேட்டிருப்பான். சமையல்காரன் சமையலறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். சிறுவன் மீண்டும் வாசலில் இறங்கி, வீட்டைச் சுற்றி, சமையலறையின் கதவுக்கு அருகில் சென்றான். அந்தக் கதவை அவன் பலமாகத் தட்டினான். சமையல்காரன் கதவைத் திறப்பதற்க மத்தியில் யாரையோ பலதடவை திட்டிக் கொண்டிருந்தான். கதவைத் திறந்தபோது சமையல்காரன் சொன்னான்:

‘‘நம்முடைய பால்காரன் என்று நான் நினைத்தேன். அவன் நேற்று பால் புட்டியுடன் வெளியேறியவன்தான். இதுவரை கடைக்குப் போகவே இல்லை.’’

சிறுவன் திடீரென்று அதிர்ச்சி அடைந்தான். காரணம் தன்னுடைய வலது பக்கத்தில் வெளியே இருக்கும் அடுப்புக் கரி வைத்திருக்கும் அறைக்குள் யாரோ போவதைப் போல அவனுக்குத் தோன்றியது. ஒரு மூச்சு விடும் சத்தம். அவன் வேகமாக சமையலறைக்குள் போய் நின்று கொண்டான். சமையல்காரன் பால்காரனைப் பற்றி கூறிக் கொண்டிருந்தான்.

‘‘இரண்டு மூன்று திசைகளில் இருந்து கிடைத்த பணம் கையில் இருந்தது. முதல் தேதி அல்லவா? அவன் அந்தப் பணத்துடன்  வண்டி ஏறி இருப்பான். நம்பவே முடியாத ஆள் என்பது அவனுடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.’’

சிறுவன் அதையெல்லாம் கேட்பதற்காக நின்று கொண்டிருக்காமல், தன் தாய் படுத்திருந்த அறைக்குள் சென்றான். அங்கு நீலக் கோடுகள் போட்ட ஒரு விரிப்பில் அவனுடைய தாய் சரிந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் தன் தாயை எழுப்பாமல் மெதுவாக அந்தக் கட்டிலில் போய் படுத்தான். அவனுடைய நெஞ்சு ஒரு கடிகாரத்தைப் போல துடித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இந்த அளவிற்கு பயப்படக் கூடிய அளவு என்ன நடந்தது என்று அவனுக்கே புரியவில்லை. அடுப்புக்கரி இருந்த அறையில் ஒரு ஆள் நின்றிருந்தால்தான் என்ன? பிச்சைக்காரர்கள் யாராவது ஓய்வெடுப்பதற்காக வந்து நின்றிருந்தால்...? அந்த கறுத்த கடித்த நிழல் தங்கப்பல் வைத்திருக்கும் டுக்காராமாகவே இருந்தால் கூட, தான் எதற்கு பயப்படவேண்டும்? தனக்குத் தெரிந்தவர்கள் யாருக்கும் ‘கண்ணால் பார்த்த காட்சி’ என்ற பெயரில்லை. சமையல்காரனைக் கொன்றால், ஒரேயொரு நோட்டு கூட டுக்காராமிற்குக் கிடைக்கப் போவதில்லை. தனக்குக் கிடைக்கக் கூடிய பதினைந்து ரூபாய்களையும் அப்படியே தன் தாய்க்கு சமையல்காரன் அனுப்பிவிடுவான். பிறகு... அவனுடைய காக்கி சட்டைக்காகவே சொல்வார்கள்?

சிறுவன் தன் தாயின் ஒரு தளர்ந்த கையை எடுத்து தன்னுடைய நெஞ்சின்மீது வைத்துக் கொண்டான். அதற்குப் பிறகும் அவனுடைய தாய் கண் விழிக்கவில்லை. தன் தாயின் கண்களின் இமைகள் மிகவும் நீளமாக இருப்பதை அவன் பார்த்தான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தன் தாயும் சமையல்காரனும் தொட்டிலில் படுத்திருக்கும் தங்கையும் கண்விழித்து எழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மதிய நேரம், மூடிய அந்த வீட்டில் கேட்டுக் கொண்டிருந்த சிறிய சத்தங்கள் ஒவ்வொன்றும் அவனை பயமுறுத்தின. சாளரத்தின் கதவின் முனகல், சுவர் கடிகாரத்தின் துடிப்பு, குளியலறையில் இறுக்கமாக இல்லாத குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் தண்ணீரின் சத்தம்...

சாளரத்தின் கதவில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலையை யாரோ சற்று உயர்த்தினார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. அறையில் அதிகமான வெளிச்சம் வந்து சேர்ந்திருந்தது. அவன் கட்டிலின் மீது ஏறி நின்றான். அவன் நினைத்தது சரிதான். சாளரத்தின் திரைச்சிலை மீது ஏறி நின்றான். அவன் நினைத்தது சரிதான். சாளரத்தின் திரைச்சீலை மீது ஒரு கறுத்த கை இருப்பதை அவன் பார்த்தான்.

‘‘யார் அது?’’

அவன் மெதுவாகக் கேட்டான். அந்தக் கை வெளியே நீண்டது. சிறுவன் பால்காரனின் பதக்கத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு எந்தவிதமான அசைவுமில்லாமல் அமர்ந்தான். யாரோ தன்னையோ தன் தாயையோ தொந்தரவு செய்ய நினைக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். இல்லாவிட்டால் சாளரத்தின் கதவிற்கு அருகில் ஒரு ஆள் எதற்கு நிற்க வேண்டும்? சாளரத்தின் கதவின் திரைச்சீலைகளை எதற்காகத் தூக்க முயற்சிக்க வேண்டும்? அவனுடைய உள்ளங்கைககள் வியர்த்தன. அவன் பால்காரனின் பதக்கத்தை மீண்டும் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து ஓசை உண்டாக்காமல் நடந்து சமையலறையை அடைந்தபோது, சமையல்காரன் அங்கு இல்லை. வெளியே செல்லும் கதவு திறந்து கிடந்தது. அதனால் சமையல்காரன் வெளியே கழிவறைக்குச் சென்றிருக்க  வண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எது எப்படி இருந்தாலும் சமையல்காரன் திருப்பி வரும் வரை வாசலிலேயே காவல் காத்துக் கொண்டிருப்பது சிறந்த ஒரு விஷயமாக இருக்குமென்று சிறுவனுக்குத் தோன்றியது. கதவின் தாழ்ப்பாள் அவனுக்கு எட்டவில்லை. அதனால் கதவுகளை அடைத்துவிட்டு, அவற்றின் மீது சாய்ந்து கொண்டு அவன் நின்றிருந்தான். எவ்வளவு நேரம் அப்படியே நிற்க வேண்டியிருந்தது என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய கண்கள் வேதனை தருவதைப் போலவும் கால்கள் தளர்வதைப் போலவும் அவன் உணர்ந்தான். கதவைத் தட்டும் சத்தம் கேட்ட போதும், அவன் விலகி நிற்கவில்லை. அப்போது அவன் தரையில் விழுந்துவிட்டான். யாரோ கதவை பலமாக தள்ளித் திறந்து விட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் "அய்யோ" என்று உரத்த குரலில் கத்தினான்.

"பாபா, எதற்கு அழறீங்க? என்னைப் பார்த்து பயந்துட்டீங்களா? நான் குழாயைச் சரி பண்ணும் ஆள்!"

சிறுவன் டுக்காராமின் முகத்தையே விரித்த கண்களுடன் பார்த்தான். தன்னைக் கொன்றுவிடுவான் என்றும் தன்னுடைய தலையைச் சுத்தியலால் நசுக்கி மரப்பெட்டிக்குள் போட்டு அடைத்துவிடுவான் என்றும் அவனுக்குத் தோன்றியது.


கண்களை அந்த கறுத்த முகத்திலிருந்து எடுத்தால், உடனே மரணம் வந்து சேர்ந்துவிடும் என்று பயந்து சிறுவன் அதே இடத்தில் இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தான். சமையல்காரன் கழிவறையிலிருந்து காலியான டால்டா டின்னுடன் திரும்பி வந்தபோது கூட, டுக்காரா¬மைப் பார்த்தவாறு பதைபதைப்புடன் சிறுவன் தரையில் உட்கார்ந்திருந்தான். சமையல்காரனைப் பார்த்ததும், டுக்காராம் சிரித்தான்.

"இது யாருப்பா ஒரு தங்கப்பல் வைத்திருக்கும் மனிதன்! ஒவ்வொருவரும் இந்த மாதிரி சமையறைக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்? வெளியே போ." சமையல்காரன் சொன்னான். டுக்காராமிற்கு மலையாளம் தெரியாமல் போனது நல்ல விஷயம் என்று சிறுவனுக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் சமையல்காரனை அப்போது அவன் வெட்டித் துண்டு துண்டாக்கி இருப்பான்.

"அம்மா எங்கே குழந்தை?" டுக்காராம் கேட்டான்.

சிறுவனால் ஒரு சொல் கூட கூற முடியவில்லை. சமையலகாரன் அவனுடைய கைகளைப் பிடித்து எழுந்திருக்க வைத்தான்.

"யாரோ வந்திருக்காங்கன்னு சொல்லுங்க. தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்ப வேண்டாம். பேப்பர் வாங்கும் ஆள் மாதிரி தெரியுது."

சிறுவன் உள்ளே சென்றான். தன் தாயின்அறையை அடைந்த போது, அவள் கண் விழித்துக் கொண்டு படுத்திருந்தாள்.

"சமையலறையில் யார் இருக்குறாங்க?"

"அம்மா, நீங்க அங்கே போக வேண்டாம். அங்கே ஒரு திருடன் இருக்கிறான்." சிறுவன் தன் தாயின்அருகில் போய் உட்கார்ந்தான். தாய் சிரித்தாள். "திருடர்கள் இப்படி மதிய நேரத்தில் வருவார்களா? அதையும்தான் பார்ப்போமே!" என்று அவள் சொன்னாள். அவள் உரத்த குரலில் பேசுவது ஆபத்தானது என்று நினைத்து சிறுவன் வேகமாக சொன்னான்:

"அம்மா, நீங்க என் அருகில் படுக்கணும். எனக்குத் தூக்கம் வருது."

"இப்போது உறங்குவதற்கு படுப்பதா? தேநீர் குடிப்பதற்கான நேரமாச்சே இது!" சிறுவனின் தாய் எழுந்து அறையின் சாளரத்தின் திரைச்சீலைகளை அகற்றினாள். சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். "மூன்று மணி... நாலு மணி... நாலே கால்... நாலே கால் ஆகிவிட்டது. இப்போ தூங்குவதற்குப் படுப்பதா?"

தன் தாய் புடவையை எடுத்து அணிவதையும் கண்ணாடிக்கு அரகில் போய் நின்று கொண்டு கூநத்லைச் சரிபண்ணுவதையும் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கட்டிலில் போய் படுத்தான். அவனுடைய தாய் ஒரு பஞ்சுத் துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து, அதைக் கொண்டு முகத்தைத் துடைத்தாள். தொடர்ந்து இன்னொரு பஞ்சுத் துண்டால் முகத்திற்கு பவுடர் இட்டாள்.

"அம்மா, நீங்க ஏன் உங்களை அழகு படுத்திக் கொண்டிருக்கிங்க?" அவன் கேட்டான். தன் தாய் வீட்டை விட்டு இப்போது போனால், டுக்காராம் தன்னை கொன்றுவிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பான் என்ற பயம் அவனுக்கு இருந்தது. "இன்று... இங்கே மகளிர் சங்கத்தின் கூட்டம் இருக்கிறது. இரண்டு மூன்ற மாதங்களுக்கு முன்பே ஒரு தேநீர் பார்ட்டி இருந்தது அல்லவா? அதைப் போன்றதுதான். உனக்கு போர் அடித்தால் லலிதாவின் வீட்டில் போய் விளையாடு." அவள் சொன்னாள்.

"இல்லை... நான் இங்கேயே இருக்கிறேன்."

"மகனே, உனக்கு லலிதாவைப் பிடிக்கும் அல்லவா?"

"ம்..."

"பிறகு என்ன?"

"நான் போக மாட்டேன்!"

அவனுடைய தாய் மீண்டும் அவனை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். லலிதாவின் வீட்டிற்கு என்றில்லை. எங்குமே போக வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய தாய் அறைக்கு வெளியே வந்தாள். சிறிது நேரம் கழித்து குளியலறையிலிருந்து சிறுவனின் தாய், டுக்காராம்- இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடலை சிறுவன் கேட்டான்.

"இதை மட்டுமே சரி பண்ண வேண்டும். இது ஒரு வருட காலமாக லூஸாக இருக்கிறது."

"அதை நான் அரை மணி நேரத்தில் சரி பண்ணுகிறேன், மேம் ஸாஹிப். பிறகு... வேறொன்றுமில்லையே!"

"இல்லை."

சிறுவனின் மனதில் பல வகைப்பட்ட இருண்ட சிந்தனைகளும் நகர்ந்து கொண்டிருந்தன. டுக்காராம் தன்னைக் கொல்வதற்காகவா வந்திருக்கிறான்? இல்லாவிட்டால், குழாயைச் சரி பண்ணுவதற்கா? அவன் அடர்த்தியான நீல நிறத்தைக் கொண்ட பேன்ட்டையும் சட்டையையும் அணிந்திரந்தான். அதனால் உண்மையாகவே அவன் ஒரு மெக்கானிக்காக இருக்க வேண்டும். பால்காரனைக் கொல்வதற்கு அவன் உதவினான். ஆனால்...

வெளியே கதவை யாரோ தட்டினார்கள். சமையல்காரன் ஓடுவதையும் கதவைத் திறப்பதையும் சிறுவன் பார்த்தான். அவன் எழுந்து வாசலுக்குச் சென்றான்.

அவனுடைய தாயின் தோழிகள் சிலர் வந்திருந்தார்கள் அவர்களில் உயரம் குறைவாக இருந்த ஒரு பெண் கையில் சில தாள்களைப் பிடித்திருந்தாள். அவளுடைய முகத்தில் மட்டும் ஒரு கெட்ட வெளிப்பாடு தெரிந்ததால், அந்தக் கூட்டத்தின் தலைவி அவளாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு சிறுவன் வந்தான். அவன் ஒரு சாளரத்தின் பீடத்தின் மீது ஏறி உட்கார்ந்தான். வந்திருந்தபெண்கள் பல வகையான விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அசைகின்ற உதடுகளையும் பற்களையும் சிரிப்பையும் பார்த்துக் கொண்டே அவன் நினைத்தான்- அவர்களையெல்லாம் பார்த்துவிட்டு, டுக்காராம் பயந்து போய் திரும்பிப் போகாமல் இருக்க மாட்டான் என்று. அந்த நினைப்பு அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது.

"மழை பெய்துவிடப் போகிறதோ என்று பயந்து நான் ஜார்ஜெட் புடவையை அணியவில்லை."

"நான் வாங்கிய நைலான் புடவை சுருங்கிப் போய்விட்டது. இந்த வகையான முட்டாள்தனத்திற்கு..."

"அய்யோ... லீலா, எதற்கு இவ்வளவு அதிகமான பலகாரங்கள்!"

"ஆறு மணிக்கு நான் திரும்பிச் செல்ல வேண்டும். குழந்தைக்கு கோரா கொடுக்கணும். ரமாவிற்கு அது மட்டும் தெரியாது."

"அப்படிச் சொன்னது நன்றாக இல்லை. இவ்வளவு காலமாக ரமாவின் மிகவும் நெருங்கிய தோழியாக இருந்துவிட்டு, இவங்க இப்படி... ஓ... ஹோஹொஹொ... ஓ...ஹொஹொ... ஹோ..."

அவர்களின் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு, ஒரு முறை சமையல்காரன் கதவு வரை வந்துவிட்டான். தொடர்ந்து தன்னுடைய எல்லா பற்களையும் வெளியே காட்டியவாறு சொன்னான்: "குழந்தை... உள்ளே வந்து பால் குடிங்க... அது ஆறிக் குளிர்ந்திடுச்சு!"

சிறுவன் அசையவில்லை. குளியலறையிலிருந்து கழற்றியதாலும் திருகியதாலும் உண்டான சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்தன.

"குழந்தை... காது கேட்கவில்லையா? பால் குடிக்க வேண்டாமா?" சமையல்காரன் அவனக்கு அருகில் வந்து கேட்டான். பெண்கள் எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து தேநீர் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அன்னை எல்லாருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். உயரம் குறைவான பெண் தாள்களை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து ஒரு கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சமையல்காரன் சிறுவனை சமையலறைக்குத் தூக்கி எடுத்துக் கொண்டு சென்றான். அங்கு பெஞ்சின் மீது உட்கார்ந்து பால் குடிக்கும்போது, சமையல்காரன் அவனிடம் சொன்னான்.


"இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் நூறு போண்டா சாப்பிடுவார்கள். ஒரு ஐம்பது கேக்குகளையும்... இவர்கள் ஏதாவது ஹோட்டலில் போய் சாப்பிடக்கூடாதா? இப்படி வீடு வீடாக ஏறி இறங்கி சாப்பிடணுமா?"

சிறுவன் எதுவும் பேசவில்லை. அதனால் சமையல்காரன் மீண்டும் தொடர்ந்து சொன்னான்: "தர்மம் செய்ததென்னவோ நல்லதுதான். ஆனால், இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த பன்றிக் குட்டிகளுக்கு அல்ல!" சமையல்காரன் சிரித்தான்: "ஓ... இதையெல்லாம் அம்மாவிடம் பற்ற வைத்திடாதீங்க... என் வேலையில் மண்ணை அள்ளிப் போட்டுடாதீங்க. உங்களுடைய பணம்... உங்களுடைய போண்டா... எனக்கு என்ன இழப்பு?"

சமையல்காரன் தரையில் ஒரு பலகையைப் போட்டு அதன்மீது உட்கார்ந்தான்.

"எனக்கு நீங்கள் எதைக் காட்டினால் என்ன... செத்தால் என்ன... சாப்பிட்டால் என்ன...?"

சிறுவன் பால் கோப்பையை தரையில் வைத்துவிட்டு எழுந்தான். அதே நேரத்தில் டுக்காராம் கையில் சுத்தியலுடன் சமைலறைக்கு வந்தான். சிறுவனைப் பார்த்ததும் அவன் சிறிது நேரம் அமைதியாக நின்றான். தன்னை அவன் மிகவும் கவனம் செலுத்திக் கூர்ந்து பார்க்கிறான் என்பதை சிறுவன் உணர்ந்து கொண்டான். வரவேற்பரையிலிருந்து ஏதோ ஒருபெண்ணின் சொற்பொழிவு காதில் விழுந்தது.

"ஒரு சிங்கத்தைவிட கொசுவிற்கு நாம் பயப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமம் எவ்வளவு பேருக்கு அது மலேரியா காய்ச்சலை அளித்துக் கொண்டிருக்கிறது!"

"பாபா, உங்க வீட்டில் இன்றைக்கு தேநீர் பார்ட்டி இருக்கிறதா? எதற்கு இவ்வளவு அதிகமாகப் பெண்கள் வந்திருக்கிறார்கள்?" டுக்காராம் கேட்டான்.

சிறுவன் தற்போதைக்கு தன்னுடைய பயத்தை மறந்துவிட்டான். அவன் சிரித்தான். டுக்காராம் அவனுடைய கையைப் பிடித்து அவனைப் பார்த்து சீட்டி அடித்தான்.

"பாபா, உனக்கு என்னைப் பார்த்து என்ன பயம்?"

"எனக்கு பயமில்லை."

"நான் வந்தப்போ ஏன் பயந்து அழுதாய்? நான் பிடித்து தின்றுவிடுவேனா? என் வயிற்றில்   குழந்தைகள் இருக்கிறார்களா?" டுக்காராம் தன்னுடைய நீல நிற சட்டையை உயர்த்தி தன் வயிற்றைக் காட்டினான். அவனுடைய சிரிப்பைப் பார்த்து சமையல்காரன் சொன்னான்:

"பல் வைக்கிறப்போ, தங்கத்தில் வைக்கணும். அப்படியென்றால் தான் பார்க்க நல்ல இருக்கு!"

"உங்களுக்கு மதராஸி மொழி மட்டும்தான் தெரியுமா?" டுக்காராம் சமையல்காரனிடம் கேட்டான். சமையல்காரன் பற்களைக் காட்டி சிரித்தான். எதுவும் கூறவில்லை. ஆனால் ஒரு கண்ணாடிக் குவளையில் தேநீர் எடுத்துக் கொண்டு வந்து அவன் டுக்காராமிற்குக் கொடுத்தான்.

"பாபா... இங்கே வா. என் மடியில் உட்காரு!"

டுக்காராம் சொன்னான். அவன் பெஞ்சின் ஒரு ஓரத்தின் உட்கார்ந்து தேநீரைப் பருகினான்.

"பாபா, உனக்கு என்னைத் தெரியவில்லை. எனக்கு நீ யார் என்று தெரியும். இதற்கு முன்பு என்னைப் பார்த்திருக்கிறாயா?"

சிறுவன் சொன்னான்: "இல்லை."

"இதோ... இந்த கொய்யாப் பழத்தை எடுத்துக்கோ. என் வீட்டிருக்கும் கொய்யா மரத்தில் பழுத்தது. உப்பைச் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்!"

சிறுவன் அதை வாங்கித் தன்னுடைய பாக்கெட்டிற்குள் போட்ட போது, டுக்காராம் கேட்டான்: "பாக்கெட்டில் பணம் இருப்பது மாதிரி தெரியுது!"

டுக்காராம் சிறுவனின் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துத் தேடினான். பால்காரனின் பதக்கத்தையும் இரண்டு பளிங்கு குண்டுகளையும் அவன் வெளியே எடுத்தான்.

"இது எங்கே இருந்து கிடைத்தது, இது பால்காரனின் பதக்கம் தானே?" சமையல்காரன் ஆச்சரியத்துடன் கேட்டான். ஆனால், டுக்காராம் எதுவும் கூறவில்லை. சிறுவன் எந்த விதமான அசைவும் இல்லாமல் நின்று கொண்டு டுக்காராமின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்களின் நிறம் மேலும் இருள்வதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவன் வேகமாக சமையலறையை விட்டு வெளியே ஓடினான்.

"நாம் இந்த அரக்கர்களை, இந்த ரத்தம் குடிப்பவர்களை முழுமையாக அழிக்காவிட்டால், அவர்கள் நம்மை என்றைக்காவது அழித்துவிடுவார்கள். சகோதரிகளே, கொசுக்களை நாம் கொன்றே ஆக வேண்டும். நாம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவர்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி, கொசுக்களைக் கொல்ல வேண்டும்."

உயரம் குறைவான பெண் வரவேற்பறையில் எழுந்து நின்று கொண்டு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தாள். சிறுவனைப் பார்த்ததும் ஒன்றோ இரண்டோ பெண்கள் தலையைத் திருப்பிக் கொண்டு சிரித்தார்கள். சிறுவன் அவர்களைப் பார்த்து சிரிக்கவில்லை. அதன் சுவரின் மீது சாய்ந்து நின்று கொண்டு டுக்காராம் கொடுத்த கொய்யாப் பழத்தைத் தின்று கொண்டிருந்தான். தன்னை டுக்காராம் கொல்வானா என்று அவன் இடையில் அவ்வப்போது தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். தன்னை எதற்காகக் கொல்ல வேண்டும்? தன்னுடைய பாக்கெட்டிற்குள் இருக்கும் பதக்கம் வேண்டும் என்பதற்காகவா? தன்னுடைய வெள்ளை நிறத் துப்பாக்கியை அடைவதற்காகவா? எதற்காக தன்னைக் கொல்ல வேண்டும்?

'ஒரேயடியில் கொல்ல வேண்டும். டி.டி.டி.-யை பயன்படுத்திக் கொல்வதுதான் சிறந்தது!'

கொய்யாப்பழம் சரியாகப் பழுத்திருக்கவில்லை. எனினும், தன் சுவை சிறுவனுக்குப் பிடித்திருந்தது-. அவன் அதை முழுமையாகத் தின்று முடித்த நேரத்தில், அவனுடைய தாய் எழுந்து அவனுக்கு அருகில் வந்து சொன்னாள்: "மகனே, நீ லலிதாவின் வீட்டிற்குப் போய் விளையாடு. இங்கே இப்படி நிற்க வேண்டாம்."

டுக்காராம் சமையலறையில் அப்போதும் உட்கார்ந்து கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சிறுவன் நினைத்தான். அதனால் அவன் சொன்னான்: "சரி... நான் தனியாகப் போய்க் கொள்கிறேன். சமையல்காரனை அனுப்பி வைக்க வேண்டாம்."

அவன் வாசலுக்கான கதவைத் திறந்து வெளியே வந்தான். வெயில் மேற்குப்பக்க வாசலுக்கு வந்து விட்டிருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்திருக்கும் சிறிய மஞ்சள் நிற பட்டாம்பூச்சிகள் தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் அவற்றைப் பார்க்க நின்று கொண்டிருக்காமல் வேகமாக நடந்து சென்று படிகளுக்குச் செல்லும் கதவைத் திறந்தான். சாலையில் ஒன்றோ இரண்டோ வேலைக்காரர்கள் நாய்களுடன் நடந்து கொண்டிருந்தார்கள். நீல நிறத்தில் ஆடை அணிந்த ஒருவனைக் கூட அவன் பார்க்கவில்லை. டுக்காராம் சமையலறையில் இருக்க வேண்டும். அவன் வேகமாக நடந்து லலிதாவின் வீட்டை அடைந்தான்.

லலிதாவின் தாய் அவனைப் பார்த்ததும் சொன்னாள்: "அங்கு அருமையான சொற்பொழிவுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன போலிருக்கிறதே! மிசஸ். பிள்ளையின் மலேரியா சொற்பொழிவு இருக்கும் என்ற விஷயம் தெரிந்துதான் நான் இந்த முறை வரவில்லை. நான் அந்தச் சொற்பொழிவை இந்த வருடம் ஐந்து முறை கேட்டுவிட்டேன்"

லலிதா பழைய சைக்கிளின் மீது ஏறி தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.

"நான் இதன் மீத ஏறுவதற்கு ஒப்புக் கொள்வதில்லை!"


லலிதா சொன்னாள். எப்போதும் போல அன்றும் அவளுடன் வாதம் செய்ய வேண்டும் என்று சிறுவனுக்குத் தோன்றவில்லைல. அதனால் அன்றைய விளையாட்டு மிகவும் ஆரவாரம் எதுவுமில்லாமல் முடிந்தது. அவன் திரும்பிச் சென்றபோது லலிதாவின் தாய் கேட்டாள்: "சாலையின் ஓரத்தில்ல நடந்து போவாயா? மிகவும் கவனமாகப் போவாய் அல்லவா?"

அவன், "ம்..." என்றான். சாலையில் அப்போதும் ஆட்கள் யாரும் இல்லை. தூரத்தில் கடலோரத்தில் ஒரு பலூன் விற்பவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்தில் நின்றிருந்த ஒரு லாரி திடீரென்று புறப்பட்டு தனக்கு எதிரில் வந்து கொண்டிருப்பதை சிறுவன் பார்த்தான். அது நடைபாதையில் ஏறி தன்னைக் கீழே தள்ளுவதற்கு முன்னால் சிறுவனுக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டிருந்தது. அதன் ஓட்டுனர் டுக்காராம் என்ற உண்மை.

"என் வீட்டு திண்ணைக்கு வர மாட்டாயா?" எட்டுக்கால் பூச்சி ஈயிடம் கேட்கிறது.

"என் அழகான திண்ணைக்கு வா!"

ஹ! ஹ! ஹஹ்ஹ! ஹா! ஹஹ்ஹஹ்ஹ! உரத்த சிரிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. எல்லாருடைய வாய்களிலும் தங்கப் பற்கள் மட்டுமே இருக்கின்றன என்று சிறுவனுக்குத் தோன்றியது. பல்லாயிரக்கணக்கான மக்கள்! பல்லாயிரக்கணக்கான தங்கப் பற்கள்!

தலைமை ஆசிரியர் மேடையின் ஓரத்தில் நகர்ந்தவாறு சொன்னார்:

"இந்த வருடம் ஒரு சிறுவனுக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அந்தச் சிறுவன் மூன்றாம் வகுப்பில் படிக்கும் மோகன். இங்குள்ள மெடல்களையும், வெள்ளிக் கோப்பைகளையும், புத்தகங்களையும் அவனுக்குத் தரப் போகிறேன்."

ஹ! ஹ! ஹ! ஹ!

ஆயிரம் தங்கப் பற்கள் பிரகாசித்தன.

"நாம் கொசுக்களைக் கொல்லாவிட்டால், கொசுக்கள் நம்மைக் கொன்றுவிடும். அதனால் அவற்றைக் கொன்றே ஆக வேண்டும்."

அந்த வகையில், கொசுக்கள் வானத்திலிருந்து மழையைப் போல கீழே இறங்கி வந்தபோது, தங்கப் பற்கள் ஒரே நேரத்தில் பிரகாசித்த போது, சிறுவன் கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தான். வெள்ளை நிறத்தில் சுவர்களைக் கொண்ட அந்த அறை தன்னுடைய படுக்கையறை அல்ல என்பதை அவன் தெரிந்து கொண்டான். சிறிது நேரம் அவன் தன்னுடைய கால் பகுதியில் தெரிந்த சுவரையும் நீண்ட தூண் விளக்கையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். முகத்தைச் சற்றுத் திருப்பி வலது பக்கம் திரும்பப் பார்த்தபோது, அவன் தன்னுடைய தாயைக் கண்டான். அவள் ஒரு சிறிய ஸோஃபாவின் மீது சாய்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் எழுந்திருக்க மயற்சித்தான். ஆனால், அவனுடைய வலது காலில் ஒரு பெரிய ப்ளாஸ்டர் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்தக் காலைல எடுக்க முடியாத அளவிற்கு கனம் உண்டாகியிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். "அம்மா..." அவன் மெதுவாக அழைத்தான்.

அவனுடைய அன்னை கண்களைத் திறந்து எழுந்தாள். அவள் தன்னுடைய கட்டிலில் வந்து உட்கார்ந்தபோது, அவளுடைய கண்கள் ஈரமாகியிமருப்பதை அவன் பார்த்தான். அவன் எதுவும் பேசவில்லை. தன் தலைக்குள் கொசுக்கள் பாடுவதைப்போலவும் தான் வாந்தி எடுக்கப்போவதைப் போலவும் சிறுவன் உணர்ந்தான். அதனால் அவன் தன்னைச் சுற்றி ஆட்கள் வந்து கூடி நின்றபோதும், தன்னுடைய மாமா  தன் கால்களுக்கு அருகில் உட்கார்ந்து, தான் இதுவரை பார்த்த வீரர்களிலேயே மிகப்பெரிய தைரியசாலி மோகன்தான் என்று கூறியபோதும் அவன் எதுவும் கூறவில்லை. கூற வேண்டும் என்ற நினைத்தான். பலவற்றையும் தன்னைக் கீழே தள்ளிய லாரியை டுக்காராம் ஓட்டி வந்தான் என்பதையும் தன்னை மட்டுமல்ல; கண்ணால் கண்ட சாட்சி என்ற ஒரு மனிதனையும் அவன் கொல்வதற்கு திட்டம் போட்டிருக்கிறான் என்பதையும் அவர்களிடம் கூறவேண்டுமென்று சிறுவன் நினைத்தான். ஆனால், அவர்களுக்கு மத்தியில் டுக்காராம் நின்று கொண்டிருந்தால்...? அந்தக் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தால்-...?"

அவனுடைய வாயில் ஒரு நர்ஸ் ஊற்றும் பாலை உள்ளே போக விட்டவாறு அவன் மல்லாக்கப் படுத்திருந்தான்.

"அதுஎந்ம மாதிரியான லாரி என்று உனக்குத் தெரியுமா?" அவனுடைய தந்தை அவனிடம் கேட்டார். "பலூன் விற்கும் மனிதன் லாரி வந்து உன்னைக் கீழே தள்ளுவதைப் பார்த்திருக்கிறான். ஆனால், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான லாரியா, தனியாருக்குச் சொந்தமான லாரியா என்பது தெரியவில்லையாம். உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா, மகனே?"

"இப்போது அவனைச் சிரமப்படுத்த வேண்டாம்." அவனுடைய தாய் சொன்னாள்: "அவன் ஓய்வு எடுக்கட்டும்."

"அது டுக்காராம்தான்." சிறுவன் மெல்லிய ஒரு குரலில் சொன்னான்.

"டுக்காராமா? யார் அத?"

"டுக்காராம் பால்காரனைக் கொன்றுவிட்டானே! டுக்காராமும் பாண்டுரங்கும் சேர்ந்து..."

"மகனே, கண்களை மூடிப் படு. இப்போதும் எதுவும் கூற வேண்டாம்!"

அவனுடைய தாய் மெதுவாக அழுது கொண்டிருந்தாள். அந்தஅழுகைச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே அவன் மீண்டும் உறங்கிவிட்டான்.

மறுநாள் அவன் கண்களைத் திறந்து பாண்டுரங்கின் பேச்சைக் கேட்டுத்தான். "எனக்கு இந்த செய்தியைக் கேட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. என்னுடைய மாணவர்களிலேயே மிகவும் அதிகமாக நான் விரும்புவது மோகனைத்தான். பரவாயில்லை... காலில் மட்டும்தான் காயம் என்ற தெரிந்த போதுதான், எனக்கு ஒழுங்காக மூச்சு விடவே முடிந்தது!"

சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்து. தான் காண்பது கனவோ என்று கூட அவனுக்கு சந்தேகம் உண்டானது. பாண்டுரங்க் எதற்காக ஒரு தவிட்டு நிற கோட்டுடன் இங்கு வந்திருக்கிறான்? அவனுடனே இருக்கக்கூடிய தொப்பி தலையில் இல்லை.

"உட்காருங்க. அவன் கண் விழித்த பிறகு போனால் போதும். இப்போது அவனுடைய அப்பா வருவார். உணவு சாப்பிட வருவதற்கானநேரம் ஆகி விட்டதே!" அவனுடைய தாய் சொன்னாள்: "மாஸ்டர், நீங்கள் அவனுடைய அப்பாவைப் பார்த்த பிறகு போனால் போதும்."

"அதோ... பையன் கண்களைத் திறந்து விட்டான்!" பாண்டுரங்க் கட்டிலை நெருங்கினான். "இப்போது சுய உணர்வு வந்திருக்குமே!"

"நேற்று இரவில் கண்விழித்து வாய்க்கு வந்தபடியெல்லாம் உளற ஆரம்பிச்சிட்டான்." அவனுடைய தாய் சொன்னாள்: "ஒரு டுக்காராமைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். எங்களுக்கு மிகவும் பயமாகிவிட்டது."

"டுக்காராமா? அது யாரு?" பாண்டுரங்க் கட்டிலுக்கு அருகில் நின்று தலையைக் குனிந்து கொண்டே சொன்னான்: "அப்படிப்பட்ட ஒரு ஆளை எனக்குத் தெரியாது. ஏதாவது வேலைக்காரனாக இருப்பானோ?"

"எங்களுக்கு எந்தக் காலத்திலும் அந்த பெயரைக் கொண்ட வேலைக்காரன் இருந்ததில்லையே!"

பாண்டுரங்க் மீண்டும் நிமிர்ந்து நின்றான். "நான் பிறகு வருகிறேன். இரண்டு மணிக்கு நான் பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும்."

அவன் போனவுடன், அவனுடைய தாய் அவனக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சொன்னாள்:


"மகனே..."

அவன் சிரித்தான். அவனுடைய அன்னை அவன் முகத்தில் தன் கைவிரல்களால் ஓவியங்கள் வரைந்தாள்.

"மகனே, எல்லாரும் உன்னைப் பார்ப்பதற்கு வருகிறார்கள். உன்னுடைய மாஸ்டரைப் பார்த்தாய் அல்லவா?"

அது தன்னுடைய மாஸ்டரே அல்ல என்று அவன் கூற நினைத்தான். ஆனால், அதற்குப் பிறகு ஒரு நீளமான கதை முழுவதையும் கூற வேண்டியது இருக்குமே என்று நினைத்து அவன் எதுவும் பேசாமல் படுத்திருந்தான். பேசினாலும், குரல் வெளியே வராது என்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய மனம் குமைந்து கொண்டிருந்தது. பாண்டுரங்க் மீது தான் கொண்டிருக்கும் பயம்தான் மனம் புரண்டு கொண்டிருப்பதற்கும் தலை வலிக்கும் காரணம் என்பதை சிறுவன் புரிந்து கொண்டான். டுக்காராம் தன்னைக் மகொல்லவில்லை. அதனால் பாண்டுரங்க்கே அந்த வேலையைச் செய்வதற்கு கிளம்பியிருக்க வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தையும் மாமாவிடம் கூறாமல் இருக்க முடியாது. வேறு யாரும் நம்பாவிட்டாலும், அவனுடைய மாமா நம்புவார். மாமா தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்.

"என்ன மோகன், தூக்கம் முடிஞ்சிடுச்சா?"

மாமாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போது அவனுடைய மாமா அங்கு வந்து சேர்ந்ததைப் பார்த்து சிறுவன் மிகவும் ஆச்சரியடைந்தான். "மாமா, உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும்!" அவன் சொன்னான்.

"எதனால் சொல்றே?" அவனுடைய மாமா கட்டில்மீது உட்கார்ந்தவாறு அவனுடைய கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார். அவனடைய தாய் சிரித்தாள்.

"மாமா, உங்களைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன்."

அதற்குப் பிறகு, அவனுடைய தாய் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்றபோது, அவன் அந்தக் கதை முழுவதையும் தன் மாமாவிடம் கூறினான். "இவை அனைத்தும் உண்மையா, மகனே?" மாமா பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டார்: "மாமாவிடம் பொய் சொல்லவில்லையே?"

"இல்லை... சத்தியமா!"

அவனுடைய மாமா நீண்ட நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு அந்தக் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தார். அன்று அவனுடைய தந்தை சிறுவனைப் பார்ப்பதற்காக வந்தபோது, மாமா சொன்னார்: "நான் கொஞ்ச காலம் விடுமுறை எடுத்து இந்த மருத்துவமனையிலேயே இருக்கப் போகிறேன்."

"அப்படியா?"

"மோகனுக்கு அது சந்தோஷத்தைத் தரக்கூடிய விஷயமாக இருக்கும்."

அவனுடைய தந்தை சிரித்தார். மாமா சிறுவனை கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு கெடுதல் உண்டாக்குகிறார் என்றால், அப்படியே உண்டாகிவிட்டுப் போகட்டும் என்று அவனுடைய தந்தை சொன்னார். அன்று இரவு சிறுவனும் அவனுடைய மாமாவும் நீண்ட நேரம் ஒன்றாக உட்கார்ந்து பேசினார்கள். போலீஸ்காரர்களிடம் கூறிப் பயனில்லை என்று மாமா சொன்னார். அது மட்டுமல்ல-அது பல பிரச்சினைகளையும்  உண்டாக்கவும் செய்யும் பாண்டுரங்க் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட காரணத்தால்தான் பால்காரன் இறந்தான். பாண்டுரங்கையோ டுக்காராமையோ பிடித்து சிறைக்குள்போட்டால், இனிமேலும் அப்படிப்பட்டவர்கள் வெளியே இருப்பார்கள். அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள். சட்டத்தை மீறியவர்களை போலீஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டியதுதான். எனினும், அதனால் அவனவனின் உயிர் இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை வரும் பட்சம், எதையும் பேசாமல் இருப்பதே நல்லது. அந்த மாதிரியான பல விஷயங்களையும் மாமா அவனிடம் சொன்னார். மாமா சிறந்த புத்திசாலி என்பதை சிறுவன் புரிந்து கொண்டான். மாமா தைரியசாலியும்கூட என்பதை அவன் புரிந்து கொண்டது பாண்டுரங்க் மாஸ்டரின் வேஷத்தில் மீண்டும் அங்கு வந்த போதுதான். மாமா உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே சொன்னார்:

"நண்பரே, கையிலிருக்கும் கத்தியை அங்கு வைத்தால்தான், இந்த அறைக்குள் வர முடியும்."

பாண்டுரங்க் நெளிந்தான்.

"கத்தியா?"

"பிறகு... இந்த சிறிய பையனை எதற்குக் கொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள்? மூச்சைவிட முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கமா?"

பாண்டுரங்க் வாசல் கதவிற்கு அருகில் நின்று கொண்டே சொன்னான்: "நீங்க என்னசொல்றீங்க? நான் சிறுவனின் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியராயிற்றே! கொல்வதற்காகநான் வரவில்லையே!"

"ஆஹா! சிறுவனின் தலைமை ஆசிரியர் நான். எனக்கு உங்களைத் தெரியவே தெரியாதே!"

அவர்களுடைய வாதங்கள் நீண்ட நேரம் நீடிக்க வில்லை பாண்டுரங்க் புறப்படுவதற்கு அவசரப்பட்டான்.

மாமா சொன்னார்: "நண்பரே, நாம் ஒரு காரியம் செய்வோம். இந்த சிறுவனுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. இவற்றையெல்லாம் மறப்பதற்கு இவனுக்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். மறக்கவில்லையென்றால் கூட, என்ன வரப்போகுது, இவன் சொல்வதை யாராவது நம்புவார்களா? இனி நீங்கள் என்னை நம்புங்கள். இந்த வைபங்களை நானும் இந்த சிறுவனும் வேறு யாரிடமும் கூற மாட்டோம் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். கூறினால், பல சிரமங்களும் வரும் என்று உங்களுக்கு சந்தேகம் உண்டானால், நீங்கள் என்னைக் கொன்றுவிடுங்கள், புரிகிறதா?"

பாண்டுரங்க் விடை பெற்றுக் கொண்டு அறைக்கு வெளியே சென்றபிறகு, மாமா தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை வெளியே எடுத்தார்.

"இன்று மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. இந்தப் பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று கூற முடியுமா?"

"ம்... பல்லி மிட்டாய்..." சிறுவன் சிரித்தான். அன்று முதல் தடவையாக அவன் தன் மாமாவின் முகத்தில் முத்தமிட்டான்.

"இந்த வகையான குணங்கள் கடல் கொள்ளைக்காரர்களிடம் இருக்கக் கூடியவை அல்ல." கன்னத்தில் இருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டே மாமா சிரித்தார். மாமாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. அதனால் தன் மாமா சிரிக்கிறாரா அழுகிறாரா என்பதை சிறுவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.